மெய்ப்பொருள் நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

சேதிநன் னாட்டு நீடு
திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின்
வழிவரு மலாடர் கோமான்
வேதநன் னெறியின் வாய்மை
விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க் கன்பர்
கருத்தறிந் தேவல் செய்வார்.

பொழிப்புரை :

நன்மை மிகுந்த சேதி நாட்டின்கண் உள்ள மேன்மை பொருந்திய திருக்கோவலூரின்கண் வாழ்ந்தருளி, உமையம்மை யாரை ஒரு கூற்றில் வைத்தருளும் சிவபெருமானிடத்துப் பத்திமை செய்தொழுகும் மலையமான் நாட்டிற்குரிய அரசர், நன்மை மிகுந்த மறைவழியில் உலகம் விளங்குதற்கு ஏதுவான பெருமை மிக்க நற் குணங்களைத் தாங்கி, பெருவிருப்போடு சிவபெருமானின் அடியவர் கட்கு அவர்தம் திருவுள்ளக் குறிப்புணர்ந்து பணிவிடை செய்து வருவார்.

குறிப்புரை :

தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் நடுவில் உள்ள பகுதியை நடு நாடு என்பர். இந்நாட்டின் உட்பகுதியாக விளங்குவது இச்சேதி நாடாகும். இந்நாட்டினைச் சேதிபர் என்னும் அரச மரபினர் ஆண்டு வந்தமையால் இஃது இப்பெயர் பெற்றது. திரு விசைப்பா ஆசிரியர்களுள் ஒருவரான சேதிராயர் இம்மரபினராவர். திருக்கோவலூர் - சிவபெருமானின் வீரம் விளங்கும் இடங்கள் எட்டனுள் இதுவும் ஒன்றாகும். அந்தகாசுரனை அழித்த வரலாறு படைத்தது. இந்நகரில் வாழ்ந்தவர் மெய்ப்பொருள் நாயனார். மலாடர் கோமான் - மலையமான் நாட்டிற்குரிய அரசர். மலையமான்+ நாடு=மலாடு எனமருவிற்று. இவ்வரசர் வழியில் வந்தவர்கள் மலையமான், நத்தமான், சுருதிமான் எனும் மூவகைப் பிரிவினராவர். இவர்களுள் மலையமான் வழி வந்தவர் நம் மெய்ப்பொருள் நாயனாராவர். மேன்மை பூண்டு - மறைவழி வந்த ஒழுக்கமாம் மேன்மை பூண்டு. சொல்லிச் செய்தலினும், கருத்தறிந்து ஏவல் செய்தல் மேன்மை உடையதாகும். அந்நெறியில் நின்றவர் இவர். `குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்` (குறள், 703) என்னும் தமிழ் மறையும்.

பண் :

பாடல் எண் : 2

அரசியல் நெறியின் வந்த
அறநெறி வழாமல் காத்து
வரைநெடுந் தோளால் வென்று
மாற்றலர் முனைகள் மாற்றி
உரைதிறம் பாத நீதி
ஓங்குநீர் மையினின் மிக்கார்
திரைசெய்நீர்ச் சடையான் அன்பர்
வேடமே சிந்தை செய்வார்.

பொழிப்புரை :

அவர், நல்லாட்சி செலுத்துதற்குரிய அரசியல் நெறியில் நின்றும், வழிவழியாகப் போற்றி வரும் அறநெறியைத் தவறாமல் பாதுகாத்தும், மலையனைய நெடிய தம் தோள்வலியால் பகைவரை வென்று அப்பகைவரின் படைவலியை அழித்தும், தாம் கூறிய சொற்களினின்றும் வேறுபடாது நன்னெறிகளைப் போற்றி வரும் குணங்களால் உயர்ந்தும், அலைவீசுகின்ற கங்கையைத் தாங் கிய திருச்சடையையுடைய சிவபெருமானின் அடியவர் திருவேடத் தையே சிந்தை செய்தும் வருவார்.

குறிப்புரை :

வந்த - அரசாட்சிக்குரிய நெறிமுறைகள் இவையென வழி வழியாக வந்த. வழாமல் காத்து - அந்நெறி முறைகளைத் தவறாமல் பாதுகாத்து. `அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம் உடையது அரசு` (குறள், 384) எனத் திருவள்ளுவர் கூறுமாறும் காண்க. உரை - தாம் கூறிய சொல். திறன் அறிந்து சொல்லும் சொல்லிற்கு மாறுபடாது நடப்பது அறனாயிற்று. அன்பர் வேடமே சிந்தை செய்வார் - சிவனடியார்களாயுள்ளார் எத்திறத்தினராயினும் அவர் தம் திருவேடம் கருதியே வழிபடும் திறத்தார்; அவர்தம் குலம், குணம் முதலிய எவையும் கருதார்.

பண் :

பாடல் எண் : 3

மங்கையைப் பாக மாக
வைத்தவர் மன்னுங் கோயில்
எங்கணும் பூசை நீடி
ஏழிசைப் பாட லாடல்
பொங்கிய சிறப்பின் மல்கப்
போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள்நா யகருக் கன்பர்
தாளலால் சார்பொன் றில்லார்.

பொழிப்புரை :

உமையம்மையாரை ஒரு கூற்றில் வைத்த சிவ பெருமான் வீற்றிருந்தருளும் திருக்கோயில்கள் அனைத்தினும் நாள் வழிபாடும், சிறப்பு வழிபாடும் குறையாது நடத்தி, ஏழிசையோடு கூடிய பாடல்களும், ஆடல்களும் மேன்மேலும் சிறப்பாக ஓங்க அவற்றைப் பாதுகாத்து வாழ்கின்றவர். தம் தலைவராகிய சிவபெரு மானின் அடியவர் திருவடிகளையன்றி வேறொரு பற்றுக் கோடும் இல்லாதவர்.

குறிப்புரை :

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே. 9; -தி.10 பா.507
கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
முட்டவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.-தி.10 பா.508
ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. -தி.10 பா.509
முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும்
கன்னம் களவு மிகுத்திடும் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே. 9; -தி.10 பா.510
எனவரும் திருமந்திரங்களால் அரசராயினாருக்கு அமைந்த தெய்விகக் கடமைகள் இவையென அறியலாம்.

பண் :

பாடல் எண் : 4

தேடிய மாடும் நீடு
செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்
காவன ஆகும் என்று
நாடிய மனத்தி னோடு
நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக்
குறைவறக் கொடுத்து வந்தார்.

