காரைக்காலம்மையார் - அற்புதத் திருவந்தாதி


பண் :

பாடல் எண் : 1

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பயின்ற - பயின்று நன்கு உணர்ந்த. பின் - பிற்பட்ட காலம். என்றது, `சிறு காலையே` என்றபடி. சேர்ந்தேன் - துணையாக அடைந்தேன். என்றது, தமது ஞானத்தின் இயல்பைக் குறித்தவாறு. இதனையே சேக்கிழார்,
`வண்டல்பயில் வனவெல்லாம் வளர்மதியம் புனைந்தசடை
அண்டர்பிரான் திருவார்த்தை அணையவரு வனபயின்று`*
என அருளிச் செய்தார். நிறம் - அழகு. `மணிகண்டம்` எனப்படுதல் அறிக. மை ஞான்ற - கருமை நிறம் ஓரளவில் (கண்டத்தளவில்) ஒட்டி நின்ற. இடர் - துன்பம்; பிறவித் துன்பம். `எஞ்ஞான்று தீர்ப்பது` என்றது, `அதனை யறிந்திலேன்` என்னும் குறிப்பினது, அதாவது, `இப்பிறப்பிலோ, இனி வரும் பிறப்பிலோ` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 2

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

படரும் நெறி - செல்லும் கதி என்றது, நற் கதியை. பணித்தல் - உரிமை செய்தல். உம்மைகள், `அவற்றை அவர் செய்யாதொழியார்` என்பதைக் குறித்தலின், எதிர்மறை. சுடர் உரு - ஒளி வீசுகின்ற உருவம். `கோலத்தோடு` என உருபு விரிக்க. `அவர்க்கு` என்பதன் பின், `ஆயினமையால்` என ஒரு சொல் வருவிக்க. `அன்பை அறுத்துவிடாது` என்றேனும், `அன்பு அறப் பெறாது` என்றேனும் உரைக்க.

பண் :

பாடல் எண் : 3

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் - பவர்ச்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண், `அல்லால்` என்றது, அன்பாதலைக் குறித்தும், பின்னர், `அல்லால்` என்றது, போழ் சூடும் அவரைக் குறித்துமாம். அன்புடையேமை, `அன்பு` என்றது உபசாரவழக்கு. பவர் - கொடி. `பவர் போலும் சடை` என்க. பாகு - ஒரு பகுதி. பாகு ஆக - ஒரு பகுதியில் பொருந்தும்படி போழ் - பிளவு. திங்களின் பிளவு. ஆள் - ஆளாம் தன்மை. `அவர்க்கு அல்லால், எம் ஆளாம் தன்மை. எஞ்ஞான்றும் மற்றொருவர்க்கு ஆகாதே போம்` என இயைத்துக்கொள்க. `ஆகாது` என்பதில் துவ்வீறும், பின்னர்த் தேற்றேகாரமும் தொகுத்தலாயின.

பண் :

பாடல் எண் : 4

ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ கேள்ஆமை - நீள்ஆகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மையாட் கொண்ட இறை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கேள் ஆமை யாக` என ஆக்கம் வருவிக்க. கேள் - உறவு. ஆமை, ஆமை ஓடு. அதனை அணியத் தகும் பொருளாக அணிந்த. ஆகம் - மார்பு. மார்பைக் கூறவே, உடல் முழுவதையும் கூறியதாயிற்று. `ஆகம் செம்மையான்` என, சினையினது பண்பு முதல்மேல் ஏற்றப்பட்டது. செம்மையைச் சுட்டிப் பின், `மற்றொன்று` என்றமையால், `கருமை` என்றதாயிற்று. `ஆம் இறை, ஆட்கொண்ட இறை` எனத் தனித்தனி இயைக்க. `கேளாதது என்கொலோ` என்றது, `இன்னும் முறையிடல் வேண்டும் போலும்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 5

இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே
எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இறக்கம் - நீக்குதல்; அழித்தல். `இறைவன்` என்றது, `சிவன்` என்றபடி. `இறைசிவன், கடன்வேந் தன்கையிறை, யிறுப்பு. இறை சிறந்தோன்` * என்னும் நிகண்டினால், `இறைவன்` என்பது சிவனுக்கே உரிய சிறப்புப் பெயராதல் விளங்கும். `உலகம் முழுவதையும் ஆக்கி அழிப்பவனும், உயிர்களுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவனும் சிவனே` என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 6

வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வானம் - சிவலோகம். `உம்பர்கோன்` என்றது சீகண்ட உருத்திரரை- அவரது தானம் (இடம்) கயிலாயம். இருண்ட - இருள்மயமான. மொய்யொளி - செறிந்த ஒளி. `என்பாரும், என்பாரும்` என்க. யான் `ஞானத்தானும், என் நெஞ்சத்தானும்` என்பன்` என இயைத்து முடிக்க. சிவலோகத்திலும், கயிலாயத்திலும் இருத்தல் தடத்த நிலையால், ஆகலின், சிவஞானம் பெற்ற சீவன் முத்தர்களது உள்ளத்தில் இருப்பவனாக உணர்தலே அவனது உண்மை நிலையை உணர்தலாம்` என்றபடி. மூன்றாம் அடியை முதலிற் கூட்டி, அதன் இறுதியில் இரண்டாம் உருபு விரித்து, பின் வந்த `என்க` என்பதன்பின் `அவன்` எனச் சுட்டியுரைக்க.

பண் :

பாடல் எண் : 7

யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரண்டாம் அடி ஈற்றில் உள்ள, `யானே` என்பது முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் முடிவில், `ஆதலின்` என்பது வருவித்து உரைக்க. நீற்ற - நீற்றையணிந்த, ஏகாரங்கள் ஏனையோரினின்றும் பிரித்தலின் பிரிநிலை. இவற்றால், `பிறர் தம்மை இவ்வாறு கூறிக்கொள்வன எல்லாம் மயக்க உரைகளாம்` என்றபடி. சிவனுக்கு ஆளாதலின் அருமையையும், பயனையும் குறித்தவாறு. `என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து - முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை... வலஞ்சுழி வாணனை வாயாரப் - பன்னி, ஆதரித்து ஏத்தியும், பாடியும் வழிபடும் அதனாலே` 1 எனவும், `எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே - பந்தம் வீடவையாய பராபரன்... சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே`, `என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே - மின்னு வார்சடை வேத விழுப்பொருள்.... செந்நெறி - மன்னுசோதி நம் பால் வந்து வைகவே`2 எனவும் போந்தவற்றையும் உணர்க.

பண் :

பாடல் எண் : 8

ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஆள்வானுக்கு (ஆள் ஆயினேன்; அன்றே பெறற்கரியன் ஆயினேன்; அஃதன்றே அவன் அருள் ஆமாறு` என இயைத்து முடிக்க.
ஆள்வான் - உண்மையா ஆள்வான்; சிவன் `ஆள்வான்` என்றதனால், `ஆயினேன்` என்றது, `ஆள் ஆயினேன்` என்ற தாயிற்று. `பெறற்கு அரியன்` என்றது, `சிவன்` என்றபடி. `சிவனுக்கு ஆளாயினேன்; அன்றே யானும் சிவனா யினேன்; தன் அடியவரைத் தானாகச் செய்தலேயன்றோ சிவனது திருவருளின் சிறப்பு` என்றபடி. `திகழ்ந்த மெய்ப்பரம் பொருள் - சேர்வார் தாமே தானாகச் செயுமவன்` 3 என்றது காண்க. `தூய... போல்வான்` என்றது `சிவன்` என்றபடி. `புனலாகிய கங்கை` என்க. `அனற்கு அங்கை` என்பதை, `அங்கைக்கு அனல்` எனப் பின் முன்னாக நிறுத்தி, உருபு பிரித்துக் கூட்டி, நான்காம் உருபை ஏழாம் உருபாகத் திரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 9

அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈசன் அருளே உலகெலாம் ஆள்விப்பது, பிறப்பு அறுப்பது ஆனால், அவன் அருளாலே (யான்) மெய்ப் பொருளையும் நோக்கும் விதியுடையேன்; ஆதலின், எனக்கு எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவது அவன் அருளே` என இயைத்து முடிக்க. ஈசன் - சிவன். `ஆனால்` என்பது தெளிவின்கண் வந்தது, `காண்பவன் சிவனே யானால்`1 என்பதிற் போல. `மெய்ப்பொருளை யும்` என்னும் சிறப்பும், இறந்தது தழுவியதும் ஆகிய உம்மை தொகுத்தலாயிற்று. நோக்குதல் - ஆராய்தல் . அறிவிப்பதொரு துணையின்றித்தானே அறியமாட்டாத இயல்பையுடையது உயிரினது அறிவு. அத்தன்மைத்தாகிய அவ்வறிவு, குறைபாடுடைய கருவி களைத் துணையாகக் கொண்டு அறியுமிடத்து அறியப்படும் பொருள் களது இயல்பு பொதுவாக விளங்குதலன்றி, உண்மையாக விளங்காது. அதனால், குறைவிலா நிறைவாகிய இறைவனது அருளைத் துணையாகக் கொண்டு அறியுமாயின், அப்பொழுது பொருள்களின் இயல்பு உண்மையாக விளங்கும்.
இனிப் பிறபொருளைக் காட்டுகின்ற கதிரவனது ஒளியே தன்னையும் காட்டுவதாகும் அல்லது, அவனைப் பிறிதோர் ஒளி காட்டமாட்டாது. ஆகையால், கதிரவன் ஒளியைக் கொண்டே கதிரவனைக் காணுதல் போல, இறைவனது அருளால் எல்லாப் பொருள்களையும் அறிதலுடன், அவனையும் அவன் அருளாலேதான் அறிதல் வேண்டும். அது பற்றியே `அவன் அருளாலே அவன் தாள் வணங்கி` 2 என்னும் திருமொழி எழுந்தது. அதனையே இங்கு அம்மையார்,`அருளாலே மெய்ப்பொருளையும் நோக்கும் விதியுடையேன்` என்றார். விதி - முறைமை. இங்ஙனம் எப்பொருளையும் அருளாலே நோக்காது, கருவிகளாலும், நூல்களாலும் விளங்கும் தம் அறிவு கொண்டே பொருள்களை நோக்குவார்க்கு மெய்யுணர்வு தோன்றாது, திரிபுணர்வே தோன்றும் என்க.
இதனையே,
இப்படியால் இதுவன்றித் தம்மிசைவு கொண்டியலும்,
துப்புரவில் லார்துணிவு துகளாகச் சூழ்ந்தார்.1
என்று அருளிச் செய்தார் சேக்கிழார்.
அருளால் எவையும் பார்என்றான்:- அத்தை
அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்;
இருளான பொருள்கண்ட தல்லால், - கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி, தோழி 2
எனத் தாயுமான அடிகளும் கூறினார். `மெய்ப்பொருளாவது யாது` என முதற்கண் ஆராய்தல், இறைவன் உள் நின்று உணர்த்தும் முறையை நோக்கும் நோக்கினாலும், அவன் ஆசான் மூர்த்தியாய் வந்து அறிவுறுக்கும் அருள்மொழியாலுமாம் என்க. அவ்வாற்றான் நோக்குவார்க்கே உண்மை புலனாவதன்றிப் பிறவாற்றான் நோக்கு வார்க்கே உண்மை புலனாகாது என்பதை,
சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு
எனத் திருக்களிற்றுப்படியார் 3 வலியுறுத்தி ஓதிற்று.

பண் :

பாடல் எண் : 10

எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஈசன் - சிவன்` என்பது முன்னைப் பாட்டின் உரையிலும் கூறப்பட்டது. `மனத்துக்கு` என்பதில் அத்துச் சாரியை தொகுக்கப்பட்டது. வைப்பு - சேம நிதி. `அவனையே பிரானாகக் கொண்டேன்` என ஏகாரம் விரித்து, மாறிக் கூட்டுக. பிரான் - தலைவன்; ஆண்டான். `கொள்வது` என்பது பொதுப்பட அத் தொழிலை உணர்த்திநின்றது. உம்மை, வினையெச்ச விகுதி. எனக்கு அரியது ஒன்று உண்டே` என்க. ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாய வினா.

பண் :

பாடல் எண் : 11

ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நினைதல் - ஆராய்தல். துணிதல் - நிச்சயித்தல். `ஓழி`, துணிவுப் பொருண்மை விகுதி. உள்ளடைத்தல் - எப்போதும் மறவாது நினைதல். இறுதியில் `அவ்வொன்றே` எனச் சுட்டு வருவிக்க. ஏகாரம், எடுத்தோத்துப் பொருட்டாய், எழுவாய்த் தன்மை உணர்த்தி நின்றது. காண், முன்னிலையசை. `அவ்வொன்றே ஆளாம் அது` என முடிக்க. ஒளி - தீ; ஆகுபெயர்.

பண் :

பாடல் எண் : 12

அதுவே பிரான்ஆமா றாட்கொள்ளு மாறும்
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முதற்கண் `அதுவே` என்றது, மேல், `உலகெலாம் ஆள்விப்பது` என்றதையும், இடைக்கண், `அதுவே` என்றது `பிறப்பறுப்பது` என்றதனையும் ஏற்புழிக் கோடாலால் சுட்டி நின்றன. இனி - இப்பொழுது. `அதுவே என அறிந்தோமானால்` என்க. `அதுவே தகவு` என முடிக்க. தகவு - தகுதி; தன்மை, பனிக்கு - பனிக்காலத்திற்கு ஆற்றாமல். அணங்குகின்ற - வாடுகின்ற. கண்ணி - முடிமாலை. `பனிக் காலத்திற்கு ஆற்றாது வாடுகின்ற` என்றது, கொன்றை மலரைக் குறித்தவாறு. அது கார்காலத்தில் மட்டுமே பூப்பது. `கண்ணி கார்நறுங் கொன்றை` * என்ற பழம் பாடலைக் காண்க. நுதல் - நெற்றி. தனிக்கண் - ஒற்றைக் கண். `அங்கும்` என, இறந்தது தழுவிய எச்ச உம்மை விரிக்க. அல்லாக்கால், `அங்கு` என்பது நின்று வற்றும். இது சிவனது தகைமையைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 13

தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லே பாவந் தான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தகவு - தகுதி; நடுவு; நடுவு நிலைமை. அஃதாவது, பிறர்க்கு வரும் துன்பத்தையும் தமக்கு வரும் துன்பம் போன்றதாகவே உணரும் தன்மை. `தாம்` என்றது, `யாரேனும்` என்றபடி. தார் - கொன்றைத்தார். அகலம் - மார்பு. எனவே `சிவனது மார்பு` என்றதாயிற்று. `அதனை மலைமகளைச் சாரத் தனிமையில் புகவிடுதல் பொல்லாது` என்க. பொல்லாது - தீங்கு. தீங்கிற்கு ஏதுவா வதனைத் `தீங்கு` என்றது உபசார வழக்கு. கண்டீர், முன்னிலையசை. `தீங்கிற்கு ஏதுவாவது யாது` எனின், `அவனது மார்பில் மிகத் தீங்கு செய்ய ஊர்ந்து கொண்டிருக்கின்ற பெரிய பாம்பு அவள் மேலே என்றாவது ஒரு நாள் தாவியே விடும். அதனால், தகவுடையோர்க்கு அது பெண் பாவமாய் முடியும்` என்பதாம். அடர்தல் - தீங்கு செய்தல். தான். அசை.
எல்லாம் அறிந்திருந்தும் அம்மையார் பெருமானை நகையாடிப் புகழ்தற் பொருட்டு ஒன்றும் அறியாதார்போல் நின்று இங்ஙனம் கூறினார்; பத்தி பரவசத்தால். `பாம்பு முதலியவற்றுள் எதுவும் அவனையும் ஒன்றும் செய்யாது; அவளையும் ஒன்றும் செய்யாது; அவ்விருவரது தன்மையும் உலகர் தன்மையின் முற்றிலும் வேறானதே` என்பது கருத்து. இதவும் நிந்தாத் துதி
வாள்வரி யதளதாடை; வரிகோ வணத்தர்;
மடவாள்த னோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி, உழுவையோடு, கொலையானை, கேழல்
கொடுநாக மோடு, கரடி,
ஆளரி நல்ல நல்ல; அவைநல்ல; நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.*
என அருளிச்செய்த மெய்ம்மைத் திருமொழியைக் காண்க.

