திருவலிவலம்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை யெதிர்விழி உமையவள்
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

மணம் கமழும் மலர்களையும், அவற்றில் தேனுண் ணும் வண்டுகளையும், உடைய பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், மலர்கள் அணிந்த சுருண்ட கூந்தலையும், வரிந்து கட் டப்பெற்ற வில்போன்ற நுதலையும், செலுத்துதற்கு உரிய கணை, மான் ஆகியன போன்ற கண்களையும் பெற்றுடைய உமையம்மையோடு கூடிய திருமேனியை உடையவன்.

குறிப்புரை :

உமாதேவி விரும்பி எழுந்தருளிய திருமேனியுடைய வன், வலிவலம் உறை இறைவன் ஆவான் என்கின்றது. பூ இயல் புரி குழல் - பூக்களையணிந்த பின்னப்பெற்ற கூந்தலையும், வரி சிலை நிகர் நுதல் - கட்டுக்களோடு கூடிய வில்லையொத்த நெற்றியையும் உடைய உமையவள் எனத்தனித்தனிகொண்டு இயைக்க. ஏவு இயல் கணை - செலுத்தப்பெற்ற பாணம். இதனைக்கண்ணுக்கு ஒப்பாக்கியது சென்று தைத்திடும் இயல்பு பற்றி. பிணை - பெண்மான்நோக்கு. ஆகுபெயர்; இதனைக் கூறியது மருட்சிபற்றி. மா இயல் பொழில் - மாமரங்கள் செறிந்த சோலை. வண்டு நிறைந்த சோலையுமாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

இட்டம தமர்பொடி யிசைதலி னசைபெறு
பட்டவிர் பவளநன் மணியென வணிபெறு
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

மணம் கமழ்கின்ற மலர்கள் தேனோடு விளங்கும் பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், விருப்பத்தோடு அணியப் பெற்ற திருநீறு பொருந்தி இருத்தலின் பட்டோடு விளங்கும் பவளமணி போல் ஒளிவிடுகின்ற அழகிய ஒளி வீசும் திருமேனியை உடையவனாகத் தோன்றுகின்றான்.

குறிப்புரை :

செம்மேனியில் திருநீறு அணியப் பெற்றமையால் பட்டோடு விளங்குகின்ற பவளமணிபோல ஒளிவிடுகின்ற திருவுருவுடையவர் இந்நகர் இறை என்கின்றது. இட்டம் - விருப்பம். நசை - விருப்பம். பட்டு அவிர் பவள நன்மணி என - பட்டோடு விளங்குகின்ற பவழமணியென்றுசொல்ல.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
கருமணி நிகர்கள முடையவன் மிடைதரு
மருமலி பொழில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

மிகுதியான மணம் நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், தேவர்கள் அஞ்சத்தக்க கடலைக் கடைந்தபோது உலகில் உள்ள அனைத்துயிர்களும் அஞ்சத்தக்க வகையில் எழுந்த விடத்தை உண்டு, திருநீறு சண்ணித்த திருமேனி வெள்ளி மலைபோல விளங்க அதனிடை நீலமணி பதித்தாற்போல் கரியகண்டம் உடையவனாய் விளங்குபவன் ஆவான்.

குறிப்புரை :

பாற்கடலைக் கடைந்தகாலத்து, உலகத்து உயிர்கள் யாவும் அஞ்சும்படித் தோன்றிய விடத்தை அமுதுசெய்தமையால் வெள்ளிமலையணிந்த நீலமணியை ஒத்த கழுத்தையுடையவன் இந்நகர் இறை என்கின்றது. வெள்ளிமலை நீறுதோய்ந்த இறைவன் திருமேனிக்கும், நீலமணி அவன் கழுத்தில் விளங்கும் கறைக்கும் உவமை. மிடைதரு - நெருங்கிய. மரு - மணம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

அனனிகர் சடையழ லவியுற வெனவரு
புனனிகழ் வதுமதி நனைபொறி யரவமும்
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

வலிவலம் உறை இறைவன், அனல் போன்ற சடை யழலை அவிப்பதற்கென வருவது போன்ற கங்கையையும், பிறையையும், பூ மொட்டுப் போன்ற படப்புள்ளிகளை உடைய பாம்பையும் முடி மிசை உடையவன் என்னும் நினைவோடு வரும் மனமுடைய அடியவர் வாழும் சிறப்பினை உடையது வலிவலமாகும்.

