பாயிரம் - திருமலைச் சருக்கம்


பண் :

பாடல் எண் : 1

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

பொழிப்புரை :

எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம்அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச்சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்.

குறிப்புரை :

உலகு என்பது ஈண்டு உயிர்களைக்குறித்தது; இடவாகு பெயர். உணர்தல் - மனத்தின் தொழில். ஓதல் - மொழியின் தொழில். இவ்விரண்டானும் அறிதற்கரியன் எனவே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் ஆதல் விளங்குகின்றது. நிலவை அணிந்தது தனி உயிர் காக்கும் தகைமையையும், கங்கையைத் தரித்தது பல்லுயிர் களையும் காக்கும் பண்பையும் விளக்குகின்றன. அலகில் சோதி - அள விறந்த ஒளியுரு. மலர் சிலம்படி - மலர்ந்த சிலம்படி, மலர்கின்ற சிலம் படி, மலரும் சிலம்படி என விரியும்: வினைத்தொகை. அன்பால் நினைவார்தம் உள்ளக் கமலத்தின் கண்ணே அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரும் இயல்பு தோன்ற இவ்வாறு கூறினார். அரியவனாயும், வேணியனாயும், சோதியனாயும் உள்ள அம்பலத்தாடுவானின் மலர் சிலம்படியை வாழ்த்தி வணங்குவாம் எனக் கூட்டி உரைக்க. சிவ ஞானத்தால் உணர்ந்தும் எடுத்தோதுதற்கரியவர் என உரை காண்பர் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் (பெரியபு.-உரை). `உணர்ந்தார்க்கு உணர்வரியோன்` எனவரும் திருக்கோவையாரின் தொடருக்கு, `ஒருகால் தன்னை உணர்ந்தவர்கட்குப் பின் உணர்தற்குக் கருவியாகிய சித்த விருத்தியும் ஒடுங்குதலால் மீட்டும் உணர்வரி யோன்` என முதற்கண் உரைத்துப், பின்னர்த் `தவத்தானும், தியானத் தானும் எல்லாப் பொருள்களையும் உணர்ந்தவர்க்கும் உணர்வரி யோன் எனினும் அமையும்` என்றும் உரைத்தார் பேராசிரியர் (திருக்கோவையார் உரை). நினைப்பவர் மனம் கோயிலாகக் கொண் டவன் என்பது விளங்க நின்றது.

பண் :

பாடல் எண் : 2

ஊன டைந்த உடம்பின் பிறவியே
தான டைந்த உறுதியைச் சாருமால்
தேன டைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
மாந டம்செய் வரதர்பொற் றாள்தொழ.

பொழிப்புரை :

தேன் நிரம்பிய மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தில்லையுள் ஆனந்தக் கூத்தினை இடையறாது இயற்றி வருகின்ற கூத்தப் பெருமானின் அழகிய திருவடிகளைத் தொழ, தசை பொருந்திய உடம்பினை உடைய மானிடப் பிறவியே, தான் பெறுதற் குரிய உறுதிப் பொருளாய வீடுபேற்றினை அடையும்.

குறிப்புரை :

கூத்தப் பெருமானின் தாள் தொழ, மானுடப் பிறவி வீடு பேறடையும் என்பது கருத்து. தில்லையைத் தரிசிக்க முத்தி எனக் கூறு வதும் காண்க. ஊன் - தசை. உறுதி - வீடுபேறு. மாநடம் - ஆனந்தக் கூத்து. உயிர்க்குற்ற மும்மலக் கட்டையும் அறுத்து, அவ்வுயிரைத் தன் அருள்வெள்ளத்தில் அழுத்தி, அதனின்றும் மீளாதவாறு இன்புறச் செய்வது இத்திருக்கூத்தின் இயல்பாம்.

பண் :

பாடல் எண் : 3

எடுக்கும் மாக்கதை இன்றமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள் முடிக்
கடக்க ளிற்றைக் கருத்துள் இருத்துவாம்.

பொழிப்புரை :

பிறவிக் கடலினின்றும் உயிர்களை எடுத்து உய்யக் கொள்ளும் இத்திருத்தொண்டர் புராணம், இனிய தமிழ்ப் பாடல்களாக நிறைவுற்று, இந்நிலவுலகில் மேதக்க அருளை வழங்கிட, ஐந்து திருக் கைகளையும், தாழ்ந்த செவிகளையும், நீண்ட முடியினையும் உடைய மதம்பொருந்திய யானைமுகக் கடவுளை மனத்தில் இருத்தி வணங் குவாம்.

குறிப்புரை :

எடுக்கும் மாக்கதை - பிறவிக் கடலினின்றும் எடுக்கும் இப் பெருங்கதை. `என்னை இப்பவத்தில் சேரா வகையெடுத்து` (சித்தி. -பாயிரம் 3) என வருவதும் காண்க. இனி எடுத்துச் சொல்லப்படு கின்ற இம்மாக்கதை எனினும் அமையும். மாக்கதை - பெரியபுராணம். இப்பெயருடன் இந்நூல் வழங்குதற்கு இத்தொடரே காரணமாகும். நடக்கும் - நடத்தற் பொருட்டு: அஃதாவது நிறைவேறுதற் பொருட்டு. மூத்த பிள்ளையார் திருக்கரங்கள் ஐந்தனுள், ஒன்று மோதகம் ஏந்தி நிற்கும். ஒன்று இரத்தினக் கலசம் ஏந்தி நிற்கும். இது தம் தாய் தந்தையர்க்குக் காட்டும் உபசாரத்திற்கு ஆகும். நிறை குடம் காட்டி வரவேற்கும் வழக்கை நினைக. மற்றொன்று கயாசுரனை அழித்தற்குத் தம் கொம்பினை ஒடித்து நிற்கும். ஏனைய இரண்டனுள் ஒன்று கயிற்றையும், மற்றொன்று தோட்டியையும் கொண்டு நிற்கும். உயிர்கட்குற்ற தீங்கை நீக்குதற்கு இவ்விரு கைகளும் உதவுகின்றன. கடம் - மதநீர். யானை என்னும் பொதுமை பற்றி இவ்வாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன்
துதிசெயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே.

பொழிப்புரை :

இளம்பிறை வளர்தற்கு இடனாய திருச்சடையை உடைய கூத்தப்பிரானை எண்ணியும், வாழ்த்தியும், வழிபட்டும் உய்ந்த நாயன்மார்களின் தூய, சொல்மலர்களால் ஆகிய இவ்வரலாற் றில், பொதிந்து கிடக்கும் சொற்பொருள்களின் சுவை நலன்களை நுகர்ந்துகொண்டிருக்கும் புனிதமான, திருத்தொண்டர்கள் வதிந்தரு ளும் இப்பேரவை, இறைவனின் ஆணைவழி நின்று இவ்வுலகில் விளக்கமும் வெற்றியும் தந்து வளர்வதாகுக.

குறிப்புரை :

முன் துதி செயும் நாயன்மார் - முன்னியும் (எண்ணியும்), வணங்கியும் வாழ்ந்த அடியவர்கள். முன் - முன்னதாக எனப் பொருள் கொண்டு, அடியவர்கள் தம் செயல்கட்கு எல்லாம் முன்னதாக இறை வழிபாட்டை ஆற்றும் பெற்றியர் எனினும் அமையும். முன் - வழிபடுதலில் தாம் எல்லோர்க்கும் முன்னதாக எனப் பொருள் கொள்வதும் அமையும். `நம்மில் பின்பல்லது எடுக்க ஒட்டோம்` என வரும் திருவாசகமும் (தி.8 திருப்பொற். பா.5) காண்க. பொதி நலன் - சொற்பொருள்களின் சுவை நலன். ஏனைய நூல்களிலன்றி இந்நூலினிடத்தேயே, பொதிந்து நிற்கும் பத்திச் சுவை எனினும் அமையும். அன்றி இச்சொற்பொருள்களின் இடனாகவும், இவற்றிற்கு மேலாகவும் பொதிந்து நிற்கும் இறையின்பம் எனினும் அமையும். நாயன்மார் தூய சொல் மலர் - நாயன்மார்களால் அருளிச் செய்யப்பட்ட திருமுறைகள். நாயன்மார்களைப் பற்றிய திருமுறை என இரு வகையானும் பொருள்கொள நின்றது. இவ்வாற்றான் பன்னிரு திருமுறைகளும் அடங்குவவாயின. நுகர்தரு - நுகர்ந்தும், நுகர்ந்துகொண்டும், இனி நுகரவும் இருக்கின்ற: வினைத் தொகை விதிமுறை. இறைவனின் ஆணைவழி. பேரவை - இத்தகைய புனிதர்கள் இருக்கும் பேரவையே பேரவையாம். அன்றி வெறும் எண்ணிக்கையால் மட்டும் பெருகி நிற்கும் பேரவை, பேரவையாகாது என்பதாம். அது, பேருக்கு அவையாம்.

பண் :

பாடல் எண் : 5

அளவி லாத பெருமைய ராகிய
அளவி லாஅடி யார்புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பரி தாயினும்
அளவில் ஆசை துரப்ப அறைகுவேன்.

பொழிப்புரை :

யாவராலும் அளத்தற்கரிய தகவும், தொண்டும் உடையராகிய எண்ணிறந்த அடியவர்களின் திருத்தொண்டினைக் கூறு தற்கு ஒருப்பட்ட யான், அதனை அளவிட்டுச் சொல்லும் ஆற்றலுடை யேன் அல்லேனாயினும், அடியவனின் அளவுபடாத ஆசை உந்த, ஒருவாறு கூறத் தொடங்கினேன்.

குறிப்புரை :

அளவு கூட - வரையறைப்படுத்திக் கூற. `காசில் கொற்றத்து இராமன் கதையினை ஆசை பற்றி அறை யலுற்றேன்`` (கம்ப. -சிறப்புப்பாயிரம் 4) என்பர் கம்பரும்.

பண் :

பாடல் எண் : 6

தெரிவ ரும்பெரு மைத்திருத் தொண்டர் தம்
பொருவ ருஞ்சீர் புகலலுற் றேன்முற்றப்
பெருகு தெண்கடல் ஊற்றுண் பெருநசை
ஒருசு ணங்கனை ஒக்கும் தகைமையேன்.

பொழிப்புரை :

குளிர்ந்த கடலருகே பெருகிவரும் ஊற்று நீரை முழுமையாக உண்டுவிடுவேன் எனும் பெருவிருப்புடைய ஒரு நாயை ஒத்த தன்மையுடைய யான், உயிர்களால் முழுமையாக அறிதற்கரிய பெருமை வாய்ந்த திருத்தொண்டர்களின் ஒப்பற்ற சிறப்புக்களை எடுத்துச் சொல்ல முற்படுகின்றேன்.

குறிப்புரை :

தகைமையேன் புகலலுற்றேன் எனக் கூட்டுக. கடலருகே உளதாய ஊற்று நீராதலின் அந்நீர்ப் பெருக்கு என்றும் வற்றாது என் பது விளங்கும். அவ்வாறு பெருகிவரும் அந்நீரை முழுமையாகப் பருகுதற்கு நினையும் ஒரு நாயை ஒத்தவன் என்பதால், தொண்டர்தம் பெருமையும், ஆசிரியரின் எளிவந்த தன்மையும் ஒருங்கு அறிதற்கு ஏதுவாகின்றது. நாய் நக்கிக் குடிக்கும் இயல்பினது. ஆதலின் பெருகி வரும் நீரை முழுமையாகக் குடிக்க இயலாததோடு, குடிக்கும் நீரும் சிறிது சிறிதாகவே அமையும். அதுபோலத் திருத்தொண்டர்தம் பெருமை நினைய நினையப் பெருகிவரும் இயல்பினது. அதனை நான் முழுமையாகச் சொல்ல இயலாததோடு சொல்லுவதும் மிகச் சிறிதாகவே அமையும் என்பது கருத்து. அடியவர் திறம் ஆருயிர் களால் முற்ற அறிய இயலாது என்பதை நம்பியாரூரர்,
``இன்னவா றின்ன பண்பென் றேத்துகேன் அதற்கி யானார்
பன்னுபா மாலை பாடும் பரிசெனக் கருள்செய் என்ன``
-தி. 12 சரு.1-5 பா.198
எனப் பின் கூறுமாற்றானும் அறியலாம்.
ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றுஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்
காசில் கொற்றத்து இராமன் கதைஅரோ. -கம்பரா. சிறப்புப்பாயிரம்
எனவரும் கம்பர் திருவாக்கும் ஒப்பிட்டு உணர்தற்குரியதாம். நக்கிக் குடிக்கும் இயல்பினதாய நாயினைச் சேக்கிழார் கூற, அவ்வியல்பின தாய பூனையைக் கம்பர் கூறுகின்றார். கம்பர் கடலைக் கூற, சேக்கிழார் அதன்அருகே இருக்கும் ஊற்றைக் கூறியிருப்பது, தாம் எடுத்துக் கூறும் வரலாற்றருமையை மேலும் மிகுவிப்பதாகும் .

பண் :

பாடல் எண் : 7

செப்ப லுற்ற பொருளின் சிறப்பினால்
அப்பொ ருட்குரை யாவருங் கொள்வரால்
இப்பொ ருட்கென் னுரைசிறி தாயினும்
மெய்ப்பொ ருட்குரி யார்கொள்வர் மேன்மையால்.

பொழிப்புரை :

ஒருவரால் கூறப்படுகின்ற பொருட் சிறப்பால், அப் பொருளைக் கூறுதற்குரிய சொற்கள் சிறப்பிலவாயினும் அதுபற்றி இகழாது, யாவரும் ஏற்றுக் கொள்வர். அதுபோல, ஈண்டுக் கூறப் பெறும் அடியவர்தம் வரலாற்றினைக் கூறுதற்குரிய என் சொற்கள் தகுதியுடையன வல்லவாயினும், உண்மை காணும் அறிஞர்கள் இச் சொற்களால் கூறப்பெறும் பொருளை நோக்க, மேன்மையாகவே கருதுவர்.

குறிப்புரை :

மெய்ப்பொருட்கு உரியார் - உண்மை காணும் விருப்பு டையார். `எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு` (குறள் 423) என்பதால், அவர் பொருளை நோக்குவரன்றி, அதனைக் கூறுவார்தம் சொல் வகைமையை நோக்கார் என்பதாம். இனி மெய்ப்பொருள் - இறை வன் எனக் கொண்டு, அவனுக்கு அடியராயினார், தம்மையும் அடிய ராகக் கொள்வராதலின் அவர் தம்மை இகழார் என்பதுமாம். `தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை உடைமை எமை இகழார்` (சிவஞான. அவையடக்கம்) என்னும் ஞானநூலும்.

பண் :

பாடல் எண் : 8

மேய இவ்வுரை கொண்டு விரும்புமாம்
சேய வன்திருப் பேரம் பலஞ்செய்ய
தூய பொன்னணி சோழன்நீ டூழிபார்
ஆய சீர்அந பாயன் அரசவை.

பொழிப்புரை :

செந்நிறத்தவனாய கூத்தப் பெருமானின் திருப்பேரம்பலத்தை, சிவந்த நிறமுடையதும் தூயதுமான பொன்னால் வேய்ந்து அழகு செய்தவனும், இவ்வுலகில் ஊழியளவும் பரவிய நிலைத்த புகழுடையவனுமான அநபாயனின் அரசவை, பொருந்திய இவ்வுரையை ஏற்று மகிழும்.

குறிப்புரை :

சோழன் - இரண்டாம் குலோத்துங்கன். இவனிடத்து முதல் அமைச்சராகப் பணிபுரிந்தவர் சேக்கிழார். இவன் திருப்பேரம் பலத்திற்குப் பொன் வேய்ந்தமை கல்வெட்டுகளாலும் அறியப்படும் உண்மையாகும்.இப்பேரரசனின்பாட்டனான முதற் குலோத்துங்கனும் சிற்றம்பலத்திற்குப் பொன் வேய்ந்தவனாவன். அநபாயனின் தகவும் தொண்டும், தம்நன்றியுணர்வும் தோன்ற, இந்நூற்கண் இப்பேரரசனைப் பதினோரிடங்களில் போற்றி மகிழ்கின்றார் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 9

அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவருந்
தெருளின் நீரிது செப்புதற் காமெனின்
வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப்புகல் வாமன்றே.

பொழிப்புரை :

பேரருட் தன்மை வாய்ந்த திருத்தொண்டர்களின் பெருமையை முழுமையாகத் தெளிதற்கு மெய்யுணர்வில்லாத நீர், இவர் பெருமையை எங்ஙனம் கூறமுடியும்? எனில், மயக்கமற்ற மெய்ம் மொழியாலே வானின் இடமாக அருளிய கூத்தப் பெருமானின் அரு ளால் அதனைக் கூறுதற்கு இயலும் எனத் துணிந்து கூறுவாம்.

குறிப்புரை :

மெய்ம்மொழி வான்நிழல் - வானினின்றும் ஒலி வடிவாகத் தோன்றிய மெய்மொழி. கூத்தப் பெருமான் அடியெடுத்துக் கொடுத்த `உலகெலாம்` எனும் தொடரை இது குறிக்கும். எனவே என்னறிவால் கூறுதற்குத் தகுதியுடையேன் அல்லேன் ஆயினும், இறைவன் அடி எடுத்துக்கொடுத்த அருட்கொடையால் கூறமுடியும் என்பது கருத்து. நிழல் - வானொலி (அசரீரி). வெருளில்மெய் மொழிவான் - குற்றம் தீர்ந்த மறைகளை அருளுபவன்: இறைவன் எனப் பொருள் கூறுவாரும் உளர். இனி நிழல் என்பதற்கு இறை வனின் வேற்று வடிவாகிய நம்பியாரூரர் எனப் பொருள்கொண்டு, அவர் அருளிய திருத்தொண்டத் தொகையின் (தி. 7 ப. 39) துணை கொண்டு கூறுவேன் எனக் கூறுவாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 10

இங்கிதன் நாமங் கூறின் இவ்வுல கத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புறவிருள் போக்கு கின்ற
செங்கதி ரவன்போல் நீக்குந் திருத்தொண்டர் புராணம் என்பாம்.

பொழிப்புரை :

இவ்விடத்து இவ்வரிய பனுவலின் பெயரைக் கூறுமிடத்து, இவ்வுலகில் தோற்றமில் காலந்தொட்டு இருந்துவரும் புறவிருள் அகவிருள்களில், புறவிருளைப் போக்குகின்ற கதிரவனைப் போல, மாக்களின் உயிரிடத்துப் பொருந்தி நிற்கும் அக இருளாகிய ஆணவத்தைப் போக்குகின்ற திருத்தொண்டர் புராணம் என்று சொல்வாம்.

குறிப்புரை :

முன்னாள் - தோற்றமில் காலம் (அநாதிக் காலம்). உயிரி டத்துப் பொருந்தியிருக்கும் இருள் ஆணவமாகும். தாழ்வெனும் தன் மையோடும் சைவமாம் சமயம் சாரும் செந்நெறியில் நின்று ஒழுகும் அடியவர் பெருமக்களின் வரலாறுகளும், அப்பெருமக்களின் வாய் மொழிகளுமே இவ்விருளைப் போக்க வல்லன. ஆதலின் ஆசிரியர் இவ்வாறு கூறுவாராயினர்.

பண் :

பாடல் எண் : 11

பொன்னின் வெண்திரு நீறு புனைந்தெனப்
பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கும் அறிவரி யான்என்றும்
மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை.

பொழிப்புரை :

பொன்னிடத்து வெண்மையான திருநீற்றை அணிந் தாற்போல,அருளாளர்களால் சிறப்பித்துக் கூறப்படும் பனி சூழ்ந்த நீண்ட இமய மலையின் பகுதியில் உள்ளதும், அன்பரன்றிப் பிறர் எவரும் அறிதற்கரிய சிவபெருமான் எந்நாளும் நிலைபெற்று வீற்றிருந் தருளும் பெருமை பொருந்தியதுமானது திருக்கயிலாயமலையாகும்.

குறிப்புரை :

இமயமலை பொன்மயமானது. அதன் உச்சியிலுள்ளது திருக்கயிலாயமலையாகும். இது எஞ்ஞான்றும் பனிபடரப் பெற்றி ருத்தலின் வெண்மையாக இருக்கும். அப்பொன்மையும், வெண்மை யும் தோன்றப் `பொன்னின் வெண் திருநீறு புனைந்தென` என்று கூறி னார். புனைந்தென - புனைந்தாற் போல; ஈண்டு வந்த, என என்ற எச்சம், உவமப் பொருளில் வந்தது. இறைவன் வீற்றிருக்கப் பெற்ற சிறப்பினாலும், ஊழிதோறூழி உயர்தற்குரிய பெருமையினாலும், அருளாளர்கள் பலரும் இம்மலையைப் போற்றி வருவாராயினர். ஆதலின் ``பன்னுநீள்பனி மால்வரை`` என்றனர். பன்னுதல் - பாராட்டிக் கூறுதல், `பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும்` (தி.2 ப.106 பா.1) என்ற விடத்தும் இப்பொருள்படுதல் காணலாம். `கனவினும் தேவர்க்கு அரியோய் போற்றி நனவினும் நாயேற்கு அருளினை போற்றி` (தி.8 போற்றி. 43) என்பன போல் வரும் திருவாக்குகள் உண்மையின், `யார்க்கும்` என்றவிடத்து அன்பர் அல்லாத யார்க்கும் எனப்பொருள் கொள்ளப்பட்டது. திரு - முழுமுதற் பொருளாய திரு. மா - சலியாமையும் அளக்கலாகா அளவுடைமையும் பற்றி வந்த பெருமை. இவ்விரு சிறப்புகளையும் என்றும் உடைமையின் `திருமாமலை` என்றார்.

பண் :

பாடல் எண் : 12

அண்ணல் வீற்றிருக் கப்பெற்ற தாதலின்
நண்ணு மூன்றுல குந்நான் மறைகளும்
எண்ணில் மாதவஞ் செய்யவந் தெய்திய
புண்ணி யந்திரண் டுள்ளது போல்வது.

பொழிப்புரை :

யாவர்க்கும் மேலான சிவபெருமான் வீற்றிருந் தருளும் பேறு பெற்ற திருமலையாதலால், அது பொருந்திய மேல், கீழ், நடு ஆகிய மூவுலகங்களும், நான்மறைகளும் அளவில் தவம் செய, அத்தவத்தின் பயனாக வந்து சேர்ந்த புண்ணியங்களின் திரண்ட உருவென அமைந்துள்ளதாம்.

குறிப்புரை :

புண்ணியத்தின் நிறம் வெண்மை என்பர். அதன் பயனாக அடைதற்குரியவன் சிவபெருமான் ஆதலின், அவன் வீற்றிருக்கப் பெற்ற மலையும் புண்ணியத்தின் திரட்சியாய் வெண்மையாய் அமைந் துள்ளது என்றார். உலகியல் வழிநின்றார்க்குக் கற்களின் திரட்சியாகத் தோன்றும் மலை, அருளியல் வழிநின்றார்க்குப் புண்ணியத்தின் திரட்சியாய்க் காண நின்றது. மூன்று உலகு - மேல் கீழ் நடுவாகிய மூவுலகு.

பண் :

பாடல் எண் : 13

நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி
இலகு தண்தளி ராக எழுந்ததோர்
உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்
மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை.

பொழிப்புரை :

நிலை பெற்று விளங்குகின்ற எண்ணற்ற சிவப்பதி களும் மிகு ஒளி பெற்று விளங்கும் தளிராக, எழுகின்ற உலகம் என்ப தொரு ஒளி பொருந்திய அழகிய கொடியின் மேல், மலர்கின்ற வெள் ளிய பூவை ஒத்தது, அத்திருக்கயிலாயமலை என்பதாம்.

குறிப்புரை :

உலகைக் கொடியாகவும், அதன்கண் விளங்கும் சிவப் பதிகளைத் தளிராகவும், அதன்மீது எழில் பெற நிற்கும் திருக்கயிலையை மலராகவும் உருவகிக்கின்றார் ஆசிரியர். இதனால் சிவப்பதிகளுள் தலையாயதாக விளங்குவது திருக்கயிலைமலை என்பது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 14

மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்
கான வீணையின் ஓசையும் காரெதிர்
தான மாக்கள் முழக்கமும் தாவில்சீர்
வான துந்துபி யார்ப்பும் மருங்கெலாம்.

பொழிப்புரை :

மேதக்க நான்மறைகளின் ஓசையும், வித்தியா தரர்களின் இனிய இசை மீதூர்ந்த வீணையின் ஓசையும், மேகத்தோடு மாறு கொண்டு ஒலித்தும், மதநீர் பொழிந்தும், செருக்கி நிற்கும் யானை களின் ஓசையும், குற்றமற்றனவும், அளவிறந்த சிறப்பினை உடையன வுமான ஐவகைத் தேவ இசைக் கருவிகளின் ஓசையும் ஆகிய இப் பேரோசைகள் திருக்கயிலைமலையின் பக்கம் எல்லாம் எதிர்ந்து ஒலிக்கின்றன.

குறிப்புரை :

தானமாக்கள் - மதம் பொருந்திய யானைகள்.

பண் :

பாடல் எண் : 15

பனிவி சும்பி லமரர் பணிந்துசூழ்
அனித கோடி அணிமுடி மாலையும்
புனித கற்பகப் பொன்னரி மாலையும்
முனிவர் அஞ்சலி மாலையும் முன்னெலாம்.

பொழிப்புரை :

குளிர்ந்த வான் உலகின்கண் வாழும் தேவர்கள் வணங்கிச் சூழ்ந்து நிற்ப அவர்களின் அளவிறந்த அழகிய முடி வரிசையும், அத்தேவர்கள் தம் முடிமேல் விளங்கும் தூய கற்பக மலர்களினால் தொடுக்கப் பெற்ற பொன்னிழைகளினால் ஆய மாலை களும், முனிவர்கள் கைதொழூஉப் பரவ அவர்களின் குவித்த கைகளின் வரிசையும் ஆகிய இவைகள் எல்லாம் இறைவனின் திரு முன்னிலையில் விளங்கி நிற்கின்றன.எனவே இறைவனின் திருமுன்பு தேவரும் முனிவரும் வணங்கி நிற்பர் என்பது பெற்றாம்.

குறிப்புரை :

அனிதம் - அளவற்ற. மாலையென வருவனவற்றுள் பொன்னரி மாலை என்பது கற்பகப் பூ மாலை யாம். ஏனைய இரண்டும் வரிசையெனும் பொருளன.

பண் :

பாடல் எண் : 16

நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின்
நாடும் ஐம்பெரும் பூதமும் நாட்டுவ
கோடி கோடி குறட்சிறு பூதங்கள்
பாடி ஆடும் பரப்பது பாங்கெலாம்.

பொழிப்புரை :

தேவர்களின் நீடிய பதவிகளையும், ஐம்பொறி களானும் நாடுதற்குரிய ஐம்பெரும் பூதங்களையும், தாம் விரும்பின் தம் வயத்தவாக நிலை நிறுத்த வல்லனவாயுள்ள குறுகிய வடிவினை யுடைய சிறிய சிவபூத கணங்கள் எண்ணிறந்தனவாய்ப் பாடியும், ஆடியும் திருக்கயிலைமலையின்கண் உள்ள பரந்த இடங்களில் எல்லாம் மகிழ்ந்து நிற்கும்.

குறிப்புரை :

தேவர் நீடு நிலை என மாற்றுக. நீடு நிலை - உயர்ந்த தலைமைப் பதவிகள். நாடும் - ஐம்பொறிகளால் விரும்பப்படும். ஐம்புலன்களும் துய்த்தற்கு இடனாய இவ்வைம்பெரும் பூதங்களின் கூட்டாக இவ்வுலகு விளங்குதலின் இங்ஙனம் கூறினார். `நிலம், நீர், தீ, வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்` (தொல். மரபியல், 90) என்னும் தொல்காப்பியமும்.
நாட்டுதல் - பூதகணங்கள் தம் இச்சைவழி ஆட்படுத்திக் கொள்ளுதல். இப்பூதங்கள் சிவகணங்கள் எனப்படும். இவை இறைவன் அருள்வழியன்றிச் செயற்படாவாதலின் அவ்வருள்வழி நிற்கும் செயற்பாட்டின் வல்லமை கூறினார் ஆயிற்று. நாவரசரின் திருத்தோளில் இடபமும், சூலமும் பொறித்தனவும், ஞானசம்பந் தருக்கு உலவாக்கிழியினை வழங்கியதும். சுந்தரரிடம் இருந்த பண்டாரங்களைக் கவர்ந்தனவும் இச்சிவகணங்களேயாம் என்பது அறியத்தக்கது. கோடிகோடி - கோடி கோடியாக விளங்கும் பூதங்கள். எண்ணிறந்தமை காட்ட இவ்வாறு கூறினார். குறள்சிறு - மிகச் சிறிய உடல் அளவிற்கேற்பக் கைகளும் கால்களும் அமைய விளங்கலின் இங்ஙனம் கூறினார்.

பண் :

பாடல் எண் : 17

நாய கன்கழல் சேவிக்க நான்முகன்
மேய காலம் அலாமையின் மீண்டவன்
தூய மால்வரைச் சோதியின் மூழ்கியொன்
றாய அன்னமும் காணா தயர்க்குமால்.

பொழிப்புரை :

தம் தலைவனாய சிவபெருமானின் திருவடிகளை வணங்க வந்த நான்முகன், தான் சென்ற காலம் அதற்கு ஏலாததாய் அமைய, மீளத் திரும்பியவன், அத்தூய வெள்ளிமலையின் பேரொளி யில் மறைந்து, வேறு காணப்படாத தன் ஊர்தியாகிய அன்னப் பறவை யைக் காணாது வருந்துவானாயினன் என்பதாம்.

குறிப்புரை :

இறைவனை வணங்கற்கு அவரவர்க்கும் உரிய காலம் வரையறுக்கப் பெற்றிருந்தமை, இதனால் அறியலாம். இது போன்றே வணங்கும் அடியவர்களுள் ஒருசாரார் பிறிதொரு சாரார்க்கு இடையூறு இன்றித் தமக்குள் இடவரையறைப்படுத்திக் கொண்டு வணங்கியமை `இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்` எனத் தொடங்கும் திருவாசகத்தால் (தி.8 திருப்பள்ளி.4) அறியலாம். இவையன்றி வழிபாட்டிற்கெனச் செல்லும் அடியவர்களும் ஒருவர் பின் ஒருவராக இருந்து முறையாக வழிபாடு ஆற்றியமை `போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்` (தி.4 ப.3 பா.1) என வரும் திருமுறைத் தொடரால் அறியலாம்.
வெள்ளிமலை வெண்மையானது. அன்னமும் வெண்மை யானது. எனினும் அவ்வன்னத்தின் வெண்மையினும் அவ்வெள்ளி மலையின் வெண்மை மிகப் பெரியதாக விளங்கி நிற்றலின், அவ்வன் னம் அவ்வெண்மையினின்றும் வேறுபடக் காண இயலாததாயிற்று. `வெயிலிடைத் தந்த விளக்கென ஒளியிலா மெய்யாள்` (கம்பரா. சுந். காட்சிப் பட. 4) என்பதும் நினைவு கூர நின்றது.
`வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது
வெய்யோனை ஆகாத மீன்போல`
எனவரும் சிவஞானபோதமும் (சூ.5 அதி.2 உதா.2 ) ஈண்டு நினைவு கூரத்தக்கது.

பண் :

பாடல் எண் : 18

காதில்வெண் குழையோன் கழல்தொழ நெடியோன்
காலம்பார்த் திருந்ததும் அறியான்
சோதிவெண் கயிலைத் தாழ்வரை முழையில்
துதிக்கையோன் ஊர்தியைக் கண்டு
மீதெழு பண்டைச் செழுஞ்சுடர் இன்று
வெண்சுட ரானதென் றதன் கீழ்
ஆதிஏ னமதாய் இடக்கலுற் றானென்
றதனைவந் தணைதருங் கலுழன்.

பொழிப்புரை :

திருச்செவியில் வெண் சங்கினால் ஆய குழையை அணிந்த இறைவனின் திருவடிகளைத் தொழுதற்கு நெடியவனாகிய திருமால், காலம் பார்த்திருத்தலை அறியாதவனாகிய கருடன், வெண் மையான கயிலையின் சாரலில் உள்ளதொரு குகையில் இருந்த மூத்த பிள்ளையாரின் ஊர்தியாகிய மூஞ்சூறு இருத்தலைப் பார்த்து, முன் பொரு காலத்து மேல் எழுந்த செழுஞ்சுடர்ப் பிழம்பானது இன்று வெண்சுடர்ப் பிழம்பாய் நிற்கின்றது என்று எண்ணிய எண்ணத்தால், அதனைப் பண்டு ஒரு பன்றியாய் நிலத்தைத் தோண்டிக் காண முயன்ற திருமால், இன்றும் அவ்வாறு காண இவ்வடிவில் முயன்றான் என்று கருதி அம்மூஞ்சூறிடத்து வந்து சேரும்.

குறிப்புரை :

இது வெள்ளிப் பாடல் என்பர். எனினும் பதிப்புகள் அனைத்திலும் இப்பாடல் இடம் பெற்றிருப்பதால் இதற்கும் உரை எழுதப் பெற்றது. காதில் வெண் குழையோன் - தோடுடைய செவியன். தன் தலைவனான பெருமானை வழிபடுதற்குக் காலம் பார்த்துத் திரு மால் இருத்தலை அறியாத கருடன், அவன் தான் இன்று மீண்டும் இவ் வெண்பிழம்பைக் காண முயன்று பன்றி வடிவெடுத்துக் காண முயல்கின் றனனோ எனக் கருதினன் என்பதாம்.
கு-ரை: மூஞ்சூறு பன்றிக்கு ஒருபுடை ஒப்புமையாய் இருத்தலின் அதனை இவ்வாறு கருதினன் கருடன். இதனை அணியிலக்கண நூலார் திரிபதிசயம் என்பர். கலுழன் - கருடன்.

பண் :

பாடல் எண் : 19

அரம்பைய ராடல் முழவுடன் மருங்கின்
அருவிகள் எதிரெதிர் முழங்க
வரம்பெறு காதல் மனத்துடன் தெய்வ
மதுமல ரிருகையும் ஏந்தி
நிரந்தரம் மிடைந்த விமானசோ பான
நீடுயர் வழியினால் ஏறிப்
புரந்தரன் முதலாங் கடவுளர் போற்றப்
பொலிவதத் திருமலைப் புறம்பு.

பொழிப்புரை :

இந்திரன் முதலிய இறையவர் பலரும் போற்ற விளங்கும் பொற்புடைய அத் திருமலைச் சாரலில், வரம் பெறும் வேட்கை பொருந்திய மனத்துடன் கூடிய தெய்வ மகளிர், கற்பகத் தருவின் தேன் பொருந்திய மலர்களை இரு கைகளிலும் ஏந்தி, இடை யீடின்றி நெருங்கிய விமானங்களுடன் கூடிய படிவழி ஏறி வந்து வணங்க, அம்மகளிரின் ஆடலுக்கு ஏற்ப ஒலித்து நிற்கும் மத்தள ஓசை யுடன், அம்மலையருகில் உள்ள அருவிகளும் ஒன்றோடொன்று மாறு பட்டு ஒலித்து நிற்கும்.

குறிப்புரை :

நிரந்தரம் - இடையீடின்றி எப்போதும். சோபானம் - படிநிலை. புரந்தரன் - இந்திரன்.தெய்வ மகளிரும் இந்திரன் முதலிய தேவர்களும் போற்றப் பொலிவது அத்திருமலை என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 20

வேதநான் முகன்மால் புரந்தரன் முதலாம்
விண்ணவர் எண்ணிலார் மற்றும்
காதலால் மிடைந்த முதற்பெருந் தடையாம்
கதிர்மணிக் கோபுரத் துள்ளான்
பூதவே தாளப் பெருங்கண நாதர்
போற்றிடப் பொதுவில்நின் றாடும்
நாதனார் ஆதி தேவனார் கோயில்
நாயகன் நந்தியெம் பெருமான்.

பொழிப்புரை :

நான்மறைகளில் வல்ல நான்முகன், திருமால், இந்திரன் முதலாக உள்ள எண்ணற்ற விண்ணவர்களும், மற்றும் பெருமானிடத்துப் பத்திமை பூண்ட முனிவர் முதலாயினாரும், இறை வனை வணங்குதற் பொருட்டு நிரல்படச் செல்லாது நெருங்கிச் சேரின், அவர்களை நிரல்பட நிறுத்தி ஆற்றுப்படுத்தும் முதல் பெருந் தடையாக விளங்கும் ஒளி பொருந்திய மணிகளால் ஆய திருக்கோபுரத்தின் திரு வாயிலின்கண் உள்ளவரும், சிவபூதங்களும், பத்திமை பூண்ட வேதா ளங்களும் முதலாய பெருங்கணநாதர்கள் போற்றி மகிழ்ந்திடத் திருக் கோவிலில் நிலையாக நின்று ஆடியருளுகின்ற தலைவனாரும், தோற் றமில் காலத்தேயே நிலை பெற்று இருந்தருள்பவரும், சிவபெருமா னின் திருக்கோவிலின் காவல் தலைவராக இருந்தருளும் நந்தியெம் பெருமான் ஆவர்.

குறிப்புரை :

முதல் பெருந் தடை - முதல் தடை + பெருந் தடை எனக் கூட்டுக. முதல் தடை - தடுத்தலில் முதன்மையாக நிற்கும் தடை. பெருந் தடை - இவரை மீறிச் செல்ல முடியாத தடை. இவ்வாறு தடை செய்பவர் நந்தியெம்பெருமான் ஆவர். இறை வழிபாடு ஆற்றுவா ரைத் தடுத்து நிறுத்தல் மறச்செயலாகும்.ஆனால் ஒருவர் ஒருவரின் முந்தச் சென்று வழிபட முயலின் மன அமைதியும் இராது; உடல் நெருக்கத்தால் மொழி மெய்களால் ஆய வழிபாடாற்றலும் செவ்வனே நிறைவேறாது. அந்நிலையை நீக்கவே அன்னோரைத் தடுத்து நிறுத்துதலின் இது அறனாயிற்று. வேதாளம் - பெரும் பேய். அவை அத் தன்மையினின்றும் நீங்கிச் சிவவழிபாடு செய்யும் பெற்றி யால் ஏனைய சிவ கணங்களோடு ஒருங்கு வைத்து எண்ணும் பெற்றி யவாயின. கோயில் நாயகன் - திருக்கோயிலைக் காத்தலில் தலைமை பூண்டு நிற்பவன்.

பண் :

பாடல் எண் : 21

நெற்றியிற் கண்ணர் நாற்பெருந் தோளர்
நீறணி மேனியர் அனேகர்
பெற்றமேல் கொண்ட தம்பிரான் அடியார்
பிஞ்ஞகன் தன்னருள் பெறுவார்
மற்றவர்க் கெல்லாந் தலைமையாம் பணியும்
மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும்
கற்றைவார் சடையான் அருளினாற் பெற்றான்
காப்பதக் கயிலைமால் வரைதான்.

பொழிப்புரை :

நெற்றியில் கண்களையுடையராய்ப் பருத்த நான்கு தோள்களையுடையராய்த் திருநீற்றினை அணிந்த திருவடிவுடைய ராய் உள்ளார்க்கும், விடை மீது இவர்ந்து வரும் பெருமானுக்கு அடிய வராய் உள்ளார்க்கும், அழகிய தலைக்கோலம் உடையனாய சிவ பெருமானின் திருவருள் உடையார்க்கும், மற்றும் ஆண்டு இருப்பார் அனைவர்க்கும் தலைவராய், இறைவற்குப் பணி விடை செய்யும் பேற்றையும், மலரனைய திருக்கைகளில் உடைவாளும் பிரம்பும் கொண்டு அடியவரை ஆற்றுப்படுத்தும் பொறுப்பையும், தொகுதியா கக் கட்டிய நீண்ட சடையினையுடைய சிவபெருமானின் திருவருள் கருணையால் பெற்றவர் திருநந்திதேவர் ஆவர். அவர்தம் காவலைப் பெற்றிருப்பது இத்திருக்கயிலை மலையாகும்.

குறிப்புரை :

சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கும் சங்கரனை அடையும் நன்மார்க்கம் ஆகும்.
அவற்றுள் இங்குக் குறிக்கப் பெறுவோர் மூவர். நெற்றியில் கண்ணும் நாற்பெருந் தோளும் நீறணி மேனியும் உடையவர், யோக நெறியில் நின்று அத்தகுதிக்குரிய சாரூபத்தைப் பெற்றவர்.
சாரூபமாவது இறைவன் திருவுருவத்தைப் பெறுதலாம். ஆத லின், பெருமானுக்குரிய வடிவும் வண்ணமும் இவர்க்கும் உளவாயின.
தம்பிரான் அடியார் என்பார் கிரியை நெறியில் நிற்பவராவர். அருள் பெறுவார் என்பார் சரியை நெறியில் நிற்பவராவர்.
சுரிகை - உடைவாள். தலைமையும் சுரிகையும் பிரம்பும் பெரு மானின் அருளால் பெற்ற நந்தியெம்பெருமான் காப்பது திருக்கயிலை மலையாம்.

பண் :

பாடல் எண் : 22

கையின்மான் மழுவர் கங்கைசூழ் சடையில்
கதிரிளம் பிறைநறுங் கண்ணி
ஐயர்வீற் றிருக்குந் தன்மையி னாலும்
அளப்பரும் பெருமையி னாலும்
மெய்யொளி தழைக்குந் தூய்மையி னாலும்
வென்றிவெண் குடைஅந பாயன்
செய்யகோல் அபயன் திருமனத் தோங்குந்
திருக்கயி லாயநீள் சிலம்பு.

பொழிப்புரை :

தம் இடக் கையில் மானும், வலக் கையில் மழுவும் உடையவரும், கங்கை சூழ்ந்து நிற்கும் திருச்சடையை உடையவரும், அதன்கண் ஒளி பொருந்திய இளம் பிறையையும் நறுமணம் மிக்க கொன்றையையும் அணிந்திருப்பவருமான மிகப் பெரியவராய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தன்மையினாலும், அளவிடற்கரிய பெருமையினாலும், தன்பால் வெண்மையான ஒளிமிக்கு இருக்கும் தூய்மையினாலும், வெற்றி பொருந்திய வெண்கொற்றக் குடையை யுடையவரும், செவ்விய செங்கோலையுடையவருமான அநபாய ரின் திருஉள்ளத்தில் ஓங்கி நிற்கும் சிறப்பினை உடையது திருக் கயிலாயம் என்னும் நீண்ட பெரிய மலையாகும்.

குறிப்புரை :

ஐயர் - பெரியோர். மெய் - திருக்கயிலாயமாம் மெய். ஒளிதழைக்கும் - `பொன்னின் வெண் திருநீறு புனைந்தென` எனத் தொடங்குதற்கண் கூறியவாறு, தழைத்து நிற்கும் வெண்மையான ஒளி. மெய் - திருநீறு எனப் பொருள் கொண்டு அதன் ஒளி தழைக்கும் எனினும் ஆம். திருநீறு மெய்யாதல் `சத்தியமாவது நீறு` (தி.2 ப.66 பா. 3) என்பதாலும் அறியப்படும். மெய் ஒளி - மெய்ப்பொருளை உணர்ந்தார் தம் ஒளி; `ஐந்தும் ஆறு அடக்கியுள்ளார் அரும்பெருஞ் சோதியாலும்` (தி.12. பு.10 பா.131) என வருதலின் அத்தகைய ஒளி எனலும் ஆம்.
அநபாயர் - அபாயம் (தீங்கு) இல்லாமல் செய்பவர். ஆனபயம் ஐந்தும் தீர்த்து அறங் காத்தலின் அநபாயர் ஆயினர். `கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது` (தி.4 ப.11 பா.12) எனவரும் அப்பரடிகள் திருவாக்கும் காண்க. கோட்டம் - தம்கண்ணும் தம்மால் காக்கப்படும் உயிர்களிடத்தும் உள்ள கோட்டம். திருமனம் - செம்மையாகிய திருவினை உடைய மனம்: `திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட` (தி.7 ப.39 பா.4) என வருவதும் காண்க`.

பண் :

பாடல் எண் : 23

அன்ன தன்திருத் தாழ்வரை யின்னிடத்து
இன்ன தன்மையன் என்றறி யாச்சிவன்
தன்னை யேயுணர்ந் தார்வம் தழைக்கின்றான்
உன்ன ருஞ்சீர் உபமன் னியமுனி.

பொழிப்புரை :

இதுகாறும் கூறிய அத்தன்மைகளை உடைய திருக்கயிலையின் அடிவாரத்தே, இவ்வாறாய தன்மையுடையர் என யாவரானும் அறியப்படாதவராகிய சிவபெருமானையே மனத்தகத்து எண்ணியும், இடையறாப் பேரன்பால் இயைந்து அநுபவித்துக் கொண்டும் இருப்பவர், நினைத்தற்கரிய சிறப்பினையுடைய உபமன் னியு முனிவர் என்பவராவர்.

குறிப்புரை :

`அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே` (தி.6 ப.97 பா.10) என்பர் அப்பரடிகள். `இன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மானை` (தி.7 ப.59 பா.1) என்பர் சுந்தரர். சிவன் தன்னையே - ஏகாரம் பிரிநிலை; தேற்றமும் ஆம். ஆர்வம் - ஆசை. இது அன்பின் வழியதாதலின் இடையறாப் பேரன்பு என உரை கொள் ளப் பெற்றது.

பண் :

பாடல் எண் : 24

யாத வன்துவ ரைக்கிறை யாகிய
மாத வன்முடி மேலடி வைத்தவன்
பூத நாதன் பொருவருந் தொண்டினுக்கு
ஆதி யந்தம் இலாமை யடைந்தவன்.

பொழிப்புரை :

அவ்வுபமன்னியு முனிவர், யது மரபில் பிறந்தவ னும், துவாரகைக்கு அரசனுமாகிய கண்ணனின் முடிமேல் தம் திருவடி களைச் சூட்டியவர். உயிர்கட்குத் தலைவராய் உள்ள சிவபெருமா னிடத்துத் தாம் கொண்டிருக்கும் ஒப்பற்ற திருத்தொண்டிற்கு முதலும் முடிவும் இல்லாத தன்மையும் பெற்றவர்.

குறிப்புரை :

யாதவன் - யது என்ற அரசன்வழி வந்த சூரிய குலத்து அரச மரபினன். கண்ணன் இம்மரபில் வந்தவன் ஆதலால் `யாதவன்` என அழைக்கப்பெற்றான். இம்மரபில் தோன்றிய கண்ணன் இடைச் சேரியில் வளர்ந்து வந்த தொடர்பு பற்றி, இடையர்களும் யாதவர் ஆயினர்.
முடிமேல் அடிவைத்த வரலாறு: சிவதீக்கை பெறாத கண்ணன், யமுனை ஆற்றங்கரையில் சிவ வழிபாடு ஆற்றிக் கொண்டிருந்தான். வழிபட்டபின், அம்மலர்களை யமுனை ஆற்றில் இட்டான். அவ்வாற் றின்வழி வந்த மலர்களை உபமன்னியு முனிவர் எடுத்துச் சிவவழி பாடு செய்தனர். அவை கண்ணனால் வழிபாடாற்றப் பெற்ற மலர்கள் (நிருமாலியம்) என்று ஆங்குள்ளார் முனிவரிடத்தில் கூறிய பொழுது, `கண்ணன் சிவதீக்கையின்றிவழிபட்டனன், ஆதலின் அவன் இட்ட மலர்கள் நிருமாலியம் ஆகா. எனவே அவற்றை மீண்டும் எடுத்து வழிபடுதலில் வழுவில்லை` என்றனர். அதுகேட்ட கண்ணன் தீக்கையின்றித் தான் இதுகாறும் செய்து வந்த சிவபூசைக்கு வருந்தி, அம்முனிவரை அடைந்து முறையாகச் சிவதீக்கை பெற்றனன் என்பது வரலாறு. அவ் வரலாற்றை உளங் கொண்டே `முடிமேல் அடி வைத்தவன்` என்றார்.

பண் :

பாடல் எண் : 25

அத்தர் தந்த அருட்பாற் கடலுண்டு
சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்
பத்த ராய முனிவர்பல் லாயிரர்
சுத்த யோகிகள் சூழ இருந்துழி.

பொழிப்புரை :

உயிர்கட்கு எல்லாம் தந்தையாக இருந்தருளும் இறைவன் வழங்கிய திருப்பாற்கடலை உண்டு, மனநிறைவு பெற்று, அவ்வுணவு தெவிட்டிட வளர்ந்தவராகிய உபமன்னியு முனிவர், இறைவர்க்குப் பத்தராய முனிவர் பலரும் தூய சிவயோகியரும் சூழ அங்கிருந்த பொழுது...

குறிப்புரை :

அத்தர் - தந்தை: `எனக்கு அன்னையும் அத்தனும் அல்லனோ பெரும!` என்பதும் காண்க. உபமன்னியு முனிவர் தம் குழந்தைப் பருவத்தே பால்வேண்டி அழ, வசிட்டரும் குழந்தையைச் சிவபெருமான் திருமுன்னிலையில் இட்டு வணங்கித் தம் குறையைக் கூறினார். இறைவனும் இரங்கி, அவர் உண்ணத் திருப்பாற்கடலை வழங்கியருளினன் என்பது வரலாறு. ``பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்`` (தி.9 திருப்பல்.9) என்னும் திருப்பல்லாண்டும். சுத்த யோகிகள் - சுத்த அவத்தையில் நின்ற யோகிகள் என்பர் சிவக்கவிமணியவர்கள் (பெ.பு.உரை). அவா வறுத்தல் முதலிய தூய குணங்களையுடைய சிவயோகியர் என்பர் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் (பெ.பு.உரை). உண்டு என்பது பொது வினையாதலின் `கடல் உண்டு` என்றார்.

பண் :

பாடல் எண் : 26

அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திருந் தாரெலாம்
இங்கி தென்கொல் அதிசயம் என்றலும்.

பொழிப்புரை :

அவ்விடத்தே ஒரு பேரொளியானது ஆயிரம் கதிரவர்கள் ஒருங்கு தோன்றி நிற்கும் பேரொளி போன்று, அவ் வுபமன்னியு முனிவர் முன்பு தோன்ற, தூய தவமுனிவர்களாய் ஆண்டுச் சூழ்ந்திருந்தார் அனைவரும், இவ்விடத்து இது தோன்றுவது என்ன அதிசயம்? என்று வினவவும்.

குறிப்புரை :

துங்கம் - தூய்மை: பெருமையுமாம். ஆயிரம் ஞாயிறு - எண்ணிறந்த ஞாயிறு.

பண் :

பாடல் எண் : 27

அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தி யாவுணர்ந் தம்முனி தென்திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்றொண்டன்
எந்தை யார்அரு ளால்அணை வான்என.

பொழிப்புரை :

மாலைப் பொழுதில் வானில் தோன்றும் இள மதியைச் சூடிய பெருமானின் திருவடிகளை இரவு பகலாகச் சிந்தித் துக் கொண்டிருக்கும் திறத்தால், உண்மை நிகழ்வை உணர்ந்து, நம்தென் திசையில் தோன்றியருளிய நாவலூராளி என, முனிவராலும் போற் றப் பெறும் வன்தொண்டர், எம்பெருமானின் திருவருளால் இவ்விடத் திற்கு எழுந்தருளுகின்றார் என்று கூற.

குறிப்புரை :

அந்தி - மாலை. `குடதிசை மதியது சூடு சென்னி` (தி.1 ப.111 பா.6) என்னும் திருமுறையும். சிந்தியா உணர்ந்து - இறை வனை இடையறாது சிந்தித்திருப்பதால் உணர்ந்து. `நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி, அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக் குறிநீர்மையர்` (தி.1 ப.17 பா.6) எனத் திருஞான சம்பந்தர் அருளுவதும் நினைவு கூர்தற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 28

கைகள் கூப்பித் தொழுதெழுந் தத்திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோ ரந்தணர்.

பொழிப்புரை :

இவ்வாறு தாம் உணர்ந்த வகையில் கைகளைக் குவித்துத் தொழுது கொண்டே, அவ்வொளி செல்லும் திசை நோக்கித் தம் உடல் முழுதும் ஆனந்த வெள்ளம் பெருக, சிவந்த நீண்ட சடையை உடைய முனிவர் செல்கின்ற பொழுது, ஆண்டுள்ள மாதவர்கள் தம் ஐயம் நீங்க ஒரு வினாவை அவரிடம் வினவுவாராயினர்.

குறிப்புரை :

ஆனந்த வாரி - ஆனந்த வெள்ளம்.

பண் :

பாடல் எண் : 29

சம்பு வின்அடித் தாமரைப் போதலால்
எம்பி ரான்இறைஞ் சாயிஃ தென்னெனத்
தம்பி ரானைத்தன் னுள்ளந் தழீஇயவன்
நம்பி யாரூரன் நாம்தொழுந் தன்மையான்.

பொழிப்புரை :

சிவபெருமானின் திருவடித் தாமரை மலர்களை யன்றி, `எம்பெருமானே! நீவிர் யாரையும் வணங்க மாட்டீர்! அவ் வாறு இருக்க, இவரை வணங்கியது என்னோ?` என்று கேட்க, அவ ரும், `யாவர்க்கும் முழுமுதற் கடவுளாய சிவபெருமானைத் தம் உள்ளத்தே வைத்து எண்ணிக் கொண்டிருப்பவராய நம்பியாரூரர், நம் மால் தொழப்படும் தன்மையர்` என்று கூற.

குறிப்புரை :

சம்பு - இறைவன்.

பண் :

பாடல் எண் : 30

என்று கூற இறைஞ்சி இயம்புவார்
வென்ற பேரொளி யார்செய் விழுத்தவம்
நன்று கேட்க விரும்பு நசையினோம்
இன்றெ மக்குரை செய்தருள் என்றலும்.

பொழிப்புரை :

உபமன்னியு முனிவர் தாம் வணங்கியதற்கான காரணம் இஃது என்று கூற, அம்முனிவர்களும் வணங்கிக் கூறுவார், `நம்பியாரூரர் செய்த தவத்தை அறிய நாங்கள் விரும்புகின்றோம், எமக்கு அதனை அருளிச்செய்ய வேண்டும்` என்று வேண்டிட.

குறிப்புரை :

வென்றபேரொளியார் - தம் தவமிகுதியால் ஐம்பொறி களையும் வென்ற பேரொளிப் பிழம்பாயவர்; நம்பியாரூரர்.

பண் :

பாடல் எண் : 31

உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்
வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொரு ளாகிய
வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும்
அள்ளும் நீறும் எடுத்தணை வானுளன்.

பொழிப்புரை :

உபமன்னியு முனிவரும் அவர்கள் கேட்ட வர லாற்றை உள்ளவாறு அருளிச் செய்வாராய், பெருக்குடைய கங்கை நீரைத் தாங்கிய சடையை உடைய மெய்ப்பொருளாய சிவபெருமான், தம் திருவுடம்பில் அணிதற்குரிய, தேன் பொருந்திய மலர்களால் தொடுத்த திருமாலையையும், அணிதற்குரிய திருவிரலால் அள்ளு கின்ற திருவெண்ணீற்றினையும் எடுத்துக் கொடுக்கும் திருத்தொண்டர் ஒருவர் இருந்து வந்தார்.

குறிப்புரை :

மதுமலர் - தேன் பொருந்திய மலர்.

பண் :

பாடல் எண் : 32

அன்ன வன்பெயர் ஆலால சுந்தரன்
முன்னம் ஆங்கொரு நாள்முதல் வன்தனக்கு
இன்ன வாமெனு நாள்மலர் கொய்திடத்
துன்னி னான்நந் தனவனச் சூழலில்.

பொழிப்புரை :

அத்திருத்தொண்டரின் பெயர் ஆலாலசுந்தரர் என்பதாம். அவர் முன்பொருநாள், திருக்கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு, இன்ன மலர்கள் உரியனவாம் எனக் கருதி, அம் மலர்களைக் கொய்தற்கெனத் திருநந்தனவனச் சோலைக்குச் சென்றரு ளினர்.

குறிப்புரை :

நாள் மலர் - அன்றலர்ந்த மலர்.

பண் :

பாடல் எண் : 33

அங்கு முன்னெமை ஆளுடை நாயகி
கொங்கு சேர்குழற் காமலர் கொய்திடத்
திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார்
பொங்கு கின்ற கவினுடைப் பூவைமார்.

பொழிப்புரை :

அத்திருநந்தன வனத்தில் ஆலாலசுந்தரர் வருதற்கு முன்னமேயே, உயிர்களை எல்லாம் ஆட்கொண்டு அருளுகின்ற தலைவியாம் உமையம்மையாரது, மணம் வீசுகின்ற கூந்தலுக்கு ஏற்கும் மலர்களைக் கொணர்தற்காக, முழுமதியென விளங்கும் ஒளி பொருந்திய முகத்தினையுடைய தோழியர் இருவர் சென்றிருந்தனர். அவர்கள், பொங்கி மிகும் அழகினையுடைய நன்மகளிராவர்.

குறிப்புரை :

கொங்கு - மணம்: இயற்கை மணம்.

பண் :

பாடல் எண் : 34

அந்த மில்சீர் அனிந்திதை ஆய்குழல்
கந்த மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருளென.

பொழிப்புரை :

அத்தோழியர், அளவிறந்த சிறப்பினையுடைய அனிந்திதை என்பாரும், நுணுகிச் செறிந்த கூந்தலையும் நறுமணம் மிக்க மாலையையும் உடைய கமலினியாரும் ஆவர். கொத்தாகப் பூத்த அழகிய மலர்களை அவர்கள் கொய்து கொண்டிருக்கும் பொழுது, தேவதேவனாம் சிவபெருமானின் திருவருள் என வந்து.

குறிப்புரை :

ஆய்குழல் - நுணுகிய குழல். கந்தம் - நறுமணம். கொந்து- பூங் கொத்து.

பண் :

பாடல் எண் : 35

மாத வம்செய்த தென்றிசை வாழ்ந்திடத்
தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்
போது வாரவர் மேல்மனம் போக்கிடக்
காதல் மாதருங் காட்சியிற் கண்ணினார்.

பொழிப்புரை :

பெருந்தவம் செய்த தென்னகம் வாழ்வடையவும், உயிர்கட்கு உற்ற தீங்குகள் இல்லையாகச் செய்யும் திருத்தொண்டத் தொகையை உலகிற்கு வழங்கவும் வருபவர், அவ்விரு தோழியர் மேலும் தம் மனத்தைச் செலுத்த, காதலுற்ற அவ்விரு பெண்களும் தமது கட்பொறியினால் பொருந்த நோக்கினர்.

குறிப்புரை :

தென்னகம் மாதவம் செய்திருக்குமாறு - அடுத்து வரும் 31 முதல் 36 வரையுள்ள பாடல்களில் விவரிக்கப்படுகிறது. தீதிலாத் திருத்தொண்டத் தொகை - உயிர்க்குற்ற தீங்கினை இல்லையாகச் செய்யும் திருத்தொண்டத் தொகை. ஈண்டுத் தீங்கு என்பது யான் எனது எனும் செருக்கினால் வரும் பிறவிப் பிணியாகும். காட்சியில் கண்ணினார் - தம் கட்பொறியினால் தம் கருத்தமைவைத் தெரிவித் தார்கள். `கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில` (குறள், 1110) என்பர் திருவள்ளுவனாரும்.
அனிந்திதை, கமலினியார் ஆகிய இரு பெண்கள் மீது சுந்தர ரும், அப்பெண்கள் சுந்தரர் மீதும் கருத்தொருமித்த பார்வையைச் செலுத்தியதே, பின் அவர்கள் மையல் மானுடமாய்ப் பிறத்தற்கு ஏதுவாயிற்று. `கண்டது மன்னும் ஒருநாள் அலர் மன்னும் திங்களைப் பாம்பு கொண்டற்று` (குறள், 1146) எனவரும் குறட்பாவும் ஈண்டு நினைவு கூரத்தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 36

முன்னம் ஆங்கவன் மொய்ம்முகை நாண்மலர்
என்னை யாட்கொண்ட ஈசனுக் கேய்வன
பன்ம லர்கொய்து செல்லப் பனிமலர்
அன்னம் அன்னவ ருங்கொண் டகன்றபின்.

பொழிப்புரை :

அவ்வாறு கண்ட மகளிர், அத்திருநந்தனவனத்தை விட்டுச் செல்லும் முன்னமேயே, வண்டுகள் மொய்த்தற்குரிய புதிய மலர்களை எல்லாம், `இவையே என்னை ஆட்கொண்டருளும் இறைவற்குப் பொருந்துவன` எனக் கருதி அவ்வாறு பறித்த மலர்கள் பலவற்றையும் ஆலாலசுந்தரர் கொண்டு செல்ல, குளிர்ந்த மலர்களைக் கொய்த அன்னத்தை ஒத்த அத்தோழியரும் திருநந்தனவனத்தை விடுத்துச் சென்றனர்.

குறிப்புரை :

மலர் பறித்தற்கு வந்த அச்சேடியருக்குப் பின் வந்த சுந் தரர், தாம் மலர் கொய்து கொண்டு அவர்களுக்கு முன்னே சென்றனர் என்பதாம். மொய்ம் முகை - வண்டுகள் மொய்த்தற்குரிய அரும்புகள்.

பண் :

பாடல் எண் : 37

ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
மாதர் மேல்மனம் வைத்தனை தென்புவி
மீது தோன்றிஅம் மெல்லிய லாருடன்
காதல் இன்பம் கலந்தணை வாயென.

பொழிப்புரை :

யாவர்க்கும் மூலகாரணமாய் நிற்கும் மூர்த்தியாகிய சிவபெருமான், மலர் கொய்து கொண்டு தம்பால் வந்து நிற்கும் சுந்தர ரைப் பார்த்து, `நீ அத்தோழியரின் மீது மனம் வைத்தாய்; ஆதலின் தென்னகத்தில் தோன்றி, அம்மகளிரிடத்து இன்பம் துய்த்து, மீண்டும் இங்கு வருவாயாக` என்று அருள.

குறிப்புரை :

ஆதி மூர்த்தி - யாவர்க்கும் மூல காரணமாய் நிற்கும் மூர்த்தி. வாழ்முதலாகிய சிவபெருமான், `வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்` (தி.6 ப.23 பா.1) என்பதற்கேற்ப, `மகளிர்மீது மனம் கொண்ட சுந்தரரை, அம்மகளிரைக் கலந்து இன்புற்றுப் பின் இக்கயி லையை அணைவாய்` என்றனர். 9;

பண் :

பாடல் எண் : 38

கைக ளஞ்சலி கூப்பிக் கலங்கினான்
செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்
மையல் மானுட மாய்மயங் கும்வழி
ஐய னேதடுத் தாண்டருள் செய்என.

பொழிப்புரை :

கைகளைத் தலைமேல் வைத்துக் குவித்து வணங்கி, மனம் கலங்கியவராகிய சுந்தரர், ``ஐயனே! நும் செவ்வியவாயவும், சிறந்தனவுமான திருவடிகளைப் பிரிந்து நீங்கும் சிறுமையுடைய னாகிய அடியேன், மயக்கம் பொருந்திய மானுடப் பிறப்பில் பிறந்து மயங்கும் பொழுது, பெருமானாராகிய நீர் வந்து அம்மயக்கத்தி னின்றும் தடுத்து, அடியேனை ஆட்கொண்டருள வேண்டும்`` என்று விண்ணப்பம் செய்ய.

குறிப்புரை :

செய்ய சேவடி - கோட்டம் இல்லனவும் சிவந்தனவுமாய திருவடிகள். வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவனாதலின் அவன் சேவடி கோட்டம் இல்லாதன ஆயின. நிறத்தால் சிவந்திருத் தலின், சேவடியாயின. மையல் மானுடம் - செய்வதும் தவிர்வதும் அறியாது மயங்கி நிற்கும் மானுடம்.
`மயங்கி, வலைப்பட்டார் மற்றையவர்` (குறள், 348), `மால் கொடுத்து ஆவி வைத்தார்` (தி.4 ப.33 பா.4), `மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம் மண்ணின் மேல், பிறக்குமாறு காட்டினாய்` (தி.2 ப.98 பா.5) எனவரும் திருவாக்குகளும் காண்க.

பண் :

பாடல் எண் : 39

அங்க ணாளன் அதற்கருள் செய்தபின்
நங்கை மாருடன் நம்பிமற் றத்திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாருமென்று
அங்க வன்செயல் எல்லாம் அறைந்தனன்.

பொழிப்புரை :

பெருங்கருணையோனாகிய இறைவனும், அவர் கேட்டுக் கொண்ட விண்ணப்பத்திற்கு அருள் செய்தபின், அனிந்திதை, கமலினி என்னும் அவ்விரு பெண்களுடன், ஆலாலசுந்தரர் தென் திசைக்கண் வாழ்தற்குரிய மானுடப் பிறவியில் தோன்றி, அப் பெண் களுடன் இன்புற்று, மீண்டும் இங்கு வருகின்றார் என்று அவருடைய செய்திகளையெல்லாம் முழுமையாக உபமன்னியு முனிவர் கூறினார்.

குறிப்புரை :

அம்+கண் = அங்கண் - அழகிய கண். `கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டமாதலின்` (குறள், 575) பெருங்கருணை யாளனாகிய இறைவன் என உரை கூறப்பெற்றது. நம்பி - ஆடவருட் சிறந்தார்க்கு உரிய பெயர். நம்பியாரூரர், ஆளுடைய நம்பி என அவரை அழைத்தலும் காணலாம். இவர் அருளிய நம்பி எனவரும் பதிகத்தில் சிவபெருமானை நம்பி என்றே குறிப்பதும் நினைவு கூர்தற்குரியது.
இப்பதினைந்து பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 40

அந்த ணாளரும் ஆங்கது கேட்டவர்
பந்த மானுடப் பாற்படு தென்றிசை
இந்த வான்றிசை எட்டினும் மேற்பட
வந்த புண்ணியம் யாதென மாதவன்.

பொழிப்புரை :

உபமன்னியு முனிவருடன் இருந்தருளிய முனிவர்களும் அவர் கூறியதைக் கேட்டு, `உலகப் பிணிப்புடைய மானுடர்கள் பிறந்தும் இறந்தும் வருதற்கு இடமாகிய எண்திசையிலும், இத்தென்திசை மேலாக, அவர் போந்ததற்குரிய புண்ணியம் யாது` என வினவ, அவ்வுபமன்னியு முனிவரும் கூறியருளுகின்றார் .

குறிப்புரை :

அந்தணாளர் - எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவோர்.

பண் :

பாடல் எண் : 41

பொருவ ருந்தவத் தான்புலிக் காலனாம்
அருமு னியெந்தை அர்ச்சித்து முள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப் புலியூரென்று
ஒருமை யாளர்வைப் பாம்பதி ஓங்குமால்.

பொழிப்புரை :

ஒப்பற்ற தவத்தையுடைய புலிக்காலர் (வியாக்கிர பாதர்) எனும் என் தந்தையாரால் வழிபடப் பெற்றதும், பெருமை மிகுந்த பெரும்பற்றப் புலியூர் என்று அழைத்தற்குரியதும், பெருமை கள் பலவும் வந்தடைதற்குரியதுமான தில்லைப்பதி, ஒருநெறிய மனம் வைத்து உணர்வோர்க்குச் சேமவைப்பாக இருப்பதாம்.

குறிப்புரை :

வியாக்கிரம் - புலி; பாதர் - காலினையுடையவர். இவர் மத்தியந்தன முனிவரின் மகனார் ஆவர். சிவவழிபாட்டைத் தவறாது செய்த இவருக்குச் சிவபெருமான் நேரில் தோன்ற, அவரிடம் சிவ வழிபாட்டிற்குப் பழுதற்ற மலர் எடுக்க நகங்களில் கண்களும், மலர் பறித்தற்கென மரங்களில் ஏறுங்கால் வழுக்காமல் இருப்பதற்கெனப் புலிக்காலும் கையும் பெற்றவர். இவர் திருமகனார் உபமன்னியு முனிவராவார். பெரும்பற்றப் புலியூர் - பெரும்பற்றை உடைய புலி யூர். அஃதாவது எல்லாப் பற்றும் அற்றாரது உள்ளத்துப் பற்றுடையதாய்ப் பற்றப்படுவது. ஒருமையாளர் - ஒருநெறிய மனம் வைத்தவர்.

பண் :

பாடல் எண் : 42

அத்தி ருப்பதி யில்நமை ஆளுடை
மெய்த்த வக்கொடி காண விருப்புடன்
நித்தன் நீடிய அம்பலத் தாடும்மற்று
இத்தி றம்பெற லாந்திசை எத்திசை.

பொழிப்புரை :

அத்தகைய திருப்பதியின்கண் நம்மை ஆளாக உடைய அன்னையார் எஞ்ஞான்றும் விருப்போடு காணுமாறு என் றும் அழியாதவராய் நிலைபெற்றுள்ள பெருமான், திருச்சிற்றம்பலத் தின்கண் ஆடுகின்றார். இவ்வாறான மேன்மையை இத்திசையன்றி வேறு எத்திசை பெறும்?

குறிப்புரை :

மெய்த்தவக் கொடி - மெய்ம்மையான தவத்திற்குரிய கொடி: உமையம்மையார். நித்தன் - என்றும் அழியாது வீற்றிருப்ப வன். இவ்விரு பாடல்களும் குளகம்.

பண் :

பாடல் எண் : 43

பூதம் யாவையின் உள்ளலர் போதென
வேத மூலம் வெளிப்படு மேதினிக்
காதல் மங்கை இதய கமலமாம்
மாதொர் பாகனார் ஆருர் மலர்ந்ததால்.

பொழிப்புரை :

எவ்வுயிர்களிடத்தும் உள்ளிருந்து மலரும் இதயத் தாமரையின்கண், இறைவன் எழுந்தருளியிருப்பது போல, உலகமாகிய மங்கையின் இதயத் தாமரையாக விளங்கும் திருவாரூரின்கண் உமை யொரு கூறனாகிய தியாகேசப் பெருமான் எழுந்தருளியுள்ளார். இத் திருப்பதி தென்திசையிலிருந்து அணி செய்து வருகிறது.

குறிப்புரை :

பூதம் - உயிர்கள். வேதமுதல்வன் - இறைவன். உயிர் களிடத்து இலங்கும் இதயத் தாமரையின்கண் இறைவன் வீற்றிருந்தரு ளுவது போல, உலகின் இதயத் தாமரையாக விளங்கும் திருவாரூரின் கண்ணும் இறைவன் வீற்றிருந்தருளுகின்றான் என்பது கருத்து. நிலவுலகைப் பெண்ணாக உருவகித்தல் இயல்பு. நிலமகள் என்ற வழக்கும் காண்க. `நிலம்புலந்து இல்லாளின் ஊடிவிடும்` (குறள், 1039) என வரும் திருவள்ளுவர் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 44

எம்பி ராட்டிஇவ் வேழுல கீன்றவள்
தம்பி ரானைத் தனித்தவத் தால்எய்திக்
கம்பை யாற்றில் வழிபடு காஞ்சியென்று
உம்பர் போற்றும் பதியும் உடையது.

பொழிப்புரை :

எம் தலைவியும் இவ்வேழுலகங்களையும் பெற்றெடுத்த தாயும் ஆகிய உமையம்மையார் தம் தலைவராகிய திருஏகம்பப் பெருமானாரை ஒப்பற்ற தவப்பயனால் கம்பையாற்றின் கரையில் சென்று வழிபட்டுப் போற்றும் காஞ்சிபுரம் விளங்குகிறது. தேவர்களும் வந்து வணங்கும் இத்திருப்பதியும் தென்திசையில் உள்ளதாம்.

குறிப்புரை :

கம்பை - ஓர் ஆறு. காஞ்சியில் நிலத்தின் கீழ் ஓடுகிறது என்பர்.

பண் :

பாடல் எண் : 45

நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து
பொங்கு நீடருள் எய்திய பொற்பது
கங்கை வேணி மலரக் கனல்மலர்
செங்கை யாளர்ஐ யாறுந் திகழ்வது.

பொழிப்புரை :

நமக்கெல்லாம் குருநாதனாகிய நந்தியெம் பெருமான் தவம் செய்து, வளர்ந்து, நீடிய பேரருள் பெற்ற பொலி வினையுடையதாய், திருச்சடையிலே கங்கை மலரவும், சிவந்த கையில் கனல் மலரவும் கொண்ட இறைவனுடைய திருவையாறும் இத் தென்திசையிலேயே விளங்குவதாம்.

குறிப்புரை :

மலர்தல் - விரிந்து விளங்குதல். நீர் மிகின் தீ அவியும்; தீ மிகின் நீர் சுருங்கும். ஆனால் ஈண்டோ, இரண்டும் மலர்ந்து விளங்குவது திருவருள் திறத்தாலேயாம்.
கங்கை, அனல் ஆகிய இரண்டையும் ஒருங்கு வைத்திருப்பது ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும் அவர்க்கு உளவாதல் பற்றியாம்.

பண் :

பாடல் எண் : 46

தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை
ஈசர் தோணி புரத்துடன் எங்கணும்
பூச னைக்குப் பொருந்தும் இடம்பல
பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை.

பொழிப்புரை :

இனையபல தேயங்களையும் தன் தெய்வத் தன்மையால் விளங்கச் செய்திருக்கும் தெற்குத் திசையின்கண், அடிய வர் செய்யும் வழிபாட்டை ஏற்றருளுதற்கென இறைவன் எழுந்தருளி யிருக்கும் இடங்கள் மேற்கூறியனவேயன்றித் திருத்தோணிபுரத் துடன் மற்று எவ்விடத்தும் விளங்க நிற்கும் திருப்பதிகளும் பல உள்ளன. அதனால் தென்திசையின் புகழைச் சொல்லுமிடத்துப் பிற திசைகள் இத்திசையோடு ஒவ்வாவாம்.

குறிப்புரை :

தோணிபுரம் - சீகாழி. பேசில் - அதன் புகழைப் பேசின்.

பண் :

பாடல் எண் : 47

என்று மாமுனி வன்றொண்டர் செய்கையை
அன்று சொன்ன படியால் அடியவர்
துன்று சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
இன்றெ னாதர வாலிங் கியம்புகேன்.

பொழிப்புரை :

இவ்வாறு அவ்வுபமன்னியு முனிவர் நம்பியாரூரர் வரலாற்றை, அந்நாளில் திருக்கயிலையின்கண் அருளியவாறு, அடிய வர்களின் பெருமை மிக்க வரலாற்றைச் சுருங்கக் கூறும் திருத்தொண் டத் தொகையின் விரியாகிய இந்நூலை, என் விருப்பம் காரணமாக இது பொழுது சொல்லத் தொடங்குகிறேன்.

