கண்ணப்பநாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

மேவலர் புரங்கள் செற்ற  
விடையவர் வேத வாய்மைக்
காவலர் திருக்கா ளத்திக்
கண்ணப்பர் திருநா டென்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும்
நல்வளம் பெருகி நின்ற
பூவலர் வாவி சோலை  
சூழ்ந்தபொத் தப்பி நாடு.

பொழிப்புரை :

பகை அசுரரின் முப்புரங்களை அழித்தவரும், ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டவரும், நான்மறைகளின் உட் பொருளாய் நிற்கும் காவலரும் ஆன திருக்காளத்தி மலையில் இருந்தருளும் புண்ணியருக்குத் தம் கண்ணினை அப்பிய கண்ணப்ப நாயனார் தோன்றிய திருநாடாவது, நாவன்மையுடைய புலவர்கள் புகழ்ந்து போற்றிடுகின்ற நல்ல வளங்கள் பலவும் பெருகி நிற்கும் பூக்கள் மலரும் குளங்களும், பூஞ்சோலைகளும் சூழ விளங்கி யிருக்கும் பொத்தப்பி நாடு என்பதாகும்.

குறிப்புரை :

பொத்தப்பி நாடு - காளத்தி மலைக்கு வடக்கே மலை நாடாகவுள்ள பகுதியாகும். இஃது இன்றும் இப்பெயரில் அழைக்கப் பெறுகிறது.

பண் :

பாடல் எண் : 2

இத்திரு நாடு தன்னில்
இவர்திருப் பதியா தென்னில்
நித்தில அருவிச் சாரல்
நீள்வரை சூழ்ந்த பாங்கர்
மத்தவெங் களிற்றுக் கோட்டு
வன்றொடர் வேலி கோலி
ஒத்தபே ரரணஞ் சூழ்ந்த
முதுபதி உடுப்பூர் ஆகும்.

பொழிப்புரை :

இப்பொத்தப்பி என்னும் திருநாட்டில், கண்ணப்பர் தோன்றியருளிய திருவுடைய நகரம் யாதெனில், முத்துக் கொழித் திடும் அருவிகளின் நீர்வீழ்ச்சிகள் குறைவுபடாத நீண்ட பெரிய மலைகள் சூழ்ந்திருப்ப, அவற்றின் எல்லையில் மதம் பொழியும் கொடிய யானைகளின் கொம்புகளால் வேலியிட்டு, அதன் வலிய நீண்ட தொட ராய மதிலே அவ்வூருக்குக் காவலாக அமைந்த மிகவும் பழையதாகிய உடுப்பூர் என்னும் நகரமாகும்.

குறிப்புரை :

அவ்வூரின் எல்லையில் யானைக் கொம்புகளை வரிசையாக நாட்டி அவையே வலியுடைய மதில் போன்று விளங்கிட அவ்வரணுள் விளங்கும் பதி உடுப்பூர் ஆகும்.காடுகள் சூழ்ந்த பதியாதலின், விலங்குகளும், தீயோரும் உட்புகாதவாறு யானைக் கொம்பால் வேலியினைக் காவலாக அமைத்தனர்.

பண் :

பாடல் எண் : 3

குன்றவர் அதனில் வாழ்வார்
கொடுஞ்செவி ஞமலி ஆர்த்த
வன்றிரள் விளவின் கோட்டு
வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும்
கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில்
ஐவனம் உணங்கு மெங்கும்.

பொழிப்புரை :

அவ்வுடுப்பூரில் வாழ்பவர்கள் வேடர்களாவர். பற்பல இடங்களிலும் கொடிய நீண்ட காதுகள் வளைந்து தொங்கும் வேட்டை நாய்களை வார்க்கயிற்றினால் கட்டி வைத்திருக்கும் பெருவிளாமரங்களின் கொம்புகளிலே, வாரினால் அமைந்த வலைகள் தொங்க விடப்பட்டிருக்கும். அவற்றின் புறத்து, வேடரின் வளர்ப்பு மிருகங்களாய பன்றி, புலி, கரடி, காட்டுப்பசு, மான் முதலிய பார்வை மிருகங்கள் கட்டப்பட்டிருக்கும். அன்றியும் அங்கு மலை நெல்லின் புழுங்கலும் முற்றத்தில் காய்ந்து கொண்டிருக்கும்.

குறிப்புரை :

பார்வை மிருகம் - வேட்டையாடுதற் பொருட்டு வேடர்கள் தங்கள் பதியிலே காட்டு விலங்குகளின் குட்டிகளைப் பிடித்து வந்து வளர்த்து அவைகளை வீட்டு விலங்குகளாக்கி வளர்ப்பர். இவையே பார்வை மிருகம் என்பர். இவற்றைக் கொண்டு அவ்வவ்வினமாய விலங்குகளைப் பிடிப்பர். விளவின் கோடு - விளாமரத்தின் கிளைகள், இம் மரத்தில் நாய் முதலியவற்றைக் கட்டி வைப்பர். `பார்வையாத்த பறைதாள் விளவின்` எனவரும் சிறு பாணாற்றுப்படையும் காண்க.

பண் :

பாடல் எண் : 4

வன்புலிக் குருளை யோடும்
வயக்கரிக் கன்றி னோடும்
புன்தலைச் சிறும கார்கள்
புரிந்துடன் ஆட லன்றி
அன்புறு காதல் கூர
அணையுமான் பிணைக ளோடும்
இன்புற மருவி யாடும்
எயிற்றியர் மகளி ரெங்கும்.

பொழிப்புரை :

கொடிய புலிக்குட்டிகளோடும், வீரமுடைய யானைக் கன்றுகளோடும், முரட்டு மயிருடைய சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பர். அன்றியும் தம்பால் அன்புடன் காதல் கொண்டு அணைகின்ற கன்னி மான்களுடன் இன்புற மகிழ்ந்து விளையாடும் வேடருடைய பெண்களும் எங்கும் அப்பதியில் காணப்படுவர்.

குறிப்புரை :

சிறுவரிடம் வீரமும், சிறுமியரிடம் அன்பும் தோன்ற விளையாட்டுக்கள் அமைந்துள்ளமை அறியத்தக்கது.

பண் :

பாடல் எண் : 5

வெல்படைத் தறுகண் வெஞ்சொல்
வேட்டுவர் கூட்டந் தோறும்
கொல்எறி குத்தென் றார்த்துக்
குழுமிய வோசை யன்றிச்
சில்லரித் துடியுங் கொம்பும்
சிறுகண்ஆ குளியுங் கூடிக்
கல்லெனு மொலியின் மேலும்
கறங்கிசை யருவி யெங்கும்.

பொழிப்புரை :

வெல்லும் படைகளும், கொடுந்தன்மையும், கடிய சொல்லும் கொண்டிருக்கும் வேட்டுவருடைய கூட்டந் தோறும், `கொல்`, `எறி`, `குத்து` என்னும் பேரொலிகள் கேட்கும். அவ்வோ சையே அன்றி, சிறிய பரல்கள் உள்ளிட்ட உடுக்கும், ஊது கொம்பும், சிறுமுகமுடைய ஆகுளிப் பறையும் கூடிக் கலீரென ஒலித்திடும். இவ்வோசைகளுக்கு மேலாக அங்குள்ள மலைகளில் இரைந்தோடும் அருவி ஒலிகளும் ஆங்காங்குக் கேட்கும்.

குறிப்புரை :

வேடுவர் இயல்பைக் `கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமைசொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாறலைக்குமிடம்` (தி.7 ப.49 பா.1) எனவரும் சுந்தரர் திருவாக்காலும் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 6

ஆறலைத் துண்ணும் வேடர்
அயற்புலங் கவர்ந்து கொண்ட
வேறுபல் உருவின் மிக்கு
விரவும்ஆன் நிரைக ளன்றி
ஏறுடை வானந் தன்னில்
இடிக்குரல் எழிலி யோடு
மாறுகொள் முழக்கங் காட்டும்
மதக்கைமா நிரைக ளெங்கும்.

பொழிப்புரை :

அப்பதிகளிலும், வழிப்பறிசெய்து களவினால் வரும் பொருள் கொண்டு உண்ணும் தொழிலுடைய வேடர்கள், அயற் புலத்திற்குச் சென்று, களவினால் கொண்டுவந்த வெவ்வேறான பல வடிவங்களில் மிகுந்து காணப்படும் பசுவின் நிரைகளேயன்றி; வானத்தில் இடிக்கும் ஓசையுடைய முகில்களுடன் மாறு கொண்டு முழங்கும் பேரோசையைக் காட்டும் மதம் பொழியும் யானைகளின் நிரைகளும் காணப்படுவன.

குறிப்புரை :

ஆறலைத்தல் - பொருள் கொள வேண்டி வழிப் போவாரைத் தடுத்துத் துன்புறுத்துதல்.

பண் :

பாடல் எண் : 7

மைச்செறிந் தனைய மேனி
வன்தொழில் மறவர் தம்பால்
அச்சமும் அருளும் என்றும்
அடைவிலார் உடைவன் தோலார்
பொச்சையி னறவும் ஊனின்
புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சழற் பகழி வேடர்க்
கதிபதி நாக னென்பான்.

பொழிப்புரை :

மை செறிந்துள்ளது எனும்படி கரிய மேனியையும், கொடுந்தொழிலையும் உடைய அந்த ஊரில் வாழும் வேடர்கள், அச்சமும் அருளும் என்றுமே தம்மிடம் வந்து அடைதல் இல்லாதவர்கள். வலிய தோலின் உடையை உடையவர்கள். மலைத் தேனும் ஊன் கலந்த சோறும் உணவாக உண்பவர்கள். நஞ்சு ஊட்டிய கூரிய கொடிய நெருப்புப் போலும் அம்பினைக் கைக் கொண்டவர்கள். அத்தகைய வேடர்களுக்கெல்லாம் அரசன் `நாகன்` என்னும் பெயருடையான்.

குறிப்புரை :

பொச்சை - மலை; நறவு - தேன். பொச்சையில் நறவு - சிறப்பில்லாத தேன்; கள் என்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 8

 பெற்றியால் தவமுன் செய்தான்
ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான்
கொடுமையே தலைநின் றுள்ளான்
விற்றொழில் விறலின் மிக்கான் 
வெஞ்சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை 
மனைவியும் தத்தை யென்பாள்.

பொழிப்புரை :

இந்நாகன் என்பான், இப்பிறவி பெறுதற்கு முற்பிறப்பில் தவம் செய்துள்ளான் எனினும், பிறந்த இப்பிறப்பின் சார்பால் கொலை முதலிய குற்றங்கள் செய்தலையேகுணம் எனக் கொண்டு வாழ்பவன். கொடுமையையே தன் தலையாய செய்கை யாகப் பேணி வாழ்பவன். விற்றொழிலில் மிகுந்த வலி யுடையவன். கொடிய சினமுடைய சிங்கத்தின் இயல்பை ஒத்தவன். அத்தகை யோனுக்கு அக்குறிஞ்சியில் அவனுடைய வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவள் `தத்தை` எனப்படுவாள்.

குறிப்புரை :

`மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல்` (குறள்,70), எனும் அருள்மொழிக் கிணங்க, நாகன் நன்மகவைப் பெறும் பேறு பெற்றவன் ஆதலின், `பெற்றியால் தவம்முன் செய்தான்` என்றார். குறிச்சி - குறிஞ்சிநிலத் துள்ள ஊர்களை இப்பெயரால் அழைப்பர்.

பண் :

பாடல் எண் : 9

 அரும்பெறல் மறவர் தாயத்
தான்றதொல் குடியில் வந்தாள்
இரும்புலி எயிற்றுத் தாலி
இடையிடை மனவு கோத்துப்
பெரும்புறம் அலையப் பூண்டாள் 
பீலியுங் குழையுந் தட்டச்
சுரும்புறு படலை முச்சிச்
சூரரிப் பிணவு போல்வாள்.

பொழிப்புரை :

அத் தத்தை என்பாளும், பெறுதற்கரிய சிறப்புடைய வேடர் இனத்துள் ஒன்றாய உயர்ந்த பழங்குடியில் பிறந்தவள். பெரிய புலியின் பற்களால் ஆய மங்கலநாணில் இடையிடையே கோர்க்கப் பட்ட மணிகள் தனது பெரிய பிடரியில் அசைய அதனை மார்பில் அணிந்தவள். அவள் மயிற்பீலியும் இளந்தளிர்களும் சேரக்கொண்ட வண்டுகள் மொய்த்திடும் பூமாலையைக் கொண்டையில் அணிந்த வள். அச்சம் பொருந்திய பெண் சிங்கத்தைப் போன்றவள்.

குறிப்புரை :

புலிப்பற்களை மங்கலநாணில் கோத்து அணிவது மறவர்குல மரபாகும். இது அவர்களின் வீரத்தைக் காட்டுவதாகும். `புலிப்பல் கோத்த புலம்புமணித்தாலி` (அகநா.18) எனவரும் அகப்பாட்டும் காண்க. பெரும்புறம் - பிடரியை அடுத்துள்ள பக்கம்.

பண் :

பாடல் எண் : 10

பொருவருஞ் சிறப்பின் மிக்கார்
இவர்க்கினிப் புதல்வர்ப் பேறே
அரியதென் றெவருங் கூற
அதற்படு காத லாலே
முருகலர் அலங்கற் செவ்வேல்
முருகவேள் முன்றிற் சென்று
பரவுதல் செய்து நாளும்
பராய்க்கடன் நெறியில் நிற்பார்.

பொழிப்புரை :

ஒப்பற்ற பெருஞ்சிறப்புமிக்க இவர்களுக்குத் திருமணமாகிப் பல்லாண்டுகள் ஆகியும், மக்கட் பேறிலதாக, அங்குள் ளார் அனைவரும் இனி இவர்க்கு மக்கட்பேறே அரிது எனக்கூறிவரும் அமையத்தில், தமக்கு ஒரு மகன் வேண்டுமெனும் காதலால், அப் பேற்றைப் பெற விரும்பி, தம் குலதெய்வமான நறுமணம் கமழும் மலர்மாலையைச் சூடிய செவ்விய வேலேந்திய முருகப்பெருமா னுடைய திருமுன்னிலையில் சென்று நாளும் வழிபாடு புரிந்து வருவாராய்,

குறிப்புரை :

வேண்டுநர் வேண்டியாங்கு எய்துதற்கு அருள்புரியும் கருணையானும், குறிஞ்சிநிலத் தெய்வமுமான முருகனே தம்குல தெய்வமாக விளங்கும் சிறப்பால் முருகப் பெருமானை வழிபடு வாராயினர்.

பண் :

பாடல் எண் : 11

 வாரணச் சேவ லோடும்
வரிமயிற் குலங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச்
சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவே லோற்குப்
புகழ்புரி குரவை தூங்கப்
பேரணங் காடல் செய்து
பெருவிழா எடுத்த பின்றை.

பொழிப்புரை :

சேவற்கோழிகளையும், வரிகளை உடைய அழகிய மயில்களையும் காணிக்கையாக விடுத்தும், மணிமாலை களின் தோரணங்களைத் தூக்கியும், வண்டுகள் மொய்க்கும் கடப்ப மாலைகளைத் தூக்கியும், போரில் அழகும், வெற்றிகாணும் திருவு முடைய நெடிய வேலையுடைய முருகப் பெருமானின் புகழ்பாடிடும் குரவையாடலைச் செய்தும், பெரிய திருவிழா நடத்தி, அதன் பின்னர்.

குறிப்புரை :

சேவலும் மயிலுமாகிய இனங்களைக் காணிக்கையாகக் கொடுத்ததன்றி, அவற்றைப் பலி கொடுத்திலர் என்பது அறியத்தக்கது.

பண் :

பாடல் எண் : 12

பயில்வடுப் பொலிந்த யாக்கை  
வேடர்தம் பதியாம் நாகற்
கெயிலுடைப் புரங்கள் செற்ற
எந்தையார் மைந்த ரான
மயிலுடைக் கொற்ற வூர்தி
வரையுரங் கிழித்த திண்மை
அயிலுடைத் தடக்கை வென்றி
அண்ணலார் அருளி னாலே.

பொழிப்புரை :

வேட்டையாடுதலினாலும், போரினாலும் ஏற்பட்ட வடுக்கள் நிறைந்த உடலுடைய வேடர்களின் தலைவனான நாகன் என்பானுக்கு, மதில்களையுடைய முப்புரங்களையும் எரித்த பெருமானின் மைந்தரும், சிறந்த மயிலினைத் தம் வெற்றிக்கு அறி குறியாக ஊர்தியாகக் கொண்டவரும், வஞ்சனையாய கிரவுஞ்ச மலையின் நீக்கமுடியாத வலியினைக் கிழித்த திண்மையுடைய வேலைத் திருக்கையில் கொண்டவருமான வெற்றிதரும் ஆறுமுகப் பெருமானின் திருவருளினாலே.

குறிப்புரை :

`விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் தன்னாளை எடுத்து` (குறள், 776) என்பது வீரரின் மரபாதலின் `பயில் வடுப் பொலிந்த யாக்கை` என்றார்.

பண் :

பாடல் எண் : 13

 கானவர் குலம்வி ளங்கத்
தத்தைபால் கருப்பம் நீட
ஊனமில் பலிகள் போக்கி
உறுகடன் வெறியாட் டோடும்
ஆனஅத் திங்கள் செல்ல
அளவில்செய் தவத்தி னாலே
பான்மதி உவரி ஈன்றால்
எனமகப் பயந்த போது.

பொழிப்புரை :

வேடருடைய குலம் சிறந்து விளங்கிடத் தத்தை என்பாளிடத்துக் கருத்தங்கி வளர்ந்திட, அதுகண்ட நாகன், தாய்க்கும் கருவிற்கும் ஊனம் இல்லையாகச் செய்யும் கடன்களை முருகப் பெருமானுக்குக் கொடுத்து, மேலும் செயத்தக்க கடன்களுடன் வெறியாடலும் நிகழ்வித்து வர, அக்கருவினுக்கு உற்ற பத்துத் திங்களும் நிறைவெய்த, இவ்வுலகம் செய்த அளவிலாத நற்றவத்தினாலே, நிறைமதியை உவர்க்கடல் பெற்றெடுத்தது போல, கரிய மேனியை யுடைய ஓர் ஆண்குழந்தையைத் தத்தை பெற்றெடுத்த பொழுது.

குறிப்புரை :

பால்மதி:- நல்ல குளிர்ச்சியையும், நிறைவையும் உடையமதி, வினையும் பயனும் பற்றி வந்த உவமை; நிறம்பற்றிய தன்று.

பண் :

பாடல் எண் : 14

 கரிப்பரு மருப்பின் முத்தும்
கழைவிளை செழுநீர் முத்தும்
பொருப்பினின் மணியும் வேடர்
பொழிதரு மழையே யன்றி
வரிச்சுரும் பலைய வானின் 
மலர்மழை பொழிந்த தெங்கும்
அரிக்குறுந் துடியே யன்றி
அமரர்துந் துபியும் ஆர்த்த.

பொழிப்புரை :

யானைக் கொம்பினின்றும் அரிந்தெடுத்த முத்துக்களையும், மூங்கிலில் விளைந்த நீரோட்டமுடைய நன் முத்துக்களையும், மலையில் விளையும் மணிகளையும் வேடர்கள் தம் மகிழ்வால் அள்ளிப் பொழியும் மழையே அன்றி, வரிகளையுடைய வண்டுகளும் தேனுக்கு அலைந்திட வானின்று எங்கும் பூமழையும் பொழிந்தது. சிறு ஓசையுடைய வேடரின் உடுக்குகளுடன் வானில் உள்ள தேவர்களுடைய துந்துபிகளும் முழங்கின.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 15

 அருவரைக் குறவர் தங்கள்
அகன்குடிச் சீறூ ராயம்
பெருவிழா எடுத்து மிக்க
பெருங்களி கூருங் காலைக்
கருவரை காள மேகம் 
ஏந்திய தென்னத் தாதை
பொருவரைத் தோள்க ளாரப்
புதல்வனை யெடுத்துக் கொண்டான்.

பொழிப்புரை :

அரிய மலையில் வாழும் பெருகிய சுற்றத்தை யுடைய குறவர்கள் வாழ்கின்ற அச்சிற்றூர் மக்கள். மகிழ்வால் பெரு விழா எடுத்து, மிக்கதொரு பெருமகிழ்வு எய்தும் காலையில், கரிய தொரு பெருமலை கருமுகில் ஒன்றை ஏந்திக்கொண்டது எனும்படி யாக, தந்தையான நாகன் மலைபோன்ற தன்தோள்கள் இனிமை கூரத் தன் மகனைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டான்.

குறிப்புரை :

காளமேகம் - நீர்முகந்து மழைபொழிதற்குரியதான கரியமேகம் .

பண் :

பாடல் எண் : 16

கருங்கதிர் விரிக்கு மேனிக் 
காமரு குழவி தானும்
இரும்புலிப் பறழின் ஓங்கி 
இறவுள ரளவே யன்றி
அரும்பெறல் உலகம் எல்லாம் 
அளப்பரும் பெருமை காட்டித்
தருங்குறி பலவுஞ் சாற்றுந்
தன்மையில் பொலிந்து தோன்ற.

பொழிப்புரை :

கரிய ஒளியைப் பரப்பிடும் அழகில் சிறந்த அக்குழவிதானும், பெரியதொரு புலிக்குட்டியின் வனப்பினைப்போல் சிறந்து, அவ்வூரில் உள்ள வேடர்கள் அளவே அன்றிப் பெறற்கரிய இவ்வுலகம் எங்கணும் பெறமுடியாத அளப்பரிய பெருமைகளைக் காட்டி, பெருஞ் சிறப்புகள் பின்விளைதற்கேற்ற குறிகள் பலவும் காண்டற்குரிய தன்மையில் பொலிந்து தோன்றிட ,

குறிப்புரை :

********

பண் :

பாடல் எண் : 17

 அண்ணலைக் கையில் ஏந்தற்
கருமையால் உரிமைப் பேரும்
திண்ணன்என் றியம்பும் என்னத்
திண்சிலை வேட ரார்த்தார்
புண்ணியப் பொருளா யுள்ள
பொருவில்சீர் உருவி னானைக்
கண்ணினுக் கணியாத் தங்கள்
கலன்பல வணிந்தா ரன்றே.

பொழிப்புரை :

தலைமைசான்ற அக்குழந்தையை நாகன் கையில் எடுத்து ஏந்துவதற்கு அருமையாக இருத்தலால், இக்குழந்தைக்கு உற்றபேரும் ``திண்ணன்`` என்று அழையுங்கள் என்னலும், வலிமை பொருந்திய வில்வேடர் யாவரும் பேரொலி செய்து மகிழ்ந்தார்கள். அதுபொழுது புண்ணியத்தின் பொருளாய் நின்ற தனக்கு நிகரில்லாத சிறப்பினையுடைய அக்குழந்தைக்கு, அங்குள்ள வேடர்கள் தங்கள் கண்ணிற்கு அழகு பொருந்தத் தங்களிடத்துள்ள பல அணிகலன் களையும் அணிவித்தார்கள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 18

வரையுறை கடவுட் காப்பும்
மறக்குடி மரபில் தங்கள்
புரையில்தொல் முறைமைக்
கேற்ப பொருந்துவ போற்றிச் செய்து
விரையிளந் தளிருஞ் சூட்டி
வேம்பிழைத் திடையே கோத்த
அரைமணிக் கவடி கட்டி
அழகுற வளர்க்கும் நாளில்.

பொழிப்புரை :

மலையிடத்து வாழும் தம் தெய்வமாய முருகப் பெருமானுக்குக் கடவுட் காப்பாக, தமது வேடரின் குடி மரபிலே நிகழ்ந்து வரும் குற்றமற்ற பழைய முறைமைக் கேற்பப் பொருந்திடும் செயல்களை மிகச் சிறப்புடன் புரிந்து, நறுமணமுடைய இளந் தளிர்களும் சூட்டி, மலைவேம்பின் கொட்டைகளை இடையிடையே வைத்துக் கோத்த மணிகளாலாய அரைஞாண் மணிக்கோவையை அரையில்கட்டி, அழகுபொருந்திட வளர்த்து வரும்நாள்களில்.

குறிப்புரை :

`சேயோன்மேய மைவரையுலகு` (தொல்.அகத்.5) என்பதற்கு ஏற்ப `வரையுறை கடவுள்` என்றார். வேம்பு இழைத்து - மலைவேப்பங் கொட்டைகளை இடையிடையே கோர்த்து.

பண் :

பாடல் எண் : 19

வருமுறைப் பருவந் தோறும்
வளமிகு சிறப்பில் தெய்வப்
பெருமடை கொடுத்துத் தொக்க
பெருவிறல் வேடர்க் கெல்லாம்
திருமலி துழனி பொங்கச்
செழுங்களி மகிழ்ச்சி செய்தே
அருமையிற் புதல்வர்ப் பெற்ற
ஆர்வமுந் தோன்ற உய்த்தார்.

பொழிப்புரை :

இவ்வண்ணம் வளர்ந்து வரும் முறையான பருவங்கள் தோறும், வளம் மிகுந்த சிறப்புக்களோடு, தெய்வங்கட்கு ஏற்றிடும் முறையான பெருமடைகளையும் கொடுத்து, தமது பெருக விளங்கும் கிளைகளான வேடர்களுக்கெல்லாம் மங்கலம் நிறையும் பெருகிய பூசை பொங்கிட, சிறக்கும் களியாட்டங்களை நிகழ்த்து வித்து அதனால் மகிழ்ச்சி பெறச் செய்து அருமையாக ஓர் ஆண் மகவைப் பெற்ற தம் அன்பின் மிகுதி வெளிப்பட அக் குழந்தையை வளர்த்து வந்தார்கள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 20

 ஆண்டெதிர் அணைந்து செல்ல
இடும்அடித் தளர்வு நீங்கிப்
பூண்திகழ் சிறுபுன் குஞ்சிப்
புலியுகிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண்
முளவுமுள் அரிந்து கோத்த
நாண்தரும் எயிற்றுத் தாலி
நலங்கிளர் மார்பில் தூங்க.

பொழிப்புரை :

அவ்வாறு அன்புடன் வளர்த்திட வளரும் குழந்தைக்கு ஓராண்டு முன் அணைந்து சென்றிட, அடி எடுத்து வைத்தலில் தனக்குற்ற தளர்வு நீங்கிச் செப்பமாக நடந்திட வெள்ளிப் பூண் திகழும் புலிநகச் சுட்டியினைச் சிறு மயிராகத் திகழும் தலையில் சாத்தி, பகை காண மூண்டு எழும் சினமுடைய செங்கண் கொண்ட முள்ளம் பன்றியின் முள்களை அரிந்து இடையிடையே கோத்த நீண்ட புலிப்பல் மாலையை நெஞ்சினில் தொங்கும்படி அணிந்து,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 21

பாசொளி மணியோ டார்த்த
பன்மணிச் சதங்கை ஏங்கக்
காசொடு தொடுத்த காப்புக்
கலன்புனை அரைஞாண் சேர்த்தித்
தேசுடை மருப்பில் தண்டை
செறிமணிக் குதம்பை மின்ன
மாசறு கோலங் காட்டி
மறுகிடை யாடும் நாளில்.

பொழிப்புரை :

பசிய ஒளியுடைய மணிகளுடன் ஏனைய மணிக ளும் இடைவைத்துக் கோத்த சதங்கைகள் ஒலிக்க, செப்புக் காசுகளு டனும் சிறுவளையங்களுடனும் சேரக் கொண்டு தொகுத்த அரை ஞாண் கயிற்றை அணிந்து, ஒளியுடைய யானைக் கொம்பினால் செய்த தண்டையையும் நல்மணிகளையுடைய குதம்பையையும் காலி லும் காதிலும் முறையே அணிந்து மின்னிட, இத்தகைய மாசற்ற கோலத் தைக் காட்டித் திண்ணனார் வீதியிடை விளையாடும் நாள்களில்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 22

தண்மலர் அலங்கல் தாதை
தாய்மனங் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில்
புனிதமாந் திருவாய் நீரில்
உண்ணனைந் தமுதம் ஊறி
ஒழுகிய மழலைத் தீஞ்சொல்
வண்ணமென் பவளச் செவ்வாய்
குதட்டியே வளரா நின்றார்.

பொழிப்புரை :

குளிர்ந்த மலர் மாலை அணிந்த தந்தையும் தாயும் கண்டுமனம் களிகூரவந்து, புண்ணியம் நிறைந்த கங்கையினும் மிகப் புனிதமாய தம் திருவாய் நீரினால் உள் நனைந்து அமுதமாக ஊறி மேல் ஒழுகிய நிலையில் மழலைச் சொற்களை அழகிய மெல்லிய பவளம் போலும் தமது செவ்வாயினைக் குதட்டி மொழிந்து வளர்ந்து வருகின்றார்.

