நக்கீரதேவ நாயனார் - திருஈங்கோய்மலை எழுபது


பண் :

பாடல் எண் : 1

அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,
இன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்
மன்னதென நின்றான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈங்கோயே` என்பதனை இறுதிக்கண் கூட்டியுரைக்க. இது இதனுள் வரும் அனைத்து வெண்பாக்கட்கும் பொருந்தும். நொடியில் - சொல்லுமிடத்து, இதனை முதலிற் கொள்க. படி - பூமி. விசும்பு - ஆகாயம். இன்னது - இன்ன தன்மையது. ``இன்னதென`` என்பதை `அடி, முடி` என்பவற்றோடு தனித் தனிக் கூட்டுக. ``மன் அது`` என்பதில் அது, ``பகுதிப்பொருள் விகுதி. மன் - முதல். அது தன்னியல்பில் அஃறிணையாதலின் `அது` என்னும் விகுதி பெற்றுப் பின் பண்பாகுபெயராய், ``நின்றான்`` என்பதனோடு இயைந்தது. அரியும், அயனும் அனற் பிழம்பாய் நின்ற சிவபெருமானது வடிவின் அடியையும், முடியையும் தேடிக் காணாது எய்த்த சிவமகாபுராண வரலாறு சைவ நூல்களில் பெரும்பான்மையாக எங்கும் சொல்லப் படுவது. `அத்தகைய பெருமான் இருக்கும் மலை திருஈங்கோய்மலை` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 2

அந்தவிள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக்
கொந்தவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் சந்தின்
இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே மேரு
மலைவளைக்கை வில்லி மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வில்லி மலை ஈங்கோயே` என முடிக்க. அந்தம் - அழகு. மாக் குழவி - மான் கன்று. ஆயம் - தன் இனம். பிரிந்து - பிரிந்து நின்றமையால். கொந்து அவிழ்தேன் - கொத்தாகிய பூக்கள் மலர்ந்து ஊற்றிய தேன். சந்து - சந்தன மரம். `இலையை உண்ணக் கொடுக்கும்` என்க. `ஈங்கோய் மலையில் குறவரும் அருளுடையராய் உள்ளார்` என்பதாம். `மேரு மலையாகிய, வளைவை யுடைய கைவில்` என்க. கைவில் - கையிற் பிடிக்கும் வில்; இஃது இனம் இல் அடை. வில்லி - வில்லை யுடையவன்.

பண் :

பாடல் எண் : 3

அம்பவள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச்
செம்பவளந் தாவென்னச் சீர்க்குறத்தி கொம்பின்
இறுதலையினாற் கிளைக்கும் ஈங்கோயே நம்மேல்
மறுதலைநோய் தீர்ப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அம் - அழகு. மகளிர் - சிறுமியர். அம்மனைக்கு - அம்மானை ஆடுதற்கு. `தம் அன்னையை` என்பது இடைக் குறைந்து. ``தம் அனையை`` என வந்தது. `ஒருத்திக்கு மகளிர் பலர்` என்க. குறத்தி - தாய்க் குறத்தி. ``கொம்பு`` என்றது யானைக் கொம்பினை. இறுதலை - அறுக்கப்பட்ட முனை. கிளைக்கும் - நிலத்தை அகழ்கின்ற. அகழ்ந்தது பவளத்தைப் பெறுதற்பொருட்டு. அருவிகளால் வீழ்த்தப்பட்ட பவளங்கள் நிலத்தில் புதைந்து கிடத்தல் பற்றி அகழ்வாளாயினாள். `அத்துணை வளம் உடையது ஈங்கோய் மலை என்றபடி.
மறுதலை நோய் - சிவானந்தத்தைப் பெற ஒட்டாது மறுதலைக் கின்ற வினைகள். அவை பிராரத்துவமும், ஆகாமியமுமாம். `நம்நோய், மேல் வரும் நோய்` என்க. மேல் - இனி.

பண் :

பாடல் எண் : 4

அரிகரியக் கண்டவிடத் தச்சலிப்பாய் ஓடப்
பிரிவரிய தன் பிடியைப் பேணிக் கரிபெரிதும்
கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே
மையடுத்த கண்டன் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரி - சிங்கம். ``கரி`` இரண்டும் களிற்றி யானை. சலிப்பாய் - இயங்குதல் உடைத்தாய். எனவே, முன்பு இயங்காது கிடந்தமை பெற்றாம். அகரம், அதன் இயல்பினைக் குறித்த பண்டறி சுட்டு. யானையைக் கண்டவிடத்து அதன் மேற் பாய்தல். சிங்கத்திற்கு இயல்பு. களிற்றியானை தன் பிடிமேற் கொண்ட அன்பினால் சிங்கத் தின் வருகைக்கு அஞ்சாது, துதிக்கையை நீட்டிக் கோபத்தால் பிளிறுவ தாயிற்று. `அன்பின்முன் அச்சம் நில்லாது` என்பதை, ``அச்சம் - தாய் தலையன்பின் முன்பு நிற்குமே`` * என்னும் பெரியபுராணத்தாலும் அறிக. கதம் - கோபம், `ஈங்கோய் மலை வாழ் அஃறிணை யுயிர்களும் அன்பு வாழ்க்கை வாழ்கின்றன` என்பதாம், மை அடுத்த - கருமை நிறம் பொருந்திய.

பண் :

பாடல் எண் : 5

அரியும் உழுவையுமே ஆளியுமே ஈண்டிப்
பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் சொரிய
எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே கூற்றம்
திரியாமற் செற்றான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உழுவை - புலி, ஈண்டுதல் - திரளுதல். பரி இடுதல் - நடத்தல். நடத்தலைக் கூறியது, அவை வன்குணம் இன்றி அன்புடையன ஆதலைக் குறித்தற்கு. எனவே, ``பரிஇட்டு`` என்றது, `மெல்ல நடந்து` என்றதாம். சொரிதல் இலிங்கத்தின்மேல். எரி ஆடி, சிவன். உகத்தல் - விரும்புதல். `ஈங்கோய் மலையில் கொடு விலங்கு களும் தம் தன்மை நீங்கி சிவபத்தியுடன் திகழ்கின்றன` என்பதாம். கூற்றம் - யமன். திரியாமல் - தன் அடியார்மேற் செல்லாதபடி செற்றான் - அழித்தான், `அத்தகையோன் இடம் ஈங்கோய் மலை என்றார். சிலம்பு - மலை. ``செற்றான்`` என்றாராயினும், `செற்ற அவன்` என்பது கருத்தாகக் கொள்க.

பண் :

பாடல் எண் : 6

ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடு தொடரும் மாக்குறவர் கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஆளியைத் தொடர்ந்து போய்ப் பற்றுதற் பொருட்டு அதனை அரி தொடர` என்க. அரி - சிங்கம். சிங்கத்தைக் குறவர் தொடர்ந்தனர். தொலைவில் இருந்து அம்பால் எய்யக் கருதியவர் அருகிலே சென்று வில்லாலே புடைத்தனர். இஃது அவர்தம் ஆற்றல் மிகுதியால் ஆயது. இடு சிலை - கீழே போகடும் வில். கோள் - அகப்படுத்துதல்.

பண் :

பாடல் எண் : 7

இடுதினைதின் வேழங் கடியக் குறவர்
வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற நெடுநெடென
நீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே ஏங்குமணி
பூண்டகழை யேறி பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இடு தினை - பயிரிடப்பட்ட தினை, வேழம் - யானை. `வெடிபடு கல்` என இயையும். வெடிபடுதல் - வேகமாக வெளிப்போதல். `வெடிபடுத்த` எனப் பிறவினை யாக்குக. ``நெடு நெடென`` என்பது ஒலிக்குறிப்பு. கழை - மூங்கில். `ஈண்டு கழை` என்பதும் பாடமாகலாம். ஏங்குதல் - ஒலித்தல். `காளை` என்பது எதுகை நோக்கிக் குறுக்கலும், திரிதலும் பெற்று, ``கழை`` என வந்தது.

பண் :

பாடல் எண் : 8

ஈன்ற குறமகளிர்க் கேழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங்கை ஊன்றவைத்
தென்அன்னை உண்ணென் றெடுத்துரைக்கும் எங்கோயே
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈன்ற மகளிர் - மகவை ஈன்ற பெண்டிர். ஏழை - எளியவர். நான்ற - முன்பே அதற்கென்று கொண்டு வந்து கோத்து வைத்த. கறிக்கு ஏறு - கறிக்குப் பொருத்தமான. அசலை - ஒருவகைக் கிழங்கு. ஊன்ற வைத்து - நிலையாக வைத்து. முதுகுறத்தி இளை யாளை, `என் அன்னையே` என்றது அன்பினால்.

