முதல் தந்திரம் - 4. உபதேசம்


பண் :

பாடல் எண் : 1

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியொ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. 

பொழிப்புரை :

மேல், ``அண்ட முதலான்`` எனக் குறிக்கப்பட்ட, அனைத்துலகிற்கும் முதல்வனாகிய சிவபெருமான், முன்னாளில், மேல்நிலையினின்றும் இறங்கி, என் வினைக்கேற்ற வகைகளாகத் தனது உண்மை நிலையை மாற்றிக்கொண்டு, கீழ்நிலையில் நின்ற தனது சத்தியை எனக்குப் பெருங்காவலாக அமைத்து நடாத்தித் தனது ஒப்பற்ற தனிப் பேரின்பத்தைத் தரும் அருள் நோக்கத்தை இன்று எனக்கு அளித்து, என் உள்ளத்தில் நீங்காது நின்று, அதனை அன்பி னால் கசிந்து கசிந்து உருகப்பண்ணி, எனது மலம் முழுவதையும் பற்றற நீக்கினான்.

குறிப்புரை :

`இழிந்து, கொண்டு நின்றதாள்` என்க. ``விண்`` என்றது மேல்நிலையை. அது, `பரநிலை` எனப்படுதலின், அந்நிலைக் கண் நிற்கும் அவனது சத்தி `பராசத்தி` எனப் பெயர்பெற்று நிற்கும். அந் நிலையினின்றும் இறங்குதலாவது, உலகை நோக்குதல். அது முன்னை நிலையிற் கீழ்ப்பட்டதாகலின், ``தண் நின்ற`` என்றார். தண்மை - தாழ்வு, ``தண்பதத்தாற் றானே கெடும்`` (குறள். 548) என்பதிற்போல `மெய்யை வினைக்கீடாய்க் கொண்டு` என்க. மெய் - உண்மை நிலை. அஃது அறக்கருணையாய் நின்று விளக்குதலைச் செய்தல். அதனை மாற்றிக் கொள்ளுதலாவது, மறக் கருணையாய் நின்று மறைத்தலைச் செய்தல். சத்தியை, `தாள் - திருவடி` என்றல் மரபு.
உலகை நோக்காது இயற்கையில் நிற்கும் பராசத்தி தனது ஒரு சிறு கூற்றில் `ஆதி சத்தி` என நின்று உலகைத் தொழிற்படுத்தும். அந் நிலையில் அஃது உயிர்கட்குச் சிவத்தைக் காட்டாது உலகத்தையே காட்டி நிற்குமாதலின், `திரோதாயி அல்லது திரோதான சத்தி` என்று சொல்லப் படும். `மறைக்கும் ஆற்றல்` என்பது இதன் பொருள். இறைவனது சத்தி இவ்வாறு செய்தல், உயிர்களை அனாதியே பற்றியுள்ள ஆணவ மலத்தின் சத்தியை மெலிவித்தற் பொருட்டாம். அது மெலிவுறுதலே `மல பரிபாகம்` எனப்படும். மல பரிபாகம் வந்தவுடன் அத்திரோதான சத்தி தானே அருட்சத்தியாய் மாறிப் பதிந்து, உயிரின் அறிவில் ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கும். இவ் வுணர்ச்சி, உயிருக்கு ஓர் அதிர்ச்சியாய்த் தோன்றும். அதுபற்றி அருட்சத்தி பதிதலை, `சத்தி நிபாதம்` என்பர். நிபாதம் - வீழ்ச்சி.
மலபரிபாகத்திற்கு முந்தின நிலை பாசத்தில் கட்டுண்டு கிடக்கும் நிலையாகலின் அது, `பெத்தம், பெந்தம், பந்தம், கட்டு` என் றெல்லாம் சொல்லப்படும். மல பரிபாகத்திற்குப் பிந்தின நிலை பாசத் தினின்றும் விடுபட்ட நிலையாகலின் அது, `முத்தி, மோட்சம், வீடு` என்றெல்லாம் சொல்லப்படும். பெத்த நிலையையே `முன்` என்றும், முத்தி நிலையையே `இன்று` என்றும் அருளிச்செய்தார். பெத்தநிலை திரோதான சத்திவழிப்பட்டே நிற்றலின் அதனை, ``தலைக்காவல்`` என்றார். ``முன்`` என்றதனை முதலில் வைத்து, ``வைத்து`` என்றதன் பின், ``நடாத்தி`` என்பது வருவித்து, `இன்று, காட்டி உருக்கி அறுத் தான்` என முடிக்க. அதிகாரம் வேறாயவழியும் முன்னைத் திருமந்திரத் தோடு தொடர்பு தோன்ற எழுவாயை அதனினின்றும் தோன்ற வைத்தார். களிம்பு உவமையாகுபெயர். இதனால், `ஆணவ மலம் செம்பிற் களிம்புபோல அனாதியே உயிரில் கலந்துள்ளது` என்பதும், அங்ஙனம் கலந்த கலப்பால், `உயிர் அனாதிபெத்த சித்துரு` என்பதும், `அதனை அறுத்தான்` என்றதனால், `சிவன் இயல்பாகவே மலம் இல்லாத அனாதிமுத்த சித்துரு` என்பதும், அவனது அருள் செம்பைக் களிம்பு நீக்கிப் பொன்னாக்குகின்ற இரசகுளிகை போல்வது என்பதும் பெறப்பட்டன. ஆனந்தக் கண் - ஆனந்தத்தைப் பயக்கும் கண்; அஃது அருட்கண். அதனை உணரச் செய்தலே வழங்கு தலாகலின், ``காட்டி`` என்றார். `முன், வைத்து நடாத்தி, இன்று, காட்டி, உருக்கி அறுத்தான்` என்றதனால், இது நாயனாரது அநுபவமேயாதல் பெறப்பட்டது.
``எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்``
என்றார் திருவாசகத்தும் (தி.8 சிவபுராணம். 31. 32). ``ஆய்`` என்றது, `ஆக` என்பதன் திரிபு.
இதனால், `உலகை நோக்காது நிற்கும் நிலையே இறைவற்கு உண்மை நிலை` என்பதும், உலகை நோக்கி நின்று செயல் புரியும் நிலை பொதுநிலை என்பதும், `பொதுநிலையில் நிற்பனவெல்லாம் மறைப்பு நிலையே` என்பதும், `அந்நிலை பலவற்றையும் அவனது சத்தி திரோதான சத்தியாய் நின்றே செய்யும்` என்பதும், `அச்செயல் களெல்லாம் செம்பில் உள்ள களிம்பைத் தேய்ப்பது போல உயிர் களைப் பற்றியுள்ள ஆணவ மலத்தைத் தேய்க்கும் செயல்களேயாகும்` என்பதும், `அம்மலம் தேய்வுற்றபொழுது அத்திரோதான சத்திதானே அருட்சத்தியாய் மாறி உயிரைப் பொதுநிலையினின்று நீக்கி, உண்மை நிலையை அடையச்செய்யும்` என்பதும், `இவையே இறைவன் என்றும் உயிர்கள்பொருட்டு இடையறாது செய்துவரும் செயல்` என்பதும் கூறப்பட்டன. படவே, `இறை, உயிர், தளை` என்னும் முப் பொருள்களின் இயல்பு பற்றிய ஆகமப்பொருள் பலவும் இவ்வொரு திருமந்திரத்தானே தொகுத்துக் கூறப்பட்டவாறு அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 2

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்
களிம்பணு காத கதிரொளி காட்டிப்
பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே. 

பொழிப்புரை :

என் மலத்தைப் பற்றற நீக்கியவனாகிய எங்கள் சிவபெருமான் நந்தி தேவரே. அவர் மேற்கூறியவாறு அருட்கண்ணை எனக்குத் திறப்பித்து ஆணவ மலமாகிய களிம்பை அறுத்து, அக் களிம்பு அணுக ஒண்ணாத சிவமாகிய மாற்றொளி மிக்க பொன்னை உணர்வித்து, பளிங்கினிடத்துப் பவளத்தைப் பதித்தாற் போல்வதொரு செயலைச் செய்தார். அவர் பதிப்பொருளேயன்றி வேறல்லர்.

குறிப்புரை :

பளிங்கு ஆன்மாவிற்கும், பவளம் சிவத்திற்கும் உள்ளுறை உவமமாய் நின்றன. எனவே, ``பளிங்கிற் பவளம் பதித் தான்`` என்றது, `ஆன்மாவாகிய என்னிடத்துச் சிவத்தை விளங்குவித் தான்` என்றதாயிற்று. பளிங்கு நீலமணியோடு சேர்ந்தவழி நீல மாயும், செம்மணியோடு சேர்ந்தவழிச் செம்மையாயும் சார்ந்ததன் வண்ண மாம் தன்மையுடையதாகலின், அவ்வுவமையால், `ஆன்மாவும் பாசத்தொடு சேர்ந்தவழிப் பாசமாயும் சிவத்தொடு சேர்ந்தவழிச் சிவமாயும் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது` என்பதும், `அத் தன்மைத்தாய ஆன்மா அனாதியே பாசத்தோடு சேர்ந்து நின்று பாச மாய்ப் பசுத்தன்மை எய்தி, அப்பாசம் நீங்கியவழிச் சிவத்தொடு சேர்ந்து பசுத்துவம் நீங்கிச் சிவமாம் தன்மையைப் பெற்று நிற்கும்` என்பதும், ``நந்தி பதித்தான்`` என்றதனால், `ஆன்மாவிற்குப் பாசத்தைப் பற்றறச் செய்து சிவமாந் தன்மையை எய்துவிப்பவன் ஆசான் மூர்த்தியே` என்பதும் உணர்த்தப்பட்டனவாம். இதனானே, `எம் போலியர்க்கு (சகல வருக்கத்தினருக்குச்) சிவபெருமான் ஆசான் மூர்த்தி வாயிலாகவே ஞானத்தை உணர்த்துவன்` என்பதும் கூறிய வாறு காண்க.
சிவம் செம்பொருளாகலின் பவளம் அதற்கு உவமை யாயிற்று.

பண் :

பாடல் எண் : 3

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காபசு பாசம்
பதியணு கிற்பசு பாசம்நில் லாவே. 

பொழிப்புரை :

(பதி ஒன்றேயன்றோ என்றும் உள்ளது? ஏனைய பசு, பாசம் இரண்டும் எவ்வாறு தோன்றின? என்று ஐயுறும் மாணாக்கரைக் குறித்து,) `பதி, பசு, பாசம்` என்று சொல்லப்படுகின்ற மூன்று பொருள்களில் பதி தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருளாதல் போலவே, ஏனைப் பசுவும், பாசமும் தோற்றம் இன்றி என்றும் உள்ள பொருள்களாம். (இவ்வுண்மை அறியாதார் பலவாறு கூறி மலைவர் என்பது கருத்து) பாசங்கள் பசுவைப் பற்றுமேயன்றிப் பதியினிடத்து அணுகமாட்டா. பசு, பதியினிடத்து அணுகும்; அவ்வாறு அணுகும் பொழுது அதனைப் பற்றியுள்ள பாசங்கள் அதனைப் பற்றிநில்லாது விட்டு நீங்கும். (என்று அருளிச்செய்தார்)

குறிப்புரை :

``அணுகின்`` என்றதனால், `அணுகுந் தன்மை உடையது` என்பதும், `அதனை உடையதாயினும், பாசப் பிணிப்பால் அணுகமாட்டாதாயிற்று` என்பதும், `அப்பிணிப்பு, கால எல்லையில் நெகிழுமாகலான் அங்ஙனம் நெகிழ்ந்தபொழுது பசு, பதியை அணுகும்` என்பதும் பெறப்பட்டன. பதி - கடவுள். பசு - உயிர். பாசம் - அவ்வுயிர்களைப் பிணித்துள்ள பொருள்கள். இவை மூன்றும் முறையே, `இறை, உயிர், தளை` எனத் தமிழிற் சொல்லப்படும்.
இத் திருமந்திரம் ஒர் ஐயம் அறுத்தது.