பொழிப்புரை :

அவர், தாம் தேடிய செல்வங்களும், தம் முன்னோ ரால் ஈட்டப் பெற்று வழிவழியாகக்காத்துவரும் மற்ற செல்வங்களும் தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடல் செய்தருளுகின்ற பெருமானின் அடியவர்களுக்கே உரியனவாம் என்று விரும்பிய மனத்தினோடு, சிவனடியார்கள் தம்மிடத்திற்கு எழுந்தருளும் பொழுது, தம் உள்ளத் தில் நிறைந்த அன்பின் மகிழ்ச்சி மிக, வேண்டிய பொருள்களை யெல்லாம் குறைவின்றிக் கொடுத்து வந்தார்.

குறிப்புரை :

ஒருவர்க்கு ஒன்றைக் கொடுக்குங்கால் மகிழ்ச்சியோடு கொடுத்தல் வேண்டும் என்பார். `கூடிய மகிழ்ச்சி பொங்க` என்றார்.
`அகனமர்ந்து ஈதல்` (குறள், 92), `ஈத்துவக்கும் இன்பம்` (குறள், 228) என்றெல்லாம் திருவள்ளுவனார் கூறுவனவும் ஈண்டு எண்ணற்குரியவாம்.

பண் :

பாடல் எண் : 5

இன்னவா றொழுகு நாளில்
இகல்திறம் புரிந்ததோர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும்
ஆசையால் அமர்மேற் கொண்டு
பொன்னணி யோடை யானை
பொருபரி காலாள் மற்றும்
பன்முறை இழந்து தோற்றுப் 
பரிபவப் பட்டுப் போனான்.

பொழிப்புரை :

இவ்வாறாக இவ்வடியவர் தம் கடமைகளைச் செய்து வரும் நாளில், அவரொடு பகைத்து நின்ற ஓர் அரசன், அவரைத் தான் போரில் வெல்லக் கருதும் ஆசை மிகுதியால், போர் செய்தலை மேற்கொண்டு, பொன்னால் செய்த நெற்றிப் பட்டத்தை உடைய யானைகளையும், போர் செய்தற்குரிய குதிரைகளையும், காலாட் படைகளையும், பலகாலும் இழந்து தோற்றுவிட, அதனால் மானம் இழந்து போனான்.

குறிப்புரை :

இகல் - மாறுபடுதல், பகைத்தல். மக்களாயினும், மன்ன ராயினும் தமக்குள் இகல் கொள்ளுதல் தீதாம். இதனை `இகல் என்னும் எவ்வநோய்` (குறள், 853) என்றும், `இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கைத் தவலும் கெடலும் நணித்து` (குறள், 856) என்றும் திருவள்ளுவர் கூறுவனவும் ஈண்டு நினைவு கூர்தற்குரியவாம். ஓடை - நெற்றிப்பட்டம். பரிபவம்- மானம் இழத்தல்.

பண் :

பாடல் எண் : 6

இப்படி இழந்த மாற்றான்
இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம்
அறிந்துவெண் ணீறு சாத்தும்
அப்பெரு வேடங் கொண்டே
அற்றத்தில் வெல்வா னாகச்
செப்பரு நிலைமை எண்ணித்
திருக்கோவ லூரிற் சேர்வான்.

பொழிப்புரை :

இவ்வாறு பலகாலும் தோல்வியடைந்த அப் பகைவன், தன்வலியினால் வெல்ல இயலாதனவாகி, மெய்ப்பொருள் நாயனாருக்கு அடியவர்மீது இருக்கும் பத்திமையை உணர்ந்து, வெண் ணீறு அணிதலாகிய அடியவர்களின் பெருமையான திரு வேடத்தை வஞ்சனையாக மேற்கொண்டு, அவ்வஞ்சனையைப் பிறர் அறியாத வாறு, காலமறிந்து வெல்லும் கருத்துடையனாக வாயினாற் சொலற்கரிய தீமையைச் செய்யக் கருதித் திருக்கோவலூரை அடைவானாயினன்.

குறிப்புரை :

அற்றம் - வஞ்சனை.

பண் :

பாடல் எண் : 7

மெய்யெலாம் நீறு பூசி
வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த
புத்தகக் கவளி யேந்தி
மைபொதி விளக்கே யென்ன
மனத்தினுட் கறுப்பு வைத்துப்
பொய்தவ வேடங் கொண்டு
புகுந்தனன் முத்த நாதன்.

பொழிப்புரை :

தன் உடல் முழுமையும் திருநீற்றை அணிந்து கொண்டு, சடைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி, தன் கையிடத்து, உடைவாளை உள்ளே மறைத்த புத்தகச் சுவடிகளைத் தாங்கிக் கொண்டு, கருமையான நிறத்தைத் தன்னுள் வைத்திருக்கும் ஒளி விளக்குப் போலத் தன் மனத்தில் சினத்தை வைத்துக் கொண்டு பொய் யாகிய ஒரு தவவேடத்தைக் கொண்டு சென்றான். அவன் முத்த நாதன் எனும் பெயரினன்.

குறிப்புரை :

வேணிகள் - சடைகள். புத்தகக் கவளி-புத்தகப் பை. ஒளிவிளக்குத் தன்னைச் சுற்றிலுமுள்ள இடத்திற்கு விளக்கம் தரினும், அவ்விளக்குத் தரும் சுடருக்கடியில் கறுப்பு நிறத்தைப் பெற்றிருக்கும். அதுபோல முத்தநாதனும் புறத்தால் தவமுடையான் போலக் காட்டிக் கொள்ளினும், தன்னகத்தே வஞ்சனை உடையவனாக இருந்தான். முத்தநாதன்: முக்தன் - விடுபட்டவன்: அஃதாவது அறிவினின்றும் விடுபட்டவன் எனக் கொண்டு, இப்பெயர் அப்பகைவனின் செயல் நினைந்து தந்த பெயர் என்று கூறுவர் சிலர். எனினும் அவ்வாறு கொள் வதால் ஒருபெரும் பயன் இன்மையின் இப்பெயரை அப்பகைவனின் இயற்பெயர் என்று கோடலே சாலும் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு. உரை). இங்குத் திருநீறு எரிக்கும் தன்மையாலே மாயா மலத்தையும், விரிந்த சடையை முடித்தலால் விரிந்து செல்லும் கன்ம மலத்தையும், ஞானத்தின் உறையுளாகிய புத்தகத்தால் அறியாமை யாகிய ஆணவமலத்தையும் போக்குவதாகிய ஞானாசாரிய அடையாளங்களைத் தாங்குவதே இத் தவவேடமாம். இவனுடைய தீயபண்புகளையே முன்னிரு பாடல்களிலும் கூறிவந்த ஆசிரியர், இப்பாடலில், அத் தீய பண்புகளை முடிக்குங்கால் அவன் பெயர் கூறினார், அவன் பெயர் கூறலும் தகாமை கருதி.

