கபிலதேவ நாயனார் - மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை


பண் :

பாடல் எண் : 1

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மூத்த நாயனார் - மூத்த பிள்ளையார் (ஆனை முகத்தான்). திரு ஆக்கும்; செஞ்சொற் பெருவாக்கும், பீடும் பெருக்கும்; உரு ஆக்கும்; ஆதலால் அவனைக் காதலால், வானோரும் தம் கை கூப்புவர் - எனக் கூட்டுக.
திரு - செல்வம். செய் கருமம் - செய்யத் தொடங்கும் செயல், கை கூட்டும் - இடையூறின்றி இனிது முடியச் செய்வான். செஞ்சொல் பெருவாக்கு - குற்றமற்ற சொற்களை வழங்கும் உயர்ந்த சொல் வன்மை. பீடு - பெருமை; புகழ். உரு - அழகு. ``வானோரும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு. அதனால் ஏனையோர் கைகூப்புதல் தானே அமைந்தது. ``கை கூப்புவர்`` என்பது `தொழுவார்` என்னும் பொருளது ஆதலின், அஃது ``ஆனை முகத்தானை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று.
`செய் கருமம் கை கூட்டும்; ஆதலால் கைகூப்புவர்` என்று, `பிள்ளையாரைத் தொழாதபொழுது செய் கருமம் கை கூடுதல் அரிது` என்னும் குறிப்பினது.
இத்திருப்பாடலையே பற்றிப் பிற்காலத்தில் ஔவையார்,
வாக்குண்டாம்; நல்ல மனம் உண்டாம்; மாமலராள்
நோக்குண்டாம்; மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு*
என அருளிச் செய்தமை அறியத் தக்கது.

பண் :

பாடல் எண் : 2

கைக்கும் பிணியொடு கான் தலைப்படும் ஏல்வையினில்
எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிணியொடு, கவலைக்கு இடைந்து (யான்) அரவு அரையான் தந்த யானையாகிய நுதற்கண் திருவாளனது திருவடி களையே (புகலிடமாக) அடைந்தேன்` எனக் கூட்டுக. `அதனால், யான் பிணியும் கவலையும் இலனாயினேன். ஆதலால் நீவிரும் அவனது அடிகளையே புகலிடமாக அடைமின்` - என்பது குறிப் பெச்சம்.
கைத்தல் - கசத்தல்; அஃது இங்கு, வெறுக்கப்படுதலைக் குறித் தது. பிணி - நோய். ஒடு, எண் ஒடு. மேற்காட்டிய ஔவையார் பாட்டி லும், ``மேனி நுடங்காது`` என வந்தமை காண்க. தலைப்படுதல் - சந்தித்தல். ஏல்வை - பொழுது. எய்த்தல் - இளைத்துச் செயல் அறுதல். எய்க்கும் கவலை - எய்த்தலால் உண்டாகும் கவலை. எனவே, ``எய்க்கும்`` என்னும் பெயரெச்சம் காரணப் பொருளில் வந்ததாம். இடைந்து - தோற்று. வெம்மை - சீற்றம். `வெம்மையோடு` என உருபு விரிக்க. பைக்கும் - படம் எடுத்து ஆடும். `பணி திருவாளன்` என இயையும்.

பண் :

பாடல் எண் : 3

அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம்
இடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில்
தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை வாழ்த்தியே வாழ்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``அடி அமர்ந்து கொள்வாயே`` என்பதை இறுதிக்கண் கூட்டுக. இடி - மா. கன்னல் - கரும்பு. வடிசுவை - இவைகளினின்றும் ஒழுகுகின்ற (மிகுகின்ற) சுவை. தாழ்வான் - உள்ளம் தங்குகின்றவன். ஆழ்வான் - அழுந்தி நுகர்வான். பணியாரங்களை மிக விரும்புவர் மூத்த பிள்ளையார். ``அவனை வாழ்த்தியே வாழ்`` என்றது. `வாழ்த் தினால் அல்லது வாழ்வு உண்டாகாது` என்றதாம். ஆகையால், `நெஞ்சமே, அவனுடைய அடிகளை விரும்பி உன்னுள் இருத்திக் கொள்வாயோ` என்க. அமர்தல் - விரும்புதல், ஏகாரம், வினாப் பொருட்டு. ஏகாரத்தைத் தேற்றப் பொருட்டாக்கி, `கொள்வாய்` என ஏவல் முற்றாக உரைப்பினும் அமையும்.

