திருநறையூர்ச்சித்தீச்சரம்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய் நாகத்தர்
கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர் கங்காளர்
மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையின் மகிழ்வெய்திச்
சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

பெருமை உடைய மறையவர் தங்கள் இல்லங்களில் வேதப்பொருள்களை உள்ளடக்கிய பாடல்களைப் பாட, அதனைக் கேட்டுச் சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மகிழ்வெய்திப்பாடித் தேனை உண்ணுகின்ற நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பிறைசூடிய சடையர். புலித்தோலை உடுத்தவர். பிளந்த வாயினை உடையபாம்பினை அணிந்தவர். விடக் கறை பொருந்திய கழுத்தை உடையவர். பிரமனது தலையோட்டை ஏந்திய கையினை உடையவர். எலும்பு மாலை அணிந்தவர்.

குறிப்புரை :

நறையூர்ச்சீத்தீச்சரத்தார் பிறைச்சடையர், புலித்தோலர், அரவார்த்தவர், நீலகண்டர், கபாலி, கங்காளர், என்கின்றது. பேழ் வாய் - பிளந்த வாய். கங்காளம் - முழு எலும்பு. சேடர் - பெருமையுடை யவர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

பொங்கார்சடையர் புனலரனலர் பூதம் பாடவே
தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர் விடையேறிக்
கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக் குளிர்பொய்கைச்
செங்காலனமும் பெடையுஞ்சேருஞ் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

தழைத்த சடையினராய், கங்கை அணிந்தவராய், அனல் ஏந்தியவராய், பூதகணங்கள் பாடத்தம் காதலியாகிய உமையம்மையும் தாமும் உடனாய், ஒப்பற்றதொருவிடைமீது, தேன் பொருந்திய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்தை மலர் ஆகியவற்றைச் சூடிக்கொண்டு குளிர்ந்த பொய்கைகளில் சிவந்த கால்களை உடைய ஆண் அன்னமும் பெண் அன்னமும் கூடிக்களிக்கும் சித்தீச் சரத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

இதுவும் அவர் புனலர், அனலர், விடையேறியவர் என்கின்றது. பொங்கு - வளர்ச்சி. கொங்கு - தேன். இறைவன் தம் காதலியும் தானும் விடையேறியிருப்பதால், பொய்கைகளில் அன்னங்களும் பெடையோடு சேர்ந்திருக்கின்றன என்று போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தை நல்கும் தன்மை விளக்கியவாறு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவா மேனிமேல்
பொடிகொணூலர் புலியினதளர் புரிபுன் சடைதாழக்
கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலா ரினம்பாயக்
கொடிகொண்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

முடியாகச் சடையினை உடையவராய், ஒரு கலை யோடு தோன்றும் வெண்மையான மதியை அணிந்தவராய், மூப்படையாததம் திருமேனியின்மேல் திருநீற்றையும் முப்புரிநூலையும் அணிந்தவராய், புலித்தோலை உடுத்தவராய், முறுக்கப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்க மணம் கமழும் சோலைகளும் வயல்களும் சூழ்ந்த நீர் நிலைகளில் கயல் மீன்களின் இனங்கள் பாய்ந்து விளையாடக் கொடிகள் கட்டிய மாடவீடுகளின் கூட்டங்கள் நிறைந்த நறையூரில் உள்ள சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

இதுவும் அவர் சடைமுடியர், வெண்ணீற்றர், புலித் தோலர் என்கின்றது. மூவா மேனி - மூப்படையாத, என்றும் இளைய திருமேனி. அதளர் - தோலை உடையாக உடையவர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

பின்றாழ்சடைமே னகுவெண்டலையர் பிரமன் றலையேந்தி
மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரு மொருகாதர்
பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்து செண்பகம்
சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

பூசைக்குகந்த பொன்போன்ற கொன்றை, செருந்தி, புன்னை, ஏற்புடையதான செண்பகம் ஆகியன வானுறப் பொருந்தி வளரும் செல்வச் செழுமையுடைய அழகிய நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பின்புறம் தாழ்ந்து தொங்கும் சடைமுடிமேல், விளங்கும் வெண்மையான தலை மாலையை அணிந்தவர். பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தி மின்னலைத் தாழச்செய்யும் ஒளி உருவினர். சங்கக் குழையணிந்த காதினை உடையவர்.