குறிப்புரை :

திருத்தொண்டர் வரலாறு (செய்கை) என்னும் விரியை இயம்புவேன் எனக் கூட்டுக. அன்று - பண்டறிசுட்டு. சீர்துன்று திருத் தொண்டத் தொகை என மாறுக. `அளவில் ஆசை துரப்ப அறைகு வேன்` என்றார் முன்னும்.

பண் :

பாடல் எண் : 48

மற்றி தற்குப் பதிகம்வன் றொண்டர்தாம்
புற்றி டத்தெம் புராணர் அருளினால்
சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகையெனப்
பெற்ற நற்பதி கம்தொழப் பெற்றதாம்.

பொழிப்புரை :

இங்கு உரைக்கப் பெறும் இவ்விரி நூலுக்குப் பதிகம் அவ் வன்தொண்டர் திருவாரூரில் புற்றிடம் கொண்ட சிவபெரு மானின் திருவருளினால் அருளிச் செய்த மெய்ம்மை பொருந்திய திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பெயர் பெற்ற நல்ல திருப்பதிக மேயாம். அதனைத் தொழுது வரலாற்றை விரித்துரைக்கின்றேன் என் பதாம்.

குறிப்புரை :

பதிகம் என்பது பல்வகைப் பொருளையும் தொகுதி யாகச் சொல்லுவதாகும். இந்நூற்கண் எடுத்துரைக்கப்படுதற்கு ஏது வாக, அடியவர்கள் அனைவரையும், தொகுத்துச் சொன்னது திருத் தொண்டத் தொகையாதலின் அதனைப் பதிகம் என்றார்.
தொழப் பெற்றது - தொழுது மேற்கோளாக எடுத்துக் கொள்ளப் பெற்றது. எனவே அப்பதிகமே இதற்கு மூலமாகும் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 49

அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை
நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்.

பொழிப்புரை :

அத்தகைய மெய்ம்மை சான்ற திருப்பதிகத்தில் வழிபடப்பெற்ற அடியார்களை, நம் தலைவனாகிய நம்பியாண்டார் நம்பிகள், நம் உளங்கூர அருளிய வகையினால், அத்திருத்தொண்டர் திருவந்தாதியில் எடுத்துரைக்கப் பெற்ற முறையினின்றும் பிறழாமல் இந்நூற்கண் சொல்லுவாம்.

குறிப்புரை :

நம்பியாண்டார் நம்பிகள் - இவர் திருநாரையூரில் ஆதி சைவர் மரபில் தோன்றியவர். தம் இளமைக் காலத்தேயே பொள்ளாப் பிள்ளையாரின் அருள் பெற்றவர். அப்பெருமானின் அருள்வழி நின்ற இவர், திருமுறைகளைக் காண்டற்குப் பேருதவி புரிந்தவர். இவர் அருளிய நூல்கள் பத்தும், பதினொன்றாம் திருமுறையில் இடம் பெற் றுள்ளன. அவற்றுள் ஒன்று திருத்தொண்டர் திருவந்தாதியாகும். அந்நூலை வகை நூலாகக் கொண்டு இந்நூல் இயம்பப்பெறுகிறது. எனவே திருத்தொண்டத்தொகை தொகையாய், இவ்வந்தாதி வகை யாய், இத்திருத்தொண்டர் புராணம் விரியாய் அமைந்தமை புலனா கின்றது. இவ்வாறு தொகை, வகை, விரியாய் எழுந்த அமைப்பு இம்முப்பெரு நூல்களுக்கே ஆயது. இது திருவருட் பெருங்கருணை யினால் ஆயதாம்.
புந்தியார - நம்பிகளின் உளமகிழ என்றலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 50

உலகம் உய்யவும் சைவம்நின் றோங்கவும்
அலகில் சீர்நம்பி ஆருரர் பாடிய
நிலவு தொண்டர்தங் கூட்ட நிறைந்துறை
குலவு தண்புனல் நாட்டணி கூறுவாம்.

பொழிப்புரை :

உலகில் வாழும் அனைத்து உயிர்களும் உறுதி பெறவும், சைவ சமயச் செந்நெறி என்றும் நிலை பெற்று நிலவவும், அளவற்ற சிறப்புகளை உடைய நம்பியாரூரர் அருளிய திருத் தொண்டத் தொகையில் விளங்கும் அடியவர் திருக்கூட்டம் நிறைந்து வாழ்ந்தருளிய குளிர்ச்சி பொருந்திய சோழநாட்டின் சிறப்பை இனிக் கூறுவாம்.

குறிப்புரை :

நிலவு தொண்டர் - என்றும் நிலைபெற்ற தொண்டர்.

பண் :

பாடல் எண் : 51

பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுட்
கோட்டுயர் பனிவரைக் குன்றின் உச்சியில்
சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி
நாட்டியல் பதனையான் நவில லுற்றனன்.

பொழிப்புரை :

வழக்கும் செய்யுளும் ஆகிய இயல்பினையுடைய தமிழ் வழங்கும் எல்லையின் கண், மலைகளில் உயர்ந்த இமய மலை யின் உச்சியின்கண் கட்டப்பட்ட நீண்ட புலிக்கொடியை உடைய சோழ மரபினரின் காவிரி பாயும் புனல் நாட்டின் வளத்தை யான் இங்குச் சொல்லத் தொடங்குகின்றேன்.

குறிப்புரை :

பாட்டு - செய்யுள். உரை - வழக்கு. எனவே வழக்கும் செய்யுளுமாம் இயல்பினையுடையது தமிழ் என்பதாயிற்று. இனி, பாடு - பெருமை எனக் கொண்டு, பெருமை பொருந்திய இயற் றமிழுக்குப் பொருளாகவுள்ள எல்லை எனினும் ஆம். கோடு - மலை. பனிவரைக் குன்று - குளிர்ந்த மலையாகிய குன்று: இமயமலை. இருபெயரொட்டுப் பண்புத்தொகை. புலி: ஈண்டு ஆகு பெயராய், அதனையுடைய கொடியை உணர்த்திற்று. புலிக்கொடி சோழர்க் குரியது. கரிகாற் பெருவளத்தான் இமய மலைமேல் புலிக்கொடி பொறித்தவரலாற்றை ஆசிரியர் பின்னும் கூறுவர். இயல்பு - வளம்.

பண் :

பாடல் எண் : 52

ஆதிமா தவமுனி அகத்தி யன்தரு
பூதநீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி
மாதர்மண் மடந்தைபொன் மார்பில் தாழ்ந்ததோர்
ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால்.

பொழிப்புரை :

தலைமை பெற்ற அருந்தவ முனிவராகிய அகத்திய முனிவரால் கொண்டுவரப்பெற்ற, தூய்மையான நீரையுடைய கமண் டலத்தினின்றும் சொரிந்த காவிரி, அழகிய நிலமகளின் பொன்னிறம் பொருந்திய திருமார்பில் தாழ்ந்து விளங்கும் பெருக்குடைய கடல் நீரில் தோன்றிய முத்து மாலையை ஒத்து இருக்கும்.

குறிப்புரை :

ஆதி மாதவ முனி - முனிவர்களில் முதன்மையானவ ராயும் பெருந் தவமுடையவராயும் விளங்கும் முனிவர் அகத்தியர் ஆவர். இறைவனின் திருமணத்தின் பொழுது கூடிய மக்கட் பெருக் கத்தால் வடக்குத் தாழ, தெற்கு உயர, இறையருளால் அதனைச் சமப் படுத்தியவர் இவர். இறைவனால் முதன்முதல் தமிழ் அறிவுறுத்தப் பெற்றவரும் இவரேயாவர்.
பூதநீர் - தூய்மையாய நீர். ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றாய நீர் என்றும் அமையும். சூரபதுமன் முதலாய அசுரர்களுக்கு அஞ்சிய இந்திரன், சீகாழியை அடைந்து அங்கே நந்தனவனம் அமைத்து இறைவழிபாடு ஆற்றி வருங்கால், மழையின்மையால், நந்தனவனம் வாட, அதுகண்டு வாடிய இந்திரன், மூத்த பிள்ளையாரிடம் விண்ணப்பித்துக் கொள்ள, அவரும் கொங்கு நாட்டில் சென்று கொண்டிருந்த அகத்தியரின் கமண்டல நீரைக் காக வடிவு கொண்டு கவிழ்க்க, அதனின்றும் விரிந்து பெருகிய ஆறே காவிரியாம் என்பர். இதனை உளம் கொண்டே `பூதநீர்க் கமண்டலம் பொழிந்த காவிரி` என்றார் ஆசிரியர். `அமரமுனிவன் அகத்தியன் தனாது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை` (மணிமேகலை, பதிகம் வரி 11,12) என்னும் மணிமேகலையும், தமிழகத்தில் கி. பி. 7ஆம் நூற்றாண்டிற்குப் பின்பே மூத்த பிள்ளையார் வழிபாடு வந்தது என்பார் கூற்றுப் பொருந் தாமையை இதனால் அறியலாம். மாதர் - காதல் எனக் கொண்டு அனைவராலும் விரும்பப்படும் நில மடந்தை எனினும் அமையும். `மாதர் காதல்` என்னும் தொல்காப்பியம் (தொல். உரி. 30), ஓதநீர் - பெருக்குடைய நீர்: கடல். `விரிநீர் வியனுலகு` (குறள், 13) என்னும் திருக்குறளும். குடதிசையினின்றும் பெருகி வரும் காவிரி. நிலமக ளின் மார்பில் விளங்கும் மாலையை ஒத்திருக்கும் என்பது கருத்தாம். ஆல் - அசை.

பண் :

பாடல் எண் : 53

சையமால் வரைபயில் தலைமை சான்றது
செய்யபூ மகட்குநற் செவிலி போன்றது
வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்
உய்யவே சுரந்தளித் தூட்டு நீரது.

பொழிப்புரை :

(இக்காவிரி) சையம் என்னும் பெருமை பொருந்திய மலையிடத்துத் தோன்றிய முதன்மை பெற்றது, செவ்வி தாய நிலமக ளுக்குச் சிறந்த செவிலிபோல்வது, உலகின்கண் உள்ள பல்வேறு உயிர்களையும் வளர்த்து அவை உய்யுமாறு குளிர்ந்த நீரைச் சொரிந்து உண்பிக்கும் தன்மை பெற்றது.

குறிப்புரை :

சையம் - மேற்குத் தொடர்ச்சி மலை: இது காவிரி தோன் றுதற்கு நிலைக்களனாக விளங்குவது. சையம் என்னும் பெயருடை யது. குடகு நாட்டில் உள்ளது. செவிலி - வளர்ப்புத் தாய். `மகவாய் வளர்க்கும் தாயாகி` (சிலப்.கானல்வரி 27) என்பர் இளங்கோவடிகளும்.
சுரத்தல் - ஊற்றுப் பெருக்காகக் காத்தல். `ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்` (நல்வழி, 9) என்பதும் காண்க. ஊட்டல் - பல வளங்களை யும் தந்துதவுதலோடு தானும் உணவாய் அமைந்திருப்பது.

பண் :

பாடல் எண் : 54

மாலின்உந் திச்சுழி மலர்தன் மேல்வருஞ்
சால்பினால் பல்லுயிர் தருதன் மாண்பினால்
கோலநற் குண்டிகை தாங்குங் கொள்கையாற்
போலும்நான் முகனையும் பொன்னி மாநதி.

பொழிப்புரை :

மிகப் பெருகிய நீர்ச் சுழியையும், மலர்களையும் தன்னிடத்தே தாங்கி வருகின்ற பெருமையினாலும், பல்லுயிர்களை யும் வளர்த்து வரும் அரிய குணங்களானும், அழகிய கமண்டலம் தன்னைத் தாங்கும் சிறப்பினாலும் காவிரி, நான்முகனின் செயலொடு ஒத்து இருக்கின்றது.

குறிப்புரை :

இப்பாட்டின்கண் அமைந்த சொற்றொடர்கள் பலவும், இரு பொருள் பெற்றியவாய் அமைந்திருத்தலின், இது சிலேடை அணியாம். காவிரிக்கும், நான்முகனுக்குமாகப் பொருள் கொள்ளப் படுவது. அப்பொருள்: திருமாலின் உந்திச் சுழியினின்றும் தோன்றிய பெருமையினாலும், பல்லுயிர்களையும் தோற்றுவிக்கும் பண்பி னாலும், அழகிய கமண்டலத்தைத் தாங்கி நிற்கும் தகைமையானும் காவிரியை ஒத்து நிற்கின்றான் நான்முகன் என்பதாம்.
இவ்விரு பொருண்மைக்கும் அமைய உரை கொள்ளுமாறு: காவிரிக்கு ஆங்கால்: மால் - பெரிய. உந்திச்சுழி - பெருகி வரும் நீர்ச் சுழி: மலர்தல் - தாங்கிவருதல்: பல்லுயிர் தருதல் - பல உயிர்களுக்கும் உணவு வழங்கல். குண்டிகை தாங்கல். காவிரியாய்ப் பெருகுதற்கு முன் அகத்தியரின் கமண்டலத்தில் இருத்தல்.
நான்முகனுக்கு ஆங்கால்: மால் - திருமால். உந்திச்சுழி - கொப்பூழ்ச்சுழி. மலர்தல் - தோன்றல். பல்லுயிர் தருதல் - பல உயிர் களையும் தோற்றுவித்தல். குண்டிகை தாங்கல் - தன் கையில் கமண் டலத்தைக் கொண்டிருத்தல்.

பண் :

பாடல் எண் : 55

திங்கள்சூ டியமுடிச் சிகரத் துச்சியில்
பொங்குவெண் டலைநுரை பொருது போதலால்
எங்கள்நா யகன்முடி மிசைநின் றேயிழி
கங்கையாம் பொன்னியாம் கன்னி நீத்தமே.

பொழிப்புரை :

நிலவு தவழ்கின்ற உயர்ந்த முடிகளையுடைய சைய மலையின் உச்சியிலிருந்து பெருகி வருதலானும், வெள்ளிய தலை போலும் நுரைகளை வீசிக் கொண்டு போதலினாலும், பொன்னி எனப் பெயர் பெறும் கன்னியாம் காவிரி, எமது முதல்வராகிய சிவபெருமானின் திருமுடியினின்றும் இந்நிலவுலகத்திற்கு இழிந்து வந்த கங்கையை ஒத்துள்ளது.
இப்பாடல், காவிரிக்கும் கங்கைக்கும் ஏற்பப் பொருள் கொள்ளக் கிடப்பது. மேற்கூறிய பொருள் காவிரிக்கென அமைந்தது.
இனிக் கங்கைக்கு ஏற்ப அமையுமாறு: நிலவணிந்த திருமுடியை யுடைய சிவபெருமானின் திருச்சடையினின்றும் இழிந்து வருவதா லும், அப்பெருமானின் திருமுடியில் விளங்கும் வெண்மையான தலைமாலையில் நுரைகளை வீசிக்கொண்டு வருவதாலும் கங்கையா னது காவிரியை ஒத்துள்ளது.

குறிப்புரை :

காவிரிக்கு ஆங்கால்: சிகரத்து உச்சி - சைய மலையின் உச்சி. வெண்தலை நுரை - வெள்ளிய தலை போன்ற நுரை.
கங்கைக்கு ஆங்கால்: சிகரத்து உச்சி - உயர்ந்து விளங்கும் திருச் சடையாகிய உச்சி. வெண்தலை நுரை - சிறந்த மால் அயன் முதலிய வர்களின் தலை.

பண் :

பாடல் எண் : 56

வண்ணநீள் வரைதர வந்த மேன்மையால்
எண்ணில்பே ரறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல்பா கத்தையா ளுடைய நாயகி
உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.

பொழிப்புரை :

காவிரி, அழகு பொருந்திய நீண்ட சைய மலையிடத் தினின்றும் தோன்றிய பெருமையினாலும், எண்ணிறந்த பேரறங்களை ஆற்றுதற்கு இடனாக நீரை வழங்கிவரும் கொடைத் தன்மையினாலும், இறைவனின் இடமருங்கைத் தன் ஒரு கூறாகக் கொண்டிருக்கும் உமை அம்மையாரின் திருவுள்ளத்தினின்றும் கனிந்து வரும் கருணைப் பெருக்கை ஒத்தது.
இப்பாடலும் மேலையது போலச் சிலேடையாம். காவிரிக்கும் உமையம்மையாருக்கும் ஆகப் பொருள் கொள்ளக் கிடப்பது. மேற் கூறிய பொருள் காவிரிக்கென அமைந்தது.
இனி, உமையம்மைக்கு ஏற்ப அமையுமாறு: அழகு பொருந்திய இமயமலைத் தலைவனாகிய இமவானிடத்தினின்றும் தோன்றிய மேன்மையானும், காஞ்சியிலிருந்து எண்ணற்ற அறங்களை வளர்த்து வருதலாலும் உமையம்மை, காவிரிக்கு ஒப்பாதல் விளங்கும்.

குறிப்புரை :

காவிரிக்கு ஆங்கால்: வண்ண நீள் வரை - சைய மலை. எண்ணில் பேரறங்கள் - எண்ணற்ற பேரறங்கள். தானமும் தவமும் வளர்தற்கு ஏது நீராதலின், எண்ணில் பேரறங்களும் வளர்ப்பதாயிற்று.
அம்மைக்கு ஆங்கால்: வண்ணநீள் வரை - இமயமலை. இதனை ஆண்ட அரசன் இமவான் ஆவன். இவனுக்குத் திருமகளாக ஒரு காலத்து அம்மை தோன்றியருளினாள். எண்ணில் பேரறங்கள்- காஞ்சிபுரத்தில் அம்மை தம் துணைவன்பால் பெற்ற இருநாழி நெற் கொண்டு உலகில் முப்பத்திரண்டு அறங்களையும் செய்தனள்.
தொல்லை மறைதேர் துணைவன்பா லாண்டுவரை
எல்லை யிருநாழி நெற்கொண்டோர் - மெல்லியலாள்
ஓங்குலகில் வாழு முயிரனைத்து மூட்டுமால்
ஏங்கொலிநீர்க் காஞ்சி யிடை -தண்டியலங்காரம் மேற்கோள்
எனவரும் பாடலும் காண்க. அன்னையின் கருணை அனைத்து உயிர்கட்கும் இடையீடின்றிப் பெருகி வரும் மாண்புடைய தாகும். ஆதலின் இடையீடின்றிப் பெருகிவரும் காவிரிக்கு அஃது உவமை யாயிற்று.
`முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்`
-தி.8 திருவெம்பாவை 9
எனவரும் திருவாக்கும் ஈண்டு நினைவு கூரத்தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 57

வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை எண்ணில் சிவாலயத்து
எம்பி ரானை இறைஞ்சலின் ஈர்ம்பொன்னி
உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால்.

பொழிப்புரை :

மணம் கமழ்கின்ற மலர்களினாலும், நீரினாலும் வழிபாடு செய்து, சிவந்த பொன்மயமான மணல் நிறைந்த காவிரிக் கரையின் இருமருங்கிலுமுள்ள எண்ணற்ற திருக்கோவில்களில் எழுந் தருளியிருக்கும் எம் தலைவனை வணங்கி வருதலினால், குளிர்ந்த காவிரி, தேவர்களுக்கெல்லாம் தலைவனாய சிவபெருமானின் அடியவரையும் ஒத்து விளங்கும்.

குறிப்புரை :

இறைவற்கு உற்ற பல் பொருள்களையும் கொண்டு அடியவர்கள் வழிபடினும், ``புண்ணியம் செய்வார்க்குப் பூஉண்டு நீருண்டு`` (தி.10 பா.1804) என்பதால் இவ்விரண்டுமே அடிப்படை யும் முதன்மையும் கொண்டு விளங்குவனவாயின. ஆதலின் அடியவ ரோடு காவிரி ஒத்ததாயிற்று. வம்பு - நறுமணம், அன்றலர்ந்தமையால், நறுமணம் கமழும் மலர். ஆல் - அசைநிலை.
காவிரிக்கும் அன்பர்களுக்கும் செயல் வகையால் ஒப்புமை கூறலின், இதுவும் சிலேடை யணியமைந்ததாகும். இத்திருப்பாடற்கண் உள்ள சொற்கள் இவ்விரு பொருட்கும் அமையும் பொழுதும், சொற் கிடக்கை முறையும், பொருள் முறையும் மாறாது அமைந்துள்ளமை போற்றற்குரியதாகும். காவிரி தன் இரு மருங்கிலும் உள்ள சோலைகளில் மலர்கள் நிரம்பப் பெற்று இருத்தலின், தன்பால் உள்ள நீரும் பூவும் கொண்டு வழிபட்டது என்றார். இருகரைகளில் உள்ள சிவாலயங்களைக் காவிரி தீண்டிச் செல்லுதலின் வணங்கி வழிபட்ட தாகின்றது.

பண் :

பாடல் எண் : 58

வாச நீர்குடை மங்கையர் கொங்கையில்
பூசு குங்கும மும்புனை சாந்தமும்
வீசு தெண்டிரை மீதிழித் தோடுநீர்
தேசு டைத்தெனி னும்தெளி வில்லதே.

பொழிப்புரை :

நறுமணம் பொருந்திய தண்ணிய நீரில் ஆடும் மகளிர், தம்முடைய மார்பகத்துப் பூசிய குங்குமக் குழம்பையும், சந்தனக் குழம்பையும், வீசுகின்ற தெள்ளிய அலைகளினால் கரைத்துச் செல்லுகின்ற அவ்வாறானது, மிக்க வெண்ணிறம் உடைத்தெனினும் தெளிவின்றி இருந்ததாம்.

குறிப்புரை :

இயல்பில் ஆறு தெளிவுடைத்தெனினும், பெண்களின் மார்பகத் திருந்த குங்குமத்தாலும் சந்தனத்தாலும் தெளிவின்றி இருந்தது என்பது கருத்து. தேசு - ஒளி. ஏ - அசை நிலை.

பண் :

பாடல் எண் : 59

மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு
பூவி ரித்த புதுமதுப் பொங்கிட
வாவி யிற்பொலி நாடு வளந்தரக்
காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால்.

பொழிப்புரை :

வண்டுகள் ஆர்த்து எழுந்து ஒலிக்கவும், மலையிடத்து மரம் தரும் மலர்களிலிருந்து வரும் புதிய தேன் பொங்கித் ததும்பவும், ஆங்காங்குள்ள குளங்களினால் சீரிய வளத்தைக் கொடுக்கவும் காவிரிப் பேராறு பல கால்களாகப் பரந்து செல்லும்.

குறிப்புரை :

மா-என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல்லேனும் `இரைத்து` என்பதால் வண்டுகளைக் குறித்தது; இதனைத் தொல்காப் பியர் `வினை வேறுபடூஉம் பல பொருளொரு சொல்` (தொல். கிளவி, 52) என்பர். கால் பரந்து - கால்வாய்களில் பரந்து. ஆல் - அசை.

பண் :

பாடல் எண் : 60

ஒண்து றைத்தலை மாமத கூடுபோய்
மண்டு நீர்வய லுட்புக வந்தெதிர்
கொண்ட மள்ளர் குரைத்தகை ஓசைபோய்
அண்டர் வானத்தின் அப்புறஞ் சாருமால்.

பொழிப்புரை :

(மேற்கூறியவாறு பல கால்வாய்களின் வழிவந்த நீர்) வலிய கரையின்கண் உள்ள பெரிய மதகின் வழிச் சென்று, மிகுந்து எழுந்த நீர் வயல்களிடத்துச் செல்லுதலும், அந்நீரை எதிர்கொண்ட உழவர்கள், தம் மகிழ்ச்சியால் கை தட்டிய ஓசையானது, தேவர்கள் வாழ்கின்ற விண்ணுலகத்திற்கும் அப்பாற் செல்லும்.

குறிப்புரை :

ஒண்துறை - ஒள்ளிய கரையமைந்த துறை; ஈண்டு ஒண்மை வன்மையைக் குறித்தது. துறைத்தலை - துறையிடத்து; ஏழனுருபு. அண்டர் வானம் - தேவர்கள் வாழ்கின்ற விண்ணுலகம். குரைத்த - ஒலித்த. ஆல் - அசை.

பண் :

பாடல் எண் : 61

மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும்
சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும்
ஓதை யார்செய் உழுநர் ஒழுக்கமும்
காதல் செய்வதோர் காட்சி மலிந்தவே.

பொழிப்புரை :

அழகிய நாற்றைப் பறிக்கின்ற உழத்தியர்களின் சிறப்பும், குளிர்ந்த நீரிடத்து நாற்று முடிகளைச் சேர்க்கின்றவர்களது செய்கையும், ஒளி பொருந்திய வயலை உழுகின்ற உழவர்களது ஒழுக்கமும், கண்டார்க்கு மிகு விருப்பை வழங்கும் காட்சியாய்ச் சிறந்து விளங்கின.

குறிப்புரை :

மாதர் நாறு - கண்டார்க்கு விருப்பத்தைத் தரும் நாற்று. `மாதர் காதல்` (தொல். உரி. 30) என்னும் தொல்காப்பியமும். ஓதையார் - ஒலி நிரம்பிய.

பண் :

பாடல் எண் : 62

உழுத சால்மிக வூறித் தெளிந்தசே
றிழுது செய்யினுள் இந்திரத் தெய்வதந்
தொழுது நாறு நடுவார் தொகுதியே
பழுதில் காவிரி நாட்டின் பரப்பெலாம்.

பொழிப்புரை :

ஏரால் உழப்பெற்ற பின், நீர் பெருகச் செய்து, தெளிந்த சேற்றை மீளவும் குழம்பாகப் பண்படுத்தப்பட்ட வயலின் உள்ளே, இந்திரனைத் தொழுது, நாற்று நடுபவர்களின் கூட்டமே, குற்ற மற்ற காவிரி பாயும் நாடு எங்கும் உள்ளது.

குறிப்புரை :

காவிரி நாட்டின் பரப்பெல்லாம் நாற்று நடுவார் கூட்டமே மிக்கு இருக்கின்றது என்பது கருத்து. சால் உழுதென மாறுக. இழுது செய்தல் - சேற்றைக் குழம்பாகச் செய்தல். இது நாற்று நடுதற்குரிய பதமாம். `கழனிபடு நடவை` (மீனாட்சி காப்பு, 1) எனக் குமரகுருபரர் குறித்தருள்வதும் காண்க. மருத நிலமாதலின் அதற்குத் தலைவனாய இந்திரனை வணங்கினர். `வேந்தன் மேய தீம்புனல் உலகமும்` (தொல். அகத். 5) என்னும் தொல்காப்பியமும். பழுதுஇல் காவிரி - தான் வருதலிலும், மக்கட்கு நீர் தருதலிலும் தவறாத காவிரி. உடல் உறுதியைக் குலைக்கும் பசியையும், உயிர் உறுதியைக் குலைக்கும் பாவத்தையும் நீக்கும் காவிரி எனலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 63

மண்டுபுனல் பரந்தவயல்
வளர்முதலின் சுருள்விரியக்
கண்டுழவர் பதங்காட்டக்
களைகளையுங் கடைசியர்கள்
தண்டரளஞ் சொரிபணிலம்
இடறியிடை தளர்ந்தசைவார்
வண்டலையும் குழலசைய
மடநடையின் வரம்பணைவார்.

பொழிப்புரை :

மிகுந்த நீர் பரந்த வயல்களில் வளர்கின்ற நெற் பயிர் களின் சுருள்கள் விரியும் நிலையைக் கண்டு, உழவர்கள் களையை எடுக்கும் பருவம் ஈது என்று காட்ட, அக்களைகளைப் பறிக்கின்ற உழத்தியர்கள், குளிர்ந்த முத்துக்களைச் சொரிகின்ற சங்குகள் தம் காலில் இடற, அதனால் இடை தளர்ந்து வருந்துவாராய், வண்டுகள் தேன் விருப்பால் சுற்றுகின்ற தங்கள் கூந்தல் அவிழ்ந்து அசையுமாறு மெதுவான நடைகொண்டு அவ்வயல் வரம்பினிடத்துச் செல்வா ராயினர்.

குறிப்புரை :

மண்டுபுனல் - மிகு புனல்; புதுப்புனல் என்பது காட்டிய வாறு. வளர்முதல் - வளர்ந்துவரும் நாற்று. பதம் - களை எடுக்கும் பதம். இடை தளரவும், குழல் அசையவும், மட நடை கொள்ளவும் காலில் சங்குகள் இடறின. எனவே அந்நிகழ்ச்சிக்கு எல்லாம் இது காரணமாயிற்று என்பது விளங்கும். பணிலம் - சங்கு.

பண் :

பாடல் எண் : 64

 செங்குவளை பறித்தணிவார்
கருங்குழல்மேல் சிறைவண்டை
அங்கைமலர் களைக்கொடுகைத்
தயல்வண்டும் வரவழைப்பார்
திங்கணுதல் வெயர்வரும்பச்
சிறுமுறுவல் தளவரும்பப்
பொங்குமலர்க் கமலத்தின்
புதுமதுவாய் மடுத்தயர்வார்.

பொழிப்புரை :

(களை எடுக்கும் உழத்தியர்களில் சிலர்) தம் கரிய கூந்தலினிடத்துச் சிவந்த குவளை மலர்களைப் பறித்துச் சூடிக் கொள் வார்கள். (சிலர்) தம் கரிய கூந்தலின்மேல் விழுகின்ற சிறகினை யுடைய வண்டுகளை, அழகிய கைகளாகிய தாமரை மலர்களைக் கொண்டு ஓட்ட, அவை அவ்விடத்தினின்றும் போகாததோடு அருகில் இருக்கும் வண்டுகளையும் உடன் வருமாறு செய்துகொள்வர். (சிலர்) பிறை போன்ற தம் நெற்றியில் வியர்வை அரும்பவும், சிறுநகை செய்யும் முல்லையரும்புகள் மலரவும் பொலிவு மிக்க தாமரை மலரிடத்திலுள்ள புதிய தேனை உண்டு அதனால் மயங்குவார்கள்.

குறிப்புரை :

கருங்குழல் மேல் செங்குவளை பறித்தணிவார் என மாறுக. வண்டுகளை ஓட்டும் கைகள், தாமரை மலர்களை ஒத்து இருத்தலின், முன்னரே மொய்த்து நிற்கும் வண்டுகளுடன் அருகில் இருக்கும் வண்டுகளும் சூழ்வன வாயின. ஆதலின் `அயல் வண்டும் வர வழைப்பார்` என்றார். உகைத்து - ஓட்டி. சிறுமுறுவல் - புன்னகை: பல்லின் நுனி தெரியாது கொள்ளும் உவகை. `முன்றுணை தோன் றாமை முறுவல் கொண்டு அடக்கி` என்னும் கலியும் (நெய்தல், 25). தளவு - முல்லை.

பண் :

பாடல் எண் : 65

 கரும்பல்ல நெல்லென்னக்
கமுகல்ல கரும்பென்னச்
சுரும்பல்லி குடைநீலத்
துகளல்ல பகலெல்லாம்
அரும்பல்ல முலையென்ன 
அமுதல்ல மொழியென்ன
வரும்பல்லா யிரங்கடைசி
மடந்தையர்கள் வயலெல்லாம்.

பொழிப்புரை :

பகல் முழுதும் அவ்வயலிடத்தைக் காண்பார்க்கு, இவை கரும்புகள் அல்ல நெற்பயிர்கள் என்று சொல்லவும், இவை பாக்குமரங்கள் அல்ல கரும்புகள் என்று சொல்லவும், இவை வண்டுகள் அல்ல, அவ்வண்டுகள் நீல மலர்களின் அக இதழைக் குடைந்த கரிய பொடி என்று சொல்லவும், பெண்களின் மார்பிலுள்ள மலர்களைக் கண்டு இவை அரும்புகள் அல்ல, அப்பெண்களின் மார்பகம் என்று சொல்லவும், அவர்கள் பேசும் மொழியினைக் கண்டு அவை அமுதம் அல்ல, அவர்கள் பேசும் சொற்கள் என்று சொல்லவும், வருகின்ற பல்லாயிரம் உழத்தியர்கள் தம்பணியைச் செய்து வருவார்கள்.

குறிப்புரை :

நெல்லினும் கரும்பு உயரமானது. கரும்பினும் கமுகு உயரமானது. எனினும் நெல் கரும்பாகவும் கரும்பு கமுகாகவும் காட்சியளித்தது, அவற்றின் உயர்வையும் செழுமையையும் காட்டு கின்றன.
அல்லியின் அகஇதழினின்றும் வீழ்ந்த நீலத்துகள் பகல் அல்ல இரவு எனக்காட்டுகின்றன.

பண் :

பாடல் எண் : 66

கயல்பாய்பைந் தடநந்தூன் 
கழிந்தபெருங் கருங்குழிசி
வியல்வாய்வெள் வளைத்தரள 
மலர்வேரி உலைப்பெய்தங்
கயலாமை அடுப்பேற்றி
அரக்காம்பல் நெருப்பூதும்
வயல்மாதர் சிறுமகளிர் 
விளையாட்டு வரம்பெல்லாம்.

பொழிப்புரை :

கெண்டை மீன்கள் பாய்ந்து விளையாடுகின்ற பசிய குளங்களில், தோன்றிய தசை நீங்கிய நத்தையின் ஓடுகளைப், பெரிய கரிய பானைகளாகவும், அகன்ற வாயையுடைய வெண்சங்குகள் ஈன்ற முத்துக்களை அரிசியாகவும், மலரிடத்துளதாய தேனை அப் பானையில் வார்க்கும் நீராகவும் இட்டு, அவ்விடத்து அருகில் காணப் படும் ஆமை ஓடாகிய அடுப்பில் ஏற்றி, செங் குமுதங்களாய நெருப்பை அதன்கீழ் வைத்து ஊதுகின்ற உழத்தியர்தம் பெண் குழந்தைகளின் விளையாட்டு, அவ்வரம்பிடங்களில் எல்லாம் நிறைந்து காணும்.

குறிப்புரை :

ஊன் கழிந்த நந்து என மாறுக. நத்தையின் ஓடு குழியாகவும் கரியதாகவும் இருத்தலின் அது கரிய பானையாக அமைக்கப்பட்டது. ஆமை ஓடுகள் வன்மையுடையவாதலின் அடுப் பாகப் பயன்படுத்தப் பெற்றன. வியல் வாய் - இடம் அகன்ற வாய். ``வியலென் கிளவி அகலப் பொருட்டே`` (தொல். உரி.66) என்னும் தொல்காப்பியம்.

பண் :

பாடல் எண் : 67

காடெல்லாங் கழைக்கரும்பு
காவெல்லாங் குழைக்கரும்பு
மாடெல்லாங் கருங்குவளை
வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம்
குளமெல்லாங் கடலன்ன
நாடெல்லாம் நீர்நாடு 
தனையொவ்வா நலமெல்லாம்.

பொழிப்புரை :

அம்மருத நிலத்தின்கண் உள்ள காடுகளில் எல்லாம் கழைக் கரும்புகள் உள்ளன. சோலைகள் எங்கும் தளிரொடு கூடிய அரும்புகள் உள்ளன. பக்கங்கள் எங்கும் கரிய குவளை மலர்கள் உள்ளன; வயல்களில் எல்லாம் நெருங்கிய சங்குகள் உள்ளன. குளக் கரைகள் எங்கும் இளஅன்னங்கள் உள்ளன. குளங்கள் எல்லாம் கடலை ஒத்துள்ளன. இனைய பல நலங்களை எல்லாம் ஒருங்கு காணின் இப்புனல் நாட்டை ஏனைய நாடுகள் ஒவ்வாதுள்ளன.

குறிப்புரை :

எல்லாம் என வருவன எஞ்சாமைப் பொருட்டாம். கழைக் கரும்பு - கழையாகிய கரும்பு: இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. குழைக் கரும்பு, கருங்குவளை, நெருங்குவளை என இச் சொற்களை இணைத்தும் பிரித்தும் பொருள் காண்க. குழைக்கு அரும்பு - இளந்தளிரோடு கூடிய அரும்பு. நான்கனுருபு, மூன்றனு ருபின் பொருள்பட நின்றது; உருபு மயக்கம்.
குழைக்கும் அரும்பு எனக் கொண்டு முகிழ்க்கும் அரும்பு என உரைப்பினும் அமையும். கருங்குவளை என இணைக்க. நெருங்கு வளை எனப் பிரிக்க. கோடு - கரை: குளக்கரை

பண் :

பாடல் எண் : 68

ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும்
சோலை வாய்வண் டிரைத்தெழு சும்மையும்
ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும்
வேலை ஓசையின் மிக்கு விரவுமால்.

பொழிப்புரை :

ஆலைகளிடத்துக் கரும்புகளைச் செலுத்துபவர்கள் ஒலிக்கும் ஒலியும், சோலைகளில் வண்டுகள் முழங்க எழும் ஒலியும், நிலவுலகில் உயரிய நான்மறைகளை ஒலிப்பவர்தம் ஒலியும் ஒருங்கு சேர்ந்து, கடல் ஒலியினும் பெரிதாக முழங்குவனவாயின.

குறிப்புரை :

பாய்பவர் - பாய்ச்சுபவர். அதாவது கரும்பினைச் செலுத்துபவர். அச்சொல் ஈண்டுத் தன்வினையாய்ப் பாய்பவர் என நின்றது. வேலை - கடல். கடல் ஒலியினும் இம் மூவகை ஒலிகளும் மிக்கு ஒலிக்கின்றன என்பது கருத்து.
ஓலம், சும்மை, ஓதை, ஓசை என்பன ஒலியைக் குறித்து நிற்பன. இவை ஒருபொருள் குறித்த பல சொற்களாம். ஆல் - அசை.

பண் :

பாடல் எண் : 69

அன்னம் ஆடும் அகன்றுறைப் பொய்கையில்
துன்னும் மேதி படியத் துதைந்தெழும்
கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன
மன்னு வான்மிசை வானவில் போலுமால்.

பொழிப்புரை :

அன்னங்கள் விளையாடும் அகன்ற கரைகளை யுடைய குளங்களில், அந்நிலத்து வாழும் எருமைகள் படிந்து மூழ்க, அக்குளங்களினின்றும் நெருங்கி மேல் எழுகின்ற இளமீன்கள், கமுக மரத்தின்மேல் பாய்கின்ற தோற்றம், யாண்டும் பொருந்தி நிற்கும் வானத்தின்கண் நிலைபெறும் இந்திர வில்லை ஒக்கும்.

குறிப்புரை :

கோடெல்லாம் மட அன்னம் என முன்னர்க் கூறியதற் கேற்ப, ஈண்டும், ``அன்னம் ஆடும் அகன்றுறை`` என்றார். கன்னி வாளை - இள மீன்கள். இவ்வாறு கூறுவது சமாதி அணியின் பாற் படும். நீரில் மூழ்கி எழும் எருமைக்குப் பயந்த மீன்கள் அச்சத்தால் துள்ளி எழுவனவாயின. அவ் எழுச்சி அருகில் இருக்கும் பாக்கு மரம் வரை சென்று விழும்; அத்தோற்றம் வான வில்லை ஒத்தது. ஆல்: அசை நிலை.

பண் :

பாடல் எண் : 70

காவி னிற்பயி லுங்களி வண்டினம்
வாவி யிற்படிந் துண்ணும் மலர்மது
மேவி அத்தடம் மீதெழப் பாய்கயல்
தாவி அப்பொழி லிற்கனி சாடுமால்.

பொழிப்புரை :

சோலையில் பயில்கின்ற வண்டின் கூட்டம் அடுத் துள்ள குளங்களில் உள்ள நீர்ப்பூக்களில் படிந்து, அவற்றின் கண் ணுள்ள தேனை உண்ணும். அக்குளங்களில் வாழும் கயல்மீன்கள் மேல் எழுந்து பாய்ந்து, அதன் அருகில் உள்ள சோலைகளின் பழங்களை உதிர்த்துச் சிதைக்கும்.

குறிப்புரை :

வண்டுகள் தமக்கெனச் சோலை இருந்தும், ஆண்டுள்ள மலர்களில் இருந்து தேனுண்ணாமல், அருகில் இருக்கும் நீர்ப் பூக்களில் உள்ள தேனை நுகர முற்பட்டன. அது கண்ட மீனினங்களும் தமக்குரிய குளத்தில் பாய்வதை விடுத்து, அருகிலுள்ள சோலைகளில் பாய்ந்து ஆண்டுள்ள மரங்களின் பழங்களைச் சிதைப்பன வாயின. தத்தம் இடங்களில் துய்த்தற்குரிய பொருளும், சூழலும் இருந்தும், அடுத்துள்ள பொருளை விரும்புதலும், அப்பொருளைத் தமக்கும் பிறர்க்கும் பயன்படாமல் கெடுத்தலும் பேதைமையாம். மீன், மேல் தாவிப் பழங்களை உதிர்ப்பதால் அதற்கும் நுகர்வோர்க்கும் பயன் இலவாதல் காண்க. ஆறறிவுடைய மனித இனமேனும் இத்தகைய தீங்குகளைச் செய்யாதிருக்க வேண்டும் என்பது ஆசிரியர் திருவுள்ளமாகும். ஆல் - அசை.

பண் :

பாடல் எண் : 71

சாலிநீள் வயலின் ஓங்கித் 
தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதாம் வெண்மை உண்மைக்
கருவினாம் வளத்த வாகிச்
சூல்முதிர் பசலை கொண்டு 
சுருள்விரித் தரனுக் கன்பர்
ஆலின சிந்தை போல 
அலர்ந்தன கதிர்க ளெல்லாம்.

பொழிப்புரை :

நெற்பயிர்கள் நீண்ட வயலினிடத்து வளர்ந்து, தமக்குப் பிறவிடங்களில் உள்ள நெற்பயிர்கள் எவையும் ஒப்பாகாத வாறு உயர்ந்து, தூய்மை பொருந்திய வெண்மையையும், உள்ளீடு உடையதாய், உண்மைக் கருவையும் கொண்டு நிற்கும் வளத்தவாகி, அவ் வெண்கரு முதிர்தலால் பொன்னிறமுடையதாகி, இதுகாறும் சுருண்டு கிடந்த நிலையினின்றும் விரிந்து, சிவபெருமானிடத்து அன்புடைய அடியவர்களின் இதயம் போலக் கதிர்கள் எல்லாம் மலர்ந்தன.

குறிப்புரை :

நெற்பயிர் தோன்றுங்கால் வெண்மையும், நெல் கருக் கொண்ட நிலையில் பொன்னிறம் உடையதாயும்.
இருக்கும். கருக் கொண்ட சுருள் விரிய விரிய, நெற்கதிர் விரியும். அவ்வாறு விரிந்த கதிர், அடியவர்தம் சிந்தை அலர்ந்திருப்பது போல அலரும் எனக் கதிர் வளர்ச்சியின் உண்மையைப் பட்டாங்கு கூறிய திறன் போற்றுதற் குரியதாகும். ஓங்குதல், மிகுதல், கருவளமாதல், பயலை கொள்ளுதல், சுருள் விரிதல், கதிர் அலர்தல் ஆகிய செயல்கள் அனைத்தும் நெற் பயிர்க்கும், அடியவர்க்கும் பொருந்துவனவாய் உள்ளன.
நெற்பயிர் அடியவர் 1. ஓங்குதல் - செழித்து வளர்தல் 1. சிந்தை மேலோங்கி நிற்றல்
2. மிகுதல் - ஒப்புமையின்றி 2. பெருமையால் தம்மை வளர்தல். ஒப்பவராகி அடிமைத்திறத் தினால் வளர்ந்திருத்தல்.
3. கருவளம் ஆதல் - நெற்கரு 3. சிவசத்தி பதிதற்குரிய வளர்தற்குரிய பால் பிடித்தல். நீர்மை பெறல்.
இக்கரு, வாலிதாம், வெண்மை, உண்மைக்கரு என மூன்று அடை, மொழிகளுடன் கூட்டிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில்,
அ. வாலிதாதல் - அ. புறத்தூய்மையைநீரானும்,
தூய்மையதாதல் அகத்தூய்மையை வாய்மையானும் பெற்றிருத்தல்.
ஆ. வெண்மை - வெண்மை ஆ. பூசுநீறுபோல் உள்ளும்
உடையதாதல் புனிதராய் இருத்தல். இ. உண்மை - பதரின்றி இ. உலகியல் உணர்வின்றி உள்ளீடு உடைத்தாதல். மாதோர் பாகர் மலர்த்தாள் அகத்துட் கொண்டு மறப்பிலா திருத்தல்.
4. பயலை கொள்ளுதல் - 4. மனம், மொழி, மெய் பொன்னிறம் கொள்ளுதல். ஆகிய மூன்றும் இறைவனிடத்தேயே 9; 9; ஆற்றுப்படுத்தப்பெற்றிருப்ப தால் உடல் வேறுபடல். `பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்` (தி.6 ப.25 பா.7)
`நின் கோயில் வாயிலில் பிச்சனாக் கினாய்` (தி.8 திருச்சத.96) எனவரும்
திருவாக்குகளும் காண்க.
5. சுருள் விரிதல் - கதிர் முதிரச் 5. தம்மளவில் கொண்டிருந்த
சுருண்டு இருந்த நெற்பயிர் அன்பு, ஏனைய விரிதல். உயிர்களிடத்தும் விரிதல். `பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் நின் செல்வத் தொண்டர்`. (பட்டினத்துப் பிள்ளையார் திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 7-54, 55) என வரும் திருவாக்கும் காண்க
6. கதிர் அலர்தல் 6. சிவபோகம் முதிர்ந்து
விளங்குதல். வாலிதாம் - தூய்மையாம். பயலை - பசலை.
ஆலின - அலர்ந்தன, அஃதாவது விரிந்தன.

பண் :

பாடல் எண் : 72

பத்தியின் பால ராகிப்
பரமனுக் காளா மன்பர்
தத்தமிற் கூடி னார்கள்
தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்தநீள் பத்தி யின்பால்
முதிர்தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல
விளைந்தன சாலி யெல்லாம்.

பொழிப்புரை :

பத்தி வயப்பட்டு இறைவனுக்கு அடிமை பூண்டு ஒழுகும் அடியவர்கள், தம்முள்தாம் கூடுகின்றபொழுது தலை தாழ்த்தி வணங்குதல் போல, செறிந்து நீண்ட வரிசையொடு பால் முதிர்ந்து விளங்கும் கதிர்கள், தலை வணங்கியனவாய், அவ்வடியார்களுக்குச் சிவபோகம் முதிர்வதுபோல அப்பயிர்களும் நெல் முதிர்ந்து பயன் விளைய நின்றன.

குறிப்புரை :

அடியவர்கள் தமக்குள் ஒருவரை ஒருவர் காணுங்கால் வணங்கி மகிழ்வர். அதுபோல நெற்பயிர்களும் தத்தமக்குள் வளைந்து நின்று அசைந்து நிற்கும்.
அடியவர்கள் தத்தமக்குள் வணங்குமாற்றைத் திருஞானசம் பந்தர் (தி.12 பு.28 பா.271), திருநாவுக்கரசர் (தி.12 பு.21 பா.182), சுந்தரர் (தி.12 சரு.1-5 பா.123) ஆகியோர்தம் வரலாறுகளிலும் பிற இடங்களிலும் காணலாம். `மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே` (சிவஞானபோதம் நூற்பா.12) என்னும் மெய்ந்நூலும்.
மொய்த்து - கதிர்களில் இடனின்றி நெல்மணிகள் செறிந்து. பத்தி - வரிசை .
சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.
(சீவகசிந்தாமணி பா.53) எனச் சிந்தாமணி ஆசிரியர் உலகியல் நலம் கொள உவமித்திருப்பதும், ஆசிரியர் சேக்கிழார் அருளியல் நலம் கொள உவமித்திருப்பதும் கண்டு ஒப்பிட்டு மகிழலாம்.

பண் :

பாடல் எண் : 73

அரிதரு செந்நெற் சூட்டின்
அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுறத் தடிந்த பன்மீன்
படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின்
சுடர்ப்பெரும் பொருப்பு யர்ப்பார்
விரிமலர்க் கற்றை வேரி
பொழிந்திழி வெற்பு வைப்பார்.

பொழிப்புரை :

உழவர்களுள் சிலர், அரியப்பட்ட செந்நெல் கதிரோடு கூடிய நெற்றாள்களின் குவியல்களை மலைபோலக் குவிப்பர். சிலர், தாம் விருப்போடு பிடித்த பல்வேறு வகையான மீன் களையும் பரந்த பெரிய மலைபோலக் குவிப்பர். சிலர், வளைந்த சங்குகள் ஈன்ற ஒளி பொருந்திய முத்துக் குவியலாகிய பெருமலை களை, மேலும் உயரச் செய்வர். சிலர், நெற்பயிரோடு வளர்ந்த விரிந்த மலர்த் தொகுதிகளினாலாய பொருப்பிலிருந்து வரும் தேனருவி களைப் பெருகச் செய்வர்.

குறிப்புரை :

செந்நெற் சூடு - செந்நெல் கதிரோடு கூடிய நெற்றாள் களின் குவியல். செந்நெல் அரிகளைத் தரையில் ஓங்கி அடிக்கும் பொழுது முதிர்ந்த நெல்மணிகள் உதிர்ந்துவிடும். முதிராத பசிய நிலை யிலுள்ள நெல், வைக்கோலை விட்டுப் பிரியாது இருக்கும். அத் தகைய தாள் குவியலையே சூடு என அழைப்பர். தடிந்த - பிடித்த. சுரி வளை - வளைந்த சங்குகள். மலர்க்கற்றை - மலர்த்தொகுதி. வேரி - தேன்.

பண் :

பாடல் எண் : 74

சாலியின் கற்றை துற்ற
தடவரை முகடு சாய்த்துக்
காலிரும் பகடு போக்குங்
கரும்பெரும் பாண்டில் ஈட்டம்
ஆலிய முகிலின் கூட்டம்
அருவரைச் சிமயச் சாரல்
மேல்வலங் கொண்டு சூழுங்
காட்சியின் மிக்க தன்றே.

பொழிப்புரை :

நெற்கதிரையுடைய வைக்கோல் குவியல்கள் பலவும், பொருந்த நீண்ட மலையெனக் காட்சிதரும். அம்மலை முகட்டைச் சிறிது சரிக்க, அதனை மிதித்து வரும் வலிய கால்களை யுடைய எருமைக்கடாக்களுடன் இணைந்து நடக்கும் கரிய பெரிய எருமைகளின் தொகுதி, நீர் மிகுந்த மேகங்களின் கூட்டம் அரிய மலை யினது உச்சியில் வலமாகச் சூழ்கின்ற காட்சியினும் சிறந்திருந்தது.

குறிப்புரை :

சாலி - நெற்பயிர். துற்று - மேன்மேல் பொருந்த. தடவரை முகடு - நீண்ட மலை உச்சி. பாண்டில் - எருமை. ஆலிய முகில் - நீர்நிறைந்தமேகம். வைக்கோற் போர் மலையென இருந்தது; அதனைச் சரித்து அதன்மீது சுற்றிவரும் எருமைக் கூட்டம் மேகம் போல் இருந்தது.

பண் :

பாடல் எண் : 75

வைதெரிந் தகற்றி யாற்றி
மழைப்பெயல் மானத் தூற்றிச்
செய்யபொற் குன்றும் வேறு
நவமணிச் சிலம்பும் என்னக்
கைவினை மள்ளர் வானங்
கரக்கவாக் கியநெற் குன்றால்
மொய்வரை உலகம் போலும்
முளரிநீர் மருத வைப்பு.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு தாளடி செய்தவுடன் அவ் வைக்கோல்களின் தூசு போக முறத்தால் வீசி, அந்நெற்கண் உள்ள பதர் போகுமாறு அதனை மழை போலத் தூற்றி, சிவந்த பொன்மலையும், அதற்கு வேறான நவமணிகளால் ஆய ஒன்பது மலைகளும் போலக் கைத் தொழில் வல்ல உழவர்கள் விண்ணுலகம் மறையுமாறு உயர்த்திய நெல் மலைகளால், நெருங்கிய மலைகளையுடைய குறிஞ்சி நிலத்தை ஒத்திருந்தது, தாமரை மலர்களை உடையதாய மருதநிலம்.

குறிப்புரை :

செந்நெல் குன்று பொற்குன்றை ஒத்தது. ஏனைய வெண்நெல், கரு நெல்களையுடைய மலைகள், நவமணிச் சிலம்பு களை ஒத்தன.
வை - வைக்கோல். இவ்வாற்றான் குறிஞ்சி என மருதம் காட்சியளித்தது.

பண் :

பாடல் எண் : 76

அரசுகொள் கடன்கள் ஆற்றி 
மிகுதிகொண் டறங்கள் பேணிப்
பரவருங் கடவுட் போற்றிக் 
குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையுந் தாங்கி 
விளங்கிய குடிகள் ஓங்கி
வரைபுரை மாடம் நீடி 
மலர்ந்துள பதிகள் எங்கும்.

பொழிப்புரை :

அவ்வாறு தொகுத்த நெற்குவியல்களுள் அரசர்க்குரிய ஆறில் ஒரு பங்கை அரசிறையாகக் கொடுத்து, எஞ்சிய ஐந்து பங்குகளில், தாம் செய்தற்குரிய அறங்களைச் செய்தும், வணங்குதற்குரிய இறை வழிபாட்டைச் செய்தும். குரவர்க்கும் விருந்தினர்க்கும், நற்குணம் அமைந்த சுற்றத்தார்க்கும் கொடுத்தும், இவ்வாற்றான் புகழ் விளங்கிய குடிகள் மிக்கு, மலை போலும் உயர்ந்த மாளிகைகள் விளங்க இருந்தன அந்நாடுகள் எல்லாம்.

குறிப்புரை :

அரசு கொள் கடன் எனவே அக்கால மரபுப்படி ஆறில் ஒன்று செலுத்துதல் அறனாயிற்று. வறியோர்க்கு ஈதல் முதலாய பல்வேறு ஈகை வினைத் துறைகளும் தம்மைப் பேணுதலும் அடங்க `அறங்கள் பேணி` என்றார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்றே செய்ய வேண்டுதலின், தன்னை ஓம்பலும் அறனாம். பரவரும் கடவுள் - பரவுதற்கு அமைந்த கடவுள். `காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை மாண்பு அறம்` (சித்தி.2 சூத்.27) என்பர். ஆதலின் அக்கடவுள் தாமும் சிவபரம் பொருளேயாம். `விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும்` (குறள், 522) என்னும் திருக்குறள். ஆதலின் அன்பும் அரிய பல குணங்களும் வாய்ந்த சுற்றமே சுற்றம் ஆதலின் `பண்பின் விரவிய கிளையும்` என்றார். தென்புலத்தார் - அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி; அவர்க்கு இடம் தென்புலமாதலின் தென்புலத்தார் என்றார் என விளக்கம் காண்பர் பரிமேலழகர் (குறள், 43 உரை). எனினும் தமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த தம்முன்னோர்களையே அத்தொடர் குறிக்கும். இவ்வகையில், ஆசிரியர் சேக்கிழார் தம்மொடு வாழ்ந்து வரும் குரவரன்றித் தமக்கு முன் வாழ்ந்து மறைந்த குரவர்களை நினைவு கூர்ந்து வழிபடுதலும் அமையக் `குரவர்` என்றார் எனலாம்.
விருந்து - புதிது. ஈண்டு, அது புதியராய் வந்தார் மேல் நின்றது. முன்னரே அறிமுகமாகி வருபவர்களும், அறிமுகம் இன்றி வருப வர்களும் ஆக இருவரும் விருந்தினர் ஆவர் என விளக்கம் காண்பர் பரிமேலழகர். எனவே `குரவர்` என்பதால் தென்புலத்தாரையும் , `பரவரும் கடவுள்` என்பதால் தெய்வத்தையும், `விருந்து` என்பதால் விருந்தினரையும், ``பண்பின் விரவிய கிளையும்`` என்பதால் ஒக்கலையும் குறித்தாராயிற்று. துறந்தார், துவ்வாதவர், இறந்தார் ஆகிய மூவருக்கும் ஈதலையும், தம்மைப் பேணலையும் `அறங்கள் பேணி` எனும் தொடரால் குறித்தார். இனி, நாடு எனும் அதிகாரத்தில் `இறைவற்கு இறை ஒருங்கு நேர்தல்` (குறள், 733) வேண்டுமெனக் குறித்ததை `அரசுகொள் கடன்களாற்றி` எனும் தொடரால் குறித்தார். இவ்வாற் றான் `தென்புலத்தார் தெய்வம்` (குறள், 43) எனத் தொடங்கும் திருக்குறளையும், ``துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும்``(குறள், 42) எனத் தொடங்கும் திருக்குறளையும், ``பொறை ஒருங்கு`` (குறள், 733) எனத் தொடங்கும் திருக்குறளையும் ஒருங்கு தழுவி யாத்திருக்கும் இச்செய்யுளின் அருமை அறிந்து இன்புறற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 77

கரும்படு களமர் ஆலைக் 
கமழ்நறும் புகையோ மாதர்
சுரும்பெழ அகிலால் இட்ட
தூபமோ யூப வேள்விப்
பெரும்பெயர்ச் சாலை தோறும்
பிறங்கிய புகையோ வானின்
வரும்கரு முகிலோ சூழ்வ
மாடமும் காவு மெங்கும்.

பொழிப்புரை :

கருப்பஞ் சாற்றைக் காய்ச்சுகின்ற உழவர்களின் ஆலை இருக்குமிடத்தில் தோன்றிய மணமிகு புகையோ? மகளிர் தம் கூந்தற்கு வண்டுகள் எழுமாறு அகில் துண்டுகளால் ஊட்டிய அரும் புகையோ? வேள்வித் தூணை நிலை பெறுத்திச் செய்யும் வேள்விச் சாலைகளினின்றும் எழும் புகையோ? விண்ணகத்து இயங்கும் கரு மேகமோ? என இன்னதென்று அறிய இயலாதவாறு நிலவும் புகை கள், அங்குள்ள மாடங்களிலும் சோலைகளிலும் சூழ்ந்து காணப்படு கின்றன.

குறிப்புரை :

மாடமும் காவும் சூழ்வன, புகையோ தூபமோ முகிலோ என இயையும். ஓகாரங்கள், ஐயப் பொருளன. கரும்பு: அதன் சாற்றைக் குறித்தலின் ஆகுபெயராம். ஆலை: அஃது இருக்குமிடத் தைக் குறித்தலின் ஆகுபெயராம். எனவே இந்நாட்டில் தோன்றும் புகை இவ்வகையில் தோன்றிய புகைகளுள் ஒன்றாக இருக்கு மேயன்றி வேறு பிற தீய வகையான் எழுந்த புகையாக இராது என்பது கருத்தாம். ஐயப்பொருளாகச் சூழும் இந்நான்கனுள் முன்னைய இரண்டும் முறையே பொருளும் இன்பமும் ஆம் மூன்றாவது அறம் குறித்ததாம். நான்காவதாய மேகம், ஈண்டுக் கூறிய மூன்றற்கும், வீடுபேற்றிற்கும் ஏதுவாவதாம்.இவ்வகையில் இணைத்துக் காணு மாறு அருளிய திறம் போற்றற்குரியதாம். யூபம் - வேள்வித்தூண்.

பண் :

பாடல் எண் : 78

நாளிகே ரஞ்செ ருந்தி
நறுமலர் நரந்தம் எங்கும்
கோளிசா லந்த மாலங்
குளிர்மலர்க் குரவம் எங்கும்
தாளிரும் போந்து சந்து 
தண்மலர் நாகம் எங்கும்
நீளிலை வஞ்சி காஞ்சி 
நிறைமலர்க் கோங்கம் எங்கும்.

பொழிப்புரை :

தென்னை மரங்களும், செருந்தி மரங்களும், நறுமணம் வாய்ந்த மலர்களை உடைய நாரத்தை மரங்களும் எவ் விடங்களிலும் உள்ளன. அரச மரங்களும் கடம்ப மரங்களும், பச் சிலை மரங்களும், குளிர்ந்த மலர்களையுடைய குரா மரங்களும் எவ் விடங்களிலும் உள்ளன. பருத்த அடிப்பாகத்தை உடைய பனை மரங் களும், சந்தன மரங்களும், குளிர்ந்த மலர்களையுடைய குங்கும மரங் களும் எவ்விடங்களிலும் உள்ளன. நீண்ட இலைகளையுடைய வஞ்சி மரங்களும், காஞ்சி மரங்களும், நிறைந்த மலர்களையுடைய கோங்க மரங்களும் எவ்விடங்களிலும் உள்ளன.

குறிப்புரை :

நாளி கேரம் - தென்னை. நரந்தம் - நாரத்தை. கோளி - அரசு. சாலம் - கடம்பு. மராமரம் என்பாரும் பூவாது காய்க்கும் மரம் என்பாரும் உளர்.
தமாலம் - பச்சிலை மரம். போந்து-பனை: `போந்தை வேம்பே ஆர் என வரூஉம்` (தொல். புறத்.5) என்னும் தொல்காப்பியம். சந்து - சந்தனமரம். நாகம் - குங்கும மரம். குரா, குரவு எனக் குறுகி அம்முப் பெற்றது.

பண் :

பாடல் எண் : 79

சூதபா டலங்கள் எங்குஞ்
சூழ்வழை ஞாழல் எங்குஞ்
சாதிமா லதிகள் எங்குந்
தண்டளிர் நறவம் எங்கும்
மாதவி சரளம் எங்கும்
வகுளசண் பகங்கள் எங்கும்
போதவிழ் கைதை எங்கும்
பூகபுன் னாகம் எங்கும்.

பொழிப்புரை :

மாமரங்களும், பாதிரி மரங்களும் எவ்விடத்தும் உள்ளன. சூழ்ந்த சுரபுன்னை மரங்களும், ஞாழல் மரங்களும், சிறு சண்பகங்களும், மல்லிகைகளும் எவ்விடத்தும் உள்ளன. குளிர்ந்த தளிரையுடைய அனிச்ச மரங்களும் எவ்விடத்தும் உள்ளன. குருக்கத்திக் கொடிகளும் சரள மரங்களும் எவ்விடத்தும் உள்ளன. மகிழ மரங்களும் சண்பக மரங்களும் எவ்விடத்தும் உள்ளன. பூவிரிந்த தாழை மரங்களும் எவ்விடத்தும் உள்ளன. கமுக மரங்களும் புன்னை மரங்களும் எவ்விடத்தும் உள்ளன.

குறிப்புரை :

சூதம் - மா. பாடலம் - பாதிரி மரம். வழை - சுரபுன்னை. சாதி - சண்பகப்பூ; சாதிப்பூ என்பாரும் உளர்.
மாலதி - மல்லிகை; முல்லையும் ஆம். நறவம் - அனிச்சம். மாதவி - குருக்கத்தி. சரளம் - சரளமரம்; நீண்ட இலைகளையுடைய ஒருவகைத் தேவதாரு என விளக்குவர் சிவக்கவிமணி (பெரிய.பு. உரை) அவர்கள்.
வகுளம் - மகிழ மரம். கைதை- - தாழை மரம்.பூகம் - பாக்குமரம். புன்னாகம் - புன்னைமரம்.

பண் :

பாடல் எண் : 80

மங்கல வினைகள் எங்கும்
மணஞ்செய்கம் பலைகள் எங்கும்
பங்கய வதனம் எங்கும
பண்களின் மழலை எங்கும்
பொங்கொளிக் கலன்கள் எங்கும்
புதுமலர்ப் பந்தர் எங்குஞ்
செங்கயல் பழனம் எங்குந்
திருமகள் உறையுள் எங்கும்.

பொழிப்புரை :

மங்கல வினைகள் பலவும் எவ்விடத்தும் உள்ளன. மணம் செய்தலினால் உண்டாகின்ற ஒலிகள் எவ்விடத்தும் உள்ளன. மகளிரின் தாமரை அனைய முகங்கள் எவ்விடத்தும் உள்ளன. அவர்தம் பண்ணோடு இயைந்த இன்சொற்கள் எவ்விடத்தும் உள்ளன. பேரொளி வீசுகின்ற அணிகலன்கள் எவ்விடத்தும் உள்ளன. புதிய மலர்களால் பொலிந்து நிற்கும் பந்தல்கள் எவ்விடத்தும் உள்ளன. சிவந்த கெண்டை மீன்கள் உலாவும் வயல்கள் எவ்விடத் தும் உள்ளன. திருமகள் வதிந்து நிற்கும் இடங்கள் எவ்விடத்தும் உள்ளன.

குறிப்புரை :

மங்கல வினைகள் - பிறந்த நாள் வயின் நிகழும் பெரு மங்கலங்கள், காப்பிடுதல், மயிர் நீக்கும் மங்கலம், ஏமுறு கடவுளை ஏத்துதற்கான மங்கலங்கள் போல்வன. இவற்றோடு மணம் செய் கம்பலை ஒலியும் பேரொலியும் உடையவாய் இருத்தலின், இதனை வேறுபட ஓதினார். முகனமர்ந்து நல்விருந்து ஓம்புதல், போலும் நற் செயல்கள் பலவும் நிகழ்தற்குரிய இடனாகவிளங்குதலின் திருமகள் பிரிவின்றி உறைவாளாயினள். `நிலத்து இருப்பு உள்ளும் மாவும்` என்பர் பின்னும். திருமகள் உறையுள் - தாமரை என்பாரும் உளர். ஒருநாட்டின் மேம்பாட்டை விளக்குதற்கு இது போதிய தன்மையின் இப்பொருள் அத்துணைச் சிறப்பின்று.

பண் :

பாடல் எண் : 81

மேகமுங் களிறு மெங்கும்
வேதமுங் கிடையு மெங்கும்
யாகமுஞ் சடங்கு மெங்கும்
இன்பமும் மகிழ்வு மெங்கும்
யோகமுந் தவமு மெங்கும்
ஊசலு மறுகு மெங்கும்
போகமும் பொலிவு மெங்கும்
புண்ணிய முனிவ ரெங்கும்.

பொழிப்புரை :

மேகக் கூட்டங்களும், யானைகளும் எவ்விடத்தும் உள்ளன. மறை ஒலியும், அதனை ஓதும் குழாங்களின் ஒலியும் எவ்விடத்தும் உள்ளன. வேள்விகளும் அவற்றிற்கு உறுப்பாய பிற செயற்பாடுகளும் எவ்விடத்தும் உள்ளன. அறவுணர் வினாலும், திருவருள் தோய்வினாலும் வரும் இன்பமும், உலகியல் அளவிலான மகிழ்வும் எவ்விடத்தும் உள்ளன. இயமம், நியமம் முதலிய எண்வகை யோகங்களும் அவற்றிற்கு உறுப்பாய விரதம் முதலிய தவங்களும், எவ்விடத்தும் உள்ளன. ஊசல் ஆடுதலும் அவற்றையுடைய வீதிகளும் எவ்விடத்தும் உள்ளன. இன்பம் துய்த்தலும் அதனால் விளையும் பொலிவுநலங்களும் எவ்விடத்தும் உள்ளன. புண்ணியம் செய்யும் முனிவர்களும் எவ்விடத்தும் உள்ளனர்.

குறிப்புரை :

கிடை - மறை ஒலிக்கும் மாணவர் குழாம். போகம் - இன்பம்: ஈண்டு ஐம்பொறிகளால் நுகரப்படும் இன்பம் குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 82

பண்டரு விபஞ்சி எங்கும்
பாதசெம் பஞ்சி எங்கும்
வண்டறை குழல்கள் எங்கும்
வளரிசைக் குழல்கள் எங்கும்
தொண்டர்த மிருக்கை எங்கும்
சொல்லுவ திருக்கை யெங்கும்
தண்டலை பலவும் எங்கும்
தாதகி பலவு மெங்கும்.

பொழிப்புரை :

நால்வகை நிலத்தினும் இசைத்தற்குரிய பண்களைப் பாடுதற்குரிய வீணைகள் எவ்விடத்தும் உள்ளன. மகளிர்தம் கால்களில் பூசப்பெற்ற செம்பஞ்சுகள் எவ்விடத்தும் உள்ளன. அம்மகளிரின் கூந்தல்களில் எவ்விடத்தும் வண்டுகள் ஒலித்தல் உள்ளது. இசை வளர்தற்குரிய குழல்கள் எவ்விடத்தும் உள்ளன. அடியவர்களின் திருமடங்கள் எவ்விடத்தும் உள்ளன. மறை ஒலிப்பதும் எங்கும் உள்ளது. சோலைகள் பலவும் எவ்விடத்தும் உள்ளன. ஆத்தி மரமும் பலாமரமும் எவ்விடத்தும் உள்ளன.

குறிப்புரை :

விபஞ்சி - வீணை: யாழ் வகைகளுள் ஒன்று என்றலும் ஒன்று. தண்டலை - சோலை. தாதகி - ஆத்திமரம் முதலியன. குழல்கள் என வருவனவற்றுள் முன்னையது கூந்தலைக் குறிக்கும்; பின்னையது இசைக் கருவிகளுள் ஒன்றாய குழல்களைக் குறிக்கும். இருக்கை என வருவனவற்றுள் முன்னையது இடத்தையும், பின்னையது மறைகளை யும் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 83

மாடுபோ தகங்கள் எங்கும்
வண்டுபோ தகங்கள் எங்கும்
பாடுமம் மனைகள் எங்கும்
பயிலுமம் மனைகள் எங்கும்
நீடுகே தனங்கள் எங்கும்
நிதிநிகே தனங்கள் எங்குந்
தோடுசூழ் மாலை எங்குந்
துணைவர்சூழ் மாலை எங்கும்.

பொழிப்புரை :

பக்கங்கள் எங்கும் யானைக்கன்றுகள் உள்ளன. மலரிடங்கள் எங்கும் வண்டுகள் உள்ளன. வீடுகள் எங்கும் பாடுவார் பாடுகின்ற இசைகள் மிக்குள்ளன. மகளிர் ஆடும் அம்மனைகள் எவ்விடத்தும் உள்ளன. நீண்ட கொடியாடைகள் எவ்விடத்தும் உள்ளன. பொருளைப் பொதிந்து வைத்திருக்கின்ற கருவூலங்கள் எவ்விடத்தும் உள்ளன. இதழ் சூழ்ந்த மலர்மாலைகள் எவ்விடத்தும் உள்ளன. சூழ்ந்து நிற்கும் ஆடவர் வரிசைகள் எவ்விடத்தும் உள்ளன.

குறிப்புரை :

மாடு - பக்கம். போதகங்கள் என வருவனவற்றுள் முன் னையது ஒரு சொல்லாய், யானை எனப் பொருள்படும்: (போதகம் - யானை); பின்னையது போது அகங்கள் எனப் பிரிக்கப்பட்டு மலர்களிடத்து எனப்பொருள்படும். அம்மனை என வருவனவற்றுள் முன்னையது வீடுகளையும் (அம்மனை- அழகியமனை), பின்னை யது விளையாட்டு வகைகளுள் ஒன்றான அம்மானையையும் குறிக்கும். கேதனம் - கொடி. நிகேதனம் - பொருள் வைப்பு: கருவூலம். மாலையென வருவனவற்றுள் முன்னையது மலர் மாலையையும், பின்னையது வரிசை என்ற பொருளையும் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 84

வீதிகள் விழவின் ஆர்ப்பும்
விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும்
சாதிகள் நெறியில் தப்பா
தனயரும் மனையில் தப்பா
நீதிய புள்ளும் மாவும்
நிலத்திருப் புள்ளு மாவும்
ஓதிய எழுத்தாம் அஞ்சும்
உறுபிணி வரத்தாம் அஞ்சும்.

பொழிப்புரை :

வீதிகளில் அவ்வப்பொழுதும் எடுக்கும் திருவிழாக்களால் இனிய முழக்கங்கள் எழும். வீடுகளில் தம்மை விரும்பி வருவோர்களுக்குச் செய்யும் விருந்தின் முழக்கங்கள் எழும். அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் எனும் நால்வகை இனத்தவர் களும் தத்தமக்குரிய ஒழுக்க நெறியில் தவறாது இருப்பர். அவ்வவ் வீடுகளில் உள்ள சிறுவர்களும் தத்தம் மனைகளில் தவறாது வதிவர். பறவைகளும், விலங்குகளும் பகையின்றித் தத்தமக்குரிய நெறியில் வாழும். திருமகளும் அந்நாட்டகத்து உறைதலையே விரும்புவாள். அந்நாட்டு மக்களால் ஓதப்படுவன திருவைந்தெழுத்தேயாம். அதனால் பிணி எவையும் அந்நாட்டில் வர அஞ்சும்.