பண் :

பாடல் எண் : 4

வாழைக் கனிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்த
கூழைச் சுருள்குழை அப்பம்எள் ளுண்டையெல் லாந்துறுத்தும்
பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென் உளம்பிரியான்
வேழத் திருமுகத் துச்செக்கர் மேனி விநாயகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பல - பலா. கூழைச் சுருள் - இரு முனைகள் குவிந்த, உள்ளே பூரணம் இடப்பட்ட கொழுக்கட்டை. குழை - குழைவு; பாயசம். துறுத்தல் - திணித்தல். `துறுத்தும் வயிறு` என இயையும். ேபழைப் பெருவயிறு - பெட்டகம் போலும் பெரிதாகிய வயிறு. ``வயிற்றோடும்`` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை, நன்கு புகுந்தமையைக் குறித்தது. `என்றன் உளம் புகுந்து பிரியான்` என மாற்றிக் கொள்க. வேழம் - யானை. செக்கர் - சிவப்பு. `செக்கர் வானம்` எனினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 5

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை, `கண்ணின் கண்டு` என ஒரு சொல் வரு வித்து, `கண்டு, கனிந்து பணிமின்` என மாற்றிக் கொள்க. வேட்கை - ஆசை. ``தணிவிப்பான்`` என்பதற்கு, `நிரப்புவான் போக்குவான்` என இரு பொருளும் கொள்க. கனிதல் - மகிழ்தல். அஃது அரும்பொருள் எதிர்ப்பட்டமை பற்றித் தோன்றுவது. `பணிந்தால், மேற்கூறிய பயன்களைப் பெறலாம்` என்பது கருத்து, ``விநாயகனே`` என்னும் சொல் ஒரு பொருளிலே பலமுறை வந்தது. இது சொற்பொருள் பின்வருநிலையணி.

பண் :

பாடல் எண் : 6

கனிய நினைவொடு நாடொறும் காதற் படும்அடியார்க்
கினியன் இனியொ ரின்னாங் கிலம்எவ ரும்வணங்கும்
பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை
முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``எவரும் வணங்கும்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. `எவரும் வணங்கும் முனிவன்` என இயையும். முனிவன், சிவபெருமான். `பிறைச் சடை, கொன்றைச் சடை` என்க. பலி தேர்தல், பிச்சையைப் பலவிடத்தும் சென்று பெறுதல். இயற்கை - இயல்பு. ``பெரு வெங் கொல்`` என்பது யானைக்கு எய்திய இன அடை. கொல் யானை - கொல்லும் தன்மை வாய்ந்த யானை. ``நினைவு`` என்றது அதனைச் செய்யும் நெஞ்சினை. `நினைவு கனிய, அதனொடும் காதற்படும் அடியார்க்கு` என்க. ``இனி`` என்பது, வினைமாற்றின் கண் வந்தது. ஒருவுதல் - நீங்குதல். ஆம் - உண்டாகும். `கிலம்` `குறை` என்னும் பொருளதாகிய வடசொல். இதன் மறுதலையே `அகிலம்` என்பது `அவனை ஒருவின் கிலம் ஆம்` என்க. `அது, சிவனது தேர் அச்சு முரிந்தமை முதலியவற்றால் அறியப்படும்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 7

யானை முகத்தான் பொருவிடையான் சேய்அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேல்நிகழும்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்என்
உள்ளக் கருத்தின் உளன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொரு விடை - போர் புரியும் இடபம். சேய் - மகன். மானம் - பெருமை. மணி - நீலமணி. நீல மணியின் வண்ணம்போலும் வண்ணத்தை உடையவன். மாயோன். மா - பெருமை, மருகன், உடன்பிறந்தாள் மகன். நிகழும் - வழிந்து ஓடுகின்ற (மதம்) `குமிழி வெள்ளம்` என மாற்றுக. வெள்ள மதம் - வெள்ளம் போலும் மத நீர். உள்ளக் கருத்து - உள்ளத்தில் எழுகின்ற கருத்து. அதன்கண் உளனாதலாவது, கருதப்படும் பொருள் அவனேயாய் இருத்தல்.