பண் :

பாடல் எண் : 8

மாதவ வேடங் கொண்ட
வன்கணான் மாடந் தோறும்
கோதைசூழ் அளக பாரக்
குழைக்கொடி யாட மீது
சோதிவெண் கொடிகள் ஆடும்
சுடர்நெடு மறுகிற் போகிச்
சேதியர் பெருமான் கோயில் 
திருமணி வாயில் சேர்ந்தான்.

பொழிப்புரை :

பெருமை பொருந்திய தவவேடத்தைத் தாங்கிக் கொண்டு வந்த கொடியவனாகிய முத்தநாதன், மேல் மாடங்கள் தொறும் மாலைகள் சூழ்ந்த கூந்தலையும் குழைகளையும் உடைய கொடிபோலும் அசைதலை யுடைய மகளிர்கள் நடனமாட, அவற்றின் மீது வெண்மையாக ஒளி விளங்கும் கொடிகள் அசைய, காண்டற்கு இடனாய ஒளிபொருந்திய நீண்ட வீதியில் சென்று, சேதி நாட்டு அரசராய மெய்ப்பொருள் நாயனாரது அழகிய மணிகள் பொருந்திய அரண்மனை வாயிலை அடைந்தான்.

குறிப்புரை :

வன்கணான் - கொடியவன். `நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்` (குறள், 276) எனத் திருவள்ளுவனாரும் இத்தகையாரை வன்கணார் என அழைத் தல் கருதத் தக்கது. மாடங்கள்தொறும் பெண்களாகிய கொடிகள் அசைய, அம் மாடங்களின் மீது கட்டப்பட்டிருக்கும் ஒளிமிக்க வெண்கொடிகளும் ஆடுகின்றன. மாடங்களில் ஆடும் பெண்களின் கூந்தல் கருநிற முடையதாகும் அது அசைய அவர்கள் ஆடுவது முத்தநாதனை வாரற்க எனக் கூறித் தடுப்பது போல் இருந்தது என்றும், அக்கொடிகளுக்கு (பெண்கள்) மேலாக அம்மாடங்களில் கட்டப் பெற்றிருக்கும் வெண்மையான கொடிகள் அசைவது வஞ்சனையாகிய உட்கறுப்பின் மேல் விளங்கும் வெண்ணீறும் சடை முடியுமாகிய திருவேடமே வெற்றிபெறும் எனக் கூறுவது போன்று இருந்தது என்றும் உட்பொருள் காண்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு. உரை). வராமல் தடுத்தற்குக் கறுப்புக் கொடி காட்டல் இன்றும் பழக்கமாகவுள் ளது. கோவலனை மதுரையிலும், துரியோதனனைத் துவாரகையிலும் உள்ள கொடிகள் தடுத்ததாக இளங்கோவடிகளும் (சிலப்ப. புறந். 190), வில்லிபுத்தூராரும் (வில்லி. வாசு. படைத்.6) கூறுதலும் ஈண்டு ஒப்பிட்டுக் காணலாம்.

பண் :

பாடல் எண் : 9

கடையுடைக் காவ லாளர்
கைதொழுதேற நின்றே
உடையவர் தாமே வந்தார்
உள்ளெழுந் தருளும் என்னத்
தடைபல புக்க பின்பு 
தனித்தடை நின்ற தத்தன்
இடைதெரிந் தருள வேண்டும்
துயில்கொளும் இறைவ னென்றான்.

பொழிப்புரை :

அரண்மனை வாயில்கள் தொறும் காவல் செய்து கொண்டிருப்பவர்கள் கைகுவித்து வணங்கி விலகிநின்று நம்மை ஆட்கொள்ளும் சிவபெருமானின் அடியார் ஒருவர், தாமே வலிய எழுந்தருளினார் என்று கூறி, உள்ளே எழுந்தருள வேண்டும் என வேண்டிக் கொள்ள, இவ்வாறாய வாயில்கள் பலவற்றையும் கடந்து சென்ற பின்பு இறுதியாக உள்ள தனிவாயிலில் காவல்புரிந்து நிற்கும் தத்தன் என்பான், `உட்செல்லுதற்குரிய அமையம் தெரிந்து எழுந்தருள வேண்டும்; இதுபொழுது அரசர் துயில் கொள்கின்றார்` என்று கூறினான்.

குறிப்புரை :

தடை - அரண்மனை வாயில். இஃது இப்பொருளாதல் ``உமைபாகரருள் செய்த ஒழுக்கமல்லால் தீங்கு நெறியடையாத தடையுமாகி`` (தி.12 பு.19 பா.88) என வரும் ஆசிரியர் கூற்றானும் அறியலாம். அரசன் இருக்கும் அந்தப்புரத்திற்குச் செல்லின் பல வாயில்களைக் கடந்து செல்லவேண்டும். அவ்வாயில்கள் தொறும் காவலாளர் காத்துநிற்பர். அவர்களையே `கடையுடைக் காவலாளர்` என்றார். ஈண்டுக் கடை என்பது குறிப்பு மொழியாக `அறிவறை போகியவர்` (சிலப்ப. வழக்குரை, 25) என்பதையும் விளக்கி நின்றது. இன்றேல் இவர்களில் ஒருவரேனும் இரவு நேரத்தில் முன்பின் தெரியாதவராய் உள்ள ஒருவரை எவ்வகையான ஆய்வு செய்தலும் இல்லாது வரவேற்று உட்செல்ல விடுத்திருக்க மாட்டார்கள். ஆதலின் இத்தகைய குறிப்புப் பொருள் கோடலில் இழுக்கில்லை. ஏற - விலக. தனித்தடை - இறுதியாக உள்ளதொரு வாயில். எனவே இவ்வாயிலே அந்தப்புரத்தின் உட்செல்லுதற்குரிய வாயில் என்பது தெரிகின்றது. இங்கு நிற்போன் ஏனைய வாயிலோரினும் கூர்த்த அறிவும், அரசர் மீதுபெரும் பற்றும் உடையனாய தத்தன் என்பவன் ஆவான். இவனொருவனே உட்செல்லுதற்குத் தடுத்தமையின் இவனைத் `தனித் தடை` என்றாருமாம். தனித் தடை - ஒப்பற்ற தடை. இடை - அமையம்: சமயம். உட்செல்லுதற்குரிய காலம். இஃது இப்பொருளாதல் `இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின் நடை தெரிந்த நன்மை யவர்` (குறள், 712). என வருமாற்றானும் அறியலாம். `துயில் கொளும் இறைவன்` என்பதால் உட்செல்லுதற்கு இது தக்க காலமன்று என்பது பெற வைத்தானாயிற்று. ஏகாரம் இரண்டனுள் முன்னையது அசைநிலை; பின்னையது தேற்றமாம்.

