முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு


பண் :

பாடல் எண் : 1

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

பொழிப்புரை :

சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவை, அறுபத்தாறுபேர் அப் பெருமானை வணங்கி அவனது மேன்முகமாகிய ஈசான முகத்தில் அரிய கருத்துக் களைக் கேட்டுணர்ந்தனவாம்.

குறிப்புரை :

அவ்வாகமங்கள், `காமிகம், யோகசம், சிந்தியம், காரணம்,அசிதம், தீத்தம், சூக்குமம், சகத்திரம், அஞ்சுமான், சுப்பிர பேதம், விசயம், நிசுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற் கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோத்தம், பாரமேசுவரம், கிரணம், வாதுளம்` என்பன.
சிவபெருமானுக்கு நாற்றிசை நோக்கி நான்கு முகங்களும், உச்சியில் வான்நோக்கி ஒருமுகமுமாக உள்ள ஐந்து முகங்களையும் கீழிருந்து முறையே, `சத்தியோசாதம் (மேற்கு), வாமதேவம் (வடக்கு), அகோரம் (தெற்கு), தற்புருடம் (கிழக்கு) ஈசானம் (உச்சி)` என எண்ண, ஐந்தாவதாக வருவது ஈசான முகம். `சிவபெருமான் மேற்சொல்லிய இருக்கு முதலிய வேதங்கள் நான்கனையும் கீழுள்ள தற்புருடம் முதலிய நான்கு முகங்களானும், ஆகமங்களை மேலே உள்ள ஈசான முகத்தாலும் அருளிச்செய்தான்` என்பவாகலின், ஆகமங்களை, ``அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டது`` என்றார்.
அஞ்சாம் முகம் - ஐந்து என்னும் எண்ணின்கண் நிற்கும் முகம். இனி, `சத்தியோசாதம் முதல் கீழே உள்ள நான்கு முகங்களாலும் முகத்திற்கு ஐவைந்தாகக் காமிகம் முதல் முகவிம்பம் ஈறாக உள்ள இருபது ஆகமங்களையும், மேலே உள்ள ஈசானமாகிய ஒருமுகத்தால் எஞ்சிய எட்டு ஆகமங்களும் அருளிச்செய்தான்` எனக் கூறுதலும் உண்டு. ஆதலின், அப்பொருளும் தோன்றுமாறு ``அஞ்சாம் முகத்தில்`` என்றார். இப்பொருட்கு, ``அஞ்சாம் முகம்`` என்றதை, `அஞ்சாகி நிற் கின்ற முகம்` என்றவாறாக உரைக்க. பின்னர்க் கூறிய முறைமைக்கு, `மேல்முகமாகிய ஈசானம் ஒன்றே சத்தியோசாதம் முதலிய ஐந்தனை யும் உடையதாய் இருக்கும்; அவற்றின்கண்ணே காமிகம் முதலிய ஆகமங்கள் ஐவைந்தாகவும், எட்டாகவும் தோன்றின` என, இரண்டு கருத்தும் தம்முள் முரணாதவாறு விளக்கம் தருபவர் உளர்.
இனிச் சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்னும் முகங்களால் முறையே, `கௌசிகர், காசிபர், பாரத்து வாசர், கௌதமர், அகத்தியர்` என்னும் முனிவர்கட்கு மேற்சொல்லிய ஆகமங்கள் உணர்த்தப்பட்டன என்பது, `நிலவுலகில் மகேந்திர மலையில்` என்ற, தி.8 திருவாசகக் கீர்த்தித் திருவகவலால் (அடி. 19. 20) அறியப் படுவதாம்.
இனி, ஆகமங்களைக் கேட்ட அறுபத்தறுவருள், `எல்லாரும் எல்லா ஆகமங்களும் கேட்டனர்` என்பதில்லை; `காமிகம் முதல் சுப்பிரபேதம் ஈறாக உள்ள பத்தினையும் ஒன்றை ஒருவராகப் பதின்மர் சிவபெருமானிடங் கேட்க, அவருள் ஒருவரிடத்து ஒருவராக ஓரா கமத்தை மற்றும் இருவர் கேட்டனர்` என்பதே வரலாறு. ஆகவே, காமிகம் முதலிய பத்தினையும் கேட்டவர் முப்பதின்மராகின்றனர்.
அவருள் காமிக முதலிய பத்தினையும் சிவபெருமானிடம் நேரே கேட்ட பதின்மராவார், `பிரணவர், சுதாக்கியர், சுதீத்தர், காரணர், சுசிவர், ஈசர், சூக்குமர், காலர், அம்பு, தேசேசர்` என்போர்.
இனி இப்பதின்மருள் ஒருவரிடத்தினின்று இவ்விருவராக வழிவழிக் கேட்ட இருபதின்மராவார், `திரிகலர், அரர் - பசுமர், விபு - கோபதி, அம்பிகை - சர்வருத்திரர், மிரசேசர் - சிவர், அச்சுதர் - திரிமூர்த்தி, உதாசனர் - வைச்சிரவணர், பிரபஞ்சனர் - பீமர், தருமர் - உக்கிரர், ஆதித்தியர் - விக்னேசர், சசி` என்போர்.
இம்முப்பதின்மரும், `சிவர்` எனப்படுதலால், இவர்களால் கேட்கப்பட்ட காமிகம் முதலிய பத்து ஆகமங்களும் `சிவபேதம்` எனப்படுகின்றன.
இனி, எஞ்சிய விசயம் முதல் வாதுளம் ஈறாக உள்ள பதினெட்டு ஆகமங்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொருவர் சிவபெரு மானிடம் நேரே கேட்க, அவரிடம் அவற்றை மற்றும் ஒவ்வொரு வராகக் கேட்டனர். ஆகவே எஞ்சிய பதினெட்டு ஆகமங்களைக் கேட்டோர் முப்பத்தறுவர் ஆகின்றனர். அவர் பெயர் முறையே வருமாறு:
அநாதிருத்திரர் (அநாதிருத்திரரை, `மகாருத்திரர்` என்றும் சொல்வது உண்டு.) பரமேச்சுரர் - தசாரணர், பார்வதி - நிதனேசர், பதுமபூ - வியோமர், உதாசனர் - தேசர், பிரசாபதி - பிர மேசர், நந்திகேசர் - சிவர், மகாதேவர் - சர்வான்மர், வீரபத்திரர் - அநந் தர், பிருகற்பதி - பிரசாந்தர், ததீசி - சூலி, கவசர் - ஆலயேசர், இலளிதர் - பிந்து, சண்டேசர் - சிவநிட்டர், அசம்பாதர் - சோமதேவர், நிருசிங்கர் - சீதேவி, உசனர் - தேவவிடி, சம்வர்த்தர் - சிவர், மகா காளர், இவரெல்லாம் `உருத்திரர்` எனப்படுதலின், இப்பதினெட்டு ஆகமங்களும், `உருத்திரபேதம்` எனப்படுகின்றன.
இவர்களுள் ஒருவர் பெயரையே பிறரும் உடையவராய் இருத்தல் பற்றியும், ஆகமங் கேட்டவரல்லாத பிறரது பெயரும் இவர்களுட் சிலர்க்குக் காணப்படுதல் பற்றியும் நாம் மலைவெய்துதல் கூடாது. இவரெல்லாரும் சுத்தாமாயா புவனங்களுள் சதாசிவ புவனத்தில் சதாசிவ மூர்த்திபால் ஆகமங்களைநேராகவும், வழிமுறை யாலும் கேட்டவர் என்க.
ஐந்து முகம் உடைய மூர்த்தி சதாசிவ மூர்த்தியே. அதனால், ``அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டது`` என்றது, இவரிடம் கேட்டதையே என்பதாதல் அறிக. இவரது நிலை மேலே விளக்கப்பட்டது.(தி.10 பா.89 - 90) ``அஞ்சாம் முகத்தில் அரும் பொருள் கேட்டது`` என்பதற்கு ஈடாக, `எஞ்சலில் விஞ்ஞகர் இருபத் தெண்மரும்`` என்று ஓதுவது, தாமே தமக்கு வேண்டியவாறு கட்டிக் கொண்ட பாடம்.
``அரும்பொருள்`` என்றது, மெய்யுணர்வினை. எனவே, `ஆகமங்கள் மெய்ந்நெறியை உணர்த்தும் சிறப்புநூல்` என்பது கூறியவாறாயிற்று. ``பாகத்தன் ஆகமம்`` என்பது, செய்யுட் கிழமைக்கண் வந்த ஆறாவதன் தொகை.