பண் :

பாடல் எண் : 8

உளதள வில்லதொர் காதல்என் நெஞ்சில்வன் நஞ்சமுண்ட
வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண் கோதைபங்கத்
திளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன் கைம்முகத்துக்
களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`என் நெஞ்சில், கணபதிகண் அளவில்லதோர் காதல் உளது` என இயைத்து முடிக்க. இளமை, இங்கு அதன் கண் உள்ள அழகைக் குறித்தது. ``வளர் இள`` என்றது, `பின்னும் வரும் இளமை` என்றவாறு. மா மணி - நீல மணி. `நஞ்சம் உண்ட கண்டம்` என இயையும். கோதை - மாலை. அஃது அதனை உடைய உமாதேவியைக் குறித்தது. `பங்கத்து எம்மான்` என இயையும். அத்து, வேண்டா வழிச் சாரியை. அஃது இரண்டாவதன் பொருள் குறித்து நின்றது. கண்ணி, முடியில் அணியும் மாலை. கை - தும்பிக்கை. `களகள` என்பது ஒலிக் குறிப்பு. `சோர் மாமதம்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். மா மதம் - கரிய மதம். களிமதம் - மத மயக்கம். ``யானைக் கணபதி`` என்பது `செஞ்ஞாயிறு` என்பதுபோல இயைபின்மை நீக்கிய விசேடணத்தையுடைய இருபெயர் ஒட்டு.

பண் :

பாடல் எண் : 9

கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப்
பணங்கொண்ட பாந்தட் சடைமேல் மணங்கொண்ட
தாதகத்த தேன்முரலுங் கொன்றையான் தந்தளித்த
போதகத்தின் தாள்பணியப் போம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கண் கொண்ட நெற்றியையும், சடைமேல் கொன்றையையும் உடையவன். தந்தளித்த போதகத்தின் தாள் பணிய, கணங்கொண்ட வல்வினைகள் போம்` என இயைத்து முடிக்க. கணம் கொண்ட - கூட்டமாகத் திரண்ட. வல்வினைகள் - வலியனவாகிய வினைகள்; சஞ்சிதம். பணம் - பாம்பின் படம். பாந்தள் - பாம்பு. `பாந்தளையுடைய சடை` என்க. தாது அகத்த - மகரந்தத்தை உள்ளே உடைய. `தாதகத்த கொன்றை, தேன் முரலுங் கொன்றை` என்க. தேன், ஒருவகை வண்டு. முரலுதல் - ஊதுதல். அளித்த - தேவர் முதலியோரைக் காத்த, ``அளித்த போதகம்`` எனப் பெயரெச்சம் கருவிப் பெயர் கொண்டது. போதகம் - யானை.
கைவேழ முகத்தவனைப் படைத்தான் போலும்!
கயாசுரனை அவனால்கொல் வித்தார் போலும்!*
என அப்பரும் அருளிச் செய்தார்.
அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னைவயிற் றிற்பிறந்த
தொல்லைபோம்; போகாத் துயரம்போம்; - நல்ல
குணம்அதிக மாம்அருணைக் கோபுரத்தின் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்
எனப் பிற்காலத்து வெண்பா ஒன்றும் கூறிற்று.

பண் :

பாடல் எண் : 10

போகபந் தத்தந்தம் இன்றிநிற் பீர்புனை தார்முடிமேல்
நாகபந் தத்தந்த நாள்அம் பிறையிறை யான்பயந்த
மாகபந் தத்தந்த மாமழை போல்மதத் துக்கதப்போர்
ஏகதந் தத்துஎந்தை செந்தாள் இணைபணிந் தேத்துமினே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