பண் :

பாடல் எண் : 9

ஈன்ற குழவிக்கு மந்தி இருவரைமேல்
நான்ற நறவத்தைத் தான்நணுகித் தோன்ற
விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே நம்மேல்
வரலாம்நோய் தீர்ப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``மந்தி`` என்பதை முதலில் வைத்து, `தான் ஈன்ற குழுவிக்கு` என்க.
`குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும்
நிரம்ப நாடின் அப்பெயர்க் குரிய`
என்பதனால், இங்கு, `குழவி` என்பது குரங்கில் இளமைப் பெயராய் வந்தது. இரு வரை - பெரிய மலை. நறவம் - தேன்; அஃது அதன் அடையைக் குறித்தது. `சுவை தோன்ற` என ஒரு சொல் வருவிக்க. வரல் ஆம் - வருதற்குரிய.

பண் :

பாடல் எண் : 10

உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப்
பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் கண்டிருந்த
மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே
பூமயிலி தாதை பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அறு பதங்கள் - வண்டுகள்; இதனை முதலிற் கொண்டு, `தாம் உண்டிருந்த` என்க. ஊடுதல், இங்கே, வெறுத்தல். நிரம்ப உண்டமையால் வெறுப்பு உண்டாயிற்று. `பண்டு இருந்த பொழில்வாய் முரல` என்க. யாழ் முரல - யாழின் இசைபோல ஒலிக்க. இது வினையுவமத் தொகை. யாழ் ஆகுபெயர். கண்டு - அவ்வண்டுகளின் செயலைப் பார்த்து. மருங்கு - வண்டுகளின் பக்கத்தில். பூ - அழகு. மயிலி - மயில் வாகனத்தையுடையவன்.

பண் :

பாடல் எண் : 11

ஊடிப் பிடிஉறங்க ஒண்கதலி வண்கனிகள்
நாடிக் களிறு நயந்தெடுத்துக் கூடிக்
குணம்மருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர்
குணமருட்டுங் கோளரவன் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிடி ஊடி உறங்க` என மாற்றிக் கொள்க. ``ஊடி உறங்க`` என்றதனால். உறங்குதல், பொய்யாக உறங்குதலாயிற்று. ``களிறு`` என்பதை, ``உறங்க`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `நாடிக் கொணர்ந்து` என, நாடுதல், அதன் காரியமும் உடன்தோற்றி நின்றது. நயந்து - இனிமை காட்டி. குணத்தால் மருட்டிக் கொண்டாடும்` என உருபு விரித்துரைக்க. குணத்தால் மருட்டுதலாவது, `நின்னிற் சிறந்த பிடியில்லை` என்பது போல அதன் இயல்பைப் புகழ்ந்து, அப்புகழ்ச்சி யில் அதனை மயங்கச் செய்தல். ``வானோர் குணம்`` என்பதில் ``குணம்`` என்றது அவர்கட்கு இயல்பாய் உள்ள அறிவினை. அதனை மருட்டுதலாவது, அவர்களால் அளந்தறியலாகாத அளவு, ஆற்றல் முதலியவற்றை அறிந்து வியக்கச்செய்தல். கோள் அரவம் - கொடிய பாம்பு. `அதனை அணியாக அணிந்தவன்` என்க.

பண் :

பாடல் எண் : 12

எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் குற்றதெனக்
கையிற் கணைகளைந்து கன்னிமான் பையப்போ
என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள்
சென்றன்று வென்றான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கன்னி மான்`` என்பதில் இரண்டன் உருபு விரித்து அதனை முதலிற் கூட்டிப் பின்னரும் `கன்னி மானே` என விளி யாக்குக. கன்னி - இளமை, பைய - மெல்ல. ``பாலனை` என்றது கைச் செய்கையை. தூங்கு எயில்கள் - இயங்கும் கோட்டைகள்; அவை முப்புரங்கள். சென்று - வினை மேற் சென்று, மானைக் கொல்லக் கணையை வில்லில் வைத்துத் தொடுத்த குறவன் அதன் பார்வை தன் இல்லக் கிழத்தியின் பார்வைபோலத் தோன்றுதலைக் கண்டு அதன் மேல் அன்பு உண்டாகப் பெற்று அதனை இன்சொற் சொல்லிப் போக விடுத்தான். இது தலைவனிடத்துத் தோன்றிய. `ஒப்புவழி யுவத்தல்` * என்னும் மெய்ப்பாடு.

பண் :

பாடல் எண் : 13

ஏழை இளமாதே என்னொடுநீ போதென்று
கூழை முதுவேடன் கொண்டுபோய் வேழ
வினைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம்
வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏழை இள மாது - யாதும் அறியா இளம்பெண். இவள் விளையாடும் சிறுமி. `இவள் யானை வருதலைக் கண்டு நடுங்கினாள்; அப்பொழுது முதுவேடன் இவளது நடுக்கத்தைத் தீர்த்தான் என்க. கூழை - நிமிர்ந்து நிற்கலாற்றாது மெலிந்து குனிந்து நடக்கும் தன்மை. `இத்துணை முதியனாயினும் யானையை அடக்கினான்` என்பது கருத்து. வேழம் - யானை. வால் வீட்டுதல். வாலையறுத்துல். குறும்பு செய்தலை `வாலாட்டுதல்` என்றும், குறும்பை அடக்குதலை, `வாலையறுத்தல்` என்றும் கூறுதல் உலக வழக்கு. வேழ வினை; மதத்துத் திரிதல். அதற்கு வாலையறுத்தலைச் செய்தல், அதனை நிகழ வொட்டாமற் செய்தல், `உடன் கொண்டு போய்` என ஒருசொல் வருவிக்க. உடன் கொண்டு சென்றது, அவள் நேரில் காணுதற்பொருட்டு. வினைக் குவால் - கன்மக் குவியல்; இது சஞ்சிதம். அதனை வீட்டுவித்தலாவது, தனது திருநோக்கால் எரித்தல். பின்னிரண்டடிகள் `மடக்கு` என்னும் சொல்லணி பெற்றன.

பண் :

பாடல் எண் : 14

ஏனம் உழுத புழுதி இன மணியைக்
கானவர்தம் மக்கள் கனலென்னக் கூனல்
இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே நம்மேல்
மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`புழுதியில் கிடக்கும் மணி` என்க. மணி - மாணிக்கம். ``இன மணி`` என்பதை `மணி இனம்` என மாற்றிக் கொள்க. இனம் - கூட்டம். என்ன - என்றே மருளும் படி. கூனல் இறுக்கம் - முகமும், முழங்காலும் ஒருங்கு சேரும்படி உடல் வளைந்து கையால் கட்டிக் கொண்ட இறுக்கம். இது குளிரால் நேர்ந்தது. கதிர் - பகலவன் கதிர்கள். பகலவன் கதிர் வெதுப்புதலால் தங்கள் குளிர் நீங்குதலை யறியாத குறச்சிறுவர்கள், காட்டுப் பன்றி நிலத்தைக் கிளறியதால் உண்டான மாணிக்கங்களின் திரளை `நெருப்பு` என்றே மருள்கின்றார்கள் என்பதாம். இஃது, உதாத்த அணியும், திரிபதிசய அணியும் சேர்ந்த சேர்வை யணி. மறுக்கம் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 15

ஏனங்கிளைத்த இனபவள மாமணிகள்
கானல் எரிபரப்பக் கண்டஞ்சி யானை
இனமிரிய முல்லைநகும் ஈங்கோயே நம்மேல்
வினையிரியச் செற்றுகந்தான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஏனம் கிளைத்த - பன்றிகள் உழுததனால் வெளிப் பட்ட. கான் - காட்டில். அல் - இரவிலே. எரி - நெருப்புப் போலும் ஒளியை. அஞ்சி - `நெருப்பு` எனக் கருதி அஞ்சி. இரிய - ஓட. முல்லை - முல்லை அரும்புகள், ``யானை இனம் இரிய`` எனத் திரிபதிசய அணியும். ``முல்லை நகும்`` எனத் தற்குறிப்பேற்ற அணியும் சேர்ந்து வந்தது சேர்வையணி. எரி, உவமையாகுபெயர். முல்லை, முதலாகுபெயர்.