பண் :

பாடல் எண் : 4

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனுங்
கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்
தோயம தாய்எழுஞ் சூரிய னாமே. 

பொழிப்புரை :

கால வழிப்பட்டு, `குழவி, இளமை, முதுமை` என்னும் மாற்றங்களை உடையதாய் நிலையற்றதான இவ்வுடம்பு என்கின்ற கோயிலிலே நீங்காது குடிகொண்டு மறைந்திருக்கின்ற தலை வனாகிய சிவன், மூங்கிலில் மறைந்து நின்ற தீ, தான் வெளிப்படுங் காலத்து வெளிப்பட்டு விளங்குதல்போல, ஆன்மாவின் பக்குவ காலத்தில் மும்மல இருளை நீக்கி எழுகின்ற சூரியனாய் வெளிப்பட்டு விளங்குவான். அப்பொழுது அவன் தாயன்பினும் மிக்க பேரருளாகிய வெள்ளமாயும் நின்று பேரின்பத்தைத் தருவான்.

குறிப்புரை :

``எழும்`` என்றதை இரட்டுற மொழிந்து, முற்றாயும், எச்சமாயும் கொண்டு முறையே முன்னும், பின்னும் இயைக்க. இதனால், `ஆனந்தக் கண்காட்டிக் களிம்பறுத்தலையும், பளிங்கிற் பவளம் பதித்தலையும் சிவன் முன்னே செய்யாமைக்குக் காரணம் பக்குவம் இன்மை` என்பது கூறப்பட்டது. ``வேயின் எழுங்கனல் போலே`` என்றமையால், `பளிங்கிற் பவளம் பதித்தான்` என்ற உவமை பற்றிச் சிவம் புதிதாக வந்து ஆன்மாவின்கண் புகுவது போலும் என மயங்குதல் கூடாது; முன்பு விளங்காது யாண்டும் உடனாய் நின்ற அதுவே பின்பு விளங்கும் என்பதை உவமை காட்டி விளக்கிற்று இத்திருமந்திரம். உயிர் உடலின்கண் அதுவே தானாய் நிற்றல்பற்றியும், இதயத்தானத்திலும், புருவ நடுவிலும் வைத்துத் தியானித்தலை உடன்பட்டுக் கொள்ளுதல் பற்றியும், உயிரின்கண் நிற்கின்ற சிவனை, உடம்பினுள் நிற்பவனாகக் கூறினார்.
``நிலாவாத புலாலுடம்பே புகுந்துநின்ற கற்பகமே``(தி.6 ப.95 பா.4) என அப்பரும்,
``எந்தையே ஈசா உடல்இடங் கொண்டாய்
யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே``
-தி.8 திருவாசகம். கோயில்திரு. 10
என்று மாணிக்கவாசகரும் அருளிச்செய்தமையும் காண்க. ``இம்மெய்`` என்றது, `நிலையற்றதான உடம்பு` எனப் பொருள் தந்தது.

பண் :

பாடல் எண் : 5

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவ்வே
சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. 

பொழிப்புரை :

`பதியினைப்போல் அனாதியே` என மேல் விளக்கப்பட்ட பசுக்களும், பாசங்களும் முறையே சூரியகாந்தக் கற் களும், அவற்றை மூடியுள்ள பஞ்சும் போல்வனவாம். அவற்றுள், சூரிய காந்தக் கற்கள் தனியே நிற்கும் பொழுது தம்மை மூடியுள்ள பஞ்சு களைச் சுடமாட்டா. அது போலப் பசுக்கள் தனியே நின்று தம்மைப் பிணித்துள்ள பாசங்களை நீக்கமாட்டா. ஆயினும், அச்சூரிய காந்தக் கற்கள் சூரியன் வந்தபொழுது அதன் கிரணத்தைப் பெற்றுத் தம்மை மூடியுள்ள பஞ்சுகளைச் சுட்டெரிக்குமாறுபோல, சிவன் ஞானாசிரிய னாய் வந்த பொழுது பசுக்கள் அக்குருவின் அருளைப் பெற்றுத் தம்மைப் பிணித்துள்ள பாசங்களை அகன்றொழியச் செய்யும்.

குறிப்புரை :

``அவ்`` என்பது வகர ஈற்றுச் சுட்டுப் பெயர். `அவை` என்பது இதன் பொருள். இது, மேல், ``பசு, பாசம்`` என்பவற்றைச் சுட்டி, அவற்றை நிரல்நிறை வகையால் சூரிய காந்தத்திற்கும், சூழ் பஞ்சிற்கும் உவமிக்கப்படும் பொருளாக்கி நின்றது. `போலவே` என்பது பாடம் ஆகாமை அறிக. சூரியன் சந்நிதியில் சுடுதற்கு உப மேயம் கூறிய அதனால், தனியே நின்று சுடாமைக்கு உபமேயம் கொள்ளப்பட்டது. ஆரியன் - ஆசிரியன். ``சுட்டிடா`` எனவும், ``சுடும்`` எனவும் பொது உணர்வே பற்றிக் கூறினாராயினும், உண்மை உணர்வு பற்றி, `சுடுந்தன்மையைப் பெறா` எனவும், `பெறும்` எனவும் கூறுதலே கருத் தாதலின், உவமைக்கேற்ப, `அகற்றும் மலங்களே` என்னாது ``அற்ற மலங்களே`` என்றார். இதனால், `ஆன்ம அறிவு தன்னியல்பில் நின்று பாசத்தை நீக்குவதன்று; சிவனது அறிவைப் பெற்று அவ்வறிவாய் நின்றே நீக்கும்` என்பது உணர்த்தப்பட்டதாம். ``வேயின் எழுங்கனல் போலே`` என மேற்கூறியவாற்றால், `விறகில் உள்ள தீ வெளிப்படுதற்கு அதனைக் கடைவோன் நிமித்தமாம் அளவே யல்லது, அதனிடத்து தீயைப் புகுத்துவோனாகாமைபோல, மாணாக் கனது அறிவின்கண் உள்ள சிவஞானம் வெளிப்பட்டுத் தோன்றுதற்கு ஞானாசிரியன் நிமித்தமாதலல்லது, அதனை அவனறிவின்கண் புகுத்துவானல்லன்` என்றற்கு, `சூரியன் சந்நிதியில்` என உவமைக் கண்ணும், ``ஆரியன் தோற்ற`` எனப் பொருட் கண்ணும் கூறினார்.
``சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய
சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல்
ஆரியனாம் ஆசான்வந் தருளால் தோன்ற
அடிஞானம் ஆன்மாவில் தோன்றும்``
-சிவஞானசித்தி. சூ. 8. 28
என இதனை அருணந்தி சிவாசாரியர் இனிது விளக்கினமை காண்க. ``அற்ற`` என்றது முற்று. ``சுட்டிடா`` என்ற பன்மையால் உயிர்கள் பலவாதல் குறிக்கப்பட்டது.
இதனால் சிவஞானம் உண்டாதல் ஞானாசிரியனது வருகை இன்றி யமையாமை சிறந்ததோர் உவமத்தால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மலங்களைந் தாமென மாற்றி அருளித்
தலங்களைந் தான்நற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே. 

பொழிப்புரை :

யாவரும் புகழும் அம்பலத்துள் ஆடுவோனாகிய சிவபெருமான், எனது பக்குவத்தை அறிந்து எனக்கு ஐந்து மலங்களையும் போக்கித் தன்னைத் தந்து, சுத்த தத்துவங்கள் ஐந்தினாலும் தான் ஐந்தொழில்புரிவோனாய் நிற்கும் கருத்தை என்னளவில் தவிர்த்தான். தவிர்த்து, நன்மையைத் தரும் திருவைந் தெழுத்தால் என் உள்ளத்தில் நீங்காது விரும்பி நின்றான்.

குறிப்புரை :

`மலங்கள் ஐந்தாம், தலங்கள் ஐந்தான், புலம் களைந் தான், நலங்கள் ஐந்தான்` எனப் பிரித்துப் பொருள் கொள்க. `ஐந்த னானும்` என்பவற்றில் சாரியையும், உம்மையும் தொகுத்தல் பெற்றன. `மலங்கள் ஐந்தாம் என` என்றதற்கு, `மேல், அற்ற எனப்பட்ட மலங்கள் ஐந்து என்று சொல்லும்படி` என உரைத்து, `ஐந்து மலங்களும் அற் றொழியுமாறு` என்பது அதனாற் போந்த பொருளாக உரைக்க. ``அருளி`` என்றது, `தந்து` என்னும் பொருளது. அதற்கும், ``அறிந்து`` என்பதற்கும் செயப்படுபொருள் வருவித்து உரைக்கப்பட்டன. சுத்த தத்துவங்கள் சுத்த மாயையின் விருத்தியே (விரிவே) ஆகலின், அவற்றைத் ``தலங்கள்`` என்றார். ``சதாசிவம் ஆன`` என்றது, `சதா சிவன் முதலாக நின்ற` என்றவாறு. `அறிவு` என்னும் பொருளதாகிய `புலம்` என்பது இங்குக் கருத்தின்மேல் நின்றது. திரோதான சத்தி யோடு இயைந்து நின்று ஐந்தொழில் செய்வது பெத்தான்மாக்கள் பொருட்டேயாதலின், முத்தராகிய தம்மளவில் இறைவன் அக் கருத்தைத் தவிர்த்தான் என்றார். நலம் தருவனவற்றை, `நலம்` என்றார். நலம் - வீடுபேறு. `அதனைத் தரும் ஐந்து` எனவே, முத்தி பஞ் சாக்கரம் என்பது போந்தது. இஃது அற்ற மலங்களின் வாதனை வந்து மீண்டும் தாக்காதவாறு செய்யுமாகலின், உள்ளத்தில் சிவன் நீங்காது நிற்கும் நிலை அதனால் நிகழ்வதாகக் குறித்தார். `மலங்கள் ஐந்து, தலங்கள் ஐந்து, நலங்கள் ஐந்து` என்பன இவை என்பதனைப் பின்னர் விளக்குவார். ``அப் பொது`` என்றதில் அகரம் பண்டறி சுட்டு.
இதனால் சிவன் குருவாய் வந்து செய்த அருட்செயல்கள் ஒருவாறு வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

அறிவைம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீராழம் போல
அறிவறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபரனாமே.

