திருப்பழனம்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார்
நாதாவெனவு நக்காவெனவு நம்பா வெனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.

பொழிப்புரை :

நாதனே எனவும், நக்கனே நம்பனே எனவும் கூறி நின்று தம் திருவடிகளைப்பரவும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் திருப்பழனத்து இறைவர் வேதங்களை ஓதிக் கொண்டு மார்பில் வெண்மையான பூணூலையணிந்து கொண்டு வெண்மையான எருதின் மிசை ஏறிப் பூதகணங்கள் புடைசூழப் புலியின் தோலை அணிந்து பொலிவுபெற வருவார்.

குறிப்புரை :

நாதா நக்கா எனத் தோத்திரிப்பவர்களின் பாவந் தீர்ப்பவர் பழனநகரார் என்கின்றது. நக்கன் - நிர்வாணி. நம்பன் - நம்பப்படத்தக்கவன்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையு முடையார் காலனைப்
புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப் புறந்தாளால்
எண்ணாதுதைத்த வெந்தைபெருமா னிமவான் மகளோடும்
பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழன நகராரே.

பொழிப்புரை :

மது உண்ட வண்டுகள் பண்பாடி ஒலி செய்யும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்பழனநகரில் இமவான் மகளாகிய பார்வதிதேவியோடு எழுந்தருளிய இறைவர் இயல்பாக உள்ள இரண்டு கண்களுக்கு மேலாக நெற்றியில் ஒரு கண்ணையும், சடைமுடிமேல் பிறையையும் உடையவர். காலனை உதைத்து, அவன் உடலில் தோன்றிய புண்களிலிருந்து குருதி வெள்ளம் ஆறாக ஓடுமாறு, அவனை ஒரு பொருளாக மதியாது புறந்தாளால் அவன் அழிய உதைத்த எந்தை பெருமானார் ஆவார்.

குறிப்புரை :

காலனை இரத்த ஆறு பெருக்கெடுத்தோடப் புறந்தா ளால் உதைத்த பெருமான் பழனநகரார் என்கின்றது. இதுவும் ஆபத்சகாயர் என்ற இத்தலத்திறைவனுக் கேற்ற செயலாதல் அறிக. கண்மேல் கண் - நெற்றிக்கண். புண்ணார் உதிரம் - புண்ணை வழியாகக்கொண்டு வெளிப்படுகின்ற இரத்தம். பொன்ற - இறக்க. எண்ணாது - அவனை ஒரு பொருளாக மனத்து எண்ணாது.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல் விழிகட்பேய்
உறையுமயான மிடமாவுடையா ருலகர் தலைமகன்
அறையுமலர்கொண் டடியார்பரவி யாடல் பாடல்செய்
பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழன நகராரே.

பொழிப்புரை :

அடியவர்கள் உயர்ந்தனவாகப் போற்றப்படும் நறு மலர்களைக் கொண்டுவந்து சாத்தி, பரவி, ஆடல் பாடல்களைச் செய்தும் பறை, சங்கு ஆகியவற்றை முழக்கியும், பணிந்தும் இடைவிடாது வழிபடும் திருப்பழனநகர் இறைவர் சடைமேல் பிறையையும், கங்கையையும் உடையவர். பறை வாய் போன்ற வட்டமான, விழிகளையுடைய பேய்கள்வாழும் மயானத்தைத் தமக்கு இடமாகக்கொண்டவர். அனைத்துலக மக்கட்கும் தலைவர்.

குறிப்புரை :

கங்கையும் பிறையும் சூடியவர், மயானத்துறைபவர் பழனத்தார் என்கின்றது. அறையும் - ஒலிக்கின்ற. அடியார் பரவி, பாடல்செய் ஓவாப்பழனம் எனக் கூட்டுக.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

உரமன்னுயர்கோட் டுலறுகூகை யலறு மயானத்தில்
இரவிற்பூதம் பாடவாடி யெழிலா ரலர்மேலைப்
பிரமன்றலையி னறவமேற்ற பெம்மா னெமையாளும்
பரமன்பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே.

பொழிப்புரை :

திருப்பழன நகர் இறைவர் வலிமை பொருந்திய உயரமான மரக்கிளைகளில் அமர்ந்து ஒலி செய்யும் கூகைகள் அலறும் மயானத்தே நள்ளிருளில் பூதங்கள் பாட ஆடியும் அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திரு விளையாடல் புரியும் பெருமானார் எம்மை ஆளும் பரமர் ஆவார். அவர் பகவன், பரமேச்சுவரன் என்பனவாகிய பெயர்களை உடையவர்.