பண் :

பாடல் எண் : 2

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்கள்மேல் வைத்த அருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்களை எண்ணாற்கூறின், `இருபத் தெட்டு` என்னும் அளவில் நில்லாமல், அளவின்றியுள்ளன. அவைகளால் மேற்கூறிய அறுபத்தறுவரும், பிறரும் சிவபெரு மானது மேன்மையைத் தத்தமக்கியைந்தவாற்றால் விளங்க உரைத்தார்கள். அவ்வாறு உரைக்கப்பட்ட அளவிலே நானும் கேட்டுச் சிந்தித்துத் துதிக்கத் தொடங்கினேன்.

குறிப்புரை :

``கோடி நூறாயிரம்`` என்றது அளவின்மை கூறிய வாறு. அற்றாயினும் முற்கூறிய இயைபு தோன்றுதற் பொருட்டு, ``இருபத்தெண்கோடி நூறாயிரம்`` என்றார். விண்ணவர் என்றது மக்களினும் மேம்பட்ட பலரையும், `அவர் இவர்` என்பது பின்னர் விளக்கப்படும். `வேதம் நான்கு` எனவும், `ஆகமம் இருபத் தெட்டு` எனவும் வரையறை கூறப்படினும், அவ்வப்பொழுது இறைவன் அவரவருக்கு உணர்த்துமாற்றால் உண்மையில் அவை அளவில் லனவே என்பது உணர்த்துதற்கு இவ்வாறு கூறினார். ``வேதங்கள் அநந்தம்`` என்ற வாக்கியமும் உண்டு. இது பற்றியே, ``ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் - திங்கள் போலத் திசைவிளக் கும்மே`` என்னும் திருமுருகாற்றுப் படைப் பகுதிக்கு நச்சினார்கினியர் உரைகூறுமாறும் அறிக.
இனி `இஃது ஆகமங்களின் கிரந்தங்கள் எண்ணில வாதலையும், உபாகமங்கள் இருநூற்றேழாதலையும் கூறியது` என்றலுமாம். சேக்கிழாரும் ``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்`` என்றமை அறியத் தக்கது. (தி.12 திருக்குறிப்புத் தொண்டர். 51) இதனால், `ஆகமங்கள், அறுபத் தறுவரேயன்றிப் பின்னும் பலரால் கேட்கப்பட்டு வந்து நிலவுலகில் விளங்கின` என்பது கூறப்பட்டது.
ஆகமங்களின் கிரந்த அளவு மரபாகச் சொல்லப்பட்டுவரும் முறை வருமாறு:
1. காமிகத்திற்குக் கிரந்தம் பரார்த்தம்.
2. யோகஜத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்.
3. சிந்தியத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்.
4. காரணத்திற்கு கிரந்தம் ஒரு கோடி.
5. அஜிதத்திற்கு கிரந்தம் நியுதம்.
6. தீப்தத்திற்கு கிரந்தம் நியுதம்.
7. சூட்சுமத்திற்கு கிரந்தம் பத்மம்
8. சகஸ்ரத்திற்கு கிரந்தம் சங்கம்
9. அம்சுமானுக்கு கிரந்தம் ஐந்து லட்சம்
10. சுப்பிரபேதத்திற்கு கிரந்தம் மூன்று கோடி
11. விஜயத்திற்கு கிரந்தம் மூன்று கோடி
12. நிஸ்வாசத்திற்கு கிரந்தம் ஒரு கோடி
13. சுவாயம்புவத்திற்கு கிரந்தம் ஒன்றரைக் கோடி
14. ஆக்னேயத்திற்கு கிரந்தம் முப்பதினாயிரம்
15. வீரத்திற்கு கிரந்தம் நியுதம்
16. ரௌரவத்திற்கு கிரந்தம் எட்டு அற்புதம்
17. மகுடத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்
18. விமலத்திற்கு கிரந்தம் மூன்று லட்சம்
19. சந்திர ஞானத்திற்கு கிரந்தம் மூன்று கோடி
20. முக விம்பத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்
21. புரோத்கீதத்திற்கு கிரந்தம் மூன்று லட்சம்
22. லளிதத்திற்கு கிரந்தம் எண்ணாயிரம்
23. சித்தத்திற்கு கிரந்தம் ஒன்றரைக் கோடி
24. சந்தானத்திற்கு கிரந்தம் ஆறாயிரம்
25. சர்வோக்தத்திற்கு கிரந்தம் இரண்டு லட்சம்
26. பாரமேசுரத்திற்கு கிரந்தம் பன்னிரண்டு லட்சம்
27. கிரணத்திற்கு கிரந்தம் ஐந்து கோடி
28. வாதுளத்திற்கு கிரந்தம் ஒரு லட்சம்
இருபத்தெட்டு மூலாகமங்கட்கு உபாகமங்களின் அளவு மரபாகச் சொல்லப்பட்டு வரும் முறை வருமாறு:
1. காமிகத்திற்கு உபாகமம் 3:- வக்தாரம், பைர
வோத்தரம், நாரசிம்மம் (மிருகேந்திரம்).
2. யோகஜத்திற்கு உபாகமம் 5:- தாரம்,
வீணாசிகோத்ரம், ஆத்மயோகம், ஸந்தம், ஸந்ததி.
3. சிந்தியத்திற்கு உபாகமம் 6:- ஸுசிந்தியம்,
ஸுபகம், வாமம், பாபநாசம், பரோத்பவம், அம்ருதம்.
4. காரணத்திற்கு உபாகமம் 7:- காரணம்,
வித்வேஷம், பாவனம், மாரணம், தௌர்கம், மாஹேந்திரம், பீனஸம்ஹிதை.
5. அஜிதத்திற்கு உபாகமம் 4:- பிரபூதம்,