பொழிப்புரை :

(பாசத்தில் அகப்பட்ட உயிரினது அறிவு தானே அதனின்றும் விடுபடமாட்டாதோ எனின், மாட்டாது. ஏன் எனின்,) ஆணவமாகிய இயற்கைப் பாசத்தின் வழிவந்து பற்றியுள்ள மாயையின் காரியமாகிய பொறி, புலன் முதலிய செயற்கைப் பாசத்தில் உயிரினது அறிவு கட்டுண்டு, நீரின் ஆழத்தில் அமிழ்ந்து கரை ஏற அறியாத நிலைமைபோல, அவற்றினின்றும் விடுபடும் நெறியை அறியாது இடர்ப்படும். ஆகவே, அதற்கு அந்நெறியை அறிவிப்போன் நீராழத்தினின்றும் எடுத்துக் கரையேற்ற வல்லவன் போல்பவனாய், ஆசிரியர்க்குள் மேலானவனாகிய ஞானாசிரியனே.

குறிப்புரை :

நான்றது - கட்டுப்பட்டது. ``உற்ற நீராழம் போல`` என்றாராயினும், `நீராழத்தில் உற்றதுபோல` என்றல் கருத்தென்க. `உற்ற நீராழம்போல நெறியறியாது` எனமாற்றுக. ``அறியாது`` என்றது முற்று. இஃது எதிர்மறைத் தொழில் உவமம். `நெறியாவது இது` என்பது அறிவித்தற்கு, `அறிவு அறிவுள்ளே அழிந்ததுபோல` என்றார். `உயிரினது அறிவு சிவத்தினது அறிவினுள்ளே பொருந்தித் தான் என்ப தொரு முதல் இல்லாது அழிந்தொழிந்தது போலும்படி` என்பது அதன் பொருள். இதுவே, `சிவமாந்தன்மை` எனப்படுவது. இந் நிலையைப் பன்னாள் பாவனையால் உணர்ந்து நிற்பின், பின்பு உண்மையிலேயே அஃது உண்டாவதாகும். இதனையே உப நிடதங்கள் `சோகம் பாவனை` என்றும், சிவாகமங்கள் `சிவோகம் பாவனை` என்றும் கூறும். சோகம் - அவன் நான் (ஆனேன்). சிவோகம் - சிவன் நான் (ஆனேன்). ``சோகம் எனப் பாவிக்கத் தோன்றுவன் வேறின்றிப் - பண்டைமறை களும்அதுநான் ஆனேன் என்று பாவிக்கச் சொல் லுவதிப் பாவகத்தைக் காணே`` என்று சிவஞானசித்தி (சூ. 9.7) நூல் இதனை எடுத்தோதுதல் காண்க. `அகம்பிரம்மாஸ்மி, தத்துவமசி` முதலிய வேதாந்த மகாவாக்கிய உபதேசங்கள் சோகம் பாவனையையும், `சிவத்துவமசி` என்னும் சித்தாந்த மகாவாக்கிய உபதேசமும், பஞ்சாக்கர உபதேசமும் சிவோகம் பாவனையையும் அடைவிப்பனவாம். இவை யெல்லாம் ஞானாசிரியனாலன்றி அடையலாகாமை அறிக.
இதனால், ஞானாசிரியனாலன்றி ஞானத்தை உணர்தல் கூடாமை, உவமையால் உணர்த்தப்பட்டது.
ஞானம் இவனொழிய நண்ணியிடும் நற்கல்அனல்
பானு ஒழியப் படின்.
என்றார் திருவருட்பயன் (பா.50).

பண் :

பாடல் எண் : 8

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்
தீமேவு பல்கர ணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே. 

பொழிப்புரை :

தீமை பொருந்திய பல கருவிகளுடன் ஒட்டிக் கிடக்கின்ற வினைகளைக் குருபரனது அருள் ஆவின்பாலில் கலந்து நின்ற நீரை அன்னப் பறவை பிரிப்பது போலப் பிரித்து அழித்தலால், பிறப்பிற்கு ஏதுவாகிய அவ்வினைகள் முழுதும் எரி சேர்ந்த வித்துப்போலக் கெட்டொழியும்.

குறிப்புரை :

``ஆமேவு பால்நீர்`` என்றதனை, `ஆவின் பால்மேவு நீர்` எனப் பொருட்கேற்ப மாற்றிக்கொள்க. `தாம் மேவு, தீமை` என் பன, கடைக்குறைந்து நின்றன. தாம் மேவு நித்தம் - சத்திநிபாதர் சென்று காண்கின்ற நடனம். நித்தம் - நிருத்தம். குருவடிவமும் சிவ பெருமான் கொள்கின்ற சகளத்திருமேனிகளுள் ஒன்றாதல் பற்றி அதற்கு ஈடாக ஆடும் கோலத்தைக் குறித்தார். சத்திநிபாதர்க்கு அக் கோலமும் அப்பயனைத்தருதல் நோக்கி. ஆடும் கோலமும் சத்தி நிபாதர்க்குப் பாசத்தை அறுத்துப் பேரின்பத்தைத் தருதலை,
மாயை தனைஉதறி, வல்வினையைச் சுட்டு, மலம்
சாய அமுக்கி, அருள் தான்எடுத்து - நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தானெந்தை யார்பரதந் தான். -உண்மை விளக்கம். 36
என்பதனால் அறியலாம்.
``உற்றன`` என்றது வினையாலணையும் பெயராய் வினை களைக் குறித்து நின்றது. அதன்பின் `பிரிக்கும்; அதனால்` என்னும் சொல்லெச்சங்கள் வருவித்து, `அன்னம்போல் நித்தம் கரணங்களுள் உற்றன பிரிக்கும், அதனால், பிறப்பு எரிசேர்ந்த வித்தாம்` என முடிக்க. `பிரிக்கும்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. தாம் ஏழ் பிறப்பு - தாமாகிய எழு பிறப்பு. இங்கு, ``தாம்`` என்றது ``உற்றன`` என முன்னர்க் கூறிய வினைகளை. `அவையே பிறவிக்கு வித்து` என்பார், ``தாம் ஏழ் பிறப்பு`` என்றார். பிறப்பிற்குக் காரணத்தை, `பிறப்பு` என்றது பான்மை வழக்கு.
`நுகர்வினை, கிடைவினை, வருவினை` என வினை மூன்றாகி நிற்கும். நுகர்வினை, இப்பிறப்பில் இன்பமாகவும், துன்பமாகவும் அனுப விக்கப்படுவன. இவற்றை, `பிராரத்தம்` என்பர். கிடைவினை, இனி வரக்கடவனவாகிய எண்ணற்ற பிறவிகட்கு ஏதுவாய்த் திரண்டு கிடப் பவை; இவற்றை, `சஞ்சிதம்` என்பர். வருவினை, நுகர்வினையை அநுபவிக்கும்பொழுதே செய்யப்பட்டு வருவன. இவற்றை, `ஆகா மியம்` என்பர். இவற்றுள் கிடைவினையே எண்ணற்ற பிறவிகட்கு ஏதுவாய் நிற்றலால், குருவருள் அதனையே எரி சேர்ந்த வித்துப்போல அழிக்கும். அதனால் பிறவி அறும்; பிறவியற்ற நிலையே வீடு. எனவே, குருவருளால், பாசநீக்கமும், வீடுபேறும் உளவாதல் அறிக.
இதனால், குருபரன் அருள்செய்யுமாறும், அவ்வருளால் எய்தும் பயன்களும் கூறப்பட்டன. குருவருளால் கிடைவினை எரிசேர்ந்த வித்தாய்விடுதலை, ``எல்லைஇல் பிறவி நல்கும் இருவினை எரிசேர் வித்தின் ஒல்லையின் அகலும்`` எனச் சிவப்பிரகாச (பா.89) நூலும் கூறுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 9

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே. 

பொழிப்புரை :

குருவருளால் சிவயோகம் கைவரப் பெற் றவர்கள், பிறவிக்கு வித்தாகிய கிடைவினையை (சஞ்சித கருமத்தை) முற் கூறியபடி அழித்து, குரு அருளிச்செய்த உபதேச மொழியிலே உறைத்து நின்று, சுத்த துரிய நிலை மிகவும் தோன்றப் பெற்று, ஐம் புலன்களை நுகர்கின்ற உணர்வு அவற்றால் கட்டுண்ணாமலே அவற் றோடு பொருந்தி நிற்கச் சிவத்தோடு ஒன்றாய் உடம்பு உள்ளபொழுதே செத்தார்போல உலகத்தை நோக்காது புருவ நடுவிலே நிற்பார்கள்.

குறிப்புரை :

வியாக்கிரம் - முடிவிடம்; ஆறாவது ஆதாரம். உணர்வை, ``உயிர்`` என்றார். `சிவத்தோடு` என்பது ஆற்றலால் வந்தது. மேற்குறித்த சிவோகம் பாவனையின் முதிர்ச்சியே `சிவ யோகம்` எனப்படுவது. இது ஞானத்தில் யோகம். இது கைவரப்பெற்ற நிலையே சுத்த துரியம். இயமம் முதலிய எட்டுறுப்புக்களை உடைய யோகம் தவயோகம் என்க. சிவயோகத்தில் நிற்பவர்கள் காண்ப வற்றையெல்லாம் சிவமாகக் காண்பதன்றிப் பிறவாகக் கண்டு விருப்பு வெறுப்புக்கள் கொள்ளுதலும், இன்பும், துன்பும் உறுதலும் ஆகிய வேறுபாடுகளுள் யாதொன்றும் இல்லாதிருத்தலை, ``செத்திட் டிருப்பர்`` என்றார். இதனால், குருவருளைப் பெற்றாரது நிலைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்
அவயோகஞ் சாரா தவன்பதி போக
நவயோகம் நந்தி நமக்களித் தானே. 

பொழிப்புரை :

மேற்குறிக்கப்பட்ட சிவயோகமாவது, `சித்தாகிய (அறிவுடைப் பொருளாகிய) ஆன்மாவும், தானே அறியும் தன்மை இன்மையால் தானே அறிந்தும், அறிவித்தும் நிற்கின்ற சிவத்தை நோக்க அசித்தாம் (அறிவில்லாத பொருளேயாம்) என்றுணர்ந்து, ஏகமாந் தன்மையுள் மிகச்சென்று, சிவனது அருளொளியே தானாகப் பெற்று, பிற பொருள்களைச் சார்தலாகிய பயனில்லாத சேர்க்கையிற் செல்லாதபடி, மிகுகின்ற அன்பினால் விளைகின்ற சிவபோகத் தினைத் தருகின்ற புதியதோர் யோகம். அதனையே எங்களுக்கு நந்திதேவர் அளித்தருளினார்.

