தண்டியடிகள் நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

தண்டி யடிகள் திருவாரூர்ப்
பிறக்கும் பெருமைத் தவமுடையார்
அண்ட வாணர் மறைபாட
ஆடுஞ் செம்பொற் கழன்மனத்துக்
கொண்ட கருத்தின் அகனோக்கும்
குறிப்பே யன்றிப் புறநோக்கும்
கண்ட வுணர்வு துறந்தார்போற்
பிறந்த பொழுதே கண்காணார்.

பொழிப்புரை :

தண்டியடிகள் என்பார் திருவாரூரில் பிறந்திடும் பெருமையாம் தவமுடையார். தேவர்கள் நான்மறைகளைப் பாட ஆடிடும் சிவந்த பொன்மயமான இறைவரின் திருவடிகளை மனத்தில் கொண்ட கருத்தில், உள்ளத்தே நோக்கி மகிழும் குறிப்பேயல்லாது வெளியே நோக்கிக் காணும் உணர்ச்சிகளை நீக்கினார் போன்று, தாம் தோன்றிய பொழுதே கண்பார்வை யிலரானார்.

குறிப்புரை :

திருவாரூரில் பிறக்க முத்தி என்பர். திருவாரூர்ப் பிறந்தார் கள் எல்லாருக்கும் அடியேன் என்பர் சுந்தரரும் (தி.7 ப.39 பா.10), `திருவாரூர்த் தோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால், ஆற்றவும் மற்றவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்\' என்பது மனு வேந்தர் கூற்றாகும் (தி.12 திருமலைச் சரு. பா.126). `ஆரூர்ப் பிறத்தல் நேர்படின் அல்லது, செயற்கையின் எய்தும் இயற்கைத் தன்றே\' என்பர் குமரகுருபர அடிகள் (குமர. சிதம்பர மும். பா.1). இத்தகைய அருமை யும் பெருமையும் நோக்கியே திருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார் என்றார். புற நோக்கினும் இவர் பெருமானைக் கண்டு மகிழும் அகநோக்குச் சிறப்புடைத்தாதல் பற்றியே சுந்தரர் பெருமானும் `நாட்டம்மிகு தண்டி\' (தி.7 ப.39 பா.5) என்றார். `அகத்திற்கண் கொண்டு காண்பதே ஆனந்தம்\' (தி.10 த.9 ப.25 பா.10) என்பர் திருமூலரும்.

பண் :

பாடல் எண் : 2

காணுங் கண்ணால் காண்பதுமெய்த்
தொண்டே யான கருத்துடையார்
பேணும் செல்வத் திருவாரூர்ப்
பெருமான் அடிகள் திருவடிக்கே
பூணும் அன்பி னால்பரவிப்
போற்றும் நிலைமை புரிந்தமரர்
சேணு மறிய வரியதிருத்
தொண்டிற் செறியச் சிறந்துள்ளார்.

பொழிப்புரை :

காணுகின்ற கண்ணால் காண்டற்குரியது இறைவனது உண்மையான தொண்டே எனும் கருத்து உடையவர்; அவர் பேணு கின்ற பெருஞ் செல்வமாம் தியாகராசப் பெருமானின் திருவடிக்காகப் பூணுகின்ற அன்பினால் போற்றி வணங்கும் நிலைமையில் நின்றவர்; வானவர்கள் தொலை தூரத்திலேனும் இத்தொண்டின் பெருமை இத்தன்மைத்து என அறிதற்கரிய திருத்தொண்டில் மிகவும் பற்றுடைய வராய், அப்பற்றில் சிறப்பு மிக்கவராய் வாழ்வாராயினர்.

குறிப்புரை :

`தொண்டலால் துணையுமில்லை\' (தி.4 ப.40 பா.4) என்பர் நாவரசர். அத்திருத்தொண்டே இவர் மேற்கொண்ட அரிய திருத்தொண்டாம்.