குறிப்புரை :

குதட்டுதல் - குழந்தைகள் மழலைச் சொற்களைக் கூறும்பொழுது வாயிதழ் கூட்டி ஒலிக்க முற்படும் நிலை. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 23

 பொருபுலிப் பார்வைப் பேழ்வாய்
முழையெனப் பொற்கை நீட்டப்
பரிவுடைத் தந்தை கண்டு
பைந்தழை கைக்கொண் டோச்ச
இருசுடர்க் குறுகண் தீர்க்கும்
எழில்வளர் கண்ணீர் மல்கி
வருதுளி முத்தம் அத்தாய்
வாய்முத்தங் கொள்ள மாற்றி.

பொழிப்புரை :

வளரும் இக்குழந்தைப் பருவத்தில், பொருதற் குரிய பார்வை மிருகமாக அங்கிருந்த புலியின் வாயைத் திண்ணனார், அது ஒரு குகை எனக் கொண்டு, தமது பொற்கையை அப்புலி வாய்க் குள் நீட்ட, அன்புடைத் தந்தையான நாகன் அதுகண்டு, அப்படிச் செய் யாதே என்று பசிய இலையுடைய சிறு கொம்பினைக் கையில் எடுத்து வீச, அஞ்சி, விம்மி, கதிரவனும் மதியமும் ஆய இருசுடர்களையும் கண்களாகக் கொண்டு இலங்கும் சிவபெருமானின் கண்களில் பின்னர் நேர இருக்கும் தீங்கினை, தீர்க்க இருக்கும் அழகு வளரும் திண்ண னாரின் திருக்கண்களில் நீர் சொரிந்திட, அதுகண்டு ஓடிவந்த தாய் எடுத்தணைத்துக் கண்ணீராய அம்முத்துக்களை, தன்வாயால் முத்தம் கொடுத்தவாறு மாற்றியும்.

குறிப்புரை :

`தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டடித் தால் தாய் அணைப்பள்` (திருவருட்பா, 6, பிள்ளைச். பா.1) என்னும் மரபை இந்நிகழ்வு காட்டுகிறது. கண்ணிலிருந்து வரும் நீராகிய முத்தைத் தனது வாயால் கொள்ளும் முத்தத்தால் மாற்றினள் என்பது மிக அழகிதான காட்சியாகும்.

பண் :

பாடல் எண் : 24

 துடிக்குற டுருட்டி யோடித்
தொடக்குநாய்ப் பாசஞ் சுற்றிப்
பிடித்தறுத் தெயினப் பிள்ளைப்
பேதையர் இழைத்த வண்டல்
அடிச்சிறு தளிராற் சிந்தி
அருகுறு சிறுவ ரோடும்
குடிச்சிறு குரம்பை யெங்கும்
குறுநடைக் குறும்பு செய்து.

பொழிப்புரை :

உடுக்குகளின் கட்டைகளை உருட்டி ஓடியும், நாய்களைக் கட்டி வைத்த வார்க்கயிற்றைப் பற்றிப்பிடித்து இழுத்து அறுத்தும், வேட்டுவச் சிறுமியர் விளையாட்டாகச் செய்திடும் சிறுவீடு களைத் தம் தளிர் போலும் மென்மையான அடிகளால் அழித்தும், அருகில் தம்மோடு விளையாடும் வேட்டுவச் சிறுவர்களுடன் அங்குள்ள சிறு குடில்களில் பல சிறு குறும்புகளைச் செய்தும்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 25

 அனையன பலவும் செய்தே
ஐந்தின்மே லான ஆண்டில்
வனைதரு வடிவார் கண்ணி
மறச்சிறு மைந்த ரோடும்
சினைமலர்க் காவு ளாடிச்
செறிகுடிக் குறிச்சி சூழ்ந்த
புனைமருப் புழலை வேலிப்
புறச்சிறு கானிற் போகி.

பொழிப்புரை :

இவ்வாறாய பல விளையாடல்களைச் செய்ய, வளர்ந்துற்ற ஆறாம் ஆண்டில், வலையினைப் போன்று வட்டமாகச் சுருக்கிட அமைத்தவாரையும், மயிர்க் கண்ணியையும் எடுத்துக் கொண்டு, வேட்டுவ மைந்தரோடும் கூடி, நல்ல மலர்கள் தோன்றும் கொம்பர்களுடைய சோலையுள் விளையாடியும், அப்பால் தங்கள் சிற்றூரின் எல்லையில் சூழ்ந்திருந்த யானைக் கொம்பினால் செய் தமைத்த வேலியின் புறத்தே உள்ள காட்டினிடத்துச் சென்று.

குறிப்புரை :

உழலை - மக்கள் குறிச்சியிலிருந்து வெளிப்போதுங் கால் அதற்கேற்ப வழிவிட்டும், பின், முன்னைய நிலையில் நின்று, எவ்விலங்குகளும் உள் நுழையாதவாறு காத்தற்குரியதாய் அமைந்து நிற்கவும் அடைத்த வேலி. ஒருவகைச் செடியானியன்ற தொரு வேலி என்பாருமுளர்.

பண் :

பாடல் எண் : 26

 கடுமுயற் பறழி னோடும்
கானஏ னத்தின் குட்டி
கொடுவரிக் குருளை செந்நாய்
கொடுஞ்செவிச் சாப மான
முடுகிய விசையி லோடித்
தொடர்ந்துடன் பற்றி முற்றத்
திடுமரத் தாளிற் கட்டி
வளர்ப்பன எண்ணி லாத.

பொழிப்புரை :

மிக வேகமுடன் ஓடும் முயற்குட்டியுடன் காட்டுப் பன்றியின் குட்டியும், வளைந்த காதுகளைஉடைய செந்நாயின் குட்டியும் ஆகிய இவற்றை எல்லாம், தாம் ஓடக்கூடிய கடுகிய விசை யால் ஓடிப் பிடித்து வந்து, தங்கள் முற்றத்தில் உற்ற மரத்தின் அடியில் கட்டி,திண்ணனார் வளர்த்திடும் விலங்கினங்கள் எண்ணிலாதன.

குறிப்புரை :

பறழ் - முயற்குட்டி. பறழ், குட்டி, குருளை, சாபம் என்பன விலங்கு இனங்களின் இளமை குறித்த மரபுப் பெயர்கள் (தொல். மரபு.1). இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 27

 அலர்பகல் கழிந்த அந்தி
ஐயவிப் புகையு மாட்டிக்
குலமுது குறத்தி யூட்டிக்
கொண்டுகண் துயிற்றிக் கங்குல்
புலரஊன் உணவு நல்கிப்
புரிவிளை யாட்டின் விட்டுச்
சிலமுறை யாண்டு செல்லச்
சிலைபயில் பருவஞ் சேர்ந்தார்.

பொழிப்புரை :

கதிரவன் ஒளி அலர்ந்திருக்கும் பகற்பொழுது கழிந்த மாலைக்காலத்தில், அவர் குலத்தில் மூத்தவளாய குறத்தி, திண்ணனாருக்கு வெண்சிறுகடுகின் புகையைச் சுற்றிக் காண்பித்து, அதன்பின் உணவு கொடுத்துத் துயில்வித்துப், பின்னர்ப் பாழுது புலர்ந்ததும், ஊன் உணவு கொடுத்துப், பின்னர் விளையாடச் செய்து, இவ்வாறு சில ஆண்டுகள் சென்றிட, வில்வித்தை பயிலும் பருவத்தை அடைந்தார்.

குறிப்புரை :

பன்னிரண்டு ஆண்டில் வில்வித்தை பயிற்றுவிக்கத் தொடங்குதல் அவர்கள் மரபாகும். மேல் (பா.674) திண்ணனாருக்கு ஆறாவது ஆண்டைக் குறித்த ஆசிரியர், அன்பின் அலர் விளையாடிய வகையால் இதுவரை கூறியமை கொண்டு மேலும் ஓர் யாண்டு சென்றிருக்கலாம். அப்பொழுது மேலும் சில முறை யாண்டு செல்ல எனக் குறித்திருப்பது, ஐந்தாண்டுகளின் வளர்ச்சியைக் குறித் தாகும். எனவே அவருக்கு வயது பன்னிரண்டாயமை அறியலாம்.

பண் :

பாடல் எண் : 28

தந்தையும் மைந்த னாரை
நோக்கித்தன் தடித்த தோளால்
சிந்தையுள் மகிழப் புல்லிச்
சிலைத்தொழில் பயிற்ற வேண்டி
முந்தையத் துறையின் மிக்க
முதியரை அழைத்துக் கூட்டி
வந்தநாட் குறித்த தெல்லாம்
மறவர்க்குச் சொல்லி விட்டான்.

பொழிப்புரை :

தந்தை நாகனும், தன் மைந்தன் திண்ணனாரை நோக்கி மகிழ்ந்து, தன் தடித்த தோளினாலே உள்ளம் மகிழ்ந்து கட்டித் தழுவி, வில்வித்தை பயிற்றவேண்டி, முன்னே அவ்வித்தையில் துறை போய முதிர்ந்த முதியோரைத் தன் முன்பு வரவழைத்து, அவருடன் ஆராய்ந்து, வித்தை தொடங்கற்குரிய நாளையும் குறித்து, அப்பயிற்சி குறித்த செய்தியைத் தன்குடியிலுள்ள வேடர்கட்கெல்லாம் அறியுமாறு சொல்லிவிடுத்தான்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 29

 வேடர்தங் கோமான் நாகன்
வென்றிவேள் அருளாற் பெற்ற
சேடரின் மிக்க செய்கைத் 
திண்ணன்விற் பிடிக்கின் றான்என்
றாடியல் துடியுஞ் சாற்றி
யறைந்தபே ரோசை கேட்டு
மாடுயர் மலைக ளாளும்
மறக்குலத் தலைவ ரெல்லாம்.

பொழிப்புரை :

வேடர்கட்கெல்லாம் தலைவனாகிய நாகன், வெற்றிவேற்பெருமான் அருளினால் பெற்ற, அறிஞரின் மிக்க பெருந்திறலுடைய திண்ணன், விற்பிடிக்கப் போகிறான் என்று அனை வரும் அறியுமாறு வெற்றிக்குரிய உடுக்கை ஒலிப்பித்து அறிவித்த பேரோசை கேட்டு, அருகிலுள்ள உயர்ந்த மலைநாட்டினை ஆளுகின்ற வேடர்குலத் தலைவர்கள் யாவரும்.

குறிப்புரை :

சேடர் - அறிவுடையார். `கலைமலிந்த சீர்நம்பி` (தி.7 ப.39 பா.2) எனத் தொகை நூல் குறித்தமையும் காண்க.

பண் :

பாடல் எண் : 30

மலைபடு மணியும் பொன்னும்
தரளமும் வரியின் தோலும்
கொலைபுரி களிற்றின் கோடும் 
பீலியின் குவையும் தேனும்
தொலைவில்பல் நறவும் ஊனும் 
பலங்களுங் கிழங்குந் துன்றச்
சிலையுடை வேடர் கொண்டு
திசைதொறும் நெருங்க வந்தார்.

பொழிப்புரை :

மலையிடத்துள்ள பொருள்களான மணியும் பொன்னுமாகிய இவற்றையும், வேங்கைப் புலியின் தோலையும், கொலை செய்யும் யானைக் கொம்பையும், மயிற்பீலியின் குவை யையும், தேனையும், அளவற்ற பலவகைக் கள்ளையும், இறைச்சி, பழம், கிழங்கு முதலாயவற்றையும், வில் பயிலும் வேடர்கள் எடுத்துக் கொண்டு திரள் திரளாக எவ்விடமும் நெருங்கும்படி வந்தார்கள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 31

மல்கிய வளங்கள் எல்லாம்
நிறைந்திட மாறில் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம்
ஈண்டினர் கொணர்ந்தா ரெங்கும்
பல்பெருங் கிளைஞர் போற்றப்
பராய்க்கடன் பலவும் நேர்ந்து
வில்விழா எடுக்க வென்று
விளம்பினன் வேடர் கோமான்.

பொழிப்புரை :

இங்ஙனமாகக் கொண்டு வரப்பெற்ற வளங்கள் எல்லாம் நிறைந்திடும்படி மாறில்லாத சிறிய உடுப்பூரின் எல்லையில், எங்கும் அடங்காத வண்ணம் வேடர்கள் பொலிவுற ஒன்றுகூடி எடுத்து வந்தனர். அதன்பின்னர், சுற்றத்தார் அனைவரும் பாராட்டத் தெய்வத் திற்கு முதற்கண் செய்யத்தகும் பூசனைகள் யாவும் செய்து, பின்னர் விற்பிடிக்கும் விழாவை நீங்கள் மேற்கொள்ளுங்கள்` என மொழிந்தனன் நாகன்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 32

 பான்மையில் சமைத்துக் கொண்டு
படைக்கலம் வினைஞர் ஏந்தத்
தேனலர் கொன்றை யார்தம்
திருச்சிலைச் செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சம்
ஆக்கிட அவர்க்கே பின்னும்
கானஊன் அமுத மாக்கும்
சிலையினைக் காப்புச் சேர்த்தார்.

பொழிப்புரை :

விழா எடுத்தற்குரிய முறையில் பணியாளர்கள் வில்லினை ஏந்த, தேன் பொருந்த அலரும் கொன்றையை அணிந்த சிவபெருமானுடைய சிவந்த பொன்மயமான மேருமலையானது முன்னர்ப் பாற்கடலில் மத்தாகக் கடைந்தபோது அவருக்கு நஞ்சை எடுத்து உண்ணும்படி கொடுத்ததற்குத் தீர்வாக, அப்பெருமானுக்குப் பின்னர், இம்மலையின்கண் ஊன் ஆகும் அமுதைக் கொடுக்க இப்பொழுது திண்ணனார் கையில் வில்லாயிற்று எனக் கூறுமாறு அமைந்த அவ் வில்லிற்குக் காப்புக்கட்டினர்.

குறிப்புரை :

மேருமலை, இறைவற்குமுன் நஞ்சு கொடுத்ததற்குத் தீர்வாக, இக்கானத்தில் காணும் இனிய ஊனைத் தருவோம் என வந்தாற் போல, திண்ணனார் கையில் வில் அமைந்திருந்தது எனவே திண்ணனாரிடத்துள்ள வில் மேருமலையென இருந்தது என்பது கருத்தாகின்றது. இவ்வாறு கூறல் தற்குறிப்பேற்ற அணியாம்.

பண் :

பாடல் எண் : 33

 சிலையினைக் காப்புக் கட்டும்
திண்புலி நரம்பிற் செய்த
நலமிகு காப்பு நன்னாள்
நாகனார் பயந்த நாகர்
குலம்விளங் கரிய குன்றின்
கோலமுன் கையிற் சேர்த்தி
மலையுறை மாக்க ளெல்லாம்
வாழ்த்தெடுத் தியம்பி னார்கள்.

பொழிப்புரை :

வில்லினைக் காப்புக் கட்டிடுவதற்காகக் கொண்ட திண்மையான புலியின் நரம்பினால் செய்த நலம் மிகுந்த காப்பு நாணினை, குறித்த நன்னாளில் நாகனார் பெற்ற, வேடர்குலம் விளங் கிட வந்து தோன்றிய கரியமலை போன்ற கோலமுடன் விளங்கும் திண்ணனார் கையில் சேர அணிவித்து, அங்கு மலை நாட்டில் வாழும் வேடர் யாவரும் கூடி நின்று வாழ்த்துக்கள் பலவும் எடுத்துக் கூறி மகிழ்ந்தார்கள்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 34

ஐவன அடிசில் வெவ்வே
றமைத்தன புற்பாற் சொன்றி
மொய்வரைத் தினைமென் சோறு
மூங்கில்வன் பதங்கள் மற்றும்
கைவினை எயின ராக்கிக்
கலந்தவூன் கிழங்கு துன்றச்
செய்வரை யுயர்ப்ப வெங்கும்
கலந்தனர் சினவில் வேடர்.

பொழிப்புரை :

காப்பணிந்து வாழ்த்தியபின், மலைநெற்சோறும், வேறுவகையாகச் சமைத்த பாலுடன்கலந்த புல்லரிசிச் சோறும், அடர்ந்த மலைபடுபொருளாய தினைமென்சோறும், மூங்கில் அரிசியின் சிறந்த பதங்களுடன் ஆக்கிய சோறும், மற்றும் இவ்வகை யான உணவு வகைகளைக், கைதேர்ந்துள்ள வேடப் பெண்கள் ஆக்கி, அவற்றுடன் ஊன் கலந்த கிழங்குகளும் பெருமளவில் சமைத்துச் செயற்கை மலைபோல் எங்கும் குவித்து வைத்திட, அவ் உணவுகளை இயல்பிலேயே சினமுடைய அவ்வில் வேடர்கள் பலரும் உண்ணக் கூடினார்கள்.

குறிப்புரை :

ஐவனம் - மலை நெல். தண்ணீர் பாய்ச்சுதலின்றி மழை வளத்தாலேயே வளர்ந்திடும் ஒருவகை நெல்.

பண் :

பாடல் எண் : 35

 செந்தினை இடியும் தேனும் 
அருந்துவார் தேனில் தோய்த்து
வெந்தஊன் அயில்வார் வேரி 
விளங்கனிக் கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி
நசையொடும் மிசைவார் வெவ்வே
றந்தமி லுணவின் மேலோர்
ஆயினர் அளவி லார்கள்.

பொழிப்புரை :

செந்தினை மாவுடன் தேனைக் குழைத்து அருந்து வாரும், தேனில் தோய்த்து வெந்த இறைச்சியினை உண்பாரும், தேனுடன் இனிய விளாம்பழத்தைக் குழைத்து உண்பாரும், ஈசல் உணவை மிகு விருப்புடன் உண்பாரும் ஆக இவ்வாறு தத்தமக்கு ஏற்ற உணவுகளை அருந்துவதில் வல்லவரானார்கள்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 36

அயல்வரைப் புலத்தின் வந்தார்
அருங்குடி யிருப்பின் உள்ளார்
இயல்வகை உணவி லார்ந்த
எயிற்றியர் எயின ரெல்லாம்
உயர்கதி ருச்சி நீங்க
ஒழிவில்பல் நறவு மாந்தி
மயலுறு களிப்பின் நீடி
வரிசிலை விழவு கொள்வார்.

பொழிப்புரை :

அயலாக உள்ள மலைப்பகுதியிலிருந்து வந்தவர் களும், உடுப்பூரில் குடியிருப்பாய் உள்ளவர்களும், தங்கள் இயல்பிற்கேற்ற வகையால் சமைக்கப் பெற்ற உணவினை உண்டு மகிழ்ந்த எயிற்றியரும் ஆக அனைவரும், வானில் உயரநின்ற கதிரவன், உச்சி நீங்கிய பிற்பகல் வேளையில், நிரம்ப இருந்த பலவகைக் கள்ளையும் குடித்து, அதனால் மயங்கும் களிப்பால் பெருகி, வில்விழாவைக் கொண்டாடுபவர்களாய்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 37

பாசிலைப் படலை சுற்றிப்
பன்மலர்த் தொடையல் சூடிக்
காசுடை வடத்தோல் கட்டிக்
கவடிமெய்க் கலன்கள் பூண்டு
மாசில்சீர் வெட்சி முன்னா
வருந்துறைக் கண்ணி சூடி
ஆசில்ஆ சிரியன் ஏந்தும்
அடற்சிலை மருங்கு சூழ்ந்தார்.

பொழிப்புரை :

பசிய இலைகளால் இழைத்த ஆடைபோலும் தழையைத் தன் மேனியில் சுற்றி அணிந்து, அதன்மேல் நல்ல பல வகைப் பூக்களின் மாலைகளை அணிந்து, அதன்மேல் காசின் மணிகள் பதித்த தோலினாலாய வடத்தைக் கட்டி, மணிகள் கோர்க்கப்பெற்ற கவடி எனப்படும் மாலையை மார்பில் அணிந்து, குற்றம் இல்லாத சிறப் புடைய வெட்சி முதலாக, ஆசிரியன் அணிவதற்கு ஏற்ற கண்ணிகளைச் சூடிய இந்தக் கோலம்கொண்டு, திண்ணனாருக்கு வில்வித்தை கற்பிப் பதற்கு உரிய குற்றமில்லாத ஆசிரியன், ஏந்திய அடல் கொண்ட வில்லின் மருங்காக வேடர்கள் வந்து சூழ்ந்தனர்.

குறிப்புரை :

திண்ணனாருக்கு வில்வித்தை பயிற்றுவிக்கும் ஆசிரியன் கொண்ட கோலம் இதுவாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 38

 தொண்டக முரசும் கொம்பும்
துடிகளுந் துளைகொள் வேயும்
எண்திசை நிறைந்து விம்ம
எழுந்தபே ரொலியி னோடும்
திண்திறல் மறவ ரார்ப்புச்
சேண்விசும் பிடித்துச் செல்லக்
கொண்டசீர் விழவு பொங்கக்
குறிச்சியை வலங்கொண் டார்கள்.

பொழிப்புரை :

பின் அவ்வேடர்கள், தொண்டகப் பறையும், கொம்பு வாத்தியமும், உடுக்குகளும், துளைகளையுடைய மூங்கில் குழலும் ஆய இவ்விசைக் கருவிகள் முழக்கம் செய்திட, எழுந்த பேரோசை எல்லாம் எட்டுத்திக்கிலும் நிறைந்து விம்மிட, அவ் ஓசை யுடன் திண்மையான வலியுடைய வேடர் ஒலித்திடும் ஓசை, உயர்ந்த வானையும் முட்டிச் செல்ல, இத்தகைய சீர் கொண்டவிழா பொங்கிடத் தமது குறிச்சியை வலங்கொண்டார்கள்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 39

குன்றவர் களிகொண் டாடக்
கொடிச்சியர் துணங்கை யாடத்
துன்றிய மகிழ்ச்சி யோடும்
சூரர மகளி ராட
வென்றிவில் விழவி னோடும்
விருப்புடை ஏழாம் நாளின்
அன்றிரு மடங்கு செய்கை 
அழகுற அமைத்த பின்றை.

பொழிப்புரை :

வேடர்கள் மகிழ்ச்சி கொண்டு கூத்தாட, எயிற்றியர்கள் துணங்கைக் கூத்தாட, இதுகண்டு பெரு மகிழ்ச்சியால் அச்சம் தருகின்ற தெய்வங்கள் ஆடிட, இத்தகையதான மகிழ்ச்சிமிக வெற்றியை யுடைய வில்லேந்தி, நகர்வலம் வரும் விழாவினை ஆறு நாள்கள் வரை கொண்டாடிய பின், ஏழாவது நாளின்கண், முன்னாள் களிலும் மேம்படச் சிறப்பும் களிப்பும் கொண்டு, அன்றைய விழாவிற்கு என அழகுற அமைத்த பின்பு.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 40

 வெங்கதிர் விசும்பின் உச்சி
மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க 
மருங்குபல் லியங்க ளார்ப்பத்
தங்கள்தொல் மரபின் விஞ்சைத்
தனுத்தொழில் வலவர் தம்பால்
பொங்கொளிக் கரும்போர் ஏற்றைப் 
பொருசிலை பிடிப்பித் தார்கள்.

பொழிப்புரை :

வெய்ய கதிரவன் உச்சியில் வரும் நல் வேளையில், மங்கலமாய வாழ்த்துக்கள் எங்கும் பெருகி விளங்க, அருகில் பல இன்னியங்கள் முழங்க, தாங்கள் வழிவழியாகக் கற்று வந்த வில் தொழில் வித்தையில் வல்ல வீரர்களிடமாக, ஒளிமிகும் கரிய மேனியையுடைய அரியேறனைய திண்ணனாரைப் போரிடக் கொல்லும் வில்லை அவர் கைக் கொடுத்து ஒப்பற்ற வில்லினைப் பிடிப்பித்தார்கள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 41

பொற்றட வரையின் பாங்கர்ப்
புரிவுறு கடன்முன் செய்த
விற்றொழிற் களத்தில் நண்ணி
விதிமுறை வணங்கி மேவும்
அற்றைநாள் தொடங்கி நாளும்
அடற்சிலை யாண்மை முற்றக்
கற்றன ரென்னை யாளும்
கானவர்க் கரிய சிங்கம்.

பொழிப்புரை :

என்னை ஆளுகின்ற வேடர்குலச் சிங்கமாய திண்ணனார், விருப்பம் மிக அமைந்த மலையின் புறத்து, விற்பயில் வதற்கமைந்த ஏற்பாடுகளை முன் செய்து வைத்த களத்தில் சென்று, ஆசிரியனையும் கடவுளையும் முறைமையால் வணங்கி, விற்பயிலத் தொடங்கும் அன்றைய நாள் தொடக்கமாக, நாள்தோறும் வலியுடைய போர் வில்லைக் கைக்கொள்ளும் வீரம் முதிர்ந்து, தெளிவுற வில் வித்தை கற்றனர்.

குறிப்புரை :

கானவர்க்கு அரிய - வேடர்குலத்திற்குக் கிடைத் தற்கரிய.

பண் :

பாடல் எண் : 42

வண்ணவெம் சிலையு மற்றப்
படைகளும் மலரக் கற்றுக்
கண்ணகன் சாயல் பொங்கக்
கலைவளர் திங்க ளேபோல்
எண்ணிரண் டாண்டின் செவ்வி
எய்தினார் எல்லை யில்லாப்
புண்ணியந் தோன்றி மேன்மேல்
வளர்வதன் பொலிவு போல்வார்.

பொழிப்புரை :

இவ்வாறு அழகிய கொடிய விற்பயிற்சியையும், பிறபடைகளின் பயிற்சியையும் சிந்தை மலரத் தெளிவுடன் கற்று, தமது மேனியின் வனப்புச் சிறந்து அழகுடன் அகன்று பழுத்த முழு அழகு பெற்றிட, நாள் தோறும் கலைவளர்ந்த திங்கள் எனப் பதினாறாவது ஆண்டைப் பெற்றார் திண்ணனார். இவ்வளர்ச்சி எல்லையிலாத புண்ணியம் இவர் வடிவாகத் தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவு போல அமைந்தது.

குறிப்புரை :

மேல் (பா.676) விற்பயிற்சி பன்னிரண்டாவது ஆண்டில் தொடங்கியமையைக் குறிப்பால் உணர்த்திய ஆசிரியர், ஈண்டுப் பதினாறாவது ஆண்டில் நிறைவுற்றமையை வெளிப்படையாகத் தெரிவித்திருத்தலின் விற்பயிற்சிக்குரிய காலம் நான்காண்டு என அறியலாம்.

பண் :

பாடல் எண் : 43

 இவ்வண்ணந் திண்ணனார் நிரம்பு நாளில்
இருங்குறவர் பெருங்குறிச்சிக் கிறைவ னாய
மைவண்ண வரைநெடுந்தோள் நாகன் தானும்
மலையெங்கும் வனமெங்கும் வரம்பில் காலம்
கைவண்ணச் சிலைவேட்டை யாடித் தெவ்வர்
கணநிரைகள் பலகவர்ந்து கானங் காத்து
மெய்வண்ணந் தளர்மூப்பின் பருவ மெய்தி
வில்லுழவின் பெருமுயற்சி மெலிவா னானான்.

பொழிப்புரை :

இவ்வண்ணமாகத் திண்ணனார் பருவம் நிரம்பிய காலத்தில், வலிய வேடருடைய பெருங் குறிச்சிக்குத் தலைவனாய, கறுத்த மலையை ஒத்த நெடுந் தோள்களையுடைய நாகன் என்பானும், மலைகளிலும் காடுகளிலுமாக அளவிறந்த காலமாகக் கைவன்மை யால் வேட்டையாடிப் பகைவருடைய பசு நிரைகள் பலவற்றைக் கவர்ந்து, நாட்டைக் காத்து, தனது உடல் தளரும் படியான மூப்பின் பருவத்தை அடைந்து, வில்லால் வாழும் அத்தொழிலின் பெருமுயற்சி இனிக் கூடாத நிலை வந்தடையப் பெற்று, அம்முயற்சியில் குன்றியவ னாயினான்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 44

அங்கண்மலைத் தடஞ்சாரற் புனங்க ளெங்கும்
அடலேனம் புலிகரடி கடமை ஆமா
வெங்கண்மரை கலையொடுமான் முதலா யுள்ள
மிருகங்கள் மிகநெருங்கி மீதூர் காலைத்
திங்கள்முறை வேட்டைவினை தாழ்த்ததென்று
சிலைவேடர் தாமெல்லாம திரண்டு சென்று
தங்கள்குல முதற்றலைவ னாகி யுள்ள
தண்தெரியல் நாகன்பால் சார்ந்து சொன்னார்.

