திருவையாறு


பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 1

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.

பொழிப்புரை :

ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக்காலத்து, `அஞ்சேல்` என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது, நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.

குறிப்புரை :

ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து கபம் மேலிட்டு வருந்துங்காலத்து அபயப் பிரதானம் செய்பவன் கோயில், வலம்வரும் பெண்கள் நடனம் செய்ய, அதற்குப் பக்கவாத்தியமாக முழவு அதிர, அவ்வொலியை மேகத்திடியோசையென மயங்கி, மந்திகள் மரம் ஏறி முகில் பார்க்கும் ஐயாறு என்கின்றது. ஐ - கபம். அலமந்து - சுழன்று. முகில் - மேகம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 2

விடலேறு படநாக மரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி யஞ்சொலீர் பலியென்னு மடிகள்கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் கீன்றலைக்குந் திருவையாறே.

பொழிப்புரை :

கொல்லுதலாகிய குற்றம் பொருந்திய படத்தினையுடைய நாகத்தை இடையிற்கட்டி, மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு வலிமை பொருந்திய விடையேற்றின் மேல் ஏறி, அழகிய சொற்களைப் பேசும் மகளிரே! பிச்சையிடுங்கள் என்று கேட்டுச் சென்ற சிவபிரானது கோயிலையுடையது, வளைந்த மூக்கினையுடைய கடற் சங்குகள் கடலினின்றும் அலை வழியாக அதில் பாயும் காவிரியோடு வந்து இரவின்கண் திடலில் ஏறித்தங்கிச் செழுமையான முத்துக்களை ஈன்று சஞ்சரிக்கும் திருவையாறாகும்.

குறிப்புரை :

பாம்பைத் திருவரையிற்கட்டி, மலையரசன் மக ளோடும் விடையேறி, அம்மா பிச்சையிடுங்கள் என்னும் அடிகள் கோயில், கடற்சங்கம் காவிரியோடு மேல் ஏறி வந்து முத்தம் ஈன்றலைக்கும் ஐயாறு என்கின்றது. விடல் - வலிமை. வீடல் என்பதன் விகாரம் எனக்கொள்ளினும் அமையும். அஞ்சொலீர் - அழகிய சொற்களையுடையவர்களே. கங்குல் - இரவு. திடல் - மேடு. சுரி சங்கம் - சுரிந்த மூக்கினையுடைய சங்குகள்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 3

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழினுழைந்து கூர்வாயா லிறகுலர்த்திக் கூதனீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கான லிரைதேருந் திருவையாறே.

பொழிப்புரை :

சிறந்த பிரமன், திருமால் ஆகியோரின் முழு எலும்புக்கூட்டை அணிந்தவரும், கயிலாய மலையில் உறைபவரும், கானப்பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியவரும், மங்கை பங்கரும் முத்தலைச் சூலப்படை ஏந்தியவரும், விடை ஊர்தியை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய கோயிலை உடையது, சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளில் நுழைந்து கூரிய தம் அலகுகளால் தம் இறகுகளைக் கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைகளைத் தேடும் திருவையாறாகும்.

குறிப்புரை :

கங்காளர் மங்கைபங்காளர் பயிலுங்கோயில், வெண்குருகு பொழிலில் நுழைந்து அலகால் சிறகைக் கோதி, உலர்த்தி, குளிர்நீங்கி இரைதேடும் ஐயாறு என்கின்றது. கொங்கு ஆள் அப்பொழில் - தேன் நிறைந்த அச்சோலை. கூதல் - குளிர். செங்கால் நல் வெண் குருகு எனப்பிரிக்க. கானல் - கடற்கரைச் சோலை. இது திணைமயக்கம் கூறியது.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 4

ஊன்பாயு முடைதலைகொண் டூருரின் பலிக்குழல்வா ருமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள்தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கமல மொட்டலருந் திருவையாறே.

பொழிப்புரை :

புலால் பொருந்தியதாய், முடை நாற்றமுடைத்தாய் உள்ள தலையோட்டைக் கையில் ஏந்தி, ஊர்கள்தோறும் பலியேற்று உழல்பவரும், உமை பாகரும், பாய்ந்து செல்லும் விடையேற்றை உடையவரும், நன்மைகளைச் செய்வதால் சங்கரன் என்ற பெயரை உடையவரும், தழல் உருவினருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, மான் துள்ளித்திரிய, வயலருகே உள்ள மரங்களில் ஏறி மந்திகள் பாய்வதால் மடுக்களில் தேன்பாய, அதனால் மீன்கள் துள்ளவும் செழுமையான தாமரை மொட்டுக்கள் அலரவும், விளங்குவதாகிய திருவையாறாகும்.