குறிப்புரை :

சிவனை நோக்க உயிர் அசித்தாதலை, ``அவனுக்கு இவனும் அசித்தாமே``(சிவஞானசித்தி. சூ. 11- 11 1) என்பதனான் அறிக. `தவப்புக்கு` என இயையும். தவ, உரிச்சொல். `யோகம்` நான்கில் முன்னது ஒழிய ஏனை மூன்றும் `ஒன்றாதல்` என்னும் காரணக் குறியேயாய் நின்றது. உலகப் பொருள்களைச் சார்தலை, `அவயோகம்` என்றார், அது முன்னே பல காலும் பல துன்பங்கட்கு இடையே நுகர்ந்து நுகர்ந்து அலுத்து விட்ட சிற்றின்பத்தையே மீளத் தருதலின். ``சிவயோக மேயோகம்; அல்லாத யோகம் - அவயோகம் என்றே அறி`` என்றது திருக்களிற்றுப்படி (பா.74) யும். அச்சிற்றின்பம் போல் துன்பத்தொடு விரவுதலும், வரையறைப்பட்டுக் கழிதலும் இன்றி எல்லையில்லாது புதிதுபுதிதாய்த் தோன்றி என்றும் இன்புறுத்துகின்ற சிவபோகம் முன்பு ஒருகாலும் கண்டறியாத தாகலின், அப்பயனை விளைவிக்கின்ற சிவயோகத்தை, `நவயோகம்` என்றார். ``சாராத அன்பு`` என்றதற்குச், `சாராமைக்கு ஏதுவாகிய அன்பு` என உரைக்க. அதிபோகம் - ஒப்புயர்வற்ற பேரின்ப நிலை. இதனால், `மேற்குறித்த சிவயோகமாவது இது` என்பதும், `அஃது இன்ன பயனைத் தரும்` என்பதும் கூறப்பட்டன. சிவயோகம் துரிய நிலை யாதலின், அதனால் விளையும் சிவபோகம் துரியாதீத நிலை என்க.

பண் :

பாடல் எண் : 11

அளித்தான் உலகெங்குந் தானான உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்
அளித்தான்பே ரின்பத் தருள்வெளி தானே. 

பொழிப்புரை :

மேற்கூறிய நவயோகத்தை எங்கட்கு அளித் தருளிய நந்தி தேவராகிய சிவபெருமான், அப்பொழுதே உலக முழுதும் தான் ஒழிவற நிறைந்து நிற்கும் மெய்ம்மையையும், மாயோன் முதலிய புத்தேளிராலும் அறியப்படாத தனது சிவலோக நிலை யையும், திருமன்றுள் பேரின்ப நடனம் செய்தருளும் தனது எடுத்த திருவடியாகிய பற்றுக்கோட்டினையும், அப்பற்றுக் கோட்டினால் கிடைக்கின்ற அருளாகிய பேரின்ப வெளியையும் அளித்தருளினான்.

குறிப்புரை :

என்றது, `அச்சிவயோகத்தானே பராயோக அநுபவம், பதமுத்தி அநுபவம், சீவன்முத்தி அநுபவம், பரமுத்தி அநுபவம் ஆகிய அனைத்து அநுபவமும் உளவாயின` என்றவாறு. பராயோக அநுபவமாவது, அறிவு இச்சை செயல்கள் புறத்துப் பரவுங் கால் காண் பன பலவும் சிவமேயாய்த் தோன்றுதல். பத முத்தி அநுபவமாவது, அவ்விடத்து உளவாகும் சிற்றின்ப நுகர்ச்சிகளும் சிவபோமாகவே விளைவது. சீவன் முத்தி அநுபவமாவது, சிந்தனைக்கு எட்டாத சிவனைச் சிந்தனைக்கு எட்டுபவனாகக் கண்டு வழிபட்டு இன்புறும் அநுபவம். பரமுத்தி அநுபவமாவது, அறிவு இச்சை செயல் கட்குப் பிறிதொன்றும் புலனாகாது சிவமே புலனாக, அதன்கண் அழுந்தித் தன்னை இழந்து நிற்பது. இவையெல்லாம் இவ்வுடம்பு உள்ள பொழுதே பெறப்படுவனவே என்க. இவற்றைப் பெற்றோரே, `அணைந்தோர்` எனப்படுவர். அணைந்தோர் - சிவனது திருவடி நிழலை அணைந்தவர். இவர், `சீவன் முத்தர்` என வடமொழியிற் சொல்லப்படுவார்.
``பெற்றசிற் றின்பமே பேரின்பமாய் அங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற`` -திருவுந்தியார் - 332
எனவும்,
``உடம்புடைய யோகிகள்தாம் உற்றசிற் றின்பம்
அடங்கத்தம் பேரின்பத் தாக்கில்`` -திருக்களிற்றுப்படியார். 76
எனவும்,
``காணுங் கரணங்க ளெல்லாம்பே ரின்பமெனக்
காணும் அடியார்`` -தி.8 திருவாசகம். பண்டாய. 6
எனவும் வருவனவற்றால் இவையெல்லாம் இவ்வுடம்புள்ளபொழுது தானே பெறத்தக்கனவாதல் அறிக.
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.
என்ற திருக்குறள் -359 இச்சிவயோக, சிவபோக நிலைகளையே கூறுவது என்பதை,
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் என்றமையால்
சார்புணர்தல்தானே தியானமுமாம்; - சார்பு
கெடஒழுகின் நல்ல சமாதியுமாம்; கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று.
என்று கூறும் திருக்களிற்றுப்படி நூல். இதனால், மேல் தொகுத்துக் கூறப்பட்ட பயனை வகுத்துக் கூறியவாறாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 12

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே. 

பொழிப்புரை :

குருவருள் பெற்ற பின்னர் உயிரினது வியாபகம் சிவனது வியாபகத்துள் அடங்கி நிற்கும் முறைமையையும், உயிர் அவனிடத்துச் செய்யும் அன்பாகிய நெகிழ்ச்சி அவனது பேரருளாகிய நெகிழ்ச்சியினுள் அடங்கிநிற்கும் முறைமையையும், உயிரினது அறி வாகிய சிற்றொளி, சிவனது அறிவாகிய பேரொளியில் அடங்கி நிற்கும் முறைமையையும் அநுபவமாக உணர்கின்றவரே சிவனைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

`அடயோகம் முதலியவற்றால் அணிமாதி ஆற் றல்கள் சித்திக்கப் பெற்றோர் `சித்தர்` எனப்படினும், அவர் சிவஞானம் பெற்று பிறவியை அறுத்துக்கொள்ளாமையின் அவசித்தரே` என்றற்கு, குருவருளால் சிவஞானம் பெற்றுச் சிவப்பேறு சித்திக்கப் பெற்றோரை, ``சிவசித்தர்`` என்றார். நாயனாரும் அத்தகைய சிவசித்தரேயாதல் அறிந்துகொள்க. இதனால், சிவபோக அநுபவத்தில் ஆன்மா வானது தன்னை இழந்து சிவமாய் நிற்கும் அநுபவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
சத்தமுஞ் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்
நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே. 

பொழிப்புரை :

சிவனைப் பெற்றவர் எனப்படுவோர், சிவ லோகத்தை இவ்வுலகிலே கண்டவரும், வாக்குகளையும், அவற் றிற்கு முதலாகிய குடிலையையும் தம்முள் அடங்கக் கண்டு நீங்கின வர்களும், அழிவில்லாதவர்களும், மலமாசு அகன்றவரும், மனக் கவலை மாற்றினவரும், எல்லையில் இன்பத்தில் நிற்பவரும் ஆகியவரே. அவர்கள் விடுதலை எய்தியது கருவிகள் முப்பத் தாறினின்றுமாம்.

குறிப்புரை :

கருவிகள் முப்பத்தாறாவன சிவ தத்துவம் ஐந்தும், வித்தியா தத்துவம் ஏழும், ஆன்ம தத்துவம் இருபத்து நான்குமாம்.
அவற்றுள் சிவ தத்துவம் ஐந்தாவன, `சிவம், சத்தி, சாதாக் கியம், ஈசுரம், சுத்த வித்தை` என்பன. வித்தியா தத்துவம் ஏழாவன, `காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என்பன. ஆன்ம தத்துவம் இருபத்து நான்காவன, `சித்தம், புத்தி, அகங்காரம், மனம்` என்னும் அந்தக் கரணங்கள் நான்கும், `செவி, தோல், கண், நாக்கு, மூக்கு` என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும், `வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்` என்னும் கன்மேந்திரியங்கள் ஐந்தும், `சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம்` என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும், `ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி` என்னும் மாபூதங்கள் ஐந்துமாம். இவை இங்கு இவ்வாறு தோற்ற முறை பற்றிக் கூறப்பட்டன. இவற்றை எல்லாம் நாயனார் பின்னர் விளக்குவார்.
கருவிகள் முப்பத்தாறனுள்ளும் ஆன்மா கட்டுண்டு தன்னியல்பை அறியாது அவையே தானாக மயங்கி நிற்கும். அந்நிலை முழுவதும் கழிதலே முத்தி அல்லது விடுதலையாகலின், ``தம் முத்தி முப்பத்தாறே`` என்றார். முப்பத்தாறே என்றதன்பின் நீக்கப் பொருளில் வந்த ஐந்தாம் உருபும், முற்றும்மையும் தொகுத்தலாயின. மேற்காட்டிய முப்பத்தாறனுள் சிவ தத்துவம் ஐந்தும் சுத்த மாயையின் காரியம் எனவும், வித்தியா தத்துவம் ஏழும் அசுத்த மாயையின் காரியம் எனவும், ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் பிரகிருதி மாயையின் காரியம் எனவும் உணர்க. இதனால் தத்துவங்களே மாயாமலமாதல் அறியப்படும்.
தத்துவங்கள் முப்பத்தாறின் கூறாகிய தாத்துவிகங்கள் அறுபதனுள் நால்வகை வாக்குகள் உயிர்க்குப் பரம பந்தம் (பெருங் கட்டு) ஆதலின், அவற்றினின்றும் நீங்குதலை முன்னர்க் கூறினார்.
இதனால், குருவருளால் பெறும், `பாசநீக்கம், (சிவப்பேறு)` என்னும் பயன்கள் இரண்டனுள் பாச நீக்கத்தினது இயல்பு வகுத் துரைக்கப்பட்டது.
சிவனைப் பெற்றவர் நித்தர், நிமலர், நிராமயர், நீள் பரமுத்தர் ஆதலை, ``நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம், ஏமாப்போம், பிணியறியோம், பணிவோ மல்லோம், இன்பமே எந்நாளும், - துன்பமில்லை`` (தி.6 ப.98 பா.1) என்பன முதலிய அருட்டிரு மொழிகளான் அறிக.

பண் :

பாடல் எண் : 14

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்
தப்பரி சாக அமர்ந்திருந் தாரே. 

பொழிப்புரை :

சிவசித்தர்கள் முப்பத்தாறு தத்துவங்களும் முத்தி நிலைக்கு ஏணிப் படிகளாக நிற்க அவற்றில் ஒவ்வொன்றாக ஏறிக் கடந்து, இணையற்ற இன்பவடிவாம் உள்ளொளியாகிய அருளே உருவாய் நின்று, அவ்வருட்கு முதலாகிய சிவத்தையும் கண்டு, பின் அசைவின்றி அச் சிவமேயாய் இன்புற்றிருக்கின்றார்கள்.