பொழிப்புரை :

அந்நிலையில், அங்குள்ள மலைகளின் பரந்த பக்கங்களிலும், பயிர் விளையும் காடுகளிலுமாக எங்கும் கொடிய பன்றி, புலி, கரடி. காட்டுப்பசு, காட்டெருது, கொடுங்கண்ணுடைய மரை, கலைமான் ஆகிய இவைமுதலாக உள்ள விலங்குகள் மிகவும் நெருங்கிப் பெருமளவில் வந்து அழிவு செய்திட, அதுகண்டு, திங்கள் தோறும் செய்திடும் முறையான வேட்டையின் தொழில் இம்முறை தாழ்த்தமையின் இந்நிலை நேர்ந்ததென்று அங்குள்ள வில்லேந்திய வேடர்கள் அனைவரும் திரண்டு, தங்கள் குலத்தின் தலைவனாக வுள்ள நல்ல மாலை சூடிய நாகன்பால் அடைந்து, இவ்வழிவு பற்றிச் சொன்னார்கள்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 45

சொன்னவுரை கேட்டலுமே நாகன் தானும்
சூழ்ந்துவருந் தன்மூப்பின் தொடர்வு நோக்கி
முன்னவர்கட் குரைசெய்வான் மூப்பி னாலே
முன்புபோல் வேட்டையினின் முயல கில்லேன்
என்மகனை உங்களுக்கு நாத னாக
எல்லீருங் கைக்கொண்மி னென்ற போதில்
அன்னவரு மிரங்கிப்பின் மகிழ்ந்து தங்கோன்
அடிவணங்கி இம்மாற்றம் அறைகின் றார்கள்.

பொழிப்புரை :

இவ்வாறுகூறியவற்றைக் கேட்டலுமே நாகன் தானும், தன்னைப்பற்றி வரும் தன் மூப்பின் தொடர்ச்சியினை நோக்கி, சொன்ன அவர்க்கு முன்னாகச் சொல்வான், `என் மக்களே! மூப்பி னால் நான் முன்பு போலச் செப்பமாக வேட்டையினில் முயற்சி கொள்ள இயலாதாயிற்று. ஆதலின் என் மகன் திண்ணனை உங்கட்குத் தலைவனாக எல்லீரும் ஏற்றுக் கொள்ளுங்கள்` என, அது கேட்ட அவ்வேடர்களும் அவன் நிலை கண்டு இரங்கினர், எனினும் திண்ண னாரைத் தலைவராகக் கொள்ளும் பேற்றால் பெரிதும் மகிழ்ந்து தம் தலைவன் நாகன் அடி பணிந்து இம் மாற்றத்தைக் கூறுவார்களாய்.

குறிப்புரை :

திரண்ட தோளினன் இப்படிச் செப்பலும் சிந்தை
புரண்டு மீதிடப் பொங்கிய உவகையர் ஆங்கே
வெருண்டு மன்னவன் பிரிவெனும் விம்முறு துயரால்
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆவென இருந்தார்.
(கம்பரா. அயோத். மந்திரப். 31)எனவரும் கம்பர் வாக்கும் ஈண்டு நினைவு கூரலாம்.

பண் :

பாடல் எண் : 46

 இத்தனைகா லமும்நினது சிலைக்கீழ்த் தங்கி
இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம் இன்னும்
அத்தநின தருள்வழியே நிற்ப தல்லால்
அடுத்தநெறி வேறுளதோ அதுவே யன்றி
மெய்த்தவிறல் திண்ணனைஉன் மரபில் சால
மேம்படவே பெற்றளித்தாய் விளங்கு மேன்மை
வைத்தசிலை மைந்தனைஈண் டழைத்து நுங்கள்
 வரையாட்சி யருளென்றார் மகிழ்ந்து வேடர்.

பொழிப்புரை :

`இத்துணைக் காலமும் உனது வில்லாட்சியின் கீழ் நாங்கள் தங்கி இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம். இன்னமும் எம் ஐயனே! நீ எமக்கு ஆணையிட்டருளும் அருள்வழியே நிற்பதல்லாது அடுத்த ஒரு செயல் எமக்கு உளதோ? இதுவே அல்லாமல், மிகுவிறல் பூண்ட திண்ணனாரை உனது மரபில் மிகவும் மேம்படவே பெற்றுத் தந்திருக்கின்றாய், விளங்கிடும் மேன்மை கொண்ட வில்வீரனான உன்மைந்தனை இவ்விடத்து நீ அழைத்து, உங்கள் மலைநாட்டு அரசாட்சிப் பொறுப்பை முறைப்படி கொடுத்திடுவாய்` என்றனர் மகிழ்வு கொண்ட அவ்வேடர்கள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 47

சிலைமறவ ருரைசெய்ய நாகன் தானும்
திண்ணனைமுன் கொண்டுவரச் செப்பி விட்டு
மலைமருவு நெடுங்கானிற் கன்னி வேட்டை
மகன்போகக் காடுபலி மகிழ வூட்டத்
தலைமரபின் வழிவந்த தேவ ராட்டி
தனையழைமின் என அங்குச் சார்ந்தோர் சென்று
நிலைமையவள் தனக்குரைப்ப நரைமூ தாட்டி
நெடிதுவந்து விருப்பினொடுங் கடிது வந்தாள்.

பொழிப்புரை :

வில்மறவர்கள் இவ்வாறு கூறக்கேட்ட நாகன் என்பானும், திண்ணனாரைத் தன் முன்பு கொண்டு வருமாறு கூறிவிட்டு, அதன்பின்பு, அங்கு நின்றார் சிலரைநோக்கி, மலையிட மாகப் பொருந்திய நெடிய காட்டில் தன் மகன் கன்னி வேட்டையாடப் போதற்கு, அக்காட்டிலுள்ள தெய்வங்கள் மகிழ்வுறுமாறு பலியூட்ட வேண்டி, அதனைப் புரிகின்ற தங்கள் குலத்தலைமை அமைந்த தேவ ராட்டியை அழையுங்கள்` எனலும், அதுகேட்ட வீரர்களும் அப் பெருமாட்டியிடத்துச் சென்று, அந்நிலையைஎடுத்துக் கூறிடலும், நரை யுடைய அம்மூதாட்டியும் பெரிதும் மகிழ்ந்து, விருப்பத்துடன் விரை வில் வந்தாள்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 48

 கானில்வரித் தளிர்துதைந்த கண்ணி சூடிக்
கலைமருப்பின் அரிந்த குழை காதிற் பெய்து
மானின்வயிற் றரிதாரத் திலக மிட்டு
மயிற் கழுத்து மனவுமணி வடமும் பூண்டு
தானிழிந்து திரங்கிமுலை சரிந்து தாழத்
தழைப்பீலி மரவுரிமேற் சார வெய்திப்
பூநெருங்கு தோரைமல சேடை நல்கிப்
போர்வேடர் கோமானைப் போற்றி நின்றாள்.

பொழிப்புரை :

காட்டில் உள்ள பசுந் தளிர்களுடன் மலர்க் கண்ணி களும் சேரக்கட்டிய மாலையைச் சூடி, கலைமான் கொம்பிலிருந்து அரிந்து எடுத்து வளையமாகச் செய்த தோட்டைக் காதில் அணிந்து, மானின் வயிற்றினின்றும் எடுக்கப் பெற்ற அரிதாரத்தால் பொட்டிட்டு, மயிற்கழுத்துப் போன்ற வட்டமான நிறம்பொருந்திய சங்கு மணி வடமும் கழுத்தில் அணிந்து, மார்பகம் சுருங்கித் தாழ, இலையின் தழையும் மரப் பட்டையும் மயில் இறகும் சேரக் கொண்ட ஆடையை இடுப்பில் அணிந்து, வந்தவளாகிய தேவராட்டி, நாகன் முன் வந்து, மலர்கள் நிறைந்த நெல்லோடு கூடிய அரிசியைக் கொடுத்து, வேடர் தலைவனாய நாகனை அப்பெருமாட்டி வணங்கி நின்றாள்.

குறிப்புரை :

தோரை - மலைநெல். சேடை -ஆசிவழங்கும் முழு மணியான அரிசி (அட்சதை என்பர்).

பண் :

பாடல் எண் : 49

நின்றமுது குறக்கோலப் படிமத் தாளை
நேர்நோக்கி அன்னைந நிரப்பு நீங்கி
நன்றினிதி னிருந்தனையோ என்று கூறும்
நாக னெதிர் நலம்பெருக வாழ்த்தி
நல்ல மென்தசையும் ஈயலொடு நறவும் வெற்பில்
விளைவளனும் பிறவளனும் வேண்டிற் றெல்லாம்
அன்றுநீ வைத்தபடி பெற்று வாழ்வேன்
அழைத்தபணி என்னென்றாள் அணங்கு சார்ந்தாள்.

பொழிப்புரை :

வணங்கி நிற்கும் முதிய தேவராட்டியைப் பார்த்து, `அன்னையே! நீ வறுமை இன்றி என்றும் நன்றாக வாழ்கின்ற னையோ!` எனக் கேட்கும் நாகன் முன்பு, அவன்பால் நலமெல்லாம் பெருகும்படி வாழ்த்தி,`எனக்கு வேண்டிய மெல்லிய இறைச்சியும், ஈசல்களின் புழுக்கலும், தேனும், மலையிடத்து விளையும் பொருளும், இன்ன பிற பொருள்களும் எல்லாம் எனக்கு இன்னவகையாகக் கொடுத்திட வேண்டுமென்று நீ சொல்லியவாறு நான் பெற்று வாழ்வேன்! அது நிற்க! இப்போது என்னை இங்கு அழைத்த பணியாது?`` எனக் கேட்டாள் அத்தேவராட்டி.

குறிப்புரை :

******

பண் :

பாடல் எண் : 50

கோட்டமில்என் குலமைந்தன் திண்ணன் எங்கள்
குலத்தலைமை யான்கொடுப்பக் கொண்டு பூண்டு
பூட்டுறுவெஞ் சிலைவேடர் தம்மைக் காக்கும்
பொருப்புரிமை புகுகின்றான் அவனுக் கென்றும்
வேட்டைவினை யெனக்குமே லாக வாய்த்து
வேறுபுலங் கவர்வென்றி மேவு மாறு
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி உண்ணக்
காடுபலி ஊட்டென்றான் கவலை யில்லான்.

பொழிப்புரை :

நடுவுநிலைமையினின்றும் பிறழாத என்குல மைந்தன் திண்ணன், எங்கள் குலத்தின் தலைமைப் பொறுப்பை நான் கொடுப்ப அதனையேற்று, வாரில் நாண் பூட்டிய வில்லைக் கைக் கொண்ட வேடர்களைக் காக்கும் மலைநாட்டரசு உரிமையைப் பெறு கின்றான். அவனுக்கு என்றும் வேட்டைச் செயல் எனக்கு மேலாக வாய்க்குமாறும், அயலிடங்களிலுள்ள பகைவரை வெற்றி கொள்ளு மாறும் `அருள்புரிந்திடக் காட்டில் உள்ள தெய்வங்கட்கு நல்ல பலி களை நீ கொடுப்பாயாக` என்றான், கவலை என்பதில்லாத நாகன்.

குறிப்புரை :

கோட்டம் - நடுவுநிலைமையினின்றும் பிறழ்தல். `கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது` (தி.4 ப.11 பா.2) எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 51

மற்றவன்தன் மொழிகேட்ட வரைச்சூ ராட்டி
மனமகிழ்ந்திங் கன்போடு வருகின் றேனுக்
கெற்றையினுங் குறிகள்மிக நல்ல வான
இதனாலே உன்மைந்தன் திண்ண னான
வெற்றிவரிச் சிலையோன்நின் அளவி லன்றி
மேம்படுகின் றான்என்று விரும்பி வாழ்த்திக்
கொற்றவன தெய்வங்கள் மகிழ வூட்ட
வேண்டுவன குறைவின்றிக் கொண்டு போனாள்.

பொழிப்புரை :

நாகனுடைய கருத்தைக் கேட்ட தேவராட்டியும், மனமகிழ்ந்து, அன்புடன் வந்த எனக்கு, எந்நாளிலும் இல்லாத நல் நிமித்தங்கள் பல காணப்பட்டன, இதனால் நின்மகன் திண்ணன் நின்னளவில் அன்றிமிக மேம்படுகின்றான் என்று வாழ்த்தி, வெற்றி விளைவிக்கும் காட்டுத் தெய்வங்கள் மகிழுமாறு பலிகொடுத்தற்கு வேண்டிய பொருள்களைக் குறைவின்றிப் பெற்றுக் கொண்டு போயினாள்

குறிப்புரை :

********

பண் :

பாடல் எண் : 52

 தெய்வநிகழ் குறமுதியாள் சென்ற பின்பு
திண்ணனார் சிலைத்தாதை அழைப்பச்சீர்கொள்
மைவிரவு நறுங்குஞ்சி வாசக கண்ணி
மணிநீல மலையொன்று வந்த தென்னக்
கைவிரவு சிலைவேடர் போற்ற வந்து
காதல்புரி தாதைகழல் வணங்கும் போதில்
செவ்வரைபோல் புயமிரண்டுஞ் செறியப் புல்லிச்
செழும்புலித்தோ லிருக்கையின்முன் சேர வைத்தான்.

பொழிப்புரை :

தெய்வம் ஏறுதற்குரிய தேவராட்டியார் சென்ற பின்பு, திண்ணனார் வில் ஏந்திய தந்தையாய நாகன் அழைத்திட, சிறப் புடைய கரிய நறுமணமாலையையும், சிறந்த கரிய குடுமியினையும், உடைய நீலமலையொன்று வந்தது என்ன, வில்லுடைய வேடர் போற்றிட வந்து, நாகனின் கழலடிகளை வணங்கும் பொழுதில், நாகன், திண்ணனாரை அன்புடன் கையால் அணைத்தெடுத்து, செப்ப முடைய இரண்டுமலை போலும் தோள்களுடன் இறுக அணைத்து, தான்இருக்கும் இடத்து முன்பு உள்ள செழுமையான புலித்தோல் இருக்கையின் மீதுசேர இருத்தினான்.

குறிப்புரை :

வேடர்போற்ற வருவதும், தோளைப் புல்லித்தன்முன் ஒப்ப இருத்துவதும் வினைக்குரிமை நாடிய பின்றை அதற்குரியனாகச் செய்யும் அருமைப்பாடாம்.
நலங்கொள் மைந்தனைத் தழுவினன் என்பது என்? நளிநீர்
நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்
விலங்க லன்னதிண் டோளையுமெய்த்திரு விருக்கும்
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டளந்தான்.
(கம்ப. அயோ. மந்.59)எனவரும் கம்பர் வாக்கையும் நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 53

 முன்னிருந்த மைந்தன்முகம் நோக்கி நாகன்
மூப்பெனைவந் தடைதலினால் முன்பு போல
என்னுடைய முயற்சியினால் வேட்டை யாட
இனிஎனக்குக் கருத்தில்லை எனக்கு மேலாய்
மன்னுசிலை மலையர்குலக் காவல் பூண்டு
மாறெறிந்து மாவேட்டை யாடி என்றும்
உன்னுடைய மரபுரிமை தாங்கு வாயென்
றுடைதோலும் சுரிகையுங்கைக் கொடுத்தா னன்றே.

பொழிப்புரை :

நாகன், தன் முன்இருந்த தன் மைந்தனின் முகம் நோக்கி, `மூப்பு என்னை வந்து அடைந்து கொண்டமையால் முன் போல என் ஆற்றலுடன் விளங்கவும், அதுகொண்டு இனி வேட்டை யாடவும், எனக்கு எழுச்சியில்லை; எனக்கும் மேலாக இவ்வில்மறவர் குலத்தின் காவல் பொறுப்பை நீ ஏற்றுப் பகைவரை அழித்து,தீய விலங்குகளையும் பெரு வேட்டையாடி வென்று, உன் மரபுரிமை யாகிய தலைமையை நீ தாங்கிக் கொள்வாய், என மொழிந்து, தலைமைப் பொறுப்பிலுள்ளார் கொண்டு விளங்குதற்குரிய உடை தோலையும், வாளையும் தந்தனன்.

குறிப்புரை :

உன்னுடைய மரபுரிமை என்பது `ஐம்புல வேடரின் வளர்ந்து அயரும் நிலை நீங்கி, நின்தவத்தினால் உணரவிருக்கும் குருமொழிவரும் மரபைத் தாங்குவாய்` எனும் பொருள்படவும் நின்றது.

பண் :

பாடல் எண் : 54

 தந்தைநிலை உட்கொண்டு தளர்வு கொண்டு
தங்கள்குலத் தலைமைக்குச் சார்வு தோன்ற
வந்தகுறை பாடதனை நிரப்பு மாறு
மனங்கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல்வணங்கி முறைமை தந்த
முதற்சுரிகை உடைதோலும் வாங்கிக் கொண்டு
சிந்தைபரங் கொளநின்ற திண்ண னார்க்குத்
திருத்தாதை முகமலர்ந்து செப்பு கின்றான்.

பொழிப்புரை :

தந்தையின் நிலையைத் திண்ணனார் மனத்தில் கொண்டு, அதனால் தம் மனத்தில் கவலை கொண்டு, பின்னர்த் தந்தை யின் தளர்வால் தங்கள் குலத்தலைமைக்கு வந்த குறைபாட்டை நிரப்ப வேண்டும் என்று மனத்தில் கொண்ட குறிப்பால், அப்பொறுப்பினை மறாது ஏற்றுக் கொண்டு, முன்னாகத் தந்தையின் திருவடிகளை முறைப்படி வணங்கி, முறைமையால் அவன் கொடுக்கும் சுழல் வாளையும் உடைத்தோலையும் வாங்கிக் கொண்டு, உளத்தில் அரசியல் பளுவைக் கொண்ட திண்ணனார்க்கு, சிறந்த தந்தையாகிய நாகன், மகன் நிலைகண்டு முகமலர்ந்து இதனைச் சொல்லுகின்றான்.

குறிப்புரை :

இனிச் `சிந்தை பரங்கொள நின்ற திண்ணனார்க்கு` என்பதற்குச் சிந்தையில் திருவருள் மீதூர நின்ற திண்ணனார்க்கு எனப் பொருள் கோடலும் ஒன்று. `காதல் உற்றிலன்,இகழ்ந்திலன் கடன் இது என்றுணர்ந்தும், யாது கொற்றவன் ஏவியது அது செயலன்றோ நீதி எற்கு என நினைந்தும், அப் பணி தலை நின்றான்` (கம்ப. அயோ. மந்.69) எனவரும் கம்பர் திருவாக்கினையும் நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 55

நம்முடைய குலமறவர் சுற்றத் தாரை
நான்கொண்டு பரித்த தன்மேல் நலமே செய்து
தெம்முனையி லயற்புலங்கள் கவர்ந்து கொண்டு
திண்சிலையின் வளமொழியாச் சிறப்பின் வாழ்வாய்
வெம்முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும்
விரைந்துநீ தாழாதே வேட்டை யாட
இம்முரண்வெஞ் சிலைவேடர் தங்க ளோடும்
எழுகவென விடைகொடுத்தான் இயல்பில் நின்றான்.

பொழிப்புரை :

`நம் குலத்து வேடர்கள், சுற்றத்தவர்கள் ஆகி யோரை நான் தாங்கிவந்த அத்தன்மையின் மேலாக, நீ நல்லனவே செய்து, கொடிய பகைமுனையில் வரும் பகைவர்களை வென்று, அயலில் உள்ள இடங்களை வெற்றி கொண்டு, எக்காலமும் குறைவில்லாத சிறப்பில் நீ வாழ்வாயாக! விரும்பத்தக்க வேட்டை முனையில் வேட்டைகளும் உனக்கு நன்கு வாய்க்கும். விரைந்து வேட்டையாட இந்த வலிய கொடியவில் வேடர்களுடன் எழுவாயாக` என விடை கொடுத்தான், மகனைச் சிறந்த தலைவனாக ஆக்கும் அவ்வியல்பில் நின்ற நாகன்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 56

 செங்கண்வயக் கோளரியே றன்ன திண்மைத்
திண்ணனார் செய்தவத்தின் பெருமை பெற்ற
வெங்கண்விறல் தாதைகழல் வணங்கி நின்று
விடைகொண்டு புறம்போந்து வேட ரோடும்
மங்கலநீர்ச் சுனைபடிந்து மனையின் வைகி
வைகிருளின் புலர்காலை வரிவிற் சாலைப்
பொங்குசிலை அடல்வேட்டைக் கோலங் கொள்ளப்
புனைதொழிற்கை வினைஞருடன் பொலிந்து புக்கார்.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய வீரமுடைய ஆண் சிங்கம்போலும் வலிமையுடைய திண்ணனார், தம்மைப் பெறுதற்குரிய பெருந் தவத்தினையுடைய, வலிமை மிகுந்த சிறந்த தந்தையின் கழல்களை வணங்கி, விடைபெற்றுக் கொண்டு, வெளியே வந்து, வேடருடன் வேட்டையாடப் புறப்படுதற்கு முன்னாக, மங்கலமுடைய சுனைநீரில் நீராடித், தம் மனையில் அன்று இரவு தங்கி, இரவு விடிகின்ற காலைப் பொழுதில், வரியையுடைய வில் இருக்கும் படைக்கலக் கொட்டிற்குச் சென்று, அங்குப் பொங்கும் வில்லாண்மை சிறந்திடும் கொலையுடைய வேட்டையாடற்குரிய கோலத்தைக் கொண்டிட, கைவன்மை உடைய வில் தொழிலாளருடன் மகிழ்ந்து புகுந்தார். 

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 57

நெறிகொண்ட குஞ்சிச் சுருள்துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறிகொண்ட கண்ணிக்கிடை மொய்யொளிப் பீலி சேர்த்தி
வெறிகொண்ட முல்லைப் பிணைமீது குறிஞ்சி வெட்சி
செறிகொண்ட வண்டின்குலம் சீர்கொளப் பின்பு செய்து.

பொழிப்புரை :

இயல்பாகச் சுருண்டிருக்கும் அவர் கூந்தலின் சுருள், நிமிர்ந்து பொலிவுறும்படி மேலே உச்சிக் கொண்டையாகத் தூக்கிக் கட்டி, அதன்மீது தளிர்களையும் மலர்க்கண்ணிகளையும் சேர்த்துக் கட்டிய மாலையை அணிந்து, அதற்கிடையே சிறந்த ஒளி யுடைய ஒரு மயிற்பீலியைச் செருகி, பின்னர் அவற்றின் கீழாக வாசனையுடைய முல்லை மாலையுடன் குறிஞ்சிப் பூவையும் வெட்சிப் பூவையும்,அவற்றின்மீது நிறைந்த வண்டின் கூட்டம் தேன் பொருட்டாக மொய்க்குமாறு சிறப்புறக் கொண்டை மாலையாகக் கட்டி.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 58

முன்னெற்றி யின்மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னிற்புரி கொண்ட மயிர்க்கயி றாரச் சாத்தி
மின்னிற்றிகழ் சங்கு விளங்குவெண் டோடு காதின்
மன்னிப்புடை நின்றன மாமதி போல வைக.

பொழிப்புரை :

முன் நெற்றியில், மயில் இறகின் அடியில், குன்றி மணிகளை இடை இடையே வைத்துச் சேரக்கட்டிய அழகுடைய மயிர்க்கற்றையை நெற்றியில் பொலிவுபெறச் சாத்தி, மின்னல் போல் ஒளிரும் சங்கினால் செய்து விளங்குகின்ற வெண்மையான தோடு காதின்புறத்தே இருநிறை நிலாக்கள் போல் பொலிவெய்த அணிந்து,

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 59

கண்டத்திடை வெண்கவ டிக்கதிர் மாலை சேரக்
கொண்டக்கொடு பன்மணி கோத்திடை ஏனக் கோடு
துண் டப்பிறை போல்வன தூங்கிட வேங்கை வன்தோல்
தண்டைச்செயல் பொங்கிய சன்னவீ ரந்த யங்க.

பொழிப்புரை :

திருக்கழுத்தில், வெள்ளை நிறமான பலகறை களாலாய ஒளியுடைய மாலையைப் பொருந்த அணிந்து, சங்கு மணிகளோடு பலவகை மணிகளைக்கோர்த்து அவற்றின் இடை யிடையே பன்றிக் கொம்புகளை இளம்பிறைத் துண்டங்கள் எனத் தொங்கவைத்து, அவற்றை வேங்கைப் புலியின் தோல் மேலாகப் பதித்து, தட்டை வடிவினதாக அமையப் பெற்ற சன்னவீரம் எனும் அணி சிறப்புடன் அமைய.

குறிப்புரை :

சன்னவீரம் - அரசர்கள் தம் வெற்றிக் குரிய மாலையாக அணிவது.

பண் :

பாடல் எண் : 60

மார்பிற்சிறு தந்த மணித்திரள் மாலை தாழத்
தாரிற்பொலி தோள்வல யங்கள் தழைத்து மின்னச்
சேர்விற்பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கைக்
கார்விற்செறி நாணெறி கைச்செறி கட்டி கட்டி.

பொழிப்புரை :

மார்பினிற் சிறிய யானைக் கொம்பின் முத்துக்களாலாய மணிமாலை சிறந்திடத், தோள்களில் மாலைகளால் பொலிவெய்தும் வாகு வலயங்கள் ஒளிதழைத்து மின்னிட, அழகிய ஒளி திகழும் காப்புக்கள் அணியப் பெற்று விளங்கிடும் முன் கையில், மழைமேகம் போல் அம்பு சொரியும் வில்லின் நாணினைப் பற்றிடும் கோதையைக் கட்டி.

குறிப்புரை :

கோதை - வில்லில் நாண் ஏற்றி இழுத்துச் சுண்டு தலால் விரல்கள் காயமடையாது கையில் பாதுகாப்பாக அணியும் உறைகள்.

பண் :

பாடல் எண் : 61

அரையிற்சர ணத்துரி யாடையின் மீது பௌவத்
திரையிற்படு வெள்ளல கார்த்து விளிம்பு சேர்த்தி
நிரையிற்பொலி நீளுடை தோல்சுரி கைப்பு றஞ்சூழ்
விரையிற்றுவர் வார்விசி போக்கி அமைத்து வீக்கி.

பொழிப்புரை :

திருவரையில் மயிற்பீலியமைந்த புலித்தோல் ஆடையை உடுத்தி, அதன் மேலாகக் கடலின் நீர்க் குமிழிகள் போன்ற முத்துக்கள் விளிம்பில் பதித்த நீண்ட உடைத் தோலினையும், அதனுடன் கூட விளங்கிய சிவந்த நிறம் கொண்ட உறையுள் செருகப் பெற்ற சுழல் வாளையும், சேர அணிந்து இறுகக் கட்டி,

குறிப்புரை :

சரணம் - மயிற்பீலி, உரியாடை - புலி முதலியவற்றின் தோலால் ஆன உடை. மரவுரி என்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 62

வீரக்கழல் காலின் விளங்க அணிந்து பாதம்
சேரத்தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்பப்
பாரப்பெரு வில்வலங் கொண்டு பணிந்து திண்ணன்
சாரத்திருத் தாள்மடித் தேற்றி வியந்து தாங்கி.

பொழிப்புரை :

வீரக்கழல்கள் காலில் விளங்கிட அணிந்து, பாதம் பொருந்தத்தொடுத்த தோல் செருப்புக் கெடாது நெடுக நிலவுவது தம் விருப்பத்திற்கு வாய்த்திடும் ஒன்றாக அணிந்து, பளுவான பெரியவில் ஒன்றினை வலமாக வந்து வணங்கி எடுத்து, அதனைத்தம் இரு காலும் நிலத்தில் மடித்து நின்று ஊன்றி வளைத்து, அதன் நாணினை ஏற்றி அவ்வில்லை வளைத்திடுந்தோறும் அதன் சிறப்பை வியந்து நோக்கிக் கையில் எடுத்துக் கொண்டு.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 63

அங்கப்பொழு திற்புவ னத்திடர் வாங்க ஓங்கித்
துங்கப்பெரு மாமழை போன்று துண்ணென் றொலிப்ப
வெங்கட்சின நீடு விலங்கு விலங்கி நீங்கச்
செங்கைத்தலத் தால்தட விச்சிறு நாண்எ றிந்தார்.

பொழிப்புரை :

அங்கு அவ்வமையத்தில், இந்நிலவுலகின் இடர் நீங்கவும், ஓங்கிடும் மேன்மையான பெருமழை முழக்கம் போன்று எங்கும் யாரும் திடுக்கிடும்படி ஓசை கொள்ளவும், கொடுந் தன்மையுடைய சினம் பெருகும் விலங்குகள் அவ்விடம் விட்டு நீங்கவும், தமது சிறந்த செங்கையினால் அவ்வில்லைத் தடவிச் சிறு நாணோசை செய்தார்.

குறிப்புரை :

பெரும் மழை பொழியுமுன் இடி இடித்திடும், அது பொழுது உலகத்தவர் நடுக்குறினும், அவ்வோசையால் பின் பெறுவது மழையே, அது போலத் திண்ணனார் கைக்கொண்ட வில்லில் அவர் எழுப்பிய நாண் ஓசை பெரிதும் உலகத்தவரை முன்னர் நடுக்குற வைப்பினும் அவ்வோசையால் பின்னர்ச் சிவவிளைவால் பெரு மகிழ்வு தருவதொன்றாக அமைய உள்ளமையின் `புவனத்திடர் வாங்க` எனக் கூறினார். திண்ணனாரின் திருமுடி முதலாகத் திருவடி ஈறாக வேடுவர்கள் வீரம் செறிய அணிவகைகளுடன் சிறப்பித்துக் கூறி இருப்பது ஆசிரியர் சேக்கிழாரின் அரும்பெரும் புலமைத் திறனோடு திண்ணனார் மீது கொண்ட பத்திமையையும் விளக்கி நிற்கின்றது, அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும், எனக்கூறும் அருமையுடைய தன்றோ அத்திருவுரு.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 64

 பல்வேறு வாளிபுதை பார்த்துடன் போத ஏவி
வில்வேட ராயத் துடிமேவி ஒலிக்கு முன்றில்
சொல்வேறு வாழ்த்துத் திசைதோறுந் துதைந்து விம்ம
வல்லேறு போல்வார் அடல்வாளி தெரிந்து நின்றார்.