குறிப்புரை :

விழவு: மக்கள் இறைவர்க்கெனவும் தமக்கெனவும் எடுக்கும் விழாக்கள்.
வீதிகடோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடர்மாமணிக ளொளிதோன்றச்
சாதிகளாய பவளமுமுத்துத் தாமங்கள்
ஆதியாரூ ராதிரைநாளா லதுவண்ணம். (தி.4 ப.21 பா.3)
எனவரும் திருவாக்கும் காண்க.
சாதிகள் - அந்தணர் முதலிய நால்வகை இனத்தவர்கள். இவ் வினத்தவர்கள் சங்ககாலத்திற்கு முன்னிருந்தே வாழ்ந்து வந்தவராவர். ``அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக் கமும், இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்``, (தொல். புறத்.20) என வரும் தொல்காப்பியமும், ``வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்`` (புறநா.183) எனவரும் புறநானூறும் காண்க.
ஒரு நாட்டிற்கு இன்றியமையாது வேண்டப்படுவன இறைவழி பாடும், பாதுகாப்பும், பண்டமாற்றமுமாம். அப் பொருள்களில் இன்றி யமையாததாய உழவும் ஆம். இந்நால்வகைப் பொறுப்புகளையும் மேற்கூறிய நால்வகையினரும் முறையே எடுத்துக் கொண்டு அவற் றைச் செவ்விதாக நடத்திவந்தனர். அவ்வகையிலேயே `சாதிகள் நெறியில் தப்பா` என்றார்.
காலப்போக்கில் இவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை வைத்து, மேல் - கீழ் எனும் அமைப்பு உளவாயிற்று. இந்நிலையும் சங்ககாலத்தேயே வந்து விட்டமை `வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்ப்பால் ஒருவன் கற்பின் - மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே` (புறம். 183) எனவரும் புறநானூற்றுப் பாட்டானும், ``மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர், கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்`` (குறள் 973) எனவரும் திருக்குறளானும் அறியலாம்.
இதனால் வளர்ந்த சாதிப்பிணக்குகள் பலவாம். அவற்றால் ஏற் பட்ட அழிவுகளும் பலவாம். ஆனால் தொடக்க காலத்தில் அவ்வவ் வோர், அவ்வப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டவாறு தவறாது செய்து வந்தனர். அச்செயற்பாடு நாட்டிற்கு நன்மையையே தந்தது. அதுகொண்டே அமைச்சர் பெருமகனாராகிய சேக்கிழாரும் இதனைக் குறித்தனர்.
தனயர் - அவ்வவ் வீடுகளிலும் வளர்ந்து வரும் நன்மக்கள். பெற்றோர் பொறுப்பில் வாழ்ந்தும், வளர்ந்தும் வரும் இவர்கள், தத்தம் பெற்றோர்தம் ஆணைவழி நின்று இறைவழிபாடு, பெற்றோர் வழி பாடு, கல்வி, நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் பற்றிய வளர்ச்சிகளைப் பெறற்குரியவராவர். ஆதலின் இவர்கள், இன்றியமையாத காரணங் களுக்கே மனையை விடுத்து வெளிச்சென்று வருதற்குரியவர்களாவர். இவ் வகையான வளர்ச்சியே அவர்தம் உடலும் உணர்வும் நெறிப்பட வளர் தற்கு ஏதுவாகும். ஆதலின் ``தனயரும் மனையில் தப்பார்`` என்றார்.
அப்பூதியடிகளார், தம்மனைக்கு வந்த நாவரசரை விருந்து ஓம்புதற்கென வாழையிலை கொணரத் தம் மகன் மூத்த திருநாவுக் கரசரை ஏவலும், அம் மைந்தனும், ``நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செய்யப் பெற்றேன்`` (தி.12 பு.25 பா.24) என மகிழ்ந்து அப்பணியை மகிழ்வுடன் ஏற்றதும் நினைவு கொளற்குரியன. எனவே மகளிர்க்கு இல்லிகவாப் பருவம் எனக் குறித்தது போன்று, மைந்தற்கும் இல்லிக வாப் பண்பு வேண்டுதல் இன்றியமையாததேயாகும்.
இவ்வாறு குரவர்தம் வழி நில்லாமையால்தான், பெற்ற துன்பத்திற்கு வருந்தி ``இருமுதுகுரவர் ஏவலும் பிழைத்தேன்`` (சிலப். கொலைக். வரி 67) எனக் கோவலனும் வருந்தினன், மாதவியின் தொடர்பு ஏற்படுமுன், அவன் குரவர் வழியில் நின்றமைக்கு, `குரவர் பணியன்றியும்` (சிலப். புறஞ். வரி 89) எனக் கூறும் மாதவியின் கூற்றுச் சான்றாதலையும் ஈண்டு நினைவு கொளற்குரிய தாம். அப்பரடிகளும் தம் தமக்கையார் வழிநில்லாமையால்,
``காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால்
கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி
நீத்தாய கயம்புக நூக்கியிட
நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்;``
(தி.4 ப.1 பா.5)
என வருந்தியமையும் உளங்கொளற்குரியதாம்.
அங்ஙனமாயின், பெற்றோர் நெறியினின்றும் வழுவி இல்லிகத் தல் பெண்களுக்குப் பொருந்துமோ எனில் அதுவும் பொருந்தாது. அங்ஙனமாக அவரையும் ஈண்டு ஆசிரியர் கூறாதது என்னை எனில்,
`முலை முகம் செய்தன முள்ளெயிறு இலங்கின,
தலைமுடி சான்ற தண்டழை உடையை,
அலமரல் ஆயமோடு யாங்கணும் படாஅல்,
மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய,
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை,
பேதை அல்லை மேதையங் குறுமகள்` -அகநானூறு, 7
எனக் கூறுமாற்றான் பண்டுதொட்டே மகளிர்க்குரிய இந்நெறி போற்றப்பெற்று வருதலானும், ஆசிரியர் சேக்கிழாரும் இதனை `இல்லிகவாப் பருவம்` எனப் பின் குறித்தலானும் அந்நெறியை ஈண்டுக் கூறாராயினார்.
ஒரு நாட்டின் நீதியமைவு மக்களிடத்து மட்டுமன்றி ஏனைய பறவைகள், விலங்குகள் வரையிலும் கூட நிலவுமாறு அமைய வேண்டும். அவ்வாறு அவ்வுயிர்களளவிலும் நிலவ வேண்டுமானால் மக்களிடத்தும், அவர்களைக் காக்கும் மன்னரிடத்தும் எத்துணை யளவு நீதியும் நேர்மையும் அமைதல் வேண்டும் என்பது உய்த்துணரத் தக்கதாம்.
`கோள்வல் உளியமும் கொடும்புற் றகழா;
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறவா;
அரவும் சூரும் இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க் குறுகண் செய்யா;
செங்கோற் றென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே.`` -சிலப். புறஞ்சேரி. 5-10
என்னும் சிலப்பதிகாரமும். இதனை உளங்கொண்டே `நீதிய புள்ளு மாவும்` என்றார். ஈண்டுக் குறித்த மா விலங்காகும்.
இத்தகைய அருள்மனமும் அறமனமும் தவழ்ந்து நிற்கும் நாட்டில் திருமகள் அகலாது உறைவள். ஆதலின் `நிலத்து இருப்பு உள்ளும் மாவும்` என்றார். ஈண்டு மா என்பது திருமகளைக் குறிக்கும். அவள் இடம் பெயர்ந்து உறைபவள். ஆயினும் இத்தகைய நிலத் தகத்தெனில் இடம் பெயராது உறைவள்.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்லிருந்து ஓம்புவான் இல். -குறள், 84
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு. -குறள், 482
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. -குறள், 179
எனவரும் திருக்குறள்களும் ஈண்டு நினைவு கூர்தற்குரியன.
திருவைந்தெழுத்தே ஆதி மந்திரமாகும். அரியதமிழ் மந்திரமும் ஆகும். இதனை நாளும் ஓதிவருவார், நோக்கும் திக்கிலும் மற்ற எவ்வித மந்திர விதிகளும் வாரா என்பர். இத்தகைய அரிய மந்திரத்தை இந்நாட்டில் உள்ள அனைவரும் இடையறாது ஓதி வருதலின் எப்பிணிகளும் வர அஞ்சும் என்றார். `தனயரும் மனையில் தப்பா` எனவரும் தொடருக்கு அவ்வவ் வீடுகள் தோறும் மகப்பேறு தப்பாது இருக்கும் என உரைகண்டு அதற்கு மேற்கோளாக,
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. -குறள், 60
என்னும் குறளை எடுத்துக்காட்டுவர் சிவக்கவிமணி அவர்கள் (பெரிய. பு. உரை). அதனினும் தனையர் என்பதற்கு ஆண்மக்கள் எனப் பொருள்கொண்டு அம்மக்கள் தாமும் தத்தம் பெற்றோரின் ஆணைவழி நின்று மனையில் தப்பார் எனப் பொருள்கோடல் சிறக்கும். இன்னும் அவர், `நிலத்து இருப்பு உள்ளும் ஆவும்` எனப் பிரித்துக் காமதேனுவும் இந் நாட்டின்கண் இருத்தலை நினையும் எனப்பொருள் கொள்வர். திருமகளே உறைவள் என்பதினும் இவ்வுரை சிறத்தல் இல்லாமை காண்க.

பண் :

பாடல் எண் : 85

நற்றமிழ் வரைப்பின் ஓங்கு
நாம்புகழ் திருநா டென்றும்
பொற்றடந் தோளால் வையம்
பொதுக்கடிந் தினிது காக்குங்
கொற்றவன் அநபா யன்பொற்
குடைநிழற் குளிர்வ தென்றால்
மற்றதன் பெருமை நம்மால்
வரம்புற விளம்ப லாமோ.

பொழிப்புரை :

செந்தமிழ் நாட்டின்கண் விளங்கும் பிறநாடுகளினும் நம்மால் புகழப்பெற்ற சோழநாடானது எந்நாளும் அழகும் அகலமும் உடைய தோளினால் இந்நிலவுலகைப் பிற அரசர்கட்கு உரித்தாகும் பொதுமையினின்றும் நீக்கி, இனிதாகக் காக்கின்ற பேரரசனாகிய அநபாயனின் அழகிய வெண்கொற்றக் குடையின் நிழலால் அப்பெருமகனின் தண்ணளி பெறுவதெனில், அச்சோழநாட்டின் மாண்பினை நம்மால் அளவுபடுத்திக் கூறல் அமையுமோ? அமை யாது என்பதாம்.

குறிப்புரை :

தோள் வலிமையால் காப்பதனைத் தோளில் வைத்துக் காப்பது என்றதும், அரசன் தண்ணளியால் வாழும் உலகை அவன்தன் குடைநிழலில் வாழும் உலகு என்றலும் ஏற்றுரையாம்.
`கண்பொர விளங்கும் நின் விண்பொரு
வியன்குடை வெயில் மறைக் கொண்டன்றோ?
அன்றே, வருந்திய குடி மறைப்பதுவே கூர்வேல் வளவ!``
-புறநா. 35
எனவரும் புறப்பாட்டும் காண்க. தாம் காக்கும் உலகு பிறர்க்கும் பொதுவாதலை விலக்கித் தமக்கே உரித்தாகக் கொண்டு ஆளுதல் தலையாய அரசற்குரிய பெற்றிமையாம்.
`போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது` -புறநா. 35
என்னும் புறப்பாட்டும்

பண் :

பாடல் எண் : 86

சொன்ன நாட்டிடைத் தொன்மையின் மிக்கது
மன்னு மாமல ராள்வழி பட்டது
வன்னி யாறு மதிபொதி செஞ்சடைச்
சென்னி யார்திரு வாரூர்த் திருநகர்.

பொழிப்புரை :

இதுகாறும் கூறிய சோழவள நாட்டின்கண், பழமை யால் சிறந்ததும், நிலைபெற்ற திருமகளால் வழிபடப் பெற்றதும், வன்னிஇலையும், கங்கையாறும், இளம் பிறையும் பொருந்திய சிவந்த சடைமுடியோடு கூடிய திருமுடியையுடைய தியாகேசப் பெருமான் வீற்றிருந்து அருளுவதும்ஆய பெருமை பெற்றது திருவாரூர் என்னும் திரு நகரமாகும்.

குறிப்புரை :

`ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ, ஓருருவே மூவுருவ மான நாளோ .... திருவாரூர் கோயிலாக்கொண்ட நாளே` (தி.6 ப.34 பா.1) எனவரும் திருவாக்கால் திருவாரூரின் தொன்மை விளங்கும். திருமால் தம் மகப்பேற்றிற்காகத் திருவாரூர்ப் பெருமானை வேண்ட, அவனும் அருளினன். தம் கணவரை வணங்கிய திருமால், தம்மை வணங்காமைபற்றிச் சினங்கொண்ட உமையம்மையார், `உமக்குப் பிறக்கும் மகன் எம் கணவரின் நெற்றிக்கண்ணால் சாம்பராகுக`! என்று ஆணை பிறப் பிக்க, வருந்திய மாலும், திருமகளும் அவ்வாணை நீங்க வேண்ட அம்மையப்பராக விளங்கும் இறைவன் `நும் மகன் இறந்தாலும் உம்மளவில் உயிர் வாழ் பவனாய் இருப்பன்` என வரம் ஈந்தனர். அந் நிகழ்வின்பின் திருமகள் திருவாரூருக்கு வந்து வழிபட்டனள். இது பற்றியே `மன்னும் மாமல ராள் வழிபட்டது` என்றார். இதற்கேற்ப ஊர்ப்பெயர் (திரு+ஆர்+ஊர்= திருமகள் இருந்து வழிபட்ட ஊர்) அமைந்திருப்பதும், அங்குள்ள குளம் கமலாலயம் எனப் பெயர் பெற்றிருப்பதும் காணலாம். வன்னி - வன்னியிலை. அடியவர் வழிபட்டு இட்ட இலை இது.

பண் :

பாடல் எண் : 87

வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் மணிமுழ வோசையும்
கீத வோசையு மாய்க்கிளர் வுற்றவே.

பொழிப்புரை :

இத்திருநகரில், நான்மறைகளின் ஓசையும், வீணையின் ஓசையும், ஒளிபொருந்திய தேவர்கள் செய்யும் வழிபாட்டு ஓசையும், நாடகப் பெண்களின் கூத்திற்கு இசைந்த அழகிய மத்தள ஓசையும், அம்மகளிரின் பாட்டு ஓசையும் ஒன்றாக ஒலித்து நிற்கும்.

குறிப்புரை :

சோதி - ஒளி. இத்தகைய ஓசைகளால், அந்நகரில் எழுச் சியும் பொலிவும் மிக்கனவாய் உள்ளன.
கீதம் - இசை தழுவிய தமிழ்ப் பாட்டு. கிளர் உற்றது - எழுச்சியுடன் விளங்குவது.

பண் :

பாடல் எண் : 88

 பல்லி யங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதிச் செழுமணித் தேரொலி
மல்லல் யானை ஒலியுடன் மாவொலி
எல்லை இன்றி யெழுந்துள எங்கணும்.

பொழிப்புரை :

பல்வகை இசைக் கருவிகளின் ஒலியோடு, செல்வம் நிறைந்த திருவீதிகளில் அழகிய தேர்களின் ஒலியும், வளப்பம்மிக்க யானை ஒலியும், குதிரை ஒலியும் அளவின்றி அந்நகர் எங்கும் எழுந்துள்ளன.

குறிப்புரை :

கொட்டுவன, ஊதுவன, இயக்குவன, தட்டுவன ஆகிய நால்வகை இயங்களும்அடங்கப் `பல்லியம்` என்றார்.

பண் :

பாடல் எண் : 89

 மாட மாளிகை சூளிகை மண்டபம்
கூட சாலைகள் கோபுரந் தெற்றிகள்
நீடு சாளர நீடரங் கெங்கணும்
ஆடன் மாத ரணிசிலம் பார்ப்பன.

பொழிப்புரை :

மேல்மாடங்களையுடைய மாளிகைகளும், செய் குன்றுகளும், மண்டபங்களும், கூடங்களையுடைய வீடுகளும், கோபுர வாயில்களும், திண்ணைகளும், நீண்ட பலகணிகளையுடைய பேரவைகளும் ஆகிய அனைத்திடங்களிலும் நாட்டியம் ஆடுகின்ற மகளிரின் அழகிய சிலம்புகள் ஒலிக்கும்.

குறிப்புரை :

சூளிகை - செய்குன்றுகள். தெற்றிகள் - திண்ணைகள். சாளரம் - பலகணி: காற்று உட்புகுந்து வீசுதற்கு ஏதுவாகப் பல கண் களையுடையனவாய் அமைக்கப்பட்ட இடம். இவ்விடங்கள் அனைத்தும் மகளிர்தம் ஆடற்கென அமைந்தவையாம்.

பண் :

பாடல் எண் : 90

அங்கு ரைக்கென் னளவப் பதியிலார்
தங்கள் மாளிகை யின்னொன்று சம்புவின்
பங்கி னாள்திருச் சேடி பரவையாம்
மங்கை யாரவ தாரஞ்செய் மாளிகை.

பொழிப்புரை :

அத்திருவாரூரின் பெருமையை அளவிட்டு எவ்வாறு யான் கூறுவேன்? அந்நகரத்தில் தமக்கெனக் கணவர் இல்லாத உருத்திர கணிகையர்களின் மாளிகைகளில் ஒன்று, சிவபிரான் இடமருங்கில் வீற்றிருந்தருளும் உமையம்மையாரின் தோழியர்களின் ஒருத்தியாகிய கமலினி என்னும் பரவையார் தோன்றியருளிய திருமாளிகையாக அமைந்திருக்குமாயின்.

குறிப்புரை :

உமையம்மையாரின் தோழியர்களில், ஒருவர்தம் பெரு மாளிகையே அமைந்திருக்குமாயின், அந்நகரில் உள்ளாரின் வளத்தை யான் எங்ஙனம் மதிப்பிட்டுக் கூறுவேன் என ஆசிரியர் வியக்கின்றார். சம்பு - சிவபெருமான். கயிலையில் வாழ்ந்த கமலினியார் என்பார் இறைவன் ஆணையின் வண்ணம் திருவாரூரில் பரவையார் எனும் பெயரில் தோன்றி வாழ்ந்து வருவாராயினர். அவர்தம் மாளிகைச் சிறப்பை எடுத்து விதந்தது, இறைவனே அம்மாளிகைக்குத் தூதுவனாய் இருமுறை எழுந்தருளியமையும், கயிலையில் உமையம்மையாருக்குத் திருப்பணி செய்துவந்த சிறப்புடைமையும், ஆரூரரை மணந்தமையும், சேர வேந்தரை அவர்தம் அரசியல் சுற்றத்தாரோடு ஏற்று மகிழ்ந்தமையும் ஆகிய காரணங்களால் ஆம்.

பண் :

பாடல் எண் : 91

 படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூதுபோய்
நடந்த செந்தா மரையடி நாறுமால்.

பொழிப்புரை :

யாண்டும் பரவிய பேரொளியையுடைய பல மணிகளால் ஒப்பனை செய்யப் பெற்ற அம்மாளிகையமைந்த வீதியானது, நிலத்தைக் கீண்டு சென்ற திருமாலாகிய பன்றியும், மேல் பரந்து சென்ற அன்னமாகிய அயனும் அடியையும், முடியையும் தேடியும் காண இயலாத பெருமான், தம்மைத் தொடர்ந்து அடிமைத்திறம் பூண்டு ஒழுகிவரும் நம்பியாரூரருக்காகத் தூது சென்ற செந்தாமரை மலர்போலும் திருவடி மணம் கமழ்ந்து நிற்கும்.

குறிப்புரை :

மாலும் அயனும் காண இயலாத பெருமான், நம்பியாரூரருக்குத் தூது சென்றது, அப்பெருமானின் அருமையின் எளிய அழகைக் காட்டுகிறது. இருமுறை தூது சென்றதால் `போய் நடந்து` என்றார். இதனால் அப்பெருமானின் திருவடி மணம் கமழ்வது திருவாரூர் மண்ணாகும்; திருமுடிமணம் கமழ்வது மதுரை மண்ணாகும். `கலிமதுரை மண்சுமந்து` (தி.8 ப.8 பா.8) என வரும் திருவாக்கை நினைவு கூர்க. தொடர்ந்து கொண்ட வன்றொண் டர் - இறைவனையே பெரும்பற்றாகக் கொண்டு அடிமைத்திறம் பேணி வரும் நம்பியாரூரர். `அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே` (தி.7 ப.1 பா.1) `மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே ... ஆளாய் இருக்கும் அடியார்` (தி.7ப.95பா.1) என்பனவாகிய திருவாக்குகளைக் காண்க. தொடர்ந்து கொண்ட - தாமே வலியத் தொடர்ந்து சென்று ஆட்கொண்ட என இறைவற்கேற்றி உரைப்பர் சிவக்கவி மணியார் (பெரிய. பு. உரை).

பண் :

பாடல் எண் : 92

செங்கண் மாதர் தெருவில் தெளித்தசெங்
குங்கு மத்தின் குழம்பை அவர்குழல்
பொங்கு கோதையின் பூந்துகள் வீழ்ந்துடன்
அங்கண் மேவி யளறு புலர்த்துமால்.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய பெண்டிர் வீதியில் தெளித்த சிவந்த குங்குமக் குழம்பை, அப்பெண்டிரின் கூந்தலில் முடிக்கப்பட்ட பூமாலைகளிலிருந்து வீழ்ந்த பூந்தாதுகள், பொருந்தி அச்சேற்றை உலரச் செய்யும்.

குறிப்புரை :

தெருவில் தெளித்த குங்குமக் குழம்பு, பெண்கள் முடி மீதுள்ள மாலையிலிருந்து மகரந்தப்பொடிகள் வீழ்வதால் உலர்கின் றது. பூந்துகள் - அழகிய மகரந்தப் பொடி. அளறு - சேறு. `சோறுவாக் கிய கொழுங்கஞ்சி, யாறு போலப் பரந்தொழுகி, ஏறுபொரச் சேறாகித் தேரோடத் துகள் கெழுமி, நீறாடிய களிறுபோல, வேறுபட்ட வினை யோவத்து` (பட்டினப்பாலை - 44-49) என வரும் பாடல் பகுதியும் ஈண்டு நினைவுகூர்தற்குரியதாம். ஆல் அசை.

பண் :

பாடல் எண் : 93

 உள்ளம் ஆர்உரு காதவர் ஊர்விடை
வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாந்
தெள்ளும் ஓசைத் திருப்பதி கங்கள்பைங்
கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.

பொழிப்புரை :

ஆனேற்றை ஊர்தியாக் கொண்டருளும் தியாகேசப் பெருமான் வீற்றிருந்தருளும் திருவாரூரின் பக்கங்கள் எல்லாம், இனிய ஓசையையுடைய திருமுறைத் திருப்பதிகங்களைப் பசுமையாக கிளிப் பிள்ளைகள் பாடிக்கொண்டிருக்கும், நாகணவாய்ப் பறவைகள் அதனைக் கேட்டு நிற்கும். இவ்வாறு பறவையினங்களும் திருமுறை களைப் பாடியும் கேட்டும் மகிழுமாயின், அப்பெருநகரில் திருப் பதிகங்களை ஓதியும் கேட்டும் உள் உருகாதவர் யாவருளர்? ஒருவரும் இலர் என்பதாம்.

குறிப்புரை :

விடையூரும் வள்ளலார் திருப்பதிகங்களைப் பாடுவன கிளிகள், கேட்டு மகிழ்வன பூவைகள் எனில் அத்திருப்பதிகங்களுக்கு உள்ளம் உருகாதவர் யார்? எனக் கூட்டிப் பொருள் காண்க. ஊர்விடை என்பதனை விடைஊர் என மாறுக. வேண்டுவார் வேண்டுவன வற்றையெல்லாம் விரும்பி வழங்கலின் `வள்ளலார்` என்றார். தெள்ளும்ஓசை - தெளிந்த ஓசை; வினைகளை அகழ்ந்து எறியும் ஓசைஎன்றலும் ஒன்று. பூவைகள் - நாகணவாய்ப் பறவைகள்.

பண் :

பாடல் எண் : 94

 விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கில் பேரொலி யால்துன்னு பண்டங்கள்
வளத்தொ டும்பல வாறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள்.

பொழிப்புரை :

(இப்பாடல் ஆவண வீதிகளுக்கும் அலைகடற்கும் சிலேடையாய் அமைந்ததாம்) ஒளிமிக்க அணிகலன்கள் நிறைந்துள் ளன கடை வீதிகளில்; விளக்குஒளி மிக்க மரக்கலங்கள் நிறைந்துள் ளன கடலில். கொண்டும் கொடுத்தும் வாங்குவோரும் விற்போரும் பேசும் ஒலிகள் நிறைந்துள்ளன கடை வீதிகளில்; அலைகளின் மிகுதி யால் பேரொலி மிக்குள்ளது கடலில். பல்வேறு வகையான பண்டங்கள் (பொருள்கள்) நிறைந்துள்ளன கடை வீதிகளில்; மலைபடு பொருள் களும், மண்படு பொருள்களுமாக ஆறுகள் அடித்துக் கொண்டு சேர்த்துள்ளன கடலில். இவ்வகையால் அங்குள்ள கடைவீதிகள் அலைகடல் போல்வனவாய் உள்ளன.

குறிப்புரை :

ஆவணவீதிகளுக்கு ஆங்கால்; கலன்கள் - அணிகலன் கள், பேரொலி - வாணிகம் செய்வோர் கொண்டும் கொடுத்தும் பேசு வதால் வரும் பேரொலி, துன்னு பண்டங்கள் - நெருங்க வைக்கப்பட்டி ருக்கும் பல்வேறு பொருள்கள், பலவாறு மடுத்தலால் - பல்வேறு இடங் களிலிருந்து கொண்டுவரப்பட்டும் பலவகைகளில் அடுக்கப்பட்டும் இருத்தல். கடலுக் காங்கால்: கலங்கள் - மரக்கலங்கள், பேரொலி - அலைகளால் ஏற்படும் ஒலி, துன்னு பண்டங்கள் - மலைபடு பொருள் களும், மண்படு பொருள்களுமாக ஆறுகளின்வழி அடித்துக் கொண்டு வரப்பட்டிருக்கும் பொருள்கள், பல ஆறு மடுத்தலால் - பல ஆறுகளும் வந்து கலத்தலால்.

பண் :

பாடல் எண் : 95

 ஆர ணங்களே அல்ல மறுகிடை
வார ணங்களும் மாறி முழங்குமால்
சீர ணங்கிய தேவர்க ளேயலால்
தோர ணங்களில் தாமமுஞ் சூழுமால்.

பொழிப்புரை :

இத்திருநகர்த் திருவீதிகளில் நான்மறைகளின் ஒலிகளேயன்றி யானைகளின் ஒலிகளும் அவற்றொடு மாறுபட்டு ஒலிக்கும்; சீர்மைமிக்க தேவர்களேயன்றி அவ்வவ்விடத்தும் கட்டப் பட்டிருக்கும் தோரணங்களின் மாலைகளும் வானத்தில் சூழ்ந்திருக்கும்.

குறிப்புரை :

ஆரணம் - மறை. வாரணம் - யானை. நான்மறைகளை உச்ச சுரமாகிய நிஷாத சுரத்தில் ஓதுங்கால், அவ்வோசை, யானையின் பிளிற்றோசை போன்றிருக்கும் ஆதலின் இவ்வாறு கூறினார். தேவர்கள் நிலம் தீண்டா வகையினர். ஆதலின் அவர் வானத்திலேயே இயங்குவர். அவரைப் போன்றே தோரணங்களில் கட்டிய மாலைக ளும் வானத்திலேயே அசைந்து நிற்கும். ஆதலின் தேவர்களேயன்றி மாலைகளும் விண்ணில் சூழும் என்றார். ஆல் இரண்டும் அசைநிலை. ஏகாரம் இரண்டும் இசை நிறை. உம்மை இரண்டும் இறந்தது தழீஇய எச்சங்கள்.

பண் :

பாடல் எண் : 96

தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்
வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்
வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல்வே றிடத்ததத் தொல்நகர்.

பொழிப்புரை :

தாழ்ந்த சடையை உடைய சைவர்களும், பெருந்தவத்தரும், சித்தத்தைச் சிவன்பால் வைத்த முனிவர்களும், மறை வல்லுநர்களும், தாம் விரும்பிய இன்பத் துறையில் நின்று வாழ்ந்துவரும் இல்லறத்தவர்களும் இப்பழமையான நகரைச் சூழ்ந்த பல்வேறு இடங்களிலும் வதிந்துவரும் பெருமையுடையது .

குறிப்புரை :

ஈண்டுத் தாழ்ந்த வேணியர், சைவர் எனக் குறிக்கப் படுவோர் சைவத்தின் உட்சமயத்தவர்களாகிய காபாலிகர், பாசுபதர் போன்றவர்களே. வேணி - சடை. சைவர் - சிவபரம்பொருளையே தமக்குரிய தெய்வமாக வழிபட்டு வருபவர். தபோதனர் - தவத்தையே தமக்குரிய செல்வமாகக் கொண்டு வாழ்பவர். ஈண்டுத் தவம் என்றது சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றுமாம். `தவத்தினில் உணர்த்த` எனவரும் சிவஞானபோதத்தால் (சூ.8 ) இவ்வுண்மை அறியப்படும். சித்தத்தைச் சிவன்பால் வைத்திருத்தலே, அச்சிந்தை வாழ்தற்கும் வளர்தற்கும் உரிய பயனாம். ஆதலின் `வாழ்ந்த சிந்தை` என்றார். வீழ்ந்த - விரும்பிய. இன்பத்துறை - இல்லறம். இல்லறம் பலராலும் விரும்பி ஏற்கப்படுவது ஒன்றாம். ஆதலின் விரும்புதற்குரிய இல்லறம் என்றார். `இல்லறம் அல்லது நல்லறம் அன்று` (கொன்றைவேந்.3), `அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை` (குறள் 49), `அறத்தாற்றின் இல் வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஓய்ப் பெறுவது எவன்` (குறள், 46) எனவரும் திருவாக்குகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 97

 நிலம கட்கழ கார்திரு நீள்நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
மலர்ம கட்குவண் தாமரை போல்மலர்ந்து
அலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால்.

பொழிப்புரை :

சோழர்கள் வீற்றிருக்கும் சிறப்புடையதும், அளவில்லாத சிறப்பினையுடைய திருவாரூர் என்னும் பெயருடையது மான இத்திருநகர், நிலமகட்கு அழகு நிறைந்த நீண்ட நெற்றியில் இட்ட திலகத்தை ஒப்பது, திருமகளுக்கு உறையுளாக விளங்கும் செந்தாமரை போன்ற அழகும், பொலிவும் தழைய நிற்பது.

குறிப்புரை :

நிலமகளின் திலகத்திற்கு ஒப்பச் சோழநாடும், திருமகளின் உறையுளான தாமரைக்கு ஒப்பத் திருவாரூரும் சிறந்து விளங்கும் என உரைகாண்பர் தவத்திரு ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் (பெரிய.பு. உரை).

பண் :

பாடல் எண் : 98

அன்ன தொல்நக ருக்கர சாயினான்
துன்னு செங்கதி ரோன்வழித் தோன்றினான்
மன்னு சீர்அந பாயன் வழிமுதல்
மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே.

பொழிப்புரை :

மேற்கூறிய அத்தன்மைகள் பலவும் பொருந்தி யதும் பழமையானதுமான திருவாரூருக்கு அரசனாக இருந்தவன், செறிந்த செம்மைநிறம் வாய்ந்த ஒளிக் கதிர்களையுடைய கதிரவன் மரபில் தோன்றியவனும், நிலைபெற்ற புகழுக்கு நிலைக்களனாய அநபாய சோழனின் குலமுதல்வனாய் உள்ளவனும், ஒளி விளங்கும் சிறந்த மணிகளாலாய அணிகலன்களை அணிந்தவனுமாய மனு வேந் தனாம்.

குறிப்புரை :

துன்னு - நெருங்கிய; செறிந்த. மன்னுசீர் - நிலைபெற்ற சிறப்பு. பூண் - அணிகலன்கள். ஏ - அசை. வெங்கதிரோன் என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 99

 மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாங்
கண்ணும் ஆவியு மாம்பெருங் காவலான்
விண்ணு ளார்மகிழ் வெய்திட வேள்விகள்
எண்ணி லாதன மாண இயற்றினான்.

பொழிப்புரை :

இவ்வேந்தன் இந்நிலவுலகில் வாழ்கின்ற நிலை பெற்ற உயிர்கட்கு எல்லாம் கண்ணெனவும் உயிரெனவும் காத்துவரும் பெரிய காவலையுடையவன். விண்ணவரும் மனம் மகிழுமாறு எண்ணிலாத பல வேள்விகளை நெறிப்பட இயற்றியவனாவன்.

குறிப்புரை :

மன்னுயிர் - நிலைபெற்ற உயிர். உயிர் தெளிவு பெறக் கண்ணும், உடல் இயக்கம் பெற உயிரும் இன்றியமையாதனவாம். `கண்ணிற்சிறந்த உறுப்பில்லையாவதும் காட்டியதே` (தஞ்சை. கோவை, 4) `உடம்பொடு உயிரிடை யன்ன` (குறள் 1122) எனக் கூறப்படுமாற்றான் இவற்றின் இன்றியமையாமை அறியலாம். இவற்றான் நிலையியற் பொருள், இயங்கியற் பொருள் (தாவர சங்கமங்கள்) ஆகிய இருதிறத் துயிர்களுக்கும் இன்றியமையாதவன் காவலன் (அரசன்) என்பது பெறுதும். `மன்னன் உயிர்த்தே மலர் தலையுலகம்` (புறம் 186) என்றும், `உயிரெலாம் உறைவதோர் உடம்புமாயினான்` (கம்பரா. பால. அர. 10) என்றும், அரசனை உயிராகவும் உயிர்களை உடம்பாக வும் கூறுவனவெல்லாம் அவ்விரண்டும் ஒன்றற் கொன்று இன்றியமை யாமையுடைமை கருதியேயாம்.
இனி உடற்கு உயிரும், கண்ணும் அகக்காவலும் புறக்காவலு மாதல் போல, உயிர்கட்கு அரசனும் அவ்விருகாவலுமாதல் பற்றிக் கூறினார் என்றலும் ஒன்று. வேள்வி நற்பயன் வீழ்புனலாகும். அவ் வீழ்புனலால் நாடு தழைக்கும். ஆதலின் `வேள்விகள் எண்ணி லாதன மாண இயற்றினான்` என்றார். `கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார்` (தி.1 ப.80 பா.1) `அஞ்சிப்போய்க் கலிமெலிய வழலோம்பு மப்பூதி` (தி.4 ப.12 பா.10) என்னும் தொடக்கத்தனவாய திருவாக்குகளும் காண்க.

பண் :

பாடல் எண் : 100

கொற்ற வாழி குவலயஞ் சூழ்ந்திடச்
சுற்று மன்னர் திறைகடை சூழ்ந்திடச்
செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப்
பெற்ற நீதியுந் தன்பெயர் ஆக்கினான்.

பொழிப்புரை :

(அவ்வரசன்) வெற்றியினையுடைய தன் ஆணையென்னும் உருள் (சக்கரம்) நிலவுலகம் முழுதும் சுற்றவும், தன் ஆணைவழி நிற்கும் மன்னர்களின் இறைப்பொருள் (கப்பம்) தன் அரண்மனை வாயிலில் சூழ்ந்து நிற்கவும், பகைமையைக் கெடுத்த செப்பமான குணநலன்களையுடையனாய் மெய்ம்மையையே வடிவாகவுமுடைய மனுவென்னும் அரசனால் ஆக்கப்பட்ட மனுநீதி என்பதையே தன்இயற் பெயராகக் கொண்டவன்.

குறிப்புரை :

`உறங்குமாயினும் மன்னவன் தன்னொளி, கறங்கு தெண்திரை வையகம் காக்குமால்` (சிந்தா. நாமகள் 219) என்பர் திருத்தக்கதேவர், எனவே அரசனின் ஆணை அவன் உறங்கும் பொழுதும் காக்க வல்லது. அவன் இருக்குமிடத்தன்றி அவன் ஆணை செல்லும் வையகம் முழுதும் காக்க வல்லது. அதுபற்றியே `கொற்றவாழி குவலயம் சூழ்ந்திட` என்றார். சுற்று மன்னர் - சூழ்ந்துள்ள மன்னர். அவர் தன் ஆணையால் சூழப்பட்டாரும், தன்னை நட்புக்கொள்ள வேண்டி அன்புவழிச் சூழப்பட்டாரும் என இருவகையர். இவருள் முன்னவர் திறை செலுத்தற்கு உரியவராவர். அன்னோர் பலராக இருத்தலின் ஒரு சிறுகால எல்லைக்குள் திறை செலுத்திவிட்டுச் சென்றுவிட இயலாது. ஆதலின் அவர் வாயிற் கடையில் காத்திருக்க வேண்டியவராயினர். ஆதலின் `திறைகடை சூழ்ந்திட` என்றார். `வேந்தர் வைகும் முற்றத் தான்` (கம்பரா. அயோத். குகப்., 65) என்பர் கம்பரும். முற்றத்தில் வைகுதலின் அன்னோர் திறை செலுத்துபவராயினர். செற்றம் - நெடுங்காலமாகக் கொண்டிருக்கும் பகைமை. மனித இனம் பல்வேறு உணர்வுடையனவாதலின் அதற்கும் அதனை ஆளும் அரசர்கட்கும் ஓரொருகால் கருத்து மாறுபாடு ஏற்படு தலும் இயற்கையே. ஆனால் அம்மாறுபாடுதானும் நெடுங்காலம் நிகழ்வதும், ஒருவரையொருவர் அழிக்க முற்படுவதும் ஆக அமைதல் தவறாகும். ஆதலின் `செற்றம் நீக்கிய` என்றார். மெய்ம்மனு - மெய்ம்மையையே வடிவாகவுடைய மனு. அம்மன்னனால் செய்யப் பட்ட நூலும் அவன் பெயரே பெற்றது. அப்பெயரையே தன் பெயராக வுடையவன் என்பார். `பெற்ற நீதியும் தன் பெயராக்கினான்` என்றார். மன்+உ+மனு; நினைக்கத்தக்கவன். அஃதாவது உலகநன்மைக்கென எதனை நினைக்கவேண்டுமோ, அதனையே நினைக்கத்தக்கவன். இவன் கதிரவனின் மகன். உம்மை-சிறப்பும்மை. சில பதிப்புகளில் இப்பாடல், வரும் பாடலை அடுத்துள்ளது

பண் :

பாடல் எண் : 101

 பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தமா ராய்ந்துளான்
துங்க வாகமஞ் சொன்ன முறைமையால்.

பொழிப்புரை :

தத்தம் கருத்திற்கு இயையப்பொருள் விரித்தற்கு இடனாக விளங்கும் சீரிய நான்மறைகளின் வடிவாக நிற்கும் புற்றை இடனாகக் கொண்டிருப்பவரும், யாண்டும் நீக்கமற நிற்பவருமான புற்றிடம் கொண்டாருக்கு (வன்மீகநாதருக்கு) சீரிய ஆகமங்கள் வகுத்துக்கூறிய முறைமை வழுவாமல் வழிபாடாற்றுதற்கென அவ் விடத்து வேண்டும் பொருள்களை அறக்கட்டளையாக அமைத்தவன்.

குறிப்புரை :

பூசனைக்கு முறைமையால் ஆராய்ந்துளான் எனக் கூட்டுக. மறைப் பொருள் அறிதற்கரிதாக இருத்தல் போலப் புற்றும் அவ்விடத்து எழுந்தருளியிருக்கும் பெருமானை அறிதற்கரி தாய் மறைந்திருத்தலின் `மறைவடிவாம் புற்று` என்றார். நிபந்தம் - அறக்கட்டளை. துங்க ஆகமம் - சீரிய ஆகமங்கள். இறைவற்கு ஆற்றும் வழிபாடு இருவகைப்படும். ஒன்று நாள் வழிபாடு, மற்றொன்று சிறப்பு வழிபாடு. இவற்றுள் முன்னையது நாளும் நிகழ்த்தப் படுவது. பின்னையது சிவராத்திரி, தைப்பூசம் முதலாய சிறப்பு நாள்களிலும், விழாக்காலங்களிலும் நிகழ்த்தப்படுவது. இவ்விருவகை வழிபாட் டையும் `சிறப்பொடு பூசனை` (குறள் 18) எனத் திருவள்ளுவரும் குறிப்பர். இவ்வழிபாடுகள் காமிகம் முதலாய ஆகமங்களில் கூறியவாறு நடத்துதற்கு அறக்கட்டளை வைத்தவன் மனு வேந்தன் ஆவன்.
ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில் களானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. -தி.10 பா.509
முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரி வளம்குன்றும்
கன்னம் களவு மிகுத்திடுங் காசினி
என்னரு நந்தி எடுத்துரைத் தானே. -தி.10 பா.510
எனவரும் திருமந்திரங்களால் இவ்வழிபாடுகள் இன்றியமையாது நிகழவேண்டும் என்பதும், இவற்றை அரசன் அறநெறி வழுவாது போற்றிக்காத்தல் வேண்டும் என்பதும் விளங்கும்.
``ஆளு மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை
மூளும் மற்றிவை காக்கும் முறைமையால்``.
(தி.12 பு.28 பா.822) எனவரும் சேக்கிழார் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 102

அறம்பொரு ளின்ப மான
அறநெறி வழாமற் புல்லி
மறங்கடிந் தரசர் போற்ற
வையகங் காக்கும் நாளில்
சிறந்தநல் தவத்தால் தேவி
திருமணி வயிற்றில் மைந்தன்
பிறந்தனன் உலகம் போற்றப்
பேரரிக் குருளை அன்னான்.

பொழிப்புரை :

இத்தகைய புண்ணியப் பேறுடைய மனு வேந்தன், அறம் பொருள் இன்பம் ஆகியவற்றை அறநெறி பிறழாமல் மேற்கொண்டு, இவற்றிற்கு மாறாய தீச்செயல்களைத் தன்னிடத்தும் ஏனைய மன்னுயிர்களிடத்தும் வாராதவாறு நீக்கியும், தன்னை யொத்த அரசர் பலரும் போற்றுமாறு இவ்வுலகைக் காத்தும்வரும் நாளில், அவன் இதுகாறும் ஆற்றிவந்த சீரிய நல்ல தவத்தால், அவனின் தேவி திருவயிற்றில், இளம் சிங்கத்தை ஒப்பான ஓர் ஆண் மகன், உலகம் போற்றப் பிறந்தனன்.

குறிப்புரை :

`அறம் பொருள்இன்பமான அறநெறி வழாமற் புல்லி` என்பது `அறன் இழுக்காது` (குறள் 384) எனவரும் திருக்குறள் தொடரின் விளக்கமாகும். `மறங்கடிந்து` என்பது `அல்லவை நீக்கி` எனவரும் தொடரின் விளக்கமாகும். `அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில்` என்பது `மறன் இழுக்கா மானம் உடையது அரசு` எனவரும் தொடரின் விளக்கமாகும். இவ்வாற்றான் `அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம் உடையது அரசு` (குறள் 384) எனவரும் திருக்குறளின் விளக்கமாக இப்பாடலின் முன்னிரண்டடிகளும் விளங்குகின்றன.
வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத் தாகலானும், `பரனை நினைந்து இம் மூன்றும் விட்டதே பேரின்பவீடு` (தனிப்பாடல்-ஔவை.) எனப்படுதலானும், அவ்வீடுபேறுதானும் அவரவரும் தத்தம் பக்குவத்திற்கேற்பத் திருவருள்வழிப் பெறத்தக்க தாதலானும், `அறம் பொருள் இன்பமான அறநெறி` என இம்மூன்றை யுமே கூறினார். சிறந்த நற்றவம் - புற்றிடம் கொண்டார்க்கு நாள் வழிபாடும், சிறப்பு வழிபாடும் என்றென்றும் நிகழுமாறு அறக்கட் டளைகளை வைத்தும், நாளும் அவற்றைப் பேணிக்காத்தும் வந்த தவம், இவ்வருமை மகவைப்பெறக் காரணமாயிற்று. இத்தேவியின் பெயர் இரத்தினமாலை என்றும், மைந்தனின் பெயர் வீதிவிடங்கன் என்றும் கூறுவர். இவன்பெயர் பிரியவிருத்தன் எனத் திருவாரூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. உலகம் போற்ற - உலகம் இவனைப் பாராட்ட. இவன் உலகத்தைக் காப்பாற்ற என்றலும் ஆம்

பண் :

பாடல் எண் : 103

 தவமுயன் றரிதில் பெற்ற
தனிஇளங் குமரன் நாளுஞ்
சிவமுயன் றடையுந் தெய்வக்
கலைபல திருந்த ஓதிக்
கவனவாம் புரவி யானை
தேர்படைத் தொழில்கள் கற்றுப்
பவமுயன் றதுவும் பேறே
எனவரும் பண்பின் மிக்கான்.

பொழிப்புரை :

சிவபரம்பொருளை முன்னிட்டுச் செய்யும் வழிபாடாகிய தவத்தைச் செய்து, அருமையாகப் பெற்ற மிக இளைஞ னாகிய அம்மகன், நாள்தோறும் முயன்று சிவத்தை அடைதற்குக் காரணமாய தெய்வக் கலைகள் பலவற்றையும் தம் மனம் திருந்த ஓதியும், விரைவோடு பாய்கின்ற குதிரை ஏற்றமும், யானை ஏற்றமும், தேர் இயக்கலும், படைக்கலப் பயிற்சியும் பெற்று, வேண்டத் தகாத மானுடப் பிறவியும் இவனளவில் ஒரு பெரும் பேறேயாயிற்று என யாவரும் சொல்லும்படியான நற்குணங்களால் மேம்பட்டு விளங்கி னான்.

குறிப்புரை :

கற்றதனாலாய பயன், வாலறிவன் நற்றாள் தொழுதல் (குறள் 2) என்றும், `அலகின் கலையின் பொருட்கெல்லை ஆடும் கழலே`(தி.12 பு.20 பா.15) என்றும், அருளாளர் கூறுமாற்றான்,
கலையறிவின் பயன் வாழ்வாங்கு வாழ்தற்கு மட்டுமின்றி அதன் பயனாய திருவருளை அடைதலுமாம் என்பது விளங்கும். ஆதலின் அத்தகைய கலையறிவைக் கற்றனன் என்பார். `சிவம் முயன்று அடை யும் தெய்வக்கலை பல ஓதி` என்றார். அவ்வாறு ஓதுதலும், உணர்த லும், பிறர்க்கு உரைத்தலும் எல்லாம், மன அடக்கம் பெற்றுச் சிறத்தற் கேயாம் என்பார். `திருந்தஓதி` என்றார்; தான் திருந்தாது பிறரைத் திருத்த முற்படின் அவனினும் அறிவிலி எவரும் இலர். `ஓதியுணர்ந் தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார்இல்` (குறள் 834), `மனம் அடங்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே` (தாயு. பராபரக்.169) எனவரும் திருவாக்குகளைக் காண்க.
மன்னவன் மகனாக விளங்கலின், அவ்வாட்சிக்குரிய யானை, குதிரை, தேர்ப்படைகளைச் செலுத்துதற்கு ஏற்ற பயிற்சியையும், படைக்கலப் பயிற்சியையும் பயிற்றுவிக்கப்பட்டான். அறிவுக்கல்வி, தொழிற்கல்வி, ஆன்மீகக்கல்வி ஆகிய மூவகைக் கல்வியும் வேண்டு மென்பது இதனால் பெற்றாம். தொல்காப்பியரும், `வாயினும், கையினும் வகுத்த பக்கமோடு ஊதியம் கருதிய ஒரு திறத்தானும்` (தொல். அகத்.41) என்பதால் இம்மூவகைக்கல்வியும் வேண்டும் எனக் குறிப்பர். இக்கல்வி முறையே இன்றும் பின்பற்றப்பட வேண்டும். ஆளுநர்க்கும், ஆளப்படும் மக்கட்கும் இத்தகைய ஞானத்தைத் திருவருள் வழங்கியருளுமாக.
`பிறவாமை பெறுதலே பெரும் பேறெனினும் இம்மகனளவில் அவன் பிறந்ததே பெரும்பேறாயிற்று` என்பார், `பவம் முயன்றதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான்` என்றார். `திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம்` (தி.12 சரு.1-5 பா.107) எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 104

அளவில்தொல் கலைகள் முற்றி
அரும்பெறல் தந்தை மிக்க
உளமகிழ் காதல் கூர
ஓங்கிய குணத்தால் நீடி
இளவர சென்னுந் தன்மை
எய்துதற் கணிய னாகி
வளரிளம் பரிதி போன்று
வாழுநாள் ஒருநாள் மைந்தன்.

பொழிப்புரை :

எண்ணிறந்த பழைய கலைகள் அனைத்தையும் முழுமையாக நன்கு கற்றவனாய்ப், பெறுதற்கரிய தந்தையாரது மேம் பட்ட மனம் மகிழ்தற்குக் காரணமான உயர்ந்த நற்குணங்கள் பலவும் நிறைந்தவனாய், இளவரசு என்று சொல்லுதற்குரிய பருவத்தை அடைந்தவனாய், வளர்கின்ற இளங் கதிரவனையொத்து வாழ்கின்ற நாள்களில், ஒருநாள் அம் மைந்தனானவன்.

குறிப்புரை :

ஓதல், உணர்தல், உணர்த்தல், தானடங்கல், இவற்றின் பயனாய இறைவழிபாடு, தாய்தந்தையர் முதலியோர்க்குச் செய்யும் வழிபாடு, ஆகிய அனைத்தும் நிரம்பப் பெற்றமை தோன்ற `அளவில் தொல் கலைகள் முற்றி` என்றார்.

பண் :

பாடல் எண் : 105

திங்கள்வெண் கவிகை மன்னன்
திருவளர் கோயில் நின்று
மங்குல்தோய் மாட வீதி
மன்னிளங் குமரர் சூழக்
கொங்கலர் மாலை தாழ்ந்த
குங்குமங் குலவு தோளான்
பொங்கிய தானை சூழத்
தேர்மிசைப் பொலிந்து போந்தான்.

பொழிப்புரை :

திங்களைப் போலும் வெள்ளிய குடையை யுடைய மனுநீதிச் சோழனின் பொலிவு மிக்க அரண்மனையினின்றும் புறப்பட்டு, மேகம் சூழ்ந்த உயர்ந்த மாடங்களையுடைய வீதியின்கண் அரசிளங்குமரர்கள் தன்னைச் சூழ, நறுமணம்மிக்க மலர்மாலைகள் தன் மார்பில் தவழுமாறு அணிந்து, குங்குமக் குழம்பு தோய்ந்த தோள்களை உடைய அம்மன்னன் மகன், மிகுந்த சேனைகள் தன்னைச் சூழ்ந்து வரத் தேரின்மீது ஏறிச் சிறந்த தோற்றப் பொலிவுடன் வந்தான்.

குறிப்புரை :

திங்களை வடிவானன்றிப் பண்பாலும் குடை ஒத்திருத்தல் பற்றித் `திங்கள் வெண் கவிகை` என்றார். `திங்கள் மாலை வெண்குடையான்` என்னும் சிலம்பும் (சிலப்ப. புகார். கானல்வரி, 2). திருவளர் கோவில் - நாளும் திருவும் பொலிவும் வளர்ந்து வரும் அரண்மனை. கொங்கு - நறுமணம். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 106

பரசுவந் தியர்முன் சூதர்  
மாகதர் ஒருபால் பாங்கர்
விரைநறுங் குழலார் சிந்தும்
வெள்வளை ஒருபால் மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப
முழங்கொலி ஒருபால் வென்றி
அரசிளங் குமரன் போதும்
அணிமணி மாட வீதி.

பொழிப்புரை :

தனது புகழைப் பரவிக்கொண்டு வரும் வந்தியர்கள் முன் செல்லவும், சூதர்கள் மாகதர்கள் ஆகியவர்கள் ஒரு மருங்கும், நறுமணம்மிக்க மலர்களை அணிந்த கூந்தலையுடைய மகளிர், தாம் அணிந்த வெள்வளைகள் சிந்துமாறு பிறிதொரு மருங்குமாக வரவும், முரசும் சங்கமும் முழக்கி ஒலிப்பவர் வேறு ஒருமருங்கு வரவும், வெற்றிபொருந்திய அரசனின் திருமகன், அழகிய மணிகள் நிறைந்த மாடங்களின் வீதியில் உலா வந்தனன்.

குறிப்புரை :

பரசுதல் - புகழ்பட வரும் சொற்களைப் பாடிவருதல். இவ்வாறு வருபவர் வந்தியர் எனப்படுவர். வந்தியர் - வழிபட்டு வருபவர். சூதர் - அவ்வப் பொழுது அரசன் செய்துவரும் செயல் களைப் போற்றிக் கட்டியங் கூறிவருவோர். அரசனைத் துயில் எழுப்புங் காலத்தும் பிறாண்டும்கூட இவர் பாடிவருவார். இவர்கள் நின்று ஏத்துவோர் ஆவர். மாகதர் - இருந்து ஏத்துவோர்; அரசனின் வீரச் செயல்களை இருந்தவாறு (அமர்ந்தவாறு) பாடுவோர். மகளிர் புகழ்ந்து வெள்வளை சிந்துதல் பிரிவு வெப்பத்தாலாம். இவர்கள் ஆடல் மகளிர் ஆவர்.

பண் :

பாடல் எண் : 107

தனிப்பெருந் தருமம் தானோர்
தயாவின்றித் தானை மன்னன்
பனிப்பில்சிந் தையினில் உண்மைப்
பான்மைசோ தித்தால் என்ன
மனித்தர் தன் வரவு காணா  
வண்ணமோர் வண்ணம் நல்ஆன்
புனிற்றிளங் கன்று துள்ளிப்
போந்ததம் மறுகி னூடே.

பொழிப்புரை :

ஒப்புயர்வற்ற பெரிய அறக்கடவுள், எள்ளளவும் தண்ணளியின்றி, நால்வகைச் சேனைகளையும் உடைய மனுநீதிச் சோழனின் சலிப்பற்ற திண்ணிய மனத்திலுள்ள உண்மைத் தன்மை யைச் சோதிக்க வந்தாற்போல, மனித இனத்தவர் எவரும் தன் வரவை அறியாதவாறு, ஒப்பற்ற அழகினதாய நல்ல பசுவினுடைய ஈன்ற ணிமையுடையதொரு இளங்கன்று ஒன்று அவ்வீதியினிடத்தே துள் ளிச் சென்றது.

குறிப்புரை :

அழியாமையும் தலைமையும் பற்றித் `தனிப்பெருந் தருமம்` என்றார். மற்றது, `பொன்றுங்கால் பொன்றாத்துணை` (குறள், 36) `அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை` (குறள், 32) எனவரும் திருவாக்குகளும் காண்க. மனுநீதிச் சோழனுக்கு அறநெறியில் இருக்கும் திண்மையை உலகிற்கு உணர்த்தக் கருதி இந்நிகழ்ச்சி நிகழ்ந்ததேயன்றி, வேறல்ல என்பார்.
`பனிப்பில் சிந்தையின் உண்மைப் பான்மை சோதித்தால் என்ன` என்றார். பனிப்பில் சிந்தை - ஒன்றாலும் நிலை குலையாத சிந்தை. புனிறு - ஈன்ற அணிமையுடைய கன்று: இளங் கன்று. `புனிறென்கிளவி ஈன்றணிமைப் பொருட்டே` (தொல். உரி.77) என்னும் தொல்காப்பியமும். தான் - அசை.

பண் :

பாடல் எண் : 108

 அம்புனிற் றாவின் கன்றோர்
அபாயத்தின் ஊடு போகிச்
செம்பொனின் தேர்க்கால் மீது
விசையினாற் செல்லப் பட்டங்
கும்பரி னடையக் கண்டங்
குருகுதா யலமந் தோடி
வெம்பிடும் அலறும் சோரும்
 மெய்ந்நடுக் குற்று வீழும்.

பொழிப்புரை :

அழகிய அப்பசுவின் இளங்கன்றானது தீங்கு விளைதற்கு உரியதொரு வழியில், வீதியின் இடையே ஓடிச், சிவந்த பொன்னால் ஆய தேர்க்காலின் இடையே புகுதப்பெற்று, விண்ணுலகு அடைந்ததாக, அதுகண்டு அவ்விடத்தில் மனமுருகித் துன்புறுகின்ற தாய்ப் பசுவானது ஓடி, தன் கன்றினை இழந்த பெருந்துயரால் அழுது அலறிச் சோர்வடைந்து நடுங்கி வீழ்ந்தது.

குறிப்புரை :

உம்பர் - தேவர்; அமுதுண்டமையால் ஒருகால எல்லைவரை அழியாதிருப்பவர்.
இதுபொழுது தேர்க்காலின் வழி அக்கன்று இறந்ததெனினும், திருவருளால் பின்னும் உயிர்பெற்று வாழ இருக்கும் சிறப்பு நோக்கி `உம்பரின் அடைந்தது` என்றார்.

பண் :

பாடல் எண் : 109

 மற்றது கண்டு மைந்தன்
வந்ததிங் கபாயம் என்று
சொற்றடு மாறி நெஞ்சில்
துயருழந் தறிவ ழிந்து
பெற்றமுங் கன்றும் இன்றென்
உணர்வெனும் பெருமை மாளச்
செற்றஎன் செய்கேன் என்று
தேரினின் றிழிந்து வீழ்ந்தான்

பொழிப்புரை :

இப்பசுவின் துயரைக்கண்ட அம்மனுவின் மைந்தன், இவ்விடத்து ஒரு பெருந்தீங்கு ஏற்பட்டுவிட்டது என்று உரை தடுமாறி, தன் மனத்தில் பெருந்துயர் உற்று, அறிவு சோர்ந்து, இப்பசுவும் கன்றும் இன்றைக்கு என்னுடைய உணர்வாகிய பெருமை கெடும்படிச் செய்தன. இதற்கு என் செய்வேன்? என்று தேரினின்றும் இறங்கி நிலத்தில் விழுந்தான்.

குறிப்புரை :

சிவம் முயன்று அடையும் தெய்வக்கலைகள் பலவற் றையும் தன் மனம் திருந்த ஓதிய தன்மையால் `பிறிதின் நோய் தன்நோய் போல்` (குறள், 315) போற்றும் பெற்றிமை வாய்க்க லாயிற்று. இவ்வியைபு தோன்ற உணர்வையும், பெருமையையும் வேறாகக் கூறாது `உணர்வெனும் பெருமை` என்றார்.

பண் :

பாடல் எண் : 110

அலறுபேர் ஆவை நோக்கி
ஆருயிர் பதைத்துச் சோரும்
நிலமிசைக் கன்றை நோக்கி
நெடிதுயிர்த் திரங்கி நிற்கும்
மலர்தலை உலகங் காக்கும்
மனுவெனும் எங்கோ மானுக்கு
உலகில்இப் பழிவந் தெய்தப்
பிறந்தவா வொருவ னென்பான்.

பொழிப்புரை :

விழுந்தவன் எழுந்துநின்று அழுகின்ற பெருமை பொருந்திய பசுவைக் காண்பான், அஃது உயிர் பதைபதைத்து நிற்ப தைக் கண்டு, தன் அரிய உயிர் பதைபதைத்துச் சோர்வான். நிலத்தின் மேல் இறந்து கிடக்கும் கன்றைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு அழுது நிற்பான். இடம் அகன்ற இந்நிலவுலகில் காவல் செய்கின்ற மனு என்னும் பெயருடைய என் அரசனுக்கு இவ்வுலகிடத்து இவ்வாறான பழிமொழி வர யான் ஒருவன் பிறந்தேனே என ஏங்குவான்.

குறிப்புரை :

என் தந்தை என்னாது `எங்கோமான்` என்றது, அறங் காத்துவரும் அப்பேரரசனுக்கு மகனாயிருந்தும் அதற்குரிய தகுதியின்மை பற்றியாம்.

பண் :

பாடல் எண் : 111

வந்தஇப் பழியை மாற்றும்
வகையினை மறைநூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால்
ஆற்றுவ தறமே யாகில்
எந்தைஈ தறியா முன்னம்
இயற்றுவ னென்று மைந்தன்
சிந்தைவெந் துயரந் தீர்ப்பான்
திருமறை யவர்முன் சென்றான்.

பொழிப்புரை :

அறியாது செய்த இப்பழியை நீக்குதற்குரிய தீர்வை, மறைகளின் மெய்ம்மை உணர்ந்த மறையவர்கள் நியமித்த அறநூல் வழியால் நீக்கிக் கொள்வதே அறமானால், எனது தந்தை யாகிய மனுநீதிச்சோழர் இச்செய்தியை அறிவதற்கு முன்னமேயே அதனைச் செய்வேன் என்று அம்மன்னவன் மகன், தன் மனத்தகத் துள்ள பெரும் துயரை நீக்கிக் கொள்வானாய்ச் சிறந்த மறையவர் களிடத்துச் சென்றான்.

குறிப்புரை :

செய்த பழி என்னாது `வந்த இப் பழி` என்றான், அது தன் அறிவின் வழி அன்றி அறியாது வந்தமை தெளிய. பாவத்தை அறிந்து செய்யினும் அறியாது செய்யினும் அதன் பயன்வருதல் ஒருதலை. பாண்டுவும், தசரதனும் தாம் அறியாமல் செய்த தீங்கிற்கும் அவ்வவற்றின் பயனை அநுபவித்தார்கள் என்பது அவரவர் தம் வரலாற்றில் கண்டதொன்றாம்.

பண் :

பாடல் எண் : 112

தன்னுயிர்க் கன்று வீயத்
தளர்ந்தஆத் தரியா தாகி
முன்நெருப் புயிர்த்து விம்மி
முகத்தினில் கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோல்
மனுவின்பொற் கோயில் வாயில்
பொன்னணி மணியைச் சென்று
கோட்டினால் புடைத்த தன்றே.

பொழிப்புரை :

தன் உயிரனைய கன்றானது இறக்க, அதனால் வருந்திய அப்பசுவானது, அப்பெருந்துயரைப் பொறுக்க இயலாத தாய், தன்முன் நெருப்பு எழும்படியாகப் பெருமூச்சுவிட்டு அழுது, தன் முகத்திலிருந்து கண்ணீர் சிந்த, நிலைபெற்ற உயிர்களைக் காக்கும் செங்கோலினை உடைய மனுவேந்தனின் அழகிய அரண்மனை வாயிற்குச் சென்று, அங்குக் கட்டப்பட்டு நிற்கும் பொன்னால் அழகு செய்யப்பட்ட அழகிய ஆராய்ச்சி மணியைத் தன்னுடைய கொம்பி னால் அடித்தது.

குறிப்புரை :

`மன்னுயிர் காக்கும் செங்கோல்` என்றது, அவ்வுயிர் களில் தன் கன்றும் ஒன்றாக இருக்க அதனைக் காவாது அமைந்த குறிப்பினை வெளிப்படுத்துவதாம். கோடு - கொம்பு. அன்று, ஏ என்பன அசைநிலைகள்.

பண் :

பாடல் எண் : 113

பழிப்பறை முழக்கோ ஆர்க்கும்
பாவத்தின் ஒலியோ வேந்தன்
வழித்திரு மைந்தன் ஆவி
கொளவரும் மறலி ஊர்திக்
கழுத்தணி மணியின் ஆர்ப்போ
என்னத்தன் கடைமுன் கேளாத்
தெழித்தெழும் ஓசை மன்னன்
செவிப்புலம் புக்க போது.

பொழிப்புரை :

(இவ்வாறு முழக்கிய ஆராய்ச்சிமணியின் ஒலி) பழிவருதலை அறிவிக்கும் ஒரு பறையினது ஒலியோ, அல்லது உயிரைப் பிணித்து நிற்கும் பாவமே ஒரு வடிவெடுத்து வந்தாற் போல்வதொரு ஒலியோ, அல்லது மனுவேந்தன் வழிவந்த அத்திரு மைந்தனின் உயிரைக்கொள்ள வருகின்ற இயமனின் ஊர்தியான எருமைக் கடாவின் கழுத்தில் கட்டிய மணியின் ஒலியோ எனக் கேட்டார் ஐயுற்றுக் கூறுமாறு, தன் தலைவாயிலில் இதுவரை கேளாத இவ்வாராய்ச்சி மணியின் ஓசையானது மனுவேந்தனின் காதிடத்துப் புக்கது.

குறிப்புரை :

ஆனிளங்கன்று இறக்க நேர்ந்தது, அவ்வரசனின் மகனுக்குப் பழியும் பாவமும் ஆதலின் `பழிப்பறை முழக்கோ` அல்லது `பாவத்தின் ஒலியோ` என்றார். இப்பழியும் பாவமும் அவனுக்கு நேர்ந்தது மட்டுமன்று; உயிரிழப்பும் அவனுக்கு நேரவுள்ளது என்பது தோன்ற `மறலி ஊர்திக் கழுத்தணி மணியின் ஆர்ப்போ` என்றார். கடைமுன் என்பதை முன்கடை என மாறுக. அது தலை வாயில் என்னும் பொருள்பட நின்றது. கேளா மன்னன் என இயைக்க; இதுவரை இவ்வாறாய ஆராய்ச்சிமணியின் ஒலியைக் கேட்டறியாத அரசன். `மறைநா ஓசை கேட்டல் அல்லது மணிநா ஓசை கேட்டதும் இலனே` (சிலப். மதுரை. கட்டு. 31-32) என்னும் சிலப்பதிகாரமும். இப்பாடற்கண் வந்த ஓகாரங்கள் ஐயப் பொருளன.

பண் :

பாடல் எண் : 114

ஆங்கது கேட்ட வேந்தன்
அரியணை இழிந்து போந்து
பூங்கொடி வாயில் நண்ணக்
காவல ரெதிரே போற்றி
ஈங்கிதோர் பசுவந் தெய்தி
இறைவநின் கொற்ற வாயில்
தூங்கிய மணியைக் கோட்டால்
துளக்கிய தென்று சொன்னார்.

பொழிப்புரை :

அவ்வொலியைக் கேட்ட மனுவேந்தனும், தன் அரியணையினின்றும் இறங்கிச் சென்று, பொலிவுமிக்க கொடிகள் கட்டப்பெற்ற அரண்மனை வாயிலை அடைய, அங்கிருந்த வாயிற் காவலர்கள் அவ்வரசன் எதிர் வணங்கி, `அரசே! இவ்விடத்து வந்த தொரு பசு, நின் வெற்றி பொருந்திய தலைவாயிலில் தொங்கவிடப் பட்டிருக்கும் ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பின் நுனியால் அசைத்தது` என்று கூறினார்கள்.

குறிப்புரை :

பூங்கொடி - அழகிய கொடி. தூங்கிய மணி - தொங்க விடப்பட்டிருக்கும் மணி; இதுவரை யாரும் இம்மணியை அடிக்க நேராமையின் செயற்பாடின்றி இருந்த மணி எனக் கோடலுமாம்.

பண் :

பாடல் எண் : 115

மன்னவ னதனைக் கேளா
வருந்திய பசுவை நோக்கி
என்னிதற் குற்ற தென்பான்
அமைச்சரை இகழ்ந்து நோக்க
முன்னுற நிகழ்ந்த எல்லாம்
அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்
தொன்னெறி யமைச்சன் மன்னன்
தாளிணை தொழுது சொல்வான்.

பொழிப்புரை :

அரசன் வாயிற்காவலர் கூறியதைக் கேட்டு, வருந்தி நிற்கும் அப்பசுவைப் பார்த்து, இதற்கு நேர்ந்த தீங்கு என்ன? என அமைச்சரை இகழ்ந்து பார்க்க, இதற்குமுன் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அறிந்தவனாகிய அறநூல்களில் துறை போய பேரறிவும், தொன்றுதொட்டுவரும் நீதி வழுவா நெறிமுறையும் உடைய ஓர் அமைச்சனானவன் அவ்வேந்தனின் திருவடிகளை வணங்கிச் சொல் வான் ஆயினன்.

குறிப்புரை :

இவ்வமைச்சனின் பெயர், இங்கணாட்டுப் பாலையூருடை யான் உபயகுலாமலன் எனத் திருவாரூர்க் கல்வெட்டுக் கூறும். (இங்கநாடு - நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பிரிவு.) பசுவினால் இம்மணி அடிக்கப்பட்டது என வாயில்காவலர் கூறினும், அதற்கு என்ன நேர்ந்தது என்பதை அமைச்சரையே வினவினன். காரணம் அங்கு நிகழும் நிகழ்ச்சிகளை அவனினும் அமைச்சர்கள் விசாரித்து முன்னரே முழுமையாக அறிந்திருப்பர் என்பதுபற்றியாம். அமைச்சரை நோக்க என்னாது, `இகழ்ந்து நோக்க` என்றார். பசு துயருறவும், அதனால் இவ்வாராய்ச்சி மணியை அடிக்க நேர்ந்ததும் அறநெறியைச் செயற்படுத்தத் தவறிவிட்ட இழிவு நோக் கியாம். ஆராய்ச்சிமணி அடித்தபொழுதே அமைச்சர் வந்துற்றதும், அத்திறனெல்லாம் ஒருங்கு அறிந்திருந்ததும் அவ்வமைச்சரின் அறநெறி வழாமையைப் புலப்படுத்துகின்றது. எனினும் இத்தகையதொரு நிகழ்ச்சி தம்நாட்டில் நடந்துவிட்டதே தவறு எனக்கருதினன் அரசன். ஆதலின் `இகழ்ந்து நோக்க` என்றார். நூலறிவையும், வழிவழியாகப் போற்றப் பெற்று வரும் அறநெறிச் செயலையும் ஒருங்கு பெற்றவன் அவ்வமைச்சன் என்பார் `முதிர்ந்த கேள்வித் தொன்னெறி அமைச்சன்` என்றார்.

பண் :

பாடல் எண் : 116

 வளவநின் புதல்வன் ஆங்கோர்
மணிநெடுந் தேர்மே லேறி
அளவில்தேர்த் தானை சூழ
அரசுலாந் தெருவிற் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால்
இடைப்புகுந் திறந்த தாகத்
தளர்வுறும் இத்தாய் வந்து
விளைத்ததித் தன்மை என்றான்.

பொழிப்புரை :

மனுவேந்தனே! நின்மகன் அம்மாடவீதியினிடத்து மணிகள் கட்டிய நெடியதொரு தேரின்மேல் ஏறி, அளவற்ற தேர்களும், சேனைகளும் தன்னைச் சூழ்ந்துவர, அரசர்கள் உலாப்போதரும் அரச வீதியில் புகும்பொழுது, ஒரு பசுவின் இளங்கன்று ஒன்று அத்தேர் உருளையின் இடையே புகுந்து இறந்ததாக, அதனால் தளர்வுற்ற இத் தாய்ப் பசுவானது இவ்விடத்து வந்து இம்மணியை அசைத்தது என்றான்.

குறிப்புரை :

அமைச்சர் கூறிய இவ்விடை அஃகி அகன்ற அறிவு நலம் உடையது. வளவன் என்பது சோழரைக் குறிக்கும் பெயர்களில் ஒன்றாகும். அது ஈண்டு மனுவேந்தனே! என விளிக்க நின்றது எனினும், அச்சொல் அறம் தளர்ந்ததோ என அஞ்சும் மனு வேந் தனுக்கு விடையாக அமையாதவாறு ஆகிவிடும் . ஆதலின் `நின்னாடு நிலவளத்தானன்றி அற வளத்தானும் குறைவுடையதன்று` என்பாராய் `வளவ` என்றார்.
அறம் துஞ்சும் செங்கோலுடைய நின்மகன் ஆதலின் அவனும் அவ்வறத்தினின்றும் மாறுபடான் என்பார் `நின்புதல்வ` என்றார். அவன் இவர்ந்து சென்ற அத்தேர்தானும் மணி கட்டப் பெற்றதும், மிக உயரமானதுமாகும். ஆதலின் அம்மணியோசை கேட்டு அக்கன்று விலகி இருக்கலாம், அல்லது அத்தேரின் பெருவடிவு நோக்கியேனும் விலகியிருக்கலாம் என்பார், `மணிநெடுந் தேரில் ஏறி` என்றார். ஓடிவந்து புகும் இளங்கன்றின் வருகை, அவ்வரசிளங் குமரற்கன்றி அவனுடன் வரும் அத் தானைத்தலைவர் உள்ளிட்ட பிறர்க்கும் தெரிந்திலது: எனவே `அதனைப் பாராதது அவன் குற்றமட்டுமன்று` என்பார், `அளவில் தேர்த்தானை சூழ` என்றார். அத்தேர் சென்ற வழி அரசர்க்குரிய பெருவீதியே அன்றி ஏனையோ ரும் இயங்குதற்குரிய பொது வீதிஅன்று என்பார் `அரசுலாம் தெருவில்` என்றார். அத்தேர் சென்றதும் மிகுவேகத்ததும் இல்லை; மென்மையாகவே சென்றது என்பார், ஓடியது என்னாது `போங்கால்` என்றார்.
இவ்வாறு பிறபிற சூழல்களில் தவறு இல்லை எனவே அக்கன்றுதான் தவறு செய்துவிட்டதோ எனின், அதுவும் அன்று; சென்ற கன்று இளங்கன்று ஆதலின் அது பயமறியாது என்பார் `இளங் கன்று` என்றார். அக்கன்று புகுந்ததும் தேரின் முன் உருளையிலாயின் அரசிளங்குமரனும் அறிந்திருப்பன், பிறரும் அறிந்திருப்பர், அவ்வாறின்றி நடுவே புகுந்தது என்பார் `இடைபுகுந்து` என்றார். இறந்தது என்னாது இறந்ததாக என்றார், அச்செய்திதானும் மேலும் உறுதி செய்தற்குரியதாதல் பற்றி. தளர்வுறும் இத்தாய் வந்து மணி அடித்தது என்னாது, `விளைத்தது` என்றார், அவ்வாறு மணியடித்தது என்பதை வாயால் கூறவும் அஞ்சி. இவ்வாறு சொல்லுக்குச் சொல் அழகு தோன்றி நிற்கும் இப்பாடல் மிகச் சிறந்ததொரு பாடலாகும்.

பண் :

பாடல் எண் : 117

அவ்வுரை கேட்ட வேந்தன்
ஆவுறு துயர மெய்தி
வெவ்விடந் தலைக்கொண் டாற்போல்
வேதனை யகத்து மிக்கிங்கு
இவ்வினை விளைந்த வாறென்
றிடருறு மிரங்கு மேங்குஞ்
செவ்விதென் செங்கோ லென்னுந்
தெருமருந் தெளியுந் தேறான்.

பொழிப்புரை :

அவ்வமைச்சரின் சொல்லைக் கேட்ட அரசன் அத் தாய்ப்பசு அடைந்த துன்பத்தைத் தானும் அடைந்து, கொடிய பாம்பின் விடம் தலைக்கு ஏறியதுபோல, மனத்துயரம் மிகுதியாக, இப்பழி இவ்வாறு விளைந்துவிட்டது ஏன்? என்று வருந்துவான், இரங்கி ஏங்குவான், என் செங்கோல் நன்கு இருந்தது என்பான், இப்பழிச் செயலுக்குத் தீர்வு என் செய்வன் எனத் தெளிந்து தேறாதவனாய் மனம் வருந்தினான்.

குறிப்புரை :

`ஆ உறு துயரம் எய்தி` என்பது அவ்வரசன் பட்ட ஆழ்ந்த துன்பத்தை விளக்கி நிற்கின்றது. தெருமரும் - சுழலும்: மனம் கவலும். `அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி` (தொல். உரி. 13) என்னும் தொல்காப்பியமும். செங்கோல் - அரசனின் செம்மை நலத்தைக் கோலின்மீது ஏற்றிக்கூறும் ஏற்றுரை.

பண் :

பாடல் எண் : 118

மன்னுயிர் புரந்து வையம்
பொதுக்கடிந் தறத்தில் நீடும்
என்னெறி நன்றா லென்னும்
என்செய்தால் தீரு மென்னுந்
தன்னிளங் கன்று காணாத்
தாய்முகங் கண்டு சோரும்
அந்நிலை யரச னுற்ற
துயரமோர் அளவிற் றன்றால்.

