எறிபத்த நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

மல்லல்நீர் ஞாலந் தன்னுள்
மழவிடை யுடையான் அன்பர்க்
கொல்லைவந் துற்ற செய்கை
உற்றிடத் துதவும் நீரார்
எல்லையில் புகழின் மிக்க
எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லலாம் படித்தன் றேனும்
ஆசையாற் சொல்ல லுற்றாம்.

பொழிப்புரை :

வளம் மிக்க கடலால் சூழப்பட்ட நிலவுல கத்தின்கண் இளமையான ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டருளும் சிவபெருமானின் அடியவர்களுக்குத் துன்பம் வந்த பொழுது விரைந்து வந்து அவர்களுக்கு வேண்டும் செய்கைகளைச் செய்கின்ற குணத்தை உடையவராய வரம்பிகந்த கீர்த்தியில் மேம்பட்ட எறிபத்த நாயனாரது பெருமை, எம்மால் சொல்லப்படும் தன்மை உடைத்தன்று. அவ்வாறிருப்பினும் அவர் மீதிருக்கும் மீதூர்ந்த ஆசையால் சொல்லத் தொடங்கினம்.

குறிப்புரை :

ஒல்லை - விரைந்து. உற்றிடத்து - துன்பம் வந்த விடத்து. `அளவில் ஆசை துரப்ப அறைகுவேன்` (தி.12 பாயிரம் பா.5) என முன் பொதுவகையால் கூறிய ஆசிரியர், ஈண்டுச் சிறப்பு வகையானும் கூறினார், அடியவர் மீதிருக்கும் அன்பு மீதூர்வு தோன்ற.

பண் :

பாடல் எண் : 2

பொன்மலைப் புலிவென் றோங்கப்
புதுமலை யிடித்துப் போற்றும்
அந்நெறி வழியே யாக 
அயல்வழி யடைத்த சோழன்
மன்னிய அநபா யன்சீர் 
மரபின்மா நகர மாகும்
தொன்னெடுங் கருவூ ரென்னும்
சுடர்மணி வீதி மூதூர்.

பொழிப்புரை :

இமய மலையினிடத்துக் கட்டிய புலிக்கொடி, பிற நாட்டு அரசர்களை வென்று மேம்பட்டபெருமையை விளக்கிநிற்ப, மலைகளை இடித்துத் தன்னால் உண்டாக்கப்படும் புதிதான அந்த வழியே செல்வோர்க்கு வழியாக, முன்னிருந்த சுற்று வழிகளை அடைத்த சோழர் மரபில் வந்த அரசனாகிய நிலை பெற்ற சிறப்பினை யுடைய அநபாயனின் மரபினருக்குப் பெரிய தலைநகரமாக விளங்குவது, பழமை மிக்க கருவூர் என்னும் ஒளி பொருந்திய மணிகள் பதித்த வீதிகளை உடைய பழமையாகிய ஊராகும்.

குறிப்புரை :

பொன்மலை - இமயமலை. நம் இந்தியப் பெருநாடு வடக்கில் இமயமலையை எல்லையாக உடையது. அதுவே அரணா கவும் உள்ளது. அதில் பல வழிகள் இருப்பின் நாட்டிற்குப் பாதுகாப்பு இராது என்று கருதிய சோழப் பேரரசர்கள், முன்னிருந்த பலவழி களையும் அடைத்துப் புதிய வழி ஒன்றையுமே போக்குவரத்திற்கு உரியதாக அமைத்தனர். இது அவர்களின் நாடுகாக்கும் திறனை உணர்த்துகின்றது. சோழ அரசர்கள் முடிசூட்டிக் கொள்வதற்குரிய பெரு நகரங்களில் கருவூரும் ஒன்றாகும். மாநகர் - தலைநகர்.

பண் :

பாடல் எண் : 3

மாமதில் மஞ்சு சூழும்
மாளிகை நிரைவிண் சூழும்
தூமணி வாயில் சூழும்
சோலையில் வாசஞ் சூழும்
தேமலர் அளகஞ் சூழும்
சிலமதி தெருவிற் சூழும்
தாமகிழ்ந் தமரர் சூழும் 
சதமகன் நகரம் தாழ.

பொழிப்புரை :

தேவர்கள் தாம் மகிழ்ந்து உறைகின்ற இந்திரனது பொன்னுலகமும், இந்நகரச் சிறப்பிற்குத் தாழ்ந்துள்ளது என்னுமாறு, அங்குள்ள பெரிய மதில்களில் மேகங்கள் சூழும். மாளிகைகளின் வரிசைகள், மேக மண்டலத்தை அளாவிநிற்கும். தூய்மையான இரத்தினங்கள் வாயில்களில் சூழ்ந்திருக்கும். தேன் கமழ்கின்ற மலர்கள், பெண்களின் கூந்தலில் சூழ்ந்திருக்கும். அம்மகளிரின் முக மாகிய சில மதிகள் தெருவில் சூழும்.

குறிப்புரை :

சூழும் எனும் சொல் அடுக்கி வந்து இப்பாடற்கு அணி செய்கின்றது. அளகம் - கூந்தல். பெண்களின் முகத்திற்கு மதி ஒப்பாதல் பற்றிச் `சில மதி தெருவில் சூழும்` என்றார். வானில் ஒரு மதியே இருக்க, இப்பெருநகரில் சில மதிகள் இருக்கின்றன, என்பது ஒரு நயம். சில மதி (சில பெண்கள்) தெருவில் சூழும் என்றது, தத்தம் செயற்பாட்டிற்கன்றி வறிதே, எப்பெண்மணிகளும், தெருவிடத்து வாரார் என்பது பற்றியாம். முன், `தனயரும் மனையிற் றப்பார்` (தி.12 சரு.1-5) என்பதனோடு இதனையும் ஒத்து நோக்கின் அக்காலத்து மகளிரும் மைந்தரும் எந்நிலையிலிருந்தனர் என்ற பண்பாடு தெரிய வரும். சதம் - நூறு; மகம் - வேள்வி, நூறு வேள்விகளைச் செய்தவன் இந்திரனாவான். அதுபற்றியே, அவன் `சதமகன்` என அழைக்கப் பட்டான்.

பண் :

பாடல் எண் : 4

கடகரி துறையி லாடும்
களிமயில் புறவி லாடும்
சுடர்மணி யரங்கி லாடும்
அரிவையர் குழல்வண் டாடும்
படரொளி மறுகி லாடும்
பயில்கொடி கதிர்மீ தாடும்
தடநெடும் புவிகொண் டாடும்
தனிநகர் வளமை ஈதால்.

பொழிப்புரை :

மதம் பொழிகின்ற யானைகள் நீர்த்துறைகளில் விளையாடும். களிப்பினையுடைய மயில்கள் முல்லை நிலத்தில் விளையாடும். நெருங்கிய மணிகள் அடர்ந்த அரங்கில் நடிக்கின்ற பெண்கள் கூந்தலில் வண்டுகள் ஆடும். ஒளி படர்ந்திருக்கும் வீதிகளில் ஆடுகின்ற நெருங்கிய கொடிகள், கதிரவன் மண்டலத்தின் மேல் உயர்ந்தாடும். பரந்த நெடிய இந்நிலவுலகத்தில் அனைவராலும் பாராட்டத்தக்க ஒப்பற்ற அந்நகரின் வளம் இதுவாம்

குறிப்புரை :

புறவு - முல்லை நிலம். ஆல் - அசை.

பண் :

பாடல் எண் : 5

மன்னிய சிறப்பின் மிக்க
வளநக ரதனின் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து
சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க
தொண்டர்தஞ் சிந்தை நீங்கா
அந்நிலை யரனார் வாழ்வ
தானிலை யென்னுங் கோயில்.

பொழிப்புரை :

நிலைபெற்ற சிறப்பினால் உயர்ந்த வளத்தினை உடைத்தாகிய அந்நகரத்தின்கண் இருக்கும் பொன்னாலாகிய மதிலைச் சுற்றி அமரர்களும் வழிபடுதற்குரிய சிறப்பினால், தம் உள்ளத்துக் கலந்த அன்பிற்சிறந்த அடியவர்களின் இதயத்தை விட்டு என்றும் நீங்காத அந்நிலைமையினையுடைய சிவபெருமானார் மகிழ்ந் திருப்பது கருவூரில் இருக்கும் `ஆனிலை` என்னும் திருக்கோயி லாகும்.

குறிப்புரை :

`அரனார் வாழ்வது ஆனிலை` என்னும் கோயிலாகும். அவ்விடத்திலன்றி, அன்பு மிக்க அடியவர் உள்ளத்திலும் அவ்வரனார் அன்பு செய்து நிற்பர் என்பார் `அன்பின் மிக்க தொண்டர் தம் சிந்தை நீங்காஅரனார்` என்றார். தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி` (தி.8 ப.5 பா.69) என்னும் திருவாசகமும். அந்நிலை - அத்தகைய சிறப்பினையுடைய நிலை. அகரம் பண்டறிசுட்டாம். அகரமாகிய நிலையினையுடையார் என்றலும் ஒன்று. `அகரமுதல எழுத்தெல்லாம்` (குறள், 1) என வருவதும் காண்க. ஆன் + நிலை = ஆனிலை. காமதேனுவால் வழிபடப்பெற்ற பதியாதலின் இப்பெயர் பெற்றது. திருக்கோயிலின் பெயரும் இதுவாம்.

பண் :

பாடல் எண் : 6

பொருட்டிரு மறைகள் தந்த
புனிதரை இனிதக் கோயில்
மருட்டுறை மாற்று மாற்றால்
வழிபடுந் தொழில ராகி
இருட்கடு வொடுங்கு கண்டத்
திறையவர்க் குரிமை பூண்டார்க்
கருட்பெருந் தொண்டு செய்வார்
அவர்எறி பத்த ராவார்.

பொழிப்புரை :

மெய்ப்பொருளைத் தருகின்ற அழகிய மறைகளை அருளிச் செய்த சிவபெருமானை, இனிதாக அக்கோயிலில், உலகியல் உணர்விற்கு ஏதுவாகிய மயக்க நெறிகளை நீக்குமாற்றால் வழிபாடு செய்கின்ற தொழிலை உடையவராய், கருநிறமுடைய நஞ்சு சேர்ந் திருக்கும் திருமிடற்றையுடைய முதல்வராகிய சிவபெருமானுக்கு உரிமையாகிய, அடிமை பூண்ட அன்பர்க்குத் தாம் கொண்ட அருள் நிறைந்த பெரிய திருத்தொண்டைச் செய்து வருகின்ற அடியவர் ஒருவர்; அவர் எறிபத்த நாயனார் என்று அழைக்கப்படுவர்.

குறிப்புரை :

மருள் - மெய்ப்பொருளல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று கருதுவது. சிறப்புக்கு வித்தாகும் புனிதர் - தூய்மையானவர்; இயல்பாகவே பாசங்களின் நீங்கியவர். மறைகள் தந்த என்பதன்றி மறைகடந்த என்றலுமாம்.