குறிப்புரை :

இதுவும் அவர் தலைமாலை அணிந்தவர், கபாலி, சங்கக் குண்டலர் என்கின்றது. சங்கு ஆர் குழை - சங்கினால் இயன்ற காதணி. திருவார் நறையூர் - திருநறையூர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைக ணிறைநாவர்
பாரார்புகழாற் பத்தர்சித்தர் பாடி யாடவே
தேரார்வீதி முழவார்விழவி னொலியுந் திசைசெல்லச்
சீரார்கோலம் பொலியுநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

உலகில் பரவிய தமது புகழ் மொழிகளைப் பக்தர்களும் சித்தர்களும் பாடிஆடத் தேரோடும் வீதிகளில் முழவின் ஒலி, விழா ஒலியோடு பெருகி எண் திசையும் பரவ, புகழ் பொருந்திய அழகோடு விளங்கும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் உறையும் இறைவர், கங்கையை அணிந்த சடைமுடியினர். கறைபொருந்திய கண்டத்தை உடையவர். வேதங்கள் நிறைந்த நாவினர்.

குறிப்புரை :

சித்தீச்சரத்தார் கங்கை முடியர், நீலகண்டர், மறைநாவர் என்கின்றது. பாரார் புகழ் - உலகம் முழுவதும் வியாபித்த புகழ்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொண் மலர்மாலை
தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத் தெழிலார்வந்
தீண்டுமாட மெழிலார்சோலை யிலங்கு கோபுரம்
தீண்டுமதியந் திகழுநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

ஒன்றோடு ஒன்று வந்து பொருந்தும் மாட வீடுகளையும், அழகிய சோலைகளையும், மதியைத் தீண்டும் உயரமாக விளங்கிய கோபுரங்களையும் உடைய நறையூரில் உள்ள சித்தீச்சரத்து இறைவர், நீண்ட சடைமுடியை உடையவர். பூச்சரங்களைக் கொண்ட கொன்றையினது மலரால் தொடுத்த மாலையை அணிந்தவர். ஒளி மிகுந்து தோன்றும் பொன்போன்ற ஒளி உருவம் உடையவர். பவளம் போன்ற அழகிய செந்நிறத்தை உடையவர்.

குறிப்புரை :

இதுவும் அது. நிரை கொள் கொன்றை - சரமாகப் பூத்த கொன்றை. தூண்டு சுடர் - ஒருகாலைக்கொருகால் மிகுந்து தோன்றும் ஒளி. பவளத் தெழிலார் - பவளம் போன்ற அழகினை உடையவர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

குழலார்சடையர் கொக்கினிறகர் கோல நிறமத்தம்
தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோ வணக்கீளர்
எழிலார்நாகம் புலியினுடைமே லிசைத்து விடையேறிக்
கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

அழகு பொருந்திய பாம்பினைப் புலித்தோல் ஆடைமேல் பொருந்தக் கட்டிக் கொண்டு விடைமீது ஏறி, கழலும் சிலம்பும் கால்களில் ஒலிக்க வருபவராகிய நறையூர்ச்சித்தீச்சரத்து இறைவர், மாதொருபாகராதலின் கூந்தலும் சடையும் அமைந்த திருமுடியினர். கொக்கின் இறகை அணிந்தவர். அழகிய நிறம் அமைந்த ஊமத்தம் மலர்சூடித் தழல் போலச் சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திரு நீற்றை அணிந்தவர்.

குறிப்புரை :

அவர் கூந்தலையும் சடையையும் உடையவர், கொக் கின் இறகை அணிந்தவர், கோவண ஆடையர் என்கின்றது. குழல் - கூந்தல். கோலம் - அழகு. தவளம் - வெண்மை. கீள் - கிழித்த ஆடை. புலம்ப - ஒலிக்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

கரையார்கடல்சூ ழிலங்கைமன்னன் கயிலை மலைதன்னை
வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்து மனமொன்றி
உரையார்கீதம் பாடநல்ல வுலப்பி லருள்செய்தார்
திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

அலைகளோடு கூடிய நீர் நிலைகளால் சூழப்பட்ட செல்வவளம் மிக்க நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்துறையும் இறைவர், கரைகளை வந்து பொருந்தும் கடல் நாற்புறமும் சூழ்ந்துள்ள இலங்கை மன்னன் இராவணன், கயிலை மலையை, மலை போன்ற தன் தோளால் பெயர்க்க முற்பட்டபோது, தலைகளைக் கால் விரலால் நெரிக்க, அவன்தன் பிழை உணர்ந்து நல் உரைகளால் இயன்ற பாடல் களைப்பாடிப் போற்ற, அளவிடமுடியாத நல்லருளை வழங்கியவர்.