பண் :

பாடல் எண் : 3

பூவார் சடிலத் திருமுடியார்
மகிழ்ந்த தெய்வப் பூங்கோயில்
தேவா சிரியன் முன்னிறைஞ்சி
வலஞ்செய் வாராய்ச் செம்மைபுரி
நாவால் இன்ப முறுங்காதல்
நமச்சி வாய நற்பதமே
ஓவா அன்பில் எடுத்தோதி
ஒருநாள் போல வருநாளில்.

பொழிப்புரை :

பூவார்ந்த கொன்றை மலரையுடைய சடைமுடியை உடைய சிவபெருமான் மகிழ்ந்து உறைகின்ற பூங்கோயிலின் திருமுன்புள்ள தேவாசிரிய மண்டபத்தின் முன்பு வணங்கி, கோயிலை வலம் செய்வாராய்த் தமது நாவால் இன்பமுறுகின்ற காதலால் `நமச்சிவாய\' என்ற நல்ல அரிய மந்திரத்தையே அயர்த்தல் இல்லாத அன்பினால் எடுத்து ஓதி, ஒருநாள் போலப் பலநாளும் அவ் வண்ணமே அவர் செய்து வரும் நாள்களில்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 4

செங்கண் விடையார் திருக்கோயில்
குடபால் தீர்த்தக் குளத்தின்பாங்
கெங்கும் அமணர் பாழிகளாய்
இடத்தாற் குறைபா டெய்துதலால்
அங்கந் நிலைமை தனைத்தண்டி
யடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நான்இக் குளம்பெருகக்
கல்ல வேண்டும் என்றெழுந்தார்.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய, ஆனேற்றில் எழுந்தரு ளும் பெருமானாரின் திருக்கோயிலின் மேற்குப்புறத்து உள்ள தீர்த்தக் குளத்தின் அருகில், சமணர்களின் மடங்களும் இருப்பிடங்களுமாகி, இதனால் அக்குளத்தின் இடப் பரப்பிற்குக் குறைபாடு வந்தடைதலால், அந்நிலையை அறிந்த தண்டியடிகள் உள்ளத்துக் கொண்ட அன்பி னால், `இங்கு நான் இக்குளத்தின் பரப்பு மிக, இதனைத் தோண்டியிடல் வேண்டும்\' என்ற துணிவு கொண்டு, அப்பணிக்கு முற்பட்டார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 5

குழிவா யதனில் குறிநட்டுக்
கட்டுங் கயிறு குளக்கரையில்
இழிவாய்ப் புறத்து நடுதறியோடு
இசையக் கட்டி இடைதடவி
வழியால் வந்து மண்கல்லி
எடுத்து மறித்துந் தடவிப்போய்
ஒழியா முயற்சி யால்உய்த்தார்
ஓதும் எழுத்தஞ் சுடன்உய்ப்பார்.

பொழிப்புரை :

தாம் நினைந்தவாறு குளத்தை அகழ்வதற்குக் கண் பார்வை இல்லாமையால், அதனைத் தேர்ந்து கொள்வதற்கு, அகழு மிடத்து ஒரு கோலை நட்டு, குளக்கரையில் மண்கொண்டு சென்று கொட்டுகின்ற இடமாய அவ்விடத்து மற்றொரு கோலை நட்டு, இரு கோல்களையும் ஒரு கயிற்றால் தொடுத்துக்கட்டி, அக்கயிற்றைப் பிடித்துத் தடவியவாறு, அதன் குறிவழியால் வந்து, மண்ணைத் தோண்டி எடுத்து, திரும்பவும் அக்கயிற்றைத் தடவிப்போய் வெளியில் கொட்டி, இவ்வாறு ஓய்வில்லாத முயற்சியால் குளத்தை அகழ்ந்து மண் எடுப்பவர், அதைச் செய்திடும் போது ஐந்தெழுத்தோதுதலையும் அப்பணியுடன் செய்து வருவாராய்,

குறிப்புரை :

இழிவாய்ப் புறத்து நடுதறி - தணிவான இறக்கத்தில் ஒரு கோல் நட்டு.

பண் :

பாடல் எண் : 6

நண்ணி நாளும் நற்றொண்டர்
நயந்த விருப்பால் மிகப்பெருகி
அண்ணல் தீர்த்தக் குளங்கல்லக்
கண்ட அமணர் பொறாராகி
எண்ணித் தண்டி யடிகள்பால்
எய்தி முன்னின் றியம்புவார்
மண்ணைக் கல்லிற் பிராணிபடும்
வருத்த வேண்டா வென்றுரைத்தார்.