பண் :

பாடல் எண் : 7

மழைவளர் உலகில் எங்கும்
மன்னிய சைவ மோங்க
அழலவிர் சடையான் அன்பர்க்
கடாதன அடுத்த போது
முழையரி யென்னத் தோன்றி
முரண்கெட எறிந்து தீர்க்கும்
பழமறை பரசுந் தூய
பரசுமுன் னெடுக்கப் பெற்றார்.

பொழிப்புரை :

அவர், மழையினால் செழிப்புற்று ஓங்கும் நில வுலகின்கண், எவ்விடத்தும் நிலைபெற்ற சைவசமயநெறி தழைத்து ஓங்கத் தீப்போல் ஒளிர்கின்ற சடைமுடியையுடைய சிவபெருமானின் அடியவர்களுக்கு, நேரத்தகாத தீங்குகள் நேர்ந்த பொழுது, மலை யிடத்து இருக்கும் குகையில் வாழும் சிங்க ஏறு போல வெளிப்பட்டு, அத்துன்பம் செய்தாரது வலிமை அழியுமாறு அவர்களை அழித்து, அத்துன்பத்தினின்றும் நீக்கும் பழமையான மறைகளும் போற்றுதற் குரிய தூய்மையான மழுப்படையைத் தம்முடைய திருக்கரத்தில் தாங்கப் பெற்றவர்.

குறிப்புரை :

வான்நின்று உலகம் வழங்கி வருதலின் `மழை வளர் உலகு` என்றார். நிலைபெற்ற சிவநெறியைப் போற்றி வருவது சைவம் ஆதலின் `மன்னிய சைவம்` என்றார். அழலின் செந்நிறத்தை ஒத்துத் திருச் சடைவிளங்குதல் பற்றி அதனொடு உவமித்தார். முழையரி - குகையிடத்து இருக்கும் சிங்கம். பதுங்கி இருத்தற்குரிய இடம் அதுவாத லின் `முழையரி` என்றார். அடியவர்க்கு உற்ற இடுக்கணை நீக்குதலின், பழமறைகளும் அவரிடத்து இருக்கும் அப்பரசினைப் பாராட்டுவன வாயின. பரசு என வருவனவற்றில் முன்னையது வழிபடுதல் எனும் பொருளது; பின்னையது கருவி எனும் பொருளது. அழல் - நெருப்பு.

பண் :

பாடல் எண் : 8

அண்ணலார் நிகழும் நாளில்
ஆனிலை யடிக ளார்க்குத்
திண்ணிய அன்பு கூர்ந்த
சிவகாமி யாண்டா ரென்னும்
புண்ணிய முனிவ னார்தாம்
பூப்பறித் தலங்கல் சாத்தி
உண்ணிறை காத லோடும்
ஒழுகுவார் ஒருநாள் முன்போல்.

பொழிப்புரை :

பெருமையில் சிறந்த இவ் எறிபத்த நாயனார் இவ்வரிய பணியைச் செய்து வருகின்ற நாளில், ஆனிலை என்னும் திருக்கோவிலின்கண் எழுந்தருளியிருக்கும் பெருமானார்க்கு உறைப்பு மீதூர்ந்த அன்பினராய சிவகாமியாண்டார் என்னும் புண்ணிய முனிவனார், தாம் மலர்களைக் கொய்து இறைவற்கு ஏற்கும் மாலை களாகத் தொடுத்து, அணிவித்துத் தம் உள்ளத்து நிறைந்த பெரு விருப்போடு அப்பணியைச் செய்து வருகின்றவர், ஒரு நாள் தாம் நாளும் செய்துவருவது போல.

குறிப்புரை :

திண்ணிய அன்பு - உறைப்புடைய அன்பு. அஃதாவது தாம் மேற் கொண்டிருக்கும் தொண்டில் வழுவாத அன்பு. அலங்கல் - மாலை.

பண் :

பாடல் எண் : 9

வைகறை யுணர்ந்து போந்து
புனல்மூழ்கி வாயுங் கட்டி
மொய்ம்மலர் நெருங்கு வாச
நந்தன வனத்து முன்னிக்
கையினில் தெரிந்து நல்ல
கமழ்முகை அலரும் வேலைத்
தெய்வநா யகர்க்குச் சாத்தும்
திருப்பள்ளித் தாமங் கொய்து.

பொழிப்புரை :

விடியற்காலையில் துயில் எழுந்து, திருக்குளத் திற்குச்சென்று நீராடி, வாயையும் கட்டிக் கொண்டு, திரளான மலர்கள் நெருங்கிய நறுமணம் கமழும் திருநந்தனவனத்தை அடைந்து, கையி னால் ஆராய்ந்து, நல்ல மணமுடையனவாய் அன்று அலரும் பருவ முடைய அரும்புகளை, அவை அலர்தற்குரிய சமயத்தில் தெய்வங் களுக்கெல்லாம் தலைமையானவராகிய சிவபெருமானுக்கு அணிவித் தற்குரிய திருமாலைக்கு ஆகின்ற மலர்களைக் கொய்து.

குறிப்புரை :

வானில் உலவும் விண்மீன்களின் நிலையைக் கொண்டு காலத்தை உணர்தலின் `வைகறை உணர்ந்து` என்றார். காலக் கருவி கொண்டோ, பிறர் உணர்த்தல் கொண்டோ எழாது, தாமே உரிய நேரத்தை உணர்ந்து எழுதலின், `வைகறை உணர்ந்து` என்றார் என்ற லுமாம். மலர் பறிக்கும் பொழுதும், மாலையாகக் கட்டி இறைவற்கு அணிவிக்கும் பொழுதும் வாய் நீராவி, தும்மல், இருமல், உமிழ்நீர் முதலாயினவற்றால் தூய்மை இழக்காதவாறும், மலர்களின் மணம் மூக்கினால் நுகரப்படாதவாறும் இருத்தற்கு வாயைக் கட்டுதல் வேண்டுதலின், `வாயும் கட்டி` என்றார். மலர்களுள் மணமுடையன வும், அன்று அலரும் தன்மை உடையனவுமே இறைவற்கு உகந்தன ஆதலின் `வாச நந்தன வனத்து` என்றும், `நல்ல கமழ்முகை அலரும் வேலை` என்றும் கூறினார். ஏனைய உயிர்கள் போல ஓரொருகால் துன்பப்பட்டும் ஒரு கால எல்லையில் இறந்தும் வருகின்ற தெய்வங்களுக்கு எல்லாம் தலைவன் சிவபெருமானே ஆதலின் `தெய்வநாயகர்` என்றார். காரணம் அவன் சாவா மூவாச் சிங்கமாய் என்றும் இருத்தலினாலேயாம். `நம் மவரவரே மூவரென் றேஎம்பி ரானொடும் எண்ணிவிண் ணாண்டுமண்மேல் தேவரென் றேஇறு மாந்தென்ன பாவந் திரிதவரே` (தி.8 ப.5 பா.4), `செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள செங்கீரை ஆடி அருளே` (குமரகுரு. முத்துக். செங். 1) எனவரும் திருவாக்குகளும் காண்க. இறைவற்கு ஆகும் மலர்கள், இலைகள், வேர்கள் முதலியவற்றைத் திருப்பள்ளித் தாமம் என்பர்.

பண் :

பாடல் எண் : 10

கோலப்பூங் கூடை தன்னை
நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசங் கொண்டு
மலர்க்கையில் தண்டுங் கொண்டங்
காலய மதனை நோக்கி
அங்கணர்க் கமைத்துச் சாத்தும்
காலைவந் துதவ வேண்டிக்
கடிதினில் வாரா நின்றார்.

பொழிப்புரை :

அழகிய திருப்பூங் கூடையில் அம் மலர்களை நிறைத்துக் கொண்டு, தம் உள்ளத்தில் தூய மெய்யன்பையுடைய வராய், மலர்போலும் திருக்கரத்தில், அம்மலர்க் கூடையைத் தொங்க விட்டிருக்கும் தண்டத்தையும் கொண்டு, அங்குள்ள திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குத் திருமாலை கட்டிச் சாத்தும் அமையத்து, அம்மலர்களைக் கொண்டு வந்து உரிய நேரத்தில் கொடுக்க விரும்பி விரைந்து வந்தார்.

குறிப்புரை :

கோலம் - அழகு. வாலிய நேசம் - தூயமெய்யன்பு. தண்டு - அலக்கு; இது தலைப்பில் ஒரு வளைவுடைதாக இருக்கும். அவ் வளைவு மலர்களையுடைய சிறு மரக்கிளைகளிலும் செடிகளிலும் உள்ள மலர்களை அவற்றிற்கு ஊறு நேராவாறு வண்ணம் வளைத்துப் பறிப்பதற்கு உதவுவது.
`வன் தனித்தண்டில் தூங்கும் மலர்கொள் பூங்கூடை` எனப் (பா.563) பின்னர் வருதலின் அத்தண்டில் பூக் கூடையை எடுத்துச் செல்லும் மரபும் இதனால் விளங்கும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 11

மற்றவ ரணைய இப்பால்
வளநக ரதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள்
குலப்புகழ்ச் சோழ னார்தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும்
பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்றவெங் களிறு கோலம்
பெருகுமா நவமி முன்னாள்.

பொழிப்புரை :

அச் சிவகாமியாண்டார் இவ்வாறு வந்து கொண் டிருக்க, இப்பால் வளம் மிக்க அக்கருவூரில் வாழும் அரசரும், சோழர் குலத்தோன்றலாரும் ஆய புகழ்ச்சோழனார்தம் பகைவரது போர் முனையை அழிக்கும் பட்டவர்த்தனம் எனும் மேன்மை பெற்ற கொடிய யானையானது, விழாக் கொண்டாடுதற்கு உரிய நவமியின் முதல் நாளாகிய அட்டமியில்.

குறிப்புரை :

பட்டவர்த்தனம் - அரசர் இவர்ந்து வரும் மேன்மை பெற்ற பட்டத்து யானை. மாநவமி - மகாநவமி. புரட்டாசித் திங்களில் வளர்பிறை முதல்நாள் தொடங்கி 9 நாள்கள் முடிய இறைவியை நோக்கிச் செய்யப்படும் நவராத்திரிப் பெருவிழாவாகும். நவமியை அடுத்த தசமியில் இவ்விழா நிறைவு பெறுதலின் தசரா என அழைப்பர். நவமியன்று தெருவும், திருக்கோயில்களும் வீடுகளும் விழாக் கோலம் பூண்டிருக்கும் ஆதலின் `கோலம் பெருகும் மாநவமி` என்றார். நவமியில் நிகழும் இவ்விழாச் சிறப்பையும் குறிக்கவே, அட்டமி என்னாது `நவமி முன்னாள்` என்றார். மற்று - அசைநிலை.

பண் :

பாடல் எண் : 12

மங்கல விழவு கொண்டு
வருநதித் துறைநீ ராடிப்
பொங்கிய களிப்பி னோடும்
பொழிமதஞ் சொரிய நின்றார்
எங்கணு மிரியல் போக
எதிர்பரிக் காரர் ஓடத்
துங்கமால் வரைபோல் தோன்றித்
துண்ணென அணைந்த தன்றே.