பண் :

பாடல் எண் : 14

தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான்,
தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர்
பூணாகத் தாற்பொலிந்து, பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
நீணாகத் தானை நினைந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நீள் நாகத்தானை நினைந்தமையால், தனி நெஞ்சம் தானே தன்னைக் கடைத்தேற்றிக் கொள்ளுதற் பொருட்டுத் தானே தனக்குப் பெருஞ்சேமத்தைச் செய்து கொள்கின்றது` என்க. `அவனை நினைப்பது ஒன்றே உயிர்க்குப் பாதுகாப்பாவது` என்பதும், `எம் நெஞ்சம் அதனைத் தானே தெரிந்து கொண்டு நினைக்கின்றது` என்பதும் கூறியவாறு.
தனி நெஞ்சம் - துணையற்ற நெஞ்சம். சேமம் - பாதுகாவல். ஆல், அசை. `ஆகம் பூணாற் பொலியாநிற்க` என்க. ஆகம் - மார்பு. பூண் - அணிகலம். `பொலியாநிற்க நீள் நாகத்தை உடையான்` என்றது, `நீள் நாகமே பூணாக ஆம் பொலிய` என்றபடி.

பண் :

பாடல் எண் : 15

நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம்
புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
கென்செய்வான் கொல்லோ இனி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நீள் மலர் - மிக்க மலர். புனைந்தும் - அலங்கரித் தும். `செய்`, உவம உருபு. வான் - உயர்ந்த. இனி - இப்பொழுது, `என் செய்வான்` என்பதில், `செய்தல்` என்னும் பொது வினை, `தருதல்` என்னும் சிறப்பு வினைப் பொருட்டாய் நின்றது. கொல், அசை.

பண் :

பாடல் எண் : 16

இனியோநாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம், நெஞ்சே - இனியோர்
வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இறைவன் சிவன்` என்பது மேலேயும்* கூறப்பட்டது. `இறைவன் அருள் சேர்ந்தோம்` என்பதை முதலில் வைத்து, அதன்பின், `ஆதலால்` என்பது வருவிக்க. இனி - இப்பொழுது. ஓகாரம், சிறப்பு. `ஓர் கடல்` என இயையும். வினைக் கடல் உருவகம். வினை, இங்கு ஆகாமியம். கனைத்தல் - ஒலித்தல். கனைக்கடல் - கனைத்தலையுடைய கடல். இனிக் ககர ஒற்றை `விரித்தல்` எனக் கொண்டு, `கனை கடல் என வினைத்தொகை யாகவே உரைத்தலும் ஆம். கனைகடல், இனஅடை. காண், முன்னிலையசை. இதனால் சிவன் அவரவர் தன்மைக்கு ஏற்ப நின்று அருள்புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது
காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்
காதியாய் நின்ற அரன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தொல் உலகுக்கு ஆதியாய் நின்ற அரன்` என்பதை முதலிற் கொள்க. ஆதி - முதல்; முதல்வன். முதலில் உள்ள `காண்பார்` என்பது, `உலகிற்கு முதல்வன் எவனும் இல்லை` என முரணிக் கூறுவாரை. அவர்க்குக் காணலாம் தன்மையாவது, அவரவர் `மெய்` எனக் கொண்ட பொருள்களாய் நின்று அவர்க்குப் பயன் தரும் தன்மை. `அவனின்றியாதும் இல்லை` என்பது கருத்து. பின்னர், `தொழுது காண்பார்` என்றதனால், முன்னர் `காண்பார்` என்றது, தொழாதே காண்பாரையாயிற்று. கை தொழுது காண்பார், தெய்வம் உண்டு ` எனப் பொதுப்பட உணர்ந்து யாதேனும் ஓர் உருவத்தில் கண்டு வழிபடுவார். அவர்க்குக் காண்டல் கூடுவதாவது, அவரவர் வணங்கும் உருவத்தில் நின்று, அவர்க்குப் பயன்தருதல். காதலால் காண்பார், `உலகிற்கு முதல்வன் உளன்; அம்முதல்வனாம் தன்மையை உடையவன் `சிவனே` என உணர்ந்து, அதனானே அவன்பால் அன்பு மீதூரப் பெற்றுக் காண விரும்புவோர். `அவர்கட்குப் புறத்தும் அகத்தும் ஒளியாய் வெளிப்பட்டு நின்று அருளுவான்` என்க. `சிந்தையுளே` என்றே போயினாராயினும், `சோதியாய்` என்றதனால் `புறத்தும்` என்பதும் பெறப்பட்டது. `சுடர் விட்டுளன் எங்கள் சோதி`1 என்ற தற்கு, `ஆன்ற அங்கிப் புறத்தொளியாய், அன்பில் - ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்` 2 எனப்பொருள் கூறியமை காண்க. தோன்றும் - தோன்றுவான். ஏகாரம் தேற்றம். அரன் - பாசத்தை அரிப்பவன்.

பண் :

பாடல் எண் : 18

அரனென்கோ நான்முகன் என்கோ அரிய
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரண் அழியத்
தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை
யானவனை எம்மானை இன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அரன் - உருத்திரன். என்கோ - என்பேனோ. பரன் - பரமபதத்தில் (வைகுந்தத்தில்) இருப்பவன்; மாயோன். `அரியாம் பரன்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். அப்பாடத்திற்கு, `பரன் - மேலானவன்` என்க. `அவன் பண்பு` எனச் சுட்டுப் பெயர். முரண் - வலிமை. தானவன், இராவணன். யான் அவன் - யானாய் நிற்கும் அவன். `முரண் அழிய` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. ஒருவனாய் நில்லாது, மூவராய் நிற்பவனை `ஒரு நாமம், ஓருருவம், ஒன்றும் இன்றி` *மெய்யறிவின்பமே உருவாய் இருத்தலாம். எனவே, சிவனது தன்னியல்பும், பொதுவியல்பும் கூறியவாறாம். பொதுவியல்பு கருணை காரணமாகக் கொள்ளப்படுவது.

பண் :

பாடல் எண் : 19

இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றும்ஒர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
ஆவானைக் காணும் அறிவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இன்று நமக்கு எளிதே` என்பதை இறுதியிற் கூட்டி, `எளிதே - எளிதோ` என உரைக்க. அன்றும் - முயன்று தேடிய அன்றும். எனவே, `இன்று அளப்பரியனாதல் சொல்ல வேண்டா` என்பதாம். `என்றும் மூவா ஓர் மதியான்` என்க. மூத்தல் - வளர்தல். `ஓர் மதி` என்றது, அதிசயத் திங்கள் என்றபடி, மூத்த ஏழ் உலகங்கள் என்க. மூத்த உலகு என்பதை, `தொல்லுலகம்` என்றவாறாகக் கொள்க `நமக்கு` என்றது `எளியராகிய நமக்கு` என்றவாறாதலைப் படுத்தல் ஓசையாற் கூறிக் காண்க.
`சிவனை உள்ளவாறுணரும் அறிவையடைதல் எளிதன்று` என்றபடி.

பண் :

பாடல் எண் : 20

அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அவன்` என்பதை முதலில் வைத்து, `அவனது இயல்பைக் கூறுமிடத்து` எனப் பொருள் விரிக்க. அறிவான்- உயிர்கட்குச் செய்வது காட்டும் உபகாரம் மட்டும் அன்று; காணும் உபகாரமுங்கூட` என்பதை விளக்கச் சிவஞான போதத்துப் பதினொன்றாம் சூத்திரச் சிற்றுரையில் இவ்வடிகள் எடுத்துக்காட்டப் பட்டமை காண்க. அறிகின்ற - அறியப்படுகின்ற. விரி சுடர், கதிரும், மதியும், தீயும். `அப்பொருள்` என்றது, `மெய்ப்பொருள் அல்லாது வேறு பொருள்` என்றதாம். `அவன்` என்றது, பண்டறி சுட்டாய்ச் சிவனைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 21

அவனே இருசுடர் தீ ஆகாசம் ஆவான்
அவனே புவிபுனல் காற் றாவான் - அவனே
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
மயனாகி நின்றானும் வந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இரு சுடர் கதிரும், மதியும். புவி - பிருதிவி; மண். புனல் - நீர். இயமானன் - எசமானன்; உயிர். அட்ட மூர்த்தி, எட்டுரு உடையவன். உம்மை எதிரது தழுவிய எச்சம். இஃது அவனது பொது நிலை. ஞானமயன் - அறிவே வடிவாய் உள்ளவன். இஃதே அவனது உண்மை நிலை. `உலகுயிர்கட்கு அட்டமூர்த்தியுமாய், வீட்டுயிர்கட்கு ஞானமயனாகி வந்து நின்றானும் ஆவன்` என்க. `ஆவன்` என்பது சொல்லெச்சம்.
சிவனது பொது நிலை, உண்மை நிலை இரண்டையும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 22

வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ - வந்தோர்
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
பிரானீர்உம் சென்னிப் பிறை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வந்தோர்` என்பது முதலாகத் தொடங்கி, `பிறைக்கண்` என ஏழாவது விரித்து உரைக்க. `வந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. நீர் - நீர்மை; தன்மை. கொள்வது உட் கொள்வது; விழுங்குவது. `ஒக்கும் சிந்தை` என இயையும். சிந்தை - எண்ணம். அது. பகுதிப் பொருள் விகுதி. காண்மின் - குறிக்கொண்டு நோக்குமின். ஓகாரம், சிறப்பு. `அடைக்கலமாக வந்து அடைந்த திங்களை நினையாது விட்டு விடாதீர்` என்றபடி.
சார்ந்தாரைக் காக்கும் சிவனது இயல்பை அறியாதார் போன்று அறிவித்தவாறு.

பண் :

பாடல் எண் : 23

பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அனல் அரவு - அனலுகின்ற; சீறுகின்ற பாம்பு. பிறை முதலிய அடையாளங்களைக் கூறியது. `இறைவர் சிவபிரான்` என்பது உணர்த்துதற்கு. இனி, அவை அவரது கைம்மாறு கருதாத கருணைக்கும் அடையாளங்கள் ஆதலை உணர்க. அவற்றால், `அவர்` எமக்கு இரங்காதொழியார்` என்னும் குறிப்பும் தோன்றிற்று. `இரங்காரேனும்` என்பதற்கு, மேல் `இடர்களையாரேனும்` என்புழி உரைத்தாங் குரைக்க. `கறை மிடற்ற எந்தையார்` என்றது, `அவர்` என்னும் சுட்டளவாய் நின்றதேனும், அதனாலும் அவரது கருணை மிகுதி குறிக்கப்பட்டதாம். அடுக்குப் பலகாலும் நினைத்தலைக் குறித்தது. இருக்கும் - அமைதியுற்றிருக்கும். `துள்ளித் துடியாது` என்றபடி. ......`உன் அருள்நோக்கி,
இரைதேர் கொக்கொத்து இரவு பகல்
ஏசற்றிருந்தே வேசற்றேன்`
`இரங்கும் நமக்கு அம்பலக் கூத்தன்
என்றென்று ஏமாந் திருப்பேனை.`
`நல்கா தொழியான் நமக்கென்று உன்
நாமம் பிதற்றி`*
என்னும் திருமொழிகளைக் காண்க. `தயா` என்பதில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்து, `தையா` என நின்றது. தயா உள்ளம் - தயவை - அருளை விரும்புகின்ற உள்ளம். `இது` என்றது, எடுத்தல் ஓசையால், `பித்துக் கொண்டதாகிய இது` எனப்பொருள் தந்தது. `உள்ளமாகிய இது, - ஆட்பட்டு விட்டோம்; இனி அவர் செய்வது `செய்க` - என்று என்று அமைதியுற்றே யிருக்கின்றது என்க.

பண் :

பாடல் எண் : 24

இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா
றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மீண்டு` என்பதை அடுக்கிக் கூறி, `மீண்டும் மீண்டும்` ஆய்கின்ற என் சிந்தனையில் மின்னும் சுடர் உருவாய் (ப் புகுந்து) இன்னும் சுழல்கின்றதாகிய இது அன்றே ஈசன் இங்குச் செய்வது! அவன் திருவுருவத்தின் இயல்பும் இதுவன்றே! என்றனக்கு ஓர் சேமம் ஆவதும் இது வன்றே!` என இயைத்துரைத்துக் கொள்க.
இடைவிடாது நினைப்பவர் உள்ளத்தையே சிவன் தனக்குக் கோயிலாகப் புகுந்து, ஒளியுருவாய் விளங்குவான்; அங்ஙனம் அவன் விளங்கப் பெறுதலே உயிர்க்கு ஆக்கமாவது` என்பதாம். `சிந்தனைக்கு` என்பது உருபு மயக்கம்.

பண் :

பாடல் எண் : 25

இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
நாமவனைக் காணலுற்ற ஞான்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எங்கள் பெருமான், எங்கும் சென்று பிச்சை யேற்பதையும், இரவிலே சுடுகாட்டில் ஆடுவதையும், `இவை இழி வல்லவோ` என்று சிறிதும் எண்ணிப் பாராமலே செய்தற்குரிய காரணத்தை நாம் இங்கேயிருந்து கொண்டு என்ன என்று சொல்ல முடியும்? முடியாது. ஆகவே, நாம் அவனை நேரிற் காணமுடிந்த பொழுது அவனிடமே, `இவை எதற்கு` என்ற கேட்டுத் தெரிவோம். (அது வரையில் சும்மா இருப்போம்) என்பது இப்பாட்டின் பொருள். `இறைவனது செயலின் இரகசியங்களை உயிர்கள் அறிதல் அரிது. அதனால் சிலர் அவனை அவை பற்றி இகழவே செய்வர். அவர்களோடு நாம் சேர்ந்து விடுதல் கூடாது; தனியே அமைந் திருத்தலே தக்கது` என்பது குறிப்பு. பொங்குதல் - மிகுதல். அதற்கு `இருள்` என்னும் வினைமுதல் வருவிக்க. ஈமம் - பிணஞ் சுடும் விறகு. `பலி திரிதல், உலகத்தைப் பற்றி நிற்கும் உயிர்கள் அப்பற்றினை விடுதற் பொருட்டு என்பதும், `ஈம வனமாவது உலகம் முற்றும் ஒடுங்கிய நிலை` என்பதும், `அங்கு இரவில் ஆடுதல்` என்பது, `யாதொன்றும் இல்லாது மறைந்த அந்தக் காலத்தில், உலகத்தை மீளத் தோற்றுவதற்கு ஆவனவற்றைச் செய்தலாகிய சூக்கும நடனம்` என்ப தும் ஆகிய உண்மைகளை அறிந்தோர் அறிவர் என்பதும் கருத்து.