குறிப்புரை :

எனவே, `தத்துவங்களை ஒவ்வொன்றாகச் சுட்டியறிந்து அவற்றினின்றும் நீங்குதல் வேண்டும்` என்பதும், `தத்துவக் கூட்டமே தனக்கு நிலைக்களமாக நின்ற ஆன்மாவிற்கு அவற்றினின்றும் நீங்கிய பின்னர்ச் சிவனது அருளே நிலைக்களமாம்` என்பதும், `அந் நிலைக்களத்து நீங்காது நிற்பின் அவ் வருட்கு முதலாகிய சிவம் வெளிப்படும்` என்பதும், `அது வெளிப்பட்டவழி அதனிடத்து அசைவற நிற்கவே அதனால் பெருகி விளைகின்ற இன்பத்தில் மதுவுண்ட வண்டுபோல் ஆன்மா அழுந்தித் தன்னையும் மறந்து நிற்கும்` என்பதும் கூறியவாறாயிற்று. ஆகவே, இதனால், பாசத்தின் நீங்குமாறும், பின்னர்ச் சிவத்தைப் பெறுமாறும், பெற்றவழி இன்புற்றிருக்குமாறும் கூறப்பட்டனவாம். இதனுள் ``சிவம் கண்டு`` என்றது சிவதரிசனம் செய்தலையும், ``தான் தெளிந்து`` என்றது அதில் அதீதப்படுதலையும் கூறியனவாம்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
என்னும் திருக்குற(பா.341)ளும் தத்துவங்களை ஒவ்வொன்றாகச் சுட்டியறிந்து நீங்குதலின் மேல் நோக்குடைத்தாதல் அறிந்துகொள்க. கே்கிழாரும், கண்ணப்பர் திருக்காளத்தி மலையின் உச்சியில் இருக்கும் இறை வனைக்காண வேண்டி அம்மலையின் படிகளைக் கடந்தமைக்கு,
``பேணுதத் துவங்கள் என்னும் பெருகுசோ பானம்ஏறி
ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல``
-தி.12 கண்ணப்பர் புராணம் - 103
என இத் தத்துவ முத்தரது செயலையே உவமையாகக் கூறுமாற்றால் இதனை இனிது விளக்கினமை காண்க.

பண் :

பாடல் எண் : 15

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்
கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே. 

பொழிப்புரை :

சிவத்தைக் கண்டு அசைவற நின்று அப்பரிசாக அமர்ந்துநின்ற சிவசித்தர்கள் தம்மை அணுவாகச் செய்த மலம் நீங்கப் பெற்றமையால், அங்கு இங்கு என்னாது எங்குமாய், இறைநிறைவில் அழுந்தி நிற்பர். அந்நிலையில் அச்சிவன் உயிர்கள் பொருட்டுச் செய்கின்ற செயல்களையும், அச் செயல்கட்கு வாயிலாக அவன் தோற்றுவித்து நிறுத்தியுள்ள காலத்தின் தொழிற்பாட்டினையும் அறியும் ஆற்றலுடையவராய்த் தம்மை இழந்து நிற்றல் வந்தமையால் விளைந்த செயலறுதியிலே இருப்பர்.

குறிப்புரை :

``நோக்கி, குறித்து`` என்றவற்றிற்கு இவ்வா றுரையாவிடில், ``இருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே`` என்பதற்கு ஒவ்வாமை அறிக. தம்மை இழந்து செயலற்றவரது நிலை தாமத குண மிகுதியால் விளையும் சோம்பலில் நிற்பவர் நிலையோடு ஒத்தல்பற்றி ``இருந்தார் ... எய்திய சோம்பே`` என்றார். இது, பழிப்பதுபோலப் புகழ்ந்தது. பின் வருவதும் அது. சோம்பு, முதனிலைத் தொழிற்பெயர்; இதன்கண் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. இதனால், `சிவத்தைப் பெற்றவர் எல்லா அறிவாற்றலும் உடையராயினும், சிவத்தை அறிந்து அழுந்துதலல்லது பிறிதொன்றும் செய்யார்` என்பது கூறப்பட்டது.
``எல்லாம் அறியும் அறிவுறினும் ஈங்கிவர்ஒன்
றல்லா தறியார் அற``
எனத் திருவருட் பயனிலும் ஓதியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 16

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம்
சோம்பர்கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே. 

பொழிப்புரை :

செயலறுதியில் நிற்கும் சிவசித்தர்கள் இருப்பதும் கிடப்பதும் மாசொடு படாததாய பரவெளியிலேயாம். ஆகவே, அவர்தம் உணர்வு நிற்கும் இடம், வேதம் எட்டமாட்டாது நின்றுவிட்ட இடமாம். அதனால், அவர்களும் அவ்வேதத்தை நோக்குதற்கண் மறதியே பெற்றார்.

குறிப்புரை :

உலகத்தார் அறியும் பொருள்களில் `வெளி` எனப்படும் வானமே எல்லை இல்லாததாக அறியப்படுவது. அதனால், உண்மையில் எல்லை இல்லாத சிவ பரம்பொருளை, `வெளி` என்று உருவகித்து நூல்கள் கூறும். அவ்வாறாயினும், `உலக வெளியின் வேறாய் மேம்பட்டது` என்பது உணர்த்துதற் பொருட்டு, வாளா, `வெளி` என்னாது, `பரவெளி` என்று கூறும். இன்னும் அப் பரம் பொருள், ஞானமே வடிவாய் நிற்றலின், `சிதாகாசம், சிற்பர வியோமம்` என்றெல்லாம் சொல்லப்படும். சிவ பரம்பொருளை, `சிவம், சத்தி` என வேற்றுமை கருதாதவிடத்து சிவமே பரவெளியாம். அவ்வாறு வேற்றுமை கருதுமிடத்து, சத்தி பரவெளியாக, சிவம் அதனைத் திருமேனியாகவாயினும், இடமாகவாயினும் பெற்று நிற்கும் பொருளாகச் சொல்லப்படும்.
``ஆகாய வண்ணம் உடையாய் போற்றி`` (தி.6 ப.57 பா.3) என்றாற் போல்வன வேற்றுமை கருதிக் கூறிய திருமொழிகளாம். இங்கு வேற்றுமை கருதாது கூறியது என்க.
``இருப்பது`` என்றது தம்மை இழவாது நின்ற துரிய நிலை யையும், ``கிடப்பது`` என்றது, தம்மை இழந்து நின்ற அதீத நிலை யையுமாம். இவ்விடம், நாதமாகிய சொல்லைக் கடந்து நின்ற தாகலின், ``சுருதி முடிந்திடம்`` என்றார். `முடிந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத் தலாயிற்று. ``முடிந்த`` என்றது, `இளைத்து நின்ற` என்னும் பொருளது.
`` ... ... ... நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய்; இதுஉன் தன்மை`` -தி.9 ப.5 பா.4
எனத் திருமுறையுள்ளும்,
``சொல்லும் இடமன்று; சொல்லப் புகும்இடம்
எல்லை சிவனுக்கென் றுந்தீபற
என்றால்நாம் என்செய்கோம் உந்தீபற``
-திருவுந்தியார் 29
எனச் சாத்திரத்துள்ளும் கூறப்பட்டமை காண்க.
இத்தகையோர்க்குச் சொல்வடிவாய வேதம் முதலிய நூல்களான் ஆகக்கடவது இன்மையின், `சுருதிக்கண் தூக்கமே கண்டார்` என்றார். தூக்கம் - மறதி; என்றது விரும்பாமையை.
``கற்றாரை யான்வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்``
(தி.8 திருவாசகம், திருப்புலம்பல் -3) என்றதூஉம் இந்நிலையில் நின்றமையாலாம். இதனால், அதீத நிலையினது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே. 

பொழிப்புரை :

சிவசித்தர் வேதம் முதலாகிய கலைகளை உணர் தலையும் மறந்து நின்றமையால், சிவலோகம் முதலிய பல உலகங் களையும், சிவமுதற் பொருளோடே தாம் என்றும் ஒன்றாய் நிற்கும் பெற்றியையும், அதனானே சிவானந்தம் தமக்கு வேறாய் வந்து விளை யாமல், தம் உள்ளே இருந்து ஊற்றெடுத்தலையும் தம் அறிவினுள்ளே விளங்கக்கண்டு வியந்தார்கள். ஆதலின், அவரது பெருமை சொலற் கரிதாம்.

குறிப்புரை :

`தூங்குதல்` என்றது, தம் முனைப்பால் சிவமல்லாத பிற பொருளாகிய தம்மையும், தம்மைச் சார்ந்துள்ள உடம்பு, உலகம் என்ப வற்றையும் அறிதலை ஒழிந்து நிற்றலையாம். இதனையே `அறி துயில்` எனவும், `யோக நித்திரை` எனவும், `தூங்காமல் தூங்குதல்` எனவும் கூறுவர். தம்மையும், தம்மைச் சார்ந்த பாசங்களையும் மறந்திருத்தலால் தூங்குதலும், சிவத்தை உணர்ந்து நிற்றலால் விழித்திருத்தலும் ஆகின்ற இரு நிலைமையும் ஒருங்கு நிகழ்தலை இவ்வாறு உணர்த்துவர் என்க.

இதனால், அதீதத்தில் நின்றாரது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா றருள்செய்வன் ஆதி யரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம். 

பொழிப்புரை :

அனாதியாய் நிற்கின்ற சிவன் ஆதியாய் நின்று ஆன்மாக்களது அறிவின் எல்லையை எவ் வெவ்வளவினவாகக் காண்கின்றானோ அவ் வவ்வளவிற்கேற்பவே அவைகட்குத் தானும் தனது திருவருளைத் தருவன், அவன், நிகரில்லாத அருள்வெளியில். தனது சத்தி துணையாய் நிற்கப் பல்வேறான பொதுச் செயல்களைப் புரிகின்ற, நடுவுநிலையாகிய வானத்தில் உள்ள ஞான சூரியனும், மாணிக்க மணியும் ஆகலின்.

குறிப்புரை :

ஆன்மாக்களினது அறிவு, மேல், ``களிம்பு`` (தி.10 பா.112) எனக் குறிக்கப்பட்ட ஆணவ மல சத்தியினது வன்மை மென்மைகட்கு ஏற்பச் சிறிதாயும், பெரிதாயும் நிற்கும். அதனால் அவ்வறிவு கொண்டு அவற்றால் விரும்பப்படுகின்ற பொருள்களும் இழிந்தனவும், உயர்ந் தனவுமாய் இருக்கும். வேண்டுவனவற்றை யன்றி வேண்டாதனவற்றைத் தரின் பயன்படாது ஒழியுமாதலின், வேண்டுவார் வேண்டுவனவற்றையே அவன் தருகின்றான் என்க.
``வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்`` -தி.6 ப.23 பா.1
என்று அருளிச் செய்ததும் இதனையேயாம். பின் இரண் டடிகளில் வெளிப்படைப் பொருள் இனிது விளங்கிக் கிடத்தலின், உள்ளுறைப் பொருளே உரைக்கப்பட்டது. `பொதுச்செயல்` என்றது, `தன்பொருட்டன்றி ஆன்மாக்கள் பொருட்டுச் செய்யும் செயல்` என்றபடி. `அச்செயல்களை வேண்டு வார் வேண்டுமாறே செய்தலின், அஃது அவனுக்குக் கோட்டம் ஆகாது` என்றற்கு நடுவு நிலைமையைக் குறித்தார். அதனால், `பெத்தான் மாக்களுக்கு உலகியலையும், முத்தான்மாக்களுக்கு வீட்டினையும் தருகின்றான்` என்பது போந்தது. படைப்புப் பல படியாய்க் காணப் படுதற்கும் இதுவே காரணம் என்பது உணர்க. ``செவ்வானில் செய்ய செழுஞ்சுடர்`` எனவந்த செம்மை இரண்டனுள் முன்னது நடுவு நிலைமையையும், பின்னது திரிபின்மையையும் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்றன. திரிபின்மை மெய்யறிவின் இயல்பாகலின், அதுவே அதற்குப் பொருளாய் உள்ளது. செழுஞ்சுடர் சூரியன், மாணிக்கம், ஒப்புயர்வற்ற தன்மையைக் குறிக்க வந்த உவமை. இறுதிக்கண் `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், `சொல்லொணாப் பெருமையை உடைய அதீத வாழ்வினைச் சிவன் பலர்க்கும் அளியாது, ஒரு சிலர்க்கே அளித்தல் என்னை` என்னும் ஐயம் அறுக்கப்பட்டது. இதனுள் உள்ளுறை உவமமாய் நின்ற பின்னிரண்டடிகளால் திருக்கோயிலுள் இருக்கும் திருமேனியது சிறப்பிற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது என்க.

