முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்


பண் :

பாடல் எண் : 1

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
 

பொழிப்புரை :

தேவருள்ளும் ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை; ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் (ஞான சூரியனாய்) விளங்கும் முதற்கடவுள் அச்சிவ பெருமானே.

குறிப்புரை :

``இங்கு`` என்றது ``இம் மண்ணுலகில்`` என்றபடி. `சித்தியாலும், முத்தியாலும் சிலர் சிவனோடு ஒத்திருப்பர்` என மயங்கிக் கூறுவாரை மறுத்தற்கு, ``அவனொடொப்பார் இங்கும் யாவரும் இல்லை`` என்றார். ``ஆதலின்`` என்பது சொல்லெச்சம். ``அன்று கடந்து`` என மாற்றுக. ``அன்று`` என்றது ``அநாதி`` என்னும் பொருளது. ``அன்றே`` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. பொன் - பகலவன். ``பொன்னொளியாய்`` என உருவகப் பொருண்மைத்தாய ஆக்கம் விரிக்க. தவன் - தவத்தின் பயனாய் உள்ளவன்; பரமுத்திப் பேறாய் உள்ளவன்; ``முதற்கடவுள்`` என்றவாறு. தா மரையான் - தாவுகின்ற மானை ஏந்தியவன். ``சடைமுடித் தா மரையான்`` என்றது, `சிவபெருமான்` என்னும் பெயரளவாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 2

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே. 

பொழிப்புரை :

சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை; அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது. அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.

குறிப்புரை :

``சிவனொடொக்குந் தெய்வம் தேடினும் இல்லை`` என மேற்கூறியதனையே அநுவதித்தார்; அதனால், பின்வருவன வற்றை வலியுறுத்தற்பொருட்டு. அருந்தவம், வீடடைவிக்கும் தவம். ``ஊர் புகுதல்`` என்றது ஒட்டணியாய் நின்று, முத்திபெறுதலைக் குறித்தது. இறவாமை முதலிய நான்கும் முதற்கடவுளது இயல்புகள் என்பதைப் பெயர்த்துரை (அநுவாத) வாய்பாட்டாற் கூறி, `அவ்வியல் புகளை உடையவன் சிவபெருமான் ஒருவனே` என்பது உணர்த்திய வாறு. நஞ்சுண்ட வரலாறு கூறும் புராணத்தால் சிவபெருமான் இறவாதவன் என்பது தெளிவாதலாலும், `சிவன் முத்திக் கடவுள்` என்பதே வழக்காதலாலும் ``அவனை ஒழிய அமரரும் இல்லை; அருந்தவம் இல்லை`` என்றார். அவை அங்ஙனமாகவே, ஏனைய இரண்டும் இனிது பெறப்பட்டன. ``நீல மணிமிடற் றொருவன்போல மன்னுக``, (புறம் - 91) ``சாவா மூவாச் சிங்கமே`` (தி. 6. ப.99 பா.2) என்றாற் போலும் மெய்ம்மொழிகளைக் காண்க.

பண் :

பாடல் எண் : 3

முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே. 

பொழிப்புரை :

பொன்போலும் மேனியையுடைய, யானைத் தோற் போர்வையாளனாகிய சிவபெருமானே! ஊழிகளுள் ஒன்றில் ஒருவர் மற்றிருவரையும், பிறிதொன்றில் மற்றொருவர் ஏனை இருவரையும் படைக்குமாற்றால் தம்முள், `முன்னோர், பின்னோர்` என்னும் வேறுபாடில்லாத மும்மூர்த்திகளுக்கும் என்றும் முன்னோன்; அத்தன்மை பிறருக்கு இன்மையால், தன்னை ஒப்பாகின்ற பொருள் பிறிதொன்றும் இல்லாத பெருந்தலைவன்; தன்னை, ``அப்பா`` என்று அழைப்பவர்க்கு அப்பனுமாய் இருக்கின்றான்; (உம்மையால்) ``அம்மே`` என்று அழைப்பவர்க்கு அம்மையாயும் இருக்கின்றான்.

குறிப்புரை :

``முன்`` என்றது பல ஊழிக்காலங்களை. ``முன்னோன்`` என்றது, அவர்களை என்றும் தானே படைத்தல் பற்றி. ``படைப்போற் படைக்கும் பழையோன்``, ``முன்னோன் காண்க`` (தி.8 திருவாசகம் - திருவண்டப்பகுதி 13,29) என்றமை காண்க. ``அயனைமுன் படைத்திடும் ஒரு கற்பத்து; அரியை முன் படைத்திடும் ஒரு கற்பத்து`` (சிவஞானபாடியம் - சூ. 1 அதி. 2) என்றது அறிக. ``தன்னை யொப்பாய் ... ... தலைமகன்`` என்றது, ஒருவனாதல் குறித்தபடி. ``ஏகோ ஹிருத்ர:`` (சுவேதாசுவதரம்) ``தன்னேரில்லோன் தானே காண்க`` (தி.8 திருவாசகம் - திருவண்டப்பகுதி 30) என்றதும் காணத்தக்கது. இவ்வாறாகவே இது, ``ஒன்றவன்றானே`` என்றதனை விளக்கியவாறாம். ``அப்பனும், அம்மையும்`` என்றது, ``உலகிற்கு முதல்வன்`` என்றதாம். இதுவும், முதற் கடவுள் இயல்பும், அவற்றைச் சிவபெருமான் உடையனாதலுங் கூறியது.

பண் :

பாடல் எண் : 4

தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 

பொழிப்புரை :

நீண்ட சடையை உடையவனாகிய சிவபெருமான், தேறுங்கால் நெருப்பினும் வெம்மை உடையன்; அருளுங்கால் நீரினும் தண்மையுடையவன்; ஆயினும், அத்தகைய அவனது ஆற்றலின் தன்மையை அறியும் உலகர் இல்லை. உலகர்க்கு இவ்வாறு அறியப்படாத சேய்மைக்கண் உளனாகிய அவன், மெய்யன்பர்க்கு அவ்வாறின்றி நன்கறியப்படும் அணிமைக்கண் உள்ளவனாய்த் தாயினும் மிக்க தயவுடையனாவான்.

குறிப்புரை :

அறியாமையாவது, உலகில் நிகழும் மறமும், அறமும் அவன் ஆணைவழியால் நிகழ்வன என்பதை அறியாமல், பிறவாற்றான் நிகழ்வனவாக எண்ணுதல். தெறலும் கருணை யேயாதல் பற்றி, `அருள்` எனப் பொதுப்படக் கூறினார். தாயது தன்மை; குழவிக்குத் தனது பாலைக் கைம்மாறு கருதாது அளித்தல் ஆதலின் அஃது, உயிர்கட்குத் தனது பேரின்பத்தைக் கைம்மாறு கருதாது வழங்கும் கடவுட்டன்மைக்கு உவமையாயிற்று. தாய்க்குக் குழவி பசித்த காலத்தில் பால்கொடுத்தல் இயலாமையும், இயலினும் நிரம்பக் கொடுக்க இயலாமையும், அவை காரணமாகக் குழவி மாட்டு அவட்கு வெறுப்பும் ஒரோவழித் தோன்றுதலும் உண்டாகலின், அன்ன குறைபாடில்லாத கடவுளை, ``தாயினும் நல்லன்`` என்றார். ``பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து` (தி.8 திருவாசகம் - பிடித்த பத்து 9) என்றதும் காண்க. இதனால், `ஒறுத்தல், அளித்தல்களால் உலகத்தை உடனாய்நின்று நடத்துதலும், அவ்வாறு நடத்தினும் உலகர்க்கு வெளிப்படாது, உணர்வினர்க்கே வெளிப்படுதலும், வெளிப்படக் கண்ட உணர்வினர்க்குத் தனது பேரின்பத்தைக் கைம்மாறு கருதாது இடையறவின்றி வழங்குதலும்` ஆகிய கடவுட்டன்மைகள் கூறப்பட்டன. `சேயினும் நல்லன்` என்பது பாடம் அன்று. `நற்றாழ்சடையோனே` என்பது பாடமாதல் வேண்டும்.

பண் :

பாடல் எண் : 5

பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.

பொழிப்புரை :

என்னால் வணங்கப்படுகின்ற எங்கள் சிவபெரு மான், தனது பொற்சடை பொன்னால் செய்யப்பட்டனவே என்னும்படி பின்னலோடு விளங்குமாறு இருப்பவன். ``நந்தி`` என்னும் பெயர் உடையான். அவனால் வணங்கப்படுபவர் ஒருவரும் இல்லை.

குறிப்புரை :

`தானே எல்லாராலும் வணங்கப்படுபவன்` என்பதாம். ``பொற்சடை`` என்பதில், ``பொன்`` என்றது, வாளா பெயராய் நின்றது. பின் - பின்னுதல்; முதனிலைத் தொழிற்பெயர். ஆல், ஒடுவின் பொருளில் வந்தது. ``பின்னால்`` என்பதனை இடப்பொருட் டாக்கி, அது பிறரைத் தலைதாழ்த்து வணங்காமையைக் குறிக்கும் குறிப்புமொழியாக உரைப்பாரும் உளர். `பின்தாழ் சடையானை`(தி.1 ப.74 பா.4) என்றாற்போல வரும் எவ்விடத்தும் அங்ஙனமே உரைத்தல் அவர் கருத்து. சடை தவக்கோலத்தை உணர்த்துதலால், பற்றின்மையைக் குறிக்கும் குறிப்பாகும். பொன்மை கவர்ச்சியையும், பின்னல் பழமையையும் குறிக்கும். நந்தி - இன்பம் உடையவன். ``அதனைத் தனக்கே உரிய பெயராக உடையவன்`` என்றவாறு. ``சிவன்`` என்பது இப்பொருளும் தரும். இன்பம், இயல்பாய் இருத்தற்குக் காரணம் மெய்ம்மையும், அறிவும் இயல்பாக இருத்தலே என்பது தோன்ற, முதற்கடவுளை, ``சச்சிதானந்தன்`` என உபநிடதங்கள் கூறுதல் அறிக. எனவே, அவையும் இதனாற் குறிக்கப்பட்டனவாம். இதனால், பற்றின்மையும், கவர்ச்சியும், காலத்திற்கு உட்படாமையும், மெய்யறிவின்பங்களை இயல்பாக உடைமையும், தனக்கு மேலாவார் இன்றித் தானே எல்லார்க்கும் மேலானவனாதலும் ஆகிய கடவுட்டன்மைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமானது பெருமையை நோக்குமிடத்து அவனோடொத்த பெருங்கடவுள் சேய்மையிலும் இல்லை; அண்மையிலும் இல்லை என்பது புலப்படும். உழவும், உழவின் பயனும், அவற்றிற்கு முதலாயுள்ள மழையும், அம் மழையைத் தருகின்ற மேகமும் ஆகிய எல்லாம், `நந்தி` என்னும் பெயருடைய அவனேயன்றிப் பிறர் இல்லை.

குறிப்புரை :

முயல் - முயற்சி; `முயற்சி` எனினும், `உழவு` எனினும் பொருந்தும். ``சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்``(குறள். 1031) என்பதனால், உலகத்திற்கு முதலாதலை இவ்வாறு கூறினார். இதனானே மெய்ந்நெறியிலும் சாதனமும், அதனைத் தருகின்ற திருவருளும், அதற்கு முதலும் ஆதலும் பெறப்படுவதாம். இதனால், பந்தம், வீடு இரண்டற்கும் முதல்வனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

பொழிப்புரை :

சிவபெருமான் என்றும் ஒரு பெற்றியனாய் அழிவின்றி இருக்கவும், அளவற்ற தேவர்கள் அழிந்தனர் என்று புராணங்கள் முழங்கவும், மண்ணிலும், விண்ணிலும் உள்ள பலர் அப்பெருமானை, `இவனே முதல்வன்` எனத் துணியமாட்டாத வராகின்றனர்.

குறிப்புரை :

`இஃது இரங்கத்தக்கது` என்பது குறிப்பெச்சம். ``காதல்`` என்றது அருளை. ஒருபெற்றியாய அருளை, `ஓர் அருள்` என்றார். நிற்றல் - அழிவின்றி நிலைத்திருத்தல். இதனால், அழிவில னாதல் கூறப்பட்டது. ஆகவே, `அவனை ஒழிய அமரரும் இல்லை` என்பது விளக்கப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 8

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

பொழிப்புரை :

திருமால், பிரமன் முதலிய தேவர்களும் இன்னும் சிவபிரானது பெருமையை ஓர்ந்து தெளியவில்லை. ஆகவே, அண்டத்தின் அப்புறத்தும் உள்ள அவனது பரப்பை அளந்து கண்டவர் யார்? ஒருவரும் இல்லை. அவன் எவ்விடத்தையும் உள்அடக்கி அவை அனைத்தையும் கடந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

எண் - எண்ணம்; சிந்தனை. `எண்ணால் அளந்து` என்க. கண் - இடம். ``எங்கும்`` என்றது, `எவ்விடத்தையும்` என்றவாறு. இதனால், அவனது பெருநிலை (வியாபகம்) கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.

பொழிப்புரை :

`சிவபெருமானது பெருநிலை (வியாபகம்) ஒருவராலும் அளத்தற்கரிது` என்பதற்கு, அயன், மால் இருவரும் அப்பெருமானது அடிமுடி தேடிக் காணமாட்டாது அல்லற்பட்ட வரலாறே போதிய சான்றாகும்.