பண் :

பாடல் எண் : 26

ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும்
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
அக்கயலே வைத்த அரவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கறை மிடற்றான்` என்பதை முதலிற் கொள்க. ஞான்ற - நான்ற; தொங்கிய. குழல் - குழல்போலப் புரிசெய்த. வரை - கீற்று; என்றது கம்பியை. போல், அசை. போன்ற - போன்றன. `பொன் மார்பு` என்பதில் பொன் - அழகு. அக்கு - எலும்பு மாலை, `அதன் அயலிலே வைத்த அரவு (பாம்பு) அயல் (புறத்தில்) ஏனை எல்லா வற்றிலும் மிக்குத் தோன்றும் முறையில் எங்கும் ஞான்று விளங்கி மிளிரும்` என்க. விளங்கி மிளிர்தல், ஒரு பொருட் பன்மொழி. இது பெருமானது திருவுருவத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 27

அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய
ஒன்னாதார் மூவெயிலும் ஒரம்பால் எய்தானே
பொன்னாரம் மற்றொன்று பூண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஆகம் - உடம்பு. `ஒன்றும்` என முற்றும்மை விரித்து, `எதனைப் பூண்டாலும் பாம்பு ஒன்றை மட்டும் பூணாதே` என்க. `பாம்பொடு பழகேல்` * என்பார் பெரியோர் ஆதலின், அஃது என்றாயினும் தீமையாகவே முடியும் என்று இரக்கின்றோம் என்பதாம், `ஒன்று` என்பது இனங்குறித்து நின்றது. நயந்து - விரும்பி. என்றதனால், `சிவன் பாம்பை விரும்புகின்றான்` என்பது பெறப்படும். பரவுதல் - துதித்தல். முரண் - வலிமை. ஒன்னாதார் - பகைவர். `மற்றொன்று` என்பதும் மற்றோர் இனத்தையே குறித்தது. `பொன்னாரம்` என்பது, ஒருபொருள் குறித்த வேறு பெயராய் வந்தது. இஃது அன்பே காரணமாக, இறைவனது ஆற்றலை மறந்து, அவனுக்கு வரும் தீங்கிற்கு அஞ்சிக் கூறிய கூற்றாய் அமைந்தது. எனினும், `மூவெயிலும் ஓர் அம்பால் எய்தான்` என அவனது அளவிலாற்றல் குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற்
கென்முடிவ தாக, இவர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`இவர்` என்றது இறைவரை அண்மையில் வைத்துச் சுட்டியது. இதன் பின், `கோள் நாகம்` என்பதைக் கூட்டி, இரண்டையும் முதலில் வைத்து, `ஒன்று பூண் ஆகப் புனைந்து, ஒன்று அதளின்மேல் மிளிர நாண் ஆக நன்கு அமைத்து, (ஒன்று) முடிமேல் சூடுவதும் ஆகிய இவையெல்லாம் பொறியிலியேற்கு என முடிவதாக` என இயைத்துப் பொருள் கொள்க. கோள் - கொடுமை. பூண் - அணிகலம். பொங்கு - அழகு மிகுந்த. அதள் - புலித்தோல்; இஃது உடுக்கையாக உடுத்தப்பட்டது. நாண், அரைநாண். `பொறியிலியேற்கு` எனத் தம்மையே குறித்தாராயினும், `தம் போலியர்க்கு` என்றலே கருத்து என்க. பொன் முடி - பொன் போலும் முடி; சடைமுடி. பொறி - அறிவு. என் - என்ன பொருள். முடிவதாக - முடிதற் பொருட்டு. `ஓன்று` என்பதை, பொன்முடிக்கும் கூட்டுக. அஃதாவது, `விளங்குதற் பொருட்டு` என்றதாம். `யான் அன்புடை யேன்; ஆயினும் அறிவிலேன்; ஆகவே, இவர் செய்வன எல்லாம் என் போலியர்க்கு என்ன விளங்குதற்பொருட்டு` என்றவாறு. எனவே, `ஆன்றமைந் தடங்கிய அறிவர்க்கே இவர் செய்வன விளங்கும்.
இவ்வாறு அம்மையார் கூறுவன எல்லாம் நம்மனோரை முன்னிட்டுக் கொண்டேயாம்.

பண் :

பாடல் எண் : 29

இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
பேய்க்கோலங் கண்டார் பிறர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொருள் - மெய்ப்பொருள். `பொருளாக` என ஆக்கம் விரிக்க. `இகழ்வதையே செய்வர்` என ஒருசொல் வருவித்து முடிக்க. கண்டீர், முன்னிலையசை. `இதுவே முறையாதலின், இவரது பேய்க் கோலத்தைக் கண்டு இகழ்பவர் எல்லாம், புறக்கோலத்தை மட்டுமே கண்டு, உண்மையை உணராத பிறரேயாவர்` என்க. முற் பகுதி பொது முறைமையாயும், பிற்பகுதி சிறப்பு முறைமையாயும் நின்றன. பூக்கோல மேனி - பொலிவு வாய்ந்த அழகிய மேனி. `மேனி மேல்` என ஏழாவது விரிக்க. பொடி - சாம்பல். `பூக் கோல மேனிமேல் சாம்பலைப் பூசுகின்றார்` என்பதாம். என்பு - எலும்பு. பேய்க் கோலம் பேய்போலும் கோலம், `கோலம் கண்டார்` என்பது, `கோலத்தை மட்டுமே கண்டவர்` என்னும் பொருளது. `பிறர்` என்றது, `உண்மை யுணராதவர்` என்றபடி. கண்டார், எழுவாய்; பிறர், பயனிலை.

பண் :

பாடல் எண் : 30

பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே
பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பிறருடைய என்பே அணிந்து; இரவில் பேயும் தாமுமாய் மகிழ்ந்து தீயாடும் எம்மானார்` என எடுத்துக் கொண்டு உரைக்க. பிறர், முன்னைப் பாட்டிற் கூறிய பிறர். பேருணர்வு - மெய்யுணர்வு என்றது, `அவர் மெய்யை உணர்ந்ததாக உணரும் உணர்வு` என்றபடி. `தாமே` என்பன, `பிறர் ஒருவரும் இல்லை` என்னும் பொருளவாய் நின்றன.

பண் :

பாடல் எண் : 31

மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே
யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
பேரன்பே இன்னும் பெருக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மடம் - அறியாமை. மடநெஞ்சே, யார் என்பே யேனும் இகழாதே அணிந்து உழல்வார்க்கு ஆட்பட்டமையால்` என முதலில் எடுத்துக் கொண்டு, பின்பு `அங்ஙனம் ஆட்பட்ட பேரன்பையே இன்னும் பெருக்கு` என முடிக்க. `பெருக்கினால் இன்னும் பெருநலம் பெறுவாய்` என்பது குறிப்பெச்சம். மகிழ்தி - மகிழ்கின்றாய்; மானுடரில் நீயும் ஒருவனாய்த் திகழ்கின்றாய். சேமம், பாதுகாவல். `என்பே அணிந்து உழல்வார்` என்றதும் நிந்தாத் துதி. அவர்க்கு ஆட்படுதலே மானுடப் பிறப்பின் பயன்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 32

பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

தெரியின் முதற்கண்ணான் - அறிவு வாய்க்கப் பெற்று ஆராய்ந்தால் முதலிடத்தில் வைத்துப் போற்றுதற்கு உரியவன்; `இல்லையேல் இகழப்படுவான்` என்பதாம. இது முதலாகத் தொடங்கி யுரைக்க. `நுதற் கண்ணான்` என்பது, `சிவன்` என்னும் பெயரளவாய் நின்றது. மூவா - கெடாத; இஃது இனம் இல் அடை. ஒளிய - ஒளியை யுடைய. கதிர் - கலை.

பண் :

பாடல் எண் : 33

நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த
தெக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே ஆம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நீர்மையே` என்னும் தேற்றேகாரத்தைப் பிரித்து, `ஆம்` என்பதனுடன் கூட்டி, இரண்டாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. `உலந்த` என்பது பாடம் அன்று. உலந்தது - விரும்பியது; `எக்கோலத்தையுடைய எவ்வுருவினிடத்து` என்க. வாய், ஏழுனுருபு. கோலம் ஆடை அணி முதலியன. உருவு - வடிவும். `அவ்வுருவை நோக்கி` என இசை யெச்சம் வருவிக்க. `ஆமே என்னும் முற்று, சொல்லுவார் குறிப்பால், `ஆதலே` என்னும் தொழிற்பெயர்ப் பொருட்டாய் நின்றது. இதன்பின் `நுழைவு இலாதார்` - என்பதைக் கூட்டி இதனை அறிந்து இவனை அடைய மாட்டாதார் திரிக என முடிக்க. நூல், தாம் தாம் அறிந்த நூல். அவை இரணிய கருப்பம், பாஞ்சராத்திரம் முதலியன. அறிவு - அறிந்த பொருள். `தனக்கென ஓர் வடிவம் இல்லாது, கருதுவார் கருதும் வடிவமாய் நின்று அவர்கட்டு அருளுதலே இவனது இயல்பு` என்பதை யறியாதார், `பொடி பூசி, எலும்பணிந்து, சுடலையாடுதலையே இவனது உண்மை யியல்பாக மயங்கித் தாம் தாம் அறிந்தவாறு பேசுவர்; அது பற்றி எமக்கு வருவ தோர் இழுக்கில்லை` என்றபடி.
ஆர்உருவ உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்.
சுருதிவா னவனாம்; திருநெடு மாலாம்;
சுந்தர விசும்பில்இந் திரனாம்;
பருதிவா னவனாம்; படர்சடை முக்கட்
பகவனாம்; அகவுயிர்க் கமுதாம்;
எருதுவா கனனாம்; எயில்கள்மூன் றெரித்த
ஏறுசே வகனுமாம்; பின்னும்
கருதுவார் கருதும் பொருளுமாம் கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
என்னும் திருமொழிகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 34

ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
நாம் ஆளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமா
றொருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி
அருகணையா தாரை யடும்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வல்வினைகள், அணையாதாரை அடும்; (அணைந்தார்பால்) ஆமாற்றை யறியா` என இயைத்து முடிக்க. `அணைந்தார்பால்` என்பது சொல்லெச்சம். `பிறவிப் பெருங்கடல் நீந்துவர்` 3 என்பதில், `சேர்ந்தார்` என்பது போல. அந்தரம் - ஆகாயம். `அந்தரத்தே வேமாறு` என இயையும். செற்றான் - அழித்தான். `அருகாக` என ஆக்கம் வருவிக்க. அடும் - வருத்தும்.

பண் :

பாடல் எண் : 35

அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந்
திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
மணிமிடற்றின் உள்ள மறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மறு, இருள், மதி அடும்` என்று அஞ்சிப் போந்து இடம் கொண்டு இருக்கின்றதை ஒக்கும்` என இயைத்துக் கொள்க. `கண்டாய்` முன்னிலை யசை. அடும் - கொல்லும். `படங் கொள் அரவு, அணி மிடற்ற அரவு, பேழ்வாய் அரவு` எனத் தனித்தனி இயைக்க. பாம்பு படம் எடுத்து ஆடும் பொழுது அதன் கழுத்து அழகாய் இருத்தல் பற்றி. `அணிமிடற்ற அரவு` எனப்பட்டது. பேழ்வாய் - பெரிய வாய்; எலிகளை விழுங்கும் வாய். அசைத்தான் - இறுகக் கட்டினவன். கோலம் - அழகு. மணி மிடறு - நீல மணிபோலும் கழுத்து. மறு - கறை. இருளுக்கு வந்து இடம் கொள்ளுதல் இன்மையால் இல்பொருள் உவமையும், வந்தமைக்கு ஒரு காரணம் கற்பித்தமையால் தற்குறிப்பேற்றமும் கூடி வந்தமையின் இது தற்குறிப்பேற்ற உவமையணி. இதனால் இறைவனது கண்டத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 36

மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம்
தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான்
தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி
வளருமோ பிள்ளை மதி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நாகம், வானத்திலும் தளர மீது ஓடுமேல், `வார்சடைமேல் தெறும்` என்று அஞ்சி பிள்ளை மதி வளருமோ! அதனால்தான், ஆ!,ஆ! தேய்ந்து உழலும்` என இயைத்துப் பொருள் கொள்க. `நாகம் வானத்தில் மதியை விழுங்குதல் யாவரும் அறிந்தது` என்பது கருத்து. `நிறைவு பெற்றால், பெரிய வானத்திலே விழுங்கு கின்ற பாம்பு, சிறிய சடைக் குள்ளே விழுங்குதல் எளிதன்றோ` என்ப தாம். `வான்` என்பதில் ஏழனுருபும், உயர்வு சிறப்பும்மையும் விரிக்க, `அஞ்சி` என்பது ஓகாரத்தால் பெறப்பட்ட எதிர்மறையுடன் முடிந்தது. `பிள்ளை மதி நும் ஆணையால் வளராதிருக்கவில்லை; பாம்பிற்கு அஞ்சியே வளராதிருக்கின்றது` என மறுத்தவாறு. ஆ! ஆ!- வியப்பிடைச் சொல் அடுக்கு. இதுவும் பாம்பையும், மதியையும் பகை தீர்த்து உடன் வைத்திருப்பதைப் பழிப்பது போலப் புகழ்ந்தது.

பண் :

பாடல் எண் : 37

மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில்
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மதியா அவுணர்` என்க. அடல் - வலிமை, மதி இரண்டில் முன்னது திங்கள்; பின்னது அறிவு. இகழாது, மதியால் ஏத்துவரேல்` என இயைக்க. என்பு ஆக்கையால் - எலும்பை அணிந்துள்ள மேனியைப் பற்றி (இகழாது). ஆதல் - அதுவாய்க் கலத்தல். `இவ்வுலகில்` என்றது, `என்பு ஆக்கைகளாய்ப் பிறப் பதற்கே இடமாய் உள்ள இவ்வுலகு` என இதன் இழிவு கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 38

ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந்
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு
கூரேறு காரேனக் கொம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பூண்டது ஓர்` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. `கொம்பு, போலாதே` என முடியும். ஏகாரம், எதிர்மறை வினாப் பொருட்டாய் உடன்பாட்டுப் பொருளைத் தந்தது. தார் - மார்பில் அணியும் மாலை, `தாராக ஏறிய பாம்பு` என்க. கூர் ஏறு - கூர்மை பொருந்திய. ஏனம் - பன்றி, திருமால் கொண்ட வராகாவதா ரத்தின் இறுதியில் அதனை அழித்து, அதன் கொம்பைச் சிவபிரான் மாலையில் கோத்தணிந்தமை புராணங்களில் கூறப்படுவது. `முற்றல் ஆமை, இளநாகமோடு, ஏன முளைக் கொம்பு அவை பூண்டு`* என்றமையும் காண்க. இறைவன் மார்பு வானத்திற்கும், அதில் அணியப்பட்ட பாம்பு இராகுவிற்கும், ஏனக் கொம்பு திங்களுக்கும் உவமையாகக் கூறப்பட்டன. திங்கள் சிறுகியதற்குக் காரணம் கற்பித்தது தற்குறிப்பேற்றம். எனவே, இது தற்குறிப்பேற்ற உவமையணியாதல் அறிக. இங்ஙனம் இறைவனது. மார்பணியைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 39

கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்தன்
அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன்
அணிவரையே போலும் பொடி அணிந்தால் வெள்ளி
மணிவரையே போலும் மறித்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொம்பு, பூங்கொம்பு. அஃது உவம ஆகு பெயராய், உமாதேவியைக் குறித்தது. குழகன் - அழகன். தன், சாரியை. அம், அணி, மணி இவை அழகைக் குறிக்கும் பெயர்கள். பவள மேனி, உவமத் தொகை, அது, பகுதிப் பொருள் விகுதி. வரை - மலை, பொடி- நீறு, மறித்து - மீள, `மேனி, முன்னம் செம்பொன் வரையேபோலும்; பின்பு வெள்ளி வரையே போலும்` என்க. `இஃதோர் அதிசயம்` என்பது குறிப்பெச்சம். இறைவனது திருமேனியின் இயற்கையழகையும், செயற்கை யழகையும் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 40

மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக்
குறித்துத் தொழுந்தொண்டர் பாதங் - குறித்தொருவர்
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்
டுள்ளாதார் கூட்டம் ஒருவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே, தொண்டர் பாதத்தைச் சேர்; அல்லாதார் கூட்டத்தை நீக்கு` என்க. `முன்னே நெஞ்சால் நினைத்து, மீள வாயாலும் வாழ்த்திப் பின் மெய்யாலும் வணங்குகின்ற தொண்டர்` - என்க. `முப்பொறிகளாலும் தொண்டு செய்பவர்` என்றபடி. உம்மை, இறந்ததையும், எதிரதையும் தழுவிநின்றது. `குறித்து` என்பது, முன்னர்க் காணுதலாகிய காரியத்தையும், பின்னர்ச் சேர்தலாகிய காரியத்தையும் குறித்தது. ஒருவர் கொள்ளாத திங்கள் - சிறிதாதலால் யாரும் விரும்பாத பிறை. `எவரும் விரும்பாதன எவையோ, அவையே எங்கள் பெருமானால் விரும்பப்படுவன` என்பதாம். `இதனால், இவன் ஏனையோரினின்றும் வேறுபட்டவன்; ஆகவே `இவனை, உலகம் - பித்தன் - என்று இகழ்தல் இயற்கை! என்றபடி.
`பித்தரே என்றும்மைப் பேசுவர் பிறரெல்லாம்`* என்று அருளிச் செய்தமையுங் காண்க. `ஒருவரும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 41