குறிப்புரை :

முடிமீது மனமுடையவர் வலிவலமுறை இறைவர் என்கின்றது. அதற்குரிய ஏது கங்கையோ செந்தழல்போன்ற சடையின் தீயை அவிக்க வருவதுபோலப் பெருகிக்கொண்டிருக்கிறது. அக்கங் கையில் நனைந்த அரவமும் நம்மால் விழுங்கத்தக்க மதி எனநினைவொடும் வருகின்றது. ஆதலால் இவை தருக்கும் பகையுமாறித் தத்தம் எல்லையில் ஒடுங்க இறைவன் எப்போதும் தலைமேற் சிந்தையராக இருக்கின்றார் என்ற நயந்தோன்றக் கூறியது, அனல் நிகர் சடை அழல் அவியுற - நெருப்பை ஒத்த சடையின் தீயானது தணிய. நனை பொறி அரவம் - நனைந்த படப்புள்ளிகளோடு கூடிய பாம்பு. நனை - கூரிய என்றுமாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

மிகுதியாக வழங்கும் கொடையே தமக்கு அழகைத் தரும் என நினையும் வள்ளற் பெருமக்கள் வாழும் வலிவலத்தில் உறையும் இறைவன், உமையம்மை பெண்யானை வடிவுகொள்ள, தான் ஆண்யானையின் வடிவு கொண்டு தன் திருவடியை வணங்கும் அடிய வர்களின் இடர்களைக் கடியக் கணபதியைத் தோற்றுவித்தருளினான்.

குறிப்புரை :

உமாதேவி பெண்யானையின் வடிவுகொள்ள, ஆண் யானையின் வடிவத்தைத் தாம்கொண்டு விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம்பற்றிய இறைவன் வலிவலநகரான் என்கின்றது. பிடி - பெண்யானை. கரி - ஆண்யானை. வடிகொடு - வடிவத்தைக் கொண்டு. கடி கணபதி - தெய்வத்தன்மையுடைய விநாயகப் பெருமான். கொடைவடிவினர் - வள்ளற் பெருமக்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

தரைமுத லுலகினி லுயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

அழகிய மலைபோலத் திகழும் மதில் சூழ்ந்த வலி வலத்தில் உறையும் இறைவன், மண் முதலிய அனைத்து அண்டங்களிலும் வாழும் உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடிப் போகம் நுகருமாறு மணம் மிக்ககூந்தலை உடைய உமையம்மையோடு கூடியவனாய் விளங்கித்தன்னை வழிபடும் அடியவர்க்கு நரை தோலின் சுருக்கம் என்பன கெடுமாறு செய்து என்றும் இளமையோடு இருக்க அருள்புரிபவனாவான்.

குறிப்புரை :

பிருதிவியண்டம் முதலான பல்வேறு அண்டங்களில் வாழும் உயிர்கள் யாவும் போகம் நுகரத்தாம் போகியாயிருந்து உமாதேவியோடு பொருந்துகின்ற இறைவன் இவன் என்கின்றது. சென்ற திருப்பாடலில் உமை பெண்யானையாக, இவர் ஆண்யானையானார் என்ற வரலாற்றுக்கு ஏது கூறி ஐயம் அகற்றியது. புணர்தகை - புணர்ச்சியை எய்துவதற்காக. விரை - மணம். விரவது - கலத்தலை. தன்னை வழிபடுகின்ற அடியார்களுக்கு நரை திரை முதலியனகெட, என்றும் இளமையோடிருக்க அருளினன் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

நலிதரு தரைவர நடைவரு மிடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவ னெழின்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

அழகுமிக்கக் கவின் கலை முதலான தொழில்கள் வளரும் வலிமை மிக்க மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், மண்ணை மிதிப்பதற்கே அஞ்சும் மென்மையான பாதங்களையும், அசையும் இடையினையும் உடைய அழகிய தாருகாவன மகளிர் உறையும் மனைகள் தோறும் சென்று புகுந்து பலி ஏற்கப் பிட்சாடனனாய் வருபவன்.

