திருப்பிரமபுரம்


பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொழிப்புரை :

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை :

தோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தகள்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார். `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது./n மூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி-தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வசங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும்./n உள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு./n இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள்./n ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு./n தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது.
குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார்./n `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொழிப்புரை :

வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசைவற்றிய பிரமகபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்தகள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!

குறிப்புரை :

இதனால் இறைவன் அணிகளைக் கொண்டு அடையாளங்கள் அறிவிக்கப் பெறுகின்றன. முற்றல் ஆமை - ஆதி கமடமாதலின் வயது முதிர்ந்த ஆமை. ஆமை என்றது ஈண்டு அதன் ஓட்டினை. இளநாகம் என்றது இறைவன் திருமேனியையிடமாகக் கொண்ட பாம்பிற்கு நரை திரையில்லையாதலின் என்றும் இளமையழியாதநாகம் என்பதைக் குறிப்பிக்க./n ஏனம் - பன்றி; ஆதிவராகம். வற்றல் ஓடு - சதைவற்றிய மண்டையோடு. கலன் - பிச்சையேற்கும் பாத்திரம். பலி - பிச்சை, பெரியார்க்கிலக்கணம் கற்றலும் கேட்டலுமே என்பது. கற்றல் - உலக நூல்களை ஓதித் தருக்குவதன்று, இறைவன் புகழையே கற்று அடங்கல். கேட்டலும் அங்ஙனமே. இறைவன் புகழையன்றி வேறொன்றையுங்கல்லாத - கேளாத பெரியோர்களாலேயே இறைவன் தொழற்குரியன் என அதிகாரிகளையறிவித்தவாறு. `கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்` `கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை` என்பன ஒப்புநோக்கற்குரியன. `கற்றல் கேட்டலுடையார் பெரியார்` எனவே, உபலக்கணத்தால் சிந்தித்தல் தெளிதல் நிட்டைகூடல் முதலியனவும் கொள்ளப்பெறும். `கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை, கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்` என்பது சிவஞானசித்தியார். தமக்கு அருள் செய்தவண்ணமே தொழுதேத்தும் பெரியோர்க்கெல்லாம் அருள் வழங்கப் பெருமான் இடபத்தை ஊர்ந்தே இருக்கிறார் என்பதாம். பெற்றம் - இடபம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொழிப்புரை :

கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இஃது என்ற புகழைப்பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!

குறிப்புரை :

நீர் - கங்கை, நிமிர்புன்சடை - நிறைந்த புல்லிய சடை, ஓர் நிலா வெண்மதி - ஒரு கலைப்பிறை, ஏர் - அழகு. வெள்வளை - சங்குவளை. சோர - நழுவ, அவன் மதியைச் சூடியிருத்தலின் விரகமிக்கு உடலிளைத்து வளைசோர்ந்தது என்பதாம். ஊர் பரந்த உலகு - ஊர்கள் மிகுந்த உலகு. மகாப்பிரளய காலத்து உலகமே அழிக்கப் பெற்றபோது, இத்தலம் மட்டும் அழியாது இருத்தலின் உலகிற்கே ஒருவித்தாக இருக்கின்றது சீகாழி என்பது. பேர் - புகழ்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொழிப்புரை :

வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல், விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த வரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை :

விண்மகிழ்ந்தமதில் - ஆகாயத்தில் பறத்தலை விரும்பிய மதில். இவை திரிபுராரிகளின் பொன், வெள்ளி, இரும்பாலான கோட்டை. எய்தது - மேருவை வில்லாக்கி, வாசுகியை நாணாக்கித்துளைத்தது. உள்மகிழ்ந்து - மனமகிழ்ந்து, தேரிய - ஆராய, செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மண் மகிழ்ந்த அரவம் - புற்றினை விரும்பும் பாம்பு, இறைவன் அணிந்த பாம்பு புற்றில் வாழாததாயினும் சாதி பற்றிக் கூறப்பட்டது. அரவம் கொன்றை மலிந்த மார்பு-அச்சுறுத்தும் விஷம் பொருந்தியபாம்பையும், மணமும் மென்மையும் உடைய கொன்றையையும் அணிந்த மார்பு, என்றது வேண்டுதல் வேண்டாமையைக் காட்டும் குறிப்பாகும். பெண் - உமாதேவியார். பலிதேரவந்தார் எனதுள்ளம் கவர்ந்தார் என்றது என்னுடைய பரிபாகம் இருந்தபடியை அறிந்து ஒன்று செய்வார் போல வந்து உள்ளமாகிய ஆன்மாவை மலமகற்றித் தமதாக்கினார் என்பதை விளக்கியவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொழிப்புரை :

ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.

குறிப்புரை :

ஒருமை - ஒரு திருமேனியிலேயே, பெண்மை உடையன் - பெண் உருவத்தை உடையன்; என்றதால் பெண்ணுருவும் ஆணுருவுமாகிய இருமையும் உடையன் என்பது குறித்தவாறு. பெண்மை - பெண்ணுரு. உடையன் என்றதிலுள்ள விகுதியால் ஆணுருவாயினும் பெண்மை உடைமையும், சிவம் உடையானும் ஆம் என்றவாறு. சடையன் - பெண்மையுருவில் பின்னிய சடையும் ஆணுருவில் அமைந்த சடையுமாயிருத்தலின் இரண்டிற்குமேற்பச்சடையன் என்றார். உரைசெய்ய - தோழியர் தலைவன் இயல்பைச் சொல்ல. உரையின் வாயிலாக உள்ளத்தில் புகுந்து விரும்பி உள்ளத்தைத் தமதாக்கிக்கொண்டான் என்பார் `அமர்ந்து எனது உள்ளம் கவர்கள்வன்` என்றார். `ஓர் காலம் கடல் கொள்ள மிதந்த தலம் இது என்னும் பெருமைபெற்ற பிரமபுரம்` என இயைத்துப்பொருள்காண்க. ஓர்காலம் - சர்வசங்கார காலம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொழிப்புரை :

ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டும் வந்து எனது முன் கையில் உள்ள ஓரினமான வெள்ளிய வளையல்கள் கழன்று விழ என்னை மெலிவித்து உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இருள்செறிந்த, மணமுடைய பொழில்களிடத்தும் நீண்டு வளர்ந்த மரங்களை உடைய சோலைகளிடத்தும் நிலவைப் பொழியும் பிறையைச் சூடியவனாய்ப் பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை :

பாடுவது வேதம், செய்வது கள்ளம் என்ற நிலையில் பெருமான் இருக்கின்றார் என்பதைக் காட்டுவன முன் இரண்டு அடி. ஒலி கலந்த மறை பாடலோடு எனக்கூட்டி ஒலிவடிவாய வேதத்தைப் பாடுதலை உடையவர் எனப் பொருள் காண்க./n மழு - தவறிழைத்தாரைத் தண்டித்தற்காக ஏந்திய சங்கார காரணமாகிய தீப்பிழம்பு; ஆயுதமுமாம். இறை - மணிக்கட்டு. வெள்வளை-சங்க வளையல்கள். முன்கையில் செறிந்து கலந்திருந்த சங்க வளையல்கள் சோர்ந்தன என்பதால், `உடம்புநனி சுருங்கல்` என்னும் மெய்ப்பாடு உணர்த்தியவாறு. கறை - இருள். கடி - மணம். பொழில் - நந்தனவனத்தும், சோலை - தானே வளர்ந்த சோலைகளிடத்தும். கதிர் சிந்த என்றதால் நிலவொளி அங்குமிங்குமாகச் சிதறியிருந்தமை அறியப்படும். கதிர் சிந்து அப்பிறை எனப்பிரிக்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த
உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்
கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொழிப்புரை :

சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக்கரத்தில் அனலை உடையவனும், ஆடையின் மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித்திரிந்து வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கடலைத் தழுவிய உப்பங்கழிகளால் சூழப் பெற்றதும், குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடையதும், தம்முடைய பெடைகளை முயங்கித் திரியும் அழகிய சிறகுகளோடு கூடிய அன்னங்களை உடையதும், ஆகிய பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை :

சடைமுயங்கு புனலன் - சடையில் கலந்திருக்கின்ற கங்கையை உடையவன். அனலன்-திருக்கரத்தில் அனலை உடையவன், உடைமுயங்கும் அரவு - ஆடையின் மேல் இறுகக்கட்டிய கச்சையாகிய பாம்பு. சதிர்வு - பெருமை. உழிதந்து - திரிந்து. ஊடத்தக்க ஒரு பெண்ணையும், அஞ்சத்தக்க எரி அரவு முதலியவற்றையும் அணிந்து திரிபவராயிருந்தும் எனது உள்ளத்தைக் கவர்ந்தார் என்றது, அவர்க்குள்ள பேரழகின் திறத்தையும், கருணையையும், எல்லாவுயிரையும் பகை நீக்கியாளும் வன்மையையும் வியந்தவாறு. கழி - உப்பங்கழி. கானல் - கடற்கரைச் சோலை. பிரமபுரத்தில் சடைமுயங்கு புனலனாய் உள்ளம் கவர்கின்ற தன்மையால் போகியாயிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிய, சிறகன்னங்களும் தத்தம் பெடைகளை முயங்குகின்றன எனல், `அவனன்றி ஓர் அணுவும் அசையாது` என்பதை அறிவித்தவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொழிப்புரை :

கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெருவீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம் கவர்கள்வன், துயர் விளங்கும் இவ்வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை :

வியர் இலங்கு தோள் - வியர்வை விளங்குகின்ற தோள். வியர் அகலம் எனவும் பொருள் கொள்ளலாம். இலங்கை அரையன் - இராவணன். அரையன் தோள்களை வலிசெற்று என மாறிக்கூட்டுக. துயர் இலங்கும் உலகு - துன்பம் விளங்குகின்ற கன்மபூமி. இதனைத் துன்ப உலகு என்றது வினைவயத்தான் மாறித் துய்க்கப்படும் இன்ப துன்பங்களுள் இன்பக்களிப்பைக் காட்டிலும் துன்பக் கலக்கம் மிகுந்து தோன்றலின். பல ஊழி-பிரம ஊழி முதலிய பல ஊழிகள். இறைவன் பல ஊழிகளை விளைவிப்பது ஆன்மாக்களின் மலம் பரிபாக மாதற்பொருட்டு. பெயர் - புகழ்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொழிப்புரை :

திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர்கள்வனாய் விளங்குபவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை :

மாலொடு தண் தாமரையானும் தாள் நுதல் செய்து இறை காணிய நீணுதல் செய்து நிமிர்ந்தான் எனக் கூட்டுக. மால் தாள் காணிய நிமிர்ந்தான் எனவும், தாமரையான் நுதல் காணிய நிமிர்ந்தான் எனவும் தனித்தனிக் கூட்டிப் பொருள் காண்க. தாள் நுதல் செய்து - தாளையும் நுதலையும் தமது குறிக்கோளாகக் கருதி. இறை காணிய - தம்முள் யார் இறை என்பதைக் காணும் பொருட்டு; இறைவனைக் காணும் பொருட்டு என்பாரும் உளர். நீணுதல் - மால் பெரிய பன்றியாய் நீளுதலும் பிரமன் அன்னமாய் வானத்தில் நீளுதலுமாகிய இரண்டின் செயல்கள். ஒழிய - செயலற்றுப் போக. நிமிர்ந்தான் -அண்ணாமலையாய் உயர்ந்தவன். சென்று பற்றுவேன் என்று செருக்கிய தேவர்க்கு அப்பாற்பட்டவன், செயலழிந்திருந்த தலைவியின் சிந்தையை வலியவந்து கவர்கின்றான் என்பது இறைவனது எளிமை தோன்ற நின்றது. மகளிர் முதலாகிய வையத்தவர் ஏத்த மேவிய பெம்மான் என்றது இவளும் வையத்தவருள் ஒருத்தியாயிருக்க இங்ஙனம் கூறினாள், ஏனைய மகளிர்க்கு இல்லாததாகிய, இறைவனே வலியவந்து உள்ளங்கவரும்பேறு தனக்குக் கிட்டியமையைத் தெரிவிக்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொழிப்புரை :

புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித்திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னுமாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை :

பொறி இல் சமண் - அறிவற்ற சமணர்கள். புறங்கூற - நேர் நின்று சொல்லமாட்டாமையாலே மறைவான இடத்தில் எளிமையாய்ச் சொல்ல. நெறி நில்லா - வரம்பில் நில்லாதனவாக. ஒத்த சொல்ல - ஒரே கருத்தை உரைக்க. புறச்சமயத்தார் ஒருமித்துப் புறங்கூறவும் பிச்சையேற்று உள்ளங்கவர்கின்ற கள்வனாதலின் யானைத்தோலைப் போர்த்து மாயம் செய்தார் என்று இயைபில் பொருள் தோன்ற வைத்தார்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.

பொழிப்புரை :

அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும். ஊழ்வினை தீர்வதற்குரிய மார்க்கங்கள் பல இருப்பினும், இத்திருப்பதிகத்தை ஓதுதலே எளிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புரை :

அருநெறிய மறைவல்ல முனி - அருமையான நெறிகளை வகுக்கும் மறைகளில் வல்ல முனிவனாகிய பிரமன். அலர்மேய அகன் பொய்கை பிரமாபுரம் மேவிய பெருநெறிய பெம்மான் இவன்றன்னை - தாமரைகள் பொருந்திய அகன்ற பொய்கையை உடைய பிரமாபுரத்தில் விரும்பியிருந்த முத்திநெறி சேர்க்கும் முதல்வனை. ஒருநெறிய மனம் - ஒன்றுபட்ட மனம். மனம் ஐந்து வழியாகவும் அறிந்தவற்றை வழியடைத்தகாலத்தும் சென்று பற்றித் தன்மயமாயிருப்பதொன்றாகலின் அங்ஙனம் செல்லாது ஒருங்கிய மனத்தை ஈண்டு விதந்தார்கள். வைத்து - பிரியாதே பதித்து. திரு நெறியதமிழ் - சிவ நெறியாகிய அருநெறியையுடைய தமிழ். தொல் வினை - பழமையாகிய வினை; என்றது ஆகாமிய சஞ்சிதங்களையும், இனி வரக்கடவ பிராரத்த சேடத்தையும். முன்னைய தீரினும் பிராரத்த சேடம் நுகராதொழியாதாகவும் இங்ஙனங் கூறியது, யான் நுகர்கிறேன் என்ற இன்னலுமின்றிக் கழிக்கப்படுதலை. இதனால் பழவினை நீக்கமே இப்பதிகப் பயன் என்று உணர்த்தியவாறு.
குருவருள்: வேதம் உலகினருக்கு வேண்டிய பொது அறங்கள் பலவற்றைச் சொல்வது ஆதலின், அதை இங்கு அருநெறிய மறை என்றும், ஆகமம் சத்திநிபாதர்க்குரிய சைவ நுட்பங்களைச் சொல்வது ஆதலின், அதனை இங்கு அவற்றின் மேம்பட்டது எனும் பொருளில் பெருநெறி என்றும் கூறினார். ஒருநெறி அல்லது ஒரு சமயம் என்றால் அஃது உலகினர் அனைவருக்கும் பயன்தரத் தக்கதாய் இருத்தல் வேண்டும். அதுபற்றியே ஞானசம்பந்தர் உலகினருக்கு அருநெறிப் பயனும் சத்திநிபாதர்க்கு பெருநெறிப்பயனும் உணர்த்தினார். ஆயினும் அருநெறியும் பெருநெறியும் ஒருநெறியே என்பதையும் அதுவே திருநெறி என்பதையும் உணர்த்தியருளினார். இக்கருத்தைத் திருமந்திரமும்
திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.
என உணர்த்துவது காண்க. பீடுடைத்தேசிகன் செயல் திருநோக்கால் ஊழ்வினையைப் போக்குதல் எனவே தேசிகன் பேரருள் தொல்வினை தீர்த்தல் ஆயிற்று. `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத் தேசிகன் பேரருளாகும்` என்பது அபியுக்தர் வாக்கு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

குறிகலந்தவிசை பாடலினான்நசை யாலிவ்வுலகெல்லாம்
நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறிப்பலிபேணி
முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடமொய்ம்மலரின்
பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புகலூரே.

பொழிப்புரை :

சுரத் தானங்களைக் குறிக்கும் இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவன். உயிர்கள் மீது கொண்ட பெரு விருப்பால் இவ்வுலகம் முழுவதும் வாழும் அவ்வுயிர்கள் தம்மை உணரும் நெறிகளை வகுத்து அவற்றுள் கலந்து நிற்பவன். எருதின் மிசை ஏறி வந்து மக்கள் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவன், இடையில் மான் தோலாடையை உடுத்துபவன். அவன் விரும்பி உறையும் இடம் செறிந்த மலர்கள் மீது புள்ளிகளை உடைய வண்டுகள் மொய்த்துத் தேனுண்ணும் வானளாவிய பொழில் சூழ்ந்த புகலூராகும்.

குறிப்புரை :

குறி கலந்த இசை - குறித்த சுரத் தானங்களோடு ஒன்றிய இசை, பாடலினான் - இறைவன் , மனக் குறிப்போடு ஒன்றிய இசையமைந்த பாடலினான் என்பாரும் உளர் . நசை - விருப்பம். நெறி - முறை, அஃதாவது அவ்வவ்வான்மாக்களின் பருவநிலைக்கு ஏற்ப, விறகில் தீயாகவும் பாலின் நெய்யாகவும் மணியுட் சோதியாகவும் கலந்து நிற்கும் முறை, பலி - பிச்சை; முறி கலந்தது ஒரு தோல் - கொன்ற புலியின் தோலை. பொறி - வண்டு. உடையான் இடம் புகலூர் என இயைக்க. இது பின்வரும் பாடற்கும் இயையும்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொருபாகம்
மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரியாடை
மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ்சோலைப்
போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புகலூரே.

பொழிப்புரை :

காதில் விளங்கும் குழையை அணிந்தவன். பூணூல் அணிந்த அழகிய மார்பினன். இடப்பாகமாக உமையம்மை விளங்கும் திருமேனியன். யானையினது தோலை உரித்து மேல் ஆடையாக அணிந்தவன். அத்தகையோன் இமையவர் தொழமேவும் இடம், சோலைகளில் தேனுண்ணும் விருப்பினால் வரிவண்டுகள் இசைபாடும் புகலூராகும்.

குறிப்புரை :

ஒரு பாகம் மாது இலங்கும் திருமேனியன் என்பதால், காதிலங்கு குழையன் என்பதற்குப் பெண்பாதியில் காதில் விளங்கும் குழையை உடையவன் என்றும், ஆண்பாதியில் தளிரை உடையவன் என்றும் பொருள் கொள்க. குழை - பனந்தோட்டால் செய்யப்படும் மகளிர் காதணி; ஆடவர் காதில் செருகிக் கொள்ளும் மணத்தழை; இதனை வடநூலார் `கர் வதம்சம்` என்பர். இழைசேர் திருமார்பன் - பூணூல் சேர்ந்த, இழைத்ததங்க அணிகள் சேர்ந்த மார்பினையுடையவன். கருமான் -`கிருஷ்ண மிருகம்` என்னும் மான், உரி - தோல், இமையோர் - தேவர்கள்; சோலைப்போதில் அங்கு நசையால் வரிவண்டு பாடும் எனப்பிரித்துப் பொருள்கொள்க. அங்கு - அசை; போது இலங்கு எனப் பிரித்துக் கோடலும் ஒன்று .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

பண்ணிலாவும்மறை பாடலினான்இறை சேரும்வளையங்கைப்
பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழல் என்றுந்தொழுதேத்த
உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவன்னிடமென்பர்
மண்ணிலாவும்மடி யார்குடிமைத்தொழின் மல்கும்புகலூரே.

பொழிப்புரை :

இசையமைதி விளங்கும் வேத கீதங்களைப் பாடுபவன் - முன்கைகளில் வளையல்கள் விளங்கும் அழகிய கைகளை உடைய உமையம்மையைத் தனது தேவியாக உடையவன். தன் திருவடிகளை என்றும் தொழுது ஏத்தும் பெரியவர்களின் உள்ளத்தே விளங்குவதோடு அவர்களின் அடிமனத்தில் என்றும் நீங்காதிருப்பவன். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் நிலவுலகில் வாழும் அடியவர்கள் குடும்பத்துடன் வந்து பணி செய்யும் புகலூராகும்.

குறிப்புரை :

பண் நிலாவும் மறை - இசை தாமே விளங்கும் வேதம். இறை - முன்கை, பெண் - உமாதேவி, பெரியார் - சிவஞானத்தில் பெரியவர்கள்; உள்நிலாவி அவர் சிந்தை நீங்கா ஒருவன் எனப்பிரிக்க. குடிமைத்தொழில் - வேளாண்மைத் தொழில்; மிராசுக்குக் குடித்தனம் என்ற வழக்குண்மை காண்க. பாடலின், உடையான், ஒருவன் இடம் புகலூரே என்பர் எனக் கூட்டுக.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

நீரின்மல்குசடை யன்விடையன்அடை யார்தம்மரண்மூன்றுஞ்
சீரின்மல்குமலை யேசிலையாகமு னிந்தானுலகுய்யக்
காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிடமென்பர்
ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புகலூரே.

பொழிப்புரை :

கங்கை நீரால் நிறைவுற்ற சடைமுடியை உடையவன். விடையூர்தியன். முப்புரங்களையும் சிறப்புமிக்க மேருமலையை வில்லாகக் கொண்டு முனிந்தவன். உலக உயிர்கள் உய்யக் கருநிறமுடைய கடலிடையே தோன்றிய நஞ்சை அமுதமாக உண்ட கடவுள். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் ஒழுக்கத்தால் உயர்ந்த மக்கள் வாழ்ந்து சிறப்பெய்தும் புகலூராகும்.

குறிப்புரை :

அடையார் - (தேவர்க்குப்) பகைவர். மலையைச் சிலையாக முனிந்தான் என்றது அவன் முனிவொன்றுமே பகை தணித்து ஆட்கொண்டது; வில்லான மலை அன்று என்பதாம், காரின் மல்கும் - கருமை நிறத்தில் மிகுந்த, ஊரின் மல்கிவளர் செம்மையினால் உயர்வெய்தும் புகலூர் - ஊர்களில் ஒருகாலைக்கு ஒருகால் நிறைந்து வளரும் ஒழுக்கத்தாலுயர்ந்த புகலூர்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடியார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணிவாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள்பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாது பொருந்தும்புகலூரே.

பொழிப்புரை :

சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர். தம்மை வந்தடையும் அடியவர்களைத் தாக்க வரும் வினைகளை நீக்குபவர். என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர். அவர் விரும்பி உறையும் இடம், அருளையே விரும்பிப் பொய்யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர் என்பர்.

குறிப்புரை :

அடியார்மேல் நின்ற வினையைப் பாற்றுவார். பைய - மெதுவாக, நோயை விரைந்து நீக்கினால் அதனால் விளையும் தீமை பெரிதாய், நோயின் பெருமையும், மருத்துவன் உழைப்பும் அறியப்படாதவாறுபோல, வினைகளை விரைந்து நீக்கின் விளையுங்கேடு பலவாமாகலின் பையப் பாற்றுவார் என்றார். பாற்றுதல் - சிதறிப் போகச் செய்தல். பணிவாரை - அடியார்கள் இடத்தில்; வேற்றுமை மயக்கம், மெய்ய - உண்மையாக, பொய் - அஞ்ஞானம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில்கானில்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிடமென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந்தெங்கும்
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புகலூரே.

பொழிப்புரை :

இரண்டு திருவடிகளிலும், விளங்கும் வீரக் கழல் சிலம்பு ஆகியன ஒலிக்கவும், குழல் முதலிய இசைக்கருவிகள் முழங்கவும், குள்ளமான பூகணங்கள் போற்றவும், பலகாலும் பழகிய இடமாக இடுகாட்டில் முற்றழிப்பு நடனம் புரியும் இறைவனுடைய இடம், திருவிழாக்களின் ஓசையும், அடியவர் மனமகிழ்வோடு எங்கும் முழக்கும் முழவோசையும் கடலோசையைத் தளரச் செய்யும் ஒலியைத் தரும் புகலூர் என்பர்.

குறிப்புரை :

கழலின் ஒசை - ஆண் பகுதியாகிய வலத்தாளில் அணிந்த வீரக்கழலின் ஓசை; சிலம்பின் ஓசை - பெண் பகுதியாகிய இடத்தாளில் அணிந்த சிலம்பின் ஓசை. அன்றிச் சிவபெருமானது கழலின் ஓசையும் மாறாடிய மகாகாளியின் சிலம்பின் ஓசையும் என்பாருமுளர். குனித்தார் - ஆடியவர், குறள்பாரிடம் - குள்ளமான பூதங்கள், மிடைவுற்று - நெருங்கி, முந்நீர் - கடல்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதிசூடி
உள்ளமார்ந்தவடி யார்தொழுதேத்த வுகக்கும்அருள்தந்தெம்
கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுள்ளிடமென்பர்
புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புகலூரே.

பொழிப்புரை :

கங்கைநீர் அடங்கி விளங்கும் செஞ்சடைமேல் விளக்கமான பிறைமதியைச்சூடி, தம்மிடம் மனம் ஒன்றிய அடியவர் தொழுது ஏத்த அவர்கள் மனம் மகிழும் அருளைப் புரிந்து என்னைப் பற்றிய வினையையும் பழியையும் தீர்த்தருளிய கடவுள் உறையும் இடம், மீன் கொத்தி முதலிய பறவை இனங்கள் மீன்களைக் கவர வந்து தங்கும் வயல்களின் விளைவால் வளம் மல்கிய புகலூராகும்.

குறிப்புரை :

வெள்ளம் - கங்கை; வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ்சடை என்றது செருக்கால் மிக்க கங்கையை அடக்கியது என்றவாறு. விளங்கும் மதிசூடி என்பது இளைத்த மதியை விளங்க வைத்தது. இதனால் தருக்கினாரை ஒடுக்குதலும் தாழ்ந்தாரை உயர்த்துதலும் இறைவன் கருணை என்பது தெரிவிக்கப்படுகின்றன. எம் கள்ளம் ஆர்ந்து பழிதீர்த்த கடவுள் - அநாதியே பற்றிநிற்கும் எமது ஆணவ மலமாகிய வஞ்சனை நீங்கப் `பெத்தான்மாக்கள்` என்னும் பழியைத் தீர்த்த கடவுள். புள் - நாரை முதலியன.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடிதிண்டோள்
தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள்செய்த
மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிடமென்பர்
பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புகலூரே.

பொழிப்புரை :

அழகிய இலங்கை அரசனாகிய இராவணன் கயிலை மலையை இரு கரங்களாலும் பற்றி எடுத்தபோது அவனுடைய தலைகள், திண்ணிய தோள்கள் ஆகியவற்றைத் தன் கால் விரலால் நெரித்துப் பின் அவன் சாமகானம் பாடக்கேட்டு அன்று அவனுக்கு அருள் செய்தவனாகிய தாழ்ந்த சடைமுடி உடைய பெருமான் தன் தேவியோடு மேவும் இடம், மதிதோயும் அழகிய மாளிகைகள் நிறைந்த புகலூராகும்.

குறிப்புரை :

தென் - அழகு, திசைகுறித்ததன்று. வரை - கயிலை; நெரித்து எனாது நெரிவித்து என்றது விரலின்செயல் என்பதைத் தெரிவிக்க. இவரே நினத்துச் செய்யின் நேரும் தீமை பெரிதாயிருக்கும் என்பது. இசை - சாமகானம். பொன்னிலங்கும் மணி மாளிகையின்மேல் மதிதோயும் என்பது, புகலூரும் மதிசூடி இறைவனைப் போல் சாரூபம் பெற்றது என்பது அறிவித்தவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடியார்கள்
ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழுதேத்த
ஏகம்வைத்தவெரி யாய்மிகவோங்கிய எம்மானிடம்போலும்
போகம்வைத்தபொழி லின்னிழலான்மது வாரும்புகலூரே.

பொழிப்புரை :

பாம்பை முடிமிசை வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப் போற்றும் அடியார்கள், தம் மனத்தின்கண் வைத்துப் போற்றும் தலைவனும், பிரமனும், திருமாலும் தொழுதேத்த ஏகனாய் எரி வடிவில் மிக ஓங்கிய எம்மானுமாகிய இறைவனுக்கு மிக உகந்த இடம், பல்வகைப் பயன்களையும் தருவதோடு நிழலாற் சிறந்ததாய்த் தேன்நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த புகலூராகும்.

குறிப்புரை :

அடியார்கள் ஆகம்வைத்த பெருமான் - அடியார்களைத் தமது திருவுள்ளத்து இடம்பெறவைத்த பெருமான், அடியார்கள் தமது நெஞ்சத்தில்வைத்த பெருமான் என்றுமாம். ஏகம்வைத்த எரி - ஒன்றான தீப்பிழம்பு, போகம்வைத்த பொழில் என்றது தனிமகன் வழங்காப் பனிமலர்க்கா என்றது போல இன்பச்சிறப்பு அறிவித்தவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொருளல்லாக்
கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம்போலும்
கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதிசெய்து
மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புகலூரே.

பொழிப்புரை :

எண்ணிக்கையில் மிக்கதேரர், சாக்கியர் சமணர்கள் ஆகியவர்களின் உண்மையல்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளைக் கேளாதவராய், மிகுதியான தவத்தைச் செய்யும் மெய்யடியார்களின் தலைவராகிய சிவபிரானுக்கு மிக உகந்த இடம், அடியவர்கள் மலர் கொய்து வந்து தூவிப் புனலாட்டித் துதி செய்து தவநெறியில் முயன்று உயர் வானகத்தை எய்துதற்குரிய வழிபாடுகளை ஆற்றும் புகலூராகும்.

குறிப்புரை :

மொழியைத் தவிர்வார்களாகிய செய்தவத்தரது கடவுளிடம் என இயைக்க. அன்றிச்செய்த அவத்தர் எனப்பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கதாகக்கொண்டு வீண்காரியம் விளைவிப்பவர்கள் எனத் தேரர்க்கு அடைமொழியாகவும் ஆக்கலாம். செப்பில் - உரையில், மெய்தவம் எதுகை நோக்கி மிகாதாயிற்று.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புகலூரைக்
கற்றுநல்லவவர் காழியுண்ஞானசம் பந்தன்றமிழ்மாலை
பற்றியென்றும்இசை பாடியமாந்தர் பரமன்னடிசேர்ந்து
குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலிவாரே.

பொழிப்புரை :

புற்றில் வாழும் பாம்புகளை இடையிலே கட்டியவனாகிய சிவபிரான் எழுந்தருளிய புகலூர்மீது இறைவனது பொருள்சேர் புகழைக்கற்று வல்லவர்கள் வாழும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை, என்றும் இசையோடு பாடி வழிபடும் மாந்தர்கள் இறைவன் திருவடி நீழலை அடைந்து குற்றம் குறைபாடு அகன்று புகழோங்கிப் பொலிவெய்துவார்கள்.

குறிப்புரை :

பாம்பு என்ற பொதுமை பற்றி, யாகத்திலிருந்து வந்த இந்தப் பாம்புகளையும் `புற்றில் வாழும் அரவம்` என்றார். சாதியடை. மேவும் - விரும்பும். கற்று நல்ல அவர் - இறைவன் புகழைப் படித்து நல்லவராயினார்கள். குற்றம் - சொல்லான் வருங்குற்றம். குறை - சிந்தனையால் வரும் தோஷம். ஞானசம்பந்தன் புகலூரைச் (சொன்ன) தமிழ ்மாலை பற்றி, பாடிய மாந்தர் பொலிவார் என இயைத்துப் பொருள்கொள்க. `கற்று நல்ல அவர் காழி` என்றது `கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள் ஈசன்` என்ற பகுதியை நினைவூட்டுவது. ஒழியா - ஒழிந்து; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி
ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம்
சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.

பொழிப்புரை :

வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களை இடர் நோய் அடையா என வினைமுடிபு கொள்க. சிவனடியார்கள், விளங்குகின்ற அழகிய மலர்களை அகங்கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் பூசிக்க அவர்களோடு ஒரே இசையில் அம்மந்திரங்களைச் சொல்லி உலகமக்கள் தாமும் வெளிநின்று தொழுதேத்துமாறு ஊமத்தை மலரை முடிமிசைச் சூடிய பெருமான் பிரியாதுறையும் வலிதாயம் என்ற தலத்தைத் தம் சித்தத்தில் வைத்துள்ள அடியவர்கள் மேல் துன்பங்களோ நோய்களோ வந்தடைய மாட்டா.

குறிப்புரை :

இது திருவலிதாயத்தைத் தியானிப்பவர்களுக்குத் துன்பம் இல்லை என்கின்றது. மந்திர புஷ்பம் இடுவதற்காக வலக்கையில் பூவை வைத்து அர்க்கிய ஜலத்தைச் சொரிந்து கையைமூடி அபிமந்திரித்துப் பலர் கூடி வேத மந்திரங்களைச் சொல்லி, இறைவற்குச் சாத்துதல் மரபாதலின் அதனைப் `பத்தரோடு....... ஒத்தசொல்லி` என்பதால் குறிப்பிடுகிறார். பத்தர் - பூசிக்கும் சிவனடியார்கள். பலர் - உடனிருக்கும் சிவனடியார்கள். பொலியம்மலர் - விளங்குகின்ற அழகிய மலர். புனல் தூவி - அர்க்கிய ஜலத்தை மந்திரத்தோடு சொரிந்து. ஒத்த சொல்லி - ஒரே ஸ்வரத்தில் வேதமந்திரங்களைச் சொல்லி என்ற செய்தென் எச்சச்தைச் சொல்ல என்று செயவெனெச்சமாக்குக. அங்ஙனம் அவர்கள் திருவணுக்கன் திருவாயிலில் நின்று வேத மந்திரங்களைச் சொல்கின்ற காலத்து வழிபடும் அடியார்கள் தொழுவார்கள் ஆதலின், அதனை உலகத்தவர் தாம் தொழுதேத்த என்பதால் விளக்குகின்றார். பிரியாதுறைகின்ற என்றது இறைவன் எங்கணும் பிரியாது உறைபவனாயினும் இங்கே அனைவர்க்கும் விளங்கித் தோன்றும் எளிமைபற்றி. அடியாரவர்மேல் என்றதில் `அவர்` வேண்டாத சுட்டு. இதனைச் சேர்த்து அடியார்கள் பெருமை விளக்கியவாறு. இடர் - ஆதிபௌதிகம் முதலிய வினைகளால் வரும் துன்பம். நோய் - பிறவிநோய். `பத்தரோடு பலரும் தூவிச்சொல்ல உலகத்தவர் தொழுது ஏத்தப்பெருமான் பிரியாதுறைகின்ற வலிதாயத்தைச் சித்தம் வைத்த அடியார்மேல் இடர் நோய் அடையா` எனக் கூட்டுக.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

படையிலங்குகர மெட்டுடையான்படி றாகக்கலனேந்திக்
கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங் கள்வன்னுறைகோயில்
மடையிலங்குபொழி லின்னிழல்வாய்மது வீசும்வலிதாயம்
அடையநின்றவடி யார்க்கடையாவினை யல்லற்றுயர்தானே.

பொழிப்புரை :

படைக் கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமானும், பொய்யாகப் பலியேற்பது போலப் பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களிற் சென்று பலியேற்றுண்ணும் கள்வனும் ஆகிய பெருமான் உறையும் கோயிலை உடையதும், நீர்வரும் வழிகள் அடுத்துள்ள பொழில்களின் நீழலில் தேன்மணம் கமழ்வதுமாகிய வலிதாயத்தை அடைய எண்ணும் அடியவர்களை வினை அல்லல் துயர் ஆகியன வந்தடையமாட்டா.

குறிப்புரை :

இது வலிதாயத்தை அடையும் அடியார்கட்கு வினையில்லை என்றது. படிறாக - பொய்யாக. கலனேந்தி - பிரமகபாலத்தைத் திருக்கரத்தில் ஏந்தி; என்றது உலகமெல்லாவற்றையும் தமக்கு உடைமையாகக் கொண்ட இறைவன் பலிகொண்டுண்டான் என்பது பொருந்தாது ஆகலின், அதுவும் அவருக்கோர் விளையாட்டு என்பதை விளக்க. படிறாக, ஏந்தி, கொண்டு, உண்டுணும் கள்வன் எனக்கூட்டுக. அன்றியும், கள்வனாதற்குப் படிறும் இயைபுடைமை காண்க. வினை அல்லல் துயர் - வினை ஏதுவாக வரும் அல்லலும் துன்பமும்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

ஐயன்நொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழுதேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்றிரு மாதோடுறைகோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலிதாயம்
உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீரும்நலமாமே.

பொழிப்புரை :

வலிதாயத்தை உய்யும் வண்ணம் நினைமின்; நினைந்தால் பிணி தீரும், இன்பம் ஆம் என வினை முடிபு கொள்க. அழகன், நுண்ணியன், அருகிலிருப்பவன், செந்நிற மேனியன், நெடிய மழுவை ஏந்தும் ஆற்றலன். அவன் பாசங்கள் நீங்கிய அடியவர் எக்காலத்தும் வணங்கித் துதிக்குமாறு உமையம்மையோடு உறையும் கோயில் உலக மக்கள் அனைவரும் வந்து பணிய அவர்களின் பிணிகளைத் தீர்த்து உயரும் திருவலிதாயம் என்ற அத்தலத்தை நீர் உய்யும் வண்ணம் நினையுங்கள். நினைந்தால் வினைகள் தீரும். நலங்கள் உண்டாகும்.

குறிப்புரை :

இது வலிதாயம் உலகப் பிணியைத் தீர்ப்பது; அதனை நினைத்தால் நும் பிணியும் தீரும்; இன்பம் ஆம் என்கின்றது. ஐயன் - அழகியன். நொய்யன் - அணுவினுக்கு அணுவாய் இருப்பவன். பிணியில்லவர் - அநாதியே பந்தித்து நிற்பதாகிய ஆணவ மலக் கட்டற்ற பெரியார்கள். என்றும் தொழுதேத்த - முத்திநிலையிலும் தொழ. வெய்யபடை - கொடியவர்களுக்கு வெம்மையாய் அடியவர்களுக்கு விருப்பமாய் இருக்கும்படை. திருமாது - உமாதேவி. முடியுடை மன்னனைக்கண்டு பிடியரிசி யாசிப்பார் போலாது வலிதாயநாதரைத் தியானித்துக் காமியப் பயனைக் கருதாதீர்கள்; உய்யு நெறியைக் கேளுங்கள்; அப்போது அதற்கிடையூறாகிய வினைகள் நீங்கும்; இன்பம் உண்டாகும்; வினை நீங்குதலொன்றுமே இன்பம் என்பது சித்தாந்த முத்தியன்றாதலின் வினை தீரும் என்பதோடமையாது நலமாமே என்று மேலும் கூறினார்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படைசூழப்
புற்றினாகமரை யார்த்துழல்கின்றவெம் பெம்மான்மடவாளோ
டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட வுள்கும்வலிதாயம்
பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடியார்க்கே.

பொழிப்புரை :

அடியவர்க்கு வலிதாயத்தைப் பற்றி வாழ்வதே சரண் என முடிபு காண்க. ஒற்றை விடையை உடையவன். சிறந்த பூதப்படைகள் சூழ்ந்துவர, புற்றில் வாழும் நாகங்களை இடையில் கட்டி நடனமாடி, உழலும் எம்பெருமான், உமையம்மையோடு உறையும் கோயில் உலகின்கண் ஒளி நிலைபெற்று வாழப் பலரும் நினைந்து போற்றும் வலிதாயமாகும். அடியவர்கட்கு அத்தலத்தைப் பற்றி வாழ்வதே அரணாம்.

குறிப்புரை :

இஃது, அடியார்களாகிய உங்களுக்கு, வலிதாயத்தைப் பற்றி வாழ்வதே சரண் என்கின்றது. ஒற்றையேறு - மற்ற இடபங்களோடு உடன்வைத்து எண்ணக் கூடாத அறவடிவமாகிய இடபம். புற்றில் நாகம் சாதியடை. வலிதாயம் உலகம் முழுவதுமே ஒளி நிறைய நினைக்கப்படுவது என்பது, வாழுமது - வாழ்வது. சரண் - அடைக்கல ஸ்தானம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொருளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயிலயலெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுங்கூடி வணங்கும் வலிதாயஞ்
சிந்தியாதவவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளிதன்றே.

பொழிப்புரை :

வலிதாயம் கோயிலைச் சிந்தியாதவர் துயர் தீர்தல் எளிதன்று என முடிபு கொள்க. மனம் ஒன்றி நினைபவர் வினைகளைத் தீர்த்து அவர்க்குத் தியானப் பொருளாய்ச் செவ்வான் அன்ன பேரொளியோடு காட்சி தரும் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலாய் அயலில் மந்தி ஆண்குரங்கோடு கூடி வந்து வணங்கும் சிறப்பை உடைய திருவலிதாயத்தைச் சிந்தியாத அவர்களைத் தாக்கும் கொடிய துன்பம், தீர்தல் எளிதன்று.

குறிப்புரை :

இது, பரிபாக விசேடம் கைவரப் பெறாத மந்தியும் கடுவனும் கூட வணங்கும்பொழுது, அச்சிறப்பு வாய்ந்த மக்கள் வழிபடாராயின் அவர் வினை தீராதென்பதை அறிவிக்கின்றது. புந்தியொன்றி நினைவார் - மனம் பொறிவழிச்சென்று புலன்களைப் பற்றாமல் ஒருமையாய் நின்று தியானிக்கும் அடியார்கள். பொருளாய - தியானிக்கும் பொருளாய. அந்தியன்னதொரு பேரொளியான் - அந்திக் காலத்துச் செவ்வொளிபோன்ற திருமேனியுடையான். மந்தியும் கடுவனும் வணங்கும் வலிதாயம் என்றமையால் மக்களும் தம் இல்லற இன்பம் குலையாதே வந்து வணங்கும் பெற்றியர் என்பது விளக்கியவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவரேத்தக்
கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல் கள்வன்சடைதன்மேல்
வானியன்றபிறை வைத்தவெம்மாதி மகிழும்வலிதாயந்
தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளிவாமே.

பொழிப்புரை :

வலிதாயத்திறைவனை நறுமாமலர் கொண்டு நின்றேத்தத் தெளிவு ஆம் என வினை முடிபு கொள்க. ஊன் கழிந்த பிரமகபாலத்தில் பலி ஏற்று உலகத்தவர் பலரும் ஏத்தக் காட்டில் திரியும் களிற்றுயானையின் தோலை உரித்துப் போர்த்துத் திரியும் கள்வனும், சடையின்மேல் வானகத்துப் பிறைக்கு அடைக்கலம் அளித்துச் சூடிய எம் முதல்வனும் ஆகிய பெருமான், மகிழ்ந்துறையும் திருவலிதாயத்தைத்தேன் நிறைந்த நறுமலர் கொண்டு நின்று ஏத்தச் சிவஞானம் விளையும்.

குறிப்புரை :

இது வலிதாயம் தொழ ஞானம் உண்டாம் என்கின்றது. ஊனியன்ற தலை - ஊன் கழிந்த தலை. பலி - பிச்சை. கான் - காடு. வானியன்ற - வானில் இலங்குகின்ற. ஆதி - முதற்பொருள்; யாவற்றிற்கும் முதலாயுள்ளவன். தெளிவு - ஞானம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமன்னுயிர்வீட்டிப்
பெண்ணிறைந்தவொரு பான்மகிழ்வெய்திய பெம்மானுறைகோயில்
மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலிதாயத்
துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் முண்மைக்கதியாமே.

பொழிப்புரை :

வலிதாய நாதன் கழலை ஏத்தினால் வீட்டின்பத்தை அடையலாம் என வினை முடிபு காண்க. நெற்றி விழியின் அழலால், தேவர் ஏவலால் வந்த காமனது உயிரை அழித்துத் தனது திருமேனியின் பெண்ணிறைந்த இடப் பாகத்தால் மகிழ்வெய்திய பெருமான் உறை கோயிலாய் நிலவுலகெங்கும் நிறைந்த புகழைக்கொண்ட, அடியவர்கள் வணங்கும் திருவலிதாயத்துள் நிறைந்து நிற்கும் பெருமான் திருவடிகளை வணங்கினால் வீடு பேறு அடையலாம்.

குறிப்புரை :

இஃது ஆன்மாக்கள் என்றும் அடையத்தகும் கதியாகிய வீட்டின்பத்தை வலிதாயநாதன் கழல் ஏத்த அடையலாம் என்கின்றது. கண் நிறைந்த விழி - கண்ணாகிய உறுப்பு முழுவதும் வியாபித்திருக்கின்ற விழி. அன்றியும் கண் நிறைந்த அழல் எனவும் கூட்டலாம். வருகாமன் - தேவ காரியத்தை முடிப்பதற்காக இந்திரன் கோபத்திற்காளாகி இறப்பதைக்காட்டிலும் சிவபெருமான் மறக் கருணையால் உய்வேன் என்று விரும்பிவந்த காமன். வீட்டி - அழித்து. உயிர் வீட்டி என்றது நித்தியமாகிய உயிரை அழித்ததன்று, அதனைத் தன்னகத் தொடுக்கி, உண்மைக் கதி - என்றும் நிலைத்த முத்தி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.

பொழிப்புரை :

உடலில் உயிர் உள்ள அளவும் தொழுவாரது மனத் துயரம் கெடும் என வினை முடிபு காண்க . திருப்பாற்கடலைக் கடைந்த போது எழுந்த நஞ்சினை அமுதமாக உண்டு தேவர்கள் தொழுது வாழ்த்த நடனம் ஆடி , வலிமை மிக்க இலங்கை மன்னனின் ஆற்றலை அழித்துப் பின் அவனுக்கு நல்லருள் புரிந்த இறைவன் எழுந்தருளிய கோயிலை உடையதும் , மடல்கள் விளங்கும் கமுகு பலாமரம் ஆகியவற்றின் தேன் மிகுந்து காணப்படுவதுமாகிய திருவலிதாயத் தலத்தை நினைக்க மனத்துயர் கெடும் .

குறிப்புரை :

இது வினைக்கீடாகிய உடலில் உயிருள்ள அளவும் தொழுவாரது மனத் துன்பம் மடியும் என்கின்றது . கடல் - பாற்கடல் நஞ்சம் அமுதுண்டு என்றது நஞ்சின் கொடுமை கண்டும் அதனை அமுதாக ஏற்றமையை . இலங்கை யரையன் வலிசெற்று என்றது அவன் வலிமை காரணமாகவே செருக்கியிருந்தானாகலின் அவனை அது கெடுத்து ஆட்கொண்டார் என்றது .
குருவருள் : சிவபூசை எடுத்துக் கொள்பவர் ` என் உடலில் உயிர் உள்ள அளவும் பூசையை விடாது செய்து வருவேன் ` என்ற உறுதி மொழி கொடுத்தே எடுத்துக்கொள்வர் . அக்கருத்தை இப்பாடலின் இறுதிவரி குறிப்பிடுதலைக் காணலாம் . ` பழனஞ்சேர் அப்பனை என்கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ ` என்ற அப்பர் தேவாரமும் காண்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயின்மூன்றும்
எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடிவாகும்
எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழுதேத்த
உரியராகவுடை யார்பெரியாரென வுள்கும்முலகோரே.

பொழிப்புரை :

வலிதாயத்தை வணங்குவாரைப் பெரியார் என உலகோர் உள்குவர் என முடிபு காண்க. தேவர்களோடு மாறுபட்ட திரிபுர அசுரர்களின் கோட்டைகள் மூன்றையும், மிகப் பெரிய மேரு மலையை வில்லாகக் கொண்டு எரியும்படி அழித்த ஒருவனும், திருமால் பிரமன் ஆகிய இருவராலும் அறிய ஒண்ணாத அழல் வடிவாய் உயர்ந்தோங்கியவனும் ஆகிய சிவபிரானது திருவலிதாயத்தைத்தொழுது ஏத்தலைத் தமக்குரிய கடமையாகக் கொண்ட உலக மக்கள் பலரும் பெரியார் என நினைந்து போற்றப்படுவர்.

குறிப்புரை :

இது வலிதாயத்தை வணங்குவாரே பெரியர் என உலகத்தோர் உள்குவர் என்கின்றது. பெரிய மேருவரை என்றது மலைகளில் எல்லாம் பெரியதாய், தலைமையாய் இருத்தலின். சிலை - வில். மலைவுற்றார் - சண்டைசெய்த திரிபுராதிகள். எய்த ஒருவன் - அம்பு எய்து எரித்த ஒப்பற்றவன். இருவர் - பிரமனும் திருமாலும். எட்டுக் கண்ணும், இரு கண்ணும் படைத்திருந்தும் அறியமுடியாத அக்கினிப்பிழம்பாகிய அண்ணாமலையாய் நின்ற இறைவன். தாம் தெய்வம் என்று இறுமாப்பார் இருவராலும் அறிய ஒண்ணாதவன் என்பதாம். ஏத்த உரியராக உடையார் - பணிதலே தமக்கு உரிமையாக உடைய அடியார்கள். உலகோர் உள்கும் - உலகத்தார் நினைப்பர்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர்கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொருளென்னேல்
வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலிதாயம்
பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரியோரே.

பொழிப்புரை :

வலிதாயத்தின் புகழைப் பேசுபவர்க்கு யாம் அடியர் எனப் பெரியோர்கள் பேணுவர் . மனமார வாழ்த்தும் இயல்பினரல்லாத சமணர் சாக்கியர் ஆகிய புறச்சமயிகள் கூடி இகழ்ந்தும் அன்பின்றியும் பேசும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாதீர் . குற்றம் தீர , அடியவர்கட்கு அருள் செய்து புகழால் ஓங்கிய பெருமானது வலிதாயத்தின் புகழைப் பேசும் ஆர்வம் உடையவர்களே , அடியார்கள் என விரும்பப்படும் பெரியோர் ஆவர் .

குறிப்புரை :

இஃது , ஏற்றத் தாழ்வற அடியார் எல்லார்க்கும் அருள் செய்யும் வலிதாயத்தைப் பேசுபவர்க்கு யாம் அடியர் எனப் பெரியோர்கள் பேணுவார் என்கின்றது . ஆசியார மொழியார் - ஆசிகளை நிரம்பச்சொல்லும் மனப் பண்பற்ற சமணர்கள் . அல்லாதவர் - சைவத்திற்குப் புறம்பானவர்கள் . ஏசி - இகழ்ந்து , ஈரம் - அன்பு . பொருள் என்னேல் - உறுதிப் பொருளாகக் கொள்ளாதே . வாசி தீர - வேற்றுமை நீங்க . இறைவன் வாசி தீரக் காசு நல்கும் வள்ளன்மை விளங்கக் கூறியதுமாம் . பேசும் ஆர்வம் - இடைவிடாது பாராட்டிப் பேசும் விருப்பம் . ஆர்வம் - அமையாத காதல் . பெரியோர் ஆர்வமுடையார்க்கு அடியார் எனப் பேணும் என உருபுவிரித்துப் பொருள் காண்க .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

வண்டுவைகும்மண மல்கியசோலை வளரும்வலிதாயத்
தண்டவாணனடி யுள்குதலாலருண் மாலைத்தமிழாகக்
கண்டல்வைகுகடற் காழியுண்ஞானசம் பந்தன்றமிழ்பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர்வாரே.

பொழிப்புரை :

வலிதாய நாதன்மீது பாடிய இத்திருப்பதிகத்தை இசையோடு பாடுவார் குளிர் வானத்துயர்வார் என முடிபு காண்க. வண்டுகள் மொய்க்கும் மணம் நிறைந்த சோலைகள் வளரும் திருவலிதாயத்தில் விளங்கும் அனைத்துலக நாதனின் திருவடிகளைத் தியானிப்பதால், தாழைகள் வளரும் கடற்கரையை அடுத்துள்ள சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தமிழ் மாலையாக அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிறந்த தோத்திரமாகக் கொண்டு அமர்ந்திருந்து இசையோடு பாடவல்லார், குளிர்ந்த வானுலக வாழ்க்கையினும் உயர்வு பெறுவர்.

குறிப்புரை :

இது, வலிதாயநாதன் மீது பாடிய இப்பத்துப் பாடலையும் மனத்துள் கொண்டு சிந்தித்துத் தெளிந்து இசையோடு பாடவும் வல்லவர்கள் சுவர்க்கபோகத்தினும் பெரிய போகம் எய்துவர் என்கின்றது. மல்கிய - நிறைந்த. அண்டவாணன் - அண்டங்கள் தோறும் ஒன்றாயும் உடனாயுமிருந்து வாழ்பவன். அவன் திருவடியை இடைவிடாது தியானிப்பதால் மாலை போன்ற தமிழாகக் கூறிய ஞானசம்பந்தப் பெருமானது தமிழ்ப்பாடல் பத்தையும் வல்லவர் உயர்வார் எனக்கூட்டுக. கண்டல் - தாழை. கடற்காழி - கடற்கரை நாடாகிய காழி என்பது மட்டும் அன்று; கடலில் மிதந்த காழி என்றதையும் உட்கொண்டு. மாலைத்தமிழ் - ஒரு பொருள்மேற் கூறிய கோவையாகிய பாடல். வலிதாயநாதரை மனமொழி மெய்களான் வணங்கியவர் வினையறுவர் வீடுபெறுவர் என்ற ஒருபொருளையே கூறுதலின் இது மாலைத்தமிழாயிற்று. இசை பாடவல்லார் வானத்து வைகி உயர்வார் என இயைப்பாரும் உளர். இசை பாடவல்லார்க்கு வானத்தின்பம் ஒரு பொருளாகத் தோன்றாதாதலின் வானத்தினும் உயர்வர் என்பதே அமையுமாறு காண்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

மைம்மரு பூங்குழற் கற்றைதுற்ற வாணுதன் மான்விழி மங்கையோடும்
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
எம்மிறை யேயிமை யாதமுக்க ணீசவெ னேசவி தென்கொல்சொல்லாய்
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

கற்றையாகச் செறிந்து கருமை மருவி வளர்ந்த அழகிய கூந்தலையும், ஒளி சேர்ந்த நுதலையும், மான் விழி போன்ற விழியையும் உடைய உமையம்மையோடு, பொய் பேசாத அந்தணர்கள் ஏத்தப் புகலியில் விளங்கும் புண்ணியம் திரண்டனைய வடிவினனே, எம் தலைவனே! இமையாத முக்கண்களை உடைய எம் ஈசனே!, என்பால் அன்பு உடையவனே, வாய்மையே பேசும் நான்மறையை ஓதிய அந்தணர் வாழும் திருவீழிமிழலையில் திருமாலால் விண்ணிலிருந்து கொண்டுவந்து நிறுவப்பட்ட கோயிலில் விரும்பியுறைதற்குரிய காரணம் என்னையோ? சொல்வாயாக!

குறிப்புரை :

மை மரு - கருமை சேர்ந்த. பொய்மொழியா மறையோர்கள் - என்றும் பொய்யே சொல்லாத வேதியர்கள். புகலி - சீகாழி. நேச - அன்புடையவனே. மெய் மொழி நான்மறை - என்றும் நிலைத்த மொழியினையுடைய நான்கு வேதம். மங்கையோடும் நிலாவிய, ஏத்த நிலாவிய புண்ணியன் எனக்கூட்டுக.
குருவருள்: `பொய் மொழியா மறையோர்` என்று காழி அந்தணர்களை எதிர்மறையால் போற்றிய ஞானசம்பந்தர் `மெய்ம்மொழி நான்மறையோர்` என வீழி அந்தணர்களை உடன்பாட்டு முகத்தால் கூறியுள்ள நுண்மை காண்க.`பொய்யர் உள்ளத்து அணுகானே` என்ற அருணகிரிநாதர் வாக்கினையும் இதனோடு இணைத்து எண்ணுக. சீனயாத்திரீகன் யுவான்சுவாங் என்பவன் தனது யாத்திரைக் குறிப்பில் பொய், களவு, சூது, வஞ்சகம் இல்லாதவர்கள் என இந்தியரின் சிறப்பைக் குறித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாம். ஞானசம்பந்தர் காலமும் யுவான்சுவாங் காலமும் கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆகும்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில் கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்
பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே
எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ ரின்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்
மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

மகளிர்க்குப் பொருந்திய கழங்கு, பந்து, அம்மானை, முற்றில் ஆகிய விளையாட்டுகளைக் கற்ற சிற்றிடைக் கன்னிமார்கள், சோலைகளில் தங்கியுள்ள கிளிகட்குச் சொற்களைக் கற்றுக் கொடுத்துப் பேசச் செய்யும் திருப்புகலியில் விளங்கும் புண்ணியனே! அழகிய தாமரை மலரில் விளங்கும் பிரமனது தலையோட்டில் பலியேற்றுண்டு இன்புறும் செல்வனே! திருவீழிமிழலையில் வேதியர்கள் போற்றித் துதிக்க விண்ணிழி கோயிலை நீ விரும்பியதற்குக் காரணம் என்ன? சொல்வாயாக!

குறிப்புரை :

கழல், பந்து, அம்மானை, முற்றில் முதலிய மகளிர் விளையாட்டுப் பொருள்கள் குறிக்கப் பெறுகின்றன. கழல் - கழற்சிக்காய். முற்றில் - முச்சி (சிறுசுளகு), கன்னியர், சோலையிலுள்ள கிளிகட்குச் சொல் கற்றுக்கொடுக்கும் புகலி. எழில் - அழகு. மலரோன் - பிரமன். ஓர் - அசை. விண்ணிழிகோயில் - வீழிமிழலையிலுள்ள கோயிலின் பெயர்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

கன்னிய ராடல் கலந்துமிக்க கந்துக வாடை கலந்துதுங்கப்
பொன்னியன் மாட நெருங்குசெல்வப் புகலி நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத் தெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
மின்னிய னுண்ணிடை யார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

கன்னிப் பெண்கள் விளையாட்டை விரும்பிப் பந்தாடுதற்குரிய தெருக்களில் கூடியாட உயர்ந்த பொன்னிறமான அழகுடன் விளங்கும் மாடங்கள் நெருங்கும் செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே! யாழினது இனிய இசைபோலும் மொழி பேசும் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட எம் தலைவனே! மின்னல் போன்ற நுண்ணிய இடையினை உடைய அழகிய மகளிர் மருவும் திருவீழிமிழலையில் விண்ணிழி விமானத்தை நீ விரும்பியதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக!

குறிப்புரை :

கன்னியர், விளையாட்டை விரும்பிப் பந்தாடுதற்குரிய வீதியில் கலந்து மாடங்களில் நெருங்குகின்ற செல்வப் புகலி எனக்கூட்டுக. கந்துகம் - பந்து. துங்கம் - உயர்ச்சி. மின் இயல் - மின்னலைப் போலும் இயல்பினையுடைய. யாழ் இன்னிசை மொழியாள் - யாழினது இனிய இசைபோலும் மொழியினை உடையாள். புகலியும் கன்னியர் பந்தாடுதற்குரிய வீதிகள் மாடங்கள் நெருங்கும் இயல்பினது; வீழியும் மின்னியல் நுண்ணிடையாரையுடையது; அங்ஙனமாகத் தேவரீர் வீழியை விரும்பியது ஏன்? என்றதில் நயம் காண்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

நாகப ணந்திக ழல்குன்மல்கு நன்னுதன் மான்விழி மங்கையோடும்
பூகவ னம்பொழில் சூழ்ந்தவந்தண் புகலி நிலாவிய புண்ணியனே
ஏகபெ ருந்தகை யாயபெம்மா னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

பாம்பின் படம் போன்று திகழும் அல்குலையும், அழகு மல்கும் நுதலையும், மான் விழி போன்ற விழியையும் உடைய பார்வதிஅம்மையுடன் வளமான கமுகஞ்சோலைகள் சூழ்ந்து விளங்கும் அழகும் தண்மையும் உடைய சீகாழிப் பதியில் விளங்கும் புண்ணியனே! தன்னொப்பார் இன்றித் தானே முதலாய பெருமானே! எம் தலைவனே! மேகங்கள் தோயும் மதில்கள் சூழ்ந்த திருவீழி மிழலையில் விண்ணிழி விமானக் கோயிலை விரும்பியது ஏன்! சொல்வாயாக.

குறிப்புரை :

புண்ணியனே! எம் இறையே! விண்ணிழிகோயில் விரும்பியது என்கொல் சொல்லாய் எனக் கூட்டுக. நாகபணம் - பாம்பின் படம். அல்குலையும், நன்னுதலையும், மான்விழியையும் உடைய மங்கை எனக்கூட்டுக. பூகவனம் - கமுகந்தோட்டம். புகலி -சீகாழி, ஏகபெருந்தகை - பெருந்தகுதியால் தன்னொப்பார் பிறரின்றித் தான் ஒருவனே பெருந்தகையானவன். பெம்மான் - பெருமான் என்பதன் திரிபு. உரிஞ்சு - தோய்ந்த.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

சந்தள றேறுத டங்கொள்கொங்கைத் தையலொ டுந்தள ராதவாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும் புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை யீசவெம்மா னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணிவார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

சந்தனக் குழம்பு பூசிய பெரிதான தனங்களை உடைய உமையம்மையோடு, உண்மையில் தவறாத புத்தியினை உடைய நான்மறை அந்தணர்கள் போற்றும் புகலியில் விளங்கும் புண்ணியனே! எம்மை அநாதியாகவே ஆளாய்க் கொண்டுள்ள ஈசனே! எம் தலைவனே! எமக்குக் கடவுளே! வெந்த திருவெண்ணீற்றை அணிந்த அடியவர் வாழும் திருவீழிமிழலையுள் விண்ணிழி கோயிலை நீ விரும்புதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக!

குறிப்புரை :

தளராத வாய்மைப் புந்தியின் நான்மறையோர்கள் - வேதங்களைப் பலகாலும் பயின்றதால் உண்மையினின்றும் தளராத புத்தியினையுடைய மறையோர்கள். சந்து அளறு - சந்தனச்சேறு. தையலாரோடும் மறையோர்கள் ஏத்தும் எனச் சிறப்பித்தது மனந் தளர்தற்கேது இருந்தும் தளராத பொறிவாயில் ஐந்தவித்த புண்ணியர் எனத் தெரிவித்தவாறு. வெந்த வெண்ணீறு - இனி வேகுதற்கில்லாத - மாற்றமில்லாது, ஒருபடித்தான வெண்ணீறு. எந்தமையாளுடையீச - எம்மை அநாதியே வழிவழியாளாக் கொண்ட தலைவ. ஈசன் - செல்வமுடையவன். எம்மான் - எமக்கெல்லாம் பெரியோய். இறை - தங்குதலையுடையவன். அணிவார் என்றது அடியார்களை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

சங்கொளி யிப்பி சுறாமகரந் தாங்கி நிரந்து தரங்கமேன்மேற்
பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே
எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மா னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

ஒளி உடைய சங்கு, முத்துச் சிப்பிகள், சுறா, மகரம் ஆகிய மீன்கள், ஆகிய இவற்றைத் தாங்கி வரிசை வரிசையாய் வரும் கடல் அலைகளால் மேலும் மேலும் பொங்கும் ஒலியோடு கூடிய ஓதநீர் ஓங்கும் செம்மையான புகலியில் விளங்கும் புண்ணியனே! எங்கள் தலைவனே! இமையோர் பெருமானே! எம் கடவுளே! கதிரவன் தோயும் பொழில்களாற் சூழப்பெற்ற விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக!

குறிப்புரை :

காழிக்குள்ள பெருமை கடலோதத்தில் தாழாது ஓங்கியிருப்பது என்றது முதலிரண்டடிகளான் உணர்த்தப் பெறுகின்றது. நிரந்து - வரிசையாய். தரங்கம் - அலை. பிரான் - வள்ளன்மையுடையவன். பெம்மான் - பெருமான் என்பதன் திரிபு. வெங்கதிர் - சூரியன்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக் காம்பன தோளியொ டுங்கலந்து
பூமரு நான்முகன் போல்வரேத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவ னத்தெரி யாட்டுகந்த வெம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

மன்மதன் தீப்பிழம்பாய் எரியுமாறு கண்ணால் நோக்கி, மூங்கில் போலும் தோளினையுடைய உமையம்மையோடும் கூடி, தாமரை மலரில் விளங்கும் நான்முகன் போல்வார் போற்றப் புகலியில் விளங்கும் புண்ணியனே! சுடுகாட்டில் எரியாடலை விரும்பும் எம்பெருமானே! மலர்கள் மருவிய குளிர்ந்த பொழில்களால் சூழப் பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக!

குறிப்புரை :

காமன் - விருப்பத்தை விளைவிக்குந் தெய்வம். எரிப்பிழம்பாக - தீயின் திரட்சியாக. நோக்கி என்றதால் விழித்தெரித்தமை குறிக்கப்படுகின்றது. காம்பு - முள்ளில்லாத மூங்கில். பூ மரு - தாமரைப் பூவைச் சேர்ந்த பிரமன் இந்திரன் முதலியவர்கள் பூசித்த தலமாதலின் நான்முகன் போல்வார் ஏத்த என்றார். ஈமவனம் - சுடுகாடு; என்றது சர்வசங்காரகாலத்து எல்லாம் சுடுகாடாதலைக் குறித்தது. வீ - பூ. காமனை எரித்தவர் ஒரு பெண்ணோடு கலந்திருக்கின்றார் என்றது, அவர் கலப்பு எம்போலியர் கலப்புப்போல் காமத்தான் விளைந்ததன்று; உலகம் போகந்துய்க்கத் தான் போகியாயிருக்கின்ற நிலையைத் தெரிவித்தவாறு. ஈம எரியிலாட்டுகந்தபெருமான் பொழில் சூழ்மிழலை விரும்பியது எங்ஙனம் பொருந்தும்? என வினாவியது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோள் இற்றல றவ்விர லொற்றியைந்து
புலங்களைக் கட்டவர் போற்றவந்தண் புகலி நிலாவிய புண்ணியனே
இலங்கெரி யேந்திநின் றெல்லியாடு மெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

இலங்கையர் தலைவனாகிய இராவணன் அழகிய வலிய தோள்கள் ஒடிந்து, அலறுமாறு தன் கால் விரலால் சிறிது ஊன்றி, ஐம்புல இன்பங்களைக் கடந்தவர்களாகிய துறவியர் போற்ற, அழகிய தண்மையான புகலியில் விளங்கும் புண்ணியனே! விளங்கும் தீப்பிழம்பைக் கையில் ஏந்தி இரவில் இடுகாட்டில் ஆடும் எம் தலைவனே! மலை போன்ற ஒளி பொருந்திய மாளிகைகளால் சூழப்பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.

குறிப்புரை :

புலங்களை வெல்லாத இராவணனையலறச் செய்து, புலன்களை வென்றவர்கள் போற்ற இருக்கும் புகலியான் என நயந்தோன்றக் கூறியவாறு, இற்று - ஒடிந்து, விரல் ஒற்றி - காற்பெருவிரலால் சிறிது ஊன்றி. புலன்களை கட்டவர் - புலனகளாகிற களைகளைக் களைந்தவர். எல்லி - இரவு. விலங்கல் - மலை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

செறிமுள ரித்தவி சேறியாறுஞ் செற்றதில் வீற்றிருந் தானுமற்றைப்
பொறியர வத்தணை யானுங்காணாப் புகலி நிலாவிய புண்ணியனே
எறிமழு வோடிள மான்கையின்றி யிருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்
வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

மணம் செறிந்த தாமரைத் தவிசில் அறுவகைக் குற்றங்களையும் விலக்கி ஏறி அதில் வீற்றிருக்கும் நான்முகனும், புள்ளிகளையுடைய பாம்பினைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும் காண இயலாதவனாய்ப் புகலியில் விளங்கும் புண்ணியனே! பகைவரைக் கொல்லும் மழுவாயுதத்தோடு இளமான் ஆகியன கையின்கண் இன்றி விளங்கும் பெருமானே! மணம் கமழும் அழகிய பொழில்களால் சூழப்பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.

குறிப்புரை :

முளரித் தவிசு - தாமரையாசனம்; (பதுமாசனம் என்னும் யோகாசனமுமாம்) ஆறும் செற்று - காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் உட்பகை ஆறையும் அழித்து. அதில் வீற்றிருந்தான் - அந்தத் தாமரையில் வீற்றிருந்த பிரமன். பொறி அரவம் - படப்பொறிகளோடு கூடிய ஆதிசேடன். அணையான் என்றது திருமாலை.
குருவருள்:`எறிமழுவோடிளமான் கையின்றி இருந்த பிரான்` என்றதனால் தனக்குத் திருவீழிமிழலையில் அருள் செய்த பெருமான் மழு ஆயுதமும் மானும் கைகளில் இல்லாமல் சீகாழித் திருத்தோணி மலையில் வீற்றிருந்தருளும் உமாமகேசுரர் என்பதைக் குறித்தருள்கின்றார் ஞானசம்பந்தர். அங்ஙனம் உள்ள காழிக் கோலத்தை வீழியிலும் காட்டியது என்னே என்று வியந்து பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த பான்மைய தன்றியும் பல்சமணும்
புத்தரு நின்றலர் தூற்றவந்தண் புகலி நிலாவிய புண்ணியனே
எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற வெம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

தன்னிடம் பத்திமையுடையோர் பணிந்து போற்றும் பான்மையோடுகூடச் சமணரும், புத்தரும் அலர் தூற்ற, அழகிய குளிர்ந்த புகலியின்கண் விளங்கும் புண்ணியனே! எவ் வகையான தவத்தை மேற்கொண்டோரும் அடைதற்குரிய இலக்காய் நின்ற எம்பெருமானே! சதுரப்பாடுடைய அறிஞர்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.

குறிப்புரை :

பத்தர்கணம் ஏத்த வாய்த்த பான்மையது அன்றியும் - அடியார்கள் தோத்திரிக்கப் பொருந்தியதோடல்லாமல். புறச் சமயத்தார் அலர் தூற்றவும் நிலவிய புண்ணியன் என்க. எத்தவத்தோர்க்கும் - ஹடயோகம், சிவயோகம் ஆகிய எத்தகைய தவத்தினையுடையவர்க்கும், இலக்காய் - அவரவர் நிலைக்கேற்பக் குறித்துணரததக்க பொருளாய், வித்தகர் - சதுரப்பாடுடையவர்கள்; ஞானிகள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

விண்ணிழி கோயில் விரும்பிமேவும் வித்தக மென்கொ லிதென்றுசொல்லிப்
புண்ணிய னைப்புக லிந்நிலாவு பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப் பாரொடு விண்பரி பாலகரே.

பொழிப்புரை :

விண்ணிழி கோயில் விரும்பிய புண்ணியனைப் போற்றி ஞானசம்பந்தன் சொன்ன பாடல் வல்லார்கள் பாரொடு விண்ணகத்தையும் பரிபாலனம் புரிவர். புகலிப்பதியில் விளங்கும் புண்ணியனாய், அழகிய இளங்கொடி போன்ற உமையம்மையோடு விளங்குவானைத் துதித்துத் திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பிய வித்தகம் என்னையோ சொல்லாய் என்று கேட்டுப் புகழால் மிக்கவனும் நலம்தரும் நூற்கேள்வி உடையவனும் நான்மறை வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய பண்ணிறைந்த இப்பதிகத் திருப்பாடல்களை ஓதுபவர் நிலவுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆளும் சிறப்புடையவராவர்.

குறிப்புரை :

நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் எனத் தன்னை வியந்ததாமோ எனின்; அன்று. ஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனருள் வழிநின்று, தன்வசமற்று அவனுரை தனதுரையாகப் பாடிய பாடல்களாதலின் இது அவனுரை. ஆதலின் தன்னை வியந்து தான் கூறியதன்று. பாரொடு விண் என்ற ஒடு உயர்பின் வழித்தாய், பார்கன்ம பூமியாய் வீட்டிற்கு வாயிலாகும் சிறப்புடைமையின் சேர்க்கப் பெற்றது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

செய்யரு கேபுனல் பாயவோங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்
கையரு கேகனி வாழையீன்று கானலெல் லாங்கமழ் காட்டுப்பள்ளிப்
பையரு கேயழல் வாயவைவாய்ப் பாம்பணை யான்பணைத் தோளிபாகம்
மெய்யரு கேயுடை யானையுள்கி விண்டவ ரேறுவர் மேலுலகே.

பொழிப்புரை :

வயலின்கண் நீர்பாய, அதனால் களித்த செங்கயல் மீன்கள் துள்ள, அதனால் சில மலர்களிலிருந்து தேன் சிந்துதலானும், கைக்கெட்டும் தூரத்தில் வாழை மரங்கள் கனிகளை ஈன்று முதிர்ந்ததனானும், காடெல்லாம் தேன் மணமும் வாழைப்பழமணமும் கமழும் திருக்காட்டுப்பள்ளியுள், நச்சுப்பையினருகே அழலும் தன்மை உடைய ஐந்து வாயையும் கூரிய நச்சுப் பற்களையும் உடைய ஆதிசேடனை அணையாகக் கொண்ட திருமாலையும் உமையம்மையையும் தனது மெய்யின் இடப்பாகமாகக் கொண்டு (அரியர்த்தர், அர்த்த நாரீசுரர்) விளங்கும் இறைவன் மீது பற்றுக்கொண்டு ஏனைய பற்றுக்களை விட்டவர், வீட்டுலகை அடைவர்.

குறிப்புரை :

இது, ஆரணிய சுந்தரரைத் தியானித்து நெகிழ்ந்த மனத்தடியவர்கள் மேலுலகடைவர் என்கின்றது. செய் - வயல். வயலருகே நீர்பாய (அதனாற் களித்த) கயல்மீன் ஓங்கிப்பாய, சிலவாகிய மலர்களிலிருந்து தேன், காடெல்லாம் கமழும் காட்டுப்பள்ளி எனவும், கைக்கெட்டுந்தூரத்தில் வாழை, கனிகளையீன்று கமழ்கின்ற காட்டுப்பள்ளி எனவும் கூட்டிப் பொருள் கொள்க. பையருகுஅழல்வாய்ப்பாம்பு அணையான் - விஷப்பையினருகே அழலுந்தன்மை வாய்ந்த கூரிய விஷப்பற்களையுடைய பாம்பை (ஆதிசேடனை) அணையாகக் கொண்ட திருமால் (போல). உள்கி, விண்டவர் மேலுலகு ஏறுவர் என முடிக்க. திருமால் பாம்பணை மேலிருந்து ஆனந்தத் தாண்டவத்தைத் தியானித்து மனம் நெகிழ்ந்தார் ஆதலின், அவ்வரலாற்றை உட்கொண்டு கூறியதாம். பணை - மூங்கில். மெய்யருகே - மெய்யில்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

* * * * * இப்பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

பொழிப்புரை :

* * * * * இப்பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

குறிப்புரை :

* * * * * இப்பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

திரைகளெல் லாமல ருஞ்சுமந்து செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்
கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக் காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி
உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல வுத்தம ராயுயர்ந் தாருலகில்
அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க் காட்செய வல்ல லறுக்கலாமே.

பொழிப்புரை :

காவிரியின் வாய்க்கால்கள் எல்லா மலர்களையும் சுமந்தும், செழுமையான மணிகள் முத்துக்கள் பொன் ஆகியவற்றை வாரிக் கொண்டும் வந்து இருகரைகளிலும் அழகு பொருந்த உராய்ந்து வளம் சேர்க்கும் திருக்காட்டுப்பள்ளியுள் பாம்புகளை இடையில் கட்டிய செல்வராய் எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு, வேதம் முதலான மேம்பட்ட உரைகள் யாவற்றையும் உணர்ந்த நல்ல உத்தமராய்த் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம்.

குறிப்புரை :

இது இறைவற்கு ஆட்செய்யின் அல்லல் அறுக்கலாம் என்கிறது. காவிரி கால்திரைகள் எல்லா மலருஞ் சுமந்து, மணி முத்தொடு பொன்வரன்றி, கரைகள் எல்லாம் அணிசேர்ந்து உரிஞ்சி பொருகாட்டுப்பள்ளி என இயைத்து, காவிரியாற்றின் வாய்க்கால்களின் அலைகள் எல்லா வகையான மலரையும் சுமந்து மணிகளையும் முத்து்களையும் பொன்னையும் வாரிக்கொண்டு, இருகரைகளிலும் அழகு பொருந்த மோதிப் பொருதற்கு இடமாகிய காட்டுப்பள்ளி எனப் பொருள்கொள்க. உரைகள் எல்லாம் உணர்வெய்தி - வேதங்கள் யாவற்றையும் உணர்ந்து. நல்ல உத்தமராய் உலகில் உயர்ந்தார் செல்வர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கலாம் எனக் கூட்டுக.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

தோலுடை யான்வண்ணப் போர்வையினான் சுண்ண வெண்ணீறு துதைந்திலங்கு
நூலுடை யானிமை யோர்பெருமான் நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்
காலுடை யான்கரி தாயகண்டன் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
மேலுடை யானிமை யாதமுக்கண் மின்னிடை யாளொடும் வேண்டினானே.

பொழிப்புரை :

புலித்தோலை ஆடையாக உடுத்தவன். யானைத்தோலை அழகிய போர்வையாகப் போர்த்தவன். திருவெண்ணீறாகிய சுண்ணத்தில் செறிந்து விளங்கும் பூணூலை மார்பகத்தே உடையவன். தேவர்கட்குத் தலைவன். பதிஞானத்தாலே அன்பர்கள் வழிபாடு செய்யும் திருவடிகளை உடையவன். கரிய கண்டத்தை உடையவன். பலராலும் விரும்பப் பெறும் திருக்காட்டுப்பள்ளியில் இமையாத மூன்றாவது கண்ணை நெற்றியில் உடைய அவ்விறைவன் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு விரும்பி எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

இது இறைவன் உமையாளோடு காட்டுப்பள்ளியை விரும்பி மேவினான் என்கின்றது. வண்ணப் போர்வை - அழகிய போர்வை, துதைந்து - செறிந்து, நுண்ணறிவால் வழிபாடு செய்யும் காலுடையான் - சிவஞானத்தால் அருளே வடிவாகக் கொண்டு வழிபடும் திருவடியை உடையவன். நுண்ணறிவால் வழிபடாதவர்க்குத் திருவடி அருளாகக் காட்சியளிக்காது என்பது வெளிப்படை. நுண்ணறிவு - மெய்யறிவு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

சலசல சந்தகி லோடுமுந்திச் சந்தன மேகரை சார்த்தியெங்கும்
பலபல வாய்த்தலை யார்த்துமண்டிப் பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்க்
கலகல நின்றதி ருங்கழலான் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்
சொலவல தொண்டர்க ளேத்தநின்ற சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே.

பொழிப்புரை :

சலசல என்னும் ஒலிக் குறிப்போடு சந்தனம் அகில் முதலியவற்றை அடித்துவந்து, சந்தனத்தைக் கரையில் சேர்த்துப் பற்பல வாய்க்கால்களின் தலைப்பில் ஆரவாரித்து ஓடிப் பாய்ந்து வயல்களில் இழிந்து வளம் சேர்க்கும் காவிரியின் தென்பாங்கரில் சலசல என்னும் ஓசையோடு அதிரும் கழல்களை அணிந்த இறைவனால் விரும்பப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து இறைவனது பொருள்சேர் புகழ் பேசும் தொண்டர்களால் துதிக்கப்படும் அச் சூலபாணியின் திருவடிப் பெருமையை நாமும் கூறித் தோத்திரிப்போம்.

குறிப்புரை :

இது காட்டுப்பள்ளியுள் தொண்டர்கள் துதிக்க இருந்த பெருமான் கழல்களைத் தோத்திரிப்போம் என்கின்றது. சலசல - ஒலிக்குறிப்பு, சந்து - சந்தனம், உந்தி - செலுத்தி. வாய்த்தலை - வாய்க்காலின் தலைப்புக்கள். ஆர்த்து - ஒலித்து, கழலான் - கழலானாய சிவபெருமான்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

தளையவிழ் தண்ணிற நீலநெய்தல் தாமரை செங்கழு நீருமெல்லாங்
களையவி ழுங்குழ லார்கடியக் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்
துளைபயி லுங்குழ லியாழ்முரலத் துன்னிய வின்னிசை யாற்றுதைந்த
அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க் காட்செய வல்ல லறுக்கலாமே.

பொழிப்புரை :

கட்டவிழ்ந்த குளிர்ந்த நிறத்துடன்கூடிய நீலோற்பலம், நெய்தல், தாமரை, செங்கழுநீர் ஆகிய எல்லா மலர்களையும், அவிழ்ந்து விழும் கூந்தலை உடைய உழத்தியர்களைகளாய்ப் பிடுங்கி எறியும் வளம் உடையதும், பலராலும் விரும்பப்படுவதும் ஆகிய திருக்காட்டுப்பள்ளியில் துளைகளால் ஓசை பயிலப்பெறும் புல்லாங்குழல் யாழ் ஆகியன இடைவிடாமல் ஒலிக்கும் இன்னிசை முழக்கோடு வளையினின்றும் பிரியாத பாம்புகளை இடையிற் கட்டி எழுந்தருளிய செல்வராகிய பெருமானுக்கு ஆளாய்த் தொண்டு செய்யின் அல்லல் அறுக்கலாம்.

குறிப்புரை :

இதுவும் ஆரண்ய சுந்தரர்க்கு ஆட்செய அல்லல் அறுக்கலாம் என்கிறது. தளை - இதழ்களின் கட்டு. நீலம் முதலிய நீர்ப்பூக்களை, அவிழுங் கூந்தலையுடைய கடைசியர்கள் களையாகப்பிடுங்கி எறிகின்றார்கள். குழலார்களைகடிய எனக் கூட்டுக. துதைந்த ஆர்த்த செல்வர் எனக் கூட்டுக.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

முடிகையி னாற்றொடு மோட்டுழவர் முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டி
கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி காதல்செய் தான்கரி தாயகண்டன்
பொடியணி மேனியி னானையுள்கிப் போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்
றடிகையினாற்றொழ வல்லதொண்ட ரருவினை யைத்துரந் தாட்செய்வாரே.

பொழிப்புரை :

நாற்று முடியைக் கையால் பறிக்கும் வலிய உழவர்கள் தங்கள் முன்கைத்தினவை வெல்லக் கட்டியை உடைப்பதால் போக்கிக் கொள்கின்ற திருக்காட்டுப்பள்ளியை விரும்பி உறைபவனும், கரிதான கண்டமுடையவனும், திருநீறணிந்த மேனியனும் ஆகிய பெருமானை நினைந்து அபிடேக நீர், மலர்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்று துதித்து முன்நின்று அவன் திருவடிகளைக் கையால் தொழவல்ல தொண்டர்கள் நீக்குதற்கு அரிய வினைகளினின்றும் நீங்கி அவ்விறைவனுக்கு ஆட்செய்வர்.

குறிப்புரை :

இது பூவும் நீருங்கொண்டு பூசித்துத் தொழும் தொண்டர்கள் வினைநீங்கி ஆட்செய்வர் என்கின்றது. முடி - நாற்றுமுடி. தொடும் - பறிக்கின்ற, மோட்டுழவர் - வலிய உழவர்கள், மணிக்கட்டின் வலியை வெல்லக் கட்டியை உடைப்பதால் போக்குகின்ற காட்டுப்பள்ளி என்க. கரிதாயகண்டன் என்றதிலுள்ள ஆக்கப் பெயரெச்சம் கருமை இயற்கையன்மையை உணர்த்தியது. அருவினை - இறைவனருள் ஒன்றாலன்றி வேறு எவற்றாலும் நீங்காத ஆகாமிய சஞ்சித வினைகள். எனவே இறைவற்கு ஆட்செய்யவும் வினைநீக்கம் வேண்டும் என்பது வலியுறுத்தியவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழ னாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான் வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட
கறையுடை யான்கன லாடுகண்ணாற் காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்
குறையுடை யான்குறட் பூதச்செல்வன் குரைகழ லேகைகள் கூப்பினோமே.

பொழிப்புரை :

தலையில் பிறையை அணிந்தவனும், பெரியோர்கள் தலைவனும், வேதங்களை அருளியவனும், மழுவாகிய வாளை உடையவனும், நீண்ட கரிய கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்ட கறைக் கண்டனும், கனல் சேர்ந்த நுதல்விழியால் காமனைக் காய்ந்தவனும், அன்பர்களின் குறைகளைக் கேட்டறிபவனும், குறட்பூதச் செல்வனுமாகிய, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள இறைவன் திருவடிகளை நாள்தோறும் விரும்பி ஏத்தி அத்திருவடிகளையே கை கூப்பினோம்.

குறிப்புரை :

இது ஆரண்யசுந்தரரின் அடிகளைக் கைகூப்பி வணங்கினோம் என்கிறது. பிறை - முதற்பிறை. வார்தரு - ஒழுகுகின்ற, மால்கடல் - மால் துயிலுகின்ற கடலாகிற பாற்கடல். கறை - களங்கம். கனலாடு கண்ணால் - நெற்றிக்கண்ணால். காட்டுப்பள்ளிக் குறையுடையான் - காட்டுப்பள்ளியில் நேர்த்திக் குறையை நிறைவித்தலையுடையவன். குறள் - குறுகிய.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

செற்றவர் தம்மர ணம்மவற்றைச் செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்
கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான் காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி
உற்றவர் தாமுணர் வெய்திநல்ல வும்பருள் ளார்தொழு தேத்தநின்ற
பெற்றம ரும்பெரு மானையல்லாற் பேசுவதும் மற்றொர் பேச்சிலோமே.

பொழிப்புரை :

தேவர்க்குப் பகைவராய திரிபுரத்து அசுரர்தம் அரணங்களைச் செவ்வழலால் எரியூட்டி அழித்துப் பெருவீரத்தோடு கற்றவர்கள் தொழுதேத்த மேம்பட்டு, விளங்கும் இறைவனால் காதலிக்கப்படும் திருக்காட்டுப்பள்ளியை அடைந்து, மெய்யுணர்வு பெற்ற தேவர்கள் பலரும் தொழுது ஏத்தும், விடை மீது ஏறி அமரும் அப்பெருமான் புகழல்லால் மற்றோர் பேச்சைப் பேசுவதிலோம்.

குறிப்புரை :

இது நாம் ஆரண்யசுந்தரரைப்பற்றியன்றி வேறொன்றையும் பற்றிப்பேசோம் என்கின்றது. செற்றவர் - பகைவர், அரணம் - கோட்டை. உற்றவர்தாம் - மலபரிபாகம் உற்ற ஆன்மாக்கள். உணர்வு - மெய்ஞ்ஞானம். பெற்றம் அமரும் - இடபத்தை ஊர்கின்ற; பெற்ற மரும் என அம் ஈறு கெட்டது. அவனையன்றிப் பேசும் பேச்சு மற்றொன்றிலாமையால் மற்றொர் பேச்சிலோம் என்றார்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த் துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்
குண்டர்க ளோடரைக் கூறையில்லார் கூறுவதாங்குண மல்லகண்டீர்
அண்டம றையவன் மாலுங்காணா ஆதியி னானுறை காட்டுப்பள்ளி
வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.

பொழிப்புரை :

நிறம் பொருந்திய காவியாடையை மேனியில் போர்த்து, உச்சி வேளையில் வயிறு கொள்ளாத அளவில் தின்று பொய் கூறும் உடல்பருத்த புத்தர், இடையில் உடையில்லாத திகம்பர சமணர் கூறுவன நற்பயனைத்தாராதன என்பதை அறிந்து கொள்ளுங்கள். உலகைப் படைத்த வேதாசாரியனான பிரமனும், மாலுங் காணாத முதல்வன் உறையும் திருக்காட்டுப்பள்ளிக்குச் சென்று வண்டு அமரும் மலர்க் கொன்றை புனைந்த வார்சடையோன் கழல்களை ஏத்தி வாழ்த்துவோம்.

குறிப்புரை :

இது புத்தரும், சமணரும் கூறுவன குணமற்ற சொற்கள்; அவைகளை உறுதியென நம்பாதீர்; இறைவன் கழலை ஏத்துவோம் என்கின்றது. துவர் ஆர்துகில் - காவியாடை, கொள்ளாமை உண்டு - கொள்ளாத அளவு மிகுதியாக உண்டு, குண்டர்கள் - உடல் பருத்த புத்தர்கள். அரைக்கூறையில்லார் - அரையில் ஆடையில்லாதவர்கள்; திகம்பர சைனர்கள் கூறுவன குணமல்ல. தாம் அசை. கண்டீர் - கண்டு தெளியுங்கோள். அண்டமறையவன் - இரண்ய கருப்பனாகிய பிரமன். பிரமன் நீரையே முதற் படைத்தான் என்பதும், அதில் பொன்மயமான முட்டையாக உலகையாக்கினான் என்பதும் புராண வரலாறு. அமரும் - விரும்பும்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

பொன்னியல் தாமரை நீலநெய்தல் போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக்
கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக் காதல னைக்கடற் காழியர்கோன்
துன்னிய வின்னிசை யாற்றுதைந்து சொல்லிய ஞானசம் பந்தனல்ல
தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந் தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.

பொழிப்புரை :

திருமகள் வாழும் தாமரை, நீலம், நெய்தல் ஆகிய மலர்களால் பகலும் இரவும் பொலிவெய்தும் பொய்கைகளில் கன்னிப்பெண்கள் குடைந்தாடும் திருக்காட்டுப்பள்ளியை விரும்பும் இறைவனைக் கடல் சூழ்ந்த காழி மாநகர்த்தலைவனாகிய ஞானசம்பந்தன் பொருந்திய இன்னிசைகூட்டிச் சொன்னதும், தானே தன்னிச்சையால் பாடியவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல் மாலை பத்தையும் மனத்திடைத் தரிக்க வல்லவர் புகழ் எய்துவர்.

குறிப்புரை :

இது ஞானசம்பந்தன் இசையாற்சொன்ன இந்த மாலை பத்தும் வல்லார் புகழ் எய்துவர் என இம்மைப்பயன் கூறி, மறுமைப்பயனும் உடன் தோன்றத் தெரிவித்துத் திருக்கடைக்காப்பு அருளிச்செய்கிறது. பொன்னியல் தாமரை - இலக்குமி வசிக்கும் தாமரை. தாமரை பகலில் பொலிவது; நீலமும் நெய்தலும் இரவிற் பொலிவன; இவைகளையுடைமையால் பொய்கை எஞ்ஞான்றும் பொலிகின்றது என்பது குறித்தவாறு, காட்டுப்பள்ளிக்காதலன் - காட்டுப்பள்ளியில் விருப்புடைய பெருமான், துதைந்து - செறிந்து, நல்ல தன் இசையால் சொன்ன - நல்ல தனது மிடற்றிசையால் அமைத்து அருளிய./n பத்துத் திருப்பாடல்களும் கூடியே மாலையாகவும், மாலை பத்தும் என்றது, ஒவ்வொரு திருப்பாடலுமே தனித்தனிப் பயனுடையதாய், வழிபடும் முறைகளை உடையதாய் இருக்கும் சிறப்புநோக்கி. ஒவ்வொரு பாடலுமே ஒரு மாலைபோன்றது. அங்ஙனமாகிய பத்து மாலைகளையும் மனத்தில் தரிக்கவல்லவர் இம்மையிற் புகழ் எய்துவர்; எனவே மறுமையில் வீடெய்துவர் என்பது தாமே பெறப்பட்டது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

அங்கமும் வேதமும் ஓதும்நாவர் அந்தணர் நாளும் அடிபரவ
மங்குன் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க, வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளியுள்ள இறைவனே! செங்கயல்கள் நிறைந்த புனல்சூழ்ந்ததும், செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏன்? சொல்வாயாக.

குறிப்புரை :

அங்கம் - வேதத்தின் அங்கங்களாகிய நிருத்தம், சிட்சை, கற்பம், சந்தஸ், வியாகரணம், ஜோதிஷம் என்ற ஆறு. மங்குல்மதி - வானமண்டலத்துச் சந்திரன், அந்தணர் அடிபரவ மருகல் நிலாவிய மைந்த! கணபதியீச்சரம் காமுறவு சொல்லாய் என இயைக்க. கங்குல் - அர்த்தயாமம். எரி - திருக்கரத்திலுள்ள தீ.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

நெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூன்மறை யாளரேத்த
மைதவழ் மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்களேத்துஞ் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கைதவழ் கூரெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.

பொழிப்புரை :

அவியாக அளிக்கப் பெறும் நெய் தவழ்ந்து எரியும் முத்தீயைப் பாதுகாப்பாக ஓம்பி வரும் நேர்மையாளரும், முப்புரி நூல் அணிந்த வேத வித்துக்களும் ஆகிய அந்தணர் ஏத்த, கரிய மேகங்கள் தவழும் மாட வீடுகள் நிறைந்த வீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளிய இறைவனே! தவங்கள் பலவும் செய்யும் நான்மறையோர் போற்றும் புகழ் பொருந்திய திருச்செங்காட்டங்குடியில், திருக்கரத்தில் மிக்க தீயை ஏந்தி ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.

குறிப்புரை :

அக்கினிகாரியம் செய்யும் அந்தணர்கள் வழிபடும் மருகல் என்றும், தவமுதியோர்களாகிய மறையோர் போற்றும் செங்காட்டங்குடி என்றும் இரண்டினியல்பும் ஒத்தமை உரைக்கப் பெறுகின்றது. மூஎரி - ஆகவனீயம், காருகபத்யம், தக்ஷிணாக்கினி என்ற முத்தீ. அந்தணர்கள் மணக்காலத்து எடுத்த தீயை அவியாதே பாதுகாக்க வேண்டியது மரபாதலின் மூ எரிகாவல் ஓம்பும் மறையாளர் என்றார். நேர் - நேர்மை. புரிநூல் - மூன்று புரியாகத் திரிக்கப்பெற்ற பூணூல். மை - மேகம். கை தவழ் - திருக்கரத்தில் திகழ்கின்ற. கூர் எரி - மிக்க தீ.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
மால்புகை போய்விம்மு மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேல்புல்கு தண்வயற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கால்புல்கு பைங்கழ லார்க்கவாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.

பொழிப்புரை :

மான் தோலோடு கூடிய முப்புரிநூல் அணிந்த மார்பினராய்த் திரளாய்நின்று வேதம் வல்ல அந்தணர்கள் வளர்த்த செந்தீயிலிருந்து எழுந்த கரிய புகைபோய் மிகவும் மிகுதியாக வெளிப்படும் மாடங்களோடு கூடிய வீதிகளை உடைய திருமருகலில் விளங்கும் இறைவனே, சேல்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களை அடுத்த சோலைகளால் சூழப்பட்ட சிறப்புமிக்க திருச்செங்காட்டங்குடியில் காலில் கட்டிய கழல்கள் ஆர்க்க ஆடிக்கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் என்ன? சொல்வாயாக.

குறிப்புரை :

இது, யாகப்புகை விம்முகிற மருகலிலுள்ள தேவனை, குளிர்ந்த வயலும் சோலையும் சூழ்ந்த செங்காட்டங்குடியை விரும்புவதேன் என்று வினாவுகிறது. தோல் - கிருஷ்ணாஜினம் என்னும் மான்தோல். மால் புகை - கரிய புகை. சேல் புல்கு - சேல்மீன்கள் தழுவிய. கால் - திருவடி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

நாமரு கேள்வியர் வேள்வியோவா நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணிக் கோயின்மேய மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.

பொழிப்புரை :

நாவிற் பொருந்திய வாய்ப்பயிலப்பட்டுவரும் வேதங்களை ஓதி உணர்ந்தவர்களும், வேள்விகளை இடைவிடாமல் செய்து வருபவர்களுமாகிய நான்மறையாளர் வழிபடச் செல்வம் மருவிய மணிக்கோயிலை உடைய மருகலில் விளங்கும் மைந்தனே! தேன் நிறைந்த அழகிய பொழில்களால் சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் விளங்குகின்ற அழகும் பெருமையும் மிக்க கணபதியீச்சரத்தைக் காமுற்று இராப்போதில் நடனம் ஆடுதற்குக் காரணம் யாது? சொல்வாயாக.

குறிப்புரை :

இஃது, அந்தணர் வேள்வி இடையறாத மருகல் நிலாவிய நீ, பொழிலும் சோலையும் சூழ்ந்த செங்காட்டங்குடியைக் காமுறுதல் ஏன்? என்கின்றது. நாமரு கேள்வியர் - நாவிற் பொருந்திய வேதங்களையுடையவர். கேள்வி - வேதம் (சுருதி என்பதன் மொழி பெயர்ப்பு) மா - பெருமை, இலக்குமி. காமரு - அழகிய.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

பாடன் முழவும் விழவுமோவாப் பன்மறை யோரவர் தாம்பரவ
மாட நெடுங்கொடி விண்டடவும் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காடக மேயிட மாகவாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.

பொழிப்புரை :

பாடலும், அதற்கிசைந்த முழவு ஒலியும், திருவிழாக்கள் ஒலியும்,இடைவிடாமல் நிகழ்வதும் மாட வீடுகளில் கட்டிய கொடிகள் வானைத்தடவுவதும் ஆகிய சிறப்புக்களை உடைய திருமருகலில் வேதங்கள் பலவும் கற்ற அந்தணாளர் பரவ எழுந்தருளிய இறைவனே! உயரமான மணம் மிக்க மலர்ச்சோலைகளால் சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில், காட்டிடமே நாடகமாடுதற்கு இடமாக இருக்கவும், ஆடுதற்குரிய இடமாகக் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.

குறிப்புரை :

இது விழவறாத மாடங்களோடு கூடிய மருகலிலுள்ள நீ, காடகமேயிடமாக ஆடுங்கணபதியீச்சரம் காமுறல் ஏன் என்கிறது. பாடலும், முழவும், விழாவும் இடையறாத மருகல் எனவும், மறையோர் பரவ நிலாவிய மைந்த எனவும், கொடி தடவு மருகல் எனவும் இயைத்துப் பொருள் காண்க. சேடகம் - கேடகம் போலும் வட்டமாகிய மலர். ஆடும் - ஆடுதற்கிடமாகிய.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

புனையழ லோம்புகை யந்தணாளர் பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கனைவளர் கூரெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.

பொழிப்புரை :

கிரியைகள் பலவற்றாலும் அழகு செய்யப்பெற்ற முத்தீயை வளர்க்கும் கைகளை உடைய அந்தணர்கள், நாள்தோறும் தன் திருவடிகளைப்போற்ற, இல்லங்களும் விளங்கும் மாடங்களும் நிறைந்த வீதிகளை உடைய திருமருகலில் விளங்கும் இறைவனே! நெற்பயிர்கள் திளைத்து வளரும் தண் வயல்களையடுத்த சோலைகளால் சூழப்பெற்ற நீர்வளம் மிக்க செங்காட்டங்குடியில் எரியேந்திக் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக.

குறிப்புரை :

இது அழலோம்பும் அந்தணர்கள் வணங்க மருகலில் எழுந்தருளியுள்ள மைந்தனே! கணபதீயீச்சரம் காமுறல் ஏன் என்கிறது. புனையழல் - சாதகன்மம் முதலான பதினாறு கிரியைகளாலும் அழகு செய்யப்பெற்ற யாகாக்கினி. பொன்னடி - பொன்போல அனைவராலும் போற்றப்பெறுகின்ற திருவடி, இயற்கையே களிம்பற்று ஒளிபெற்று என்றும் மங்காத பொன்னைப்போல, இயற்கையே பாசம் இன்றி அடைந்தாரையும் பாசங்களினீக்குகின்ற திருவருள், கல்லெறிய விலகும் பாசி போல ஒருநாள் ஒருகால் போற்ற, சிவஞானம் சித்திக்கும்; அந்தணர்கள் நாடோறும் போற்றிசைப்பதால் நிலைத்த ஞானத்தை எய்துகின்றனர் என்பதாம். உடன்பிறந்தே கொல்லும் பகையாய், தன்னையும் காட்டாது தலைவனையும் காட்டாது நிற்கின்ற மூலமலப் பகையை வெல்லும் வீரனாதலின் மைந்த என்றார். மைந்து - வலிமை, சினை - கிளை; முளையுமாம். கனை - மிகுதி. ஓசையுமாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை

பொழிப்புரை :

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை

குறிப்புரை :

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

பூண்டங்கு மார்பி னிலங்கைவேந்தன் பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து
மாண்டங்கு நூன்மறை யோர்பரவ மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.

பொழிப்புரை :

கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அணிகலன்கள் பொருந்திய மார்பினை உடைய இலங்கை மன்னன் இராவணனின் அழகிய பெரிய தோள்களை அம்மலையாலேயே அடர்த்து, மாட்சிமை பொருந்திய நான்மறையோர் பரவத் திருமருகலில் எழுந்தருளி விளங்கும் இறைவனே! வானளாவிய மண மலர்ச்சோலைகளால் சூழப்பெற்ற சீர்மிக்க செங்காட்டங்குடியில் அழகிய உன் திருத்தோள்களை அசைத்து இரவில் நடமிடுதற்கு இடனாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.

குறிப்புரை :

பூண் - மதாணி முதலிய மார்பணிகள், மாண் தங்கு -மாட்சிமை தங்கிய. சேண் - ஆகாயம். காண் தங்கு - அழகு தங்கப் பெற்ற. எல்லி - இரவு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

அந்தமு மாதியுந் நான்முகனு மரவணை யானு மறிவரிய
மந்திர வேதங்க ளோதுநாவர் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கந்தம கிற்புகை யேகமழுங் கணபதி யீச்சரங் காமுறவே.

பொழிப்புரை :

நான்முகனும் அரவணையானும் ஆதியாய முடியையும் அந்தமாகிய அடியையும் அறிதற்கு அரியவனாய், மந்திர வடிவான வேதங்களை ஓதும் நாவினரான அந்தணர் பரவி ஏத்தத் திருமருகலில் விளங்கும் இறைவனே! செந்தமிழ் வல்லோர் பரவித் துதிக்கும் சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் அகில் புகை மணமே கமழும் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.

குறிப்புரை :

அந்தம் அரவணையானும் ஆதி நான்முகனும் அறிவரிய என எதிர்நிரனிறை. அந்தம் ஆதி - அடி முடி. மந்திர வேதங்கள் - மந்திர வடிவாகிய வேதங்கள், அவை இருக்கு, வேதங்களில் இருக்கு மந்திரங்களும், யஜுர் பிரயோகங்களும், சாமம் கானங்களுமாக அமைந்தன, வேதம் ஓதும் அந்தணர்கள் விளங்கும் மருகலில் இருக்கும் இறைவன், செந்தமிழ் நூலோர் பரவியேத்தும் செங்காட்டங்குடியை விரும்பியதில் நயமிருத்தல் ஓர்க. கந்தமே கமழும் என மாற்றுக.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

இலைமரு தேயழ காகநாளும் இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்
நிலையமண் தேரரை நீங்கிநின்று நீதரல் லார்தொழு மாமருகல்
மலைமக டோள்புணர் வாயருளாய் மாசில்செங் காட்டங் குடியதனுள்
கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.

பொழிப்புரை :

மருத மரத்து இலையின் சாற்றினால் நிறமூட்டிய ஆடைகளை அணிந்த புத்தர், கடுக்காய், சுக்கு, இவற்றைத் தின்னும் சமணர் ஆகியோரை விடுத்து, சைவர்கள் தொழத்திருமருகலில் மலைமகளோடு உறையும் மைந்தனே! குற்றமற்ற செங்காட்டங்குடியில் மான்தோலை உடுத்தி நள்ளிருளில் ஆடுதற்கு இடனாய்க்கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

குறிப்புரை :

மருது இலை - மருத மரத்தின் இலை. துவர்க்காய் -கடு, பாக்கு. தேரர் - சாக்கியர். நீதர் - இழிந்தோர்; நீசர் என்பதன் போலி, கலைமல்கு தோல் - மான்தோலாடை, எல்லி - இரவு. கையில் மருதிலைச் சாயம்பூசி, வெற்றிலை பாக்கும் சுக்கும் தின்னுதல் சமணத் துறவியர் இயல்பு போலும். நீதரல்லார் தேரரை நீங்கிநின்று தொழும் மாமருகல் எனக்கூட்டுக.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

நாலுங் குலைக்கமு கோங்குகாழி ஞானசம் பந்தன் நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடமோங்கும் மருகலின் மற்றதன் மேன்மொழிந்த
சேலும் கயலும் திளைத்தகண்ணார் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
சூலம்வல் லான்கழ லேத்துபாடல் சொல்லவல் லார்வினை யில்லையாமே.

பொழிப்புரை :

தொங்குகின்ற குலைகளோடு பாக்கு மரங்கள் ஓங்கி வளரும் சீகாழிப்பதியினனாய ஞானசம்பந்தன், நலம் திகழ்வதும், மேகமும் பிறையும் தவழும் மாடங்கள் ஓங்கியதுமான திருமருகல் இறைவனையும், சேல் கயல் ஆகிய மீன்வகைகளை ஒத்த கண்களை உடைய மகளிர் வாழ்வதும் சிறப்பு மிக்கதும் ஆகிய செங்காட்டங்குடியில் முத்தலைச் சூலம் ஏந்தியவனாய் விளங்கும் பெருமானையும் புகழ்ந்து ஏத்திய பாடல்களைச் சொல்லித் துதிக்க வல்லார் வினைகள், இல்லையாகும்.

குறிப்புரை :

நாலும் - தொங்குகின்ற. மாலின் மதி தவழ் மாடம் -மேகத்தோடு பிறையுந்தவழ்கின்ற மாடங்கள். திளைத்த - ஒத்த. சூலம் ஞானப் படையாய் மலமாயாகன்மங்களைப் போக்குவதாகலின், சூலம் வல்லான் கழல் ஏத்து பாடல் வல்லார் வினை இல்லையெனக் காரணம் குறிப்பித்தருளினார்கள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடக மாடும்நள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவ ரொடுந்தொழு தேத்திவாழ்த்த
ஆடகமாடம் நெருங்குகூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

பொழிப்புரை :

பாடகம் என்னும் அணிகலன் அணிந்த மென்மையான அடிகளை உடைய உமையம்மையோடு, பிணக்காடாகிய இடுகாட்டைப் பற்றி நின்று நாடகம் ஆடும் நள்ளாற்று நம் பெருமானே! நீ கையில் வளையல் அணிந்த மகளிர் தம் துணைவர்களோடும் கூடி வந்து வழிபடுவதும், பொன்மாளிகைகள் நிறைந்ததுமான கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

குறிப்புரை :

பாடகம் - காலணிகளுள் ஒன்று. பாடக மெல்லடி என்று இணைத்தது பாடகத்தின் வன்மையும் அதனைத் தாங்கல் ஆற்றாத அடியின் மென்மையும் குறித்தவாறு. சூடகம் - வளை. துணைவர் - கணவர். ஆடகமாடம் - பொன்மாளிகைகள்.
குருவருள்: பாண்டி நாட்டின் மூன்று வாதங்களிலும் வெற்றி கொண்டு சைவ சமயத்தை நிலைநிறுத்திய பிள்ளையார், பாண்டியன் நெடுமாறன், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் ஆகிய மூவரும் பிரிவாற்றாது உடன்வர பாண்டி நாட்டுத் தலங்களைத் தரிசித்துப் பதிகம் பாடிப் பாண்டிநாட்டுக் கீழ் எல்லையில் உள்ளதும் குலச்சிறையார் அவதரித்ததுமான மணமேற்குடி வந்து வழிபட்டுச் சுற்றியுள்ள பல பதிகளையும் வணங்கிப் போற்றினார். காவிரி நாடு மீண்டருளத் திருவுளம் பற்றினார். தன்னோடு உடன் வந்த மன்னன் முதலிய மூவரும் பிரிவாற்றாது உடன்வரும் குறிப்பு நோக்கிய பிள்ளையார்,`இங்கு நான் மொழிந்ததனுக்கு இசைந்தீராகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர்` என்று அவர்கட்கு விடைகொடுத்துப் பொன்னி நாடணைந்தார். பாண்டி நாட்டில் அனல்வாதம் செய்தபோது கயிறு சாத்திப் பார்த்தபோது `போகமார்த்த பூண்முலையாள்` என்னும் திருநள்ளாற்றுப் பதிகம் கிடைத்தது. அதனால் வெற்றியும் கிடைத்தமையைத் திருவுளம் கொண்டு நள்ளாறு சென்று வழிபட எண்ணினார். வழியில் திருக்கொள்ளம்பூதூர் முதலிய தலங்களை வழிபட்டுத் திருநள்ளாறு சேர்ந்து நம்பெருமானைப் `பாடக மெல்லடிப் பாவையோடும்` என்னும் பதிகத்தால் பெருமான் நடத்திய நாடகத்தை `நாடகம் ஆடும் நள்ளாறுடைய நம்பெருமான் இது என்கொல் சொல்லாய்? `என்று வினவினார். பிள்ளையார் நம்பெருமான் என்றே இப்பதிகப் பாடல்தோறும் குறிப்பிட்டுள்ளார். தர்ப்பாரண்யேசுரர் என்று இன்று வழங்கும் பெயர் குறிக்கப்பெறாமை சிந்திக்கத் தக்கது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

திங்களம் போதுஞ் செழும்புனலும் செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
நங்கண் மகிழும்நள் ளாறுடைய நம்பெருமானிது வென்கொல்சொல்லாய்
பொங்கிள மென்முலை யார்களோடும் புனமயி லாட நிலாமுளைக்கும்
அங்கழ கச்சுதை மாடக்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

பொழிப்புரை :

பிறைமதி, அழகிய மலர்கள், வளமான கங்கை நதி ஆகியவற்றைத் தன் செஞ்சடையின் மேல் அருகருகே வைத்து மகிழ்ந்து நம் கண்கள் களிக்குமாறு நள்ளாற்றின்கண் எழுந்தருளிய நம் பெருமானே! நீ, பூரித்து எழும் மென்மையான இளைய தனங்களை உடைய மடந்தையரோடு கானகத்தில் வாழும் ஆண் மயில்கள் களித்தாட, பெருமை மிக்க தமிழ்ச்சங்கத்தினையும், நிலவொளி வெளிப்படுமாறு வெண்மையான சுண்ணாம்பினால் கட்டப்பட்ட மாடங்களையும் உடைய கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

குறிப்புரை :

போது வாடாமைப் புனல் வைப்பார்போலத் திங்களம் போது வாடாத வண்ணம் செழும்புனலைச் சேரவைத்தார் என்பது சிந்தித்தற் குரியது. நங்கண் - நம்மிடத்து. மகளிரோடு மயிலாட என்றது சாயலால் வேற்றுமை தோன்றாமையால். கார் வரவால் களிப்பது மயில். கணவர் வரவால் களிப்பவர் மகளிர். ஆட்டம் ஈரிடத்தும் நிகழ்வது இயல்பு. அம் கழகம் - பெருமை மிக்க தமிழ்ச் சங்கம். நிலா - வெள்ளொளி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

தண்ணறு மத்தமும் கூவிளமும் வெண்டலை மாலையும் தாங்கியார்க்கும்
நண்ணல ரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்துட னேத்தப் புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

பொழிப்புரை :

குளிர்ந்த மணம் வீசும் ஊமத்தை மலர் வில்வம் ஆகியவற்றையும் வெண்மையான தலை மாலையையும் அணிந்து, திருவருள் இருந்தாலன்றி யாராலும் சென்று வழிபடற்கரிய நள்ளாற்றின்கண் எழுந்தருளிய நம் பெருமானே! நீ, புண்ணிய வாணரும் மாதவர்களும் வந்து ஏத்துவதும் அணி கலன்கள் புனைந்த மகளிர் இறைவனது புகழ் சேர்ந்த பாடல்களைப் பாடுவதுமான கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ?சொல்வாயாக .

குறிப்புரை :

தண்ணறு மத்தம் - குளிர்ந்த மணம் வீசுகின்ற ஊமத்தம்பூ. இறைவனுக்கு உன்மத்த சேகரன் என்பதும் ஒருபெயர். கூவிளம் - வில்வம். தாங்கி உடைய பெருமான் என முடிக்க. யார்க்கும் நண்ணலரிய நள்ளாறு - எவர்க்கும் அணுக முடியாத நள்ளாறு. என்றது நாடிழந்தும் நகரிழந்தும் மனைவியையிழந்தும் உருமாறியும் வினையை நுகர்ந்து கழித்த நளன் போன்றோரன்றி வினைச் சேடமுடைய எவர்க்கும் நணுக முடியாதது என்பதை விளக்க. புண்ணியவாணர் - சென்ற பிறவிகளில் ஈட்டிய புண்ணியங்கொண்டு வாழ்பவர்கள். மாதவர் - இப்பிறவியில் புண்ணியம் ஈட்டுவார். அண்ணலின் பாடல் - இறைவனுடைய புகழ் சேர்ந்த பாடல்கள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

பூவினில் வாசம் புனலிற்பொற்புப் புதுவிரைச் சாந்தினில் நாற்றத்தோடு
நாவினிற் பாடல்நள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர்விச்சா தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி
ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

பொழிப்புரை :

பூக்களில் வாசனையாய், நீரில் தண்மையாய், புதிய சந்தனத்தில் மணமாய், நாவில் பாடலாய்க் கலந்து விளங்கும் நள்ளாற்று நம் பெருமானே! நீ, தேவர்களும், அசுரர்களும், சித்தர்களும், வித்யாதரர்களும் ஆகிய கூட்டத்தினரோடு சிறந்து விளங்குபவராய்ப் பசுவினிடம் தோன்றும் பஞ்சகவ்யங்களால் ஆட்டி வழிபடக் கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

குறிப்புரை :

பூவினில் வாசம் முதலியன இறைவன் கலந்து நிற்கும் நிலை கூறியன. `பூவினுள் நாற்றம் நீ தீயினுள் தெறலும் நீ` என்னும் பரிபாட்டானும் அறிக. புனலில் பொற்பு - நீரில் அழகு. புதுவிரைச்சாந்து - புதிதாக அரைத்து எண்வகை மணப் பொருள்களும் கூட்டப் பெற்ற சந்தனம். நள்ளாறன் ஐம்பொறிகளுக்கும் இன்பப்பொருளாயிருக்கும் தன்மையைச் சில சொல்லித் தெரிவிக்கின்றார். பூவினில் வாசம் என்பது முதல் நாவினில் பாடல் என்பதுவரை. பொற்பு - அழகு. என்றது தட்பமும் தெளிவும். தானவர் - அசுரர். ஆவினில் ஐந்து - பால், தயிர், நெய், கோசலம், கோமயம், என்பன.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

செம்பொன்செய் மாலையும் வாசிகையும் திருந்து புகையும் அவியும்பாட்டும்
நம்பும் பெருமைநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
உம்பரும் நாகரு லகந்தானும் ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்
அம்புத நால்களால் நீடுங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

பொழிப்புரை :

செம்பொன்னால் செய்த மாலைகள், திருவாசி ஆகியவற்றுடன் மணப்புகை நிவேதனம் தோத்திரம் ஆகியவற்றை விரும்பி ஏற்கும் பெருமை உடைய, நள்ளாற்றில் விளங்கும் நம் பெருமானே! நீ, விண்ணவரும், நாகர் உலகத்தவரும், ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட மண்ணுலக மக்களும் ஏத்த, நான்கு மேகங்களால் சூழப்பட்ட கூடல் ஆலவாயின்கண் விரும்பி உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

குறிப்புரை :

வாசிகை - திருவாசி (ஒருவகை மாலை). அவி - நைவேத்தியம். பாட்டு - தோத்திரம். விரும்பும் பெருமை - அனைவரும் இவரே எமக்கு அடைக்கலமாவார் என்று நம்பும் பெருமை. உம்பர் - தேவர். அம்புதம் - மேகம். அம்புதம் நால்களான் நீடுங்கூடல் -நான்கு மேகங்கள் கூடிய கூடல் நகர், நால்கள் - நான்கு. நால் - நான்கு, அதன்மேற்பன்மை விகுதி நால்கள்; இது அரும்பிரயோகம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகமு டையவர் சேருங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

பொழிப்புரை :

இடப்பாகமாக உமையம்மையை வைத்துக் கொண்டு, படமும் புள்ளிகளும் பெரிதாகப் பிளந்த வாயும் உடைய நாகத்தைப் பூண்டுள்ள நள்ளாறுடைய நம் பெருமானே! நீ, உன்னை மனத்தில் கொண்டு சிவபோகமும், புண்ணியர்களாம் அடியவர்கள் கூட்டுறவும் கொண்ட மேனியராகிய சான்றோர்கள் சேர்ந்துறையும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்து உறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

குறிப்புரை :

பாகமும் தேவியை வைத்துக் கொண்டு நாகமும் பூண்ட என்றது பாம்பைக் கண்டாற் பெரிதும் அஞ்சுகின்ற தேவியை வைத்துக் கொண்டேயும் நாகம் பூணுதல் சாலாது என்ற நயந்தோன்ற நின்றது. பை - படம். துத்தி - படப்பொறி. பேழ்வாய் - பிளந்தவாய். புண்ணியர் நின்னை மனத்து வைத்துப்போகம் நண்ணும் புணர்வு பூண்ட ஆகமுடையவர் என இயைக்க. போகியாய் உமையொரு பாதியாய் இருக்கும் இறைவனைத் தியானிப்பதாலேயே புண்ணியர் போகம் நண்ணுவர் என்பதாம். புணர்வு - சம்பந்தம். ஆகம் - திருமேனி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

கோவண வாடையும் நீறுப்பூச்சுங் கொடுமழு வேந்தலுஞ் செஞ்சடையும்
நாவணப் பாட்டும்நள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
பூவண மேனி யிளையமாதர் பொன்னும் மணியும் கொழித்தெடுத்து
ஆவண வீதியி லாடுங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

பொழிப்புரை :

வேதமாகிய கோவண ஆடையும் திருநீற்றுப் பூச்சும் கொடிய மழுவாயுதத்தை ஏந்தலும் சிவந்த சடையும் நாவில் பல்வேறு சந்தங்களில் பாடும் வேதப் பாட்டும் உடையவனாய் இலங்கும் நள்ளாற்றுள் எழுந்தருளிய நம் பெருமானே! நீ பூப்போலும் மெல்லிய மேனியை உடைய இளம் பெண்கள் பொன்மணி முதலியவற்றைக் கொழித்து எடுத்துக் கடை வீதியில் விளையாடும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்து விளங்கக் காரணம் யாதோ? சொல்வாயாக.

குறிப்புரை :

இறைவனுக்கு வேதமே கோவணமாதலின் கோவண ஆடையர் என்றார். நீறுப்பூச்சும் - நீற்றுப்பூச்சும் எனற்பாலது ஓசை நோக்கி இரட்டாதாயிற்று. இறைவன் நீறுபூசி ஒளிர்தலை மாணிக்கவாசக சுவாமிகளும் `நீறுபட்டே ஒளிகாட்டும் மேனி` என்பார்கள். நாவணப் பாட்டும் - நாவில் பல்வேறு வண்ணங்களையுடைய பாட்டும். வண்ணம் - பாஅவண்ணம் முதலிய செய்யுள்வண்ணங்கள். பூவண மேனி - பூப்போலும் மெல்லிய மேனி . ஆவண வீதி - கடைவீதி .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

இலங்கை யிராவணன் வெற்பெடுக்க வெழில்விர லூன்றி யிசைவிரும்பி
நலங்கொளச் சேர்ந்தநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப் புந்தியி லுந்நினைச் சிந்தைசெய்யும்
அலங்க னல்லார்க ளமருங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

பொழிப்புரை :

இலங்கை மன்னன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபோது, தனது அழகிய கால் விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவனது இசையை விரும்பிக்கேட்டு அவனுக்கு நன்மைகள் பலவும் பொருந்துமாறு உளங்கொண்ட நள்ளாறுடைய நம் பெருமானே! நீ, ஐம்புல இன்பங்களை வெறுத்து அவற்றைத் தரும் ஐம்பொறிகளை மடைமாற்றிப் புந்தியில் உன்னையே சிந்தனை செய்யும் தூய வாழ்க்கையையுடைய சிவஞானிகள் வாழும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

குறிப்புரை :

விரல் ஊன்றி என்றது நிக்கிரகம். விரும்பி என்றது கருணைக்கு ஏது. நலங்கொள என்றது அநுக்கிரகம். விரலூன்றிய வரலாற்றை மணிவாசகப் பெருந்தகை `மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய மிதிக்குந் திருவடி` என்னுதல் காண்க. புலன்களைச் செற்று - விஷயங்களைக் கெடுத்து. பொறியை நீக்கி -இந்திரியங்களைச் சேட்டியாதே செய்து. நினைப்புந்தியிலும் சிந்தை செய்யும் - தேவரீரைப்புத்தியாலும் தியானிக்கின்ற, பொறிகள் புலன்களின் வழிச்செல்லாது அடக்கிய பெரியோர்களின் புத்தியில் சென்று பதியும் பொருள், கருவி கரணங்களைக் கடந்துநிற்கும் இறைப்பொருள் ஒன்றுமே யாதலின் இங்ஙனம் கூறினார். அலங்கல் - தாபத வாகைக்குரிய மாலை. நல்லார்கள் - சிவஞானிகள். கூடல் ஆலவாய் என்பது ஒரு பொருட் பன்மொழி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும் வென்றிப் பறவையாயும்
நணுகல ரியநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
மணியொலி சங்கொலி யோடுமற்றை மாமுர சின்னொலி யென்றுமோவா
தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

பொழிப்புரை :

பாம்பணையானாகிய திருமாலும் தாமரை மலரில் எழுந்தருளிய நான்முகனும் முறையே பன்றியாயும் பறவை இனங்களில் மேம்பட்ட அன்னமாயும், அடிமுடிகளை மாறித் தேடியும் நணுக முடியாத நள்ளாறுடைய நம் பெருமானே! நீ மணி ஒலியும், சங்கொலியும், சிறந்த முரசின் ஒலியும் என்றும் இடையறவின்றிக் கேட்கும் சிறப்பினதும், மேம்பட்ட வேந்தர்கள் புகுந்து வழிபடும் பெருமையதும் ஆகிய கூடல் ஆலவாயின்கண் எழுந்தருளி விளங்கக்காரணம் யாதோ? சொல்வாயாக.

குறிப்புரை :

பணி - ஆதிசேடன், வென்றிப் பறவை -`திருமுடி கண்டேன்` என்று பொய் வென்றியைக் கூறிக்கொண்ட பறவையாகிய அன்னம். பாண்டிய மன்னனிடம் கப்பங்கட்ட வருமன்னர் பலர், பலவகை ஒலிகளோடும் இடையறாது வருகின்ற, கூடல் என்பதாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ் சாதியி னீங்கிய வத்தவத்தர்
நடுக்குற நின்றநள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள்விழவும் இரும்பலி யின்பினோ டெத்திசையும்
அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.

பொழிப்புரை :

ஓலைத்தடுக்கைக் கையில் ஏந்தித் திரியும் சமணர்களும் சாக்கியர்களும் மரபு நீங்கிய வீண் தவத்தராவர். அவர்கள் மெய்ந்நெறியாகிய சைவ சமயத்தைக் கண்டு அச்சமயிகளின் வழிபடு கடவுளைக் கண்டு நடுக்கம் உறுமாறு திரு நள்ளாற்றுள் விளங்கும் நம் பெருமானே! நீ, நாள் விழாவும், சிறப்பு விழாவும் நன்கு நடைபெற, அவ்விழாவில் வழங்கும் பெருவிருந்தால் விளையும் மகிழ்வு எத்திசையும் பொருந்திப் பெருமை சேர்க்கும் மாடக்கூடல் ஆலவாயின் கண் மகிழ்ந்துறைதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக.

குறிப்புரை :

தடுக்கு - ஓலையிருக்கை. சாதியின் நீங்கிய வத்தவத்தர் - தத்தம் மரபின் நீங்கி வீணான தவத்தைச் செய்பவர்கள். எடுக்கும் விழா - நைமித்திகத் திருவிழா. நன்னாள் விழா - நித்தியத் திருவிழா.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

அன்புடை யானை யரனைக்கூடல் ஆலவாய் மேவிய தென்கொலென்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை நயம்பெறப் போற்றி நலங்குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப் பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார் இமையவ ரேத்த விருப்பர்தாமே.

பொழிப்புரை :

எல்லா உயிர்களிடத்தும் அன்புடையவனாம், அரனைக் கூடல் ஆலவாயில் மேவியதற்குக் காரணம் யாதெனக் கேட்டுத் தூய பொன் போன்றவனாகவும், தலைவனாகவும் விளங்கும் திருநள்ளாற்று இறைவனை நயமாகப் போற்றி, நலம் பயக்கும் செம்பொன் நிறைந்த மாட வீடுகளால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் தோன்றிய பூசுரனாகிய ஞானசம்பந்தன் பாடிய இனிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர், இமையவர் ஏத்தத் தேவருலகில் விளங்குவர்.

குறிப்புரை :

அன்புடையானை - உலகமே இறைவனுடைய மக்களாதலின் வாற்சல்ய முடையவனை, நயம்பெறப் போற்றி - போற்றுவதில் ஒரு நயம் உண்டாம்படிப் பணிந்து, அல்லது தாம் நலம் பெறப் போற்றி என்றுமாம், இமையவர் ஏத்த இருப்பர் - தேவர்க்கெல்லாம் தேவராய் அவர்கள் தொழ விளங்குவர். இந்திரனார் என்றுமாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
கண்ணிய ரென்றென்று காதலாளர் கைதொழு தேத்த விருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.

பொழிப்புரை :

அன்புடை அடியவர் புண்ணியம் திரண்டனைய வடிவினர் எனவும், நிறைந்த செல்வம் உடையவர் எனவும், பூதகணங்களின் தலைவர் எனவும், அருகில் வந்து பரவுவாரின் மனத்தார் எனவும், பிறைமதிக் கண்ணியர் எனவும் கைதொழுது போற்றச் சிவபிரான் எழுந்தருளிய ஊர் ஆகிய வானளாவ உயர்ந்த மாட மாளிகைகளோடு கூடியதும், மணம் கமழும் சோலைகளால் சூழப் பெற்றதும், எங்கும் பண்ணியலோடு கூடிய பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதும் ஆகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை, நாவே தொழுது பாடுவாயாக.

குறிப்புரை :

பூதியர் - செல்வம் உடையார். புடைபடுவார் - பக்கம் நண்ணிப் பரவுவார். கண்ணி - திருமுடியிற் சூடப் பெறும் மாலை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
அத்திய ரென்றென் றடியரேத்தும் ஐயன ணங்கொ டிருந்தவூராம்
தொத்திய லும்பொழில் மாடுவண்டு துதைந்தெங்குந் தூமதுப் பாயக்கோயிற்
பத்திமைப் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.

பொழிப்புரை :

அடியவர்கள், முத்திச் செல்வத்தை உடையவர் என்றும், மூப்பு இலர் என்றும், மாட்டுத் தறியில் விளங்குபவர் என்றும், முக்கண்ணர் என்றும், தம்மை இகழ்ந்து செய்த தக்கனின் வேள்வியை அழித்தவர் என்றும், போற்றித் துதிக்கும் தலைவராகிய சிவபிரான் உமையம்மையாரோடு எழுந்தருளிய ஊராகிய பொழில்களில் கொத்தாக மலர்ந்த பூக்களில் வண்டுகள் தோய்தலால் எங்கும் தூயதேன்துளிகள் பாய்வதும், கோயிலில் பத்தி பூண்ட அடியவர் பாடும் பாடல் இடைவிடாது கேட்பதுமாகிய ஆவூர்ப்பசுபதியீச் சரத்தை நாவே தொழுது பாடுவாயாக.

குறிப்புரை :

முத்தியர் - முத்தியின்பத்தை உடையவர். ஆப்பு - கன்றாப்பூர், வேள்விசாடும் அத்தியர் என்றது தக்கன் வேள்விக்கண் அளிக்கும் அவியை ஏற்கும் இரவலராயிருந்தும் வேள்வியை அழித்தமை சாலாது என்னும் பழிப்பு தோன்றக்கூறியது. அத்தியர் - இரவலர். ஹத்தி என்பதன் திரிபாகக்கொண்டு கொலை என்பாரும் உளர்; அது பொருந்தாமை ஓர்க. தொத்து இயலும் - பூங்கொத்துக்கள் அழகு செய்கின்ற. பத்திமைப் பாடல் - சிவபத்தியைப் பயக்கும் பாடல்கள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார் போம்வழி வந்திழி வேற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும் இறையவ ரென்றுமி ருந்தவூராம்
தெங்குயர் சோலைசே ராலைசாலி திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்புமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.

பொழிப்புரை :

சினந்து வந்த கங்கையைத் தம் திருமுடியில் வைத்தவரும், பிறவி போதற்குரிய பிறப்பான மனிதப் பிறவி எடுத்து இழிவடைதற்கும் ஏற்றம் பெறுதற்கும் உரிய மக்களும் அவருள் இப்பிறப்பில் உயர்தற்குரிய சிவஞானத்தைப் பெற்றோரும் வான வரும் துதிக்கச் சிவபிரான் எழுந்தருளிய ஊர், உயரமாக வளர்ந்த தென்னஞ்சோலைகளும், கரும்பாலைகளும், செந்நெற்பயிர்களும் திளைத்து விளைவுதரும் வயல்களை உடையதும், பொய்கைகள் சூழ்ந்ததும், திருமகள் விரும்புவதுமாகிய வளம்சான்ற ஆவூர்ப்பசபதீயீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

குறிப்புரை :

பொங்கிவரும் புனல் - கங்கை. அதுவந்த செருக்கினைக் குறிப்பித்தபடி. போம் வழிவந்து - பிறவியினீங்கி உய்ந்து போகக் கூடிய மனிதப்பிறவியில் வந்து. இழிவு ஏற்றம் ஆனார் - தீயனசெய்து இழிந்தும் நல்லன செய்து உயர்ந்தும் உய்ந்த மக்கள். இழிவேற்றமானாரும், ஞானத்தரும், வானோரும் ஏத்தும் இறைவர் என்று ஒரு தொடராக்குக. தென்னஞ்சோலைகளும் ஆலைகளும் வயல்களில் நெற்பயிர்களும் சேரும் ஆவூர் எனவும், பங்கயமங்கை விரும்பும் ஆவூர் எனவும் கூட்டுக. பொய்கை மானிடர் ஆக்காத நீர் நிலை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

தேவியொர் கூறின ரேறதேறுஞ் செலவினர் நல்குர வென்னைநீக்கும்
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் அப்பனா ரங்கே யமர்ந்தவூராம்
பூவிய லும்பொழில் வாசம்வீசப் புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
பாவியல் பாடல றாதவாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.

பொழிப்புரை :

உமாதேவியை ஒரு பாதியாக உடையவர், இடப வாகனத்தில் ஏறி வருபவர். வறுமை புகுதாது என்னைக் காப்பவர். எனக்கு உயிர் போன்றவர். கருணையர், என்துயர் போக்குதலால் எனக்குத் தந்தையாக விளங்குபவர். அவர் எழுந்தருளிய ஊர், பூக்கள் நிறைந்த பொழில்களின் வாசனை வீசுவதும் சுருண்ட கூந்தலை உடைய மகளிர் காலாலே தாளமிட்டு ஆடித் தேர்ந்த இசையோடு பாடும் பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதுமான ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே பாடுவாயாக.

குறிப்புரை :

நல்குரவு என்னை நீக்கும் ஆவியர் - வறுமை புகுதாதே என்னைக் காக்கும் உயிர்போன்றவர். இதனோடு `இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்` என்று யாகத்துக்குப் பொன்வேண்டிய காலத்துப் பாடிய பாடலையும் ஒப்பிடுக. அந்தணர் - முனிவர். புரிகுழலார் சுவடு ஒற்றி - பெண்கள் காற்சுவட்டினாலே தாளமிட்டு, பாவியல் பாடல் - இசையமைந்த பாடல், பா - பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

இந்தணை யுஞ்சடை யார்விடையார் இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
வந்தணைந் தின்னிசை பாடுவார்பால் மன்னினர் மன்னி யிருந்தவூராம்
கொந்தணை யுங்குழ லார்விழவிற் கூட்ட மிடையிடை சேரும்வீதிப்
பந்தணையும் விர லார்தமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.

பொழிப்புரை :

திங்கள் தங்கும் சடையினரும், விடையை ஊர்தியாக உடையவரும், என்னைப் பற்றிய இப்பிறவியின் வினையை நீக்கி முத்தியளிக்க வல்லவரும், தம்மை வந்தடைந்து இன்னிசையால் பாடி வழிபடுவாரிடம் மன்னியிருப்பவரும் ஆகிய சிவபிரான், நிலைபெற்று விளங்கும் ஊர், பூங்கொத்தணிந்த கூந்தலை உடைய மங்கல மகளிர் வாழ்வதும், திருவிழாக்களில் மக்கள் கூட்டம் இடையிடையே சேரும் அகன்ற வீதிகளை உடையதும், பந்தாடும் கைவிரல்களினராகிய இளம்பெண்கள் நிறைந்ததுமாகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே அதனைப் பாடுவாயாக.

குறிப்புரை :

இந்து - சந்திரன்; இப்பிறப்பு அறுக்க வல்லார் என்றது என் வினை முழுவதும் உலர்ந்துபோதலின் முத்தி அளிக்கவல்லார் என்பதாம், வந்து அணைந்து - திருக்கோயிலின் திருவணுக்கன் திருவாயிலை வந்து அடைந்து. மன்னினர் - நிலை பெற்று இருப்பவர். கொந்து - பூங்கொத்து; குழலார் விரலார் என்பன மகளிரைக்குறித்து நின்றன.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார் உறைபதி யாகுஞ் செறிகொண்மாடம்
சுற்றிய வாசலின் மாதர்விழாச் சொற்கவி பாடநி தானநல்கப்
பற்றிய கையினர் வாழுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.

பொழிப்புரை :

அடியவர் செய்யும் குற்றங்களை நீக்கியவரும், நற்குணங்களை உடையோரிடம் வாழ்பவரும், தம்மைக் கும்பிடுவார்க்கு அன்பு செய்பவரும், ஓர் எருதைத் தமக்கு ஊர்தியாகக் கொண்டவரும், பிறர்க்கில்லாத நெற்றிக்கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி, செறிந்த மாட வீடுகளைச் சார்ந்துள்ள வாசலில் விழாக்காலங்களில் பெண்கள் புகழ்ந்து கவிபாடக் கேட்டு அவ்வீடுகளில் வாழும் செல்வர்கள் பொற்காசுகள் வழங்க, அதனைப் பற்றிய கையினராய் மகளிர் மகிழ்ந்துறையும் ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைத் தொழுது பாடுக.

குறிப்புரை :

குற்றம் அறுத்தார் - அடியார்கள் செய்த குற்றங்களை நீக்கியவர். குற்றம் மறுத்தார் - நறுநாற்றத்திலன்றி தீநாற்றத்தில் செல்லாத வண்டுபோல் குற்றங்களில் சென்று பொருந்த மறுத்தவர். மாதர்கள் விழாவின்கண் சொல்லானியன்ற கவிகளைப்பாட, அதனைக்கண்ட மாந்தர்கள் பொன்னளிக்க, அதனை ஏற்ற கையர்களாய் வாழ்கின்ற ஆவூர் என்க. நிதானம் - பொன்,`நிதானம் - முற்காரணம் தூய்மை நியமம் நிதி மறைத்துக்கொள் பொருள் கன்றின் கயிறாம்` என்பது நானார்த்ததீபிகை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

நீறுடை யார்நெடு மால்வணங்கு நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
கூறுடை யாருடை கோவணத்தார் குவலய மேத்தவி ருந்தவூராம்
தாறுடை வாழையிற் கூழைமந்தி தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
பாறிடப் பாய்ந்துப யிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.

பொழிப்புரை :

திருவெண்ணீற்றை அணிந்தவரும், திருமாலால் வணங்கப் பெறுபவரும், நிமிர்த்துக் கட்டிய சடைமுடியுடையவரும், தம்மை நினைவார் உள்ளத்தில் குடிகொண்டிருப்பவரும், கோவண ஆடை தரித்தவரும் ஆகிய சிவபிரான், மண்ணுலக மக்கள் தம்மைப் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய ஊர், குள்ளமான மந்தி பழுத்துள்ள வாழைத்தாற்றில் உண்ணத்தகுதியான பழங்களை வயிறார உண்டு, எஞ்சியுள்ள பழங்களை உண்ணவரும் குரங்குகளை அஞ்சுமாறு பாய்ந்து விரட்டும் தோட்டங்களை உடைய ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

குறிப்புரை :

நீறுடையார் - தாம் தொன்மைக்கெல்லாம் தொன்மை யாயிருத்தலைத் தோற்றுவிக்கச் சர்வசங்காரகாலத்துத் திருநீற்றினைத் திருமேனியிலணிந்தவர். உள்ளம் கூறுடையார் - உள்ளத்தில் குடிகொண்டிருப்பர், தாறிட்ட வாழையில் தழைவால் மந்திகள் கனிந்த பழத்தை உண்டு செருக்கி, குரங்கினத்தைக் கலைந்தோடப்பாய்கின்ற ஆவூர் என்றதால் நினைந்துருகும் அடியார்க்குச் சிவாநுபவ வன்மையளிக்கும் ஆவூர் என்பது குறிப்பால் போந்த பொருள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

வெண்டலை மாலை விரவிப்பூண்ட மெய்யுடை யார்விற லாரரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த மைந்தரி டம்வள மோங்கியெங்கும்
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார் கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.

பொழிப்புரை :

வெண்மையான தலைகளை மாலையாகக் கோத்துப் பிற மாலைகளுடன் அணிந்துள்ள திருமேனியை உடையவரும், வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய வலிய இராவணனின் முடியை நெரித்து மகிழ்ந்த வலியரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடம், எங்கும் வளம் ஓங்கியதும், தரிசித்தவர்கள் சித்தத்தால் உயர்ந்தவர்களாய்த் தமக்குக் கதியருள் என்று கைகளைக்கூப்பிப் பழமைதொட்டுச் சிவபெருமானுக்கு உரியனவாகிய மலர்களைச் சாத்தி வழிபடும் இயல்பினதும் ஆகிய ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

குறிப்புரை :

வெண்டலைமாலை உம்மைத்தொகை; வெண்தலைகளையும் மாலைகளையும் கலந்து அணிந்த திருமேனியுடையவர். விறல் - வலிமை. நாளும் புதுப்பூச்சூடி, போகம் நுகர்பவனாதலின் இராவணன்முடி வண்டமர் பூமுடி எனப்பட்டது. அதனைச் செற்றுகந்த மைந்தர் என்பதால் வினைப்போகக் கழிவின்கண் ஆட்கொள்ளும் இறைவன் என்பது போதரும். சிந்தைக்கருத்து - இடைவிடாத சிந்தனையால் எழுந்த கருத்து.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

மாலு மயனும் வணங்கிநேட மற்றவ ருக்கெரி யாகிநீண்ட
சீல மறிவரி தாகிநின்ற செம்மையி னாரவர் சேருமூராம்
கோல விழாவி னரங்கதேறிக் கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
பாலென வேமொழிந் தேத்துமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் வணங்கித் தேட, அவர்கட்குச் சோதிப்பிழம்பாய் நீண்டு தோன்றிய, அறிதற்கு அரியராய் விளங்கும் செம்மையராகிய சிவபிரான் எழுந்தருளிய ஊர், அழகிய விழாக்காலங்களில் கொடியிடைப் பெண்கள் அரங்கின்கண் ஏறி ஆடவர்களோடு கூடிப் பால்போன்று இனிக்கும் மொழிகளால் இறைவனை ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

குறிப்புரை :

நேட - தேட. மற்று வினைமாற்றுப் பொருளில் வந்தது. சீலம் - எளிமை; இதனைச் சௌலப்யம் என்பர் வடநூலார். சீலமாவது அடியார்க்கு எளியராய் இருக்கும் தன்மை. மாலும் அயனும் தேட அவர்களுக்குச் சோதிப் பிழம்பாய்த் தோன்றிய எளிமையை விளக்கியது. அதனைச் சிற்றறிவுடைய ஆன்மாக்கள் அறியமுடியாமையால் அறிவரிதாகிநின்ற என்றார். கோலவிழா - அழகியவிழா. மாதரும் மைந்தரும் அரங்கேறியும் பால்போன்ற மொழியால் இறைவனை ஏத்துகிறார்கள் என்பது, இன்பக்காலத்தும் இறைவனையே தியானிக்கும் பெருமை விளக்கியவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
தன்னிய லும்முரை கொள்ளகில்லாச் சைவ ரிடந்தள வேறுசோலைத்
துன்னிய மாதரும் மைந்தர்தாமுஞ் சுனையிடை மூழ்கித் தொடர்ந்த சிந்தைப்
பன்னிய பாடல் பயிலுமாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே.

பொழிப்புரை :

பின்னித் தொங்கவிடப்பட்ட சடையை உடையவராய், அறிவின்மையோடு சமணர்கள் சாக்கியர்கள் ஆகியோர் தங்களைப் பற்றியும் தாங்கள் சார்ந்த மதங்களின் சிறப்புக்களைப் பற்றியும் கூற, அவற்றை ஏலாதவராய் விளங்கும் சைவன் விரும்பி உறையும் இடம், முல்லைக் கொடி படர்ந்த சோலைகளில் மாதரும் மைந்தரும் நெருங்கிச் சுனையில் மூழ்கிச் சிவபிரானை மனம் ஒன்றிப் பாடும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக.

குறிப்புரை :

பின்னிய தாழ் சடையார் - பின்னித் தொங்கவிடப் பெற்ற சடையை உடையவர்கள்; சமணரில் இல்லறத்தாராகிய ஆண்கள் தலையைப் பின்னித் தொங்கவிடுதல் மரபு, இன்றும் சீனமக்களிடத்துக் காணலாம். சாக்கியர் - புத்தர். தன்னியலும் உரை - தன்னைப்பற்றி அவர்கள் சொல்லும் உரைகள். உரைகொள்ள இல்லாசைவர் - அவ்வுரைகளுக்குப் பொருளாகத்தாம் ஆகாத சிவபெருமான் என்றது, சிவத்தைப்பற்றி அவர்கள் கூறும் உரைகள் சிற்றறிவினால் சொல்லப்பட்டன ஆதலின் அவற்றைக் கடந்துநின்ற இயல்பினை உடையவர் என்பதாம். தளவு - முல்லை. மாதரும் மைந்தரும் சுனையில் மூழ்கிப் புறத்தூய்மையொடு அகத்தூய்மையும் கொண்டு வழிபடுகின்றனர் என்றவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

எண்டிசை யாரும்வ ணங்கியேத்தும் எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்
பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும் பசுபதி யீச்சரத் தாதிதன் மேல்
கண்டல்கண் மிண்டிய கானற்காழிக் கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
கொண்டினி தாவிசை பாடியாடிக் கூடும வருடை யார்கள்வானே.

பொழிப்புரை :

எட்டுத் திசையில் உள்ளவர்களும் வணங்கிப் போற்றும் எம் தலைவரும், அழகிய ஆவூரில் பழ அடியார்களால் போற்றப் பெறுபவரும் ஆகிய பசுபதியீச்சரத்து இறைவர்மேல் தாழை மரங்கள் நிறைந்த கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய பாடல்களை இசையோடு பாடி ஆடி வணங்குபவர்கள், வானகத்தைத் தமது உடைமையாகப் பெறுவர்.

குறிப்புரை :

திசையிலுள்ளார் அனைவரும் வணங்கும் பெருமானை ஆவூரில் வழிவழி உரிமைபூண்ட சில அடியார்கள் போற்றுகின்றார்கள் என்பதாம். கண்டல் - தாழை, சொன்ன - சொல்லினவாயபாடல்கள். பாடி - வாய்த்தொண்டு. ஆடி - மெய்த்தொண்டு. கூடுதல் - சிந்தைத்தொண்டு. கூடுமவர் - தியானிப்பவர்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

வண்டார்குழ லரிவையொடு பிரியாவகை பாகம்
பெண்டான்மிக வானான்பிறைச் சென்னிப்பெரு மானூர்
தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்
விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே.

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணாகிய உமையம்மை, தன்னிற் பிரியாதிருக்கத் தன் திருமேனியில் இடப்பாகத்தை அளித்து, அப்பாகம் முழுதும் பெண் வடிவானவனும், பிறையணிந்த திருமுடியை உடையவனும் ஆகிய பெருமானது ஊர், தாமரை மலரில் விளங்கும் திருமகள் வாழும் வெண்மையான பெரிய மாடங்கள் விண்ணைத் தாங்குவனபோல உயர்ந்து விளங்கும் வேணுபுரமாகும்.

குறிப்புரை :

இது உமாதேவியைப் பிரியாதிருக்க ஒருபாகமே பெண்ணான பெருமான் ஊர் வேணுபுரம் என்கின்றது. வண்டார்குழல் அரிவை - வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய பெண்ணாகிய உமை. பிரியாவகை -பிரியாதிருக்க. பாகம் - ஒரு பாகத்திலேயே. மிகப் பெண் ஆனான் - முழுதும் பெண்வடிவானவன். தவளம் - வெண்மை. மாடம் விண்தாங்குவ போலும் என்றது உயர்வு நவிற்சியணி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

படைப்புந்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை
கிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானூர்
புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்
விடைத்தேவரு தென்றன்மிகு வேணுபுர மதுவே.

பொழிப்புரை :

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரிவோனும், அவற்றின் முடிந்த பயனாய வீட்டின்ப வடிவாய் விளங்குவோனும், பருமை நுண்மை இவற்றிற்கோர் எல்லையாக இருப்பவனும், வேதங்களை ஓதும் கணங்களை உடையோனும், வஞ்சகமான பூதப்படைகளை உடையவனும் ஆகிய சிவபிரானது ஊர், பக்கங்களில் வெடித்து மலர்ந்திருக்கும் கமுகம் பாளையின் மணத்தோடு புன்னை மலர்களின் மணத்தைத் தாங்கி மெல்லெனப் பெருமிதத்தோடு வரும் தென்றல் காற்று மிகுந்து வீசும் வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

படைப்பு - சிருஷ்டி. நிலை - திதி. இறுதி - சம்ஹாரம். பயன் - முத்தொழிலின் பயனாகிய வீட்டின்பத்தின் வடிவாய் இருப்பவன். பயன் - பயன் வடிவாகிய இறைவனை உணர்த்திற்று. பருமை - பருப்பொருள். நேர்மை - நுண்பொருள் என்றது அணுவுக்கு அணுவாயும் பெரியவற்றிற்கெல்லாம் பெரிதாயும் நிற்கும் இறைவனின் நிலை உணர்த்தியவாறு. கிடை பல் கணம் உடையான் - வேதத்தை ஓதும் கூட்டமாகிய பல சிவகணங்களையுடையவன். கிடை - வேதம் ஓதும் கூட்டம். `ஓதுகிடையின் உடன் போவார்` (பெரிய, சண்டே - 17) கிறி-வஞ்சகம். புடைப்பாளை - பக்கங்களில் வெடித்து மலர்ந்திருக்கின்ற பாளைகள். விடைத்தே - வேறுபடுத்தியே, கமுகு புன்னைகளின் நாற்றத்தை ஒன்றாகக் காட்டாது மிக்கு வேறுபடுத்திக் காட்டுகிறது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப்
படந்தாங்கிய வரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர்
நடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல்
விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுர மதுவே.

பொழிப்புரை :

தாருகாவனத்து முனிவர்கள் ஏவிய மதநீர் ஒழுகும் யானையை அம்முனிவர்கள் வெருவுமாறு உரித்துப் போர்த்தவரும், படத்தோடு கூடிய பாம்பைக் குழையாக அணிந்தவரும் ஆகிய சிவபிரானது பழமையான ஊர், நடனத்துக்குரிய சதிகளோடு கூடிய நடையையும், அழகிய பவளம் போன்ற சிவந்த வாயினையும் மேலான விடத்தன்மையோடு கூடிய கண்களையும் உடைய அழகிய மகளிர் பலர் வாழும் வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

கடம் - மதநீர். அவர் வெருவ - யானையை ஏவிய தாருகாவனத்து முனிவர்களஞ்ச. பழவூர் என்றது மகாப்பிரளயகாலத்திற்கும் தொன்மையதாதலின். நடந்தாங்கிய நடையார் - நடனத்திற்கு ஏற்ற ஜதிவைப்பைத் தாங்கிய நடையையுடையவர்கள். துவர் - சிவப்பு. மேல்விடம் - மேலாகிய விடம். விடம் உண்டாரையன்றிக் கொல்லாது; இது நோக்கினாரையும் கொல்லும் ஆதலின் மேல்விடம் என்றார். வாய்மேல்(விடந்தாங்கிய) கண் எனலுமாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

தக்கன்றன சிரமொன்றினை யரிவித்தவன் றனக்கு
மிக்கவ்வர மருள்செய்தவெம் விண்ணோர்பெரு மானூர்
பக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர
மிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுர மதுவே.

பொழிப்புரை :

தக்கனது தலையை வீரபத்திரக் கடவுளைக் கொண்டு அரியச் செய்து, பிழையை உணர்ந்து அவன் வேண்டியபோது அவனுக்கு மிகுதியான வரங்கள் பலவற்றை அளித்தருளிய வானோர் தலைவனாகிய சிவபெருமானது ஊர், மேகங்கள் முழவாக ஒலிக்க, நாற்புறமும் மயில்கள் ஆடுவதும், மிகுதியான தேனை வண்டுகள் அருந்தும் வளமுடையதுமான பொழில்கள் சூழ்ந்த வேணுபுரமாகும்.

குறிப்புரை :

தக்கன் தன்சிரம் - தக்கன் தலை. தன அகரம் வேண்டாவழிச் சாரியை. அரிவித்து என்றது வீரபத்திரக் கடவுளைக் கொண்டு வெட்டுவித்த வரலாற்றினை உட்கொண்டு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

நானாவித வுருவானமை யாள்வானணு காதார்
வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான்
தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்றிகழ் மந்தி
மேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுர மதுவே.

பொழிப்புரை :

அன்போடு வழிபடும் நாம் எவ்வுருவில் நினைக்கின்றோமோ அவ்வுருவில் தோன்றி நம்மை ஆட்கொள்பவனும், தன்னை நணுகாதவராகிய அசுரர்களின் வானில் திரிந்த மூன்று புரங்கள் வெந்தழியுமாறு வில்லை வளைத்துக் கணை தொடுத்து எரியூட்டியவனும் ஆகிய சிவபிரானது ஊர், மரங்களில் அமர்ந்த மந்திகள் தேனின் சுவை பொருந்தியனவாய்ப் பழுத்துத் தோன்றிய வாழைப் பழங்களைக் கண்டு அவற்றை உண்ணுதற் பொருட்டு மேல் நோக்கியவாறே தாம் ஏறிப் பறிக்க இயலாத தம் நிலைக்கு வருந்தும் பொழில்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும். \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"வாழை மரத்தில் குரங்கு ஏறாதன்றோ\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\".

குறிப்புரை :

நானாவித உருவால் நமையாள்வான் - தியானிக்கின்ற அடியார்கள் நினைத்த உருவத்தோடு வெளிப்பட்டு அருள்புரிபவன். நணுகாதார் - பகைவர்களாகிய திரிபுராதிகள். வானார் - வானத்திற் பறந்து திரிகின்ற. சிலை தொட்டான் - வில்லால் அம்பைச் செலுத்தியவன். தொடுதல் - செலுத்துதல். `கடுங் கணைகள் தம்மைத் தொட்டனன்`(கந்த. சூரபன்மன் வதை.191) சிலை தொட்டான் என்றது சிலையைத் தொட்ட அளவே! திரிபுரங்கள் எரிந்தன என்னும் நயப்பொருள் தோன்ற. தேன் ஆர்ந்து எழு கதலி - தேன்கதலி என்னும் ஒருவகை வாழை. மந்தி மேல்நோக்கி ஏறிப்பறிக்க இயலாத நிலைக்கு இரங்குகின்ற (வருந்துகின்ற) இயற்கையை அறிவித்தபடி. இறங்கும் என்றும் பாடம். இதற்கு, குரங்கு மேல்நோக்கியவாறே கீழிறங்கும் என்பது பொருள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிம்மிக வஞ்சக்
கண்ணார்சல மூடிக்கட லோங்கவ்வுயர்ந் தானூர்
தண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை
விண்ணார்குதி கொள்ளும்வியன் வேணுபுர மதுவே.

பொழிப்புரை :

மண்ணுலக மக்களும் விண்ணகத் தேவரும் கண்டு நடுங்கி மிகவும் அஞ்சுமாறு நிலமெல்லாம் நிறைந்த நீர் மூடிக் கடல் ஊழி வெள்ளமாய் ஓங்க, அவ்வெள்ளத்திலும் அழியாது உயர்ந்து தோணியாய்த் தோன்றுமாறு செய்த சிவபிரானது ஊர், தண்ணிய மணம் கமழும் தாமரை மலர்கள் சாயுமாறு இளவாளை மீன்கள் வானிடை எழுந்து குதிக்கும் நீர்வளம் சான்ற பெரிய வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

கண்ணார் சல மூடி - நிலமெல்லாம் நிறைந்து நீர் மூடி. மூடி ஓங்க உயர்ந்தான் ஊர் எனக் கூடுக.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

* * * * * * * * *பாடல் இதுவரை கிடைக்கவில்லை

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

மலையான்மக ளஞ்சவ்வரை யெடுத்தவ்வலி யரக்கன்
தலைதோளவை நெரியச்சர ணுகிர்வைத்தவன் றன்னூர்
கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்
விலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே.

பொழிப்புரை :

மலையரையன் மகளாகிய பார்வதி தேவி அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிமை சான்ற இராவணனின் தலைகள் தோள்கள் ஆகியவை நெரியுமாறு கால் விரலை ஊன்றிய சிவபிரானது ஊர், ஆறு அங்கங்களோடு வேதங்களின் தொகுதியைக் கற்றுணர்ந்தோர் தம்முள் கூடும் கூட்டத்தில் விலை மதிப்புடைய சொற்களைத் தேர்ந்து பேசும் கல்வி நலம் சான்றவர் வாழும் வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

இராவணனது தலையும் தோளும் நெரிய விரலினது நுனியை ஊன்றி மறக்கருணை காட்டியது வரையையெடுத்ததற்காக அன்று; உமாதேவிக்கு அச்சம் விளைத்தமையான். பெண்மையின் பொதுமை நோக்கி உரைத்தலாயிற்று. உகிர் - நகம். சுருதித்தொகை - சாகைகளின் கூட்டமாகிய வேதம். விலையாயின சொல் - பெறுமதியுடைய சொற்கள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

வயமுண்டவ மாலும்மடி காணாதல மாக்கும்
பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர்
கயமேவிய சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல்
வியன்மேவிவந் துறங்கும்பொழில் வேணுபுர மதுவே.

பொழிப்புரை :

உலகை உண்ட திருமாலும் தன் அடிகளைக் காணாது அலமருமாறு செய்தவனும், மக்கள் அடையத்தக்க பயன்களில் ஒன்றான பிரமலோகத்தை உடைய பிரமனது கிள்ளப்பட்ட தலையோட்டினை ஏந்தியவனுமாகிய சிவபிரானது ஊர்; ஆழ்ந்த நீர் நிலைகளில் வாழும் சங்குகள், கடல் தரும் உப்பங்கழியைவிடுத்துச் செந்நெல் விளைந்த அகன்ற வயலில் வந்து உறங்கும் வேணுபுரமாகும்.

குறிப்புரை :

வயம் - வையம் - போலி. வயம் உண் தவம் மாலும் - உலகை உண்ட தவத்தைச்செய்த திருமாலும். அடிகாணாது அல மாக்கும் - திருவடியைக் காணப்பெறாது சுழலும். அலமாக்கும் பரன் எனவும் ஏந்திய பரன் எனவும் தனித்தனியே கூட்டுக. பயன் ஆகிய பிரமன் - அச்சத்தை உடையவனாகிய பிரமன். கயம் - ஆழ்ந்த நீர்நிலை. சங்கம் உப்பங்கழியைவிட்டுச் செந்நெல் வயலில் வந்து உறங்கும் வேணுபுரம். செந்நெல்வியன் - செந்நெல் விளைந்துள்ள அகன்ற இடம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

மாசேறிய வுடலாரமண் குழுக்கள்ளொடு தேரர்
தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர்
தூசேறிய வல்குற்றுடி யிடையார்துணை முலையார்
வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே.

பொழிப்புரை :

அழுக்கேறிய உடலினை உடையவர்களாகிய சமணர் கூட்டத்தினரோடு, புத்த மதத்தினராகிய தேரர்களும் ஒளி பொருந்திய திருவடிகளை வணங்காமையால் அவர்களால் அறியப் பெறாத சிவபிரானது ஊர்; அழகிய ஆடை தோயும் அல்குலையும், உடுக்கை போன்ற இடையையும், பருத்த தனங்களையும், ஆடவர் மேல் தம் குறிப்பு உணர்த்தி நெரியும் புருவங்களையும் உடைய அழகிய மகளிர் வாழும் வேணுபுரம் ஆகும்.

குறிப்புரை :

மாசு ஏறிய உடல் - தேயாது தோய்வதால் அழுக்கு ஏறிய உடல். தேரர் - புத்த முனிவர். தேசு ஏறிய பாதம் - ஒளியுள்ள திருவடி. வணங்காமைத் தெரியான் - வணங்காதபடி அவர்களால் அறியமுடியாதவன். தூசு - ஆடை. துடி - உடுக்கை. வீசு ஏறிய புருவத்தவர் - ஆடவர்மேல் வீசி நெற்றியின்கண் ஏறிய புருவத்தினை உடையார்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப்
பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்றன பாடல்
ஏதத்தினை யில்லாவிவை பத்தும்மிசை வல்லார்
கேதத்தினை யில்லார்சிவ கெதியைப்பெறு வாரே.

பொழிப்புரை :

ஞானசம்பந்தரின் ஏதம் இல்லாத இப்பத்துப் பாடல்களையும் இசையோடு பாடுவார் சிவகதி பெறுவார் என வினை முடிபு கொள்க./n மங்கல ஒலிகள் பலவற்றோடு வேத ஒலியாலும் மிக்குத்தோன்றும் வேணுபுரத்துப் பெருமானின் பாதங்களை மனத்துட் கொண்டு பாடப்பெற்ற ஞானசம்பந்தரின் துன்பந்தரல் இல்லாத இப்பதிகப் பாடல்களை இசையோடு பாடவல்லவர் துயர் நீங்குவர்; முடிவில் சிவகதியைப் பெறுவர்.

குறிப்புரை :

சென்ற திருப்பாடல்களில் கூறிய முழவதிர்தலும், வாளை குதிகொள்ளுதலும், கற்றோர்கள் சொல்தேர்தலும் ஆகிய இவற்றால் உண்டான ஒலியோடு வேத ஒலியாலும் மிகுந்திருக்கின்ற வேணுபுரம். பாதம் - சிவனது திருவடி. பந்தன் - ஞானசம்பந்தன். ஏதத்தினை இல்லா இவை பத்தும் - துன்பம் தரல் இல்லாத இந்தப் பத்துப்பாடல்களும் துன்பம் நீக்குமாற்றை ஊன்றி நோக்கி இன்புறுதற்குரியது. கேதம் - துன்பம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

பொழிப்புரை :

உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.

குறிப்புரை :

உமையாளொடும் உடனாகிய ஒருவன் என்றது உமாதேவியை இடப்பாகத்திருத்தி இருக்கிற உடனாய நிலையை உணர்த்தியது. பெண்ணாகிய பெருமான் என்றது உமையம்மையோடு ஒன்றாகிய நிலையை உணர்த்தியது. மழலை முழவு - சொற்றூய்மை யில்லாத முழவொலி. சொல் - மத்தளத்தின் ஜதி ஒலி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

பொழிப்புரை :

கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக்கருதி மர நிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர்.

குறிப்புரை :

கடுவன் - ஆண் குரங்கு. விடுகொம்பு - மாம்பழத்தைப் பறித்துவிட்ட மாங்கொம்பு. தூ மா மழை - தூய்மையான கரிய மேகம். துறுகல் - பாறை. ஆமா பிணை - காட்டுப் பசு; பெண்பசுவோடு, ஆமாப் பிணை என்பது எதுகை நோக்கி ஆமாம் பிணையாயிற்று, பூமாங்கழல் - அழகிய மாவிலையின் வடிவந்தோன்றப் புனையப்பட்ட காலணி. மாண் கழலுமாம். நினைக்க முத்தி தரும் தலம் ஆதலின் நினைவார் வினையிலரே என்றார்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.

பொழிப்புரை :

தோகைகளோடு கூடிய ஆண் மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல் கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த் துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை, இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ்.(தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்).

குறிப்புரை :

பீலிம்மயில், ஆலிம்மழை, சூலிம்மணி என்பன விரித்தல் விகாரம். சூலி மணி - சூலிருந்து பெற்ற முத்துக்கள். ஆலி - நீர்த்துளி. திருவடியால் எட்டியுதைத்தார் ஆகலின் காலன் வலிதொலை சேவடி என்றார். புகழ் தொழுவார் எனக்கூட்டுக.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல்
அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.

பொழிப்புரை :

உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மயிர் நீங்கிய பிரமனது வெண்மையான தலையோட்டை உண்கலனாக் கொண்டு, உலகெலாம் திரிந்து ஏற்கும் பலியை உணவாகக் கொள்ளுதற்கு எருது ஏறி வருவதோடு, முதிர்ந்த சடைமுடியின் மீது வெண்பிறையைச் சூடித்திருவடிகளில் அதிரும் வீரக்கழல்களோடு விளங்கும் சிவபிரானுக்குரிய இடம் திருவண்ணாமலையாகும்.

குறிப்புரை :

உதிரும் மயிர் இடு வெண்டலை - சதை வற்றிப் போனதால் உதிர்கின்ற மயிரையுடைய காட்டில் இடப்பெற்ற பிரமகபாலம். எதிரும் பலி - வந்து இடப்பெறும் பிச்சை. பிச்சை ஏற்பார்யாசியாது தெருவிற் செல்ல மகளிர் தாமே வந்து இடுதல் மரபாதலின் அதனை விளக்க எதிரும் பலி என்றார். முதிருஞ்சடை இள வெண்பிறை : முரண்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.

பொழிப்புரை :

வெண் கடம்பமரம், சிலை, முத்து, மிக்க மணிகள் ஆகியவற்றை உந்திவரும் வெண்மையான அருவிகள் பறைபோல ஆரவாரம் செய்யும் திருவண்ணாமலையில் விளங்கும் அண்ணலாகிய சிவபிரான், சடையில் பாம்பும் கங்கையும் உடனாயிருந்து உலவுவதை ஓராமல், குராமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மையாரைத் தழுவுதல் நன்றோ?

குறிப்புரை :

சிலை - ஒருவகை மரம். தரளம் - முத்து. மணி - இரத்தினம். அரவம் - ஒலி, உரவம் - உரகம் என்பதன் திரிபு; பாம்பு. உரகமும், கங்கையும் சடையில் உலாவுதலையும் ஓராமல் உமையாளைத் தழுவுதல் குணமாகுமா என்று வினவுகிறார். புணர்ச்சிக்குத் தனிமை இனியதாய், நாணங்காப்பாகவும். இவர் பாம்பும், கங்கையும் சடைமீது உலாவப் புல்லல் நன்றன்று என்று நகைபடச் சொல்லிற்றாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே.

பொழிப்புரை :

பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில் பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத்தோன்றிய நஞ்சை உட் கொள்ளும் அளவிற்குத்துணிபுடையவரும், அந்நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும், திருவெண்ணீற்றை அணிந்தவரும், மணம் கமழும் சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும் வாரா.

குறிப்புரை :

பிறை சேர் கடல் - ஒருகலைப்பிறை உண்டாதற்கு இடமாகிய பாற்கடல். பருகுந்தனை துணிவார் - உட்கொள்ளும் அளவிற்குத் துணிவுடையவர். பொடி - விபூதி. கருகும் மிடறு - கருமை ஒருகாலைக்கு ஒருகால் மிக்குத்தோன்றும் கழுத்து.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.

பொழிப்புரை :

கரிந்த கால்களை உடையனவும், குடரைப் பிடுங்கி உண்பனவும் ஆகிய பேய்கள் ஆடும் இடுகாட்டில், நரிகள் உருட்டி விளையாடும் சிரிக்கும் வெண்டலை ஓடுகள் உதைக்கப்பட்டு உருள, கையில் எரி ஏந்தி ஆடும் சிவபெருமான், வண்டுக் கூட்டங்கள் இசை பாடச் செவ்வரிபரந்த கண்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளிய இடம், திருவண்ணாமலை.

குறிப்புரை :

கரிகாலன - எரிபிணத்தை நுகர எரியில் நிற்பதால் கரிந்துபோன கால்களையுடையன. கழுது - பேய். நரியாடிய - நரிகள் உருட்டி விளையாடிய. எரியாடிய - இடுகாட்டில் தீப்பிழம்பில் நின்றாடிய. அரி - செவ்வரி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரன் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட வடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.

பொழிப்புரை :

ஒளி செய்யும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.

குறிப்புரை :

ஒளிறூபுலியதள் - ஒளிசெய்யும் புலித்தோல், பிளிறூ வெளிறூ அளறூ என்ப சந்தம் நோக்கி நீண்டன. மதவாரணம் - மதம் பிடித்த யானை. வதனம் பிடித்து உரித்து - முகத்தில் திருவடியையூன்றிப் பிடித்துக்கொண்டு உரித்து, வெளிறுபட விளையாடிய -வெள்ளையாக விளையாடிய, வயிரமில்லாத மரத்தை வெளிறு என்றல்போல, கபடமின்றி விளையாடுதலை இங்ஙனம் கூறி இன்புற்றார். அளறுபட - மலைக்கீழகப்பட்டு நசுங்கிச் சேறாக. அடர்த்தான் - நெருக்கியவன்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.

பொழிப்புரை :

விளமரத்தின் கனியை உகுப்பது போல அம் மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும் குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.

குறிப்புரை :

விளவு ஆர் கனிபட நூறிய கடல்வண்ணன் - விளா மரமாய் நின்ற கபித்தன் அழியக்கொன்ற கண்ணபிரான். கேடில் புகழோன் - அழியாப்புகழ் பெற்ற பிரமன். அளவாவண்ணம் - தம்முட் பகைகொண்டு கலவாதபடி. இது இத்தலத்தில் பிரம விஷ்ணுக்கள் செருக்கிச்செய்த சண்டையைத் தீர்க்கப் பெருமான் தீப்பிழம்பாகிய அண்ணாமலையாய் நின்ற தலவரலாற்றுக் குறிப்பை விளக்குவது. உண்ணத் தளர்தல் நகிற்கு இயல்பாதலின் உண்ணாமுலை என்பார் தளராமுலை என்றார். தனது நகில் கொண்டும் இறைவனைத் தன்வசமாக்கியவள் என்பது குறிப்பிக்கப் பெற்றது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே.

பொழிப்புரை :

உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில் நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய சமணரும், மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர்கள் ஆதலின், அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர். திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய வெண்மையான மழுவாயுதத்தைக் கைக்கொண்டவனும் ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே மேலான குணம்.

குறிப்புரை :

வேர் - வியர்வை. மாசு - அழுக்கு. சீவரம் - மஞ்சள் நிற ஆடை. மார்பு புலப்படாத வண்ணம் மறைத்தல் சமணத்துறவியர் இயல்பு. ஆரம்பர் - தொடக்க நிலையிலுள்ளார்; ஆரம்பவாதிகள் போதிய பயிற்சியில்லார் என்பதாம். ஆடம்பரமில்லாதவர்கள் என்பதுமாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.

பொழிப்புரை :

வெம்மை மிக்க கதிரவன் ஒளி புகாதவாறு தடுக்கும் விரிந்த சாரலை உடையதும், அம்பைச் செலுத்தி முப்புரங்களை அழித்த சிவபிரான் எழுந்தருளியதுமான அண்ணாமலையைக் கொம்பு என்னும் வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு, குயில்கள் எதிர் ஒலிக்கும் குளிர்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதவல்லவர்களின் திருவடிகளை வணங்குதல் சிறந்த தவமாம்.

குறிப்புரை :

வெம்பு உந்திய - வெப்பமிக்க, மலையே இறைவன் திருமேனியாதலின் அவனைத் தீண்டிப் பழியேற்க விருப்பின்றி கதிரோன் விலகிச் சென்றான் என்பதாம். கொம்பு ஒருவகை வாத்திய விசேடம். கொம்பு ஊதிய இனிய ஓசையைக் குயில் ஒலிக்கும் காழி. குருவருள்: இப்பாடலின் இறுதிவரி `ஞானசம்பந்தன தமிழ் வல்லவர் அடிபேணுதல் தவமே` என்கின்றது. இத்திருப்பதிகத்தை வல்லவாறு ஓதுவார்களின் அடியை விரும்பிப் போற்றுதலே ஒருவருக்குத் தவமாக அமையும் என்கிறது. இவ்வாறே திருவலஞ்சுழி பற்றிய `விண்டெலாம்` என்ற பதிகத்தின் திருக்கடைக்காப்பாகிய `வீடும் ஞானமும் வேண்டுதிரேல்` என்ற பாடலும், `நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை பாடும் ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே` என்ற வரிகளால் இப்பதிகத்தை ஓதுவார்களின் அடிசேர்ந்து வாழ்தலே உண்மை ஞானம் கிடைத்தற்கு ஏதுவாம் என்கின்றது. இவ்விரு பாடல்களும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் அடி போற்றின் தவமும் அதன் வழி ஞானமும் உண்டாம் என்பதை வற்புறுத்துவது காணலாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்
படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
மடமான்விழி யுமைமாதிட முடையானெனை யுடையான்
விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.

பொழிப்புரை :

சடைமுடியில் கங்கையைத் தரித்தவனும், இடையினின்று சரிந்து நழுவும் ஒப்பற்ற கோவண ஆடையை அணிந்தவனும், மழுப் படையை உடையவனும், பலவகையான பூதங்களைப் படையாகக் கொண்டவனும், மடமைத் தன்மை பொருந்திய மான்விழி போன்ற விழிகளை உடைய உமையம்மையாகிய பெண்ணை இடப்பாகத்தே கொண்டவனும், என்னை ஆளாக உடையவனும், விடைக்கொடி உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் திருவீழிமிழலை.

குறிப்புரை :

சடையார் புனல் - சடைக்கண் நிறைந்த கங்கை. படையார் மழு என்றது தீப்பிழம்பன்று; எரியாகிய படை என்பதை விளக்க. இடம் - இடப்பாகத்து. எனை உடையான் - என்னை அநாதியே ஆளாக உடையவன். விடையார் கொடி - இடபக்கொடி. இஃது இறைவனுக்குரிய அடையாளக்கொடி, இறைவன் தருமஸ்வரூபியாதலால் அறவடிவான காளை அவன் கொடிக்கண்ணதாயிற்று.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை யைந்தாய்
ஆறார்சுவை யேழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே.

பொழிப்புரை :

ஊழிக் காலத்தில் அனைத்தையும் ஒடுக்குவோனாய், ஒடுங்கிய உடலைத் தானொருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய், சக்தி சிவம் என இருவகைப்பட்டவனாய், முக்குண வடிவினனாய், எக்காலத்தும் மாறுபடாத நான்மறை வடிவினனாய், ஐம்பெரும்பூதங்கள், ஆறுசுவை, ஏழு ஓசை, எட்டுத்திசை ஆகியவற்றில் நிறைந்தவனாய், உயிரோடு ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது இடம் திருவீழிமிழலை.

குறிப்புரை :

ஈறாய் - உலகத்துயிர்களெல்லாம் தன்னிடத்து ஒடுங்க, தான் ஒருவனே நிற்றலின் இயங்குவ நிற்பவான எல்லாவற்றிற்கும் தான் இறுதியாய். முதல் ஒன்றாய் - இறுதியாக நிற்பவனே உலக காரணனாய் (முதலாய்) நிற்குந் தன்மையன் ஆதலின் ஒடுங்கிய உலகமெல்லாம் மீளத்தோன்றுதற்குக் காரணமான (முதற்) பொருள் தானொருவனேயாய். பெண் ஆண் இரண்டாய் என்பது இரு பெண் ஆண் (ஆய்) என நின்றது. குணம் மூன்றாய் - சத்துவ முதலிய குணங்கள் மூன்றாய். மாறா மறை நான்காய் - தம்முள் மாறுபடாத வேதங்கள் நான்குமாய். அவை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பன. மாறா மறை - என்றும் ஒரு படித்தான வேதம் எனினுமாம். வருபூதம் அவை ஐந்தாய் - தத்தம் காரணமாகிய புலன்களிலிருந்து தோன்றுகின்ற பூதம் ஐந்தாய். ஆறு ஆர்சுவை - ஆறாக அமைந்த சுவை (ஆய்); அவை, அறு வகையான நாப்பொறி கவரும் உப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கைப்பு, புளிப்பு, தித்திப்பு என்பன. ஏழ் ஓசை - சட்சம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், என்ற ஓசைகள் ஏழு. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன தமிழ் நூல் வழக்கு. எட்டுத் திசை - மாயாகாரியமான உலகத்தில் காணப்பெறும் எட்டுத்திசை. தானாய் - ஒன்றாய். வேறாய் -அவற்றின் வேறாய். உடனானான் - உடனாய் நிற்பவன். இறைவன் கண்ணும் ஒளியும், கதிரும் அருக்கனும், ஒளியும் சூடும் போல உயிர்களோடு கலந்திருக்கின்ற மூவகை நிலைகளை உணர்த்தியவாறு. இப்பாடல் எண்ணலங்காரம் பட வந்தது.
குருவருள் : இப்பாடலில் `ஈறாய் என்பது முதல் எட்டுத்திசை தானாய்` என்பது முடிய இறைவன் அவையே தானேயேயாய்ப் பிரிப்பின்றி உடலும் உயிரும் போல் ஒன்றாயிருந்து அருள் புரியும் நிலையையும், காணும் ஒளியாகிய கண்ணுக்குக் காட்டும் ஒளியாகிய சூரியன் வேறாயிருந்து உதவுவது போல் இறைவன் வேறாயிருந்து அருள் புரியும் நிலையையும், கண் ஒளி ஒரு பொருளைப் பார்த்தாலும் அக்கண் ஒளியுடன் உடனாய் உயிர் கலந்தாலன்றி, கண் காணாதவாறு போல இறைவன் உயிர்களுடன் உடனாயிருந்து அருள்புரியும் நிலையையும் உணர்த்துகின்றார் ஞானசம்பந்தர்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய
உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில்
மும்மென்றிசை முரல்வண்டுகள் கெண்டித்திசை யெங்கும்
விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே.

பொழிப்புரை :

அன்றலர்ந்த மலர்களைச் சாத்தி வணங்கி உய்தி பெற அடியவர்களே வாருங்கள். உயர்ந்த உம் அன்போடு எம் அன்பையும் ஏற்றருளும் இறைவன் உறையும் கோயில், மும் என்ற ஒலிக்குறிப்போடு இசைபாடும் வண்டுகள் மலர்களைக் கிளறுவதால் திசையெங்கும் மணம் கமழும் பொழில்கள் சூழ்ந்ததும், தண்ணிய வயல்களைக் கொண்டதுமாகிய திருவீழிமிழலை.

குறிப்புரை :

இது அடியார்களை அழைத்து அறிவித்தது. நாண் மலர் - அன்று அலர்ந்த புதுப்பூ. அடியீர் உம் அன்பினொடு மலரிட்டுத் தொழுதுய்ய வம்மின் எனக்கூட்டுக. அன்றி, உம் அன்பினொடு எம்மன்பு செய்து இட்டுத்தொழுது உய்யவம்மின் என்றுமாம். செய்து செய்ய எனத்திரிக்க. மும்மென்பது ஒலிக்குறிப்பு. முரல் - ஒலிக்கின்ற. கெண்டி - மகரந்தங்களைக் கிளறி. வண்டு முரல் பொழில் சூழ் மிழலை எனவே புதுப்பூவிற்குக் குறைவில்லை. ஆதலால் உம்மன்பினொடு இட்டுத் தொழுவதே வேண்டப்படுவது என்பது குறிப்பு. எம்மன்பு செய்து என்றதற்கு, எம்மன்பின் பயனாக எழுந்த திருப்பாடல்களைப் பாடிக்கொண்டே என்பது பொருளாம். பின்னர்த் திருக்கடைக் காப்பில் `தமிழ்பத்தும் இசை வல்லார் சொலக்கேட்டார் வினைபோயிட வான் அடைவார்` என்று அருள்வாராதலின் இதுவே கருத்தாதல் துணிபாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

பண்ணும்பத மேழும்பல வோசைத்தமி ழவையும்
உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.

பொழிப்புரை :

இசையும், அதற்கு அடிப்படையான ஏழு சுரங்களும் வல்லோசை, மெல்லோசை முதலியனவற்றையுடைய தமிழும் உள்ளத்துணர்வாகிய சுவையும், பொருந்திய தாள வேறு பாட்டு ஒலிகளும், மண், புனல், உயிர், காற்று, நெருப்பு, சூரியன், சந்திரன், விண் ஆகிய எண்வகை வடிவங்களும் ஆகிய இறைவனது இடம் திருவீழிமிழலை.

குறிப்புரை :

பண் - இசை. பதம் ஏழு - ஸ்வரஸ்தானங்கள் ஏழு. பதம் - தானம். பல ஓசைத் தமிழ் - வல்லோசை, மெல்லோசை, இடையோசை முதலிய வேறுபாடுகளையுடைய தமிழ். உள் நின்றது ஓர் சுவை - பண்ணைச் சுரத்தானங்களில் நின்று ஆலத்தி பண்ணி, பல ஓசை பொருந்தப் பாடுங்கால் உண்டாகின்ற உள்ளத்து உணர்வாகிய சுவை. உறுதாளத்தொலி - அங்ஙனம் சுவையை அநுபவிக்கும்போது உண்டாகின்ற சச்சபுடம் சாசபுடம் முதலான தாள ஒத்துக்கள் பலவும். சுடர் மூன்றும் - சூரியன் சந்திரன் அக்கினி என்ற ஒளிப் பொருள் மூன்றும், இப்பகுதி இறைவனுடைய அட்டமூர்த்தி வடிவம் கூறுகிறது. உயிர் - இயமானனாகிய ஆன்மா.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

ஆயாதன சமயம்பல வறியாதவன் நெறியின்
தாயானவ னுயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்
தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்
மேயானவ னுறையும்மிடம் வீழிம்மிழ லையே.

பொழிப்புரை :

சுருதி, யுக்தி, அநுபவங்களால் ஆராய்ச்சி செய்யாத பல சமயங்களால் அறியப் பெறாதவன். அறநெறிகளின் தாயாய் விளங்குவோன். எல்லா உயிர்கட்கும் அநாதியாகவே தலைவன். வேத வேள்விகளில் முத்தீ வடிவினன். சிவன் எனும் திருப்பெயருடையவன். எங்கட்குத்தலைவன். செல்வம் நிறைந்த திருவாரூரில் எழுந்தருளியிருப்பவன். அத்தகையோன் உறையுமிடம் திருவீழிமிழலை.

குறிப்புரை :

ஆயாதன சமயம் பல அறியாதவன் - இறையுண்மையையும் இறையிலக்கணத்தையும், அளவையானும், அநுபவத்தானும் உள்ளவாறு ஆராயாதனவாகிய சித்தாந்த சைவம் ஒழிந்த ஏனைச் சமயங்களால் சிறப்பியல்பை அறியப் பெறாதவன். நெறி - இறைவனை அறிதற்கு ஏற்ற பல்வேறு சமயநிலைகள். உயிர்கட்கு முன் தலையானவன் - ஆன்மாக்கட்கு அநாதியே தலைமையாக அமைந்தவன். மறை முத்தீயானவன் - வேத வேள்விக்கேற்ற சிவாக்கினியாகிய முத்தீயானவன். ஆயாதன என்பது முதல் தீயானவன் என்பது வரை இறையிலக்கணம் கூறியது. சிவன் எனச் சிறப்பியல்பு கூறியது. எம்மிறை எனத் தம்மோடு உளதாகிய அநாதித் தொடர்பு கூறியது. செல்வத் திருவாரூர் மேயான் என்றது திருவாரூரின் தொன்மை நோக்கிக் கூறியது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

கல்லானிழற் கீழாயிடர் காவாயென வானோர்
எல்லாமொரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப
வல்வாயெரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்
வில்லாலெயி லெய்தானிடம் வீழிம்மிழ லையே.

பொழிப்புரை :

சிவபிரான் கல்லால மரநிழற்கீழ் யோகியாய் வீற்றிருந்த காலத்து அசுரர்களால் இடருழந்த வானோர் காவாய் என வேண்ட, சூரிய சந்திரராகிய சக்கரம் பூட்டிய பூமியைத் தேராகக் கொண்டு நான்முகன் வேதங்களாகிய தேரிற் பூட்டிய குதிரைகளைச் செலுத்த, அக்கினிதேவனை வலிய வாயாகவும், வாயுதேவனை இறகாகவும் கொண்ட திருமால் ஆகிய அம்பை வாசுகி என்னும் பாம்பினை நாணாகப் பூட்டி மேருமலையாகிய வில்லால் செலுத்தித் திரிபுரங்களை எய்து அழித்த சிவபிரானது இடம் திருவீழிமிழலை.

குறிப்புரை :

கல் ஆல் நிழற்கீழாய் - இறைவன் யோகியாய்க் கல்லால நிழலின் கீழ் அறம் நால்வர்க்கு உரைத்திருந்த காலத்து. வானோர் காவாய் என - அசுரர்களால் வருந்திய தேவர்கள் காவாய் என்று வேண்டிக்கொள்ள, என்றது வேண்டுதல் வேண்டாமையற்ற சனகாதியர் யாதொரு துன்பமுமின்றி இருந்த காலத்தே வினைவயத்தான் வருந்தும் தேவர்கள் அசுரர் ஒறுத்தற்கு ஆற்றாது வருந்திக் காவாய் என வேண்டினர் என்பதை விளக்கியவாறு காண்க. எல் ஆம் ஒரு தேர் - ஒளிப் பொருளாகிய சூரிய சந்திரர்கள் ஆகிய சக்கரம் பூண்ட ஒரு தேர். அயன் - பிரமன், இங்கே பாகனானான். மறை பூட்டி என்றதால் வேதங்கள் குதிரைகளாயினமை வெளிப்படை. வல்லாய் எரி - விரைந்து பற்றும் நெருப்பு. காற்று ஈர்க்கு - காற்றாகிய இறகு. அரி கோல் - திருமாலாகிய அம்பு. கல் - மேருமலை. வல்வாய் எரி - வலிய வாயாகிய எரி, வல்லாய் என்று பாடம் ஓதுவாரும் உளர்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்
புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா
வரத்தான்மிக வளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி
விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே.