பண் :

பாடல் எண் : 16

ஒருகணையும் கேழல் உயிர்செகுத்துக் கையில்
இருகணையும் ஆனைமேல் எய்ய அருகணையும்
ஆளரிதான் ஓட அரிவெருவும் ஈங்கோயே
கோளரிக்கும் காண்பரியான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கேழல் - பன்றியை. இது காட்டுப் பன்றி. உயிர் செகுத்தல் - கொல்லுதல். கேழல் சிறிதாகலின் ஒருகணையே போதியா தாயிற்று. யானை பெரிதாதலின் அதற்கு இருகணைகள் வேண்டப் பட்டன. ஆளரி - ஆளி; யாளி. அஃது யானையோடு ஒருபுடை ஒப்பது ஆதலின் யானை எய்யப் பட்டதைக் கண்டு தான் அஞ்சி ஓடுவதாயிற்று. அஃது ஓடுதலைக் கண்டு சிங்கமும் அஞ்சிற்று. அரி - சிங்கம். கோளரி, இங்கு, நரசிங்கம். ``ஒருகணையும்`` என்னும் உம்மை முற்று, ``இருகணையும்`` என்னும் உம்மை சிறப்பு. ``செகுத்து`` என்றது, `செகுத்தபின்` என்றபடி. `வேடன் எய்ய` எனத் தோன்றா எழுவாய் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 17

ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந் தண்போதைத்
தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் மூங்கில்
தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக்
குழையிறுத்த காதுடையான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தூங்குவது - தொங்குவது. கடுவன் - ஆண் குரங்கு. இறுத்துக்கொண்டு - ஓடித்துக்கொண்டு. ஓச்சுதல் - ஓங்குதல். தழையால் அடிப்பினும் கொள்ளி அணைவதாகும். மக்களோடு ஒத்திருக்கும் தன்மையால், நெருப்பைக் கண்டால் குரங்கிற்கும் அஞ்சி அதனை அணைக்க முயலும் இயல்பும் குரங்கிற்கும் உளதாகக் கூறப்பட்டது. இலவம் பூவை `நெருப்பு` என மருண்டது என்றது திரிபதிசய அணி. இறுத்த - தங்கிய.

பண் :

பாடல் எண் : 18

ஓடும் முகிலை உகிரால் இறஊன்றி
மாடுபுக வான்கை மிகமடுத்து நீடருவி
மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே
கோச்சீயம் காண்பரியான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உகிர் - நகம். இற - பிளக்கும்படி. மாடு புக - பிளந்த தனால் ஒழுகிய நீர் இம்மலையிடத்தை அடைய (அதனால் உண்டான) `நீடு அருவியை மாச்சீயம் வான் கையால் மிக மடுத்து மனங் களிக்கும்` என்க. சீயம் - சிங்கம். அதன் முன்னங்கால்கள் அதற்குக் கையாகவும் உதவும். கோச் சீயம் - தலைமைச் சிங்கம்; நரசிங்கம். இனி, `கோ மாயோன்` என வைத்து, `மாயோனாகிய சீயம்` எனினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 19

கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர்
உண்டு குளிர்ந்திலவென் றூடிப்போய்க் கொண்டல்
இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்கு
மறைக்கீறு கண்டான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண்ட கனி - கண்ணில்பட்ட கனிகளையெல்லாம். கருமை, ஆழம் மிகுதியால் உண்டாயிற்று. `கருநீர்` என இயையும். குளிர்தல் - தாகம் தணிதல். மந்திகளின் பன்மையால் தாகமும் பல வாயின. ஊடுதல் - வெறுத்தல். `கொண்டலை` எனவும், `இறையால்` எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. இறை - கை அஃது ஆகுபெயராய், நகத்தை உணர்த்திற்று. ஈறு கண்டான் - முற்ற உணர்ந்தவன். உணரப் பட்டன அவற்றின் பொருள். அதனை முன்னே தான் உணர்ந்தாலன்றி உலகிற்கு அதனைச் சொல்லுதல் கூடாமையறிக. ஒரு நூலின் பொருளை அதன் உரையாசிரியர் எவ்வளவு உணரினும் நூலை ஆக்கிய ஆசிரியன் கருத்தை முற்ற உணர மாட்டுவாரல்லர். அதனால், ``மறைக்கு ஈறு கண்டான்`` என்றது, `அதனை உலகிற்கு அளித்த ஆசிரியன்` எனக் கூறியவாறேயாம்.

பண் :

பாடல் எண் : 20

கருங்களிற்றின் வெண்கொம்பாற் கல்லுரல்வாய் நல்லார்
பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப வருங்குறவன்
கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே
மைக்கொணருங் கண்டன் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நல்லார் - அழகுடைய பெண்கள். `தினையைப் பிண்டியாக இடிப்ப` என்க. பிண்டி - மா. வரும் - வெளிச்சென்று வருகின்ற. மை - மேகம் ``மைக் கொணரும்`` என்பதில் கொணரும். உவம உருபு, இனி, `மை கருமை`` எனக் கொண்டு, `அதனைத் தன் பால் கொணர்ந்த கண்டன்` என்றலும் ஆம். இருவழியும் ககர ஒற்று விரித்தல். ``கருங்களிற்றின் வெண்கொம்பு`` என்பது முரண்தொடை யும், விரோத அணியுமாம்.

பண் :

பாடல் எண் : 21

கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க
நனைய கலத்துரத்தில் ஏந்தி மனைகள்
வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே பாங்கார்
குரவரும்பு செஞ்சடையான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கனைதல் - செறிதல். அதனை, `கனை யிருள்` என்பதனானும் அறிக. கனைய - செறிதலை உடைய. பல ஆம் கனிகள் - பலவாகிய பழங்கள். `கனிகளை ஏந்தி` என இயையும். கல் இலையர் - கற்ற இலைத் தொழிலர். அவராவார், இலைகளைக் கல்லை யாகச் செய்தல், தழையாகக் கோத்தல் முதலியவற்றைக் கற்றவர். `இலையரால்` என்னும் மூன்றன் உருபு தொகுக்கப்பட்டது. தொக்க - தொகுக்கப்பட்ட. நனைய - தேனை உடைய. இலையரால் தொகுக்கப் பட்ட கலம் தொன்னை. உரத்தில் - மார்பிற்கு நேராக. `கலத்தில், மனை களில்` என ஏழாவது விரிக்க. ஆய் - தாய்; பழம் விற்பவள். இவளை, `தாய்` என்றது நாட்டு வழக்கு. `பலவகைக் கனிகளை யாவரும் எளிதில் காணத் தேனோடு கலந்து மார்பிற்கு நேராகக் தொன்னை களில் ஏந்தி விற்பவள் தன்னை அழைக்கும் மனைகளில் செல்ல விரும்பி அவற்றை உற்று நோக்குகின்ற ஈங்கோய்` என்றபடி. ``வா`` என்றது இட வழுவமைதி. குரவு - குரா மரத்தின் அரும்பு.

பண் :

பாடல் எண் : 22

கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச்
சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு மடக்கிளிகள்
கீதம் தெரிந்துரைக்கும் ஈங்கோயே ஆல்கீழ்நால்
வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடக் களிறு - மதத்தினையுடைய ஆண் யானை. கண்வளர்தல், உறங்குதல். ஆர்த்தல் - ஆரவாரித்தல். மதயானை உறங்கும் பொழுது வண்டுகள் ஆராவாரித்தல், அதன் மத நீரைத் தான் வேண்டியபடி உண்ணுதலாலாம். உழுதல், `உழவு` ஆயினாற்போல, எழுதல், `எழவு` ஆயிற்று. மடம் - இளமை. இனி, `சொல்லியதைச் சொல்லுதல்` என்றும் ஆம், கீதம் தெரிந்து உரைக்கும் - இசையையும் உணர்ந்து. அம்முறையிலே பாட்டினையும் பாடுதல், ``ஆர்ப்ப உரைக்கும்`` என்றது. `இரண்டும் ஒருங்கு நிகழ்கின்றன` என்பதாம். நால் வேதத்தை நால்வர் முனிவர்க்குச் சிவன் அறிவுறுத்தமை திருமுறைகளிற் பல இடத்தும் சொல்லப்படுவது. ``உரைப்பான்`` என எதிர்காலத்தாற் கூறியது, `இது கற்பந் தோறும் நிகழ்வது`` என்றற்கு.