குறிப்புரை :

`காண்பாராய இருவர்` எனவும், `கண்டிலராய்க் கூடி` எனவும் இயைத்துரைக்க. இருவருள் ஒவ்வொருவரும் அடி, முடி இரண்டையுங் காணுங் கருத்தினராய் முதற்கண்ணே தோல்வியுற் றமையின், ``அடி முடி காண்பார் அயன் மால் இருவர்`` எனப் பொதுப் படவே கூறினார். படி - தாம் கருதிய நிலை. நிலவுலகினின்றே புறப்பட் டமையின், ``மீண்டும் பார்மிசைக் கூடி`` என்றார். சிவபெருமானைப் பொதுநீக்கி உணர்தற்கு இவ்வரலாறு பெரிதும் சிறந்ததாய்ப் பயின்று வருவதாகலின், பின்னர்க் கூறப்படும் புராண வரலாறுகளுட் கூறுத லன்றி இவ்விடம் குறித்தருளினார். இவ்வாறன்றி, `இத் திருமந்திரமும் பின்னர் வரும் இவ் வரலாற்று மந்திரங்களுள் ஒன்றாகற் பாலதே` என்பாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 10

கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 

பொழிப்புரை :

பிரமனும், திருமாலும் ஓரோர் எல்லையளவில் பெருநிலை (வியாபகம்) உடையவராயினும், அனைவரினும் மேம்பட்ட பெருநிலையுடையவன் சிவபெருமான். அவன் அத்தகையனாய்ப் புறத்து நிற்பினும், எப்பொருளிலும் நிறைந்து அவற்றை அறிந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

ஆதி - முதல்வன். இறுதியில், ``கடந்து நின்றான்`` என்றதன்பின், `ஆயினும்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. இதனால் மேலதனை வலியுறுத்தி, எங்கும் நிறைந்து நிற்றலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 

பொழிப்புரை :

அருளாகிய ஒளி உருவினனாயும், என்றும் குறைதல் இல்லாத அவ்வருள் காரணமாக அனைத்துயிர்க்கும் நடுவுநிலைமையனாயும், அழிவில்லாதவனாயும் உள்ள சிவ பெருமான், தானே உலகிற்கு முதலாகியும், முடிவாகியும், பல்வகை உடம்பிலும் காணப்படுகின்ற இன்ப துன்பங்களாகியும் பரந்து நிறைந்திருக்கின்றான்.

குறிப்புரை :

ஆதி - பிரமன். அரன் - உருத்திரன். வேதி - மாற்றம். ``உடலுள் நின்ற`` என்றதனால், அஃது இன்பதுன்ப நுகர்ச்சியைக் குறித்தது. எனவே, இது நிலைத்தொழிலை உணர்த்திற்று. முதல் இரண்டடிகளால் முத்தொழிற்கும் முதல்வனாதல் கூறப்பட்டது. இறுதி இரண்டடிகளால் அத்தொழில் புரிதற்குக் காரணம் உடம்பொடு புணர்த்தலால் கூறப்பட்டது. முன்னைத் திருமந்திரத்தில் பேரறிவு கூறப்பட்டாற்போல, இத் திருமந்திரத்தில் பேராற்றல் கூறப்பட்டவாறு காண்க. `எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் அறிதலின், உயிர்கள் நன்மையடைதற்பொருட்டு நடுவு நிலையாளனாய் என்றும் நின்று ஆக்கல் அழித்தல் முதலியவற்றைச் செய்கின்றான்` என்றபடி. `விரிந்து ஆர்ந்திருந்தான்` என்றது, `அவனது பெருநிலையால் விளையும் பயன் இது` என்றற்கு.

பண் :

பாடல் எண் : 12

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாகனை
யாது குலாவி அமரருந் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே

பொழிப்புரை :

திருத்தி விளங்கிய, கொன்றை மாலையணிந்த குழல்போலும் சடையை உடைய, அழகு விளங்கும் மங்கையைப் பாதியில் உடைய சிவபெருமானை மும்மூர்த்திகளும், தேவர்களும் எதனை விரும்பிக் குற்றத்தையே குணமாகக் கொண்டாடி வணங்கு கின்றார்கள்?

குறிப்புரை :

``தாம்தாம் வேண்டுவன யாவற்றையும் விரும்பியே அவ்வாறு வணங்குகின்றார்கள்`` என்பது குறிப்பெச்சம். `கோது` இரண்டனுள் முன்னது, `கொழுது` என்பதன் மரூஉ. கொழுதுதல் - திருத்துதல். பின்னது - குற்றம். மகளிர் கூந்தலும் சிலபொழுது குழல் போலத் திருத்திவிடப்படுதல் பற்றியே, `குழல்` எனப்படுகின்றது. அமரர் என்றது ஏனையோரை நோக்க நெடுநாள் வாழ்வுடையராதல் பற்றி மும்மூர்த்திகளைக் குறித்தது. `கோது குணமாகக் குலாவிப் பயில்வார்` என மாற்றிக் கொள்க. குற்றமாவன, எலும்பும் சாம்பலும் அணிதல், சுடுகாட்டில் ஆடுதல், இரந்துண்டல் முதலியன.
கானார் புலித்தோல் உடை, தலைஊண், காடுபதி
ஆனால் அவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?
ஆனாலுங் கேளாய் அயனும் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.
-தி.8 திருவாசகம். திருச்சாழல். 12
என்றமை காண்க. ஒன்றும் இல்லாதவன்போலவும், பித்தன் போலவும் காணப்படினும் வேண்டுவார் வேண்டுவன பலவற்றையும் அருளுதல் இதனால் தொகுத்துக் கூறப்பட்டது. ``மாது குலாவிய வாள்நுதல் பாகன்`` என்றதும் அதனைத் தெளிவிக்கும் குறிப்பு.

பண் :

பாடல் எண் : 13

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. 

பொழிப்புரை :

``காயம், கத்தூரி`` என்னும் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்தாலும் அவ்விடத்து வியப்புண்டாகுமாறு கத்தூரியின் மணம் காயத்தின் மணத்தை அடக்கி மேற்பட்டு விளங்கும்; அதுபோல, உலகத்தார் சிவபெருமானை ஏனைத் தேவர் பலரோடு ஒப்ப வைத்து எண்ணினாலும், சிவபெருமானது திருவருளுக்கு ஏனைத் தேவரது அருள் ஈடாகாது; சிவனருளே மேம்பட்டு விளங்கும்.

குறிப்புரை :

``கத்தூரி`` எனப் பின்னர் வருதலின், அது முன்னரும் கூட்டி எண்ணப்படும். மாயம் - மருட்கை. ``மாயமாக`` என ஆக்கம் வருவிக்க. ``அவ்வழி`` என்றதனை, ``கொதிக்கும்`` என்றதன் பின்னர்க்கூட்டுக. ``தேசம்`` என்றது மக்களை. கலத்தல் - ஒப்ப வைத்தல். `ஏனைத் தேவர் பிற சில பயன்களைத் தரவல்லராயினும், உண்மை ஞானத்தையும், வீடு பேற்றையும் தரவல்லராகாமையின், அவரது அருளால் பெறும்பயன் யாது`` என்பதும், `பிற பயன்களிலும் சிவபெருமானால் தரப்படுவனவேமிக்கு விளங்கும்` என்பதும் கருத்து. சிவபெருமான் இம்மை, மறுமைப் பயன்களையும் நிகரின்றித் தருதலும், முடிந்த பயனாய வீடு பேற்றைத் தருதலும் இதனால் வகுத்துக் கூறப்பட்டன. பின்னிரண்டடிகளில் யகரத்திற்குச் சகரம் எதுகையாயிற்று. உயிரெதுகையுமாம்.

பண் :

பாடல் எண் : 14

அதிபதி செய்து அளகையர் வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி யாதரித் தாக்கம தாக்கின்
இதுபதி கொள்ளென்றான் எம்பெரு மானே. 

பொழிப்புரை :

அளகை நகரில் உள்ள இயக்கர்க்குத் தலைவனாகிய குபேரனை அவன் செய்த மிக்க தவத்தைக் கண்டு அவனை அந்நகருக்குத் தலைவனாகச் செய்து, அந்த அளகை நகரத்தைச் சுட்டி, `இதுதான் உனது நகர்; இதனை நீ நன்கு புரந்து, செல்வத்தைப் பெருக்குவதாயின் ஏற்றுக்கொள்` என்று எங்கள் சிவபிரானே வழங்கினான்.

குறிப்புரை :

`அதனால் பெருஞ்செல்வம் உடையவன்` எனப் புகழப்படுகின்ற குபேரனுக்கு அந்நிலையை வழங்கினவனும், `எங்கள் சிவபெருமானே` என்றவாறு. `அளகை வேந்தனை` `கொள் என்ற` என்பன பாடமல்ல. `அந்நிதிபதி` என்னும் சுட்டு வருவிக்க. `அது பதியை, இதுபதி; இதனை ஆதரித்து ஆக்கமதாக்கின் கொள் என்றான்` என முடிக்க. இதுகாறும் சிவபிரான் தேவர்க்குந் தேவனாதலைக் கூறி, `சிவனோடொக்குந் தெய்வம் தேடினும் இல்லை` என்பதனை விரித்துரைத்தவாறு.

பண் :

பாடல் எண் : 15

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே. 

பொழிப்புரை :

சந்திரனைத் தரித்துள்ளவனாகிய சிவபெருமான், இவ்வுலகத்தில் ஏலம் முதலியவற்றின் மணங் கமழ்கின்ற சோலையின் பெயராகிய `பொழில்` என்பதனையே தமக்கும் பெயராகக் கொண்ட ஏழு தீவுகளையும், இவ்வுலகிற்கு மேலே ஒன்றைவிட ஒன்று நூறு கோடி யோசனை விரிவுடையனவாகிய பல உலகங்களையும் தோற்று வித்தவன்; அவ் வளவையும் ஆக்கிக் காத்து அழிக்குமாற்றை அறிந்த பேரறிவுடையவன். அவன் தன்னை நோக்கிச் செய்யும் மெய்த்தவத்தைக் கண்டு அத்தவத்தையே தனக்கு இடமாக விரும்பி வீற்றிருக்கின்றான்.

குறிப்புரை :

`ஆதலின், அவன் அருளைப் பெறுதற்கு அத்தவமே செயற்பாலது` என அதற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது. `இப்பதி` என்பதனை `இது பதி` என்றார். `பதி` நான்கில் முன்னவை இரண்டும் உலகம். இறுதியில் உள்ளது உறைவிடம். விது - சந்திரன். பதி செய் தவன் - பதித்தலைச் (சூடுதலை) செய்தவன். ``ஏலங் கமழ்`` என்றது சொல்லளவாய் நின்ற பொழிலுக்கு அடை. எல்லாவற்றையும் நினைத்த அளவாலே செய்தலின், செயலைக் கூறாது அறிவையே கூறி னார். `சிவபெருமானை நோக்கிச் செய்யும் தவமே மெய்த்தவம்` என்ப தனை விளக்கவே, `தவம்` என்றொழியாது; `மெய்த்தவம்` என்றார். `சிவபுண்ணியம்` அல்லது `பதிபுண்ணியம்` எனப்படுவதும் இதுவே என்க. எனவே, இதனால், `அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை` என்பதனை விளக்கியவாறாயிற்று. `சிவனை நோக்கிச் செய்யும் தவமே மெய்த் தவமாதற்குக் காரணம் உண்மைக் கடவுள் அவனாதலே` என்பதனை விளக்கவே, பொழில் ஏழும் முதுபதியும் செய்தவனா தலை எடுத்தோதினார். முதுமை, இங்குப் பெருமைமேல் நின்றது.

பண் :

பாடல் எண் : 16

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்றம் அலையது தானே. 

பொழிப்புரை :

உயிர்கட்கு இறப்பையும், பிறப்பையும் பண்டே அமைத்து வைத்த தலைவன் நிலைபெற்று நிற்கின்ற தவநெறியைக் கூறும் நூல்கள் யாவை என ஆராயின், அவை இடிபோலவும், முரசு முதலிய பறைகள் போலவும் அனைவரும் அறிய முழங்கும்; அவனது திருவுருவம் மலைபோலவும், கடல் போலவும் நன்கு விளங்கித் தோன்றும்.

குறிப்புரை :

`ஆதலின், அந்நூல்களின்வழி நின்று தவம் செய்து அவனது திருவுருவை விளங்கக் கண்டு பயன் பெறுக` என்பது குறிப் பெச்சம். ``அறனெறி`` என்றது காரியவாகு பெயராய் அதனை உணர்த்தும் நூலைக் குறித்தது. அறம், இங்குச் சிவதன்மமாதலின் அதற்கு, `தவம்` எனப் பொருள் உரைக்கப்பட்டது. சிவதன்மத்தைக் கூறும் நூல்கள் சிவாகமங்கள். அவை இறைவன் திருவருள் வடிவா மாகலின், அவற்றை அவனுக்கு உறைவிடமாக அருளினார். அதனால் அந்நூல்கள் அவனது திருவருளை அங்கை நெல்லிக் கனியென இனிது விளக்குதல் பெறப்பட்டது. `அவற்றின்வழி நிற்பின் அப்பெருமான் அநுபவப் பொருளாதல் தப்பாது` என்றற்கு, `அவனது உருவம் மலையும், கடலும்போல விளங்குவது` என்றார். ``முழக்கம்`` என்றது, முழங்கும் பறைகளைக் குறித்த காரியவாகு பெயர். இதன்பின், `போலும்` என்பது எஞ்சி நின்றது. கடி - மணம். மலைகள் மணம் நிறைந்த மலர் மரங்களை உடையவாதல் அறிக. அலை, ஆகுபெயர். `அரனெறி` என்பதும் பாடம்.

பண் :

பாடல் எண் : 17

மனத்தில் எழுகின்ற மாயநன் னாடன்
நினைத்த தறிவ னெனில்தாம் நினைக்கிலர்
எனக்கிறை அன்பிலன் என்பர் இறைவன்
பிழைக்கநின் றார்பக்கம் பேணிநின் றானே. 