குறிப்புரை :

பிரமகபாலத்தை ஏந்தி ஊர்தோறும் பலிக்கு உழல்வா ராகிய தழல் உருவர் தங்கும் கோயில், மான்பாய, வயலருகேயுள்ள மரத்தில் ஏறி மந்திகள் மடுக்கள் தோறும் பாய்வதால் தேன் பாய, மீன்பாய, தாமரைகள் மலரும் ஐயாறு என்கின்றது. மான்: முல்லைக் கருப்பொருள்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 5

நீரோடு கூவிளமு நிலாமதியும் வெள்ளெருக்கு நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடு மரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே.

பொழிப்புரை :

கங்கைநதி, வில்வம், பிறைமதி, வெள்ளெருக்கு, கொன்றை மலர் நிறைந்த மாலை, குளிர்ந்த கரந்தை ஆகியவற்றைச் சடையின்கண் அணிந்த தத்துவனாகிய சிவபிரான் தங்கியுள்ள கோயிலையுடையது, மேகமண்டலம் வரை உயர்ந்து சென்று வானத்தை அளந்து மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்ததும், மணம் வீசும் வீடுகளை உடைய தேரோடும் வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகலன்கள் புனைந்த இளம் பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும்.

குறிப்புரை :

கங்கையோடு வில்வம் எருக்கம்பூ முதலியவற்றைச் சடையிலணிந்த தத்துவனார் தங்குங் கோயில், மேகமண்டலத்தையளாவி, விண்ணையளந்த பொழில்கள் சேர்ந்துள்ள தேரோடும் வீதியிலே உள்ள அரங்குகளில் மகளிர் நடமாடும் ஐயாறு என்கின்றது. கூவிளம் - வில்வம். கார் ஓடி - மேகம் பரந்து.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 6

வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தார மிசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.

பொழிப்புரை :

அனைத்துலகங்களுக்கும் வேந்தனாய், விண்ணவர் களுக்கும், மண்ணவர்களுக்கும் வழி காட்டும் வள்ளலாய், மணங்கமழும் கொன்றை மாலையைச் சடையின்மிசை அணிந்தவனாய் புண்ணிய வடிவினனாய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, மகளிர் காந்தாரப் பண்ணமைத்து இசைபாட அழகிய வீதிகளில் அமைந்த அரங்கங்களில் ஏறி அணிகலன்கள் பூண்ட இளம் பெண்கள் தேம், தாம் என்ற ஒலிக் குறிப்போடு நடனம் ஆடும் திருவையாறாகும்.

குறிப்புரை :

அரசாகி, வழிகாட்டும் வள்ளலாகிய பூங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியர் கோயில் காந்தாரப்பண்ணமைத்து மகளிர் இசைபாட, சேயிழையார் சிலர் அரங்கேறி நடமாடும் ஐயாறு என்கின்றது. தாமம் - மாலை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 7

நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.

பொழிப்புரை :

நீண்ட வானவெளியில் நின்று உலவி, தேவர்கள் வாழ்விடங்களை அழித்துவந்த முப்புரங்களையும், நீண்ட கூரிய அம்பு சென்று உலவும்படி கணை தொடுத்த வில்லாளியும், கயிலைமலை ஆளியுமாகிய சிவபிரான் சேர்ந்துறையும் கோயிலையுடையது, சிறுமலைகளில் குயில்கள் கூவவும், செழுமையான தேன் நிறைந்த மலர்களைத் தீண்டி மணம் மிகுந்து வருவதாகிய தென்றல் காற்று அடிவருடவும், அவற்றால் செழுமையான கரும்புகள் கண் வளரும் வளமுடைய திருவையாறாகும்.

குறிப்புரை :

வானவீதியில் நெருங்கிவரும் முப்புரங்களையும் அம்புதைக்கும் வண்ணம் வளைத்த வில்லாளி, மலையில் குயில்கூவத் தேன்பாய்ந்து மணம் நிறைந்த தென்றற்காற்று அடிவருடக் கரும்பு தூங்கும் ஐயாறு என்கின்றது. பிரசம் - தேன். இதனால் தென்றற்காற்றின் சௌரப்யம், மாந்தியம் என்ற இருகுணங்களும் கூறப்பட்டன. கண் வளரும் - கணுக்கள் வளரும் என்றுமாம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 8

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த வரக்கர்கோன் றலைகள்பத்தும்
மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ விளமேதி யிரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.