பொழிப்புரை :

மங்கலம் பொருந்திய விழா நாளில் அணிதற்குரிய அணிகளைக் கொண்டு, நீர்மிகுந்து வருகின்ற ஆம்பிராவதி நதித் துறையில் நீராட்டப்பெற்று, மிகுந்த களிப்போடு பொழிகின்ற மதநீர் பெருக, வழிநிற்பார் எவரும் அஞ்சி எவ்விடத்தும் ஓடிப் போகவும், உடன்வந்த குத்துக் கோல்காரர்களும் எதிர் ஓடவும், உயர்ந்த பெருமை பொருந்திய மலையனைய தோற்றத்துடன் அவ்யானை, விரைவாக வந்தது.

குறிப்புரை :

ஆம்பிராவதி - இது கோவை மாவட்டத்தில் திரிமூர்த்தி மலைக் கருகில் தோன்றி, கிழக்காக ஓடி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கட்டளை என்னும் ஊருக்கு அருகிலுள்ள திருமுக் கூடலில் காவிரியொடு கலக்கும் ஆறாகும். ஆம்பிரம் - மாமரம். மாமரங்களின் நீழலிலேயே இவ்ஆறு பெரிதும் வருவதால் இப்பெயர் பெற்றது. குத்துக் கோல்காரர் - ஈட்டி முதலிய குத்துக் கோல்களைக் கொண்டு யானையை அடக்கிவருவோர். இவர்கள் யானையுடன் நடந்து வருவோராவர். அன்று ஓ, என்பன அசை நிலைகளாம். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 13

வென்றிமால் யானை தன்னை
மேல்கொண்ட பாக ரோடும்
சென்றொரு தெருவின் முட்டிச்
சிவகாமி யார்முன் செல்ல
வன்தனித் தண்டில் தூங்கும்
மலர்கொள்பூங் கூடை தன்னைப்
பின்தொடர்ந் தோடிச் சென்று
பிடித்துடன் பறித்துச் சிந்த.

பொழிப்புரை :

வெற்றி பொருந்திய அப்பெரிய யானையானது தன் மீது இவர்ந்து வரும் பாகரோடும் சென்று, ஒரு தெருவில் அப்பாகர்களின் கட்டுக் கடங்காமல் தனக்கு முன் சென்று கொண்டிருக் கும் சிவகாமியாண்டாரைக் கண்ட அளவில், அவர்தம் வலிமை மிக்க ஒப்பற்ற தண்டில் தொங்குகின்ற மலர்கள் நிறைந்த திருப்பூங் கூடையை, அவர் பின் தொடர்ந்து ஓடிப் பற்றி, நிலத்தில் சிந்த.

குறிப்புரை :

அரசனுக்குரிய வெற்றியை யானை மீதேற்றி `வென்றிமால் யானை` என்றார். மால் யானை - பெரிய யானை; ஒரு தெருவில் முட்டி எனவே அவ்யானை பாகர்க்கு அடங்காத நிலையில் சென்றமை தெரிய வருகின்றது; தூங்கு - தொங்குகின்ற.

பண் :

பாடல் எண் : 14

மேல்கொண்ட பாகர் கண்டு
விசைகொண்ட களிறு சண்டக்
கால்கொண்டு போவார் போலக்
கடிதுகொண் டகலப் போக
நூல்கொண்ட மார்பின் தொண்டர்
நோக்கினர் பதைத்துப் பொங்கி
மால்கொண்ட களிற்றின் பின்பு
தண்டுகொண் டடிக்க வந்தார்.

பொழிப்புரை :

அவ்யானையின் மேல் ஏறியிருக்கும் பாகர்கள் அதைக் கண்டு, விரைவாகச் செல்லுகின்ற யானையை ஊழிக் காற் றினைத் தம் வயப்படுத்திக் கொண்டு செல்வாரைப் போல விரைந்து, அதனை அகலக் கொண்டு சென்றுவிட்டார்களாக, முந்நூலை அணிந்த மார்பினையுடைய சிவகாமியாண்டார் அவ்யானையைப் பார்த்து, மனம் பதைத்துச் சினந்து, மயக்கம் கொண்ட அவ்யானையின் பின்னாக அதனைத் தம் தண்டு கொண்டு அடிக்க வந்தார்.

குறிப்புரை :

சண்டக்கால் - ஊழிக் காற்று. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 15

அப்பொழு தணைய வொட்டா
தடற்களி றகன்று போக
மெய்ப்பெருந் தொண்டர் மூப்பால்
விரைந்துபின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால்
தரையடித் தெழுந்து நின்று
செப்பருந் துயரம் நீடிச்
செயிர்த்துமுன் சிவதா வென்பார்.

பொழிப்புரை :

அது பொழுது வலிய அவ்யானை அவரை அணு காதவாறு நீங்கிப் போக, மெய்ம்மையான பெருமையினை உடைய சிவகாமியாண்டார் தம்மூப்பினால் விரைந்து அதன்பின் செல்ல இயலாதவராய் நின்று விட்டவர், கீழே விழுந்து, கைகளினால் நிலத்தை அடித்து மோதிப், பின் எழுந்து நின்று, சொலற்கரிய துன்பத்தால் மிகுந்த சினமுடையவராய்ச் `சிவதா` என்பாராகி .

குறிப்புரை :

சிவதா - மங்கலத்தைச் செய்பவன் என்னும் பொருள்பட நின்ற விளிச் சொல். இச் சொல்லை அவர் நாளும் ஓதிவந்த பழக்கத்தால் இத்தகைய இடர் வந்த பொழுதும் அம்மங்கலச் சொல்லையே கூறுவா ராயினர். இறைவனை நினைத்து ஓலமிடும் ஓர் ஓலச் சொல் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை).

பண் :

பாடல் எண் : 16

களியா னையின்ஈர் உரியாய் சிவதா
எளியார் வலியாம் இறைவா சிவதா
அளியார் அடியார் அறிவே சிவதா
தெளிவார் அமுதே சிவதா சிவதா.

பொழிப்புரை :

மதத்தையுடைய யானையினின்றும் உரித்த தோலைப் போர்த்தவரே! சிவதா! எளியவர்களுக்குத் துணைநிற்கும் இறைவனே! சிவதா! அன்பு மீதூர்ந்த மெய்யடியார்களின் உயிர்க் குயிரே! சிவதா! இறைமைக் குணங்களைத் தெளிவார்க்கு அமுதமே! சிவதா! சிவதா!

குறிப்புரை :

களி - மதம். அளியார் - அன்பு மீதூர்ந்தவர்.

பண் :

பாடல் எண் : 17

ஆறும் மதியும் அணியுஞ் சடைமேல்
ஏறும் மலரைக் கரிசிந் துவதே
வேறுள் நினைவார் புரம்வெந் தவியச்
சீறுஞ் சிலையாய் சிவதா சிவதா.

பொழிப்புரை :

கங்கையையும் இளம் பிறையையும் அணிந்த சடைமுடியின்மேல் அணிதற்குரிய இம்மலரை, இவ்யானை சிந்தியது தகுமோ? பகைமை கருதிய அசுரர்களின் முப்புரங்களும் எரிந்து ஒழியச் சினந்து மேருவை வில்லாக வளைத்தவரே! சிவதா! சிவதா!

குறிப்புரை :

இறைவனைத் தமக்குற்ற துணையாகக் கொண்டு வழிபடுவதே இயல்பாக, அதற்கு மாறாகப் பகைமையை நினைத்தவர் என்பார் முப்புரத்தவரை, `வேறு உள்நினைவார்` என்றார். இறைவ னின் சீற்றத்தை வில்லில் ஏற்றிச் `சீறும் சிலையாய்` என்றார்.

பண் :

பாடல் எண் : 18

தஞ்சே சரணம் புகுதுந் தமியோர்
நெஞ்சேய் துயரங் கெடநேர் தொடரும்
மஞ்சே யெனவீழ் மறலிக் கிறைநீள்
செஞ்சே வடியாய் சிவதா சிவதா.

பொழிப்புரை :

தம்மை அடைக்கலமாகக் கொண்ட மார்க்கண்டே யரின் மனத்தின்கண் உள்ள துன்பம் நீங்க, எதிர்த்துத் தொடரும் மேகம் போல வந்த இயமனுக்குச் சிறிதே நீண்ட சிவந்த திருவடியை உடைய வரே! சிவதா! சிவதா!

குறிப்புரை :

தஞ்சம் - அடைக்கலம். நெஞ்சு ஏய்துயரம் - மனத்தின் கண் பொருந்திய துன்பம். மஞ்சு - மேகம். இயமனின் நிறம் அன்ன தாதலின் `மஞ்சே எனவீழ் மறலி` என்றார். இறை நீள் - சிறிது நீண்ட; இயமனை உதைக்கப் பெருமானின் திருவடி சிறிது நீண்டது என்பார். `இறை நீள் சேவடி` என்றார். செஞ்சேவடி சிவப்பானதும் வீடுபேற்றை வழங்குவதுமான திருவடி.

பண் :

பாடல் எண் : 19

நெடியோன் அறியா நெறியா ரறியும்
படியால் அடிமைப் பணிசெய் தொழுகும்
அடியார் களில்யான் ஆரா அணைவாய்
முடியா முதலாய் எனவே மொழிய.

பொழிப்புரை :

திருமாலும் தேடி அறிய இயலாதவாறு நீண்ட சிவபெருமானுக்குத், தாம் உணர்ந்த வகையில் அடிமைத் தொழில் பூண்டு நிற்கும் அடியவர்களில், யான் எவ்வகையினன்? (ஒன்றற்கும் பற்றாதவன்). அங்ஙனமிருக்க நீ இங்கு வந்து எவ்வாறு இடர் தீர்ப்பாய்! முடிவில்லாத முதற்பொருளே! எனச் சிவகாமியாண்டார் மொழியவே.

குறிப்புரை :

மெய்யடியார்களில் ஒருவனாக எண்ணத்தக்கவன் அல்லன் நான். அங்ஙனமிருக்க யான் ஓலமிடநீ எங்ஙனம் அணை வாய் என வினவுவார். `அடியார்களில் யான் ஆரா அணைவாய்` என் றார். எனவே இறைவன் தாம் அழைக்கும் பொழுது வாராதிருத்தற்குக் காரணம் தம் தகுதியின்மையேயன்றி, இறைவனின் கருணைக் குறை வன்று என்பது அவர் கருத்தாகின்றது. முடியா முதலாய் - அழிவில் லாத முதல்வனே, `பொன் னம்பலத்தெம் முடியா முதலே` (தி.8 ப.21 பா.1) எனவரும் திருவாக்கும் காண்க. இப்பாடல் சில ஏட்டுப் படிகளில் இல்லையென்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை).