பொழிப்புரை :

பிரமகபாலம் பொருந்திய திருக்கரத்தினன். யானையை உரித்ததால் கிடைத்ததொரு மேற்போர்வையினன். முப்புர அசுரர் அழியத் தன்னடி பணிந்த அம்முப்புரத்தலைவர் மூவர்கட்கும் மிக்க வரங்களை அளித்தவன். அப்பெருமானது இடம், வளர்ந்தோங்கிய புன்னை மரங்கள் முத்துக்கள் போல் அரும்பி மலர்ந்து பொன்தாதுக்களை ஈன்று பச்சை மணிகளைப்போல் காய்த்து அழகு செய்கின்ற திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

சிரத்தான் மலி கரத்தான் என மாற்றிப், பிரமகபாலத் தான் நிறைந்த திருக்கரத்தையுடையவன் எனப் பொருள் காண்க. படம் - மேற்போர்வை, புரத்தார் பொடிபட - முப்புரங்களின் வரிசை பொடியாக. தன்னடிபணி மூவர்கட்கு - தம் திருவடியைப் பணிந்த மேம்பட்ட அடியவர்களான தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூவர்கட்கும். ஓவா வரத்தான் மிக அளித்தான் - சுதர்மன், சுநீதி, சுபுத்தி எனப் பெயரீந்து வாயிற்காவலராகும் வரத்தால் மிக அருள் செய்தவன். புரத்தார் பொடிபட என்பதற்கு முப்புராதிகள் பொடியாயினார் எனப் பொருள் கொள்ளின் `உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல் காவலாளர் என்றேவி` என்பதனோடு மாறு கொள்ளும். அன்றியும் அதிகைப்புராணவரலாற்றொடும் முரணும். ஆதலால் புரத்தார் பொடிபட எனப் பிரித்தலே சால்புடைத்து. திரிபுரம் எரிந்த காலத்து அடியவர்கள் மூவர் அழிந்திலர் என்பதைப் புரம் எரிந்த காலத்து இவர்கள் மூவரும் கைலாசத்தில் துவாரபாலகராகும் பதவியைக் கொடுக்கவேண்டும் என வேண்டிக் கொண்டார்கள் என்னும் தர்மசங்கிதைவசனமும் வலியுறுக்கும். புன்னை முத்துப் போலரும்பி, மலர்ந்து, பொன்தாதுக்களை ஈன்று, காய்த்துப் பச்சை மணிகளை யீன்று, அழகு செய்கின்ற மிழலை எனக்கூட்டிப் பொருள் கொள்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

முன்னிற்பவ ரில்லாமுர ணரக்கன்வட கயிலை
தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்
பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடுங் கொடுத்த
மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே.

பொழிப்புரை :

தன்னை எதிர்த்து நிற்பார் யாரும் இல்லாத வலிமை பெற்ற அரக்கனாகிய இராவணன் வடதிசையிலுள்ள கயிலாயமலையைப் பற்றித் தூக்கினான். அவன் தலைகள் தோள்கள் ஆகியன நெரிய ஊன்றி அதனால் இடருழந்த அவன் பின்னர்ப் பணிந்தேத்த அவனுக்குப் பெரிதாகிய வாள், இராவணன் என்ற பெயர் ஆகியனவற்றைக் கொடுத்தருளிய மின்னல் போலப் பொலியும் சடைமுடியை உடைய சிவபிரானது இடம் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன் - தன்னொடு எதிர்த்து நின்று பொருவார் யாரும் இல்லா வலிமைபெற்ற தசக்கிரீவன். இற - இற்றறும்படி. ஊன்றி - வலக்காற் பெருவிரல் நுனியை ஊன்றி. பெருவாள் - சந்திரகாசம் என்னும் வாள். பேர் - மலைக்கீழகப்பட்டு அழுதமையால் உண்டான இராவணன் என்னும் பெயர்; கீர்த்தியுமாம். இதனால் ஆன்மாக்கள் முனைப்புற்ற காலத்து மறக்கருணை காட்டித் தண்டித்து நற்புத்திவரச்செய்து, `நின்னல்லது உறுதுணை வேறில்லை` என உணர்ந்து பணிந்த காலத்து அருள் செய்தல் கூறப்பட்டது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா
ஒண்டீயுரு வானானுறை கோயின்னிறை பொய்கை
வண்டாமரை மலர்மேன்மட வன்னந்நடை பயில
வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே.

பொழிப்புரை :

முன்னொரு காலத்து ஏழுலகையும் தன் வயிற்றில் அடக்கிக்காட்டிய திருமாலும், அவ்வுலகங்களைப் படைத்தருளிய நான்முகனும் தன்னை அறியாதவாறு ஒளி பொருந்திய தீயுருவான சிவபிரான் உறையும் கோயில்; நீர் நிறைந்த பொய்கைகளில் பூத்த செழுமையான தாமரை மலர்மீது இள அன்னம் நடை பயில வெண் தாமரை சிவந்த தாதுக்களை உதிர்க்கும் திருவீழிமிழலையாகும். அன்னத்தின் நிறத்தால் செந்தாமரை வெண்தாமரை ஆயிற்று. அதன் கால்களின் செம்மையால் பொன்னிறத்தாதுக்கள் செந்தாதுக்கள் ஆயின.

குறிப்புரை :

உலகுண்டான் - ஏழுலகையும் தன்வயிற்றில் அடக்கிய திருமால். அவைகண்டான் - அந்த உலகைப் படைத்த பிரமன்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்
இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப்
பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே.

பொழிப்புரை :

மயக்க உணர்வுடையவரும், பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக் கையின்கண் ஏந்தியவரும், நற் குணங்கள் இல்லாதவர்களும் ஆகிய சமணர், புத்தர்கள் நிற்கத் தன்னை வழிபடும் அன்பர்கட்கு வினைவயத்தாற் பொருந்திய பிறப்பினைப் போக்கியவன் எழுந்தருளிய இடம், மிகுதியான தேனீக்கள் தேனை உண்டு களித்து ஒலி செய்யவும், பசுமை நிறமேனியும் பொன் நிறக்காலும் உடைய கிளிகளும், களிப்புற்ற மயில்களும் நிறைந்ததும் ஒளியோடு தோன்றும் கதிரவன் இருக்கும் வான மண்டலத்தை அழகுறுத்துவதும் ஆகிய பொழில் சூழ்ந்த திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

மசங்கல், மயங்கல் - மயக்கம். மண்டை - பிச்சையேற்கும் பனையோலைக்குடைப் பாத்திரம். குண்டர் - அறிவற்றவர். இசங்கும் - வினைவயத்தான் பொருந்திய. இருந்தேன் - பெரிய வண்டு; கரியவண்டுமாம். பசும் பொற்கிளி - பசுமை நிறமும் பொன் போலுஞ் செந்தாளும் உடைய கிளி. திருவீழிமிழலைப் பொழில் விண்ணளவும் ஓங்கி வளர்ந்து பொலிவு செய்யும் என்று உரைத்தருளியதால் இன்றும் அச்சிறப்பிற் குன்றாது ஒளிர்கின்றது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்
காழிந்நகர் கலைஞானசம் பந்தன்றமிழ் பத்தும்
யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்
ஊழின்மலி வினைபோயிட வுயர்வானடை வாரே.

பொழிப்புரை :

வீழிமிழலையுள் எழுந்தருளிய விகிர்தனாகிய இறைவனைப்பற்றி மணம் பொருந்திய சீகாழிப் பதியில் தோன்றிய கலைவல்ல ஞானசம்பந்தன் பாடியருளிய பாடல்கள் பத்தினையும் யாழிசையில் பாட வல்லார்களும் சொல்லக் கேட்டார்களும் ஆகிய அனைவரும் ஊழாக அமைந்த வினைகள் நீங்கச் சிவப்பேறு எய்துவர்.

குறிப்புரை :

ஊழின் மலி வினை - முறைமையானிறைந்த வினை; அதாவது இன்னதன்பின் இன்னது நுகர்ச்சிக்கு உரியது என நியதி தத்துவத்தான் வரையறுக்கப்பெற்ற வினை. இத்திருப்பதிகத்தை யாழிசை வல்லவர் பாடக்கேட்டுச் சிவபக்தியுடன் வழிபட்டவர் எல்லாரும் ஊழ்வினை ஒழியவும் வீட்டுலகம் எய்தவும் பெறுவர் என்றதால், தேவாரத் திருப்பதிகங்களை இசையுடன் பாடல் வேண்டும் என்பதும் அது பத்தியை விளைத்துப் பேரின்ப வீட்டை அருளும் என்பதும் புலனாகும். யாழின் இசை என்றும், யாழ் இன்னிசை என்றும் பிரிக்கலாம். ஊழின்மலி வினை போயிடல் - பாசநீக்கம். உயர் வானடைதல் - சிவப்பேறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விட முண்ட
தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாம்
கொத்தார்மலர் குளிர்சந்தகி லொளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.

பொழிப்புரை :

மந்தர மலையை மத்தாக நட்டுக் கடலைக் கடைந்தபோது, கொடிது எனக் கூறப்பெறும் ஆலகால விடம் தோன்ற, அதனை உண்டவனும், பூங்கொத்துக்கள் சூடிய அழகிய நீண்ட சடை முடியினனும், எரி சுடர் வண்ணனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய இடம்; மலர்க் கொத்துக்கள் குளிர்ந்த சந்தனம் அகில் ஒளிதரும் குங்கும மரம் ஆகியவற்றை அலைக்கரங்களால் ஏந்திக் கொண்டு வந்து மணிமுத்தாறு அடிவீழ்ந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

குறிப்புரை :

வரை மத்தா நிறுவி - மந்தரமலையை மத்தாக நிறுத்தி. அவிடம் என்றது அத்தகைய ஆலகாலவிடம் எனச் சுட்டு, பெருமையுணர்த்தி நின்றது. தொத்து - கொத்து. மணிமுத்தாறு மலர், சந்தனம், குங்குமப்பூ முதலிய காணிக்கைகளைக் கொண்டுவந்து சமர்ப்பித்து அடிவணங்குகிறது என்பதாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை யிடமாம்
மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகி ரெரிகண்
முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.

பொழிப்புரை :

தழைகளுடன் கூடிய ஆலமர நீழலில் யோகியாய் வீற்றிருந்து தவம் செய்யும் சிவபிரான், போகியாய் நூலிழை போன்ற இடையினை உடைய உமையம்மையோடு மகிழ்ந்துறையும் இடம், மேகங்கள் வானின்கண் இடித்தலைக் கேட்டு யானையின் பிளிறல் எனக்கருதி அழகிதாய் வளைந்த ஒளி பொருந்தி விளங்கும் நகங்களையும் எரிபோலும் கண்களையும் உடையனவாய்க் குகைகளில் வாழும் சிங்கங்கள் கர்ச்சிக்கும் உயர்ந்த திருமுதுகுன்றமாகும். அதனை வழிபடச் செல்வோம்.

குறிப்புரை :

வடவிய வீதனில் - ஆலமரத்தினது அகன்ற நீழலில். பதுமாசனத்திலிருந்து தவஞ் செய்கின்ற சைவன் என்றது அநாதி சைவனாகிய சிவனை. இழையார் இடை - நூலிழையை ஒத்த இடை. மழைவானிடைமுழவ - மேகம் வானத்தில் பிளிற. முழவம் பெயரடியாக முழவ என்ற வினையெச்சம் பிறந்தது. ஒலிக்க என்பது பொருளாம். எழில் வளை வாள் உகிர் - அழகிய வளைந்த ஒளி பொருந்திய நகத்தையும். எரி கண் - காந்துகின்ற கண்ணையும். முழை - மலைக்குகை. அரி - சிங்கம். சிங்கம் உறுமுதல் மழை ஒலியை யானையின் பிளிறல் என்று எண்ணி. மேருமலையின் வடபால் தனித்து யோகத்திருந்த இறைவன் முதுகுன்றில் உமையாளொடு போகியாக உறைகின்றான் என்றது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்
தளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு
முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.

பொழிப்புரை :

உயிர்களுடன் அநாதியாகவே வருகின்ற வேதனைகளைத் தரும் பாசங்களாகிய ஒள்ளிய தளைகள் நீங்குமாறு அருள்புரிதற்கு எழுந்தருளிய சிவபிரானது இடம், ஒளி பொருந்திய கிரணங்கள் ஆயிரத்தைக் கொண்ட கதிரவனும் முளைத்தெழுந்து வளரும் சந்திரனும் தவழும் வானளாவிய மலையாகிய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

குறிப்புரை :

விளையாதது ஒருபரிசில்வரும் பசுபாச வேதனை ஒண்தளை - மீண்டும் அங்குரியாதவாறு அவிந்ததாகிய ஒரு தன்மையில் வரும் பாசங்களாகின்ற துன்பத்தைத் தருகின்ற ஒள்ளிய கட்டு. பசுபாசம் - ஆன்மாக்களை அனாதியே பந்தித்து நிற்கும் ஆணவமலக்கட்டு எனப்பாசத்திற்கு அடையாளமாய் நின்றது. வேதனை - துன்பம் எனப் பொருள் கொண்டு அதன் காரணமாகிய தீவினை என்பாரும் உளர். அப்போது பாசவேதனை உம்மைத்தொகை. பாசமும் வேதனையும் என்பது பொருள். வேதனைக்கு விளையாமையாவது பிராரத்தத்தை நுகருங்கால் மேல்வினைக்கு வித்தாகாவண்ணம் முனைப்பின்றி நுகர்தல். சார்பு - இடம். களை - தேஜஸ். ஆயிரம் பன்மை குறித்து நின்றது. கதிர் ஆயிரம் உடையவன் - சூரியன். சகத்திர கிரணன் என்னும் பெயருண்மையையும் அறிக. செங்கதிரோடு முளைமாமதி தவழும் முதுகுன்று என்றமையால் பிள்ளையார் கண்ட காலம் வளர்பிறைக் காலத்து மூன்றாம் நாளாகலாம் என்று ஊகிக்கலாம். குருவருள் : இறை, உயிர், தளை என்ற முப்பொருள்களும் என்றும் உள்ள உண்மைப் பொருள்கள். ஒரு காலத்தே தோன்றியன அன்று. இக்கருத்தையே `விளையாததொர் பரிசில்வரு பசுபாச வேதனை ஒண்தளை` என்றார். இவை நீங்க அருள்பவனே இறையாகிய தலைவன் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் பசு - உயிர். பாசம் - ஆணவம். வேதனை - நல்வினை தீவினையாகிய இருவினைகள். ஒண்தளை - மாயை. ஆணவக்கட்டினின்றும் ஆன்மாவை விடுவிப்பதற்குத் துணை செய்வதால் மாயையை ஒண்தளை என்றார்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

சுரர்மாதவர் தொகுகின்னர ரவரோதொலை வில்லா
நரரானபன் முனிவர்தொழ விருந்தானிட நலமார்
அரசார்வர வணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்
முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.

பொழிப்புரை :

தேவர்களும், சிறந்த தவத்தை மேற்கொண்டவர்களும், கின்னரி மீட்டி இசை பாடும் தேவ இனத்தவரான கின்னரரும், மக்களுலகில் வாழும் மாமுனிவர்களும் தொழுமாறு சிவபிரான் எழுந்தருளிய இடம், அழகிய அரசிளங்குமாரர்கள் வர அவர்களைப் பொன் அணிகலன்கள் கொண்டு வரவேற்கும் மணமுரசு பன்னாளும் ஒலித்தலை உடைய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

குறிப்புரை :

தொகு கின்னரர் - எப்பொழுதும் கூட்டமாகவே இருந்து கின்னரி பயிலும் தேவகூட்டத்தார்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

அறையார்கழ லந்தன்றனை அயின்மூவிலை யழகார்
கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
முறையான்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அந்தகாசுரனைக், கூரிய மூவிலை வடிவாய் அமைந்த குருதிக் கறைபடிந்த அழகிய நீண்ட வேலின் முனையில் குத்தி ஏந்திய சிவபெருமானது இடம் யாதெனில், முனிவர்கள் பலரும் வேதங்கள் பலவும் சொல்லி நறுமலர் சந்தனம் முதலான பொருள்களைக் கொண்டு முறைப்படி சார்த்தி வழிபடுகின்ற திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.

குறிப்புரை :

இப்பாட்டின் முன்னடியிரண்டிலும், அந்தகனை முத்தலைச் சூலத்தின் உச்சியில் தாங்கிய வரலாறு குறிப்பிடப் படுகிறது. அந்தன் - அந்தகாசுரன். அயில் - கூர்மை. வேலுக்கு அழகு இவ்வண்ணம் தண்டிக்கத் தக்கவர்களைத் தண்டித்தல். முனிவர் மறையாயின சொல்லி, மலர்ச் சாந்துகொண்டு முறையான் தொழு முதுகுன்று எனக் கூட்டுக. அந்தகாசுரன் தன்தவமகிமையால் தேவர்களை வருத்தினான். தேவர்கள் பெண்வடிவந்தாங்கி மறைந்து வாழ்ந்தனர். பின் அவர்கள் வேண்டுகோட்கிரங்கிச் சிவபெருமான் பைரவருக்கு ஆணையிட அவர் தனது முத்தலைச் சூலத்திற் குத்திக் கொணர்ந்தார். அவன் சிவனைக் கண்டதும் உண்மை ஞானம் கைவரப் பெற்றான். கணபதியாம் பதவியை அளித்தார் என்பது வரலாறு. (கந்தபுராணம்.)

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

ஏவார்சிலை யெயினன்னுரு வாகியெழில் விசயற்
கோவாதவின் னருள்செய்தவெம் மொருவற்கிட முலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.

பொழிப்புரை :

அம்புகள் பூட்டிய வில்லை ஏந்திய வேட உருவந்தாங்கி வந்து போரிட்டு அழகிய அருச்சுனனுக்கு அருள்செய்த எம் சிவபெருமானுக்கு உகந்த இடம், சாவாமை பெற்றவர்களும், மீண்டும் பிறப்பு எய்தாதவர்களும், மிகுதியான தவத்தைப் புரிந்தவர்களும், மூப்பு எய்தாத முனிவர் பலரும் வந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். நாமும் அதனைச் சென்றடைவோம்.

குறிப்புரை :

இதில் இறைவன் வேடவுருத்தாங்கிப் பன்றியை எய்து வீழ்த்தி அருச்சுனன் தவங்கண்டு வந்து பாசுபதம் அருளிய வரலாறு குறிக்கப்பெறுகின்றது. ஏ - அம்பு. சிலை - வில். எயினன் - வேடன். விசயற்கு - அருச்சுனற்கு. ஓவாத - கெடாத. சாவாதவர்களும், மீட்டும் பிறப்பெய்தாதவர்களும், ஆகத் தவமிக்க முனிவர்கள்; என்றும் இளமை நீங்காத முனிவர்கள் தொழும் முதுகுன்றம் என்றவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடியர்
மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்
விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை
முழவோடிசை நடமுன்செயு முதுகுன்றடை வோமே.

பொழிப்புரை :

தழலை ஒத்த சிவந்த திருமேனியரும், பிறைமதி அணிந்த சடைமுடியினரும், இளமையான திருமாலாகிய இடபத்தில் மிகவும் உகந்தேறி வருபவரும், வேதங்களை அருளியவருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயில், விழாக்களின் ஓசையோடு அழகு மிகு நங்கையர் தக்க நடனசாலைகளில் முழவோசையோடு பாடி நடனம் ஆடும் திருமுதுகுன்றம் ஆகும். அதனை நாமும் சென்றடைவோம்.

குறிப்புரை :

தழல் சேர்தரு திருமேனியர் - தழலை ஒத்த செந்நிற மேனியை யுடையவர். `தழல்வண்ண வண்ணர்` என்றதும் அது நோக்கி. சசி - சந்திரன். மழ மால் விடை - இளைய பெரிய இடபம். ஆடகசாலை - நடனசாலை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
கதுவாய்கள்பத் தலறீயிடக் கண்டானுறை கோயில்
மதுவாயசெங் காந்தண்மலர் நிறையக்குறை வில்லா
முதுவேய்கண்முத் துதிரும்பொழின் முதுகுன்றடை வோமே.

பொழிப்புரை :

பொல்லா மொழிகளைக் கருதிக் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் வடுவுள்ள வாய்கள் பத்தும் அலறும்படி கால்விரலால் ஊன்றி அடர்த்த சிவபிரானது கோயில் விளங்குவதும், தேன் நிறைந்த இடம் உடைய செங்காந்தள் மலர்களாகிய கைகள் நிறையும்படி முதிய மூங்கில்கள் குறைவின்றி முத்துக்களை உதிர்க்கும் பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருமுதுகுன்றை நாம் அடைவோம்.

குறிப்புரை :

செதுவாய்மைகள் கருதி - பொல்லாச் சொல்லை எண்ணி. செதுவாய்மை - பொல்லாமொழி. `செதுமொழிந்த சீத்த செவி` என்பதுபோல நின்றது. கதுவாய்கள் - வடுவுள்ளவாய் `கது வாய் எஃகின்` என்னும் பதிற்றுப்பத்தடி ஒப்பு நோக்குக. மலைப்பிளப்பை ஒத்த வாயுமாம். மதுவாய - தேனை மலரின் முகத்தே உடைய, செங்காந்தள் பூக்களில் நிறைய மூங்கில்கள் முத்தைச் சொரிகின்றன என்பது. செங்காந்தள் கையேந்தி ஏற்பாரையும், வேய்வரையாது கொடுப்பாரையும் ஒத்திருக்கின்றன என்று கொள்ள வைத்தவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

இயலாடிய பிரமன்னரி யிருவர்க்கறி வரிய
செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்
புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே
முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.

பொழிப்புரை :

தற்பெருமை பேசிய பிரமன் திருமால் ஆகிய இருவராலும் அறிதற்கரிய திருவிளையாடல் செய்து எரியுருவில் எழுந்த செல்வனாகிய சிவபிரான் எழுந்தருளியதும், மேகங்கள் தோயும் வளமையான பொழில்கள், நீர்வளம் மிக்க நிலப்பரப்புகள், நீர் நிலைகட்கு அருகில் வரும் முயல்கள் ஓடுமாறு வெள்ளிய கயல்மீன்கள் துள்ளிப்பாயும் குளங்கள் இவற்றின் வளமுடையதும் ஆகிய திருமுதுகுன்றத்தை நாம் அடைவோம்.

குறிப்புரை :

இயலாடிய பிரமன், இயலாடிய அரி என அடை மொழியை இருவர்க்கும் கூட்டுக. இயல் - தற்பெருமை. செயல்ஆடிய - செயலால் வெற்றி கொண்ட. புயல் - மேகம். புனற்படப்பை - நீர்பரந்த இடம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
மருகன்வரு மிடபக்கொடி யுடையானிட மலரார்
கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.

பொழிப்புரை :

சமணர்களாலும் புத்தர்களாலும் அறியப் பெறாத அரனும், இமவான் மருகனும், தோன்றும் இடபக் கொடி உடையோனும், ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மலர் சூடிய கரியகூந்தலை உடைய இளம் பெண்கள் தெய்வத்தன்மை வாய்ந்த குறிஞ்சிப் பண்ணைப்பாடி முருகப் பெருமானின் பெருமைகளைப் பகரும் திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.

குறிப்புரை :

புறச்சமயிகளால் அறியப்படாமை அறிவித்தவாறு. மலையான் மருகன் - இமவானுக்கு மருமகன். வருமிடபம் என்ற சொற்றொடர் இவர் பதிகங்களிற் பலவிடத்தும் வரல் கண்டு இன்புறற்பாலர் முதற்காட்சியதுவாதலின். கருகு குழல் - ஒருகாலைக்கொருகால் கறுப்பு ஏறிக்கொண்டே போகின்ற குழல். கடிகுறிஞ்சி - தெய்வத்தன்மை பொருந்திய குறிஞ்சிப்பண், இப்பண்ணே முருகனது பெருமையைக் கூறுதற்கு ஏற்றதென்பது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
நிகரில்லன தமிழ்மாலைக ளிசையோடிவை பத்தும்
பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.

பொழிப்புரை :

மேகங்கள் வந்து தங்கும் திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானைப் பழமையான மிக்க புகழையுடைய புகலிநகரில் தோன்றிய மறைவல்ல ஞானசம்பந்தன் உரைத்த ஒப்பற்ற தமிழ்மாலைகளாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பகர்ந்து வழிபடும் அடியவர்களைத் துன்பங்களும் அவற்றைத் தரும் பாவங்களும் அடையா.

குறிப்புரை :

நிகரில்லன தமிழ்மாலை என்றார்; ஒவ்வொரு திருப்பாடலின் முதலிரண்டடிக் கண்ணும் இறைவன் ஆன்மாக்களின் மலத்தைநீக்கி ஆட்கொள்ளும் முறைமையும், உபதேச குருமூர்த்தியாய் வந்தருளும் சிறப்பும், தானே முதல் என உணர்த்தும் தகுதியும் உணர்த்திப் பின்னிரண்டடிகளிலும் இயற்கையழகுகளின் வழியாக இறைவளத்தையுணர்த்துதலின். இடர் - பாவம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவப்
பொருவெங்கரி படவென்றதன் உரிவையுட லணிவோன்
அரவும்மலை புனலும்மிள மதியும்நகு தலையும்
விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.

பொழிப்புரை :

குரா மலரின் மணம் கமழ்வதும், இயற்கையிலேயே மணமுடையதுமான மென்மையான கூந்தலையுடைய உமையம்மை அஞ்ச, தன்னோடு பொருதற்கு வந்த சினவேழத்தைக் கொன்று, அதன் தோலைத் தன் திருமேனியில் போர்த்தவனும், அரவு, கங்கை, பிறை, வெண்தலை ஆகியவற்றை அணிந்த சடையை உடையவனுமாய சிவபிரானுக்குரிய இடம் நீர்வளம் மிக்க வியலூராகும்.

குறிப்புரை :

குரவம் - குராமலர். அரிவை என்றது உமாதேவியை. சிவனுக்கு உமையம்மை வெருவயானையை உரித்துப் போர்த்ததாகச் சொல்லுதல் வழக்கம். அரவு முதலியன விரவிய சடையென்பது தம்முள்மாறுபட்ட, பல பொருள்களும் பகை நீங்கி வாழ்தற்கிடமாகிய சடை என்றவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

ஏறார்தரு மொருவன்பல வுருவன்னிலை யானான்
ஆறார்தரு சடையன்அனல் உருவன்புரி வுடையான்
மாறார்புர மெரியச்சிலை வளைவித்தவன் மடவாள்
வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே.

பொழிப்புரை :

எருதின்மேல் வருபவனும், பல்வேறு மூர்த்தங்களைக் கொண்டவனும், என்றும் நிலையானவனும், கங்கையாற்றைச் சடையில் நிறுத்தியவனும், அனல் போன்ற சிவந்த மேனியனும், அன்புடையவனும், பகைவராய் வந்த அசுரர்தம் முப்புரங்கள் எரியுமாறு வில்லை வளைத்தவனும், உமையம்மை பெருமிதம் கொள்ளப் பல்வகைச் சிறப்புக்களோடு நிற்பவனுமாய சிவபிரானுக்குரிய இடம் நீர் வளம் மிக்க வியலூராகும்.

குறிப்புரை :

ஆர்தருதல் - ஊர்தல். பல உருவன் - அடியார்கள் வேண்டிய வேண்டியாங்கு கொள்ளும் வடிவங்களையுடையவன். அதாவது எம்போலியர்க்கு வினைவாய்ப்பால் கிடைக்கும் உடல் போல்வதன்று, அவன் வடிவென்பது. நிலையானான் - என்றும் அழியாமல் ஏனைய பொருள்கள் தத்தம் கால எல்லை வரை நிலைத்து நிற்கஏதுவானவன். புரிவுடையான் - அன்புடையான். ஆன்மாக்களிடத்துக் காரணமின்றியே செலுத்தும் அன்புடையவன் என்பது கருத்து. மாறார் -பகைவர். வீறு - பிறிதொன்றற்கில்லாத பெருமை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்
பெய்ம்மின்பலி யெனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
உம்மென்றெழு மருவித்திரள் வரைபற்றிட வுரைமேல்
விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே.

பொழிப்புரை :

சிவந்த மென்மையான சடை தாழத் தாருகாவன முனிவர்களின் மனைவியர் வாழ்ந்த இல்லங்கள்தோறும் சென்று உணவிடுங்கள் என்று இசை பாடியவனாய சிவபிரானது இடம், உம் என்ற ஒலிக்குறிப்போடு அருவிகள் குடகுமலை முகடுகளிலிருந்து காவிரியாய் வர அந்நீர் வளத்தால் புகழோடு செழித்து வளரும் பொழில்களையும் பொருந்திய வயல்களையும் உடைய நீர்வளம் மிக்க வியலூராகும்.

குறிப்புரை :

செம்மென்சடை - செம்மையாகிய மெல்லியசடை. மடவார் - கர்மபிரமவாதிகளான தாருகாவனத்து முனிவர் பெண்கள். பலி - பிச்சை. உம் - ஒலிக்குறிப்பு. உரை - புகழ்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

அடைவாகிய வடியார்தொழ வலரோன்றலை யதனில்
மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாம்
கடையார்தர வகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே.

பொழிப்புரை :

அடியவர்கள் தத்தம் அடைவின்படி தொழப் பிரமகபாலத்தில் மகளிர் இட்ட உணவை உண்பவனாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், பள்ளர்கள் வயல்களில் நிறையவும் நிறைந்த மூங்கில்கள் முத்துக்களை வரிசையாகச் சொரியவும் ஆற்றில் வரும் அகில் மரங்களைக் கொண்டதும் நெருங்கிய மரங்களைக் கொண்ட பொழில் சூழ்ந்ததுமாகிய நீர்வளம் மிக்க வியலூராகும்.

குறிப்புரை :

அடைவாகிய அடியார் - தத்தம் நெறியினின்று வழிபடுமடியவர்கள். அடைவு - முறைமை. அலரோன் - பிரமன். கடையார் - பள்ளர்கள். அகில்ஆர்கழை எனப்பிரித்து அகிலும் நிறைந்த மூங்கிலும் எனப் பொருள் காண்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்
பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
கண்ணார்தரு முருவாகிய கடவுள்ளிட மெனலாம்
விண்ணோரொடு மண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.

பொழிப்புரை :

தியானத்தின் பயனாய் இருப்பவனும், நான்முகனாய் உலகைப் படைப்போனும், எண்ணற்ற கலைகளாய்த் திகழ்வோனும் சந்த இசையோடு கூடிய வேதங்களாய் விளங்குவோனும், உலகில் மிக உயர்ந்த பொருளாய் இருப்போனும், எல்லோர்க்கும் தலைவனானவனும், கண்ணிறைந்த பேரழகுடையோனும் ஆகிய கடவுளது இடம் விண்ணவராகிய தேவர்களும் மண்ணவராகிய மக்களும் வந்து வணங்கும் நீர்வளம் நிரம்பிய வியலூர் ஆகும்.

குறிப்புரை :

எண் - தியானம். எண்ணார்தருபயன் - தியானப்பயன். அயனவனாய் - பிரமனாய் என்றது. பவமலி நினைவொடு பதுமனன் மலரது மேவிய நிலையை. மிகுகலையாய் - ஒன்றினொன்று மிகுந்திருக்கின்ற கலைப்பொருள்களாய். பண் - சந்தம். கண்ணார் தரு உரு - கண்நிறைந்த வடிவம். பேரழகன் என்றபடி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்
திசையுற்றவர் காணச்செரு மலைவானிலை யவனை
அசையப்பொரு தசையாவண மவனுக்குயர் படைகள்
விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.

பொழிப்புரை :

வளைந்த வில்லை ஏந்தி வேட்டுவ வடிவம் கொண்டு வந்து, தன்னை நோக்கித் தவம் இயற்றும் விசயனின் ஆற்றலை அறிதற்பொருட்டு எண்திசையிலுள்ளோரும் காண ஒரு காலில் நின்று தவம் செய்த அவன் வருந்தும்படி, அவனோடு செருமலைந்து அவனது ஆற்றலைப் பாராட்டி அவன் அழியாதவாறு அவனுக்குப் பாசுபதம் முதலிய படைக்கலங்களை அருளியவனாகிய சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.

குறிப்புரை :

வசைவில் - வளைந்தவில். நிலையறிவான் - அருச்சுனனுடைய உண்மையான தவநிலையை உணர்த்தும்படி. செரு - போர். நிலையவன் - ஒரு காலில் நின்று தவம் செய்யும் விசயன்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

மானார்அர வுடையானிர வுடையான்பகல் நட்டம்
ஊனார்தரு முயிரானுயர் விசையான்விளை பொருள்கள்
தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்
மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.

பொழிப்புரை :

தலைமையான அரவை அணிந்தவனும், தலையோட்டில் இரத்தல் தொழில் புரிகின்றவனும், பகலில் நட்டம் ஆடுபவனும், ஊனிடை உயிராய் விளங்குபவனும், உயரிய வீரம் உடையவனும், அனைத்து விளை பொருள்களாய் நிற்கும் தலைவன் என நினைத்தற்குரியவனுமாகிய சிவபிரானது இடம், புண்ணியப் பயனால் மேல் உலகை நாடிய விண்ணவர்களால் தொழப் பெறும் நீர் வளம் சான்ற வியலூராகும்.

குறிப்புரை :

மான் - மான் தோல். இரவுடையான் - இரத்தற்றொழில் உடையான். உடையான் என்பது நடுநிலைத்தீவகமாக பகல் நட்டம் உடையான் எனப்பின்னதனோடும் சென்றியையும். ஊனார் தரும் உயிரான் - உடம்பினுள் எங்கும் வியாபகமாய் இருக்கும் உயிர்க்குயிராய் இருப்பவன். உயர்வு இசையான் - பசுபோத முனைப்பால் உயர்வாக எண்ணுகின்ற உயிர்களிடத்துப் பொருள்கள் எல்லாமாய் இருக்கின்ற இறைவன். மேல்நாடிய விண்ணோர் தொழும் என்றது விண்ணோர்கள் தாம் செய்த புண்ணியப்பயனை நுகர்தலிலேயே மயங்கி நிற்பவராதலின், மேல்நாடற்குரிய சிறப்பு என்றும் இல்லாதவர் என்று குறிப்பித்தவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன்
கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீண்முடி நெரிந்து
சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே.

பொழிப்புரை :

எனக்கெதிராகச் சண்டையிடுவார் யார் என்ற செருக்கால் கயிலை மலையை எடுத்த இராவணனின் வலிய பெரிய மலைபோலும் கைகள் தோள்கள் மார்பு ஆகியனவும் ஒளி பொருந்திய நீண்ட மகுடங்களுடன் கூடிய தலைகளும் நெரிதலால் அவன் கதறுமாறு, செறிந்த கழல்களுடன் கூடிய திருவடியின் விரலால் அடர்த்த சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.

குறிப்புரை :

எனக்கு எதிர் பொருவார் ஆர் என, எனக் கூட்டுக. பொருப்பை எடுத்தான் - இராவணன். கருமால்வரை -வலிய பெரிய மலையை ஒத்த. முடிநெரிந்து - கிரீடம் நெரிதலால். சிரமாயின கதற - சிரங்கள் பத்தும் கதற. அடர்த்தான் என்னாது அடர்வித்தான் என்றது அவனுடைய ஆணவம் குறைந்து பரிபாகம் ஏற்படும்வரை வருத்தி என்ற நயம்தோன்ற நின்றது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்
அளம்பட்டறி வொண்ணாவகை யழலாகிய வண்ணல்
உளம்பட்டெழு தழற்றூணதன் நடுவேயொரு வுருவம்
விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.

பொழிப்புரை :

வளமையோடு அலர்ந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் தமக்குள் முடி அடி காண்பவர் பெரியவர் என்ற ஒரு வகையான உடன்பாட்டால் அன்னமும் பன்றியுமாய் வருந்தி முயன்றும் அறிய வொண்ணாதவாறு அழலுருவாகி நின்ற அண்ணலும், அவ்விருவர்தம் முனைப்பு அடங்கி வேண்டத் தழல் வடிவான தூணின் நடுவே ஓருருவமாய் வெளிப்பட்டு அருள் செய்தவனுமாகிய சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.

குறிப்புரை :

வளம்பட்டு அலர் மலர் - திருமாலின் உந்தியினின்றும் தோன்றியது ஒன்றாதலால், வளமான தாமரை மலர். அளம் பட்டு - வருந்தி. உளம் பட்டு - மனம் உடைய; பட என்பது பட்டெனத் திரிந்து நின்றது எதுகைநோக்கி. விளம்பட்டு - வெளிப்பட்டு. விள்ளப்பட்டு என்பது எதுகை நோக்கி விளப்பட்டு ஆகி அது மெலிந்து விளம்பட்டு என நின்றது. விளம் - அகந்தை. செருக்கொழிய என்றுமாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

தடுக்காலுடன் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்
பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
கடல்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த
விடைசேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே.

பொழிப்புரை :

ஓலைப் பாயால் உடலை மறைப்பவராகிய சமண முனிவர்களுடனும், பொன்னிற ஆடையால் உடலை மூடிப்பிடகம் என்னும் நூலைத் தம் மத வேதமாக உரைக்கும் புத்த மதத்தலைவர்கள் உடனும் நம் பெரியோர் நட்புக் கொள்ளார். கடலில் தோன்றிய நஞ்சைத் தான் உண்டு, அமுதை அமரர்க்களித்தருளிய விடைக் கொடியை உடைய சிவபிரானது இடம் நீர்வளமிக்க வியலூராகும். அதனைச் சென்று வழிபடுமின்.

குறிப்புரை :

தடுக்கு - ஓலைப்பாய். சீவரம் - பொன்நிற ஆடை. பிடக்கு - பிடகம் என்னும் புத்த நூல். நமர்பெரியோர் - நம்மவர்களாகிய பெரியோர். கடல் - பாற்கடல். விடமுண்டு அமுது அமரர்க்கு அருள்செய்த - ஆலகால விடத்தைத் தாம் அருந்தி, இனிய அமுதத்தைத் தேவர்க்கு அளித்த கருணையைக் காட்டியவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்
தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
துளங்கில்தமிழ் பரவித்தொழு மடியாரவ ரென்றும்
விளங்கும்புக ழதனோடுயர் விண்ணும்முடை யாரே.

பொழிப்புரை :

விளங்கும் பிறையைச் சடைமேலுடைய விகிர்தனாய சிவபிரானது வியலூரை, இடமகன்ற ஊராகிய புகலியில் தோன்றிய தக்க தமிழ் ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய துளக்கமில்லாத இத்தமிழ் மாலையைப் பாடிப்பரவித்தொழும் அடியவர், எக்காலத்தும் விளங்கும் புகழோடு உயரிய விண்ணுலகையும் தமதாக உடையவராவர்.

குறிப்புரை :

விகிர்தன் - சதுரப்பாடுடையவன். தளம் - இடம். துளங்குஇல் தமிழ் - நடுக்கமில்லாத தமிழ்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி யைந்தும்அமர்ந் தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.

பொழிப்புரை :

வளைந்த பிறைமதி வானின்கண் விளங்கும் மழை மேகங்களைக் கிழித்து ஓடிச் சென்று சேரும் குளிர்ந்த சாரலை உடைய கொடுங்குன்றம், பசுவிடம் விளங்கும் பால் நெய் தயிர் கோமயம் கோசலம் ஆகிய ஐந்து பொருள்களையும் மகிழ்ந்தாடி உலகம் போற்றத் தேன்போலும் மொழியினைப் பேசும் உமையம்மையோடு சிவபிரான் மேவிய திருத்தலமாகும்.

குறிப்புரை :

கூனல்பிறை மேகங்கிழித்து ஓடிச்சேருங் கொடுங் குன்றம் எனக்கூட்டுக. மழைமேகம் - சூல்முற்றி மழை பொழியும் மேகம். தேனில் பொலி மொழியாள் -குயில் அமுதநாயகி. இளம்பிறை கனத்த மேகப் படலத்தைக் கிழித்துச் சென்று சேர்தற்கிடமாகிய குளிர்சாரல் குன்று என்றமையால், ஆன்மாக்கள் அநாதியான ஆணவமலப் படலத்தைக் கிழித்துச் சென்று எய்தி, திருவடி நிழலாகிய தண்ணிய இடத்தைச் சாரலாம் என்பது குறித்தவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

மயில்புல்குதண் பெடையோடுட னாடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேன்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.

பொழிப்புரை :

ஆண் மயில்கள் தண்ணிய தம் பெடைகளைத் தழுவித் தோகைவிரித்தாடும் விரிந்த சாரலையும், குயில்கள் இன்னிசை பாடும் குளிர்ந்த சோலைகளையும் உடைய கொடுங்குன்றம், கூரிய வேல்போலும் நெடிய வெம்மையான ஒளியோடு கூடிய அனலைக் கையில் ஏந்தி நின்றாடி முப்புரங்களைக் கணை தொடுத்து அழித்த சிவபிரான் எழுந்தருளிய திருத்தலமாகும்.

குறிப்புரை :

புல்கு - தழுவிய, தண்பெடை என்றது மயிலுக்குள்ள கற்பின் சிறப்புக்கருதி. குயில் இன்னிசைபாடும் சாரல், மயில் தண்பெடையோடு ஆடும் சாரல் என்றது, தன்வசமற்றுப் பாடியும் ஆடியும் செல்லும் அன்பர்க்குக் குளிருஞ்சாரல் கொடுங்குன்றம் என்ற கருத்துத் தொனித்தல் காண்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே.

பொழிப்புரை :

அருவிகள், ஒளிவீசும் மணிகள், பசும்பொன், மணமுள்ள மலர்கள் ஆகியவற்றைத் தள்ளிக்கொண்டு வந்து நீரைச் சொரிதலால், குளிர்ந்துள்ள மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம், பொங்கி எழும் கங்கையோடு, வெள்ளிய பிறைமதி பொருந்திய சடை, முடிமேல், மணம் வளரும் கொன்றை மலரையும் மதத்தை ஊட்டும் ஊமத்தை மலரையும் அணிந்துள்ள சிவபிரானது வளமையான நகராகும்.

குறிப்புரை :

கிளர்கங்கை - பொங்கும் கங்காநதி. மதமத்தம் - மதத்தையூட்டும் ஊமத்தம்பூ.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாவெயில் வரைவில்தரு கணையிற்பொடி செய்த
பெருமானவ னுமையாளொடு மேவும்பெரு நகரே.

பொழிப்புரை :

பெரிய கரிய மதயானைகளும் சிங்கங்களும் இரை தேடவும், நீர் பருகவும் இறங்கிவரும் பெரிய மலைச்சாரலையும், நிறம் பொருந்திய பெரிய மணிகளைப் பொன்னோடு சொரியும் அருவிகளையும் உடைய கொடுங்குன்றம், தன்னோடு பொரவந்த பெரிய முப்புரக் கோட்டைகளை மலை வில்லில் தொடுத்த கணையால் பொடியாக்கிய சிவபிரான் உமையம்மையோடு எழுந்தருளிய பெருநகராகும்.

குறிப்புரை :

கரி - யானை. அரி - சிங்கம். இழியும் - இறங்குகின்ற சாரல். எனவே பகைகொண்ட வலிவுள்ள யானையும் சிங்கமுமாகிய இவ்விரண்டின் வலிமையடங்க, அருவி கிழித்து வருவது போல, கொடுங்குன்றச்சாரலை அடையின் தம்முள் மாறுபட்ட ஆணவக்களிறும், ஐம்பொறிகளாகிய அரிகளும் தம் வலிமையற்றுக் கருணையருவியின் வழியே இழுக்கப்பட்டு அமிழ்த்தப்படும் என்பது அறிவித்தவாறாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குல மோடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவ னிமையோர்தொழ மேவும்பழ நகரே.

பொழிப்புரை :

மேகத்திடம் இடிக்குரல் தோன்றக் கேட்டுக் கோட்டான் என்னும் பறவை இனங்கள் அஞ்சி மலையினின்றும் இறங்கி வந்து ஓடித்திரியும் மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம், நாகத்தோடு இளவெண்பிறையை முடியிற் சூடி அழகிய உமை நங்கையை ஒரு பாகமாகக் கொண்டுள்ள சிவபிரான், தேவர்கள் தன்னை வணங்குமாறு எழுந்தருளும் பழமையான நகராகும்.

குறிப்புரை :

கூகைக்குலம் - கோட்டான்களின் கூட்டம். கூகைகள் இருள் வாழ்க்கையுடையன. அவைகள் மேக இடிக்குரல்கேட்டு அஞ்சி மலையை விட்டிறங்கிப் புகலிடம் காணாது திரிகின்றன என்றது, அஞ்ஞானமாகிய வாழ்க்கையையுடைய ஆன்மாக்கள் கருணைமழை பொழியும் இறைவனது மறக்கருணை காட்டும் மொழியைக்கேட்டு மலையை அணுகமுடியாதே அலைவர் என்று குறிப்பித்தவாறு. நலமங்கை - அழகிய உமாதேவி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

கைம்மாமத கரியின்னின மிடியின்குர லதிரக்
கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்
அம்மானென வுள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்
பெம்மானவ னிமையோர்தொழ மேவும்பெரு நகரே.

பொழிப்புரை :

துதிக்கையை உடைய கரிய மதயானைகளின் கூட்டம் இடிக்குரல் அதிரக்கேட்டு அஞ்சிக் கொய்யத்தக்க மண மலர்களை உடைய சோலைகளில் புகுந்து ஒளிதற்குச் செறிந்து வரும் கொடுங்குன்றம், இவரே நம் தலைவர் என இடைவிடாது நினைந்து தொழும் அடியவர்கட்கு அருள் செய்யும் சிவபெருமான் விண்ணோர் தன்னைத் தொழ வீற்றிருந்தருளும் பெருநகராகும்.

குறிப்புரை :

கைம்மா - யானை. வெளிப்படைமொழி. யானை, இடியோசையைக்கேட்டுச் சோலைகளிற் புகுகின்றன. இது `நெறி நில்லார் தீயோசைகேட்டு அஞ்சிஓடித் தாணிழல் செல்லும் அன்பரை நினைவூட்டும் நிகழ்ச்சி. அம்மான் - தலைவன். உள்கி - தியானித்து.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தானெடு நகரே.

பொழிப்புரை :

கடம்பு, குருக்கத்தி, முல்லை ஆகியவற்றின் நாள் அரும்புகள் குரவமலர்களோடு விண்டு மணம் விரவும் பொழில் சூழ்ந்த தண்ணிய கொடுங்குன்றம், அரவு, வெள்ளிய இளம்பிறை, மணம் விரவும் கொன்றை மலர் ஆகியவற்றை நிரம்பத் தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகராகும்.

குறிப்புரை :

மரவம் - கடம்பு. மாதவி - குருக்கத்தி. மௌவல் - முல்லை. நிரவ - நிரம்ப. ஒன்ற என்றுமாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

முட்டாமுது கரியின்னின முதுவேய்களை முனிந்து
குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
ஒட்டாவரக் கன்றன்முடி யொருபஃதவை யுடனே
பிட்டானவ னுமையாளொடு மேவும்பெரு நகரே.

பொழிப்புரை :

யானைக் கூட்டங்கள் யாரும் தடுப்பார் இன்றி முதிய மூங்கில்களை உண்டு வெறுத்துப் பிறரால் அகழப்படாது இயற்கையிலேயே ஆழமாக உள்ள சுனைகளில் இறங்கிநின்று நீராடும் கொடுங்குன்றம், தன்னோடு மனம் பொருந்தாது கயிலை மலையை எடுத்த அரக்கனாகிய இராவணனின் முடியணிந்த பத்துத் தலைகளையும் அடர்த்து ஒடித்தவனாகிய சிவபெருமான் உமையம்மையோடு மேவும் பெருநகராகும்.

குறிப்புரை :

முட்டா - தடையில்லாத. முதுவேய்கள் - முதிர்ந்த மூங்கில்கள். யானைகள் மூங்கிலை முரித்து வைத்துக்கொண்டு சுனைகளில் ஆடுகின்றன. குட்டாச்சுனை - தானே ஆழமான சுனை என்பதாம். குட்டம் - ஆழம். குட்டா - ஆழமாக்கப்படாத. ஒட்டா - பொருந்தாத. பிட்டான் - இரண்டாக ஒடித்தான்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

அறையும்மரி குரலோசையை யஞ்சியடு மானை
குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்
மறையும்மவை யுடையானென நெடியானென விவர்கள்
இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே.

பொழிப்புரை :

சிங்கத்தின் கர்ச்சனை ஓசையைக் கேட்டு அஞ்சிக் கொல்லும் தன்மையினவாகிய யானைகள் மன எழுச்சி குன்றி மலையிடையே உள்ள குகைப் பகுதிகளில் மறைந்து வைகும் கொடுங்குன்றம், வேதங்களுக்கு உரியவனாய நான்முகன் திருமால் ஆகிய இருவரும் சிறிதும் அறிய முடியாதவனாய் நின்ற சிவபிரான் மேவிய அழகிய நகராகும்.

குறிப்புரை :

அறையும் - முன்கால்களால் அறைந்து கொல்லும். அடும் ஆனை - கொல்லும் தன்மைவாய்ந்த மதயானை. குறையும் மனமாகி - வன்மைகுறைந்த மனத்தை யுடையவராகி. முழை - குகை. மறையும் அவை யுடையான் - வேதங்களை யுடையவனாய பிரமன். நெடியான் - திருமால் என்றது. இறையும் - சிறிதும்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்
குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்
புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்
பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே.

பொழிப்புரை :

மதம் பொருந்திய யானைகள் தம்மின் வலிய சிங்கம் வருதலைக் கண்டு அஞ்சி மலையைக் குத்திப் பெருமுழையாக்கி, அதனிடை வைகும் கொடுங்குன்றம், புத்தர்களும் பொல்லா மனமுடைய சமணர்களும் புறங்கூறத் தன் பக்தர்கட்கு அருள் செய்பவனாகிய சிவபிரான் மேவிய பழமையான நகராகும்.

குறிப்புரை :

யானை ஆளிவர அஞ்சி, மலையைக் குத்திக்கொண்டு குகையில் தங்குகின்றது என்பதாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

கூனற்பிறை சடைமேன்மிக வுடையான்கொடுங் குன்றைக்
கானற்கழு மலமாநகர் தலைவன்னல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.

பொழிப்புரை :

வளைந்த பிறை மதியைச் சடைமுடிமீது அழகு மிகுமாறு அணிந்த சிவபிரானது திருக்கொடுங்குன்றைக் கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட கழுமலமாநகரின் தலைவனும் நல்ல கவுணியர் கோத்திரத்தில் தோன்றியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்மாலைகளை ஓதி வழிபட வல்லவர் தம்மிடமுள்ள குறைபாடுகள் நீங்கித்துன்பங்கள் அகன்று உலகம் போற்றும் புகழுடையோராவர்.

குறிப்புரை :

கானல் - கடற்கரைச்சோலை. தலைவன் நல்ல கவுணி - தலைவனாகிய நல்ல கவுண்டின்ய கோத்திரத்துண்டானவன். ஊனம் - குறைபாடு. எழில் - எழுச்சி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.

பொழிப்புரை :

கருநிறம் அமைந்த கண்டத்தை உடையவனும், மலைமகளாகிய பார்வதியை இடப் பாகமாகக் கொண்டவனும், துதிக்கையோடு கூடியதாய்த் தன்னை எதிர்த்து வந்ததால் அழிவற்ற புகழ்பெற்ற யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த, தன்னொப்பார் இல்லாத் தலைவனுமாகிய சிவபிரான் வயல்களில் முளைத்த குவளை மலர் போலும் கண்களை உடைய உமையம்மையோடும் நெய்யாடிய பெருமான் என்ற திருப்பெயரோடும் விளங்குமிடமாகிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைச் சொல்வீராக.

குறிப்புரை :

மையாடிய கண்டன் - விஷம் பொருந்திய கழுத்தையுடையவன். கையாடிய கரி - கையோடு கூடிய யானை, கேடில்கரி என்றது இறைவன் உரித்துப் போர்த்ததால் நிலைத்த புகழ் கொண்டமையின். செய் - வயல். நெய்யாடிய பெருமான் என்பது இத்தலத்து இறைவன் திருநாமம். நெய்த்தானம் எனத் தலப்பெயரைச் சொல்லுங்கள் போதும் என்கின்றார்கள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

பறையும்பழி பாவம்படு துயரம் பலதீரும்
பிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி யலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.

பொழிப்புரை :

காவிரி வடகரை மேல் உள்ள எம்பெருமான் ஊராகிய நெய்த்தானம் என்ற பெயரைச் சொல்லுமின் பழி பாவம் தீரும் என வினை முடிபு காண்க. ஆரவாரத்துடன் வரும் புனலின் அலைகள் சேரும் காவிரி வடகரையில் விளங்குவதும், பிறை கங்கை அரவம் ஆகியவற்றுடன் கூடிய சடைமுடியை உடைய எம்பெருமான் எழுந்தருளியதும், மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்தும் நிறை குணத்துடன் தம்மை ஒப்பனை செய்து கொள்ளும் மகளிர் பயில்வதுமாகிய நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்லுமின்; பழிநீங்கும், பாவங்கள் துன்பங்கள் அனைத்தும் தீரும்.

குறிப்புரை :

பறையும் - கழியும், அறையும் - ஒலிக்கும், நிறையும் புனைமடவார் - மனத்தைக் கற்பு நெறிக்கண் நிறுத்துவதாகிய நிறைக்குணத்தால் தம்மை ஒப்பனை செய்த மடவார்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்
தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்
நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.

பொழிப்புரை :

ஊழிக்காலத்து, பேய்கள் பாட, மகா நடனம் ஆடிய பெருமானும், மூங்கில் போலத் திரண்ட தோள்களை உடைய உமையம்மைக்குத் தனது திருமேனியின் ஒரு பாகத்தை வழங்கியவனும், அனைத்து உலகங்களிலும் வாழும் உயிர்களை நிலைபேறு செய்தருளும் தாய்போன்ற தலைவனும், அன்பர்களின் அன்பு நீரில் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நெய்த்தானம் என்ற திருப்பெயரைப் பலகாலும் சொல்வீராக.

குறிப்புரை :

பெருநடம் - மகாப்பிரளய காலத்துச் செய்யப்பெறும் மகாநடனம், வேய் - மூங்கில். அவ்வுலகங்களைத்தாயாகி நிலைபேறு செய்ததலைவன் எனக் கூட்டுக. நெய்யாடிய என்பது எதுகை நோக்கி நேயாடிய என்றாயிற்று. நே - அன்பு. அன்பே அபிடேக மாதல் ஞானப் பூசையிலுண்டு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மன லேந்தி
நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்
கடுவாளிள வரவாடுமிழ் கடனஞ்சம துண்டான்
நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே.

பொழிப்புரை :

சுடப்பட்ட திருநீற்றை அணியும் தலைமையானவனும் ஒளி பொருந்திய சூலம் அனல் ஆகியவற்றைக் கைகளில் ஏந்தி இருள் செறிந்த இரவின் நடுயாமத்தே நடனம் ஆடும் நம்பனும், கொடிய ஒளி பொருந்திய இளைய வாசுகியாகிய பாம்பு உமிழ்ந்த நஞ்சோடு கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனுமாகிய சிவபிரான் உறையும் இடமாகிய நீண்ட வாளை மீன்கள் துள்ளி விளையாடும் நீர்வளம் மிக்க நெய்த்தானம் என்ற ஊரின் பெயரைச் சொல்வீராக.

குறிப்புரை :

சுடுநீறு - சுட்டநீறாகிய விபூதி. நடுநள்ளிருள் - அர்த்தயாமம், நடுநள் - ஒருபொருட் பன்மொழி. நள் -செறிவுமாம். நம்பன் - நம்பப்படத்தக்கவன், விருப்பிற்குரியன். கடுவாள் இளஅரவு ஆடு உமிழ் நஞ்சு - கொடிய ஒளிபொருந்திய இளைய வாசுகியாகிய பாம்பு உமிழ்ந்த அடுதலை உடைய நஞ்சம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்
பகராவரு புனல்காவிரி பரவிப்பணிந் தேத்தும்
நிகரான்மண லிடுதண்கரை நிகழ்வாயநெய்த் தான
நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.

பொழிப்புரை :

நுகரத்தக்க பொருளாகிய சந்தனம், ஏலம், மணி, செம்பொன் ஆகியவற்றை நுரையோடு உந்தி விலை பகர்வதுபோல ஆரவாரித்து வரும் நீரை உடைய காவிரி பரவிப் பணிந்தேத்துவதும், ஒருவகையான மணல் சேர்க்கப்பெற்ற அவ்வாற்றின் தண்கரையில் விளங்குவதுமாகிய நெய்த்தானத்துக் கோயிலில் விளங்கும் சிவபிரான் திருவடிகளை ஏத்தத் துன்பங்கள் நம்மை அடையா.

குறிப்புரை :

நுகர் ஆரம் - நுகரத்தக்க பொருளாகிய சந்தனம், பகராவரும் - விலை கூறிவருகின்ற. நிகரான் மணல் - ஒருவிதமான மணல். நடலை - துன்பம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

விடையார் கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்
உடையார்நறு மாலைசடை யுடையாரவர் மேய
புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்ந்தநெய்த் தானம்
அடையாதவ ரென்றும்அம ருலகம்அடை யாரே.

பொழிப்புரை :

இடபக் கொடியை உடைய அண்ணலும், மணம் கமழும் மாலைகளைச் சடைமேல் அணிந்தவனும் ஆகிய சிவபிரான் மேவியதும், அருகிலுள்ள கண்ணிகளிலும் வாய்க்கால்களிலும் வரும் நீர்பாயும் வயல்கள் பொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய நெய்த்தானம் என்னும் தலத்தை அடையாதவர் எக்காலத்தும் வீட்டுலகம் அடையார்.

குறிப்புரை :

உடைய அண்ணல், உடையவ் வணல் என விரித்தல் தொகுத்தல் விகாரம் வந்தன சந்தம் நோக்கி. வீந்தார் - இறந்தவர்களாகிய பிரமவிஷ்ணுக்களது. வெளை; வெள்ளை என்பதன் தொகுத்தல். நெய்த்தானம் அடையாதவர் அமருலகம் அடையார் என எதிர் மறைமுகத்தால் பயன் கூறியவாறு. அமருலகம், தேவருலகம் என்பாரும் உளர். விரும்பிய தலமாகிய வீடென்பதே பொருந்துவதாம்; அமரர் உலகு என்னாது அமருலகென்றே இருத்தலின்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்
தழலானவ னனலங்கையில் ஏந்தியழ காய
கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்
தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே.

பொழிப்புரை :

பயிர் செழித்து வளர்தலால் ஒளி நிறைந்த வயல்களும் மணம் கமழும் சோலைகளும் நிறைகின்ற நெய்த்தானத்தில், தழல் உருவில் விளங்குபவனும் அனலைத் தன் கையில் ஏந்தியவனும் அழகிய வீரக்கழல்களை அணிந்தவனும் ஆகிய சிவபிரானது திருவடிகளை நாள்தோறும் தவறாமலும் மறவாமலும் தொழுதலை உடைய அடியவர் எந்நாளும் துயரின்றி மற்றவர்களால் தொழத்தக்க நிலையினராவர்.

குறிப்புரை :

கழலாதே - நீங்காதே. விடல் இன்றி - இடைவிடாமல். தொழலார் அவர் - தொழுதலையுடைய அடியார்கள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்
இறையாரமு னெடுத்தானிரு பதுதோளிற வூன்றி
நிறையார்புனல் நெய்த்தானன்நல் நிகழ்சேவடி பரவக்
கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே.

பொழிப்புரை :

அழகிய கயிலாயமலையைத் தன் இருபது முன்கரங்களாலும் பெயர்த்து எடுத்த ஒசை கெழுமிய கடல் சூழ்ந்த இலங்கைக்குரிய மன்னனாகிய இராவணன் இருபது தோள்களும் நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவன் புனல் நிறைந்த நெய்த்தானப் பெருமானது விளங்கும் திருவடிகளைப் பரவ அவனுக்கு முயற்கறையை உடைய சந்திரனின் பெயரைப் பெற்ற சந்திரகாசம் என்ற வாளை ஈந்த அப்பெருமான் திருவடிகளை ஏத்துதலே, ஒருவற்கு அடையத்தக்க கதியாம்.

குறிப்புரை :

அறை - ஒசை. இறை ஆர - மணிக்கட்டுப் பொருந்த, நெய்த்தானன் - அன் தவிர்வழி வந்த சாரியை; நெய்த்தானத்தவனாகிய இறைவன். கறையார் கதிர்வாள் ஈந்த - சந்திரன் பெயரைப் பொருந்திய வாளைத் தந்த என்றது சந்திரஹாசம் என்னும் வாளைத்தந்த என்பதாம். அவர் கழல் ஏத்துதல் கதியே - அந்த இறைவனுடைய கழலை ஏத்துதலே மீட்டும் அடையத்தக்க கதியாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்
சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம்
காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்
ஞாலம்புக ழடியாருடல் உறுநோய்நலி யாவே.

பொழிப்புரை :

அழகிய முடியை உடைய திருமாலும், கொய்யத்தக்க தாமரைமலர் மேல் விளங்கும் நான்முகனும் தன் இயல்பை அறிதற்கியலாத நிலையில் ஒளிவடிவாய்த் திகழ்ந்த நெய்த்தானப் பெருமானை விடியற் பொழுதிலே நீராட்டி மலர் சூட்டித் தொழுதேத்தும் உலகு புகழ் அடியவரை உடலுறும் நோய்கள் நலியா.

குறிப்புரை :

கோலம் முடி - அழகிய கிரீடம், சீலம் - சௌலப்யம் என்னும் எளிமைக்குணம். காலம் பெற - விடியலிலேயே. உடலை நோய் நலியா என்க. உறுநோய் - பிராரத்த வினையான் வரும் துன்பம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்
சித்தம் முடை யடியாருடல் செறுநோயடை யாவே.

பொழிப்புரை :

சித்தத்தில் செருக்குடையவரும், சிறிதும் மதியில்லாதவரும் ஆகிய சமணர்களும், புத்தர்களும் கூறும் பொருளற்ற உரைகளை ஒரு பொருளாக நினையாதீர். நாள்தோறும் நாம் பழகி வழிபடுமாறு, குற்றமற்ற சிவபிரான் உறையும் நெய்த்தானத்தை வணங்கிப்போற்றும் சித்தத்தை உடைய அடியவர் உடலைத் துன்புறுத்தும் நோய்கள் அடையா.

குறிப்புரை :

மத்தம் - மதம். இறைமதியில்லார் - கடவுளுணர்ச்சி சிறிதும் இல்லாதவர்கள். செறுநோய் - வருத்தும் நோய்கள். குருவருள் : `உருகும் மனம் உடையார் தமக்கு உறுநோய் அடையாவே` என்ற பிள்ளையார் இங்கு `நித்தம் பயில் நிமலன் உறை நெய்த்தானமதேத்தும் சித்தம்முடை அடியார்உடல் செறுநோய் அடையாவே` என்று கூறுதல் சிந்திக்கத்தக்கது. இறைவழிபாட்டில் ஈடுபாடுள்ள அடியவர்களை உறத்தக்க நோயும் செறத்தக்க நோயும் அடையா என்பதைத் தெளிவித்தவாறறியலாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

தலமல்கிய புனற்காழியுட் டமிழ்ஞானசம் பந்தன்
நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்
சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.

பொழிப்புரை :

தலங்களில் சிறந்த புனல் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உலகெங்கும் பரவிய புகழால் மிக்க நெய்த்தானத்துப் பெருமான் மீது பாடிய ஒப்பற்ற பயன்கள் பலவற்றைத்தரும் பாடல்களாகிய இவற்றைக் கற்றுப் பலகாலும் பரவ வல்லவர் புண்ணிய வாய்ப்புடைய சிலவே நிறைந்த செல்வன் அடியாகிய சிவகதியைச் சேர்வர்.

குறிப்புரை :

பலம் மல்கிய பாடலிவை பத்தும் என்றது, முதல் நான்கு பாடலிலும் நெய்த்தானம் என்னுங்கள், உங்களை நடலையடையா, அமருலகு அடையலாம், துயரின்றித் தொழலாம், நோய் நலியா, அடையா, கழலேத்துதல் கதி என இம்மைப் பயனையும்; மறுமைப் பயனையும் எய்தலாம் என்கிறார்கள் ஆதலின். சில மல்கிய - சிலவே நிறைந்த. இறைவனடியைச் சில என்றதால் நிறைவு ஏது? மல்குதற்கேற்ற புண்ணிய வாய்ப்புடையன சிலவே யாதலின் இங்ஙனம் கூறினார்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்றான்
போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
காலன்றிற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.

பொழிப்புரை :

பாலினின்று மிதந்து வரும் வெண்ணெய்த் திரள் போல்பவரும், காலனது வலிமை முழுவதையும் அழித்தவரும், வேதப்புலமையில் நான்முகன் போன்ற அந்தணர் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் விளங்கும் ஆலந்துறைக் கோயிலில் உள்ள இறைவனை நினைந்து வழிபடுபவர்களை வினைகள் அடையா.

குறிப்புரை :

பால் உந்து உறுதிரள் - பாலைக் கடைதலால் விளைந்த வெண்ணெய். பிரமன் தான் போலுந்திறலவர் - பிரமனும் அவன் போலும் தன்மையினராகிய அந்தணரும். ஆலந்துறை கோயிலின் பெயர்; புள்ளமங்கை தலத்தின் பெயர். இதனை `புளமங்கை ஆதியவர் கோயில் திருவாலந்துறை தொழுமின்` என்ற இப்பதிகம் பத்தாம் பாடலால் அறிக. வினையடையா என்றது ஆகாமியங்கள் அடையா என்பதாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தண்மைப்
புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
கலையான்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
அலையார்புனல் வருகாவிரி யாலந்துறை யதுவே.

பொழிப்புரை :

இமவான் மகளாகிய பார்வதி தேவியின் கணவனும் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த குளிர்ந்த இவ்வுலகில் உடலோடு பிறக்கும் பிறப்பைக் களைபவனும் ஆகிய சிவபெருமானது இடம், கலைகள் பலவற்றை அறிந்த அறிவால் நிறைந்த மறையவர்கள் மனத்தால் கருதிக் காயத்தால் தொழுது வாயால் ஏத்தி வழிபடுவதும், பொழில் சூழ்ந்ததும் அலைகளோடு கூடி நீர்பெருகி வரும் காவிரிக் கரையிலுள்ளதாகிய திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் விளங்கும் ஆலந்துறை என்னும் கோயில் இதுவேயாகும்.

குறிப்புரை :

கடல்சூழ்தரு தண்மைப் புலையாயின களைவான் இடம் பொழில்சூழ் புளமங்கை - கடல் சூழ்தலால் வந்த பண்பாகிய குளிர்ச்சியோடு புலால் மணத்தைக் களைகின்ற பெரிய இடம் (மணந்தருகின்ற) பொழில் சூழ்ந்த புள்ளமங்கை என்க. களைவான் என ஒரு சொல்லாக்கி, நிற்பவனாகிய இறைவன் என்பாரும் உளர். புலைகளைதல் பொழிலின் செயலேயன்றி இறைவன் செயலாகாமை ஓர்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்
பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்
சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்
துறையானவ னறையார்கழல் தொழுமின்துதி செய்தே.

பொழிப்புரை :

விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், மணம் கமழும் கொன்றை மலர் அணிந்த சடைமுடியின்மீது சுமையாக அமைந்த கங்கையாற்றை அணிந்தவனுமாய சிவபிரானுக்குரியது, சிறகுகளுடன் கூடிய மதுவுண்ட வண்டுகள் ஒலிக்கும் பொழில்களால் சூழப்பட்ட திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் உள்ளது ஆலந்துறை என்னும் கோயிலாகும். அக்கோயிலுக்குச் சென்று அப்பெருமானது திருவடிகளைத் துதி செய்து தொழுவீராக.

குறிப்புரை :

கறை - விடம். மிடறு - கழுத்து. பொறையார்தரு - சுமையாகப் பொருந்திய. நறை - மணம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

தணியார்மதி யரவின்னொடு வைத்தானிட மொய்த்தெம்
பணியாயவ னடியார்தொழு தேத்தும்புள மங்கை
மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்
அணியார்மண லணைகாவிரி யாலந்துறை யதுவே.

பொழிப்புரை :

தண்ணிய பிறைமதியைப் பாம்போடு முடிமிசை வைத்துள்ள சிவபெருமானது இடம் , அடியவர்கள் எமது தொண்டுகளுக்குரியவன் எனத் தொழுது ஏத்துவதும் , மணிகளோடு கூடிய பொன்னை வயிரக்குவைகளோடும் , அழகிய மணலோடும் கொணர்ந்து சேர்க்கும் காவிரியின் தென்கரையிலுள்ளதுமான திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் அமைந்துள்ள ஆலந்துறைக் கோயில் அதுவேயாகும்.

குறிப்புரை :

தணி ஆர் மதி - குளிர்ந்தபிறை . இகரம் சாரியை . எம் பணி ஆயவன் - எமது தொண்டு விளங்குதற்கு இடமாயவன் . எம்மைப் பணிகொள்ளும் தலைவனானவன் என்பாரும் உண்டு . பொன்னும் மணியும் முதலாயின மணலில் அணையும் காவிரி என்றது ஓடும் பொன்னும் ஒக்கநோக்கும் இயல்பு காவிரிக்கு உண்டென்பதால் அடியாரியல்பு விளக்கியவாறு .

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்
கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்
பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை
அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே.

பொழிப்புரை :

உயிர் உடலை அடுத்தற்குக் காரணமான வினைகள் நீங்கும் வகையில் பெருமானை நீவிர் வணங்குவீர்களாக. செழுமையான மலர்க் கொத்துக்களை உடைய சந்தனம், அகில் முதலியவற்றைக் கொண்டுவரும் காவிரியாற்றின் கரைமேல் உள்ளதும் பொந்துகளில் ஆந்தைகள் பல தங்கிப் பாடுவதும் ஆகிய திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் அமைந்துள்ள ஆலந்துறைக் கோயிலை உறைவிடமாகக் கொண்ட தலைவனாகிய சிவபெருமான் நம்மை ஆள்வான்.

குறிப்புரை :

மெய் - உண்மையாகவே, அல்லது உடலானது உயிரை அடுத்தற்குக் காரணமாகிய வினைதீரும்வகை என்றுமாம். தொழுதற்கேற்ற சாதனப் பொருள்களைத் தேடிச்செல்ல வேண்டாம். காவிரியே சந்தனம், பூங்கொத்து, அகில் முதலியவற்றைக் கொணர்ந்து தருகின்றது. அவற்றைக்கொண்டு நீவிர் தொழவேண்டும் என்பதுதான் கருத்து.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

மன்னானவ னுலகிற்கொரு மழையானவன் பிழையில்
பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
என்னானவ னிசையானவ னிளஞாயிறின் சோதி
அன்னானவ னுறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

பொழிப்புரை :

உலகிற்குத் தான் ஒருவனே மன்னனாய் விளங்குபவனும், மழையாய்ப் பயிர்களை விளைவிப்பவனும், குற்றமற்ற பொன்னானவனும், உயிர்களுக்கு வாழ்முதலாக உள்ளவனும், எனக்குத் தலைவனாய் இசை வடிவாக விளங்குபவனும், இள ஞாயிற்றின் ஒளியைப் போன்ற ஒளியினனுமாகிய சிவபெருமான் உறையும் இடம், திருப்புள்ளமங்கையில் விளங்கும் ஆலந்துறைக் கோயில் அதுவாகும்.

குறிப்புரை :

உலகிற்கு ஒரு மன்னானவன் மழையானவன் எனக் கூட்டுக. பிழையில் பொன் - குற்றமற ஓடவிட்ட பொன்னாகிய சாம்பூநதம் முதலியன. என் ஆனவன் - எனக்குத் தலைவனானவன்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

முடியார்தரு சடைமேன்முளை யிளவெண்மதி சூடிப்
பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கைக்
கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்
அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே.

பொழிப்புரை :

தலைமேல் விளங்கும் சடைமிசைமுளை போன்ற இளம்பிறையைச் சூடி வெள்ளிய திருநீறு அணிந்த திருமேனியனாய், மணம் கமழும் மலர்களையும் நீரையும் கொண்டு தன் திருவடிகளை வணங்கி ஏத்தும் அடியார்களுக்கு இனியனாய் விளங்கும் சிவபெருமான் விரும்பி உறையும் இடம் பொழில் சூழ்ந்த திருப்புள்ளமங்கை என்ற தலத்தில் உள்ள ஆலந்துறைக் கோயில் அதுவேயாகும்.

குறிப்புரை :

முளைஇளவெண்மதி - முளைவடிவான இளைய பிறை. பொடி - திருநீறு. திருமேனியர், இனியான் என ஒருமை பன்மை மயங்கி வந்தது, செய்யுளாதலின்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

இலங்கைமனன் முடிதோளிற வெழிலார்திரு விரலால்
விலங்கல்லிடை யடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்
புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனாகிய இராவணனின் தலைகளும் தோள்களும் நெரிய, எழுச்சி பொருந்திய அழகிய கால்விரலால் கயிலை மலையிடை அகப்படுத்தி அவனை அடர்த்த சிவபெருமானது இடம், வேதங்களை முறையாகக் கற்றறிந்து ஓதித் துதித்தலோடு புலன்களை வென்ற புகழுடைய அந்தணர் வாழ்வதும் மாலை அணிந்த சடைமுடி உடைய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாயிருப்பதும் ஆகிய திருப்புள்ளமங்கைத் தலத்தில் விளங்கும் ஆலந்துறைக் கோயில் அதுவேயாகும்.

குறிப்புரை :

மனன் - மன்னன். தொகுத்தல் விகாரம். எழில் - எழுச்சி. விலங்கலிடை - மலையின் அடியில். புலன்கள் தம்மை வென்றார் - புலன்களாகிய பொறிகளைத் தன்வயமாக்கவிடாமல் வென்ற முனிவர்கள். அலங்கல் - மாலை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்றிரு முண்டப்
பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை
வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி
அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே.

பொழிப்புரை :

வெண்மையான திருநீறு மூன்று பட்டைகளாய்ச் செறிய உத்தமஇலக்கணம் ஆகிய மூன்று வரிபொருந்திய, முப்புரிநூல் அணிந்த மலை போன்ற திண்ணிய மார்பினை உடையவனும் மணம் கமழும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியோர் தன்னைத் தேடி அறியாவகை ஓங்கி நின்றவனுமாகிய சிவபெருமானுக்கு உரியஇடம், திருப்புள்ளமங்கைத் தலத்தில் உள்ள ஆலந்துறைக் கோயில் அதுவாகும்.

குறிப்புரை :

செறி ஆர்தரு - நெருங்குதல் பொருந்திய. திருமுண்டம் - அழகிய திரிபுண்டரம். பொறியார்தரு மார்பன் எனக் கூட்டுக. உத்தம விலக்கணம் பொருந்திய மார்பு.(சிந்தாமணி 1462,1706) வெறி - மணம். அறியாவகை நின்றான் -(அவர்கள்) ஞானக்கண்ணினிற் சிந்தையில் நாடவேண்டிய பதியை ஊனக்கண்ணினிற் காணலுற்றார்களாதலின் அறியா வண்ணம் சோதிவடிவாய் நின்றவன்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்
போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை
ஆதியவர் கோயில்திரு வாலந்துறை தொழுமின்
சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.

பொழிப்புரை :

நீதி அறியாத அமணராகிய கீழ் மக்களும் பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திப்போதிமரத்தடியில் உறையும் புத்தமதத்தினரும் கூறும் உரைகளை மெய்ம்மை எனக்கொள்ளாமல், திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் எல்லாப் பொருள்கட்கும் ஆதியானவனாகிய இறைவனை, ஆலந்துறைக் கோயிலில் சென்று தொழுதால் பல்வேறு பிரிவினராகிய தேவர்கள் தொழும் தன்மையைப் பெறலாம்.

குறிப்புரை :

அமண்கையர் - அமணர்களாகிய கீழ்மக்கள். மண்டைப் போதியவர் - மண்டையை (பிச்சைக் கலத்தை)க் கையிலுடைய புத்தர். சாதி மிகுவானவர் - முப்பத்துமூன்று கோடியாகச் சாதியினையுடைய தேவர்கள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்
கந்தம்மலி கமழ்காழியுட் கலைஞானசம் பந்தன்
சந்தம்மலி பாடல்சொலி யாடத்தவ மாமே.

பொழிப்புரை :

மரப்பொந்துகளில் தேனீக்கள் சேகரித்த தேன் மிகுதியான அளவில் கிடைக்கும் பொழில்கள் சூழ்ந்த, அழகிய தண்மையான நீரைக்கொணர்ந்துதரும் காவிரித்தென்கரையில் விளங்கும் திருப்புள்ளமங்கை என்னும் தலத்தில் உள்ள ஆலந்துறைக் கோயிலில் உறையும் இறைவனை, மணம் நிறைந்து கமழும் காழிப்பதியில் தோன்றிய கலை நலம் உடைய ஞானசம்பந்தன் பாடிய சந்தம் நிறைந்த இத்திருப்பதிகப் பாடல்களை ஓதிப்பரவசமாய் ஆடத் தவம் கைகூடும்.

குறிப்புரை :

பொந்து - மரப் பொந்துகள். இப்பதிகச் சந்தம், படிக்குங் காலத்தேயே பரவசமாய் ஆட வருந்தன்மையது என்பது குறித்தவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்
சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்
இனமாதவ ரிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :

மனத்தால் விரும்பப் பெற்ற மனைவியரோடு மகிழ்ச்சிமிக்க இளைஞர்களால் மலர்தூவி வழிபட்டுச் செல்வம் பெறுதற்குரியதாய் விளங்குவதும், சங்குகளை உடைய கடலில் உள்ள கப்பல்களை அலைகள் உந்தி வந்து சேர்ப்பிப்பதும் ஆகிய இடும்பாவனம், சினம் மிக்க வலிய ஒளிபொருந்திய பற்களை உடைய இடும்பன் என்னும் அரக்கனுக்குரிய வளம்மிக்க குன்றளூர் என்னும் ஊரில் முனிவர் குழாங்களால் வணங்கப்பெறும் சிவபிரானுக்குரிய இடம் ஆகும்.

குறிப்புரை :

மனம் ஆர்தரு மடவார் - மனம் பொருந்திய சிறு பெண்கள். குன்றில் - குன்றளூரில். இது இடும்பன் தலைநகரம், மத்தியிலுள்ள தனம் ஆர்தரு குன்றில், உந்தி மிகு குன்றில், எனத் தனித்தனிக் கூட்டுக. போககாமிகளாகிய காதலர்கள் அருச்சனைசெய்து அதற்குக் காரணமாகிய தனத்தை யடைகின்றனர். கடலில் அலைகள் இருப்பதால் கப்பல்களை உந்தி மிகுகின்றன. அரக்கன் - இடும்பன். சினம் ஆர்தரு, திறல்வாள், எயிறு என்பன அரக்கனுக்குத் தனித்தனியே அடைமொழியுமாம். இனமாதவர் இறைவர் - கூட்டமாகிய முனிவர்களுக்கு இறைவர்; என்றது சிவபெருமானை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புக ழொளிசேர்
கலையார்தரு புலவோரவர் காவன்மிகு குன்றில்
இலையார்தரு பொழில்சூழ்தரு மிடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :

இமவான் மகளாய் மலையிடைத் தோன்றி வளர்ந்த பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்து நிலையாக வீற்றிருந்தருளும் குற்றமற்ற சிவபிரானது வென்றி விளங்குவதும், புகழாகிய ஒளி மிக்க கலை வல்ல புலவர்கள் இடைவிடாது பயில்வதால் காவல்மிக்கு விளங்குவதுமான குன்றளூரை அடுத்துள்ள இலைகள் அடர்ந்த பொழில் சூழ்ந்த இடும்பாவனம் இதுவேயாகும்.

குறிப்புரை :

மலையார் - மலையரசனாகிய இமவான். தரு -பெற்ற, மலை ஆர்தரு மடவாள் எனப்பிரித்து மலையிடத்து வசிக்கின்ற உமாதேவி என்பாரும் உளர். நிலையார்தரு நிமலன் - என்றும் எங்கும் நிற்றலையுடைய நித்தியப் பொருளாகிய இறைவன். ஒளிசேர் இடும்பாவனம், பொழில் சூழ்தரும் இடும்பாவனம் எனக் கூட்டுக. கலை ஆர்தரு புலவோர் -ஒளிமிகுந்த தேவர்கள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழு மெந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்தரு முலகத்தவர் நலமார்
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :

தவ ஒழுக்கத்தால் மேம்பட்ட முனிவர்களால் சிந்தித்து வணங்கப்பெறும் எம் தந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், நிலப்பரப்பினும் மிக்க பரப்புடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகச் சான்றோர்களும், நற்குணங்களும் அழகும் மலர்போலும் மென்மையான தனங்களும் உடைய பெண்களும் மிக்குள்ள குன்றளூரைச் சார்ந்த ஏல மணங்கமழும் பொழில் சூழ்ந்த இடும்பாவனம் எனப்படும் தலம் இதுவேயாகும்.

குறிப்புரை :

சீலம் - காட்சிக்கெளியனாந் தன்மை. இயமம் முதலான தவ ஒழுக்கங்களும் ஆம். ஒழுக்கம் என்றும் ஆம். சிந்தித்தெழும் எந்தை என்றது,`கொழுநற்றொழு தெழுவாள்` போல முனிவர்கள் சிந்தித்துக் கொண்டே எழுவர் என்பதாம். அன்றி ஒழுக்கம் மிக்க மனத்தை யுடையவர்களைத் திருவுள்ளத்தடைத்துத் திருவோலக்கம் கொண்டருளுகின்ற எந்தை. ஞாலம் மிகுகடல் - நிலத்தின் பரப்பைக் காட்டிலும் மிகுந்திருப்பதாகிய கடல். நிலப்பரப்புக் கால்பங்கும், நீர்ப்பரப்பு முக்கால்பங்கும் என்பது மரபாகலின். கோலம் - அழகு, நலமார் இடும்பாவனம் எனக்கூட்டுக. உலகத்தவர் நன்மையடைதற்கு (முத்தியின்பத்தை யடைதற்கு) இடமாகிய இடும்பாவனம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

பொழிலார்தரு குலைவாழைக ளெழிலார்திகழ் போழ்தில்
தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்
குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
எழிலார்தரு மிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :

குலைகள் தள்ளிய வாழைகள் செழித்துள்ள பொழில்கள் சூழப்பெற்றதும், அழகு திகழும் காலை மாலைப் பொழுதுகளில் பணி செய்வதால் சிறப்பு மிகுந்து விளங்கும் தொண்டர்கள் தொழுது ஆடி மகிழும் முன்றிலை உடையதும் மலர் சூடிய கூந்தலை உடைய மென்முலை மடவார் சூழ்ந்துள்ளதுமான குன்றளூரை அடுத்துள்ள இடும்பாவனம் அழகுக்கு அழகு செய்யும் இறைவர்க்குரிய இடமாகும்.

குறிப்புரை :

முன்றில் இடும்பாவனம் இது எனக்கூட்டுக. சோலைகளில் விளங்குகின்ற குலைவாழைகள் அழகுமிகுகின்ற காலத்துத்தொண்டர்கள் தொழுது ஆடுகின்ற முன்றிலையுடைய குன்று எனவும், அத்தகைய குன்றில் இறைவர்க்கு இடம் இத்தகைய இடும்பாவனம் எனவும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க. குலைவாழைகள் அழகோடுகூடி விளங்கும்போது மஞ்சள் வெயிற்படும் மாலைக்காலம்; அப்போது அடியார்கள் தொழுது ஆனந்த மேலீட்டால் ஆடுகின்றார்கள் என்பது. குழலார் தருமலர் மென்முலை மடவார் - குழலின் கண் பொருந்திய மலரையும் மெல்லிய முலையினையுமுடைய மடவார் என்கின்றது வேட்டுவமகளிரை. எழில் - அழகு. எழுச்சியுமாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

பந்தார்விர லுமையாளொரு பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்
எந்தாயென விருந்தானிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :

பந்தாடும் கை விரல்களை உடைய உமையவள்பங்கனே எனவும், கங்கை அணிந்த சடைமுடியோடு செந்தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிரம்பிய வளமான வயல்களின் கரைமேல் கொத்துக்களாக மலர்ந்த புன்னை, மகிழ், குரா ஆகியவற்றின் மணம் கமழ்கின்ற குன்றளூரில் எழுந்தருளிய எந்தாய் எனவும், போற்ற இருந்த இறைவனது இடம், இடும்பாவனம்.

குறிப்புரை :

பந்தார் விரல் உமையாள் ஒரு பங்கா - பந்தணை மெல்விரலி எனவும், அம்மைக்கொரு நாமம் உண்மையைக் குறிப்பித்தவாறு. பங்காக என்பது பங்கா எனச் செயவென்னெச்சத்தீறு கெட்டது. பங்காகக் கரைமேல், குன்றில் இருந்தான் எனக்கூட்டுக. கங்கையை முடிமேற்கொண்டு என ஒரு சொல் வருவித்துமுடிக்க. வயற்கரைமேல் புன்னை, மகிழ்குரவம், கமழ்குன்றில் என்றது இடும்பாவனத்தலம் மருதநிலமும் நெய்தல் நிலமும் தம்முள் மயங்கியிருந்தமைபுலனாம். குன்று என்பது குன்றளூர் என்பதன் மரூஉ. எந்தாய் என - அனைத்துயிரும் எமது தாயே என்ன. எந்தை என்பதன் விளியுமாம். தாயும் தந்தையுமாக ஓர் உருவிலேயே நின்று அருள்வது இறைவற்குச் சிறப்பியல்பாகலின் எந்தாய் எனச்சொல் ஒன்றானே நயம்தோன்றக் கூறியவாறு. `தோடுடைய செவியன்` என்றதற்கேற்ப எந்தாய் என இருந்தான் என ஆண்பால் முடிபேற்றவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி
அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்
குறிநீர்மையர் குணமார்தரு மணமார்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரு மிடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :

தவ ஒழுக்கத்தால் சிறந்த முனிவர்கள், உயர்ந்த தேவர்கள் ஆகியோர் நினையும் நினைவுப் பொருளாகி, ஞானத்தால் தொழும் மேலான ஞானியர்கட்குத் தன்னை அறியும் அறிவை நல்கிச் சிவலிங்கம் முதலான குறிகளில் இருந்து அருள் புரிபவனாகிய சிவபெருமான் இடம், தூய சிந்தனையைத் தரும் மணம் கமழ்கின்ற குன்றளூரில் வரப்பை மோதும் நீர் நிரம்பிய வயல்கள் புடைசூழ்ந்து விளங்கும் இடும்பாவனமாகிய இத்தலமேயாகும்.

குறிப்புரை :

நெறிநீர்மையர் - ஒழுக்கத்தின்கண் நிற்கும் இயல்பினையுடைய முனிவர்கள், முனிவர்க்கும் தேவர்க்கும் தியானப் பொருளாய் இருப்பார் என்பது குறித்தவாறு. இவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் ஞானிகள், அவர்களை `அறிநீர்மையினில் எய்தும் அவர்` எனக் குறித்தார்கள். அதாவது அறிவானும் அறியப்படும் பொருளும் அறிவுமாகிய மூன்றும் தனிநிலையற்று ஒன்றாயிருந்து அறியும் பரமஞானிகளுக்கு அறியும் அறிவருளி - சிவமாகிய தன்னையறியத்தக்க அறிவும் அருள, என்றது இறைவன் அறியுமாறு அறிந்தாலன்றி ஆன்மாக்கள் தாமாக அறிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாதன என்பது. `உணருமா உணரே` என்பதும் இப்பொருட்டு, குறிநீர்மையர் - அங்ஙனம் அவனருளே கண்ணாகக் காணும் குறிக்கண் நிற்கும் சிவஞானிகள். குணமார்தரும் - இறைவனுக்குள்ள ஐந்தொழில் ஆற்றுதல் ஒழிந்த ஏனைய குணங்களைப் பொருந்தவைக்கும்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்
பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக்
கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி
ஏறேறிய விறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :

நீறணிந்த திருமேனியராய், விளங்கும் உலகெங்கணும் சென்று, பருந்து உண்ணவரும் தசையோடு கூடிய காய்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி அன்பர்கள் இடும் உணவைப்பெற்று உமையம்மையைத் தன் மேனியின் ஒரு கூறாகிய இடப்பாகமாக ஏற்று மகிழ்ந்து விடைமீது வரும் சிவபெருமானுக்குரிய இடமாகிய இடும்பாவனம் இதுவேயாகும்.

குறிப்புரை :

ஏறிய - மிகுந்த. பாறு - பருந்து. தலை - பிரமகபாலம். கூறு ஏறிய மடவாள் - தமது திருமேனிக்கண்ணேயே ஒரு பாதியாயமைந்த உமையாளை. ஒருபாகம் மகிழ்வெய்தி - தன்னின் வேறாக இடப்பாகத்து வைத்து மகிழ்ந்து, இதனால் சொற்பொருள் போல அம்மையோடு ஒன்றாய் இருக்குந்தன்மையும் சொல்லும் பொருளும் போல அம்மையை வேறாகவைத்து விரும்பும் தன்மையும் விளக்கியவாறு. ஏறு - இடபம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை
ஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக்
கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த
ஏரார்தரு மிறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :

வானவெளியில் தேர்மிசை ஏறிவந்த ஒளி பொருந்திய வாளையும் பற்களையும் உடைய அரக்கனாகிய இராவணன், சிவபிரான் எழுந்தருளிய கயிலை மலையின் சிறப்பை ஓராது, தன்தேர் தடைப்படுகிறது என்ற காரணத்திற்காக மலையைப் பெயர்த்துச் செருக்கால் ஆரவாரம் செய்ய, அவன் பத்துத் தலைமுடிகளையும் நெரித்தபின் அவன் வருந்திவேண்ட, கருணையோடு கூரிய கொலைவாள், பிற நன்மைகள், இராவணன் என்ற பெயர் ஆகியவற்றைக் கொடுத்தருளிய அழகனாகிய இறைவற்கு இடம் இடும்பாவனம்.

குறிப்புரை :

தேர் ஆர்தரு - ஆகாயத்தின்கண்ணே அமர்ந்து வந்து. அரக்கன் - இராவணன். ஓராது - ஆராயாமல், அரக்கனாகிய ஆர்த்தானது முடிபத்தினையும் நெரித்து என இயைத்துப் பொருள் காண்க. வாள் - சந்திரகாசம். குணநாமம் - அழுகைக் குணத்தால் வந்த பெயராகிய இராவணன் என்பது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலிமலிசீர்த்
தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர்பலதூய்
மருளார்தரு மாயன்னயன் காணார்மயலெய்த
இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :

தருக்கு மிகுந்த மாயனும் அயனும் காணாது மயங்கப் பொருள் நிறைந்த வேதங்களைக் கற்றுணர்ந்த அந்தணர்களால் புகழ்ந்து போற்றப் பெறும் பழமையானவரும், புகழ்மிக்க அம்மறையோர்களால் தெளிந்த சிந்தையோடு பல்வகை நிறங்களுடன் கூடிய மலர்களைத்தூவி வழிபடப் பெறுபவரும் ஆகிய அருள் நிறைந்த கண்டத்தை உடைய சிவபிரானுக்குரிய இடமாக விளங்கும் இடும்பாவனம், இதுவேயாகும்.

குறிப்புரை :

பொருளார் தரும் மறை - பொருள் நிறைந்த வேதம். புகழ் விருத்தர் - புகழால் பழையவர்கள். தெருள் - தெளிவு. மருளார் தருமாயன் அயன் - தாமே தலையென்னும் தருக்கு நிறைந்த அவரிருவரும். இருளார்தரு - இருளையொத்த. மலர்பல தூய் (தொழும்) இடம் இடும்பாவனம் என ஒருசொல்வருவித்து முடிக்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

தடுக்கையுட னிடுக்கித்தலை பறித்துச்சமண் நடப்பார்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே.

பொழிப்புரை :

பனை ஓலையால் செய்த தடுக்கைத் தம்கையில் இடுக்கிக்கொண்டு தலையிலுள்ள உரோமங்களைப் பறித்து முண்டிதமாக நடக்கும் சமணரும், உடுத்துவதற்குரிய காவியுடைகளை அணிந்து திரியும் புத்தரும் அறிய இயலாதவனாய், துன்பம் நீக்கி இன்பம் அருளும் இறைவனது இடம், தாமரை செங்கழுநீர் போன்ற மலர்களை உடைய மடுக்களும், செந்நெல் வயல்களும் சூழ்ந்த, நீர்மலர் மிக்க நீர்நிலைகளின் கரைமேல் விளங்கும் இடும்பாவனம் இதுவேயாகும்.

குறிப்புரை :

தடுக்கு - பனையோலை மணை. இடுக்கி - தமது அக்குளுள் அடக்கி. உடுக்கை பல துவர்க்கூறைகள் உடம்பு இட்டு - உடுத்துவனவாகப் பல காவியாடைகளை உடம்பில் பூண்டு. மடுக்கள் - ஆழமான நீர்நிலைகள். இடுக்கண் - துன்பம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல
இடியார்கட லடிவீழ்தரு மிடும்பாவனத் திறையை
அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும் வினை தானே.

பொழிப்புரை :

கொடிகள் கட்டிய நீண்ட மாடங்களோடு கூடிய குன்றளூரில் கரைமீது இடியோசையோடு கூடிய அழகிய கடல் தன் அலைகளால் அடிவீழ்ந்து இறைஞ்சும் இடும்பாவனத்து இறைவனை, திருவடிகளையே சிந்தித்து ஆய்வு செய்யும் அந்தணர்கள் வாழும் காழிப்பதிக்கு அணியாய ஞானசம்பந்தன் முறையோடு அருளிய இப்பாடல்களை ஓத, வினைகள் நீங்கும். தானே - அசை.

குறிப்புரை :

கொடியார் நெடுமாடக் குன்றளூர் - கொடிகள் கட்டிய நீண்ட மாடங்களோடு கூடிய குன்றளூரினது. குன்றளூர் என்பது இடும்பனது தலைநகரம். இதனையே சுவாமிகள் பெயர்க்குறையாக்குன்றில் என்று குறித்தவாறு, பல விடங்களில் காண்க. கோலக்கரை இடியார்கடல் அடிவீழ்தரும் இடும்பாவனம் - அழகிய கரையை இடித்தலைப் பொருந்திய கடல் அடிக்கண் மடங்கி வீழும் இடும்பாவனம். அடி ஆயும் அந்தணர் - திருவடியின்பத்தைச் சிந்திக்கும் அந்தணர்கள். படியாற் சொன்னபாடல் - அவர் அவர் பக்குவத்திற்கேற்ப முறையால் சொன்ன பாடல். ஊதப்பறையும் மணல்போலப் பாடல் சொல்லப் பறையும் வினை என்பதாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்னிலை யோர்க்கே.

பொழிப்புரை :

முன்னொரு காலத்தில் காலனின் வலிமையைக் காலால் உதைத்துப் போக்கி, மணம் கமழும் நீல மலர்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய திருநின்றியூரில் நிலையாக எழுந்தருளியுள்ள இறைவற்குப் படைக்கலன் சூலம். சுண்ணப்பொடியும், சாந்தமும், திருநீறே. பால் போலும் வெண்மையான பிறைமதி அவரது செந்நிறச் சடை முடியின் மேலது.

குறிப்புரை :

காலன் வலிபோக்கி, நின்றியூரின் நிலையோர்க்கு, சூலம் படை, சுண்ணப்பொடி, சாந்தம், சுடுநீறு, மதி முடிமேலது என்க. நிலையோர் - நிலைபெறுதலையுடையார். சுண்ணப்பொடியும் சாந்தமும் நீறேயாம், பால் அம்மதி - பால்போலும் அழகிய மதி, அம்தவிர்வழி வந்த சாரியையுமாம். பண்டைக்காலன் என்றது இப்போது சிவனடியார்மேல் செல்லும் முனைப்பற்று இருக்கின்ற நிலையை உளத்தடைத்து.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.

பொழிப்புரை :

நஞ்சை மிடற்றிலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும், மணம் கமழும் கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும், தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிவார் அச்சம், பாவம், கேடு, நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்.

குறிப்புரை :

நின்றியூரில் அடிகள் திருப்பாதம் பணியும் அடியார் அச்சமுதலாயின இலராவர் எனக் கூட்டுக. அச்சம் இலர் என்றது தமக்கு உறுதுணையாவார் ஒருவரைப் பெற்றமையால். இந்நிலையை அப்பர் சுவாமிகளும் `சுண்ணவெண் சந்தனச்சாந்தும்` என்னும் பதிகத்து `அஞ்சுவதுயாதொன்றுமில்லை அஞ்சவருவதுமில்லை` என்றமை காண்க. பாவம் இலர் - பிராரத்த நுகர்ச்சிக் கண்ணும் இவர்கள் இது செய்தார்யானிது செய்தேன் என்னும் தருக்கதின்றிச் செய்வார்கள் ஆதலின் மேல்வினைக்கு வித்துமாகும்./n பாவம் இலர். கேடும் இலர் - அவ்வினை காரணமாக வரும் கேடும் இலராவர். நிச்சம் - நித்யம். நோய் - துன்பங்கள். நச்சம் - நஞ்சு. அம் சாரியை. நறுங்கொன்றை நயந்து - மணம் பொருந்திய கொன்றைப்பூவை விரும்பி, ஆளும் - அதனை விரும்பி அன்போடு சாத்தும் அடியார்களை ஆளுகின்ற. பச்சம் உடை அடிகள் - பட்சமுடைய பெருமான். பச்சம், பக்ஷம் என்பது எதுகை நோக்கித் திரிந்து நின்றது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
உறையும்மிறை யல்லதென துள்ளம் உணராதே.

பொழிப்புரை :

பறையடிக்கும் ஒலி, சங்கு முழங்கும் முழக்கம், பக்கங்களிலெல்லாம் மிகவும் ஒலிக்கும் ஏனைய ஒலிகள் ஆகியவற்றில் இறைவனது நாததத்துவத்தை அறிவோர் உணர்வர். நிறைந்த கங்கைப் புனலைச் சடைமிசை உடையவராய் நின்றியூரில் உறையும் அவ்விறைவரை அல்லது என் உள்ளம் பிறபொருள்களுள் ஒன்றனையும் உணராது.

குறிப்புரை :

பாங்குஆரவும் - பக்கங்களில். மிகவும் - அறையும் ஒலி மிக அடித்தலால் உண்டாகும் (ஏனைய) ஒலிகள். இவை தோற்கருவி ஒலிகள். அறிவார் அடிகள் இறை அவர் தன்மையல்லது உள்ளம் உணராது என முடிக்க. எங்கும் அவையறிவார் - எவரும் அவ்வொலியினை அறிபவர், என் உள்ளம் உணராது என்பது எங்குங்காண்பது அவனுருவே ஆதலின்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே.

பொழிப்புரை :

அணிகலன்களைப் பூண்ட மலைபோன்ற மார்பில் முப்புரிநூலை அணிந்து, விரிந்த கொன்றை மலர் மாலையையும் அதனோடும் பொருந்தப் பால் போன்ற வெண்மையான திங்களையும் சூடி, வானத்தைத் தீண்டும் பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளி, நம்மை ஆண்டருளிய அவ்விறைவன் திருவடிகளைத்தொழுதல் அல்லது, அவன் இயல்புகளை அடியவர் எவரும் அறியார்.

குறிப்புரை :

பூண்டவரை மார்பு - அணிகளைப்பூண்ட மலை போலத் திண்ணிய மார்பு. பூண்டவ்வரை - விரித்தல் விகாரம். ஈண்ட - செறிய. கொன்றை./nஈண்ட மதி அதனைத் தீண்டும் பொழில் சூழ்ந்த திருநின்றி எனக் கூட்டுக. திருவடியைத் தொழுதாலல்லது அவர் அறிவான் அறியார் என ஆன்மாக்கள் அருளே கண்ணாகக் காணும் ஆற்றல் விளக்கியவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
அழலின்வல னங்கையது வேந்தியன லாடும்
கழலின்னொலி யாடும்புரி கடவுள்களை கண்ணே.

பொழிப்புரை :

குழலிசை வண்டிசை ஆகியவற்றைக் கேட்டுக் குயில்கள் கூவுவதும், நிழலின் அழகு தங்கியதுமாகிய பொழில்களால் சூழப்பட்ட நின்றியூரிடத்து அழலை வலத்திருக்கரத்தில் ஏந்தி அனலிடை நின்று கழல்களின் ஒலிகள் கேட்குமாறு ஆடும் இறைவன் நமக்குக்களைகண் ஆவான்.

குறிப்புரை :

பாடுவாரைப் பார்த்து மற்றவர்க்கும் பாடத்தோன்றுவதுபோலக் குழலிசையும் வண்டிசையும் கேட்டுக் குயில் கூவுகின்றன. நிழலின் எழில் தாழ்ந்த பொழில் - ஒளியும் நிழலும் விரவித் தோன்றும் நிலை சித்திரப்பூம்படாம் விரித்தது போலுமாகலின் நிழலின் எழில் தாழ்ந்த பொழில் என்பர்./n அழலின் வலன் - வலமாகச் சுற்றியெரியும் மழு. ஆடும்புரிகடவுள் - ஆடுகின்ற விரும்பத்தக்க கடவுள். களைகண் - நமக்கு ஆதாரம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்
சாரன்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
வீரன்மலி யழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
யூரன்கழ லல்லாதென துள்ளம்முண ராதே.

பொழிப்புரை :

புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, சடைமுடியில் சார்ந்துள்ள பிறைமதியோடு கங்கையை வைத்துள்ள வீரனும் அழகு மலிந்த பொழில்கள் செறிந்த திருநின்றியூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லாது எனது உள்ளம் வேறு ஒன்றையும் உணராது.

குறிப்புரை :

மூரல் முறுவல் - மிகச் சிறிய புன்சிரிப்பு, சலவம் - கங்கை. கழலைப்பற்றிய உள்ளத்திற்கு, வேறொன்றையும் உணர முடியாமையானும் உணர்ந்து ஆகவேண்டுவது இன்மையானும் உள்ளம் உணராது என்றார்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும்
பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்
சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்
நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்னிலை யாரே.

பொழிப்புரை :

பிரமனது தலைகளில் ஒன்றைப் பறித்து அதனைக் கையினில் ஏந்திப் பலிகேட்கும் இயல்பினராய்த் திரிகின்ற தேவர் தலைவரும் புலித்தோலை இடையில் சுற்றியிருப்பதோடு முடியில் பிறை மதியைச் சூடியவரும், நெற்றியில் ஒரு கண்ணை உடையவரும் ஆகிய பெருமானார் திருநின்றியூரின்கண் நிலையாக எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

தலை கையினில் பற்றி ஏந்தித் தேரும் பெற்றியதுவாகியே திரிகின்ற தேவர் பெருமானார் என இயைக்க. பலி பெற்றியதுவாகி எனவே அப்பெற்றி அவர்க்கு இயல்பன்மையும், தாருகாவனத்து முனிவர்கள்பால் வைத்த தடையிலாக்கருணையே காரணம் என்பதும் வெளிப்படை, சுற்றி - அரையைச் சுற்றி. வேங்கை - புலித்தோல்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

****************

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

இப்பாடல் கிடைக்கவில்லை

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

நல்லம்மலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்
அல்லரென வாவரென நின்றும்மறி வரிய
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரின்னிலை யாரெம்
செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.

பொழிப்புரை :

நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனோடு உலகைத் தன் வயிற்றகத்து அடக்கிக் காட்டிய திருமாலும், சிவபிரானே முழுமுதற் பொருள் ஆவர் எனவும் அல்லர் எனவும் கூறிக்கொண்டு தேடிக் காணுதற்கரியவராய் நின்றவரும் நெல்வயல்களால் சூழப்பட்ட நின்றியூரில் நிலையாக எழுந்தருளிய எம் செல்வருமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லது என் சிந்தை வேறொன்றையும் உணராது.

குறிப்புரை :

நல்ல மலர் நல்லம்மலராயிற்று. மலர்மேலான்பிரமன். ஞாலமது உண்டான் திருமால். அல்லர் என ஆவர் என தலைவர் அல்லர் எனவும் தலைவர் ஆவர் எனவும் தாமே தருக்கி நின்று.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை
அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே
நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்
மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே.

பொழிப்புரை :

சமய நெறியில் பயில்வதால் பேராமலும் மறவாமலும் நினைக்கும் முழுமுதற்பொருளை அறியும் அறிவற்ற சமணர்களாகிய நெறியற்ற கீழ்மக்களின் உரைகளைக் கேட்டு மயங்காமலும், தமக்கென்று உண்மை நெறியல்லாத புறச்சமயிகளின் அடையாளங்களைக் கருதாமலும் நின்றியூரில் மான் ஏந்தியகையனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாகும்.

குறிப்புரை :

நெறியில் வரும் - தொன்றுதொட்டுக் குரு காட்டிய நெறியினின்று பயில்வதால் வருகின்ற. பேராவகை நினையா நினைவொன்றை அறிவில் சமண் ஆதர் - பேராதே மறவாதே தன்மயமாய் இருந்து நினைக்கப்படும் ஒருபொருளை அறியும் அறிவு அற்ற சமணர்களாகிய கீழ்மக்கள். மயராது - மயங்காது. நெறியில்லவர் - தமக்கென்று உண்மை நெறியில்லாதவர்களாகிய புறச்சமயிகள். குறிகள் - அடையாளங்கள். மறி - மான்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

குன்றம்மது வெடுத்தானுடல் தோளுந்நெரி வாக
நின்றங்கொரு விரலாலுற வைத்தானின்றி யூரை
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.

பொழிப்புரை :

கயிலைமலையை எடுத்த இராவணனின் உடல் தோள் ஆகியன நெரியத் தன் கால்விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது, நன்மைகளையே செய்யும் புகலிப்பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த திருவருள் நலம் குன்றாத இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் புகழ் நிறையும்.

குறிப்புரை :

உற - பொருந்த. ஞானம்மிகுபந்தன் - ஞானசம்பந்தன். இச்சொல் ஞானசம்பந்தன் என்பதற்குப் பொருள் காட்டியது போலும். குன்றாத்தமிழ் - எஞ்ஞான்றும் திருவருள் குறையாத தமிழ்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை யவனிறை
இறையணி வளையிணை முலையவள் இணைவன தெழிலுடை யிடவகை
கறையணி பொழினிறை வயலணி கழுமல மமர்கன லுருவினன்
நறையணி மலர்நறு விரைபுல்கு நலமலி கழல்தொழன் மருவுமே.

பொழிப்புரை :

பிறை அணிந்த விரிந்த சடைமுடியின்கண் பெருகிவந்த கங்கையை உடைய இறைவனும், முன்கையில் அழகிய வளையலை அணிந்த உமையம்மையின் இரண்டு தனபாரங்களோடு இணைபவனும், அழகிய இடவகைகளில் ஒன்றான நிழல்மிக்க பொழில்கள் நிறைந்ததும் நெல்வயல்கள் அணி செய்வதுமாகிய திருக்கழுமலத்தில் எழுந்தருளியுள்ள அழல் போன்ற சிவந்த மேனியனுமாகிய சிவபிரானின் தேன்நிறைந்த மலர்களின் நறுமணம் செறிந்த அழகிய திருவடிகளைத் தொழுதல் செய்மின்கள்.

குறிப்புரை :

இறை - முன் கை. இணை முலையவள் இணைவனது- பரஞானம் அபரஞானம் என்ற இரண்டு முலைகளையுடைய உமாதேவியோடு இணைபவனாகிய சிவனது. கறையணிபொழில் - நிழல் மிக்க பொழில். நறையணிமலர் - தேனோடுகூடிய அழகிய மலர். உலகீர்! இடமாகிய கழுமலம் அமர் கனல் உருவினனது கழல் தொழுதலை மருவும் எனக்கூட்டுக. மருவும் - பொருந்துங்கள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

பிணிபடு கடல்பிற விகளறல் எளிதுள ததுபெரு கியதிரை
அணிபடு கழுமல மினிதமர் அனலுரு வினனவிர் சடைமிசை
தணிபடு கதிர்வள ரிளமதி புனைவனை யுமைதலை வனைநிற
மணிபடு கறைமிட றனைநலம் மலிகழ லிணைதொழன் மருவுமே.

பொழிப்புரை :

இடைவிடாமல் நம்மைப் பிணிக்கும் கடல் போன்ற பிறவிகள் நீங்குதல் எளிதாகும். அப்பிறவிக்கடல் மிகப் பெரிதாகிய துன்ப அலைகளை உடையது. ஆதலின் அழகிய கழுமலத்துள் இனிதாக அமர்கின்ற அழலுருவினனும் விரிந்த சடைமீது குளிர்ந்த கிரணங்களை உடைய பிறைமதியைச் சூடியவனும், உமையம்மையின் மணாளனும், நீலமணிபோலும் நிறத்தினை உடைய கறைக்கண்டனும் ஆகிய சிவபிரானின் நலம் நிறைந்த திருவடிகளைத் தொழுதல் செய்மின்.

குறிப்புரை :

பிணிபடுகடல் பிறவிகள் - ஆதி ஆன்மிகம் முதலிய பிணிகளோடு தொடக்குண்ட கடல் போன்ற பிறவிகள். தன்னகப்பட்டாரை மீளவிடாதே மேலும் மேலும் பிணிக்கின்ற பிறவிக்கடல் என்றுமாம். அறல் - நீங்குதல். அது பெருகிய திரை உளது - அப் பிறவிக்கடல் மிகப் பெருகுகின்ற அலைகளையுடையது. அனல் உருவினனாகிய மதிபுனைவனை, உமைதலைவனை, கறைமிடறனை, கழலிணை தொழல் மருவும் எனக் கூட்டுக. புனைவன் - சூடுபவன். நிறமணி படும் கறை மிடறன் - ஒளிபொருந்திய நீலமணிபோலும் விடம்பொருந்திய கழுத்தினையுடையவன். நலம் - வீட்டின்பம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

வரியுறு புலியத ளுடையினன் வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடைவிரை புரைபொழில் விழவொலி மலிகழு மலமமர்
எரியுறு நிறவிறை வனதடி யிரவொடு பகல்பர வுவர்தம
தெரியுறு வினைசெறி கதிர்முனை யிருள்கெட நனிநினை வெய்துமதே.

பொழிப்புரை :

கோடுகள் பொருந்திய புலியின் தோலை ஆடையாக உடுத்தவனாய், ஒளி மிக்குத்தோன்றும் கிரணங்களையுடைய வளர்பிறையை அணிந்த சடையை உடையவனாய், மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும் திருவிழாக்களின் ஒலி நிறைந்ததும் ஆகிய கழுமலத்துள் அழல் வண்ணனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை, இரவும் பகலும் பரவுகின்றவர்களின் வருத்துகின்ற வினைகள் மிக்க ஒளியை உடைய ஞாயிற்றின் முன் இருள் போலக் கெட்டொழியும். ஆதலால், அப்பெருமான் திருவடிகளை நன்றாக நினையுங்கள்.

குறிப்புரை :

வரியுறுபுரி அதள் - கோடுகள் பொருந்திய புலித்தோல். வளர்பிறையையும் கதிரையும் பொதிந்த விரியுறுசடையையுடைய இறைவன், கழுமலம் அமர் இறைவன் எனத் தனித் தனிக் கூட்டுக எரியுறு நிற இறைவன் - தீவண்ணன். பரவுவர் தமது நினைவெய்தும் எனக் கூட்டுக. எரியுறுவினை - வருத்துகின்ற நல்வினை தீவினைகள். கதிர் முனை இருள் - ஒளிப்பொருளாகிய சூரியனையும் வெறுத் தோட்டுகின்ற இருள் என்றது ஆணவமலம் என்றவாறு. நனி நினைவெய்தும் - தயிலதாரை போல இடைவிடாது இறைவன் நினைப்பெய்தும்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

வினைகெட மனநினை வதுமுடி கெனில்நனி தொழுதெழு குலமதி
புனைகொடியிடைபொருள் தருபடு களிறின துரிபுதை யுடலினன்
மனைகுட வயிறுடை யனசில வருகுறள் படையுடை யவன்மலி
கனைகட லடைகழு மலமமர் கதிர்மதி யினனதிர் கழல்களே.

பொழிப்புரை :

உயர்ந்த பிறை மதி, கொடிபோன்ற இடையையுடைய கங்கை, மந்திரப் பொருளால் உண்டாக்கப்பட்டுத் தோன்றிய யானையின் தோல் இவற்றை உடைய உடலினனும், வீட்டுக் குடம் போலும் வயிற்றினை உடைய பூதங்கள் சிலவற்றின் படையை உடையவனும், ஆரவாரம் நிறைந்த கடற்கரையை அடுத்த கழுமலத்துள் ஞாயிறு திங்கள் ஆகியவற்றைக் கண்களாகக் கொண்டு அமர்ந்தவனுமாகிய சிவபெருமானின் ஒலிக்கும் கழற் சேவடிகளை, வினைகள் கெடவும் மனத்தில் நினைவது முடியவும் வேண்டின் நன்கு தொழுதெழுக.

குறிப்புரை :

குலமதிபுனை - உயர்ந்த பிறைமதியை அணிந்த கொடியிடை - சுற்றிக் கொண்டிருக்கின்ற காட்டுக் கொடிகளினிடையே. பொருள்தருபடுகளிறினது - பல பொருள்களைக் கொண்டு வருகின்ற இறந்த யானையினது. உரி - தோல். இவருடைய மேனியின் செவ்வொளியைக் களிற்றின் கருந்தோல் புதைத்தது என்பதாம். மனைகுட வயிறு உடையன குறள் படை -வீட்டுக்குடம்போன்ற வயிறு உடையனவாகிய பூதப்படைகள். கதிர் மதியினன் - சூரியனையும் சந்திரனையும் தமது திருக்கண்களாகப் படைத்தவன். உடலினன், உடையவன், மதியினன், கழல்கள். வினைகெட மனநினைவது முடிகெனின், நனிதொழுது எழு எனக்கூட்டுக. மனநினைவிற்கு எல்லாம் காரணமாகிய வினைகள் கெடவும், மனம் நினைந்தது நிறைவேறவும், விரும்பின், கழல்களைத் தொழுதெழு என்று நெஞ்சை நோக்கி அறிவித்தவாறு. முடிக எனின் என்பது முடிகெனின் எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது. முடியுமாயின் எனப் பொருள் காண்பதும் உண்டு. பொருந்துமேல் கொள்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

தலைமதி புனல்விட வரவிவை தலைமைய தொருசடை யிடையுடன்
நிலைமரு வவொரிட மருளின னிழன்மழு வினொடழல் கணையினன்
மலைமரு வியசிலை தனின்மதி லெரியுண மனமரு வினனல
கலைமரு வியபுற வணிதரு கழுமல மினிதமர் தலைவனே.

பொழிப்புரை :

நல்ல கலைமான்கள் பொருந்திய சிறுகாடுகள் புறத்தே அழகு பெறச் சூழ்ந்துள்ள கழுமலத்தில் இனிதாக எழுந்தருளிய இறைவன், ஒரு நாட்பிறை, கங்கை, நஞ்சு பொருந்திய பாம்பு ஆகியவற்றுக்குத் தன் தலைமையான சடைக் காட்டின் நடுவில் ஒன்றாக இருக்குமாறு இடம் அருளியவன். ஒளி பொருந்திய மழுவோடு அழல் வடிவான அம்பினை மேருமலையாகிய வில்லில் பூட்டி எய்தலால் திரிபுரங்கள் எரியுண்ணுமாறு மனத்தால் சிந்தித்தவன்.

குறிப்புரை :

இடமருளினன், கணையினன், மருவினன் தலைவன் எனப் பொருந்த முடிக்க, தலைமதி - ஒருநாட் பிறை. தலைமையது ஒரு சடைஇடை - தலைமையதாகிய சடைக்காட்டின் நடுவில். பகைபட்டபொருளாகிய மதி அரவு இவைகளைப் பகை நீங்கி வாழ ஓரிடத்து அருளினன் என்பது குறித்தவாறு. நிழல் மழு - ஒளிவிடுகின்ற மழு. மலை மருவிய சிலைதனில் - மேருமலையாகிய வில்லில். மதில் - முப்புரங்கள். மனம் மருவினன் - மனம் பொருந்தினன். நலகலை மருவிய புறவு - நல்லகலைமான்கள் பொருந்திய சிறுகாடு. புறவம் என்ற தலப்பெயர்க் காரணம் புலப்படும்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

வரைபொரு திழியரு விகள்பல பருகொரு கடல்வரி மணலிடை
கரைபொரு திரையொலி கெழுமிய கழுமல மமர்கன லுருவினன்
அரைபொரு புலியத ளுடையினன் அடியிணை தொழவரு வினையெனும்
உரைபொடி படவுறு துயர்கெட வுயருல கெய்தலொரு தலைமையே.

பொழிப்புரை :

மலைகளைப் பொருது இழிகின்ற அருவிகள் பலவற்றைப் பருகுகின்ற பெரிய கடலினை அடுத்துள்ளவரிகளாக அமைந்த மணற் பரப்பில் அமைந்ததும், கரையைப் பொரும் கடல் அலைகளின் ஒசை எப்போதும் கேட்கின்றதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளியுள்ளவனும், கனல் போலும் சிவந்த திருமேனியனும், இடையிலே கட்டிய புலித்தோலை உடையவனுமாகிய சிவபிரானின் இணை அடிகளைத் தொழின், போக்குதற்கு அரியனவாகிய வினைகள் என்னும் வார்த்தையும் பொடிபட, மிக்க துயர்கள் நீங்க உயர்ந்த உலகமாகிய வீட்டுலகத்தைப் பெறுதல் நிச்சயமாகும்.

குறிப்புரை :

கழுமலத்தில் எழுந்தருளியுள்ள தீவண்ணப் பெருமானின் திருவடியைத் தொழ, வினையென்னும் சொல்லும் பொடிபட உயர்ந்த உலகத்தையடைதல் துணிபு என்கின்றது. அருவிகள் பல பருகு ஒருகடல் -பல அருவிகளைப் பருகுகின்ற பெரியகடல். திரை ஒலி கெழுமிய கழுமலம் - அலையோசையோடு எப்பொழுதும் கூடியிருக்கிற சீகாழி. உரையும் பொடிபடவே அதன் பொருளாகிய வினைபொடிபடுதல் சொல்லாமலேயமையும் என்பதாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

முதிருறி கதிர்வள ரிளமதி சடையனை நறநிறை தலைதனில்
உதிருறு மயிர்பிணை தவிர்தசை யுடைபுலி யதளிடை யிருள்கடி
கதிருறு சுடரொளி கெழுமிய கழுமல மமர்மழு மலிபடை
அதிருறு கழலடி களதடி தொழுமறி வலதறி வறியமே.

பொழிப்புரை :

மலர்கள் சூடுவதால் தேன் நிறைந்துள்ள திருமுடியில் உலகிற் பயிர்களை முதிர்விக்கும் கிரணங்கள் வளர்கின்ற மதியைச் சூடிய சடையை உடையவனாய், உதிரத்தக்க மயிர் பிணைந்து தசை தவிர்ந்துள்ள புலித்தோலை உடுத்த இடையை உடையவனாய், இருளை நீக்கும் கதிரவனின் சுடரொளி பொருந்திய மழுவாகிய படையை ஏந்திக் கழுமலத்துள் அமர்கின்ற பெருமானின் கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொழும் அறிவல்லது பிறவற்றை அறியும் அறிவை அறியோம்.

குறிப்புரை :

நற நிறை தலைதனில் - தேனிறைந்த திருமுடியில். முதிர் உறுகதிர் வளர் இளமதி - முதிர்ச்சியடையும் கதிர்கள் வளரும் இளைய ஒருகலைப் பிறைச் சடையையுடையவனை; உதிர் உறு மயிர்பிணை - உதிரத்தக்க மயிர்கள் உதிராதே பிணைந்திருக்கும், தவிர்தசையுடை புலியதள் - கழன்ற தசையையுடைய புலித்தோலை உடுத்த. இடை - இடையினையுடையவனை. இடை என்பது உடையானைக் காட்டி நின்றது. படையையும் கழலையும் உடைய அடிகள். அடிகளின் திருவடியைத்தொழும் அறிவல்லது பிறவற்றையறியோம் என்று உறைத்த திருத்தொண்டைக் கூறியருளியவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

கடலென நிறநெடு முடியவன் அடுதிறல் தெறவடி சரணென
அடனிறை படையரு ளியபுகழ் அரவரை யினனணி கிளர்பிறை
விடநிறை மிடறுடை யவன்விரி சடையவன் விடையுடை யவனுமை
உடனுறை பதிகடல் மறுகுடை யுயர்கழு மலவிய னகரதே.

பொழிப்புரை :

கடல் போன்ற கரிய நிறத்தினனும், நீண்ட முடியை அணிந்தவனும் ஆகிய இராவணனின் வலிமை கெடுமாறு செய்து பின் அவன் திருவடிகளே சரண் என வேண்ட அவனுக்கு வலிமை மிக்கவாட்படை அருளிய புகழுடையவனும், பாம்பை இடையில் கட்டியவனும், அழகுமிக்க பிறையை அணிந்தவனும், விடம் தங்கிய கண்டத்தை உடையவனும், விரித்த சடையை உடையவனும், விடை ஊர்தியனும் ஆகிய பெருமான் உமையம்மையோடு உறையும் பதி, கடல் அலைகளையுடைய உயர்ந்த கழுமலம் எனப்படும் பெரிய நகராகும்.

குறிப்புரை :

கடல் என நிறநெடு முடியவன் - கடலை ஒத்த நிறத்தையுடைய நீண்ட கிரீடத்தையணிந்தவனாகிய இராவணன். அடுதிறல் தெற - பிறரை வருத்தும் வலிமை தொலைய என்றுமாம். அடி சரண் என - திருவடியே அடைக்கலமாவது என்று கூற. அடல் நிறை படை - கொலை நிறைந்த படையாகிய சந்திரகாசம் என்னும் வாள். அரவு அரையினன் - பாம்பை இடுப்பிலணிந்தவன். கடல் மறுகு உடை - கடலுங் கலங்குதலை உடையகாலத்து.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

கொழுமல ருறைபதி யுடையவன் நெடியவ னெனவிவர் களுமவன்
விழுமையை யளவறி கிலரிறை விரைபுணர் பொழிலணி விழவமர்
கழுமல மமர்கன லுருவினன் அடியிணை தொழுமவ ரருவினை
எழுமையுமிலநில வகைதனில் எளிதிமை யவர்விய னுலகமே.

பொழிப்புரை :

செழுமையான தாமரை மலரை உறையும் இடமாகக் கொண்ட பிரமன், திருமால் ஆகிய இவர்களும் சிவபெருமானது சிறப்பைச் சிறிதும் அறியார். அப்பெருமான், மணம் பொருந்திய பொழில்கள் சூழப் பெற்றதும் அழகிய விழாக்கள் பல நிகழ்வதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளிய அழல் உருவினன். அப்பெருமானுடைய திருவடி இணைகளைத் தொழுபவர்களின் நீங்குதற்கரிய வினைகள் இப்பூவுலகில் ஏழு பிறப்பின்கண்ணும் இலவாகும். இமையவர்களின் பெரிய உலகத்தை அடைதல் அவர்கட்கு எளிதாகும்.

குறிப்புரை :

கொழுவிய தாமரைமலரை உறையுமிடமாக உடைய பிரமன். நெடியவன் - திருமால். அவன் - சிவன். விழுமை - பெருமை. இறையளவு அறிகிலர் எனவும். நிலவகைதனில் வினை எழுமையும் இல. இமையவர் வியன் உலகம் எளிது எனவும் இயைத்துப் பொருள்காண்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

அமைவன துவரிழு கியதுகில் அணியுடை யினரம ணுருவர்கள்
சமையமு மொருபொரு ளெனுமவை சலநெறி யனவற வுரைகளும்
இமையவர் தொழுகழு மலமமர் இறைவன தடிபர வுவர்தமை
நமையல வினைநல னடைதலில் உயர்நெறி நனிநணு குவர்களே.

பொழிப்புரை :

தமக்குப் பொருந்துவனவாகிய மருதந்துவர் ஊட்டின ஆடையை அணிந்தவர்களாகிய புத்தர்களும், ஆடையற்ற சமணர்களும் ஒரு பொருள் எனக்கூறும் சமய நெறிகளும் அறவுரைகளும் ஆகிய அவைவஞ்சனை மார்க்கத்தை வகுப்பன என உணர்ந்து தேவர்களால் தொழப்படுகின்ற கழுமலத்துள் எழுந்தருளிய இறைவன் திருவடிகளைப் பரவுவார்களை வினைகள் வருத்தா. நலன் அடைதலின் உயர்நெறிகளை அவர்கள் அடைவார்கள்.

குறிப்புரை :

அமைவன - பொருந்துவனவாகிய. துவர் இழுகிய துகிலினர் - மருதந்துவர் ஊட்டின ஆடையராகிய புத்தர். அமண் உருவர்கள் - சமணர்கள். ஒருபொருளெனும் சமயமும், அறவுரைகளும் ஆகிய அவை சலநெறியன - மேற் கூறிய புத்தரும் சாக்கியரும் ஒரு பொருளாகக் கூறும் சமயங்களும், அவற்றில் அவர்கள் கூறும் தர்மோபதேசங்களும் ஆகிய அவைகள் வஞ்சனை மார்க்கத்தை வகுப்பன. நமையல - வருத்தா. `நமைப்புறுபிறவிநோய்` என்னும் சூளாமணிப் பகுதியும் இப்பொருட்டாதல் காண்க. `நும்மால் நமைப்புண்ணேன்` என்ற அப்பர் வாக்கும் நினைவுறத்தக்கது. வினை நலன் அடைதலின் நமையல நனி உயர்நெறி நணுகுவர்கள் என இயைக்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

பெருகிய தமிழ்விர கினன்மலி பெயரவ னுறைபிணர் திரையொடு
கருகிய நிறவிரி கடலடை கழுமல முறைவிட மெனநனி
பெருகிய சிவனடி பரவிய பிணைமொழி யனவொரு பதுமுடன்
மருவிய மனமுடை யவர்மதி யுடையவர் விதியுடை யவர்களே.

பொழிப்புரை :

பரந்துபட்ட நூல்களைக் கொண்டுள்ள தமிழ் மொழியை ஆழ உணர்ந்தவனும், மிக்க புகழாளனும் ஆகிய ஞான சம்பந்தன் நீர்த்துளிகளோடு மடங்கும் அலைகளுடன் கருமை நிறம் வாய்ந்த கடலின் கரையில் விளங்கும் கழுமலம் இறைவனது உறைவிடம் என மிகவும் புகழ் பரவிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடிய அன்பு பிணைந்த இப்பத்துப் பாடல்களையும் ஓதி மனம் பொருந்த வைக்கும் அன்பர்கள், நிறைந்த ஞானமும் நல்லூழும் உடையவராவர்.

குறிப்புரை :

தமிழ் விரகினனாகிய பெயரவன் பரவிய மொழிகள் பத்தும் மருவிய மனம் உடையவர் மதியுடையர் விதியுடையவர்கள் எனக் கூட்டுக. மலிபெயரவன் - நிறைந்த புகழ் உடையவன். உறை பிணர் திரையொடு - நீர்த்துளிகளோடு மடங்குகின்ற அலைகளோடு. பிணைமொழியன - அன்பு பூட்டிய மொழிகள்./n குருவருள்: இப்பதிகம் ஒருபது பாடல்களையும் மருவிய மனம் உடையவர், நன்மதியுடையவராவர். அவர் நல்விதி உடையவரும் ஆவர். எனவே, இறைநெறி சேராதார் நல்மதியும் நல்விதியும் உடையவராகமாட்டாராய் இடர்ப்படுவர் என்பது குறிப்பெச்சம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட வரவுகொ
டடலசு ரரொடம ரர்களலை கடல்கடை வுழியெழு மிகுசின
விடமடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே.

பொழிப்புரை :

பெரியதாகிய மந்தரமலையை மத்தாக நிறுத்தி, அழல் போலும் கொடிய நஞ்சை உமிழும் படத்தோடு கூடிய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கட்டி வலிய அசுரர்களோடு தேவர்கள் அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்த விடத்துத்தோன்றிய உக்கிரமான ஆலகாலம் என்னும் நஞ்சு அடைந்த கண்டத்தை உடையவனும், விடையின்மீது வருபவனும் ஆகிய சிவபிரான் உறையும் தலம், நான்மறைகளை முறையாக ஓதி உணர்ந்த உறுதி வாய்ந்த மறையவர் நிறைந்துள்ள திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

தேவர்கள் பாற்கடல் கடைந்த வரலாறு முதல் மூன்று அடிகளில் குறிக்கப்பெறுகிறது. தடம் நிலவிய மலை -விசாலமாகிய மந்தர மலை. அரவுகொடு அடல் அசுரரொடு அமரர்கள் அலை கடல் கடைவுழி எனப்பிரிக்க. திடம் - மனஉறுதி. மறையவர் என்ற பெயர் மறையைமுறையே உணர்தலால் வந்தது எனக் காரணக்குறியாதல் விளக்கியவாறு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு திகிரியை யரிபெற வருளினன்
உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடன்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே.

பொழிப்புரை :

மண்ணுலகத்தோடு விண்ணுலகையும் நலிவுறுத்துகின்ற வலிமை பொருந்திய சலந்தராசுரனின் மலைபோன்ற தலையை வேகமாக அறுத்து வீழ்த்திய சக்கராயுதத்தைத் திருமால் வேண்ட அவர்க்கு அருளியவனும், புகழால் மிக்க கங்கை நதி மதி ஆகியன பொதிந்த சடைமுடியை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் தலம், பெரிய அலைகளை உடைய கடற்கரை, மணலால் அழகுபெறும் மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

முதல் இரண்டடிகள் சலந்தரன் சிரங்கொய்த சக்கரத்தைத் திருமாலுக்கருளியது குறிக்கப்படுகிறது. திவிதலம் - விண்ணுலகம். சலதரன் - சலந்தராசுரன். வரையன தலை - மலையையொத்த அவனது தலை. திகிரி - சக்கராயுதம், திருமால் ஆயிரம் தாமரை கொண்டு அருச்சித்தமைக்காகச் சக்கராயுதம் அருளினார் என்பது இத்தல வரலாறு. உரைமலிதரு - புகழ் மலிந்த. சுரநதி - தேவகங்கை. கடற்கரை மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலை என்பது சிந்திக்கத்தக்கது. அவர்கள் காலத்து இத்தலம் நெய்தல் வேலியாக இருந்திருக்கும் போலும்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

மலைமக டனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகர மறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர் களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதிள்புடை தழுவிய திகழ்பொழில் வளர்திரு மிழலையே.

பொழிப்புரை :

மலைமகளாகிய பார்வதிதேவியை இகழ்ந்த அறிவற்ற அற்பபுத்தியையுடைய தக்கனுடைய தலையோடு அழலோனின் கை ஒன்றையும் அரிந்து, தன் சினத்தை வெளிப்படுத்திய சிவபிரான்உறையும் தலம், கலை ஞானம் நிரம்பிய புலவர்களின் வறுமைத் துன்பம் நீங்க நிறைந்த செல்வத்தை வழங்கும் கொடையாளர்கள் வாழ்வதும் பெரிய மதில்களால் சூழப் பெற்றதும் விளங்குகின்ற பொழில்கள் வளர்வதுமாய திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

முதல் இரண்டடிகளில் தக்கன் சிரங்கொய்த வரலாறும், அக்கினியைக் கையரிந்த வரலாறும் குறிக்கப்படுகின்றன. மதியறுசிறுமனவன் - புத்திகெட்ட சிறுமனத்தையுடைய தக்கன். உயர்தலை -மனிதத் தலை. அழல் உருவன கரம் - தீவடிவினனாகிய அக்கினியினது கை. சிலை மலிமதிள் - மலையைப் போன்ற மதில்கள். இத்தலத்திலுள்ள கொடையாளிகள் புலவர்களின் துன்பங்களைக் களைகின்றார்கள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினனல மலிதரு கரனுர மிகுபிண மமர்வன
இருளிடை யடையுற வொடுநட விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே.

பொழிப்புரை :

பகைமை பாராட்டிய திரிபுராதிகளின் முப்புரங்களும் எரியில் அழியுமாறு கணை ஒன்றைச் செலுத்திய பெருவலி படைத்தவனும், நன்மைகள் நிறைந்த திருக்கரங்களை உடையவனும், வலிய பிணங்கள் நிறைந்த சுடுகாட்டில் நள்ளிருட்போதில் சென்று அங்குத் தன்னை வந்தடைந்த பேய்களோடு நடனமாடி இசை பாடுபவனுமாகிய பரமன் மகிழ்வோடு உறையும் பதி, தெருக்கள் தோறும் நிகழும் பெருவிழாக்களின் ஆரவாரம் நிறைந்து வளரும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

இது இறைவனது திரிபுரமெரித்த வீரத்தையும், கைவண்மையையும், சுடுகாட்டில் நடமாடிய செயலையும் குறிப்பிடுகிறது. மருவலர் - பகைவர்; திரிபுராதிகள். நலம் மலிதரு கரன் - நன்மை மிகுந்த திருக்கரங்களையுடையவன். உரமிகுபிணம் - வலிமைமிக்க பிணங்கள். அமர்வன இருள் இடை அடை உறவொடு நடை விசை உறு பரன் எனப் பிரிக்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர வறநெறி மறையொடும் அருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணி
திணிபொழி றருமண மதுநுகர் அறுபத முரல்திரு மிழலையே.

பொழிப்புரை :

அழகிய கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து தம் திருவடி இணைகளைச் சனகர் சனந்தனர் ஆகிய இருவர் ஒருபுறமும், சனாதனர் சனற்குமாரர் ஆகிய இருவர் மறுபுறமும் பணிய அவர்கட்கு அறநெறியை வேதங்களோடும் அருளிச்செய்த சிவபிரான் உறையும் இடம், ஒளி பொருந்திய மணிகள் ஒப்பில்லாத மரகதம் ஆகியவற்றை அடித்துவரும் ஆற்று நீர் நிலமெல்லாம் நிறைந்து வளங்களால் அணி செய்யப் பெறுவதும் செறிந்த பொழில்கள் தரும் மணத்தை நுகரும் வண்டுகள் முரல்வதுமான திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

இது ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு உரைத்தவரலாறு அறிவிக்கிறது. வடமரநிழல் - ஆலநிழல். அமர்வு - விருப்பம். இருவர்கள் - சனகர் முதலிய நால்வரும், இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் இருவர் இருவராக இருந்தமை கருதற்குரியது. மறை - இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டும் அநுபவநிலை. பொழில்தரு மணமது நுகர் அறுபதம் முரல் திருமிழலை எனப் பிரிக்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி வுறுதிற லமர்மிடல் கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரும் அவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி பொழின்மலி தருதிரு மிழலையே.

பொழிப்புரை :

குற்றமற்ற வலிய வேடர் உருவைக் கொண்டு, நினைதற்கும் அரிய கடுந்தவத்தைச் செய்யும் விசயனுடைய வலிமையை உமையம்மைக்கு அறிவுறுத்தும் வகையில் அவனோடு வலிய போரைத் தன் வலிமை தோன்றச் செய்து அவ்விசயனுக்குத் தோல்வி எய்தாத பாசுபதக் கணையை வழங்கி அருள்புரிந்த சிவபிரான் உறையும் பதி, செறிந்த மரங்கள் திசைகள் எங்கும் மலர்கள் பூத்துக் குலாவும் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ள திருவீழிமிழலை யாகும்.

குறிப்புரை :

இது விசயன் வீரத்தை உமாதேவிக்குக் காட்டிப் பாசு பதம் அருளிய வீரம் குறிப்பிடுகிறது. வசையறு வலி - குற்றமற்ற வலிமை. வனசர உருவு - வேட உருவம். நினைவரு தவம் - முனிவர் எவரும் நினைத்தற்கரிய கடுந்தவம், மிடல் - வலிமை, அசைவில படை - தோற்காத பாசுபதாஸ்திரம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை யொளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன் மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர் கெடவுதை செய்தவ னுறைபதி
திலகமி தெனவுல குகள்புகழ் தருபொழி லணிதிரு மிழலையே.

பொழிப்புரை :

நன்மைகள் பலவும் நிறைந்த வேத மந்திரங்களை ஓதி, ஆற்று நீர், மணப்புகை, தீபம், மலர்கள் ஆகியனவற்றைக் கொண்டு பூசை புரிந்து வழிபடும் மறையவனாகிய மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த வஞ்சகம் மிக்க இயமனின் உயிர் கெடுமாறு உதைத்தருளிய சிவபிரான் உறையும்பதி, உலக மக்கள் திலகம் எனப்புகழ்வதும் பொழில்கள் சூழ்ந்துள்ளதுமான திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

இது மார்க்கண்டேயற்காகக் காலனை உதைத்த வரலாற்றைக் கூறுகிறது. மறைமொழியொடு - வேதமந்திரங்களொடு. நதியுறு புனல் - தேவகங்கையின் திருமஞ்சனதீர்த்தம். புகை ஒளி முதல் - தூபம் தீபம் முதலான ஆராதனைப் பொருள்கள். மறையவன் - மார்க்கண்டேயன். சலம் மலிதரு மறலி - வஞ்சம் மிகுந்த இயமன். உலகுகள் திலகம் இது எனப் புகழ்தரு பொழில் அணிமிழலை எனமாறிக் கூட்டுக.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல் நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர் வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதிதிரு மிழலையே.

பொழிப்புரை :

சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை நிலைகுலையச் செய்து அதனைப் பெயர்த்த பத்துத் தலைகளை உடைய இராவணனுடைய இருபது கரங்களும் நெரியுமாறு தன் கால்விரலை ஊன்றிய வீரக்கழல் அணிந்த திருவடிகளை உடையவனும், வரன் முறையால் உலகைப்படைக்கும் பூவின் நாயகனான பிரமன் வழிவழுவியதால் ஐந்தாயிருந்த அவன் சிரங்களில் ஒன்றைக் கிள்ளி எடுத்து அதன்கண் பலியேற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும் பதி திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

இது வழக்கம்போல இராவணன் வரலாறு கூறுகிறது. தசமுகன் - இராவணன். வரன்முறை உலகவைதரும் மலர்வளர் மறையவன் - அந்தந்த ஆன்மாக்களுக்கு வகுக்கப்பெற்ற நியதி தத்துவத்தின் வழிநின்று உலகம் உடல் போகம் இவற்றைப்படைக்கின்ற பிரமன். வழிவழுவிய - உமாதேவியாரை இகழ்ந்ததாகிய தவறு இழைத்த.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

அயனொடு மெழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழ னிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதின் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே.

பொழிப்புரை :

நான்முகனும் அழகிய மலர்மகள் கேள்வனாகிய கண்ணனும் அளவிடமுடியாது அஞ்சி நிற்க, ஒரு சோதிப்பிழம்பாய்த் தோன்ற அவ்விருவரும் முறையாக சயசய எனப்போற்றித் துதிசெய்யுமாறு அண்டங்கடந்த அச்சிவபிரான் உறையும் பதி, வெற்றி விளங்கும் மதில்களில் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்து தோன்றும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

இது அயனும் மாலும் அறியாத அழல் உருவாய் நின்ற வரலாற்றை அறிவிக்கிறது. மலர் மகள் மகிழ் கணன் - திருமகள் மகிழும் கண்ணனாகிய திருமால். தழல் நிகழ்வதொர்படி உருவது வர - தீப்பிழம்பாக ஒளிரும் திருமேனி பொருந்த, வெளி உருவிய அவன் - ஆகாயத்தைக் கடந்த அவன்; செயம் நிலவிய மதில் - வெற்றி விளங்குகின்ற மதில்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

இகழுரு வொடுபறி தலைகொடும் இழிதொழின் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர் கெடவடி யவர்மிக வருளிய
புகழுடை யிறையுறை பதிபுனல் அணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர் செறிவொடு திகழ்திரு மிழலையே.

பொழிப்புரை :

பிறரால் இகழத்தக்க உருவோடும் உரோமங்களைப் பறித்தெடுத்தலால் முண்டிதமான தலையோடும் இழி தொழில் மிகுதியாகப்புரியும் சமணர்களாகிய தந்திரசாலிகளும், விளங்கும் மருதந்துவராடையை உடலில் போர்த்துத் திரியும் சாக்கியர்களும் அழிந்தொழியத்தன் அடியவர்களுக்கு மிகவும் அருள் புரிபவனும் புகழாளனுமாகிய இறைவன் உறையும் பதி நீர்வளம் மிக்கதும் கடலாற் சூழப்பட்ட இவ்வுலகில் விளங்கும் சுரர் தருவாகிய கற்பகம் போன்ற கொடையாளர் மிக்கு விளங்குவதுமாகிய திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

இது சமணர்கெட அடியவர்க்கருளியதையறிவிப்பது. இகழ் உரு - பிறரால் இகழத்தக்க வடிவம். துவர் உடை உடல் பொதிபவர் - உடல் முழுவதும் போர்த்து மூடும் புத்தர். சுரர்தரு நிகர் கொடையினர் - கற்பக விருட்சத்தையொத்த கொடையினையுடையவர்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே.

பொழிப்புரை :

சினவேகத்தோடு வந்த யானையை உரித்துப்போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையை, மிக்க செல்வங்களால் நிறைந்த மனமகிழ்வுடையவர் வாழும் சிவபுரநகரின் மன்னனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகப்பாடல்கள் பத்தையும் மனமகிழ்வோடு பயில்பவர் அழகிய திருமகள், கலைமகள், சயமகள், அவர்க்கு இனமான புகழ்மகள் ஆகியோர் தம்பால் பொருந்த, பெரிய இவ்வுலகின்கண் இனிதாக வாழ்வர்.

குறிப்புரை :

இது பயன்கூறித்திருக்கடைக்காப்பருளுகிறது. தனமிகு மனர் - செல்வம் மிகுந்த மனத்தையுடையவர். சிரபுரம் - சீகாழி, இப்பதிகத்தைப் பரிவொடு பயில்வார் திருமகள் கலைமகள் வெற்றிமகள் புகழ்மகள் பொருந்தப் பூமியில் நீடுவாழ்வார் என்பதாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுண மமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரு முயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுர நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே.

பொழிப்புரை :

விண், காற்று, தீ, நீர், மண் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும், எண்ணெண் கலைகளை உரைத்தருளும் வேதங்களையும், முக்குணங்களையும், விரும்பத்தக்க மார்க்கங்களையும், வானுலகில் வாழும் தேவர்கள் முதலியவர்களாய் விளங்கும் உயிர்களையும், தம்முடைய படைப்பாற்றல் நினைவோடு நல்ல தாமரைமலரில் விளங்கும் நான்முகனை அதிட்டித்து நின்று உலகைத் தோற்றுவித்தருளும் சிவபெருமானது சிவபுரத்தலத்தை நினைப்பவர் வளமையான இவ்வுலகில் நிலைபெற்று வாழ்வர்.

குறிப்புரை :

இது இறைவனே சிருட்டித்தொழில் இடையறாது நிகழ்த்தத் திருவுள்ளங் கொள்கின்றார். அத்தொழிலைச் செய்யும் பிரமன் அந்தப்பாவனையில் இருந்து சிருட்டிக்கின்றான். ஆதலால் பவமலி தொழிலது நினைவொடு இருக்கும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சிவபுரத்தை நினைப்பவர் நிலைபேறான வாழ்வடைவர் என்கின்றது. புவம், வளி, கனல், புனல், புவி - விண்ணாதி மண்ணந்தமாகிய ஐம்பெரும் பூதங்கள். புவம் - வான், கலை - எண்ணெண் கலைகள். உரைமறை - இறைவன் புகழைச்சொல்லும் வேதம். திரிகுணம் -சத்துவம் முதலிய மூன்று குணங்கள். அமர்நெறி - விரும்பத்தக்க மார்க்கங்கள். திவம் - தேவலோகம். உயிரவை - தேவர் முதலாகத் தாவரம் ஈறாகச்சொல்லப்பட்ட உயிர்கள். அவைதம பவமலி தொழிலது நினைவொடு - அவ்வவ் ஆன்மாக்களுடைய வினைக்கு ஈடாக அருளப்படுகின்ற பிறவிக்கேற்ற சிருட்டித்தொழிலின் நினைவொடு. எனவே இறைவன் பிரமனைப்போல விகாரியாய்ப்படைப்பவனல்லன், இச்சையால் எல்லாம் இயங்குகின்றன என்பது. பதுமநன்மலரது மருவிய சிவன் - தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் சிவன். சிவபெருமான் பிரமன் உருக்கொண்டு வீற்றிருப்பாரல்லர். இத்தகைய திருவுருவத்தைப்பிரமன் தியானித்தலான் சிருட்டி கைவரப்பெறுவன் என்பது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர் முத லுலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகட னடுவறி துயிலமர் அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே.

பொழிப்புரை :

மலைகள் பல வளரும் இம்மண்ணுலகில் வேத விதிகளின் படி நடக்கும் மிகுதியான மக்கள், விண்ணில் நிலை பேறுடையவராய் வாழும் தேவர்கள் ஆகியோரும் மற்றுமுள்ள உலக உயிர்களும் நிலைபெற்று வாழ்தற்குரிய காத்தல் தொழில் நினைவோடு, மிகுந்துவரும் அலைகளை உடைய திருப்பாற்கடல் நடுவில் அறிதுயில் அமர்ந்துள்ள திருமாலை அதிட்டித்துநின்று காத்தல் தொழிலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதி, கற்களால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைப்பவர் திருமகளொடு திகழ்வர்.

குறிப்புரை :

இது எல்லா உலகங்களும் தத்தம் கால எல்லை வரையில் நிலைபெறுக என்னும் திருவுள்ளக் குறிப்போடு பாற்கடல் மேல் பள்ளிகொள்ளும் திருமால் உருவின் இயல்போடு அரன் உறையும்பதி. நினைப்பவர் திருமகளோடு திகழ்வர் என்கின்றது. உலகு நிலைப்பதற்கு மலை இன்றியமையாமையின் மலை பல வளர் தருபுவி எனப் புவியை விசேடித்தார். மறைதரு வழிமலி மனிதர்கள் - வேத விதியின்படி அக ஒழுக்கத்தையும், புறவொழுக்கத்தையும் வரையறுத்தமக்கள். நிலைமலிசுரர் - மக்களைக்காட்டிலும் வாழ்வால் நீடித்த தேவர்கள், முதல் உலகுகள் என்றது, விண்ணும் மண்ணும் கூறவே இடைப்பட்டனவெல்லாம் உணரவைத்தார், அறிதுயில் - யோகநித்திரை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

பழுதில கடல்புடை தழுவிய படிமுத லியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலமலி தருமுயி ரவையவை
முழுவது மழிவகை நினைவொடு முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே.

பொழிப்புரை :

பழுதுபடாத, கடலால் சூழப்பட்ட நிலவுலகம் முதலிய எல்லா உலகங்களையும், அவ்வுலகங்களில் நிறைவுடன் குழுமிவாழும் தேவர்கள் நரகர்கள் மற்றும் மனிதர்கள் ஏனையோர் ஆகிய அனைவர் உயிர்களையும் அழிக்கும் வகையான நினைவோடு உருத்திரனை அதிட்டித்து அவனுருவில் அழித்தலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதியாகிய செழுமையான மணிகள் அழகு செய்யும் சிவபுரநகரைத் தொழுவோரின் புகழ் உலகில் மிகும்.

குறிப்புரை :

இது நிலம் முதலிய உலகுகள் முழுவதுமழியும்படி ருத்திராம்சத்தோடு எழுந்தருளும் இறைவன் பதியைத் தொழுமவர் புகழ் உலகில் மிகும் என்கின்றது. கடல்புடை தழுவியபடி என்றது சங்கார கிருத்தியத்திற்குப் பயன்படும் தண்ணீரைக் கூறி விசேடித்தபடி. படி - பூமி. படி முதலிய உலகுகள் என்றது ஒடுக்க முறைக்கண் பிருதிவி முதலாயின முறையே தத்தம் காரணமாகிய மாயையில் ஒடுங்கும் முறை பற்றி. உயிரவை அவை முழுவதும் அழிவகை என்றது உயிர்கள் ஒடுங்குதலை உயிர்களுக்கு என்றும் அழிவின்மையின். முதல் - இறைவனது உருவாகிய உருத்திரவடிவு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடு மடியவர்
குறைவில பதமணை தரவருள் குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே.

பொழிப்புரை :

மணம் மிகுந்த சந்தனம், அரும்புகள், இதழ் விரிந்த மலர்கள், குங்கிலியம், சீதாரி முதலிய தூபம், ஒளி வளர் தீபங்கள், நிறைந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு நீராட்டியும், மலர் சூட்டியும் ஒளி காட்டியும் தன்னை நாள்தோறும் நினைவோடு வழிபடும் அடியவர், குறைவிலா நிறைவான சாமீபம் முதலான முத்திகளை அடைய அருள்செய்யும் குணம் உடைய இறைவன் உறையும் அழகிய பதி, நீர் நிலைகள் பலவற்றாலும் வளம் நிரம்பி விளங்கும் சிவபுரமாகும். அதனை நினைபவர் சயமகள் தலைவராவர்.

குறிப்புரை :

இது அபிஷேக ஆராதனைப் பொருள்களோடு நியதியாக வழிபடும் அடியார்களுக்குக் குறைவிலாப் பதத்தைக் கொடுக்கும் மகேச்சுரனது பதியை வழிபடுமவர்கள் செயமகளுக்குத் தலைவராவர் என்கின்றது. நறை மலிதரும் அளறு - மணம் மிகுந்த சந்தனம். முகை நகு மலர் - முகையும் மலரும், புகை - தூபம். ஒளி - தீபம். நினைவொடு - ஈசுவர தியானத்தோடு. நியதமும் - ஒழுங்காக. குறைவிலபதம் - சாமீபம், வனபதி - அழகியநகரம். சிறைபுனல் - மதகுகளோடு கூடிய புனல். இது கிரியாவான்கள் பெறுபயன் கூறியது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொரு ணியதமு முணர்பவர்
தனதெழி லுருவது கொடுவடை தகுபர னுறைவது நகர்மதிள்
கனமரு வியசிவ புரநினை பவர்கலை மகள்தர நிகழ்வரே.

பொழிப்புரை :

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் எனப்படும் ஆறு பகைகளையும் வென்று, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கும் வகையில், காற்றை நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும் பிராணாயாமத்தைப் புரிந்தும், தியானித்தலால் உள்ளத்தில் தோன்றியருளும் ஒளிப்பொருளாகிய சிவபெருமானை நாள்தோறும் உணர்பவராகிய யோகியர்கட்குத் தனது எழிலுருவாகிய சாரூபத்தைத் தந்தருளும் சிவபிரான் உறைந்தருளும் நகர், மேகந் தவழும் மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைபவர், கலைமகள் தன் அருளைத் தர வாழ்வர்.

குறிப்புரை :

இது அகப்பகை ஆறும் வென்று ஐம்பொறி அடக்கி, பிராணவாயுவை ஒழுங்குபடுத்திய யோகியர்க்குச் சாரூபந் தரும் பரசிவன் பதியாகிய சிவபுரத்தை நினைப்பவர் சாரூபர்களாவார்கள் என்கின்றது. சினமலி அறுபகை - கோபம் முதலிய உட்பகையாறும், இதனை அரிஷட்வர்க்கம் என்பர் வடநூலார். பொறி - ஐம்பொறிகள். பொறிகள் புலன்களைச் சென்று பற்றுவதைத்தடுப்பது பிராணாயாமம் ஒன்றே என்பதாம். மனன் உணர்வு - தியானம். மலர் மிசை எழுதரு பொருள் - பிரமரந்தரத்தின் கண்ணதாகிய சகஸ்ரதளத்தையுடைய தாமரை மலரின்மேல் எழுந்தருளியிருக்கும் பேரொளிப்பிழம்பாகிய பொருளை. நியதமும் உணர்பவர் - அனவரதமும் அறிபவர்கள். தனது எழில் உருவு கொடு - தன்னுடைய அழகிய வடிவத்தைக் கொண்டு. என்றது கண்டக்கறையும் கங்கையும் ஒழிந்த சாரூபத்தை. கனம் - மேகம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி யடைவகை நினையர னுறைபதி
திருவருள் சிவபுர நினைபவர் திகழ்குல னிலனிடை நிகழுமே.

பொழிப்புரை :

வேதங்களையும், பலவாகிய நன்மைகளைத் தரும் தலைமையான கலைகளையும், குற்றம் அறப் பயின்று, உலகியலில் பழி பாவங்களுக்கு அஞ்சித் தூய ஒழுக்க சீலராய் உலகம் புகழ விளங்கி உடலின்கண் உள்ள பொறிகள்வழி ஒழுகாது அரிய தவத்தை மேற்கொண்ட அடியவர்கள் தன் திருவடிகளை அடையும் வகை சங்கற்பிக்கும் சிவபிரான் உறையும் பதி திருவருள் தேங்கிய சிவபுரமாகும். அத்தலத்தை நினைவோர்தம் விளக்கமான குலம் உலகிடை நின்று நிகழும்.

குறிப்புரை :

வேதம் முதலான கலைகளைக் குற்றமறப்பயின்று உலகம் புகழ, பொறிவாயில் அவித்து, அருந்தவம் முயல்வார்கள் திருவடி ஞானத்தைப்பெறத் திருவுளங்கொண்டருள்கின்ற பரமசிவன் உறை பதியைச் சிந்திப்பவர் குலம் நிலத்திடை நீடுவாழும் என்கின்றது. பலநலமுதல்கலை - பலவாகிய நன்மைகளைக் கருதுகின்ற கலை. துகள் அறுவகை - சந்தேக விபரீதங்கள் அறும்படி, உருவு இயல் - தோற்றத்தின் அழகு. தனது அடி அடைவகை: இது சாயுச்சியம் அளிப்பது அறிவித்தது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

கதமிகு கருவுரு வொடுவுகி ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக ழெயிறத னுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய வெழிலரி வழிபட வருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுர நினைபவர் நிலவுவர் படியிலே.

பொழிப்புரை :

திருமால் வராக அவதாரத்தில் சினம்மிக்க கரிய உருவோடு, தனது நகங்களிடையே வடக்கின்கண் உள்ள மேருமலை கணகண என ஒலி செய்ய, மதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின் முகத்திற் பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து விளங்க, அப்பூமியை உலகின்கண் அவியாது நிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட, அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகிற் புகழோடு விளங்குவர்.

குறிப்புரை :

ஆதிவராகமான அரிவழிபட அருள் செய்தவரது சிவபுரத்தை நினைபவர் என்றும் விளங்குவர் என்கின்றது. கதம் மிகு - கோபம் மிகுந்த. கருவுருவொடு - கறுத்த மேனியோடு. உகிர்இடை - நகங்களின் இடையே. மதம் மிகு நெடுமுகன் அமர் - மதம் மிக்க நீளமான முகத்திலே இருக்கின்ற. வளைமதி திகழ் எயிறு - பிறை மதியையொத்த கோரப்பல். நுதி - நுனி. இதம் அமர் புவி - இன்பத் தோடு இருக்கின்ற பூமி. ஆதிவராக உருவெடுத்த திருமாலின் சத்தி பூமியாதலின், அவள் வராகத் தந்தத்தில் இதமாக இருந்தாள் என்றார். பதம் - திருவடி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை யிருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுர நினைபவர் செழுநில னினில்நிகழ் வுடையரே.

பொழிப்புரை :

உடல் வருத்தத்தைத் தரும் கடுமையான தவத்தைச் செய்து நான்முகன் அருளினால் வரமாகக் கிடைக்கப் பெற்ற வலிமையைக் கொண்டு சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை அது பெயரும்வகையில் இருபது கரங்களை அம்மலையின் கீழ்ச்செலுத்திய இராவணனின் பத்துத் தலைகளில் உள்ள முடிகள் சிதறுமாறு தனது ஒரு கால் விரலால் அடர்த்துத் தன் வலிமையை அவனுக்கு உணர்த்தி அவனைப் பணி கொண்டருளும் சிவபிரான் உறையும் பதி, எண் திசைகளிலும் புகழ் நிறைந்த சிவபுரமாகும். அத்தலத்தை நினைபவர் வளமான இவ்வுலகில் எஞ்ஞான்றும் வாழ்வர்.

குறிப்புரை :

இது பிரமன் அருளால் வந்த தவவலிமையைக் கொண்டு இறைவனது கயிலையையெடுத்த இராவணனது முடியை நெரித்த முதல்வன் நகரத்தை நினைபவர் உலகத்தில் என்றும் வாழ்வர் என்கின்றது. அசைவுஉறுதவம் - வருத்தம்மிக்க தவம். முயல் வினில் - முயன்றதால். நிசிசரன் - இராவணன்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

அடன்மலி படையரி யயனொடு மறிவரி யதொரழன் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர் வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண துடையுரு வெளிபடு மவனகர்
திடமலி பொழிலெழில் சிவபுர நினைபவர் வழிபுவி திகழுமே.

பொழிப்புரை :

வலிமை மிக்க சக்கராயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட திருமாலும் நான்முகனும் அறிதற்கரிய வகையில் அழல்மிக்க பேரொளிப்பிழம்பாய் வெளிப்பட்டருள அதனைக் கண்ட அவர்கள், அச்சங் கொண்டு துதி செய்த அளவில் அவர்கட்கு எதிரே விடம் பொருந்திய கண்டமும் நெற்றிக் கண்ணும் உடைய தனது உருவத்தோடு காட்சி நல்கிய சிவபிரான் எழுந்தருளிய தலம், உறுதியான மரங்கள் செறிந்த பொழில்கள்சூழ்ந்த எழில் பெற்ற சிவபுரமாகும். அதனை நினைபவரும் அவர் மரபினரும் உலகில் புகழோடு விளங்குவர்.

குறிப்புரை :

அயன் மால் இவர்களுக்கிடையே அழல் வண்ணராய்த் தோன்றி, அவர்கள் துதிசெய்யக் கண்ணுதல் கண்டக் கறையோடு கூடிய தனதுருவத்தைக்காட்டிய இறைவன் நகரத்தை நினைப்பவர் வைத்தபடி உலகம் நடக்கும் என்கின்றது. அடல் மலிபடை - வலிமை மிக்க சக்கரம். அவர் வெருவொடு துதி அது செய்ய -அவர்கள் அச்சத்தோடு துதிக்க (அதற்காக இரங்கி) வெளிபடுமவன் எனக் கூட்டுக. விடமலிகளம் - நீலகண்டம். நுதலமர் கண் அது உடை உரு - நெற்றிக் கண்ணையுடைய உரு. நினைபவர் வழி புவிதிகழும் எனப்பிரிக்க. வழி - வமிசம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

குணமறி வுகணிலை யிலபொரு ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர னுறைதரு பதியுல கினினல
கணமரு வியசிவ புரநினை பவரெழி லுருவுடை யவர்களே.

பொழிப்புரை :

குணங்களும் அறிவும் நிலையில்லாதன எனவும், காணப்படும் உலகப் பொருள்களும், உரைக்கும் உரையால் உணர்த்தப்படும் ஏனைய பொருள்களும், அவ்வாறே அழிந்து தோன்றுமியல்பின, இது திண்ணம் எனவும், கணபங்க வாதம் புரியும் கேட்டிற்குக் காரணமான அறிவினராகிய புத்தர்களும், தமது கையில் நிறைந்த உணவை வாங்கி உண்ணும் சமணர்களும், உணர்தற்கரிய சிவபிரான் உறையும் பதி, இவ்வுலகில் நல்லவர்கள் திரளாய் வாழும் சிவபுரமாகும். அதனை நினைப்பவர் அழகிய உருவோடு விளங்குவர்.

குறிப்புரை :

குணம் அறிவு முதலாயின நிலையில்லாதன; உலகப்பொருள்களும் அங்ஙனமே என்னும் கணபங்கவாதிகளான புத்தர்களும் சமணர்களும் அறிவரிய அரன்பதியை நினைப்பவர் அழகான வடிவத்தையடைவர் என்கின்றது. குணம் அறிவுகள் நிலையில எனப்பிரிக்க. செதுமதி - குற்றம் பொருந்திய புத்தி. கை உணல் உடையவர் - கையில் பிச்சையேற்றுண்ணும் சமணர்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபது நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர் தரநல மிகுவரே.

பொழிப்புரை :

இவ்வுலகில் புகழால் விளங்கும் சிவபுரநகரில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடி இணைகளைப் பணிகின்ற சிரபுரநகர்த் தலைவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய உரைச்சிறப்பு வாய்ந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் ஓதி வழிபடுபவர் குலம், நிலம், நிறைந்த செல்வம், அழகிய வடிவம், ஒப்பற்ற கொடை வண்மை, மிக்க வெற்றித்திரு, இவ்வுலகிடை தொடர்ந்து வரும் சந்ததி, இறைவனடியார் என்ற பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப்பெறுவர்.

குறிப்புரை :

இதுவரை பாடல்தோறும் சிவனியல்பும், அவர் எழுந்தருளியுள்ள நகரழகும், அவரை அடைவார் அடைந்து வந்த பயன்களும் கூறிவந்த பிள்ளையார் இப்பாட்டில் இப்பதிகத்தைப் படிப்பார் எய்தும் பயனைத் தொகுத்துக் கூறுகின்றார். குலம் (6) நிலம் (8) நிறை திரு (2) உரு (10) சயமகள் (4) கலைமகள் (5) புகழ் (3) புவி வளர்வழி (9) அடிமை (7) இவ்வாறு இப்பதிகப்பயன் ஒவ்வொரு பாடலிலும் இருப்பதை ஓர்ந்து உணர்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி யரவது கொடுதிவி
தலமலி சுரரசு ரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு
கொலைமலி விடமெழ வவருடல் குலைதர வதுநுகர் பவனெழில்
மலைமலி மதில்புடை தழுவிய மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :

மந்தரமலையை மத்தாக நடுவே நிறுத்தி, சினம் மிக்க ஒப்பற்ற வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக்கொண்டு, விண்ணுலகில் வாழும் தேவர்களும் அசுரர்களும் சலசல என்னும் ஒலி தோன்றுமாறு திருப்பாற்கடலைக் கடைந்தகாலத்துக் கொல்லும் தன்மை வாய்ந்த ஆலகால விடம் அக்கடலில் தோன்ற, அதனால் தேவாசுரர்கள் அஞ்சி நடுங்கித் தன்னை நோக்கி ஓலமிட்ட அளவில் அந்நஞ்சை உண்டு அவர்களைக் காத்தருளியவன் அழகிய மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட மறைவனத்தில் எழுந்தருளிய பரமன் ஆவான்.

குறிப்புரை :

இது விடத்தைக்கண்டு விண்ணவர் எல்லாரும் நடு நடுங்க, அதனை நுகர்பவன் மறைக்காட்டுறையும் பரமன் என்கின்றது. சிலை - மந்தரமலை. சினம் மலி அரவு என்றது வாசுகி என்னும் பாம்பை. திவிதலம் - சுவர்க்கம். சலசல என்பது மத்தைக் கடையும் போது உண்டாகும் ஒலிக்குறிப்பு. அவர் உடல் குலைதர - அத்தேவாசுரர்கள் உடல் நடுநடுங்க. மலைமலி மதில் - மலையை ஒத்த மதில். எல்லாத்தேவர் கட்கும் நடுக்கம் தந்த கடுவிடம் இவர்க்கமுதாயிற்று என்றது சிவனது அளவிலாற்றலையும் காக்கும் கருணையையும் விளக்கியது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

கரமுத லியவவ யவமவை கடுவிட வரவது கொடுவரு
வரன்முறை யணிதரு மவனடல் வலிமிகு புலியத ளுடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை யிமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடைமனி தர்கள்பயில் மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :

கைகள் முதலிய அவயவங்களில், கொடிய விடம் பொருந்திய பாம்புகளைத் தொன்று தொட்டுவரும் வரன் முறைப்படி, வளை கேயூரம் முதலியனவாக அணி செய்து கொள்பவனும், கொலைத் தொழிலில் வல்லமை மிக்க புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்தவனுமாகிய பெருமான், இரவலர்களின் வறுமைத்துயர் போக எல்லோரும் நினைக்கும் தேவருலகம் அழகு பெற வளரும் கற்பகமரம் போன்ற கொடையாளர்கள் வாழும் மறைவனம் அமர்பரமன் ஆவான்.

குறிப்புரை :

இது கற்பகம் ஒத்த கொடையாளர்கள் பயில்கின்ற மறைக்காட்டுறையும் பரமனே எங்கும் அரவத்தை அணிந்து புலித்தோலாடை புனைந்து விளங்குபவன் என்கின்றது. இதனால் இறைவனது ஆடையும் அணியுங்கூறி அறிவித்தவாறு. கரம் - கை. கடு விட அரவு அது கொடு - கொடிய விடப்பாம்பைக் கொண்டு. வரன்முறையணிதரும் அவன் - முறையாக அவயவங்கட்கேற்றவாறு அணிபவன். அடல் வலி - கொல்லும் வன்மை. துயர்கெடுவகை நினைமனிதர்கள், இமையவர்புரம் எழில்பெற வளர் மரம் எனக்கூட்டுக. மரம் என்றது கற்பகத்தை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

இழைவளர் தருமுலை மலைமகள் இனிதுறை தருமெழி லுருவினன்
முழையினின் மிகுதுயி லுறுமரி முசிவொடு மெழமுள ரியொடெழு
கழைநுகர் தருகரி யிரிதரு கயிலையின் மலிபவ னிருளுறும்
மழைதவழ் தருபொழி னிலவிய மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :

அணிகலன்கள் பொருந்திய தனங்களை உடைய மலைமகள் இடப்பாகமாக இனிதாக உறையும் அழகிய திருமேனியை உடையவனும், குகைகளில் நன்கு உறங்கும் சிங்கங்கள், பசி வருதலினாலே மூரி நிமிர்ந்து எழ, தாமரை மலர்களோடு வளர்ந்து செழித்த கரும்புகளை உண்ணும் யானையினங்கள் அஞ்சி ஓடுகின்ற கயிலைமலையில் எழுந்தருளியவனும் ஆகிய பெருமான் கரிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடைய மறைவனத்தில் அமரும் பரமனாவான்.

குறிப்புரை :

இது மறைவனத்துறையும் பரமனே மலைமகள் மணாளன், கயிலையின்பதி என்கின்றது. இழை - ஆபரணம். எழில் - அழகு, முழை - மலைக்குகை. அரி - சிங்கம். முசிவு, மெலிவு. முளரி - தாமரை. கழை - கரும்பு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

நலமிகு திருவித ழியின்மலர் நகுதலை யொடுகன கியின்முகை
பலசுர நதிபட வரவொடு மதிபொதி சடைமுடி யினன்மிகு
தலநில வியமனி தர்களொடு தவமுயல் தருமுனி வர்கடம
மலமறு வகைமன நினைதரு மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :

அணிவிப்பவர்க்கு நலம் மிகுவிக்கின்ற அழகிய கொன்றை மலர், கபாலம், ஊமத்தை, கங்கை நதி, படஅரவு, பிறை ஆகியனவற்றைச் சூடிய சடைமுடியினனாகிய பெருமான், பெரிதாய இவ்வுலகில் வாழும் மனிதர்கள், தவம் முயலும் முனிவர்கள் ஆகியோர் தன்னை வழிபட அவர்கள் மலம் அகன்று உய்யும் வகையை நினையும் மறைவனம் உறையும் பரமன் ஆவான்.

குறிப்புரை :

இது மக்கள் முனிவர் இவர்கள் மலம் அகன்று உய்யும் வகை திருவுளம்பற்றிய மறைவனத்திறைவனே கொன்றையும், கபாலமும், ஊமத்தமும், கங்கையும், அரவும், பிறையும் பொதிந்த சடைமுடியினன் என்கின்றது. இதழி - கொன்றை, நகுதலை - இறந்த பிரமனது மண்டையோடு. கனகி - ஊமத்தை, முனிவர்கள் தம் மலம் அறுவகை எனப்பிரிக்க. நகுதலை, மதி, அரவு முதலியவற்றின் தீமைகளை நீக்கி அருள் செய்கின்றான் என்பது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த வதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி பலகலை யவைமுறை முறையுணர்
விதியறி தருநெறி யமர்முனி கணனொடு மிகுதவ முயல்தரும்
அதிநிபு ணர்கள்வழி படவளர் மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :

நடை அழகுடன் தன்னை எதிர்த்து வந்த களிறு அஞ்சிப் பிளிற, அதனை உரித்தருளிய மிக்க குணாளனும், உயர்ந்த பசுக்களின் நாயகனாகிய விடையின்மீது வரும் ஆருயிர்களின் தலைவனும் ஆகிய பெருமான், பல கலையும் முறையாகக் கற்று உணர்ந்தவர்களும், விதிகளாகத் தாம் கற்ற நெறிகளில் நிற்போரும் ஆகிய முனிவர் குழாங்களும், மிக்கதவத்தை மேற்கொண்டொழுகும் அதி நிபுணர்களும், தன்னை வழிபடுமாறு வளங்கள் பலவும் வளரும் மறைவனத்தில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.

குறிப்புரை :

இது பலகலையாகம வேத நூல்களை முறையாகக்கற்று, கற்றவண்ணம் ஒழுகுகின்ற முனிவர்களும், மிகத் தவஞ்செய்யும் அதி நிபுணர்களும் வழிபடும் மறைவனநாதனே யானையை உரித்துப்போர்த்த பெருவீரன், பசுபதிமேல்வரு பசுபதி என்கின்றது. கதி - நடை. அதிகுணன் - குணங்களான் மிகுந்தவன். பசு - இடபம். பசுபதி - ஆன்மாக்கள் அனைவர்க்கும் தலைவன். விதி - செயல்முறை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

கறைமலி திரிசிகை படையடல் கனன்மழு வெழுதர வெறிமறி
முறைமுறை யொலிதம ருகமுடை தலைமுகிழ் மலிகணி வடமுகம்
உறைதரு கரனுல கினிலுய ரொளிபெறு வகைநினை வொடுமலர்
மறையவன் மறைவழி வழிபடு மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :

குருதிக் கறைபடிந்த முத்தலைச் சூலம், வருத்தும் தழல் வடிவினதாகிய மழுவாயுதம், கையினின்று எழுவது போன்ற வெறித்த கண்களை உடைய மான், முறைமுறையாக ஒலி செயும் உடுக்கை, முடைநாறும் பிரமகபாலம், முகிழ் போலும் கூரிய கணிச்சி, வடவை முகத்தீ ஆகியன உறையும் திருக்கரங்களை உடையவனும், தாமரை மலரில் எழுந்தருளிய வேதாவாகிய நான்முகனால் உலகில் உயர்ந்த புகழோடு விளங்கும் நினைவோடு வேத விதிப்படி வழிபடப்பெறுபவனுமாகிய சிவபிரான் மறை வனத்தில் உறையும் பரமன் ஆவான்.

குறிப்புரை :

இது உலகத்தில் உயர்வதற்காகப் பிரமன் வழிபட்ட மறைவனத்து இருந்தருள் பரமன் திரிசூலம் முதலியவற்றைத் தாங்கிய எட்டுக்கரங்களையுடையவன் என்கின்றது. கறை - இரத்தக்கறை. திரிசிகை - முத்தலைச்சூலம். அடல்கனல் மழு - வருத்தும் தழல்வடி வாகிய மழுப்படை. எழுதர வெறி மறி - திருக்கரத்தை விட்டு எழும்புவது போலும் வெறித்தகண்ணையுடைய மான். முடைதலை - முடைநாற்றம் வீசும் பிரமகபாலம். முகிழ் மலி கணி - முகிழ்போலும் கூரிய குந்தாலிப்படை. வடமுகம் - வடவாமுகாக்கினி. ஒளி - புகழ்.`ஒளிநிறான்` என்பதும் ஓர்க. மறைவழி - வேதவிதிப்படி. இறைவன் படையிலங்கு கரம் எட்டுடையானாக இருப்பது குறிக்கப்பெறுகிறது.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

இருநில னதுபுன லிடைமடி தரவெரி புகவெரி யதுமிகு
பெருவெளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட
இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவ னினமலர்
மருவிய வறுபத மிசைமுரன் மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :

பேரூழிக்காலத்தில் பெரிய இந்நிலமாகிய மண் புனலில் ஒடுங்க, நீர் எரியில் ஒடுங்க, எரி வளியில் ஒடுங்க, வளி ஆகாயத்தில் ஒடுங்க, பரந்துபட்ட இவ்வுலகமும் உலகப் பொருள்களும் ஆகிய அனைத்தும் அழிய, அதுபோது பிரம விட்டுணுக்களது முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன், வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசை முரலும் மறைவனம் அமரும் பரமன் ஆவான்.

குறிப்புரை :

இது ஐம்பெரும் பூதங்களும் ஒன்றினொன்று ஒடுங்க, இறுதியில் மால் அயன் இவர்களுடைய உடற்பொறையோடு திரிகின்ற இறைவன், மறைவனநாதன் என்கின்றது. நிலன் நீரில் ஒடுங்க, நீர் எரியில் ஒடுங்க, எரி வளியில் ஒடுங்க வளி ஆகாயத்தில் ஒடுங்க அப்போது மாலயன் இருவரும் அழிய, அவர்கள் எலும்பை அணிந்து, தான் ஒருவனே தலைவன் என்பதை உணர்த்தித்திரிபவன் என்பதையும், இத்தகைய சங்காரகாரணனையே உலகு முதலாகவுடையது என்பதையும் உணர்த்திநிற்பன் என்பதாம். இனமலர் - கூட்டமான மலர், அறுபதம் - வண்டு. இது ஒடுக்க முறை கூறியது. இதனால் மண் முதலிய பூதங்கள் ஒன்றினொன்று தோன்றும் என்பதுபெறப்படுகிறது. இதனையே உட்கொண்டு இப்பாடலும் ஒடுக்கமுறை கூறுகிறது. இது காரியத்தின் குணம் காரணத்தினும் உண்டென்பது நியமமாகலின் புடவிக்குரிய ஐந்து குணங்களும் அதற்குக் காரணமென்ற புனலுக்கும் உளவாதல் வேண்டும். அங்ஙனமே ஏனைய பூதங்கட்கும், அஃதின்மையின் ஒரு பூதம் மற்றொரு பூதத்திற்குக் காரணமாகாது பஞ்சதன்மாத்திரைகளே காரணமாகும் என்பது சைவசித்தாந்தத் துணிபு. அதனோடு ஒடுக்கமுறை கூறும் இச்செய்யுள் முரணுமெனின், முரணாது. மாதவச் சிவஞான யோகிகள் மாபாடியத்து இச்செய்யுளை எடுத்துக்காட்டிக் கூறுவது: `அற்றேல், வேதத்துள் அங்ஙனம் 1 ஒன்றினொன்று தோன்று `மென்ற வாக்கியத்தோடும்,` இருநில னதுபுன லிடை மடி தரவெளி புகவெரி யதுமிகு - பெருவெளியினிலவி தரவளி கெடவியனிடைமுழுவதுகெட - விருவர்களுடல் பொறையொடுதிரி யெழிலுருவுடையவன் `எனச் சங்கார முறைபற்றி வேதவாக்கியப் பொருளை வலியுறுத்தோதிய திருப்பாட்டோடும் முரணுமாலெனின், - அற்றன்று;1 வேதஞ்சிவாகமம் இரண்டும் செய்த முதற்கருத்தா பரமசிவ னொருவனேயாகலின், அவைதம்முண் முரணுமாறின்மையின், ஒரோவழிமுரணுவன போலத் தோன்றியவழி, முரணாகாதவாறு வன்மை மென்மைபற்றித் தாற்பரியங்கோடல் வேண்டும். அற்றாகலினன்றே 2 தேயுமுதன் முப்பூதங்கட்கே தோற்றங்கூறி,`இம்முப்பூதமயமே பிரபஞ்சமெல்லாம் `என விரித்தோதிய சாந்தோக்கியவுபநிடதமும், ஆகாயமுதல் ஐந்திற்குந்தோற்றங்கூறி,`ஐம்பூதமயமே பிரபஞ்சமெல்லாம்` என்னும் தைத்திரீயவுபநிடதமும் தம்முண் முரணுவனபோலத் தோன்றுதலின், அங்ஙனம் முரணாமைப் பொருட்டு வன்மைமென்மைநோக்கித் தைத்திரீயத்திற் கூறியதே பிரமாணமெனவும், சாந்தோக்கியத்திற்கூறும் வாக்கியங்கட்கும் அதுவே தாற்பரியமெனவும், உத்தரமீமாஞ்சையின் வியததிகரணத்து ளோதியதூஉம்; மற்றும் ஆண்டாண்டு முரணாதவண்ணம் ஒன்று முக்கியப்பொருளும், ஒன்று தாற்பரியப்பொருளுமாக வைத்துப் பொருளொருமையுணர்த்தியதூஉ மென்க. ஆதலின் இப்பகுதிக்கு நிலம் இரதத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற கந்த தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும், நீர் உருவத்தோடு கூடி விசிட்டமாய்நின்ற இரத தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும் தீ பரிசத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற உருவ தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும், காற்று சத்தத்தோடு கூடி விசிட்டமாய் நின்ற பரிச தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும், ஆகாயம் பிரமமாகிய சதா சிவத்தால் அதிட்டிக்கப்படும் சத்த தன்மாத்திரையில் ஒடுங்கிற்றென்றும் பொருள் கோடலே மரபாம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

சனம்வெரு வுறவரு தசமுக னொருபது முடியொடு மிருபது
கனமரு வியபுய நெரிவகை கழலடி யிலொர்விர னிறுவினன்
இனமலி கணநிசி சரன்மகிழ் வுறவருள் செய்தகரு ணையனென
மனமகிழ் வொடுமறை முறையுணர் மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :

மக்கள் அஞ்சுமாறு வருகின்ற இராவணனின் பத்துத் தலைகளோடு பெரிதாய இருபது தோள்களும் நெரியுமாறு வீரக்கழல் அணிந்த திருவடியில் உள்ளதொரு விரலை ஊன்றி அடர்த்தவன். அவன் பிழை உணர்ந்த அளவில் அரக்கர் கூட்டமுடைய அவ்இராவணன் மனம் மகிழ்வுறுமாறு பேர், வாழ்நாள், தேர், வாள் முதலியன அளித்தருளிய கருணையாளன் என நான்மறைகளை முறையாக உணர்ந்த வேதியர் மனமகிழ்வொடு புகழும் மறைவனத்தில் அமர்ந்தருளும் பரமன் ஆவான்.

குறிப்புரை :

இது இராவணனுக்கு அருள் செய்த கருணையை யுடையன் என்று அனைவரும் உணர `மறைவனம் அமர்தரு பரமன்` இருக்கின்றான் என்கின்றது. சனம் - மக்கள். கனமருவிய புயம் - பருத்ததோள். இனம் மலி - அரக்கர் கூட்டத்தால் நிறைந்த, நிசிசரன் - இராவணன்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

அணிமலர் மகள்தலை மகன்அயன் அறிவரி யதொர்பரி சினிலெரி
திணிதரு திரளுரு வளர்தர வவர்வெரு வுறலொடு துதிசெய்து
பணியுற வெளியுரு வியபர னவனுரை மலிகட றிரளெழும்
மணிவள ரொளிவெயின் மிகுதரு மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :

அழகிய மலர்மகள் கேள்வனும், அயனும் அறிதற்கு அரியதொரு தன்மையில் அனல் செறிந்த பிழம்புருவத்தோடு தோன்ற அதனைக் கண்டு அவ்விருவரும் அஞ்சித் துதி செய்து பணிய, வானவெளியைக் கடந்த பேருருவத்தோடு காட்சி நல்கிய பரனாகிய அவன் நுரைமிக்க கடல் திரட்சியில் தோன்றும் மணிகளின் வளர் ஒளியினால் வெயிலொளி மிகுந்து தோன்றும் மறைவனத்தில் அமரும் பரமன் ஆவான்.

குறிப்புரை :

மறைவனத்துப் பரமனே அயனும் மாலும் அறி யொண்ணாதபடி அண்ணாமலையாய், அவர்கள் அச்சத்தோடு துதிசெய்ய வெளிப்பட்டு உருவங்கொண்ட பரன் என்கின்றது. மலர் மகள் தலைமகன் - திருமால். பரிசு - தன்மை. எரி திணிதரு திரள் உரு - செறிவான தீப்பிழம்பின் வடிவு, வெளி உருவிய - ஆகாயத்தைக் கடந்த, நுரை மலிகடல் - நுரைமலிந்த கடல்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

இயல்வழி தரவிது செலவுற வினமயி லிறகுறு தழையொடு
செயன்மரு வியசிறு கடமுடி யடைகையர் தலைபறி செய்துதவம்
முயல்பவர் துவர்பட முடல்பொதி பவரறி வருபர னவனணி
வயலினில் வளைவள மருவிய மறைவன மமர்தரு பரமனே.