பரோத்பூதம், பார்வதீஸம்ஹிதை, பத்மஸம்ஹிதை.
6. தீப்தத்திற்கு உபாகமம் 9:- அமேயம், சப்தம்,
ஆச்சாத்தியம், அஸங்கியம், அமிருதோஜஸம், ஆனந்தம், மாதவோத்பூதம், அற்புதம், அக்ஷயம்.
7. சூட்சுமத்திற்கு உபாகமம் 1:- சூட்சுமம்.
8. சகஸ்ரத்திற்கு உபாகமம் 10:- அதீதம்,
மங்கலம், சுத்தம், அப்ரமேயம், ஜாதிபாக்கு, பிரபுத்தம், விபுதம், அஸ்தம், அலங்காரம், ஸுபோதம்.
9. அம்சுமானுக்கு உபாகமம் 12:- வித்தியா
புராணம், தந்திரம், வாஸவம், நீலலோகிதம், பிரகரணம், பூததந்திரம், ஆத்மாலங்காரம், காசியபம்,
கௌதமம், ஐந்திரம், பிராமம், வாசிட்டம், ஈசானோத்தரம்.
10. சுப்பிரபேதத்திற்கு உபாகமம் 1:- சுப்பிரபேதம்.
11. விசயத்திற்கு உபாகமம் 8:- உற்பவம்,
சௌமியம், அகோரம், மிருத்யுநாசனம், கௌபேரம், மகாகோரம், விமலம், விசயம்.
12. நிசுவாசத்திற்கு உபாகமம் 8:- நிசுவாசம்,
நிசுவாசோத்தரம், நிசுவாச சுகோதயம், நிசுவாச நயனம், நிசுவாச காரிகை, நிசுவாச கோரம், நிசுவாசகுய்யம், மந்திர நிசுவாசம்.
13. சுவாயம்புவத்திற்கு உபாகமம் 3:- பிரஜாபதி மதம், பதுமம், நளினோற்பவம்.
14. ஆக்னேயத்திற்கு உபாகமம் 1:- ஆக்கினேயம்.
15. வீரத்திற்கு உபாகமம் 13:- பிரஸ்தரம்,
புல்லம், அமலம், பிரபோதகம், அமோகம், மோகசமயம், சகடம், சகடாதிகம், பத்திரம்,
விலேகனம், வீரம், அலம், போதகம்.
16. இரௌரவத்திற்கு உபாகமம் 6:- காலாக்கியம்,
காலதகனம், இரௌரவம், இரௌரவோத்தரம்,மகாகாலமதம், ஐந்திரம்.
17. மகுடத்திற்கு உபாகமம் 2:- மகுடம், மகுடோத்தரம்.
18. விமலத்திற்கு உபாகமம் 16:- அனந்தம்,
போகம், ஆக்கிராந்தம், இருடபிங்கம், இருடோதரம், இருடோற்பூதம், இரௌத்திரம், சூதந்தம், தாரணம்
ஆரேவதம், அதிக்கிராந்தம், அட்டகாசம், பத்திரவிதம், அர்ச்சிதம், அலங்கிருதம், விமலம்.
19. சந்திர ஞானத்திற்கு உபாகமம் 14:- ஸ்திரம், ஸ்தாணு,
மகாந்தம், வாருணம், நந்திகேசுரம், ஏகபாதபுராணம், சாங்கரம், நீலருத்திரகம், சிவபத்திரம், கற்பபேதம்,
சீமுகம், சிவசாசனம், சிவசேகரம், தேவீமதம்.
20. முக விம்பத்திற்கு உபாகமம் 15:- சதுமுகம்,
சமத்தோபம், பிரதிபிம்பம், அயோகஜம், ஆன்மாலங்காரம், வாயவியம், பட்டசேகரம்,
தௌடிகம், துடிநீரகம், குட்டிமம், துலாயோகம்,
காலாத்தியயம், மகாசௌரம், நைருதம், மகாவித்தை.
21. புரோத்கீதத்திற்கு உபாகமம் 16:- வாராகம், கவசம்,
பாசபந்தம், பிங்கலாமதம், அங்குசம், தண்டதரம், தனுதரம், சிவஞானம், விஞ்ஞானம், சீகாலஞானம்,
ஆயுர்வேதம், தனுர்வேதம், சர்பதம், ஷ்டரவிபேதனம்,
கீதகம், பரதம், ஆதோத்தியம்.
22. இலளிதத்திற்கு உபாகமம் 3:- இலளிதம்,
இலளிதோத்தரம், கௌமாரம்.
23. சித்தத்திற்கு உபாகமம் 4:- சாரோத்தரம்,
ஔசனசம், சாலாபேதம், சசிமண்டலம்.
24. சந்தானத்திற்கு உபாகமம் 7:- இலிங்காதியட்சம்,
சுராத்தியட்சம், அமரேசுரம், சங்கரம், அசங்கியம், அனிலம், துவந்தம். 25. சர்வோக்தத்திற்கு உபாகமம் 5:- சிவ
தருமோத்தரம், வாயுப்புரோத்தம்,
திவ்வியப்புரோத்தம்,ஈசானம், சருவோற்கீதம்.
26. பாரமேசுரத்திற்கு உபாகமம் 7:- மாதங்கம்,
யட்சணிபதுமம், பாரமேசுரம், புட்கரம், (பௌட்கரம்) சுப்பிரயோகம், அமிசம், சாமானியம்.
27. கிரணத்திற்கு உபாகமம் 9:- காருடம்,
நைருதம், நீலம், இரூட்சம், பானுகம், தேனுகம், காலாக்கியம், பிரபுத்தம், புத்தம்.
28. வாதுளத்திற்கு உபாகமம் 12:- வாதுளம்,
வாதுளோத்தரம், காலஞானம், பிரரோகிதம், சருவம், தருமாத்மகம், நித்தியம், சிரேட்டம், சுத்தம்,
மகானனம், விசுவம், விசுவான்மகம்.
ஆக உபாகமங்கள் இருநூற்றேழு - 207
காமிகம் முதலிய இருபத்தெட்டு மூலாகமங்கள் சிவபெருமானுக்குப் பாதம் முதலிய உறுப்புகளாகவும், ஆடை, ஆபாரணம் முதலிய பிற பொருள்களாகவும் அமைந்த முறைமை ஆகமங்களுட் சொல்லப்படும்.
எண்ணற்ற கிரந்தங்களாயும், உபாகமங்களாயும் விரிந்த ஆகமங்களைப் பின்வந்த ஆசிரியர்கள் பலவாறு சுருக்கிச் சொன்னார்கள். அச்சுருக்கங்களிற் சிலவே இப்பொழுது கிடைக்கும் ஆகமங்கள்.