போக பந்தம் - உலக இன்பமாகிய கட்டு. (அதில்) அந்தம் இன்றி நிற்பீர் - முடிவு இல்லாமல் இருந்து கொண்டே இருப்பவர்களே! இது விளி. நாக பந்தம் - பாம்பாகிய கட்டு. அதனை யுடைய இறையான் சிவன். அந்த, பண்டறி சுட்டு. `அந்த இறையான்` என இயையும். நாள் அம் பிறை - முதல்முதலாகத் தோன்றுகின்ற மூன்றாம் நாட் பிறை. கபந்தம் - கழுத்து. கன்ன மதம் கழுத்து வழியாக மழைபோல ஒழுகுகின்றமதம். அந்த மா மழை - உலக முடிவுக் காலத்தில் பெய்கின்ற பெருமழை. கதம் - கோபம். கதப் போர், யானை இனம் பற்றிக் கூறியது. ``ஏத்துமின்`` என்றது, `ஏத்தினால் போக பந்தத் தில் அந்தம் இன்றி நில்லாது, அதற்கு அந்தம் (முடிவு) உளதாகும்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 11

ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் தூத்தழல்போல்
செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழல்ஐங்கை
முக்கட் கடாயானை முன்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`என் உள்ளம் எப்பொழுதும் யானைமுன் ஏத்தியே நிற்கும்` என இயைத்து முடிக்க. ஆல், அசை. மா - பெருமை. தனி - ஒற்றை. செக்கர் - சிவப்பு. முன்னர் `மதம்` கூறினமையால், பின்னர். ``கடாம்`` என்றது, களிற்றினைக் குறிக்கும் குறிப்பாய் நின்றது. தனிக் கோடு, செக்கர் மேனி, கழல், ஐங் கை இவை பிற யானைகளினின்று பிரித்த, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணங்கள். `அங்கை` என்பது பாடம் அன்றாம்.

பண் :

பாடல் எண் : 12

முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்வெற்றி மீன்உயர்த்த
மன்னிளங் காமன்தன் மைத்துன னேமணி நீலகண்டத்
தென்னிளங் காய்களி றேஇமை யோர்சிங்க மே,உமையாள்
தன்னிளங் காதல னேசர ணாவுன் சரணங்களே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உன் சரணங்களே சரணா முன் இளங் காலத்திலே பற்றினேன்` என முடிக்க. மீன் - மீன் எழுதப்பட்ட கொடி உயர்த்த - உயர்த்துக் கட்டிய. மன் - தலைவன். இரண்டாவதான இளமை அழகைக் குறித்தது. விநாயகருக்கு மன்மதன் அம்மான் மகன் ஆதல் பற்றி அவரை, `அவனுக்கு மைத்துனன்` என்றார். மணி நீலகண்டம் - நீல மணிபோலும் நீலகண்டம். விநாயகருக்கும் நீலகண்டம் உண்மை,
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் *
என்னும் ஔவையார் வாக்காலும் அறிக. என் - எனது. இங்ஙனம் உரிமை பாராட்டியது அன்பினால், `இளங் களிறு, காய் களிறு` என்க. காய்தல் - இனம் பற்றி வந்த அடை. ``சிங்கமே`` என்றது, ``வடிவத்தில் யானையாய் இருப்பினும், வீரத்தில் சிங்கம்` என்றபடி. ஈற்றில் நின்ற இளமை பருவம் உணர்த்தியதன்றி, பிறப்புமுறை குறித்ததன்று.
காதலன் - மகன். இளமையிலேயே விடுவன விடுத்துப் பற்றுவன பற்றுதல் முற்றவம் உடையார்கன்றி ஆகாது. இவ்வாசிரியர், ``முன் இளங்காலத்திலே பற்றினேன்`` என்றமையால் அத்தகைய தவம் உடையாராதல் விளங்கும். முன் இளங்காலம் - பருவங்களில் முதலதாகிய இளமைப் பருவம். முன்னாயதனை ``முன்`` என்றது ஆகுபெயர். ``சரண்`` இரண்டில் முன்னது அடைக்கலம்; பின்னது திருவடி.

