திருச்சண்பைநகர்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

பங்கமேறு மதிசேர்சடையார் விடையார் பலவேதம்
அங்கமாறு மறைநான்கவையு மானார் மீனாரும்
வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கே நுனைமூக்கின்
சங்கமேறி முத்தமீனுஞ் சண்பை நகராரே.

பொழிப்புரை :

மீன்கள் நிறைந்ததும், கப்பல்களை உடையதும் ஆன கடலிடையே வாழும் பரதவர்கள் வீட்டு முற்றங்களில் கூரிய மூக்கினை உடைய சங்குகள் முத்துக்களை ஈனுகின்ற கடற்கரை ஊராகிய சண்பை நகரில் மேவிய இறைவர் கலை குறைந்த பிறைமதி சேர்ந்த சடையினர். விடை ஊர்தியர், பலவாய் விரிந்த நான்கு வேதங்களாகவும் ஆறு அங்கங்களாகவும் விளங்குபவர்.

குறிப்புரை :

கூன்பிறையணிந்த சடையாரும், விடையாரும், வேதம் அங்கம் ஆனாரும் சண்பைநகரார் என்கின்றது. பங்கம் - கூனல்; குற்றம் என்பாரும் உளர். சிவன்சடை சேரத்தகும் பிறைக்குக் குற்றமின்மை தெளிவு. வங்கம் -தோணி. பரதர் - செம்படவர். நுனைமூக்கின் சங்கம் - கூரிய மூக்கினையுடைய சங்குகள். கடல் வாழ்சங்கு பரதர் மனையேறி முத்தமீனும் என்றது பிறவிக் கடலில் ஆழ்வாரும் வினைநீங்கும் காலம்வரின் சண்பைநகர் சார்ந்து பேரின்பம் எய்துவர் என்று குறிப்பித்தவாறு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர் சுடர்க்கமலப்
போதகஞ்சேர் புண்ணியனார் பூத கணநாதர்
மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில் விண்ணார்ந்த
சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பை நகராரே.

பொழிப்புரை :

வானகத்தே திரிந்து வாழும் சாதகப் பறவைகள் உண்ணுமாறு மேன்மை பொருந்திய மேகங்கள் பெய்த மழை நீர் அழகிய குளிர்ந்த சோலைகளில் விளங்கும் தெங்கு கமுகு இவற்றின் பாளைகளில் சேரும் சண்பை நகர் இறைவர், சூது ஆடு கருவி போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். ஒளி பொருந்திய தாமரை மலரைச் சூடிய புண்ணிய வடிவினர். பூதகணங்களின் தலைவர்.

குறிப்புரை :

உமையொருபாகர், செங்கமலப்போதில் வீற்றிருக்கும் புண்ணியனார் சண்பையார் என்கின்றது. சூதகம் சேர்- சூதாடுங் காயை ஒத்த. பங்கர் - பாகத்தையுடையவர். சுடர் கமலப் போது அகஞ்சேர் - ஒளிவிடுகின்ற செந்தாமரையில் எழுந்தருளியுள்ள. மேதகம் - மேன்மை. விண்ணார்ந்த - மேகநீரையுண்ட. சாதகம் -சாதகப்புள். பாளை நீர்சேர் - தென்னை கமுகு முதலியவற்றின் பாளைகளில் தேன் சேர்ந்த.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீல கண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே.

பொழிப்புரை :

எல்லோரும் புகழத்தாரா அன்னம் அன்றில் முதலிய பறவைகள் தம் திருவடிகளை வணங்கிப் போற்றுமாறு தகரம் புன்னை தாழை முதலிய மரங்களின் பொழில்கள் சூழ்ந்த சண்பைநகரில் விளங்கும் இறைவர், மகரமீன் வடிவு எழுதப்பட்டு ஆடும் கொடியை உடைய மன்மதனது உடலை நீங்குமாறு செய்து, அழகில் தன்னொப்பில்லாத அவனுடைய மனைவி வேண்ட அவள் கண்களுக்கு மட்டும் மன்மதனைப் புலனாகுமாறு அருள் செய்த நீலகண்டர் ஆவார்.

குறிப்புரை :

மன்மதனை எரித்து, அவன் மனைவியாகிய இரதிக்கு அருள் செய்தவன் சண்பையான் என்கின்றது. மகரத்து ஆடு கொடி யோன் - மகரமீன் எழுதிய வெற்றி பொருந்திய கொடியுடையோன். நிகர் ஒப்பு: ஒருபொருட்பன்மொழி. தேவி என்றது இரதியை. அவளுக்கு மட்டும் மன்மதனை எழுப்பித் தந்ததை உணர்த்துவது. தாரா - சிறுநாரை. பகன்றில் - அன்றில். தகரப்புன்னை - தகரமும் புன்னையும்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ் சதுவுண்ட
தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர் திகழ்சுத்திக்
கையர்கட்டங் கத்தர்கரியி னுரியர் காதலாற்
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பை நகராரே.