பொழிப்புரை :

உலக இயல்பு கெடுமாறு நடை உடை பாவனைகளால் வேறுபடத் தோன்றிப் பல மயில்களின் தோகைகளைக் கொண்டு வழிகளை உயிரினங்களுக்கு ஊறு வாராதபடி தூய்மை செய்து நடத்தலைச் செய்து சிறிய குண்டிகை வைக்கப்பட்ட உறியை ஏந்திய கையராய்த் தலையைப் பறித்து முண்டிதமாக்கிக் கொண்டு தவம் முயலும் சமணர்களும், துவராடையால் உடலை மூடியவர்களாகிய புத்தர்களும் அறிதற்கரிய பரனாகிய அவன், அழகிய வயலில் சங்கீன்ற முத்துக்கள் நிறைந்துள்ள மறைவனத்தில் அமர்ந்துறையும் பரமன் ஆவான்.

குறிப்புரை :

இது புறச்சமயத்தாரால் அறியமுடியாத பரன் `மறை வனநாதன்` என்கின்றது. இயல்வு அழிதர - உலகவியற்கை கெட, விதுசெலவுற - காற்று வீச. மயில் இறகு தழையொடு - மயிற்பீலிக் கற்றையொடு. செயல் மருவிய சிறுகடம் முடி - வேலைப்பாடமைந்த குண்டிகை வைக்கப்பட்ட உறி, துவர்படம் - கல்லாடை. வளை வளம் - சங்குதந்த முத்தாகிய வளப்பங்கள்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

வசையறு மலர்மக ணிலவிய மறைவன மமர்பர மனைநினை
பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள் புகழ்வழி வளர்தரு
இசையமர் கழுமல நகரிறை தமிழ்விர கனதுரை யியல்வல
இசைமலி தமிழொரு பதும்வல வவருல கினிலெழில் பெறுவரே.

பொழிப்புரை :

குற்றமற்ற திருமகள் நிலவும் மறைவனத்தில் அமர்ந்துள்ள பரமனை அன்போடு நினையும் மிகுந்த கலைகளில் வல்ல புலவர்களின் புகழோடு வளரும் கழுமலநகர்த் தலைவனும் தமிழ் விரகனும் ஆகிய ஞானசம்பந்தனுடைய இயற்றமிழிலும் மேம்பட்ட இசை மலிந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் உலகினில் அழகெய்துவர்.

குறிப்புரை :

இது மறைவனநாதனை மனத்தெண்ணிய அன்போடு, கற்றார் பயிலும் காழி ஞானசம்பந்தன் சொன்ன இப்பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் உலகில் அழகெய்துவர் என்கின்றது. வசையறு மலர்மகள் - குற்றமற்ற திருமகள், திருமகளுக்குக் குற்றம் ஓரிடத்தும் நில்லாமையும், தக்காரிடத்துச் செல்லாமையும் போல்வன. மறைவனத்து அங்ஙனம் இல்லாமையின் குற்றமற்றவள் ஆயினள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீள்
உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.

பொழிப்புரை :

நீரைத் தேக்கி வெளிவிடும் மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், அதன்கண் பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப்பூச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய் இருப்பது ஏனோ?

குறிப்புரை :

இது மாதர் நீராடுவதால் வாளைமீன் துள்ளும் பொய்கைக் கரையிலுள்ள கோலக்காவிலுள்ளவன், சடையும் பிறையும் தாங்கி, சாம்பலைப்பூசி, கீள்உடுத்து இருக்கின்ற வடிவத்தைக் கொண்டது ஏனோ என்கின்றது. தலமோ மாதர் நீராட வாளை மடையில் பாயும் வளம் பொருந்திய தலம். அதற்கேற்ப இவர் அணியணிந்து, சாந்தம்பூசி, பட்டுடுத்து வாழாது இங்ஙனமாய திருக்கோலத்தைக் கொண்டதேன்? கீளுடை - கீளோடு கட்டின கோவண உடை. குருவருள்: இப்பாடலில் கீள் உடை என்பதே சரியான பாடம். கீள் என்பது கீளப்பட்ட அஃதாவது கிழிக்கப்பட்ட வாராகும்.`கீளார் கோவணமும்` என்ற சுந்தரர் தேவாரமும் காண்க. சடை இறைவனது எண்குணங்களுள் அளவிலாற்றலுடைமையைக் குறித்தது. `கடுத்து வரும் கங்கைதனைக் கமழ்சடை ஒன்று ஆடாமே தடுத்தவர்` என்ற பிள்ளையார் வாக்கும் காண்க. எண்குணங்களுள் பிறை, பெருமான் கருணையாளன் என்பதை நினைவுறுத்துகிறது. தவறு செய்தவன் உணர்ந்தால் மன்னித்து அருள் வழங்கும் கருணை இதில் புலப்படுதல் காணலாம். சாம்பற் பூச்சும், கீள் உடையும் பரமனின் பற்றற்ற நிலையைக் குறிப்பன. எல்லாம் இருந்தும் தான் ஒன்றும் அநுபவியாமல் யோகியாயிருந்து உயிர்கட்கு யோகநெறி காட்டி விடுதலை செய்பவன் என்பதைக் குறிப்பது.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி
கொண்டான் கோலக் காவு கோயிலாக்
கண்டான் பாதங் கையாற் கூப்பவே
உண்டா னஞ்சை யுலக முய்யவே.

பொழிப்புரை :

உமையம்மையைத் தன் திருமேனியில் இடப் பாதியாகக்கொண்டு, கலைகள் ஒன்றொன்றாகக் குறைந்து வந்த இளம் பிறையைச் சடைமுடி மீது ஏற்றுக் கொண்டவனாகிய சிவபிரான், கோலக்காவிலுள்ள கோயிலைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். திருப்பாற்கடலில் நஞ்சு தோன்றியபோது காவாய் என அனைவரும் கைகூப்பி வணங்க உலகம் உய்யுமாறு அந்நஞ்சினை உண்டு அருளியவன்.

குறிப்புரை :

இது கோலக்காவிற் கோயில்கொண்ட இறைவன், எல்லாருந்தொழ, உலகம் உய்ய, கடல் நஞ்சை உண்டான் என்கின்றது. நஞ்சுண்டது தம் வீரத்தை வெளிப்படுத்தற்கன்று; உலகமுய்ய எழுந்த பெருங்கருணையைத் தெரிவித்தவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

பூணற் பொறிகொ ளரவம் புன்சடை
கோணற் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறைவல் லானையே
பேணப் பறையும் பிணிக ளானவே.

பொழிப்புரை :

அழகிய புள்ளிகளை உடைய பாம்பை அணிகலனாகக் கொண்டு, சிவந்த சடையின்மேல் வளைந்த பிறைமதியைச் சூடிய, என்றும் மாறா இளமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் திருக்கோலக்காவை மாட்சிமை தங்கப்பாடி, வேதங்களை அருளிய அப்பெருமானைப் பேணித் தொழப்பிணிகளானவை நீங்கும்.

குறிப்புரை :

கோலக்காவில் குழகனைப் பேணப்பிணிகள் நீங்கும் என்கின்றது. பூண் நல் பொறிகொள் அரவம் - நற்பொறிகொள் அரவம் பூண் என மாற்றுக. குழகன் - இளமையுடையவன். மாண - மாட்சிமை மிக. பேண - மனத்துள் இடைவிடாது தியானிக்க. பறையும் - ஒன்றொன்றாக உருவமின்றிக் கெடும்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ண மேத்தி வாழ்மினே.

பொழிப்புரை :

பல்வேறு சமயங்களிலும் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களே! மழுவாயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட செல்வனும், மானை ஏந்திய அழகியகையை உடையவனும், பூதங்களின் குழுக்களை உடையவனும் ஆகிய சிவபிரானது கோலக்காவைத் தவறாமல் சென்று தரிசித்து வாருங்கள். நும் பாவங்கள் அகலும்.

குறிப்புரை :

பாவங்கள் தளர வேண்டுபவர்களே! கோலக்காவில் இறைவனைக் கும்பிட்டு வாழ்த்துங்கள் என்கின்றது. தழுக்கொள் பாவம் - ஆணவமுனைப்போடு கூடிய ஆன்ம போதத்தால் தழுவிக்கொள்ளப்பட்ட பாவங்கள். இழுக்கா வண்ணம் - தவறாதபடி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

மயிலார் சாயன் மாதோர் பாகமா
எயிலார் சாய வெரித்த வெந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

பொழிப்புரை :

ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், அசுரர்களின் முப்புரங்கள் கெடுமாறு அவற்றை எரித்தவனும் ஆகிய எம் தந்தையாகிய சிவபிரானது, குயில்கள் நிறைந்து வாழும் சோலைகளை உடைய திருக்கோலக்காவைப் பலகாலும் நினைக்கப் பாவங்கள் நீங்கும்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த செல்வன் எழுந்தருளியுள்ள கோலக்காவை இடைவிடாது நினைக்கப் பாவம் பறையும் என்கின்றது. மாது - உமாதேவி. நோக்கினார்கண்ணுக்கு இனிமையும், பிறவியான் வரும் மயக்கம் அறுக்கும் மருந்துமாகலின் இறைவி மயிலார்சாயலள் ஆயினள். எயிலார் - திரிபுராதிகள். பயிலா நிற்க - இடைவிடாது தியானிக்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்
அடிகள் பாத மடைந்து வாழ்மினே.

பொழிப்புரை :

ஒன்றிலிருந்து பிறிதொன்று கிளைக்கும் வினைப்பகையை நீக்கிக்கொள்ள விரும்புகின்றவர்களே! மணம் பொருந்திய கொன்றை மலர் விரவிய சென்னியை உடையோனும், கொடிகள் கட்டப்பெற்று விழாக்கள் பலவும் நிகழ்த்தப்பெறும் கோலக்காவில் விளங்கும் எம் தலைவனும் ஆகிய பெருமான் திருப்பாதங்களை அடைந்து வாழ்வீர்களாக.

குறிப்புரை :

இது வினைகெட வேண்டுவீர் கோலக்காவின் அடிகளை அடைந்து வாழுங்கள் என்கின்றது. வெடிகொள்வினை - வாழை சிங்கம் வெடித்தது என்றாற் போல ஒரு முதலிலிருந்து பலவாகப் பல்கும்வினை. கடி - மணம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

நிழலார் சோலை நீல வண்டினங்
குழலார் பண்செய் கோலக் காவுளான்
கழலான் மொய்த்த பாதங் கைகளால்
தொழலார் பக்கல் துயர மில்லையே.

பொழிப்புரை :

நிழல் செறிந்த சோலைகளில் நீல நிறம் பொருந்திய வண்டினங்கள் வேய்ங்குழல் போல இசை வழங்கும் திருக்கோலக்காவில் விளங்கும் சிவபிரானுடைய வீரக்கழல் செறிந்த திருவடிகளைக் கைகூப்பித் தொழுபவர் பக்கம் துயரம் வாராது.

குறிப்புரை :

இது கோலக்காவுளான் பாதம் தொழுவார்க்குத் துயரமில்லை என்கின்றது. குழலார் - குழல்போல. கழலான் மொய்த்த பாதம் - வீரக்கழலோடு செறிந்த சேவடி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

எறியார் கடல்சூ ழிலங்கைக் கோன்றனை
முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்
குறியார் பண்செய் கோலக் காவையே
நெறியாற் றொழுவார் வினைகள் நீங்குமே.

பொழிப்புரை :

அலைகள் எறியும் கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனாகிய இராவணனை, அவன் நீண்ட கைகள் முரிதலைப் பொருந்துமாறு அடர்த்த சிவபிரானைச் சுரத்தானங்களைக் குறித்த பண்ணிசையால் கோலக்காவில் சிவாகமநெறிகளின்படி வழிபடுவார் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

கோலக்காவைத் தொழுவார் வினை நீங்கும் என் கின்றது. எறியார்கடல் - எறிதலைப் பொருந்துகின்ற கடல். அதாவது கரையொடு மோதுகின்றகடல். முறியார் தடக்கை - முரிதல் அமைந்த தடக்கை என்றது அவனது இருபது தோள்களையும். குறியார் பண் `குறிகலந்த இன்னிசை` என்பது போலக் கொள்க. நெறியால் தொழுவார் - சிவாகம நெறிப்படியே வணங்குகின்றவர்கள். வினைகள் நீங்கும் என்றது வினைகள் தாமே கழலும் என்பதை விளக்கிற்று.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

நாற்ற மலர்மே லயனு நாகத்தில்
ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்
கூற்ற முதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாத மேத்தி வாழ்மினே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், ஆற்றல் பொருந்திய ஆதிசேடனாகிய அணையில் உறங்கும் திருமாலும் காணுதற்கு இயலாத, இயமனை உதைத்த குழகன் ஆகிய கோலக்காவில் விளங்கும் ஆன்ஏற்றை வாகனமாகக் கொண்ட இறைவன் திருவடிகளைப் போற்றி வாழ்வீர்களாக.

குறிப்புரை :

அயனும் மாலுங் காணாத கூற்ற முதைத்த குழகன் பாதத்தை ஏத்தி வாழுங்கள் என்கின்றது. நாற்றம் - மணம். நாகத்தில் - ஆதிசேடனிடத்தில். ஏற்றான் - இடமாக ஏற்றுக் கொண்டவன்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்
உற்ற துவர்தோ யுருவி லாளருங்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே.

பொழிப்புரை :

நீராடாமல் தம் உடலிற் சேர்ந்த மாசுடன் தோன்றும் சமணரும், தம் உடலிற் பொருந்திய கல்லாடையால் தம் உருவை மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், குற்றமுடைய சமய நெறியை மேற்கொண்டவராவர். அவர்கள் தம் தெய்வம் என்று ஏற்றுக் கொள்ளாத கோலக்கா இறைவனைப் பற்றிப்போற்றப் பாவம்தீரும்.

குறிப்புரை :

சமணர்களும் புத்தர்களும் சொல்வனவற்றைக் கொள்ளாத பெரியோர்கள் கோலக்காவைத் தொழப் பாவம் பறையும் என்கின்றது. பெற்றமாசு பிறக்கும் சமணர் - தாங்களாகவே பெற்ற அழுக்குக்களை மறையாது (கழுவாது) வெளிப்படுத்திக் கொள்ளும் சமணர்கள். துவர்தோய் உருவிலாளர் - காவியாடையால் உருவந்தோன்றாதே மறைத்த புத்தர்கள். ஆகிய இருவரும், குற்ற நெறியார் - குற்றப்பட்ட சமயநெறியை உடையவர்கள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

நலங்கொள் காழி ஞானசம் பந்தன்
குலங்கொள் கோலக் காவு ளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோ யோங்கி வாழ்வரே.

பொழிப்புரை :

இயற்கை நலங்கள் யாவும் நிறைந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பண்பால் உயர்ந்த குலத்தினரைக் கொண்டுள்ள கோலக்காவில் விளங்கும் இறைவனைப் பாடிய திருவருள் வென்றியைக் கொண்ட இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபடவல்ல வாய்மையாளர், மலை போலும் திண்ணிய வினைகள் நீங்கப்பெற்றுச் சிறந்து வாழ்வர்.

குறிப்புரை :

கோலக்காவைப்பற்றிய இப்பாடல் பத்தையும் வல்லவர் மலைபோன்ற தம்வினையும் மாள ஓங்கிவாழ்வார்கள் என்கின்றது. வலங்கொள்பாடல் - திருவருள் வன்மையைக்கொண்ட பாடல் அல்லது வலமாகக் கொண்ட பாடல் என்றுமாம். உலம் - மலை. குருவருள்: உலம் - மலை. மலையளவு பாவம் செய்திருப்பினும் நெறியாக இப்பதிகத்தை ஓதினால், மலையளவு வினைகளும் பொடியாக உயர்ந்த வாழ்வு பெறுவர். முடிவான பேரின்ப வாழ்வு பெறுவர் என்பதை உணர்த்துகின்றது. மேலும் ஞானசம்பந்தர் `மந்தரம் மனபாவங்கள் மேவிய, பந்தனையவர் தாமும் பகர்வரேல், சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால், நந்திநாமம் நமச்சிவாயவே` என்ற பாடலாலும் இக்கருத்தை வலியுறுத்துவார்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா
காவா யெனநின் றேத்துங் காழியார்
மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம்
பாவா ரின்சொற் பயிலும் பரமரே.

பொழிப்புரை :

பாடல்களின் சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர், பக்தர்கள், `கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை ஈசா காவாய்!` என நின்று துதித்துப் போற்றும் சீகாழிப்பதியினராவார். மனம் ஒன்றாத அசுரர்களின் மூன்று புரங்களை அழித்தவரும் அவரேயாவார்.

குறிப்புரை :

இது பாக்களின் சொற்பொருளாய்ப் பயிலும் பரமர் திரிபுரம் எரித்த சீகாழியார் போலும் என்கின்றது. புரிபுன் சடை - புரியாக முறுக்கேறிய புல்லிய சடை. ஏத்தும் - மக்களாலும் தேவர்களாலும் ஏத்தப்படுகின்ற. மேவார் - பகைவர்களாகிய திரிபுராதிகள். பாவார் இன் சொல் - பாக்களில் நிறைந்த இனியசொல், பயிலுதல் - சொற்கள் தோறும் பொருளாய் அமைதல்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்
கந்த மாலை கொடுசேர் காழியார்
வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்
அந்தி நட்ட மாடும் மடிகளே.

பொழிப்புரை :

அந்திக் காலத்தில் நடனம் ஆடும் அடிகளாகிய இறைவர், தேவர்கள் எந்தையே என அன்போடு அழைத்து ஆலயத்துட்புகுந்து குழுமி மணம்மிக்க மாலைகளை அணிவித்தற் பொருட்டுச் சேரும் சீகாழிப் பதியினராவார். அவரே நன்றாகச் சுட்டு எடுத்த திருநீற்றை அணிந்தவரும், குற்றம் அற்றவருமாவார்.

குறிப்புரை :

அந்திக்காலத்து நடமாடும் அடிகளே மாலையுஞ்சாந்துங் கொண்டு தேவர்கள் வழிபடும் காழியார்போலாம் என்கின்றது. இமையோர் - தேவர்கள். எந்தை என்று - எம்உயிர்த்தந்தையே என்று. அந்திநட்டம் - சந்தியாதாண்டவம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

தேனை வென்ற மொழியா ளொருபாகங்
கான மான்கைக் கொண்ட காழியார்
வான மோங்கு கோயி லவர்போலாம்
ஆன வின்ப மாடும் மடிகளே.

பொழிப்புரை :

முற்றிய இன்பத்தோடு ஆடுகின்ற சிவபிரான், இனிப்பில் தேனை வென்று விளங்கும் மொழிகளைப் பேசுகின்ற உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காட்டில் திரியும் இயல்பினதாகிய மானைக் கையின்கண் ஏந்தி விளங்கும் காழிப்பதியினராவார். அவர் வானளாவ உயர்ந்த திருக்கோயிலில் விளங்குபவர் ஆவார்.

குறிப்புரை :

இது உமையாளை ஒருபாகம்வைத்து மானைக் கையேந்திய காழியார் இன்பத்தோடு நடமாடும் இறைவர் என்கின்றது. தேனைவென்ற மொழியாள் - வாய்வழிபுகுந்து முன் இனிப்பாய்ப் பின் புளிக்கும் தேனை, செவிவழியாகச் சிந்தையுள் புகுந்து பின்னும் இனிக்கும் மொழி வென்றது என்பது குறிப்பு. கான மான்:சாதியடை, இறைவன் கையில் உள்ளது காட்டுமான் அன்று. ஆன இன்பம் ஆடும் - முற்றிய இன்பத்தோடு ஆடுகின்ற. ஆனநெய் என்பதுபோல் பசு வினால்வரும் இன்பமாகிய பால் முதலியனவுமாம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக் களித்த காழியார்
நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்
பேணார் புரங்க ளட்ட பெருமானே.

பொழிப்புரை :

தம்மைப் பேணி வழிபடாத அசுரர்களின் முப் புரங்களை அழித்த பெருமான், மாட்சிமையில்லாத வெற்றியை உடைய காலனை மடியுமாறு செய்து, தம்மையன்றி வேறொன்றையும் காணாத மார்க்கண்டேய முனிவருக்கு என்றும் பதினாறாண்டோடு விளங்கும் வரத்தை அளித்தருளிய காழிப்பதியினர் ஆவார். முப்புரங்களை அழித்தற்பொருட்டு நாணிற் பூட்டிய அம்பைத் தொடுத்த வருமாவார்.

குறிப்புரை :

சரந்தொடுத்துப் புரம் அட்ட பெருமான் காலனை உதைத்த காழியார்போலாம் என்கின்றது. மாணா வென்றி - மாட்சிமைப்படாத வெற்றி. காணா மாணிக்கு - இறைவனையன்றி வேறொன்றையும் காணாத பிரமசாரியாகிய மார்க்கண்டருக்கு. பேணார் -பகைவர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

மாடே யோத மெறிய வயற்செந்நெற்
காடே றிச்சங் கீனுங் காழியார்
வாடா மலராள் பங்க ரவர்போலாம்
ஏடார் புரமூன் றெரித்த விறைவரே.

பொழிப்புரை :

குற்றம் பொருந்திய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தருளிய இறைவர், அருகில் கடல் நீரின் அலைகள் எறிந்த சங்குகள் வயல்களில் விளைந்த செந்நெற் பயிர்களின் செறிவில் ஏறி முத்துக்களை ஈனும் சீகாழிப் பதியினர். அவர் வாடாமலர்களைச் சூடி விளங்கும் பார்வதி தேவியைத்தம் திருமேனியின் ஒரு பங்காக உடையவராவார்.

குறிப்புரை :

புரம் எரித்த இறைவரே காழியில் உள்ள உமைபாகர் போலும் என்கின்றது. கடல் ஓதத்தால் பக்கங்களில் எறியப்பட்ட சங்குகள் வயலிலே உள்ள செந்நெற்காட்டில் ஏறி முத்தீனும் காழி என்றது திருவருள் வாய்ப்பிருக்குமானால் மடுவிலிருந்த ஒன்றும் காழிக்கரையேறிக் கடவுள் கருணையெய்தி இன்பமுறும் என்று குறிப்பித்தவாறு, வாடாமலராள் என்றது தெய்வக்கற்புடையாள் என்பதைத் தெரிவிக்க. ஏடு - குற்றம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார்
அங்க ணரவ மாட்டு மவர்போலாஞ்
செங்க ணரக்கர் புரத்தை யெரித்தாரே.

பொழிப்புரை :

சிவந்த கண்களை உடைய அரக்கர் மூவரின் திரி புரங்களை எரித்தவராகிய இறைவர், கோங்கு, செருந்தி,கொன்றை மலர் இவற்றுடன் கங்கையை அணிந்துள்ள சடைமுடியினர். அக்காழியர் தாம் அணிந்துள்ள பாம்புகளை அவ்விடத்தே தங்கி ஆட்டுபவராகவும் உள்ளார்.

குறிப்புரை :

புரமெரித்த பெருமானே காழியாராகிய பாம்பாட்டி போலும் என்கின்றது. அங்கண் அரவம் ஆட்டுமவர் - அவ்விடத்துப்பாம்பை அவயவங்களிலணிந்து ஆட்டுவர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்
கல்ல வடத்தை யுகப்பார் காழியார்
அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்
பல்ல விடத்தும் பயிலும் பரமரே.

பொழிப்புரை :

எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்கும் பரமராகிய பெருமானார், முல்லை நிலத்துக்குரிய ஆன் ஏற்றை ஊர்ந்து அதன் முன்னே பூதகணங்கள் வளைந்து நெளிந்து ஆடிச்செல்லக் கல்லவடம் என்னும் பறையை விரும்புபவர். அக்காழியார் தம்மை அறிந்து போற்றுநர் அல்லாதார் இடங்களிலும் தோன்றி அருள் வழங்கும் இயல்பினர்.

குறிப்புரை :

கொல்லைவிடை - முல்லைக் கடவுளாகிய திரு மாலாகிய விடை. கல்லவடம் - ஒருவகைப்பறை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

எடுத்த வரக்க னெரிய விரலூன்றிக்
கடுத்து முரிய வடர்த்தார் காழியார்
எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்
பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே.

பொழிப்புரை :

பொடியாக அமைந்த திருநீற்றைப் பூசும் தூயவராகிய பெருமானார், கயிலைமலையை எடுத்த இராவணனின் முடிகள் நெரியுமாறு தம் கால்விரலை ஊன்றிச்சினந்து அவனது ஆற்றல் அழியுமாறு அடர்த்தவர். அக்காழியார் இராவணன் எடுத்த பாடலாகிய சாமகானத்துக்கு இரங்கி அருள் செய்தவராவார்.

குறிப்புரை :

இராவணனை நெரித்த காழியார் கானத்திற்கிரங்கும் கருணையாளர் போலாம் என்கின்றது. கடுத்து - கோபித்து. பாடல் - சாமகானம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

ஆற்ற லுடைய வரியும் பிரமனுந்
தோற்றங் காணா வென்றிக் காழியார்
ஏற்ற மேறங் கேறு மவர்போலாங்
கூற்ற மறுகக் குமைத்த குழகரே.

பொழிப்புரை :

வாழ்நாளைக் கூறுபடுத்திக் கணக்கிட்டு உயிர் கொள்ளும் இயமன் அஞ்சுமாறு அவனை உதைத்து, மார்க்கண்டேயர்க்கு அருள்செய்த குழகராகிய சிவபிரானார், ஆற்றல் உடைய திருமாலும் பிரமனும் தம் அடிமுடிகள் தோன்றுமிடங்களைக் காணாதவாறு வானுற ஓங்கிய வெற்றியை உடையவராய்க் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளார். அவர் மிக உயர்ந்த ஆன்ஏற்றில் ஏறி உலாவந்து அருள்பவராவார்.

குறிப்புரை :

கூற்றங்குமைத்த குழகராகிய காழியார் இடபம் ஏறும் கருணையாளர் போலாம் என்கின்றது. /nஆற்றலுடைய என்றது ஆற்றல் இருந்தும் இறைவனைக் காணப்பயன்பெற்றில என்பதைத் தெரிவிக்க. ஏற்றம் ஏறு - உயர்ந்த இடபம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
கரக்கு முரையை விட்டார் காழியார்
இருக்கின் மலிந்த விறைவ ரவர்போலாம்
அருப்பின் முலையாள் பங்கத் தையரே.

பொழிப்புரை :

தாமரை அரும்பு போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒருபங்காகக் கொண்டுள்ள தலைவராகிய சிவபிரான், உண்மையின்றி மிகப்பிதற்றுகின்ற சமணர் சாக்கியர்களின் வஞ்சக உரைகளைக் கொள்ளாதவராய்க் காழியில் எழுந்தருளியுள்ளார். அவரே இருக்கு வேதத்தில் நிறைந்துள்ள இறைவரும் ஆவார்.

குறிப்புரை :

உமையொருபாகனாகிய காழியார் இருக்குவேதத்தில் நிறைந்த இறைவர் போலாம் என்கின்றது. /n பெருக்கப்பிதற்றும் - உண்மையில்லாமல் மிகப் பிதற்றுகின்ற. கரக்கும் உரை - வஞ்சக உரை. அருப்பின் முலையாள் - அரும்பு போன்ற முலையையுடைய பார்வதி.

பண் :தக்கராகம

பாடல் எண் : 11

காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்
சீரார் ஞான சம்பந் தன்சொன்ன
பாரார் புகழப் பரவ வல்லவர்
ஏரார் வானத் தினிதா விருப்பரே.

பொழிப்புரை :

நீர்வளத்தால் கருஞ்சேறுபட்டு விளங்கும் வயல்களால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் விளங்கும் கோமகனாகிய சிவபிரான்மீது, சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் அருளிச்செய்த பாடல்களை ஓதி உலகோர் போற்றத் துதிக்க வல்லவர், அழகிய வானகத்தில் இனிதாக இருப்பர்.

குறிப்புரை :

காழிநாதனைப்பற்றி ஞானசம்பந்தன் சொன்னவைகளை உலகோர் புகழ உரைக்கவல்லவர்கள் வானத்து இனிதாய் இருப்பர் என்கின்றது. ஏர் - அழகு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்டத் தீசன் கழல்களை
மருவா தவர்மேன் மன்னும் பாவமே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய கூந்தலை உடையவளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக உடையவராய்த் திருமகள் வாழும் செம்பொன்பள்ளி என வழங்கும் திருத்தலக்கோயிலில் எழுந்தருளிய, கருநீலம் பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை வணங்கி அவற்றைத் தம் மனத்தே பொருந்தவையாதவர்களைப் பாவங்கள் பற்றும்.

குறிப்புரை :

இது செம்பொன்பள்ளி ஈசன் கழல்களை அடையாத வரைப் பாவம் அடையும் என்கின்றது. மருவார்குழலி, இத்தலத்து அம்மையின் திருநாமம். வடமொழியில் சுகந்தவனப்பாவை என வழங்குவர். கருவார்கண்டம் - நீலகண்டம். இறைவன் அடைந்தார் இன்னல் தீர்க்க அடையாளமாக நீலகண்டத்தைக் காட்டியும் அவன் கழல்களை மருவாதவரைப் பாவம் மருவும் என்ற நயந்தோன்ற நின்றது.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
சீரார் செம்பொன் பள்ளி மேவிய
ஏரார் புரிபுன் சடையெம்மீசனைச்
சேரா தவர்மேற் சேரும் வினைகளே.

பொழிப்புரை :

கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவராய், சிறப்புப் பொருந்திய செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய அழகிய முறுக்கேறிய சிவந்தசடைமுடியை உடைய எம் ஈசனாகிய சிவபிரானைச் சென்று வணங்கி இடைவிடாது மனத்தில் நினையாதவர்களிடம் வினைகள் சேரும்.

குறிப்புரை :

இதுவுமது. சேராதவர் - இடைவிடாது தியானியாதவர். வினைகள் எனப்பன்மையாற் கூறியது வெடிக்கும் வினைகளாய் இருத்தலின்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்
திரையார் செம்பொன் பள்ளி மேவிய
நரையார் விடையொன் றூரும் நம்பனை
உரையா தவர்மே லொழியா வூனமே.

பொழிப்புரை :

மலைகளில் செழித்து வளர்ந்த சந்தனமரங்களோடு, அகில் மரங்களையும் அடித்துக் கொண்டு வருகின்ற பொன்னி நதிக்கரையில் விளங்கும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய வெண்ணிறம் பொருந்திய விடை ஒன்றை ஊர்ந்து வருபவனாகிய சிவபெருமான் புகழை உரையாதவர்களைப் பற்றியுள்ள குற்றங்கள் ஒழியா.

குறிப்புரை :

செம்பொன்பள்ளி நம்பனைத் தோத்திரியாதவர் மேலுள்ள ஊனம் ஒழியாதென்கின்றது. வரை - மலை. நரை - வெள்ளை. உரையாதவர் - புகழாதவர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்
செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத்
தொழுவார் தம்மேற் றுயர மில்லையே.

பொழிப்புரை :

மழுவாகிய வாளை ஏந்தி உமையொருபாகனாய் வளம் பொருந்திய செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய அழகு பொருந்திய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் இறைவனைத் தொழுபவர்கட்குத் துயரம் இல்லை.

குறிப்புரை :

தொழுவார்க்குத் துயரமில்லை என்கின்றது. துயரம் இல்லாமைக்கு இரண்டு ஏது; ஒன்று பகையும் பிணியும் தடுத்தல். மற்றொன்று இன்பம் பெருக்கல். இவ்விரண்டையும் பெற இறைவன் மழுவாள் ஏந்திப் பகையும் பிணியும் தடுத்தும், மாதோர் பாகமாய்த் தான் இருந்து இன்பம் பெருக்கியும் காக்கின்றார் என்று உணரவைத்தவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த
சிலையார் செம்பொன் பள்ளி யானையே
இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே.

பொழிப்புரை :

மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு உடனாய் விளங்குபவனும், அசுரர்களின் மும்மதில்களை எய்தழித்த மலை வில்லை உடையவனுமாகிய செம்பொன்பள்ளியில் விளங்கும் சிவபிரானையே, இலைகளையும் மலர்களையும் கொண்டு இரவிலும் நண்பகலிலும் மனம் நிலைத்து நிற்குமாறு வணங்குவார் மேல் வினைநில்லா.

குறிப்புரை :

இலையும் பூவுங்கொண்டு இரவும் பகலும் வணங்கு வார்க்கு வினைகள் இல்லை என்கின்றது. மதில் எய்து மறத்தைக் காட்டினாலும் அதுவும் கருணையாய் முடிந்தது என்பார் மலையான் மகளோடுடனாய் மதில் எய்த என்றார். எல்லி - இரவு. நிலையா வணங்க - வேறொன்றிலும் மனம் சென்று பற்றாது இறைவனிடத்தேயே நிலைத்து வணங்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்
சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
கறையார் கண்டத் தீசன் கழல்களை
நிறையால் வணங்க நில்லா வினைகளே.

பொழிப்புரை :

பாறைகளிற் பொருந்திவரும் நீரில் அகில் மரங்களையும் அடித்துவரும் பொன்னியாற்றின் கரையில் அமைந்த செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய விடக்கறை பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை மன ஒருமைப்பாட்டோடு வணங்க வினைகள் நில்லா.

குறிப்புரை :

மனத்தை ஒருநெறிக்கண் நிறுத்தும் வன்மையோடு வணங்க வினைநில்லா என்கின்றது. அறையார் புனல் - பாறைகளைப் பொருந்தி வருகின்ற புனல். சிறை - கரை. கறை - விடம். நிறை - மகளிர்க்குள்ள நிறையென்னுங் குணம்போல மக்களுக்கமைய வேண்டிய இவனலாது இறை இல்லை என்ற உறைப்பு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

பையா ரரவே ரல்கு லாளொடும்
செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
கையார் சூல மேந்து கடவுளை
மெய்யால் வணங்க மேவா வினைகளே.

பொழிப்புரை :

அரவின் படம் போன்ற அழகிய அல்குலை உடைய உமையம்மையோடு வயல்கள் சூழ்ந்த செம்பொன்பள்ளியில் வீற்றிருக்கின்ற கையில் பொருந்திய சூலத்தை ஏந்தி விளங்கும் கடவுளை உடம்பால் வணங்க வினைகள் மேவா.

குறிப்புரை :

மெய்யால் வணங்கினாலும் போதும்; வினைமேவா என்கின்றது. பையார் அரவு - படம் பொருந்திய நாகம். செய் - வயல், மெய்யால் வணங்க - உடம்பால் வணங்க. உண்மையோடு வணங்க என்பாரும் உளர். இப்பொருள் `நிலையா வணங்க` `நிறையால் வணங்க` என்ற விடத்தும் போந்தமையின் இறைவனது எளிமைக் குணந்தோன்ற உள்ளம் பொருந்தாது உடம்பால் வணங்கினாலும் போதும்; வினைகள் மேவா. ஆதலால் பொருந்துமாறு ஓர்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
தேனார் செம்பொன் பள்ளி மேவிய
ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலே யடைந்து வாழ்மினே.

பொழிப்புரை :

வானத்தில் விளங்கும் பிறை மதியை, வளர்ந்துள்ள சிவந்த தன் சடைமீது வைத்து, இனிமை பொருந்திய செம்பொன்பள்ளியில் எழுந்தருளியவனும், புலால் பொருந்திய பிரமனது தலையோட்டில் பலியேற்று உழல்வதையே தன் வாழ்வின் தொழிலாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளையே அடைந்து வாழ்மின்.

குறிப்புரை :

பலி ஏற்றுண்ணும் வாழ்க்கையானான் தாளை வணங்கி உய்யுங்கள் என்கின்றது. வானார் திங்கள் - ஒருகலைப்பிறை; வானில் பொருந்தாதாயினும் பொதுமையின் கூறப்பட்டது.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

காரார் வண்ணன் கனக மனையானும்
தேரார் செம்பொன் பள்ளி மேவிய
நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை
ஓரா தவர்மே லொழியா வூனமே.

பொழிப்புரை :

நீலமேகம் போன்ற நிறமுடையோனாகிய திருமாலும், பொன்னிறமேனியனாகிய பிரமனும், தேடிக்காணொணாதவனும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய கங்கை அணிந்த நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனுமாகிய குற்றமற்ற எம் இறைவனை மனம் உருகித்தியானியாதவர் மேல் உளதாகும் குற்றங்கள் நீங்கா.

குறிப்புரை :

மலரகிதனான இறைவனைத் தியானியாதவர்களின் ஊனம் ஒழியா என்கின்றது. கனகம் அனையான் - பொன் நிறமான பிரமன். ஓராதவர் - மனமுருகித் தியானியாதவர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
பேசா வண்ணம் பேசித் திரியவே
தேசார் செம்பொன் பள்ளி மேவிய
ஈசா வென்ன நில்லா விடர்களே.

பொழிப்புரை :

அழுக்கேறிய உடலினராகிய சமணரும், மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித்திரிபவர்களாகிய புத்தரும் பேசக்கூடாதவைகளைப் பேசித்திரிய அன்பர்கள் `ஒளி பொருந்திய செம்பொன்பள்ளியில் மேவிய ஈசா!` என்று கூற அவர்களுடைய இடர்கள் பலவும் நில்லா.

குறிப்புரை :

ஈசா என்ன இடர் நில்லா என்கின்றது. மாசார் உடம்பர் - அழுக்கேறிய உடம்பை உடையவர்கள். மண்டை - உண்கலம். பேசா வண்ணம் - பேசக்கூடாதபடி, பேசித்திரிய - வாய்க்கு வந்தவற்றைப் பேசித்திரிய. தேசு - ஒளி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

நறவார் புகலி ஞான சம்பந்தன்
செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே.

பொழிப்புரை :

தேன் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் வயல்கள் சூழ்ந்த செம்பொன்பள்ளி இறைவன் அருளைப் பெறுமாறு பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் இசையோடு தமக்குவந்த அளவில் ஓதவல்லவர் ஓங்கி வாழ்வர்.

குறிப்புரை :

செம்பொன்பள்ளியில் மேவிய இறைவனைப் பெறுதற்காக ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும் சொல்லுவார் ஓங்கி வாழ்வர். நறவு - தேன். செறுஆர் - வயல்கள் பொருந்திய. உறுமா சொல்ல - உள்ளத்துப் பொருந்தும்படி சொல்ல.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை
திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்
கங்கை தங்கு முடியா ரவர்போலும்
எங்க ளுச்சி யுறையு மிறையாரே.

பொழிப்புரை :

விரும்பத்தக்க தேன் விம்மிச்சுரந்துள்ள, மணம் பொருந்திய சோலைகள் வானளாவ உயர்ந்து, அங்குத் தவழும் திங்களோடு பழகித்திளைக்கும் வளம் உடைய திருப்புத்தூரில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடைமுடியினராகிய பெருமானார் எங்கள் சிரங்களின்மேல் தங்கும் இறைவர் ஆவார்.

குறிப்புரை :

எங்கள் சிரமேல் தங்கிய இறைவன் திருப்புத்தூர் நாதன் என்கின்றது. வெம் கள் - விரும்பத்தக்கதேன். வெறி - மணம். கள்ளுண்ட வெறியால் சோலை தனக்குத்தகாத திங்களோடு திளைக்கின்றதென்று வேறும் ஒரு பொருள் தோன்ற நின்றது காண்க. உச்சி - தலை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்
தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்
ஊனமின்றி யுறைவா ரவர்போலும்
ஏன முள்ளு மெயிறும் புனைவாரே.

பொழிப்புரை :

தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுப் பன்றி வடிவமெடுத்த திருமால் உலகை அழிக்கத் தொடங்கிய காலத்து, அதனை அடக்கி, அதன் பல்லையும் கொம்பையும் பறித்துத் தன் மார்பில் அணிந்தவர், வேனிற்காலத்தில் வெளிப்படும் மணம் நிறைந்துள்ள பொழில்களிலும் சோலைகளிலும் வாழும் வண்டுகள் தேனை உண்டு திளைத்து ஒலி செய்யும் திருப்புத்தூரில் குறையின்றி உறையும் பெருமானார் ஆவர்.

குறிப்புரை :

இது இறைவன் பன்றியின் முள்ளையும் பல்லையும் புனைபவர் என்கின்றது. வேனல் - வேனிற்காலம். வண்டு தேன் இவை வண்டின் வகைகள். ஊனம் - குறைபாடு. ஏனம் - ஆதிவராகம். ஆதிவராகம் செருக்குற்று உலகத்தை அழிக்கத் தொடங்கிய காலத்துத் தேவர்கள் வேண்டுகோட்கிரங்கி, அதை அடக்கி, அதனுடைய முள்ளையும், பல்லையும் மார்பில் அணிந்தார் என்பது வரலாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்
தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்
ஓங்கு கோயி லுறைவா ரவர்போலும்
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே.

பொழிப்புரை :

தம்மை அடைக்கலமாக அடைந்த திங்கள் தவழும் செந்நிறச் சடைமுடியினை உடைய இறைவர், நல்ல வரிகளை உடைய வண்டுகள் பாங்கரிலிருந்து இசைபாடத் தேன் நிறைந்த கொன்றை மலர்கள் முடிமிசைத் திளைத்து விளங்கத் திருப்புத்தூரில் ஓங்கி உயர்ந்த கோயிலில் எழுந்தருளிய பெருமானார் ஆவார். கொன்றை - திருப்புத்தூர் தலவிருட்சம்.

குறிப்புரை :

இது திங்கள் திகழும் சடையார் திருப்புத்தூர் நாதர் என்கின்றது. வரிவண்டு இசைபாட, கொன்றை திளைக்கும் திருப்புத்தூர் எனக் கூட்டுக. பாங்கு - பக்கங்களில்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

நாற விண்ட நறுமா மலர்கவ்வித்
தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்
ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் மிறையாரே.

பொழிப்புரை :

ஆன் ஏற்றுக் கொடியைத் தனதாகக் கொண்ட எம் இறைவர், மணம் வீசுமாறு மலர்ந்த சிறந்த நறுமலர்களைத் தம் வாயால் கவ்வி வண்டுகள் தேனை உண்டு திளைக்கும் திருப்புத்தூரில் பலகாலம் தங்கிய வாழ்க்கையினை உடையவர் ஆவார்.

குறிப்புரை :

நாற - மணம்வீச. விண்ட - மலர்ந்த. வண்டுமலர் கவ்வித் தேறல் திளைக்கும் திருப்புத்தூர் என்க. ஊறல் வாழ்க்கை - ஊறிப்போன வாழ்க்கை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

இசைவி ளங்கு மெழில்சூழ்ந் தியல்பாகத்
திசைவி ளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்
பசைவி ளங்கப் படித்தா ரவர்போலும்
வசைவி ளங்கும் வடிசேர் நுதலாரே.

பொழிப்புரை :

கங்கையாகிய பெண் விளங்கும் அழகிய சென்னியினராகிய இறைவர், புகழால் விளக்கம் பெற்றதும், இயல்பாக அழகு சூழ்ந்து விளங்குவதும், நாற்றிசைகளிலும் பொழில்கள் சூழ்ந்ததுமான திருப்புத்தூரில், தம்மை வழிபடுவார்க்கு அன்பு வளருமாறு பழகும் பெருமானார் ஆவார்.

குறிப்புரை :

இசை - புகழ். பசை - அன்பு. படித்தார் - பழகுபவர். வசை - பெண்; ஈண்டு கங்கை. வடி - அழகு. நுதல் - சென்னி. `குடுமி களைந்த நுதல்` என்ற புறப்பகுதியும் இப்பொருளதாதல் ஓர்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

வெண்ணி றத்த விரையோ டலருந்தித்
தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
ஒண்ணி றத்த வொளியா ரவர்போலும்
வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே.

பொழிப்புரை :

வெண்மை நிறமுடைய விடை உருவம் எழுதிய கொடியை உடைய இறைவர், வெள்ளிய நிறமுடையனவாய் மணம் பொருந்திய மலர்களை அடித்துக் கொண்டு தெளிந்த தன்மை உடையதாய்த் தண்ணீர் பாயும் திருப்புத்தூரில் எழுந்தருளிய ஒண்மை பொருந்திய ஒளியை உடைய பெருமானார் ஆவார்.

குறிப்புரை :

வெண்ணிறத்த விரையோடு அலர் உந்தி - வெண் மையாகிய நிறமுடையவையாய் மணம் பொருந்திய மலர்களை அடித்துக்கொண்டு, ஒள்நிறத்தஒளியார் - பேரொளிப்பிழம்பானவர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்கும்
செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்
தையல் பாக மகிழ்ந்தா ரவர்போலும்
மையு ணஞ்ச மருவு மிடற்றாரே.

பொழிப்புரை :

கருமை பொருந்திய நஞ்சு மருவும் மிடற்றினராய இறைவர், நெய்தல், ஆம்பல் செங்கழுநீர் ஆகிய மலர்கள் வயல்கள் எங்கும் மலர்ந்து நிறைந்து விளங்கும் திருப்புத்தூரில் எழுந்தருளிய உமையொரு பாகம் மகிழ்ந்த சிவனாராவார்.

குறிப்புரை :

நீலகண்டராயும் நேரிழைபாகம் மகிழ்ந்தார் என்கின்றது. மைஉண்நஞ்சம் - கரியவிடம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

கருக்க மெல்லாங் கமழும் பொழிற்சோலைத்
திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்
இருக்க வல்ல விறைவ ரவர்போலும்
அரக்க னொல்க விரலா லடர்த்தாரே.

பொழிப்புரை :

இராவணனாகிய அரக்கனைக் கால்விரலால் தளர அடர்த்தவராகிய பெருமானார், மேகங்களிலும் பரவிக் கமழும் மணமுடைய பொழில்களாலும் சோலைகளாலும் சூழப்பெற்றதும், செல்வம் நிறைந்ததும், செம்மையாளர் வாழ்வதும், திருவிழாக்கள் பல நிகழ்வதுமாய திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்க வல்லவராய இறைவராவார்.

குறிப்புரை :

இராவணனையழித்த இறைவன் திருப்புத்தூரில் இருப்பவன் என்கின்றது. கருக்கம் - மேகம். அரக்கன் - இராவணன். ஒல்க - வருந்த.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை
தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்
பெருகி வாழும் பெருமா னவன்போலும்
பிரமன் மாலு மறியாப் பெரியோனே.

பொழிப்புரை :

பிரமனும் திருமாலும் அறியமுடியாத பெரியோனாகிய இறைவன், எங்கும் பொருந்தியனவாய் வளரும் இள மயில்கள் தெருக்கள் தோறும் உலவிக்களிக்கும் திருப்புத்தூரில் பெருமை பெருகியவனாய் வாழும் பெருமானாவான்.

குறிப்புரை :

பிரமன் மால் அறியாப்பெருமான் திருப்புத்தூரில் பெருகிவாழ்கின்றான் என்கின்றது. மஞ்ஞை - மயில்கள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல்
தேறல் வேண்டா தெளிமின் றிருப்புத்தூர்
ஆறு நான்கு மமர்ந்தா ரவர்போலும்
ஏறு கொண்ட கொடியெம் மிறையாரே.

பொழிப்புரை :

மேல் ஆடையைப் போர்த்துத் திரிதலைத் தொழிலாகக் கொண்ட பௌத்தர் சமணர் ஆகியவருடைய உரைகளை நம்பாதீர்கள். ஆனேறு எழுதிய கொடியினை உடையவராய்த் திருப்புத்தூரில் நான்கு வேதங்களாகவும், ஆறு அங்கங்களாகவும் விளங்கும் பெருமானாராகிய அவரைத்தெளிமின்.

குறிப்புரை :

இது இடபக்கொடிகொண்ட இறைவர் நான்கு வேதத்தினும் ஆறங்கத்தினும் அமர்ந்திருக்கின்றார் என்கின்றது. கூறை - ஆடை. தேறல்வேண்டா - தெளியவேண்டா. ஆறும் நான்கும் அமர்ந்தார் - வேத அங்கங்கள் ஆறினையும் வேதங்கள் நான்கினையும் விரும்பியவர். ஆறுநான்கும் என்று ஒரு சொல்லாகக்கொண்டு நிரலே நிறுத்தி, அறுபத்துநான்கு கலைஞானங்களில் அமர்ந்தார் எனவுங்கொள்ளலாம் அன்றி ஆறாறாக அடுக்கப்பட்டு வருகின்ற அகம், அகப்புறம், புறம், புறப்புறம் ஆகிய சமயங்களின் பொருளாய் அமர்ந்திருப்பவர் என்றுமாம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

நல்ல கேள்வி ஞான சம்பந்தன்
செல்வர் சேட ருறையுந் திருப்புத்தூர்ச்
சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்
அல்லல் தீரு மவல மடையாவே.

பொழிப்புரை :

நன்மை தரும் வேதங்களை உணர்ந்த ஞான சம்பந்தன், செல்வரும் உயர்ந்தவருமான சிவபெருமான் உறையும் திருப்புத்தூரை அடைந்து வழிபட்டுச் சொல்லிய பத்துப் பாடல்களையும் வல்லவர்கட்குத் துன்பங்கள் நீங்கும். எக்காலத்தும் அவலம் அவர்களை அடையா.

குறிப்புரை :

இது இப்பாடல் பத்தும் வல்லார்க்கு அல்லல் தீரும் என்கின்றது. நல்லகேள்வி - நல்லகேள்வியால் விளைந்த அறிவு. அன்றிக் கேள்வி என்பதனைச் சுருதி என்பதன் மொழிபெயர்ப்பாகக் கொண்டு வேதம் வல்ல ஞானசம்பந்தன் என்றுமாம். சேடர் - எல்லாம் தத்தம் காரணத்துள் ஒடுங்க அவை தமக்குள் ஒடுங்கத் தாம் ஒன்றினும் ஒடுங்காது, ஒடுங்கியவைகள் மீட்டும் உதிக்க மிச்சமாய் இருப்பவர்; பெருமையையுடையவர் என்றுமாம். அல்லல் - துன்பம். அவலம் - வறுமை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

முந்தி நின்ற வினைக ளவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்த மில்லா வடிக ளவர்போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே.

பொழிப்புரை :

நெஞ்சே! பல பிறவிகளிலும் செய்தனவாய சஞ்சித, ஆகாமிய வினைகளுள் பக்குவப்பட்டுப் பிராரத்த வினையாய்ப் புசிப்பிற்கு முற்பட்டு நின்ற வினைகள் பலவும் நீங்க, திருப்புன்கூரில் ஆதி அந்தம் இல்லாத தலைவராய், மணம் நிறைந்து கமழும் செந்நிறச் சடைமுடி உடையவராய் எழுந்தருளிய சிவ பிரானாரைச் சிந்தனை செய்வாயாக.

குறிப்புரை :

இது பழவினையற, நெஞ்சே! திருப்புன்கூர்ச் சிவனாரைச் சிந்தி, என்கிறது. முந்திநின்ற வினைகள் - நுகர்ச்சிக்குரியனவாகப் பரிபக்குவப்பட்டு நிற்கும் ஆகாமிய சஞ்சித வினைகள். அந்தம் - முடிவு. கந்தம் - மணம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

மூவ ராய முதல்வர் முறையாலே
தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
ஆவ ரென்னு மடிக ளவர்போலும்
ஏவி னல்லா ரெயின்மூன் றெரித்தாரே.

பொழிப்புரை :

பகைமை பூண்டவராய அசுரர்களின் மூன்று அரண்களைக் கணையொன்றால் எரித்தழித்த இறைவர், பிரமன் மால் உருத்திரன் ஆகிய மூவராயும், அவர்களுக்கு முதல்வராயும், தேவர்கள் எல்லோரும் முறையாக வந்து வணங்குபவராயும் விளங்கும் திருப்புன்கூரில் எழுந்தருளிய அடிகள் ஆவர்.

குறிப்புரை :

இது முப்பெருந்தேவராய், எல்லாத் தேவராலும் வணங்கப்பெறும் இறைவன் திருப்புன்கூர்நாதன் என்கின்றது. மூவர் ஆய முதல்வர் - திருச்சிவபுரப் பதிகத்துக் குறித்தவண்ணம் பிரமன் மால் உருத்திரன் என்ற முத்தேவராயும், அவர்க்கு முதல்வராயும் உள்ளவர். அடிகள் ஆவர் என்னும் அவர் போலும் எனக்கூட்டுக. ஏ - அம்பு. அல்லார் - பகைவர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

பங்க யங்கண் மலரும் பழனத்துச்
செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்
கங்கை தங்கு சடையா ரவர்போலும்
எங்க ளுச்சி யுறையும் மிறையாரே.

பொழிப்புரை :

எங்கள் தலைகளின் மேல் தங்கி விளங்கும் இறைவர், தாமரை மலர்கள் மலரும் வயல்களில் சிவந்த கயல் மீன்கள் திளைத்து மகிழும் திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள கங்கை தங்கிய சடை முடியினராகிய சிவபெருமானாராவர்.

குறிப்புரை :

திருப்புன்கூர் நாதனே எங்கள் முடிமீது உறையும் இறைவன் என்கின்றது. பழனம் - வயல். இவர் கங்கை தங்கும் சடையாராதலின் நீர்வளமிகுந்து பழனங்களில் செங்கயல்கள் திளைக்கின்றன என்பதாம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்
திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
உரையி னல்ல பெருமா னவர்போலும்
விரையி னல்ல மலர்ச்சே வடியாரே.

பொழிப்புரை :

மணத்தால் மேம்பட்ட தாமரைமலர் போலும் சிவந்த திருவடிகளை உடைய இறைவர், ஒளி பொருந்திய சிறந்த மாணிக்கங்கள் கரைகளில் திகழ்வதும், முத்துக்கள் நீர்த்திரைகளில் உலாவுவதும் ஆகிய வளம்மிக்க வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளிய புகழ்மிக்க நல்ல பெருமானாராவார்.

குறிப்புரை :

இது பெருமான் மணம்நாறும் மலர்ச்சேவடியார் என்கின்றது. கதிர்மாமணி கரையுலாவும், முத்தம் திரை உலாவும் வயல் எனக்கூட்டுக. உரை - புகழ். விரை - மணம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

பவள வண்ணப் பரிசார் திருமேனி
திகழும் வண்ண முறையுந் திருப்புன்கூர்
அழக ரென்னு மடிக ளவர்போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே.

பொழிப்புரை :

உலகோர் புகழ நிலை பெற்ற, முறுக்கிய சிவந்த சடை முடியை உடைய இறைவர், பவளம் போலும் தமது திருமேனியின் செவ்வண்ணம் திகழுமாறு திருப்புன்கூரில் உறையும் அழகர் என்னும் அடிகளாவார்.

குறிப்புரை :

இது பவளமேனியழகரே அனைவராலும் புகழநின்ற பெருமான் என்கின்றது. பரிசு - தன்மை. திகழும்வண்ணம் உறையும் - மிக்கு விளங்கும் வண்ணம் என்றும் உறையும். அழகர் - அழகு பண்பு; அழகர் பண்பி. அம்மையப்பர் ஆதலின் இத்தலத்து அம்மை திருநாமம் சொக்கநாயகி; அழகிய நாயகி. ஆதலால் இவர் அழகர் எனக்குறிப்பிடப்பெற்றார்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
பொருந்தி நின்ற வடிக ளவர்போலும்
விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே.

பொழிப்புரை :

விரிந்து விளங்கும் சடைமுடியில் வெண்பிறை அணிந்த இறைவர், கண்களுக்குப் புலனாய் அழகோடு திகழும் செங்கழுநீர் மலர்ந்த வயல்களாலும், செந்நெற் கதிர்கள் அழகோடு நிறைந்து நிற்கும் வயல்களாலும் சூழப்பெற்ற திருப்புன்கூரில் எழுந்தருளியுள்ள அடிகள் ஆவார்.

குறிப்புரை :

அழகன் சடையில் வெண்பிறையுடையார்போலும் என்கின்றது. கழுநீர் வயல்களும், செந்நெல் வயல்களும் சூழ்ந்த புன்கூர் என்க. பொருந்தி - தமக்கு இதுவே சிறந்த தலம் என அமைந்து.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்
தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
ஆர நின்ற வடிக ளவர்போலும்
கூர நின்ற வெயின்மூன் றெரித்தாரே.

பொழிப்புரை :

கொடியனவாய்த் தோன்றி இடர் விளைத்து நின்ற முப்புரங்களையும் எரித்தழித்த இறைவர், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் பரவித் தொழுதேத்துமாறு தேரோடும் திருவீதிகளை உடையதும், எந்நாளும் திருவிழாக்களால் சிறந்து திகழ்வதுமான திருப்புன்கூரில் பொருந்தி நின்ற அடிகளாவார்.

குறிப்புரை :

தேர்விழாத்திகழும் திருப்புன்கூர் அடிகள் முப்புரம் எரித்த முதல்வன்போலும் என்கின்றது. பார், விண் - ஆகு பெயராக முறையே மக்களையும் தேவரையும் உணர்த்தின. ஆர - பொருந்த. கூரம் - க்ரூரம், கொடுமை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

மலைய தனா ருடைய மதின்மூன்றும்
சிலைய தனா லெரித்தார் திருப்புன்கூர்த்
தலைவர் வல்ல வரக்கன் றருக்கினை
மலைய தனா லடர்த்து மகிழ்ந்தாரே.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய இராவணன் செருக்கைப் போக்க, அவனைக் கயிலை மலையாலே அடர்த்துப்பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள் வழங்கிய இறைவர், தேவர்களோடு சண்டையிட்டு அவர்களை அழிக்கும் குணம் உடையவராய அசுரர்களின் முப்புரங்களை வில்லால் எரித்தழித்தவராகிய திருப்புன்கூர்த் தலைவர் ஆவார்.

குறிப்புரை :

புரமெரித்த வீரத்தையும், இராவணன் வலியடக்கி யாண்ட கருணையையும் விளக்குகின்றது. மலையதனார் - மலைதற்குரியராகிய முப்புராதிகள். மலைதல் - சண்டையிடுதல். மலை - கைலைமலை. அடர்த்து - நெருக்கி. இதனாற் கருணை அறிவிக்கப்பெறுகின்றது.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

நாட வல்ல மலரான் மாலுமாய்த்
தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர்
ஆட வல்ல வடிக ளவர்போலும்
பாட லாடல் பயிலும் பரமரே.

பொழிப்புரை :

பாடல் ஆடல் ஆகிய இரண்டிலும் வல்லவராய் அவற்றைப் பழகும் மேலான இறைவர், எதனையும் ஆராய்ந்தறிதலில் வல்ல நான்முகனும், திருமாலும் தேடி அறிய இயலாதவராய் ஓங்கி நின்றவர். அப்பெருமான் திருப்புன்கூரில் உறையும் ஆடல்வல்ல அடிகள் ஆவார்.

குறிப்புரை :

ஆடவல்ல அடிகளே பாடலாடல் பயிலும் பரமர் போலும் என்கின்றது. நாடவல்ல மலரான் - பிரமனுக்கு நான்கு முகங்களாதலின் ஏனைய தேவர்களைப்போலத் திரும்பித் திரும்பித் தேட வேண்டிய அவசியம் இல்லை என்று நகைக்சுவை தோன்றக்கூறியது. அதிலும் துணையாகத் தன் தந்தையையுஞ்சேர்த்துக் கொண்டு தேடினான் என அச்சுவையை மிகுத்தவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

குண்டு முற்றிக் கூறை யின்றியே
பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே.

பொழிப்புரை :

கீழாந்தன்மை மிகுந்து ஆடையின்றி வீதிகளில் வந்து பிச்சை கேட்டுப் பெற்று, அவ்வுணவை விழுங்கி வாழும் மயக்க அறிவினராகிய சமணர்கள் கூறும் சொற்களைக் கேளாதீர். தேனுண்ண வந்த வண்டுகள் பாடுமாறு மலர்கள் நிறைந்து விளங்கும் திருப்புன்கூர் சென்று அங்கு விளங்கும் கபாலியாகிய சிவபிரானின் வடிவத்தைக் கண்டு தொழுவீர்களாக.

குறிப்புரை :

மயக்க அறிவினராகிய புறச்சமயத்தார் புன்சொல் கேளாதே `கபாலியைக் கைதொழுமின்` என்கின்றது. குண்டு அறியாமை, இழிந்த தன்மை கூறையின்றி என்றது திகம்பர சமணரை. பிண்டமுண்ணுதல் - சுவைத்து மென்றுதின்னாது விழுங்குதல். பிராந்தர் - மயக்க அறிவினர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

மாட மல்கு மதில்சூழ் காழிமன்
சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
நாட வல்ல ஞான சம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே.

பொழிப்புரை :

மாடவீடுகளால் நிறையப் பெற்றதும் மதில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப்பதிக்குத் தலைவனாய், எதையும் நாடி ஆராய்தலில் வல்ல ஞானசம்பந்தன், பெரியோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர் இறைவர்மீது பாடிய பாடல்கள் பத்தையும் பரவி வாழ்வீர்களாக.

குறிப்புரை :

இது இப்பதிகத்தை ஓதின் வாழலாம் என்கின்றது. சேடர்க்கு முன்னுரைத்தாங்கு உரைக்க. பத்தும் பரவி -பத்தாலும் தோத்திரித்து.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமா னொளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சே, முறையான சிற்றின்பத்தைத் தன் முனைப்போடு `யான் துய்ப்பேன்` என்னாது,`அருளே துணையாக நுகர்வேன்` என்று கூற, இறைவர் அதனை ஏற்பர். அத்தகைய பெருமானார், ஒளி பொருந்திய திருவெண்ணீறு அணிந்த மேனியராய்த் தலைவராய் விளங்கும், திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.

குறிப்புரை :

நெஞ்சே! நெறிகொள் சிற்றின்பம் துப்பன் என்னாது அருளே துணையாகச் செப்ப ஒப்பர் ஒப்பர் என முடிவுசெய்க. நெறிகொள் சிற்றின்பம் - இல்லறத்தானுக்கு ஓதியமுறைப்படி நுகரப்படும் சிற்றின்பம். துப்பன் - நுகர்வோன். பொறிகளான் நுகரப்படும் சிற்றின்பத்தை நுகருங்கால் தன்முனைப்பின்றி அவனருளே துணையாக நுகர்கின்றேன் என்று புத்திபண்ணிச் சொல்ல அவர் நம்சிறுமைகண்டு இகழாது ஒப்புவர் ஒப்புவர் என்றவாறு. `ஒளிவெண்ணீற்று அப்பர்` என்பது தொலையாச் செல்வர் என்னும் இறைவன் திருநாமத்தை நினைவூட்டியது. தொலையாச் செல்வம் - விபூதி (திருநீறு). ஒப்பர் ஒப்பர் என்பதற்குத் தமக்குத்தாமே ஒப்பு ஆனவர் என்றும் உரைகாண்பர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

பாலு நெய்யுந் தயிரும் பயின்றாடித்
தோலு நூலுந் துதைந்த வரைமார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.

பொழிப்புரை :

பாலையும் நெய்யையும் தயிரையும் விரும்பியாடிப் புலித்தோலும் முப்புரிநூலும் பொருந்திய மலை போன்று விரிந்த மார்பினராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய, மயக்கும் சோலைகளால் சூழப்பெற்ற, இளமயில்கள் ஆரவாரிக்கும் திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

குறிப்புரை :

பாலும் நெய்யும் தயிரும் ஆடி என்றது பஞ்சகவ்யங்களில் தனித்தனியாக இறைவனுக்கு அபிஷேகிக்கத்தக்கன இம் மூன்றுமே எனக் குறித்தபடி. தோல் - புலித்தோல், மான் தோலுமாம். மாலும் - மயக்கும். ஆலும் - ஒலிக்கும்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
தைய லாளொர் பாக மாயவெம்
ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே.

பொழிப்புரை :

சிவந்த திருமேனியரும், செம்மை நிறமுடைய சடைமுடியினரும், விடையூர்ந்து வருபவரும், கையில் பற்றிய சூலத்தினரும், வீரக்கழல் அணிந்தவரும், இடுகாட்டில் விளங்குபவரும், உமையம்மையைத் தன்மேனியில் ஒரு கூறாகக் கொண்டவருமான எம் தலைவராய சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

குறிப்புரை :

வேல் - சூலம். கரிகாடர் - சுடுகாட்டில் நடிப்பவர். ஐயர் - தலைவர். கழலர் - வீரக்கழலையுடையவர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர்
துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே.

பொழிப்புரை :

நோய்கட்கு இடமான இவ்வுடலுடன் பிறத்தல் ஒழியுமாறு இப்பிறப்பைப் பயன்படுத்த எண்ணும் அறிவுடையவர்களே, துணித்தலைச் செய்வதும், போர் செய்தற்கு உரியதுமான விளங்கும் மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவரும், நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமான, சிவபெருமான் மேவிய நீண்ட பொழில்கள் சூழ்ந்த அழகிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோமாக.

குறிப்புரை :

பிணிகொள் ஆக்கை - நோயுற்ற உடல். பிறப்புளீர் - நோயுற்ற இவ்வுடல் ஒழிக்க எடுத்த இப்பிறவியைப் பயன்படுத்தும் ஞானிகளே!

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

பிறையு மரவும் புனலுஞ் சடைவைத்து
மறையு மோதி மயான மிடமாக
உறையுஞ் செல்வ முடையார் காவிரி
அறையுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.

பொழிப்புரை :

இளம் பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடையில் அணிந்து, நான்மறைகளை ஓதிக் கொண்டு, சுடுகாட்டைத் தமது இடமாகக் கொண்டு உறையும், வீடு பேறாகிய செல்வத்தை உடைய இறைவரின் காவிரி நீர் ஒலி செய்யும் திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்.

குறிப்புரை :

அணியல்லாத பாம்பு மதி இவற்றைப் பூண்டு, கரிகாடு இடமாகக்கொண்டும் செல்வமுடையார் என்றது சுவைபடக் கூறியது. அறையும் - மோதும்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே.

பொழிப்புரை :

உடுக்கைகள் பலவற்றோடு முழவங்கள் ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப்பொடி பூசி, புறங்காடாகிய சுடுகாட்டை அரங்காகக் கொண்டு, பொருத்தமான தாளச்சதிகளோடு பாடல்கள் பாடி ஆடும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம்.

குறிப்புரை :

துடி - உடுக்கை. புறங்காடு - சுடுகாடு. அரங்கு - கூத்து மேடை. பாணி - தாளம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடி யாடிப் பரவு வாருள்ளத்
தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே.

பொழிப்புரை :

காலன் அழியுமாறு அவனைக் காலால் உதைத்துத் தலைமாலைகளை அணிந்து, பொருத்தம் உடையவராய் வருபவரும், பாடி ஆடிப் பரவுவார் உள்ளங்களில் மகிழ்வோடு நடனம் புரிபவருமான சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

குறிப்புரை :

காலன் மாளச் சாடி என மாறுக. சுவண்டாய் - பொருத்தமாய், பரவுவார் உள்ளத்து ஆடி - தியானிப்பவர் உள்ளத்து ஆடுபவன்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

பெண்ணோர் பாக முடையார் பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
எண்ணா தரக்க னெடுக்க வூன்றிய
அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே.

பொழிப்புரை :

ஒருபாகமாக உமையம்மையை உடையவரும், பிறையணிந்த சென்னியரும், தமது திருமேனியில் ஒருபாகமாக விளங்கும் நெற்றி விழியை உடையவரும், இராவணன் பின்விளையும் தீமையை எண்ணாது கயிலை மலையைப் பெயர்க்க, அவனது முனைப்பை அடக்கக் கால்விரலை ஊன்றிய தலைமைத் தன்மை உடையவருமாகிய சிவபிரானது திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

குறிப்புரை :

பிறைச்சென்னி - பிறையையணிந்த சிரம். எண்ணாது - பின்வருந்தீமையை ஆராயாமல். அண்ணல் - பெருமையிற் சிறந்தவன்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

தொழுவா ரிருவர் துயர நீங்கவே
அழலா யோங்கி யருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியான் மிக்கவெம்
எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே.

பொழிப்புரை :

தம் செருக்கடங்கித் தம்மைத் தொழுத திருமால் பிரமன் ஆகிய இருவர்க்கும், அழலுருவாய் ஓங்கி நின்று அருள்களைச் செய்தவன், விரும்பி உறையும் விழாக்கள் நிகழும் வீதிகளில் வேதவிதியோடு வாழும் மக்களை உடைய சோற்றுத்துறையைச் சென்றடைவோம்.

குறிப்புரை :

தொழுவார் இருவர் - தம் செருக்கு அடங்கித்தொழுத அயனும் திருமாலும். மறுகு - வீதி. விதி - வேதவிதி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

கோது சாற்றித் திரிவா ரமண்குண்டர்
ஓது மோத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே.

பொழிப்புரை :

நெஞ்சே! குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவராகிய சமண் குண்டர்கள் ஓதுகின்ற வேதத்தை அறிய முயலாது, சிவாகம நெறி நின்று, நினைப்பவர் கருதும் திருவுருவோடு வெளிப்பட்டருளும் முதல்வனாகிய சிவபிரானது சோற்றுத்துறையை நாம் சென்றடைவோம்.

குறிப்புரை :

கோது - குற்றம். ஓதும் ஓத்தை - ஓதுகின்ற பிடகவேதத்தை. நீதி நின்று - சிவாகம நெறிக்கண் நின்று. நினைவார் வேடம் ஆம் ஆதி - தியானிப்பவர்கள் தியானித்த உருவிற்சென்று அருளும் முதல்வன்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்
சிந்தை செய்ம்மி னடியா ராயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே.

பொழிப்புரை :

அடியவர்களாக உள்ளவர்களே! அழகு தண்மை ஆகியவற்றோடு விளங்கும் திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளிய எம் முதல்வனை மனத்தால் தியானியுங்கள். சந்த இசையால் ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தைத் தமக்கு வந்தவாறு பாடி வழிபடுதலே அவ்விறைவற்கு நாம் செய்யும் வழிபாடாகும்.

குறிப்புரை :

அடியாராகவுள்ளீர்! சோற்றுத்துறை ஆதியைத் தியானி யுங்கள்; அதற்குரிய வழிபாடாவது ஞானசம்பந்தன் திருவுளத்து வந்தவாறு அமைந்த இப்பதிகத்தைப் பாடிப்புனைதலே என்பது. வந்தவாறே என்றது, இவை இறைவன் திருவுள்ளத்து நின்று உணர்த்த எழுந்த உரைகள் என்பதை விளக்கியது.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
சீரு லாவு மறையோர் நறையூரில்
சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! ஊர்கள்தோறும் உலாவுவதால் கிடைக்கும் உணவைப் பெற்று, உலகம் பரவக் கங்கை நீரைத் தன் திருமுடியில் ஏற்று, அக்கங்கை நீர் உலாவும் மேல்நோக்கின சிவந்த சடைமுடியினை உடையதலைமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளிய, சீருடைய மறையவர் வாழும் நகரான நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்தைச் சென்றடைவாயாக.

குறிப்புரை :

இப்பதிகம் நெஞ்சை நோக்கிச் சித்தீச்சரம் சென்றடை; சிந்தி; தெளி; என்று அறிவுறுத்தியது. ஊர் உலாவு பலிகொண்டு - ஊரின்கண் உலாவுதலைச் செய்து பிச்சையேற்று. உலாவு என்பது முதனிலைத் தொழிற்பெயர். தலப்பெயர் நறையூர்; கோயிற்பெயர் சித்தீச்சரம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி
ஓடு கங்கை யொளிர்புன் சடைதாழ
வீடு மாக மறையோர் நறையூரில்
நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! காட்டின்கண் முனிவர் குடில்களிலும், நாட்டின்கண் இல்லறத்தார் வீடுகளிலும் விரும்பிப் பலியேற்று, ஓடி வரும் கங்கை தங்கிய ஒளிவீசும் சிவந்தசடைகள் தாழ, தம் உடல்களை விடுத்து, முத்திப்பேற்றை அடைய விரும்பும் அந்தணர் வாழும் நறையூரில், புகழால் நீடிய சித்தீச்சரத்தில் விளங்கும் பெருமானை நினைவாயாக.

குறிப்புரை :

காடும் நாடும் கலக்க - காட்டிடமும், நாடும் தம்முட் கலக்க. ஆகம் வீடும் மறையோர் எனக்கூட்டி வினைவயத்தான் வந்த உடலைவிட்டு முத்தியெய்தும் அந்தணர் எனப்பொருள் கொள்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

கல்வி யாளர் கனகம் மழன்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
மல்கு திங்கட் பொழில்சூழ் நறையூரில்
செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சமே! பொன்னையும் தீயையும் ஒத்த திருமேனியராய், கங்கை தங்கும் முறுக்கேறிய சிவந்த சடையினை உடையவராய் விளங்கும் சிவபிரானது ஊர், கல்வியாளர் நிறைந்ததாய், திங்கள் தங்கும் பொழில்கள் சூழ்ந்ததாய் விளங்கும் நறையூராகும். அவ்வூரில் செல்வர் வணங்கும் சித்தீச்சரத்தைச் சென்றடைவாயாக.

குறிப்புரை :

கனகம் அழன்மேனி - பொன்னையும் தீயையும் ஒத்த திருமேனி. கல்வியாளர் மல்கும் நறையூர் என இயைக்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
ஆட வல்ல வடிக ளிடமாகும்
பாடல் வண்டு பயிலு நறையூரில்
சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! மேல்நோக்கிய நீண்டு வளரவல்ல செஞ் சடைகள் தாழுமாறு ஆடுதலில் வல்ல அடிகளாகிய சிவபிரானது இடம் ஆகிய பாடுதலில் வல்ல வண்டுகள் நிறைந்து வாழும் சோலைவளம் உடைய நறையூரில் பெரியோர் வணங்கித் துதிக்கும் சித்தீச்சரத்தைத் தெளிவாயாக.

குறிப்புரை :

நீடவல்ல - மிகமேலும் வளரவல்ல. சேடர் - பெருமையுடையவர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

உம்ப ராலு முலகின் னவராலும்
தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
நண்பு லாவு மறையோர் நறையூரில்
செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! தேவர்களாலும், உலகிடை வாழும் மக்களாலும் தனது பெருமைகளை அளவிட்டுக் கூறுவதற்கு அரியவனாகிய சிவபிரானது ஊராய், நட்புத் தன்மையால் மேம்பட்ட மறையவர்கள் வாழும் திருநறையூரில் சிவபிரான் எழுந்தருளிய செம்பொன் மயமான சித்தீச்சரத்தையே தெளிவாயாக.

குறிப்புரை :

உம்பர் - தேவர். உலகின்னவர் - மக்கள். உம்பர்கள் மலத்தான் மறைப்புண்டு இன்பத்துள் மயங்கி இறைவனை மறந்து, தம் பெருமையொன்றையே நினைத்திருப்பவராதலின் அவர்களால் இவன் பெருமை அளக்கமுடியாதாயிற்று; மக்கள் மலத்தான் கட்டுண்டு ஆன்மபோதமிக்கிருத்தலின் மக்களால் அளக்கமுடியாதாயிற்று.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

கூரு லாவு படையான் விடையேறி
போரு லாவு மழுவா னனலாடி
பேரு லாவு பெருமா னறையூரில்
சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே.

பொழிப்புரை :

கூர்மைமிக்க சூலப்படையை உடையவனாய், விடை மீது ஏறிப் போருக்குப் பயன்படும் மழுவாயுதத்தை ஏந்தி, அனல்மிசை நின்றாடி, ஏழுலகிலும் தன் புகழ் விளங்க நிற்கும் சிவ பெருமான் திருநறையூரில் விளங்கும் சித்தீச்சரமே நாம் வழிபடற்குரிய இடமாகும்.

குறிப்புரை :

கூர் உலாவு படை - கூர்மை மிக்க சூலப்படை. பேர் -புகழ். நறையூரில் சேரும் இடம் சித்தீச்சரம் ஆம் எனக்கூட்டுக.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

அன்றி நின்ற வவுணர் புரமெய்த
வென்றி வில்லி விமலன் விரும்புமூர்
மன்றில் வாச மணமார் நறையூரில்
சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! தன்னோடு வேறுபட்டு நிற்கும் அவுணர் களின் முப்புரங்களையும் எய்தழித்த வெற்றியோடு கூடிய வில்லை உடைய குற்றமற்றவன் விரும்பும் ஊர் ஆகிய, மணம் நிலைபெற்று வீசும் பொது மன்றங்களை உடைய திருநறையூருக்குச் சென்று, அங்குப் பெருமான் எழுந்தருளிய சித்தீச்சரத்தைத் தெளிந்து வழிபடுக.

குறிப்புரை :

அன்றி - வேறுபட்டு. மன்றில் - பொதுச்சபைகளில்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

அரக்க னாண்மை யழிய வரைதன்னால்
நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரில்
திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! இராவணனது வலிமை கெடுமாறு கயிலை மலையால் ஊன்றி அடர்த்த கால் விரலை உடைய சிவபிரான் விரும்புவது, பரவிய புகழாளர் வாழ்வது ஆகிய திருநறையூரில் விளங்கும் சிவபிரானது சித்தீச்சரத்தைத் தெளிவாயாக.

குறிப்புரை :

பரக்குங் கீர்த்தி - மேலும் மேலும் பரவும் புகழ். திரு -சிவஞானம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

ஆழி யானு மலரி னுறைவானும்
ஊழி நாடி யுணரார் திரிந்துமேல்
சூழு நேட வெரியா மொருவன்சீர்
நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! சக்கராயுதத்தை உடைய திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், உணராதவனாய், ஓர் ஊழிக்காலம் அளவும் திரிந்து சுற்றும் முற்றும் மேலும் கீழுமாய்த் தேட எரியுருவாய் ஓங்கி நின்ற சிவபெருமானது சிறப்புமிக்க இடமாகிய திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நினைவாய்.

குறிப்புரை :

ஊழி நாடி - ஓரூழிக்காலம் தேடி. என்றது நீண்ட காலம் தேடியும் என்று அவர்கள் முயற்சியின் பயனற்ற தன்மையை விளக்கியவாறு. சூழும் - சுற்றிலும். நேட - தேட.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

மெய்யின் மாசர் விரிநுண் டுகிலிலார்
கையி லுண்டு கழறு முரைகொள்ளேல்
உய்ய வேண்டி லிறைவன் னறையூரில்
செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே.

பொழிப்புரை :

உடம்பின்கண் அழுக்குடையவர்களும், விரித்துக் கட்டும் நுண்ணிய ஆடைகளை அணியாதவர்களும், கைகளில் பலி ஏற்று உண்டு திரிபவர்களுமாகிய சமணர்கள் இடித்துக் கூறும் உரைகளைக் கொள்ளாதீர். நீர் இப்பிறப்பில் உய்தி பெற விரும்பினால், சிவபிரான் எழுந்தருளிய திருநறையூரில் செய்தமைத்த சித்தீச்சரத்தைச் சென்று வழிபடுமின். அதுவே சிறந்த தவமாம்.

குறிப்புரை :

மாசர் - அழுக்குடையவர். துகிலிலார் - திகம்பரர். சித்தீச்சரமே தவமாம் செய்யும் எனக்கூட்டுக.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

மெய்த்து லாவு மறையோர் நறையூரில்
சித்தன் சித்தீச் சரத்தை யுயர்காழி
அத்தன் பாத மணிஞான சம்பந்தன்
பத்தும் பாடப் பறையும் பாவமே.

பொழிப்புரை :

வாய்மையே பேசி வாழும் மறையவர் வாழும் திருநறையூரின்கண் சித்தன் என்ற திருநாமத்தோடு விளங்கும் சிவபெருமானது சித்தீச்சரத்தை, மேலான காழி மாநகரில் விளங்கும் சிவபிரானது திருப்பாதங்களைத் தனது திருமுடிக்கு அணியாகக் கொண்ட ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடிப்பரவப் பாவங்கள் நீங்கும்.

குறிப்புரை :

மெய்த்து - உண்மையான வாழ்வுடன். உண்மை கூறி என்றுமாம். சித்தன் இத்தலத்து இறைவன் திருநாமம். காழியத்தன் பாதம் அணி ஞானசம்பந்தன் -சீகாழியில் தோணியப்பரது திருவடி ஞானம் பெற்ற சம்பந்தன்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயருக்கு வயது பதினாறு என விதித்த விதியாகவும், அதன்காரணமாக வந்த மரணமாய், அவர் இறை வழிபாடு செய்ததன் காரணமாகத்தானே விதியின் பயனாய் வெளிப்பட்டுச் சினந்துவந்த கூற்றுவனை உதைத்தருளிய சிவபிரான் எழுந்தருளிய தலம், தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும், தேன்கூடுகள் நிறைந்த பொழில்களும் சூழ்ந்த புகலிநகராகும்.

குறிப்புரை :

இது கூற்றுதைத்தார் பதியாவது புகலிநகர் என்கின்றது. விதியாய் - மார்க்கண்டற்கு வயது பதினாறு என்ற விதியாய். விளைவாய் - அவ்விதியின் விளைவாகிய மரணமாய். விளைவின் பயன் ஆகி - மரணத்தின் பயனாகித் தான் வெளிப்பட்டு. கொதியா - சினந்து. கொதியாவருகூற்றை உதைத்தவர் என்றது, இங்ஙனம் விதியென்னும் நியதியைத் துணைபற்றி வந்த கூற்றுவன் அந்நியதிக்கும் காரணம் இறைவன் என்பதை உணர்ந்துகொள்ளவைத்த பெருங்கருணை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

ஒன்னார் புரமூன் றுமெரித் தவொருவன்
மின்னா ரிடையா ளொடுங்கூ டியவேடந்
தன்னா லுறைவா வதுதண் கடல்சூழ்ந்த
பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே.

பொழிப்புரை :

பகைவராய் மாறிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த சிவபிரான் மின்னல் போன்ற இடையினை உடைய உமையம்மையோடு கூடிய திருவுருவத்தோடு எழுந்தருளிய இடம், குளிர்ந்த கடல் ஒருபுறம் சூழ, பொன் போன்ற நெல்மணிகள் நிறைந்த வயல்களை உடைய புகலிநகராகும்.

குறிப்புரை :

இது திரிபுரம் எரித்த பெருமான் தேவியோடு எழுந்தருளியிருக்கும் இடம் புகலி என்கின்றது. ஒன்னார் - பகைவர். வேடந்தன்னால் - வேடத்தோடு. உறைவாவது - உறையும் இடமாவது புகலிநகர் என்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

வலியின் மதிசெஞ் சடைவைத் தமணாளன்
புலியின் னதள்கொண் டரையார்த் தபுனிதன்
மலியும் பதிமா மறையோர் நிறைந்தீண்டிப்
பொலியும் புனற்பூம் புகலிந் நகர்தானே.

பொழிப்புரை :

கலைகளாகிய வலிமை குறைந்த பிறை மதியைச் செஞ்சடைமீது வைத்துள்ள மணாளனும், புலியின் தோலை இடையிற் கட்டிய புனிதனும் ஆகிய சிவபெருமான் விரும்பும் பதி மேம்பட்ட வேதியர் நிறைந்து செறிந்து பொலியும் நீர்வளம் சான்ற அழகிய புகலிநகராகும்.

குறிப்புரை :

இது மதிசூடிய மணாளனாகிய, புலித்தோலரையார்த்த பெருமான் பதி புகலி என்கின்றது. வலியில் மதி - தேய்ந்து வலி குன்றிய பிறைமதி. தளர்ந்தாரைத் தாங்குதல் இறைவனியல்பு என்பது உணர்த்தியவாறு. அதள் - தோல்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

கயலார் தடங்கண் ணியொடும் மெருதேறி
அயலார் கடையிற் பலிகொண் டவழகன்
இயலா லுறையும் மிடமெண் டிசையோர்க்கும்
புயலார் கடற்பூம் புகலிந் நகர்தானே.

பொழிப்புரை :

கயல்மீன் போன்ற பெரிய கண்களை உடைய உமையம்மையோடும் விடைமீது ஏறி, அயலார் இல்லங்களில் பலி கொண்டருளும் அழகனாகிய சிவபிரான் எண்திசையிலுள்ளாரும் செவிசாய்த்து இடி ஓசையைக் கேட்கும் கார்மேகங்கள் தங்கும் கடலை அடுத்துள்ள அழகிய புகலிநகராகும்.

குறிப்புரை :

இடபவாகனத்தில் அம்மையப்பராய், அயலார் மனை வாயிலில் பலிகொள்ளும் இறைவன்பதி புகலி என்கின்றது. கயலார் தடங்கண்ணி - மீனாட்சி. அயலார் - கன்மப்பிரமவாதிகளான தாருகாவனத்து ரிஷிகள். கடை - மனைவாயில். இயலால் - அழகோடு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

காதார் கனபொற் குழைதோ டதிலங்கத்
தாதார் மலர்தண் சடையே றமுடித்து
நாதா னுறையும் மிடமா வதுநாளும்
போதார் பொழிற்பூம் புகலிந் நகர்தானே.

பொழிப்புரை :

காதுகளில் அணிந்துள்ள கனவிய பொன்னால் இயன்ற குழை, தோடு ஆகியன இலங்க மகரந்தம் மருவிய மலர்களைத் தண்ணிய சடையின்கண் பொருந்தச்சூடி, எல்லா உயிர்கட்கும் நாதனாக விளங்கும் சிவபிரான் உறையுமிடம் நாள்தோறும் புதிய பூக்கள் நிறைந்து விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலிநகராகும்.

குறிப்புரை :

குழையுந் தோடுங்காதிற் கலந்திலங்கச் சடையை ஏறமுடித்தநாதன் உறையும் இடம் புகலி என்கின்றது. கன பொன்குழை - பொன்னாலாகிய கனவியகுழை. தாதார் மலர் - மகரந்தம் பொருந்திய மலர். ஏறமுடித்து - உயரத் தூக்கிக் கட்டி. நாதன் என்ற சொல் எதுகைநோக்கி நாதான் என நீண்டது. தண்சடை என்றமையால் குழையணிந்த பாகத்திற்கேற்பக் கங்கையணிந்து தண்ணிய சடையான செம்பகுதிச் சடையையுணர்த்தியது.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

வலமார் படைமான் மழுவேந் தியமைந்தன்
கலமார் கடனஞ் சமுதுண் டகருத்தன்
குலமார் பதிகொன் றைகள்பொன் சொரியத்தேன்
புலமார் வயற்பூம் புகலிந் நகர்தானே.

பொழிப்புரை :

வெற்றி பொருந்திய சூலப்படை, மான், மழு, ஆகியவற்றை ஏந்திய வலிமையுடையோனும், மரக்கலங்கள் உலாவும் கடலிடைத் தோன்றிய நஞ்சினை அமுதாக உண்டவனும் ஆகிய சிவபிரான், அடியார் குழாத்தோடு உறையும் பதி, கொன்றை மலர்கள் பொன் போன்ற இதழ்களையும் மகரந்தங்களையும் சொரிய, தேன் நிலத்தில் பாயும் வயல்களை உடைய புகலி நகராகும்.

குறிப்புரை :

இது மான் மழுவேந்திய மைந்தன், கடல் நஞ்சமுண்ட தலைவன் பதி புகலி என்கின்றது. வலம் ஆர்படை - வெற்றி பொருந்திய சூலப்படை. கலம் - மரக்கலம். கருத்தன் - தலைவன். குலமார் பதி - மக்கள் கூட்டம் செறிந்த நகரம். புலம் - அறிவு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

கறுத்தான் கனலான் மதின்மூன் றையும்வேவச்
செறுத்தான் றிகழுங் கடனஞ் சமுதாக
அறுத்தா னயன்றன் சிரமைந் திலுமொன்றைப்
பொறுத்தா னிடம்பூம் புகலிந் நகர்தானே.

பொழிப்புரை :

மும்மதில்களும் கனலால் வெந்தழியுமாறு சினந்த வனும், கடலிடை விளங்கித் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு கண்டத்தில் தரித்தவனும், பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றை அறுத்து அதனைக் கையில் தாங்கிய சிவபிரான் எழுந்தருளிய இடம் அழகிய புகலி நகராகும்.

குறிப்புரை :

புரம் எரித்து, நஞ்சுண்டு, பிரமன் சிரங்கொய்து வீரம் விளக்கிய தலைவன் பதி புகலி என்கின்றது. இப்பாட்டு அடி தோறும் பொருள்முற்றி வந்துள்ளது. கறுத்தான் - சினந்தவன். செறுத்தான் - கண்டத்தில் அடக்கியவன். வேவக்கறுத்தான், அமுதாகச் செறுத்தான். ஒன்றையறுத்தான், அதைப் பொறுத்தான் இடம் புகலி என முடிவு செய்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

தொழிலான் மிகுதொண் டர்கள்தோத் திரஞ்சொல்ல
எழிலார் வரையா லன்றரக் கனைச்செற்ற
கழலா னுறையும் மிடங்கண் டல்கண்மிண்டிப்
பொழிலான் மலிபூம் புகலிந் நகர்தானே.

பொழிப்புரை :

தாம் செய்யும் பணிகளால் மேம்பட்ட தொண்டர்கள் தோத்திரம் சொல்லிப்போற்ற, அழகிய கயிலைமலையால் முன்னொரு காலத்தில் இராவணனைச் செற்ற திருவடிகளை உடைய சிவ பிரான் உறையும் இடம், தாழைமரங்கள் செறிந்து விளங்கும் பொழில்கள் சூழ்ந்த புகலி நகராகும்.

குறிப்புரை :

தொண்டர் தோத்திரஞ்சொல்ல இராவணனைச் செற்ற திருவடியையுடைய சிவன்பதி புகலி என்கிறது. தொழிலால் மிகு தொண்டர்கள் - சரியை, கிரியையாதிகளால் மிக்க அடியார்கள். எழில் - எழுச்சி; அழகுமாம். கண்டல் - தாழை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

மாண்டார் சுடலைப் பொடிபூ சிமயானத்
தீண்டா நடமா டியவேந் தல்தன்மேனி
நீண்டா னிருவர்க் கெரியா யரவாரம்
பூண்டா னகர்பூம் புகலிந் நகர்தானே.

பொழிப்புரை :

இறந்தவர்களை எரிக்கும் சுடலையில் விளையும் சாம்பலை உடலிற் பூசிக் கொண்டு, அம்மயானத்திலேயே தங்கி நடனமாடும் தலைவரும், திருமால் பிரமர் பொருட்டுத்தம் திருமேனியை அழலுருவாக்கி ஓங்கி நின்றவரும் பாம்பை மாலையாகத் தரித்தவருமான சிவபிரானது நகர் அழகிய புகலிப் பதியாகும்.

குறிப்புரை :

சுடலைப் பொடி பூசி, மயானத்தாடி, மாலயனுக்காக அக்கினி மலையாய் நீண்டு, அரவையாரமாகப் பூண்டு விளங்கும் இறைவன் பதி புகலி என்கின்றது. மாண்டார் - இறந்தவர். பொடிபூசி மயானத்தாடி என்றது எல்லாரும் அந்தம் எய்த, தாம் அந்தம் இல்லாதிருப்பவன் என்பதை விளக்கியது. ஏந்தல் - தலைவன். தன்மேனி இருவர்க்கு எரியா நீண்டான் எனக் கூட்டுக. அரவு ஆரம் பூண்டான் - பாம்பை மார்பில் மாலையாக அணிந்தவன்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

உடையார் துகில்போர்த் துழல்வார் சமண்கையர்
அடையா தனசொல் லுவரா தர்களோத்தைக்
கிடையா தவன்றன் னகர்நன் மலிபூகம்
புடையார் தருபூம் புகலிந் நகர்தானே.

பொழிப்புரை :

கீழ் உடையோடு மெல்லிய ஆடையைப் போர்த்துத் திரியும் புத்தரும், சமணர்களும் ஆகிய கீழ்மக்கள் பொருந்தாதவற்றைக் கூறுவார்கள். அக்கீழோரின் ஓத்திற்கு அகப்படாதவன் சிவபிரான். அப்பெருமானது நன்னகர், நன்கு செறிந்த பாக்கு மரச்சோலைகள் சூழ்ந்த புகலிநகராகும்.

குறிப்புரை :

புறச்சமயிகளாகிய சமணர் புத்தர் வேதங்கட்குக் கிடையாத சிவனார்பதி புகலி என்கின்றது. உடையார் துகில் - உடுக்கத்தக்க துகில். போர்த்து - போர்வையாகப் போர்த்து. கையர் - கீழ்மக்கள். அடையாதன சொல்லுவர் - பொருந்தாதவற்றைச் சொல்லுவார்கள். ஆதர்கள் - கீழ்மக்கள். ஓத்து - வேதத்தை; என்றது பிடகம் முதலியவற்றிற்கு. வேற்றுமை மயக்கம். கிடையாதவன் - அகப்படாதவன். பூகம் - பாக்கு மரம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

இரைக்கும் புனல்செஞ் சடைவைத் தவெம்மான்றன்
புரைக்கும் பொழிற்பூம் புகலிந் நகர்தன்மேல்
உரைக்குந் தமிழ்ஞான சம்பந் தனொண்மாலை
வரைக்குந் தொழில்வல் லவர்நல் லவர்தாமே.

பொழிப்புரை :

ஆரவாரிக்கும் கங்கை நீரைத் தமது சிவந்த சடைமீது வைத்த எம் தலைவனாகிய சிவபிரானின், உயர்ந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய புகலிப் பதியைக் குறித்துத் தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த அழகிய இப்பதிகமாலையைத் தமதாக்கி ஓதும் தொழில் வல்லவர் நல்லவர் ஆவர்.

குறிப்புரை :

இம்மாலை பத்தும் தனக்கே உரியதாக்கவல்லவர் நல்லவராவர் என்கின்றது. புரைக்கும் - உயர்ந்திருக்கும். வரைக்கும் தொழில் - தம்மளவினதாக்கிக் கொள்ளுந்தொழில். எழுதுவிக்கும் தொழில் என்றுமாம்; அளவுபடுத்தியுரைக்கும் தொழில் எனவுமாம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

விழுநீர் மழுவாட் படையண் ணல்விளங்கும்
கழுநீர் குவளைம் மலரக் கயல்பாயும்
கொழுநீர் வயல்சூழ்ந் தகுரங் கணின்முட்டம்
தொழுநீர் மையர்தீ துறுதுன் பமிலரே.

பொழிப்புரை :

பெருமைக்குரிய கங்கையை முடிமிசை அணிந்த வரும், மழுவாட்படையைக் கையில் ஏந்தியவரும் ஆகிய சிவபிரான் உறைவது கழுநீர், குவளை ஆகியன மலர்ந்து, கயல்மீன்கள் துள்ளுமாறு விளங்கும் நீர் நிலைகளை உடையதும், செழுமையான வயல்களால் சூழப்பட்டதுமாகிய திருக்குரங்கணில்முட்டம் ஆகும். இத்தலத்தைத் தொழுபவர் தீமையால் வரும் துன்பம் இலராவர்.

குறிப்புரை :

கங்கையையணிந்தவரும், மழுவேந்தியவருமாகிய இறைவன் விளங்கும் இத்தலத்தைத் தொழுபவர் துன்பமிலர் என்கின்றது. விழுநீர் - பெருமையையுடையநீர், கங்கை. கொழு நீர் - வளமான நீர். தீதுறு துன்பம் - தீமையான்வரும் துன்பம்; பாவகன்மத்தான்வரும் துன்பம் என்பதாம். தீதுகழுவி ஆட்கொள்ளக் கங்கையையும், துன்பந்துடைக்க மழுப்படையையும் உடைய பெருமானாதலின் துன்பம் இலர் என்றார்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

விடைசேர் கொடியண் ணல்விளங் குயர்மாடக்
கடைசேர் கருமென் குளத்தோங் கியகாட்டில்
குடையார் புனன்மல் குகுரங் கணின்முட்டம்
உடையா னெனையா ளுடையெந் தைபிரானே.

பொழிப்புரை :

உயர்ந்து விளங்கும் மாடங்களின் கடை வாயிலைச் சேர்ந்துள்ள கரிய மெல்லிய காட்டிடையே அமைந்த குடைந்து ஆடுதற்குரிய நீர் நிலைகள் நிறைந்த குரங்கணில்முட்டத்தை உடையானும் விடைக்கொடி அண்ணலுமாகிய சிவபிரான் என்னை ஆளாக உடைய தலைவன் ஆவான்.

குறிப்புரை :

இது இத்தலமுடைய பெருமானே என்னையாளுடைய பிரான் என்கின்றது. மாடக்கடைசேர் கருமென்குளத்து ஓங்கிய காட்டில் - மாடங்களின் கடைவாயிலைச் சேர்ந்துள்ள கரிய மெல்லிய குளத்தால் சிறந்த கட்டிடங்களிலே. குடையார் புனல் மல்கு - குடைதற்குரிய நீர்நிறைந்த; அணில் முட்டம் என்க. ஆளுடைபிரான் என்பதால் எனக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு, அநாதியேயான ஆண்டான் அடிமைத்தன்மையென அறிவித்தது. எந்தை என்றது ஆதியாயிருந்து, அடித்தும் அணைத்தும் அருள்வழங்கலின். பிரான் என்றது தன்வழிநின்று ஏவல்கொள்ளுந்தலைவனாக இருத்தலின்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

சூலப் படையான் விடையான் சுடுநீற்றான்
காலன் றனையா ருயிர்வவ் வியகாலன்
கோலப் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டத்
தேலங் கமழ்புன் சடையெந் தைபிரானே.

பொழிப்புரை :

அழகிய சோலைகளால் சூழப்பெற்ற குரங்கணில் முட்டத்தில் எழுந்தருளிய மணம்கமழும் சடைமுடியை உடையோனாகிய எந்தை பிரான் சூலப்படையையும் விடை ஊர்தியையும் உடையவன். திருவெண்ணீறு பூசியவன். காலனின் உயிரை வவ்வியதால் கால காலன் எனப்படுபவன்.

குறிப்புரை :

இது இத்தலத்திறைவன் சூலப்படையான் விடையான் நீற்றான் காலகாலன் என அடையாளமும், அருளுந்திறமும் அறிவிக்கின்றது. கோலம் - அழகு. ஏலம் - மயிர்ச்சாந்து.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

வாடா விரிகொன் றைவலத் தொருகாதில்
தோடார் குழையா னலபா லனநோக்கி
கூடா தனசெய் தகுரங் கணின்முட்டம்
ஆடா வருவா ரவரன் புடையாரே.

பொழிப்புரை :

வாடாது விரிந்துள்ள கொன்றை மாலையைச் சூடிய வனும், வலக் காதில் குழையையும் இடக்காதில் தோட்டையும் அணிந்துள்ளவனும், நன்றாக அனைத்துயிர்களையும் காத்தலைத் திருவுளம் கொண்டு தேவர் எவரும் செய்ய முடியாத அரிய செயல்களைச் செய்பவனுமாகிய குரங்கணில்முட்டத்துள் திருநடனம் புரியும் இறைவன் எல்லோரிடத்தும் அன்புடையவன்.

குறிப்புரை :

இத்தலத்து ஆடிவரும் பெருமானாகிய அவரே அடியேன் மாட்டு அன்புடையார் என்கின்றது. வாடாவிரி கொன்றை - வாடாத விரிந்த கொன்றை மலர்மாலையையும். தேவர்கட்கே அணிந்த மாலை வாடாது; அங்ஙனமாகத் தேவதேவனாகிய சிவபெருமான் அணிந்த மாலை வாடாமை இயல்பு ஆதலின் இங்ஙனம் கூறப்பட்டது. வலத்துக்குழையும், ஒர்காதில் தோடும் உடையான் எனக்கொள்க. நல்ல பாலனம் நோக்கி - நன்றாகக் காத்தலைத் திருவுளங்கொண்டு. கூடாதன செய்த - வேறுதேவர் எவரும் செய்யக்கூடாத அரிய காரியங்களைச் செய்த. ஆடாவருவார் - திருநடனம்செய்து வருவார்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

இறையார் வளையா ளையொர்பா கத்தடக்கிக்
கறையார் மிடற்றான் கரிகீ றியகையான்
குறையார் மதிசூ டிகுரங் கணின்முட்டத்
துறைவா னெமையா ளுடையொண் சுடரானே.

பொழிப்புரை :

இறையார் வளையாள் என்னும் திருப்பெயர் கொண்ட உமையம்மையை ஒருபாகத்தே கொண்டவனும், நீலகண்டனும், யானையின் தோலை உரித்துப் போர்த்த கையினனும் ஆகிப் பிறைமதியை முடியில் சூடிக் குரங்கணில் முட்டத்தில் உறையும் இறைவன் எம்மை ஆளாக உடைய ஒண் சுடராவான்.

குறிப்புரை :

சிவனே எம்மையாளுடைய சோதி வடிவன் என்கின்றது. இறையார்வளையாள் இத்தலத்து அம்மையின் திருநாமம். முன்கையில் வளையல் அணிந்தவள் என்பது பொருள். கரி கீறிய கையான் - யானையையுரித்த கையையுடையவன். குறையார்மதி - இனிக்குறையக்கூடாத அளவு குறைந்த பிறைமதி. ஒண்சுடரான் - ஒள்ளிய சோதிவடிவன்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

பலவும் பயனுள் ளனபற் றுமொழிந்தோம்
கலவும் மயில்கா முறுபே டையொடாடிக்
குலவும் பொழில்சூழ்ந் தகுரங் கணின்முட்டம்
நிலவும் பெருமா னடிநித் தல்நினைந்தே.

பொழிப்புரை :

தோகைகளை உடைய ஆண் மயில்கள் தாம் விரும்பும் பெண் மயில்களோடு கூடிக் களித்தாடும் பொழில்களால் சூழப்பட்ட குரங்கணில்முட்டத்தில் உறையும் பெருமான் திருவடிகளை நாள்தோறும் நினைந்து உலகப் பொருள்கள் பலவற்றிலும் இருந்த பற்றொழிந்தோம்.

குறிப்புரை :

இது இறைவனடியை நித்தலும் நினைந்ததன் பயன் உள்ளன பலவற்றிலும் இருந்த பற்றும் ஒழிந்தோம் என்கின்றது. பயன் உள்ளன - பொறிகட்கும் பிறவற்றிற்கும் பயன்படுவனவாகிய தனு கரண புவனபோகங்கள். கலவம் - தோகை. `பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு` என்ற குறட்கருத்து அமைந்திருத்தல் காண்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

மாடார் மலர்க்கொன் றைவளர் சடைவைத்துத்
தோடார் குழைதா னொருகா திலிலங்கக்
கூடார் மதிலெய் துகுரங் கணின்முட்டத்
தாடா ரரவம் மரையார்த் தமர்வானே.

பொழிப்புரை :

சிவபிரான் பொன்னையொத்த கொன்றை மலர் மாலையைச் சடைமீது அணிந்து, காதணியாகிய குழை ஒரு காதில் இலங்கத் திரிபுரத்தை எரித்தழித்து, ஆடும் பாம்பை இடையிலே வரிந்துகட்டிக் குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

கொன்றையணிந்து குழையுந்தோடுங் காதில் தாழ, திரிபுரமெரித்த பெருமான் குரங்கணில் முட்டத்து அமர்வான் என இறைவனுடைய மாலை அணி வீரம் இவற்றைக் குறிப்பிக்கின்றது. மாடு ஆர் மலர்க் கொன்றை - பொன்னை ஒத்த நிறமுடைய கொன்றைமலர். கூடார் - பகைவர். ஆடு ஆர் அரவம் - ஆடுதலைப் பொருந்திய அரவம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

மையார் நிறமே னியரக் கர்தங்கோனை
உய்யா வகையா லடர்த்தின் னருள்செய்த
கொய்யார் மலர்சூ டிகுரங் கணின்முட்டம்
கையாற் றொழுவார் வினைகாண் டலரிதே.

பொழிப்புரை :

கரிய மேனியை உடைய அரக்கர் தலைவனாகிய இராவணனைப் பிழைக்க முடியாதபடி அடர்த்துப் பின் அவனுக்கு இனிய அருளை வழங்கியவனும், அடியவர் கொய்தணிவித்த மலர் மாலைகளுடன் குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளியுள்ளவனுமாகிய சிவபெருமானைக் கைகளால் தொழுபவர் வினைப்பயன்களைக் காணுதல் இலராவர்.

குறிப்புரை :

இத்தலத்தைத் தொழுவார் வினைகாண்டல் அரிது என்கின்றது. மையார்மேனி - கரியமேனி. அரக்கன் - இராவணன். உய்யா வகையால் - தப்பாதவண்ணம். கொய் ஆர் மலர் - கொய்தலைப் பொருந்திய மலர். வினை - வினைப்பயனாகிய துன்ப இன்பங்களை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

வெறியார் மலர்த்தா மரையா னொடுமாலும்
அறியா தசைந்தேத் தவோரா ரழலாகும்
குறியா னிமிர்ந்தான் றன்குரங் கணின்முட்டம்
நெறியாற் றொழுவார் வினைநிற் ககிலாவே.

பொழிப்புரை :

மணம் கமழும் தாமரை மலரில் உறையும் நான் முகனும், திருமாலும் அடிமுடி அறிய முடியாது வருந்தி வணங்க அழல் உருவாய் ஓங்கி நின்றருளிய சிவபிரான் விளங்கும் குரங்கணில் முட்டத்தை முறையாக வணங்குவார் வினைகள் இலராவர்.

குறிப்புரை :

இது தொழுவார்வினை நிற்கும் ஆற்றல் இல்லாதன என்கின்றது. வெறி - மணம். அறியாது அசைந்து - முதற்கண் இறைவன் பெருமையையறியாமல் சோம்பி இருந்து. ஏத்த - பின்னர் அறிந்து துதிக்க. ஓர் ஆர் அழலாகும் குறியான் - ஒப்பற்ற நெருங்குதற்கரிய அழலாகிய திருவுருவையுடையவன். நெறி - ஆகமவிதி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

கழுவார் துவரா டைகலந் துமெய்போர்க்கும்
வழுவாச் சமண்சாக் கியர்வாக் கவைகொள்ளேல்
குழுமின் சடையண் ணல்குரங் கணின்முட்டத்
தெழில்வெண் பிறையா னடிசேர் வதியல்பே.

பொழிப்புரை :

தோய்க்கப்பட்ட துவராடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தர், தம்கொள்கையில் வழுவாத சமணர் ஆகியோர் உரைகளைக் கொள்ளாதீர். மின்னல்திரள் போலத் திரண்டு உள்ள சடைமுடியை உடையவனும், அழகிய வெண்பிறையை அணிந்தவனும் ஆகிய குரங்கணில் முட்டத்து இறைவன் திருவடிகளைச் சென்று வணங்குவதே நம் கடமையாகும்.

குறிப்புரை :

இத்தலத்துள்ள இறைவனடிசேர்வதே இயல்பு என் கின்றது. கழுவார் - உடையைத் தோய்த்து அலசாதவராய், வழுவாச் சமண் - தம் கொள்கையில் வழுவாத சமணர். குழு மின்சடை - கூட்டமாகிய மின்னலை ஒத்த சடை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

கல்லார் மதிற்கா ழியுண்ஞான சம்பந்தன்
கொல்லார் மழுவேந் திகுரங் கணின்முட்டம்
சொல்லார் தமிழ்மா லைசெவிக் கினிதாக
வல்லார்க் கெளிதாம் பிறவா வகைவீடே.

பொழிப்புரை :

கருங்கல்லால் இயன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், கையில் கொல்லனது தொழில் நிறைந்த மழுவாயுதம் ஏந்திய குரங்கணில் முட்டத்து இறைவன்மீது பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் செவிக்கு இனிதாக ஓதி ஏத்த வல்லார்க்குப் பிறவா நெறியாகிய வீடு எளிதாகும்.

குறிப்புரை :

இப்பதிகத்தைச் செவிக்கினிதாகச் சொல்லவல்லவர் களுக்கு வீடு எளிது என்கின்றது. கல் ஆர் மதில் - மலையை ஒத்த மதில். பிறவாவகை வீடு எளிதாம் எனக் கூட்டுக. கொல்லார்மழு - கொற்றொழில் நிறைந்த மழு (திருக்கோவையார் - 231).

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

ஓடே கலனுண் பதுமூ ரிடுபிச்சை
காடே யிடமா வதுகல் லானிழற்கீழ்
வாடா முலைமங் கையுந்தா னுமகிழ்ந்
தீடா வுறைகின் றவிடை மருதீதோ.

பொழிப்புரை :

உண்ணும் பாத்திரம் பிரமகபாலமாகும். அவர் உண்ணும் உணவோ ஊர் மக்கள் இடும் பிச்சையாகும், அவர் வாழும் இடமோ இடுகாடாகும். அத்தகைய சிவபிரான் கல்லால மரநிழற்கீழ் நன்முலைநாயகியும் தானுமாய் மகிழ்ந்து பெருமையோடு விளங்கும் திருத்தலமாகிய இடைமருது இதுதானோ?

குறிப்புரை :

ஓடு எடுத்து ஊர்ப்பிச்சை ஏற்றுக் காடிடங்கொள்ளும் பெருமான் பெருமுலைநாயகியோடு எழுந்தருளும் இடைமருதீதோ என்று வினாவுகிறது இப்பதிகம். ஓடு - பிரமகபாலம். வாடாமுலை மங்கை என்பது பெருமுலைநாயகி என்னும் அம்மையின் திரு நாமத்தைக் குறித்தது. ஈடா - பெருமையாக.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

தடங்கொண்டதொர்தாமரைப்பொன்முடிதன்மேல்
குடங்கொண் டடியார் குளிர்நீர் சுமந்தாட்டப்
படங்கொண் டதொர்பாம் பரையார்த்த பரமன்
இடங்கொண் டிருந்தான் றனிடை மருதீதோ.

பொழிப்புரை :

தடாகங்களிற் பறித்த பெரிய தாமரை மலரைச் சூடிய அழகிய திருமுடியில், அடியவர் குடங்களைக் கொண்டு குளிர்ந்த நீரைமுகந்து சுமந்து வந்து அபிடேகிக்குமாறு, படம் எடுத்தாடும் நல்லபாம்பை இடையிலே கட்டிய பரமன் தான் விரும்பிய இடமாகக் கொண்டுறையும் இடைமருது இதுதானோ?

குறிப்புரை :

தடம் - குளம். தாமரைப் பொன்முடி - தாமரை சூடிய அழகிய சிரம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

வெண்கோ வணங்கொண் டொரு வெண்டலையேந்தி
அங்கோல் வளையா ளையொர்பா கமமர்ந்து
பொங்கா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எங்கோ னுறைகின் றவிடை மருதீதோ.

பொழிப்புரை :

வெண்மையான கோவணத்தை அணிந்து ஒப்பற்ற வெள்ளிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி அழகியதாய்த் திரண்ட வளையல்களை அணிந்த உமாதேவியை ஒருபாகமாக விரும்பி ஏற்று, பொங்கிவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது எம் தலைவனாயுள்ள சிவபிரான் எழுந்தருளிய இடைமருதூர் இதுதானோ?

குறிப்புரை :

அம் கோல் வளையாளை - அழகிய திரண்ட வளையல் அணிந்த உமாதேவியை. அமர்ந்து - விரும்பி ஏற்று.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

அந்தம் மறியா தவருங் கலமுந்திக்
கந்தங் கமழ்கா விரிக்கோ லக்கரைமேல்
வெந்த பொடிப்பூ சியவே தமுதல்வன்
எந்தை யுறைகின்ற விடைமரு தீதோ.

பொழிப்புரை :

அரிய அணிகலன்களைக் கரையில் வீசி மணம் கமழ்ந்துவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது திருவெண்ணீறு அணிந்தவனாய், முடிவறியாத வேத முதல்வனாய் விளங்கும் எம் தந்தையாகிய சிவபிரான் உறைகின்ற இடைமருதூர் இதுதானோ?

குறிப்புரை :

அந்தம் அறியாத வேதமுதல்வன் எனக் கூட்டுக. அருங்கலம் உந்தி - அரிய ஆபரணங்களைக் கரையில் வீசி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

வாசங் கமழ்மா மலர்ச்சோ லையில்வண்டே
தேசம் புகுந்தீண் டியொர்செம் மையுடைத்தாய்ப்
பூசம் புகுந்தா டிப்பொலிந் தழகாய
ஈச னுறைகின் றவிடை மருதீதோ.

பொழிப்புரை :

மணம் கமழும் சிறந்த மலர்களை உடைய சோலை களில் வண்டுகளைக் கொண்டதும், உலக மக்கள் பலரும் கூடிச் செம்மையாளராய்த் தைப்பூசத் திருநாளில் நீராடி வணங்குவதும், பொலிவும் அழகும் உடையவனாய் ஈசன் எழுந்தருளி விளங்குவதுமான இடைமருது என்னும் தலம் இதுதானோ?

குறிப்புரை :

வண்டு புகுந்து ஈண்டி செம்மையுடைத்தாய் இருக்க, பூசம்புகுந்து ஆடி அழகாய ஈசன் உறைகின்ற இடைமருது என வினை முடிவுசெய்க. தேசம் புகுந்து - பல இடங்களிலும் சுற்றி, செம்மை உடைத்தாய் - குரலின் இனிமை படைத்து. இத்தலத்தில் தைப்பூசத் திருநாள் அன்று இறைவன் காவிரியில் தீர்த்தங்கொள்வர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

வன்புற் றிளநா கமசைத் தழகாக
என்பிற் பலமா லையும்பூண் டெருதேறி
அன்பிற் பிரியா தவளோ டுமுடனாய்
இன்புற் றிருந்தான் றனிடை மருதீதோ.

பொழிப்புரை :

வலிய புற்றுக்களில் வாழும் இளநாகங்களை இடையிலே அழகாகக் கட்டிக் கொண்டு, எலும்பால் இயன்ற மாலைகள் பலவற்றையும் அணிகலன்களாகப் பூண்டு, அன்பிற்பிரியாத உமையம்மையோடும் உடனாய் எருதேறிச் சிவபிரான் இன்புற்றுறையும் இடைமருது என்பது இதுதானோ?

குறிப்புரை :

வல்புற்று இளநாகம் - வலிய புற்றில் வாழும் இள நாகம் அவைகளை அவயவங்களிலே அணியாகக் கட்டி. அன்பில் பிரியாதவள் - பிரியாவிடையாகிய பார்வதி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

தேக்குந் திமிலும் பலவுஞ் சுமந்துந்திப்
போக்கிப் புறம்பூ சலடிப் பவருமால்
ஆர்க்குந் திரைக்கா விரிக்கோ லக்கரைமேல்
ஏற்க விருந்தான் றனிடை மருதீதோ.

பொழிப்புரை :

தேக்கு, வேங்கை, பலா ஆகிய மரங்களைச் சுமந்து வந்து இருகரைகளிலும், அம்மரங்களை எடுத்து வீசி, ஆரவாரித்து வரும் அலைகளையுடையதாய காவிரி நதியின் அழகிய கரைமீது சிவபெருமான் பொருந்த உறையும் இடைமருது என்னும் தலம் இதுதானோ?

குறிப்புரை :

திமில் - வேங்கைமரம். பல - பலாமரம். புறம் போக்கி - இம்மரங்களை இருகரைமருங்கும் எடுத்துவீசி. பூசல் அடிப்ப - கரையுடன் மோத. ஆல் - அசை. ஆர்க்கும் திரை - ஆரவாரிக்கின்ற அலை. ஏற்க - பொருந்த.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

பூவார் குழலா ரகில்கொண் டுபுகைப்ப
ஓவா தடியா ரடியுள் குளிர்ந்தேத்த
ஆவா வரக்கன் றனையாற் றலழித்த
ஏவார் சிலையான் றனிடை மருதீதோ.

பொழிப்புரை :

மலர் சூடிய கூந்தலை உடைய மங்கல மகளிர் அகில் தூபம் இட, அடியவர் இடையீடின்றித் திருவடிகளை மனம் குளிர்ந்து ஏத்த, கண்டவர் ஆஆ என இரங்குமாறு இராவணனது ஆற்றலை அழித்த, அம்பு பொருத்தற்கேற்ற மலைவில்லைக் கையில் கொண்ட, சிவபெருமானின் இடைமருது என்னும் தலம் இதுதானோ?

குறிப்புரை :

இது மகளிரும் அடியாரும் அவரவர்கள் பரிபாகத் திற்கேற்ப வழிபடுகின்றார்கள் என்கின்றது. ஓவாது - இடைவிடாமல். ஆவா; இரக்கக் குறிப்பிடைச்சொல். ஏ ஆர் சிலை - பெருக்கத்தோடு கூடியகைலைமலை. `ஏபெற்றாகும்` என்பது தொல். சொல். உரி. (பெற்று - பெருக்கம்) `ஏகல் அடுக்கம்` என்னும் நற்றிணையும் (116) காண்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

முற்றா ததொர்பான் மதிசூ டுமுதல்வன்
நற்றா மரையா னொடுமால் நயந்தேத்தப்
பொற்றோ ளியுந்தா னும்பொலிந் தழகாக
எற்றே யுறைகின் றவிடை மருதீதோ.

பொழிப்புரை :

முற்றாத பால் போன்ற இளம்பிறையை முடிமிசைச் சூடிய முதல்வனாய், நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், திருமாலும் விரும்பித் தொழ, உமையம்மையும் தானுமாய்ச் சிவபிரான் அழகாகப் பொலிந்து உறைகின்ற இடைமருது என்னும் தலம் இதுதானோ?

குறிப்புரை :

பால்மதி - பால்போல் வெள்ளியபிறை. மால் நயந்து ஏத்த எனப்பிரிக்க. உறைகின்ற இடைமருது ஈதோ எற்றே எனக் கூட்டுக. எற்று - எத்தன்மைத்து; என வியந்து கூறியவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

சிறுதே ரருஞ்சில் சமணும் புறங்கூற
நெறியே பலபத் தர்கள்கை தொழுதேத்த
வெறியா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எறியார் மழுவா ளனிடை மருதீதோ.

பொழிப்புரை :

சிறுமதியாளராகிய தேரர்களும், சிற்றறிவினராகிய சமணர்களும், புறங்கூறித் திரிய, சிவபக்தர்கள் பலர் முறையாலே கைகளால் தொழுது துதிக்கப் பகைவரைக் கொன்றொழிக்கும் மழுவை ஏந்திய சிவபிரான் எழுந்தருளிய, மணம் கமழ்ந்துவரும் காவிரி நதியின் அழகிய கரைமேல் உள்ள இடைமருது என்னும் தலம் இதுதானோ?

குறிப்புரை :

புறச்சமயிகள் புறங்கூறுகிறார்கள்; பக்தர்கள் கைதொழுது பயன்கொள்ளுகிறார்கள் என்று இறைவனுடைய வேண்டுதல் வேண்டாமையையும், ஆன்மாக்கள் அவர் அவர் பரிபாகத்திற்கேற்பப் பலன் கொள்ளுகிறார்கள் என்பதையும் அறிவித்தபடி. தேரர் -புத்தர். எறியார் மழுவாளன் - எறியுந்தன்மைவாய்ந்த மழுவைத் தாங்கியவன்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

கண்ணார் கமழ்கா ழியுண்ஞா னசம்பந்தன்
எண்ணார் புகழெந் தையிடை மருதின்மேல்
பண்ணோ டிசைபா டியபத் தும்வல்லார்கள்
விண்ணோ ருலகத் தினில்வீற் றிருப்பாரே.

பொழிப்புரை :

இடமகன்றதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் எண்ணத்தில் நிறைந்துள்ள புகழை உடைய எம்பெருமானுடைய இடைமருது மீது பண்ணோடியன்ற இசையால் பாடிய பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள்.

குறிப்புரை :

கண்ணார் - இடமகன்ற. எண்ணார்புகழ் - எண்ணத்தைப் பொருந்திய புகழ். வீற்றிருப்பார் - பிறதேவர்க்கில்லாத பெருமையோடு இருப்பார்கள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

கணைநீ டெரிமா லரவம் வரைவில்லா
இணையா வெயின்மூன் றுமெரித் தவிறைவர்
பிணைமா மயிலுங் குயில்சேர் மடவன்னம்
அணையும் பொழிலன் பிலாலந் துறையாரே.

பொழிப்புரை :

நீண்டு எரிகின்ற தீயையும் திருமாலையும் அம்பாகக் கொண்டு பூட்டி வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கட்டிய மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் எரித்த இறைவர், தத்தம் பெடைகளோடுகூடிய பெரிய மயில்களும், குயில்களும் சேர்ந்து வாழும் அன்னங்களும் உறையும் பொழில் சூழ்ந்த அன்பிலாலந்துறையார் ஆவார்.

குறிப்புரை :

இது திரிபுரம் எரித்த இறைவர் ஆலந்துறையார் என அறிவிக்கின்றது. நீடு எரி மால் கணை - மேலோங்கி எழுகின்ற தீயையும், திருமாலையும் கணையாகவும். அரவம் வரை வில்லா - வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்ட மேருமலையை வில்லாகவும். இணையா - இணைத்து. பிணை - தத்தம் பெடைகளோடு கூடிய.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

சடையார் சதுரன் முதிரா மதிசூடி
விடையார் கொடியொன் றுடையெந் தைவிமலன்
கிடையா ரொலியோத் தரவத் திசைகிள்ளை
அடையார் பொழிலன் பிலாலந் துறையாரே.

பொழிப்புரை :

சடைமுடிகளோடு கூடிய சதுரப்பாடு உடையவராய் இளம்பிறையை முடிமிசைச் சூடி இடபக்கொடி ஒன்றை உடைய எந்தையாராகிய விமலர், வேதம் பயிலும் இளஞ்சிறார்கள் கூடியிருந்து ஓதும் வேத ஒலியைக் கேட்டு அவ்வோசையாலேயே அவற்றை இசைக்கின்ற கிளிகள் அடைதல் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட அன்பிலாலந்துறை இறைவராவார்.

குறிப்புரை :

இது கிளிகள் வேத இசையைச் சொல்லும் ஆலந்துறை இறைவனே எந்தை விமலன் என்கின்றது. சதுரன் - சாமர்த்திய முடையவன். கிடை ஆர் ஒலி - மாணவர்கள் கூட்டமாயிருந்து ஒலிக்கும் வேத ஒலி. இதனைச் சந்தைகூறுதல் என்ப. ஓத்து அரவத்து இசை கிள்ளை - வேத ஒலியை இசைக்கின்ற கிளி. அடை ஆர் பொழில் - அடைதல் பொருந்திய சோலை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

ஊரும் மரவஞ் சடைமே லுறவைத்துப்
பாரும் பலிகொண் டொலிபா டும்பரமர்
நீருண் கயலும் வயல்வா ளைவராலோ
டாரும் புனலன் பிலாலந் துறையாரே.

பொழிப்புரை :

ஊர்ந்து செல்லும் பாம்பைச் சடைமுடிமேல் பொருந்த அணிந்து உலகம் முழுதும் சென்று பலியேற்று, இசை பாடி மகிழும் பரமராகிய பெருமானார், நீரின்வழி உணவுண்ணும் கயல்மீன்களை வயல்களிடத்துள்ள வாளை வரால் ஆகிய மீன்கள் உண்ணும் புனல்வளம் மிக்க அன்பிலாலந்துறையாராவார்.

குறிப்புரை :

இது பலிகொள்ளும் பரமர் அன்பிலாலந்துறையார் என்கின்றது. அடியார்களது ஓடும் மனத்தை ஓரிடத்து நிறுத்தி வைப்பதுபோல ஊரும்பாம்பைச் சடைமேல் உறவைத்தார் என்ற நயம் உணர்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

பிறையும் மரவும் முறவைத் தமுடிமேல்
நறையுண் டெழுவன் னியுமன் னுசடையார்
மறையும் பலவே தியரோ தவொலிசென்
றறையும் புனலன் பிலாலந் துறையாரே.

பொழிப்புரை :

பிறைமதி, பாம்பு ஆகியவற்றைப் பகை நீக்கி ஒருங்கே பொருந்த வைத்த முடிமீது, நறுமணத்துடன் தோன்றும் வன்னித் தளிர்களும் மன்னிய சடையினர், வேதியர் பலர் வேதங்களை ஓத அவ்வொலி பல இடங்களிலும் ஒலிக்கும் நீர்வளம்மிக்க அன்பிலாலந்துறை இறைவராவார்.

குறிப்புரை :

இது இத்தலத்திறைவன் பகைநீக்கி ஆளும் பண்பினன் என்கின்றது. உறவைத்த - பகைநீக்கி ஒருங்கே பொருந்தவைத்த. நறை - நல்லமணம். வன்னி - வன்னிப் பத்திரம். வேதியர் மறைபலவும் ஓத அவ்வொலிசென்று அறையும் ஆலந்துறை எனக் கூட்டுக.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

நீடும் புனற்கங் கையுந்தங் கமுடிமேல்
கூடும் மலையா ளொருபா கமமர்ந்தார்
மாடும் முழவ மதிர மடமாதர்
ஆடும் பதியன் பிலாலந் துறையாரே.

பொழிப்புரை :

முடிமேல் பெருகிவரும் நீரை உடைய கங்கை நதியையும் தங்குமாறு அணிந்து, ஒருபாகமாகத் தம்மைத் தழுவிய மலைமகளைக் கொண்டுள்ள பெருமானார், பல இடங்களிலும் முழவுகள் ஒலிக்க, இளம் பெண்கள் பலர் நடனங்கள் புரியும் அன்பிலாலந்துறை இறைவராவார்.

குறிப்புரை :

இது அன்பிலாலந்துறை இறைவர், கங்கையை முடி மேல் வைத்து உமையாளை ஒருபாகம் வைத்துளார் என்கின்றது. இவர் போகியாய் இருப்பதற்கேற்ற தலம், முழவம் அதிர மடமாதர் ஆடும் பதியாய்ப் போகபூமியாய் இருப்பதைக் குறித்தவாறு. மாடு - பக்கம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

நீறார் திருமே னியரூ னமிலார்பால்
ஊறார் சுவையா கியவும் பர்பெருமான்
வேறா ரகிலும் மிகுசந் தனமுந்தி
ஆறார் வயலன் பிலாலந் துறையாரே.

பொழிப்புரை :

திருநீறு அணிந்த திருமேனியரும், குற்றம் அற்றவர்களின் உள்ளங்களில் பொருந்திய சுவையாக இனிப்பவருமாகிய தேவர் தலைவர், வேறாகப் பெயர்ந்து வரும் அகில் மரங்களையும் உயர்ந்த சந்தன மரங்களையும் அடித்துவரும் ஆற்றுநீர் பாயும் வயல்களை உடைய அன்பிலாலந்துறை இறைவர் ஆவார்.

குறிப்புரை :

இது குற்றமே இல்லாத நற்றவர்பால் ஊறுஞ் சுவையாய் விளங்குபவர் என்கின்றது. ஊனம் இல்லார்பால் ஊறு ஆர் சுவை ஆகிய எனப் பிரிக்க. ஆர் சுவை - அரிய அமுதம். வேறு ஆர் - வேறாகப் பெயர்ந்த.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

செடியார் தலையிற் பலிகொண் டினிதுண்ட
படியார் பரமன் பரமேட் டிதன்சீரைக்
கடியார் மலரும் புனல்தூ விநின்றேத்தும்
அடியார் தொழுமன் பிலாலந் துறையாரே.

பொழிப்புரை :

முடைநாற்றமுடைய தலையோட்டில் பலியேற்று அதனை இனிதாக உண்டருளும் தன்மையினைக் கொண்ட பரமனாகிய பரம்பொருள், மணம் பொருந்திய மலர்களையும் நீரையும் தூவி நின்று தன்புகழைத் துதிக்கும் அடியவர்களால் தொழப்படும் அன்பிலாலந்துறை இறைவராவார்.

குறிப்புரை :

இது இறைவன் புகழைச் சொல்லி அடியார்கள் வழிபடும் ஆலந்துறையார் என்கின்றது. செடி - முடைநாற்றம். செடியார் தலையில் பிச்சை ஏற்று இனிதுண்டார் என்பது இறைவன் வேண்டுதல் வேண்டாமையிலான் என்பதை உணர்த்தியது. படி - தன்மை. அடியார், சீரைத் தூவிநின்று ஏத்தித் தொழும், ஆலந்துறையார் என்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

விடத்தார் திகழும் மிடறன் னடமாடி
படத்தா ரரவம் விரவுஞ் சடையாதி
கொடித்தே ரிலங்கைக் குலக்கோன் வரையார
அடர்த்தா ரருளன் பிலாலந் துறையாரே.

பொழிப்புரை :

ஆலகால விடக்கறை விளங்கும் கரிய கண்டத்தினரும், நடனமாடியும், படத்தோடு கூடிய அரவம் விரவும் சடையினை உடைய முதற்கடவுளும், கொடித்தேரைக் கொண்ட இலங்கையர் குலத்தலைவனாகிய இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்தவரும் ஆகிய சிவபிரான், அன்பர்கள் அருள் பெறுதற்குரிய இடமாக விளங்கும் அன்பில்ஆலந்துறை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

இது நீலகண்டனாய் அரவம் அணிந்து இராவணனை அடர்த்தவன் ஆலந்துறையான் என்கின்றது. விடத்தார் திகழும் மிடறன் - `கறைமிடறு அணியலும் அணிந்தன்று` என்ற கருத்தை ஒப்புநோக்குக. படத்து ஆர் அரவம் - படம் பொருந்திய பாம்பு. ஆதி - முதல்வனே; அண்மைவிளி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

வணங்கிம் மலர்மே லயனுந் நெடுமாலும்
பிணங்கி யறிகின் றிலர்மற் றும்பெருமை
சுணங்கும் முகத்தம் முலையா ளொருபாகம்
அணங்குந் நிகழன் பிலாலந் துறையாரே.

பொழிப்புரை :

தாமரை மலர்மேல் விளங்கும் அயனும் திருமாலும், சிவபிரானின் பெருமையை வணங்கி அறியாது, தம்முட் பிணங்கித்தேடி அறியாதவராயினர். அப்பெருமான், சுணங்கு பொருந்திய முகப்பினை உடைய அழகிய தனத்தவளாய உமையம்மையை ஒருபாகத்தே அணங்காகக் கொண்டுள்ள அன்பிலாலந்துறை இறைவராவார்.

குறிப்புரை :

இது உமையொருபாகர் ஆலந்துறையார் என்கின்றது. வணங்கிமலர்மேல் என்பது சந்தம்நோக்கி மகரம் மிகுந்தது. பிணங்கி உம் பெருமையறிகின்றிலர் எனக் கூட்டுக. மற்று அசை. சுணங்கு முகத்து முலையாளாகிய அணங்கு ஒருபாகம் நிகழ் ஆலந்துறையார் எனக் கூட்டுக. ஒருபாகம் இருந்தும் சுணங்குபூக்கும் முலையாள் என்றது அம்மையின் மாறாத காதலை அறிவித்தவாறு. சுணங்கு பெண்களுக்குண்டாகும் தேமல். அணங்கு - தெய்வப்பெண்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

தறியார் துகில்போர்த் துழல்வார் சமண்கையர்
நெறியா வுணரா நிலைக்கே டினர்நித்தல்
வெறியார் மலர்கொண் டடிவீ ழுமவரை
அறிவா ரவரன் பிலாலந் துறையாரே.

பொழிப்புரை :

தறிபோல ஆடையின்றி உள்ள சமணர்கள், நெய்த ஆடையினை உடலில் போர்த்து உழலும் புத்தர்கள், பரம் பொருளை முறையாக உணராததோடு, நிலையான கேடுகளுக்கு உரியவர்களாய் உள்ளனர். அவர்களைச் சாராது நாள்தோறும் மணமலர்களைச் சூட்டித் தம் திருவடிகளில் வீழ்ந்து தொழும் அடியவர்களை நன்கறிந்தருளும் பெருமானார் அன்பிலாலந்துறை இறைவராவார்.

குறிப்புரை :

இது அன்போடு பூவும் நீரும்கொண்டு அடிபணிவாரை அறிபவர் ஆலந்துறையார் என்கின்றது. தறியார் துகில் - தறியில் நெய்த ஆடை. நெறியா உணரா - முறைமைப்படி உணர்ந்து கொள்ளாத. நிலைக்கேடினர் - கெட்ட நிலையையுடையவர்கள். வீழுமவர் - விரும்பித் தொழுமடியார்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

அரவார் புனலன் பிலாலந் துறைதன்மேல்
கரவா தவர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
பரவார் தமிழ்பத் திசைபா டவல்லார்போய்
விரவா குவர்வா னிடைவீ டெளிதாமே.

பொழிப்புரை :

பாம்புகள் வாழும் நீர் வளம் உடைய அன்பில் ஆலந்துறை இறைவர்மேல் வஞ்சனையில்லாத மக்கள் வாழும் சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பரவிப்பாடிய இப்பத்துப் பாடல்களையும் இசையோடு பாட வல்லவர் மறுமையில் வானக இன்பங்களுக்கு உரியவர்கள் ஆவர். அவர்களுக்கு வீட்டின்பமும் எளிதாம்.

குறிப்புரை :

இப்பாடல் பத்தினையும் இசையோடு பாடவல்லார் விண்ணின்பத்தை மேவுவர்; அவர்க்கு வீட்டின்பமும் எளிதாம் என்கின்றது. கரவாதவர் காழி - வஞ்சனை இல்லாத தவத்தவர் மேவியுள்ள காழி. ஆலந்துறை தன்மேல் பரவு ஆர் தமிழ் எனக்கூட்டுக. வானிடை விரவு ஆகுவர் - விண்ணிற்கலப்பர். அரவார் புனல் - பாம்பை ஒத்த புனல் (நெளிந்து விரைந்து வருதல்).

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

அடலே றமருங் கொடியண்ணல்
மடலார் குழலா ளொடுமன்னுங்
கடலார் புடைசூழ் தருகாழி
தொடர்வா ரவர்தூ நெறியாரே.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய இடபம் பொறிக்கப்பட்ட கொடியைத்தனதாகக் கொண்ட தலைவனாகிய சிவபிரான், மலர் சூடிய கூந்தலை உடைய உமையம்மையோடு எழுந்தருளியிருப்பதும், கடலால் புடை சூழப்பட்டதுமான சீகாழிப்பதியை இடைவிடாது சென்று வழிபடுபவர் தூயநெறியில் நிற்பவராவர்.

குறிப்புரை :

இது இறைவன் உமையோடு எழுந்தருளியிருக்கும் சீகாழியைப் பரவுவார் தூநெறியார் என்கின்றது. அடல் ஏறு - வலிமைபொருந்திய இடபம், மடல் - பூ. தொடர்வார் - இடைவிடாது தியானிப்பவர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே.

பொழிப்புரை :

அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய செல்வனாகிய சிவபிரான் மலைமகளோடு மகிழ்ந்து எழுந்தருளியிருப்பதும், கரையை உடைய நீர்நிலைகளால் சூழப்பட்டதுமான சீகாழிப்பதியை வரிசையான பூக்களைக் கொண்டு நின்று தூவி வழிபடுமின்.

குறிப்புரை :

காழியை இன்றே மலர்தூவி வணங்குங்கள் என்கின்றது. நிரையார் மலர் - வரிசையான பூக்கள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

இடியார் குரலே றுடையெந்தை
துடியா ரிடையா ளொடுதுன்னுங்
கடியார் பொழில்சூழ் தருகாழி
அடியா ரறியா ரவலம்மே.

பொழிப்புரை :

இடியை ஒத்த குரலையுடைய இடபத்தைத் தனது வாகனமாகக் கொண்ட எம் தந்தையாகிய இறைவன், துடி போலும் இடையினை உடைய உமையம்மையோடு எழுந்தருளியிருப்பதும், மணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்டதுமான சீகாழிப் பதியை வணங்கும் அடியவர்கள், துன்பத்தை அறியார்கள்.

குறிப்புரை :

இது காழி அடியார் அவலம் அறியார் என்கின்றது. இடியார் குரல் ஏறு - இடியையொத்த குரலுடைய இடபம். துடி - உடுக்கை, எந்தை துன்னும் காழி அடியார் அவலம் அறியார் எனக்கூட்டுக.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

ஒளியார் விடமுண் டவொருவன்
அளியார் குழன்மங் கையொடன்பாய்க்
களியார் பொழில்சூழ் தருகாழி
எளிதா மதுகண் டவரின்பே.

பொழிப்புரை :

நீலநிற ஒளியோடு கூடிய ஆலகால விடத்தை உண்டருளிய ஒப்பற்றவனாகிய சிவபிரான், வண்டுகள் மணத்தைத் தேடி வந்து நாடும் கூந்தலை உடைய உமையம்மையோடு, அன்புடன் களிக்கும், பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியைக் கண்டவர்க்கு இன்பம் எளிதாம்.

குறிப்புரை :

இது காழி கண்டவர்க்கு இன்பம் எளிதாம் என்கின்றது. ஒளியார் விடம் - நீலஒளியோடுகூடிய விடம். அளி -வண்டு. ஒருவன் மங்கையொடு அன்பாய்க் களி ஆர் காழி கண்டவர் இன்பம் எளிதாம் என முடிவு செய்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

பனியார் மலரார் தருபாதன்
முனிதா னுமையோ டுமுயங்கிக்
கனியார் பொழில்சூழ் தருகாழி
இனிதா மதுகண் டவரீடே.

பொழிப்புரை :

தண்மை பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிகளை உடைய சிவபெருமான் உமையம்மையோடு கூடி உலக உயிர்கட்குப் போகத்தைப் புரிந்தருளினும், தான் முனிவனாக விளங்குவோன். அத்தகையோன் எழுந்தருளியதும் கனிகள் குலுங்கும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியைச் சென்று கண்டவர்க்குப் பெருமை எளிதாக வந்தமையும்.

குறிப்புரை :

இது காழி கண்டவர் பெருமை எய்துவர் என்கின்றது. பனி - குளிர்மை. பனியார் மலர் - தாமரை மலர். ஆர் தரு - ஒத்த. உமையோடு முயங்கி முனிதான் - ஒருத்தியோடு கூடியிருந்தும் தான் முனிவனாய் இருப்பவன். பாதன் முனி காழி கண்டவர் ஈடு இனிதாம் என முடிக்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

கொலையார் தருகூற் றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதேத் தியகாழி
தலையாற் றொழுவார் தலையாரே.

பொழிப்புரை :

கொலைத் தொழில் நிறைந்த எமனை உதைத்து அழித்து மலையரையன் மகளாகிய உமையம்மையோடு மகிழ்ந்து உறைபவனாகிய சிவபெருமான் விரும்புவதும், மெய்ஞ்ஞானியர் தொழுதேத்துவதுமாகிய சீகாழிப்பதியைத் தலையால் வணங்குவார் தலையாயவராவார்.

குறிப்புரை :

இது காழிக்குச் சிரம்பணிவார் மேலானவர் என்கின்றது. கலையார் - கலைஞானிகள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

திருவார் சிலையா லெயிலெய்து
உருவா ருமையோ டுடனானான்
கருவார் பொழில்சூழ் தருகாழி
மருவா தவர்வான் மருவாரே.

பொழிப்புரை :

அழகிய வில்லால் மூவெயில்களை எய்தழித்து எழில் தவழும் உமையம்மையோடு உடனாய் விளங்கும் சிவபெருமான் எழுந்தருளியிருப்பதும், கருநிறம் பொருந்திய சோலைகளால் சூழப்பெற்றதுமான சீகாழிப் பதியை அடையாதவர் விண்ணுலக இன்பங்களை அடையாதவராவர்.

குறிப்புரை :

இது காழியடையார் வான்அடையார் என்கின்றது. திருவார் சிலை - அழகிய வில்; என்றது பொன் வில்லாதலின். உரு - அழகு. கருவார் பொழில் - கருமையாகிய சோலை. மருவாதவர் - அடையாதவர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

அரக்கன் வலியொல் கவடர்த்து
வரைக்கும் மகளோ டுமகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூ வுநினைந்தே.

பொழிப்புரை :

இராவணனது வலிமை சுருங்குமாறு அவனைத் தளர்ச்சியெய்த அடர்த்து மலைமகளோடு மகிழ்ந்த சிவபிரான் விளங்குவதும் மேலும் மேலும் பெருகிவரும் நீர் சூழ்ந்ததுமான சீகாழிப்பதியை நினைந்து வரிசையான மலர்களைத்தூவுமின்.

குறிப்புரை :

இது காழிக்கு மலர் தூவுங்கள் என்கின்றது. அரக்கன் வலி அடர்த்து வரைக்குமகளோடு மகிழ்ந்தான் என்பது. அரக்கன் மலையெடுக்க, உமையாள் எய்திய அச்சத்தைப் போக்கியதும், அவன் செய்த தவற்றிற்காக அவள் காணத் தண்டித்தமையும் விளக்கிநின்றது. ஒல்க - சுருங்க. நிரக்கும் - ஒழுங்கான.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே.

பொழிப்புரை :

திருமால் பிரமன் ஆகிய இருவர் பொருட்டு எரி உருவாகி நிமிர்ந்த சிவபிரான் அழகிற்சிறந்த பெரியநாயகி அம்மையோடு எழுந்தருளியிருப்பதும் கரிய நல்ல கடலின் மணம் கமழ்வதுமான சீகாழிப் பதியை மனத்தால் நினைய நம் வினைகள் மாய்ந்து பிரியும்.

குறிப்புரை :

இது காழியையடைய வினைகெடும் என்கின்றது. இருவர் - மாலுமயனும். உருவிற் பெரியாள் - பெரியநாயகி என்னும் திருத்தோணிச் சிகரத்திருக்கும் அம்மையார். பரவை - கடல்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

சமண்சாக் கியர்தா மலர்தூற்ற
அமைந்தா னுமையோ டுடனன்பாய்க்
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.

பொழிப்புரை :

சமணர்களும் சாக்கியர்களும் புறங்கூற, உமை யம்மையோடு ஒருசேர அன்பாய்ச் சிவபிரான் எழுந்தருளியிருப்பதும், மணம் கமழ்ந்து நிறையும் பொழில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதியைத் தம் மனத்தே தியானித்து, மலர் தூவித்தொழுதலே சிறந்த தொண்டாகும்.

குறிப்புரை :

இது சமண் முதலியோர் அலர் தூற்ற அடியார் மலர் தூவுதல் தொண்டு என்கின்றது. அலர்தூற்ற - பழி சொல்ல. உமையோடு உடன் அன்பாய் அமர்ந்தான் - அம்மையொடு ஒருசேர ஆசனத்து அன்பாய் அமர்ந்தான் என்க. காழி சுமந்தார் - காழியைத் தம் மனத்துத் தியானித்தவர்கள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

நலமா கியஞா னசம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வா னடைவாரே.

பொழிப்புரை :

நன்மையை மக்கட்கு நல்குவதும் மரக்கலங்களை உடைய கடலால் சூழப்பெற்றதுமான சீகாழிப் பதியை உறுதியாக நினைந்தவர்களும், ஞானசம்பந்தரின் பாடல்களில் வல்லவராய் ஓதி வழிபட்டவர்களும் விண்ணக இன்பங்களை அடைவர்.

குறிப்புரை :

காழியைத் தமது நிலைத்த இடமாக நினைந்த பெருமானது பாடலில் வல்லவர்கள் வானடைவர் என முடிக்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

அரையார் விரிகோ வணவாடை
நரையார் விடையூர் திநயந்தான்
விரையார் பொழில்வீ ழிம்மிழலை
உரையா லுணர்வா ருயர்வாரே.

பொழிப்புரை :

இடையிற் கட்டிய விரிந்த கோவண ஆடையையும், வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியையும் விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபிரான் உறைவதும், மணம் பொருந்திய பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருவீழிமிழலையின் புகழை நூல்களால் உணர்வார் உயர்வடைவர்.

குறிப்புரை :

வீழிமிழலையைத் தியானிப்பவர்கள் உயர்வர் என்கின்றது. கோவண ஆடையையும் ஊர்தியையும் நயந்தான் என முடிக்க. நரை - வெண்மை. உரையால் - வேதாகமங்களில் சொல்லப்பட்ட சொற்களால். விரிகோவணம் - படம் விரியும் பாம்பாகிய கோவணம். `அற்றம் மறைப்பது முன்பணியே` `ஐந்தலைய மாசுணங் கொண்டு அரையார்க்குமே` என்ற பகுதிகள் இதற்கு ஒப்பு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

புனைதல் புரிபுன் சடைதன்மேல்
கனைதல் லொருகங் கைகரந்தான்
வினையில் லவர்வீ ழிம்மிழலை
நினைவில் லவர்நெஞ் சமுநெஞ்சே.

பொழிப்புரை :

மலரால் அலங்கரிக்கப்பட்ட முறுக்குக்களை உடைய சிவந்த சடைமுடி மீது ஆரவாரித்து வந்த ஒப்பற்ற கங்கை நதியை மறைத்து வைத்துள்ள சிவபிரான் உறையும், தீவினை இல்லாத மக்கள் வாழும் திருவீழிமிழலையை நினையாதவர் நெஞ்சமும் ஒரு நெஞ்சமோ?

குறிப்புரை :

வீழிமிழலையை நினையாதவர் நெஞ்சம் நெஞ்சா என்கின்றது. புனைதல் - முடித்தல், கனைதல் - ஒலித்தல். வினையில்லவர் - இயல்பாகவே வினையில்லாதவர். நெஞ்சத்தின் தொழில் நினையவேண்டியவற்றை நினைவதாயிருக்க, அது செய்யாமையின் நெஞ்சமும் நெஞ்சே என இகழ்ந்து கூறியவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

அழவல் லவரா டியும்பாடி
எழவல் லவரெந் தையடிமேல்
விழவல் லவர்வீ ழிம்மிழலை
தொழவல் லவர்நல் லவர்தொண்டே.

பொழிப்புரை :

அழவல்லவரும், ஆடியும் பாடியும் எழவல்லவரும் எந்தையாகிய இறைவன் திருவடிமேல் விழ வல்லவருமாய் அடியவர் நிறைந்துள்ள திருவீழிமிழலையைத் தொழவல்லவரே நல்லவர். அவர் தொண்டே நற்றொண்டாம்.

குறிப்புரை :

இது அழுதும், ஆடியும், பாடியும், விழுந்தும் தொழ வல்லவர் தொண்டில் நல்லராம் என்கின்றது. வல்லவர் என்பன நான்கும் அருமைவிளக்கி நின்றன. அடிமேல் விழுதல் - தன்வசமற்று ஆனந்தமேலீட்டால் விழுதல்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

உரவம் புரிபுன் சடைதன்மேல்
அரவம் மரையார்த் தவழகன்
விரவும் பொழில்வீ ழிம்மிழலை
பரவும் மடியா ரடியாரே.

பொழிப்புரை :

வலிமையை வெளிப்படுத்தி நிற்கும் சிவந்த சடைமுடி மீதும் இடையிலும், பாம்பை அணிந்தும் கட்டியும் உள்ள அழகனாகிய சிவபிரான் எழுந்தருளியதும், பொழில்கள் விரவிச்சூழ்ந்ததுமான திருவீழிமிழலையைப் பரவித் துதிக்கும் அடியவரே அடியவராவர்.

குறிப்புரை :

இது வீழிமிழலையைத் தொழும் அடியாரே அடியார் என அடியார் இயல்பை விளக்குகின்றது. உரவம் - வலிமை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

கரிதா கியநஞ் சணிகண்டன்
வரிதா கியவண் டறைகொன்றை
விரிதார் பொழில்வீ ழிம்மிழலை
உரிதா நினைவா ருயர்வாரே.

பொழிப்புரை :

கரியதாகிய நஞ்சினை உண்டு அதனை அணியாக நிறுத்திய நீலகண்டன் எழுந்தருளியதும், வரிகளை உடைய வண்டுகள் ஒலி செய்யும் கொன்றை மரங்கள் விரிந்த மாலைபோலக் கொத்தாக மலரும் சோலைகளால் சூழப்பெற்றதும் ஆகிய திருவீழிமிழலையைத் தமக்கு உரியதலமாகக் கருதுவோர் சிறந்த அடியவராவர்.

குறிப்புரை :

இது இத்தலத்தை உரிமையோடு நினைவார் உயர்வார் என்கின்றது. வரிதாகிய வண்டு - வரிகளையுடையதாகிய வண்டு. `பொறிவரி வண்டினம்` என்பது காண்க. உரியதா என்பது உரிதா எனத் தொகுத்தல் விகாரம்பெற்றது, உரித்து உரிது போலவும், வரித்து வரிது போலவும் என்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

சடையார் பிறையான் சரிபூதப்
படையான் கொடிமே லதொர்பைங்கண்
விடையா னுறைவீ ழிம்மிழலை
அடைவா ரடியா ரவர்தாமே.

பொழிப்புரை :

சடைமிசைச்சூடிய பிறைமதியை உடையவனும், இயங்கும் பூதப்படைகளை உடையவனும், கொடிமேல் பசிய கண்களை உடைய ஒற்றை விடையேற்றை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் திருவீழிமிழலையை அடைபவர்கள் சிறந்த அடியவர்கள் ஆவர். தாம், ஏ அசைநிலை.

குறிப்புரை :

இது இத்தலத்தை அடைவாரே அடியார் என்கின்றது. சரி - இயங்குகின்ற. பைங்கண் - பசியகண். பசுமை ஈண்டு இளமை குறித்து நின்றது.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

செறியார் கழலுஞ் சிலம்பார்க்க
நெறியார் குழலா ளொடுநின்றான்
வெறியார் பொழில்வீ ழிம்மிழலை
அறிவா ரவலம் மறியாரே.

பொழிப்புரை :

கால்களிற் செறிந்த கழல், சிலம்பு ஆகிய அணிகள் ஆர்க்கச் சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையோடு நின்றருளும் சிவபிரான் எழுந்தருளியதும் மணம் கமழும் பொழில்களால் சூழப் பெற்றதுமான திருவீழிமிழலையைத் தியானிப்பவர் அவலம் அறியார்.

குறிப்புரை :

இது இத்தலத்தையறிவார், துன்பம் அறியார் என்கின்றது. செறி - வளை. செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க என்பதில் எண்ணும்மையை ஏனையவிடத்தும் கூட்டுக. நெறியார் குழல் - சுருண்ட கூந்தல், அறிவார் - தியானிப்பார்கள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

உளையா வலியொல் கவரக்கன்
வளையா விரலூன் றியமைந்தன்
விளையார் வயல்வீ ழிம்மிழலை
அளையா வருவா ரடியாரே.

பொழிப்புரை :

மிகவருந்திக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனது வலிமை கெடுமாறு தன் காலை வளைத்து விரலால் ஊன்றிய வலிமை வாய்ந்த சிவபிரான் எழுந்தருளியதும், விளைவு மிகுந்த வயல்களை உடையதுமான திருவீழிமிழலையை நினைந்து வருபவர் சிறந்த அடியவராவர்.

குறிப்புரை :

இத்தலத்தை நெருங்குவாரே அடியார் என்கின்றது. உளையா - வருந்தி. அளையா - அளைந்து; பொருந்தி. உளையாவலி - பண்டு வருந்தா வலிமையுமாம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

மருள்செய் திருவர் மயலாக
அருள்செய் தவனா ரழலாகி
வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.

பொழிப்புரை :

திருமால் பிரமன் ஆகிய இருவரும் அஞ்ஞானத் தினால் அடிமுடிகாணாது மயங்க, அரிய அழலுருவாய் வெளிப்பட்டு நின்று வெருட்டியவனும் பின் அவர்க்கு அருள் செய்தவனுமான சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையைச் சிறந்த தலம் என்று தெளிந்தவர்கள் தீவினைகள் தேய்தல் உறும்.

குறிப்புரை :

இத்தலத்தைத் தெளிந்தவர்களது தீவினை தேயும் என்கின்றது. இருவர் மருள்செய்து மயலாக - மாலும் அயனும் அஞ்ஞானத்தால் மயங்க. வெருள்செய்தவன் - வெருட்டியவன். தெருள்செய்தவர் - தெளிந்தவர்கள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

துளங்குந் நெறியா ரவர்தொன்மை
வளங்கொள் ளன்மின்புல் லமண்டேரை
விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை
உளங்கொள் பவர்தம் வினையோய்வே.

பொழிப்புரை :

தடுமாற்றமுறும் கொள்கைகளை மேற்கொண்டுள்ள அற்பமானவராய அமணர் தேரர் ஆகியோரின் சமயத் தொன்மைச் சிறப்பைக் கருதாதீர். விளங்கும் பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலையை நினைபவர்களின் வினைகள் ஓய்தலுறும்.

குறிப்புரை :

இத்தலத்தைத் தியானிப்பவர்களின் வினை ஓயும் என்கின்றது. துளங்கும் நெறியார் - அளவைக்கும் அநுபவத்திற்கும் நிலைபெறாது அசையும் சமயநெறியையுடையவர்கள். தேரை: தேரரை என்பதன் சிதைவு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

நளிர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
குளிரார் சடையா னடிகூற
மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை
கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே.

பொழிப்புரை :

குளிர்ந்த காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தண்மையான சடைமுடியை உடைய சிவபிரானுடைய திருவடிப் பெருமைகளைக் கூறத் தொடங்கி விளக்கமான பொழில்கள் சூழ்ந்த திருவீழிமிழலைப் பெருமான் புகழ்கூறும் இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்கட்குக் கேடு இல்லை.

குறிப்புரை :

இது இப்பாடலை வல்லார்க்குக் கேடு இல்லை எனப்பயன் கூறுகிறது. நளிர் - குளிர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே.

பொழிப்புரை :

ஒரு கலைப்பிறைமதியோடு வலிய கங்கை நீரும் நிலையாகப் பொருந்திய சடையை உடைய சிவபிரானது இடம், மலையிலிருந்து கொணர்ந்த முத்துக்கள் சிறந்த மணிகள் சந்தனம் ஆகியவற்றை அள்ளி வரும் அலைகளை உடைய காவிரிபாயும் திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

இப்பதிகப்பாடல் பத்தும் இறைவன் இடம் திருவையாறு என்கின்றது. பாடல்கள்தோறும் இறைவனது மதி, கொன்றை, கங்கை, வன்னி, கொக்கிறகு, தலைமாலை முதலிய அணிவகைகளும் அவர் வீரமும் அறிவிக்கப்பெறுகின்றன. உரநீர் - வலியநீர். மலையாரம் - மலையிற்பிறந்த முத்துக்கள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

மதியொன் றியகொன் றைவடத்தான்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வு
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே.

பொழிப்புரை :

பிறைமதி பொருந்திய சடையில் கொன்றை மாலையை அணிந்தவனும், தக்கயாகத்தில் வீரபத்திரரை ஏவிச்சந்திரனைக் காலால் பொருந்த உதைத்தவனுமான சிவபெருமான் வாழுமிடம், மதியோடு சேரும் கொடிகளைக் கொண்டதும் மதி தங்குமாறு உயர்ந்த மாடவீடுகளை உடையதுமான திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

நான்கடிகளிலுமுள்ள மதி என்ற சொல் சந்திரனையே குறிப்பதாகும். வடம் - மாலை. மதி ஒன்ற உதைத்தது, தக்கயாகத்தில் தம் திருவடியால் தேய்த்ததை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகும்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே.

பொழிப்புரை :

கொக்கிறகு என்னும் மலரோடு வன்னிப் பச்சிலைகளும் பொருந்திய சடைமுடியை உடையவர்க்கு உரியஇடம், எண் திசைகளிலும் வாழும் தேவர்களால் வணங்கப் பெறுபவரும், சங்கு மணிகள் கட்டிய இடையினை உடையவருமான அப்பெருமானின் திருவையாறாகும்.

குறிப்புரை :

கொக்கின் இறகு - கொக்கிறகம்பூ; கொக்கினது இறகுமாம். வன்னி - வன்னியிலை. திக்கின் இசை தேவர் - எட்டுத் திக்கிலும் பொருந்தியிருக்கின்ற தேவர்கள். அக்கு - சங்குமணி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ருமையாறே.

பொழிப்புரை :

சிறகுகளோடு கூடிய முப்புரங்களும் அழியச் சினந்தவராகிய சிவபிரான் விரும்பும் கோயில், மக்கள் கண்களுக்குப் புலனாகாது மறைந்து இயங்கும் நல்ல தேவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஒலி நிறைந்துள்ள திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

சிறைகொண்டபுரம் - சிறகோடு கூடிய முப்புரங்கள். கறைகொண்டவர் - கோபித்தவர். மறைகொண்ட நல் வானவர் - மக்கள் கண்ணுக்கு மறைந்து வதியும் தேவர்கள். தம்மில் அறையும் ஒலி - தமக்குள் பேசிக்கொள்ளும் ஒலி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

உமையா ளொருபா கமதாகச்
சமைவா ரவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வருமந் தணையாறே.

பொழிப்புரை :

உமையம்மை ஒருபாகத்தே விளங்கப்பொருந் தியவராகிய சிவபெருமான் சாரும் இடம், மலையிடையே உள்ள மூங்கில்கள் முத்துக்களைச் சொரிய அவை காவிரியாற்றில் பொருந்தி வரும் குளிர்ந்த திருவையாறாகும்.

குறிப்புரை :

சமைவார் - பொருந்தியவர். அமையார் உடல் சோர்தர - மூங்கிலினது உடல் வெடிக்க. அமையா - பொருந்தி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

தலையின் றொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே.

பொழிப்புரை :

தலையோட்டினால் தொகுக்கப்பட்டுள்ள மாலையை அணிந்து மானைக் கையின்கண் கொண்டவராகிய சிவ பிரானது இடம், இறைவன் திருவடிக்கண் நிலைத்த மனமுடையவராகிய அடியவர் நாள்தோறும் மலர்கொண்டு தூவிவழிபாடு செய்யும் திருவையாறாகும்.

குறிப்புரை :

கலை - மான். நிலைகொண்ட மனத்தவர் என்றது, இறைவனது திருவடியின் கண் நிலைத்த மனமுடைய அடியார்களை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங் கொடுசே ருமையாறே.

பொழிப்புரை :

வரங்கள் பல பெற்ற தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனின் தலைகளில் ஒன்றை அறுத்த சிவபிரானது இடம், மலையினின்று இழிந்துபெருகி வரும் காவிரி நதி ஆரவாரித்து வரும் திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

வரம் ஒன்றிய - வரம் பெற்ற. மேன்மைபொருந்திய என்றுமாம். சேர்வு - இடம். வரைநின்று இழிவார்தரு பொன்னி எனப்பிரிக்க. வார்தரு - ஒழுகுகின்ற. அரவம் - ஒலி, பொன்னி - காவிரி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

வரையொன் றதெடுத் தவரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே.

பொழிப்புரை :

கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் சிரங்களும் பிறஅங்கங்களும் சிதறுமாறு நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம். மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு புண்ணிய நதியாகிய காவிரி அலைகளோடு கூடிப்பாய்ந்து வளம் சேர்க்கும் திருவையாறு ஆகும்.

குறிப்புரை :

விரை - மணம். சிரம் அங்கம் - தலையும் பிற அங்கங்களும்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

சங்கக் கயனு மறியாமைப்
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
அங்கிக் கெதிர்காட் டுமையாறே.

பொழிப்புரை :

சங்கத்தைக் கையின்கண் கொண்ட திருமாலும் அறியாதவாறு பொங்கி எழும் சுடராகத் தோன்றிய சிவபிரான் உறையும் கோயில், காவிரி, மகரந்தம், தேன் ஆகியன பொலியும் நீரைக் கொண்டு வந்து, அழல் வடிவான இறைவன் திருமுன் அர்க்கியமாகக் காட்டும் திருவையாறாகும்.

குறிப்புரை :

சங்கக்கயன் - சங்கத்தைக் கையிலேயுடைய திருமால். கொங்கு - தேன். அங்கிக்கு எதிர்காட்டும் - காலையில் அக்கினி காரியம் செய்வோர் அர்க்கியம் சமர்ப்பிக்கும்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே.

பொழிப்புரை :

துவராடை தரித்த புத்தர், ஆடையின்றித் தோலைக் காட்டும் சமணர் ஆகியவரின் மாறுபட்ட வாய்மொழிகளை விரும்பாது, தவத்தால் மேம்பட்டவர்கள், பிரமன் முதலிய தேவர்களோடு வந்தணைந்து வழிபடும் தலம் திருவையாறாகும். அதனைச் சென்று வழிபடுமின்.

குறிப்புரை :

கவர்வு - கபடம். தவராசர்கள் - தவத்தான் மிக்க முனிவர்கள். தாமரையான் என்றது பிரமனை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞா னசம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே.

பொழிப்புரை :

கலைவல்லவர்களின் ஆரவாரம் மிக்க சீகாழிப்பதியில் உள்ளார்க்குத் தலைவனாகிய நன்மை அமைந்த ஞானசம்பந்தன் அலைகளை உடைய காவிரியால் சூழப்பட்ட திருவையாற்றைப் போற்றிப் பாடிய இத்தமிழ் வல்லவர்களின் துயர்கள் நீங்கும்.

குறிப்புரை :

இது ஐயாற்றைப்பற்றிய இம்மாலையைச் சொல்ல வல்லார் துன்பத்தினின்று வீடுபெறுவர் என்கின்றது. கலை - கலை ஞானங்கள். கலி - ஒலி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

அரவச் சடைமேன் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனூராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.

பொழிப்புரை :

சடைமுடிமேல் அரவம், மதி, ஊமத்தம் மலர் ஆகியன கலந்து விளங்குமாறு அணிந்த சிவபெருமானது தலம் தொண்டர்கள் பலரும் கலந்து நாள்தோறும் வணங்கி மகிழ்வுறும் திருப்பனை யூராகும்.

குறிப்புரை :

இது, சடைமேல் மதியும் ஊமத்தமும் கலந்து விளங்குகின்ற இறைவனூர் பனையூர் என்கின்றது. மத்தம் - ஊமத்தம். நிரவி - கலந்து. பரவி -வணங்கி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்
கண்ணின் றெழுசோ லையில்வண்டு
பண்ணின் றொலிசெய் பனையூரே.

பொழிப்புரை :

மனம் ஒன்றி நினைந்த அடியார்களின் உள்ளத் துள்ளே இருந்து அவர்தம் வழிபாட்டை ஏற்று மகிழ்கின்ற சிவபெருமானது தலம், தேன் பொருந்திய மலர்களோடு உயர்ந்துள்ள சோலைகளில் வண்டுகள் பண்ணொன்றிய ஒலி செய்யும் பனையூராகும்.

குறிப்புரை :

மனம் ஒன்றி நினைக்கும் அடியார்களிடத்து உள்நின்று மகிழும் இறைவனூர் பனையூர் என்கின்றது. எண் - எண்ணம். ஒன்றி - விஷய சுகங்களில் சென்று பற்றாது திருவடியிலேயே பொருந்தி. மகிழ்ந்தவன் - தான்மகிழ, தன்னைச்சார்ந்த ஆன்மாவும் மகிழுமாதலின் மகிழ்வித்தவன் என்னாது மகிழ்ந்தவன் என்றார்; மகிழ்தற்குரிய சுதந்திரமும் ஆன்மாவுக்கு இல்லை என்றபடி. கள் நின்று - தேன் பொருந்தி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறையொன் றுடையானூர்
சிலரென் றுமிருந் தடிபேணப்
பலரும் பரவும் பனையூரே.

பொழிப்புரை :

விளங்கும் எரிபோலச் சிவந்த சடைமுடிமீது வளரும் பிறையொன்றை உடைய சிவபெருமானது ஊர், அடியவர்களில் சிலர் என்றும் இருந்து திருவடிகளைப் பரவிப்பூசனை செய்து போற்றவும், பலர் பலகாலும் வந்து பரவ விளங்கும் திருப்பனையூராகும்.

குறிப்புரை :

பிறையணிந்த பெருமானூர் பனையூர் என்கின்றது. எறி - அர்ச்சிக்கப்படுகின்ற. மலரும் பிறை - வளரும் பிறை. சிலர் - அணுக்கத்தொண்டர்களாகிய அடியார்கள். பலர் - வழிபடும் அடியார்கள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

இடியார் கடனஞ் சமுதுண்டு
பொடியா டியமே னியினானூர்
அடியார் தொழமன் னவரேத்தப்
படியார் பணியும் பனையூரே.

பொழிப்புரை :

கரைகளை மோதுதல் செய்யும் கடலிடைத் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டு, மேனி மீது திருநீற்றுப் பொடியை நிரம்பப்பூசிய சிவபெருமானது ஊர், அடியவர்கள் தொழ, மன்னவர்கள் ஏத்த உலகில் வாழும் பிறமக்கள் பணியும் திருப்பனையூராகும்.

குறிப்புரை :

இது, நீறுபூசிய இறைவனூர் பனையூர் என்கின்றது. இடியார் கடல் - கரைகளை மோதுகின்ற கடல். பொடி - விபூதி. படியார் - பூமியிலுள்ள பிறமக்கள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

அறையார் கழன்மே லரவாட
இறையார் பலிதேர்ந் தவனூராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறையா ரொலிசெய் பனையூரே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற வீரக்கழல் மேல் அரவு ஆட முன் கைகளில் பலியேற்றுத் திரியும் பிட்சாடனராகிய சிவபெருமானது ஊர், மண்ணுலகில் சிறந்த புகழை உடைய திருவிழாக்கள் நிறையப் பறைகளின் ஒலி இடைவிடாது பயிலும் திருப்பனையூராகும்.

குறிப்புரை :

இது பிட்சாடனமூர்த்தியின் ஊர் பனையூர் என் கின்றது. அறை - ஒலி. இறை - முன்கை. பொறையார் மிகுசீர் விழமல்க - பூமியிற் சிறந்த புகழினையுடைய திருவிழாநிறைய. `பொறைதரத் திரண்டதாரு` இரகுவம்சம் - தசரதன் சாப.40.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

அணியார் தொழவல் லவரேத்த
மணியார் மிடறொன் றுடையானூர்
தணியார் மலர்கொண் டிருபோதும்
பணிவார் பயிலும் பனையூரே.

பொழிப்புரை :

தம்மைப் பூசனை செய்து தொழவல்ல அடியவர்கள் அண்மையில் இருப்பவராய், அருகிருந்து ஏத்துமாறு உள்ள நீலமணிபோலும் கண்டத்தை உடைய சிவபெருமானது ஊர், தன்னைப் பணியும் அடியவர் குளிர்ந்த மலர்களைக் கொண்டு இருபோதும் தூவி வழிபடும் இடமான திருப்பனையூராகும்.

குறிப்புரை :

நீலகண்டனது உறைவிடம் பனையூர் என்கின்றது. தொழவல்லவர் அணியார் ஏத்த என மாறுக. அணியார் - அண்மையில் உள்ளவர்கள். மணி - நீலமணி. தணி ஆர் மலர் கொண்டு - குளிர்ந்த மலரையுங்கொண்டு. `பூவும் நீரும் கொண்டு` என்பதனை நினைவு கூர்க. தணி - தண்மை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

அடையா தவர்மூ வெயில்சீறும்
விடையான் விறலார் கரியின்றோல்
உடையா னவனெண் பலபூதப்
படையா னவனூர் பனையூரே.

பொழிப்புரை :

தன்னை வணங்காத பகைவர்களான அசுரர்களின் மூன்று அரண்களையும் அழித்த விடையூர்தியனும், வலியயானையை உரித்து அதன் தோலை மேல் ஆடையாகக் கொண்டவனும் எண்ணற்ற பல பூதப்படைகளை உடையவனுமான சிவபெருமானது ஊர் திருப்பனையூராகும்.

குறிப்புரை :

இது வீரன் மேவும் ஊர் பனையூர் என்கின்றது. அடையாதவர் - பகைவராகிய திரிபுராதிகள்; சீறும் என்ற பெயரெச்சம் விடை உடையானை விசேடித்தது. விறல் - வலிமை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

இலகும் முடிபத் துடையானை
அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனூர் பனையூரே.

பொழிப்புரை :

விளங்கும் முடிபத்தை உடைய இராவணனை அடர்த்து அவன்படும் அல்லல் கண்டு அவனுக்கு அருள் செய்த எம் அண்ணலும், உலகின்கண் உயிர்கட்கு நீர் நிலம் முதலான பலவற்றையும் படைத்தளித்தவனும் ஆகிய சிவபெருமானது ஊர் திருப்பனையூர்.

குறிப்புரை :

ஐம்பூதங்களையும் ஆக்கிய இறைவனூர் பனையூர் என்கின்றது. அலல் - துன்பம்; அல்லல் என்பதன் திரிபு. மற்றும் பல என்றமையான் நுண்பூதங்களும், தன்மாத்திரைகளும் ஆகிய அனைத்தையுங் கண்டவன்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனையூரே.

பொழிப்புரை :

சிவபெருமானிடம் வரங்களைப்பெறுதலை எண்ணி மகிழ்வோடு புறப்பட்டு வரும் அடியவர்களே, அப்பெருமான் திருமுன் தலை தாழ்த்தி வணங்குங்கள்; எளிதில் நல்வரம் பெறலாம். பிரமனும் திருமாலும் அறியாத அப்பரமன் உறையும் ஊர் திருப்பனையூராகும்.

குறிப்புரை :

இது வரம் வேண்டியவர்கள் பனையூரைச் சிரந்தாழ வணங்குங்கள் என்கின்றது. முன்னி - எண்ணி. வணங்கும் - வணங்குங்கள்; செய்யுமென்முற்று.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

அழிவல் லமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினானூர்
பழியில் லவர்சேர் பனையூரே.

பொழிப்புரை :

அழிதலில் வல்ல அமணர்களும் பௌத்தர்களும் வாய்த்திறனால் புறங்கூறிய போதும் குறைவுறாத செம்மையாளனாகிய சிவபெருமானது ஊர் பழியற்றவர் சேரும் திருப்பனையூராகும்.

குறிப்புரை :

இது புறச்சமயிகள் பொருந்தாதன சொல்லியபோதும் அவற்றால் இழிவுபடாத இறைவனூர் பனையூர் என்கின்றது. அழிவல் அமணர் - அழிதலில்வல்ல சமணர்கள். தேரர் - புத்தர். மொழி வல்லன - வாய் வன்மையாற் சொல்லும் மொழிகளை. இழிவு - குறைபாடு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

பாரார் விடையான் பனையூர்மேல்
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொன்மா லைகள்பத்தும்
ஊரூர் நினைவா ருயர்வாரே.

பொழிப்புரை :

மண்ணுலகிற் பொருந்தி வாழ்தற்கு ஏற்ற விடை ஊர்தியைக் கொண்ட சிவபெருமானது திருப்பனையூரின் மேல் புகழால் மிக்க தமிழ் ஞானசம்பந்தன் மென்மேலும் விருப்பத்தைத் தருவனவாகப் போற்றிப் பாடிய சொன்மாலைகளான இப்பத்துப் பாடல்களையும் ஒவ்வோரூரிலும் இருந்துகொண்டு நினைவார் உயர்வெய்துவர்.

குறிப்புரை :

பனையூர் மாலை பத்தையும் வல்லவர்கள் உயர்வார் எனப்பயன்கூறுகிறது. பார் - பூமி. ஆராத - கேட்டு அமையாத; அதாவது மேன்மேலும் விருப்பத்தை விளைவிக்கக்கூடிய. ஊர் ஊர் நினை வார் - பொலிகின்றவன் ஊர், மகிழ்ந்தவன் ஊர் என்பன முதலியவாக முடிவனவற்றை நினைவார்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

கரவின் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே.

பொழிப்புரை :

நெஞ்சிற் கரவின்றி மணம் மிக்க சிறந்த மலர்கள் பலவற்றையும் பறித்துக் கொண்டு வந்து இரவும் பகலும் தொழும் அடியார்களுக்கு, தலைமாலை பொருந்தும் செஞ்சடை உடைய சிவபெருமான் வாழும் பதியாகிய மயிலாடுதுறை மேம்பட்ட தலமாகும். வள்ளன்மையுடையான் உகந்தருளும் இடமுமாம்.

குறிப்புரை :

இது மயிலாடுதுறை, இரவும் பகலுந்தொழும் அடியார் கட்குச்சிரம் ஒன்றும் சிவன்வாழும் இடம் என்று அறிவிக்கிறது. கரவு - வஞ்சனை. சிரம் - தலைமாலை. குருவருள் : வரம் என்ற சொல் வழங்குதலைக் குறிக்கும் இங்குள்ள பெருமான் வள்ளற்பெருமானாகலின் வரம் என்ற சொல்லால் அவ்வள்ளலைக் குறித்துள்ளார். அப்பர், வள்ளல் என்று குறிப்பிட்டுள்ளதும் காண்க. மயிலாடுதுறையரன் அடியார்களுக்கு வள்ளலாக அருள் வழங்குகிறான் என்பது குறிப்பு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய கொடியயானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும் பதி, குராமரம், சுரபுன்னை வன்னி ஆகிய மரங்கள் செறிந்த திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

யானைத்தோல்போர்த்த பரமன் உறையும்பதி மயிலாடுதுறை என்கின்றது. உரம் - வலிமை. குரவம் - குராமலர். சுரபுன்னை - இது இக்காலத்து நாகலிங்கப்பூ என வழங்குகிறது.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

ஊனத் திருணீங் கிடவேண்டில்
ஞானப் பொருள்கொண் டடிபேணும்
தேனொத் தினியா னமருஞ்சேர்
வானம் மயிலா டுதுறையே.

பொழிப்புரை :

இப்பிறப்பில் நமக்குள்ள குறைபாடாகிய ஆணவம் என்னும் இருள் நம்மை விட்டு நீங்க வேண்டில், ஞானப்பொருளாய் உள்ள சிவபெருமான் திருவடிகளை வணங்குங்கள். தேனை ஒத்து இனியனாய் விளங்கும் அப்பெருமான் தனக்குச் சேர்வான மயிலாடுதுறையில் விரும்பி உறைகிறான்.

குறிப்புரை :

உயிர்களை அணுவாக்கும் ஆணவமலம் நீங்க வேண்டில் ஞானப்பொருளைத் துணைக்கொண்டு மயிலாடுதுறையைப் பேணுங்கள் என்கின்றது. ஊனத்து இருள் - குறைபாட்டை உண்டாக்கும் மலம். குறைபாடாவது சிவத்தோடொன்றிச் சிவமாகும் ஆன்மாவை மறைத்து அணுவாக்கும் குறைபாடு. தேன் ஒத்து இனியான் - முத்தியில் ஒன்றிய காலத்துத் தேனை ஒத்து இனியவன், `தேனைப் பாலையொத்திருப்பன் முத்தியினிற் கலந்தே` என்றதும் காண்க. அமரும், சேர்வு ஆன. மயிலாடுதுறையை அடிபேணும் எனக் கூட்டுக.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

அஞ்சொண் புலனும் மவைசெற்ற
மஞ்சன் மயிலா டுதுறையை
நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேற்
றுஞ்சும் பிணியா யினதானே.

பொழிப்புரை :

ஐம்பொறிகளைப் பற்றும் ஒள்ளிய புலன்களாகிய அவைகளைக் கெடுத்த பெருவீரனாகிய சிவபெருமான் எழுந்தருளிய மயிலாடுதுறையை மனம் ஒன்றி நினைந்து வழிபட எழுவார் மேல் வரும் பிறவி முதலாகிய பிணிகள் அழிந்தொழியும்.

குறிப்புரை :

பொறிவாயிலைந்தவித்த வீரன் மேவிய மயிலாடு துறையை மனமொன்றித் தியானிப்பவர்களின் பிணிகள் அழியும் என்கின்றது. அஞ்சு ஒண்புலனும் - தத்தமக்கேற்ற பொறிகளைக் கவரும் ஒள்ளிய ஐந்து புலன்களையும். செற்ற - கெடுத்த. மஞ்சன் - இது மைந்தன் என்பதன் போலி. வலிமையுடையோன் என்பதாம். நினைந்து எழுவார் - துயில்விட்டு எழும்போதே தியானித்து எழுபவர்கள். பிணி - பிறவிப்பிணி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

தணியார் மதிசெஞ் சடையான்றன்
அணியார்ந் தவருக் கருளென்றும்
பிணியா யினதீர்த் தருள்செய்யும்
மணியான் மயிலா டுதுறையே.

பொழிப்புரை :

குளிர்ந்த பிறைமதியை அணிந்துள்ள சிவந்த சடை முடியை உடையவனாகிய சிவபெருமானை அணுகியவருக்கு என்றும் அருள் உளதாம். பிணி முதலானவற்றைப் போக்கி அருள்புரியும் மணி போன்றவனாய் அப்பெருமான் மயிலாடுதுறையில் உள்ளான்.

குறிப்புரை :

இது மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்க்கு என்றும் அருள் உளதாம் என்கின்றது. தணியார் மதி - குளிர்ந்தமதி. அணியார்ந்தவர் - அணுகியவர். மணியான் - மணிபோன்றவன். பிணிதீர்ப்பன மணி மந்திரம் ஔஷதம் என்ற மூன்றுமாதலின் அவற்றுள் ஒன்றாய மணிபோன்றவன் என்றார். பிணியாயின தீர்த்து அருள்செய்யும் மணியான், செஞ்சடையான் தன் மயிலாடுதுறை அணியார்ந்தவர்க்கு என்றும் அருள் (உளதாம்) என முடிக்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

தொண்ட ரிசைபா டியுங்கூடிக்
கண்டு துதிசெய் பவனூராம்
பண்டும் பலவே தியரோத
வண்டார் மயிலா டுதுறையே.

பொழிப்புரை :

தொண்டர்களாயுள்ளவர்கள் கூடி இசை பாடியும், தரிசித்தும் துதிக்கும் சிவபெருமானது ஊர் முற்காலத்தும் இக்காலத்தும் வேதியர்கள் வேதங்களை ஓதித்துதிக்க, வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த மயிலாடுதுறையாகும்.

குறிப்புரை :

தொண்டர்கள் கூடித் துதிபாடும் ஊர் என்கின்றது. துதிசெய்பவன் - துதிசெய்யப்படுமவன். பண்டும் - முன்பும்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

அணங்கோ டொருபா கமமர்ந்து
இணங்கி யருள்செய் தவனூராம்
நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
வணங்கும் மயிலா டுதுறையே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று வீற்றிருந்து அருள் புரிபவன் ஊர், முப்புரி நூல் துவளும் அந்தணர்கள் கூடி வணங்கும் திருமயிலாடுதுறை ஆகும்.

குறிப்புரை :

இது மயிலம்மையை ஒருபாகங்கொண்டு அருள் செய்த ஊர் என்கின்றது. அணங்கு - மயிலம்மை. இணங்கி - பொருந்தி. நுணங்கும் - துவளும். புரிநூலவர்கள் - முப்புரி நூலையுடைய அந்தணர்கள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

சிரங்கை யினிலேந் தியிரந்த
பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற
வரங்கொண் மயிலா டுதுறையே.

பொழிப்புரை :

பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலர் இல்லங்களிலும் சென்று இரந்த மேன்மை கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனை நெரியுமாறு அடர்த்த நன்மையாளனாகிய அப்பெருமானை அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை.

குறிப்புரை :

இது பிரமகபாலத்தைத்தாங்கி இரந்த பரமேட்டியின் இடம் என்கின்றது. பரம்கொள் பரமேட்டி - மேன்மையைக் கொண்ட சிவன். வரையால் அரங்க - கைலையால் நசுங்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

ஞாலத் தைநுகர்ந் தவன்றானும்
கோலத் தயனும் மறியாத
சீலத் தவனூர் சிலர்கூடி
மாலைத் தீர்மயிலா டுதுறையே.

பொழிப்புரை :

உலகை விழுங்கித் தன் வயிற்றகத்தே வைத்த திரு மாலும், அழகிய நான்முகனும் அறியாத தூயவனாகிய சிவபெருமானது ஊர், அடியவர் ஒருங்கு கூடி வழிபட்டுத் தம் அறியாமை நீங்கப் பெறும் சிறப்புடைய திருமயிலாடுதுறை ஆகும்.

குறிப்புரை :

இது அயனும் மாலும் அறியாதவனூர் என்கின்றது. ஞாலத்தை நுகர்ந்தவன் - பூமியைவிழுங்கித் தன் வயிற்றகத்து அடக்கிய மாயன். சீலம் - எளிமை. மால் - மயக்கம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

நின்றுண் சமணுந் நெடுந்தேரர்
ஒன்றும் மறியா மையுயர்ந்த
வென்றி யருளா னவனூராம்
மன்றன் மயிலா டுதுறையே.

பொழிப்புரை :

நின்றுண்பவர்களாகிய சமணர்களும் நெடிதுயர்ந்த புத்தர்களும் ஒரு சிறிதும் தன்னை அறியாதவர்களாய் ஒழியத் தான் உயர்ந்த வெற்றி அருள் இவைகளைக் கொண்டுள்ள சிவபெருமானது ஊர் நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை ஆகும்.

குறிப்புரை :

புறச்சமயத்தார்க்கு அறியொண்ணாதபடி உயர்ந்தோனிடம் இது என்கின்றது. வென்றி அருளான் - வெற்றியை விளைவிக்கும் அருளையுடையவன். மன்றல் - நறுமணம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

நயர்கா ழியுண்ஞா னசம்பந்தன்
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர்வா மிவையுற் றுணர்வார்க்கே.

பொழிப்புரை :

ஞானத்தினால் மேம்பட்டவர் வாழும் சீகாழிப்பதியுள் வாழும் ஞானசம்பந்தன், தன்னை வழிபடுவாரின் மயக்கத்தைத் தீர்த்தருளும் மயிலாடுதுறை இறைவனைப் பற்றித் திருவருள் உணர்த்தும் செயலால் உரைத்தனவாகிய இத்திருப்பதிகப் பாடல் களாகிய இவை பத்தும் உற்றுணர்வார்க்கு உயர்வைத் தரும்.

குறிப்புரை :

இவைபத்தும் உணர்வார்க்கு உயர்வாம் என்கின்றது. நயர் காழி - நயம் உணர்ந்த பெரியோர்கள் உறைகின்ற காழி. மயல் - மயக்கம். செயலால் - திருவருள் உண்ணின்று செய்தலால்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

அந்தமுமாதியு மாகியவண்ணல் ஆரழலங்கை யமர்ந்திலங்க
மந்தமுழவ மியம்ப மலைமகள் காணநின்றாடிச்
சந்தமிலங்கு நகுதலைகங்கை தண்மதியம் மயலேததும்ப
வெந்தவெண் ணீறுமெய்பூசும் வேட்கள நன்னகராரே.