பண் :

பாடல் எண் : 13

சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்க
முரண்உடையேன் அல்லேன் நான்முன்னம் திரள்நெடுங்கோட்
டண்டத்தான் அப்புறத்தான் ஆனைமுகத் தான்அமரர்
பண்டத்தான் தாள்பணியாய் பண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முன்னம் திரள் நெடுங்கோட்டு ஆனை முகத்தான், அண்டத்தான், அப்புறத்தான், அமரர் பண்டத்தான் தாள் நான் பண்டு பணியா, - சரண் உடையேன் - என்று தலை தொட்டிருக்க முரண் உடையேன் அல்லேன்` என இயைத்து முடிக்க. முன்னம் திரள் - முகத்திற்கு முன்னே திரண்டு தோன்றுகின்ற. அண்டத்தான் - அனைத்து அண்டங்களிலும் உள்ளவன், (ஆயினும்) அப்புறத்தான் - அனைத்து அண்டங்கட்கும் அப்பாலும் உள்ளவன். பண்டத்தான் - அடையத்தக்க பொருளாய் உள்ளவன். சரண் - புகலிடம். முரண் - வலிமை. ``பண்டமாப் படுத்து என்னை`` 1 என்னும் அப்பர் திரு மொழியையும் காண்க.
பணிய - பணிந்து. `தலை தொடுதல்` என்பது சூளுரைத் தலைக் குறிப்பதொரு வழக்கு மொழி. `பண்டே பணிந்தேனாயினும், அந்நிலையில் - உன்னையே நான் சரணாக (புகலிடமாக) உடையேன் - என்று சூள் உரைக்கும் அளவிற்கு நான் உறுதி யுடையேன் அல்லேன்` என்பதாம். `அத்தகைய உறுதியை எனக்கு நீ அருளல் வேண்டும்` என்பது கருத்து.
நின்றன் வார்கழற்கு அன்பு எனக்கும் -
நிரந்தரமாய் அருளாய் 2
எனவும்,
``இறவாத இன்ப அன்பு வேண்டி`` எனவும் போந்தனவும் இக்கருத்தே பற்றியாம். 3

பண் :

பாடல் எண் : 14

பண்டம்தம் ஆதரத் தான்என் றினியன வேபலவும்
கொண்டந்த நாள்குறு காமைக் குறுகுவர் கூர்உணர்வில்
கண்டந்த நீண்முடிக் கார்மத வார்சடைக் கற்றைஒற்றை
வெண்தந்த வேழ முகத்தெம் பிரானடி வேட்கையரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கூர் உணர்வில்`` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கூர் உணர்வு - நுணுகிய ஞானம் `உணர்வில் கண்டு` என்க. ``அந்த`` என்பது பண்டறி சுட்டு. `அந்த எம் பிரான்` என இயையும். கார் மதம் - கரிய மத நீர். `மேகம் போலப் பொழியும் மதம்` என்றலும் ஆம். விநாயகருக்கும் சடைமுடி உள்ளது. `ஒற்றைத் தந்தம்` என இயையும். அடி வேட்கையார் - அடிக்கண் அன்பு செய்பவர். ``பண்டம்`` என்றும், ``தம் ஆதரத்தான்`` என்றும் உணர்ந்து குறுகலர் - என்க. பண்டம் - தமக்குப் பொருளாய் உள்ளவன். ஆதரத்தான் - அன்பிற்கு உரியவன். இனியன - இனிய சுவையுடைய பண்ணியங்கள். `கொண்டு குறுகுவர்` என்க. அந்த நாள் குறுகாமை - முடிவு நாள் உண்டாகாதபடி; `என்றும் நிரந்தரமாக` என்பதாம். குறுகுவர் - அடைவர்.

பண் :

பாடல் எண் : 15

வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க் கின்பஞ்செய்து
ஆட்கொண் டருளும் அரன்சேயை வாட்கதிர்கொள்
காந்தார, மார்பிற் கமழ்தார்க் கணபதியை
வேந்தா உடைத்தமரர் விண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மெய்யடியார்க்கு வினை முடித்து இன்பம் செய் சேய்` என இயைக்க. வேட்கை வினை - விரும்பிய விருப்பத்தை ஏற்ற ெசயல். என்றது, `விரும்பிய செயல்` என்றபடி. சேய் - மகன். வாட் கதிர்- ஒளிக் கதிர். கதிராவது - எங்கும் பரந்து செல்வது. `கதிர் மார்பில் காந் தாரத்தார், கமழ் தார்` என்க. காந்தாரம் - (வண்டுகளின்) இசை. விண்- இங்குச் சிவலோகம். எனவே, அமரர், பதமுத்தி பெற்றவர் களாவார். `பத முத்தி பெற்றவர்கள் விநாயகரை வணங்கி வாழ்வர்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 16