பண் :

பாடல் எண் : 3

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த மேலான ஆகமங்கள் வானத்தில் உள்ள தேவர் களாலும் அறிதற்கரிய பொருள்களை உடையன. அதனால், அவை அளவிறந்து கிடப்பினும், உயிர்கட்குப் பயன்படுதல் அரிது.

குறிப்புரை :

`அஃது அறிந்து சிவபெருமான் அவற்றைத் தானே நேராகவும், பிறர் வாயிலாகவும் பலர்க்கு விளக்கியருளினான்` என்பது குறிப்பெச்சம். ``நீர்மேல் எழுத்து`` பயன்கொள்ளுதல் அரிதாதற்கு உவமை. `அங்ஙனம் விளக்கம் பெற்றோர் இவர்` என்பதனை வருகின்ற திருமந்திரங்களால் கூறுவார்.

பண் :

பாடல் எண் : 4

பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. 

பொழிப்புரை :

சிவலோகத்தில் மேலான சதாசிவ மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலியோர்க்கு உணர்த்தியருளிய சிவபெருமான், நிலவுலகிற்கு ஏற்ப அவற்றை உணர்த்தியருளும் பொழுது சீகண்ட பரமசிவனாய் இருந்து உணர்த்த, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான் மெய்யுணர்வுடையராய் அவை இனிது விளங்கப்பெற்றார்.

குறிப்புரை :

இஃது ஆகமங்கள் நிலவுலகிற்கு வந்த வரலாற்றைத் தொகுத்துக் கூறியது. பராபரம் - உயர்ந்ததும் தாழ்ந்தனவும் ஆகிய பொருள்; அவை பதியும், பசு பாசங்களுமாம். எனவே, `முப் பொருளின் இயல்பு` என்றவாறாம். தரனாய் - ஏற்ற பெற்றியில் நிற் பவனாய். இங்ஙனங் கூறவே, `சிவபெருமான் ஆகமங்களை முதற் கண் அனந்ததேவர் வாயிலாகச் சீகண்ட உருத்திரர்க்கு உணர்த்தி, பின்பு அவர் வாயிலாகத் தேவர், முனிவர், கணங்கட்கு உணர்த் தினான்` என்பது கொள்க.`வேதங்களை அனந்ததேவர் வாயிலாகப் பிரமதேவர்க்கு உணர்த்தினான்` என்ப. அரன் - உருத்திரன்; அஃது ஏற்புழிக் கோடலால், சீகண்ட உருத்திரரைக் குறித்தது. பரமசிவன் சீகண்ட உருத்திரராய் நிற்றல், அவரே தானாக அவருள் நிற்றல். சிவ தன்மம் - சிவபுண்ணியம். `அவை சரியையும், கிரியையும்` என்பது, ``நல்லசிவ தன்மத்தால் நல்லசிவயோகத்தால் நல்லசிவ ஞானத்தால்`` (திருக்களிற்றுப்படியார். 15) என்பவற்றால் அறிக. சிவதன்மங் கூறவே, இனம் பற்றிச் சிவயோகமும் கொள்ளப்படும். ``பராபரம், சிவதன்மம்`` என்றவை, ஏனையிடங்களிலும் சென்று இயையும். எனவே, சிவாகமங்கள் `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நாற்பாதங்களாய் உள்ளன என்பது உணர்த்தப்பட்டதாம்.
சிவாகமங்களில்,
சிவபெருமானது இலிங்கத் திருமேனி, உமா மகேசுர மூர்த்தம் முதலிய உருவத் திருமேனி, நந்திதேவர் முதலிய பரிவார மூர்த்தங்கள் முதலியவற்றின் அமைப்புமுறைகளையும், திருக் கோயில் அமைப்பு, புட்ப விதி, பிராயச்சித்த விதி, பவித்திர விதி, செப மாலை யோகபட்டம் முதலியவற்றின் அமைப்பு, அந்தியேட்டி விதி, சிரார்த்த விதி முதலியவற்றையும் கூறும் பகுதிகள் சரியாபாதம் எனவும்,
மந்திரங்களின் உச்சாரணமுறை, குண்டமண்டல வேதிகை முதலியவற்றின் அமைப்புக்கள், சந்தியாவந்தனம், பூசை, செபம், ஓமம் முதலியவற்றின் விதிகள், சமய விசேட நிருவாண தீட்சைகள் ஆசாரியாபிடேகம் என்பவற்றின் விதிகள், ஆன்மார்த்தமும், பரார்த்தமும் ஆக அமைந்த நித்திய நைமித்திய பூசை முறைகள் விழா முறைகள் போல்வனவற்றைக் கூறும் பகுதிகள் கிரியா பாதம் எனவும்,
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு நிலைகளின் முறைமையும், மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களின் இயல்பும், ஞானபாதத்திற் சொல்லப்படும் பொருள்களைப் பாவனையாற்காணும் முறைகளும் போல்வனவற்றைக் கூறும் பகுதிகள் யோக பாதம் எனவும்,
`பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களின் இயல்பு, உலகத்தின் தோற்ற ஒடுக்கங்கள், அண்டகோடிகளின் இயல்புகள், நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பின் எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதத்தின் இயல்புகள், வினைவகை வினைப்பயன் வகைகள், ஞானத்தின் படிநிலைகள், அவற்றின் பயன்கள் முதலிய வற்றைக் கூறும்பகுதிகள் ஞானபாதம் எனவும்
உணர்க.
சிவாகமங்களைச் சிவபெருமான் சொல்லியருளினமையைத் திருஞானசம்பந்தரும்,
``திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான்``
-தி.2 ப.43 பா.6
எனக் குறிப்பிட்டருளினமை காண்க. இதனுள், ``அறங்கொண்டு`` என்றது, ``சார்ந்தாரைக் காத்தல் வேண்டுவதாகிய கடன் பற்றி`` எனப் பொருள் தரும். உரன் - உரம் உடையவன். உரம் - மெய்யுணர்வு, ``உரனென்னுந் தோட்டியான்`` (குறள். 24) என்பதிற்போல, ஓங்கி - ஓங்கப்பெற்று. ஓங்குதல் - விளங்குதல்.