பொழிப்புரை :

நிலைபெற்ற இவ்வுயிரினங்களைக் காத்து, நில வுலகத்தைப் பகைவர்க்கும் பொதுவாம் என்னும் தன்மையினின்றும் நீக்கி, அறவழியில் ஒழுகுகின்ற என் ஆட்சியானது நன்கு இருந்தது என்று கூறுவான். இப்பாவம் என்ன கழிவு (தீர்வு) செய்தால் நீங்கும் என்பான். தன் இளமைமிக்க கன்றைக் காணாது வருந்தும் தாய்ப் பசுவின் முகத்தைப் பார்த்துச் சோர்வடைவான். இவ்விடத்து அவ் வரசன் அடைந்த துன்பமானது ஓர் அளவினது அன்று; மிகப் பெரிய தாய் இருந்தது.

குறிப்புரை :

வையம் பொதுக் கடிதல் - இந்நிலவுலகம் யாவர்க்கும் பொது என்னும் தன்மையிலிருந்து நீக்குதல்: அஃதாவது, தனக்கே உரித் தாக்குவது. ஆல் - அசைநிலை.

பண் :

பாடல் எண் : 119

மந்திரிகள் அதுகண்டு
மன்னவனை அடிவணங்கிச்
சிந்தைதளர்ந் தருளுவது
மற்றிதற்குத் தீர்வன்றால்
கொந்தலர்த்தார் மைந்தனைமுன்
கோவதைசெய் தார்க்குமறை
அந்தணர்கள் விதித்தமுறை
வழிநிறுத்தல் அறமென்றார்.

பொழிப்புரை :

இவ்வாறெல்லாம், அரசன் அடைந்த துயரத்தைக் கண்ட அமைச்சர்கள் பார்த்து. அம்மன்னவன் திருவடிகளை வணங்கி, இவ்விளைவிற்குத் தாங்கள் மனம் தளர்வது தீர்வாகாது; கொத்தாக அலர்ந்த பூமாலை உடைய நும்மைந்தனை, இதற்குமுன் பசுக்கொலை செய்த பாவிகட்குத் தீர்வாக மறை உணர்ந்தோரால் விதிக்கப்பட்ட ஆணைவழித் தீர்வு செய்வதே நீதியாகும் என்று கூறினர்.

குறிப்புரை :

பசுக்கொலை செய்தார்க்கு, அப்பாவத்திற்குக் கழிவா கக் கூறப்பட்டிருக்கும் முறையாவது: பசுக்கொலை செய்தானை மொட்டை அடித்து, ஆவின் சிறுநீரில் முழுகச் செய்து, அவன் கொன்ற பசுவின் தோலைப் போர்த்து, ஆறு திங்கள் அளவும் உப்பில்லாத உணவை ஒரு பொழுது மட்டுமே உண்ணச்செய்து, பசுக்கட்கு நோயாலும், பசியாலும், பிற உயிர்களாலும் நேரும் துன்பம் வாராது பாதுகாத்து வரும் பணியில் ஈடுபடச் செய்வதாகும் என்பர். மற்று, ஆல் என்பன அசைநிலைகள்.

பண் :

பாடல் எண் : 120

வழக்கென்று நீர்மொழிந்தால்
மற்றதுதான் வலிப்பட்டுக்
குழக்கன்றை இழந்தலறுங்
கோவுறுநோய் மருந்தாமோ
இழக்கின்றேன் மைந்தனைஎன்
றெல்லீருஞ் சொல்லியஇச்
சழக்கின்று நானியைந்தால்
தருமந்தான் சலியாதோ.

பொழிப்புரை :

பசுக்கொலை செய்தார்க்கு, மறைவழிக்காணும் தீர்வு செய்துகொள்ளுதல்தான் உலக வழக்கென்று நீவிர் கூறினால், அத்தீர்வு தானும் தன் இளங்கன்றினை இழந்து மனம் வருந்தி அலமரு கின்ற இப்பசுவின் நோய்க்கு மருந்தாகுமோ? ஆகாது. அதனால் என் மகனை யான் இழக்கின்றேன் என்று நீவிரெல்லாம் கூறிய இப்பொய் மொழிக்கு, இன்றுநான் உடன்படுவேனானால் அறக்கடவுள்தான் சலிப்படையாதோ? அடையும்.

குறிப்புரை :

ஒருவர்க்குரிய பொருளை மற்றொருவர் வஞ்சித்தோ, வன்முறையிலோ எடுத்துக்கொள்வாராயின் அப்பொருளை மீட்டுக் கொடுப்பது அறம். பறிக்கப்பட்ட பொருள் மீண்டும் தருதற்கு உரிய தன்றாயின், அப்பொருளை இழத்தற்குக் காரணமான அவனை அழித்தலே முறை. இன்றளவும்கூட இதுவே நியதியாக உள்ளது. இவ் வகையில் பசு இழந்த பொருள் அதன் கன்றாகும். அக்கன்றை மீட்டும் கொடுக்க இயலாத நிலையில் அப்பசு அடையும் துன்பத்தை யான் அடைதலே அறம் என்கின்றான் அவ்வருமந்த அரசன். எனவேதான் `என் மைந்தனை இழக்கின்றேன்` என்று நீங்கள் இவ்வகையில் தீர்வு கூறினீர்கள் என்று கூறினான். இழப்பேன் என்னாது இழக்கின்றேன் என்றான், துணிவும் தெளிவும் பற்றி. மற்று, தான் என்பன அசை நிலைகள். ஓகாரம் இரண்டும் எதிர்மறைப்பொருளன.

பண் :

பாடல் எண் : 121

மாநிலங்கா வலனாவான்
மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக் கிடையூறு
தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு பகைத்திறத்தால்
கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம் ஐந்துந்தீர்த்
தறங்காப்பா னல்லனோ.

பொழிப்புரை :

பெரிய நிலவுலகத்திற்கு அரசனாவான், நிலை பெற்ற உயிர்களைக் காக்குங் காலத்து, அவ்வுயிர்களுக்குத் தன் காரண மாயும், தன் கீழ்ப் பணிபுரியும் அமைச்சர் முதலானோரின் காரண மாயும், குற்றத்தை விளைவிக்கும் பகைவர்கள் காரணமாயும், கள்வர் காரணமாயும், பிற உயிர்கள் காரணமாயும் வருகின்ற துன்பங்களால் வரும் ஐந்து அச்சங்களையும் நீக்கி அறத்தை வழுவாமல் காப்பவன் அல்லனோ?

குறிப்புரை :

பிறவற்றால் வரும் இடையூறுகளைக் காப்பதற்கு உரியவன், தானே தவறு செய்வானாயின் அதனைத் தடுப்பார் எவரும் இல்லை. ஆதலால் அவ்வரசன் தன்னால் வரும் இடையூற்றை முதற்கண் கூறினான். அன்றியும் அரசனே தவறு செய்யின் ஏனை யோர்க்கு அது முன்னோடியாக அமைந்துவிடுதல் பற்றியும் அவன் தன் குற்றம் நேராமையை முற்கூறினான். தன் பரிசனம்- தன்கீழ்ப் பணிசெய்து வாழும் அமைச்சர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் ஆவர். அரசனுக்குச் சுற்றமாய கேளிரும் இதன்கண் அடங்குவர்.
ஊனமிகு பகைத்திறம் - குற்றத்தை விளைவிக்கும் பகைவரால், கள்வரால் உயிர்கள் தம்மால் என்றது, வலிமையுடையன வலிமை அற்றனவற்றைத் துன்புறுத்தலும், அழித்தலும் ஆகும்.

பண் :

பாடல் எண் : 122

 என்மகன்செய் பாதகத்துக்
கிருந்தவங்கள் செயஇசைந்தே
அன்னியனோர் உயிர்கொன்றால்
அவனைக்கொல் வேனானால்
தொன்மனுநூற் றொடைமனுவால்
துடைப்புண்ட தெனும்வார்த்தை
மன்னுலகில் பெறமொழிந்தீர்
மந்திரிகள் வழக்கென்றான்.

பொழிப்புரை :

என்னுடைய மகன் செய்த பசுக்கொலையாகிய இப்பாவத்திற்கு அதற்கு உரிய தீர்வாக அவனைக் கொலை செய்யாது, பிறபிற தீர்வுகளைச் செய்து, இதுபோன்றதொரு பாவச்செயலை வேறொருவன் செய்ய அவன் உயிரைக் கொலை செய்வேன் ஆயின், தொன்று தொட்டு வந்த மனுநூலில் விதித்த ஒழுக்கமானது, இம்மனுச் சோழனால் கெடுக்கப்பட்டது என்னும் சொல், நிலைபெற்ற இவ்வுல கத்தில் வழங்குமாறு கூறினீர். இவ்வாறு பிறழக் கூறுதல் அமைச்சர் களுக்கு வழக்கம் என்று கூறினான்.

குறிப்புரை :

தொடை - விதி. இவ்வொழுக்க நெறி தன்னால் கெட்டது எனும் பழி வரக்கூடாது. எனவே, பழமையாக இருந்த மனு நூலில், குற்றம் செய்தவன் எவனாயினும் அவன் செய்த குற்றத்திற் கேற்ப ஒறுப்பு வழங்கப்பெறுதல், அனைவர்க்கும் ஒரு படித்தாகவே இருந்து வந்தது என்று தெரியவருகிறது. ஆனால் `உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி` (மனோன்மணியம், பாயிரம்,11) என இக்காலத்துக் கூறப்படுமாற்றான். மனு நெறியில் ஒரு குலத்திற்கு ஒருநீதி இருந்தமை புலனாகின்றது. இம்முரண்பாடு எண்ணற்குரிய தாம். இதனால் இப்பொழுதுள்ள மனு நூல் முன்னையதாய மனு நூலுடன் வேறுபட்டதோ, என ஐயுறற்கு இடனாகின்றது. (மேலும் எண்ணுக). மந்திரிகள் வழக்கெனவே, அவர்கள் ஒருபாற்கோடுதலை வழக்கமாகக் கொண்டவர்கள் எனப் பொதுப்படக் கூறிவிடுதல் தவறு டைத்தாம். இதுவரை எக்குற்றமும் செய்யாதவனாதலானும், அவன் செய்ததெனக் கருதப்படும் குற்றமும் அவன் அறிவிற்கு அப்பாற் பட்டதாய் நிகழ்ந்திருத்தலானும், வழிவழியாகப் பின்பற்றி வந்துள்ள இத்தீர்வைக் கூறினரேயன்றி, ஒருகுலத்துக்கு ஒரு நீதி எனும் முறையில் கூறினார் அல்லர் என்பதும் அறியத்தக்கதாம். அங்ஙனமாகவும், மனுவேந்தன் இவ்வாறு கூறியதற்குக் காரணம், அறவுணர்வில் அவனுக்கிருந்த மீதூர்ந்த உணர்வையும், எந்நிலையிலும் ஒருபால் கோடிய நிலையில் எத்தகைய தீர்வும் அமைந்துவிடக்கூடாது எனக்கருதும் அறநெஞ்சமும் கொண் டிருந்தமையாலேயாம்.

பண் :

பாடல் எண் : 123

 என்றரசன் இகழ்ந்துரைப்ப
எதிர்நின்ற மதியமைச்சர்
நின்றநெறி உலகின்கண்
இதுபோல்முன் நிகழ்ந்ததால்
பொன்றுவித்தன் மரபன்று
மறைமொழிந்த அறம்புரிதல்
தொன்றுதொடு நெறியன்றோ
தொல்நிலங்கா வலஎன்றார்.

பொழிப்புரை :

இவ்வாறு மனுவேந்தன் அவ்வமைச்சர்களை இகழ்ந்து கூற, அவ்வரசன் முன்பு நின்ற அறிவு சான்ற அமைச்சர் களும், பழமையாகிய இந்நிலவுலகத்தைக் காத்துவருகின்ற மன்ன வனே! நிலைபெற்ற அறநூல் வகுத்த வழியில் ஒழுகுகின்ற இந்நிலவுல கத்தில் இதுபோலப் பசுக்கொலைகள் முன்பு நிகழ்ந்திருத்தலால் இது பொழுது அம்மகனை இதன் காரணமாக இறக்கச் செய்தல் முறைமை யன்று. மறைகள் வகுத்த அறநெறியில் ஒழுகுதல் இதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்கமன்றோ என்றனர்.

குறிப்புரை :

வழிவழியாக இந் நிலத்தைக் காத்துவரும் அரசமரபில் தோன்றிய தங்கட்கு, வழிவழியாக ஏற்றுக்கொள்ளப்பெற்று வரும் அறநெறியை ஏற்றலும் தகுவதே யாகும் என்றனர்.

பண் :

பாடல் எண் : 124

அவ்வண்ணந் தொழுதுரைத்த
அமைச்சர்களை முகம்நோக்கி
மெய்வண்ணந் தெரிந்துணர்ந்த
மனுவென்னும் விறல்வேந்தன்
இவ்வண்ணம் பழுதுரைத்தீர்
என்றெரியி னிடைத்தோய்ந்த
செவ்வண்ணக் கமலம்போல்
முகம்புலர்ந்து செயிர்த்துரைப்பான்.

பொழிப்புரை :

இவ்வாறு வணங்கிக்கூறிய அமைச்சர்களுடைய முகத்தைப் பார்த்து, அறவுண்மையை மிகத்தெளிவாக ஆய்ந்தறிந்த மனுவென்னும் பெயருடைய வெற்றி பொருந்திய சோழப் பேரரசன், `இவ்வாறு நீவீர் கூறியது மிகக் குற்றமுடையதாகும்` என்று நெருப்பிடத்துத் தோய்ந்த செந்நிறத்தையுடைய தாமரை மலர்போல் முகம் வாடிச் சினந்து சொல்வான்.

குறிப்புரை :

மிகு துன்பத்திற்கு எரியிடைத் தோய்ந்த மலரைக் காட்டுதல், `இணர் எரி தோய்வன்ன இன்னாசெயினும் புணரின் வெகுளாமை நன்று` (குறள், 308) எனவரும் திருக்குறளானும் அறிக. `மெய்த்திருப்பதம் மேவென்ற போதினும், இத்திருத் துறந்து ஏகென்ற போதினும், சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகத்தைப்பெற்றமை இராமன்பால் காண` (கம்பரா. சுந்தர. காட்சி. 20) இங்கு மறுதலையா யுள்ளதே எனின், அற்றன்று, அங்குத் தன்வயத்த தாய துன்பத்தைப் பெற்றநிலை; இங்குப் பிறவுயிர்வயத்ததாய துன்பத்தை ஏற்றநிலை எனும் வேற்றுமையுணர்தல் தக்கதாம். அன்றியும் இவன் அரசனாதலின் குற்றம் கடியும்பொறுப்புண்மையும் அறியத்தக்கதாம். மெய்வண்ணம் தெரிந்துணர்ந்த - அறநெறிகளை அளவைகளாலும் பொருந்துமாற்றானும் ஆராய்ந்துணர்ந்த.

பண் :

பாடல் எண் : 125

 அவ்வுரையில் வருநெறிகள்
அவைநிற்க அறநெறியின்
செவ்வியவுண் மைத்திறநீர்
சிந்தைசெயா துரைக்கின்றீர்
எவ்வுலகில் எப்பெற்றம்
இப்பெற்றித் தாமிடரால்
வெவ்வுயிர்த்துக் கதறிமணி
யெறிந்துவிழுந் ததுவிளம்பீர்.

பொழிப்புரை :

`அமைச்சர்களே! நீவிர் கூறும் அம்மனு உரை களின்படி வரும் நெறிகள் ஒருபுறம் நிற்க, அவ் அறநெறியின் சிறப்பான உண்மைத் தன்மையை நீவிர் கருதாமல் கூறுகின்றீர்! எந்த நாட்டில் எந்தப் பசு, தன் கன்றை இழந்த காரணத்தால் வரும் துன்பத் தைப் பெருமுச்சு விட்டு அழுது ஆராய்ச்சிமணியை அடித்து விழுந்தது? கூறுங்கள்.`

குறிப்புரை :

அவை நிற்க என்றது, அவை கிடக்கட்டும் எனும் இகழ்ச்சிக் குறிப்புத் தோன்ற நின்றது. பசுக் கொலை இவ்வாறு நிகழ்ந் திருக்கலாம். ஆனால் அது ஒரு சாதாரண மக்களுள் ஒருவனாக இருந்து செய்திருக்கலாம். இங்கு அப்படி அன்று. அறங்காத்தலின் திறம்பாத ஓர் அரசனின் மகன் இதனைச் செய்துள்ளான். அவ்வாறு செய்த துன்பத்திற்கு இலக்காகிய அக்கன்றின் தாய்ப் பசுவோ அதற்கென அழுது துயர் உற்றதோடு ஆராய்ச்சி மணியையும் அடித்துள்ளது. எனவே இக்கொடும் செயலுக்கு உள்ளான கன்றின் தாயும் தனித்தன்மை உடையதாய் விளங்குகின்றது. இவ்வகையில் இதுவரை போற்றி வந்த பொதுவான தீர்வு (பிராயச்சித்தம்) இதற்கும் ஆகாது எனக்கருதினன்.

பண் :

பாடல் எண் : 126

போற்றிசைத்துப் புரந்தரன்மா
லயன்முதலோர் புகழ்ந்திறைஞ்ச
வீற்றிருந்த பெருமானார்
மேவியுறை திருவாரூர்த்
தோற்றமுடை உயிர்கொன்றான்
ஆதலினால் துணிபொருள்தான்
ஆற்றவுமற் றவற்கொல்லும்
அதுவேயா மெனநினைமின்.

பொழிப்புரை :

இந்திரன், மால், அயன் முதலிய தேவர்கள் எல்லாம் வணங்கவும், வாழ்த்தவும் வீற்றிருந்தருளுகின்ற வீதி விடங்கப் பெருமானார் மிகவும் விரும்பி உறைகின்ற திருவாரூரில் தோன்றுதற்கு வாய்ந்த பெரும் புண்ணியமுடைய உயிர் ஒன்றைக் கொன்றான் ஆதலின், அதற்குக் கழிவாக, மிக உறுதியோடு செயத்தக்க செயல் அவனைக் கொல்வதே ஆம் என்று நினையுங்கள்.

குறிப்புரை :

`அயிரா வணமேறா தானே றேறி, அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட அயிரா வணமேயென் னம்மா னே` (தி.6 ப.25 பா.1) ஆதலின், அவன் விரும்பி உறையும் பதியாதல் விளங்கும்.
தோற்றம் உடை - தோன்றுதற்கு உரிய எனப் பொது வகையால் உரை கூறினும், திருவாரூரில் தோன்றுதற்குத் தகுதி உடைய உயிர் என்பது கருத்தாம்.
`ஆரூர்ப் பிறத்தல் நேர்படின் அல்லது செயற்கையின் எய்தும் இயற்கைத் தன்றே` (குமரகுருபரர். சிதம். மும்.2) என வரும் திருவாக்கான் இவ்வுண்மை அறியப்படும். ஆற்றவும் - மிகவும்.

பண் :

பாடல் எண் : 127

எனமொழிந்து மற்றிதனுக்
கினியிதுவே செயல்இவ்ஆன்
மனமழியுந் துயரகற்ற
மாட்டாதேன் வருந்துமிது
தனதுறுபே ரிடர்யானுந்
தாங்குவதே கருமமென
அனகன்அரும் பொருள்துணிந்தான்
அமைச்சருமஞ் சினரகன்றார்.

பொழிப்புரை :

என்று மேற்கூறியவாறு கூறி, இனி இத்தீச் செயற்குச் செய்யக்கடவதாகிய செயல் இதுவேயாம் என்று கருதியவன், இப்பசுவின் மனம் வருந்துதற்கு ஏதுவான துன்பத்தை நீக்க மாட்டாதவனாகிய யான், வருந்திக் கொண்டிருக்கும் இப்பசுவினது மிகப் பெரும் துயரத்தை அடைவதே தக்கதாம் என்று கூறி, அம் மனு வேந்தனும் அச்செயற்கு உறுதி பூண்டனன். அதுகண்ட அமைச்சர் களும் அஞ்சி அவ்விடத்தினின்றும் நீங்கினர்.

குறிப்புரை :

யானும் - இத்தீச்செயல் செய்த மகனின் தந்தையாகிய யானும் என்பதுபட நின்றது. உம்மை இழிவு சிறப்பு. `அமைச்சரும்` எனவரும் இடத்துள்ள உம்மை, அவ்விடத்திருந்த பிறபிற அலு வலர்கள் மட்டுமன்றி அமைச்சரும் என்பது பட நிற்றலின் உம்மை இறந்தது தழீஇயதாம். இம் மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 128

மன்னவன்தன் மைந்தனையங்
கழைத்தொருமந் திரிதன்னை
முன்னிவனை அவ்வீதி
முரண்தேர்க்கா லூர்கவென
அன்னவனும் அதுசெய்யா
தகன்றுதன்ஆ ருயிர்துறப்பத்
தன்னுடைய குலமகனைத்
தான்கொண்டு மறுகணைந்தான்.

பொழிப்புரை :

இவ்வாறு மன உறுதி செய்துகொண்ட அம்மனு வேந்தனும், தன் மகனை அவ்விடத்து வரவழைத்து, ஓர் அமைச்சனை நோக்கி, `விரைவாக இம்மகனை அவ்வீதியின்கண் வலிய தேர்க் காலில் இட்டுச் செலுத்துக` என்று கூற, அவ்வமைச்சன் தானும் அச் செயலைச் செய்யாது அவ்விடத்தினின்றும் நீங்கித் தன் உயிரைவிட, (அது கேட்ட) அரசன் தன் அரசிளங்குமரனைத் தானே அழைத்துக் கொண்டு அவ்வீதியிடத்துச் சென்றான்.

குறிப்புரை :

முன் - விரைவு கருதியமுன். முரண் - வலிமை: மாறுபாடு. முன் பாடலில் அமைச்சரும் அகன்றார் எனக் கூறியதையும், இப் பாடலில் ஓர் அமைச்சரை நோக்கித் தேர்க்காலில் இம்மகனை ஊர்க எனக் கூறியதையும் நோக்க. அமைச்சர்கள் அரசன் கருத்திற்கு உடன்படாமை தோன்றச் சிறிது அகன்றிருப்பினும், அரசனின் ஆணையின்றி அகன்று போதல் மரபன்று எனக் கருதியவாறு பெரிதும் அகன்று போகாது, அவ்வரசன் கண்பட நின்றிருந்தனர் என்பது தெரிய வருகிறது.

பண் :

பாடல் எண் : 129

 ஒருமைந்தன் தன்குலத்துக்
குள்ளான்என் பதும்உணரான்
தருமம்தன் வழிச்செல்கை
கடனென்று தன்மைந்தன்
மருமம்தன் தேராழி
உறவூர்ந்தான் மனுவேந்தன்
அருமந்த அரசாட்சி
அரிதோமற் றெளிதோதான்.

பொழிப்புரை :

தன் குலத்தில் அரசுரிமை பெற்று ஆட்சி நடத்து தற்கு ஒரு மகன் தான் உளன் என்பதையும் மனத்தில் கொள்ளாமல், அறத்தின்வழி நடத்தலே தனக்குரிய முறைமை என்று கருதித், தன் மகனது மார்பைத் தன் தேர்க்காலானது பொருந்த நடத்தினான் அம் மனுவேந்தன். இதனால் அரிய மருந்தனைய அரசாட்சியை நடத்துதல் அரியதோ? அல்லது எளியதோ? என்பது எண்ணற்குரியதாம்.

குறிப்புரை :

தனக்கேயன்றித் தன் குலத்திற்கும், இவனன்றிப் பிறன் ஒருவன் இலன் என்பார், `ஒரு மைந்தன்` என்றார். ஒப்பற்ற மைந்தன் எனினும் ஆம். மருமம் - மார்பு. அதன்மீது தேர்க்கால் ஊர என்றது, மங்கல வழக்கக் கூறியதாம். இறந்துபட என்பது பொருள். அருமருந்தனைய என்பது அருமந்த என்றாயிற்று. இஃது அமிழ்தத்தைக் குறிக்கும். அமிழ்தம் இனியதும், சாதல் நீங்கக் காப்பதுமாகும். அது போன்றே அரசும் தன்கீழ் வாழ்வார்க்கு இனிமையும், எவ்வாற்றானும் சாதல் இன்றிக் காப்பதும் ஆக இருக்க வேண்டும் என்பார். `அருமந்த அரசாட்சி` என்றார். இத்தகைய ஆட்சியை மேற்கொண்டு செலுத்துதல் அரிதோ, அன்றி எளிதோ என வரும் வினா, அஃது அரிதன்றி எளிதன்று என்பது போதர நின்றது. `மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும், இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகல் ஞாலம்` (புறநா.35)என்றும், `மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம், பிழை உயிர் எய்தின் பெரும்பேர் அச்சம், குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி, மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவில்` (சிலப்ப. வஞ்சி. காட்சிக். 100-104) என்றும் பண்டைய நூல்கள் பகருவனவும் ஈண்டறியத் தக்கனவாம்.

பண் :

பாடல் எண் : 130

 தண்ணளிவெண் குடைவேந்தன்
செயல்கண்டு தரியாது
மண்ணவர்கண் மழைபொழிந்தார்
வானவர்பூ மழைசொரிந்தார்
அண்ணலவன் கண்ணெதிரே
அணிவீதி மழவிடைமேல்
விண்ணவர்கள் தொழநின்றான்
வீதிவிடங் கப்பெருமான்.

பொழிப்புரை :

உயிர்கள் மாட்டு வைத்த கருணையாகிய வெண்கொற்றக் கொடையினை உடைய கண்டு, ஆற்றாதவர்களாய் நிலவுலகில் உள்ள மனிதர்கள் கண்ணீரைப் பொழிந்தார்கள். வியந்த தேவர்கள் பூமழையைச் சொரிந்தார்கள். அந் நிலையில் அறத்தின் மேம்பட்ட அவ்வரசனின் கண்ணெதிரே அழகிய திருவீதியின்கண், இளைய மழவிடையின்மீது விண்ணவர்களும் தொழுமாறு தியாகேசர் காட்சி கொடுத்தருளினார்.

குறிப்புரை :

அளி - கருணை. `குளிர்வெண்குடை போன்று இவ்வங்கண் உலகளித் தலான்` (சிலப்ப. மங்கல.1) எனவரும் சிலப்பதிகாரமும் காண்க.

பண் :

பாடல் எண் : 131

சடைமருங்கில் இளம்பிறையுந்
தனிவிழிக்குந் திருநுதலும்
இடமருங்கில் உமையாளும்
எம்மருங்கும் பூதகணம்
புடைநெருங்கும் பெருமையும்முன்
கண்டரசன் போற்றிசைப்ப
விடைமருவும் பெருமானும்
விறல்வேந்தற் கருள்கொடுத்தான்.

பொழிப்புரை :

திருச்சடையின்கண் விளங்கும் மூன்றாம் பிறை யினையும், தனித்து விழிக்கும் கண்ணையுடைய திருநெற்றி யினையும், இடப்பக்கத்தில் உமையம்மையையும், எவ்விடத்தும் நெருங்கி யிருக்கும் பூதகணங்களையுமுடைய பெருமையையும் கொண்டு, தம் முன்பு தோன்றக்கண்டு, மனுவேந்தன் வழிபட்டு நிற்க, ஆனேற்றில் எழுந்தருளி வந்த அப்பெருமானும் வெற்றி பொருந்திய அச்சோழர் பெருமகனாருக்குக் கருணை வழங்கினான்.

குறிப்புரை :

தனிவிழி - நெற்றியில் தனித்து நிற்கும் கண்விழி. நெற்றிக்குக் கீழ் இருப்பன இணை விழிகள்; இது தனி விழியாம். உமை யம்மையார் ஒருகாலத்தில் இறைவனின் இருகண்களையும் மூட, அது பொழுது உலகிற்கு ஒளிதர இந்நெற்றிக்கண்ணைத் திறந்தனர் என்பர். அவ்வகையிலும் இது தனிவிழியாயிற்று. புடை - பக்கம்.

பண் :

பாடல் எண் : 132

அந்நிலையே உயிர்பிரிந்த
ஆன்கன்றும் அவ்வரசன்
மன்னுரிமைத் தனிக்கன்றும்
மந்திரியும் உடனெழலும்
இன்னபரி சானானென்
றறிந்திலன்வேந் தனும்யார்க்கும்
முன்னவனே முன்னின்றால்
முடியாத பொருளுளதோ.

பொழிப்புரை :

அக்காட்சியை அப்பெருவேந்தன் கண்டு கொண்டிருக்கும்பொழுதே, உயிர் நீங்கிக் கிடந்த பசுங்கன்றும், அம் மனுவேந்தனின் அரசுரிமைக் குரிய ஒப்பற்ற இளங்கன்றாய திருமக னும், அம்மகன் காரணமாகத் தன் உயிரை நீத்த அமைச்சரும் ஒருங்கே எழுதலும், அதைக்கண்ட மனுவேந்தன் பெருமகிழ்வால் இன்ன தன்மையன் ஆனான் என்று கூற அறியேன். இவ் வியத்தகு செயல்களை எல்லாம் காணும்பொழுது, எவ்வுயிர்க்கும் முதல்வ னாகிய சிவபெருமானே முன்னின்று அருளின் முடியாத பொருள் களும் உளவோ? இல என்பது தெரிகிறது.

குறிப்புரை :

இறந்த உடல் மீண்டும் உயிர்பெற்று எழுதல் என்பது உலகியலில் இயலாததே ஆகும். அதிலும் ஆன் கன்று, அமைச்சர், அரசிளங்குமரன் ஆகிய மூன்று உயிர்களும் மீளத்தோன்றுமாறு நிகழ்தல் யாண்டும் காண்டற்கின்று.
அங்ஙனம் ஆகவும் இம் மூவுயிர்களும் மீளத் தத்தம் உடற்கண் புகுந்து எழுதல் திருவருட் செயலாலேயே ஆகும். ஆதலால்தான் `யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள் உளதோ` என்றார்.
ஓகாரம் - எதிர் மறைக்கண் வந்தது. அரசிளங்குமரனைக் கன்று என்றது உயர்வின்கண் வந்த திணை வழுவமைதியாம்.

பண் :

பாடல் எண் : 133

அடிபணிந்த திருமகனை
ஆகமுற எடுத்தணைத்து
நெடிதுமகிழ்ந் தருந்துயரம்
நீங்கினான் நிலவேந்தன்
மடிசுரந்து பொழிதீம்பால்
வருங்கன்று மகிழ்ந்துண்டு
படிநனைய வரும்பசுவும்
பருவரல்நீங் கியதன்றே.

பொழிப்புரை :

தன்னுடைய திருவடிகளில் வணங்கிய அரசிளங்குமரனைத் தன் மார்புற எடுத்துத் தழுவி, மிக மகிழ்ந்து, தனக்குள் இருந்த பெருந்துயரினின்றும் நீங்கினான் இந்நிலவுலகை ஆளும் மனுவேந்தன். கன்றிழந்த காரணத்தால் அங்கு வந்து, துயரத்தினின்றும் நீங்கிய அத்தாய்ப் பசுவின் மடியிலிருந்து சுரந்து வரும் இனிய பாலை, உயிர் பெற்று எழுந்த பசுங்கன்றும் மகிழ்ச்சியால் உண்ண, அதனால் தரையும் நனைந்தது.

குறிப்புரை :

அடிபணிந்த திருமகனை என்றது அவ்வரசிளங் குமரனின் பண்பையும் பத்திமையையும் காட்டுகின்றது. படி - நிலம். பருவரல் - துன்பம்.
அன்று, ஏ என்பன அசை நிலைகள். அன்றே - அப்பொழுதே என உரை காண்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு. உரை) .

பண் :

பாடல் எண் : 134

பொன்தயங்கு மதிலாரூர்ப்
பூங்கோயில் அமர்ந்தபிரான்
வென்றிமனு வேந்தனுக்கு
வீதியிலே அருள்கொடுத்துச்
சென்றருளும் பெருங்கருணைத்
திறங்கண்டு தன்னடியார்க்கு
என்றும்எளி வரும்பெருமை
ஏழுலகும் எடுத்தேத்தும்.

பொழிப்புரை :

பொன்மயமாய் விளங்குகின்ற மதில் சூழ்ந்த திருவாரூரில், பூங்கோயிலின் இடனாக வீற்றிருந்தருளுகின்ற தியாகேசர், வெற்றியினையுடைய மனுவேந்தனுக்கு அவ்வீதியின் கண்ணே காட்சி கொடுத்து மறைந்தருளும் பெருங்கருணைத் திறம் கண்டு, தம் அடியவர்களுக்கு எந்நாளும் எளிவந்து அருளும் கருணையின் பெருமையை ஏழுலகங்களும் எடுத்துக்கூறி வணங்கும்.

குறிப்புரை :

எந்த வீதியில் ஆனிளம் கன்றும், அரசிளம் கன்றும், அமைச்சர் ஒருவரும் இறக்க நேர்ந்ததோ, அவ்வீதியிலேயே அவரவர் களும் குற்றம் நீங்க உயிர் பெறவும், இறைவனின் காட்சி பெறவும் நேர்ந்தன. ஆதலின் அப்பெருமானின் எளிவந்த கருணை புலப்படுவ தாயிற்று. `என்றும்`, ஏழுலகமும்` எனவரும் இடங்களில் வரும் உம்மை முற்றும்மையாம்.

பண் :

பாடல் எண் : 135

இனையவகை அறநெறியில்
எண்ணிறந்தோர்க் கருள்புரிந்து
முனைவரவர் மகிழ்ந்தருளப்
பெற்றுடைய மூதூர்மேல்
புனையுமுரை நம்மளவில்
புகலலாந் தகைமையதோ
அனையதனுக் ககமலராம்
அறவனார் பூங்கோயில்.

பொழிப்புரை :

இவ்வாறு வரும் அறவழியில் ஒழுகும் எண்ணற்ற அடியார்களுக்கு அருள் வழங்கித் தியாகேசர் மகிழ்ந்து வீற்றிருந் தருளும் திருவாரூரை, ஒப்பனை செய்து கூறும் சிறப்பு நம்மால் எடுத்துக்கூற அடங்கும் அளவினதோ? அன்று. அத்திருநகரத்திற்கு இதய மலராக விளங்குவதுஅப்பெருமானாரின் பூங்கோயில் ஆகும்.

குறிப்புரை :

திருவாரூரின் பெருமை நம்மளவில் பாராட்டுதற் குரியதோ? என்றது, அதன் பெருமை தம்மளவிற்கும் மேம்பட்டது என்பது கருதியாம். அத்தகைய திருவாரூரின் இதயமலராக விளங் குவது இறைவனின் பூங்கோயிலாம் என நிறைவு செய்கிறார்.

பண் :

பாடல் எண் : 136

பூத நாயகர் புற்றிடங் கொண்டவர்
ஆதி தேவர் அமர்ந்தபூங் கோயிலிற்
சோதி மாமணி நீள்சுடர் முன்றில்சூழ்
மூதெ யிற்றிரு வாயின்முன் னாயது.

பொழிப்புரை :

பூதகணங்களுக்கு முதல்வரும், புற்றிடம் கொண்ட வரும், எவ்வுயிர்க்கும் தலைவர் ஆயவரும் ஆன சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பூங்கோயிலில், ஒளிபொருந்திய மாணிக்கங் களின் பேரொளி நிறைந்த திருமுற்றத்தைச் சூழ்ந்த பழமையான மதில்களை யுடைய திருவாயிலின் முன்னாகத் (தேவாசிரியன் மண்டபம்) உள்ளது.

குறிப்புரை :

முன்னாக உள்ளது யாதெனில், அது திருக்காவணமாம் என அடுத்த பாடலோடு நிறைவு பெறுதலின் இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. மதில் சூழ்ந்த திருவாயிலைக் கடந்து செல்லுங்கால் முதற்கண் காணத்தக்கதாக முன்னிற்பது இம்மண்டபமாகும். இதன்கண் வீற்றிருக்கும் அடியவர் பெருமை இப்பகுதியில் பேசப்படுகின்றது. புற்றிடம் கொண்டவர் - புற்றை இடமாகக் கொண்டு விளங்குபவர் . பூங்கோயில் - திருமகள்வழிபட்ட கோயில். பூதம் - பூதகணங்கள்: உயிர்க் கூட்டம் எனினும் அமையும்; `பூதபரம்பரை பொலிய` (தி.12 பு.28 பா.1) எனவரும் திருவாக்கும் காண்க. சோதிமாமணி - ஒளி பொருந்திய மாணிக்கங்கள். நீள்சுடர் - பேர் ஒளி.

பண் :

பாடல் எண் : 137

 பூவார் திசைமுகன் இந்திரன் பூமிசை
மாவாழ் அகலத்து மால்முத லானவர்
ஓவா தெவரும் நிறைந்துறைந் துள்ளது
தேவா சிரிய னெனுந்திருக் காவணம்.

பொழிப்புரை :

தாமரை மலரில் வாழ்கின்ற அயனும், இந்திரனும், தாமரைமலரில் உறையும் திருமகளைத் தன் மார்பகத்தே கொண்டி ருக்கும் திருமால் முதலான தேவர்களும் ஆகிய எல்லோரும் நீங்காது நிறைந்து உறைவது தேவாசிரியன் என்னும் திருப்பெயருடைய திருமண்டபம் ஆகும்.

குறிப்புரை :

அயனும், திருமகளும் வீற்றிருக்குமிடம் தாமரை என்பர். ஆதலின் `பூவார் திசைமுகன்` என்றும், `பூமிசை மா` என்றும் கூறினார். பூவெனப் பொதுப்படக் கூறினும் அது தாமரையையே குறிக்கும். என்னை? `பூவெனப்படுவது பொறிவாழ் பூவே` (நால்வர் நான்மணி, 40) என்பவாகலின். திருமகள் தாமரையை இடனாகக் கொண்டிருப்பினும், திருமாலைப் பிரியாதிருத்தற் பொருட்டு அவரின் மார்பகத்தேயே வீற்றிருப்பாள் என்பர்; `அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறைமார்பா` என வருவதும் காண்க. தேவர்கள் திருவாரூர்ப் பெருமானை வணங்குதற் பொருட்டு மிகவும் விரும்பி வந்து நிற்குமிடம் தேவாசிரிய மண்டபம் ஆகும். இதுபோன்றே அடியவர்களும் இறைவனை வணங்கி இன்பம் ஆர்ந்து (தேனித்து) நிற்குமிடம் தேவாசிரிய மண்டபம் ஆகும். தேவர்களுக்கு, இவ்வடியவர்கள் ஆசிரியத் தன்மை பூண்டு வழிகாட்டுவர்.
`........ வாய்தல் பற்றித்
துன்றிநின் றார்தொல்லை வானவ ரீட்டம் பணியறிவான்
வந்துநின் றாரய னுந்திரு மாலும்` -தி.4 ப.99 பா.10
எனவரும் ஆளுடை அரசரின் திருவாக்கும் காண்க. திருக்காவணம் - மண்டபம்.

பண் :

பாடல் எண் : 138

அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
நிரந்த நீற்றொளி யால்நிறை தூய்மையால்
புரந்த வஞ்செழுத் தோசை பொலிதலால்
பரந்த வாயிரம் பாற்கடல் போல்வது.

பொழிப்புரை :

அத்தேவாசிரிய மண்டபம், உயிர்க்குற்ற துன்பத்தை நீக்கும் அடியவர்களின் திருமேனியில் ஒழுங்குபெற அணிந்த திரு நீற்றின் ஒளியாலும், நிறைந்த தூய்மையாலும், தன்னை எண்ணு பவர்களைக் காப்பாற்றுதற்குரிய திருவைந்தெழுத்தின் ஒலியானது மீதூர்ந்து தோன்றுதலினாலும் பெரும் பரப்பினையுடைய ஆயிரம் பாற்கடலை ஒப்பது.

குறிப்புரை :

அரந்தை - துன்பம்: பிறவித்துன்பம். மந்திரம் தன்னை எண்ணுவாரைக் காப்பது என்னும் பொருளது: அது திருவைந்தெழுத் தாம். ஆதி மந்திரமாகிய இத்திருவைந்தெழுத்து இவ்வகையில் தலைமையும் சிறப்பும் உடைமைபற்றிப் `புரந்த அஞ்செழுத்து` என்றார். திருக்காவணம் வெண்மையான ஒளியாலும், தூய்மை யாலும், ஒலியாலும் பாற்கடலை ஒத்தது என்றார். அடியவர் ஒவ் வொருவரும் ஒவ்வொரு பாற்கடலை ஒத்திருத்தலின் `ஆயிரம் பாற் கடல் போல்வது` என்றார். ஆயிரம் என்பது எண்ணின் மிகுதி குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 139

 அகில காரணர் தாள்பணி வார்கள்தாம்
அகில லோகமும் ஆளற் குரியரென்று
அகில லோகத்து ளார்க ளடைதலின்
அகில லோகமும் போல்வ ததனிடை.

பொழிப்புரை :

மேல், கீழ், நடு எனும் மூவுலகிற்கும் தலைவனான தியாகேசப் பெருமானின் திருவடிகளைத் தொழுகின்றவர்கள்தாம், எல்லா உலகங்களையும் ஆளுதற்குரியவராவர் என்று, அனைத் துலகிலும் வாழும் முனிவர் முதலிய யாவரும் அங்கு வந்து வாழ் தலால், அம்மண்டபத்தின் பரப்பு அனைத்துலகங்களும் ஒருங்கிருந் ததை ஒத்ததாம்.

குறிப்புரை :

அதன் இடை - அம்மண்டபத்தின் பரப்பிடம்; இப் பாடல் சொற்பொருட் பின்வருநிலை அணியதாம்.

பண் :

பாடல் எண் : 140

அத்தர் வேண்டிமுன் ஆண்டவர் அன்பினால்
மெய்த்த ழைத்து விதிர்ப்புறு சிந்தையார்
கைத்தி ருத்தொண்டு செய்கடப் பாட்டினார்
இத்தி றத்தவ ரன்றியும் எண்ணிலார்.

பொழிப்புரை :

உலகுயிர்க்கெலாம் தந்தையாக விளங்கும் சிவபெருமானால், முன்னமேயே விரும்பி ஆட்கொள்ளப் பெற்ற அவ்வடியவர், பெருமானை இடையறாது நினைதலால் உரோமம் சிலிர்க்கவும், உடல் விதிர்விதிர்க்கவும் ஆன சிந்தையை உடைய வர்கள். அவர்கள் தத்தம் திருக்கைகளால் திருத்தொண்டு செய்தலைக் கடனாகக் கொண்டவர்கள். இவ்வாறாய அன்புடையவர்களன்றித் தத்தம் அநுபவத்திற்கேற்ப அன்புகாட்டி ஒழுகும் அடியவர்களும் எண்ணிலாதவர்களாய் உள்ளனர்.

குறிப்புரை :

அத்தர் - தந்தையார். மெய் தழைத்து என்பதன்றி, மெய்த்து அழைத்து எனப்பிரித்துப்பொருள் விரிப்பர் ஆறுமுகத் தம்பி ரான் சுவாமிகள். அன்பினால் மெய்த்து அழைத்தலாவது:- ஆன்கன்று தாயை நாடி அழைத்தல் போல, அன்போடு திருநாமங்களைக் கூறி அழைத்தலாம் என்பது அவர்தம் உரையாகும். விதிர்ப்புறுதலாவது - அவ்வாறு அழைக்குங்கால் உரோமம் முகிழ்த்து உடம்பு சிறிது அசைதல். இவ்விரண்டும் வாக்கினிடத்தும் மெய்யினிடத்தும் உள்ளனவேனும் சிந்தைவழியவாய் நிற்றலில் `சிந்தையார்` என்றார். கைத்திருத்தொண்டு - திருவிளக்கு, திருப்பள்ளித்தாமம் அமைத்தல் முதலியன. கைத்தொண்டு செய்தல் கற்புடையாளுக்குக் கணவன் மாட்டுச் செய்பணியேயன்றிப் பிறிதொன்றும் பொருளாகாமை போலத், தம்மையாண்ட முதல்வன் மாட்டு அன்புடையார், அவனுக்கே தொண்டுசெய்தல் அல்லது வேறறியார் என்பது தோன்றக் `கடப்பாட்டினார்` என்றார். செபம், தவம், தியானம், விரதம் முதலிய சீலங்களிலும், தியான யோகம் முதலிய நெறிகளினும் நிற்போரும் அடங்க `எண்ணிலார்` என்றார்.

பண் :

பாடல் எண் : 141

மாசி லாத மணிதிகழ் மேனிமேல்
பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்
தேசி னால்எத் திசையும் விளக்கினார்
பேச வொண்ணாப் பெருமை பிறங்கினார்.

பொழிப்புரை :

இவ்வாறாய அடியவர்கள், குற்றமில்லாத உருத்தி ராக்கம் அணிந்து, விளங்குகின்ற தம் திருமேனியிடத்துப் பூசுகின்ற வெள்ளிய திருநீறுபோல, உள்ளத்தாலும் தூய்மை உடையவர்கள். தமது ஞானப் பேரொளியால் எத்திசைகளையும் விளக்குகின்றவர் கள். நம்மனோரால் இவ்வியல்பினர் என எடுத்து ஓதுதற்கரிய பெருமை பெற்றவர்கள்:

குறிப்புரை :

மந்திரம், தன்னை நினைத்தாரைக் காப்பதுபோல, உருத்திராக்கமும் தன்னை அணிந்தாரைக் காக்கும் தகையது. தீய பண்புகளும், தீய செயல்களும்தோன்றாதவாறு காத்தல் பற்றி `மாசிலாத மணி` என்றார். மணி - உருத்திராக்க மணி. தேசு - ஒளி: தவத் தாலும் அதனால் பெற்ற ஞானத்தாலும் பெற்ற ஒளி. `ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும்பெரும் சோதியாலும்` என்பர் பின்னும். இவ் விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 142

பூத மைந்தும் நிலையிற் கலங்கினும்
மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஓது காத லுறைப்பி னெறிநின்றார்
கோதி லாத குணப்பெருங் குன்றனார்.

பொழிப்புரை :

இவ்வடியவர்கள், ஐம்பெரும் பூதங்களும் தத்தம் நிலையினின்றும் கலங்கியபோதும், தாம் கலங்காது, உமையம் மையை ஒரு பால் உடைய சிவபெருமானின் திருவடிகளை மறத்தல் இல்லாதவர். சிறப்பாகக் கூறுதற்குரிய பத்திமை நெறியில் அழுந்தி நிற்பவர்கள். குற்றமற்ற குணங்களால் பெரிய மலையை ஒத்தவர்கள்.

குறிப்புரை :

பூதம் ஐந்தாவன நிலம், நீர், தீ, வளி, வெளி என்பன. இவை நிலை கலங்குதலாவது தத்தம் தன்மையில் குன்றியும், திரிந்தும் நிற்பதாம். `வான்கெட்டு மாருதம் மாய்ந்தழல் நீர் மண்கெடினுந் தான் கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையன்`(தி.8 ப.11 பா.18) இறைவன். அப் பெருமானைச் சார்ந்து நின்றார்க்கும் அவ்வியல்பு வரப் பெறுதலின் `பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும் மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்` என்றார். இத்தகைய மாண்பு இவர்க்கு உளவாதலை,
வானம் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே.
(தி.4 ப.112 பா.8) மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற்றேழ் உலகும்
விண்பால் திசைகெட்டிருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோம் திருப்பா திரிப்புலியூர்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே.
(தி.4 ப.94 பா.9) கன்னெடுங் கானம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப்
பன்னெடுங் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம்உண்டு என்று
என்னொடுஞ் சூளறும் அஞ்சல் நெஞ் சேஇமை யாதமுக்கட்
பொன்னெடுங் குன்றமொன்றுண்டு கண்டீரிப் புகலிடத்தே.
(தி.4 ப.113 பா.10) ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்
றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்
உம்பரமே உம்வசமே யாக்க வல்லீர்க்கு
இல்லையே நுகர்போகம், யானேல் வானோர்
உம்பருமா யூழியுமா யுலகே ழாகி
ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்
தம்பெருமா னாய்நின்ற அரனைக் காண்பேன்
தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே. (தி.6 ப.27 பா.2) எனவரும் அப்பரடிகள் திருவாக்குகளாலும் காண்க. சலியாமையும் பெருமையும் பற்றிக் `குணப்பெருங் குன்றனார்` என்றார். `குணமென் னும் குன்றேறி நின்றார்` (குறள். 29) எனவரும் திருக்குறளும் காண்க.

பண் :

பாடல் எண் : 143

கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

பொழிப்புரை :

இவ்வடியவர் பெருமக்கள், தமக்குளவாய பொருள் ஒன்றை இழத்தலால் வரும் கேடும், வளர்தலால் வரும் ஆக்கமும் இல்லாமை ஆகிய செல்வத்தை உடையவர்கள். ஓட்டையும் சிவந்த பொன்னையும் ஒப்ப நோக்கும் இயல்புடையவர்கள். தம்மி டத்துத் தோன்றுகின்ற அன்பு காரணமாய்ச் சிவபெருமானை வணங் குதலே யன்றி, வீடுபேற்றையும் விரும்பாத பத்திமைச் செல்வத்தை உடையவர்கள்.

குறிப்புரை :

யாதொரு பொருளினும் பற்றிருப்பின், அப்பொரு ளைப் பெறுதலிலும் வளர்த்தலிலும் அவா எழும். நினைத்தவாறு வளரின் மகிழ்ச்சி விளையும்; மாறாய வழித் துன்பம் விளையும். இவ்வடியவர்க்கு யாதொரு பொருளினும் பற்றின்மையால் அதன் வழிவரும் கேடும் ஆக்கமும் இலராயினார். இவ்வுள்ள அமைதியே பெரும் செல்வமாகும். `வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃது ஒப்பதில்` (குறள். 363) எனத் திருவள்ளுவனார் கூறுவதும் ஈண்டு எண்ணத் தக்கதாம். `பொருளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றும் திருத்தகவிற்றாயதோர் உள்ளநிகழ்ச்சி` எனப் பேராசிரியர் குறிப்பதும் இதுவாம். இவ்வுள்ள அமைதியினாலேயே ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கும் கருத்தும் உளதாகிறது.
செம்பொன்னும் நவமணியும் சேண்விளங்க ஆங்கெவையும்
உம்பர்பிரான் திருமுன்றில் உருள்பருக்கை யுடனொக்க
எம்பெருமான் வாகீசர் உழவாரத் தினில்ஏந்தி
வம்பலர்மென் பூங்கமல வாவியினில் புகவெறிந்தார்.
(தி.12 பு.21 பா.417) `புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறுபா டிலாநிலைமை துணிந்திருந்த
நல்லோர்......` (தி.12 பு.21 பா.418)
எனவரும் நாவரசர் வரலாற்று நிகழ்வும் எண்ணத்தக்கதாம். இறை வழிபாடாற்றும் பொழுதும் வழிபடுதல் குறிப்பு ஒன்றன்றி, வேறு பிற நினைவுகள், விருப்பு, வெறுப்புக்கள் எவையும் இல என்பார், `வீடும் வேண்டா விறலில் விளங்கினார்` என்றார். `வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே` (தி.8 ப.33 பா.6) என வரும் திருவாக்கும் காண்க. விறல் - வெற்றி; பத்திமை மேம்பாட்டால் வரும் வெற்றி. இது அவர்க்கு வாய்த்த பத்திமைச் செல்வமாகும்.

பண் :

பாடல் எண் : 144

ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே
பார மீசன் பணியல தொன்றிலார்
ஈர அன்பினர் யாதுங் குறைவிலார்
வீர மென்னால் விளம்புந் தகையதோ.

பொழிப்புரை :

அவர்கள் அணியும் மாலை உருத்திராக்க வடமேயாம். ஆடையாக உடுப்பது கந்தையேயாம். தாம் செய்யத் தகும் கடமையாகத் தாங்கி நிற்பதும் இறைவற்குரிய திருத்தொண் டன்றிப் பிறிதொரு கடமை இல்லாமையேயாம். இவர்கள் எவ்வுயிர்க ளிடத்தும் அன்புடையவர்கள். ஒன்றாலும் குறைவிலர். அத்தன்மைய ரான அடியவரின் வீரம் என்னால் முற்ற எடுத்துரைக்கும் தகைமை உடையதோ? அன்று என்பதாம்.

குறிப்புரை :

அணி என்பது இக்காலத்து ஒருவரால் அணியப்படும் அணிகலன்களைக் குறிக்கின்றன. இவை தன்னிடத்தினின்றும் ஒரு கால எல்லையில் நீங்கற்குரியன. இடையில் பிறரால் கவர்தற்குரியன. ஆனால் திருவள்ளுவர், நாவரசர் போன்ற அருளாளர்களோ, அவரவர்களுடன் கொள்ளத்தக்க சீரிய பண்புகளையே அணிகளாகக் கருதினர். அவ்வகையிலேயே இவ்வடியவர்கள் வாழ்வும் அமைந் துள்ளது. ``பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற` (குறள், 95) `அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு` (குறள், 1014) எனவரும் திருக்குறள் திருவாக்குகளையும் காண்க.
பாரம் - மேற்கொண்டிருக்கும் கடமை. `தொண்டலாற் றுணையு மில்லை` (தி.4 ப.40 பா.4) `கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்` (தி.1 ப.116 பா.1) எனவரும் திருமுறைத் திருவாக்குகளும் காண்க. ஈரம் - அன்பு. `இன்சொல்லால் ஈரம் அளைஇ` (குறள், 91) என்னும் திருக்குறளும். இறைப்பற்றும் இறைத்தொண்டும் அன்றி வேறு எவற்றிலும் கருத்தில்லாமையால் அவையே அவர்க்கு அனைத்தையும் வழங்கிவிடுகின்றன. ஆதலால் `யாதும் குறைவிலர்` என்றார். `உன்னைக் குறுகினேற் கினியென்ன குறையே?` (தி.8 ப.22 பா.4), `என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்?` (தி.8 ப.7 பா.9) எனவரும் மணிமொழிகளும் காண்க. வீரம் - இறை அன்பாலும் இறைத்தொண்டாலும் வரும் வீரம். இவ்வீரமே `நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்` (தி.6 ப.98 பா.1) என முழங்கக் காரணமாயிற்று.

பண் :

பாடல் எண் : 145

 வேண்டு மாறு விருப்புறும் வேடத்தர்
தாண்ட வப்பெரு மான்தனித் தொண்டர்கள்
நீண்ட தொல்புக ழார்தந் நிலைமையை
ஈண்டு வாழ்த்துகேன் என்னறிந் தேத்துகேன்.

பொழிப்புரை :

மேற்கூறிய திருவேடமே அன்றித் தாம் வேண்டு மாறு விரும்பி ஏற்றுக் கொள்ளும் பல்வேறு படிவங்களையுமுடையர். தியாகராசப் பெருமானின் ஒப்பற்ற தொண்டர்களாகிய நீட்டித்த பழமையான புகழ் உடையார்கள் தன்மையை இவ்விடத்துப் போற்று கின்ற யான், அவர்கட்குரிய முழுமையான பெருமைகளை எவ் வகையில் அறிந்து வாழ்த்துவேன்? முற்றவும் அறிந்து வாழ்த்த கில்லேன் என்பதாம்.

குறிப்புரை :

அடியவர்கள் மேற்கூறியவாறு கொள்ளும் கோலத்தரா யன்றிப் பிறவாறும் வேடம் கொண்டிருப்பர். எனினும் அவர்கள் எந் நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமையைக் கடப்பாடாகக் கொண்டிருப்பர். திருமூலர், சாக்கியர் முதலிய அடியவர்களின் வரலாறுகளை நினைவு கூர்க. அவர் புகழ் ஒருகாலஎல்லையிலோ சொல் அளவிலோ கூறத் தக்கதன்று. விரிக்கில் பெருகும்; சுருக்கில் எஞ்சும். ஆதலின், அதனை `நீண்ட தொல் புகழ்` என்றார். வாழ்த்துகேன் - வாழ்த்துகின்றவனாகிய யான், அச்சொல் என்னறிந்து ஏத்துகேன் என்பதனோடு இயைந்து பொருள்கொள நின்றது. வேண்டுமாறு விருப்புறும் வேடத்தர் என்பதை இறைவற்கு உரித்தாக்குவாரும் உளர். `பலபல வேடமாகும் பரனாரி பாகன்` என்றல் தொடக்கத்தனவாய திருவாக்குகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 146

இந்த மாதவர் கூட்டத்தை யெம்பிரான்
அந்த மில்புகழ் ஆலால சுந்தரன்
சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம்.

பொழிப்புரை :

இத்தகைய பெருமை வாய்ந்த அடியவர்களின் திருக் கூட்டத்தை, எம் தலைவரும் அளவற்ற புகழுடையவரும் ஆன ஆலாலசுந்தரர், திருக்கயிலையினின்றும் இம்மண்ணுலகிற்கு வந்து அழகிய திருத்தொண்டத் தொகை என்னும் தமிழ்ப் பதிகத்தில் வைத்துப் பாடிய வகைமையை இனிச் சொல்லுவாம்.

குறிப்புரை :

வந்து - `ஆரூரில் வருக நம்பால்` எனப் பெருமானார் அழைக்கத் திருவாரூருக்கு வந்து எனக் கோடலும் ஒன்று என்பர் சிவக் கவிமணியார் (பெரிய. பு. உரை). திருத்தொண்டத்தொகை அருளிய இடம் ஆரூர் ஆதலின் அவ்வாறு கொள்ளுதலும் ஏற்புடைத்தேயாம். இத்திருத் தொண்டத்தொகையைச் சுந்தரத் தமிழ் எனச் சேக்கிழார் குறித்தமையின், அந்த வகைமையில் பாடிய திருத்தொண்டர் புராணமும் தனித்தமிழேயாம். பக்த விலாசம் என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பல்ல என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).

பண் :

பாடல் எண் : 147

கங்கையும் மதியும் பாம்புங்
கடுக்கையு முடிமேல் வைத்த
அங்கணர் ஓலை காட்டி
ஆண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத
மதியிரு மருங்கு மோடிச்
செங்கயல் குழைகள் நாடுந்
திருமுனைப் பாடி நாடு.

பொழிப்புரை :

கங்கையையும், பிறையையும், பாம்பையும், கொன்றை மாலையையும், திருமுடியின்மேல் வைத்த சிவபெருமான், ஆவண ஓலையைக் காட்டி அடிமை கொண்ட நம்பியாரூரரின் நாடு, மகளிருடைய முகமாகிய குளிர்ந்த நிறைமதியின் இருபக்கத்தும் அவர் கண்களாகிய கயல் மீன்கள் தாவி அவர் காதுகளை அடையும் திருமுனைப்பாடி நாடாம்.

குறிப்புரை :

மகளிரின் கண்கள் அவர்கள் காதுவரை ஓடி மீளும் என்றல் இலக்கிய மரபாம். ``காதளவும் நீண்டுலவும் கண்`` (தண்டி.மேற்) `காதளவா வெங்கடுவளவா ஒளிர் காவியந்தண் போதளவா விழி` (தஞ்சை. கோவை, 46) எனவரும் இலக்கிய வழக்கும் காண்க. கடுக்கை - கொன்றை. வதனமதி - முகமாகிய மதி. திரு முனைப் பாடி நாடு - இது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதியாகும். முனைய தரையர், முனையரையர், முனையர் எனவரும் மரபினர் ஆண்ட பகுதியாதலின் இப்பெயர் பெற்றது. அந்நாட்டில் ஆரூரர் காலத்தில் வாழ்ந்த அரசர் நரசிங்கமுனையரையர் (கி.பி.840-865) ஆவர்.

பண் :

பாடல் எண் : 148

பெருகிய நலத்தால் மிக்க 
பெருந்திரு நாடு தன்னில்
அருமறைச் சைவ மோங்க
அருளினால் அவத ரித்த
மருவிய தவத்தான் மிக்க
வளம்பதி வாய்மை குன்றாத்
திருமறை யவர்கள் நீடுந்
திருநாவ லூரா மன்றே.

பொழிப்புரை :

நிறைந்த பல வளங்களால் மேம்பட்ட பெருமை மிகுந்த அத்திருமுனைப்பாடி நாட்டில், அரிய மறைகளின் பிழிவாக விளங்கும் சைவநெறி மேன்மேலும் செழிக்க, சிவபெருமானின் திருவருளினால் நம்பியாரூரர் தோன்றுதற்கு இடனாக விளங்கும் மேதக்க தவம் நிறைந்ததும், மேம்பட்ட நலங்களை உடையதும் ஆகிய திருப்பதி, மெய்ந்நெறியினின்றும் வழுவாத மறையவர்கள் மிக்கிருக் கும் திருநாவலூர் என்னும் திருப்பதியாகும்.

குறிப்புரை :

ஒரு நாட்டின் வளம் அங்குள்ள நிலத்தானும், நீரானும் மட்டும் அமைவதன்று; அங்குள்ள பெருமக்களாலும் அமைவதாகும். `எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே` (புறநா. 187), `ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழுமூரே` (புறநா. 191) என்றற் றொடக்கத்தனவாய கூற்றுக்களையும் காண்க. இவ்வகையில் திருமுறை ஆசிரியராகிய இவரும், நாவரசரும் தோன்றியதும், சந்தான ஆசிரியர்களில் மெய்கண்டார், அருணந்தி சிவாசாரியார் ஆகிய இருவரும் தோன்றியதும் ஆன பெருமை இந்நாட்டிற்கு உண்டு. நாவலூரர் தோன்றவும், மறை வல்லுநர்கள் வாழவும் இடனாக விளங்குவது திருநாவலூர் என இப்பாடல் இருவகையானும் சிறப்பித் துள்ளமை அறியத்தக்கதாம். அருமறைச் சைவம் - அரிய மறைகளின் முடிபாக விளங்கும் சைவம்; `வேதப் பயனாம் சைவமும்` (தி.12 பு.20 பா.9) எனப் பின்னர் வருதலும் காண்க. அன்று, ஏ என்பன அசை நிலைகள்.

பண் :

பாடல் எண் : 149

மாதொரு பாக னார்க்கு
வழிவழி யடிமை செய்யும்
வேதியர் குலத்துள் தோன்றி
மேம்படு சடைய னாருக்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை
மனையிசை ஞானி யார்பால்
தீதகன் றுலகம் உய்யத்
திருவவ தாரஞ் செய்தார்.

பொழிப்புரை :

உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமானுக்கு வழிவழியாக அகத்தடிமை செய்து ஒழுகும் ஆதி சைவர் குலத்தில் தோன்றிய மேம்பட்ட சடையனாருக்குக், குற்றமற்ற கற்பினை உடைய வாழ்க்கைத் துணைவியாராகிய இசைஞானியா ரிடத்து, உலகிலுள்ள உயிர்கள் யாவும் தீநெறியினின்றும் நீங்கி நன்னெறி அடைய ஒரு பெருமகனார் தோன்றியருளினார்.

குறிப்புரை :

தாய் தந்தை ஆகிய இருவர்தம் மரபில் வந்த முன்னோர்களும் இறைவற்கு அடிமை செய்து வந்தவர்கள் ஆதலின் வழியடிமை என்னாது `வழிவழியடிமை` என்றார். `இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி` (தி.11 திருமுரு. வரி.178) என நக்கீரர் சிறப்பிப்பதும் காண்க. `மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்` (தி.9 ப.29 பா. 11) என்னும் திருப்பல்லாண்டும். இறைவனை அகத்தும் புறத்தும் வைத்து வழிபடும் உரிமையும் தகுதியும் உடையவர்கள் ஆதிசைவ மரபினர் ஆவர். திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரை நாள் வழிபாட்டிலும், சிறப்பு வழிபாட்டிலும், தீண்டி வழிபடும்பேறும் இவர்கட்குண்டு. அம்மரபில் தோன்றியவர் சடையனார் என்பார் `மேம்படு சடையனார்` என்றார். ஏதம் இல் கற்பு - குற்றம் தீர்ந்த கற்பு; அறக்கற்பு. `மறுவில் கற்பின் வாள்நுதல் கணவன்` (தி.11 திருமுரு. வரி 6) எனவரும் நக்கீரர் கூற்றும் காண்க. கமலாபுரத்தில் (திருவாரூரில்) சிவகோதம கோத்திரத்தில் ஞான சிவாசாரியார் குடும்பத்தில் தோன்றியவர் இவர் என்பது கல்வெட்டுக்களால் அறியப் படுவ தொன்றாம். (73 of 95. S.I.I. Vol & Vol 11. p. 153)

பண் :

பாடல் எண் : 150

தம்பிரா னருளி னாலே
தவத்தினால் மிக்கோர் போற்றும்
நம்பியா ரூர ரென்றே
நாமமுஞ் சாற்றி மிக்க
ஐம்படைச் சதங்கை சாத்தி
அணிமணிச் சுட்டி சாத்திச்
செம்பொன்நாண் அரையில் மின்னத்
தெருவில்தேர் உருட்டு நாளில்.

பொழிப்புரை :

இவ்வாறு சிவபெருமான் திருவருளினாலே தோன் றிய அவருக்கு, தவத்தின் நிலையில் மேம்பட்டோரும் போற்றத் தக்க நம்பியாரூரர் எனும் பெயரிட்டு, மேதக்க ஐம்படையையும், சதங்கை யையும் முறையே மார்பிலும், காலிலும் அணிவித்து அழகிய இரத்தினச் சுட்டியை நெற்றியில் தாழுமாறு தலையில் சூட்டி, சிவந்த பொன்னாலாய அரை ஞாணை இடுப்பில் விளங்க அணிவித்து, திகழும் அவர், வீதியில் சிறுதேர் உருட்டி விளையாடும் நாள்களில் (ஒருநாள்).

குறிப்புரை :

ஐம்படை - திருமாலின் கரங்களில் விளங்கும் ஐந்து படைகளாய சங்கு, உருள் (சக்கரம்), வாள், கதை, கத்தி ஆகிய ஐந்தின் வடிவாகச் செய்யப்பட்ட அணி. இவற்றை மார்பில் கோத்து அணிவது மரபு. சதங்கை - இடையிலும் காலிலும் அணிவது. ஐம்படைச் சதங்கை - உம்மைத் தொகை.

பண் :

பாடல் எண் : 151

நரசிங்க முனையர் என்னும்
நாடுவாழ் அரசர் கண்டு
பரவருங் காதல் கூர 
பயந்தவர் தம்பாற் சென்று
விரவிய நண்பி னாலே
வேண்டினர் பெற்றுத் தங்கள்
அரசிளங் குமரற் கேற்ப
அன்பினால் மகன்மை கொண்டார்

பொழிப்புரை :

அந்நாட்டு அரசராய நரசிங்க முனையர் என்பார், அந்நம்பியாரூரரைப் பார்த்துச் சொலற்கரிய ஆசை மிகுதியால், அவர் தந்தையாராகிய சடையனாரிடத்துச் சென்று, அவருக்கும் தமக்கும் இருக்கும் நட்பு மிகுதியால், அந்நம்பியாரூரரை வேண்டிப் பெற்றுக் கொண்டு, தம்மரபில் பிறந்த இளவரசருக்குச் செய்யும் சிறப்புக்களை யெல்லாம் செய்து, அன்போடு தம் மகனாராக வளர்த்து வந்தார்.

குறிப்புரை :

நரசிங்க முனையர்: இம்மரபினர் சிற்றரசர்களாகவும், சோழப் பேரரசின் அமைச்சர்களாகவும் விளங்கியவர்கள். `பலர் முடிமேல் - ஆர்க்குங் கழற் காலனகன் றனதவையுட் பார்க்குமதி மந்திர பாலகரிற் போர்க்குத் தொடுக்குங் கமழ் தும்பை தூசினொடுஞ் சூடிக் கொடுத்த புகழ்முனையர் கோனும்` (விக். உலா வரி, 140-142) என வரும் விக்கிரம சோழனுலாவால் இம் மரபினர் அமைச்சராய் இருந் தமை அறியலாம். இவர் பல்லவ மன்னனாகிய கழற்சிங்கர் காலத்தில் வாழ்ந்த சிற்றரசர் ஆவர். பரவ அரும் - சொல்லுதற்கரிய. பயந்தவர் - பெற்றோர். விரவிய நண்பு - மனம் கலந்த அன்பு. நரசிங்க முனையருக்கும் சடையனாருக்கும் இருந்த நட்புரிமை இதனால் தெரிகிறது. வேண்டினர் பெற்று - நரசிங்கமுனையரின் வேண்டு கோட்கு இணங்கச் சடையனாரால் கொடுக்கப் பெற்று. மகன்மை - மகனாகக் கொள்ளும் உரிமை.
இக்காலத்தில் இதனைச் சுவிகாரம், தத்து எடுத்தல் என்றெல் லாம் கூறுப. இவற்றிற்கு எல்லாம் மேலாகத் தெளிவும், இனிமையும் தோன்ற இச் சொல்லாட்சி அமைந்துள்ளது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 152

பெருமைசா லரசர் காதற்
பிள்ளையாய்ப் பின்னுந் தங்கள்
வருமுறை மரபின் வைகி
வளர்ந்துமங் கலஞ்செய் கோலத்
தருமறை முந்நூல் சாத்தி
யளவில்தொல் கலைகள் ஆய்ந்து
திருமலி சிறப்பின் ஓங்கிச்
சீர்மணப் பருவஞ் சேர்ந்தார்.

பொழிப்புரை :

பெருமை மிகுந்த அந்நரசிங்க முனையரின் பேரன்புக்குரிய திருமகனாராய் வாழ்ந்து வருவதோடு, அதன் பின்னும் தம்முடைய ஆதிசைவ மரபில் கொண்டு ஒழுகத் தகும் ஒழுக்கங்களையும் கொண்டு வளர்ந்து, முந்நூல் அணியும் காலம் வர, அதனையும் அம்மரபு வழி நின்று ஏற்று, எண்ணிறந்த மறை முதலாய நூல்களையும் கற்றுத் தெளிந்து, செல்வம் தழைய நிற்கும் சிறப்பைப் பெற்றுச் சிறப்புமிக்க திருமணப் பருவத்தை அடைந்தார்.

குறிப்புரை :

அரசர் மரபில் வளர்ந்தும், ஆதி சைவ நெறியை விடாது பின்பற்றி வளரவும், வளர்க்கப்பட்டதும் ஆய அருமை எண்ணற் குரியதாம். முந்நூல் அணிதலை உபநயனம் என்பர். உபநயனம் - மேலும் பெறும்கண். முன்னரே உள்ள இருகண்களுடன், புருவ நடுவில் இறைவனை இடையறாது எண்ணுவதால் திறக்கப்படும் கண் இதுவாகும். காயத்திரி மந்திரத்தையருளி இம்முந்நூலையும் அணிவர்.
காயத்திரி - வினைவிளைவையறுத்து மேலும் பிறப்பில்லா தாக்குவது. இம் மந்திரத்தால் குறிக்கப் பெறுபவர் சிவபெரு மானேயாவர்.

பண் :

பாடல் எண் : 153

தந்தையார் சடைய னார்தம்
தனித்திரு மகற்குச் சைவ
அந்தணர் குலத்துள் தங்கள்
அரும்பெரும் மரபுக் கேற்ப
வந்ததொல் சிறப்பில் புத்தூர்ச்
சடங்கவி மறையோன் தன்பால்
செந்திரு வனைய கன்னி
மணத்திறஞ் செப்பி விட்டார்.

பொழிப்புரை :

தந்தையாராகிய சடையனார் தம் ஒப்பற்ற திருமகனாருக்கு, ஆதிசைவ குலத்தில், தம் அரும்பெரும் மரபிற்கு ஏற்ப வழிவழியாக வாழ்ந்து வரும் சிறப்புடைய புத்தூரில் வாழும் சடங்கவி சிவாசாரியாரிடத்துச் சிவந்த திருமகளை ஒப்பத் தோன்றி யிருக்கும் மகளாரைத் திருமணம் செய்தற்குத் தக்கோர் வாயிலாகக் கேட்டு அனுப்பினார்.

குறிப்புரை :

சடங்கவி எனப் பாடலில் இருப்பினும், சடங்கவியார் எனக் கோடலே நம் மரபுக்குப் பொருந்துவதாகும். அதற்கு ஏற்பவே, பின்னும் முகத்தர், இசைந்தார் எனக் கொள்ளப்பெற்றன. சிவக்கவிமணியாரும் (பெரிய. பு. உரை) இங்ஙனமே பொருள் உரைத்துள்ளார்.

பண் :

பாடல் எண் : 154

குலமுத லறிவின் மிக்கார்
கோத்திர முறையுந் தேர்ந்தார்
நலமிகு முதியோர் சொல்லச்
சடங்கவி நன்மை யேற்று
மலர்தரு முகத்த னாகி
மணம்புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி ஒத்த 
பண்பினால் அன்பு நேர்ந்தான்.

பொழிப்புரை :

தம் குலத்திற்குரியோரை வழிவழியாக அறிந்து வரும் மரபினையுடைய அறிவு மிக்கோரும், கோத்திரங்களின் வரலாற்றை நன்கு உணர்ந்தவருமாகிய நலம் பொருந்திய தம் சுற்றத்தாருள் முதிய பெரியவர்கள் சொல்ல, சடங்கவியாரும் அவ் வுறவு தமக்கு நன்மை உடையது என ஏற்று, மகிழ்ச்சி பொருந்திய முகத்தராகி, திருமணம் செய்தற்குரிய முறைமைகள் பலவற்றையும் ஒருங்கு பேசி முடித்து, தம் மகட்கும் வரும் மணவாளருக்கும் உரிய ஒத்த பண்புகள் உளவாதலைக் கண்டு தம் மகளைக் கொடுக்க இசைந்தார்.

