மூன்றாம் தந்திரம் - 1. அட்டாங்க யோகம்


பண் :

பாடல் எண் : 1

உரைத்தன வற்கரி ஒன்று முடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.

பொழிப்புரை :

கணிநூலில் (சோதிட நூலில்) சொல்லப்பட்ட வரிசையான பன்னிரண்டு இராசிகளையும் யாடும் (மேடமும்), அரிமாவும் (சிங்கமும்) முதலாய் நிற்பத் தொடங்கி முடியும் வகைகளில் முறையானே எண்ணி யோக உறுப்புக்கள் எட்டனையும் முன்பு உணர்த்தியருளிய நந்திபெருமான், அவைகளில் முறையான விலக்கு விதிகளை அருளிச் செய்தார்.

குறிப்புரை :

வற்கு - யாடு. பன்னிரண்டு இராசிகளை எண்ணும் பொழுது மேடம் முதலாக எண்ணுதலே யன்றி, சிலவற்றிற்குச் சிங்கம் முதலாக எண்ணுதலும் உளதாதலின், ``வற்கு அரி ஒன்று முடிய`` என்றார். ஒன்று முடிய - ஒன்றாகத் தொடங்கி முடிய. ``நிரைத்த இராசி`` என்றதனை, ``உரைத்தன`` என்றதன் பின்னர்க் கூட்டுக. ``இராசியை எண்ணி`` என்றது, யோக நூற்குக் கணிநூல் துணையாக நிற்றல் கூறியவாறு. பிராசாதம் - யோகம்; அது, `பிரச்சதம்` என மருவி நின்றது. யோக உறுப்புக்கள் எட்டு, பின்னர்க் கூறப்படும். `இயமம், நியமம்` என்பன இங்கு யோக உறுப்புக்களைக் குறியாது `விலக்கு, விதி` என்னும் பொருளவாய் நின்றன.
இதனால், யோகப் பயிற்சி, கணிநூல் கூறும் கால இயல்பை நோக்கி அதற்கேற்பச் செய்யப்படுதலும், யோகத்தின் உறுப்புக்கள் எட்டாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசத்தி உத்தர பூருவம்
எய்தக் கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே. 

பொழிப்புரை :

மேற்கூறியவாறு நந்திபெருமான் அருளிச்செய்த விலக்கு விதிகளால் சமாதி நிலையை அடைந்து யாவரும் உய்தற் பொருட்டு, ஞானம் இறுதித் தந்திரங்களில் வர நிறுத்தி, முன்னே உள்ள சில தந்திரங்களில் கிரியைகளாகிய கவசம், நியாசம், முத்திரை முதலியவைகளுடன் யோக நெறியையும் கூறுவேன். `இயம நியமத்தால்` என உருபு விரிக்க.

குறிப்புரை :

`உத்தரம் பராசத்தி எய்த, பூருவம் கவசம் நியாசங்கள் முத்திரை இந்நெறி எய்த உரைசெய்வன்` எனக் கூட்டுக. ஞானமாவது திருவருளே யாதலின், ``பராசத்தி`` என்றார். `முத்திரையோடு` என உருபு விரிக்க. ``இந்நிலை`` என்றது, மேல் `பிரச்சதம்` எனக்கூறிய யோகத்தை.
இதனால், சரியை கிரியா யோகங்களாகிய தவங்கள் ஞானத்திற்குச் சாதனமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அந்நெறி இந்நெறி என்னாதே அட்டாங்கந்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புன்னெறி ஆகத்திற் போக்கில்லை யாகுமே. 

பொழிப்புரை :

`நாம் கொண்ட நெறி நன்றோ, இது வல்லாத பிறிதொரு நெறி நன்றோ` என்று ஐயுற்று அலமராது, எந்நெறிக்கும் வேண்டப்படுவதாகிய அட்டாங்கத்தை உடைய யோக நெறியிலே சென்று, உம்மால் விரும்பப்படுகின்ற பொருளிலே உள்ளம் ஒடுங்குங்கள். இவ்வாறு ஒடுங்கும் நன்னெறியில் நிற்பவர்க்கு ஞானத்தை எளிதில் தலைப்படுதல் கூடும். பின்பு அந்த ஞானத்தின் பயனாகப் பிறவியாகிய இழி நெறியிற் செல்லுதல் இல்லையாம்.

குறிப்புரை :

யோகம் மெய்ந்நெறியாளர் பலர்க்கும் வேண்டப் படுவது ஆதலின், அவர் அனைவர்க்கும் பொதுவாயிற்று. புறத்துச் சென்று அலமந்த மனம் அவ்வலமரல் நீங்கி ஒருக்கம் உற்றபின், பொரு ளியல்புகள் எளிதில் உள்ளவாறு விளங்குமாகலின், ``இந்நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகல் ஆம்`` என்றார். ``ஆம்`` என்றது எளிதிற் கூடும் என்றவாறு. `பிற நெறிகளால் பொருளியல்பு உள்ள வாறு விளங்குதல் அரிது` என்பதை விளக்கவே, `இந்நெறி அந்நெறி என்னாது` என முதற்கண் கூறினார். `போலும்` என்பது ``போன்ம்`` என நிற்றல்போல், ``நில்லும்`` என்பது உம்மையுள் உகரங்கெட, ``நின்ம்`` என நின்றது. `நின்மின்` என்பது பாடமாயின், ``இந்நன்னெறி`` எனச் சுட்டு வருவிக்க. ஆகம் - உடம்பு.
இதனால், ஞானத்திற்குச் சிறந்த வழி யோகமாதல் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே. 

பொழிப்புரை :

அட்டாங்கம் (யோகத்தின் எட்டுறுப்புக்கள்) ஆவன, `இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி` என்பன.

குறிப்புரை :

``எண்ணிலா ஆதனம்`` என்றதனால், `ஆதனங்கள் பல` என்பதும், ``நயமுறும் பிரணாயாமம்`` என்றதனால், `பிரணா யாமமே மனத்தின் அலமரலாகிய இன்பத்தைத் தரும்` என்பதும், ``சய மிகு தாரணை`` என்றதனால், `தாரணை கைவரப் பெற்றவரே மனத்தை அடக்குதலில் வெற்றிபெற்றவராவர்` என்பதும் பெறப்படும். நயம் - இன்பம். சயம் - வெற்றி. அயம் -குதிரை. அயம்உறும் - குதிரை அடங்கப்பெறுகின்ற. ``குதிரை`` என்பது, உவம ஆகுபெயராய் வேகம் மிக்க மனத்தைக் குறித்தல் யோகநூல் வழக்கு. குதிரைக்கு வடமொழி யில் ``வாசி`` என்பது பெயராகையால் அஃது அடங்குதற் பொருட்டுச் செய்யப்படும் யோகம் ``வாசி யோகம்`` எனப்படுகின்றது.
இதனால், யோகத்தின் எண்வகை உறுப்புக்களும் தொகுத்து உணர்த்தப்பட்டன. இவை எட்டும் இங்குக் கூறிய முறையானே முதற் படி, இரண்டாம்படி முதலியவாய் அமையும் என்பது உணர்ந்து கொள்க.
சிற்பி