பொழிப்புரை :

வலிய சிங்கஏற்றைப் போன்ற திண்ணனார், மேற்கூறியவாறு நாணோசை செய்த பின்பு, பல்வேறு அம்புகளை அவற்றின் கூர்மைச் சிறப்பைப் பார்த்து, உடன் கொண்டு வருமாறு ஆணையிட்டு, வில் ஏந்திய வேடர் கூட்டம் உடுக்கை அடித்து ஒலித்திடும் முன்றிலில் வந்து, பல்வேறு வகையான வாழ்த்துகள் திசைதோறும் பொலிந்து விம்மிடத் தாமும், கொலை புரியும் அம்புகளைத் தெரிந்து எடுத்து நின்றார்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 65

 மானச்சிலை வேடர் மருங்கு நெருங்கு போதில்
பானற்குல மாமல ரிற்படர் சோதி யார்முன்
தேனற்றசை தேறல் சருப்பொரி மற்று முள்ள
கானப்பலி நேர்கட வுட்பொறை யாட்டி வந்தாள்.

பொழிப்புரை :

பெருமை பொருந்திய வில் வேடர்கள், அவர் அருகில் நெருங்க, நீலமலர் என விரிகின்ற ஒளி பொருந்திய முகத்தை யுடைய திண்ணனார் முன், தேன் தோய்ந்த தசைகளும், கள்ளும், பொரியும், மற்றுமுள்ள பிற பொருள்களும் கொண்டு, காட்டிலுள்ள தெய்வங்கட்குப் பலி கொடுத்துவந்த தேவராட்டி வந்தாள்.

குறிப்புரை :

பானற்குலமலர் - நீலமலர்.

பண் :

பாடல் எண் : 66

 நின்றெங்கு மொய்க்குஞ்சிலை வேடர்கள் நீங்கப் புக்குச்
சென்றங்கு வள்ளல்திரு நெற்றியிற் சேடை சாத்தி
உன்தந்தை தந்தைக்கும் இந்நன்மை கள்உள்ள வல்ல
நன்றும்பெரி துன்விறல் நம்மள வன்றி தென்றாள்.

பொழிப்புரை :

திண்ணனாரைச் சூழ நிற்கும் வில்வேடர்கள், அப்பெருமாட்டிக்கு வழிவிட்டு நிற்ப, உட்புகுந்து சென்று அவளும், அவர் திருநெற்றியில் முனை முரியாத மஞ்சளோடு கலந்த அரிசி யையும் மலரையும் சாத்தி, உன் தந்தை தந்தைக்கும் கன்னி வேட்டை யாடச் சென்றிடும் போது, இன்று உனக்கு வாய்த்திருக்கும் நன்மைகள் போல வாய்த்தில; உன்னுடைய வலிமை பெரிதாகும்; அது உரையிடற்கு அரிதாகும்; எனக் கூறி, ஆசி வழங்கினாள்.

குறிப்புரை :

சேடை - மஞ்சளொடு கலந்த அரிசியும் மலரும்.

பண் :

பாடல் எண் : 67

 அப்பெற்றியில் வாழ்த்தும் அணங்குடை
யாட்டி தன்னைச்
செப்பற்கரி தாய சிறப்பெதிர்
செய்து போக்கிக்
கைப்பற்றிய திண்சிலைக் கார்மழை  
மேக மென்ன
மெய்ப்பொற்புடை வேட்டை யின்மேற்கொண்
டெழுந்து போந்தார்.

பொழிப்புரை :

அத்தன்மையில் வாழ்த்திய தேவராட்டிக்குச் சொலற்கரிய சிறப்புக்கள் பலவற்றையும் செய்து, அவளை அனுப்பு வித்து, கையில் பிடித்த திண்மையான வில்லுடன் மழைமேகம் என மெய்யழகு பெற்ற திண்ணனார், வேட்டையின் மேற்கொண்டு எழுந்து போயினார்.

குறிப்புரை :

மெய்ப் பொற்பு - மெய்யழகு.

பண் :

பாடல் எண் : 68

தாளில்வாழ் செருப்பர்தோல்
தழைத்தநீடு தானையார்
வாளியோடு சாபம்மேவு  
கையர்வெய்ய வன்கணார்
ஆளியேறு போலஏகும்  
அன்ணலார்முன் எண்ணிலார்
மீளிவேடர் நீடுகூட்டம்
மிக்குமேல் எழுந்ததே.

பொழிப்புரை :

இவ்வாறு ஆண்சிங்கம் என எழுந்த திண்ண னாரின் முன்பு, காலில் அணிந்து விளங்கும் செருப்பினை உடையவர் களும் தோல் ஆடைகளுடன் சேர உடுத்த நீண்ட மரஉரி ஆடையை உடுத்தியவர்களும், அம்புடன் வில்லும் கொண்ட கையினை உடைய வர்களும், தவிராது கொலை புரியும் கொடும் தன்மை உடையவர் களும் ஆன எண்ணற்ற வேடரின் கூட்டம் மிகுந்து மேற்கொண்டு எழுந்தது .

குறிப்புரை :

இப்பாடல் முதல் 727ஆவது பாடல் வரை, சந்த நடை பொருந்த வேட்டைச் சிறப்பை விவரிப்பது காணத்தக்கது.

பண் :

பாடல் எண் : 69

வன்தொடர்ப்பி ணித்தபாசம்  
வன்கைமள்ளர் கொள்ளவே
வென்றிமங்கை வேடர்வில்லின்
மீதுமேவு பாதமுன்
சென்றுநீளு மாறுபோல்வ  
செய்யநாவின் வாயவாய்
ஒன்றொடொன்று நேர்படாமல்
ஓடுநாய்கள் மாடெலாம்.

பொழிப்புரை :

வலிமையுடன் தொடுத்துக்கட்டிய வார்க் கயிற்றினைக் கொடிய கைகளையுடைய வேடர்கள் பற்றிக்கொண்டு வரவும், வெற்றிக்குரிய தெய்வமான கொற்றவையின் திருவடிமுன் போய் நீள்வது போன்ற சிவந்த நாக்குகளைத் தொங்கவிட்டிருக்கும் நாய்கள் இரு மருங்கும் ஒன்றொடு ஒன்று பொருந்தாமல் ஓடும்.

குறிப்புரை :

வேட்டை நாய்களின் நாக்குகள் கொற்றவையின் திருவடிகள் என நீண்டிருந்தன.

பண் :

பாடல் எண் : 70

 போர்வலைச் சிலைத்தொழிற்  
புறத்திலே விளைப்பவச்
சார்வலைத் தொடக்கறுக்க  
ஏகும்ஐயர் தம்முனே
கார்வலைப் படுத்தகுன்று
கானமா வளைக்கநீள்
வார்வலைத் திறஞ்சுமந்து  
வந்தவெற்பர் முந்தினார்.

பொழிப்புரை :

போர் வலைகள் கொண்டு வில்லும் கொண்ட வேட்டைத் தொழிலை வெளியிலே புரியுமாறு சென்றாலும், தம் உள்ளத்துள் சார்கின்ற பாசவலைகளின் தொடக்கறுக்க ஏகின்ற திண்ணனாருக்கு முன்னரே, மேகங்கள் பற்றிச் சூழும் பெருமலையின் இடைப்பட்ட அக்காட்டில் விலங்குகள் தப்பி ஒடாதபடி, காட்டை வளைத்திட, நீண்ட பெரிய வார் வலைகளின் பொதிகளைப் பல்வேறு வகையாகச் சுமந்து கொண்டு வருகின்ற வேடர்கள், தம் கூட்டத்தினரை முந்திக் கொண்டு ஓடினார்கள்.

குறிப்புரை :

வேட்டையாடும் பொழுது, காட்டிலுள்ள மிருகங்கள் தவறி வெளிப்போகாதபடி, காட்டை வலையால் சுற்றி வளைத்துச் சேமம் செய்தபின்புதான் , காட்டினுள் புகுந்து மிருகங்களை எழுப்பப் பண்ணி, வேட்டையாடுவது மரபாகும். ஆதலினால்தான் அக் காட்டினை வளைப்ப, வலைப் பொதிகளைச் சுமந்து கொண்டு வந்த வேடர்கள் முற்படச் சென்றனர். கார்வலைப்படுத்த குன்று - மேகங்களால் வளைக்கப் பட்டது போன்று மலையின் சூழல் அமைந்திருந்தது.

பண் :

பாடல் எண் : 71

நண்ணிமாம றைக்குலங்கள்
நாடவென்று நீடுமத்
தண்ணிலா அடம்புகொன்றை  
தங்குவேணி யார்தமைக்
கண்ணினீடு பார்வையொன்று  
கொண்டு காணும் அன்பர்முன்
எண்ணில்பார்வை கொண்டுவேடர்  
எம்மருங்கும் ஏகினார்.

பொழிப்புரை :

பெருமை பொருந்திய நான்மறைகளும் சென்று தேடிடும், அக்குளிர்ந்த வெண்பிறையும் அடம்பும் கொன்றைமலரும் தங்கும் சடையையுடைய பெருமானை, முன்னைய தவத்தால் அகக் கண்ணினால் கண்டு மகிழ்கின்ற அன்பராம் திண்ணனார் முன்னே, எண்ணற்ற பார்வை மிருகங்களைக் கொண்டு வேடர்கள் எப்பக்கங் களிலும் சென்றனர்.

குறிப்புரை :

******

பண் :

பாடல் எண் : 72

கோடுமுன் பொலிக்கவும்
குறுங்கணா குளிக்குலம்
மாடுசென் றிசைப்பவும்  
மருங்குபம்பை கொட்டவும்
சேடுகொண்ட கைவிளிச்  
சிறந்தவோசை செல்லவும்
காடுகொண் டெழுந்தவேடு  
கைவளைந்து சென்றதே.

பொழிப்புரை :

கொம்புகள் முன்பு ஒலிக்கவும், சிறு முகமுடைய ஆகுளிப் பறைகள் பக்கங்களில் ஒலிக்கவும், அவற்றின் அருகில் பம்பை முழக்கிடவும், அனைவரும் கூடிய வகையில் கைகளைத் தட்டுதலால் பேரோசை எழவும், பெருந்திரளாக வந்து எழுந்த வேட்டுவக் கூட்டம், அவ்வேட்டைக் காட்டினைப் பலபக்கமும் வளைந்து சென்றது.

குறிப்புரை :

******

பண் :

பாடல் எண் : 73

 நெருங்குபைந் தருக்குலங்கள்
நீடுகாடு கூடநேர்
வருங்கருஞ் சிலைத்தடக்கை  
மானவேடர் சேனைதான்
பொருந்தடந் திரைக்கடல்  
பரப்பிடைப் புகும்பெருங்
கருந்தரங்க நீள்புனல்
களிந்திகன்னி யொத்ததே.

பொழிப்புரை :

நெருங்கிய பசிய மரங்களின் இனங்கள் நீள வளர்ந்த பெருங்காட்டினை அடைவதற்கு நேர்வரும் கரிய வில்பிடித்த பெருங்கைகளை உடைய பெருமை நிறைந்த வேடரின் சேனை தானும், அலை பொருந்தும் திரையுடைய கடலின் எல்லையில் புகு கின்ற கறுத்த நீளும் அலைகளையுடைய காளிந்தி நதி என்னும் ஆற்றைப் போன்றது.

குறிப்புரை :

காளிந்திநதி - யமுனை என்பர். இது கருநிறமுடையதா தலின் ஈண்டு உவமையாயிற்று.காடு - கடல். சேனை - அதிற்புகும் யமுனை.

பண் :

பாடல் எண் : 74

 தென்றிசைப் பொருப்புடன்
செறிந்தகானின் மானினம்
பன்றிவெம் மரைக்கணங்கள்  
ஆதியான பல்குலம்
துன்றிநின்ற வென்றடிச்
சுவட்டின்ஒற்றர் சொல்லவே
வன்தடக்கை வார்கொடெம்  
மருங்கும் வேடரோடினார்.

பொழிப்புரை :

தென்திசையில் உள்ள மலையுடன் செறிந்த காட்டில் உள்ள மான் இனங்கள், பன்றிகள், கொடிய மரையினங்கள் முதலான பல மிருக இனங்கள் நெருக்கமுடன் நின்றன என்று அவற்றின் அடிச் சுவட்டினால் அறிந்துவந்து ஒற்றர்கள் அறிவிக்கவே, அவற்றை வளைப்ப, பெரும் கைகளில் வாரினைக் கொண்டு வேடர் கள் எப்பக்கங்களிலும் ஓடினார்கள்.

குறிப்புரை :

******

பண் :

பாடல் எண் : 75

ஒடியெறிந்து வாரொழுக்கி  
யோசனைப் பரப்பெலாம்
நெடியதிண் வலைத்தொடக்கு
நீளிடைப் பிணித்துநேர்
கடிகொ ளப் பரந்தகாடு  
காவல்செய் தமைத்தபின்
செடிதலைச் சிலைக்கைவேடர்  
திண்ணனார்முன் நண்ணினார்.

பொழிப்புரை :

அவ்வாறு ஓடிய வேடுவர்கள், காட்டின் மரக்கிளைகளை வெட்டி வீழ்த்தியும், வாரினைக் கட்டி, அவ்வெல்லை யெல்லாம் நீண்ட வலியுடைய அவ்வலையின் தொடர்ச்சி நீளிடை யாக ஒழுங்குடன் விளங்கப் பிணித்தும், அக் காட்டினில் விலங்குகள் தப்பிடாத வண்ணம் காவல் செய்து, அடைத்த பின், வில்லேந்திய கையினையுடைய வேடர்கள், திண்ணனார் முன்பாக வந்து சேர்ந்தார்கள்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 76

வெஞ்சிலைக்கை வீரனாரும்  
வேடரோடு கூடிமுன்
மஞ்சலைக்கு மாமலைச்  
சரிப்புறத்து வந்தமா
அஞ்சுவித் தடர்க்குநாய்கள்  
அட்டமாக விட்டுநீள்
செஞ்சரத்தி னோடுசூழல்  
செய்தகானுள் எய்தினார்.

பொழிப்புரை :

கொடிய வில்லைக் கையிலுடைய திண்ணனார், தம்முடன் வந்த வேடரோடும் கூடி, முன்பாக உள்ள மேகங்கள் படியும் பெரு மலையின் சாரலிடத்துத் தப்பி வரும் மிருகங்கள் யாவற்றையும் அச்சுறுத்திக் கலைத்துச் சென்று, பற்றிடும் நாய்களைக் கட்டிய வலையின் புறமாக நீள விடுத்து, நீண்ட அம்புகளினோடும் தாம் காவல் செய்த வேட்டைக் காட்டினுள் சென்றார்.

குறிப்புரை :

அட்டம் - வேடுவர்கள் தமக்குள் உரையாடிக் கொள் ளும் குழூஉக் குறி என்பர். நாய்களை அவிழ்த்து விட்டு, குறுக்காக வும் நெடுக்காகவும் செல்ல விடுத்து, ஏனைய விலங்குகளை மேற் செல்லாமல் தடுத்தல் எனப் பொருள் காண்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 77

 வெய்யமா எழுப்பஏவி
வெற்பராயம் ஓடிநேர்
எய்யும்வாளி முன்தெரிந்து  
கொண்டுசெல்ல எங்கணும்
மொய்குரல் துடிக்குலங்கள்  
பம்பைமுன் சிலைத்தெழக்
கைவிளித் ததிர்த்துமா
எழுப்பினார்கள் கானெலாம்.

பொழிப்புரை :

கொடிய விலங்குகளை எழுப்பும்படி வேடர்களை ஏவ, அம்மலைநாட்டு வேடரெல்லாம் மிருகங்களை எய்வதற்கு ஏற்ற கூரிய அம்புகளை எடுத்துக் கொண்டு, எங்கும் ஓடிச் செல்ல, எப்பக்கங்களிலும் மொய்த்தெழுகின்ற உடுக்கின் கூட்டங்களின் ஓசை பெருக, பம்பைப் பறைமுன் முழங்க, கைகளைத் தட்டி, நிலம் அதிரும் ஓசை செய்து, காட்டிலுள்ள மிருகங்களை யெல்லாம் அவ்வேடர்கள் எழுப்பினார்கள்.

குறிப்புரை :

******

பண் :

பாடல் எண் : 78

ஏனமோடு மானினங்கள்  
எண்குதிண் கலைக்குலம்
கானமேதி யானைவெம்  
புலிக்கணங்கள் கான்மரை
ஆனமாவ னேகமா  
வெருண்டெழுந்து பாயமுன்
சேனைவேடர் மேலடர்ந்து
சீறிஅம்பில் நூறினார்.

பொழிப்புரை :

காட்டுப் பன்றிகளோடு, மானினங்கள், கரடி, திண்மையான கலைமான் கூட்டம், காட்டெருமைகள், யானைகள், கொடிய புலியின் வகைகள், காட்டு மரைகள் ஆன பெரு மிருகங்கள் பலவாக வெருண்டு எழுந்து பாய, திண்ணனாரின் முன் வந்த சேனையாய வேடர்கள், அம்மிருகங்கள் மேல் நெருங்கிச் சீறி அம்பினால் எய்து கொன்றார்கள்.

குறிப்புரை :

******

பண் :

பாடல் எண் : 79

 தாளறுவன இடைதுணிவன  
தலைதுமிவன கலைமா
வாளிகளொடு குடல்சொரிதர
மறிவனசில மரைமா
நீளுடல்விடு சரமுருவிட
நிமிர்வனமிடை கடமா
மீளிகொள்கணை படுமுடலெழ  
விழுவனபல உழையே.

பொழிப்புரை :

கலைமான்கள் கால் அறுவனவும், இடை அறு வனவும், தலை முறிவனவும், தைத்த அம்புடன் குடல் சொரிந்திடப் புரண்டு வீழ்வனவும் ஆயின. சில காட்டுப் பசுக்கள் தமது நீண்ட உடல் மேல் விடப் பெறும் அம்பு வந்து பின்னால் உருவிச் செல்ல, உடல் பதைத்து நிமிர்வனவாயின. பலமான்கள் மிகக் கொடிய அம்புகள் வந்து தைக்க எழுந்து துள்ளி அறுபடலாயின.

குறிப்புரை :

******

பண் :

பாடல் எண் : 80

 வெங்கணைபடு பிடர்கிழிபட  
விசையுருவிய கயவாய்
செங்கனல்பட அதனொடுகணை
செறியமுன்இரு கருமா
அங்கெழுசிர முருவியபொழு  
தடலெயிறுற அதனைப்
பொங்கியசின மொடுகவர்வன
புரைவனசில புலிகள்.

பொழிப்புரை :

கொடிய அம்பு படப்பிடரி கிழியும்படி விசையுடன் உருவப்பட்ட சிறிய வாயினையுடைய மான், அவ்வம்பு முன் போதலால் வாயினில் குருதி பெருகிச் சிவந்த நெருப்பைப் போலக் காட்சி தர, அதன்பின் இன்னும் அம்புகள் விசையுடன் சென்று முன் வந்த பெரும் பன்றியின் தலையில் அவை உருவிய பொழுது, அவ் வீச்சுடன் அப்பன்றி சென்று முன்னாக வந்த புலியின் வாய்க்குள் அம்புடன் சேரத் தைக்கப்பட்டு அம்பினால் புலியின் வாயும் பன்றியின் முகமும் ஒன்றாக்கப் பட்ட தன்மையினால் புலி,பன்றியைக் கௌவிக் கொண்டோடிய தன்மைபோல் இக்காட்சி ஒத்திருந்தது.

குறிப்புரை :

******

பண் :

பாடல் எண் : 81

 பின்மறவர்கள் விடுபகழிகள்  
பிறகுறவயி றிடைபோய்
முன்னடுமுக மிசையுறுவிட  
முடுகியவிசை யுடனக்
கொன்முனையடு சரமினமெதிர்
குறுகியமுக முருவத்
தன்னெதிரெதிர் பொருவனநிகர்
தலையனபல கலைகள்.

பொழிப்புரை :

பின்னின்று வேடர்கள் விடுகின்ற அம்புகள், பல கலைமான்களின் வயிற்றிடையே போய் முன்னாக வரும் முகத்தி னூடாகச் சென்று முடுகிடும் விசையோடு அக்கொலை முகமுடைய அம்பு, முன்னாக எதிருற்று வந்த இன்னொரு மானின் முகத்தில் தைத்து உருவ, அதனால் அவ்வம்பு தைக்கப்பட்ட இரு மான்களும் ஒன்றையொன்று தலையினால் இடிபட்டுப் போர் புரியும் நிலைபோலக் காணப்படுவன வாயின.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 82

 கருவரையொரு தனுவொடுவிசை
கடுகியதென முனைநேர்
குரிசில்முன்விடும் அடுசரமெதிர்
கொலைபயில்பொழு தவையே
பொருகரியொடு சினவரியிடை
புரையறவுடல் புகலால்
வருமிரவொடு பகலணைவன
எனமிடையுமவ் வனமே.

பொழிப்புரை :

கரிய பெருமலை, கையில் ஒரு வில்லுடன் விரைவாக ஓடுகின்றதெனப், பொருந்தும் படியாக வனத்தின் முன்னாக நேர்ந்து வரும் திண்ணனார், முன் விடுகின்ற கொலை புரியும் அம்புகள் எதிர்வந்த மிருகங்களைக் கொலை செய்கின்ற அமையத்து, அவ்வம்புகள் போரிடும் யானையோடு சினமுடைய சிங்கங்களின் வயிற்றிலும் இடையீடு இன்றிப் புகுதலால், இறந்து வீழ்ந்து கிடக்கும் அம்மிருகங்கள் இரவின் பின்னால் பகல் தொடர்கின்றது எனும்படி அவ்வனம் காட்சியளித்தது

குறிப்புரை :

யானை இரவுக்கும் சிங்கம் பகலுக்கும் உவமையாயின.

பண் :

பாடல் எண் : 83

நீளிடைவிசை மிசைகுதிகொள  
நெடுமுகில்தொட எழுமான்
தாளுறுகழல் மறவர்கள்விடு
சரநிரைதொடர் வனதாம்
வாள்விடுகதிர் மதிபிரிவுற
வருமெனவிழும் உழையைக்
கோளொடுபயில் பணிதொடர்நிலை
கொளவுளவெதிர் பலவே.

பொழிப்புரை :

வேட்டை மிக்க நிலையில், அச்சத்தால் நீண்ட இடம்வரையும் கடிதோடி மேலே துள்ளிக் குதித்து, நெடிய முகிலைத் தொடும்படி எழுந்த மான்களைக் கொல்லுமாறு வீரக் கழலை அணிந்த வேடர்கள் விடுகின்ற அம்புகளின் நிரை, பின்னால் தொடர்கின்ற தன்மை, ஒளிவிடுகின்ற நிலாக்கதிரை விடுத்து, அதனிட மிருந்து கீழ்விழுகின்ற மானைப் பிடிப்பதற்கெனப் பின்பற்றச் செல்லும் பாம்புகளின் நிலையை ஒத்திருந்தது.

குறிப்புரை :

நிறைமதியிடத்துக் காணும் களங்கத்தை முயல் என்பதும் உண்டு. மான் என்பதும் உண்டு. விண்வரை சென்ற அம்பு, அவ் வெல்லைவரை துள்ளிய மானைத் தைத்து. மதியைப் பற்ற நினைந்த பாம்பு, அதனின்றும் பிரிந்து விழும் மானைப் பற்றியது போன்றது என்றார்.

பண் :

பாடல் எண் : 84

 கடல்விரிபுனல் கொளவிழுவன  
கருமுகிலென நிரையே
படர்வொடுசெறி தழைபொதுளிய  
பயில்புதல்வன மதன்மேல்
அடலுறுசரம் உடலுறவரை  
அடியிடம்அல மரலால்
மிடைகருமரை கரடிகளொடு
விழுவனவன மேதி.

பொழிப்புரை :

கொடிய அம்புகள் வந்து படுதலினால், அருகில் படர்ந்து செறிந்த தழைகள் பரப்பிய பெருமரங்கள் செறிந்த அக் காட்டினிடத்து, கரிய மரைகளுடனும், கரடிகளுடனும், காட்டெருமை களுடனும் அம்மலைச் சாரலில் சுழன்று வீழ்கின்றமை, நீலக் கடல் மீது நீருண்ண வந்து படிகின்ற கருமுகிலின் நிரையை யொத்துள்ளது.

குறிப்புரை :

நிரை - வரிசை.

பண் :

பாடல் எண் : 85

பலதுறைகளின் வெருவரலொடு  
பயில்வலையற நுழைமா
உலமொடுபடர் வனதகையுற
உறுசினமொடு கவர்நாய்
நிலவியவிரு வினைவலையிடை
நிலைசுழல்பவர் நெறிசேர்
புலனுறுமன னிடைதடைசெய்த
பொறிகளின்அள வுளவே.

பொழிப்புரை :

பல இடங்களிலும் கட்டியிருக்கின்ற வார்வலைகள் அறும்படி, மிகும் அச்சத்தால் ஓடி அவற்றுள் புகுகின்ற விலங்குகள், மிகுவலியுடன் தப்பித்தோடுவனவற்றைத் தடுத்திடும் நாய்கள், இந் நிலவுலகில் எவ்வுயிர்களிடத்தும் நிலவுகின்ற கொடிய இருவினை யின் வலியிடைச் சுழல்பவர்கள், அக்கொடிய வினையை விடுத்து நன்னெறிக்கண் சேர எண்ணும் மனத்தை, அவ்வாறு போகவிடாதபடி தடுத்து வைக்கும் ஐம்புலன்களை ஒத்தன.

குறிப்புரை :

விலங்குகள் - உயிர்கள். வலை - இருவினை. வலையி னின்றும் தப்பித்தோடும் விலங்குகளை நாய்கள் தடுப்பது இரு வினை யினின்றும் தப்ப முயலும் உயிர்களை ஐம்பொறிகளும் தடுப்பதை ஒத்தது.

பண் :

பாடல் எண் : 86

 துடியடியன மடிசெவியன  
துறுகயமுனி தொடரார்
வெடிபடவிரி சிறுகுருளைகள்
மிகைபடுகொலை விரவார்
அடிதளர்வுறு கருவுடையன  
அணைவுறுபிணை அலையார்
கொடியனஎதிர் முடுகியும்உறு  
கொலைபுரிசிலை மறவோர்.

பொழிப்புரை :

எதிராக ஓடிச் சென்று ஒவ்வொரு விலங்கையும் கொலை புரிகின்ற அவ்வில் வேடர்கள், அம்மிருகக் கூட்டத்து, உடுக்கை போலும் காலுடையவும் மடிந்த செவியை உடையவுமாகிய யானைக் குட்டிகளைத் தீண்டாது தவிர்த்து விடுவர். துள்ளி ஓடுகின்ற சிறு மிருகக் குட்டிகள் மீதும் ஒருபோதும் கொலை செய்ய விரும்பார். கருமுதிர்ந்து அத்தன்மையால் கால் தளர்வுற்று ஓட முடியாது தளர்ந்தோடும் விலங்குகளைத் துயரம் செய்யார். இவ்வாறாகத் தாம் செய்யும் கொலைத் தொழிலினும் அறம் பிறழச் செய்யாதவர்கள், வேடர்கள்.

குறிப்புரை :

வேடர்கள் கொலைத் தொழிலினராயினும், அவர்கள் மாட்டும் அறக் கருணையுடையதாதலை இப்பாடல் விளக்குகின்றது. மடிந்த உள்ளத்தோனையும் மகப்பெறாதோனையும் மயிர்குலைந்தோ னையும், அடிபிறக்கிட்டோனையும், பெண் பெயரோனையும், படையிழந்தோனையும், ஒத்த படையெடாதோனையும், பிறவும் இத்தன்மையுடையோரையும் கொல்லாது விடுதலுங் கூறிப் பொருதலும் அறமாம் (தொல். புறத்.2) என நச்சினார்க்கினியர் கூறுமாறுங் காண்க. இவ்வாறு வழிவழியாகக் கூறப்பெற்றுவந்த அறமே, இக்காலத்தில் விலங்கின வதைத் தடைச் சட்டம் முதலானசட்டங்கள் தோன்றக் காரணமாயிற்று.

பண் :

பாடல் எண் : 87

இவ்வகைவரு கொலைமறவினை
எதிர்நிகழ்வுழி அதிரக்
கைவரைகளும் வெருவுறமிடை
கானெழுவதொர் ஏனம்
பெய்கருமுகி லெனஇடியொடு
பிதிர்கனல்விழி சிதறி
மொய்வலைகளை அறநிமிர்வுற
முடுகியகடு விசையில்.