பொழிப்புரை :

உலகங்களைப் படைப்பவரும், இறுதி செய்பவரு மாகிய, தலைமைத் தன்மையுடைய சிவபிரான் பிறரால் பொறுத்தற்கரிய தீகையின்கண் விளங்க, மெல்லென ஒலிக்கும் முழவம் இயம்ப, மலைமகளாகிய பார்வதிதேவி காணுமாறு திருநடம் புரிந்து, அழகு விளங்கும் கபாலமாலை, கங்கை, தண் பிறை ஆகியன தலையின்கண் விளங்க, வெந்த வெண்ணீறு மெய்யில் பூசியவராய்த் திருவேட்கள நன்னகரில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

வேட்களாநாதர் அழல் அங்கையில் தயங்க, கங்கையும் கபாலமும் மதியமும் விளங்க, மலைமகள் காண நின்றாடுவர் என்கின்றது. அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் - காணப்பட்ட பிரபஞ்சத்திற்கெல்லாம் இறுதிசெய்பவனும், முதலாய் நின்று படைப்பவனும் ஆகிய பெருமையிற் சிறந்தவன். `அந்தம் ஆதி` சிவஞான போதம். ஆரழல் - பிறரால் பொறுத்தற்கரிய தீ. மந்த முழவம் - மந்த ஸ்தாயியில் அடிக்கப்பெறுகின்ற மத்தளம். மலைமகள் - உமாதேவி. நோயுண் மருந்து தாயுண்டாங்கு இறைவனது ஆனந்தத்தாண்டவத்தை மலைமகள் கண்டு ஆன்மாக்களின் பக்குவத்திற்கு ஏற்பப்பயன் கொள்ளச் செய்கின்றாள் ஆதலின் உமைகாண நின்றாடி என்றார். நகரார் ஆகிய அண்ணல், இலங்க, இயம்ப, ஆடி, ததும்ப, பூசும் என முடிக்க. குருவருள் : `வேட்கள நன்னகராரே` என்பதற்கு ஏற்ப அவ்வருள் வாக்கின்படி இன்று இத்தலம் பல்கலைக்கழகத்துடன் அண்ணாமலை நகராக விளங்குவது காண்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

சடைதனைத்தாழ்தலு மேறமுடித்துச் சங்கவெண்டோடு சரிந்திலங்கப்
புடைதனிற் பாரிடஞ்சூழப் போதருமா றிவர்போல்வார்
உடைதனினால்விரற் கோவணவாடை யுண்பதுமூரிடு பிச்சைவெள்ளை
விடைதனை யூர்திநயந்தார் வேட்கள நன்னகராரே.

பொழிப்புரை :

திருவேட்கள நன்னகர் இறைவன், தாழ்ந்து தொங்கும் சடைமுடியை எடுத்துக் கட்டிச் சங்கால் இயன்ற வெள்ளிய தோடு காதிற் சரிந்து விளங்கவும், அருகில் பூதங்கள் சூழ்ந்து வரவும், போதருகின்றவர். அவர்தம் உடையோ நால்விரல் அகலமுடைய கோவண ஆடையாகும். அவர் உண்பதோ ஊரார் இடும் பிச்சையாகும். அவர் விரும்பி ஏறும் ஊர்தியோ வெண்ணிறமுடைய விடையாகும்.

குறிப்புரை :

இறைவன் சடைமுடித்து, சங்ககுண்டலந்தாழ, பூதந்தாழப் போதருவர்; அவருக்கு உடை கோவணம்; உண்பது பிச்சை; ஊர்தி இடபம் என்கின்றது. ஏறமுடித்து - எடுத்துக்கட்டி, சரிந்து - தாழ்ந்து. பாரிடம் - பூதம். போல்வார் - ஒப்பில் போலி.ஊர்தி -வாகனம். கோவணம் நால்விரல் அகலமுடையதாயிருத்தல் வேண்டும் என்பது மரபு ஆதலின் நால் விரல் கோவணம் என்றார்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

பூதமும்பல்கண மும்புடைசூழப் பூமியும்விண்ணு முடன்பொருந்தச்
சீதமும்வெம்மையு மாகிச் சீரொடுநின்றவெஞ் செல்வர்
ஓதமுங்கானலுஞ் சூழ்தருவேலை யுள்ளங்கலந்திசை யாலெழுந்த
வேதமும்வேள்வியு மோவா வேட்கள நன்னகராரே.

பொழிப்புரை :

கடல்நீர்ப் பெருக்கும் சோலையும் சூழ்ந்ததும், அந்தணர்கள் மனங்கலந்து பாடும் இசையால் எழுந்த வேத ஒலியும், அவர்கள் இயற்றும் வேள்விகளும் இடையறாது நிகழும் இயல்பினதும், ஆகிய திருவேட்கள நன்னகர் இறைவர், பூதங்களும் சிவ கணங்களும் அருகில் சூழ்ந்து விளங்க, விண்ணும் மண்ணும் தம்பால் பொருந்தத் தண்மையும் வெம்மையும் ஆகிப் புகழோடு விளங்கும் எம் செல்வராவார்.

குறிப்புரை :

இது விண்ணும் மண்ணும் கலந்து தட்பமும் வெப்ப முமாகிப் புகழோடு நின்ற செல்வர் வேட்கள நன்னகரார் என்று அறிவிக்கின்றது. உடன்பொருந்த - எங்குமாயிருக்க. உள்ளங்கலந்து இசையால் எழுந்த வேதம் - மனத்தில் நின்று ஊறி இசையோடு எழுந்த வேதம். ஓவா - இடையறாத.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

அரைபுல்குமைந்தலை யாடலரவ மமையவெண்கோவணத் தோடசைத்து
வரைபுல்குமார்பி லொராமை வாங்கியணிந் தவர்தாந்
திரைபுல்குதெண்கடல் தண்கழியோதந் தேனலங்கானலில் வண்டுபண்செய்ய
விரைபுல்குபைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன்னகராரே.

பொழிப்புரை :

இடையிற் பொருந்திய ஐந்து தலைகளையுடைய தாய், ஆடும் பாம்பை வெண்மையான கோவணத்தோடும் பொருந்தக்கட்டி, மலை போன்று அகன்ற மார்பின்கண் ஒப்பற்ற ஆமை ஓட்டை விரும்பி அணிந்தவராய் விளங்கும் சிவபெருமானார் அலைகளையுடைய தெளிந்த கடல்நீர் பெருகிவரும் உப்பங்கழிகளை உடையதும், வண்டுகள் இசைபாடும் தேன்பொருந்திய கடற்கரைச் சோலைகளை உடையதும், மணம் கமழும் பைம்பொழில் சூழ்ந்ததுமாகிய திருவேட்கள நன்னகரில் எழுந்தருளி உள்ளார்.

குறிப்புரை :

அரைபுல்கும் - அரையைத் தழுவிய. அசைத்து - இறுக உடுத்து. வரைபுல்கு - மலையையொத்த. ஆமை - ஆதி கூர்மம். ஓதம் பைம்பொழில் சூழ்ந்த வேட்களம் என்க; என்றது நெய்தலோடு தழுவிய நகர் என அறிவித்தவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

பண்ணுறுவண்டறை கொன்றையலங்கல் பால்புரைநீறுவெண் ணூல்கிடந்த
பெண்ணுறுமார்பினர் பேணார் மும்மதிலெய்த பெருமான்
கண்ணுறுநெற்றி கலந்தவெண்டிங்கட் கண்ணியர்விண்ணவர் கைதொழுதேத்தும்
வெண்ணிறமால்விடை யண்ணல் வேட்கள நன்னகராரே.

பொழிப்புரை :

திருவேட்கள நன்னகர் இறைவர், இசை பாடும் வண்டுகள் சூழ்ந்த கொன்றை மாலையை அணிந்தவராய், பால் போன்ற வெண்ணீறு பூசியவராய், முப்புரிநூலும் உமையம்மையும் பொருந்திய மார்பினராய்ப் பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களையும் எய்து அழித்த தலைவராய், நெற்றிக் கண்ணராய், பிறைமதிக் கண்ணியராய் விண்ணவர் கைதொழுது ஏத்தும் வெண்மையான பெரிய விடை மீது ஊர்ந்து வருபவராய் விளங்கும் தலைவராவார்.

குறிப்புரை :

இது கொன்றைமாலை, பூணூல் இவற்றையணிந்து உமை ஒருபாதியராகத் திரிபுரமெரித்த பெருமான் இவர் என்கின்றது. பண் உறு வண்டு - இசையை எழுப்புகின்ற வண்டுகள். அறை - ஒலிக்கின்ற. அலங்கல் - மாலை. கண்ணுறு நெற்றி - அக்கினிக்கண் பொருந்திய நெற்றி. வெண்திங்கள் கண்ணியர் - பிறையைத் தலை மாலையாய் அணிந்தவர்; பிறையைக் கண்ணியாகச் சூடுதல் மரபு. `மாதர்ப் பிறைக்கண்ணியானை` என்பதை நோக்குக. மால்விடை - பெரிய இடபம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

கறிவளர்குன்ற மெடுத்தவன்காதற் கண்கவரைங்கணை யோனுடலம்
பொறிவள ராரழலுண்ணப் பொங்கிய பூதபுராணர்
மறிவளரங்கையர் மங்கையொர்பங்கர் மைஞ்ஞிறமானுரி தோலுடையாடை
வெறிவளர்கொன்றையந் தாரார் வேட்கள நன்னகராரே.

பொழிப்புரை :

திருவேட்கள நன்னகர் இறைவர், மிளகுக் கொடிகள் வளர்ந்து செறிந்த கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த திருமாலின் அன்பு மகனும், அழகு மிக்கவனும், ஐங்கணை உடையவனுமாகிய மன்மதனின் உடல், பொறி பறக்கும் அரிய அழல் உண்ணும்படி சினந்த பழையோரும், மான் ஏந்திய கரத்தினரும், மங்கை பங்கரும், கருநிறமுடைய யானையின் தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவரும், மணங்கமழும் கொன்றை மாலையை அணிந்தவருமாவார்.

குறிப்புரை :

இது மன்மதனை எரித்த மங்கைபங்கர் திருத்தலம் இவ்வூர் என்கின்றது. கறி - மிளகு. குன்றம் என்றது கோவர்த்தனம். எடுத்தவன் - கண்ணன். காதல் கண்கவர் ஐங்கணையோன் - மகனாகிய பேரழகனாகிய மன்மதன். ஆர் அழல் உண்ண - தீப்பற்றி எரிய. பொங்கிய - கோபித்த. மறி - மான். மைஞ்ஞிற மான் - கருமான். வெறி - மணம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

மண்பொடிக்கொண்டெரித் தோர்சுடலை மாமலைவேந்தன் மகள்மகிழ
நுண்பொடிச்சேர நின்றாடி நொய்யன செய்யலுகந்தார்
கண்பொடிவெண்டலை யோடுகையேந்திக் காலனைக்காலாற் கடிந்துகந்தார்
வெண்பொடிச் சேர்திருமார்பர் வேட்கள நன்னகராரே.

பொழிப்புரை :

திருவேட்கள நன்னகர் இறைவர் மண்ணும் பொடியாகுமாறு உலகை அழித்து, ஒப்பற்ற அச்சுடலையில் சிறப்புத்தன்மையை உடைய இமவான் மகளாகிய பார்வதிதேவி கண்டு மகிழ, சுடலையின் நுண்பொடிகள் தம் உடலிற்படிய, நின்று ஆடி, அத்திருக்கூத்து வாயிலாக நுட்பமான பஞ்ச கிருத்தியங்கள் செய்தலை உகந்தவரும், கண் பொடிந்து போன வெள்ளிய தலையோட்டினைக் கையில் ஏந்தியவரும், காலனைக் காலால் கடிந்துகந்தவரும் வெள்ளிய திருநீறு சேர்ந்த அழகிய மார்பினரும் ஆவார்.

குறிப்புரை :

உலகத்தைச் சங்கரித்த சுடலையில் மலைமகள் மகிழ ஆடி நுட்பமான செயலைச் செய்பவர் இந்நகரார் என்கின்றது. பொடிக் கொண்டு - பொடித்தன்மையைக் கொள்ள. நுண்பொடிச் சேர - துகள் திருமேனியில் பொருந்த. நொய்யன செய்யல் உகந்தார் - மிகவும் நுட்பமான பஞ்சகிருத்தியங்களைச் செய்யத்திருவுளம் பற்றினார். செய்தார் என்னாது செய்யல் உகந்தார் என்பதில் சிறப்பிருத்தல் நோக்குக. செய்தல் பிரமனாதியர் தொழில். கண்பொடி வெண்தலை - கண் பொடிந்து போனதலை. பொடிதல் - இல்லையாதல்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

ஆழ்தருமால்கட னஞ்சினையுண்டார் அமுதமமரர்க் கருளிச்
சூழ்தருபாம்பரை யார்த்துச் சூலமோடொண் மழுவேந்தித்
தாழ்தருபுன்சடை யொன்றினைவாங்கித் தண்மதியம்மய லேததும்ப
வீழ்தருகங்கை கரந்தார் வேட்கள நன்னகராரே.

பொழிப்புரை :

திருவேட்கள நன்னகர் இறைவர், ஆழமான பெரிய கடலிடத்துத் தோன்றிய அமுதத்தைத் தேவர்க்கு அளித்தருளி நஞ்சினைத் தாம் உண்டவரும், சுற்றிக் கொள்ளும் இயல்பினதாய பாம்பினை இடையிற் கட்டி, சூலம், ஒளி பொருந்திய மழு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவரும், உலகையே அழிக்கும் ஆற்றலோடு பெருகி வந்த கங்கை நீரைத் தம் பிறை அயலில் விளங்கத்தலையிலிருந்து தொங்கும் மெல்லிய சடை ஒன்றினை எடுத்து அதன்கண் சுவறுமாறு செய்தவரும் ஆவார்.

குறிப்புரை :

நஞ்சினைத் தாம் உண்டு, அமுதத்தைத் தேவர்க்கருளி, பாம்பு, சூலம், மழு இவற்றைத் தரித்துச் சடையில் கங்கையை மறைத்து வைத்தவர் இவர் என்கின்றது. புன்சடை - மெல்லிய சடை. உயிரைக் கொல்லும் விடத்தைக் தான் உண்டு சாவாமையையளிக்கும் அமுதினைத் தேவர்க்களித்தது இவர் பெருங்கருணையைத் தெரிவிக்கிறது.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

திருவொளிகாணிய பேதுறுகின்ற திசைமுகனுந் திசைமேலளந்த
கருவரையேந்திய மாலுங் கைதொழ நின்றதுமல்லால்
அருவரையொல்க வெடுத்தவரக்க னாடெழிற்றோள்க ளாழத்தழுந்த
வெருவுறவூன்றிய பெம்மான் வேட்கள நன்னகராரே.

பொழிப்புரை :

திருவேட்கள நன்னகர் இறைவர், அழகிய பேரொளிப் பிழம்பைக் காணும்பொருட்டு மயங்கிய நான்முகனும், எண்திசைகளையும் அளந்தவனாய்ப் பெரிதான கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய திருமாலும், அடிமுடி காண இயலாது கைதொழுது நிற்க, கயிலைமலை தளருமாறு அதனை எடுத்த இராவணனின் வெற்றியும் அழகு மிக்க தோள்களும் ஆழத் தழுந்தவும் அவன் அஞ்சி நடுங்கவும் தம் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவார்.

குறிப்புரை :

இறைவனுடைய பேர் ஒளித்திருமேனியைக் காண வருந்திய அயனும் மாலும் அறியமுடியாமல் வணங்க நின்றதோடு இராவணனை ஆழத்தழுத்திய பெருமான் இந்நகரார் என அறிவிக்கின்றது. திருவொளி - அழல்தூணின் பேரொளி. திசைமேல் அளந்த - திக்குகள் அனைத்தையுமளந்த. கருவரை - கோவர்த்தனகிரி. அருவரை - கைலைமலை. ஆடு எழில் தோள் - வெற்றியோடு கூடிய எழுச்சிமிக்க தோள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

அத்தமண்டோய்துவ ரார்அமண்குண்டர் யாதுமல்லாவுரை யேயுரைத்துப்
பொய்த்தவம் பேசுவதல்லாற் புறனுரையாதொன்றுங் கொள்ளேல்
முத்தனவெண்முறு வல்லுமையஞ்ச மூரிவல்லானையி னீருரிபோர்த்த
வித்தகர்வேத முதல்வர் வேட்கள நன்னகராரே.

பொழிப்புரை :

செந்நிறமான காவி மண் தோய்ந்த ஆடைகளை அணிந்த பௌத்தர்கள், சமண் குண்டர்கள் ஆகியோர் பொருளற்றவார்த்தைகளை உரைத்துப் பொய்த்தவம் பேசுவதோடு சைவத்தைப்புறனுரைத்துத்திரிவர். அவர்தம் உரை எதனையும் கொள்ளாதீர். முத்துப் போன்ற வெண்முறுவல் உடைய உமையம்மை அஞ்சுமாறு வலியயானையின் தோலை உரித்துப் போர்த்த வித்தகரும் வேத முதல்வருமாகிய வேட்கள நன்னகர் இறைவரை வணங்குமின்.

குறிப்புரை :

இது யானைத்தோல் போர்த்த வித்தகர் இவ்வூரார் என்கின்றது. அத்தம் மண் - செந்நிறமான மண். `ஆடுநீரன அத்து மண்களும்` சிந்தாமணி. 2418. யாதும் அல்லா உரை - பொருளற்ற உரை. முறுவல் - பல். மூரி - வலிமை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

விண்ணியன்மாடம் விளங்கொளிவீதி வெண்கொடியெங்கும் விரிந்திலங்க
நண்ணியசீர்வளர் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணினல்லாளொரு பாகமமர்ந்து பேணியவேட்கள மேன்மொழிந்த
பண்ணியல்பாடல் வல்லார்கள் பழியொடு பாவமிலாரே.

பொழிப்புரை :

விண்ணுறவோங்கிய மாட வீடுகளையும், வெண்மையான கொடிகள் எங்கும் விரிந்து விளங்கும் ஒளி தவழும் வீதிகளையும் உடையதும், பொருந்திய சீர்வளர்வதும் ஆகிய சீகாழிப்பதியுள் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் பெண்ணில் நல்லவளான நல்ல நாயகியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று எழுந்தருளியுள்ள திருவேட்களத்து இறைவர்மீது பாடியருளிய பண்பொருந்திய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் பழி பாவம் இலராவர்.

குறிப்புரை :

இது திருவேட்களப்பதிகத்தை ஓத வல்லவர்கட்குப் பழி பாவம் இல்லை என்கின்றது. புகழுக்கு அடையாளமாக வெண்கொடி எடுத்தல் மரபு. பெண்ணின் நல்லாள்: இது இத்தலத்து அம்மையின் பெயராகிய நல்லநாயகி என்பதை நினைவூட்டுகின்றது.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

பொடியுடைமார்பினர் போர்விடையேறிப் பூதகணம் புடைசூழக்
கொடியுடையூர்திரிந் தையங் கொண்டு பலபலகூறி
வடிவுடைவாணெடுங் கண்ணுமைபாக மாயவன்வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமலரிட்டுக் கறைமிடற்றானடி காண்போம்.

பொழிப்புரை :

திருநீறு அணிந்த மார்பினராய், வீரம் மிக்க விடை மீது ஏறி, பூதகணங்கள் புடைசூழ்ந்து வர, கொடிகள் கட்டிய ஊர்களில் திரிந்து பற்பல வாசகங்களைக் கூறிப்பலியேற்று, அழகிய வாள் போன்ற நெடிய கண்களையுடைய உமையொரு பாகராகிய சிவபிரானார் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று மணம் கமழும் சிறந்த மலர்களால் அருச்சித்து அக்கறைமிடற்றார் திருவடிகளைக் காண்போம்.

குறிப்புரை :

இது பலிகொண்டு உமையொருபாகனாய் எழுந்தருளி யிருக்கும் நீலகண்டனது திருவடியை, வாழ்கொளி புத்தூரில் சென்று மலரிட்டு வணங்குவோம் என்கின்றது. ஐயம் - பிச்சை. பிச்சை ஏற்பார் வாகனத்திலேறிப் பலர் புடைசூழச் செல்லுதல் அழகியது என நயந்தோன்றநின்றது. வடிவு - அழகு. புத்தூர் மிடற்றான் அடிமலரிட்டுக் காண்போம் எனக்கூட்டுக.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

அரைகெழுகோவண வாடையின்மேலோர் ஆடரவம்மசைத் தையம்
புரைகெழுவெண்டலை யேந்திப் போர்வி டை யேறிப்புகழ
வரைகெழுமங்கைய தாகமொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்
விரைகமழ் மாமலர்தூவி விரிசடையானடி சேர்வோம்.

பொழிப்புரை :

இடையில் கட்டிய கோவண ஆடையின்மேல் ஆடும் அரவம் ஒன்றைக் கட்டிக் கொண்டு, துளை பொருந்திய வெண்தலையோட்டைக் கையில், ஏந்திப் பலியேற்று, சினம் பொருந்திய விடை மீது ஏறிப் பலரும் புகழ, இமவான் மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று, மணம் கமழும் சிறந்த மலர்களைத் தூவி அவ்விரிசடையான் திருவடிகளைச் சேர்வோம்.

குறிப்புரை :

பிரமகபாலத்தில் பிச்சை ஏற்ற பெருமானை மலர் தூவித்தியானிப்போம் என்கின்றது. புரை - ஓட்டை. மங்கையது ஆகம் - உமையின் திருமேனி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

பூணெடுநாக மசைத்தனலாடிப் புன்றலையங்கையி லேந்தி
ஊணிடுபிச்சையூ ரையம் முண்டியென்று பலகூறி
வாணெடுங்கண்ணுமை மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தாணெடு மாமலரிட்டுத் தலைவனதாணிழல் சார்வோம்.

பொழிப்புரை :

நெடிய பாம்பை அணிகலனாகப் பூண்டு, அனலைக் கையின்கண் ஏந்தி, ஆடிக்கொண்டும், பிரமனது தலையோட்டை அழகிய கையொன்றில் ஏந்திப் பல ஊர்களிலும் திரிந்து மக்கள் உணவாகத் தரும் பிச்சையைத் தனக்கு உணவாக ஏற்றுப் பற்பலவாறு கூறிக்கொண்டும், வாள் போன்ற நீண்ட கண்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாக ஏற்று விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று அப்பெருமான் திருவடிகளில் சிறந்த மலர்களைத் தூவித் தலைவனாக விளங்கும் அவன் தாள் நிழலைச் சார்வோம்.

குறிப்புரை :

இது இறைவனுக்கு மலரிட்டு வணங்கி அவன்தாள் நிழலைச் சார்வோம் என்கின்றது. பூண் அசைத்து - ஆபரணமாகக் கட்டி, இடுபிச்சை ஊண் உண்டி ஊர் ஐயம் என்று பலகூறி என்றது பிச்சைதான் உணவு என்பதைப் பலமுறையாகச் சொல்லி. தலைவன தாள் - தலைவனுடைய திருவடிகள். அகரம் ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

தாரிடுகொன்றையொர் வெண்மதிகங்கை தாழ்சடை மேலவைசூடி
ஊரிடுபிச்சைகொள் செல்வ முண்டியென்று பலகூறி
வாரிடுமென்முலை மாதொருபாக மாயவன்வாழ்கொளி புத்தூர்க்
காரிடு மாமலர்தூவிக் கறைமிடற்றானடி காண்போம்.

பொழிப்புரை :

கொன்றை மாலையையும், வெண்மதியையும், கங்கையையும், தாழ்ந்து தொங்கும் சடைமுடியில் சூடி, ஊர் மக்கள் இடும் பிச்சையை ஏற்றுக்கொண்டு, அதுவே தனக்குச் செல்வம், உணவு என்று பலவாறு கூறிக்கொண்டு கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று, கார்காலத்தே மலரும் சிறந்த கொன்றை மலர்களைத் தூவிக் கறைமிடற்றானாகிய அப்பெருமான் திருவடிகளைக் காண்போம்.

குறிப்புரை :

கார்காலத்துப் பூவைத் தூவித் திருவடியைத் தரிசிப்போம் என்கின்றது. நமக்கு உணவு ஊர்ப்பிச்சைதான் என்று சொல்லிக்கொண்டு ஒரு பெண்ணை ஒருபாகமாகக் கொண்டிருக்கிறானென நயச்சுவை காண்க. வார் - கச்சு. கார் இடுமாமலர் - கார்காலத்துப் பூவாகிய கொன்றை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

கனமலர்க்கொன்றை யலங்கலிலங்கக் காதிலொர் வெண்குழையோடு
புனமலர்மாலை புனைந்தூர் புகுதியென்றே பலகூறி
வனமுலைமாமலை மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்
இனமல ரேய்ந்தனதூவி யெம்பெருமானடி சேர்வோம்.

பொழிப்புரை :

கார்காலத்து மலராகிய கொன்றை மலர்மாலை தன் திருமேனியில் விளங்க, ஒரு காதில் வெண்குழையணிந்து, முல்லை நிலத்து மலர்களால் தொடுக்கப்பெற்ற மாலைகளைச்சூடிப் பல ஊர்களுக்கும் சென்று பற்பல கூறிப் பலியேற்று அழகிய தனங்களையுடைய மலைமகளாகிய பார்வதியை ஒருபாகமாகக் கொண்ட எம்பிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று நமக்குக் கிட்டிய இனமான மலர்களைத் தூவி அவன் அடிகளைச் சேர்வோம்.

குறிப்புரை :

இதுவும் அது. கனமலர் - பொன்போலுமலர். அலங்கல் - மாலை. புனமலர் - முல்லைநிலத்துப் பூக்கள். புகுதி - புகுவாய். ஏய்ந்தன - அருச்சிக்கத்தகுந்தன.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

அளைவளர்நாக மசைத்தனலாடி யலர்மிசை யந்தணனுச்சிக்
களைதலை யிற்பலிகொள்ளுங் கருத்தனே கள்வனேயென்னா
வளையொலிமுன்கை மடந்தையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தளையவிழ் மாமலர்தூவித் தலைவனதாளிணை சார்வோம்.

பொழிப்புரை :

புற்றின்கண் வாழும்பாம்பினை இடையில் கட்டி, சுடுகாட்டில் ஆடி, தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் உச்சித்தலையைக் கொய்து, அத்தலையோட்டில் பலி கொள்ளும் தலைவனே, நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கள்வனே, என்று, வளையல் ஒலிக்கும் முன் கையையுடைய பார்வதிதேவியை ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமான் உறையும் திருவாழ்கொளிபுத்தூர் சென்று, மொட்டவிழ்ந்த நறுமலர்களைத்தூவி அப்பெருமானின் தாளிணைகளைச் சார்வோம்.

குறிப்புரை :

கருத்தனே ! கள்வனே ! என்று மலர்தூவித் தாழ்ந்து சார்வோம் என்கின்றது . அளை - புற்று . அலர்மிசை அந்தணன் - பிரமன் . உச்சி களை தலையில் - உச்சியிலிருந்து களையப்பட்ட தலையில் . தளை - முறுக்கு .

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

அடர்செவிவேழத்தி னீருரிபோர்த்து வழிதலையங்கையி லேந்தி
உடலிடுபிச்சையோ டைய முண்டியென்று பலகூறி
மடனெடுமாமலர்க் கண்ணியொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தடமல ராயினதூவித் தலைவனதாணிழல் சார்வோம்.

பொழிப்புரை :

பரந்த காதுகளையுடைய யானையைக் கொன்று, அதன் உதிரப் பசுமை கெடாத தோலை உரித்துப் போர்த்து, கிள்ளிய பிரமன் தலையோட்டைக் கையில் ஏந்தி, தாருகாவன முனிவர் மகளிர் தம் கைகளால் இட்ட பிச்சையோடு ஐயம், உண்டி, என்று பலகூறப்பலியேற்ற மடப்பம் வாய்ந்த நீண்ட நீல மலர் போன்ற கண்களையுடைய உமையொரு பாகனாக உள்ள திருவாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்கள் பலவற்றால் அருச்சித்து அப்பெருமான் தாள்நிழலைச் சார்வோம்.

குறிப்புரை :

ஐயமும் பிச்சையுமே உண்பவன் என்றுகூறி உமையோடிருக்குந் தலைவன்தாளை மலர்தூவிச் சார்வோம் என்கின்றது. அடர்செவி - பரந்தகாது. அழி தலை - இறந்தார் தலை; என்றது பிரமகபாலம். பிச்சை - இரவலனாகச்சென்று ஏற்பது. ஐயம் - இடுவானாக அழைத்திடுவது. இவ்வேற்றுமை தோன்றவே ஷ்ரீ ஆண்டாள் திருப்பாவையில் `ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி` என்றார். ஆத்திசூடியில் `ஐயம் இட்டுண்` என்று இடுவார் மேலேற்றிச்சொன்னதும் இக்கருத்து நோக்கி, `பிச்சைபுகினும் கற்கை நன்றே` என்பது இதனை வலியுறுத்தல் காண்க. உடலிடு பிச்சை - தன்வசமிழந்து தாருகாவனத்து மாதர் உடலாலிட்ட (பரவசமாகிய) பிச்சை. மாறுபட்ட என்றுமாம். உடனிடு என்றொரு பாடமும் உண்டு. அங்ஙனமாயின் உடனேயிட்ட பிச்சை என்பதாம். பிச்சையிடுவார் இரவலரைக் காக்க வைத்தலாகாது என்பது மரபு. போர்த்து, ஏந்தி, உண்டி என்று கூறி ஆயவன் புத்தூர்த்தலைவன் தாணிழல் தூவிச்சார்வோம் என வினை முடிவு செய்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

உயர்வரையொல்க வெடுத்தவரக்க னொளிர்கடகக்கை யடர்த்து
அயலிடுபிச்சையோ டைய மார்தலையென்றடி போற்றி
வயல்விரிநீல நெடுங்கணிபாக மாயவன்வாழ்கொளி புத்தூர்ச்
சயவிரி மாமலர்தூவித் தாழ்சடையானடி சார்வோம்.

பொழிப்புரை :

உயர்ந்த கயிலைமலையை அசையுமாறு பெயர்த்த இராவணனது ஒளி பொருந்திய கடகத்தோடு கூடிய தோள் வலிமையை அடர்த்தவனே என்றும், ஊர் மக்கள் இடும் பிச்சை, ஐயம் ஆகியவற்றை உண்ணும் தலைவனே என்றும், வயலின்கண் தோன்றி மலர்ந்த நீலமலர் போன்ற நீண்ட கண்களையுடைய உமையம்மை பாகனே என்றும் திருவாழ்கொளிபுத்தூர் இறைவனே, என்றும் வெற்றி யோடு மலர்ந்த சிறந்த மலர்களைத் தூவி அத்தாழ் சடையான் அடிகளைச் சார்வோம்.

குறிப்புரை :

இதுவுமது. ஒல்க - அசைய. அடர்த்து - நெருக்கி. ஆர்தல் ஐ என்று - உண்டலை உடைய தலைவன். என்று சயவிரி - வெற்றியோடு விரிந்த. அடர்த்து, ஆர்தலையுடையவன் என்று, பாகம் ஆயவன் தாழ்சடையான் அடிமலர்தூவிப் போற்றிச் சார்வோம் எனப்பொருள் முடிக்க. சயவிரிமலர் - வாகை மலர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

கரியவனான்முகன் கைதொழுதேத்தக் காணலுஞ்சாரலு மாகா
எரியுருவாகியூ ரைய மிடுபலியுண்ணியென் றேத்தி
வரியரவல்குன் மடந்தையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்
விரிமல ராயினதூவி விகிர்தனசேவடி சேர்வோம்.

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் கைகளால் தொழுதேத்திக் காணவும் சாரவும் இயலாத எரி உரு ஆகியவனே என்றும், பல ஊர்களிலும் திரிந்து ஐயம், பிச்சை ஆகியவற்றை உண்பவனே என்றும் போற்றிப் பொறிகளோடு கூடிய பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனாகிய வாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்களைத் தூவி வழிபட்டு விகிர்தனாகிய அவன் சேவடிகளைச் சேர்வோம்.

குறிப்புரை :

மால் அயன் இருவர்க்கும் அறியலாகாவிகிர்தன் அடி சேர்வோம் என்கின்றது. கரியவன் - திருமால்; கரியவன் சாரலும், நான்முகன் காணலுமாகா எனக் கூட்டுக. எரியுரு - அக்னிமலையின் வடிவு. வரி யரவு - பொறிகளோடு கூடிய பாம்பின் படம். விகிர்தன - சதுரப்பாடுடையவனது.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

குண்டமணர்துவர்க் கூறைகண்மெய்யிற் கொள்கையினார் புறங்கூற
வெண்டலையிற்பலி கொண்டல் விரும்பினையென்று விளம்பி
வண்டமர்பூங்குழன் மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கண் மாமலர்தூவத் தோன்றிநின்றானடி சேர்வோம்.

பொழிப்புரை :

கொழுத்த அமணர்களும், துவராடைகள் போர்த்த புத்தர்களும், புறம் பேசுமாறு வெண்மையான தலையோட்டின்கண் பலியேற்றலை விரும்பியவனே என்று புகழ்ந்து போற்றி, வண்டுகள் மொய்க்கும் அழகிய கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவன் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று அடியவர்கள் சிறந்த மலர்களைத் தூவி வழிபட அவர்கட்குக் காட்சி அளிப்பவனாகிய சிவனடிகளைச் சேர்வோம்.

குறிப்புரை :

அமணர் புறங்கூற, பிச்சையேற்பவன் என்றுகூறி மலர்தூவ நின்றான் அடி சேர்வோம் என்கின்றது. புறச்சமயத்தார் பொருந்தாதன கூறவும், நம்போல்வார்க்கு வெளிப்பட்டு அருள் செய்யும் அண்ணலாதலின் அடிசேர்வோம் என்றார். துவர்க்கூறை - மருதந்துவர் தோய்த்த ஆடை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

கல்லுயர்மாக்கட னின்றுமுழங்குங் கரைபொரு காழியமூதூர்
நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன்
வல்லுயர்சூலமும் வெண்மழுவாளும் வல்லவன்வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லியபாடல்கள் வல்லார் துயர்கெடுதல்லெளி தாமே.

பொழிப்புரை :

மலைபோல உயர்ந்து வரும் அலைகளை உடைய பெரிய கடல், பெரிய கரையோடு மோதி முழங்கும் காழிப்பழம்பதியில் தோன்றிய, உயர்ந்த நான்மறைகள் ஓதும் நாவினை உடைய நற்றமிழ் ஞானசம்பந்தன், வலிதாக உயர்ந்த சூலம், வெண்மையான மழு, வாள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் வல்லவனாகிய சிவபிரான் விளங்கும் வாழ்கொளிபுத்தூரைப் போற்றிச் சொல்லிய பாடல்களை ஓதவல்லவர் துயர் கெடுதல் எளிதாம்.

குறிப்புரை :

பாடல்வல்லார் துயர்கெடுதல் எளிதாம் என்கின்றது. கல்லுயர் மாக்கடல் - மலைபோலத் திரையுயர்ந்துவரும் கரிய கடல். வல்லுயர் சூலம் - வலிய உயர்ந்த சூலம். துயர்கெடுதல் எளிதாம் என்றது வாதநோய்க்குச் சரபசெந்தூரம் போலப் பிறவித்துயருக்குச் சிறந்த மருந்தாதலின் எளிதாம் என்றவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

சீரணிதிகழ்திரு மார்பில்வெண்ணூலர் திரிபுரமெரிசெய்த செல்வர்
வாரணிவனமுலை மங்கையோர்பங்கர் மான்மறியேந்திய மைந்தர்
காரணிமணிதிகழ் மிடறுடையண்ணல் கண்ணுதல் விண்ணவரேத்தும்
பாரணிதிகழ்தரு நான்மறையாளர் பாம்புர நன்னகராரே.

பொழிப்புரை :

விண்ணவர் போற்றும் திருப்பாம்புர நன்னகர் இறைவர் சிறந்த அணிகலன்கள் விளங்கும் அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவர். திரிபுரங்களை எரித்த வீரச்செல்வர். கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்திய நீலமணிபோலும் திகழ்கின்ற கண்டத்தையுடைய தலைவர். உலகில் அழகிய புகழோடு விளங்கும் மறைகளை அருளியவர். நெற்றிக்கண்ணர்.

குறிப்புரை :

பாம்புர நன்னகரார் இயல்புகள் இவை என்கின்றது. சீர் அணி திகழ் - புகழ் அழகு இவைகள் விளங்கும் செல்வர் என்றது தம்கையிலிருந்து ஒன்றையும் ஏவாதே, இருந்தநிலையில் இருந்தே விளைக்கப்பெற்ற வீரச்செல்வத்தையுடையவர். வார் -கச்சு. மான்மறி - மான்குட்டி. கார் அணி மணி திகழ் மிடறு - கரிய அழகிய நீலமணி போலும் மிடறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

கொக்கிறகோடு கூவிளமத்தங் கொன்றையொ டெருக்கணிசடையர்
அக்கினொடாமை பூண்டழகாக அனலதுவாடுமெம் மடிகள்
மிக்கநல்வேத வேள்வியுளெங்கும் விண்ணவர்விரைமலர் தூவப்
பக்கம்பல்பூதம் பாடிடவருவார் பாம்புர நன்னகராரே.

பொழிப்புரை :

திருப்பாம்புர நன்னகர் இறைவர், கொக்கிறகு என்னும் மலர், வில்வம், ஊமத்தம்பூ, கொன்றை மலர், எருக்க மலர் ஆகியவற்றை அணிந்த சடைமுடியினர். சங்கு மணிகளோடு ஆமை ஓட்டைப் பூண்டு அழகாக அனலின்கண் ஆடும் எம் தலைவர். மிக்க நல்ல வேதவேள்விகளில் விண்ணோர்கள் மணம் கமழும் மலர்கள் தூவிப் போற்ற அருகில் பூதங்கள் பல பாடவும் வருபவர்.

குறிப்புரை :

இதுஅவருடைய அணிகளை அறிவிக்கின்றது. கொக்கிறகு - ஒருவகைப்பூ; கொக்கின் இறகுமாம், கூவிளம் - வில்வம். மத்தம் - ஊமத்தம்பூ. அக்கு - சங்குமணி. வேதவேள்வி - வைதிகயாகம். விரை - மணம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

துன்னலினாடை யுடுத்ததன்மேலோர் சூறைநல்லரவது சுற்றிப்
பின்னுவார்சடைகள் தாழவிட்டாடிப் பித்தராய்த்திரியுமெம் பெருமான்
மன்னுமாமலர்கள் தூவிடநாளும்மாமலையாட்டியுந் தாமும்
பன்னுநான்மறைகள் பாடிடவருவார் பாம்புர நன்னகராரே.

பொழிப்புரை :

திருப்பாம்புர நன்னகர் இறைவர் தைத்த கோவண ஆடையை அணிந்துஅதன் மேல் காற்றை உட்கொள்ளும் நல்ல பாம்பு ஒன்றைச் சுற்றிக் கொண்டு பின்னிய நீண்ட சடைகளைத் தாழ விட்டுக் கொண்டு, பித்தராய் ஆடித் திரியும் எமது பெருமான். அவர் மணம் நிறைந்த சிறந்த மலர்களைத் தூவி நாளும் நாம் வழிபட மலையரசன் மகளாகிய பார்வதியும், தாமுமாய்ப் புகழ்ந்து போற்றும் நான் மறைகளை அடியவர் பாடிக்கொண்டு வர, நம்முன் காட்சி தருபவர்.

குறிப்புரை :

கோவணமுடுத்துப் பாம்பைச் சுற்றிச் சடைதாழ நின்றாடும் பித்தர்; அன்பர்கள் மலர்தூவி வழிபட உமையும் தானும் வருவார்; அவரே பாம்புரநகரார் என்கின்றது. துன்னலின் ஆடை - கோவண ஆடை. சூறை நல் அரவு - காற்றையுட்கொள்ளும் பாம்பு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

துஞ்சுநாள்துறந்து தோற்றமுமில்லாச் சுடர்விடுசோதியெம் பெருமான்
நஞ்சுசேர்கண்ட முடையவென்னாதர் நள்ளிருள்நடஞ்செயுந் நம்பர்
மஞ்சுதோய்சோலை மாமயிலாட மாடமாளிகைதன்மே லேறிப்
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர்பயிலும் பாம்புர நன்னகராரே.

பொழிப்புரை :

மேகங்கள் தோயும் சோலைகளில் சிறந்த மயில்கள் ஆடவும், மாடமாளிகைகளில் ஏறி, செம்பஞ்சு தோய்த்த சிவந்த மெல்லிய அடிகளை உடைய பெண்கள் பாடவும், ஆகச் சிறந்து விளங்கும் திருப்பாம்புர நன்னகர் இறைவர், இறக்கும் நாள் இல்லாத வராய், தோற்றமும் இல்லாதவராய், ஒளி பெற்று விளங்கும் சோதி வடிவினராய்த் திகழும் எம் பெருமான், விடம் பொருந்திய கண்டத்தை உடைய எம் தலைவர், நள்ளிருளில் நடனம் புரியும் கடவுளாவார்.

குறிப்புரை :

இறப்பு பிறப்பு இல்லாத சோதியாய், சர்வசங்கார காலத்து நள்ளிருளில் நட்டமாடும் நம்பர் இவர் என்கின்றது. துஞ்சுநாள் துறந்து - இறக்கும்நாள் இன்றி. நள் இருள் - நடுஇரவு. நம்பர் - நம்பப்படத்தக்கவர். மஞ்சு - மேகம். பஞ்சுசேர் - செம்பஞ்சுக் குழம்பு பூசப்பெற்ற.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

நதியதனயலே நகுதலைமாலை நாண்மதிசடைமிசை யணிந்து
கதியதுவாகக் காளிமுன்காணக் கானிடைநடஞ்செய்த கருத்தர்
விதியதுவழுவா வேதியர்வேள்வி செய்தவரோத்தொலி யோவாப்
பதியதுவாகப் பாவையுந்தாமும் பாம்புர நன்னகராரே.

பொழிப்புரை :

விதிமுறை வழுவா வேதியர்கள், வேள்விகள் பல செய்தலால், எழும் வேத ஒலி நீங்காதபதிஅது என உமையம்மையும் தாமுமாய்த் திருப்பாம்புர நன்னகரில் விளங்கும் இறைவர், சடைமுடி மீது கங்கையின் அயலே சிரிக்கும் தலைமாலை, பிறை மதி ஆகியவற்றை அணிந்து நடனத்திற்குரிய சதி அதுவே என்னும்படி காளி முன்னே இருந்து காண இடுகாட்டுள் நடனம் செய்ததலைவர் ஆவார்.

குறிப்புரை :

தலையில் கங்கை, கபாலம், பிறை முதலியன அணிந்து காளியோடு நடனமாடிய நாதர் இவர் என்கின்றது. நதி - கங்கை. நகுதலை - உடலைச் சதம் என்றிருக்கின்ற பிறரைப் பார்த்துச் சிரிக்கின்ற தலை. கதியதுவாக - நடனகதி அதுவாக. கான் - இடுகாடு. ஓத்துஒலி - வேத ஒலி. ஓவா - நீங்காத.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

ஓதிநன்குணர்வார்க் குணர்வுடையொருவ ரொளிதிகழுருவஞ்சே ரொருவர்
மாதினையிடமா வைத்தவெம்வள்ளல் மான்மறியேந்திய மைந்தர்
ஆதிநீயருளென் றமரர்கள்பணிய அலைகடல்கடையவன் றெழுந்த
பாதிவெண்பிறைசடை வைத்தவெம்பரமர் பாம்புர நன்னகராரே.

பொழிப்புரை :

திருப்பாம்புர நன்னகர் இறைவர், கல்வி கற்றுத் தெளிந்த அறிவுடையோரால் அறியப்படும் ஒருவராவார். ஒளியாக விளங்கும் சோதி உருவினராவார். உமையம்மையை இடப்பாகமாகக் கொண்ட எம் வள்ளலாவார். இளமான் மறியைக் கையில் ஏந்திய மைந்தராவார். திருப்பாற்கடலைக் கடைந்த பொழுது எழுந்த ஆலகாலவிடத்திற்கு அஞ்சிய தேவர்கள் ஆதியாக விளங்கும் தலைவனே, நீ எம்மைக் காத்தருள் என வேண்ட, நஞ்சினை உண்டும், கடலினின்றெழுந்த பிறைமதியைச் சடையிலே வைத்தும் அருள்புரிந்த எம் மேலான தலைவராவார்.

குறிப்புரை :

ஓதியுணர்வார்க்கு ஞானமாக இருக்கும் நாதனாகிய பிறைசூடிய பெருமான் இவர் என்கின்றது. உணர்தல் -கல்வியைத் துணையாகக்கொண்டு கற்றுத் தெளிந்து அறிதல். உணர்வுடை ஒருவன் - உணரத்தக்க ஒப்பற்றவன். ஒளிதிகழ் உருவம் - ஒளியாக விளங்கும் சோதியுருவம். வள்ளல் என்றது சத்தியொடு கூடிய வழியே சிவம் கருணையை மேவி வள்ளன்மை பூணுதலின். ஆதி - முதலுக் கெல்லாம் முதற்பொருளாய் இருப்பவன். கடலில் எழுந்த பொருள்கள் ஆகிய இலக்குமி, விஷம், பிறை, உச்சை சிரவம், கௌத்துவம் முதலிய பொருள்களில் ஒன்றாகிய பிறை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

மாலினுக்கன்று சக்கரமீந்து மலரவற்கொருமுக மொழித்து
ஆலின்கீழறமோர் நால்வருக்கருளி யனலதுவாடுமெம் மடிகள்
காலனைக்காய்ந்து தங்கழலடியாற் காமனைப்பொடிபட நோக்கிப்
பாலனுக்கருள்கள் செய்தவெம்மடிகள் பாம்புர நன்னகராரே.

பொழிப்புரை :

திருப்பாம்புர நன்னகர் இறைவர் முன்பு திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவர். தாமரை மலர் மேல் உறையும் பிரமனது ஐந்தலைகளில் ஒன்றைக் கொய்தவர். சனகாதி நால்வருக்குக் கல்லாலின் கீழிருந்து அறம் அருளியவர். தீயில் நடனமாடுபவர். தமது கழலணிந்த திருவடியால் காலனைக் காய்ந்தவர். காமனைப் பொடிபட நோக்கியவர். உபமன்யு முனிவருக்குப் பாற்கடல் அளித்து அருள்கள் செய்ததலைவர் ஆவார்.

குறிப்புரை :

இது வீரச்செயலை விளக்குகின்றது. சக்கரமீந்தது திருவீழிழலையில் நடந்த செய்தி; ஒருமுகம் ஒழித்தது திருக்கண்டியூர்ச்செய்தி; காலனைக்காய்ந்தது கடவூர்ச்செய்தி; காமனை எரித்தது குறுக்கைச்செய்தி. நால்வர் - சனகாதியர். அறம் - சிவாநுபவத்திறம். பாலன் - உபமன்யு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

விடைத்தவல்லரக்கன் வெற்பினையெடுக்க மெல்லியதிருவிர லூன்றி
அடர்த்தவன்றனக்கன் றருள்செய்தவடிக ளனலதுவாடுமெம் மண்ணல்
மடக்கொடியவர்கள் வருபுனலாட வந்திழியரிசிலின் கரைமேல்
படப்பையிற்கொணர்ந்து பருமணிசிதறும் பாம்புர நன்னகராரே.

பொழிப்புரை :

இளங்கொடி போன்ற பெண்கள் நீராட வந்து இழியும் அரிசிலாறு தோட்டங்களில் சிதறிக்கிடக்கும் பெரிய மணிகளை அடித்து வந்து கரைமேல் சேர்க்கும் திருப்பாம்புர நன்னகர் இறைவர், செருக்குற்ற வலிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்த போது மெல்லிய திருவடிவிரல் ஒன்றை ஊன்றி அவனை அடர்த்துப் பின் அவன் பிழையுணர்ந்து வருந்திப்போற்ற அருள் பல செய்ததலைவர் ஆவார்.

குறிப்புரை :

கைலையையசைத்த இராவணனை வலியடக்கிய அடிகள், அரிசிலாற்றங்கரையில் பருமணி சிதறும் பாம்புர நகரார் என்கின்றது. விடைத்த - செருக்குற்ற. அடர்த்து - நெருக்கி. அடர்த்து அருள்செய்த என்றது மறக்கருணையும் அறக்கருணையும் காட்டி ஆட்கொண்டது. அனல் - ஊழித்தீ. அரிசிலின் கரைமேல் (புனல்) மணிசிதறும் நகர் எனப்பொருள் முடிக்க. படப்பை - தோட்டம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

கடிபடுகமலத் தயனொடுமாலுங் காதலோடடிமுடி தேடச்
செடிபடுவினைக டீர்த்தருள்செய்யுந் தீவணரெம்முடைச் செல்வர்
முடியுடையமரர் முனிகணத்தவர்கள் முறைமுறையடிபணிந் தேத்தப்
படியதுவாகப் பாவையுந்தாமும் பாம்புர நன்னகராரே.

பொழிப்புரை :

முடி சூடிய அமரர்களும் முனிகணத்தவர்களும் முறையாகத் தம் திருவடிகளைப் பணிந்து ஏத்துதற்கு உரியதகுதி வாய்ந்த இடமாகக் கொண்டு உமையம்மையும் தாமுமாய்த் திருப்பாம்புர நன்னகரில் விளங்கும் இறைவர் மணம் பொருந்திய தாமரை மலர் மேல் விளங்கும் பிரமனும் திருமாலும் அன்போடு அடிமுடி தேடத்தீவண்ணராய்க் கிளைத்த வினைகள் பலவற்றையும் தீர்த்து அருள் செய்பவராய் விளங்கும் எம் செல்வர் ஆவார்.

குறிப்புரை :

அடிமுடிதேடிய அயனுக்கும் மாலுக்கும் அருள்செய்த செல்வர் இவர் என்கின்றது. கடி - மணம். செடிபடுவினைகள் - தூறாக மண்டிக்கிடக்கும் வினைகள். படி - தகுதி.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

குண்டர்சாக்கியருங் குணமிலாதாருங் குற்றுவிட்டுடுக்கையர் தாமுங்
கண்டவாறுரைத்துக் கானிமிர்த்துண்ணுங் கையர்தாமுள்ளவா றறியார்
வண்டுசேர்குழலி மலைமகணடுங்க வாரணமுரிசெய்து போர்த்தார்
பண்டுநாஞ்செய்த பாவங்கள்தீர்ப்பார் பாம்புர நன்னகராரே.

பொழிப்புரை :

திருப்பாம்புர நன்னகர் இறைவர் குண்டர்களாகிய சமணர்களாலும் புத்தர்களாலும் மிகச்சிறிய ஆடையை அணிந்து, கண்டபடி பேசிக் கொண்டு நின்றுண்ணும் சமணத் துறவியராலும் உள்ளவாறு அறியப் பெறாதவர். வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய மலைமகளாகிய பார்வதிதேவி நடுங்க யானையை உரித்துப் போர்த்தவர். முற்பிறவிகளில் நாம் செய்த பாவங்களைத் தீர்ப்பவர்.

குறிப்புரை :

புறச்சமயிகட்கு அறியப்பெறாதவர் என்கின்றது. குண்டர் - பருஉடல் படைத்த சமணர்கள். சாக்கியர் - புத்தர். குற்றுவிட்டு உடுக்கையர் - மிகச்சிறிய ஆடையை உடையவர்கள். கானிமிர்த்து உண்ணும் கையர் - நின்றபடியே உண்ணும் கீழ்மக்கள். இவர்களை `நின்றுண் சமணர்` என்பர். வண்டு சேர்குழலி மலைமகள் நடுங்க என்றது அம்மையின் மென்மை அறிவித்தது. வாரணம் - யானை. பண்டு - முன்பு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

பார்மலிந்தோங்கிப் பருமதில்சூழ்ந்த பாம்புரநன்னக ராரைக்
கார்மலிந்தழகார் கழனிசூழ்மாடக் கழுமலமுதுபதிக் கவுணி
நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்செந்தமிழ் வல்லார்
சீர்மலிந்தழகார் செல்வமதோங்கிச் சிவனடி நண்ணுவர்தாமே.

பொழிப்புரை :

உலகில் புகழ் நிறைந்து ஓங்கியதும்பெரிய மதில்களால் சூழப் பெற்றதுமான திருப்பாம்புர நன்னகர் இறைவனை, மழை வளத்தால் சிறந்து அழகியதாய் விளங்கும் வயல்கள் சூழப்பெற்றதும், மாட வீடுகளை உடையதுமான, கழுமலம் என்னும் பழம் பதியில் கவுணியர் கோத்திரத்தில், அன்பிற் சிறந்தவனாய்ப் புகழால் ஓங்கி விளங்கும் நான்மறைவல்ல ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய்ச் செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர்.

குறிப்புரை :

பாம்புரப்பதிகம் வல்லவர் செல்வத்திற் சிறந்து சிவனடி சேர்வர் என்கின்றது. கழனி - வயல். கவுணி - கவுண்டின்ய கோத்திரத்தவன். நார் - அன்பு. சீர் - புகழ்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

பைம்மா நாகம் பன்மலர் கொன்றை பன்றிவெண் கொம்பொன்று பூண்டு
செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச் செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மா னோக்கிய வந்தளிர் மேனி யரிவை யோர் பாக மமர்ந்த
பெம்மா னல்கிய தொல்புக ழாளர் பேணுபெ ருந்துறை யாரே.

பொழிப்புரை :

திருப்பேணு பெருந்துறை இறைவர், படம் பொருந் திய பெரிய நாகம், பல மலர்களோடு இணைந்த கொன்றை மலர், வெண்மையான பன்றிக் கொம்பு ஆகியவற்றை அணிந்து செம்மாப்பு உடையவராய்ப் பலர் இல்லங்களுக்கும் சென்று `ஐயம் இடுக` என்று கேட்டு, ஐயம் இட்ட கடமையாளர்களுக்குச் செல்வமாய் இருப்பவர்; அழகிய மான்விழி போன்ற விழிகளையும், தளிர் போன்ற மேனியையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட தலைவர்; நிலைத்த பழமையான புகழையுடையவர்.

குறிப்புரை :

இது உடம்பெடுத்த பிறவியின்பயனாக, செய்ய வேண்டிய தொழில்களைத் தவறாதுசெய்யும் அடியார்களுக்கு, ஒர் செல்வம் போன்றவர் பேணுபெருந்துறையார் என்கின்றது. பை - படம். பல்மலர் - தும்பை மத்தம் முதலாயின. செம்மாந்து -இறுமாந்து. ஐயம்பெய்க என்று சொல்லி - பிச்சையிடுக என்று கூறி. பிச்சையிடுக என்பார் இரங்கிய முகத்துடன் தாழ்ந்து சொல்ல வேண்டியிருக்க, இவர் இறுமாந்து சொல்கின்றார் என்றது, ஏலாமல் ஏற்கின்ற இறைமை தோன்ற. கடமை தவறாதவர்க்குச் செல்வத்துட் செல்வமாய் இருக்கின்றார் என்பார், தொழில் பேணியோர்க்குச் செல்வர் என்றார். தமது அருள் வழங்குந் தொழிலைப் பேணியோர் எனலுமாம். அ மான் நோக்கி - அழகிய மான் போன்ற கண்ணையுடையவள். அந்தளிர் மேனி - அழகிய தளிர் போன்ற மேனியையுடையவள்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

மூவரு மாகி யிருவரு மாகி முதல்வனு மாய்நின்ற மூர்த்தி
பாவங்கள் தீர்தர நல்வினை நல்கிப் பல்கண நின்று பணியச்
சாவம தாகிய மால்வரை கொண்டு தண்மதிண் மூன்றுமெ ரித்த
தேவர்கள் தேவ ரெம்பெரு மானார் தீதில்பெ ருந்துறை யாரே.

பொழிப்புரை :

குற்றமற்ற பேணு பெருந்துறையில் விளங்கும் எம் பெருமானார், அரி அயன் அரன் ஆகிய முத்தொழில் செய்யும் மூவருமாய், ஒடுங்கிய உலகை மீளத் தோற்றும் சிவன், சக்தி ஆகிய இருவருமாய், அனைவர்க்கும் தலைவருமாய் நின்ற மூர்த்தி ஆவார். நம் பாவங்கள் தீர நல்வினைகளை அளித்துப் பதினெண் கணங்களும் நின்று பணிய மேரு மலையை வில்லாகக் கொண்டு, மும்மதில்களையும் எரித்தழித்த தேவதேவராவார்.

குறிப்புரை :

மூவருமாய் இருவருமாய் முதல்வனுமாய் நின்று, பணிவார்கள் பாவங்கள் தீர நல்வினைகளை நல்கி நிற்கும் தேவதேவர் இவர் என்கின்றது. மூவருமாகி - அயன், மால், உருத்திரன் என முத்தொழிலைச் செய்யும் மூவரையும் அதிட்டித்து நின்று அவரவர் தொழிலைத் திறம்பட ஆற்றச்செய்தும், இருவருமாகி -தன்னிடத்து ஒடுங்கிய உலகமாதியவற்றைப் புனருற்பவம் செய்யுங்காலைச் சிவம் சத்தியென்னும் இருவரும் ஆகி. முதல்வனும் ஆகி - இவர்களின் வேறாய்நின்று இயக்கும் பரசிவமுமாகி, வினையோய்ந்து ஆன்மாக்கள் பெத்தநிலையில் நில்லா ஆகையால் தீவினைகள் நீங்கிநிற்கப் பரங்கருணைத் தடங்கடலாகிய பரமன் நல்வினைகளை அவைகள் ஆற்ற அருள்கின்றார் என்பது. சாவம் - வில், வரை - மேருமலை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

செய்பூங் கொன்றை கூவிள மாலை சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்
கொய்பூங் கோதை மாதுமை பாகங் கூடியோர் பீடுடை வேடர்
கைபோ னான்ற கனிகுலை வாழை காய்குலை யிற்கமு கீனப்
பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல் பில்குபெ ருந்துறை யாரே.

பொழிப்புரை :

யானையின் கை போன்ற நீண்ட வாழைக்குலையில் பழுத்த பழங்களிலும், காய்த்த குலைகளிலும், கமுக மரங்களின் பூம்பாளைகளில் ஒழுகும் தேன் பாய்ந்து பெருகும் பெருந்துறை இறைவர், கொன்றைப்பூமாலை, கூவிளமாலை அணிந்த தலையில் கங்கையை ஏற்று, பூமாலை சூடிய உமையைத் தம் உடலின் ஒரு பாகமாகக் கொண்டு அதனால் ஒப்பற்ற அம்மையப்பர் என்ற பெருமையுடைய உருவினராவர்.

குறிப்புரை :

உமையொருபாகம் வைத்த வேடர் இவர் என்கிறது. செய்மாலை எனக்கூட்டிப் புனையப்பெற்ற மாலை என்க, சென்னி - தலை. கொய் பூங்கோதை - கொய்யப்பட்ட பூவால் இயன்ற மாலை. பீடு உடை வேடர் - பெருமைபெற்ற வேடத்தையுடையவர். கை - யானையின் துதிக்கை. வாழைக்குலைக்கு யானையின் கையை ஒப்பிடுதல் மரபு. தேறல் - தேன். வாழைக்குலையில் கமுகு ஈன என்றது இரண்டும் ஒத்த அளவில் வளர்ந்திருக்கின்றன என்று உணர்த்தியவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

நிலனொடு வானும் நீரொடு தீயும் வாயுவு மாகியோ ரைந்து
புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி
நலனொடு தீங்குந் தானல தின்றி நன்கெழு சிந்தைய ராகி
மலனொடு மாசு மில்லவர் வாழும் மல்குபெ ருந்துறை யாரே.

பொழிப்புரை :

நிலம், வானம், நீர், தீ, காற்று ஆகிய ஐம்பூதங்களின் வடிவாய், ஐந்து புலங்களை வென்றவராய், பொய்ம்மைகள் இல்லாத புண்ணியராய் வாழும் இறைவர், திருவெண்ணீறு அணிந்து நன்மையும் தின்மையும் சிவனாலன்றி வருவதில்லை என்ற நல்லுள்ளங் கொள்பவராய், மல மாசுக்கள் தீர்ந்தவராய் வாழும் அடியவர்கள் நிறைந்த பேணு பெருந்துறையார் ஆவர்.

குறிப்புரை :

பூதங்கள் ஐந்தாய்ப் புலன்வென்ற புண்ணியர் இவர் என்கின்றது. பூதங்கள் ஐந்துமாகி, தன்மாத்திரைகளாகிய ஐம்புலன்களையும் வென்று, பொய்ம்மைநீங்கிய புண்ணியர் பெருந்துறையார் என முடிக்க. அன்றி, புண்ணியராகி பொடி பூசி, இறை சிந்தையராகி மாசில்லாதவர் வாழும் பெருந்துறை எனவும் முடிக்கலாம். இப்பொருளில் நிலனொடு வாயுவுமாகிய ஓர் ஐந்து புலன் - ஐம்பூதங்களும் அவற்றிக்குக் காரணமாகிய தன்மாத்திரைகள் ஐந்தும், பொய்ம்மைகள் தீர்ந்த - அழியுந்தன்மையவாகிய விஷயசுகங்களில் பற்றற்ற, நலனொடு தீங்கும் தானலது இன்றி - நன்மையும் தீமையும் இறைவனையன்றி வேறொன்று இன்று என எண்ணி, `நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே` என்ற நினைவு. நன்கெழு சிந்தையராகி - இறைவன் திருப்பாத கமலங்களை நன்றாக இறுகத் தழுவிய மனமுடையராகி, மலன் - ஆணவம். மாசு -மாயையும் கன்மமும்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

பணிவா யுள்ள நன்கெழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்யத்
துணியார் தங்க ளுள்ளமி லாத சுமடர்கள் சோதிப் பரியார்
அணியார் நீல மாகிய கண்டர் அரிசிலு ரிஞ்சுக ரைமேல்
மணிவாய் நீலம் வாய்கமழ் தேறன் மல்குபெ ருந்துறை யாரே.

பொழிப்புரை :

அரிசிலாற்றின் அலைகள் மோதும் கரையில் அமைந்ததும், நீல மணிபோலும் நிறம் அமைந்த குவளை மலர்களின் வாயிலிருந்து வெளிப்படும் தேன் கமழ்ந்து நிறைவதுமாகிய பேணுபெருந்துறை இறைவர். பணிவுடைய துதிப்பாடல்கள் பாடும் நன்மை தழுவிய நாவினையுடைய பக்தர்கள் அன்போடு வழிபட எளியர். துணிவற்றவர்களாய்த் தங்கள் மனம் பொருந்தாத அறியாமை உடையவர்களாய் உள்ளவர்கள் பகுத்தறிவதற்கு அரியவர். அழகிய நீல நிறம் பொருந்திய கண்டத்தை உடையவர்.

குறிப்புரை :

அன்பர்க்கணியராய், அல்லவர்க்குச் சேயராய் இருப் பவர் இவர் என்கின்றது. பணிவாய் உள்ள - துதிப்பாடல்களைப் பாடிப் பணியும். துணியார் - அன்பர்களைவிட்டு வேறுபடாதவர். துணிதல் - வேறாதல். சுமடர் - அறிவற்றவர்கள்: சோதிப்பு அரியார் - சோதித்தறிதற்கும் அரியவர். சோதித்தல் - அளவைகளால் சோதித்தல். அணி - அழகு. மணி - நீலமணி. நீலம் - நீலப்பூ; தேறல் - தேன்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

எண்ணார் தங்கள் மும்மதிள் வேவ ஏவலங் காட்டிய வெந்தை
விண்ணோர் சாரத் தன்னருள் செய்த வித்தகர் வேத முதல்வர்
பண்ணார் பாட லாட லறாத பசுபதி யீசனோர் பாகம்
பெண்ணா ணாய வார்சடை யண்ணல் பேணுபெ ருந்துறை யாரே.

பொழிப்புரை :

திருப்பேணுபெருந்துறை இறைவர் தம்மை மதியாதவரான, அசுரர்களின் முப்புரங்கள் எரிந்தழியுமாறு வில்வன்மை காட்டிய எந்தையாராவர். தேவர்கள் வழிபட அவர்கட்கு தமது அருளை நல்கிய வித்தகராவர். வேதங்களின் தலைவராவர். இசை நலம் கெழுமிய பாடல்களோடு, ஆடி மகிழும் பசுபதியாய ஈசனும் ஆவர். ஒரு பாகம் பெண்ணுமாய், ஒரு பாகம் ஆணுமாய் விளங்கும் நீண்ட சடைமுடியுடைய தலைவராவர்.

குறிப்புரை :

முப்புரம் எரித்த வீரர்; தேவர்க்கருளிய தேவதேவர்; பெண்ணாணாய பரமர் இவர் என்கின்றது. எண்ணார் - பகைவர். ஏவலம் - அம்பின் வன்மை. வார் சடை - நீண்ட சடை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

விழையா ருள்ள நன்கெழு நாவில் வினை கெடவேதமா றங்கம்
பிழையா வண்ணம் பண்ணிய வாற்றாற் பெரியோ ரேத்தும் பெருமான்
தழையார் மாவின் றாழ்கனி யுந்தித் தண்ணரி சில்புடை சூழ்ந்து
குழையார் சோலை மென்னடை யன்னங் கூடுபெ ருந்துறையாரே.

பொழிப்புரை :

தழைத்த மாமரத்திலிருந்து உதிர்ந்த பழங்களை உருட்டிவரும் தண்ணிய அரிசிலாற்றின் கரையருகே சூழ்ந்து விளங்கும் தளிர்கள் நிறைந்த சோலைகளில் மெல்லிய நடையையுடைய அன்னங்கள் கூடி விளங்கும் திருப்பேணுபெருந்துறை இறைவர், விருப்பம் பொருந்திய உள்ளத்தோடு நன்மை அமைந்த நாவின்கண் தம்வினைகெட, நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பிழையின்றி முன்னோர் ஓதிவரும் முறையில் பெரியோர் ஓதி ஏத்தும் பெருமானார் ஆவர்.

குறிப்புரை :

கனிந்த உள்ளத்தடியார் வேதமோதி ஏத்தும் பெருமான் இவர் என்கின்றது. விழை ஆர் உள்ளம் - விரும்புதலைப் பொருந்திய உள்ளத்தோடு. நாவில் வேதம் ஆறங்கம் பிழையாவண்ணம் வினைகெடப் பண்ணிய ஆற்றால் எனக் கூட்டுக. அரிசில் - அரிசிலாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த பொருகடல் வேலி யிலங்கை
மன்ன னொல்க மால்வரை யூன்றி மாமுர ணாகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடை யொடாடி யணவுபெ ருந்துறை யாரே.

பொழிப்புரை :

ஆண் அன்னம் கன்னிமையுடைய பெண் அன்னத் தோடு ஆடியும், கூடியும் மகிழும் பேணு பெருந்துறை இறைவர், அழகிய கடற்கரைச் சோலைகளும், வெண்மையான கடல் அலைகளும் சூழ்ந்துள்ளதும், நாற்புறங்களிலும் கடலையே வேலியாக உடையதுமான இலங்கை மாநகர் மன்னனாகிய இராவணன் தளர்ச்சி அடையுமாறு பெரிய கயிலை மலையைக் கால் விரலால் ஊன்றி, அவனுடைய சிறந்த வலிமையுடைய, மார்பும், தோள்களும் வலிமை குன்றுமாறு செய்து பின் அவனுக்கு அருள்கள் பல செய்த மூவிலை வேலையுடைய மூர்த்தியாவார்.

குறிப்புரை :

உயிர்களின் முனைப்படக்கி ஆட்கொண்டு அருள் வழங்கும் பெருமானிவர் என்கின்றது. பொன் - அழகு. மன்னன் - இராவணன். இவன் தன் மார்பையும் தோளையுமே நம்பித் தருக்கியிருந்தானாதலின், அவற்றைப் பயனற்றனவாக, இறைவன் காட்டவே, தனது மாட்டாமையையும், தலைவனாற்றலையும் உணர்ந்தான்; சாமம்பாடினான்; இறைவன் அருளினார் என்பது. அணவு - கலக்கின்ற.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட பொருகடல் வண்ணனும் பூவின்
உள்வா யல்லி மேலுறை வானு முணர்வரி யானுமை கேள்வன்
முள்வாய் தாளின் தாமரை மொட்டின் முகமலரக் கயல் பாயக்
கள்வாய் நீலங் கண்மல ரேய்க்குங் காமர்பெ ருந்துறை யாரே.

பொழிப்புரை :

முட்களையுடைய தண்டின்மேல் தாமரை மொட்டு இனிய முகம்போல் மலர, அதன்கண் கயல்மீன் பாயத் தேனையுடைய நீல மலர் கண்மலரை ஒத்துள்ளதால், இயற்கை, மாதர்களின் மலர்ந்த முகங்களைப் போலத் தோற்றந்தரும் பேணுபெருந்துறையில் உள்ள இறைவர், கொக்கு வடிவங்கொண்ட பகாசுரனின் வாயைப் பிளந்தும், நிலவுலகைத் தோண்டியும் விளங்கும் கடல் வண்ணனாகிய திருமாலும், தாமரை மலரின் அக இதழ்கள் மேல் உறையும் நான் முகனும் உணர்ந்து அறிதற்கரியவர்; உமையம்மையின் கணவர்.

குறிப்புரை :

பதவிகளால் மயங்கிய ஆன்மாக்களால் அறியொணாத பெருமான் இவர் என்கின்றது. புள் - கொக்கு. பகாசுரன் என்பவனைக் கிருஷ்ணாவதார காலத்தில் வாயைப்பிளந்து கொன்ற வரலாறு குறிக்கப்பெறுகின்றது. நிலங்கீண்டது - வராகாவதார வரலாறு. அல்லி - அகவிதழ். தாமரைமொட்டு இன்முகம் மலர - தாமரையரும்பு இனியமுகம்போல மலர, இப்பகுதி தாமரைப் போது முகம்போல மலர, நீலம் கண்ணை ஒக்க, கயல் விழியையொக்க எல்லாமாக மாதர் முகம் போல முற்றும் மகிழ்செய்யும் அழகிய பெருந்துறை என அறிவித்தவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

குண்டுந் தேருங் கூறைக ளைந்துங் கூப்பிலர் செப்பில ராகி
மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு மிண்டு செயாது விரும்பும்
தண்டும் பாம்பும் வெண்டலை சூலந் தாங்கிய தேவர் தலைவர்
வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை மல்குபெ ருந்துறை யாரே.

பொழிப்புரை :

இறைவரைக் குண்டர்களாகிய சமணர்களும், தேரர்களாகிய புத்தர்களும் தம் ஆடைகளைக் களைந்தும் பல்வகை விரதங்களை மேற்கொண்டும் கைகூப்பி வணங்காதவர்களாய்த் திருப்பெயர்களைக் கூறாதவர்களாய், வம்பு செய்யும் இயல்பினராய் வீண் தவம் புரிகின்றனர். அவர்களின் மாறான செய்கைகளைக் கண்டு அவற்றை மேற்கொள்ளாது சிவநெறியை விரும்புமின். யோகதண்டம், பாம்பு, தலைமாலை, சூலம் ஆகியவற்றை ஏந்திய தேவர் தலைவராகிய நம் இறைவர், வண்டுகளும், தேனும் நிறைந்து வாழும் பொழில்களும், சோலைகளும் நிறைந்த பேணுபெருந்துறையில் உள்ளார்.

குறிப்புரை :

புத்தர் சமணர் பொய்யுரை கண்டு புந்தி மயங்காது போற்றுங்கள் என அறிவிக்கின்றது. குண்டு - குண்டர். தேர் - தேரர். கூப்பிலர் - வணங்காதவர்களாய். செப்பிலர் - தோத்திரியாதவர்கள் ஆகி. மிண்டர் - வம்பர். மிண்டு - குறும்பு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

கடையார் மாட நன்கெழு வீதிக் கழுமல வூரன் கலந்து
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் நல்லபெ ருந்துறை மேய
படையார் சூலம் வல்லவன் பாதம் பரவிய பத்திவை வல்லார்
உடையா ராகி உள்ளமு மொன்றி உலகினின் மன்னுவர் தாமே.

பொழிப்புரை :

வாயில்களையுடைய மாட வீடுகள் நன்கமைந்த வீதிகளையுடைய கழுமலம் என்னும் ஊரில் தோன்றியவனும், அன்பொடு கலந்து இன்சொல் நடையோடு பாடுபவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல பேணுபெருந்துறை மேவிய வலிய சூலப்படையுடைய இறைவன் திருவடிகளைப் பரவிப் போற்றிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதுபவர், எல்லா நன்மைகளும் உடையவராய் மனம் ஒன்றி உலகில் நிலையான வாழ்வினைப் பெறுவர்.

குறிப்புரை :

இப்பதிகம் வல்லவர் எல்லா வளமும் உடையவராகி மன ஒருமைப்பாட்டுடன் வாழ்வர் என்கின்றது. கடை -வாயில். மன்னுவர் - வினைப்போகத்திற்கு உரிய காலம்வரையில் பூதவுடலோடும், அதற்குப்பின் புகழுடலோடும் நிலைபெறுவர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்
தடந்திரை சேர்புனன் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்
இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாம்
கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.

பொழிப்புரை :

திருக்கற்குடி மாமலையை விரும்பி அதன்கண் வாழும் இறைவர், முத்துவடம் விளங்கும் மெல்லிய தனங்களை உடைய உமையம்மையை மதித்து இடப்பாகமாகக் கொண்டு பெரிய அலைகள் வீசும் கங்கை நங்கையைத் தாழ்கின்ற சடைமிசை வைத் துள்ள சதுரப்பாடுடையவர்: திருமேனியின் இடப்பாகத்தே விளங்கும் முப்புரிநூலை அணிந்தவர். இன்பதுன்பங்களைக் கடந்தவர்.

குறிப்புரை :

ஒருமாதை முடியிலும், ஒருமாதைப் பாகத்திலும் வைத்தும், பிரமசாரியாயிருப்பவர் கற்குடியார் என்கின்றது. முப்புரிநூலர் என்றது `பவன் பிரமசாரியாகும்` என்பதை விளக்க. வினையின் நீங்கிய முதல்வனாதலின், வினைபற்றி நிகழ்வனவாகிய துன்பஇன்பங்கள் அவரைப் பாதியா என்பது விளக்கக் `கடந்தவர்` என்றார். குருவருள் : `துன்பமொடு இன்பம தெல்லாம் கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மாமலையாரே` என்றதொடர் கடவுள் என்ற சொல்லின் பொருளை விளக்குதல் காண்க. கடவுள் என்ற சொல் வேறாய் உடனாய் இருந்து அருள் செய்தலை உணர்த்துவது. கட - கடந்தது. வேறாய் என்பதை உணர்த்துவது. உள் - ஒன்றாய் என்பதை உணர்த்துவது. கடவு என்று பார்க்கும்போது உடனாயிருந்து இயக்குவதைக் காணலாம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

அங்கமொ ராறுடை வேள்வி யான வருமறை நான்கும்
பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்
சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக்
கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே.

பொழிப்புரை :

சங்கு வளையல்கள் அணிந்த குறப் பெண்களின் கைகளில் விளங்கும் பிள்ளைகள் இரவு நேரத்தில் தாவிப்பெரிய மதியைக் கைகளால் பற்றும் திருக்கற்குடி மாமலை இறைவர் வேள்விகட்குரிய விதிகளை விளக்கி ஆறு அங்கங்களுடன் கூடிய, அரிய வேதங்கள் நான்காகிய குற்றமற்ற பாடல், ஆடல், தாளச் சதிகள் ஆகியவற்றைப் பழகியவர்.

குறிப்புரை :

வேதம் பாடியும் படிறர் இவர் என்கின்றது. வேள்வியான அருமறை - யாகவிதிகளை விளக்கும் வேதம். பாணி - கை. ஈண்டு தாளத்தை உணர்த்தியது. படிறர் - பொய்யர். சங்கம் - சங்கு வளையல். கங்குல் - வானம். குறமாதர் கையிலுள்ள பிள்ளைகள் எட்டி மாமதியைப் பற்றுகின்றனர் என்று கற்குடி மலையின் உயரமும் கவினும் உரைத்தவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத்
தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில்
காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே.

பொழிப்புரை :

போர் செய்தற்கு ஏற்ற அகலமான மார்பினைக் கொண்டுள்ள வேடர்கள் காடுகளிலிருந்து வெட்டிக் கொணர்ந்து எரிக்கும் விறகுகளில் கரிய அகிலின் புகைமணம் வீசும் திருக்கற்குடிமாமலை இறைவர் பரந்து விரிந்து வந்த கங்கை நீரை உடைய முடி மீது நீண்டு மலர்ந்த ஊமத்தை மலரை அணிந்து விண்மீன்களின் ஒளி சூழ்ந்து விளங்கும் குளிர்ந்த பிறை மதியைச்சூடிய சைவராவர். அம்மலையில் மரமானவை அகிலன்றிப் பிறிதில்லை என்பதாம்.

குறிப்புரை :

கங்கை வைத்த திருமுடிக்கண் மத்தமும் மதியமும் சூடியிருக்கிற சைவர் இவர் என்கின்றது. அகலந்தரும் - பரந்த. தாரகை - நட்சத்திரம். திருமுடிக்கண் வைத்த அப்பிராகிருதமதிக்குத் தாரகைகள் சூழ்தல் இல்லையாயினும் மதி என்ற பொதுமைபற்றியருளிய அடைமொழி. போர் அகலம் தரு வேடர் - பொருதற்கு ஏற்ற மார்பினையுடைய வேடர்கள். வேடர்கள் அகிற்காட்டைக் கொளுத்திப் புனம் செப்பனிடுகின்றார்கள் என்பதாம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்க ளோல மிடக்கண்
டிருங்கள மார விடத்தை யின்னமு துண்ணிய ஈசர்
மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக்
கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே.

பொழிப்புரை :

மதம் கொண்ட கரிய களிறு அருகில் அன்பு காட்டி வரும் பெண்யானையின் வாயில், பசுமையோடு முளைத்து வரும் மூங்கில் முளைகளை வாரிக்கொடுத்து ஊட்டும் திருக்கற்குடிமாமலை இறைவர், தேவர்கள் பெருமானே, அனைவரையும் ஒருங்குகாத்தளிப்பாயாக என ஓலமிடுவதைக் கேட்டுப் பாற்கடலிடை எழுந்த நஞ்சைத் தமது மிடறு கருமைக்கு இடமாகுமாறு இனிய அமுதமாகக் கருதி உண்டு காத்த ஈசராவார்.

குறிப்புரை :

தேவர்வேண்ட விடத்தைத் திருவமுது செய்தருளிய ஈசர் சிவம் என்கின்றது. இறைவா! நீ ஒருங்கு அளி என்று உம்பர்கள் ஓலம் இட எனக் கூட்டுக. இரும் களம் ஆர - பெரிய கண்டம் நிறைய. உண்ணிய - உண்ட. இது ஒரு அரும் பிரயோகம். உண் என்ற பகுதி அடியாகப் பிறக்கும் இறந்தகாலப் பெயரெச்சம் உண்ட என்பதே. உண்ணிய எனவருதல் மிக அருமை. அளியார் பிடி வாயில் - அன்பு செறிந்த பெண் யானையின் வாயில். வெதிர் - மூங்கில். வலிய மதக்களிப்போடு கூடிய யானைதானுண்ணாது, பிடியின் வாயில் அமுதம் போன்ற மூங்கில் முளை களை வாரிக்கொடுக்கின்ற கற்குடிநாதர், தேவர்கள் வேண்டத் தாம் விடமுண்டு, அவர்கட்கு அமுதம் அளித்தார் என்ற நயம் காண்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப்
பார்மலி வேடுரு வாகிப் பண்டொரு வர்க்கருள் செய்தார்
ஏர்மலி கேழல் கிளைத்த வின்னொளி மாமணி எங்கும்
கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே.

பொழிப்புரை :

அழகிய பன்றிகள் நிலத்தைக் கிளைத்தலால் வெளிப்பட்ட இனிய ஒளியோடு கூடிய சிறந்த மணிகளைக் கரிய நிறமுடைய வேடர்கள் பல இடங்களிலும் குவித்துள்ள திருக்கற்குடிமாமலை இறைவர், போர் செய்யத்தக்க வலிய வில்லைக் கையில் கொண்டு, பூதகணங்கள் புடைசூழ்ந்து வர மண்ணுலகில் தாமொரு வேடர் உருத்தாங்கி, முற்காலத்தில் அருச்சுனருக்கு அருள் செய்தவராவார்.

குறிப்புரை :

வேடரான பெருமான் இவர் என்கின்றது. வேட்டுவ உருவானது அருச்சுனற்குப் பாசுபதம் அருளித்தருள் செய்ய, ஒருவர் - அருச்சுனன். ஏர் - அழகு. கேழல் - பன்றி. கார்மலி வேடர் - கருமை நிறமிகுந்த வேடர்கள். இனம் இனத்தோடு சேரும் என்பதுபோல வேடர் ஆகி வேடரொடு வாழும் மாமலையர் என்ற நயம் ஓர்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி
விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார்
நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே
கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.

பொழிப்புரை :

நன்மை அமைந்த மனமுடையவராய் நாவினால் புகழும் சொல்மாலைகளாகிய தோத்திரங்களினாலே இறைவன் திருவருளில் கலந்த மெய்யடியார்கள் அன்போடு வாழும் திருக்கற்குடிமாமலை இறைவர், இறந்தவர்களின் எலும்பை அணிந்து, ஊர் மக்கள் இடும் பிச்சையை ஏற்கும் பிட்சாடனராய் மேருமலையாகிய வில்லிடைத் தோன்றிய கொடிய கனலால் முப்புரங்களும் வெந்தழியுமாறு முனிந்தவர்.

குறிப்புரை :

பிட்சாடன மூர்த்தியாய் மூவெயிலை முனிந்தவர் இவர் என்கின்றது. உலந்தவர் - இறந்தவர் என்பது. அணிந்து - எலும்புகளைச்சூடி. விலங்கல் - மேருமலையாகிய வில். நாமலி மாலை - நாவில் மலிந்த தோத்திரப் பாமாலை. நலந்தரு சிந்தை - காமம் வெகுளி மயக்கம் முதலிய மூன்றும் கெட்ட மனம். கலந்தவர் - ஒருமைப்பட்டவர்கள். மனம் ஒன்றிய முனிபுங்கவர்கள் வாழும் கற்குடிமலை என்றதால் யோகியர் இடம் இது என அறிவித்தவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தர்
ஊனிடை யார்தலை யோட்டி லுண்கல னாக வுகந்தார்
தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யாற்றினை வித்திக்
கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே.

பொழிப்புரை :

தேனடைகள் பொருந்திய சந்தன மரங்களுக்கிடையே வலிய கரைகளைக்கட்டி, தினைகளை விதைத்துக் கானகத்தில் வேடர்கள் தினைப்பயிர் விளைக்கும் திருக்கற்குடிமாமலை இறைவர் மானை இடக் கையிலும், மழுவை வலக்கையிலும் தரித்தவர். ஊன் பொருந்திய தலையோட்டை உண்கலனாக உகந்தவர்.

குறிப்புரை :

மானையும் மழுவையும் ஏந்தி, கபாலத்தை உண் கலமாக உகந்தவர் இவர் என்கின்றது. சந்து - சந்தனம். வேடர் சந்தனமரத்தின் நடுவில் தினைவித்தி விளைக்கின்றார்கள் என்பது. ஆன்மாக்கள் வினைப்போகம் தடையாய் இருப்பினும் அவற்றை நீக்கிச் சிவபோகத்தை வித்தி விளைக்கும் புண்ணியபூமி எனக் குறிப்பித்தவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

வாளமர் வீர நினைந்த விராவணன் மாமலை யின்கீழ்த்
தோளமர் வன்றலை குன்றத் தொல்விர லூன்று துணைவர்
தாளமர் வேய்தலை பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க்
காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே.

பொழிப்புரை :

அடிமரத்தோடு கூடிய மூங்கிலினது தழையைப்பற்றி வளைத்து உண்ட களிறு, அதனை வேகமாக விடுதலால் அம்மூங்கில், விசையோடு சென்று, கரிய நிறம் பொருந்திய மேகங்களைக் கீறும், திருக்கற்குடி மாமலை இறைவர், வாட்போரில் வல்ல தனது பெருவீரத்தை நினைந்த இராவணனைப் பெருமை பொருந்திய கயிலைமலையின்கீழ் அவன் தோள்களும், வலிய தலைகளும் நெரியுமாறு தமது பழம்புகழ் வாய்ந்த கால் விரலால் ஊன்றிய துணைவராவார்.

குறிப்புரை :

இராவணனை விரல் ஊன்றி அடக்கியவர் இவர் என்கின்றது. வேய் - மூங்கில். தாள் - அடி. கரி - யானை. காளம் - கருமை நிறம். யானை மூங்கிலினது நுனியைப் பற்றிவிட்ட விசையால் கருமுகிலின் வயிறு கீறப்படும் மலை என்றது, திருவருள் துணையிருப்பின் ஆணவமான படலத்தையும் கீறிக் கருணைமழையைக் காணலாம் எனக் குறிப்பித்தவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை யளந்து
கொண்டவ னும்மறி வொண்ணாக் கொள்கையர் வெள்விடையூர்வர்
வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல்
கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே.

பொழிப்புரை :

வண்டுகள் இசை பாட, நீண்ட பொழிலின் நீழலைக் கண்டு மகிழும் சிறந்த மயில்கள் ஆடும் திருக்கற்குடிமாமலை இறைவர் குளிர்ந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகனாலும் உயர்ந்த இவ்வுலகை அளந்த திருமாலாலும் அறிய ஒண்ணாத இயல்பினர். வெண்ணிறமான விடையை ஊர்ந்து வருபவர்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியவொண்ணாதார் இவர் என்கின்றது. வார் பொழில் - நீண்டசோலை. பொழிலின் நீழலில் வண்டு பாடக்கண்டு மயிலாடும் கற்குடி என்றது திருவடி நிழலில் திளைத்திருக்கும் சிவயோகியர் பரநாத இன்னிசை கேட்டு ஆனந்தக்கூத்தாடுகின்ற இடம் என அறிவித்தவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

மூத்துவ ராடையி னாரும் மூசு கடுப்பொடி யாரும்
நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமில ராமதி வைத்தார்
ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச வவரிட ரெல்லாம்
காத்தவர் காமரு சோலைக் கற்குடி மாமலை யாரே.

பொழிப்புரை :

காவியாடையணிந்த புத்தர்களும், கடுக்காய்ப் பொடியை நிரம்ப உண்ணும் சமணர்களும், நாவிற்கு வெறுப்பை உண்டாக்கும் பொய்ம்மொழி பேசுபவராய் நேயமற்ற அறிவுடையவராய் இருப்போராவர். அவர்களை விடுத்துத் தம்மை ஏத்தி வாழ்த்தி உயரும் பக்தர்களும், சித்தர்களும் வணங்க அவர்கட்கு வரும் இடர்களை அகற்றிக்காத்தவர், அழகிய சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடிமாமலை இறைவர்.

குறிப்புரை :

சமணரும் புத்தரும் அறியமுடியாத பிறை சூடிய பெருமான் என்கிறது. மூதுவர் ஆடை - முதிர்ந்த காவியாடை. கடு - கடுக்காய்த்துவர். நா துவர் பொய்ம்மொழி - நாக்கிற்குத் துவர்ப்பை உண்டுபண்ணும் பொய்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை
நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன்
பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள்
பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே.

பொழிப்புரை :

அழகிய நீண்ட பொழில்களால் சூழப்பட்ட திருக்கற்குடிமாமலை இறைவரை, நாவிற் பொருந்திய வண்புகழால் போற்றப்பெறும் சீகாழிப் பதியில் தோன்றிய நன்மையமைந்த ஞானசம்பந்தன் பாடிய செந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள். பொலிவுடன் கூடிய தேவர்களோடும் பொன்னுலகின்கண் பொலிவோராவர்.

குறிப்புரை :

இத்தலத்திறைவனை ஏத்தவல்லவர்கள் தேவராய்த் திகழ்வர் என்கின்றது. காமரு - அழகிய. நாமரு - நாவிற் பொருந்திய.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே. 

பொழிப்புரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

குறிப்புரை :

தவறிழைத்த தண்மதியைத் தலையிற்சூடி விடத்தை அமுதுசெய்த பெருமானோ இவள் வாட மயக்குவது என்கின்றார். துணி - கீறு. பணி வளர்கொள்கையர் - பாம்புகள் வளர்வதைக் கொள்ளுகின்ற திருக்கரங்களையுடையவர். பாரிடம் - பூதம். ஆரிடமும் - ஏற்பார் ஏலாதார் என்கின்ற வேறுபாடில்லாமல் எல்லாரிடமும். மங்கை என்றது கொல்லிமழவனது மகளை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

கலைபுனைமானுரி தோலுடையாடை கனல்சுட ராலிவர்கண்கள்
தலையணிசென்னியர் தாரணிமார்பர் தம்மடிகள் ளிவரென்ன
அலைபுனல்பூம்பொழில் சூழ்ந்தமர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
இலைபுனைவேலரோ வேழையைவாட விடர்செய்வதோ விவரீடே.

பொழிப்புரை :

மான்தோலை இடையில் ஆடையாகப் புனைந்து, கனல், ஞாயிறு, திங்கள் ஆகியன கண்களாக விளங்கத் தலையோடு அணிந்த முடியினராய், மாலை அணிந்த மார்பினராய், உயிர்கட்குத் தலைவரிவர் என்று சொல்லத் தக்கவராய், நீர்வளம் நிரம்பிய பொழில்கள் சூழ்ந்த பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற இலை வடிவமான வேலை ஏந்திய இறைவர், இம்மழவன் மகளை வாடுமாறு இடர் செய்தல் இவர் பெருமைக்குப் பொருந்துவதாமோ?

குறிப்புரை :

இறைவனது கலை, ஆடை, கண் முதலியன இவை என உணர்த்தி, இவற்றையுடைய இவரோ இவளை இடர் செய்வது என்று வினாவுகின்றது. மானுரி புனைகலை. தோலுடை ஆடை, கனல்சுடர் இவர் கண்கள் என இயைக்க. கலை - மேலாடை. உடை ஆடை - உடுத்தலையுடைய ஆடை. இலை புனை வேலர் - இலைவடிவாகப் புனையப்பெற்ற வேலினையுடையவர். ஏழை - பெண்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

வெஞ்சுடராடுவர் துஞ்சிருண்மாலை வேண்டுவர்பூண்பது வெண்ணூல்
நஞ்சடைகண்டர் நெஞ்சிடமாக நண்ணுவர் நம்மைநயந்து
மஞ்சடைமாளிகை சூழ்தருபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
செஞ்சுடர்வண்ணரோ பைந்தொடிவாடச் சிதைசெய்வதோ விவர்சீரே.

பொழிப்புரை :

உலகமெல்லாம் அழிந்தொழியும் ஊழிக் காலத்து இருளில் கொடிய தீயில் நடனம் ஆடுபவரும், தலைமாலை முதலியவற்றை விரும்புபவரும், வெண்ணூல் பூண்பவரும், நஞ்சுடைய கண்டத்தவரும், அன்போடு தம்மை நினைத்த நம்மை விரும்பி நம் நெஞ்சை இடமாகக் கொண்டு எழுந்தருள்பவரும், மேகங்கள் தோயும் மாளிகைகள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து எழுந்தருளிய செந்தீவண்ணரும் ஆகிய சிவபெருமான் பைந்தொடி அணிந்த மழவன் மகளாகிய இப்பெண்ணை வருத்துவது இவர் புகழுக்குப் பொருந்துவதோ?

குறிப்புரை :

உலகமெல்லாந்துஞ்சும் பிரளயகாலத்திருளில் தீயாடுவார், மாலைவேண்டுவார், வெண்ணூல் பூண்பர், நஞ்சடை கண்டர், ஆன்மாக்களாகிய நம்மை எளிவந்த கருணையால் நண்ணுவார் என்கின்றது. துஞ்சு இருள் - அண்டமெல்லாம் இறக்குங்காலமாகிய இருள். இருள் ஆடுவர் என இயைபுபடுத்துக. நெஞ்சிடமாக நம்மை நயந்து நண்ணுவர் எனவும் இயைக்க. ஆன்மாக்கள் தற்போதமிழந்து நம்மை நண்ணட்டும் ஆட்கொள்வோம் என்றிராது, சென்று பயன்படும் கால்போலத்தாமே வலியவந்து அணுகுவர் என்பதாம். மஞ்சு - மேகம். சிதைசெய்வது - வருத்துவது. இவர் சீர் - இவர் புகழ்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

கனமலர்க்கொன்றை யலங்கலிலங்கக் கனறரு தூமதிக்கண்ணி
புனமலர்மாலை யணிந்தழகாய புனிதர்கொ லாமிவரென்ன
வனமலிவண்பொழில் சூழ்தருபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மனமலிமைந்தரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே.

பொழிப்புரை :

கார்காலத்தில் மலரும் கொன்றை மலரால் இயன்ற மாலை திருமேனியில் விளங்க, பிரிந்தவர்க்குக் கனலைத் தரும் தூய பிறைமதியைக் கண்ணியாகச் சூடி, வனங்களில் மலர்ந்த மலர்களால் ஆகிய மாலையைச் சூடி, அழகிய புனிதர் என்று சொல்லும்படி எழிலார்ந்த வண்பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து அடியவருக்கு, மனநிறைவு தருபவராய் உறையும் சிவபெருமான், இம்மங்கையை வாடும்படி செய்து மயக்குறுத்துவது மாண்பாகுமோ?

குறிப்புரை :

கொன்றைமாலை விளங்க, பிறைக்கண்ணியை யணிந்து அழகாய புனிதர் இவர் என அறிவிக்கின்றது. கனமலர் - கார்காலத்து மலரும் கொன்றைமலர். கனம் - மேகம். தூமதி - ஒருகலைப் பிறையாதலின் களங்கமில்லாத மதி. இறைவன் அணிந்தமையின் தூமதி எனலுமாம். வனம் - அழகு./n இங்ஙனம் பிறர் உற்ற துன்பம் போக்குதற்கு அறிகுறியாகப் பிறையை அணிந்த பெருமான் ஒருபெண் வாட மயல்செய்வது மாண்பாகுமா என்று வினாவியவாறு. கனல் தரு - மதிக்கு அடை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

மாந்தர்தம்பானறு நெய்மகிழ்ந்தாடி வளர்சடை மேற்புனல்வைத்து
மோந்தைமுழாக்குழல் தாளமொர்வீணை முதிரவோர் வாய்மூரிபாடி
ஆந்தைவிழிச்சிறு பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சாந்தணிமார்பரோ தையலைவாடச் சதுர்செய்வதோ விவர்சார்வே.

பொழிப்புரை :

மண்ணுலகில் அடியவர்கள் ஆட்டும் பால் நறுநெய் ஆகியவற்றை விரும்பியாடி, வளர்ந்த சடைமுடிமேல் கங்கையைச் சூடி, மொந்தை, முழா, குழல், தாளம், வீணை ஆகியன முழங்க வாய்மூரி பாடி ஆந்தை போன்ற விழிகளையுடைய சிறு பூதங்கள் சூழ்ந்தவராய்த் திருப்பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற சந்தனக் கலவையை அணிந்த மார்பினையுடைய சிவபிரான் இத்தையலை வாடும்படி செய்து இப்பெண்ணிடம் தம் சதுரப்பாட்டைக் காட்டல் ஏற்புடையதோ?

குறிப்புரை :

அடியார்கள் ஆட்டும் பால், நெய் முதலானவற்றில் ஆடிக் கங்கையைச் சடைமேல்வைத்து மொந்தை முதலான வாத்தியங்கள் முழங்கப்பாடும் பூதகணநாதர் இவர் என்கின்றது. மோந்தை: மொந்தை என்பதன் நீட்டல்விகாரம். முதிர - ஒலிக்க. ஒருமாதைத் தலையில் வைத்த இவரோ இம்மாது வாடச் சதுர்செய்வது என நயந்தோன்ற உரைத்தவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

நீறுமெய்பூசி நிறைசடைதாழ நெற்றிக்கண் ணாலுற்றுநோக்கி
ஆறதுசூடி யாடரவாட்டி யைவிரற் கோவணவாடை
பாறருமேனியர் பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
ஏறதுவேறிய ரேழையைவாட விடர்செய்வதோ விவரீடே.

பொழிப்புரை :

திருநீற்றை உடல் முழுதும் பூசியவராய், நிறைந்த சடைகள் தாழ்ந்து விளங்க, தமது நெற்றி விழியால் மறக்கருணை காட்டிப் பாவம் போக்கி, கங்கையைத் தலையில் அணிந்து, ஆடுகின்ற பாம்பைக் கையில் எடுத்து விளையாடிக் கொண்டு, ஐவிரல் அளவுள்ள கோவண ஆடை அணிந்து, பால் போன்ற வெள்ளிய மேனியராய், பூதகணங்கள் தம்மைச் சூழ்ந்தவராய்த் திருபாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற விடை ஊர்தியராகிய சிவபிரான் இப்பெண்ணை வாடுமாறு செய்து இவளுக்கு இடர் செய்வது பெருமை தருவது ஒன்றா?

குறிப்புரை :

அருளும் மறமும் உடையவர் இவர் என அறிவிக்கின்றது. நெற்றிக்கண்ணால் உற்றுநோக்கி என்றது மறக்கருணை காட்டிச் சம்ஹரித்தலைச் சொல்லியது./n ஐவிரல் கோவணம் என்பது கோவணத்தினகலம் கூறியது. ஏழை - பெண். ஈடு - பெருமை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

பொழிப்புரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

குறிப்புரை :

நாகம், ஆமையோடு, பூணூல், கொன்றைமாலை புனைந்தவர் இவர் என்கின்றது./n ஏகவடம் - ஒற்றைமாலை. குழகர் - இளமையுடையவர். சதிர் - சாமர்த்தியம். இளமங்கையைப் பக்கத்தில் உடைய இவர் இவ்வாறு சதிர்செய்தல் ஆகாது என்பது குறிப்பு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

ஏவலத்தால்விச யற்கருள்செய்து இராவண னையீடழித்து
மூவரிலும்முத லாய்நடுவாய மூர்த்தியை யன்றிமொழியாள்
யாவர்களும்பர வும்மெழிற்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
தேவர்கள்தேவரோ சேயிழைவாடச் சிதைசெய்வதோ விவர்சேர்வே.

பொழிப்புரை :

அம்பின் வலிமையால் விசயனோடு போரிட்டு வென்று அவனுக்குப் பாசுபதாஸ்திரம் வழங்கி, அருள் செய்தவரும் இராவணன் பெருவீரன் என்ற புகழை அழித்தவரும், மும்மூர்த்திகளுக்கும் தலைவராய் அவர்கட்கு நடுவே நின்று படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைப் புரிபவராய் எல்லோராலும் துதிக்கப் பெறும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறையும் மகாதேவராய சிவபிரான் திருப்பெயரையன்றி வேறு வார்த்தைகள் பேசுவதறியாத இப்பெண்ணை வாடச் சிதைவு செய்தல் இவருடைய தொடர்புக்கு அழகிய செயல் ஆகுமோ?

குறிப்புரை :

அண்டினாரைக் காத்து மிண்டினாரை அழிக்கும் பெரு மையர் இவர் என்கின்றது. ஏ வலத்தால் - அம்பின் வலிமையால். ஈடு - வலிமை. `இராவணன் தன்னை` என்றும் பாடம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

மேலதுநான்முக னெய்தியதில்லை கீழது சேவடிதன்னை
நீலதுவண்ணனு மெய்தியதில்லை யெனவிவர் நின்றதுமல்லால்
ஆலதுமாமதி தோய்பொழிற்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பாலதுவண்ணரோ பைந்தொடிவாடப் பழிசெய்வதோ விவர்பண்பே.

பொழிப்புரை :

மேலே உள்ள திருமுடியை நான்முகன் தேடிக் கண்டான் இல்லை: கீழே உள்ள திருவடியை நீல நிறத்தை உடைய திருமால் தேடி அடைந்ததுமில்லை என்று உலகம் புகழுமாறு ஓங்கி அழலுருவாய் நின்றவரும், பெரிய முழுமதியை ஆலமரங்கள் சென்று தோயும் பொழில்கள் சூழ்ந்த திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் பால் வண்ணருமாகிய சிவபிரான் இப்பைந்தொடியாள் வாடுமாறு வஞ்சித்தல் இவர் பண்புக்கு ஏற்ற செயல் ஆகுமோ?

குறிப்புரை :

அயனும் திருமாலும் மேலும் கீழும் அறியாதபடி மயங்கச்செய்த பெருமான் இவர் என்கின்றது.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

பொழிப்புரை :

நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

குறிப்புரை :

புறச்சமயிகள் புல்லுரை கொள்ளவேண்டா என உலக வர்க்கு அறிவுறுத்திப், பின்னர் ஆணோடு பெண் வடிவானவர் இவர் என்கின்றது./n நாணொடு கூடிய - நாணத்தோடு சேர்ந்த பிறவற்றையும். சாயினரேனும் - இழந்தவர்களாயினும். நகுவர் - பரிகசிக்கத் தக்க வர்கள், ஆதலால் இருவேளை உண்ணுகின்ற அவருடைய அஞ்சத்தக்க சிரிப்பால் அவர்களைக் கொள்ளவேண்டா என முதல் இரண்டடிகட்கும் பொழிப்புரை காண்க. பெண்ணொருபாதியான பெருமான் ஒரு பெண்ணை வாடச் செய்யார் என்பது குறிப்பு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

அகமலியன்பொடு தொண்டர்வணங்க வாச்சிரா மத்துறைகின்ற
புகைமலிமாலை புனைந்தழகாய புனிதர்கொ லாமிவரென்ன
நகைமலிதண்பொழில் சூழ்தருகாழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலிதண்டமிழ் கொண்டிவையேத்தச் சாரகி லாவினைதானே.

பொழிப்புரை :

உள்ளம் நிறைந்த அன்போடு தொண்டர்கள் வழிபட ஆச்சிராமம் என்னும் ஊரில் உறைகின்றவரும், அன்பர் காட்டும் நறுமணப்புகை நிறைந்த மாலைகளைச் சூடியவரும், அழகும் தூய்மையும் உடையவருமான சிவபெருமானை, மலர்ந்த தண் பொழில்கள் சூழ்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய, நோய்தீர்க்கும் மேன்மை மிக்கதும் உள்ளத்தைக் குளிர்விப்பதுமான இத்தமிழ் மாலையால், ஏத்திப் பரவி வழிபடுவோரை வினைகள்சாரா.

குறிப்புரை :

இப்பாடல் பத்தும் வல்லாரை வினைசாரா என்கிறது. அகமலி அன்பு - மனம் நிறைந்த அன்பு. தகைமலி தண் தமிழ் - இன்றைக்கும் ஓதுவாரது நோய் தீர்க்கும் தகுதி வாய்ந்த தமிழ்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

துஞ்சவருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
நெஞ்சம்புகுந்தென்னை நினைவிப்பாரு முனைநட்பாய்
வஞ்சப்படுத்தொருத்தி வாணாள்கொள்ளும் வகைகேட்
டஞ்சும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.

பொழிப்புரை :

உறங்கும்போது கனவிடை வருபவரும், தம்மைத் தொழுமாறு செய்பவரும், முனைப்புக் காலத்து மறைந்து, அன்பு செய்யும் காலத்து என் நெஞ்சம் புகுந்து நின்று, நினையுமாறு செய்பவரும் ஆகிய இறைவர், முற்பிறவியில் நட்பாய் இருப்பதுபோலக் காட்டித்தன்னை வஞ்சனை செய்து கொன்ற கணவனை மறுபிறப்பில் அடைந்து அவனது வாழ்நாளைக் கவர்ந்த பெண்ணின் செயலுக்குத் துணைபோன வேளாளர்கள் அஞ்சி உயிர்த்தியாகம் செய்த திருவாலங்காட்டில் உறையும் எம் அடிகளாவார்.

குறிப்புரை :

அடியேனை எல்லாம் செய்விப்பவர் இவர் என் கின்றது. துஞ்சவருவார் - யான் தூங்க என்கனவில் எழுந்தருளுவார். இவன் இறைவன் என்று உணரச்செய்த இறைவனே தொழச் செய்தாலன்றித் தொழும் உரிமையும் ஆன்மாக்களுக்கு இல்லையாதலின் தொழுவிப்பாரும் என்றார். வழுவிப்போய் - உயிர்களுடைய முனைப்புக்காலத்து மறைந்து நின்று. முனைநட்பாய் - முன்னமே இருந்த நட்பினை உடையவளைப்போலாகி, ஒருத்தியென்றது நீலியை. நவஞானியென்னும் பார்ப்பனியை அவள் கணவன் கொன்றான். அவள் அவனைப் பழிவாங்க எண்ணி மறுபிறவியில் புரிசைகிழார் என்னும் வேளாளர்க்குப் புத்திரியாகப் பிறந்திருந்தாள். தோற்றத்தைக் கண்டு அவளைப் பேயென்று ஊரார் புறக்கணித்தனர், முற்பிறப்பின் கணவனாகிய பார்ப்பான் தரிசனச் செட்டி என்னும் பெயரோடு பிறந்திருந்தான். அவனைக் கண்டதும் இவள் அவன் மனைவிபோல நடித்துப் பழிவாங்கத் தலைப்பட்டபோது அவன் அஞ்சியோடி அவ்வூர் வேளாளர் எழுபதுபேரிடம் அடைக்கலம் புகுந்தான். அவர்கள் பிணை கொடுத்தனர். இருந்தும் இவள் செட்டியை வஞ்சித்துக் கொன்றாள். பிணைகொடுத்த வண்ணம் எழுபது வேளாளரும் தீப்புகுந்து உயிர்துறந்தனர். இதனைக் கேட்ட அயலார் அனை வரும் அஞ்சினர் என்ற தொண்டைமண்டல வரலாறு பின்னிரண்டடிகளிற் குறிக்கப்பெற்றுள்ளது.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

கேடும்பிறவியு மாக்கினாருங் கேடிலா
வீடுமாநெறி விளம்பினாரெம் விகிர்தனார்
காடுஞ்சுடலையுங் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோ
டாடும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.

பொழிப்புரை :

பிறப்பு இறப்புக்களை உயிர்கட்குத் தந்தருளியவரும், அழிவற்ற வீட்டு நெறியை அடைதற்குரிய நெறிகளை உயிர்கட்கு விளம்பியவரும் ஆகிய நம்மின் வேறுபட்ட இயல்பினராகிய சிவபிரான், இடுகாடு சுடலை ஆகியவற்றை இடமாகக் கொண்டு இராப்போதில் பேய்க்கணங்களோடு நடனமாடும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

தோற்ற நரகங்களைத்தந்த இவரே வீட்டு நெறியையும் விளம்பினார் என்கின்றது. கேடு - அழிவு. கேடிலா - என்றும் அழிதலில்லாத. அந்நெறியையுணர்த்துதலே இறைவனருளிச் செயல்; நெறிக்கண் சென்று வீடடைதல் ஆன்மாவின் கடன் என்பது காட்டியவாறு. எல்லி - இரவு. கணப்பேய் - கூட்டமாகிய பேய்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

கந்தங்கமழ்கொன்றைக் கண்ணிசூடிக் கனலாடி
வெந்தபொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார்
கொந்தண்பொழிற்சோலை யரவிற்றோன்றிக் கோடல்பூத்
தந்தண்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.

பொழிப்புரை :

மணம் கமழும் கொன்றை மலர் மாலை சூடிக்கனலிடை நின்று ஆடி சுடுகாட்டில் `வெந்த` சாம்பலை உடல் முழுதும் விளங்கப் பூசும் வேறுபட்ட இயல்பினராகிய சிவபிரான், கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளிலும் பாம்பின் படம் போலக் காந்தள் மலர் மலரும் அழகிய குளிர்ந்த பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

கொன்றையணிந்து, கனலாடி நீறுபூசும் நிமலர் இவர் என்கிறது. கண்ணி - திருமுடியிற் சூடப்பெறும் மாலை. கொந்து அண் - கொத்துக்கள் நெருங்கிய. பொழில் - இயற்கையே வளர்ந்த காடு. சோலை - வைத்து வளர்க்கப்பெற்ற பூங்கா. கோடல் - செங்காந்தள். கோடல் அரவில் தோன்றிப் பூத்து எனக்கூட்டுக. செங்காந்தள் பூத்திருப்பது பாம்பு படம் எடுத்ததை ஒக்குமாதலின் இவ்வாறு கூறினார்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

பாலமதிசென்னி படரச்சூடி பழியோராக்
காலனுயிர்செற்ற காலனாய கருத்தனார்
கோலம்பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை
ஆலும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.

பொழிப்புரை :

இளம்பிறையை முடிமீது பொருந்தச் சூடி, தனக்கு வரும் பழியை நினையாத காலனது உயிரைச் செற்ற காலகாலராய இறைவர் அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் இளமயில்கள் பெண் மயில்களோடு கூடிக்களித்து ஆரவாரிக்கும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

கால காலனாய கருத்தா இவர் என்கின்றது. பாலமதி - இளம்பிறை. பழியோரா - தனக்கு வரும் பழியை ஆராயாத. பழியாவது சிவனடியாரைப் பிடிக்க முயன்ற தீங்கு. காலன் பிறவற்றின் உயிர்களைப் பறிப்பதும் இறைவன் அருளாணைவழி நின்றே என்பது விளங்கக் காலகாலனாய கருத்தனார் என்றார். கோலம் - அழகு. ஆலும் - ஆரவாரிக்கும். இது மயில் ஒலியைக் குறிக்கும் மரபுச் சொல்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

ஈர்க்கும்புனல்சூடி யிளவெண்திங்கள் முதிரவே
பார்க்குமரவம்பூண் டாடிவேடம் பயின்றாரும்
கார்க்கொள்கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்
தார்க்கும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.

பொழிப்புரை :

ஈர்த்துச் செல்லுதலில் வலிய கங்கை நீரை முடி மிசைத் தாங்கி, இளம்பிறையை விழுங்க அதனது வளர்ச்சி பார்த்திருக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டு, நடனம் ஆடிப் பல்வேறு வேடங்களில் தோன்றி அருள்புரிபவர், கார்காலத்தே மலரும் முல்லைக் கொடிகள் குருந்த மரங்களில் ஏறிப்படர அம்மலர்களில் உள்ள தேனை உண்ணவரும் கரிய வண்டுகள் மலரை மொய்த்து ஆரவாரிக்கும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

இளவெண் திங்கள் முதிரும்வரை பார்த்திருக்கும் அரவம் பூண்டாடிய பெருமான் இவர் என்கின்றது. ஈர்க்கும் - இழுத்துச் செல்லும். திருமுடிக்கண் உள்ள அரவம் உடனிருக்கும் இளம்பிறையை முதிரட்டும்; உண்போம் என்று பார்த்திருக்கின்றது என்பதை விளக்கியவாறு. கார்க்கொள் - கார்காலத்தைக் கொண்ட. கருந்தேன் - கரியவண்டு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

பறையுஞ்சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
மறையும்பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும்பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
டறையும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.

பொழிப்புரை :

பறை, சிறுகுழல், யாழ் முதலிய கருவிகளைப் பூதங்கள் ஒலிக்க வேதங்களைப் பாடிக்கொண்டு மயானத்தில் உறையும் மைந்தராய், பிறை, பெருகி வரும் கங்கை ஆகியவற்றை அணிந்த சடை முடியினர் ஆகிய சிவபெருமான் பெடைகளோடு கூடிய ஆண் வண்டுகள் ஒலிக்கும்சோலைகள் சூழ்ந்த பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

பறை குழல் யாழ் முதலியவற்றைப் பூதகணம் வாசிக்க, திருவாலங்காட்டுறையும் பெருமானிவர் என்கின்றது. பயிற்ற - தம்முடனுறை பூதங்கள் பலகாற்பழக்க. பேடைவண்டு - பெண்வண்டு. அறையும் - ஒலிக்கும்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

நுணங்குமறைபாடி யாடிவேடம் பயின்றாரும்
இணங்குமலைமகளோ டிருகூறொன்றா யிசைந்தாரும்
வணங்குஞ்சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட்
டணங்கும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.

பொழிப்புரை :

நுட்பமான ஒலிக் கூறுகளை உடைய வேதங்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பல்வேறு திருவுருவங்களைக் கொள்பவரும், தம்மோடு இணைந்த பார்வதிதேவியுடன் இருவேறு உருவுடைய ஓருருவாக இசைந்தவரும், ஆகிய பெருமானார் தம்மை வணங்கும் அடக்கமுடைய தொண்டர்கள் நாள்தோறும் பாடும் வாழ்த்துக்களைக் கேட்டு தெய்வத் தன்மை மிகுந்து தோன்றும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

உமையொரு கூறனாக, இருவேறுருவின் ஒருபேரியாக் கையனாக எழுந்தருளிய பெருமான் இவர் என்கின்றது. இரு கூறு - சத்தியின்கூறும் சிவத்தின்கூறும் ஆகிய இரண்டு கூறு, வைகல் - நாடோறும். அணங்கும் - தெய்வத்தன்மை மிகும்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

கணையும்வரிசிலையு மெரியுங்கூடிக் கவர்ந்துண்ண
இணையிலெயின்மூன்று மெரித்திட்டாரெம் மிறைவனார்
பிணையுஞ்சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந்
தணையும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.

பொழிப்புரை :

அம்பு வில் நெருப்பு ஆகியன கூடிக் கவர்ந்து உண்ணுமாறு ஒப்பற்ற முப்புரங்களை எரித்தவராகிய எம் இறைவர், பெண் மான் ஆண்மான் அவற்றின் குட்டிகள் ஆகியன இரவிடைச் சென்றணையும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

முப்புரங்களை வில்லும் அம்பும் தீயும்கூடி எரிக்கச் செய்த இறைவன் இவர் என்கின்றது. இணை - ஒப்பு. பிணை - பெண்மான். மறி - மான்குட்டி. கலை - ஆண்மான். கங்குல் - இரா.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

கவிழமலைதரளக் கடகக்கையா லெடுத்தான்தோள்
பவழநுனைவிரலாற் பையவூன்றிப் பரிந்தாரும்
தவழுங்கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத்
தவிழும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.

பொழிப்புரை :

கயிலை மலை நிலை குலையுமாறு முத்துக்கள் பதித்த வீரக் கடகம் அணிந்த தன் கைகளால் எடுத்த இராவணனின் தோள் வலியைத் தம் பவழம் போன்ற கால்விரல் நுனியால் மெல்ல ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு இரங்கி அருள் புரிந்த சிவபிரானார் முல்லைக்கொடிகள் முல்லை நிலத்தின்கண் தவழ்ந்து படர நறவக் கொடிகள் மலர்களைப் பூத்து விரிந்து நிற்கும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

இராவணனைப் பையநெரித்த பெருமான் இவர் என்கின்றது. மலை - கயிலை மலை. தரளக்கடகம் கை - முத்துக்கடகம் செறிந்தகை. பவழநுனை விரல் - பவழம் போன்ற நுனியையுடைய விரல். பைய - மெதுவாக. பரிந்தார் - கருணைசெய்தவர். புறவம் - முல்லைநிலம். நறவம் - நறவுமலர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

பகலுமிரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா
திகலுமிருவர்க்கு மெரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும்வழிபாடு வல்லார்க்கென்றுந் தீயபோய்
அகலும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.

பொழிப்புரை :

பகல் இரவு போன்ற வெண்மை கருமை நிறங்களைக் கொண்ட நான்முகனும் திருமாலும் தங்களிடையே உள்ள உறவு முறையையும் கருதாது யார் தலைவர் என்பதில் மாறுபட்டு நிற்க அவ்விருவர்க்கும் இடையே எரியுருவாய்த் தோன்றி ஓங்கி நின்றவரும் ஆகம நூல்கள் புகலும் வழிபாடுகளில் தலை நிற்கும் அடியவர்க்குத் தீயன போக்கி அருள்புரிபவரும் ஆகிய பெருமான் பழையனூர்ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

தந்தையும் மகனும் என்ற முறையையும் பாராதே முனிந்த அயனுக்கும் மாலுக்கும் இடையே எரியாய் நிமிர்ந்த பெருமான் இவர் என்கின்றது. பகலும் இரவும் சேர்பண்பினார். நிறத்தால் வெண்பகலையும், காரிரவையும் ஒத்த பண்பினர். நண்பு - தந்தையும் மகனுமான முறையன்பு. இகலும் - மாறுபட்ட. புகலும் - விதிநூல்களாய ஆகமங்களிற் சொல்லப்பெற்ற. உண்ணும்வரை நோய்தடுக்கும் உலகமருந்துகள் போலாது என்றைக்கும் பாவம் அணுகாதவண்ணம் பாதுகாக்கும் அடிகள் என்பதை விளக்குதல் காண்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

போழம்பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
வேழம்வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
கேழல்வினைபோகக் கேட்பிப்பாருங் கேடிலா
ஆழ்வர்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.

பொழிப்புரை :

மாறுபட்ட சொற்களைப் பேசியும், காலத்துக்கு ஏற்றவாறு உண்மையல்லாதவைகளைச் சொல்லியும் திரியும் புறச்சமயத்தவரும், நன்மையல்லாதவற்றை உபதேசங்களாகக் கூறுபவரும், யானைத் தீ வரும் அளவும் வெயிலிடை உண்டு திரியும் மதவாதிகளுமாகிய புறச்சமயிகளைச் சாராது தம்மைச் சார்ந்த அடியவர்களைப் பற்றிய வினைகள் அகலுமாறு அவர்கட்கு உபதேசங்களைப் புரியச் செய்பவராகிய அழிவற்ற ஆளுமையுடையவர் ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

போழம் - மாறுபட்ட சொல். போது சாற்றி - காலம் பார்த்துச் சொல்லி. திரிவார் என்றது புறச்சமயிகளை. வேழம் - யானைத்தீ என்னும் நோய். துற்றி - உண்டு. கேழல் வினை - கெழுவுதலையுடைய வினை. போக - கெட. கேழ்பவர் - நன்மை உடையார், கேழ்பு - நன்மை, கேழ் அல் - நன்மை அல்லாத.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 12

சாந்தங்கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன்
ஆந்தண்பழையனூ ராலங்காட்டெம் மடிகளை
வேந்தனருளாலே விரித்தபாட லிவைவல்லார்
சேர்ந்தவிடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே.

பொழிப்புரை :

சந்தனம் கமழும் திருவீதிகளை உடைய சண்பைப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் அழகிய தண்ணிய ஆலங்காட்டு வேந்தனாக விளங்கும் அவ்விறைவன் திருவருளாலே போற்றி விரித்தோதிய இத்திருப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் சேர்ந்த இடங்களெல்லாம் புனிதமானவைகளாகப் பொருந்தப் பெறுவர்.

குறிப்புரை :

இறைவனருளால் பாடிய இதை வல்லார் சேர்ந்த இடமெல்லாம் புனிதமாம் எனப் புகல்கின்றது. சாந்தம் - சந்தனம். தீர்த்தமாக - புனிதமாக. சேர்வார் - பொருந்துவார்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 1

குண்டைக் குறட்பூதங் குழும வனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே.

பொழிப்புரை :

பருத்த குள்ளமான பூதகணங்கள் தன்னைச் சூழ்ந்து நிற்கக் கையில் அனலை ஏந்தியவனாய், வண்டுகள் மருளிந்தளப்பண்பாட, பொன்போன்று விரிந்து மலர்ந்த கொன்றை மலர் மாலை அணிந்தவனாய்ச் சிவபிரான் கெண்டை மீன்கள் பிறழ்ந்து விளையாடும் தெளிந்த நீரை உடைய கெடில நதியின் வடகரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்து ஆடுவான்.

குறிப்புரை :

கெடில நதியின் வடபக்கத்து, கொன்றைமாலையணிந்த பெருமான் அனல் ஏந்தி வீரட்டானத்து ஆடும் என்கின்றது. குண்டை - பருத்த. குறள் - குள்ளமான. குழும - கூடியிருக்க. மருள் பாட - மருளிந்தளம் என்னும் பண்ணைப் பாட. இது குறிஞ்சிப்பண்திறம் எட்டனுள் ஒன்று. பொன்விரிகொன்றை - பொன்னிறமாகவிரிந்த கொன்றை. தொடையலான் - மாலையை அணிந்த இறைவன். தொடையலான் ஏந்தி வீரட்டானத்து ஆடும் எனப் பொருத்துக.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 2

அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக்
கரும்பின் மொழியாளோ டுடன்கை யனல்வீசிச்
சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ
விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே.

பொழிப்புரை :

சிவபிரான் தாமரை அரும்பு, குரும்பை ஆகிய வற்றை அழகால் வென்ற மென்மையான தனங்களையும், கரும்பு போன்ற இனிய மொழிகளையும் உடைய உமையம்மையோடு கூடிக் கையில் அனல் ஏந்தி வீசிக் கொண்டு, வண்டுகள் தேனுண்ணும் இதழ் விரிந்த கொன்றை மாலை அணிந்த ஒளிமயமான பொன் போன்ற சடைகள் தாழத் தன்னால் பெரிதும் விரும்பப்படும் அதிகை வீரட்டானத்து ஆடுவான்.

குறிப்புரை :

இறைவர் உமையம்மையாரோடு திருவதிகை வீரட்டா னத்து ஆடுவர் என்கின்றது. அரும்பு - தாமரையரும்பு. அலைத்த - அழகின்மிகுதியால் வருத்திய. சுரும்பு - ஒருசாதி வண்டு. அதிகை - தலப்பெயர். வீரட்டானம் - கோயிற்பெயர்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 3

ஆடலழனாக மரைக்கிட் டசைத்தாடப்
பாடன் மறைவல்லான் படுதம் பலிபெயர்வான்
மாட முகட்டின்மேன் மதிதோ யதிகையுள்
வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே.

பொழிப்புரை :

வென்றியையும் அழல் போலும் கொடிய தன்மை யையும் கொண்ட நாகத்தை இடையில் பொருந்தக் கட்டி ஆடுமாறு செய்து, பாடப்படும் வேதங்களில் வல்லவனாய், `படுதம்` என்னும் கூத்தினை ஆடிக்கொண்டு, பலி தேடித் திரிபவனாய சிவபிரான் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்த மாடவீடுகளை உடைய திருவதிகையிலுள்ள வீரட்டானத்தில் பல்வேறு கோலங்களைக் கொள்ளுதலில் வல்லவனாய் ஆடுவான்.

குறிப்புரை :

நாகம் முதலியவற்றைக் கட்டி, வேடம் பலவல்ல இறைவர் வீரட்டானத்து ஆடுவர் என்கின்றது. ஆடல் அழல் நாகம் - வெற்றியோடு கூடிய கொடியபாம்பு. இட்டு - அணியாக இட்டு. படுதம் பலி பெயர்வான் - `படுதம்` என்னும் கூத்தினை ஆடிக்கொண்டு பலிக்காகத் திரிபவன். வேடம் பலவல்லான் என்றது நினைந்த வடிவை நினைந்த வண்ணம் அடையும் வல்லமை உடையனாதலின்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 4

எண்ணா ரெயிலெய்தா னிறைவ னனலேந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறைபாடப் பரம னதிகையுள்
விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே.

பொழிப்புரை :

பகைவரது திரிபுரங்களை எய்து அழித்த இறைவன் அனலைக் கையில் ஏந்தி மார்ச்சனை இடப்பட்ட முழவு முழங்க இளம் பிறையை முடியில் சூடிப் பண்ணமைப்புடைய வேதங்களை அந்தணர் ஓதத் திருவதிகை வீரட்டானத்தே தேவர்கள் போற்ற நின்று ஆடுவான்.

குறிப்புரை :

பகைவரது திரிபுரத்தை எரித்தருளிய இறைவர் அன லேந்தி, மதிசூடி, மறைபாட அதிகை வீரட்டானத்து ஆடுவர் என்கின்றது. எண்ணார் - பகைவர். மண் - மார்ச்சனை. முதிரா மதி - இளம் பிறை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 5

கரிபுன் புறமாய கழிந்தா ரிடுகாட்டில்
திருநின் றொருகையாற் றிருவா மதிகையுள்
எரியேந் தியபெருமா னெரிபுன் சடைதாழ
விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே.

பொழிப்புரை :

கரிந்த புல்லிய ஊர்ப்புறமாய இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டில், ஒரு திருக்கரத்தில் எரி ஏந்தி ஆடும் பெருமான் திருமகள் நிலைபெற்ற திருவதிகையில் உள்ள வீரட்டானத்தில் எரிபோன்று சிவந்த தன் சடைகள் தாழ்ந்து விரிய தலையில் கங்கை சூடி ஆடுவான்.

குறிப்புரை :

எரியேந்திய பெருமான் சடைதாழப் புனல்சூடி இடு காட்டில் ஆடுவார் என்கின்றது. கரி புன்புறம் ஆய - கரிந்த புல்லிய ஊர்ப்புறமாகிய. திரு நின்று - திருமகள் நிலைபெற்று, ஒருகையால் - ஒழிதலால்: அஃதாவது பிற இடங்கட்குச் செல்லுதலை ஒழிதலால். இது திரு அதிகை என்பதற்குப் பொருள் காட்டியவாறு.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 6

துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி
இளங்கொம் பனசாய லுமையோ டிசைபாடி
வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்
விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே.

பொழிப்புரை :

அசைந்து எரியும் அனலை அழகிய கையில் பொருந்த ஏந்தி விளையாடி, இளங்கொம்பு போன்ற உமையம்மையோடு இசைபாடி, வளமை உள்ள புனல் சூழ்ந்த வயல்களை உடைய திருவதிகையில் வீரட்டானத்தே முடிமிசை விளங்கும் பிறைசூடி ஆடுவான்.

குறிப்புரை :

உமையோடு இசைபாடி ஆடுவார் என்கின்றது. துளங்கும் - அசைந்து (எரிகின்ற). துதைய - நெருங்க. சாயல் - மென்மை.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 7

பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி
பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக்
கீத முமைபாடக் கெடில வடபக்கம்
வேத முதல்வன்நின் றாடும்வீரட் டானத்தே.

பொழிப்புரை :

பரம்பொருளாகிய பரமன் தன் திருவடிகளைப் பலரும் பரவி ஏத்தி வணங்கவும், பூதகணங்கள் புடை சூழவும், புலித்தோலை உடுத்து, உமையம்மை கீதம் பாடக் கெடிலநதியின் வடகரையில் வேதமுதல்வனாய் வீரட்டானத்தே ஆடுவான்.

குறிப்புரை :

இது உமையவளே இசைபாட வேதமுதல்வன் ஆடு கிறான் என்கின்றது. பலர் என்றது பாதத்தைத் திருவருளாகவே எண்ணிப்பணியும் சிவஞானியரும், உறுப்பென எண்ணிப்போற்றும் உலக ஞானியரும் ஆகிய பலரையும்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 8

கல்லார் வரையரக்கன் றடந்தோள் கவின்வாட
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
வில்லா லெயிலெய்தா னாடும்வீரட் டானத்தே.

பொழிப்புரை :

கற்கள் பொருந்திய கயிலை மலையை எடுத்த இராவணனின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் பல செய்தும், முப்புரங்களை வில்லால் எய்து, அழித்தும், தனது பெருவீரத்தைப் புலப்படுத்திய இறைவன் பற்கள் பொருந்திய பிளந்தவாயை உடைய வெள்ளிய தலைமாலையைச் சூடித்திருவதிகை வீரட்டானத்தே ஆடுவான்.

குறிப்புரை :

இராவணனது தோளழகுகெட அடர்த்து அவனுக்கு அருள்செய்தவர் அதிகையுள் ஆடுகிறார் என்கின்றது. கல்லார் வரை என்றது கயிலையை. கயிலை கல்லில்லாததாயினும் மலையென்ற பொதுமைற்றிக் கூறியது. கவின் - அழகு. ஒல்லை - விரைவாக: காலந் தாழ்க்க அடர்ப்பின் அவனிறந்தேபடுவான் என்னுங் கருணையால். பல் ஆர் பகுவாய - பற்கள் பொருந்திய பிளவுபட்ட வாயையுடைய.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 9

நெடியா னான்முகனு நிமிர்ந்தானைக் காண்கிலார்
பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக்
கடியார் கழுநீலம் மலரும் மதிகையுள்
வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே.

பொழிப்புரை :

பேருருக் கொண்ட திருமாலும், நான்முகனும் அழ லுருவாய் ஓங்கி நிமிர்ந்தவனை, திருநீறணிந்த மார்பினனை, முப்புரிநூல் அணிந்தவனைக் காண்கிலார்: அப்பெருமான் மணம் கமழும் நீலப்பூக்கள் மலரும் திருவதிகையிலுள்ள வீரட்டானத்தே முடைநாற்றமுடைய தலை ஓட்டைக் கையில் ஏந்தி ஆடுகின்றான்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியமுடியாதவர் என்கின்றது. கடி -மணம். கழுநீலம் - நீலப்பூ. வெடி - முடைநாற்றம். நெடியானும் நான் முகனும் நிமிர்ந்தானை, மார்பானை, உடையானை, காண்கிலார்: அவன் அதிகையுள்வீரட்டானத்து ஆடும் என முடிக்க.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 10

அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோ டுடனேந்தி யுடைவிட் டுழல்வார்கள்
உரையோ டுரையொவ்வாதுமையோடுடனாகி
விரைதோ யலர்தாரா னாடும்வீரட் டானத்தே.

பொழிப்புரை :

அரச மரத்தையும் தழைத்த அசோக மரத்தையும் புனித மரங்களாகக் கொண்டு குண்டிகையாகச் சுரைக்குடுக்கையை ஏந்தித்திரியும் புத்தர்கள், ஆடையற்றுத் திரியும் சமணர்கள் ஆகியவர்களின் பொருந்தாத வார்த்தைகளைக் கேளாதீர். மணம் கமழும் மாலை அணிந்த சிவபிரான் உமையம்மையோடு உடனாய் அதிகை வீரட்டானத்தே ஆடுவான். அவனை வணங்குங்கள்.

குறிப்புரை :

அரை - அரச மரம். புத்தர் சமணர் உரைகள் ஒன்றோடு ஒன்று ஒவ்வா என்கின்றது. சுரைக்குடுக்கையை ஏந்தித் திரிபவர் ஆதலின் இங்ஙனம் கூறினார். விரை - மணம்.

பண் :தக்கராகம்

பாடல் எண் : 11

ஞாழல் கமழ்காழி யுண்ஞான சம்பந்தன்
வேழம் பொருதெண்ணீ ரதிகைவீரட் டானத்துச்
சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழுந் துணையாக நினைவார் வினையிலரே.

பொழிப்புரை :

ஞாழற் செடிகளின் மலர்கள் மணம் கமழும் சீகாழியுள் தோன்றிய ஞானசம்பந்தன், நாணல்களால் கரைகள் அரிக்கப்படாமல் காக்கப்படும் தெளிந்த நீர்வளம் உடைய திருவதிகை வீரட்டானத்தில், ஆடும் கழல் அணிந்த அடிகளை உடைய சிவபிரானைப் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை, வாழ்வுத் துணையாக நினைபவர் வினையிலராவர்.

குறிப்புரை :

இப்பதிகத்தைத் தமது வாழ்விற்குத் துணையாகக் கொண்டவர்கட்கு வினையில்லை என்கின்றது. ஞாழல் - புலிநகக் கொன்றை. வேழம் - கொறுக்காந் தட்டை. கரை - கரையாமலிருக்க நாணல் இடுவது மரபு.

பண் :

பாடல் எண் : 1

பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்
வில்லடைந்த புருவநல்லாண் மேனியில் வைத்தலென்னே
சொல்லடைந்த தொன்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்
செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுர மேயவனே.

பொழிப்புரை :

பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய பழமையான வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும், பிற கலைகளையும் கற்றுணர்ந்த செல்வர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப்பதியுள் எழுந்தருளிய இறைவனே! பற்கள் பொருந்திய வெண்மையான தலையில் பல இடங்களுக்கும் போய்ப் பலியேற்பதோடு வில் போன்ற புருவத்தை உடைய உமையம்மையை உன் திருமேனியில் கொண்டுள்ள காரணம் யாதோ?

குறிப்புரை :

வேதம், அங்கம், கலைகள் எல்லாவற்றினும் செல்லும் கலைச்செல்வர்கள் வாழும் சிரபுரமேயவனே! வெண்தலையிற் பலி கொள்வதோடன்றி உமையவளை ஒருபாகத்து வைத்தது என்னே என வினவுகின்றார். வில் அடைந்த புருவம் - வில்லை ஒத்த புருவம். செல் அடைந்த செல்வர் - வேத முதலியவற்றில் செல்லுதலைப்பெற்ற கலைச்செல்வர்கள்.

பண் :

பாடல் எண் : 2

கொல்லைமுல்லை நகையினாளோர் கூறதுவன் றியும்போய்
அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணு மாதரவென் னைகொலாஞ்
சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
செல்லநீண்ட செல்வமல்கு சிரபுர மேயவனே.

பொழிப்புரை :

சொல்லச் சொல்ல நீண்டு செல்லும் பெருமையாள ரும், பழமையான கலைகளைக் கற்று வல்லவர்களுமாகிய அறிஞர்கள் வாழ்வதும், வழங்கத் தொலையாத செல்வவளத்தை உடையதுமான சிரபுரம் மேவிய இறைவனே! முல்லை நிலத்தே தோன்றிய முல்லையரும்பு போன்ற பற்களை உடைய உமையம்மை ஓர் கூற்றில் விளங்கவும் சென்று அல்லற்படுவோர் ஏற்கும் பலி உணவை ஏற்று உண்ணுதலில் விருப்பம் கொள்வது ஏனோ ?

குறிப்புரை :

இதுவும் பெண்பாகராகிய தேவரீர் பலிதேர்வது ஏன் என்கின்றது. கொல்லை - முல்லை நிலம். முல்லை நகை - முல்லையரும்புபோன்ற பல். நகை: தொழிலாகுபெயர். ஓர் கூறு - ஒரு பங்கில் உள்ளாள். அல்லல் வாழ்க்கைப் பலி - துன்ப வாழ்வாகிய பலி. `இரத்தலின் இன்னாதது இல்லை` என்ற வள்ளுவர் குறளும் நோக்குக.

பண் :

பாடல் எண் : 3

நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
ஊரடைந்த வேறதேறி யுண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வமோங்கு சிரபுர மேயவனே.

பொழிப்புரை :

வண்டுகள் சீகாமரம் என்னும் பண்ணைப் பாடி மகிழ்ந்துறைவதும், மேகங்கள் தவழும் சோலைகளால் சூழப்பெற்றதும், அறநெறியில் விளைந்த செல்வம் பெருகி விளங்குவதுமாகிய சிரபுரம் மேவிய இறைவனே! கங்கையை அணிந்த சடைமுடியின் மேல் விளங்கும் பிறைமதி ஒன்றை அணிந்து, பல ஊர்களையும் அடைதற்கு ஏதுவாய ஆனேற்றில் ஏறிச் சென்று, பலரிடமும் பலி கொள்வது ஏனோ?

குறிப்புரை :

மதிசூடிய நீர் பலிகொள்வது ஏன் என்கின்றது. கார் - மேகம். வண்டு காமரம் இசைப்ப என மாறுக. அறவழி ஈட்டப்பெற்ற செல்வமாதலின், சீர் அடைந்த செல்வம் என்றார்.

பண் :

பாடல் எண் : 4

கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தலென்னே
கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுர மேயவனே.

பொழிப்புரை :

களையெடுப்போர் கைகளில், மிக அதிகமான களைகளாகச் செங்கழுநீர் மலர்கள் வந்தடையும் அழகிய வயல்களால் சூழப்பட்ட சிரபுரம் மேவிய இறைவனே! கைகளில் மான், கரிய பாம்பு ஆகியவற்றைக் கொண்டு உனது திருமேனியில் பெரு விருப்போடு உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டுள்ளது ஏனோ?

குறிப்புரை :

கையில் மானையும் அரவையும் அணிந்திருப்பதோடு அன்றி, மெல்லியலையும் வைத்திருப்பது ஏன் என்கின்றது. கார் அரவு - கரும்பாம்பு. வேட்கை - பற்றுள்ளம். கையடைந்த களைகள் - பக்கங்களையடைந்த களைகள். செய் அடைந்த வயல்கள் - நேர்த்தி அமைந்த வயல்கள்.

பண் :

பாடல் எண் : 5

புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானைதன்னை
கரமெடுத்துத் தோலுரித்த காரண மாவதென்னே
மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்
சிரமெடுத்த கைகள் கூப்புஞ் சிரபுர மேயவனே.

பொழிப்புரை :

மரத்தை உரித்ததால் ஆன மரவுரி என்னும் ஆடையை அணிந்த முனிவர்களும் தேவர்களும் கைகளைத் தலை மிசைக் கூப்பி வணங்கும் சிரபுரம் மேவிய இறைவனே! திரிபுரங்களை எரித்தழித்த பெரு வீரத்தோடு போர் செய்ய வந்த மதயானையைக் கையால் தூக்கி அதன் தோலை உரித்துப்போர்த்த, காரணம் யாதோ?

குறிப்புரை :

திரிபுரம் எரித்த தேவரீர் யானையை உரித்தது ஏன் என்கின்றது. பெற்றி - தன்மை. கரம் எடுத்து - கையால் தூக்கி, மரம் உரித்த தோல் - மரவுரி. தேவரும் முனிவரும் கை தலைமேல் கூப்பி வணங்கும் சிரபுரமேயவன் என்க.

பண் :

பாடல் எண் : 6

கண்ணுமூன்று முடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்தலென்னே
எண்ணுமூன்று கனலுமோம்பி யெழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுர மேயவனே.

பொழிப்புரை :

ஆகவனீயம், காருகபத்தியம், தக்ஷிணாக்கினி என்று எண்ணப்படும் முத்தீயையும் வேட்பதுடன் எழு பிறப்பிலும் தூயவராய் உறுதிப்பாட்டுடன் தேவ யாகம், பிதிர்யாகம், இருடியாகம் ஆகிய மூன்று வேள்விகளையும் புரியும் அந்தணாளர் வாழும் சிரபுரம் மேவிய இறைவனே; முக்கண்களை உடையவனாய்க் கைகளில் வெண்மழு, பண் மூன்றுடைய வீணை, பாம்பு ஆகியன கொண்டுள்ள காரணம் யாதோ?

குறிப்புரை :

மூன்று கண்ணுடைய முதல்வராகிய தேவரீர்மழு, வீணை, பாம்பு, இவற்றை வைத்தது ஏன் என்கின்றது. பண் மூன்று - பண், திறம், திறத் திறம் என்பன. இறைவன் திருக்கரத்தில் வீணையுண்மை `எம்மிறை நல்வீணை வாசிக்குமே` என்ற பகுதியாலும் அறிக. எண்ணும் - எண்ணப்படுகின்ற. மூன்று கனல் - ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்யம் என்பன. மூன்று வேள்வியாளர் - தேவயஞ்ஞம், பிதிர்யஞ்ஞம், ருஷியஞ்ஞம் என்னும் மூன்று வேள்விகளையும் செய்பவர்கள்.

பண் :

பாடல் எண் : 7

குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்
பொறைபடாத வின்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே
இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
சிறைபடாத பாடலோங்கு சிரபுர மேயவனே.

பொழிப்புரை :

சிறிதும் சாயாத மெல்லிய தனங்களை உடைய இள மகளிர் மாளிகைகளின் மேல் இருந்து குற்றமற்ற பாடல்களைப் பாடும் மகிழ்ச்சி மிகுந்துள்ள சிரபுரம் மேவிய இறைவனே, குன்றாத வேட்கையோடு திரண்ட கைவளைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாக அளவற்ற இன்பத்துடன் புணர்தற்குக் காரணம் என்னையோ.

குறிப்புரை :

தேவரீரைக் குறையாக் காதலோடும், பொறுக்கலாற்றாத இன்பத்தோடும் பெரிய பிராட்டி புணர்வதென் என்கின்றது. வேட்கை - பொருளையடையாத காலத்து அதன்கண்ணிகழும் பற்றுள்ளமாதலின் அடைந்தவழி நுகர்ந்தவழிக் குறையுமன்றே அங்ஙனம் குறையாமல் என்பது வலியுறுக்கக் குறைபடாத வேட்கை என்றார். கோல் வளை - திரண்ட வளையல். பொறைபடாத இன்பம் - பொறுக்க முடியாத அளவுகடந்த இன்பம். மெய்ம்மை - தத்துவம். இறைபடாத - சிறிதும் தளராத. சிறை - குற்றம்.

பண் :

பாடல் எண் : 8

மலையெடுத்த வாளரக்க னஞ்சவொ ருவிரலால்
நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்
துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்
சிலையெடுத்த தோளினானே சிரபுர மேயவனே.

பொழிப்புரை :

கயிலை மலையை எடுத்த வாள்வலி உடைய இரா வணன் அஞ்சுமாறு கால் விரல் ஒன்றினால் அடர்த்துத் தன் நிலையை எடுத்துக் காட்டிய செயலைப் புரிந்தவனே, குற்றமற்றவனே, தன்னை நினைவாரும் இருவினையொப்புடன் தோத்திரிக்கும் அன்பர்களும் மேன்மை மிக்க வீதி தொறும் வாழ விசயனுக்காக வில்லைச் சுமந்த தோளினை உடையவனே! சிரபுரம் மேவியவனே! கொள்கையனே என்று பாடம் இருக்கலாம். நிலை எடுத்த கொள்கை என்னே என்று பொருள் கொள்ளின் ஏனைய திருப்பாடல்களுடன் ஒக்கும்.

குறிப்புரை :

இது இறைவனை நின்மலனே! கொள்கையானே! தோளினானே! மேயவனே! என விளிக்கின்றது. அரக்கன் - இராவணன், நிலையெடுத்த - இறைத்தன்மையின் நிலையை எடுத்துக் காட்டிய; நிலைக்கச்செய்த எனலுமாம். துலையெடுத்த சொல் பயில்வார் - இருவினையொப்போடு கூடிய தோத்திரிக்கும் அன்பர்கள். மேதகு வீதி - மேவுதல் தக்கவீதி. அதாவது அவர்கள் வாழ்கின்ற வீதி. சிலை எடுத்த - வில்லைச் சுமந்த.

பண் :

பாடல் எண் : 9

மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
நாலுவேத மோதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்
சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுர மேயவனே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள் நம் துணைவனே என்று போற்றி இறைஞ்சச் சேல்மீன்கள் மேயும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேவிய இறைவனே! தாமே பெரியர் என வந்த திருமாலும் தாமரை மலரில் உறையும் நான்முகனும் இயலாது மிகவும் அஞ்சுமாறு செய்து மிக நீண்ட திருவுருவைக் கொண்டது ஏன்?

குறிப்புரை :

அயனும் மாலுங் காணாதவண்ணம் நீண்டதன் தத்துவம் என்ன என்கின்றது. சாலும் - மிகவும். ஓதலார்கள் - ஓதுதலையுடையவர்கள். சேலு மேயும் கழனி - சேல்மீன்கள் மேயும் வயல். சேலு என்பதில் உகரம் சாரியை.

பண் :

பாடல் எண் : 10

புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்
மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொடும்முடனே
சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுர மேயவனே.

பொழிப்புரை :

மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்து உமையம்மையாருடன் சித்தர்கள் பலரும் பணியச் செல்வச் சிரபுரநகரில் மேவிய இறைவனே! புத்தர்கள் சமணர்கள் ஆகிய புறச்சமயிகளின் வார்த்தைகள் புறனுரை என்று கருதும் பத்தர் வந்து பணியுமாறு செய்த பான்மையாதோ? உரியும் - உம்மை இசைநிறை.

குறிப்புரை :

புத்தர் சமணராகிய புறச்சமயிகள் வார்த்தை புறம் பானது என்றெண்ணும் அன்பர்கள் வணங்க இருப்பதேன்? என்கின்றது. சித்தர் - யோகநெறியில் நின்று சித்திபெற்றவர்கள்.

பண் :

பாடல் எண் : 11

தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுர மேயவனை
அங்கநீண்ட மறைகள்வல்ல வணிகொள்சம் பந்தனுரை
பங்கநீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்
சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே.

பொழிப்புரை :

தென்னைகள் நீண்டு வளர்ந்து பயன்தரும் சோலைகள் சூழ்ந்த சிரபுரம் மேவிய இறைவனை ஆறு அங்கங்களுடன் விரிந்துள்ள வேதங்களை அறிந்துணர்ந்த அழகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிக வாசகங்களைத் தம் குற்றங்கள் நீங்கப் பாடவல்ல பக்தர்கள் இவ்வுலகில் அடியவர் கூட்டங்களோடு வாழும் தன்மையினால் வாழ்நாள் பெருகிவாழ்வர்.

குறிப்புரை :

இப்பதிகத்தைக் குற்றமறப்பாட வல்லார் இவ்வுலகில் சத்சங்கத்தோடு நீடுவாழ்வார் எனப் பயன்கூறுகிறது. அங்கம் நீண்ட மறைகள் - சிகை?ஷ முதலிய ஆறு அங்கங்களால் நீண்ட வேதங்கள். பங்கம் - மலமாயாபந்தத்தால் விளைந்த குற்றங்கள். சங்கம் - அடியார் கூட்டம். தன்மையினால் நீடிவாழ்வார் எனக் கொண்டு கூட்டுக.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழன்மேவி யருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.

பொழிப்புரை :

சேல் மீன்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! வேதம் முதலிய நூல்களில் விதிக்கப்பட்ட முறைகளினால் உன் திருவடிகளை அடைதற்கு முயன்றும் அஞ்ஞானம் நீங்காமையால் சனகாதி முனிவர்களாகிய நால்வர் உன்னை அடைந்து உண்மைப் பொருள் கேட்க, அவர்கள் தெளிவு பெறுமாறு கல்லால மர நிழலில் வீற்றிருந்து அருமறை நல்கிய நல்லறத்தை எவ்வாறு அவர்கட்கு உணர்த்தியருளினாய்? கூறுவாயாக.

குறிப்புரை :

பலநூல் கற்றும் மயக்கந் தெளியாமையாலே வந்து கேட்ட சனகாதியர் நால்வர்க்கும் உபதேசப் பொருளை உரைத்த தென்னே என வினாவியதாக அமைந்தது இப்பாடலும் பிறவும். நூல் - வேதாகம முதலிய நூற் பிரமாணங்கள். மால் - மயக்கம். நால்வர் - சனகாதியர் நால்வர். அரு மறை - அரிய அநுபூதி நிலையாகிய இரகசியத்தை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

நீறடைந்த மேனியின்க ணேரிழை யாளொருபால்
கூறடைந்த கொள்கையன்றிக் கோல வளர்சடைமேல்
ஆறடைந்த திங்கள்சூடி யரவம ணிந்ததென்னே
சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.

பொழிப்புரை :

சேறு மிகுந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! திருநீறணிந்த தன் திருமேனியின்கண் உமையம்மை ஒருபால் விளங்க அழகியதாய் நீண்டு வளர்ந்த சடைமேல் கங்கையையும் தன்னைச் சரணாக அடைந்த திங்களையும் சூடிப் பாம்பையும் அணிந்துள்ள காரணம் யாதோ?

குறிப்புரை :

ஒருபாகமாக உமையைக் கொண்டிருத்தலேயன்றிக் கங்கை முதலியவற்றையும் அணிந்ததென்னே என்கின்றது. கோலம் - அழகு. பெண்ணொரு பாதியராக இருந்தும், மற்றொரு பெண்ணாகிய கங்கையையும், காமத்தாற் கலைகுறைந்த மதியையும், போகியாகிய பாம்பையும் அணிதல் ஆகுமா என வினாவியதன் நயம் ஓர்க.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

ஊனடைந்த வெண்டலையி னோடுப லிதிரிந்து
கானடைந்த பேய்களோடு பூதங்க லந்துடனே
மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே
தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே.

பொழிப்புரை :

வண்டுகள் நிறைந்த சோலைகள் செறிந்த திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! ஊன் பொருந்திய வெண்மையான தலையோட்டைக் கையில் ஏந்தி, உண் பலிக்குத் திரிந்து காட்டில் வாழும் பேய்களோடு பூதகணங்களும் கலந்து சூழ, மான் போன்ற கண்ணை உடைய உமையம்மை காண மகிழ்வோடு இடுகாட்டில் எரியாடுவது ஏன்?

குறிப்புரை :

பலியேற்று, பேயும் பூதங்களும் புடைசூழ, மலையரசன் மகள் காண எரியாடுதல் ஏன் என வினவுவதை விளக்குகிறது. கான் - காடு. மான் அடைந்த நோக்கி - மான் பார்வையைக் கற்றுக் கொள்வதற்காக வந்தடைந்த நோக்கினையுடையாளாகிய உமாதேவி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

வீணடைந்த மும்மதிலும் வின்மலை யாவரவின்
நாணடைந்த வெஞ்சரத்தா னல்லெரி யூட்டலென்னே
பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்
சேணடைந்த மாடமல்கு சேய்ஞலூர் மேயவனே.

பொழிப்புரை :

பண்ணிசையோடு வண்டுகள் பாடும் பசுமையான பொழில் சூழ்ந்ததும், அழகியதாய் உயர்ந்த மாட வீடுகள் நிறைந்ததுமான திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! மும்மதில்களும் வீணடையுமாறு மலையை வில்லாகவும் அரவை அவ்வில்லின் நாணாகவும் கொண்டு கொடிய அம்பால் பெரிய எரியை அம்முப்புரங்களுக்கு ஊட்டியது ஏன்?

குறிப்புரை :

மலை வில்லாக, பாம்பு நாணாகக் கொண்டு முப்புரத்தைத் தீவைத்தது என்னே எனவினாவுகிறது இத்திருப்பாடல். வீண்அடைந்த - பயனற்றுப்போன, நல்லெரி என்றது பூத எரிபோலாது, புண்ணியப் பொருளாகிய சிவபெருமானுடைய சிரிப்பினின்றெழுந்த சிவாக்கினி என்பதைக் குறிப்பித்தது. பாண் - பாட்டு. சேண் - ஆகாயம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்
வேயடைந்த தோளியஞ்ச வேழமுரி த்ததென்னே
வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்
தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.

பொழிப்புரை :

வாயினால் ஓதப்பெற்ற நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் கற்று, ஐவகை வேள்விகளை இயற்றி, தீப் பொருந்திய சிவந்த கையினராய் விளங்கும் அந்தணர் வாழும் சேய்ஞலூர் மேயவனே! சுடுகாட்டை இடமாகக் கொண்டு ஆடி உகப்பதோடு அன்றியும் சென்று மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மை அஞ்ச யானையை உரித்தது ஏனோ?

குறிப்புரை :

சுடுகாட்டையிடமாகக் கொண்டு ஆடுதலேயன்றி அம்மையஞ்ச ஆனை உரித்ததென்னே என்கின்றது. பேணுவது - விரும்பியமர்வது. வேய் அடைந்த தோளி - மூங்கிலையொத்த தோள்களையுடைய உமையம்மை. வாயடைந்த - ஓதப்பெறுகின்ற; உண்மை செறிந்த என்றுமாம். ஐவேள்வி - தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற ஐவருக்கும் செய்யப்பெறும் வேள்வி. தீ அடைந்த செங்கையாளர் - தீப்பொருந்திய வலக்கரத்தையுடைய அந்தணர்கள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

காடடைந்த வேனமொன்றின் காரண மாகிவந்து
வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே
கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்
சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே.

பொழிப்புரை :

கோடுகளோடு கூடிய பெரிய யானைப் படைகளை உடைய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்தவனும், பெருமை பொருந்திய செல்வர்கள் வாழும் திருச்சேய்ஞலூரில் மேவியவனுமாகிய இறைவனே! வில்லடிபட்டுக் காட்டுள் சென்று பதுங்கிய பன்றி ஒன்றின் காரணமாக, தான் வேடன் உருத்தாங்கி வந்து அருச்சுனனோடு போர் புரிந்தது ஏனோ?

குறிப்புரை :

பன்றியைத்துரத்திவந்து வேடனாகி விசயனோடு சண்டையிட்டது ஏன் என்கின்றது. ஏனம் - பன்றி. இது விசயன் தவத்தைக் கெடுத்துக் கொல்லவந்த மூகாசுரன் என்னும் பன்றி. இதனைத் திருவுள்ளம் பற்றிய சிவபெருமான் பன்றியைக்கொன்று விசயனைக்காத்தனர் என்பது வரலாறு. கோடு - கொம்பு. மால் - பெரிய; மயக்கமுமாம். கோச்செங்கண்ணான் செய்த கோயில்களில் ஒன்றாதலின் அவற்கு அருள்செய் சேய்ஞலூர் மேயவனே என்றார். சேடு - பெருமை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

பீரடைந்த பாலதாட்டப் பேணாத வன்றாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமைவ குத்ததென்னே
சீரடைந்த கோயின்மல்கு சேய்ஞலூர் மேயவனே.

பொழிப்புரை :

சிறப்புமிக்க மாடக் கோயிலாய் விளங்கும் திருச்சேய்ஞலூரில் விளங்கும் இறைவனே! பசுவின் முலைக் காம்பின் வழிச்சுரந்து நின்ற பாலைச் சண்டீசர் மணலால் தாபித்த இலிங்கத்துக்கு ஆட்டி வழிபட, அதனை விரும்பாது சினந்து பாற்குடத்தை இடறிய தன் தந்தையின் காலைத் தடிந்த சண்டீசரின் பக்தியை மெச்சி உன் தாரையும் மாலையையும் சூட்டி அவரைச் சிவகணங்களின் தலைவர் ஆக்கியது ஏனோ?

குறிப்புரை :

தந்தையின் தாளை வெட்டிய சண்டீசற்கு மாலைசூட்டித் தலைமை தந்ததென்னே என்கின்றது. பீர் - சுரப்பு. பேணாது - அது சிவார்ப்பணம் ஆன அருமைப்பாட்டை அகங்கொள்ளாது. அவன் என்றது விசாரசருமனை. தாதை - எச்சதத்தன். வேர் அடைந்து பாய்ந்த தாளை - வேரூன்றிப் பாற் குடத்தின் மேல் பாய்ந்ததாளை; அதாவது இடறிய காலை என்பதாம். வேர் அடைந்து என்பதற்குச் சினத்தால் வேர்த்து எனலுமாம். வேர்த்தடிந்தான் - நிலையையறுத்தவன். அடைந்த தார் மாலை சூட்டி - தாம் சூட்டியதாரையும் மாலையையும் சூட்டி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

மாவடைந்த தேரரக்கன் வலி தொலை வித்தவன்றன்
நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே
பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யும்
சேவடைந்த வூர்தியானே சேய்ஞலூர் மேயவனே.

பொழிப்புரை :

தாமரை மலரில் விளங்கும் நான்முகன் போன்ற அந்தணர்கள் போற்றும், விடையை ஊர்தியாகக் கொண்டவனே! திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடைய இராவணனது வலிமையை அழித்து அவன் நாவினால் பாடிய பாடலைக் கேட்டு விரும்பி அவனுக்கு அருள்கள் பல செய்தது ஏனோ?

குறிப்புரை :

இராவணனது வலிதொலைத்து, அவன்பாடல்கேட்டு அருளியதேன் என்கின்றது. இராவணன் தேர் புஷ்பகமாயினும் மா அடைந்ததேர் என்றது தேர் என்ற பொதுமை நோக்கி. மா - குதிரை: வண்டுமாம். பாடல் - சாமகீதம். பூசுரர் - அந்தணர். சே - இடபம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

காரடைந்த வண்ணனோடு கனகம னையானும்
பாரடைந்தும் விண்பறந்தும் பாதமு டிகாணார்
சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே
தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே.

பொழிப்புரை :

தேர் ஓடும் அழகிய வீதிகளை உடைய திருச்சேய்ஞலூர் மேவிய சிவனே! கருமை நிறம் பொருந்திய திருமால் பொன்வண்ணனாகிய பிரமன் ஆகியோர் உலகங்களை அகழ்ந்தும் பறந்தும் சென்று அடிமுடிகளைக் காணாராய்த் தம் தருக்கொழிந்து பின் அவர்கள் போற்ற அவர்பால் சென்று அருள் செய்தது ஏனோ?

குறிப்புரை :

அயனும் மாலும் பறந்தும் தோண்டியும் காணக் கிடையாத தேவரீர் அவர்கள் திருந்தி வந்தகாலத்து அருள்வழங்கியது ஏன் என்கின்றது. கார் - கருமைநிறம். கனகம் அனையான் - பொன் நிறமுடைய பிரமன். சீர் அடைந்து - தாம் முதலல்ல `என்றும் மீளா ஆளாவோம்` என்ற உண்மை உணர்ந்து. மறுகு - வீதி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

மாசடைந்த மேனியாரு மனந்திரி யாதகஞ்சி
நேசடைந்த வூணினாரு நேசமிலாததென்னே
வீசடைந்த தோகையாட விரைகம ழும்பொழில்வாய்த்
தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே.

பொழிப்புரை :

வீசி ஆடுகின்ற தோகைகளை உடைய மயில்கள் ஆடுவதும், மணம் கமழும் பொழில்களில் ஒளி பொருந்திய வண்டுகள் பாடுவதும் செய்யும் திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! அழுக்கேறிய உடலினரும், மனத்தில் வெறுப்பின்றிக் கஞ்சியை விரும்பி உணவாகக் கொள்வோரும் ஆகிய சமண புத்தர்கள் உன்பால் நேசம் இலாததற்குக் காரணம் யாதோ?

குறிப்புரை :

புத்தரும் சமணரும் தேவரீரிடத்து அன்பு கொள்ளாதது என்னே என்கின்றது. மாசு - அழுக்கு. நேசடைந்த - அன்புகொண்ட. வீசடைந்த தோகை - வீசியாடுகின்ற மயில். தேசு - ஒளி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்
தோயடைந்த வண்வயல்சூழ் தோணிபு ரத்தலைவன்
சாயடைந்த ஞானமல்கு சம்பந்த னின்னுரைகள்
வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.

பொழிப்புரை :

முருகப் பெருமான் வழிபட்ட சிறப்பினதாகிய திருச்சேய்ஞலூரில் விளங்கும் செல்வனாகிய சிவபிரானது புகழைப் போற்றி நீர்வளம் சான்ற, வளமையான வயல்களால் சூழப்பட்ட தோணிபுரத்தின் தலைவனும், நுட்பமான ஞானம் மிக்கவனுமாகிய சம்பந்தனுடைய இன்னுரைகளை வாயினால் பாடி வழிபட வல்லவர் வானுலகு ஆள்வர்.

குறிப்புரை :

நுணுகிய ஞானத்தோடு கூடிய இப்பதிகம் வல்லவர்கள் வானுலகு ஆள்வர் என்கின்றது. சேய் - முருகன். முருகன் சூரபன்மாவைக் கொல்லப் படை எடுத்த காலத்து இத்தலத்தில் தங்கி இறைவனை வழிபட்டார் என்பது கந்தபுராண வரலாறு ஆதலின் `சேயடைந்த சேய்ஞலூர்` என்றார். தோயடைந்த - நீர் நிறைந்த. தோயம் என்பது தோய் என ஈறு குறைந்தது. சாய் - நுணுக்கம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

பொழிப்புரை :

இன்பத்துக்கு நிலைக்களனாயுள்ளனவும் அணிகலன்கள் பொருந்தியனவுமான தனங்களை உடைய உமையம்மையைத் தன்னோடு அழகிய திருமேனியின் இடப்பாகமாக ஒன்றாக இருக்கச் செய்தவனும், பசிய கண்களையும் வெண்மையான நிறத்தையும் உடைய ஆனேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட தலைவனும், மேலானவனும், திருமேனியின் மேல் போர்த்த தோலாடையுடையவனும், இடையிற் கட்டிய கோவண ஆடையின் மேல் நாகத்தைக் கச்சாக அணிந்தவனுமான நம் பெருமான் எழுந்தருளி இருக்கும் தலம் திருநள்ளாறு.

குறிப்புரை :

இப்பதிகம் முழுவதுமே பெருமான் விரும்பியிருக்குமிடம் நள்ளாறு என்கின்றது. ஆர்த்த - நிறைந்த. அம்மையின் திருநாமம் போகமார்த்த பூண்முலையாள் என்பது. தன்னோடும் என்றது அம்மையைத் தன்னின் வேறாக இடப்பாகத்துக்கு எழுந்தருளச் செய்த நிலையைக் குறித்தது. பொன் அகலம் பாகம் ஆர்த்த என்பது தன்னோடு ஒரு திருமேனியில் இருக்கும் நிலையைக் குறித்தது. அகலம்-மார்பு. ஆகம்-மார்பு./n குருவருள் : அனல் வாதத்தின்போது ஞானசம்பந்தர் தாம் அருளிய பாடல் தொகுப்பில் கயிறு சார்த்திப் பார்த்தபோது இப்போகமார்த்த பூண்முலையாள் என்னும் பதிகம் கிடைத்தது. திருமுறையில் கயிறு சார்த்திப் பார்க்கும் மரபை ஞானசம்பந்தரே தொடங்கி வைத்துள்ளதை இதனால் அறியலாம். போகமார்த்த பூண்முலையாள் என்னும் இத்தொடரால் இன்பதுன்ப அநுபவங்களாகிய போகத்தைத் தன் மார்பகத்தே தேக்கி வைத்து உயிர்களாகிய தம்பிள்ளைகட்குப் பாலாக ஊட்டுகிறாள் அம்மை என்ற குறிப்பும் கிடைக்கிறது. உலகில் தாய்மார்கள் தங்கள் மார்பகத்தே திருவருளால் சுரக்கின்ற தாய்ப்பாலைத் தங்கள் குழந்தைகட்குக் கரவாது கொடுத்து வரவேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. தாய்ப்பாலே குழந்தைகட்குச் சிறந்த உணவு. நோய்த்தடுப்பு மருந்து. தாய்க்கும் சேய்க்கும் நலம் பயப்பது என்பது உணர்க.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கட லுஞ்சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.

பொழிப்புரை :

அம்மை பாகத்தே உள்ள இடச்செவியில் தோடணிந்த காதினை உடையவனும் தோலை ஆடையாகக் கொண்டவனும், குன்றாப் புகழ் உடையதும் போர் செய்தலில் வல்லதுமான விடை ஊர்தியனும் மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவனும், அடுக்குகளாக அமைந்த மேல் உலகங்களோடு ஏழ்கடலாலும் சூழப்பட்ட நாடு என்னும் இந்நிலவுலகமும் உடையவனுமாகிய எம்பெருமான் விரும்பிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

தோடுடைய காது - அம்மையின் காது. பீடு -பெருமை. ஏடு உடைய மேலுலகு - ஒன்றின்மேல் ஒன்றாக எடுத்தலையுடைய மேலுலகங்கள். இவ்விரண்டடிகளாலும் இறைவனுடைய தனியரசிற்கு உரிய நாட்டுப்பரப்பு சொல்லப்பட்டது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி யணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.

பொழிப்புரை :

பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திருவெண்ணீற்றை மேனி முழுதும் பூசி அழகிய அணிகலன்களைப் புனைந்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ள, தன் திருவடிகளைப் பக்தர்கள் பணிந்து போற்ற, இளமான், வெண்மையான மழு, சூலம் ஆகியவற்றை ஏந்திய கையினனாய் நான்மறைகளையும் அருளிய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

ஆன் முறையால் - பசுவினிடமிருந்து விதிப்படி எடுக்கப்பட்ட, ஆற்ற ஆடி எனக் கூட்டுக. ஆற்ற - மிக. அணியிழை - உமாதேவியார்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

புல்கவல்ல வார்சடைமேற் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாதநி ழற்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.

பொழிப்புரை :

பொருந்திய நீண்ட சடையின் மேல் கங்கையை அணிந்து, அதன் அருகில் கொன்றை மாலையையும் பிறைமதியையும் ஒருசேரச் சூடித் தன்னைச் சார்ந்து வாழும் தொண்டர்கட்குத் தனது திருவடி நிழலைச் சேரும்பேற்றை நல்கும் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

புல்கவல்ல - தழுவவல்ல, மல்க - நிறைய. பல்க - இறுக. இது அடியார்களுக்குத் திருவடி நிழலைத் தருகின்றார் என்று பயன் கூறுகின்றது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

பொழிப்புரை :

ஆன்ஏற்றைக் கொடியாகத் தாங்கியும் அதனையே ஊர்தியாக விரும்பி ஏற்றும் அழகிய இளம்பிறை கங்கை ஆகியன பொருந்திய சடைமுடியின்மேல் ஆடும் பாம்பைச் சூடியும் திருநீறு பூசிப் பூணூலோடு விளங்கும் மார்பில் கொன்றை மாலையின் மணம் கொண்டவனுமான நம் பெருமான் மேவியதலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

ஏறுதாங்கி - கொடியின்கண் இடபத்தைத் தாங்கி. ஊர்தி பேணி - இடபவாகனத்தின்மீது ஆரோகணித்து. ஏர் - அழகு. நிரைகொன்றை - ஒழுங்கான கொன்றை. நாறு - மணம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.

பொழிப்புரை :

திங்கள் திருமுடியின் உச்சி மீது விளங்கும் தேவனாய், தேவர்கள் எங்கள் உச்சியாய் உள்ள எம்பெருமானே! என்று அடிபரவவும், தலையால் தன்னை வணங்கும் அடியவர்களும் எங்கள் முடிமீது விளங்கும் நம் பெருமான் என்று போற்றவும் விளங்கும் சிவபிரான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

உச்சி - தலை. எங்கள் உச்சியின்மேல் இருக்கின்றார் எம்மிறைவன் என்று தேவர்கள் வணங்க, தலைவணங்கும் அடியார்களும் நமது உச்சியிலுள்ளான் (எனக்கூற இருக்கும்) நம் பெருமான் மேயது நள்ளாறு எனஇயைத்துப் பொருள் காண்க.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொண் முழவதிர
அஞ்சிடத்தோ ராடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

பொழிப்புரை :

கொடிய ஒளி பொருந்திய நெருப்பைக் கையில் ஏந்தி விண்ணளவும் ஒலிக்கும் முழவு முழங்கப் பலரும் அஞ்சும் சுடுகாட்டில் ஆடல் பாடலுடன் ஓர் இளம்பிறையைச் சூடி, விளங்கும் கண்டத்தில் நஞ்சினை நிறுத்திய நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

விண் கொள் முழவு-மேகத்தையொத்த முழவம்; அல்லது ஆகாயத்தின் தன்மையாகிய சப்தத்தைக் கொண்டிருக்கின்ற முழவுமாம். அஞ்சிடம் - அஞ்சத்தக்க இடமாகிய மயானம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பான்ம தியஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.

பொழிப்புரை :

பெருமை மிக்க முப்புரங்களையும் வரை சிலையில் பொருந்திய தீயாகிய அம்பினால் சுட்டு அழித்து, திருவெண்ணீற்றுப் பொடியில் திளைத்து ஆடி, பட்டம் என்னும் அணிகலன் கட்டிய சென்னியின்மேல் பால்போலும் நிறமுடையதொரு பிறைமதியைச் சூடி நடனம் ஆடும் நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

சிட்டம் - பெருமை. மாட்டி - மாளச்செய்து. தீயில் விறகை மாட்டி என்ற வழக்குண்மையும் அறிக. பட்டம் - நெற்றியில் அணியும் அணி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுடனே யொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழல் ஆரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.

பொழிப்புரை :

யாராலும் உண்ணமுடியாத நஞ்சினை உண்டு அதனைத் தம் கண்டத்தில் நிறுத்தியவரும், யாராலும் அணுக இயலாத தலைவரும் ஒளி பொருந்திய அழல் போன்ற திருவுருவினரும் அநாதியாகவே உள்ள வினையால் எண்ண இயலவில்லையே என மனம் வருந்திய திருமால் பிரமர்களால் நணுக முடியாதவருமான நம் பெருமான் மேவிய தலம் திருநள்ளாறு ஆகும்.

குறிப்புரை :

உண்ணலாகா நஞ்சு - எந்தத் தேவராலும் உண்ண முடியாத விஷம். ஒடுக்கி - அதன் வலியைக் கெடுத்து. அண்ணலாகா - அணுகமுடியாத. உள்வினை எண்ணலாகா என்று எள்க வலித்து இருவர் நண்ணலாகா நம்பெருமான் - அநாதியே பற்றியுள்ள வினையால் உள்ளபடியே உணரமாட்டாது இகழ, வருந்தி அயனாலும் மாலாலும் அணுகமுடியாத பெருமான்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

மாசுமெய்யர் மண்டைத் தேரர் குண்டர்கு ணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி ளும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

பொழிப்புரை :

அழுக்கேறிய உடலினராகிய சமணரும், கையில் மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித் திரியும் புத்தர்களும் ஆகிய குண்டர்களும் நற்குணம் இல்லாதவர்கள். அவர்கள் பேசும் பேச்சை மெய்யென்று எண்ணி அவர்கள் சமயங்களைச் சாராதீர். வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் கொன்றை மலர் மாலையைச் சூடி மும்மதில்களையும் ஒருசேர அழித்துத் தேவர்களைக் காத்தருளிய நம்பெருமான் மேவிய திருநள்ளாற்றைச் சென்று வழிபடுமின்.

குறிப்புரை :

மண்டை - உண்ணும் பாத்திரம்; மூசு - மொய்க்கின்ற.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகில் உறைவாரே.

பொழிப்புரை :

நட்புக்கு ஏற்ற நல்லோர் வாழும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், குளிர்ந்த கங்கையையும் வெண்மையான பிறையையும் தாங்கிய தாழ்ந்த சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய, நல்லியல்பு வாய்ந்தோர் வாழும் திருநள்ளாற்றைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் பிராரத்த கன்ம வலிமை குறையப் பெற்று வானவர்களோடு தேவருலகில் வாழ்வர்.

குறிப்புரை :

இப்பாடல் திருக்கடைக்காப்பு அருளுகிறது. நண்புநல்லார் - நல்லியல்போடு கூடிய நல்லார். உண்புநீங்கி - உண்பதற்காக அளிக்கப்பெற்ற பிரார்த்த சேடமும் நீங்கி என்றது, பிரார்த்த சேடத்தின் வலி குறைந்தது என்பதாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

ஒல்லையாறி யுள்ளமொன்றிக் கள்ளமொழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே யுன்றனாமம் நாவில்நவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே! பரபரப்பு அடங்கி, மனம் ஒன்றி, வஞ்சம் வெஞ்சொல் தவிர்ந்து தூய்மையோடு, காமம் முதலிய குற்றங்களைக் கடிந்து, நல்ல முறையில் உன் நாம மாகிய திருவைந்தெழுத்தை என் வல்லமைக்குத் தக்கவாறு நான் ஓதி வழிபடுகின்றேன், வந்து அருள்புரிவாயாக.

குறிப்புரை :

வலிவலம் மேயவனே! மனம் ஒன்றி, வஞ்சம் நீங்கி இனிய கூறி, காமமாதிகடிந்து, உனதுநாமத்தைச் சொல்ல, தேவரீர் வந்து அருளவேண்டும் என்கின்றது. ஒல்லை - வேகம். அதாவது பரபரப்பு. கள்ளம் - வஞ்சனை. வெய்ய சொல் - கொடுஞ்சொல். தூய்மை செய்து - மனத்தைப் பண்படுத்தி. நாமம் - திருவைந்தெழுத்து. வல்ல வாறு - அடியேனுடைய தகுதி ஏற்க வல்லவாறு. இறைவற்கு வல்லவாறு என்று உரைப்பாரும் உளர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

இயங்குகின்ற விரவிதிங்கண் மற்றுநற் றேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பாற் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதீ சாமவேதா காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவலமே யவனே.

பொழிப்புரை :

வானவெளியில் இயங்குகின்ற ஞாயிறு, திங்கள் மற்றும் நல்ல தேவர்கள் எல்லோரும் அச்ச மேலீட்டினால் உன்னைப் பரம் பொருள் என்று தம் சித்தம் தெளியாதவராயுள்ளனர். விளங்கும் சோதி வடிவினனே, சாம வேதம் பாடி மகிழ்பவனே, காமனைக் காய்ந்தவனே, எவ்வாறு உன்னைத் தெளிவது என்று யானும் மயங்குகின்றேன். வந்து அருள்புரிவாயாக.

குறிப்புரை :

தேவரெல்லாரும் பயத்தால் பற்றப்பட்டுச் சித்தம் தெளிகிலார்கள்: நானோ மயங்குகின்றேன்: வந்தருள் செய் என்கின்றது. இரவி - சூரியன். திங்கள் - சந்திரன். பயங்களாலே பற்றி - அச்சத்தால் பற்றப்பட்டு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனைநோய் நலியக்
கண்டுகண்டே யுன்றனாமங் காதலிக்கின்ற துள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவலமே யவனே.

பொழிப்புரை :

வண்டுகள் தேனுண்ணற் பொருட்டு மலர்களைக் கிண்டி இசை பாடும் சோலைகள் சூழ்ந்த திருவலிவலத்துள் மேவிய இறைவனே, மனைவி மக்கள் சுற்றம் முதலான பாசப் பெருங்கடலை இளைய காலத்திலேயே கடந்து வாழ்ந்தேன் அல்லேன். வேதனை நோய் ஆகியன நலிய உலகியற் பாசங்கள் துன்பம் தருவன என்பதைக் கண்டு உன் திருநாமம் சொல்வதொன்றே இன்பமாவது என்பதைக் கண்டு அதனை ஓத உள்ளம் விரும்புகிறது. அருள் புரிவாயாக.

குறிப்புரை :

பெண்டிர் முதலாகிய பாசப் பெருங்கடலில் பற்றி, விட்டுப் பிரியகில்லாது வருந்துகின்றேன்: உனது நாமத்தைச் சொல்ல உளம் விழைகின்றது என அறிவிக்கின்றார்./n பேதைப்பெருங்கடல் - அறியாமைக் கடல். விண்டு - பிரிந்து. கண்டு கண்டு - இவை துன்பம் உன்நாமம் சொல்வது இன்பம் எனப் பலகாலுங்கண்டு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே
நைவனாயே னுன்றனாமம் நாளும்நவிற் றுகின்றேன்
வையமுன்னே வந்துநல்காய் வலிவலமே யவனே.

பொழிப்புரை :

பொய்மையை விலக்கி, உண்மையை மேற்கொண்டு பந்த பாசங்களாகிய வேதனைகளைத் துறந்து செம்மையான மனமுடையோராய் வாழும் அன்பர்களின் சிந்தையுள் இருப்பவனே, தேவர்களின் குலக்கொழுந்தே! நான் வருந்தி நிற்கிறேன். உன்றன் திருநாமத்தை நாள்தோறும் ஓதி வருகிறேன். வலிவலம் மேவிய இறைவனே. வையகத்தே பலரும் காணவந்து அருள்புரிவாயாக.

குறிப்புரை :

செம்மனச் செல்வர் சிந்தையுள் இருப்பவனே! அடியேன் அவலத்தால் நைகின்றேன்: வந்து அருள் செய் என்கின்றது. மெய்யராகி எனவே பொய்யை நீக்கி என்பது பெறப்படவும் மீட்டுங் கூறியது வற்புறுத்த. அல்லது மெய்யராகி - தத்துவஞான உணர்ச்சி உடையராய். பொய்யை நீக்கி என்றுமாம்./n வேதனை - ஆசைபற்றி எழும் துன்பம். செய்யர் - செம்மையான அடியார்கள். நைவன் - வருந்துவேன். வையம் - முன்னே வந்து நல்காய் - இவ்வுலகத்து என்போலியரும் அறிந்துய்யவேண்டி மானைக்காட்டி மானைப் பிடிப்பார்போல் வந்து அருள் செய்வாய்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவனுன் றிறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன் றாளிணைக்கீழ்ப் பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும்நினைந் தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனே.�

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே, உறங்கும் போதும் உண்ணும்போதும் உன்றன் புகழையே சொல்லுவேன். தேவர் கள் வேறு புகலிடம் இல்லாது உன்பால் வந்து உன் தாளிணைகளின் கீழ்ப் பணிய அவர்களைக் காத்தற்பொருட்டு நஞ்சை உண்ட உன் கருணையை நாளும் நினைதலையன்றி வேறு என் செய வல்லேன்? உன் அருள் பெறுதற்குத் தடையாக என்பால் வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன். அதனைப் போக்கி எனக்கு அருள்.

குறிப்புரை :

உறங்கும்போதும் உண்ணும்போதும் உன்புகழே பேசு கின்றேன்; என்னிடம் வஞ்சம் இருப்பதால் ஏற்பாயோ மாட்டாயோ என அஞ்சுகின்றேன் என்கின்றது. துஞ்சும்போதும் - தூங்கும்போதும். துற்றும்போதும் - உண்ணும்போதும். தஞ்சம் - அடைக்கலத்தானாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

புரிசடையாய் புண்ணியனே நண்ணலார்மூ வெயிலும்
எரியவெய்தா யெம்பெருமா னென்றிமையோர் பரவும்
கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய் வலிவலமே யவனே.

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே, முறுகிய சடையை உடையவனே, புண்ணிய வடிவினனே! பகைவர் தம் முப்புரங்களும் எரியுமாறு அம்பெய்தவனே என்று தேவர்கள்பரவும், யானையின் தோலை அணிந்தவனே, காலனுக்குக் காலனே! நீலமணி போலும் கண்டத்தையும் வரிந்து கட்டப் பெற்ற பாம்பினையும் உடையவனே! என்பால் வந்து அருள்புரிவாயாக.

குறிப்புரை :

புண்ணியனே! காலகாலா! நீலகண்டா! வந்து அருள் செய் என்கின்றது. நண்ணலார் - பகைவர். வரி அரவு - வரிந்து கட்டப் பட்ட பாம்பு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

தாயும்நீயே தந்தைநீயே சங்கரனே யடியேன்
ஆயும்நின்பா லன்புசெய்வா னாதரிக்கின் றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னு ளைவர்நின்றொன் றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனே.

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே! சங்கரனே எனக்குத் தாயும் தந்தையும் நீயேயாவாய். அடியேன் உள்ளம் சிவஞானிகளால் ஆய்ந்துணரப்படும் நின்பால் அன்பு செய்ய விரும்புகின்றது. எனக்குப் படைத்தளிக்கப்பட்ட இவ்வுடலிடைப்பொருந்திய ஐம்பொறிகள் உன்னைப் பொருந்தவொட்டாமல் தடுக்கின்றன. இம்மாயத்தைக் கண்டு யான் அஞ்சுகின்றேன். அருள்புரிவாயாக.

குறிப்புரை :

சுற்றமும் மற்றெல்லாமும் நீயே என்கின்றது. ஆயும் - சிவஞானம் கைவரப்பெற்ற ஆன்மாவினால் ஆராயப்படுகின்ற. ஆயம் ஆய - படைக்கப்பெற்ற. ஐவர் - பஞ்சேந்திரியங்கள். ஒன்றல் ஒட்டார் - நின்னோடு பொருந்தவிடார்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடையபொன் மலையை
வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனிரா வணனைத்
தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிரலா லடர்த்த
வாரொடுங்குங் கொங்கைபங்கா வலிவலமே யவனே.

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே தருக்கி வந்த கங்கை செயல் இழந்து ஒடுங்கிய செஞ்சடையை உடையவனே, உன்னுடைய பொன்மயமான கயிலை மலையை வேரோடும் பிடுங்கி ஏந்தத் தொடங்கிய இலங்கை வேந்தன் இராவணனைத் தேரோடும் வீழ்ந்து அலறுமாறு உன்கால் திருவிரலால் அடர்த்தவனே, கச்சு அணிந்த பெருத்ததனங்களை உடைய உமைபங்கனே! வந்து நல்காய்.

குறிப்புரை :

ஆணவத்தால் மிஞ்சிய இராவணனையும் அடக்கி ஆட்கொண்ட அம்மையப்பா! அடியேனை ஆட்கொள்ளவேண்டும் என்கின்றது. நீர் ஒடுங்கும் - தருக்கிவந்த கங்கைதன் வலி ஒடுங்கும். பொன்மலை - அழகிய கயிலைமலை. பீழ்ந்து - பிடுங்கி. வார் ஒடுங்கும் - கச்சு தன்வலியழியும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

ஆதியாய நான்முகனும் மாலுமறி வரிய
சோதியானே நீதியில்லேன் சொல்லுவனின் றிறமே
ஓதிநாளு முன்னையேத்து மென்னைவினை யவலம்
வாதியாமே வந்துநல்காய் வலிவலமே யவனே.

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே! உலகங்களைப் படைத்துக் காத்தலில் ஆதியானவர்களாகிய நான்முகனும், திருமாலும் அறிதற்கரிய சோதிப் பிழம்பாய்த் தோன்றியவனே! யான் நீதியில்லாதேன் ஆயினும் உன்புகழையே சொல்லுகின்றேன். நாள்தோறும் உன்புகழையே ஓதி உன்னையே ஏத்தும் என்னை வினைகளும் அவற்றின் பயனாய துன்பங்களும் வந்து தாக்காமல் வந்து அருள் புரிவாயாக.

குறிப்புரை :

இடைவிடாது உன்னையே தோத்திரிக்கின்றேன். ஆத லால் அடியேனை அவலவினைகள் அடையாவண்ணம் அருள் செய்க என்கின்றது. வினை அவலம் - வினையும் அதனால்வரும் துன்பமும். வாதியாமே - துன்புறுத்தாதபடி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

பொதியிலானே பூவணத்தாய் பொன்றிகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ வலிவலமே யவனே.

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே, பொதிய மலையைத் தனக்கு இடமாகக் கொண்டவனே, திருப்பூவணம் என்னும் தலத்தில் உறைபவனே, தன்பால் பக்தி செய்யும் அன்பர்களின் சித்தங்களில் எழுந்தருளி இருப்பவனே, கொடிய சமணர்களும் சாக்கியர்களும் உன்னை அடையும் புண்ணியம் இல்லாதவர்கள். அறிவற்ற அவர்கள் தங்கள் சமய நெறியில் என்ன பயனைக் காண்பார்களோ?.

குறிப்புரை :

புறச்சமயிகள் என்செய்வார்களென, அவர்கட்காக இரங்குகின்றது. பொதியிலான் - பொதியமலையைத் தனக்கு இடமாகக்கொண்டவன். பொதியிலும், திருப்பூவணமும், கயிலையும், அன்பர் உள்ளமும் அவன் உறையுமிடங்கள் என அறிவிக்கப்படுகின்றன.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவலமே யவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னுசோதி யீசனோடே மன்னியிருப் பாரே.

