ஐந்தாம் தந்திரம் - 13. சாலோக மாதி


பண் :

பாடல் எண் : 1

சாலோகம் ஆதி சரியா தியிற்பெறும்
சாலோகம் சாமீபம் தங்கும் கிரியையால்
சாலோகம் சேரில் வழிஆகும் சாரூபம்
பாலோக மில்லாப் பரனுறு ஆமே.

பொழிப்புரை :

சாலோகம் முதற் பயன் அது சரியையாகிய முதல் நெறியாற் பெறப்படுவதாகும். கிரியையாகிய நெறியால் அந்தச் சாலோகப் பயனில் சாமீபப்பயன் உண்டாகும். சாலோகத்தில் சாமீபம் கிடைத்தால் அதன் பின் சாரூபம் வரும். முடிவாக விரிந்த பல உலகங்களில் யாதொன்றிலும் இல்லாது பரசிவத்தோடே ஒன்றாகின்ற பயன் கிடைப்பதாம்.

குறிப்புரை :

`லோகம்` என்பது சிறப்புப் பற்றிச் சிவலோகத்தையே உணர்த்தலின், `சாலோகம்` என்பது சிவலோகத்தை அடைந்து அங்கு எவ்விடத்தும் செல்லும் உரிமையைப் பெறுதலாம். ``பெறும்`` என்றது, `பெறப்படும்` என்றதாம். ஏனைச் சாமீப சாரூபங்களும் அவ்வுலகத்தில் பெறும் பயனே யாதலின், அவற்றை, ``சாலோகம் தங்கும்`` எனவும், ``மாலோகம் சேரில் ஆகும்`` எனவும் கூறினார். இரண்டாம் அடியில், `சாலோகத்துக்கண்` என உருபு விரிக்க. இவ்வடியில், `சரியையால்` என்பது பாடம் அன்று. மூன்றாம் அடியிலும் அவ்வாறே `மாலோகத்துக்கண்` என உருபு விரித்துக் கொள்க. மாலோகம் - பெரிய உலகம்; சிவலோகம் ``சேரில்`` என்பதற்கு, `சாமீபம்` என்னும் வினைமுதல் மேலையடியினின்றும் வருவிக்க. வழி - பின்பு. பரன் - பரசிவன். அவன் உரு ஆதல், அவனோடு ஒன்றாதலாம். இதுவே சாயுச்சம். ``வழி ஆகும்`` என்றதனால் `அஃது யோகத்தால் வரும்` என்பது பெறப்பட்டது. படவே எஞ்சி நின்ற ஞானத்தின் பயனே சாயுச்சமாதல் விளங்கிற்று` சாயுச்சம் - இரண்டறக் கலத்தல். சாலோக முதலிய பயன்கள் மூன்றும் முறையே பணியாளர், மைந்தர், தோழர் என்னும் இவர்கட்கு உள்ள உரிமையோடொத்தலின், சரியை முதலிய மூன்றும் முறையே `தாசமார்க்கம் சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம்` எனவும் சாயுச்சமே சிறந்தபயனாகலின் ஞானம் `சன்மார்க்கம்` எனவும் பயன் பற்றிப் பெயர் பெற்றன என்றார் சிவஞான போத மாபாடியம் உடையார்.
இதனால், சரியை முதலிய நானெறியின் பயன் சாலோகம் முதலிய நான்குமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சமயம் கிரியையில் தன்மனம் கோயில்
சமய மனுமுறை தானே விசேடம்
சமயத்து மூலந் தனைத்தேறல் மூன்றாம்
சமயாபி டேகம்தா னாகும் சமாதியே.