பொழிப்புரை :

கண்ணிற்குப் புலப்படாது கருத்தினுள்ளே நிற்கின்ற கள்வனாகிய சிவன், யாவர் எதனை எண்ணினும் அதனை அறிவான் என்று உண்மை நூல்கள் கூறவும், உலகர் அவனை நினைத்து அவன் அருளைப் பெறுகின்றார்களில்லை. நினையாமலே ஒவ்வொருவரும் `சிவன் எங்களுக்கு அருள் பண்ணவில்லை` என்று நொந்து கொள்கின்றார்கள். உண்மையில் சிவன், பிறவற்றை நினையாது தன்னை நினைப்பவர் பக்கமே விரும்பி நிற்கின்றான்.

குறிப்புரை :

`ஆதலின் அவன் அருளைப் பெறுதற்கு அவனை நினைத்து நிற்றலே செய்யத்தக்கது` என்றவாறு. மாய நாடன் - வஞ் சனையை இடமாகக் கொண்டு நிற்பவர். `வஞ்சம்` என்றது புலனாகாமையை. `பிறர்க்குத் தீங்கு சூழும் வஞ்சனை அன்று` என்பது தோன்ற, `நல்` என்னும் அடை கொடுத்தார். ``எனக்கு`` என்றது பன்மை் ஒருமை மயக்கம். `எனக்கு அன்பிலன்` என இயையும். பிழைத்தல், பிறவற்றினின்று நீங்குதல். ஈற்றடி மூன்றாம் எழுத்தெதுகை.

பண் :

பாடல் எண் : 18

வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே. 

பொழிப்புரை :

உலகீர், எல்லாம் வல்லவனாய், கடல் நீரை, `தீக்கடவுளாகிய வடவையிடத்து அடங்கிநிற்க` என மிகுந்து வாராமல் நிற்கச்செய்த அருளாணை உடையவனாகிய சிவபெருமானை, நுண்ணுணர்வின்றி, `இல்லை` எனக் கூறிப்பிணங்குதல் வேண்டா; அவன் அயன், மால் முதலிய கடவுளர்க்கு முதல்வனாய் நின்று, எப்பொழுதும் உயிர்கட்கு நலம் புரிந்துவருகின்றான்.

குறிப்புரை :

`உலகம் ஒருவனது ஆணை வழிநடப்பதும், அவ் வொருவன் எல்லாம் வல்லவன் என்பதும் கடல் கரையின்றியே அடங்கி நிற்கும் இவ்வொன்றானே அறியப்படும்` என்பது முன்னிரண்டு அடிகளின் கருத்து. ``வல்லவன், முதல்`` என்பவற்றில் ஆக்கச்சொல் விரிக்க.

பண் :

பாடல் எண் : 19

போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்னடி
தேற்றுமின் என்றுஞ் சிவனடிக் கேசெல்ல
மாற்றிய தென்று மயலுற்ற சிந்தையை
மாற்றிநின் றார்வழி மன்னிநின் றானே. 

பொழிப்புரை :

`நமது மனமே நம்மை நன்னெறியினின்று மாற்றி விட்டது` என்பதை உணர்ந்து, மயக்கம் பொருந்திய அம்மனத்தை மாற்றித் தெளிந்தவரது வழியிற்றான் சிவபெருமான் மறைவின்றி விளங்கி நிற்கின்றான். அதனால், உலகீர், அவனது திருவடி நிழலில் செல்வதற்குப் பன்முறை வணக்கம் கூறியும், பலவாற்றால் புகழ்ந்து பாடியும் அவனது திருவடிகளை என்றும் தெளிந்து நின்மின்கள்.

குறிப்புரை :

``சிவனடிக்கே செல்வம்`` என்பது பாடமாயின், `இவ்வாறு செய்தால் சிவனடியை அடைவோம்` என உரைக்க.

பண் :

பாடல் எண் : 20

காணநில் லாயடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணிய னாகி அமர்ந்து நின் றானே. 

பொழிப்புரை :

`இறைவனே! நீ முன்முன் தோன்றினால் உன்னைத் தழுவிக்கொள்ளுதற்கு நான் சிறிதும் நாணமாட்டேன்; எனக்கு உன்னையன்றி உறவாவார் யாருளர்! யான் காணும்படி வெளி நின்றருள்` என்று மாறுபாடின்றி இரக்கின்ற பண்புடைய அடியவர் உள்ளத்திலே சிவன் அறையப்பட்ட ஆணிபோல்பவனாய் வீற்றிருக்கின்றான்.

குறிப்புரை :

`அதனால் அவ்வாற்றால் அவனை மனத்தில் எழுந் தருளப் பண்ணிக்கொண்மின்கள்` என்பதாம். இரண்டாம் அடியை முதற்கண் மொழிமாற்றி வைத்து, ``உளர்`` என்றதன்பின், `என்று` என்பது வருவித்து உரைக்க. இது காறும் நினைதல் கூறியவாறு; இதன் பின் வாழ்த்துதலைக் கூறுதலே முறையாயினும், அஃது இந்நூற்குச் சிறந்ததாதல் பற்றி இறுதிக்கண் கூறுவாராய், வணங்குதலை முன்னர் கூறுகின்றார்.

பண் :

பாடல் எண் : 21

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே.

பொழிப்புரை :

சிவபெருமான் பிறப்பில்லாதவன்; சடை முடி உடையவன்; மிக்க அருளுடையவன்; ஒருகாலத்தும் அழிவில்லாத வன்; யாவர்க்கும் வேறுபாடின்றி நன்மையையே செய்து, அவரை என்றும் விட்டு நீங்காதவன். அதனால் அவனை வணங்குங்கள். வணங்கினால் என்றும் மறவாத தன்மையாகிய மெய்யுணர்வு தோன்றுவதாகும்.

குறிப்புரை :

`சிவபெருமான்` என்பது அதிகாரத்தால் வந்தது. ``தன்னை`` என்றது, `அவனை` என்றவாறு. இவ்வாறு `பிறப்பிலி` முதலியவற்றைப் பயனிலையாக்காது, பெயராக வைத்துரைத்தல் சிறவாமை அறிக. பிறப்பிலி முதலிய பலவும் அவன் ஒருவனே வணக்கத்திற்கு உரியவனாதலைக் குறிப்பால் உணர்த்தி நின்றன. சடைமுடி யோகியாதலைக் குறித்தலின், அதுவும் வணக்கத்திற்கு உரிய வனாதலைக் குறித்தல் அறிக. மாயா விருத்தம் - மாயைக்கு மாறானது. மாயை - அஞ்ஞானம்; `அதற்கு மாறு` எனவே, `ஞானம்` என்பது போந்தது. இறைவனை மறக்கும் மறதி அஞ்ஞானத்தால் உளதாவதாம். அது நீங்கவே, மறவாமையாகிய மெய்ஞ்ஞானம் உளதாம் என்க.

பண் :

பாடல் எண் : 22

தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றான்கம லம்மலர் மேலே
புணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.

பொழிப்புரை :

யாவர்க்கும் இன்பம் அருளி, அவரை விடாது தொடர்ந்து நிற்கின்ற சிவனை வணங்குங்கள்; வணங்கினால் அவனது திருவடி ஞானம் உங்கட்குக் கிடைக்கும்.

குறிப்புரை :

பரி பாரகம் - எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலமாகிய இடம். ``பாரகம் முற்றும்`` என்பது தாப்பிசையாய் முன்னும், பின்னும் சென்று இயையும். ``கமலமலர்`` என்றது அன்பரது உள்ளங்களை. `புணர்ந்து` என்றது உயிரெதுகை. `உடந்திருந்தான்` என்பது பாடம் ஆகாமை அறிக. `படர்ந்து நிற்றல், நடந்து நிற்றல், புணர்ந்திருத்தல்` என்னும் மூன்றும் முறையே இறைவன் உலகத்தோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்கும் முறைமையை உணர்த்தியவாறு. `அம் முறைமையே சிவநெறி அத்துவிதம்` என்பதும், `அதனை உணர்தலே சிவஞானம்` என்பதும் அறிக. சிவனடிப் புண்ணியம் - சிவதன்மம்; சிவதன்மத்தால் விளைகின்ற சிவஞானத்தை, `சிவதன்மம்` என்றார்.

பண் :

பாடல் எண் : 23

சந்தி எனத்தக்க தாமரை வாள்முகத்
தந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே. 

பொழிப்புரை :

`அந்தி வானம் என்று சொல்லத் தக்க நிறத்தை யுடைய தாமரை (செந்தாமரை) மலர்போலும் ஒளி பொருந்திய முகத்தை உடைய, அழிவில்லாத சிவபெருமானது திருவருள் நமக்கே உரியதாகும்` என்ற உறுதியுடன் அவனை நாள்தோறும் வணங்க உடன்படும் அவரது உள்ளத்துள்ளே அவன் குடிபுகுந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`அதனால் நீவிரும் வணங்குமின்` என்பது கருத்து. படுதல் - உடன்படுதல்.

பண் :

பாடல் எண் : 24

இணங்கிநின் றான்எங்கு மாகிநின் றானும்
பிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்
உணங்கிநின் றான்அம ராபதி நாதன்
வணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. 

பொழிப்புரை :

மாயோனும் சிவபெருமானை வழிபட உடன்பட்டு நின்றதல்லது வழிபட்டுக் காணவில்லை. படைப்புக் கடவுளாகிய பிரமன் வழிபடுதற்கு உடன்படவேயில்லை. அவர்கட்குப் பின் இந்திரன் காண இயலாதவனாய் வாட்டமுற்று நின்றான். ஆகவே, சிவபெருமான் தன்னை வணங்கி நிற்பவர்க்கே செல்கதித் துணையாய் நிற்கின்றான்.

குறிப்புரை :

இங்கு வழிபடுதல், பயன் கருதாத மெய்யன்பினால் வழிபடுதலாதலின், `திருமாலும் அது செய்யவில்லை` என்றும், பயன் கருதி வழிபட்டுச் சக்கரம் பெற்றமையால் ``இணங்கி நின்றான்`` என்றும் கூறினார். பிரமனும், இந்திரனும் அவ்வாறு வழிபட்டுப் பேறு பெற்ற வரலாறு ஒன்றும் சிறப்பாகச் சொல்லப்படாமையால், அவர் களை, பிணங்கியும், வணங்கியும் நிற்பவராகக் கூறினார். ``எங்குமாகி நின்றான்`` என்றது, `விட்டுணு` என்னும் சொற்பொருளை எடுத்தோதியவாறு. ``பின்`` என்பதை இரண்டாம் அடியின் இறுதியிற் கூட்டி உரைக்க. மேல் பொது வணக்கம் கூறி, இதனால், உண்மை வணக்கம் கூறியவாறு. இதுகாறும் வணங்குதல் கூறப்பட்டது. இனி, வாழ்த்துதல் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 25

வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்தஎங்
கோனைப் புகழுமின் கூடலு மாமே. 

பொழிப்புரை :

மேகம் போலும் நிறத்தையுடைய திருமால், பிரமன், மற்றைய தேவர் ஆகியோர்க்கும் இழிவான பிறவித் துன்பத்தை நீக்குகின்ற ஒப்பற்றவனும், யானையை உரித்த எங்கள் தலைவனும் ஆகிய சிவபெருமானைத் துதியுங்கள்; அதனால் அவனை அடைதலாகிய அப் பெரும்பேறும் கிடைக்கும்.

குறிப்புரை :

வானம் - விண். ``கூடலும்`` என்ற உம்மை சிறப்பு.

பண் :

பாடல் எண் : 26

வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கு மதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானங் கருதியே. 

பொழிப்புரை :

`வானத்தில் நின்று முழங்குகின்ற மேகம்போல இறைவன் மேலுலகத்தில் நின்று தன் அடியவரை `வருக` என்று அழைப்பான் என்று ஆன்றோர் கூறுதல் உண்மையாய் இருக்குமோ` என்று சிலர் ஐயுறுவர். `எங்கள் சிவபெருமான் தன்னைப் பிரிந்த கன்றைத் தாய்ப்பசு கதறி அழைப்பது போலத் தன் அடியவரைத் தன்பால் கூவி அழைப்பவனே; (இதில் ஐயமில்லை. அவனைப் பலர் துதித்து அவற்றிற்கு ஈடாகப் பல பயன்களைப் பெற்றனர். ஆயினும்,) நான் அவனைத் துதிப்பது ஞானத்தைப் பெறுதற்பொருட்டே.

குறிப்புரை :

`நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே` என்றதனால், `பலர் பயன் கருதித் துதித்து அவற்றைப் பெற்றனர்` என்பது பெறப்பட்டது. `அவர் அங்ஙனம் பெற்றமை அனுபவ மாகலின், சிலர்போல நீங்கள் ஐயுற வேண்டுவதில்லை` என்றபடி. `ஞானம் கருதித் துதித்தலே சிறந்தது` என்பதும் குறிக்கப்பட்டது என்க.
வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாந் தொழவேண்டிச்
சூழ்த்துமது கரம்முரலுந் தாரோயை நாயடியேன்
பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே.
என்ற திருவாசகத்தையும் காண்க. (தி.8 திருச்சதகம். 20) `போல்` என்பது வினைத்தொகையாய், ``நந்தி`` என்பதனோடு இயைந்தது.

பண் :

பாடல் எண் : 27

மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே. 