ஒருபால் உலகளந்த மாலவனாம்; மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உலகு அளந்த மாலாதல் இடப்பாதியும், உமையவளாதல் வலப்பாதியும் என்க. `சிவன் எல்லாவற்றையும் சத்தி வழியாகவே தோற்றுவிப்பன்` என்பது முடிவாதலால் `மாயோனை இடப்பாகத்தினின்றும் தோற்றுவிக்கும் நிலைமையில் வலப்பாகம் சத்தி பாகமாய் நிற்கும். என்பது பற்றி, `ஒருபால் மாலவனாம், மற்றை ஒரு பால் உமைய வளாம்` என்றும், இந்நிலைமையில் `சிவம்` என்பதே இல்லாதது போலத் தோன்றுதலால், இருபாலில் ஒரு பாலையும் நின்னுருவமாகத் தெரிய மாட்டேம்` என்றும், இங்ஙனமாகவே, சிவமேதான் சத்தியோ? `சிவம்` என்பது வேறு இல்லையோ? என வினாவும் முறையில், `நின்னுருவே மின்னுருவுதானோ` என்றும் அருளிச்செய்தார். மின் - பெண்; உமை. சிவமும், சத்தியும் இரு பொருள்கள் அல்ல` என்பது விளங்குதற்கு இங்ஙனம் நகைச்சுவை தோன்றக் கூறினார். நிறம், `உரு` என்னும் பொருட்டாய், வடிவத்தைக் குறித்தது. `இந்நிறத்தை இரு பாலிலும் நின் உருவமாகத் தெரிய மாட்டேம்` என இயைக்க. ஒகாரம் இரண்டில் முன்னது சிறப்பு; பின்னது வினா, `நின் உருவமாக நேர்ந்து தெரிய மாட்டோம்` எனக் கூட்டுக. `நேர்ந்து தெரியமாட்டோம்` என்றாராயினும், `தெரிந்து நேரமாட்டோம்` எனப்பின்முன்னாக நிறுத்தி, விகுதி பிரித்துக் கூட்டி யுரைக்க. நேர்தல் - உடன் படுதல். சிவம் சத்திகளது இயல்பை விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 42

நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை
ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து
வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ,
இளங்குழவித் திங்கள் இது

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்கு - வானத்தில். `அங்கு அரவம் நேர்ந்து (எதிர்ப்பட்டுக்) கொள்ள (விழுங்க, அதனால்) சிறுகிற்றோ? இசைய (உனக்குப் பொருந்த) அளவே ஈர்ந்து, (அளவாகப் பிளந்து எடுத்து) வைத்தாயோ? பேர்ந்து காலத்திற்கு ஏற்ப மாறி) வளர மாட்டாதோ? (மாட்டாத தன்மையை உடையதோ?) இளங் குழவித் திங்கள் இது (என்றுமே பசுங்குழவியாய் இருக்கின்ற திங்களாகிய இதன் தன்மை) என்னோ?` என இயைத்துக் கொள்க. `வளக் குழவி` என்பது மெலிந்து நின்றது. குழவித்தாய் குழவித் தன்மையுடையதாய், இளங்குழவி - பசுங்குழவி. இறைவன் அணிந்துள்ள பிறை என்றும் ஒரு பெற்றித்தாய் இருத்தலைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 43

திங்கள் இதுசூடிச் சில்பலிக்கென்று ஊர்திரியேல்
எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய
வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே
தானே யறிவான் தனக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எங்கள் பெருமானே` என்பதை முதலில் வைத்து உரைக்க. `இது` என்பது, எடுத்தல் ஓசையால், `இத் தன்மைத்து` எனப்பொருள் தந்து நின்றது, `இவன் எவ்வாறு அவனை வெல்ல முடியும்` எனக் கூறினால் அதில், `இவன், அவன் என்பன ஓசை வேறுபாட்டால், `இத்தன்மையன், அத்தன்மையன்` எனப் பொருள் தருதல்போல. `சிறிதாய்ப் பயன் தாராதது` என்றதாம். `பிச்சை யேற்பவன் வேடத்தாற் பொலிவுடையனாயின் அது பற்றியேனும் பிச்சையிடுவர்; அது தானும் செய்கின்றிலையே ` என்றபடி. சில் பலி `இன்னதுதான் ஏற்பது` என்பதின்றி இடுவார் இடுவனவாகிய எல்லாப் பிச்சையும், `ஊர்` என்பதன்பின், `தொறும்` என்பது தொகுக்கப்பட்டது. பொங்கொளிய - மிக்க ஒளியான உடம்பை யுடைய. `தேவர்` என்பது ஒளியுடம்பினர்` என்னும் பொருளதாதல் பற்றி, `பொங்கு ஒளிய வானோர்` என்றார். `வானோரே` என்னும் சிறப்புணர்த்தும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. `விலக்காரேல்` என்றது, விலக்க வல்லரல்லராயின்` என்றபடி. `வல்லமே` என்னும் ஏகாரம் எதிர்மறை வினாவாய் நின்று, மாட்டாமையைக் குறித்தது. ஈற்றடியைத் தனித் தொடராக வைத்து, முதற்கண், `இனி` என்பது வருவிக்க. இறுதியில் `ஆவதை` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. ஈற்றடியால், `எம் பெருமான் தனக்கு ஆவதைப் பிறர் அறிவிக்க வேண்டாது தானே அறிவான் ஆதலின், அவன் இவ்வாறு `பலிக்கு` என்று ஊர் திரிவதில் ஒரு கருத்திருத்தல் வேண்டும்` என்றபடி. அக்கருத்தாவது, உயிர்களின் வினையை நீக்குதலாம்.

பண் :

பாடல் எண் : 44

தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவாறு என்கொல் - மனக்கினிய
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அடியன்` என்பது தன்மையொருமைப் பெயர். `தன்னை` என்னும் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. பிரிநிலை ஏகாரத்தை இதனுடனும் கூட்டுக. `எனக்கே` என்னும் பிரிநிலை ஏகாரம். பிறர்க்கெல்லாம் அருளினமையைக் குறித்தது. `அருளாவாறு` என்பதை நிகழ் காலத்ததாகவும், `கொல்` என்பதை ஐய இடைச் சொல்லாகவும் கொண்டு உரைப்பதும், அவற்றை முறையே எதிர்காலத்ததாகவும், அசை நிலை இடைச் சொல்லாகவும், மற்றும் `என்` என்பதை இன்மை குறித்து வந்த வினாவினைக் குறிப்புச் சொல்லாகவும் கொண்டு உரைப்பதும் ஆகிய இரு பொருளையும் கொள்க. அங்ஙனம் கொள்ளவே, பின்னர் உரைக்கும் உரையின் படி, `எனக்கு அருளாதொழியக் காரணம் இல்லை` என்னும் துணிவுப் பொருளே வலியுடைத்தாய் நிலை பெறும். பின்னை உரைக்கு `எனக்கே` என்னும் ஏகாரம் தேற்றப் பொருட்டாம். `மனத்துக்கு` என்பதில் அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. சீர் - புகழ். பேராளன் பெருமையுடையவன். இனி, `செம்மேனி உடையனாதலைக் குறிக்கும் பெயரையுடையவன்; அப்பெயர் - சிவன் - என்பது` என உரைப்பினும் ஆம்; `சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய. செம்மேனி எம்மான்` 1 என்னும் திருமொழியையும் காண்க.

பண் :

பாடல் எண் : 45

பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப்
பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை
எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும்
இங்குற்றான் காண்பார்க் கெளிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பேணி, வேண்டி, என்று நீவிர் தேடுகிறீர்கள்; இங்கே என்போல்வார் சிந்தையினும் உற்றான்; (அஃதறிந்து) காண் பார்க்கு (க் காண்டல்) எளிது` என்க. `அவனையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. பெருநெறி - மேலான நெறி. நோக்கு தலையே `பெருநெறி` என்றார் ஆகலின், பெயரெச்சம் வினைப் பெயர் கொண்டதாம். `நின்முகம் காணும் மருந்தினேன்` 2 என்பதிற் போல. பேணுதல் போற்றிக் காத்தல். வேண்டுதல் - விரும்புதல். `பெருநெறி, ேபரருள்` என அடை புணர்த்தமை. `ஏனை நெறிகள் எல்லாம் ஒரு நெறி யல்ல` என்பதும், `ஏனையோர் அருளெல்லாம் பேரருள் அல்ல` என்பதும் தோன்றுதற் பொருட்டு, `பெருநெறி` எனப்படாமை, பிறப்பைக் கடத்தலாகிய பெரும் பயனைத் தாராமை பற்றியும், `பேரருள்` எனப்படாமை, சிலர்க்குச் சில சிறு பயன்களைத் தந்த அளவிலே அற்று விடுதல் பற்றியுமாம். `என்பீர்கள்` என்பது. `என்று தேடுகின்றீர்கள்` என்னும் பொருட்டாய் நிற்றலின், `பிரான் அவனை` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. `என் போல்வார் சிந்தையினும் உற்றான்` என்பது, `உலகியல் வகையில் எளியனாயினும் அன்புடையார் உள்ளத்தில் இருப்பவன் அவன் என்பதை விளக்கிற்று. `இங்கு` என்பது, `இங்கே` என அண்மை குறிக்க வந்தது. `அஃது அறிந்து` என்பதும், `காண்டல்` என்பதும் சொல்லெச்சமாய் எஞ்சி நின்றன. இவ்வாறன்றி, `எளி தாக` என ஆக்கம் வருவித்து, `எளிதாக உற்றான்` என முடிப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 46

எளிய திதுஅன்றே ஏழைகாள் யாதும்
அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற்
றெந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த
சிந்தையராய் வாழுந் திறம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஒளிகொள் மிடற்று` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. `இது எளியது அன்றே! ஏழை காள், யாதும் அறிவிலீர்; ஆஆ அளியீர்! என முடிக்க. அளியீர் - இரங்கத்தக்க நிலையை உடையீர். ஆ! ஆ!, இரக்க இடைச் சொல் அடுக்கு. ஒளி, நீல ஒளி, `அறிகிலீர்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். தனிச்சீரில் ளகர ஒற்றை நீக்கி அலகிடுக.

பண் :

பாடல் எண் : 47

திறத்தால் மடநெஞ்சே சென்றடைவ தல்லால்
பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த
இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான்
திருவடிக்கட் சேருந் திரு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நெஞ்சே, திருவை, (அடையும்) திறத்தால் அடைவதல்லால், பிறவகையில் பெறவும் ஆதியோ` (உரியை ஆவையோ? ஆகாய்) என இயைத்து முடிக்க. (பிற வகையில் பெற நினைக்கும்) பேதையே, (அந்த நினைவை விடு) என்க. `அடையும்` என்பதும், `பிறவகையில்` என்பதும் `விடு` என்பதும் சொல் லெச்சங்கள். அடையும் திறமாவது, அன்பு செய்தல்.
அழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால்,
அறிவரிது அவன்திரு வடியிணை யிரண்டும்.*
என்றது காண்க. நிறம் - அழகு. வடிக் கண் - மாவடுவின் விளவு போலும்கண். ஏழை - பெண்.

பண் :

பாடல் எண் : 48

திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும்
பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள்
இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா
தது மதியொன் றில்லா அரா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரு - அழகு. ஏன மருப்பு - பன்றிக் கொம்பு. `பெருமான்` என்பது தாப்பிசையாய், முன்னும் சென்று, இயைந்தது. `ஒரு நாளும் ஒன்றும் என்னும் இழிவு சிறப்பும்மைகள் தொகுத்த லாயின. `மதி` இரண்டில் முன்னது திங்கள். பின்னது அறிவு. ஒன்றாக- ஒருதலையாக; நிச்சயமாக. தேராது - அறியாது. `அது யாது` எனின், மதி (அறிவு) ஒன்று இல்லா (சிறிதும் இல்லாத) அரா. இது மயக்க அணி. `மதி ஒன்று இல்லா` என்றதனால், எள்ளல் பற்றிய நகை பிறந்தது.

பண் :

பாடல் எண் : 49

அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள்
விராவு கதிர்விரிய ஓடி - விராவுதலால்
பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே
தன்னோடே ஒப்பான் சடை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அராவி - அரத்தால் தேய்த்து, அம் - அழகு. விராவு கதிர் - திங்களிலே பொருந்தியுள்ள கதிர்கள். `விரிய ஓடி` - எங்கும் பரவ ஓடி. விராவுதலால் - இடை இடை செறிதலால். புரி - முறுக்கு. புரிந்தாற்போலாவே - முறுக்குண்டாற்போல இல்லையோ. ஏகாரம் எதிர் மறை வினாப் பொருட்டாய், `போல்கின்றன` எனப் பொருள் தந்தது. `தன்னோடே ஒப்பான் - தனக்குத் தானே ஒப்பானவன்.

பண் :

பாடல் எண் : 50

சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து
புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல்
வலப்பால்அக் கோலமதி வைத்தான் தன்பங்கின்
குலப்பாவை நீலக் குழல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`முடிமேல்` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. கோல மதி - அழகிய திங்கள். பங்கு - இடப் பாகம், `பங்கின் உள்ள பாவை` என்க. குலப் பாவை - உயர் குல மடந்தை, `அவன் சடைமேல் அணிந்த` எனச் சுட்டுப் பெயரும், ஒரு வினைக் குறிப்புச் சொல்லும் வருவிக்க, கொன்றை - கொன்றைப் பூ. பூக்கள் பின்னர்க் காய்த்துப் பழத்தைத் தருதல் இயல்பாகலின், சுவை தருகனிகள்` என்றார் கூந்தலுக்குக் கொன்றைக் கனி உவமையாகச் சொல்லப்படும். புடைமேவி - சடையின் மற்றொரு பக்கத்தில் பொருந்தி. சடை வலப் பால் உள்ளது. `வலப் பக்கம் சடையும், இடப் பக்கம் கூந்தலுமாய் இரு தன்மைப்பட்டுத் தோன்றாது, சடையில் உள்ள கொன்றையின் கனியே இடப்பக்கம் உள்ளது போலும் என ஒருமை கற்பித்தவாறு. இஃது இடத்திற்கு ஏற்ற உவமை.

பண் :

பாடல் எண் : 51

குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்து
எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குழல் ஆர் சிறு புறத்து - கூந்தல் புரளுகின்ற சிறிய முதுகையுடைய. கோல் வளை - திரண்ட வளை. இஃது இதனை அணிந்தவளைக் குறித்தது. எழில் - அழகு. `அழகுக்காக அவளை நீ ஆடும் அங்குக் கொண்டு செல்ல வேண்டா` என்க. இப்பாட்டிற்குப் `பெருமானே` என்னும் முன்னிலை வருவிக்க. கழல் - வீரர்கள் காலில் அணியும் அணி. ஆர்த்தல் - ஒலித்தல், ஆரழல் - அணுகுதற்கரிய நெருப்பு.

பண் :

பாடல் எண் : 52

அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`செங்கண்` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. `பங்கில்` என ஏழாவது விரிக்க. ஒவ்வாதே - போலாதே. ஏகாரத்தை வினாவாகவும், தேற்றமாகவும் கொண்டு, `ஒக்கும்` என உடன்பாட்டுப் பொருளும், `ஒவ்வாது` என எதிர்மறைப் பொருளும் இரண்டும் கொள்க. சிர மாலை - தலை மாலை. `பெருமானது சடாடவி செவ்வானம்போல விளங்க, அதில் அணியப்பட்ட வெண்டலை மாலையில் உள்ள தலைகள் பல, பல சந்திரர் செவ்வானம் எங்கும் தோன்றியது போல விளங்குகின்றன` என்பதாம். தலை மாலை அவனது நித்தியத்துவத்தை விளக்குவதாகலின் அதனைப் புகழ்ந்த வாறு. சீர் - அழகு.