பொழிப்புரை :

அன்போடு சைவர்களும் பாசுபதர்களும் வழிபடும் சண்பை நகர் இறைவர். வலிமை செறிந்த அசுரர்களும் தேவர்களும் கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சு முழுவதையும் உண்டருளிய தெய்வமாவார். அவர் சிவந்த திருமேனி உடையவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். சுத்தியைக் கொண்டகையினர். மழுவினர் - யானைத் தோலைப் போர்த்தியவர்.

குறிப்புரை :

நஞ்சமுது செய்த தெய்வர், செய்யர், கண்டங்கரியர், சுத்திக்கையர், மழுப்படையர் சண்பைநகரார் என அடையாளம் அறிவிக்கின்றது. கட்டங்கம் - மழு. சுத்தி - திருநீறு கொடுப்பதற்குத் தலையோட்டினால் இப்பிவடிவமாகச் செய்யப்பட்டது.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுத மருள்செய்த
குலமார்கயிலைக் குன்றதுடைய கொல்லை யெருதேறி
நலமார்வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை
சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பை நகராரே.

பொழிப்புரை :

மக்கட்கு நன்மை தரும் மரமாகிய தென்னையிலிருந்து வெண்மை நிறத்தோடு வெளிவரும் மணம் மிக்க பாளை கபடம் மிக்க யானையின் மருப்புப் போலத் தோன்றும் சோலைவளம் மிக்க சண்பைநகர் இறைவர் மரக்கலங்கள் நிறைந்த கடலிடையே தோன்றிய விடத்தை உண்டு அமரர்கட்கு அமுதம் அருள் செய்தவர். மலைக் குலங்களில் மேம்பட்ட கயிலை மலைக்கு உரியவர். முல்லை நிலத்து ஆனேற்றை ஊர்ந்து வருபவர்.

குறிப்புரை :

தான் நஞ்சுண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்தவர் சண்பையார் என்கின்றது. கொல்லை எருது - முல்லை நிலத்து இடபம். நாளிகேரம் - தென்னை. நாளிகேரம் வெள்ளை விரியா நறும்பாளை கரியின் மருப்புக்காட்டும் எனக்கூட்டுக. கரியின் மருப்பு - யானைக் கொம்பு. சலம் - வஞ்சனை. யானைக் கபடம் என்பது வழக்காதலின் சலமார்யானை என்றார்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

மாகரஞ்சே ரத்தியின்றோல் போர்த்து மெய்ம்மாலான
சூகரஞ்சே ரெயிறுபூண்ட சோதியன் மேதக்க
ஆகரஞ்சே ரிப்பிமுத்தை யந்தண் வயலுக்கே
சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பை நகராரே.

பொழிப்புரை :

கடலில் வாழும் சிப்பிகள் தந்த முத்துக்களை அழகியதாய்க் குளிர்ந்த வயல்களுக்குக் கடல் அலைகள் உந்தி வந்து சேர்க்கும் சண்பை நகர் இறைவன் நீண்ட கையினை உடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துள்ள திருமேனியில் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான பன்றியின் பல்லை அணிகலனாகப் பூண்ட ஒளி வடிவினன்.

குறிப்புரை :

யானைத் தோலைப் போர்த்துப் பன்றிக் கொம்பை அணிந்த சோதியான் சண்பையான் என்கின்றது, மா கரம் - பெரிய கை. அத்தி - யானை. சூகரம் - பன்றி. ஆகரம் - கடல். திரைகள் முத்தை வயலுக்கே உந்தும் சண்பை என்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

* * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * *

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

இருளைப்புரையு நிறத்திலரக்கன் றனையீ டழிவித்து
அருளைச்செய்யு மம்மானேரா ரந்தண் கந்தத்தின்
மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார் திரைக்கையாற்
றரளத்தோடு பவளமீனுஞ் சண்பை நகராரே.

பொழிப்புரை :

அழகிய மணத்தோடு மருள் என்னும் பண்ணை வண்டுகள் பாட, கடல் மலை போன்ற அலைக் கைகளால் முத்துக்களையும் பவளங்களையும் கொணர்ந்து சேர்க்கும் சண்பைநகர் இறைவன் இருள் போன்ற கரியநிறத்தினன் ஆகிய இராவணனின் வீரத்தை அழித்து அவன் உணர்ந்து வருந்த அருள் செய்த தலைவன்.