பண் :

பாடல் எண் : 20

என்றவ ருரைத்த மாற்றம்
எறிபத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும்
நெருப்புயிர்த் தழன்று பொங்கி
மன்றவ ரடியார்க் கென்றும்
வழிப்பகை களிறே யன்றோ
கொன்றது வீழ்ப்ப னென்று
கொடுமழு எடுத்து வந்தார்.

பொழிப்புரை :

இவ்வாறு சிவகாமியாண்டார் முறையீடு செய்து கொண்டிருக்கும் சொற்களை அவர் எதிரில் வருகின்ற எறிபத்தர் கேட்டு, தன்னுள் மூளும் சினத்தீயோடு பெருமூச்சு விட்டு, மேலும் சினந்து, தில்லையில் கூத்தியற்றும் அடியவர்களுக்கு எந்நாளும் வழி வழியாகப் பகைமையாயுள்ளது யானையேயன்றோ? ஆதலால் அவ்யானையைக் கொன்று தரையில் வீழ்த்துவேன் என்று கொலை செய்தற்கு ஏது வாய கொடிய மழுப் படையை எடுத்துக் கொண்டு வந்தார்.

குறிப்புரை :

வாரா நின்றவர் - வந்து கொண்டிருப்பவர். கேளா - கேட்டு. வழிப் பகை - வழிவழியாகப் பகைமை கொண்டிருப்பது; கோச் செங்கட்சோழரின் வழிபாட்டிற்கு இடையூறு செய்ததும், துருவாச முனிவர் அளித்த சிவப்பிரசாதத்தை இந்திரன், யானையின் மத்தகத்து வைப்ப, அதனைச் சிந்தி அழித்துச் சாபம்பெற்றதும், அமணர் வழி வந்த யானை பாண்டியனுக்கு ஊறுவிளைத்ததும், முதலாய நிகழ்ச்சி களை நினைவுகூர்ந்து இங்ஙனம் கூறினார். இவ்வகைமை யெல்லாம் நீங்கவோ, இறைவர் தமக்கு வெள்ளையானை தந்து அழைத்தது எனச்சுந்தரர் பெருமான் நினைந்ததும் காண்க. `ஆனை உரித்தபகை அடி யேனொடு மீளக்கொலோ` (தி.7 ப.100 பா.2) என்பது அவர் திருவாக்கு ஆகும். இனிக் களிறு என்பதை உருவமாகக் கொண்டு ஐம்புலக் களிறாகிய யானை என்பாரும் உளர் `தொண்டரஞ்சு களிறும் அடக்கி` (தி.2 ப.114 பா.1) `இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும் ஏழையேற் கென்னுடன் பிறந்த ஐவரும் பகையே` (தி.9 ப.8 பா.2), `பழியே விளைக்கும் பஞ்சேந்திரக் குஞ்சரம்` எனவரும் திருவாக்கு களை இது நினைவுகூர வைக்கின்றது. பொறிகள் யாவர்க்கும் பகை யேயாயினும், அடியவர் அப் பகைமையை உணர்ந்தும், அல்லாதார் அவற்றை நட்பென்று கொண்டும் ஒழுகுதலின் `மன்றுடை அடியார்க்கு என்றும் வழிப்பகை களிறு` என அடியவரை விதந்து கூறினாரென இதற்கு மேலுமோர் நயமும் காண்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு.உரை). இவற்றுக்கெல்லாம் மூலமாக `உரன் என்னும் தோட்டியால் ஓரைந்தும் காப்பான்` (குறள், 24) எனத் திருவள்ளுவனார் அருளி யிருத்தலும் மறத்தற்குரியதன்று. தீங்குசெய்தாரை அத்தீமையினின்றும் நீக்க அவரைக் கொலை செய்தலின்` கொலை மழு` என்றார். கொலை செய்தற்குரிய மழு என்பது இதன் பொருள்.

பண் :

பாடல் எண் : 21

வந்தவ ரழைத்த தொண்டர்
தமைக்கண்டு வணங்கி உம்மை
இந்தவல் லிடும்பை செய்த
யானைஎங் குற்ற தென்ன
எந்தையார் சாத்தும் பூவை
என்கையில் பறித்து மண்மேல்
சிந்திமுன் பிழைத்துப் போகா
நின்றதித் தெருவே யென்றார்.

பொழிப்புரை :

வந்தவராகிய எறிபத்தர் சிவதா என முறையிட்டு அழைத்துவரும் சிவகாமியாரைக் கண்டு, தொழுது, `உமக்கு இக்கொடிய துன்பத்தை விளைத்த யானை எவ்விடத்தது?` என வினவ, `எம் சிவபெருமான் அணிதற்குரிய மலர்களையுடைய பூங் கூடையை என்கையினின்றும் பறித்து நிலத்தில் சிதறி, எனக்கு முன்னே தப்பி ஓடிய யானை இவ்வீதியினிடத்தேயாம்` என்று கூறினார்.

குறிப்புரை :

பிழைத்து - தப்பி

பண் :

பாடல் எண் : 22

இங்கது பிழைப்ப தெங்கே
இனியென எரிவாய் சிந்தும்
அங்கையின் மழுவுந் தாமும்
அனலும்வெங் காலு மென்னப்
பொங்கிய விசையிற் சென்று
பொருகரி தொடர்ந்து பற்றும்
செங்கண்வாள் அரியிற் கூடிக்
கிடைத்தனர் சீற்ற மிக்கார்.

பொழிப்புரை :

இவ்விடத்துச் சென்ற யானை இனிப் பிழைப்பது எங்கே? என்று நெருப்பைத் தம் வாயினிடத்துச் சிதறுவதாய்க் கையில் ஏந்திய மழுவும் தாமும் ஆக, அனலும் கொடிய காற்றும் என விரை வாக ஓடிச் செல்பவராய் எறிபத்தநாயனார் போர் செய்தற்குரிய யானையைப் பின்தொடர்ந்து, பற்றுகின்ற சிவந்த கண்களையும் கூரிய நகங்களையுமுடைய சிங்கமென அவ்யானையைக் கிட்டினர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 23

கண்டவர் இதுமுன்பு அண்ணல்
உரித்தஅக் களிறே போலும்
அண்டரும் மண்ணு ளோரும்
தடுக்கினு மடர்த்துச் சிந்தத்
துண்டித்துக் கொல்வே னென்று
சுடர்மழு வலத்தில் வீசிக்
கொண்டெழுந் தார்த்துச் சென்று
காலினாற் குலுங்கப் பாய்ந்தார்.

பொழிப்புரை :

அவ்யானையைக் கண்ட எறிபத்தர், இவ்யானை முன்பு சிவபெருமான் உரித்த அந்த யானை போன்றதாகும்; ஆயினும் விண்ணவரும் மண்ணவரும் வந்து தடுப்பினும் மேற்சென்று எதிர்த்துக் குருதி சிதறுமாறு வெட்டிக் கொன்றுவிடுவேன் என்று ஒளி பொருந் திய மழுவினை வலமாகத் திரித்து வீசிக் கொண்டு, மேலெழுந்து ஆர்த்து அவ்யானை குலுங்குமாறு பாய்ந்தார்.

குறிப்புரை :

மழுவினை வலமாகத் திரித்து வீசுவது விரைவாகவும் குறிதவறாமலும் எறிதற்காம். குலுங்குதலை எறிபத்தர் செயலாகக் கூறலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 24

பாய்தலும் விசைகொண் டுய்க்கும்
பாகரைக் கொண்டு சீறிக்
காய்தழல் உமிழ்கண் வேழம்
திரிந்துமேற் கதுவ அச்சம்
தாய்தலை யன்பின் முன்பு
நிற்குமே தகைந்து பாய்ந்து
தோய்தனித் தடக்கை வீழ
மழுவினால் துணித்தார் தொண்டர்.

பொழிப்புரை :

அவ்வாறு பாய்ந்தவுடனே, மேலிருந்து செலுத்து கின்ற பாகர்களை மேற்கொண்டும், சினந்து எரிகின்ற தீயைக் கக்கும் கண்களைக் கொண்டும், இருப்பதான யானையானது, மாறுபட்டு இவர் மீது பாய, அச்சம் என்ற ஒன்று ஒரு தாயினது தலையாய அன்பின் முன்னே நிற்க வல்லதோ? நில்லாது; அதுபோன்றே அதனை மறித்துப் பாய்ந்து, நிலம் தோயத் தாழ்ந்து துதிக்கை விழுமாறு தம் படையினால் வெட்டி வீழ்த்தினார்.

குறிப்புரை :

தன்னைச் செலுத்தி நிற்கும் பாகர் மீதிருந்தும் அடிய வரை யானை பாய வருதலின் அவர்களின் கட்டுக்கு அடங்காமை தெரிய வருகின்றது. அங்ஙனமிருந்தும் தம் உயிர்க்கு உறுதி எண்ணாது அவ்யானை மீது பாய்ந்து வெட்டும் அடியவரின் நிலையைக் கண்ட ஆசிரியர் அச்செயல் ஒல்லுமோ? என ஐயுறுவார்க்கு வழங்கும் விடையாக `அச்சம் தாய் தலையன்பின் முன்பு நிற்குமே` எனக் கூறினார். எனவே இவர் அடியாரிடத்துக் கொண்டிருக்கும் அன்பு தாயன்பு போல்வது என்பது கருத்து. இனி அச்சம் தாய் (தாவிச்சென்று: அஃதாவது அடியவர்மீது சென்று) தலையன்பின் முன் (தலையாய அன்பின்முன்) நிற்குமே என உரைகாண்டலும் ஒன்று.

பண் :

பாடல் எண் : 25

கையினைத் துணித்த போது
கடலெனக் கதறி வீழ்ந்து
மைவரை யனைய வேழம்
புரண்டிட மருங்கு வந்த
வெய்யகோல் பாகர் மூவர்
மிசைகொண்டார் இருவ ராக
ஐவரைக் கொன்று நின்றார்
அருவரை அனைய தோளார்.

பொழிப்புரை :

இவ்வாறு துதிக்கையை வெட்டிய பொழுது கடல் முழங்கினாற் போலக் கதறி நிலத்தில் விழுந்து, கரிய மலைபோலும் அவ்யானையானது புரள, அருகில் வந்தவலிய குத்துக் கோல்காரர் மூவரும் அவ்யானையின் மேலிருந்த பாகர் இருவருமாக ஐவரையும், அரிய மலை போன்ற தோள்களையுடைய எறிபத்தர் கொன்று நின்றார்.

குறிப்புரை :

மலையனைய வேழம் கடல் போலக் கதறிற்று என்றது, உருவத்தால் மலையையும், ஓசையால் கடலையும், ஒப்புமை கொள நின்றது. ஐவரைக் கொன்று நின்றார் என்பது உரன் என்னும் தோட் டியால் ஓரைந்தும் காத்து நிற்கும் அவர் தகைமையையும் குறிக்கொள நின்றது.

பண் :

பாடல் எண் : 26

வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார்
ஒழியமற் றுள்ளா ரோடி
மட்டவிழ் தொங்கல் மன்னன்
வாயிற்கா வலரை நோக்கிப்
பட்டவர்த் தனமும் பட்டுப்
பாகரும் பட்டா ரென்று
முட்டநீர் கடிது புக்கு
முதல்வனுக் குரையு மென்றார்.