பண் :

பாடல் எண் : 10

என்றவன் கூறக் கேட்டே
யானவற் குறுதி கூற
நின்றிடு நீயு மென்றே
அவனையும் நீக்கிப் புக்குப்
பொன்றிகழ் பள்ளிக் கட்டிற்
புரவலன் துயிலு மாடே
மன்றலங் குழல்மென் சாயல்
மாதேவி இருப்பக் கண்டான்.

பொழிப்புரை :

தத்தன் இவ்வாறு கூறக் கேட்டமுத்தநாதன், `யான் அவ்வரசனுக்கு உறுதி கூற வந்துள்ளேன், ஆதலின் நீ தடை செய்யாது இங்கு நிற்பாயாக` என்று கூறியவாறு, அத்தத்தனை விலக்கிக் கொண்டு உள்ளே சென்று பொன்னாலாய விளக்கம் பொருந்திய பள்ளிக் கட்டிலில் மெய்ப்பொருள் நாயனார் துயிலவும், அவர் அருகில் நறுமணம் பொருந்திய கூந்தலையும் மென்மையையும் உடைய அவர் மனைவியார் இருக்கவும் கண்டான்.

குறிப்புரை :

தத்தன் மிகச் சிறந்த மதிநுட்பமும், அரசர் மீது மீதூர்ந்த பற்றும் உடையனாயினும், வந்தவரின் தவவேடமும் அவர் உறுதிப் பொருள் கூறவந்ததாகக் கூறியதும் அவனைத் தடுக்க இயலாதவாறு தகைத்து விட்டன. அவ்வன்னெஞ்சனும் தன் தவவேடத்தையும் தான் கூறிய பொய்க் காரணத்தையும் காட்டி `நின்றிடு நீயும்` என ஏவலாக விதித்தனன். `நீயும் நின்றிடு` என்பது அவ்வவ்வாயிலினின்றும் ஏனையோர் நின்றது போல நீயும் நின்றிடு எனக் கூறலின் இறந்தது தழீஇய எச்ச உம்மையாயிற்று. `புரவலன் துயில மாதேவி இருப்ப` என்றார் அவ்வரசியார் துயிலாதிருந்தமை பற்றி. தன் தலைவன் துயிலும் வரை அவனுக்கு அடிவருடல் விசிறுதல் போன்ற இனிய தொண்டுகளைச் செய்து பின்தான் துயிலுதல், அறமும், மரபும் ஆதலின் `மாதேவி இருப்ப` என்றார். `அடிவருடிப் பின் தூங்கிமுன் எழும் பேதையே` எனவரும் பழம்பாடலும் காண்க. `மன்னு மலை மகள் கையால் வருடின` (தி.4 ப.100 பா.1) `செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால் வருடச் சிவப்பன` (தி.4 ப.108 பா.2) என்பனவாகிய திருவாக்குகளால் உலகத் தலைவியாம் உமையம்மை யாரும் இவ்வறத்தைச் செய்து காட்டிய திறத்தை அறியலாம்.

பண் :

பாடல் எண் : 11

கண்டுசென் றணையும் போது
கதுமென எழுந்து தேவி
வண்டலர் மாலை யானை
எழுப்பிட உணர்ந்து மன்னன்
அண்டர்நா யகனார் தொண்ட
ராம்எனக் குவித்த செங்கை
கொண்டு எழுந்து எதிரே சென்று 
கொள்கையின் வணங்கி நின்று.

பொழிப்புரை :

மன்னவன் துயிலவும் அருகில் மாதேவி இருக் கவும் கண்டும், திரும்பாமல் மேலே சென்று, அக்கட்டிலை நெருங்க வும், விரைந்து எழுந்த அத்தேவியார், வண்டுகள் மொய்த்தற்கு இடனாக அலர்ந்த மாலையை அணிந்த மெய்ப்பொருளாராய தம் தலைவரை எழுப்பிடத் துயிலுணர்ந்த அம்மன்னர், `சிவபெருமானின் அடியவர் இவர்` என்று தலைமீது குவித்த சிவந்த திருக்கரங்ளை உடையவராய்ப் பள்ளிக் கட்டிலினின்றும் எழுந்து நின்று.

குறிப்புரை :

கண்டும் என்றவிடத்துள்ள உம்மை தொக்கு நின்றது. தத்தன் `துயில் கொளும் இறைவன்` என்றபொழுதே முத்தநாதன் தான் உட்செல்லுவதை விடுத்திருக்க வேண்டும். மாறாக உட்சென்றான். பள்ளிக்கட்டிலில் அரசன் துயில்வதையும் அத்தேவியார் இருப்பதை யும் கண்டபின்னரேனும் மேலும் செல்லாது வெளிப் போந்திருக்க வேண்டும்.
அவ்வாறன்றி அந்நிலையைக் கண்டும், மேலும் சென்றனன், அக்கட்டிலையும் நெருங்கினன் என்பதைப் படிப்படியாக ஆசிரியர் கூறியிருக்கும் சொல்லாட்சிகள் அம் முத்தநாதனின் வன்கண்மையை அணுவணுவாக உணரவைக்கின்றன. `குவித்த செங்கை கொண்டு, எழுந்து` எனவே மெய்ப்பொருளார் தொழுது கொண்டே எழுந்தமை புலனாகின்றது. தேவியார் எழுப்பிய அளவிலேயே மன்னருக்கு இச் செயல் நிகழ்தலின் எழுந்தபின் தொழுதனரா? தொழுதபின் எழுந்த னரா? என்ற ஆராய்ச்சிக்கு இடனில்லாது போயிற்று. உணர்தல் - மனம் முதலிய அகக்கருவிகளின் செயல். எழுதல்கை முதலிய புறக்கருவி களின் செயல். எனவே மனத்தால் தொழுது கொண்டே எழுதலில் இழுக்கில்லை. இழிந்து - பள்ளிக் கட்டிலினின்றும் இறங்கி,

பண் :

பாடல் எண் : 12

மங்கலம் பெருக மற்றென்
வாழ்வுவந் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்ற
தென்கொலோ என்று கூற
உங்கள்நா யகனார் முன்னம்
உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்குமில் லாத தொன்று
கொடுவந்தேன் இயம்ப வென்றான்.