பொழிப்புரை :

இவ்வாறாக நாள்தோறும் சென்று, தண்டியடிகள் நயந்த விருப்பினாலே, அவ்வாசை மிகப் பெருகி, பெருமானுடைய தீர்த்தக் குளத்தை அகழக் கண்ட சமணர்கள் பொறுக்க மாட்டாராய், மனத்தில் வஞ்சனை கொண்டு தண்டியடிகள்பால் சென்று, இதனைச் சொல்வாராய், `நீர் மண்ணை அகழ்ந்தெடுத்தால் அதனுள் வாழும் உயிரினங்கள் இறந்தும் காயமுற்றும் வருந்தும், எனவே அகழ வேண்டா\' என்று சொன்னார்கள்.

குறிப்புரை :

இவ்வாறாக நாள்தோறும் சென்று, தண்டியடிகள் நயந்த விருப்பினாலே, அவ்வாசை மிகப் பெருகி, பெருமானுடைய தீர்த்தக் குளத்தை அகழக் கண்ட சமணர்கள் பொறுக்க மாட்டாராய், மனத்தில் வஞ்சனை கொண்டு தண்டியடிகள்பால் சென்று, இதனைச் சொல்வாராய், `நீர் மண்ணை அகழ்ந்தெடுத்தால் அதனுள் வாழும் உயிரினங்கள் இறந்தும் காயமுற்றும் வருந்தும், எனவே அகழ வேண்டா\' என்று சொன்னார்கள்.

பண் :

பாடல் எண் : 7

மாசு சேர்ந்த முடையுடலார்
மாற்றங் கேட்டு மறுமாற்றம்
தேசு பெருகுந் திருத்தொண்டர்
செப்பு கின்றார் திருவிலிகாள்
பூசு நீறு சாந்தமெனப்
புனைந்த பிரானுக் கானபணி
ஆசி லாநல் லறமாவது
அறிய வருமோ உமக்கென்றார்.

பொழிப்புரை :

அழுக்குப் பொருந்திய மேனியை உடைய சமணர்கள் கூறிய கூற்றைக் கேட்ட அடிகள், அதற்கு மறுமாற்றம் கூறுவாராய், `திருவில்லாதவர்களே! பூசும் நீற்றினை நறுமணமுடைய சந்தனம் என அணியும் சிவபெருமானுக்கு ஆன அத்தொண்டு எதுவாயினும் அது நல்ல அறமேயாம் என்பது அறிய வருமோ உமக்கு\' என்றார்.

குறிப்புரை :

திரு-சிவத்திரு; அதனை உளங்கொளாமையின் திரு விலிகாள் என்றார். `உருவிலான் பெருமையை உளங்கொளாத அத் திருவிலார்\' (தி.3 ப.14 பா.2) எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 8

அந்தம் இல்லா அறிவுடையார்
உரைப்பக் கேட்ட அறிவில்லார்
சிந்தித் திந்த அறங்கேளாய்
செவியும் இழந்தா யோஎன்ன
மந்த வுணர்வும் விழிக்குருடும்
கேளாச் செவியும் மற்றுமக்கே
இந்த வுலகத் துள்ளனஎன்
றன்பர் பின்னும் இயம்புவார்.

பொழிப்புரை :

முடிவிலாத பேரறிவின் திறமுடைய தண்டியடிகள் இவ்வாறு அருளக் கேட்ட அறிவிலாத சமணர்கள், `நாங்கள் சிந்தித்து ஓதிய இவ்வறத்தைக் கேளாயாயினை, உன் கண் இழந்ததோடு காதும் இழந்தனையோ?\' என்று கூறிட, அதுகேட்ட தண்டியடிகள், சமணரை நோக்கி, `மந்தமான மூடவுணர்வும் குருட்டுக் கண்ணும், கேளாத காதும் மற்று உமக்கே இவ்வுலகத்தில் உள்ளன\' என்று கூறிப் பின்னரும் சொல்வார்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 9

வில்லால் எயில்மூன் றெரித்தபிரான்
விரையார் கமலச் சேவடிகள்
அல்லால் வேறு காணேன்யான்
அதுநீர் அறிதற் காரென்பார்
நில்லா நிலையீர் உணர்வின்றி
நுங்கண் குருடாய் என்கண்உல
கெல்லாங் காண யான்கண்டால்
என்செய் வீர்என் றெடுத்துரைத்தார்.