பண் :

பாடல் எண் : 53

சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேர்யாறு நீத்தமாய்ப் - போரார்ந்த
நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`போரார்ந்த பாம்பு கொண்டு நாண் அசைத்த நம் ஈசன் பொன்முடி` என்று எடுத்து, முதற்றொட்டு உரைக்க, அசை, நாண் - அரை நாண். அசைத்த இறுகக் கட்டிய. பொன் - அழகு. தழைப்ப - மிகுந்திருக்க. சேண் - வானுலகம். `அங்கு உலவி நீர் மிகுந்திருந்த யாறு` என்க. நீத்தம் - வெள்ளம். `ஆய்` என்பது, `ஆயதனால்` எனக் காரணப் பொருள் தந்தது. செவ் ஏய் ஓர் கார் - செம்மை நிறம் பொருந்திய ஒரு மேகம் போலும் கொன்றை, கார் காலத்தில் பூப்பது. `கண்ணி கார் நறுங் கொன்றை` என்றது காண்க.* எனவே, `கொன்றை மலரும், நீத்தமும் மேகத்தால் விளைந்தன போலத் தோன்றுகின்றன என்றபடி. மேகம் கரிதாயினும் இஃதோர் அதிசய மேகம் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 54

காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓருருவாய் நின்னோடு உழிதருவான் - நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாயோன், நின்னுடைய பாகத்தானாய் நின்னோடு ஓருருவாய் உழிதருவானாகவும், அவன் பண்டொருகால் காணாதபடி நீ எங்குச் சென்று ஒளித்தாய்` என்க. `பாகத்தான்` என்றது, ஓருருவாய் நின்றவாற்றை விளக்கியது. `எங்கு ஒளித்தாய்` என்றது, `அவனுக்கு இடம் அளித்து நின்றே ஒளிக்கவும் வல்லாய்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 55

பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டங் கறுத்ததுவும் அன்றியே - உண்டு
பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியின் உள்ளே
மணிமறுவாய்த் தோன்றும் வடு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

படுகடல் - ஒலிக்கின்ற கடல். உண்டு - `உண்டமையால்` என்க. பணி உறுவார் - பாம்பை அணிகலமாகப் பொருந்தியவர். `அவர் கறுத்தமையால்` எனச் சினைவினை முதல் மேல் ஏற்றப்பட்டது. மணி மறுவாய் நீல நிறமான களங்கமாய் த் தோன்றும் வடுவும் உண்டாகும் - என உம்மையும் ஆக்கமும் விரித்து முடிக்க `யாம் களங்கமிலேம்` என்று அவர் சொல்லினும், கண்டம் கறுத்ததையேனும், `ஓர் உபகாரம் பற்றி` எனலாம்; `காரணம் இன்றி, மதியினிடத்துத் தோன்ற இருக்கும் வடுவும் ஒன்று உண்டு` என்க. `இவர் களங்கமிலாராவது எங்ஙனம்` என்றபடி. இதனை,
வார மாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர்
பெறுவ தென்னே?
ஆரம் பாம்பு; வாழ்வ தாரூர்; ஒற்றி யூரேல்
உம்ம தன்று;
........................
ஊருங் காடு; உடையும் தோலே
ஒண காந்தன் தளியு ளீரே.*
என்றதுபோல உரிமை பற்றிச் சொல்மாத்திரையால் பழித்தவாறாகக் கொள்க. நிறை மதிக்கன்றிப் பிறைக்குக் களங்கம் இன்மையால், `தோன்றும்` என்பதை எதிர்கால முற்றாகக் கொண்டு, `இப்பொழுது இல்லையேனும் பின்பு உண்டாக இருக்கின்றது` என்றவாறாகக் கொள்க.

பண் :

பாடல் எண் : 56

வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின்
சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண்
புலால்தலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்டோம்
நிலாத்தலையிற் சூடுவாய் நீ.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`சுடு வெண்பொடி நிறத்தாய், படு வெண் புலால் தலையினுள் ஊண் (பற்றிப் பிறர்) புறம் பேசக் கேட்டோம்; (அதனை) - வடு அன்று - எனக் கருதி நீ மதித்தியாயின், (வடு வாகாமைக்குரிய காரணத்தைச்) சொல்லாய்; நீ நிலாவைத் தலையிற் சூடுபவன்` எனக் கூட்டி முடிக்க. நிறம் - மார்பு. படு - இறந்த. ஊண் - உண்டல், புறம் பேசுதல், `பழித்தல்` என்னும் பொருட்டாகலின் அது, `ஊண்` என்பதில் தொக்கு நின்ற இரண்டவதற்கு முடிபாயிற்று. வடு - குற்றம். நிலாக் கலைகட்கு அடையாளம் ஆதலின், அதனைத் தலையில் சூடுதல், `எல்லாக் கலையும் வல்லவன்` என்பதைக் காட்டும். ஆகவே, `நீ வடுவாவன செய்யாய்` என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 57

நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய
தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய
மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி
விடவரவம் மேல்ஆட மிக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எல்லாம்` என்பதன் பின், `சென்று` என்பதும், `கண்டாய்` என்பதன்பின், `ஏன்எனில்` என்பதும் வருவிக்க. கண்டாய், முன்னிலையசை. விடம் - நஞ்சு. `விட அரவம் மிக்கு மேல் ஆடுதலால், மடவார் அஞ்சி, வந்து பலி இடார்` என்க. `எம் அன்பினால் உன்னை, அறியாதார் போல நினைத்துச் சொல்கின்றேம்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 58

மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும்
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில்
பாகத்தாள் பூங்குழலும் பண்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

மிக்க எரி - அளவில் மிகுந்த தீ. எரியின் முழக்கம். `தமதம` என்பது. வீங்கிய பொங்கு இருள் - பெருகிய, மிகுந்த இருள். ஒக்க உடன் இருத்தல் - சமமாக ஒருங்கிருத்தல், `ஒவ்வாதே` என்றதற்கு, மேல், `போலாதே` என்றதற்கு 1 உரைத்தவாறு உரைக்க. செக்கர் - செவ்வானம். ஆகம் - உடம்பு. பண்பு - நிறம், `பண்பினால்` என்னும் மூன்றனுருபு தொகுத்தலாயிற்று. `சடையும், குழலும் பண்பி னால் எரியும், இருளும் உடன் இருந்தால் ஒக்கும்` என்க. ஓருடம்பு இருவராய கோலத்தைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 59

பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண்
கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும்
அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ
தெவ்வுருவோ நின்னுருவம் மேல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கண்புணரும்` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. `மேல்` என்பதை, மேலே, `பண்பு` என்பதை, மேலே, `பண்பு` என்பதேனாடு இயைத்து, `மேல் பண்பு - மேலே உள்ள தன்மை` என உரைக்க. பணி - சொல்லியருள். `பணி` என்னும் ஏவல் முற்றினைப் பார்த்துக் காண்` என்றது ஒரு நாட்டு வழக்கு. ஏவல் முற்றுக்கள் அந்த வழக்கில் இவ்வாறு வரும் என்க. இதில் கூறப்பட்ட பொருளின் விளக்கத்தை, மேல், `ஒருபால் உலகளந்த` என்னும் வெண்பாக் 2 குறிப்பிற் காண்க. `நீறணிவ தாகிய நின்னுருவம் எவ் வுருவோ` என்க. `இரண்டு உருவத்திலும் நீறு காணப்படுதலால், உன் உருவம் அறியப்பட வில்லை` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 60

மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய
கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ
தம்மான் திருமேனி அன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மாலாய` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. மால் - மத மயக்கம். மா - காட்டு விலங்கு `கையையுடைய மாவாகிய களிறு` என்க. கார் உரிவை - கரிய தோல். அன்று, உரித்துப் போர்த்த அன்று. விலங்கல் - மலை. `ஓவ்வாதே` என்பது, மேலேயும் வந்தது. 1 யானைத் தோற் போர்வையைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 61

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அன்று - ஆட்படாது உலகியலில் இருந்த அன்று. இன்று - உலகியலின் நீங்கி ஆட்பட்ட பின்னதாகிய இன்று. இரு நிலைகளிலும் உன் உருவத்தை நான் காணவில்லையென்றால் எப் பொழுதுதான் நான் அதனைக் காண்பது? நீ சிவனுக்கு ஆள் என்கின் றாயே; அவன் உருவம் எத்தகையது என வினவுவார்க்கு நான் என்ன விடை சொல்லுவேன்` என்றபடி. `எவ்வுருவோ நும்பிரான்` என்பதில், உரு உடையவனை, `உரு` என்றது உபசார வழக்கு. `எவ் வுருவோ` என்னும் ஓகாரத்தை, `ஏது` என்பதனோடும் கூட்டுக. ஏது- எத்தகையது. ஆட்படாதபொழுது எந்த உருவத்தையும் காணவில்லை. ஆட்பட்ட பின் உருவத்தை ஒன்றாகக் காணவில்லை; கயிலையில் கண்டது ஓர் உருவம்; ஆலங்காட்டிற் கண்டது ஓர் உருவம்; அவரவர் கள் சொல்லக் கேட்பன பல உருவங்கள்; அவை கருதுவார் கருதும் உருவங்கள்; ஒருபால் உலகளந்த மாலும், ஒருபால் உமையவளும் ஆகும் உருவம்; அரியும், அயனும் ஆய உருவம் முதலியன. 2 `உருவ சிவன் தடத்த சிவனேயன்றிச் சொரூப சிவன் அல்லன்` என்பதும் `தடத்த சிவனே கண்ணுக்குப் புலனாவன்; சொரூப சிவன் உணர்வுக்கு மட்டுமே புலனாவன்` என்பதும் இதன் கருத்துக்களாகும்.
அருவும் உருவும் அறிஞர்க்கு அறிவாம்
உருவும் உடையான் உளன்.
என்றது காண்க. `என்றுந்தான் எவ்வுரு` என்றது, நிலையான உரு எது` என்று வினாவி அஃது இல்லை, என்றபடி.

பண் :

பாடல் எண் : 62

ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா
தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்
வில்வேட னாகி விசயனோ டேற்றநாள்
வல்வேட னான வடிவு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பூதப்பால்` என்பது முதலாகத் தொடங்கி உரைக்க. `பூதம்` என்றது மண்ணை; எனவே, `பூதப்பால்` என்றது, `மண்ணுலகில்` என்றவாறு `வேடன்` இரண்டில் முன்னது, `வேடம் பூண்டவன்` என்றும், பின்னது, `வேட சாதியினன்` என்றும் பொருள் தந்தன. விசயன் - அருச்சுனன். `போர் ஏற்ற நாள்` என ஒரு சொல் வருவிக்க. ஒக்கும் இரண்டில் முன்னது `நிகர்க்கும்` என்றும், பின்னது, `பொருந்தும்` என்றும் பொருள் தந்தன. `ஏது` ஐந்தில் முன்னிரண்டும் வினாப் பெயர்; அடுத்த இரண்டும் `எத்தன்மையது` என வினைக் குறிப்பு. ஈற்றில் உள்ளதும் வினாப் பெயரே. பின் வந்த `ஏதொக்கும்` என்பது, `எந்த விடை பொருந்தும்` என்பதாம். வினாக்கள் முதல் அடியில் வந்தன. வல்வேடனாய்த் தோன்றினும் தேவ வடிவாய் இருந்ததோ, வேட வடிவாயே இருந்ததோ? அதனை அறிந்தவர் ஆர் என்றபடி.

பண் :

பாடல் எண் : 63

வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கடி உலவு.... சோதியாய்` என்றது விளி. அது, `சொல்லாய்` என்பதனோடு முடிந்தது. ஆல், அசை. கடி உலவு சொல் - விளக்கம் அமைந்த சொல். அத்தகைய சொல் ஒன்றை முடிவாக இல்லாத சோதி. அஃதாவது, சொல்லால் அளவிட்டுச் சொல்ல முடியாத ஒளி `அலகில் சோதியன்` * என்றது காண்க. சோதி யாய் - ஒளியை உடையவனே. `நின் முடிமேல் திங்கள், பகலே நிலா எறிக்குங் கொல்லோ` என இயைக்க. வடிவு - வட்டம் என்றது. `நின் முடிமேல் திங்கள் குறையுடையது` எனக் குறிப்பால் நகை தோற்றியவாறு. செங்கதிர் - ஞாயிறு. நெடிது உலவி நின்று - பகல் முழுதும் மறையாது உலவி நின்று. `எறிக்குங் கொல்` என்றது, சொல்லால் ஐயம் போலக் கூறினும், பொருளால் துணிவு உணர்த்தியதேயாம். ஓகாரம், சிறப்பு, `நீ அணிந்துள்ள திங்கள் உலகத் திங்களன்று; அருளுருவத் திங்களாம்` என்றபடி. `கனக மலை அருகே, போயின காக்கையும் அன்றே படைத்தது பொன் வண்ணமே` 1 என்றாற் போல, `சிவனை அடைந்த பொருள்கள் யாவும் சிவமேயாதலல்லது வேறாகா` என்பதனைக் குறிப்பால் உணர்த்தியதாம்.

பண் :

பாடல் எண் : 64

நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல்
உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்த
செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே
புக்கரவங் காலையே போன்று.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நிலா இருந்த` என்பது தொடங்கிச் சென்று, `நிலா இலங்கு வெண்மதியை நேடிக் கொள்வான்` என்பதை, `அரவம்` என்பதன் பின்னரும். `போல்` என்பதை, `கொல்லோ` என்பதன் பின்னரும் வைத்து உரைக்க. `போல்` என்பது `போலும்` என முற்றுப் பொருள் தந்தது. `பெறுவது - கொள்வாரும் கள்வரும் நேர்` என்பதில், `நேர்` 2 என்பது போல, இனி `போன்ம்` என்பதே பாடம் எனலுமாம். கொல், அசை, ஏகாரம், சிறப்பு. கொள்வான், வான் ஈற்று வினையெச்சம். செக்கர் அவ்வானம் - செம்மை நிறம் உடைய அந்தவானம். `புக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. திருமுடிக்கே - திருமுடிக்கண்ணே; உருபு மயக்கம் `காலை` என்பதில் ஐ இரண்டாம் வேற்றுமை யுருபு. கால் - காற்று. `காற்றையே போன்று உலாவி உழிதரும்` என இயையும். `அரவம் சடை முடியில் மிக விரைவாக ஊர்ந்து உழலுதல், அங்குள்ள நிலாவை, `எங்கே உள்ளது` எனத் தேடி உழல்வது போல் உள்ளது` என்றது தற்குறிப்பேற்ற அணி. `நிலா` இரண்டில் முன்னது திங்களின் ஒளி; பின்னது திங்கள்.

பண் :

பாடல் எண் : 65

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

காலை நேரம், அருணோதயத்தாலும், உதய சூரியனாலும் வானம்மிகச் சிவந்து தோன்றுதலால், அக்காலத்து வானம் சிவனது திருமேனிக்கும், உச்சி வேளையில் சூரியன் வெண்ணிறமாய் நிற்றலால் வானமும் வெளிது ஆதலின், அக்காலத்து வானம் அவன் அணிந்துள்ள வெண்ணீற்றிற்கும், மாலையில் மறை கின்ற ஞாயிற்றின் கதிர்கள் பல திசைகளிலும் பல கம்பிகள் போல வீசுதலால் அவற்றின் தோற்றம் அவனது விரிந்த சடைக்கும், இரவு நேரத்தில் மிகுந்துள்ள இரவு மிகக் கரிதாய்த் தோன்றலின் அஃது அவன் கறை மிடற்றிற்கும் உவமையாயின. இவை மாலையுவமை யணி. `காலை, பகல்` என்பன அக்காலத்து வானத்தையும், `மாலை` என்பதும் அக்காலத்துக் கதிர் வீச்சினையும் குறித்தன. மாலை - மயங்கும் மாலை. அந்தக் காலம். `மாலையின் உரு` என இயையும். தாங்கு உரு - தாங்கப்படும் உரு. வேலை - பொழுது. கடும் பகல் - மிக்க பகல்; நண்பகல். மற்று, அசை, `அவன்` என்பது சிவபிரானைச் சுட்டியது பண்டறி சுட்டு. வீங்குதல் - மிகுதல். சிவபிரானது திருமேனியது உறுப்பழகைப் புகழ்ந்தவாறு.

பண் :

பாடல் எண் : 66

மிடற்றில் விடம்உடையீர் உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மிடற்றில் விடம் உடையீர் நும் மார்பில் பைத்து ஆடும் பாம்பு வண்ணம் (நும்) மிடற்றில் மைத்து ஆம் இருள் போலும் கரிது; (அது) உம் மிடற்றை நக்கித் (தனது) மிடற்றில் வடம் கொண்ட வாற்றாலோ?` என இயைத்துப் பொருள் கொள்க. `உமது மிடற்றின் நிறமும், நும் மார்பில் ஆடும் பாம்பின் நிறமும் ஒன்றாய் இருக் கின்றதே` என வியந்துரைத்தவாறு. பின் வந்த மிடற்றுக்கு, `தன்` என்பது வருவிக்க. `உம்` என்பதை ஈற்றில் வந்த மிடற்றுக்கும் கூட்டுக. `விடம் கொண்டவாற்றால்` என உருபு விரிக்க. ஓகாரம் தெரிநிலைப் பொருட்டு. மைத்து ஆம் - மையின் தன்மை யுடையதாகி. `பாம்பு வண்ணம் கரிது` எனப் பண்பின் வினைபண்பிமேல் நின்றது. ஆல், ஓ அசைகள். பைத்து - படத்தை உடையதாய். இது, `பை` என்னும் பெயர் அடியாகப் பிறந்த வினைச் சொல்.