பொழிப்புரை :

தீக்கைகளில் சமயதீக்கை சிவனை மனத்தால் நினைக்கப் பண்ணும். விசேடதீக்கை சைவ சமய மந்திரங்கள் பல வற்றை பல முறையில் பயிலப் பண்ணும். மூன்றாவதாகிய நிருவாண தீக்கை சைவ சமயத்தின் முதற் பொருளுளாகிய சிவனது பெருமையை உள்ளவாறுணர்ந்து, `அவனே முதற்கடவுள்` எனத் தெளியப் பண்ணும். சைவ அபிடேகம் தான் சிவமாயே நின்று பிறர் சிவனது திருவருளைப் பெறும் வாயிலாய் விளங்குப் பண்ணும்.

குறிப்புரை :

இங்கு, ``கிரியை`` என்றது, சிவனது கிரியா சத்தியின் செயற் பாடாகிய தீக்கையை. இதனை முதலில் வைத்து, எல்லா வற்றோடும் கூட்டி உரைக்க. மனத்தைக் கோயிலாக்குதலாவது, சிவனைப் புறத்தில் பல வடிவங்களில் கண்டு தொழுதல் மாத்திரையான் அன்றி, தியானிக்கும் நெறியைத் தருதல். இதனை `அனுட்டானம்` எனப. பல மந்திரங்களைப் பல வகையில் பயிலல் எனவே, `கிரியை, யோகம்` என்னும் இரண்டும் அடங்கின. தான் சிவமாய் நின்று பிறரும் திருவருள் பெறுதற்கு வாயிலாவது ஞானா சிரியனாய் விளங்குதலாம். `சரியை முதலிய நான்கும் சமயம் முதலிய தீக்கைகளால் இங்ஙனம் ஒன்றின் ஒன்று உயர்ந்த நிலையை உடைய ஆதலின், பின்னர் அவற்றால் விளையும் பயனும் அன்னவாயின` என்றவாறு.
இதனால், மேற்கூறிய நெறிகட்கும், அவற்றின் பயன்கட்கும் உளவாய இயைபு கூறப்பட்டது. அபிடேகம் பெறாதோரும் ஞானியராய்ச் சாயுச்சம் பெறுவராயினும், அவரினும் ஆசிரியராய் விளங்கினோர் பிறரையும் உய்விக்கும் சிறப்புடையர் என்றற்கு அவரையே சாயுச்சம் பெறுவார்போலக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 3

பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
பாசம் அருளான தாகும்இச் சாமீபம்
பாசம் சிவமான தாகும்இச் சாரூபம்
பாசங் கரைபதி சாயுச் சியமே.

பொழிப்புரை :

சாலோகம், மாயா கருவிகள், தாமே உயிர் என்று உயிரை மருட்டி அதனைத் தம் வயப்படுத்தியிருந்த நிலை நீங்கித் தாம் அதனின் வேறாய சடங்களாதலைத்தோற்றி, அதன்வயப்பட்ட நிலையை உடையது. சாமீபம், அக்கருவிகள் அருள்வயப்பட்டதாய் உயிர் இறைவனை அணுகுதற்குத்துணை செய்து நிற்கும் நிலையை உடையது. சாரூபம், அக்கருவிகள் சிவமயமாய் உயிருக்குச் சிவானந்தத்தைத் தரும் நிலையை உடையது. சாயுச்சம், அக்கருவிகள் யாவும் கழிய, உயிர் தான் நேரே சிவனைக் கூடியிருக்கும் நிலையை உடையது.

குறிப்புரை :

மூன்றாம் அடியில், `சிரமானது` என்பது பாடம் அன்று. ``பதி`` என்பது, `பதியோடு ஒன்றாய் இருக்கும் நிலை` எனப் பொருள் பட்டு, `பழம் உதிர்ந்த கோடு` என்பது போல நீக்கப் பொருட்டாய வினைத் தொகையாய்க் ``கரை`` என்பதனோடு தொக்கது. ``ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள``1 என்ற அனுபவநிலை. பாசம் அருளானதாதலை ஓர்ந்துணர்ந்துகொள்க.
இதனால், சரியை முதலியவற்றின் பயனாய சாலோகம் முதலிய நான்கின் இயல்பு வேற்றுமை கூறப்பட்டது.
சிற்பி