குறிப்புரை :

குலம் - ஒழுக்கத்தால் சிறந்துவரும் இயல்புடைமை. `ஒழுக்கம் உடைமை குடிமை` (குறள், 133), `குலஞ் சுடும் கொள்கை பிழைப்பின்` (குறள், 1019) எனவரும் திருக்குறட் பாக்களையும் காண்க. `கோத்திரம் - இதனுள் வரும் சில பிரிவு. ஆதி சைவருக்குரிய கோத்திரங்கள் ஐவகைப்படும் என்பர். அவை: கௌசிகர், காசிபர், பரத்துவாசர், கௌதமர், அகத்தியர் என்னும் ஐந்து இருடிகளின் பெயர்களால் வரும் கோத்திரங்களாம். இக்கோத்திரங்கள் ஒவ்வொன் றின் வழித்தோன்றிய கிளைக் கோத்திரங்களும் உள என்பர். ஒரே கோத்திரத்தில் மகட்கோடல் தகாது என்பர். ஒத்த பண்பு - தலைமகனுக் கும் தலைமகளுக்கும் உரிய ஒத்த பண்பு. `பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு, உருவு நிறுத்த காம வாயில், நிறையே அருளே உணர்வொடு திருவென, முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே` (தொல்.மெய்ப்.25), என்னும் தொல்காப்பியமும்.
பிறப்பு - குடிப்பிறப்பு. குடிமை - அதற்குத்தக்க ஒழுக்கமுடைமை. ஆண்மை - ஆளும் தன்மை: பெண்டிரும் ஆடவரும் தத்தமக்குரிய பண்பை என்றும் இழக்காது ஆளும் தன்மை: தம் குடியை ஆளும் ஆற்றல். ஆண்டு - பெண்மை பிறத்தற்கு ஏதுவாய பன்னீராண்டும், ஆண்மை பிறத்தற் கேதுவாய பதினாறாண்டுமாக அமைதல். உரு - பிறழ்ச்சியின்றியமைந்த வடிவு. நிறுத்த காம வாயில்- பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் அங்ஙனம் பிறழ்ச்சியின்றி அமைந்த வழி அவற்று மேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பு. நிறை - மறை பிறரறியாமை நெஞ்சினை நிறுத்துதல். அருள் - எவ்வுயிர்க்கும் இடுக் கண் செய்யாத அருள் உடைமை. உணர்வு - உலகியலால் செய்யத் தக்கதும் தவிரத் தக்கதுமாயவற்றை அறிதல். திரு - பொருளுடை மையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றும் திருத்தகவிற்றாயதோர் உள்ள நிகழ்ச்சி (தொல். மெய். 25) எனவரும் பேராசிரியர் உரையும் இங்கே கருதத் தக்கதாம்.மணம்புரி செயலின் வாய்மை - திருமணத்திற்குரிய நாள், இடம், மணநாளுக்கு முன்னும் பின்னும் செய்து கொள்ளும் செயல் வகைகள், சிறப்பு வகைகள் முதலியன.

பண் :

பாடல் எண் : 155

மற்றவன் இசைந்த வார்த்தை
கேட்டவர் வள்ளல் தன்னைப்
பெற்றவர் தம்பால் சென்று
சொன்னபின் பெருகு சிந்தை
உற்றதோர் மகிழ்ச்சி யெய்தி
மணவினை உவந்து சாற்றிக்
கொற்றவர் திருவுக் கேற்பக்
குறித்துநாள் ஓலை விட்டார்.

பொழிப்புரை :

சடங்கவியார், தம் மகளைக் கொடுக்க இசைந்து கூறிய சொற்களைக் கேட்டவர்கள், நம்பியாரூரரைப் பெற்ற தந்தை யாராகிய சடையனாரிடத்தில் சென்று கூறிய பின்பு, எஞ்ஞான்றுமே மகிழ்ச்சி மீக்கூர இருக்கும் மனத்தின்கண், மேலும் ஒப்பற்ற மகிழ்ச்சியைப் பெற்று, அத்திருமணச் செயலை மகிழ்வோடு சுற்றத்தாரிடம் கூறித், தம் மகனார் அரசிளம் செல்வராக வளர்தற்கு ஏற்பத் திருமணச் செய்கையை உறுதி செய்து, அதற்குரிய திருமண ஓலையையும் அனுப்பினார்.

குறிப்புரை :

வள்ளல் - நம்பியாரூரர்; இறைவன்பால் தாம் பெற்ற பேரருள் திறத்தை வழிவழியாகப் பின்னுள்ளோரும் தம் திரு வாக்கின்வழிப் பெற அருளிய வள்ளன்மை கண்டு `வள்ளல்` என்றார். பெருகு சிந்தை - மகிழ்ச்சியால் என்றும் வளர்ந்து வரும் சிந்தை. கொற்றவர் திருவுக்கேற்ப - நரசிங்க முனையரிடத்து வளர்ந்ததற் கேற்ற செல்வப் பெருக்கு. எனவே திருமணம் அரசியல் திருவிற்கு ஏற்ப நடத்த மனம் கொண்டனர் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 156

மங்கலம் பொலியச் செய்த
மணவினை ஓலை ஏந்தி
அங்கயற் கண்ணி னாரும்
ஆடவர் பலரும் ஈண்டிக்
கொங்கலர்ச் சோலை மூதூர்
குறுகினா ரெதிரே வந்து
பங்கய வதனி மாரும் 
மைந்தரும் பணிந்து கொண்டார்.

பொழிப்புரை :

மங்கலம் பெருகுமாறு எழுதிய அம்மண வோலையை எடுத்துக் கொண்டு, அழகிய கயல் போலும் கண்களை உடைய மகளிரும், ஆடவர் பலருமாக ஒருங்கு கூடி, நறுமணம் உடையதாகிய மலர்களை உடைய சோலை சூழ்ந்த புத்தூருக்குச் சென்றார்கள். அவர்களை எதிர்கொண்டு வந்த சடங்கவியாரின் உறவினர்களாய தாமரை போலும் முகத்தை உடைய பெண்களும் ஆட வர்களும் அம் மணவோலையை வணங்கி வாங்கிக் கொண்டார்கள்.

குறிப்புரை :

மங்கல ஒலிகள் முழங்க மணவோலையைப் பொற்கலத்தில் வைத்துப் பூம்பட்டால் மூடி, மஞ்சள் பூசி எடுத்துச் செல்லுதல் மரபாதலின் `மங்கலம் பொலியச் செய்த மணவினை ஓலை` என்றார். கொங்கு - நறுமணம்.

பண் :

பாடல் எண் : 157

மகிழ்ச்சியால் மணமீக் கூறி
மங்கல வினைக ளெல்லாம்
புகழ்ச்சியாற் பொலிந்து தோன்றப்
போற்றிய தொழில ராகி
இகழ்ச்சியொன் றானும் இன்றி
ஏந்துபூ மாலைப் பந்தர்
நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி
நீள்முளை சாத்தி னார்கள்.

பொழிப்புரை :

மகிழ்ச்சியோடு அத்திருமணத்தை யாவரும் அறிய எடுத்துக்கூறி, அதன் தொடர்பாகச் செயத்தகும் மங்கலத் தொழில்களெல்லாம் புகழ் பொருந்தப் பொலிந்து விளங்க, அதனை விருப்புற்றுச் செய்யும் செயற்பாடு உடையவர்களாய், ஒன்றாலும் குறைவின்றித் தொங்கவிடப்பட்ட பூமாலைகளையுடைய பந்தலி னிடத்து மனக்கிளர்ச்சியோடு மறையவர்கள் அனைவரும் ஒருங்கு கூடி முளையிட்டுத் தொடங்கி வைத்தார்கள்.

குறிப்புரை :

முளை விளைத்தலாவது, பின் நிகழவிருக்கும் மங்கலச் செயல்களுக்கெல்லாம் தொடக்கமாகச் சந்திரனைத் தலைமையாக வைத்த கும்பத்தின் அருகில், பாலிற் கலந்த ஒன்பான் தானியங்களை, மந்திரங்களோடு புற்றுமண்ணிட்டு வைத்திருக்கும் கலங்களில் பெய்து, அவற்றை வளருமாறு செய்தலாம். இம்முளைகளின் வளர்ச்சி, மணமக்களுக்குப் பின்வரும் நலங்களுக்கு அறிகுறியாகக் கருதப் பெறும். இது மணநாளுக்கு முன் ஏழாம் நாளில் செய்யப்படுவதாகும்.

பண் :

பாடல் எண் : 158

மணவினைக் கமைந்த செய்கை
மாதினைப் பயந்தார் செய்யத்
துணர்மலர்க் கோதைத் தாமச்
சுரும்பணை தோளி னானைப்
புணர்மணத் திருநாள் முன்னாட்
பொருந்திய விதியி னாலே
பணைமுர சியம்ப வாழ்த்திப்
பைம்பொன்நாண் காப்புச் சேர்த்தார்.

பொழிப்புரை :

இவ்வாறு அத்திருமணச் செயலுக்கு அமைந்த செயல்களை மணமகளைப் பயந்த சடங்கவியாரும், அவர்தம் உறவினரும் செய்ய, வண்டுகள் மொய்க்கின்ற கொத்தாக மலர்ந்த மலர்களால் கட்டப்பட்ட கோதையாகிய மாலையை அணிந்த தோள்களை உடைய நம்பியாரூரரை, மணமக்கள் இருவரும் தம் மனம் கலத்தற்குரிய மணவிழாவிற்கு முன்னாளில், அறநூல் வகுத்திருக்கும் நியதியின் வண்ணம், பருத்த முரசுகள் ஒலிக்குமாறு வாழ்த்துதல் செய்து, பசிய பொன்னாலாகிய நாணை அவரைக் காக்குமாறு கையில் கட்டினார்கள்.

குறிப்புரை :

புணர்மணம் - மணமக்கள் இருவரும் தம் மனம் கலத்தற்கு ஏதுவாகிய திருமணம். திருமணத்திற்கு முதல்நாளில் மணமக்கள் இருவர்க்கும் எத்தகைய தீங்கும் அணுகாதவாறு காத்தற்குத் தனித்தனியாக அவரவர் வீட்டிலும் காப்பு நாணை அணிவர். மணமகனுக்கு வலக் கையிலும், மணமகளுக்கு இடக் கையிலும் காப்பு நாண் கட்டல் மரபு.

பண் :

பாடல் எண் : 159

மாமறை விதிவ ழாமல் 
மணத்துறைக் கடன்க ளாற்றித்
தூமறை மூதூர்க் கங்குல்
மங்கலந் துவன்றி ஆர்ப்பத்
தேமரு தொடையல் மார்பன்
திருமணக் கோலங் காணக்
காமுறு மனத்தான் போலக் 
கதிரவ னுதயஞ் செய்தான்.

பொழிப்புரை :

பெருமை பொருந்திய மறை நெறிக்கு மாறாகாமல் திருமணத்திற்குரிய செயற்பாடுகளை எல்லாம் முழுமையாகச் செய்து, தூய மறை ஒலிக்கும் பழமையினை உடைய அத்திருநாவலூரில், முதல் நாள் இரவில், மங்கலம் நிறைந்த இயங்கள் ஒலிக்க, மறுநாட்காலை, தேன் பொருந்திய மாலையை அணிந்த மார்பினராய நம்பியாரூரரின் திருமணக் கோலத்தைக் காண்டற்குப் பெருவிருப்பு டைய மனம் உடையவன் போலக் கதிரவனும் தோன்றினன்.

குறிப்புரை :

தேமரு தொடையல் - தேன் மருவிய மாலை.

பண் :

பாடல் எண் : 160

காலைசெய் வினைகள் முற்றிக்
கணிதநூற் புலவர் சொன்ன
வேலைவந் தணையு முன்னர்
விதிமணக் கோலங் கொள்வான்
நூலசைந் திலங்கு மார்பின்
நுணங்கிய கேள்வி மேலோன்
மாலையுந் தாரும் பொங்க
மஞ்சனச் சாலை புக்கான்.

பொழிப்புரை :

திருமண நாளன்று வைகறைப் போதில் செயத்தகும் நாள் கடன்களை முடித்துச், சோதிடம் வல்லார் வரையறுத்த திருமணம் செய்தற்குரிய நேரம் வரும் முன்னே, மணக்கோலம் கொள்ளுதற்குரிய நெறியில், நூலணிந்த மார்பினரும், நுணங்கிய கேள்வியில் மிக்கு உயர்ந்தவருமாகிய நம்பியாரூரர், மணிமாலையும் மலர் மாலையும் விளங்க, நீராடுதற்குரிய இடத்தை அடைந்தார்.

குறிப்புரை :

நாள் கடன்களாவன: அநுட்டானமும் சிவ வழிபாடு மாகும். இவை என்றும் செய்யத்தக்கனவாதலின் இவற்றை வைகறை யில் செய்தார். இனித் திருமண நாளாதலின் அதற்குரிய சிறப்பு ஒழுக்கங்களை மேற்கொள்வார் மீண்டும் நீராடப் புகுந்தார்.

பண் :

பாடல் எண் : 161

வாசநெய் யூட்டி மிக்க
மலர்விரை யடுத்த தூநீர்ப்
பாசனத் தமைந்த பாங்கர்ப்
பருமணிப் பைம்பொன் திண்கால்
ஆசனத் தணிநீ ராட்டி
அரிசனஞ் சாத்தி யன்பால்
ஈசனுக் கினியான் மேனி
எழில்பெற விளக்கி னார்கள்.

பொழிப்புரை :

மணம் கமழ்கின்ற நெய்ப்புகை ஊட்டப் பெற்றதும், உயர்ந்த மலர்களின் மணம் விரவியதுமான தூய நீரை உடைய கலத்தின் அருகில், வைத்த பருத்த முழு மணிகளை அழுத்திய பசிய பொன்னாலாகிய வலிய கால்களை உடைய இருக்கைமீது இருத்தி, அழகிய நீரால் திருமுழுக்காட்டி, கத்தூரி மஞ்சள் விரவிய நறுமணப் பொடியைப் பூசிச், சிவபெருமானுக்கு அன்பு செய்தலில் இனியராக விளங்கும் நம்பியாரூரர் திருமேனியை, அவர்தம் சுற்றத்தார்கள் மேலும் அழகுபெறச் செய்தார்கள்.

குறிப்புரை :

நெய் - அதன் புகையைக் குறித்தமையின் ஆகு பெயராம். அரிசனம் - கத்தூரி மஞ்சள் கலந்த நறுமணத் தூள். நீர்ப் பாசனம் - நீரை உடைய கலம் (பாத்திரம்). நீர்க்கு வாசனை ஊட்டும் மலர்கள் பாதிரி, சண்பகம் முதலியனவாம் என்பர்.

பண் :

பாடல் எண் : 162

அகில்விரைத் தூப மேய்ந்த
அணிகொள்பட் டாடை சாத்தி
முகில்நுழை மதியம் போலக்
கைவலான் முன்கை சூழ்ந்த
துகில்கொடு குஞ்சி ஈரம்
புலர்த்தித்தன் தூய செங்கை
உகிர்நுதி முறையில் போக்கி
ஒளிர்நறுஞ் சிகழி ஆர்த்தான்.

பொழிப்புரை :

அகிலின் நறுமணமுடைய புகையை ஊட்டிய அழகிய பட்டாடையை உடுத்தி, மேகத்தினிடத்து நுழைகின்ற சந்திரனைப் போல, அழகுபடுத்தும் ஒப்பனைத் தொழிலில் வல்லவன் தன் முன்கையினிடத்துச் சுற்றிய ஆடையால் குடுமியின் ஈரத்தை உலரச் செய்து, தன் தூய்மையான சிவந்த கையிடத்து உள்ள நக நுனிகளால், அத்தலைமயிரின் பிணிப்பை விலக்கி, விளங்குகின்ற நறுமணத்தை உடைய குடுமியை முடித்துக் கட்டினான்.

குறிப்புரை :

ஈரம் புலர்த்திச் சிக்கறுத்துச் சிகழி (குடுமி)யை முடித்துக் கட்டினான். குடுமியின் கருமையும் அதனைப் புலர்த்தும் ஆடையின் வெண்மையும் தோன்ற `முகில் நுழை மதியம் போல` என்றார். கைவலான் - உடலை அழகுபடுத்துவதில் வல்லமை உடைய ஒப்ப னைத் தொழிலாளன். உகிர் - நகம். சிகழி - குடுமி.

பண் :

பாடல் எண் : 163

தூநறும் பசுங்கர்ப் பூரச்
சுண்ணத்தால் வண்ணப் போதில்
ஆனதண் பனிநீர் கூட்டி
யமைத்தசந் தனச்சே றாட்டி
மான்மதச் சாந்து தோய்ந்த
மங்கலக் கலவை சாத்திப்
பான்மறை முந்நூல் மின்னப்
பவித்திரஞ் சிறந்த கையான்.

பொழிப்புரை :

அவ்வழகுபடுத்தும் தொழில் வல்லாளனால் தூய நறுமணம் உடைய பச்சைக் கற்பூரத்தின் பொடியோடு, அழகிய பல்வேறு மலர்களில் உண்டான குளிர்ந்த பனி நீரைச் சேர்த்துக் கூட்டிய சந்தனக் குழம்பால் ஆட்டப்பட்டு, கத்தூரிக் குழம்பு சேர்த்த மங்கலமான கலவைச் சாந்தும் சாத்தப் பெற்று, முறைப்படி அமைக்கப் பெற்ற முந்நூல் மார்பினில் விளங்க, தருப்பையினாலாகிய மோதிரம் விளங்க நம்பியாரூரர்...,

குறிப்புரை :

சுண்ணம் - பொடி. பால்முறை முந்நூல் - மறை நூல்களில் கூறிய முறையில் அமைக்கப்பட்ட முந்நூல். `ஒன்பது கொண்ட மூன்று புரிநுண்ஞாண்`(தி.11 திருமுரு. திருவேரகம்,7) எனக் கூறுதற்கு ஏற்ப, மந்திர விதி கொண்டு அமைக்கப்பட்ட முந்நூல் மார்பினில் விளங்கியது. பவித்திரம் - மோதிரம்.

பண் :

பாடல் எண் : 164

தூமலர்ப் பிணையல் மாலை
துணரிணர்க் கண்ணி கோதை
தாமமென் றினைய வேறு
தகுதியால் அமையச் சாத்தி
மாமணி யணிந்த தூய
வளரொளி இருள்கால் சீக்கும்
நாமநீள் கலன்கள் சாத்தி
நன்மணக் கோலங் கொண்டான்.

பொழிப்புரை :

தூய மலர்களால் தொகுக்கப்பெற்ற பிணையல் மாலையையும், செறிந்த பூங்கொத்துக்களாலாய கொண்டை மாலையையும், கோதையையும், பத்தி மாலையையும், இனையபல வேறுபாடுகளையுடைய மாலைகளையும், மாணிக்கங்கள் அழுத்திய தூய ஒளியால் இருளை ஓட்டும் புகழ்பெற்ற வேறுபிற அணிகலன் களையும் அணியத் தக்க இடங்களில் அணிவிப்ப அணிந்து, அழகிய திருமணக் கோலத்தைக் கொண்டார்.

குறிப்புரை :

பிணையல் மாலை - மலர்களின் தாள் இரண்டையும் ஒருங்கு சேர்த்துக் கட்டப்பெற்ற மாலை. கண்ணி - தலையில் அணியும் மாலை. கோதை - நீளமாகக் கட்டும் மாலை. தாமம் - பல்வேறு மலர் களைப் பத்திபத்தியாக வைத்துக் கட்டும் மாலை. இண்டை மாலை - வட்ட வடிவாய் இறுகக் கட்டியதாய்த் தலை மீது அணியத்தக்க மாலை. கண்ணி என்பது தலை மயிரை முடித்துக் கட்டியிருக்கும் கொண்டை யைச் சுற்றி அணியும் மாலையாகும்.
தாமம் என்பது தோளில் அணிவதாகும். பிணையல், மாலை என்பன மார்பில் அணியத் தக்கவையாம். இவற்றின் விரிவை முருக நாயனார் புராணத்துட் (தி.12 பு.16) காண்க. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 165

மன்னவர் திருவுந் தங்கள்
வைதிகத் திருவும் பொங்க
நன்னகர் விழவு கொள்ள
நம்பியா ரூரர் நாதன்
தன்னடி மனத்துள் கொண்டு
தகுந்திரு நீறு சாத்திப்
பொன்னணி மணியார் யோகப்
புரவிமேற் கொண்டு போந்தார்.

பொழிப்புரை :

அரசர்க்குரிய செல்வமும், மறைவழிப்பட்ட ஆதி சைவர்க்குரிய சீலமும் பொருந்த, நன்மை மிக்க திருநாவலூர் இத் திருமணத்திற்குரிய விழாவைக் கொள்ள, நம்பியாரூரர் சிவபெருமா னுடைய திருவடிகளை மனத்தில் எண்ணிய வண்ணம் மேன்மை பொருந்திய திருநீற்றைத் திருமேனியில் அணிந்து, பொன்னாலும் முத்து முதலிய மணிகளினாலும் அழகு செய்யப்பட்டிருக்கும் நல்லிலக் கணம் அமைந்த குதிரையின்மீது எழுந்தருளிச் சென்றார்.

குறிப்புரை :

மன்னவர்திரு - அரசர்க்குரிய வெண்கொற்றக் குடை, முரசு, யானை முதலாயின. வைதிகத் திரு - ஆதிசைவர்க்குரிய அணிகள், ஆடைகள், திருநீறு, உருத்திராக்கம் முதலாயின. யோகப் புரவி - கூடுதலையுடைய குதிரை; அஃதாவது நற்சுழி முதலிய நல்லிலக்கணங்கள் பலவும் கூடிய குதிரை. யோக நிலையை வாசி, புரவி என்றெல்லாம் கூறுவர். இவ்வகையில் யோக நிலையை விளக்க வந்த சுந்தரர் இவர்ந்தருளிய குதிரையும் யோகப்புரவியாயிற்று என்றலும் ஒன்று.

பண் :

பாடல் எண் : 166

இயம்பல துவைப்ப எங்கும் 
ஏத்தொலி எடுப்ப மாதர்
நயந்துபல் லாண்டு போற்ற
நான்மறை ஒலியின் ஓங்க
வியந்துபார் விரும்ப வந்து
விரவினர்க் கின்பஞ் செய்தே
உயர்ந்தவா கனயா னங்கள்
மிசைக்கொண்டார் உழைய ரானார்.

பொழிப்புரை :

இயங்கள் பலவும் ஒலிக்கவும், சூழ நிற்போர் யாவரும் இறைவனை வழிபடுதற்குரிய பாடல்களை ஒலிக்கவும், உடன்வரும் பெண்கள் பல்லாண்டு கூறவும், நான்கு மறைகளும் இசை யோடு ஒலிக்கப்படவும், இத்தகைய அரிய திருமணத்தை வியந்து பாராட்டி வருபவர்களுக்கு அவரவரும் விரும்புமாறு இன்சொல்லும், நன்றாற்றலும் செய்து எதிர்கொள்ளவுமாக, உடன் வந்து கொண்டிருக் கும் சான்றோர்கள், யானை, குதிரை, சிவிகை முதலிய ஊர்திகளில் ஏறிக் கொண்டார்கள்.

குறிப்புரை :

துவைப்ப - முழக்க: ஒலிக்க. துவைப்ப, எடுப்ப, போற்ற, ஒல்க, விரும்ப, இன்பம் செய்ய, உடன் வந்தவர்கள் ஏறினார் என முடிக்க. உயர்ந்த வாகனங்கள் யானை, தேர், குதிரை ஆகியன. யானம் - சிவிகை. இயம் - பலவகை ஒலிக்கருவிகள்.

பண் :

பாடல் எண் : 167

மங்கல கீத நாத
மறையவர் குழாங்க ளோடு
தொங்கலும் விரையுஞ் சூழ்ந்த
மைந்தருந் துவன்றிச் சூதும்
பங்கய முகையுஞ் சாய்த்துப் 
பணைத்தெழுந் தணியின் மிக்க
குங்கும முலையி னாரும்
பரந்தெழு கொள்கைத் தாகி.

பொழிப்புரை :

இசையாலும் பொருளாலும் மங்கலமுடைய தமிழ்ப் பாடல்களையும் இவ்வாறாய நான்மறைப் பகுதிகளையும் பாடுகின்ற மறையவர்களின் தொகுதியோடு, மலர்மாலைகளையும் நறுமணக் கலவைகளையும் அணிந்து கொண்ட ஆடவர்களும், நெருக்கத்தால் சூதாடு கருவியையும் தாமரை அரும்பையும் தோற்கச் செய்து அடி பெருத்து எழுந்து அழகு மிகுந்த குங்குமக் குழம்பு பூசிய மார்பகத்தை உடைய மகளிரும் உடன் வருகின்ற சிறப்பை உடைத்தாய்.

குறிப்புரை :

தொங்கல் - மலர்மாலைகள். விரை- நறுமணமிக்க கலவைச் சாந்து. துவன்றி - நெருங்கி.

பண் :

பாடல் எண் : 168

அருங்கடி எழுந்த போழ்தின்
ஆர்த்தவெள் வளைக ளாலும்
இருங்குழை மகரத் தாலும்
இலங்கொளி மணிக ளாலும்
நெருங்கிய பீலிச் சோலை
நீலநீர்த் தரங்கத் தாலுங்
கருங்கடல் கிளர்ந்த தென்னக்
காட்சியிற் பொலிந்த தன்றே.

பொழிப்புரை :

இவ்வாறு எழுந்த மகளிரின் அரிய திருமண எழுச்சி, முழங்குகின்ற வெண்மையான வளையல்களாலும், பெரிய மகரவடிவினவாகிய காதணிகளினாலும், விளங்குகின்ற ஒளியினை உடைய அணிகலன்களில் பொருந்திய முத்து முதலிய மணிகளாலும், நெருக்கமாகக் கைகளில் ஏந்தி நிற்கும் மயிற்பீலிக் குஞ்சங்களின் நீலநிறத்தை உடைய பெருக்கத்தாலும் கரிய கடல் பெருகி வருவது போன்ற தோற்றத்தை யொத்துப் பொலிவடைந்தது.

குறிப்புரை :

கடி - திருமணம். பீலிச்சோலை - மயில் இறகின் தொகு திகளாகிய சோலை. கடலில் காணப்பெறும் சங்கு, மீன், மணிகள், அலைகள் ஆகியன, பெண்களின் கைவளை, காதணி,அணிகலன், கைகளில் ஏந்திச் செல்லும் பீலி ஆகியவற்றோடு ஒப்புமையுடைத் தாதல் காண்க. அன்று, ஏ, என்பன அசைநிலைகள். இவ்விரு பாடல் களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 169

நெருங்குதூ ரியங்கள் ஏங்க
நிரைத்தசா மரைகள் ஓங்கப்
பெருங்குடை மிடைந்து செல்லப்
பிணங்குபூங் கொடிக ளாட
அருங்கடி மணம்வந் தெய்த
அன்றுதொட்டு என்றும் அன்பில்
வருங்குல மறையோர் புத்தூர்
மணம்வந்த புத்தூ ராமால்.

பொழிப்புரை :

நெருங்கிய பேரிகை முதலிய இயங்கள் ஒலிக் கவும், நிரல்பட வீசப்பெறும் சாமரங்கள் இயங்கவும், பெரிய குடைகள் நெருங்கிச் செல்லவும், விளங்குகின்ற அழகிய கொடிகள் அசையவும், அரிய சிறப்பு மிக்க திருமணம் அவ்வூரில் நிகழ இருந்த காரணத்தால், அன்று முதல் எந்நாளும் அன்புமிக்க ஆதிசைவ மறையவர்களின் புத்தூரானது `மணம்வந்த புத்தூர்` எனப் பெயர் பெற்றது.

குறிப்புரை :

தூரியங்கள் - பேரிகை முதலிய இயங்கள். அருங்கடி மணம் - அரிய சிறப்பினை உடைய மணம். இதுகாறும் நிகழ்ந்திராத புதுமையை உடைய மணம் எனலுமாம். ஆல் - அசை.

பண் :

பாடல் எண் : 170

நிறைகுடந் தூபம் தீபம்
நெருங்குபா லிகைக ளேந்தி
நறைமல ரறுகு சுண்ணம்
நறும்பொரி பலவும் வீசி
உறைமலி கலவைச் சாந்தின்
உறுபுனல் தெளித்து வீதி
மறையவர் மடவார் வள்ளல்
மணமெதிர் கொள்ள வந்தார்.

பொழிப்புரை :

நிறைகுடங்களையும், நிறை மணங்களையும், ஒளி விளக்குகளையும், நெருங்கிய முளைப்பாலிகைகளையும் கையில் ஏந்திக் கொண்டு, நறுமணம் கமழ்கின்ற மலர்களும், அறுகும், நறுமணப் பொடியும், சிறந்த பொரியும் ஆகிய பல பொருள்களையும் வீசி, நீரொடு கலக்கப்பட்ட கலவைச் சாந்தினின்றும் தெளிந்த நீரை வருவார்மீது தெளித்து, அங்குள்ள மறையவர்களும் மடவார்களும் நம்பியாரூரரின் திருமண வருகையை எதிர்கொள்ள வந்தனர்.

குறிப்புரை :

பெரியவர்கள் வரும்பொழுது பிற நறுமணப் பொருள் களோடு அறுகும் தெளிப்பர். உறை - நீர்த்துளி. மறையவர் மடவார் என்பதை உம்மைத் தொகையாகக் கொள்ளாது, ஆதிசைவக் குலப் பெண்கள் என்ற அளவிலேயே கொள்வர் ஆறுமுகத்தம்பிரான் சுவாமி கள் (பெ.உரை).

பண் :

பாடல் எண் : 171

கண்களெண் ணிலாத வேண்டுங் 
காளையைக் காண என்பார்
பெண்களி லுயர நோற்றாள்
சடங்கவி பேதை என்பார்
மண்களி கூர வந்த
மணங்கண்டு வாழ்ந்தோம் என்பார்
பண்களில் நிறைந்த கீதம்
பாடுவார் ஆடு வார்கள்.

பொழிப்புரை :

மணம் எதிர்கொள்ள வந்த மகளிருள் சிலர், இம்மணமகனைப் பார்க்க எண்ணிறந்த கண்கள் வேண்டும் என்பர். சிலர், இம்மணமகனைப் பெறுதற்கு ஏனைய மகளிரினும் இச் சடங்கவியார் மகளார் மிகுதியான தவம் செய்தவள் என்பார். சிலர், இம்மண்ணுலகத்தார் உள்ளம் மகிழ்வடையுமாறு இம்மணக்கோலத் தைக் கண்டு யாம் பெரும்பேறு பெற்றோம் என்பார். சிலர், இசை நிரம்பிய அரிய பாடல்களைப் பாடிக் கொண்டு மிகுமகிழ்வால் கூத் தாடுவர்.

குறிப்புரை :

மண்களி கூரவந்த மணம் எனவே, இம்மணம் இம் மண மக்களுக்கு மகிழ்ச்சிதர வந்ததன்று என்னும் குறிப்பும் புலப்படு கின்றது. `மாநகர்க்கு ஈந்தார் மணம்` (சிலப்ப. மங்கல. 44) என்புழிப் போல. `நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும், கொம்பினைக் காணும்தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்` (கம்பர். பால. கார்.792) என்பார் கம்பர். ஈண்டு அதுபோலச் சடங்கவியார் மகளாரைச் சிறப்பியாது, `பெண்களில் உயர நோற்றாள்` என்ற அளவிலேயே சிறப்பித்ததற்குக் காரணம், ஈண்டு மண நிகழ்ச்சி நிறைவு பெறாமையாகும்.

பண் :

பாடல் எண் : 172

ஆண்டகை யருளின் நோக்கின்
வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்
தாண்டிய பரியும் நம்பால்
தகுதியில் நடந்த தென்பார்
பூண்டயங் கிவனே காணும்
 புண்ணிய மூர்த்தி யென்பார்
ஈண்டிய மடவார் கூட்டம்  
இன்னன இசைப்பச் சென்றார்.

பொழிப்புரை :

சிலர், இம்மணமகனாரின் கண்களினின்றும் தோன்றும் கருணை நோக்கு என்னும் வெள்ளத்துள் அலைவுட்பட்டோம் என்பார்கள். சிலர், இவர் ஊர்ந்து வருவதும், தாவிச்செல்லுவதுமான குதிரையும் நம் எண்ணத்திற்கேற்ப நம்மிடத்து மெல்ல வருகின்றது என்பார்கள். சிலர், அணிநலம் சான்ற இவ்வாண்டகை, புண்ணியமே ஓருருவாய்த் திரண்ட உருவினை உடையன் என்பார்கள். மணவெழுச்சியை எதிர்கொள்ளுதற்கென வந்த மகளிர் கூட்டம் இவ்வாறெல்லாம் சொல்ல, நம்பியாரூரர் எழுந்தருளினார்.

குறிப்புரை :

தாண்டிய பரி - தாவிச் செல்லும் குதிரை. `கண்ணாரக் காண எம் சாலேகம் சார நட` (முத்தொள்.பாண்டி.20) என முத்தொள்ளாயிரத்து வரும் பெண்கள் வேண்டிக் கொள்வதையும் காணலாம். இக்குதிரை அவர்கள் வேண்டிக்கொள்ளாமலேயே அவர்கள் பக்கம் சாரச் செல்வது, அவர்களிடத்துக் கொண்ட மீதூர்ந்த கருணையினால் போலும்! பூண் - அணிகலன். `காணும்` என்பது அசைநிலை.

பண் :

பாடல் எண் : 173

வருமணக் கோலத் தெங்கள்
வள்ளலார் தெள்ளும் வாசத்
திருமணப் பந்தர் முன்பு  
சென்றுவெண் சங்க மெங்கும்
பெருமழைக் குலத்தி னார்ப்பப்
பரிமிசை இழிந்து பேணும்
ஒருமணத் திறத்தி னங்கு  
நிகழ்ந்தது மொழிவேன் உய்ந்தேன்.

பொழிப்புரை :

இவ்வாறு வருகின்ற மணக்கோலத்தை உடைய எங்கள் நம்பியாரூரர், தெள்ளிதாகிய நறுமணம் கமழும் திருமணப் பந்தலினிடத்து எழுந்தருளி, வெண்மையான சங்குகள் எவ்விடத்தும் பெரிய மேகக் கூட்டங்களினின்றும் எழும் ஒலியென முழங்க, குதிரையினின்றும் இறங்கி, தாம் விரும்பிச் செய்தற்குரிய திருமணச் செயலில், அவ்விடத்து நிகழ்ந்ததொரு செய்தியைச் சொல்லுதற் குரியேனாய நிலையில் யான் பேறு பெற்றுள்ளேன்.

குறிப்புரை :

மொழிவேன் உய்ந்தேன் - சொல்லுகின்ற அதனால் உய்ந்தேன்; உய்தல் - பிழைத்தல்: ஈண்டுச் சொல்லுதற்குரிய பேற்றைப் பெறுதற்குரியராதல். மொழிவது எதிர்காலமாக, உய்தலை இறந்த காலமாகக் கூறியது அவ்வுய்தி கிடைத்தல் ஒருதலையாதல் பற்றியாம்.

பண் :

பாடல் எண் : 174

ஆலுமறை சூழ்கயிலை யின்கணருள் செய்த
சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்
மேலுற வெழுந்துமிகு கீழுற அகழ்ந்து
மாலும்அய னுக்குமரி யாரொருவர் வந்தார்.

பொழிப்புரை :

மறை முழக்கம் சூழ்ந்து நிற்கும் திருக்கயிலாய மலையில், அருளிச் செய்த மேதக்க திருவாக்கின்படி, அந்நம்பி யாரூரரை மணம் செய்யாது தடுத்து, வழி அடிமை கொள்ளும் பொருட்டு, அன்னவடிவாய் மேற்கொண்டு எழுந்தும், பன்றி வடி வாய்க் கீழ்ப் புகுந்து தோண்டியும் பெருமானைக் காணாது மயங்கி நிற்கும் மால் அயன் ஆகிய இருவருக்கும் அரியராய் இருந்த சிவ பெருமான், அங்கு ஒரு திருமேனி கொண்டு எழுந்தருளி வந்தார்.

குறிப்புரை :

தடுத்து - திருமணம் செய்து கொள்ளுதலின் வாயிலாக ஏற்படும் பிறவிச் சூழலைத் தடுத்து. `மையல் மானுட மாய்மயங் கும்வழி ஐய னேதடுத் தாண்டருள் செய்` (தி.12 சரு.1-1 பா.28) எனக் கயிலையில் வேண்டிக் கொண்டதற்கு இணங்க இதுபொழுது தடுத்தாட் கொள்ள இறைவன் வருவாராயினர். அத்திறத்தை, நம்பியாரூரர் மானுடராய்ப் பிறந்து மறப்பினும், இறைவன் மறவாது வந்தமை அவன் கருணைத் திறத்தைக் காட்டுகிறது. `நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்` (சிலப்ப. கானல்.32) என உலகியல்வழி வரும் அன்பே இத்திறத்தில் தலைப்படுமானால், அருளாளராய இறைவற்கு உளதாகும் அருள் அதனினும் பிற்படுமோ? படாது முற்படும்.

பண் :

பாடல் எண் : 175

கண்ணிடை கரந்தகதிர் வெண்பட மெனச்சூழ்
புண்ணிய நுதற்புனித நீறுபொலி வெய்தத்
தண்மதி முதிர்ந்துகதிர் சாய்வதென மீதே
வெண்ணரை முடித்தது விழுந்திடை சழங்க.

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணிடத்து மறைத்து நிற்கும் வெள் ளாடை போலப் புண்ணிய வடிவாய தூய திருநீறானது நெற்றியில் பொருந்தி விளங்கவும், திருச்சடையிடத்து வாழும் இளம்பிறையானது முதிர்ந்து அதனால் அதன் ஒளி கீழே செல்லுதல் போலத் தலையின் உச்சியிடத்து ஒருங்கு சேர்த்து முடித்த தலையின் வெண்மயிரானது இடையிடையே விழுந்து அசையவும்,

குறிப்புரை :

கண்ணிடை - நெற்றிக் கண்ணிடத்து. வெண்படம் - வெண்மையான ஆடை. இது திருநீற்றிற்கு உவமை ஆயிற்று. மதி முதிர்ந்து சாய்வது எனச் சடையினிடத்துள்ள நரைத்த மயிர்கள் தலை யிடத்து ஆங்காங்கே விரிந்து அசைந்தன. வெண்மையான நரைக்கு முதிர்ந்த பிறை ஒளியை உவமித்தது அதன் வெண்மை கருதியாம். சழங்க - அசைய.

பண் :

பாடல் எண் : 176

காதிலணி கண்டிகை வடிந்தகுழை தாழச்
சோதிமணி மார்பினசை நூலினொடு தோளின்
மீதுபுனை யுத்தரிய வெண்டுகில் நுடங்க
ஆதப மறைக்குடை அணிக்கரம் விளங்க.

பொழிப்புரை :

காதில் அழகுபெற அணியப் பெற்ற உருத்தி ராக்கத்தாலாய குண்டலமானது தாழ்ந்து அசையவும், ஒளி பொருந் திய உருத்திராக்க மாலை அணிந்த திருமார்பில் பூண நூலொடு திருத்தோளின்மேல் அணிந்திருக்கும் மேலாடையாகிய வெள்ளிய ஆடை அசையவும், வெயிலை மறைக்கின்ற குடையானது அழகிய திருக்கையில் விளங்கவும்,

குறிப்புரை :

சோதிமணி - ஒளி பொருந்திய உருத்திராக்க மணி. நூல் - பூணு நூல். உத்தரியம் - மேலாடை, ஆதவன் - கதிரவன். ஆதபம் - ஈண்டு அவனிடமாகத் தோன்றும் வெயிலைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 177

பண்டிசரி கோவண உடைப்பழமை கூரக்
கொண்டதொர் சழங்கலுடை யார்ந்தழகு கொள்ள
வெண்டுகி லுடன்குசை முடிந்துவிடு வேணுத்
தண்டொருகை கொண்டுகழல் தள்ளுநடைகொள்ள.

பொழிப்புரை :

வயிற்றின்கீழ்ச் சரிய உடுத்த கோவணமாகிய உடை, அதன் பழமையை வெளிப்படுத்தவும், அதன்மீது விளங்கும் அசைய நிற்பதொரு உடையானது அழகிய இடுப்பின்கண் பொருந்தி அழகு செய்யவும், வெண்மையான ஆடையோடு தருப்பையைச் சேர முடித்து விளங்கும் மூங்கில் தண்டத்தை, ஒரு திருக்கையில் கொண்டு, திருவடிகள் தளர் நடை கொள்ளவும்,

குறிப்புரை :

பண்டி - வயிறு, கோவணம் - அதன் பழமையை விளக்க என்பது, அது பல்காலும் உடுத்தப்பட்டதொன்று என்பது விளங்க வாம். இனி மறையே அக்கோவணமாதல் பற்றிக் கோவண உடை `பழமை கூர` என்றார் என்றலுமாம். `மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ` (தி.8 ப.12 பா.2) எனவரும் திருவாசகமும் காண்க. கொண்டதோர் - இடுப்பில் கொண்டதோர். சழங்கல் உடை - அசைந்து விளங்கும் உடை. குசை - தருப்பை.

பண் :

பாடல் எண் : 178

மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ
அத்தகைய மூப்பெனு மதன்படிவ மேயோ
மெய்த்தநெறி வைதிகம் விளைத்தமுத லேயோ
இத்தகைய வேடமென ஐயமுற வெய்தி.

பொழிப்புரை :

செறிந்து வளர்கின்ற பேரழகானது இளமையி னின்றும் முதிர்ந்து ஒரு வடிவு கொண்டதோ, அவ்வழகு மிளிரும் மூப்பு என்பது ஒரு வடிவுகொள்ள அவ்வடிவாக விளங்குகின்றதோ, மெய்ந்நெறிகளைத் தன்னகத்துக்கொண்ட வைதிகம் என்பது விளைத் ததொரு முதன்மையோ? இத்தன்மையுடையதொரு திருவுருவம் இருந்தவாறு என்? எனக் கண்டார் ஐயம்கொள்ளுமாறு எழுந்தருள.

குறிப்புரை :

பேரழகு உடையாரும் மூப்புவர அழகு குன்றுவர். ஆனால் இம்முதியவரிடத்தே அழகு பொலிந்து இருப்பதால், அழகென்பதே முதிர்ந்தொரு வடிவம்கொண்டதோ என ஐயுற்றனர். இவர்தம் முதுமை மூப்பிற்குரிய அனைத்துக் குணங்களையும் கொண் டிருத்தலின் அம்மூப்பே ஒரு வடிவெடுத்து வந்ததோ என்று ஐயுற் றனர். வைதிகம் - வேதத்தை அடிப்படையாகக்கொண்ட நெறி. இவர் வேடம் வேதநெறியில் வளர்ந்த பெருமக்களின் வடிவைக் கொண் டிருத்தலின் அந்நெறியே ஒரு வடிவெடுத்து வந்ததோ என்று ஐயுற் றனர். இவ்வாறெல்லாம் கண்டார் ஐயுற அவர் எழுந்தருளினர். மொய்த்து - செறிந்து, மெய்த்த நெறி - மெய்நெறி.

பண் :

பாடல் எண் : 179

வந்துதிரு மாமறை மணத்தொழில் தொடங்கும்
பந்தரிடை நம்பியெதிர் பன்னுசபை முன்னின்று
இந்தமொழி கேண்மினெதிர் யாவர்களும் என்றான்
முந்தைமறை யாயிர மொழிந்த திருவாயான்.

பொழிப்புரை :

அழகிய மறைவழித் திருமணம் செய்யத் தொடங்கும் மணப்பந்தலினிடத்து, இவ்வாறு எழுந்தருளி வந்தவராய மிகப்பழங்காலத்தேயே எண்ணற்ற மறைகளை அருளிச்செய்த அழ கிய திருவாயினையுடைய சிவபெருமான், நம்பியாரூரர்க்கு முன், புகழத்தக்க அவையினரின் எதிர்நின்று, `எனக்கு எதிரில் அமர்ந்திருக் கும் இவ்வவையத்தில் உள்ளார் யாவரும் யான் கூறும் இச்சொல்லைக் கேளுங்கள்` என்று அருளிச் செய்தார்.

குறிப்புரை :

பன்னுசபை - புகழத்தக்க அவை. `மறை ஆயிரம்` என்றது எண்ணிக்கை குறித்தன்று; பலவாகிய மறை எனப் பொருள்பட நின்றது. இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 180

என்றுரைசெ யந்தணனை எண்ணில்மறை யோரும்
மன்றல்வினை மங்கல மடங்கலனை யானும்
நன்றுமது நல்வரவு நங்கள்தவ மென்றே
நின்றதிவண் நீர்மொழிமின் நீர்மொழிவ தென்றார்.

பொழிப்புரை :

இவ்வாறு கூறிவரும் மறையவரை, ஆண்டிருந்த எண்ணற்ற மறையவர்களும், திருமணத்திற்குரிய செயலைச் செய்து கொண்டிருக்கும் மணக்கோலம் கொண்ட சிங்கம் போன்ற ஆற்றலை உடைய நம்பியாரூரரும் `நும் வரவு எங்கட்கு மிக நன்மை பயப்பது; இது நாங்கள் செய்த தவமேயாகும்` என்று கூறி, `இவ்விடத்து நீர் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்` என்றனர்.

குறிப்புரை :

மடங்கல் - சிங்கம்

பண் :

பாடல் எண் : 181

பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி
என்னிடையும் நின்னிடையும் நின்றஇசை வால்யான்
முன்னுடைய தோர்பெரு வழக்கினை முடித்தே
நின்னுடைய வேள்வியினை நீமுயல்தி என்றான்.

பொழிப்புரை :

இவ்வாறு அவையத்தார் கூற, சிவபெருமானா கிய மறையவரும், நம்பியாரூரரைப் பார்த்து, `என்னிடத்தும் உன்னி டத்தும் முன்னமேயே அமைந்ததொரு இசைவு இருப்பதால், முற்பட அமைந்ததொரு பெருவழக்கினை முடிவுசெய்தபின், உன்னுடைய மணத்தை நீ நடத்த முயலுக` என்றார்.

குறிப்புரை :

பிஞ்ஞகன் - தலைக்கோலம் கொண்ட சிவபெருமான். திருக்கயிலையில் தமக்கும் நம்பியாரூரர்க்கும் உரிய ஆண்டான் அடிமைத்திறமும், அதன்வழி நிகழ்ந்த பேச்சும், அவ்விருவரும் அறிவ தல்லது பிறர் அறியார் ஆதலின் `என்னிடையும், நின்னிடையும் நின்ற இசைவால்`என்றார். நின்ற-நிலைபெற்ற; அத்திறந்தானும் என்றும் நிலைபெற்றதாகலின், `நின்ற இசைவு` என்றார். முன்னுடையதோர்- முற்காலத்திருந்தே வழிவழியாக ஏற்றுக் கொண்டதொரு செயல். முன், இசைவு எனக்கூறியவர், பின் வழக்கு என்றார், அதனை அவர் ஏற்றுக் கொள்ளாமை பற்றி. வேள்வியினைச் செய்க என்னாது `செய்ய முயல்க` என்றார், இனி அவ்வினைதானும் நிறைவு பெறாது என்பது தோன்ற.

பண் :

பாடல் எண் : 182

நெற்றிவிழி யான்மொழிய நின்றநிக ரில்லான்
உற்றதொர் வழக்கெனிடை நீயுடைய துண்டேல்
மற்றது முடித்தலதி யான்வதுவை செய்யேன்
முற்றவிது சொல்லுகென வெல்லைமுடி வில்லான்.

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமானாகிய மறையவர் இவ்வாறு அருளிச் செய்ய, அங்கு நின்ற ஒப்புமை கூறுதற்கு இயலாத நம்பியாரூரர் தாமும், நம் இருவருக்கும் உரியதொரு வழக்கு நின்னிடத்து இருக்குமானால், அவ்வழக்கை முடித்தன்றி யான் மணம் செய்து கொள்ளேன்; நீர் முழுமையாக இவ்வழக்கைச் சொல்வீராக! என்று கூற, தன்பெருமையைத் தானும் அறியாதவனாகிய அப் பெருமானாய மறையவரும்,

குறிப்புரை :

எனக்கும் உனக்கும் உரிய வழக்கொன்று இருத் தற்கில்லை என்பார் `நீ உடையது உண்டேல்` என்றார். எனவே, வந்தவர் பெருமான் என்பதும், தாமும் திருக்கயிலையிலிருந்து வந்த வர் என்பதும் அறியாராயினார் என்பது விளங்குகின்றது. எல்லை முடிவில்லான் - தன் பெருமையை வரையறுத்துக் கூறுதற்கும் முற்ற மொழிதற்கும் இயலாதவன். மற்று - அசை. சொல்லுக என என்பது, சொல்லுகென நின்றது.

பண் :

பாடல் எண் : 183

ஆவதிது கேண்மின்மறை யோர்என்அடி யான்இந்
நாவல்நக ரூரனிது நான்மொழிவ தென்றான்
தேவரையும் மாலயன் முதற்றிருவின் மிக்கோர்
யாவரையும் வேறடிமை யாவுடைய எம்மான்.

பொழிப்புரை :

இந்திரன் முதலிய தேவர்களையும், மால் அயன் முதலிய தகுதிச் செல்வம் பெற்ற பிறர் எவரையும் தனித்தனியாக அடிமை கொண்டிருக்கும் சிவபெருமானாகிய மறையவரும், `மறை யவர்களே! நான் சொல்லத்தக்க இதனைக் கேளுங்கள், என்னுடைய அடிமையாவன் `இத்திருநாவலூரன்`, இதுவே நான் சொல்ல வந்தது` என்று அருளிச் செய்தார்.

குறிப்புரை :

திருவின் மிக்கார் - மால், அயன் என்னும் தகுதியாகிய செல்வத்தைப் பெற்றவர்கள். வேறு அடிமையாக உடையான் - புண் ணியம் நிறைந்த ஏனைய உயிர்களன்றி இத்தகைய மால் அயன் முதலோரையும் சிறந்த அடியாராகக் கொண்டுள்ளவன் எனும் பொருள் தோன்ற நின்றது என்றலுமாம். வேறு - சிறப்பு. இவ் விரு பாடலும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 184

என்றான் இறையோன் அதுகேட்டவ ரெம்ம ருங்கும்
நின்றார் இருந்தார் இவனென்னினைந் தான்கொ லென்று
சென்றார் வெகுண்டார் சிரித்தார் திருநாவ லூரான்
நன்றால் மறையோன் மொழியென் றெதிர்நோக்கி நக்கான்.

பொழிப்புரை :

மறையவராக வந்த இறைவன் இவ்வாறு கூற, அதனைக் கேட்டவர்களாய் எவ்விடத்திலும் நின்றவர்களும் இருந்த வர்களுமாகிய யாவரும், இம்மறையவர் நினைந்தது தான் எவ் வகையது? என, அம்மறையவர் அருகே சென்றார்கள், சினந்தார்கள், சிரித்தார்கள். நம்பியாரூரரும் இம்மறையவர்சொல் மிக நன்றாக இருந்தது என்று அவர் எதிர்நோக்கிச் சிரித்தார்.

குறிப்புரை :

இம்மணம் தடைப்பட்டு விடுமோ என நினைந்து அவையத்தார் வெகுண்டனர். மறையவர் கூறும் வழக்கு இவ்வுலகில் இல்லா வழக்காக இருத்தலின் சிரித்தனர் நம்பியாரூரர். இச்சிரிப்புத் தானும் வெகுளியோடு கூடிய எள்ளல் சிரிப்பாக அமைந்தது.

பண் :

பாடல் எண் : 185

நக்கான் முகநோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும்
மிக்கான் மிசையுத்தரி யத்துகில் தாங்கி மேற்சென்று
அக்கா லமுன்தந்தை தன்தந்தையா ளோலை யீதால்
இக்கா ரியத்தை நீயின்று சிரித்ததென் ஏடவென்ன.

பொழிப்புரை :

தம்மை இகழ்தல் குறிப்புடன் சிரித்த நம்பி யாரூரரின் முகத்தைப் பார்த்து, உடல் நடுக்குற்றுப் பெருந்துயரால் வருந்தி, யாவர்க்கும் மேலாய இறைவன், நழுவிய மேலாடையை விழாமல் கையால் தாங்கிக் கொண்டு, அவர் அருகில் சென்று அந் நாளில், உன்னுடைய பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்த அடிமைச் சீட்டு இதுவாகும். அங்ஙனம் இருக்க, `ஏட! நீ இன்றைக்கு இகழ்ந்து சிரித்தது எவ்வாறு பொருந்தும்` என்று சொல்ல.

குறிப்புரை :

உத்தரியத் துகில்-மேலாடை. நடுங்கல், நுடங்கல், மேல் ஆடை நழுவல் ஆகிய இவை வெகுளிக்கண் வரும் மெய்ப்பாடு களாம். ஏட-அடிமையை அழைக்கும் முறைமையில் வருவதொரு சொல்லாம்.

பண் :

பாடல் எண் : 186

மாசிலா மரபில் வந்த
வள்ளல்வே தியனை நோக்கி
நேசமுன் கிடந்த சிந்தை
நெகிழ்ச்சியாற் சிரிப்பு நீங்கி
ஆசிலந் தணர்கள் வேறோர்
அந்தணர்க் கடிமை யாதல்
பேசஇன் றுன்னைக் கேட்டோம்
பித்தனோ மறையோன் என்றார்.

பொழிப்புரை :

குற்றமற்ற ஆதி சைவ மரபில் தோன்றிய நம்பியாரூரர், சிவபெருமானாகிய மறையவரைப் பார்த்து, அவரி டத்து முன்பிருந்த அன்பின் நெகிழ்ச்சியால், சிரித்தலை விடுத்துக், குற்றமற்ற ஆதி சைவர்கள் வேறொரு ஆதிசைவர்க்கு அடிமையாத லைச் சொல்ல, இற்றை நாளில் உன்னிடத்தில் கேட்டோம் ஆதலின் மறையவனே! நீ பித்தனோ என்றார்.

குறிப்புரை :

முன்கிடந்த சிந்தை நிகழ்ச்சி - முன்னமேயே இருந்த உள்ள நெகிழ்ச்சி. சிரிப்பு நீங்கற்கு அவரொடு மாறுகொண்டு பேசும் பேச்சே காரணமாக இருப்பினும், முன் இருந்த அன்பின் நெகிழ்ச்சியும் சிறிது அரும்பியது என்பார், இங்ஙனம் கூறினார். பேச இன்று உன்னைக் கேட்டோம் என்பது, அம்மறையவரை நோக்கிக் கூறிய தாகும். `பித்தனோ மறையோன்` என்றது அவையத்தாரை நோக்கிக் கூறியதாகும். இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 187

பித்தனு மாகப் பின்னும்
பேயனு மாக நீயின்று
எத்தனை தீங்கு சொன்னாய்
யாதுமற் றவற்றால் நாணேன்
அத்தனைக் கென்னை யொன்றும்
அறிந்திலை யாகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம்
பணிசெய வேண்டு மென்றார்.

பொழிப்புரை :

இவ்வாறாக நம்பியாரூரர் கூறக் கேட்ட மறையவர், `நான் பித்தன் ஆனாலும் ஆகுக! பின் பேயன் ஆனாலும் ஆகுக! நீ இப்பொழுது எத்துணைக் குற்றமாய சொற்களைச் சொல்வாயாயினும் அச்சொற்களால் நான் எத்துணையும் நாணமாட் டேன். அவ்வளவிற்கு என்னை ஒருவகையாலும் நீ இன்னவன் என்று அறியவில்லை. ஆயினும் நீ என்முன் நின்று உன் திறமையைப் (சதுரப்பாட்டை) பேசவேண்டாம். எனக்குத் தொண்டு செய்ய வேண்டும்` என்றார்.

குறிப்புரை :

எனக்கும் உனக்கும் உள்ள தொடர்பையும், நின் வேண்டு கோளாலேயே யான் வர நேர்ந்தது என்பதையும் நீ அறிந் திலை என்பார், `அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை` என்றார். வித்தகம் - சதுரப்பாடு (சாமர்த்தியம்) மற்று - அசைநிலை.

பண் :

பாடல் எண் : 188

கண்டதோர் வடிவா லுள்ளங்
காதல்செய் துருகா நிற்குங்
கொண்டதோர் பித்த வார்த்தை 
கோபமு முடனே யாக்கும்
உண்டொராள் ஓலை யென்னும்
அதனுண்மை யறிவே னென்று
தொண்டனா ரோலை காட்டு
கென்றனர் துணைவ னாரை.

பொழிப்புரை :

`என்னால் காணப்பட்ட ஒப்பற்ற இம்மறையவரது திருவடிவால் என் மனம் இவரிடத்து அன்பு வைத்து உருகும். மாறாக, இவருக்கு நான் அடிமை என்று கொண்ட ஒரு பைத்தியச் சொல் சினத்தையும் உடனே விளைவிக்கும். எனினும் இவ்வுவத்தலும் காய்தலுமின்றி, அடிமை ஓலை ஒன்று உண்டு என்று சொல்லும் அச்சொல்லின் உண்மையை அறிவேன்` என்று, தம் துணைவனாரான சிவபெருமானாகிய மறையவரை நோக்கி, நம்பியாரூரர் அடிமை ஓலையைக் காட்டுக என்று கூறினார்.

குறிப்புரை :

துணைவனார் - எவ்வுயிர்க்கும் துணையாக நின்று அருளுபவர்; இவர் அளவில், சிறந்த தோழராகவே இருப்பவர்.

பண் :

பாடல் எண் : 189

ஓலைகாட் டென்று நம்பி
யுரைக்கநீ யோலை காணற்
பாலையோ அவைமுன் காட்டப்
பணிசெயற் பாலை யென்ற
வேலையில் நாவ லூரர்
வெகுண்டுமேல் விரைந்து சென்று
மாலயன் தொடரா தானை
வலிந்துபின் தொடர லுற்றார்.

பொழிப்புரை :

நம்பியாரூரர் `அடிமை ஓலையைக் காட்டுக` என்று சொல்ல, அம்மறையவர் நீ அவ்வடிமை ஓலையைப் பார்த்து உணரத் தகுதி உடையையோ? (அல்லை). இவ்வவை முன் அதனை யாவரும் அறியக் காட்டியபின் அடிமை செய்தற்கே உரியை என்று கூறிய அளவில், நம்பியாரூரர் சினந்து மேல் விரைவாய்ச் சென்று, மாலும் அயனும் அறிய ஒண்ணாத சிவபெருமானை வன்மை செய்து, அவர் ஓடிய அளவில் தாமும் பின்தொடர்ந்து சென்றார்.

குறிப்புரை :

இவ்வோலையில் உள்ள செய்தி மெய்ம்மையுடையது ஆதலின் அவையத்தார் ஐயமின்றி ஏற்பர்; அவர் தீர்ப்பின்வழி நீயும் அடிமை செய்வாய் என்பார் `அவைமுன்காட்டப் பணி செயற்பாலை` என்றார். மால் அயன் காண இயலாத பெருமான் இவரளவில் எளிவந்து நின்றனர் என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 190

ஆவணம் பறிக்கச் சென்ற
அளவினில் அந்த ணாளன்
காவணத் திடையே யோடக்
கடிதுபின் தொடர்ந்து நம்பி
பூவணத் தவரை உற்றார்
அவரலால் புரங்கள் செற்ற
ஏவணச் சிலையி னாரை
யார்தொடர்ந் தெட்ட வல்லார்.

பொழிப்புரை :

நம்பியாரூரர் தம்மை அடிமையெனக் குறித் திருக்கும் ஓலையைப் பறிக்கச் சென்றபொழுது, சிவபெருமானாகிய மறையவரும் அம்மணப் பந்தலின் ஊடே ஓட, விரைவாக நம்பி யாரூரரும் தொடர்ந்து அவர்பின் ஓடி, செந்தாமரை அனைய திருமேனியுடையராய சிவபெருமானாகிய அம்மறையவரைத் தலைப் பட்டார். அந்நம்பியாரூரர் அல்லாமல் முப்புரங்களையும் ஓரம்பினால் அழித்த சிவபெருமானை யார் தொடர்ந்து தலைப்பட வல்லவர்கள்? ஒருவருமாகார் என்பதாம்.

குறிப்புரை :

காவணம் - திருமணப் பந்தல். `பூ எனப்படுவது பொறிவாழ்பூவே` (நால்வர் நான்மணி, 40) ஆதலின், ஈண்டு அது செந்தாமரையைக் குறித்தது. `செந் தாமரைக்கா டனைய மேனி` (தி.8 ப.5 பா.26) எனவரும் திருவாக்கும் காண்க. இங்ஙனமன்றிப் பூவணம் என்பதை இடப் பெயராகக் கோடற்கு யாதும் இயைபின்று. ஏவணச்சிலை - அம்போடு கூடிய வில்.

பண் :

பாடல் எண் : 191

மறைகளா யினமுன் போற்றி
மலர்ப்பதம் பற்றி நின்ற
இறைவனைத் தொடர்ந்து பற்றி 
யெழுதுமா ளோலை வாங்கி
அறைகழ லண்ணல் ஆளாய்
அந்தணர் செய்த லென்ன
முறையெனக் கீறி யிட்டார்
முறையிட்டான் முடிவி லாதான்.

பொழிப்புரை :

மறைகளானவை முற்பட வணங்கிப் பின் திருவடி களைத் தொடர்ந்து பற்றி நிற்கின்ற சிவபெருமானைத் தொடர்ந்து பிடித்துக் கொண்டு, எழுதப் பெற்றிருக்கும் அடிமை ஓலையை வாங்கி, ஒலிக்கின்ற வீரக் கழலினை உடைய நம்பியாரூரர், `மறையவர்கள் அடிமையாய்ப் பிறரிடம் பணி செய்தல் எந்த நூலினும் கூறப்படும் முறைமையுடையதன்று` எனக் கிழித்தார். ஈறில்லாத சிவபெருமானும் `இது முறையோ` என்று முறையிட்டு அருளினார்.

குறிப்புரை :

மறைகள் பொதுவாக இறைவனைப் பற்றிப் பேசுவன. அவற்றின் ஒரு பகுதியாயுள்ள மந்திரங்கள் இறைவனைப் போற்றுவன. ஆதலின் `மறைகளாயின முன்போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற இறைவன்` என்றார். அறைகழல் - ஒலிக்கின்ற வீரக்கழல்

பண் :

பாடல் எண் : 192

அருமறை முறையிட் டின்னும்
அறிவதற் கரியான் பற்றி
ஒருமுறை முறையோ என்ன
உழைநின்றார் விலக்கி இந்தப்
பெருமுறை உலகில் இல்லா
நெறிகொண்டு பிணங்கு கின்ற
திருமறை முனிவ ரேநீர்
எங்குளீர் செப்பு மென்றார்.

பொழிப்புரை :

அரிய மறைகளும் முறையிட்டு இதுவரையும் இவ்வியல்பினர் என்று அறிதற்கு அரியவராகிய சிவபெருமான், நம்பியாரூரரைத் தம் திருக்கரத்தால் பற்றிக் கொண்டு, ஒருமுறை `இது முறையோ` என்று கூற, அருகில் நின்றவர்கள் இருவரையும் விலக்கி, இவ்வுலகில் இல்லா வழக்காகிய ஒரு பெருவழக்கைக் கொண்டு அதை நிறைவேற்ற வேண்டுமென்று, `மாறு கொள்ளும் மேன்மை மிக்க மறை முனிவரே! நீர் தாம் எங்குள்ளீர்?` சொல்லும் எனக் கேட்டனர்.

குறிப்புரை :

அருமறை முறையிடலாவது, இறைவன் இப்படியன் இவ்வண்ணத்தன் என அறியாமையின், தாம் அறிந்தவாறே போற்றி நிற்பதாகும். பிணங்குதல் - மாறு கொள்ளுதல்.

பண் :

பாடல் எண் : 193

என்றலும் நின்ற ஐயர்
இங்குளேன் இருப்புஞ் சேயது
அன்றிந்த வெண்ணெய் நல்லூர்
அதுநிற்க அறத்தா றின்றி
வன்றிறல் செய்தென் கையில்
ஆவணம் வலிய வாங்கி
நின்றிவன் கிழித்துத் தானே
நிரப்பினா னடிமை யென்றான்.

பொழிப்புரை :

இவ்வாறு விலக்கிய மறையவர்கள் வினவ, அதைக் கேட்டு நின்ற மறையவர், `இவ்விடத்தில் உள்ளேன், என் இருக்கையும் மிகத் தொலைவன்று; இந்தத் திருவெண்ணெய் நல்லூரேயாம். அது கிடக்க, அறநெறிக்குப் புறம்பாக வன்முறை செய்து என் கையிலிருந்த அடிமைச் சீட்டை வலியப்பறித்த இந் நாவலூரன் கிழித்தமையால், அவன்தானே எனக்கு அடிமை என்பதை மெய்ப்பித்து விட்டான்` என்று அருளினார்.

குறிப்புரை :

அவையத்தார் `எங்குளீர்` என்று கேட்க, அதற்கு இங்கு உள்ளேன் என்று கூறியது, நகையும் சினமும் குறித்த விடையாம். தம் இருப்பைக் கேட்டவர்கள், தொடர்ந்து நலமும் உறவும் கேட்டு தாம் வந்த செயலை மடைமாற்றிவிடுவர் எனக் கருதிய பெருமான், `அது நிற்க` என்றார். அத்தகைய புறக் கேள்விகளை மேலும் கேட்க இயலாது செய்தது எண்ணற்குரியதாம். அன்றியும் தாம் வந்த செயற்கண் அவர் கருத்தை நிறுத்துதற்கு உரிய இடனும் ஆயிற்று. தன் கையில் இருந்த ஆவணத்தைக் கிழித்தமையாலேயே அவன்தன் அடிமையை மெய்ப் பித்துக் கொண்டான் என்பது வழக்கில் நிற்கும் உண்மையை எடுத்துக் காட்டுவதாம். இந்த ஆவணம் இருப்பின் தான் அடிமையாதல் உண் மையாகிவிடும்; அதனைக் கிழித்துவிடின் அது பொய்த்துவிடும் எனக் கருதியிருக்கின்றான். ஆனால் அவன் தரப்பில் செய்த இவ்வன் மையே, அவனுக்கு மென்மையாயிற்று என்று கூறுவது நுட்பமும் திட்பமும் உடையதாம்.

பண் :

பாடல் எண் : 194

குழைமறை காதி னானைக்
கோதிலா ரூரர் நோக்கிப்
பழையமன் றாடி போலு
மிவனென்று பண்பின் மிக்க
விழைவுறு மனமும் பொங்க
வெண்ணெய்நல் லூரா யேலுன்
பிழைநெறி வழக்கை யாங்கே
பேசநீ போதா யென்றார்.

பொழிப்புரை :

கந்தருவராக இருந்து மறைந்த குழை களைஅணிந்த காதினை உடைய சிவபெருமானைக், குற்றமற்ற நம்பி யாரூரர் பார்த்து, பழைமையான அறம் கூறும் அவையத்தின்கண், இவர் பன்முறையும் வழக்காடி இருப்பர் போலும்! என்று மனத்துட் கொண்டு, `பண்புமிக்க அன்புறு மனமும் பொலிவும் பெறத் திரு வெண்ணெய்நல்லூரில் நீர் இருப்பவரானால் உம்முடைய குற்ற முடைய வழக்கை அங்கேயே பேசுதற்கு வாரும்` என்றார்.

குறிப்புரை :

கந்தருவர் இருவர், தம் இசையை இறைவர் எப்போ தும் கேட்குமாறு வரம் பெற்றுக் குழையாக அமைந்தனர் என்பர். ஆதலின் `குழை மறை` என்றார். மறை குழை என மாற்றுக. பழைய மன்றாடி போலும் - அறங் கூறவையில் வழக்கிடுதலில் பல்காலும் மிக்க பட்டறிவு உடையவர் (அநுபவம் உடையவர்) போலும்! இனி அத் தொடர் பழைய தில்லை மன்றுள் ஆடுகின்றவர் போலும் எனும் பொருள்படவும் அமைந்துள்ளமை அறியத்தக்கது. பிழைநெறி வழக்கு - குற்றமுடைய நெறியினதாய வழக்கு. இப்பொருளொடு, `யான் இப்பிறவியினின்றும் பிழைத்தற்குரிய நெறியை உடைய வழக்கு` எனும் பொருள்படவும் நிற்கின்றது. பிறபிற ஊர்களில் பிழைபடப் பேசினும் தம்மூரில் தாம் பிழைபடப் பேசார் எனக் கருதி, `வெண்ணெய் நல்லூராயேல் அங்கே பேசுவோம்` என்றார். வெண்ணெய் நல்லூராயேல் என்றது, அஃது அவர்தம் ஊராதலிலும் தமக்கு நம்பிக்கையின்மை தோன்ற நின்றது.

பண் :

பாடல் எண் : 195

வேதிய னதனைக் கேட்டு
வெண்ணெய்நல் லூரி லேநீ
போதினும் நன்று மற்றப்
புனிதநான் மறையோர் முன்னர்
ஆதியின் மூல வோலை
காட்டிநீ யடிமை யாதல்
சாதிப்ப னென்று முன்னே
தண்டுமுன் தாங்கிச் சென்றான்.

பொழிப்புரை :

சிவபெருமானாகிய மறையவர், அவர் கூறிய தைக் கேட்டு, திருவெண்ணெய் நல்லூரிலே நீ செல்லினும் நல்லதே. அவ்வூரில் இருக்கின்ற தூய்மையான நான்மறைகளையும் ஓதி உணர்ந்த மறையவர் முன்னிலையில், நின் முன்னோர் எழுதித் தந்துள்ள மூல ஆவணத்தைக் காட்டி, நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்துவன் என்று சொல்லி, அவருக்கு முன்னாகத் தம்முடைய தண்டத்தை முன்னே ஊன்றிக் கொண்டு, திருவெண்ணெய் நல்லூருக்கு எழுந்தருளினார்.

குறிப்புரை :

மூல ஓலையைக் காட்டி உறுதிப்படுத்துவன் எனவே, நீ கிழித்தது படியோலை என்பதும், அதனைக் கிழித்ததால் நினக்கு வெற்றியாகும் எனக் கருதற்க என்பதும் கூறினாராயிற்று.

பண் :

பாடல் எண் : 196

செல்லுநான் மறையோன் தன்பின் 
திரிமுகக் காந்தஞ் சேர்ந்த
வல்லிரும் பணையு மாபோல்
வள்ளலுங் கடிது சென்றான்
எல்லையில் சுற்றத் தாரு
மிதுவென்னா மென்று செல்ல
நல்லவந் தணர்கள் வாழும்
வெண்ணெய்நல் லூரை நண்ணி.

பொழிப்புரை :

திருவெண்ணெய் நல்லூரை நோக்கிச் செல்கின்ற சிவபெருமானாகிய மறையவரின் பின்பு, தன்முன் வைக்கப்பெற்ற பொருளை வேறுபடுத்தும் முகத்தை உடைய காந்தத்தின் முன் இரும்பு பற்றுவதுபோல, நம்பியாரூரரும் அவர்பின் விரைந்து சென்றார். எண்ணிறந்த சுற்றத்தாரும் இவ்வழக்கு என்னாகுமோ? எனும் நினைவுடன் பின் தொடர்ந்து செல்ல, நல்ல மறையவர்கள் வாழுகின்ற திருவெண்ணெய் நல்லூரை அடைந்து..,

குறிப்புரை :

காந்தத்தின் முன் வைக்கப்பட்ட இரும்பு அதன் ஆற் றலால் ஈர்த்துக் கொள்ளப்படுவதுபோல, முன் செல்லும் மறையவரின் திருவருள் ஆற்றலால் நம்பியாரூரர் ஈர்க்கப்பட்டுப் பின் சென்றார் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 197

வேதபா ரகரின் மிக்கார்
விளங்குபே ரவைமுன் சென்று
நாதனாம் மறையோன் சொல்லும்
நாவலூர் ஆரூ ரன்றான்
காதலென் அடியான் என்னக்
காட்டிய வோலை கீறி
மூதறி வீர்முன் போந்தா
னிதுமற்றென் முறைப்பா டென்றான்.

பொழிப்புரை :

மறையவர்களுள் மிகச் சிறந்தவர்கள் விளங்கு கின்ற பேரவையின் முன்னே சென்று, சிவபெருமானாகிய மறையவர் சொல்லுவார், `திருநாவலூரின்கண் வாழும் இந்நம்பியாரூரன் விரும் புதற்குரிய என் அடியவன் என்று யான் காட்டிய அடிமை ஓலையைக் கிழித்து, முதிய அறிவினையுடைய மறையவர்களே! உங்களிடத்து வந்தான். இது என்னுடைய முறைப்பாடு` என்று அருளினார்.

குறிப்புரை :

வேதபாரகர் - மறைவல்லுநர். அவர்களால் தேர்ந் தெடுக்கப் பெற்றவர் ஆதலின் `அவரின் மிக்கார்` என்றார். முறைப் பாடு - முறையிடும் பொருள். மற்று - அசைநிலை. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 198

அந்தண ரவையின் மிக்கார்
மறையவ ரடிமை யாதல்
இந்தமா நிலத்தி லில்லை
யென்சொன்னாய் ஐயா வென்றார்
வந்தவா றிசைவே யன்றோ
வழக்கிவன் கிழித்த வோலை
தந்தைதன் தந்தை நேர்ந்த
தென்றனன் தனியாய் நின்றான்.

பொழிப்புரை :

அவ்வவையில் அறிவில் மிக்கிருப்பவர்களாகிய மறையவர்கள், ஒரு மறையவருக்கு, மற்றொரு மறையவர் அடிமை யாதல் இவ்வுலகத்தில் வழக்கமில்லை. அங்ஙனம் இருக்க, ஐயா! நீர் என்ன பொருந்தா வழக்கைச் சொல்லுகின்றீர்கள் என்றார்கள். யான் கொண்டு வந்த வழக்கு, எழுதிக்கொடுத்த இசைவையுடைய தன்றோ? இவன் கிழித்த அடிமை ஓலை இவன் தந்தைக்குத் தந்தையாகிய பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்ததாகும் என்று தனித்து நிற்கும் சிவபெருமானாகிய மறையவர் சொன்னார்.

குறிப்புரை :

அவையினர் அனைவரும் நம்பியாரூரர் பக்கமே வலி யுடையது எனக் கருதுதலின் இவர் பக்கம் யாரும் இல்லை என்பார் `தனியாய் நின்றான்` என்றார். இனி, `தாயுமிலி தந்தையிலி தான்தனியன்` (தி.8 ப.12 பா.3) என்பதற்கேற்பத் `தனியாய் நின்றான்` என்றலும் ஒன்று.

பண் :

பாடல் எண் : 199

இசைவினா லெழுது மோலை 
காட்டினா னாகி லின்று
விசையினால் வலிய வாங்கிக்
கிழிப்பது வெற்றி யாமோ
தசையெலா மொடுங்க மூத்தான்
வழக்கினைச் சாரச் சொன்னான்
அசைவில்ஆ ரூரர் எண்ணம்
என்னென்றார் அவையின் மிக்கார்.

பொழிப்புரை :

அவ்வவையில் உள்ள பெரியோர்கள், காண்பதற்கு உடன்பட்டு எழுதிய ஓலையை இம்மறையவர் காட்டினா ரானால், அதனை இன்று விரைந்து வலிய வாங்கிக் கிழித்தல் உமக்கு வெற்றியாகுமோ? உடம்பிலுள்ள தசைகளெல்லாம் வற்றுமாறு மூப்படைந்த இம்மறையவர், தம் வழக்கு இதுவென யாவர்க்கும் பொருந்துமாறு சொல்லியுள்ளார். (வெற்றி காண்டலில்) தளர்ச்சி யின்றி இருக்கும் நம்பியாரூரரே! இதற்கு நும் கருத்து யாது? என்று வினவினார்கள்.