பொழிப்புரை :

வேட்டையாடும் இவ்வகையில் கொலைச்செயல் அங்கே நிகழ்ந்து வரும் பொழுது, அக்காட்டிடத்து உள்ள மிருகங் களில் மலை போன்ற பெரிய துதிக்கையுடைய யானைகளும் அச்சமுற, அக்காடும் புழுதி பரவுமாறு ஒரு பன்றி எழுந்து, பெரிய மழை பெய்யும் கறுத்தமுகில் ஒன்று இடி இடித்துக் கொண்டு போகின்ற தன்மைபோல, தன்கண்களூடாகப் பிறக்கின்ற சினப் பொறிகளுடன் பாய்ந்தோடி, வேடர் கட்டிய வலைகள் எல்லாம் அறுந்திடும்படியாகப் புறப்பட்டு, நிமிர்கின்ற விசையோடு ஓடியது.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 88

 போமதுதனை அடுதிறலொடு  
பொருமறவர்கள் அரியே
றாமவர்தொடர் வுறும்விசையுடன்
அடிவழிசெலும் அளவில்
தாமொருவரு ம் அறிகிலரவர்  
தனிதொடர்வுழி அதன்மேல்
ஏமுனையடு சிலைவிடலைகள்  
இருவர்கள்அடி பிரியார்.

பொழிப்புரை :

அவ்வாறு விசையுடன் ஓடுகின்ற அப்பன்றியைக் கொன்றிட உறுதியுடன் போரிடும் வேடர்களில் ஆண்சிங்கம் எனத் தகும் திண்ணனார், அப்பன்றி ஓடிடும் விசையுடன் தாமும் அதைத் தொடர்ந்து ஓடிடும் அளவில், அதைப் பிறர் எவரும் காணாது தாமே அதைத் தனித்துத் தொடர்ந்து சென்றிடும் போது, அப்பன்றி வேட்டையில் கொலை புரியும் வில் வீரர்கள் இருவர் திண்ணனாரைப் பிரியாது தாமும் தொடர்ந்தோடினர்.

குறிப்புரை :

பற்றித் தொடரும் இருவினையைப் போன்றவர் இவ்விரு வீரரும் எனலாம்.

பண் :

பாடல் எண் : 89

 நாடியகழல் வயவர்களவர்
நாணனும்நெடு வரிவில்
காடனும்எனும் இருவருமலை  
காவலரொடு கடிதில்
கூடினர்விடு பகழிகளொடு  
கொலைஞமலிகள் வழுவி
நீடியசரி படர்வதுதரு
நீழலின்விரை கேழல்.

பொழிப்புரை :

வீரக்கழல் அணிந்த அவ்வீரர்கள் `நாணன்` என்னும் பெயருடையவனும், நெடிய வரிவில்லைக் கையில் கொண்ட `காடன்` என்னும் பெயருடையவனும் ஆன இருவரும், மலைநாட்டின் காவலரான திண்ணனாரோடு மிகு விரைவுடன் கூடினராய்ப் பன்றியின் பின் தொடர்ந்து ஓடி, அவர்கள் விடுகின்ற அம்புகளை எல்லாம் தப்பியதுமன்றி, அப்பன்றியைத் தடுத்திடும் நாய்களையும் தப்பித்துக் கொண்டு, நீண்ட மலைச் சாரலில் உள்ள மரங்களின் நீழலில் விரைவுடன் தொடர்ந்தோடியது.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 90

 குன்றியைநிகர் முன்செறஎரி
கொடுவிழிஇடி குரல்நீள்
பன்றியும்அடல் வன்றிறலொடு
படர்நெறிநெடி தோடித்
துன்றியதொரு குன்றடிவரை
சுலவியநெறி சூழல்
சென்றதனிடை நின்றதுவலி  
தெருமரமரம் நிரையில்.

பொழிப்புரை :

குன்றி மணியைப் போலும் பொறிபறந்திட எரிகின்ற சிவந்த கண்களுடன் இடியை ஒத்த குரலையுடைய பன்றியும், மிக்க வலிமையுடன் நீண்டதூரம் ஓடி, எதிரே ஒரு மலை அடிவாரத்து நிலவுகின்ற ஒருமரச் சூழலில் சென்று, தன்வலி குன்றிக் களைப்புற்று அம்மரநிரையின் நிழலில் மறைந்து நின்றது.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 91

 அத்தருவளர் சுழலிடையடை  
அதனிலையறி பவர்முன்
கைத்தெரிகணை யினிலடுவது
கருதலர்விசை கடுகி
மொய்த்தெழுசுடர் விடுசுரிகையை
முனைபெறஎதிர் உருவிக்
குத்தினருடல் முறிபடவெறி
குலமறவர்கள் தலைவர்.

பொழிப்புரை :

அம்மரங்கள் வளர்ந்துற்ற பகுதியில் அப் பன்றியின் நிலையை அறிபவராய திண்ணனார், சென்று தம் கையிடத்து வைத்திருந்த நெருப்புப் பொறி போன்ற அம்பால் எய்து, அதைக் கொல்வதை எண்ணாது மிகு வேகமுடன் ஓடி, எங்கும் பளிச்சிடும்படி எழுகின்ற சுடருடைய தன் சுழல் வாளை உறையி னின்றும் எடுத்து, அப்பன்றியின் உடலை இரு துண்டாக வெட்டினார்.

குறிப்புரை :

உயிர்க்குத் தப்பி ஓடும் விலங்குகள், அந்நிலை இயலாதபொழுது எதிர்த்துப் போராட எண்ணும், அந்நிலைக்கு அஞ்சித் தொலைவி லிருந்து அம்பினால் கொல்வது தம் வீரத்திற்கு இழுக்கென்று கருதி, நேர் முகமாக நின்று வெட்டி வீழ்த்தினார்.

பண் :

பாடல் எண் : 92

 வேடர்தங் கரிய செங்கண்  
வில்லியார் விசையிற் குத்த
மாடிரு துணியாய் வீழ்ந்த  
வராகத்தைக் கண்டு நாணன்
காடனே இதன்பின் இன்று  
காதங்கள் பலவந் தெய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ
என்றவர் அடியில் தாழ்ந்தார்.

பொழிப்புரை :

கரிய மேனியும் சிவந்த கண்களும், வில்லும் கொண்ட வேடர் தலைவராய திண்ணனார், விரைந்து குத்தலும் இரு துண்டுகளாய் வீழ்ந்த அப்பன்றியைக் கண்டு, நாணன், ``காடனே! இப் பன்றியின் பின்னாக இன்று பல காததூரம் ஓடிவந்து களைத்து இளைத்தோம் ஆயினும் இவ் ஆடவனாய திண்ணன் அதனைக் கொன்றான் அச்சோ`` எனப் பாராட்டுக் கூறி, தம் தலைவர் திண்ண னார் திருவடிகளில் தாழ்ந்தார்கள்.

குறிப்புரை :

அச்சோ - வியந்து போற்றுதற்குரிய சொல்.

பண் :

பாடல் எண் : 93

 மற்றவர் திண்ண னார்க்கு  
மொழிகின்றார் வழிவந் தாற்ற
உற்றது பசிவந் தெம்மை
உதவிய இதனைக் காய்ச்சிச்
சற்றுநீ அருந்தி யாமும்  
தின்றுதண் ணீர்கு டித்து
வெற்றிகொள் வேட்டைக் காடு  
குறுகுவோம் மெல்ல என்றார்.

பொழிப்புரை :

அவ்விருவரும் திண்ணனாரை நோக்கி `இத்துணைத் தொலைவும் நாம் ஓடிவந்தமையால், எமக்குப் பசி மிகவும் ஏற்பட்டுள்ளது. ஆதலின் உற்ற இடத்து உதவிய இப்பன்றியை நெருப்பில் காய்ச்சி நீயும் உண்டு, யாமும் தின்று தண்ணீரும் பருகிப் பின்பு இன்று பெருவெற்றி கொண்ட வேட்டைக் காட்டைச் சென்று சேர்வோம்` என்றனர்.

குறிப்புரை :

அருந்துதல் - அளவுபட உண்டல். தின்றல் - பெருக உண்டல்.
தலைவர் - உண்டபின் பணியாளர் உண்ணும் மரபும் குறித்த வாறு.

பண் :

பாடல் எண் : 94

என்றவர் கூற நோக்கித்  
திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றுமிவ் வனத்தி லுள்ள  
தென்றுரை செய்ய நாணன்
நின்றவிப் பெரிய தேக்கின்
அப்புறஞ் சென்றால் நீண்ட
குன்றினுக் கயலே ஓடும்
குளிர்ந்தபொன் முகலி என்றான்.

பொழிப்புரை :

என்று நாணனும், காடனும் மொழிந்திட, அவரைத் திண்ணனார் நோக்கி, `நல்ல தண்ணீர் எங்கே இக்காட்டில் உள்ளது` எனக் கேட்டலும், நாணனும், `இதோ நிற்கின்ற இப்பெரிய தேக்கு மரச்சோலையைக் கடந்து சென்றால், நீண்ட ஒரு மலை உண்டு; அம்மலைக்கு அருகே ஓடுகின்றது குளிர்ந்த பொன்முகலி என்னும் ஆறு, அது நல்ல நீராகும்` என்றான்.

குறிப்புரை :

திண்ணனார் அவ்விருவரையும் நோக்கிக் கேட்ட அளவில் நாணனே இம்மறுமொழி கூறுகின்றான்; காடனினும் இவன் அறிவும் எழுச்சியும் உடையனாதலின்.

பண் :

பாடல் எண் : 95

 பொங்கிய சினவில் வேடன்  
சொன்னபின் போவோம் அங்கே
இங்கிது தன்னைக் கொண்டு  
போதுமின் என்று தாமும்
அங்கது நோக்கிச் சென்றார்
காவதம் அரையிற் கண்டார்
செங்கண்ஏ றுடையார் வைகும்
திருமலைச் சாரற் சோலை.

பொழிப்புரை :

பொங்கிடும் சினமுடைய வில் வேடனாகிய நாணன் இங்ஙனம் கூறத் திண்ணனாரும். `அவ்விடத்திற்கு நாம் போவோம், அங்கே இப்பன்றியின் உடலைக் கொண்டு வாருங்கள்` என்று கூறித் தாமும் அப்பொன்முகலியாற்றின் திசை நோக்கிச் சென்றார். சென்றிடும்போது அரைக்காவதத் தொலைவு சென்ற அளவில் திண்ணனார், சிவந்த கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாக வுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்காளத்தி மலையைச் சார்ந்த சோலையைக் கண்டார்.

குறிப்புரை :

திருமலை என்பது கயிலை மலையைக் குறிக்கும். முன்னர்த் திருமலைச் சருக்கம் என்றதும் காண்க. திருக்காளத்தியும் அதனொடு ஒப்ப எண்ணுதற்குரியதாய்த் தென்கயிலை எனக் குறிக்கத்தக்கது ஆதலின் இதனையும் `திருமலை` என்றார்.

பண் :

பாடல் எண் : 96

 நாணனே தோன்றும் குன்றில்  
நண்ணுவேம் என்ன நாணன்
காணநீ போதின் நல்ல  
காட்சியே காணும் இந்தச்
சேணுயர் திருக்கா ளத்தி  
மலைமிசை யெழுந்து செவ்வே
கோணமில் குடுமித் தேவர்
இருப்பர்கும் பிடலாம் என்றான்.

பொழிப்புரை :

கண்ட திண்ணனார், `நாணனே, இதோ தெரிகின்ற மலைமேல் செல்வோம்` என்னலும், நாணனும், `நீ அம்மலைக்குச் செல்வாயாயின் நல்ல காட்சியையே காண்பாய். வானுயர எழுந்த திருக்காளத்தி மலையின் மேல், எவர்க்கும் அருள் புரிதலில் மாறு படுதல் இல்லாத குடுமித்தேவர் என்னும் பெருமான் இருப்பர். கும்பிடலாம்` என்றான்.

குறிப்புரை :

கோணம் - குற்றம் எனப் பொருள் கொண்டு, எவ் வுயிர்க்கும் உற்ற குற்றங்களை இல்லையாகச் செய்யும் குடுமித் தேவர் என்றலும் ஆம். `யான்செய்தேன் பிறர் செய்தார் என்னாது யான் என்னும் இக்கோணை` நீக்குதலே குற்றம் இல்லையாகச் செய்வதாம். குடுமித்தேவர் - மலையின் உச்சியில் இருப்பவர். குடுமி - உபநிடதத்து உச்சி எனும் பொருள் கொண்டு, உபநிடதத்து உச்சியில் விரிந்த இறைவன் எனப் பொருள் கோடலும் ஒன்று.

பண் :

பாடல் எண் : 97

 ஆவதென் இதனைக் கண்டிங்  
கணைதொறும் என்மேல் பாரம்
போவதொன் றுளது போலும்  
ஆசையும் பொங்கி மேன்மேல்
மேவிய நெஞ்சும் வேறோர்
விருப்புற விரையா நிற்கும்
தேவரங் கிருப்ப தெங்கே
போகென்றார் திண்ண னார்தாம்.

பொழிப்புரை :

இவ்வாறு நாணன் சொல்லக்கேட்டு முன் சென்று கொண்டிருக்கும் திண்ணனாரும், `நாணனே! ஈதென்ன வியப்பு, இம்மலையை அணைந்து செல்லச்செல்ல என்மேல் உள்ள பளு வொன்று நீங்குவது போல் இருக்கின்றது. ஆசைமிக்கெழ என் நெஞ்சமும் இதுகாறும் இல்லாத வேறொரு வகையான விருப்பமுற விரைந்து செல்கின்றது. நீ சொன்ன தேவர்தாம் எங்கே இருக்கின்றார்? அங்குச் செல்வாயாக` என்றார்.

குறிப்புரை :

பாரம் - பளு, தத்துவக்கட்டு. `பேணுத்தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி` (பா.752)என்பர் பின்னும். வேறோர் விருப்பு - உலகியல் வயத்ததன்றி அருள் வயத்ததாய விருப்பு.

பண் :

பாடல் எண் : 98

 உரைசெய்து விரைந்து செல்ல  
அவர்களும் உடனே போந்து
கரைவளர் கழையின் முத்தும்
காரகில் குறடுஞ் சந்தும்
வரைதரு மணியும் பொன்னும்  
வயிரமும் புளினம் தோறும்
திரைகள்முன் திரட்டி வைத்த  
திருமுக லியினைச் சார்ந்தார்.

பொழிப்புரை :

இவ்வாறு கூறியவாறு திண்ணனார்விரைந்து செல்ல. அவர்களும், இவர் விரைவுடன் ஒப்பச் சென்று, கரையில் வளரும் மூங்கிலின் முத்தும், கரிய அகில் மரத்தின் கட்டைகளும், மலை தரும் மணிகளும், பொன்னும், வயிரமும் மணற் பரப்புகள் எங்கும் திரைகள் முன்பு கொணர்ந்து திரட்டி வைக்கும் பெருந் திருவுடைய பொன்முகலி ஆற்றினைச் சேர்ந்தார்கள்.

குறிப்புரை :

பொன்முகலி - இப்பெயருடையது, இங்குள்ள ஆறு. அறிந்தோ, அறியாமலோ செய்த தீவினைகள் எல்லாம் இதன் கண் ஆடப்போம் என்பர் நக்கீரர் (தி.11 கயிலை.காள. பா.74) எனவே திருமுகலி என்பர் சேக்கிழார்.

பண் :

பாடல் எண் : 99

ஆங்கதன் கரையின் பாங்கோர்  
அணிநிழற் கேழ லிட்டு
வாங்குவிற் காடன் தன்னை
மரக்கடை தீக்கோல் பண்ணி
ஈங்குநீ நெருப்புக் காண்பாய்  
இம்மலை யேறிக் கண்டு
நாங்கள்வந் தணைவோ மென்று
நாணனும் தாமும் போந்தார்.

பொழிப்புரை :

அவ்வாற்றங் கரையின்பாலாக ஓர் அழகிய மரத்தின் நிழலில், சுமந்து வந்த பன்றியைக் கிடத்தி நிற்கும் வில் வேடனாகிய காடனை நோக்கி, `மரக்கட்டையில் தீக்கடையும் கோல் செய்து அதனால் இங்கு நெருப்பு உண்டு பண்ணுவாய், நாங்கள் இம் மலையில் ஏறிச்சென்று கண்டு பின்னர் வந்து சேர்வோம்` எனக்கூறி, நாணனும் தாமுமாகச் சென்றார்கள்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 100

 அளிமிடை கரைசூழ் சோலை
அலர்கள்கொண் டணைந்த ஆற்றின்
தெளிபுன லிழிந்து சிந்தை
தெளிவுறுந் திண்ண னார்தாம்
களிவரு மகிழ்ச்சி பொங்கக்  
காளத்தி கண்டு கொண்டு
குளிர்வரு நதியூ டேகிக்  
குலவரைச் சாரல் சேர்ந்தார்.

பொழிப்புரை :

வண்டினம் மொய்க்கும் கரையில் சூழ்வுற்ற சோலைகளின் பூக்களைத் திரையால் வாரிக்கொண்டு வந்த பொன்முகலி ஆற்றின் தெளிந்த நீரில் இறங்கி, சிந்தை தெளிவுறும் திண்ணனார் தாமும், மனத்தில் களிகூருகின்ற மகிழ்ச்சி பொங்கிடக், காளத்தி மலையைக் கண்டவாறே, குளிர்ந்து வரும் அப்பொன்முகலி ஆற்றினூடு சென்று, சிறந்த காளத்தி மலைச்சாரலை அடைந்தார்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 101

 கதிரவ னுச்சி நண்ணக்
கடவுள்மால் வரையி னுச்சி
அதிர்தரு மோசை ஐந்தும்  
ஆர்கலி முழக்கங் காட்ட
இதுவென்கொல் நாணா வென்றார்க்  
கிம்மலைப் பெருந்தேன் சூழ்ந்து
மதுமலர் ஈக்கள் மொய்த்து  
மருங்கெழும் ஒலிகொல் என்றான்.

பொழிப்புரை :

அது பொழுது கதிரவனும் உச்சியை அடைய, தெய்வத்தன்மையுடைய அம்மலையின் உச்சியில் ஒலித்து எழுகின்ற ஐந்து தேவதுந்துபிகளின் ஓசைகளும் ஒலிக்கின்ற கடலினைப் போன்ற முழக்கத்தைக் காட்ட, அதுகேட்ட திண்ணனாரும் நாணனை நோக்கி, ``நாணனே! இது என்ன ஓசை?` எனக் கேட்க, அவனும், `இம் மலையில் இருக்கும் பெருந்தேன் கூட்டினைச் சூழ்ந்து, பூவில் தேன் உண்ணும் ஈக்கள், அதில் மொய்த்துப் பக்கங்களில் மீண்டும் எழுவதால் விளைகின்ற ஓசையாக இருக்கும்போலும்` என்றான்.

குறிப்புரை :

திண்ணனார் கேட்டதற்கு நாணன் கூறிய விடை `கண்டானாம் தான் கண்டவாறு` (குறள், 849) என்ற அளவில் அமைந்தது, எனினும் அதனை ஐயுற மொழிந்தது, அவன் தன்மதி நுட்பத்தைக் காட்டுகிறது. ``கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்ல தூஉம் ஐயம் தரும்`` (குறள், 845) எனும் குறளை நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 102

 முன்புசெய் தவத்தின் ஈட்டம்  
முடிவிலா இன்ப மான
அன்பினை எடுத்துக் காட்ட  
அளவிலா ஆர்வம் பொங்கி
மன்பெருங் காதல் கூர வ
ள்ளலார் மலையை நோக்கி
என்புநெக் குருகி உள்ளத்
தெழுபெரு வேட்கை யோடும்.

பொழிப்புரை :

முற்பிறவியில் செய்து கொண்ட தவத்தின் தொகுதி, இப்பொழுது திரண்டு வந்து, முடிவில்லாத இன்பமாகும் அன்பினை எடுத்துக் காட்டிட, அதனாலே பெருமானைக் காண்பதற்கு அளவிலாத ஆர்வம் தமது உள்ளத்துள் பொங்கி மிக, வள்ளலாராய காளத்தியப்பர் இருந்தருளும் அம்மலையை நோக்கி எலும்பும் நெக்கு உருகத் தம் உள்ளத்து எழுவதொரு விருப்பத்துடன்,

குறிப்புரை :

முன்பு செய் தவத்தின் ஈட்டம் என்பது முற்பிறவியில் அருச்சுனனாய் இருந்து தவம் செய்தமையைக் குறித்தது என்பார்,
வாமான்தேர்வல்ல வயப்போர் விசயனைப் போல்
தாமார்உலகில் தவம் உடையார் - தாம்யார்க்கும்
காண்டற் கரியராய்க் காளத்தி ஆள்வாரைத்
தீண்டத்தாம் பெற்றமையாற் சென்று. (தி.11 கயிலை.காள. பா.70)
என வரும் நக்கீரர் திருவாக்கை இதற்கு மேற் கோளாகக் காட்டுவர். முடி விலா இன்பம் - ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பம்.

பண் :

பாடல் எண் : 103

 நாணனும் அன்பும் முன்பு
நளிர்வரை ஏறத் தாமும்
பேணுதத் துவங்க ளென்னும்
பெருகுசோ பானம் ஏறி
ஆணையாம் சிவத்தைச் சார  
அணைபவர் போல ஐயர்
நீணிலை மலையை ஏறி  
நேர்படச் செல்லும் போதில்.

பொழிப்புரை :

நாணனும் தமது அன்பும் தமக்கு முன்னராகக் குளிர்ந்த மலைமேல் ஏறிச் செல்லத் திண்ணனார், இவ்வுலகில் பேணுகின்ற தத்துவங்கள் என்னும் பெரும் படிகளை ஏறி, சத்தியே வடிவமாகிய சிவத்தைச் சேர அணைகின்ற முனிவர்களைப் போல, காளத்தி அப்பரின் நீண்ட நிலையாய மலையில் அப்பெருமானின் திருமுன்பாகச் சென்றிடும் போதில்,

குறிப்புரை :

தொண்னூற்றாறு தத்துவங்களையும் கடந்த நிலையிலேயே இறைவன் காட்சியளிப்பன். ஆதலின் தத்துவங் களைப் படிகளாக உருவகித்தார். சிவத்தைச் சாரும் நிலையில் அவை வேண்டப்படாது நீங்கினும், அதுகாறும் இக்கூட்டு வேண்டியிருத்த லின் `பேணுதத்துவங்கள்` என்றார். ஆணை - சத்தி, `ஆணையின் நீக்கமின்றி நிற்குமன்றே` (சிவஞானபோதம் சூ.2) என்ற விடத்தும் இப்பொருள் படுதல் காண்க. சோபானம் - படிகள்.

பண் :

பாடல் எண் : 104

 திங்கள்சேர் சடையார் தம்மைச்  
சென்றவர் காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்த  
அருள்திரு நோக்க மெய்தத்
தங்கிய பவத்தின் முன்னைச்  
சார்புவிட் டகல நீங்கிப்
பொங்கிய ஒளியின் நீழல்  
பொருவில்அன் புருவம் ஆனார்.

பொழிப்புரை :

சென்ற திண்ணனார், இளம் பிறையைச் சூடிய சடையராய பெருமானாரைக் காண்பதற்கு முன்னமேயே, அழகிய நெற்றிக் கண்களையுடைய பெருமானாரின் கருணை கூர்ந்த அருள் பார்வை அவர்மீது பொருந்த, இப்பிறவியில் முன்னர்ச் சார்ந்திருந்த பற்றுக்கள் அனைத்தும் நீங்க, பொங்கி எழும் ஒளியின் நீழலில் ஒப்பற்ற அன்புருவமாக ஆயினார்.

குறிப்புரை :

அருட்டிரு நோக்கு - திருக் கண்களால் நோக்கிய நோக்கு. திருமலையில் ஏறுங்கால் திண்ணனார் உடம்பினும் அவர் அன்பு முந்திச் சென்றது; அதுபோலப் பெருமானும், தன்வடிவுக் காட்சியினும், அருள் திருநோக்கை முந்த அருளினார். தீக்கை வகை யில் கண்ணால் நோக்கும் நோக்கமும் ஒன்று; இதனை நயன தீக்கை என்பர். நீழல் - திருவடி நிழல். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 105

 மாகமார் திருக்கா ளத்தி  
மலையெழு கொழுந்தா யுள்ள
எகநா யகரைக் கண்டார் 
எழுந்தபே ருவகை அன்பின்
வேகமா னதுமேற் செல்ல  
மிக்கதோர் விரைவி னோடு
மோகமா யோடிச் சென்றார்  
தழுவினார் மோந்து நின்றார்.

பொழிப்புரை :

வானத்தை அளாவிய நீண்ட திருக்காளத்தி மலைமேல் எழுந்தருளியிருக்கும் சுடர்க் கொழுந்தாயுள்ள ஏகநாத ரைத் திண்ணனார் கண்டார். கண்டதும் எழுந்த பேருவகையால் அன்புமீதூர, அதனால் மிகுந்து எழுகின்ற விரைவினோடும் ஓடிச் சென்று, அப்பெருமானைக் கட்டித் தழுவினார். முகர்ந்து நின்றார்.

குறிப்புரை :

ஏக நாயகர் - ஒப்பற்ற தலைவர். ஒருவன் என்னும் ஒருவன். முகர்தல் பாசத்தின் அறிகுறி.

பண் :

பாடல் எண் : 106

 நெடிதுபோ துயிர்த்து நின்று  
நிறைந்தெழு மயிர்க்கால் தோறும்
வடிவெலாம் புளகம் பொங்க  
மலர்க்கண்ணீர் அருவி பாய
அடியனேற் கிவர்தாம் இங்கே  
அகப்பட்டார் அச்சோ என்று
படியிலாப் பரிவு தானோர்
படிவமாம் பரிசு தோன்ற.

பொழிப்புரை :

நெடிது நேரம் அப்பெருமானை மோந்துநின்று, மேனியின் மயிர்க்கால்கள் தோறும் மகிழ்வு நிறைந்து எழுந்து பொங்கிட, மலர் போலும் கண்களில் இருந்து அருவிநீர் பாய்ந்திட, அடியனேனுக்கு இவர்தாம் இங்கே அகப்பட்டார், அச்சோ! என்று தாம் கூறி, ஒப்பில்லாத அன்பு என்பது, தானே ஒரு வடிவு கொண்டாற் போல் நிற்க,

குறிப்புரை :

படியிலாப்பரிவு - ஒப்பற்ற அன்பு. அவ்வன்பே வடிவு கொண்டால் போல் நின்றார். ``கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்`` (தி.8 ப.10 பா.4)எனவரும் மணிவாசகர் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 107

வெம்மறக் குலத்து வந்த  
வேட்டுவச் சாதி யார்போல்
கைம்மலை கரடி வேங்கை
அரிதிரி கானந் தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார்  
ஒருவரு மின்றிக் கெட்டேன்
இம்மலைத் தனியே நீரிங்  
கிருப்பதே என்று நைந்தார்.

பொழிப்புரை :

கொடிய வேட்டுவக் குலத்து வந்த வேட்டுவச் சாதியார் போல, யானைகள், கரடிகள், வேங்கைப்புலிகள், சிங்கங்கள், திரிகின்ற இக்காட்டில் உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இல்லாது, நீர் தனித்திருக்கக் கெட்டேன்! இம் மலையிடத்துத் தனியராகவும் நீர் இங்கு இருப்பதுவும் தகுமோ என்று உள்ளம் நெகிழ்ந்தார்.

குறிப்புரை :

சாதி - பெரும் பிரிவு. குலம் - உட்பிரிவு. `சாதிகுலம் பிறப்பு என்னும்` (தி.8 ப.31 பா.5) என வரும் திருவாக்கும் காண்க. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 108

 கைச்சிலை விழுந்த தோரார்
 காளையார் மீள இந்தப்
பச்சிலை யோடு பூவும்  
பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ  
என்றலும் மருங்கு நின்ற
அச்சிலை நாணன் தானும்
நான் இது அறிந்தேன் என்பான்.

பொழிப்புரை :

இவ்வாறு மனம் நைந்துருகிய திண்ணனார், மெய்ம்மறக்கத் தமது கையிலுள்ள வில் விழுந்ததையும் உணராதவராய் இப்பச்சிலையோடு பூவையும் எம் பெருமான் மீது இட்டு, நீரையும் வார்த்து, இத்தகையதொரு நற்செயலைச் செய்தார் யார்? என்றலும், அருகில் நின்ற வில்லைக் கைக் கொண்டிருக்கும் நாணன் `நான் இதை அறிந்துள்ளேன்` என்று சொல்வானாய்,

குறிப்புரை :

மஞ்சு -அழகு: ஈண்டு நன்மையைக் குறித்தது. இத்தமிழ்ச் சொல் காலப்போக்கில் தெலுங்குச் சொல்லாக மாறியது. மற்றிது என்பது எதுகை நோக்கி மச்சிது என்றாயிற்று என்று கோடலும் ஒன்று.

பண் :

பாடல் எண் : 109

வன்திறல் உந்தை யோடு  
மாவேட்டை யாடிப் பண்டிக்
குன்றிடை வந்தோ மாகக்  
குளிர்ந்தநீ ரிவரை யாட்டி
ஒன்றிய இலைப்பூச் சூட்டி
ஊட்டிமுன் பறைந்தோர் பார்ப்பான்
அன்றிது செய்தான் இன்றும்  
அவன்செய்தா னாகு மென்றான்.