பண் :

பாடல் எண் : 23

கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம்
இறுத்துக்கைந் நீட்டும்ஈங் கோயே செறுத்த
கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த
விடமிடற்றி னான்மருவும் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கருவுற்ற காலத்தில் மகளிர்தம் கொங்கை நுனி கறுப்பாகும்` என்னும் வழக்குப் பற்றி, ``கறுத்த முலைச் சூற் பிடிக்கு`` என்றார். சூல் - கருப்பம். பிடி - பெண் யானை. ``பிடிக்கு`` என்றத னால், ``யானை`` என்றது களிற்றியானை யாயிற்று. கார் யானை - கரிய யானை. இஃது இனம் இல் அடை. சந்தம் - சந்தனம் மரம். அஃது ஆகுபெயராய், அதன் தழையைக் குறித்தது. இறுத்தல் - ஒடித்தல் ``கை நீட்டும்`` என்றது, `கையை நீட்டிக் கொடுக்கும்` என்றபடி. செறுத்த - கொல்லப்பட்ட. கடம் - மதநீர். அஃது ஆகுபெயராய், யானையைக் குறித்தது. தடத்த - பெரிய. உரிவை - தோல். `யானைத் தோலாகிய தோல்` என இருபெயர் ஒட்டாகக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 24

கங்குல் இரைதேருங் காகோ தரங்கேழற்
கொம்பி னிடைக்கிடந்த கூர்மணியைப் பொங்கும்
உருமென்று புற்றடையும் ஈங்கோயே காமன்
வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கங்குல் - இரவு. காகோதரம் - பாம்பு. கேழல் - காட்டுப் பன்றி. கொம்பின் இடைக்கிடந்த மணி - நிலத்தைக் கிளறும் பொழுது அக்கொம்பினிடையே வெளிப்பட்ட மாணிக்கம். கூர் - ஒளி மிகுந்த. உரு - மேகத்தின் இடி. அஃது ஆகுபெயராய் அதனோடு உடன் தோன்றும் மின்னலைக் குறித்தது. `மின்னலுக்குப்பின் இடி விழும்` என்னும் அச்சத்தால் பாம்பு புற்றை அடைவதாயிற்று. மின்னல் `திடீர்` எனத் தோன்றுதல் போலப் பன்றி உழுதமையால் அதன் கொம்புகளினிடையே மாணிக்கம் தோன்றிற்று. `அதனைப் பாம்பு - மின்னல் - என மருண்டது` என்றது திரிபதிசய அணி. காமன் - மன்மதன். வெருவு ஒன்ற - அச்சத்தைப் பொருத்த. ``கண் சிவந்தான்`` என்றது, இலக்கணையால், `சினந்தான்` எனப் பொருள் தந்தது. அது வும், `எரித்தான்` எனத் தன் காரியம் தோற்றிநின்றது. ``கொம்பின்`` என்றது இன எதுகை.

பண் :

பாடல் எண் : 25

கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா
திலைகைக்கொண் டேந்திக்கால் வீச உலவிச்சென்
றொண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய
வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அசைந்த - இளைத்த. அசைந்த காற்று - முன்பெல் லாம் கலவிக்குப் பின் அவ் இளைப்புத் தீர ஏற்ற காற்று. காணாது - அப்பொழுது காணாமையால். இலை. பலவகையான இலைகள். கால் வீச - காற்றை வீச. `களிறு காற்றை வீசப் பிடி தன் இளைப்பு நீங்கும்படி அதனை உலவிச் சென்று ஏற்கும் ஈங்கோய்` என்க. வெண்பொடி நீறு- இருபெயரொட்டு.

பண் :

பாடல் எண் : 26

கன்னிப் பிடிமுதுகிற் கப்புருவம் உட்பருகி
அன்னைக் குடிவரலா றஞ்சியே பின்னரே
ஏன்றருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே நீங்காத
மான் தரித்த கையான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கன்னிப் பிடி - களிற்றியானையோடு சேர்தல் இல்லாத பிடி யானை. `முதுகில் கப்பு உருவம்` என்றது இடக்கர் அடக்கல். அதனை உட்பருகுதலாவது, தான் பூப்படைந்தமையை மனத்தில் எண்ணுதல். அன்னைக் குடி வரலாறு - தன் தாய், தாய்க்குத் தாய் இப்படிப் பெண்யானைகள் யாவும் கன்றுகளை ஈன்று இனத்தைப் பெருக்கி, வாளாதே இறந்தொழிந்த வரலாறு. (அதனை அறிந்த ஒரு பிடி யானை) அஞ்சி - அவ்வாறு தானும் துன்புற்று வாளா மாய்தற்கு அஞ்சி மாதவும் ஏன்று அருக்கிச் செய் ஈங்கோய் - பெரிய தவத்தை மேற்கொண்டு உண்டி முதலியவைகளை மறுத்து நோற்கின்ற ஈங்கோய் மலை, அருக்குதல் மறுத்தல்.

பண் :

பாடல் எண் : 27

கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை
கொள்ளென் றழைத்த குரல்கேட்டுத் துள்ளி
இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம்
மனக்கவலை தீர்ப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கள்ள - வஞ்சனையையுடைய. அஃதாவது ஒளிந் திருந்து மாக்களைப் பிடிக்கின்ற. முது மறவர் - கிழ வேடர். மாவேட்டை - விலங்கு வேட்டை. கொள் என்று - பிடியுங்கள் என்று. இனம் - பல்வேறு வகையான. கவ் வலை - சிக்க யாக்கின்ற வலை களைக் கடந்து. பாய்ந்து ஓடுவன மேற் கூறப்பட்ட மாக்கள். `கவ் வலை` என்பது இடைக் குறைந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 28

கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக்
கொல்லை எழுந்த கொழும்புறவின் முல்லை அங்கண்
பல்லரும்ப மொய்த்தீனும் ஈங்கோயே மூவெயிலும்
கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கல் - சிறு பாறைகள், `அவற்றை உடைய புனம் என்க. ஐ, சாரியை. படர்தல், இங்கு மேய்தலாகச் சொல்லப்பட்டது. தார் - மாலை. அதனை, ``போர்த்த`` என்றது. `நிரம்பத் தாங்கி` என்றபடி. புனம், கொல்லை, புறவு - யாவும் முல்லை நிலப்பெயர்கள். புறவின் முல்லை - முல்லை நிலத்துக்கே சிறப்பாக உரிய முல்லைக் கொடிகள். பல் அரும்பு, பற்கள் போன்ற அரும்புகள். ``மொய்த்து`` என்பதை, `மொய்ப்ப` எனத் திரிக்க. கொல் அரும்ப - கொலைத் தொழில் தோன்றும் படி. கோல் - அம்பு, ``மேய்ந்து, போர்த்து, ஈனும்`` என்றது சில சொல் நயங்கள்.

பண் :

பாடல் எண் : 29

கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட
எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி வல்லே
இருந்துகிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே மேனிப்
பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பின், ``எல்லாக் குரங்கும்`` என வருதலின் முதற்கண், `ஒருகல்லாக் குரங்கு` என உரைக்க. கல்லாமை, யாதும் அறியாமை. பளிங்கு - பளிக்குப் பாறை. கனி - அதனுள் தோன்றும் கனியினது நிழலை. ஈண்டி - நெருங்கி. இருந்து - அமர்ந்து கொண்டு `இருந்து, வல்லே உகிரால் கல் கிளைக்கும்` என்க. வல்லே - விரைவாக. உகிர் - நகம். கிளைக்கும் - கிள்ளுகின்ற. இதுவும் திரிபதிசய அணி.

பண் :

பாடல் எண் : 30

கண்கொண் டவிர்மணியின் நாப்பண் கருங்கேழல்
வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் தண்கோ
டிளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே வேதம்
விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கண் - கண்ணொளி; ஆகுபெயர். ``கொண்டு`` என்பதை, `கொள்ள` எனத் திரிக்க. அவிர்தல். ஒளி வீசுதல். மணி - நீலமணி. நாப்பண்- நடுவில். கேழல் - பன்றி, ``கடுக்கும்`` இரண்டில் முன்னது, `ஒக்கின்ற` என்னும் பொருளையும், பின்னது, `மிக்குறை கின்ற` என்னும் பொருளையும் உடையன. இளம் பிறை சேர்வான் - இளம் பிறை பொருந்திய ஆகாயம். வேதம் விளம்பு இறை - வேதத்தால் சொல்லப்பட்ட இறைமைக் குணங்கள். நீலமணிக் குவியல் இடையே பன்றிக் கொம்பு காணப்படுதலால், அக்குவியல் பிறை பொருந்திய ஆகாயம் போலத் தோன்றுவதாயிற்று. பின் இரண்டடிகள், திரிபணி.