பண் :

பாடல் எண் : 67

பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந்
தாம்பயின்று தாழருவி தாங்குதலால் - ஆம்பொன்
உருவடியில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
திருவடியின் மேய சிலம்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

இதனுள் `சிலம்பு` என்றது கழலையே குறித்தது, மாதொரு பாகமாம் வடிவில் சிவன் திருவடியில் மேயது கழலேயாகையால் `கழல் வீரம் உடையார்க்கே உரியது. முதல் இரண்டு அடிகளில் கூறியவாறு. சிவபெருமான் பகைப் பொருள்களைத் தனது மேனியில் பகைதீர்த்துப் பயில வைத்தமையாலும், தாங்கற்கரிய கங்கையைத் தலையில் தாங்கினமையாலும் அவன் கழல் அணிதல் தக்கதே `பயின்று` என்பதை, `பயில` எனத் திரிக்க. தாழ்தல் - வீழ்தல். `அருவி` என்றது கங்கையை. `பயின்று, தாங்குதலால் சிலம்பு ஆம்` என இயைக்க. ஆம் - பொருந்துவதே. உரு - நிறம். `வடிவில் ஓங்கின்ற ஒளி` என்க. சிவபிரானது எல்லாம் வல்ல தன்மையை வியந்தவாறு. பெருமான் புலித்தோலையே உடையனாயினும், மான் அதையே கண்டு, `புலி` என்று அஞ்சும் ஆகலின், `அங்ஙனம் அஞ்சவில்லை` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 68

சிலம்படியாள் ஊடலைத் தான் தவிர்ப்பான் வேண்டிச்
சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற்
றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
முதிரா மதியான் முடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`செந்நிறத்தால் செக்கர் வானமும், சிவ பெருமானது சடைமுடியும் ஒன்றை ஒன்று வெல்லப் பார்க்கும் நிலையில், சிவபெருமான் உமாதேவியின் ஊடலைத் தவிர்க்க வேண்டி அவளது பாதங்களில் தனது முடியைப் பல முறை சேர்த்துதலால் அப்பாதங்களில் தனது முடியைப் பல முறை சேர்த்துதலால் அப்பாதங்களில் உள்ள செம்பஞ்சுக் குழம்பு பட்டுப் பட்டுச் சடைமுடி செக்கர் வானத்தை வென்று விட்டது` என்பது இப்பாட்டின் திரண்ட பொருள். இஃது உவகைச்சுவை. இதனை, `சிருங்கார ரசம்` என்பர் வட நூலார். அனைத்துச் சுவைகளையும் பத்திச் சுவைக்குத் துணையாகவே திரு முறைகள் கொள்ளும்.
செவ்வரத்தம் - செம்பஞ்சு. `செவ்வரத்தத்தில் சேர்த்தி` என உருபு விரிக்க. `சேர்த்தி` என்றாரேனும், `சேர்த்திச் சேர்த்தி` என அடுக்கிக் கூறுதல் கருத்தென்க. நலம் - அழகு. `பெற்று` என்பதில் `பெறுவித்து` என்னும் பிறவினை விகுதி தொகுக்கப்பட்டது. செக்கர் - செவ்வானம் இதன்பின், `சிறக்க` என ஒரு சொல் வருவிக்க. `முதிரா மதியான் தனது முடியைச் செவ்வரத்தத்தில் சேர்த்து நலம் பெறுவித்து இக்கோலம் செய்தான்` என்க. மதி திங்களாயினும், `அறிவு` என்றும் பொருள்தரும் ஆதலின், `ஒரு பெண்ணின் அடிகளில் பல முறை முடி தோய வணங்குகின்றான்` என்னும் நகை நயம் தோன்ற அப்பொருள் மேற் செல்லும் குறிப்பும் உடையது.

பண் :

பாடல் எண் : 69

முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல
அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் - படிமேற்
குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம்
இனியவலம் உண்டோ எமக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கொடு மதி - வளைந்த பிறை. `வாலறிவான் நற்றாள்` * என்பதன் உரையில், `பிறவிப் பிணிக்கு மருந்தாகலின் `நற்றாள்` என்றார்` எனப் பரிமேலழகர் உரைத்த உரை இங்கு, `நல்ல அடி` என்பதற்குக் கொள்ளத்தக்கது. மேற் கொடு - தலைமேற் கொண்டமையால், `கூற்றை மதியோம்` என்க. கூற்று, இறப்பைத் தரும் தெய்வம்; யமன். படி - பூமி, `படிமேல் பொருந்தத் தலை குனிய வல்ல மாகிய அடிமைத் தன்மையைக் கொண்டாடப் பெற்றோம்` என்பதில் `வல்லம்` என்பது இடைக் குறைந்து நின்றது. கொண்டாடுதல் - பாராட்டுதல். அவலம் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 70

எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிரா
தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே
போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
ஏந்தெரிபாய்ந் தாடும் இடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எந்தாய், சடையாய், இரவில் நீ ஆடும் இடம் எமக்கு ஒருநாள் காட்டுதியோ? இதுவோ எமக்கு ஒரு பேராசையாய் (உள்ளது) தவிராது` என்க. அமைக்கவே போந்த எரி - சிலர் செயற்கையாக அமைக்க அதனாலே உண்டான எரி, பாய்தல் - பரத்தல்; `இயற்கையேயாயினும் செயற்கைபோல அத்தனை அமைப்பாய் உள்ளது` என்பதாம். `போந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. பொங்குதல் - இருள் மிகுதல். ஏந்து எரி - ஓங்கி எரியும் எரி. `இதுவோ` என்னும் ஓகாரம் சிறப்பு. `தவிராது` என்றது. `தவிர்க் கினும் தவிராது` என்றபடி. `காட்டுதியோ` என்பதில் ஓகாரம் ஐயப் பொருட்டு ஆகலின், `மாட்டாயோ` என்பதும் கொள்ளப்படும். `சிவன் இரவில் எரியாடும் இடம் இந்தச் சுடுகாடாயின், யாவரும் அதனை எளிதிற் சென்று கண்டுவிடலாம்; `அவன் காட்ட வேண்டும்` என்பதில்லை. ஆசை தோன்றுதலும், அதனை நிரப்ப முடியாதிருத்தலும் நிகழா. அதனால், இரவாவது முற்றழிப்புக் காலமும், எரியாடும் இடமாவது சூக்குமமாகிய காரண நிலையுமாம் - என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 71

இடப்பால வானத் தெழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண்
கண்டாயே முக்கண்ணாய் கண்.

பொழிப்புரை :

குறிப்புரை :

`முக்கண்ணாய்` என்பதை முதலிற்கொண்டு `உரைக்க. இடப்பால் - `இடப் பக்கத்தில் உள்ள மதி` என்க. ஓர் மடப் பாவை, கங்கை. கங்கை தலையிலேயிருப்பதால், மதியை (பிறையை) அவள் பக்கத்தில்தான் வைக்க வேண்டியுள்ளது. அஃது உண்மைதான்; ஆயினும் அதனால் நீ அழகாகச் சூடிய பிறையில் உன் இடப் பாகத்தில் உள்ள தேவிக்குத் தொடர்பில்லாமல், அவள் மாற்றாட்கன்றோ (கங்கைக்கு) தொடர்புடையதாகின்றது? கண் கண்டாயே இனை நீ உன் கண்ணால் கண்டு கொண்டு தானே இருக்கின்றாள். (`இதற்கு என் செய்தாய்` என்பது இசை யெச்சம். `நீ, இடப்பாகத்தில் ஒருத்தியிருக்க, மற்றொருத்தியைத் தலையில் வைத்தது பிழை` என்பது குறிப்பு.) இதுவும் நிந்தாத் துதி. `கண்டிலம் காண்` என்பதில் காண், முன்லையசை. கண் கண்டாயே` என மாற்றி, `கண்ணால்` என உருபு விரிக்க. இனி, ஈற்றில் `கண்` என்பதை, `காண்` எனப் பாடம் ஓதி, `கண்டாயே; இதற்கு ஒரு வழியைக் காண்` என உரைப்பினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 72

கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாறுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்குங்
கண்ணாளா ஈதென் கருத்து.

பொழிப்புரை :

குறிப்புரை :

`நின்னைக் கண்டு நினக்குப் பணி செய்யே னேல்` என்க. கைப் பணி - கையால் செய்யும் தொண்டு. சிறப்புடைமை பற்றி இதனை எடுத்தோதினார். ஆகவே, மனத்தொண்டும், வாய்த் தொண்டும் சொல்லாமே அடங்கின. `செய்யேனேல்` என்றது, `செய்யும் வாய்ப்பைப் பெறேனாயின்` என்றபடி. அண்டம் - வானுலக ஆட்சி. இதனைக் கூறவே, மண்ணுலக ஆட்சியும் அடங்கிற்று, திங்களாய் - திங்களை அணிந்தவனே. இதனையும், `கண்ணாளா` என்பதையும் முதலிற் கொள்க. `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `கண்` என்றது, கண்போலும் தன்மையை. அஃதா வது நன்னெறி தீநெறிகளை விளக்கும் தன்மை. ஆளன் உடையவன். கைப்பணி பிறப்பை அறுப்பதும், மண்ணுலக விண்ணுலக ஆட்சிகள் பிறப்பை மிகுவிப்பனவும் ஆதலின் அவை முறையே விரும்பப்படு வதும், வெறுக்கப்படுவனவும் ஆயின.

பண் :

பாடல் எண் : 73

கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன் - பருத்தரங்க
வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீ விரும்பி
உள்ளமே எப்போதும் ஒது.

பொழிப்புரை :

குறிப்புரை :

`உள்ளமே` என்பதை, `பருத் தரங்கம்` என்ப தற்கு முன்னே கூட்டி, அது முதலாக உரைக்க. தரங்கம் - அலை. வெள்ள நீர் - மிக்க நீர். வாயின் தொழிலாகிய ஓதுதலை நெஞ்சிற்கு ஏற்றியது இலக்கணை. நெஞ்சிற்குக் கருத்து உள்ளதுபோலக் கூறியதும் அது. திருத்தலாம் - நிரப்பலாம். சிக்கென - உறுதியாக.

பண் :

பாடல் எண் : 74

ஒத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட
ஏதும் நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள்
எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா
கண்ணார் கபாலக் கலம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

பொ: ஓதம் - அலை. `எத்தனை` என்பது ஆகு பெயராய் அவற்றின் நீரைக் குறித்தது. அட்டுதல் - சேர்த்தல். `அட்ட வும்` என உம்மை விரிக்க. `நிறைந்தது` என்பதில் அகரம் தொகுத்தல். அமர் நீதி நாயனார் நாட்டிய துலாக்கோல் மண்ணுலகத்ததாயினும் இறைவனது கோவணத்தை தாங்கிய தட்டு, எதிர்த் தட்டில் எத்தனைப் பொருள்களை வைப்பினும் மேல் எழாது இருந்தமை போல, கபாலம், பிரமன் தலையேயாயினும் இறைவன் கையில் இருத்தலால் எத்தனைக் கடல்களின் நீரை வார்ப்பினும் நிரம்பாதாயிற்று. பேதையர்கள் - பெண்கள். எண்ணாது - பாத்திரத்தின் பெருமையை அறியாமல். பலி- பிச்சை. `கலம் பலியால் நிறைந்தவா என்னோ? என்க. (நிறைய வில்லை, நிறைந்து விட்டதுபோல இறைவன் அப்பாற் சென்றான்` என்பது குறிப்பு. கண் ஆர் - இடம் மிகுந்த. கலம் - பாத்திரம். இறை வனை அடைந்த பொருள்களும் அவனைப் போலவே அளப்பரிதாதல் கூறியபடி.

பண் :

பாடல் எண் : 75

கலங்கு புனற்கங்கை ஊடால லாலும்
இலங்கு மதியியங்க லாலும் - நலங்கொள்
பரிசுடையான் நீள்முடிமேற் பாம்பியங்க லாலும்
விரிசடையாங் காணில் விசும்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஊடு - உள்ளே, ஆலல் - ஒலித்தல். அசைதலு மாம். பரிசு - தன்மை; இயல்பு. `நீள் முடிமேல் விரி சடை` என இயைக்க. காணில் - பார்க்கும்பொழுது. `சடை விசும்பாம்` என்க. ஆக்கம் உவமை குறித்து நின்றது. `கங்கை மழைபோலவும், பாம்பு இராகு போலவும் தோன்றுகின்றன` என்பதாம். இஃது ஏது உவமை யணி.

பண் :

பாடல் எண் : 76

விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து,
பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்து,
எந்தாய் தழும்பேறி யேபாவ பொல்லாவாம்
அந்தா மரைபோல் அடி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எந்தாய்` என்பதை முதலிற் கொள்க. விசும்பின் - வானின்கண் உள்ள. விதி, இங்கு நல்வினை. விண்ணோர்` என்பது `தேவர்` என்னும் அளவாய் நின்றது. `மகுடத்தைத் தேய்ப்ப` என்க. `மகுடத்தால் தேய்ப்ப` என்றும் ஆம். முசிந்து - தேய்ந்து. ஏகாரம் பிற காரணங்களினின்று பிரித்தலின் பிரிநிலை. பொல்லா ஆம் - அழகில்லன ஆகின்றன. `நின் அடி` என வருவித்து, `தேய்ப்ப முசிந்து, தழும் பேறிப் பொல்லா ஆம்` என வினை முடிக்க. பாவம், இரக்கக் குறிப்புச் சொல். விண்ணோர் யாவரும் சிவபெருமானது திருவடிகளில் தங்கள் முடி தோய வணங்குதலைக் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 77

அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள்
முடிபேரின் மாமுகடு பேருங் - கடகம்
மறிந்தாடும் கைபேரில் வான்திசைகள் பேரும்;
அறிந்தாடும் ஆற்றா தரங்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அடிகளது` என உருபு விரித்து, முதலிற் கூட்டுக. அடிகள் - சுவாமிகள். இஃது உயர்வு குறித்து வரும் பன்மைச் சொல். முகடு - அண்டத்தின் உச்சி. அது பேர்தலாவது, உடைதல், `மறிந்து` என்பதை, `மறிய` என திரிக்க. மறிதல் - உழலுதல். வான், இங்குச் சேய்மை. `ஆகலான் அரங்கு ஆற்றாது; அதனை யறிந்து மெல்ல ஆடுமின்` என்பதாம். ஆடும், முன்னிலைப் பன்மை ஏவல், சிவபெருமானது விசுவரூபத்தினைச் சிறப்பித்தவாறு.