விண்ணுதல் நுங்கிய விண்ணும்மண் ணும்செய் வினைப்பயனும்
பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் அன்பர்கள் பாய்மதமாக்
கண்ணுதல் நுங்கிய நஞ்சமுண் டார்கரு மாமிடற்றுப்
பெண்ணுதல் நும்பிரி யாஒரு பாகன் பெருமகனே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

விண்ணுதல் - `விண்` என ஒலித்தல். நுங்கிய விண்- அங்ஙனம் ஒலிக்கும் ஒலியைத் தன்னுட் கொண்ட ஆகாயம். ``விண்`` என்பது அதன்கண் உள்ள உலகத்தையும், ``மண்`` என்பது அதனால் ஆகிய உலகத்தையும் முன்னர்க் குறித்துப் பின்னர் அவ்வுலகங்களில் வாழும் தேவரையும், மக்களையும் குறித்தலால் இருமடி யாகுபெயர். வினைப் பயனைப் பண்ணுதல் - தொடங்கிய செயலின் பயனை விளைவித்தல். அஃதாவது, அச்செயல் இடையூறின்றி இனிது முற்றுப் பெறச் செய்தல். பெண் தநுப் பிரியா ஒரு பாகன் - பெண்ணைத் தனது உடம்பினுள் பிரியாதவாறு ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான். `பிரியாது` என்னும் எதிர்மறை வினையெச்சத்தின் ஈறு தொகுத்தலா யிற்று. அவ்வெச்சம், ``பாகன்`` என்னும் வினைக்குறிப்புப் பெயரோடு முடிந்தது. பெருமகன் - மூத்த மகன். மெய் அன்பர்கள் - கண் நுதலை யும், கருமாமிடற்றையும், பெண் தநுப் பிரியா ஒரு பாகத்தையும் உடையவனுக்குப் பெருமகனாய்த் தோன்றியவனே! தேவரும், மக்களும் தொடங்கிய செயல்களை இடையூறின்றி இனிது முற்று வித்தலே உனது கடன் - என்பார்கள் என இயைத்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 17

பெருங்காதல் என்னோடு பென்னோடை நெற்றி
மருங்கார வார்செவிகள் வீசி ஒருங்கே
திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர
வருவான்தன் நாமம் வரும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காதலையுடைய என்னோடு` என இரண்டாவது விரிக்க. ஓடை - நெற்றிப் பட்டம். நெற்றி மருங்கு ஆர - நெற்றியின் இரு பக்கங்களிலும் பொருந்தும்படி. வார் - நீண்ட. திரு - அழகு. `நெற்றி மருங்கு ஆரச் செவிகளை வீசி. முகத்தில் மதங்கள் சோர வருவான் தன் நாமம் என்னோடு வரும்` என இயைத்து முடிக்க. நாமம் உடன் வருதலாவது, ஓரிடத்தில் நில்லாது நடந்து சென்றாலும் நாமங்களை உச்சரித்துக் கொண்ட நடத்தலாம். ``செம்முகத்துக் கார்மதம்`` என்பது முரண் தொடை.

பண் :