பொழிப்புரை :

அஞ்சாமல் கயிலை மலையை எடுத்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தையும் வலிமை பொருந்திய அவன் தோள்களோடு நெரியுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் புரிந்த சிவபிரான் எழுந்தருளிய கோயிலைஉடையது. இனிய தோற்றத்தையுடைய இளந்தென்னையில் காய்த்த நெற்று விழ, அதனைக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று அஞ்சி ஓடி செந்நெற் கதிர்களைக் காலால் மிதித்துச் செழுமையான தாமரைகள் களையாகப் பூத்த வயல்களில் படியும் திருவையாறாகும்.

குறிப்புரை :

சிறிதும் அஞ்சாது கயிலையைத் தூக்கிய இராவணன் தலைகள் பத்தையும் நெரித்து அவனுக்கு அருள்செய்த மைந்தர் கோயில், தேங்காய் நெற்று வீழ, எருமைக்கன்று பயந்தோடி நெல்வயலை மிதித்துத் தாமரை முளைத்திருக்கின்ற வயலிலே படியும் ஐயாறு என்கின்றது. மஞ்சு - வலிமை. மைந்து என்பதன் திரிபு. இன் சாயல் - இனிய நிழல். இஞ்சாயல் என ஆயிற்று எதுகைநோக்கி. இளமேதி - ஈனாக்கன்றாகிய எருமை. செஞ்சாலி - செந்நெல்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 9

மேலோடி விசும்பணவி வியனிலத்தை மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.

பொழிப்புரை :

அன்னமாய் மேலே பறந்து சென்று வானத்தைக் கலந்தும், அகன்ற நிலத்தை ஆழமாக அகழ்ந்தும் முயற்சியோடு தேடிய நான்முகன், திருமால் ஆகியோர் அறிய முடியாதவாறு ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் கோயிலையுடையது, கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும் அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட, திரண்ட தனங்களையுடைய அச்சேயிழையார் முகத்தில் கண்களாகிய சேல்மீன்கள் பிறழவும், வில் போன்ற புருவங்கள் மேலும் கீழும் செல்லவும், நடனமாடும் திருவையாறாகும்.

குறிப்புரை :

மேலே பறந்தும் நிலத்தைத் தோண்டியும் தேடிய அயனும் மாலும் அறியாதவண்ணம் அழலுருவானான் அமருங்கோயில், ஐயாறு என்கின்றது. அணவி - கலந்து. கோல் - கூத்தர் கையிற்கொள்ளும் அவிநயக்கோல். கோல் வளை - திரண்டவளை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 10

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோளர் முக்கண்ண ரெம்மீச ரிறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே.

பொழிப்புரை :

இழிசெயல்களில் ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும், வஞ்சனை பொருந்திய உரைகளையும், கேளாமல், தொண்டர்களே! நீவிர் சிவபிரானை அடைந்து அவருக்கு ஆட்படுவீர்களாக. எட்டுத் தோள்களையும், முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும் கோயிலையுடையது, பூக்களைச் செண்டுகள் போல் உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான மணிகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.

குறிப்புரை :

தொண்டர்களே! புறச்சமயிகளின் மொழிகளைக் கேளாதே ஆட்படுங்கள்; எம் இறைவர் அமருங்கோயில் காவிரி மணிகளைக் கொணர்ந்து எற்றும் திருவையாறு என்கின்றது. குற்றுடுக்கை - சிற்றாடை. மிண்டு - குறும்பான உரை. மேவி - விரும்பி. செண்டு - பூ உருண்டை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 11

அன்னமலி பொழில்புடைசூ ழையாற்றெம் பெருமானை யந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்து மிசையுங்கா லீசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகிற் றவநெறிசென் றெய்துவார் தாழாதன்றே.

பொழிப்புரை :

அன்னப் பறவைகள் நிறைந்த பொழில்கள் புடை சூழ்ந்து விளங்கும் திருவையாற்றுப் பெருமானை, அழகிய தண்மையான சீகாழிப்பதியில் வாழும் சிறப்பு மிக்க, வேதங்கள் பயிலும் நாவினன் ஆகிய புகழ் வளரும் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்களாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி, ஈசனடியை ஏத்துபவர்கள் புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்.

குறிப்புரை :

ஐயாற்றெம்பெருமானைச் சம்பந்த சுவாமிகள் பாடல்களால் தோத்திரிப்பவர்கள் புகழோடு தேவருலகிற் செல்வார்கள் என்கின்றது. இசையோடு அமர் உலகு - தேவருலகு. தாழாது - தாமதியாது.
சிற்பி