பொழிப்புரை :

மக்கள்முன் தோன்றி அருள்புரிதலால் மண்ணுலகத்தில் உள்ளவனைப் போலவும், தேவர்களுள் ஒருவனாய் நிற்றலால் வானுலகத்தில் உள்ளவனைப் போலவும், முத்தர்களுக்கு வீட்டுலகத்தில் நின்று அருள்புரிதலால் வீட்டுலகத்தில் உள்ளவன் போலவும், யாவரையும் தன்மயமாகச் செய்தலால் இரத குளிகை போல்பவன் போலவும் தோன்றுபவனாய், பண்களில் பொருந்திய இசையிடத்துள்ள விருப்பத்தால் தானே வீணையை இசைக்கின்ற சிவபிரான் பொருட்டு அவனது அருள் நோக்கில் நின்றே அவனிடத்து நான் அன்புசெய்கின்றேன்.

குறிப்புரை :

``ஒக்கும்`` நான்கும் பெயரெச்ச அடுக்கு. அவை, ``பாடலுற்றான்`` என்பதனோடு முடிந்தன. `யாவர்க்கும் அவரவர் தகுதிக்கேற்ப நின்று அருள்புரிபவனாகிய சிவபெருமான் விரும்புவது இசை என்பதை உணர்ந்து, அவன் அருளாலே அவனைப் பாடித் துதிக்கின்றேன்` என்பது இத் திருமந்திரத்தின் திரண்ட கருத்து. துதிக்கும்பொழுதும் நான் என்ற முனைப்புடன் துதியாது, `இப் பேறும் அவனது அருளால் கிடைத்தது` என அவனது அருள்வழி நின்று துதித்தல் வேண்டும் என்றற்கு, ``கண்ணகத்தே நின்று`` என்றார். `அவன் கண்ணகத்தே நின்று` என்க. ``அவனரு ளாலே அவன்தாள் வணங்கி`` என்றதும் காண்க. (தி.8 திருவாசகம். சிவபுராணம் அடி 18).

பண் :

பாடல் எண் : 28

தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருள் பாடலு மாமே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தேவர் பலர்க்கும் தலைவன்; நமக்கும் தலைவன்; உலகமுழுதும் நிறைந்து நிற்கும் நிறைவினன்; அவ்வாறு நிற்பினும் அவற்றை அகப்படுத்து அப்பால் நிற்கும் பெரியோன்; ஆதலின் அவனது தன்மையை முற்றும் அறிந்து துதிப்பவர் ஒருவரும் இல்லை. ஆயினும் எங்கும் நிறைந்த அவனது அருட்டன்மைகளை உயிர்கள் தாம் தாம் அறிந்தவாற்றால் பாடித் துதித்தலும் அமைவுடையதே.

குறிப்புரை :

``தேவர் பிரான்`` முதலியவற்றைப் பல தொடராகக் கூறியது, அவற்றின் சிறப்புணர்த்தற்கு. காட்சிக்கு எய்துதல் பற்றி ``விரிநீர் உலகு ஏழையும்`` என நிலவுலகத்தையே கூறினாராயினும், மேல், ``திசை பத்தும்`` கூறினமையால் பிற உலகங்களும் கொள்ளப் படும். `முற்ற அறிய வாராமை பற்றி அவன் முனிதல் இல்லை; அறிந்த அளவு பாடின் உவப்பான்` என்பது கருத்து. ``யானறி அளவையின் ஏத்தி ஆனாது - நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் - நின்னடி உள்ளி வந்தனென்`` (திருமுருகாற்றுப் படை. 277 - 279) என்றதும் காண்க. மேவுதல் - விரும்புதல்; அது, பற்றிநிற்றலைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 29

பதிபல வாயது பண்டிவ் வுலகம்
விதிபல செய்தொன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரஞ் சொல்லவல் லாரும்
மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே. 

பொழிப்புரை :

பண்டுதொட்டு இவ்வுலகத்தில் `கடவுள்` என்ற ஒன்று, பலவாகக் கொள்ளப்படுகின்றது. அவற்றின்கண் பலரும் பல விதிமுறை வழிபாடுகளைச் செய்தும் மெய்ம்மையைச் சிறிதும் உணர்கின்றார்களில்லை. அக்கடவுளரைத் துதிக்கின்ற பல தோத்திரப் பாடல்களைத் தாங்களே ஆக்க வல்லவர்களும் மெய்யறிவில்லாதவர் களாய் மனத்தில் துன்புறுகின்றார்கள்.

குறிப்புரை :

`அதனால் சிவனது முதன்மையாகிய மெய்ம் மையைத் தெளிவித்தல் அரிதேயாம்` என்பது குறிப்பெச்சம். பதி - கடவுள்.

பண் :

பாடல் எண் : 30

சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே. 

பொழிப்புரை :

சந்தனத்தில் நின்று கமழ்கின்ற கத்தூரி மானின் மதமணம்போலச் சிவபெருமான், முத்தியுலகத்தில் உள்ள சிலர்க்கு அறிவுறுத்திய நெறியே மெய்ந்நெறி. அந்நெறி நின்றே பகலவனது பல கதிர்கள் போன்ற அவனது பல திருப்பெயர்களை, நான் நடக்கும் பொழுதும், இருக்கும்பொழுதும் துதித்துக் கிடக்கின்றேன்.

குறிப்புரை :

`நீவிரும் அவ்வாறு செய்தலே தக்கது` என்பது குறிப்பெச்சம். `மான்மத மணம் சந்தன மணத்தினும் வேறாய் மிக்குத் தோன்றுமாறுபோலச் சிவபிரான் அறிவுறுத்திய நெறி ஏனை நெறி யினும் மிக்குத் தோன்றுதல் அறிவுடையார்க்குப் புலனாகும்` என்பது, `சாந்து கமழும் கவரியின் கந்தம்போல்` என்ற உவமையால் குறிக்கப் பட்டது. ``மாயங்கத் தூரியது மிகும் அவ்வழி`` என மேலேயும் கூறினார். (தி.10 திருமந்திரம் - 51) கவரி, ஆகுபெயர்.
`முத்தியுலகத்தில் மெய்ந்நெறி அறிவுறுக்கப்பட்டோர் பிரணவர் முதலியோர்` என்பது பின்னர்க் காணப்படும் `மெய்ந் நெறி யானே` என உருபு விரிக்க. ``ஆர்ந்தசுடர்`` பன்மையும், ஒளியும் பற்றி வந்த உவமை. `பேர்ந்தும்` என்பதும் பாடமாகலாம்.

பண் :

பாடல் எண் : 31

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் குங்கிழக் குத்திசை எட்டொடும்
ஆற்றுவன் அப்படி ஆட்டலும் ஆமே.

பொழிப்புரை :

பிறிதொரு நெறியும் ஒப்பாக மாட்டாதபடி உயர்ந்து நிற்பதாய சிவநெறியாற் பெறப்படுபவனாகிய சிவபெருமானுக்கு வணக்கம் கூறுங்கள்; கூறிப் பலவாற்றால் புகழுங்கள்; புகழ்ந்தால், மேலுலகத்தையும் கீழுலகமாகிய நிலவுலகம் முழுதையும் உமக்கு அவன் வழங்குவான்; அவ்வுலகங்களை நீங்கள் உங்கள் விருப்பப்படி ஆளலாம்.

குறிப்புரை :

``ஆற்றுகிலா`` என்றதில் ஆற்றுதல், ``வையகமும் - வானகமும் ஆற்றல் அரிது`` (குறள். 101) என்பதிற் போல `ஒத்தல்` என்றும், ``ஆற்றுவன்`` என்றதில், ஆற்றுதல் ``அற்றார்க் கொன்றாற் றாதான் செல்வம்`` (குறள். 1007) என்பதிற்போல, `கொடுத்தல்` என்றும் பொருள் தந்து நின்றன. `வழக்கும், எதிர்வழக்கும் கூறு வோரது கூற்றினுள் மெய்ம்மை இது என்பது நடுவுநிற்பார்க்கு இனிது விளங்கி நிற்றல்போலப் பல நெறிகளும் பிறர்கோள் மறுத்துத் தம் கோள் நிறுவுமாயினும், உண்மை காண் பார்க்குச் சிவநெறியது உயர்வு `சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்` (தி.10 பா.69) இனிது விளங்கியே நிற்கும் என்பார், சிவநெறியை `ஆற்று கிலா வழி` என்று அருளினார்.
ஆதல், உளவாதல். அஃது இங்குப் பெறப் படுதலைக் குறித்தது. ``மேற்கு, கிழக்கு`` என்பவை, `மேல், கீழ்` என்னும் பொருளவாய் நின்றன. திசைக்கண் உள்ளவற்றை, `திை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்றார். மூவுலகமும் இங்கு, `மேல், கீழ்` என இரண்டாக அடக்கப் பட்டன. அப் படி - அவ்வுலகம். `தம் விருப்பப்படி நடத்தலாம்` என்பது தோன்ற, `ஆளலுமாம்` என்னாது, ``ஆட்டலுமாம்`` என்றார்.
இனி, `ஆளலுமாம்` என்பதே பாடம் என்றலும் ஆம். `சிவபிரானைப் போற்றுவோர் எவ்வுலகத்தை ஆளநினைப்பினும் ஆள்பவராவர்` என்பது திருமுறைகளுள் பலவிடத்தும் இனிது எடுத்துச் சொல்லப்படுவது. `ஏனைக் கடவுளர்பால் அடையும் பயனையும் சிவபிரான்பால் அடையலாம்` என்பது கூறி, அவனை வாழ்த்துதலை வலியுறுத்தியவாறு.

பண் :

பாடல் எண் : 32

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே. 

பொழிப்புரை :

எவ்வுயிர்க்கும் தந்தையும், `நந்தி` என்னும் பெயருடையவனும், தெவிட்டாத அமுதமாய் இனிப்பவனும், வள்ளல் பிறர் ஒருவரும் ஒப்பாகமாட்டாத பெருவள்ளலும், ஊழிகள் பல வற்றிலும் உலகிற்குத் தலைவனாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை யாதொரு முறைமையிலானும் துதியுங்கள்; துதித்தால், அம்முறைக்குத் தக அவனது அருளைப் பெறலாம்.

குறிப்புரை :

`பொது நீக்கி ஒப்புயர்வற்ற தலைவனாக உணருந்தன்மை இல்லாது பொதுப்பட ஏத்தினும் அது பின்னர் உண்மையுணர்வைப் பயக்கும்` என்பதும், பயன்கருதித் துதிப்பினும் அது பின்னர்ப் பயன் கருதாது துதிக்கும் மெய்யன்பினைப் பயக்கும் என்பதும் கருத்து.
``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ``
(தி.5 ப.23 பா.9)
என்று அருளிச்செய்தார் ஆளுடைய அரசரும்.

பண் :

பாடல் எண் : 33

நானும்நின் றேத்துவன் நாடொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்
வானில் நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்
தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

பொழிப்புரை :

சிவபெருமானை நானும் நாள்தோறும் மேற் கொண்டு நின்று துதிக்கின்றேன்; அவனும் நாள்தோறும் வானத்தில் பொருந்தி வளராநின்ற வளர்பிறைச் சந்திரன் போல எனது உடலில் மகிழ்ந்து மேன்மேல் விளங்கி நிற்கின்றான். தூயனாகிய அவன் எனது புலால் உடம்பில் நின்று உயிர்ப்பாய் வெளிப்படுகின்றவாறு வியப்பு.

குறிப்புரை :

உம்மைகள் எச்சம். ``தழல்தான்`` என்பதில்தான், அசைநிலை. `தழலொக்கு மேனியனாகிய தானும் மதிபோல் உடலுள் உவந்து நின்றான்` எனக் கூட்டுக. உவத்தல் - நிறைதல். ``ஊனில் நின்று`` என்பதனால், அவன் அதனோடு இயைபில்லாத தூயனாதல் பெறப்பட்டது. ``நிலாவாத புலாலுடம்பே புகுந்துநின்ற கற்பகமே`` (தி.6 ப.95 பா.4) எனவும், ``எந்தையே ஈசா உடலிடங்கொண்டாய் யானிதற் கிலனொர்கைம் மாறே`` (தி.8 கோயில் திருப்பதிகம் 10) எனவும் போந்த அருட்டிருமொழிகளைக் காண்க. உயிர்ப்பாய் வெளிப்படுதலாவது, உயிர்க்குந்தோறும் புறத்தும், அகத்தும் இன்பமாய்த் தோன்றுதல்.
``என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` (தி.5 ப.21 பா.1)
என்றருளியதும் காண்க. இதனை அசபா மந்திரத்தின் அநுபவம் என்ப. ஏத்தினால் ஈசன் அருளைப் பெறுதலை அனுபவத்தின் வைத்து உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 34

பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றொழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றொழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றொழி யேன்பெரு மைத்தவன் நானே. 

பொழிப்புரை :

யாவரினும் பெரியவனும், யாவர்க்கும் அரியவனும், நால்வகைத் தோற்றத்துள் ஒன்றாகாது தன் இச்சையாற் கொள்ளப் படுவனவாய அருட்டிருமேனிகளை உடையவனும் ஆகிய எங்கள் சிவபெருமானைப் பிதற்றுதல் ஒருகாலும் ஒழியேன்; அதனால், நானே பெருமையை உடைய தவத்தை உடையவன்.

குறிப்புரை :

பிதற்றுதல் போலுதலின், `பிதற்று` என்றார்; இது முதனிலைத் தொழிற்பெயர். ``பிதற்றொழியேன்`` என்பதனைச் சொற்பொருட்பின் வருநிலையாகப் பலகாற் கூறியது, வலியுறுத்தற் பொருட்டு. வேறு வேறு தொடராதலின், இஃது ஒருசொல்லடுக்கன்மை உணர்க. `பெரியானை` என்னும்
இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. `இத்தன்மையனை இடையறாது துதித்தல் தவமிலார்க்குக் கூடாது` என்றற்கு, `பெருமைத் தவன் நானே` என்றார். `தவமும் தவமுடையார்க்கே ஆகும்` (குறள் 262) என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
யானே தவமுடையேன்; என்நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேஅக்
கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன். -அம்மை திருவந்தாதி. 7
என்றது காண்க.