பொழிப்புரை :

எறிபத்தரால் வெட்டுண்டு விழுந்த ஐவர் அல்லாமல் அங்கிருந்த வேறு சிலர், தேன் துளிக்கும் ஆத்தி மாலையை யணிந்த புகழ்ச்சோழநாயனாரின் (தோராயமாக கி.பி. 400-600) அரண்மனைக்கு ஓடிச்சென்று, வாயில் காவலர்களைப் பார்த்து, பட்டத்து யானையும் இறந்து அதனைச் செலுத்தும் பாகரும் இறந் தார்கள் என்று, நீவிர் விரைவாகச் சென்று அரசருக்குத் தெரிவிப்பீராக என்று சொன்னார்கள்.

குறிப்புரை :

முட்ட - அனைவருமாகச் சேர: பலராகவும் விரைவாக வும் அரசரிடத்துச் சென்று கூறியது, அந்நிகழ்ச்சியை அரசர் விரைவில் அறியவும் விரைந்து மேற்கொண்டு செயல்படவுமாம்.

பண் :

பாடல் எண் : 27

மற்றவர் மொழிந்த மாற்றம்
மணிக்கடை காப்போர் கேளாக்
கொற்றவன் தன்பால் எய்திக்
குரைகழல் பணிந்து போற்றிப்
பற்றலர் இலாதாய் நின்பொற்
பட்டமால் யானை வீழச்
செற்றனர் சிலரா மென்று
செப்பினார் பாக ரென்றார்.

பொழிப்புரை :

அவ்வாறு கூறிய சொற்களை, மணிகள் அழுந் திய வாயிலைக் காக்கின்றவர்கள் கேட்டு, புகழ்ச்சோழரிடத்துச் சென்று, ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகளை வணங்கி, வாழ்த்தி, `பகையின்றிப் புரந்து வரும் அரசர் ஏறே! உம்முடைய பொன்னாலாகிய நெற்றிப் பட்டத்தையுடைய யானை இறக்குமாறு சிலர் கொன்றார்கள் என்று பாகர் சொன்னார்கள்` எனக் கூறினார்கள்.

குறிப்புரை :

பற்றலர் - பகைவர். பற்றலர் இலாதாய் என்றது, இச் செயலும் அன்னோரால் செயப்பட்டதன்று என்னும் குறிப்புணர நின் றது. பாகர் - யானையோடு இறந்த ஐவர் போக, மேலும் எஞ்சி நின்றவர்கள். பாகர் - பொறுப்புள்ளவர்கள் என உரை காண்பர் சிவக் கவிமணியார் (பெரிய.பு.உரை). குரைகழல் - ஒலிக்கின்ற வீரக்கழல். மற்று - அசைநிலை.

பண் :

பாடல் எண் : 28

வளவனுங் கேட்ட போதில்
மாறின்றி மண்காக் கின்ற
கிளர்மணித் தோள லங்கல்
சுரும்பினங் கிளர்ந்து பொங்க
அளவில்சீற் றத்தி னாலே
யார்செய்தா ரென்றுங் கேளான்
இளவரி யேறு போல
எழின்மணி வாயில் நீங்க.

பொழிப்புரை :

புகழ்ச் சோழனும் அதைக் கேட்ட அளவில், பகைமையின்றி ஆட்சி செய்கின்ற எழுச்சியும் அழகும் மிக்க தோள் களில் உள்ள மாலையில் வண்டுகள் களிப்புடன் ஒலிக்க, அளவற்ற சினம் கொண்டு, இது செய்தவர் யார்? என்றும் அவ்வாயில் காவல ரையும் கேளாதவனாய், இளைய ஆண் சிங்கம் போல, அழகு பொருந்திய இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற அரண்மனை வாயிலி னின்றும் வெளிப்பட்டு வர.

குறிப்புரை :

`இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து` (குறள், 856) என்பர் திருவள்ளுவர். `யாரொடும் பகை கொள்ளலன் என்றபின், போரொடுங்கும் புகழ் ஒடுங்காது` (கம்பரா. அயோத். மந்த.1) என்பர் கம்பர். இவ்வறத்திற்கேற்ப ஆண்டு வருதலின் `மாறின்றி மண்காக் கின்ற` என்றார். அரியேறு - ஆண் சிங்கம்.

பண் :

பாடல் எண் : 29

தந்திரத் தலைவர் தாமும்
தலைவன்தன் நிலைமை கண்டு
வந்துறச் சேனை தன்னை
வல்விரைந் தெழமுன் சாற்ற
அந்தரத் தகல மெல்லாம்
அணிதுகிற் பதாகை தூர்ப்ப
எந்திரத் தேரு மாவும்
இடையிடை களிறு மாகி.

பொழிப்புரை :

அருகிருந்து அரசருக்கு உறுதிகூறும் அமைச்சர் களும், போர் கருதிச் செல்லும் புகழ்ச்சோழனின் நிலையை அறிந்து, பொருந்திய சேனைகளை விரைவில் எழுமாறு முன்னே பறை அறை விக்க, விண்ணகமாகிய பரந்த இடங்களெல்லாம் அழகிய துகிற் கொடிகள் மறைக்கவும், இயந்திரப் பொறிகள் அமைந்திருக்கும் தேரும் குதிரையும் இவற்றின் இடைஇடையே யானைகளுமாகக் கூடி.

குறிப்புரை :

தந்திரம் - சூழ்ச்சி; ஆராய்ந்து தெளிவது. மதிநுட்பம் நூலோடுடைய அமைச்சர்களாதலின் `தந்திரத் தலைவர்` என்றார். `உறுதி உழையிருந்தான் கூறல் கடன்` (குறள், 638) என்றலுங் காண்க. பதாகை - துகிற் கொடிகள். தூர்ப்ப - மறைக்க. தந்திரத் தலைவர் - படைத்தலைவருமாம். போர்க் காலங்களில் இவர்களின் சூழ்ச்சித் திறனை நன்கறியலாம்.

பண் :

பாடல் எண் : 30

வில்லொடு வேல்வாள் தண்டு
பிண்டிபா லங்கள் மிக்க
வல்லெழு முசலம் நேமி
மழுக்கழுக் கடைமுன் னான
பல்படைக் கலன்கள் பற்றிப்
பைங்கழல் வரிந்த வன்கண்
எல்லையில் படைஞர் கொட்புற்
றெழுந்தனர் எங்கு மெங்கும்.

பொழிப்புரை :

வில்லோடு வேலும், வாளும், தண்டும் பீலித் தண்டங்களும், மிகுந்த வலிய இருப்பு உலக்கைகளும், சக்கரங்களும் மழுவும், எறிகின்ற ஈட்டியும் முதலான பலபடைக் கலங்களைப் பற்றிப் பசுமையான பொன்னால் ஆய வீரக் கழலைக் கட்டிய வலிய எண்ணிறந்த படைவீரர்கள் யாண்டும் குதித்தெழ,

குறிப்புரை :

பிண்டிபாலம் - தலையில் பீலிகட்டி எறியத்தக்கதொரு படை என்பர். முசலம் - இருப்பு உலக்கை. கழுக்கடை - சூலம். எறிகின்ற ஈட்டி எனபாரும் உளர். மழு - பரசு. இது கோடரி போன்று இருக்கும். கொட்புற்று - எழுச்சி மிகக் குதித்து; சுழன்று என்றலும் ஒன்று.

பண் :

பாடல் எண் : 31

சங்கொடு தாரை காளம்
தழங்கொலி முழங்கு பேரி
வெங்குரல் பம்பை கண்டை
வியன்துடி திமிலை தட்டி
பொங்கொலிச் சின்ன மெல்லாம்
பொருபடை மிடைந்த பொற்பின்
மங்குல்வான் கிளர்ச்சி நாண
மருங்கெழுந் தியம்பி மல்க.

பொழிப்புரை :

சங்கு, தாரை, காளம் பேரொலியாக முழங்கும்; பேரி, பம்பை, கண்டை, திமிலை, தட்டி முதலாய பேரொலிகளை மிகுவிக்கும்; ஒலிக் கருவிகளோடு போர்ப் படைகள் நெருங்கிச் செல்லும்; அப் பேரொலிகள் விண்ணின்கண் எழும்; அத்தகைய பேரொலிகள் அனைத்தையும் கீழ்ப்படுத்தி, அரசர் செல்லும் வழியில் நாற்புறமும் இடி முழங்கியது.

குறிப்புரை :

காளம் - எக்காளம். பேரி - மிகுதியான பேரொலியைத் தரும் இசைக் கருவி, பம்பை - பரந்த இரு முகம் உடையதாயும் பெரிய உருவுடைய தாயும் உள்ள இசைக் கருவி. கண்டை, திமிலை என்பன ஒலிபெருக்கும் கருவிகள்.

பண் :

பாடல் எண் : 32

தூரியத் துவைப்பும் முட்டுஞ்
சுடர்ப்படை ஒலியும் மாவின்
தார்மணி இசைப்பும் வேழ
முழக்கமும் தடந்தேர்ச் சீரும்
வீரர்தஞ் செருக்கி னார்ப்பும்
மிக்கெழுந் தொன்றாம் எல்லைக்
காருடன் கடைநாள் பொங்கும்
கடலெனக் கலித்த வன்றே.

பொழிப்புரை :

ஒலிக் கருவிகளினுடைய ஒலியும், நெருங்கிய ஒளி பொருந்திய படைகள் ஒன்றோடு ஒன்று உரசுதலால் ஆகிய ஒலியும், குதிரையின் கழுத்தில் அணியும் கிண்கிணி மாலையின் ஒலி யும், யானைகளின் பிளிற்று ஒலியும், அகன்ற தேர் செல்லும் ஒலியும், படைவீரர்களின் எழுச்சியினால் உண்டாகிய ஒலியும் மிகுந்து எழுந்து ஒன்றாய்ச் சேர்ந்தபொழுது,ஊழிக்காலத்தில் தோன்றிநிற்கும் மேகத் துடன் கூடி நிற்கும் கடலைப் போல ஒலித்தன.

குறிப்புரை :

தூரியம் - இயங்களின் பொதுமை குறித்து நின்றது. துவைப்பு - ஒலி. முட்டும் சுடர்ப் படை - ஒன்றோடு ஒன்று உரசும் ஒளி பொருந்திய படை. துவைப்பு, ஒலிப்பு, இசைப்பு, முழக்கு, ஆர்ப்பு என்பன ஒலி என்னும் பொருளன. அன்று `ஒ` என்பன அசைநிலை. இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 33

பண்ணுறும் உறுப்பு நான்கில்
பரந்தெழு சேனை யெல்லாம்
மண்ணிடை யிறுகான் மேன்மேல்
வந்தெழுந் ததுபோல் தோன்றத்
தண்ணளிக் கவிகை மன்னன்
தானைபின் தொடரத் தானோர்
அண்ணலம் புரவி மேல்கொண்
டரசமா வீதி சென்றான்.