பொழிப்புரை :

வலியதிறல் உடைய உன் தந்தையோடு நாங்கள் கூடிப் பெருவேட்டையாடி, முன்னர் ஒருகால் இம் மலையிடத்து வந்தேமாக, அப்பொழுது குளிர்ந்த நீரால் இவரை நீராட்டி, ஒருமைப் பாட்டுடன் பூவும் இலையுமாம் இவற்றை இவர்மேல் சூட்டி, இவருக்கு உணவும் கொடுத்து, உண்பித்து, முன்நின்று, சில வார்த்தைகளையும் சொல்லி,ஒரு பிராமணன் இதனைச் செய்தான், ஆதலால் அவனே இன்று இதனைச் செய்தானாகும் என்றான்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 110

உண்ணிறைந் தெழுந்த தேனும்  
ஒழிவின்றி ஆரா அன்பில்
திண்ணனார் திருக்கா ளத்தி
நாயனார்க் கினிய செய்கை
எண்ணிய இவைகொ லாமென்
றிதுகடைப் பிடித்துக் கொண்டவ்
அண்ணலைப் பிரிய மாட்டா  
தளவில் ஆதரவு நீட.

பொழிப்புரை :

உள்ளத்துள் நின்றும் சிவன்பால் எழுந்த அன்பின் பெருக்கம் ஒழிவின்றிப் பெருகி நின்றதென்றாலும், இன்னமும் அடங் கிடாத அவ் அன்பினால் எழும் ஆசை மிகுந்த திண்ணனாருக்குத், திருக்காளத்தியில் வீற்றிருக்கும் பெருமானுக்கு விருப்பமான இனிய செயல் இவைதாமாகும் என்று அச்செயலைக் கடைப்பிடித்துக் கொண்டு, தாமும் அதுபோலப் பூசை செய்ய முற்பட் டாலும், பெருமானை விட்டுப்பிரிய முடியாத அளவற்ற ஆதரவு பெருகுதலால்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 111

இவர்தமைக் கண்டே னுக்குத்
தனியராய் இருந்தார் என்னே
இவர்தமக் கமுது செய்ய  
இறைச்சியும் இடுவா ரில்லை
இவர்தமைப் பிரிய ஒண்ணா
தென்செய்கேன் இனியான் சால
இவர்தமக் கிறைச்சி கொண்டிங்
கெய்தவும் வேண்டு மென்று.

பொழிப்புரை :

இவரைக் கண்ட எனக்கு இவர் தனியராகவே இருந்தார், என்னே நான் செய்வது! இவர் தமக்கு உண்டருளும்படி இறைச்சியும் கொடுப்பார் யாரும் இல்லை, நானே அதுவும் கொண்டு வந்து கொடுத்தல் வேண்டும், ஆனால் தனித்திருக்கும் இவரைப் பிரிந்து செல்லவும் இயலவில்லை, இந்நிலையில் யான் என் செய்கேன்! இவர் பசித்திருப்ப, இறைச்சி கொடாது நிற்றலும் கூடாது! ஆதலால் எக்காரணத் தினாலும் சாலவும் இனியரான இவர்தமக்கு இறைச்சி கொண்டு இங்கு வரவும் வேண்டும் என்று எண்ணி.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 112

 போதுவர் மீண்டு செல்வர்
புல்லுவர் மீளப் போவர்
காதலின் நோக்கி நிற்பர்  
கன்றகல் புனிற்றாப் போல்வர்
நாதனே அமுது செய்ய  
நல்லமெல் லிறைச்சி நானே
கோதறத் தெரிந்து வேறு
கொண்டிங்கு வருவே னென்பார்.

பொழிப்புரை :

எம்பெருமானை விடுத்துப் போவர். மீண்டு வருவர். கட்டித் தழுவுவர். திரும்பிப்போவர். சிறிது தொலைவு சென்று நின்று எம்பெருமானைக் காதலால் நோக்கி நிற்பர். கன்றை விட்டகலும் பசுவினைப் போல்வர். நாதனே! அமுது செய்ய நல்ல மிருதுவான இறைச்சியைக் குற்றமற வேறாகத் தெரிந்தெடுத்துக் கொண்டு இங்கு வருவேன் என்பார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 113

 ஆர்தம ராக நீரிங்
கிருப்பதென் றகல மாட்டேன்
நீர்பசித் திருக்க இங்கு  
நிற்கவுங் கில்லேன் என்று
சோர்தரு கண்ணீர் வாரப்  
போய்வரத் துணிந்தா ராகி
வார்சிலை எடுத்துக் கொண்டு  
மலர்க்கையால் தொழுது போந்தார்.

பொழிப்புரை :

உம்துணைவராக இங்கு யார் இருப்பதென்று நினைந்து, உம்மை விடுத்து நான் போகமாட்டேன் என்றாலும், நீர் பசித்திருக்க இங்கு நிற்கவும் மாட்டேன் என்று, இருதிறனாகவும் எண்ணி, அக்கவலை மிகுதியால், உள்ளம் வருந்திக் கண்ணீர் பெருகிட, ஒருவாறு தாம் இறைச்சி கொண்டு வருவதற்குப் போய்வரத் துணிந்தவராகி, வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு, மலர் போன்ற தம்கைகளைக் கூப்பி, பெருமானைத் தொழுது போயினார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 114

 முன்புநின் றரிதில் நீங்கி
மொய்வரை யிழிந்து நாணன்
பின்புவந் தணைய முன்னைப்  
பிறதுறை வேட்கை நீங்கி
அன்புகொண் டுய்ப்பச் செல்லும்
அவர்திரு முகலி ஆற்றின்
பொன்புனை கரையி லேறிப்  
புதுமலர்க் காவிற் புக்கார்.

பொழிப்புரை :

பெருமானின் திருமுன்னிலையினின்றும் அருமைப் பாட்டுடன் நீங்கி, சீர்விளங்கிய அம்மலையினின்றும் நாணன் பின் வரக், கீழிறங்கி, இதற்கு முன்பாக உள்ள தமக்குற்ற பிற துறைகளின் விருப்புகள் யாவும் நீங்கப் பெற்று, தாம் கொண்ட அன்பே தம்மைச் செலுத்திடச் செல்கின்ற திண்ணனார், திருவுடைய பொன் முகலி ஆற்றங் கரையில் வந்து சேர்ந்து, அங்குள்ள புதிய மலர்கள் மலர்ந்து சிறந்து நின்ற பூஞ்சோலையில் புகுந்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 115

காடனும் எதிரே சென்று
தொழுதுதீக் கடைந்து வைத்தேன்
கோடுடை ஏனம் உங்கள்
குறிப்படி உறுப்பை யெல்லாம்
மாடுற நோக்கிக் கொள்ளும்
மறித்துநாம் போகைக் கின்று
நீடநீர் தாழ்த்த தென்னோ  
என்றலும் நின்ற நாணன்.

பொழிப்புரை :

சோலையில் புகுந்த திண்ணனார் முன்பு, காடனும், எதிரே சென்று, தொழுது, ஐயனே! நீர் சொல்லியவாறு நெருப்புக் கடைந்து பற்ற வைத்துள்ளேன். கொம்புடைய அப் பன்றியின் உறுப்புகளையெல்லாம் உங்கள் குறிப்பின்படி வைத்துள் ளேன். திரும்பி நாம் வேட்டை ஒழிந்து போதற்கு இதுகாறும் காலம் தாழ்த்தது என்னோ? என்றலும், அது கேட்ட நாணன்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 116

 அங்கிவன் மலையில் தேவர்  
தம்மைக்கண் டணைத்துக் கொண்டு
வங்கினைப் பற்றிப் போதா  
வல்லுடும் பென்ன நீங்கான்
இங்குமத் தேவர் தின்ன
இறைச்சிகொண் டேகப் போந்தான்
நங்குலத் தலைமை விட்டான்
நலப்பட்டான் தேவர்க் கென்றான்.

பொழிப்புரை :

அங்கு அம்மலைமேல் இவன் சேறலும், அங்கிருந்த குடுமித் தேவரைக் கண்டு, அணைத்துக் கொண்டு, மரப் பொந்தைப் பற்றி அதை விடாது நிற்கும் வலிய உடும்பினைப் போன்று, அக்குடுமித்தேவரை விட்டு நீங்காது நின்றான். இதுபொழுதும் அத் தேவர் தின்ன இறைச்சி கொண்டு போகவே வந்துள்ளான். இவன் நம் குலத்தைக் காக்கும் தலைமைப் பொறுப்பை விட்டு விட்டான். இவன் அக்கடவுளுக்கே உரியனாய் நலம் பெற்று விட்டான் எனக் கூறி னான்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 117

என்செய்தாய் திண்ணா நீதான்  
என்னமால் கொண்டாய் எங்கள்
முன்பெரு முதலி யல்லை  
யோவென முகத்தை நோக்கார்
வன்பெரும் பன்றி தன்னை  
எரியினில் வதக்கி மிக்க
இன்புறு தசைகள் வெவ்வே  
றம்பினால் ஈர்ந்து கொண்டு.

பொழிப்புரை :

திண்ணா! நீ என்ன காரியம் செய்தாய்! எங்கள் குலத்து முதல்வன் நீ அல்லையோ? இப்படியும் நீ செய்யலாமோ? எனக் கூறும் காடனது முகத்தையும் திரும்பிப் பாராதவராய் திண்ணனார், வலிய அப்பெரிய பன்றியினை நெருப்பினிலிட்டு வதக்கி, அதில் மிகவும் சுவைமிகுந்த தசைகளை வெவ்வேறாகத் தம் அம்பால் கோத்து எடுத்துக் கொண்டு.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 118

 கோலினிற் கோத்துக் காய்ச்சிக்
கொழுந்தசை பதத்தில் வேவ
வாலிய சுவைமுன் காண்பான்  
வாயினில் அதுக்கிப் பார்த்துச்
சாலவும் இனிய எல்லாம்  
சருகிலை யிணைத்த கல்லை
ஏலவே கோலிக் கூட  
அதன்மிசை இடுவா ரானார்.

பொழிப்புரை :

அவைகளை ஓர் அம்பில் கோத்து, நெருப்பில் இட்டுக் காய்ச்சி, கொழுத்த அத்தசைகள் நல்ல பதத்தில் வெந்திட அவற்றின் இனிய சுவையை முன்னர்த் தாமே காணும் பொருட்டாக அத்தசைகளை வாயில் போட்டு அதுக்கிப் பதம் பார்த்து, மிகவும் இனிய எல்லாவற்றையும் முழுமையாகச் சருகினால் இணைத்துத் தைத்த தொன்னை ஒன்றினை அமைத்து, அதன்கண் இடுவாரானார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 119

 மருங்குநின் றவர்கள் பின்னும்
மயல்மிக முதிர்ந்தான் என்னே
அரும்பெறல் இறைச்சி காய்ச்சி  
அதுக்கிவே றுமிழா நின்றான்
பெரும்பசி யுடைய னேனும்
பேச்சிலன் எமக்கும் பேறு
தரும்பரி சுணரான் மற்றைத்  
தசைபுறத் தெறியா நின்றான்.

பொழிப்புரை :

அருகில் நின்ற நாணனும் காடனும் இவன் மேலும் மயக்கம் முதிர்ந்து விட்டான், சுவைமிக்க பன்றி இறைச்சியினைக் காய்ச்சி, வாயில் இட்டு அதுக்கிப் பின்னர் அதனை வேறாக உமிழ்ந்து நிற்கின்றான், இவன் பெரும் பசி உடையவன் என்றாலும் அதைப் பற்றி ஒரு பேச்சும் இல்லாதிருக்கின்றான். பசித்திருக்கும் நமக்கும் அவ்விறைச்சியைத் தரவேண்டும் என்பதை உணராதிருக்கின்றான். மற்றைத் தசைகளைப் புறத்தில் வீசிக் கொண்டிருக்கின்றான்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 120

தேவுமால் கொண்டான் இந்தத்
திண்ணன்மற் றிதனைத் தீர்க்கல்
ஆவதொன் றறியோந் தேவ
ராட்டியை நாக னோடு
மேவிநாங் கொணர்ந்து தீர்க்க  
வேண்டும்அவ் வேட்டைக் கானில்
ஏவலாட் களையுங் கொண்டு  
போதுமென் றெண்ணிப் போனார்.

பொழிப்புரை :

இத்திண்ணன் தெய்வமயக்கம் கொண்டான், நம் சொல்லை ஏற்கான், அன்றியும் நாம் யார் என்பதைக் கூட அம்மயக்கத் தால் அறியான், இதனை இங்கு நாம் தீர்த்திடக் கூடிய ஏது ஒன்றினை யும் அறியோம், நாம் ஊர் சென்று அங்குத் தேவராட்டியை நாகனோடு ஒருங்கு அழைத்து வந்து, இவன் மயக்கத்தைத் தீர்க்க வேண்டும். வேட்டைக் காட்டில் நம்மை எதிர்பார்த்திருக்கும் வேடுவர்களையும் கூட்டிக் கொண்டு போவோம் என எண்ணிப் போயினர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 121

கானவர் போன தோரார்  
கடிதினில் கல்லை யின்கண்
ஊனமு தமைத்துக் கொண்டு  
மஞ்சனம் ஆட்ட உன்னி
மாநதி நன்னீர் தூய  
வாயினிற் கொண்டு கொய்த
தூநறும் பள்ளித் தாமம்  
குஞ்சிமேல் துதையக் கொண்டார்.

பொழிப்புரை :

அவ்வேடர்கள் போனதைத் திண்ணனார் அறியார். விரைவினில் தேக்கிலைச் சருகினால் ஆய தொன்னையின் கண், ஊன் அமுதத்தை எடுத்துக்கொண்டு, பெருமானுக்குத் திருமஞ்சனம் ஆட்டப் பொன் முகலியாற்றின் நன்னீரைத் தன் வாயில் கொண்டு, அச்சோலையில் தாம் எடுத்த தூய நறுமனம் மிக்க பூக்களைத் தமது தலையில் எடுத்துக் கொண்டவராய்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 122

 தனுவொரு கையில் வெய்ய  
சரத்துடன் தாங்கிக் கல்லைப்
புனிதமெல் லிறைச்சி நல்ல
போனகம் ஒருகை யேந்தி
இனியஎம் பிரானார் சாலப்  
பசிப்பரென் றிரங்கி யேங்கி
நனிவிரைந் திறைவர் வெற்பை  
நண்ணினார் திண்ண னார்தாம்.

பொழிப்புரை :

வில்லை ஒரு கையில் கொடிய அம்பினுடன் சேர எடுத்துக் கொண்டு, புனிதமான மென் தசைகளாய இறைச்சியாம் திருவமுதினை ஒருகையில் ஏந்தியவராய், எம்பெருமான் மிகவும் பசித்திருப்பார் என்று இரங்கி, ஏங்கி, மிக விரைவுடன் மலையைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 123

இளைத்தனர் நாய னார்என்  
றீண்டச்சென் றெய்தி வெற்பின்
முளைத்தெழு முதலைக் கண்டு  
முடிமிசை மலரைக் காலில்
வளைத்தபொற் செருப்பால் மாற்றி
வாயில்மஞ் சனநீர் தன்னை
விளைத்தஅன் புமிழ்வார் போல  
விமலனார் முடிமேல் விட்டார்.

பொழிப்புரை :

என் நாயனார் பசியால் இளைத்துவிட்டார் என்று அவர் அருகே சென்று, மலையில் முளைத்து எழுந்த சுடர்க் கொழுந்தாய முதல்வரைக் கண்டு, அவர்தம் முடிமீதிருந்த பூக்களைக் காலில் அணிந்த அழகிய செருப்பால் அகற்றி, தம் வாயில் உள்ள நீரினைத் தம் அன்பினை உமிழ்வார்போல வினையின் நீங்கி விளங்கி நிற்கும். பெருமானின் திருமுடிமேல் உமிழ்ந்து விட்டார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 124

தலைமிசைச் சுமந்த பள்ளித்  
தாமத்தைத் தடங்கா ளத்தி
மலைமிசைத் தம்பி ரானார்  
முடிமிசை வணங்கிச் சாத்திச்
சிலைமிசைப் பொலிந்த செங்கைத்
திண்ணனார் சேர்த்த கல்லை
இலைமிசைப் படைத்த ஊனின்  
திருவமு தெதிரே வைத்து.

பொழிப்புரை :

வில்லைத் தாங்கிய திண்ணனார், தலைமீது சுமந்து வந்த பூக்களை மலை மீதிருந்த தமது பெருமானின் திருமுடிமீது வணங்கிச் சாத்திய பின்பு, தாம் சேர்த்த தேக்க இலைத் தொன்னை மீது படைத்த ஊன் ஆகும் திருவமுதினைப் பெருமானின் திருமுன்பாக வைத்து.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 125

கொழுவிய தசைக ளெல்லாம்  
கோலினில் தெரிந்து கோத்தங்
கழலுறு பதத்திற் காய்ச்சிப்  
பல்லினா லதுக்கி நாவிற்
பழகிய இனிமை பார்த்துப்  
படைத்தஇவ் விறைச்சி சால
அழகிது நாய னீரே  
அமுதுசெய் தருளும் என்றார்.

பொழிப்புரை :

மிகவும் கொழுத்த பன்றியின் தசைகள் யாவற் றையும் வகிர்ந்து, அவற்றை அம்பில் கோத்து, நெருப்பில் உற்ற நல்ல பதத்தில் காய்ச்சிப், பின்னர் அவை இனிமையுடையனவோ எனப் பல்லினால் அதுக்கி, நாவில் சுவையை முன்னர்ப் பழகிய வகையால் இனிமை பார்த்து எடுத்துப் பெருமானாருக்கு இங்குப் படைத்த இறைச்சி மிகவும் நல்லது, சுவையுடையது, என் நாயனீரே! இதனை உண்டருளுவீராக! என்றார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 126

 அன்னவிம் மொழிகள் சொல்லி  
அமுதுசெய் வித்த வேடர்
மன்னனார் திருக்கா ளத்தி  
மலையினார்க் கினிய நல்லூன்
இன்னமும் வேண்டு மென்னும்  
எழுபெருங் காதல் கண்டு
பன்னெடுங் கரங்கள் கூப்பிப்  
பகலவன் மலையில் தாழ்ந்தான்.

பொழிப்புரை :

இத்தகைய நயமுடைய சொற்களைச் சொல்லிப் பெருமானுக்குத் தாம் படைத்த ஊன் அமுதினை உண்பித்த வேடர் மன்னராய திண்ணனாருக்கு, திருக்காளத்தி மலையை இடனாகக் கொண்டிருக்கும் புண்ணியருக்கு இன்னமும் இதுபோன்ற நல்ல ஊன் அமுது கொடுக்க வேண்டுமே! என அவர் உள்ளத்து எழுகின்ற பெருங் காதலினைக் கண்டு, தன் பலவாகிய நெடிய ஒளிக்கதிர்களால் வணங்கிய கதிரவன். அம்மலையில் சென்று மறைந்தனன்.

குறிப்புரை :

கதிரவன் இயல்பில் மறைய, அதற்குக் கவிஞர் தம் குறிப்பினை ஏற்றிக் கூறிய மையின், இது தற்குறிப்பேற்ற அணியாம்.

பண் :

பாடல் எண் : 127

 அவ்வழி யந்தி மாலை  
அணைதலும் இரவு சேரும்
வெவ்விலங் குளவென் றஞ்சி
மெய்ம்மையின் வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித்
திருக்கையில் சிலையும் தாங்கி
மைவரை யென்ன ஐயர்
மருங்குநின் றகலா நின்றார்.

பொழிப்புரை :

கதிரவன் மறையவே அந்தியாய மாலைக்காலம் வருதலும், அது கண்டு, இனி இரவில் வரும் கொடிய விலங்குகள் இங்கு உள்ளன என அஞ்சி, உண்மையினின்றும் பிறழாத செப்பமாய அன்பினைக் கொண்டு, திருக்கையில் வில்லையும் பிடித்துக் கொண்டு, ஒரு கரிய மலையெனப் பெருமானின் அருகிலிருந்து நீங்காது நின்றார்.

குறிப்புரை :


பண் :

பாடல் எண் : 128

சார்வருந் தவங்கள் செய்தும்  
முனிவரும் அமரர் தாமும்
கார்வரை அடவி சேர்ந்தும்  
காணுதற் கரியார் தம்மை
ஆர்வமுன் பெருக ஆரா  
அன்பினிற் கண்டு கொண்டே
நேர்பெற நோக்கி நின்றார்  
நீளிருள் நீங்க நின்றார்.

பொழிப்புரை :

முனிவர்களும், தேவர்களும், செயற்கரிய தவங்கள் செய்தும், மேகம் தவழும் மலை இடமாய காடு புகுந்தும், காணுதற்கரிய சிவபெருமானை, உள்ளத்து எழும் ஆர்வம் முன்னாகப் பெருகிட, அளவிலாத அன்பினில் கண்டு கொண்டு, அப் பெருமானையே நேர்பெற நோக்கியவாறு, நீண்ட இருள்பரந்த இரவு கழியும் வரை நின்றார் திண்ணனார்.

குறிப்புரை :

தவம் - தனித்தல், வாட்டுதல் எனும் பொருள்படும். கோடைக்கண் வெயிலிடை நிற்றல், பனியின்கண் நீரிடை நிற்றல் போல்வன செய்து உடலை ஒறுத்து. விரதம், யோகம் முதலியன பூணுதல் தவம் என்பர். புற (சரியை), அக (கிரியை) வழிபாடுகளைச் செய்து அவற்றின் பயனாக மனஒருமை பெற்று, இறையுணர்வில் திளைத்து நிற்றலை(யோகம்)த் தரும் (சிவஞான சித்தி. -சுபக். 8சூ.18-22) என்னும் ஞான நூல்கள். முனிவர்களும் தேவர்களும் இவ்வரிய தவத்தைச் செய்யினும், தன்முனைப் பற்றுச் செய்யாமை யின் இறைவர் அவர்களுக்கு அரியராயினர். `கங்குல் எல்லை காண்பளவும் நின்றான் இமைப்பிலன் நயனம் என்றான்` எனவரும் கம்பர் வாக்கும் ஈண்டு நினைவுகூரலாம்.

பண் :

பாடல் எண் : 129

 கழைசொரி தரளக் குன்றில்  
கதிர்நில வொருபாற் பொங்க
முழையர வுமிழ்ந்த செய்ய  
மணிவெயில் ஒருபால் மொய்ப்பத்
தழைகதிர்ப் பரிதியோடும
சந்திரன் தலைஉ வாவில்
குழையணி காதர் வெற்பைக்
கும்பிடச் சென்றால் ஒக்கும்.

பொழிப்புரை :

அது பொழுது மூங்கில்களினின்றும் உதிரும் முத்துக்களின் ஒளியாய நிலவு ஒரு பாலாகப் பொங்கி எழவும், புற்றில் இருந்திடும் நாகங்கள் உமிழ்ந்த இரத்தினங்களின் சிவந்த ஒளி ஒருபால் விளங்கிடவும், இருக்கும் தோற்றத்தைக் காண, சந்திரன் தழைத்த ஒளியையுடைய கதிரவனோடு சேர்ந்து, மறைமதி (அமா வாசை) யன்று தோடணிந்த காதுடைய பெருமானைக் காளத்தியில் கண்டு கும்பிடச் சென்றாற் போன்றிருந்தது.

குறிப்புரை :

தரளம் - முத்து. இது நிலவொளிக்கு உவமை. செய்ய மணிவெயில் - சிவந்த மணிகளின் ஒளி. இது கதிரவன் ஓளிக்கு உவமை. கதிரவனும், சந்திரனும் நேர்படக்காணும் நாளும், அவை எதிர் எதிராகக் காணும் நாளும் உவா எனப்படும். இவற்றுள் முன்னையது மறைமதி (அமாவாசை) எனப்படும். பின்னையது நிறைமதி (பௌர்ணமி)எனப்படும்.

பண் :

பாடல் எண் : 130

விரவுபன் மணிகள் கான்ற
விரிசுடர்ப் படலை பொங்க
மரகதம் ஒளிகொள் நீல
மணிகளும் இமைக்குஞ் சோதி
பொரவிரு சுடருக் கஞ்சிப்  
போயின புடைகள் தோறும்
இரவிரு ளொதுங்கி னாலே  
போன்றுள தெங்கும் எங்கும்.

பொழிப்புரை :

மேலும் அங்குப் பொருந்தியிருக்கும் முத்து, இரத்தினம் முதலிய பலவகை மணிகளும், விரிந்த ஒளியையுடைய மரகதப் பச்சைகளும், ஒளிகொண்ட நீலமணிகளும், மின்னிடும் பசிய கருமையாய ஒளியானது, கதிரவனும் சந்திரனும் தம்முடன்பொர, அஞ்சி, இரவும் இருளும் பக்கம் தோறும் ஒதுங்கி இருப்பது போன்று எங்கெங்கும் உள்ளது.

குறிப்புரை :

முத்தும் இரத்தினமும் கதிரவன் ஒளி போன்று ஒளிவிடுவன. மரகதமும், நீலமும் இரவின் ஒளிபோன்று கருமையாய் இமைப்பன. விரிசுடர்ப்படலை - விரிந்து வீசுகின்ற ஒளிக்கூட்டம். கதிரவனுக்கு அஞ்சியது இருள். சந்திரனுக்கு அஞ்சியது இரவு.

பண் :

பாடல் எண் : 131

செந்தழல் ஒளியில் பொங்கும்
தீபமா மரங்க ளாலும்
மந்திகள் முழையில் வைத்த
மணிவிளக் கொளிக ளாலும்
ஐந்தும்ஆ றடக்கி யுள்ளார்  
அரும்பெருஞ் சோதி யாலும்
எந்தையார் திருக்கா ளத்தி
மலையினில் இரவொன் றில்லை.

பொழிப்புரை :

செந்தழலின் ஒளிபோன்று விளங்கும் தீபமரங் களாலும், குரங்குகள் தம் கூட்டினில் விளக்காக வைத்திட்ட முத்து மணி களின் ஒளியாலும், ஐந்து புலன்களையும், ஆறு குற்றங்களையும் அடக்கிச் சிவயோக சாதனையில் நின்ற முனிவர்களின் அரும்பெரும் ஓளியினாலும் எந்தையாராகிய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக் காளத்தி மலையில் இரவு என்பது பொருந்துதல் இல்லை.

குறிப்புரை :

எனவே காளத்தி மலை எஞ்ஞான்றும் ஒளிமயமாகவே விளங்கும். தீபமாமரங்கள் - சோதி விருட்சம் என அழைப்பர். பகலில் ஏனைய மரங்களைப் போல இருக்கும் இம்மரம், இரவில் நெடுந் தொலைவிலும் பேரொளி விளங்க நிற்கும் என்பர். ஐந்து - ஐம்பொறிகள். குற்றங்கள் ஆறாவன - செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணா உவகை. இரவு ஒன்று - இரவு பொருந்துதல். இம் மூன்று பாடல்களானும் இரவின் முதல்யாமத்து இருள் சூழ்ந்திருந்தமையையும், இடையாமத்து இரவும் இருளும் ஒதுங்கியமையையும், கடை யாமத்து இரவு என்பதே இல்லையா யிற்று என்பதையும் ஆசிரியர் கூறுமாற்றான், திண்ணனார் அம்முப்போதும் கண் துயிலின்றி இறைவரைக் காத்து வந்தமையை உய்த்துணருமாறு செய்துள்ளார் என்பதை அறியலாம்.

பண் :

பாடல் எண் : 132

வருங்கறைப் பொழுது நீங்கி
மல்கிய யாமம் சென்று
சுருங்கிட அறிந்த புள்ளின்
சூழ்சிலம் போசை கேட்டுக்
கருங்கட லென்ன நின்ற  
கண்துயி லாத வீரர்
அரும்பெறல் தம்பி ரானார்க்
கமுதுகொண் டணைய வேண்டி.

பொழிப்புரை :

சூழ்ந்து வரும் கரிய இருளான காலம் நீங்கி, அதனொடு தொடர்ந்த யாமங்களும் சென்று, இருள் சுருங்கிடும் வைகறை அணைய, அதனை உணர்ந்த பறவைகளின் கூட்டம் யாண்டும் ஒலிக்கக் கேட்டு, கருமையானதொரு கடலென அன்றிரவு முழுதும் கண்துயிலாது நின்ற வீரராகிய திண்ணனார், பெறுதற்கரிய தம் பெருமானுக்கு ஊனாய திருவமுது அமைத்துக் கொண்டு அங்கு வர வேண்டி,

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 133

 ஏறுகாற் பன்றி யோடும்  
இருங்கலை புனமான் மற்றும்
வேறுவே றினங்கள் வேட்டை  
வினைத்தொழில் விரகி னாலே
ஊறுசெய் காலம் சிந்தித்  
துருமிகத் தெரியாப் போதின்
மாறடு சிலையுங் கொண்டு
வள்ளலைத் தொழுது போந்தார்.