பொழிப்புரை :

`மேருமலையை வில்லாகக் கொண்டு புரங்கள் மூன்றினையும் எரித்த பெருமானது நறுமணம் பொருந்திய தாமரை மலர்போலும் திருவடிகளை அல்லாது வேறொன்றும் என் கண்ணால் நான் காணேன்! அப்பேரின்பத்தைப் பெறுதற்கு நீங்கள் ஆர்?\' என்று கூறுவாராய், மேலும் அவரிடம், நில்லாதவற்றை நிலையின என்றுண ரும் புல்லறிவாளர்களே! புறத்தே பார்க்கும் பார்வை உணர்வின்றி உங்கள் கண்கள் குருடாகவும், எம் கண்கள் உலகெல்லாம் காணுமாறு ஒளிபெறவும் நேரின், நீர் என் செய்வீர்? என்று கேட்டார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 10

அருகர் அதுகேட் டுன்தெய்வத்
தருளால் கண்நீ பெற்றாயேல்
பெருகும் இவ்வூ ரினில்நாங்கள்
பின்னை யிருக்கி லோமென்று
கருகு முருட்டுக் கைகளால்
கொட்டை வாங்கிக் கருத்தின்வழித்
தருகைக் கயிறுந் தறியுமுடன்
பறித்தார் தங்கள் தலைபறித்தார்.

பொழிப்புரை :

அதுகேட்ட, சமணர்கள், `உன் இறையருளால் கண்ணினை நீ பெற்றாயாயின் பெருகிய இத்திருவாரூரில் நாங்கள் பின்னர் இருக்கில்லோம்\' என்று கூறி, கறுத்த தங்கள் முரட்டுக் கையால் தண்டியடிகளது மண்வெட்டியையும் பறித்துக்கொண்டு, அவர் தாம் தடவிப் போதற்கெனக் கட்டிவைத்த கயிற்றையும் நட்ட கோல்களையும் பிடுங்கி உடன் எறிந்தார்கள்.

குறிப்புரை :

கொட்டு - மண்வெட்டி

பண் :

பாடல் எண் : 11

வெய்ய தொழிலார் செய்கையின்மேல்
வெகுண்ட தண்டி யடிகள்தாம்
மைகொள் கண்டர் பூங்கோயில்
மணிவா யிலின்முன் வந்திறைஞ்சி
ஐய னேஇன்று அமணர்கள்தாம்
என்னை யவமா னஞ்செய்ய
நைவ தானேன் இதுதீர
நல்கு மடியேற் கெனவீழ்ந்தார்.

பொழிப்புரை :

: பிறர்க்கு ஊறு செய்தும் வரும் கொடிய தொழிலின ரான சமணர்கள் செய்த இச்செயலை அறிந்த தண்டியடிகள் வெகுண்டு, வேதனையடைந்து, நஞ்சுண்டு கருமையாய கழுத்தினையுடைய சிவபெருமானின் பூங்கோயிலின் முன்பு வந்து வணங்கி, `என் ஐயனே! இன்று சமணர்கள் என்னை இழிவு செய்திட நான் மனவேதனையுறுவ தானேன், அடியேற்கு இதனைத் தீர்த்திட அருள் புரிதல் வேண்டும்\' என விண்ணப்பித்துக் கொண்ட நிலையில், நிலம் உற வணங்கினார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 12

பழுது தீர்ப்பார் திருத்தொண்டர்
பரவி விண்ணப் பஞ்செய்து
தொழுது போந்து மடம்புகுந்து
தூய பணிசெய் யப்பெறா
தழுது கங்கு லவர்துயிலக்
கனவி லகில லோகங்கள்
முழுது மளித்த முதல்வனார்
முன்னின் றருளிச் செய்கின்றார்.