பொழிப்புரை :

`மங்கலம் பெருக என்வாழ்வே ஓர் உருவெடுத்து வந்தாற்போல, இவ்விடத்திற்கு எழுந்தருளப் பெற்றது யாது கருதியோ?` என்று மெய்ப்பொருளார் வினவ, முத்தநாதன், `உங்கள் தலைவர் முற்காலத்தே அருளிச் செய்த சைவ ஆகம நூல்களுள் உலகில் வேறு எங்கும் கிடைத்திராத அரியதொரு நூலைக் கொண்டு வந்தேன்; உமக்கு உபதேசிப்பதற்காக` என்றனன்.

குறிப்புரை :

`மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது` என்பது, எஞ்ஞான்றும் இன்பமே பெறுதற்கு ஏதுவாய முத்திச் செல்வத்தைப் பெற இப் பிறவியாகிய வாழ்வு இன்றோடு முடிந்தது எனும் குறிப்புப் பொருளும் தரநின்றது. `உங்கள் நாயனார்` என்றது மெய்ப்பொருளாரின் பத்திமையும், அடிமையும் தோன்ற நின்றது. மாறாக, முத்திநாதனின் பத்தியின்மையையும் தோன்ற நின்றது. ``இசையாழ் உங்களிறைவருக் கிங்கியற்றும்`` (தி.12 பு.28 பா.134); `அப்பர்! உங்கள் தம்பிரானாரை நீர் பாடீரென்ன` (தி.12 பு.21 பா.186) எனவருவன, இந்நிகழ்விற்கு மாறாகப் பாணான் பத்திமையும் காவலர்களின் பத்திமையும் தோன்ற நின்றது. இதுவன்றி இறைவனுக்கும், தனக்கும் தொடர்பில்லாமையைக் குறிக்க முத்த நாதன் `உங்கள் நாயனார்` என்றல் பொருந்துவதாகின்றது. `இயம்பக் கொடுவந்தேன்` என்னாது `கொடுவந்தேன் இயம்ப` என்றது முத்த நாதனின் வஞ்சனையால் எழுந்த சொல்தடுமாற்றம் ஆகும். மற்று, கொல் என்பன அசை நிலைகள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 13

பேறெனக் கிதன்மேல் உண்டோ 
பிரானருள் செய்த இந்த
மாறில்ஆ கமத்தை வாசித்
தருள்செய வேண்டு மென்ன
நாறுபூங் கோதை மாதுந்
தவிரவே நானும் நீயும்
வேறிடத் திருத்தல் வேண்டும்
என்றவன் விளம்ப வேந்தன்.

பொழிப்புரை :

இவ்வாறு எழுந்தருளி உபதேசிப்பதினும் உயர்ந்த பேறு வேறு அடியேனுக்கு உண்டோ? (இல்லை). சிவபெருமான் அருளிச் செய்த குற்றமற்ற இச்சிவாகம நூலை வாசித்து அதன் பொருள் விளங்க அருளிச் செய்ய வேண்டும் என்று வேண்ட, நறுமணம் கமழ் கின்ற மலரணிந்த கூந்தலையுடைய உன் தேவி இவ்விடத்தினின்றும் நீங்க, நானும் நீயும் தனியிடத்து இருக்கவேண்டும் என அம்முத்த நாதன் சொல்ல மெய்ப்பொருள் நாயனாரும்.

குறிப்புரை :

மாறுஇல் ஆகமம் - தமக்குள் மாறுபாடு இல்லாதனவும் இணை இல்லாதனவுமான ஆகமம். மாது தவிரவே எனப் பிரித்துப் பின் வரும் வரலாற்றை நினைவு கொள்ளுதலும் ஒன்று. நானும் நீயும் வேறி டத்து இருக்க என்பதற்கு, நீ இறைவனின் பேரின்ப நிழலில் இருக்க வும், நான் எரிவாய் நரகில் இருக்கவும் ஆக வெவ்வேறு இடங்களில் இருத்தல் வேண்டும் எனப்பொருள் கோடற்கும் இயைய உள்ளமை அறிந்து இன்புறுதற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 14

திருமக ளென்ன நின்ற
தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப்
புரத்திடைப் போக ஏவித்
தருதவ வேடத் தானைத்
தவிசின்மேல் இருத்தித் தாமும்
இருநிலத் திருந்து போற்றி
இனியருள் செய்யும் என்றார்.

பொழிப்புரை :

திருமகளைப் போல அங்கு நிற்கும் தம் மனைவியாரைப் பார்த்து, அருளுரை கேட்கும் பெருவிருப்பால், அவரை விரைவாக அந்தப்புரத்திற்குப் போகுமாறு பணித்து, இயல் பாகவன்றி வலிய எடுத்துக்கொண்ட தவவேடமுடைய முத்தநாதனை ஓர் இருக்கையின்மீது இருக்கச் செய்து, தாம் வெறுநிலத்திலிருந்து வழி பட்டவாறு, இனி அருள் செய்ய வேண்டு மென்று விண்ணப்பித்துக் கொண்டார்.

குறிப்புரை :

புரிவுடன் - விருப்புடன்: ஆகமம் கேட்கும் விருப் புடன். தருதவ வேடம் - இயல்பாக அன்றி, வஞ்சனையால் எடுத்துக் கொண்ட தவவேடம்.
உபதேசம் பெறுங்கால் குருமூர்த்திகளைத் தக்க இருக்கையில் இருக்கச் செய்து தாம் வெறு நிலத்தில் இருந்து கேட்டல் மரபு. இம்மரபிற்கு ஏற்பவே `தருதவ வேடத்தானைத் தவிசின் மேல் இருத்தித்தாமும் இருநிலத்து இருந்து` என்றார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 15

கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப் 
பொருளெனத் தொழுது வென்றார்.