பண் :

பாடல் எண் : 31

காந்தள்அங் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை
கூந்தல் விரித்துடனே கூத்தாடச் சாய்ந்திரங்கி
ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
கார்க்கொன்றை ஏன்றான் கடறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கைத்தலங்கள் காட்ட`` என்றது, கைகாட்டி, `வருக` என்று அழைக்க என்றபடி. காந்தள் மலர் கைக்கு உவமையாகச் சொல்லப்படுவது ஆதலின் அதன் அசைவு கையை அசைத்தலாகச் சொல்லப்படுவது. இது தற்குறிப்பேற்றம். கூந்தல் - தோகை. ஏர் - அழகு. கொன்றை மலர் பொன்போல்வது ஆதலின், அதனை உதிர்ப்பது, நடனமாடும் நாடகமகளுக்குப் பரிசாகப் பொன்னைச் சொரிவதாகக் கூறப்பட்டது. இதுவும் தற்குறிப்பேற்றம். சாய்தல். வளைதல். இரங்குதல் - மனம் இரங்குதல். இஃது இலக்கணை என்றதனால் மஞ்ஞை (மயில்) நாடக மகளாதலைப் பெற வைத்தது குறிப்புருவகம். களி - களிப்பு; மகிழ்ச்சி ``கை காட்ட, பொன் கொடுக்கும்`` என்பன இயைபுருவகம் ``கடறு`` என்ப காடாயினும், இஃது ஆகுபெயராய், ஆங்குள்ள மலையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 32

குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குற்றி
நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் சிறுகுறவர்
கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே
மைந்நீட்டுங் கண்டன் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நறவம் - தேன். நறவத்தோடு கூட்டி. `ஆக்க`, என்பதன் ஈற்று அகரம் தொகுக்கப்பட்டது. அன்றி, `ஆக்கு அகங்கள்` என வினைத்தொகையாக்கலும் ஆம். ஆகம் - இல்லம். ``அஞ்சு அகங்கள்` என்றதில் அஞ்சு, பன்மை குறித்தது. `அஞ்சு வீடு நுழைந்தேன்` என்பது நாட்டு வழக்கு. `நாடிச் சென்று` எனவும், `கைந்நீட்டி வாங்கி` எனவும் ஒரோர் சொல் வருவிக்க. உவப்பவர் குறவர்கள். களித்துவக்க, ஒருபொருட் பன்மொழி. மை நீட்டு - கருமையைக் காட்டுகின்ற.

பண் :

பாடல் எண் : 33

கூழை முதுமந்தி கோல்கொண்டுதேன்பாய
ஏழை யிளமந்தி சென்றிருந்து வாழை
இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே இஞ்சி
சிலையால்தான் செற்றான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கூழை - உடல் வளைந்த. முது மந்தி - கிழப்பெண் குரங்கு. இது தாய். `கோல் கொண்டு தாக்க` என ஒருசொல் வருவிக்க. தாக்கப்பட்டது தேன் கூடு. ஏழை - அறிவில்லாத; திறமையற்ற. இளமந்தி, இது மகள். ``இலையால் உண்ணும்`` என்றதனால், இலை யால் ஏற்றமை பெறப்பட்டது. இஞ்சி - மதில்; முப்புரம். சிலை - வில். தான். அசை.

பண் :

பாடல் எண் : 34

கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை
மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண் டொல்லை
இருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய்
வருங்கைக் களைவான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொத்து, பூங்கொத்து, இறுத்துக்கொண்டு, `ஓடித்துக் கொண்டு` என ஒரு சொல். இனி, `குண்டு சுனை` எனப்பாடம் ஓதலும் ஆம். குண்டு - ஆழம். வேங்கைப் பூ தாம் ஆடும் நீரில் நறுமணத்திற் காக இடுவது. `சுனை நீர்` என இயையும். மல், `மல்லை` என ஐகாரம் பெற்றது. `வளப்பம்` என்பது பொருள். நாட்டிக் கொண்டு - மனத்தில் உறுதி செய்து கொண்டு. ஏறுதல். சுனை உள்ள இடத்தை நோக்கி ஏறுதல். `மேல் கை வரும் நோய்` என மாற்றுக. மேல் - வருங்காலம். கை வருதல் - நெருங்கி வருதல்.

பண் :

பாடல் எண் : 35

கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர்
கவ்வைக் கடிபிடிக்குங் காதன்மையால் செவ்வை
எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர்
குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கூந்தலில் சேர்க்கின்ற கடி` என்க. கடி - வாசனை. கவ்வை - அலர் தூற்றுதல். அஃது இங்குச் சேய்மையினும் சென்று கமழ்ந்து கூந்தலின் இருப்பை அறிவித்தலைக் குறித்தது. ``ஆர்வலர் - புன்கணீர் பூசல் தரும்`` என்றார் திருவள்ளுவ நாயனாரும். கடி பிடித்தல் - வாசனையேற்றுதல். ``காதன்மை`` என்பதில், மை பகுதிப் பொருள் விகுதி. இதில் னகர ஒற்று நீக்கி அலகிடுக. செவ்வை எறித்த. மலர் - நன்றாகப் பூத்துப் பொலிகின்ற மலர்கள். பொதுப்படக் கூறியதனால், ஏற்கும் மலர்களையெல்லாம் கொள்க. ``கொண்டு விடும்`` என்பதில், விடு, துணிவுப் பொருண்மை விகுதி.

பண் :

பாடல் எண் : 36

கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல்
படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி நெடுநாகம்
தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே தாழ்சடைமேல்
வண்டூன்றுந் தாரான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொல்லை - தினை, சோளம் முதலியவைகளை விளைவிக்கும் புன்செய் நிலம். அவற்றுள் யானை புகாமல் தடுக்கக் குறவர்கள் அப்பால் உள்ள இடங்களில் படுகுழிகள் தோண்டி, கழிக ளாலும், இலைகளாலும் அக்குழிகள் தெரியாதபடி மூடிவைப்பர். அதனையுணர்ந்து யானைகள் மரக் கிளைகளை முரித்துத் தண்டாக முன்னே ஊன்றிப் பார்த்துச் செல்லும். நாகம் - யானை. ``வண்டு ஊன்றும்`` என்பதில் ஊன்றுதல், கிளறுதல்.

பண் :

பாடல் எண் : 37

கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல் விளையாடி வேங்கை
வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு
வரவதனைக் காப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அழித்த - தோற்கச் செய்த. ``வேங்கை`` இரண்டில் முன்னது வேங்கை மரம்; பின்னது புலி, இது சொற்பின் வருநிலையணி. மணி - அழகு. `புலி வர, அதனைக் கண்டு இரியும்` என்க. இரிதல் - அஞ்சி நீங்குதல். ஈற்றடியில் ``வரவதனை`` என்பதில் அது, பகுதிப் பொருள் விகுதி. வரவைக் காத்தலாவது, வாராமற் காத்தல்.

பண் :

பாடல் எண் : 38

சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை
மந்தண் மடப்பிடியின் வாய்க்கொடுப்ப வந்ததன்
கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதே
விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பூ - அழகு. யானை, களிற்றியானை. `மந்தம்` என்பது ஈற்று அம்முக்கெட்டு நின்றது. மந்தம் - மெல்லிய நடை. தண் - குளிர்ச்சி. களிற்றுக்குத் தரப்படும் குளிர்ச்சி. மடம் - இளமை. ``கொடுப்ப`` என்றது, `கொடுக்க முயல` என்றபடி. தன் - அதனது. கண் களித்தல், கண்ணில் உவகை நீர் ததும்புதல். களிற்றின் அன்பு நோக்கிப் பிடி கண்களித்தது. பிடி கண்களித்ததைக் கண்டு களிறு ஆரவாரித்தது. கலித்தல் ஆரவாரித்தல், ``தான்`` என்றது களிற்றியானையை. தேங்குதல் - திகைத்தல். விண் - விண்ணோர், ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 39

சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து
கொந்தியினி துண்ணக் குறமகளிர் மந்தி
இளமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின்
வளமகளிர் பாகன் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``குறமகளிர்`` என்பதை முதலில் வைத்தும், ``இளமகளிர் மந்திவாய்க் கொடுத்து`` என மாற்றி வைத்தும் உரைக்க. தண் - மென்மை. பிண்டி - தினை மா. கொந்தி - அளைந்து. குறமகளிர் அங்குள்ள மந்திகளுக்குக் கொடுத்து உண்கின்றார்கள்; இஃது அவர் களது முதுக்குறைவாகும். `வெற்பின் மகள்` என்பதை, ``வெற்பின் மகளிர்`` என்றது உயர்வு பற்றி வந்த பன்மை. அன்றிக் கங்கையும், இமவான் மகளாய், `ஐமவதி` எனப்படுகின்றாள் ஆதலின், அவ்விரு வரையும் குறித்ததுமாம். இப்பொருட்கு. `பாகன், ஒரு பகுதியிற் கொண்டவன்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 40

சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி
சேரத் தருக்கி மதுக்கலந்து வீரத்
தமரினிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே வெற்பின்
குமரன்முது தாதையார் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சாரல் - இம்மலையின் பக்கம். தண் - குளிர்ச்சி. அஃதாவது, கண்ணிற்குத் தரும் குளிர்ச்சி. அது வெண்மை, எனவே, மருப்பு யானைத் தந்தமாயிற்று. பிண்டி - மா. இது தினை மா, சேர நன்கு மசிந்து ஒன்றுபட. தருக்கி - மகிழ்ந்து. மது - தேன். வீரத் தமர் - வீரம் உடைய உறவினர்; என்றது, ஆடவரை. இனிது ஆக - மகிழ்ச்சி அடையும்படி. மகளிர் தங்கள் உதவியை நாடாது அவர்களே முயன்று இனிய உணவைப் பெற்று உண்ணுதலைக் கண்டு ஆடவர் மகிழ்வாரா யினர் என்க. இன்பம் - இருவர் தேவியருடன் இன்புற்றிருப்பான். குமரன்- மருகன், `அவன் மிக இளையனாயினும் அவனைப் பெற்ற தந்தை மிக முதியன்` என்னும் நயம் தோன்றுதற்கு. ``முதுதாதையார்`` என்றார் சிவபெருமானை. நன்றாய்ந்த நீணிமிர்சடை - முதுமுதல்வன்`` எனச் சங்கத்துச் சான்றோரும் (புறம்.166) கூறினார். ``குமரன் முது`` என்னும் சீரினை னகர ஒற்று நீக்கி அலகிடுக.

பண் :

பாடல் எண் : 41

தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம்
வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் தீயோங்கிக்
கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கொன்றைத் தாரான் வரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தண் சாரல் ஒண்கானத்தில் தாய் ஓங்கி அடரும் வேய் ஓங்கிக் கண் கன்றி, முத்தம் எதிர் பிதுங்கித் தீ ஓங்கித் தீ விளைக்கும் ஈங்கோய்` என இயைத்துக் கொள்க. வேய் - மூங்கில் தாய் - பல பக்கங்களிலும் தாவி. தாம், அசை. ``தாய் ஓங்கி அடரும் வேய்`` எனக் கூறியது முன்னர் அதன் வளர்ச்சியையும், பின்னரும் ``ஓங்கி`` என்பது முதலாகக் கூறியன அதன் விளைவுகளையும் விளக்கியவாறு. கண் - கணுக்கள். கன்றுதல், உறுதிப்படுதல். கன்றி - கன்றுதலால். பிதுங்கி - பிதுங்கப் பெற்று. முன்னர், ``தீ ஓங்கி`` என்றது, ``கன்றி, பிதுங்கி`` என்றவற்றோடு ஒருங்கு நிகழ்ந்ததையும், பின்னும் `தீவிளைக்கும்` என்றது, வேய்கள் சாரலில் விளைக்கும் விளைவையும் குறித்தன.

பண் :

பாடல் எண் : 42

செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக் கஞ்சிப்
பிடிபட்ட மாக்களிறு போந்து கடம்முட்டி
என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே ஏந்தழலிற்
பொன்னேர் அனையான் நெபாருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சிங்கத்தின் சீற்றத்தீக்கு அஞ்சிப் பிடி செடி முட்ட, மாக்களிறு அட்டம் போந்து கடம் முட்டி, என்னே சீ என்னும் ஈங் கோய்` எனக் கூட்டுக. முட்ட - சேர; சேர்ந்து மறைய முயல, அட்டம் போந்து - குறுக்காகப் புகுந்து. அஃதாவது பிடியைக் காக்கும் முறை யில் புகுந்து. கடம் - காட்டில்; அஃதாவது சிங்கம் வாழும் இடத்தில். முட்டி - சேர்ந்து. அங்குச் சிங்கம் காணப்படாமையால் அதனைக் களிறு `என்னே! சீ!` என்று இகழ்ந்தது. ஏந்து அழல் - எரிகின்ற நெருப்பு. நேர் ``அனையான்`` என்பது ஒருபொருட் பன்மொழி.

பண் :

பாடல் எண் : 43

சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப்
புனைநீடு பொன்னிறத்த வண்டு மனைநீடி
மன்னி மணம்புணரும் ஈங்கோயே மாமதியம்
சென்னி அணிந்தான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாது - மகரந்தம். சோதிப் புனை - ஒளியாகிய அழகு. ``மனை`` என்றது முதற்கண் கூறிய தாமரை மலரே.

பண் :

பாடல் எண் : 44

செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து
வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி பந்தியாத்
தேக்கிலைக ளிட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே
மாக்கலைகள் வைத்தான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பிண்டி - மா, பச்சை - காய்ச்சப்படாதது. மணி - அழகு. சிறப்பு - உபசாரம். மாக்கலைகள் - உயர்ந்த நூல்கள். வைத்தான் - உலகர் பொருட்டு ஆக்கி வைத்தவன். முதல் அடி முரண்தொடையும், விரோத அணியும் பெற்றது.

பண் :

பாடல் எண் : 45

தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம்புகுத்தங் கின்நறவம் மாந்தி உடன்கலந்து
மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே
கோக்குரவை ஆடிகொழுங் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தடம் - சுனை. குடைந்த - முழுகிய. ``கொங்கை மகளிர்`` என்றது மங்கைப் பருவத்தினர் ஆதல் குறிக்கும்படி. நறவம் - தேன். உடன் - பலர் திரண்டு. ``கோக் குரவை`` என்பதில், குரவை, `கூத்து` எனப் பொதுப் பொருள் தந்தது. கோக் குரவை - தலையாய கூத்து. பின் வந்த ``ஆடி`` என்பது பெயர்.

பண் :

பாடல் எண் : 46

தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள் தகையத்
தாமரையிற் பாய்ந்துகளுந் தண்புறவில் தாமரையின்
ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும்
வாட்டங்கள் தீர்ப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தாமரையின் தாள் தகைத்த தாமர் - தாமரை மலரில் தாள்களை இணைத்துக் கட்டிய மாலையை அணிந்தவர்கள்; அந்தணர் கள். ஐ - அழகு. இஃது ஆகுபெயராய், அழகையுடைய இளஞ்சிறார் களைக் குறித்தது. தாமர்தம் ஐகள், அந்தணச்சிறார்கள். தாள் தகைய - தங்கள் கால்கள் வலிக்கும்படி. அரையில். பாய்ந்து - `அரை` என்னும் ஒருவகை மரத்தின்மேற் பாய்ந்து. உகளும் புறவு - விளையாடுகின்ற காடு. தா மரையின் ஈட்டம் - தாவி ஓடுகின்ற `மரை` என்னும் மானின் கூட்டத்தை. சிதறும் - அழிக்கின்ற. வாட்டம் - மெலிவு. ஈங்கோய் மலையைச் சூழ அந்தணர்கள் இருக்கையுள்ளதைக் குறித்தவாறு. இவ்வெண்பா, சொற்பின் வருநிலையணி பெற்றது.

பண் :

பாடல் எண் : 47

தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய்
வள்ளவட்டப்பாழி மடலேறி வெள்ளகட்ட
காராமை கண் படுக்கும் ஈங்கோயே வெங்கூற்றைச்
சேராமைச் செற்றான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அகடு - நடுவிடம். தெள் அகட்ட சுனை - தெளிவான நடுவிடத்தையுடைய சுனை. தேன் + மலர் = தேமலர். `வாயாகிய வட்டம்` என்க. வள்ள வட்டம் - கிண்ணம் போலும் வட்டம். பாழி - உள் ஆழ்ந்த. கடல் - இதழ் வெள் அகட்ட காராமை - வெண்மையான வயிற்றையுடைய கரிய ஆமை. குறிப்பு: பழம் பதிப்புக்களில் காணப்படாதனவாகிய இப் பதினைந்து பாடல்களும் திருப்பனந்தாள் ஷ்ரீகாசி மடத்துப் பதிப்பில் கண்டு, பின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

பண் :

பாடல் எண் : 48

தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பாங்கு அமரர் சீராட்ட நின்றான் சிலம்பு, குரங்கு பலவின் சுளைகளை மக்கள் கையில் கொடுத்து ஊட்டும் ஈங்கோயே` எனக் கூட்டுக. தேன் - இனிமை, பலா - பலாமரம். கருங்குரங்கு என்பது இங்கு பைங்குரங்கு எனப்பட்டது. வான் குணங்கள் - மக்க ளுடைய சிறப்புப் பண்புகள். சீராட்டுதல் என்பது ஒரு சொல். புகழ்தல் என்பது அதன் பொருள். பாங்கு - பக்கம். சந்நிதி என்பது பொருள்.