பொழிப்புரை :

நான்கு வகையாக வகைப்படுத்தப்பட்ட பரந்து எழுகின்ற சேனைகள் எல்லாம், நிலவுலகத்தில் அழிவினைச் செய்யும் ஊழிக் காற்றானது மேன்மேலும் வந்து எழுந்தது போலத் தோன்ற, அப் படைகள் உயிர்கள் மாட்டு வைத்த தண்ணளியாகிய கொடையை யுடைய புகழ்ச்சோழர் தம்மைப் பின் தொடர்ந்து வர, தாம் ஒப்பற்ற பெருமையினையுடைய அழகிய குதிரையின் மேல் ஏறிக் கொண்டு அரசமா வீதியில் சென்றார்.

குறிப்புரை :

பண்ணுறு - வகைப்படுத்தப்பட்ட; யானை, தேர், குதிரை, காலாள் என வகைப்படுத்தப்பட்ட. இறுகால் - அழிவைச் செய்யும் ஊழிக்காற்று. அரசரின் தண்ணளியைக் குடைமேல் ஏற்றித் தண்ணளிக் கவிகை` என்றார். `கொங்கலர்தார்ச் சென்னிக் குளிர் வெண் குடை போன்று` (சிலப்ப.புகார்.மங்கல.1)என்னும் சிலம்பும்.

பண் :

பாடல் எண் : 34

கடுவிசை முடுகிப் போகிக்
களிற்றொடும் பாகர் வீழ்ந்த
படுகளங் குறுகச் சென்றான்
பகைப்புலத் தவரைக் காணான்
விடுசுடர் மழுவொன் றேந்தி
வேறிரு தடக்கைத் தாய
அடுகளி றென்ன நின்ற
அன்பரை முன்பு கண்டான்.

பொழிப்புரை :

புகழ்ச்சோழர் மிகவிரைவாக, யானையோடு பாகர்கள் இறந்து கிடக்கின்ற போர்க்களத்திற்கு அணித்தாகச் சென்றார். அங்கு மாற்றார்கள் ஒருவரையும் காணாதவராய் ஒளி பொருந்திய மழுப்படை ஒன்றைக் கையில் கொண்டு, யானையின் துதிக்கையி னின்றும் வேறாய இரு பெருங் கைகளையுடைய கொலைத் தொழில் செய்யும் யானையை ஒத்துநின்ற எறிபத்தனாரைக் கண்டார்.

குறிப்புரை :

சுடர்விடு என மாற்றுக. `இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் கருவை யான்கண்டி லேன்` (தி.8 ப.5 பா.41) எனவரும் திருவாசகத்தை இப்பகுதி நினைவுகூர வைக்கின்றது.

பண் :

பாடல் எண் : 35

பொன்தவழ் அருவிக் குன்றம்
எனப்புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்று ளென்றும்
நிருத்தமே பயிலும் வெள்ளிக்
குன்றவ ரடியா ரானார்
கொன்றவ ரிவரென் றோரான்
வென்றவர் யாவ ரென்றான்
வெடிபட முழங்குஞ் சொல்லான்.

பொழிப்புரை :

பொன் துகள் சேர்ந்து ஒழுகும் அருவியினை யுடைய மலை போலப் புரண்டு கொண்டிருக்கும் யானைக்கு முன்னே நிற்கின்ற இவர், திருச்சிற்றம்பலத்தின்கண் எப்பொழுதும் ஆனந்தக் கூத்தினை இயற்றிவருபவரும், கயிலை மலைக்கு இறைவருமாகிய சிவபெருமான் அடியவர் ஆனார். ஆதலின் யானையைக் கொன்ற வர், இவர் என்று தெளியாதவராய், இவ்யானையை வென்றவர் யாவர்? என்று வெடிபடமுழங்கும் சொற்களால் கேட்டார்.

குறிப்புரை :

குருதியோடுகிடக்கும் யானைக்கு, பொன்துகள் ஒழுகும் அருவியை உடைய மலைஉவமை ஆயிற்று.

பண் :

பாடல் எண் : 36

அரசனாங் கருளிச் செய்ய
அருகுசென் றணைந்து பாகர்
விரைசெய்தார் மாலை யோய்நின்
விறற்களிற் றெதிரே நிற்குந்
திரைசெய்நீர் உலகின் மன்னர்
யாருளார் தீங்கு செய்தார்
பரசுமுன் கொண்டு நின்ற
இவரெனப் பணிந்து சொன்னார்.

பொழிப்புரை :

புகழ்ச்சோழர் அவ்விடத்து இவ்வாறு கேட்க, அருகிருந்த பாகர்கள் அவரை அணுகிச் சென்று, நறுமணம் கமழ்கின்ற மலர் மாலையையும், முத்து மாலையையும் உடைய அரசனே! உன்னுடைய வெற்றி பொருந்திய பட்டவர்த்தனத்தை எதிர்த்து நிற்கும் அலை வீசுகின்ற கடலால் சூழப்பட்ட இந்நிலவுகத்தின் கண்வாழும் அரசர்கள் யார் உளர்? ஒருவரும் இலர். அதைக் கொன்றவர் `மழுப்படையைக் கையில் கொண்டு நிற்கும் இவர்தாம்` என்று வணங்கிச் சொன்னார்கள்.

குறிப்புரை :

திரை - அலை. பரசு - மழுப்படை.

பண் :

பாடல் எண் : 37

குழையணி காதி னானுக்
கன்பராங் குணத்தின் மிக்கார்
பிழைபடின் அன்றிக் கொல்லார்
பிழைத்ததுண் டென்றுட் கொண்டு
மழைமத யானை சேனை
வரவினை மாற்றி மற்ற
உழைவயப் புரவி மேல்நின்
றிழிந்தனன் உலக மன்னன்.

பொழிப்புரை :

சங்கக் குழையை அணிந்த திருச்செவியினை யுடைய சிவபெருமானுக்கு அடியவர் ஆகும் குணத்தால் மிக்க இவர், இவ்யானை பிழை செய்து இருந்தாலன்றிக் கொல்ல மாட்டார்; இஃது அவருக்குத் தீங்கு செய்தது உறுதி என்று தம் உள்ளத்தில் கருதிக் கொண்டு, மழை போலும் மதத்தைச் சொரிகின்ற யானையோடு கூடிய சேனைகளின் வரவினைத் தடுத்து, தாம் ஏறி வந்த வலிமை பொருந்திய குதிரையினின்றும் உலகை ஆளும் அரசராய புகழ்ச் சோழர் இறங்கினார்.

குறிப்புரை :

வயப்புரவி - வலிமையுடைய குதிரை. அடியவர் எனக் கண்ட பொழுதே அவர் கொல்ல மாட்டார் என்று கருதியதும், அவர் கொன்றார் என அறிந்ததும் அடியவராயினாருக்கு இவ்யானை தீங்கிழைத்து இருந்தாலன்றிக் கொல்லமாட்டார் எனக் கருதிப் போரொடு வந்த நிலையை மாற்றிக் கொண்டதும், அடியவர் மீது அவருக்கு இருந்த பத்திமையையும் அக்காலத்து அடியவர்க்கிருந்த தனிச் சிறப்பையும் அறிய உதவுகின்றன. மற்று - அசைநிலை.

பண் :

பாடல் எண் : 38

மைத்தடங் குன்று போலும்
மதக்களிற் றெதிரே யிந்த
மெய்த்தவர் சென்ற போது
வேறொன்றும் புகுதா விட்ட
அத்தவ முடையேன் ஆனேன்
அம்பல வாண ரன்பர்
இத்தனை முனியக் கெட்டேன்
என்கொலோ பிழையென் றஞ்சி.

பொழிப்புரை :

கருமையும், பெருமையும் உடைய மலை போன்ற மதத்தினையுடைய இவ்யானையின் எதிரே இந்த மெய்ம்மையான தவத்தினையுடைய அடியவர் சென்ற பொழுது, வேறோர் தீங்கும் அதனால் இவருக்கு நேராமல் இருக்கப் பெற்ற அத்தகைய பெருந் தவம் உடையவன் யான் ஆயினேன். சிவபெருமானின் அடியவரா கிய இவருக்கு நேர்ந்த தீங்கு காரணமாக இவர் இவ்வாறு வெகுளும் படிக்கு நேரிட்ட பிழை யாதோ? என்று அச்சமுற்று, `கெட்டேன்` என்று அஞ்சியவராய்,

குறிப்புரை :

மை - கருமை. அடியவரை இறக்கச் செய்யாது விட்ட மையை `வேறு ஒன்றும்புகுதாவிட்ட அத்தவம் உடையேன் ஆனேன்` என்றார். இத்தகைய தொரு பிழை நேர்ந்திருக்கக் கூடாது, ஆயினும் நேர்ந்து விட்டதே என வருந்துவார் `கெட்டேன்` என்றார்.

பண் :

பாடல் எண் : 39

செறிந்தவர் தம்மை நீக்கி
அன்பர்முன் தொழுது சென்றீது
அறிந்திலே னடியேன் அங்குக்
கேட்டதொன் றதுதா னிற்க
மறிந்தஇக் களிற்றின் குற்றம்
பாகரோ டிதனை மாள
எறிந்ததே போது மோதான்
அருள்செயு மென்று நின்றார்.

பொழிப்புரை :

இவ்வாறு எண்ணிய புகழ்ச்சோழர் தம்மொடு நெருங்கி வரும் அமைச்சர் முதலாயினோரை விலகச் செய்து, அவ் எறிபத்த நாயனாருக்கு முன்பாக வணங்கிப் போய், `இவ்யானை தங்களுக்குக் குற்றம் செய்தது என்பதை அறிய மாட்டாதவனாகிய நான், அங்குக் கேள்வியுற்றது ஒன்று; அது நிற்க. இறந்த இவ்யானை செய்த குற்றத்திற்குப் பாகரோடு இவ்யானையை இறக்குமாறு மழுவால் துணித்தது ஒன்றே அமையுமோ? மேலும் செயத்தக்கது உளதாயின் அதனையும் அருள் செய்ய வேண்டும்` என்று விண்ணப்பம் செய்தார்.

குறிப்புரை :

தான், என வருவன இரண்டும் அசைநிலை. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 40

மன்னவன் தன்னை நோக்கி
வானவர் ஈசர் நேசர்
சென்னியித் துங்க வேழஞ்
சிவகாமி யாண்டார் கொய்து
பன்னகா பரணர்ச் சாத்தக்
கொடுவரும் பள்ளித் தாமம்
தன்னைமுன் பறித்துச் சிந்தத்
தரைப்படத் துணித்து வீழ்த்தேன்.

பொழிப்புரை :

தேவர்களுக்கு இறைவராகிய சிவபெருமானுக்கு அடிமை பூண்டொழுகும் எறிபத்த நாயனார், புகழ்ச்சோழரைப் பார்த்து, `சோழனே! இவ்வுயர்ந்த யானையானது சிவகாமி யாண்டார் என்னும் அடியவர், பாம்பினை அணியாகக் கொண்டிருக்கும் சிவபெரு மானுக்கு எனப் பறித்துச் சாத்துதற்குக் கொண்டு வந்த திருப்பள்ளித் தாமத்திற்குரிய மலர்களைப் பறித்து நிலத்தில் சிதற, யான் இதனை நிலத்தில் விழுமாறு துணித்து வீழ்த்தினேன்` என்றார்.