பண் :

பாடல் எண் : 5

சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே. 

பொழிப்புரை :

தடத்த நிலைகளுள் மேலானதாகிய சிவம் நாத தத்துவத்தில் நின்று, தன்னிடத்தினின்று வெளிப்பட்டு விந்து தத்து வத்தில் நிற்கும் சத்திக்கு உணர்த்த, அச்சத்தி தன்னினின்றும் தோன்றிய சதாசிவர்க்கு உணர்த்த, அவர் தம்மிடத்தினின்றுந் தோன்றிய சம்புபட்ச மகேசுரரோடு ஒத்த அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர்க்கு உணர்த்த, அவர் உருத்திரதேவர்க்கும், அவர் தவத் திருமாலுக்கும், அவர் பிரமேசருக்கும் உணர்த்த இவ்வாறு சுத்தமாயையில் உள்ள தலைவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவராகப் பெற்றுப் பயனடைந்த ஆகமங்களில் சிறப்பாக ஒன்பதை எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமான் மேற்குறித்தவாறு சீகண்ட பரமசிவன்பால் பெற்றார்.

குறிப்புரை :

``உவமா`` என்பது, `ஒப்பு` என்னும் பொருளதாகிய ஆரியச்சொல். `உருத்திரன், திருமால், பிரமன்` என்போர் சுத்த மாயையில் உள்ளோர் என்பது அறி வித்தற்கு, `உருத்திர தேவர்` என்றும், ``தவமால்`` என்றும், ``பிர மேசர்`` என்றுங் கூறினார். மால் - பெருமையுடையோன். தவமால் - மிக்க பெருமையுடையோன். முதற்கண் கூறியவாறு அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்ட அறுபத்தறுவரும் சதாசிவ புவனத்தில் வாழும் அணுசதாசிவராகலின், இது அவ்வாகமங்கள் கீழ்க்கீழ்ப் புவனங்களில் வந்த முறைமை கூறியவாறு. மந்திர மகேசுரர் ஈசுர தத்துவத்திலும் உருத்திரர் முதலிய மூவரும் சுத்த வித்தியாதத்துவத்திலும் வாழ்வார் என்று அறிக. உருத்திரதேவர்க்கு மந்திர மகேசுரரால் உணர்த்தப்பட்டது எனவே, `சுத்த வித்தையில் அவரோடு ஒப்ப நிற்கும் அனந்த தேவர்க்கும் அவர்வழியாகவே உணர்த்தப்பட்டது` என்பதும், அங்ஙனமாயினும் அனந்ததேவர் சதாசிவரிடமிருந்தே ஆகமங்களைப் பெற்றார் எனச் சில ஆகமங்களில் கூறப்படுதல் முகமனுரை என்பதும் பெறப்படும்.
நந்தி பெருமான் ஆகமங்களில் ஒன்பதைச் சிறப்பாகப் பெற்றமையாவது, ஆசிரிய வழிமுறையால் (குருபரம்பரையால்) சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினோராகிய மக்கட்கு விண்ணோர் தமக்கும் விளங்கரிய எல்லா ஆகமங்களின் பொருளையும் எளிமை யாகத் தொகுத்துணர்த்தற் பொருட்டாம். எனவே, அவ்வொன்பது ஆகமங்களுள் ஏனை எல்லா ஆகமப் பொருளும் அடங்கி நிற்றல் பெற்றாம். ``ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு`` (தி.10 ஐந்தாம் தந்திரம்) என்னும் திருமந்திரத்தால் இக்கருத்து வலியுறுத்தப் படுகின்றது. `அவ்வாகமங்கள் இவை` என்பதனை அடுத்துவரும் திருமந்திரத்தால் உணர்த்துவார். `அவற்றை நந்தி பெருமானிடம் கேட்டு உலகிற்கு உணர்த்தினோர் இந் நாயனாரை உள்ளிட்ட எண்மர்` என்பதையும், `இவர் வழியாக மற்றும் பலர் அவற்றை உலகிற் பரப்பினர்` என்பதையும் முன்னே கூறினார் (தி.10 எட்டாம் தந்திரம்) இன்னும் சனற்குமார முனிவர் கேட்டுச் சத்திய ஞான தரிசனிகள் நில வுலகில் வழியாகப் பரஞ்சோதிமாமுனிவர்க்கும், அவர்வழியாக திரு வெண்ணெய்நல்லூரில் `சுவேதவனப் பெருமாள்` என்னும் பிள்ளைத் திருநாமத்துடன் எழுந்தருளியிருந்த மெய்கண்ட தேவர்க்கும் உணர்த்தற்ப்பட்டு, அவர் வழியாகப் பலவிடத்தும் ஆகமப்பொருள் விளங்கிவருதல் அம் மரபினராகிய உமாபதிதேவ நாயனார் அருளிச் செய்த சிவப்பிரகாச நூலாலும், பிறவற்றாலும் நன்கறியப்பட்டது.
`சிவபெருமான் ஆகமங்களைப் பிரதி சங்கிதை முறையால் (ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்றாக வகுத்துக் கூறும் முறையால்) பிரணவர் முதலிய இருபத்தெண்மர்க்கும் நேரே உணர்த்தி, மகௌக முறையால் (எல்லாவற்றையும் ஒருவர்க்கு ஒருங்கு தொகுத்துக் கூறும் முறையால்,) அனந்த தேவர் வாயிலாகச் சீகண்டருக்கு உணர்த்த, அவர் நந்திபெருமானுக்கும் அவ்வாறே அனைத்தையும் உணர்த்தி னார்` என ஆகமங்களில் கூறப்படுதலால், ``நவ ஆகமம் எங்கள் நந்திபெற்றானே`` என இங்கு நாயனார் அருளிச்செய்ததற்கு, குருபரம்பரையால் நிலவுலகிற்குத் தருமாறு உணர்த்தப்பட்டவை ஒன்பது` என்பதே கருத்தாதல் அறிக.
ஆகமங்களைச் சிவபெருமானிடம் நேரே கேட்டவர் மந்திர மகேசுரர் ஆதலின் அது `அதிபர சம்பந்தம்` என்றும், மந்திர மகேசுரரிடம் அனந்ததேவர் கேட்டது `பர சம்பந்தம்` என்றும், அனந்த தேவரிடம் சீகண்டர் கேட்டது `மகா சம்பந்தம்` என்றும், சீகண்டரிடம் நந்திபெருமான் கேட்டதும், திருமால் முதலிய தேவர்கள் கேட்டதும் `அந்தராள சம்பந்தம்` என்றும், நந்தி பெருமானிடத்தும், திருமாலி டத்தும், மற்றைய தேவர்களிடத்தும் முனிவர்களும் சித்தர்களும் கேட்டது `திவ்வியசம்பந்தம்` என்றும், தேவர்களிடமும், முனிவர்களிடமும் மக்கள் கேட்டது `திவ்வியாதிவ்விய சம்பந்தம்` என்றும், மக்களிடம் மக்கள் கேட்டது `அதிவ்விய சம்பந்தம்` என்றும் சொல்லப் படுகின்றன.
`வேதம், சிவாகமம்` என்னும் இரண்டும் `ஆப்த வாக்கியம்` எனப்படுகின்றன. `ஆப்தன்` என்பதற்கு, `உள்ளது கூறுவோன்` என்பது பொருள். பொதுமக்கட்கு நன்மக்கள் ஆப்தர். நன்மக்கட்கு முனிவர்களும், தேவர்களும் ஆப்தர். முனிவர்கட்கு நந்தி பெரு மானும், தேவர் கட்குப் பிரமதேவரும் ஆப்தர். நந்திதேவர், பிரம தேவரினின்று மேன் மேல் உள்ளவர் கீழ்க்கீழ் உள்ளவருக்கு ஆப்தர். எல்லார்க்கும் ஆப் தராய்த் தமக்கோர் ஆப்தர் இல்லாத அதிபரமாப்தர் சதாசிவ நாயனார். அவர்க்குமேல் உள்ள சத்தியும், சிவமும் இலய நிலை (ஒடுக்கநிலை) ஆதலின், அங்கு வேத சிவாகமங்கள் விளங்கித் தோன்றுதல் இல்லை.