பொழிப்புரை :

வன்னி கொன்றை மலர், ஊமத்தை மலர் ஆகிய வற்றைச் சூடும் திருவலிவலம் மேவிய இறைவனைக் காவிரி நாட்டிலுள்ள புகலி என்னும் சீகாழிப்பதிக்கு வேந்தனாய ஞானசம்பந்தன் புகழ்ந்து ஓதியனவும் எக்காலத்தும் ஓதத்தக்கனவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர், உண்மைத் தவமுடையோர் விரும்பும் நிலைபெற்ற, சோதி வடிவான ஈசனோடு மன்னியிருப்பர்.

குறிப்புரை :

இப்பாடல் பத்தும் வல்லார் இறைவனோடு ஒன்றி இருப்பார் என்கின்றது. பொன்னி நாடன் - காவிரிநாட்டிற்பிறந்தவன். மன்னு சோதி - நிலைபெற்றசோதி வடிவானவன்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

வெங்கணானை யீருரிவை போர்த்துவிளங் கும்மொழி
மங்கைபாகம் வைத்துகந்த மாண்பதுவென் னைகொலாம்
கங்கையோடு திங்கள்சூடிக் கடிகமழுங் கொன்றைத்
தொங்கலானே தூயநீற்றாய் சோபுரமே யவனே.

பொழிப்புரை :

கங்கை திங்கள் ஆகியவற்றை முடிமிசைச்சூடி மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்து தூய திருநீறு பூசித் திருச்சோபுரத்தில் விளங்கும் இறைவனே! கொடிய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திய, விளக்கமான மொழிகளைப் பேசும் மலைமங்கையை இடப்பாகத்தே கொண்டு மகிழும் உனது செயலின் மாண்பு எத்தகையதோ?.

குறிப்புரை :

சோபுரம் மேயவனே! யானைத்தோல் போர்த்து, ஒரு பாகத்து உமையையும் வைத்துக்கொண்டது என்னவோ என்கின்றது. வெங்கண் - கொடுமை. ஈர் உரி - கிழிக்கப்பெற்ற தோல்: ஈரமாகிய தோல் என்றுமாம். கடி - மணம். தொங்கல் - மாலை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவிரிந் திலங்கு
சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கியதென் னைகொலாம்
கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தனலுள் ளழுந்தத்
தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுரமே யவனே.

பொழிப்புரை :

வாயில்களாற் சிறந்த முப்புரங்களும் அனலுள் அழுந்துமாறு சினத்தோடு அம்பு செலுத்திய கொடிய மலை வில்லை உடையவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! விடைமீது அமர்ந்து வெண்மையான மழு ஒன்றைக் கையில் ஏந்தி விரிந்து விளங்கும் சடையின்கண் ஒடுங்குமாறு குளிர்ந்த நீரைத் தடுத்துத் தாங்கி இருத்தற்குக் காரணம் என்னையோ?.

குறிப்புரை :

முப்புரம் எரியக்கணை தொடுத்த வில்லையுடைய இறைவா, விடையேறி, வெண்மழுவேந்தி, சடையில் கங்கையைத் தாங்கியது என்னையோ என்கின்றது. விடை - இடபம். வெண் மழு என்றது இறைவன் திருக்கரத்திலுள்ள மழு அலங்காரப் பொருளாதலன்றி யாரையும் அழித்தல் இல்லையாதலின். தொடை - அம்பு. நெகிழ்ந்த - செலுத்திய.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

தீயராய வல்லரக்கர் செந்தழலுள் ளழுந்தச்
சாயவெய்து வானவரைத் தாங்கியதென் னைகொலாம்
பாயும்வெள்ளை யேற்றையேறிப் பாய்புலித்தோலுடுத்த
தூயவெள்ளை நீற்றினானே சோபுரமே யவனே.

பொழிப்புரை :

பாய்ந்து செல்லும் வெண்ணிறமான விடையேற்றின் மீது ஏறி, பாயும் புலியினது தோலை உடுத்துத்தூய வெண்ணீற்றை அணிந்துள்ளவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொடியவர்களாகிய வலிய அரக்கர் சிவந்த அழலுள் அழுந்துமாறு கணை எய்து தேவர்களை வாழ்வித்தது என்ன காரணம் பற்றியோ?

குறிப்புரை :

இடபத்திலே ஏறி, புலித்தோல் உடுத்த புண்ணியனே! அரக்கரையழித்து, வானவரை வாழ்வித்தது என்னையோ என்கின்றது இறைமைக்குணம் வேண்டுதல் வேண்டாமை இலவாய் இருக்க, சிலரை அழித்து, சிலரை வாழ்விப்பது பொருந்துமோ என்பார்க்குக் காரணம் அருள்வதுபோல, தீயராய வல்லரக்கர் என்று திரிபுராதிகள் தீமைதோன்றக் கூறினார். வானவர் என அடைமொழி இன்றிக் கூறியதும் இரங்கத்தக்கார் என்னும் குறிப்புப்பற்றி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

பல்லிலோடு கையிலேந்திப் பல்கடையும் பலிதேர்ந்
தல்லல்வாழ்க்கை மேலதான வாதரவென் னைகொலாம்
வில்லைவென்ற நுண்புருவ வேனெடுங்கண் ணியொடும்
தொல்லையூழி யாகிநின்றாய் சோபுரமே யவனே.

பொழிப்புரை :

வில்லை வென்ற வளைந்த நுண்புருவத்தையும், வேல் போன்ற நீண்ட கண்ணையும் உடைய உமையம்மையோடும், பழமையான பல ஊழிக்காலங்களாக நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! பல் இல்லாத மண்டையோட்டைக் கையிலேந்திப் பலர்இல்லங்களுக்கும் சென்று பலி ஏற்கும் அல்லல் பொருந்திய வாழ்க்கையின்மேல் நீ ஆதரவு காட்டுதற்குக் காரணம் என்னவோ?

குறிப்புரை :

வேல்நெடுங்கண்ணியோடு ஊழி ஊழியாக இருக்கின்ற நீ பிச்சைவாழ்க்கையை விரும்பியது என்னையோ என்கின்றது. பல் இல் ஓடு - பற்கள் உதிர்ந்துபோன மண்டையோடு. கடை - கடைவாயில். அல்லல் வாழ்க்கை - துன்பவாழ்வு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடைமேன் மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரணமென் னைகொலாம்
ஊற்றமிக்க காலன் றன்னை யொல்கவுதைத் தருளி
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுரமே யவனே.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய காலனை அழியுமாறு உதைத் தருளி, எல்லாப் பொருள்கட்கும் தோற்றமும் ஈறுமாகி நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மணம் மிக்க கொன்றை மலர்கள் நிறைந்த செஞ்சடையின்மேல் பிறைமதியை அழகு பெறவைத்து மகிழ்தற்குக் காரணம் என்னையோ?

குறிப்புரை :

காலனை உதைத்து உலகத்திற்குத் தோற்றமும் ஈறுமாக இருக்கின்ற தேவரீர், கொன்றை நிறைந்த செஞ்சடைமேல் மதியும் வைத்தது ஏன் என்கின்றது. ஏற்றம் - உயர்வு. உகந்த - மகிழ்ந்த. மகிழ்ச்சிக்குக் காரணம் பலர் சாபத்தால் இளைத்த ஒருவனுக்கு ஏற்றம் அளித்தோமே என்ற மகிழ்ச்சி. ஊற்றம் - வலிமை. தோற்றம் ஈறுமாகி நின்றாய் என்றது, தான் எல்லாவற்றிற்கும் தோற்றமும் ஈறுமாய் ஆவதன்றித் தனக்குத் தோற்றமும் ஈறும் இல்லாதவன் என்பது குறிப்பு. இதனையே மணிவாசகரும் `ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே` என்பார்கள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

கொன்னவின்ற மூவிலைவேற் கூர்மழுவாட் படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற்பென் னைகொலாம்
அன்னமன்ன மென்னடையாள் பாகமமர்ந் தரைசேர்
துன்னவண்ண ஆடையினாய் சோபுரமே யவனே.

பொழிப்புரை :

அன்னம் போன்ற மெல்லிய நடையினையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்தி, இடையில் அழகிய கோவண ஆடையை அணிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொல்லும் தொழில் பொருந்திய மூவிலை வேலையும் தூய மழுவாட்படையையும் உடையவனே! நிறத்தால் பொன்னை வென்ற கொன்றை மாலையை நீ விரும்பிச் சூடுதற்குரிய காரணம் என்னையோ?

குறிப்புரை :

ஒரேமேனியில் பெண்பாதியும் உடையன் ஆதலால் கோவணமும், பட்டாடையும் உடைய பெருமானே, கொன்றை மாலை சூடுவதென்னை என்கின்றது. கொன் - பெருமை. பொற்பு - அழகு. துன்ன ஆடையினாய், வண்ண ஆடையினாய் எனத் தனித்தனிப் பிரித்துக்கூட்டிக் கோவணமாகிய ஆடையையுடையவனே, நிறம் பொருந்திய ஆடையையுடையவனே என உமையொருபாதியனாய் இருப்பதற்கேற்பப் பொருள் உரைக்க.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடியார் பணிவார்
கற்றகேள்வி ஞானமான காரணமென் னைகொலாம்
வற்றலாமை வாளரவம் பூண்டயன்வெண் டலையில்
துற்றலான கொள்கையானே சோபுரமே யவனே.

பொழிப்புரை :

ஊன் வற்றிய ஆமை ஓட்டையும், ஒளி பொருந்திய பாம்பையும் அணிகலனாகப்பூண்டு, பிரமனின் வெண்மையான தலையோட்டில் பலியேற்று உண்ணும் கொள்கையனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! குணமும் குற்றமும் நீயே என்று பணியும் உன் அடியவர்கட்குத் தாங்கள் கற்ற கல்வியும், கேள்வியும் அதனால் விளையும் ஞானமுமாக நீயே விளங்குதற்குக் காரணம் என்னவோ?

குறிப்புரை :

பிரமகபாலத்துப் பிச்சை ஏற்பவனே, குணமும் நீ, குற்றமும் நீ என்று பணியும் அடியார்கட்குக் கல்வியும் கேள்வியும் அதனால் விளங்கும் ஞானமுமாகத் தேவரீர் விளங்குவது என்னையோ என்கின்றது. கற்ற கேள்வி - கேள்வி பயன்படுவது கற்றபின்னாதலின் கற்றதன்பின் கேட்கப்படும் கேள்வி எனக் குறித்தமை காண்க. வற்றலாமை - ஆமை ஓடு. துற்றலான - உண்ணுதலாகிய.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர்
குலங்கள்வாழு மூரெரித்த கொள்கையிதென் னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே.

பொழிப்புரை :

இலங்கையில் நிலைபெற்று வாழும், வாட்போரில் வல்ல அவுணர் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மேரு மலையைக் கொடியதொரு வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?.

குறிப்புரை :

இலங்கை மன்னனை ஒருவிரலால் அடர்த்த நீ, மலையை வில்லாகத் தூக்கித்திரிபுரம் எரித்தது என்னையோ என்கின்றது. விலங்கல் - மேருமலை. அரக்கர் - திரிபுராதிகள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

விடங்கொணாக மால்வரையைச் சுற்றிவிரி திரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரணமென் னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர்மே லயனும்
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுரமே யவனே.

பொழிப்புரை :

மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும், இனிய தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய் நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே! தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுற்றிக் கட்டி, விரிந்த அலைகளையுடைய கடல்நீரைக் கடைந்தபோது, அத னிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ?

குறிப்புரை :

அயனாலும் மாலாலும் அறியப்படாத நீர் விடம் உண்டு மகிழ்ந்த காரணம் என்னை என்கின்றது. நாகம் - வாசுகி என்னும் பாம்பு. மால் வரை - மந்தரமலை. நஞ்சை உண்டு உகந்த - தேவர்கள் அஞ்சிய நஞ்சைத் தாம் உண்டு அவர்களைக் காத்தும், சாவாமைக்கு ஏதுவாகிய அமுதத்தை அவர்களுக்குக் கொடுத்து அளித்தும் மகிழ்ந்த. இடந்து - தோண்டி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

புத்தரோடு புன்சமணர் பொய்யுரையே யுரைத்துப்
பித்தராகக் கண்டுகந்த பெற்றிமையென் னைகொலாம்
மத்தயானை யீருரிவை போர்த்துவளர் சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே சோபுரமே யவனே

பொழிப்புரை :

மதம் பொருந்திய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து , நீண்ட சடையின் மேல் புள்ளிகளையுடைய நாகப் பாம்பைச்சூடியவனே ! திருச்சோபுரம் மேவிய இறைவனே ! புத்தர் களும் , சமணர்களும் பொய்யுரைகளையே பேசிப் பித்தராகத் திரி தலைக் கண்டு நீ மகிழ்தற்குக் காரணம் என்னையோ ?.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் பொய்யுரைத்துப் பித்தராக்கிய தன்மை என்னையோ என்கின்றது . அவர்களுக்கும் ஞானம் அளித்து உயர்த்தவேண்டிய தேவரீர் , இங்ஙனம் பித்தராகக் கண்டது அவர் களுக்கு அதற்கேற்ற பரிபாகம் இன்மையாலே என்று உணர வைத்த வாறு . துத்தி - படம் ; பொறி .

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

சோலைமிக்க தண்வயல் சூழ் சோபுரமே யவனைச்
சீலமிக்க தொல்புகழார் சிரபுரக்கோன் நலத்தான்
ஞாலமிக்க தண்டமிழான் ஞானசம்பந்தன் சொன்ன
கோலமிக்க மாலைவல்லார் கூடுவர்வா னுலகே.

பொழிப்புரை :

சோலைகள் மிகுந்ததும், குளிர்ந்தவயல்களால் சூழப்பட்டதுமான திருச்சோபுரம் மேவிய இறைவனைச் சீலத்தால் மிக்க, பழமையான புகழை உடைய அந்தணர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனும், நன்மைகளையே கருதுபவனும், உலகில் மேம்பட்ட தண் தமிழ் பாடியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய அழகுமிக்க இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகை அடைவர்.

குறிப்புரை :

இம்மாலை வல்லவர்கள் வானுலகைக் கூடுவர் எனத் திருக்கடைக்காப்பு அருளுகின்றது; கோலம் - அழகு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, வேதங்களைத் தனக்கு உடைமையாகக் கொண்டவனே, தோல் ஆடை உடுத்தவனே, நீண்ட சடை மேல் வளரும் இளம் பிறையைச் சூடியவனே, தலைக்கோலம் உடையவனே, என்று உன்னை வாழ்த்தினாலல்லது குறை உடையவர்களின் குற்றங்களை மனத்துக் கொள்ளாத நீ, மனத்தினால் உன்னையன்றி வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில் மேம்பட்ட நிறையுடைய அடியவர்களின் இடர்களை நீக்கி அருள் வாயாக.

குறிப்புரை :

மறையுடையாய் என்பது முதலிய சொல்லித் தோத் திரித்தால் அல்லது குறையுடையார் குற்றத்தை ஆராயாத தேவரீர், நிறையுடையார் துன்பத்தையும் களையவேண்டும் என்கின்றது. மறை உடையாய் என்பது முதலியன நிறைந்த மறையையும், அருவருக்கத் தக்கதோலையும், சாபம் ஏற்ற மதியையும் ஒப்பமதிக்கும் பெரியோனே எனப் பின்னர்வரும் `குறையுடையார் குற்றம் ஓராய்` என் பதற்கு இயைய அமைந்திருத்தல் காண்க. ஓராய் - ஆராயாதவனே.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்
தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை
மனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, ஆரவாரித்து எழுந்த, வெண்மையான அலைகளால் சூழப்பட்ட கடல் நஞ்சினைத் தினையளவாகச் செய்து உண்டு கண்டத்தே நிறுத்திய மேம்பட்ட தேவனே, நின்னை மனத்தகத்தே நிறுவியவர்களின் ஆடல், பாடல்களை விரும்பி, இரவும் பகலும் நின்னையே நினைத்து எழும் அடியவர்களின் இடர்களை நீக்கி அருளுக.

குறிப்புரை :

ஆகாத நஞ்சை அழகியமிடற்றில் வைத்த பெருமானே! அல்லும் பகலும் தியானிக்கும் அடியார் இடர்களைவாயாக என்கின்றது. கனைத்து - ஒலித்து. தினைத்தனையா - அதன்பெருமை எல்லாவற்றையும் அடக்கித் தினையளவாகச்செய்து. மிடறு - கழுத்து.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்லவந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, `என் அடியவன் உயிரைக் கவராதே` என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.

குறிப்புரை :

காலகாலராகிய நின்னடியையே கருதும் அடியார்கள் இடரைக்களைக என்கின்றது. நிமலா, நின் அடியே வழிபடுவான் நினைக்கருத (நீ)`என் அடியான் உயிரை வவ்வேல்` என்று அடல் கூற்று உதைத்த பொன்னடியே பரவி எனக் கூட்டிப் பொருள்காண்க. சுமக்கும் அடியார் இடர்களையாய் என்றது, இவர்கள் வினை இடையீடாக இருந்ததாயினும் சுமைக்குக் கூலி கொடுப்பார்போல, அடியார்கள் பூவும் நீரும் சுமந்தமைக்காகவாவது நீர் அருள்வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பான் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றா ணிழற்கீழ்
நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, இமவான் மகளாகிய பார்வதிதேவியைத் தன் திருமேனியின் ஓர் பாதியாகக் கொண்டு மகிழ்பவனே, அலைகள் வீசும் கங்கை நீரைத் தாங்கிய விரிந்த சடையினையுடைய திருவாரூர் இறைவனே, தலையோட்டை விரும்பி ஏந்தி அதன்கண் பலியேற்று மகிழ்பவனே, தலைவனே, நினது திருவடி நீழற்கீழ் நிற்றலையே விரும்பும் அடியவர்களின் இடர்களைப் போக்கி அருள்வாயாக.

குறிப்புரை :

மலைமகளையொருபாலும், அலைமகளைத் தலை மேலும் வைத்து மகிழ்ந்த தேவரீர், நின்னடி மறவாத நிலையுடையார் இடரைக்களைக என்கின்றது. புரிந்த - விரும்பிய. நிலைபுரிந்தார் - அநவரத தியானத்தால் நிற்றலையுடையவர்கள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவவேடம் தாங்கியவர்களும். பாரிடை வாழும் மக்களும் பலருடைய இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழத்தக்க உன் திருவடிகளை வணங்கிக் கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது திருவடி நிழலை நீங்கி நில்லாதவர்களாகிய அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.

குறிப்புரை :

இடையீடின்றியே திருவடிக்கண் உறைத்து நிற்கும் அன்பர் இடர்களையாய் என்கின்றது. தலைவ, நெடுங்களமேயவனே, நல்லார் செய்வார் நல்லார் பாடலொடு அன்பினோடும் நின் தாள் நிழற்கீழ் நீங்கி நில்லார் இடர்களையாய் எனக் கூட்டிப் பொருள் காண்க. பாங்கின் - குணங்களால். படிமம் - தவவேடம். தூங்கி - மனம் ஒன்றி. தாங்கிநில்லா அன்பினோடும் - தம்மளவில் பொறுக்கலாற்றாது கரைகடந்துவருகின்ற அன்போடும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்
அருத்தனாய வாதிதேவ னடியிணையே பரவும்
நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, மூத்த வேடந்தாங்கியும், இளமை வடிவங்கொண்டும், வேதங்கள் நான்கையும் நன்குணர்ந்த தலைவனாய் கங்கை நங்கையை மணம் கமழும் சடைமிசைக் கரந்துள்ள பெருமானே, கலைஞானங்கள் மெய்ஞானங்களின் பொருளான முதற்கடவுளாய உன் அடி இணைகளைப் பரவி ஆடியும் பாடியும் போற்றும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருள்வாயாக.

குறிப்புரை :

விருத்தகுமாரபாலராகிக் கங்கையைச் சடைமேற்கரந்த பெருமானே, நின்னடிபரவும் ஆடல் பாடலையுடைய அடியார்களின் இடரைக்களைவாயாக என்கின்றது. கருத்தனாகி - முழுமுதற் கடவுளாகி. அருத்தன் - பொருளானவன். நிருத்தர் - ஆனந்தத்தால் நிருத்தம் செய்பவர். கீதம் - பாடுபவர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, உமையம் மையைத் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவனே, அரி, எரி, காற்று ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கூட்டிய ஒப்பற்ற கொடிய அம்பினால் வேதவழக்கோடு பகை கொண்ட அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த மன்னவனே, கொடி மீது இடபத்தை இலச்சினையாகக் கொண்டவனே, இதுவே மணம் பொருந்திய சந்தனமாகும் என்று எம்பெருமானே நீ அணிந்துள்ள திருநீற்றை விரும்பி அணியும் அடியவர்களின் இடரை நீக்கியருள்வாயாக.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த மன்னவனே, விடைக்கொடி உடையவனே, நீறு அணிந்த அடியார்களது இடரைக் களைக என்கின்றது. கூறுகொண்டாய் - உமாதேவியை ஒருபாகத்துக்கொண்டவனே. மூன்றும் ஒன்றாகக்கூட்டி ஓர் வெங்கணையால் - அரி, எரி, கால் என்ற மூன்றையும் ஒன்றாகக்கூட்டிய ஓர் அம்பினாலே. இதனை `எரி காற்று அரி கோல்` என்னும் திருவீழிமிழலைப் பதிகத்தானும் அறிக.(1-11-6) மாறு - பகை. சாந்தம் - சந்தனம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ ழிலங்கை
அன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீ ழடர்த்தாய்
என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்
நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, மேருமலை யின் சிகரங்கள் மூன்றில் ஒன்றாகிய குன்றின்மேல் விளங்குவதும் கொடிகள் கட்டப்பட்ட மதில்களால் சூழப்பட்டதுமான இலங்கை நகர் மன்னனும், உன்னோடு மாறுபட்டுக் கயிலை மலையைப் பெயர்த்தவனுமான அரக்கர் தலைவனாகிய இராவணனை அரிய அம்மலையின் கீழே அடர்த்தவனே! என்றெல்லாம் நல்ல தோத்திரங்களைக் கூறி இரவும் பகலும் உன்னையே ஏத்தி நின்று மனம் நையும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.

குறிப்புரை :

இராவணனை அடர்த்தாய் என்று தோத்திரித்து, இராப் பகலாக உருகித் தொழுகின்ற அடியார்களின் இடரைக் களைவாயாக என்கின்றது. உச்சிமேல் விளங்கும் இலங்கைக் குன்றின் - மேருமலையில் இருந்து, வாயுதேவனால் பெயர்த்து வீழ்த்தப்பெற்ற மூன்று சிகரங்களுள் ஒன்றாகிய இலங்கைக்குன்றின். அன்றி - கோபித்து; பகைத்து எனலுமாம். வாய் மொழி - தோத்திரம். நைவார் - மனங்கனிவார்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனுஞ்
சூழவெங்கு நேடவாங்கோர் சோதியுளா கிநின்றாய்
கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்
நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

திருநெடுங்களம் மேவிய இறைவனே, கஞ்சனால் ஏவப்பட்டுத் தன்னைக் கொல்ல வந்த குவலயாபீடம் என்ற யானையின் கொம்புகளை ஒடித்த திருமாலும், புகழ்பெற்ற நான்முகனும், தங்களைச் சூழ்ந்துள்ள இடமெங்கும் தேடுமாறு இருவருக்கும் இடையே சோதிப் பிழம்பாய்த் தோன்றி நின்றவனே, பன்றியினது கொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே, அழிவற்ற உன் பொன்போன்ற திருவடி நீழலில் வாழும் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாய்.

குறிப்புரை :

அயனும் மாலும் தேடச் சோதியாய்நின்ற பெருமானே! நின் திருவடிக்கீழ்வாழும் அடியாரது இடரைக்களைவாயாக என்கின்றது. வேழம் - குவலயாபீடம் என்னும் யானை. கண்ணன் கஞ்ச னால் ஏவப்பட்ட குவலயாபீடம் என்னும் பட்டத்து யானையின் கொம்பை ஒடித்தார் என்பது வரலாறு. நேட - தேட. கேழல் - பன்றி. அடியின்நீழல் வாழ்வார் - திருவடிச்சார்பே சார்பாகக்கொண்டு மற்றொன்றையும் சாராத அடியார்கள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே
நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

பொழிப்புரை :

கொடுஞ் சொற்களையே தம் சொற்களாக்கிக் கொண்டு தமது வேடத்திற்குப் பொருந்தாமல் ஒழுகும் சமணரும் நற்சார்பில்லாத புத்தர்களும் சைவசமயம் கூறும் உண்மைப் பொருளை ஒரு சிறிதும் உணராதவர்கள். அவர்களை விடுத்து, திருநெடுங்களம் மேவிய இறைவனே! அழியாப் புகழுடைய வேதங்களோடு, தோத்திரங்களால் நின்னைப் பரவி நின் திருவடிகளை நெஞ்சில் கொண்டு வாழும் அடியவர்களின் இடர்களைப் போக்கியருளுவாயாக.

குறிப்புரை :

சமணரும் புத்தரும் பொருளுண்மை அறியாதவர்கள். ஆதலால் அவர்கள் உரையை விட்டு நின்னடியையே நெஞ்சில் வைப்பாரது இடர்களைவாய் என்கின்றது. வெம் சொல் - கொடுஞ்சொல். சமணர்கள் கொடுஞ்சொல்லையே எப்பொழுதும் பேசி, கொண்டவேடத்திற்குப் பொருந்தாதிருப்பர் எனக் குறிப்பிடப்படுகிறது. தஞ்சம் - நற்சார்பு. சாக்கியர் - புத்தர். தத்துவம் - பொருளுண்மை. துஞ்சல் இல்லா - இறவாத. வாய்மொழி - வேதம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல்பத்தும் பாடவல்லார் பாவம்ப றையுமே.

பொழிப்புரை :

மேலும் மேலும் நீண்டு வளரத்தக்க சடைமுடியை உடைய சிவபிரான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் பெரிய வீதிகளை உடைய சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய, நன்மைப் பொருளால் ஆராய்ந்து உணரத்தக்க இப்பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்களின் பாவங்கள் விலகும்.

குறிப்புரை :

இப்பாடல் பத்தும் பாடவல்லார் பாவம் பறையும் எனப் பயன்கூறுகிறது. நீட வல்லவார்சடையான் - மேலும் வளரத்தக்க நீண்ட சடையையுடையவன். சேடர் - இளைஞர். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருபனுவல்போல் பயன்விளைத்தலின் பனுவல்மாலை எனப்பட்டது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

தேவராயு மசுரராயுஞ் சித்தர்செழு மறைசேர்
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரிகால் நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
மூவராய முதலொருவன் மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

தேவர், அசுரர், சித்தர், செழுமையான வேதங்களை ஓதும் நாவினராகிய அந்தணர், நாம் வாழும் மண், விண், எரி, காற்று, நீர் ஆகிய ஐம்பூதங்கள், மணம் மிக்க தாமரை மலர் மேல் உறையும் நான்முகன், சிவந்த கண்களை உடைய திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகள் ஆகிய எல்லாமாகவும் அவர்களின் தலைவராகவும் இருக்கின்ற சிவபிரான் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றத் தலமாகும்.

குறிப்புரை :

இறைவனது முழுமுதற்றன்மையை உணர்த்துகின்றது இது. செழுமறைசேர் நாவர் - அந்தணர். மேவராய - மேவி உள்ளவராகிய. மூவராய முதல் - மூவருமாய் அவர்கள் தலைவருமாய் இருக்கின்ற சிவன்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதிரோன் மதிபார்
எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணியமா னனோடு
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலயனும் மறைகள்
முற்றுமாகி வேறுமானான் மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

தேவர்கட்குப் பற்றுக் கோடாகியும், பல வண்ணக் கதிர்களை உடைய ஞாயிறு, திங்கள் மண், கரையை மோதும் நீர், தீ, காற்று, மேலே உள்ள ஆகாயம், உயிர் ஆகிய அட்ட மூர்த்தங்களாகியும் எல்லா உயிர்களாகியும் திருமால், பிரமன் வேதங்கள் முதலான அனைத்துமாகியும் இவற்றின் வேறானவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியிருக்கும் தலம் திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை :

அட்டமூர்த்தி வடிவாயும், பல்லுயிராயும், மால் அயன் மறைகள் எல்லாம் ஆகியும் உள்ளவர்மேவிய முதுகுன்று என்கின்றது. வானுளோர்க்குப் பற்றும் ஆகி - தேவர்களுக்குப் பற்றப்படும் பொருளாகியும். எற்றுநீர் - கரையை மோதுகின்ற நீர். கால் - காற்று. மேலை விண் - மேலதாகிய ஆகாயம். இயமானன் - புருடன். மற்று, மாது, ஓர் இம்மூன்றும் அசை. முற்றும் ஆகி - இவையெல்லாம் ஆகி. வேறும் ஆனான் - இவற்றின் வேறாயும் இருப்பவன்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

வாரிமாகம் வைகுதிங்கள் வாளரவஞ் சூடி
நாரிபாக நயந்துபூமேல் நான்முகன்றன் தலையில்
சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந்தோன் றியதோர்
மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

கங்கை, வானகத்தே வைகும் திங்கள், ஒளி பொருந் திய பாம்பு ஆகியவற்றை முடிமிசைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, தாமரை மலரில் உறையும் பிரமனது தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையோட்டில் பலி ஏற்கச் செல்பவனும், தன்னைச் சினந்து வந்த வலிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருமுது குன்றம்.

குறிப்புரை :

கங்கை மதி முதலியன சூடி, உமையொருபாகனாய், பலி ஏற்றுண்ணும் பரமன் விரும்பும் இடம் முதுகுன்றம் என்கின்றது. வாரி - கங்கை. மாகம் - ஆகாயம். வாள் - ஒளி. நாரி - பெண்; உமையம்மை. செற்றலும் - கோபித்தலும். மூரிநாகம் - வலியயானை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

பாடுவாருக் கருளுமெந்தை பனிமுதுபௌ வமுந்நீர்
நீடுபாரு முழுதுமோடி யண்டர்நிலை கெடலும்
நாடுதானு மூடுமோடி ஞாலமுநான் முகனும்
ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்ததுமு துகுன்றே.

பொழிப்புரை :

தன்னைப் பாடிப் பரவுவார்க்கு அருள் செய்யும் எந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், குளிர்ந்த பழமையான கடல் நீண்ட மண் உலகிலும் தேவர் உலகிலும் பரவி, அவர்தம் இருப்பிடங்களை அழித்ததோடு நாடுகளிலும் அவற்றின் இடையிலும் ஓடி, ஞாலத்துள்ளாரும் நான்முகன் முதலிய தேவரும் உயிர் பிழைக்க வழி தேடும்படி, ஊழி வெள்ளமாய்ப் பெருகிய காலத்திலும் அழியாது உயர்ந்து நிற்பதாகிய, திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :


பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

வழங்குதிங்கள் வன்னிமத்த மாசுணமீ சணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர்திசை வணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம்பூ தஞ்சூழ
முழங்குசெந்தீ யேந்தியாடி மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

வானத்தில் சஞ்சரிக்கும் திங்கள், வன்னியிலை ஊமத்தம் மலர், பாம்பு, ஆகியவற்றைத் திருமுடிமீது நெருக்கமாகச் சூடி, இமவான் மகளாகிய உமையவள் காணத் தேவர்கள் எல்லாத் திசைகளிலும் நின்று வணங்க, மொந்தை, தக்கை, ஆகியன அருகில் ஒலிக்க, பேய்க்கணங்கள் பூதங்கள் சூழ்ந்து விளங்க, முழங்கும் செந்தீயைக் கையில் ஏந்தி ஆடும் சிவபெருமான் மேவிய தலம் திரு முதுகுன்றமாகும்.

குறிப்புரை :

பாம்பு மதி முதலியவற்றைச் சூடிக்கொண்டு மலைமகள் காண இறைவன் ஆடியமர்ந்த இடம் முதுகுன்றம் என்கின்றது. வழங்கு திங்கள் - வானமண்டலத்து ஊடறுத்துச் செல்லும் சந்திரன். வன்னி - வன்னிமரத்து இலை. மாசுணம் - பாம்பு. மீசணவி - சிரத்தின்மேற் கலந்து. செழுங்கல் வேந்தன் - வளப்பமான மலையரசன். தழங்கும் - ஒலிக்கின்ற. மொந்தை - ஒரு முகப்பறை வகைகளில் ஒன்று. தக்கை - இருமுகப்பறை வகையில் ஒன்று; உடுக்கையும் ஆம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லராநல் லிதழி
சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைந் தைம்புலனும்
அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

சுழிகளோடு கூடிய கங்கை, அதன்கண் தோய்ந்த திங்கள், பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர் ஆகியன நெருங்கிய சென்னியை உடைய முக்கண் ஆதியாகிய சிவபிரானுடைய சைவ வேடத்தை விருப்புற்று நினைத்து, ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினராகிய சனகர் முதலிய அந்தணாளர்கட்கு அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினனாய் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றம் ஆகும். தாள் நினைத்து, தாள் இணைத்து என்பவும் பாடம்.

குறிப்புரை :

கொன்றை, மதி, கங்கை முதலியன அணிந்த சென்னியோடு அந்தணர்க்கு அருமறைகளை உபதேசித்த இறைவன் மேயது திருமுதுகுன்றம் என்கின்றது. சுழிந்த - சுழிகளோடு கூடிய. தொல் அரா - பழம் பாம்பு. இதழி - கொன்றை. சழிந்த - நெருங்கிக் கிடக்கின்ற. சைவ வேடம் - தாழ்சடை வெண்ணீறு தாழ்வடம் முதலிய முனிவர் வேடத்தோடு. தாள் இணைத்து - கால்களைப் பதுமம் முதலிய ஆசனவகைகள் பொருந்தப் பின்னி. அழிந்த - செயலற்றுப்போன. சென்னி, வாயான், ஆதி மேயது எனக் கூட்டிப் பொருள் காண்க./n குருவருள் : சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் தான் நினைந்து ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு என்ற பாடம் புதுவை பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவன ஆய்வுப் பதிப்பில் காணப்படுகிறது. இது சிறப்பாய் உள்ளது. `சைவ வேடம் தாள் நினைந்து` என்பதிலும் சைவ வேடத்தையும் தாளையும் நினைத்து ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர் என்பதும் சிறக்கிறது. தாள் இணைத்து என்பதில் சிறப்புத் தோன்றவில்லை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

மயங்குமாயம் வல்லராகி வானினொடு நீரும்
இயங்குவோருக் கிறைவனாய விராவணன்றோ ணெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர்முலைமா துமையாள்
முயங்குமார்பன் முனிவரேத்த மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

அறிவை மயங்கச் செய்யும் மாயத்தில் வல்லவராய் வான், நீர் ஆகியவற்றிலும் சஞ்சரிக்கும் இயல்பினராய அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் தோளை நெரித்த வலிமையோடு பாம்பு நடனத்தில் விருப்புடையவனும், செறிந்த தனபாரங்களை உடைய உமையம்மையைத் தழுவிய மார்பினனும் ஆகிய சிவபிரான் முனிவர்கள் ஏத்த எழுந்தருளி விளங்கும் தலம் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

மாயம்வல்லராய், வானிலும் நீரிலும் இயங்குகின்ற அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணனை அடக்கிய புஜங்க நடனத்தினராகிய இறைவன் முனிவர்கள் வந்து அடிவணங்க மேயது முதுகுன்றம் என்கின்றது. புயங்கராக மாநடத்தன் - பாம்பு நடனத்தில் விருப்புடையன். புணர் முலை - இணைந்த முலை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

ஞாலமுண்ட மாலுமற்றை நான்முகனும் மறியாக்
கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங்கொய் மலரால்
ஏலவிண்டை கட்டிநாம மிசையவெப்போ துமேத்தும்
மூலமுண்ட நீற்றர்வாயான் மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

உலகங்களை உண்ட திருமாலும், நான்முகனும் அறிய முடியாத இறைவனது திருக்கோலத்தைத் தேவர்களும் அறியாதவர் ஆயினர். நாள்தோறும் கொய்த மலர்களைக் கொண்டு இண்டை முதலிய மாலைகள் தொடுத்துத் தன் திருப்பெயரையே எப்போதும் மனம் பொருந்தச் சொல்பவரும், மூலமலத்தை அழிக்கும் திருநீற்றை மெய்யிற் பூசுபவருமாகிய அடியவர்களின் வாயில், நாமமந்திரமாக உறைந்தருளுகின்ற அப்பெருமான் மேவிய தலம் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியாத வடிவைத் தேவர்கள் மனங் கொள்ள மாட்டாராயினும் ஆணவ வலிகெடுத்த அடியார்கள் மலர்மாலை கட்டி வழிபடும் இடம் முதுகுன்றம் என்கின்றது. கோலம் - விண்ணும் பாதலமும் ஊடுருவி நின்ற தீப்பிழம்பாகிய வடிவம். ஏல - பொருந்த. நாமம் - திருவைந்தெழுத்து. மூலம் உண்ட நீற்றர் - மூல மலமாகிய ஆணவத்தின் வலிகெடுத்த திருநீற்றினையுடைய அடியவர்கள். வாயான் - வாயில் நாமமந்திரமாக உறைபவன்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

உறிகொள்கையர் சீவரத்த ருண்டுழன்மிண் டர்சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங்கை தொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப் பொங்குவிடத் தையுண்ட
முறிகொண்மேனி மங்கைபங்கன் மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

குண்டிகையை உறியில் கட்டித் தூக்கிய கையினரும், காவியாடையைத் தரித்தவரும், உண்டு உழல்பவரும் ஆகிய சமண புத்தர்கள் கூறுவனவற்றை நெறிகள் எனக் கருதாது, நாள் தோறும், சென்று வணங்குவீராக. மானை ஏந்திய கையினனும், கப்பல்கள் ஓடும் கடலிடைப் பொங்கி எழுந்த விடத்தை உண்டவனும், தளிர் போலும் மேனியளாகிய உமையம்மையை ஒருகூறாக உடையவனுமாகிய சிவபிரான் மேவியுள்ளது திருமுதுகுன்றமாகும். அத்திருத்தலத்தை வணங்குவீராக.

குறிப்புரை :

சமணர் புத்தர் சொற்களைக் கேளாதீர்கள்; இறைவனை நித்தம் தொழுங்கள்; அவ்விறைவன் மேயது முதுகுன்றே என்கின்றது. உறி - சமணர்கள் குண்டிகை வைத்திருக்கும் கயிற்றுறி. சீவரம் - மஞ்சளாடை. மிண்டர் - உடல் வலிமையுடையவர். வங்க முந்நீர் - கப்பலோடுங் கடல்; என்றது கடல் என்ற பொதுமைபற்றி வந்த அடைமொழி. முறி - தளிர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்குமு துகுன்றைப்
பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்
* * * * * * *

பொழிப்புரை :

தேவர் கணங்கள் பலவும் நிறைந்து செறிந்து வணங்கும் திருமுதுகுன்றத்திறைவனை, பித்தர் போலத் தன் வயம் இழந்து திரிவாரின் தவவேடம் பெருமை தருவதாகும் எனக் கருதும் பிரமபுரத்தலைவனான ஞானசம்பந்தன்... ...

குறிப்புரை :

பித்தர் வேடம் பெருமை என்னும் - சிவபோத மிகுதியால் பித்தரைப்போல இருப்பார் வேடம் பெருமைதருவதாகும் என்னும்... ...

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி
ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்
ஓத்தூர் மேய வொளிமழு வாளங்கைக்
கூத்தீ ரும்ம குணங்களே.

பொழிப்புரை :

திருஓத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய் எழுந்தருளிய கூத்தரே, ஆராயுமிடத்து பூசைக்குரிய நறுமலர்களைத் தேர்ந்து பறித்தும் ஏனைய உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, உம் குணநலங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏத்தி, வணங்காதார் இல்லை.

குறிப்புரை :

ஓத்தூர் மேயகூத்தரே, பூவேந்தி உம் பொன்னடி போற்றாதார் இல்லை என்கின்றது. பூதேர்ந்து - வண்டு, ஈக்கடி எச்சம், முடக்கு முதலிய குற்றமில்லாத பூக்களை ஆராய்ந்து. ஆயன - பூசைக்கு வேண்டிய உபகரணங்கள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

இடையீர் போகா விளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மானுரி
உடையீ ரேயும்மை யேத்துது மோத்தூர்ச்
சடையீ ரேயும தாளே.

பொழிப்புரை :

திருஓத்தூரில் சடைமுடியோடு விளங்கும் இறைவரே, ஈர்க்கு இடையில் செல்லாத நெருக்கமான இளமுலைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, புள்ளிமான் தோலை ஆடையாக உடுத்தியவரே, உம் திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம்.

குறிப்புரை :

இள முலையுமையாள் பாகரே, மான்தோல் உடையீரே, உம்மை வணங்குகிறோம் என்கின்றது. இடையீர் போகா இள முலை - இரண்டு முலைகளுக்கும் இடையில் ஈர்க்கு நுழையாத இளமுலை. `ஈர்க்கிடைபோகா இளமுலை` என்ற திருவாசகமும் நோக்குக. புடையீர் - பக்கத்துடையவரே!

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

உள்வேர் போல நொடிமையி னார்திறம்
கொள்வீ ரல்குலோர் கோவணம்
ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்
கள்வீ ரேயும காதலே. 

பொழிப்புரை :

ஒளிசிறந்த வாழைக் கனிகள் தேன் போன்ற சாற்றைச் சொரியும் திருவோத்தூரில் அரையிற் கோவணம் உடுத்தியவராய் விளங்கும் கள்வரே, உம் காதல் மிக நன்று. பொய் பேசும் இயல்பினராய் அடியார்களை நினைப்பவரைப் போலக் காட்டி அவரை ஏற்றுக் கொள்வீர்.

குறிப்புரை :

ஓத்தூர்க் கள்ளரே! உம்முடைய காதல் நன்றா யிருக்கிறது என்கின்றது. உள்வேர் போல - நினைப்பீர்போல. உள்வீர் என்பதும் பாடம். நொடிமையினார்திறம் - பொய்யாகப் பேசுபவருடைய தன்மையை. அல்குல் - அரை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை
ஆட்டீ ரேயடி யார்வினை
ஓட்டீ ரேயும்மை யேத்துது மோத்தூர்
நாட்டீ ரேயரு ணல்குமே.

பொழிப்புரை :

செங்காந்தட்பூவை அணிந்தவரே! படப்பொறிகளை உடைய ஐந்து தலைநாகத்தை ஆட்டுபவரே! அடியவர் வினைகளை ஓட்டுபவரே! திருவோத்தூர் நாட்டில் எழுந்தருளியவரே! உம்மைத் துதிக்கின்றோம்; அருள்புரிவீராக.

குறிப்புரை :

உம்மை ஏத்துவோம்; அருளும் என்கின்றது. தோட்டீர் - செங்காந்தள் பூவையணிந்தவரே. துத்தி - படப்பொறி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

குழையார் காதீர் கொடுமழு வாட்படை
உழையாள் வீர்திரு வோத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்
அழையா மேயரு ணல்குமே.

பொழிப்புரை :

குழையணிந்த காதினை உடையவரே, கொடிய மழு என்னும் வாட்படையை ஒருபாலுள்ள கரத்தில் ஏந்தி ஆள்பவரே, திருவோத்தூரில் பிழை நேராதபடி வண்ணப் பாடல்கள் பல பாடிநின்று ஆடும் அடியார்க்கு அழையாமலே வந்து அருள் நல்குவீராக.

குறிப்புரை :

பாடி, ஆடும் அடியார்களுக்கு அவர்கள் அழையாமலே வந்து அருளும் என்கின்றது. உழை - பக்கம். பிழையா - தவறாதபடி. வண்ணங்கள் - தாஅவண்ணம் முதலிய வண்ணப்பாடல்கள். அழையாமே நல்கல் முதல் வள்ளல் ஆவார் கடமையென்று விண்ணப்பித்தவாறு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்
தக்கார் தம்மக்க ளீரென்
றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்
நக்கீ ரேயரு ணல்குமே.

பொழிப்புரை :

திருவோத்தூரில் மகிழ்ந்து உறையும் இறைவரே, நீர் பலிகொள்ள வருங்காலத்து, உம்திருமுன் அன்பு மிக்கவராய் விரும்பி வந்து பலியிடுதற்குத் தம் மக்களுள் மகளிரை அனுப்புதற்கு அஞ்சாத தந்தை தாயர் உளரோ? எவ்வாறேனும் ஆக, அவர் தமக்கு அருள் நல்குவீராக.

குறிப்புரை :

நீர் பலியேற்க வந்த காலத்து,தம் மக்களுள் உம்முன் வந்து பலியிடத்தக்கவர் யார் என்று அஞ்சாதார் உளரோ; அருள் நல்கும் என்கின்றது. இறைவன் கொண்ட விடவேடத்தில் ஈடுபட்டவர்கள் மயங்கித் தன்வசம் அழிந்தமையின் அவர் அண்மைக்கண் நடந்து வந்து பிச்சை போடத்தக்கார் யார் என்று அஞ்சாதார் உளரோ என்று கூறியதாம். நக்கீரே - மகிழ்ந்திருப்பவரே.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா வென்று நலம்புகழ்ந்
தோதா தாருள ரோதிரு வோத்தூர்
ஆதீ ரேயரு ணல்குமே.

பொழிப்புரை :

திருவோத்தூரில் முதற்பொருளாக விளங்குபவரே! மகரந்தம் பொருந்திய கொன்றை மலர் விளங்கும் திருமுடியை உடைய தலைவரே! என்றழைத்து உமது அழகினைப் புகழ்ந்து ஓதாதவர் உளரோ? அருள் நல்குவீராக.

குறிப்புரை :

கொன்றை விளங்குமுடியுடைநாதா என்று ஓதார் யார்? அருள் நல்கும் என்கின்றது. தாது - மகரந்தம். ஆதீர் - முதற்பொருளாயுள்ளவரே.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

என்றா னிம்மலை யென்ற வரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்
என்றார் மேல்வினை யேகுமே.

பொழிப்புரை :

இக்கயிலைமலை எம்மாத்திரம் என்று கூறிய இராவணனைக் கால்விரலால் வென்றவரும், தம்மோடு மனம் பொருந்தாத திரிபுரத்தசுரர்தம் மும்மதில்களைக் கணையால் எய்து அழித்தவருமாகிய சிவபிரானது திருவோத்தூர் என்று ஊர்ப்பெயரைச் சொன்ன அளவில் சொல்லிய அவர்மேல் உள்ள வினைகள் போகும்.

குறிப்புரை :

ஓத்தூர் என்றார் மேல்உள்ள வினைகெடும் என்கின்றது. என்தான் - எம்மாத்திரம். ஒன்னார் - பகைவர். என்றார் மேல்வினை ஏகும் என்றும், என்றார்மேல் வினை ஏகும் என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்
சென்றார் போலுந் திசையெலாம்
ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்
நின்றீ ரேயுமை நேடியே.

பொழிப்புரை :

திருவோத்தூரில் விளங்கும் இறைவரே! நல்லன செய்யும் நான்கு வேதங்களை ஓதுபவனாகிய பிரமன். திருமால் ஆகியோர் எரியுருவாய் நீர் ஒன்றுபட்டுத் தோன்றவும், அறியாராய் திசையனைத்தும் தேடித் திரிந்து எய்த்தனர். அவர்தம் அறிவுநிலை யாதோ?

குறிப்புரை :

அயனும் மாலும் உம்மைத் தேடித் திசையெல்லாம் சென்றார்போலும் என்று நகை செய்கின்றது. நன்றாம் நான் மறையான் என்றது நல்லன செய்யும் நான்மறைகளை ஓதியும் அவன் அறிந்திலன் எனக் குறிப்பித்தபடி. ஒன்றாயும் - பெருஞ்சோதிப் பொருளாயும். நேரில் இருந்தும் காணாது திசையெல்லாந்தேடினர்; அவர்கள் அறிவு இருந்தபடி என்னே என்று நகைசெய்தவாறு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

கார மண்கலிங் கத்துவ ராடையர்
தேரர் சொல்லவை தேறன்மின்
ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்
சீர வன்கழல் சேர்மினே.

பொழிப்புரை :

கரிய நிறத்தவராகிய சமணர்களும், கலிங்க நாட்டுத்துவர் ஏற்றிய ஆடையை அணிந்த புத்தத் துறவியரும் கூறும் பொய் மொழிகளை நம்பாதீர். முப்புரங்களை ஓரம்பினால் எய்து அழித்தவனாகிய, திருவோத்தூரில் விளங்கும் சிறப்பு மிக்க சிவபிரானின் கழல்களைச் சேர்வீர்களாக.

குறிப்புரை :

ஓரம்பால் எயில் எய்தவன் கழல்சேருங்கள்; புத்தர், சமணர் பொய்யுரை கேளாதீர்கள் என அறிவுறுத்தவாறு. தேரர் - புத்தர். கலிங்கத்துவராடையர் - துவர் ஏற்றிய கலிங்கநாட்டு ஆடையையுடைய புத்தர்கள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்
அரும்பு கொன்றை யடிகளைப்
பெரும்பு கலியுண் ஞானசம்பந் தன்சொல்
விரும்பு வார்வினை வீடே.

பொழிப்புரை :

திருவோத்தூரில், ஆண் பனைகள் குரும்பைக் குலைகளை ஈனும் அற்புதத்தைச் செய்தருளிய கொன்றை அரும்பும் சடைமுடி உடைய இறைவரைப் பெருமை மிக்க திருப்புகலி என்னும் பெயருடைய சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றியுரைத்த இப்பாமாலையை விரும்பும் அன்பர்களின் வினைகள் அழியும்.

குறிப்புரை :

ஞானசம்பந்தன் சொல்லிய இவை பத்தும் விரும்புவார்க்கு வினை ஒழியும் என்கின்றது. முதலிரண்டடியிலும் கூறிய கருத்து, பிள்ளையார் பாடல்களைக் கேட்டதும் இறைவனருளால் ஆண் பனைகள் பெண் பனைகளாகக் குலையீன்றன என்பதாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை
நீறு சேர்திரு மேனியர்
சேறு சேர்வயற் றென்றிரு மாற்பேற்றின்
மாறி லாமணி கண்டரே.

பொழிப்புரை :

சேற்று வளம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த அழகிய திருமாற்பேற்றில் ஒப்பற்ற நீலமணி போன்ற கண்டத்தை உடைய இறைவர், கடலிடத்தே ஊறிப் பொருந்திவந்த நஞ்சினை உண்டு உமையம்மையோடு கூடியவராய்த் திருநீறு பூசிய திருமேனியராய் விளங்குகிறார்.

குறிப்புரை :

நஞ்சத்தையுண்டு, உமையும் நீறும்சேர்ந்த திருமேனியர் மாற்பேறர் என்கின்றது. ஊறி ஆர் தரு நஞ்சு - கடலில் ஊறி வந்த விடம். உமை நீறுசேர் மேனி எனப் பிரிக்க. மாறிலா - தீது செய்யாத; அருளே வழங்குகின்ற, மணிகண்டர் - நீலகண்டர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவா ராமடி கள்ளென
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே.

பொழிப்புரை :

வாய்க்கால் மடைகளில் நீர் நிறைந்து விளங்கும் நிலையான திருமாற்பேற்றைத் தமது இருப்பிடமாக உடையவரே, உம்மை நினைந்து சிறந்த மாலைகளைத் தொடுத்து ஏந்திய கையினராய்க் காலை, மாலை இருபோதும் உம்மைத்தலைவராக எண்ணி அடியவர் அடைகின்றனர்.

குறிப்புரை :

மாற்பேறரே உம்மை எண்ணி அடியார்கள் மாலை முதலியவற்றை ஏந்தி இருபோதும் அடைகின்றார்கள் என்கின்றது. தொடை - மாலை. இருபோதும் - காலையும் மாலையும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

பையா ரும்மர வங்கொடு வாட்டிய
கையா னென்று வணங்குவர்
மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே.

பொழிப்புரை :

கருநிறம் பொருந்திய நஞ்சை உண்டு தேவர்களைக் காத்தருளிய நீலகண்டராய்த் திருமாற்பேற்றில் வீற்றிருக்கின்ற தலைவரே, உம் அடியவர்கள் படம் பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் கைகளை உடையவர் என்று உம்மை வணங்குவார்கள்.

குறிப்புரை :

நின்னடியார்கள் நின்னை அரவமாட்டிய கையான் என்று வணங்குவார்கள் என்கின்றது. பை - படம். மை - கருமை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

சால மாமலர் கொண்டு சரணென்று
மேலை யார்கள் விரும்புவர்
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே.

பொழிப்புரை :

திருமால் வழிபாடு செய்து அருள் பெற்றதால் திருமாற்பேறு என வழங்கும் இத்தலத்தில் விளங்கும் நீலநிறம் பொருந்திய கண்டத்தை உடையவரே, நும்மை மேன்மை மிக்க பெரியோர்கள் மிகுதியான நறுமலர்களைக் கொண்டு அர்ச்சித்து உம்மையே சரண் என்று விரும்பி வழிபடுவர்.

குறிப்புரை :

நீலகண்ட, உயர்ந்தோர்கள் மலர்கொண்டு நின்னை வழிபடுவார்கள் என்கின்றது. சால - மிக. மேலையோர்கள் - உயர்ந்தோர்கள் மாலினார் வழிபாடுசெய் மாற்பேறு என்றது இத்தலவரலாற்றுக் குறிப்பு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

மாறி லாமணி யேயென்று வானவர்
ஏற வேமிக வேத்துவர்
கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
நீற னேயென்று நின்னையே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்டவரே, விளங்கும் திருமாற்பேற்றில் வெண்ணீறுபூசி விளங்குபவரே, ஒப்பற்ற மாணிக்கமணியே என்று உம்மையே வானவர் மிகமிக ஏத்தி மகிழ்வர்.

குறிப்புரை :

நின்னைத் தேவர்கள் மாறிலாமணியே என்று ஏத்துவர் என்கின்றது. சில ரத்தினங்களை அணிந்தால் தீமையும் செய்யக் கூடும்; இந்தமணி எத்தகையோர்க்கும் இன்பமே செய்தலின் மாறிலாமணியே என்றார். ஏறவே - மிக. தாமுயர என்றுமாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

உரையா தாரில்லை யொன்றுநின் றன்மையைப்
பரவா தாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் றென்கரை மாற்பேற்
றரையா னேயரு ணல்கிடே.

பொழிப்புரை :

அலைகள் பொருந்திய பாலியாற்றின் தென்கரையில் விளங்கும் திருமாற்பேற்றில் விளங்கும் அரசனே, பொருந்திய நின் பெருந்தன்மையை வியந்து உரையாதார் இல்லை. நாள்தோறும் உன் பெருமைகளைப் பரவாதவர் இல்லை. அருள் நல்குவீராக.

குறிப்புரை :

திருமாற்பேற்று அரைசனே, உன்னைப் புகழாதாரும், பரவாதாரும் இல்லை என்கின்றது. இத்தலம் பாலியாற்றுத் தென்கரையது என்பது குறிக்கப்பெறுகின்றது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

அரச ளிக்கு மரக்க னவன்றனை
உரைகெ டுத்தவ னொல்கிட
வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே.

பொழிப்புரை :

இலங்கை நாட்டை ஆளும் இராவணனின் புகழை மங்கச் செய்து, பின் அவன் பிழை உணர்ந்து வேண்டிய அளவில் அவனுக்கு வரங்கள் பலவற்றையும் மிகுதியாக அளித்தருளிய எமது திருமாற்பேற்று அடிகளைப் பரவப் பாவம் கெடும்.

குறிப்புரை :

இராவணன் வலிகெடுத்து வரமளித்த இறைவனைப் பரவப் பாவம் கெடும் என்கின்றது, உரை - புகழ். ஒல்கிட - பணிய.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

இருவர் தேவருந் தேடித் திரிந்தினி
ஒருவ ராலறி வொண்ணிலன்
மருவு நீள்கழன் மாற்பேற் றடிகளைப்
பரவு வார்வினை பாறுமே.

பொழிப்புரை :

திருமால் பிரமன் ஆகிய இருவரும் அடிமுடி காணத்தேடித் திரிந்தும் ஒருவராலும் அறிய ஒண்ணாத இயல்பினனாகிய, திருமாற்பேற்றுள் விளங்கும் சிவபிரானுடைய பெருமை விரிந்த திருவடிகளைப் பரவித்துதிப்பார் வினைகள் கெடும்.

குறிப்புரை :

இறைவன் அடிகளைப் பரவுவார் வினைசிதறும் என்கின்றது. தேவர் இருவர் - அயனும் மாலும். இருவர் தேடியும் ஒருவராலும் அறிய முடியாதவன் என்பது கருத்து.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

தூசு போர்த்துழல் வார்கையிற் றுற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலும்
தேச மல்கிய தென்றிரு மாற்பேற்றின்
ஈச னென்றெடுத் தேத்துமே.

பொழிப்புரை :

ஆடையை மேனிமேற் போர்த்து உழல்வோரும், கைகளில் உணவை ஏற்று உண்ணும் இழிந்தோருமாகிய புத்த, சமணர்களின் உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். புகழ் பொருந்திய அழகிய திருமாற்பேற்றுள் விளங்கும் ஈசன் என்று பெருமானைப் புகழ்ந்து போற்றுமின்.

குறிப்புரை :

சமணர் புத்தர் சழக்குரை கொள்ளாதீர்; திருமாற் பேற்றீசன் என்று ஏத்தும் என்கின்றது. தூசு - ஆடை. துற்று - உணவு. நீசர் - இழிந்தவர். கொள்ளெலும் - கொள்ளாதீர்கள்; இது அருவழக்கு. தேசம் - ஒளி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னு மாற்பேற் றடிகளை
மன்னு காழியுண் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே.

பொழிப்புரை :

திருமாலும் சந்திரனும் தங்கியிருந்து பணிசெய்து வழிபட்ட நிலைபேறுடைய திருமாற்பேற்றுள் விளங்கும் இறைவனை நிலைத்த காழிமாநகருள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதினால் வினைகள் கெடும்.

குறிப்புரை :

இத்தலம் மாலும், மதியும் வணங்கிய தலமாதலின் இத்தலத்திறைவனை வழிபட வினைகள் சிதறும் என்கின்றது. சோமன் - சந்திரன். பன்ன - சொல்ல.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யாரா ராதி முதல்வரே.

பொழிப்புரை :

உலக மக்கள் நாள்தோறும் வந்து வழிபட்டுப் போற்றும், ஆத்தி மலர் அணிந்த திருப்பாற்றுறையில் விளங்கும் ஆதிமுதல்வராகிய பெருமானார் கார்காலத்தே மலரும் கொன்றை மலர்மாலை சூடிய திருமுடியினராய் அன்பு கனிந்த நம் சிந்தையைத் தம்மிடமே செல்லச் செய்தார்.

குறிப்புரை :

திருஞானசம்பந்தப் பிள்ளையார் தம்மைப் பெண்ணாக்கி, தலைவனாகத் திருப்பாற்றுறைத் திருமூலநாதரைப் பாவித்து ஈடுபட்டு, சிறந்த சிந்தை தம்மிடமே செல்லச்செய்தார் என்கின்றார். கார் ஆர் கொன்றை - கார்காலத்துத் கொன்றை. சிந்தை செலச்செய்தார். அடியார்கள் சிந்தையைத் தம்மிடமே செல்லச்செய்தார். ஆரார் - தெவிட்டாதவர். ஆதிமுதல்வர் என்றது திருமூலநாதர் என்னும் தலத்திறைவர் பெயரைக் குறிப்பது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

நல்லா ரும்மவர் தீய ரெனப்படும்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை
எல்லா ருந்தொழு மீசரே.

பொழிப்புரை :

பற்கள் பொருந்திய வெண்மையான தலையோட்டை அணிந்தவரும், எல்லாராலும் தொழப்படுபவருமாகிய எம் திருப்பாற்றுறைச் செல்வராகிய ஈசர், நல்லவருக்கு நல்லவராவர். தீயை ஏந்தியதால் தீயர் எனவும் படுவார். அவர் நல்ல மலரைச் சூடியவர்.

குறிப்புரை :

இவர் நல்லவரும் ஆவர்; தீயர் எனவும் சொல்லப் பெறுவர்; ஆயினும் எனது சொன்மலரைச் சூடினார் என்கின்றது. தீயர் - கையில் தீயையுடையவர். சொல் ஆர் நன் மலர் - சொல்லாகிய நிறைந்த நல்லமலர்கள்; என்றது, தலைவி பேசுவனயாவும் அவன் புகழேயாதல் தெரிவித்தது. எல்லாரும் தொழும் - பரிபாகமுடையவர் அஃதில்லாத உலகவர் யாவரும் வணங்கும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தெ னெழில்கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
உண்ணா ணாளு முறைவரே.

பொழிப்புரை :

இயற்கையில் பண்ணிசை போல முரலும் வண்டினங்கள் பாடும் திருப்பாற்றுறையுள் எக்காலத்தும் உறைபவரும், விண்ணகத்தே தவழும் திங்கள் விளங்கும் திருமுடியினரும் ஆகிய இறைவர் என் இதயத்தில் இருப்பவராய் வந்து என் எழில்நலம் அனைத்தையும் கவர்ந்தார்.

குறிப்புரை :

திருமூலநாதர் ஆராயாதே வந்து என்னழ கெல்லாவற்றையும் கவர்ந்தார் என்கின்றது. எண்ணார் - எண்ணத்தில் இருப்பவர். இது உறுப்பு நலனழிதல் என்னும் மெய்ப்பாடு. பாற்றுறையுள் நாள்நாளும் உறைவர் எனப்பிரித்துப் பொருள்காண்க.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

பூவுந் திங்கள் புனைந்த முடியினர்
ஏவி னல்லா ரெயிலெய்தார்
பாவந் தீர்புனன் மல்கிய பாற்றுறை
ஓவென் சிந்தை யொருவரே.

பொழிப்புரை :

மூழ்கியவருடைய பாவங்களைப் போக்கும் தீர்த்த நலம் உடைய திருப்பாற்றுறையுள் மலர்களையும் பிறைமதியையும் புனைந்த திருமுடியினராய்க் கணையொன்றால் பகைவராய் வந்தடைந்த அசுரர்களின் முப்புரங்களை அழித்த இறைவரே என்மனம் பிறவற்றில் செல்லாது ஓவுதல் செய்த ஒருவராவர்.

குறிப்புரை :

அம்பால் அடையார் புரம் எய்த பாற்றுறைநாதனே என் சிந்தைக்கண் உள்ள ஒருவர் என்கின்றது. ஏவின் - அம்பால். அல்லார் - பகைவர். ஓ என்பது வினாப்பொருளின் கண்ணது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

மாகந் தோய்மதி சூடி மகிழ்ந்தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணு முடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே.

பொழிப்புரை :

தம் திருமேனியின் ஒருபாதியாய்ப் பெண்ணைக் கொண்டுள்ளவரும், நாகத்தை அணிகலனாகப் பூண்டவரும் ஆகிய, திருப்பாற்றுறை இறைவர், வானகத்தே தோயும் பிறைமதியை முடியிற்சூடி மகிழ்ந்து வந்து எனது உடலைப் பொன்னிறமான பசலை பூக்கச் செய்தவராவார்.

குறிப்புரை :

ஒருபாதியில் பெண்ணையும் உடைய பெருமான் என்னுடைய மார்பைப் பொன்னிறமாக்கினார் என்று பிரிவால் வருந்திய தலைவி பசந்தமையையறிவிக்கின்றது. மாகம் - ஆகாயம். ஆகம் - மார்பு. நயவர் - நலமுடையவர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தெ னலங்கொண்டார்
பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
வேத மோதும் விகிர்தரே.

பொழிப்புரை :

தொண்டர்கள் தம் திருவடிகளைப் பரவத்திருப்பாற்றுறையுள் விளங்கும் வேதங்களை அருளிய விகிர்தரும், பொன்போல் திகழும் கொன்றை மலர்களைப் புனைந்த திருமுடியினை உடைய தலைவருமாகிய சிவபிரானாரே என்பால் வந்து என் அழகினைக் கவர்ந்தவராவார்.

குறிப்புரை :

கொன்றைபுனைந்த நாதர்வந்து என் நலங்கொண்டார் என்கின்றது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

வாடல் வெண்டலை சூடினர் மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆட னாக மசைத்தாரே.

பொழிப்புரை :

பாடல்கள் பலவற்றைப்பாடும் வண்டினங்கள் சிறந்த பண்களை மிழற்றும் திருப்பாற்றுறையுள், ஆடுதலில் வல்ல நாகப்பாம்பைத் திருமேனியில் பல இடங்களிலும் கட்டியுள்ள இறைவர், உலர்ந்த வெள்ளிய தலையோடுகளை மாலையாகச் சூடியவராவர். பெரிய இடபத்தின் மேல் ஏறிவந்து என் அழகைக் கவர்ந்து செல்லும் குறிப்பினர்.

குறிப்புரை :

ஆடும் அரவையணிந்த பாற்றுறைநாதர் விடையேறிப் பிரிதலைக் கருதினார் என்கின்றது. வாடல் வெண்தலை - உலர்ந்த தலை. மால்விடை கோடல்செய்த குறிப்பினார் - பெரிய இடபத்தைக் கொள்ளுதலைச்செய்த குறிப்பினையுடைவர்; என்றது. ஊர்தியாகிய விடையைக் கொள்ளுதல் என்பது. தலைவன் பிரிவு கருதியதாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வஞ் செய்தெ னெழில்கொண்டார்
பவ்வ நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே.

பொழிப்புரை :

கடலிடைத் தோன்றிய நஞ்சடைந்த கண்டரும், முல்லை மலர் சூடிய மைந்தரும் ஆகிய எம் திருப்பாற்றுறை இறைவர் விரும்பத்தக்க திருமேனியராய், வெண்மையான திருவெண்ணீறு அணிந்தவராய் வந்து, என் எழிலைக் கொண்டு பின் பிரிவுத்துன்பம் தந்தவராவர்.

குறிப்புரை :

முல்லைசூடிய இறைவர் பிரிவுத் துன்பத்தை எனக்குப் பெரிதாக்கி எனது அழகைக் கவர்ந்தார் என்கின்றது. வெவ்வ மேனியர் - வெம்மையோடுகூடிய மேனியை யுடையவர். எவ்வம் செய்து - துன்புறுத்தி. பவ்வம்நஞ்சு - கடல் நஞ்சு. மவ்வல் - முல்லை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

ஏன மன்னமு மானவ ருக்கெரி
ஆன வண்ணத்தெ மண்ணலார்
பான லம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே.

பொழிப்புரை :

நீலோற்பல மலர்கள் நிறைந்த நீர் நிலைகளோடு கூடிய திருப்பாற்றுறையுள் வானகத்தே விளங்கும் வெண்மையான பிறை மதியைச் சூடி எழுந்தருளியுள்ள மைந்தராகிய இறைவர், பன்றியும், அன்னமுமாய் அடிமுடி தேடிய திருமால், பிரமன் ஆகியோருக்கு அழலுருவமாய் ஓங்கி நின்ற அண்ணலார் ஆவார்.

குறிப்புரை :

தீப்பிழம்பாகிய செல்வரே வெண்பிறை அணிந்த மைந்தராக இருக்கின்றார் என்கின்றது. ஏனம் - பன்றி. பானல் - நீலோற்பலம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்தெ னன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே.

பொழிப்புரை :

பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்துள்ள திருப்பாற்றுறையுள் எழுந்தருளியுள்ள மைந்தராகிய இறைவர், மேனி மீது வெந்த நீறு பூசியவராய், கையில் வேலேந்தியவராய், மார்பில் பூணூல் அணிந்தவராய் வந்து என் அழகினை வவ்விச் சென்றார். அவர் முன்னரே மலைமகளை மணந்த மணாளர் ஆவார்.

குறிப்புரை :

பாற்றுறை மணாளர் என்நலம் வௌவினார் என்கின் றது. இதில் தலைவி தலைவருடைய உள்ளத் தூய்மையைக் காட்டும் வீரத்தை விளக்கும் வேலையும், இதுவரை மணமாகாமையைக் காட்டும் நூலையுங்கண்டு காதலித்தேன், அவர் என்நலத்தை வௌவினார் என்பதுதோன்ற, நீற்றினர் வேலினர் நூலினராய்வந்து என் நலத்தை வௌவினார் என்கின்றார். எம்மணாளர் என்னாது ஓர் மணாளர் என்றது மலைமகளையும் அலைமகளையும் முன்னரே மணந்திருக்கின்றமை குறிப்பிக்க. இப்பதிகத்துள் இராவணனை அடர்த் ததும், புறச்சமயிகளைப் பற்றிய குறிப்பும் கூறாமை, தலைவனும் தலைவியுமாய் இருந்து அநுபவிக்கும் அருள்நெறி முதிர்ச்சியால் என அறிக. வரும் தோணிபுரப்பதிகத்தும் இக்காட்சியைக் காண்க.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
பத்தும் பாடிப் பரவுமே.

பொழிப்புரை :

அடியவர்கள் நிறைந்துள்ள திருப்பாற்றுறையுள் எழுந்தருளிய ஆயிரம் திருநாமங்களையுடைய இறைவனை, பக்தனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இனிய தமிழ்ப் பாடல்களாகிய இப்பத்தையும் பாடிப்பரவுமின்.

குறிப்புரை :

பாற்றுறைநாதரைப்பற்றிய இப்பாடல் பத்தையுஞ் சொல்லிப்பரவுங்கள் என்கின்றது. பத்து நூறு பெயரன் - ஆயிரந்திருநாமத்தையுடையவன்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே.

பொழிப்புரை :

மிகவும் சிறந்த மெய்ப்பொருளை அன்போடு எண்ணினால் அவ்வெண்ணம் நற்கதிக்கு வாயிலாம். அத்தகைய மெய்ப்பொருளாய் வெண்மையான ஒளி வடிவினனாய் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள இவ்விறைவனை நினைந்தவர்கள் இவ்வுலகினில் உயர்ந்தவர் ஆவர். அவனைக் கண்டு தெளிந்த அவர்கள் தேவர்களாவர்.

குறிப்புரை :

மிகவும் உயர்ந்ததை எண்ணின் அது நற்கதிக்கு வாயி லாம்; ஆதலால் வேற்காடு எண்ணியவர்கள் இவ்வுலகில் தேவராவர் என்கின்றது. ஒள்ளிது - உயர்ந்தபொருளை. உள்ள - எண்ண. உள்ளம் - உயிருமாம். உள்ளியார் - எண்ணியவர்கள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

ஆட னாக மசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே.

பொழிப்புரை :

ஆடுதற்குரிய பாம்பினை இடையிற்கட்டிய, அளவற்ற பல்வேறு வடிவங்களைக் கொண்டருளிய திருவேற்காட்டு இறைவனைப்பாடிப் பணிந்தவர்கள், இவ்வுலகினில் பெருமை பொருந்திய செல்வர்கள் ஆவர்.

குறிப்புரை :

வேற்காடு பணிந்தார் இவ்வுலகில் பெரிய செல்வராவர் என்கின்றது. சேடர் - பெருமையுடையவர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேத மெய்துத லில்லையே.

பொழிப்புரை :

பூதகணங்கள் பாட, சுடுகாட்டின்கண் நடனம் ஆடி, வேதங்களை அருளிய வித்தகனாக விளங்கும் திருவேற்காட்டு இறைவற்கு மலர்களும், சந்தனமும், நறும்புகை தரும் பொருள்களும் கொடுத்தவர்களுக்குத் துன்பங்கள் வருதல் இல்லையாம்.

குறிப்புரை :

வேற்காட்டுநாதரைப் பூவுஞ்சாந்தும் புகையுங் கொண்டு வழிபட்டவர்க்கு ஏதம் எய்தாது என்கின்றது. புறங்காடு - சுடுகாடு. ஆடி - ஆடுபவன்; பெயர்ச்சொல். ஏதம் - துன்பம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

ஆழ்க டலெனக் கங்கைக ரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திடப்
பாழ் படும்மவர் பாவமே.

பொழிப்புரை :

ஆழமான கடல் என்று சொல்லத்தக்க கங்கை நதியை மறைத்துக்கொண்ட, விழுது போன்ற சடைமுடியினை உடைய திருவேற்காட்டு இறைவனைப் பணிவான மனத்தோடு வணங்கித் துதிப்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும்.

குறிப்புரை :

பணிந்த மனத்தோடு ஏத்த பாவம் அழியும் என்கின்றது. ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன் - பல மகாநதிகளைத் தன்னகத்து அடக்கிக்கொள்ளும் கடலைப்போல, கங்கையை அடக்கியவன். வீழ்சடை - விழுதுபோலும் சடை. தாழ்வுடை மனம் - பணிந்த உள்ளம். தாழ்வெனுந்தன்மை (சித்தியார்). பாவம் பாழ்படும் - பாவம் பயன் அளியாதொழியும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

காட்டி னாலு மயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை யொல்லையே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயர், சிவனே முழுமுதல்வன் எனக் காட்டினாலும், அதனை உணராது மயங்கி அவர் உயிரைக் கவரவந்த அக்காலனை அழித்த சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் பாடல்கள் பாடிப்பணிந்து வழிபடவல்லவர் தம் வினைகளை விரைவில் ஓட்டியவர் ஆவர்.

குறிப்புரை :

இது பாடிப்பணிந்து ஏத்தவல்லவர் வினை ஓடும் என் கின்றது. காட்டினாலும் அயர்த்திடு அக்காலனை - மார்க்கண்டேயர் பூசித்து, சிவன் முழுமுதல்வன் என்பதைக் காட்டினாலும் அதனை உணராதே மயங்கிய காலனை. வீட்டினான் - அழித்தவன். ஒல்லை - விரைவு. காட்டினானும் என்ற பாடமும் உண்டு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே.

பொழிப்புரை :

தான் கட்டியும் போர்த்தும் உள்ள ஆடைகளைத் தோலினால் அமைந்தனவாகக் கொண்டுள்ள இறைவன் ஒளிபொருந்திய வேலோடு உறையும் திருவேற்காட்டை, ஆகம நூல்களில் விதித்தவாறு வழிபட்டுத் துதிக்க வல்லவர்களாகிய ஆன்மாக்களைப் பற்றிய மயங்கச் செய்யும் வினைகள், மாய்ந்தொழியும்.

குறிப்புரை :

விதிப்படி ஏத்தவல்லவர்க்கு வினைமாயும் என்கின்றது நூலினால் - ஆகம விதிப்படி. மாலினார் வினை - மயங்கிய ஆன்மாக்களினது வினை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

மல்லன் மும்மதின் மாய்தர வெய்ததோர்
வில்லி னானுறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே.

பொழிப்புரை :

வளமை பொருந்திய முப்புரங்களும் அழிந்தொழி யுமாறு கணை எய்த ஒப்பற்ற மேருவில்லை ஏந்திய சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் புகழ்ந்து சொல்லவல்லவர்கள் சுருங்கா மனத்தினராவர். அங்குச் சென்று தரிசிக்க வல்லவர் நீண்ட ஆயுள் பெறுவர்.

குறிப்புரை :

இறைவனை எப்பொழுதும் பேசவல்ல குவியாமனத்து அடியவர்கள் நீடுவாழ்வர் என்கின்றது. தீர்க்கம் - நெடுங்காலம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

மூரல் வெண்மதி சூடுமுடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடுநி னைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே.

பொழிப்புரை :

மிக இளைய வெண்மையான பிறைமதியைச் சூடும் திருமுடியை உடைய வீரனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருவேற்காட்டை, அன்போடு வழிபட நினைந்தவர், அப்பெருமானின் சிவந்த திருவடிகளைத் திண்ணமாகச் சேர்வர்.

குறிப்புரை :

அன்போடு வழிபடுவார் அடி அடைவர் என்கின்றது. மூரல் - இளமை. வாரம் - அன்பு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்டூர்
அரக்க னாண்மை யடரப்பட் டானிறை
நெருக்கி னானை நினைமினே.

பொழிப்புரை :

பிரமனின் தலையோட்டில் பலியேற்கின்ற சமர்த்தனாகிய சிவபிரான் உறையும் திருவேற்காட்டில் அரக்கன் ஆகிய இராவணனின் ஆண்மையை அடர்த்துக் கால்விரலால் சிறிதே ஊன்றி நெருக்கிய அவனை நினைமின்கள்.

குறிப்புரை :

இராவணனது ஆண்மையை அடர்த்த இறைவனை நினையுங்கள் என்கின்றது. பரக்கினார் - உலகில் தன் படைப்பால் உயிர்களைத் தனு கரண புவன போகங்களோடு பரவச் செய்தவராகிய பிரமனார். விரக்கினான் - சாமர்த்தியமுடையன். விரகினான் என்பது எதுகைநோக்கி விரிந்தது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாவெழில்
கூறி னார்க்கில்லை குற்றமே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தாமரை மலர் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியவர்களை வெற்றி கொள்வானாகிய சிவன் உறையும் திருவேற்காட்டு இறைவனைப் பற்றிய மொழியை ஈறிலாமொழியாக, அப்பெருமானுடைய அழகிய நலங்களைக் கூறுபவர்களுக்குக் குற்றமில்லை.

குறிப்புரை :

இறைவனைப்பற்றிய மொழியே ஈறிலாமொழியாக அதனை அழகுபெறக் கூறினார்க்குக் குற்றமில்லை என்கிறது. வேறலான் - வெல்லுதலையுடையான். வேறாகாதவன் எனலுமாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.

பொழிப்புரை :

விரிந்த மலர்களையுடைய மாஞ்சோலைகள் சூழ்ந்த திருவேற்காட்டை அடைந்து, அங்கெழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவி, சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப்போற்றுவார்க்கு நன்மைகள் விளையும்.

குறிப்புரை :

திருவேற்காட்டைத் தரிசித்து இறைவன் திருவடியைத் தியானித்து இப்பதிகத்தைப் பாடக் குணமாம் என்கின்றது. விண்ட - மலர்ந்த. சண்பை சீகாழிக்கு மறுபெயர்.

பண் :

பாடல் எண் : 1

அரியு நம்வினை யுள்ளன வாசற
வரிகொண் மாமணி போற்கண்டம்
கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம்
பெரிய வன்கழல் பேணவே.

பொழிப்புரை :

வரிகள் அமைந்த சிறந்தநீலமணிபோலக் கண்டம் கறுத்தவனாய், விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைத் துதித்தால் நம் வினைகளாக உள்ளன யாவும் முற்றிலும் கழியும்.

குறிப்புரை :

கரவீரத்து இறைவன்கழல் பேண வினையுள்ளன எல்லாம் அரியும் என்கின்றது. கழல்பேண நம்வினையுள்ளன அரியும் எனக்கூட்டுக. வரிகொள் மாமணி - நிறங்கொண்ட நீலமணி.

பண் :

பாடல் எண் : 2

தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய
கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்
சங்க ரன்கழல் சாரவே.

பொழிப்புரை :

தாழ்ந்து தொங்கும் சடைமுடிகளை உடைய உயர்ந்தோனாய் இளம்பிறையோடு கங்கையை உடனாகச் சூடிய, திருக்கரவீரத்தில் விளங்கும் சங்கரன் திருவடிகளை வழிபட்டால் நம்மைப் பற்றிய வினைகள் தங்கா.

குறிப்புரை :

சங்கரன் கழல்சார வினை தங்குமோ என வினாவுகிறது. சங்கரன் - சுகத்தைச் செய்பவன்.

பண் :

பாடல் எண் : 3

ஏதம் வந்தடை யாவினி நல்லன
பூதம் பல்படை யாக்கிய
காத லான்றிக ழுங்கர வீரத்தெம்
நாதன் பாத நணுகவே.

பொழிப்புரை :

நல்லனவாகிய பூதகணங்களைப் பல்வகைப் படைகளாக அமைத்துக் கொண்டுள்ள அன்பு வடிவினனும் விளங்கும் திருக்கரவீரத்தில் எழுந்தருளிய எம் நாதனுமான சிவபெருமான் திருவடிகளை அடைவோரைத் துன்பங்கள் வந்தடையமாட்டா.

குறிப்புரை :

கரவீரநாதன் பாதம் நணுக ஏதம் அடையா என்கின்றது. ஏதம் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 4

பறையு நம்வினை யுள்ளன பாழ்பட
மறையு மாமணி போற்கண்டம்
கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்
இறைய வன்கழ லேத்தவே.

பொழிப்புரை :

நீலமணி போலக் கண்டத்தில் கறையுடையவனும், விளங்கும் திருக்கரவீரத்தில் உறையும் எம் இறைவனுமாகிய பெருமான் திருவடிகளை ஏத்த நம் வினைகள் நீங்கும். சஞ்சிதமாக உள்ளவும் மறையும்.

குறிப்புரை :

கழல் ஏத்த வினைபறையும் என்கின்றது. பறையும் என்றதோடமையாது பாழ்பட பறையும் என்றது அதன் வாசனையும் கெடும் என்பதை விளக்க.

பண் :

பாடல் எண் : 5

பண்ணி னார்மறை பாடல னாடலன்
விண்ணி னார்மதி லெய்தமுக்
கண்ணி னானுறை யுங்கர வீரத்தை
நண்ணு வார்வினை நாசமே.

பொழிப்புரை :

சந்த இசையமைப்புடன் கூடிய வேதங்களைப் பாடியும் ஆடியும் மகிழ்பவரும், வானகத்தில் சஞ்சரித்த மும்மதில்களையும் எய்தழித்த மூன்றாம் கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய திருக்கரவீரத்தை அடைவார் வினைகள் நாசமாம்.

குறிப்புரை :

கரவீரத்தை நண்ணுவார்வினை நாசமாம் என்கின்றது. பண்ணின் ஆர் மறை - சத்தத்தோடுகூடிய வேதம்.

பண் :

பாடல் எண் : 6

நிழலி னார்மதி சூடிய நீள்சடை
அழலி னாரழ லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய பிறைமதியைச்சூடிய நீண்ட சடைமுடியினரும், அழலைக் கையில் ஏந்தியவரும் வீரக்கழலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய திருக்கரவீரத்தைத் தொழவல்லவர்கட்குத் துக்கம் இல்லை.

குறிப்புரை :

இத்தலத்தைத் தொழுவார்க்குத் துக்கம் இல்லை என்கின்றது. நிழலின் ஆர் மதி - ஒளி நிறைந்த பிறை.

பண் :

பாடல் எண் : 7

வண்டர் மும்மதின் மாய்தர வெய்தவன்
அண்ட னாரழல் போலொளிர்
கண்ட னாருறை யுங்கரவீ ரத்துத்
தொண்டர் மேற்றுயர் தூரமே.

பொழிப்புரை :

தீயவர்களாகிய அசுரர்களின் முப்புரங்களும் அழிந்தொழியுமாறு கணை எய்தவரும், அனைத்து உலகங்களின் வடிவாக விளங்குபவரும், விடம் போல ஒளிவிடும் கண்டத்தை உடையவரும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருக்கரவீரத்துத் தொண்டர்களைப் பற்றிய துயரங்கள் தூரவிலகும். அழல் - தீப்போன்ற கொடிய விடம்.

குறிப்புரை :

அடியார்மேல் துயரம் தூரமாம் என்கின்றது. வண்டர் - தீயோர்களாகிய முப்புராதிகள். அழல்போல் ஒளிர் கண்டனார் - விடத்தைப் போல் ஒளிவிடுகின்ற கழுத்தையுடையவர். துயர் தூரமே - துன்பம் தூரவிலகும்.

பண் :

பாடல் எண் : 8

புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்
சினவ லாண்மை செகுத்தவன்
கனல வன்னுறை கின்ற கரவீரம்
எனவல் லார்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

கடலால் சூழப்பட்ட இலங்கை மக்களின் தலைவ னாகிய இராவணனின் தலைகள் பத்தும் நெரியுமாறு செய்து, கோபத்தோடு கூடிய அவனது ஆண்மையை அழித்தவனாய், எரிபோலும் உருவினன் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கரவீரம் என்று சொல்ல வல்லார்க்கு இடர் இல்லை.

குறிப்புரை :

கரவீரம் என்பார்க்கு இடர் இல்லை என்கின்றது. புனல் இலங்கை - கடல்சூழ்ந்த இலங்கை. சின வல் ஆண்மை - கோபத்தோடு கூடிய வலிய ஆண்மை. செகுத்தவன் - அழித்தவன்.

பண் :

பாடல் எண் : 9

வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திர ளாகிய
கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை
உள்ளத் தான்வினை யோயுமே.

பொழிப்புரை :

நீரில் தோன்றும் தாமரை மலர் மேல் உறையும் நான் முகனோடு திருமாலும் உண்மையைத் தெளியுமாறு ஒளிப்பிழம்பாகத் தோன்றி அவர்கள் அறியாவாறு கள்ளம் செய்தவனாகிய சிவபிரான் உறையும் திருக்கரவீரத்தை நினைந்து போற்ற வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

கரவீரத்தைத் தியானிக்க வினைவலி குன்றும் என் கின்றது. வெள்ளத்தாமரையான் - நீரில் இருக்கும் தாமரையானாகிய பிரமன். வெள்ளத்தாமரை என்றது சாதியடை. பிரமனிருக்கும் தாமரை உந்தித்தாமரையாயினும் தாமரையென்ற பொதுமை நோக்கிக் கூறப்பட்டது. தான்; அசை.

பண் :

பாடல் எண் : 10

செடிய மண்ணொடு சீவரத் தாரவர்
கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்
கடிய வன்னுறை கின்ற கரவீரத்
தடிய வர்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

முடைநாற்றம் வீசும் அமணர்களோடு காவியாடை அணிந்து திரியும் புத்தர்கள் ஆகியோர்தம் கொடிய வெம்மையான உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். அனைத்துலகையும் காத்தருள்கின்றவனாகிய சிவபிரான் உறைகின்ற திருக்கரவீரத்து அடியவர்க்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

கரவீரத்தடியவர்க்கு அல்லல் இல்லை என்கின்றது. செடி - நாற்றம். அமணொடு என்பது அமண்ணொடு என விரித்தல் விகாரம்பெற்றது. சீவரம் - காவியாடை. கொடிய வெவ்வுரை - நெறியல்லா நெறிக்கண் செலுத்தலின் கொடிய வெம்மையான உரையாயிற்று. கடியவன் - காத்தலையுடையவன்.

பண் :

பாடல் எண் : 11

வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்
சேடன் மேற்கசி வாற்றமிழ்
நாடு ஞானசம் பந்தன சொல்லிவை
பாடு வார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

அழிவில்லாதவனாக விளங்கும் திருக்கரவீரத்துப் பெரியோன் மேல் அன்புக்கசிவால் தமிழை விரும்பும் ஞானசம்பந்தன் சொல்லிய இத்திருப்பதிகப் பாடல்களாகிய இவற்றைப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

இது பாடுவார்க்குப் பாவமே இல்லை என்று கீழ்ப்போன திருப்பாடல்களில் தனித்தனியாகக் கூறியவற்றைத் தொகுத்துப் பயனாகக் கூறியது. சேடன் - பெருமையையுடையவன். வீடிலான் - அழிவில்லாதான். கட்டுடையார்க்கே வீடும் உண்டு ஆதலின் இயற்கையிலேயே கட்டிலாத இறைவன் வீடிலாதான் எனப்பட்டான். அழிவில்லாதவன் எனலுமாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கும் மிடங்கருதி நின்றீரெல்லாம் அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணம்
கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங் கெழுமனைக டோறு மறையின்னொலி
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

வெளிப்படுதற்குரிய காலம் வருந்துணையும் ஒடுங்கியிருக்கும் நோய் இனிவரும் பிறப்புகள், துன்பங்கள் ஆகியனவாய இவைகளை உடைய இவ்வாழ்க்கை நீங்கத்தவம் புரிதற்குரிய இடத்தை விரும்பி நிற்கும் நீவிர் எல்லீரும் அகழும் மதிலும் சூழ்ந்து எல்லா இடங்களிலும் உள்ள வீடுகள்தோறும் வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக.

குறிப்புரை :

தவம் செய்யும் இடத்தைத் தேடுகின்ற மக்களே! தூங்கானைமாடம் தொழுமின்கள் என்கின்றது. நின்றீர் எல்லாம் ஆளாம்வண்ணம் தொழுமின்கள் எனக்கூட்டுக. ஒடுங்கும் பிணி - தமக்குரிய பருவம் வருந்துணையும் வெளிப்படாதே ஒடுங்கியிருக்கும் நோய். அடங்கும் இடம் - அடங்கியிருத்தற்குரிய இடம். கிடங்கு - அகழ். சுலாவி - சுற்றி. கெழு மனைகள் - கூடிய வீடுகள். கடந்தை - பெண்ணாகடம். இது தலப்பெயர். தூங்கானை மாடம் என்பது கோயிலின் பெயர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

பிணிநீர சாதல் பிறத்தலிவை பிரியப் பிரியாத பேரின்பத்தோ
டணிநீர மேலுலக மெய்தலுறில் அறிமின் குறைவில்லை யானேறுடை
மணிநீல கண்ட முடையபிரான் மலைமக ளுந்தானு மகிழ்ந்துவாழும்
துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

பிணிகளின் தன்மையினை உடைய சாதல் பிறத்தல் ஆகியன நீங்க, எக்காலத்தும் நீங்காத பேரின்பத்தோடு கூடிய அழகிய தன்மை வாய்ந்த, மேலுலகங்களை நீவிர் அடைய விரும்பினால், விடையேற்றை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனும், நீலமணி போன்ற கண்டத்தினைக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் மலைமகளும் தானுமாய் மகிழ்ந்து வாழும், தெளிந்த நீரை உடைய கடந்தையில் ஒளியோடு கூடிய திருத்தூங்கானைமாடக் கோயிலை அறிந்து தொழுவீராக. உங்கட்கு யாதும் குறைவில்லை.

குறிப்புரை :

பிறப்பிறப்பு நீங்கிப் பேரின்பம் உற எண்ணில் இக் கோயிலைத்தொழுங்கள் என்கின்றது. பிணிநீர் - நோய்த் தன்மையையுடைய. அணிநீர - அழகிய. மணிநீல கண்டம் - அழகிய நீலகண்டத்தையுடைய. பிரான் - வள்ளன்மையுடையவன். துணிநீர் - தெளிந்த நீர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
ஆமா றறியா தலமந்துநீர் அயர்ந்துங் குறைவில்லை யானேறுடைப்
பூமா ணலங்க லிலங்குகொன்றை புனல்பொதிந்த புன்சடையி னானுறையும்
தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

இறக்கும் நாளும், வாழும் நாளும், பிறக்கும் நாளும் ஆகிய இவற்றோடு கூடிய சலிப்பான வாழ்க்கை நீங்கச் செய்யும் தவம் யாதென அறியாது நீவிர் மறந்ததனாலும் யாதும் குறைவில்லை. விடையேற்றை ஊர்தியாகக்கொண்டு மலர்களில் மாட்சிமையுற்று விளங்கும் கொன்றை மாலையும், கங்கையும் தங்கிய சிவந்த சடையினை உடைய சிவபிரான் உறையும் தூய்மையான, மாண்புடைய கடம்பைநகரில் விளங்கும் பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீராக. அது ஒன்றே தவத்தின் பயனைத் தரப்போதுமானதாகும்.

குறிப்புரை :

பிறந்து, வாழ்ந்து, இறந்துவரும் இந்தவாழ்க்கையை ஒழிக்கவிரும்புவீர் இக்கோயிலைத் தொழுங்கள் என்கின்றது. சலிப்பு - ஓய்தல். தவம் ஆமாறு - தவம் சித்திக்கும் வண்ணம். அலமந்து - வருந்தி. தூமாண் கடந்தை - தூய்மையான மாட்சிமைபொருந்திய கடந்தை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
மான்று மனங்கருதி நின்றீரெல்லாம் மனந்திரிந்து மண்ணின் மயங்காதுநீர்
மூன்று மதிலெய்த மூவாச்சிலை முதல்வர்க் கிடம்போலு முகில்தோய்கொடி
தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

நிலையானநோய், பிறப்பு, இறப்பு, துன்பம் இவற்றை உடைய வாழ்க்கை நீங்கவும், நிலையான வீடு பேற்றைப் பெறவும், தவம் செய்ய விரும்பி மயங்கி நிற்கும் நீவிர் எல்லீரும் மனம் வேறுபட்டு உலகில் மயங்காது, திரிபுரங்களை எய்த அழியாத வில்லை ஏந்தியவரும், உலகின் தலைவருமாகிய சிவபிரானது இடமாக விளங்குவதாய், வானளாவிய கொடிகள் தோன்றும் கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.

குறிப்புரை :

இதுவும் அது. பிணியூன்றும் பிறவி - நோய் நிலை பெற்ற பிறப்பு. மான்று - மயங்கி. மூவாச்சிலை - மூப்படையாத வில். முகில் - மேகம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

மயறீர்மை யில்லாத தோற்றம்மிவை மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
வியறீர மேலுலக மெய்தலுறின் மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
உயர்தீர வோங்கிய நாமங்களா லோவாது நாளும் அடிபரவல்செய்
துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

மயக்கம் நீங்காத பிறப்பிறப்புக்கள் அழியும் வழிகள் ஆதலால் அவற்றின் நீங்கி மேலுலகம் எய்த நீவிர் விரும்பினால் பெரிதாய முயற்சி எதுவும் வேண்டா. எளிய வழியாகச் சிவபிரானது இடமாக விளங்குவதும் நம் துயர்களைத் தீர்ப்பதும் ஆகிய கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாகிய திருத்தூங்கானைமாடத்தை அடைந்து அப்பெருமானுடைய மிக உயர்ந்த திருப்பெயர்களைக் கூறி இடைவிடாது அவன் திருவடிகளைத் தொழுவீர்களாக.

குறிப்புரை :

பிறப்பிறப்புக்கள் அழியும் வழிகள்; ஆதலால், அவற்றை நீங்கி மேலுலகம் எய்தலுறின் வேறொன்றும் தேட வேண்டாம்; இறைவன் நாமத்தைச் சொல்லிக்கொண்டு தூங்கானைமாடத்தைத் தொழுங்கள் என்கின்றது. மயல்தீர்மை - மயக்கம் நீங்கும் உபாயம். ஆறு - வழி. வியல்தீர - பலதிறப்படுதல் நீங்க. உயர்தீர ஓங்கிய நாமம் - உயர்ந்த பெயர். ஓவாது - இடைவிடாது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா படர்நோக் கிற்கண் பவளந்நிற
நன்னீர்மை குன்றித் திரைதோலொடு நரைதோன் றுங்கால நமக்காதன்முன்
பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற் புனல்பொதிந்த புன்சடையி னானுறையும்
தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

புலன் நுகர்ச்சிக்குரிய பல தன்மைகளும் குறைந்து காதுகள் கேளாமல் கண்களில், சென்று பற்றும் பார்வைகுன்றிப் பவளம் போன்ற உடல்நிறம் குன்றிச் சுருங்கிய தோலோடு நரை தோன்றும் மூப்புக் காலம் நம்மை வந்து அணுகுமுன் பொன்போன்ற நிறம் பொருந்திய கங்கை தங்கிய செஞ்சடையினையுடைய சிவபிரான் உறையும், பழமையான புகழையுடைய கடம்பை நகர்த்தடங்கோயிலாகிய திருத்தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.

குறிப்புரை :

காது, கண் இவை கெட்டு, தோல் சுருங்கி, நரை தோன்றுவதற்குமுன் தொழுமின் என்கின்றது. பல் நீர்மை குன்றி - புலன் நுகர்ச்சிக்கு ஏற்ற பலதன்மைகளும் குறைந்து. படர்நோக்கின் - படலம் மூடியதால். பவளந்நிற நல்நீர்மை - செவ்வரி பரந்த நல்ல நிலைமை. திரை - திரங்கிய. பொன் நீர்மை துன்ற - பொன்போன்ற தன்மை பொருந்த; புறந்தோன்றும் - உருத்தாங்கிக் காட்சியளிக்கும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

இறையூண் டுகளோ டிடுக்கணெய்தி யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லா நீள்கழ லேநாளு நினைமின்சென்னிப்
பிறைசூ ழலங்க லிலங்குகொன்றை பிணையும் பெருமான் பிரியாதநீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

குறைந்த உணவோடு பல்வகைத் துன்பங்களையும் எய்தி வருந்தும் இழிந்த வாழ்க்கை நீங்க, தவமாகிய நிறைந்த உணவைப் பெறும் வழியாதென மயங்கி நிற்கும் நீவிர் அனைவீரும், முடியில் பிறை சூடியவரும், கொன்றை மாலை அணிந்தவரும் ஆகிய பெருமான் பிரியாது உறைவதாய், நீர்த்துறைகள் சூழ்ந்த கடந்தை நகரிலுள்ள தடங்கோயிலாகிய தூங்கானைமாடத்தை நாளும் நினைந்து தொழுவீர்களாக.

குறிப்புரை :

புல்லிய உணவுகொண்டு வருந்தும் இழிந்த வாழ்வு ஒழியத் தவமாகிய பேருண்டியை விரும்பியிருக்கின்றவர்களே! இக்கோயிலைத் தொழுமின் என்கின்றது. இறையூண் - சிற்றுணவு. துகள் - தூளி. இடுக்கண் - துன்பம். தவம் நிறையூண் நெறி - தவமாகிய நிறைந்த உணவைப்பெறுமார்க்கம். அலங்கல் - மாலை. பிணையும் - விரும்பும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லா மிறையே பிரியா தெழுந்துபோதும்
கல்சூ ழரக்கன் கதறச்செய்தான் காதலியுந் தானுங் கருதிவாழும்
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

பல்வீழ்ந்து பேச்சுத் தளர்ந்து, உடல் வாடிப் பலராலும் பழிக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் இடம் யாதெனக்கருதி நிற்கும் நீவிர் அனைவீரும் சிறிதும் காலம் தாழ்த்தாது எழுந்துவருவீர்களாக. கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைக் கதறுமாறு அடர்த்த சிவபிரான் மலைமகளும் தானுமாய்க் கருதி வாழும் பழமையான புகழையுடைய கடம்பை நகரில் உள்ள பெருங்கோயிலாகிய தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.

குறிப்புரை :

பல்வீழ்ந்து நாத்தளர்ந்து பழிப்பாய வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் இடம் தேடுபவர்களே! விரைந்து வாருங்கள்; இக்கோயிலைத் தொழுங்கள் என்கிறது. பழிப்பாய வாழ்க்கை - காளையரான காலத்துக் காமுற்றாரும் இந்நிலையைக் கண்டு ஏளனம் செய்யும் கிழப்பருவத்தது. இறையே - சிறிதும். போதும் - வாருங்கள். கல் - கயிலை. அரக்கன் - இராவணன்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

நோயும் பிணியு மருந்துயரமு நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
வாயு மனங்கருதி நின்றீ ரெல்லா மலர்மிசைய நான்முகனு மண்ணும்விண்ணும்
தாய வடியளந்தான் காணமாட்டாத் தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

உடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காணமாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானைமாடப் பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.

குறிப்புரை :

இதுவும் அது. நோய் - உடலைப்பற்றியனவாகி வாதபித்த சிலேட்டுமத்தால் விளைவன. பிணி - மனத்தைப் பிணித்து நிற்கும் கவலைகள். அருந்துயரம் - அவற்றால் விளையும் துன்பங்கள். வாயும் - பொருந்தும். தாய - தாவிய.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

பகடூர் பசிநலிய நோய்வருதலாற் பழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும் மூடுதுவ ராடையரு நாடிச்சொன்ன
திகடீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்திழையுந் தானும் பொருந்திவாழும்
துகடீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.

பொழிப்புரை :

பெரும்பசி நலிய, நோய்கள் வருத்துவதால், பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்பும் நீவிர் தலையை முண்டிதமாக்கித் திரிபவரும், உடலைத் துவராடையால் போர்த்தவரும் ஆகிய சமண புத்தர்களின் ஞானம் நீங்கிய பொய் மொழிகளைத் தெளியாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் குற்றமற்ற கடந்தை நகர்த் தடங்கோயிலாகிய திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.

குறிப்புரை :

பிறப்பறுக்கப் புறச்சமயத்தார் பொய்ம்மொழிகளைத் தேறவேண்டா: தூங்கானைமாடம் தொழுமின்கள் என்கின்றது. பகடு ஊர் பசி - யானைப்பசி. முகடு - தலையுச்சி, திகழ் தீர்ந்த - விளக்கம் ஒழிந்த. துகள் - குற்றம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

மண்ணார் முழவதிரு மாடவீதி வயற்காழி ஞானசம் பந்தனல்ல
பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்
விண்ணோ ருலகத்து மேவிவாழும் விதியதுவே யாகும் வினைமாயுமே.

பொழிப்புரை :

மார்ச்சனையோடு கூடிய முழவு ஒலி செய்யும் மாட வீதிகளைக் கொண்டுள்ள வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தர் பெண்ணாகடத்தில் பெருங்கோயிலாக விளங்கும் வானளாவிய திருத்தூங்கானைமாடத்து இறைவன் திருவடிகளைப் பரவிப் பாடிய பாடல்கள் பத்தையும் கற்றவரும், கேட்டவரும் விண்ணவர் உலகத்தை மேவி வாழ அப்பாடல்களே தவப்பயன்தரும்; வினைகள் மாயும்.

குறிப்புரை :

சுடர்க்கொழுந்துநாதன் கழலைப்பரவும் பாடல் பத்தும் கருத்துணரக் கற்றாரும் கேட்டாரும் தேவராய் வாழ்வர்; வினைகள் மாயும் எனப் பயன் கூறுகின்றது. மண் - மார்ச்சனை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க விசைபாடு மளியரசே யொளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்னிலைமை பரிந்தொருகாற் பகராயே.

பொழிப்புரை :

வளமையான அலைகளோடு கூடிய நீர் நிலைகளில், மலர்ந்த தாமரை மலர்களின் விளைந்ததேனை வயிறார உண்டு, தன் பெண் வண்டோடு களித்து, சிறந்த அலைபோல மேலும் கீழுமாய் அசையும் நடையில் இசைபாடும் அரச வண்டே! என் மேல் பரிவு கொண்டு, ஒளிபொருந்திய இளம்பிறையை முடியிற் சூடியவரும், எலும்பு மாலைகளை அணிகலனாகப் பூண்ட மார்பினருமாகிய, திருத்தோணிபுரத்தில் பண்டரங்கக் கூத்து ஆடும் பரமரைக் கண்டு, அவரிடம் எனது பிரிவாற்றாத நிலையை ஒரு முறையேனும் பகர்வாயாக.

குறிப்புரை :

பிரிவாற்றாமையால் பேதுறுகின்ற தலைவி, தன் நிலை மையை உணர்த்த வண்டைத் தூதாக அனுப்பக்கருதி, அதனைப் பார்த்து வேண்டுகின்றாள். வண் தரங்கம் - வளப்பமான அலை. தரங்க இசை - அலைபோல் அசைகின்ற இசையின் ஆலத்தி. அளி - வண்டு. மதியத்துண்டர் - பிறைத்துண்டை அணிந்தவர். அங்கப் பூண் - எலும்பாகிய ஆபரணம். பண்டரங்கன் - பண்டரங்கக் கூத்தை ஆடுபவன். பதினொருவகைக் கூத்தினுள் சிவபெருமான் திரிபுரத்தையழித்தபோது வெண்ணீறணிந்து ஆடியகூத்து, தான் ஏவுந்தொழிலுக்கு உடந்தையாய் இருக்க அளி அரசே எனச் சிறப்பித்து அழைத்தாள். பெடையினொடும் இசைபாடும் அளி என்றதனால், பிரிவுத்துன்பம் அறியாமையால், அழைத்து உணர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதிலும் மது மாந்தி மயங்கியவர்களுக்கு, காதல் வாழ்க்கையில் களித்து இருப்பவர்களுக்கு உணர்த்தினாலல்லது தானே உணரும் ஆற்றல் இல்லை என்பதையும் அறிவித்தவாறு. பெடையோடு இருக்கும் அளியை மூன்றாமவளாகிய தான் பார்த்தமையால் உடன் உறைவு இனிக் கூடாது; என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமையையும் குறிப்பித்தாள். இசைபாடும் அளியாதலின், தோணிபுரநாதரை உன் இசை முதலில் வசப்படுத்த, என்னிலைமையை எடுத்தியம்ப உனக்கு இனியவாய்ப்புக் கிட்டுமென்று உணர்த்தினாள். காதலனோடு களித்திருக்கும் பெடைவண்டு பெண்கள்படும் பிரிவுத்துன்பத்தை நன்கு முன்னர் அறியுமாயினும், அதனைத் தனித்து மற்றொரு தலைவனிடத்து அனுப்புதல் மரபு அன்றாகலின் அளி அரசே என ஆண்வண்டை விளித்தாள். நீ செல்லினும் என்னிலைமை உணர்த்தக் கூடிய அளவிற்கு அவகாசம் இராதென்பாள் பண்டரங்கற்கு என்றாள். கூத்தில் ஈடுபட்டவர்க்குக் கேட்பதற்கு அவகாசம் ஏது? இத்தனை நயங்கள் இப்பாடலில் பொதிந்து ஆன்மாவின் பெண்மைத்தன்மையை மிகுதிப்படுத்தி, இறைவனாகிய தலைவனின் இன்றியமையாமையை உணர்ந்து இடையறாப் பேரன்பாகிற வண்டைத் தூதனுப்புகின்ற நிலை மிக அறிந்து இன்புறுதற்கு உரியது. அளி என்பது அன்பிற்கும் ஒரு பெயராதல் காண்க.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

எறிசுறவங் கழிக்கான லிளங்குருகே யென்பயலை
அறிவுறா தொழிவதுவு மருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.

பொழிப்புரை :

எதிர்ப்பட்டனவற்றைக் கொல்லும் இயல்பினவாகிய சுறா மீன்கள் நிறைந்த உப்பங்கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் வாழும் இளங்குருகே! என்னுடைய பசலைத் துன்பத்தை நீ அறியாமல் இருப்பதும் நீக்குதற்கரிய என் வினைப்பயன் அன்றோ? அந்தணச் சிறுவர்கள் பலர் கூடி, பத மந்திரங்களை ஓதிப்பயிலும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியவரும் முடிமீது மணமும் நிறமும் பொருந்திய மலர்க்கண்ணி சூடியவருமான சிவபிரானாருக்கு என் நிலைமையைக் கூறுவாயாக.

குறிப்புரை :

ண்டின் இன்னிசை அங்கு ஓதப்படும் வேத ஒலியில் இறைவன் காதில் வீழாது என்பதை உணர்ந்த தலைவி, தாரை போல் பெருங்குரல் இடும் குருகைத் தூதனுப்ப எண்ணி, என்னுடைய பசலைத் துன்பத்தை நீ அறியாமல் இருப்பதும் என் வினைப்பயன் தான்; ஆயினும் அவர்க்கு நீ சொல்லு என்று தூதனுப்புகின்றாள். சுறவம் - சுறாமீன். கழி - உப்பங்கழி. கானல் - கடற்கரைச் சோலை. குருகு - நாரை. பயலை - பிரிந்த மகளிர்க்கு உண்டாகும் ஒரு நோய். செறிசிறார் - நெருங்கிய சிறுவர்கள். பதம் - பதமந்திரங்கள். வெறி நிற ஆர் மலர் - மணமும் நிறமும் பொருந்திய மலர். நீ இளங்குருகாயிருந்தும் என் நோய் அறியாதது என் வினைப்பயன் என்றாள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே கடுவினையே னுறுபயலை
செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்
பண்பனுக்கென் பரிசுரைத்தாற் பழியாமோ மொழியாயே.

பொழிப்புரை :

பண்படுத்தப்பட்ட வயல்களின் கரைகளில் முளைத்த சம்பங்கோரைகளின் இடையே வாட்டமின்றி மகிழ்வோடு வாழும் சிவந்த உச்சிக் கொண்டையை உடைய கோழியே! சண்பக மரங்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய இனிய இயல்பினன் ஆகிய இறைவனிடம் மிக்க வினைகளின் பயனாய் அவனைப் பிரிந்து மிகுதியான பசலையால் வருந்தி வாழும் என் நிலைமையை உரைத்தால் உனக்குப் பழி விளையுமோ? மொழிவாயாக.

குறிப்புரை :

இளங்குருகும் இவள் துன்பத்தை அறியாதாகவே, கோழியை விளித்துக் கூறுகிறாள். நற்பண்புடைய நாயகனுக்கு என் தன்மை உரைத்தால் உனக்குப் பழியாவந்துவிடும் என வேண்டுகிறாள். பழனம் - வயல், கோடு - கரை. சூட்டு - உச்சிக் கொண்டை. கண்பு அகத்தின் - சம்பங்கோரையின் நடுவில்.` செருந்தியொடு கண்பு அமர்ந்து ஊர்தார் `( மதுரைக் 122 ) என்பதிலும் இப்பொருளதாதல் காண்க. தன் துன்பங்கண்டும் தான் தூதுபோகாமல் இருப்பது வருத்த மறியாமையால் என்று எண்ணிய தலைவிவாட்டமில்லா வாரணமே என்கின்றாள். சம்பங்கோரையின் நடுவில் வாழ்வதால் உனக்கு வருத்தந் தெரியாது; ஆனாலும் நீ ஒரு சேவலாதலின் எம்போலியர் வேண்டுகோளை மொழியத்தான் வேண்டும் என்று வற்புறுத்துகிறாள். அதற்குள், நான்போய்ச் சொல்லுகிறேன் அவர் கேட்பாரோ என்ற ஐயம் வாரணத்திற்கும் உண்டாவதாக எண்ணி, தன் தலைவன் பண்பன் என்று அறிவிக்கின்றாள். அதிலும் சிறப்பாக அவனியல்பு அவன் ஊருக்கும், ஊர் இயல்பு அவனுக்கும் உண்டாகையாலே செண்பகஞ் சேர் பொழில்சூழ் தோணிபுரம் என்ற குறிப்பால், வண்டுமொய்க்காத மலராகிய செண்பகம் சேர்ந்திருப்பதால் வண்டுகள் செல்ல அஞ்சுகின்றன; நீ கோரையின் நடுவில் வாழ்வதால் தோணி அணுகும்போது செல்லும் வாய்ப்பிருக்கிறது என்று எண்ணித்தான் உன்னை அனுப்புகின்றேன் என்கின்றாள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்
பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்
சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும்
ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய வுணர்த்தாயே.

பொழிப்புரை :

உப்பங்கழியில் வாழும் அழகுமிக்க சிவந்த கால்களை உடைய நாரையே! `காதல் மிக்கூர்தலால் அணிகலன் களைப் பொருந்திய அழகிய தனங்கள் மெலிந்து பசலை நோய் பூக்கப்பெற்று உன் அடியவள் வருந்துகிறாள்` என்று வானோங்கி வளர்ந்துள்ள அழகிய மாடவீடுகளைக் கொண்டுள்ள திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஆண்மக்களில் சிறந்தவராய் விளங்கும் சிவபிரானை இன்றே சென்று அடைந்து என் மெலிவுக்குரிய காரணத்தை அவர் அறியுமாறு உணர்த்துவாயாக.

குறிப்புரை :

கோழியும் பயன்படாதொழிய, நாரையைப் பார்த்து வேண்டுகிறாள். நாராய்! தோள்மெலிந்து மேனி பசந்தாள் என்று இன்றே சென்று உணர்த்து என்கின்றனள். காண்தகைய - அழகுமிக்க. பூண்தகைய - அணிகளால் அழகுபெற்ற. பொன்பயந்தாள் - பயலை பெற்றாள். சேண் - ஆகாயம். அவர் ஆண்டகையாய் இருப்பதால் அவரால் பூணத்தக்க தளராத முலையும் தளர்ந்து, மெலிந்து, மேனி பசந்தது என்று உணர்த்தினால், உடனேவந்து தலையளிசெய்வர் என்று இன்றே சென்று தூதுசொல்லவேண்டிய இன்றியமையாமையை விளக் குகிறாள். நீ சென்றால் பிறர்கண்ணில் படாமல் தங்கி, என்தூதை இரகசியமாய்ச் சொல்லுதற்கேற்ற அவகாசம் கிட்டும்வரைத் தங்குவதற்கு மணிமாடங்கள் இருக்கின்றன; அவரோ திருத்தோணிமலைச் சிகரத்தில் இருக்கிறார் என்று செவ்வி அறிதல் எளிமையும் செப்புகிறாள். இதில் நுகர்ச்சிக்குரிய முலை மெலிந்தால் இனி அவருக்குப் பயன்படுமாறு யாங்ஙனம் என்பதனையும் உணரவைத்தாள். அடி - காரணம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

பாராரே யெனையொருகாற் றொழுகின்றேன் பாங்கமைந்த
காராருஞ் செழுநிறத்துப் பவளக்காற் கபோதகங்காள்
தேராரு நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்
நீராருஞ் சடையாருக் கென்னிலைமை நிகழ்த்தீரே.

பொழிப்புரை :

அழகியதாய் அமைந்துள்ள கருமை நிறைந்த செழு மையான நிறத்தினையும் பவளம் போன்ற கால்களையும் உடைய புறாக்களே! உம்மைத் தொழுகின்றேன். வண்டு முதலியவற்றிடம் என் நிலைமை கூறியும் அவை என்னை ஒருமுறையேனும் பாராவாயின. நீவிர் தேரோடும் அகலமான வீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடையினை உடைய சிவபிரானிடம் சென்று என் பிரிவாற்றாத நிலையைக் கூறுவீர்களாக.

குறிப்புரை :

இங்ஙனம் நாரை முதலானவற்றை இவள் வேண்ட, அவை இவளைத் திரும்பியும் பாராமல் ஒழிய, இன்னது செய்வது என்று தோன்றாத நிலையில், மாடப்புறாக்களை அழைத்துக் கூறுகிறாள். கபோதகங்காள்! உங்களைத் தொழுகின்றேன்; என் தலைவருக்கு என் நிலையை உணர்த்துங்கள் என்கின்றாள். எனை ஒருகால் பாராரே - யான் அழைத்த அளி குருகு முதலியவர்கள் என்னை ஒருமுறையும் பாராரே. அளி முதலியவற்றைப் பாரார் என உயர்திணையாற் கூறியது, பிரிவால் விளைந்த பேதைமையால் ஆகும். பாங்கு - பக்கத்தில். கார் ஆரும் - கருமைநிறைந்த. கபோதகம் - மாடப்புறா. நீர் - கங்கை. கபோதகங்காள் எனப் பன்மைவாய்பாட்டால் அழைத்தது புறாக்கள் என்றும் இணைபிரியாமல் இருத்தலின். அன்றி, இணைந்து வாழுகின்ற இவைகளும் என் வேண்டுகோளிற்காகப் பிரிந்து, யான் அடையும் துன்பத்தை இவைகள் எய்தல் ஆகாது என்ற இரக்கத்தாலும்ஆம். தலைவனை `நீர் ஆரும்சடையார்` என்றதுகங்கையாகிய ஒருத்தி எஞ் ஞான்றும் உடன் உறைவதால் அவருக்குப் பிரிவுத் துன்பம் தெரியாது; நிழலில் இருப்பவனுக்கு வெயிலின் கொடுமை தெரியாதவாறுபோல, என்னிலையைக் கண்டநீங்களே சொல்லும்வன்மையால் அவரைச் செவிமடுக்கச் செய்யவேண்டும் என்று குறிப்பித்தவாறு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச
வீற்றிருந்த வன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்
தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் றுளங்காத
கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே.

பொழிப்புரை :

வளமான சேற்றிடை முளைத்து மலர்ந்த தாமரை மலர்மேல் நெற்பயிர்கள் தம் கதிர்களையே சாமரையாக வீச, அரச போகத்தில் வீற்றிருக்கும் அன்னங்களே! விண்ணுலகம் மண்ணுலகம் ஆகியவற்றையும் நான்கு வேதங்களையும் தோற்றுவித்த திருத்தோணிபுரத்தில் உறையும் சிவபிரானாருடைய யாராலும் அசைத்தற்கு இயலாத இயமனை உதைத்தழித்த திருவடிகளை யாம் அடையும் வழிகளைக் கூறுவீர்களாக.

குறிப்புரை :

புறாக்களும் இன்பத்தில் மூழ்கி அசையாதிருக்க, தாமரை ஆசனத்தில் இருபுறமும் செந்நெற்கதிர்களாகிய சாமரைவீச அரசபோகத்தில் இருக்கும் அன்னங்கள் இவள் கண்ணில்பட்டன. இரங்கும் பெருந்தன்மை அற்ற அவைகள் கிடக்கட்டும்; இந்த அரச அன்னமாவது என் குறையை நிறைவேற்றும் என்று எண்ணி அதனை அழைத்தாள். தனக்குப் பிரிவே பெருங்காலனாக இருந்து உயிர்கொள்வதை உணர்த்தினாள். காலகாலன் திருவடியைக் கூடினால் கலக்கமில்லை என்று தெரிவித்துக்கொள்கின்றாள். விண்ணும் மண்ணும் தோற்று வித்தல் - பொருட் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தல். மறையைத் தோற்றுவித்தல் - சொற்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தல்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

முன்றில்வாய் மடற்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை
அன்றில்காள் பிரிவுறுநோ யறியாதீர் மிகவல்லீர்
தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங்
கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே.

பொழிப்புரை :

வீடுகளின் வாயிற்பகுதியில் மடல்களை உடைய பனைமரங்களில் கட்டிய கூடுகளில் வாழ்ந்து தம் பெடைகளைத் தழுவும் சிறகுகளோடு கூடிய அன்றிற் பறவைகளே! நீவிர் பிரிவுத்துன்பத்தை அறியமாட்டீர் ஆயினும் நேசிப்பதில் மிக வல்லவர்களாயுள்ளீர்கள். தென்றல் காற்று தவழ்ந்து வரும் திருவீதிகளை உடைய திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய கொன்றை மாலை அணிந்த சடை முடியினை உடைய சிவபிரானுக்கு என்பால் மிகுந்துள்ள பசலை நோயின் இயல்பை எடுத்துரைப்பீர்களாக.

குறிப்புரை :

அன்னங்களாலும் பயன்பெறாது மயங்கிய தலைவி, பனை மடலில் வாழும் அன்றிலைப் பார்த்துக்கூறுகிறாள். அவள் பார்த்த காலம் பகல் ஆதலின் அன்றில்கள் கூடிக்குலாவிக் கொண்டிருந்தன. ஆதலால் அவற்றை அழைக்கின்ற அவள் உங்களுக்குப் பிரிவுத்துன்பமே தெரியாது; ஆனாலும் மிக வல்லவர்கள்; என் பயலை நோயைக் கூறுங்கள் என்கின்றாள். மேலும் `தென்றலார் புகுந்துலவு` என இளவேனிற்காலம் வந்தமைகாரணத்தால் தான்படும் துன்பத்தை மிகுத்துக் காட்டுகின்றாள். `கொன்றைவார் சடையார்க்கு` என்ற குறிப்பால் என்நோயைக் கூறுகின்ற நீங்கள், அவர்சடைக்கண்ணதாகிய கொன்றை மாலையைப் பெற்றுக் கொண்டு வந்து கொடுத்தால், அது பெற்றாயினும் உய்வேன் என்று, உபாயம் அறிவித்தாள். முன்றில் - வாயில். மடற் பெண்ணை - மட்டைகளோடு கூடியபனை. குரம்பை - கூடு. முயங்கு சிறை - தழுவியிருக்கின்ற சிறகுகள். கூர் பயலை - மிக்க பசலைநோய்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி
ஏனோர்க்கு மினிதாக மொழியுமெழி லிளங்குயிலே
தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்
கோனாரை யென்னிடைக்கே வரவொருகாற் கூவாயே.

பொழிப்புரை :

பால்மணம் கமழும் மலர்களைக் கொண்ட மாமரத்தின் தளிர்களைக் கோதி உண்டு, எல்லோர்க்கும் இனிதாகக் கூவும் அழகிய இளமையான குயிலே! தேன் நிறைந்த பொழில்கள் புடைசூழ்ந்து விளங்கும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய தேவர் தலைவனாகிய சிவபிரான் என்னிடம் வருமாறு ஒருமுறையேனும் கூவுவாயாக.

குறிப்புரை :

பிரிவுநோய் அறியாமையினாலே அன்னங்களும் பேசாமல் இருக்க, குரல் நயம் இன்மையால் அவரும் கேளார் என்ற எண்ணத்தால், அவரை மீட்டும் வற்புறுத்தாது குயிலைப் பார்த்துத் தலைவன்வரக் கூவாய்! என வேண்டுகின்றாள். குயில் மாந்தளிரை உண்டு மிக இனிமையாகக்கூவும் தன்மையது என்று குறிக்கின்றாள். அது அங்குச் சென்று கூவினாலே போதும் அவர் மனம் மாறும் என்று எதிர்நோக்கினளாக, அளிமுதலியவற்றைப் பார்த்துப் பகராய், விளம்பாய் என வேண்டிய அவள், இதனைக் கூவாய் என்று மட்டும் வேண்டுகிறாள். தோணிபுரத்தைப் பொழில்சூழ் தோணிபுரம் என்றது தூது போகின்ற குயிலுக்குத் தங்குமிடம் வசதியாய் உள்ளது என்பதை அறிவிக்க. என் இடைக்கே என்பதில், ஏகாரம் வந்தால் பிரியவிடாது காப்பாற்றும் பொறுப்பும் உன்னுடையதே என்று குறிப்பித்து நிற்கின்றது. சூதப் பல்லவம் - மாந்தளிர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

நற்பதங்கண் மிகவறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாயலகிற் பூவைநல்லாய் போற்றுகின்றேன்
சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்
விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே.

பொழிப்புரை :

அழகமைந்த வாயாகியஅலகினை உடைய நாகண வாய்ப் பறவையே! நான் உன்னைத் துதித்துப் போற்றுகிறேன். தலைவனிடம் முறையிடுதற்குரிய செவ்விகளை நீ மிகவும் நன்கறிவாய் ஆதலால், இம்முறையீட்டை உன்பால் தெரிவிக்கிறேன். சொற்களால் அமைந்த பதம் என்னும் இசையமைப்புடைய வேதங்களில்வல்ல மறையவர் வாழும் திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய வில்லாற் பொலியும் தோளை உடைய விகிர்தனுக்கு என் உடலில் தோன்றிய பசலை நோயை உரைப்பாயாக.

குறிப்புரை :

குயிலும் வேனிற்காலத்தன்றி, பொழிலிடைத் தலைவர் வரினன்றித் தூதுசெல்லும் தரத்தன அல்ல என்பதை உட்கொண்ட தலைவி, நாகணவாய்ப்புள்ளை வேண்டுகின்றாள். நற்பதங்கள் மிக அறிவாய் - நல்ல சந்தர்ப்பத்தை நன்றாக அறிவாய். பொற்பு - அழகு. சொற்பதம் - சொல்லப்படுகின்ற பதம் என்னும் ஓதும்முறை. தலைவன் தோளும் சாமர்த்தியமுமே தம்மை வசீகரித்தன என்பாள், `தோள் விகிர்தனுக்கு` என்றாள். தன்னுடைய உள்ளக் காதலை, மெய்ப்பயலை பலர் அறியப் பரப்புதலின், அதனை நீக்கவேண்டியதன் இன்றியமையாமையை எடுத்து இயம்புக என்று குறிப்பித்தாள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால்
முறையாலே யுணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந்
துறையாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.

பொழிப்புரை :

அழகிய சிறகுகளை உடைய இளங்கிளியே! என் பால் வருவாயாக. நான் உனக்குத் தேனையும் பாலையும் மாறி மாறி உண்ணத்தருவேன். நீ செறிந்த பவளங்களையும் முத்துக்களையும் கரைகளில் சேர்ப்பிக்கும் கடல் அருகில் உள்ள திருத்தோணிபுரத்தில் உறையும் இளம்பிறை சூடிய பெருமானின் திருநாமத்தை `ஒரு முறை` என் செவி குளிரப் பேசுவாயாக.

குறிப்புரை :

இங்ஙனம் சேய்மையிலும் அண்மையிலும் இருக்கின்ற பொருள்களை வேண்டிக்கொள்ள, அவை பயன்படாதொழியவே, தான்வளர்த்த கிளியையே நோக்கி,` ஒருகால் அவர் பெயரைச் சொல்` என்று வேண்டுகின்றாள். இதுவரை தூதுவேண்டிய அவள் இப்போது கிளியிடம் பெயரை வேண்டுவது, கிளி சென்று தூதுரைத்துத் தலைவரை உடன்படுத்தி அழைத்துவரும் வரையில் பிரிவுத்துன்பம் பொறுக்கமுடியாத அளவு பெரிதாம் என்பதை எண்ணி, தலைவனுடைய பெயரைக் கேட்கின்ற அளவிலாவது துன்பந் தோன்றாது என்ற குறிப்பினளாக இங்ஙனம் வேண்டுகின்றாள். அங்ஙனம் சொல்வதற்குக் கைக்கூலியும் தருவதாக தேனொடுபால் முறையாக உண்ணத் தருவேன் என்கின்றாள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங்
கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத்
தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்த னுரைசெய்த
சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.

பொழிப்புரை :

தூற்றாப் பொலிகளை மிகுதியாகக் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருத்தோணிபுரத்தில் எழுந்தருளிய முறுக்கேறிய சடையினையும் கருமை நிறைந்த விடக்கறை பொருந்திய கழுத்தையும் உடைய சிவபிரானை, வளமையான தாமரை மலர் மாலையைச் சூடிய மலை போன்ற மார்பினனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த புகழ் பொருந்திய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதி நினையவல்லவர் சிவலோகம் சேர்வர்.

குறிப்புரை :

கழுமலநாதனைப்பற்றிச் சம்பந்தர் அருளிச்செய்த சிறப்பமைந்த இத்தமிழ்வல்லவர்கள் சிவலோகம் சார்வர் எனத் திருக்கடைக்காப்பு அருளுகின்றது. போர் - வைக்கோற்போர். கார் - கருமை. கமலத்தார் மிகுத்த வரை மார்பன் - தாமரை மலர் மாலையணிந்த மார்பையுடையவன். அந்தணர்க்கு அடையாள மாலை தாமரையாதலின் இங்ஙனம் கூறினார். பதிகங்கள்தோறும் கூறப்பெறும் இராவணனை அடர்த்த வரலாறு, புத்தர் சமணர்களைப் பற்றிய குறிப்பு இவைகள் இத்திருப்பதிகத்து இல்லாமை ஊன்றி இன்புறுதற் குரியது. சன்மார்க்க நெறியில் தலைவனும் தலைவியுமாக இறைவனும் ஆன்மாவும் ஈடுபடுகிறபோது காதல்வெள்ளத்து ஆழங்காற்படுகின்ற போது, இறைவனுடைய இன்றியமையாத் தன்மை உள்ளத்தைக் கவர்ந்துநின்றபோது இன்ப உணர்ச்சியன்றி வேறு எதுவும் தோன்றாது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்
சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்
கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

அடியவர்கள் நாள்தோறும் விதிப்படி தேன் பொருந்திய நாண்மலர்களைத் தூவி மணம்கமழச் செய்வித்துத் தவறாமல் நின்று பணிசெய்துவழிபட, விடக்கறை பொருந்திய கண்டத்தினனாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயில், சிறகுகளை உடைய வண்டினங்கள் ஒலிக்கும் திருச்செங்காட்டங் குடியில் விளங்கும் கணபதீச்சரமாகும்.

குறிப்புரை :

அடியார் மணந்தரும் பூக்களைத் தூவிவழிபட இறைவன் கணபதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்றான் என்கின்றது. நறை - தேன். விரை - மணம். முறைகொண்டு - விதிப்படி. முட்டாமே - இடைவிடாமல். சிறை - சிறகு. அறையும் - ஒலிக்கும். கறை - விடம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப
ஊரேற்ற செல்வத்தோ டோங்கியசீர் விழவோவாச்
சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்
காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

கார்காலத்தே மலரும் கொன்றை மலரை அணிந்த சிவபிரான், வாரால் இழுத்துக் கட்டப்பட்ட பறைகளின் ஒலியும், சங்குகளின் ஒலியும் வந்திசைக்க ஊர் முழுதும் நிறைந்த செல்வ வளங்களோடு பரவிய புகழை உடைய திருவிழாக்கள் இடைவிடாது நிகழும் திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

பலவகை வாச்சிய ஒலிகள் நீங்காததும் விழவறாதது மாகிய செங்காட்டங்குடிக் கணபதீச்சரத்தான் என்கின்றது. வார் ஏற்ற பறை - வாரால் இழுத்துக் கட்டப்பெற்ற பறை. சீர் ஏற்றம் - புகழின் மிகுதி. கார் - கார்காலம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்
கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்
சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைச்சேரும்
கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், வரந்தை, சோபுரம் ஆகிய தலங்களில் எழுந்தருளியிருப்பவன். வேதாகமங்களை அருளிச்செய்தவன். கோவணம் அணிந்தவன். காலிற் கிண்கிணி அணிந்தவன். கையில் உடுக்கை ஒன்றை ஏந்தியவன். சிவந்த சடைமுடிமீது கரந்தை சூடியவன். திருவெண்ணீறு அணிந்தவன். அப்பெருமான் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

வரந்தை முதலியபதிகளில் இருப்பவனும், உடுக்கை, கோவணம், கிண்கிணி, கபாலம் இவற்றையுடையவனும் கணபதீச்சரத்தான் என்கின்றது. வரந்தை, கிரந்தை, சோபுரம், என்பன ஊர்ப் பெயர்கள். மந்திரம் - வேதம். தந்திரம் - ஆகமம். கையது ஓர் சிரந்தையான் - கையின் கண்ணதாக ஓர் உடுக்கையை உடையான். சிரந்தை - உடுக்கை.( பெருந்தொகை - 54.) கரந்தை - சிவகரந்தை என்ற மணமுள்ள பூண்டு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

தொங்கலுங் கமழ்சாந்து மகிற்புகையுந் தொண்டர்கொண்
டங்கையாற் றொழுதேத்த வருச்சனைக்கன் றருள்செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

மணம் கமழும் மாலைகளும் சந்தனமும், அகில் புகையும் கொண்டு தொண்டர்கள் தம் அழகிய கைகளால் தொழுது போற்றி வணங்கி அருச்சிக்க அவர்கட்கு உடனே அருள்செய்த பெருமானும் கங்கை தங்கிய நீண்ட சடைமுடியை உடையவனுமாகிய சிவ பிரான், சிவந்த கயல் மீன்கள் பாயும் வளமான வயல்கள் புறமாகச் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

தொண்டர் அருச்சனைக் கருள்செய்தான் கணபதீச்சரத் தான் என்கின்றது. தொங்கல் - மாலை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி
நூலினான் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்
சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்
காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

தனது இடத்திருவடியால் இயமனை உதைத்தருளிய இறைவன், அடியவர்கள் ஆகம விதிப்படி பாலினாலும் மணம் கமழும் நெய்யாலும், பழவர்க்கங்களாலும் விரும்பி அபிடேகித்து மணமாலைகளைக் கொண்டு வந்து சூட்டி அன்போடு வழிபடுமாறு சேல்மீன்கள் நிறைந்த வளமான வயல்கள் புடைசூழ்ந்துள்ள திருச் செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

அடியார் பாலும் நெய்யுங்கொண்டு அபிடேகித்து மணமாலைகொண்டு வழிபடக் கூற்றுதைத்தான் இவ்வூரான் என்கின்றது. பயின்று - பலகாலும் பழகி. நூலினான் - வேதவிதிப்படி. புரிந்து - விரும்பி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

நுண்ணியான் மிகப்பெரியான் நோவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் நுண்ணியனயாவற்றினும் மிகநுண்ணியன். பருமையானபொருள்கள் யாவற்றிலும் மிகப்பருமையானவன். நோய் முதலியவற்றால் வருந்துவோர் தம் வாயினால் துதிக்கப் பெறுபவன். தண்மையானவன். புறச்சமயிகட்கு வெய்யவன். நமது முடிமீதும் மனத்தின் கண்ணும் உறைபவன். உறுதியானவன். தனது சிவந்த சடைமீது பிறைமதிக் கண்ணியைச் சூடியவன். நெற்றியில் கண்ணுடையவன்.

குறிப்புரை :

நுண்மைக்கு நுண்ணியனாகவும், பருமைக்குப் பரிய னாகவும், வருந்துவார் வாயுளானாகவும், தண்ணியனாகவும் வெம்மையனாகவும், மேலும் அகத்தும் இருப்பவனாகவும் விளங்குங்கண்ணுதலான் கணபதீச்சரத்தான் என்கின்றது. `நுண்ணியான் மிகப் பெரியான்` என்றதும்,(அணோரணீயாந் மஹதோ மஹீயாந்) என்னும் உபநிடதக் கருத்தும் ஒத்தமை காண்க. தன்னடியடைந்த அடியார்கட்குத் தண்ணியான், புறச்சமயத்தார்க்குவெய்யான், கிரியாவான்களுக்குச் சகத்திரதளபத்மத்தின் மேலதாகத் தலைமேலான், ஞானி கட்கு மனத்துளான் என்க. கண்ணி - தலையில் சூடப்படும் மாலை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்
மெய்யினான் பையரவ மரைக்கசைத்தான் மீன்பிறழச்
செய்யினா ரகன்கழனிச் செங்காட்டங் குடியதனுட்
கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

கருங்குவளை மலர் போன்ற நீண்ட கண்களை உடைய மலைமகளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ள திருமேனியனும், படம் பொருந்திய பாம்பை இடையிலே கட்டியவனும், கையின்கண் மிகுந்துள்ள தீயை ஏந்தியவனுமாகிய சிவபிரான், மீன்கள் விளங்கித் திரியும் வயல்களாலும் அகன்ற கழனிகளாலும் சூழப்பட்ட திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டவன், கையில் மழுவேந்திய கணபதீச்சரத்தான் என்கின்றது. மையினார் மலர் - நீலமலர். பையரவம் - படத்தோடு கூடிய பாம்பு. மீன் பிறழ் அச்செய்யின் ஆர் அகன் கழனி - மீன்கள் துள்ளுகின்ற அந்த வயலையும், நிறைந்த அகன்ற நீர்நிலைகளையும் (உடைய). செய் - பண்படுத்தப் பெற்ற வயல். கழனி - தானே அமைந்த விளைபுலம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

தோடுடையான் குழையுடையா னரக்கன்றன் றோளடர்த்த
பீடுடையான் போர்விடையான் பெண்பாக மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டங் குடியுடையான் சேர்ந்தாடும்
காடுடையா னாடுடையான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச் சரத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், ஒரு காதில் தோட்டினை அணிந்தவன். பிறிதொருகாதில் குழை அணிந்தவன். கயிலையைப் பெயர்த்த இராவணனின் தோள்களை நெரித்த பெருமை உடையவன், போரிடும் காளையை உடையவன். பெண்ணை ஒரு பாகமாகக் கொண்டவன். மிகவும் பெரியவன். பெருமைகட்கு உரியவன். பூதகணங்களோடு சேர்ந்தாடும் சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டவன். நாடுகள் பலவற்றிலும் கோயில் கொண்டு அருள்புரிபவன்.

குறிப்புரை :

தோடும் குழையும் பீடும் உடையவன் என்பது முதலாக அவன் சிறப்பியல்புகள் பலவற்றைச் செப்புகிறது. தோடு சத்தி பாகத்திற்குரியது. குழை சிவத்தின் பாகத்திற்குரியது. அரக்கன் - இராவ ணன், பீடு - பெருமை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

ஆனூரா வுழிதருவா னன்றிருவர் தேர்ந்துணரா
வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்
தேனூரான் செங்காட்டங் குடியான்சிற் றம்பலத்தான்
கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

விடைமிசை ஏறி அதனை ஊர்ந்து பல இடங்களிலும் திரிபவன். முன்னொரு காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர் அடிமுடிகளைத் தேர்ந்து உணர முடியாதவாறு வானளாவ ஓங்கி நின்றவன். இவ்வுலகில் சிற்றம்பலத்திலும் தேனூரிலும் கானூரிலும் கழுமலத்திலும் விளங்குபவன். அவ்விறைவன் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

அவன் ஏறுவதுவிடை; இடம் வான், வையகம், வாழ்த்துவார் மனம், தேனூர், கானூர் முதலியன என்கின்றது. ஆன் ஊரா ஊழி தருவான் - இடபத்தை ஏறிச் சுற்றுவான். இருவர் - அயனும் மாலும். வானூரான் - விண்ணிடமாக ஓங்கி வளர்ந்தவன். இங்ஙனம் புறத்தானே எனினும் வாழ்த்துவார் மனத்தகத்துள்ளான்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்
படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்
பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்
கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே.

பொழிப்புரை :

முடைநாற்றத்தை நுகரும் சமணர்களும், காவி யாடை கட்டிய புத்தர்களும் எம்பெருமானுடைய இயல்புகளை அறிந்துணராது துன்புறுபவர்கள். அவர்கட்கு அருள்புரியாத இயல்பினனாகிய சிவபிரான் திருநீற்று மணத்தையே நுகரும் சிறுத்தொண்டர்க்கு அருள்செய்யும் பொருட்டுத் திருச்செங்காட்டங்குடியை விளங்கிய தலமாகக் கொண்டு அங்குள்ள கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

புறச்சமயத்தார்க்கிருளாயிருப்பவன் சிறுத்தொண்ட நாயனார்க்கருள் வழங்க இந்நகரில் எழுந்தருளியிருக்கின்றான் என்கின்றது. செடி - நாற்றம். சீவரம் - காவியாடை. படி நுகராது - பூமியின் கண் நுகரத்தகுவன நுகராதே, அயர் உழப்பார் - துன்பத்தைத் தாமே தேடிக்கொண்டு வருந்துபவர்கள். பொடி - விபூதி. கடி நகர் - காவல் நகரம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்
நறையிலங்கு வயற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்
மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே.

பொழிப்புரை :

கருமை பரவி விளங்கும் மலராகிய குவளை கண்போல் மலர்ந்து விளங்குவதும், மணம் கமழும் சோலைகளிலுள்ள தேனின் மணம் வீசுவதுமான, வயல்களால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் தோன்றிய தமிழ் வல்ல ஞானசம்பந்தன் கரைகளோடு கூடி நீர் நிறைந்து தோன்றும் வயல்கள் சூழ்ந்த திருச்செங்காட்டங்குடியில் விளங்கும் கணபதீச்சரத்து இறைவர் மீது பாடிய வேதப்பொருள் நிறைந்த இத் திருப்பதிகத் தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகில் வாழ்வர்.

குறிப்புரை :

இத்தலத்துத்தமிழில் வல்லவர்கள் வானுலகத் திருப்பவர் என்கின்றது. கறை இலங்கு மலர் - நீலமலர். நறை - தேன். சிறை - கரை. படப்பை - தோட்டம். மறை இலங்கு தமிழ் - வேதக் கருத்துக்கள் விளங்கும் தமிழ்ப்பாடல்கள். வானுலகத்து இருப்பார் - புண்ணிய லோகந்துய்க்கச் சென்ற தேவர்கள் போலாதுஅயனால் படைக்கப்பட்ட பதினெண் கணத்தவர்களில் ஒருவராக என்றும் இருப்பார்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய வன்புசெய்வோ மடநெஞ்சே யரனாமம்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

அறியாமையை உடைய மனமே! உலகில் உயிர் வாழும் நாள்கள் பல போவதற்கு முன்னரே நீலகண்டனாய சிவபிரானுக்கே அடியவராக விளங்கி அவனிடத்து அன்பு செய்வோம். அவ்வரனது திருநாமங்களைப் பலகாலும் கேட்பாயாக. அவ்வாறு கேட்பின் நம் சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு அருள்புரிந்து நம் மனமாறுபாடுகளையும் அவன் தீர்த்து அருள்வான். அவ்விறைவன் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

வாழ்நாள் வீணாளாகக் கழியாதவண்ணம், நீலகண்ட னுக்கு ஆளாய் அன்பு செய்வோம்; நமக்கு மட்டுமன்று; நம்சுற்றமுங் கூட நன்மையடையும் உபாயத்தை அருளிச்செய்து கோள்களை நீக்குபவன் கோளிலிப் பெருமான் என்கின்றது. மட நெஞ்சே - அறியாமையையுடைய நெஞ்சமே. கேளாய் - கேட்பாயாக. கிளை கிளைக்கும் - சுற்றம் சுற்றத்திற்குச் சுற்றம் இவைகட்கும். கோள் - மாறுபாடு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

ஆடரவத் தழகாமை யணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

படம் எடுத்து ஆடும் இயல்புடைய பாம்பை நாணாகக் கொண்டு அதில் அழகிய ஆமை ஓட்டையும் பன்றிக் கொம்பையும் கோத்து அணிந்தவனும், தோடாகப் பாம்பையே கொண்டவனும் ஆகிய சிவபிரானது இரண்டு மலர் போன்ற சிவந்த நல்ல திருவடிகளையே பாடலால் வரும் இசையினால் பாடிப்பழகிப் பணிந்து வணங்குபவர்களின் மனக்கோணலைத் தீர்த்தருள்பவன் திருக்கோளிலி எம்பெருமானாவான்.

குறிப்புரை :

பாம்பாகிய நாணில் ஆமையோட்டையும், பன்றிக் கொம்பையும் கட்டியணிந்த இறைவன் திருவடியில், துதிப்பாக்களைச் சொல்லி எழுவார் மனத்துக் கோணலை நீக்கும் பெருமான் இவர் என்கின்றது. கேழல் - பன்றி. தோடு அரவம் - தோடாக உள்ள பாம்பு. பாடு அரவம் - பாட்டோசை. கோடரவம் - கோணல்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய லுற்றவன்ற னோங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

அழகிதாக மலர்ந்த புதிய பூக்களைக் கொண்டு இருக்கு வேத மந்திரங்களைக் கூறி மன ஒருமையோடு வழிபாடு செய்த மார்க்கண்டேயனின் உயர்ந்த உயிரைக் கவரச் சினந்து வந்த இயமனது உயிரைப் போக்கி அம்மார்க்கண்டேயனுக்கு அன்றே என்றும் பதினாறாண்டாக இருக்கும் வரமளித்தவன், பொன் போல் விளங்கும் கொன்றை மலரைச் சூடிய எம் திருக்கோளிலிப் பெருமானாவான்.

குறிப்புரை :

அன்றலர்ந்த புதுப்பூக்களைக்கொண்டு இருக்குவேத மந்திரங்களுடன் பூசைசெய்த மார்க்கண்டன் மேல்வந்த காலனை உதைத்து மார்க்கண்டற்கு உயிர்வழங்கிய இறைவன் இவன் என்கின்றது. நகுநாண்மலர் - மலர்ந்த புதுப்பூ. ஒன்றி - மன ஒருமைப்பாட்டுடன். கன்றி - கோபித்து. கண்டு - போகக்கண்டு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் றன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

மண்ணியாறு கொண்டுவந்த மணலால் அவ்வாற்றின் கரையில் இலிங்கம் அமைத்து மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த பசுவின் பாலை அபிடேகித்து வழிபட்ட விசாரசருமனது செயலைக் கண்டு அச்சிவபூசையைச் சிதைக்க முற்பட்ட அவன் தந்தையின் காலை அவன் தடிய, அதனைக் கண்டு அவ்விசாரசருமனுக்குச் சண்டீசப் பதவி அருளித் தான் உண்ட கலத்தொடு சூடிய மலர் மாலைகளைச் சூடிக்கொள்ளும் சிறப்பை அளித்தவன், திருக்கோளிலியில் விளங்கும் எமது பெருமான் ஆவான்.

குறிப்புரை :

மண்ணியாற்றங்கரையில் மணலால் இலிங்கம் தாபித்துப் பாலபிஷேகஞ்செய்த விசாரசருமர் செயலையறிந்து பூசனைக்கு இடையூறுசெய்த தந்தை எச்சதத்தனை ஒறுத்தலும் அவருக்குச் சண்டேசப் பதவியைக் கொடுத்து, சூடியமாலையும் உண்டகலமும் அருளிச் செய்தவர் இவர் என்கின்றது. சிதைப்பான் - இடற. கொந்து அணவும் மலர் - பூங்கொத்துக்களில் உள்ள மலர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலுநற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்
பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபத மீந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

வஞ்சகமான மனத்தைத் திருத்தி ஐம்பொறிகளை ஒடுக்கி நாள்தோறும் நல்ல பூசையை இயற்றி, நஞ்சினை அமுதாக உண்டருளிய நம்பியே என நினையும் சிவபக்தனும், பாண்டவர் ஐவரில் ஒருவனுமான அருச்சுனனுக்குப் பாசுபதம் என்னும் அத்திரம் வழங்கி மகிழ்ந்தவன், கொஞ்சும் கிளிகள் வானவெளியில் பறக்கும் திருக்கோளிலியில் விளங்கும் எம்பெருமான் ஆவான்.

குறிப்புரை :

பொறிகளையொடுக்கித் தவஞ்செய்த விஜயனுக்குப் பாசுபதம் தந்த பரமன் இவர் என்கின்றது. அஞ்சு - மெய் வாய் முதலிய பொறிகள் ஐந்து. வைகலும் - தினந்தோறும். பஞ்சவர் - பாண்டவர். பார்த்தன் - அருச்சுனன். மஞ்சு - ஆகாயம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி யங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

மூவுலகங்களையும் தாவி அளந்த திருமால் தன்னோடு உடனிருந்தும் திருவடிகளைக் காண இயலாதவாறு சிறந்து நின்ற தற்பரனாகிய சிவபிரானை, ஐம்புலன்களையும் ஒடுக்கிக் கருணையாளனாக உயிர்க்குயிராய்க் காதலித்து வழிபடும் நாவால் புகழத்தக்க பெரியவராகிய நமிநந்தி அடிகளுக்கு அருள்புரிந்தவன், தலைமை சான்ற மலர் மரங்களை உடைய திருக்கோளிலியில் விளங்கும் எம் பெருமானாவான்.

குறிப்புரை :

உலகத்தைத் தாவியளந்த திருமாலும் காணாத தற்பரன், பொறிகளையடக்கி அன்புசெய்த நமிநந்தியடிகளுக்குப் புகழைத்தந்த பெருமான் இவர் என்கின்றது. தாவியவன் - மூவுலகத்தையும் ஈரடியால் தாவியளந்த திருமால். காணாத தற்பரனை - நாயகனாகவும், ஊர்வோனாகவும், ஆண்டானாகவும், மைத்துனனாகவும், கண்டதன்றித் தற்பரன் என்று காணப்படாதவற்றிற்கெல்லாம் மேலானவனை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

கன்னவிலு மால்வரையான் கார்திகழு மாமிடற்றான்
சொன்னவிலு மாமறையான் றோத்திரஞ்செய் வாயினுளான்
மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியா னங்கையினில்
கொன்னவிலுஞ் சூலத்தான் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

கற்கள் செறிந்த பெரிய கயிலாயமலையில் எழுந்தருளியிருப்பவன். கருமை விளங்கும் பெரிய மிடற்றை உடையவன். புகழ் பொருந்திய வேதங்களை அருளிச்செய்தவன். தன்னைத் தோத்திரிப்பாரின் வாயின்கண் உள்ளவன். மின்னல் போன்ற சிவந்த சடையினை உடையவன். திருவெண்ணீறு அணிந்தவன். அழகிய கையில் கொல்லும் தொழிலில் பழகிய சூலப்படையை ஏந்தியவன். இத்தகையோனாகி விளங்குவோன் திருக்கோளிலியின்கண் விளங்கு எம்பெருமானாவான்.

குறிப்புரை :

கயிலையையுடையவன், நீலகண்டன்; வேதங்களை யுடையவன்; தோத்திரஞ்செய்யும் வாயில் உள்ளவன்; செஞ்சடையான்; வெண்பொடியான்; சூலத்தான் இவன் என்கின்றது. கல் நவிலும் மால்வரை எனப்பிரிக்க. கார் - கருமைநிறம். கொன் - பெருமை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

அந்தரத்திற் றேரூரு மரக்கன்மலை யன்றெடுப்பச்
சுந்தரத்தன் றிருவிரலா லூன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானும்
கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

ஆகாய வெளியிலே தேரை ஊர்ந்து வரும் இராவணன் கயிலைமலையைப் பெயர்த்த போது அழகிய தனது கால் விரலால் சிறிதே ஊன்றிய அளவில், அவன் உடல் நெரிந்து, மந்திரமாக விளங்கும் வேதகீதங்களைப் பாடிப் போற்றச் சந்திரஹாசம் என்னும் வாளை ஈந்து அருள் செய்தவன், கொத்துப் போல இரண்டு முனைகளை உடைய பிறை மதியைச் சூடிய சடையினனாகிய திருக்கோளிலி எம்பெருமானாவான்.

குறிப்புரை :

வானவூர்தியனாகிய இராவணன் கயிலையை எடுத்த காலத்து விரலூன்றியடர்த்து அவன் சாமகானஞ்செய்ய அருள் செய்தவன் இவன் என்கின்றது. அந்தரம் - ஆகாயம். சுந்தரம் - அழகு. வாள் - சந்திரஹாசம் என்னும் வாள். உம்மை - இசைநிறை. கொன்தரத்த - கொந்த ரத்த எனத்திரிந்தது. பெருமையுடைய என்பது பொருள்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்
தாணுவெனை யாளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

ஐந்து தலைகளில் ஒன்றை இழந்ததால் நாணமுற்ற வேதியனாகிய பிரமனும், திருமாலும் அணுக முடியாத நிலைத்த பொருள் ஆனவனும் என்னை அடிமையாக உடையவனும், தன் அடியவர்கட்கு அன்பு வடிவானவனும், பாணபத்திரன் பத்திமையோடு பாடப்பரிவோடு அவனுக்கு அருள் புரிந்தவனுமான வளைந்த பிறைமதியைச் சென்னியில் சூடிய சிவபிரான், திருக்கோளிலி எம்பெருமான் ஆவான்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியவொண்ணாத்தாணு, பாண பத்திரன் அன்போடு பாடுதலும் அருள் சுரந்து பரிசில் பல அளித்தவன் இவன் என்கின்றது. நாணம் உடை வேதியன் - அறிய முடியாமையால் வெட்கமுற்ற பிரமன். தலைபோனமையால் வெட்கிய என்றுமாம். தாணு - நிலைத்தபொருள். பாணன் - பாணபத்திரன். பரிந்து - விரும்பி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்
இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே யேத்துமின்கள்
நடுக்கமிலா வமருலகம் நண்ணலுமா மண்ணல்கழல்
கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே.

பொழிப்புரை :

தடுக்கை உடையாக விரும்பும் சமணரும், தர்க்க சாத்திரங்களில் வல்ல புத்தர்களும் கூறுகின்ற இடுக்கண் வளரும் மொழிகளைக் கேளாது ஈசனையே ஏத்துமின்கள். துளங்காது அமரர் வாழும் வானுலகத்தை அடைதலும் கூடும். அப்பெருமான் திருவடிகள், வேறுயாராலும் தர இயலாத வரங்கள் பலவற்றையும் தரும். அவ்விறைவன் திருக்கோளிலி எம்பெருமான் ஆவான்.

குறிப்புரை :

சமணர்களும் தார்க்கீகர்களும் கூறும் துன்பவார்த்தை களைக் கேளாமல் ஈசனையே ஏத்துங்கள்; வானுலகை அடையலாம்; அவன் கழல் அரிய வரங்களையும் கொடுக்கும் என்கின்றது. தடுக்கு அமரும் - தடுக்கை ஆசனமாக விரும்புகின்ற. தர்க்க சாஸ்திரிகளும் நாஸ்திகர்கள் ஆதலின் அவருரையும் கேளாதீர் என்றார்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்கும்
கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண்
டின்பமர வல்லார்கள் எய்துவர்க ளீசனையே.

பொழிப்புரை :

நல்ல அடியவர்கள் நம்முடைய செல்வம் என நம்பியிருப்பவனாய்ப், பூங்கொம்பு போன்ற அழகிய உமையம்மையின் கணவனாய், அழகிய திருக்கோளிலியில் விளங்கும் எம் பெருமானை, மணம் விரியும் தண்ணிய சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்ப் பதிகத்தால் இன்பம் பொருந்தப் பாடவல்லவர்கள் அப்பெருமானையே அடைவர்.

குறிப்புரை :

நல்ல அடியார்கள் ஒவ்வொருவரும் நம்முடைய செல்வம் என்று நம்பியிருக்கும் கோளிலிப்பெருமானை ஞானசம்பந்தன் அருளிய வண்டமிழ்கொண்டு இன்பங்கொள்ள வல்லவர்கள் ஈசனை எய்துவர் என்கின்றது. கொம்பு அனையாள் - பூங்கொம்பை ஒத்த உமாதேவி. வம்பு - மணம். இன்பு அமர - இன்பத்து இருக்க.

பண் :

பாடல் எண் : 1

எரியார்மழுவொன் றேந்தியங்கை யிடுதலை யேகலனா
வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம் வவ்வுதியே
சரியாநாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன்
பெரியான்பிரமன் பேணியாண்ட பிரம புரத்தானே.

பொழிப்புரை :

உச்சரிப்பு தவறாதவாறு நாவினால் வேதகீதங்களைப் பாடுபவனும், தாமரை மலர்மேல் விளங்குவோனும் ஆகிய நான்கு திருமுகங்களை உடைய பெரியவனாகிய பிரமன் விரும்பி வழிபட்டு ஆட்சிபுரிந்த பிரமபுரத்தில் விளங்கும் இறைவனே! எரியும் மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தி அழகிய கையில் பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து கொண்ட மண்டை ஓட்டையே உண்கல னாகக் கொண்டு வீதிகள்தோறும் பலி ஏற்பது போல் வந்து வரிகளை உடைய வளையல்களை அணிந்த இளம் பெண்கள் தரும்பிச்சையை ஏலாது அவர்களது மிக்க அழகைக் கவர்ந்து செல்கின்றாயே! இது நீதிதானா?

குறிப்புரை :

பிரமபுரத்தானே! ஒருகையில் மழுவையும், ஒருகையில் கபாலத்தையும் ஏந்திக்கொண்டு மகளிரிடம் பிச்சை வாங்காது அவர்கள் அழகை வாங்குகிறீரே ஏன் என்று வினாவுகிறது. எரியார் மழு - எரிதலைப் பொருந்திய மழு. வரியார் வளையார் - கோடுகளோடு கூடிய வளையலையுடைய முனிபத்தினியர். ஐயம் - பிச்சை. சரியாநாவின் என்பது முதல் பிரமன் என்பதுவரை பிரமனைக் குறிக்கும் தொடர். பிரமன் வழிபட்டதால் பிரமபுரம் எனத் தலத்திற்குப் பெயர் வந்தமை விளக்கியது.

பண் :

பாடல் எண் : 2

பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக் கென்றயலே
கயலார்தடங்க ணஞ்சொனல்லார் கண்டுயில் வவ்வுதியே
இயலானடாவி யின்பமெய்தி யிந்திரனாண் மண்மேல்
வியலார்முரச மோங்குசெம்மை வேணு புரத்தானே.

பொழிப்புரை :

இந்திரன் விண்ணுலகை இழந்து மண்ணுலகம் வந்து முறைப்படி ஆட்சி நடத்தி மகிழ்வெய்தி வழிபட்டு வாழ்ந்த சிறப்பினதும், பெரிதாய முரசுகள் ஓங்கி ஒலிப்பதும் நீதி நிலை பெற்றதும் ஆகிய வேணுபுரத்தில் எழுந்தருளிய இறைவனே, கங்கை தங்கிய சடைமுடியில் ஒரு திங்களைச் சூடி மகளிர்இடும் பலியை ஏற்பதற்கு என்றே வந்து அதனின் வேறாய் மீன் போன்ற தடங்கண்களையும் அழகிய சொற்களையும் உடைய இளம்பெண்களின் கண்கள் துயில் கொள்வதைக் கவர்ந்து அவர்களை விரகநோய்ப் படுத்தல் நீதியோ?

குறிப்புரை :

வேணுபுரத்தானே! சடையிற் சந்திரனையும் சூடிப் பிச்சைக்கென்று புறப்பட்டு மகளிர் துயிலை வவ்வுவதேன் என்கின்றது. பெயல் - கங்கை. திங்கள் - பிறை. கயல் ஆர் - கயல் மீனை ஒத்த. நல்லார் - பெண்கள். கண் துயில் வவ்வுதியே என்றது விரகநோயால் அவர்கள் துயில் துறந்தார்கள் எனக் குறித்தது. இயலான் நடாவி - முறைப்படி நடத்தி. இந்திரன் ஆள் மண் மேல் - இந்திரன் வந்து மறைந்திருந்தாண்ட மண்ணுலகத்தில். வியல் - அகலம். இந்திரன் மூங்கிலாய் மறைந்திருந்தமையின் வேணுவனமாயிற்று எனக்காரணங் குறித்தது.

பண் :

பாடல் எண் : 3

நகலார்தலையும் வெண்பிறையு நளிர்சடை மாட்டயலே
பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலை வவ்வுதியே
அகலாதுறையு மாநிலத்தில் அயலின்மை யாலமரர்
புகலான்மலிந்த பூம்புகலி மேவிய புண்ணியனே.

பொழிப்புரை :

இம்மாநிலத்தில் தம்மை அடைக்கலமாக ஏற்போர் பிறர் இன்மையால் தேவர்கள் தமக்குப் புகலிடமாய் வந்தடைந்த சிறப்பினதும், அவர்கள் அகலாது உறைவதுமாகிய அழகிய புகலி நகரில் மேவிய புண்ணியனே! சிரிக்கும் தலையோட்டையும் வெண் மையான பிறைமதியையும் குளிர்ந்த சடையில் அணிந்து பகற்போதில் பலி ஏற்பது போல் வந்து, மகளிர்தரும் பிச்சைப் பொருள் கொள்ளாது அவர்கட்கு விரகதாபம் அளித்து, அதனால் அவர்கள் அணிந்துள்ள ஆடை முதலியன, நெகிழும்படி செய்து போதல் நீதியோ?

குறிப்புரை :

இவ்வுலகத்தில் அடைக்கலத்தானம் வேறில்லாமை யால் அமரர்கள் வந்து அடைக்கலம் புகுந்த புகலிமேவிய புண்ணியனே! கலையைக்கவர்ந்ததேன் என்கின்றது. நகல் - சிரித்தல். பகலாப் பலி - நடுவற்றபிச்சை; பகற்காலத்துப்பலி என்றுமாம். ஐயம் - பிச்சை; பாய் கலை - பரந்தஆடை. அயல் இன்மையால் -(அடைக்கலம்) வேறின்மையால். புகல் - அடைக்கலம். புகலி என்பதற்குத் தேவர்களால் அடைக்கலம் புகப்பெற்ற இடம் எனக் காரணம் விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 4

சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலொர் தாழ்குழையன்
அங்கோல்வளையா ரையம்வவ்வா யானலம் வவ்வுதியே
செங்கோனடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினை மெய்தெரிய
வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குரு மேயவனே.

பொழிப்புரை :

கொடிய அரசன் எனப்படும் எமதருமராசன் தானும் குருவாகிச் செங்கோல் ஆட்சியை நடத்தித்தான் செய்யும் செயல்கள் நீதிநெறிக்கு உட்பட்டவை என்ற உண்மை எல்லோர்க்கும் தெரியுமாறு செங்கோல் முறைகளை வந்து கற்று அருள் புரிந்து ஆண்ட வெங்குரு என்னும் தலத்தில் எழுந்தருளியவனே! சங்கக் குண்டலத்தோடு விளங்குமாறு தோடணிந்தும் ஒரு காதில் தாழும் குழையணிந்தும் பலி ஏற்பதற்கென்று வந்து அழகிய திரண்ட வளையல்களை அணிந்த இளம் பெண்களின் அழகினைக் கவர்ந்து செல்லல் நீதியோ?

குறிப்புரை :

வெங்குருமேயவனே! தோடும் குழையும் காதிற்பெய்த உமையொருபாதியனாகிய உருவத்தைக்கொண்டு மகளிரிடம் ஐயம் பெறாது நலங்கவர்ந்தது ஏன் என்கின்றது. சங்கோடு இலங்க - சங்க குண்டலத்தோடு விளங்க. அம் கோல் வளையார் - அழகிய திரண்ட வளையலையுடையவர்கள் . ஐயம் வவ்வாயால் - பிச்சையை ஏற்காய். நடாவி - நடத்தி. வெங்கோ தருமன் செங்கோல் நடாவிச் செய்வினை பல்லுயிர்க்கும் மெய்தெரிய மேவி ஆண்டவெங்குரு எனக் கூட்டுக. தருமன் செங்கோல் முறைப்படி பல உயிர்கட்கும் செய்யும் ஆட்சியின் உண்மையை அறிய வெங்குரு எனப் பெயர் பெற்றது எனக்காரணம் விளக்கியது.

பண் :

பாடல் எண் : 5

தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கிய தாழ்சடையன்
பிணிநீர்மடவா ரையம்வவ்வாய் பெய்கலை வவ்வுதியே
அணிநீருலக மாகியெங்கு மாழ்கட லாலழுங்கத்
துணிநீர்பணியத் தான்மிதந்த தோணி புரத்தானே.

பொழிப்புரை :

மண்ணுலகம் அழகிய நீருலகம் ஆகி, அனைத்திடங் களும் ஆழமான கடலால் மூழ்கி வருந்தும் அவ்வேளையில், அச்சம் தரும் அக்கடல் பணியுமாறு தான் மட்டும் அவ்வூழி வெள்ளத்தில் அழியாது மிதந்த தோணிபுரத்து இறைவனே! தன்னை வந்து பணிந்த மதியைச் சூடி அம்மதியை நெடிது நாள் காத்தருளிய, தாழ்ந்து தொங்கும் சடைமுடியை உடையவனாய், காமநோயால் வருந்தும் மகளிர் பால் சென்று அவர்கள் தரும் பிச்சையை ஏலாது அவர்களின் ஆடைகளை நிலைகுலையச் செய்தல் நீதியாகுமா?

குறிப்புரை :

உலகம் கடலுள் ஆழ்ந்தகாலத்து மிதந்த தோணிபுரத் தானே! மகளிரிடம் ஐயம் ஏற்காது உடுத்த ஆடையை வவ்வியதேன் என்கின்றது. தணிநீர் மதியம் - கீழ்ப்படிந்த தன்மையை உடையபிறை. பிணிநீர் மடவார் - காமநோய்வாய்ப்பட்ட மாதர்கள். ஐயம் - பிச்சை. பெய்கலை - உடுத்திய ஆடை. உலகம் எங்கும் அணி நீராகிக்கடலால் அழுங்க எனக் கூட்டுக. துணி நீர் பணிய - துணிவுகொண்ட தண்ணீர் கீழ்ப்படிய. தோணிபுரம் என்ற பெயரின் காரணம் விளக்கியது.

பண் :

பாடல் எண் : 6

கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடை மாட்டயலே
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யானலம் வவ்வுதியே
அவர்பூணரையர்க் காதியாய வடன்மன்ன னாண்மண்மேல்
தவர்பூம்பதிக ளெங்குமெங்குந் தங்கு தராயவனே.

பொழிப்புரை :

அணிகலன்களை அணிந்த அரசர்களாகிய அவர்க் கெல்லாம் தலைவனாகிய வலிமை பொருந்திய மன்னனாகிய திருமால் வராக அவதாரத்தில் இரண்ய கசிபுவைக் கொன்ற பழிநீங்கப் பூசித்து ஆட்சி செய்த இம்மண்ணுலகில் உள்ளதும், தவமுனிவர்கள் எல்லா இடங்களிலும் தங்கும் சிறப்பினதும், ஆகிய பூந்தராயில் எழுந்தருளியவனே, இம்மண்ணுலகைக் கவரவந்த அழகிய கங்கையையும் தண்ணிய மதியையும் மணம் கமழும் சடைமிசைச்சூடி மகளிர் அருகருகே இடும் சுவைமிக்க பலியாகிய உணவை ஏலாது அவர்களின் அழகை வவ்வுகின்றாயே; இது நீதியா?

குறிப்புரை :

பூந்தராய்மேவியவனே! பலி வவ்வாயாய் அவர்கள் நலம் வவ்வுதியே என்கின்றது. வவ்வாய் ஆய் நலம் வவ்வுதியே எனப்பிரித்துப் பொருள்கொள்க. பூண் அரையர் அவர்க்கு ஆதியாய அடல் மன்னன் - மன்னர்க்கெல்லாம் முதலாகிய வலிமைமிக்க திருமால். காக்கும் மன்னர்க்கு எல்லாம் தலைவன், காத்தற்றெய்வமாகிய திருமால் என்ற ஒற்றுமைபற்றி உரைக்கப்பெற்றது. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்பதும் இந்த இயைபுபற்றியே. ஆதிவராகமான திருமால் இரணியனைக் கொன்ற பழிபோகப் பூக்களைக்கொண்டு பூசித்தமையால் பூந்தராய் என அழைக்கப்பெற்றது எனத்தலப்பெயர்க்காரணம் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 7

முலையாழ்கெழுவ மொந்தைகொட்ட முன்கடை மாட்டயலே
நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம் வவ்வுதியே
தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதொ ராணைநடாய்ச்
சிலையான்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுர மேயவனே.

பொழிப்புரை :

கரவாக அமுதுண்டதால் திருமாலால் வெட்டப் பெற்றுத் தலைமாத்திரமாய் நின்ற வில்வீரனாகிய சிலம்பன் என்னும் இராகு வழிபட்டு இவ்வையகமெல்லாவற்றையும் தன் ஆணைவழி நடத்தி ஆட்சி புரிந்த சிரபுரம் என்னும் நகரில் எழுந்தருளிய இறைவனே! முல்லையாழைமீட்டி மொந்தை என்னும் பறை ஒலிக்கச் சென்று வீட்டின் முன்கடையின் அயலே நின்று உண்பதற்காக அன்றிப் பொய்யாகப் பிச்சை கேட்டு மகளிர் தரும் உணவைக் கொள்ளாது நீ அவர்தம் அழகினைக் கவர்வது நீதியோ?

குறிப்புரை :

சிரபுரமேயவனே! நிலையாப்பிச்சையாக ஐயம் ஏற்காது நலம் வவ்வுதியே என்கின்றது. முலை யாழ் கெழுவ - முல்லை யாழ் சுரம் ஒத்து ஒலிக்க. கெழும் என்பதும் பாடம். நிலையாப்பலி என்றது தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தையடக்க ஏற்றுக் கொண்ட பிச்சையேயன்றி நிலைத்ததன்று என்பது விளக்கிற்று. தலையே வடிவாய் (உடல் முதலியன இன்றி) உலகத்தையெல்லாம் தன்னாணையின் நடக்கச்செய்யும் சிலம்பன் என்னும் அசுரன், ராகு என்ற பெயர்தாங்கி வழிபட்ட சிரபுரம் என விளக்கியவாறு. தேவர்களுடன் கலந்து கரவாக அமுதுண்ட சிலம்பன் என்னும் அசுரனை மோகினியான திருமால் சட்டுவத்தால் வெட்ட, தலை மாத்திரமான ராகு இத்தலத்தில் பூசித்தான் என்பது வரலாறு.

பண் :

பாடல் எண் : 8

எருதேகொணர்கென் றேறியங்கை யிடுதலை யேகலனாக்
கருதேர்மடவா ரையம்வவ்வாய் கண்டுயில் வவ்வுதியே
ஒருதேர்கடாவி யாரமரு ளொருபது தேர்தொலையப்
பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர் புண்ணியனே.

பொழிப்புரை :

ஒரு தேரைச் செலுத்திய அரிய போரில் பத்துத்தேர் களை அழியுமாறு சண்டையிடும் தேர்வல்லவன் ஆகிய சிபிச்சக்கரவர்த்தி வீற்றிருந்து அரசாண்ட சிறப்பினதும் அவனை வஞ்சித்துப் புறாவின் எடைக்கு எடை தசைகேட்ட பாவம் தீரத் தீக்கடவுள் வழிபட்டதுமான புறவம் என்னும் சீகாழிப்பதியில் விளங்கும் இறைவனே! தனது எருது ஊர்தியைக் கொணர்க என ஆணையிட்டு அதன்மிசை ஏறித்தனது அழகிய கையில் ஏந்திய பிரமகபாலத்தையே உண்கலனாகக் கொண்டு விரும்பும் அழகுடைய மகளிரிடும் பலியைக் கொள்ளாது அவர்களின் உறக்கம் கெடுமாறு விரகதாபம் செய்து வருதல் நீதியோ?

குறிப்புரை :

இதுவும் புறவமர் புண்ணியனே மாதர் துயில் வவ் வியது ஏன் என்கின்றது. ஐயம் ஏற்பார் ஊர்தியேறிச் செல்லார் ஆகவும் எருதைக் கொணர்க, என்று ஆணையிட்டு அதில் ஏறி. கருதேர் மடவார் - கருவைத்தேரும் மடவார்; காமினிகள். கருது ஏர் மடவார் எனப்பிரித்தலுமாம். ஒருதேரைச் செலுத்தி, பத்துத்தேரை வென்ற தேர்வல்லவனாகிய சிபியாண்ட புறவம் எனப்பெயர்க்காரணத்தைக் குறிப்பாக உணர்த்தியது. சிபியின் தசை எடைக்கு எடைபெற்ற தீக்கடவுளாகிய புறா அப்பாவம் போக வழிபட்ட தலமாதலின் புறவம் என்றாயிற்று என்பது வரலாறு.

பண் :

பாடல் எண் : 9

துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மை யிலாச்சமணுங்
கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகை வார்குழலார்
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யானலம் வவ்வுதியே
தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பை யமர்ந்தவனே.

பொழிப்புரை :

உடலைத் துளைக்கும் நீண்ட வேலை உடைய இயமனை அடக்கிஆளச் சண்பையில் எழுந்தருளிய இறைவரே! காவி நிறம் சேர்ந்த ஆடையைப் போர்த்த புத்தரும், தூய்மையற்ற சமணரும் மனம் திரிந்து உழலுமாறு செய்து, பிச்சையேற்கும் கோலத்தவராய் மகளிர் வாழும் இல்லங்களை அடைந்து, நீண்ட கூந்தலை உடைய அம்மகளிர் கண்ட அளவில் மனம் திரிந்து நிற்க, அவர்கள் இடவந்த இனிய உணவாகிய பிச்சையை ஏலாது அவர்தம் அழகினைக் கவர்ந்து செல்கின்றீரே; இது நீதியோ?

குறிப்புரை :

புறச்சமயிகள் மனந்தேராது உழலச்செய்ததுபோல மகளிர் நலத்தையும் கொண்டனையே என்கின்றது. கலிங்கப் போர்வை - கலிங்கநாட்டில் நெய்தபோர்வை. கவர்செய்து - மனந்திரிந்து. காரிகை - அழகு. தவர்செய் நெடுவேல் சண்டன் ஆள - துளைக்கின்ற நீண்ட வேலை ஏந்தியயமனை அடக்கி ஆள. இது மார்க்கண்டேயர்க்காக யமனை உதைத்த வரலாற்றை உட்கொண்டது.

பண் :

பாடல் எண் : 10

நிழலான்மலிந்த கொன்றைசூடி நீறுமெய் பூசிநல்ல
குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளை வவ்வுதியே
அழலாயுலகங் கவ்வைதீர வைந்தலை நீண்முடிய
கழனாகரையன் காவலாகக் காழி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

உலகம் அழலாக வெதும்பி வருத்திய துன்பம் தீருமாறு ஐந்து தலைகளையும் நீண்ட முடியையும் வீரக்கழலையும் அணிந்த நாகங்களின் தலைவனாகிய காளிதன் என்னும் பாம்பு காவல் புரிந்த காழிப்பதியில் அமர்ந்த தலைவனே! ஒளி நிறைந்த கொன்றை மலர் மாலையைச்சூடி, திருமேனியில் நீற்றினைப் பூசிக் கொண்டு பிச்சையேற்பவர் போல மகளிர் வாழும் வீதிகளில் சென்று அழகிய கூந்தலினை உடைய மகளிர்தரும் பிச்சையை ஏலாது அவர்களை விரகதாபத்தினால் மெலியச் செய்து அவர்தம் திரண்ட வளையல்களை வவ்வுகின்றீரே; இது நீதியோ?

குறிப்புரை :

காழியமர்ந்தவனே, வளைகவர்ந்தனையே என் கின்றது. கோல் - திரட்சி. அழலாய் - வெதும்பி. கவ்வை - துன்பம். ஐந்தலை நீள்முடிய கழல் நாக அரையன் - ஐந்து தலையோடும் முடியோடும் கூடிய வீரக்கழலை அணிந்த காளிதன் என்னும் பாம்பு.

பண் :

பாடல் எண் : 11

கட்டார்துழாயன் றாமரையா னென்றிவர் காண்பரிய
சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலை வவ்வுதியே
நட்டார்நடுவே நந்தனாள நல்வினை யாலுயர்ந்த
கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சை யமர்ந்தவனே.

பொழிப்புரை :

ஆற்றின் நடுவே பராசரமுனிவன் மச்சகந்தியைக் கூடிய பழிபோகும்படி; அம்முனிவன் செய்த பூசனையால், அம்முனிவர் அடையுமாறு அப்பெண்ணுக்கு மணத்தையும் நல்லொழுக்கத் தையும் அளித்து அம்முனிவனை வாழச்செய்த சிறப்பினதாகிய குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட கொச்சைவயம் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய இறைவனே! கட்டப்பட்ட துளசி மாலையை அணிந்த திருமால் நான்முகன் என்ற இவர்களாலும் காண்டற்கரிய மேன்மையனாகிய நீ பிச்சை ஏற்கச் சென்று மகளிர் தரும் பலியை ஏலாது அவர் தம் அழகிய ஆடைகளை வவ்வுதல் நீதியோ?

குறிப்புரை :

திருமாலும் பிரமனும் காணுதற்கரிய சிட்டராய்ப் பலி கொள்ளாது கலைகொள்ளக் காரணம் ஏன் என்கின்றது. கட்டு ஆர் துழாயன் - கட்டுதல் பொருந்திய துளசிமாலையையுடைய திருமால். சிட்டார் - ஒழுங்கினையுடையவர். கலை - ஆடை. நட்டாறு என்பது நட்டார் என ஆயிற்று. நந்தன் - பிரமன் மகனாகிய பராசரன். ஆள - மச்சகந்தியைப் பெண்டாள. (அப்பழி போம்படி) நல்வினையால் - அவன் செய்த பூசையால். கொட்டு ஆறு உடுத்த - மயிர்ச்சாந்து போன்ற மணத்தையும், நல்லொழுக்கத்தையும் பொருந்தச்செய்த. உடுத்த கொச்சை எனக் கூட்டுக. இது கொச்சைவயம் என்றதன் காரணம் உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 12

கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க் கவுணி
நடையார்பனுவன் மாலையாக ஞானசம் பந்தன்நல்ல
படையார்மழுவன் மேன்மொழிந்த பல்பெயர்ப் பத்தும்வல்லார்க்
கடையாவினைகள் உலகில்நாளும் அமருல காள்பவரே.

பொழிப்புரை :

வாயில்களிற் பொருந்திய கொடிகளோடு கூடிய மாடவீடுகளை உடைய வீதிகள் சூழ்ந்த கழுமலம் என்னும் சீகாழிப்பதியில் கவுணியர் குலத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் சந்தநடைகளோடு கூடிய இலக்கிய மாலையாக மழுப்படையை உடைய சீகாழி இறைவர்மேற்பாடிய பல்பெயர்ப்பத்து என்னும் இத்திருப்பதிகத்தை ஓதி வழிபட வல்லவர்களை இவ்வுலகில் துன்புறுத்தும் வினைகள் ஒருநாளும் வந்து அடையா. மறுமையில் அவர்கள் அமரருலகினை ஆள்வர்.

குறிப்புரை :

மேற்கூறிய கழுமலநகரின் பெயராகக் கூறிய பத்தையும் வல்லார்க்கு இவ்வுலகில் தீவினைபொருந்தா; தேவர் உலகினையும் ஆள்வர் எனப் பயன்கூறுகிறது. கடை - வாயில். கவுணி - கவுணிய கோத்திரத்து உதித்தவர். பல்பெயர்ப் பத்தும் - பத்தின் மேலும் பலவாகிய பெயர். அமரர் உலகு அமருலகாயிற்று.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

அறையார்புனலு மாமலரு மாடரவார் சடைமேல்
குறையார்மதியுஞ் சூடிமாதோர் கூறுடையா னிடமாம்
முறையார்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம் வணங்கும்
திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

ஆரவாரித்து வரும் கங்கையும், ஆத்தி மலரும், ஆடும் பாம்பும் பொருந்திய சடையின் மேல், ஒரு கலையாய்க் குறைந்த பிறை மதியையும் சூடி மாதொர்பாகனாக விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய இடம், நீதியோடு கூடியவராய் முடிசூடி ஆளும் பாண்டியர், சேரர், சோழர் ஆகிய மூவேந்தர்களும் வணங்குவதும், வையை ஆற்றின் அலைகள் வீசுவதும், புகழோடு கூடியதும், வயல் வளம் மிக்கதுமாகிய அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

புனலும், ஆத்திமலரும், மதியும் சூடிய உமையொரு பாகன் இடம் பூவணம் என்கின்றது. அறை - பாறை. ஆ - ஆச்சா (ஆத்தி.) குறையார்மதி - பிறைமதி. தென்னர் - பாண்டியர். திறை - கப்பம். செம்மை - ஒழுங்கு. குருவருள் : `முறையார் முடிசேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும் திறையாரொளி சேர் செம்மை ஓங்கும் தென்திருப்பூவணமே` என்ற தொடரால் மூவேந்தரும் பூவணத்தில் ஒருங்கு வணங்கிய குறிப்பு இப்பாடலில் அமைந்துள்ளமையை, கண்டு மகிழலாம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

மருவார்மதின்மூன் றொன்றவெய்து மாமலையான் மடந்தை
ஒருபால்பாக மாகச்செய்த வும்பர்பிரா னவனூர்
கருவார்சாலி யாலைமல்கிக் கழன்மன்னர் காத்தளித்த
திருவான்மலிந்த சேடர்வாழுந் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

பகைவர்களாகிய திரிபுர அசுரர் மதில்கள் மூன்றையும் ஒருசேர எய்து அழித்தோனும், மலையரையன் மகளாகிய பார்வதிதேவியை ஒருபால் கொண்டு தேவர்கள் தலைவனாக விளங்குவோனும் ஆகிய சிவபிரானது ஊர்; கருக்கொண்ட நெற்பயிர்கள் கரும்புகள் ஆகியன நிறைந்ததும் வீரக்கழல் புனைந்த மன்னர்கள் காப்பாற்றிக் கொடுத்த செல்வவளத்தால் சிறந்த மேலானவர்கள் வாழ்வதுமான அழகிய பூவண நகராகும்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்துத் தேவியை ஒருபாகம் வைத்தவனூர் இது என்கின்றது. மருவார் - பகைவர். உம்பர்பிரான் - தேவதேவன். கருவார் சாலி - கருக்கொண்ட நெல். ஆலை - கரும்பு. திரு - செல்வம். சேடர் - பெருமையுடையவர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

போரார்மதமா வுரிவைபோர்த்துப் பொடியணி மேனியனாய்க்
காரார்கடலி னஞ்சமுண்ட கண்ணுதல் விண்ணவனூர்
பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப் பன்மணி பொன்கொழித்துச்
சீரார்வாரி சேரநின்ற தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

போர்ப் பயிற்சியுடைய மதம் பொருந்திய யானை யின் தோலை உரித்துப் போர்த்து, திருநீற்றுப் பொடி அணிந்த மேனியனாய், கருநிறம் பொருந்திய கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டவனாய், நுதல்விழி உடையவனாய் விளங்கும் சிவனது ஊர், நிலவுலகை வளம் செய்வதற்கு வந்த வையையாறு வாய்க்கால் வழியே பரப்பிப் பலவகை மணிகளையும் பொன்னையும் கொழித்து வளம் செய்யும் அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

யானையையுரித்துப் போர்த்து, பொடியணிந்து, நஞ்சுண்டு விளங்கும் கண்ணுதற் பெருமானூர் இது என்கின்றது. போர் ஆர் மதமா - சண்டைசெய்யும் மதயானை. உரிவை - தோல். கண் நுதல் - நெற்றிக்கண்ணை யுடையவன். பார் ஆர் - பூமியிற் பொருந்திய. வாய் - வாய்க்கால். வாரி - நீர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

கடியாரலங்கற் கொன்றைசூடிக் காதிலொர் வார்குழையன்
கொடியார்வெள்ளை யேறுகந்த கோவணவன் னிடமாம்
படியார்கூடி நீடியோங்கும் பல்புகழாற் பரவச்
செடியார்வைகை சூழநின்ற தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடி ஒரு காதில் நீண்ட குழை அணிந்தவனாய், வெண்மையான விடைக்கொடியைத் தனக்குரியதாகக் கொண்டவனாய், கோவணம் அணிந்தவனாய் விளங்கும் சிவபிரானது இடம், நிலவுலக மக்கள் ஒருங்கு கூடி நீண்டு விரிந்த தன் புகழைக் கூறி வணங்கப் புதர்கள் நிறைந்த வைகையாறு சூழ்ந்துள்ள அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

கொன்றையணிந்து, காதில் குழைவிளங்க இடபக் கொடி ஏந்திய கோவணாண்டி இடம் இது என்கின்றது. கடி - மணம். அலங்கல் - மாலை. படியார் - பூமியிலுள்ள மக்கள். செடி ஆர் வைகை - புதர் நிறைந்த வைகை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதில் கூட்டழித்த
போரார்வில்லி மெல்லியலாளோர் பான்மகிழ்ந் தானிடமாம்
ஆராவன்பிற் றென்னர்சேரர் சோழர்கள் போற்றிசைப்பத்
தேரார்வீதி மாடநீடுந் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

கூர்மை பொருந்திய அம்பை வில்லில் பூட்டி, கொடிகள் கட்டிப் பறந்த மும்மதில்களின் கூட்டுக்களையும் ஒருசேர அழித்த போர்வல்ல வில் வீரனும், மெல்லியலாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு மகிழ்பவனுமாகிய சிவபிரானது இடம், குன்றாத அன்போடு பாண்டியர் சேரர் சோழர் ஆகிய மூவேந்தர்கள் போற்றத் தேரோடும் திருவீதியையும் மாட வீடுகளையும் உடைய அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த வில்லாளியாய் உமையொரு பாகங் கொண்டானிடம் இது என்கின்றது, சிலை - வில். கூட்டழித்த - ஒருசேர அழித்த. ஆரா அன்பில் - போதும் என்றமையாத அன்பொடு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

நன்றுதீதென் றொன்றிலாத நான்மறை யோன்கழலே
சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரா னிடமாம்
குன்றிலொன்றி யோங்கமல்கு குளிர்பொழில் சூழ்மலர்மேல்
தென்றலொன்றி முன்றிலாருந் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

நன்மை தீமை என்பனவற்றுள் ஒன்றும் இல்லாத வனும், நான்கு வேதங்களை அருளியவனும், தேவர்களின் தலைவனுமான சிவபிரான் தன் திருவடிகளை அடைந்து அன்பர்கள் போற்றி அருள் பெறுமாறு நின்ற இடம், பொதிய மலையில் பொருந்தி அங்கு நிறைந்த ஓங்கிய குளிர் பொழில்களில் உள்ள மலர்களிற் படிந்து வந்து தென்றல் முன்றில்களில் தங்கி மகிழ்விக்கும் அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

நல்லது தீது இரண்டையுங்கடந்த பெருமான், எல்லோ ரும் ஏத்தநின்ற பெருமான் இடம் இது என்கின்றது. நன்றும் தீதும் வினையான் வருவன ஆதலின் வினையிலியாகிய பெருமானுக்கு அவ்விரண்டும் இல்லையாயிற்று. குன்றில் ஒன்றி - மலைகளிற் பொருந்தி. முன்றில் - முன்வாயிலில்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

பைவாயரவ மரையிற்சாத்திப் பாரிடம் போற்றிசைப்ப
மெய்வாய்மேனி நீறுபூசி யேறுகந் தானிடமாம்
கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியி னானெருங்கிச்
செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

படம் பொருந்திய வாயினை உடைய பாம்பை இடையில் கட்டிக் கொண்டு, பூதகணங்கள் போற்றிப் பாட, மேனி முழுதும் மெய்மை வடிவான திருநீற்றைப் பூசி, விடையேற்றை ஊர்ந்து வரும் சிவபிரானது இடம், கைகளில் வளையல்களை அணிந்துள்ள இளமகளிர் தம் காதலர்களோடு புணர்ச்சி விருப்புடையராய் நெருங்கிச் செய்யப்படும் கலவி பற்றிய பாடல்களின் ஓசை நீங்காத அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

பாம்புடுத்துப் பூதம்போற்ற நீறுபூசி இடபமூர்ந்தவன் இடம் இது என்கின்றது. பை - படம். பாரிடம் - பூதம். கைவாழ் வளையார் - இளைய மகளிர்கள். கலவி - புணர்ச்சி. கலவிக் காலத்து நிகழ்த்தும் காதற்பாட்டு நீங்காத பூவணம் என்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

மாடவீதி மன்னிலங்கை மன்னனை மாண்பழித்துக்
கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையி னார்க்கிடமாம்
பாடலோடு மாடலோங்கிப் பன்மணி பொன்கொழித்து
ஓடிநீரால் வைகைசூழு முயர்திருப் பூவணமே.