பண் :

பாடல் எண் : 35

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்
ஆத்தஞ்செய் தீசன் அருள்பெற லாமே. 

பொழிப்புரை :

தன்னை வாழ்த்த வல்லவரது மனத்தின் கண் ஒளியாயும், தூய்மையாயும், இன்பமாயும் விளங்குகின்ற சிவபெரு மானைத் துதித்தும், `எம் தலைவன்` என்று வணங்கியும் உறவு கொண்டால், அவனது திருவருளைப் பெறலாம்.

குறிப்புரை :

``அங்கே`` என்பது ``தீர்த்தன்`` என்பதனோடும் இயையும். ``திளைக்கின்ற`` என்பது, ``தேவன்`` என்ற செயப்படு பொருட்பெயர் கொண்டது.

பண் :

பாடல் எண் : 36

குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்
நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும்
மறைஞ்சடஞ் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்
புறஞ்சடஞ் செய்யான் புகுந்துநின் றானே. 

பொழிப்புரை :

கரவு கொண்டு வன்மை செய்யாது தன்னை வாழ்த்த வல்லவர்க்குச் சிவபெருமான் அவர்களது உள்ளத்தைப் புறக் கணியாது புகுந்து நிற்பான்; அதனால் அவனது மாற்று நிறைந்து அடையப்பட்ட செம்பொன்னிடத்துப் பொருந்திய ஒளியை ஒத்த, ஒலிக் கின்ற கழல் அணிந்த திருவடியைக் குறைவேண்டி அடைந்து பற்றுங்கள்.

குறிப்புரை :

`குரைகழலை நாடும்; அது செம்பொன்னின் ஒளியொக்கும்` என்னும் தொடர்கட்குக் கருத்துநோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. `நாடும்` என்பது உம்மீற்றுப் பன்மை ஏவல். மறைஞ்சு, `மறைந்து` என்பதன் போலி. `மறைந்தடம்` எனவும் ஓதுவர். உள்ளத்தைச் சடம் என்றது, உடம்பையும் குறித்தற்கு.

பண் :

பாடல் எண் : 37

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வார்குழல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

பொழிப்புரை :

சீறி எழுந்த நஞ்சினை உண்டு தேவரைக் காத்த சிவபெருமானை, காடு வெட்டித் திருத்திய புனம்போன்ற உள்ளத்தில் வைத்துத் துதிக்க வல்லவர்கட்கு, உமையை ஒரு பாகத்தில் உடைய அவன் அவ்வுள்ளத்திலேயே மான் இனத் தோடு ஒப்பச் செய்யப்பட்ட பார்வை விலங்கு போல்பவனாய் அச்சந் தோன்றாது அன்பு தோன்றத்தக்க வடிவத்துடன் பொருந்தி நிற்பான்.

குறிப்புரை :

`நெஞ்சிடை வைத்து` என ஒருசொல் வருவிக்க. பார்வை விலங்கினை குருவடிவிற்கேயன்றி, உள்ளத்தில் நினைக்கப் படும் வடிவிற்கும் கூறினார் என்க. ``கனஞ் செய்த`` என்றதில் `செய்த` உவம உருபு. கனம் - மேகம். `வாள் நுதல்` என்பது பாடம் அன்று.

பண் :

பாடல் எண் : 38

போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமானை அடைந்து துதிப்பவர்கள் பெறத் தக்க பயன், அவன் `நான்` என்னும் பசுபோதத்தை ஒழித்துத் தரும் சிவபோதமேயாம். அதனை அவன் தானே விரும்பிக் கொடுப்பான். அதுவன்றி, நிலையில்லாத அப்பசு போதத்தால் சில வற்றை விரும்பி அடையினும் அவற்றையும் அவன் உடன்பட்டுக் கொடுப்பான்.

குறிப்புரை :

``நான்`` என்றது, `நான்` என்னும் முனைப்பிற்குக் காரணமான பசுபோதத்தைக் குறித்த காரியவாகுபெயர். முடி - முடிவு; முதனிலைத் தொழிற்பெயர். `செய்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. இஃது எதிர்காலத்து இறந்த காலம். ``அது`` என்றது, ``அந்தப்பயன்` எனச் சிவபோதத்தை உணர்த்திற்று. ஆணவ சத்தி மெலிதல், அனாதிதொட்டே நோக்கிவரும் இறைவனது திரு வருள் நோக்கத்தாலாதலின், `நாயகன் முடிசெய்த அது` என்றார். `பெறுவது` எனக் கூறிப் பின்னரும், `நல்கும்` என்றார்; `தானே விரும்பிக் கொடுப்பான்` என்பது உணர்த்துதற்கு. ``அகம்`` என்றது, `நான்` என்னும் பொருளதாகிய வடசொல், ``அகத்தால்`` என உருபு விரித்து, சூழ்தற்குச் செயப்படு பொருளாகிய, `சிலவற்றை` என்பது வருவிக்க. ``வல்லர்`` என்றது வஞ்சப் புகழ்ச்சி. ஒன்றுதல் - உடன்படுதல்; அது, கொடுத்தலாகிய தன் காரியம் தோன்றநின்றது. சிவபெருமானை வாழ்த்துவார், போகம், மோட்சம் இரண்டும் பெறுவர் என்பது உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 39

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே. 

பொழிப்புரை :

சிவபெருமானது திருவடியையே துதித்து, அலறி, அழுது, அவற்றையே விரும்பி நாள்தோறும் நினைக்க வல்லவர்க்கு, அவன் தனது திருவடியை உறுதுணையாகக் கொடுத்து, பின் அதிலே அடங்கிநிற்க வல்லார்க்கு அதனை இனிது விளங்கத் தந்து, அவரது அறிவில் நிறைந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`நாளும் பாவிப்ப` எனவும், `அடி உரன் செய்து` எனவும், ` அடி நிரன்` செய்து எனவும் மாற்றுக. உரன் - வலிமை; அது துணைவலிமேல் நின்றது. `நிறன்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. நிறன் - விளக்கம்.

பண் :

பாடல் எண் : 40

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. 

பொழிப்புரை :

தேவர், அசுரர், மக்கள் ஆகிய அனைவரும் சிவ பெருமானது திருவடிக்கு வணக்கம் கூறித் துதிப்பர். அதனால் நானும் அவ்வாறே செய்து அதனை என் அன்பினுள் நின்று ஒளிரச் செய்தேன்.

குறிப்புரை :

`அதனால் நீவிரும் அதுவே செய்ம்மின்` என்பது குறிப் பெச்சம். இயக்கர், கந்திருவர் முதலியோரைத் தேவருள்ளும், நரகரை அசுரருள்ளும் அடக்கினார். நரகரும் தேவராதற்குச் சிவனது திரு வடியைத் துதிப்பர் என உணர்க. வேறு வேறு தொடராகக் கூறியது, போற்றுதலின் சிறப்பை விளக்குதற்கு. சிவன் அப்பெயரால் கூறப் படுதல், `நிறைமலம் அனாதியின் நீங்கி நிற்றல்`. (காஞ்சிப் புராணம். திருநெறிக்காரைக்காட்டுப் படலம். 23) பற்றியும் ஆதலின், `புனிதன்` என்றார்.

பண் :

பாடல் எண் : 41

விதிவழி அல்லதிவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலுஞ் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே. 

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த இவ்வுலகம் வினைவழியல்லது நடத்தல் இல்லை. இங்கு இன்பச்சூழலும் வினைவழித் தோன்றுத லல்லது வேறோராற்றான் இல்லை. ஆயினும் ஒளிமயமாகிய சிவபெருமான் தன்னை நாள்தோறும் துதிப்பவர்க்கு அத்துதி வழியாக முத்திக்கு வழிகாட்டும் பகலவனாய் நிற்பான்.

குறிப்புரை :

`ஆதலின் வினைவழியினின்று விடுதிபெற வேண்டு வோர் சிவபெருமானைத் துதிக்க` என்பது குறிப்பெச்சம். திருவள்ளுவ நாயனாரும், வினை நீங்குதற்கு வாயில் இறைவனது பொருள்சேர் புகழை விரும்பிச் சொல்லுதலே எனக் கூறுமாறு அறிக.
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (குறள். 5)
``இன்பம்`` என்றதன்பின்,`உளதாதல்` என்பது வருவித்து, உம்மையைப் பிரித்து அதனொடு கூட்டுக. ``இல்லை`` என்பது ``அல்லது`` என்றதனோடும் இயை யும்.
இதன்பின், `ஆயினும்` என்பது எஞ்சி நின்றது. வினை உள தாவது அஞ்ஞானத்தால் ஆதலின் அது மெய்ஞ்ஞான வடிவினனாகிய சிவபெருமானால் நீங்கும் என்பார், ``சோதிப் பிரான்`` எனவும், ``பகலவன் ஆம்`` எனவும் கூறினார். ``சோதிப் பிரானும்`` என்ற உம்மை, அசைநிலை.

பண் :

பாடல் எண் : 42

அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே. 

பொழிப்புரை :

`அந்தி வானம்போலும் நிறம் உடையவனே, அரனே, சிவனே` என்று சிவபெருமானது திருப்பெயர்கள் பலவற்றைச் சொல்லி, தியானத்திற்கு உரிய அவனது வடிவத்தைச் செம்மை பெற்ற அடியார்கள் வணங்கும்பொழுது நானும், `எவ்வுருவிற்கும் முதலாய திருவுருவத்தை உடையவனே, தலைவனே, மேலானவனே` என்று துதித்து வணங்கினேன்; அப்பொழுதே ஞானமயனாகிய அவன் இவ்வாறு என் உள்ளத்திற் புகுந்துவிட்டான்.

குறிப்புரை :

அரன் - பாசத்தை அரிப்பவன். சிவன் - மங்கலமான வன். வடிவத்தை ``வண்ணம்`` என்றார். ``தொழ`` என்றது, ``ஞாயிறு பட வந்தான்`` என்பதிற்போல நிகழ்கால வினை. `அடியார் தொழ நானும் தொழுதேன்` என்றது, `அவர் செய்ததை நானும் செய்தேன்; அச் செயலின் திறம் முற்றும் அறிந்து செய்தேனில்லை` என்றபடி.
``ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாய்உனை நானுந் தொழுவனே`` -தி.5 ப.91 பா.3
என்ற அப்பர் திருமொழியும் காண்க. ``என்று`` என்றது, தன்மை ஒருமை இறந்த காலமுற்று. இங்கு ``என்றேன்`` என வருதல் யாப்பிற்கு ஒவ்வாமை அறிக. ``இவ்வண்ணம்`` எனச் சுட்டியது தம் அநுபவங்களை. இத்துணையும் வாழ்த்துதலே கூறினார். வணங்குதல், திருவடிவின் முன்னன்றிச் சிறவாது. நினைதற்கு நெஞ்சு ஒடுங்குதல் அரிது. அதனால் எப்பொழுதும் யாவர்க்கும் எளிதிற் கூடுதல் பற்றி வாழ்த்துதலையே பெரிதும் வலியுறுத்தினார். தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகள் பரக்க எழுந்தமைக்கும் இதுவே காரணம் என்க. திருவள்ளுவரும் மேற்குறித்த குறளில் இறைவனது பொருள்சேர் புகழையே எப்பொழுதும் இடைவிடாது சொல்லுதல் வேண்டுமென விதித்தல் நினைக்க. இனி மூவகை வழிபாட்டினையும் இறுதிக்கண் தொகுத்துணர்த்துவார்.

பண் :

பாடல் எண் : 43

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நீள்இன்பந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமானை ஒரோவொரு பொழுதாயினும் நினைப்பின், இல்லறத்தில் நிற்பவரும் பெரிய தவத்தவரேயாவர். துறவராயினார் சிவத்தியானத்திலே நிற்பாராயின், ஞானத்தில் நிற்பவராவர். இல்லறத்தவராயினும் துறவறத் தவராயினும், பனை மரத்தின் மேலே வாழ்ந்தும் அப்பனையின் பயனை அறிந்து நுகர மாட்டாத பருந்துபோலச் சிவனது திருவருளில் நின்றும் அதனை யறிந்து அழுந்தமாட்டாதவர்க்குப் பேரின்பம் உண்டாதல் இல்லை.

குறிப்புரை :

பின்னர் `நினையாதவர்` என வருதலால், முன்னர் `நினைப்பவர்` என்பதும், முன்னர் ``மனையுள் இருந்தவர்`` என்றதனால். பின்னர், `துறந்திருந்தவர்` என்பதும் பெறப்பட்டன. `ஞானம் ஈசன்பால் அன்பே` (தி.12 பெ. பு. ஞானசம்பந்தர். 843) ஆதலின், ஞானத்தை, ``நேசம்`` என்றார். `நின் இன்பம்` என்பது பாடம் அன்று. இதனால் நினைத்தலின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

பொழிப்புரை :

மெய்யுணர்ந்தோரால் துதிக்கப்படு கின்றவனும், தேவர்கட்குத் தலைவனும், எப்பொருட்கும் முதல்வனும், இவ்வுலகத் திற்றானே நிரம்ப அருளைப் புரிபவனும், மேலானவற்றிற்கெல்லாம் மேலானவனும், எமக்குத் தந்தையாய் நிற்பவனும் ஆகிய சிவபெரு மானை நான் அணையா விளக்காகக் கொண்டு தலையால் வணங்கி, மனத்தால் நினைந்து அன்பு செய்து நிற்கின்றேன்.