பொழிப்புரை :

அவன், தன் கையில் வைத்திருந்த வஞ்சனையாகக் கொண்ட புத்தகப் பையைத் தன் மடியின் மேல் வைத்து, உள்ளிருந்த அப்புத்தகத்தைத் திறப்பவனைப்போல, விரும்பி அந்நாயனார் வணங்கும் சமயத்தில், அதனுள் மறைத்து வைத்திருந்த உடை வாளை எடுத்துத்தான் முன் கருதியவாறே செய்ய, அவ்வடியவர் தாமும், மெய்ம்மையான பொருளாகக் கொண்ட தவவேடத்தையே மெய்ப்பொருளாகக் கருதி வணங்கி வென்றார்.

குறிப்புரை :

பத்திரம் - உடைவாள். தான்முன் நினைந்த அப்பரிசு - எதிர்த்து நின்று கொல்ல இயலாமையின், அவரை அடுத்து நின்று கொல்ல நினைந்த நினைவு. மங்கலம் இன்றிச் சொல்லல் இவர் மரபில்லையாதலின், `தான் முன் நினைந்த அப்பரிசே செய்ய` என்றார். `மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம் தகுதியான் வென்று விடல்` (குறள், 158) அறனாதலின் `வென்றார்` என்றார். இதனையே `வெல்லுமா மிக வல்ல மெய்ப் பொருள்` (தி.7 ப.39 பா.1) எனத் திருத்தொண்டத் தொகையும் குறிப்பதாயிற்று. ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது.

பண் :

பாடல் எண் : 16

மறைத்தவன் புகுந்த போதே
மனம்அங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி
வாளினால் எறிய லுற்றான்
நிறைத்தசெங் குருதி சோர
வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப்படும் அளவில் தத்தா
நமரெனத் தடுத்து வீழ்ந்தார்.

பொழிப்புரை :

உள்ளத்தில் கொண்டிருந்த வஞ்சனையை மறைத்துத் தவவேடம் பூண்ட அம்முத்த நாதன் உள்ளே சென்ற பொழுதே, தன் மனத்தை அவனுடன் போக நிறுத்திய தத்தன் என்பான், ஒரு நொடிப் பொழுதில் சென்று, வாட்படையால் அவனை எறியத் தொடங்கினான். தம் திருமேனியில் இரத்தம் சோர நிலத்தில் வீழ்கின்ற அந்நாயனார், `தத்தனே! அவர் நம்மவர்` என்றுகூறித் தம் நீண்ட கையினால் தடுத்து வீழ்ந்தார்.

குறிப்புரை :

மறைத்தவன் - மறைநெறியில் வந்த தவத்தவன், தவ வேடத்தில் தன்னை மறைத்துக் கொண்டவன், என இரு பொருளும் பட நின்றது. பின்னயது தவம் மறைந்து அவம் செய்யும் குறிப்பானது. `நின்றிடு நீயும்` என்றதால் தத்தனை மறைத்தவன் என்றலும் ஒன்று. `நமர்` என்றது தீங்கு செய்தற்குரியர் அல்லர் எனும் குறிப்பில் நின்றது. `நந்தமர் ஊரனென்றான்` (தி.7 ப.100 பா.9) எனவரும் திருவாக்கை யும் நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 17

வேதனை யெய்தி வீழ்ந்த
வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும்
தலையினால் வணங்கித் தாங்கி
யாதுநான் செய்கே னென்ன
எம்பிரா னடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம்
கொண்டுபோய் விடுநீ யென்றார்.

பொழிப்புரை :

இக்கொடுஞ்செயலால் வருத்தப்பட்டு நிலத்தில் வீழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரால் `தத்தா நமர்` என்றுகூறித் தடுக்கப் பெற்ற அவரை, (வேந்தரை) அடியவனாகிய தத்தன் என்பவனும் தலையால் வணங்கி, அவர்தம் தலையைத் தம் கையால் தாங்கிய வண்ணம் `அடியேன் செய்யும் பணி யாது?` என்று வினவ, `எம் தலை வனாய சிவபெருமானின் அடியவராகிய இவர் (முத்தநாதன்) செல்லும் பொழுது இடையில் எவரும் மேற்சென்று விலக்காதவாறு இவரைக் கொண்டுபோய் விடுவாயாக என்று கட்டளையிட்டார்.

குறிப்புரை :

தாதன் - அடிமை. மீது - இவர் (முத்தநாதன்) மீது. இடை விலக்காவண்ணம் - இவரிடத்துச் சென்று வழி மறித்து ஊறு செய்யா வண்ணம்.

பண் :

பாடல் எண் : 18

அத்திறம் அறிந்தார் எல்லாம் 
அரசனைத் தீங்கு செய்த
பொய்த்தவன் தன்னைக்
கொல்வோம் எனப்புடை சூழ்ந்த போது
தத்தனு மவரை எல்லாம்
தடுத்துடன் கொண்டு போவான்
இத்தவன் போகப் பெற்ற
திறைவன தாணை என்றான்.

பொழிப்புரை :

அச் செய்கையை அறிந்தவர்கள் எல்லாரும், நம் அரசனுக்கு தீங்கு செய்த பொய்ம்மையான தவ வேடத்தையுடைய இவனைக் கொல்வோம் என்று அவர் அருகில் சூழ்ந்த பொழுது, தத்தன் என்பான், அவர்களை யெல்லாம் தடுத்துத் தன்னுடன் அவனைக் கொண்டு போகின்றவனாய், அவர்களை நோக்கி, இப் பொய்த் தவத்தினை உடையான் உயிருடன் போதல் இறைவனது ஆணை யாம் என்று கூறினன்.

குறிப்புரை :

புடை - பக்கம்.

பண் :

பாடல் எண் : 19

அவ்வழி அவர்க ளெல்லாம்
அஞ்சியே அகன்று நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன் 
திருநகர் கடந்து போந்து
கைவடி நெடுவா ளேந்தி
ஆளுறாக் கானஞ் சேர
வெவ்வினைக் கொடியோன் தன்னை
விட்டபின் மீண்டு போந்தான்.