பொழிப்புரை :

மாடவீதிகள் நிலைபெற்ற இலங்கை மன்னன் இராவணன் பெருவீரன் என்று மக்கள் பாராட்டிய சிறப்பை அழித்து, அவன் பிழை உணர்ந்து பாடி வேண்டிய அளவில் உடன் வெற்றி நல்கும் வாளைக் கொடுத்து ஆளும் அருட்கொள்கையாளனாகிய சிவ பிரானுக்குரிய இடம், ஆடல் பாடல்களால் மிக்க சிறப்புடையதும், பல்வகை மணிகளையும் பொன்னையும் அடித்து ஓடிவரும் நீரோடு வைகையாறு சூழ்ந்ததுமான உயர்ந்த திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

இராவணனை அடக்கி ஆண்டு, வாளும் அருள்செய்த மன்னர்க்கு இடம் பூவணம் என்கின்றது. மாண்பு - சிறப்பு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

பொய்யாவேத நாவினானும் பூமகள் காதலனும்
கையாற்றொழுது கழல்கள்போற்றக் கனலெரி யானவனூர்
மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணி கொழித்துச்
செய்யார்கமலந் தேனரும்புந் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

என்றும் பொய்யாகாத வேதங்களை ஓதும் நாவினன் ஆகிய நான்முகனும், மலர்மகள் கணவனாகிய திருமாலும், தம் கைகளால் தன் திருவடிகளைத் தொழுது போற்ற, சிவந்த எரி உருவான சிவபிரானது ஊர், கருநிறம் பொருந்திய சோலைகளில் வண்டுகள் பாடுவதும், வைகை ஆறு மணி கொழித்து வளம் சேர்ப்பதும், சிவந்த தாமரை மலர்களில் தேன் அரும்பி நிற்பதுமான அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியொண்ணாவகை அழலுரு வானவனூர் இது என்கின்றது. பொய்யா வேதம் - எக்காலத்தும் பொய்யாகாத வேதம். வேதத்தின் நித்யத்துவம் கூறியது. பொழிலில் வண்டு பாடச் செய்களிற் கமலம் தேனரும்பும் என்றது கன்று கத்தச் சுரக்கும் கறவைபோல வண்டுபாடக் கமலம் மலர்ந்து தேன்சுரக்கும் என்பதாம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

அலையார்புனலை நீத்தவருந் தேரருமன்பு செய்யா
நிலையாவண்ண மாயம்வைத்த நின்மலன் றன்னிடமாம்
மலைபோற்றுன்னி வென்றியோங்கு மாளிகை சூழ்ந்தயலே
சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்றிருப் பூவணமே.

பொழிப்புரை :

அலைகள் வீசும் நீரில் நீராடாது அதனைத் துறந்த சமணரும் புத்தரும் புண்ணியப் பேறு இன்மையால் அன்பு செய்து வழிபாட்டில் நிலைத்திராது அவர்கட்கு மாயத்தை வைத்த குற்றமற்ற சிவபிரானுக்குரிய இடம், வெற்றி மிக்க மாளிகைகள் மலைபோல் நெருங்கி அமைய அவற்றைச் சூழ்ந்து கருங்கல்லால் ஆகிய மதில்கள் அழகு செய்யும் அழகிய திருப்பூவணமாகும்.

குறிப்புரை :

புத்தர் சமணர் அன்புசெய்து நிலையாதவண்ணம் அவர்கட்கு மாயையைக்கூட்டிய நின்மலன் இடம் இது என்கின்றது. புனலை நீத்தவர் - நீராடாதே அதனை விலக்கிய சமணர். தேரர் - புத்தர். துன்னி - நெருங்கி. சிலையார் புரிசை - மலையை ஒத்த மதில். பரிசு - அழகு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்றிருப் பூவணத்துப்
பெண்ணார்மேனி யெம்மிறையைப் பேரிய லின்றமிழால்
நண்ணாருட்கக் காழிமல்கு ஞானசம்பந்தன் சொன்ன
பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வது வானிடையே.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய மதில்களும் மாடவீடுகளும் நிறைந்த அழகிய திருப்பூவணத்தில் பெண்ணொரு பாகனாம் திருமேனியோடு விளங்கும் எம் தலைவனாகிய சிவபிரானைப் பெருமை பொருந்திய இனிய தமிழால் பகைவராய புறச்சமயத்தவர் அஞ்சுமாறு சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் சொல்லிய இவ்விசைத் தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் ஓதவல்லவர் வாழ்வது வான் உலகமாகும்.

குறிப்புரை :

இந்தப் பண்ணார் பாடல் வல்லார் வானுலகிற் பயில் வார் என்கின்றது. திண் - வலிமை. நண்ணார் - பகைவர். உட்க - அஞ்ச.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

அடையார்தம் புரங்கண்மூன்று மாரழலில் லழுந்த
விடையார்மேனி யராய்ச்சீறும் வித்தகர் மேயவிடங்
கடையார்மாட நீடியெங்கும் கங்குல் புறந்தடவப்
படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

பகைவராய அசுரர்களின் திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில் அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம், வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்த திருப்பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

திரிபுரங்கள் தீயிலழுந்தச் சீறும் வித்தகர் இடம் பல்லவனீச்சரம் என்கின்றது. அடையார் - பகைவர். விடையார் மேனியர் - இடபத்தில் ஆரோகணித்த திருமேனியார். கங்குல் - ஆகாயம். படை- ஆயுதம் பல அடுக்கு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

எண்ணாரெயில்கண் மூன்றுஞ்சீறு மெந்தைபிரா னிமையோர்
கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல் நண்ணுமிடம்
மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந் தேனருந்திப்
பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

பகைவராய அசுரர்களின் கோட்டைகளாய திரி புரங்களைச் சினந்தழித்த எந்தையாகிய பெருமானும், தேவர்களின் கண்களாய் விளங்குவோனும், இவ்வுலகைக் காக்கின்ற கண்ணுதலும் ஆகிய சிவபிரான் மேவிய இடம், நன்கு அமைக்கப்பட்ட சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசைபாடும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

முப்புரஞ்சீறிய முதல்வன் தேவர்கட்குக் கண்ணாய் உலகம்காக்கும் கண்ணுதலும் ஆவான்; அவனது இடம் இது என்கின்றது. எண்ணார் - பகைவர். கண்ணுதல் - சிவன். மண் - பூமி. மண்ணுதல் - உண்டாக்குதல். பண் ஆர் செய்யும் - பாடும்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

மங்கையங்கோர் பாகமாக வாணில வார்சடைமேற்
கங்கையங்கே வாழவைத்த கள்வ னிருந்தவிடம்
பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர் பொய்கையின்மேற்
பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு ஒளி பொருந்திய பிறை தங்கிய சடையின்மேல் கங்கை நங்கையையும் வாழ வைத்துள்ள கள்வனாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மிக்க ஆழமான கடலினது வெள்ள நீரால் தானும்மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்துள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

மங்கை ஓர்பாகத்து இருக்கவும் சடைமேற் கங்கையை யும் வைத்த கள்வனிடம் இது என்கிறது. வாள் நிலவு - ஒளி பொருந்திய நிலவு. பொங்கு அயஞ்சேர் புணரி - மிகுந்த பள்ளம் பொருந்திய கடல். அயம் - பள்ளம். `அயமிழியருவி` என்னுங்கலியிலும் இப் பொருட்டாதல் தெளிக. பங்கயம் - தாமரை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்திய மார்பகலம்
நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன் மன்னுமிடம்
போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசை பாடலினாற்
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

மாலையாகக் கட்டிய கொன்றை மலர்கள் பொன் போல் விளங்குமாறு சூட்டியுள்ள மார்பின் பரப்பில், நீரில் குழைத்த சாம்பலைச் சந்தனத்தைப் போலப் பூசியுள்ள குற்றமற்ற சிவபிரான் எழுந்தருளிய இடம், போர்செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம்போல் திரண்டுள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

கொன்றைசாத்திய மார்பில் நீறும் சாந்தும் சாத்திய நிமலனிடம், மாதரும் மைந்தரும் பாடலினால் பூமிக்கண் இன்பம் நுகரும் தலமாகியது இது என்கின்றது. தாரார் கொன்றை - மாலையாகவே பூக்கும் கொன்றை. போரார் வேற்கண் - போரில் பொருந்திய வேல்போலும் கண்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

மைசேர்கண்ட ரண்டவாணர் வானவ ருந்துதிப்ப
மெய்சேர்பொடிய ரடியாரேத்த மேவி யிருந்தவிடங்
கைசேர்வளையார் விழைவினோடு காதன்மை யாற்கழலே
பைசேரரவா ரல்குலார்சேர் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

கருமை நிறம் பொருந்திய கண்டத்தினை உடைய வரும், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் துதிக்க மேனிமிசைத் திருநீறுபூசியவனும் ஆகிய நிமலன், அடியவர் புகழ மேவியிருந்தருளும் இடம், கைகளில் மிகுதியான வளையல்களை அணிந்தபாம்பின் படம் போன்ற அல்குலை உடைய இளமகளிர் விழைவோடும் காதலோடும் திருவடிகளை வழிபடச் சேர்கின்ற திருப்பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

நீலகண்டரும், நீறு பூசியவருமாகிய சிவபெருமான் அடியார்கள் ஏத்த அமர்ந்திருந்த இடம் இத்தலம் என்கின்றது. மை - விடம். மேவி - விரும்பி. கைசேர் வளையாராகிய அல்குலார், ஆசையோடும் காதலோடும் கழலைச்சேரும் பல்லவனீச்சரம் எனக் கூட்டிப் பொருள் காண்க. விழைவு - பற்று. காதல் - பற்றுமுற்றி இன்றியமையாத் தன்மையால் எழுந்த விருப்புள்ளம். பை - படம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

குழலினோசை வீணைமொந்தை கொட்ட முழவதிரக்
கழலினோசை யார்க்கவாடுங் கடவு ளிருந்தவிடஞ்
சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

குழலோசைக்கு ஏற்ப வீணை, மொந்தை ஆகியன முழங்கவும், முழவு ஒலிக்கவும், காலில் அணிந்துள்ள வீரக்கழல் நடனத்துக்கு ஏற்பச்சதங்கை போல இசைக்கவும் ஆடும் கடவுளாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், சுழிகள் பொருந்திய கடலில் காவிரி வெள்ளநீர் தெளிந்த நீரை முகந்து எறியுமாறு விளங்குவதும், பழியற்ற நன்மக்கள் வாழ்வதுமான புகார் நகரிலுள்ள பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

குழல் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க ஆடுங்கடவுள் அமர்ந்த இடம் இத்தலம் என்கின்றது. மொந்தை என்பது ஒருவகைப் பறையாதலின் கொட்ட என்றார். பயில் புகார் - பழகுகின்ற காவிரிப் பூம்பட்டினம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடி விண்ணோர்
வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன் மகிழ்ந்தவிடம்
மந்தலாய மல்லிகையும் புன்னைவளர் குரவின்
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

தகுதி இல்லாத மிக்க கூட்டத்தை உடைய தக்கன் என்னும் வேந்தன் செய்த வேள்வியை அடியோடு அழித்துத் தேவர்கள் எல்லோரும் வந்து தன்னை விரும்பி வழிபட நின்ற பெருவீரனாகிய சிவபிரானது இடம், மென்மையான மல்லிகை, வளர்ந்து பரவியுள்ள புன்னை குராமரம் ஆகியவற்றில் படர்ந்துள்ள, காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

தக்கன் யாகத்தை அழித்துத் தேவரெல்லாரும் வழிபட நின்ற இறைவனது இடம் இத்தலம் என்கின்றது. மந்தல் - மென்மை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

தேரரக்கன் மால்வரையைத் தெற்றி யெடுக்கவவன்
றாரரக்குந் திண்முடிக ளூன்றிய சங்கரனூர்
காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலா முணரப்
பாரரக்கம் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

சிறந்த தேரை உடைய இராவணன் பெருமை மிக்க கயிலை மலையைக் கைகளைப்பின்னி அகழ்ந்து எடுக்க, மாலைகள் அழுத்தும் அவனது திண்ணிய தலைகள் பத்தையும் கால் விரலால் ஊன்றி நெரித்த சங்கரனது ஊர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையதுமாகிய, புகார் நகரைச் சேர்ந்த பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

இராவணன் முடிகள்நெரியத் தாளூன்றிய சங்கரன் ஊர் இத்தலம் என்கின்றது. தெற்றி எடுக்க - கைகளைப் பின்னி எடுக்க. தார் அரக்கும் - மாலைகள் அழுத்துகின்ற, அரக்குதல் - பதித்தல். கார் அரக்கும் - மேகங்கள் முகக்கும். பாரர் அக்கம் பயில் புகார் - மக்கள் உருத்திராக்கங்களைப் பயில்கின்ற காவிரிப்பூம்பட்டினம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

அங்கமாறும் வேதநான்கு மோதுமய னெடுமால்
தங்கணாலு நேடநின்ற சங்கரன் றங்குமிடம்
வங்கமாரு முத்தமிப்பி வார்கட லூடலைப்பப்
பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும், முறையே ஓதும் பிரமனும், திருமாலும் தம் கண்களால் தேருமாறு உயர்ந்து நின்ற சங்கரன் தங்கும் இடம், மரக்கலங்களை உடைய கடல் முத்துக்களையும் சங்கங்களையும் அலைக்கரங்களால் அலைத்துத் தருவதும், குற்றமற்றோர் வாழ்வதுமாய புகாரில் அமைந்துள்ள பல்லவனீச்சரம் ஆகும்.

குறிப்புரை :

வேதனும் நெடுமாலும் கண்ணால் தேடநின்ற பெரு மான் உறையுமிடம் இது என்கின்றது. கண்ணாலும் என்ற உம்மை கருத்தால் தேட வேண்டியதை அவர்கள் அறியாமையால் கண்ணால்தேட, அதற்கும் வெளிப்பட்டு நின்ற இறைவன் என உயர்வைச் சிறப்பித்து நின்றது. வங்கம் - கப்பல்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நக வேதிரிவார்
கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறி யாதவிடந்
தண்டுடுக்கை தாளந்தக்கை சார நடம்பயில்வார்
பண்டிடுக்கண் டீரநல்கும் பல்லவ னீச்சரமே.

பொழிப்புரை :

அளவுக்கு மீறி உண்டு ஆடையின்றி ஊரார் சிரிக்கத் திரியும் சமணர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை மெய்யில் போர்த்து உழலும் புத்தர்களும் கண்டு அறியாத இடம், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவை பொருந்த நடனம் புரிபவராய், அடியவர் இடுக்கண்களைப் பண்டு முதல் தீர்த்தருளிவரும் பரமனார் எழுந்தருளிய பல்லவனீச்சரமாகும்.

குறிப்புரை :

நிறையத்தின்று ஆடையின்றியே திரியும் சமணரும், ஆடையைப் போர்த்துத் திரியும் புத்தரும் கண்டறியாத இடம் இது என்கின்றது. முன்னிரண்டடியிலுள்ள உடுக்கை என்பது ஆடை என்ற பொருளிலும், மூன்றாமடியில் உள்ள உடுக்கை என்பது வாத்தியம் என்னும் பொருளிலும் வந்துள்ளன. இடுக்கண் - துன்பம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவ னீச்சரத்தெம்
அத்தன்றன்னை யணிகொள்காழி ஞானசம் பந்தன்சொற்
சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினை நோயிலராய்
ஒத்தமைந்த வும்பர்வானி லுயர்வினொ டோங்குவரே.

பொழிப்புரை :

பக்தர்கள் போற்றும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விளங்கும் எம் தலைவனாகிய இறைவனை அழகிய சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செழுந்தமிழை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீ வினையும் நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர்.

குறிப்புரை :

ஒத்தமைந்த - தம் இயல்புகளுக்கு ஏற்ப அமைந்த. சம்பந்தன் பல்லவனீச்சரத்துப் பல்லவனநாதரைத் தோத்திரித்த இப்பாடல் பத்தையும் மனம் ஊன்றிச் சொல்லும் மக்கள் தீவினையும் நோயும் இலராய் வானுலகில் வாழ்வார் என்கின்றது.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

பங்கமேறு மதிசேர்சடையார் விடையார் பலவேதம்
அங்கமாறு மறைநான்கவையு மானார் மீனாரும்
வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கே நுனைமூக்கின்
சங்கமேறி முத்தமீனுஞ் சண்பை நகராரே.

பொழிப்புரை :

மீன்கள் நிறைந்ததும், கப்பல்களை உடையதும் ஆன கடலிடையே வாழும் பரதவர்கள் வீட்டு முற்றங்களில் கூரிய மூக்கினை உடைய சங்குகள் முத்துக்களை ஈனுகின்ற கடற்கரை ஊராகிய சண்பை நகரில் மேவிய இறைவர் கலை குறைந்த பிறைமதி சேர்ந்த சடையினர். விடை ஊர்தியர், பலவாய் விரிந்த நான்கு வேதங்களாகவும் ஆறு அங்கங்களாகவும் விளங்குபவர்.

குறிப்புரை :

கூன்பிறையணிந்த சடையாரும், விடையாரும், வேதம் அங்கம் ஆனாரும் சண்பைநகரார் என்கின்றது. பங்கம் - கூனல்; குற்றம் என்பாரும் உளர். சிவன்சடை சேரத்தகும் பிறைக்குக் குற்றமின்மை தெளிவு. வங்கம் -தோணி. பரதர் - செம்படவர். நுனைமூக்கின் சங்கம் - கூரிய மூக்கினையுடைய சங்குகள். கடல் வாழ்சங்கு பரதர் மனையேறி முத்தமீனும் என்றது பிறவிக் கடலில் ஆழ்வாரும் வினைநீங்கும் காலம்வரின் சண்பைநகர் சார்ந்து பேரின்பம் எய்துவர் என்று குறிப்பித்தவாறு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர் சுடர்க்கமலப்
போதகஞ்சேர் புண்ணியனார் பூத கணநாதர்
மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில் விண்ணார்ந்த
சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பை நகராரே.

பொழிப்புரை :

வானகத்தே திரிந்து வாழும் சாதகப் பறவைகள் உண்ணுமாறு மேன்மை பொருந்திய மேகங்கள் பெய்த மழை நீர் அழகிய குளிர்ந்த சோலைகளில் விளங்கும் தெங்கு கமுகு இவற்றின் பாளைகளில் சேரும் சண்பை நகர் இறைவர், சூது ஆடு கருவி போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். ஒளி பொருந்திய தாமரை மலரைச் சூடிய புண்ணிய வடிவினர். பூதகணங்களின் தலைவர்.

குறிப்புரை :

உமையொருபாகர், செங்கமலப்போதில் வீற்றிருக்கும் புண்ணியனார் சண்பையார் என்கின்றது. சூதகம் சேர்- சூதாடுங் காயை ஒத்த. பங்கர் - பாகத்தையுடையவர். சுடர் கமலப் போது அகஞ்சேர் - ஒளிவிடுகின்ற செந்தாமரையில் எழுந்தருளியுள்ள. மேதகம் - மேன்மை. விண்ணார்ந்த - மேகநீரையுண்ட. சாதகம் -சாதகப்புள். பாளை நீர்சேர் - தென்னை கமுகு முதலியவற்றின் பாளைகளில் தேன் சேர்ந்த.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீல கண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே.

பொழிப்புரை :

எல்லோரும் புகழத்தாரா அன்னம் அன்றில் முதலிய பறவைகள் தம் திருவடிகளை வணங்கிப் போற்றுமாறு தகரம் புன்னை தாழை முதலிய மரங்களின் பொழில்கள் சூழ்ந்த சண்பைநகரில் விளங்கும் இறைவர், மகரமீன் வடிவு எழுதப்பட்டு ஆடும் கொடியை உடைய மன்மதனது உடலை நீங்குமாறு செய்து, அழகில் தன்னொப்பில்லாத அவனுடைய மனைவி வேண்ட அவள் கண்களுக்கு மட்டும் மன்மதனைப் புலனாகுமாறு அருள் செய்த நீலகண்டர் ஆவார்.

குறிப்புரை :

மன்மதனை எரித்து, அவன் மனைவியாகிய இரதிக்கு அருள் செய்தவன் சண்பையான் என்கின்றது. மகரத்து ஆடு கொடி யோன் - மகரமீன் எழுதிய வெற்றி பொருந்திய கொடியுடையோன். நிகர் ஒப்பு: ஒருபொருட்பன்மொழி. தேவி என்றது இரதியை. அவளுக்கு மட்டும் மன்மதனை எழுப்பித் தந்ததை உணர்த்துவது. தாரா - சிறுநாரை. பகன்றில் - அன்றில். தகரப்புன்னை - தகரமும் புன்னையும்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ் சதுவுண்ட
தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர் திகழ்சுத்திக்
கையர்கட்டங் கத்தர்கரியி னுரியர் காதலாற்
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பை நகராரே.

பொழிப்புரை :

அன்போடு சைவர்களும் பாசுபதர்களும் வழிபடும் சண்பை நகர் இறைவர். வலிமை செறிந்த அசுரர்களும் தேவர்களும் கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சு முழுவதையும் உண்டருளிய தெய்வமாவார். அவர் சிவந்த திருமேனி உடையவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். சுத்தியைக் கொண்டகையினர். மழுவினர் - யானைத் தோலைப் போர்த்தியவர்.

குறிப்புரை :

நஞ்சமுது செய்த தெய்வர், செய்யர், கண்டங்கரியர், சுத்திக்கையர், மழுப்படையர் சண்பைநகரார் என அடையாளம் அறிவிக்கின்றது. கட்டங்கம் - மழு. சுத்தி - திருநீறு கொடுப்பதற்குத் தலையோட்டினால் இப்பிவடிவமாகச் செய்யப்பட்டது.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுத மருள்செய்த
குலமார்கயிலைக் குன்றதுடைய கொல்லை யெருதேறி
நலமார்வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை
சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பை நகராரே.

பொழிப்புரை :

மக்கட்கு நன்மை தரும் மரமாகிய தென்னையிலிருந்து வெண்மை நிறத்தோடு வெளிவரும் மணம் மிக்க பாளை கபடம் மிக்க யானையின் மருப்புப் போலத் தோன்றும் சோலைவளம் மிக்க சண்பைநகர் இறைவர் மரக்கலங்கள் நிறைந்த கடலிடையே தோன்றிய விடத்தை உண்டு அமரர்கட்கு அமுதம் அருள் செய்தவர். மலைக் குலங்களில் மேம்பட்ட கயிலை மலைக்கு உரியவர். முல்லை நிலத்து ஆனேற்றை ஊர்ந்து வருபவர்.

குறிப்புரை :

தான் நஞ்சுண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்தவர் சண்பையார் என்கின்றது. கொல்லை எருது - முல்லை நிலத்து இடபம். நாளிகேரம் - தென்னை. நாளிகேரம் வெள்ளை விரியா நறும்பாளை கரியின் மருப்புக்காட்டும் எனக்கூட்டுக. கரியின் மருப்பு - யானைக் கொம்பு. சலம் - வஞ்சனை. யானைக் கபடம் என்பது வழக்காதலின் சலமார்யானை என்றார்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

மாகரஞ்சே ரத்தியின்றோல் போர்த்து மெய்ம்மாலான
சூகரஞ்சே ரெயிறுபூண்ட சோதியன் மேதக்க
ஆகரஞ்சே ரிப்பிமுத்தை யந்தண் வயலுக்கே
சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பை நகராரே.

பொழிப்புரை :

கடலில் வாழும் சிப்பிகள் தந்த முத்துக்களை அழகியதாய்க் குளிர்ந்த வயல்களுக்குக் கடல் அலைகள் உந்தி வந்து சேர்க்கும் சண்பை நகர் இறைவன் நீண்ட கையினை உடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துள்ள திருமேனியில் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான பன்றியின் பல்லை அணிகலனாகப் பூண்ட ஒளி வடிவினன்.

குறிப்புரை :

யானைத் தோலைப் போர்த்துப் பன்றிக் கொம்பை அணிந்த சோதியான் சண்பையான் என்கின்றது, மா கரம் - பெரிய கை. அத்தி - யானை. சூகரம் - பன்றி. ஆகரம் - கடல். திரைகள் முத்தை வயலுக்கே உந்தும் சண்பை என்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

* * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * *

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

இருளைப்புரையு நிறத்திலரக்கன் றனையீ டழிவித்து
அருளைச்செய்யு மம்மானேரா ரந்தண் கந்தத்தின்
மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார் திரைக்கையாற்
றரளத்தோடு பவளமீனுஞ் சண்பை நகராரே.

பொழிப்புரை :

அழகிய மணத்தோடு மருள் என்னும் பண்ணை வண்டுகள் பாட, கடல் மலை போன்ற அலைக் கைகளால் முத்துக்களையும் பவளங்களையும் கொணர்ந்து சேர்க்கும் சண்பைநகர் இறைவன் இருள் போன்ற கரியநிறத்தினன் ஆகிய இராவணனின் வீரத்தை அழித்து அவன் உணர்ந்து வருந்த அருள் செய்த தலைவன்.

குறிப்புரை :

இராவணனை ஈடழித்து, ஈடேற்றும் அம்மான் இவர் என்கின்றது. ஈடு - பெருமை. ஏரார் - அழகிய. மருளைச்சுரும்பு பாடி - மருள் என்னும் பண்ணை வண்டு பாடி. அளக்கர் - கடல். வரை ஆர் திரை - மலையொத்த அலை. தரளம் - முத்து.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

மண்டான்முழுது முண்டமாலு மலர்மிசை மேலயனும்
எண்தானறியா வண்ணநின்ற விறைவன் மறையோதி
தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத் தாதின்மேற்
பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பை நகராரே.

பொழிப்புரை :

தண்டிலே மலர்ந்த குவளை மலர்களின் தேனை உண்டு தாமரை மலர்களில் நிறைந்துள்ள மகரந்தங்களில் தங்கி வண்டுகள் பண்பாடும் சண்பை நகர் இறைவன் உலகங்கள் முழுவதையும் உண்ட திருமால் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகன் ஆகியோர் மனத்தாலும் அறிய ஒண்ணாதவாறு நின்றவன் வேதங்களை ஓதி வெளிப்படுத்தியவன்.

குறிப்புரை :

மண்ணுண்ட மாலும் மலரோனும் அறியாவண்ணம் நின்ற இறையோன் சண்பைநகரார் என்கின்றது. எண்தான் அறியா - எள்ளளவும் அறியாத. வண்டு குவளைத் தேனை அருந்தித் தாமரையின் மகரந்தத்தை உண்டு பாடும் சண்பைநகர் என்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும்
நீதியாகக் கொண்டங்கருளு நிமல னிருநான்கின்
மாதிசித்தர் மாமறையின் மன்னிய தொன்னூலர்
சாதிகீத வர்த்தமானர் சண்பை நகராரே.

பொழிப்புரை :

அணிமா முதலிய எண்வகைச் சித்திகளில் வல்ல சித்தர், பழமையான நூல்களாகிய வேதப் பொருள்களில் நிலைபெற்று நிற்பவர், சகாரம் முதலாகப் பாடப்படும் பாட்டில் நிலைத்திருப்பவர் ஆகிய சண்பைநகரார், புத்தர்களும் சமணர்களும் புகழ் அல்லவற்றைக் கூறினாலும் அவற்றைப் புகழ் மொழிகளாகக் கொண்டருளும் நிமலர்.

குறிப்புரை :

புறச் சமயிகள் இகழ்ந்து பேசினாலும் அவற்றைப் புகழாகக் கொண்டருளும் சண்பைநகரார் இவர் என்கின்றது. போதியார் - புத்தர். பிண்டியார் - சமணர். மாதி சித்தர் - அணிமாதி சித்திகளை உடையவர். சாதி கீத வர்த்தமானர் - சகாரம் முதலாகப் பாடப்படுகின்ற பாட்டில் நிலைத்திருப்பவர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

வந்தியோடு பூசையல்லாப் போழ்தின் மறைபேசிச்
சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பை நகர்மேய
அந்திவண்ணன் றன்னையழகார் ஞானசம் பந்தன்சொற்
சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே.

பொழிப்புரை :

அடியவர்கள் வந்தனையோடு பூசை செய்யும் காலங்கள் அல்லாத ஏனைய பொழுதுகளில் வேதப் பொருள்களைப் பேசியும், மூன்று சந்தியா காலங்களிலும் தியானம் சமாதி நிலையில் நின்று வழிபடும் சண்பைநகர்மேய, மாலைக்காலம் போன்ற செம்மேனியனாகிய இறைவனை, ஞானசம்பந்தன் அருளிய அழகிய இப்பதிகப் பொருளை மனத்தில் நிறுத்திப் பாடவல்லவர் சிவகதி சேர்வர்.

குறிப்புரை :

சண்பைநகர்ச் சிவபெருமானைப் பற்றிச் சொன்ன ஞானசம்பந்தனது சொல்லைத் தியானத்தோடு பாடவல்லார்கள் சிவகதி சேர்வர் என்கின்றது. வந்தி - வந்தித்தல். வந்தி - அடியவருடைய வந்தித்தல், முதல் நிலைத்தொழிற்பெயர். மறை - இரகசியம். சந்தி - காலை மாலை. இறைவன் பூசைக்காலமல்லாத காலங்களில் அம்மையோடு, வேதவிசாரணை செய்து சந்தியாகாலங்களில் சமாதி செய்கின்றார் என்ற அநுபவம் அறிவிக்கப்படுகிறது.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார்
நாதாவெனவு நக்காவெனவு நம்பா வெனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.

பொழிப்புரை :

நாதனே எனவும், நக்கனே நம்பனே எனவும் கூறி நின்று தம் திருவடிகளைப்பரவும் அடியவர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் திருப்பழனத்து இறைவர் வேதங்களை ஓதிக் கொண்டு மார்பில் வெண்மையான பூணூலையணிந்து கொண்டு வெண்மையான எருதின் மிசை ஏறிப் பூதகணங்கள் புடைசூழப் புலியின் தோலை அணிந்து பொலிவுபெற வருவார்.

குறிப்புரை :

நாதா நக்கா எனத் தோத்திரிப்பவர்களின் பாவந் தீர்ப்பவர் பழனநகரார் என்கின்றது. நக்கன் - நிர்வாணி. நம்பன் - நம்பப்படத்தக்கவன்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையு முடையார் காலனைப்
புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப் புறந்தாளால்
எண்ணாதுதைத்த வெந்தைபெருமா னிமவான் மகளோடும்
பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழன நகராரே.

பொழிப்புரை :

மது உண்ட வண்டுகள் பண்பாடி ஒலி செய்யும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருப்பழனநகரில் இமவான் மகளாகிய பார்வதிதேவியோடு எழுந்தருளிய இறைவர் இயல்பாக உள்ள இரண்டு கண்களுக்கு மேலாக நெற்றியில் ஒரு கண்ணையும், சடைமுடிமேல் பிறையையும் உடையவர். காலனை உதைத்து, அவன் உடலில் தோன்றிய புண்களிலிருந்து குருதி வெள்ளம் ஆறாக ஓடுமாறு, அவனை ஒரு பொருளாக மதியாது புறந்தாளால் அவன் அழிய உதைத்த எந்தை பெருமானார் ஆவார்.

குறிப்புரை :

காலனை இரத்த ஆறு பெருக்கெடுத்தோடப் புறந்தா ளால் உதைத்த பெருமான் பழனநகரார் என்கின்றது. இதுவும் ஆபத்சகாயர் என்ற இத்தலத்திறைவனுக் கேற்ற செயலாதல் அறிக. கண்மேல் கண் - நெற்றிக்கண். புண்ணார் உதிரம் - புண்ணை வழியாகக்கொண்டு வெளிப்படுகின்ற இரத்தம். பொன்ற - இறக்க. எண்ணாது - அவனை ஒரு பொருளாக மனத்து எண்ணாது.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல் விழிகட்பேய்
உறையுமயான மிடமாவுடையா ருலகர் தலைமகன்
அறையுமலர்கொண் டடியார்பரவி யாடல் பாடல்செய்
பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழன நகராரே.

பொழிப்புரை :

அடியவர்கள் உயர்ந்தனவாகப் போற்றப்படும் நறு மலர்களைக் கொண்டுவந்து சாத்தி, பரவி, ஆடல் பாடல்களைச் செய்தும் பறை, சங்கு ஆகியவற்றை முழக்கியும், பணிந்தும் இடைவிடாது வழிபடும் திருப்பழனநகர் இறைவர் சடைமேல் பிறையையும், கங்கையையும் உடையவர். பறை வாய் போன்ற வட்டமான, விழிகளையுடைய பேய்கள்வாழும் மயானத்தைத் தமக்கு இடமாகக்கொண்டவர். அனைத்துலக மக்கட்கும் தலைவர்.

குறிப்புரை :

கங்கையும் பிறையும் சூடியவர், மயானத்துறைபவர் பழனத்தார் என்கின்றது. அறையும் - ஒலிக்கின்ற. அடியார் பரவி, பாடல்செய் ஓவாப்பழனம் எனக் கூட்டுக.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

உரமன்னுயர்கோட் டுலறுகூகை யலறு மயானத்தில்
இரவிற்பூதம் பாடவாடி யெழிலா ரலர்மேலைப்
பிரமன்றலையி னறவமேற்ற பெம்மா னெமையாளும்
பரமன்பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே.

பொழிப்புரை :

திருப்பழன நகர் இறைவர் வலிமை பொருந்திய உயரமான மரக்கிளைகளில் அமர்ந்து ஒலி செய்யும் கூகைகள் அலறும் மயானத்தே நள்ளிருளில் பூதங்கள் பாட ஆடியும் அழகிய தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலையோட்டில் பலியேற்றும் திரு விளையாடல் புரியும் பெருமானார் எம்மை ஆளும் பரமர் ஆவார். அவர் பகவன், பரமேச்சுவரன் என்பனவாகிய பெயர்களை உடையவர்.

குறிப்புரை :

மயானத்துப் பூதம் பாட, நள்ளிருளில் நடமாடுபவர் இந்நாதர் என்கின்றது. உரம் - வலிமை. உலறு கோட்டு - வற்றிய கிளைகளில். கூகை - கோட்டான். அலர் மேலைப் பிரமன் - தாமரை மலர்மேல் உள்ள பிரமன். நறவம் - கள். தேன்; என்றது உணவு என்னும் பொதுமையில் நின்றது. பரமன் - உயர்ந்தவற்றிற்கெல்லாம் உயர்ந்தவன். பகவன் - ஆறு குணங்களையுடையவன்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

குலவெஞ்சிலையான் மதின்மூன்றெரித்த கொல்லே றுடையண்ணல்
கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற் காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண் டெதிருந்திப்
பலவின்கனிக டிரைமுன்சேர்க்கும் பழன நகராரே.

பொழிப்புரை :

தோகைகளையுடைய மயில்கள், குயில்கள் வாழ் வதும், கடல்போல் பரந்து விரிந்த காவிரி ஆற்றின் அலைகள் மாங்கனிகளையும், பலாவின் கனிகளையும் ஏந்திக் குதித்து உந்தி வந்து கரையிற் சேர்ப்பதுமாகிய திருப்பழனநகர் இறைவர், உயர்ந்த கொடிய மலை வில்லால் அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தவர். பகைவரைக் கொல்லும் ஆனேற்றையுடைய அண்ணல் ஆவார்.

குறிப்புரை :

வில்லால் திரிபுரமெரித்த சிவன் பழனத்தான் என் கின்றது. பின்னிரண்டடிகளில் கடல்போன்ற காவிரியின் அலைகள் மாங்கனிகளையும் பலாக்கனிகளையும் எதிர் உந்திச்சேர்க்கும் பழனம் என வளங் கூறப்பெற்றுள்ளது. கடல்போற் காவேரி என்றது வற்றாமையும் பரப்பும்பற்றி. கலவம் - தோகை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

வீளைக்குரலும் விளிச்சங்கொலியும் விழவின் னொலியோவா
மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியா மதிளெய்தார்
ஈளைப்படுகி லிலையார்தெங்கிற் குலையார் வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழன நகராரே.

பொழிப்புரை :

ஈரத்தன்மையுடைய ஆற்றுப்படுகைகளில் வளர்ந்த பசுமையான மட்டைகளோடு கூடிய தென்னை மரங்களின் குலைகளில் விளைந்த தேங்காயும், வாழை மரத்தில் பழுத்த வாழைப்பழங்களும், பாளைகளையுடைய கமுகமரங்களில் பழுத்தபாக்குப் பழங்களும் விழுகின்ற சோலைகளால் சூழப்பட்ட திருப்பழனநகர் இறைவர். அழைக்கும் சீழ்க்கை ஒலியும் அழைக்கும் சங்கொலியும், விழவின் ஆரவாரங்களும் ஓயாத ஊரகத்தே சென்று மூளை பொருந்திய தலையோட்டில் பலியேற்பவர். அடியவர்கள் போற்றி வாழ்த்த முப்புரங்களையும் அழித்தவராவார்.

குறிப்புரை :

கையில் கபாலங்கொண்டு அடியார்கள் வழிபடநின்ற இறைவன் இந்நகரார் என்கின்றது. வீளைக்குரல் - அழைக்கும் குரல். மூளைத்தலை கொண்டு - மூளையோடுகூடிய பிரமகபாலத்தைக் கொண்டு. ஈளைப் படுகு - உலராத சேற்றோடு கூடிய ஆற்றுப்படுகை. படுகையில் தென்னை, வாழை, கமுகு இவற்றின் பழம் விழுகின்ற பழனம் என வளங்கூறியது.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார் திருமேனி
செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்த வகலத்தார்
கையாடலினார் புனலான்மல்கு சடைமேற் பிறையோடும்
பையாடரவ முடனேவைத்தார் பழன நகராரே.

பொழிப்புரை :

திருப்பழனநகர் இறைவர் பொய்கூறாத அடியவர் களால் முறைப்படி ஏத்திப் புகழப்பெறுவர். சிவந்த திருமேனி உடையவர். கரிய கண்டம் உடையவர். முப்புரிநூல் அணிந்த மார்பினை உடையவர். கைகளை வீசி ஆடல் புரிபவர். கங்கை சூடிய சடை முடி மீது பிறையையும், படப்பாம்பையும் ஒருசேர வைத்தவர்.

குறிப்புரை :

உண்மை அடியார்களால் வணங்கி வாழ்த்தப்படுமவர் பழனத்தார் என்கின்றது. பொய்யாமொழியார் - உண்மையே பேசும் அடியார்கள். மிடற்றார் - கழுத்தினையுடையவர். அகலத்தார் - மார்பினையுடையவர். பை - படம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

மஞ்சோங்குயர முடையான்மலையை மாறா யெடுத்தான்றோள்
அஞ்சோடஞ்சு மாறுநான்கு மடர வூன்றினார்
நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான் வம்பாரும்
பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழன நகராரே.

பொழிப்புரை :

மணம்கமழும் புதிய தாமரை மலர்களையுடைய வயல்களால் சூழப்பட்ட திருப்பழனநகர் இறைவர், வானகத்தே விளங்கும் மேகங்கள் அளவு உயர்ந்த தோற்றம் உடைய இராவணன் தனக்கு எதிராகக் கயிலைமலையைப் பெயர்க்க அவனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். நஞ்சை உண்ட கண்டத்தர், சுடலையில் எரிந்த சாம்பலை அணிந்த பெருமானாகிய சிவனார் ஆவார்.

குறிப்புரை :

இராவணனுடைய இருபது தோள்களும் வருந்த ஊன்றியவர் இவர் என்கின்றது. மஞ்சோங்கு உயரம் உடையான் - ஆகாயம் அளாவிய உயரம் உடையவன். மாறாய் - விரோதித்து. அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் - இருபது. அடர - நெருங்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன் சடையார்விண்
முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந் தாவிய
நெடியானீடா மரைமேலயனு நேடிக் காணாத
படியார்பொடியா டகலமுடையார் பழன நகராரே.

பொழிப்புரை :

திருப்பழனநகர் இறைவர் மணங்கமழ்வதும் வண்டுகள் மொய்ப்பதுமான கொன்றை மாலை கமழ்கின்ற சிவந்த சடைமுடியையுடையவர். விண்ணளாவிய திருமுடியோடு இவ்வுலகம் முழுவதையும் மூவடியால் அளந்த நெடியோனாகிய திருமாலும், நீண்ட தண்டின்மேல் வளர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் தேடிக்காணமுடியாத தன்மையை யுடையவர். திருநீற்றுப் பொடியணிந்த மார்பினையுடையவர்.

குறிப்புரை :

உலகத்தை மூவடியால் அளந்த திருமாலும் அயனும் தேடிக்கண்டுபிடிக்கமுடியாத திருநீற்றழகர் இவர் என்கின்றது. கடி - மணம். சுரும்பு - வண்டு. விண்முடியாப்படி - விண்ணை முடிவாகக் கொண்ட பூமி. நெடியான் - திருவிக்கிரமனாகிய திருமால். நேடி - தேடி. காணாதபடி ஆர் பொடி ஆடு அகலமுடையார் எனப் பிரித்து அவர்கள் காணாதவண்ணம் நிறைந்த திருநீற்றோடு அளாவிய மார்பை உடையவர் எனப் பொருள் காண்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக் கஞ்சியை
உண்டாங்கவர்க ளுரைக்குஞ்சிறுசொல் லோரார் பாராட்ட
வண்டாமரையின் மலர்மேனறவ மதுவாய் மிகவுண்டு
பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழன நகராரே.

பொழிப்புரை :

வண்டுகள் வளமையான தாமரை மலர்மேல் விளங்கும் தேனாகிய மதுவை வாயால் மிக உண்டு பண்பொருந்த யாழ்போல் ஒலி செய்யும் கழனிகளையுடைய திருப்பழனநகர் இறைவர், கண்களைக் கூடக் கழுவாமல் முந்திச் சென்று கலவைக் கஞ்சியை உண்பவர்களாகிய சமணர்கள் உரைக்கும் சிறு சொல்லைக்கேளாத அடியவர்கள் பாராட்ட விளங்குபவராவார்.

குறிப்புரை :

கண்களைக்கூடக் கழுவாது கஞ்சிகுடிக்கும் புறச்சமயிகளுடைய சிறுசொல்லை ஓராத அடியார்கள் பாராட்ட இருப்பவன் பழனத்தான் என்கின்றது. கலவைக்கஞ்சி - கலந்த கஞ்சி. வண்டு நறவமது உண்டு பண்கெழும யாழ்செய்யும் பழனம் எனக்கொண்டு கூட்டுக.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந் தன்னுள்
நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞான சம்பந்தன்
பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான் பழனத்தை
வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார் நல்லாரே.

பொழிப்புரை :

மூங்கில் மரங்கள் முத்துக்களோடு ஓங்கி வளர்ந்து மணம் பரப்பும் வேணுபுரநகரில் உள்ள, நாவினால் வல்ல திறன் மிக்க ஞானசம்பந்தன் திருப்பழனப் பெருமான் மீது, பேசற்கினிய பாடல்களாய்த் தன் வாயால் பாடிய இப்பதிகப்பாமாலை பத்தையும், இசையுடன் பாடவல்லவர் நல்லவர் ஆவார்.

குறிப்புரை :

பேசற்கு இனிய இப்பாடல் பத்தையும் வல்லார் நல்லார் என்கின்றது. வேய் முத்து - மூங்கிலில் தோன்றிய முத்து. விரை - மணம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல் திகழ்மார்பில்
கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர் கண்டத்தர்
இடியகுரலா லிரியுமடங்கல் தொடங்கு முனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

மேகங்களின் இடிக்குரல் கேட்டு அஞ்சிய சிங்கங்கள், நிலைகெட்டு ஓடத்தொடங்கும் சாரலை உடைய கயிலைமலையில் வாழும் இறைவர், திருநீறு பூசிய திருமேனியை உடையவர். புலியின் தோலை உடுத்தவர். முப்புரிநூல் விளங்கும் மார்பில் மணம் கமழும் கொன்றை மாலையோடு திருநீற்றையும் அணிந்தவர். விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவர். விரைந்து செல்லும் விடைமீது ஏறி அவ்விடை எழுதிய கொடி ஒன்றையே தம் கொடியாகக் கொண்டவர்.

குறிப்புரை :

கயிலைநாதனின் திருமேனிப்பூச்சு, உடை, ஆடை, அணி, ஊர்தி முதலியவற்றைக் கூறுகின்றது. பொடி - விபூதி. அதள் - தோல். பொடிகொள் உருவர் என்றது திருமேனி முழுதும் பூசப்பட்டதைக் குறித்தது. நீற்றர் என்பது மார்பில் அணிந்ததைக் குறித்தது. கறை - விடம். இடிய குரலால் - இடிக்குரலால். இரியும் - நிலைகெட்டு ஓடுகின்ற. மடங்கல் - சிங்கம். கடிய விடை - வேகமான இடபம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

புரிகொள்சடைய ரடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

பெரிய களிற்றியானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள்மிக்க கயிலைமலையில் விடம் உண்ட கரியகண்டராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும் இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர். கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமைமங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்ததேவர் தலைவராவார்.

குறிப்புரை :

இதுவும் அது. கிளிசேர்மொழி மங்கை - கிளியை யொத்த மொழியினை உடைய உமாதேவி. தெரிய - விளங்க. பரியகளிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள்கூர்ந்த கயிலை - பெரிய யானையை மலைப்பாம்பு விழுங்கி மறைய இருள்மிகுந்த கயிலை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

மாவினுரிவை மங்கைவெருவ மூடி முடிதன்மேல்
மேவு மதியு நதியும்வைத்த விறைவர் கழலுன்னும்
தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கன் முகவன்சேர்
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

திரங்கிய தோலை உடைய குரங்குகள் வாழும் காடுகளும் பொழில்களும் மலையிடையே இயற்கையாக அமைந்த சுனைகளும் சூழ்ந்த கயிலைமலைப் பெருமானார் உமையம்மை அஞ்ச யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு முடிமீது பிறை கங்கை ஆகியவற்றைக் கொண்ட இறைவர், தம் திருவடிகளை நினைந்து போற்றும் தேவர்களின் தேவர். முத்தலைச் சூலத்தை உடையவர்.

குறிப்புரை :

இதுவும் அது. மங்கை வெருவமாவின் உரிவை மூடி - உமாதேவியார் அஞ்ச யானைத்தோலைப் போர்த்து. கழல் உன்னும் - திருவடியைத் தியானிக்கின்ற. திரங்கல் முகவன் - குரங்குகள்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர் மதனன்றன்
தென்னீருருவ மழியத்திருக்கண் சிவந்த நுதலினார்
மன்னீர்மடுவும் படுகல்லறையி னுழுவை சினங்கொண்டு
கன்னீர்வரைமே லிரைமுன்றேடுங் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

இயற்கையாகத் தோன்றிய மலைக் குகைகளில் வாழும் புலிகள், பசியினால் சினமடைந்து கல்லால் இயன்ற மலைமிசை உணவாதற்குரிய இரைகளையும், அருந்துவதற்கு நிலைபெற்ற நீரையுடைய மடுக்களையும் தேடும் கயிலைமலையில் உறையும் தலைவர், கடலில் பரவித் தோன்றிய நஞ்சினைத் திரட்டி உண்டவர் மன்மதனின் அழகிய உருவம் அழியக்கண்சிவந்த நுதலை உடையவர்.

குறிப்புரை :

தென் நீர் உருவம் - அழகிய நீர்மையோடு கூடிய வடிவம். சிவந்த - கோபத்தாற் சிவந்த. மன்னீர் மடு - நிலைபெற்ற நீரினையுடைய சுனை, கல்லறை - குகை. உழுவை - புலி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர் கழல்சேர்வார்
நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித் திரண்டெங்கும்
தென்றியிருளிற் றிகைத்தகரிதண் சாரல் நெறியோடிக்
கன்றும்பிடியு மடிவாரஞ்சேர் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

இரவில் சிதறித் தனிமைப்பட்ட யானைகள் குளிர்ந்த மலைச் சாரலின் வழிகளில் விரையச்சென்று கன்றும் பிடியுமாய் இணையும் கயிலைமலைக்குரிய இறைவர். ஒருவராக இருந்தே பற்பல வடிவங்களைக் கொண்ட ஒப்பற்ற பரம்பொருளாவார். தம் திருவடிகளைஅடைய எண்ணும் அடியவர்கள் பேரின்பத்தை அடையும் விருப்போடு நாடுதற்குரியவர்.

குறிப்புரை :

ஒன்றும் பலவும் ஆய வேடத்தார் - ஒன்றாயும் விரிந்து பலவாயும் ஆகிய வேடத்தை உடையவர். கழல் சேர்வார் - திருவடியைத் தியானிப்பவர்கள். நன்று நினைந்து - பேரின்பத்தை விரும்பி. தென்றி - சிதறி. திகைத்தயானை மலைச்சாரல் வழியாக ஒடி, கன்றும் பிடியுமாக அடிவாரத்துச் சேரும் கயிலை என இயற்கை எடுத்துக்காட்டப்பெறுகிறது.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

தாதார் கொன்றை தயங்குமுடியர் முயங்கு மடவாளைப்
போதார்பாக மாகவைத்த புனிதர் பனிமல்கும்
மூதாருலகின் முனிவருடனா யறநான் கருள்செய்த
காதார்குழையர் வேதத்திரளர் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

கயிலைமலை இறைவர், மகரந்தம் நிறைந்த கொன்றைமாலை விளங்கும் முடியினை உடையவர். தம்மைத் தழுவிய உமையம்மையை மென்மையான இடப்பாகமாக ஏற்றதூயவர். குளிர்ந்த இவ்வுலகின்கண் வயதால் முதிர்ந்த சனகர் முதலிய முனிவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் அருளிச் செய்தவர். வலக்காதில் குழை அணிந்தவர். வேதவடிவாய் விளங்குபவர்.

குறிப்புரை :

தாது - மகரந்தம். போதார் பாகம் - மெல்லிய இடப் பாகம். உலகின் மூதார் முனிவர் - உலகத்தில் மிக வயது முதிர்ந்த முனிவராகிய சனகாதியர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

தொடுத்தார் புரமூன் றெரியச்சிலைமே லெரியொண் பகழியார்
எடுத்தான்திரள்தோள் முடிகள்பத்து மிடிய விரல்வைத்தார்
கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகிவருங் கூற்றைக்
கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

கயிலைமலை இறைவர் முப்புரங்களை மேரு வில்லை வளைத்து எரியாகிய ஒளி பொருந்திய அம்பைத் தொடுத்து எரித்து அழித்தவர். கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் திரண்ட தோள்கள் பத்துத் தலைகள் ஆகியன நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். அவன் பிழையுணர்ந்து வருந்த அவனை அடிமையாக ஏற்று வாள் முதலிய படைகள் கொடுத்தவர். மார்க்கண்டேயனின் உயிரைக் கவர அவன்மேல் நெருங்கி வந்த எமனைச் சினந்து அவனைக் காலால் உதைத்தவர்.

குறிப்புரை :

இராவணனை அடக்கி, வாள் கொடுத்தாண்டார் என்ற வரலாறு காட்டப்படுகிறது. எரிய, சிலைமேல், ஒண்பகழியார் தொடுத்தார் எனக்கூட்டுக. படை - வாள். ஆளாக்கொண்டார் - அடிமையாக ஆட்கொண்டார். கடுத்து - கோபித்து.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

ஊணாப்பலிகொண் டுலகிலேற்றா ரிலகு மணிநாகம்
பூணாணார மாகப்பூண்டார் புகழு மிருவர்தாம்
பேணாவோடி நேடவெங்கும் பிறங்கு மெரியாகிக்
காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

கயிலைமலை இறைவர் உலகில் மகளிர் இடும் பலியை உணவாகக் கொண்டு அதனை ஏற்றவர். விளங்கும் மணிகளைக் கொண்டுள்ள நாகங்களை அனிகலனாகப் பூண்டவர். எல்லோராலும் புகழப்பெறும் திருமால் பிரமர்கள் அடிமுடி காண விரும்பிச் சென்று தேட எங்கும் விளங்கும் எரியுருவோடு அவர்கள் காணாதவாறு உயர்ந்து நின்றவர்.

குறிப்புரை :

உலகில் பலி ஊணாக்கொண்டு ஏற்றார் எனக்கூட்டுக. பூண் நாண் ஆரமாக - பூணத்தகும் மாலையாக. இருவர் - பிரம விஷ்ணுக்கள்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச் சாக்கியர்
பொருதுபகரு மொழியைக்கொள்ளார் புகழ்வார்க் கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண் டிகழ்வார்கள்
கருதும்வண்ண முடையார்போலுங் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

தாம் பெற்ற விருதுகளைப் பலரிடமும் சொல்லிப் பெருமை கொள்ளும் இயல்புடைய கொடுஞ்சொல் பேசும் சமணரும் வஞ்சனையான மனமுடைய சாக்கியரும் பிறசமயத்தவரோடு சண்டையிட்டுக் கூறும் சொற்களைக் கேளாதவராய், புகழ்ந்து போற்றுவார்க்கு அணிமையானவராய் விடை ஒன்றைச் செலுத்தி உணவிடுவார் பால் இரந்து உண்பவராய் இகழ்பவரும் தம்பெருமையை நினைந்து போற்றும் இயல்பினராய் விளங்குபவர் கயிலைமலை இறைவர்.

குறிப்புரை :

விருது - பட்டங்கள். பொருது - மோதுதல் காரணமாக. எருது ஒன்று உகைத்து - ஓர் இடபத்தில் ஏறிச் செலுத்தி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார் சம்பந்தன்
காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலை மலையார்மேல்
தேராவுரைத்த செஞ்சொன்மாலை செப்பு மடியார்மேல்
வாராபிணிகள் வானோருலகின் மருவு மனத்தாரே.

பொழிப்புரை :

கரையோடு போர் செய்யும் கடலினது நீரால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் தோன்றிய புகழ் பொருந்திய ஞானசம்பந்தன், கரிய மேகங்கள் நிலையாகத் தங்கியுள்ள சாரலை உடைய கயிலைமலை இறைவர்மேல் தெளிந்துரைத்த இச்செஞ்சொல் மாலையாகிய திருப்பதிகத்தை ஓதும் அடியவர்பால் பிணிகள் வாரா. அவர்கள் வானோர் உலகில் மருவும் மனத்தினராவர்.

குறிப்புரை :

கயிலைமலையாரைச் சொன்ன செஞ்சொல்மாலை வல்லார்மேல் பிணிகள் வாரா; வானோர் உலகத்தில் மருவுவர் என்கின்றது. தேரா - தெளிந்து.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்க ளெரித்தவன்று மூவர்க் கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் னிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

நீர்த்துளிகளைத் தூவும் கரிய மேகங்கள் வானத்தில் நின்றவாறு இடி முழக்கத்தைச்செய்ய, அதனைக் கேட்டு அஞ்சிய காட்டுப் பசுக்களின் மந்தைகளான வரிசைகள் வந்து ஒருங்கிணையும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை இறைவர், அடியவர்கள் பொலிவுமிக்க நறுமலர்களைத் தூவி வழிபடவும், வானோர்கள் புகழ்ந்து போற்றவும், அழியாவரம் பெற்ற அசுரர்களின் முப்புரங்களை எரித்து அழித்து அவ்வசுரர்களில் மூவர்க்கு அருளையும் வழங்கிய பெருமையுடையவர்.

குறிப்புரை :

அடியார்கள் மலர்கொண்டு அடிவணங்குவார்கள்; தேவர்கள் தோத்திரிப்பார்கள்; இங்ஙனமாகத் திரிபுரம் எரித்த பெருமான் அண்ணாமலையார் ஆவர் என்கின்றது. பூ ஆர் மலர் - போதும் விரிந்த பூவும். மூவார் - அழியாதவர்கள். மூவர் - திரிபுராதிகள். தொறுவின் நிரையோடும் - ஆட்டுமந்தை வரிசை யோடும். ஆமாம் பிணை - காட்டுப்பசுக்கள்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர் பெருமானார்
நஞ்சைக்கண்டத் தடக்குமதுவு நன்மைப் பொருள்போலும்
வெஞ்சொற்பேசும் வேடர்மடவா ரிதண மதுவேறி
அஞ்சொற்கிளிக ளாயோவென்னும் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

குத்து வெட்டு முதலிய கொடிய சொற்களையே பேசும் வேடர்களின் பெண்கள் தினைப்புனங்களில் பரண்மீது ஏறியிருந்து தினைகவரவரும் அழகிய சொற்களைப் பேசும்கிளிகளை ஆயோ என ஒலியெழுப்பி ஓட்டும் திருவண்ணாமலை இறைவர், மேகங்களைக் கிழித்துச் செல்லும் பிறைமதியை முடியிற்சூடும் வானவர் தலைவர். கடலிடைத் தோன்றிய நஞ்சையுண்டு கண்டத்தில் அடக்கியவர். இச்செயல் உலகத்தை அழியாது காக்கும் நன்மை கருதியதேயாகும்.

குறிப்புரை :

அண்ணாமலையாராகிய பிறைசூடிய பெருமான் நஞ்சையுண்டதும் நன்மைகருதியேயாம் என்கின்றது. மஞ்சு - மேகம். வெஞ்சொல்பேசும் வேடர் - பிடி எறி குத்து கொல்லு என்ற கொடிய சொற்களையே பேசுகிற வேடர்கள். மடவார் - வேட்டுவத்தி. இதணம் - பரண். ஆயோ என்பது கிளிஓட்டும் ஒலிக்குறிப்பு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

ஞானத்திரளாய் நின்றபெருமா னல்ல வடியார்மேல்
ஊனத்திரளை நீக்குமதுவு முண்மைப் பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி யிழியு மிரவின்கண்
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

இராப்போதில் பன்றிகளின் கூட்டமும், மான் இனங்களும், கரடிகளும், ஒருங்கே இறங்கிவரும் மலைச்சாரலில் யானைகளின் கூட்டமும் வந்தணையும் திருவண்ணாமலை இறைவர், ஞானப் பிழம்பாய் நிற்பவர். நன்மைகளையே கருதும் அடியவர்கள் ஊனுடலோடு பிறக்கும் பிறவிகளை நீக்குபவர். இவ்வருட்செயல் வேதாகமநூல்கள் உணர்த்தும் உண்மைப் பொருளாகும்.

குறிப்புரை :

ஞானப்பிழம்பாய் நிற்கும் அண்ணாமலையார் நல்ல அடியார்மேல் வருங்குற்றங்களை நீக்குவதும் உண்மையே போலும் என்கின்றது. திரள் - பிழம்பு. ஊனத்திரள் - குறைகளின் குவியல்; உடம்பு என்றுமாம். உண்மைப்பொருள் - சத்தியம் போலும் என்பது ஒப்பில் போலி. ஏனத்திரள் - பன்றிக்கூட்டம். ஆனை - யானை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

இழைத்தவிடையா ளுமையாள்பங்க ரிமையோர் பெருமானார்
தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார் புரமெய்தார்
பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

தன்னைவிட்டுப் பிரிந்த பெண்யானையைக் காணாத பெரிய கையைஉடைய மதம் பொருந்திய ஆண் யானை, குரல் கொடுத்து அழைத்துத் திரிந்து அலுத்து உறங்கும் சாரலைஉடைய திருவண்ணாமலை இறைவர், நூல்போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவர். விடைமீது ஏறிச்சென்று பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.

குறிப்புரை :

உமைபங்கர், தேவதேவர், தாழ்சடையார், விடை யேறி, திரிபுரம் எய்தவர் இவர் என்கின்றது. இழைத்த - நூலிழையின் தன்மையையுடைய, தரியார் - பகைவர். பிழைத்த - தவறிய. பெரிய களிறு தன்னை விட்டுப்பிரிந்த பெண்யானையைக் காணாமல் அழைத்துச் சுற்றி அலுத்துப்போய் உறங்கும் சாரல் என மலையியற்கை கூறியவாறு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

உருவிற்றிகழு முமையாள்பங்க ரிமையோர் பெருமானார்
செருவில்லொருகால் வளையவூன்றிச் செந்தீ யெழுவித்தார்
பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமா மணிமுத்தம்
அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

பெரிய வில்லை ஏந்திய குறவர்கள் விளைநில வரப்புக்களில் குவித்து வைத்திருந்த பெரிய முத்துக்களும் மணிகளும் அருவித்திரள்களின் வழியே நிலத்தில் வந்து இழியும் திருவண்ணாமலை இறைவர், உருவத்தால் அழகிய உமையவளை ஒருபாகமாகக் கொண்டவர். இமையவர்கட்குத் தலைவர். பெரிய போர்வில்லை ஒரு காலால் ஊன்றிக்கொண்டு வளைத்துக் கணைஎய்து முப்புரங்களும் செந்தீயால் அழிந்து விழுமாறு செய்தவர்.

குறிப்புரை :

ஒரே உருவில் விளங்கும் உமையொருபாகர், வில் வளைத்துத் திரிபுரத்தைச் செந்தீயாட்டியவர் இவர் என்கிறது. செரு - போர். வில் ஒருகால் வளைய ஊன்றி - வில்லினது ஒரு தலையை வளைவதற்காகக் காலிற் பெருவிரலால் ஊன்றி. பரு வில் குறவர் - பருத்த வில்லையுடைய குறவர்கள். குறவர் குவித்த முத்தங்கள் அருவியோடு இழியும் சாரல் அண்ணாமலை என்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

எனைத்தோரூழி யடியாரேத்த விமையோர் பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமல ருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற் குழலூத
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

மலைச்சாரலில் புல்மேய்க்கச் சென்ற ஆயன் கனைத்து மேய்ந்த தம் எருமைகளைக் காணாதவனாய்த் தன் கையிலிருந்த வேய்ங்குழலை ஊத அவ்வளவில் அனைத்தெருமைகளும் வீடு திரும்பும் விருப்போடு ஒன்றுதிரளும் அடிவாரத்தை உடைய திரு வண்ணாமலை, அடியவர்கள் தன்னைத் துதிக்க இமையவர் தலைவனாய்ப் பல்லூழிக் காலங்களைக் கண்ட பழையோனாய் விளங்கும் தன்னை நினைத்துத் தொழும் அன்பர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் நிமலனாய் விளங்கும் அப்பெரியோனின் கோயிலாக விளங்குவது ஆகும்.

குறிப்புரை :

நினைத்துத் தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலர் உறை கோயில் அண்ணாமலையார் என்கின்றது. எனைத்து ஓர் ஊழி - எத்தகையதோர் ஊழியிலும், கனைத்த - ஒலித்த. மேதிகளைக்காணாத ஆயன் குழலூத அவைகளெல்லாம் திரளும் சாரல் என்க. மேதி - எருமை. குருவருள் : `எனைத்தோ ரூழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார் நினைத்துத் தொழுவார் பாவம்தீர்க்கும் நிமலர் உறை கோயில்` என்ற தொடரில் நினைத்தால் முத்தி தரும் தலம் திருவண்ணாமலை என்ற குறிப்பு காணப்படுகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் `அண்ணாமலையார் துணை` என்றே கையெழுத்திடுவர் கடிதங்களில். அதுபற்றி விசாரித்தபொழுது, நினைத்தால் முத்தி தரும் தலம் அண்ணாமலை என்பதால், `அண்ணாமலையார் துணை` என்று போடுகிறார்கள் என்று ஒரு நகரத்தார், கருப்பன் செட்டியார் என்பவர் குறிப்பிட்டார். இது இப்பாடல் கருத்திற்கு அரணாகவே உள்ளமைகாண்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

வந்தித்திருக்கு மடியார்தங்கள் வருமேல் வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரம னுறைகோயில்
முந்தியெழுந்த முழவினோசை முதுகல் வரைகண்மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

விழா நிகழ்ச்சிகளை முன்னதாக அறிவித்தெழும் முழவின் ஓசை இடையறாது கேட்பதும், பழமையான மலைப்பாறைகளுக்கு இடையே அந்திக்காலத்துப் பிறை வந்து அணைவதுமாகிய திருவண்ணாமலையில் விளங்கும் இறைவன் தன்னை வழிபட்டு வேறு நினைவின்றி இருக்கும் அடியவர்களின் ஆகாமிய வினைகளோடு அவர்களைப் பந்தித்திருக்கும் பாவங்களையும் போக்கியருளும் பரம னாவான். அவனது கோயில் திருவண்ணாமலையாகும்.

குறிப்புரை :

தொழும் அடியார்களின் ஆகாமிய சஞ்சிதவினைகளைத் தீர்க்கும் பரமன்உறை கோயில் அண்ணாமலை என்கின்றது. வந்தித்து இருக்கும் - வழிபட்டுச் சோகம் பாவனையில் இருக்கும். பந்தித் திருந்த - ஆன்மாவின் அறிவை மறைத்திருந்த. பெரிய பாறைகளில் அந்திப்பிறை அணையும் சாரல் என்பது அண்ணாமலையே பிறைசூடிய பெருமானாகக் காட்சியளிப்பதைக் கருதி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

மறந்தான்கருதி வலியைநினைந்து மாறா யெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறைய வருள்செய்தார்
திறந்தான்காட்டி யருளாயென்று தேவ ரவர்வேண்ட
அறந்தான்காட்டி யருளிச்செய்தார் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

தனது வலிமையை வெளிப்படுத்தித் திரிபுர அசுரர் களை அழித்து அருள் புரியுமாறு தேவர்கள் வேண்ட, தீயவரை ஒறுப்பது அறநெறியின் பாற்பட்டதாதலை உணர்த்தும் நிலையில் அசுரர்களை அழித்துத் தேவர்கட்கு அருள்செய்த பெருமானாகிய திருவண்ணாமலை இறைவன், தன் வலிமையையும், பெற்ற வெற்றிகளையும் பெரிதாக எண்ணியவனாய்த் தனக்கு மாறாகத்தான் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் மார்பு தோள் ஆகியனவற்றை நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவ்விராவணன் வேண்ட அவனுக்கு அருள் செய்த மேம்பாடுடையவனாவன்.

குறிப்புரை :

இலங்கை மன்னனது தோள் நெரிய, விரல் ஊன்றிய இறைவன் அண்ணாமலையான் என்கிறது. மறம் - வீரம். நிறம் - மார்பு. தேவர் திறங் காட்டியருளாய் என்று வேண்ட, அறங்காட்டி அருள் செய்தார் எனமுடிக்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

தேடிக்காணார் திருமால்பிரமன் றேவர் பெருமானை
மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம் பலகொண்டு
கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ள வம்மினென்
றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

மலையை மூடி ஓங்கிவளர்ந்த பழமையான மூங்கில் மரங்கள் உகுத்த முத்துக்கள் பலவற்றைக் குறவர்குலப்பெண்கள் ஓரிடத்தே குவித்து வைத்து அவற்றை வாங்கிட வருக என மக்களை அழைத்து ஆடிப்பாடி அவர்களுக்கு அளந்து அளிக்கும் திரு வண்ணாமலை இறைவனாகிய தேவர் பெருமானைத் திருமால் பிரமன் ஆகிய இருவர் தேடிக் காணாதவராயினர்.

குறிப்புரை :

மாலும் அயனும் பெருமானைத் தேடிக் காணாரா யிருக்கக் குறத்தியர் மூங்கில் முத்துக்களைக்குவித்து, வாங்கிக்கொள்ள வாருங்கள் என்றழைக்கும் அண்ணாமலை என்கின்றது. வேய் உகுத்த முத்தம் - மூங்கிலில் பிறந்த முத்துக்கள்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணே நின்றுண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித் தொழுமின்கள்
வட்டமுலையா ளுமையாள்பங்கர் மன்னி யுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

தடுக்கை அக்குளில் இடுக்கிக் கொண்டு தலைமயிரை ஒன்றொன்றாகப் பறித்த முண்டிதராய் ஆடையின்றி நின்றுண்ணும் சமணர்களாகிய பித்தர்களின் சொற்களைப் பொருளெனக் கொள்ளல் வேண்டா. வட்டமான தனங்களைக் கொண்ட உமையம்மையின் பங்கராய், மலைச்சாரல்களில் சிங்கஏறுகள் கூட்டமாய் வந்தணையும் திருவண்ணாமலையில் வீற்றிருந்தருளும் பெருமான் நிலையாக எழுந்தருளி உறையும் கோயிலை விரும்பித் தொழுவீராக.

குறிப்புரை :

சமணர் புத்தர் சொல்லைக் கேளாதே, இறைவனைத் தொழுங்கள்; அவ்விறைவன் உறையுங்கோயில் அண்ணாமலையாகும் என்கின்றது. தட்டு - தடுக்கு. பிட்டர் - பிரட்டர்கள். அட்டம் - குறுக்கு. தக்க - உரை.406.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

அல்லாடரவ மியங்குஞ்சாரல் அண்ணா மலையாரை
நல்லார்பரவப் படுவான்காழி ஞான சம்பந்தன்
சொல்லான்மலிந்த பாடலான பத்து மிவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னி வாழ்வாரே.

பொழிப்புரை :

இரவு வேளைகளில் படம் எடுத்தாடும் பாம்புகள் இயங்கும் சாரலை உடைய திருவண்ணாமலையில் உறையும் இறைவரை, நல்லவர்களால் போற்றப்படுபவனாகிய, சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய அருஞ்சொல்லமைப் புக்கள் நிறைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் கற்று வல்லவர் அனைவரும் வானோர் வணங்க நிலைபெற்று வாழ்வர்.

குறிப்புரை :

அண்ணாமலையாரை ஞானசம்பந்தன் சொன்ன இப்பாடல் வல்லார் தேவர்வணங்க வாழ்வார்கள் என்கின்றது. அல் - இரவு. மன்னி - நிலைபெற்று.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

வானத்துயர்தண் மதிதோய்சடைமேன் மத்த மலர்சூடித்
தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவி பாகமாக்
கானத்திரவி லெரிகொண்டாடுங் கடவு ளுலகேத்த
ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

வானத்தில் உயர்ந்து விளங்கும் குளிர்ந்த சந்திரன் தோயும் சடைமுடிமேல் ஊமத்தம் மலர்களைச் சூடித் தேன்போன்ற இனிய மொழிகளையும் மான் விழிபோலும் கண்களையுமுடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு சுடுகாட்டில் இரவில் எரி யேந்தி ஆடும் இறைவர் உலகமக்கள் உணர்ந்து போற்றுமாறு பன்றிகள் பலகூடி இறங்கிவரும் சாரலையுடைய திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

பிறை, மத்தம் இவற்றைச்சூடி, தேவியைப் பாகமாகக் கொண்டு, நள்ளிரவில் நடமாடும் பெருமான் ஈங்கோய் மலையார் என்கின்றது. கான் - சுடுகாடு. ஏனத்திரள் - பன்றியின் கூட்டம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகா டிடமாகக்
கோலச்சடைக டாழக்கு ழல்யாழ் மொந்தை கொட்டவே
பாலொத்தனைய மொழியாள்காண வாடும் பரமனார்
ஏலத்தொடுநல் லிலவங்கமழும் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

முத்தலைச்சூலம் ஒன்றைத்தமது படைக்கலனாக ஏந்தி இரவில் சுடுகாட்டை இடமாகக் கொண்டு அழகிய சடைகள் தாழ்ந்து தொங்கவும், குழல் யாழ் மொந்தை ஆகிய இசைக்கருவிகள் முழங்கவும், பால் போன்று இனிய மொழியினை உடைய பார்வதிதேவி காண ஆடும் பரமர் ஏலம் நல்ல இலவங்கம் முதலியன கமழும் திருவீங்கோய்மலையின்கண் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

சுடுகாட்டில் குழலும் யாழும் முழவுங்கொட்ட, பாகம் பிரியாள் காண ஆடும் பெருமான் இவர் என்கின்றது. கோலச்சடை - அழகியசடை. குழல், யாழ், மொந்தையைக் கொட்ட என்றாலும், குழலை ஊத, யாழை வாசிக்க, மொந்தையைக் கொட்ட எனக் கருவிகளுக்கேற்பப் பொருள் கொள்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

கண்கொணுதலார் கறைகொண்மிடற்றார் கரியி னுரிதோலார்
விண்கொண்மதிசேர் சடையார்விடையார் கொடியார் வெண்ணீறு
பெண்கொள்திருமார் பதனிற்பூசும் பெம்மா னெமையாள்வார்
எண்குமரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

கண் ஒன்றைக்கொண்ட நுதலினரும், விடக்கறை பொருந்திய கண்டத்தினரும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவரும், வானில் விளங்கும் மதியைச்சூடிய சடையினரும், விடைக் கொடியினரும், ஒருபாகமாக உமையம்மையைக் கொண்டுள்ளவரும் திருவெண்ணீற்றைத் திருமேனியின் மார்பகத்தே பூசுபவரும் ஆகிய எமை ஆள்பவராகிய பெருமான் கரடிகளும், சிங்கங்களும் திரியும் சாரலை உடைய திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

இறைவருடைய உடையும் அணியும் பூச்சும் இவை என்கின்றது. நுதல் - நெற்றி. கறை - விடம். மிடறு - கழுத்து. எண்கு - கரடி. அரி - சிங்கம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

மறையின்னிசையார் நெறிமென்கூந்தன் மலையான் மகளோடும்
குறைவெண்பிறையும் புனலுந்நிலவுங் குளிர்புன் சடைதாழப்
பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட் டெரியாடும்
இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் அழகிய சாரலை உடைய திருவீங்கோய்மலை இறைவர் வேதங்களை இனிய இசையோடு பாடுபவர். வளைவுகளோடு கூடிய மென்மையான கூந்தலையுடைய மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு, கலைகள் குறைந்த வெண்மையான பிறையும் கங்கையும் விளங்கும் குளிர்ந்த மென்மையான சடைகள் தாழ, பறை குழல் இவற்றோடு காலிற்கட்டிய கழலும் ஆரவாரிக்கப் பிணங்களை எரிக்கும் சுடுகாட்டுள் எரியேந்தி ஆடுபவராவார்.

குறிப்புரை :

இடுகாட்டில் மலையான் மகளோடு ஆடும் இறைவன் இவர் என்கின்றது. நெறி மென் கூந்தல் - நெறித்துச் சுருண்ட மெல்லிய கூந்தல். குறை வெண் பிறை - சாபத்தால் குறைந்த வெண்மையான பிறைச்சந்திரன். படுகாடு - சுடுகாடு. சிறை வண்டு - சிறகோடு கூடிய வண்டுகள்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர் கண்ணினார்
கந்தமலர்கள் பலவுந்நிலவு கமழ்புன் சடைதாழப்
பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட் டெரியாடும்
எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

நறுமணங்களைக் கொண்டுள்ள சாரலையுடைய திருவீங்கோய்மலை இறைவர், இறந்தார் உடலை எரிக்கும் சுடலையில் விளைந்த சாம்பற்பொடியைத் திருநீறாக அணிந்தவர். நெற்றியைச் சார்ந்துள்ள விழியையுடையவர். மணம் பொருந்திய மலர்கள் பலவும் விளங்கும் மணங்கமழ் செஞ்சடைகள் தாழ்ந்து தொங்கப்பந்து சேரும் கைவிரல்களையுடைய உமையம்மை ஒருபாகமாக விளங்கச் சுடுகாட்டில் எரியாடுபவர்.

குறிப்புரை :

இதுவும் அது. நொந்த - பதன் அழிந்த. பந்து அண் விரலாள் - பந்து அணுகும் மெல்லிய விரலை உடையாள். கடி கொள் சாரல் - தெய்வமணங்கமழும் சாரல்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

நீறாரகல முடையார்நிரையார் கொன்றை யரவோடும்
ஆறார்சடையா ரயில்வெங்கணையா லவுணர் புரமூன்றும்
சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்க ணடல்வெள்ளை
ஏறார்கொடியா ருமையாளோடும் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளியுள்ள இறைவர் திருநீறு அணிந்த மார்பினையுடையவர். சரஞ்சரமாக வரிசையாய் மலரும் கொன்றை மாலைபாம்பு கங்கை ஆகியவற்றை அணிந்த சடைமுடியை உடையவர். கூரிய கொடியகணையால் அசுரர்களின் முப்புரங்களையும் சினந்து எரித்த தேவர்தலைவர். சிவந்த கண்களையும் வலிமையையும் உடைய வெண்மையான விடையேற்றுக் கொடியினை உடையவர்.

குறிப்புரை :

கொன்றை, அரவு, கங்கை இவற்றைச் சடையில் உடையவரும், திரிபுரங்களை எரித்தவரும் ஈங்கோய்மலையார் என்கின்றது. அகலம் - மார்பு. அயில் - கூர்மை. அடல் - வலிமை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன் விரிகொன்றை
நனையார்முடிமேன் மதியஞ்சூடு நம்பான் நலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோ டனலேந்தும்
எனையாளுடையா னுமையாளோடும் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

உமையம்மையோடு திருவீங்கோய்மலையில் எழுந்தருளிவிளங்கும் இறைவர். வினைகளானவற்றைத் தீர்த்து அருளையே வழங்கும் விகிர்தர். விரிந்து தழைத்த கொன்றை அரும்புகள் சூடிய முடிமீது பிறைமதியையும் சூடும் நம்பர். அழகு நிறைந்ததும் தலைமை உடையதுமான தாமரை மலர்மேல் உறையும் பிரமனின் தலையோட்டுடன் அனலையும் ஏந்தி என்னை அடிமையாகக் கொண்டருளுபவர்.

குறிப்புரை :

வினைதீர்க்கும் விகிர்தனாய் என்னை ஆளுடைய பிரான் இவர் என்கின்றது. நனை - அரும்பு. தனையார் கமலம் - தலைமை பொருந்திய தாமரை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

பரக்கும்பெருமை யிலங்கையென்னும் பதியிற் பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளு மணியார் விரல்தன்னால்
நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்று நின்றேத்த
இரக்கம்புரிந்தா ருமையாளோடும் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள ஈங்கோய்மலை இறைவர், எங்கும் பரவிய பெருமையை உடைய இலங்கை என்னும் நகரில் புகழோடு விளங்கிய அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணன் தலைகளையும் தோள்களையும் தமது அழகு பொருந்திய கால்விரலால் நெருக்கி அடர்த்து, பின் அவன் `நிமலா போற்றி` என்று ஏத்த இரக்கம் காட்டி அருள்புரிந்தவராவார்.

குறிப்புரை :

இராவணனை விரலால் அடர்க்க, அவன் நிமலா போற்றி என வணக்கம் செய்ய, இரக்கங்காட்டிய பெருமான் இவர் என்கின்றது. பரக்கும் - பரந்த. அணி - காலாழி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

வரியார்புலியி னுரிதோலுடையான் மலையான் மகளோடும்
பிரியாதுடனா யாடல்பேணும் பெம்மான் றிருமேனி
அரியோடயனு மறியாவண்ண மளவில் பெருமையோ
டெரியாய்நிமிர்ந்த வெங்கள்பெருமான் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

ஈங்கோய்மலை இறைவர் வரிகளோடு கூடிய புலித் தோலை உடையாகக் கட்டியவர். மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு பிரியாது அவளுடனாக இருந்து ஆடுதலை விரும்பும் தலைமை சான்றவர். தம்திருமேனியின் அடிமுடிகளைத் திருமாலும் நான்முகனும் அறியாதபடி அளவற்ற பெருமை உடையவராய் எரிஉருவத்தோடு ஓங்கிநின்ற எங்கள் பெருமான் ஆவார்.

குறிப்புரை :

உமையொருபாதியனாய், அயனும் மாலும் அறியாமல் எரியாய் நிமிர்ந்த பெருமான் இவர் என்கின்றது. வரி - கோடு. எரியாய் - அக்கினிவடிவான அண்ணா மலையாய்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்கு சமணரும்
மண்டைகலனாக் கொண்டுதிரியு மதியில் தேரரும்
உண்டிவயிறா ருரைகள்கொள்ளா துமையோ டுடனாகி
இண்டைச்சடையா னிமையோர்பெருமான் ஈங்கோய் மலையாரே.

பொழிப்புரை :

அருகதேவன் வீற்றிருக்கும் அசோகமரம் என அம் மரத்தின் பெருமை கூறிப்பெயர்ந்து செல்லும் மாறுபட்ட சமயநெறியில் நிற்கும் சமணர்களும், பிச்சை ஏற்கும் மண்டை என்னும் பாத்திரத்தைக் கையில் ஏந்தித்திரியும் அறிவற்ற புத்தரும் உண்டு பருத்த வயிற்றினராய்க் கூறும் உரைகளைக் கொள்ளாது, உமையம்மையாரோடு உடனாய், இண்டை சூடிய சடைமுடியினனாய், இமையோர் தலைவனாய், ஈங்கோய் மலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைச் சென்று வழிபடுவீராக.

குறிப்புரை :

சமணரும் புத்தருமாகிய இவர்களின் உரையைக் கொள்ளாத இமையோர் பெருமான் இவர் என்கின்றது. பிண்டி - அசோகந்தளிர். ஏன்று - தாங்கி. மண்டை - பிச்சை ஏற்கும் பாத்திரம். தேரர் - புத்தர். உண்டி வயிறார் - உண்டு பருத்த வயிற்றையுடையவர்கள். இண்டை - திருமுடியிற் சூடப்படும் வட்டமாகக் கட்டப்பெற்ற மாலை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

விழவாரொலியு முழவுமோவா வேணு புரந்தன்னுள்
அழலார்வண்ணத் தடிகளருள்சே ரணிகொள் சம்பந்தன்
எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்
கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலை களைவாரே.

பொழிப்புரை :

திருவிழாக்களின் ஓசையும் முழவின் ஓசையும் நீங்காத வேணுபுரம் என்னும் சீகாழிப்பதியில் அழல் வண்ணனாகிய சிவபிரானின் அருள்சேரப் பெற்ற அழகிய ஞானசம்பந்தன் எழிலார்ந்த சுனையும் பொழிலும் புடைசூழ்ந்து விளங்கும் திருவீங்கோய்மலை ஈசனின் திருவடிகளைப் பரவிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்கள் கவலைகள் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

சம்பந்தன் சொன்ன ஈங்கோய்மலைப் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவார் என்கின்றது. வேணுபுரம் என்பது சீகாழிக்கு மறுபெயர். எழில் - அழகு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய் நாகத்தர்
கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர் கங்காளர்
மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையின் மகிழ்வெய்திச்
சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

பெருமை உடைய மறையவர் தங்கள் இல்லங்களில் வேதப்பொருள்களை உள்ளடக்கிய பாடல்களைப் பாட, அதனைக் கேட்டுச் சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மகிழ்வெய்திப்பாடித் தேனை உண்ணுகின்ற நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பிறைசூடிய சடையர். புலித்தோலை உடுத்தவர். பிளந்த வாயினை உடையபாம்பினை அணிந்தவர். விடக் கறை பொருந்திய கழுத்தை உடையவர். பிரமனது தலையோட்டை ஏந்திய கையினை உடையவர். எலும்பு மாலை அணிந்தவர்.

குறிப்புரை :

நறையூர்ச்சீத்தீச்சரத்தார் பிறைச்சடையர், புலித்தோலர், அரவார்த்தவர், நீலகண்டர், கபாலி, கங்காளர், என்கின்றது. பேழ் வாய் - பிளந்த வாய். கங்காளம் - முழு எலும்பு. சேடர் - பெருமையுடை யவர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

பொங்கார்சடையர் புனலரனலர் பூதம் பாடவே
தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர் விடையேறிக்
கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக் குளிர்பொய்கைச்
செங்காலனமும் பெடையுஞ்சேருஞ் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

தழைத்த சடையினராய், கங்கை அணிந்தவராய், அனல் ஏந்தியவராய், பூதகணங்கள் பாடத்தம் காதலியாகிய உமையம்மையும் தாமும் உடனாய், ஒப்பற்றதொருவிடைமீது, தேன் பொருந்திய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்தை மலர் ஆகியவற்றைச் சூடிக்கொண்டு குளிர்ந்த பொய்கைகளில் சிவந்த கால்களை உடைய ஆண் அன்னமும் பெண் அன்னமும் கூடிக்களிக்கும் சித்தீச் சரத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

இதுவும் அவர் புனலர், அனலர், விடையேறியவர் என்கின்றது. பொங்கு - வளர்ச்சி. கொங்கு - தேன். இறைவன் தம் காதலியும் தானும் விடையேறியிருப்பதால், பொய்கைகளில் அன்னங்களும் பெடையோடு சேர்ந்திருக்கின்றன என்று போகியாய் இருந்து உயிர்க்குப் போகத்தை நல்கும் தன்மை விளக்கியவாறு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவா மேனிமேல்
பொடிகொணூலர் புலியினதளர் புரிபுன் சடைதாழக்
கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலா ரினம்பாயக்
கொடிகொண்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

முடியாகச் சடையினை உடையவராய், ஒரு கலை யோடு தோன்றும் வெண்மையான மதியை அணிந்தவராய், மூப்படையாததம் திருமேனியின்மேல் திருநீற்றையும் முப்புரிநூலையும் அணிந்தவராய், புலித்தோலை உடுத்தவராய், முறுக்கப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்க மணம் கமழும் சோலைகளும் வயல்களும் சூழ்ந்த நீர் நிலைகளில் கயல் மீன்களின் இனங்கள் பாய்ந்து விளையாடக் கொடிகள் கட்டிய மாடவீடுகளின் கூட்டங்கள் நிறைந்த நறையூரில் உள்ள சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

இதுவும் அவர் சடைமுடியர், வெண்ணீற்றர், புலித் தோலர் என்கின்றது. மூவா மேனி - மூப்படையாத, என்றும் இளைய திருமேனி. அதளர் - தோலை உடையாக உடையவர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

பின்றாழ்சடைமே னகுவெண்டலையர் பிரமன் றலையேந்தி
மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரு மொருகாதர்
பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்து செண்பகம்
சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

பூசைக்குகந்த பொன்போன்ற கொன்றை, செருந்தி, புன்னை, ஏற்புடையதான செண்பகம் ஆகியன வானுறப் பொருந்தி வளரும் செல்வச் செழுமையுடைய அழகிய நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்து இறைவர், பின்புறம் தாழ்ந்து தொங்கும் சடைமுடிமேல், விளங்கும் வெண்மையான தலை மாலையை அணிந்தவர். பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தி மின்னலைத் தாழச்செய்யும் ஒளி உருவினர். சங்கக் குழையணிந்த காதினை உடையவர்.

குறிப்புரை :

இதுவும் அவர் தலைமாலை அணிந்தவர், கபாலி, சங்கக் குண்டலர் என்கின்றது. சங்கு ஆர் குழை - சங்கினால் இயன்ற காதணி. திருவார் நறையூர் - திருநறையூர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைக ணிறைநாவர்
பாரார்புகழாற் பத்தர்சித்தர் பாடி யாடவே
தேரார்வீதி முழவார்விழவி னொலியுந் திசைசெல்லச்
சீரார்கோலம் பொலியுநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

உலகில் பரவிய தமது புகழ் மொழிகளைப் பக்தர்களும் சித்தர்களும் பாடிஆடத் தேரோடும் வீதிகளில் முழவின் ஒலி, விழா ஒலியோடு பெருகி எண் திசையும் பரவ, புகழ் பொருந்திய அழகோடு விளங்கும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் உறையும் இறைவர், கங்கையை அணிந்த சடைமுடியினர். கறைபொருந்திய கண்டத்தை உடையவர். வேதங்கள் நிறைந்த நாவினர்.

குறிப்புரை :

சித்தீச்சரத்தார் கங்கை முடியர், நீலகண்டர், மறைநாவர் என்கின்றது. பாரார் புகழ் - உலகம் முழுவதும் வியாபித்த புகழ்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொண் மலர்மாலை
தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத் தெழிலார்வந்
தீண்டுமாட மெழிலார்சோலை யிலங்கு கோபுரம்
தீண்டுமதியந் திகழுநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

ஒன்றோடு ஒன்று வந்து பொருந்தும் மாட வீடுகளையும், அழகிய சோலைகளையும், மதியைத் தீண்டும் உயரமாக விளங்கிய கோபுரங்களையும் உடைய நறையூரில் உள்ள சித்தீச்சரத்து இறைவர், நீண்ட சடைமுடியை உடையவர். பூச்சரங்களைக் கொண்ட கொன்றையினது மலரால் தொடுத்த மாலையை அணிந்தவர். ஒளி மிகுந்து தோன்றும் பொன்போன்ற ஒளி உருவம் உடையவர். பவளம் போன்ற அழகிய செந்நிறத்தை உடையவர்.

குறிப்புரை :

இதுவும் அது. நிரை கொள் கொன்றை - சரமாகப் பூத்த கொன்றை. தூண்டு சுடர் - ஒருகாலைக்கொருகால் மிகுந்து தோன்றும் ஒளி. பவளத் தெழிலார் - பவளம் போன்ற அழகினை உடையவர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

குழலார்சடையர் கொக்கினிறகர் கோல நிறமத்தம்
தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோ வணக்கீளர்
எழிலார்நாகம் புலியினுடைமே லிசைத்து விடையேறிக்
கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

அழகு பொருந்திய பாம்பினைப் புலித்தோல் ஆடைமேல் பொருந்தக் கட்டிக் கொண்டு விடைமீது ஏறி, கழலும் சிலம்பும் கால்களில் ஒலிக்க வருபவராகிய நறையூர்ச்சித்தீச்சரத்து இறைவர், மாதொருபாகராதலின் கூந்தலும் சடையும் அமைந்த திருமுடியினர். கொக்கின் இறகை அணிந்தவர். அழகிய நிறம் அமைந்த ஊமத்தம் மலர்சூடித் தழல் போலச் சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திரு நீற்றை அணிந்தவர்.

குறிப்புரை :

அவர் கூந்தலையும் சடையையும் உடையவர், கொக் கின் இறகை அணிந்தவர், கோவண ஆடையர் என்கின்றது. குழல் - கூந்தல். கோலம் - அழகு. தவளம் - வெண்மை. கீள் - கிழித்த ஆடை. புலம்ப - ஒலிக்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

கரையார்கடல்சூ ழிலங்கைமன்னன் கயிலை மலைதன்னை
வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்து மனமொன்றி
உரையார்கீதம் பாடநல்ல வுலப்பி லருள்செய்தார்
திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

அலைகளோடு கூடிய நீர் நிலைகளால் சூழப்பட்ட செல்வவளம் மிக்க நறையூரில் விளங்கும் சித்தீச்சரத்துறையும் இறைவர், கரைகளை வந்து பொருந்தும் கடல் நாற்புறமும் சூழ்ந்துள்ள இலங்கை மன்னன் இராவணன், கயிலை மலையை, மலை போன்ற தன் தோளால் பெயர்க்க முற்பட்டபோது, தலைகளைக் கால் விரலால் நெரிக்க, அவன்தன் பிழை உணர்ந்து நல் உரைகளால் இயன்ற பாடல் களைப்பாடிப் போற்ற, அளவிடமுடியாத நல்லருளை வழங்கியவர்.

குறிப்புரை :

இராவணனை அடர்த்து, அவன் சாமகானம் பாட அருள்செய்தவர் இவர் என்கின்றது. வரையார் தோளால் - மலையையொத்த தோள்களால். உலப்பில் - வற்றாத.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

நெடியான்பிரம னேடிக்காணார் நினைப்பார் மனத்தாராய்
அடியாரவரு மருமாமறையு மண்டத் தமரரும்
முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வா வருளென்னச்
செடியார்செந்நெற் றிகழுநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் தேடிக்காண இயலாதவராய் விளங்கிய சிவபெருமான் தம்மை நினைப்பவரின் மனத்தில் விளங்கித்தோன்றுபவராய், அடியவர்களும், அரிய புகழ்மிக்க வேதங்களும், மேலுலகில் வாழும் தேவர்களும், தம் முடியால் வணங்கிக் குணங்களைப் போற்றி `முதல்வா அருள்` என்று வழிபடுமாறு செந்நெற்பயிர்கள் புதர்களாய்ச் செழித்துத் திகழும் திருநறையூர்ச் சித்தீச்சரத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

அடியாரும் அமரரும் `முதல்வா! அருள்` என்று தோத்திரிக்க, இத்தலத்து எழுந்தருளியிருக்கின்றார் என்கின்றது. நெடியான் - திருமால். நேடி - தேடி. பதவிகளில் இருப்பார் தேடிக்காணாத பெருமான், தியானிப்பவர்கள் மனத்தில் இருக்கின்றார் என எளிமை கூறியவாறு. செடி - புதர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

நின்றுண்சமண ரிருந்துண்டேரர் நீண்ட போர்வையார்
ஒன்றுமுணரா வூமர்வாயி லுரைகேட் டுழல்வீர்காள்
கன்றுண்பயப்பா லுண்ணமுலையிற் கபால மயல்பொழியச்
சென்றுண்டார்ந்து சேருநறையூர்ச் சித்தீச் சரத்தாரே.

பொழிப்புரை :

நின்றுண்ணும் சமணர்களும், இருந்துண்ணும் புத்தர்களும் சித்தாந்த சைவச்சிறப்பொன்றையும் அறியாத ஊமர்கள். அவர்கள் தம் வாயால் கூறும் உரைகளைக் கேட்டு உழல்பவரே! எளிதில் அருள் நல்கும் சிவபிரான், கன்று விருப்போடு உண்ண, முலைக் காம்பில் சுரந்த பால் பாத்திரத்தில் நிறைந்து அயலினும் பொழிவதைக் கண்டு பால் போதுமென மீண்டும் கன்றை அவிழ்த்து விட அக்கன்றுகள் சென்று உண்டு கொட்டிலை அடையும் நறையூர்ச் சித்தீச்சரத்தில் எழுந்தருளி உள்ளார். சென்று தொழுமின்.

குறிப்புரை :

ஒன்றுமறியாத புத்தர் சமணர்களின் உரைகளைக் கேட்டுழலும் மக்களே! இத்தலத்தைச் சேரும் என்கின்றது. கன்று உண் பயப்பால் உண்ண - கன்று உண்ணும் விருப்பால் உண்ண. முலையில் - முலையிலிருந்து. கபாலம் அயல் பொழிய - கறவைப் பாத்திரம் நிறைந்து வழிய. சென்று உண்டு ஆர்ந்து சேரும் - மீளவும் கன்றுபோய் உண்டு நிறைந்து சேரும் என்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ் சுரபுன்னை
செயிலார் பொய்கை சேருநறையூர்ச் சித்தீச் சரத்தாரை
மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்கு சம்பந்தன்
பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவ நாசமே.

பொழிப்புரை :

குயில்கள் வாழும் அழகிய மாதவிகளும், குளிர்ந்த அழகிய சுரபுன்னைகளும் வயல்களில் நீரைச் செலுத்தும் பொய்கைகளும் நிறைந்த நறையூர்ச் சித்தீச்சரத்து இறைவரை மயில்கள் வாழும் சோலைகள் சூழ்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பயில்பவர்க்கு இனியவாய்ப் போற்றிப்பாடிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர்களின் பாவம் நாசமாம்.

குறிப்புரை :

இப்பாடல் பாடுவார்க்குப் பாவம் நாசம் ஆம் என் கின்றது. மாதவி - குருக்கத்தி. செயில் - வயலில். இப்பாடல் பயில்வார்க்கு இனிமையாய் இருக்குமென்று இதன் இயல்பு விளக்கியவாறு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

வாரார்கொங்கை மாதோர்பாக மாக வார்சடை
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன் குடமூக்கில்
காரார்கண்டத் தெண்டோளெந்தை காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

திருக்குடமூக்கில் விளங்கும் காரோணத்தில் கருமை பொருந்திய கண்டத்தராய், எட்டுத் தோள்களோடு விளங்கும் எந்தையாராகிய இறைவர், கச்சணிந்த கொங்கைகளை உடைய பார்வதிதேவியை ஒருபாகமாக் கொண்டு, நீண்ட சடைமிசை நீர் மய மான கங்கை, பிறை ஆகியவற்றைச் சூடி, இயல்பான இருவிழிகளோடு நெற்றியில் ஒற்றைக் கண்ணுடையவராய், கூரிய மழு என்னும் ஓர் ஆயுதத்தை ஏந்தி, அழகிய தண்ணளி செய்யும் குழகராய் விளங்குகின்றார்.

குறிப்புரை :

குடந்தைக் காரோணத்தார் உமையொருபாகமாக, சடையில் கங்கையையும் திங்களையும் சூடி, மழுவேந்திய குழகன் ஆவார் என்கின்றது. வார் - கச்சு. குழகன் - இளமை உடையவன்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும் மேத்தும்
படியார்பவள வாயார்பலரும் பரவிப் பணிந்தேத்தக்
கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக் குழகாரும்
கடியார்சோலைக் கலவமயிலார் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

மாட வீதிகளை உடைய குடந்தை என்னும் திருத் தலத்தில் உள்ளதும், மணம் கமழும் சோலைகளில் தோகைகளோடு கூடிய மயில்கள் விளங்குவதும் ஆகிய காரோணத்தில், இளமை பொருந்தியவராய் இலங்கும் இறைவர், முடிமன்னர்கள், இளையமான் போன்ற விழியினை உடையமகளிர், மேல் கீழ் நடு என்னும் மூவுலக மக்கள், தேவர், முனிகணங்கள், பவளம் போன்ற வாயினை உடைய அரம்பையர் முதலானோர் பலரும் பரவிப்பணிந்து போற்ற விடைக்கொடியோடு விளங்குபவராவார்.

குறிப்புரை :

இவர் முடிமன்னர், மான்விழியார், மூவுலகேத்தும் முதல்வர் என்றது. கொடியார் விடை - கொடியில் பொருந்திய இடபம். கடியார் சோலை - மணம் பொருந்திய சோலை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

மலையார்மங்கை பங்கரங்கை யனலர் மடலாரும்
குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார் குடமூக்கில்
முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவா மதியினார்
கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

மட்டைகளோடும் குலைகளோடும் கூடிய தென்னைகளும் குளிர்ந்த வாழைகளும் சூழ்ந்த அழகமைந்த குடமூக்கு என்னும் திருத்தலத்தில், பொன்னணிகள் விளங்கும் தனங்களையும் மூங்கில் முளை போன்ற வெண்மையான பற்களையும் இளம் பிறை போன்ற நெற்றியையும் இசைக்கலை சேர்ந்த மொழியையும் உடைய மகளிர் பலரால் விரும்பப்படும் காரோணத்து இறைவர் மலைமங்கைபங்கர்; அழகியகையில் அனல் ஏந்தியவர்.

குறிப்புரை :

உமையொருபாகர், மழுவேந்தியவர் பிறைமதியர் இவர் என்கின்றது. மடல் - மட்டை. முலையார் என்பது முதல் கலையார் மொழியார் என்பது வரையில் உமாதேவியைக் குறிக்குஞ் சொற்றொடர்கள். மூவா மதியினார் - இளம்பிறை போன்ற நெற்றியினை உடையவர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ் வழகாரும்
தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண் குடமூக்கில்
மாதார்மங்கை பாகமாக மனைகள் பலிதேர்வார்
காதார்குழையர் காளகண்டர் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

நீர் நிலைகளில் தோன்றும் தாமரை கழுநீர் குவளை முதலிய பூக்களின் வாசனை முற்பட்டுப் பொலிவெய்த, அழகு நிரம்பிய மகரந்தம் நிறைந்த சோலைகளாலும் எழிலார்ந்த காடுகளாலும் சூழப்பெற்றதாய் விளங்கும் அழகிய தண்மையான குட மூக்கில் விளங்கும் காரோணம் எனப்பெயர் பெறும் கோயிலில் எழுந்தருளிய இறைவர், காதல் நிறைந்த உமையம்மைபாகராக மனைகள் தோறும் பலி ஏற்பவர். காதில் குழை அணிந்தவர். காளம் என்னும் நஞ்சினைக் கண்டத்தே கொண்டவர்.

குறிப்புரை :

பலிதேர்வார், குழைக்காதர், காளகண்டர் இவர் என் கின்றது. போது - தாமரை முதலிய பூக்கள். தாது - மகரந்தம். எழில் - அழகு. புறவு - காடு. மாதர் மங்கை - காதல் நிறைந்த உமாதேவி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

பூவார்பொய்கை யலர்தாமரைசெங் கழுநீர் புறவெல்லாம்
தேவார்சிந்தை யந்தணாளர் சீராலடி போற்றக்
கூவார்குயில்க ளாலுமயில்க ளின்சொற் கிளிப்பிள்ளை
காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

சிவபிரான், தெய்வத்தன்மை நிறைந்த மனத் தினராகிய அந்தணர்கள் அழகிய பொய்கைகளில் பூத்த தாமரை செங்கழுநீர் ஆகியவற்றையும் முல்லை நிலங்களில் பூத்த மல்லிகை முல்லை முதலிய மணமலர்களையும் கொண்டு தனது புகழைக் கூறித் திருவடிகளைப் போற்ற, கூவும் குயில்கள் ஆடும் மயில்கள், இன்சொல்பேசும் கிளிப்பிள்ளைகள் ஆகிய பறவைகளை உடையதும், பணியாளர்களால் காக்கப் பெறுவதுமாகிய பொழிலால் சூழப்பெற்ற அழகிய குடந்தைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

தாமரை செங்கழுநீர் முதலிய பூக்களைக் கொண்டு தெய்வத்தன்மை கொண்ட அந்தணர்கள் அடிபோற்ற இருப்பவர் காரோணத்தார் என்கின்றது. பூவார்பொய்கை - கொட்டி அல்லி தாமரை முதலிய நீர்ப்பூக்கள் நிறைந்த பொய்கை. அவற்றுள் தாமரை யும், கழுநீரும் இறைவன் வழிபாட்டிற்கு ஏற்றன ஆதலின், பின்னர் விதந்து கூறப்பட்டன. புறவு - முல்லை. தே ஆர் சிந்தை - தெய்வத்தன்மை நிறைந்த மனம். சீரால் - இறைவன் புகழால். ஆலும் - அகவும். அந்தணாளர் அடிபோற்றப் பொழில் சூழ்ந்து அழகார் காரோணத்தார் என முடிக்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னே யனல்வாளி
கோப்பார்பார்த்த னிலைகண்டருளுங் குழகர் குடமூக்கில்
தீர்ப்பாருடலி லடுநோயவலம் வினைகள் நலியாமைக்
காப்பார்கால னடையாவண்ணங் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

குடமூக்கிலுள்ள காரோணத்து இறைவர் மூப்பு ஊர்ந்துவந்து நலிய நியதி தத்துவத்தின் வழியே நெறியாய் நின்று நம்மைக்காப்பவர். முற்காலத்தில் அனலையே அம்பாக வில்லில் கோத்து முப்புரங்களை அழித்தவர். அருச்சுனன் செய்ததவத்தின் நிலை கண்டு இரங்கிப் பாசுபதக்கணை வழங்கியருளிய குழகர். நம் உடலை வருத்தும் நோய்கள், நம்மைப் பற்றிய வினைகள், மனத்தை வருத்தும் துன்பங்கள் ஆகியவற்றைத் தீர்ப்பவர். காலன் அடையாவண்ணம் காப்பவர்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்தகாலத்து அம்பைக்கோப்பவரும் விசயன் நிலைகண்டு அருள் செய்தவருமாகிய குழகரது குடமூக்கில் அடியார்களைக் காலன்குறுகாதவாறு காப்பவர் காரோணத்தார் என்கின்றது. மூப்பு ஊர் நலிய - முதுமை ஊர்ந்து வருத்த. நெதியார் விதி யாய் - நியதியின்வழியே நடக்கும் நெறியாய். பார்த்தன் - அருச்சுனன். அடுநோய் - வருத்துகின்ற நோய்கள். அவலம் - துன்பம். மூப்பு ஊர் நலிய, நெதியார் விதியாய் முன்னே கோப்பார், குழகர் குடமூக்கில், வினைகள் நலியாமை உடலில் அடுநோய் அவலம் தீர்ப்பார், காலன் அடையாவண்ணங் காப்பார் காரோணத்தார் எனக் கூட்டுக.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந் துழல்வாழ்க்கை
மானார்தோலார் புலியினுடையார் கரியின் னுரிபோர்வை
தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங் குடமூக்கில்
கானார்நட்ட முடையார்செல்வக் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

விளங்கும் குடமூக்கில் உள்ள செல்வவளம் மிக்க காரோணத்து இறைவர், ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகம் முழுதும் திரிந்து பலி ஏற்று உழலும் வாழ்க்கையர், மான் தோலைப் பூணநூலில் அணிந்தவர். தேனார் மொழி அம்மையோடு குடமூக்கில் கூடி மகிழ்ந்து சுடுகாட்டில் நடனம் புரிபவர்.

குறிப்புரை :

கபாலம் ஏந்திப் பலி ஏற்று உழலும் இறைவன் காரோ ணத்தார் என்கின்றது. மானார் தோலார் - மான்தோலை உடையவர். கரியின் உரிபோர்வை - யானைத்தோலால் ஆகிய போர்வையை உடையவர். திளைத்து - கூடி. தேனார் மொழியாள்என்பது இத்தலத்து அம்மையின் திருநாமம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

வரையார்திரடோண் மதவாளரக்க னெடுப்ப மலைசேரும்
விரையார்பாத நுதியாலூன்ற நெரிந்து சிரம்பத்தும்
உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள் கொடுத்தாரும்
கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

கரைகளோடு கூடிய காவிரியாற்று நீர் சூழ்ந்த தண்மையான குடந்தை மாநகரில் அமைந்த காரோணத்து இறைவர் மலை போன்ற திரண்ட தோள்களை உடைய மதம் மிக்க வாட்போரில் வல்ல இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க, அவ்வளவில் தம் மணம் கமழும் திருவடி நுனிவிரலால் அம்மலையில் சேர்த்து ஊன்றி, அவ்விராவணன் தலை பத்தும் நெரித்துப் புகழ்மிக்க சாமகானத்தைப் பாடக் கேட்டு, அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய சந்திரஹாசம் என்னும் வாளைக் கொடுத்தவர் ஆவார்.

குறிப்புரை :

இராவணன் கயிலையை எடுக்க, பெருவிரலை ஊன்றி நெரித்த சிரங்கள் பத்திலிருந்தும், சாமகானங்கேட்டு அருள்செய்தவர் இவர் என்கின்றது. சீபாதந்தாங்குவார் இறைவனை இருகையில் அன்போடு கூப்பிடுகிறார்கள்; இவன் மதத்தால் இருக்கிறான்; ஆதலால் அடக்குண்டான் என்பார். மதவாள் அரக்கன் என்று உரைத்தார். விரை - மணம். உரையார்கீதம் - புகழ் நிறைந்த சாமகீதம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

கரியமாலுஞ் செய்யபூமே லயனுங் கழறிப்போய்
அரியவண்டந் தேடிப்புக்கு மளக்க வொண்கிலார்
தெரியவரிய தேவர்செல்வந் திகழுங் குடமூக்கில்
கரியகண்டர் காலகாலர் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

செல்வம் விளங்கும் குடமூக்கில் உள்ள காரோணத்து இறைவர் கருநிறம் பொருந்திய திருமாலும் சிவந்த தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகனும் ஒருவரோடு ஒருவர் மாறுபடப் பேசியவராய் அரிய உலகங்கள் அனைத்தும் தேடிச் சென்றும் அடி முடிகளை அளக்க ஒண்ணாதவராய் உயர்ந்து நின்ற பெரியவர். முனைப்புடையவரால் காணுதற்கு அரியவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர். கால காலர்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியவொண்ணாத காலகாலர் குடமூக்கின் காரோணத்தார் என்கின்றது. கழறி - ஒருவருக்கொருவர் இடித்துப்பேசி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

நாணாரமணர் நல்லதறியார் நாளுங் குரத்திகள்
பேணார்தூய்மை மாசுகழியார் பேசே லவரோடும்
சேணார்மதிதோய் மாடமல்கு செல்வ நெடுவீதிக்
கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோ ணத்தாரே.

பொழிப்புரை :

சமணர்கள் நாணம் இல்லாதவர்கள். நல்லதை அறி யாதவர்கள். நாள்தோறும் பெண்பால் குருமார்களும், தூய்மை பேணாதவர்கள். உடல் மாசை நீராடிப் போக்கிக் கொள்ளாதவர்கள். அவர்களோடு பேசவும் செய்யாதீர்கள். வான் அளாவிய மதியினைத் தோயும் மாடவீடுகளைக் கொண்ட செல்வச் செழுமை உடைய வீதிகளோடு கூடிய காரோணமாகிய இருப்பிடத்தை உடையவர் சிவபெருமானார். அவரைச் சென்று வழிபடுவீர்களாக.

குறிப்புரை :

கோணமாகிய இருப்பிடத்தை உடையவர் இவர் என் கின்றது. குரத்திகள் - பெண்பால் துறவிகள் ஆரியாங்கனைகள். தூய்மை பேணார் - பரிசுத்தத்தைப் போற்றாதவர்கள். சேண் - ஆகாயம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோ ணத்தாரைத்
திருவார்செல்வ மல்குசண்பைத் திகழுஞ் சம்பந்தன்
உருவார்செஞ்சொன் மாலையிவைபத் துரைப்பா ருலகத்துக்
கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலை கழிவாரே.

பொழிப்புரை :

அடர்த்தியால் கருநிறம் பெற்ற பொழில்கள் சூழ்ந்த அழகிய செல்வக்காரோணத்து இறைவரைத் தெய்வ நலத்தால் விளைந்த செல்வம் நிறைந்த சண்பை என்னும் சீகாழிப்பதியில் விளங்கும் ஞானசம்பந்தன் பாடிய செஞ்சொல் மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் உரைப்பவர், இவ்வுலகில் மீளக்கருவுற்று இடர்ப்படும் பிறப்பினை எய்தாது கவலைகள் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

குடந்தைக் காரோணத்தாரைச் சண்பை ஞானசம்பந்தன் சொன்ன இம்மாலையைச் சொல்பவர்கள் பிறப்பறுத்துக் கவலையிலிருந்து நீங்குவார்கள் என்கின்றது. கருவார் பொழில் - கரியசோலை. கரு ஆர் இடும்பைப் பிறப்பு - கருப்பையில் படும் துன்பம் நிறைந்த பிறப்பு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

வானார்சோதி மன்னுசென்னி வன்னி புனங்கொன்றைத்
தேனார்போது தானார்கங்கை திங்க ளொடுசூடி
மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலை யாடுவார்
கானூர்மேய கண்ணார்நெற்றி யானூர் செல்வரே.

பொழிப்புரை :

திருக்கானூரில் மேவிய கண்பொருந்திய நெற்றி யினை உடையவரும், ஆனேற்றை ஊர்ந்து வருபவருமாகிய செல்வர், வானத்தில் ஒளியோடு விளங்கும் சூரிய சந்திரர் போன்ற ஒளி மன்னும் சென்னியில் வன்னி, காடுகளில் பூத்த தேன் பொருந்திய கொன்றை மலர், தானே வந்து தங்கிய கங்கை, திங்கள் ஆகியவற்றைச் சூடி, மான் போன்ற மருண்ட கண்களையுடைய உமையம்மை கண்டு மகிழ மாலைக்காலத்தில் நடனம் புரிபவராவர்.

குறிப்புரை :

கானூர் மேவிய செல்வர், சென்னியிலே வன்னி, கொன்றை, திங்கள், கங்கை சூடி அம்மைகாண ஆடுவார் என்கின்றது. வானார்சோதி - வானிலுள்ள ஒளிப்பொருளாகிய சூரியனும் சந்திரனும். சென்னி - திருமுடி. வன்னி - வன்னிப் பத்திரம். மானேர் நோக்கி - மானை ஒத்த கண்களையுடைய பார்வதி. ஆன் ஊர் செல்வர் - இடபத்தை ஊர்ந்த செல்வர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடை தன்மேலோர்
ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றை யெழிலாரப்
போந்தமென்சொ லின்பம்பயந்த மைந்தரவர் போலாம்
காந்தள்விம்மு கானூர்மேய சாந்த நீற்றாரே.

பொழிப்புரை :

காந்தள் செடிகள் தழைத்து வளர்ந்து பூத்து மணம் பரப்பும் கானூரில் மேவிய சந்தனமும் திருநீறும் பூசிய இறைவர், தடுக்க முடியாதபடி பெருகிவந்த கங்கையினது வெள்ளம் மூழ்கி மறைந்துபோன நீண்ட சடைமுடிமேல் பொருந்த வளைந்த பிறை மதியோடு, பாம்பு, கொன்றைமலர் ஆகியன அழகுதர வீதியுலா வந்து அழகிய மென் சொற்களால் இன்பம் தந்த மைந்தர் ஆவார்.

குறிப்புரை :

கானூர்மேவிய செல்வர், கங்கையினையுடைய சடையின் மேல் பிறையும் கொன்றையும் பொருந்த, இன்சொல்லால் இன்பம் பயக்கும் இறைவர்போலாம் என்கின்றது. நீந்தலாகாவெள்ளம் மூழ்கும் நீள்சடை - நீந்தமுடியாத அளவு வேகத்தோடு வந்த கங்கை வெள்ளம் மூழ்கி மறைந்துபோன சடை. ஏய்ந்த - பொருந்திய. போந்த - தன்வாயினின்றும் வந்த. மென்சொல் - மெல்லிய சொற்களால்; என்றது நயந்து பின்னிற்றலால் இன்பந்தந்த தலைவர் என்றவாறு. இது வழிநாட் புணர்ச்சிக்கண் பிரிந்த தலைமகன் காலம் நீட்டிக்க, கவன்றதலைவி தலைநாளில் மென்சொல்லால் இன்பம் பயந்தமை எண்ணி நைகின்ற நிலையை அறிவிக்கின்றது.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்ய மலர்க்கொன்றை
மறையார்பாட லாடலோடு மால்விடை மேல்வருவார்
இறையார்வந்தெ னில்புகுந்தென் னெழினல முங்கொண்டார்
கறையார்சோலைக் கானூர்மேய பிறையார் சடையாரே.

பொழிப்புரை :

கருநிறமான சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய பிறை பொருந்திய சடையினராகிய இறைவர், சிறகுகளோடு கூடிய வண்டுகளும் அவற்றால் உண்ணப்பெறும் தேனும் நிறைந்து செவ்விதாக மலர்ந்த கொன்றை மலர்களைச் சூடியவராய் வேதப் பாடல்களைப் பாடி ஆடுபவராய்ப் பெரிய விடைமேல் வருவார். அவ்வாறு வரும் இறைவர் என் இல்லத்தே புகுந்து என் அழகையும் நலத்தையும் கவர்ந்து சென்றார், இதுமுறையோ?.

குறிப்புரை :

கானூர்மேவிய பிறையார், சடையார், விடைமேல் வருவாராய் என் வீட்டில் புகுந்து என் நலத்தைக் கொண்டார் என்று தலைவி அறத்தொடு நிற்பதாக எழுந்தது. சிறை - சிறகு. மறை ஆர் பாடல் - வேதப்பாடல். மால்விடை - பெரிய இடபம். இறையார் - சிவன். எழில்நலம் என்பது எழிலும் நலமும் என உம்மைத் தொகை. கறையார் சோலை - இருள் சூழ்ந்த சோலை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

விண்ணார்திங்கட் கண்ணிவெள்ளை மாலை யதுசூடித்
தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன் சடைதாழ
எண்ணாவந்தெ னில்புகுந்தங் கெவ்வ நோய்செய்தான்
கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர் பெருமானே.

பொழிப்புரை :

இடம் அகன்ற சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய விண்ணோர் தலைவராகிய சிவபிரானார் வானகத்தில் பொருந்திய பிறைமதியைக் கண்ணியாகச்சூடி, வெண்ணிறமான மாலையை அணிந்து, குளிர்ந்த என்புமாலை, ஆமையோடு ஆகிய வற்றைப் புனைந்து தழைத்த சிவந்த சடைகள் தொங்க, என்னை அடைய எண்ணி வந்து என் இல்லம் புகுந்து, எனக்கு மிக்க விரகவேதனையைத் தந்து சென்றார். இது முறையோ?

குறிப்புரை :

வீட்டில் கன்னம்வைத்துப் புகுந்த கள்வனின் அடை யாளங் கூறுவார்போலத் தலைவி, இல்புகுந்து எவ்வஞ்செய்த தலைவனின் கண்ணி அணி அடையாளங்கள் இவற்றைக் கூறுகின்றாள். விண் - ஆகாயம். கண்ணி - தலைமாலை. தண் ஆர் அக்கு - குளிர்ச்சி பொருந்திய எலும்புமாலை. எண்ணாவந்து என் இல் புகுந்து எவ்வ நோய் செய்தான் - யான் அறியாமையால் எண்ணாதிருந்தபோதிலும், வலியவந்து இல்லில் புகுந்து கலந்து பிரிந்த மிக்க துன்பத்தைச் செய்தான்; என்றது ஆன்மா தலைவனை, தானே சென்று அடைதற்கும், கலத்தற்கும், பிரிதற்கும் என்றும் சுதந்திரமில்லாதன என்று அறிவித்தவாறு. கண் - இடம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண் மதியஞ்சூடி
சீர்கொள்பாட லாடலோடு சேட ராய்வந்து
ஊர்கள்தோறு மையமேற்றென் னுள்வெந் நோய்செய்தார்
கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண் டத்தாரே.

பொழிப்புரை :

கருநிறம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய கறைக்கண்டர், கொன்றை மலர்களால் இயன்ற கண்ணி தார் ஆகியவற்றை அணிந்தவராய்க் குளிர்ந்த பிறைமதியை முடியில் சூடி, சிறப்புமிக்க ஆடல் பாடல்களோடு பெருமைக்குரியவராய் வந்து ஊர்கள்தோறும் திரிந்து, பலியேற்று, என் மனத்தகத்தே கொடிய விரகவேதனையைத் தந்து சென்றார்.

குறிப்புரை :

பிச்சை ஏற்பார்போல் வந்து என் மனத்திற்குப் பெரு நோய் செய்தார் என்கின்றது. இதுவும் தலைவி கூற்று. தார் - மார்பின் மாலை. கண்ணி - தலையிற்சூடப்படும் மாலை. சேடர் - காதலால் தூது செல்லும் தோழர். உள் - மனம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

முளிவெள்ளெலும்பு நீறுநூலு மூழ்கு மார்பராய்
எளிவந்தார்போ லையமென்றெ னில்லே புகுந்துள்ளத்
தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேற லார்பூவில்
களிவண்டியாழ்செய் கானூர்மேய வொளிவெண் பிறையாரே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய மலரில் கள்ளுண்டு களித்த வண்டுகள் யாழ்போல ஒலி செய்யும் திருக்கானூரில் மேவிய ஒளி பொருந்திய வெண்பிறையை முடியிற் சூடிய இறைவர், காய்ந்த வெண்மையான எலும்பும் திருநீறும் முப்புரிநூலும் பொருந்திய மார்பினராய் எளிமையாக வந்தவர் போல வந்து, `ஐயம் இடுக` என்று கூறிக் கொண்டே என் இல்லத்தில் புகுந்து உள்ளத் தெளிவையும் நாணத்தையும் கவர்ந்து சென்ற கள்வர் ஆவார்.

குறிப்புரை :

இதுவும்; பிச்சை என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்கு வந்து என்னுடைய தெளிவையும் நாணத்தையுங்கொண்ட கள்வர் இவர் என்கின்றது. முளி - காய்ந்த. எளிவந்தார்போல் - இரங்கத் தக்கவர்போல். உள்ளத் தெளிவும் நாணுங்கொண்ட கள்வர் என்றது தன்னுடைய நிறையும் நாணும் அகன்றன என்பதை விளக்கியது. தேறல் - தேன்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல் செய்திங்கே
பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம் பலபேசிப்
போவார்போல மால்செய்துள்ளம் புக்க புரிநூலர்
தேவார்சோலைக் கானூர்மேய தேவ தேவரே.

பொழிப்புரை :

தெய்வத்தன்மை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த கானூரில் மேவிய தேவதேவராகிய சிவபிரானார், மூப்பு அடையாத அழகினர். ஒரு கலையோடு முளைத்த வெண்மையான பிறையை அணிந்தவர். அவர் கொன்றைமாலை சூடியவராய்க் காமக் குறிப்புத் தோன்றும் புன்சிரிப்புடன் என் இல்லம் நோக்கி வந்து, பொய்கலந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்து போவாரைப்போல் காட்டி என்னை மயக்கி என் உள்ளத்தில் புக்கொளித்த புரிநூலர் ஆவார்.

குறிப்புரை :

இவர் வரும்போது பிறைசூடி, கொன்றை மாலை யணிந்து, புன்சிரிப்புச் செய்துகொண்டே வந்தார்; பல பொய்யைப் பேசிக்கொண்டே போவார்போல என் மனத்தை மயக்கிப் புகுந்து கொண்டார் என்கின்றது. மூவா வண்ணர் - மூப்படையாத அழகை உடையவர். முறுவல் - காமக்குறிப்புத் தோன்றும் சிரிப்பு. பொக்கம் - பொய். உள்ளம் புக்க புரிநூலர் என்றது புரிநூல் அணிந்ததற்கேலாத செயல் செய்தார் என்னுங்குறிப்பு. தேவு - தெய்வத்தன்மை; தேன் வார் சோலை என்றுமாம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

தமிழினீர்மை பேசித்தாளம் வீணை பண்ணிநல்ல
முழவமொந்தை மல்குபாடல் செய்கை யிடமோவார்
குமிழின்மேனி தந்துகோல நீர்மை யதுகொண்டார்
கமழுஞ்சோலைக் கானூர்மேய பவள வண்ணரே.

பொழிப்புரை :

மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கானூரில் மேவிய பவளம் போன்ற நிறத்தினை உடைய பரமர், தமிழ்போன்று இனிக்கும் இனிய வார்த்தைகளைப் பேசி, தாளத்தோடு வீணையை மீட்டி, முழவம் மொந்தை ஆகிய துணைக் கருவிகளுடன் கூடிய பாடல்களைப் பாடி எனது இல்லத்தை அடைந்து, அதனை விட்டுப் பெயராதவராய் எனக்குக் குமிழம்பூப் போன்ற பசலை நிறத்தை அளித்து என் அழகைக் கொண்டு சென்றார்.

குறிப்புரை :

இவர் பல வாத்தியங்கள் முழங்கப் பாடிக்கொண்டும் இனிமையாகப் பேசிக்கொண்டும் வந்தார்; வந்தவர் இடம் விட்டுப் பெயராராய் என்னுடைய அழகைக் கவர்ந்து கொண்டு குமிழம்பூ நிறத்தைக் கொடுத்துவிட்டார் என்கின்றது. தமிழின் நீர்மை - இனிமை. கோலம் - அழகு. பவளவண்ணரே என்றாள், அவர்மேனியின் நிறத்தில் ஈடுபட்டு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

அந்தமாதி யயனுமாலு மார்க்கு மறிவரியான்
சிந்தையுள்ளு நாவின்மேலுஞ் சென்னியு மன்னினான்
வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலை யாடுவான்
கந்தமல்கு கானூர்மேய வெந்தை பெம்மானே.

பொழிப்புரை :

மணம் நிறைந்த திருக்கானூரில் எழுந்தருளிய எந் தையாராகிய பெருமானார், அந்தத்தைச் செய்பவரும், யாவர்க்கும் ஆதியாய் இருப்பவரும் ஆவார். அயன், மால் முதலிய அனைவராலும் அறிதற்கரியவர். என் சிந்தையிலும் சென்னியிலும் நாவிலும் நிலைபெற்றிருப்பவர். அத்தகையோர் யான் காண வெளிப்பட்டு வந்து என் உள்ளம் புகுந்து மாலையிலும் காலையிலும் நடனம் புரிந்தருளு கின்றார்.

குறிப்புரை :

அயனுக்கும் மாலுக்கும் அறியப்படாத இறைவன் எனது சிந்தையிலும், நாவிலும், சென்னியிலும் திகழ்கின்றான்; என் மனத்திற் புகுந்து காலையும் மாலையும் உலாவுகின்றான் என்கின்றது. அந்தம் ஆதி - முடிவும் முதலும்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

ஆமையரவோ டேனவெண்கொம் பக்கு மாலைபூண்
டாமோர்கள்வர் வெள்ளர்போல வுள்வெந் நோய்செய்தார்
ஓமவேத நான்முகனுங் கோணா கணையானும்
சேமமாய செல்வர்கானூர் மேய சேடரே.

பொழிப்புரை :

வேள்விகள் இயற்றும் முறைகளைக் கூறும் வேதங் களை ஓதும் நான்முகனும், வளைந்த பாம்பணையில் பள்ளிகொள்ளும் திருமாலும் தங்கள் பாதுகாப்புக்குரியவராகக் கருதும் செல்வராகிய கானூர் மேவிய பெருமானார், ஆமை, அரவு, பன்றியின் வெண்மையான கொம்பு என்புமாலை ஆகியவற்றைப் பூண்ட ஓர்கள்வராய் வெள்ளை உள்ளம் படைத்தவர் போலக் கருதுமாறு நல்லவர் போல வந்து எனக்கு மனவேதனையைத் தந்தார்.

குறிப்புரை :

எலும்பு முதலியவற்றை அணிந்து வெள்ளை உள்ளம் படைத்தவர்போல வந்து கள்வராய் மனவேதனையைத் தந்தார் என்கின்றது. அவர்கொண்ட வேடத்திற்கும் செயலுக்கும் பொருத்தமில்லை என்றபடி. ஓமம் - ஆகுதி. கோண் நாகணையான் - வளைந்த பாம்பைப் படுக்கையாகக்கொண்டவன். சேமம் - பாதுகாப்பு. சேடர் - கடவுள்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர் மேயானைப்
பழுதின்ஞான சம்பந்தன்சொற் பத்தும் பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித் துதித்துநின்
றழுதுநக்கு மன்புசெய்வார் அல்ல லறுப்பாரே.

பொழிப்புரை :

பேய்களும் தூங்கும் நள்ளிரவில் நடனம் ஆடும் கானூர்மேவிய இறைவனைக் குற்றமற்ற ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன சொல்மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடித்தொழுது முப்பொழுதும் தோத்திரங்களைச் சொல்லித் துதித்து நின்று அழுதும் சிரித்தும் அன்பு செய்பவர்கள் அல்லலை அறுப்பார்கள்.

குறிப்புரை :

இத்தோத்திரங்களைச் சொல்லித் துதித்து ஆனந்தத் தால் அழுதும் சிரித்தும் நிற்பவர்கள் துன்பம் அறுப்பார் என்கின்றது. கழுது - பேய். பொழுது - முப்பொழுதிலும்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 1

நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்து நயனத்தாற்
சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியா விழிசெய்தான்
புறவமுறைவண் பதியாமதியார் புரமூன் றெரிசெய்த
இறைவன்அறவ னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

தேன் நிறைந்த வண்டுகள் ஒலிக்கும் கொன்றை மாலையை விரும்பிச்சூடி, சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடைய, உயிர்கட்கு எல்லாம் இன்பநலம் தரும் வள்ளன்மை உடைய, மன்மதனைப் பொடியாகுமாறு நெற்றிக்கண்ணால் விழித்து அழித்த, சிவபிரான் உறையும்பதி புறவம் எனப்பெறும் சீகாழியாம். தன்னை மதியாத அசுரர்களின் முப்புரங்களை எரித்தழித்த அவ்விறைவனாகிய அறவன் இமையவர் ஏத்தித்துதிக்க அப்பதியிடை உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

மகரக்கொடியோனாகிய மன்மதனது உடலத்தைப் பொடி செய்தவரும், திரிபுரம் எரித்தவரும் ஆகிய உமாபதிநகர் புறவம் என்னும் சீகாழியாம் என்கின்றது. நறவம் - தேன். அறை - ஒலிக்கின்ற. நயந்து - விரும்பி. நயனத்தால் - கண்ணால். சுறவம் செறி வண் கொடியோன் - சுறாமீன் எழுதப்பட்ட கொடியை உடையவனாகிய மன்மதன். நயனத்தால் விழித்தலைச் செய்தான் என்க. மதியார் - பகைவர்./n குருவருள் : நறவம் நிறை வண்டறை தார் என்ற பதிகம் ஞானசம்பந்தர் தோடுடைய செவியன் பாடியபிறகு உடன் கோயிலினுட் சென்று உமாமகேசுரரைத் தரிசித்துப் பாடியது. இரண்டாம் பதிகம் மடையில் வாளை என்பதாகவே கற்றோரும் மற்றோரும் எண்ணி வருகின்றனர். இது பொருந்தாது என்பதைப் பின்வரும் சேக்கிழார் வாக்கால் தெளியலாம்.`அண்ண லணைந்தமை கண்டு தொடர்ந்தெழும் அன்பாலே மண்மிசை நின்ற மறைச்சிறு போதகம் அன்னாரும்/n கண்வழி சென்ற கருத்து விடாது கலந்தேகப்/n புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலி னுட்புக்கார்`/n `பொங்கொளி மால்விடை மீது புகுந்தணி பொற்றோணி/n தங்கி யிருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே/n இங்கெனை யாளுடை யான்உமை யோடும் இருந்தான்என்று/n அங்கெதிர் நின்று புகன்றனர் ஞானத் தமுதுண்டார்`/n இப்பதிகத்துள் பாடல் தோறும் `இமையோர் ஏத்த உமையோ டிருந்தானே` என்பதால் இதுவே இரண்டாம் பதிகம் என்பதைச் சி.கே. சுப்பிரமணிய முதலியார் தம் பெரியபுராண உரைப்பேருரைக் குறிப்பில் அறிவித்துள்ளார். இஃது இத்துறையில் உள்ளார்க்கும் பெருவிருந்தாம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

உரவன்புலியி னுரிதோலாடை யுடைமேற் படநாகம்
விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்த னுகிர்தன்னாற்
பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம் பதியாக
இரவும்பகலு மிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

மிக்க வலிமையை உடையவனும், புலியிலினது தோல் ஆடையாகிய உடை மேல், படம் பொருந்திய நாகத்தைக் கச்சாகக் கட்டிய விகிர்தனும், தனது கைவிரல் நகத்தால் போர்செய்யும் கொடிய யானை பிளிற அதன் தோலை உரித்துப் போர்த்தவனுமாகிய இறைவன், புறவம் என்னும் சீகாழியையே தான் உறையும் பதியாகக் கொண்டு அதன்கண் இரவும் பகலும் தேவர்கள் பலரும் வந்து வணங்க உமையம்மையோடு எழுந்தருளியிருக்கின்றான்.

குறிப்புரை :

புலித்தோல் ஆடையின்மேல் நாகத்தைக் கச்சாக உடுத்து, யானையை உரித்துப் போர்த்து, புறவம் பதியாக உமையோடு இருந்தான் என்கின்றது. உரவன் - வன்மை உடையோன்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ் சிலம்பார்க்கக்
கந்தமல்கு குழலிகாணக் கரிகாட் டெரியாடி
அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியா வமர்வெய்தி
எந்தம்பெருமா னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

எம்முடைய தலைவனாகிய இறைவன், உதரபந்தத்தை அணிந்துள்ள பூதங்கள் பாடவும், பாதங்களில் சிலம்புகள் ஒலிக்கவும், மணம் நிறைந்த கூந்தலையுடைய உமையம்மை காணச் சுடுகாட்டில் எரியேந்தி ஆடி, அழகிய குளிர்ந்த கடலால் சூழப்பட்ட எழில்மிக்க புறவம் என்னும் சீகாழியையே இருப்பிடமாகக் கொண்டு, எழுந்தருளி இமையோர்கள் தன்னையேத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

பூதம் பாட, சிலம்பொலிக்க, உமைகாண இடுகாட்டில் நடமாடி இந்நகரை இடமாகக் கொண்டிருந்தான் என்கின்றது. பந்தம் உடைய பூதம் - உதரபந்தம் என்னும் அணியையணிந்த பூதம். கந்தம் - மணம். கரிகாடு - இடுகாடு. அமர்வெய்தி - விரும்பியிருந்து.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

நினைவார்நினைய வினியான்பனியார் மலர்தூய் நித்தலுங்
கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள் கமழ்கொன்றை
புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம் பதியாக
எனையாளுடையா னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

என்னை ஆளாக உடைய இறைவன், நாள்தோறும் குளிர்ந்த மலர்களைத் தூவித் தன்னை நினையும் அடியவர்களின் நினைப்பிற்கு இனியவனாய், கனைக்கும் விடை ஒன்றை ஊர்தியாக உடையவனாய், கங்கை, திங்கள், மணங்கமழும் கொன்றை ஆகியவற்றைச் சூடிய அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், கடலால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழிப்பதியை இடமாகக் கொண்டு இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

என்னை ஆளாக உடையவன் நினைத்தற்கினியனாய் விடையேறி, கங்கை முதலியவற்றைச் சூடி, புறவம்பதியாக உமையோடு இமையோர் ஏத்த இருந்தான் என்கின்றது. பனியார் மலர் தூய், நினைவார் நித்தலும் நினைய இனியான் எனக் கூட்டுக. கனை - ஒலி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

செங்கணரவு நகுவெண்டலையு முகிழ்வெண் டிங்களுந்
தங்குசடையன் விடையனுடையன் சரிகோ வணவாடை
பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம் பதியாக
எங்கும்பரவி யிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

சிவபிரான், சிவந்த கண்களையுடைய பாம்பும், சிரிப்பதுபோல வாய்விண்டு தோன்றும் வெள்ளிய தலையோடும், இளையவெண்பிறையும் தங்கும் சடைமுடியன். விடை ஊர்தியன். சரியும் கோவண ஆடையை உடையாகக் கொண்டவன். அப்பெருமான் பொங்கிஎழும் அலைகளையுடைய வளம் பொருந்திய கடலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் எங்கும் பரவி நின்று ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.

குறிப்புரை :

அரவு முதலியவற்றை அணிந்து விடையேறி, கோவணமுடுத்தி, இந்நகரை இடமாகக்கொண்டு இமையோர் ஏத்த உமையோடு இருந்தான் என்கின்றது. முகிழ் - இளைய. சரி - தொங்குகின்ற. திரை - அலை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

பின்னுசடைகள் தாழக்கேழ லெயிறு பிறழப்போய்
அன்னநடையார் மனைகடோறு மழகார் பலிதேர்ந்து
புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம் பதியாக
என்னையுடையா னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

என்னை அடிமையாக உடைய இறைவன், முறுக்கி விடப்பட்ட சடைகள் தாழ்ந்து தொங்க மாலையாகக் கோத்தணிந்த பன்றியின் பற்கள் விளங்கச் சென்று, அன்னம் போன்ற நடையினையுடைய மகளிரின் இல்லங்கள்தோறும் அழகு பொருந்தப்பலியேற்று, புன்னை தாழை முதலியன நிறைந்த பொழிலால் சூழப்பட்ட அழகிய புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக்கொண்டு உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.

குறிப்புரை :

என்னையுடையான் சடைதாழ, பன்றிக்கொம்பு மார்பில் விளங்க, பெண்கள் மனைதோறும் சென்று பிச்சை எடுத்துப் புறவம் பதியாக இருந்தான் என்கின்றது. கேழல் எயிறு - பன்றிப் பல்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோ ழந்தேவர்
விண்ணிற்பொலிய வமுதமளித்த விடைசேர் கொடியண்ணல்
பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம் பதியாக
எண்ணிற்சிறந்த விமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

யாராலும் உண்ண முடியாத நஞ்சைத் தான் உண்டு, ஒரு தோழம் என்ற எண்ணிக்கையில் தேவர்கள் விண்ணுலகில் மகிழ்வுற்று வாழ, கடலிடைத் தோன்றிய அமுதை வழங்கிய விடை எழுதிய கொடியையுடைய அண்ணல். சிறகுகளையுடைய வண்டுகள் பண்ணோடு ஒலிக்கும் பூஞ்சோலைகளால் சூழப்பட்ட புறவம் என்னும் சீகாழியைத் தன் பதியாகக் கொண்டு எண்ணற்ற இமையோர் தன்னை ஏத்தி வணங்க உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

நஞ்சை உண்டு முப்பத்துமுக்கோடி தேவர்கட்கு அமுது அளித்து வாழவைத்த அண்ணல் இந்நகரை இடமாகக்கொண்டிருந்தான் என்கின்றது. உண்ணற்கரிய - பிறரால் உண்ண முடியாத. ஒரு தோழம் தேவர் - ஒரு பேரெண்ணினையுடைய தேவர்கள், தோழம் பேரெண். `ஒரு தோழம் தொண்டருளன்` (திருவாசகம்) விண்ணிற் பொலிய - விண்ணுலகை இடமாகக்கொண்டு போகத்தில் மூழ்கி விளங்க. பண்ணில் அறை - பண்ணோடு ஒலிக்கின்ற. எண்ணில் சிறந்த - எண்ணிக்கையில் மிகுந்த.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

விண்டானதிர வியனார்கயிலை வேரோ டெடுத்தான்றன்
றிண்டோளுடலு முடியுநெரியச் சிறிதே யூன்றிய
புண்டானொழிய வருள்செய்பெருமான் புறவம் பதியாக
எண்டோளுடையா னிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

எட்டுத் தோள்களையுடைய சிவபிரான் விண் அதிரும்படியாகப் பெரிய கயிலைமலையை வேரோடு பெயர்த்து எடுத்த இராவணனின் வலிமை பொருந்திய தோள்கள், உடல், முடி ஆகியன நெரியுமாறு கால் விரலால் சிறிதே ஊன்றிப் பின் அவன் வருந்திய அளவில் உடலில் தோன்றிய புண்கள் நீங்க அவன் வேண்டும் வரங்கள் பலவற்றைத்தந்த பெருமானாவான். அவ்விறைவன் புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு இமையோர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

இராவணனை நெரித்த புண் நீங்க, அருள்செய்த பெருமான் இவன் என்கின்றது. வியன் ஆர் கயிலை - இடமகன்ற கயிலை. சிறிதே ஊன்றிய - மிகச் சிறிதாக ஊன்றிய. புண் - உடற்புண்ணும், உள்ளப்புண்ணும். எண்தோள் உடையான் - எட்டுத் திக்குகளாகிய தோள்களை உடையவன்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

நெடியானீடா மரைமேலயனும் நேடிக் காண்கில்லாப்
படியாமேனி யுடையான்பவள வரைபோற் றிருமார்பிற்
பொடியார்கோல முடையான்கடல்சூழ் புறவம் பதியாக
இடியார்முழவா ரிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

திருமாலும், நீண்டு வளர்ந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் தேடிக்காண இயலாத தன்மையை உடைய திருமேனியன். பவளமலை போன்ற திருமார்பின்கண் திருநீறு அணிந்த அழகினையுடையவன். அவ்விறைவன், கடல் நீரால் சூழப்பட்டதும் இடி போன்ற முழக்கத்தையுடைய முழா ஒலிப்பதும் ஆகிய புறவம் என்னும் சீகாழியைத் தனக்குரிய பதியாகக் கொண்டு, இமையவர் ஏத்த உமையம்மையோடு வீற்றிருந்தருள்கின்றான்.

குறிப்புரை :

அயனும் மாலும் தேடிக் காணமுடியாத திருமேனியை உடையவன், திருநீற்றழகன் இவன் என்கின்றது. நெடியான் - திருமால். படியாமேனி உடையான் - அடங்காத அழல் உருவாகிய மேனியை உடையவன். பொடி - விபூதி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

ஆலும்மயிலின் பீலியமண ரறிவில் சிறுதேரர்
கோலும்மொழிக ளொழியக்குழுவுந் தழலு மெழில்வானும்
போலும்வடிவு முடையான்கடல்சூழ் புறவம் பதியாக
ஏலும்வகையா லிமையோரேத்த வுமையோ டிருந்தானே.

பொழிப்புரை :

ஆடுகின்ற மயிலின் தோகையைக் கையில் ஏந்திய அமணர்களும், அறிவில் குறைந்த புத்தர்களும், புனைந்து பேசும் மொழிகளைத் தாழுமாறு செய்பவனாய், கூடி எரியும் தழலும், அழகிய வானமும் போன்ற செவ்வண்ணம் உடையசிவன், கடல் நீர் சூழ்ந்த புறவம் என்னும் சீகாழியைத் தனது பதியாகக் கொண்டு இமையோர் பொருந்தும் வகையால் போற்ற உமையம்மையோடு வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் கூறும் மொழிகளைக் கடந்து, விண்ணையும் தீயையும் ஒத்த வடிவமுடையவனாக இருப்பவன் இவன் என்கின்றது. கோலும் மொழிகள் ஒழிய - கோலிச் சொல்லும் மொழிகள் பிற்பட. குழுவும் - கூடி எரிகின்ற. ஏலும் வகையால் - பொருந்தும் வகை. ஆலும் மயில் - உயிர் உள் வழி அடை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

பொன்னார்மாட நீடுஞ்செல்வப் புறவம் பதியாக
மின்னாரிடையா ளுமையாளோடு மிருந்த விமலனைத்
தன்னார்வஞ்செய் தமிழின்விரக னுரைத்த தமிழ்மாலை
பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோ கந்தானே.

பொழிப்புரை :

அழகு பொருந்திய உயர்ந்த மாடவீடுகளை உடையதும், செல்வச் செழுமை வாய்ந்ததும் ஆகிய புறவம் என்னும் சீகாழிப்பதியில், மின்னல் போன்ற இடையினையுடைய உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ள குற்றமற்ற இறைவனைத் தன் அன்பால் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் போற்றி உரைத்த இத்தமிழ் மாலையைப் பல நாள்களும் பாடி ஆடுவோர், மேலுலகத்தில் பிரியாது உறைவர்.

குறிப்புரை :

புறவம்பதியாக இறைவியோடு இருக்கின்ற விமலனை அன்புசெய்து, தமிழாற்சொன்ன இப்பாடலைப் பாடியாடுவார் பரலோகம் பிரியார் எனப்பயன் கூறுகிறது. ஆர்வம் - அன்பு.

பண் :

பாடல் எண் : 1

காலைநன்மாமலர் கொண்டடிபரவிக் கைதொழுமாணியைக் கறுத்தவெங்காலன்
ஓலமதிடமுன் னுயிரொடுமாள வுதைத்தவனுமையவள் விருப்பனெம்பெருமான்
மாலைவந்தணுக வோதம்வந்துலவி மறிதிரைசங்கொடு பவளமுனுந்தி
வேலைவந்தணையுஞ் சோலைகள்சூழ்ந்த வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

வைகறைப் பொழுதில், சிறந்தனவாகிய நல்ல மலர்களைப் பறித்துவந்து சாத்தித் தன் திருவடிகளைப் பரவி, கைகளால் தொழும் மார்க்கண்டேயன் உயிரைக் கவரச் சினந்துவந்த கொடிய காலனை ஓலமிட்டு அலறித் தனக்கு முன்னே உயிரோடு மாளுமாறு உதைத்தருளியவனும், உமையம்மைக்கு விருப்பமானவனும் ஆகிய எம்பெருமான், மாலைக் காலம் வரக் கடல் வெள்ள நீர் வந்து உலவிச் சூழ்ந்து வரும் அலைகளால் சங்கு, பவளம் ஆகியவற்றை உந்திவந்து கரையிற் சேர்க்கும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழியில் மேவி வீற்றிருந்தருள்கின்றான்.

குறிப்புரை :

நாள்தோறும் மலர்கொண்டு அடிபரவும் மார்க் கண்டற்காகக் காலனைக் காய்ந்த பரமன் வெங்குரு என்னும் சீகாழியில் வீற்றிருக்கிறார் என்கின்றது. மாணி - பிரமசாரியாகிய மார்க்கண்டர். கறுத்த - கோபித்த. மாலைக்காலம் வந்ததும் கடல் ஓதம் பெருகி, சங்கையும் பவளத்தையும் உந்திக் கடல்சாரும் சோலைகள் சூழ்ந்த காழி என நெய்தல்வளம் கூறப்பெற்றது.

பண் :

பாடல் எண் : 2

பெண்ணினைப்பாக மமர்ந்துசெஞ்சடைமேற் பிறையொடுமரவினை யணிந்தழகாகப்
பண்ணினைப்பாடி யாடிமுன்பலிகொள் பரமரெம்மடிகளார் பரிசுகள்பேணி
மண்ணினைமூடி வான்முகடேறி மறிதிரைகடன்முகந் தெடுப்பமற்றுயர்ந்து
விண்ணளவோங்கி வந்திழிகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

உமையம்மையை இடப்பாகமாக விரும்பி ஏற்று, செஞ்டைமேல் பிறை பாம்பு ஆகியவற்றை அணிந்து, பண் வகைகளை அழகாகப்பாடி ஆடியவராய்ச் சென்று, மகளிரிடம் பலியேற்கும் பரமராகிய எம் அடிகளார், ஊழிக் காலத்தில் உலகை மூடி வான்முகடு வரை உயர்ந்து சுருண்டு விழும் அலைகடல் நீரில் மிதந்து உயர்ந்து வான் உற ஓங்கி மீள நிலவுலகிற்கு வந்திழிந்த கோயிலாகிய வெங்குரு என்னும் சீகாழிப் பதியுள், வீற்றிருந்தருள்கிறார்.

குறிப்புரை :

கடல்கொண்டஞான்று உயர்ந்தோங்கிய கோயிலில் உமாதேவியை ஒருபாகத்திருத்தி, பிறைசூடி, பண்ணைப்பாடி, தன் தன்மைகளைப்பேணி வீற்றிருந்தார் என்கின்றது. அமர்ந்து - விரும்பி. பரிசுகள் பேணி - தன் தன்மையவாகிய கருணையைக் காட்டி. கடல் மோதி, ஏறி, முகந்து எடுப்ப, உயர்ந்து, ஓங்கி, இழி கோயிலாகிய வெங்குருவில் வீற்றிருந்தார் என முடிக்க.

பண் :

பாடல் எண் : 3

ஓரியல்பில்லா வுருவமதாகி யொண்டிறல்வேடன துருவதுகொண்டு
காரிகைகாணத் தனஞ்சயன்றன்னைக் கறுத்தவற்களித்துடன் காதல்செய்பெருமான்
நேரிசையாக வறுபதமுரன்று நிரைமலர்த்தாதுகண் மூசவிண்டுதிர்ந்து
வேரிகளெங்கும் விம்மியசோலை வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

தம் இயல்பிற்குப் பொருத்தமற்ற உருவமாய் மிக்க வலிமையுடைய வேடர் உருத்தாங்கி வந்து உமையம்மைகாண அருச்சுனனோடு ஒரு காரணங்காட்டிச் சண்டையிட்டு அவனுக்கு வேண்டும் பொருள்களை வழங்கி அன்பு செய்த பெருமானாகிய சிவபிரான், வண்டுகள் நேரிசைப் பண்பாடி முரன்று வரிசையாக மலர்ந்த மலர்களின் மகரந்தங்களில் புரள, அதனால் மலர்கள் விரிந்து தேன் உதிருவதால் தேன் எங்கும் விம்மிவழியும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கிறான்.

குறிப்புரை :

உமாதேவிக்காக விசயனைக் கோபித்து அருளுஞ் செய்த பெருமான் இவர் என்கின்றது. ஓர் இயல்பு இல்லா உருவமது ஆகி - ஒருதன்மையும் இல்லாத உருவத்தை மேற்கொண்டு. காரிகை - உமாதேவியார். தனஞ்சயன் - அருச்சுனன். கறுத்து அவற்கு அளித்து எனப்பிரிக்க. நேரிசை: ஒருபண். அறுபதம் - வண்டு. முரன்று - ஒலித்து. தாது கண் மூச - மகரந்தம் கண்ணில் மூட. வேரிகள் - தேன்கள்.

பண் :

பாடல் எண் : 4

வண்டணைகொன்றை வன்னியுமத்த மருவியகூவிள மெருக்கொடுமிக்க
கொண்டணிசடையர் விடையினர்பூதங் கொடுகொட்டிகுடமுழாக் கூடியுமுழவப்
பண்டிகழ்வாகப்பாடியொர்வேதம் பயில்வர்முன்பாய்புனற் கங்கையைச்சடைமேல்
வெண்பிறைசூடி யுமையவளோடும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

வண்டுகள் சூழும் கொன்றை மலர், வன்னி இலை, ஊமத்தம் மலர், வில்வம், எருக்கம்பூ ஆகியனவற்றை மிகுதியாகக் கொண்டு அணிந்த சடையினரும், விடை ஊர்தியரும், பூதகணங்கள் கொடுகொட்டி குடமுழா முழவு முதலியவற்றை முழக்கப் பண் விளங்க ஒப்பற்ற வேதங்களைப் பாடிப் பழகியவரும், தமக்கு முன்னே பாய்ந்து வந்த கங்கை வெள்ளத்தை வெண்பிறையோடு சடையில் அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் உமையம்மையாரோடு வெங்குரு எனப்படும் சீகாழிப் பதியில் வீற்றிருந்தருள்கிறார்.

குறிப்புரை :

கொன்றை முதலியவற்றை அணிந்த சடையராய், குடமுழா முதலியவற்றைப் பூதங்கள் வாசிக்க, இசையோடு வேதத்தைப் பாடுகிறவர் இவர் என்கின்றது. கூவிளம் - வில்வம். கொடுகொட்டி - ஒருவகை வாத்தியம். இது இப்போது கிடுகிட்டி என வழங்குகிறது. பண்திகழ்வாக - ஒரேஸ்வரத்தில்.

பண் :

பாடல் எண் : 5

சடையினர்மேனி நீறதுபூசித் தக்கைகொள்பொக்கண மிட்டுடனாகக்
கடைதொறும்வந்து பலியதுகொண்டு கண்டவர்மனமவை கவர்ந்தழகாகப்
படையதுவேந்திப் பைங்கயற்கண்ணி யுமையவள்பாகமு மமர்ந்தருள்செய்து
விடையொடுபூதஞ் சூழ்தரச்சென்று வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

சடைமுடியினராய்த் திருமேனியில் வெண்ணீறு பூசியவராய், தக்கை என்னும் இசைக்கருவியை வைத்துக் கட்டியுள்ள துணிமூட்டையைத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு வீடுகள் தோறும் வந்து பலியேற்று, தம்மைக் கண்ட மகளிரின் மனங்களைக் கவர்ந்து அழகிய கோலத்தோடு மழுப்படையைக் கையில் ஏந்தியவராய் விளங்கும் பெருமானார், பசிய கயல் போன்ற கண்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு அமர்ந்து அருள் செய்யும் குறிப்பினராய், விடையூர்தியோடு பூதகணங்கள் சூழ வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வந்து வீற்றிருந்தருள்கிறார்.

குறிப்புரை :

வீடுகள்தோறும் வந்து பிச்சை ஏற்று, கண்டவர் மனத்தைக்கவர்ந்து, உமையவளை ஒருபாகத்திருத்தியவர் இவர் என்கின்றது. தக்கைகொள்பொக்கணம் - தக்கை என்னும் வாத்தியத்தை வைத்து மறைத்த துணி மூட்டை. இட்டு - புறத்தோளில் தொங்கவிட்டு.

பண் :

பாடல் எண் : 6

கரைபொருகடலிற் றிரையதுமோதக் கங்குல்வந்தேறிய சங்கமுமிப்பி
உரையுடைமுத்த மணலிடைவைகி யோங்குவானிருளறத் துரப்பவெண்டிசையும்
புரைமலிவேதம் போற்றுபூசுரர்கள் புரிந்தவர் நலங்கொளா குதியினினிறைந்த
விரைமலிதூபம் விசும்பினைமறைக்கும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

கரையை அலைக்கும் கடலின் திரைகள் மோதுதலால் இரவிடைக் கரையில் வந்து ஏறிய சங்குகளும் சிப்பிகளும் முத்துக்களை ஈனப் புகழ்பெற்ற அம்முத்துக்கள் மணல் இடையே தங்கி ஓங்கிய வானத்தின் இருளை முற்றிலும் துரத்தி ஒளி செய்ய, எண் திசைகளிலும் பரவி நிறைந்த வேதங்களைப் போற்றும் அந்தணர்கள் நன்மை விளைக்கும் வேள்விகளைப் புரிய, அவ்வேள்விகளின் ஆகுதியால் எழும் மணம் மிக்கபுகை வானை மறைத்துத் தோன்றும் வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் பெருமான் உமையம்மையாரோடு வீற்றிருந்தருள்கின்றார்.

குறிப்புரை :

ஓதத்தில் கரையேறிச் சங்குகளும் இப்பிகளும் முத்துக்களை ஈன, அவை இருளை ஓட்ட, அந்தணர்கள் செய்யும் யாகப்புகை ஆகாயத்தை மறைக்கின்ற வெங்குரு என்கின்றது. இருளை ஒளியாக்குவன சங்கும் இப்பியும் ஈன்ற முத்துக்கள். ஒளியான விசும்பை மறைப்பன யாகப்புகை என்பது கருத்து. பூசுரர் - அந்தணர். புரை - உயர்வு.

பண் :

பாடல் எண் : 7

வல்லிநுண்ணிடையா ளுமையவடன்னை மறுகிடவருமத களிற்றினைமயங்க
ஒல்லையிற்பிடித்தங் குரித்தவள்வெருவல் கெடுத்தவர்விரிபொழின் மிகுதிருவாலில்
நல்லறமுரைத்து ஞானமோடிருப்ப நலிந்திடலுற்று வந்தவக்கருப்பு
வில்லியைப்பொடிபட விழித்தவர்விரும்பி வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

கொடி போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மை அஞ்சுமாறு வந்த மதகளிற்றை அது மயங்குமாறு விரைந்து பிடித்து அதனை உரித்து அம்மையின் அச்சத்தைப் போக்கியவரும், விரிந்த பொழிலிடையே அமைந்த அழகிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதியர்க்கு நல்லறங்களை உரைத்து, யோக நிலையில் ஞானமாத்திரராய் வீற்றிருக்க, திருமால் பிரமர் தம் கடுஞ்சொற்களால் நலிவுற்று மலர்க்கணை தொடுத்து யோக நிலையைக் கலைக்க வந்த கரும்பு வில்லையுடைய காமன் எரிந்து பொடிபடுமாறு விழித்தவரும் ஆகிய சிவபிரானார் விரும்பி வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

உமையவள் அஞ்ச, யானையை உரித்து அவள் அச்சத்தைப் போக்கியவரும், ஆலின்கீழ் நால்வருக்கு அறம் உரைத்திருந்தபோது வருத்தவந்த மன்மதனை எரித்தவரும் ஆகிய இறைவன் இந்நகரில் இருந்தார் என்கின்றது. வல்லி - கொடி. மறுகிட - மயங்க. ஒல்லை - விரைவாக. வெருவுதல் - அஞ்சுதல். திரு ஆல் - கல்லால விருட்சம். நலிந்திடலுற்று - வருந்தி. கருப்பு வில்லி - கரும்பை வில்லாக உடைய மன்மதன்.

பண் :

பாடல் எண் : 8

பாங்கிலாவரக்கன் கயிலையன்றெடுப்பப் பலதலைமுடியொடு தோளவைநெரிய
ஓங்கியவிரலா லூன்றியன்றவற்கே யொளிதிகழ்வாளது கொடுத்தழகாய
கோங்கொடுசெருந்தி கூவிளமத்தங் கொன்றையுங்குலாவிய செஞ்சடைச்செல்வர்
வேங்கைபொன்மலரார் விரைதருகோயில் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

நற்குணங்கள் இல்லாத அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தபோது அவன் முடிகள் அணிந்த பல தலைகளையும் தோள்களையும் கால்விரலை ஊன்றி நெரித்த வரும், அவன் பிழை உணர்ந்து வருந்திப்பாடிய அளவில் அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய வாளை வழங்கியருளியவ ரும், அழகிய கோங்கு, செருந்தி, வில்வம், ஊமத்த மலர், கொன்றை ஆகியன விளங்கும் சிவந்த சடைமுடிச் செல்வரும் ஆகிய சிவபிரானார் வேங்கை மரங்களின் பொன்போன்ற மலர்களின் மணம் கமழும் வெங்குரு என்னும் சீகாழித் திருக்கோயிலில் வீற்றிருந்தருள்கிறார்.

குறிப்புரை :

இராவணனை அடக்கி அருள்செய்தவர் இவர் என் கின்றது. பாங்கிலா அரக்கன் - குணமில்லாத இராவணன்.

பண் :

பாடல் எண் : 9

ஆறுடைச்சடையெம் மடிகளைக்காண வரியொடுபிரமனு மளப்பதற்காகிச்
சேறிடைத்திகழ்வா னத்திடைபுக்குஞ் செலவறத்தவிர்ந்தனரெழிலுடைத்திகழ்வெண்
ணீறுடைக்கோல மேனியர்நெற்றிக் கண்ணினர்விண்ணவர் கைதொழுதேத்த
வேறெமையாள விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

கங்கை நதியைச் சடையிற் சூடிய எம் தலைவராகிய சிவபிரானாரின் அடிமுடிகளை அளந்து காணுதற்குத் திருமால் பிரமர்கள் சேற்று நிலத்தைப் பன்றியாய் அகழ்ந்து சென்றும், முடியினைக் காண அன்னமாய்ப் பறந்து சென்றும் தம் செயல் அழிந்தனர். அழகு விளங்கும் வெண்ணீறு பூசிய திருமேனியரும், நெற்றிக்கண்ணரும், விண்ணவர் கைகளால் தொழுது ஏத்த அவர்களை விடுத்து எம்மைச் சிறப்பாக ஆள விரும்பியவரும் ஆகிய அவ்விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

அயனும் மாலும், விண்ணிலும் மண்ணிலும் தேடச் சென்றும் காணாது போக்கொழிந்தனர்; அத்தகைய நீறுபூசிய மேனியையுடையவர் இவர் என்கின்றது. சேறு இடைபுக்கும், திகழ்வானத் திடைபுக்கும் எனப் பிரித்துக் கூட்டுக. எழில் - அழகு. விண்ணவர் கைதொழுதேத்த எமை வேறு ஆள விரும்பிய விகிர்தர் - தேவர்கள் வணங்க எம்மை வேறாக ஆட்கொள விரும்பிய இறைவன்; என்றது, தேவர்கள் தம் போகத்திற்கு இடையீடு வாராமைகுறித்து வணங்குவர்; ஆதலால் அவர்க்கு எளிதில் அருள் வழங்காது, எம்மைச் சிறப்பாக வைத்து ஆள்கின்றார் என்ற நயப்பொருள் தோன்ற நின்றது.

பண் :

பாடல் எண் : 10

பாடுடைக்குண்டர் சாக்கியர்சமணர் பயிறருமறவுரை விட்டழகாக
ஏடுடைமலராள் பொருட்டுவன்றக்க னெல்லையில்வேள்வியைத்தகர்த்தருள்செய்து
காடிடைக்கடிநாய் கலந்துடன்சூழக் கண்டவர்வெருவுற விளித்துவெய்தாய
வேடுடைக்கோலம் விரும்பியவிகிர்தர் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.

பொழிப்புரை :

துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக்கருதும் குண்டர்களாகிய சமணர்களும் சாக்கியர்களும் கூறும் அறவுரைகளைக் கருதாது, அழகிய இதழ்களோடு கூடிய தாமரை மலர் போன்றவளாகிய தாட்சாயணியின்பொருட்டு வலிய தக்கன் இயற்றிய அளவிட முடியாத பெரிய வேள்வியை அழித்துப் பின் தக்கனுக்கும் அருள்புரிந்து, காட்டில் காவல் புரியும் நாய்கள் சூழ்ந்து வரவும், கண்டவர் அஞ்சவும், வேடர் பயிலும் சொற்களால் விலங்குகளை விளித்து வேட்டுவக் கோலத்தை விரும்பி ஏற்ற விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கின்றார்.

குறிப்புரை :

புறச்சமயிகளுடைய பொருந்தா உரைக்கு அப்பாற் பட்டுத் தக்கன் யாகத்தைத் தகர்த்து, வேட்டுவ வடிவந் தாங்கிய விகிர்தர் இவர் என்கின்றது . பாடு - துன்பம். பயில்தரும் மற உரை - சொல்லுகின்ற கருணையற்ற வார்த்தைகள். விட்டு - அவ்வுரைகளுக்கு அப்பாற்பட்டு. ஏடு உடை மலராள் - தாட்சாயணியாகிய உமாதேவி. தகர்த்து - அழித்து. விளித்து - அழைத்து.

பண் :

பாடல் எண் : 11

விண்ணியல்விமானம் விரும்பியபெருமான் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரை
நண்ணியநூலன் ஞானசம்பந்த னவின்றவிவ்வாய்மொழி நலமிகுபத்தும்
பண்ணியல்பாகப் பத்திமையாலே பாடியுமாடியும் பயிலவல்லோர்கள்
விண்ணவர்விமானங் கொடுவரவேறி வியனுலகாண்டுவீற் றிருப்பவர்தாமே.

பொழிப்புரை :

வானளாவிய விமானத்தை விரும்பி, வெங்குரு என்னும் சீகாழிப்பதியுள் வீற்றிருந்தருளும் பெருமானைப் பற்றி, அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றைத் தெரிவிக்கும் நல்ல நூல்களை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இவ்வுண்மை மொழிகளாகிய நன்மைகளைத் தரும் இப்பதிகப் பாடல்கள் பத்தையும், பண்ணிசை யோடும் பக்தியோடும் பாடி ஆடிக் கூற வல்லவர்கள், தேவர்கள் விமானம் கொண்டுவர அதன்மிசை ஏறி, அகன்ற அத்தேவருலகை அடைந்து அரசு புரிந்து, அதன்கண் வீற்றிருப்பர்.

குறிப்புரை :

வெங்குருமேவிய பெருமானைச் சொன்ன இந்த நலமிகு பத்துப் பாடல்களையும் பத்தியோடு பாடியும் ஆடியும் பயிலவல்லார், விண்ணவர்கள் விமானங்கொண்டுவர அதில் ஏறிச்சென்று விண்ணரசாய் வீற்றிருப்பார் என்கின்றது. விண்ணியல் விமானம் - ஆகாயத்தை அளாவிய விமானம். நண்ணிய நூலன் - தானாகவே அடைந்த வேதத்தை உடையவன். வாய் மொழி - உண்மை உரை. வியனுலகு - அகன்ற உலகம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

மலையினார்பருப்பதந் துருத்திமாற்பேறு மாசிலாச்சீர்மறைக் காடுநெய்த்தானம்
நிலையினானெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக் கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும்
இலையினார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

கயிலாய மலையை இடமாகக் கொண்டுறையும் இறைவன், சீபருப்பதம், துருத்தி, மாற்பேறு, குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு, நெய்த்தானம் ஆகிய தலங்களில் நிலையாக எழுந் தருளியிருப்பவன். தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் ஆண்மான்கள் தம் இளைய பெண் மான்களோடு துயில்வதும், சோலைகளில் வாழும் ஆண் மயில்கள் பெடைகளைத் தழுவி அகவுவதுமாய இலைகள் நிறைந்த பசிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகினைக் கவர்ந்து செல்வது முறையோ?

குறிப்புரை :

சீபருப்பத முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவ னாகிய, என்னுடைய உரைகள் எல்லாவற்றையும் தனது வாக்காகக் கொண்டவிடையேறிய விமலன் இலம்பையங்கோட்டூரை இடமாகக் கொண்டு என்னலங்கொள்வதழகா? என்று பிரிவினால் வருந்துந் தலைவியின் நிலையை அநுபவித்துப் பேசுகின்றார்கள் திருஞானசம்பந்தப் பிள்ளையார். துருத்தி - திருத்துருத்தி. திருப்பூந்துருத்தி முதலிய தலங்கள். மாசிலாச்சீர்மறைக்காடு என்றது வேதத்தால் வழிபடப்பெற்றமையானும், கதவந்திறக்கவும் அடைக்கவுமாகப் பாடல்பெற்ற சிறப்புடைமையானும் இவ்வடைமொழி வந்தது. நிலையினான் - பிரியாதே பெயராதே உறைபவன்; நித்யவாஸம் செய்பவன் என்பர் வடநூலார். `எனதுரை தனதுரையாக` ஆன்ம போதங்கழன்று, சிவபோதத்தில் நிற்பார் சொல்லுவனயாவும் சிவத்துரையேயாதலின் இங்ஙனம் கூறினார். கலையின் ஆர் மடப்பிணை - கலைமானோடுகூடிய இளைய பெண்மான். துணை யொடு - தன் துணையாகிய முற்கூறிய ஆண் மானோடு. கானல் - சோலை. கணமயில் - கூட்டமாகிய ஆண் மயில். ஆலும் - அகவும். இருக்கை - இருப்பிடம். என் எழில் கொள்வது இயல்பே - என்னழகைக் கவர்வது இத்தகையீர்க்கு இயல்பாமோ என்றாள். மயிலும், மானும் துணையொடும் பேடையொடும்வதிய, நீர்மட்டும் தனித்திருந்து, காதலித்த அடியாளையும் தனித்திருக்கச்செய்து அழகைக் கவர்வது அழகா? என்று உரைக்கின்றாள். இதனால் சிவத்தோடு இடை யறாமல் இருத்தலாகிய அத்துவித பாவனையிற் பிரிந்து இருக்கின்ற ஆன்மா ஒன்றிய காலத்துண்டாகிய சிவானந்தாநுபவத்தாலுண்டான ஒளிகுறைய, அதனை எண்ணி, ஆன்மநாயகியை வந்தேற்றுக் கொண்ட தேவரீர் இங்ஙனம் இடையறவுபடச் செய்யலாமா என்று வருந்திக் கூறுவதாகிய பேரின்பப் பொருளும் தோன்றுதல் காண்க. இங்ஙனமே ஏனைய திருப்பாடல்கட்கும் கொள்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

திருமலர்க்கொன்றையா னின்றியூர்மேயான் றேவர்கடலைமகன் றிருக்கழிப்பாலை
நிருமலனெனதுரை தனதுரையாக நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கருமலர்க்கமழ்சுனை நீண்மலர்க்குவளை கதிர்முலையிளையவர் மதிமுகத்துலவும்
இருமலர்த்தண்பொய்கை யிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவன். திருநின்றியூரில் எழுந்தருளியிருப்பவன். தேவர்கட்குத் தலைவன். திருக்கழிப்பாலையில் குற்றமற்றவனாய் உறைபவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்தகையோன் பெரிய தாமரை மலர்களால் மணம் கமழும் சுனைகளில் உள்ள நீண்ட குவளை மலர்கள் இளம் பெண்களின் மதி போன்ற முகத்தில் உலவும் பெரிய கண்களை நிகர்க்கும் இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகைக் கவர்ந்து செல்லுதல் முறையோ?

குறிப்புரை :

இதுவும் அதுபோலத் தலைவி கூற்று; திருமலர் என்றது மற்றைய மலர்கட்கு இல்லாத பிரணவ வடிவம் இதற்கு இருத்தலின். கருமலர் - கருநெய்தற்பூ. குவளை இளையவர் மதிமுகத்துலவும் - குவளை போன்ற கண்கள் முழுமதிபோன்ற முகத்து உலாவுகின்ற என்பதாம். கதிர்முலை - வளர்முலை. இரு மலர் - பெரியமலர் போன்ற கண்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

பாலனாம்விருத்தனாம் பசுபதிதானாம் பண்டுவெங்கூற்றுதைத் தடியவர்க்கருளும்
காலனாமெனதுரை தனதுரையாகக் கனலெரியங்கையி லேந்தியகடவுள்
நீலமாமலர்ச்சுனை வண்டுபண்செய்ய நீர்மலர்க்குவளைக டாதுவிண்டோங்கும்
ஏலநாறும்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப் பேணியென்னெழில் கொள்வதியல்பே.

பொழிப்புரை :

பால வடிவோடும், விருத்த வடிவோடும் வரும் பசுபதி எனப் பெறுபவன். முற்காலத்தில் கொடிய கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த காலகாலன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். கையில் விளங்கும் எரியை ஏந்திய கடவுள். அத்தகைய இறைவன் நீல நிறம் பொருந்திய சிறந்த மலர்கள் பூக்கும் சுனையில் வண்டுகள் பாட நீரில் பூக்கும் குவளை மலர்கள் மகரந்தம் விண்டு மணம் பரப்புவதும், ஏலமணம் கமழும் பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கொள்வது முறையோ?

குறிப்புரை :

பாலன், விருத்தன், பசுபதி, காலகாலன், அனலேந்தி எல்லாமவன்; அவன் என் எழில் கொள்வதியல்பே என்கின்றது. வழிபடும் அடியார்கள் பரிபக்குவத்திற்கு ஏற்ப இத்தகைய வடிவங்களைத் தான் விரும்பியவாறு பெறுகின்றான் என்பதாம். வண்டுபாடக் குவளைகள் மலர்ந்து ஏல முதலியன நாறும் பொழில்சூழ் கோட்டூர் என்றது, தலைவியின் பிரிவாற்றாமைமிகுக்கும் சாதனங்கள் நிரம்பியுள்ளமை குறித்தவாறு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

உளங்கொள்வாருச்சியார் கச்சியேகம்ப னொற்றியூருறையுமண் ணாமலையண்ணல்
விளம்புவானெனதுரை தனதுரையாக வெள்ளநீர்விரிசடைத் தாங்கியவிமலன்
குளம்புறக்கலைதுள மலைகளுஞ்சிலம்பக் கொழுங்கொடியெழுந்தெங்குங் கூவிளங்கொள்ள
இளம்பிறைதவழ்பொழிலிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப் பேணியென் னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

உள்ளத்தில் தியானிப்பவர்களின் முடிமீது விளங்குபவன் கச்சியேகம்பன். ஒற்றியூர், திருவண்ணாமலை ஆகிய தலங்களில் விளங்கும் தலைவன். என்னுடைய உரைகளாகத் தன்னுரைகளை வெளியிடுபவன். கங்கை வெள்ளத்தைத் தனது விரிந்த சடைமிசைத் தாங்கிய விமலன். அத்தகையோன், கலைமான்கள் குளம்புகள் நிலத்தில் பதியுமாறு கால்களை அழுத்தித் துள்ளவும், மலைகள் அவ்விடங்களில் எழும்பும் ஒலிகளை எதிரொலிக்கவும், வளமையான கொடிகள் வளர்ந்த வில்வமரங்கள் முழுதும் படியவும் அமைந்துள்ள, இளம்பிறை தவழும் வான் அளவிய பொழில்கள் சூழ்ந்த இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கவர்ந்து கொள்வது நீதியோ!

குறிப்புரை :

தியானிப்பவர்களின் உச்சியிலுள்ள சகஸ்ரகமலத்தில் இருப்பவன் எனபது முதல் கங்கைதாங்கிய விமலன் என்பது வரை கூறப்பெற்ற சிறப்பியல்புடையவன் இவன் என்று கூறி, இத்தகையவன் என் எழில் கொள்ளலாமா என்கின்றாள். உளங்கொள்வார் - தியானிப்பவர். கலை குளம்பு உறத்துள - கலைமான் குளம்பு பதியத்துள்ள, சிலம்ப - ஒலிக்க. கூவிளங் கொள்ள - வில்வமரத்தின்மேல் படிய.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

தேனுமாயமுதமாய்த் தெய்வமுந்தானாய்த் தீயொடுநீருடன் வாயுவாந்தெரியில்
வானுமாமெனதுரை தனதுரையாக வரியராவரைக்கசைத் துழிதருமைந்தன்
கானமான்வெருவுறக் கருவிரலூகங் கடுவனோடுகளுமூர் கற்கடுஞ்சாரல்
ஏனமானுழிதரு மிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே

பொழிப்புரை :

தேன் , அமுது ஆகியன போல இனிப்பவனாய் , தெய்வம் தானேயானவன் . தீ , நீர் , வாயு , வான் , மண் ஆகிய ஐம்பூத வடிவினன் . தன் உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன் . உடலில் வரிகளை உடைய பாம்பைத் தன் இடையிலே கட்டிக் கொண்டு திரிபவன் . மான்கள் அஞ்சும்படி கரிய விரல்களை உடைய பெண் கருங்குரங்கு ஆண் குரங்கோடு காட்டில் உகளும் பாறை களை யுடைய கடுமையான மலைச்சாரலில் பன்றிகளும் காட்டுப் பசுக் களும் திரியும் இலம்பையங்கோட்டூரைத் தன் இருப்பிடமாகக் கொண்டு தன்னை வழிபட வந்த என் அழகைக் கவர்ந்து கொள்ளல் முறையோ ?

குறிப்புரை :

தேன் முதலிய இனிய பொருள்களாய் , ஐம்பூதமாய் , அராப்பூண்டு அலையும் மைந்தன் என் அழகைக் கொள்வது இயல்பாகுமா என்கிறாள் . தேன் , இதயத்திற்கு வலிவூட்டி உடல் வளர்க்கும் இனித்த மருந்தாவது . அமுதம் , அழியாமை நல்கும் மருந்து . இவையிரண்டும் எடுத்த பிறவிக்கு மட்டுமே இன்பம் அளிப்பன . தெய்வம் எடுத்த எடுக்கப்போகின்ற பிறவிகட்கும் , பிறவி யற்ற பேரின்ப நிலைக்கும் இன்பம் அளிப்பது ஆதலால் தேனுமாய் , அமுதமாய் என்றருளிய பிள்ளையார் அடுத்து தெய்வ முந்தானாய் என்கிறார்கள் . தீயொடு ... வானுமாம் என்றதால் பூமி யொழிந்த ஏனைய நாற்பூதங்களைக் குறித்தார்கள் . பாரிசேடத்தால் பூமியும்கொள்க . கானமான் வெருவுற - காட்டு மான் அஞ்ச . கருவிரல் ஊகம் - கரிய விரலையுடைய பெண் குரங்கு . கடுவன் - ஆண்குரங்கு . உகளும் - தாவும் . ஏனம் ஆன் உழிதரும் - பன்றியும் காட்டுப்பசுவும் திரியும் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

மனமுலாமடியவர்க் கருள்புரிகின்ற வகையலாற்பலிதிரிந் துண்பிலான்மற்றோர்
தனமிலானெனதுரை தனதுரையாகத் தாழ்சடையிளமதி தாங்கியதலைவன்
புனமெலாமருவிக ளிருவிசேர்முத்தம் பொன்னொடுமணிகொழித் தீண்டிவந்தெங்கும்
இனமெலாமடைகரை யிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

தங்கள் மனங்களில் இறைவனை உலாவச் செய்யும் அடியவர்க்கு அருள்புரிதற்பொருட்டே பலியேற்றுத் திரிபவனேயன்றி உண்ணும்பொருட்டுப் பலி ஏலாதவன். வீடுபேறாகிய செல்வமன்றி வேறு செல்வம் இல்லாதவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தியவன். தாழ்ந்து தொங்கும் சடைமீது இளம் பிறையைத் தாங்கியுள்ள தலைவன். அத்தகையோன் தினைப்புனங் களில் பாய்ந்து வரும் அருவிகள் அரிந்த தினைத்தாள்களில் ஒதுங்கிய முத்து பொன்மணி முதலியவற்றைக் கொழித்துக் கொண்டு வந்து எல்லா இடங்களிலும் சேர்க்கும் கரைகளோடு கூடிய வயல்களை உடைய இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கொள்வது முறையோ?

குறிப்புரை :

மனத்தின்கண் இறைவனை உலாவச்செய்கின்ற அடியவற்கு அருளும் வகையன்றி, பிச்சையேற்றுத் தான் உண்ணாதவன்; வேறு செல்வமில்லாதவன்; என்னுரையைத் தன்னுரையாகக் கொண்டு, பிறைமதி தாங்கிய சடையன்; இத்தகைய இறைவன் இந்த நகரை இருக்கையாகக்கொண்டு என் எழில் கொள்ளுவது இயல்பா என்கின்றாள். மனம் உலாம் அடியவர் - இறைவனிடம் மனத்தை உலாவச்செய்கின்ற அடியார்கள். பலி - பிச்சை. இறைவன் தான் பலி ஏற்பதும் தன்பொருட்டன்று அடியார்க்காகவே என்பதாம். இருவி - தினைகொய்ததாள். இனம் எலாம் - இடமாகிய இடங்களில் எல்லாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

நீருளான்றீயுளா னந்தரத்துள்ளா னினைப்பவர்மனத்துளா னித்தமாவேத்தும்
ஊருளானெனதுரை தனதுரையாக வொற்றைவெள்ளேறுகந் தேறியவொருவன்
பாருளார்பாடலோ டாடலறாத பண்முரன்றஞ்சிறை வண்டினம்பாடும்
ஏருளார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

நீர், தீ, ஆகாயம் ஆகியவற்றுள் இருப்பவன். நினைப்பவர் மனத்தில் உறைபவன். நாள்தோறும் அடியவர்கள் வந்து வணங்கும் ஊர்களை இடமாகக் கொண்டவன். தன்னுடைய உரைகளை என்னுடையனவாக வெளிப்படுத்தியவன். தனித்த ஒரு வெள்ளேற்றை உகந்து ஏறிவருபவன். அத்தகையோன், மண்ணக மக்களின் பாடல் ஆடல்கள் இடையறாது நிகழ்வதும், அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் பண்ணிசை போல ஒலி செய்து பாடும் அழகிய பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையாகுமோ?

குறிப்புரை :

நீர், தீ, ஆகாயம், நினைப்பவர் மனம், ஊர் இவை இறைவன் வசிக்கும் இடங்கள்; இங்கெல்லாம் உள்ளவன் விடையேறி இவ்வூரை இருக்கையாக்கொண்டு என் எழில் கொள்வதியல்பா என்கின்றாள். அந்தரம் - ஆகாயம். நித்தமா ஏத்தும் - நித்தியவழிபாடு செய்யும். மண்ணவர் பாட்டும் ஆட்டும் இடையறாத பொழில். முரன்று வண்டினம் பாடும் பொழில் எனக்கூட்டுக.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

வேருலாமாழ்கடல் வருதிரையிலங்கை வேந்தனதடக்கைக ளடர்த்தவனுலகில்
ஆருலாமெனதுரை தனதுரையாக வாகமோரரவணிந் துழிதருமண்ணல்
வாருலாநல்லன மாக்களுஞ்சார வாரணமுழிதரு மல்லலங்கானல்
ஏருலாம்பொழிலணி யிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

நிலத்தின் வேர்வரை உலாவுகின்ற ஆழ்ந்த கடலின் அலைகள் தவழ்கின்ற இலங்கை வேந்தனாகிய இராவணனின் நீண்டகைகள் இருபதையும் நெரித்தவன். உலகின்கண் நிறைந்து விளங்கும் தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். தன்னுடைய மார்பில் பெரியதொரு பாம்பினை அணிந்து திரியும் தலை வன். அத்தகையோன், கழுத்தில் வார் கட்டப்பட்ட நல்ல வளர்ப்பு விலங்குகளும், யானைகளும் திரியும் வளமான காடுகளும் அழகிய பொழில்களும் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிட மாகக்கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையோ?