பண் :

பாடல் எண் : 19

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே

பொழிப்புரை :

மாணிக்க மணிக்குள்தானே மரகத ஒளி வீசி னாற்போலவும், மாணிக்க மாளிகைக்குள்ளே மரகதநிலை காணப் பட்டாற்போலவும், மாற்றுயர்ந்த பொன்னாலாகிய அம்பலத்துள் நின்று அவன் ஆடுகின்ற திருக்கூத்தினை விரும்பி வணங்கினோர் பெற்ற பேற்றினை இவ்வளவினது என்று சொல்லுதல் கூடுமோ!

குறிப்புரை :

மேல், ``அரன்`` எனவும், ``உமை`` எனவும் குறிக்கப் பட்ட அப்பன், அம்மை இவரது நிறம் முறையே செம்மையும், பசுமையும் ஆகலானும், அம்மையது வடிவம் அப்பனது வடிவிற் பொருந்தி நிற்றலானும் ``மாணிக்கத்துள்ளே ... ... ... மாடமாய்`` என்றார். ஆணிப் பொன் பிற பொன், எல்லாவற்றின் மாற்றினையும் அளத்தற்கு உரையாணியாய் நிற்கும் பொன். `மன்றினில் நின்று` என ஒரு சொல் வருவிக்க. ``என்ன`` என்ற வினா, `எத்துணையாவன` என்னும் பொருட்டாய், அளவின்மை குறித்து நின்றது.

பண் :

பாடல் எண் : 20

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி
பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்
பெற்றார்அம் மன்றிற் பிரியாப் பெரும்பேறு
பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

பொழிப்புரை :

மேற்கூறிய ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தினை அம்மன்றினின்றும் நீங்காது பேணித் தொழுகின்ற பேற்றினைப் பெற்றவர், இவ்வுடம்பு நீங்கியபின் சிவனோடு ஒன்றாகின்ற பெருநிலையையும், அதனால் விளையும் பிறவாமை யாகிய பெரும்பயனையும், அப்பயன் வடிவான திருக்கோயில் வழிபாட்டினை ஒழியாது செய்யும் பெரிய பேற்றினையும், அப்பேற்றினால் உலகத்தாரொடு பேசாது நிற்கும் பெருமையையும் பெற்றவராவர்.

குறிப்புரை :

`ஆதலின் அவர்க்கு மீளப் பிறவிக்கு வித்தாகிய வினை உண்டாதல் இல்லை` என்பதாம். `பேசுதல்` என்பது, `அளவ ளாவுதல் - தொடர்புறுதல்` என்றவாறு. `அஃது இல்லை` எனவே, உலகத்தில் நின்றே அதனின் நீங்கிநிற்றல் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வாரார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.

பொழிப்புரை :

பிறரது பெருமை சிறுமைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அரியனாயும், எளியனாயும் நிற்கின்ற முறைமையை எங்கள் சிவபெருமான் அறிவதுபோல அறிவார் பிறர் யார்? ஒருவரும் இல்லை. அதனால், மேற்குறித்த அவன் அன்பர் இவ்வொரு பிறப்பிலே, ஆமை தனது ஐந்துறுப்புக்களையும் தனக்குக் காவலாய் உள்ள ஓட்டிற்குள் அடக்குதல்போல, புலன் அவா ஐந்தனையும் தமக்கு அரணாய் உள்ள அவனது திருவருளினுள் அடக்கி, இம்மை யின்பம், மறுமையின்பம் இரண்டையும் உவர்த்துக் குற்றம் அற்று இருக்கின்றனர்.

குறிப்புரை :

``பெருமை, சிறுமை`` என்பவை உலகியல் பற்றிக் கூறியவை. உலகியலில் பெரியராய்த் தன்னை நினையாதவர்க்கு இறைவன் அரியனாயும், உலகியலில் சிறியராயினும் தன்னை நினைவார்க்கு எளியனாயும் நிற்றலை,
``கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி``
-தி.8 போற்றித் திருவகவல். 143. 44
என்னும் திருவாசகத்தான் அறிக. `அவனது இத்தன்மையை அறிந்து, அன்பர்கள் முனைப்பின்றி அவன்பால் அடங்கி நிற்பர்` என்றற்கு இவற்றை எடுத்தோதினார். `கண்டறிவார், உண்டறிவார்` என்பன போல `அறிந்தறிவார்` என்பது ஒருசொல்லாய் நின்றது.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. -குறள் 126
எனத் திருவள்ளுவர் புலனடக்கத்திற்கு இவ்வுவமையைக் கூறினார்.
புலனடக்கித் தம்முதற்கண் புக்குறுவர் போதார்
தலன்நடக்கும் ஆமை தக.
எனத் திருவருட்பயனிலும் (பா.94) கூறப்பட்டமை காண்க. `கேட்டிருந்தார்` என்பது பாடம் அன்று.
இம் மூன்று திருமந்திரத்தானும், `அதீத நிலையில் நிற் போர்க்கு அறிவு இச்சை செயல்கள் உலகிடைச் செல்லுமாயின், அவை திருக்கோயில் வழிபாடு முதலிய அன்பு நெறியிற் செல்லுதலல்லது பிறிதாற்றிற் செல்லா`` என்பது கூறப்பட்டது. இந்நிலை ஞானசம்பந்தர் முதலிய நால்வரது செயல்களால் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 22

புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்
திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தாற்
கரையற்ற சோதி கலந்தசத் தாமே.

பொழிப்புரை :

குற்றம் அற்ற பாலில் உள்ள நெய் அப் பாலினுள் வேற்றுமையின்றிக் கலந்து நிற்றல்போல, ஞானாசிரியன் அறிவுறுத்த சொல்லை அலைவற்ற உள்ளத்தில் வேற்றுமை அற்றுக் கலந்து நிற்குமாறு உணர்ந்து அப் பொருளில் அழுந்திநிற்பவர், தம் உடம்பு இங்கு வீழ்ந்த பின்னர் அவரது ஆன்மாத் தன் இயற்கை வியாபகத்தைப் பெற்று, என்றும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்ற மெய்ப்பொருளேயாய் விடும்.

குறிப்புரை :

`குற்றம்` என்றது வேற்றுப் பொருளாகிய பிரையை. பாலில் பிரை சேருமாயின், அஃது அதனைத் திரித்து அதன்கண் உள்ள நெய்யை வேறாகச் செய்யுமாதலின் அதனைப் ``புரை`` என்றார். உரை அறுதலாவது, சொல்லாய் வேறு நில்லாது பொருளாய் உணர்வோடு ஒன்றுதல்; என்றது அநுபூதி நிலையை. எனவே, `ஆசிரியனது அருண்மொழியை, கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்னும் அளவிற் கொண்டொழியாது, நிட்டை நிலையில் அநுபவமாகக் கைவரப் பெற்றவர், உடம்பு நீங்கியபின் சிவனோடு இரண்டறக் கலத்தலாகிய சாயுச்ச பரமுத்தியை எய்துவர்` என்றவாறாம். `கரையற்ற சோதியாய்` என்றார், பின்வரும் பொருட்குத் தோற்றுவாயாதற்கு. ஆக்கச்சொல் தொகுத்தல். சத்து - மெய்ப்பொருள்; சிவம். இக்கலப்பு முன்பே உள்ளதன்றிப் புதுவதன்றாகலின், `அஃது இயற்கையாய் விடும்` என்றற்கு, ``கலந்த சத்தாமே`` என்றார். ``அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே`` (சிவஞானபோதம் சூ.8) என்றார் மெய்கண்டதேவரும்.
இதனால், இவ்வுலகில் அதீதத்தைப் பெற்றோர் பின்னர் எய்தும் பயன் கூறப்பட்டது.
``காயம்ஒழிந் தால்சுத்த னாகி ... ...
... ... ... ... ... ...
மாயமெலாம் நீங்கிஅரன் மலரடிக்கீழ் இருப்பன்
மாறாத சிவானுபவம் மருவிக் கொண்டே`` 2
எனச் சிவஞான சித்தியினும் (சூ. 11.1) இவ்வாறே கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

சத்த முதல்ஐந்துந் தன்வழித் தான்சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே. 

பொழிப்புரை :

சடமாகிய சத்தம் முதலிய தன்மாத்திரைகள் முதலாக உள்ள கருவிகள் யாவும், சடமாகிய தத்தம் காரணத்துள்ளே சென்று சேர்ந்துவிடுமாயின் அதன்பின் சித்தாகிய ஆன்மாவிற்குச் சித்தாகிய சிவத்தையன்றிச் சாருமிடம் வேறுண்டோ? இல்லை. அதனால் அந்நிலையில் அப் பயனைத் தரக் கருதியே குருவாய் வந்து ஆண்டுகொண்ட திருவருளாகிய வெள்ளத்தின் செயலால், தூய பரவெளியில் விளங்கும் சிவமென்னும் ஞாயிறாகிய பேரொளியிடத்து ஆன்மா என்னும் விண்மீனாகிய சிற்றொளி சென்று சேர்ந்து ஒன்றாய்விடும்.