குறிப்புரை :

மெய்யுணர்ந்தோரே சிவனுக்கு ஆட்படுவாராதலின், அடியாராவர் அவரேயாதல் அறிக. `படி ஆர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``முடியால்`` என்றதற்கேற்ப, `மனத்தால்` என்பது வருவிக்கப்பட்டது. ``வணங்கி, முன்னி`` என்று ஒழிந்தாராயினும், முன்னர் ``பரவும்`` என்ற குறிப்பால், வாயால் வாழ்த்தலும் பெறப்பட்டது. ``அமரர் பிரான்`` முதலாக வந்த சிறப்பினால் வணங்கப் படுதல் முதலியவற்றிற்கு அவனே உரியவன் எனக் குறித்தவாறு.

பண் :

பாடல் எண் : 45

பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசங் கடந்தெய்த லாமே. 

பொழிப்புரை :

தன்னின் வேறாகாத பரையாகிய சத்திக்கும், தன்னின் வேறாகிய பசு பாசங்கட்கும் தலைவனாகிய சிவபெருமானை நினைந்து, உயிர்க்குரிய உடலிடத்தே சொல்லும் அந்நெறிப்பட்டு நிற்க வல்லவர்கட்கு, கட்டுற்ற உயிர்கட்கு உரித்தாகிய அலைமோதும் பிறவிப் பெருங்கடலை நீந்தி, மும்மலங்களும் கழன்று, பரமுத்தி யாகிய கரையை அடைதல் கூடும்.

குறிப்புரை :

``உரை பசு பாசம்`` என்பதில், ``பாசம்`` என்றது உடம்பை. ``உள்ளி உரை பாசத்து ஒருங்க`` என்றது, `மனம் மொழி மெய் ஆகிய மூன்றும் அவனிடத்தே ஒரு நெறிப்பட` என்றவாறு. ``திரை`` என்பது, ``கடல்`` என்பதனோடு வினைத்தொகையாகத் தொக்கது. பாவம் - உளதாந்தன்மை; என்றது பிறப்பை. செழுமை, அளவிடப்படாத அகல ஆழங்கள். `நீந்திக் கடந்து கரை எய்தல் ஆம்` எனக்கூட்டுக. ஆதல் - கூடுதல்.

பண் :

பாடல் எண் : 46

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே. 

பொழிப்புரை :

சிவபெருமானையே என் தலைவன் என்று நினைந்து அவனது திருவடியாகிய மலர்களை நான் தலையில் சூடிக்கொள்வேன்; நெஞ்சில் இருத்திக்கொள்வேன்; பாடித் துதிப்பேன்; பலவாகிய மலர்களைத் தூவிப் பணிந்துநின்று கூத்தாடு வேன்; தேவர்க்குத் தேவன் என்று கொள்வேன்; திருவருள் பெற்ற இந்நிலையில் நான் அறிவது இவ்வளவே.

குறிப்புரை :

`நான் இன்று அறிவது இவ்வளவே` என்றது, `இதற்குமேல் உண்மை வேறில்லை` என்றதாம். `பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த - மக்கட் பேறல்ல பிற` (குறள் - 61)
`யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை - எனைத்தொன்றும் - வாய்மையின் நல்ல பிற`(குறள் - 300) என்றவற்றிற்கும் கருத்து இவ்வாறாதல் அறிக.
நாற்பத்தாறு திருமந்திரங்களால் சிவபெருமானது முதன் மையை முதற்கண் கூறிய நாயனார், `சிவன் ஒருவனே கடவுளாயின் `அயன், அரி, அரன்` என மும் மூர்த்திகளாக யாண்டும் கூறப்படு வோரது நிலை என்னை?` என்னும் ஐயத்தை நீக்குதற்கு அம்மூவரது மேல் கீழ் நிலையைப் பத்துத் திருமந்திரங்களால் விளக்குகின்றார்.

பண் :

பாடல் எண் : 47

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அரிஅயற் காமே.

பொழிப்புரை :

என்றும் ஒழியாது செய்கின்ற படைப்பும், காப்பும், அழிப்பும், அருளும் என்ற நான்கனையும் ஆராயுமிடத்தும் அவை அனைத்தையும் சோர்வின்றிச் செய்பவன் சிவபெருமான் ஒருவனே. ஆயினும், மெய்யுணர்ந்தோராகிய அவன்றன் அடியார்கள் சொல் கின்ற அளவில்லாத அவன் பெருமைகள் `மால், அயன்` என்னும் இருவர்க்கும் ஏற்ற பெற்றி பொருந்துவனவாம்.

குறிப்புரை :

எனவே,`புண்ணிய மிகுதியால் அத்தொழில்களுள் சிலவற்றை இயன்ற அளவு பெற்று நடாத்துதல் பற்றி அவரும் ஒருபுடைத் தலைவராய் நிற்பர்` என்றவாறு. தோற்றத்தை ``இளமை`` என்றார்.
``அந்தம்`` என்றது உயிர்களின் அலைவிற்கு முடிவாதலை; எனவே, அஃது அருளலாயிற்று; இறுதியில் நிற்கற்பாலதாய அதனைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார்.
ஈறு - ஒடுக்கம். அளவியல் காலம், `தோற்றத்திற்குப் பின்னதாயும், ஈற்றிற்கு முன்னதாயும் இடைநிற்றலின் வரையறைப்பட்டு நிகழ்கின்ற காலம்; அஃது அதனை உடைத்தாகிய நிலைத்தொழிலின்மேல் நின்றது. மறைத்தலின் வகையே படைப்பு முதலிய மூன்றுமாகலின், அதனை வேறுவைத்து எண்ணாது,``நாலும் உணரில்`` என்றார். இத்தொழில் அனைத்தும் என்றும் நிகழ்வன வாகலின், அவற்றிற்கு, `அளவில்` என்ற அடை கொடுத்தார்.

பண் :

பாடல் எண் : 48

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே. 

பொழிப்புரை :

யாவர்க்கும் முதல்வனாகிய சிவனும், அழகிய மணிவண்ணனாகிய மாயோனும், முதற்றொழிலாகிய படைப்பினைச் செய்யும் பிரமனும் என்கின்ற வடிவங்களை ஆராயின், அம்மூன்று வடிவங்களும் தொழில் இயைபில் ஒன்றே என்று அறியாமல்,`வேறு வேறு` என்று சொல்லி உலகத்தார் இகலி நிற்கின்றார்கள்; இஃதோர் அறியாமை இருந்தவாறு!

குறிப்புரை :

தொழில் இயைபு பின்னர் விளக்கப்படும். இயைபு பட்ட தொழில்கள் பலவற்றைப் பலர் இயற்றுங்கால் தம்முள் இணங்கி இயற்றுதலன்றிப் பிணங்கி இயற்றாமையும், ஒரோவழிப் பிணங்கி இயற்றியவழி ஒன்றும் நடவாதொழிதலும் காட்சியால் அறியப் படுவனவாகலின், அவைபற்றி இடையறாது நிகழும் படைப்பு முதலியவற்றை இயற்றுவோர் அவற்றைத் தம்முள் இணங்கியே இயற்றுகின்றமை துணியப்படும் என்பார், ``மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார் பேதித்துப் பிணங்குகின்றார்களே`` என்றார். எனவே, `மால், அயன் இருவரும் பொருளால் சிவபெருமானின் வேறாயினும், தொழிலால் அவனோடு ஒருவரே என்றதாயிற்று.

பண் :

பாடல் எண் : 49

ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகிற் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

பொழிப்புரை :

வினையின் நீங்கி நிற்பவன் சிவபெருமான் ஒருவனே. அதற்கு உலகில் திருக்கோயில்களில், காணாத அரு வினுக்கும் காண்கின்ற உருவினுக்கும் (தி.8 பெரியபுராணம். சாக்கிய.8) முதலாயுள்ள அவனது இலிங்கத் திருமேனி நடுவிடத்தில் விளங்க, ஏனைத் தேவர் பலரும் அதனைச் சூழ்ந்து போற்றி நிற்றலும், அத்தேவர் நடுவிடத்தில் விளங்கும் கோட்டங்களில் அஃது அவ்வாறு நில்லாமையுமே சான்றாகும். காட்சியானே உணரப்படுகின்ற இதனையும் நோக்காது, முதற்கடவுள் `அது` என்றும் `இது` என்றும் பிற தெய்வங்களைச் சுட்டிச் சொல்லித் தம்முட் சிலர் கலாய்ப்பாராயின், அவர் பகுத்துணர்வில்லாதவரே யாவர். தூர்ப்புக்களையே பொருளென்று கண்டவர்கள் அத்தூர்ப்பைத் தான் அறிவார்கள்; அவற்றை அகற்றி உள்ளே உள்ள பொருளை அவர்கள் எவ்வாறு கண்டறிவார்கள்!

குறிப்புரை :

``ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம் என்றதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ``ஈசனே, தூரே`` என்னும் பிரிநிலை ஏகாரங்கள் தொகுத்தலாயின. முதலதனால், `ஏனைத் தேவர் பலரும் வினையாற் கட்டுண்டு நிற்பவரே` என்பது பெறப்பட்டது. `இருக்கும்` என்பது முற்று. ``உலகில்`` என்றதனால், காட்சிப் பொருளாய `கோயில்` என்பது விளங்கிற்று. பெருமை, இங்கு முதன்மையைக் குறித்தது. ``ஆனது`` என்றது, `ஆகிநின்றது` என்றவாறு. இதன் முதல் அடி மேற்கோளாயும், இரண்டாம் அடி ஏதுவாயும் நின்றன. நினைப்பு - ஆய்வு. ``தூசு`` என்றது பின்வரும் தூரினை. தூர் - பள்ளங்களைத் தூர்த்து நிற்கும் பொருள்கள். கூரிய நோக்குடையவரே, தூரினை அறிந்து அகற்றி உள்ளே கிடக்கும் பொருளைக் காண்பர். அதுபோல அறிவுடையவரே கலாய்ப்புக்களை அகற்றி உண்மையை உணர்வர் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 50

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

பொழிப்புரை :

`சிவன், சதாசிவன், மகேசுரன்` என மூன்றாகவும், `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என ஐந்தாகவும், தொகுத்தும் வகுத்தும் சொல்லப்படுகின்றனர். நிலைகளே, `சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், மால், அயன்` என ஒன்பதாக விரித்துச் சொல்லப்படும். அந்நிலைகள் எல்லாம், முதல்களாகிய விந்து நாதங்களினின்றே தோன்றுதலால், யாவும் அத்தொகுதித் தலைவனாகிய சிவபெருமான் ஒருவனது நிலை வேறுபாடுகளேயன்றி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கடவுளன்று.

குறிப்புரை :