பொழிப்புரை :

இறைவன் ஆணையென்று கூறியதும் அவனைச் சூழ்ந்தவர்களெல்லாம் அஞ்சி அவ்விடத்தினின்றும் பெயர்ந்து செல்ல, செல்லுதற்குப் பாதுகாப்பாய வழியில் தத்தன் என்பான் அந்நகரத்தைக் கடந்து சென்று, கையிடத்துக் கூரிய நீண்ட வாளை ஏந்திய வண்ணம், மனிதர்கள் இயங்காத காட்டை அடைந்து தீத்தொழிலினனாய அக் கொடியவனை விடுத்து மீண்டு வந்தான்.

குறிப்புரை :

செவ்விய நெறியில் தத்தன் - செந்நெறியில் தலை நின்றவனாகிய தத்தன் எனக் கோடலும் ஒன்று. இறைவனின் எண் வகை வீரச் செயல்களுள் ஒன்று நிகழ்ந்த இடமாதலானும், மெய்ப் பொருளாரும் தத்தனும் போன்ற அடியவரும், அருங்குணச் சீலர்களும் வாழ்ந்து வரும் இடமாதலானும் `திருநகர்` என்றார்.
ஆள் உறாக் கானம் - இவன் நிலை அறிந்து இவனுக்கு ஊறு பாடு செய்வார் இல்லாத காடு. மனிதர்களன்றி ஏனைய விலங் கினங்கள் வாழும் கானம் எனப் பொருள் கோடல் மெய்ப்பொருளா ரின் ஆணை வழி நிற்கும் தத்தன் செயற்குப் பொருந்தாததாகும். ஏகாரம் - அசைநிலை.

பண் :

பாடல் எண் : 20

மற்றவன் கொண்டு போன
வஞ்சனை வேடத் தான்மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீ
திலா நெறியில் விட்ட
சொற்றிறங் கேட்க வேண்டிச்
சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான்
கோமகன் குறிப்பில் நின்றான்.

பொழிப்புரை :

தத்தன் தான் அழைத்துக் கொண்டு சென்ற வஞ்சனையான வேடத்தையுடைய முத்தநாதனை, சினந்து எதிர்த்த வர்களை விலக்கி, குற்றம் நேராதவாறு விட்ட நற்சொல்லின் வகைமை யைக் கேட்க விரும்பி, உடலை விட்டு நீங்குதற்குரிய உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கும் மெய்ப்பொருள் நாயனார் முன்பு, அவர்தம் குறிப்பில் நிற்கும் தத்தன் போய் நின்றான்.

குறிப்புரை :

சொல்திறம் - அப் பொய்த்தவனை அழைத்துச் சென்ற மையும், இடையில் நேர்ந்த தடையையும், அதனை விலக்கிச் சென்று அவனை விட்டு வந்ததுமாகிய நற்செய்திகள். மற்று - அசைநிலை,

பண் :

பாடல் எண் : 21

 சென்றடி வணங்கி நின்று
செய்தவ வேடங் கொண்டு
வென்றவற் கிடையூ றின்றி
விட்டனன் என்று கூற
இன்றெனக் கையன் செய்த
தியார்செய வல்லா ரென்று
நின்றவன் தன்னை நோக்கி
நிறைபெருங் கருணை கூர்ந்தார்.

பொழிப்புரை :

தத்தன் மெய்ப்பொருள் நாயனாரிடத்து அணுகச் சென்று, அவர் திருவடிகளை வணங்கி நின்று, செயற்கையாக மேற் கொண்ட தவவேடத்தைத் தாங்கித் தன்னளவில் வென்றதாகக் கருதிய அம் முத்தநாதனுக்கு, யாதொரு இடையூறுமின்றித் தொலைதூரத்தில் கொண்டு சென்று விட்டனன், என்று விண்ணப்பிக்க, நாயனாரும், இன்று என் தலைவனாக விளங்கும் நீ செய்த உதவியை யாவர் செய்ய வல்லவர்? என்று கூறி, தன்முன் நின்ற தத்தனைப் பார்த்துத்தம் மனம் நிறைந்த பெருங் கருணையைச் செய்தார்.

குறிப்புரை :

செய்தவம் - இயல்பாகக் கொண்ட தவமன்றிச் செயற்கையாகச் செய்து கொண்ட தவம். ஐயன் - தலைவன். ஆணை வழங்குதல் அரசர் கண்ணதேனும், அதனைநிறைவேற்றுதல் அவன் கீழ்வாழும் அலுவலர்கண்ணதேயாம். அவ்வகையிலேயே, இதுகாறும் ஆணை வழங்கி வந்த மெய்ப்பொருள் நாயனார், தற்பொழுது அதனை நிறைவேற்றித் தந்த தத்தனைப் பார்த்து `ஐயன்` என்றார். மெய்ப்பொருள் நாயனார் தம்கால எல்லையில் இதுவே தமக்கு அவர் செய்த பேருதவியாகவும், காலத்தினால் செய்த நன்றியாகவும் கொணடமை, அச்சொல்லருமையால் விளங்குகின்றது. நிறைபெருங் கருணை - தம் உள்ளத்தில் நிறைந்த பெருங்கருணை. இனி அவர் கருணை வழங்கவோ, தத்தன் உள்ளிட்ட பிறர் எவரும் அதனை ஏற்கவோ இயலாத நிலையில் வழங்கிய கருணையாதலின் `நிறை வான பெருங்கருணை` என்றலும் ஆம். இனித் தத்தன் தன் வாழ்வில் நிறைவு பெறுதற்குக் காரணமான கருணை என்று கோடலும் ஒன்று. `இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செயவல்லார்?` என்று கூறியதால் மொழியாலும், `நோக்கி` என்பதால் மெய்யாலும், `கருணை கூர்ந்தார்` என்பதால் மனத்தாலும் அவர் அருளிய அருளிப்பாடு பெறப்படுதலின் தத்தன் பெறுதற்குரிய அருளிப்பாடு இதுவன்றி வேறு இல்லையாம்.

பண் :

பாடல் எண் : 22

அரசிய லாயத் தார்க்கும்
அழிவுறுங் காத லார்க்கும்
விரவிய செய்கை தன்னை
விளம்புவார் விதியி னாலே
பரவிய திருநீற் றன்பு 
பாதுகாத் துய்ப்பீர் என்று
புரவலர் மன்று ளாடும்
பூங்கழல் சிந்தை செய்தார்.