குறிப்புரை :

இராவணனை ஈடழித்து, ஈடேற்றும் அம்மான் இவர் என்கின்றது. ஈடு - பெருமை. ஏரார் - அழகிய. மருளைச்சுரும்பு பாடி - மருள் என்னும் பண்ணை வண்டு பாடி. அளக்கர் - கடல். வரை ஆர் திரை - மலையொத்த அலை. தரளம் - முத்து.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

மண்டான்முழுது முண்டமாலு மலர்மிசை மேலயனும்
எண்தானறியா வண்ணநின்ற விறைவன் மறையோதி
தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத் தாதின்மேற்
பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பை நகராரே.

பொழிப்புரை :

தண்டிலே மலர்ந்த குவளை மலர்களின் தேனை உண்டு தாமரை மலர்களில் நிறைந்துள்ள மகரந்தங்களில் தங்கி வண்டுகள் பண்பாடும் சண்பை நகர் இறைவன் உலகங்கள் முழுவதையும் உண்ட திருமால் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகன் ஆகியோர் மனத்தாலும் அறிய ஒண்ணாதவாறு நின்றவன் வேதங்களை ஓதி வெளிப்படுத்தியவன்.

குறிப்புரை :

மண்ணுண்ட மாலும் மலரோனும் அறியாவண்ணம் நின்ற இறையோன் சண்பைநகரார் என்கின்றது. எண்தான் அறியா - எள்ளளவும் அறியாத. வண்டு குவளைத் தேனை அருந்தித் தாமரையின் மகரந்தத்தை உண்டு பாடும் சண்பைநகர் என்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும்
நீதியாகக் கொண்டங்கருளு நிமல னிருநான்கின்
மாதிசித்தர் மாமறையின் மன்னிய தொன்னூலர்
சாதிகீத வர்த்தமானர் சண்பை நகராரே.

பொழிப்புரை :

அணிமா முதலிய எண்வகைச் சித்திகளில் வல்ல சித்தர், பழமையான நூல்களாகிய வேதப் பொருள்களில் நிலைபெற்று நிற்பவர், சகாரம் முதலாகப் பாடப்படும் பாட்டில் நிலைத்திருப்பவர் ஆகிய சண்பைநகரார், புத்தர்களும் சமணர்களும் புகழ் அல்லவற்றைக் கூறினாலும் அவற்றைப் புகழ் மொழிகளாகக் கொண்டருளும் நிமலர்.

குறிப்புரை :

புறச் சமயிகள் இகழ்ந்து பேசினாலும் அவற்றைப் புகழாகக் கொண்டருளும் சண்பைநகரார் இவர் என்கின்றது. போதியார் - புத்தர். பிண்டியார் - சமணர். மாதி சித்தர் - அணிமாதி சித்திகளை உடையவர். சாதி கீத வர்த்தமானர் - சகாரம் முதலாகப் பாடப்படுகின்ற பாட்டில் நிலைத்திருப்பவர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

வந்தியோடு பூசையல்லாப் போழ்தின் மறைபேசிச்
சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பை நகர்மேய
அந்திவண்ணன் றன்னையழகார் ஞானசம் பந்தன்சொற்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே.

பொழிப்புரை :

அடியவர்கள் வந்தனையோடு பூசை செய்யும் காலங்கள் அல்லாத ஏனைய பொழுதுகளில் வேதப் பொருள்களைப் பேசியும், மூன்று சந்தியா காலங்களிலும் தியானம் சமாதி நிலையில் நின்று வழிபடும் சண்பைநகர்மேய, மாலைக்காலம் போன்ற செம்மேனியனாகிய இறைவனை, ஞானசம்பந்தன் அருளிய அழகிய இப்பதிகப் பொருளை மனத்தில் நிறுத்திப் பாடவல்லவர் சிவகதி சேர்வர்.

குறிப்புரை :

சண்பைநகர்ச் சிவபெருமானைப் பற்றிச் சொன்ன ஞானசம்பந்தனது சொல்லைத் தியானத்தோடு பாடவல்லார்கள் சிவகதி சேர்வர் என்கின்றது. வந்தி - வந்தித்தல். வந்தி - அடியவருடைய வந்தித்தல், முதல் நிலைத்தொழிற்பெயர். மறை - இரகசியம். சந்தி - காலை மாலை. இறைவன் பூசைக்காலமல்லாத காலங்களில் அம்மையோடு, வேதவிசாரணை செய்து சந்தியாகாலங்களில் சமாதி செய்கின்றார் என்ற அநுபவம் அறிவிக்கப்படுகிறது.
சிற்பி