`இதனை யறியாது மேற்கூறியவாறு தம்முள் முரணிக் கூறிக் கலாய்க்கின்றவரைத் தெருட்டுதல் இயலாது`` என்பது குறிப்பெச்சம்.
முதற்கடவுள் ஒருவனே, பிறிதொன்றையும் நினையாது வாளா இருக்கும் பொழுது `பரசிவன்` அல்லது `பரமசிவன்` எனப் படுவான். பரமசிவனே, `சொரூபசிவன், சுத்தசிவன்` என்றெல்லாம் சொல்லப்படுவான். அப்பொழுது அவனது, சத்தி `பராசத்தி` எனப்படும். பின் அப்பரமசிவன் உலகைத் தொழிற்படுத்த நினைக்கும் பொழுது `சிவன்` அல்லது `தடத்த சிவன்` எனப்பட, அவனது சத்தி பராசத்தியில் பல கூற்றில் ஒருகூறாய் `ஆதிசக்தி` எனப்படும், `திரோதான சத்தி` எனப்படுவதும் இதுவே.
சிவனுக்கு உலகை உய்வித்தற்கு உள்ள விருப்பமே `இச்சாசக்தி` என்றும், அச்செயலுக்கு ஆனவற்றை அறியும் அறிவே `ஞான சத்தி` என்றும், அறிந்தவாறு செய்யும் செயலாற்றலே `கிரியா சத்தி` என்றும் சொல்லப்படும், இவற்றுள் இச்சை, என்றும் ஒருபெற்றியாய் உள்ளதே. ஏனைய ஞானம் கிரியை இரண்டுமே பலவாறு அவ்வப்பொழுது செயற்படும். சிவன் (தடத்த சிவன்) சுத்த மாயை முதற்கண் தனது ஞானசத்தி மாத்திரத்தால் பொதுவாக நோக்கிப் பின்பு கிரியா சத்தியைப் பொதுவாக அதன்கண் செலுத்துவான். கிரியையின் செயற்பாடே செய்கையாகையால் இந்நிலை சத்திக்கே உரியது. அதனால், இந்நிலை `சத்தி` என்றே சொல்லப்படும். இது முன் சொன்ன ஆதிசத்தியன்று. முன்பு, ஆதி சத்தியும், தானும் வேறின்றி ஒருவனேயாய் நின்ற சிவன், இச்சத்தி தோன்றிய பின்பு `சிவன், சத்தி` என இரண்டாய் நிற்பன். அச்சிவன் பின்பு சுத்தமாயையை ஞான சத்தியால் சிறப்பாக நோக்கி `நாதம்` என நின்று, பின்பு கிரியா சத்தியைச் சிறப்பாகச் செலுத்துவன். அந்நிலை யில் அவனது சத்தி `விந்து` எனப்படும். எனவே, இந்த அளவிலே, இறைவனது நிலை, `சிவன் சத்தி, நாதம், விந்து` என நான்காதல் அறியலாம், இந்நான்கிலும் ஞானமே மிகுந்திருப்பதால் இவை அருவம் (சூக்குமம்). சிவனை, `பர நாதம்` என்றும், சத்தியை, `பர விந்து` என்றும் ` நாதத்தை, `அபர நாதம்` என்றும், விந்துவை `அபர விந்து` என்றும் சொல்வது உண்டு. பரம் - மேல். அபரம் - கீழ். `நாதனை` என்பதற்கு `நாதம் என்கின்ற நிலையில் நிற்பவன்` என்பதே பொருள். நாதம் - ஒலி. சுத்த மாயையில் நாத தத்துவமே எழுத்தொலி என்பது உணர்க.
மேற்கூறியவாறு ஞான சத்தியே மிக்கு விளங்கிய நிலைக்குப் பின் ஞான சத்தியையும், கிரியா சத்தியையும் இறைவன் சமமாகச் செலுத்தி மாயையைச் செயற்படுத்த முயல்வன். இந்நிலையில் அவன் `சதாசிவன்` எனப்படுவன். இந்நிலை அருவுருவம் (சூக்குமத்திற்கும், தூலத்திற்கும் இடைப்பட்டது). பின்பு ஞான சத்தியைக் குறைவாகவும் கிரியா சத்தியை மிகுதியாகவும் செலுத்திச் சுத்தமாயையில் ஐந்தொழில் செய்வான், அப்பொழுது அவன் `மகேசுரன்` எனப் பெயர் பெறுவான். பின்பு ஞானசத்தியை மிகுதியாகவும், கிரியா சத்தியைக் குறைவாகவும் செலுத்தி உரியோர் சிலரை ஏவி அசுத்த மாயை, பிரகிருதி மாயைகளில் ஐந்தொழில் செய்யச் செய்வான், இந்நிலையில் அவன் `வித்தி யேசுரன்` எனப்படுவான். வித்தியேசுரன் கீழ் நிற்போருள் உயர் நிலையை அடைந்தோரும், `வித்தியேசுரர்` எனப் பெயர்பெறுவர். அவர், `அனந்தர், சூட்சுமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தர், சீகண்டர், சிகண்டி` என எண்மராவர். இவருள் முதல்வராகிய `அனந்தர்` என்பவரே அசுத்த மாயையில் ஐந்தொழில் செய்தும், சீகண்டருத்திரரை ஏவி அவர் வாயிலாகப் பிரகிருதி மாயையில் ஐந்தொழிலைச் செய்வித்தும் நிற்பார்.
ஐந்தொழில்களுள், `படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றும் மாயையின் மேலும், `மறைத்தல், அருளல் `என்னும் இரண்டும் ஆன்மாக்கள் மேலும் நிகழ்வன, இவற்றை இறைவன் பிறரைக் கொண்டு செய்விக்குங்கால், படைப்பு முதலிய மூன்றனையும் தான் அவரேயாய் மறைந்து நின்றும், ஏனை இரண்டனையும் அவர் தானேயாக விளங்கி நின்றும் செய்வன். எனவே, படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்யும் `அயன், அரி. அரன்` என்னும் மூவரே மகேசுரனுக்கு வேறாக வைத்து எண்ணப்படுவர். அனந்த தேவரது தொழிலோடு எவ்வாற்றானும் நம்மனோர்க்கு நேரே தொடர்பு இன்மையால் அவரையும் அவர்கீழ் நிற்பாரையும் வேறு வைத்து எண்ணுவதில்லை. சீகண்டரது மறைத்தல், அருளல் தொழில் சிவனுடையனவே என்பது மேலே குறித்தவாற்றால் விளங்கும். எனவே, `மகேசுரன், உருத்திரன், மால், அயன்` எனச் சதாசிவனுக்குக் கீழ் நான்கு நிலைகளே சொல்லப்படுகின்றன. இவை நான்கும் உருவம் (தூலம்). அனைத்தும் கூட, `சிவன், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன் எனச் சிவனது நிலைகள் ஒன்பது என்பது விரியாக அமைந்துள்ளன. இவை `நவந்தரு பேதம்` எனப்படும். முதல் நான்கும் இலய நிலைகள்; இடை ஒன்று போக நிலை; இறுதி நான்கு அதிகாரநிலை. இவைகளை மூன்றாகத் தொகுத்துக் கூறுமிடத்து. `சிவன்` என்னும் இலய நிலையுள் ஏனைய மூன்றும் `மகேசுரன்` என்னும் அதிகார நிலையுள் ஏனைய மூன்றும் அடங்கும். ஐந்தாக வகுத்துக் கூறுமிடத்து, `சிவன்` என்பதில் நாதமும், `சத்தி` என்பதில் விந்துவும் அடங்க, `உருத்திரன்` மால், அயன் என்னும் மூன்றும் `வித்தை` என ஒன்றாகச் சொல்லப்படும். இவற்றையே, ``சிவன் முதல் மூவர்`` என்றும், ``ஐவர்` என்றும், ``ஆறு இரண்டு ஒன்று-ஒன்பது`` என்றும் கூறினார். ஒன்பது நிலைகளுள் `சத்தி, விந்து என்பன சத்தியின் நிலைகளே` என்பதை மேலே குறித்தோம். எனவே, இறைவன்` `சிவன், நாதம், சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன், என்னும் நிலைகளுள் நிற்கும்பொழுது இறைவி, முறையே, சத்தி, விந்து, மனோன்மனி, உமை, திரு, வாணி` என நிற்பாள். எனவே, மறைந்து நிற்றல் வகையாயினும், விளங்கி நிற்றல் வகையாயினும் ஒன்பது நிலைகளும் எவ்வாற்றானும் சிவபெருமானுடையனவே. ஆதலின்,`மால், அயன்` என்போரை அப்பெருமானின் வேறாக எண்ணி உயர்த்தியோ, தாழ்த்தியோ கூறிப் பிணங்க வேண்டுவது இல்லை என்பதாம்.
சிறந்த அவை முதல் ஒன்பது - சிறப்புடைய அவை முதலாய் நிற்கின்ற ஒன்பது, `முதலுகின்ற ஒன்பது` என வினைத்தொகை. இரண்டாவதாய் நின்ற ``அவை`` என்றது, ``ஓங்க` என்பதனோடு இயையும், இதனை அடுத்து நின்ற முதல், கருவி; தத்துவம். தத்துவத் திற்கு ஏதுவாகும் இறைவன் நிலைகளை `தத்துவம்` என்றார். சவை - சபை. தொகுதி. ``பெயர்` எனச் சொல்மேல்வைத்துக் கூறினாரேனும், அதனால் உணர்த்தப்படும் நிலைகளைக் கூறுதலே கருத்து என்க. இறைவனது நிலைகளை இவ்வாறு தொகுத்தும், வகுத்தும் விரித்தும் கூறப்படுதலை எடுத்தோதி, இவையெல்லாம் ஒருவனது பல நிலைகளே யன்றி பொருளால் வேறல்ல என்பார். `ஒன்று ஆகும்` என்றார்.

பண் :

பாடல் எண் : 51

பயன்அறிந் தவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர்அவ் வானவ ராலே.

பொழிப்புரை :

மேற்கூறிய நிலைகளால் உயிர்கட்கு விளையும் பயன்களை அறிந்து அவற்றை முறைப்படுத்தி எண்ணுங் கால் சீகண்ட வுருத்திரர்க்குக்கீழ் நிற்கும் `அயன், மால்` என்பவர் தாமும் நமக்கு அயலாவாரல்லர்; அதனால் நீவிர் அக்கடவுளராலும் சிவனுக்கு அடியவராகும் வகையைப் பெற முயல்வீராக.

குறிப்புரை :

``எண்ணும்`` என்றதற்கு, `அவற்றை` என்னும் செயப்படு பொருள் வருவிக்க, இங்கு, `அயன், மால்` என்றது சீகண்ட உருத்திரர்க்குக் கீழ் நிற்பவரையே என்பது. ஏற்புழிக் கோடலால் விளங்கும், `அன்னியம் இல்லை` என அமைதிகூற வேண்டுதல் அவரைப்பற்றியே யாகலின், அன்னியராவாரை, ``அன்னியம்`` என்றார். அதன்பின், ஆதலால் என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `மாலும்` எனவும், `அவ்வானவராலும்` எனவும் போந்த இழிவு சிறப்பும் தொகுத்தலாயின, ``அன்னியம் இல்லை` என்றது சிவ பிரானுக்கு வேறானவராய்த் தோன்றுதல் இல்லை என்றவாறு. அவரால் சிவனடியாராதலைப் பெறுதலாவது, `இவரும் சிவ பெருமானது தொழிற்குரியராம் நிலைமையைப் பெற்றுச் சீகண்ட உருத்திரர் வாயிலாக அப்பெருமானது திருவருளைப் பெற்று நிற்பவர்` என உணர்ந்து அவனது அடியவராகக் கருதி வழிபட்டுச் சிவ புண்ணியத்தைப் பெறுதல். ``ஆம்`` என்றது எச்சம்; முற்றாதற்கு ஏலாமை அறிக. `வயணம்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `வயணம்` என்பதே பாடம் எனலுமாம், வயணம் - வகை.
நவந்தரு பேதங்களில் இறைவன் தன் அடியவரை அவர்க்கு விருப்பம் உள்வழி ஏற்புடையவற்றில் நிறுத்துதலும் உண்டு. ஆகவே, அவை `சம்பு பட்சம், அணு பட்சம்` என இருவேறு வகையாய் நிற்கும். இறைவன் தானே கொள்ளும் நிலைகள் சம்பு பட்சம்; தன் அடியவரை அந்நிலைகளில் நிறுத்தித் தானே செய்விப்பனவும், பிறர் வாயிலாகச் செய்விப்பனவும் அணுபட்சம், இவ்விருவகை நிலைகளும் சுத்த மாயையிலே உள்ளன. ஏனை இருமாயைகளிலும் அணுபட்சம் மட்டுமே உள்ளன. அவற்றுள்ளும் தூலமாய் உள்ள உருவநிலை நான்குமே உள்ளன. அந்நான்கனுள் மகேசுர நிலையில் நிற்பவர் முறையே அனந்த தேவரும், சீகண்டருமேயாவர். ஆன்ம வருக்கத் தினராகிய இவர் எல்லாரிடத்தும் பதியாகிய சிவபெருமான் தான் அவரேயாய்க் கலந்துநின்று அவரவர் தொழிலை இயற்றுவிப்பான், இவ்வாற்றால் அணுபட்சத்தினராகிய அயன், மால் என்பவரும் ஓராற்றால் சிவ நிலையினரேயாகலின், ``அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை`` என்றார். இவ்வாறே.
``ஒருவிண்முதல் பூதலம் - ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்ப மும்மூர்த்திக ளாயினை`` -தி,1 ப.28
``நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்``
-தி,6 ப.8 பா.3
``மாதிவர் பாகன் மறை பயின்ற
வாசகன் மாமலர் மேய சோதி`` -தி.8 திருவார்த்தை 1
``ஆதி - அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்``
-ஞானவுலா 5
என அருட்டிருமொழிகள் `அயன், மால்`` என்பவரையும் சிவபெருமானோடு ஒன்றாக வைத்து உயர்த்துக் கூறுமாறு அறிக.
அருட்டிருமொழிகளில் மேற்காட்டியவாறு அயனையும், மாலையும், சிவபெருமானோடு ஒன்றாக வைத்து உயர்த்துக் கூறுவனவேயன்றி,
``முந்நீர்த் துயின்றோன் நான்முக னறியாப்
பண்பொடு நின்றனை`` -தி.1 ப.28
``பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம்
அறியாமை நின்ற பெரியோன்`` -தி.4 ப.14 பா.2
``பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க``
-தி.8 திருவாசகம். திருவண்டப் பகுதி 32
என வேறாக வைத்து இழித்துக் கூறுவனவும் உள்ளனவன்றோ எனின், ஆம், அவையெல்லாம், `படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்` என இறைவன் செய்யும் தொழில் ஐந்து என்பதும், அவை ஐந்தும் ஒருவனது தொழிலே என்பதும் உணராது படைத்தல் முதலிய மூன்றே தொழில்கள் உள்ளன எனவும், அவற்றுள் அழித்தல் தொழில் கொடியதாகலின் அதனைச் செய்வோன் இறைவனாகான் என விடுத்து ஏனைய இரண்டும் செய்யத் தக்கனவாயினும் அவற்றுள் ஒவ்வொன்றே உயர்ந்தது எனவும் கொண்டு அதுவதற்கு உரிய ஒவ்வொருவனையே இறைவன் எனப் புகழ்ந்து, ஏனை இருவரையும் இகழ்ந்தொதுக்குவாரை நோக்கி, `முதல்வனாவான் ஓரோர் தொழிற்கே முதல்வராய் அவர் எல்லாரினும் மேம்பட்ட ஒருவன்` எனத்தெளிவித்தற் பொருட்டு வருவனவாகலின், `அவை, முன்னர்க் காட்டியவற்றோடு முரணுவன அல்ல` என்க.
எனவே, அயனையும், மாலையும் சிவபெருமானோடு ஒன்றாக வைத்துக் கூறும் திருமொழிகள் சிவபெருமான் தானே செய் வோனாய் சம்பு பட்சங்களில் வெளிப்பட்டு நிற்கும் நிலை, செய்விப் போனாய் அணுபட்சங்களில் மறைந்து நிற்கும் நிலை என்னும் இவற்றை நோக்கின எனவும், அவ்விருவரையும் வேறாக வைத்துக் கூறுந்திருமொழிகள் அவர் அணுபட்சத்தினராகின்ற நிலையை நோக்கின எனவும் பகுத்துணரற்பாலன என்பதாயிற்று.
இதுபற்றி யன்றே இந் நாயனாரும், ``பயனறிந் தவ்வழி எண்ணும் அளவில் ... ... நமக்கு அன்னியமில்லை`` என்றார்! `அவ்வழி எண்ணும் அளவில் அன்னியம் இல்லை` எனவே, `சிவபெருமானது நிலைவேறுபாடுகளாகிய சம்புபட்சங்களை எண்ணாது அணுபட்சங்களாகிய அவரவரையே எண்ணிய வழி அன்னியம் உண்டு`` என்து போந்தது.
``நமக்கு அன்னியம் இல்லை`` என்றது, `சம்புபட்சங்களை எண்ண வல்ல சிவநெறியாளராகிய நமக்கு அன்னியம் இல்லை`` என்றவாறு. எனவே, `அது மாட்டாது அணுபட்சத்தையே எண்ணும் ஐரணியகருப்பர், பாஞ்சராத்திரிகள் முதலியோர்க்கு எவ்வாற்றானும் உளதாவது அன்னியமே என்பதும் போந்தது. இதனானே, `இது மாட்டாத பௌராணிகர், அனைவரையும் ஒப்பவைத்து அனேகேச்சுர வாதம் பேசுவர்` என்பதும் பெறப்படும்.
இன்னும், ``பயனறிந்து அவ்வழி எண்ணும் அளவில்`` என்ற தனால், உயிர்களின் நன்மையின் பொருட்டு இறைவன் கொள்ளும் தடத்த நிலைகள் மேற்கூறியவாற்றான் முன்னும் பின்னுமாய் நிற்றல் நோக்கிச் சம்புபட்சமாகிய அவற்றில் மேல், கீழ் கூறப்படுதல் பற்றி அணுபட்சத்திலும் மேல், கீழ் கூறப்படுகின்றனவன்றி, அணுப் பட்சத்தில் உண்மையில் மேல் கீழ் இன்றி யாவரும் ஒரு தன்மையினரே என்பதும் உணர்த்தப்பட்டதாம். இதனை,
அயனை முன்படைத் திடுமொரு கற்பத்
தரியை முன்படைத் திடுமொரு கற்பத்
துயரு ருத்திரன் றனைமுனம் படைப்பன்
ஒருகற் பத்தின்மற் றொருகற்பந் தன்னின்
முயலு மூவரை ஒருங்குடன் படைப்பன்
முற்பி றந்தவர் மற்றிரு வரையும்
செயலி னாற் படைக் கவும் அருள் புரிவன்
சிவபிரான் எனில் ஏற்றமிங் கெவனோ.
எனச் `சிவதத்துவ விவேக` நூல் விளக்கிற்று.
`இச் சிவதத்துவ விவேகச் செய்யுளில் `சிவபிரான்` என்றதற்கு ஈடாக `மாயோன்` அல்லது `நான்முகன்` என்பதைப் பெய்து, இவை அனைத்தையும் மால் அல்லது அயனுக்கு ஆக்கிக் கூறின் வரும் குற்றம் யாது` எனின், ``சிவம் சாந்தம் சதுர்த்தம்` என்று சிவபெருமானைக் குணமூர்த்திகளாகிய மூவரின் மேம்பட்ட நான்காமவனாய நிர்க்குண மூர்த்தியாகக் கூறியது போல, அவரை ஓரிடத்தும் கூறாமையானும், மாயோனையும், நான்முகனையும் முதல்வராகக் கூறுவோர் அவரை முறையே `சத்துவ மூர்த்தி, இராசத மூர்த்தி` என்பதல்லது, நிர்க்குண மூர்த்திகளாகக் கூறாமையானும் அங்ஙனம் கூறுதல் கூடாது என்க. உருத்திரனைச் சிவபிரானின் மேம்பட்டவனாகக் கூறிப் பிணங்குவார் இன்மையின், அவன் அன்னியன் ஆகாமையைக் கூறிற்றிலர்.