பண் :

பாடல் எண் : 6

பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே. 

பொழிப்புரை :

மேற்கூறியவாறு நந்திபெருமான் சீகண்டரிடம் சிறப்பாகப்பெற்ற ஒன்பது ஆகமங்கள், `1. காரணம், 2. காமிகம், 3. வீரம், 4. சிந்தியம், 5. வாதுளம், 6 ... ... 7. ... ... 8 சுப்பிரபேதம், 9. மகுடம்` என்பன.

குறிப்புரை :

இத்திருமந்திரத்தின் மூன்றாம் அடி, `நாயனார் திருமொழியன்று` என்பது தெளிவாய்த் தெரிகின்றது. எவ்வாறெனில், `யாமளமாகும் காலோத்தரம்` என்பது பெரும்பான்மையும் ஒன்றாகவே கொள்ளத்தக்கதாய் உள்ளது. அவ்வாறு கொண்டால், ஒன்பது கூறவந்தவர் ஒன்றனை மறந்தார் ஆவர். `யாமளம், ஆகும் காலோத்தரம்` என இரண்டாகக் கொள்ளினும், யாமளம் சைவாகம மன்று; வாம தந்திரம். அது சைவத்திற்குப் புறம்பானது. `காலோத்தரம்` என்ற பெயரில் பல உள. ஒன்றேனும் மூலாகமம் அன்று. அதனால், வாம மதத்தினர் ஒருவர் தமது தந்திரத்தையும் திவ்வியாகமங்களில் ஒன்றாக்கிக்கொள்ள இத்திருமந்திரத்தைத் திரித்துவிட்டார் போலும்! அவ்விடத்தில் நாயனார் கூறிய இரு ஆகமங்கள் இவை என்பது அறியப்படாது போயினமை வருத்தத்திற்குரியது. `நந்திபெருமான் சிறப்பாகப்பெற்ற ஆகமங்கள் ஒன்பது` என்பதற்கேற்ப அவர்பால் அவற்றைப்பெற்ற இந்நாயனார் இந்நூலையும் ஒன்பது தந்திரங்களாக அருளிச்செய்திருத்தல் அறியத் தக்கது. எனினும், ஒவ்வோர் ஆகமத்தையே ஒவ்வொரு தந்திரமாகச் செய்தார் என்பதற்கில்லை. ஏனெனில், அவ்வாறு செய்திருப்பின், அவற்றின் தொடக்கத்தில் `இன்ன ஆகமத்தைச் செப்புகின்றேன்` எனச் சொல்லித் தொடங்கி யிருப்பார். அவ்வாறன்றி முதற்கண் ``சிந்தைசெய்து ஆகமம் செப்ப லுற்றேனே`` எனப் பொதுப்படக்கூறி அமைந் தமையானே அது பெறப்படுவதாம்.
ஆகமங்கள் பலவும் தனித்தனி வேறு வேறு பொருளைக் கூறுவன அல்ல; எல்லா ஆகமங்களும் எல்லாப் பொருளையும் கூறு வனவே எனினும், சிலவற்றைத் தொகுத்தும், சிலவற்றை விரித்தும் கூறுமாற்றால் வேறு வேறு ஆகமங்களாயின. ஆகவே, நந்திபெருமான் சிறப்பாகப்பெற்ற ஆகமங்களை உணரின், அனைத்து ஆகமங்களை யும் உணர்ந்ததாம். அவற்றின் பொருளையே கூறினமையால், இந் நூலை உணரினும் அனைத்து ஆகமங்களும் உணர்ந்தவாறாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 7

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த ஆகமங்கள் அளவின்றி இருப்பினும், அவற்றில் சொல்லப்பட்ட பொருளை மக்கள் அறியமாட்டாராயின், அவை அனைத்தும் அவர்கட்குப் பயனில்லாதனவேயாய் விடும்.

குறிப்புரை :

என்றது, வருகின்ற திருமந்திரங்கட்குத் தோற்றுவாயாக லின், `அதனால் அவற்றின் பொருளை அறிதற் பொருட்டுப் பல மொழிகளை அவன் படைத்தனன்` என்பது குறிப்பெச்சமாக உரைக்க.