குறிப்புரை :

இசைவினால் - நீர் காண்பதற்கு உடன்பட்டு. இனி இதனை எழுதும் ஓலை என்பதற்கு அடையாக்கி, மனம் இசைந்து எழுதப்பட்ட ஓலை என்று உரைத்தலும் ஒன்று. விசையினால் - விரை வாக. தம் கருத்தே வலியுடையது என்பதில் தளர்ச்சியின்றி இருத் தலைக் கண்ட அவையத்தார் `அசைவில் ஆரூரர்` என்றார்.

பண் :

பாடல் எண் : 200

அனைத்துநூல் உணர்ந்தீர் ஆதி
சைவனென் றறிவீர் என்னைத்
தனக்குவே றடிமை யென்றிவ்
வந்தணன் சாதித் தானேல்
மனத்தினா லுணர்தற் கெட்டா
மாயையென் சொல்லு கேன்யான்
எனக்கிது தெளிய வொண்ணா
தென்றனன் எண்ணம் மிக்கான்.

பொழிப்புரை :

இவ்வாறு கேட்ட அவையத்தாருக்கு ஆராய்ந்த அறிவில்வல்ல நம்பியாரூரர் `மறை முதலிய அனைத்து நூல்களையும் உணர்ந்தவர்களே! என்னை ஆதி சைவன் என்று நீவிர் அறிவீர்! இம்மறையவர், உலக வழக்கிற்கு வேறாக என்னைத் தம் அடியன் என்று உறுதிப்படச் சொல்வாரேயானால், அச் செய்தி மனத்தினால் அறியப்படாத தோர் மாயையாய் இருக்கின்றது. இதற்கு யான் என்ன கூறுவேன்? எனக்கு இவ்வழக்கு ஒருவகையில் உறுதிப்படுத்த இயலாததாய் இருக்கின்றது` என்று சொன்னார்.

குறிப்புரை :

எண்ணம் - சூழ்ச்சி; அஃதாவது ஆராய்ந்த அறிவு.

பண் :

பாடல் எண் : 201

அவ்வுரை யவையின் முன்பு 
நம்பியா ரூரர் சொல்லச்
செவ்விய மறையோர் நின்ற
திருமறை முனியை நோக்கி
இவ்வுல கின்கண் நீயின்
றிவரையுன் னடிமை யென்ற
வெவ்வுரை யெம்முன் பேற்ற
வேண்டுமென் றுரைத்து மீண்டும்.

பொழிப்புரை :

அவ்வாறாய கருத்தினை, அவ்வவையார் முன்பு, நம்பியாரூரர் எடுத்துக்கூற, நடுவுநிலைமை உடைய அவ்வவை யத்தார், அங்கு நிற்கின்ற சிவபெருமானாகிய மறையவரைப் பார்த்து, `இவ்வுலகில் இற்றைப் போதில் நீர் இந்நம்பியாரூரரை உம்முடைய அடியான் என்று சொன்ன கடுஞ்சொல்லை எங்கள் முன் உறுதிப் படுத்த வேண்டும்` என்று கூறியவர், பின்னும் கூறுவார்.

குறிப்புரை :

ஓர் அந்தணர் மற்றொரு அந்தணருக்கு அடிமையாதல் இதுவரை இல்லாததும்கேளாததுமாய் இருத்தலின் அதனை `வெவ் வுரை` என்றார்.

பண் :

பாடல் எண் : 202

ஆட்சியில் ஆவ ணத்தில்
அன்றிமற் றயலார் தங்கள்
காட்சியில் மூன்றி லொன்று
காட்டுவா யென்ன முன்னே
மூட்சியிற் கிழித்த வோலை 
படியோலை மூல வோலை
மாட்சியிற் காட்ட வைத்தேன்
என்றனன் மாயை வல்லான்.

பொழிப்புரை :

ஆட்சி, ஆவணம், அயலார் கூறும் சான்று ஆகிய இம்மூன்றில் ஒரு சான்றை இந்நம்பியாரூரர் உமக்கு அடிமை என்பதற்குக் காட்டும் என்று அம்மறையவரிடம் கூற, மாயையில் வல்ல அச்சிவபெருமானாகிய மறையவர், முன்பு இவன் தன் சினத்தால் கிழித்த ஓலையானது என்னிடத்தில் இருக்கும் மூல ஓலையின் படியோலையாகும். (நகல்); ஆதலின் என்னிடம் உள்ள மூல ஓலையை மாண்புமிக்க இப்பேரவையின்முன் காட்டுதற்கென வைத்துள்ளேன் என்றார்.

குறிப்புரை :

ஒரு வழக்கைச் சொல்வதற்கு மூன்று சான்றுகள் வேண்டும்.
1. ஆட்சி. அஃதாவது தான் இதுகாறும் ஆண்டு வந்திருக்கும் உரிமை. இதனை இக்காலத்தார் `அநுபோக பாத்தியம்` என்பர்.
2. ஆவணம் - தனக்குரியதென்று அவ்வுடைமைக்கு உரிய முன்னோர் எழுதிக் கொடுத்திருக்கும் ஓலை. இக்காலத்தார் இதனை `மூல சாசனம்` என்பர்.
3. அயலவர் சான்று - தனக்குரிய உடைமையாக ஆண்டுவந்த ஒன்றைத் தம் கண்ணால் பார்த்து அதனைப் பிறர்க்கும் தெளிவித்தற் குரியார்தம் கூற்று. இதனை இக்காலத்தார் `சாட்சி` என்பர்.
இவையே இன்றும் வழக்கில் வெல்லுவதற்குரிய சான்றுகளாக இருந்து வருகின்றன என்பதும் அறியத்தக்கதாம். காட்சி - கண்ணால் கண்டது. இதனைப் பிறர்க்கும் தெளிவிப்பார் சான்றாவார். இம்மூன்றனுள் ஒன்றைக் காட்டினும் அமையும் என்றனர் அவையத் தார். இவ்வழக்கில் காட்டுதற்குரியதாக இருப்பது `ஆவணம்` ஒன்றேயாம். ஆதலின் அம்மூல ஓலையைக் காட்டுகிறேன் என்றார். சுந்தரர் அடிமையாயுள்ளதற்கு ஏனைய இரு சான்றுகளும் உளவே னும் அவையோர், அவற்றைக் காட்டக் காணும் தகையராவரல்லர். சுந்தரர் அடிமை செய்து வந்தது திருக்கயிலையில் ஆகும். அதனை ஆண்டுள்ளார் பலரும் அறிவர். ஆயினும் அச்சுந்தரரே நாவலூர ராய்த் தோன்றினார் என்பதை அவர்களுள் சிலரே தமக்குரிய ஞானத்தால் அறிவர். அவர்களும் ஈண்டு வரவோ, அச்சான்றுகளைக் கூற இவர்கள் ஏற்கவோ இயலாததாகும். இனி இறைவற்கு என்றும் அடிமையாய் இருப்பதும் வாய்மையே. எனினும் அதனையும் உலகி யல் வழி உணர்த்த இயலாது. அன்றியும் எவ்வுயிர்களும் என்றென் றும் அப்பெருமானின் அடிமையேயாம். `என்று நீ அன்று நான் உன்னடிமை அல்லவோ` (தாயுமான. சுவாமி.7) என்ற திருவாக்கால் இந்த உண்மை பெறப்படும். இவற்றிற்கும் மேலாக வழக்காடுவோர் மறையவர் வேடத்தில் வந்திருப்பதாலும், அவையத் தாரும் உலகியல் வயப்பட்டவராதலாலும் ஆவணம் ஒன்றுமே காட்டவும், அதன்வழி அவர்கள் தெளியவும் வாய்ப்பாயிற்று. மூட்சி - சினம். மாயை - யாவ ரையும் தன்வயப்படுத்துதல். இவ்விரு பாடல்களும் ஒரே முடிபின.

பண் :

பாடல் எண் : 203

வல்லையேற் காட்டிங் கென்ன
மறையவன் வலிசெய் யாமற்
சொல்லநீர் வல்லீ ராகில்
காட்டுவே னென்று சொல்லச்
செல்வநான் மறையோர் நாங்கள்
தீங்குற வொட்டோ மென்றார்
அல்லல்தீர்த் தாள நின்றார்
ஆவணங் கொண்டு சென்றார்.

பொழிப்புரை :

நீர் கூறியவாறு மூல ஓலையைக் காட்ட இயலு மேல் காட்டுக! என அவையத்தார் கூற, இந்நம்பியாரூரன் இம்மூல ஓலையைப் பறித்துக் கிழிக்காமல் இருக்குமாறு நீங்கள் சொல்ல வல்லவர்களானால் அதனைக் காட்டுகின்றேன் என்று கூற, அதற்குரிய தகுதி வாய்ந்த அவ்வவையத்தாரும் அம்மூல ஓலைக்குத் தீங்கு வாராமல் காப்போம் என்று உறுதி கூறினர். நம்பியாரூரரின் பிறவித் துன்பத்தை நீக்கி ஆளுதற்கு வந்த அம்மறையவரும் ஆவண மூல ஓலையை அவையத்தார்முன் காட்டி அருளினார்.

குறிப்புரை :

மறையவரிடத்திருந்த ஓலை நம்பியாரூரரால் கிழிக்கப் பட்டபின், அதற்குரிய மூல ஓலை ஒன்று உளதென்பதும், அஃது அவர் கையகத்துளது என்பதும் அவையத்தார் அறிந்திலராதலின் `வல்லை யேல் காட்டு இங்கு` என்றனர். இத்துணை அளவு எளிவந்தும், மூல ஓலை, படியோலைகளையும் கொண்டு வழக்காடியும் வருதற்குக் காரணம், நம்பியாரூரரைப் பிறவித் துன்பத்தினின்றும் நீக்கித் தடுத் தாட்கொள்ளவேயாம் என்பார் `அல்லல் தீர்த்து ஆள நின்றார்` என்றார். அல்லல் - துன்பம்; ஈண்டுப் பிறவித் துன்பத்தின் மேற்று.

பண் :

பாடல் எண் : 204

இருள்மறை மிடற்றோன் கையி
லோலைகண் டவையோ ரேவ
அருள்பெறு கரணத் தானும்
ஆவணந் தொழுது வாங்கிச்
சுருள்பெறு மடியை நீக்கி 
விரித்ததன் தொன்மை நோக்கித்
தெருள்பெறு சபையோர் கேட்ப
வாசகஞ் செப்பு கின்றான்.

பொழிப்புரை :

தம் கழுத்திலுள்ள கருமையான நிறத்தை மறைத்து வந்தவனாகிய சிவபெருமான் தந்த ஓலையைக் கண்ட அவையத்தார், அதனை யாவரும் அறியப் படிக்குமாறு கணக்கனிடம் கூற, அவர்தம் அனுமதியைப் பெற்ற கணக்கனும் அவ்வோலையைத் தொழுது வாங்கிச், சுருளாயிருக்கின்ற மடிப்பை நீக்கி விரித்து, அதன் பழமையைப் பார்த்து, அறநூல் உணர்வில் தெளிவு பெற்றிருக்கும் அவ்வவையத்தார் கேட்குமாறு அவ்வோலையில் இருந்த செய்தியை வாசிக்கத் தொடங்கினான்.

குறிப்புரை :

மூல ஓலைமிகப் பழமை உடையதாதலின் அதன் மடிப்பை நீக்கும்பொழுதும் விரித்துப் படிக்கும்பொழுதும் எத்தகைய ஊறு பாடும் விளையாதவாறு செயற்படத் தொடங்கினான் என்பார், `அதன் தொன்மை நோக்கி` என்றார். அன்றி அம்மூல ஆவணம் உண் மையிலேயே பழமையானதா? அன்றிப் புதிதா? என்பதைக் காண `அதன் தொன்மை நோக்கி` என்றார் என்றலுமாம்.

பண் :

பாடல் எண் : 205

அருமறை நாவல் ஆதி 
சைவனா ரூரன் செய்கை
பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப்
பித்தனுக் கியானும் என்பால்
வருமுறை மரபு ளோரும்
வழித்தொண்டு செய்தற் கோலை
இருமையா லெழுதி நேர்ந்தேன்
இதற்கிவை யென்னெ ழுத்து.

பொழிப்புரை :

`அறிதற்கரிய மறைகளை உணர்ந்த திருநாவ லூரிலிருக்கும் ஆதி சைவனாகிய ஆரூரன் எழுதிக் கொடுத்த உடன் பாடு; பெருமுனிவராய திருவெண்ணெய் நல்லூரில் வாழும் பித்தன் என்னும் மறையவருக்கு `யானும் என் வழிவழி வரும் மரபினரும் வழிவழியாக அடிமை செய்தற்கு இந்த ஆவணத்தை உள்ளும் புறம்பும் ஒத்து எழுதிக் கொடுத்தேன் இப்படிக்கு இவை என் கையெழுத்தாம்.`

குறிப்புரை :

செய்கை - உடன்பாடு; உடன்பட்டு எழுதிக் கொடுக்கும் ஆவணம். இருமை - உள்ளும் புறம்பும் ஆகிய இருமை.

பண் :

பாடல் எண் : 206

வாசகங் கேட்ட பின்னர்
மற்றுமே லெழுத்திட் டார்கள்
ஆசிலா வெழுத்தை நோக்கி
யவையொக்கு மென்ற பின்னர்
மாசிலா மறையோர் ஐயா 
மற்றுங்கள் பேர னார்தந்
தேசுடை எழுத்தே யாகில்
தெளியப்பார்த் தறிமின் என்றார்.

பொழிப்புரை :

இவ்வாறு எழுதிய உடன்பாட்டைக் கேட்ட பின்பு, அவ்வுடன்படிக்கையில் சான்றாகக் கையெழுத்திட்டிருப்பவர்களின் குற்றமில்லாத கையெழுத்தைப் பார்த்து, அவையனைத்தும் முறையாக அமைந்துள்ளன என்று கூறிப், பின்பு நீதியில் திறம்புதலில்லா அவ் வவையத்தார், `நம்பியாரூரரே! உம்முடைய பாட்டனாரின் உண்மை யான கையெழுத்தாய் இருக்குமாயின் அதனை நன்றாகப் பார்த்துணர் வீர்!` என்றார்கள்

குறிப்புரை :

உங்கள் பேரனார் - உங்கள் பெயரையுடைய பாட்ட னார். இப்பெயர் மகன் அல்லது மகள் வயிற்றில் பிறந்தவர்களையே இக்காலத்துக் குறித்தற்குரியதாயுள்ளது. மேல் எழுத்து இட்டார்கள் - உடன்படிக்கையின்மீது சான்றாகக் கையொப்பமிட்டவர்கள். எழுதிக் கொடுக்கப்பட்ட உடன்பாடு மரபு நிலை திரியா மாட்சிமை உடையதாக உள்ளதா? என்பதைப் பொதுவகையான் பார்த்த அவையத்தார், அது உரிய முறையில் இருப்பது கண்டு `அவையொக்கும்` என்றனர். இனிச் சிறப்பு வகையான் உடன்படிக்கையில் கையெழுத்திட்டவரின் கையெ ழுத்துப் பாட்டனார் கையெழுத்தா என்பதை உற்று நோக்கிப் பார்க்கு மாறு அதனை நம்பியாரூரர் கையில் கொடுக்க நினைந்தார்கள்.மற்று என வருவனவற்றுள் முன்னையது பிறிது என்னும் பொருள்பட நின்றது, பின்னையது அசைநிலையாம்.

பண் :

பாடல் எண் : 207

அந்தணர் கூற வின்னு
மாளோலை யிவனே காண்பான்
தந்தைதன் தந்தை தான்வே
றெழுதுகைச் சாத்துண் டாகில்
இந்தவா வணத்தி னோடு
மெழுத்துநீ ரொப்பு நோக்கி
வந்தது மொழிமின் என்றான்
வலியஆட் கொள்ளும் வள்ளல்.

பொழிப்புரை :

அவ்வவையில் உள்ள மறையவர்கள் இவ்வாறு சொல்ல, அடியவர்களை வலிய வந்து ஆட்கொள்ளும் கருணைப் பெருக்குடைய சிவபெருமானாகிய மறையவர், இன்னமும் அடிமை ஓலையை, இந்நம்பியாரூரனோ காண வல்லவன்? இவன் பாட்டன் இதுவன்றி வேறாக எழுதியிருக்கும் கைச்சாத்துகள் இருக்குமாயின் இவ்வாவண ஓலையின்கண் இருக்கும் எழுத்துக்களோடு ஒத்து நோக்கி ஒக்கும் அல்லது ஒவ்வாது என்று உங்கள் மனத்தில் தோன்றும் தீர்ப்பைச் சொல்லுங்கள் என்றார்.

குறிப்புரை :

`இன்னும்` என்னும் உம்மை, முன் ஆவணம் கிழித்த மையை நினைவு கூர நின்றது; இறந்தது தழீஇய எச்சவும்மை. முன் வன்மை பேசி ஓலையைக் கிழித்தவன் ஆதலானும், வேறாகவுள்ள பாட்டன் கையெழுத்தோடு இவ்வோலையில் இருக்கும் கையெழுத் தை ஒப்புநோக்குதற்குரிய வயதும் திறனும் இல்லாதவன் ஆதலானும் `இவனே காண்பான்` என்றார். பேச்சிலும் வழக்காடுதலிலும் வன்மை உடையவன் போலத் தோன்றினும், உண்மையில் அடியவர்களை வலி யத் தடுத்தாட்கொள்ளும் பெருங்கருணை உடையவன் என்பார் `வலிய ஆட்கொள்ளும் வள்ளல்` என்றார். கைச்சாத்து - கையெழுத்து.

பண் :

பாடல் எண் : 208

திரண்டமா மறையோர் தாமுந்
திருநாவ லூரர் கோமுன்
மருண்டது தெளிய மற்ற
மறையவ னெழுத்தால் ஓலை
அரண்டரு காப்பில் வேறொன்
றழைத்துடன் ஒப்பு நோக்கி
இரண்டுமொத் திருந்த தென்னே
யினிச்செயல் இல்லை யென்றார்.

பொழிப்புரை :

திரண்டிருக்கும் பெருமையுடைய மறையோர்க ளாகிய அவ்வவையோர் தாமும், நம்பியாரூரர் முன்பு ஐயம் தெளியு மாறு, அப்பாட்டனுடைய கையெழுத்தாக ஊர் அவையில் பாது காவலாக வைத்திருக்கும் கையெழுத்தொன்றை எடுக்கச் செய்து, அவ் வோலையிலுள்ள கையெழுத்துடன் எழுத்து வடிவங்களை ஒத்துப் பார்த்து, இரண்டும் ஒத்துள்ளமை கண்டு, ஈதென்ன வியப்பு என நினைந்து இனி வேறு செயலில்லை என்றனர்.

குறிப்புரை :

ஓலை கொண்டு வழக்கிடும் மறையவர் `இவனே காண்பான்` எனக் கூறிக் காண்டற்குரியன் அல்லன் என்றதும், நம்பியா ரூரருக்கு அச்சமும் ஐயமும் ஏற்பட்டன. அவ்வச்சத்தோடு கூடிய ஐயமே `மருட்சி` எனப்பட்டது. அரண் தருகாப்பு - பாதுகாப்புடன் வைத்திருக் கும் இருப்பு. ஊராட்சி மன்றங்கள் பலவும் தத்தம் எல்லையில் உள்ளா ரின் கையெழுத்தைப் பெற்றுப் பாதுகாப்பாக வைத்திருந்தமை இதனால் அறியப்படுகிறது. ஆட்சி முறையின் அமைவு பண்டைக் காலத்தில் எத்துணைச் சீரியதாயிருந்தது என்பது அறியத்தக்கது.

பண் :

பாடல் எண் : 209

நான்மறை முனிவ னார்க்கு
நம்பியா ரூரர் தோற்றீர்
பான்மையி னேவல் செய்தல்
கடனென்று பண்பின் மிக்க
மேன்மையோர் விளம்ப நம்பி
விதிமுறை யிதுவே யாகில்
யானிதற் கிசையே னென்ன
இசையுமோ வென்று நின்றார்.

பொழிப்புரை :

`நான்கு மறைகளையும் உணர்ந்த இம் மறைய வர்க்கு நம்பியாரூரரே! நீர் தோற்றீர்! ஆதலின் அவர் கூறியவாறு அவருக்குப் பணி செய்வதே உமக்குக் கடன்` என்று நற்குணங்கள் நிறைந்த மேதக்க அவ்வவையோர் கூற, நம்பியாரூரரும் `அவையத் தாரின் ஆணை இதுவாயின் யான் இதற்கு உடன்படேன் என மறுத்தற்கு ஒல்லுமோ?` என்று கூறி நின்றார்.

குறிப்புரை :

பான்மையின் - அம்மறையவர் கருத்தின்படி.

பண் :

பாடல் எண் : 210

திருமிகு மறையோர் நின்ற
செழுமறை முனியை நோக்கி
அருமுனி நீமுன் காட்டும்
ஆவணம் அதனில் எங்கள்
பெருமைசேர் பதியே யாகப்
பேசிய துமக்கிவ் வூரில்
வருமுறை மனையு நீடு
வாழ்க்கையுங் காட்டு கென்றார்.

பொழிப்புரை :

மேதக்க அம்மறையவர்கள் அங்கு நிற்கும் சிவ பெருமானாகிய மறையவரைப் பார்த்து, `அரிய மறை முனிவரே! நீர் முன் காட்டிய ஆவணவோலையில் உம்முடைய ஊர் எங்கள் திரு வெண்ணெய்நல்லூர் எனக் குறிக்கப்பட்டுள்ளது. அதன்படி உமக்கு இவ்வூரில் வழிவழியாக ஆண்டுவரும் மனையையும், நீர் வாழ்ந்து வரும் நிலையான வாழ்க்கை வசதிகளையும் காட்டும்` என்றனர்.

குறிப்புரை :

நீடுவாழ்க்கை - தொடர்ந்து துய்த்து வரும் வாழ்க்கைச் செல்வங்கள்.

பண் :

பாடல் எண் : 211

பொருவரும் வழக்கால் வென்ற
புண்ணிய முனிவ ரென்னை
ஒருவரும் அறியீ ராகில்
போதுமென் றுரைத்துச் சூழ்ந்த
பெருமறை யவர்கு ழாமும் 
நம்பியும் பின்பு செல்லத்
திருவருட் டுறையே புக்கார்
கண்டிலர் திகைத்து நின்றார்.

பொழிப்புரை :

ஒப்பற்ற பெருவழக்கினால் வெற்றிகொண்ட புண்ணியத்தின் வடிவென நிற்கும் சிவபெருமானாகிய மறையவர், `இத்துணை முதியவராக இருந்தும் ஒருவரும் என் மனையையும் வாழ்க்கையையும் அறியீராயின் அவற்றை நான் காட்டுகின்றேன்` என அவர்களை அழைக்க, ஆண்டுச் சூழ்ந்துள்ள பெருமைமிக்க அவையத் தாரும் நம்பியாரூரரும் பின்வர, அவ்வூரிலுள்ள `திரு வருட்டுறை` என்னும் திருக்கோயிலில் புகுந்தார். அதன்பின்பு அவரை அவர்கள் காணாமல் திகைத்து நின்றனர்.

குறிப்புரை :

பொருவரும் - ஒப்பற்ற. திருவருட்டுறை - திரு வெண்ணெய் நல்லூரிலுள்ள திருக்கோயிலின் பெயராகும். இடர்க் கடலினின்றும் ஏறற்கு அமைந்த அருள்துறை; `தனியனேன் பெரும் பிறவிப் பௌவத்து....மல்லற் கரைகாட்டி ஆட்கொண்டாய்` (தி.8 ப.5 பா.27) எனவரும் திருவாசகத் திருவாக்கினையும் காண்க.

பண் :

பாடல் எண் : 212

எம்பிரான் கோயில் நண்ண
இலங்குநூன் மார்பர் எங்கள்
நம்பர்தங் கோயில் புக்க
தென்காலோ வென்று நம்பி
தம்பெரு விருப்பி னோடு
தனித்தொடர்ந் தழைப்ப மாதோ
டும்பரின் விடைமேல் தோன்றி
அவர்தமக் குணர்த்த லுற்றார்.

பொழிப்புரை :

எம் சிவபெருமான் ஆகிய மறையவர், திருக்கோயிலுக்குட் சென்று மறைந்தருள, நம்மை அடிமை என்று உறுதிப்படுத்திய விளங்குகின்ற பூணூலணிந்த மார்பினை உடைய மறையவர், எம்பிரானார் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலுக்குட் புகுந்தது என்னோ? என்று கருதிய நம்பியாரூரர், தம்மிடத்துத் தோன்றிய பெருவிருப்போடும் உடன் வந்த மறையவர்களினின்றும் பிரிந்து தனியே சென்று அழைக்கச், சிவபெருமான் உமையம்மை யாரோடு ஆனேற்றின்மீது எழுந்தருளி, அந்நம்பியாரூரர்க்கு அரு ளிச் செய்வாராய்.

குறிப்புரை :

நம்பியாரூரரோடு அவையத்தாரும் உடன் வந்திருப் பினும், மறையவர் கோயிலுட் சென்று மறைந்தது கண்டு, அவர்கள் வியந்ததல்லது அப்பெருமானைத் தொடர்ந்திலர். காரணம் தம்மள வில் உள்ள கடமை நிறைவு பெற்றுவிட்டதாலும், இறைவனாகக் கண்டு மகிழும் புண்ணியம் அவருக்கு இன்மையானுமாம். நம்பியா ரூரருக்கோ அடிமை செய்து வாழும் கடப்பாடு இருத்தலின் அவர் மட்டுமே தொடர்ந்தார்.

பண் :

பாடல் எண் : 213

முன்புநீ நமக்குத் தொண்டன்
முன்னிய வேட்கை கூரப்
பின்புநம் ஏவ லாலே
பிறந்தனை மண்ணின் மீது
துன்புறு வாழ்க்கை நின்னைத்
தொடர்வறத் தொடர்ந்து வந்து
நன்புல மறையோர் முன்னர்
நாம்தடுத் தாண்டோம் என்றார்.

பொழிப்புரை :

முற்பிறப்பில் நீ நமக்கு அடியனாய் இருந்தாய். மாதரைக் கருதிய விருப்பு மிகுதியால் பின் நம்முடைய ஆணையால் இந்நிலவுலகில் தோன்றினாய். அதனால் துன்பத்தை விளைவிக்கும் இல்வாழ்க்கையானது உன்னைத் தொடராமல் நாமே வலியத் தொடர்ந்து வந்து நல்லுணர்வினை உடைய மறையவர்களுக்கு முன்னே தடுத்தாட்கொண்டோம் என்றார்.

குறிப்புரை :

முன்னிய - கருதிய; மாதராரைக் கருதிய. `வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்வியென்னும் பித்த உலகிற்` (தி.8 ப.10 பா.6) தலைப்படுதற்கு ஏதுவாதலின், அவ்வாழ்க்கையைத் `துன்புறு வாழ்க்கை` என்றார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 214

என்றெழு மோசை கேளா
ஈன்றஆன் கனைப்புக் கேட்ட
கன்றுபோல் கதறி நம்பி
கரசர ணாதி யங்கந்
துன்றிய புளக மாகத்
தொழுதகை தலைமே லாக
மன்றுளீர் செயலோ வந்து
வலியஆட் கொண்ட தென்றார்.

பொழிப்புரை :

இவ்வாறு, சிவபெருமான் அருளிச் செய்த திருவாக்கைக் கேட்ட நம்பியாரூரர், ஈன்ற பசுவின் கனைப்பினைக் கேட்ட கன்றைப் போல அலறி, கைகால் முதலிய உறுப்புக்களில் நெருங்கி எழுந்த மயிர்க்கூச்செறிதல் உண்டாக, தொழுத கை தலைமீது ஏற, திருமன்றுள் ஆடல் செய்தருளும் பெருமானே! உம்முடைய செய் கையோ இவ்வாறு வலிய வந்து தடுத்தாட்கொண்டது என்று விண்ணப் பம் செய்தார்.

குறிப்புரை :

ஈன்ற ஆன் - கன்றை ஈன்ற பசு. கரசரணம் - கைகால். புளகம் - மயிர்க் கூச்செறிதல். அன்பாலும் அச்சத்தானும் வந்த மெய்ப்பாடுகள் இவை.

பண் :

பாடல் எண் : 215

எண்ணிய வோசை யைந்தும்
விசும்பிடை நிறைய வெங்கும்
விண்ணவர் பொழிபூ மாரி
மேதினி நிறைந்து விம்ம
மண்ணவர் மகிழ்ச்சி பொங்க
மறைகளும் முழங்கி ஆர்ப்ப
அண்ணலை ஓலை காட்டி
யாண்டவ ரருளிச் செய்வார்.

பொழிப்புரை :

எண்ணப்பட்ட ஐந்து இயங்களின் ஓசையும் விண்ணில் நிறையவும், எவ்விடத்தும் தேவர்கள் சொரிகின்ற மலர் மழையானது இந்நிலவுலகில் நிறைந்து மேற்படவும், மண்ணுலகத்தவர் மகிழ்ச்சியடையவும், மறைகள் பெருமுழக்கிடவும் நம்பியாரூரரை ஆவண ஓலை காட்டித் தடுத்தாட்கொண்ட சிவபெருமான் இவ்வாறு அருளிச் செய்வாராயினார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 216

மற்றுநீ வன்மை பேசி
வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற்
பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே யாகும்
ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார்
தூமறை பாடும் வாயார்.

பொழிப்புரை :

தூய்மையான மறைகளைப் பண்டு அருளிச் செய்த சிவபெருமான், மேலும் நீ என்னுடன் வன்மையான சொற்க ளைச் சொல்லி வழக்கிட்டமையால், `வன்றொண்டன்` என்னும் பெயரைப் பெற்றாய். நமக்கும் அன்பினால் செய்யும் திருமுழுக்காட் டுதல் திருமாலை அணிவித்தல், திருவிளக்கிடுதல் முதலாய வழிபாடு களினும் மேலான வழிபாடாவது போற்றியுரைக்கும் புகழுரைகளே யாகும். ஆதலின் இந்நிலவுலகில் நம்மைத் தமிழ்ச் சொற்களால் ஆகிய பாடல்களைப் பாடுக! என்றருளிச் செய்தார்.

குறிப்புரை :

அற்சனை - போற்றியுரைகள்; `இனியவும் நல்லவும் நனிபல ஏத்தி` (தி.11 திருமுரு. வரி.286) , `பொருள்சேர் புகழ் புரிந்தார்` (குறள், 5) என்றல் தொடக்கத்தனவும் காண்க. `தூய மறை களைப் பாடும் வாயார், `சொற்றமிழ் பாடுக` என்றதன் அருமையும் காண்க.
`ஆத னத்திடை வைத்த ருச்சனை செய்தபின்` (தி.12 பு.4 பா.4), `வந்தஅர்ச் சனைவழி பாடு மன்னவாம்` (தி.12 பு.28 பா.821), `அழுக்கிலாத் துறவ டக்கம்அறிவொ டர்ச்சித்தல்`(சிவஞா. சித்தி. சுப., 2-23), எனவரும் இடங்களிலெல்லாம் இடையின ரகரம் இட்டே அருச்சனை என்னும் சொல் அமைந்துள்ளது.
ஈண்டு வல்லின றகரமாகி `அற்சனை` என வந்தது எதுகை நோக்கிலாம்.

பண் :

பாடல் எண் : 217

தேடிய அயனு மாலுந்
தெளிவுறா தைந்தெ ழுத்தும்
பாடிய பொருளா யுள்ளான்
பாடுவாய் நம்மை யென்ன
நாடிய மனத்த ராகி நம்பியா
ரூரர் மன்றுள்
ஆடிய செய்ய தாளை
யஞ்சலி கூப்பி நின்று.

பொழிப்புரை :

பண்டொருகால் பெருமானின் முடியையும் அடியையும் தேடிய அயனும் மாலும் காணாமல் வருந்திய நிலையில், திருவைந்தெழுத்தைத் துதித்து, வாழ்த்த, அவ்வளவில் அவர்க்குக் காட்சி கொடுத்தருளிய சிவபெருமான், நம்மைப் பாடுவாய் என்று அருளிச் செய்ய, சிவபெருமானின் திருவருளைச் சிந்தித்து நிற்கும் கருத்துடையராய நம்பியாரூரரும், திருமன்றுள் ஆடியருளும் சிவந்த திருவடிகளைக் கைகுவித்து வணங்கி நின்று.

குறிப்புரை :

பெருமானின் அடிமுடியைக் காண இயலாத அயனும், மாலும்,
திருவைந்தெழுத்தை எண்ணிய அளவில் பெருமான் வெளிப் பட்டருளப் போற்றி மகிழ்ந்தனர்.
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாகுங் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்துய்ந்த படிவிரித்தார்.
எனச் சேக்கிழார் பின்னும் (தி.12 ப.28 பா.78) விளக்குமாற்றானும் இவ்வுண்மை அறியலாம்.

பண் :

பாடல் எண் : 218

வேதிய னாகி யென்னை
வழக்கினால் வெல்ல வந்த
ஊதிய மறியா தேனுக்
குணர்வுதந் துய்யக் கொண்ட
கோதிலா அமுதே இன்றுன்
குணப்பெருங் கடலை நாயேன்
யாதினை யறிந்தென் சொல்லிப்
பாடுகேன் எனமொழிந்தார்.

பொழிப்புரை :

மறையவனாய் அடியேனை வழக்கிட்டு வெல்ல வந்த ஊதியத்தை அறியாத அடியேனுக்கு, முன்னைய உணர்வைக் கொடுத்து, உலக வாழ்வினின்றும் விலகுமாறு தடுத்தாட்கொண்ட குற்ற மற்ற அமுதாக விளங்குபவனே! இன்று உம் மேலான குணநலன் களாம் பெருங்கடலில், நாயை ஒத்த சிறுமைக்குணம் உடையவனா கிய யான், எவ்வளவில் முகந்து எக்குணத்தை அறிந்து எவ்வண்ணம் பாடுகேன்? என்று விண்ணப்பம் செய்தார்.

குறிப்புரை :

என்னை - ஒன்றற்கும் உரியனல்லாத என்னை என இழிவு தோன்ற நின்றது. ஊதியம் - இலாபம்: `முதலிலார்க்கு ஊதியம் இல்லை` (குறள், 449) எனவருவதும் காண்க.
எண்ணிறந்த குணங்கள் உடைமையின் `குணப்பெருங்கடல்` என்றார். அக்குணங்களுள் யாதொன்றனையும் அறியாதேனும், அதனை எடுத்துக் கூறிப் போற்றத் தகுதியில்லாதேனும் ஆகியேன் என்பார். `யாதினை அறிந்து என்சொல்லிப் பாடுகேன்` என்றார்.
இவ்விருபாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 219

அன்பனை யருளின் நோக்கி
அங்கணர் அருளிச் செய்வார்
முன்பெனைப் பித்த னென்றே
மொழிந்தனை யாத லாலே
என்பெயர் பித்த னென்றே
பாடுவா யென்றார் நின்ற
வன்பெருந் தொண்டர் ஆண்ட
வள்ளலைப் பாட லுற்றார்.

பொழிப்புரை :

இவ்வாறு வேண்டிய அடியவராகிய நம்பி யாரூரரைக் கருணையோடும் பார்த்து, அழகிய பேரருட் பெருங் கருணையை உடைய சிவபெருமான் அருளிச் செய்வார் `முன்னே என்னைப் பித்தன் என்றே கூறினாய், அதனால் இப்பொழுதும் என் பெயரைப் பித்தன் என்றே வைத்துப் பாடுக!` என்று அருளினார். அதனைக் கேட்டு நின்ற பெருமைமிக்க தொண்டராகிய நம்பி யாரூரரும், தம்மைத் தடுத்தாட்கொண்ட கருணை வள்ளலாகிய பெருமானைப் பாடத் தொடங்கினார்.

குறிப்புரை :

அங்கணர் - அழகிய கருணைப் பெருக்குடையவர் .

பண் :

பாடல் எண் : 220

கொத்தார்மலர்க் குழலாளொரு
கூறாயடி யவர்பான்
மெய்த்தாயினு மினியானையவ்
வியனாவலர் பெருமான்
பித்தாபிறை சூடீயெனப்
பெரிதாந்திருப் பதிகம்
இத்தாரணி முதலாமுல
கெல்லாமுய வெடுத்தார்.

பொழிப்புரை :

கொத்தாக மலர்ந்த மலர்களை அணிந்த கூந்தலை உடைய உமையம்மையாரைஒரு மருங்கில் கொண்டவரும், அடிய வரிடத்து மெய்யன்புடைய தாயினும் இனியவருமான சிவபெரு மானை, இடமகன்ற திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைமை பெற்று விளங்குபவராகிய அந்நம்பியாரூரர், `பித்தா பிறைசூடி` என்னும் முதற்குறிப்புடைய பெருமை பொருந்திய திருப்பதிகத்தை, இந்நிலவுல கம் முதலாக எவ்வுலகத்தில் உள்ளாரும் உயரிய பேறான வீட்டின்பத் தைப் பெறும் பொருட்டுப் பாடத் தொடங்கினார்.

குறிப்புரை :

மெய்த்தாய் - உண்மையான அன்புடைய தாய்; பால் நினைந்து ஊட்டும் தாய். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்பர். அது தாயைப் பெரிதும் வணங்கிப் போற்றி வாழ வேண்டும் என்னும்குறிப்பினது,ஆயினும்இறைவனை நோக்க அத்தாயன்பு தானும் குறைவுடையதேயாம். தாய் ஒரு கால எல்லையில் மட்டுமே உதவுபவள் அதிலும் பெரிதும் உடம்பையே பேணி வளர்த்தற் குரியவள். அவ்வாறு வளர்த்தற்கும் தக்க சூழல் வாய்த்துழியே செய்தற்குரியவள். ஆனால் இறைவனோ எஞ்ஞான்றும், அவ்வப் போதும் பெறும் உடலோடு உயிரையும் காத்து வருபவன். அவன் யாவர்க்கும் மேலாம் சீர் உடையவன் ஆதலின் அவனுக்கு இடம், காலம், ஏற்ற சூழல் போன்ற எச்சூழலும் வேண்டுவதின்று. ஆதலின் `மெய்த் தாயினும் இனியான்` என்றார். `மெய்த்தாய்` என்பது உடல் பற்றிய தாய் எனப்பொருள்படுமாறும் காண்க. `பித்தா பிறைசூடீ` (தி.7 ப.1) எனத் தொடங்கும் இப்பதிகமே சுந்தரர் திருவாயினின்றும் மலர்ந்த முதல் திருப்பதிகம் ஆகும். சுந்தரர் இறைவனைப் `பித்தன்` எனக் கூறியது வன்மையானதும் குற்றமானதுமாகிய மொழியாகும். இதனையே முதலாக வைத்துப்பாடுக என்றருளியது இறைவனின் பெருங்கருணையாகும். `அற்றம் மறைக்கும் பெருமை` (குறள் 980) என்பர் திருவள்ளுவர். அப்பெருமையறிய நின்ற பதிகம் இதுவா தலின், `பெரிதாம் திருப்பதிகம்` என்றார். பொருளானும் பயனானும் பெரிதாகிய பதிகம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு. உரை).

பண் :

பாடல் எண் : 221

முறையால்வரு மருதத்துடன்
மொழியிந்தள முதலிற்
குறையாநிலை மும்மைப்படி
கூடுங்கிழ மையினால்
நிறைபாணியி லிசைகோள்புணர்
நீடும்புகல் வகையால்
இறையான்மகி ழிசைபாடின
னெல்லாநிக ரில்லான்.

பொழிப்புரை :

எவ்வகையினாலும் தமக்குப் பிறர் ஒப்பில்லாத வன்தொண்டர், முறைமையாக வரும் மருதப் பண்ணுடன் கூடிய முதலில் எடுத்துப் பாடுகின்ற `இந்தளம்` என்னும் பண்ணை உடைய அத் திருப்பதிகத்தை, எடுத்தல், படுத்தல், நலிதல் எனவரும் இசை வேறுபாடு குறையாமல் பொருந்தும் முறைமையினாலும், நிறைந்த தாளத்தில் இசையின்பகுதி மிகவும் புணர்ந்து அமையும் வகைமை யாலும் சிவபெருமான் மகிழுமாறு இசையோடு பாடினர்.

குறிப்புரை :

மருதம் - இது குறிஞ்சி, பாலை, மருதம், செவ்வழி எனும் நான்கு பெரும் பிரிவுகளுள் ஒன்று. இதன் உட்பிரிவாக விளங்கும் இந்தளம், பகற்பொழுதில் பாடப் பெறும் பத்துப் பண்களுள் ஒன்றாம். மும்மைப்படி - வலிவு, மெலிவு, சமநிலை ஆகிய இசைக் கூறுபாடு. பகற்பொழுதாவது காலை பத்து முதல் பிற்பகல் 2 மணி வரையிலான பொழுதாம். மணம் வந்த புத்தூரில் திருமணம் செய்வதற் கென எடுத்துக் கொண்ட முயற்சி, திருநாண்பூட்டும் நேரத்தில் நிறுத்தப் பெற்றது. அதுபற்றி அருகிருந்தோர் வழக்கினை விசாரிக்கவும், பின் திருவெண்ணெய்நல்லூருக்கு வந்து விசாரணை நிறைவு பெற்று முடிவு பெறவும், பின்னர்த் திருக்கோயிலில் சென்று இறைவர் மறைய அப் பெருமானின் அருள்வழி நின்று ஆரூரர் பாடவும் நேர்ந்தது. இவற்றை யெல்லாம் ஆழமாக எண்ண இத்திருமணம் காலை 6-00 முதல் 7-30 மணி வரையிலான கால அமைப்பில் அமைக்கப்பட்டது என்று அறிய லாம். `திருமணக் கோலம் காணக் காமுறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான்` என ஆசிரியர் முன்னர் அருளுமாறும் காண்க எனவே இப்பதிகம் ஏறத்தாழ முற்பகல் 11 மணியிலிருந்து 12 மணிக்குள் பாடப்பெற்றது என அறியலாம். திருவெண்ணெய் நல்லூர்க் கல்வெட்டில் இறைவன் பெயர் தடுத்தாட்கொண்ட தேவர், தடுத்தாட்கொண்ட நாயனார் எனக்காணப்படுவதும் , வழக்கு வென்ற திருவம்பலம் என்ற பெயரில் மண்டபம் ஒன்று இருத்தலும், பிச்சன் என்று பாடச் சொன்னான் என்றொரு தொடர் கல்வெட்டில் காணப்படுவதும் இந்நிகழ்ச்சிக்கு அரணாகின்றன.

பண் :

பாடல் எண் : 222

சொல்லார்தமி ழிசைபாடிய
தொண்டன்தனை இன்னும்
பல்லாறுல கினில்நம்புகழ்
பாடென்றுறு பரிவின்
நல்லார்வெண்ணெய் நல்லூரருட்
டுறைமேவிய நம்பன்
எல்லாவுல குய்யப்புரம்
எய்தானருள் செய்தான்.

பொழிப்புரை :

இவ்வாறு தம்மைச் சொற்கள் நிறைந்த தமிழ்ப் பதிகத்தை இசையோடு பாடியருளிய வன்தொண்டரை, இனியும் பலவகைகளால் இந்நிலவுலகத்தின்கண் இருந்து நம் புகழைப் பாடு வாயாக! என்று மீதூர்ந்த கருணையினால் எவ்வுலகும் உய்யுமாறு முப் புரங்களை எரித்தவரும் மெய்யன்பர்கள் வாழும் திருவெண்ணெய் நல்லூர்த் திருவருட்துறையில் எழுந்தருளியிருப்பவருமான சிவ பெருமான் ஆணையிட்டு அருளினர்.

குறிப்புரை :

`பலசொல்லால் பொருட்கிடனாக உணர்வினில் வல் லோர் அணிபெறச் செய்வன செய்யுள்` (நன்னூல். பெய.11) என்பவாகலின், ஆரூரர் பதிகமும் `சொல்லார் தமிழாயிற்று`. சொல்லார் தமிழ் - பல்வகையான இனிய அரியதமிழ்ச்சொற்களால் அமைந்த திருப்பதிகம். அவ்வாறமைந்த பதிகம்தாமும் சொல்வகை யானும், பொருள் வகையாலும், யாப்புவகையானும் பல திறப்படுமா தலின் `பல்லாறு உலகினில் நம் புகழ்பாடு` என்றார்.

பண் :

பாடல் எண் : 223

அயலோர்தவ முயல்வார்பிற
ரன்றேமணம் அழியும்
செயலால்நிகழ் புத்தூர்வரு
சிவவேதியன் மகளும்
உயர்நாவலர் தனிநாதனை 
யொழியாதுணர் வழியிற்
பெயராதுயர் சிவலோகமும்
எளிதாம்வகை பெற்றாள்.

பொழிப்புரை :

தம் கணவரிடத்து இடையில் மணமுறிவு நேரினும், அவருக்குப் பெரும் பிரிவு (இறப்பு) நேரினும், அவர்தம் மனைவியார் மேற்கொள்ளும் நெறிகள் பலவாம். அவ்வாறின்றி விளங்குகின்ற புத்தூரில் வாழும் சடங்கவியாரின் திருமகளாரோ, மணம் நேர்ந்த அந்நாளிலேயே அம்மணம் அழிந்த காரணத்தால், ஒப்பற்ற நாவலர் பெருமானாகிய நம்பியாரூரரைத் தம் மனத்தகத்து என்றும் நீங்காது சிந்தித்துவரும் கடப்பாட்டால், உயர்வாகிய சிவலோகத்தையும் எளிதாகப் பெற்றார்.

குறிப்புரை :

மண உறுதி செய்யப்பட்டு, உரிய மணமகனார் இறக்க, அம் மணம் தடைப்பட்டமை திலகவதியார் வரலாற்றில் காண்ப தொன்றாம். மணமகனோடு இருந்து திருநாண் பூட்டப்பட இருந்த நிலையில் மணம் நேராதது இவ்வரலாற்றில் காண்பதொன்றாம். இந்நிலையில் இவ்விரு பெருமாட்டியாரும் தம் வாழ்வை அமைத்துக் கொண்ட முறைமை மிகச் சீரியதாகும். திலகவதியார் கணவராக வர இருந்தவரே இறந்தமையால் உடன் உயிர் துறக்க நினைய, தம்பியார் வேண்டுகோளால் வாழ்ந்து அவர் திருந்தவும், உயிர்க்குயிராய நாதனை அடையவும் இம்பர் மனைத் தவம் செய்தார். இப்பெரு மாட்டியாரோ மணம் முறியினும் கணவராக இருந்த நாவலர் சொற் றமிழ் பாடி இந்நிலவுலகில் வாழ்ந்திருந்தமையின், அப் பெருமகனா ரையே மனத்தகத்து எண்ணி வீடுபேறு அடைகின்றார். காரணம், தமக்கென உறுதி செய்யப்பட்ட கணவனார் இறந்தே விடுவதால் இனி உனக்கு `அடுத்த தாதை நாம்` என அருளுமாப்போல, உடல் தலைவன் நீங்க, உயிர்த் தலைவனை (இறைவனை) எண்ணி வழிபடுவா ராயினர் திலகவதியார். இவ்வம்மையாரோ மணமுறிவு நிகழினும் தமக்கென உறுதி செய்யப்பட்ட கணவனார் மேலும் இவ்வுலகில் வாழ்ந்து வருவதால், அப்பெருமகனாரையே நினைந்து வாழ்ந்து வீடுபேறு அடைவாராயினர். அயலோர் தவமாவது,
``காதலர் இறப்பிற் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது
இன்னுயிர் ஈவர் ஈயா ராயின்
நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்,
நளியெரி புகாஅ ராயின் அன்பரோடு
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர்`` -மணிமேகலை , 2 , 42 - 48
என்பதாகும்.

பண் :

பாடல் எண் : 224

நாவலர்கோன் ஆரூரன்
தனைவெண்ணெய் நல்லூரின்
மேவுமருட் டுறையமர்ந்த
வேதியராட் கொண்டதற்பின்
பூவலருந் தடம்பொய்கைத்
திருநாவ லூர்புகுந்து
தேவர்பிரான் தனைப்பணிந்து
திருப்பதிகம் பாடினார்.

பொழிப்புரை :

திருநாவலூரராகிய நம்பியாரூரர், தம்மைத் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள திருவருட்டுறையுள் வீற்றிருந் தருளும் மறையவராகிவந்த இறைவன் தடுத்தாட் கொண்டதன்பின், மலர்கள் பலவும் மலர்ந்து விளங்குதற்கு இடனாய பொய்கைகளை உடைய திருநாவலூருக்குச் சென்று, அங்கு வீற்றிருந்தருளும் இறை வனைப் பணிந்து திருப்பதிகம் பாடுவாராயினர்.

குறிப்புரை :

இது போது அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 225

சிவனுறையுந் திருத்துறையூர்
சென்றணைந்து தீவினையால்
அவநெறியிற் செல்லாமே
தடுத்தாண்டாய் அடியேற்குத்
தவநெறிதந் தருளென்று 
தம்பிரான் முன்னின்று
பவநெறிக்கு விலக்காகுந்
திருப்பதிகம் பாடினார்.

பொழிப்புரை :

திருநாவலூரிலிருந்து சிவபெருமான் வீற்றிருந் தருளும் திருத்துறையூரை அணைந்து, தம் இறைவன் திருமுன்னி லையில் நின்று, என் தீவினைப்பயனால் உலகியல் உணர்வில் செல்லாதவாறு தடுத்து ஆளாகக் கொண்டருளினாய். அடியேற்கு யான் உய்தற்குரிய தவநெறியைத் தந்தருள வேண்டும் எனும் குறிப் பினையுடையதாய பிறவிப் பிணிக்கு விலக்காகும் திருப்பதிகத்தைப் பாடினார்.

குறிப்புரை :

இத்திருப்பதியில் பாடிய பதிகம் `மலையார் அருவி` (தி.7 ப.13) எனத் தொடங்கும் திருப்பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் பாடல்கள் தோறும் தவநெறி வேண்டும் எனும் குறிப்பு இடம் பெற்றுள் ளது. பதினோராவது பாடலில், `பொய்யாத் தமிழ் ஊரன் உரைத்தன வல்லார், மெய்யே பெறுவார்கள் தவநெறிதானே` (தி.7 ப.13) என ஓதுமாற்றான் இப்பதிகத்தை ஓதுவார்க்கும் தவநெறி கிட்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

பண் :

பாடல் எண் : 226

புலனொன்றும் படிதவத்திற்
புரிந்தநெறி கொடுத்தருள
அலர்கொண்ட நறுஞ்சோலைத் 
திருத்துறையூர் அமர்ந்தருளும்
நிலவுந்தண் புனலுமொளிர்
நீள்சடையோன் திருப்பாத
மலர்கொண்டு போற்றிசைத்து
வந்தித்தார் வன்றொண்டர்.

பொழிப்புரை :

ஆரூரர் வேண்டியவாறே, ஐம்பொறிகளும் தம் வயப்பட்டு நிற்கும் தவநெறியை இறைவன் கொடுத்தருள, அதனை மேற்கொண்ட ஆரூரர், மலர்கள் நிறைந்த மணம் மிக்க சோலைகள் சூழ்ந்த திருத்துறையூரில் வீற்றிருந்தருளும் பிறையும், சடையும் இருத் தற்கிடனாய நீண்ட சடையினையுடைய பெருமானின் திருவடி மலர் களை மனத்திற் கொண்டு அழகிய மலர்களால் வழிபாடு செய்து வணங்கினார்.

குறிப்புரை :

பொறிகள் தத்தம் வழியில் செல்லாது ஒருவழிப்பட்டு நிற்க, இறைவனை அகத்தே உணர்ந்தும், புறத்தே வழிபட்டும் நிற்கும் அநுபவமே இப்பாடற்கண் குறிக்கும் தவமாகும் . `தவத்தினில் உணர்த்த` என்னும் சிவஞானபோதமும் (சூத்.8). இத்தவத்தாலேயே இவர் திருக்கோயிலில் மலர் கொண்டு வழிபட்டார், இவ்வுரிமை அக் காலத்து வழிபடுவார் அனைவர்க்கும் இருந்தமை, `போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்` (தி.4 ப.3 பா.1) எனவரும் அப்பரடிகளின் திருவாக்கால் அறியப்படும். `இவ்வாற்றான் நம்பிகள் ஆன்மார்த்த பரார்த்தங்களாகிய இருவகைப் பூசைக்குமுரிய ஆதி சைவராதலும் உணர்க` எனச் சிவக்கவிமணியார் விளக்கம் தருவர் (பெரிய.பு. உரை).

பண் :

பாடல் எண் : 227

திருத்துறையூர் தனைப்பணிந்து
சிவபெருமான் அமர்ந்தருளும்
பொருத்தமா மிடம்பலவும்
புக்கிறைஞ்சிப் பொற்புலியூர்
நிருத்தனார் திருக்கூத்துத்
தொழுவதற்கு நினைவுற்று
வருத்தமிகு காதலினால்
வழிக்கொள்வான் மனங்கொண்டார்.

பொழிப்புரை :

திருத்துறையூரை வணங்கி மகிழ்ந்த ஆரூரர், அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சிவபெருமானை வழிபடுதற்கு ஏற்ற திருப்பதிகள் பலவற்றையும் சென்று வணங்கி, அழகிய தில்லைப் பதியின்கண் ஆடும் கூத்தப் பெருமானைத் தொழ நினைந்து அதற் குரிய முயற்சியும், பேரன்பும் மீதூர்ந்தவாறு வழிச் செல்ல மனம் கொண்டார்.

குறிப்புரை :

வருத்தம் - முயற்சி; `மூப்பே பிணியே வருத்தம் மென் மையொடு` (தொல். மெய்ப். 6) எனவரும் பகுதிக்குப் பேராசிரியர் கூறும் உரையும் காண்க. திருத்துறையூரிலிருந்து தில்லைக்குச் செல் லும் வழியில் சிவபெருமானை வழிபடுதற்கு ஏற்ற திருப்பதிகளாக வுள்ளன திருவதிகை, திருமாணிகுழி முதலாயினவாம். அவற்றை மேல்வரும் 228 மற்றும் 236 ஆகிய பாடல்களிற் சேக்கிழாரும் குறித்தருள்வர்.

பண் :

பாடல் எண் : 228

மலைவளர்சந் தகில்பீலி
மலர்பரப்பி மணிகொழிக்கும்
அலைதருதண் புனற்பெண்ணை
யாறுகடந் தேறியபின்
இலகுபசும் புரவிநெடுந்
தேர்இரவி மேல்கடலிற்
செலவணையும் பொழுதணையத்
திருவதிகைப் புறத்தணைந்தார்.

பொழிப்புரை :

மலையின்கண் தோன்றிய சந்தன மரங்களும், அகில் மரங்களும், மயிற்பீலிகளும், மலர்களும் ஆகிய இவைகளைத் தன்மீது பரவச் செய்து, முத்துக்களைக் கரையில் தந்து நிற்கும் அலை களை உடைத்தாகிய குளிர்ந்த நீரையுடைய பெண்ணை ஆற்றினைக் கடந்து, கரையேறிய பின்பு, விளங்குகின்ற பசிய நிறம் பொருந்திய குதிரை பூட்டிய நீண்ட தேரினையுடைய கதிரவன் மேல்திசைக் கடலில் சென்று அணைதற்குரிய மாலைக்காலம் வர, திருவதிகையின் புறத்து வந்தருளினார்.

குறிப்புரை :

கதிரவன் இவர்ந்து செல்லும் தேரை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்லும் என்பர். அவ்வேழு குதிரைகளும் செந்நீலம், கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், பொன்சிவப்பு, சிவப்பு ஆகிய எழு நிறங்களையுடையன என்று கூறுவர். இவற்றுள் இங்குப் பச்சை நிறத்தைக் குறிக்கவே, ஏனைய ஆறும் அதன்கண் அடங்க ஏழு நிறமும் குறித்தார் என்பர் சிவக்கவிமணி அவர்கள் (பெரிய.பு. உரை).

பண் :

பாடல் எண் : 229

உடையவர சுலகேத்து 
முழவாரப் படையாளி
விடையவர்க்குக் கைத்தொண்டு
விரும்புபெரும் பதியைமிதித்
தடையுமதற் கஞ்சுவனென்
றந்நகரிற் புகுதாதே
மடைவளர்தண் புறம்பணையிற்
சித்தவட மடம்புகுந்தார்.

பொழிப்புரை :

ஆளுடைய அரசு என உலகவர் போற்றுகின்ற உழவாரப் படையினையுடைய திருநாவுக்கரசர், இறைவனுக்குக் கைத் தொண்டுகளை விரும்பிச் செய்த பெரும் திருப்பதியாகிய இத்திரு வதிகையினுள், காலால் நடந்து செல்வதற்கு நான் அஞ்சுகின்றேன் எனும் நினைவுடையராய், அந்நகரினுள் புகாமல் அதன் புறத்தே யுள்ள சித்தவட மடத்திற்குச் செல்வாராயினர்.

குறிப்புரை :

ஆளுடைய அரசு - இறைவற்கு அடிமைத் திறம் பேணிவரும் அரசு. உழவாரம் கொண்டு யாண்டும் பணிசெய்து வந்தமைபற்றி நாவரசர் உழவாரப் படையாளி எனவும் அழைக்கப் பெற்றார். சித்தவட மடம் - இது திருவதிகைக்கு வட மேற்கில் உள்ள பழமையானதொரு மடம்.

பண் :

பாடல் எண் : 230

வரிவளர்பூஞ் சோலைசூழ்
மடத்தின்கண் வன்றொண்டர்
விரிதிரைநீர்க் கெடிலவட
வீரட்டா னத்திறைதாள்
புரிவுடைய மனத்தினராய்ப்
புடையெங்கு மிடைகின்ற
பரிசனமுந் துயில்கொள்ளப்
பள்ளியமர்ந் தருளினார்.

பொழிப்புரை :

வரிப் பாடல்களை இனிது ஒலிக்கும் வண்டுகளின் கூட்டம் மிக்க சோலைகள் சூழ்ந்த அத்திருமடத்தில், ஆரூரர் விரிந்த அலைகளையுடைய நீர்மிக்க கெடில நதிக்கு வடக்கே இருக்கும் திரு வீரட்டானத்தில் வதிந்தருளும் இறைவனின் திருவடிகளை இடை யறாது உளங்கொண்ட பண்பினராய், தம்மைச் சூழப் பொருந்திய, அடியவர்கள் துயிலத் தாமும் துயின்றார்.

குறிப்புரை :

வரி - வரிப்பாட்டு: ஈண்டு இதனை ஒலிக்கும் வண்டு களைக் குறிக்கும்.

பண் :

பாடல் எண் : 231

அதுகண்டு வீரட்டத்
தமர்ந்தருளும் அங்கணரும்
முதுவடிவின் மறையவராய்
முன்னொருவ ரறியாமே
பொதுமடத்தி னுட்புகுந்து
பூந்தாரான் திருமுடிமேற்
பதுமமலர்த் தாள்வைத்துப்
பள்ளிகொள்வார் போல்பயின்றார்.

பொழிப்புரை :

ஆரூரர் அவ்வாறு துயில் கொண்டிருப்பதைக் கண்ட இறைவனும், முதிய வடிவு கொண்ட மறையவராய், முன்பு ஒருவரும் அறியாதபடி அப்பொது மடத்தின் உள்ளே புகுந்து, ஆரூர ரின் திருமுடியின் மேலே தம் தாமரை மலர் போன்ற திருவடிகளை வைத்துத், தாமும் துயில்கொள்வாரைப் போன்று இருந்தார்.

குறிப்புரை :

பொதுமடம் - அன்பராயினார் அனைவரும் தங்குதற் குரிய திருமடம். பூந்தாரான் - மலர்களாலாய மாலையை உடையவன்: நம்பியாரூரர். மலர்கள் எனப் பொதுப்படக் கூறினும் ஈண்டுத் தாமரை யைக் குறிக்கும்; `அல்லியந் தாமரைத்தார் ஆரூரன்` என ஆரூரர் தம்மைக் குறித்தலின் என்க. பதுமமலர் - தாமரை மலர்.

பண் :

பாடல் எண் : 232

அந்நிலைஆ ரூரனுணர்ந்
தருமறையோ யுன்னடியென்
சென்னியில்வைத் தனையென்னத்
திசையறியா வகைசெய்தது
என்னுடைய மூப்புக்காண்
என்றருள அதற்கிசைந்து
தன்முடியப் பால்வைத்தே
துயிலமர்ந்தான் தமிழ்நாதன்.

பொழிப்புரை :

அவ்வாறு தம்முடிமேல் அடிவைத்திருப்பதை அறிந்த ஆரூரர், அரிய மறைகளை உணர்ந்த பெரியீர்! உம் அடிகளை என்முடிமேல் வைத்தது ஏன்? என வினவ, அதற்கு அவரும், என்னு டைய மூப்பு என்னைத் தெரியாமல் செய்துவிட்டது என்று கூற, தமிழ்த் தலைவராய ஆரூரரும், அதனை ஏற்றுக் கொண்டு, தம் முடியைப் பிறி தோரிடத்திலே வைத்துத் துயில் கொள்வாராயினர்.

குறிப்புரை :

தம் அடியை முடிமேல் வைத்தது முதுமையாலேயாம் என. ஆரூரர் அவரைக் கடியாது, வேற்றிடத்தில் தம் முடி வைத்துத் துயில் கொள்ள நினைந்தது அவர்தம் அரிய பண்பாட்டைக் காட்டு கிறது. இக்கால இளைஞர் உலகம் இதனை எண்ணுமாக.

பண் :

பாடல் எண் : 233

அங்குமவன் திருமுடிமேல்
மீண்டுமவர் தாள்நீட்டச்
செங்கயல்பாய் தடம்புடைசூழ்
திருநாவ லூராளி
இங்கென்னைப் பலகாலும்
மிதித்தனைநீ யாரென்னக்
கங்கைசடைக் கரந்தபிரா
னறிந்திலையோ எனக்கரந்தான்.

பொழிப்புரை :

அவ்வாறு துயில் கொண்ட பிறிதோரிடத்தும், முதியவர் எனக் கூறிய அவர்தம் திருவடிகளை அவர் முடிமேல் மீண்டும் நீட்டவே, செழுமையவாகிய மீன்கள் பாய்ந்து விளையாடு கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருநாவலூரில் தோன்றிய ஆருரர், இவ் விடத்தே என்னைப் பலகாலும் மிதித்தாய், நீ யார் என்று வினவ, கங்கையைத் தம் திருச்சடையின்கண் ஒருமருங்கே மறைத்து நிற்கச் செய்த பெருமானாகிய மறையவரும், `என்னை நீ அறியாயோ` எனக் கூறி மறைந்தனர்.

குறிப்புரை :

இருமுறை மிதித்தவரைப் பலகாலும் மிதித்தனை எனக் கூறியது, ஒன்றல்லன வெல்லாம் பல என்னும் தமிழ் வழக்குப் பற்றியாம். இறைவனின் கருணையை ஆரூரர் அறியாமை கண்டு `அறிந்திலையோ` என ஈண்டுக் கூறியதையும், முன்னர் இறைவன் தடுத்தாட்கொள்ள வந்தபோது `திருமறை முனிவரே நீர் எங்குளீர்` என அவையத்தார் கேட்க, `என்னை ஒருவரும் அறியீராகில் போதும்` எனக் கூறியதையும் ஒப்பிட்டுக் காண, உயிர் உணர்த்த உணரும் பான்மையதாதலை அறியலாம்.

பண் :

பாடல் எண் : 234

செம்மாந்திங் கியானறியா
தென்செய்தே னெனத்தெளிந்து
தம்மானை யறியாத
சாதியா ருளரே யென்று
அம்மானைத் திருவதிகை
வீரட்டா னத்தமர்ந்த
கைம்மாவி னுரியானைக்
கழல்பணிந்து பாடினார்.

பொழிப்புரை :

இவ்விடத்து இறுமாப்படைந்து யான் அறியாமல் என்ன செயலைச் செய்துவிட்டேன்! எனக் கலங்கித், தெளிவடைந்து, தந்தையாராயும், திருவதிகை வீரட்டானத்து எழுந்தருளி இருப்பவ ராயும், யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டவராயும் உள்ள பெருமானின் திருவடிகளை வணங்கித் `தம்மானை யறியாத சாதியா ருளரே` (தி.7 ப.38 பா.1) எனும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

குறிப்புரை :

இவ்வாறு தொடங்கியருளிய பதிகத்தில் பத்தாவது பாடலில் `வன்றொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன அன்பனை` (தி.7 ப.38 பா.10) எனவரும் குறிப்பே, `செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன்?` எனச் சேக்கிழார் அருளுதற்குக் காரணமாயிற்று. செம்மாந்து - இறுமாந்து. தனக்குரிய தலைவனைக் கூட அறியாதிருந்த அறியாமை, செருக்கினால் ஆயது என்பார் `செம்மாந்து` என்றார். `சிம்மாந்து சிம்புளித்துச்` (தி.7 ப.30. பா.1) என்பது தலை நிமிர்ந்து கண்களைச் சிறிது மூடி எனப் பொருள்படும்.
`சீரூர்ப்பாட லாட லறாத செம்மாப் பார்ந்து` என்பது பெருமா னின், சீர்மை மிகுந்த பாடல்களும் அவ்வுள்ளுணர்வால் தம்மை அறியாது ஆடும் ஆடல்களும் நீங்காத பெருமிதத்துடன் கூடி` எனப் பொருள்படும். எனவே ஈண்டு வரும் இறுமாப்பு எனப் பொருள் படும் `செம்மாந்து` என்பதற்கு, அவை மேற்கோளாகா. அங்ஙனமா கவும் சிவக்கவிமணியார் (பெரிய.பு. உரை) அவற்றை ஈண்டு மேற்கோளாகக் காட்டி விளக்கியிருப்பது இயைபுடைத்தன்றாம். இறுமாப்பு என்பதும், பெருமிதம் என்பதும் வேறுவேறாய நிலைய வாம். ஒரோவழிப் பெருமிதம் எனும் பொருளில் இறுமாப்பு எனும் சொல் வருதலும் உண்டு. `இறுமாந் திருப்பன்கொலோ` (தி.4 ப.9 பா.11) என்புழி அப்பொருளில் வருதல் காண்க. கைம்மா - துதிக்கையையுடைய யானை.

பண் :

பாடல் எண் : 235

பொன்றிரளும் மணித்திரளும்
பொருகரிவெண் கோடுகளும்
மின்றிரண்ட வெண்முத்தும்
விரைமலரும் நறுங்குறடும்
வன்றிரைக ளாற்கொணர்ந்து
திருவதிகை வழிபடலால்
தென்திசையில் கங்கையெனுந்
திருக்கெடிலம் திளைத்தாடி.

பொழிப்புரை :

பொற்பொடிகளின் தொகுதியையும், மணிகளின் தொகுதியையும், போர் செய்தற்குரிய யானைகளின் வெண்மையான தந்தங்களையும், ஒளி மிகுந்த வெண்மையான முத்துக்களையும், நறுமணம் உடைய மலர்களையும், சந்தனக் கட்டைகளையும் வலிய அலை என்னும் கைகளால் கொண்டுவந்து திருவதிகை என்னும் திருப்பதியை வழிபாடு செய்தலால், தென்திசையில் கங்கை என்று அறிஞர்கள் கூறும் திருக்கெடிலப் பேராற்றில் படிந்து முழுகி.

குறிப்புரை :

மின் - ஒளி. குறடு - சந்தனக் கட்டைகள். நாட்டுச் சிறப்பில் காவிரியை அடியவராகக் காட்டியது போல (தி.12 சரு.1-2 பா.7), ஈண்டும் கெடிலப் பேராற்றைக் கங்கையொடு ஒப்பிட்டு அடியவராகக் காட்டுகின்றார். `தென்றிசைக் கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே` (தி.4 ப.10 பா.6) என வரும் அப்பரடிகள் திருவாக்கினை நினைவு கூர்ந்தவாறு ஆசிரியர் அருளுவது எண்ணத்தக்கது.

பண் :

பாடல் எண் : 236

அங்கணரை அடிபோற்றி அங்ககன்று மற்றந்தப்
பொங்குநதித் தென்கரைபோய்ப் போர்வலித்தோள் மாவலிதன்
மங்கலவேள் வியிற்பண்டு வாமனனாய் மண்ணிரந்த
செங்கணவன் வழிபட்ட திருமாணி குழியணைந்தார்.

பொழிப்புரை :

அழகிய திருக்கண்களையுடைய பெருமான் திருவடிகளை வணங்கி, அவ்விடத்தினின்றும் நீங்கிப் பொங்குகின்ற நீரையுடைய அப்பேராற்றின் தென்கரை வழியே சென்று, போர் செய்தலில் வலிமை உடைய தோளையுடைய மாவலி என்னும் பேரரசனின் மங்கலமான வேள்வியில் முன்னாளில் மிகக் குறுகிய வடிவாய்ச் சென்று, மூவடி மண் இரந்த திருமால் வழிபாடு செய்த திருமாணிகுழி என்னும் திருப்பதியை அடைந்தருளினார்.

குறிப்புரை :

அங்கணரை அடிபோற்றி என்பதால் இவ்விடத்துப் பதிகம் பாடியிருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும் இப்பதிகம் கிடைத்திலது. மாவலி - இவனோர் அரசன். திருமால் இவனை அழிக்கவே மூன்றடி மண் கேட்க, ஈரடியால் மூவுலகும் அளந்து எஞ்சிய ஓரடிக்கு அம்மன்னவன் தலையையே தாம் பெறுவதற்குரிய இடனாகக் கொண்டார் என்பது வரலாறு. இப்பாவம் நீங்கத் திருமால் வழிபட்ட பதி இதுவாகும். வாமனன் - திருமால் மிகக் குறுகிய வடிவு கொண்டு எடுத்த திருவுருவம். மாணி - பிரமச்சாரி; இவ்வடிவில் வந்தவர் திருமால்.

பண் :

பாடல் எண் : 237

பரம்பொருளைப் பணிந்துதாள்
பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு
வரந்தருவான் தினைநகரை 
வணங்கினர்வண் டமிழ்பாடி
நரம்புடையாழ் ஒலிமுழவின் 
நாதவொலி வேதவொலி
அரம்பையர்தங் கீதவொலி
அறாத்தில்லை மருங்கணைந்தார்.

பொழிப்புரை :

திருமாணிகுழியில் வீற்றிருந்தருளும் இறை வனை வணங்கி, அவ்விடத்தினின்றும் சென்று அடியவர்க்கு வேண்டும் வரங்களைத் தந்தருளும் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தினை நகரை வணங்கி, வளமான திருப்பதிகத்தைப் பாடி, நரம்பு களையுடைய யாழோசையும், முழவோசையும், நான்மறையோசை யும், தெய்வமகளிரின் இன்னிசைப் பாடல் ஓசையும் ஆகிய இவைகள் எக்காலமும் நீங்காதிருக்கும் தில்லையின் அருகே அடைந்தருளினார்.

குறிப்புரை :

திருத்தினை நகரில் பாடிய பதிகம் `நீறு தாங்கிய` (தி.7 ப.64) எனத் தொடங்கும் திருப்பதிகமாகும். இப்பதிகப் பாடல்தொறும் `திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே` என வருவதால், இத்திருப்பதியைச் சென்று அடையுமுன் பாடப்பட்டதெ னத் தெரிகிறது. இது பற்றியே சேக்கிழாரும் தினை நகரை வணங்கினர் எனக் கூறி, பின் `வண்டமிழ் பாடி` எனக் குறித்தருளுகின்றார். நெஞ் சறிவுறுத்தலாக அருளப் பெற்றிருக்கும் இப்பதிகம், பன்முறையும் படித்து இன்புறுதற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 238

தேம லங்கலணி மாமணி மார்பில்
செம்ம லங்கயல்கள் செங்கம லத்தண்
பூம லங்கவெதிர் பாய்வன மாடே
புள்ள லம்புதிரை வெள்வளை வாவித்
தாம லங்குகள் தடம்பணை சூழுந்
தன்ம ருங்குதொழு வார்கள்தம் மும்மை
மாம லங்களற வீடருள் தில்லை
மல்ல லம்பதியி னெல்லை வணங்கி.

பொழிப்புரை :

தேன் பொருந்திய புதிய தாமரை மலராலாய மாலையையும், அணிகலனாகிய சிறந்த மணிமாலையையும் அணிந்த மார்பினையுடைய ஆரூரர், அருகில் பறவைகள் ஒலிக்கும் அலை யோடு கூடிய வெண்மையான சங்குகளை உடைத்தாகிய குளத்திடத் துள்ள குளிர்ந்த செந்தாமரை மலர்கள் அசையுமாறு அழகிய கயல் மீன்கள் பாய்தற்கு ஏதுவாக, மலங்கு மீன்கள்அகன்ற வயல்களில் சூழ்கின்ற அத்தில்லையின் பக்கத்தே வழிபடுவோருடைய மும்மலங்க ளும் கெட வீடுபேற்றை வழங்கியருளும் வளமும் அழகும் தவழும் திருஎல்லையை வணங்கி.

குறிப்புரை :

தேம் அலங்கல் - தேனையுடைய மலர்மாலை; தாமரை மாலை. செம்மல் - நம்பியாரூரர். பறவைகளை உடையதும், நீர்ப்பெருக்கால் அலைகளொடு கூடியதும், வெண்மையான சங்குகளை உடையதுமான குளம். இக்குளத்தில் உள்ள தாமரை மலர்கள் அசையுமாறு மீன்கள் பாய்கின்றன. அதன் அயலிலிருக்கும் வயல்களில் `மலங்கு` என்னும் ஒருவகையான மீன்கள் சூழ உள்ளன. இவ்வாறாய திருப்பதியே தில்லையாம். இத்தகைய திருப்பதியின் கண் உள்ள பெருமானை வழிபடுவார்க்கு இறைவன் மும்மலங்களும் கெட வீடு அருளுவன் என்கின்றார் சேக்கிழார். இதனால் நீர்வளம், நிலவளம் ஆகிய உலகியல் நலன்களும், பாச நீக்கமும் சிவப்பேறும் பெறுதற்குரிய அருளியல் நலன்களும் குறித்தாராயிற்று.

பண் :

பாடல் எண் : 239

நாக சூதவகு ளஞ்சர ளஞ்சூழ்
நாளி கேரமில வங்க நரந்தம்
பூக ஞாழல்குளிர் வாழை மதூகம்
பொதுளும் வஞ்சிபல வெங்கு நெருங்கி
மேக சாலமலி சோலைக ளாகி
மீது கோகில மிடைந்து மிழற்றப்
போக பூமியினு மிக்கு விளங்கும்
பூம்பு றம்பணை கடந்து புகுந்தார்.