பொழிப்புரை :

: பிறர்க்கு ஊறு செய்தும் வரும் கொடிய தொழிலின ரான சமணர்கள் செய்த இச்செயலை அறிந்த தண்டியடிகள் வெகுண்டு, வேதனையடைந்து, நஞ்சுண்டு கருமையாய கழுத்தினையுடைய சிவபெருமானின் பூங்கோயிலின் முன்பு வந்து வணங்கி, `என் ஐயனே! இன்று சமணர்கள் என்னை இழிவு செய்திட நான் மனவேதனையுறுவ தானேன், அடியேற்கு இதனைத் தீர்த்திட அருள் புரிதல் வேண்டும்\' என விண்ணப்பித்துக் கொண்ட நிலையில், நிலம் உற வணங்கினார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 13

நெஞ்சின் மருவும் கவலையினை
ஒழிநீ நின்கண் விழித்துஅந்த
வஞ்ச அமணர் தங்கள்கண்
மறையு மாறு காண்கின்றாய்
அஞ்ச வேண்டா வென்றருளி
அவர்பால் நீங்கி அவ்விரவே
துஞ்சும் இருளின் அரசன்பாற்
தோன்றிக் கனவி லருள் புரிவார்.

பொழிப்புரை :

தண்டியே! `நின் நெஞ்சில் கொண்ட கவலையை ஒழிவாய்! உன் கண்ணை நீ விழித்துப் பார்வை பெறவும், அவ்வஞ்சக ராய சமணர்களின் கண்கள் மறையவும் நீ காணப்போகின்றாய்! அஞ்ச வேண்டா\' என அருளி, அவரிடம் நீங்கி, அவ்விரவிலேயே அனைவ ரும் துயிலும் இருளில், அரசனிடத்துத் தோன்றி, அவன் கனவில் அருள் செய்வாராகிய பெருமான்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 14

தண்டி நமக்குக் குளங்கல்லக்
கண்ட அமணர் தரியாராய்
மிண்டு செய்து பணிவிலக்க
வெகுண்டான் அவன்பால் நீமேவிக்
கொண்ட குறிப்பால் அவன்கருத்தை
முடிப்பா யென்று கொளவருளித்
தொண்டர் இடுக்கண் நீங்கஎழுந்
தருளி னார்அத் தொழிலுவப்பார்.

பொழிப்புரை :

` தண்டி நமக்குக் குளம் தோண்டக் கண்ட சமணர்கள் தாங்காது, பொறாமையால் வன்மை செய்து, அவன் பணியினை விலக்கிட, அவன் வெகுட்சியால் வேதனைப்பட்டான். அவனிடம் நீ சென்று அவன் மனத்தில் கொண்ட குறிப்பின்வழி அவன் எண்ணத்தை முடிப்பாய்\' என அருள் புரிந்து, தண்டியடிகளது இடுக்கண் நீங்க அருள்செய்து மறைந்தருளினார் அவர்தம் தொழிலை மகிழ்வாராகிய இறைவர்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 15

வேந்தன் அதுகண் டப்பொழுதே
விழித்து மெய்யில் மயிர் முகிழ்ப்பப்
பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப்
போற்றிப் புலரத் தொண்டர்பால்
சார்ந்து புகுந்த படிவிளம்பத்
தம்பி ரானர் அருள் நினைந்தே
ஏய்ந்த மன்னன் கேட்பஇது
புகுந்த வண்ணம் இயம்புவார்.

பொழிப்புரை :

அரசன் அக்கனாக் கண்ட அப்பொழுதே விழித்து, உடலில் மயிர் சிலிர்த்திடக் குளிர்ந்த மலராய கொன்றை மாலையைச் சூடினாரைப் போற்றி, இருள் நீங்கியவுடன், தொண்டராய தண்டியடிக ளிடம் சென்று, தனக்குப் பெருமான் அருளிய பாங்கைச் சொல்லிட, அதுகேட்டுத் தம்பெருமான் அருள் நினைந்து, திருவருளின் வாய்ப்புடைய அரசன் கேட்ப, இவ்வண்ணமாகச் சொல்வாராய்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 16

மன்ன கேள்யான் மழவிடையார்
மகிழுந் தீர்த்தக் குளங்கல்லத்
துன்னும் அமணர் அங்கணைந்தீ
தறமன் றென்று பலசொல்லிப்
பின்னுங் கயிறு தடவுதற்கியான்
பிணித்த தறிக ளவைவாங்கி
என்னை வலிசெய் தியான்கல்லுங்
கொட்டைப் பறித்தா என்றியம்பி.