குறிப்புரை :

பின்னர் `சித்திற்குச் சித்து இடம்` என்பது வருதலால், முன்னர், `சடத்திற்குச் சடம் இடம்` என்பது பெறப்பட்டது. `ஒரு பொருள் தன்னினப் பொருளொடு சேர்தலன்றி, வேற்றினப் பொருளொடு சேராதாயினும், சித்தாகிய ஆன்மா, சடமாகிய தத்துவங் களோடு சேர்ந்திருந்தமை, மதுவுண்டவனுக்கு அம்மயக்கத்தால் உள தாகும் தலைதடுமாற்றம் போல, ஆணவ மலமாகிய குற்றச் சார்பினால் உளதாயது` என்பதும், `அக்குற்றம் நீங்கவே, ஆன்மா அம் மயக்கம் நீங்கப் பெற்றுச் சிவத்தை அடையும்` என்பதும் உணர்த்துதற் பொருட்டுச் சடத்திற்குச் சடமும், சித்திற்குச் சித்துமே இடமாதலைக் குறித்தார். இன்னும், ``சுடரில் சுடர்சேரும்`` என்றதும் அதுபற்றி. இதனால், உயிருக்கு உலகை நோக்கிச் செல்லுதல் செயற்கையும், சிவத்தை நோக்கிச் செல்லுதல் இயற்கையும் ஆதல் பெறப்பட்டது. இச் செயற்கை இயற்கைகளை,
சிறைசெய்ய நின்ற செழும்புனலின் உள்ளம்
சிறைசெய் புலன்உணர்வின் தீர்ந்து - சிறைவிட்
டலைகடலிற் சென்றடங்கும் ஆறுபோல் மீளா
துலைவில்அரன் பாதத்தை உற்று.
என (சிவஞானபோதம் சூ.8) விளக்கினார் மெய்கண்ட தேவர்.
தூநிழல் ஆர் தற்காருஞ் சொல்லார் தொகும்இதுபோல்
தானதுவாய் நிற்கும் தரம். -திருவருட்பயன் 61
என்னும் திருவருட்பயனும் ஆன்மாவிற்குச் சிவத்தைச் சார்தலே இயற்கை என்பதை விளக்கிற்று.
`இருபொருள் ஒன்றாதல் எவ்வாறு` என்பார்க்கு விளக்கமாக, ``சுடரில் சுடர் சேரும்`` என்றார். சுடரில் சுடர் சேர்தல், நீரில் நீர் சேர்தல் போல, ஒருபொருள்தானே பிற பொருளது இடையீட்டால் இரண்டாய் நின்று, அவ்விடையீடு நீங்கியபின் முன்போல ஒன்றாதலாகிய ஐக்கியம் அல்லாமை உணர்க. சுடரில் சுடர் சேர்ந்தவழியும் சேர்ந்தது பொருளால் வேறேயாய் நிற்குமாற்றை,
``வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது
வெய்யோனை ஆகாத மீன்போல`` -சிவஞானபோதம் சூ.8
என விளக்கினார் மெய்கண்டதேவர். இவ்வுண்மை அறியாதார், `உடம்பு நீங்கியவழி ஆன்மா சிவத்தொடு சேர்ந்து ஒன்றாதல், குடம் உடைந்தவழி, அக்குடத்தினுள் நின்ற ஆகாயம், புறத்து நின்ற ஆகாயத்தோடு சேர்ந்து ஒன்றாதல் போலும்` எனத் தமக்குத் தோன்றியவாறே உரைப்பர். தத்துவங்களுள் ஒடுக்க முறையில் முன் நிற்பன மாபூதங்களே யாயினும், தன்மாத்திரைகளையே முதலாகக் கூறினார். அவை அவற்றிற்கு முதலாய் அவை ஒடுங்கும் இடமாதல் பற்றியும், நிலம் நீர் முதலிய பூதங்கள் ஒன்றின் ஒன்று ஒடுங்கும் என்றல் சிவாகம நெறியாகாமை பற்றியும் என்க. உருவகமாய் வந்த அப்பு, ஆகு பெயராய் நின்றது. அருளையுடையோன் செயலை அருளின் செயலாகவே கூறினார். ``அப்பில்`` என்பதில் இல், ஏதுப் பொருட் டாகிய ஐந்தாம் உருபு.
இதனால், `மேற்கூறியவாறு கரையற்ற சோதி கலந்த சத்தாமாறு இது` எனச் சிவசாயுச்ச பரமுத்தியில் ஆன்மா நிற்கும் நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

பொழிப்புரை :

கடல்நீரில் ஒன்றாய் நிற்கும் உவர்ப்புப் பின் ஞாயிற்றின் வெப்பத்தால் அந்நீரின் வேறாய் உருவெய்தி `உப்பு` எனப் பெயர்பெற்ற அப்பொருள், அந்நீரில் சேர்ந்தவழி அவ்வுரு வொழிந்து வேறுகாணப்படாது அந்நீரோடு ஒன்றாகும் முறைமை போல, உயிர் சிவத்தோடு என்றும் ஒன்றாயே இருத்தற் குரியதாயினும், ஆணவ மலத்தின் தடையால், அநாதியே வேறாய்ப் பசுத்தன்மை எய்திச் சீவன் எனப் பெயர்பெற்று மாயை கன்மங்களையும் உடைய தாய் உழன்று, அத்தடை நீங்கப்பெற்ற பின்னர்ச் சிவத்தோடு சேர்ந்து வேறாய் நில்லாது ஒன்றாய்விடும்.

குறிப்புரை :

செய்யுட்கு ஏற்ப, ``உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த`` என்றாராயினும், `உருச்செய்து உப்பெனப் பேர் பெற்ற` என ஓதுதல் கருத்தென்க. ``அவ்வுரு`` என்றதில் ``உரு`` என்றது பொருளை. ``கூடியது`` என்பதில் `ஆயின்` என்பது வருவித்து, ``கூடியதாயின்`` என உரைக்க. ``செப்பினில்`` என்பதில், இன், எதுகைநோக்கித் தவிர்வழி வந்த சாரியையாய் நின்றது. `செப்பிடில்` எனப் பாடம் ஓதுதலும் ஆம்.
இஃது, `ஆன்மாச் சிவத்தோடு ஒன்றாதலே இயற்கை; வேறு நிற்றலே செயற்கை` என்பதனைத் தக்கதோர் உவமங்காட்டி வலியுறுத்தவாறு. உப்பு, நீரின் குணமாகாது வேறு பொருளேயாதல் அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 25

அடங்குபே ரண்டத் தணுஅண்டஞ் சென்றங்
கிடங்கொண்ட தில்லை இதுவன்றி வேறுண்டோ
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம்பெற நின்றான் திருவடி தானே. 

பொழிப்புரை :

எல்லாப்பொருளும் அடங்கி நிற்கும் இடமாகிய `அண்டம்` என்னும் பேருருண்டையுள் அணு என்னும் சிறியதோர் உருண்டை அடங்கி நிற்பதல்லது, அதற்குப் புறம்பாய் வேறோ ரிடத்தில் நிற்றல் இல்லை. அதுபோலப் பலவகை உடம்புகளை எடுத்து அவற்றின் அளவாய் நிற்கின்ற சிற்றுயிர்களுக்குப் பிறவிக் கடலி னின்றும் நீங்கி அலமராது நிலைத்து நிற்கும் கரையை அடைவதாயின் அக்கரை, என்றும் அலமரல் இல்லாது ஒருபெற்றியே நிற்பவனாகிய சிவபெருமானது திருவடியே. இதுவன்றி வேறு கரை உண்டோ?

குறிப்புரை :

அண்டம் - உருண்டை; ``அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்``(தி.8 திருவண்டப்பகுதி.1) என்றார் மணிவாசகரும். `இடங்கொண்ட தன்றி வேறில்லை` எனச் சில சொல் வருவித்து உரைக்க. ``இதுவன்றி உண்டோ`` என்பதனை இறுதிக்கண் வைத்து உரைக்க. கடம் - குடம். அஃது உவமையாகு பெயராய், உடம்பைக் குறித்தது.
இதனால், சிவம் பெரிய பொருளாதலும், உயிர் அதனிற் சிறிய பொருளாதலும் உணர்த்தி, மேற்கூறியவாறு சீவன் சிவத்துள் அடங்குமாறு கூறப்பட்டது. `திடம்பெற நின்றானே` என்று ஒழியாது `அவன் திருவடிதானே` என்றதும், சிவனது பெருமைக்கண் சீவன் சிறியதோர் அளவில் அடங்கும் என்றற்காம். இதனானே, உயிர்கட்குப் பயன் தருபவன் இறைவன் என்னாது, அவனது அடியே என நூல்கள் கூறுவதன் உண்மையும் விளங்கும். இன்னும் சித்தாந்த முத்தி, `அடிசேர் முத்தி அல்லது அருள்சேர் முத்தி` எனப்படுமாறும் இதனானே விளக்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 26

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே. 

பொழிப்புரை :

உண்மை நூல்களைத் தெரிந்தெடுத்து அவற்றில் சொல்லப்பட்ட பொருள்களைச் சிந்தித்து அறுதியிட்டுச் சொல்லு மிடத்து, மெய்ப்பொருளைத் தம் உள்ளத்தில் ஒருதலையாக உணர்ந்து பற்ற வேண்டுவோர்க்குச் சிவபெருமானது திருவடி ஒன்றே பரம் பொருளும், வீட்டுலகமும், துறக்க உலகங்களுமாகும். ஆதலின், அதனைத்தவிர உயிர்கட்குப் பற்றுக்கோடு வேறில்லை.

குறிப்புரை :

என்றது, `மிகப்பெரியோனாகிய சிவபெருமானது பேராற்றலுள் ஒரு சிறு கூறுதானே எண்ணில்லாத உயிர்கட்கும் எல்லா மாய் நின்று பயன்தரும்` என்றவாறு. இதனானே, சத்தியைத் திருவடி யாகக்கொண்டு, `அத்திருவடி தானே எல்லாம் செய்ய வல்லது` என வும், `உயிர்கட்கு வீடுபேறாய் நிற்பது அத்திருவடி நிழலே` எனவும் கூறுதல் மரபாயிற்று என்பதும் உணர்ந்து கொள்ளப்படும். சத்தியே திரு வடி எனவே, `ஞானசத்தி, கிரியாசத்தி` என்பனவே இரண்டு திருவடி களாதல் உணரப்படும். இச்சை இவ்விரண்டினும் விரவிநிற்பதாம்.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின். -குறள் 2
என்பது முதலாகத் திருவள்ளுவ நாயனாரும் திருவடியையே பலவிடத்தும் கூறினார். திருநாவுக்கரசர், `திருவடித் திருவிருத்தங்கள், திருவடித்திருத்தாண்டகங்கள்` என்பவற்றால் திருவடிகளின் பெருமையைப் பலபட விரித்தருளிச் செய்தார். மாணிக்கவாசகர் தி.8 திருவெம்பாவையின் இறுதித் திருப்பாட்டில் திருவடியே எல்லாமாய் நின்று ஐந்தொழில் செய்வனவாக அருளிச்செய்தார். இன்னும் திருமுறைகளில் யாண்டும் திருவடிப் பெருமையே பேசப்படுதல் வெளிப்படை. இவ்வாற்றால், `யாவரும், யாவர்க்கும் சிவபெரு மானது திருவடியே பற்றாதல் உணர்ந்து அதனைப் பற்றி வாழ்தல் வேண்டும்` என்பது பெறப்பட்டது.
இதனால் திருவடியது சிறப்புக் கூறும் முகத்தால் சிவனது சிறப்பு வகுத்துணர்த்தப்பட்டது. இதனானே சிவநெறிக்குப் பொருளாவது யாண்டும் சிவனது திருவடியே என்பதும் முடித்துக் கூறப் பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 27

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. 

பொழிப்புரை :

`பெத்தநிலை நீங்கும் பருவத்துச் சிவன் குருவாய் வந்து தனது திருவடி ஞானத்தை வழங்குவான்` எனவும், `அத் திருவடி ஞானத்தைப் பெற்றபின் நிகழ்வன இவை` எனவும் முறைப்படக்கூறி முடித்தபின், அப்பேறு அனைத்தையும் வழங்கிய குருமூர்த்தியை மறத்தல் பெரிதும் உய்தியில்லதோர் குற்றமாம் ஆதலின், அக்குற்றத் திற்கு ஆளாகாது என்றும் அக்குருமூர்த்தியை மறவாது, `சிவம்` எனவே கண்டு வழிபடல் வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார்.
ஞான குருவினது திருவுருவைச் சிவனது அருட்டிரு மேனியாகக் காணுதல், அவரது திருப்பெயரைச் சிவனது திருப்பெய ராகிய திருவைந்தெழுத்தோடு ஒப்பதாகக் கொண்டு எப்பொழுதும் சொல்லுதல், அவர் இடும் கட்டளை மொழிகளைச் சிவனது அருளா ணையாகப் போற்றிக் கேட்டல், அவரது திருவுருவை உள்ளத்துள் உள்குதல் என்னும் இவைகளே உண்மை ஞானத்தைத் தருவனவாகும்.