பொழிப்புரை :

புன்னை மரமும், மாமரமும், மகிழமரமும், சரள மரமும், சூழ்ந்திருக்கின்ற தென்னை மரமும், இலவங்க மரமும், நாரத்த மரமும், பாக்கு (கமுகு) மரமும், குங்கும மரமும், குளிர்ந்த வாழை மரமும், இலுப்பை மரமும், நெருங்கிய வஞ்சி மரமும் ஆகிய பல மரங்களும் எவ்விடத்தும் நெருக்கம் உடையவாய், மேகத் தொகுதி களைத் தாங்கி நிற்கும் சோலைகளை உடைத்தாய், குயில்கள் நெருங்கிக் கூவ, போக பூமியினும் சிறந்து விளங்கும் பொலிவினை உடைத்தாகிய மருத நிலத்தைக் கடந்து, தில்லையின் திருஎல்லையுள் சென்றருளினார்.

குறிப்புரை :

நாகம் - புன்னை. சூதம் - மா. வகுளம் - மகிழமரம். நாளிகேரம் - தென்னை. நரந்தம் - நாரத்தை. போக பூமி - இன்பச்சிறப் பொன்றே உள்ள உலகு. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 240

வன்னி கொன்றைவழை சண்பகம் ஆரம்
மலர்ப்ப லாசொடு செருந்திமந் தாரங்
கன்னி காரங்குர வங்கமழ் புன்னை
கற்பு பாடலம் கூவிள மோங்கித்
துன்னு சாதிமரு மாலதி மௌவல்
துதைந்த நந்திகர வீர மிடைந்த
பன்ம லர்ப்புனித நந்தனவ னங்கள்
பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்.

பொழிப்புரை :

வன்னி மரமும், கொன்றை மரமும், சுரபுன்னை மரமும், சண்பக மரமும், சந்தன மரமும், பூக்களை உடைய பலாச மரத்தொடு, செருந்தி மரமும், மந்தார மரமும், கோங்கு மரமும், குரா மரமும், மணம் கமழ்கின்ற புன்னை மரமும், கற்பக மரமும், பாதிரி மரமும், வில்வ மரமும் ஆகிய இவைகளால் நிரம்பப் பெற்றும், நெருங்கிய சிறுசண்பகமும், நறுமணமுடைய முல்லையும், மல்லிகையும் ஆகிய மலர்கள் நிரம்பப்பெற்றும், இதழ்கள் நெருங்கிய நந்தியாவர்த்தம், அலரி ஆகிய கொடிகளும், செடிகளும் செறியப் பெற்றும் உளவாய நெருங்கிய பல மலர்களையுடைய தூய திருநந்தனவனங்களை, மணம் கமழ்கின்ற மாலையையுடைய ஆரூரர் வணங்கிச் சென்றார்.

குறிப்புரை :

வழை - சுரபுன்னை. ஆரம் - சந்தனமரம். கன்னிகாரம் - கோங்குமரம். கற்பு - கற்பகம் (பாரி சாதம்). பாடலம் - பாதிரி. கூவிளம் - வில்வம். மௌவல் - மல்லிகை. கரவீரம் - அலரி.

பண் :

பாடல் எண் : 241

இடம ருங்குதனி நாயகி காண
ஏழ்பெ ரும்புவன முய்ய வெடுத்து
நடந வின்றருள் சிலம்பொலி போற்றும்
நான்ம றைப்பதியை நாளும் வணங்கக்
கடல்வ லங்கொள்வது போற்புடை சூழுங்
காட்சி மேவிமிகு சேட்செல வோங்குந்
தடம ருங்குவளர் மஞ்சிவர் இஞ்சித்
தண்கி டங்கையெதிர் கண்டும கிழ்ந்தார்.

பொழிப்புரை :

இடப்பக்கத்தில் நின்று உமையம்மையார் காணவும், பெருமையுடைய ஏழுலகத்தாரும் உய்யவும், தூக்கிய திருவடி கொண்டு ஆடியருளுகின்ற அத்திருவடியின் சிலம்போசை யைப் போற்றி மகிழும் நான்மறைகளும் வாழ்கின்ற அத்திருத்தில் லையை, நாள்தோறும் வணங்குதற்காகக் கடல் வலங்கொண்டிருப்பது போல, அந்நகரைச் சூழ்ந்திருக்கும் தோற்ற முடையதாய், நெடுந் தொலைவு உயர்ந்தும் அகன்றும் மேல் இவர்ந்தும் நிற்கும் மேகங்கள் சூழ்ந்து நிற்கும் மதிலைச் சூழ்ந்திருக்கும் குளிர்ந்த அகழியை ஆரூரர் எதிர்கண்டு மகிழ்ந்தார்.

குறிப்புரை :

தில்லைப் பதியைச் சூழவிருக்கும் அகழி, அந்நகரைக் கடல் வலம்கொண்டாற் போல் அமைந்திருந்தது. எனவே அகழியின் ஆழமும், நீர்ப்பரப்பும், குறித்தவாறாயிற்று. வலம்கொண்டது போல் எனும் தற்குறிப்பேற்றத்தால் அங்குள்ள பத்திமைப்பான்மையையும் குறித்தாராயிற்று.

பண் :

பாடல் எண் : 242

மன்று ளாடுமது வின்னசை யாலே
மறைச்சு ரும்பறை புறத்தின்  மருங்கே
குன்று போலுமணி மாமதில் சூழுங்
குண்ட கழ்க்கமல  வண்டலர் கைதைத்
துன்று  நீறுபுனை மேனிய வாகித் தூய  
நீறுபுனை தொண்டர்க ளென்னச்
சென்று சென்றுமுரல் கின்றன  கண்டு
சிந்தை அன்பொடு திளைத்தெதிர் சென்றார்.

பொழிப்புரை :

பொன்னம்பலத்தில் ஆனந்த நடனம் செய்தருளும் திருவடியாகிய தாமரை மலரின்கண் உள்ள இன்பத் தேனைத் தாம் உண்ண வேண்டும் எனும் ஆசையால் மறைகளாகிய வண்டுகள் முழங்குகின்ற சூழலையுடைய அத்தில்லையின் மருங்கே உள்ள மலைபோல் உயர்ந்த அழகிய பெருமையினையுடைய மதிலைச் சூழ்ந்த ஆழமான அகழியிலிருக்கும் தாமரை மலர்களில், வண்டுகளானவை அதனருகில் அலர்ந்து நிற்கும் தாழம் பூவினிடத்திருக்கும் மகரந்தப் பொடியில் தோய்ந்து, சிறந்த திருநீற்றை அணிந்த உடம்பினை உடையவாய்த் தூய திருநீற்றை அணிந்துநிற்கும் அடியவர்கள் என்று சொல்லுமாறு அவ்விடத்துச் சென்றுசென்று ஒலிப்பதைக் கண்டு, மனத்தில் எழுந்த அன்போடு பத்தியிலும் மூழ்கி எதிராகச் சென்றார் ஆரூரர்.

குறிப்புரை :

தாழம்பூவின் மகரந்தப் பொடியில் துதைந்த வண்டுகள், அகழியிலிருக்கும் தாமரைகளில் சென்றுசென்று ஒலிப்பது, திருநீறு அணிந்த தொண்டர்கள் பெருமானிடத்துச் சென்று போற்றி மகிழ்வதைப் போன்றிருந்தது. ஆருரர் இக்காட்சியைக் கண்டு மகிழ்ந்தார். மன்றுளாடும் மது - பொன்னம்பலத்தில் ஆடியருளுகின்ற கூத்தப் பிரான். இப்பெருமானைப் போற்றி மகிழும் வண்டுகள் மறைகளாகிய வண்டுகளாம். இவ்வண்டுகளைப் போன்றே, அகழியில் செந்தாமரை மலர்களில் மொய்த்து நிற்கும் வண்டுகளும் காட்சியளிக்கின்றன.

பண் :

பாடல் எண் : 243

பார்வி ளங்கவளர் நான்மறை நாதம்
பயின்ற பண்புமிக வெண்கொடி யாடும்
சீர்வி ளங்குமணி நாவொலி யாலும்
திசைக ணான்கெதிர் புலப்பட லாலும்
தார்வி ளங்குவரை மார்பின் அயன்பொற்
சதுர்மு கங்களென வாயின தில்லை
ஊர்வி ளங்குதிரு வாயில்கள் நான்கின்
உத்த ரத்திசை வாயின்மு னெய்தி.

பொழிப்புரை :

உலகத்தார் அறநெறி வழுவாமல் இருத்தற்கு ஏதுவாக வளர்கின்ற நான்மறைகளின் ஒலி அங்குள்ளார் பலரும் ஓதுவதால் மிக்கு இருக்கவும், வெண்மையான கொடிகள் அசையவும், சிறப்புமிக்க நல்ல மணிகளின் ஒலி எழவும், அவ்வொலி நான்கு திசைகளிலும் வெளிப்பட்டு வரவும், மாலையை அணிந்த மலை போலும் மார்பினையுடைய நான்முகனின் அழகிய நான்கு முகங்கள் போன்றிருக்கும் நான்கு வாயில்களையுடைய தில்லைப்பதியின்கண் வடக்குவாயிலின் திருமுன்பு அடைந்து.

குறிப்புரை :

இப்பாடலில் வரும் முதல் மூன்று அடிகளும் நான் முகனுக்கும், தில்லைப்பதிக்கும் பொதுப்பட அமைந்துள்ளன. நான் முகனுக்கு ஆகும்பொழுது நான்மறை பயின்ற நாவினை உடைய வனும், அந்நாவின்கண் கலைமகள் இருத்தலின் இடையறாது வரும் நா ஒலி உடையவனும், நான்கு முகங்களை உடையவனும் ஆனவன் எனப் பொருள்படும். தில்லையம்பதிக்கு ஆகும் பொழுது நான்மறைகளும் இடையறாது பயிலப்பட்டு வருவதும், கட்டப்பட்ட வெண் கொடிகள் பலவும் அசைந்து விளங்குவதும், மணிகளின் ஒலி ஆங்காங்கு கேட்கப் பெறுவதும், நான்கு வாயில்களை உடையதுமான `தில்லை` எனப் பொருள்படும். வெண்கொடி - நான்முகனுக்கு ஆகும்போது கலைமகளைக் குறிக்கும். தில்லைக்கு ஆகும்பொழுது வீதிகளில் கட்டப் பெற்றிருக்கும் கொடிகளைக் குறிக்கும். சதுர்முகங்கள் - நான்முகனைக் குறிக்கும்பொழுது நான்கு முகங்களைக் குறிக்கும். தில்லையைக் குறிக்கும் பொழுது நான்கு திசைகளிலும் உள்ள திருவாயிலைக் குறிக்கும். உத்தரத்திசை - வடக்குத் திக்கு.
அவ்வவ் ஊர்களின் பொலிவையும் மகிழ்வையும் காட்டி நிற்பன கொடிகளாம். `வீதிகடோறும் வெண்கொடியோடு விதானங் கள்` (தி.4 ப.21 பா.3) `விதானமும் வெண்கொடியு மில்லா வூரும் அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா வூரும் அவை யெல்லாம் ஊரல்ல` (தி.6 ப.95 பா.5) எனவரும் அப்பரடிகளின் திருவாக்குகளும் காண்க.

பண் :

பாடல் எண் : 244

அன்பின் வந்தெதிர் கொண்டசீ ரடியார்
அவர்க ளோநம்பி யாரூரர்  தாமோ
முன்பி றைஞ்சினர் யாவரென் றறியா
முறைமை யாலெதிர்  வணங்கி மகிழ்ந்து
பின்பு கும்பிடும் விருப்பி னிறைந்து
பெருகு  நாவனக ரார்பெரு மானும்
பொன்பி றங்குமணி மாளிகை நீடும்
பொருவி றந்ததிரு வீதி புகுந்தார்.

பொழிப்புரை :

அன்பு மீதூர விரும்பி வந்து எதிர்கொண்ட சிறந்த அடியவர்களோ அல்லது நம்பியாரூரரோ இவர்களுள் முற்பட வணங்கியவர்கள் இன்னார் என்று அறிய இயலாத முறைமையில், எதிரெதிர் வணங்கி மகிழ்ந்து, பின் கூத்தப்பெருமானை வழிபட இருக்கும் பேரவாவால் தமது உள்ளம் நிறைந்து அவ்வன்புப் பெருக் கெடுக்கும் நம்பியாரூரரும், பொன்மயமாய் நிற்கும் அழகிய திரு மாளிகைகள் மிக்கு இருக்கும் ஒப்பற்ற அத்தில்லைத் திருவீதியில் சென்றருளினார்.

குறிப்புரை :

நம்பியாரூரரும் அவரை எதிர்கொண்டு வந்த அடியவர்களும் யார் முற்பட வணங்கினர் என அறிய இயலாதவாறு ஒருவரையொருவர் முந்த வணங்கியுள்ளமை அறியலாம்.
பின்பு கும்பிடும் - அடியவர் வணக்கத்திற்குப் பின்பு பெருமா னைக் கும்பிடவிருக்கும். ஓகாரங்கள் ஐயப்பொருளன.
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 245

அங்கண் மாமறை முழங்கும் மருங்கே
ஆட ரம்பையர் அரங்கு  முழங்கும்
மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும்
வாச மாலைகளின் வண்டு முழங்கும்
பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர்
போற்றி சைக்குமொலி எங்கும் முழங்கும்
திங்கள் தங்குசடை  கங்கை முழங்கும்
தேவ தேவர்புரி யுந்திரு வீதி.

பொழிப்புரை :

இளம்பிறை வாழும் திருச்சடையில் விளங்குகின்ற கங்கையை வைத்திருக்கும் தேவர்க்கும் தேவனாய கூத்தப் பிரான், விரும்பும் அத்திருவீதியினிடத்துச் சிறந்த நான்மறைகளும் முழங்கும், அவ்வீதியின் அருகில் அரம்பையர் நடனம் செய்கின்ற கூத்து இயலும். மேகம் தவழும் வானின்கண் ஐந்து தேவ ஒலிகளும் ஒலிக்கும். நறுமணம் கமழ்கின்ற மாலைகளில் வண்டுகள் ஒலிக்கும். மிகுகின்ற இன்பக் கண்ணீரைக் கண்களினின்றும் பொழிகின்ற அடியவர்களின் திருவாயில் போற்றி உரைகள் எங்கும் ஒலிக்கும்.

குறிப்புரை :

தில்லைத் திருவீதிகளில் கேட்கும் மங்கல ஒலிகள் இவையெனவே, ஏனைய அவ ஒலிகளும், அமங்கல ஒலிகளும் அங்குக் கேட்கப்படா என்பது பெற்றாம்.

பண் :

பாடல் எண் : 246

போக நீடுநிதி மன்னவன் மன்னும்
புரங்க ளொப்பன வரம்பில வோங்கி
மாக முன்பருகு கின்றன போலும்
மாளி கைக்குல மிடைந்த  பதாகை
யோக சிந்தைமறை யோர்கள் வளர்க்கும்
ஓம தூமமுயர் வானி லடுப்ப
மேக பந்திகளின் மீதிடை எங்கும்
மின்னு  டங்குவன வென்ன விளங்கும்.

பொழிப்புரை :

இன்பம் துய்த்தற்கு ஏதுவான பொருள்களால் நிரம்பப் பெற்று அவற்றை இடையீடின்றித் துய்த்தும் வரும் குபேரன் வாழும் அரண்மனையை ஒத்த தில்லைத் திருமாளிகைகள், எண்ணி றந்தனவாய் உயர்ந்து மேகமண்டலத்தினைத் தம்முள் அடக்குவன போல உயர்ந்து விளங்க, அவற்றில் கட்டப் பெற்றிருக்கும் நெருங்கிய கொடிகளில் அமைந்த ஆடைகள், இறைவனை மனத்தகத்து எண்ணி ஒருமையுற்று நிற்கும் மறையவர்கள் வளர்க்கும் வேள்வியில் எழும் ஓமப்புகை விண்ணை அடைய, அதனால், நிரல்பட அமைந்த மேகங்க ளிடத்து இடைஇடையே மின்னல் தோன்றி மறைவனபோல ஒளி விட்டு அசைந்து நிற்கும்.

குறிப்புரை :

தில்லைப் பதியில் விளங்கும் மாளிகைகளிடத்து உயர்ந்து விளங்கும் கொடிகள், ஓமப்புகையால் எழுந்த மேகக் கூட்டங்களில், இடையிடையே தோன்றி மறையும் மின்னல் போல ஒளிவிட்டு நிற்கின்றன என்பதாம். தில்லையின்கண் உள்ள மாளிகை கள் வளத்தால் குபேரனின் அரண்மனையை ஒத்தும், நெடிய உயரத் தால் மேகக் கூட்டங்களைத் தம்முள் அடக்குவனவாக அமைந்தும் விளங்குகின்றன. அங்குக் கட்டப்பட்டிருக்கும் கொடிகள் மறையவர் கள் வளர்க்கும் வேள்விக் கண் எழுந்த புகையாகிய மேகக் கூட்டங் களின் மின்னல் என ஒளிவிட்டு நிற்கும் என்பது ஆசிரியர் கருத்தாம். நிதி மன்னவன் - குபேரன். புரங்கள் - அரண்மனைகள். பருகுதல் - தம்முள் அடக்குதல். பதாகை - கொடிகள். யோக சிந்தை - திருவருளோடு ஒன்றிய சிந்தை. மேகபந்திகள் - மேகக் கூட்டங்கள்.

பண் :

பாடல் எண் : 247

ஆடு தோகைபுடை நாசிகள் தோறும்
அரணி தந்தசுட ராகுதி  தோறும்
மாடு தாமமணி வாயில்கள் தோறும்
மங்க லக்கலசம் வேதிகை தோறுஞ்
சேடு கொண்டவொளி தேர்நிரை தோறுஞ்
செந்நெ லன்னமலை சாலைகள் தோறும்
நீடு தண்புனல்கள் பந்தர்கள் தோறும்
நிறைந்த தேவர்கணம் நீளிடை தோறும்.

பொழிப்புரை :

ஆடுகின்ற மயில்கள், திருக்கோபுர நிலைகளில் அமைக்கப் பெற்றிருக்கும் முகங்கள்தோறும் உள்ளன. தீக்கடைக் கோலினால் உருவாக்கப்பட்ட நெருப்புகள், வேள்விச் சாலைகள் தோறும் உள்ளன. அழகிய மாலைகள், மணிகளால் இழைக்கப்பட்ட வாயில்கள் தொறும் இருமருங்குமாக அணிவிக்கப்பட்டுள்ளன. மங்கலம் பொருந்திய நிறைகுடங்கள், திண்ணைகள் தோறும் வைக்கப் பட்டுள்ளன. பெருமை பொருந்திய ஒளிகள், தேர் வரிசை தோறும் அமைக்கப்பெற்றுள்ளன. செந்நெல் அரிசியாலாய சோற்றுமலைகள், உணவு வழங்கும் இடம் தோறும் அமைந்துள்ளன. குளிர்ச்சிமிக்க நீர்வகைகள் தண்ணீர்ப் பந்தர் தோறும் வைக்கப்பட்டுள்ளன, நெருங் கிய தேவகணங்கள் நீண்ட வீதிகள் தோறும் வதிந்துள்ளன.

குறிப்புரை :

நாசி - கோபுர நிலைகளின்மேல் வைக்கப் பெற்றுள்ள முகங்கள். அரணி - தீக்கடைக் கோல். நீர்கள் - குளிர்ந்த நீர் வகைகள், பானக நீர், நீர் மோர் முதலியன. இவ்வாற்றான் தில்லையம்பதி அழ கிய திருக்கோயில்களையும் அறம் மிக்க உணவுச் சாலைகளையும், நீர் மிக்க தண்ணீர்ப் பந்தர்களையும், சிவச்சார்புமிக்க சிவவேள்விகளை யும் உடையது எனத் தெரிய வருகின்றது.

பண் :

பாடல் எண் : 248

எண்ணில் பேருல கனைத்தினு முள்ள
எல்லை யில்லழகு சொல்லிய வெல்லாம்
மண்ணில் இப்பதியில் வந்தன வென்ன
மங்க லம்பொலி வளத்தன வாகிப்
புண்ணி யப்புனித வன்பர்கள் முன்பு
புகழ்ந்து பாடல்புரி பொற்பின் விளங்கும்
அண்ண லாடுதிரு வம்பலஞ் சூழ்ந்த
அம்பொன் வீதியினை நம்பி வணங்கி.

பொழிப்புரை :

எண்ணற்கரிய உலகங்கள் யாவற்றிலும் உள்ள எல்லையற்ற சிறப்பினவாகக் கூறப்படும் பொருள்களெல்லாம், நிலவுலகத்திலுள்ள இத்திருத்தில்லையில் ஒருங்கு வந்துள்ளன எனக் கூறுமாறு, மங்கலப் பொருள்கள் பலவற்றாலும் பொலிவுபெற்ற வளங்களை உடையவாய்ப், பெரும் புண்ணியமும், தூய்மையும் உடைய அடியவர்கள் முன்னின்று வணங்கி மகிழத்தக்க சிறப்பினால், விளங்கி ஒளிரும் இறைவன் ஆனந்தக் கூத்துச் செய்தருளும், திருஅம்பலத்தைச் சூழ்ந்த அழகிய பொன்மயமான தேர்கள் ஓடும் திருவீதியை வணங்கிய ஆரூரர்.

குறிப்புரை :

அழகு எத்தனை உண்டு புவிமீதே அவையாவும் படைத்த திருத்தில்லையென அருளுகின்றார் சேக்கிழார்.

பண் :

பாடல் எண் : 249

மால யன்சத மகன்பெருந் தேவர்
மற்று முள்ளவர்கள் முற்றும் நெருங்கிச்
சீல மாமுனிவர் சென்றுபின் துன்னித்
திருப்பி ரம்பினடி கொண்டு திளைத்துக்
காலம் நேர்படுதல் பார்த்தயல் நிற்பக்
காத லன்பர்கண நாதர் புகும்பொற்
கோல நீடுதிரு வாயி லிறைஞ்சிக்
குவித்த செங்கைதலை மேற்கொடு புக்கார்.

பொழிப்புரை :

திருமால், நான்முகன், இந்திரன் முதலிய பெரிய தேவர்களும் அவரல்லாத பிறரும் முழுதும் நெருங்கவும், தூய தவ ஒழுக்கத்தையுடைய பெரிய முனிவர்கள் நெருங்கவும், அவர்களை ஒருவர்பின் ஒருவராக வருமாறு நந்திதேவர் தம் கைப்பிரம்பு கொண்டு நெறிப்படுத்த அப்பிரம்படிபடுவதால் மகிழ்ந்த அவ்வடியவர்கள், தாம் வழிபடுதற்குரிய காலம் பார்த்து அருகில் நிற்ப, மீதூர்ந்த அன்பினை உடைய அடியவர்களும் கணநாதர்களும் தடையின்றிச் செல்லும் அழகுமிக்க ஒப்பனைகளால் நிறைந்து நிற்கும் திருக்கோபுரவாயிலை நெருங்கி, கூப்பிய திருக்கரங்களைத் தம் தலைமேல் கொண்டு புகுந்தருளினர்.

குறிப்புரை :

சதமகன் - நூறு வேள்விகளைச் செய்து அவற்றால் தலைமை பெற்றவன் இந்திரன் ஆதலின் அப்பெயர் பெற்றான். இறை வனை வழிபடுதற்கெனச் சென்ற தேவர்களும், முனிவர்களும் நிரல்படச் செல்லாமையால் நந்திதேவரின் பிரம்படிபட நேர்ந்தனராயி னும், அதுவும் பின் வழிபாடு செய்தற்குத் துணையாய் நிற்றலின் `திளைத்து` என்றார். திளைத்து - மகிழ்ந்து. `கோவே ... கூவிப் பணி கொள்ளாது தொறுத்தால் ஒன்றும் போதுமே` (தி.8 ப.33 பா.2) எனவரும் மணிமொழியும் காண்க. இவர்கள் இவ்வாறு நிற்கவும், அடியவர்களும், கணநாதர்களும் தடையின்றிப் புகுதற்குக் காரணம், அவர்களின் அன்பும் தொண்டும் மேம்பட்ட சிறப்பும் கருதியேயாம். நம்பி வணங்கிப் புகுந்தனர் என முடிக்க. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 250

பெருமதில் சிறந்த செம்பொன்மா ளிகைமின்
பிறங்குபே ரம்பல மேரு
வருமுறை வலங்கொண் டிறைஞ்சிய பின்னர்
வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்
அருமறை முதலில் நடுவினில் கடையில்
அன்பர்தஞ் சிந்தையில் அலர்ந்த
திருவள ரொளிசூழ் திருச்சிற்றம் பலமுன்
திருவணுக் கன்திரு வாயில்.

பொழிப்புரை :

உயர்ந்த மதில்களால் சிறந்த சிவந்த பொன்னாலாகிய பொன்னம்பலத்தையும், ஒளி பொருந்திய பேரம் பலமாகிய மேருவையும் முறையாக வலம் செய்து வணங்கிய பின்பு, உட்சென்று வணங்குதற்குரிய மகிழ்ச்சியோடும், அருமறைகளின் முதல், இடை, இறுதி ஆகிய மூவிடங்களிலும், அடியவர்களின் உளத் தாமரையிலும் வெளிப்பட்டு நிற்கும் அழகு வளரும் ஒளி சூழ்ந்த திருச் சிற்றம்பலத்தின் முன்னுள்ள திருஅணுக்கன் என்னும் திருவாயிலின் கண் புகுந்தார்.

குறிப்புரை :

பேரம்பல மேரு - பேரம்பலமாகிய மேரு. சலி யாமையும், பெருமையும் பற்றிப் பேரம்பலத்தை மேருமலையாகக் கூறினார். இலங்கை இடைகலையாகவும், இமயம் பிங்கலையாகவும் விளங்க இது சுழுமுனையாக விளங்கும் என்று கூறுவர்.
இடைபிங் கலைஇம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுமுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்
படர் வொன்றி என்னும் பரமாம் பரமே. (தி.10 பா.2711)
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரு இவ்வானின் இலங்கை குறியுறுஞ்
சாருந் திலைவனந் தண்மா மலயத்தூட
ஏறுஞ் சுழுமுனை இவைசிவ பூமியே. (தி.10 பா.2704)
பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலையொண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே. (தி.10 பா.2705)
எனவரும் திருமந்திரப் பாடல்களாலும் காண்க.
சிற்றம்பலம் - கூத்து இயற்றும் பெருமான் எழுந்தருளியிருக் கும் மன்றம். பேரம்பலம் - சோமாஸ்கந்தர் முதலிய விழாக் கொள்ளும் மூர்த்திகள் எழுந்தருளி இருக்கும் இடம். திருச்சிற்றம்பலம், ஓம் எனும் பிரணவ வடிவாய் விளங்குவதாகும். ஓம் என்பது அ, உ, ம், ஆகிய மூன்று எழுத்துகளும் சேர்ந்த நிலையாகும். பிரிந்த நிலையில் நிற்கும் முதல் எழுத்தாகிய அகாரம் இருக்கு வேதத்தின் முதலினும், (அக்நி, மீளே) உகாரம் யசுர் வேதத்தின் நடுவிலும் (யோநிஸ் சமுத்திரோ பிந்து), மகாரம் சாமவேதத்தின் முடிவிலும் (சமாநம், வரம்) விளங்கு வதென்று கூறுவர்.
திருஅணுக்கன் திருவாயில் - கூத்தப்பெருமான் எழுந்தருளி யிருக்கும் மன்றின் முதல் வாயிலாக உள்ளது இது. உள்ளிருந்து கணக் கிடும்போது இது முதல் வாயிலாக விளங்கும். ஆதலின் இதனை இப் பெயரால் அழைப்பர். இனி இறைவனுக்கு அருகிருந்து வழிபாடு செயத்தகும் தொண்டர்களே உட்புகுதற்குரிய இடமாதலின் அணுக்கன் திருவாயில் எனப்பெயர் பெற்றது என்றலும் ஒன்று. இவ்விரு பாடல் களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 251

வையகம் பொலிய மறைச்சிலம் பார்ப்ப
மன்றுளே மாலயன் தேட
ஐயர்தாம் வெளியே யாடுகின் றாரை
அஞ்சலி மலர்த்திமுன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
கரணமோ கலந்தவன் புந்தச்
செய்தவம் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான்
திருக்களிற் றுப்படி மருங்கு.

பொழிப்புரை :

மாலும் அயனும் முன்னாளில் தேடவும், அவர்களுக்கும் எட்டாதிருந்த இறைவன், இம்மண்ணுலகத்தவர் மகிழவும், மறைகளாகிய சிலம்புகள் ஒலிக்கவும், வெளிப்பட நின்று பொன்னம்பலத்தின்கண் ஆனந்தக் கூத்து இயற்றி அருள்பவராகிய பெருமானை, `தம் திருமார்பில் குவித்த கைகள் தாமோ?`, திருவடியை வணங்கித் திளைத்த கண்கள் தாமோ? மனம் புத்தி, சித்தம், அகங்கா ரம் என்னும் அகக் கருவிகள் தாமோ? இவற்றுள் எவ்வுறுப்புகளிடத்து, இறைவனிடத்துக் கலந்த அன்பு செலுத்தியதோ அறியோம்; ஆனால் அவையனைத்துமே ஒன்றி நிற்க, முற்செய்தவத்தால் பெரியராகிய நம்பியாரூரர் திருக்களிற்றுப்படியின் அருகில் சென்று வணங்கி எழுந்தார்.

குறிப்புரை :

இறைவன் சிலம்பு ஒலிக்க யாவரும் அறிய வெளியில் நின்று ஆடவும், மால் அயன் அப்பெருமானைக் காணாது தேடியது என்னோ? என்ற நயமும் காண்க. அஞ்சலி மலர்த்தி முன் குவித்த கைகள் - தாம் செய்யும் வணக்கம் வெளிப்பட மார்பின் முன் குவித்த கைகள். இறைவழிபாடு செய்ய வேண்டும் எனும் அன்பு உந்த மனம் முதலாய அகக்கருவிகள் முற்படச் செயல்புரியும். அச்செயற்பாட்டி னால் கண்கள் காணும். அக்காட்சியால் கைகள் குவியும். இதுவே முறைமை. இத்தகைய அன்பு உந்துதலை அகக் கருவிகள் மட்டுமோ முன்பு பெற்றன. அன்றிக் கண்கள் மட்டுமோ முன்பு பெற்றன. அன்றிக் கைகள் மட்டுமோ முன்பு பெற்றன என அறிய இயலாதவாறு அத் தகைய கலந்த அன்பு அவ்வனைத்துறுப்புக்களிலும் உந்த ஆரூரர் வணங்கி மகிழ்ந்து எழுந்தார் என்பது கருத்து. திருக்களிற்றுப்படி - யானையின் துதிக்கை வடிவினதாகிய திரட்சிகள் இருபுறமும் அமையவிளங்கும் படிகள். இவ்வைந்து படிகளையும் பஞ்சாட்சரப் படிகள் எனவும் அழைப்பர். இப்பெயரமைந்த திருக்களிற்றுப்படியார் என்னும் ஞானநூல் ஒன்று இருத்தலும் ஈண்டு நினைவுகூரத்தக்கது.

பண் :

பாடல் எண் : 252

ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
வெல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.

பொழிப்புரை :

ஐந்தாகப் பெயரும் புலன் உணர்வு ஐந்தையும் கண்களே தமதாக்கிக் கொள்ள, அளத்தற்கரிய மனம் முதலிய நான்கு கருவிகளின் செயல்களெல்லாம் சித்தம் ஒன்றின் செயலேயாக, உயிர்க்குற்ற முக்குணங்களின் செயல்களெல்லாம் சாத்துவிகம் என்ற ஒன்றேயாகி நிற்க, பிறை தவழும் சடையினையுடைய கூத்தப்பிரான் செய்தருளுகின்ற அளவில்லாத இன்பத்தை விளைவிக்கும் ஒப்பற்ற திருக்கூத்தால் தம்மிடத்தெழுந்த மிகப்பெரிய இன்ப வெள்ளத்தில் முழுகி, நீங்காத பெருமகிழ்ச்சியால் உள்ளமும், உடலும் ஒருங்கு மலர்ந்தார்.

குறிப்புரை :

மெய், வாய், கண், மூக்கு,செவி ஆகிய ஐம்பொறி களும் சுவை, ஒளி, ஊறு ஓசை, நாற்றம் ஆகிய ஐம்புல உணர்வுடை யன. அவற்றுள் பெருமானைக் காண்டற்கு அமைந்த கண்கள் இரண்டுமே காண, ஏனைய பொறிகள் தத்தம் செயலிழந்து நின்றன என்பார், `ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள` என்றார். பேரறிவு - பொறிகள் ஐந்தும் தத்தம் புலன்களில் பெயர்ந்து பெயர்ந்து நிற்கும் அறிவு. ஒன்று செயற்படுகின்ற பொழுது மற்றவை செயற்படாத நிலையில் இருத்தலே அமைவுடையது. மாறாக ஒன்றுக்கு மேற்பட்டன செயற்படின் எந்த ஒன்றிலும் உயிர் முழுமையாகப் படிந்து நிற்கும் நிலையில்லா தொழியும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கு அகக்கருவிகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயற்பாட்டுக் குரியன. மனம் - நினைக்கும். சித்தம் - சிந்திக்கும். புத்தி - உறுதி செய்யும். அகங்காரம் - செயற்படும். இவ்வகையில் சித்தம் ஒன்றே பெருமானைச் சிந்தித்து நிற்கும் என்பார், `அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாக` என்றார். சாத்துவிகம், இராசதம், தாமதம் ஆகிய மூன்றும் முக்குணங்களாம். சாத்துவிகம் - எதனையும் அமைதியாகவும், மகிழ்வோடும் ஏற்பது. இராசதம் - இந்நிலைக்கு முற்றிலும் மாறாய்க் கடிந்து கொள்வது. தாமதம் - எவ்வுணர்விலும் கருத்தின்றிச் சோம்பியிருப்பது. இவ்வகையில் இம்முக்குணங்களும் பெருமானை வழிபடுங்கால் சாத்துவிக குணமேயாக அமைந்திருந் தன என்பார், `குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக` என்றார். முக்குணங்களுள் ஈதொன்றே உயிர் திருந்தி வாழ்தற்கு ஏது வாதலின் `திருந்து சாத்துவிகம்` என்றார். இந்து - இளம் பிறை.
செந்திற் பெருமானின் திருவருள் பெற்ற குமரகுருபரர், குருவருள் பெறத் தருமபுர ஆதீனம் நான்காவது குருமூர்த்திகளாகிய ஷ்ரீலஷ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் திருமுன்பு அடைய, அவர் இப் பாடலைச் சுட்டி, இதன் அநுபவப் பொருளைக் கூறுக என, அவ்வளவில் அடிகள் வாக்குத் தடைப்பட்டார் என்பதும், திருவருள் முன் உணர்த்திய வகையால், அக்குரு மூர்த்திகளையே தமக்கு ஞானாசிரியராகக் கொண்டார் என்பதும் வரலாறு ஆகும்.
இம்மரபே இன்றும் தருமையும் பனசையும் (திருப்பனந்தாள்) குருபீடமாகவும் சீடர் பீடமாகவும் விளங்கக் காரணமாயிற்று.

பண் :

பாடல் எண் : 253

தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருநடங் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு
வாலிதாம் இன்பமாம் என்று
கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக்
கைம்மல ருச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்.

பொழிப்புரை :

வெண்மையான இளம்பிறை விளங்கும் திருச் சடையை உடையாய்! உன்னுடைய ஆனந்தத் திருக்கூத்தை வழி பாடாற்றப் பெற்று, இந்நிலவுலகத்தில் வந்த மானிடப் பிறவியே எனக்கு மேலான இன்பம் என்று, கண்களினின்றும் இன்பக் கண்ணீர் சொரிய, கைகளாகிய மலர்களைத் தலைமிசை வைத்துக் குவித்து, இசையோடு கூடிய அறிதற்கரிய திருப்பதிகத்தை இசைத்தார். போற்றினார், வணங்கினார்.

குறிப்புரை :

தெள் + நிலா = தெண்ணிலா. ஈண்டுத் தெளிவு வெண்மையின் மேற்று. மாமன் இட்ட சாபம், இறைவனை அடைந் தால் தான் நீங்கும் எனத் தெளிதலின் `தெள்நிலா` என்றார் என உரைப்பர் சிவக்கவிமணியார்(பெரிய.பு.உரை). வாலிதாம் இன்பம் - தூய இன்பம். மேலான இன்பம் என்று உரைப்பர் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் (பெரிய.பு.உரை). வாலிதாம் இன்பமாம் எனவரும் தொடர்கள் இதுபொழுது பாடிய பதிகத்தின் உட்குறிப்பாக அல்லது மகுடமாக (நிறைவுச் சொல்லாக) இருக்க வேண்டுமெனக் கருதுவர் சிவக்கவிமணியார்(பெரிய.பு.உரை). இவ்வரிய பதிகம் இதுபொழுது கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 254

தடுத்துமுன் ஆண்ட தொண்டனார் முன்பு
தனிப்பெருந் தாண்டவம் புரிய
எடுத்தசே வடியா ரருளினால் தரளம்
எறிபுனல் மறிதிரைப் பொன்னி
மடுத்தநீள் வண்ணப் பண்ணையா ரூரில்
வருகநம் பாலென வானில்
அடுத்தபோ தினில்வந் தெழுந்ததோர் நாதம்
கேட்டலும் அதுவுணர்ந் தெழுந்தார்.

பொழிப்புரை :

இறைவனால் முன்பு தடுத்தாட்கொள்ளப் பெற்ற நம்பிகள், முன்பு ஒப்பற்ற பெருங்கூத்தினை இயற்றுதற்கு எடுத்த திருவடிகளை உடைய கூத்தப்பிரானின் திருவருளால், அலைகளால் முகந்து முத்துக்களை வீசும் நிறைந்த நீர்ப் பெருக்கினையுடைய காவிரி பாய்கின்ற அழகிய வயல்கள் சூழ்ந்த திருவாரூரில் `நம்மிடத்து நீ வருவாயாக` என விண்ணினின்றும் ஓர் ஒலி எழ, அவ்வானொலி யைக் கேட்டலும் திருவாரூருக்குச் செல்ல எழுந்தருளினார்.

குறிப்புரை :

பொன்னி மடுத்த - காவிரியின் நீரானது பாய்கின்ற. வண்ணப் பண்ணை - அழகிய வயல்கள். வந்து எழுந்ததோர் நாதம் - வானொலி.

பண் :

பாடல் எண் : 255

ஆடுகின் றவர்பே ரருளினால் நிகழ்ந்த
அப்பணி சென்னிமேற் கொண்டு
சூடுதங் கரங்கள் அஞ்சலி கொண்டு
தொழுந்தொறும் புறவிடை கொண்டு
மாடுபே ரொளியின் வளருமம் பலத்தை
வலங்கொண்டு வணங்கினர் போந்து
நீடுவான் பணிய வுயர்ந்தபொன் வரைபோல்
நிலையெழு கோபுரங் கடந்து.

பொழிப்புரை :

கூத்தப் பெருமானின் பேரருளால் நிகழ்ந்த அப்பணிமொழியைத் தலைமேல் தாங்கி, தலைமேல் குவித்து நிற்கும் திருக்கைகளைக் கொண்டு வணங்கி, மேலும் மேலும் வணங்குந் தொறும் தாம் புறத்தே போதற்குரிய அனுமதியை வேண்டிக்கொள் பவராய், மிகப் பெருகும் பேரொளியால் வளர்ந்து வரும் அம்பலத்தை வலங்கொண்டு, இறைவன் திருமுன்னிலையில் வணங்கி, மகிழ்ந்து, நீடிய வானமும் குன்றியதென வளர்ந்து விளங்கும் பொன்மலை என மிளிரும் ஏழு கோபுரங்களையும் கடந்து சென்று.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 256

நின்றுகோ புரத்தை நிலமுறப் பணிந்து
நெடுந்திரு வீதியை வணங்கி
மன்றலார் செல்வ மறுகினூ டேகி
மன்னிய திருப்பதி யதனில்
தென்றிரு வாயில் கடந்துமுன் போந்து
சேட்படுந் திருவெல்லை யிறைஞ்சிக்
கொன்றைவார் சடையா னருளையே நினைவார்
கொள்ளிடத் திருநதி கடந்தார்.

பொழிப்புரை :

திருக்கோபுரவாயிற்கு வெளியேநின்று, நிலமுறப் பணிந்து வணங்கி, அதனையடுத்த தேரோடும் திருவீதியையும் வணங்கி, நறுமணம் கமழ்கின்ற நிறைந்த செல்வத்தை உடைய ஆவண வீதிவழியே சென்று, நிலைபெற்ற அத்திருப்பதியின் தெற்கு வாயிலைக் கடந்து, முன்னே எழுந்தருளித் தொலைவில் இருக்கும் அத்திரு எல்லையை வணங்கிக், கொன்றை மலர்களால் ஆய மாலையை முடித்த நீண்ட சடைமுடியையுடைய சிவபெருமானின் திருவரு ளையே சிந்தித்து ஒழுகும் நம்பியாரூரர், கொள்ளிடம் என்னும் பேராற்றைக் கடந்து சென்றருளினார்.

குறிப்புரை :

கொள்ளிடம் - மரக்கலன்களைக் கொள்ளுகின்ற இடம். சோழ மன்னர்கள் கடலிலிருந்து தம் நாட்டிற்கு மரக்கலன்கள் வருவதற்காக அகலமும், ஆழமும் பெற அமைத்த இடம் இதுவாம். இதனைக் கல்வெட்டுக்களில் `கலன் கொள்ளிடம்` எனக் குறிக்கு மாற்றான் அறியலாம். வருகின்ற கலன்களும் இல்லையாக, இத் தொடரில் வரும் முதற் சொல்லாகிய `கலம்` என்பதும் இல்லையா யிற்றுப் போலும் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை). கொள்ளிடம் - காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுது, அம்மிகுநீரைக் கொள்ளவும், அதன் வழிக் காவிரியின் வடபுலத்துள்ள நிலங்களில் பயன்கொள்ளவும் சோழப் பெருமக்களால் வெட்டப் பெற்ற ஆறே இது எனவும் கூறுவர். எனவே நிலத்தானும் நீரானும் பயன்கொள்ளக் கருதி இவ்வாறு வெட்டப்பட்டது என அறியலாம். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 257

புறந்தருவார் போற்றிசைப்பப்
புரிமுந்நூல் அணிமார்பர்
அறம்பயந்தாள் திருமுலைப்பால்
அமுதுண்டு வளர்ந்தவர்தாம்
பிறந்தருளும் பெரும்பேறு 
பெற்றதென முற்றுலகிற்
சிறந்தபுகழ்க் கழுமலமாந் 
திருப்பதியைச் சென்றணைந்தார்.

பொழிப்புரை :

தம்மைச் சூழ்ந்துவரும் அடியவர்கள் போற்றி உரைக்க, மூன்று முறுக்குகளையுடைய பூணூலை அணிந்த மார்பினை யுடைய நம்பியாரூரர், அறம் வளர்க்கும் தாயாகிய உமையம்மையார் திருமுலைப்பாலுடன் ஞான அமுதைக் குழைத்து ஊட்ட உண்டு வளர்ந்த ஆளுடைய பிள்ளையார் பிறந்து அருளுதற்கு ஏதுவான பெரியபேற்றைப் பெற்றது என்று உலகிலுள்ளார் யாவரும் போற்றி மகிழும் புகழால், சிறந்த சீகாழி என்னும் திருப்பதியை அடைந்தருளி னார்.

குறிப்புரை :

புறந்தருவார் - தம்மைச் சூழ்ந்து வரும் அடியவர்கள். தாம் - அசைநிலை.

பண் :

பாடல் எண் : 258

பிள்ளையார் திருவவதா 
ரஞ்செய்த பெரும்புகலி
உள்ளுநான் மிதியேனென் 
றூரெல்லைப் புறம்வணங்கி
வள்ளலார் வலமாக
வரும்பொழுதின் மங்கையிடங்
கொள்ளுமால் விடையானும்
எதிர்காட்சி கொடுத்தருள.

பொழிப்புரை :

ஆளுடைய பிள்ளையார் தோன்றுதற்கு இட னான பெருமை பொருந்திய சீகாழி என்னும் திருப்பதியின் எல்லை யையும் நான் மிதிக்க மாட்டேன் என்று அத்திருப்பதியின் புற எல்லை யைச் சூழ்ந்து வணங்கிய ஆரூரர், அப்பதியை வலமாக வருமிடத்து, உமையம்மையை ஒரு கூற்றில் வைத்திருப்பவரும் மிகப் பெரிய ஆனேற்றை ஊர்தியாக உடையவருமான தோணியப்பர் அவர் எதி ராக எழுந்தருளிக் காட்சி கொடுத்தருள,

குறிப்புரை :

ஞானசம்பந்தர் தோன்றிய சிறப்புடையதாதலின் சீகாழிப் பதியினகத்து நடந்து செல்லுதலும் தவறென்று கருதிய ஆரூரர், அப்பதியின் புறமாக வலம் வந்தார். ஆரூரருக்கு ஆளுடைய பிள்ளை யார் மீதிருந்த அளவற்ற பத்திமை இதனால் விளங்கும்.

பண் :

பாடல் எண் : 259

மண்டியபே ரன்பினால்
வன்றொண்டர் நின்றிறைஞ்சித்
தெண்டிரைவே லையின்மிதந்த
திருத்தோணி புரத்தாரைக்
கண்டுகொண்டேன் கயிலையினில்
வீற்றிருந்த படியென்று
பண்டருமின் னிசைபயின்ற 
திருப்பதிகம் பாடினார்.

பொழிப்புரை :

இவ்வாறு எளிவந்தருளிய இறைவனின் திருக்காட்சியை நிறைந்த பேரன்போடு வணங்கி நின்ற நம்பியாரூரர், தெளிந்த அலைகளையுடைய கடலில் ஒருகாலத்து மிதந்த திருத் தோணிபுரத்தின்கண் வீற்றிருக்கும் பெருமானைத் `திருக்கயிலையின் கண் இருந்தருளிய திருக்கோலமாக இங்குக் கண்டு மகிழ்ந்தேன்` என்று பண் அமைந்த இனிய இசையோடு கூடிய திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

குறிப்புரை :

மண்டிய - நிறைந்த. கடல் பொங்கி எழுந்த பேரூழிக் காலத்தில், இறைவன் அறுபத்து நான்கு கலைகளையும் ஆடையாக உடுத்துப் பிரணவத் தோணியில் அம்மையப்பராக எழுந்தருளி வரும்போது, ஊழியிலும் அழியாத இத்திருப்பதியைக் கண்டு இதுவே மூலம் என்றெண்ணித் தங்கினர் என்ப. இதனை உட்கொண்டே `வேலையில் மிதந்த திருத்தோணிபுரம்` என்றார். இறைவன் உரோமச முனிவருக்காகத் திருக்கயிலைச் சிகரமொன்றைத் தென்திசையில், தோற்றுவித்துத் தானும், அம்மையுமாக இருந்து காட்சி வழங்கினன் என்பதொரு வரலாறும் உண்டு. இதுவே மலைக்கோயில் எனும் பெயரில் இன்று அமைந்திருப்பதாகும்.
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்
தன்னருள் தந்தஎம் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை
வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே. (தி.7 ப.58 பா.1) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணமைந்த திருப்பதிகமே இது பொழுது பாடியதாகும். இப்பதிகத்தில் பாடல்தொறும் வரும் கருத்தைத் திருவுளங் கொண்டே `திருத்தோணி புரத்தாரைக் கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்றிருந்த படியென்று பண்டருமின் னிசைபயின்ற திருப்பதிகம் பாடினார்` என்றருளினார் சேக்கிழார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 260

இருக்கோல மிடும்பெருமான் 
எதிர்நின்றும் எழுந்தருள
வெருக்கோளுற் றதுநீங்க
ஆரூர்மேற் செலவிரும்பிப்
பெருக்கோதஞ் சூழ்புறவப்
பெரும்பதியை வணங்கிப்போய்த்
திருக்கோலக் காவணங்கிச்
செந்தமிழ்மா லைகள்பாடி.

பொழிப்புரை :

நான்மறைகளும் தம் எல்லையில் அறிய இயலாமையின் முறையிட்டு அழைக்கின்ற தோணியப்பர், ஆரூரர் தம் திருக்காட்சியினின்றும் மறைந்தருள, அதனால் அச்சமும், விரை வும் மீதூர, பின் அந்நிலை நீங்க, திருவாரூரை அடைய விரும்பி, வெள்ளப் பெருக்கினையுடைய கடல்சூழ்ந்த சீகாழி என்னும் திருப் பதியை வணங்கிச் சென்று, திருக்கோலக்கா என்னும் திருப்பதியை அடைந்து செந்தமிழ் மாலைகள் பல பாடியருளி.

குறிப்புரை :

இருக்கு - நான்மறைகள்; சாதி ஒருமை. இவை இறைவனைத் தம்மால் முழுமையாக அறிய இயலாமையின் இயன்ற வரையில் அழைத்து மகிழ்கின்றன என்பார் `இருக்கு ஓலமிடும் பெருமான்` என்றார். `வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே`(தி.8 ப.1 வரி.34-35) என்னும் திருவாசகமும், வெருக்கோள் - அச்சமும் விரைவும் தவழ நிற்பதொரு மெய்ப்பாடு. இறைவனின் காட்சி மறைந் ததும் எழுந்த இம்மெய்ப்பாடு, ஒரு சிறு கால எல்லையிலிருந்து நீங்கத், திருவாரூர் செல்ல வேண்டும் என்னும் நினைவு ஆரூரருக்குத் தோன்றியது. அவ்விருப்பின்வழிச் செல்லும் ஆரூரர், முதற்கண் திருக்கோலக்காவை அடைந்தார். இங்கு ஒன்றிற்கு மேற்பட்ட பதிகங்களை அருளியுள்ளமை, `செந்தமிழ் மாலைகள் பாடி` என வரும் திருவாக்கால் அறிய இயலுகின்றது. எனினும் இத்திருப்பதி கங்கள் எவையும் இதுபொழுது கிடைத்தில. இதுபொழுது கிடைத்திருக் கும் `புற்றில்வாழ்` எனத் தொடங்கும் பதிகம் பின்பொருமுறை வந்தபொழுது பாடியதாகும். (தி.12 பு.29 பா.154 காண்க). புறவம் - சீகாழிக்குரிய பன்னிரண்டு திருப்பெயர்களில் ஒன்று.

பண் :

பாடல் எண் : 261

தேனார்க்கு மலர்ச்சோலைத்
திருப்புன்கூர் நம்பர்பால்
ஆனாப்பே ரன்புமிக
அடிபணிந்து தமிழ்பாடி
மானார்க்குங் கரதலத்தார்
மகிழ்ந்தஇடம் பலவணங்கிக்
கானார்க்கு மலர்த்தடஞ்சூழ்
காவிரியின் கரையணைந்தார்.

பொழிப்புரை :

வண்டுகள் ஒலிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருப்புன்கூர் என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் இறைவனிடத்து அமையாத பேரன்பு மேலும் மேலும் மீதூர, அப்பெருமானின் திருவடிகளை வணங்கித் தமிழ்ப் பதிகம் பாடி, மான் கன்றைத் தாங்கும் திருக்கரத்தையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருநீடூர் முதலிய பல திருப்பதிகளையும் வணங்கி, நறுமணம் மிக்க மலர்களையுடைய குளங்கள் சூழ்ந்த காவிரியின் கரையை அடைந்தார்.

குறிப்புரை :

தேன் - வண்டு. ஆனா - அமையாத. கான் ஆர்க்கும் - நறுமணம் மிக்கிருக்கும். இடம்பல - திருப்புன்கூருக்கும், காவிரிக் கரைக்கும் இடையிலுள்ள திருக்கஞ்சனூர், திருநீடூர் முதலாயினவாகலாம் எனச் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை) கருதுவார்கள். `திருப்புன்கூர் நம்பர்பால்..... தமிழ் பாடி` எனவரும் குறிப்பிற்கேற்ப இதுபொழுது பதிகங்கள் எவையும் கிடைத்தில. இதுபொழுதுள்ள `அந்தணாளன்` எனத் தொடங்கும் பதிகம் பிறிதோரமையத்துப் பாடியதாகும்.
இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பி னாலே
பொருவரு மகிழ்ச்சி பொங்கத் திருப்புன்கூர்ப் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று வன்றொண்டர் தம்பி ரானார்
அருளினை நினைந்தே அந்த ணாளனென் றென்றெடுத்துப் பாடி.
எனப்பின் (தி.12 பு.29 பா.406) வருவதால் இவ்வுண்மை அறியலாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 262

வம்புலா மலரலைய 
மணிகொழித்து வந்திழியும்
பைம்பொன்வார் கரைப்பொன்னிப் 
பயில்தீர்த்தம் படிந்தாடித்
தம்பிரான் மயிலாடு
துறைவணங்கித் தாவில்சீர்
அம்பர்மா காளத்தின்
அமர்ந்தபிரான் அடிபணிந்தார்.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் பூக்கள், அலைவழி அலைந்து நிற்ப, முத்து முதலிய மணிகளைக் கரையில் கொண்டு வந்து கொழித் துப், பாய்கின்ற பசிய பசும்பொன்னாலாகிய நீண்ட கொடிகளை யுடைய கரையினையுடைய காவிரியில் நீராடி, இறைவன் வீற்றி ருந்தருளும் திருமயிலாடுதுறையை வணங்கி, அவ்விடத்தினின்றும் எழுந்தருளி, திருஅம்பர்மாகாளத்தில் வீற்றிருந்தருளும் இறைவ னைப் பணிந்தார்.

குறிப்புரை :

வம்பு - நறுமணம். அலைகளால் மலர்கள் இங்கு மங்குமாக அலைக்கப்படுதலின் `மலர் அலைய` என்றார். தீர்த்தம் - புனிதநீர். இவ்விரு திருப்பதிகளிலும் ஆரூரர் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 263

மின்னார்செஞ் சடையண்ணல்
விரும்புதிருப் புகலூரை
முன்னாகப் பணிந்தேத்தி
முதல்வன்தன் அருள்நினைந்து
பொன்னாரும் உத்தரியம் பு
ரிமுந்நூ லணிமார்பர்
தென்னாவ லூராளி
திருவாரூர் சென்றணைந்தார்.

பொழிப்புரை :

மின்னலை ஒத்த சிவந்த சடைமுடியை உடைய சிவபெருமான் விரும்பி அருளும் திருப்புகலூரை முதற்கண் வணங்கி வழிபட்டு, அப்பெருமானின் திருவருளை நினைந்து, பொன் னிழையாலாய மேலாடையையும், முப்புரி நூலையும் கொண்ட மார்பினை உடையவரும், அழகிய திருநாவலூரின் தலைவருமாகிய நம்பியாரூரர் திருவாரூரின் எல்லையை அடைந்தருளினார்.

குறிப்புரை :

`மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை` (தி.11 பொன்வண். 1) என்பர் சேரர் பெருமான். ஆதலின் ஈண்டும், `மிக்கார் செஞ்சடை அண்ணல்` என்றார். உத்தரியம் - மேலாடை.

பண் :

பாடல் எண் : 264

தேராரும் நெடுவீதித்
திருவாரூர் வாழ்வார்க்கு
ஆராத காதலின்நம்
ஆரூரன் நாமழைக்க
வாராநின் றானவனை
மகிழ்ந்தெதிர்கொள் வீரென்று
நீராருஞ் சடைமுடிமேல் 
நிலவணிந்தார் அருள்செய்தார்.

பொழிப்புரை :

தேர் ஓடுவதால் அழகு நிறைந்த நீண்ட வீதிகளை யுடைய திருவாரூரின்கண் வாழும் அடியவர்களுக்கு, `என்றும் தணியாத பத்திமையினால் நம்முடைய நம்பியாரூரன் நாம் அழைத் தமையால் இங்கு வருகின்றான். அவனை மகிழ்ச்சியோடு எதிர் கொள்வீர்களாக!` என்று கங்கையின் பெருக்கெடுக்கும் சடை முடி யின்கண் இளம்பிறையை அணிந்த இறைவன் கனவில் பணித் தருளினார்.

குறிப்புரை :

நீர் - கங்கை. நிலவு- பிறை.

பண் :

பாடல் எண் : 265

தம்பிரா னருள்செய்யத்
திருத்தொண்ட ரதுசாற்றி
எம்பிரா னார்அருள்தான்
இருந்தபரி சிதுவானால்
நம்பிரா னாராவார்
அவரன்றே யெனுநலத்தால்
உம்பர்நா டிழிந்ததென
எதிர்கொள்ள வுடனெழுந்தார்.

பொழிப்புரை :

ஆரூர்ப் பெருமான் இவ்வாறு அருளிச் செய்ய, அங்கிருந்த திருத்தொண்டர்கள் அவ்வாணையை அனைவரிடத்தும் கூற, `எம் தலைவனாகிய பெருமானின் திருவருள் இருந்தமை இவ் வாறாயின் நம் தலைவராவார் அந்நம்பியாரூரரே` என்று கருதும் அன்போடு, தேவருலகமே இந்நிலவுலகின்கண் வந்ததென்று சொல்லு மாறு, அவரை எதிர்கொள்ள யாவரும் ஒருங்கு கூடி அதற்குரிய முறை யில் ஆயத்தமாயினர்.

குறிப்புரை :

பரிசு - தன்மை. உம்பர்நாடு - தேவருலகம்.

பண் :

பாடல் எண் : 266

மாளிகைகள் மண்டபங்கள்
மருங்குபெருங் கொடிநெருங்கத்
தாளின்நெடும் தோரணமுந் 
தழைக்கமுகுங் குழைத்தொடையும்
நீளிலைய கதலிகளும்
நிறைந்தபசும் பொற்றசும்பும்
ஒளிநெடு மணிவிளக்கு
முயர்வாயில் தொறும்நிரைத்தார்.

பொழிப்புரை :

மாளிகைகளிலும், மண்டபங்களிலும் பெரிய கொடிகள் நெருங்குமாறு அமைத்து,அவற்றின் அடிப்பக்கத்தில் நீண்ட தோரணங்களையும், தழைத்த பாக்கு மரங்களையும், மாவிலை முதலிய தழைகளால் கட்டிய தோரணங்களையும், நீண்ட இலைகளை யுடைய வாழை மரங்களையும், நீர் நிறைந்த பசும் பொன்னாலாகிய நிறைகுடங்களையும், ஒளி பொருந்திய நெடிய அழகிய இரத்தின விளக்குகளையும், உயர்ந்த வாயில்கள்தோறும் நிரம்ப வைத்தார்கள்.

குறிப்புரை :

தாளின் - அடிப்பக்கத்தில். தழைக் கமுகு - காய்க்குப் பயன்படாதனவாய் இலைகளடர்ந்த பாக்கு மரங்கள். கதலி - வாழை. பொன் தசும்பு - பொற்குடங்கள்.

பண் :

பாடல் எண் : 267

சோதிமணி வேதிகைகள்
தூநறுஞ்சாந் தணிநீவிக்
கோதில்பொரி பொற்சுண்ணங்
குளிர்தரள மணிபரப்பித்
தாதவிழ்பூந் தொடைமாலைத்
தண்பந்தர் களுஞ்சமைத்து
வீதிகள்நுண் துகள்அடங்க
விரைப்பனிநீர் மிகத்தெளித்தார்.

பொழிப்புரை :

ஒளிபடைத்த மணிகள் பதித்த திண்ணைகளில் தூய நறுமணம் மிக்க சந்தனக் குழம்பை அழகாக மெழுகி, அதன்மீது குற்றமற்ற பொரியும், பொன்பொடிகளும், குளிர்ந்த முத்துக்களும், அழகிய மணிளும் ஆகியவற்றைப் பரப்பி, மகரந்தப் பொடியைச் சொரிந்து நிற்கும் அலர்ந்த மலர்களைக் கொண்டு அமைத்த மாலை களைக் குளிர்ந்த பூம்பந்தல்களில் தொங்கச் செய்து, தெருக்களில் நுண்ணிய துகள்கள் அடங்குமாறு நறுமணம் மிக்க பனிநீரைச் செறி வாகத் தெளித்தார்கள்.

குறிப்புரை :

பொற்சுண்ணம் - மஞ்சள், அரிதாரம் முதலிய மணப் பொருள்கள் பலவற்றையும் உரலில் இட்டு இடித்த நறுமணப்பொடி. இப்பொடியாலும் இறைவனைத் திருமுழுக்காற்றுவர். இதனை, மகளிர் பலரும் குழுமி இடிப்பர் - `பலர்தொகுபு இடித்ததாதுகு சுண்ணத்தர்` - என மதுரைக் காஞ்சி, 399 கூறும். திருவாசகத்தில் வரும் திருப்பொற் சுண்ணமும் இவ் வகையில் அமைந்ததாம்.

பண் :

பாடல் எண் : 268

மங்கல கீதம்பாட
மழைநிகர்தூ ரியமுழங்கச்
செங்கயற்கண் முற்றிழையார் 
தெற்றிதொறும் நடம்பயில
நங்கள்பிரான் திருவாரூர்
நகர்வாழ்வார் நம்பியைமுன்
பொங்கெயில்நீள் திருவாயில்
புறமுறவந் தெதிர்கொண்டார்.

பொழிப்புரை :

மங்கலம் பொருந்திய இசைப்பாடல்கள் பாடவும், மேக முழக்கை ஒத்த பேரிகை முதலிய இயங்கள் முழங்கவும், சிவந்த கயல்மீன் போலும் கண்களையுடைய செய்தொழில் முற்றிய அணிகளை அணிந்த மகளிர்கள் நடனம் செய்தற்குரிய மேடைகள் தோறும் நடனம் செய்யவும், நம் தலைவனாகிய பெருமான் எழுந் தருளியிருக்கும் திருவாரூரில் வாழும் அடியவர்கள் நம்பியாரூரரை முற்பட்டு விளங்கும் நகர்ப்புறத்துள்ள நீண்ட மதிலின் வாயில் புறத்தே வந்து எதிர் கொண்டார்கள்.

குறிப்புரை :

மழை நிகர் தூரியம் - மேக முழக்கை ஒத்த பேரிகை. முற்றிழை - செய்தொழில் முற்றிய அணிகள். தெற்றி - திண்ணை.

பண் :

பாடல் எண் : 269

வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன்
வன்றொண்டர் அஞ்சலி கூப்பி வந்து
சிந்தை களிப்புற வீதி யூடு
செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி
எந்தை யிருப்பதும் ஆரூ ரவர்
எம்மையு மாள்வரோ கேளீர் என்னும்
சந்த விசைப்பதி கங்கள்  பாடித்
தம்பெரு மான்திரு வாயில் சார்ந்தார்.

பொழிப்புரை :

தம்மை எதிர்கொண்டு வணங்கும் அடியவர் களுக்கு முன், நம்பியாரூரரும் கரங்குவித்து வணங்கி, அவர் எதிர் வந்து மனமகிழ்வோடு திருவீதியினிடத்துச்செல்லுகின்றவர், அவ் வடியவர்களைப் பார்த்து, `எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்` (தி.7 ப.73 பா.7)என்னும் வினாவுரை யாக அமைந்த சந்தம் நிறைந்த இசையோடு கூடிய திருப்பதிகத்தைப் பாடியருளி, தம் முதல்வராகிய புற்றிடங்கொண்டார் திருக்கோயிலின் திருவாயிலை அடைந்தார்.

குறிப்புரை :

இதுபொழுது பாடியருளிய பதிகம் `கரையும் கடலும்` எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த (தி.7 ப.73) பதிக மாகும். இப்பதிகப் பாடல்தொறும் இறைவனைப் பல பெயர்களால் குறித்து, `அவர் இருப்பதும் ஆருர், அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்` எனும் நிறைவுடையதாகப் பாடியுள்ளார். இப்பதிகத்தின் பதினோராவது பாடல், (தி.7 ப.73 பா 11),
எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தை செயுந்திறம் வல்லான் திருமரு வுந்திரள் தோளன்
மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவல்ஆ ரூரன்
சந்தம் இசையொடும் வல்லார் தாம்புகழ் எய்துவர் தாமே.
என்பதாகும். இத்திருப்பாடலின் முதல் அடியையே சேக்கிழார் எடுத்து மொழிந்துள்ளார். இப்பாடலின் நான்காவது அடியில் `சந்தம் இசையொடு வல்லார்` எனவரும் தொடரே `சந்த இசைப் பதிகங்கள் பாடி` என ஆசிரியர் அருளுவதற்கும் காரணமாயிற்று. இவ்வாறே, `திரு வாரூரான் வருந்தும் போதெனை வாடலெ னுங்கொலோ?` (தி.3 ப.45 பா.5) என ஞானசம்பந்தரும், `நமக் குண்டுகொலோ... தொண் டர்க்குத் தொண்டராம் புண்ணியமே` (தி.4 ப.101 பா.1) என அப்பர் அடிகளும் இத்திருப்பதிக்கு எழுந்தருளியபொழுது வினா வுரைப் பதிகம் பாடியிருப்பதும் நினைவு கூரத்தக்கதாகும்.

பண் :

பாடல் எண் : 270

வானுற நீள்திரு வாயில் நோக்கி
மண்ணுற ஐந்துறுப் பால் வணங்கித்
தேனுறை கற்பக வாச மாலைத்
தேவா சிரியன் தொழுதி றைஞ்சி
ஊனு முயிரும் உருக்கு மன்பால்
உச்சி குவித்த செங்கைக ளோடும்
தூநறுங் கொன்றை யான்மூலட் டானம்
சூழ்திரு மாளிகை வாயில் புக்கார்.

பொழிப்புரை :

விண்ணளவும் உயர்ந்து நீண்டிருக்கும் திரு வாயிலை வணங்கி, நிலத்தில் ஐயுறுப்புக்களும் பொருந்த வீழ்ந்து எழுந்து, தேன் தங்குகின்ற கற்பக மலர்களால் தொடுக்கப்பெற்ற நறு மண மாலைகள் கட்டப் பெற்றிருக்கும் , தேவாசிரிய மண்டபத்தை வணங்கித், தொழுது, உடலையும், உயிரையும் உருகச் செய்யும் அன்பால், தலைமேல் குவித்த கைகளுடன் தூய நறுமணம் கமழும் கொன்றை மாலையணிந்த பெருமானின் பூங்கோயிலைச் சூழ்ந்த திருமாளிகையின் வாயிலை அடைந்தார்.

குறிப்புரை :

ஐந்து உறுப்புக்களாவன: தலையும், கைகள் இரண்டும், கால்கள் இரண்டுமாம். இவை நிலத்தில் பொருந்த வணங்குதலைப் `பஞ்சாங்க நமஸ்காரம்` என்பர். திருமூலட்டானம் - புற்றிடங் கொண் டார் எழுந்தருளியிருக்கும் கருவறை. பொன்னம்பலத்தின் வடபால் திருமூலநாதர், திருமூலட்டானம் இருத்தல்போல, இங்கும் தியாகேசர் எழுந்தருளியிருக்கும் இடத்திற்கு வேறாக இத்திருமூலட்டானம் அமைந்துள்ளது. திருமாளிகை - மண்டபம்.

பண் :

பாடல் எண் : 271

புற்றிடங் கொண்ட புராதனனைப்
பூங்கோயின் மேய பிரானை யார்க்கும்
பற்றிட மாய பரம்பொருளைப்
பார்ப்பதி பாகனைப் பங்க யத்தாள்
அர்ச்சனை செய்ய அருள்புரிந்த
அண்ணலை மண்மிசை வீழ்ந்தி றைஞ்சி
நற்றமிழ் நாவலர் கோன்உடம்பால்
நன்மையின் தன்மையை மெய்ம்மை பெற்றார்.

பொழிப்புரை :

புற்றை இடமாகக் கொண்டு எழுந்தருளியிருக் கும் பழம்பொருளாய் இருப்பவனைப், பூங்கோயிலின்கண் எழுந்த ருளியிருப்பவனை, யாவர்க்கும் பற்றுதற்கு இடனாக விளங்கும் மேலாய பொருளை, உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனைத், தாமரை மலரில் வாழும் திருமகள் வழிபட அவளுக்கு அருள்செய்த முதல் வனை, எண்வகை உறுப்புக்களும் நிலமுற விழுந்து வணங்கி, நற்றமிழ்ப் புலமை வாய்ந்த நம்பியாரூரர், தம் உடம்பு எடுத்ததனாலாய பயனின் விளைவை மெய்ம்மையாகப் பெற்றார்.

குறிப்புரை :

பங்கயத்தாள் - திருமகள், `மன்னு மாமலராள் வழி பட்டது` என முன்னரும் குறிக்கப் பெற்றமை காண்க. இனி இச் சொற்குத் தாமரையனைய இறைவனின் திருவடிகள் எனப் பொருள் கொண்டு இத்திருவடி மலர்களை வழிபாடு செய்யும் பெரும் பேற்றை அருளியவனை எனப்பொருள் விரிப்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). இவ் வாறு கூறின் நம்பியாரூரர் தமக்குக் கிடைத்த பேற்றைக் கூறியதாக அமையும்.

பண் :

பாடல் எண் : 272

அன்பு பெருக உருகியுள்ளம்
அலையஅட் டாங்கபஞ் சாங்க மாக
முன்பு முறைமையி னால்வணங்கி
முடிவிலாக் காதல் முதிர வோங்கி
நன்புல னாகிய ஐந்தும்ஒன்றி
நாயகன் சேவடி எய்தப் பெற்ற
இன்பவெள் ளத்திடை மூழ்கிநின்றே
இன்னிசை வண்டமிழ் மாலை பாட.

பொழிப்புரை :

அன்பானது தம் உள்ளத்தே பெருக்கெடுக்க, அதனால் மனம் கசிந்துருகி அவ்வன்பு வழித்தாய்ச் செயற்பட்டு நிற்க, எண்வகை உறுப்புக்களும் ஐவகை உறுப்புக்களும் பொருந்த முறை முறையாக வணங்கி, அளவற்ற பெருவிருப்பு மேற்பட அதனால் உயர் வடைந்து, அதனால் பெற்ற நல்லுணர்வாகிய ஐம்புலன்களும் ஒரு வழியவாகப் பெருமானின் திருவடிகளைத் தாம் அடைந்ததனால் உண்டாகிய பேரின்ப வெள்ளத்தில் முழுகி நின்று, இனிய இசையோடு கூடிய திருப்பதிகத்தைப் பாடியருள,

குறிப்புரை :

எண்வகை உறுப்புக்கள் - தலை, கைகள் இரண்டு, காதுகள் இரண்டு, நெற்றி ஒன்று, கால்கள் இரண்டு. இவ்வுறுப்புக்கள் நிலமுற வணங்குதலை அட்டாங்க நமஸ்காரம் என்பார். ஐந்து உறுப் புக்களால் வணங்குதலை முன் 270ஆவது பாடலிலும் உரைத்தார். இவ்வாறாய எண்வகை உறுப்புக்களைக் கொண்டு மும்முறையும், முற்கூறிய ஐவகை உறுப்புக்களையும் கொண்டு மும்முறை வணங்கல் முறையாம். `கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள` (குறள், 1101) என்பர் திருவள்ளுவர். இது சிற்றின்ப நுகர்வாம். இவ்வாறே இவ்வைம்புலனும் ஒன்றித்து அநுபவிக்கும் நிலை இறைவன் மாட்டும் உளதாம். இதனைப் பேரின்பம் என்பர். இவ்வநுபவமே இங்குப் பேசப்படுவதாகும். `ஐம் புலன்கள் ஆர வந்தனை ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே` (தி.8 ப.5 பா.26) என்னும் திருவாசகமும். இதுபொழுது பாடிய பதிகம் கிடைத்திலது. ஏகாரம் அசைநிலை.

பண் :

பாடல் எண் : 273

வாழிய மாமறைப் புற்றிடங்கொள்
மன்னவ னாரரு ளாலோர் வாக்குத்
தோழமை யாக வுனக்குநம்மைத் த
ந்தனம்  நாமுன்பு தொண்டு கொண்ட
வேள்வியி லன்றுநீ கொண்டகோலம்
என்றும் புனைந்துநின் வேட்கை தீர
வாழிமண் மேல்விளை யாடுவாயென்
றாரூரர் கேட்க எழுந்த தன்றே.

பொழிப்புரை :

பெருமை பொருந்திய பிரணவ வடிவான புற்றை இடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருவரு ளால், ஓர் வானொலியாக வந்த வாக்கானது, `நம்மை உனக்குத் தோழ னாகத் தந்தனம், நாம் முன்பு உன்னைத் திருநாவலூரில் தடுத்தாட் கொண்ட திருமணத்தில் நீ அன்று கொண்டிருந்த மணக்கோலத்தை எந்நாளும் கொண்டு, உன் விருப்பம் நீங்கும் வரை, கடல்சூழ் நிலவுல கத்து விளையாடுவாயாக` என நம்பியாரூரர் கேட்குமாறு எழுந்தது.

குறிப்புரை :

தோழமையாகக் கொடுத்தனம் என்னாது, தந்தனம் என்றார், அச்சொல்லும் தோழமை தோன்றவாம். `ஈ, தா, கொடு ஆகிய மூன்று சொற்களில் `தா` என்னும் சொல் தன்னிடத்து ஒத்தவனாக இருப்பவனிடத்துக் கூறும் கூற்றாகும். இதனைத் `தா வென் கிளவி ஒப்போன் கூற்றே`(தொல். எச்ச. 50) எனவரும் தொல்காப்பியத்தால் அறியலாம். ஆழி - கடல். வாழிய, அன்று , ஏ என்பன அசை நிலைகள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 274

கேட்க விரும்பிவன் றொண்டரென்றும்
கேடிலா தானை யிறைஞ்சி நின்றே
ஆட்கொள வந்த மறையவனே
ஆரூ ரமர்ந்த அருமணி யே
வாட்கயல் கொண்டகண் மங்கைபங்கா
மற்றுன் பெரிய கருணை யன்றே
நாட்கம லப்பதந் தந்ததின்று
நாயினே னைப்பொரு ளாக என்றார்.

பொழிப்புரை :

அவ்வானொலியைக் கேட்ட அளவில், நம்பி யாரூரர் பெருவிருப்புற்று, எஞ்ஞான்றும் அழிவில்லாத சிவ பெருமானை வணங்கி நின்று, `என்னை அடிமை கொள்ள எழுந்தரு ளிய மறையவனே! திருவாரூரில் வீற்றிருந்தருளும் அரிய மாணிக் கமே! ஒளி பொருந்திய கயல் மீன் போலும் கண்களை உடைய உமை யம்மையை ஒரு கூற்றில் உடையவனே! உன்னுடைய பெருங் கருணையே, நாய்க்கு ஒப்பான அடியேனை இன்றைக்குப் பொருளாக மதித்து அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற திருவடிகளைப் புகுமிட மாகக் கொடுத்தது` என்று விண்ணப்பம் செய்தார்.