பொழிப்புரை :

`அரசே! கேள்; இளைய ஆனேற்றினையுடைய பெருமான் மகிழ்கின்ற தீர்த்தக் குளத்தை யான் தோண்டிட, அதனைக் கண்டு அங்கு இருந்த சமணர்கள், வந்து என்னை நோக்கி, ஈது அறமன்று என்று பல சொல்லிப் பின்னர், யான் குருடானமையின், தடவிச் செல்லக் கட்டிய கயிறு, அதனைப் பிணைத்திருக்கும் கோல்கள் ஆகியவற்றைப் பிடுங்கி, எனக்கு வன்மைசெய்து, யான் வைத்திருந்த மண்வெட்டியையும் பறித்தார்கள்\' என்று சொல்லிப் பின்னரும்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 17

அந்த னான வுனக்கறிவும்
இல்லை யென்றா ரியானதனுக்
கெந்தை பெருமா னருளால்யான்
விழிக்கி லென்செய் வீரென்ன
இந்த வூரில் இருக்கிலோம்
என்றே ஒட்டி னார்இதுமேல்
வந்த வாறு கண்டிந்த
வழக்கை முடிப்ப தெனமொழிந்தார்.

பொழிப்புரை :

`குருடனான உனக்கு அறிவும் இல்லை என்றார்கள். யான் அதற்கு எந்தை பெருமான் அருளால் கண்பார்வை பெற்று விழிப்பின் என் செய்வீர்கள்? என்ன, அவ்வாறு நிகழின் நாங்கள் இவ்வூரில் இருக்கமாட்டோம் என ஒட்டிக் (சபதம்) கூறினார்கள். நிகழ்ந்தது இது, இனி இவ்வழக்கில் காணும் உண்மை கண்டு தேர்வாய்\' என்று தண்டியடிகள் மொழிந்தார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 18

அருகர் தம்மை அரசனும்அங்
கழைத்துக் கேட்க அதற்கிசைந்தார்
மருவுந் தொண்டர் முன்போக
மன்னன் பின்போய் மலர்வாவி
அருகு நின்று விறல்தண்டி
யடிகள் தம்மை முகநோக்கிப்
பெருகுந் தவத்தீர் கண்ணருளாற்
பெறுமா காட்டும் எனப்பெரியோர்.

பொழிப்புரை :

அதுகேட்ட அரசன், சமணர்களை அங்கு அழைத்து இதனைக் கூற, அவர்களும் அதற்கு இசைந்தவர்களாய், இறைவன் அருளால் சிறந்திடும் தண்டியடிகள் முன்னாக அரசன் பின்னாகச் சென்று மலர்கள் சிறந்திடும் குளத்தினருகே நின்று வலியுடைய தண்டியடிகளின் முகநோக்கிப் பெருகும் தவமுடையீர்! உமது கண்ணினை அருளால் பெறுமாறு இங்குக் காட்டும் என்ன, அதுகேட்ட பெரியோராகிய தண்டியடிகளும்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 19

ஏய்ந்த வடிமை சிவனுக்கியான்
என்னில் இன்றென் கண்பெற்று
வேந்த னெதிரே திருவாரூர்
விரவுஞ் சமணர் கண்ணிழப்பார்
ஆய்ந்த பொருளுஞ் சிவபதமே
யாவ தென்றே அஞ்செழுத்தை
வாய்ந்த தொண்டர் எடுத்தோதி
மணிநீர் வாவி மூழ்கினார்.