குறிப்புரை :

இராவணனை அடர்த்தவன்; இந்த உலகில் எனதுரை தனதுரையாக, மார்பில் பாம்பணிந்து திரியும் அண்ணல் இவ்வூரை இடமாகக்கொண்டு என் நலங்கவர்தல் இயல்போ என்கிறாள். வேர் உலாம் - பூமியின் அடிவரை உலாவுகின்ற, ஆருலாம் - நிறைதல் மலிந்த. ஆகம் - மார்பு. வாரணம் - யானை. மல்லல் - வளம். ஏர் உலாம்பொழில் - எழுச்சிமிக்க சோலை. நல்லன மாக்கள் - நல்ல விலங்குகள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

கிளர்மழைதாங்கினா னான்முகமுடையோன் கீழடிமேன்முடி தேர்ந்தளக்கில்லா
உளமழையெனதுரை தனதுரையாக வொள்ளழலங்கையி லேந்தியவொருவன்
வளமழையெனக்கழை வளர்துளிசோர மாசுணமுழிதரு மணியணிமாலை
இளமழைதவழ்பொழி லிலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

ஆயர்பாடியை அழித்தற்கெனக் கிளர்ந்தெழுந்த மழையைக் கோவர்த்தனம் என்னும் மலையால் தடுத்த திருமாலும், நான்முகனும், கீழே அகழ்ந்து சென்று அடியையும், மேலே பறந்து சென்று முடியையும் அளந்தறியமுடியாதவாறு அழலுருவாய் ஓங்கி நின்றவன். மனத்தால் அழைத்தற்குரியனவாய் அமைந்த தன்னுடைய உரைகளை என்னுடையவாக வெளிப்படுத்தியவன். அழகிய கையில் ஒளி பொருந்திய அழலை ஏந்திய ஒப்பற்ற தலைவன். அத்தகையோன், வளமான மழை போல, மூங்கிலில் தேங்கிய பனி நீர், காற்றால் பொழிவதும், மலைப் பாம்புகள் ஊர்வதும், அழகிய மணிகள்மாலை போல நிறைந்து தோன்றுவதும், மேகக் கூட்டங்கள் தவழும் பொழில் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்ந்தான். இது முறையோ?

குறிப்புரை :

மாலும் அயனும் அடிமுடியறியப்பெறாத அழலேந்திய ஒருவன், இவ்வூரை இருக்கையாகக்கொண்டு, இவ்வண்ணம் செய்வதா? என்கின்றாள். கிளர்மழை தாங்கினான் - இந்திரனால் ஏவப்பட்ட மழையைக் கோவர்த்தனகிரியைக் குடையாகத் தூக்கித் தடுத்தவனாகிய திருமால். உளம் அழை - மனத்தால் அழைக்கின்ற. மழையைப்போல மூங்கிலிலைமேல் துளிவிழ, மலைப்பாம்பு திரிகின்ற கோட்டூர் என்க. மாசுணம் - மலைப்பாம்பு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

உரிஞ்சனகூறைக ளுடம்பினராகி யுழிதருசமணருஞ் சாக்கியப்பேய்கள்
பெருஞ்செல்வனெனதுரை தனதுரையாகப் பெய்பலிக்கென்றுழல் பெரியவர்பெருமான்
கருஞ்சினைமுல்லைநன் பொன்னடைவேங்கை களிமுகவண்டொடு தேனினமுரலும்
இருஞ்சுனைமல்கிய விலம்பையங்கோட்டூ ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.

பொழிப்புரை :

ஆடைகளை உரிந்துவிட்டாற் போன்ற அம்மண உடம்பினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களாகிய பேய்களும் அறிய இயலாத பெரிய வைப்பு நிதியாய் விளங்குவோன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். ஊரார் இடும் பலியை ஏற்பதற்கெனப் பிட்சாடனனாய்த் திரிபவன். பெரியோர்களுக்கெல்லாம் தலைவன். அத்தகையோன், பெரிதான அரும்புகளை உடைய முல்லையும், பொன்போன்று மலரும் வேங்கையும், மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடு வண்டுகளும், தேனீக்களும் முரலும் பெரிய சுனைகளும், நிறைந்து காணப்படும் இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு, என் எழிலைக் கவர்தல் முறையோ?

குறிப்புரை :

புறச்சமயிகள் பெறுதற்கரிய பெருஞ்செல்வம் போன்ற வன், பலிக்கென்று உழல் பெரியவர் பெருமான், இவ்வூரை இருக்கையாகப்பேணி என் எழில்கொள்வதியல்பா என்கிறாள். உரிஞ்சன கூறைகள் - உரிந்தாற்போன்ற ஆடைகள். உழி தரு - திரிகின்ற. கருஞ்சினை - பெரிய அரும்போடுகூடிய. பொன் அடை வேங்கை - பொன் போன்ற பூக்களையுடைய வேங்கை. இரும்சுனை - பெரிய நீர்ச்சுனை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

கந்தனைமலிகனை கடலொலியோதங் கானலங்கழிவளர் கழுமலமென்னும்
நந்தியாருறைபதி நான்மறைநாவ னற்றமிழ்க்கின்றுணை ஞானசம்பந்தன்
எந்தையார்வளநக ரிலம்பையங்கோட்டூ ரிசையொடுகூடிய பத்தும்வல்லார்போய்
வெந்துயர்கெடுகிட விண்ணவரோடும் வீடுபெற்றிம்மையின் வீடெளிதாமே.

பொழிப்புரை :

மணம் நிரம்பியதும், கடல் ஒலியோடு அதன் வெள்ளம் பெருகிக் கடற்கரைச் சோலைகள் உப்பங்கழிகள் ஆகியன நிரம்புவதும் ஆகிய கழுமலம் என்னும் சிவன் உறைபதியாகிய சீகாழியில் தோன்றிய நான்மறை ஓதும் நாவினனும் நற்றமிழ்க்குஇனிய துணையாயிருப்பவனுமாகிய ஞானசம்பந்தன் எந்தையார் உறையும் வளநகராகிய இலம்பையங்கோட்டூரில் வீற்றிருந்தருளும் இறைவன் மீதுபாடிய இசையொடும் கூடிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர்கள் தம் கொடிய துயர்கள் ஓடிக்கெட விண்ணவரோடும் வீற்றிருந்து பின் விண்ணிலிருந்து விடுபட்டு வீடு பேற்றையும் இப்பிறப்பு ஒன்றாலேயே எளிதாகப் பெறுவார்கள்.

குறிப்புரை :

இலம்பையங்கோட்டூரைப்பற்றிய இப்பாடல் பத்தையும் இசையொடு ஓதவல்லவர், துன்பநீங்கித் தேவரோடும் உறைந்து, அதினின்றும் விடுதலை பெற்று வீட்டின்பத்தையும் எய்துவர் என்கின்றது. கந்தனை - மணம். நந்தியார் - சிவன். கெடுகிட - கெட.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப் பொருகடற்பவளமொ டழனிறம்புரையக்
குன்றிரண்டன்ன தோளுடையகலங் குலாயவெண்ணூலொடு கொழும்பொடியணிவர்
மின்றிரண்டன்ன நுண்ணிடையரிவை மெல்லியலாளையோர் பாகமாப்பேணி
அன்றிரண்டுருவ மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தைத் தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தமது, முறுக்கேறிய பொன் திரண்டாற் போன்ற சடை, அலைகள் பெருங்கடலில் தோன்றும் பவளக் கொடியையும், தீ வண்ணத்தையும் ஒத்துப் புரள, குன்றுகள் போன்ற இரண்டு தோள்களோடு கூடிய மார்பகத்தில் விளங்கும் வெண்மையான முப்புரிநூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையினையுடைய மென்மைத்தன்மை வாய்ந்த அரிவையாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓருருவில் ஈருருவாய்த் தோன்றும் அடிகளாவார்.

குறிப்புரை :

அச்சிறுபாக்கத்தை ஆட்சிகொண்ட சிவன், சடை, பவளக்கொடியையும் தீவண்ணத்தையும் ஒத்துப்புரள, மலை திரண்டால் ஒத்த மார்பில், பூணூலும் பொடியும் அணிந்து, உமாதேவியை ஒரு பாகத்துக்கொண்டு, ஆணுருவும் பெண்ணுருவும் வேறாயுள்ள அடிகள் ஆவார் என்கின்றது. குன்று இரண்டு அன்ன தோள் எனவும், அன்று இரண்டுருவம் ஆய எனவும் பிரிக்க. கொழும் பொடி - வளப்பமான விபூதி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

தேனினுமினியர் பாலனநீற்றர் தீங்கரும்பனையர்தந் திருவடிதொழுவார்
ஊனயந்துருக வுவகைகடருவா ருச்சிமேலுறைபவ ரொன்றலாதூரார்
வானகமிறந்து வையகம்வணங்க வயங்கொளநிற்பதோர் வடிவினையுடையார்
ஆனையினுரிவை போர்த்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தேனினும் இனியவர். பால் போன்ற நீறணிந்தவர். இனிய கரும்பு போன்றவர். தம் திருவடிகளை மெய்யுருகி வணங்கும் அன்பர்கட்கு உவகைகள் தருபவர். அவர்களின் தலைமேல் விளங்குபவர். இடபவாகனமாகிய ஓர் ஊர்தியிலேயே வருபவர். வானுலகைக் கடந்து மண்ணுலகை அடைந்து அங்குத் தம்மை வழிபடும் அன்பர்கள் நினைக்கும் செயலை வெற்றிபெறச் செய்து நிற்கும் வடிவினை உடையவர். யானையின் தோலைப் போர்த்தியவர். அவர் எம் தலைவராவர்.

குறிப்புரை :

அவர் திருவடி தொழுவார்க்குத் தேனினும் இனியர், கரும்பனையர், உவகைகள் தருவார், விண்ணுலகினைக் கடந்தும், வையகம் வணங்க நிற்பவர் என்கின்றது. தேனினும் இனியர் - எக்காலத்தும் அள்ளூறிநின்று இனிக்கும் பொருளாக இருத்தலின் நாப்புலனோடு ஒன்றியகணத்து இனித்துப் பின் புளிப்பதாய தேனினும் இனியராயினர். பால் அன்ன நீறு - பால் உண்டார்க்குப் பித்தநோய் தணிக்கும்போல நீறு கண்டார்க்கும், பூசினார்க்கும் மலமயக்கம் போக்கலின் இங்ஙனம் கூறினார். தீங்கரும்பனையர் - கரும்பு பருவத்திற்கும் முயற்சிக்கும் ஏற்பநுகரும் முறையில் இனிப்பைக் கொடுக்கும்; இவரும் ஆன்மாக்களின் பரிபக்குவநிலைக்கு ஏற்பஇனிப்பர். ஊன் நயந்து உருக உவகைகள் தருவார் - சடமாகிய மாயாகாரியமாகிய உடல், உயிர் பெறும் இவ்வின்பத்தைப் பெற்றிலமே என்று விரும்பி உருக ஆன்மாவிற்கு மகிழ்ச்சியை விளைவிப்பவர். ஒன்று - இடபம். வானகம் இறந்து - போகபூமியாகிய வானகத்துப் பொருந்தலாகாமையின் அவர்களும் போகிகளாயிருத்தலின் பொருந்தமாட்டாமையின் அதனைக்கடந்து.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

காரிருளுருவ மால்வரைபுரையக் களிற்றினதுருவுகொண் டரிவைமேலோடி
நீருருமகளை நிமிர்சடைத்தாங்கி நீறணிந்தேறுகந் தேறியநிமலர்
பேரருளாளர் பிறவியிற்சேரார் பிணியிலர்கேடிலர் பேய்க்கணஞ்சூழ
ஆரிருண்மாலை யாடுமெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், உமையம்மை பெண் யானை வடிவு கொள்ளத்தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். நீர்வடிவமான கங்கையை மேல்நோக்கிய சடைமிசைத் தாங்கியவர். நீறுபூசி விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் புனிதர். பேரருளாளர். பிறப்பிறப்பிற் சேராதவர். பிணி, கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள் சூழச் சுடுகாட்டில் முன்மாலை யாமத்தில் நடனம் புரியும் எம் அடிகளாவார்.

குறிப்புரை :

அவர், உமை பெண்யானையின் வடிவங்கொள்ள, ஆண்யானையாய்த் தொடர்ந்து சென்றும், நீர்மகளைச் சடையில் தாங்கியும், விடையேறியும், நீறுபூசியும் விளங்கும் நிமலர், பேரருளாளர், பேய்க்கணம் புடைசூழ நள்ளிருளில் நடமாடுபவர் என்கின்றது. கார் இருள் உருவம் மால்வரை புரைய - கறுத்த இருட்பிழம்பின் உருவத்தையும், கரியமலையையும் ஒத்த. அரிவை - பெண்யானையாகிய உமாதேவி. இது `பிடியதன் உரு உமைகொள மிகு கரியது வடிகொடு` நடந்தமையைக் காட்டுவது. நீர் உருமகள் - கங்கையாகிய அழகிய மகள். பிறவியில் சேரார் - இங்ஙனம் நினைத்த வடிவத்தைத் தாமே மேற்கொள்ளுதலன்றி, வினைவயத்தான் வரும் பிறவியில் சேராதவர். ஆர் இருள் மாலை - நிறைந்த இருட்கூட்டம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்
தம்மலரடியொன் றடியவர்பரவத் தமிழ்ச்சொலும்வடசொலுந் தாணிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் குவளை மலர்களால் இயன்ற மாலையைச் சூடிய மார்பினர் எனவும், மலைமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாகக் கொண்டுள்ளவர் எனவும், சிவந்த மலர் போலும் பிறையையும், தேங்கியுள்ள கங்கை நீரையும் தம் சடைமுடி மீது உடையவர் எனவும், எம் சென்னி மேல் உறைபவர் எனவும், தம் மலர் போன்ற திருவடிகளை மனத்தால் ஒன்றி நின்று அடியவர்கள் பரவவும் தமிழ்ச் சொல், வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம் திருவடிகளைச் சாரவும் அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவராய் விளங்கும் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

அவர், அடியவர்கள் மாலை மார்பர் எனவும், மலை மகளை மருவினர் எனவும் கங்கையும் பிறையும் சூடிய சென்னியர் எனவும், எம் சென்னிமேல் உறைவார் எனவும் தோத்திரிக்க, தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் தம் திருவடியைச்சார இருக்கும் அடிகளாவர் என்கின்றது. மை மலர் - நீல மலர். கோதை - மாலை. செம்மலர்ப் பிறை - சிவந்த மலர்போலும் பிறை. தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் தாள் நிழல்சேர என்றது ஒலிவடிவாய சொற்கள்யாவும் இறைவனிடமிருந்தே தோன்றியனவாதலின் அடையுமிடமும் அவனடியேயாயிற்று என்பதாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

விண்ணுலாமதியஞ் சூடினரெனவும் விரிசடையுள்ளது வெள்ளநீரெனவும்
பண்ணுலாமறைகள் பாடினரெனவும் பலபுகழல்லது பழியிலரெனவும்
எண்ணலாகாத விமையவர்நாளு மேத்தரவங்களோ டெழில்பெறநின்ற
அண்ணலானூர்தி யேறுமெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் வானிலே உலாவும் திங்களைச் சூடியவர் எனவும், அவர்தம் விரிந்த சடைமுடியில் கங்கை நீர் வெள்ளம் தங்கி உள்ளது எனவும், இசை அமைதியோடு கூடிய நான்கு வேதங்களைப் பாடியவர் எனவும், பலவகையான புகழையே உடையவர் எனவும், பழியே இல்லாதவர் எனவும் எண்ணற்ற தேவர்கள் நாள்தோறும் தம்மை ஏத்த அரவாபரணங்களோடு, மிக்க அழகும் தலைமையும் உடையவராய் ஆனேறு ஏறிவரும் எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

அவர் பிறைசூடினர் எனவும், கங்கை அவர் சடைக் கண்ணதெனவும், மறைபாடினர் எனவும், பழியிலர் எனவும் தேவர்கள் நாளும் ஏத்த இருப்பவர் என்கின்றது. எண்ணலாகாத இமையவர் - தாம் நுகரும் போக உள்ளத்தில் மயங்கி இறைவனைத் தியானிக்காத தேவர்கள். கணக்கற்ற தேவர்கள் என்பாரும் உளர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

நீடிருஞ்சடைமே லிளம்பிறைதுலங்க நிழறிகழ்மழுவொடு நீறுமெய்பூசித்
தோடொருகாதினிற் பெய்துவெய்தாய சுடலையிலாடுவர் தோலுடையாகக்
காடரங்காகக் கங்குலும்பகலுங் கழுதொடுபாரிடங் கைதொழுதேத்த
ஆடரவாட வாடுமெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கதில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் தமது நீண்ட பெரிய சடைமேல் இளம்பிறை விளங்க, ஒளிபொருந்திய மழுவோடு, திருநீற்றை மேனிமேல் பூசி, ஒரு காதில் தோடணிந்து கொடிய சுடலைக் காட்டில் ஆடுபவர். புலித்தோலை உடையாக அணிந்து இரவும், பகலும் பேய்க்கணங்களும், பூதகணங்களும் கைகளால் தொழுதேத்தப் படமெடுத்தாடும் பாம்புகள் தம் மேனிமேல் பொருந்தி ஆடச் சுடுகாட்டைத் தமது அரங்கமாகக் கொண்டு ஆடும் எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

அவர் சடைமேல் பிறைவிளங்க, நீறுபூசி ஒருகாதில் தோடணிந்து, பேயும் பூதமும் கைதொழுதேத்த, சுடலையில் ஆடுவர் என்கின்றது. நீடு இரும் சடை - நீண்ட பெரிய சடை. அரங்கு - கூத்தாடுமிடம். கங்குல் - இரவு. கழுது - பேய். பாரிடம் - பூதம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

ஏறுமொன்றேறி நீறுமெய்பூசி யிளங்கிளையரிவையொ டொருங்குடனாகிக்
கூறுமொன்றருளிக் கொன்றையந்தாருங் குளிரிளமதியமுங் கூவிளமலரும்
நாறுமல்லிகையு மெருக்கொடுமுருக்கு மகிழிளவன்னியு மிவைநலம்பகர
ஆறுமோர்சடைமே லணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர், ஆனேறு ஒன்றில் ஏறித்தம் திருமேனிமேல் நீறுபூசி இளையகிளி போன்ற அழகிய பார்வதிதேவியாருக்குத் தம் உடலில் ஒரு கூறு அருளி இருவரும் ஒருவராய் இணைந்து திருமுடிமேல் கொன்றை மாலை, குளிர்ந்த இளமதி, வில்வம், பிற நறுமலர்கள் மணங்கமழும் மல்லிகை, எருக்கு, முருக்கு, மகிழ், இளவன்னி இலை ஆகியஇவை மணம் பரப்ப, கங்கையாற்றைச் சடைமேல் அணிந்துள்ள எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

அவர் எருதேறி, நீறுபூசி, பசுங்கிளி ஏந்திய பாவையோடு, கொன்றை, மதியம், வில்வம், மல்லிகை முதலியவற்றைப் புனைந்தவர் என்கின்றது. இளங்கிளை அரிவை - இளைய கிளியையேந்திய உமாதேவி. கூவிள மலர் - வில்வப்பூ. பத்திரமேயன்றிப் பூவும் சூடப்பெறும் என்பதறிவிக்கப்பட்டது. மகிழ் - மகிழம்பூ.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர் கதிர்முடிசுடர்விடக் கவரியுங்குடையும்
பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய பிறைநுதலவர்தமைப் பெரியவர்பேணப்
பச்சமும்வலியுங் கருதியவரக்கன் பருவரையெடுத்ததிண் டோள்களையடர்வித்
தச்சமுமருளுங் கொடுத்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர். ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற்சூடி விளங்குபவர். பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித்தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

அவர், இராவணனுக்கு அச்சமும் அருளும் அளித்தவர் என்கின்றது. இராவணனுக்கு வந்த ஏற்றமெல்லாம் கச்சையும் வாளையுங்கட்டி, கவரி குடை பிச்சம் முதலியவற்றைத் தாங்கிய பெண்கள் இவனைப் பெரியவன் என்று பேணியதேயாகும். அதனால் இவனுக்கு அன்பும் வலிமையும் உண்டாயின என்ற கருத்து விளக்கப்படுதல் காண்க. அதனாலேயே ஏமாந்து இறைவன் கயிலையை எடுக்கத் தொடங்கினான் என்பதாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

நோற்றலாரேனும் வேட்டலாரேனு நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக்
கூற்றலாரேனு மின்னவாறென்று மெய்தலாகாததொ ரியல்பினையுடையார்
தோற்றலார்மாலு நான்முகமுடைய தோன்றலுமடியொடு முடியுறத்தங்கள்
ஆற்றலாற்காணா ராயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர் தவம் செய்யாராயினும், அன்பு செய்யாராயினும் நுகரத்தக்க உணவு, சந்தனம், கையில் ஏந்திய மாலை இவற்றின் கூறுகளோடு வழிபாடு செய்யாராயினும் இத்தகையவர் என்று அறியமுடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்ற எம்அடிகள் ஆவார். எனவே நோற்பவருக்கும் அன்பு செய்பவருக்கும் வழிபடுவோருக்கும் அவர் எளியர் என்பது கருத்து.

குறிப்புரை :

அவர் தவஞ்செய்யாராயினும் சாந்தும் மாலையுங் கொண்டு தொழாராயினும், என்றைக்கும் இப்படி அடையலாமென்று முயன்றும் அடையமுடியாத தன்மையையுடையவர் இவர் என்கின்றது. நோற்றலார் - தவஞ்செய்யாதவர். வேட்டலார் - யாகஞ் செய்யாதவர்கள். புகர் - உணவு. ஈண்டு - நைவேத்தியம். தோற்றலார் மால் - பிறத்தலையுடைய திருமால்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

வாதுசெய்சமணுஞ் சாக்கியப்பேய்க ணல்வினைநீக்கிய வல்வினையாளர்
ஓதியுங்கேட்டு முணர்வினையிலாதா ருள்கலாகாததோ ரியல்பினையுடையார்
வேதமும்வேத நெறிகளுமாகி விமலவேடத்தொடு கமலமாமதிபோல்
ஆதியுமீறு மாயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொழிப்புரை :

அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள எம் அடிகள் நல்வினைகளைச் செய்யாது வல்வினைகள் புரிபவரும் ஓதியும் கேட்டும் திருந்தாத உணர்வோடு தர்க்கவாதம் புரிபவருமாகிய சமணர்களும் சாக்கியப் பேய்களும் நினைத்தும் அறிய முடியாத இயல்பினை உடையவர். வேதமும் வேதநெறிகளும் ஆகியவர். தம்மை வழிபடுவார் மலங்களை நீக்கும் வேடம் உடையவர். தாமரை மலரும் திங்களும் போன்ற அழகும், தண்மையும் உடையவர். உலகின் முதலும் முடிவும் ஆனவர்.

குறிப்புரை :

அவர் புறச்சமயிகளுடைய நல்வினையைப் போக்கிய வர், படித்துங் கேட்டும் உணர்ச்சியற்றவர்களால் தியானிக்கப்படாதவர், வேதமும் அவைகூறும் நெறிகளுமாகி, மலரகிதரான வேடத்தோடு, ஆதியும் ஈறுமாய அடிகள் இவர் என்கின்றது. வாது செய் சமண் - விதண்டாவாதமே செய்து பொழுதுபோக்கும் சமணர். அவர்களுக்குத் துணை இருப்பது உலகபோகத்திற்குரிய நல்வினையாதலின் உண்மை உணராது வாதமே செய்து காலம் கழிக்கின்றனர் என்பதாம். ஆதலால் அவர்களுடைய நல்வினையை நீக்கவேண்டியது இவர் அருளித்திறமாயிற்று.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

மைச்செறிகுவளை தவளைவாய்நிறைய மதுமலர்ப்பொய்கையிற் புதுமலர்கிழியப்
பச்சிறவெறிவயல் வெறிகமழ்காழிப் பதியவரதிபதி கவுணியர்பெருமான்
கைச்சிறுமறியவன் கழலலாற்பேணாக் கருத்துடைஞானசம் பந்தனதமிழ்கொண்
டச்சிறுபாக்கத் தடிகளையேத்து மன்புடையடியவ ரருவினையிலரே.

பொழிப்புரை :

கருநிறம் பொருந்திய குவளை மலர்கள் தவளைகளின் வாய் நிறையுமாறு தேனைப் பொழியும் மலர்கள் நிறைந்த பொய்கைகளும், புதுமலர்களின் இதழ்கள் கிழியுமாறு பசிய இறால் மீன்கள் துள்ளி விழும் பொய்கைகளை அடுத்துள்ள வயல்களும் மணம் கமழும் சீகாழிப்பதியினர்க்கு அதிபதியாய் விளங்கும் கவுணியர் குலத்தலைவனும், கையின்கண் சிறிய மானை ஏந்திய சிவன் திருவடிகளையன்றிப் பிறவற்றைக் கருதாதகருத்தினை உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தைக் கொண்டு அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் நீக்குதற்கரிய வினைகள் இலராவர்.

குறிப்புரை :

இது, இறைவன்திருவடியன்றி வேறொன்றையும் பேணாத ஞானசம்பந்தர் தமிழைக் கொண்டது. இத்தலத்து இறைவனை ஏத்தும் அடியார்கள் வினையிலர் என்கின்றது. குவளைப் பூக்கள் தவளையினுடைய வாய்நிரம்ப மதுவைப் பொழிகின்ற பொய்கை என்க. பச்சு இறவு புதுமலர் கிழிய எறி வயல் - பசிய இறால்மீன் புதுமலர் கிழியத் துள்ளும் வயல். மறி - மான்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

வரிவளரவிரொளி யரவரைதாழ வார்சடைமுடிமிசை வளர்மதிசூடிக்
கரிவளர்தருகழல் கால்வலனேந்திக் கனலெரியாடுவர் காடரங்காக
விரிவளர்தருபொழி லிளமயிலால வெண்ணிறத்தருவிக டிண்ணெனவீழும்
எரிவளரினமணி புனமணிசார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

மரங்கள் வளர்ந்த விரிந்த பொழில்களில் இள மயில்கள் ஆடுவதும், வெண்மையான நிறத்துடன் அருவிகள் திண்ணென்ற ஒலிக் குறிப்போடு வீழ்வதும், எரிபோன்று ஒளிரும் ஓரினமான மணிகள் காடுகளில் அழகுற விளங்குவதுமாய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், வரிகளையும் ஒளியையும் உடைய பாம்பை இடையிலே கட்டி, நீண்ட சடைமுடிமீது வளரும் பிறைமதியைச் சூடி யானை உருவம் பொறித்த வீரக்கழலைக் காலின்கண் வெற்றி பெறச்சூடிச் சுடுகாட்டைத் தமது அரங்காகக் கொண்டு ஆடும் இவ்விறைவரது இயல்பு யாதோ?

குறிப்புரை :

இப்பதிகம், இறைவனுடைய வீரம் முதலிய பல இயல்புகளை எடுத்துக்கூறி, இடைச்சுரம் மேவிய இவர் வண்ணம் என்னே என்று வினாவுவதாக அமைந்துள்ளது. வரிவளர் அவிர் ஒளி அரவு - வரிகளோடுகூடி விளங்குகின்ற ஒளியினையுடைய பாம்பு. அரைதாழ - திருவரையில் தங்க. கரிவளர் தரு கழல் - அத்தியாளியின் உருவம் எழுதப்பெற்ற வீரக்கழல். இவர் இயல்புகளை எத்துணை அறியினும், அறிந்தவற்றிற்கும் அப்பால் பல இயல்புகள் இருத்தலின் இவர்வண்ணம் என்னே எனச் செயலறவு அருளினாராயிற்று.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

ஆற்றையுமேற்றதோ ரவிர்சடையுடைய ரழகினையருளுவர் குழகலதறியார்
கூற்றுயிர்செகுப்பதோர் கொடுமையையுடையர் நடுவிருளாடுவர் கொன்றையந்தாரார்
சேற்றயன்மிளிர்வன கயலிளவாளை செருச்செயவோர்ப்பன செம்முகமந்தி
ஏற்றையொடுழிதரு மெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

வயல்களில் உள்ள சேற்றில் விளங்கும் கயல் மீன்களும் வாளைமீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கோடு ஆண்குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், கங்கை நதியையும் ஏற்றருளிய விரிந்த சடையை உடையவராய், அழகும் இளமையும் உடையவராய், கூற்றுவன் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராய், நள்ளிருளில் திருநடம்புரிபவராய், கொன்றை மலர்மாலை சூடியவராய் விளங்கும் இவ்விறைவர்தம் இயல்பு யாதோ?

குறிப்புரை :

ஆறு - கங்கை. குழகு - இளமை. கயல்மீனும் இளவாளைமீனும் போர்செய்ய, அதனைப் பெண் குரங்குகள் கூர்ந்து நோக்குகின்றன. செம்முக மந்தி - பெண் குரங்கு. ஏற்றை - ஆண் குரங்கு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

கானமுஞ்சுடலையுங் கற்படுநிலனுங் காதலர்தீதிலர் கனன்மழுவாளர்
வானமுநிலமையு மிருமையுமானர் வணங்கவுமிணங்கவும் வாழ்த்தவும்படுவார்
நானமும்புகையொளி விரையொடுகமழ நளிர்பொழிலிளமஞ்ஞை மன்னியபாங்கர்
ஏனமும்பிணையலு மெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

தூவி எரிக்கும் புழுகு, சந்தனம், அகில் முதலிய வற்றின் புகையும் அவை எரிதலால் விளங்கும் ஒளியும் மணம் வீசச்செறிந்த பொழில்களிடையே இளமயில்கள் நிறைந்துள்ளதும், அருகில் பன்றிகளும் மானினங்களும் வாழ்வதுமான அழகிய மலைச் சாரலை அடுத்துள்ள திருஇடைச்சுரத்தில் காட்டையும், சுடலையையும், கற்கள் நிரம்பிய மலையிடங்களையும் விரும்புபவரும், தீமை யில்லாதவரும், அழல் போன்ற வெம்மையான மழுவாயுதத்தை ஏந்தியவரும், தீமை யில்லாதவரும், மறுமை இம்மை ஆகிய இருமை இன்பங்களையும் தருபவரும் வணங்குதற்கும் பழகுதற்கும் வாழ்த்துதற்கும் உரிமையானவருமாகிய இவ்விறைவரின் இயல்புயாதோ?

குறிப்புரை :

கானம் - காடு. கற்படுநிலன் - மலை. காதலர் - இவற்றை இடமாகக்கொள்ளும் விருப்பினர். வானம் - மறுமை. நிலமை - இம்மை. இருமையும் - இவ்விரண்டின் தன்மையும். நானம் - கஸ்தூரி. ஏனம் - பன்றி. பிணையல் - பெண்மான்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

கடமணிமார்பினர் கடறனிலுறைவார் காதலர்தீதிலர் கனன்மழுவாளர்
விடமணிமிடறினர் மிளிர்வதோரரவர் வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர்
வடமுலையயலன கருங்குருந்தேறி வாழையின்றீங்கனி வார்ந்துதேனட்டும்
இடமுலையரிவைய ரெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

அசையும் ஆலமரத்தினருகே விளங்கும் கரிய குருந்த மரங்களில் ஏறி வாழைக் கனிகளின்மீது ஒழுகுமாறு தேன் அடைகளை எடுத்துப் பிழியும், இடங்கொண்டு வளர்ந்த முலைகளை உடைய பெண்கள் வாழும் அழகிய மலைச்சாரலை உடைய திரு இடைச்சுரத்தில், மலைச்சாரல்களில் விளைந்த மணிகளை அணிந்த மார்பினரும் கடலில் உறைபவரும், அன்புடையவரும் தீமையில்லாத வரும், கனலும் மழுவை ஏந்தியவரும் விடத்தை அடக்கிய மணிமிடற்றினரும், பாம்பை அணிகலனாகப் பூண்டவரும் வேறுவேறான ஒழுக்க நெறிகளை உடையவரும் பல்வேறு தோற்றங்களையுடைய வருமாய் எழுந்தருளிய இவ்விறைவரின் இயல்புயாதோ?

குறிப்புரை :

கடமணி - மலைச்சாரலில் விளைந்த மணி. சரிதை - ஒழுக்கம். வட முலை அயலன - அசையும் ஆலுக்குப் பக்கத்தனவாகிய. கருங்குருந்து - பெரிய குருந்தமரத்தில். வார்ந்து - ஒழுகி. தேன் அட்டும் - தேனை எடுக்கின்ற. இட முலை அரிவையர் - இடங் கொண்டு வளர்ந்த முலையினையுடைய பெண்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

கார்கொண்டகடிகமழ் விரிமலர்க்கொன்றைக் கண்ணியர்வளர்மதி கதிர்விடக்கங்கை
நீர்கொண்டசடையினர் விடையுயர்கொடியர் நிழறிகழ்மழுவின ரழறிகழ்நிறத்தர்
சீர்கொண்டமென்சிறை வண்டுபண்செய்யும் செழும்புனலனையன செங்குலை வாழை
ஏர்கொண்டபலவினொ டெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

கார்காலத்தே உண்டான மணம் கமழும் விரிந்த கொன்றை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவரும், வளரும் பிறைமதி ஒளிவிடக் கங்கைநீரை ஏற்ற சடையினரும், விடை எழுதிய உயர்ந்த கொடியை உடையவரும், ஒளி விளங்கும் மழுப் படையை ஏந்தியவரும், அழல்போலும் சிவந்த நிறத்தினரும் ஆய், சிறப்புமிக்க மெல்லிய இறகுகளை உடைய வண்டுகள் இசை பாடுவதும் வளவிய புனல் போலும் தண்ணிய செவ்வாழைக் குலைகள் அழகுமிக்க பலாக்கனிகளோடு விளங்கி அழகு செய்வதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியிருக்கும் இவரது தன்மை யாதோ?

குறிப்புரை :

கார்கொண்ட - கார்காலத்து உண்டான. கடி - மணம். வாழைகள் பலாவினோடு அழகைச்செய்கின்ற சாரல் எனக்கூட்டுக.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

தோடணிகுழையினர் சுண்ணவெண்ணீற்றர் சுடலையினாடுவர் தோலுடையாகப்
பீடுயர்செய்ததோர் பெருமையையுடையர் பேயுடனாடுவர் பெரியவர்பெருமான்
கோடல்களொழுகுவ முழுகுவதும்பி குரவமுமரவமு மன்னியபாங்கர்
ஏடவிழ்புதுமலர் கடிகமழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

தோடணிந்த காதினராய்த் திருவெண்ணீறாகிய சுண்ணப்பொடி பூசியவரும், தோலை உடுத்திச் சுடுகாட்டில் நடனம் ஆடுபவரும், பீடு என்னும் சொல் பெருமை உறுமாறு மிக்க பெருமையை உடையவரும் பேய்க்கணங்களோடு ஆடுபவரும், பெரியவர் எனப் போற்றத் தக்கவர்கட்குத் தலைவருமாய்ச் செங் காந்தட் பூக்கள் தேனைச் சொரிய அவற்றின்கண் முழுகும் வண்டுகளை உடையதும் குரவம் கடம்ப மரம் ஆகியன நிறைந்துள்ள சோலைகளில் பூத்த புதுமலர்களின் மணம் வீசப்பெறுவதுமாகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபிரானது இயல்பு யாதோ?

குறிப்புரை :

குழை - காது. பீடு - பெருமை. கோடல்கள் ஒழுகுவ - செங்காந்தட்பூக்கள் தேனைச்சொரிவன; அதில், தும்பி முழுகுகின்றன. தும்பி - வண்டு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

கழன்மல்குகாலினர் வேலினர்நூலர் கவர்தலையரவொடு கண்டியும்பூண்பர்
அழன்மல்குமெரியொடு மணிமழுவேந்தி யாடுவர்பாடுவ ராரணங்குடையர்
பொழின்மல்குநீடிய மரவமுமரவ மன்னியகவட்டிடைப் புணர்குயிலாலும்
எழின்மல்குசோலையில் வண்டிசைபாடு மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

வீரக்கழல் அணிந்த திருவடியினரும், கையில் வேலை ஏந்தியவரும், முப்புரிநூல் அணிந்தவரும் ஐந்தாகக்கிளைத்த தலைகளை உடைய பாம்போடு உருத்திராக்க மாலை அணிந்துள்ளவரும், சுவாலைவிட்ட எரியோடு அழகிய மழுவை ஏந்தி ஆடுபவரும், பாடுபவரும், பிறரை வருத்தும் அழகுடையவருமாய்ப் பொழில்களில் நிறைந்து உயர்ந்துள்ள மராமரங்களில் பொருந்திய கிளைகளில் ஆண்பெண் குயில்கள் இணைந்து பாடுவதும் அழகிய சோலைகளில் வண்டுகள் இசைபாடுவதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் சிவபிரானது இயல்பு யாதோ?

குறிப்புரை :

கழல் - வீரக்கழல். வேல் - சூலம். கவர் தலை அரவு - ஐந்தலை நாகம். கண்டி - உருத்திராக்கம். அணங்கு - தெய்வத்தன்மை. மரவம் - மராமரம். கவடு - கிளை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

தேங்கமழ்கொன்றையந் திருமலர்புனைவார் திகழ்தருசடைமிசைத் திங்களுஞ்சூடி
வீந்தவர்சுடலைவெண் ணீறுமெய்பூசி வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர்
சாந்தமுமகிலொடு முகில்பொதிந்தலம்பித் தவழ்கனமணியொடு மிகுபளிங்கிடறி
ஏந்துவெள்ளருவிக ளெழிறிகழ்சார லிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலர் மாலையைச் சூடுபவரும், விளங்கும் சடைமுடியில் பிறை மதியைச்சூடி இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டுச் சாம்பலைத் தம் திருமேனி மீது பூசி, வேறுபடும் புராணவரலாறுகளை உடையவரும் அவ்வாறே வேறுபடும் பல வேடங்களுடன் காட்சி தருபவருமாய், சந்தனம் அகில் ஆகியவற்றின் மணம் பொதிந்து இடித்துப் பொழியும் மழையாள் உருண்டுவரும் பெரிய மணிகளையும் பளிங்குகளையும் அடித்து வருவனவாகிய உயர்ந்த வெண்மையான அருவிகள் விளங்கும் மலைச் சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் பெருமானது இயல்பு யாதோ?

குறிப்புரை :

வீந்தவர் - இறந்தவர். சாந்தம் - சந்தனம். கனமணி - கூட்டமாகிய இரத்தினங்கள். ஏந்து - தாங்கிய.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

பலவிலமிடுபலி கையிலொன்றேற்பர்
பலபுகழல்லது பழியிலர்தாமும்
தலையிலங்கவிரொளி நெடுமுடியரக்கன்
றடக்கைகளடர்த்ததோர் தன்மையையுடையர்
மலையிலங்கருவிகண் மணமுழவதிர
மழைதவழிளமஞ்ஞை மல்கியசாரல்
இலையிலவங்கமு மேலமுங்கமழு
மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

பலர் இல்லங்களுக்கும் சென்று மகளிர் இடும் உணவைக் கைகளில் ஏற்பவரும், பலவாய் விரிந்த புகழ் அல்லது பழி எதுவும் இல்லாதவரும், விட்டு விளங்கும் ஒளியை உடைய நீண்ட மகுடங்களைத் தரித்த பத்துத் தலைகளையுடைய இராவணனின் நீண்ட கைகளை நெரித்த வலிமையை உடையவருமாய், மலையில் விளங்கும் அருவிகள் மணமுழாப் போல் ஒலியோடு இழிவதும், இள மயில்கள் நிறைந்ததும், மேகங்கள் தவழும் சாரலை உடையதும், இலைகளை உடைய இலவங்கம் ஏலம் கமழ்வதுமான திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய இப்பெருமானது இயல்பு யாதோ?

குறிப்புரை :

பல இலம் இடு பலி - பல வீடுகளில் இட்ட பிச்சை. தலை இலங்கு நெடு முடி எனக் கூட்டுக. இலை இலவங்கம் - இலைகளோடு கூடிய இலவங்கமரம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பெருமைகடருக்கியோர் பேதுறுகின்ற பெருங்கடல்வண்ணனும் பிரமனுமோரா
அருமையரடிநிழல் பரவிநின்றேத்து மன்புடையடியவர்க் கணியருமாவர்
கருமைகொள்வடிவொடு சுனைவளர்குவளைக் கயலினம்வயலிள வாளைகளிரிய
எருமைகள்படிதர விளவனமாலு மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொழிப்புரை :

பெருமைகளால் செருக்குற்றுப் பேதைமை உறுகின்ற கடல் நிறவண்ணனாகிய திருமாலும் பிரமனும் அறிய முடியாத அருமையை உடையவரும், தம் திருவடி நிழலை நின்று பரவிப்போற்றும் அன்புடைய அடியவர்கட்கு அணிமையானவருமாய், சுனைகளில் கரிய நிறவடிவோடு பூத்து வளர்ந்த குவளை மலர்களையும் கயலினங்களையும் உடையதும் வயல்களில் வாளை மீன்களும் கயல் மீன்களும் அஞ்சித் துள்ளுமாறு எருமைகள் படிய அதனைக் கண்டு இளைய அன்னங்கள் ஆரவாரிப்பதுமாகிய திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய சிவபிரானாராகிய இவர்தம் இயல்பு யாதோ?

குறிப்புரை :

பெருமைகள் தருக்கி - பெருமைகளால் செருக்குற்று. பேதுறுகின்ற - மயங்கிய. ஓரா அருமையர் - அறியமுடியாத அருமைப்பாட்டினை உடையவர். எருமைகள் குவளை கயலினம் இளவாளைகள் இரிய படிதர இளஅன்னம் ஆலும் இடைச்சுரம் எனக் கூட்டுக. இரிய - விலக. படிதர - தோய. ஆலும் - ஒலிக்கும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

மடைச்சுரமறிவன வாளையுங்கயலு மருவியவயறனில் வருபுனற்காழிச்
சடைச்சுரத்துறைவதோர் பிறையுடையண்ணல் சரிதைகள்பரவிநின் றுருகுசம்பந்தன்
புடைச்சுரத்தருவரைப் பூக்கமழ்சாரற் புணர்மடநடையவர் புடையிடையார்ந்த
இடைச்சுரமேத்திய விசையொடுபாட லிவைசொலவல்லவர் பிணியிலர்தாமே.

பொழிப்புரை :

நீர் மடைகளில் துள்ளுவனவாகிய வாளை மீன்களும் கயல் மீன்களும் வயல்களிடத்து வரும் நீர் வளம் மிக்க காழி நகரில், சடைக்காட்டில் உறையும் பிறை மதியை உடைய சிவபிரானின் வரலாறுகளைப் பரவி உருகும் ஞானசம்பந்தன், அருகருகே வெற்றிடங் களை உடைய மலையின் பூக்கமழ் சாரலில் அழகிய மட நடையினை உடைய மகளிர் பல இடங்களில் தங்கி அழகு செய்வதாகிய இடைச்சுரத்தைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடலை இசையோடு சொல்ல வல்லவர், பிணிகள் இன்றி வாழ்வர்.

குறிப்புரை :

ஞானசம்பந்தன், இடைச்சுரத்தைத் துதித்த பாடலை, இசையோடு சொல்ல வல்லவர் பிணியிலர் என்கின்றது. மடைச் சுரம் - நீர்மடைகளின் வழி. மறிவன - மடங்கித் துள்ளுவன. சடைச்சுரத்து - சடைக்காட்டில்.

பண் :

பாடல் எண் : 1

அயிலுறுபடையினர் விடையினர்முடிமே லரவமுமதியமும் விரவியவழகர்
மயிலுறுசாயல வனமுலையொருபான் மகிழ்பவர்வானிடை முகில்புல்குமிடறர்
பயில்வுறுசரிதைய ரெருதுகந்தேறிப் பாடியுமாடியும் பலிகொள்வர்வலிசேர்
கயிலையும்பொதியிலு மிடமெனவுடையார் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

கூர்மை பொருந்திய சூலப்படையை உடைய வரும், விடை ஊர்தியினரும், முடிமேல் அரவு மதி ஆகியன விரவிய அழகுடையவரும், ஆண்மயில் போலும் கட்புலனாகிய மென்மையையும், அழகிய தனபாரங்களையும் உடைய உமையம்மையை ஒரு பாலாகக் கொண்டு மகிழ்பவரும், வானகத்தே பொருந்திய மேகம் போன்ற கரியமிடற்றினரும், எல்லோராலும் போற்றப்படும் புராணவரலாறுகளை உடையவரும், இடபத்தில் மகிழ்ந்தேறிப் பாடியும் ஆடியும் சென்று பலியேற்பவரும், வலிமை சேர்ந்த கயிலை, பொதியில் போன்ற அழகிய மலைகளைத் தம் இடங்களாக உடையவரும் ஆகிய சிவபெருமான் உறையும் கழுமலத்தை நினைய நம் வினைத்தீமை அறும்.

குறிப்புரை :

இப்பதிகம் இறைவனது கழுமலத்தை நினைய, நமது வினையின் தீமை அறும் என்கின்றது. அயில் - கூர்மை. மயில் உரு சாயல் - மயில் போன்றசாயலை உடைய. வனமுலை - இளைய முலையினையுடையாளாகிய உமாதேவி. முகில் புல்கும் மிடறர் - மேகத்தையொத்த கண்டத்தை யுடையவர். கரிசு - தீமை.

பண் :

பாடல் எண் : 2

கொண்டலுநீலமும் புரைதிருமிடறர் கொடுமுடியுறைபவர் படுதலைக்கையர்
பண்டலரயன்சிர மரிந்தவர்பொருந்தும் படர்சடையடிகளார் பதியதனயலே
வண்டலும்வங்கமுஞ் சங்கமுஞ்சுறவு மறிகடற்றிரைகொணர்ந் தெற்றியகரைமேற்
கண்டலுங்கைதையு நெய்தலுங்குலவுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

மேகம் நீல மலர் ஆகியன போன்ற அழகியமிடற்றை உடையவரும், கயிலைச் சிகரத்தில் உறைபவரும், உயிரற்ற தலையோட்டைக் கையில் ஏந்தியவரும், முற்காலத்தில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலைகளில் ஒன்றைக் கொய்தவரும், அழகுறப் பொருந்தும் விரிந்த சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானதுபதி, பக்கலின் சுருண்டு விழும் கடல் அலைகள் வண்டல் மண், இலவங்கம், சங்குகள் சுறா ஆகியனவற்றைக் கொணர்ந்து வீசும் கரைமேல் நீர்முள்ளி தாழை நெய்தல் ஆகியன பூத்து விளங்கும் கழுமல நகராகும். அதனை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.

குறிப்புரை :

கொண்டல் - மேகம். மேகம் மிடற்றிற்கு உவமை யானது தேவர்களைக் காத்தமையால். நீலம் ஒப்பானது கண்ணுக்கு இனிமையாய் இருத்தலின். படுதலை - கபாலம். வண்டல் - ஒதுக்கிய மண். வங்கம் - தோணி. கண்டல் - நீர்முள்ளி. கைதை - தாழை. நெய்தல் - நெய்தற்பூ.

பண் :

பாடல் எண் : 3

எண்ணிடையொன்றின ரிரண்டினருருவ மெரியிடைமூன்றினர் நான்மறையாளர்
மண்ணிடையைந்தின ராறினரங்கம் வகுத்தனரேழிசை யெட்டிருங்கலைசேர்
பண்ணிடையொன்பது முணர்ந்தவர்பத்தர் பாடிநின்றடிதொழ மதனனைவெகுண்ட
கண்ணிடைக்கனலினர் கருதியகோயில் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

எண்ணத்தில் ஒன்றாயிருப்பவர், சிவம் சக்தி என உருவத்தால் இரண்டாயிருப்பவர். நெருப்பில் மூன்றாயிருப்பவர். நான்கு மறைகளை அருளியவர். மண்ணிடைச் சுவை ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்ற ஐந்து தன்மையர். வேதத்தின் ஆறு அங்கங்களாக இருப்பவர். ஏழிசைகளை வகுத்தவர். எண்வகைக் கலைகளில் ஒன்றாய இசைத்துறையில் ஒன்பான் கலையையும் உணர்ந்தவர். பக்தர்கள் பாடி நின்று திருவடிகளை வணங்க வீற்றிருப்பவர். மன்மதனைக் கண்ணிடைத் தோன்றிய கனலால் வெகுண்டவர். அத்தகைய பெருமான் விரும்பி உறையும் கழுமலத்திலுள்ள கோயிலை நினைய நம் வினைகளின் தீமை முற்றிலும் நீங்கும்.

குறிப்புரை :

எண்ணிடை ஒன்றினர் - எண்ணத்தில் அருவா யிருக்கும் பொழுது ஒன்றாய் இருப்பவர். உருவம் இரண்டினர் - சிவமும் சத்தியுமாகி உருவத்திருமேனி கொள்ளுங்காலத்து இரண்டாய் இருப்பவர். எரியிடை மூன்றினர் - நெருப்பில் சத்தமும் ஸ்பரிசமும் உருவமுமாகிய மூன்று தன்மாத்திரைகளாய் இருப்பவர். ஆகவனீயம் முதலிய முத்தீயாய் இருப்பவர் என்றலுமாம். மண்ணிடை ஐந்தினர் - மண்ணில் சத்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகளாய் இருப்பவர். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐந்திணையாய் இருப்பவர் எனலுமாம் ஏழிசை - குரல், கைக்கிளை, துத்தம், இழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழு. எட்டிருங்கலை - அஷ்டவித்தை.

பண் :

பாடல் எண் : 4

எரியொருகரத்தின ரிமையவர்க்கிறைவ ரேறுகந்தேறுவர் நீறுமெய்பூசித்
திரிதருமியல்பின ரயலவர்புரங்க டீயெழவிழித்தனர் வேய்புரைதோளி
வரிதருகண்ணிணை மடவரலஞ்ச மஞ்சுறநிமிர்ந்ததோர் வடிவொடும்வந்த
கரியுரிமருவிய வடிகளுக்கிடமாங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

ஒருகரத்தில் எரி ஏந்தியவர். தேவர்கட்குத் தலைவர். விடையை விரும்பி ஊர்பவர். திருநீற்றை மெய்யிற் பூசித்திரியும் இயல்பினர். பகைமை பூண்டவர்களாய அசுரர்களின் மூன்று புரங்களும் தீயில் அழியுமாறு விழித்தவர். மூங்கில் போன்ற திரண்ட தோள்களையும், வரி பரந்த கண்களையும் உடைய உமையம்மை அஞ்சுமாறு மேகம் திரண்டு நிமிர்ந்து வந்தாற் போன்ற கரிய வடிவோடு தம்பால் வந்த யானையின் தோலை உரித்து அதனை அணிந்தவர். அத்தகைய பெருமானுக்கு இடமாக விளங்கும் கழுமலத்தை நினைய நம் வினைத்தீமை நீங்கும்.

குறிப்புரை :

எரி - மழு. அயலவர் - பகைவர். தீயெழ விழித்தனர் என முப்புரங்களை விழித்தெரித்ததாகக் கூறப்படுகிறது. வேய் - மூங்கில். வரி - செவ்வரி. மடவரல் - உமாதேவி. மஞ்சு - ஆகாயம். கரியுரி - யானைத்தோல்.

பண் :

பாடல் எண் : 5

ஊரெதிர்ந்திடுபலி தலைகலனாக வுண்பவர்விண்பொலிந் திலங்கியவுருவர்
பாரெதிர்ந்தடிதொழ விரைதருமார்பிற் படவரவாமையக் கணிந்தவர்க்கிடமாம்
நீரெதிர்ந்திழிமணி நித்திலமுத்த நிரைசுரிசங்கமொ டொண்மணிவரன்றிக்
காரெதிர்ந்தோதம்வன் றிரைகரைக்கெற்றுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

ஊர்மக்கள் வரவேற்று இடும் பலியைத் தலையோட்டில் ஏற்று உண்பவர். வானத்தில் பொலிவோடு இலங்கும் திருவுருவினர். மண்ணுலக மக்கள் விரும்பி வந்து தம் திருவடிகளை வணங்க மணம் கமழும் மார்பகத்தே படப்பாம்பு ஆமைஓடு உருத்திராக்கம் ஆகியன அணிந்தவர். அவர் தமக்கு இடமாய் உள்ளதால், மேகங்கள் படியும் வெண்மையான வலிய கடல் அலைகள் மிகுதியான நீருடன் இழிந்துவரும் மணிகள், முத்துக்கள், ஒழுங்குற நிறைந்த வளைந்த சங்குகள், ஒளி பொருந்திய பவளமணி ஆகியவற்றைக் கரையில் கொணர்ந்து வீசும் கழுமலத்தை நினைய நம் வினைத் தீமை நீங்கும்.

குறிப்புரை :

ஊர் எதிர்ந்திடு பலி - ஊரவர் இடுகின்ற பிச்சை. கலன் - உண்ணும் பாத்திரம். படஅரவு, ஆமை, அக்கு அணிந்தவர்க்கு இடமாம் எனப்பிரிக்க. அக்கு - உருத்திராக்கம். அக்குமணியுமாம். வன்திரை மணி நித்திலம் முத்தம் சுரிசங்கம் ஒண்மணிவரன்றி கரைக்கு எற்றும் கழுமலம் எனக்கூட்டுக. சுரிசங்கம் - மூக்குச் சுரிந்திருக்கின்ற சங்குகள்.

பண் :

பாடல் எண் : 6

முன்னுயிர்த்தோற்றமு மிறுதியுமாகி முடியுடையமரர்க ளடிபணிந்தேத்தப்
பின்னியசடைமிசைப் பிறைநிறைவித்த பேரருளாளனார் பேணியகோயில்
பொன்னியனறுமலர் புனலொடுதூபஞ் சாந்தமுமேந்திய கையினராகிக்
கன்னியர் நாடொறும் வேடமேபரவுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

உயிர்கட்கு முதலில் தோற்றத்தையும் பின்னர் இறுதியையும் வழங்குவோராய், முடியணிந்த தேவர் கணங்கள் தம் திருவடிகளைப் பணிந்து போற்ற, வட்டமாக, முறுக்கிய சடையின் மேல் பிறையைச் சூடிய பெருங்கருணையாளராகிய சிவபிரான் விரும்பிய கோயிலை உடையதும், பொன்போன்ற மணம் பொருந்திய மலர்கள் புனல் தூபம் சந்தனம் முதலியன ஏந்திய கையினராய்க் கன்னியர்கள் நாள்தோறும் வந்து இறைவர் கொண்டருளிய வடிவங் களைப் போற்றி வழிபடுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைத் தீமைகள் நீங்கும்.

குறிப்புரை :

முன் - சர்வ சங்காரகாலத்து. உயிர்த்தோற்றமும் இறுதியும் ஆகி - உயிர்களை உடம்போடு புணர்த்துகின்ற பிறப்பும் அவற்றைப்பிரிக்கின்ற இறுதியும் ஆகிய இரண்டிற்கும் காரணமாகி, கன்னியர் மலர் தூபம் சாந்தம் ஏந்திய கையினராகிப் பரவும் கழுமலம் எனக்கூட்டுக.

பண் :

பாடல் எண் : 7

கொலைக்கணித்தாவரு கூற்றுதைசெய்தார் குரைகழல்பணிந்தவர்க் கருளியபொருளின்
நிலைக்கணித்தாவர நினையவல்லார்தந் நெடுந்துயர்தவிர்த்தவெந் நிமலருக்கிடமாம்
மலைக்கணித்தாவர வன்றிரைமுரல மதுவிரிபுன்னைகண் முத்தெனவரும்பக்
கலைக்கணங்கானலி னீழலில்வாழுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயர் உயிரைக் கொல்லுதற்கு அணித்தாக வந்த கூற்றுவனை உதைத்தவர். ஒலிக்கின்ற கழல் அணிந்த தமது திருவடியைப் பணிந்தவர்கட்கு உரியதாக அருளிச் செய்த வீட்டின்பமாகிய நிலை அணியதாக வரவும் அவர்தம் நெடுந்துயர் போகவும் நினைக்கும் எம் நிமலர். அவர்க்கு இடமாக விளங்குவதும், தோணி மலைக்கு அருகில் வரும் வலிய அலைகள் ஒலிப்பதும், தேன் நிறைந்த புன்னைகள் முத்தென அரும்பவும் கடற்கரைச் சோலைகளின் நீழலில் மானினங்கள் வாழ்வதுமாய கழுமல நகரை நினைய நம் வினைக் குற்றங்கள் நீங்கும்.

குறிப்புரை :

கொலைக்கு அணித்தாவரு கூற்று - கொலையை அணியதாக்க வருகின்ற யமன். குரை கழல் - ஒலிக்குங் கழல். பணிந்தவர்க்கு அருளிய பொருளின் நிலைக்கு - வணங்கிய அடியார்களுக்கு அருளிச்செய்த வீட்டின்பமாகிய நிலைக்கு. அணித்தாவர - அணுகி வர. மலைக்கு - தோணிமலைக்கு. வன்திரை அணித் தாவர முரல - வலிய அலைகள் அணுகி வரவும் ஒலிக்கவும். மது - தேன். கலைக் கணம் - மான் கூட்டம். கானல் - கடற்கரைச் சோலை.

பண் :

பாடல் எண் : 8

புயம்பலவுடையதென் னிலங்கையர்வேந்தன் பொருவரையெடுத்தவன் பொன்முடிதிண்டோள்
பயம்பலபடவடர்த் தருளியபெருமான் பரிவொடுமினிதுறை கோயிலதாகும்
வியன்பலவிண்ணினு மண்ணினுமெங்கும் வேறுவேறுகங்களிற் பெயருளதென்னக்
கயம்பலபடக்கடற் றிரைகரைக்கெற்றுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

தோள்கள் பலவற்றை உடைய தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க அவன் பொன்முடிகளையும், வலிய தோள்களையும் அச்சம் பல உண்டாகுமாறு அடர்த்தருளிய பெருமான் விருப்போடு மகிழ்ந்துறையும் கோயிலை உடையதும் அகன்ற விண்ணுலகிலும் மண்ணுலகிலும் வேறுவேறு யுகங்களில் வேறுவேறு பெயர்களுடையதாய் விளங்கு வதும் நீர்த்துளி பலவாகத் தோன்ற கடல் அலைகள் தொடர்ந்து வந்து கரையில் வீசுவதுமாய கழுமலத்தை நினைய நம் வினைகளின் தீமைகள் நீங்கும்.

குறிப்புரை :

புயம் பல உடைய - இருபது தோள்களை உடைய. பயம் பலபட - பல வகையில் அச்சப்பட. பரிவொடும் - விருப்பத்தோடும். வியன் பல விண்ணினும் - அகன்ற பலவாகிய ஆகாயத்தி னும். வேறு வேறு உகங்களில் பெயர் உளது என்ன - ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு பெயரை உடையதென்று. கயம் - யானை. நீர் எனினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 9

விலங்கலொன்றேந்திவன் மழைதடுத்தோனும் வெறிகமழ்தாமரை யோனுமென்றிவர்தம்
பலங்களானேடியு மறிவரிதாய பரிசினன்மருவிநின் றினிதுறைகோயில்
மலங்கிவன்றிரைவரை யெனப்பரந்தெங்கு மறிகடலோங்கிவெள் ளிப்பியுஞ்சுமந்து
கலங்கடன்சரக்கொடு நிரக்கவந்தேறுங் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

கோவர்த்தனத்தைக் குடையாகக் கவித்துக் கொடிய மழையைத் தடுத்த திருமாலும், மணம்கமழ் தாமரையில் தோன்றிய பிரமனும் ஆகிய இவர்கள் தம் வலிமையினால் தேடியும் அறிய முடியாத தன்மையனாகிய சிவபெருமான், விரும்பி வந்து மகிழ்வாக உறையும் கோயில், வெள்ளிய அலைகள் ஒன்றோடொன்று கலந்து மலைகளைப் போலப் பரவி எங்கும் கரையில் மோதி மீளும் கடலில் பெருமிதத்துடன் கப்பல்கள் தம் சரக்கொடு வெள்ளிய முத்துச் சிப்பிகளையும் சுமந்து கரையை நோக்கி வரும் கழுமலமாகும் அதனை நினைய நும்வினைத் தீமை நீங்கும்.

குறிப்புரை :

விலங்கல் - கோவர்த்தன கிரி. தம் பலங்களால் - தமது உடற்பலத்தால். மலங்கி - கலங்கி. வரையென - மலையைப் போல. கலங்கள் தன்சரக்கொடு நிரக்க - கப்பல்கள் தன்னிடத்து ஏற்றப் பட்டுள்ள சரக்கோடு வரிசையாக.

பண் :

பாடல் எண் : 10

ஆம்பலதவமுயன் றறவுரைசொல்லு மறிவிலாச்சமணருந் தேரருங்கணிசேர்
நோம்பலதவமறி யாதவர்நொடிந்த மூதுரைகொள்கிலா முதல்வர்தம்மேனிச்
சாம்பலும்பூசிவெண் டலைகலனாகத் தையலாரிடுபலி வையகத்தேற்றுக்
காம்பனதோளியொ டினிதுறைகோயில் கழுமலநினையநம் வினைகரிசறுமே.

பொழிப்புரை :

இயன்ற பலவகையான தவங்களை மேற்கொண்டு பிறர்க்கு அறவுரை கூறும் அறிவற்ற சமணரும் புத்தரும், எண்ணத்தக்க வருத்தத்தைத் தரும் தவம் பலவற்றை அறியாதவராய்க் கூறும் பழமொழிகளை ஏற்று அருளாத தலைவர், தம் மேனி மீது திருநீற்றைப் பூசிக் கொண்டு வெண்டலையை உண்கலனாக் கொண்டு மகளிர் இடும் பலியை உலகில் ஏற்று மூங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் கோயிலை உடைய கழுமலத்தை நினைய நம் வினைக்குற்றம் தீரும்.

குறிப்புரை :

ஆம்பலதவம் முயன்று - ஆகிய பலவிதமான தவங் களைச் செய்து. தேரர் - புத்தர். கணிசேர் - எண்ணத் தக்க. நோம் பல தவம் - துன்பத்தைத் தரும் பல தவங்களை. அறியாதவர் - அறியாதவர்களாய். நொடிந்த - சொன்ன. தையலார் - பெண்கள். காம்பு அன தோளியொடு - மூங்கிலையொத்த தோளையுடைய உமாதேவியொடு.

பண் :

பாடல் எண் : 11

கலிகெழுபாரிடை யூரெனவுளதாங் கழுமலம்விரும்பிய கோயில்கொண்டவர்மேல்
வலிகெழுமனமிக வைத்தவன்மறைசேர் வருங்கலைஞானசம் பந்தனதமிழின்
ஒலிகெழுமாலையென் றுரைசெய்தபத்து முண்மையினானினைந் தேத்தவல்லார்மேல்
மெலிகெழுதுயரடை யாவினைசிந்தும் விண்ணவராற்றலின் மிகப்பெறுவாரே.

பொழிப்புரை :

ஆரவாரம் மிக்க உலகில் ஊர் எனப் போற்ற விளங்கும் கழுமலத்தை விரும்பிக் கோயில் கொண்டுள்ள இறைவரிடம், உறுதியோடு தன் மனத்தை வைத்தவனும், வேதங்களிலும் கலைகளிலும் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன், இசையோடு பாடிய மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும், உண்மையோடு நினைந்து ஏத்த வல்லவரை, மெலிவைத்தரும் துன்பங்கள் சாரா. வினைகள் நீங்கும், விண்ணவரினும் மேம்பட்ட ஆற்றலை அவர்கள் பெறுவார்கள்.

குறிப்புரை :

கலி கெழு பார் - ஒலிமிக்க உலகம். வலி கெழு மனம் - உறுதியான மனம். ஒலிகெழு மாலை - இசையோடு கூடிய மாலை. மெலி கெழு துயர் - மெலிவைச் சேர்க்கும் துன்பம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

பொழிப்புரை :

வேதம் முதலிய நூல்களைக் கற்று அவற்றின்கண் ஓதிய நெறியிலே நின்று, வேள்விகளைச் செய்து, இவ்வுலகில் வறுமையை வாராமல் ஒழிக்கும் அந்தணர்கள் வாழும் தில்லையிலுள்ள சிற்றம் பலத்தில் எழுந்தருளியவனும் இளமையான வெள்ளிய பிறை மதியைச் சூடியவனும் ஆகிய முதல்வனது திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களைப் பாவம் பற்றா.

குறிப்புரை :

இப்பாடல் சிற்றம்பலநாதன் திருவடியே பற்றுக் கோடாகக் கொண்டவர்களைப் பாவம் பற்றாது என்கின்றது. கற்று - வேதம் முதலியவற்றை ஓதி. ஆங்கு எரி யோம்பி - அந்நெறியிலேயே நின்று வேள்வியைச் செய்து. கலி - பாவம். பற்றா - பற்றுக்கோடாக.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்றாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மைய றீர்வாரே.

பொழிப்புரை :

பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, ஆன்ம போதத்தைக் கொன்று, எரியோம்பும் சிறப்புடைய அந்தணர்கள் வாழும் தில்லையில் உள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவனும், தாயின் வயிற்றில் தங்கிப் பிறத்தல் இல்லாதவனும், பின் புறம் தாழ்ந்து தொங்கும் சடாபாரம் உடையவனும் ஆகிய பெருமானை மறவாதவர் மயக்க உணர்வு நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

சிற்றம்பலநாதரை மறவாதவர்களே மலமயக்கம் தீர்வார்கள் என்கின்றது. பறப்பை - வேள்விச்சாலை. பசு வேட்டு - ஆன்மபோதத்தைக் கொன்று. எரி ஓம்பும் - சிவாக்கினியை வளர்க்கும். சிறப்பர் - சிறப்பினை உடைய தில்லை வாழ் அந்தணர்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுட்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.

பொழிப்புரை :

மைதீட்டப் பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள், நீண்ட வீதிகளிலுள்ள மாட வீதிகளில் தம் கைகளால் பந்தோச்சி விளையாடும் அழகுடையதும், உப்பங்கழிகள் சூழ்ந்ததுமான தில்லையுள், என்றும் பொய்யாத வேதப்பாடல்களை விரும்பும் சிவந்த திருமேனியை உடைய சிவபிரான், உலக மக்கள் தன்னை ஏத்த உறையும் கோயிலை உடையது சிற்றம்பலமாகும்.

குறிப்புரை :

வேதத்தை விரும்பிய சிவபெருமான் உலகேத்த உறை யுங் கோயில் சிற்றம்பலம் என்கின்றது. மையார் ஒண் கண்ணார் - மை பூசிய ஒளிபொருந்திய கண்ணை உடைய பெண்கள். பொய்யா மறை - என்றும் பொய்யாத வேதம். புரிந்தான் - விரும்பியவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்து மின்ப மின்பமே.

பொழிப்புரை :

மாடவீடுகளில் நிறைந்துள்ள வெண்மையான கொடிகள் வானத்திலுள்ள பிறையின் நெற்றியை நேரே தீண்டுமாறு வந்து சிறிதே தாக்கும் தில்லைப்பதியில் சிறகுகளை உடைய வண்டுகள் எப்போதும் ஒலிக்கும் பேரம்பலத்தை அடுத்துள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவுவதே இன்பம் ஆகும்.

குறிப்புரை :

சிற்றம்பலநாதன் சேவடியை ஏத்தும் இன்பமே இன்பம் என்கின்றது. கொடிவந்து பிறை இறைதாக்கும் பேரம்பலம் எனக்கூட்டுக. அறை - ஒலி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.

பொழிப்புரை :

செல்வவளம்மிக்க பெரிய மாடவீடுகள் வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய மதியினைத் தோயப் பல்வகை அழகு நலன்களும் உயர்ந்து விளங்கிவருவதும், ஞானச்செல்வர்கள் பலர் வாழ்வதுமாகிய தில்லையிலுள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள, வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான் திருவடிகளை வாழ்த்தும் செல்வமே, ஒருவருக்குச் செல்வமாம்.

குறிப்புரை :

சிற்றம்பலத்தெழுந்தருளியிருக்கின்ற செல்வன் கழலை ஏத்தும் இன்பமே இன்பம் என்கின்றது. சேண் - ஆகாயம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
கருமா னுரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.

பொழிப்புரை :

புதிதாக மரத்தின்கண் இருந்து வெளிவரும் மாந்தளிர் போன்ற மேனியளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, திருமகள் விளங்கும் தில்லை மாநகருள் சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளியவரும், யானைத்தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவரும் நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமாகிய எம் பெருமான் திருவடிகளை அல்லது என் உள்ளம் வேறொன்றையுமே விரும்பாது.

குறிப்புரை :

சிற்றம்பலத்து எழுந்தருளியுள்ள பெருமான் திருவடி யல்லது என்னுள்ளம் வேறொன்றையும் பேணாது என்கின்றது. திரு மாந்தில்லை - திருமகளோடு கூடிய பெரியதில்லை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தா னுலகேத்தச்
சிலையா லெயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே.

பொழிப்புரை :

அலைகள் வீசும் கங்கை நதியை முடியிற்சூடித் தன் திருமேனியில் ஒருபாகமாக மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு மகிழ்ந்திருப்பவனும் உலகம் போற்ற மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்து அழித்தவனும் ஆகிய சிற்றம்பலத்துப் பெருமானைத் தலைதாழ்த்தி வணங்குவார் தலைமைத் தன்மையோடு விளங்குவார்.

குறிப்புரை :

சிற்றம்பலத்தைத் தலையால் வணங்குபவர்களே தலை யானவர்கள் என்கின்றது. சிலை - மேருமலையாகிய வில்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கூர்வா ளரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்த லேத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்த றிண்ணமே.

பொழிப்புரை :

கூரிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின் வலிமையை அழித்துச் சிறந்த புகழ் மல்கிய சிற்றம்பலத்தின் கண் எழுந்தருளிய கங்கையைத் தரித்த சடையினை உடைய இறைவனை நாள்தோறும் ஏத்துபவருக்குத் தீராதநோய்கள் எல்லாம் தீர்தல் திண்ணம்.

குறிப்புரை :

சிற்றம்பலநாதனை நாள்தோறும் ஏத்துவார் தீராத நோயெல்லாம் தீர்வர் என்கின்றது. கூர்வாள் அரக்கன் என்றது இராவணனை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலா யோங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.

பொழிப்புரை :

வளைந்து சுற்றிய பாம்பணையில் பள்ளிகொள்ளும் திருமாலும், குளிர்ந்த தாமரை மேல் விளங்கும் நான்முகனும், அடிமுடிகளைக் காணாதவராய்த் தன் திருவடிகளைப் பரவ, அழல் வடிவில் ஓங்கி நின்றவனும், உயர்ந்தோர் பலர் வாழும் தில்லைப் பதியுள் சிற்றம் பலத்தின்கண் எழுந்தருளியவனுமாகிய பெருமானைப் போற்ற, நோய்களில் மாட்சிமை உள்ள கொடிய நோய்கள் எல்லாமும் பயன்தாராது கழியும்.

குறிப்புரை :

சிற்றம்பலத்தைத் துதிக்க, பெரியநோயெல்லாம் மாயும் என்கின்றது. கோண் நாகணையான் - வளைந்த நாகத்தை அணையாகக்கொண்ட திருமால். சேணார் - தேவர்கள். மாணா நோய் - மாட்சிமைதராத நோய்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.

பொழிப்புரை :

மரப்பட்டையின் சாயம் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தரும் நோன்புகள் பலவற்றை மேற்கொண்டு திரியும் சமணர்களும் மொழியும் அறியாமையோடு கூடிய உரைகளைக் கேளாது ஒழுக்கத்தால் மேம்பட்டவர் வாழும் தில்லையில் சிற்றம்பலத்தில் எழுந்தருளிய நடராசப்பெருமானை நாள்தோறும் நாம் தொழுவோம்.

குறிப்புரை :

புறச்சமயிகள் புல்லுரையைக் கேளாது சிற்றம்பல நாதன் திருவடியைத்தினம் தொழுவோம் என்கிறது. பட்டைத் துவர் - மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் காவி. படிமம் - நோன்பு. முட்டைக் கட்டுரை - அறியாமையோடு கூடிய சொல். சிட்டர், ஆசாரசீலர். நட்டம் - நடம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.

பொழிப்புரை :

உலகில் உயர்ந்து விளங்கும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், ஒழுக்கசீலர்களாலே புனிதமாகக் கொண்டு போற்றப் பெறும் தில்லைச் சிற்றம்பலத்தே எழுந்தருளிய, சூலப்படையுடைய பெருமான் மீதுபாடிய, இத்தமிழ் மாலையாகிய திருப் பதிகத்தை, அழகுறப் பாடவல்லவர் நல்லவர் ஆவர்.

குறிப்புரை :

திருஞானசம்பந்தர் திருச்சிற்றம்பலநாதனைப் பற்றிச் சொன்ன தமிழ் மாலையைப் பாடவல்லவர்கள், நல்லவர் ஆவர் என்கின்றது. சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் - ஒழுக்கம் உடையவர்களால் கொள்ளப்படுகின்ற சிற்றம்பலம். கோலத்தால் - அழகால்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.

பொழிப்புரை :

நல்லவர்களும், நாள்தோறும் வேள்விகளைச் செய்பவர்களும், நான்கு வேதங்களை ஓதுபவர்களும், அன்புடையவர்களும் ஆகிய அந்தணர்கள், ஒளி பொருந்திய அழகிய தன் திருவடிகளைப் போற்ற, மேருவில்லால் முப்புரங்களை அழித்த சிவபெருமான் எழுந்தருளிய தலம், மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட சீகாழி நகராகும்.

குறிப்புரை :

வேதம் ஓதி வேள்விசெய்யும் அந்தணர்கள் திருவடியைத் தொழ, வில்லால் புரமெரித்த பெருமானிடம் காழிநகரம் என்கின்றது. தீ மேவும் தொழிலார் - யாகத்தீயை விரும்பும் தொழிலையுடைய அந்தணர். நால்வேதம் சொல்லார் - நான்கு வேதங்களாகிய சொல்லையுடையவர்கள். கல்லார் மதில் - மலையையொத்த மதில்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

துளிவண் டேன்பாயு மிதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கண்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை யுகந்தா னூர்போலுங்
களிவண் டியாழ்செய்யுங் காழிந் நகர்தானே.

பொழிப்புரை :

வளமான தேன் துளிபாயும் கொன்றை மலர், தூய ஊமத்தம் மலர், தெளிந்த வெண்மையான பிறை மதி, பாம்பு, கங்கை ஆகியன விளங்கும் சென்னிக்கண், ஒளி பொருந்திய வெள்ளிய தலை மாலையை விரும்பிச்சூடிய சிவபிரானது ஊர், கள்ளுண்டு களித்த வண்டுகள், யாழ்போல ஒலிக்கும், சீகாழி நகராகும்.

குறிப்புரை :

கொன்றை, பிறை, பாம்பு, ஊமத்தம் இவற்றை விரும்பிய இறைவனிடம் இது என்கின்றது. வண் தேன் துளி பாயும் இதழி என மாறுக. இதழி - கொன்றை. மாசுணம் - பாம்பு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

ஆலக் கோலத்தி னஞ்சுண் டமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந் தளித்தான் றன்மையாற்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தாற்
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே.

பொழிப்புரை :

பாற்கடலில் தோன்றிய ஆலகாலம் எனப்படும் அழகிய நஞ்சினை உண்டு, அமுதம் முழுவதையும் தேவர்களுக்கு ஈந்தருளிய தன்மையை உடையவனாய் மார்க்கண்டேயன் பொருட்டுத் தன்பாதத்தால் காலனை உதைத்த சிவபிரானது ஊர், சீகாழிநகராகும்.

குறிப்புரை :

ஆலகால விஷத்தை உண்டு அமுதத்தைத் தேவர்க்கு அளித்தவனும், காலனைக் காய்ந்தவனும் ஆகிய காவலன் ஊர், காழி என்கின்றது. ஆலக்கோலத்தின் நஞ்சு - ஆலகால விஷம். சால - மிக. பாலற்கு - மார்க்கண்டேயற்கு. பரிந்து - கருணை கூர்ந்து. அளித்தான் - உயிர் கொடுத்தான்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

இரவிற் றிரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பானீ றணிவோர்க்குங்
கரவிற் றடக்கையார் காழிந் நகர்தானே.

பொழிப்புரை :

இரவில் திரியும் நிசாசரராகிய அசுரர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் இருபது தோள்களையும் நெரித்து, பின் அவன் வருந்திய அளவில் கைகளில் ஏந்தும் வாள் வழங்கிய சிவபிரானது இடம், இறைவனைப் பரவித்திரியும் அடியவர்கட்கும், பால் போன்ற திருநீற்றை அணிபவர்கட்கும், ஒளியாமல் வழங்கும் நீண்ட கைகளையுடைய, வள்ளன்மை மிக்க, அடியார் வாழும், சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

இராவணற்கு வாள் அருளிச் செய்தவன் இடம் காழி நகரம் என்கின்றது. இரவில் திரிவோர் - அசுரர்கள்; நிசாசரர் என்பதன் மொழிபெயர்ப்பு. நிரவி - ஒழுங்குபடுத்தி. கரவாள் - கைவாள். கரவு இல் தடக்கையார் - ஒளியாமல் வழங்கும் கையையுடையவர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

மாலும் பிரமனு மறியா மாட்சியான்
றோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலு மிரந்தோர்க் கெந்நாளுங்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.

பொழிப்புரை :

திருமால், பிரமன் ஆகியோர் அறிய முடியாத மாட்சிமையை உடையவனும், மான்தோலும், முப்புரி நூலும் பொருந்திய மலை போன்ற மார்பினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளும்பதி, தம்பால் இரந்தவர்களுக்கு எந்நாளும் பிறிதொருநாளையோ, நேரத்தையோ குறிக்காது உடனே பொருள் வழங்கும் செல்வர்கள் வாழ்கின்ற சீகாழிநகராகும்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியாதவனும், பூணூல் அணிந்தவனுமாகிய இறைவன் பதி காழிநகர் என்கின்றது. இரந்தோர்க்கு எந்நாளும் காலம் பகராதார் - யாசிப்பவர்களுக்கு எப்பொழுதும் இதுகாலமல்ல, இதுகாலமல்ல, என்று சொல்லாது எப்பொழுதும் கொடுப்பவர்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாக மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.

பொழிப்புரை :

உணவளிப்போர் தங்கள் கைகளிலே தர, அதனை வாங்கி உண்ணும் சமணர்களும் தாழ்ந்த சீவரம் என்னும் கல்லாடையை உடுத்திய புத்தர்களும் ஆகியவர்களின் தீயொழுக்கத்தை மனத்துக் கொள்ளாமல், உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்து ஏற்றவனும், மலரணிந்த சென்னியில் கங்கையைத் தரித்தவனுமாகிய சிவபெருமான் எழுந்தருளிய காழிநகரைப் பேணித்தொழுவீர்களாக.

குறிப்புரை :

புத்தர் சமணர்களுடைய தீயொழுக்கத்தைச் சிந்தியாமல் காழிநகரைத் தொழுமின்கள் என்கின்றது. தம்கையிட உண்பார் - கையில் பிச்சையிட ஏற்று உண்பவர்கள். சீவரத்தார்கள் - காவியாடை உடுத்தியவர்கள். பெங்கை - தீயொழுக்கம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈசன் னகர்தன்னை யிணையில் சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே.

பொழிப்புரை :

பிறைமதியைச் செஞ்சடையில் வைத்த சிவபிரானது மணங்கமழ்கின்ற சீகாழிப்பதியாகிய நகரை, ஒப்பற்ற ஞானசம்பந்தன் போற்றிப் பேசிய இத்திருப்பதிகத் தமிழில் வல்லவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகில் பாசங்களை நீக்கிப் பழியற்ற புகழோடு வாழ்வர்.

குறிப்புரை :

காழிநகரைப்பற்றிச் சம்பந்தன் சொன்ன இத்தமிழை வல்லவர்கள் கடல் புடைசூழ்ந்த உலகத்துப் பாசம் நீங்கிப் பழியற்றுப் புகழுடையராய் வாழ்வர் எனப் பயன் கூறுகிறது. பெருநீர் - கடல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

இரும்பொன் மலைவில்லா வெரியம் பாநாணில்
திரிந்த புரமூன்றுஞ் செற்றா னுறைகோயில்
தெரிந்த வடியார்கள் சென்ற திசைதோறும்
விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே.

பொழிப்புரை :

பெரிய பொன்மயமான மேருமலையை வில்லாக வளைத்து, அனலை அம்பாக அவ்வில்நாணில் பூட்டி வானில் திரிந்து கொண்டிருந்த முப்புரங்களையும் அழித்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், கற்றுணர்ந்த அடியவர்கள் செல்லும் திசைகளில் எல்லாம் விரும்பி அவர்களை எதிர்கொள்ளும் மக்கள் வாழும் திருவீழிமிழலை ஆகும்.

குறிப்புரை :

மேருமலையை வில்லாகவும், அங்கியை அம்பாகவும் கொண்டு திரிபுரமெரித்த சிவன் உறையுங்கோயில் திருவீழிமிழலை என்கின்றது. தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும் விரும்பி எதிர்கொள்வார் என்றது, ஞானசம்பந்தப்பெருமான் எழுந்தருளிய போது எதிர்கொண்டதைத்திருவுள்ளத்து எண்ணி எழுந்த உரைபோலும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
ஓதக் கடனஞ்சை யுண்டா னுறைகோயில்
கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும்
வேதத் தொலியோவா வீழி மிழலையே.

பொழிப்புரை :

துன்புறும் தேவர்களின் துயர்தீர, வெள்ள நீரொடு கூடிய கடலின்கண் எழுந்த நஞ்சினை உண்ட சிவபிரான் உறையும் கோயில், இசையமைப்போடு கூடியதும் சுருதி என்பதற்கேற்ப ஒருவர் ஓதக்கேட்டு ஓதப்பட்டு வருவதும் ஆகிய வேதபாராயணத்தின் ஒலி நீங்காமல் ஒலிக்கின்ற திருவீழிமிழலை ஆகும்.

குறிப்புரை :

துன்புறுகின்ற தேவர்கள் துயர் தீர நஞ்சுண்டநாதன் கோயில் வீழிமிழலை என்கின்றது. வாதை - துன்பம். கேள்விக் கிடை - வேதத்தை ஓதும் மாணவர் கூட்டம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

பயிலும் மறையாளன் றலையிற் பலிகொண்டு
துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்
மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்
வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதிய பிரமனின், தலையோட்டில் பலியேற்று அனைவரும் துயிலும் நள்ளிரவில் ஆடும் ஒளிவடிவினனாகிய சிவபிரான் உறையும் கோயில், மயில், மடப்பம் பொருந்தியமான், மதி, இள மூங்கில், வெயில் ஆகியனவற்றைப் போன்று கண்ணுக்கு இனிய மென்மையும், மருளும் விழி, முகம், தோள்கள், உடல்ஒளி இவற்றால் பொலியும் மகளிர் வாழும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

பிரமகபாலத்தில் பிச்சை ஏற்று, எல்லாம் துயிலும் நள்ளிரவில் நட்டமாடும் பெருமான் கோயில் வீழிமிழலை என்கின்றது. இந்நகரத்து மாதர் மயிலையும் மானையும் மதியையும் மூங்கிலையும் வெயிலையும் போல் விளங்குகின்றார்கள்; சாயலால் மயில், பார்வையால் மான், நுதலழகால் மதி, தோளால் மூங்கில், கற்பால் வெயில் எனக்கொள்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

இரவன் பகலோனு மெச்சத் திமையோரை
நிரவிட் டருள்செய்த நிமலன் னுறைகோயில்
குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை
விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே.

பொழிப்புரை :

தக்கன் செய்தயாகத்தில் சந்திரன், சூரியன் ஏனைய தேவர்கள் ஆகியோரை, வீரபத்திரரை அனுப்பித் தண்டம் செய்து செம்மைப்படுத்தி அருள்செய்த சிவபிரான் உறையும் கோயில் குரா, சுரபுன்னை, குளிர்ந்த கோங்கு, இளவேங்கை ஆகியன விரவிய பொழில்கள் சூழ்ந்த அழகிய தட்பமுடைய வீழிமிழலையாகும்.

குறிப்புரை :

தக்கயாகத்தில் சூரியன் சந்திரன் முதலான தேவர்களைச் செப்பஞ்செய்து அருள்செய்த நிமலன் கோயில் இது என்கின்றது. இரவன் - சந்திரன். பகலோன் - சூரியன். எச்சத்து - யாகத்தில். நிரவிட்டு - செப்பஞ்செய்து.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்
பெண்ணுக் கருள்செய்த பெருமா னுறைகோயில்
மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்
விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

நெற்றி விழியில் தோன்றிய கனலால் காமனைப் பொடிசெய்து, இரதிதேவிவேண்ட அவள் கண்களுக்கு மட்டும் புலனாகுமாறு அருள் செய்த பெருமான் உறையும் கோயில் மண்ணில் செய்யும் பெரிய வேள்விகளில் வளரும் தீப்புகை நாள்தோறும் விண் ணகத்தே மழைமேகங்களை உருவாக்கும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

மன்மதன் எரிய விழித்து, இரதிக்கு அருள்செய்த பெருமான் கோயில் இது என்கின்றது. பெண் - இரதி. உமையெனப் பொருள்கொண்டு இடப்பாகத்தை அருளிய எனப்பொருள் உரைப்பாரும் உளர். பூமியில் செய்யப்படும் யாகப்புகை, வானத்தில் மேகத்தை வளர்க்கும் என்ற கருத்தைப் பின்னிரண்டடிகளில் காண்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடவாழி
ஏலா வலயத்தோ டீந்தா னுறைகோயில்
சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்
மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

திருமால் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அருச்சித்தபோது ஒன்று குறையக்கண்டு, தன், மலர் போன்ற கண்ணை இடந்து சாத்திய அளவில் பிறர் சுமக்கலாற்றாத சக்கராயுதம் ஆகிய ஆழியை அவனுக்கு ஈந்தருளிய பெருமான் உறையும் கோயில், சேல்மீன்கள் பொருந்திய செழுநீர்ப் பொய்கைகளில் முளைத்த தாமரை மலர்கள் தீப்பிழப்பு போலக் காணப்படும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

திருமால் ஆயிரம்பூவோடு கண்கொண்டு வழிபாடு செய்யச் சக்கரம் ஈந்த பெருமான் கோயில் இது என்கின்றது. இவ்வரலாறு இத்தலத்தில் நிகழ்ந்தது. ஏலாவலயம் - சுமக்கலாற்றாத சக்கரம். கமலங்கள் எரிகாட்டும் - செந்தாமரை தீப்பிழம்பைப் போல விளங்கும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
கொதியா வருகூற்றைக் குமைத்தா னுறைகோயில்
நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்
விதியா னிற்கின்றார் வீழி மிழலையே.

பொழிப்புரை :

மெய்யறிவால் தன்னை வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாளைக் கையகப்படுத்தச் சினந்து வந்த கூற்றுவனை அழித்த சிவபிரானது கோயில், நிதியால் மிகுந்த செல்வர்கள் நாள்தோறும் செய்யும் நியமங்களை விதிப்படி செய்து வாழும் திருவீழி மிழலையாகும்.

குறிப்புரை :

காலகாலன் கோயில் இது என்கின்றது. மதியால் வழிபட்டான் - அறிவோடு வழிபட்ட மார்க்கண்டன். கொதியா - கோபித்து. குமைத்தான் - உரு அழியச் செய்தவன். நெதியான் மிகு செல்வர் - தியானத்தால் மிக்க செல்வர். நியமங்கள் - யோக உறுப்புகள் எட்டனுள் ஒன்றாகிய நியமம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

எடுத்தான் றருக்கினை யிழித்தான் விரலூன்றிக்
கொடுத்தான் வாளாளாக் கொண்டா னுறைகோயில்
படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை
விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் செருக்கினைத் தன் கால்விரலை ஊன்றி அழித்தவனும், பின் அவன் பிழையுணர்ந்து வேண்ட, வாள் முதலியன கொடுத்து, அவனை அடிமையாக ஏற்றுக் கொண்டருளியவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில், வேதங்களைப் பயின்றவர்களும், வேள்விகள் பலவற்றைச் செய்பவர்களும், பாவங்களை விட்டவர்களுமாகிய அந்தணர்கள் மிகுதியாக வாழும், திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

இராவணனது தருக்கினை அழித்து வாள்கொடுத்து ஆளாகக்கொண்ட இறைவன் கோயில் இது என்கின்றது, மறை படித்தார், வேள்வி பயின்றார் என மாறிக் கூட்டுக. வேதம் ஓதி வேள்வி இடைவிடாது செய்து பாபத்தை விட்டவர்கள் வாழ்கின்ற மிழலை என்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

கிடந்தா னிருந்தானுங் கீழ்மேல் காணாது
தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில்
படந்தாங் கரவல்குற் பவளத் துவர்வாய்மேல்
விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே.

பொழிப்புரை :

பாம்பணையில் துயிலும் திருமாலும், தாமரை மலரில் உறையும் நான்முகனும் அடிமுடிகளைக் காணாது திரும்பித் தொடர்ந்து ஏத்த அழலுருவாய் நின்ற சிவபிரானது கோயில். அரவின் படம் போன்ற அல்குலையும், பவளம் போன்ற வாயினையும் விடம் பொருந்திய கண்களையும் உடைய மகளிர் மிகுதியாக வாழும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

மாலும் அயனும் அறியாவண்ணம் அழல் உருவானான் இடம் இது என்கின்றது. கிடந்தான் - பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமால். இருந்தான் - பூமேல் இருந்த பிரமன். சுடராயவன் - தீ உருவானவன். அரவுபோன்ற அல்குலையும், வாயின் மேல் விஷத்தையும் தாங்கிய கண்ணார் என்றது பாம்பு ஓரிடமும் விடம் ஓரிடமும் இருக்கின்றதென்னும் வியப்புத் தோன்றக்கூறியது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும்
நக்காங் கலர்தூற்றுந் நம்பா னுறைகோயில்
தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு
மிக்கா ரவர்வாழும் வீழி மிழலையே.

பொழிப்புரை :

சிக்குப் பிடித்த காவி உடையையும் சிறிய ஒலைத் தடுக்குக்களையும் உடைய புத்தரும் சமணர்களும் ஏளனம் செய்து சிரித்துப் பழிதூற்றும் நம் இறைவர் தங்கும் கோயில், தக்கவராய், வேதவேள்விகள் செய்வதில் தலையாயவராய், உலகில் மேம்பட்டவராய் விளங்கும் மறையவர் வாழும் வீழிமிழலை ஆகும்.

குறிப்புரை :

புறச்சமயிகள் புறம்பழிக்கும் நமதிறைவன் கோயில் இது என்கின்றது. சிக்கு ஆர் துவர் ஆடை - சிக்கு நாறும் காவியுடை. தட்டு உடை - ஓலைத்தடுக்காகிய உடை, நக்கு - சிரித்து. அலர் தூற்றும் - பழிதூற்றும். தக்காராய், வேதவேள்வியில் தலையானவராய், உலகுக்கே மிக்கவர்கள் வாழுகின்ற வீழிமிழலை என்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்
ஏனத் தெயிற்றானை யெழிலார் பொழிற்காழி
ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்
வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே.

பொழிப்புரை :

விண்ணிலிருந்து இழிந்து வந்துள்ள வீழிமிழலைக் கோயிலில், பன்றிப்பல் சூடியவனாய் எழுந்தருளி விளங்கும் சிவபிரானை, அழகிய பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியில் தோன்றிய ஞானத்தால் மேம்பட்ட அழகிய ஞானசம்பந்தன், உண்மையை உடையவனாய் ஓதிய இப்பதிகத்தைச் சொல்ல வல்லவர் நல்லவர் ஆவர்.

குறிப்புரை :

வீழிநாதனைக் காழி ஞானசம்பந்தன் சொன்ன இப்பாடல் பாடவல்லார் நல்லார் என்கின்றது. மேல்நின்று இழி கோயில் - விண்ணிழிகோயில். இது இத்தலத்துச் சிறப்புக்களுள் ஒன்று. ஏனத்து எயிற்றானை - பன்றிக்கொம்பை அணிந்தானை. வாய்மைத்து இவை - உண்மையை உடையனவாகிய இவற்றை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

அடையார் புரமூன்று மனல்வாய் விழவெய்து
மடையார் புனலம்பர் மாகா ளம்மேய
விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும்
சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.

பொழிப்புரை :

பகைவராகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் அனலிடைப்பட்டு அழியுமாறு கணைஎய்தவனும், நீரைத் தேக்கும் மடைகளையுடைய புனல் வளம் நிறைந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய விடை எழுதிய கொடியை உடைய எம் தந்தையும், வெண்மையான பிறை மதியை அணிந்த சடையினனும் ஆகிய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை வினைகள் சாரா.

குறிப்புரை :

இப்பதிகத்தால் அம்பர்மாகாளத்தெழுந்தருளிய இறை வனுடைய திருவடியை ஏத்தவல்லவர்க்கு வினை சாரா, தவம் சாரும், இன்பம் எய்தும் என்பது அறிவிக்கப்படுகின்றது. அடையார் - பகைவர். என்றது திரிபுராதிகள். மடை - வாய்க்கால் மடை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த வல்ல லடையாவே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய செழுமையான ஊமத்தம் மலர், பிறைமதி, கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, வானளாவிய பொழில்சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய ஊன் பொருந்திய தலையோட்டில் பலியேற்றுத் திரியும் வாழ்க்கையை மேற்கொண்ட பெருமான் திருவடிகளைப் போற்றத் துன்பங்கள் நம்மை அடையா.

குறிப்புரை :

ஊனார் தலை - பிரமகபாலம். ஆனான் - இடபத்தை யுடையவன். அல்லல் - துன்பம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

திரையார் புனலோடு செல்வ மதிசூடி
விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய
நரையார் விடையூரு நம்பான் கழனாளும்
உரையா தவர்கண்மே லொழியா வூனம்மே.

பொழிப்புரை :

அலைகள் பொருந்திய கங்கை நதியோடு, கண்டாரை மகிழ்விக்கும் சிறப்பு வாய்ந்த பிறைமதியை முடியில் சூடி, மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய வெண்மையான விடையை ஊர்ந்து வரும் சிவபிரான் திருவடிப்புகழை நாள்தோறும் உரையாதவர்கள் பால் பழிபாவங்கள் நீங்கா.

குறிப்புரை :

திரை - அலை. மேனி குறைதலாகிய வறுமையும் இறைவனைச் சார்ந்து கழிந்தமையின் செல்வமதியாயிற்று. விரை - மணம். நரை - வெண்மை. ஊனம் - பழி. இப்பாடல் எதிர்மறை முகத்தான் வற்புறுத்தியது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு
மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய
கந்தங் கமழ்கொன்றை கமழ்புன்சடை வைத்த
எந்தை கழலேத்த விடர்வந் தடையாவே.

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளிலும் அழகிய வரிவண்டுகள் பாடும் மந்தச் சுருதி இசை நிறைந்து விளங்கும் இயற்கை எழில் வாய்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய, மணம் கமழும் கொன்றை மலர்களை இயல்பாக மணம் வீசும் தனது சிவந்த சடைமிசைவைத்துள்ள எம் தந்தையாகிய சிவபிரானின் திருவடிகளை ஏத்தினால் இடர்கள் நம்மை வந்தடையமாட்டா.

குறிப்புரை :

கொந்து அண் பொழில் - கொத்துக்கள் நிறைந்த நந்தவனம். கோலம் - அழகு. மந்தம் - தென்றற்காற்று.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

அணியார் மலைமங்கை யாகம் பாகமாய்
மணியார் புனலம்பர் மாகா ளம்மேய
துணியா ருடையினான் றுதைபொற் கழனாளும்
பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே.

பொழிப்புரை :

அழகு பொருந்திய மலைமங்கையாகிய பார்வதி தேவியைத் தனது உடலின் இடப்பாகமாய்க் கொண்டவனாய் மணிகளோடு கூடிய புனல் வளம் உடைய அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய, துணிக்கப்பட்ட கோவணஉடையினன் ஆகிய சிவபெருமானின் பொன்னிறம் துதைந்த திருவடிகளை நாள்தோறும் பணியாதவரைப் பாவம் நீங்கா.

குறிப்புரை :

அணி - அழகு. ஆகம் - உடல், மணியார் புனல் - முத்துக்களோடு கூடிய தண்ணீர். துணி ஆர் உடை - துணிக்கப்பெற்ற கோவணஉடை. பணியாதவர்மேல் பாவம் பறையா என இதுவும் எதிர்மறை முகத்தான் விளக்கியது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

பண்டாழ் கடனஞ்சை யுண்டு களிமாந்தி
வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய
விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்
கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே.

பொழிப்புரை :

முற்காலத்தில் ஆழ்ந்த கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டு, களிப்புற்று வண்டுகள் மொய்க்கும் சோலைகள் சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருப்பவனும், பகைவராகிய அசுரர்களின் முப்புரங்களும் வெந்தழியுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டருளியவனுமான சிவபெருமான், திருவடிகளைப் போற்ற, குற்றங்கள் நம்மைக் குறுகா.

குறிப்புரை :

பண்டு ஆழ் கடல் நஞ்சை எனப்பிரிக்க. அமுதமுண்டு களிப்பது இயல்பாயினும், இவர், நஞ்சையுண்டு களித்தார் என்றது மிகநயமான பகுதி. அமுதுண்டு களிப்பார் அறிவு மயங்குவார். நஞ்சை உண்டு இவர் களித்தகளிப்பு இத்துணைத் தேவர்க்கும் இன்பம் செய்தோமே என்றதால் விளைந்தது. களிமாந்தி - களிப்பையடைந்து. விண்டார் - பகைவர். இது இத்தலவரலாறு. இத்தலத்திறைவன் பெயர் காளகண்டேசுவரர் என்பதுங்காண்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய
கிளரும் சடையண்ணல் கேடில் கழலேத்தத்
தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே.

பொழிப்புரை :

விளங்குகின்ற பாம்போடு வெள்ளை நிறமுடைய பிறையை முடியிற்சூடி, வளர்கின்ற பொழில்கள் சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும், விளங்குகின்ற சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபிரானுடைய குற்றமற்ற திருவடிகளை ஏத்தினால், மிக்க நோய்கள் தளர்வுறும்; தவம் நம்மை வந்து அடையும்.

குறிப்புரை :

மிளிரும் அரவு - விளங்குகின்ற பாம்பு. அரவுக்கு விளக்கம் அடியார்கள் அன்போடு அடைக்கலமாக நோக்கும் இறைவனுடைய திருவடி, கரம், கழுத்து, முடி, செவி, இவற்றிலெல்லாம் அணியாக இருந்து அடியார்கள் மனத்தைக் கவர்தல், கேடில்கழல் - அழிந்துபடாத்திருவடி. உறுநோய்கள் தளரும், தவம் சாரும் என முடிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய
இலையார் திரிசூலப் படையான் கழனாளும்
நிலையா நினைவார்மே னில்லா வினைதானே.

பொழிப்புரை :

கொல்லும் தொழிலில் வல்ல மழுவாயுதத்தோடு, அழகிய வில்லையும் கையில் ஏந்தி, கரையோடு மோதும் நீர்நிரம்பிய அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும், இலைவடிவமான முத்தலைச் சூலத்தைப் படையாகக் கொண்ட சிவபெருமான் திருவடிகளை நாள்தோறும் நிலையாக நினைவார்பால் வினைகள் சாரா.

குறிப்புரை :

கொலை ஆர்மழு என்றது படைக்கலம் என்ற பொதுமை பற்றி வந்த அடை; இறைவன் மழு யாரையும் கொலை செய்தல் இல்லையாதலின். கோலச் சிலை - அழகுக்காகத் தரிக்கப்பட்டவில்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய
நறையார் மலரானும் மாலும் காண்பொண்ணா
இறையான் கழலேத்த வெய்தும் மின்பம்மே.

பொழிப்புரை :

சிறகுகளை உடைய வரிவண்டுகள் தேனுண்டு இசைபாட, வேதம் ஓதும் அந்தணர் நிறைந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியிருப்பவனும், தேன் நிறைந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் காணஒண்ணாத தலைமையாளனுமாய சிவபிரான் திருவடிகளை ஏத்தினால் இன்பம் கிடைக்கும்.

குறிப்புரை :

மறையார் - அந்தணர். நறை - தேன். இறையான் சிவபெருமான்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல
வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஈசா வென்பார்கட் கில்லை யிடர்தானே.

பொழிப்புரை :

அழுக்கடைந்த மேனியரும், துன்ப வடிவினராகி, மண்டை என்னும் பாத்திரத்தில் உணவு கொள்பவருமாய புத்தரும், சமணரும் மனம் கூசாமல் கூறும் பொய்யுரைகளை ஏற்றுக் கொள்ளல் நன்மை தாராது. மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியுள்ள ஈசனே என்று கூறுபவர்கட்கு இடர்வாராது.

குறிப்புரை :

மாசூர்வடிவு - அழுக்கடைந்த மேனி. இன்னார் - துன்பமுடையவர்கள். மண்டை - வாயகன்ற உண்ணும் பாத்திரம். கூசாது உரைக்கும் சொல் - பொய் என்றறிந்தும் மனமும் வாயும் கூசாமல் உரைக்குஞ்சொல். வாசு ஆர் பொழில் - நீர் நிறைந்த பொழில்; வெட்டி வேரும் ஆம். வாசு - நீர் (பெருங்கதை. 1. 53. 77).

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

வெரிநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந் தனசேணார்
பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி
உருகா வுரைசெய்வா ருயர்வா னடைவாரே.

பொழிப்புரை :

அஞ்சத்தக்க ஊழி வெள்ளம். உலகத்தை மூட, அவ்வெள்ளத்தே ஓங்கிமேல் மிதந்த வேணுபுரம் என்னும் சீகாழிப்பதியுள் தோன்றிய அழகியனவும் சிறந்தனவுமான வேதங்களில் வல்ல ஞானசம்பந்தனுடைய இத்திருப்பதிகப் பாடல்களை, விண்ணோர் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள அம்பர்மாகாளத்தை விரும்பித் தொழுது உருகி உரைசெய்பவர் உயர்ந்த வானோர் உலகத்தை அடைவார்கள்.

குறிப்புரை :

வெரி நீர் - தேனாகிய நீர். வேரி என்பது வெரி எனத் திரிந்து நின்றது. சேணார் பெருமான் - விண்ணவர் தலைவனாகிய சிவபெருமான்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையுங் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

விரிந்த கொன்றை மலர் மாலையைப் புனையும் கடவுளாய சிவபிரான், கங்கை நீரைத் தாங்கியதால் நனைந்துள்ள சடையின்மேல், வாய் விரித்துச் சிரிப்பது போன்ற வெள்ளியதொரு தலைமாலையைச் சூடி, வினைநீங்கிய அடியவர்கள் விதிப்படி வழிபடச் செறிந்துள்ள கடற்கரையை அடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

வினைநீங்கிய அடியார்கள் விதிப்படி வழிபட்டுச் செறியும் கடனாகைக் காரோணத்தானே சிரமாலையணிந்தவன் என்கின்றது. புனையும் - அழகுசெய்யும். கடவுள்புனல் - தேவ கங்கை. வினையில் அடியார்கள் - வினை ஓய்ந்த அடியார்கள். கனையும் - செறியும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி
அண்ணா மலைநாட னாரூ ருறையம்மான்
மண்ணார் முழவோவா மாடந் நெடுவீதிக்
கண்ணார் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

பெண்ணும் ஆணுமாய் ஓருருவில் விளங்கும் பெருமானும், பிறை சூடிய சென்னியனாய் அண்ணாமலை ஆரூர் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய தலைவனும் ஆகிய சிவபிரான் மார்ச்சனை பொருந்திய முழவின் ஒலி இடைவிடாமல் கேட்கும், மாட வீடுகளுடன் கூடிய நெடிய வீதிகளை உடைய அகன்ற இடப்பரப்புடைய கடலையடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

சிவமும் சத்தியுமாக நின்றவன், அண்ணாமலையான், ஆரூருறைவான் காரோணத்தானே என்கின்றது. திருமாலின் தருக்கொழித்த தலங்கள் மூன்றினையும் சேர்த்துக்கூறியருளினார். திருவாரூரில் வில்நாணைச் செல்லாக அரித்து நிமிர்த்தித் திருமால் சிரத்தை யிடறினார்; திருவண்ணாமலையில் தீமலையாய் நின்று செருக்கடக்கினார்; நாகையிலும் தியாகர் திருவுருவில் இருந்து திருமாலின் தியானவஸ்துவானார் என்பதுமாம். மண் - மார்ச்சனை என்னும் மண். கண் - இடம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதின்மூன்றும்
ஆரா ரழலூட்டி யடியார்க் கருள்செய்தான்
தேரார் விழவோவாச் செல்வன் றிரைசூழ்ந்த
காரார் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

மண்ணக மக்கள் தொழவும், விண்ணவர் பணியவும் அனைவர்க்கும் நெருங்குதற்கரிய அழலை ஊட்டி அழித்து அடியவர்க்கு அருள் செய்து, தேரோட்டமாகிய சிறப்பு விழா இடைவிடாது நிகழும் சிறப்பினை ஏற்றருளும் செல்வன் ஆகிய சிவபெருமான், அலைகள் நிரம்பிய, மேகங்கள் பொருந்திய கடலின் கரையில் விளங்கும் நாகைக் காரோணம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த செயல் விண்ணவர் மண்ணவர் அடியார் எல்லாரும் மகிழுஞ் செயலாயிற்று என்பது உணர்த்துகின்றது. ஆரார் - பகைவர். காரார்கடல் - கரியகடல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்
அழிசூழ் புனலேற்ற வண்ணல் லணியாய
பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக்
கழிசூழ் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய வேதங்களைப் பாடிக் கொண்டு, முதிர்ந்த தன் சடைமுடி மேல் உலகைஅழிக்க எண்ணிவந்த கங்கை நதியை ஏற்றருளிய தலைவனாகிய சிவபெருமான், அழகிய செயல்களோடு பழிபாவங்களை மனத்திலும் கருதா தவர்களாகிய அடியவர்கள் பணிந்து போற்ற உப்பங்கழிகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

பழியொடு பொருந்தாத பத்தர்தொழும் நாகை என் கின்றது. மொழிசூழ்மறை - மந்திரமொழியாகச் சூழும் வேதம். அழி சூழ்புனல் - அழித்தலையெண்ணி மிடுக்கொடு வந்த கங்கை. பழி சூழ்வு இலராய - பழிசூழாத. பழியும்சூழ்ச்சியும் இலராய என்றுமாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

ஆணும் பெண்ணுமா யடியார்க் கருணல்கிச்
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்
காணுங் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

ஆணும் பெண்ணுமான வடிவோடு காட்சி தந்து, அடியவர்களுக்கு அருள் வழங்கி, வானுலகில் வாழும் தேவர்கட்கு மேலும் அருள்புரிய விரும்பும் மனத்தை உடையனாய் விளங்கும் சிவபிரான் அன்புடன் வழிபாடு செய்து பிரியாது வாழும் தொண்டர்கள் காணும் வண்ணம் கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

அடியார்க்கு அருள்செய்து, விலகிநின்றவருக்கும் திருவுளம் பாலித்துத் தியானிக்கும் செம்மனச் செல்வர் தரிசிக்க நின்றவன் இவன் என்கின்றது. சிவம் சத்தியாக நின்றாலல்லது அருளல் நிகழாமையின் `ஆணும் பெண்ணுமாய் அருள் நல்கி` என்றார். சேண் நின்றவர் - தூரத்தே நின்றவர்; தேவருமாம். இன்னம் சிந்தைசெய வல்லான் - மேலும் திருவருள் உள்ளத்தைப் புரியவல்லவன். காணும் - அநவரததரிசனம் செய்யும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு
வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்
ஞானத் துரைவல்லார் நாளும் பணிந்தேத்தக்
கானற் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

பன்றியின் பல், பாம்பு ஆகியவற்றை மெய்யிற் பூண்டு, வானகத்தே இயங்கும் இளம்பிறை தங்கும் சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபெருமான், மெய்யறிவு மயமான சொற்களைப் பேசவல்ல அடியவர்கள் நாள்தோறும் பணிந்து போற்றச் சோலைகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

ஞானிகள் பணிய இருப்பான் இவன் என்கின்றது. ஏனத்து எயிறு - பன்றிக்கொம்பு. அரவம் - பாம்பு. ஞானத்து உரைவல்லார் - சிவஞானத்தோடு செறிந்து இறைவன் புகழையே பேசவல்லவர்கள். கானல் - கடற்கரைச் சோலை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

அரையா ரழனாக மக்கோ டசைத்திட்டு
விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்
வரையார் வனபோல வளரும் வங்கங்கள்
கரையார் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

இடையில் அழல்போலும் கொடியநாகத்தைச் சங்கு மணிகளோடு இணைத்துக் கட்டிக் கொண்டு, மணம் கமழும் மலை போன்ற மார்பில் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைமையாளனாகிய சிவபெருமான், மலைகள் மிதந்து வருவன போலக்கப்பல்கள் கரையைச் சாரும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

சங்குமணியைச் சர்ப்பத்தோடு அணிந்தவன் இவன் என்கின்றது. அரை ஆர் அழல் நாகம் - இடுப்பில் பொருந்திய தீயைப்போல் கொடிய விடப்பாம்பு. அக்கோடு - சங்குமணியோடு. அசைத்திட்டு - கட்டி. விரை - மணம். வரை ஆர்வன போல - மலைகள் நிறைந்திருப்பனபோல. வங்கங்கள் - தோணிகள். வங்கங்கள் வரையார்வனபோல வளரும் கரை எனக் கூட்டுக.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோள்
இலங்கைக் கிறைவாட வடர்த்தங் கருள்செய்தான்
பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக்
கலங்கொள் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

மேலும் மேலும் வெற்றிகளால் பெற்ற புகழால் தருக்கி, மலை போன்று உயர்ந்த திண்ணிய தோளால் கயிலை மலையை எடுத்த இராவணனை வாடுமாறு அடர்த்துப்பின் அவனுக்கு அருள்செய்த சிவபிரான், வாழ்வின் பயனாகக் கொள்ளத் தக்க புகழை உடையவர்களாகிய அடியவர்கள் மண்ணுலகில் தன்னைப் பணிந்து ஏத்த மரக்கலங்கள் பொருந்திய கடற்கரையை அடுத்து விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

தன் புகழை நம்பி வளர்ந்த தோளையுடைய இரா வணன் வாட அடர்த்து, அருள் செய்தவர் இவர் என்கின்றது. வலங்கொள்புகழ் என்றது கொடை முதலியவற்றாலும் புகழ் வருமாதலின் அவற்றினின்றும் பிரிக்க. கலம் - மரக்கலம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப்
பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்
செருமால் விடையூருஞ் செல்வன் றிரைசூழ்ந்த
கருமால் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

திருமால் தன் திருவடியில் விழுந்து வணங்கவும், நான்முகன் ஏத்தவும், தானே முழுமுதற் பரம்பொருள் என உணர்ந்து அழலுருவாய் ஓங்கி நின்ற பெருமானும், பிறைமதியை முடியிற்சூடிப் பகைவரை எதிர்க்க வல்ல விடையேற்றை ஊர்ந்து வரும் செல்வனும் ஆகிய சிவபெருமான், அலைகளால் சூழப்பட்ட கரிய பெரிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

அயன் மால் இவர்கள் பெருமானே என ஏத்தநின்றவர், விடையூருஞ்செல்வர், இவர் என்கின்றது. செரு மால் விடை - சண்டைசெய்யும் பெரிய இடபம். கரு மால் கடல் - கரிய பெரிய கடல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற
அல்லா ரலர்தூற்ற வடியார்க் கருள்செய்வான்
பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்
கல்லார் கடனாகைக் காரோ ணத்தானே.

பொழிப்புரை :

நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும், பொல்லாதவர்களாகிய சமணர்கள் புறங்கூறவும், நல்லவரல்லாத புத்தர்கள் பழிதூற்றவும், தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலர் தலையோடுகளை மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப் பலரும் பணிந்து ஏத்த, கல் என்னும் ஒலியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

நல்லவர்கள் அறம் சொல்ல, தீயோர் புறங்கூற, அயலார் பழிசொல்ல, அடியார்க்கு அருள்செய்பவன் காரோணத்தான் என்கின்றது. பல் ஆர் தலை - பல்லோடுகூடிய தலை. கல் ஆர் கடல் - கல் என்னும் ஒலியோடு கூடிய கடல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

கரையார் கடனாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடும் மவரெல்லாம்
கரையா வுருவாகிக் கலிவா னடைவாரே.

பொழிப்புரை :

இடைவிடாது ஒலி செய்யும் கடலின் கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளிய வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியைக் கொண்டுள்ள இறைவனை ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய புகழ்பொருந்திய இத்தமிழ் மாலையைப் பாடிப்பரவுபவர் அனைவரும் அழியாத வடிவத்தோடு ஆரவாரம் மிக்கவானுலகை அடைவார்கள்.

குறிப்புரை :

காரோணநாதனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் மாலையாகிய இவற்றைப் பாடுவார் அழியாவடிவோடு வான் அடைவார்கள் என்கின்றது. கரையார் கடல் - ஒலிக்கின்ற கடல். நரை - வெண்மை. உரை - புகழ். கரையா உருவாகி - அழியாத வடிவத்தோடு. கலி - ஒசை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

கல்லா னிழன்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்த
வில்லா லரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லா னமையாள்வா னல்ல நகரானே.

பொழிப்புரை :

இமையவர்கள் கல்லால மரநிழலில் எழுந்தருளிய கறை பொருந்திய கண்டத்தை உடையவனே என்று தமக்குத் தெரிந்த அனைத்து மொழிகளாலும் தோத்திரம் செய்து தொழுது ஏத்த, மேரு வில்லால் அசுரர்தம் மூன்று அரண்களும் வெந்து விழுமாறு செய்தருளிய பெரியவனாகிய சிவபிரான் நம்மையாட்கொள்ளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

உபதேச குருமூர்த்தியாயிருந்த நீலகண்டா என்று தேவர்கள் தோத்திரிக்கத் திரிபுரம் எரித்த பெருமான் நமையாட் கொள்ளுவதற்காகத் திருநல்லம் என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்றார் என்கின்றது. கறை - விஷம். எல்லா மொழியாலும் - தமக்குத் தெரிந்த மொழிகள் எல்லாவற்றாலும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

தக்கன் பெருவேள்வி தன்னி லமரரைத்
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
கொக்கின் னிறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் னமையாள்வா னல்ல நகரானே.

பொழிப்புரை :

தன்னை இகழ்ந்து தக்கன் செய்த பெரிய வேள்விக்குச் சென்ற அமரர்களை, அவ்வேள்விக் களத்திலேயே பலவகையான துக்கங்களை அடையச் செய்தவனும், ஒளிவிடும் பொன்போன்ற சடைகள் தாழ்ந்து தொங்கக் கொக்கின் இறகோடு குளிர்ந்த வெண்மையான பிறையைச் சூடியிருப்பவனும் திகம்பரனுமாய இறைவன் நம்மை ஆளுதற்பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

தக்கயாகத்தில் தேவர்களைத் துக்கப்படச்செய்த பெரு மான் இவர் என்கின்றது. நக்கன் - நக்நன். இது நிர்வாணி என்னும் பொருளது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

அந்தி மதியோடு மரவச் சடைதாழ
முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி
சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும்
நந்தி நமையாள்வா னல்ல நகரானே.

பொழிப்புரை :

மாலைக் காலத்தில் தோன்றும் பிறை மதியோடு பாம்பையும் அணிந்த சடைமுடி தாழ்ந்து தொங்க, முற்பட்ட ஊழிக்காலத்தில் கையில் அனலேந்திப் பழமையான சுடுகாட்டகத்தே எரியில் நின்றாடித் தன்னைச் சிந்தித்தே எச்செயலையும் தொடங்கும் அன்பர்களின் தீராதவினைகள் எல்லாவற்றையும் தீர்த்தருளும் நந்தியாகிய சிவபெருமான், நம்மை ஆட்கொண்டருளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

தியானிப்பவர்களுடைய தீராவினை நீக்குவார் இவர் என்கின்றது. முந்தி - ஊழித் தொடக்கத்தில். தீராவினை - இறைவன் திருவருளால் அன்றி வேறொன்றாலும் தீராதவினை. நந்தி - சிவ பெருமான்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூ றிகழ்மார்பில்
தளிருந் திருமேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்ல நகரானே.

பொழிப்புரை :

குளிர்ந்த பிறை மதியைச் சூடி, கொன்றை மலர் களை அணிந்துள்ள சடைகள் தாழ்ந்து தொங்க, விளங்கும் பாம்போடு பூணநூல் திகழும் மார்பினனாய்த் தளிர் போன்ற திருமேனியை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட சிவபிரான் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

உமையொருபாகன் இவன் என்கின்றது. மிளிரும் - விளங்குகின்ற. தளிரும்திகழ் மேனி - தளிரைப்போல் விளங்குகின்ற மேனி. நளிரும் வயல் - குளிர்ந்த வயல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித்
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியா னமையாள்வா னல்ல நகரானே.

பொழிப்புரை :

நீலமணி போன்ற விளங்கிய கண்டத்தினை உடைய வனும், மலர்கள் நிறைந்த வளைத்துக் கட்டப்பட்ட நீண்ட சடைமுடியினனும், எமக்குத் தந்தையானவனும் ஆகிய பெருமான் மனத் துணிவோடு மலர் கொண்டு தன் திருவடிகளை விரும்பித் தொழுதேத்தவும் நம்மை ஆட்கொண்டருளவும் நண்ணிய நிலையினனாய் நல்லம் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

மலர்கொண்டு கழல்பேணி, தொண்டர்கள் தொழுது ஏத்த அவர்களுக்கு அண்மையில் இருப்பவன் இவன் என்கின்றது. மணி - நீலமணி. பிணிவார் சடை - கட்டிய நீண்ட சடை. நணியான் - நணுகியவன். துணிவார் தொண்டர் - மனத்துணிவினை உடைய தொண்டர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈசன் னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
நாசன் னமையாள்வா னல்ல நகரானே.

பொழிப்புரை :

மணம் கமழ்கின்ற மலர்களைச் சூடிய மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடும், பூசத்தக்கதாய்ச் சுட்டெடுத்த திருநீறு அணிந்தவனாய், இதழ் விரிந்த கொன்றை மாலையைப் புனைந்தவனாய், ஈசன் எனத் தன்னை நினைந்தேத்துபவர்களின் வினைகளைப் பொடிசெய்பவனாய், விளங்கும் இறைவன், நம்மை ஆட்கொண்டருள நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

உமாதேவியோடு நீறணிந்து கொன்றை சூடிய ஈசன் எனத் தியானிப்பார்க்கு வினைநாசம் செய்பவன் இவன் என்கின்றது. உள்கி - நினைத்து.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

அங்கோல் வளைமங்கை காண வனலேந்திக்
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோ னமையாள்வா னல்ல நகரானே.

பொழிப்புரை :

அழகிய திரண்ட வளையல்களை அணிந்த உமை யம்மை காணக் கையில் அனல் ஏந்தி, தேன் நிறைந்த மணமுடைய கொன்றை மலர்மாலை சூடி, இளமைக் கோலத்தில் சுடுகாட்டை அரங்காகக் கொண்டு எரியாடும் நம் தலைவனாகிய சிவபிரான், நம்மை ஆட்கொள்ளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

உமையம்மைகாணக் கொன்றைசூடி, ஊழிக்காலத்தில் நடனம் புரிபவர் இவர் என்கின்றது. அம் கோல் வளை - அழகிய திரண்ட வளையல். கொங்கு - மணம் நிறைந்த தேன். குழகாக - இளமையாக.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
எண்ணா தெடுத்தானை யிறையே விரலூன்றி
நண்ணார் புரமெய்தா னல்ல நகரானே.

பொழிப்புரை :

உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூற்றிலே கொண்டுள்ள பெருமானும், பிறை மதியை முடியில் சூடிக் கண்பொருந்திய நுதலினனாய் விளங்குவோனும், இறைவனது வரம் பிலாற்றலை மனத்தால் எண்ணாது கயிலை மலையை எடுத்த இரா வணனைச் சிறிதே விரலூன்றி அடர்த்தவனும், பகைவர்தம் முப்புரங்களை எய்தழித்தவனுமாகிய சிவபிரான், நம்மை ஆட்கொண்டருள, நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

இராவணனை விரலால் ஊன்றித் திரிபுரம் எரித்தவர் இவர் என்கின்றது. எண்ணாது - பின்வருகின்ற தீங்கை முன் ஆராயாது. இறையே - சிறிது. நண்ணார் - பகைவர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

நாகத் தணையானு நளிர்மா மலரானும்
போகத் தியல்பினாற் பொலிய வழகாகும்
ஆகத் தவளோடு மமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தா னல்ல நகரானே.

பொழிப்புரை :

பாம்பணையில் துயிலும் திருமாலும், தண்ணிய, தாமரை மலர்மேல் எழுந்தருளியுள்ள நான்முகனும், திருமகள் கலைமகளிரோடு போகம் பொருந்திவாழ, தானும் மலைமகளோடு கூடிப் போகியாய் இருந்து அருள் செய்த, அழகு பொருந்திய பாம்பை இடையில் அரைநாணாகக் கட்டிக் கொண்டிருப்பவன் ஆகிய சிவ பிரான், நம்மை ஆள நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

நாகத்தணையான் - திருமால். திருமாலை இச்சொல் லால் குறித்தது, அணையிருந்தும் அணையிலேயே அருகில் அலர் மகள் இருந்தும், மாலுக்குப் போகம் கூடவேண்டுமாயின் இறைவன் போகியாய் இருந்தால் அல்லது பயனில்லை என்பதைக்காட்ட. மாமலரான் என்பதும் அங்ஙனமே.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

குறியில் சமணோடு குண்டர் வண்டேரர்
அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்ல நகரானே.

பொழிப்புரை :

குறிக்கோள் இல்லாத சமணர்களும் புத்தரும் கூறும் அறிவற்ற சொற்களைக் கேட்டு நாள்களைப் பயனற்றனவாய்ப்போக்காதீர், புள்ளிகளோடு கூடிய பாம்பினை இடையிற்கட்டிய பரமன், நம் பொல்லா வினைகளைத் தீர்க்கும் நிலையில் தேன் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

இது பொல்லாவினையைப் போக்குவார் இவர் என் கின்றது. குறி இல் சமண் - குறிக்கோளற்ற சமணர். குண்டர் - அறிவிலிகள். தேரர் - புத்தர். அவமே - வீணாக, பொறி - படப்பொறி. நறை - தேன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

நலமார் மறையோர்வாழ் நல்ல நகர்மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு
தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே.

பொழிப்புரை :

நன்மைகள் நிறைந்த வேதங்களை ஓதும் அந்த ணர்கள் வாழும் நல்லம் நகரில் எழுந்தருளிய, கொல்லும் தொழில் வல்ல மழுவைக் கையில் ஏந்திய சிவபிரானை, கொச்சை வயம் என்னும் புகழுடைய தலத்தில் வாழ்ந்த தமிழ் ஞானசம்பந்தன், போற்றிப் பாடிய கலைநலம் வாய்ந்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர், கவலைகள் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

நல்ல நகரானை ஞானசம்பந்தன் சொன்ன கலை களாகிய இவைகளை வல்லவர்கள் கவலை கழிவார் என்கின்றது. கொச்சை - சீகாழி. இப்பதிகத்தைக் கலைகள் எனச் சிறப்பித்தமை காண்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

கொட்டும் பறைசீராற் குழும வனலேந்தி
நட்டம் பயின்றாடு நல்லூர்ப் பெருமானை
முட்டின் றிருபோது முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்க ளறியார் பாவமே.

பொழிப்புரை :

பறை கொட்டும் சீருக்கு ஏற்பப் பூதகணங்கள் முதலியன சூழக்கையின்கண் அனலேந்தி விருப்போடு நடனம் ஆடும் நல்லூர்ப் பெருமானைக் காலை மாலை இருபொழுதும் தவறாமல் வெறுப்பின்றி எழுச்சியோடு வணங்கி அன்பு பூண்ட மனத்தார்களைப் பாவம் அணுகாது.

குறிப்புரை :

பறை கொட்டுஞ் சீருக்கு ஏற்ப அனலேந்தியாடும் நல் லூர்ப்பெருமானை, காலை மாலையிருவேளைகளிலும் அன்பு செய்யுமனத்தவர்கள் பாவமறியார் என்கின்றது. சீரால் - சதிக்கு ஏற்ப சீரால் ஆடும் எனக்கூட்டுக. முட்டின்று - இடையீடு இல்லாமல். அன்புபட்ட - அன்பொடு பொருந்திய.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

ஏறி லெருதேறு மெழிலா யிழையோடும்
வேறும் முடனுமாம் விகிர்த ரவரென்ன
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் மடியார்கட் கடையா குற்றமே.

பொழிப்புரை :

ஊர்தியாக எருது ஒன்றிலேயே ஏறுபவனும், அழகிய உமையம்மையோடு ஒன்றாகவும் வேறாகவும் விளங்கும் தன்மையை உடையவனுமாகிய சிவபெருமான், அன்பர்கள் எண்ணுமாறு மணங்கமழும் மலர்ப் பொய்கை சூழ்ந்த நல்லூரில் விளங்குகின்றான். அப்பெருமான் புகழைக் கூறும் அடியவர்களைக் குற்றங்கள் அடையா.

குறிப்புரை :

அம்மையொடு உடனாயும் வேறாயும் இருக்கும் பெரு மானாகிய, நல்லூர் இறைவனைத் தோத்திரிப்பார்க்குக் குற்றம் அடையா என்கின்றது. ஏறில் எருது ஏறும் விகிர்தர் எனக் கூட்டிப் பொருள்கொள்க. எருதன்றி வேறொன்றிலும் அவர்க்கு விருப்பில்லை என்றவாறு. எழில் - அழகு. வேறாதல் - அம்மையை இடப்பாகத்துக் கொண்டி ருத்தல். உடனாதல் - தன்மேனியில் ஒருபங்காய்க் கொண்டு அர்த்தநாரீச்சுரராக இருத்தல். இதுவும் உருவில் வேறுபட்டுத் தோன்றுதலின் சத்தியைத் தன்னுளடக்கியிருக்கும் நிலை கூறிற்றுமாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

சூடு மிளந்திங்கட் சுடர்பொற் சடைதாழ
ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை
நாடுந் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
பாடும் மடியார்கட் கடையா பாவமே.

பொழிப்புரை :

இளம்பிறை, முடியிற்சூடி, ஒளி விடுகின்ற பொன் போன்ற சடைகள் தாழ, தலையோட்டையே உண்கலனாகக் கொண்டு, ஒவ்வோர் ஊரிலும் மகளிர் இடும் பிச்சையை நாடிச்செல்லும் அறநெறியாளனாகிய நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியவர்களைப் பாவங்கள் அடையா.

குறிப்புரை :

ஊரிடு பிச்சையை நாடும் முறையையுடைய நல்லூர்ப் பெருமானைப் பாடுகின்ற அடியவர்களைப் பாவம் அடையா என்கின்றது. சுடர் பொன் சடை - ஒளிவிடுகின்ற பொன்போலும் திருச்சடை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
காத்த நெறியானைக் கைகூப் பித்தொழு
தேத்து மடியார்கட் கில்லை யிடர்தானே.

பொழிப்புரை :

உலகியல் நெறி முறைகளைத் தான் பின்பற்றாது நீத்தவனும், நீங்காத தவத்தை உடையவனும், கட்டுப்பாடுகளுடைய நெறிகளை வகுத்து அளித்தவனும், அந்நெறி நிற்பாரைக் காத்தருள் பவனும் ஆகிய நல்லூர்ப் பெருமானைக் கைகுவித்துத் தொழுதேத்தும் அடியவர்கட்கு இடரில்லை.

குறிப்புரை :

இவனைக் கைதொழுதேத்துவார்கட்கு இடர் இல்லை என்கின்றது. நீத்த நெறியானை - விடுபட்ட நெறிகளையுடையவனை. நெறி என்பனயாவும் மலமாயாபந்தங்களாற் கட்டப்பெற்ற எம் போலியர்க்கே ஆதலின், அவையற்ற இறைவன், விடுபட்ட ஆசார சீலங்களை உடையவனாயினன். நாத்த நெறியானை என்பதில் ஞாத்தநெறி நாத்த நெறியாயிற்று. ஞாத்த - கட்டப்பட்ட; எமக்கு ஒழுங்குகளைக் கட்டிக் கொடுத்தவனை என்பது பொருள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

ஆகத் துமைகேள்வ னரவச் சடைதாழ
நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர்
போக மனத்தராய்ப் புகழத் திரிவாரே.

பொழிப்புரை :

தனது திருமேனியில், கூறாகக் கொண்டுள்ள உமையம்மையின் கணவனும் பாம்பணிந்த சடைகள் தாழ்ந்து தொங்க, இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டியவனும் ஆகிய நல்லூர்ப் பெருமானை, வேட்கை மிக்கவராய் அணுகி அவன் திருவடிகளைத் தொழும் தொண்டர்கள் இன்பம் பொருந்திய மனத்தவராய்ப் பலரும் புகழ உலகில் வாழ்வர்.

குறிப்புரை :

சிவனைச் சேரவேண்டும் என்ற தாகம் எடுத்து அணு குந் தொண்டர்கள் போகம் நிறைந்த மனத்தராக உலகம் புகழத் திரிவார்கள் என்கின்றது. ஆகம் - மேனி. தாகம் புகுந்து - வேட்கைமிக்கு. அண்மி - அணுகி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
செல்லு நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச்
சொல்லு மடியார்க ளறியார் துக்கமே.

பொழிப்புரை :

தன்னைக் கொல்ல வந்த மதம் பொருந்திய யானையை, உமையம்மை அஞ்சுமாறு கொன்று, அதன் தோலைப் போர்த்த நல்ல நெறியாளனாய், நல்லூர்ப் பெருமானாய், எல்லோரும் அடையத்தக்க முத்திநெறியாளனாய் விளங்கும் சிவபிரானை அடைந்து, தங்களது அரிய துன்பங்கள் தீருமாறு புகழ்ந்து போற்றும் அடியவர்கள், துக்கம் அறியார்.

குறிப்புரை :

மக்களடையும் நெறியாகவுள்ள நல்லூர்ப் பெரு மானைச் சொல்லும் அடியார்கள் துக்கம் அறியார் என்கின்றது. உரி - தோல். செல்லுநெறி - அடையத்தகும் நெறியாகிய முத்தி. சேர்ந்தார் - தியானித்தவர்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

எங்கள் பெருமானை யிமையோர் தொழுதேத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லாத்
தங்கை தலைக்கேற்றி யாளென் றடிநீழல்
தங்கு மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே.

பொழிப்புரை :

எங்கள் தலைவனும், தேவர்களால் தொழுது போற்றப்படும் நம் பெருமானும், நல்லூரில் பிரிவின்றி எழுந்தருளியிருக்கும் தலைவனுமாய இறைவனை அடைந்து, தம் கைகளை உச்சி மேல் குவித்து, நாங்கள் உனக்கு அடிமை என்று கூறி, அவனது திருவடி நீழலில் ஒன்றி வாழும் மனத்தவர்கள் தடுமாற்றம் இலராவர்.

குறிப்புரை :

சிரமேற் கைகுவித்து, திருமுன்நின்று `அடியேன்மீளா ஆளாவேன்` என்று திருவடி நீழலில் தங்கும் மனத்தார்கள் தடுமாற்றம் அறுப்பார்கள் என்கின்றது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

காம னெழில்வாட்டிக் கடல்சூ ழிலங்கைக்கோன்
நாம மிறுத்தானை நல்லூர்ப் பெருமானை
ஏம மனத்தாரா யிகழா தெழுந்தொண்டர்
தீப மனத்தார்க ளறியார் தீயவே.

பொழிப்புரை :

மன்மதனது உருவஅழகை அழித்துக் கடல் சூழ்ந்த இலங்கை மன்னனாகிய இராவணனது புகழைக் கெடுத்து, விளங்கும் நல்லூரில் எழுந்தருளிய பெருமானை, பாதுகாப்புக் கொண்ட மனத்தவர்களாய் இகழாது அவனைக் காணஎழும் தொண்டர்கள், தீபம் போன்ற ஞானஒளி நிலைத்த மனம் உடையவராவர். தீயனவற்றை அவர்கள் அறியார்.

குறிப்புரை :

இராவணனது புகழைக் கெடுத்த பெருமானாகிய நல் லூர்ப் பெருமானைப் புகழுந்தொண்டர், ஒளிமனத்தர்களாய் தீயன அறியார் என்கின்றது. காமன் - மன்மதன். எழில் - எழுச்சி; தருக்கு. நாமம் - புகழ். ஏம மனத்தார் - பாதுகாப்புற்ற மனத்தவர்கள். தீப மனத்தார் - எழுதிய தீபம்போல நிலைத்த மனத்தடியார்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

வண்ண மலரானும் வைய மளந்தானும்
நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத்
தண்ண மலர்தூவித் தாள்க டொழுதேத்த
எண்ணு மடியார்கட் கில்லை யிடுக்கணே.

பொழிப்புரை :

செந்தாமரையில் விளங்கும் பிரமனும், உலகை அளந்த திருமாலும், நண்ணுதற்கு அரியவனாய் விளங்கும் நல்லூர்ப்பெருமானை, குளிர்ந்த மலர்களைத்தூவி, அவன் திருவடிகளைத் தொழுது வணங்க எண்ணும் அடியவர்களுக்கு, இடுக்கண் இல்லை.

குறிப்புரை :

அயனும் மாலும் அணுகவும் அரிய பெருமான் திரு வடியை மலர்தூவி வணங்கும் அடியார்கட்கு என்றும் துன்பமில்லை என்கின்றது. வண்ணமலரான் - செந்தாமரையில் உள்ள பிரமன். வையம் அளந்தான் - உலகளந்தபெருமாள். தொழுது ஏத்தவும் வேண்டாம் - எண்ணினாற்போதும் இடுக்கண் இல்லை என்று எளிமை கூறியவாறு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்
நிச்ச மலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சு மடியார்கட் கில்லை யிடர்தானே.

பொழிப்புரை :

மயிற்பீலியாலாகிய குடை நீழலில் திரியும் சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பழி தூற்றுமாறு நின்ற பெருமானாய், நஞ்சு பொருந்திய கண்டத்தை உடைய நல்லூர்ப்பெருமானாய் விளங்கும் சிவபிரானை, ஏத்தும் அடியவர்களுக்கு இடரில்லை.

குறிப்புரை :

அமணரும் புத்தரும் அலர்தூற்ற நின்ற பெருமானைப் புகழும் அடியார்கட்கு இடர் இல்லை என்கின்றது. பிச்சக்குடை - மயிற் பீலியாலாகிய குடை. நிச்சம் - நாடோறும். அலர் - பழிச்சொல். நச்சு மிடற்றானை - விஷம்பொருந்திய கழுத்தையுடையவனை. எச்சும் - ஏச்சும். ஏத்தும் என்பதன் மரூஉ.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்
நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
வண்ணம் புனைமாலை வைக லேத்துவார்
விண்ணுந் நிலனுமாய் விளங்கும் புகழாரே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீரால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பொருந்திய நீரை வேலியாக உடைய நல்லூரில் விளங்கும் பெருமான் இயல்புகளைப் புனைந்து பாடிய இத்திருப்பதிகத்தை நாள்தோறும் சொல்லித் துதிப்பவர் விண்ணும் மண்ணும் விளங்கும் புகழாளர் ஆவர்.

குறிப்புரை :

ஞானசம்பந்தன், நல்லூர்ப்பெருமானைச் சொன்ன புகழ்மாலையை நாளும் ஏத்துவார் விண்ணும் நிலனுமாக விளங்கும் புகழார் என்கின்றது. தண்ணம்புனல்: அம் சாரியை. புனல் வேலி - நீரை வேலியாகவுடைய. வண்ணம்புனை மாலை - இறையியல்புகளை எடுத்துச் சேர்த்துச் சொன்ன மாலை. வைகல் - நாடோறும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.

பொழிப்புரை :

சுடும் தன்மை மிக்க தீபமாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினரும், கொடிய மழுவாயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், விடையை ஊர்ந்து வருபவரும், நீர் வளம் மிக்க வடுகூர் இறைவர் ஆவார். மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும் ஆவர்.

குறிப்புரை :

தீயணிவர், சுடர்வேலர். மழுவுடையர், பசி காமம் கவலை பிணி முதலியன இல்லாதவர் வடுகூரடிகள் என்கின்றது. கூர் எரிமாலை - மிக்க தீவரிசையை. வேல் - சூலம். கொடுகுஊர் - கொடுமை மிக்க ஊர். கடுகுஊர் - விரைந்து ஊரும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பாலுந் நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி
ஏலுஞ் சுடுநீறு மென்பு மொளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம்
ஆலும் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

பால், நறுமணம் மிக்க நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடி, பொருந்துவதான வெண்ணீறு, என்புமாலை ஆகியவற்றை ஒளிமல்க அணிந்து அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் வாழும் அன்னங்கள் கூடி ஆரவாரிக்கும் வடுகூரில் நம் அடிகளாகிய இறைவர் மகிழ்வோடு ஆடுகின்றார்.

குறிப்புரை :

பால், நெய், தயிர், இவற்றை ஆடி, நீறும் எலும்பும் ஒளி நிரம்பச்சூடி, நடஞ்செய்வர் இவர் என்கின்றது. பயின்று - பலகாலும் விரும்பி. ஏலும் - பொருந்தும். கோலம் - அழகு. ஆலும் - ஒலிக்கும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

சூடு மிளந்திங்கட் சுடர்பொற் சடைதன்மேல்
ஓடுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு
பாடும் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய பொன்போன்ற சடைமுடிமேல் இளந்திங்களைச்சூடி, மதம் கொண்டு தன்பால் ஓடி வந்த யானையை, உமையம்மை அஞ்சக் கொன்று, அதன் தோலைப் போர்த்து, அழகு பொருந்திய வரி வண்டுகள் இதழ்களோடுகூடிய மலர்களை முகர்ந்து தேனுண்டு பாடும் வடுகூரில், அடிகள் நடனம் ஆடுவர்.

குறிப்புரை :

சடையின்மேல் இளம்பிறையைச் சூடுவர்; உமையாள் அஞ்ச யானையை உரித்துப் போர்த்துக் கொண்டு ஆடுவர் வடுகூர்நாதர் என்கின்றது. மலர் ஏடு - பூவிதழ். மோந்து - முகர்ந்து, எழிலார் - அழகுமிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம்
கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார்
கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார்
பவரும் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

செந்நிறமும், மதிலும் செறிந்த அழகிய மாடங்களை அழிக்குமாறு தீயைச் செலுத்தி அம்மதில்கள் அழியுமாறு அம்பு எய்த சிவபெருமானார், காவல் பொருந்திய முலையாராகிய பெண் கொடிகள் முல்லைநிலத்தில் கைகளால் இரத்தினங்களைப் பொறுக்கி எடுக்கும் வடுகூரில் நடம்பயிலும் அடிகளாவர்.

குறிப்புரை :

திரிபுரம் எரியச்செய்தார் வடுகூரிலாடும் அடிகள் என்கின்றது. துவரும் புரிசையும் துதைந்த மணிமாடம் - காவியூட்டி மதில்கள் செறிந்த அழகிய மாடங்கள். ஓட்டி - பரப்பி. கடிய மதில் - காவலோடுகூடிய முப்புரங்கள். மணிகவரும் கொல்லை கடிய முலை நல்லார் பவரும் - இரத்தினங்களைக் கவரும் முல்லைநிலத்தில் உள்ள காவல் பொருந்திய முலையோடு கூடிய பெண்களாகிய கொடிகளோடு கூடிய.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல்
தணியா வழனாகந் தரியா வகைவைத்தார்
பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த
அணியார் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

துணிக்கப் பெற்றதாகிய கோவண ஆடையை இடையிலே தரித்து அதன்மேல் தீப்போன்ற விட வெம்மை தணியாத நாகத்தை அழகுறத் தரித்தவராகிய அடிகள் அடியவர் பலரும் பணிந்து பரவி வாழ்த்த அழகிய வடுகூரில் ஆடியருள்கின்றார்.

குறிப்புரை :

கோவணமுடுத்து அதன்மேல் அழகாக நாகம் வைத் தவர், அடியார்கள் பலரும் வணங்கும் வடுகூரில் ஆடும் அடிகள் என்கின்றது. துணி - கிழிக்கப்பெற்ற கோவணம். துன்னி - பொருந்தி. தணியா அழல் நாகம் - தணியாத கோபத்தோடு கூடிய பாம்பு. பணி ஆர் அடியார்கள் - பணிதலைப் பொருந்திய அடியார்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

தளருங் கொடியன்னா டன்னோ டுடனாகிக்
கிளரு மரவார்த்துக் கிளரு முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
ஒளிரும் வடுகூரி லாடும் மடிகளே

பொழிப்புரை :

சுமை பொறுக்காது தள்ளாடும் கொடி போன்ற வளாகிய உமையம்மையோடு கூடி , விளங்கும் பாம்பினை இடையிலே கட்டிக் கொண்டு விளக்கம் பொருந்திய முடிமேல் வளரும் பிறைமதி ஒன்றைச் சூடி , வரிகள் பொருந்திய வண்டுகள் இசைபாட பலராலும் நன்கறியப்பட்ட வடுகூரில் அடிகளாகிய பெருமான் ஆடியருள்கின்றார் .

குறிப்புரை :

உமாதேவியோடு உடனாகி , அரவு பிறை இவற்றை அணிந்து வடுகூர் அடிகள் ஆடுவர் என்கின்றது . தளரும் கொடி அன் னாள் - சுமை பொறுக்காது தள்ளாடும் கொடியை ஒத்த உமாதேவி . அரவு - பாம்பு . கிளரும் - விளங்கும் . ஒளிரும் - பிரகாசிக்கும் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார்
கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட
அடியர் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

வடுகூரில் ஆடும் அடிகள் பேருருவம் கொள்பவர். சிறிதான கலைநிரம்பாத பிறைமதியைச் சூடும் முடியை உடையவர். விடையை ஊர்ந்து வருபவர். கொடியவர் மொழிகளை ஏற்றுக் கொள்ளாதவர். கொல்லும் தொழிலைச் செய்யும் காலன் மடியுமாறு உதைத்தருளிய திருவடியினர்.

குறிப்புரை :

நெடியர், சிறுமதிசூடும் முடியர், விடையூர்வர், கொடியர் மொழிகொள்ளாதவர், காலனையுதைத்த அடியவர் வடுகூரில் ஆடும் அடிகள் என்கின்றது. நிரம்பா மதி - இளம்பிறை. கடிய தொழில் - கொடுந்தொழில்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

பிறையு நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையு மதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

அதிர்கின்ற பறையும் வேய்ங்குழலும் போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் ஆடும் அடிகள், இளம்பிறை, பெருகிய கங்கை நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர். வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில் உறைபவர்.

குறிப்புரை :

கங்கையும் பிறையும் பிரியா முடியாரும், வேதம் பல பாடி மயானத்துறைவாரும் வடுகூரில் ஆடும் அடிகள் என்கின்றது. நெடுநீர் - கங்கை. பறையும் குழலும் போலப் பல வண்டு ஆங்கு அறையும் எனப்பிரிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

சந்தம் மலர்வேய்ந்த சடையின் னிடைவிம்மு
கந்தம் மிகுதிங்கட் சிந்து கதிர்மாலை
வந்து நயந்தெம்மை நன்று மருள்செய்வார்
அந்தண் வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

அழகு தண்மை ஆகியவற்றை உடைய வடுகூரில் ஆடும் அடிகள் அழகிய மலர்கள் வேய்ந்த சடையின்கண் பெருகி எழும் மணம் மிகும் பிறைமதி வெளியிடும் கிரணங்களை உடைய மாலைநேரத்தில் வந்து விரும்பி எமக்கு நன்றாக அருள் செய்வார்.

குறிப்புரை :

மலர் புனைந்த சடைக்காட்டில் இருப்பதால் மணம் பெற்ற மதிசிந்துகின்ற கதிர்களோடு வந்து நயந்து எமக்கு நன்மையை அருளுவர் வடுகூரிலழகர் என்கின்றது. சந்தம் - அழகு. கதிர்மாலை - கிரணவரிசை. நயந்து - இனியன பலகூறி, நன்றும் அருள்செய்வார் - நன்றாக அருளுவர். நன்றும் மருள் செய்வார் - நன்றாக மயக்குவர் என்றுமாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

திருமா லடிவீழத் திசைநான் முகனாய
பெருமா னுணர்கில்லாப்பெருமா னெடுமுடிசேர்
செருமால் விடையூருஞ் செம்மான் றிசைவில்லா
அருமா வடுகூரி லாடும் மடிகளே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளிலும் ஒளிபரவுமாறு அரிய பெரிய வடுகூரில் நடனம் ஆடும் அடிகள், திருமால் தம் அடியை விரும்பித் தோண்டிச் செல்லவும், திசைக்கு ஒரு முகமாக நான்கு திருமுகங்களைக் கொண்ட பிரமனாகிய தலைவனும் அறிய முடியாத பெரிய முடியினை உடைய இறைவர், போர் செய்யத்தக்க விடைமீது எழுந்தருளிவரும் சிவந்தநிறத்தினர்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியவொண்ணாப் பெருமான் மாலாகிய இடபமூரும் செம்மான் வடுகூர் அடிகள் என்கின்றது. செருமால் - பொருகின்ற பெரிய; திருமாலாகிய என்றுமாம். திசைவில்லா அரு மா வடுகூரில் - திசைகளில் எல்லாம் ஒளியைச் செய்கின்ற அரிய பெரிய வடுகூரில்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

படிநோன் பவையாவர் பழியில் புகழான
கடிநா ணிகழ் சோலை கமழும் வடுகூரைப்
படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்
அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே.

பொழிப்புரை :

இவ்வுலகில் கூறப்படும் நோன்புகள் பலவற்றுக்கும் உரியவராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளியதும், குற்றமற்ற புகழோடு கூடிய மணம் கமழும் சோலைகளால் மணம் பெறுவதுமான வடுகூரில் மேவிய இறைவன் திருவடிகளில் படிந்த மனத்தோடு ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை ஓதி, அடிசேர்ஞானம் பெற்றார், திருவடிப்பேறு பெறுவர்.

குறிப்புரை :

இவ்வுலகத்துள்ள நோன்பெல்லாம் ஆய இறைவன் எழுந்தருளியுள்ள வடுகூரைப்பாடிய திருவடிஞானத்தால் வந்த இத்திருப்பாடல்களை வல்லார், திருவடிசேர்முத்தியை எய்துவார்கள். படி - பூமி. படியான சிந்தை - படிதலான மனம். அடி ஞானம் - சிவஞானம்; அடிசேர்வார் - அடிசேரும் முத்தியாகிய சாயுச்சிய முத்தியை அடைவார்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா விளம்பிறையன்
ஒற்றைப் படவரவ மதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருவாப்ப னூரானைப்
பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

முடியைச் சூழ்ந்துள்ள சடையின்மேல் வளராத இளம் பிறையைச் சூடியவனும், ஒருதலைப் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டியுள்ளவனும், வெறுத்தற்கியலாத புகழானும் ஆகிய திருஆப்பனூர் இறைவனைப் பற்றும் உள்ளமுடையோர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

இப்பதிகம் ஆப்பனூரானைப் பணிவார், பரவுவார், புகழ்வார், வினைப்பற்றறுப்பார் என்கின்றது. `முற்றும் சடை முதிரா இளம்பிறை` என்பதில் பொருள்முரண் உள்ளது. செற்றம் - கோபம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவ மணிந்தானை யணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

குராமலர் மணம் கமழும் கூந்தலையுடைய உமை யம்மை விளங்கும் திருமேனியோடு தேவர்கள் கூடி வணங்கத் திருஆப்பனூரில் விளங்கும் சிவபிரானைப் பரவும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

குரவம் கமழ்குழலாள் - குராமலர் மணக்கும் கூந்தலையுடைய உமாதேவி. விரவுதல் - கலந்து பணியும். வளை எயிறு - வளைந்த விஷப்பல். பரவுதல் - தோத்திரித்தல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

முருகு விரிகுழலார் மனங்கொ ளநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவ மணிந்தானை யணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

மணம் கமழும் கூந்தலை உடைய மகளிரால் நினைக்கப் பெறும் காமனை, முற்காலத்தில் பெரிதும் சினந்து, பின் அவனுக்கு வாழ்வு தந்த பெருமானும், பெரிய காட்டகத்தே வாழும் அரவத்தை அணிந்தவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியவனுமாகிய இறைவனைப் பரவும் மனம் உடையவர் வினைத்தொடர்ச்சி நீங்கப்பெறுவர்.

குறிப்புரை :

முருகு விரி குழலாள் - மணம் வீசும் கூந்தலையுடைய பெண்கள். அநங்கன் - மன்மதன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியி னுடைதாழச் சுடரேந்தி யாடுவான்
அணியும் புனலானை யணியாப்ப னூரானைப்
பணியு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

உடலைப் பற்றிய நோய்களையும் உயிரைப் பற்றிய பிறவி நோயையும் அறுத்தருளும் பெருமானும், சுடுகாட்டகத்தே கோவண ஆடையோடு அழலேந்தி ஆடுபவனும், கங்கையை முடியில் அணிந்தவனும் ஆகிய அழகிய ஆப்பனூர் இறைவனைப் பணியும் மனம் உடையவர் வினைத்தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

பிணியும் பிறப்பும் அறுப்பான் என உம்மை விரிக்க. துணியின் உடை - கீண்ட கோவண உடை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

தகர மணியருவித் தடமால் வரைசிலையா
நகர மொருமூன்று நலங்குன்ற வென்றுகந்தான்
அகர முதலானை யணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

தகரம் எனப்படும் மணப்பொருளும் மணிகளும் கலந்து விழும் அருவிகளை உடைய மிகப் பெரிய மலையை, வில்லாக வளைத்து, அசுரர்களின் நகரங்களாக விளங்கிய முப்புரங்களும் பொடிபடச் செய்து மகிழ்ந்தவனும், எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் அகரம் போல எப்பொருள்களிலும் கலந்து நிற்பவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியிருப்பவனுமாகிய சிவபிரான் புகழைக் கூறும் மனம் உடையவர்கள் வினைமாசுகளினின்று நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

தகரம் அணியருவி - தகர மரத்தை அணிந்த அருவி என்றுமாம். நகரம் ஒரு மூன்று - முப்புரம். அகரமுதலானை என்பது `அகரமுதல எழுத்தெல்லாம்` என்ற குறட்கருத்து.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

ஓடுந் திரிபுரங்க ளுடனே யுலந்தவியக்
காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
ஆடுந் தொழிலானை யணியாப்ப னூரானைப்
பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

பறந்து திரியும் முப்புரங்களையும் ஒரு நொடியில் அழித்து, பொடிபடச் செய்து, சுடுகாட்டைத் தனது இடமாகக் கொண்டு, கனல் ஏந்தி நின்று, இரவில் திருநடனம் புரிவதைத் தொழிலாகக் கொண் டவனும், அழகிய ஆப்பனூரில் விளங்குபவனுமாகிய இறைவனைப் பாடும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

உலந்து - வற்றி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

இயலும் விடையேறி யெரிகொண் மழுவீசிக்
கயலி னிணைக்கண்ணா ளொருபாற் கலந்தாட
இயலு மிசையானை யெழிலாப்ப னூரானைப்
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

மனம் போல் இயங்கும் விடைமிசை ஏறி, எரிதலைக் கொண்ட மழுவைச் சுழற்றிக் கொண்டு, கயல் போன்ற இரு விழிகளைக் கொண்ட உமையம்மை திருமேனியின் ஒருபால் இணைந்து மகிழ, இசைபாடி மகிழ்பவனாய் அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியுள்ள இறைவனைப் பாடுவதைத் தம் இயல்பாகக் கொண்ட மனம் உடையவர், வினை மாசு தீர்வர்.

குறிப்புரை :

இயலும் விடை - மனம்போலியங்கும் இடபம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
உருக்கு மடியவரை யொளிவெண் பிறைசூடி
அரக்கன் றிறலழித்தா னணியாப்ப னூரானைப்
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

கரிதான நீலமணி போன்ற கண்டத்தை உடைய வனும், சினம் பொருந்திய பாம்பைக் கச்சையாக அணிந்தவனும், அடியவர்களை மனம் உருகச் செய்பவனும், ஒளிபொருந்திய வெண் பிறையைச் சூடியவனும், இராவணனின் வலிமையை அழித்தவனும் ஆகிய அழகிய ஆப்பனூரில் எழுந்தருளிய இறைவனை, சுவைக்கும் மனம் உடையவர் வினை மாசு நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

கருக்கும் மணி மிடறன் - மேலும் கருக்கும் நீலமணி போலும் கழுத்தினையுடையவன். கதநாகம் - சினத்தோடுகூடிய பாம்பு. அரக்கன் - இராவணன். திறல் - வலி. பருக்கும் - பருகும் என்பதன் விரித்தல் விகாரம். குடிக்கும் என்பது பொருள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
எண்ணில் வினைகளைவா னெழிலாப்ப னூரானைப்
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

திருமால், மணம் பொருந்திய தாமரை மலர் மேல் இனிதாய் உறையும் பிரமன் ஆகியோரால், அளத்தற்கரியவனாய் நின்றவனும், அடியவர் மேல் வரும் எண்ணற்ற வினைகள் பலவற்றையும் களைபவனும் ஆகிய அழகிய ஆப்பனூரில் விளங்கும் இறைவனைப் பண்பொருந்த இசைபாடிப் போற்றுவார் வினை மாசு நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

கடிக்கமலம் - மணம் உள்ள தாமரை. அண்ணல் என்றது பிரமனை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்த வடியாரை
ஐய மகற்றுவா னணியாப்ப னூரானைப்
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.

பொழிப்புரை :

சிவந்த காவி ஆடை உடுத்த புத்தர்களும், சிறு தடுக்கை ஆடையாக உடுத்துக் கொண்டு திரியும் சமணர்களும் பொய்பேசிப் புறம்பேச, தன்னை விரும்பிய அடியவர்களின் விபரீத ஞானத்தைப் போக்கி, மெய்யுணர்வு நல்கும் அழகிய ஆப்பனூரில் விளங்கும் இறைவனை மெல்ல உள்குவார்களின் வினை மாசுகள் நீங்கும்.

குறிப்புரை :

செய்ய கலிங்கத்தார் - சிவந்த காவியாடையார். சிறு தட்டு - சிறு தடுக்கு. புரிந்த - விரும்பிய. ஐயம் அகற்றுவான் - சந்தேக ஞானத்தை விலக்குபவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

அந்தண் புனல்வைகை யணியாப்ப னூர்மேய
சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை
நந்தி யடிபரவு நலஞான சம்பந்தன்
சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.

பொழிப்புரை :

அழகிய குளிர்ந்த நீர் நிறைந்த வைகைக் கரையில் விளங்கும் அழகிய ஆப்பனூரில் எழுந்தருளிய அழகிய கொன்றை மலர் மாலையைச் சடைமேல் அணிந்துள்ள இறைவனை, சிவன் திருவடிகளையே பரவும் நல்ல ஞானசம்பந்தன் பாடிய சந்த இசை யோடு கூடிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் நிலையான மெய்யறிவு பெறுவார்கள்.

குறிப்புரை :

நந்தி - சிவபெருமான். சந்தம் - சந்தத்தோடுகூடிய திருப்பாடல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

படையார் தருபூதப் பகடா ருரிபோர்வை
உடையா னுமையோடு முடனா யிடுகங்கைச்
சடையா னெருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்
விடையா னடியேத்த மேவா வினைதானே.

பொழிப்புரை :

படைகளாக அமைந்த பூதகணங்களை உடையவனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், உமையம்மையோடு உடனாய் விளங்குபவனும், வந்து பொருந்திய கங்கையை ஏற்ற சடையை உடையவனும் ஆகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் தகுதிவாய்ந்த கோயிலில் எழுந்தருளிய விடை ஏற்றை உடைய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை, வினைகள் வந்து சாரா.

குறிப்புரை :

பகடு ஆர் உரி - யானையின் தோல். மேவா - தம் வலிமையைக்காட்டா.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதின்மூன்று நீறாய் விழவெய்த
சிலையா னெருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில்
கலையா னடியேத்தக் கருதா வினைதானே.

பொழிப்புரை :

இலை வடிவமாக அமைந்த சூலப்படையை உடையவனும், எம்பெருமானும், நிலைபெற்ற முப்புரங்களையும் நீறாய்ப் பொடிபடுமாறு கணை எய்த வில்லை உடையவனும், எருக்கத்தம்புலியூரில் விளங்கும் கோயிலில் மேவியிருப்பவனும் ஆகிய கலைகளின் வடிவான சிவபிரானின் திருவடிகளை ஏத்தி வாழ்த்துவோரை, வினைகள் கருதா.

குறிப்புரை :

இலையார்தரு சூலப்படை - இலை வடிவாகச் செய்யப் பெற்ற சூலப்படை. நிலையார் - அழிந்துபடுந் தன்மையரான திரிபுராதிகள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா வெனவல்லார்க் கடையா வினைதானே.

பொழிப்புரை :

விண்ணவர் தலைவனே, வேறுபட்ட வடிவும் பண்பும் உடையவனே, விடைமீது ஏறிவருபவனே! பெண், ஆண், அலி என்னும் திணை பால் பாகுபாடுகளைக் கடந்துள்ளவனே, பித்தனே, பிறை சூடியவனே, எல்லோராலும் எண்ணத்தகும் எருக்கத்தம்புலியூரில் உறைகின்ற தலைவனே என்றுரைத்துப் போற்ற வல்லவரை, வினைகள் அடையா.

குறிப்புரை :

பெண் ஆண் அலியாகும் - பால் பாகுபாட்டையும் திணைப் பாகுபாட்டையும் கடந்தவன் என்பது கருத்து. `பித்தா பிறை சூடீ` இத்தொடரே சுந்தரர் வாக்கில் தோன்றுவது. எண் ஆர் - எண்ணுதல் பொருந்திய.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

அரையார் தருநாக மணிவா னலர்மாலை
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி
வரையா னெருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரையார் சடையானைச் சேரத் திருவாமே.

பொழிப்புரை :

இடையிலே பாம்பைப் பொருந்துமாறு அணிந்துள்ளவனும், மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்துள்ளவனும், விடைமீது ஏறி வருபவனும், கயிலை மலையைத் தனக்குரிய இடமாகக் கொண்டவனும், எருக்கத்தம்புலியூரில் மகிழ்ந்து உறைபவனும் ஆகிய அலைகள் வீசும் கங்கை நதியை, சடைமிசைத்தரித்த சிவபிரானைச் சேர்வோர்க்குச் செல்வங்கள் வந்து சேரும்.

குறிப்புரை :

விரை - மணம். வரையான் - கயிலைமலையை யுடையவன். திரையார் சடையான் - கங்கையணிந்த சடையான். திரை ஆகு பெயராய்க் கங்கையை உணர்த்திற்று.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

வீறார் முலையாளைப் பாக மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
ஏறா னெருக்கத்தம் புலியூ ரிறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே.

பொழிப்புரை :

வேறொன்றற்கில்லா அழகினை உடைய தனங்களைக் கொண்ட உமையம்மையை, இடப் பாகமாகச் சிறப்புடன் வைத்துக் கொண்டருளியவனும், சீறி வந்த காலனின் சினம் அடங்கச் செய்தவனும், இடப ஊர்தியை உடையவனும், எருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள இறைவனும் ஆகிய சிவபிரானைத் தனித்திருந்து தியானிப்பவரை வினைகள் விரும்பா.

குறிப்புரை :

வீறு - தனிப்பெருமை. வேறொன்றற்கு இல்லாத அழகு என்பர் நச்சினார்க்கினியர். அழித்தான் என்னாது அழிவித்தான் என்றது காலன் தானேயுணர்ந்து அடங்கச்செய்த தன்மையால். வேறா நினைவாரை - தனியேயிருந்து தியானிப்பவர்களை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

நகுவெண் டலையேந்தி நானாவிதம் பாடிப்
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவா னெருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.

பொழிப்புரை :

சிரிக்கும் வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலவிதமாகப் பாடிக்கொண்டு மகளிர் இடும் பிச்சையை ஏற்கப் புகுபவனாய்ப் புலித்தோலைத் தோளில் இட்டுக்கொண்டு தகுதி வாய்ந்தவனாய் எருக்கத்தம்புலியூரில் தங்கி அங்கே நிலைத்திருப்பவனாகிய இறைவன் கழல்களை ஏத்த வினைகள் தொடரா.

குறிப்புரை :

நானாவிதம் பாடி - பலவகையான பண்களைப் பாடி. அயம் பெய்யப் புகுவான் - பிச்சையை மகளிர் பெய்யப் புகுவான். ஐயம் அயம் எனப் போலியாயிற்று. பியற்கு - பிடரிக்கு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

ஆவா வெனவரக்க னலற வடர்த்திட்டுத்
தேவா வெனவருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே யெனவல்லல் தீர்தல் திடமாமே.

பொழிப்புரை :

ஆ ஆ என்ற இரக்கக் குறிப்போடு இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து, பின் தேவா என அவன் வேண்ட அருள் நிறைந்த செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே, எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற, நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.

குறிப்புரை :

ஆ ஆ - இரக்கக்குறிப்பு. தேவா என - அவனே, தேவா என்று வேண்ட.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

மறையா னெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையா னெருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதும் நான்முகனும், நெடுமாலும் காணுதற்கு அரியவனே, மழுவைக் கையில் ஏந்தியவனே, கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே, முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே என்று போற்றி, எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட கறைமிடற்று அண்ணலை நினைந்தால், வினை கெடும்.

குறிப்புரை :

மறையான் - பிரமன். நிறையாமதி - இளம்பிறை. முத்தின் தொத்தே - முத்தின் கொத்தே.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

புத்த ரருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்
நித்த னெருக்கத்தம் புலியூர் நிகழ்வாய
அத்த னறவன்றன் னடியே யடைவோமே.

பொழிப்புரை :

புத்தர் சமணர் ஆகியோர்தம் பொய்யுரைகளை விலக்கித் தூய்மையைத் தழுவி விளங்கும் ஒளி வடிவினனாய், உமையம்மையாருடன் நித்தம் மணாளனாக விளங்குவோனாய், எருக்கத்தம்புலியூரில் விளங்கிக் கொண்டிருக்கும் அறவடிவினனாகிய தலைவன் அடிகளை, நாம் அடைவோம்.

குறிப்புரை :

சுத்தி தரித்து - தூய்மையைப் பொருந்தி. அத்தன் - தலைவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

ஏரா ரெருக்கத்தம் புலியூ ருறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்
ஆரா வருந்தமிழ் மாலையிவை வல்லார்
பாரா ரவரேத்தப் பதிவா னுறைவாரே.

பொழிப்புரை :

அழகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் இறைவனை, சீர்மிகு காழிப்பதியில் தோன்றிய திருவார்சம்பந்தன் அருளிய சுவைகுன்றாத அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதுபவர்கள் உலகவர் ஏத்த வானகம் எய்துவர்.

குறிப்புரை :

ஏர் - எழுச்சி. ஆரா அருந்தமிழ் - உணர்ந்தது போதும் என்றமையாத மிக இனியதமிழ்.

பண் :

பாடல் எண் : 1

அரனை யுள்குவீர் , பிரம னூருளெம்
பரனையே மனம் , பரவி யுய்ம்மினே.

பொழிப்புரை :

சிவபிரானைச் சிந்தித்துப் போற்ற விரும்பும் அன்பர்களே, பிரமனூரில் விளங்கும் பரனையே மனத்தால் பரவிப் போற்றி உய்வீர்களாக.

குறிப்புரை :

சிவபெருமானைச் சிந்திப்பவர்களே, பிரமபுரத்தில் உள்ள பரமனைப் பரவி உய்யுங்கள் என்கின்றது.

பண் :

பாடல் எண் : 2

காண வுள்குவீர் , வேணு நற்புரத்
தாணு வின்கழல் , பேணி யுய்ம்மினே.

பொழிப்புரை :

சிவபிரானைக் கண்டு தொழஎண்ணும் அன்பர்களே, வேணுபுரத்தில் விளங்கும் தாணுவின் திருவடிகளைப் பேணி உய்வீர்களாக.

குறிப்புரை :

காண உள்குவீர் - தரிசிக்க எண்ணுபவர்களே. வேணுபுரம் - சீகாழி. தாணு - சிவபெருமான்.

பண் :

பாடல் எண் : 3

நாத னென்பிர்காள் , காத லொண்புகல்
ஆதி பாதமே , ஓதியுய்ம்மினே.

பொழிப்புரை :

சிவபெருமானை எம் தலைவன் எனக் கூறும் அன்பர்களே! அன்போடு ஒளி விளங்கும் புகலிப் பதியில் விளங்கும் ஆதியின் திருவடிப் பெருமைகளை ஓதி உய்வீர்களாக.

குறிப்புரை :

நாதன் என்பிர்காள் - என் தலைவன் என்பவர்களே. புகல் ஆதி - சீகாழியிலுள்ள முதல்வன்.

பண் :

பாடல் எண் : 4

அங்க மாதுசேர் , பங்க மாயவன்
வெங்குரு மன்னும் , எங்க ளீசனே.

பொழிப்புரை :

அருள் வழங்கும் குறிப்போடு உமையம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவன், வெங்குருவில் நிலையாக உள்ள எங்கள் ஈசன் ஆவான்.

குறிப்புரை :

அங்கம் - மேனி. பங்கம் - பாதி. வெங்குரு - சீகாழி.

பண் :

பாடல் எண் : 5

வாணி லாச்சடைத் , தோணி வண்புரத்
தாணி நற்பொனைக் , காணு மின்களே.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய, பிறைமதி பொருந்திய சடைமுடி உடையவனாய்த் தோணிபுரத்தில் விளங்கும் ஆணிப் பொன் போன்ற இறைவனைக் கண்டு தொழுவீர்களாக.

குறிப்புரை :

வாள் நிலாச் சடை - ஒளிபொருந்திய நிலாவை யணிந்த சடை. ஆணிநற்பொனை - மாற்றுயர்ந்த பொன்போன்றவனை. தோணிபுரம் - சீகாழி.

பண் :

பாடல் எண் : 6

பாந்த ளார்சடைப் , பூந்த ராய்மன்னும்
ஏந்து கொங்கையாள் , வேந்த னென்பரே.

பொழிப்புரை :

பாம்பு பொருந்திய சடைமுடியோடு பூந்தராயில் விளங்கும் பெருமானை, ஏந்திய தனபாரங்களை உடைய உமையம்மையின் கணவன் என்று கூறுவார்கள்.

குறிப்புரை :

பாந்தள் - பாம்பு. பூந்தராய் - சீகாழி.

பண் :

பாடல் எண் : 7

கரிய கண்டனைச் , சிரபு ரத்துளெம்
அரசை நாடொறும் , பரவி யுய்ம்மினே.

பொழிப்புரை :

கருமை பொருந்திய கண்டத்தை உடையவனாய்ச், சிரபுரத்துள் எழுந்தருளிய அரசனை நாள்தோறும் பரவி உய்வீர்களாக.

குறிப்புரை :

சிரபுரம் - சீகாழி.

பண் :

பாடல் எண் : 8

நறவ மார்பொழிற் , புறவ நற்பதி
இறைவ னாமமே , மறவ னெஞ்சமே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய சோலைகளை உடைய புறவமாகிய நல்ல ஊரில் எழுந்தருளிய இறைவன் திருநாமங்களை, நெஞ்சமே! நீ மறவாதே.

குறிப்புரை :

நறவம் - தேன். புறவநற்பதி - சீகாழி. மறவல் நெஞ்சமே எனப்பிரிக்க.

பண் :

பாடல் எண் : 9

தென்றி லரக்கனைக் , குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா , நின்று நினைமினே.

பொழிப்புரை :

தென் திசையிலுள்ள இலங்கை மன்னனாம் இராவணனாகிய அரக்கனைச் சண்பை மன்னனாகிய சிவபிரான் கயிலை மலையிடைப்படுத்து அன்று நெரித்த வரலாற்றை நின்று நினைத்துப் போற்றுவீர்களாக.

குறிப்புரை :

தென்றில் அரக்கன் - தென்திசையில் உள்ள அரக்கன். குன்றில் - கயிலைமலையில். சண்பை - சீகாழி. அன்று - கயிலையைத் தூக்கிய காலத்து. நெரித்தவா - இராவணனை நெரித்தவாற்றை.

பண் :

பாடல் எண் : 10

அயனு மாலுமாய் , முயலுங் காழியான்
பெயல்வை யெய்திநின் , றியலு முள்ளமே.

பொழிப்புரை :

பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி முயலும் பரம்பொருளாகிய சீகாழிப்பதியில் விளங்கும் இறைவனது கருணைப் பொழிவைச் சார்ந்து நின்று நினைக்கும் என் உள்ளம்.

குறிப்புரை :

முயலும் - தேடமுயற்சி செய்யும். காழி - சீகாழி.

பண் :

பாடல் எண் : 11

தேர ரமணரைச் , சேர்வில் கொச்சைமன்
நேரில் கழனினைந் , தோரு முள்ளமே.

பொழிப்புரை :

புத்தர் சமணர் ஆகியோரை அணுகாத, கொச்சை வயத்து மன்னனாகிய சிவபிரானின் ஒப்பற்ற திருவடிகளை நினைந்து தியானிக்கும் என் உள்ளம்.

குறிப்புரை :

கொச்சை - சீகாழி. நேரில் கழல் - ஒப்பற்ற திருவடி. ஓரும் - தியானிக்கும்.

பண் :

பாடல் எண் : 12

தொழும னத்தவர் , கழும லத்துறை
பழுதில் சம்பந்தன் , மொழிகள் பத்துமே.

பொழிப்புரை :

கழுமலத்தில் உறையும் குற்றமற்ற ஞானசம்பந்தன் அருளிய மொழிகளாகிய, இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி, பெருமானைத் தொழும் மனத்தவர் ஆகுக.

குறிப்புரை :

பழுது - குற்றம். கழுமலம் - சீகாழி.

பண் :

பாடல் எண் : 1

சித்தந் தெளிவீர்காள் , அத்த னாரூரைப்
பத்தி மலர்தூவ , முத்தி யாகுமே.

பொழிப்புரை :

சித்தம் மாசு நீங்கித் தெளிவடைய விரும்புகின்ற வர்களே, அனைவர்க்கும் தலைவனாய் ஆரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பக்தியோடு மலர் தூவி வாழ்த்துங்கள். சித்தத் தெளிவோடு முக்தி கிடைக்கும்.

குறிப்புரை :

திருவிருக்குக்குறள் என்பது, வீடு காதலிப்பவரால் விரும்பப்பெறும் பாடல். இரண்டு சீர்களான் யாக்கப்பெற்ற இருக்கு மந்திரம் போன்ற பாடல். வேதங்களுள் இருக்கு, மந்திரவடிவாக உள்ளது. அதுபோல இப்பதிகமும் மந்திரவடிவாக உள்ளது எனலும் ஆம். மந்திரம் சொற்சுருக்கமுடையது; எண்ணுவார் எண்ணத்தை ஈடேற்றவல்லது. அதுபோல இதுவும் அமைந்திருப்பது காண்க. அநாதியே ஆன்மாவைப்பற்றி நிற்கும் பாசத்தால் இருவினைக் கீடாகக் கருவயிற்பிண்டமாய் வளர்ந்து பிறந்து, பரிபாகமுற்ற வினைகள் துன்ப இன்பங்களையூட்டுகின்ற காலத்து வருந்தி மகிழ்ந்து, அலைகின்ற ஒழியாத் துன்பத்தினின்றும் உய்திவேண்டும் உத்தமர்களையழைத்து, அன்போடு மலர் தூவுங்கள்; கைகளால் தொழுங்கள்; எடுத்து வாழ்த்துங்கள்; உங்களுடைய பற்றறும், வினைகள் விண்டுபோம்; இன்பமுத்தி எய்தலாம் எனப் பயனும், வழியும் வகுப்பன இப்பத்துப்பாடல்களும். இம் முதற்பாட்டு முத்தி எய்தலாம் என்பதனைத் தெரிவித்து, அதற்கு உபாயம் உணர்த்துகின்றது. சித்தம் தெளிவீர்காள் - மலமறைப்பாற் கலக்குண்ட சித்தந் தெளியவிரும்புபவர்களே. அத்தன் - அனைவர்க்குந் தலைவன். தியாகேசப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆரூரைப் பத்தியோடு மலர் தூவி வழிபடுங்கள் முத்தியாகும் என்பது போந்தபொருள். தெளிவீர்காள் என்று எதிர்காலத்தாற் கூறியது மலர் தூவல் முதலிய கிரியைத் தொண்டுகள் சித்தந்தெளிதற்கு ஏதுவென்பது தெரித்தற்கு; `கிரியையென மருவும் யாவையும் ஞானங் கிடைத்தற்கு நிமித்தம்` என்பது ஞானசாத்திரமாகலின். மலர்தூவ என்றது இறைவனும், ஞானாசாரியனும் எழுந்தருளியுள்ள இடங்களை மலர்தூவி வழிபடல் மரபு என்பதை விளக்கி நிற்கின்றது. முத்தியாகும் என முத்தியை வினை முதலாகக் கூறியருளியது திருவருட்பதிவு உற்றகாலத்துத் தாமே வந்தெய்துவதோர் சிவானந்தமாதலின்.

பண் :

பாடல் எண் : 2

பிறவி யறுப்பீர்காள் , அறவ னாரூரை
மறவா தேத்துமின் , துறவி யாகுமே.

பொழிப்புரை :

பிறப்பினை அறுத்துக் கொள்ள விரும்புபவர்களே, அறவடிவினனாகத் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை மறவாது ஏத்துங்கள் பிறப்பிற்குக் காரணமான ஆசைகள் நீங்கித் துறவு நிலை எய்தலாம்.

குறிப்புரை :

முத்தியாதற்குப் பிறவி இடையூறாதலின் அப்பிறப்பு, பாவத்தைப் பற்றி வருவதொன்றாதலின், பாவமோ பற்றுள்ளங்காரணமாக எழுவதாகலின், காரியமாகிய பிறப்பினையறுக்க விரும்புவார்க்குத் துறவியாதலே சிறந்த உபாயம் என்பதை உணர்த்துகின்றது இப்பாட்டு. அறவன் - தருமவடிவன். மறவாது ஏத்துமின் - நினைப்பின்றி நினைத்து வழிபடுங்கள். நெஞ்சொடு படாத செயலும் உண்டன்றே! அங்ஙனன்றிப் புத்திபூர்வமாக வழிபடுங்கள். துறவியாகும் - பிறவிக்கு ஏதுவாகிய பற்றுள்ளங்கழியும் என்பதாம். மறங்கடிய அறவனாலன்றியாகாது என்பது உணரக்கிடக்கின்றது. துறவி - துறவு. வி, தொழில் விகுதி.

பண் :

பாடல் எண் : 3

துன்பந் துடைப்பீர்காள் , அன்ப னணியாரூர்
நன்பொன் மலர்தூவ , இன்ப மாகுமே.

பொழிப்புரை :

துன்பங்களைத் துடைத்துக் கொள்ள விரும்பு கின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அன்பு வடிவான இறைவனை நல்ல பொலிவுடைய மலர்களைத்தூவி வழிபடுங்கள். துன்பம் நீங்குவதோடு இன்பம் உளதாம்.

குறிப்புரை :

பிறந்தார் உறுவது பெருகிய துன்பமாதலின் அதனைத் துடைக்க வேண்டும் என்பதும், அதற்கு உபாயம் மலர் தூவலே என்பதும் உணர்த்துகின்றது இப்பாடல். அன்பன் - சிவன். அன்பனணி யாரூர் - அன்பனால் அழகு பெறும் ஆரூர். பொன்மலர்தூவ என்பது செம்பொன்னும் வெண்பொன்னுமாகிய இரண்டாலும் பூக்கள் செய்து அவற்றை முல்லைமலரோடு கலந்து தூவுதல் மரபு. இன்பம் ஆகும் - துன்பநீக்கத்திற்குத் தொழுத உங்கட்கு இன்பமும் ஆகும் என்பதாம். இன்பம் என்றது இம்மையின்பத்தையும் நிரதிசயா நந்தப் பேரின்பத்தையும்.

பண் :

பாடல் எண் : 4

உய்ய லுறுவீர்காள் , ஐய னாரூரைக்
கையி னாற்றொழ , நையும் வினைதானே.

பொழிப்புரை :

உலக வாழ்க்கையிலிருந்து கடைத்தேற விரும்பு கின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய தலைவனாகிய இறைவனைக் கைகளைக் கூப்பி வணங்குங்கள். உங்கள் வினைகள் மெலிவடையும். உய்தி பெறலாம்.

குறிப்புரை :

இப்பாடல், துன்பந்துடைத்து உய்தியை விரும்புவீரா யின் கைகளால் தொழுங்கள் என்றருளிச் செய்கின்றது. ஐயன் - தலைவன். வினை தானே நையும் என்றது தொழுவாரிடம் இருப்புக்கொள்ள இடமின்மையால் வல்வினைகள் மெலிந்துபோம் என்பதாம். வினை உண்டாலன்றிக் கழியாதாகலின் நையும் என்றார்.

பண் :

பாடல் எண் : 5

பிண்ட மறுப்பீர்காள் , அண்ட னாரூரைக்
கண்டு மலர்தூவ , விண்டு வினைபோமே.

பொழிப்புரை :

மீண்டும் பிறவா நிலையைப் பெற விரும்பு கின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய அனைத்துலக நாயகனாகிய இறைவனைச் சென்று கண்டு மலர் தூவி வழிபடுங்கள். பிறப்புக்குக் காரணமான வினைகள் விண்டுபோம். பிறவாநிலை எய்தலாம்.

குறிப்புரை :

கீழைத்திருப்பாட்டு பிராரத்தவினை நைந்துபோம் என்றது; இத்திருப்பாட்டு வரக்கடவ வினைகளும் விண்டுபோம் என்கின்றது. பிண்டம் - கருவில் உறுப்பு நிரம்பாதிருக்கும் தசைத்திரள். `சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்` என்பது புறநானூறு. பிண்டம் அறுப்பீர்காள் - மீண்டும் விளையும் கருவிடைப் பிண்ட நிலையை அறுப்பவர்களே! அண்டன் ஆரூர் என்றது தேவலோகத்தில் எழுந்தருளியிருந்ததை மனங்கொண்டு கூறியது. அண்டன் - தேவன். வினை விண்டுபோம் - வினைகள் மீண்டும் அங்குரியாதவாறு கெடும். நெல் வாய்விண்டது என்பதுபோல.

பண் :

பாடல் எண் : 6

பாச மறுப்பீர்காள் , ஈச னணியாரூர்
வாச மலர்தூவ நேச மாகுமே.

பொழிப்புரை :

உயிரோடு பிணைந்துள்ள பாசம் அகல வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளியுள்ள ஈசனை மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடுங்கள். உம்பால் அவனது நேசம் உளதாகும். பாசம் அகலும்.

குறிப்புரை :

கீழைத்திருப்பாட்டு வினை நீக்கங் கூறியது. அவ்வினையோடு ஒருங்கு எண்ணப் பெறுவதாய், அநாதியே பந்தித்துள்ள பாசமுங்கெடும்; இறைவன் நேசமாகும் என்று சொல்கிறது இப்பாட்டு. பாசம் - ஆணவம். கட்டி நிற்பதாகலின் அதனையறுக்கவேண்டு மாயிற்று. ஆன்ம அறிவைப் பந்தித்து அடக்கி நிற்றலின் பாசம் எனப்பெற்றது. நேசமாகுமே என்பதையுற்று நோக்குகின்ற எம்போலியர்க்கு, பாசமறுத்த நம்பியாரூரர்க்குத் தோழரானதுபோல நமக்கும் நேசமாவர் என்ற நினைப்பு உண்டாகும். அன்பு முதிரும் என்றுமாம்.

பண் :

பாடல் எண் : 7

வெய்ய வினைதீர , ஐய னணியாரூர்
செய்ய மலர்தூவ , வைய முமதாமே.

பொழிப்புரை :

கொடிய வினைகள் தீர வேண்டுமென விரும்பு கின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அனைத்துயிர்க்கும் தலைவனாகிய இறைவனைச் செம்மையான மலர்களைத்தூவி வழிபடுங்கள். உலகம் உம்முடையதாகும்.

குறிப்புரை :

இருவகை வினையும் தீரவேண்டும் என்றும், தீர்ந்தால் உலகமுழுதும் உடைமையாம் என்றும் உணர்த்துகிறது இப்பாடல். வெய்ய வினை - விரும்பத்தக்க நல்வினையும் கொடிய தீவினையும். இரண்டும் பொன்விலங்கும் இருப்பு விலங்கும் போலத் தளைத்து நிற்பவாகலின் நல்வினையும் தீரவேண்டுவதாயிற்று. செய்ய மலர் - சிவந்த மலர். வையம் உமதாம் - எலிமாவலியாகி வையமுழுதாண்டாற்போல உமதாம் என்பதாம். விளி முதற்பாட்டிலிருந்து கொள்ளப் பெறும்.

பண் :

பாடல் எண் : 8

அரக்க னாண்மையை , நெருக்கி னானாரூர்
கரத்தி னாற்றொழத் , திருத்த மாகுமே.

பொழிப்புரை :

அரக்கர் தலைவனாகிய இராவணனின் ஆற்றலைக் கால்விரல் ஒன்றால் நெருக்கி அடர்த்து அழித்து ஆரூரில் எழுந்தருளிய இறைவனைக் கைகளால் தொழுவீர்களாக. உமது மனக்கோணல் நீங்கும், திருத்தம் பெறலாம்.

குறிப்புரை :

செய்யமலர் தூவி வையந்தமதாய காலத்து உண்டாகிய தருக்கையும் களைந்து திருத்தம் நல்குவர் தியாகேசராதலின் அவர்தலத்தைக் கையினாற்றொழ வேண்டும் என்கின்றது இப்பாடல். அரக்கன் - சிவபூசையை விதிமுறையியற்றி ஆட்சியும் படையும் பெற்ற இராவணன். ஆண்மை - திருவருட்பதிவு இன்மையால் தன்முனைப்பால் எழுந்த வன்மை. நெருக்கினான் - அடர்த்தவன். திருத்தம் - தூய்மை. திருத்தமாகும் - கோணல் நீங்கும் என்றுமாம். அரக்கன் தருக்கழித்த இறைவனது ஆரூர் தொழத்திருத்தமாம் என்க.

பண் :

பாடல் எண் : 9

துள்ளு மிருவர்க்கும் , வள்ள லாரூரை
உள்ளு மவர்தம்மேல் , விள்ளும் வினைதானே.