பாடல் எண் : 18

வருகோள் தருபெருந் தீமையும் காலன் தமரவர்கள்
அரு கோட் டருமவ ராண்மையும் காய்பவன் கூர்ந்தன்பு
தருகோள் தருமர பிற்பத்தர் சித்தத் தறியணையும்
ஒருகோட் டிருசெவி முக்கண்செம் மேனிய ஒண்களிறே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வரு கோள் - தசா புத்திகளாகவும், பிறவாறாகவும் வந்து பற்றுகின்ற கிரகங்கள். அருகு ஓட்டரும் - அருகினின்றும் அப்பாற்போகும்படி துரத்த இயலாத. அரும், பண்படியாகப் பிறந்த குறிப்பு வினைப் பெயரெச்சம். அவர் காலன் தமர் (தூதுவர்). அன்பு தருகோள் தரும் மரபின் பத்தர் - அன்பினால் தரப்படும் கொள்கை யால் தரப்படும் நெறிமுறைகளையுடைய அடியார். `அன்பு காரண மாகவே வழிபடும் அடியார்கள்` என்றபடி. சித்தத் தறி - உள்ளமாகிய தறி; ``தறி`` என்றது அவர் கருது கோள் பற்றி, உருவகம் அன்று. `தறியை அணையும் களிறு` என இயையும். ``ஒரு கோட்டுச் செம் மேனிய களிறு`` என்றது, `இஃதோர் அதிசயக் களிறு` என்றபடி. களிறு- முகத்தால் யானையாகியவன். எனவே, ``களிறு`` என்றது `யானை போல்பவன்` என உவமை யாகுபெயர். ஆகுபெயர் அல்லாக்கால். ``காய்பவன்`` என உயர்திணை வினையோடு இயையாது. ஏகரம் பிரிநிலை. `களிறே தீமையும். ஆண்மையும் காய்பவன்` என இயைத்து முடிக்க. `ஆதலின் அவனையே அடைக` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 19

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

களி - மதக் களிப்பு. மதம், இங்கு அருள். ``யானைக் கன்று`` என்பது, `கன்றாகிய யானை` என்னும் பண்புத் தொகை. முன்பின்னாகிய புணர்ச்சி. ``யானை`` என்பது பிறிதின் இயைபு நீக்க வரின், ஆறாம் வேற்றுமைத் தொகைப் புணர்ச்சியாம். இங்கு அவ்வா றில்லை. செம்பொன் ஒளியான் - செவ்விய பொன்னினது ஒளி போலும் ஒளியையுடையவன், அளியான் - அருளாளன். கண்ணல் - கருதல். மற்று, அசை, நல்லார் கடன் - நல்லொழுக்கம் உடையவர்கட்கு இன்றியமையாக் கடமைகள். `கடன் கணபதியைக் கண்ணுவதும்` கைத் தலங்கல் கூப்புவதும், அவன்தாள் நண்ணுவதும் என இயைத்து முடிக்க. நல்லார்க்கு இவைகளைக் கடனாகக் கூறியது, நல்லார் எண்ணியவற்றை இடையூறின்றி இனிது முடித்தற் பொருட்டும், தீயார் எண்ணியவற்றை இடை முரிவித்தற் பொருட்டுமே இறைவனால் தந்தருளப்பட்ட கடவுளாதல் பற்றி. இதனைத் ``தனதடி வழிபடு மவர்இடர் - கணபதி வர அருளினன்... ... இறையே`` என ஆளுடைய பிள்ளையார் அருளிச் செய்தமையான் அறிக.

பண் :

பாடல் எண் : 20

நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற
பொல்லா முகத்தெங்கள் போதக மேபுரம் மூன்றெரித்த
வில்லான் அளித்த விநாயக னேயென்று மெய்ம்மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நல்லார், இங்கு இரத்தின பரீட்சையில் வல்லவர், அவரால், `குற்றம் உடைத்து` என்று பழித்தல் இல்லாத பவளம் என்க. பவளத்து ஐ - பவளத்தினது அழகு. `நாண நின்ற போதகம்` என இயை யும். `பொற்` என்பது எதுகை நோக்கி, `போல்` எனத் திரிந்து நின்றது. பொள் - பொள்ளல்; புழை. புழை ஆம் முகம் - உள்துளை பொருந்திய தும்பி முகம். போதகம் - யானை. எங்கள் போதகமே, விநாயகனே - என்று துதித்து, அதனால் உள்ளமே யன்றி உடம்பும் மகிழ்வடைய வல்லாரது மனத்திலின்றி (ஏனையோர் மனங்களில்) மலர்த் திரு இருக்க மாட்டாள்` என இயைத்து முடிக்க. முன் தவம் உடையார்க் கன்றி இது கூடாமையின் ``வல்லார்`` என்றார். மெய் மகிழ்தலாவது, புளகம் போர்த்தல்.
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை முற்றிற்று.
சிற்பி