பொழிப்புரை :

உண்மையில் சிவபெருமானுக்குப் பொருந்திய அடிமையான் என்னில் இன்று யான் கண் பெற்றிட, இவ்வரசன் முன்னாகத் திருவாரூரில் வாழ்ந்துவரும் இச்சமணர்கள் கண்ணிழப்பர், செவ்விய நூல்களால் ஆராய்ந்து தெளிந்த மெய்ப்பொருளும் சிவபெருமானுடைய திருவடிகளே எனக் கூறி திருவருள் வாய்ப்புற்ற தண்டியடிகள் திருவைந்தெழுத்தை ஓதியவாறு அழகிய நீர்க் குளத்தில் மூழ்கினார்.

குறிப்புரை :

சிவபதம் - சிவபெருமானின் திருவடி. சிவபெருமானின் திருப்பெயராய சொல்; திருவைந்தெழுத்து என்றலும் ஒன்று. பதம் - சொல்லாதல், `அஞ்சு பதம் சொல்லி\' (தி.7 ப.83 பா.1) என்ற திருவாக்காலும் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 20

தொழுது புனல்மேல் எழுந்தொண்டர்
தூய மலர்க்கண் பெற்றெழுந்தார்
பொழுது தெரியா வகையிமையோர்
பொழிந்தார் செழுந்தண் பூமாரி
இழுதை அமணர் விழித்தேகண்
ணிழந்து தடுமா றக்கண்டு
பழுது செய்த அமண்கெட்ட
தென்று மன்னன் பகர்கின்றான்.

பொழிப்புரை :

குளத்தில் மூழ்கித் தொழுது நீர்மேலாக எழுந்த தண்டியடிகள், தமது தூயதான மலர்க் கண்களைப் பெற்று எழுந்தார். அதுபொழுது வானவெளியே இதுவென அறியாவாறு தேவர்கள் செழுமையான பூமழை பொழிந்தார்கள். இந்நிலையில் பேய்களாகும் சமணர்கள் கண் விழித்தவாறே, பார்வை இழந்து தடுமாறக் கண்ட அர சன், பழுதுசெய்த சமணம் இனிக் கெட்டழிந்தது என மொழிவானாய்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 21

தண்டி யடிகள் தம்முடனே
ஒட்டிக் கெட்ட சமண்குண்டர்
அண்டர் போற்றுந் திருவாரூர்
நின்றும் அகன்று போய்க்கழியக்
கண்ட அமணர் தமையெங்கும்
காணா வண்ணந் துரக்கவென
மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனங்கலங்கி.

பொழிப்புரை :

தண்டியடிகள் தம்முடன் ஒட்டிக் கெட்டழிந்த வஞ்சகச் சமணர்கள், தேவர்கள் போற்றும் திருவாரூரினின்றும் அகன்றுபோய் ஒழிந்திட, நீங்கள் அவர்களைக் கண்டவிடத்தே இனி இங்குக் காணாவண்ணம் களைக எனக் கட்டளை செய்தலும், அதன்படி அரசனது படைவீரர்கள் சமணர்களை அடித்துத் துரத்துதலும், கண் காண முடியாத அவர்கள் மனக்கலக்கம் கொண்டு,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 22

குழியில் விழுவார் நிலைதளர்வார்
கோலும் இல்லை எனவுரைப்பரார்
வழியீ தென்று தூறடைவார்
மாண்டோம் என்பார் மதிகெட்டீர்
அழியும் பொருளை வழிபட்டுஇங்கு
அழிந்தோம் என்பார் அரசனுக்குப்
பழியீ தாமோ என்றுரைப்பார்
பாய்க ளிழப்பார் பறிதலையர்.

பொழிப்புரை :

குழியில் தடுக்கி வீழ்வார்களும், செல்லும் நிலை தளர்வார்களும், அந்தோ எமக்கு ஊன்றுகோலும் இல்லையே எனச் சொல்வார்களும், வழி இஃதெனச் சென்று செடிப் புதர்களைச் சார்வார் களும், அழிந்தோம் என்பார்களும், இவ்வாறு செய்யும் அரசனுக்கு இதுவும் பழியாய் ஆகுமோ? ஆகாது என்பார்களும், தமக்குரிய பாய்களை இழப்பார்களுமாகிய அச்சமணர்கள்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 23

பீலி தடவிக் காணாது
பெயர்வார் நின்று பேதுறுவார்
காலி னோடு கைமுறியக்
கல்மேல் இடறி வீழ்வார்கள்
சால நெருங்கி எதிரெதிரே
தம்மில் தாமே முட்டிடுவார்
மாலு மனமும் அழிந்தோடி
வழிக ளறியார் மயங்குவார்.