குறிப்புரை :

துங்க வேழம் - உயர்ந்த யானை. பன்னகம் - பாம்பு. `மழவிடை யுடையான் அன்பர்க் கொல்லைவந் துற்ற செய்கை உற்றிடத் துதவும் நீரார்` (பா.551) என்றதால் துணித்து வீழ்த்தினார்.

பண் :

பாடல் எண் : 41

மாதங்கந் தீங்கு செய்ய
வருபரிக் காரர் தாமும்
மீதங்குக் கடாவு வாரும்
விலக்கிடா தொழிந்து பட்டார்
ஈதிங்கு நிகழ்ந்த தென்றார்
எறிபத்த ரென்ன அஞ்சிப்
பாதங்கள் முறையால் தாழ்ந்து
பருவரைத் தடந்தோள் மன்னன்.

பொழிப்புரை :

(மேலும்) இவ்யானையானது அவர் கையிலி ருந்து திருப்பூங்கூடையைப் பறித்து அம்மலர்களைச் சிந்த, உடன் வரும் குத்துக் கோல்காரரும் அதன் மேல் இருந்த அவ்யானையைச் செலுத்தும் பாகரும் விலக்காது ஒழிந்த காரணத்தால், அவர்களும் துணிக்கப்பட்டார்கள். இதுவே இவ்விடத்து நிகழ்ந்த செய்தியாம் என்று அருளிச் செய்தார். இவ்வாறு அருளியவர் இவ்வூரில் வாழும் எறிபத்த நாயனார் என்று புகழ்ச்சோழநாயனார் அச்சமுற்று, அவர் திருவடிகளை முறையாக வணங்கிப் பருத்த மலை போலும் பெரிய தோள்களையுடைய மன்னர்.

குறிப்புரை :

மாதங்கம் - யானை. முறையால் தாழ்ந்து - எண் வகை உறுப்புக்களாலும், ஐவகை உறுப்புக்களாலும் வணங்கி.

பண் :

பாடல் எண் : 42

அங்கண ரடியார் தம்மைச்
செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா
தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை
வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக்
கொடுத்தனர் தீர்வு நேர்வார்.

பொழிப்புரை :

அழகிய நெற்றிக் கண்ணையுடைய சிவபெரு மானின் அடியவர்க்கு, இவ்யானை செய்த தீங்கிற்குத் தீர்வு, இங்குப் பாகரோடு யானையையும் துணித்ததனால் அமையாது; இத்தீங்கு நேர்தற்குக் காரணமாகும் என்னையும் கொல்லவேண்டும்; மங்கலம் பொருந்திய மழுவினால் கொல்லுதல் முறைமையன்று; அதற்கு இதுவே தகுதியாகும் என்று, சிவந்த தம்திருக் கரத்தினால் இடையில் செருகியிருந்த வாளை எடுத்து, தம் பிழைக்குத் தீர்வு நேர்வாராய்க் கொடுத்தார்.

குறிப்புரை :

தீர்வு - பாவக்கழிவு. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 43

வெந்தழற் சுடர்வாள் நீட்டும்
வேந்தனை நோக்கிக் கெட்டேன்
அந்தமில் புகழான் அன்புக்
களவின்மை கண்டே னென்று
தந்தவாள் வாங்க மாட்டார்
தன்னைத்தான் துறக்கு மென்று
சிந்தையால் உணர்வுற் றஞ்சி
வாங்கினார் தீங்கு தீர்ப்பார்.

பொழிப்புரை :

கொடிய தீப் போலும் ஒளி வீசுகின்ற உடை வாளை எடுத்துத்தம் கையில் கொடுக்கும் புகழ்ச்சோழரைப் பார்த்து, `தீவினையால் கெட்டேன், அளவற்ற புகழையுடைய புகழ்ச்சோழரின் அன்பிற்கு எல்லையில்லாமையைக்கண்டேன்` என்றுஅவர்கொடுத்த உடைவாளை வாங்காதவராய், வாங்காதொழியின் தம்முயிரைத் தாமே நீக்கிக் கொள்ளுவார் என்று தம் உள்ளத்தால் உணர்ந்து, அது காரணமாய் அச்சமுற்று, அத்தீங்கை நீக்கும் கருத்துடையராய், அதனை வாங்கினார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 44

வாங்கிய தொண்டர் முன்பு
மன்னனார் தொழுது நின்றே
ஈங்கெனை வாளி னாற்கொன்
றென்பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செய்யப்
பெற்றனன் இவர்பா லென்றே
ஆங்கவர் உரைப்பக் கண்ட
எறிபத்தர் அதனுக் கஞ்சி.

பொழிப்புரை :

(புகழ்ச்சோழர்) கொடுத்த உடைவாளைத் தம்கரத்தில் வாங்கிக் கொண்ட எறிபத்த நாயனார் முன்னர், புகழ்ச் சோழர் வணங்கிநின்று, `இவ்விடத்து அடியேனை இவ்வுடைவாளால் கொன்று யான்செய்த தீங்கைத் தீர்க்குமாறு கருதிய இந்நாயனாரால் மிகப் பேருதவியை அடியேன் பெற்றேன்` என்று அப்புகழ்ச் சோழ நாயனார் கூற, அவர்தம் நிலைமையைக் கண்ட எறிபத்த நாயனார், அப்பத்திமை நிலைக்கு அஞ்சி.

குறிப்புரை :

`ஏ` என வருவன அசை நிலை.

பண் :

பாடல் எண் : 45

வன்பெருங் களிறு பாகர்
மடியவும் உடைவா ளைத்தந்
தென்பெரும் பிழையி னாலே
யென்னையுங் கொல்லு மென்னும்
அன்பனார் தம்மைத் தீங்கு
நினைந்தன னென்று கொண்டு
முன்பென துயிர்செ குத்து
முடிப்பதே முடிவென் றெண்ணி.

பொழிப்புரை :

வலிமையும், பெருமையும் உடைய பட்டத்து யானையும், பாகர்களும் இறக்கவும் அதற்காக மனம் வருந்தாது, தம்முடைய உடைவாளை என் கையில் கொடுத்து `யான் செய்த பெரும் பிழையால் அடியேனையும் கொல்ல வேண்டும் என்று கூறும், பேரன்புடைய இவரைக் குற்றமுடையவ ரெனக் கருதினேன்` என்று தம் உள்ளத்தில் கருதி, `அவருக்கு முன்னே எனது உடலை உடைவாளால், மாய்த்துக் கொள்வதே அப்பிழைக்குத் தீர்வாகும்` என்று கருதி.

குறிப்புரை :

தீங்கு நினைத்தனன் என்றது இவ்வரசன் நீதியை நிலைநிறுத்தும் முறையினின்றும் தவறியவன் என்று முன் கருதி யிருந்ததாம்.

பண் :

பாடல் எண் : 46

புரிந்தவர் கொடுத்த வாளை
அன்பர்தங் கழுத்தில் பூட்டி
அரிந்திட லுற்ற போதில்
அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவா றிதுவென் கெட்டேன்
என்றெதிர் கடிதிற் சென்று
பெருந்தடந் தோளாற் கூடிப்
பிடித்தனன் வாளுங் கையும்.

பொழிப்புரை :

அப்புகழ்ச் சோழ நாயனார் விரும்பிக் கொடுத்த உடைவாளை எறிபத்த நாயனார், தம் கழுத்தில் சேர்த்து அறுக்கத் தொடங்கும் பொழுது, புகழ்ச் சோழநாயனாரும், `இப் பெரியவரின் செய்கை இவ்வாறிருக்க யானே கெட்டேன்` என்று கூறி, இரங்கி, அவர் எதிரே விரைந்து போய்த் தம் பெரிய கைகளினால் அவர் தம் வாளையையும், கையையும் தடுத்துப் பிடித்தார்.

குறிப்புரை :

இம் மூன்றும் குளகம். புரிந்து - விரும்பி. தோளால் - கையால். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 47

வளவனார் விடாது பற்ற
மாதவர் வருந்தி நிற்ப
அளவிலாப் பரிவில் வந்த
இடுக்கணை யகற்ற வேண்டிக்
களமணி களத்துச் செய்ய
கண்ணுதல் அருளால் வாக்குக்
கிளரொளி விசும்பின் மேல்வந்
தெழுந்தது பலருங் கேட்ப.

பொழிப்புரை :

புகழ்ச் சோழநாயனார் தாம் கொண்ட வாளி னையும் கையையும் விடாமல் பற்றிக் கொள்ள, பெருந்தவத்தை யுடைய எறிபத்தநாயனார் அதனால் வருத்தமுற்று நிற்ப, அளவற்ற அன்பினால் இருவரிடத்தும் நிகழ்ந்த துன்பத்தை நீக்குமாறு, தம் திரு வுள்ளத்தில் கருதிய நஞ்சைத் தாங்கிய கழுத்தையும், சிவந்த நெற்றிக் கண்ணையும் உடைய சிவபெருமான் திருவருளினால் ஒரு வான் ஒலி, விளக்கம் பொருந்திய விண்ணில் யாவரும் கேட்குமாறு எழுந்தது.

குறிப்புரை :

களம் - கறுப்பு; அந்நிறமுடைய நஞ்சுக்கு ஆனமையின் பண்பாகு பெயராகும். களம் - எனவருவனவற்றுள் முன்னையது கறுப்பும் பின்னையது கழுத்தும் ஆம்.

பண் :

பாடல் எண் : 48

தொழுந்தகை யன்பின் மிக்கீர்
தொண்டினை மண்மேற் காட்டச்
செழுந்திரு மலரை யின்று
சினக்கரி சிந்தத் திங்கள்
கொழுந்தணி வேணிக் கூத்தர்
அருளினால் கூடிற் றென்றங்
கெழுந்தது பாக ரோடும்
யானையும் எழுந்த தன்றே.

பொழிப்புரை :

யாவரும் தொழத்தக்க மேன்மையினை உடைய அன்பிற் சிறந்தவர்களே! உம்முடைய தொண்டின் பெருமையை உலகத்தவர்க்குக் காட்டுமாறு, செழுமையான திருப்பள்ளித் தாமத்திற் குரிய மலரை இன்று இச்சினமிக்க யானையால் சிதறுமாறு செய்தது, இளம் பிறையை அணிந்த சடைமுடியையுடைய சிவபெருமான் திருவருளால் நேர்ந்தது, என வான் ஒலி கேட்ப, அதுபொழுது, பாகர்களுடன் யானையும் எழுந்தது.