பண் :

பாடல் எண் : 8

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. 

பொழிப்புரை :

பெருகற்காலத்தும், சிறுகற்காலத்தும் நிறைந்த மெய்யுணர்விருக்கவும் அதனை நோக்காது புலனுணர்வே மிகப் பெற்று மக்கள் மெலிவுறுகின்ற காலத்து அம்மெலிவு நீங்குமாறு சிவ பெருமான் `ஆரியம், தமிழ்` என்னும் இருமொழிகளை உமா தேவியார்க்கு ஒருங்கு சொல்லி உலகம் உய்யத் திருவருள் செய்தான்.

குறிப்புரை :

`அவற்றையே பின்னர் பாணினி முனிவர்க்கும், அகத்திய முனிவர்க்கும் செப்பஞ் செய்யுமாறு உணர்த்தி, உலகில் பரவச்செய்தான்` என்க. `வடமொழிக்கு இந்திரனால் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணமே முதல் நூல்` என்றல் பழங்கதையேயாக, உண்மையில் உள்ளது பாணினீயமே. அதனால்,
``வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்``
-காஞ்சிப்புராணம்
என்றலே சிவநெறி மரபு என்க.
பலதலைப்பட்ட உணர்வுடையராய்ப் பரந்துசென்று ஆராயும் உலகர் பொருட்டு ஆரியமொழியும், அவ்வாறன்றி ஒருதலைப்பட அமைந்த உணர்வுடையராய் ஒழுக்கத்தில் நின்று பயன்பெற விரும்பும் நல்லோர் பொருட்டுத் தமிழ்மொழியுமாக இருமொழியை இறைவன் சொல்லியருளினான் என்பது,
``தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்`` -தி.10. பா.26
என நாயனார் மேலே அருளிச்செய்தவாற்றால் பெறப்படும். இவ்வாறு இவ்விருமொழியையும் ஒப்பக்கொண்டதன்றி ஒன்றை உயர்ந்ததாகவும், மற்றொன்றைத் தாழ்ந்ததாகவும் ஆன்றோர் கொண்டிலர் என்பது இதனால் பெறப்பட்டது. இங்ஙனமாகவும் சிலர் இவற்றுள் ஒன்றைப் பற்றி மற்றொன்றனை இகழ்வர். அவர், இது முதல் மூன்று திருமந்திரங்களை, `நாயனார் வாக்கல்ல` என விலக்கிச் செல்வர். அவர், ``தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழற் சேர`` (தி.1 ப.77 பா.4) ``ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்`` (தி.6 ப.23 பா.5) என்றாற் போல்வன வற்றையும் அவ்வாறு விலக்கிப்போவர் போலும்!
மொழிகளது நிலை, `நுண்மை, பொதுமை, இடைமை, பருமை` என நான்கு வகைப்படும். அவை முறையே, `சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி` என வடமொழியிற் சொல்லப்படும். அவற்றுள், `மத்திமை, வைகரி` எனப்படுகின்ற இடைமொழி பரு மொழிகள் தாம் ஆரியம், தமிழ் முதலிய பாகுபாடுகளைப் பெற்று நிற்கும். அவற்றிற்கு முந்திய நிலைகள் பாகுபாடின்றியே விளங்கும். அவற்றுள் பிரணவர் முதலியோரும் அனந்த தேவரும் ஆகமங்களைப் பெற்றது `சூக்குமை` எனப்படும் நுண்மொழியினாலாம். சீகண்டர் பெற்றது `பைசந்தி` என்னும் பொதுமை மொழியால். சீகண்டரிட மிருந்து நந்தி முதலிய கணங்கள், தேவர், முனிவர், சித்தர் பெற்றது இடைமொழியாகிய மத்திமையினால். அவர்களிடமிருந்து மக்கள் பெற்றது `வைகரி` எனப்படும் பருமொழியினால். `சிலர்க்கு இயல் பாகவே மெய்யுணர்வு உண்டாயிற்று` என்றல் இறைவன் உள்நின்று நுண்மொழி இடைமொழிகளால் விளக்கியதே என்க. அதனால், கணங்கள் முதலியோர் பொருட்டே பாகுபட்ட மொழிகளை இறைவன் சொல்லினன்` எனக் கொள்க. இவற்றுள், இடைமொழிக்கு (மத்தி மைக்கு) முற்பட்டவற்றையே, ``சொற்பிரிவிலாத மறை`` (தி.3 ப.78 பா.2) என்று திரு ஞானசம்பந்தர் அருளிச் செய்தார். அதற்கு இவ்வாறு பொருள் கொள் ளாது `சொற்கள் நீங்காது நிற்கின்ற மறை` என உரைப்பின் பொருள் படாமை அறிக. ``எழுதா மறை`` எனப்படுவதும் இச்சொற்பிரிவிலாத மறையே. அதனையே ஆரிய வேதத்திற்கு மரபாகக் கொண்டனர் அந்தணர். `எழுதா மறை` என்பதற்கு, `எழுத வாராத மறை` என்பதே பொருளன்றி, `எழுதாமல் இருப்பதையே மரபாகக் கொண்ட மறை` என்பது பொருளாகாது.
``ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றிஉரைத் தேட்டின் புறத்தெழுதார்`` -திருவள்ளுவமாலை. 15
என்ற செய்யுளும், `எழுதப்படுவதனை எழுதாதிருக்கின்றனர் அந்தணர்` என்றே கூறிற்று. எனவே, `எல்லையிலா மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை` (தி.12 பெ.பு.ஞானசம். 75) என்பதில், `எழுது மறை` என்றது, `சொற்பிரிவிலாத மறையைத் `தமிழ்` என `ஒரு மொழியாய்ப் பிரிந்து தோன்றி எழுதப்படுமாறு வைத்த மறை` என்றவாறாயிற்று.
இதனால், மேலுலகத்தில் பிரணவர் முதலியோர்க்குச் சொல்லிய ஆகமங்கள் கீழுலகத்தார்க்கு விளங்குதற்பொருட்டு இறைவன் பருமொழிகளைப் படைத்தமை கூறப்பட்டது. `ஆகமங்கள் விளங்குதற்பொருட்டே மொழிகளைப் படைத்தான்` என்றமையால், அம்மொழிகளில் அவ்வாகமங்களை அவன் கூறினமையும் பெறப்படும்.
``மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்``
-தி.8 திருவாசகம். கீர்த்தி. 9. 10
``கேவேட ராகிக் கெளிறது படுத்து
மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்
துற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்``
-தி.8 திருவாசகம் கீர்த்தி. 16. 20.
வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுதே
தெள்ளும் வாய்மையின் ஆகமத் திறனெலாந் தெரிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகைஆ ளுடையாள்.
-தி.12 பெ. பு. திருக்குறிப்பு. 50.
என்றாற்போல வருவன பலவும் சிவபெருமான் தனது ஆகமங்களைப் பருமொழியால் விளக்கிய வரலாற்றைக் குறிப்பனவேயாம். இறைவன் படைத்த பருமொழியை இந்நாயனார், `ஆரியம், தமிழ்` என இரண்டாகக் கூறினமையின், ஆகமங்கள் அவ் இருமொழியிலும் கூறப்பட்டன என்றல் பொருந்துவதே என்க. இதனானே, பிறநெறிகள்யாவும், `ஆரியம் ஒன்றே கடவுள்மொழி; தமிழ் முதலிய பிறமொழிகள் யாவும் தேசியம் - அஃதாவது அவ்வந் நிலப்பகுதியில் வாழும் மக்கட்கு அமைந்த மொழி` என்னுமாயினும், சிவநெறி, ஆரியம் தமிழ் இரண்டையுமே கடவுள்மொழி என ஒப்பக்கொள்வது என்பது பெறப்பட்டது. இந்நாயனார்க்குப் பல நூற்றாண்டுகட்குப் பின் பிறர் சிலரும் இவ்வாறு கொண்டனர்.