பண் :

பாடல் எண் : 49

தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின்
கானமர்கற் பேரழுகு கண்குளிர மேனின்
றருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர்
வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சுனைகள் புக்கு என்பதன் பின் `ஆடும் மகளிர்` என ஒரு சொல் வருவிக்க. சுனை ஆடும் மகளிர் காட்டின் அழகை கண் குளிரக் காணும்படி அருவிகள் வந்து இழியும் ஈங்கோய் என்க. சந்தது - சந்தன மரம். கான் - காடு. சந்தனக் காட்டின் பேரழகு என்க.

பண் :

பாடல் எண் : 50

தோகை மயிலினங்கள் சூழந்து மணிவரைமேல்
ஒகை செறிஆயத் தோடாட நாகம்
இனவளையிற் புக்கொளிக்கும் ஈங்கோயே நம்மேல்
வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஓகை செறி ஆயம் - உவகை மிகுந்த மகளிர் கூட்டம் இனவளை - கூட்டமாய் உள்ள புற்று. வினை வளையைச் செற்று - முன் செய்த வினை வந்து பற்றும் பொழுது அவற்றை அழித்து.

பண் :

பாடல் எண் : 51

நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம்
இறவி லியங்குவான் பார்த்துக் குறவர்
இறைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கை
விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நறவம் - தேன். ஏனம் - பன்றி. இனத்து வலை தைத் திருக்கும் - பலவாய வலைகளை அமைத்திருக்கின்ற (ஈங்கோய்). நங்கை - கங்கை. விரை - துவலை, மணம் பொருந்திய நீர்த்துளிகள். இரவு என்பது எதுகை நோக்கி இறவு எனத் திரிந்தது.

பண் :

பாடல் எண் : 52

நாக முழைநுழைந்த நாகம்போம் நல்வனத்தில்
நாகம் விழுங்க நடுக்குற்று நாகந்தான்
மாக்கையால் மஞ்சுரிஞ்சும் ஈங்கோயே ஓங்கிசெந்
தீக்கையால் ஏந்தி சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாகமுழை நுழைந்த நாகம் - மலைக் குகையில் நுழைந்த மலைப்பாம்பு. போய் - வெளியே புறப்பட்டுச் சென்று. நாகம் விழுங்க - குரங்கை விழுங்க. நாகம் மாக்கையால் மஞ்சு உரிஞ்சும் - யானை தனது பெரிய கையால் மேகத்தைத் தடவுகின்ற. இது சொற்பின் வருநிலையணி.

பண் :

பாடல் எண் : 53

நாகங் களிறுநுங்க நல்லுழுவை தாமரையின்
ஆகந் தழுவி அசைவெய்த மேகங்
கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே ஓங்கு
பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நாகம் களிறு நுங்க - மலைப்பாம்பு யானையை விழுங்க. உழுவை - புலி. தாமரையின் ஆகம் தழுவிட - தாவிச் செல்லு கின்ற மானின் உடம்பைத் தழுவி. அசைவு எய்த - தங்கியிருக்க. மேகம் கருவிடைக் கண் நீர் சொரியும் - சூல் கொண்ட மேகம் அச் சூலினின்றும் மழையைப் பொழிய. மழை பெய்யும்பொழுது பாம்பு யானையை விழுங்குதல் முதலியவை நிகழ்கின்றன என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 54

பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை
கணவனிடந்திட்ட கட்டி உணவேண்டி
எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கங்கை ஏற்றான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பணவம் - பாம்பு. புற்றின் பழஞ்சோறு - புற்றாஞ் சோறு என வழங்கும். கணவன் - ஆண் கரடி. இடந்து - பெயர்த்துக் கொணர்ந்து. இட்டகட்டி - இட்ட சோற்றுத்திரள். எண்கு - பெண் கரடி.

பண் :

பாடல் எண் : 55

பன்றிபருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித்
தென்றி மணிகிடப்பத் தீயென்று கன்றிக்
கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே வானோர்
மருவரியான் மன்னும் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பன்றி, காட்டுப் பன்றி. பருக்கோடு - பருத்த கொம்பு. புழுதித் தென்றி - மண்மேடு. மணி - மாணிக்கம். கன்றி - மனம் நைந்து. கரி - யானை.

பண் :

பாடல் எண் : 56

பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று
சீறி மருப்பொசித்த செம்முகமாத் தேறிக்கொண்
டெல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்
வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிழல் - வெயில் காரணமாகத் தோன்றுகின்ற நிழல். பகடு - வேறோர் யானை. மருப்பு ஒசித்த - பாறை மேலே முட்டித் தன் கொம்பை ஒடித்துக் கொண்ட -செம்முகமா- உதிரம் ஒழுகுகின்ற முகத்தை உடைய யானை. எல்லே - அந்தப் பகற்பொழுதிலே. பிடி என்னும் - பெண் யானை என்று மகிழ்கின்ற.

பண் :

பாடல் எண் : 57

பிடிபிரிந்த வேழம் பெருந்திசைநான் கோடிப்
படிமுகிலைப் பல்காலும் பார்த்திட் டிடரா
இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர்
குருவருட்குன் றாய்நின்றான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பிடி - பெண் யானை. வேழம் - ஆண் யானை. இடரா - துன்பம் உடையதாய். இருமருப்பைக் கை காட்டும் - தனது இரு தந்தங்களையும் தும்பிக்கையையும் காட்டி அழைக்கின்ற. குரு அருட் குன்று - குரு மூர்த்தியாகிய அருள்மலை.

பண் :

பாடல் எண் : 58

பொருத கரியின் முரிமருப்பிற் போந்து
சொரிமுத்தைத் தூநீரென் றெண்ணிக் கருமந்தி
முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே மூவெயிலும்
திக்குகக்கச் செற்றான் சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முரி மருப்பிற் போந்து - முரிந்த மருப்பினின்றும் வெளிப்பட்டு தூ நீர் என்று - மழைநீர் என்று நினைத்து. கருமந்தி - கருங் குரங்கு (பெண்) முக்கி விக்கி நக்கு இருக்கும் - முழுகியும் பருகியும் பிற குரங்குகள் நகைக்க இருக்கின்ற. ஒக என்பது ஒக்கு எனத் திரிந்து வந்தது. திக்கு உகக்க - எட்டுத் திக்கிலும் உள்ளவர்கள் விரும்பும்படி.

பண் :

பாடல் எண் : 59

மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம்
குறவர் சிறார்குடங்கைக் கொண்டு நறவம்
இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே மூன்று
வளவெயில்தீ யீட்டான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மறம் - வீரம். குடங்கை - உள்ளங்கை. கொண்டு - எடுத்துக்கொண்ட பின்பு. முத்துக்களை வாரிய குறங்கினார் தேனை இளவெயிலாகிய நீரில் காய்ச்சி உண்கின்றனர் என்க.

பண் :

பாடல் எண் : 60

மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்
சிலைநுதலி சீறிச் சிலைத்துக் கலைபிரிய
இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே
மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

சிலைநுதலி - வில் போன்ற நெற்றியினை உடைய குறத்தி. சிலைத்து - கடிந்து பேசி. கலை - ஆண் மான். குறவன் பெண் மானைப் பிடித்து வந்ததற்கு குறத்தி சினம் கொண்டு பேச ஆண் மான் விலகிச் சென்றது.

பண் :

பாடல் எண் : 61

மரையதளும் ஆடும் மயிலிறகும் வேய்ந்த
புரையிதணம் பூங்கொடியார்புக்கு நுரைசிறந்த
இன்நறவுண் டாடி இசைமுரலும் ஈங்கோயே
பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மரை அதள் - மான் தோல். புரை இதணம் - உயர்ந்த பரண். இன் நறவு - இனிய தேன்.