குறிப்புரை :

ஐய உணர்வும், திரிபுணர்வும் ஞானம் ஆகாமையின், மெய்யுணர்வை, ``தெளிவு`` என்றார். தெளிவு தருவனவற்றைத் தெளி வாகப் பாற்படுத்து ஓதினார். ஞானாசிரியரைச் சிவமாக உணராது நம்மனோருள் ஒருவனாக எண்ணுதல் ஆணவ மலச் சார்பினால் நிகழ்வதாகலின், அச்சார்புடையார்க்கு உண்மை ஞானம் விளங்க மாட்டாது என்பதனை ஈற்றில் நின்ற தேற்றேகாரத்தால் பெற வைத்தார். அதனால் மலம் நீங்கப் பெற்றார்க்கு இவை இயல்பால் நிகழும் என்பது பெற்றாம்.
`உலகிற்கு ஆசிரியரும், அடைந்தவர்க்கு ஆசிரியரும், இருமை ஆசிரியரும்` என ஆசிரியர் முத்திறப்படுவர். அறம் முதலிய உறுதிப் பொருள் நான்கனுள் ஒன்றையாயினும், பலவற்றையாயினும் பற்றி முதலும், வழியும் ஆன நூல்களையாயினும், உரைகளையாயினும் செய்தோர் உலகிற்கு ஆசிரியர். இவர் திருவள்ளுவரும், ஞான சம்பந்தர் முதலிய சமயாசாரியர் நால்வரும் போல்பவர். இனி உறுதிப் பொருள்களை வரலாற்று முறையாற் கேட்டுணர்ந்து தம்மை அடைந்தவர்கட்கு அவற்றைக் கேட்பித்தல் சிந்திப்பித்தல்களைச் செய்விப்போர் அடைந்தவர்க்கு ஆசிரியர். இவர்களை, `தாதாரகுரு` என்பர். இவர் சந்தான குரவர் நால்வருள் மறைஞானசம்பந்தர் போல்பவர். மேற்கூறிய இருதன்மையும் உடையோர் இருமை ஆசிரியர். இவர் மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியர், உமாபதி சிவாசாரியர் போல்பவர். இம்மூவருள்ளும் சில குடியினர்க்குமட்டும் ஆசிரியராய்க் குலகுருவாய் நிற்பாரும் உளர்.
இவருள் உலகாசிரியர் தவிர ஏனையோருள் எழுத்தும், சொல்லும் அவற்றின் வடிவளவில் கற்பிப்பவர் `கணக்காயர்` எனப் படுவார். `உபாத்தியாயர், ஓதுவிப்பவர்` என்றெல்லாம் கூறுதல் இவரையே. பலவகைச் செய்யுட்களையும், நூல்களையும் பொருள் உணர்வு பெறக் கற்பிப்பவர் `கற்பிக்கும் ஆசிரியர்` எனப்படுவார். `வித்தியா குரு` என்றல் இவரையே. மணவினை, பிற்கடன் (உத்தர கிரியை, அந்தியேட்டி) முதலியவற்றை முன்னின்று செய்விப்பார், `பார்ப் பார்` எனவும், `ஐயர்` எனவும் சொல்லப்படுவர். இவருள்ளும் சிலகுடி யினர்க்கு மட்டும் உறுதி உணர்த்திக் குல குருமாராய் நிற்ப வரும் உளர் என்க. `புரோகிதர்` என்றல் இவரையேயாம். இவர், தெய்வங்கட்குச் சீற்றந்தணிவிக்கும் கடன் முறைகளையும் செய்வர் என அறிக.
சமய விசேட தீக்கைகளால் சிவவழிபாட்டினைப் பிறர்க்கு அளிப்பவர்களும், திருக்கோயில்களில் சிவனது திருமேனிகளை உலக நலத்தின் பொருட்டு வழிபடுகின்றவர்களும் `வழிபாட்டாசிரியர்` எனப்படுவர். `கிரியாகுரு` எனப்படுவார். இவரே. இனிச் சமய விசேட தீக்கைகளைப் பெற்றுச் சிவதன்மதத்திலும், சிவயோகத்திலும் பயின்ற தன் பயனாக மலபரிபாகம் வரப்பெற்றவர்க்கு அப் பரிபக்குவத்தை அறிந்து நோக்கம், பரிசம் முதலியவற்றால் பாசத்தை அறுத்தலாகிய நிருவாண தீக்கையின்வழிச் சிவனது திருவடி ஞானத்தை உணர்த் துவோர் `அருளாசிரியர்` எனப்படுவார். `ஞானகுரு` என்றும், `ஞானா சிரியர்` என்றும் சொல்லப்படுவார் இவரே. இங்குக் கூறப்பட்டு வந்த ஆசிரியன்மார்கள் அம்முறையானே ஒருவரில் ஒருவர் உயர்ந்தோர். அனைவரிலும் உயர்ந்தோர் அருளாசிரியாராகிய ஞானகுருவே. சிவன் ஆசானாய் நிற்றல் இந்த ஞானகுருவிடத்தேயாம். அதனால், `குருவேசிவன்` (தி.10 6ஆம் தந்திரம்) என்றற்கு முழுதுரிமை உடையவர் ஞானாசிரியரே.
``எழுத்தறிவித்தவன் இறைவனாகும்`` -நறுந்தொகை
``தெய்வத்தைப் போல மதிக்கிற்பான்``
-தொல். பாயிரம் உரை நச்சினார்க்கினயம்
என்றாற் போல ஏனை ஆசிரியன்மாரையும் இறைவனாகக் கூறுதல் முகமனுரையேயாம். அதனால், இத்திருமந்திரத்துள் ``குரு`` என்றது அனைவரிலும் மேலாய ஞானகுருவையே என்பது இனிது விளங்குதல் காண்க. இவரது சிறப்பினை இவ்வாறே,
ஞானயோ கக்கிரியா சரியை நான்கும்
நாதன்றன் பணி; ஞானி நாலினுக்கும் உரியன்;
ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்
யோகி; கிரி யாவான்தான் ஒண்கிரியை யாதி
யானஇரண் டினுக்குரியன்; சரியையினில் நின்றோன்
அச்சரியைக் கேஉரியன். ஆதலினால், யார்க்கும்
ஈனமிலா ஞானகுரு வேகுருவும். இவனே
ஈசனிவன் றானென்றும் இறைஞ்சி ஏத்தே.
எனச் சிவஞான சித்தி (சூ. 12,5) வகுத்துணர்த்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 28

தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே. 

பொழிப்புரை :

ஒருவன், `நான்` என்னும் முனைப்பு இன்றி ஞானாசாரியரை அடுத்து நிற்பானாயின், அவனது ஐம்புல ஆசை தன் னியல்பில் உலகப் பொருள்கள் மேல் செல்லாது அவன்வழிப்பட்டுச் சிவனிடத்திற் செல்வதாய்ப் பள்ள மடையில் வீழ்ந்து பயனின்றிக் கழிந்துகொண்டிருந்த நீர் அம்மடை அடைக்கப்பட்ட வழித் தேங்கி நின்று மேட்டுமேடையிற் போய்ப் பாய்ந்து பயன்தருதல் போலத்தன் அறிவினிடத்தே மாறுவதாகும்.

குறிப்புரை :

`ஆதலின் ஞானத்தைப் பெற்றவனும், பயிற்சி வயத் தால் மீள அஞ்ஞான வயப்படாதிருத்தற்கு ஞானாசாரியரை விட்டு அகலாது நின்று வழிபடுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். ``புலன்`` அவற்றின்மேல் செல்கின்ற ஆசை. அஃது ஒன்றேயாதல் பற்றி, ``தானே`` என ஒருமையாற் கூறினார். ``தன் வசம்`` இரண்டனுள் முன்னது, மாணவன்வசமும், பின்னது ஆசையின் வசமுமாம். தன் வசம் போயிடும் - சுதந்திரம் நீங்கப்பெறும். ``தன்னில்`` என்றதும், மாணவன் அறிவையே தன்முனைப்பு இழந்து செல்லுதலைத் ``தனித்து`` என்றார். `தனித்துத் தானேயாய்` என மாற்றி ஆக்கம் வருவித்து உணர்க. எம் பிரானை - எங்கள் சிவபெருமானை. ஞானத்தை உணர்த்துபவன் அவனேயாகலின், குருவை இவ்வாறு கூறினார். சந்தித்து - தலைப்பட்டு என்றது `பிரியா நின்று` என்றவாறு. `சந்தித்தலால்` என்பது ``சந்தித்து`` எனத் திரிந்து நின்றது. `சந்தித்தலால் ஆயிடும், போயிடும், மாறும்` என மேலே கூட்டுக.

பண் :

பாடல் எண் : 29

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே. 

பொழிப்புரை :

நான் எப்பொழுதும் உடலால் பணிவது எனக்கு ஞானாசிரியராகிய நந்தி பெருமானது இரண்டு திருவடிகளையே. மனத்தால் நினைப்பது அவரது அருட்டிருவுருவத்தையே. வாயாற் சொல்வது அவரது திருப்பெயரையே. என் அறிவினுள் நிலைத்து நிற்பது அவரது பொன்மொழியே.

குறிப்புரை :

`ஆதலின் பிறரும் தம் ஆசிரியரிடத்து நிற்க` என்பது குறிப்பெச்சம். செம்மை - திரிபின்மை; அதனை உடையது அருள் என்க. `தாளிணை, மேனி, நாமம்` என்பவற்றில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. திருவை நாமத்திற்கும் கூட்டுக. `வந்தித்தல்` என்பது இங்கு வழுத்துதலாகிய வழிபாட்டின்மேல் நின்றது.

பண் :

பாடல் எண் : 30

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனங் களிகூர
வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

பொழிப்புரை :

உண்மை ஞானத்தை வழங்குகின்ற அருளுரு வினரான எங்கள் நந்தி பெருமானைத் தங்கள் நெஞ்சில் மறவாது நினைந்து ஞானம் முதிரப் பெற்றவர்களே இவ்வுலகில் சிவபெரு மானது ஆனந்த நடனத்தால் கண்ணும் களிகூர வாழ்ந்து, இவ்வுடம்பு நீங்கியபின் வேதமும் போற்றுமாறு சென்று பரவெளியை அடைந் தார்கள்; ஏனையோர் மீளவும் பிறவிக்கு ஆளாயினர்.

குறிப்புரை :

``புண்ணியராயினார்`` என்புழித் தொகுக்கப்பட்ட பிரிநிலை ஏகாரத்தால் ஏனையோரது நிலை குறிக்கப்பட்டது. இதனால், `இப்பயனைப் பெறவேண்டின், பிறரும் அருளுருவான தம் ஆசிரியரை நினைக` என்பது குறிப்பெச்சமாய் நிற்றல் அறிக.
சிற்பி