பொழிப்புரை :

மயிற்பீலியைக் கீழே வீழ்த்தி அதனைக் காணாது செல்வார்களும், செல்லாது நின்று நடுங்குவார்களும், மிகவும் நெருங்கிச் செல்லும் நிலையில் தாம்தாமும் முட்டிக்கொள்வார்களும், மனம் உடைந்த நிலையில் மயங்குவார்களுமாயினார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 24

அன்ன வண்ணம் ஆரூரில்
அமணர் கலக்கங் கண்டவர்தாம்
சொன்ன வண்ண மேஅவரை
ஓடத் தொடர்ந்து துரந்ததற்பின்
பன்னும் பாழி பள்ளிகளும்
பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து
மன்ன னவனும் மனமகிழ்ந்து
வந்து தொண்டர் அடிபணிந்தான்.

பொழிப்புரை :

அவ்வாறாய நிலையில், அச்சமணர்களைத் தாங்கள் முன்னர் சொன்னவாறே அவர்களைத் தொடர்ந்து துரத்தியபின், சமணப் பள்ளிகளையும் இடித்துக், குளத்தைச் சூழந்த கரையையும் அகலமாகச் செய்து, அரசனும் மனமகிழ்ந்து வந்து தண்டியடிகள் திருவடிகளை வணங்கினான்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 25

மன்னன் வணங்கிப் போயினபின்
மாலு மயனும் அறியாத
பொன்னங் கழல்கள் போற்றிசைத்துப்
புரிந்த பணியுங் குறைமுடித்தே
உன்னும் மனத்தால் அஞ்செழுத்தும்
ஓதி வழுவா தொழுகியே
மின்னுஞ் சடையார் அடிநீழல்
மிக்க சிறப்பின் மேவினார்.

பொழிப்புரை :

அரசன் வணங்கிப்போன பின், திருமாலும் அறிந்திடாத பெருமானின் பொன்வண்ணமாய அழகிய திருவடிகளைப் போற்றித், தாம் செய்த திருப்பணியின் துறையினையும் முடித்து, சிந்திக்கும் மனத்தால் திருவைந்தெழுத்தையும் ஓதித் தமது பணியில் வழுவின்றி ஒழுகிவந்து, மின்னும் சடையையுடைய பெருமான் திருவடி நிழற்கீழ் மிக்க சிறப்பில் பொருந்தினார் தண்டியடிகள்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 26

கண்ணின் மணிக ளவையின்றிக்
கயிறு தடவிக் குளந்தொட்ட
எண்ணில் பெருமைத் திருத்தொண்டர்
பாத மிறைஞ்சி யிடர்நீங்கி
விண்ணில் வாழ்வார் தாம்வேண்டப்
புரங்கள் வெகுண்டார் வேற்காட்டூர்
உண்ணி லாவும் புகழ்த்தொண்டர் மூர்க்கர் செய்கை யுரைக்கின்றாம்.

பொழிப்புரை :

கண்ணின் மணிகளாய ஒளியின்றிக் கயிற்றைத் தடவிக் கொண்டே ஏறியும் இழிந்தும் பொருந்திய திருத்தொண்டாற் றிய தண்டியடிகளின் திருவடிகளை வணங்கித் துன்பங்கள் பலவும் நீங்கப்பெற்று, வானில் வாழும் தேவர்கள் வேண்ட முப்புரங்களையும் எரித்த பெருமான் விரும்பி உறையும் திருவேற்காட்டில் வாழும் நிலவிய புகழுடைய தொண்டர் மூர்க்க நாயனாரது செயலினை இனி எடுத்து மொழிவாம். தண்டியடிகள் நாயனார் புராணம் முற்றிற்று.

குறிப்புரை :

***************
சிற்பி