பொழிப்புரை :

மலையிடத்துக் குதித்தோடும் பன்றியுடன், பெருங் கலைமான், புனமான் எனும் இவைபோன்ற வேறு வேறு விலங் கினங்களை வேட்டையாடுதற்குரிய தந்திரத்தால், அதற்குரிய காலத் தைச் சிந்தித்து, உருவம் நன்றாகத் தெரியாத வைகறைப் பொழுதில், பகையை அழித்திடும் தமது வில்லையும் எடுத்துக் கொண்டு, எம் வள்ளலாராகிய காளத்தி நாதரைக் கைதொழுது, வேட்டையாடப் போயினார் திண்ணனார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 134

 மொய்காட்டும் இருள்வாங்கி
முகங்காட்டுந் தேர்இரவி
மெய்காட்டும் அன்புடைய
வில்லியார் தனிவேட்டை
எய்காட்டின் மாவளைக்க
இட்டகருந் திரையெடுத்துக்
கைகாட்டு வான்போலக்
கதிர்காட்டி யெழும்பொழுதில்.

பொழிப்புரை :

எங்கும் செறிந்து விளங்கும் இருளை நீக்கித் தன்முகத்தைக் காட்டும் பெருந் தேருடைய கதிரவன், தம் உடம்பின் வழி அன்பின் தன்மையைக் காட்டுகின்ற அன்புருவாய வில்லேந்திய திண்ணனார், தனியான வேட்டையாட, அம்பு எய்கின்ற அக் காட்டினை அடைந்து, மிருகங்களைச் சாய்த்திடற்கு அவைகளைக் காணமுடியாதவாறு தான் இட்ட பெரும் இருளாய கருந்திரையை எடுத்து, இனி உமது செயலைப் புரியும் எனக் கைகாட்டுவான் போலத் தன் கதிர்களை வெளிக்காட்டித் தோன்றிய பொழுதில்.

குறிப்புரை :

மொய் காட்டும் - இருட் செறிவு இது என்பதைக் காட்டும். முகம் காட்டுதல் - ஞாயிறு தோன்றல். எய்காடு - அம்பு எய்து விலங்குகளைப் பிடித்தற்குரிய காடு. கதிரவன் வைகறையில் தோன்றி ஒளி காட்டல் இயற்கையாக, அதனைத் திண்ணனார் செயலுக்கெனக் கை காட்டுவான் போல் எனக் கூறியது தற்குறிப்பேற்றமாம்.

பண் :

பாடல் எண் : 135

எய்தியசீர் ஆகமத்தில்  
இயம்பியபூ சனைக்கேற்பக்
கொய்தமல ரும்புனலும்  
முதலான கொண்டணைந்தார்
மைதழையுங் கண்டத்து  
மலைமருந்தை வழிபாடு
செய்துவருந் தவமுடைய  
முனிவர்சிவ கோசரியார்.

பொழிப்புரை :

இருள் தழைக்கும் கண்டமுடைய காளத்தி மலையில் இருக்கும் மருந்தாய சிவபெருமானை வழிபாடு செய்துவரும் தவமுடைய முனிவராகிய சிவகோசரியார், அது பொழுது பெருஞ் சிறப்பினவாய சிவாகமங்களில் விதிக்கப்பட்ட பூசனை முறைகளுக்கு ஏற்ப,கொய்தெடுத்த நன்மலரும் நீரும் முதலான பூசனைப் பொருள்களைக்கொண்டு வந்தார்.

குறிப்புரை :

சிவகோசாரியார் - இவர் காளத்தி நாதரை நாளும் சிவாகம முறைப்படி வழிபட்டுவரும் ஆதிசைவர் ஆவர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 136

வந்துதிரு மலையின்கண்
வானவர்நா யகர்மருங்கு
சிந்தைநிய மத்தோடும்  
செல்கின்றார் திருமுன்பு
வெந்தஇறைச் சியும்எலும்பும்
கண்டகல மிதித்தோடி
இந்தஅனு சிதங்கெட்டேன்
யார்செய்தார் என்றழிவார்.

பொழிப்புரை :

திருக்காளத்தி மலையின்கண்வந்து தேவர்களின் தலைவனாய சிவபரஞ்சுடரின் அருகே தூயதான சிந்தனையும், நியம மும் கொண்டு வருகின்றவராய அவ்வேதியர், பெருமானின் திரு முன்னிலையில் வெந்த இறைச்சியும் எலும்பும் கிடப்பக் கண்டு, அவற்றைத் தாண்டி ஓடிச் சென்று, ஓ கெட்டேன்! இவ்வருவருப் பிற்குரிய பொருள் நேர் இருக்க யார் செய்தார்? எனக் கூறி, மன மழிந்து தளர்வுறுவார்.

குறிப்புரை :

அநுசிதம் - அருவருப்பாகும் குற்றம்.

பண் :

பாடல் எண் : 137

 மேவநேர் வரஅஞ்சா
வேடுவரே இதுசெய்தார்
தேவதே வேசனே  
திருமுன்பே இதுசெய்து
போவதே இவ்வண்ணம்
புகுதநீர் திருவுள்ளம்
ஆவதே எனப்பதறி  
அழுதுவிழுந் தலமந்தார்.

பொழிப்புரை :

பெருமானின் திருமுன்பு நேர் வருவதற்கு அஞ் சாத வேடுவரே இதனைச் செய்தாராதல் வேண்டும். தேவாதி தேவனே! ஈசனே! உம் திருமுன்பிலும் வேடுவர் இவ்வருவருப்பைச் செய்து போவதோ? இக்கொடுமை நிகழ்வதும் பெருமானின் திருவுள்ளம் ஆவதோ? என்று பதறி அழுது விழுந்து துன்புற்றார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 138

 பொருப்பிலெழுஞ் சுடர்க்கொழுந்தின்  
பூசனையும் தாழ்க்கநான்
இருப்பதினி என்என்றவ்  
இறைச்சியெலும் புடன்இலையும்
செருப்படியும் நாயடியும்  
திருவலகால் மாற்றியபின்
விருப்பினொடுந் திருமுகலிப்  
புனல்மூழ்கி விரைந்தணைந்தார்.

பொழிப்புரை :

காளத்திமலையில் எழுந்தருளியிருக்கின்ற சுடர்க் கொழுந்தாய சிவபெருமானின் பூசனைக்குக் காலம் தாழ்க்க, நான் இங்கு இருப்பது என்னே? என்று கருதியவராய், அவ்விறைச்சிகளை யும், எலும்புகளையும், உடன்கிடந்த இலைகளையும், செருப்படியும், நாயடியும் ஆயசுவடுகளையும், திரு அலகால் மாற்றி, எழுகின்ற பெருவிருப்பத்துடன், திருவுடைய பொன்முகலியாற்றில் மூழ்கி, தூய்மை உடையவராய், விரைவாக வந்தணைந்தார் சிவகோசரியார்.

குறிப்புரை :

`ஈங்கொரு வேடுவன் நாயொடும் புகுந்து... தொடர்ந்த நாயொடு தோன்றினன்` (தி.11 கண். மறம். வரி 81-82) என வரும் நக்கீர தேவரின் திருவாக்கால் திண்ணனாருடன் நாயொன்றும் தொடர்ந்து வந்தமை போதரும். இவ்வாறன்றித் திண்ணனார் இறைவற்குப் படைத்த இறைச்சியைத் தின்ன வேண்டி வந்த நாயடி என உரைகண்டனர் மகாலிங் கையர். நக்கீரதேவரின் வாக்கொடுபட்ட வரலாறே கொள்ளத் தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 139

 பழுதுபுகுந் ததுதீரப்
பவித்திரமாம் செயல்புரிந்து
தொழுதுபெறு வனகொண்டு
தூயபூ சனைதொடங்கி
வழுவில்திரு மஞ்சனமே  
முதலாக வரும்பூசை
முழுதுமுறை மையின்முடித்து
முதல்வனார் கழல்பணிந்தார்.

பொழிப்புரை :

முன்னர் அங்கு நிகழ்ந்த குற்றம் தீருமாறு அலகிட்டு, நீரால் தூய்மை செய்து, தொழுது, பின் தூயதாகத் தாம் கொண்டிருக்கும் பொருள்களைக் கொண்டு, சிறந்த தமது பூசையைத் தொடங்கி, குறைவிலாத திருமுழுக்காட்டல் முதலாக அமைந்த வழிபாடுகளைச் செய்து, தம் முதல்வனார் திருவடிகளில் வணங்கினார் சிவகோசரியார்.

குறிப்புரை :

பவித்திரம் - தூய்மை பொருந்தத் தகும் செயல். தருப்பைப் புல்லை முடித்துக் கையில் அணிந்து கொண்டு, இந்நற் செயலைச் செய்வது என்றுரைப்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 140

பணிந்தெழுந்து தனிமுதலாம்  
பரனென்று பன்முறையால்
துணிந்தமறை மொழியாலே
துதிசெய்து சுடர்த்திங்கள்
அணிந்தசடை முடிக்கற்றை  
அங்கணரை விடைகொண்டு
தணிந்தமனத் திருமுனிவர்
தபோவனத்தி னிடைச்சார்ந்தார்.

பொழிப்புரை :

பணிந்து எழுந்து, ஒப்பற்ற முதல்வன் சிவ பெருமான் ஒருவனே என்று பன்முறையானும், போற்றிவழிபடும் மறைமொழிகளால் துதி செய்து, ஒளியையுடைய இளம்பிறை சூடிய சடைமுடிக் கற்றையுடன் நெற்றியில் கண்ணுடைய இறைவனை விடை கொண்டு, மீண்டு, அடக்கமும் அமைதியும் பெற்ற தவமுனிவராய சிவகோசரியார், தாம் தவம் செய்து கொண்டிருக்கும் காட்டினிடையே சென்றார்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 141

இவ்வண்ணம் பெருமுனிவர்
ஏகினார் இனியிப்பால்
மைவண்ணக் கருங்குஞ்சி
வனவேடர் பெருமானார்
கைவண்ணச் சிலைவளைத்துக்  
கான்வேட்டை தனியாடிச்
செய்வண்ணத் திறம்மொழிவேன்
தீவினையின் திறம்ஒழிவேன்.

பொழிப்புரை :

இவ்வண்ணம் பெருமுனிவராய சிவகோசரியார் செல்ல, இனி இப்பால், மையின் நிறம் போலும் கரும் குடுமியினை உடைய வனவேடரான திண்ணனார், கைவண்ணம் மிகுந்த வில்லை வளைத்துக் காட்டில் வேட்டையாடிச் செய்கின்ற சிறப்பினை நான் சொல்லுகின்றேன். இதனால் என் தீவினையின் திறத்தினையும் ஒழித் திடுவேன்.

குறிப்புரை :

திறமொழிவேன் என வருவனவற்றுள், முன்னையது திறம் மொழிவேன் என்றும், பின்னையது திறம் ஒழிவேன் என்றும் பிரித்துப் பொருள் கொள நின்றன. திண்ணனார் இனிச் செய்யும் வேட்டையெல்லாம் தம்வயத்ததன்றிக் காளத்திநாதரின் அருள் வயத்ததாய நிலையில் செயப்படுதலின், அச்செயலைக் கூறல், தீவினை ஒழிதற்குக் காரணமாயிற்று. வரும் பாடலிலும் கொன்றார் என்னாது, கொன்றருளி என அருளுவதும் காண்க.

பண் :

பாடல் எண் : 142

திருமலையின் புறம்போன
திண்ணனார் செறிதுறுகல்
பெருமலைக ளிடைச்சரிவில்
பெரும்பன்றி புனம்மேய்ந்து
வருவனவுந் துணிபடுத்து
மானினங்கள் கானிடைநின்
றொருவழிச்சென் றேறுதுறை
ஒளிநின்று கொன்றருளி.

பொழிப்புரை :

திருக்காளத்தி மலையினின்றும் வெளிப்போந்த திண்ணனார், சிறுசிறு பாறைகளாகச் செறிந்து பொருந்தி நிற்கின்ற பெருமலைகளின் இடையே சென்று, அங்குள்ள சாரல்களில் பெரும் பன்றிகள் காட்டில் மேய்ந்து வருவனவற்றைத் துண்டித்தும், மானி னங்கள் காட்டின் இடையாக நின்றுகூட்டமாகப் புறப்பட்டு ஒரு வழியில் வந்து ஏறுகின்ற அத்துறைகளில், தாம் ஒளிந்திருந்து அவற்றைக் கொன்றருளியும்,

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 143

 பயில்விளியால் கலையழைத்துப்
பாடுபெற ஊடுருவும்
அயில்முகவெங் கணைபோக்கி
அடியொற்றி மரையினங்கள்
துயிலிடையிற் கிடையெய்து  
தொடர்ந்துகட மைகளெய்து
வெயில்படுவெங் கதிர்முதிரத்
தனிவேட்டை வினைமுடித்தார்.

பொழிப்புரை :

மானினங்களை அழைத்தற்குரிய ஒலியால், திண்ணனார் கூவி அக்கலைமான்களை அழைத்து, அவற்றின் மீது, ஊடுருவும் வேல் முதலிய கொடிய அம்புகளை விடுத்தும், மரை இனங்களின் அடிச்சுவடுகளின்வழி தொடர்ந்து சென்று, அவை இருக்குமிடத்தே அம்பு எய்து, அம்மரை இனங்களைக் கைக்கொண்டும் கதிரவனின் வெப்பம் மிக அவ்வேளையில் தமது தனியான வேட்டையாடும் செயலை முடித்துக் கொண்டார் திண்ணனார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 144

 பட்டவன விலங்கெல்லாம்
படர்வனத்தில் ஒருசூழல்
இட்டருகு தீக்கடைகோல்
இருஞ்சுரிகை தனையுருவி
வெட்டிநறுங் கோல்தேனும்
மிகமுறித்துத் தேக்கிலையால்
வட்டமுறு பெருங்கல்லை  
மருங்குபுடை படவமைத்தார்.

பொழிப்புரை :

கொலைப்பட்ட அம்மிருகங்கள் யாவற்றையும், படர்ந்த காட்டில் ஒரு மரச்சூழலில் கொண்டு வந்து இட்டு, தமது பெருஞ் சூழல் வாளை உருவி எடுத்து, அருகில் தீக்கடைக் கோலும் வெட்டி, நறுமணம் பொருந்திய கொம்புத் தேனுள்ள கிளையையும் முறித்து எடுத்து வந்த பின்னர், தேக்கமர இலையால் வட்டமாக வரும் விளிம்புடைய பெரிய தொன்னை ஒன்று அதன் உள்ளிடம் அகன் றிருக்குமாறு பெரிதாகத் தைத்தார்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 145

 இந்தனத்தை முறித்தடுக்கி
எரிகடையும் அரணியினில்
வெந்தழலைப் பிறப்பித்து  
மிகவளர்த்து மிருகங்கள்
கொந்திஅயில் அலகம்பாற்  
குட்டமிட்டுக் கொழுப்பரிந்து
வந்தனகொண் டெழுந்தழலில்  
வக்குவன வக்குவித்து.

பொழிப்புரை :

விறகுகளை முறித்து அடுக்கித் தீக்கடையும் கோலில் கொடிய தழல் கொள்ளும் நெருப்பை உண்டாக்கி, விறகை மூட்டி, அதனை எரியும்படி வளர்த்து, மிருகங்களை அம்பால் குத்தி, அம்பின் அலகால் கொழுப்புள்ள தசைகளை வளைவாகக் குடைந்தெடுத்து, அவ்வாறு எடுத்தனவற்றை எழுகின்ற தழலில் வேக வைப்பனவற்றை வேக வைத்து,

குறிப்புரை :

இந்தனம் - விறகு. அரணி - தீயை உண்டாக்கும் கோல் வக்குவன - வதக்குவன. குட்டம் இட்டு - வளைவாகக் கொத்தி.

பண் :

பாடல் எண் : 146

 வாயம்பால் அழிப்பதுவும்  
வகுப்பதுவும் செய்தவற்றின்
ஆயவுறுப் பிறைச்சியெலாம்
அரிந்தொருகல் லையிலிட்டுக்
காயநெடுங் கோல்கோத்துக்  
கனலின்கண் உறக்காய்ச்சித்
தூயதிரு அமுதமைக்ககச்  
சுவைகாணல் உறுகின்றார்.

பொழிப்புரை :

அவற்றில், அம்பின் வாயால் கடித்து அகற்றுவதை அகற்றிச் சேர்ப்பதைச் சேர்த்து, அவற்றில் சுவை மிக்க உறுப்பு இறைச்சி கள் எல்லாவற்றையும் அரிந்து, ஒரு தொன்னையில் வைத்துக் கொண்டு, மீண்டும் அவை பதமுறக் காயும்படி ஒரு கோலில் கோத்து, நெருப்பில் நன்றாகக் காய்ச்சி, காளத்தி அப்பருக்குத் தூய திருவமுது ஆக்கும்படி தமது வாயில் அந்த இறைச்சிகளை இட்டுச் சுவை பார்ப்பாராய்,

குறிப்புரை :

வகுப்பது - தூயவாக அமைத்துக் கொள்வது.

பண் :

பாடல் எண் : 147

எண்ணிறந்த கடவுளருக்
கிடுமுணவு கொண்டூட்டும்
வண்ணஎரி வாயின்கண்
வைத்ததெனக் காளத்தி
அண்ணலார்க் காம்பரிசு
தாஞ்சோதித் தமைப்பார்போல்
திண்ணனார் திருவாயில்
அமைத்தார்ஊன் திருவமுது.

பொழிப்புரை :

எண்ணிறந்த தெய்வங்கட்கு இடுகின்ற அவி யாகும் அமுதினைத் தான் ஏற்று, அவற்றை அவ்வத் தெய்வங்கட்குக் கொடுத்திடுகின்ற வேள்வித்தீபோல, காளத்தி மலையிலிருக்கும் தேவர்க்கு அமுதமாகத் தரும் தன்மையில், தாம் அவற்றைச் சுவை யுள்ளனவோ எனத் தேர்ந்து, அறிதற்குத் திண்ணனார் தம் திருவாயில் அவ்வூன் அமுதினை வாயில் இட்டுச் சுவை பார்த்தார்.

குறிப்புரை :

வேள்வியில் எரிவாய்ப்பட்ட அமுது அவ்வத் தெய்வங்கட்கும் உரியவாதல் போலத் திண்ணனார் தம் திருவாய்ப் பட்ட அமுதும், காளத்தியாருக்கு உரித்தாயிற்று. அவன் உகந்து, இட்ட இறைச்சி எனக்கு, `நன்மாதவர் இட்ட நெய் போல் அவியே` (தி.11 கண். மறம். வரி 111-112) எனவரும் நக்கீரர் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 148

நல்லபத முறவெந்து
நாவின்கண் இடுமிறைச்சி
கல்லையினிற் படைத்துத்தேன்  
பிழிந்துகலந் ததுகொண்டு
வல்விரைந்து திருப்பள்ளித்
தாமமுந்தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்புபோல்
உடன்கொண்டு வந்தணைந்தார்.

பொழிப்புரை :

நல்ல பக்குவம் பொருந்த வெந்த, நாவின்கண் இட்டுச் சுவை கண்ட, இறைச்சியைத், தேக்க இலையாலாய தொன்னை யில் வைத்து, கொம்புத் தேனைப் பிழிந்து எடுத்த தேனையும் அதில் கலந்து, சுவைபட அமைத்த திருவமுதை எடுத்துக் கொண்டு, மிக விரை வுடன் திருப்பள்ளித் தாமம், திருமஞ்சனநீர் ஆகியவற்றையும் முன் போலக் கொண்டு விரைவாக வந்தனர்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 149

வந்துதிருக் காளத்தி  
மலையேறி வனசரர்கள்
தந்தலைவ னார்இமையோர்  
தலைவனார் தமையெய்தி
அந்தணனார் பூசையினை
முன்புபோ லகற்றியபின்
முந்தைமுறை தம்முடைய
பூசனையின் செயல்முடிப்பார்.

பொழிப்புரை :

வந்து திருக்காளத்தி மலையில் ஏறிய வேடர் களின் தலைவனாராய திண்ணனார், தேவர்களின் தலைவனாய பெருமானை அடைந்து, அங்குச் சிவகோசரியார் செய்த பூசையினை முன்புபோல் மாற்றி நீக்கிய பின், முன்னாளில் செய்த முறையாகவே தமது பூசையின் செயலைச்செய்து முடிப்பாராய்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 150

ஊனமுது கல்லையுடன்
வைத்திதுமுன் னையின்நன்றால்
ஏனமொடு மான்கலைகள்  
மரைகடமை யிவையிற்றில்
ஆனவுறுப் பிறைச்சியமு  
தடியேனுஞ் சுவைகண்டேன்
தேனுமுடன் கலந்ததிது  
தித்திக்கும் எனமொழிந்தார்.

பொழிப்புரை :

: ஊன் அமுதை இறைவனின் திருமுன்னிலையில் வைத்து, எம் ஐயனே! இது முன்னை நாளில் எடுத்து வந்ததினும் நன்றாகும், பன்றியுடன் மான் கலைகள், காட்டுப்பசு ஆகிய இவை களின் நல்லுறுப்புகளின் இறைச்சியும் உள்ளது, அடியேனும் சுவை பார்த்தேன், அத்துடன் தேனும் இவற்றுடன் கலந்துள்ளது, தித்திக்கும், என மொழிந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 151

இப்பரிசு திருவமுது  
செய்வித்துத் தம்முடைய
ஒப்பரிய பூசனைசெய்
தந்நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல்வந்  
தெழும்அன்பால் காளத்தி
அப்பர்எதிர் அல்லுறங்கார்
பகல்வேட்டை யாடுவார்.

பொழிப்புரை :

இவ்வாறாக அன்பு ததும்பிய சொற்களை மொழிந்து, ஊனமுதினைப் பெருமானுக்கு உண்பித்துத்,தம்முடைய ஒப்பரிய இப் பூசனையைப் புரிந்து, அந்நெறியில் ஒழுகி வருபவராய திண்ணனார், மேன்மேலும் பெருகி எழுகின்ற அன்பினால், காளத்தி அப்பரின் திருமுன்பு நின்று, இரவில் உறங்காது காத்தும், ஊனாய திருவமுது அமைக்கப் பகலில் வேட்டையாடியும் வருவார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 152

மாமுனிவர் நாள்தோறும்
வந்தணைந்து வனவேந்தர்
தாமுயலும் பூசனைக்குச்  
சாலமிகத் தளர்வெய்தித்
தீமையென அதுநீக்கிச்
செப்பியஆ கமவிதியால்
ஆமுறையில் அருச்சனைசெய்
தந்நெறியில் ஒழுகுவரால்.

பொழிப்புரை :

பெருமுனிவரான சிவகோசரியாரும், நாள் தோறும் காளத்தி மலைக்குச் சென்று அங்கு வனவேடர்களின் அரச ராய திண்ணனார் தாம் அன்பின் முயற்சியால் புரிந்து வரும் அப் பூசனைக்கு மிகவும் தளர்வுற்று, அதனைத் தீமையுடையது எனநீக்கி, பின்னர் ஆகம வழி நின்று அம்முறையால் அருச்சனை செய்து, அந்நெறியில் ஒழுகி வருவாராயினார்.

குறிப்புரை :

இவ்விருவரின் வழிபாடும், `ஊனோடு உண்டல் நன் றென ஊனோடு உண்டல் தீதென, ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்` (தி.3 ப.53 பா.9) எனவரும் ஞானசம்பந்தரின் திருவாக்கினை நினைவு கூரவைக்கும்.

பண் :

பாடல் எண் : 153

 நாணனொடு காடனும்போய்
நாகனுக்குச் சொல்லியபின்
ஊணும்உறக் கமுமின்றி
அணங்குறைவா ளையுங்கொண்டு
பேணுமக னார்தம்பால்  
வந்தெல்லாம் பேதித்துக்
காணுநெறி தங்கள்குறி  
வாராமற் கைவிட்டார்.

பொழிப்புரை :

(இந்நிலையில் இவர்கள் நிலை அமைய) நாணனொடு காடனும் சென்று திண்ணனாருக்கு நிகழ்ந்த நிலைமையைச் சொல்ல, அதுகேட்ட நாகனும், அந்நாள் முதல் ஊணும் உறக்கமும் இல்லாதவனாய், வருந்தி, உடனாகத் தேவராட்டியையும் அழைத்துக் கொண்டு, காளத்திக்கு வந்து, அங்குத் தாம் பேணி வளர்த்த மகனாராய திண்ணனாரைத் தம் வழியில் மீள நிலைபெறு தற்கு ஆவனவெல்லாம் செய்தும், அவர் மீளாது தம் நெறியில் நின்றிட, இனித்தம் குறிக்கோளுக்கு ஏற்ப வாரான் எனக் கருதி, வந்த இருவரும் கை விட்டுச் சென்றனர்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 154

முன்புதிருக் காளத்தி
முதல்வனார் அருள்நோக்கால்
இன்புறுவே தகத்திரும்பு
பொன்னானாற் போல்யாக்கைத்
தன்பரிசும் வினையிரண்டும்  
சாருமலம் மூன்றுமற
அன்புபிழம் பாய்த்திரிவார்
அவர்கருத்தின் அளவினரோ.

பொழிப்புரை :

முன்பு திருக்காளத்தியில் எழுந்தருளியிருக்கும் முதல்வனாரின் திருப்பார்வை எய்தியதால், இன்ப நிலையாய இரத குளிகையினால். இரும்பு பொன்னாக மாறியவாறுபோல், உடற் றன்மையும், இருவினைகளும் மும்மலங்களும் நீங்கியதால், அன்பே வடிவாய்த் திரியும் திண்ணனார் அவ்வேடர்களின் கருத்தளவில் அமைவரோ? (அமையார்).

குறிப்புரை :

வேதகம் - வேறு படுத்துவது. இரச குளிகை - இரும்பை வேறுபடுத்திப் பொன்னாகச் செய்யும் செயல்.
அச்செயல் அனைவரும் இன்புறுதற்கு ஏதுவாதலின் இன்புறு வேதகம் என்றார்.
இறைவனின் அருள் நோக்கால் திண்ணனாரும், தமக்குற்ற உயிர்த்தன்மை (யான் எனது என நிற்கும் தன்மை) இருவினைகள், மும்மலங்கள் ஆகிய அனைத்தினின்றும் நீங்கினாராதலின் இங்ஙனம் கூறினார்.

பண் :

பாடல் எண் : 155

 அந்நிலையில் அன்பனார்  
அறிந்தநெறி பூசிப்ப
மன்னியஆ கமப்படியால்
மாமுனிவர் அருச்சித்திங்
கென்னுடைய நாயகனே  
இதுசெய்தார் தமைக்காணேன்
உன்னுடைய திருவருளால்
ஒழித்தருள வேண்டுமென.

பொழிப்புரை :

அந்நிலையில் அன்பராய திண்ணனார் தாம் அறிந்த முறையில் பெருமானைப் பூசித்துவர, சிறப்புமிக்க ஆகம வழி நின்று ஒழுகும் சிவகோசரியாரும் பெருமானை வழிபட்டு வரும் நிலையால் என்னுடைய பெருமானே! நும் திருமுன்னிலையில், நாளும் இக் குற்றமுடைய பூசனை புரிந்து வருவாரை நான் கண்டிலேன்; இதனை இனி உம் முடைய திருவருளால் ஒழித்தருள வேண்டும் என விண்ணப்பிக்க,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 156

 அன்றிரவு கனவின்கண்  
அருள்முனிவர் தம்பாலே
மின்திகழுஞ் சடைமவுலி  
வேதியர்தா மெழுந்தருளி
வன்திறல்வே டுவன்என்று  
மற்றவனை நீநினையேல்
நன்றவன்தன் செயல்தன்னை
நாமுரைப்பக் கேள்என்று.

பொழிப்புரை :

அன்று இரவு, அரிய அம்முனிவரிடத்து, திகழும் சடைமுடியையுடைய இறைவன் கனவில் எழுந்தருளி, வலிமை பொருந்திய வேடுவன் இது செய்தவன் என அவனை நீ எண்ணாதே! நலம் மிக்க அவன் தன் செயலை நான் கூறக் கேட்பாயாக என மொழிந்தருளிப் பின்னரும்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 157

 அவனுடைய வடிவெல்லாம்
நம்பக்கல் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம்  
நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம்  
நமக்கினிய வாமென்றும்
அவனுடைய நிலைஇவ்வா  
றறிநீயென் றருள்செய்வார்.

பொழிப்புரை :

அவனுடைய வடிவம் எல்லாம் நம்மிடத்து அன்பு கொண்ட வடிவம் என்றும், அவனுடைய அறிவு எல்லாம் நம்மையே அறிகின்ற அறிவு என்றும், அவனுடைய செயல்கள் எல்லாம் நமக்கு இனியவாகும் என்றும் கூறி, அவனுடைய நிலை இத்தன்மையானது அதனை நீ அறிவாயாக, என அருள்செய்வாராய்.