பண் :

பாடல் எண் : 78

அரங்கமாப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல்
என்னாக வையான் தான் எவ்வுலகம் ஈந்தளியான்
பன்னாள் இரந்தாற் பணிந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஏழாய், ஆடுவான் எவ்வுயிர்க்கும் வாளா இரங்குமோ! பன்னாள் பணிந்து இரந்தால் (இரங்கும்), இரங்குமேல், தான், என்னாகவையான்; எவ்வுலகம் ஈந்து அளியான்!` என இயைத்துக் கொள்க. `அரங்கமாப் பேய்க் காட்டில் ஆடுவான்` என்றாரேனும், `பேய்க் காடு அரங்கமா அதன்கண் ஆடுவான்` என்றல் கருத்து என்க. எவ்வுயிர்க்கும் - எத்துணைச் சிறப்புடைய உயிர்க்கும். அவை அயன்,மால், ஏனைத் தேவர் முதலியோர். `அவரெல்லாம் அவனைப் பன்னாள் பணிந்து இரந்தே தத்தம் பதவிகளைப் பெற்றனர் என்றபடி. எனவே, `அவனைப் பன்னாள் பணிந்து இரந்தால் திருவுளம் இரங்குவான்` என்பதற்கும், `இரங்கினால் எத்தகைய சிறப்பைத் தான் அவன் தரமாட்டான்` என்பதற்கும் அவ் அயன், மால் முதலியோரே சான்று` என்றவாறு. ஏழாய் - அறிவிலியே. இது தமது நெஞ்சத்தை விளித்தது. `இரங்குமோ` என்னும் ஓகாரம் எதிர்மறை. `இரங்கு மேல்` என்ற அனுவாதத்தால், இரங்குதலும் பெறப்பட்டது. அளித்தல்- காத்தல். `எத்தகைய சிறப்பையும் எய்தச் செய்வான். எந்த உலகத்தையும் ஈந்து அளிப்பான்` எனக் கூறற்பாலதனை இங்ஙனம் வினாவாகக் கூறினார். வலியுறுத்தித் தெளிவித்தற்கு `சிவன் வாளா இரங்கான்; பன்னாள் பணிந்து இரந்தால் இரங்குவான்` என்பது உணர்த்தியவாறு.
சும்மா கிடைக்குமோ சோணாசலன்பாதம்
அம்மால் விரிஞ்சன் அறிகிலார் நம்மால்
இருந்துகதை சொன்னக்கால் என்னாகும் நெஞ்சே
பொருந்த நினையாத போது*
எனப் பிற்காலத்தவரும் கூறினார்.
சிவன்எனும் நாமம் தனக்கே உடைய
செம்மேனிஎம்மான்
அவன்எனை ஆட்கொண் டளித்திடுமாயின்
அவன்றனை யான்
பவன்எனும் நாமம் பிடித்துத் திரிந்து
பன்னாள் அழைத்தால்
இவன்எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று
எதிர்ப்படுமே.
என்பது அப்பர் திருமொழி.
உழப்பின் வாரா உறுதிகள் உளவோ!
கழப்பின் வாராக் கையற வுளவோ!
என்றார் பட்டினத்தடிகள்.

பண் :

பாடல் எண் : 79

பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால்
அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும்
எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`படர்சடையான் பாதங்கள்` என்பதை முதலிற் கொள்க. போது - பேரரும்பு. அணிதல் - அலங்கரித்தல். வினைக்கண் வந்த எண்ணும்மைகள் ஆட்செய்யும் வகைகளை எண்ணி நின்றது. கொல், அசை. ஓகாரம் சிறப்பு. `சிந்தையார்` என உயர்த்தற்கண் அஃறிணை உயர் திணையாய் மயங்கிற்று.
செருக்கு - பெருமிதம். அஃதாவது, `ஒருவரை மதியாது உறாமைகள் செய்தல்` 3 பெரு மிதத்தைத் தம் சிந்தைமேல் வைத்து, அதனை வேறுபோற் கூறினார். `சிவனுக்கு ஆட்செய்யப் பெறுகின்ற பேறு கிடைத்தற்கரியது` என்பதைக் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 80

செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள்
அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க
மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக்
காலனையும் வென்றுதைத்த கால்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திருத் தக்க` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. திரு - திருமகள். `திருவுக்குத் தக்க` என நான்கன் உருபு தொகுத்தலாயிற்று. திருவினால் தக்க என மூன்றன் உருபு விரிப்பின் மாலுக்குக் குறையுண்டாகும். `காணாது` என்பதை, `காணப்படாது நின்று` எனச் செயப்பாட்டு வினைப் பொருட்டாக்கி, அதனை, `ஏத்தக் காணப்பட்ட` என ஒரு சொல் வருவித்து முடிக்க. இல்லையேல், `ஏத்த` என்பதற்கு முடிபின்றாம். `காணப்பட்ட கால்` என்க. `வென்று உதைத்த` என்பதனை, `உதைத்து வென்ற` எனப்பின் முன்னாக வைத்து, விகுதி பிரித்துக் கூட்டியுரைக்க. `கால் அடர்த்த` என முடியும். அடர்த்த அடர்த்தன; ஒறுத்தன. வெற்பு - கயிலை மலை. `எத்தனையோ` என்றது, `பல` என்றவாறு. எண் வரையறை கூறாது இங்ஙனம் கூறியது. அவனது வலிமிகுதியைக் குறித்தது, அதனானே அவன் செருக்கியதன் காரணத்தை உணர்த்தற்கு. அரக்கன், இராவணன். உம்மை, பிறருக்கில்லாத அவனது தலைகளும், தோள் களும் பற்றிய சிறப்பைக் குறித்தது. முன் நிற்றல், அனைத்துறுப்புக் களும் பின் நிற்கத் தான் முன்னிற்றல். அதனால், `அஃதே, காண் பார்க்கு முதலிற் காணப்படுவது` என்பதும் பெறப்பட்டது. `அத்துணை வலியன் தோளால் முயன்று எடுத்த மலையை, தாளால் (அதனுள்ளும் ஒரு விரலால்) தடுத்து ஒறுத்தவனோடு இகலி நிற்பார் யாவர்` என அவனது அளவிலாற்றலைக் குறித்தது, அதனானே அவனது தன்வயம் உடைமையையும் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 81

காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல
அரணார் அவிந்தழிய வெந்தீஅம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கோல அரணார்` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. கோலம் - அழகு. அரண் - மதில். முப்புரம். அரணார் - அவற்றையுடைய அசுரர். `அவிந்து அழிய` என்பது ஒரு பொருட் பன்மொழி. தீ - தீக்கடவுள் `தீக் கடவுளாகிய அம்பு` - என்க. சரண அரவிந்தங்கள் - திருவடியாகிய தாமரை மலர்கள். சார்ந்து - சார்ந்தமையால். கழன்றோம் - நீங்கினோம். கை, இடைச்சொல். மேல், இடமேல். அது காலத்தால் `கீழ்` எனப்படும்.ஐ சாரியை. மேலை வினை- முன்னே சேர்ந்து கிடக்கின்ற வினை; சஞ்சித கன்மம். `வேரோடு` என மூன்றாவது விரிக்க. சஞ்சிதம் இன்மையால், `பிறவியில்லையாயிற்று` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 82

சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது
பேர்ந்தார்க்குத் தீக்கொழுந்தின் பெற்றியதாம் - தேர்ந்துணரில்
தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன்
வீழ்சடையே என்றுரைக்கும் மின்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தாழ் சுடரோனை` என்பது முதலாகத் தொடங்கி, `தேர்ந்து உணவில்` என்பதை ஈற்றிற் கூட்டி உரைக்க. தாழ் சுடரோன். மறைகின்ற சூரியன். எனவே, செங்கதிர், மாலை வெயிலாம். சாய்தல் - தோல்வியுறுதல். `சாயும் வண்ணன்` என இயையும். வீழ் - தொங்குகின்ற. மின் - மின்னல். `சடையே என்று உரைக்கும் மின்` என்றது உருவக அணி. `சடையே` என்னும் தேற்றேகாரம் உண்மையுவமைப் பொருட்டாய், உருவகத்தோடு இயைந்து வந்தது. `சார்ந்தார் இன்பமே பெறுதலால் அவர்க்கு அழகி தாயும், சாராதார் ஒறுத்தலே பெறுதலால் அவர்க்கு அச்சம் தருவதாயும் உள்ளது` என்க.

பண் :

பாடல் எண் : 83

மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காண்பார் கட்கு என்போலும்` எனக் கூட்டுக. என் போலும் - எதைப்போல இருக்கும். `தன்போலும்` என்றது, `சிவனைப் போல இருக்கின்ற பொற்குன்று` என்றபடி. இதனை நீல மணிக்கும் கூட்டி. `திருமாலைப் போல இருக்கின்ற நீல மணிக்குன்று` என்க. உலக இலக்கியங்களில் உபயோகத்தை மிக உயர்த்துக் கூறுதற்பொருட்டு. உபமான உபமேயங்களை நிலைமாற்றிக் கூறுதல் உண்டு. அங்ஙனம் கூறியவழி அஃது, `எதிர்நிலை உவமம்` என்றும், `விபரீத உவமை` என்றும் சொல்லப்படும். அதற்குக் காரணம் உலகப் பொருள்களில் உண்மையில் உயர்ந்து நிற்பது உவமையே. அதனை, `உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை` 1 என்னும் தொல்காப்பியத் தாலும் அறியலாம். இறையிலக்கியத்தில் உபமேயமாகிய இறையே உண்மையில் உயர்ந்து நிற்பது. எனினும் இலக்கண மரபு பற்றி அங்ஙனம் கூறுதல் கூடும். `பொற்குன்றும் நீல மணிக் குன்றும் உவம மாக வேறிடத்து வைத்துக் கருதப்படாது. அவையே பொருளாகக் காட்சியில் முன்னிலையில் வைத்து உணரப்படும்` என, அரியர்த்த உருவத்தைச் சிறப்பித்தவாறு. உடன் - ஒருசேர, `இரு பாதியாக` என்ற படி. நிற்கின்ற - நிற்கின்றன. நெடிது - நெடுங்காலம். `எல்லையில் காலம்` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 84

நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக
விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
கண்டாலும் முக்கணாங் கண்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`கொடிதாக` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்குங்கால், `வெந்தீ - இயற்கையிலே வெப்பம் உடையதாகிய தீ, மேலும் கொடிதாகி எரிக்க, அதனில்` என உரைக்க. விண்டார்கள் - பகையாகியவர்கள்; அசுரர். `ஆறும் கண்` என இயைக்க. ஆறுதல் - மகிழ்தல். காட்சியால் உள்ளம் மகிழ்தலை, `கண்களிப்பக் கண்டார்கள். 2 என்றது போல `கண் களித்தது` என்றல் வழக்கு `மூன்றாகிய கண்` என்றற்பாலதனை, `முக்கண் ஆம் கண்` என்றார். எனவே, முன் உள்ள `கண்` என்பது `பொருள்` எனப் பொதுமையில் நின்றதாம். `முக்கணான் கண்` எனப்பாடம் ஓதி. `சிவனது கண்கள்` என உரைத்தல் சிறக்கும். `நெடிது` என்பதற்கு, முன்னை வெண்பாவில் உரைத்தவாறே உரைக்க. பொங்கு எரி - எரிகின்ற நெருப்பு. நேரே போலும் - ஒப்பனவேபோலும். கடிது - மிக்கது. `கடுஞ் சுடர்` என்பதில் கடுமை வெம்மை குறித்தது. வெஞ்சுடர், ஞாயிறு. `போலும்` என்பது உரை யசை, `மங்கலம் என்பது ஓர் ஊர் உண்டுபோலும்` என்றல் போல. உவமம் அன்று. `சிவனது` மூன்று கண்களே முச்சுடர்கள்` என உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 85

கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. பெரியான் - மகாதேவன்; சிவன். `அவனை` எனச் சுட்டுப் பெயர் வருவிக்க. ஆர - நிரம்ப. எண், எண்ணம் - அதனைச் செய்வதாகிய என்றும் - என்று என்றும் சொல்லியும். கொல், அசை, ஓகாரம், ஐயப் பொருட்டு `என்` என்பது தாப்பிசையாய் முன்னும் சென்று இயைந்தது. பேரவாக் காரணமாக இங்ஙனம் ஐயுற்றவாறு. `காணப்பெறின்` என்பது, காணப்பெறலின் அருமை குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 86

பெறினும் பிறிதியாதும் வேண்டேம் எமக்கீ
துறினும் உறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மற்றொரு கண் நெற்றிமேல் சிறிது உணர்த்தி வைத்தான்றன் பேய் நற்கணத்தில் ஒன்றாய நாம், (இஃது) உறினும், உறாதொழியுமேனும் பிறிதுயாதும் பெறினும் வேண்டேம்` என இயைத்து முடிக்க. நெற்றிக் கண்ணைச் சிறிது உணர்த்தலாவது, `உளது` என்னும் அளவிலே காட்டுதல். நன்கு திறப்பின் உலகம் வெந்தொழி யும். கணம் - படை. `நற்கணம்` என்றமையால், சிவகணமாகிய பேய்கள். பாவப் பிறவியாகிய பேய்களாகாமை விளங்கும். ஞானி களை உலகம் அவர்களது புறக்கோலம் பற்றி, பித்தராக நினைப்பினும் அவர் பித்தராகாமை போல்வதே இது. ஊழி முடிவில் உடம்பின்றிச் சிறிதே உணர்வு மாத்திரமாய் இருக்கும் உயிர்களே சிவப் படைகளாகக் கூறப்படுதலின் உண்மை. எனவே, பௌதிக உடம்பு நீங்கிச் சிவனைச் சார்ந்திருக்கும் உயிர்களும் அவையாகவே விளங்கும் என்க. அம்மையார் மேற்காட்டிய திருப்பதிகங்களிலும் இவ்வந்தாதியின் இறுதியிலும் தம்மை, `காரைக்காற் பேய்` எனக் குறித்தமையால், அவர் அந்நிலையராகியே இறைவனைச் சார்ந்தமை தெளிவு. அதனால் நம்பியாரூரர் இவரது வரலாற்றை, `பேயார்` என்ற ஒரு சொல்லில் அடக்கி அருளிச் செய்தார்(1) சேக்கிழார். மெய்யில் ஊனுடை வனப்பை யெல்லாம் உதறி, எற்புடம்பே யாகி, வானமும், மண்ணும் எல்லாம் வணங்குப்பேய் வடிவ மானார்.1 பொற்புடைச் செய்ய பாத புண்டரீ கங்கள் போற்றும் நற்கணத் தினில்ஒன் றானேன் நான்என்று நயந்து பாடி. 2 என விரித்தும், அருளிச் செய்தார். இத்தகைய நற்பேறு கிடக்கப் பெற்ற பெருமிதம் பற்றி அம்மையார் தம்மை `நாம்` என்றும், `வேண்டேம்` என்றும், `எமக்கு` என்றும் பன்மைச் சொல்லாற் குறித்தருளினார். `பிற பேறுகளோடு தமக்கு இயைபில்லாமையால் அவை தம்மைக் கிட்டப் போவதில்லை` என்பது தோன்ற, `பெறினும்` என எதிர்மறை உம்மை கொடுத்துக் கூறினார். `பிற பேறுகள் எல்லாம் இதன் முன் எம்மாத்திரம்` என்பது கருத்து. உறுதல் நன்மை பயத்தல்.

பண் :

பாடல் எண் : 87

நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினால் எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நா மாலை - நாவால் தொடுக்கப் படும் மாலை; சொன் மாலை; பா மாலை. `நம் ஈசன் பொன் அடிக்கே` என்பதை முதலிற் கொள்க. `கொண்டு` என்பது `ஆல்` உருபின் பொருட்டாய இடைச்சொல். புனைந்து - அலங்கரித்து, ஓர் அறிவு, `அவனே நமக்கு எல்லாப் பொருளும், பிறிதொன்றும் பொருளாவதில்லை` என அறியும் அந்த ஒருமை அறிவு. `ஏ தாய், அற்றாய் அடும்` என்க. ஏது, `யாது` என்பதன் மரூஉ. எற்று - என்ன தன்மைத்து. அடும் - வருத்தும். எறி - தாக்குகின்ற. `வினையே` என்னும் ஏகாரம். அசை. `வினை யென்னும் இருள்` என்றது உருவகம். இருள் - துன்பம். துன்பம் தருவதனைத் `துன்பம்` என்றது உபசாரம். பற்றினால், இருள், ஏதாய், எற்றாய் அடும்? என முடிக்க. `வினாக்கள், யாதாயும், எற்றாயும் அடாது` என்னும் எதிர் மறைப்பொருள் குறித்து நின்றன. `சிவனுக்குப் பணி செய்து நிற்பாரை வினை அணுகமாட்டாது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 88

இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நன்றுடையாய்` என்பது முதலாகத் தொடங்கி, `உன்னுடைய கண்டத்து ஒளியை யான் என் என்கோ! எமக்கு அருள்` என முடிக்க. `எமக்கு அருள்` என்பது வேறு தொடராதலின், ஒருமை பன்மை மயக்கம் அன்மை உணர்க. என்கோ - என்பேனோ. ஓகாரங்கள் - ஐயப் பொருள வாயினும், `எவ்வாறு கூறினும் பொருந்தும்` என்பதே. மா - கருமை. மருள் - மருட்கை; வியப்பு. `வியப்பைத் தரும் மணி` என்க. இதில் சாரியை நிற்க இரண்டன் உருபு தொக்கது, பெயர்த் தொகையாகலின். அருள் - சொல்லியருள். நன்று உடையாய் நன்று ஒன்றையே உடையவனே. `நன்றுடை யானைத் தீயதில்லானை`* என அருளிச் செய்தமை காண்க. நக்கு இலங்குதல் - ஒளிவிட்டு விளங்குதல்.