குறிப்புரை :

இராவணனை அடர்த்து, அவன் சாமகானம் பாட அருள்செய்தவர் இவர் என்கின்றது. வரையார் தோளால் - மலையையொத்த தோள்களால். உலப்பில் - வற்றாத.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

நெடியான்பிரம னேடிக்காணார் நினைப்பார் மனத்தாராய்
அடியாரவரு மருமாமறையு மண்டத் தமரரும்
முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வா வருளென்னச்
செடியார்செந்நெற் றிகழுநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் தேடிக்காண இயலாதவராய் விளங்கிய சிவபெருமான் தம்மை நினைப்பவரின் மனத்தில் விளங்கித்தோன்றுபவராய், அடியவர்களும், அரிய புகழ்மிக்க வேதங்களும், மேலுலகில் வாழும் தேவர்களும், தம் முடியால் வணங்கிக் குணங்களைப் போற்றி `முதல்வா அருள்` என்று வழிபடுமாறு செந்நெற்பயிர்கள் புதர்களாய்ச் செழித்துத் திகழும் திருநறையூர்ச் சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

அடியாரும் அமரரும் `முதல்வா! அருள்` என்று தோத்திரிக்க, இத்தலத்து எழுந்தருளியிருக்கின்றார் என்கின்றது. நெடியான் - திருமால். நேடி - தேடி. பதவிகளில் இருப்பார் தேடிக்காணாத பெருமான், தியானிப்பவர்கள் மனத்தில் இருக்கின்றார் என எளிமை கூறியவாறு. செடி - புதர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

நின்றுண்சமண ரிருந்துண்டேரர் நீண்ட போர்வையார்
ஒன்றுமுணரா வூமர்வாயி லுரைகேட் டுழல்வீர்காள்
கன்றுண்பயப்பா லுண்ணமுலையிற் கபால மயல்பொழியச்
சென்றுண்டார்ந்து சேருநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

நின்றுண்ணும் சமணர்களும், இருந்துண்ணும் புத்தர்களும் சித்தாந்த சைவச்சிறப்பொன்றையும் அறியாத ஊமர்கள். அவர்கள் தம் வாயால் கூறும் உரைகளைக் கேட்டு உழல்பவரே! எளிதில் அருள் நல்கும் சிவபிரான், கன்று விருப்போடு உண்ண, முலைக் காம்பில் சுரந்த பால் பாத்திரத்தில் நிறைந்து அயலினும் பொழிவதைக் கண்டு பால் போதுமென மீண்டும் கன்றை அவிழ்த்து விட அக்கன்றுகள் சென்று உண்டு கொட்டிலை அடையும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் எழுந்தருளி உள்ளார். சென்று தொழுமின்.

குறிப்புரை :

ஒன்றுமறியாத புத்தர் சமணர்களின் உரைகளைக் கேட்டுழலும் மக்களே! இத்தலத்தைச் சேரும் என்கின்றது. கன்று உண் பயப்பால் உண்ண - கன்று உண்ணும் விருப்பால் உண்ண. முலையில் - முலையிலிருந்து. கபாலம் அயல் பொழிய - கறவைப் பாத்திரம் நிறைந்து வழிய. சென்று உண்டு ஆர்ந்து சேரும் - மீளவும் கன்றுபோய் உண்டு நிறைந்து சேரும் என்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ் சுரபுன்னை
செயிலார் பொய்கை சேருநறையூர்ச் சித்தீச் சரத்தாரை
மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்கு சம்பந்தன்
பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவ நாசமே.

பொழிப்புரை :

குயில்கள் வாழும் அழகிய மாதவிகளும், குளிர்ந்த அழகிய சுரபுன்னைகளும் வயல்களில் நீரைச் செலுத்தும் பொய்கைகளும் நிறைந்த நறையூர்ச் சித்தீச்சரத்து இறைவரை மயில்கள் வாழும் சோலைகள் சூழ்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பயில்பவர்க்கு இனியவாய்ப் போற்றிப்பாடிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்களின் பாவம் நாசமாம்.

குறிப்புரை :

இப்பாடல் பாடுவார்க்குப் பாவம் நாசம் ஆம் என் கின்றது. மாதவி - குருக்கத்தி. செயில் - வயலில். இப்பாடல் பயில்வார்க்கு இனிமையாய் இருக்குமென்று இதன் இயல்பு விளக்கியவாறு.
சிற்பி