குறிப்புரை :

வாள் - ஒளி. நாட்கமலம் - அன்றலர்ந்த தாமரை. அன்று, மற்று என்பன அசைநிலைகளாம். ஏகாரம் இரண்டனுள் முன்னையது அசைநிலை; பின்னையது தேற்றமாம்.

பண் :

பாடல் எண் : 275

என்று பலமுறை யால்வணங்கி
எய்திய உள்ளக் களிப்பி னோடும்
வென்றி யடல்விடை போல்நடந்து
வீதி விடங்கப் பெருமான் முன்பு
சென்று தொழுது துதித்துவாழ்ந்து
திருமா ளிகைவலஞ் செய்து போந்தார்
அன்று முதலடி யார்களெல்லாம்
தம்பிரான் தோழ ரென்றே யறைந்தார்.

பொழிப்புரை :

இவ்வாறு விண்ணப்பித்துக் கொண்ட ஆரூரர் பன்முறையும் வணங்கித் தம் உள்ளத்து நிகழ்ந்த மகிழ்வுடன் பெரு வெற்றியினையுடைய வலிய ஆனேற்றைப் போல் நடந்து, தியாகப் பெருமானின் திருமுன்பு சென்று வணங்கி வழிபட்டு அப்பேற்றால் வாழ்வடைந்து, திருக்கோவிலைச் சூழ்ந்த திருமாளிகையை வலம் வந்து புறப்பட்டார். அன்று முதல் திருக்கூட்டத்து அடியவர்களெல் லாம் தம்பிரான் தோழரென்று அழைத்து வரலானார்கள்.

குறிப்புரை :

வீதிவிடங்கன் - தியாகேசர்.

பண் :

பாடல் எண் : 276

மைவளர் கண்ட ரருளினாலே
வண்டமிழ் நாவலர் தம்பெ ருமான்
சைவ விடங்கின் அணிபுனைந்து
சாந்தமும் மாலையுந் தாரு மாகி
மெய்வளர் கோலமெல் லாம்பொலிய
மிக்க விழுத்தவ வேந்த ரென்னத்
தெய்வ மணிப்புற்று ளாரைப் பாடித்
திளைத்து மகிழ்வொடுஞ் செல்லா நின்றார்.

பொழிப்புரை :

கரிய கழுத்தையுடைய சிவபெருமானின் திரு வருளால் வளம் நிரம்பிய தமிழ் வல்லவரான ஆரூரர், சைவசமயத் தைச் சார்ந்தோர்க்குரிய திருநீறு, உருத்திராக்கம், மகரக்குழை, பூணூல் ஆகிய திருவேடங்களைப் பூண்டு, சந்தனமும் முத்து மாலையும் மலர் மாலையும் அணிந்தவராய்த், தம் திருமேனியின்கண் மிகச் சிறந்த திருக் கோலமெல்லாம் பொலிந்திருக்கும் மேன்மை மிகுந்த சிறந்த தவவேந்தர் என யாவரும் சொல்லுமாறு தெய்வத்தன்மை வாய்ந்த அழகிய புற்றிடங்கொண்டாரைப் பதிகங்கள் பாடி, அப்பேற்றால் உண்டாகிய இன்ப வெள்ளத்துள் மூழ்கி மகிழ்ச்சியோடு நாள்தொறும் வணங்கி வருவாராயினர்.

குறிப்புரை :

சைவவிடங்கு - சைவசமயம் சார்ந்த தோற்றப் பொலிவு. விடங்கு - அழகு. `சுந்தர வேடங்களால்` என இவர்தாமே அருளுவதும் காண்க. இது பொழுது பாடிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 277

இதற்குமுன் எல்லை யில்லாத்
திருநகர் இதனுள் வந்து
முதற்பெருங் கயிலை யாதி
முதல்வர்தம் பங்கி னாட்குப்
பொதுக்கடிந் துரிமை செய்யும் 
பூங்குழற் சேடி மாரிற்
கதிர்த்தபூ ணேந்து கொங்கைக்
கமலினி அவத ரித்தாள்.

பொழிப்புரை :

நம்பியாரூரர் திருவாரூருக்கு எழுந்தருளுதற்கு முன்னே எல்லையில்லாத சிறப்பினையுடைய இத்திருவாரூரிடத்து வந்து, தலைமையும், பெருமையும் உடைய திருக்கயிலையின்கண் வீற்றிருந்தருளும், உயிர்களின் வாழ்முதலாக விளங்கும் சிவ பெருமானின் ஒரு கூற்றை இடனாக உடைய உமையம்மையாருக்குச் சிறப்பான உரிமைத் தொண்டு செய்துவரும், மலர்களை முடித்த கூந் தலையுடைய கமலினி, அநிந்திதை எனும் இரு பணிப்பெண்களுள், ஒளி பொருந்திய அணிகளைத் தாங்கிய மார்பகங்களையுடைய கமலினி என்னும் பணிப்பெண் தோன்றினாள்.

குறிப்புரை :

திருவாரூரின் பெருமை பன்னிரு திருமுறைகளானும் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. `திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்` (தி.7 ப.39 பா10) எனவரும் திருத்தொண் டத் தொகைக் கூற்றொன்றே அதன் பெருமைக்குப் போதியதாகும். ஆதலின் `எல்லையில்லாத் திருநகர்` என்றார். பொதுக் கடிந்துரிமை செய்யும் என்றது உமையம்மையாருக்குப் பணி செய்தல் தமக்கும், பிறர்க்கும் பொதுவாய் உரியது என்பதை நீக்கித், தமக்கே சிறப்பாய் உரியதாக்கிக் கொண்டு பணி செய்வது. கதிர்த்த - ஒளி பொருந்திய. கமலினியாரும் அநிந்திதையாரும் திருக்கயிலையிலிருந்து இம்மண் ணுலகில் தோன்றுதற்குரிய காரணத்தை, திருமலைச் சருக்கம் 22 முதல் 27 வரையுள்ள பாடல்களில் காண்க.

பண் :

பாடல் எண் : 278

கதிர்மணி பிறந்த தென்ன
உருத்திர கணிகை மாராம்
பதியிலார் குலத்தில் தோன்றிப்
பரவையா ரென்னு நாமம்
விதியுளி விளக்கத் தாலே
மேதகு சான்றோ ரான்ற
மதியணி புனிதன் நன்னாள்
மங்கல அணியால் சாத்தி.

பொழிப்புரை :

இவ்வாறு தோன்றிய அவர், சிப்பியிடத்து ஒளி பொருந்திய முத்துப் பிறந்தாற்போல், இறைவற்குப் பணிசெய்யும் பதியிலார் குலத்தில் தோன்றி, நூல்களில் கூறியவாறு, மேன்மை பொருந்திய சான்றோர்களால், சிறந்த இளம்பிறையை அணிந்த சிவபெருமானுக்குரிய திருவாதிரை நன்னாளில் மங்கலம் பொருந்தப் பரவையார் என்னும் திருப்பெயரிடப்பட்டு.

குறிப்புரை :

கதிர் - ஒளி. பரத்தையர் - இற்பரத்தையர், சேரிப் பரத் தையர் என இருவகையர். இவர்களுள் முன்னவர் ஒருவன் தனக்கே உரிமைபூண்டு ஒழுகும் பான்மையர். பின்னையவர் பொருள் கொண்டு இன்பம்தரும் இயல்பினர். இவரைத் திருவள்ளுவர் `பொருட்பெண்டிர்`(குறள், 914) என்றழைப்பர். இங்குக் கூறப்படும் உருத்திர கணிகையர் என்பவர் முன்னைய வகையைச் சார்ந்தவர். இவர், பரத்தையர் குலத்தில் தோன்றினும், ஒருவன் தனக்கே உரிமை பூண்டு வாழும் தகையர். இறைவற்குரிய வழிபாட்டுக் காலங்களில் நடனம் செய்துவருபவர். காலப்போக்கில் பின்னையவர் இப்பணி யைச் செய்யும் நிலை நேர்ந்தது. ஆதலால் திருக்கோயில்களில் இவர்கள் பணி நிறுத்தப்பட நேர்ந்தது.

பண் :

பாடல் எண் : 279

பரவினர் காப்புப் போற்றிப்
பயில்பெருஞ் சுற்றந் திங்கள்
விரவிய பருவந் தோறும்
விழாவணி யெடுப்ப மிக்கோர்
வரமலர் மங்கை யிங்கு
வந்தன ளென்று சிந்தை
தரவரு மகிழ்ச்சி பொங்கத்
தளர்நடைப் பருவஞ் சேர்ந்தார்.

பொழிப்புரை :

தமக்கு இனமான சுற்றத்தார்கள் தெய்வங்களை வழிபட்டவர்களாய், அப்பெருமானின் காப்பை வேண்டி அவ்வத் திங்களிலும் செய்யத் தக்க விழா அணிகளைச் செய்ய, சான்றோர்கள் மேன்மையான திருமகள் இவ்விடத்துத் தோன்றினாள் என்று தங்கள் உள்ளத்தின்கண் தோன்றிவரும் மகிழ்ச்சி மேம்படத் தளர்நடைப் பருவத்தை அடைந்தார்.

குறிப்புரை :

குழந்தை பிறந்தபின், செங்கீரை, சப்பாணி முதலான பருவத்ததாய திங்களில், அக்குழந்தைக்கு நலமும் வளமும் வளர, இறைவழிபாடாற்றி வருவர். அது பெருவிழாவாகக் கொண்டாடப் பெறும். அதனையே `திங்கள் விரவிய பருவந்தோறும் விழா அணி எடுப்ப` என்றார். வர மலர் மங்கை - இப்பதியின்கண் முன்னர்த் தவம் செய்து வரம்பெற்ற திருமகள்.

பண் :

பாடல் எண் : 280

மானிளம் பிணையோ தெய்வ
வளரிள முகையோ வாசத்
தேனிளம் பதமோ வேலைத்
திரையிளம் பவள வல்லிக்
கானிளங் கொடியோ திங்கட்
கதிரிளங் கொழுந்தோ காமன்
தானிளம் பருவங் கற்குந்
தனியிளந் தனுவோ வென்ன.

பொழிப்புரை :

இளமை தவழும் ஒரு பெண்மானோ, தெய்வத் தன்மையுடைய கற்பகத் தருவில், வளரும் பருவத்தையுடைய இள அரும்போ, நறுமணம் பொருந்திய கற்பக மலரிலிருந்து ஒழுகும் தேனினது ஓர் இளம் பதமோ, அலை வீசுகின்ற கடலில் தோன்றிய இளமையான பவளக்கொடிகளுள் ஓர் இளங்கொடியோ, ஒளி பொருந்திய சந்திரனிடத்துத் தோன்றும் ஓர் இளங்கலையோ, மன்மதன் தன் இளம்பருவத்தில் கற்றற்குரிய ஒப்பற்ற இளமையானதொரு கருப்பு வில்லோ எனக் கண்டார் கூற.

குறிப்புரை :

கான் - அழகு. ஓகாரங்கள் ஐயப்பொருளன. தான் - அசைநிலை.

பண் :

பாடல் எண் : 281

நாடுமின் பொற்பு வாய்ப்பு
நாளுநாள் வளர்ந்து பொங்க
ஆடுமென் கழங்கும் பந்தும்
அம்மனை ஊச லின்ன
பாடுமின் னிசையுந் தங்கள்
பனிமலை வல்லி பாதங்
கூடுமன் புருகப் பாடுங்
கொள்கையோர் குறிப்புத் தோன்ற.

பொழிப்புரை :

எல்லோராலும் கருதத்தக்க இனிய அழகினது சிறப்பு நாள்தோறும் வளர்ந்து பொலிவடைய, எடுத்து ஆடுகின்ற மென்மையான கழற்காயும், பந்தும், அம்மனையும், ஊசலாட்டும் ஆகிய இவற்றைப் பாடுங்கால் எழும் இனிய ஓசையில், தம் தலைவி யாராகிய பார்வதியாரின் திருவடிகளைக் கூடுதற்குக் காரணமான அன்போடு, மனம் உருகப் பாடுகின்ற கொள்கையாகிய ஒரு குறிப் பும், அவரிடத்துத் தோன்றவும்.

குறிப்புரை :

விளையாட்டு வகையால் பாடுகின்ற பாடல்களில் ஓரொருகால் உமையம்மையாரைக் கூடவேண்டும் என்னும் குறிப்பும் தோன்றியது என்பார்,`பனிமலை வல்லிபாதம்......... குறிப்புத் தோன்ற` என்றார். கழங்கு, பந்து, அம்மனை, ஊசல் என விளை யாடும் விளையாட்டுக்களில், தெய்வ மணங்கமழும் திருப்பாடல் களைப் பாடி ஆடுதல் வழக்காதலைத் திருவாசகத்தாலும் அறியலாம் (தி.8 ப.11, ப.16 முதலியன).

பண் :

பாடல் எண் : 282

பிள்ளைமைப் பருவ மீதாம்
பேதைமைப் பருவ நீங்கி
அள்ளுதற் கமைந்த பொற்பால்
அநங்கன்மெய்த் தனங்க ளீட்டங்
கொள்ளமிக் குயர்வ போன்ற
கொங்கைகோங் கரும்பை வீழ்ப்ப
உள்ளமெய்த் தன்மை முன்னை
உண்மையுந் தோன்ற வுய்ப்பார்.

பொழிப்புரை :

குழவிப்பருவமாகிய ஐந்து வயதிற்கு மேலான பேதைப் பருவத்தினின்றும் நீங்கி, அள்ளிக்கொள்வதற்கமைந்த அழகினால் மன்மதன் தேடிய மெய்ம்மையான பொருள் குவியல் மேன்மேலும் உயர்வது போன்று, கோங்கு அரும்புகளையும் தோற்கச் செய்த கொங்கைகள் வளரவும், மனத்தின் உண்மை இயல்பானது, முன்தாம் திருக்கயிலையில் உமையம்மையாருக்குப் பணிப்பெண் ணாக இருந்த குறிப்பை ஓரொருகால் தோற்றுவிக்கவும் வாழ்ந்தார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின. இப்பாடலில் முதல் மூன்று அடிகளும் உடல் வளர்ச்சியைக் குறிக்கின்றன. நான்காவது அடி உள்ள வளர்ச்சியைக் குறிக்கின்றது.

பண் :

பாடல் எண் : 283

பாங்கியர் மருங்கு சூழப்
படரொளி மறுகு சூழத்
தேங்கமழ் குழலின் வாசந்
திசையெலாஞ் சென்று சூழ
ஓங்குபூங் கோயி லுள்ளார்
ஒருவரை யன்பி னோடும்
பூங்கழல் வணங்க வென்றும்
போதுவார் ஒருநாட் போந்தார்.

பொழிப்புரை :

தம் தோழியர்கள் தம்மைச்சூழ்ந்து வரவும், தம் உடலில் படர்ந்து இருக்கும் ஒளியானது தெருவில் சூழவும், தேன் கமழும் கூந்தலின் நறுமணமானது திசைகளெல்லாம் சென்று சூழவும், உயர்ந்த பூங்கோயிலில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற பெருமானை அன்புமீதூர, பொலிவினையுடைய திருவடிகளை வணங்க நாள் தோறும் செல்கின்றவராகிய பரவையார், ஒருநாள் அப் பூங்கோயிலுக்குச் சென்றார்.

குறிப்புரை :

பேரொளி - உடம்பில் பரந்திருக்கும் ஒளி. கூந்தலுக்கு இயற்கை மணம் உளதாதல், `கொங்கு தேர் வாழ்க்கை`(குறுந்.1) எனத் தொடங்கும் சங்கப்பாடலிலும் காண்பதொன்றாம்.

பண் :

பாடல் எண் : 284

அணிசிலம் படிகள் பார்வென்
றடிப்படுத் தனமென் றார்ப்ப
மணிகிளர் காஞ்சி யல்குல்
வரியர வுலகை வென்ற
துணிவுகொண் டார்ப்ப மஞ்சு
சுரிகுழற் கழிய விண்ணும்
பணியுமென் றினவண் டார்ப்பப்
பரவையார் போதும் போதில்.

பொழிப்புரை :

கால்களில் அணிந்த சிலம்புகள், `இந்நிலவுலகின் மாதர்களை யாம் வென்றோம்` என்று ஒலிக்கவும், முத்து முதலிய மணிகளால் கோக்கப்பெற்ற காஞ்சி என்னும் அணி, `பாம்பு உலகாய கீழுலகத்தை அல்குல் வென்றது` எனும் உறுதிப்பாட்டால் ஒலிக்கவும், சுருண்ட கூந்தற்கு மேகமானது தோற்ற காரணத்தால் `விண்ணு லகத்தவரும் இவரை வணங்குவார்கள்` என வண்டுகள் ஒலிக்கவும், பரவையார் தெருவில் செல்லும் பொழுதில்.

குறிப்புரை :

வரி அரவு உலகு - கோடுகளை உடைய பாம்பு உலகம்; கீழுலகம்.

பண் :

பாடல் எண் : 285

புற்றிடம் விரும்பி னாரைப்
போற்றினர் தொழுது செல்வார்
சுற்றிய பரிச னங்கள்
சூழஆ ளுடைய நம்பி
நற்பெரும் பான்மை கூட்ட
நகைபொதிந் திலங்கு செவ்வாய்
விற்புரை நுதலின் வேற்கண்
விளங்கிழை யவரைக் கண்டார்.

பொழிப்புரை :

தம்முடன் வரும் அடியவர் பலரும் சூழ, புற்றை இடமாகக்கொண்டு எழுந்தருளியிருக்கும் பெருமானை வழிபட்டு வணங்கிச் செல்பவராகிய ஆளுடைய நம்பிகள், முன்னைய ஊழ் கூட்ட, மகிழ்ச்சியைத் தன்னுள் அடக்கி நிற்கும் விளங்குகின்ற சிவந்த வாயையும், வில்போன்ற புருவங்களையும், வேல் போன்ற கண் களையும் உடைய விளங்கிய அணிகலன்களையணிந்த பரவை யாரைக் கண்டார்.

குறிப்புரை :

நற்பெரும் பான்மை - நன்மையும் பெருமையும் பெறத் தக்க ஊழ்வினை. பண்டை விதி கடைக்கூட்டப் பரவையாருங் கண்டார்` (தி.12 சரு.1-5 பா.288) `மின்போன் மறையும் சங்கிலியார் தம்மை விதியாற் கண்ணுற்றார்.` (தி.12 பு.29 பா.266) எனப் பின்னும் ஊழ்வினை கூட்டக் காண்பதைச் சிறப்பிப்பர். `ஒன்றே வேறே என்றிருபால்வயின், ஒன்றி உயர்ந்த பாவது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப`(தொல்.களவியல் 2) என்னும் தொல்காப்பியமும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 286

கற்பகத்தின் பூம்கொம்போ
காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின்
புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர்
மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ
அறியேனென் றதிசயித்தார்.

பொழிப்புரை :

இவ்விடத்து யான் காணும் இப்பொருள் கற்பக மரத்தின் பொலிவினையுடைய கொம்போ? மன்மதன்தன் பெருவாழ் வாகக்கொண்ட இரதி தேவியோ? உயர்வுமிக்க புண்ணியத்தின் பயனாய் விளைந்ததொரு புண்ணியமோ? மேகத்தைச் சுமந்து, வில், குவளை, பவளம், பிறபிற பூக்கள், சந்திரன் ஆகிய அனைத்தையும் தன்னிடத்தே கொண்டதொரு கொடியோ? இவற்றுள் யாதானும் ஒன்றோ, அல்லது வேறொன்றோ? என அறிய ஒண்ணாத அற்புதத் தின் திரண்ட வடிவோ? அல்லது சிவனருளால் வந்ததொரு திரு வடிவோ? இவற்றுள் எந்த ஒன்றாகவும் உறுதிப்படுத்த அறியேன் என்று அதிசயித்தார்.

குறிப்புரை :

முன் பாடலில் காட்சி நிகழ்ந்ததை அடுத்து, இப்பாட லில் ஐயம் நிகழ்வதாகக் காட்டுகின்றார். இது அகப்பொருள் இலக்கண மரபாகும். திருக்குறளில் காண்டலின்றி ஐயம் நிகழாதாதலின் ஐயமே முற்படக் கூறினார். அது அவர் செய்த புதுமைப் பொலிவாகும். திருக் கயிலையிலிருந்து வந்த பெண்ணாதலின் அத்தெய்வத் தோற்றமே காணக் `கற்பத்தின் பூங்கொம்போ` என்றார் . கற்பு + அகத்து + இன்பூ +கொம்பு எனப் பிரித்துக் கற்பினை அகத்தே கொண்ட இனிய பூ மலர்தற்கு இடமாகிய கொம்பு எனப் பொருள் காண்டலும் ஒன்று என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை). காமன்தன் பெரு வாழ்வு - பெருவாழ்வு பெறுவதற்கு இலக்காகக் கொண்ட மன்மதனின் வெற்றிக்கொடியோ? எனப்பொருள் கொண்டு, `உருவளர் காமன்றன் வென்றிக் கொடி` (தி.8 திருக்கோவை 1)எனவரும் திருக்கோவையா ரையும் நினைவு கூர்வர் சிவக்கவிமணியார். புண்ணியத்தின் புண்ணியமோ என்றது புண்ணியத்தின் விளைவோ எனப் பொருள்பட நின்றது. வில் - புருவத்திற்கும் குவளை - கண் ணிற்கும், பவளம் - வாய் இதழிற்கும், கோங்குமலர் - மார்பகத்திற்கும் (முலை), மதி - நெற்றிக்கும் உவமையாதல் வழக்கு. ஆதலின் இவ்வனைத்துப் பொருள்களையும் கொண்ட தொரு நறுமணக்கொடியோ! என்றார். `திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி .....` (தி.8 திருக்கோவை 1) எனவரும் திருக்கோ வையாரில் பலமலர்களும் ஒருங்குடைய கொடியோ என்றார். ஈண்டு மலர்களோடு பிறவற்றையும். (வில் - பிறைச்சந்திரன்) கூட்டி அவற்றை யுடைய விரைக் கொடியோ? என்றார். ஓகாரங்கள் ஐயப்பொருளன.

பண் :

பாடல் எண் : 287

ஓவியநான் முகனெழுத
வொண்ணாமை யுள்ளத்தால்
மேவியதன் வருத்தமுற
விதித்ததொரு மணிவிளக்கோ
மூவுலகின் பயனாகி
முன்னின்ற தெனநினைந்து
நாவலர்கா வலர்நின்றார்
நடுநின்றார் படைமதனார்.

பொழிப்புரை :

மூவுலகில் உள்ளவரும் கண்டு களிப்படைதற்குக் காரணமாய் என் முன் இங்கு நிற்கின்றது, நான்முகன் இத்தகையதான ஒரு பெண்கொடியைத் தன் கைகளால் எழுத இயலாமையின், தான் அடைந்த வருத்த மிகுதியினால் தன் உள்ளத்தால் நிறைவு கொள்ளு மாறு படைத்ததொரு இரத்தின விளக்கோ? என வியந்து நம்பியாரூரர் நின்றருளினார். பரவையாரும், நம்பியாரூரரும் தமக்குள் ஒருவரை யொருவர் மனங் கொள்ளுதற்கு ஏதுவாக, ஐவகை அம்புகளையுடைய மன்மதனாரும் இடைநின்றார்.

குறிப்புரை :

உயிர்கட்குற்ற வினைப்பயன் ஏதுவாக எத்தனையோ வகையான உடம்புகளைப் படைத்துக் கொடுக்கும் நான்முகனும், இவ் வடிவைத் தன் கையில் எழுதிப் பார்க்க இயலாதவாறு உள்ளத்தளவி லேயே உருவெழுதிக் காண்பதொரு மணிவிளக்காய் நின்றதெனவே, அவ்வடிவின் அருமையும், பெருமையும் சொல்லத்தகாத நிலைய வாயின. இது `கைபுனைந்து இயற்றாக்கவின்பெரு வனப்பு`(தி.11 திருமுரு.17) என்பதாயிற்று. `வேதா தன் கைமலரால் அன்றிக் கருத்தால் வகுத்தமைத்தான் மொய்ம்மலர்ப் பூங்கோதை முகம்` எனும் தண்டியலங்கார எடுத்துக் காட்டுச் செய்யுளும் ஈண்டு நினைவு கூர்தற்குரியதாம். மூவுலகின் பயனாகி - மூவுலகில் உள்ளவர்களும் கண்டுகளித்தற்குரிய வடிவாகி. நாவலர் காவலர் - திருநாவலூரில் தோன்றிய காவலர். `நாதனுக் கூர்நமக் கூர்..... நாவலூர்` (தி.7 ப.17 பா.11) என்பது ஆரூரரின் திருவாக்காதலின், நாவலர் என்பது நாவலுரில் தோன்றியவர் என்பதுபட நின்றது. காவலர் - நரசிங்க முனையரையர் மகன்மை கொள்ள வளர்ந்தவராதலின், இவரும் அந் நிலையினராவர். இனிப் பொதுவகையானன்றிச் சிறப்பு வகையானும் புலவர் பெருமக்களைத் திருவருள் திட்பம்கொண்டு வாழ ஆற்றுப் படுத்தி அருளியமைபற்றி நாவன்மையுடைய புலவர்கட்கு இவர் காவலர் ஆவர் என்றலும் ஒன்று. கரும்பு வில்லும் மலர் அம்பும் கொண்டு ஆண், பெண் ஆகிய இரு பாலார்க்கும் காதல் உணர்வைத் தோற்றுவிக்கும் கடப்பாடுடைமைபற்றி `நடுநின்றார் படைமதனார்` என்றார். இவ்வுண்மை இனிவரும் வரலாற்றானும் அறியப்படும். ஓகாரம் ஐயப்பொருளது.

பண் :

பாடல் எண் : 288

தண்டரள மணித்தோடும்  
தகைத்தோடும் கடைபிறழும்
கெண்டைநெடுங் கண்வியப்பக்
கிளரொளிப்பூ ணுரவோனை
அண்டர்பிரான் திருவருளால் 
அயலறியா மனம்விரும்பப்
பண்டைவிதி கடைகூட்டப்
பரவையா ருங்கண்டார்.

பொழிப்புரை :

குளிர்ந்த முத்துக்களினாலும், மணிகளினாலும் அமைந்த காதணிகளையும் தாண்டிச் செல்கின்ற நெருங்கிப் பிறழுகின்ற நீண்டகண்கள் வியக்குமாறு, விளங்குகின்ற ஒளி பொருந் திய அணிகலன்களை அணிந்த நம்பியாரூரரைத், தேவர்க்கும் தேவரா கிய புற்றிடம்கொண்டாரின் திருவருளால், திருவருள் சார்பன்றி, உலகியல் சார்பினை அறிந்திராத அவர்தம் மனம் விரும்புமாறு, முன் திருக்கயிலாயத்தில் நேர்ந்த ஊழின் வலியும் கூட்டுவிக்கப் பரவையா ரும் கண்டார்.

குறிப்புரை :

கந்தருவர் ஒழுக்கமாம் களவுப் புணர்ச்சியைத் தாமும் விரும்பி, முன்னமைந்த ஊழும் இயைய, பரவையாரும் அவரைப் பார்த்தார். உரவோன் - நம்பியாரூரர். அயலறியா மணம் எனப்பாடங் கொண்டு, பிறர் அறியாத காதல் மணம் எனப் பொருள் கோடலும் நன்று. கடைக்கூட்ட - முடித்துவைக்க.

பண் :

பாடல் எண் : 289

கண்கொள்ளாக் கவின்பொழிந்த
திருமேனி கதிர்விரிப்ப
விண்கொள்ளாப் பேரொளியா
னெதிர்நோக்கு மெல்லியலுக்கு
எண்கொள்ளாக் காதலின்முன்
பெய்தாத தொருவேட்கை
மண்கொள்ளா நாண்மடம்அச்
சம்பயிர்ப்பை வலிந்தெழலும்.

பொழிப்புரை :

காட்சிக்கு அடங்காத அழகினைப் பொழியும் திரு உடம்பானது ஒளியைப் பரப்ப, அதனால் விண்ணிடமும் அதனைப் பொறாதென்று சொல்லுமாறு பரவிய பேரொளியையுடைய நம்பி யாரூரரை எதிரே பார்க்கும் மெல்லிய நடையினையுடைய பரவை யாருக்கு, அளவற்ற அன்புப் பெருக்கால் முன்பு ஒரு காலத்தும் வாராத தொரு பெருவிருப்பானது, இந்நிலவுலகமும் ஏற்க இயலாதவாறு நிரம்ப, நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு எனும் நான்கு குணங் களையும் கீழ்ப்படுத்தித் தோன்றவும்.

குறிப்புரை :

நாணம் - ஈன்றோள் மாட்டும் எதிர்முகம் நோக்காது அமையும் கூச்சம். மடம் - அறிவிக்க அறிதலும், அறிந்ததை மறவாமை யும். பயிர்ப்பு - முன்பின் காணாத பொருள்களைக் காண்டலால் வரும் அருவருப்பு. உயிர்க் குணங்களுள் ஒன்று தோன்ற, ஏனைய அடங்கி நிற்கும். இங்கு நம்பியாரூரரிடத்து வைத்த காதலுணர்வு மீதூர்ந்தமை யால் இவ்வருங்குணங்கள் அடங்கி நிற்பவாயின. புனல் ஓடும் வழி, புல் சாய்ந்து புறங்கிடப்பது போலக் காதல் மீதூர்ந்த வழி, இவை ஒரு பால் அடங்கி நிற்பதன்றி இவை என்றும் அழியா என்பதும் அறியத் தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 290

முன்னேவந் தெதிர்தோன்றும்
முருகனோ பெருகொளியால்
தன்னேரில் மாரனோ
தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர்செஞ் சடையண்ணல்
மெய்யருள்பெற் றுடையவனோ
என்னேயென் மனந்திரித்த
இவன்யாரோ வெனநினைந்தார்.

பொழிப்புரை :

எனக்கு முற்பட வந்து என் எதிரில் தோன்றுகின்ற முருகப்பெருமானோ? பேரொளியால் தனக்கு ஒப்பில்லாத மன் மதனோ? மாலையை யணிந்த மார்பினையுடைய வித்தியாதரனோ? மின்னலையொத்த சிவந்த சடையினையுடைய சிவபெருமானின் மெய்ம்மையான திருவருளைப் பெற்றவனோ? என்ன வியப்பு? என் மனத்தைத் தன் வயப்படுத்தி நிற்கும் இப்பெருமகன் யாரோ அறியேன் என்று நினைந்தார்.

குறிப்புரை :

முன் ஆரூரர் இவரைக்கண்டதும் இவர் யாரோ என ஐய முற்றுக்கூறியதுபோல, இவரும் ஆரூரரைக் கண்டதும் ஐயுற்று இவர் யாரோ என வியக்கின்றார்.
``உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி
ஐயக் கிளவி ஆடூஉவிற் குரித்தே``. -தொல்காப். பொருள், 42
எனவரும் தொல்காப்பியத்தால் தலைமகனை ஐயுற்றுக் கூறல் தலை மகட்கு இல்லை எனத் தெரிகிறது. தலைமகள் ஐயப்படின் தெய்வமோ என்று ஐயுறல் வேண்டும், அவ்வாறு ஐயுறின் அச்சம் வரும். அதனால் காம நிகழ்ச்சியுண்டாகாதெனக் காரணம் கூறுவர் இளம்பூரனார். ஆனால் இறையனார் களவியல் உரையாசிரியர், தலைமகளும் ஐயப் படுவர் எனக் கூறுவர்(இ.க.நூற்பா. 3 உரை). எனவே தொல்காப்பியர் காலத்தே மகளிர் ஐயுறுதல் இல்லையாகக் காலப்போக்கில் அவர்களும் ஐயுறுதற்கு ஏதுவாயிற்று என அறியலாம். இந்நிலையிலேயே ஆரூர ரைக் கண்டு பரவையார் ஐயுற்றார். அற்றேல்,
வணங்கு நோன்சிலை வார்கணைக் காமனோ
மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ
நிணந்தெ னெஞ்ச நிறை கொண்ட கள்வனை
யணங்கு காளறி யேனுரை யீர்களே. -சீவக. சிந். பதுமை. 146
எனப் பதுமையார் ஐயுற்றது என்னாமோ எனில் அது, காட்சி விதுப் பால் ஐயுற்றதன்று: சீவகன் என்று அறிந்தபின் அவன் அழகுகண்டு வியந்ததாகும். பரவையார் இப்பாடலில் ஐயுற்றுக் கூறும் கூற்றோடு ஆரூரர் ஐயுற்றுக் கூறும் கூற்றும் ஒப்பிட்டுக் காண்டற்குரியதாம். ஆண்டு அவர் கற்பகத்தின் பூங்கொம்போ? என்றார். இங்கு இவர் அக்கற்பகத்தின் பூங்கொம்பாம் தெய்வயானையை மணந்த முரு கனோ? என்றார். ஆண்டு அவர் - காமன் தன் பெருவாழ்வோ? என்றார். இங்கு இவர் அத்தேவியை மணந்த மாரனோ? என்றார். ஆண்டு அவர் பொற்புடைய புண்ணி யத்தின் புண்ணியமோ? என்றார். இங்கு இவர் அப்புண்ணியத்தின் பயனான மின்னேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ? என்றார். இவ்வாறு ஐயுற்ற திறன்களாலும் இவ்விருவர்தம் உளம் ஒத்த பாங்கு தெரியவருகிறது. இவ்வாறெல்லாம் ஐயுறுதற்குரிய பெருமையுடை யான், தோன்றிய அளவில் மறைந்தமைபற்றி இவன் யாரோ? என்றார். ஓகாரங்கள் ஐயப் பொருளன.

பண் :

பாடல் எண் : 291

அண்ணலவன் தன்மருங்கே
அளவிறந்த காதலினால்
உண்ணிறையுங் குணநான்கும்
ஒருபுடைசாய்ந் தனவெனினும்
வண்ணமலர்க் கருங்கூந்தல்
மடக்கொடியை வலிதாக்கிக்
கண்ணுதலைத் தொழுமன்பே
கைக்கொண்டு செலவுய்ப்ப.

பொழிப்புரை :

தலைமைசான்ற நம்பியாரூரரிடத்து ஏற்பட்ட அளவிறந்த காதல் வேட்கையால், தம் உள் நிறைந்த நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களும் ஒருமருங்கு விலகின வாயினும், அழகிய மலர்கள் நிறைந்த கரிய கூந்தலையுடைய இளங் கொடிபோல்வாளைத் தேற்றி, சிவபெருமானைத் தொழுதற்குரிய அன்பே திருக்கோயிலுக்குச் செல்லுமாறு செலுத்த,

குறிப்புரை :

ஆரூரர்மீது உற்ற காதலால் அச்சம் முதலாகிய நான்கு குணங்களும் நிறை அழியினும், இறைவன்பால் கொண்ட அன்பு அழியாது மீதூர்ந்திருந்தது என்பார். `கண்ணுதலைத் தொழும் அன்பே கைக்கொண்டு செலவுய்ப்ப` என்றார். கைக்கொண்டு செலவு உய்ப்ப - (வலியிழந்தவர்களைக்) கைப்பிடித்து அழைத்துக் கொண்டு செல்வது போல, இறைவன் மீது கொண்டிருந்த அன்பும் இவரைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வது போல அழைத்துச் சென்றதாம்.

பண் :

பாடல் எண் : 292

பாங்கோடிச் சிலைவளைத்துப்
படையனங்கன் விடுபாணம்
தாங்கோலி யெம்மருங்கும்
தடைசெய்ய மடவரலும்
தேங்கோதை மலர்க்குழல்மேல்
சிறைவண்டு கலந்தார்ப்பப்
பூங்கோயி லமர்ந்தபிரான்
பொற்கோயில் போய்ப்புகுந்தாள்.

பொழிப்புரை :

பக்கத்தில் ஓடிக் கருப்புவில்லை வளைத்து, தென்றல் முதலிய நால்வகைச் சேனைகளையுடைய மன்மதன் விடும் மலர் அம்புகள், வளைந்து நான்கு புறத்திலும் தடை செய்யவும், பர வையாரும் நறுமணமுடைய மலர்மாலையை அணிந்த கூந்தலிடத்துச் சிறகினையுடைய வண்டுகள் தம்முள் கலந்து ஒலிக்க, பூங்கோயி லின்கண் வீற்றிருந்தருளும் பெருமானின் அழகிய திருக்கோயிலுக் குள் சென்றார்.

குறிப்புரை :

தாம்- அசைநிலை. தாம் கோலி - தமக்குள் வளைத்துக் கொண்டு. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 293

வன்றொண்ட ரதுகண்டுஎன்
மனங்கொண்ட மயிலியலின்
இன்றொண்டைச் செங்கனிவாய்
இளங்கொடிதான் யாரென்ன
அன்றங்கு முன்நின்றார்
அவர்நங்கை பரவையார்
சென்றும்பர் தரத்தார்க்குஞ்
சேர்வரியார் எனச்செப்ப.

பொழிப்புரை :

பரவையார் கோயிலுள் புகுந்தமையைக் கண்ட ஆரூரர், என் மனத்தைத் தன் வயப்படுத்தி, சென்ற மயில்போலும் சாயலையும், கொவ்வைக் கனி போலும் சிவந்த வாயினையும் உடைய இளங்கொடிபோலும் இப்பெண் யாரென்று வினவ, அது பொழுது அவ்விடத்திருந்தவர்கள், இவர்பெண்களில் சிறந்த பரவையார் எனும் பெயரினர், தேவர்களும் நெருங்கிச் சேர்தற்கு அரியவர் என்று கூற.

குறிப்புரை :

தொண்டை - கொவ்வை. இதன் பழம் சிவந்திருத்தல் பற்றி இதனைப் பெண்களின் வாய் இதழுக்கு உவமையாகக் கூறுவர்.

பண் :

பாடல் எண் : 294

பேர்பரவை பெண்மையினில்
பெரும்பரவை விரும்பல்குல்
ஆர்பரவை யணிதிகழும்
மணிமுறுவல் அரும்பரவை
சீர்பரவை யாயினாள்
திருவுருவின் மென்சாயல்
ஏர்பரவை யிடைப்பட்ட
என்னாசை யெழுபரவை.

பொழிப்புரை :

இவள் பெயர் பரவை என்று சொல்லப்படுவது. அவளுடைய பெண்தன்மையைக் குறிக்கொண்டு கூறின், பெரிய தேவர் கூட்டமும் விரும்புகின்ற திலோத்தமை முதலிய அரம்பை யர்களும் வணங்கத் தகுந்த தெய்வத் தன்மை வாய்ந்தது. அழகு பொலிகின்ற முத்துக்களையொத்த பற்கள் முல்லை அரும்புகளை ஒப்பன, திருமகளும் விரும்பும் அழகினை உடையவளது திருவுருவத் தின் இனிய மென்மையான அழகில் தோன்றும் என்னுடைய ஆசை ஏழு கடலையும் ஒத்துள்ளது.

குறிப்புரை :

இப்பாடலில் பரவை என்னும் சொல் ஏழு இடங்களில் வந்துள்ளது. பரவை என்பது கடல் எனப் பொருள்படுவது. இது கொண்டு திருச்சிராப்பள்ளி மீனாட்சிசுந்தரம் பிள்ளை `முறையின் ஒரு சிறு தூக்கின் எழுபரவையும் புக முடித்து உற நிறுத்தான், இவன் மொழி எங்கள் தம்பிரான் வல்லபம் உணர்ந்திலை கொல்` (சேக்கிழார் பிள். தமிழ், அம்புலி, 6) எனப் பாராட்டி மகிழ்ந்திருப்பதும் அறியத்தக் கதாம்.
இனி இப் பாட்டினிறுதியில் வரும் எழுபரவை என்பது ஏழு கடல்களைக் குறிப்பதும் அறிந்து இன்புறத்தக்கதாம். இவ்வாறெல்லாம் எண்ணி மகிழ்தற்குரியது எனினும், இச்சொல்வரும் ஏழு இடங்களில், பின்னிரண்டிடங்களில் மட்டுமே கடலைக் குறிப்பனவாக உள்ளன. ஏனைய இடங்களில் வெவ்வேறான நிலையில், சொற்கள் பிரிக்கப் பட்டுப் பொருள்களும் வேறுபட நிற்கின்றன.
`பேர் பரவை` என வருமிடத்து, அது அப்பெருமாட்டியின் பெயரைக் குறித்து நிற்கின்றது, பெரும் பரவை என்பது. பெரு + உம்பர் + அவை எனப் பிரிக்கப் பெற்றுப் பெரிய தேவர் கூட்டம் எனும் பொருள்பட நிற்கின்றது. விரும்பு அல்குலார் பரவை என வருமிடத்து விரும்பு + அல்குலார் + பரவு + ஐ எனப் பிரிக்கப்பட்டு, தேவர்களும் விரும்புகின்ற திலோத்தமை முதலிய அரம்பையர்களும், வணங்கத் தகுந்த தெய்வத் தன்மை வாய்ந்தவள் எனும் பொருள்பட நிற்கின்றது ஐ - இறை; தெய்வத் தன்மை.
இனி, விரும்பு + அல்குல் + ஆர்பு + அரவு + ஐ எனப் பிரித்து விரும்பத் தகுந்த அல்குலின் நிறைவானது, பாம்பரசின் (ஆதி சேடன்) படத்தின் அழகையொக்கும் எனப் பொருள் கோடலும் ஒன்று என்பர் ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள்,(பெரிய.பு.உரை) `மணிகிளர் காஞ்சி யல்குல் வரியரவுலகை வென்ற துணிவுகொண்டார்ப்ப` (பா.284) என முன்னர்க் கூறப்பட்டதும் காணலாம். அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை என்பது மணி முறுவல் அரும்பர் அவை எனப்பிரிக்கப் பட்டு, முத்துக்களையொத்த முறுவலானது முல்லை அரும்புகளை ஒத்தது எனப் பொருள்பட நின்றது. அரும்பர் - முல்லை அரும்புகள்; சுரும்பு - சுரும்பர் என நின்றாற் போல, அரும்பு அரும்பர் என நின்றது. சீர் பரவை ஆயினார் (என்பது) சீர் + பரவு + ஐ எனப் பிரிக்கப் பட்டுத் திருமகளும் விரும்பும் அழகினை உடையாள் என நின்றது. ஐ - அழகு. மென்சாயல் ஏர் பரவை என்பது, மென்மையான அழகு பொருந்திய கடலினிடத்து எனும் பொருள்பட நின்றது. எழுபரவை என்பது ஏழுகடல் எனும் பொருள்பட நின்றது.

பண் :

பாடல் எண் : 295

என்றினைய பலவுநினைந்
தெம்பெருமான் அருள்வகையான்
முன்றொடர்ந்து வருங்காதல் 
முறைமையினால் தொடக்குண்டு
நன்றெனையாட் கொண்டவர்பால்
நண்ணுவனென் றுள்மகிழ்ந்து
சென்றுடைய நம்பியும்போய்த்
தேவர்பிரான் கோயில்புக.

பொழிப்புரை :

இவ்வாறாகப் பலபட நினைந்து எம் தலைவ னாகிய புற்றிடங் கொண்டாரது திருவருட்பெருக்கால், முற்பிறவியி லிருந்து தம்மைத் தொடர்ந்து வருகின்ற விருப்பின் தகைமையால் கட்டுண்டு, பெரிதும் விரும்பி என்னை அடிமைகொண்ட பெருமானை அடைவேன் என்று, தமது உள்ள மகிழ்ச்சியால் சென்று, ஆளுடைய நம்பிகளும் புற்றிடங் கொண்டாரின் திருக்கோயிலுள் செல்ல.

குறிப்புரை :

பரவையாரிடத்துத் தோன்றிய காதல் திருக்கயிலை யிலேயே தொடங்கப் பெற்ற தாதலின் `முன் தொடர்ந்து வரும் காதல்` என்றார்.
மடவரலும் (பரவையார்) பொற்கோயில் போய்ப் புகுந்தாள் எனக்கூறியதை அகப்படுத்துமாறு, இங்கு `நம்பியும் போய்த் தேவர் பிரான் கோயில் புக` என்றமையின், உம்மை இறந்தது தழீஇயிற்று.

பண் :

பாடல் எண் : 296

பரவையார் வலங்கொண்டு
பணிந்தேத்தி முன்னரே
புரவலனார் கோயிலினின்
றொருமருங்கு புறப்பட்டார்
விரவுபெருங் காதலினால்
மெல்லியலார் தமைவேண்டி
அரவின்ஆ ரம்புனைந்தார்
அடிபணிந்தார் ஆரூரர்.

பொழிப்புரை :

அது பொழுது பரவையார் திருக்கோயிலை வலம்வந்து புற்றிடங் கொண்டாரை வணங்கிப் போற்றி, தம் வழிபாட்டை நிறைவு செய்துகொண்டு, ஆரூரர் திருக்கோயிலினுள் புகும் முன்பே பெருமானின் திருக்கோயிலிலிருந்து வேறொரு வழியாக வெளிச் சென்றார். (இந்நிலையில்) நம்பியாரூரரும், பெருமானிடத்துக் கொண்ட பெருவிருப்பால், பரவையாரைத் தமக்குத் தருமாறு பாம்பினை அணியாகக் கொண்ட புற்றிடங்கொண்டார் திருவடிகளை வணங்கினார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.
எனவே பரவையார் வழிபாடு செய்து வெளிப்போந்த பின் னரே, நம்பியாரூரர் உட்சென்று அவரைத் தருமாறு வேண்டினார் என்பது புலப்படுகின்றது. விரவு பெருங்காதலினால் - பெருமான் மீது வைத்த அளவிறந்த பற்றால். பெருமான் தம்மை விரும்பித் தடுத்தாட் கொண்டமையாலும், அவ்வாறு ஆட்கொள்ளப்பட்டபின் மீளா அடிமை கொண்டு ஆரூரரும் அப் பெருமானிடத்து அன்பு செலுத்தி வருதலாலும், அக்கயிலை நிகழ்ச்சி வழியே பரவையாரை விரும்ப வும் காணவும் நேர்ந்தமையாலும், இத் தொடருக்கு இவ்வாறு பொருள் கொள்ளல் ஏற்புடைத்தாயிற்று. இவ்வாறன்றி, பரவையார் மீதுற்ற பெருங்காதலால் என உரை கொள்ளின், அது ஆரூரர் அடிமைத் திறத்திற்கு அத்துணைப் பெருமை தராததாய் அமையும்.

பண் :

பாடல் எண் : 297

அவ்வாறு பணிந்தேத்தி
யணியாரூர் மணிப்புற்றின்
மைவாழுந் திருமிடற்று
வானவர்பால் நின்றும்போந்து
எவ்வாறு சென்றாள்என்
இன்னுயிராம் அன்னமெனச்
செவ்வாய்வெண் நகைக்கொடியைத்
தேடுவா ராயினார்.

பொழிப்புரை :

அவ்வகையில் பரவையாரைத் தருமாறு வேண்டி வணங்கி வழிபட்டுத், திருவாரூரின்கண் உள்ள அழகிய புற்றை இட மாகக் கொண்ட நீல நிறம் பொருந்திய திருக்கழுத்தினையுடைய சிவ பெருமானிடத்தினின்றும் நீங்கி, எவ்வழியாகச் சென்றாள் என் உயிர் போன்ற அன்னமாகிய பரவை என்று சிவந்த வாயினையும், வெண் மையான பற்களையும் உடைய பரவையாரைத் தேடுவாராயினார்.

குறிப்புரை :

மை - கருமை: அந்நிறத்தையுடைய நஞ்சைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 298

பாச மாம்வினைப் பற்றறுப் பான்மிகும்
ஆசை மேலுமொ ராசை யளிப்பதோர்
தேசின் மன்னியென் சிந்தை மயக்கிய
ஈச னாரரு ளெந்நெறிச் சென்றதே.

பொழிப்புரை :

உயிரைப் பிணித்து நிற்கும் வினைத்தொடர்பை அறுத்தற்காகச் சிவபெருமானிடத்துக் கொள்ளும் மிக்க ஆசையின் மேலும் ஓர் ஆசையைக் கொடுக்கும் ஒப்பற்ற ஒளியாக விளங்கி, என் மனத்தை மயங்கச் செய்த சிவபெருமானின் திருவருளானது (பரவை யார்) எவ்வழியாகச் சென்றது?

குறிப்புரை :

பாசம் - கட்டு. உயிர்கள் தாம் கொள்ளும் பற்றின் காரணமாகவே இக்கட்டு நேர்கிறது. இதனை அறுத்தற்கு உரியான் இறைவனே யாவன். `பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே`(தி.8 ப.1 வரி.64) என்னும் திருவாசகமும். `பற்று` `கட்டாதல்` `ஒக்கல் வாழ்க்கை தட்கு மா காலே`(புறநா. 193), `மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர்`(குறள்,348) என்பனவாய சங்க இலக்கியத்தாலும் திருக்குறாலும் உணரலாம். இறைவன் மீது கொண்ட ஆசையுடன் மேலும் ஒருவர் (பரவையார்) தன்மீது ஆசை கொள்ளுமாறு செய்யும் ஈசன் அருள் எவ்வழிச் சென்றது? என வியந்து கூறுகிறார். அற்புதமோ, சிவனருளோ என முன்னர் ஐயுற்றதற்கு இணங்க, இங்குப் பரவையாரை `ஈசன் அருள்` எனக் குறித்தார். பற்று அறுப்பான் - பற்றினை அறுக்கும் பொருட்டு.

பண் :

பாடல் எண் : 299

உம்பர் நாயகர் தங்கழல் அல்லது
நம்பு மாறறி யேனை நடுக்குற
வம்பு மால்செய்து வல்லியின் ஒல்கியின்று
எம்பி ரானரு ளெந்நெறிச் சென்றதே.

பொழிப்புரை :

தேவர்கட்குத் தலைவனாகிய சிவபெருமானின் வீரக்கழலை அணிந்த திருவடிகளையன்றி வேறொன்றையும் ஒரு பொருளெனக் கருதிவிரும்பாத என்னை, வருந்துதற்கு ஏதுவாய நிலையில்லாத விருப்பத்தைத் தந்து, ஒரு கற்பகக் கொடிபோல் அசைந்து இற்றைக்கு எம் பெருமானின் திருவருளானது (பரவையார்) எவ்வழியாகச் சென்றது?

குறிப்புரை :

நம்புமாறு - விரும்புமாறு. நம்பு - விருப்பம். வம்பு - நிலையின்மை.

பண் :

பாடல் எண் : 300

பந்தம் வீடு தரும்பர மன்கழல்
சிந்தை யார்வுற உன்னுமென் சிந்தையை
வந்து மால்செய்து மானென வேவிழித்து
எந்தை யார்அருள் எந்நெறிச் சென்றதே.

பொழிப்புரை :

உடம்போடு உயிரைக் கூட்டி வாழ்விக்கும் கட்டையும், அவற்றின் நீக்கமாகிய வீட்டையும் கொடுக்கும் சிவ பெருமானின் திருவடிகளை உளங்குளிர எண்ணி மகிழும் என் சிந்தையை வந்து மயக்கி, மானென விழித்து, என் விருப்பை மிகுவித்த எம் சிவபெருமானின் திருவருள் (பரவையார்) எவ்வழிச் சென்றது?

குறிப்புரை :

இரு வினையானும் போக்குவரவு புரியுமாறு உயிர்க்கு உடம்பு கொடுத்து, அதன்வழி வினை நீக்கம்பெறச்செய்வது பந்தமாகும்.

பண் :

பாடல் எண் : 301

என்று சாலவு மாற்றல ரென்னுயிர்
நின்ற தெங்கென நித்திலப் பூண்முலை
மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்
சென்று தேவா சிரியனைச் சேர்ந்தபின்.

பொழிப்புரை :

இவ்வாறெல்லாம் கூறி, மிகவும் ஐம்புல இன்பத்திற்கு ஆற்றாதவராய், என்னுடைய உயிரானது எங்கு நிற் கின்றது? என்று, முத்துமாலையை அணிந்த மார்பையும் நறுமணம் கமழும் நீண்ட கூந்தலையும் உடைய அப்பரவையாரைத் தேடுவா ராய்த், திருக்கோயிலினின்றும் புறப்பட்டுத், தேவாசிரிய மண்டபத்தை அடைந்த பொழுது.

குறிப்புரை :

தேடுவான் - தேடும்பொருட்டு.

பண் :

பாடல் எண் : 302

காவி நேர்வருங் கண்ணியை நண்ணுவான்
யாவ ரோடு முரையியம் பாதிருந்து
ஆவி நல்குவர் ஆரூரை யாண்டவர்
பூவின் மங்கையைத் தந்தெனும் போழ்தினில்.

பொழிப்புரை :

கருங்குவளை மலரை யொத்த கண்களையுடைய பரவையாரைச் சேரும்பொருட்டு, யாவரிடத்தும் உரையாடாதிருந்து, திருவாரூரில் அரசு வீற்றிருக்கும் பெருமான், திருமகளையொத்த பரவையாரைக் கொடுத்து, அதன் வாயிலாக என் உயிரையும் கொடுப்பர் எனக் கருதியிருக்கும் அமையத்தில்,

குறிப்புரை :

காவி - கருங்குவளை.

பண் :

பாடல் எண் : 303

நாட்டு நல்லிசை நாவலூ ரன்சிந்தை
வேட்ட மின்னிடை இன்னமு தத்தினைக்
காட்டு வன்கட லைக்கடைந் தென்பபோற்
பூட்டு மேழ்பரித் தேரோன் கடல்புக.

பொழிப்புரை :

நிலைபெற்ற நற்புகழையுடைய நம்பியாரூரர் தம் உள்ளத்து விரும்பிய மின்போலும் இடையினையுடைய இனிய அமுதாகிய பரவையாரை, இப்பொழுது கடலைக்கடந்து சென்று நாளை வந்து காட்டுவன் என்று கூறுவது போல, பூட்டிய ஏழு குதிரைகளை உடைத்தாகிய தேரையுடைய கதிரவன் கடலில் மறைய,

குறிப்புரை :

ஏழ்பரித்தேரோன் - கதிரவன்; இவன் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் செல்வன் என்றும், அவ் ஏழு குதிரைகளும் ஏழு நிறங்களை உடையன என்றும் கூறுவர். இனி ஏழு நிறமுடைய `சப்தா` எனும் குதிரை பூட்டப்பெற்ற தேரையுடையவன் என்று கூறுவாரும் உளர். நீலம் முதல் சிவப்பு ஈறாக உள்ள ஏழு நிறங்களின் திரட்சியே கதிரவனின் கதிராகும் என்றும், இதனையே ஏழு குதிரைகள் பூட்டப் பெற்ற தேரில் செல்வதாகக் கருதுவர் என்றும் கூறுவர் சிவக்கவி மணியார் (பெரிய.பு.உரை).

பண் :

பாடல் எண் : 304

எய்து மென்பெடை யோடிரை தேர்ந்துண்டு
பொய்கை யிற்பகல் போக்கிய புள்ளினம்
வைகு சேக்கைகண் மேற்செல வந்தது
பையுள் மாலை தமியோர் பனிப்புற.

பொழிப்புரை :

பிரியாது உறையும் மென்மையான பெடை யொடு பகற்காலத்தே பொய்கைக் கண் சென்று, நல்ல இரைகளை ஆராய்ந்து உண்ட பறவைக்கூட்டங்கள், தாம் வாழும் கூடுகளில் சென்று அடையவும்,தனித்திருக்கும் தலைவரும், தலைவியரும் பிரிவாற்றாது வருந்தவும் துன்பத்தைத் தரும் மாலைக் காலம் வந்தது.

குறிப்புரை :

எய்தும் - ஆண் பறவையோடு பிரியாது பொருந்தும். பையுள் - துன்பம். இவைநான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 305

பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும்
வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்அரன்
அஞ்செ ழுத்து முணரா அறிவிலோர்
நெஞ்சு மென்ன இருண்டது நீண்டவான்.

பொழிப்புரை :

செம்பஞ்சினும் மெல்லிய அடியினையுடைய பெண்களின் மனமும், வஞ்சனை உடையாரது கொடிய தீவினையும், சிவபெருமானின் திருவைந்தெழுத்தை உணராத அறிவற்றார்தம் மனமும் போல நீண்ட விண்வெளியானது இருளடைந்தது.

குறிப்புரை :

`பேதைமை என்பது மாதர்க் கணிகலம்` என்பதாலும், மகளிர்க்கு உளவாகும் அச்சம் முதலிய நான்கு குணங்களுள் மடமை என்பதும் ஒன்றாதலானும் மாதர் உள்ளம் இருண்டது எனக் கூறினார். இப்பாவையர் குலமகளிரும் அடங்கப் பரத்தையரே குறிக்கும் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). திருமணம் ஆகும்வரை, பெற்றோர் அரவணைப்பிலும், திருமணம் ஆனபின் கொண்டான் குறிப்பிலும் நிற்றலின், நீண்டநெடிய அநுபவம் அவருக்கு அக் காலத்தே வாயாதிருந்தது. அதுபற்றியே பாவையர் எனப்பொதுப்படக் கூறினர் என்றலும் எண்ணத் தகுவதாகும். வஞ்சனையுடையார் உண்மை உணர இயலாமையின் அவர் உள்ளமும் `அரன் அஞ்செ ழுத்து முணரா அறிவிலோர்` ஆதலின், அவர்தம் உள் ளமும் இருண்டது என்றார். அஞ்செழுத்தும் எனவரும் உம்மை முற்றும்மை. ஏனைய எண்ணும்மைகளாம்.

பண் :

பாடல் எண் : 306

மறுவில் சிந்தைவன் றொண்டர் வருந்தினால்
இறும ருங்குலார்க் கியார்பிழைப் பாரென்று
நறும லர்க்கங்குல் நங்கைமுன் கொண்டபுன்
முறுவ லென்ன முகிழ்த்தது வெண்ணிலா.

பொழிப்புரை :

குற்றமற்ற சிந்தையையுடைய நம்பியாரூரரே வருத்தமுற்றால், மார்பகத்தின் பளுவால் அசைகின்ற சிறிய இடையை யுடைய பெண்களின் ஆசையினின்றும் யார்பிழைக்க முடியும்? என்று நறுமணம் கமழும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய இரவாகிய பெண்ணானவள், முற்படச் செய்த புன்சிரிப்புப் போல வெண்ணிலா தோன்றுவதாயிற்று.

குறிப்புரை :

இறும் - பளுவால் வளையும்.

பண் :

பாடல் எண் : 307

அரந்தை செய்வார்க் கழுங்கித்தம் ஆருயிர்
வரன்கை தீண்ட மலர்குல மாதர்போல்
பரந்த வெம்பகற் கொல்கிப் பனிமதிக்
கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம்.

பொழிப்புரை :

துன்பம் செய்யும் இழிந்தாரின் கை தீண்ட வருந்தியும், தம் உயிர்க்காதலர் தம்மைத் தீண்ட உடலும் உள்ளமும் மலர்ச்சி அடைந்தும் வாழும் குலப் பெண்டிர் போல, பரந்த வெம்மை பொருந்திய கதிரவனின் ஒளியாகிய கைகள் படும்போது வாடிக் குவிந்தும் குளிர்ந்த சந்திரனுடைய ஒளிக் கதிராகிய கைகள் தம்மைத் தீண்டியபோது ஆம்பல்கள் மலர்ந்தும் இருந்தன.

குறிப்புரை :

அரந்தை - துன்பம். வரன் - கணவன். கயிரவம் - ஆம்பல்.

பண் :

பாடல் எண் : 308

தோற்று மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே
சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோய்
ஆற்ற அண்டமெ லாம்பரந் தண்ணல்வெண்
நீற்றின் பேரொளி போன்றது நீள்நிலா.

பொழிப்புரை :

இந்நிலவுலகில் பிறக்கும் நிலை பெற்ற உயிர் கட்கெல்லாம் தூய்மையையும், போற்றத்தகும் இன்பத்தையும், குளிர்ச் சியையும் கொடுத்தலன்றி, செல்கின்ற மிகப்பெரிய அண்டங்களிலும். சென்று நிலவுகின்ற சிவபெருமானின் திருநீற்றினது வெண்மையான பேரொளி போன்று நீண்டு ஒளிவிடும் நிலவு விளங்கியது.

குறிப்புரை :

நிலவு, இவ்வுலகில் தோன்றியிருக்கும் உயிர்கட் கெல் லாம் தூய்மையும், இன்பமும், தண்ணளியும், கொடுப்பதோடு எல்லா அண்டங்களிலும் ஒளிவிட்டு விளங்குவதும் ஆகும். தோற்றும்- உடலொடு பிறக்கும். ஆற்ற அண்டம் - மிகப்பெரிய அண்டங்கள்.

பண் :

பாடல் எண் : 309

வாவி புள்ளொலி மாறிய மாலையில்
நாவ லூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர்பெருங் காதலும்
ஆவி சூழ்ந்த தனிமையு மாயினார் .

பொழிப்புரை :

குளங்களில் இரைதேடும் பறவைகளின் ஒலி நீங்கிய மாலைக்காலத்தில், நம்பியாரூரரும், பெண்களில் சிறந்த பரவையார் கொடுத்த மிகப்பெரிய வேட்கையும், தம் உயிரை நீங்காது நிற்கும் தனிமையும் உடையராயினார்.

குறிப்புரை :

*********

பண் :

பாடல் எண் : 310

தந்தி ருக்கண் எரிதழ லிற்பட்டு
வெந்த காமன் வெளியே உருச்செய்து
வந்தென் முன்னின்று வாளி தொடுப்பதே
எந்தை யார்அருள் இவ்வண்ண மோவென்பார்.

பொழிப்புரை :

`சிவபெருமானின் நெற்றிக்கண்ணினின்றும் தோன்றிய தீயில்பட்டு இறந்த மன்மதன் இதுபொழுது உருவெடுத்து வெளிப்போந்து என் எதிர்நின்று அம்பைத் தொடுப்பதோ? எம் பெருமானது திருவருளும் இத்தகையதோ?` என்பார்.

குறிப்புரை :

எரிதழல் - எரிகின்ற நெருப்பு. உருச்செய்து - உருவெ டுத்து. வாளி - அம்பு.

பண் :

பாடல் எண் : 311

ஆர்த்தி கண்டும்என் மேல்நின்று அழற்கதிர்
தூர்ப்ப தேயெனைத் தொண்டுகொண் டாண்டவர்
நீர்த்த ரங்கநெடுங் கங்கை நீள்முடிச்
சாத்தும் வெண்மதி போன்றிலை தண்மதி.

பொழிப்புரை :

குளிர்ந்த சந்திரனே! யான் பரவையாரால் படும் துன்பத்தைக் கண்டபின்னும், என்னிடத்து நெருப்பை வீசும் ஒளிக் கதிர்களைத் தூவுவதோ? என்னை அடிமை கொண்டு ஆண்ட சிவ பெருமானின் வெள்ளப் பெருக்கையுடைய அலைவீசுகின்ற கங்கைப் பேராற்றையுடைய நீண்ட சடைமுடியில் அணிந்திருக்கின்ற வெண் மதியைப்போல் அமைந்தாய் அல்லையோ! என்பார்.

குறிப்புரை :

ஆர்த்தி - துன்பம். நின்னளவானும் நீ இருக்கும் இடத்தானும், தண்மையையே வழங்கவேண்டிய நீ, வெம்மையை வழங்குகின்றாயே என அலமருகின்றார்.

பண் :

பாடல் எண் : 312

அடுத்து மேன்மேல் அலைத்தெழு மாழியே
தடுத்து முன்னெனை யாண்டவர் தாமுணக்
கடுத்த நஞ்சுண் தரங்கக் கரங்களால்
எடுத்து நீட்டுநீ யென்னைஇன் றென்செயாய்.

பொழிப்புரை :

இடைவிடாது ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கி எழும் அலைகளையுடைய கடலே! என்னை முன் தடுத்தாட்கொண்ட இறைவனே, உண்ணுமாறு கொடிய நஞ்சை உன் அலைகளாகிய கைகளால் எடுத்துக் கொடுத்த நீ, எனக்கு இன்று யாது செய்யாய்? எக்கொடுமையும் செய்வாய் என்பார்.

குறிப்புரை :

கடுத்த - கொடிய.

பண் :

பாடல் எண் : 313

பிறந்த தெங்கள் பிரான்மல யத்திடைச்
சிறந்த ணைந்தது தெய்வநீர் நாட்டினில்
புறம்ப ணைத்தடம் பொங்கழல் வீசிட
மறம்ப யின்றதெங் கோதமிழ் மாருதம்.

பொழிப்புரை :

தமிழ்த் தென்றலே! நீ பிறந்தது எங்கள் பெருமான் வீற்றிருந்தருளும் பொதிய மலையிலாம். அவ்விடத்தினின்றும் சிறப் பாக வந்தடைந்ததும் தெய்வத் தன்மை வாய்ந்த தென்தமிழ் நாட்டின் கண் உள்ள அழகிய நீர்நிலைகளின் வழியேயாம். அங்ஙனமாகவும், நீ வெம்மையாகிய காற்றைக் கொடுக்கப் பழகியது எங்ஙனம்? என்பார்.

குறிப்புரை :

ஒருவருக்கு அமையும் குணங்கள், ஒன்று பிறப்பின் வழி வரும். இன்றேல் அவர் பழகிய சிறப்பின் வழி வரும். அந்நிலை யில் பிறப்பின்வழித் திருவருள் தந்த அருட்டன்மை வாய்ந்த குளிர்ச்சி யையும், பழகிய சிறப்பின்வழி நறுமணங்கமழும் நீர்தர வந்த குளிர்ச்சி யையும் பெற்றிருக்கும் நீ, வெம்மை தருவது எங்ஙனம்? என வினவு கின்றார். புறம் பணைத் தடம் - தென்தமிழ் நாட்டில் அழகிய மருத நிலங்களிலுள்ள குளம். மறம் - ஈண்டு வெப்ப மிகுதியைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 314

இன்ன தன்மைய பின்னும் இயம்புவான்
மன்னு காதல னாகிய வள்ளல்பால்
தன்ன ரும்பெறல் நெஞ்சு தயங்கப்போம்
அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம்.

பொழிப்புரை :

இதுகாறும் கூறிய மன்மதன், மதி, கடல், காற்று ஆகியவற்றோடு அன்றி, மேலும் குயில், கிளி, போன்றவற்றையும், வெறுத்துக் கூறுபவராகிய நிலை பெற்ற காதலை உடையவராகிய நம்பியாரூரரிடத்து, தனது பெறற்கரிய மனம் சென்று மீளாதிருப்ப, அன்னம் போன்ற நடையினையுடைய பரவையாரது செய்கையை இனிச் சொல்லுவாம்.

குறிப்புரை :

காம மீதூர்வினால் வருந்துபவர்கள் உறுப்புடையது போல், உணர்வுடையதுபோல், மறுத்துரைப்பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும், சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச் செய்யா மரபில் தொழிற்படுத்தி அடக்கியும் (தொல். பொருளியல், 2) கூறல் மரபே யாம். அவ்வகையில் மன்மதன் உருவற்றவன் ஆதலின் பேசான். மதி, கடல், காற்று ஆகியவை உணர்வற்றனவாதலின் அவையும் பேசா, ஆயினும் அவை, பேசுவன போலவும், உணர்வுடையன போலவும் கூறினார். இங்குக் கூறப் பட்டனவன்றி இவ்வாறு கூறுதற்கேற்ற குயில், கிளி, முதலாய பிற பொருள்களும் உளவாதலின் `இன்ன தன்மைய` என்றார். நெஞ்சு தயங்க - ஆரூரர்பால் சென்ற நெஞ்சு அவ்விடத்தே தயங்கி நிற்ப; மீளாது நிற்ப என்றவாறு.

பண் :

பாடல் எண் : 315

கனங்கொண்ட மணிகண்டர் கழல்வணங்கிக்
கணவனைமுன் பெறுவாள் போல
இனங்கொண்ட சேடியர்கள் புடைசூழ
எய்து பெருங் காதலோடும்
தனங்கொண்டு தளர்மருங்குற் பரவையும்வன்
றொண்டர்பால் தனித்துச் சென்ற
மனங்கொண்டு வரும்பெரிய மயல்கொண்டு
தன்மணிமா ளிகையைச் சார்ந்தாள்.

பொழிப்புரை :

மேகத்தின் நிறத்தைக் கொண்ட நீலமணி போலும் கழுத்தினையுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கித் தாம் விரும்பும் கணவனாராகிய நம்பியாரூரரை இனிப் பெறுவார் போல, இனமாகிய தோழியர்கள் சூழ்ந்துவர, மார்பகங்களால் தளர்வடைந்த இடையினையுடைய பரவையாரும், பொருந்திய பெருவிருப் பொடும் ஆரூரரிடத்துத் தனித்துச் சென்ற மனத்தை மீளவும் வலிந்து கொண்டு, விருப்பின்வழிவந்த மயக்கத்தையும் தாங்கிக்கொண்டு, தமது அழகிய திருமாளிகையைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

கனம் - மேகம். இனிக்கனங்கொண்ட மணி என மணிக்கு அடையாக்கித் திரண்டமணி என்றலும் ஒன்று. மணி மாளிகை - மணிகளால் இழைக்கப்பெற்ற மாளிகை: அழகிய மாளிகையும் ஆம்.

பண் :

பாடல் எண் : 316

சீறடிமேல் நூபுரங்கள் அறிந்தனபோல்
சிறிதளவே யொலிப்ப முன்னர்
வேறொருவ ருடன் பேசாள் மெல்லவடி
யொதுங்கிமா ளிகையின் மேலால்
ஏறிமர கதத்தூணத் திலங்குமணி
வேதிகையில் நலங்கொள் பொற்கால்
மாறின்மலர்ச் சேக்கைமிசை மணிநிலா
முன்றின்மருங் கிருந்தாள் வந்து.

பொழிப்புரை :

தம் மாளிகையை அடைந்த பரவையார், தம் சிறிய அடிகளில் அணிந்த சிலம்புகள், அவர் தம் உள்ளத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டாற் போல், அதற்குத் தக்கவாறு மென் மையாக ஒலிக்க, தம் முன்னர் நிற்கும் எவருடனும் பேசாதவராய், மென்மையாக அடிமேல் அடிவைத்துச் சென்று மாளிகையின் மேல் ஏறிப் போய், நிலவின் பயன் கொள்ளும் அவ்விடத்து, மரகதத்தால் ஆய தூண்களுடன் விளங்கும் அழகிய திண்ணை மீதுள்ள ஒப்பற்ற மலர்களால் ஆய படுக்கையில் அமர்ந்து இருந்தார்.

குறிப்புரை :

நூபுரம் - சிலம்பு, வேதிகை -திண்ணை. மலர்ச்சேக்கை மலர்களால் ஆய படுக்கை. நிலாமுன்றில் - நிலவின் பயன்கொள்ளும் இடம். இது மேற்பகுதி (கூரை) இன்றி விளங்கும்.

பண் :

பாடல் எண் : 317

அவ்வளவில் அருகிருந்த சேடிதனை
முகநோக்கி ஆரூர் ஆண்ட
மைவிரவு கண்டரைநாம் வணங்கப்போம்
மறுகெதிர்வந் தவரா ரென்ன
இவ்வுலகி லந்தணரா யிருவர்தே
டொருவர்தா மெதிர்நின் றாண்ட
சைவமுதல் திருத்தொண்டர் தம்பிரான்
தோழனார் நம்பி யென்றாள்.

பொழிப்புரை :

அது பொழுது தம் அருகில் இருந்த தோழியைப் பார்த்துத் திருவாரூரை ஆண்டு வரும் கருமை பொருந்திய கழுத் தினையுடைய தியாகராசப் பெருமானை நாம் வணங்கச் சென்ற பொழுது, நம் எதிரில் வந்தார் யாவர்? எனப் பரவையார் கேட்க, அவள், இவ்வுலகில் மாலும் அயனும் காண இயலாத அழகிய அருளு டையராய இறைவர், அந்தணர் வடிவு கொண்டு பகைமைகொண்டவர் போலக் காட்டி, வழக்கிட்டு ஆட்கொள்ளப் பெற்றவரும், சைவத் திறத்தில் நின்றொழுகும் முதல் திருத்தொண்டருமான தம்பிரான் தோழராய ஆளுடைய நம்பிகள் ஆவர் என்று கூறினாள்.

குறிப்புரை :

சேடி - தோழி. எதிர் நின்று - பகைமை கொண் டவர்போல் நின்று. இறைவன், ஆளுடைய நம்பிகளைத் தம் அடியவன் என்று கூறிய அளவில், அஃது அவருக்குப் பகைமையாகத் தோன்றியது. எனினும் அஃதே அவருக்குப் பின் பெரும் பேறாயிற்று. ஆதலின் `எதிர் நின்று` என்றார். சைவப் பெருநெறிக்கு அடித்தளமாக விளங்கும் வழிபாட்டுநெறிகள் மூன்றாம். அவை குருவழிபாடு, சிவலிங்க வழிபாடு, அடியவர்வழிபாடு என்பனவாம். இவற்றுள் அடியவர் வழிபாட்டிற்கு அடித்தளமாய் நின்று விளங்கும் திருத் தொண்டத் தொகையை அருளிய பெருமை ஆளுடைய நம்பிகளுக்கு உரியதாதலின் அவரைச் `சைவமுதல் திருத்தொண்டர்` என்றார்.

பண் :

பாடல் எண் : 318

என்றவுரை கேட்டலுமே எம்பிரான்
தமரேயோ வென்னா முன்னம்
வன்றொண்டர் பால்வைத்த மனக்காதல்
அளவின்றி வளர்ந்து பொங்க
நின்றநிறை நாண்முதலாங் குணங்களுடன்
நீங்கவுயி ரொன்றுந் தாங்கி
மின்றயங்கு நுண்ணிடையாள் வெவ்வுயிர்த்து
மெல்லணைமேல் வீழ்ந்த போது.

பொழிப்புரை :

என்று தோழிகூறிய சொற்களைக் கேட்டதும் பரவையார், எம் இறைவராகிய தியாகேசருடைய தோழரோ என்று கூறி, அச் சொற்கள் வாயிலிருந்து வெளிப்படுதற்கு முன், வன்றொண் டரிடத்து மனத்தகத்துக் கொண்ட காதல் உணர்வு கரை கடந்து மேல் எழுந்ததால், முன்பு தம்மிடத்து இயல்பாகவே நிலைபெற்று நின்ற நிறை, நாண் முதலிய குணங்களும் ஒரு சேர நீங்க, உயிர் ஒன்றை மட்டும் த