பொழிப்புரை :

தம் வழி அரசு இயற்றுதற்குரிய இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும், தம் பிரிவால் வருந்தி நிற்கும் அரசமா தேவியார், ஏனைய சுற்றத்தார் முதலியோர்க்கும் தம் உள்ளத்தில் கருக்கொண்டு நிற்கும் கொள்கையைக் கூறுபவராய், `முறையாகப் போற்றிக் காக்கத் தக்க திருநீற்றினிடத்து வைத்து வாழும் அன்பில் சோர்வு வாராது அதனை என்றும் பாதுகாத்து, இவ்வுலகில் கொண்டு செலுத்தக் கடவீர்` எனும் கட்டளையைக் கூறியபின், மெய்பொரு ளார், திருமன்றில் அருட்கூத்து இயற்றுகின்ற பெருமானின் அழகிய வீரக்கழலினை அணிந்த திருவடியை மனத்தகத்து எண்ணியிருந்தார்.

குறிப்புரை :

ஆயத்தார் - மன்னன் ஆணை வழிநின்று மக்களுக்கு நலம் செய்யும் அமைச்சர் முதலாயினார். காதலார் - தம்மைப்பிரிய நேர்வதால் வருந்தி நிற்கும் அரசமாதேவியார் உள்ளிட்ட சுற்றத்தார். விரவிய செய்கை - தம்திரு உள்ளத்தில் எஞ்ஞான்றும் பொருந்தி நிற்கும் செய்கை. திருநீற்றையும் அதனை அணிந்து நிற்கும் அடியவர் பெருமக்களையும் பேணிப் போற்றுவதே அவர்தம் திருவுள்ளமாகும். விதியினாலே - ஆகமம் விதித்த வழியினாலே. பாதுகாத்து உய்ப்பீர் - திருநீற்றினிடத்தும், அதனை அணிவார் தம் திருவேடத்தினிடத்தும் சோர்வுபடாது பெரும்பற்றைச் செய்து, நும் வழிவழி வருவாரும் ஏற்றுப் போற்றுமாறு செய்வீர். உடலை விட்டு உயிர் நீங்கும் பொழுது இறை சிந்தனை ஒன்றே உயிரிடத்து அமைதல் வேண்டும் அதனை நாயனார் செய்திருந்தமையான் ``பூங்கழல் சிந்தை செய்தார்`` என் றார். `நாகைக் காரோணநின் நாமம் பரவி நமச்சிவாய வென்னும் அஞ்செழுத்தும் சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே!` (தி.4 ப.103 பா.3), `துஞ்சும் போழ்துநின் னாமத் திருவெழுத் தஞ்சும் தோன்ற அருளுமை யாறரே` (தி.5 ப.27 பா.3) என வரும் திருமுறைத் திருவாக்குகளும் காண்க.

பண் :

பாடல் எண் : 23

தொண்டனார்க் கிமையப் பாவை
துணைவனார் அவர்முன் தம்மைக்
கண்டவா றெதிரே நின்று
காட்சிதந் தருளி மிக்க
அண்டவா னவர்கட் கெட்டா
அருட்கழல் நீழல் சேரக்
கொண்டவா றிடைய றாமல்
கும்பிடுங் கொள்கை ஈந்தார்.

பொழிப்புரை :

அம்மெய்ப்பொருள் நாயனாருக்கு உமையம்மை யாரின் கணவராகிய சிவபெருமான், அவர்தம்மை மனத்தகத்து எண்ணியிருந்த வடிவே வடிவாக, அவர் முன்னிலையில் வெளிப் பட்டருளி, அவரை மேலான விண்ணுலகின்கண் வாழும் தேவர் களுக்கும் எட்டாத அருள் வடிவான தம் திருவடி நிழலில் கலந்து இன்புறுமாறு அருள் செய்து, அவர் தம்மை இடைவிடாது வணங்கி வாழும் பேற்றினையும் வழங்கியருளினார்.

குறிப்புரை :

`அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர், அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர்` (திருக்களிற்றுப். கட.1) என்னும் ஞானநூல். அதற்கேற்ப இறைவன் காட்சி கொடுத்தாரேனும், அவ்வடிவும் மெய்பொருள் நாயனார் உள்ளத்துக் கொண்டு வழிபட்ட வடிவேயாகும் என்பார். `அவர் முன் தம்மைக் கண்டவாறு எதிரே நின்று` என்றார். அண்டம் - விண்ணுலகம். மிக்க வானவர் - மேலான வானவர்: நீண்ட வாழ்நாள், பெருமை இன்பம் முதலியவற்றால் மக்களினும் சிறந்திருத்தலின் `மிக்க வானவர்` என்றார். இனி இதனை மிக்க அண்டம் என இயைத்துக் கூறினும் அமைவதாகும். `அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி, ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின், நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன` (தி.8 ப.3 வரி 1-4) என வரும் திருவாக்கால் அண்டத்தின் அருமை தெரியலாம்.

பண் :

பாடல் எண் : 24

 இன்னுயிர் செகுக்கக் கண்டும்
எம்பிரான் அன்ப ரென்றே
நன்னெறி காத்த சேதி
நாதனார் பெருமை தன்னில்
என்னுரை செய்தே னாக
இகல்விறன் மிண்டர் பொற்றாள்
சென்னிவைத் தவர்முன்
செய்த திருத்தொண்டு செப்ப லுற்றேன்.

பொழிப்புரை :

தம் இன்னுயிர் நீங்குமாறு உடைவாளால் சிதைக்கக் கண்டும், எம் சிவபெருமானுடைய அடியாரென்ற திருவேடமே மெய்ப்பொருள், எனத்தாம் கொண்ட நெறியைப் பாதுகாத்த சேதி நாட்டின் அரசராகிய மெய்பொருள் நாயனார் பெருமையில் என்னால் இயன்றவகையில் ஒரு சிறிது சொன்னேன்: இனி வலிமை யுடைய விறன் மிண்ட நாயனாரின் அழகிய திருவடிகளைத் தலைமேற் கொண்டு அவர் முன் செய்த திருத்தொண்டைச் சொல்லத் தொடங்கு கின்றேன்.

குறிப்புரை :

என்னுரை - ஒன்றற்கும் பற்றாத என்னால் கூற இயன்ற உரை; `யான் அறி அளவையின் ஏத்தி` என்புழிப் போல.
சிற்பி