பண் :

பாடல் எண் : 89

ஒளிவிலி வன்மதனை ஒண்பொடியா நோக்கித்
தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம்
உண்டவாய் அஃதிருப்ப உன்னுடைய கண்டமிருள்
கொண்டவா றென்இதனைக் கூறு.

பொழிப்புரை :

பொழிப்புரை எழுதவில்லை

குறிப்புரை :

ஒளி வில் - அழகையுடைய வில்; கரும்பு வில். வில்லி - வில்லையுடையவன். இஃது இடைக்குறைந்து நின்றது. பொடியாக - சாம்பலாகும் படி, நோக்கி - (நெற்றிக் கண்ணால்) பார்த்து. இவ் எச்சம், எண்ணின் கண் வந்தது. தெளிவு - ஞானம். சேர்வாய் - சேர்பவனே, ஒளி நஞ்சம் - ஒளிக்கப்பட்ட விடம், `வாயாகிய அஃது\\\' என்க. அஃது - அவ்வுறுப்பு. இருப்ப - கறை படாமலே இருக்க. `கண்டமும் கறைபடாமல்தான் உள்ளது; ஆயினும் உள்ளிருக்கும் நஞ்சின் கறை வெளித் தோன்றுதலை உலகம் கண்டம் கறைபட்டதாக எண்ணுகின்றது\\\' என்பதாம். `எந்த ஒரு பொருளும் இறைவனை மாசுபடுத்துதல் இயலாது\\\' என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 90

கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித்திட்
டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறி
விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்தோடுங் கங்கைத் திரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`எந்தாய்` எனத் தொடங்கி, `கங்கை மிகப் பெருகின், அரவும், மதியும், ஈர்த்து ஒடும்; (அப்பொழுது) நீ என் செய்வாய்? ஈது எமக்குக் கூறு` என இயைத்து முடிக்க. எந்தாய் - எம் தந்தையே. `சடையை அழித்திட்டு மீது ஏறப் பெருகின்` என்க. அழித்தல் - கட்டுக்கு அடங்காது போதல். `சீறி விழித்து ஊரும் அரவு` என்க. தெழித்து - ஆரவாரித்து. திரை - அலை. `என் செய்வாய்` என நகையாடிக் கூறியது, `கங்கை என்னும் அவ்வாறு பெருகப் போவது இல்லை` எனப் பழித்தது போலப் புகழ்ந்தது.

பண் :

பாடல் எண் : 91

திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய்
உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ
இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே
எம்மைப் புறனுரைப்ப தென்

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உரை - சிவனைப் பற்றிக் கூறும் புகழுரையும், பொருளுரையும். அவை தோத்திர சாத்திரங்களாம். உணர்ந்தோம் - உணரற்பாலனவற்றை யெல்லாம் உணர்ந்தோம். `இனி வேறு உரைகள் பற்றியாம் உணரற்பாலது யாதுமில்லை` என்பதாம். கண்டீர், முன்னிலை யசை. ஓகாரம், அசை. `அதனால், இம்மைக்கும், அம்மைக்கும் ஆவன யாவற்றாலும் அமைந்தோம்; இஃது அறியாது, நீவிர் எம்மைப் புறங்கூறுதல் ஏன்` - என வேண்டும் சொற்கள் வருவித்து முடிக்க. அமைதல் - நிரம்புதல். ஏகாரம் தேற்றம். புறன் உரைத்தல் - காணாத வழி இகழ்ந்துரைத்தல். அஃதாவது, `பித்தனைப் பேணித் திரிகின்றார்` எனக் கூறுதலாம். இங்ஙனம் கூறுவோர் புறச் சமயிகள் ஆதலின், முதற்கண், `புறச் சமயத்தீர்` என்பது வருவித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 92

என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந்
தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச்
சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்
கருளாக வைத்த அவன்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

உடையான் - ஆளாக உடைய தலைவன். ஏகமாய் நிற்றல் - ஒப்பாரும், மிக்காரும் இல்லாது தனி முதல்வனாய் நிற்றல். தன்னை அறியாத தன்மையாவது, எத்துணையும் பெரியவ னாகிய தனது தன்மையைத் தான் எண்ணாமல், எத்துணையும் எளிய வனாய் வந்து அருள் புரியும் குணம். `பெறுமவற்றுள் யாம் அறிவ தில்லை` 1 என்பதிற்போல, அறிதல் இங்கு மதித்தல், `தன் பெருமை தானறியாத் தன்மையன்காண்` 2 என்று அருளிச் செய்ததும் இப் பொருட்டு. `அருளை வானோர்க்கு ஆகும்படி வைத்த அவன்` என்க.

பண் :

பாடல் எண் : 93

அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன்கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே
மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அவன்` என்றது முன்னை வெண்பாவிற் சுட்டிய அவனை. `என்றும் பிரான் ஆவான்` என்க. பிரான் - தலைவன். மைத்து அமர்ந்த - மையின் நிறத்தைக் கொண்டு பொருந்திய. இது தேவர் அமுதுண்ணத் தான் நஞ்சை உண்ட கருணையைக் குறித்தது. மற்று, அசை. `நன்னெஞேசை` என்பதை முதலிற் கூட்டுக. மெய்த்து - மெய்ம்மைப் பட்டு. அஃதாவது, `பயன் யாதும் கருதாத நிலையில் நின்று` என்றதாம். `மெய்த்து அமர்ந்த` என்பதின் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று. `மெய்த்து அமர்ந்த அன்பு` என்றது சிறப்பும், `விரும்பு` என்பது பொதுவுமாய்த் தம்முள் இயைந்து நின்றன.

பண் :

பாடல் எண் : 94

விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`மஞ்சுபோல் மால் விடையாய்` என்பதை முதலிற்கொள்க. மஞ்சு - மேகம். மேகம் போலும் நிறத்தையுடைய மால், திருமால். விடை - இடபம், `திருமாலாகிய இடபம்` என்பதாம். `சிவபெருமான் திரிபுரம் எரித்த காலத்தில் திருமால் அவருக்கு இடபவாகனமாய் இருந்தார்` என்பது புராண வரலாறு. தடமதில்கள் அவைமூன்றும் தழல்எரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.* என்னும் திருவாசகத்தைக் காண்க. பொருப்பன் - மலையரையன். அவன் மகள் உமாதேவி. அவளை நீ வேறு வையாது உன் உடம்பில் ஒரு பாதியாக வைத்திருப்பதற்குக் காரணம் யாது? அவள்மீது நீ வைத் துள்ள பெருவிருப்பத்தால் அவளை விட்டு நீ வேறாய் இருக்க ஆற்றாயோ? அவளுக்கு இருக்க வேறு இடம் இல்லையோ? உன்னை விட்டுப் பிரிந்து அவள் தனியேயிருக்க அஞ்சுகின்றாளோ? என் - யாது காரணம்? - என்க. `என்னோ` ஓகாரம் அசை. இவையெல்லாம் காரணங்களல்ல; இருவரும் இருவரல்லர்; ஓருவரே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. `பொருப்பன்மகள்` என்னும் சீரை, னகர ஒற்றுத் தள்ளி அலகிடுக.

பண் :

பாடல் எண் : 95

அவளோர் குலமங்கை பாகத் தகலாள்
இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ
றென்பணிவீர் என்றும் பிறந்தறியீர் ஈங்கிவருள்
அன்பணியார் சொல்லுமினிங் கார்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`உம்முடைய ஒரு பாகத்தினின்றும் நீங்கா திருப்பவளாகிய அவள் (நீ முறைப்படி மணந்து கொண்ட) குல மங்கை` என்பது நன்கு விளங்குகின்றது. (அவள் நிற்க) இவள் ஒருத்தி யும் நீர் வடிவாய் (உமது தலையில் இருக்கின்றாள்) இவளையும் நீர் என்றும் பிரிந்தறியீர்; உம்முடைய தன்மை இதுவேயாய் உள்ளது. (இருக்கட்டும்) இவ்விருவருள் அன்பு மிகுதியால் நெருங்கிய உறவுடையவர் யார்? சொல்லுமின்` - என்க. `சொல்லுமின்` - என்றது. `பொருப்பன் மகள்தான் அன்பால் அணியளாய் இருக்க முடியும்; சலமகள் எங்ஙனம் அன்பாய் இருக்க முடியும்` எனக் குறித்தவாறு, `சலம்` என்பதற்கு, - `வஞ்சம்` - என்பதும் பொருளாகலின், அதனாலும் ஒரு சொல்நயம் தோற்றுவித்தவாறு. `பொருப்பன் மகளே உமது அங்கமும், பிரத்தியங்கமும் ஆவள்; ஏனைய வெல்லாம் உமது சாங்க உபாங்கங்களாம்` என்றபடி. பொருப்பன் மகளே சிவனது சத்தி; அவனது சம்பந்தத்தாலே சிவனது அணி, ஆடை, இடம் முதலியன சத்திகள் ஆகின்றன என்பது உணர்க. `கங்கையின் வீழ்ச்சியால் உலகம் அழிந்தொழியாதபடி அவளைச் சிவன் தன் தலையில் தாங்கிய தல்லது, காம தகனனாகிய அவனுக்கும் நம்மைப் போலக் காமம் உள தாகக் கருதுதல் மடமை யாதலின், நகைச் சுவை தோன்றவே புலவர்கள் அவனை இவ்வாறு கூறித் துதிக்கின்றனர்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 96

ஆர்வல்லார் காண அரன்அவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நாமும் சீர்வல்ல தாயத்தால்` என மாற்றி முதலிற் கூட்டி, `மாயத்தால் மறைத்து வைத்தோம்; இனி அரன் அவனை ஆர் காண வல்லார்` என இயைத்து முடிக்க. அன்பென்னும் போர்வை, உருவகம். `போர்வையது` என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. அன்பினுள் அகப்படுபவனாதல் பற்றி அன்பு அவனை மறைக்கும் போர்வையாக உருவகிக்கப்பட்டது. சீர், ஆகு பெயராய்ப் பாட்டை உணர்த்திற்று. `அவனைப் பாட்டால் போற்ற வல்ல தாயத்தால் என்க. தாயம் - செல்வ உரிமை. `நாமும்` என்னும் உம்மை மற்றைத் தொண்டர்களோடு என இறந்தது தழுவி நின்றது. தனி நெஞ்சம் - அன்பு மிக்கமையால் ஒப்பற்ற மனம். மாயம் - என்ற உபாயம். `அரனாகிய அவனை` என்க. `அன்புடையவர் கூடித் தங்கள் அன்பாகிய போர்த்து வைத்திருத்தலால் அன்பில்லாத பிறர் அவனை எங்ஙனம் காண முடியும்` என நயம்படக் கூறியவாறு. `அன்பில்லாதார் அரனைக் காணுதல் இயலாது` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 97

மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்
டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்
களைந்தெழுந்த செந்தீ யழல்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`நீ நிறைத்திட்டு எரிப்ப, உளைந்து எழுந்து, மூவுலகும் உள்புக்கு, அணைந்து எழுந்த செந்தீ அழலை உலகம் ஏழினிலும் மறைத்து வைத்தாயோ? அன்றேல், உறைப்போடும் உன் கைக் கொண்டாயோ? (அஃது இன்று உலகை எரிக்கவில்லையோ,) என இயைத்து முடிக்க. ஈற்றில் வருவித்து உரைத்தது இசையெச்சம். உறைப்போடும் - வலிமையோடும். உம்மை சிறப்பு. உளைந்து - சினந்து. `மூவுலகினும்` என்பதில் சாரியை தொக்கது. அணைந்து - விரவி. அழல் - சுவாலை. `யாதொரு பொருளும் இறைவனது சங்கற்பத்தைக் கடக்கமாட்டாது` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 98

அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாய்இதனைச் செப்பு.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

அங்கை - அகங்கை. ஆறு - பயன். தீ ஆடுவாய் - தீயின்கண் நின்று ஆடுவாய்; விளி. அகங்கையும், தீயும் அழகால் ஒன்றனை ஒன்று விஞ்சுவனவாய் உள்ளன` எனக் கூறி, அகங்கையின் மிக்க அழகைப் புகழ்ந்தவாறு. இஃது ஏது அணியின் பாற் படும்.

பண் :

பாடல் எண் : 99

செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட்
டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன்
றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய
நாகத்தாய் ஆடுன் நடம்.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`தான் அங்காந்து` என்பது முதலாகத் தொடங்கி யுரைக்க. செப்பு ஏந்து. கிண்ணம்போல நிமிர்ந்த. `கணமவை` என்பதில் அவை, பகுதிப் பொருள் விகுதி. பின் வந்த, `காணவோ` என்பதன்பின், `நிகழ்கின்றது` என்னும் பயனிலை அவாய் நிலையாக எஞ்சி நின்றது. `நடம் நிகழ்கின்றது` என இயையும். `எனக்கு ஒன்றாகச் செப்பு` என்க. ஒன்றாக - திட்டமாக. இனி, `நீ ஆடும்` என எழுவாய் வருவித்து. முடிப்பினும் ஆம். `எவர் காணுதற் பொருட்டும் நீ ஆடவில்லை; உனது கருணை காரணமாகவே நீ ஆடுகின்றாய்` என்பது குறிப்பு.
`ஆடும் எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும்..........
..............................
நாடும் திறத்தார்க்(கு) அருளல்லது நாட்ட லாமே?* `
என அருளிச் செய்தமை காண்க. அங்காத்தல் - வாய் திறத்தல். ஐவாய - ஐந்து வாய்களை உடைய. நாகத்தாய் - பாம்பை அணிந்தவனே.

பண் :

பாடல் எண் : 100

நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம்
இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல்
பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்ஏ
றுருமேறோ ஒன்றா உரை.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`பொன் ஒப்பாய், நின் ஏறு நடக்கில்` எனக் கூட்டி உரைக்க. படி - பூமி. நோக்கில் - கண் விழித்துப் பார்த்தால். `கண்ணினின்றும் எழும் தீயால் திசைகள் வேகும்` என்க. இடிக்கின் - கதறினால் ஏங்கும் - கதி காணாது கலங்கும். இதன்பின், `ஆதலால்` என்பது வருவிக்க. அடுக்கல் - மலை. `மலையின்கண் நின்று` என விரிக்க. பொரும் ஏறோ - இடபத்தானோ. உரும் ஏறோ - மேகத்தி னின்றும் தோன்றுகின்ற இடியேறோ, சிவனைச் சார்ந்தமையால், ஆனேறும் பிறவகை ஏறுகளினும் மிகுவலி பெற்றமையைக் கூறிய வாறு.

பண் :

பாடல் எண் : 101

உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக்
கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார்
ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார்
பேராத காதல் பிறந்து.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`காரைக்காற் பேய் சொல் இம்மாலை அந்தாதி வெண்பாக்களை உரையினால், கரைவினாற் பரவுவார் ஆராத அன்பினோடு சென்று அண்ணலைப் பேராத காதல் பிறந்து ஏத்துவார்` என இயைத்து முடிக்க. `மாலையாய் அமைந்த வெண்பா` என்க. மாலையாதல் சொற்றொடர்நிலைச் செய்யுள் ஆதல். `உரை` என்றது, `மனம், மொழி, மெய்` என்னும் மூன்றனுள் `மொழி` என்னும் மொழியைக் குறித்தது. கரைவு - அன்பு. பரவுதல், ஏத்துதல் இரண்டும் துதித்தலைக் குறிக்கும் சொற்கள். ஆராத - நிரம்பாத. பேராத - மாறாத. காதல் - பேரன்பு. பிறந்து தோன்றப் பெற்று. `கரைவினால் பரவுவார்` என்றது இவ்வுலகத்திலும், பின் வந்தவை சிவலோகத்திலும் ஆதலின் அவை கூறியது கூறல் அல்லவாதலை அறிக. சென்று - சிவலோகத்தை அடைந்து. இது நூற் பயன் கூறியவாறு. ஈற்றில் `பிறந்து` என்றது முதல் வெண்பாவின் முதற் சீரோடு சென்று மண்டலித்தல் காண்க. அற்புதத் திருவந்தாதி முற்றிற்று.
சிற்பி