பண் :

பாடல் எண் : 52

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.

பொழிப்புரை :

எண்ணில்லாத தேவர்கள் திருவோலக்கத்தில் சூழ்ந்து பணிகின்ற சிவபிரானது திருமேனியை அடியேனும் பணிந்து கும்பிட, அவன், `நீ திருமாலையும், படைப்புக் கடவுளாகிய பிரமனையும் நிகர்த்தவன்; ஆதலின், நிலவுலகத்திற்கு நமது திருவருட் பெருமையை உணர்த்து` என ஆணை தந்தருளினான்.

குறிப்புரை :

`ஆகவே, மக்களுலகத்துள்ளாரைச் சிவபெருமான் மாலும் அயனுமாகச் செய்தல் உண்டு` என்றவாறு. ``உலப்பிலி தேவர்கள்`` என்றதை முதலிற் கூட்டுக. சிவபெருமானது திருமேனி, பால் போலுதல் திருநீற்றுப் பூச்சினாலாம். இனிபால், இனிமை பற்றிவந்த உவமை என்றலுமாம், அருளை, `அடி` என்றல் மரபு என்பது, ``இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆை\\\\\\\\\\\\\\\\u2970?`` என்ற சிவஞான சித்தியானும் (சுபக்கம் - பாயிரம் - 4) உணர்க. திருமாலும், பிரமனும் வேதம் முதலியவற்றால் பலர்க்குச் சிவபிரானது திருவருட் பெருமையைப் பலர்க்கு உணர்த்துவோராதல் அறியத்தக்கது. `ஞாலக்கு` என்பதே பாடம் போலும். நாயனார்க்கு சிவபெருமான் இவ்வாறு ஆணை தந்தது நந்திதேவர் வாயிலாக என்க. இனித் திருவாவடுதுறையில் சிவபோதியின் கீழ் இருந்து கண்ட யோகக் காட்சியில் என்றலும் பொருந்துவதேயாம், இவ் ஆணையின் வழி நல்கப்பட்டதே இத் திருமந்திர மாலை என்க.

பண் :

பாடல் எண் : 53

வானவர் என்றும் மனிதர்இவர் என்றுந்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.

பொழிப்புரை :

உடம்போடு கூடி நிற்பவருள் சிலரை`இவர் தேவர்` என்றும், சிலரை, (இவர் மக்கள்) என்றும் உணர நிற்கும் நிலைமைகள் எல்லாம் சிவபெருமானது செயலால் அமைவனவன்றித் தானாகவே அவ்வாறு நிற்கும் தனித் தெய்வம் இல்லை.

குறிப்புரை :

`அதனால், ஏனைத் தேவரும், தலைமக்களும் மாலயன் போலச் சிவபெருமானது கலப்பினை நோக்கும்வழி அவனாதலும், இவர்தந் தன்மையை நோக்கும்வழி இவரோயாதலும் பெறப்படும், என, வானுலகத்தில் இந்திரன் முதலாகவும், மண் ணுலகத்தில் அரசர் முதலாகவும் உள்ள தலைவரது நிலைமையை விளக்கியவாறு. இவ்வாற்றானே. ``திருமாலுக் கடிமைசெய், தெய்வம் இகழேல், சக்கர நெறிநில் (ஆத்திச்சூடி) என்றற்றொடக்கத்து அறநூற் கட்டளைகள் எழுந்தன என்க. ``ஓரும்`` என்றது செயப்பாட்டு வினையாய் நின்றது. தனிமை, இங்குச் சுதந்திரத்தைக் குறித்தது. மற்று, அசைநிலை,

பண் :

பாடல் எண் : 54

சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

பொழிப்புரை :

சிவதன்ம நூலுள், `உருத்திரன், மால் அயன்` என்னும் மூவரும், மெய்யுணர்ந்தோர் ஆய்ந்துணர்ந்த பேரொளி யாகிய அநாதிப் பொருள் ஒன்றே மூன்றாயும், ஐவந்தாயும் நின்ற முதனிலைகளில் அமைவனவாதலை அந்நூலை அறியாதார் அறிய மாட்டார். அதனால், அவர் உலகியல் நூலே பற்றி அவரை வேறு வேறு கடவுளாக்கி அவருள் ஒருவராகப் புகழ்ந்தும், ஏனையிருவரையும் இகழ்ந்தும் திரிகின்றனர்.

குறிப்புரை :

`அவர் உரை பொருளாதல் இன்று` என்பது குறிப்பெச்சம். ``ஆதி`` என்றதனால், `அநாதி` என்பதும், நீதி நூல் என்றதனால் ``சிவதன்ம நூல்`` என்பதும் கொள்ளப்பட்டன. நீதி - உலகியல்; இஃது ஆகுபெயராய் நின்றது. ``நீதிக்கண் நின்று`` என ஒருசொல் வருவிக்க. ஈசன் முதலிய மூவரும் நின்று` என ஒரு சொல் வருவிக்க ஈசன் முதலிய மூவரும் பின்னர்க் கூறப்படுதலின் முன்னர்க் கூறாயினார். `அவரைப் பேதித்துப் பிதற்றுகின்றார்` என மாறிக் கூட்டுக.
`உலகியல் நூல், பல்வேறு சமயத்தாருக்கும் பொது வாய அறங்களைக் கூறும் நூல், அஃது `முதற்கடவுளாவது இதுவே` என ஒருதலையாக ஒருதெய்வத்தை வரையறுத்துணர்த்தாமையின், அதனையே பற்றி நிற்பார்க்கு மலைவுண்டாதல் இயல்பு` என்பதும், `அம்மலைவு, மெய்ந்நெறி நூலை உணர்வார்க்கு இல்லை` என்பதும் உணர்த்தியவாறு அறிக.

பண் :

பாடல் எண் : 55

பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாக
வரத்தினுள் மாயவ னாய்அய னாகித்
தரத்தினுள் தான்பல தன்மைய னாகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒன்றோடும் ஒட்டாது தனித்து நிற்கும் மேல் நிலையில் ஒருவனேயாய், அந்நிலையினின்று வரு தலாகிய பொதுநிலையில் எல்லாப் பொருட்கும் உள்ளும், புறம்பும் நிறைந்து நிற்பவனாய் மால், அயன் முதலிய ஒன்பது நிலைகளை உடையவனாகியும், உயிர்களின் தகுதி வேறுபாட்டிற்கேற் மற்றும் பல் வேறு நிலைகளையுடையனாகியும் இவ்வாறெல்லாம் தனது திருவருள் ஒன்றிலே நின்று உயிர்கட்குப் பாசத்தைப் போக்கி யருளுகின்றான்.

குறிப்புரை :

எனவே, `இவற்றிற்கெல்லாம் காரணம் பல்வேறு நிலைப்பட்ட உயிர்கள் மாட்டுக் கொண்ட அருளேயன்றிப் பிறி தில்லை` என, `ஒருவன் ஒருநிலையில் நில்லாது பல நிலையை மேற் கொள்ள வேண்டுவது என்னை` என்னும் ஐயத்தை நீக்கியவாறு ``மாயவன், அயன்``, ``தரம்`` என்பன உபலக்கணம். வரத்து, `வரவு` என்னும் தொழிற் பெயர். சொரூபம் நிலையும், தடத்தம் வரவும் ஆதல் உணர்ந்து கொள்க. கரம் போல்வதனை, ``கரம்`` என்றார். இறைவனது சத்தியை அவனுக்குக் கை போல்வதாதலை.
``நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும்
நங்கையினால் செய்தளிக்கும் நாயகனாம்``
என்னும் திருக்களிற்றுப்படியார். 78 இதனாலறிக. இதனானே, ``என்னை இப்பவத்திற் சேராவகை எடுத்து`` (சிவஞானசித்தி. பாயிரம். 2) என்பதில் எடுத்து என்றது, `அருளாகிய கையால் எடுத்து` எனப் பொருள் தந்தது.

பண் :

பாடல் எண் : 56

தானொரு கூறு சதாசிவன் எம்இறை
வானொரு கூறு மருவியும் அங்குளான்
கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்ற
தானொரு கூறு சலமய னாமே.

பொழிப்புரை :

எம் கடவுளாகிய சிவபெருமான் தானே ஒரு கூற்றில் சதாசிவ மூர்த்தியாய் `சாந்தியதீதை` என்னும் ஒரு கலையுள் நின்று அதனையே தன்னிடமாகக் கொண்டும் இருக்கின்றான். மற்றொரு கூற்றில் உயிர்க்குயிராய் நின்று உணர்த்துவதாகிய இலயசிவனாயும் நிற்கின்றான். பிறிதொரு கூற்றில் பாசங்களின் வழிநின்று நடத்தும் மறைப்பாற்றலாயும் உள்ளான். வேறொரு கூற்றில் பாசத்தை நீக்கித் தன்னைத் தரும் அருளாற்றலாயும் இருப்பன்.

குறிப்புரை :

`அதனால் அவனது நிலைவேறுபாடுகளை அறிதல் உயிர்கட்கு அரிது` என்பது கருத்து. `இந்நிலையெல்லாம் தன் இச்சையாற் கொள்வனவே` என்றற்கு முதற்கண், ``தான்`` என்றார். சாந்தியதீத கலையும் ஆகாயம் எனப்படுமாறு அறிக. உண்மையை ``அங்கு`` என்பதனுடன் கூட்டுக. ``கோன்`` என்றது. `எசமானன்` என்னும் பொருளது. பாசத்தின் வழி நின்று நடத்துதலை, `உடலுள் நின்று உயிர்த்தல்` என்றார். இறுதிக் கண் நின்ற ``ஒரு கூறு`` என்றது முன்னும் சென்று இயையும், ``ஆம்`` என்பதனை, ``தான்`` என்றதற்கும் கூட்டுக. தண்ணியனாதல் பற்றி அருள்வோனாதலை, ``சலமயன் ஆம்`` என்றார்.
சிற்பி