குறிப்புரை :

திங்கட்கொழுந்து - இளம்பிறை. அன்று, `ஏ` என்பன அசைநிலைகளாம். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 49

ஈரவே பூட்டும் வாள்விட்
டெறிபத்தர் தாமும் அந்த
நேரியர் பெருமான் தாள்மேல்
விழுந்தனர் நிருபர் கோனும்
போர்வடி வாளைப் போக
எறிந்துஅவர் கழல்கள் போற்றிப்
பார்மிசை பணிந்தார் விண்ணோர்
பனிமலர் மாரி தூர்த்தார்.

பொழிப்புரை :

தம் கழுத்தை அறுக்கக் கருதி எடுத்த உடை வாளை விடுத்த எறிபத்த நாயனாரும், சோழ மரபில் சிறந்த புகழ்ச்சோழ நாயனாருடைய திருவடிகளில் வீழ்ந்தார். அரசருள் சிறந்த புகழ்ச் சோழநாயனாரும் தாம் கைப் பிடித்திருந்த உடைவாளைத் தொலை வில் எறிந்து, அவ் எறிபத்த நாயனாருடைய திருவடிகளைத் துதித்து, நிலம் உற வணங்கினார். இந்நிகழ்ச்சியைக் கண்ட தேவர்கள் குளிர்ந்த மலர் மழையைப் பொழிந்தார்கள்.

குறிப்புரை :

ஈர - அறுக்க. நேரியர் - சோழர்.

பண் :

பாடல் எண் : 50

இருவரும் எழுந்து வானில்
எழுந்தபே ரொலியைப் போற்ற
அருமறைப் பொருளாய் உள்ளார்
அணிகொள்பூங் கூடை தன்னில்
மருவிய பள்ளித் தாம
நிறைந்திட அருள மற்றத்
திருவருள் கண்டு வாழ்ந்து
சிவகாமியாரும் நின்றார்.

பொழிப்புரை :

எறிபத்த நாயனாரும், புகழ்ச்சோழ நாயனாரும் ஒருவரை ஒருவர் வணங்கி, எழுந்து நின்று, வானில் எழுந்த ஒலி யைப் போற்ற, அரிய மறைப் பொருளாயுள்ள சிவபெருமானும், அழகிய திருப்பூங்கூடையில் முன்பிருந்த திருப்பள்ளித் தாமத்திற்குரிய மலர்கள் நிறையும்படி அருளிச் செய்ய, அத்தகைய திருவருளைக் கண்டு மகிழ்ந்து, சிவகாமி யாண்டாரும் அங்கு வந்து நின்றனர்.

குறிப்புரை :

மற்று - அசைநிலை.

பண் :

பாடல் எண் : 51

மட்டவிழ் அலங்கல் வென்றி
மன்னவர் பெருமான் முன்னர்
உட்டரு களிப்பி னோடும்
உறங்கிய தெழுந்த தொத்து
முட்டவெங் கடங்கள் பாய்ந்து
முகிலென முழங்கிப் பொங்கும்
பட்டவர்த் தனத்தைக் கொண்டு
பாகரும் அணைய வந்தார்.

பொழிப்புரை :

தேன் சொரியும், ஆத்தி மாலையை அணிந்த வெற்றி பொருந்திய அரசர்க்கரசராகிய புகழ்ச் சோழநாயனாரின் முன், உள்ளத்தில் உண்டாகிய மகிழ்ச்சியோடும், துயிலினின்றும் எழுந்தாற் போல நாற்புறமும் நிறையும் படியாகக் கொடிய மதநீரைச் சொரிந்து மேக முழக்கம் போல் பிளிறிக் களித்து நிற்கும் பட்டவர்த்தனம் என் னும் யானையை நடத்திக் கொண்டு பாகர்களும் அணுக வந்தார்கள்.

குறிப்புரை :

இறந்த யானை பிழைத் தெழுந்தது, உறங்கி விழித்தது போன்றது. `உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு` (குறள், 339) என்னும் திருக்குறளை நினைவுகூர வைக்கின்றது.

பண் :

பாடல் எண் : 52

ஆனசீர்த் தொண்டர் கும்பிட்
டடியனேன் களிப்ப இந்த
மானவெங் களிற்றில் ஏறி
மகிழ்ந்தெழுந் தருளும் என்ன
மேன்மையப் பணிமேற் கொண்டு
வணங்கிவெண் குடையின் நீழல்
யானைமேல் கொண்டு சென்றார்
இவுளிமேல் கொண்டு வந்தார்.

பொழிப்புரை :

மேதக்க சிறப்பினையுடைய எறிபத்தநாயனார் புகழ்ச் சோழநாயனாரை வணங்கி, `அடியேன் மனம் மகிழ இந்த வீரம் பொருந்திய கொடிய யானையின் மீது ஏறி மகிழ்ச்சியோடு எழுந் தருளும்` என்று சொல்ல, மேதக்க அந்நாயனார் பணித்தவாறு, அவரை நிலமுற வணங்கி முன்குதிரையின் மீது இவர்ந்து வந்த புகழ்ச் சோழ நாயனார் வெண்கொற்றக் குடையின் நிழற்கீழ் யானையின் மீது ஏறிச் சென்றார்.

குறிப்புரை :

மான - சிறந்த; திருவருள் வழிபாட்டிற்கு இவ் யானையின் செயல் கருவியாக இருந்தமையின் `மான வெங்களிறு` என்றார். இவுளி - குதிரை.

பண் :

பாடல் எண் : 53

அந்நிலை எழுந்த சேனை
ஆர்கலி ஏழு மொன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப
மண்ணெலாம் மகிழ்ந்து வாழ்த்தப்
பொன்னெடும் பொதுவில் ஆடல்
நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியிற் கொண்டு சென்னி
திருவளர் கோயில் புக்கான்.

பொழிப்புரை :

அது பொழுது, அவ்விடத்தில் திரண்டு எழுந்த சேனைகள் எழுகடலும் ஒன்றாய்க் கூடி ஒலித்தன போன்று ஒலிக்க வும், நிலவுலகத்துள்ளார் யாவரும் மகிழ்ச்சி மீதூர வாழ்த்தவும், அழ கிய திருச்சிற்றம்பலத்தின்கண் ஆடியருளும் பெருமானின் அழகிய திருவடிகள் தம் தலையில் பொருந்த எண்ணிய வண்ணம் புகழ்ச்சோழ நாயனார் தம் அழகிய அரண்மனைக்குச் சென்றார்.

குறிப்புரை :

ஆர்கலி - பொருந்திய பேரொலி; இங்கு அதனை யுடைய கடலைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 54

தம்பிரான் பணிமேற் கொண்டு
சிவகாமி யாருஞ் சார
எம்பிரான் அன்ப ரான எறிபத்தர்
தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர்
அறிவதற் கரியார் என்று
செம்பியன் பெருமை உன்னித்
திருப்பணி நோக்கிச் சென்றார்.

பொழிப்புரை :

சிவபெருமானுக்குத் தாம் செய்யும் திருப்பணியை மேற்கொண்டு, சிவகாமியாண்டாரும் திருக்கோயிலை அடைய, சிவ பெருமானுக்கு அன்பு பூண்டு ஒழுகும் எறிபத்த நாய னாரும், `ஈதென்ன வியப்பு? சிற்றம்பலத்தின் கண் அழகுபெற விளங்கியருளும் கூத்தப் பெருமானின் அடியவர்களின் தொண்டு அளவிடற்கரியது` என்று புகழ்ச் சோழ நாயனாரின் பெருமையைத் தமது திருவுள்ளத்தில் கருதிக் கொண்டு, தம் திருப்பணிக்குச் சென்றரு ளினார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 55

மற்றவர் இனைய தான
வன்பெருந் தொண்டு மண்மேல்
உற்றிடத் தடியார் முன்சென்
றுதவியே நாளும் நாளும்
நற்றவக் கொள்கை தாங்கி
நலமிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம்
கோமுதல் தலைமை பெற்றார்.

பொழிப்புரை :

அவ் எறிபத்த நாயனார், மேற்கூறிய முறையான வலிய பெருந்தொண்டை நாளும் இந் நிலவுலகத்தின்கண் அடியவர் களுக்குத் துன்பம் நேரிட்ட பொழுது அவர் முன் சென்று அத்துன் பத்தை நீக்கி, நாளும் நல்ல தவநெறியைப் பூண்டு, பின்பு மேன்மை மிக்க திருக்கயிலையில் வெற்றி பொருந்திய சிவகணங்கட்க்கு முன்னாக இருக்கும் முதன்மை பெற்றார்.

குறிப்புரை :

மற்று, ஏ,என்பன அசைநிலை.

பண் :

பாடல் எண் : 56

ஆளுடைத் தொண்டர் செய்த
ஆண்மையுந் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற
வளவனார் பெருமை தானும்
நாளுமற் றவர்க்கு நல்கும்
நம்பர்தாம் அளக்கி லன்றி
நீளுமித் தொண்டின் நீர்மை
நினைக்கில்ஆர் அளக்க வல்லார்.

பொழிப்புரை :

சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எறிபத்த நாயனார் செய்த திருத்தொண்டின் வலிமையையும், தம் குற்றம் தீரத் தம்மைக் கொல்லுமாறு தம் உடைவாளை அவர் கையில் எடுத்துக் கொடுத்து நின்ற புகழ்ச் சோழநாயனார்தம் பெருமையையும், நாள் தோறும் அவ்விருவர்க்கும் அருள் செய்யும் சிவபெருமான் அளந்து அறிவதன்றி, நீண்ட இவர்தம் திருத்தொண்டின் பெருமையை நினைக்கு மிடத்து யாவர் வரையறுத்துக் கூறவல்லவர்கள்? ஒருவரும் இலர்.

குறிப்புரை :

தான் - அசைநிலை.

பண் :

பாடல் எண் : 57

தேனாருந் தண்பூங் கொன்றைச்
செஞ்சடை யவர்பொற் றாளில்
ஆனாத காதல் அன்பர்
எறிபத்த ரடிகள் சூடி
வானாளுந் தேவர் போற்றும்
மன்றுளார் நீறு போற்றும்
ஏனாதி நாதர் செய்த 
திருத்தொழி லியம்ப லுற்றேன்.

பொழிப்புரை :

தேன் நிறைந்த குளிர்ந்த அழகுடைத்தாகிய கொன்றைமாலையைச் சூடிய சிவந்த சடையையுடைய சிவபெரு மானின் அழகிய திருவடியில் குறையாத பேரன்பினையுடைய எறி பத்த நாயனாரின் திருவடிகளை என் தலைமேல் சூடிக்கொண்டு, விண்ணுலகை ஆளும் தேவர்கள் போற்றும் கூத்தப் பெருமானின் திருநீற்றை எந்நாளும் பேணிப்பத்திமை செய்து ஒழுகிய ஏனாதி நாதரின் திருத்தொண்டைச் சொல்லத் தொடங்குகின்றேன்.

குறிப்புரை :

ஏனாதி நாதரின் வரலாற்றில் நீறு போற்றி வாழும் திருத்தொண்டே அடித்தளமாக நிற்றலின் அந்நெறியையே ஈண்டுச் சிறப்பித்து ஓதுவாராயினர்.
சிற்பி