குறிப்புரை :

மயானத்துப் பூதம் பாட, நள்ளிருளில் நடமாடுபவர் இந்நாதர் என்கின்றது. உரம் - வலிமை. உலறு கோட்டு - வற்றிய கிளைகளில். கூகை - கோட்டான். அலர் மேலைப் பிரமன் - தாமரை மலர்மேல் உள்ள பிரமன். நறவம் - கள். தேன்; என்றது உணவு என்னும் பொதுமையில் நின்றது. பரமன் - உயர்ந்தவற்றிற்கெல்லாம் உயர்ந்தவன். பகவன் - ஆறு குணங்களையுடையவன்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

குலவெஞ்சிலையான் மதின்மூன்றெரித்த கொல்லே றுடையண்ணல்
கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற் காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண் டெதிருந்திப்
பலவின்கனிக டிரைமுன்சேர்க்கும் பழன நகராரே.

பொழிப்புரை :

தோகைகளையுடைய மயில்கள், குயில்கள் வாழ் வதும், கடல்போல் பரந்து விரிந்த காவிரி ஆற்றின் அலைகள் மாங்கனிகளையும், பலாவின் கனிகளையும் ஏந்திக் குதித்து உந்தி வந்து கரையிற் சேர்ப்பதுமாகிய திருப்பழனநகர் இறைவர், உயர்ந்த கொடிய மலை வில்லால் அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவர். பகைவரைக் கொல்லும் ஆனேற்றையுடைய அண்ணல் ஆவார்.

குறிப்புரை :

வில்லால் திரிபுரமெரித்த சிவன் பழனத்தான் என் கின்றது. பின்னிரண்டடிகளில் கடல்போன்ற காவிரியின் அலைகள் மாங்கனிகளையும் பலாக்கனிகளையும் எதிர் உந்திச்சேர்க்கும் பழனம் என வளங் கூறப்பெற்றுள்ளது. கடல்போற் காவேரி என்றது வற்றாமையும் பரப்பும்பற்றி. கலவம் - தோகை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

வீளைக்குரலும் விளிச்சங்கொலியும் விழவின் னொலியோவா
மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியா மதிளெய்தார்
ஈளைப்படுகி லிலையார்தெங்கிற் குலையார் வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழன நகராரே.

பொழிப்புரை :

ஈரத்தன்மையுடைய ஆற்றுப்படுகைகளில் வளர்ந்த பசுமையான மட்டைகளோடு கூடிய தென்னை மரங்களின் குலைகளில் விளைந்த தேங்காயும், வாழை மரத்தில் பழுத்த வாழைப்பழங்களும், பாளைகளையுடைய கமுகமரங்களில் பழுத்தபாக்குப் பழங்களும் விழுகின்ற சோலைகளால் சூழப்பட்ட திருப்பழனநகர் இறைவர். அழைக்கும் சீழ்க்கை ஒலியும் அழைக்கும் சங்கொலியும், விழவின் ஆரவாரங்களும் ஓயாத ஊரகத்தே சென்று மூளை பொருந்திய தலையோட்டில் பலியேற்பவர். அடியவர்கள் போற்றி வாழ்த்த முப்புரங்களையும் அழித்தவராவார்.

குறிப்புரை :

கையில் கபாலங்கொண்டு அடியார்கள் வழிபடநின்ற இறைவன் இந்நகரார் என்கின்றது. வீளைக்குரல் - அழைக்கும் குரல். மூளைத்தலை கொண்டு - மூளையோடுகூடிய பிரமகபாலத்தைக் கொண்டு. ஈளைப் படுகு - உலராத சேற்றோடு கூடிய ஆற்றுப்படுகை. படுகையில் தென்னை, வாழை, கமுகு இவற்றின் பழம் விழுகின்ற பழனம் என வளங்கூறியது.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார் திருமேனி
செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்த வகலத்தார்
கையாடலினார் புனலான்மல்கு சடைமேற் பிறையோடும்
பையாடரவ முடனேவைத்தார் பழன நகராரே.

பொழிப்புரை :

திருப்பழனநகர் இறைவர் பொய்கூறாத அடியவர் களால் முறைப்படி ஏத்திப் புகழப்பெறுவர். சிவந்த திருமேனி உடையவர். கரிய கண்டம் உடையவர். முப்புரிநூல் அணிந்த மார்பினை உடையவர். கைகளை வீசி ஆடல் புரிபவர். கங்கை சூடிய சடை முடி மீது பிறையையும், படப்பாம்பையும் ஒருசேர வைத்தவர்.

குறிப்புரை :

உண்மை அடியார்களால் வணங்கி வாழ்த்தப்படுமவர் பழனத்தார் என்கின்றது. பொய்யாமொழியார் - உண்மையே பேசும் அடியார்கள். மிடற்றார் - கழுத்தினையுடையவர். அகலத்தார் - மார்பினையுடையவர். பை - படம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

மஞ்சோங்குயர முடையான்மலையை மாறா யெடுத்தான்றோள்
அஞ்சோடஞ்சு மாறுநான்கு மடர வூன்றினார்
நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான் வம்பாரும்
பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழன நகராரே.