குறிப்புரை :

இதனையடுத்துப் `பொருப்பினில் வந்தவன்` என்பது முதலாக `மன் பெருமாமறை` எனவரும் பாடல் ஈறாக உள்ள ஐந்து பாடல்களும் சில பதிப்புகளில் காணப்பெறினும், அவை வெள்ளிப் பாடல்கள் எனச் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை) தெளிவாகக் கூறியிருத்தலின் அவற்றை இங்கு சேர்க்கவில்லை. எனினும், ஆராய்ச்சி முன்னுரையில் இடைச் செருகல்கள் எனும் தலைப்பில் அங்குச் சேர்க்கப்பட்டுள்ளன.

பண் :

பாடல் எண் : 158

 உனக்கவன்தன் செயல்காட்ட
நாளைநீ யொளித்திருந்தால்
எனக்கவன்தன் பரிவிருக்கும்  
பரிசெல்லாம் காண்கின்றாய்
மனக்கவலை ஒழிகென்று  
மறைமுனிவர்க் கருள்செய்து
புனற்சடிலத் திருமுடியார்
எழுந்தருளிப் போயினார்.

பொழிப்புரை :

உனக்கு அவ்வேடனுடைய அன்பின் செயலை நாம் காட்ட, நாளை நீ ஒளித்திருந்தால், அவன் என்னிடத்துக் கொண் டிருக்கும் அன்பின் சிறப்பையெல்லாம் நீ காண்பாய், ஆதலால் நீ கொண்டிருக்கும் மனக்கவலையை ஒழித்திடுவாய், என்று கங்கை யைத் திருச்சடையில் கொண்டிருப்பவராகிய இறைவன் சிவகோசரி யாருக்கு அருளிச் செய்து மறைந்தருளினன்.

குறிப்புரை :

இவ்விரண்டுபாடல்களும் ஒரு முடிபு கொண்டன.

பண் :

பாடல் எண் : 159

கனவுநிலை நீங்கியபின்  
விழித்துணர்ந்து கங்குலிடைப்
புனைதவத்து மாமுனிவர்  
புலர்வளவும் கண்துயிலார்
மனமுறும்அற் புதமாகி  
வரும்பயமும் உடனாகித்
துனைபுரவித் தனித்தேர்மேல்
தோன்றுவான் கதிர்தோன்ற.

பொழிப்புரை :

கனவு நிலையினின்றும் விழித்து உணர்ந்து, பின்னர் அன்றிரவு முழுவதும் துயிலாராய்த் தமது மனத்தில் கொண்ட அற் புதமும், அதன் விளைவால் எழுந்த அச்சமும் உடன் நிகழ, விரைந்து செல்லும் குதிரை பூண்ட தேரின் மீது, இவர்ந்து வரும் கதிரவனின் ஒளியும் தோன்ற.

குறிப்புரை :

துனை - விரைவு, அஃது அப் பொருளாதல் `கதழ்வும் துனைவும் விரைவின் பொருள` என்பதானும் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 160

 முன்னைநாள் போல்வந்து
திருமுகலிப் புனல்மூழ்கிப்
பன்முறையும் தம்பிரான்
அருள்செய்த படிநினைந்து
மன்னுதிருக் காளத்தி  
மலையேறி முன்புபோல்
பிஞ்ஞகனைப் பூசித்துப்  
பின்பாக ஒளித்திருந்தார்.

பொழிப்புரை :

முன்னை நாள்களைப் போலவே, திருவுடைய பொன்முகலியாற்றில் மூழ்கி எழுந்து, தம் பெருமான் கனவில் அருள் செய்ததை நினைந்த வண்ணம், நிலைபெற்று விளங்கும் திருக்காளத்தி மலைமீது ஏறி, முன்பு போல் பெருமானைப் பூசித்துப், பின்பாக ஓரிடத்துச்சென்று ஒளித்திருந்தார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 161

கருமுகி லென்ன நின்ற  
கண்படா வில்லி யார்தாம்
வருமுறை ஆறாம் நாளில்
வரும்இர வொழிந்த காலை
அருமறை முனிவ னார்வந்
தணைவதன் முன்னம் போகித்
தருமுறை முன்பு போலத்  
தனிப்பெரு வேட்டை யாடி.

பொழிப்புரை :

இப்பால், கரிய மேகத்தை யொத்த வடிவும், கண்துயிலாத பண்பும் உடைய திண்ணனார், தாம் இதுகாறும் வழிபாடாற்றி வரும் முறையில் ஆறாவது நாளில், இரவு நீங்கிய விடியற் காலத்தில், அரிய மறைநெறி நிற்கும் சிவகோசரியார் வருதற்கு முன்னாகத் தாம் புறப்பட்டுச் சென்று, பெருமானுக்குத் திருவமுது ஊட்டுதற்கு முன்னைய நாள்களில் செய்தது போலக் காட்டில் தனியாக இருந்து பெருவேட்டையாடி,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 162

மாறில்ஊன் அமுதும் நல்ல  
மஞ்சனப் புனலுஞ் சென்னி
ஏறுநாண் மலரும் வெவ்வே  
றியல்பினில் அமைத்துக் கொண்டு
தேறுவார்க் கமுத மான  
செல்வனார் திருக்கா ளத்தி
ஆறுசேர் சடையார் தம்மை  
அணுகவந் தணையா நின்றார்.

பொழிப்புரை :

ஊன் அமைத்தலினும், சுவைபார்த்தல் முதலிய வற்றினும் மாறில்லாத நிலையில் அமைத்துக் கொண்ட இறைச்சி ஆகிய அமுதையும், நல்ல திருமுழுக்கிற்குரிய நீரையும், இறைவன் திருமுடியில் சாத்துதற்கான அன்றலர்ந்த மலர்களையும், வெவ் வேறான இயல்பில் இவற்றை அமைத்து எடுத்துக் கொண்டு, மெய்யுணர்ந்த அன்பர்களுக்கு அமுதமெனத் தித்திக்கும் செல்வராய, சுடர்க் கொழுந் தாய்த் திருக்காளத்தி மலைமீது கங்கை சேர்ந்த சடையை யுடையவராய், எழுந்தருளியிருக்கும் பெருமானாரை அணுக வருவாராகி. 

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 163

இத்தனை பொழுதுந் தாழ்த்தேன்
எனவிரைந் தேகு வார்முன்
மொய்த்தபல் சகுன மெல்லாம்
முறைமுறை தீங்கு செய்ய
இத்தகு தீய புட்கள்
ஈண்டமுன் உதிரங் காட்டும்
அத்தனுக் கென்கொல் கெட்டேன்  
அடுத்ததென் றணையும் போதில்.

பொழிப்புரை :

என் தலைவனுக்கு அமுது ஊட்ட இத்துணையும் காலந் தாழ்த்தேனே, என்று எண்ணி, விரைவாக வரும் திண்ணனார் முன்னே, அடுக்கி வரும் தீய நிமித்தம் பலவும் முறை முறையே தீங்கினைக் காட்ட, இத்தகைய நிமித்தங்கள் இரத்தக் கெடுதி வரும் என்பதைக் காட்டுவனவாகும் எனத் தேர்ந்த திண்ணனார், அந்தோ! என் அப்பனுக்கு என்ன நேர்ந்ததோ! கெட்டேன்! என விரைவாக வரும் பொழுதில்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 164

அண்ணலார் திருக்கா ளத்தி  
அடிகளார் முனிவ னார்க்குத்
திண்ணனார் பரிவு காட்டத்  
திருநய னத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய  
இருந்தனர் தூரத் தேஅவ்
வண்ணவெஞ் சிலையார் கண்டு
வல்விரைந் தோடி வந்தார்.

பொழிப்புரை :

தலைமை சான்ற திருக்காளத்தியப்பர், சிவ கோசரியாருக்குத் திண்ணனார் தம்மீது கொண்ட அன்பின் திறத்தைக் காட்டிடத், தம் திருக்கண்கள் ஒன்றில், கதுமென இரத்தம் பெருகும்படி இருந்தனராக, தொலைவிலிருந்து வரும் வில் வீரராகிய திண்ணனார் அது கண்டு மிகு விரைவுடன் ஓடி வந்தார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 165

வந்தவர் குருதி கண்டார்
மயங்கினார் வாயில் நன்னீர்
சிந்திடக் கையில் ஊனும்
சிலையுடன் சிதறி வீழக்
கொந்தலர் பள்ளித் தாமங்
குஞ்சிநின் றலைந்து சோரப்
பைந்தழை அலங்கல் மார்பர்  
நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்.

பொழிப்புரை :

வந்தவர் இரத்தம் வருதலைக் கண்டார், மயங்கி னார்; வாயில் கொண்ட நல்ல மஞ்சன நீர் சிந்திடவும், கைகளில் இருந்த வில்லும் இறைச்சியும் சிதறி விழவும், கொத்தாக மலர்ந்த பூசனைக் குரிய மலர்கள் கொண்டையினின்றும் விழவும், பசிய தழை களாலாய மாலை சூடிய மார்புடைய திண்ணனார் நிலத்திடைப் பதைத்து வீழ்ந்தார்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 166

விழுந்தவர் எழுந்து சென்று  
துடைத்தனர் குருதி வீழ்வ
தொழிந்திடக் காணார் செய்வ  
தறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்துபோய் வீழ்ந்தார் தேறி
யாரிது செய்தார் என்னா
எழுந்தனர் திசைக ளெங்கும்
பார்த்தனர் எடுத்தார் வில்லும்.

பொழிப்புரை :

விழுந்தவர், எழுந்து சென்று, எம்பிரான் திருக்கண்ணினின்றும் வடியும் இரத்தத்தைத் துடைத்தனர். துடைத்தும் அது பெருகுதல் ஒழிந்திடக் கண்டிலர், என் செய்வதென்று அறிந்திலர், பெருமூச்சு விட்டார், மீளவும் மயங்கி வீழ்ந்தார். பின் ஒருவாறு மயக்கம் நீங்கிய நிலையில் யார் இது என் தலைவருக்குச் செய்தார்? என்று எழுந்தார், திக்குகள் எங்கும் பார்த்தனர், வில்லையும் கையில் எடுத்துக் கொண்டார்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 167

 வாளியுந் தெரிந்து கொண்டிம்
மலையிடை எனக்கு மாறா
மீளிவெம் மறவர் செய்தார்
உளர்கொலோ விலங்கின் சாதி
ஆளிமுன் னாகி யுள்ள
விளைத்தவோ அறியே னென்று
நீளிருங் குன்றச் சாரல்
நெடிதிடை நேடிச் சென்றார்.

பொழிப்புரை :

அம்பையும் தெரிந்து கூரியவாக எடுத்துக் கொண்டு, இம்மலையிடத்து எனக்கு மாறாகத் திண்மையுடைய கொடிய வேடர்கள் இதைச் செய்தனரோ? அல்லது ஆளி முதலிய கொடிய காட்டு மிருகங்கள் செய்தனவோ? என்று பலபட எண்ணிய வராய், அப்பெரு மலைச்சாரலெங்கும் நெடுந்தொலைவு வரையிலும் தேடிச் சென்றார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 168

 வேடரைக் காணார் தீய
விலங்குகள் மருங்கும் எங்கும்
நாடியுங் காணார் மீண்டும்
நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத் தோடு
நிறைமலர்ப் பாதம் பற்றி
மாடுறக் கட்டிக் கொண்டு
கதறினார் கண்ணீர் வார.

பொழிப்புரை :

தாம் நினைந்தவாறு ஒரு வேடரையும் காணார், கொடிய விலங்குகளையும் அப்பக்கங்கள் எங்கும் காணார், மீண்டும் தம் பெருமானிடம் வந்து, நீடிய பெரு வருத்தத்தோடு, அப் பெருமா னின் மலரனைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு, கண்ணீர் பெருகக் கதறுவாராய்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 169

பாவியேன் கண்ட வண்ணம்  
பரமனார்க் கடுத்த தென்னோ
ஆவியின் இனிய எங்கள்  
அத்தனார்க் கடுத்த தென்னோ
மேவினார் பிரிய மாட்டா
விமலனார்க் கடுத்த தென்னோ
ஆவதொன் றறிகி லேன்யான்
என்செய்கேன் என்று பின்னும்.

பொழிப்புரை :

பாவியேன் கண்ட தீய நிமித்தங்களுக்கு ஏற்ப என் தலைவருக்கு நேர்ந்தது என்னோ? என் உயிரினும் சிறந்த தந்தை யாருக்கு அடுத்தது என்னோ? தம்மைக் கண்டார் எவரும், பிரிதற்கு ஒருப்படாத விமலனாருக்கு அடுத்தது என்னோ? யான் செயத் தகுவது ஒன்றும் அறிந்திலேனே! நான் என் செய்கேன்! என்று எண்ணியவராய்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 170

 என்செய்தால் தீரு மோதான்  
எம்பிரான் திறத்துத் தீங்கு
முன்செய்தார் தம்மைக் காணேன்
மொய்கழல் வேட ரென்றும்
மின்செய்வார் பகழிப் புண்கள்
தீர்க்குமெய் மருந்து தேடிப்
பொன்செய்தாழ் வரையிற் கொண்டு
வருவன்நான் என்று போனார்.

பொழிப்புரை :

இதற்கு என்ன செய்தால் இக்கண்ணில் புண் தீருமோ? அறியேன்! எம்பிரானிடத்துத் தீங்கு செய்தார் ஒருவரையும் காணேன்! செறிந்த வீரக் கழல்களை அணிந்த வேடர்கள் என்றும் மின் ஒளி கொண்ட கூரிய அம்பு தைப்பதால் வரும் புண்களைத் தீர்க்க, உடலில் பூசிடும் நல்ல மருந்தாய மூலிகைகளைப் பொன் விளையும் சிறப்புடைய இம்மலைச் சாரலில் தேடி நான் கொணர்வேன் என்று கூறிப் போயினார் திண்ணனார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடலகளும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 171

 நினைத்தனர் வேறு வேறு  
நெருங்கிய வனங்க ளெங்கும்
இனத்திடைப் பிரிந்த செங்கண்  
ஏறென வெருக்கொண் டெய்திப்
புனத்திடைப் பறித்துக் கொண்டு
பூதநா யகன்பால் வைத்த
மனத்தினுங் கடிது வந்து  
மருந்துகள் பிழிந்து வார்த்தார்.

பொழிப்புரை :

அச்சிந்தனையுடன் சென்ற திண்ணனார், மருந்துகளின் வகைகளை நினைந்து, அவற்றினைப் பெறுதற்கு, வேறு வேறான மரங்களும் செடி கொடிகளும் அமைந்த அவ்விடங்களி லெங்கும், தம் இனத்தைப் பிரிந்து நிற்கும் சிவந்த கண்களையுடைய காளையைப் போன்று அச்சம் கொண்டு சென்று, அம்மருந்துகளை அவ்வவ்விடங்களிலும் தேடிப் பறித்து எடுத்துக் கொண்டு, உயிர்கட் கெல்லாம் தலைவரான இறைவர்பால் வைத்த மனத்திலும் விரைவாக வந்து பெருமானாரின் கண்ணில் அம்மூலிகைளைப் பிழிந்து அவற்றின் சாற்றை வார்த்தார்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 172

 மற்றவர் பிழிந்து வார்த்த
மருந்தினால் திருக்கா ளத்திக்
கொற்றவர் கண்ணிற் புண்ணீர்  
குறைபடா திழியக் கண்டே
இற்றையின் நிலைமைக் கென்னோ
இனிச்செய லென்று பார்ப்பார்
உற்றநோய் தீர்ப்ப தூனுக்
கூனெனும் உரைமுன் கண்டார்.

பொழிப்புரை :

இவ்வாறு திண்ணனார் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்காளத்திப் பெருமானின் திருக்கண்ணிலிருந்து வரும் இரத்தம் வடிதல் குறைவுபடாது பெருகிடக் கண்டு, இன்றைக்கு எம்பெருமானுக்கு நேர்ந்த இந்நிலைமைக்கு என்னோ இனிச் செயல்? என்று எண்ணிப் பார்ப்பவராய திண்ணனார், ஒருவருக்கு ஊனில் உற்ற நோயைத் தீர்ப்பதற்கு அதுபோன்ற ஊனையிடல் வேண்டும் என்னும் முதுமொழி ஒன்று தம் மனத்தில் தோன்ற உணர்ந்தார்.

குறிப்புரை :

மனிதனின் உடல் உறுப்புக்களில் யாதானும் ஒன்று பழு தாகி விடில், அதற்குமாறாகப் பிறமனித உயிர்களின் உறுப்புகளை எடுத்துப் பொருத்தின், அப்பழுது நீங்குதல் இன்று கண்கூடாகப் பார்ப்பது ஒன்று. இவ்வரிய மருத்துவக் கலையைத் திண்ணனார் அறிந்தது கேள்வி அளவிலேயாம் எனினும் அதன் நினைவு இது பொழுது அவருக்குப் பெரிதும் உதவியாயிற்று. `கற்றிலனாயினும் கேட்க அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந்துணை` (குறள், 414) எனவரும் திருக்குறள் நோக்குக.

பண் :

பாடல் எண் : 173

 இதற்கினி என்கண் அம்பால்  
இடந்தப்பின் எந்தை யார்கண்
அதற்கிது மருந்தாய்ப் புண்ணீர்  
நிற்கவும் அடுக்கு மென்று
மதர்த்தெழும் உள்ளத் தோடு  
மகிழ்ந்துமுன் னிருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி  
முதல்வர்தங் கண்ணில் அப்ப.

பொழிப்புரை :

இதற்கு இனி, எனது கண்ணை நான் அம்பால் இடந்து எம்பிரானின் புண்ணுடைய கண்ணில் அப்பினால், அக்கண்ணிற்கு எனது இக்கண் மருந்தாகிக் குருதி நிற்கவும் கூடும் என்று உள்ளத்து எழுந்த அந்நினைவால், பெருமிதம் கொண்டு, மகிழ்ந்து, திண்ணனார் ஓர் அம்பினை எடுத்துத் தம் கண்ணினை இடந்து, கையிடத்துக் கொண்டு, தம் முதல்வராய காளத்தியப்பரின் கண்மீது அப்பிடலும்.

குறிப்புரை :

கண்முதல் - கண்ணின் அடிப்பகுதி. சரம் மடுத்து - அம்பினால் இடந்து.

பண் :

பாடல் எண் : 174

 நின்றசெங் குருதி கண்டார்  
நிலத்தினின் றேறப் பாய்ந்தார்
குன்றென வளர்ந்த தோள்கள்
கொட்டினார் கூத்து மாடி
நன்றுநான் செய்த இந்த  
மதியென நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பி னாலே  
உன்மத்தர் போல மிக்கார்.

பொழிப்புரை :

கண்ணில் நின்றும் வடிந்த குருதி நிற்பதைக் கண்டார், உடன் நிலத்தில் நின்றும் உயரத்துள்ளிப் பாய்ந்தார். மலை போன்று வளர்ந்த தம் தோள்களைக் கொட்டினார். கூத்தும் ஆடி, நான் செய்த இத்தீர்வு நன்று என்று புன்முறுவல் பூப்ப மனத்தில் பொருந்திய மகிழ்ச்சியாலே, தாம் ஓர் உன்மத்தன் (பித்துற்றவர்) போலாகி, அதில் மேம்பட்ட நிலையரானார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 175

 வலத்திருக் கண்ணில் தங்கண்
அப்பிய வள்ள லார்தம்
நலத்தினைப் பின்னும் காட்ட  
நாயனார் மற்றைக் கண்ணில்
உலப்பில்செங் குருதி பாயக்  
கண்டனர் உலகில் வேடர்
குலப்பெரும் தவத்தால் வந்து  
கொள்கையின் உம்பர் மேலார்.

பொழிப்புரை :

பெருமானின் வலத் திருக்கண்ணில் தமது வலக்கண்ணை இடந்து அப்பிய வள்ளலாராய திண்ணனார், தம்பால் கொண்ட அன்பின் நலத்தை, மேலும் காட்டிடக் காளத்தி மலை யின்கண் எழுந்தருளியிருக்கும் பெருமான், தமது மற்றைக் கண் ணாகிய இடக் கண்ணிலும் ஒழிவின்றிப் பெருகிடும் குருதி பாய்ந்திடச் செய்தனர். அதனைக் கண்ட இவ்வுலகில் வேடர்குலம் செய்த பெருந் தவத்தினால் வந்து தோன்றிய உயர்ந்த கோட்பாடுடைய தேவரின் மேம்பட்ட திண்ணனாரும்,

குறிப்புரை :

உயர்ந்த கோட்பாடு - பெருமானிடத்துக் கொண்டிருக் கும் பேரன்பு, `அன்பின் வழியது உயிர்நிலை` (குறள், 80) ஆதலின் உயிர்கள் கொள்ளத்தக்க கொள்கைகளில் தலையாயது அன்பாம், எனவே இங்கு உயர்ந்த கோட்பாடு எனக் குறிப்பது அன்பேயாம்.

பண் :

பாடல் எண் : 176

கண்டபின் கெட்டேன் எங்கள்
காளத்தி யார்கண் ணொன்று
புண்தரு குருதி நிற்க
மற்றைக்கண் குருதி பொங்கி
மண்டும்மற் றிதனுக் கஞ்சேன்
மருந்துகைக் கண்டே னின்னும்
உண்டொரு கண்அக் கண்ணை
இடந்தப்பி யொழிப்பே னென்று.

பொழிப்புரை :

இதைக் கண்டதும்,அந்தோ! நான் கெட்டேன்! எங்கள் காளத்தியார் தம் கண்களில் ஒன்றான வலத் திருக்கண்ணில் குருதி வருதல் நின்றிட, மற்றைக்கண்ணாய இடக் கண்ணில் குருதி பொங்குகின்றதே! என்று எண்ணியவராய், இதற்கு யான் அஞ்ச மாட்டேன், மருந்து கையில் இருக்கக் கண்டேன், இன்னும் என்னி டத்தில் ஒரு கண் உண்டு, அக்கண்ணை நான் அம்பால் இடந்து எம் பெருமானுடைய கண்ணில் அப்பி, அக்கண்ணிலிருந்து வரும் குருதி யையும் ஒழிப்பேன் என்றார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 177

 கண்ணுதல் கண்ணில் தங்கண்  
இடந்தப்பிற் காணும் நேர்பா
டெண்ணுவார் தம்பி ரான்தன்  
திருக்கண்ணில் இடக்கா லூன்றி
உண்ணிறை காத லோடும்  
ஒருதனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணி லூன்றத்
தரித்திலர் தேவ தேவர்.

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணுடைய பெருமானின் இடத் திருக் கண்ணில் தமது இடக்கண்ணினை இடந்து அப்பிடற்கு, அக் கண்ணுள்ள இடம் மாறாது நேர்படுதற்காக, பெருமானின் இடத் திருக்கண்ணில், தமது இடக்காலை ஊன்றி, உளமகிழ்வுடன், ஒரு அம்பினை எடுத்துத் தம் இடக்கண்ணில் இடந்திட, அது கண்டு, தேவதேவராய பெருமான் தரித்திலராகி,

குறிப்புரை :

வலக்கண்ணை இழந்தநிலையில், இடக்கண்ணையும் இழந்து விடின், பெருமானின் இடக்கண் இருக்கும் இடம் தெரியாது. ஆதலின் அவ்விடத்தை அடையாளம் காண்டற்கு, ஏதுவாக இடக்காலை அவ்விடத்து ஊன்றினாராதலின் `காணும் நேர்பாடு எண்ணுவார்` என்றார்.

பண் :

பாடல் எண் : 178

 செங்கண்வெள் விடையின் பாகர்
திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக்கா ளத்தி  
அற்புதர் திருக்கை யன்பர்
தங்கண்முன் னிடக்குங் கையைத்  
தடுக்கமூன் றடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக்  
கண்ணப்ப நிற்க வென்றே.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய ஆனேற்றின் மீது எழுந்தருளுவோரும், திண்ணனார் தம்மை ஆண்ட அருளாளரு மாகிய இறைவராய, திருக்காளத்தி மலையில் வியத்தகு நிலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானாரின் திருக்கை தோன்றி, திண்ண னார் தம் கண்ணை இடந்து தோண்டும் கையைத் தடுத்து நிற்ப, பாம்பினைத் திருக்கையில் அணிந்த அப்பெருமானின், அமுதமாய வாக்கு, `கண்ணப்ப நிற்க! கண்ணப்ப நிற்க! கண்ணப்ப நிற்க!` என மும்முறை மொழிந்தருளுமாற்று.

குறிப்புரை :

`இன்னுரை யதனொடும் எழிற்சிவ லிங்கம் தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையா லன்னவன் தன்கை யம்பொடு மகப்படப், பிடித் தருளினன், ஆண்டகை, ஒருகை யாலுமிருகை பிடித்து, நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! என்அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப!` (தி.11 கண்.மறம்.வரி 147-152) என வரும் திருவாக்கினைக் காண்க. `விரைசொல் அடுக்கே மூன்று வரம்பாகும்` என வரும் மரபிற்கேற்ப, மும்முறை அடுக்கி வந்தது.

பண் :

பாடல் எண் : 179

கானவர் பெருமா னார்தங்
கண்ணிடந் தப்பும் போதும்
ஊனமு துகந்த ஐயர்  
உற்றுமுன் பிடிக்கும் போதும்
ஞானமா முனிவர் கண்டார்
நான்முகன் முதலா யுள்ள
வானவர் வளர்பூ மாரி
பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப.

பொழிப்புரை :

வேடர் பெருமானாராம் திண்ணனார். தமது கண்ணை இடந்து அப்பும் பொழுதும், அவர் படைத்த ஊனை அமுதாக உண்டு உகந்த அப்பெருமான், தன் அன்பர் அம்பால் இடக் கண்ணையும் இடக்கும்படி எடுத்த அவர் கையைப் பிடிக்கும் பொழுதும், ஞானம் மிகுந்த சிவகோசரியார் என்னும் பெருமுனிவர் கண்டார். நான்முகன் முதலாயுள்ள தேவர்கள் மகிழ்ந்து, பெருகும் கற் பகப் பூக்களாம் மழையினைச் சொரிந்தனர். நான்மறைகளும் முழங்கின.

குறிப்புரை :

கண்ணப்பர் வரலாற்றைப் போற்றும் வண்ணம், கண்ணப்பர் திருமறம் என்ற பெயரில் நக்கீரதேவர், கல்லாடதேவர் ஆகிய இருவரும் இருநூல்கள் செய்துள்ளனர். இவற்றுள் நக்கீரதேவர் திருமறமே (தி.11) இவ்வரலாற்றிற்குப் பெரிதும் துணை நின்றுள்ளது. எடுத்துக்காட்டாக,
தத்தையாம் தாய்தந்தை நாகனாம் தன்பிறப்புப்
பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும்
திண்ணப்ப னாஞ்சிறுபேர் செய்தவத்தாற் காளத்திக்
கண்ணப்பனாய் நின்றான் காண்.
(தி.11 கண்ணப். மறம். இறுதி வெண்பா.)
என வரும் நக்கீரதேவரின் திருவாக்கினைக் காண்க.

பண் :

பாடல் எண் : 180

 பேறினி யிதன்மேல் உண்டோ  
பிரான்திருக் கண்ணில் வந்த
ஊறுகண் டஞ்சித் தங்கண்  
இடந்தப்ப உதவுங் கையை
ஏறுயர்த் தவர் தங் கையால்
பிடித்துக்கொண் டென்வ லத்தின்
மாறிலாய் நிற்க வென்று  
மன்னுபே ரருள்பு ரிந்தார்.

பொழிப்புரை :

பெருமானார் திருக்கண்ணில் வந்த ஊறாய புண்ணைக் கண்டு அஞ்சி, அதற்காகத் தமது இடக்கண்ணை இடக்க எடுத்த கண்ணப்ப நாயனாரின் கையை, ஆனேற்றுக் கொடியை உயர்த்தியருளிய பெருமானார் தம் கையால் பிடித்துக் கொண்டு, `ஒப்பில்லாத அன்பனே! என் வலப் பக்கத்தில் என்றும் நீ நிற்பாயாக` என எக்காலமும் குன்றாத சீர்மன்னி விளங்கும் பெரிய அருள் புரிந்தார். ஆதலின் இப்பேற்றினும் பெறத்தக்கதொரு பெரும்பயன் இல்லை என்பதாம்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 181

 மங்குல்வாழ் திருக்கா ளத்தி  
மன்னனார் கண்ணில் புண்ணீர்
தங்கணால் மாற்றப் பெற்ற
தலைவர்தாள் தலைமேற் கொண்டே
கங்கைவாழ் சடையார் வாழும்  
கடவூரிற் கலய னாராம்
பொங்கிய புகழின் மிக்கார்  
திருத்தொண்டு புகல லுற்றேன்.

பொழிப்புரை :

மேகங்கள் வாழுதற்கு இடனாய திருக்காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் திருக்கண்களில் கண்ட குருதியை, தமது கண்களினால் மாற்றும் பேறு பெற்ற தலைவராகிய கண்ணப்ப நாயனாரின் திருவடிகளை என் தலைமேற்கொண்டு, கங்கை வாழும் திருச்சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் திருக்கடவூரில் வாழ்ந்த கலயனாராகிய புகழ் மேம்பட்டவரின் திருத்தொண்டினை, இனிக் கூறத் தொடங்குகின்றேன்.

குறிப்புரை :

********
சிற்பி