குறிப்புரை :

பூமியை மிதிப்பதற்கு அஞ்சும் மெல்லிய பாதமுடைய முனிபன்னியர் வீடுகள்தோறும் சென்று பலியேற்க வருபவன் வலி வலம் உறை இறை என்கின்றது. தரை வரநலிதரும் நடை வரும் இடையவர் எனக்கொண்டு கூட்டுக. மடவரலியர் - பெண்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

இரவண னிருபது கரமெழின் மலைதனின்
இரவண நினைதர வவன்முடி பொடிசெய்து
இரவண மமர்பெய ரருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

தன்னை வழிபட்டு இரக்கும் தன்மையாளர்களாகிய அடியவர்கட்குத் தன் மனத்தில் தோன்றும் கருணையாகிய நிதியை வழங்கும் வலிவலத்தில் உறையும் இறைவன், இராவணனின் இருபது கரங்களையும் அவனுடைய பத்துத் தலைகளையும் அழகிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்திப் பொடி செய்து பின் அவன் இரந்து வேண்டி நினைத்த அளவில் அவனுக்கு வேண்டுவன அளித்து இரா வணன் என்ற பெயரையும் அருளியவன்.

குறிப்புரை :

இராவணன் செருக்கடங்க, விரல் நுதியையூன்றி அவன் இரக்க, மீட்டும் அருள் செய்தவன் இவன் என்கின்றது. இரவ ணன் - இராவணன்; எதுகை நோக்கி இடைகுறுகிற்று. இராவண்ணம் - இருக்காத வண்ணம். இரவணம் அமர் - அவன் அழுதலைப் பொருந்த. இரவு அண்ண நிகர் ...... இறை - அடியார்கள் தத்தம் குறைகளைச் சொல்லியாசிக்க அருளும் இறைவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

தேனமர் தருமல ரணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நில மகழரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

வானத்தைச் சென்றடையுமாறு நெருக்கமாகக் கட்டப்பட்ட கொடிகளைக் கொண்ட மதில்களால் சூழப்பட்ட வலி வலத்தில் உறையும் இறைவன், தேன் நிறைந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், வலிமைமிக்க பன்றியுருவினனாய் நிலத்தை அகழும் திருமால் ஆகியோர் முடியையும் அடியையும் காணமுடியாதவாறு ஓங்கி உயர்ந்த திருவுருவை உடையவன்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியாத வடிவுடையான் வலிவல நாதன் என்கின்றது. ஏனம் - பன்றி. மிடை - நெருங்கிய.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையி லுணலுடை யவர்களு நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட வலி வலத்தில் உறையும் இறைவன், மிகுதியான மருதந்துவர் இலைகளால் பிழியப்பட்ட மிக்க துவர்நிறம் உடைய ஆடைகளை அணிந்த புத்தர்களும் நின்றுண்ணும் இயல்பினர்களாகிய சமணர்களும் நினைப்பதை அழித்துப் பொருட்டன்மையால் வலியவான பெருமை மிக்க வேதங்கள் தன்னைத் தொடருமாறு செய்தருளும் உருவினை உடையவனாய் உள்ளான்.

குறிப்புரை :

சமணர் புத்தர்களுடைய நினைப்புத்தொலைய, வேதம் தேடும் வடிவினன் வலிவலநாதன் என்கின்றது. இலை மலிதர மிகு துவர் உடையவர்கள் - வாயில் வெற்றிலை மிக, காவியுடுத்த புத்தர்கள். நிலைமையில் உணலுடையவர்கள் - நின்றபடியே விழுங்கும் சமணர்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழின்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய வொருபது முயர்பொருள் தருமே.

பொழிப்புரை :

நிலைபேறுடைய வலிவல நகரில் உறையும் இறைவன்மீது இனிமையான இயல்பினை உடைய கழுமல நகருக்குத் தலைவனும் அழகிய வேதங்களையும் கலைகளையும் ஓதாமல் தானே உணர்ந்த தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் எண்ணிஉரைத்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தும் உயர்வான வீடு பேறாகிய செல்வத்தை அளிக்கும்.

குறிப்புரை :

வலிவல நாதனைக் கழுமலநாதனாகிய ஞான சம்பந்தன் சொல்லிய இந்தப்பத்து உரைகளும் உயர்ந்த பொருளைத் தரும் என்கின்றது. எழில்மறை தன்னியல் கலைவல தமிழ்விரகன் - அழகிய வேதத்தையும், கலைகளையும் ஓதாதே தன்னியலாலேயே திருவருள் துணைகொண்டு உணர்ந்த தமிழ் விரகன். உன்னிய - எண்ணிச் சொன்ன. உயர்பொருள் - வீடு.
சிற்பி