பொழிப்புரை :

மணம்கமழும் புதிய தாமரை மலர்களையுடைய வயல்களால் சூழப்பட்ட திருப்பழனநகர் இறைவர், வானகத்தே விளங்கும் மேகங்கள் அளவு உயர்ந்த தோற்றம் உடைய இராவணன் தனக்கு எதிராகக் கயிலைமலையைப் பெயர்க்க அவனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். நஞ்சை உண்ட கண்டத்தர், சுடலையில் எரிந்த சாம்பலை அணிந்த பெருமானாகிய சிவனார் ஆவார்.

குறிப்புரை :

இராவணனுடைய இருபது தோள்களும் வருந்த ஊன்றியவர் இவர் என்கின்றது. மஞ்சோங்கு உயரம் உடையான் - ஆகாயம் அளாவிய உயரம் உடையவன். மாறாய் - விரோதித்து. அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் - இருபது. அடர - நெருங்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன் சடையார்விண்
முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந் தாவிய
நெடியானீடா மரைமேலயனு நேடிக் காணாத
படியார்பொடியா டகலமுடையார் பழன நகராரே.

பொழிப்புரை :

திருப்பழனநகர் இறைவர் மணங்கமழ்வதும் வண்டுகள் மொய்ப்பதுமான கொன்றை மாலை கமழ்கின்ற சிவந்த சடைமுடியையுடையவர். விண்ணளாவிய திருமுடியோடு இவ்வுலகம் முழுவதையும் மூவடியால் அளந்த நெடியோனாகிய திருமாலும், நீண்ட தண்டின்மேல் வளர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் தேடிக்காணமுடியாத தன்மையை யுடையவர். திருநீற்றுப் பொடியணிந்த மார்பினையுடையவர்.

குறிப்புரை :

உலகத்தை மூவடியால் அளந்த திருமாலும் அயனும் தேடிக்கண்டுபிடிக்கமுடியாத திருநீற்றழகர் இவர் என்கின்றது. கடி - மணம். சுரும்பு - வண்டு. விண்முடியாப்படி - விண்ணை முடிவாகக் கொண்ட பூமி. நெடியான் - திருவிக்கிரமனாகிய திருமால். நேடி - தேடி. காணாதபடி ஆர் பொடி ஆடு அகலமுடையார் எனப் பிரித்து அவர்கள் காணாதவண்ணம் நிறைந்த திருநீற்றோடு அளாவிய மார்பை உடையவர் எனப் பொருள் காண்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக் கஞ்சியை
உண்டாங்கவர்க ளுரைக்குஞ்சிறுசொல் லோரார் பாராட்ட
வண்டாமரையின் மலர்மேனறவ மதுவாய் மிகவுண்டு
பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழன நகராரே.

பொழிப்புரை :

வண்டுகள் வளமையான தாமரை மலர்மேல் விளங்கும் தேனாகிய மதுவை வாயால் மிக உண்டு பண்பொருந்த யாழ்போல் ஒலி செய்யும் கழனிகளையுடைய திருப்பழனநகர் இறைவர், கண்களைக் கூடக் கழுவாமல் முந்திச் சென்று கலவைக் கஞ்சியை உண்பவர்களாகிய சமணர்கள் உரைக்கும் சிறு சொல்லைக்கேளாத அடியவர்கள் பாராட்ட விளங்குபவராவார்.

குறிப்புரை :

கண்களைக்கூடக் கழுவாது கஞ்சிகுடிக்கும் புறச்சமயிகளுடைய சிறுசொல்லை ஓராத அடியார்கள் பாராட்ட இருப்பவன் பழனத்தான் என்கின்றது. கலவைக்கஞ்சி - கலந்த கஞ்சி. வண்டு நறவமது உண்டு பண்கெழும யாழ்செய்யும் பழனம் எனக்கொண்டு கூட்டுக.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந் தன்னுள்
நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞான சம்பந்தன்
பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான் பழனத்தை
வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார் நல்லாரே.

பொழிப்புரை :

மூங்கில் மரங்கள் முத்துக்களோடு ஓங்கி வளர்ந்து மணம் பரப்பும் வேணுபுரநகரில் உள்ள, நாவினால் வல்ல திறன் மிக்க ஞானசம்பந்தன் திருப்பழனப் பெருமான் மீது, பேசற்கினிய பாடல்களாய்த் தன் வாயால் பாடிய இப்பதிகப்பாமாலை பத்தையும், இசையுடன் பாடவல்லவர் நல்லவர் ஆவார்.

குறிப்புரை :

பேசற்கு இனிய இப்பாடல் பத்தையும் வல்லார் நல்லார் என்கின்றது. வேய் முத்து - மூங்கிலில் தோன்றிய முத்து. விரை - மணம்.
சிற்பி