பண் :

பாடல் எண் : 62

மலையர் கிளிகடிய மற்றப் புறமே
கலைகள் வருவனகள் கண்டு சிலையை
இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே மாதைப்
புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மலையர் - மலையிலே உள்ள வேடர். கலைகள் - மான்கள். சிலை - வில். கோல் - அம்பு.

பண் :

பாடல் எண் : 63

மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறவொளிர்
முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் அத்தகைய
ஏனற் புனம்நீடும் ஈங்கோயே தேங்குபுனல்
கூனற் பிறையணிந்தான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மதக் கரி` என்பது, ``மத்தக் கரி`` என விரித்தல் பெற்றது. கரி - யானை. வாள் அரிகள் - கொடிய சிங்கங்கள். முத்தம் - முத்து. இவை யானையின் மத்தகத்திலிருந்து உதிர்ந்தவை. பனி - பனித்துளிகள், மொய்ம்பு - வலிமை. அஃது இங்கு `சிறப்பு எனப் பொருள் தந்தது. `மொய்ம்பிற்றாம் ஏனற் புனம்` என ஒரு தொடராக ஓதற்பாலதனை ``மொய்ம்பிற்று; அத்தகைய ஏனற் புனம்`` என இரு தொடராக ஓதினார், அச்சிறப்பை வலியுறுத்தற்கு. ஆல், அசை. ஏனல்- தினை. `புனலையும், பிறையையும் அணிந்தான்` என்க.

பண் :

பாடல் எண் : 64

மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல்
முந்தி இருந்து முறைமுறையே நந்தி
அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம்
வளைந்தோடச் செற்றான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மணி வரை - இரத்தின மலை. இஃது இம்மலையின் ஒரு பகுதியில் உள்ளதாகக் கூறப்பட்டது. `முறை முறையே முந்தி` - என மாற்றிக்கொள்க. முறைமுறையே முந்துதலாவது, `நான் முன்னே, நான் முன்னே` என ஒன்றை ஒன்று நந்தி - மகிழ்ந்து முந்து அணைதல் - ஒன்றை ஒன்று தழுவுதல். ஆலிக்கும் - ஆரவாரிக்கும் வளைந்து ஓடுதல் - மறைந்து ஓடுதல்.

பண் :

பாடல் எண் : 65

மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண்
முந்திப் பறித்த முறியதனுள் சிந்திப்போய்த்
தேனாறு பாயுஞ்சீர் ஈங்கோயே செஞ்சடைமேல்
வானாறு வைத்தான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மக இனங்கள் - குட்டிக் கூட்டங்கள். பறித்த - பிளந்து எடுத்த. முறி - சிறு துண்டுகள். ``உள்`` என்னும் ஏழன் உருபை. `இன்` என்னும் ஐந்தன் உருபாகத் திரிக்க. போய் - பல இடங்களிலும். தேன் - பலாச்சுளைச் சாறு `ஆறாகப் பாயும்` என ஆக்கம் வருவிக்க. ``உள்`` என்பதனைத் திரியாமலே, `சுளைத் துண்டுகளுக்குள்ளே தேனாகிய ஆறு பாயும்` என உரைத்தலும் ஆம்.

பண் :

பாடல் எண் : 66

முள்ளார்ந்த வெள்ளிலவம் ஏறி வெறியாது
கள்ளார்ந்த பூப்படியுங் கார்மயில்தான் ஒள்ளார்
எரிநடுவுட் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயே
புரிநெடுநூல் மார்பன் பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முள்ளிலவின் பூச் சிவந்து நெருப்புப் போலக் காணப் படும். அதனால் அவற்றின் நடுவே நிற்கும் மயில் தீயின் நடுவில் தீங்கின்றி நிற்கும் கற்புடை மகளிர் போலத் தோன்றாநின்றது. ``வெள்ளிலவு`` என்றது அம்மரத்தின் நிறம் வெண்மையாய் இருத்தல் பற்றி. வெறித்தல் - வெற்றிடத்தில் நிற்றல். வெறியாது - வெற்றிடத்தில் செல்லுதல். கள் - தேன். பூப் படிதல் - பூக்களுக்கு நடுவே மூழ்குவது போல நிற்றல். கார் மயில் - கரிய மயில், தான், அசை. ஒள் எரி - ஒளி பொருந்திய தீ. ஆரெரி - தீண்டுதற்கரிய நெருப்பு.

பண் :

பாடல் எண் : 67

வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை
அளைந்து வடுப்படுப்பான் வேண்டி இளந்தென்றல்
எல்லிப் புகநுழையும் ஈங்கோயே தீங்கருப்பு
வில்லிக்குக் கூற்றானான் வெற்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

``கன்னி மாங்கொம்பின் கொங்கை அணைந்து`` என்பது கன்னிப் பெண்ணுக்கும், மாங்கொம்பிற்கும் ஆய சிலேடை. பெண்மேற் செல்லுங்கால், மாங்கொம்பு - மாந்தளிர்போலும் மேனியை உடைமையால் மாங்கொம்பு போல்பவள். கொங்கை - தனம். வடுப்படுத்தல் - குற்றம் உண்டாக்குதல். மாங்கொம்பின் மேற் செல்லுங்கால், கன்னி - புதுமை. கொங்கை = கொங்கு + ஐ. வாசனையை வடுப்படுத்தல் - மாவடுவை உதிர்த்தல். `அளைதல் - அளவளாவிக் கலத்தல். எல்லி - இரவு` இவை இரண்டிற்கும் பொது. இதில், தற்குறிப்பேற்றத்தோடு சிலேடை சேர்ந்து வந்தது. சேர்வையணி. கருப்பு வில்லி - கரும்பை வில்லாக உடைய மன்மதன்.

பண் :

பாடல் எண் : 68

வான மதிதடவல் உற்ற இளமந்தி
கான முதுவேயின் கண்ணேறித் தானங்
கிருந்துயரக் கைநாட்டும் ஈங்கோயே நம்மேல்
வருந்துயரம் தீர்ப்பான் மலை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உற்ற - விரும்பி. ``கண்`` என்றது உச்சியிடத்தை. சந்திரனை மூங்கிலின் உச்சியில் இருப்பதாக மயங்கி. அதன் அழகைக் கண்டு அதனைக் கையால் தடவிப் பார்க்க விரும்பிய இள மந்தி, அங்குச் சென்று இல்லாமையால் தன் ஆசையால் மேலே கையை நீட்டிப் பார்ப்பதாயிற்று. இதில் மயக்க அணியும், தொடர்புயர்வு நவிற்சியணியும் சேர்ந்து வந்தமையால் சேர்வை யணி.

பண் :

பாடல் எண் : 69

வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து
காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப வேயணைத்து
மாப்பிடிமுன் ஒட்டும்ஈங் கோயே மறைகலிக்கும்
பூப்பிடிபொற் றாளான் பொருப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வேய் வனம் - மூங்கிற் காடு. அதனிடையே தினை விதைக்கப்பட்டிருந்தது என்க. யானை, களிற்றியானை. வேறு - மறை வான ஒரு தனியிடம். காய் வனம் - வெயில் கடுமையாகக் காய்கின்ற காடு. விசைப்ப - வேகமாக ஏவ. பிடி வேய் அணைத்து முன் ஓட்டும்- பெண் யானை மூங்கிலை வளைத்து களிற்றியானை. வேறு - மறைவன ஒரு தனியிடம். காய் வனம் - வெயில் கடுமையாகக் காய்கின்ற காடு. விசைப்ப - வேகமா ஏவ. பிடி வேய் அணைத்து முன் ஓட்டும் - பெண் யானை மூங்கிலை வளைத்து அக்கிளை களிற்றின்மேல் படாதபடி விலகி ஓடச் செய்கின்ற. மறை கலிக்கும் தாள் - வேதமாகிய சிலம்பு ஒலிக்கின்ற திருவடி. பூப்பிடி - பூவின் தன்மையைக் கொண்ட. பொன்- அழகு.

பண் :

பாடல் எண் : 70

வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகியதென் றஞ்சிமுது மந்தி பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வழகு - வழுவழுக்கின்ற. அஃதாவது, மெத்தென்ற. காந்தள், செங்காந்தள் மலர். `தீயின்கண்` என ஏழாவது விரிக்க. பழகி- பன்முறையாக. இது திரிபதிசய அணி. திருஈங்கோய் மலை எழுபது முற்றிற்று
சிற்பி