பண் :

பாடல் எண் : 9

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே. 

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்களைப் பாசத்தளை யினின்றும் விடுவிக்கின்ற முறையையும், பின் அவற்றை அன்பு வாயி லாகத் தன்னிடத்தே நிலைபெறுவிக்கின்ற முறையையும், அங்ஙனம் நிலைபெறுவித்தற்கண் உயிர் தனது பண்டைப் பயிற்சி வயத்தால் பாசத்திலே பொருந்தி அலைவுறுகின்ற முறையையும், `தமிழ்மொழி, வடமொழி` என்னும் இருமொழியுமே ஒருபடித்தாக உணர்த்தும்; அதனால், அவற்றுள் யாதொன்றையாயினும் முறைப்படி உணர வல்லார்க்குத் தத்துவ ஞானத்தையே யன்றிச் சிவஞானத்தைப் பெறுதலுங் கூடுவதாம்.

குறிப்புரை :

``உயிர்`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``அவிழ்க் கின்றவாறு`` என்றார். ``அது`` என்றது, `அவ்வினத்தை` என்றவாறு. `சிமிட்டலை` எனவும் பாடம் ஓதுப. `உணரலும்` என்ற உம்மை, உணர் தற்கு அருமை குறித்து நின்ற சிறப்பும்மை. `ஆரியம், தமிழ் இரண்டனையும் உணர்தல் சிறப்புடைத்தாயினும் அஃது எல்லார்க்கும் கூடாமையின், ஒன்றை உணரினும் பயனைப்பெறுதல் தப்புதல் இல்லை` என்றவாறு. ஈற்றடி ஆசிடை வந்த மூன்றாம் எழுத்து எதுகை.

பண் :

பாடல் எண் : 10

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 

பொழிப்புரை :

கற்றவர் போற்றுகின்ற பதினெண்மொழிகளும் சிவபிரான் தனது அறத்தைப் பொதுவாகவும், சிறப்பாகவும் உணர்த்தற்கு அமைத்த வாயிலே. அதனால், `கற்றவர்` எனப்படுவார், பல மொழிகளையும் உணர்ந்து, அவற்றில் சொல்லியுள்ள முடிந்த பொருளை உணர்ந்தவரே என அறிக.

குறிப்புரை :

`அவனன்றி ஓரணுவும் அசையாது` ஆதலின், உலகில் மொழிகள் பலவாய்த்தோன்றி வளர்தலும் சிவபெருமானது திருவுளத்தின்படியே எனவும், `அங்ஙனம் அவன் திருவுளம் செய்தது, தான், பிரணவர் முதலியோர், அனந்ததேவர், சீகண்டர், உமையம்மை முதலியோர்க்குச் சொல்லிய ஆகமப் பொருள்கள் நிலவுலகில் அவரவர்க்கு ஏற்ற பெற்றியான் விளங்குதற்பொருட்டே` எனவும் கூறுவார், ``பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறம் சொன்ன ஆறே`` என்றார். `சொன்ன ஆறே` என்பதில் ``சொன்ன`` என்றதை ``அன்போடியைந்த வழக்கு`` (குறள். 73) என்பதில் `இயைந்த` என்றதுபோலக் கொள்க.
ஆறு - வழி; வாயில். ``பதினெட்டுப் பாடை`` என்றது `மொழிகள் பதினெட்டு` என்னும் வழக்குப் பற்றி. எனவே, `பன்மொழியும்` என்பதே அதற்குக் கருத்தாகும். ஆரியம், தமிழ் இரண்டும் முன்னர்க் கூறப்பட்டமையின், `பன்மொழிகள்` என்றதில் அவை இரண்டும் ஒழிந்தனவே கொள்ளப்படும். ``கண்டவர்`` என்றது, ``அறிந்தவர்`` என்றபடி. `அவ்வம்மொழிகளில் வல்லோர் அவை வாயிலாக உயர்ந்த பொருள்களை மக்கட்கு உணர்த்துவாராதலின், அப்பொருள்களும் தமிழ்ச்சொல் வடசொற்களில் அமைந்த பொருளின் பகுதியவே; பிற அல்ல` என்பார், ``பண்டிதராவார் பதினெட்டுப் பாடையும் கண்டவர் கூறும் கருத்தறிவார்`` என்றார். ``கருத்தறிவார்`` என்றதனால், `அச்சொற்களை அறிதல் வேண்டும் என்பதில்லை` என்றவாறாயிற்று. அங்ஙனமாகவே, `அவற்றில் உள்ள பொருள்கள்` தமிழ்ச்சொல் வடசொற்களில் உள்ள பொருள்களின் பகுதியே என்பதும் உணர்த்தப்பட்டதாம். அதனானே, `தமிழும், ஆரியமுமே தொன்மை மொழிகள்` என்பதும், `பிறமொழிகள் இவற்றின் வழித்தோன்றின` என்பதும் போந்தன.
இதனால் வழிமொழிகளாகிய பிறமொழிகளும் பயனுடைய வாதலை அறிந்து அவற்றை இகழாமை வேண்டும் என்பது கூறப்பட்டது.
சிற்பி