பொழிப்புரை :

செருக்குற்றுத் துள்ளிய திருமால் பிரமரின் செருக்கு அடக்கி அருள்செய்த, ஆரூரில் எழுந்தருளிய வள்ளற் பெருமானை மனத்தால் நினைத்து வழிபட வல்லவர்களின் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

அருள்பெற்றுச் சிறிது திருந்திப் பதவிகளின் நிற்பாரும், பதவிமோகத்தான் மயங்குவாராயினும், அவர்கள் மிகைநோக்காதே, அதுதான் ஆன்மவியல்பு என்று திருவுளங்கொண்டு அருள்செய்யும் கருணையாளன் எழுந்தருளியுள்ள ஆரூரை நினைக்க வேண்டும் என்றும், நினைத்தால் ஆகாமிய சஞ்சித வினைகள் அழியும் என்றும் அறிவிக்கின்றது இப்பாடல். துள்ளும் இருவர் - அதிகாரம்பெற்ற சகலான்மாக்களாதலின் மலமுனைப்பால் தாம் பெரியர் எனத் துள்ளுகின்ற பிரம விஷ்ணுக்கள். வள்ளல் - அவர்களுடைய மிகுதி கண்டும் நகையாது வழங்குபவர். உள்ளுதல் - தியானித்தல். மேல் வினை விள்ளும் எனவும் கூட்டலாம்.

பண் :

பாடல் எண் : 10

கடுக்கொள் சீவரை , அடக்கி னானாரூர்
எடுத்து வாழ்த்துவார் , விடுப்பர் வேட்கையே.

பொழிப்புரை :

கடுக்காயைத் தின்று துவர் ஆடை போர்த்துத் திரியும் சமண புத்தர்களை அடக்கியவனாகிய ஆரூர் இறைவனே பரம்பொருள் எனச் சிறப்பித்து வாழ்த்துவார், வேட்கை என்னும் ஆசையை விடுப்பர்.

குறிப்புரை :

அதிகாரமலத்தான் துள்ளுவாரையும் ஆட்கொள்ளும் இறைவன், ஏனைய விஷத்தன்மை பொருந்திய ஆன்மாக்களையும் அடக்கியாளுவர் என்ற கருணையின் மேன்மையைக் காட்டுகின்றது இச்செய்யுள். கடுக்கொள் சீவர் - கடுப்பொடியைக் கொள்ளும் சமணராகிய ஆன்மாக்கள். அடக்கினார் - அத்தன்மை கெடுமாறு அடக்கியவர். எடுத்து வாழ்த்துவார் - உள்ளத்துட்கிடந்த உணர்ச்சி வெள்ளம் உரையிறந்து வருதலின் கேட்டாரும் தம்போலுய்ய உரக்க வாழ்த்துபவர். வேட்கை விடுப்பர் - உரையினைச் செவிகேட்க, கேட்டதனைச் சித்தம் தியானிக்க, அதனால் மனம் ஒடுங்குதலின் பற்றுள்ளத்தைவிடுவர் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 11

சீரூர் சம்பந்தன் , ஆரூ ரைச்சொன்ன
பாரூர் பாடலார் , பேரா ரின்பமே.

பொழிப்புரை :

சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் ஆரூர் இறைவன்மீது பாடிய உலகம் முழுதும் பரவிய பாடல்களைப் பாடி வழிபட வல்லவர் இன்பத்தினின்று நீங்கார்.

குறிப்புரை :

முத்தியாகுமே என முதற்பாட்டில் அருளியவர்கள் அதற்கிடையூறான பிறவிவினை பாசம் இவைகளையும், இவைகளை நீக்கும் உபாயங்களையும், நீங்கியார் எய்தும் பயனையும் முறையே கூறினார்கள். இத்தகைய பாடல்கள் பத்தையும் பயில்வாரும் அத்தகைய இன்பத்தை எய்துவர்; பேரார்; நிலையாவரெனத் திருக்கடைக்காப்புச் செய்தருள்கின்றார்கள். சீர் ஊர் - சீகாழி. பாரூர் பாடல் - உலகமுழுதும் பரவிப் பண்படுத்தும் பாடல். இன்பம் பேரார் - பெற்ற இன்பத்தினின்றும் மீளார். பேராவின்பப் பெருவாழ்வெய்துவர் என்பதாம். கீழ்ப்பாடல்களும் ஆரூரை மலர்தூவ அடையும் பயனை ஐந்துபாடல்களும், தொழுவார் எய்தும் பயனை இரண்டு பாடல்களும், வாழ்த்துவார் எய்தும் பயனை இரண்டு பாடல்களும், பாடற்பயனை ஒருபாடலும் உணர்த்துகின்றன.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே.

பொழிப்புரை :

குற்றம் அற்ற வீழிமிழலையில் எழுந்தருளியுள்ள இறைவரே, அடியேனுக்கு வழங்கியருளும் காசில் உள்ள உயர்வு தாழ்வு நீங்குமாறு செய்து அக்காசினை நல்குக. அதனால் உமக்குப் பழிப்பு இல்லை.

குறிப்புரை :

வாசி - உயர்வு தாழ்வு. (வட்டமாகக் கழிக்கும் பணம்.) மாசு - குற்றம். ஏசல் - நிந்தனை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே.

பொழிப்புரை :

எல்லோருக்கும் இறைவராக விளங்கும் பெரு மானீரே, வேதங்களின் ஒலி நிறைந்த திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, கறை படிந்ததாக அளிக்கப்படும் காசில் உள்ள அக்கறையை நீக்கி முறையாக அளித்தருளுக.

குறிப்புரை :

இறைவர் ஆயினீர் என இயற்கையே இறைவரை, ஆயினீர் என ஆக்கம்கொடுத்துக் கூறினார், முறைப்படி வேற்றுமையறக் கொடுக்காமையால். கறைகொள் காசு - அழுக்குப் படிந்த காசு; நாள்படச் சேமித்துவைத்த காசு என்பது கருத்து.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர் உய்ய நல்குமே.

பொழிப்புரை :

சிவந்த திருமேனியை உடையவரே, மெய்ம்மை யாளர் வாழும் திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, படம் எடுக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டுள்ளவரே, அடியேங்கள் உய்யுமாறு வாசியில்லாததாகக் காசு அருளுக.

குறிப்புரை :

மெய் - உண்மைத்தன்மை. பை - படம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

நீறு பூசினீர் ஏற தேறினீர்
கூறு மிழலையீர் பேறு மருளுமே.

பொழிப்புரை :

திருவெண்ணீற்றை அணிந்தவரே, ஆனேற்றில் ஏறி வருபவரே, பலராலும் புகழப்பெறும் திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, காசு அருளுவதோடு எமக்கு முத்திப்பேறும் அருளுவீராக.

குறிப்புரை :

பேறும் அருளும் - காசுகொடுத்ததோடமையோம்; வீடுபேற்றையும் கொடும் என்பதாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

காமன் வேவவோர் தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே.

பொழிப்புரை :

காமனை எரிந்து அழியுமாறு செய்தபுகை பொருந்திய அழல் விழியை உடையவரே! புகழ் பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே! எமக்குச் சேமத்தை அருளுவீராக.

குறிப்புரை :

தூமக்கண் - புகையோடுகூடிய தீக்கண். நாமம் - புகழ். சேமம் - பாதுகாவல். கே?ஷமம் என்பதன் திரிபுமாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர்
அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே.

பொழிப்புரை :

கட்டப்பட்ட சடையை உடையவரே, நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே, அழகு பொருந்திய திருவீழி மிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எம்மைப் பணி கொண்டு அருளுவீராக.

குறிப்புரை :

பிணிகொள்சடையினீர் - கட்டிய சடையையுடைய வரே. மணி - நீலமணி. பணி - ஏவல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, உயர்வுடைய திருவீழிமிழலையில் உறைபவரே, கங்கை சூடிய திருமுடியை உடையவரே, எங்களது ஐயுறவைப் போக்கியருளுக.

குறிப்புரை :

பங்கு - ஒருபகுதி. துங்கம் - உயர்வு. சங்கை - சந்தேகம். தேவரீரிடம் வேற்றுமை சிறிதும் இல்லையாகவும் நாங்கள் சந்தேகிக்கிறோம்; வாசிதீர அளித்து அதனைப்போக்கியருளும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

அரக்க னெரிதர இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே.

பொழிப்புரை :

இராவணன் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரிய இரக்கம் காட்டியருளியவரே, எங்கும் பரவிய புகழ் உடைய திருவீழிமிழலையில் உறைபவரே, எமக்கு அளிக்கும் காசில் உள்ள குறையைப் போக்கியருளுக.

குறிப்புரை :

அரக்கன் - இராவணன். பரக்கும் - எங்கும் புகழ் பரவிய. கரக்கை - வஞ்சகம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனு மருளுமே.

பொழிப்புரை :

நான்முகனும் திருமாலும் அடிமுடி காண முயலும் பேருருவம் கொண்டருளியவரே, எல்லோரும் எளிதில் வழிபட இயலுமாறு திருவீழிமிழலையில் எழுந்தருளியவரே, எமக்கு வீட்டின் பத்தையும் அருளுவீராக.

குறிப்புரை :

பயன் - வீட்டின்பம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே.

பொழிப்புரை :

ஒன்றொன்றாக மயிர் பறித்த தலையினை உடைய சமணர்கள் அறிய வேண்டுபவராகிய உம்மை அறியாது வாழ்கின்றனர். மணம் கமழும் திருவீழிமிழலையில் உறைபவரே, அடியேங்கள் உம்மைப் பிரிந்து வாழ்தல் இயலாது.

குறிப்புரை :

பறிகொள்தலையினார் - மயிர்பறித்த தலையை யுடைய சமணர். அறிவது அறியவேண்டிய உண்மை ஞானங்களை. வெறி - மணம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழு மொழிகளே.

பொழிப்புரை :

இத்திருப்பதிகம் சீகாழிப்பதியாகிய பெரிய நகருள் தோன்றி வாழும் ஞானசம்பந்தன் திருவீழிமிழலை இறைவர் மேல் தாழ்ந்து பணிந்து போற்றிய மொழிகளைக் கொண்டதாகும்.

குறிப்புரை :

வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே வல்லார் எல்லா நன்மையும் எய்துவர் எனச் செயப்படுபொருளும், வினையும் வருவித்து முடிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
நன்று மேத்துவீர்க் கென்று மின்பமே.

பொழிப்புரை :

இன்றே திருமுதுகுன்றம் சென்று, அங்குள்ள இறை வரை மலரால் அருச்சித்து நின்று நல்லமுறையில் துதிப்பீராயின் உமக்கு எக்காலத்தும் இன்பம் உளதாம்.

குறிப்புரை :

இன்றைக்கே முதுகுன்றை மலர்தூவி ஏத்தும் உங்க ளுக்கு என்றைக்கும் இன்பமாம் என்கின்றது. ஒருநாள் வழிபாட்டிற்கு நிலைத்த இன்பம் வரும் என்கின்றது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

அத்தன் முதுகுன்றைப் பத்தி யாகிநீர்
நித்த மேத்துவீர்க் குய்த்தல் செல்வமே.

பொழிப்புரை :

நீர் திருமுதுகுன்றத்துத் தலைவனாய் விளங்கும் இறைவன்மீது பக்தி செலுத்தி நாள்தோறும் வழிபட்டு வருவீராயின் உமக்குச் செல்வம் பெருகும்.

குறிப்புரை :

உய்த்தல் செல்வமே - பொருந்துதல் செல்வமே யாகும் என்றது பொருள் பெருகும் என்பதாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

ஐயன் முதுகுன்றைப் பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர் வைய முமதாமே.

பொழிப்புரை :

திருமுதுகுன்றத்துள் விளங்கும் தலைவனாகிய சிவபிரானை நீர் பலவகையான பொய்கள் இன்றி மெய்மையோடு நின்று கைகளைக் கூப்பி வழிபடுவீர்களாயின் உலகம் உம்முடையதாகும்.

குறிப்புரை :

ஐயன் - தலைவன். பொய்யில்லாதவருக்கு உலகமே உரிமையாம் என்பதை விளக்கியவாறு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

ஈசன் முதுகுன்றை நேச மாகிநீர்
வாச மலர்தூவப் பாச வினைபோமே.

பொழிப்புரை :

திருமுதுகுன்றத்து ஈசனை நீர் அன்போடு மணம் பொருந்திய மலர்களால் அருச்சித்துவரின் உம் பாசங்களும் அவற்றால் விளைந்த வினைகளும் நீங்கும்.

குறிப்புரை :

நேசமாகி - அன்பாகி. பாசவினை - பாசமும் வினை யும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

மணியார் முதுகுன்றைப் பணிவா ரவர்கண்டீர்
பிணியா யினகெட்டுத் தணிவா ருலகிலே.

பொழிப்புரை :

அழகிய திருமுதுகுன்றத்து இறைவரைப் பணிபவர் கள், பிணிகளிலிருந்து விடுபட்டு உலகில் அமைதியோடு வாழ்வார்கள்.

குறிப்புரை :

மணி - அழகு, முத்துமாம். தணிவார் - அமைதி உறுவார்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

மொய்யார் முதுகுன்றில் ஐயா வெனவல்லார்
பொய்யா ரிரவோர்க்குச் செய்யா ளணியாளே.

பொழிப்புரை :

அன்பர்கள் நெருங்கித் திரண்டுள்ள திருமுதுகுன்றத்து இறைவனை, நீர், ஐயா என அன்போடு அழைத்துத் துதிக்க வல்லீர்களாயின் இரப்பவர்க்கு இல்லை என்னாத நிலையில் திருமகள் நிறை செல்வத்தோடு உமக்கு அணியள் ஆவாள்.

குறிப்புரை :

மொய் - நெருக்கம். ஐயா! எனத் தோத்திரிக்க வல்ல வராய் இரவலர்க்கு இல்லை என்று பொய்யும் சொல்லாதவர்களுக்குச் செய்யவள் அணியள் ஆவாள் என்றவாறு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

விடையான் முதுகுன்றை இடையா தேத்துவார்
படையா யினசூழ உடையா ருலகமே.

பொழிப்புரை :

திருமுதுகுன்றத்து விடை ஊர்தியை உடைய சிவ பிரானை இடையீடுபடாது ஏத்துகின்றவர், படைகள் பல சூழ உலகத்தை ஆட்சிசெய்யும் உயர்வை உடையவராவர்.

குறிப்புரை :

இடையாது - இடையீடுபடாது. உலகம் உடையார் - சக்கரவர்த்தியாவர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

பத்துத் தலையோனைக் கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே.

பொழிப்புரை :

பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் கதறி அழுமாறு கால்விரலை ஊன்றி அடர்த்த திருமுதுகுன்றத்துத் தலைவனாகிய சிவபிரானை நெருங்கிச் சென்று பணிவீராக.

குறிப்புரை :

மொய்த்து - நெருங்கி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

இருவ ரறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே.

பொழிப்புரை :

திருமால் பிரமர்களாகிய இருவரும் அறியவொண் ணாத திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானை மனம் உருகி நினைப்பவர் பெருக்கத்தோடு வாழ்வர்.

குறிப்புரை :

இருவர் - அயனும் மாலும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

தேர ரமணரும் சேரும் வகையில்லான்
நேரில் முதுகுன்றை நீர்நின் றுள்குமே.

பொழிப்புரை :

புத்தர் சமணர் ஆகியோர்க்குத் தன்னை வந்தடையும் புண்ணியத்தை அளிக்காத சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற திருமுதுகுன்றத்தை அங்‌கு நின்று நீவீர் நினைந்து தியானிப்பீராக.

குறிப்புரை :

உள்கும் - தியானியுங்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்று முரைவல்லார் என்று முயர்வோரே.

பொழிப்புரை :

திருமுதுகுன்றம் சென்று நின்று பெருமை உடை யவனாகிய ஞானசம்பந்தன் ஒன்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் எக்காலத்தும் உயர்வு பெறுவர்.

குறிப்புரை :

ஒன்றும் உரை - அவன் தான் என வேறின்றி ஒன்றிய உரை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

நீல மாமிடற் றால வாயிலான்
பால தாயினார் ஞால மாள்வரே.

பொழிப்புரை :

நீலநிறம் பொருந்திய கண்டத்தினை உடைய திரு ஆலவாய் இறைவனைச் சென்று தொழுது மனத்தால் அவன் அருகில் இருப்பதாக உணர்பவர்கள், இவ்வுலகை ஆள்வர்.

குறிப்புரை :

பாலது ஆயினார் - சாமீப்யம் அடைந்தவர்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

ஞால மேழுமாம் ஆல வாயிலார்
சீல மேசொலீர் காலன் வீடவே.

பொழிப்புரை :

எமபயம் இன்றி வாழ, ஏழுலகங்களிலும் எழுந்தருளியிருக்கும் ஆலவாய் இறைவனது மெய்ப்புகழையே உரையால் போற்றி வருவீர்களாக.

குறிப்புரை :

ஞாலம் ஏழுமாம் ஆலவாயில் - உலகேழும் உளதா தற்குக் காரணமாகிய துவாதசாந்தப் பெருவெளியாகிய ஆலவாயில். சீலம் - குணங்கள். வீட - அழிய.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

ஆல நீழலார் ஆல வாயிலார்
கால காலனார் பால தாமினே.

பொழிப்புரை :

கல்லால மரநிழலில் வீற்றிருப்பவரும், காலனுக்குக் காலனாய் அவனை அழித்தருளிய பெருவீரரும் ஆகிய ஆலவாய் இறைவரை மனத்தால் அணுகியிருப்பீர்களாக.

குறிப்புரை :

ஆலநீழலார் - வடவால விருட்சத்தின் நிழலில் இருப்பவர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

அந்த மில்புகழ் எந்தை யாலவாய்
பந்தி யார்கழல் சிந்தை செய்ம்மினே.

பொழிப்புரை :

ஆலவாய்க் கோயிலிலுள்ள எந்தையாகிய சிவ பெருமானுடைய அழிவில்லாத புகழுக்கு இருப்பிடமான திருவடிகளை மனங்கொள்ளுங்கள்.

குறிப்புரை :

அந்தமில்புகழ் - எல்லையற்ற புகழ். பந்தியார் - இட மாகக்கொண்டவர்; பாசங்களால் கட்டுண்ணாதவர் என்றுமாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

ஆட லேற்றினான் கூட லாலவாய்
பாடி யேமனம் நாடி வாழ்மினே.

பொழிப்புரை :

வெற்றியோடு கூடிய ஆனேற்றினானது நான்மாடக்கூடல் என்னும் ஆலவாயின் புகழைப் பாடி மனத்தால் அவ்விறைவனையே நாடி வாழ்வீர்களாக.

குறிப்புரை :

ஆடல் ஏறு - வெற்றியோடு கூடிய இடபம். நாடி - விரும்பி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

அண்ண லாலவாய் நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத் திண்ண மின்பமே.

பொழிப்புரை :

தலைமையாளனும் ஆலவாய் என்னும் மதுரைப் பதியின் கோயிலைப் பொருந்தியிருப்பவனுமாகிய சோமசுந்தரப் பெருமானையே எண்ணித் தொழுதுவரின் இன்பம் பெறுவது திண்ணமாகும்.

குறிப்புரை :

எண்ணி - தியானித்து. திண்ணம் - உறுதி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

அம்பொ னாலவாய் நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே.

பொழிப்புரை :

அழகிய பொன்மயமான ஆலவாய்த் திருக்கோயிலில் விளங்கும் இறைவனுடைய திருவடிகளே நமக்குச் சார்வாகும் என நம்பி வாழ்பவரின் துன்பம் நீங்கும்.

குறிப்புரை :

நம்பனார் கழல் நம்பி - இதுவே எமக்கு இம்மையும் மறுமையும் இன்பமும் வீடும் என்று உறுதி கொண்டு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

அரக்க னார்வலி நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க் கிரக்க முண்மையே.

பொழிப்புரை :

அரக்கனாகிய பெருவலிபடைத்த இராவணனைக் கால் விரலால் நெரித்தருளிய ஆலவாய் அரன் புகழை உரைக்கும் உள்ளத்தார்க்கு அவனது கருணை உளதாகும்.

குறிப்புரை :

நெருக்கன் - நெருக்கியவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

அருவ னாலவாய் மருவி னான்றனை
இருவ ரேத்தநின் றுருவ மோங்குமே.

பொழிப்புரை :

அருவனாய் விளங்கும் இறைவன் திருவாலவாயில் திருமால் பிரமர் ஆகிய இருவர் போற்றும் உருவனாய் மருவி ஓங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

அருவன் - அருவமானவன். இருவர் - அயனும் மாலும்

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

ஆர நாகமாம் சீர னாலவாய்த்
தேர மண்செற்ற வீர னென்பரே.

பொழிப்புரை :

பாம்பாகிய ஆரத்தை அணிந்தவனாய், ஆலவாயில் பெரும் புகழாளனாய் விளங்கும் இறைவன், புத்தரையும் சமணரையும் அழித்த பெருவீரன் ஆவான் என்று அடியவர்கள் அவனைப் புகழ்ந்து போற்றுவார்கள்.

குறிப்புரை :

ஆரம் - மாலை. சீரன் - புகழுடையவன். தேரர் - புத்தர். அமண் - அமணர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

அடிக ளாலவாய்ப் படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ் செடிக ணீக்குமே.

பொழிப்புரை :

ஆலவாயில் எழுந்தருளிய அடிகளாகிய இறைவனது திருவருளில் தோய்ந்த ஞானசம்பந்தனின் அழிவற்ற இனிய இத்தமிழ் மாலை நமக்கு வரும் வினைகளைப் போக்குவதாகும்.

குறிப்புரை :

செடிகள் - வினைகள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

தோடொர் காதினன் பாடு மறையினன்
காடு பேணிநின் றாடு மருதனே.

பொழிப்புரை :

திருவிடைமருதூர் இறைவன் தோட்டை, இடத் திருச்செவியில் அணிந்தவனாய் நான்கு வேதங்களைப் பாடுபவனாய், சுடுகாட்டை விரும்பி அதன்கண் நின்று ஆடுகின்றவனாவான்.

குறிப்புரை :

பேணி - விரும்பி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

கருதார் புரமெய்வர் எருதே யினிதூர்வர்
மருதே யிடமாகும் விருதாம் வினைதீர்ப்பே.

பொழிப்புரை :

தம்மைக் கருதாதவராகிய அசுரர்களின் முப்புரங்களை எய்து அழித்தவரும், எருதை வாகனமாகக் கொண்டு இனிதாக ஊர்பவரும் ஆகிய இறைவர்க்குத் திருவிடை மருதூரே விரும்பி உறையும் இடமாகும். அவரைத் தொழுதால் புகழ் சேரும். வினைகள் தீர் தலை உடையனவாகும்.

குறிப்புரை :

கருதார் - பகைவர். விருது ஆம் - பெருமை உளதாம். வினை தீர்ப்பு ஆம் - வினைகள் தீர்தலை உடையனவாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

எண்ணு மடியார்கள் அண்ணன் மருதரைப்
பண்ணின் மொழிசொல்ல விண்ணுந் தமதாமே.

பொழிப்புரை :

மனத்தால் எண்ணி வழிபடும் அன்பர்கள் தலைமையாளராய் விளங்கும் மருதவாணரைப் பண்ணிசையோடு அவர்தம் புகழைப் போற்ற, விண்ணுலகமும் அவர்கள் வசமாகும்.

குறிப்புரை :

அண்ணல் - பெருமையிற் சிறந்தவர். பண்ணின் மொழி - தோத்திரங்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

விரியார் சடைமேனி எரியார் மருதரைத்
தரியா தேத்துவார் பெரியா ருலகிலே.

பொழிப்புரை :

விரிந்த சடைமுடியை உடையவரும், எரிபோன்ற சிவந்த மேனியருமாகிய மருதவாணரைத் தாமதியாது துதிப்பவர் உலகில் பெரியவர் எனப்போற்றப்படுவர்.

குறிப்புரை :

எரி - மழு. தரியாது - தாமதியாது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

பந்த விடையேறும் எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே.

பொழிப்புரை :

கட்டுத்தறியில் கட்டத்தக்க விடையை ஊர்ந்து வரும் எந்தையாராகிய மருதவாணரை மனத்தால் தியானிப்பவர்கள் அறிவால் மேம்பட்டவராவர்.

குறிப்புரை :

பந்தவிடை - கட்டோடு கூடிய இடபம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

கழலுஞ் சிலம்பார்க்கும் எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க் குழலும் வினைபோமே

பொழிப்புரை :

ஒரு காலில் கழலும் , பிறிதொரு காலில் சிலம்பும் ஒலிக்கும் உமைபாகராகிய அழகிய மருதவாணரை விரும்பித் தொழு வதை நியமமாகக் கொண்டவர்க்கு வருத்துதற்கு உரிய வினைகள் துன் புறுத்தா ; அகலும் .

குறிப்புரை :

கழலும் சிலம்பும் ஆர்க்கும் - ஒருகால் கழலும் , ஒருகால் சிலம்பும் ஒலிக்கும் . உழலும் வினை - வருத்தும் வினைகள் .

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

பிறையார் சடையண்ணல் மறையார் மருதரை
நிறையால் நினைபவர் குறையா ரின்பமே.

பொழிப்புரை :

பிறை பொருந்திய சடைமுடியினை உடைய தலை மையாளரான வேதங்களை அருளிய மருதவாணரை நிறைந்த மனத்தால் நினைப்பவர் இன்பம் குறையப் பெறார்.

குறிப்புரை :

நிறையால் - நிறைவோடு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

எடுத்தான் புயந்தன்னை அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட விடுத்தார் வேட்கையே.

பொழிப்புரை :

கயிலை மலையை எடுத்த இராவணனின் தோள் களை நெரித்த மருதவாணருக்குச் சூட்டுவதற்கு மலர் தொடுத்தவர்கள், பிறவிக்குக் காரணமான ஆசையை விடுத்தவர்களாவர்.

குறிப்புரை :

எடுத்தான் - கைலையைத் தூக்கிய இராவணன், வேட் கை - பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

இருவர்க் கெரியாய உருவ மருதரைப்
பரவி யேத்துவார் மருவி வாழ்வரே.

பொழிப்புரை :

திருமால் பிரமர் அடிமுடி அறிய முடியாதவாறு எரி உருவமாய் நின்ற மருதவாணரைப் புகழ்ந்து ஏத்தித் துதிப்பவர் எல்லா நலன்களோடும் மருவி வாழும் வாழ்க்கையைப் பெறுவர்.

குறிப்புரை :

இருவர்க்கு - அயனுக்கும் மாலுக்கும். மருவி - எல்லா வற்றொடும் பொருந்தி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

நின்றுண் சமண்தேரர் என்று மருதரை
அன்றி யுரைசொல்ல நன்று மொழியாரே.

பொழிப்புரை :

நின்றுண்ணும் சமணரும், புத்தரும் எக்காலத்தும் இடைமருது இறைவனாகிய சிவபெருமானை மாறுபட்ட உரைகளால் கூறுவதால் அவர் எக்காலத்தும் நல்லனவே கூறார்.

குறிப்புரை :

சமணரும் புத்தரும் என்றைக்கும் மருதப்பெருமானை அன்றிப் பிறவற்றைப் பேசுவதால் நல்லதைச் சொல்லமாட்டார்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

கருது சம்பந்தன் மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப் பொருத வினைபோமே.

பொழிப்புரை :

இறைவன் திருவருளையே கருதும் ஞானசம்பந்தன் மருதவாணரின் திருவடிகளைப் பெரிதும் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதுபவர்க்குத் துன்புறுத்திய வினைகள் போகும்.

குறிப்புரை :

பொருதவினை - இதுவரையில் வருத்திவந்த வினை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

மன்னி யூரிறை சென்னி யார்பிறை
அன்னி யூரமர் மன்னு சோதியே.

பொழிப்புரை :

திருஅன்னியூரில் எழுந்தருளிய நிலைபெற்ற ஒளி வடிவினனாகிய சிவன், பிறை சூடிய திருமுடியோடு பல தலங்களிலும் எழுந்தருளியிருந்து, ஆங்காங்குள்ள மக்கட்குத் தலைவனாய் விளங்குபவன்.

குறிப்புரை :

சென்னி - தலை. சோதிமன்னி ஊர் இறை என முடிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பழகுந் தொண்டர்வம் அழக னன்னியூர்க்
குழகன் சேவடி தொழுது வாழ்மினே.

பொழிப்புரை :

இறைவன்பால் மனம் ஒன்றிப் பழகும் தொண்டர்களே வாருங்கள். அன்னியூரில் அழகனாகவும் இளமைத் தன்மை உடையவனாகவும் எழுந்தருளியுள்ள சிவபிரானின் செம்மையான திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.

குறிப்புரை :

வம் - வாருங்கள். குழகன் - இளையவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

நீதி பேணுவீர் ஆதி யன்னியூர்ச்
சோதி நாமமே ஓதி யுய்ம்மினே.

பொழிப்புரை :

நீதியைப் போற்றி அதன்படி வாழ்கின்றவர்களே, அன்னியூரில் விளங்கும் ஒளி வடிவினனாகிய சிவபிரான் திருநாமங்களையே ஓதிஉய்வீர்களாக.

குறிப்புரை :

**********

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

பத்த ராயினீர் அத்த ரன்னியூர்ச்
சித்தர் தாள் தொழ முத்த ராவரே.

பொழிப்புரை :

இறைவனிடம் பத்திமை பூண்டவர்களே, தலைமை யாளனாய் அன்னியூரில் விளங்கும் ஞானவடிவினனின் திருவடிகளைத் தொழுதலால் வினை மாசுகளிலிருந்து விடுபட்டவராவீர்.

குறிப்புரை :

*********

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

நிறைவு வேண்டுவீர் அறவ னன்னியூர்
மறையு ளான்கழற் குறவு செய்ம்மினே.

பொழிப்புரை :

மனநிறைவுடன் வாழ விரும்புகின்றவர்களே, அற வடிவினனாய் நான்கு வேதங்களிலும் பரம்பொருளாகக் கூறப்பட்டுள்ள அன்னியூர்ப் பெருமான் திருவடிகளுக்கு அன்பு செய்து அவனோடு உறவு கொள்வீர்களாக.

குறிப்புரை :

நிறைவு வேண்டுவீர் - குறைவிலா நிறைவாக விரும்புகின்றவர்களே. அறவன் - அற வடிவானவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

இன்பம் வேண்டுவீர் அன்ப னன்னியூர்
நன்பொ னென்னுமின் உம்பராகவே.

பொழிப்புரை :

உலக வாழ்க்கையில் இன்பங்களை எய்த விரும்பும் அடியவர்களே, அன்பனாக விளங்கும் அன்னியூர் இறைவனை நல்ல பொன்னே என்று கூறுமின், தேவர்களாகலாம்.

குறிப்புரை :

உம்பராக - தேவர்களாக. நன்பொன் என்னுமின் - நல்ல பொன் என்று சொல்லுங்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

அந்த ணாளர்தம் தந்தை யன்னியூர்
எந்தை யேயெனப் பந்த நீங்குமே.

பொழிப்புரை :

அந்தணர்களின் தந்தையாக விளங்கும் அன்னியூர் இறைவனை எந்தையே என அழைக்க மல மாயைகள் நீங்கும்.

குறிப்புரை :

பந்தம் - மல மாயையால் விளைந்த கட்டு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

தூர்த்த னைச்செற்ற தீர்த்த னன்னியூர்
ஆத்த மாவடைந் தேத்தி வாழ்மினே.

பொழிப்புரை :

காமாந்தகனாகிய இராவணனைத் தண்டித்த புனித னாகிய அன்னியூர் இறைவனை அடைந்து அன்புக்குரியவனாக அவனைப் போற்றி வாழுங்கள்.

குறிப்புரை :

தூர்த்தன் - காமியாகிய இராவணன். தீர்த்தன் - பரிசுத்தமானவன். ஆத்தமா - அன்போடு. ஆப்தமாக என்பதன் சிதைவு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

இருவர் நாடிய அரவ னன்னியூர்
பரவு வார்விண்ணுக் கொருவ ராவரே.

பொழிப்புரை :

திருமால் பிரமர்களால் அடிமுடி தேடப்பட்ட அரவை அணிகலனாகப் பூண்ட அன்னியூர் இறைவனைப் பரவித் துதிப்பவர் தேவருலகில் இந்திரராவர்.

குறிப்புரை :

விண்ணுக்கு ஒருவராவர் - இந்திரனாவர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

குண்டர் தேரருக்கு அண்ட னன்னியூர்த்
தொண்டு ளார்வினை விண்டு போகுமே.

பொழிப்புரை :

சமணர்களாலும் புத்தர்களாலும் அணுக முடியாதவனாகிய அன்னியூர் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களின் வினைகள் விண்டு போகும்.

குறிப்புரை :

அண்டன் - அண்டமுடியாதவன், வினை விண்டு போகும் - நெல்வாய் விண்டதுபோல வினை முளைக்குந் தன்மையழியும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

பூந்த ராய்ப்பந்தன் ஆய்ந்த பாடலால்
வேந்த னன்னியூர் சேர்ந்து வாழ்மினே.

பொழிப்புரை :

பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் ஆய்ந்து சொல்லிய பாடல்களைப் பாடி அன்னியூர் வேந்தனாகிய சிவபிரானைச் சேர்ந்து வாழ்வீர்களாக.

குறிப்புரை :

பந்தன் - ஞானசம்பந்தன் என்பதன் முதற்குறை. பூந்த ராய் - சீகாழி.

பண் :

பாடல் எண் : 1

எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த
மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச்
செய்யான் வெண்ணீறணிவான் றிகழ்பொற் பதிபோலும்
பொய்யாநாவி னந்தணர்வாழும் புறவம்மே.

பொழிப்புரை :

பொய் கூறாத நாவினை உடைய அந்தணர்கள் வாழும் திருப்புறவம் என்னும் சீகாழிப்பதி, இளையாத வெற்றியை உடைய அசுரர்களின் முப்புரங்களை எரித்த நீலகண்டன், உமையம்மையை ஒருகூறாகக் கொண்டு எழுந்தருளும், செய்ய திருமேனியனாய் வெண்ணீறு அணிந்தவனாய் விளங்கும் அழகிய பதியாகும்.

குறிப்புரை :

புறவம் திரிபுரம் எரித்த நீலகண்டர்பதிபோலும் என் கின்றது. எய்யா வென்றி - இளையாத வெற்றியையுடைய. தானவர் - அசுரர்கள். மை - விடம். பொய்யாநாவின் அந்தணர் - பொய்யே சொல்லாத நாவினை உடைய அந்தணர். அவர்கள் கூறும் உரை, தவறாத நா என்றுமாம்.

பண் :

பாடல் எண் : 2

மாதொருபாலு மாலொருபாலும் மகிழ்கின்ற
நாதனென்றேத்து நம்பரன்வைகுந் நகர்போலும்
மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப்
போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே.

பொழிப்புரை :

குருக்கத்தியில் மேவிய வண்டுகள் இசைபாடவும் மயில்கள் ஆடவும், அவற்றிற்குப் பரிசிலாகப் புன்னை மரங்கள் விரிந்த மலர்களின் மகரந்தங்களைப் பொன்னாக அளிக்கும் இயற்கை வளம்சான்ற புறவம் என்னும் பதி, உமையம்மையை ஒரு பாகமாகவும் திருமாலை ஒரு பாகமாகவும் கொண்டு மகிழ்கின்ற நம் மேலான தலைவன் வைகும் நகராகும்.

குறிப்புரை :

ஒருபாதி உமையும் ஒருபாதி மாலுமாக இருக்கும் நாதன் நகர் புறவம் என்கின்றது. மாதவி மேய வண்டு - குருக்கத்தியில் மேவிய வண்டுகள். புன்னை போதலர் செம்பொன் கொடுக்கும் புறவம் - புன்னைமரங்கள் போதாய் இருந்து அலர்ந்து மகரந்தங்களாய செம்பொன்னைக் கொடுக்கும் புறவம்; இதனால் மரங்களும் வள்ளன்மை செய்யும் நகரம் என்றறிவித்தவாறு.

பண் :

பாடல் எண் : 3

வற்றாநதியும் மதியும் பொதியுஞ் சடைமேலே
புற்றாரரவின் படமாடவுமிப் புவனிக்கோர்
பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே.

பொழிப்புரை :

என்றும் நீர் வற்றாத கங்கையும், பிறையும் பொருந்திய சடையின்மேல் புற்றை இடமாகக் கொண்ட பாம்புபடத்துடன்ஆட , இவ்வுலகிற்கு ஒரு பற்றுக்கோடாகி , எனக்குப் பலி இடு மின் என்று பல ஊர்களுக்கும் செல்லும் சிவபிரானது பதி, அழகிய தாமரைகள் மலர்ந்துள்ள பொய்கை விளங்கும் புறவம் என்னும் பதியாகும்.

குறிப்புரை :

இவ்வுலகத்திற்கு ஒருபற்றுக்கோடாக இருக்க எமக்குப் பலியிடுங்கள் என்றுவரும் இறைவன்பதி புறவம் என்கின்றது. வற்றா நதி - கங்கை. பொற்றாமரையின் பொய்கை நிலாவும் - பொற்றாமரையைப்போல பிரமதீர்த்தம் விளங்குகின்ற.

பண் :

பாடல் எண் : 4

துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து
மின்னார்சடைமே லரவும்மதியும் விளையாடப்
பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொன்னார்புரிநூ லந்தணர்வாழும் புறவம்மே.

பொழிப்புரை :

பகைவர்களாகிய திரிபுர அசுரர்களின் முப்புரங் களையும், பிரமனின் தலைகளில் ஒன்றையும் அழித்து, மின்னல் போல் ஒளி விடும் சடைமுடி மேல் பாம்பும் மதியும் பகை நீங்கி விளையாடு மாறு சூடிப் பல நாள்களும் சென்று பலியிடுமின் என்று கூறித் திரிவானாகிய சிவபிரானது பதி, பொன்னாலியன்ற முப்புரிநூலை அணிந்த அந்தணர்கள் வாழும் புறவமாகும்.

குறிப்புரை :

திரிபுரத்தையும் பிரமன் சிரத்தையும் அழித்து, சடை மேல் பாம்பும் மதியும் விளையாட, பலியிடுங்கள் என்று வருவார் பதிபுறவம் என்கின்றது. பொன் ஆர் புரிநூல் - பொன்னாலாகிய பூநூல்.

பண் :

பாடல் எண் : 5

தேவாவரனே சரணென்றிமையோர் திசைதோறுங்
காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு
பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும்
பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே.

பொழிப்புரை :

பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த விடத்தின் கொடுமை தாங்காது, தேவர்கள் திசைதோறும் சூழ்ந்து நின்று `தேவனே! அரனே! உனக்கு அடைக்கலம் எங்களைக் காவாய்` எனச் சரண்அடைய, அக்கடலில் தோன்றிய கரிய விடத்தை உண்டு, பாடல்களாக அமைந்த வேதங்களைப் பயிலும் சிவபெருமான் வாழும் பதி, மலர்கள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த புறவம் என்னும் பதியாகும்.

குறிப்புரை :

தேவர்கள் `தேவதேவா! அடைக்கலம்` என்று அரற்ற விடம் உண்டவர் பதி இது என்கின்றது. சரண் - அடைக்கலம். கார் விடம் - கரிய விஷம். பா ஆர் மறை - பாக்களோடு கூடிய வேதம்.

பண் :

பாடல் எண் : 6

கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம்
அற்றரனேநின் னடிசரணென்னு மடியோர்க்குப்
பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர்
பொற்றிகழ்மாடத் தொளிகள் நிலாவும் புறவம்மே.

பொழிப்புரை :

மெய்ந்நூல்களைக் கற்று, அதனால் நல்லறிவும் பெற்று, காமனாகிய மன்மதனின் குறிப்பினால் ஆகும் காமவிருப்பமெல்லாம் அற்று, `அரனே! நின் திருவடிகளே சரண்` என்று கூறும் அடியவர்கட்குப் பற்றுக்கோடாய்ப் பாசுபதன் எழுந்தருளிய பதி, பொன் நிறைந்து விளங்கும் மாடவீடுகளின் ஒளி சூழ்ந்த புறவம் என்னும் பதியாகும் என்பர்.

குறிப்புரை :

கற்றறிந்து, காமனுக்கும் முன்னோனாயிருக்கும் முக ஒளியெல்லாம் கெட்டு, அரனே அடைக்கலமென்னும் அடியவருக்குப் பற்றாயபரன் சேர்பதிபுறவம் என்கின்றது. முகவு - முகவொளி.

பண் :

பாடல் எண் : 7

எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக்
கொண்டெழுகோல முகில்போற்பெரிய கரிதன்னைப்
பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர்
புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே.

பொழிப்புரை :

எண்திசையில் உள்ளாரும் அஞ்சிடுமாறு கரிய மலைபோலவும், நீரை முகந்து கொண்டெழுந்த அழகிய கரிய மேகம் போலவும் வந்த பெரிய களிற்று யானையை முற்காலத்தில் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்த சிவபிரான் விரும்பியிருக்கும் பதி, தாமரை மலர் மேல் உறையும் நான்முகன் போல வேதங்களில் வல்ல அந்தணர்கள் வாழும் புறவமாகும்.

குறிப்புரை :

திசையெல்லாம் நடுங்கவந்த யானையை உரித்துப் போர்த்தவன் பதிபுறவம் என்கின்றது. கார் சேர் வரை - கருமை சேர்ந்தமலை. கோலமுகில்போல் - அழகிய மேகத்தைப்போல. பாவனை செய்யும் - விரும்பியிருக்கும். புண்டரிகத்தோன் - பிரமன்.

பண் :

பாடல் எண் : 8

பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத்
துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழின்மேவும்
அரக்கன்றிண்டோ ளழிவித்தானக் காலத்திற்
புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.

பொழிப்புரை :

எங்கும் பரவிய பழமையான புகழை உடைய தேவர்களின் கடல் போன்ற படையை, ஊழித்தீப்போன்று அழிக்கும் தொழிலில் வல்ல இராவணனின் வலிய தோள்வலியை அக்காலத்தில் அழித்தருளி, அனைத்து உலகங்களையும் புரந்தருளும் வேந்தனாக விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய பழமையான ஊர் புறவமாகும்.

குறிப்புரை :

தேவர்களின் சேனைக்கடலை ஓட்டும் ஊழித்தீயைப் போல, சண்டைசெய்யும் இராவணனது தோள்வலியை வாட்டியவனது பதிபுறவம் என்கிறது. பௌவம் - கடல். துரக்கும் - ஓட்டும்.

பண் :

பாடல் எண் : 9

மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும்
மூர்த்தியை நாடிக் காணவொணாது முயல்விட்டாங்
கேத்தவெளிப்பா டெய்தியவன்ற னிடமென்பர்
பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே.

பொழிப்புரை :

மேலானதாக விளங்கும் உலகங்களைப் படைத்த பிரமனும், புகழால் மேம்பட்ட திருமாலும் அழலுருவாய் வெளிப்பட்ட சிவமூர்த்தியின் அடிமுடிகளைக்காண இயலாது தமது முயற்சியைக் கைவிட்டு ஏத்த, அவர்கட்குக் காட்சி தந்தருளிய சிவபிரானது இடம், மலர்கள் நிறைந்த சோலைகளில் தென்றல் வந்து உலாவும் புறவமாகும்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியாத பெருமான் இடம் புறவம் என்கிறது. மூர்த்தியை - உருவங்கொண்ட இறைவனை.

பண் :

பாடல் எண் : 10

வையகநீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான்
மெய்யலதேர ருண்டிலையென்றே நின்றேதங்
கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர்
பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே.

பொழிப்புரை :

மண், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களில் நிறைந்து, அவற்றின் முதலாக விளங்கும் இறைவனாய், உண்மையல்லாதவற்றைப் பேசி உண்டு இல்லை என்ற உரைகளால் அத்தி நாத்தி எனக்கூறிக் கொண்டு தம் கைகளில் உணவேற்று உண்போராய சமணரும், புத்தரும் காண ஒண்ணாத சிவபிரானின் நகர், நெஞ்சிலும் பொய்யறியாத பூசுரர் வாழும் புறவமாகும்.

குறிப்புரை :

ஐம்பெரும் பூதமானவனும் புறச்சமயிகளால் பொருந்த ஒண்ணாதவனுமாகிய இறைவன் நகரம் புறவம் என்கின்றது. வையகம் - மண். உண்டு இலை என்று - அஸ்தி நாஸ்தி கூறி. பூசுரர் - அந்தணர்.

பண் :

பாடல் எண் : 11

பொன்னியன்மாடப் புரிசைநிலாவும் புறவத்து
மன்னியவீசன் சேவடிநாளும் பணிகின்ற
தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன்
இன்னிசையீரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே.

பொழிப்புரை :

பொன்னால் இயன்ற மாடங்களின் மதில்கள் சூழ்ந்த, புறவம் என்னும் பதியில் நிலைபெற்று விளங்கும் சிவபிரானின் சேவடிகளை, நாள்தோறும் பணிந்து, சீவபோதம் அற்றுச் சிவபோதம் உடையவனாய்ப் போற்றும் சண்பையர் தலைவனாகிய புகழ்மிக்க ஞானசம்பந்தன், இன்னிசையோடு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடி ஏத்தவல்லவர்கட்கு, இடர் போகும்.

குறிப்புரை :

புறவத்து ஈசனை, இப்பதிகம் சொல்லி ஏத்தவல்லாருக்கு இடர்போம் என்கின்றது. தன்னியல்பில்லாச் சண்பையர் கோன் - சீவபோதமற்ற திருஞானசம்பந்தர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.

பொழிப்புரை :

நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.

குறிப்புரை :

சிராப்பள்ளி நாதரைச் சொல்ல என்னுள்ளம் குளிரும் என்கின்றார். நன்றுடையான், தீயதில்லான் இவை யிரண்டும் இத்தலத்துத் தீர்த்தங்கள். நரைவெள்ளேறு - மிக வெள்ளிய இடபம். சென்றடையாத திரு - நல்வினைப் போகம் காரணமாக ஆன்மாக்களுக்கு வருவது போல வந்து அடையாத இயற்கையேயான திரு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ
பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே.

பொழிப்புரை :

சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு மூங்கில் புதரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதற்காகத் தனது குட்டியையும் ஏந்திக் கொண்டு கரியமலை மீது ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியவனும் கொடிய முகத்தோடு கூடிய யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனும் ஆகிய நீ படத்தோடு கூடிய முகத்தினை உடைய நாகப்பாம்பை அதன் பகைப் பொருளாகிய பிறைமதியுடன் முடிமிசை அணிந்திருத்தல் பழி தரும் செயல் அன்றோ?

குறிப்புரை :

பெண் குரங்கு ஆண் குரங்கோடு ஊடி, குட்டியையும் தூக்கிக் கொண்டு மூங்கிலில் பாய்வதற்காக மலைமிசையேறும் சிராப்பள்ளி நாதா! நாகத்தையும் மதியையும் உடனாக வைத்தல் உனக்குப் பழியாகுமல்லவா?. கைம்மகவு - கைக்குழந்தை. கடுவன் - ஆண் குரங்கு. கழை - மூங்கில். செம்முக மந்தி - சிவந்த முகத்தோடு கூடிய பெண் குரங்கு. பெண் குரங்கின் முகம் சிவப்பாயிருக்குமென்ற குரங்கின் இயற்கையையும் ஈண்டு எண்ணுக. வெம்முக வேழம் - கொடுந்தன்மையுடையயானை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்
எந்தம்மடிக ளடியார்க்கல்ல லில்லையே.

பொழிப்புரை :

மந்த சுருதியினை உடைய முழவு மழலை போல ஒலி செய்ய, மலை அடிவாரத்தில் செவ்விய தண்ணிய தோட்டங்களையும் சுனைகளையும் கொண்டுள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய அழகிய மலர்களைச் சடைமேற் சூடியவரும், விடையேற்றை ஊர்ந்து வருபவரும் ஆகிய எம் தலைவராகிய செல்வரை வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

சிராப்பள்ளி நாதனின் அடியார்க்கு அல்லல் இல்லை என்கிறது. மந்தம் முழவம் - மந்தஸ்தாயியில் அடிக்கப்படும் முழவம். மழலை - பொருள் விளங்காத ஒலி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்
கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்
பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே.

பொழிப்புரை :

பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள மலையடிவாரத்தில் விளங்கும் சுனைகளில் நெருங்கிப் பூத்த நீலமலர்களில் தங்கிச் சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பியும் இசைபாடும் சிராப்பள்ளியில் எங்கள் பெருமானாகிய சிவபிரான் கறைபொருந்திய கண்டத்தை உடையவனாய்க் கனலும் எரியைக் கையில் ஏந்தி ஆடும் எம் கடவுளாய்ப் பிறை பொருந்திய சென்னியை உடையவனாய் விளங்கியருள்கின்றான்.

குறிப்புரை :

நீலகண்டன், எரியாடுங் கடவுள், பிறைச் சென்னியன் எங்கள் கடவுள் என்கின்றது. வண்டும் தும்பியும் நீலப் பூவில் தங்கிப்பாடும் என்ற சுனையியற்கை முதல் இரண்டடிகளில் குறிக்கப் பெறுகிறது. கறை - விடம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்
தலைவரை நாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்
நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே.

பொழிப்புரை :

கொல்லும் தொழிலைக் கைவிடாத கொள்கை யினராகிய அவுணர்கள் மும் மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு அழித்தவராயினும் சிராப்பள்ளியின் தலைவராகிய அப்பெருமானாரைத் தலைவரல்லர் என்று நாள் தோறும் கூறிவரும் புறச் சமயிகளே! நிலவுலகில் நீலம் உண்ட துகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல் இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றுதல் இயலுவதொன்றோ?

குறிப்புரை :

சிவபெருமான் முழுமுதற் கடவுளல்லர் என்பார்க்கு உண்மை உணர்த்துவது இப்பாடல். கொலைவரையாத கொள்கையர் - கொலையை நீக்காத கொள்கையினை உடைய திரிபுராதிகள். நிலவரை நீலம் - நிலவுலகில் நீலநிறம் ஊட்டப்பட்ட துணி. வெள்ளை நிறம் ஆமே - வெண்மை நிறம் உடையதாதல் கூடுமா? நீலநிறத்துக்கு மட்டும் உரிய பண்பு இது. அதுபோல நீவிர் கொண்ட கொள்கையையும் மாற்றல் இயலாது. (பழமொழி - 168.)

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வ ராரிவர்செய்கை யறிவாரே.

பொழிப்புரை :

எல்லோராலும் விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில் விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள் சிவந்த பொன்போன்ற நிறத்தனவாய் உதிரும் சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் செல்வராகிய சிவபிரான் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்வர். நஞ்சினை உண்பர். தலையோட்டில் பலி ஏற்பர். வேறுபட்ட இவர்தம் செயல்களின் உண்மையை யார் அறியவல்லார்.

குறிப்புரை :

சிராப்பள்ளிமேவிய செல்வர் பெண்ணொரு பாக மாகுவர், ஆகாத நஞ்சை அருந்துவர், பிரம கபாலத்தில் பிச்சையும் எடுப்பர், இவர் செயல்கள் ஒன்றோடொன்று ஒத்திருந்தனவல்ல என்றபடி. வெய்ய - கொடிய; விரும்பத்தக்க என்றுமாம். வேங்கைப்பூ பொன்சேரும் சிராப்பள்ளி என்றது, வேங்கை மலர்கள் பொன்போன்ற நிறத்தனவாய் நிலத்தைச் சேரும் மலை என்க. ஐயம் - பிச்சை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

வேயுயர்சாரற் கருவிரலூகம் விளையாடும்
சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார்
பேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே.

பொழிப்புரை :

கரிய விரல்களை உடைய கருங்குரங்குகள் விளையாடும் மூங்கில் மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சாரலை உடைய சிராப்பள்ளியில் நெடிதாக உயர்ந்துள்ள கோயிலில் மேவிய செல்வராகிய பெருமானார், பேய்கள் உயர்த்திப் பிடித்த கொள்ளிகளைக் கைவிளக்காகக் கொண்டு, சுடுகாட்டில் எரியும் தீயில் மகிழ்ந்து நடனம் ஆடும் திருக்குறிப்பு யாதோ? அஃது அவரை அடைய விரும்பும் மகளிர்க்குப் புலனாகாததாக உள்ளதே.

குறிப்புரை :

தாயுமானவர், பேயின் கையிலுள்ள கொள்ளியைக் கை விளக்காகக் கொண்டு ஆடுதல் திருவுளக் குறிப்பாயின் அது ஆகாது என்கின்றது. வேய் - மூங்கில். கருவிரலூகம் - கருங்குரங்கு. சேய் - தூரம். கைவிளக்கு - சிறியவிளக்கு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்
தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்
சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்
சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.

பொழிப்புரை :

மலைபோன்ற திண்மை நிரம்பிய தோள்களை உடைய இராவணனின் வலிமை கெடுமாறு ஊன்றி அழித்துத் தாமரை மலர் மேல் உறைபவனாகிய பிரமனது தலையோட்டை உண் கலனாகக் கொண்டு திரிந்து அவ்வோட்டில் பலியேற்று உண்ணுவதால் தமக்குப் பழி வருமே என்று நினையாதவராய், இசையோடு ஓதத் தக்க வேதங்களையும் கீதங்களையும் அன்பர்கள் ஓதுமிடத்துச் சில பிழைபட்டன என்றாலும் அவற்றையும் ஏற்று மகிழ்பவர் சிராப்பள்ளி மேவிய பெருமைக்குரிய சிவனார். இவர்தம் செய்கைகளின் உட்பொருள் யாதோ?

குறிப்புரை :

தலையே கலனாகப் பலி ஏற்றுண்பார்; சொல்லவல்ல வேதத்தையும் பாடலையும் சொன்னால் சிராப்பள்ளியார் செய்கை சில அல்லாதன போலும் என்கின்றது. மல்கும் - நிறைந்த, வேதங்களையும் பாடல்களையும் சொன்னால் அவற்றில் சில அல்லாதன என்பதை அவர் செய்கைகளிலிருந்து அறிகிறோம் என்பது கருத்து.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

அரப்பள்ளியானு மலருறைவானு மறியாமைக்
கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த
சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்
இரப்புள்ளீரும்மை யேதிலர்கண்டா லிகழாரே.

பொழிப்புரை :

பாம்பணையில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் அறியாதவாறு அடிமுடி கரந்து உயர்ந்து நின்றதை அவர்கள் தேடிக்கண்டிலர் என்ற பெருமை உமக்கு உளதாயினும் மலையகத்துள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய நீண்ட சடையினை உடைய செல்வராகிய சிவபிரானே, நீர் வீடுகள் தோறும் சென்று இரப்பதைக் கருதுகின்றீர். அயலவர் கண்டால் இதனை இகழாரோ?

குறிப்புரை :

அயனும் மாலும் உம்மைக் காணாவிட்டாலும் நீர் மனைதொறும் பிச்சைக்குப் புறப்படாதீர்; உம்மை யாவரும் இகழார்கள் என்கிறது. அரப்பள்ளியான் - பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமால். கரப்பு உள்ளி - இறைவன் மறைந்திருப்பதை எண்ணி. நாடி - தேடி, ஏதிலர் - அயலார்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோதுவோர்க ளுரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.

பொழிப்புரை :

நாணாது உடையின்றித் திரியும் திகம்பர சமணரும், காலையிலும் நண்பகலிலும் கஞ்சியை மட்டும் உணவாக உண்டு வாழும் புத்தரும் கூறும் பழிப்புரைகளைக் கருதாது நாம் சிறப்படைய வேண்டுமென்று விரும்பும் நீர், எம்பெருமான் உறையும் வானளாவிய கோயிலை உடைய சிராப்பள்ளியைச் சென்று அடைவீர்களாக.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் உரைக்கும் சொல்லைப் பேணாது பெருஞ்சிறப்பெய்த விரும்புபவர்களே! சிராப்பள்ளி சேர்மின் என்கின்றது. நாணாது - வெட்கப்படாமல். கஞ்சியை விடியலுணவாகவும், பகலிலும் உண்டு ஓதுபவர்கள் புத்தர்கள். பேணாது - போற்றாது. உறுசீர் - மிக்கபுகழ். சேணார் கோயில் - ஆகாயமளாவிய கோயில்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்
ஞானசம்பந்த னலமிகுபாட லிவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.

பொழிப்புரை :

தேனுண்ணும் வண்டுகள் இனிய இசைபாடும் சிராப்பள்ளியில் விளங்கும் இறைவனை, அலைகளிற் பொருந்திவந்த சங்குகள் சோலைகளில் ஏறி உலாவும் கடலை அடுத்துள்ள கழுமல ஊரில் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிப் போற்றிய, நன்மைகள் மிக்க இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் வானுலகிற் சம்பந்தமுடையவராகத் தேவர்களோடு நிலைபெற்று வாழ்வர்.

குறிப்புரை :

சிராப்பள்ளியானைத் துதித்த ஞானசம்பந்தன் பாடலிவை வல்லார் தேவரொடு சேர்ந்து வாழ்வர் என்கின்றது. தேன் - வண்டு. கானல் - கடற்கரைச் சோலை. வானசம்பந்தத்தவர் - வானுலகிற் சம்பந்தமுடைய தேவர்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்
அம்பானெய்யோ டாடலமர்ந்தா னலர்கொன்றை
நம்பான்மேய நன்னகர்போலும் நமரங்காள்.

பொழிப்புரை :

நம்மவர்களே! காணுந்தோறும் புதுமையைப் பயக்கும் குன்றங்களையும், நீண்டுயர்ந்த மலைச்சாரலையும், அழகிய வண்டுகள் யாழ்போல் ஒலிக்கும் வளர்ந்த வேங்கை மரங்களின் கிளைகள் அடர்ந்த சோலைகளையும் உடைய குற்றாலம், இனிய பால் நெய் ஆகியவற்றோடு நீராடலை விரும்புபவனாய் விரிந்த கொன்றை மலர்களைச் சூடிய நம்பனாகிய சிவபெருமான் எழுந்தருளிய நன்னகராகும்.

குறிப்புரை :

திருக்குற்றாலம், பால்நெய்யாடிய பரமன் உறை கோயில் என்கின்றது. வம்பு - புதுமை. வம்பார்குன்றம் - பலமுறை கண்டார்க்கும் புதுமையையே பொருந்தும் மலை. நீடு உயர் சாரல் - காலத்தானும் இடத்தானும் நீடிக்கும் சாரல். கோல வண்டு - அழகிய வண்டு. பால் நெய்யோடு - பால் நெய் இவற்றோடு. அம் ஆடல் அமர்ந்தான் - நீராடலை விரும்பியவன். நமரங்காள் - நம்மவர்களே!

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிகளோடுந் நாள்விழமல்கு குற்றாலம்
கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்
அடிகண்மேய நன்னகர்போலும் மடியீர்காள்.

பொழிப்புரை :

அடியவர்களே! திருநீறு பூசித் தொண்டர்கள் பின்னே வரவும், புகழ் சிறக்கவும், கொடிகளை ஏந்தியவர்களாய் அன்பர்கள் முன்னால் செல்லவும், நாள்தோறும் விழாக்கள் நிகழும் நகர் குற்றாலமாகும். இவ்வூர் மணம் கமழும் கொன்றை வில்வமாலை ஆகியவற்றை விரும்பும் அடிகளாகிய சிவபிரானார் எழுந்தருளிய நன்னகராகும்.

குறிப்புரை :

நீறணிந்து தொண்டர்கள் பின்செல்ல, நாள்விழா நிறைந்த குற்றாலம், கொன்றையையும் கூவிளத்தையும் விரும்பிய அடிகள் நகர் என்கின்றது. பொடி - விபூதி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

செல்வமல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்
கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்
வில்லினொல்க மும்மதிலெய்து வினைபோக
நல்கும்நம்பா னன்னகர்போலுந் நமரங்காள்.

பொழிப்புரை :

நம்மவர்களே! செல்வம் நிறைந்ததும், செண்பகம் வேங்கை ஆகிய மரங்களில் தாவிப் படர்ந்து முல்லைக் கொடி அரும்புகளை ஈனுவதும் ஆகிய குற்றாலம், வில்லின் நாண் அசைய அதன்கண் தொடுத்த கணையை விடுத்து மும்மதில்களையும் எய்து அழித்துத் தன்னை வழிபடும் அன்பர்களின் வினை மாசுகள் தீர அருள்புரியும் சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

குறிப்புரை :

முல்லை, செண்பகம், வேங்கை இவற்றின்மீதேறி அரும்பீனும் குற்றாலமே திரிபுரம் எய்து அவர்கள் பாவம் தொலைத்து அருள்வழங்கும் இறைவன் நகர் என்கின்றது. கொல்லை - காடு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்தேன்
கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம்
அக்கும்பாம்பு மாமையும்பூண்டோ ரனலேந்தும்
நக்கன்மேய நன்னகர்போலும் நமரங்காள்.

பொழிப்புரை :

மலையின் பக்கங்களில் எல்லாம் முளைத்த வாழை மரத்தின் கனிகளோடு தேன் ஒழுகும் பலாவின் பழங்களும் மாமரக் கிளைகளில் பழுத்த புத்தம் புதிய நறுங்கனிகளும் ஆய முக்கனிகளும் அவ்வம்மரங்களில் தொங்கும் குற்றால நகர், என்புமாலை, பாம்பு, ஆமை ஆகியவற்றைப் பூண்டு கையில் அனலை ஏந்தி விளங்கும் சிவபிரான் மேவிய நன்னகராகும்.

குறிப்புரை :

பக்கங்களில் வாழைக்கனியோடு பலாப்பழத்தேனும், மாம்பழமும் தொங்கும் குற்றாலம், அக்குமணிமுதலியவற்றையணிந்த நக்கன் நகர் என்கின்றது. பாய்கனி - பரவிய பழம். கொக்கு - மா. நக்கன் - நக்நன் - ஆடையில்லாதவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

மலையார்சாரன் மகவுடன்வந்த மடமந்தி
குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம்
இலையார்சூல மேந்தியகையா னெயிலெய்த
சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்.

பொழிப்புரை :

இறைவனுக்குக் கைத்தொண்டு புரியுமவர்களே! தன் குட்டிகளோடு மலையின் சாரலுக்கு வந்த மடமந்தி வாழைமரக் குலைகளில் பழுத்த இனிய கனிகளை வயிறு புடைக்கத் தின்னும் குற்றாலம், இலை வடிவமான சூலத்தை ஏந்திய கையினனும், மும் மதில்களையும் எய்து அழித்த வில்லாளனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

குறிப்புரை :

குட்டியுடன் வந்த தாய்க்குரங்கு வாழைப்பழத்தை உண்ணும் குற்றாலம், திரிபுரம் எரித்த சிவபெருமான் மேய நகர் என்கின்றது. மாந்தும் - தின்னும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

மைம்மாநீலக் கண்ணியர்சாரன் மணிவாரிக்
கொய்ம்மாவேன லுண்கிளியோப்புங் குற்றாலம்
கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம்
பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.

பொழிப்புரை :

பெரியீரே! மிகக் கரிய பெரிய நீலமலர் போன்ற கண்களை உடைய குறமகளிர், மலைச்சாரல்களில் விளைந்த தினைப் புனங்களில் கொய்யத்தக்க பருவத்திலுள்ள பெரிய தினைக்கதிர்களை உண்ண வரும் கிளிகளை அங்குள்ள மணிகளை வாரி வீசியோட்டும் குற்றாலம், கைம்மா எனப்பெறும் யானையின் தோலைப் போர்த்த கடவுளும் எம் தலைவனுமாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

குறிப்புரை :

நீலமலர் போலுங் கண்ணையுடைய குறத்தியர் மாணிக்கத்தைக் கொண்டு கிளியோட்டுங் குற்றாலம், யானையுரி போர்த்த நாதன் நகர் என்கின்றது. மை மா நீலம் - மிகக்கரிய நீலமலர். கொய் மா ஏனல் - கொய்யும் பருவத்திலுள்ள பெரிய தினை. ஓப்பும் - ஓட்டும். கைம்மாவேழம் - கையையுடைய விலங்காகிய யானை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக்
கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலம்
காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெம்
சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள்.

பொழிப்புரை :

தொழுது வணங்கும் அடியவர்களே! நீலமலரும் நெய்தல் மலரும் பூத்த தண்ணியவான சுனைகள் சூழ்ந்ததும், நீண்டு வளர்ந்துள்ள சோலைகளில் அழகிய ஆண் மயில்கள் தத்தம் பெண் மயில்களோடு களித்தாடுவதுமாகிய குற்றாலம், காலனைக் காலால் கடிந்த கடவுளும் சூலத்தைக் கையில் ஏந்தியவனுமாகிய எம் சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

குறிப்புரை :

சுனைசூழ்ந்த சோலையிலே மயில் பெடையோடு விளையாடும் குற்றாலம், காலகாலனாகிய சூலபாணியின் நகர் என்கின்றது. கோல மஞ்ஞை - அழகிய மயில்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

போதும்பொன்னு முந்தியருவி புடைசூழக்
கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம்
மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த
நாதன்மேய நன்னகர்போலுந் நமரங்காள்.

பொழிப்புரை :

நம்மவர்களே! அருவிகள் மலர்களையும் பொன் னையும் உந்திவந்து இருபுறங்களிலும் குளிர்ந்த மழை போல் நுண்மையான துளிகளை உதிர்க்கும் குற்றாலம், தன் தகுதிக்கு மேலே செயற்பட்ட இலங்கை நகரின் புகழ் பெருக்கி ஆளும் அரசனாகிய இராவணனைத் தண்டித்த சிவபிரான் எழுந்தருளிய நல்ல நகராகும்.

குறிப்புரை :

பூக்களையும் பொன்னையும் உந்தி அருவி புடைசூழ நுண்துளி வீசுங்குற்றாலம், இலங்கைநாதனையடக்கிய இறைவன் நகர் என்கின்றது. மீதூர் எனவும் பாடம். கூதல் மாரி - குளிர்ந்த மழை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப வரும்பீன்று
குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம்
பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்
பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள்.

பொழிப்புரை :

பணியும் தொண்டர்களே! பாம்பின் வாயில் அமைந்த வளைந்த கூரிய பற்களை ஒப்ப அரும்பீன்று குரவ மரங்கள் பூத்துள்ள பாவை போன்ற மலர்களின் மணம் தங்கியுள்ள குற்றாலம், பிரமன் மால் அறியாப் பெரியோனாகிய எம் பரமன் மேவியுள்ள நன்னகராகும்.

குறிப்புரை :

குரவம்பாவை பாம்பின் பல்லைப்போல் அரும்பீன்று மணங்கமழும் சோலை சூழ்ந்த குற்றாலம், அயனும் மாலும் அறியாத பரமன் நகர் என்கின்றது. முள் எயிறு - முள்போன்ற பல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்
குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம்
இருந்துண்டேரு நின்றுண்சமணு மெடுத்தார்ப்ப
அருந்தண்மேய நன்னகர்போலு மடியீர்காள்.

பொழிப்புரை :

அடியவர்களே! பெரிய தண்ணிய மலைச்சாரலில் வாழ்கின்ற சிறகுகளை உடைய வண்டு தன் பெண் வண்டை விரும்பிக் கூடி குருந்த மரத்தில் ஏறிச் செவ்வழிப் பண்பாடும் குற்றாலம், இருந்துண்ணும் புத்தர்களும், நின்று உண்ணும் சமணர்களும் புறங்கூற அரிய தண்ணியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய நன்னகராகும்.

குறிப்புரை :

வண்டு பெண் வண்டைப் புணர்ந்து செவ்வழிப் பண்ணைப் பாடும் குற்றாலம், தண்ணிய இறைவன் மேய நகர் என்கின்றது. எடுத்து ஆர்ப்ப அருந்தண்மேய - சமணர் புத்தர்கள் எடுத்து நுகர்தற்கரிய தண்மையான இறைவன் மேவிய. தண் - தண்மை; பண்பு தண்மையையுடைய இறைவனைக் காட்டி நின்றது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன்
கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம்
நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்
பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.

பொழிப்புரை :

மாடவீதிகளையுடையதும் ஆற்று நீர்வளம் மிக்கதுமான சீகாழிப்பதிக்கு மன்னனும் பலராலும் நாட வல்லவனுமான நற்றமிழ் ஞானசம்பந்தன் செங்காந்தள் மலர்களை ஈன்று அவற்றின் கொழுவிய முனையால் கை குவிக்கும் குற்றாலத்து இறைவர் மேல் பாடிய பாடல்கள் பத்தையும் பாடப் பாவம் நீங்கும்.

குறிப்புரை :

குற்றாலத்தைப்பற்றி ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும் வல்லார் பாவம் பறையும் என்கின்றது. கோடல் - செங்காந்தள். கொழுமுனை கூம்பும் - கொழுமையான சிகரம் கூம்பியுள்ள.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலனந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்
ஆடலனஞ்சொ லணியிழையாளை யொருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.

பொழிப்புரை :

நீண்டு விரிந்த ஒளிக்கதிர்களை உடைய வெண் பிறையோடு வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சூடுதலை உடையவன். அந்திப் போதில் ஒளியோடு கூடிய எரியை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவன். அழகிய சொற்களைப் பேசும் அணிகலன்களோடு கூடிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு பாடுபவன். அத்தகைய பெருமானது நல்லநகர் பரங்குன்று.

குறிப்புரை :

பிறை, கொன்றை இவைகளைச் சூடியவனும், எரி யேந்தியும், இடுகாட்டில் நட்டமாடுபவனும், உமாதேவியாரை ஒரு பாகம் வைத்து ஆடுபவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள நகரம் திருப்பரங்குன்றம் என்கின்றது. சூடலன் - சூடுதலையு டையவன். அம் சொல் அணியிழையாளை எனப் பிரிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

அங்கமொராறும் மருமறைநான்கும் மருள்செய்து
பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்
திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி
பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளிச் செய்து, திருநீறு அணிந்த மார்பில் அழகுமிக்க வெண்ணூலைப் பொலிவுற அணிந்து, பிறை பாம்பு ஆகியவற்றை விளங்கும் சடைமீது சூடித் தேன் போன்ற மொழியினளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாய்ச் சிவபிரான் விளங்கும் நன்னகர் திருப்பரங்குன்றம்.

குறிப்புரை :

வேதம் அங்கம் இவைகளையருளிச் செய்து, பூணுநூல் நீறணிந்த மார்பில் விளங்க, பாம்பும் மதியும் சென்னியிற்சூடிய உமையொருபாகன் நகர் இது என்கின்றது. பொங்கும் வெண்ணூல் - அழகுமிகும் பூணுநூல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மே னிரைகொன்றை
சீரிடங்கொண்ட வெம்மிறைபோலுஞ் சேய்தாய
ஓருடம்புள்ளே யுமையொருபாக முடனாகிப்
பாரிடம்பாட வினிதுறைகோயில் பரங்குன்றே.

பொழிப்புரை :

கங்கை சூடிய நிமிர்ந்த சடைமுடிமேல் வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சிறப்புற அணிந்துள்ள எம் இறைவன் மிக உயர்ந்துள்ள தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள உமையம்மையோடும் உடனாய்ப் பூதகணங்கள் பாட இனிதாக உறையும் கோயில் திருப்பரங்குன்றம்.

குறிப்புரை :

கங்கை சூடிய திருச்சடையில் கொன்றையையணிந்த எம்மிறைவன் உறைகோயில் பரங்குன்றுபோலும் என்கின்றது. நீர் - கங்கை. நிரை கொன்றை - மாலையாகப் பூக்கும் கொன்றை. பாரிடம் - பூதம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

வளர்பூங்கோங்க மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம்
தளிர்போன்மேனித் தையனல்லாளோ டொருபாகம்
நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.

பொழிப்புரை :

வளர்ந்துள்ள கோங்கு முதலிய மரங்களும், மணம் தரும் மாதவி முதலிய செடிகளும், மல்லிகை முதலிய கொடிகளும் நிறைந்துள்ள வண்டுகள் முரலும் சோலைகள் சூழ்ந்த சாரலை உடைய திருப்பரங்குன்றம், ஒரு பாகமாகிய தளிர் போன்ற மேனியளாகிய தையல் நல்லாளோடு பொருந்திக் கொத்தாகச் செறிந்த பூக்களைக் கொண்ட கொன்றை மலர் மாலையை அணிந்தவனாகிய சிவபிரானது நகராகும்.

குறிப்புரை :

கோங்கம் மாதவி மல்லிகை இவைகள் செறிந்த சாரலையுடைய பரங்குன்றம், பெண்ணொருபாகன் பேணிய நகராம் என்கின்றது. இவன் போகியாதற்கேற்பக் குன்றமும் மல்லிகை முதலிய மணந்தரும் பூக்கள் மலிந்துள்ளமையும், புணர்ச்சி நலமிகும் சாரலோடு கூடியமையும் குறிக்கப்பெற்றன.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னியசோதி யாகியவீசன் றொன்மறை
பன்னியபாட லாடலன்மேய பரங்குன்றை
உன்னியசிந்தை யுடையவர்க்கில்லை யுறுநோயே.

பொழிப்புரை :

பொன் போன்ற கொன்றை மலர், பொறிகள் விளங் கும் பாம்பு ஆகியவற்றை அணிந்துள்ள முறுக்கேறிய சடைமுடியோடு பொருந்திய ஒளி வடிவினனாகிய ஈசனும், பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப் பாடிஆடுபவனுமாகிய சிவபிரான் எழுந் தருளிய திருப்பரங்குன்றை எண்ணிய சிந்தை உடையவர்க்கு மிக்க நோய்கள் எவையும் இல்லை.

குறிப்புரை :

சோதி வடிவாகிய ஈசனும் வேதம் அருளிச் செய்தவனும் ஆகிய நட்டமாடியின் பரங்குன்றைத் தியானிப்பவர்கட்கு நோயில்லை என்கின்றது. பொறி - படப்பொறி. உன்னிய - தியானித்த. உறுநோய் - மிக்கநோய்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனன்மூழ்கத்
தொடைநவில்கின்ற வில்லினனந்திச் சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்
படைநவில்வான்ற னன்னகர்போலும் பரங்குன்றே.

பொழிப்புரை :

வாயிலை உடைய காவல் பொருந்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் கனலில் மூழ்குமாறு அம்பினை எய்த வில்லினனும், அந்திக் காலத்தில் சுடுகாட்டில் அருகில் தன்னொடு பழகிய பூதகணங்கள் பாட நின்றாடுபவனும் போர்க்கருவியாகிய சூலப்படையை ஏந்தியவனுமாகிய சிவபிரானது நன்னகர் திருப்பரங்குன்றம்.

குறிப்புரை :

திரிபுரம் எரிய அம்புதொடுத்த வில்லினனும், பூதம் பாட இடுகாட்டில் நடமாடும் சூலபாணியுமாகிய இறைவன் நகர் பரங்குன்று என்கின்றது. கடி அரண் - காவலோடு கூடிய அரண். தொடை - அம்பு. புடை - பக்கம். நவில்வான் - விரும்பியவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

அயிலுடைவேலோ ரனல்புல்குகையி னம்பொன்றால்
எயில்படவெய்த வெம்மிறைமேய விடம்போலும்
மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப்
பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே.

பொழிப்புரை :

கூரிய வேற்படையை உடையவனும், அனல் தழுவிய கை அம்பு ஒன்றால் மூவெயில்களை எய்து அழித்தவனும் ஆகிய எம் இறைவன் மேவிய இடம், ஆண் மயில்கள் பெண் மயில்களைத் தழுவிச் சிறந்த வகையில் நடனம் ஆடும் வளர்ந்த சோலைகளில் பெண் வண்டுகளோடு கூடிய ஆண் வண்டுகள் இடையறாது இசைபாடும் சிறப்புடைய திருப்பரங்குன்றாகும்.

குறிப்புரை :

எறியம்பு ஒன்றால் எயில் எய்த இறைவன் எழுந் தருளியுள்ள இடம் பரங்குன்று என்கின்றது. அயில் - கூர்மை. பட - அழிய. ஆண்மயில் தன்னுடைய பெடையைத்தழுவிக் கொண்டு நடமாடும் சோலையிலே, பெடையோடு கூடிய வண்டுகள் பாடுகின்றன என்பதால் இன்பமயமாதல் எடுத்துக் காட்டப்பெற்றது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்
பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச்
சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று
நித்தலுமேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.

பொழிப்புரை :

மை எனத்தக்க கரிய மேனியனாகிய வாட்போரில் வல்ல இராவணனின் மகுடம் பொருந்திய பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பரங்குன்றை ஒன்றிய மனத்துடன் அங்குள்ள பெருமானின் சேவடிகளைச் சிந்தித்துச் சிவனே என்று நித்தலும் ஏத்தித் துதிக்க, வினைகள் நம் மேல்நில்லா.

குறிப்புரை :

பரங்குன்றைச் சிவபெருமானே என்றெண்ணி மனம் ஒன்றி நாள்தோறும் வழிபட நமது வினைகள் அழியும் என்கின்றது. மைத்தகுமேனி வாள் அரக்கன் - கரியமேனியை உடைய கொடிய அரக்கன்; என்றது இராவணனை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

முந்தியிவ்வையந் தாவியமாலு மொய்யொளி
உந்தியில்வந்திங் கருமறையீந்த வுரவோனும்
சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி
பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.

பொழிப்புரை :

மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் தந்த அளவில் முந்திக் கொண்டு இவ்வுலகை ஓரடியால் அளந்ததுடன் வானுலகங்களையும் ஓரடியால் அளந்த திருமாலும், அத்திருமாலின் ஒளி நிறைந்த உந்திக் கமலத்தில் தோன்றி அரிய மறைகளை ஓதும் நான் முகனும் மனத்தாலும் அறிய முடியாதவாறு பேரொளிப் பிழம்பாய் நின்ற சோதி வடிவினனும், விளையாடும் பந்து தங்கிய அழகியகையை உடைய மங்கையை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருப்பரங்குன்று.

குறிப்புரை :

அயனும் மாலும் மனத்தாலும் அறியமுடியாத சோதி வடிவாகிய இறைவனது பரங்குன்று இது என்கின்றது. உந்தி - கொப்பூழ். உரவோன் - அறிஞன்; என்றது பிரமனை. பந்து இயல் அங்கை - மங்கைக்கு அடை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து
மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல
பண்டானீழன் மேவியவீசன் பரங்குன்றைத்
தொண்டாலேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.

பொழிப்புரை :

பருத்த உடலினராய் எங்கும் திரியும் சமணரும், ஆடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தரும் தர்க்க வாதத்துடன் மிடுக்காய்ப் பேசும் பேச்சுக்கள் எவையும் உண்மையல்ல. முற்காலத்தில் கல்லால மரநிழலில் வீற்றிருந்து அறம் நால்வர்க்கருளிய ஈசனது பரங்குன்றைத் தொண்டு செய்து ஏத்தினால் நம் தொல்வினை நம்மேல் நில்லாது கழியும்.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் கூறுவன மெய்யில்லாதன; ஆத லால் பரங்குன்று ஈசன் பாதத்தைப் பணிசெய்து தொழவே பழவினை பறக்கும் என்கின்றது. குண்டாய் - பருத்த உடலராய். மிண்டர் - வழக் குரைப்பார். பண்டு ஆல் நீழல் மேவிய எனப்பிரிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்
படமலிநாக மரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்
தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி
விடமலிகண்ட னருள்பெறுந்தன்மை மிக்கோரே.

பொழிப்புரை :

பரப்புமிக்க பொய்கையை உடைய சண்பை என்னும் சீகாழிப்பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தன் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டிய பரங்குன்றிறைவர் மீது பாடிய தொடை நயம் மிக்க பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் தம் துன்பம் நீங்கி விடமுண்ட கண்டனாகிய சிவபிரானின் அருள்பெறும் தகுதியில் மேம்பட்டவராவர்.

குறிப்புரை :

ஞானசம்பந்தன் சொன்ன பரங்குன்றப் பாடல் பத்தும் வல்லவர் தம்முடைய துன்பம் எல்லாம் தொலைந்து நீலகண்டனது அருளைப் பெறும் தகுதி உடையோராவர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப்
பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம்
நண்ணாவாகுந் நல்வினையாய நணுகும்மே.

பொழிப்புரை :

குளிர்ந்த திங்கள், சினம் மிக்க பாம்பு, ஆகாயத் திலிருந்து தாழ்ந்துவந்த கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, பெண்ணும் ஆணுமாய கோலத்தில் விளங்கும் பெருங்கருணையாளனாகிய சிவபிரான் பிரியாமல் எழுந்தருளியிருக்கும் திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் நண்ணா. நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களும் நண்ணும்./n

குறிப்புரை :

திங்களும் பாம்பும் கங்கையும் சிரத்தில் அணிந்து பெண்ணுமாய் ஆணுமாயிருக்கின்ற பேரருளாளனது கண்ணார் கோயிலைக் கைதொழுவார்களுக்கு இடரும் பாவமும் இல்லை; நல்வினை நணுகும் என்கின்றது. தண்ணார் திங்கள் - குளிர்ந்த மதி. இடர் பாவம் - துன்பமும் அதற்குக் காரணமாகிய பாவங்களும்./b

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும்
வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயன்மண்டிக்
கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு
செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய சந்தனம், கரிய அகில், குளிர்ந்த ஒளி பொருந்திய முத்து ஆகியன பொருந்தியதாய் வரும் தெளிந்த நீரையுடைய மண்ணியாற்றால் வளம் பெறும் வயல்களால் சூழப்பட்டு, கொத்துக்களாக விரிந்த மலர்களை உடைய சோலைகளில் குயில்கள் ஆடச்செவிகளைக் குளிர்விக்கும் வண்டுகள் செவ்வழிப் பண்பாடும் சீரோடு திகழ்வது, சிவபிரானது திருக்கண்ணார் கோயிலாகும்.

குறிப்புரை :

மண்ணியாறு வளம்படுக்கின்ற வயல்கள் நிறைந்து சோலையிலே குயில் ஆட வண்டுபாடுங் கண்ணார்கோயில் இது என்கின்றது. கந்து அமர் சந்து - மணம் பொருந்திய சந்தனம். கந்து - கந்தம். கார் அகில் - வயிரமாய் இருக்கும் கறுத்த அகில். கோகிலம் - குயில். செந்திசை - செவ்வழிப்பண்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின்
எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் னிடமென்பர்
கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக்
கல்லியலிஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே.

பொழிப்புரை :

பலவாக இயலும் தாளங்களை இசைத்துப் பூதகணங்கள் ஏத்த, பிணங்கள் இடப்படும் சுடுகாட்டில் நள்ளிராப்போதில் திருநடம்புரியும் ஈசனாகிய எம்பெருமானது இடம், காடுகளில் முல்லையும், மல்லிகையும் காட்டு மல்லிகையோடு பின்னி விளங்குவதும், கல்லால் இயன்ற வானளாவிய மதில்களில் மேகங்கள் அமர்ந்திருப்பதுமாகிய கண்ணார்கோயில் என்னும் தலமாகும் என்பர்.

குறிப்புரை :

பூதம் ஏத்த இரவில் நடஞ்செயும் ஈசன் இடம் இது என்பர். பல்லியல் பாணி - பலவாகிய இயல்பினையுடைய பாட்டு. எல்லி - இரவு. கொல்லை - முல்லைநிலம். மௌவல் - காட்டுமல்லிகை. கல்லியல் இஞ்சி - கல்லால் இயன்ற மதில். மஞ்சு - மேகம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம்
மருவளர்கோதை யஞ்சவுரித்து மறைநால்வர்க்
குருவளரால நீழலமர்ந்தீங் குரைசெய்தார்
கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே.

பொழிப்புரை :

மரங்கள் செழித்து வளர்ந்துள்ள காட்டில் வாழ்ந்த உயர்ந்த பெரிய யானையை, மணம் பொருந்திய மலர் மாலையை அணிந்துள்ள உமையம்மை அஞ்சுமாறு உரித்தவரும், அடர்ந்த பசுமை நிறம் பொருந்தி உயர்ந்து வளர்ந்துள்ள கல்லால மரநிழலில் அமர்ந்து வேதங்களின் உட்பொருளைச் சனகாதி முனிவர்க்கு இவ்வுலகத்தே உரைசெய்து உணர்த்தியவருமாகிய சிவபெருமான் கருவறையில் தங்கியிருக்கின்ற கோயிலை அடைந்தவர்கள் முழுமையான கல்வியறிவின் பயனை அடைந்தோராவர்.

குறிப்புரை :

உமையாள் அஞ்ச காட்டானையை உரித்துப் போர்த்தி யும் சனகாதியர்க்கு உபதேசித்தும் அமர்ந்த பெருமானது கண்ணார் கோயிலையடைந்தவர்கள் கற்றவர்கள் என்கின்றது. துங்கம் - உயர்ச்சி. வேழம் - யானை. மருவளர்கோதை - மணம்மிக்க மாலை போல்வாளாகிய உமாதேவி. நால்வர்க்கு - சனகாதியர்களுக்கு. உரு வளர் ஆலம் - தெய்வத்தன்மையாகிய அச்சம் வளர்கின்ற ஆலமரம். உரு - வடிவமுமாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச்
செறுமாவலிபாற் சென்றுலகெல்லா மளவிட்ட
குறுமாணுருவன் றற்குறியாகக் கொண்டாடும்
கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே.

பொழிப்புரை :

வஞ்சகம் பொருந்திய மனத்தோடு பெரிய உருவம் உடையவனாய், தனக்கு ஒப்பார் இல்லாதவனாய், தேவர்களைத் துன்புறுத்திய மாவலி என்ற அரக்கர் குல மன்னனிடம் சென்று அவனிடம் மூன்றடி மண் கேட்டு எல்லா உலகங்களையும் தனக்கே உரியவாய் அளவிட்டு அளந்த குள்ளமான பிரமசாரிய வடிவுடைய வாமனன், சிவபெருமானது வடிவாகத் தாபித்து வழிபட, அவனுக்கு அருள் செய்த நீல மறுப் பொருந்திய கண்டனாகிய சிவபிரான் மேவிய ஊர், கண்ணார் கோயிலாகும்.

குறிப்புரை :

மாவலியை வென்ற குறளனாகிய திருமால் வழிபட்ட இறைவன் எழுந்தருளியுள்ள இடம் கண்ணார்கோயில் என்கின்றது. மறு மாண் உருவாய் - குற்றம் பொருந்திய பெரிய வடிவமாய். செறும் - வருத்துகின்ற. குறுமாண் உருவன் - குறுகிய பிரமசாரி வடிவத்தை எடுத்த திருமால். தற்குறியாக - சிவபெருமானின் அடையாளமாக. கறுமா கண்டன் - கறுத்த பெரிய கழுத்தினை உடையவன். இத்தலத்திற்குப் பக்கத்தில் குறுமாணகுடி என்ற கிராமமும் இருப்பது அறிஞர்கள் அறிந்து இன்புறுதற்குரியது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

விண்ணவருக்காய் வேலையுணஞ்சம் விருப்பாக
உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும்
கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை
நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே.

பொழிப்புரை :

விண்ணவர்களைக் காத்தற் பொருட்டுக் கடலுள் தோன்றிய நஞ்சினை விருப்போடு உண்டவனை, தேவர்களுக்கு அமுதம் அளித்து எவ்வுலகிற்கும் பற்றுக்கோடாய் விளங்குபவனை, விளக்கமான கண்ணார் கோயிலுள் விளங்கும் கனிபோல்பவனை நண்ணி வழிபட வல்லவர்கட்கு, நமனால் வரும் துன்பங்கள் இல்லை.

குறிப்புரை :

தேவர்களுக்காக விஷத்தை விரும்பி உண்டவனை, அவர்களுக்கு அமுதம் அளித்து, எல்லா உலகிற்குங் கண்ணானவனை, கண்ணார்கோயில் கனியை அடையவல்லவர்க்கு எமன் பால் இன்னல் இல்லை என்கின்றது. வேலை - கடல். உண்ணவன் - உண்டவன். நடலை - துன்பம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்
பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்
தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்
கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.

பொழிப்புரை :

முன்னொரு காலத்தில் கௌதம முனிவரால் விளைந்த சாபத்தால் உடல் எங்கும் பெண் குறிகளோடு வருந்தித் தன்னை வழிபட்ட இந்திரனுக்குப் பின்னொரு நாளில் தேவர்கள் புகழ்ந்து போற்றுமாறு தண்ணருளோடு அச்சாபத்தைப் போக்கி அவற்றை ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்த சிவபிரான் எழுந்தருளிய இடம், கன்னியர்கள் நாள்தோறும் கூடி வந்து வழிபடும் தலமாகிய கண்ணார்கோயில் என்பர்.

குறிப்புரை :

கௌதம முனிவரால் இந்திரன் அடைந்த சாபத்தைத் தேவர்கள் வேண்டிக்கொள்ளப் போக்கி ஆயிரங்கண் அளித்த கடவுள் இடம் இது என்பர். இத்தலத்து வரலாற்றைக் குறிப்பது இது. சார்பு - இடம். துன் அமர் - நெருங்கியிருக்கின்ற.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணாத்தன் னீள்கழனெஞ்சில் நினைந்தேத்த
முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த
திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே.

பொழிப்புரை :

அன்போடு வழிபட்டால் ஆக்கம் பெறலாம் என்று எண்ணாத அறிவிலியாகிய இராவணன் கயிலையைப் பெயர்த்த போது அதன்கீழ் அகப்பட்டு நெருக்குண்டு நல்லறிவு பெற்று விரிந்த புகழை உடைய தன் திருவடிகளை அவன் நெஞ்சினால் நினைந்து போற்றிய அளவில் அவனுக்கு அழிக்கமுடியாத, ஒளியினை உடையவாளையும் தேரையும் முற்காலத்தில் வழங்கியருளிய சிவபிரான் வீற் றிருக்கும் தலமாகிய திருக்கண்ணார் கோயில் என்று கூறுவார் சிவலோகம் சேர்வர்.

குறிப்புரை :

இராவணன் கைலையின் கீழ் நெருக்குண்ணாதபடி திருவடியிலிருந்து தோத்திரிக்க, வாளும் தேருங் கொடுத்த இறைவன் எழுந்தருளியுள்ள இடத்தைப் பரவுவார் சிவலோகம் சேர்வார் என்கின்றது. பெருக்கு - ஆக்கம். பேதை - அறிவிலி. வரை - கைலைமலை. நெருக்குண்ணா - நெருக்குண்டு என்றுமாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

செங்கமலப்போ திற்றிகழ்செல்வன் றிருமாலும்
அங்கமலக்கண் ணோக்கரும்வண்ணத் தழலானான்
தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளம்
அங்கமலத்தோ டேத்திடவண்டத் தமர்வாரே.

பொழிப்புரை :

செந்தாமரைப் போதில் வீற்றிருக்கும் பிரமனும் திருமாலும் அழகிய தங்கள் கமலம் போன்ற கண்களால் நோக்கிக் காணுதற்கரிய அழலுருவாய் நின்ற பெருமான் தன் கருணை நிறைந்த கமலக் கண்களோடு வீற்றிருக்கும் தலமாகிய கண்ணார் கோயிலை அடைந்து அங்குத் தம் உள்ளத்தில் மலம் நீங்கப் பெற்றவராய் ஏத்திடுவோர் வானுலகில் இனிது உறைபவராவர்.

குறிப்புரை :

அயனும் மாலும் கண்ணால் நோக்க முடியாதவண்ணம் தீயுருவான சிவன்திகழும் கண்ணார்கோயிலை வணங்குவார் அமரர் உலகத்து இருப்பார் என்கின்றது. அங்கு அம் மலக்கண் நோக்கரும் வண்ணத்து - அவ்விடத்து அழகிய ஊனக்கண்ணால் நோக்க முடியாதவண்ணம். தங்கு அமலக் கண்ணார் கோயில் அங்கு அமலத்தோடு ஏத்திட - அவ்விடத்து மலரகிதராய்த் துதிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணும்
சோறுடையார்சொற்றேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன்
ஏறுடையன்பர னென்பணிவானீள் சடைமேலோர்
ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே.

பொழிப்புரை :

குலைகளை ஈனும் பனைமரத்தின் ஓலைகளால் வேயப்பட்ட தடுக்கை உடையாக உடுத்தித் திரியும் சமணரும், தாம் உண்ணும் சோற்றையே பெரிதெனக் கருதும் புத்தரும் கூறும் அறிவுரைகளைக் கேளாதீர். வெண்மையான பூநூல் அணிந்த மார்பினனும், ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், மேலானவனும், என்பு மாலை அணிபவனும், நீண்ட சடைமுடி மேல் கங்கையை அணிந்துள்ளவனுமாகிய தலைமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் தலம் கண்ணார் கோயிலாகும். அதனைச் சென்று தொழுமின்.

குறிப்புரை :

பனந்தடுக்கை உடுத்திய புத்தரும் சமணரும் சொல்லு கின்ற சொற்களைத் தெளியாதீர்கள்; சிவன் சேர்வது கண்ணார் கோயிலே என்கின்றது. தாறு இடு பெண்ணை - குலை தள்ளும் பெண்பனை. தட்டு - தடுக்கு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த
பூமருசோலைப் பொன்னியன்மாடப் புகலிக்கோன்
நாமருதொன்மைத் தன்மையுண்ஞான சம்பந்தன்
பாமருபாடல் பத்தும்வல்லார்மேற் பழிபோமே.

பொழிப்புரை :

அழகிய திருக்கண்ணார் கோயில் என்னும் தலத்துள் விளங்கும் சிவபெருமானை, கடல் ஒரு புடைசூழ்ந்ததும், பூக்கள் நிறைந்த சோலைகளை உடையதும் அழகியதாய் அமைந்த மாட வீடுகளைக் கொண்டதுமான புகலிப் பதியின் தலைவனும், பழமையான இறைபுகழை, நாவினால் மருவிப் போற்றுபவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிப் பரவிய ஓசையோடு திகழும் இப்பதிகப் பாடல்கள் பத்தினாலும் போற்றி வழிபட வல்லவர்கள், தம் மேல் வரும் பழிகள் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

கண்ணார் கோயிலைப்பற்றி ஞானசம்பந்தன் சொல் லிய பாடல் பத்தையும் வல்லார் மேல் பழி போம் என்கின்றது. காமரு - அழகிய. பாமரு பாடல் - பரந்துபட்டுச் செல்லும் ஓசை மருவிய பாடல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்
கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி
அரவாரரையா வவுணர்புரமூன் றெரிசெய்த
சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே.

பொழிப்புரை :

ஞானம் நிறைந்த கலை உணர்வோடு, கவிதைகள் பாடும் புலவர்களுக்கு ஒரு நாளும் கரவாத வள்ளன்மை மிக்க கைகளை உடைய கற்றவர்கள் வாழும் ஒலிமிக்க காழி மாநகரில் விளங்கும் பாம்பை இடையில் அணிந்துள்ள பரமனே! அசுரர்களின் முப்புரங்களையும் எரித்த அம்பை ஏந்தியவனே! என்று போற்றுபவர், தத்துவ ஞானத்தில் தலையானவராவர்.

குறிப்புரை :

கவிவாணர்க்கு ஒருநாளும் கரவாதபடி வழங்குங் கற்றவர் சேரும் காழியரசே! திரிபுரம் எரித்த செல்வா என்பவர்களே தத்துவ ஞானத்தில் தலையானவர்கள் என்கின்றது. உரவு - ஞானம். கரவா - மறைக்காத. கலி - ஒலி. அரவு ஆர் அரையா எனப்பிரிக்க. சரவா - அம்பை உடையவனே.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி
மைசேர்கண்டத் தெண்டோண்முக்கண் மறையோனே
ஐயாவென்பார்க் கல்லல்களான வடையாவே.

பொழிப்புரை :

சூழ்ந்து மொய்த்தலை உடைய வண்டுகள் தங்கி உண்ணும் மும்மதங்களையும், தொங்குகின்ற வாயையும், முரண்படு தலையும் உடைய களிற்று யானையின் கை போல வாழை மரங்கள் காய்களை ஈனும் ஒலி நிறைந்த காழிப்பதியில், நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் மூன்று கண்களையும் உடையவனாய் விளங்கும் மறையோனே! தலைவனே! என்பவர்களை அல்லல்கள் அடையா.

குறிப்புரை :

காழிமறையோனே ஐயா என்பவர்களுக்கு அல்லல்கள் அடையா என்கின்றது, யானையின் கையைப்போல வாழைக்குலை ஈனும் காழி எனவளம் உரைத்தவாறு. மும்மதம் - கபோலம், கரடம், கோசம் என்ற மூன்றிடத்திலும் பொருந்திய மதம். நால் வாய் - தொங்குகின்ற வாய். மை - விடம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக்
களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி
அளகத்திருநன் னுதலிபங்கா வரனேயென்
றுளகப்பாடு மடியார்க்குறுநோ யடையாவே.

பொழிப்புரை :

முறுக்கவிழ்ந்த தாமரை மலர்கள் பிலிற்றிய தேன் ஓடுகின்ற கழிகள் சூழப் பெற்றதும், சுண்ணாம்பினால் இயன்ற அழகு பொருந்திய மதில்களை உடையதுமான, ஆரவாரம் மிக்க காழிப்பதியில் அழகிய கூந்தலையும் நல்ல நெற்றியையும் உடைய உமையம்மையின் கணவனே, அரனே! என்று மனம் உருகிப் பாடும் அடியவர்களை மிக்க துன்பங்கள் எவையும் அடையா.

குறிப்புரை :

காழியில் எழுந்தருளியிருக்கின்ற உமையொரு பாகனை அரனே என்று மனம் இளகப்பாடுகின்ற அடியார்கட்குத் துன்பம் சேரா என்கிறது. இளகக் கமலத்து ஈன்கள் இயங்கும் கழி - முறுக்கவிழ தாமரையிலிருந்து உண்டான கள் ஓடுகின்ற கழி. களகப்புரிசை - சுண்ணாம்புச் சாந்து பூசப்பெற்ற மதில். கவின் - அழகு. அளகம் - கூந்தல். நல்நுதலி - நல்ல நெற்றியையுடையாளாகிய பார்வதி. உள் அகப்பாடும் - மனம் பொருந்தப்பாடுகின்ற.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

எண்ணார்முத்த மீன்றுமரகதம் போற்காய்த்துக்
கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப்
பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு
நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே.

பொழிப்புரை :

அழகிய கமுக மரங்கள், எண்ணத்தில் நிறையும் அழகிய முத்துக்களைப் போல அரும்பி மரகதம் போலக் காய்த்துப் பவளம் போலப் பழுக்கும் ஆரவாரம் மிக்க காழிப்பதியில் விளங்கும் பெண்ணோர் பாகனே! பித்தனே! பிரானே! என்பவர்களை வினைகள் நண்ணா. நாள்தோறும் அவர்கட்கு இன்பங்கள் வந்து சேரும்.

குறிப்புரை :

காழியின்கண்ணுள்ள பெண்ணொரு பாகனே பித்தா என்பார்க்கு வினைகள் நண்ணா, இன்பம் நணுகும் என்கின்றது. எண்ணார் முத்தம் - எண்ணுதற்கரிய முத்தம். கமுகு முத்தம் போல அரும்பி, மரகதம்போல் காய்த்து, பவளம்போல் கனியும் காழி என வளங்கூறியது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

மழையார்சாரற் செம்புனல்வந்தங் கடிவருடக்
கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி
உழையார்கரவா வுமையாள்கணவா வொளிர்சங்கக்
குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே.

பொழிப்புரை :

மேகங்கள் தங்கிய குடதிசை மலைச்சாரல்களி லிருந்து சிவந்த நிறமுடைய தண்ணீர் வந்து அடிகளை வருட, அதனால் மூங்கில் போன்று பருத்த கரும்புகளில் கணுக்கள் வளரும் சோலைகளை உடைய ஒலிமிக்க சீகாழிப்பதியில் எழுந்தருளிய மானேந்திய கையனே, உமையம்மையின் கணவனே! ஒளி பொருந்திய சங்கக் குழையை அணிந்தவனே என்று கூறிப் போற்ற வல்லவர்கள் குணம் மிக்கவராவர்.

குறிப்புரை :

மான் ஏந்தி, மங்கை கணவா, சங்கக் குழையா எனக் கூறவல்லவர்கள் குணமுடையராவர் என்கின்றது. மலைச் சாரலில் மழைபெய்து, செந்நீர் வந்து அடிவருட கரும்பு தூங்கும் சோலைக் காழி என வளங் கூறிற்று. கழையார் கரும்பு - கரும்பினுள் ஒரு சாதி. மூங்கிலை ஒத்த வளமான கரும்பெனினும் ஆம். உழை - மான். கரவா - கையை உடையவனே.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

குறியார்திரைகள் வரைகணின்றுங் கோட்டாறு
கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி
வெறியார்கொன்றைச் சடையாவிடையா வென்பாரை
அறியாவினைக ளருநோய்பாவம் மடையாவே.

பொழிப்புரை :

தாள ஒலிக் குறிப்போடு கூடிய அலைகளை உடைய, மலைகளிலிருந்து வரும் அருவிகள் இரு கரைகளுக்கும் உள்ளடங்கிய ஆறாக அடித்துக் கொண்டு வரும் மிளகின் கொடித்தண்டுகளின் சுவையைத் தன் தண்ணீருக்கு வழங்கும். ஆரவாரம் மிக்க காழிப்பதியில் எழுந்தருளிய மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்த சடையினனே! விடையை ஊர்ந்து வருபவனே! என்று கூறுபவரை வினைகள் அறியாது அகலும். அவர்களை அரிய நோய்கள் பாவங்கள் அடைய மாட்டா.

குறிப்புரை :

கொன்றைச் சடையா, விடையா என்பாரை வினைகள் அறியவேமாட்டா; நோய்களும் பாவங்களும் அடையா என்கின்றது. மலைகளிலிருந்து குறித்தலை உடைய அலைகளோடு கூடிய கரையை யுடைய ஆறுகள், மிளகில் இருந்து கழிக்கப்பட்ட சம்பிரசத்தைக் கொடுக்கும் என காழிச் சிறப்பு தெரிவித்தது. வெறி - மணம். சம்பு - தண்டு இரசம் - சுவை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு
கலங்கள் வந்து கார்வயலேறுங் கலிக்காழி
இலங்கைமன்னன் றன்னையிடர்கண் டருள்செய்த
சலங்கொள்சென்னி மன்னாவென்னத் தவமாமே.

பொழிப்புரை :

வலிய சங்குகளை உடைய கடலினது வெள்ளத்தால் மோதப்பட்டுத் தோணிகள் வந்து கரிய வயலின்கண் சேரும் ஒலி மிக்க சீகாழியில் எழுந்தருளிய, இலங்கை மன்னன் இராவணனை முதலில் துன்புறுத்திப்பின் அருள் செய்த, கங்கை சூடிய திருமுடியினை உடைய மன்னவனே! என்று சிவபிரானைப் போற்றத் தவம் கைகூடும்.

குறிப்புரை :

இலங்கை மன்னர்க்கு அருள்செய்த அரசே! என்று சொல்லத் தவம் உண்டாம் என்கின்றது. ஓதத்தால் உந்தப்பட்டு மரக்கலங்கள் வயலைச் சாரும் காழி என்க. ஆர்கலி - கடல். கலங்கள் - தோணிகள். சலம் - கங்கை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்
காவிக்கண்ணார் மங்கலமோவாக் கலிக்காழிப்
பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்
மேவிப்பரவு மரசேயென்ன வினைபோமே.

பொழிப்புரை :

ஓடைகளில் உள்ள தாமரை மலர்களில் வாழும் அன்னங்கள் நடமாடும் உப்பங்கழிகள் சூழ்ந்திருப்பதும், நீலமலர் போன்ற கண்களை உடைய மகளிரது மங்கல ஒலி ஓவாது கேட்பதுமாகிய செழிப்புமிக்க சீகாழியில் தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் வந்து பரவும் அரசனாக விளங்கும் பெருமானே என்று சொல்ல நம் வினைகள் போகும்.

குறிப்புரை :

அயனும் மாலும் வணங்கும் அரசே என்று சொல்ல வினைபோம் என்கின்றது. பொய்கைகளிலுள்ள தாமரைகளில் அன்னம் நடமாடுகின்ற உப்பங் கழிகளைச் சுற்றிலும் மகளிர் மங்கல ஒலி நீங்காத காழி என்க. ஆவி - வாவி. காவிக் கண்ணார் - நீலமலர் போலும் கண்ணையுடைய பெண்கள். பூவில் தோன்றும் புத்தேள் - பிரமன். மேவி - விரும்பி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

மலையார்மாட நீடுயரிஞ்சி மஞ்சாருங்
கலையார்மதியஞ் சேர்தருமந்தண் கலிக்காழித்
தலைவாசமணர் சாக்கியர்க்கென்று மறிவொண்ணா
நிலையாயென்னத் தொல்வினையாய நில்லாவே.

பொழிப்புரை :

மலை போலுயர்ந்த மாட வீடுகளின், மேகங்கள் தவழும் நீண்டுயர்ந்த மதில்களில் கலைகள் நிறைந்த மதி வந்து தங்கும் அழகிய குளிர்ந்த ஒலிமிக்க காழிப் பதியின் தலைவனே! சமண புத்தர்களால் என்றும் அறிய ஒண்ணாத நிலையினனே! என்று போற்ற நம் தொல்வினைகள் நில்லா.

குறிப்புரை :

காழித்தலைவா, புறச்சமயிகளால் அறியப்படாதவனே என்று சொல்ல, பழவினை நில்லா என்கின்றது. மலையார் மாடம் - மலையையொத்த மாடங்கள். நீடு உயர் இஞ்சி - நீண்ட உயர்ந்த மதில். மஞ்சு - மேகம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்
கடிகொள்தென்றல் முன்றினில்வைகுங் கலிக்காழி
அடிகள்தம்மை யந்தமின்ஞான சம்பந்தன்
படிகொள்பாடல் வல்லவர் தம்மேற் பழிபோமே.

பொழிப்புரை :

தேன் மணங்கொண்ட வாவியில் மலர்ந்த செங்கழுநீர்ப் பூவின் மகரந்தங்களில் படிந்து அவற்றின் மணத்தைக் கொண்ட தென்றல், முன்றிலில் வந்து உலாவும் ஒலிமிக்க காழிப்பதியில் வீற்றிருக்கும் அடிகளை, முடிவற்ற புகழை உடைய ஞானசம்பந்தன் இவ்வுலகிடைப் போற்றிப் பாடிய பாடல்களை வல்லவர்கள் மேல் வரும் பழிகள் போகும்.

குறிப்புரை :

ஞானசம்பந்தன் காழி அடிகளைப் பாடிய பாடல் வல்லவர் பழி நீங்கும் என்கின்றது. தென்றல் செங்கழுநீர்ப் பூவில் அளைந்து முன்றிலில் உலாவும் காழி என்க. வடி - மா. கொங்கு - தேன். கடி கொள் - மணத்தைக் கொள்ளுகின்ற. படிகொள் பாடல் - ஒப்பினைக்கொண்ட பாடல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

தோடுடையானொரு காதிற்றூய குழைதாழ
ஏடுடையான் றலைகலனாக விரந்துண்ணும்
நாடுடையா னள்ளிருளேம நடமாடும்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

ஒரு காதில் தோடும் பிறிதொரு காதில் தூய குழையும் தாழ்ந்து தொங்கத், தாமரை மலரில் தங்கும் பிரமனின் தலையோட்டை உண் கலனாகக் கொண்டு இரந்துண்ணும் நாடுகளை உடையவன். நள்ளிருள் யாமத்தில் மகிழ்வோடு சுடுகாட்டில் நடனம் ஆடுபவன். அத்தகையோன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.

குறிப்புரை :

ஒருகாதில் தோடுடையான், ஒருகாதில் குழைதாழ மலரும் அணிந்தவன், கபாலத்தில் இரந்துண்ணும் நாட்டையுடையவன், நள்ளிருளில் நடமாடுதற்குரிய காட்டையுடையவன். அத்தகைய இறைவன் காதலிக்கும் இடம் கழுக்குன்று என்கின்றது. ஏடு - மலர். நள்ளிருள் - நடு இராத்திரி. ஏமம் - யாமம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகம்
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அகழ்ந்து அணியவல்லவன். வாமனனாக அவதரித்த திருமாலின் கூர்மாவதார ஆமையோட்டினை அணிகலனாகக் கோத்துப் பூணவல்லவன். முறுக்கிய சடைமுடிமேல் ஒப்பற்ற கங்கை, கொன்றை மாலை ஆகியவற்றை விரும்பி அணிபவன். பெண்ணின் நல்லவளான உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் காணுமாறு செய்தருளியவன். அத்தகையோன் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.

குறிப்புரை :

பன்றிக்கொம்பைக் கேணவல்லவனும், ஆமையோட்டைப் பூணவல்லவனும், கொன்றைமாலையணிபவனும், உமையையொருபாகம் உடையவனும் ஆகிய இறைவன் கோயில்கழுக்குன்று என்கின்றது. கேண - சிதைக்க. கேழல் - பன்றி. குறள் ஆமை - சிறிய ஆமை. ஈண்டு அதன் ஓட்டினைக் குறிக்கின்றது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்தும்
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

தேனை அகத்தே இருந்து வண்டுகள் உண்ட, விளங்கிய கொன்றை மாலையைச் சூடிய தலையில் மதியைச் சூடி, வானகத்தவரும், வையகத்தவரும் தொழுதேத்தும் வண்ணம் சுடுகாட்டைத் தனக்கு இடமாகக் கொண்ட இறைவன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம்.

குறிப்புரை :

கொன்றையையும், மதியையும் அணிந்து விண்ணவரும் மண்ணவரும் துதிக்கநின்ற இறைவன் இடம் இது என்கின்றது. தேன் அகத்து ஆர் வண்டு - தேனைப் பூவினகத்தில் இருந்து உண்ணும் வண்டு. கொன்றை தான் நக தார் தண்மதிசூடி - கொன்றை மலர, அம்மாலையைத் தண் பிறையோடு சூடி. கானகத்தான் - காட்டில் உறைபவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

துணையல்செய்தான் றூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணினல்லாளை யொருபாகம்
இணையல்செய்யா விலங்கெயின்மூன்று மெரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

வண்டுகள் யாழ்போல் ஒலித்து மொய்க்கும் தூய ஒளி நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனும், பெண்ணின் நல்லவளான உமையம்மையைக்கூடி அவளைத்தன் உடலில் ஒரு பாகமாகப் பிணைத்திருப்பவனும், தன்னோடு இணைந்து வாராத புரங்கள் மூன்றையும் எரி உண்ணுமாறு கணையை விடுத்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில், கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை :

கொன்றையணிந்து, உமையை ஒருபாகத்து வைத்து, திரிபுரமெரித்த இறைவன் இடம் இது என்கின்றது. துணையல் - இரண்டிரண்டாகச் சேர்த்துக் கட்டும் மாலை. பிணையல் - புணர்தல். இணையல் - நட்புக்கொள்ளல். கணையல் செய்தான் - அம்பெய்தான். நான்கு அடிகளிலும் அல் சாரியை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணன் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

நச்சுப் பையையுடைய பாம்போடு திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வெண்பிறையையும், விரிந்த கொன்றையையும் முடியில் சூடியவனும், விடம் பொருந்தியமிடற்றினை உடைய தலைமையாளனும், மானேந்திய கையை உடையவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை :

அரவும் திருநீறும் பழகும் திருமேனியுடையவனும், பிறை கொன்றை இவற்றையணிந்த நீலகண்டனும், மானேந்திய கையையுடையவனும் ஆகிய சிவபெருமான் இடம் கழுக்குன்று என்கின்றது. பை - படம். மை - விடம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லா முள்கிநின்றாங்கே யுடனாடும்
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

விரிந்த சடைமுடியின்மேல் வெள்ளமாகப் பெருகி வந்த கங்கையின் அனைத்து நீரையும் விரிந்த கொன்றை மாலையோடு சூடியிருப்பவனும், தனது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளை ஏத்தித் துதிக்கும் சிறிய தொண்டர்களின் உள்ளமெல்லாம் நிறைந்து, அவர்கள் தியானித்து நின்று ஆடத்தானும் உடன் ஆடும் கள்ளம் வல்லவனுமாகிய, சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை :

விரிசடைமேல் கங்கையையும் கொன்றையையும் சூட வல்லவனும், அடிபணியும் அடியார் உள்ளங்களில் எல்லாம் உடனாய் நின்று ஆடும் கள்ளனுமாகிய பெருமான் காதலிக்கும் கோயில் கழுக்குன்று என்கின்றது. வெள்ளம் - கங்கை. குரை கழல் - ஒலிக்கும் வீரக்கழல். உள்கி - எண்ணி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

ஆதல்செய்தா னரக்கர்தங்கோனை யருவரையின்
நோதல்செய்தா னொடிவரையின்கண் விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகம்
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

அரக்கர் கோனை அரிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி, நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி, அவனை நோதல் செய்தவனும், பிறகு அவனுக்கு ஆக்கம் வழங்கியவனும், பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை :

கயிலையைத் தூக்கிய இராவணனை அழியச் செய்தவனும், உமையை ஒரு பாகத்திருத்திக் காதல் செய்தவனும் ஆகிய இறைவன் இடம் இது என்கின்றது. நொடிவரை - நொடிப்பொழுது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

இடந்தபெம்மா னேனமதாயு மனமாயும்
தொடர்ந்தபெம்மான் றூமதிசூடி வரையார்தம்
மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

அடிமுடி காணப் பன்றி உருவோடு நிலத்தை அகழ்ந்து சென்ற திருமாலும், அன்னமாய்ப் பறந்து சென்ற நான்முகனும், தொடர்ந்த பெருமானாய், தூய மதியை முடியிற் சூடியவன், மலைமகளின் தலைவன், வார்கழலணிந்த திருவடியை உயர்த்திக் காலனைக் காய்ந்தவன் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை :

திருமால் பன்றியாய்த் தோண்டிக் காணவும், பிரமன் அன்னமாய்ப் பறந்து தொடரவும் நின்ற பெருமான், காலனைக் கடந்த பெருமான் காதல்செய்த இடம் இது என்கின்றது. இடந்த - தோண்டிய. ஏனம் - பன்றி. கடந்த - வென்ற.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

தேயநின்றான் றிரிபுரங்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாம்
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கீயர்
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

முப்புரங்களை அழியுமாறு செய்தவனும், பெருகிவந்த கங்கை தன் சடை மேல் பாய நின்றவனும், பலரும் புகழ்ந்து போற்ற உலகனைத்தும் ஊழி இறுதியில் அழியுமாறு நின்றவனும், வலிய சமண் குண்டர்களும், புத்தர்களும் கெடுமாறு நின்றவனும் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றமாகும்.

குறிப்புரை :

திரிபுரம் தேயவும், கங்கை சடைமேலே பாயவும் நின்ற பெருமான், புறச்சமயிகள் காயநின்றவன் காதல் செய்யுமிடம் கழுக்குன்று என்கின்றது. தேய - அழிய. சாய - கெட. சாக்கியர் என்பது சந்த நோக்கி நீண்டது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் றமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடியபத்து மிவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

பொழிப்புரை :

நெற்றியில் கண்ணுடையவனாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயிலாகிய திருக்கழுக்குன்றத்தைப் புகழ் பொருந்திய ஞானசம்பந்தன் பண் அமைதியோடு பாடிய தமிழ் மாலையாகிய பத்துப் பாடல்களையும் பாடிப் போற்றுபவர் புண்ணியராய்த் தேவர்களோடு வானுலகம் புகுவர்.

குறிப்புரை :

ஞானசம்பந்தன் பாடிய கழுக்குன்றப் பதிகத்தைப் பண்ணியல்பால் பாடிய பத்தும் வல்லவர் புண்ணியராய்த் தேவரோடு உடன் உறைவர் என்கின்றது.

பண் :

பாடல் எண் : 1

ஆட லரவசைத்தா னருமாமறை தான்விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகா டமர்ந்தபிரான்
ஏடவிழ் மாமலையா ளொருபாக மமர்ந்தடியா ரேத்த
ஆடிய வெம்மிறையூர் புகலிப் பதியாமே.

பொழிப்புரை :

படம் எடுத்து ஆடும் பாம்பினை இடையில் கட்டியவனும், அரிய பெரிய வேதங்களை அருளிச் செய்தவனும், கொன்றை மலர் மாலையைச் சூடிய செஞ்சடை முடியை உடையவனும், சுடுகாட்டைத் தனது இருப்பிடமாகக் கொண்டு உறைபவனும், இதழ் அவிழும் மலர்கள் பூத்த பெரிய இமயமலை அரசனின் புதல்வியாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று அடியவர் போற்ற நடனம் ஆடியவனும் ஆகிய எம் இறைவனது ஊர் புகலிப் பதியாகும்.

குறிப்புரை :

அரவணிந்து, வேதம் விரித்து, கொன்றை சூடி, சுடு காட்டில் அமர்ந்த பிரான் உமையொருபாகத்திருக்க ஆடிய இறைவன் ஊர் புகலிப்பதியாம் என்கின்றது. அசைத்தான் - கட்டியவன். ஏடு - இதழ். புகலி - சீகாழி.

பண் :

பாடல் எண் : 2

ஏல மலிகுழலா ரிசைபாடி யெழுந்தருளாற் சென்று
சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய
ஆலை மலிபுகைபோ யண்டர்வானத்தை மூடிநின்று நல்ல
மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே.

பொழிப்புரை :

மயிர்ச் சாந்தணிந்த கூந்தலினை உடைய மகளிர் காலையில் எழுந்து இசை பாடிக்கொண்டு இறையருள் பெறும் வேட்கையோடு சென்று சோலையின்கண் விளங்கும் சுனையில் துளைந்து நீராடித் துதி செய்ய, கரும்பு ஆலைகளில் நிறைந்தெழுந்த புகை சென்று தேவர்கள் உறையும் வானகத்தை மூடி நின்று காலையை நல்ல மாலைப் போதாகச் செய்வது புகலிப்பதியாம். மகளிர் நீராடித்துதி செய்ய விளங்குவது புகலிப்பதி என முடிவு காண்க.

குறிப்புரை :

மகளிர் விடியலில் இசைபாடிக்கொண்டே எழுந்து சுனையில் நீராடித் தோத்திரிக்க, ஆலைப்புகைபோய் ஆகாயத்தை மறைத்து மாலைக்காலத்தைச் செய்யும் புகலி என்கின்றது. ஏலம் - மயிர்ச்சாந்து. அண்டர் - தேவர்.

பண் :

பாடல் எண் : 3

ஆறணி செஞ்சடையா னழகார்புர மூன்றுமன்று வேவ
நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை யெம்மிறைவன்
பாறணி வெண்டலையிற் பகலேபலி யென்றுவந்து நின்ற
வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே.

பொழிப்புரை :

கங்கை சூடிய செஞ்சடையினை உடையவனும், அழகமைந்த முப்புரங்களைத் தீயால் வேவச் செய்தவனும், திருநீற்றைத் தன் திருமேனியில் அழகாகப் பூசியவனும், மேல்நோக்கிய சிவந்த சடையை உடைய எம் இறைவனும், பருந்து சூழும் வெள்ளிய தலையோட்டை ஏந்திப் பகலில் பலி இடுக என்று வந்து நிற்பவனும் வேறுபாடு உடையனவாய்ப் புனையப் பெற்ற கோலத்தினனும் ஆகிய சிவபிரான் விரும்பும் தலம் புகலியாகும்.

குறிப்புரை :

திரிபுரம்வேவ, திருநீற்றை அணியாகப்பூசிய இறைவன் விரும்பும் இடம் புகலி என்கின்றது. அணியாக - ஆபரணமாக. பாறு - பருந்து.

பண் :

பாடல் எண் : 4

வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கண் மூன்றுங்
கொள்ள வெரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்
அள்ளல் விளைகழனி யழகார்விரைத் தாமரைமே லன்னம்
புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே.

பொழிப்புரை :

பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச் சடைமேல் கரந்தவனும், பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரி மடுத்தவனும் ஆகிய சிவபிரான் குறைவிலா நிறைவோடு உறையும் கோயில், சேறு நிறைந்த வயல்களில் முளைத்த அழகிய மணங்கமழும் தாமரை மலர்கள் மேல் அன்னமும் பிற பறவைகளும் வந்து தங்கிச் செல்லும் புகலிப் பகுதியாகும்.

குறிப்புரை :

கங்கையைச் சடையிற்கரந்தவன் திரிபுரம் தீமடுத்தவன் உறையும்கோயில் புகலிப்பதி என்கின்றது. விரவார் - பகைவர். அள்ளல் - சேறு. தாமரைமேல் அன்னமும் பறவைக் கூட்டங்களும் தங்கி எழும் புகலி என்க.

பண் :

பாடல் எண் : 5

சூடு மதிச்சடைமேற் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம்
ஆடு மமரர்பிரா னழகாருமை யோடுமுடன்
வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்
பாட வினிதுறையும் புகலிப் பதியாமே.

பொழிப்புரை :

மதி சூடிய சடையின் மீது வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர்களைப் பொருந்துமாறு அணிந்து நடனம் ஆடும் தேவர் பிரானும், அழகிய உமையம்மையோடு உடனாய் வேட்டுவக் கோலத்தோடு தோன்றி அருச்சுனற்கு அருள்புரிய நடந்த வேறுபாடுடையவனும் ஆகிய சிவபிரானின் குணங்களைப் போற்றித் தொண்டர்கள் பாட அப்பெருமான் இனிதுறையும் பதிபுகலியாகும்.

குறிப்புரை :

மதிசூடிய சடைமேல் கொன்றை நெருங்க நடனம் ஆடும் பெருமானும், உமையோடும் வேடனாகி நடந்த இறைவனும் ஆகிய இவர் புகழைத் தொண்டர்கள் புகழ்ந்துபாட இனிதுறையும் பதிபுகலியாம் என்கின்றது.

பண் :

பாடல் எண் : 6

மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரிவண்டினங்கள் [ வந்து
நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்
அந்திசெய் மந்திரத்தா லடியார்கள் பரவியெழ விரும்பும்
புந்திசெய் நான்மறையோர் புகலிப் பதிதானே.

பொழிப்புரை :

இளமை குன்றாத மரங்களை உடைய அழகிய சோலையின்கண் மலர்ந்த பூக்களின் தேனில் பரவிய வரி வண்டுகள் வந்து வளரும் இசையைப் பாட நடம் பயிலும் பெருமானது இடம், அந்திக் காலங்களில் செய்யும் சந்தியாவந்தன மந்திரங்களால் அடியார்களாய்ப் போற்றுவதற்கு நான்கு வேதங்களிலும் வல்ல அந்தணர் விருப்போடு தமது புந்தியில் நினைக்கும் புகலிப்பதியாகும்.

குறிப்புரை :

சோலையில் வண்டினங்கள் இசைபாட நடம்புரியும் நம்பன் இடம் புகலி என்கின்றது. மைந்து - இளமை. நந்து இசை - வளரும் இசைகளை. அந்திசெய் மந்திரம் - சந்தியா மந்திரம். பரவி - வணங்கி. அந்தி - காலை அந்தி, நண்பகல் அந்தி, மாலை அந்தி என்பன.

பண் :

பாடல் எண் : 7

மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேற் றிங்கள்
கங்கை தனைக்கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்
செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்
அங்கையி னாற்றொழுவா ரவலம் மறியாரே.

பொழிப்புரை :

உமையம்மையைத் தனது திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்பவனும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவனும், நீண்ட சடைமேல் திங்களையும் கங்கையையும் அணிந்தவனும், விடக் கறை பொருந்தியமிடற்றினனும் ஆகிய சிவபிரான் கருதி உறையும் இடமாகிய சிவந்த கயல் மீன்கள் திகழும் நீண்ட வயல்களோடு விளங்கும் திருப்புகலிக்குச் சென்று தம் அழகிய கைகளைக் குவித்து வணங்குபவர் துன்பங்கள் நீங்கப்பெறுவர்.

குறிப்புரை :

உமாதேவியை ஒருபால் விரும்பிய மழுவாளனும், கங்கையைச் சடைமேல் மறைத்து வைத்த நீலகண்டனுமாகிய இறைவன் விரும்பிய புகலியைத் தொழுவார்கள் துன்பம் அறியார்கள் என்கின்றது. அவலம் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 8

வில்லிய நுண்ணிடையா ளுமையாள் விருப்பனவ னண்ணும்
நல்லிட மென்றறியா னலியும் விறலரக்கன்
பல்லொடு தோணெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள்
ஒல்லை யருள்புரிந்தா னுறையும் புகலியதே.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய நுண்ணிய இடையினை உடைய உமையவளிடம் பெருவிருப்பினனாகிய சிவபிரான் எழுந்தருளிய மேம்பட்ட இடம் என்று கருதாது கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனாகிய இராவணனின் பற்களும் தோள்களும் நெரியுமாறு கால்விரலை ஊன்றி அடர்த்த அளவில் அவன் தன்னைப் புகழ்ந்து பாடக்கேட்டுக் கையில் ஏந்திப் போர் செய்யும் வாளை விரைந்து அருள்புரிந்தவனாகிய சிவபிரான் உறையுமிடம் திருப்புகலியாகும்.

குறிப்புரை :

இறைவன் உமாதேவியோடு எழுந்தருளியிருக்கின்ற இடம் இது என்று அறியாதவனாய்த் தூக்கிய இராவணனை அடர்த்து அருள் புரிந்தான் உறையும் இடம் புகலி என்கின்றது. வில்லிய - ஒளிபொருந்திய, பாடலும் - சாமவேதத்தைப் பாடலும். ஒல்லை - விரைவு.

பண் :

பாடல் எண் : 9

தாதலர் தாமரைமே லயனுந் திருமாலுந் தேடி
ஓதியுங் காண்பரிய வுமைகோ னுறையுமிடம்
மாதவி வான்வகுள மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே.

பொழிப்புரை :

மகரந்தம் விரிந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் தேடியும் புகழ்ந்தும் காண்டற்கு அரியவனாய் நின்ற உமைமணவாளனாம் சிவன் உறையுமிடம், மாதவி, வானளாவ உயர்ந்த மகிழமரம் ஆகியன மலர்ந்து எங்கும் மணம் பரப்புமாறு பொருந்திய மலர் விரிந்த சோலைகள் சூழ்ந்த புகலிப்பதியாகும்.

குறிப்புரை :

அயனும் மாலும் தேடியும், ஓதியும் காணுதற்கரிய உமாபதி உறையும் இடம் புகலி என்கின்றது. தாது - மகரந்தம். மாதவி - குருக்கத்தி. வகுளம் - மகிழ்.

பண் :

பாடல் எண் : 10

வெந்துவர் மேனியினார் விரிகோவண நீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லா மவையோர் பொருளென்னேல்
வந்தெதி ரும்புரமூன் றெரித்தா னுறைகோயில் வாய்ந்த
புந்தியி னார்பயிலும் புகலிப் பதிதானே.

பொழிப்புரை :

கொடிய மருதத்துவராடை உடுத்த மேனியினராகிய புத்தர்களும் விரிந்த கோவணம் உடுப்பதையும் துறந்த திகம்பர சமணரும் சொல்லும் அழிவுதரும் ஞானங்களாகிய அவற்றை ஒரு பொருளாகக் கொள்ளாதீர். தம்மை வந்தெதிர்த்த திரிபுரங்களை எரித்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், பொருந்திய அறிவு உடையவர் வாழும் புகலிப் பதியாகும். அதனைச் சென்று தொழுமின்.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் கூறும் ஞானத்தை ஒரு பொரு ளாகக்கொள்ளேல்; திரிபுரம் எரித்தான் உறையும் கோயில் புகலியாம் என்கின்றது. வெம் துவர் - கொடிய துவராடை. கோவணம் நீத்தார் - கோவணத்தையும் துறந்தவர்கள். அந்தர ஞானம் - இடையீடு உற்ற ஞானம்.

பண் :

பாடல் எண் : 11

வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்த மிகுவாசப்
போதனைப் போன்மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன் றமிழ்மாலை நாவில்
ஓதவல் லாருலகி லுறுநோய் களைவாரே.

பொழிப்புரை :

வேத கீதங்களை உணர்ந்து வாழ்பவர் தொழுது ஏத்தவும், மிக்க மணமுடைய தாமரை மலர் மேல் உறையும் நான்முகனைப் போல விளங்கும் மறையவர் போற்றவும், விளங்கும் புகலியுள் உறையும் சிவபிரானை ஞானம் மிகும் சம்பந்தன் பாடிய இத்தமிழ் மாலையை நாவினால் ஓதி வழிபட வல்லவர் மேம்பட்ட பிறவிப் பிணியை நீக்கிவிடுவர்.

குறிப்புரை :

வேதகீதம் உணர்ந்தவர்களாய்ப் பிரமனைப் போன்ற பிராமணர்கள் வாழ்கின்ற புகலியில் இருக்கும் சிவபெருமானைக் குறித்து, ஞானசம்பந்தன் சொன்ன மாலை ஓதவல்லார் நோய் நீங்குவார்கள் என்கின்றது. உணர்வாணர் - உணர்தலால் வாழ்பவர். வாசப் போதனை - வாசனை பொருந்திய தாமரைப் பூவில் இருக்கின்ற பிரமனை. உறுநோய் - மிக்க நோய்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

பாடல னான்மறையன் படிபட்ட கோலத்தன் றிங்கள்
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும்மெரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி
ஆடல னாதிரையன் ஆரூ ரமர்ந்தானே.

பொழிப்புரை :

திருவாரூரின்கண் எழுந்தருளிய இறைவன் பாடப்படும் நான்கு வேதங்களை அருளியவன். ஒப்பற்ற தோற்றத்தை உடையவன். திங்களை முடியிற் சூடியவன். இலை வடிவமான முத்தலைச் சூலத்தை வலக்கரத்தே ஏந்தித் தன் பகைவராக இருந்த அசுரர்களின் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவன். மிக்க எரியைக் கையில் ஏந்தி நள்ளிரவில் நடம்புரிபவன். திருவாதிரை நாளை உகந்தவன்.

குறிப்புரை :

இப்பாட்டு, தியாகேசப் பெருமானது உரை, கோலம், அணி, வீரம் முதலியவற்றை விளக்கியருளுகிறது. பாடலன் நான் மறையன் - பாடப்பெறுகின்ற நான்கு வேதங்களையுடையவன். அன் தவிர் வழிவந்த சாரியை. அன்றிப் பாடலன் நான்மறையன் எனப் பிரித்துத் தோத்திரத் தமிழ் பாடல்களையும் நான்மறைகளையும் உடையன் எனலுமாம். படிபட்ட கோலத்தன். எஞ்ஞான்றும் எவ்வகையிலும் ஒப்பில்லையாம்படியுயர்ந்த திருமேனியழகினை யுடையான். சூடலன் - சூடுதலையுடையவன். கூடலர் - பகைவர்; திரிபுராரிகள். கூர் எரி - மிக்க எரி. எல்லி - இரவு. ஆதிரையன் என்பது அப்பர் அடிகள் தெரிவித்த சிறப்பு திருவுள்ளத்து நிற்றலான் எழுந்தது. ஆரூரமர்ந்தான், பாடலன் முதல் ஆதிரையன் என்பது இறுதியாகக் கூட்டி முடிவு காண்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையு மாலையும்போய்ப் பணிதல் கருமமே.

பொழிப்புரை :

சோலைகளில் வண்டுகளும், சுரும்புகளும் இசை முரலவும், சூழ்ந்துள்ள கரும்பாலைகளில் தோன்றும் விரும்பத்தக்க புகை மேல் நோக்கிச் சென்று வானத்திலுள்ள முகில்களில் தோய்வதுமான திருவாரூரில் பால், நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடும் மேலான இறைவன் திருவடிகளைக் காலை மாலை ஆகிய இரு போதுகளிலும் சென்று பணிவது நாம் செய்யத்தக்க கருமமாகும்.

குறிப்புரை :

இப்பாட்டு இறைவனை இருபோதும் வணங்கல் கடமையென்றறிவிக்கின்றது. வண்டினங்கள் சுரும்போடிசைமுரல - வண்டின்சாதி நான்கில் வண்டும் சுரும்பும் தம்மினத்தோடு மாறியொலிக்க. வண்டுஞ் சுரும்பும் இசை முரல ஆலையின் வெம்புகை வானத்து முகில்தோயும் ஆரூர் என்றது, பரமேட்டி பாதம் பணிவார் மங்கள வாத்தியம் ஒலிக்க இன்பவுலகடைவார் இது உறுதி என்ற உள்ளுறை தோன்ற நிற்கின்றது. கருமம் - கடமை. பயின்று - விரும்பி. பாலொடு நெய் தயிரும் எனப் பஞ்சகவ்வியத்துள் மூன்றே கூறினார்கள்; இறைவன் ஆடுதற்குரியன இவையேயாதலின். கோசல கோமயம் நீக்கி மோரும் வெண்ணையும் கொள்வார் இனம்பற்றி அவ்விரண்டும் கொள்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

உள்ளமோ ரிச்சையினா லுகந்தேத்தித் தொழுமின்றொண்டீர் மெய்யே
கள்ள மொழிந்திடுமின் கரவா திருபொழுதும்
வெள்ளமோர் வார்சடைமேற்கரந்திட்ட வெள்ளேற் றான்மேய
அள்ள லகன்கழனி ஆரூர் அடைவோமே.

பொழிப்புரை :

தொண்டர்களே! நீவிர் உள்ளத்தால் ஆராய்ந்தறிந்த விருப்போடு மகிழ்ந்து போற்றித் தொழுவீர்களாக. மறைக்காமல் உண்மையாகவே உம் நெஞ்சத்திலுள்ள கள்ளங்களை ஒழிப்பீர்களாக! காலை மாலை இருபோதுகளிலும் கங்கை வெள்ளத்தை ஒப்பற்ற நீண்ட தன் சடைமேல் மறையும்படி செய்தவனும், வெண்மையான ஆனேற்றை உடையவனுமான சிவபிரான் எழுந்தருளிய சேற்று வளம் மிக்க அகன்ற வயல்களால் சூழப்பெற்ற திருவாரூரை வழிபடுதற் பொருட்டு நாம் செல்வோம்.

குறிப்புரை :

சென்ற திருப்பாட்டில் பணிதல் கருமமே எனப் படர்க்கையாக உணர்த்தியவர்கள் இத்திருப்பாட்டில் தன்மையில் வைத்து இருபொழுதும் அடைவோம் என்கின்றார்கள். உள்ளமோர் இச்சையினால் - மனத்தான் ஓர்ந்து இதுவே உறுதியெனக் கடைப்பிடிக்கப்பெற்ற இச்சையால்; அன்றி மந்ததர பக்குவர்க்காயின், ஏதோ ஒரு விருப்பத்தால் மகிழ்ந்து எனக் கொள்க. ஓர்: அசையுமாம். வெள்ளம் ஓர் வார்சடைமேல் கரந்திட்ட - வானுலகன்றித் தரணி தனக்கிடமாதல் தகாது எனத்தருக்கிவந்த கங்கையை ஒரு சடைக்கும் காணாது என்னும்படித் தருக்கடக்கி, இருக்குமிடமும் தெரியாதபடி மறைத்த. கரந்திட்ட என்றது - மறைத்தவன் வேண்டும் போது வெளிப்படுத்தும் வன்மையும் உடையவன் என்பது தோன்ற நின்றது. வெள்ளேற்றான் - அறவடிவான வெள்ளிய இடபமுடையவன். தருக்கடக்கியதோடன்றித் தண்ணருளும் வழங்க இருக்கின்றான் என்பது சிந்தை கொள்ளக் கரந்திட்ட என்பதனையடுத்து வெள்ளேற்றான் என்பதனைத் தெரித்தார்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

வெந்துறு வெண்மழுவாட் படையான் மணிமிடற்றா னரையின்
ஐந்தலை யாடரவ மசைத்தா னணியாரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் னடிபரவப் பாவம்
நைந்தறும் வந்தணையும் நாடொறும் நல்லனவே.

பொழிப்புரை :

அடியவர்களின் வினைகளை வெந்தறுமாறு செய்யும் வெண்மையான மழுவாளைக் கையில் ஏந்தியவனும், நீலமணி போன்ற கண்டத்தை உடையவனும், இடையில் ஐந்து தலையுடையதாய் ஆடும் பாம்பினைக் கட்டியவனும், அழகிய திருவாரூரில் பசுந்தளிர்களோடு கட்டிய கொன்றை மாலையை அணிந்தவனுமாகிய பரமனுடைய அடிகளைப் பரவ நம் பாவங்கள் நைந்து இல்லையாகும். நாள்தோறும் நமக்கு நல்லனவே வந்தணையும்.

குறிப்புரை :

கீழைத்திருப்பாட்டில் தொண்டர்க்கு உகந்தேத்தப் பணித்த பிள்ளையார், இத்திருப்பாட்டில் அடைந்தார் அல்லல்களைய ஆயுதந்தாங்கி இருக்கின்றார் என்பதையும், அடைந்தாரைப் பாதுகாத்த அடையாளமாகக் கண்டத்துக் கறையுடையர் என்பதையும் விளக்குகின்றார்கள். வெந்துறு வெண்மழு - அடியார்கள் வினை வெந்து போதற்குக் காரணமாகிய கறையற்ற மழு. மழுவும், வாளும் அடைந்தாரைக் காக்க ஏந்திய ஆயுதங்கள். மணிமிடற்றான் - நீலகண்டன்; இது கலங்கிய தேவரைக் காத்த அடையாளம். அடியார்களுடைய ஐம்பொறிகளையும் தத்தம் புலன் களில் செல்லவிடாது தடுத்தாட் கொள்ளும் தன்மையைப்போல, ஆடுந்தன்மை வாய்ந்த ஐந்தலைப் பாம்பைச் சேட்டியாதே திருவரையில் இறுகக் கட்டினான் என்பது. பாவம் நைந்தறும் - தீவினைகள் நைந்து இல்லையாம். அடிபரவுவார் சிந்தை தீவினையை மிகுவிக்காமையின் நல்லனவே வரும் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

வீடு பிறப்பெளிதா மதனை வினவுதிரேல் வெய்ய
காடிட மாகநின்று கனலேந்திக் கைவீசி
ஆடு மவிர்சடையா னவன்மேய வாரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே.

பொழிப்புரை :

வீடு பேற்றை அடைதல் நமக்கு எளிதாகும். அதற்குரிய வழிகளை நீர் கேட்பீராயின் கூறுகிறேன். கொடிய சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டு கனலை ஏந்திக் கைகளை வீசிக்கொண்டு ஆடுகின்ற விளங்கிய சடைமுடியை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாரூரை அடைந்து பாடுதல், கைகளால் தொழுதல், பணிதல் ஆகியனவற்றைச் செய்தலே அதற்குரிய வழிகளாகும்.

குறிப்புரை :

முற்கூறியவாறு வினைகளும் நைந்து நல்லன வந்து அடைந்தவிடத்து வீடடைதல் எளிதாம் என்கின்றது இத்திருப்பாடல். வீடு பிறப்பு - வீட்டின்கண் பிறத்தல்; என்றது வீடடைதல் என்னுமளவிற்று. அதனை - உபாயத்தை. வெய்ய காட்டை இடமாகக் கொண்டு, வெய்யகனலைக் கையேந்தி ஆடுவானாதலின், பாடுவார் தன்மை நோக்காது, கரும நோக்கிக் கருணை செய்வான் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும்
அங்கையி னானடியே பரவி யவன்மேய வாரூர்
தங்கையி னாற்றொழுவார் தடுமாற் றறுப்பாரே.

பொழிப்புரை :

கங்கையை ஒப்பற்ற தனது நீண்ட சடைமுடிமேல் கரந்தவனும், கிளி போன்ற மழலை மொழி பேசும் கேடில்லாத உமைமங்கையை ஒரு பாகமாக உடையவனும், மழுவாயுதத்தை அழகிய கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவன் திருவடிகளையே பரவி அவன் எழுந்தருளிய திருவாரூரைத் தம் கைகளால் தொழுபவர் தடுமாற்றங்கள் தவிர்வர்.

குறிப்புரை :

இவ்வண்ணம் கடமைகளை விடாது செய்தவர் வீடு எய்துவார் ஆதலின், பிறவிக்கடலில் வினைச் சுழலில் தடுமாறார் என இப்பாடல் தெரிவிக்கின்றது. கிளி மழலை மங்கை - கிளி போன்ற மழலைச் சொல்லினையுடைய உமாதேவி. கங்கை கரந்தான், மங்கையோர் கூறுடையான் என்றது தருக்கி வந்த தாழ்குழலை மறைத்தடக்கி, அநுக்கிரக சக்தியைத் தன் இடப்பாகமாகக் கொண்டு இருக்கின்ற அருமைப்பாடு அறிவிக்கின்றது. மறையான் - விதிமுறையானும் விலக்குமுறையானும் அறிவுறுக்கும் ஆணை மொழியாகிய வேதங்களையுடையவன். பரவித் தொழுவார் தடுமாற்று - துணிவு பெறாத தொல்லை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட
ஆறணி வார்சடையான் ஆரூர் இனிதமர்ந்தான்
சேறணி மாமலர்மேற் பிரமன் சிரமரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியா னவனெம் பெருமானே.

பொழிப்புரை :

திருநீறு அணிந்த திருமேனியனாய்த் திருமுடியில் இளம்பிறையைச் சூடி, கங்கை விளங்கும் அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், திருவாரூரின் கண் மகிழ்வோடு எழுந்தருளி விளங்குபவனும், சேற்றின்கண் அழகியதாய்த் தோன்றி மலர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனது சிரங்களில் ஒன்றைக் கொய்த, சிவந்த கண்களை உடைய விடையேற்றை வெற்றிக் கொடியாகக் கொண்டவனுமாகிய சிவபெருமானே எம் தலைவனாவான்.

குறிப்புரை :

இங்ஙனம், ஆன்மாக்களின் தடுமாற்றறுப்பவரே தலைவர்; அவருடைய திருமேனியமைப்பும் இடமும் இத்தகைய என்பன முதலியவற்றை இப்பாடலில் அறிவிக்கின்றார். நிரம்பாமதி - இறைவன் முடியிலிருந்தும் நிரம்பாத பிள்ளைமதி. நிரம்பா மதிசூடி, நீண்ட ஆறு அணிசடையன் என்றது குறைப் பொருளையும், நிறைப்பொருளையும் ஒப்ப நோக்குவான் என்பது விளக்கிற்று. சேறணி மாமலர் - சேற்றிற் பிறந்து அழகு செய்யும் தாமரை. சேறணி மாமலர்மேற் பிரமன் என, பிரமன் உந்தியந் தாமரையிலிருந்தும் கூறியது, தாமரை என்ற பொதுமை நோக்கி. `புற்றில்வாளரவன்` (திருக்கோவை) என்று மணிவாசகர் கூறியருளியது போல. பிரமன் சிரமரிந்த செங்கண் ஏறணி வெல்கொடியான் என்றது மகன்றலையறுக்கவும் ஒரு கரத்துக் கொடியாக இருந்த இடபவடிவினனாகிய திருமால், பார்த்துக்கொண்டேயிருப்பதைத் தவிரத் தவிர்க்க முடியாத வண்ணம் தலைமைபடைத்தவன்; அவனே எம் தலைவன் எனத் தலைவனின் தனிச்சிறப்பினை விளக்கியவாறு.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

வல்லியந் தோலுடையான் வளர்திங்கட் கண்ணியினான் வாய்த்த
நல்லிய னான்முகத்தோன் றலையின் னறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை யாகத் தமர்ந்தருளி யாரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.

பொழிப்புரை :

வலிய புலியினது தோலை உடுத்தவனும், வளர்தற் குரிய பிறைமதியைக் கண்ணியாகச் சூடியவனும், நல்லியல்புகள் வாய்ந்த பிரமனது தலையில் பலியேற்று உண்பவனும், அல்லியங்கோதை என்ற பெயருடைய அம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய திருவாரூரில் விளங்கும் புண்ணியனைத் தொழுபவர்களும் புண்ணியராவர்.

குறிப்புரை :

அத்தலைவன், அடைவார் எளிதில் அடைந்துய்ய அல்லியங்கோதையுடன் அருள்மூர்த்தியாய் ஆரூரில் அமர்ந்திருக்கின்றான் என இப்பாடலில் இடம் குறிக்கின்றார். வல்லியம் - புலி. நல்லியல் வாய்த்த நான்முகத்தோன் - தான் பிரமம் என்ற தன்மை யொழிந்து தலைவனையுணர்தலாகிய நல்லியல்பு வாய்க்கப் பெற்ற பிரமன். நல்லியல் வாய்க்கப்பெற்றமையாலேயே கபாலம் இறைவன் கரத்து ஏற்குங்கலமாக விளங்கிற்று. நறவு - அமுதம். விஷ்ணு மார்பிலுள்ளது. அல்லியங்கோதை - பூங்கோயில் பக்கத்துக் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் நீலோத்பலாம்பிகை. ஆகம் - திருமேனி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

செந்துவ ராடையினா ருடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலமொழிந் தின்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலும் அரணம் மெரியூட்டி யாரூர்த்
தந்திர மாவுடையா னவனெந் தலைமையனே.

பொழிப்புரை :

செந்துவர் ஊட்டப்பட்ட ஆடையை உடுத்தவரும், ஆடையின்றித் திகம்பரராய்த் திரிபவரும் ஆகிய புத்த சமணர்கள் கூறிய மாயப்பேச்சுக்களைக் கேளாது விடுத்து, இன்புற்று வாழ விரும்புவீராயின் வானத்தில் திரியும் மூவெயில்களாகிய கோட்டைகளை எரியூட்டி அழித்தவனும் திருவாரூரைத் தனக்கு நிலையான இடமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானே எம் தலைவன் என்று வழிபடுவீர்களாக.

குறிப்புரை :

புண்ணியனைத் தொழும் புண்ணியம் பெற்ற நீங்கள், புறச்சமயிகள் கூறும் இந்திரஞாலம் நீங்கி, இன்பம் பெற வேண்டின், ஆரூருடையானைத் தலைவனாக அறியுங்கள் என்று அறிவித்தருள்கின்றார். செந்துவர் ஆடை - காவியாடை. சைன சந்நியாசிகளில் காவியாடையுடுத்தியவரும், திகம்பர சந்நியாசிகளும் என இருவகையார். இந்திரஞாலம் - இந்திரஞாலமான மாயப்பேச்சுக்கள். அந்தரம் - ஆகாயம். அரணம் - கோட்டை. ஆரூர் தம் திரமாவுடையான் - ஆரூரைத் தமது நிலைக்களனாகக் கொண்டவன். திரம் ஸ்திரம் என்பதன் திரிபு. சிவபூஜா துரந்தரர்களாகிய திரிபுராதிகள் தம் நிலை கெட்டது புத்தாவதாரங்கொண்ட திருமாலின் இந்திர ஜாலப் பேச்சால். திருமால் உபதேசம் மனத்தைக் கெடுத்தமையும், அதனால் அசுரர்கள் அழிந்தமையும் ஆகிய வரலாற்றை நினைப்பூட்டுவது இப்பகுதி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

நல்ல புனற்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல
அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை
வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பந் துடைப்பாரே.

பொழிப்புரை :

தூயதான நீர்வளத்தை உடைய புகலியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் அக இதழ்களையுடைய நல்ல தாமரை முதலிய மலர்கள் பூத்த கழனிகளால் சூழப்பட்ட திருவாரூரில் எழுந்தருளிய இறைவனைத் தனக்கியன்ற வல்லமையால் அன்போடு பாடிய வழிபாட்டுப் பாடல்களாகிய இப்பதிகத்தைப் பொருந்தச் சொல்லுதல் கேட்டல் வல்லவர்கள் துன்பம் துடைப்பவர்களாவர்.

குறிப்புரை :

அத்தகைய தலைவனாகிய ஆரூரமர்ந்தானை மனங் கொண்ட மகிழ்ச்சியால் எழுந்த பாடல்கள் பத்தினையும் பாடுவாரும் கேட்பாரும் துன்ப நீக்கம் பெறுவர் என்றுணர்த்துகிறது திருக்கடைக்காப்பாகிய இறுதிப் பாடல். நல்லபுனல் - கழுமலவள நதி. வழிபாடு பத்தும் - இப்பத்துப் பாடல்களுமே வழிபாடு ஆகும் என்பதாம். வாய்க்கச் சொல்லுதல் கேட்டல் - சொல்லும் வாயும், கேட்கும் செவியும், இவற்றை இயக்கும் உள்ளமும் பிறவழி போகாது பொருந்தச் சொல்லுதலும், கேட்டலும். துன்பந்துடைப்பார் - ஈரந் துடைத்தார் என்பது போலத் துன்பம் இருந்த சுவடுந் தெரியாதபடித் துடைப்பார் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

மாறி லவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று
நீறெழ வெய்தவெங்கள் நிமல னிடம்வினவில்
தேற லிரும்பொழிலுந் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊற லமர்ந்தபிரா னொலியார்கழ லுள்குதுமே.

பொழிப்புரை :

தமக்கு ஒப்பாரில்லாத வலிய அவுணர்களின் அரணங்களாக விளங்கிய முப்புரங்களை மறையுமாறு முற்காலத்தில் ஒரு வெங்கணையால் நீறுபடச் செய்தழித்த எங்கள் நிமலன் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம், யாதென வினவில், தேன் நிறைந்த பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல்கள் பாயும் வயல்களும், சூழ்ந்துள்ள திருவூறலாகும். அப்பெருமானுடைய ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளை நாம் தியானிப்போம்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த சிவபெருமான் இடம் யாதென்று வினாவினால், அது திருஊறலாம்; அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் கழலைத் தியானிப்போம் என்கின்றது. அரணம் - கோட்டை. தேறல் - தேன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

மத்த மதக்கரியை மலையான்மக ளஞ்சவன்று கையால்
மெத்த வுரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலநாளுந் நயனம்
ஒத்தல ருங்கழனித் திருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

மதம் பொருந்திய பெரிய தலையையுடைய யானையை மலைமகள் அஞ்ச, முற்காலத்தில் தன் கைகளால் மெல்ல உரித்த எங்கள் விமலனாகிய சிவபெருமான் விரும்பும் இடம் யாதென வினவில், பூங்கொத்துக்கள் விரிந்துள்ள பொழில்கள் சூழ்ந்ததும், வயல்களில் நாள்தோறும் முளைத்து விளங்கிய நீல மலர்கள் மங்கையரின் கண்களையொத்து மலரும் வயல்வளங்களை உடையதுமான திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.

குறிப்புரை :

யானையை உரித்த இறைவன் விரும்பும் இடம் ஊறல்; அதனை உள்குவோம் என்கின்றது. மெத்த - மிக. தொத்து - கொத்து. நயனம் - கண்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

ஏன மருப்பினொடு மெழிலாமையும் பூண்டழகார் நன்றும்
கானமர் மான்மறிக்கைக் கடவுள் கருதுமிடம்
வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை
ஊன மறுத்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

பன்றிக் கொம்புகளோடு ஆமையோட்டையும் அணிகலனாக அழகுறப் பூண்டு, நல்ல காட்டில் வாழும் மான்கன்றைத் தன் கையில் ஏந்தியுள்ள கடவுளாகிய சிவபெருமான் விரும்புமிடம், வானத்தின் கண் உள்ள மதி தோயுமாறு வளர்ந்துள்ள சோலைகளால் அழகுறச் சூழப்பட்டு நமது பிறவிப் பிணியைப் போக்க வல்லவனாய்ச் சிவபிரான் எழுந்தருளிய திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.

குறிப்புரை :

பன்றிக் கொம்பு, ஆமையோடு இவற்றை அணிந்து மான் ஏந்திய கடவுள் இடம் ஊறல்; அதனைத் தியானிப்போம் என்கின்றது. ஏனம் - பன்றி. எழில் - அழகு. மான்மறி - மான்குட்டி. ஊனம் - குறை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

நெய்யணி மூவிலைவே னிறைவெண்மழு வும்மனலு மன்று
கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவில்
மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான் றிருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

நெய் பூசப்பெற்ற மூவிலை வேல், ஒளிநிறைந்த வெண்மழு, அனல் ஆகியவற்றைத் தன் கைகளில் அணியும் கோட்பாட்டினை உடைய கடவுள் விரும்பும் இடம் யாதென வினவுவீராயின், மை பூசப் பெற்ற கண்களையுடைய மடவார் பலர் வந்து வழிபட நிலையாகத் தங்கி, நாம் உய்யும் வகையில் எழுந்தருளி அருள் புரியும் திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.

குறிப்புரை :

திரிசூலம், மழு, அனல் இவற்றைக் கையில் ஏந்திய கடவுள் இடம் திருஊறல் என்கின்றது. நெய்யணி - நெய் பூசப்பெற்ற. ஆயுதங்கள் துருப்பிடிக்காவாறு நெய் பூசிவைத்தல் மரபு. உய்யும் வகை - துன்பத்தினின்று ஈடேறும் வகை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

எண்டிசை யோர்மகிழ வெழின்மாலையும் போனகமும் பண்டு
சண்டி தொழவளித்தான் அவன்றாழு மிடம்வினவில்
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரானமருந் திருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளில் உள்ளாரும் கண்டு மகிழுமாறு தன்னைத் தொழுத சண்டீசர்க்கு அழகிய மாலை, உணவு முதலியவற்றை முற்காலத்தே அளித்தருளியவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில், மேகங்கள் தங்கும் பொழில்களும், குளிர்ந்த பொய்கைகளும் சூழ்ந்து விளங்கும் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.

குறிப்புரை :

தான் சாத்திய மாலையும் உண்ட உணவும், சண்டே சுரர்க்கு அருள் செய்தவன் இடம் திருஊறல் என்கின்றது போனகம் - உணவு. சண்டி - சண்டேசுவரர். கொண்டல்கள் - மேகங்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி
மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தா னிடம்வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு மெய்யுந்நெரிய வன்று
ஒறுத்தருள் செய்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

சினம் பொருந்திய மனத்தோடு கூடிய கொடிய காலன் தம் வாழ்நாளைக் கவரவந்து அடைதலைக் கண்டு கலங்கி மயங்கிய மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்தவனும், தன்னை மதியாது சினந்து வந்த வாள்வல்ல இராவணனின் தலை, தோள், உடல் ஆகியனவற்றை முற்காலத்தில் நெரித்து அருள் செய்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.

குறிப்புரை :

மார்க்கண்டேயற்கு அருள்செய்த இறைவன் இடம் திருஊறல் என்கின்றது. கறுத்த - கோபித்த. மறுக்குறும் - மயங்கிய. மாணி - பிரமசாரியாகிய மார்க்கண்டன். செறுத்து - கோபித்து. அரக்கன் என்றது இராவணனை. ஒறுத்து - தண்டித்து.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

நீரின் மிசைத்துயின்றோ னிறைநான் முகனுமறியா தன்று
தேரும் வகை நிமிர்ந்தான் அவன்சேரு மிடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரு மரவசைத்தான் றிருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

கடல்நீரின் மேல் துயில் கொள்வோனாகிய திருமாலும் ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் அறிய முடியாமல் தேடி ஆராயுமாறு நிமிர்ந்து நின்றவனும், மண்ணுலகில் அடியவர் பலரும் வந்து வணங்க மகிழ்ந்து ஊரும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாமும் உள்குவோமாக.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியாத வண்ணம் அக்கினி மலையாய் நிமிர்ந்தவன் இடம் திருஊறல் என்கின்றது. நீரின் மிசைத் துயின்றோன் - திருமால். தேரும் வகை - ஆராயும் வகை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்
என்னு மிவர்க்கருளா வீசனிடம் வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை
உன்ன வினைகெடுப்பான் றிருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

பொன்போன்ற மஞ்சட் காவியுடை அணிந்த புத்தர்கள், புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பவர்கள் ஆகிய அறியாமையை உடைய சமண் குண்டர்கள் என்னும் இவர்கட்கு அருள் புரியாதவனும், தன்னை நினைவார்களின் வினைகளைக் கெடுப்பவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் வண்டு இனங்கள் தென்னென்ற ஓசையோடு செறிந்த பொழில்கள் சூழ்ந்த அழகிய திருவூறலாகும். அதனை நாமும் நினைவோமாக.

குறிப்புரை :

புத்தருக்கும் சமணருக்கும் அருள்செய்யாத ஈசன் இடம் திருஊறல் என்கின்றது. பொன்னியல் சீவரத்தார் - பொன் போன்ற நிறத்தினையுடைய உடை அணிந்தவர்கள். புளித் தட்டையர் - புளித்த நீரோடு கூடிய பழஞ்சோற்றைத் தட்டில் இட்டு உண்பவர், தென்என: ஒலிக்குறிப்பு, தன்னை உன்ன வினைகெடுப்பான் - தன்னைத் தியானிப்பவர்களின் இரு வினையைக் கெடுப்பவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச
ஓடு புனல்சடைமேற் கரந்தான் றிருவூறல்
நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத் திருப்பாரே.

பொழிப்புரை :

செங்காந்தட் செடிகள் நிறைந்த பெரிய புதர்கள் விளங்குவதும் கொடிகள் கட்டிய மாட வீடுகளைக் கொண்டதுமான கொச்சையம்பதிக்குத் தலைவனும், பெருகிவரும் கங்கையைச் சடைமிசைக் கரந்தவனுமாகிய சிவபிரானது திருவூறலைப் பற்றி நாடற் கரிய புகழால் மிக்க ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் பரலோகத்திருப்பர்.

குறிப்புரை :

திருஊறலைப் பற்றிய பாடல் பத்தையும் வல்லவர் பரலோகத்து இருப்பார் என்கின்றது. கோடல் - செங்காந்தள். இரும் புறவில் - பெரிய காடுகளை உடைய. நாடல் அரும் - பிறரால் தேடற்கரிய.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல
பந்தண வும்விரலா ளொருபாக மமர்ந்தருளிக்
கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தண னைத்தொழுவார் அவல மறுப்பாரே.

பொழிப்புரை :

விரிக்கப் பெற்ற பூணுநூல் திகழும் திருமார் பினனாய், நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்து, பந்து பொருந்திய கைவிரல்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய அழகிய தண்ணளியை உடைய சிவபெருமானைத் தொழுவார் துன்பங்கள் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

பூணுநூல் திகழ்கின்ற திருமார்பில் வெண்ணீறணிந்து உமையொருபாகமாகக் கொடிமாடச் செங்குன்றூரில் நின்ற அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பார் என்கின்றது. அணவும் - கலக்கும். கொந்து - கொத்து.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான் மலையா ரிளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.

பொழிப்புரை :

அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கை நதியோடு பாம்பினையும், சடையின்கண் அணிந்து, தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும், மலையின்கண் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடைய குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுவார் தடுமாற்றம் தவிர்வர்.

குறிப்புரை :

கங்கை, பாம்பு இவற்றைச் சடைக்கணிந்து மலைமகள் கூறுடையனாக எழுந்தருளியிருக்கின்ற செங்குன்றூர்த் தலைவனைத் தொழுவார் தடுமாற்றம் தகர்ப்பர் என்கின்றது. அரவம் - பாம்பு.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

பாலன நீறுபுனை திகழ்மார்பிற் பல்வளைக்கை நல்ல
ஏல மலர்க்குழலா ளொருபாக மமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே.

பொழிப்புரை :

பால் போன்று வெள்ளிய திருநீற்றைப் புனைந்து விளங்கிய மார்பினோடு பல்வகை வளையல்களையும் பாங்குறப்புனைந்த கையினளாய், மணம் கமழும் நறுமலர்களைச் சூடிய கூந்தலினளாகிய உமையம்மை ஒரு பாகமாக அமைந்த கோலத்தோடு அழகிய மலர்கள் பூத்த பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய நீல நன்மாமிடற்றானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே நீதியாகும்.

குறிப்புரை :

நீறுபூசிய திருமேனியோடு மலைமகள் ஒருபாகமாக எழுந்தருளிய செங்குன்றூர் நீலகண்டன் திருவடியைத் தொழுதலே நீதி என்கின்றது. ஏலம் - மயிர்ச்சாந்து. நீலநன்மாமிடற்றான் - நீலகண்டன். நன்மிடறு என்றது தேவர்க்கு நன்மை செய்தலின்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பி னண்ணும்
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
சீருறு மந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.

பொழிப்புரை :

கச்சணிந்த தனங்களை உடைய அழகிய உமையம்மை விளங்கும் திருமார்பின்கண் கார்காலத்தே மலரும் கொன்றை மலர் மாலையோடு சினம் பொருந்திய பாம்பை அணிகலனாகப் பூண்டு சிறப்புப் பொருந்திய அந்தணர்கள் வாழும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய கங்கையணிந்த செஞ்சடையனாய் விளங்கும் சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதல் நீதியாகும்.

குறிப்புரை :

உமாதேவி விளங்குகின்ற, திருமார்பில் கொன்றை மாலையையும் பாம்பு அணியையும் பூண்டு வீற்றிருக்கும் செங்குன்றூர் நாதன் சேவடியைத் துதித்தல் நீதியாம் என்கின்றது. வார் - கச்சு. கதம் - கோபம். சீர் - புகழ்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

பொன்றிக ழாமையொடு புரிநூல் திகழ்மார்பி னல்ல
பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்
மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே.

பொழிப்புரை :

திருமகள் விளங்கும் திருமாலாகிய ஆமையினது ஓட்டினோடு முப்புரிநூல் திகழும் மார்பின்கண் நல்ல பன்றியின் கொம்புகளையும் அணிந்து மூங்கில் போன்ற தோளினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்கக் குன்றுகள் போன்ற மாளிகைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் வானில் திகழும் மின்னல் போன்று விளங்கும் செஞ்சடையானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே மெய்ப்பொருளாகும்.

குறிப்புரை :

ஆமையோடும் பூணூலும் விளங்கும் மார்பில், பன்றிக் கொம்பையும் அணிந்த மாதொருபாதியனான செங்குன்றூர் நாதன் கழலேத்துதலே மெய்ப்பொருள் என்கின்றது. பொன் திகழ் ஆமை ஓடு - திருமகள் விளங்குகின்ற திருமாலாகிய ஆமையின் ஓடு. பணை - மூங்கில்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.

பொழிப்புரை :

மேம்பட்ட மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய்த் திருமுடியில் தடுத்த கங்கையோடு, பிறையையும் சடையின்கண் அணிந்து, தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் வேர்ப்பற்றோடு நீங்கும்.

குறிப்புரை :

சூலமேந்திய கையனும், கங்கையும் மதியமும் சூடியவனும் ஆகிய செங்குன்றூர் நாதன் தாள் தொழுவாரது வினைப்பற்று நீங்கும் என்கின்றது. ஓங்கிய - சிறந்த. கோங்கு அணவும் - கோங்க மரங்கள் கலந்த. பாங்கன தாள் - தோழமை பூண்ட இறைவனுடைய தாள்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
வாட லுடைதலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.

பொழிப்புரை :

கொத்தாக நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களோடு நிமிர்ந்து தோன்றும் சிவந்த சடைகள் தாழ்ந்து தொங்க, வெண்மையான புலால் நீங்கிய தலையோட்டில் பலி ஏற்றுண்ணும் வாழ்க்கையனாய், வெண்காந்தள் மலர்ந்த புதர்களை உடைய வளமான முல்லை நிலங்களால் சூழப்பட்ட கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய பெருமை உடையோனின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் தேய்ந்தொழியும்.

குறிப்புரை :

கொன்றை மாலையோடு சடைதாழ, உலர்ந்த தலையிற் பலிகொள்ளும் செங்குன்றூர்நாதன் தாள் தொழுவாரது வினைதேயும் என்கின்றது. நீடு அலர் கொன்றை - மாலையாக நீண்டு மலர்கின்ற கொன்றை. வாடல் - உலர்தல். கோடல் - செங்காந்தள். சேடன் - பெருமையுடையவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவ னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.

பொழிப்புரை :

செஞ்சடைமீது நல்ல ஊமத்த மலரையும் இள மதியையும் கொத்தாக அலரும் கொன்றை மலருடன் ஒருசேர நெருங்கச்சூடிப் பூங்கொத்துக்கள் அலரும் தண்ணிய பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தத்துவனைத் தொழுவார் தடுமாற்றங்கள் இலராவர்.

குறிப்புரை :

ஊமத்தம் பூவும், பிறையும், கொன்றையும் செஞ்சடை மேற்சூடிய தத்துவனைத் தொழுவார் தடுமாற்றம் அறுப்பார் என்கின்றது. துன்று - நெருங்கிய. தொத்து - கொத்து. துதைய - செறிய. தத்துவன் - மெய்ப்பொருளானவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

செம்பொனின் மேனியனாம் பிரமன்றிரு மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போ லொளியாய வாதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
நம்பன தாடொழுவார் வினையாய நாசமே.

பொழிப்புரை :

சிவந்த பொன்போன்ற மேனியினன் ஆகிய பிரமனும் திருமாலும் தேடுமாறு பவளத்திரள்போல ஒளி வடிவினனாய் ஓங்கி நின்ற மூலகாரணனும், கொம்புகளாகக் கிளைத்து நெருங்கிய மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் நாசமாகும்.

குறிப்புரை :

அயனும் மாலும் தேடச் செம்பவளத்திரள்போல தீவடிவாய ஆதிப்பிரானது தாள்தொழுவார் வினைகள் யாவும் நாசமாம் என்கின்றது. கொம்பு அணவும் பொழில் - கொம்புகள் செறிந்த சோலை. நம்பன் - சிவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
வேதிய னைத்தொழநும் வினையான வீடுமே.

பொழிப்புரை :

போதி மரத்தை வழிபடும் புத்தர், அசோக மரத்தை வழிபடும் சமணர் ஆகியோர் பொய்ந்நூல்களை மேற்கோள்களாகக் காட்டிக் கூறும் புனைந்துரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதி உழல்பவர்களே!, இசை பாடும் குயில்கள் கோதிய தளிர்களோடு கூடிய தண்பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய வேதம் விரித்த சிவபிரானைத் தொழுமின்; நம் வினைகள் யாவும் அழியும்.

குறிப்புரை :

புத்தர் சமணர் இவர்களுடைய புறவுரை கேட்டு உழலுகின்ற மக்களே! செங்குன்றூர் வேதியனைத் தொழ உங்கள் வினையாயின அழியும் என்கின்றது. போதியர் - புத்தர். பிண்டியர் - சைனர். கட்டுரை - கட்டிச் சொன்ன பொய்யுரை. கோதிய - மூக்காற்கோதியுண்ட. வேதியன் - வேதங்களை அருளிச்செய்தவன். வீடும் - அழியும்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணும்
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்
நலமலி பாடல்வல்லார் வினையான நாசமே.

பொழிப்புரை :

அலைகள் மிகுந்த குளிர்ந்த நீரால் சூழப்பட்ட அழகிய புகலி நகரை விரும்பும் தலைமகனாகிய தமிழ் ஞானசம்பந்தன், கொல்லும் தொழிலில் வல்ல மூன்று இலை வடிவான சூலத்தைக் கையில் ஏந்தியவனாய சிவபிரான் எழுந்தருளிய கொடிமாடச் செங்குன்றூரைப் போற்றிப் பாடிய, நலம் மிக்க, இப்பதிகப் பாடல்களை ஓத, வல்லவர்களின் வினைகள் நாசமாகும்.

குறிப்புரை :

ஞானசம்பந்தப் பெருமான் செங்குன்றூர் நாதரை ஏத்திய நலமிகுந்த பாடல் வல்லார் வினைகள் நாசமாம் எனப்பயன் கூறுகின்றது. புகலி - சீகாழி. கொலைமலிமூவிலையான் - கொலைபுரியும் முத்தலைச் சூலம் ஏந்தியவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்
அன்ன மனநடையா ளொருபாகத் தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

மின்னல் போன்ற செஞ்சடைமேல் விளங்கும் மதி, ஊமத்தமலர் பொன் போன்ற நல்ல கொன்றை ஆகியவற்றோடு கங்கையையும் சூடி, அழகு விளங்கும் அன்னம் போன்ற நடையினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்க, நாள்தோறும் வேத கீதங்களைப் பாடியவனாய்ச் சிவபெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

இப்பதிகம் முழுதும் செஞ்சடைமேல், பிறை, ஊமத்தம், கொன்றை இவற்றையணிந்தவனும், கங்கையணிந்து உமையையொருபாகத் திருந்தருளச் செய்தவனும் ஆகிய இறைவன் உறைகோயில் திருப்பாதாளீச்சரம் என்கின்றது. ஒவ்வொரு பாடலிலும் தலத்தின் திருப்பெயருக்கேற்பப் பாம்பணிந்தமை பேசப்படுதல் காண்க. விளங் கும்மதி - இறைவன் திருமுடிமேல் இருத்தலின் விளக்கம்பெற்ற பிறை. `அன்னம் அனநடையாள்` அன்ன என்பது அன எனல் தொகுத்தல் விகாரம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதினல்ல குழையான் சுடுநீற்றான்
ஆடர வம்பெருக வனலேந்திக் கைவீசி வேதம்
பாடலி னாலினியா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

கொத்தாக நீண்டு அலர்கின்ற கொன்றையோடு கலைநிறையாத இளம் பிறையை முடியில் சூடி, ஒரு காதில் வெள்ளைத் தோட்டுடன் மறு காதில் நல்ல குழையையுடையவனாய் விளங்குவோனும், சுட்ட திருநீற்றை மெய்யில் பூசியவனும், ஆடும் பாம்பு அணிகலனாகப் பெருகித்தோன்ற அனல் ஏந்திக் கைவீசி வேதப் பாடல்களைப் பாடுதலில் இனியனாய் விளங்குவோனும் ஆகிய சிவபெருமான் உறையும் கோயில் திருப்பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

நிரம்பாமதி - குறைப்பிறை. வெள்ளைத்தோடு - முத்துத் தோடு. குழை - காதணியாகிய குண்டலம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

நாகமும் வான்மதியுந் நலமல்கு செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற் புரமூன்றெரித்துகந்தான்
தோகைநன் மாமயில்போல் வளர்சாயற் றூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

பாம்பு, வானில் விளங்கும் மதி ஆகியனவற்றைச் சூடிய அழகுமிக்க செஞ்சடையை உடையவனும், உரிய காலம் கழிய நல்ல மேருவில்லால் முப்புரங்களை எரித்துகந்தவனும், தோகையை உடைய நல்ல ஆண்மயில் போன்று வளர்கின்ற கட்புலனாய மென்மையை உடைய தூய மொழி பேசும் உமையம்மையைத் தன்னோடு உடனாக இடப்பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவனும் ஆகிய சிவபிரான் மகிழ்ந்துறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

வான்மதி - வானிலுள்ள பிறை. சாமம் போக - உரிய காலங்கழிய. தோகை மா மயில் - ஆண்மயில்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

அங்கமு நான்மறையும் அருள்செய் தழகார்ந்த வஞ்சொல்
மங்கையோர் கூறுடையான் மறையோ னுறைகோயில்
செங்கய னின்றுகளுஞ் செறுவிற் றிகழ்கின்ற சோதிப்
பங்கய நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.

பொழிப்புரை :

ஆறு அங்கங்களையும் நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவனும், அழகிய இனிய சொற்களைப் பேசும் உமைநங்கையை ஒரு பாகமாக உடையவனும், வேதங்களைப் பாடி மகிழ் பவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் செங்கயல் மீன்கள் புரளும் வயல்களில் விளங்கும் ஒளியினால் தாமரைகள் எழுந்து மலரும் வயல்கள் சூழ்ந்த பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

செங்கயல்மீன்கள் புரளும் வயலில் தாமரை மலரும் பாதாளம் என்கின்றது, செறு - வயல்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும் மழுவுந் திகழ்வித்துத்
தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப்
பாய்புன லும்முடையா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

பேய்கள் பலவும் உடன் சூழ, சுடுகாட்டை அரங்காக எண்ணி நின்று, தீ, மான்கன்று மழு ஆகியவற்றைக் கைகளில் விளங்குவித்து, தேய்ந்த பிறையும் பாம்பும் விளங்கிய கொன்றை மலரும் உடைய தன் சடைமேல் பாய்ந்து வரும் கங்கையையும் உடையவனாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

பேய்கள் உடன்விளங்க, இடுகாட்டை நாடகமேடை யாக எண்ணி, மான், மழு முதலியன தாங்கி ஆடும் பெருமான் உறைவிடம் பாதாளீச்சரம் என்கின்றது. உன்னிநின்று, திகழ்வித்து, சேர உடையான் உறைகோயில் பாதாள் எனக்கூட்டுக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னன்று
விண்ணியன் மாமதியும் முடன்வைத் தவன்விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக வாடும்
பண்ணியல் பாடலினா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

கண் பொருந்திய நெற்றியை உடையவனும், சடை முடி மீது மணம் கமழும் கொன்றை மலரோடு, அழகு பொருந்த வானின்கண் உலாவும் சிறந்த பிறைமதியையும் உடனாக வைத்தவனும், தன்னால் விரும்பப் பெற்ற உமைமங்கை பொருந்திய திரு மேனியனும், சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பண்ணொடு கூடிய பாடல்களுடன் ஆடுபவனுமாகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

கண்ணமர்நெற்றி - கண்ணோடு விளங்குகின்ற நெற் றியை யுடையவன் . நன்று விண் இயல் மாமதி - நன்றாக விண்ணில் இயங்குகின்ற பெரிய பிறைச்சந்திரன் .

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன் னிதிகழ்
வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரமூன் றெரிசெய்துரை வேதநான் கும்மவை
பண்டிசை பாடலினா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

தளையவிழ்ந்து மலர்ந்த ஊமத்த மலரோடு, புரண்டு கொண்டிருக்கும் இளநாகம், வன்னிஇலை, வண்டுகளால் மலர்த்தப் பெறும் கொன்றை, பிறைமதி ஆகியன பொருந்திய நீண்ட சடை உடையவனும், பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்த வனும், நான்கு வேதங்களையும் உரைத்தலோடு அவற்றைப் பண்டைய இசைமரபோடு பாடி மகிழ்பவனுமான சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

விண்டு - முறுக்கவிழ்ந்து. வன்னி - வன்னியிலை. நகும் - மலரும். விண்டவர் - பகைவர்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

மல்கிய நுண்ணிடையா ளுமைநங்கை மறுகவன்று கையால்
தொல்லை மலையெடுத்த வரக்கன்றலை தோணெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக் கணிந்தோன்
பல்லிசை பாடலினா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

செறிந்த நுண்மையான இடையினை உடைய உமை யம்மை அஞ்ச அன்று கையால் பழமையான கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் தலைகளையும் தோள்களையும் நெரித்தவனும், முல்லை நிலத் தெய்வமான திருமாலாகிய விடையை உகந்தவ னும், குளிர்ந்த திங்களைச் சடையின்கண் அணிந்தவனும் பல்வகையான இசைப் பாடல்களைப் பாடுபவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

இராவணன் தோள் நெரித்தது; இறைவற்கு எழுந்த சீற் றம் காரணம் அன்று; உமாதேவி நடுங்க, அந்நடுக்கந்தீரவே விரலூன்றி மலையை நிலைக்கச்செய்தார்; அது இராவணற்கு இன்னலாயிற்று என்ற கருத்து ஓர்க. கொல்லைவிடை - முல்லை நிலத்து இடபம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

தாமரை மேலயனும் மரியுந்தம தாள்வினையாற் றேடிக்
காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழலா ளுமைநங்கை பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

மன்மதனை எரித்த சிவபிரான் திருவடிகளைத் தாமரை மலரின்மேல் எழுந்தருளிய அயனும், திருமாலும் தமது முயற்சியால் தேடிக்காண இயலாது நீங்கினர். மலர்கள் சூடிய கூந்தலை உடைய உமைநங்கை ஒரு பாகமாகப் பொருந்தியவனும் வேதப் பாடல்களைப் பாடும் நல்ல குணத்தினனும் ஆகிய அப்பெருமான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும். அங்குச் சென்றால் அவன் கழலடி காணலாம் என்பது குறிப்பெச்சம்.

குறிப்புரை :

ஆள்வினையால் - முயற்சியால். செயலற்ற தன்மை யில் சிந்திக்கவேண்டிய சிவத்தைச் செய்வினையாற் காணமுற்பட்ட அறிவீனத்தை விளக்கியவாறு. காமனை வீடுவித்தான் கழல் - காமனை எரித்த பெருமான் திருவடி. காமனும் தருக்கி வருவானாயினும் அவன் காண இருந்தமையும் அயனும் மாலும் காணாதிருந்தமைக்கும் ஏது ஒன்று உண்டு. இவர்கள் தாம் பெரியர் என்னுந் தருக்கால் முனைத்து வந்தவர்கள்; காமன் தேவகாரியம் என்றும், இந்திரன் சாபத்தால் இறப்பதைக் காட்டிலும்; சிவன் கோபத்தால் இறப்பதுமேல் என்றும் வந்தவன்; ஆதலால் இவனுக்குக் கட்புலனானார் என்பது சிந்தனைக் குரியது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

காலையி லுண்பவருஞ் சமண்கையருங் கட்டுரை விட்டன்
றால விடநுகர்ந்தா னவன் றன்னடி யேபரவி
மாலையில் வண்டினங்கண் மதுவுண் டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தா னுறைகோயில் பாதாளே.

பொழிப்புரை :

காலையில் சோறுண்ணும் புத்தரும், சமண சமயக் கீழ்மக்களும் கூறும் மெய்போன்ற பொய்யுரைகளை விடுத்து, ஆலகாலவிடமுண்டு அமரர்களைக் காத்தவனும் மாலைக் காலத்தில் வண்டினங்கள் மதுவுண்டு இசை முரல ஏற்புடையதான பாலைப் பண்ணையாழில் பாடக்கேட்டு மகிழ்பவனும் ஆகிய சிவபிரான் உறையும் கோயில் பாதாளீச்சரமாகும்.

குறிப்புரை :

பாலை யாழ்ப் பாட்டு உகந்தான் - பாலைப்பண்ணில் விருப்புடையான் .

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்
பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லா ரெழில்வானத் திருப்பாரே.

பொழிப்புரை :

பலவகையான மலர்களும் பூத்துள்ள பொழில் புடை சூழ்ந்த பாதாளீச்சரத்தைச் சென்று தரிசிக்குமாறு, பொன்னால் இயன்ற மாட வீடுகள் நிறைந்த புகலி நகர் மன்னனும், தன்புகழ் உல கெங்கும் பரவி விளங்குமாறு உயர்ந்தவனுமாகிய தமிழ் ஞானசம்பந் தன் பாடிய இன்னிசை பொருந்திய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் அழகிய வானுலகின்கண் இருப்பர்.

குறிப்புரை :

இப்பதிகம் வல்லார் தேவராய் வானத்திருப்பார் என் கின்றது.

பண் :

பாடல் எண் : 1

வாருறு வனமுலை மங்கைபங்கன்
நீருறு சடைமுடி நிமலனிடங்
காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்
சீருறு வளவயற் சிரபுரமே.

பொழிப்புரை :

கச்சணிந்த அழகிய தனபாரங்களை உடைய உமை யம்மையின் கணவனும், கங்கையை அணிந்த சடைமுடியை உடைய நிமலனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், மேகங்கள் தோயுமாறு வானளாவிய மணம் கமழும் பொழில் சூழ்ந்த அழகிய சிறப்புப் பொருந்திய வளமையான வயல்களை உடைய சிரபுரம் ஆகும்.

குறிப்புரை :

இப்பதிகம் பெரியநாயகியுடன் எழுந்தருளியிருக்கும் பெருமான் நகரம் சிரபுரமாகிய சீகாழி என்கின்றது. வார் - கச்சு.

பண் :

பாடல் எண் : 2

அங்கமொ டருமறை யருள்புரிந்தான்
திங்களொ டரவணி திகழ்முடியன்
மங்கையொ டினிதுறை வளநகரஞ்
செங்கயன் மிளிர்வயற் சிரபுரமே.

பொழிப்புரை :

ஆறங்கங்களோடு அரிய வேதங்கள் நான்கையும் அருளிச் செய்தவனும், திங்கள் பாம்பு ஆகியவற்றை அணிந்து விளங்கிய முடியினனும் ஆகிய சிவபெருமான் உமைமங்கையோடு மகிழ்வாக உறையும் வளமையான நகரம் செங்கயல்கள் துள்ளி விளையாடும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் ஆகும்.

குறிப்புரை :

அருமறை - எக்காலத்தும் உணரும் அருமைப் பாட்டினையுடைய வேதம்.

பண் :

பாடல் எண் : 3

பரிந்தவன் பன்முடி யமரர்க்காகித்
திரிந்தவர் புரமவை தீயின்வேவ
வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத்
தெரிந்தவன் வளநகர் சிரபுரமே.

பொழிப்புரை :

பல்வகையான முடிகளைச் சூடிய அமரர்களிடம் மிக்க பரிவுடையவனாகி வானவெளியில் திரிந்த அவுணர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு வரிந்து கட்டிய கொடிய வில்லைப் பிடித்துக் கொல்லும் அம்பினை ஆராய்ந்து தொடுத்த பெருமானது வளநகர் சிரபுரமாகும்.

குறிப்புரை :

பரிந்தவன் - அன்புகூர்ந்தவன். வரிந்த - கட்டிய. அடு சரத்தை - கொல்லும் பாணத்தை. தெரிந்தவன் - ஆராய்ந்தவன்.

பண் :

பாடல் எண் : 4

நீறணி மேனிய னீண்மதியோ
டாறணி சடையின னணியிழையோர்
கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்
சேறணி வளவயற் சிரபுரமே.

பொழிப்புரை :

திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வளைவாக நீண்ட பிறைமதியோடு கங்கையை அணிந்த சடையினை உடையவனும் ஆகிய சிவபிரான், அழகிய அணிகலன்களைப் பூண்ட உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு இனிதாக உறையும் குளிர்ந்த நகரம் சேற்றால் அழகிய வளமான வயல்கள் சூழ்ந்த சிரபுரமாகும்.

குறிப்புரை :

அணியிழை - அணிந்த இழையினையுடையாளாகிய உமை.

பண் :

பாடல் எண் : 5

அருந்திற லவுணர்க ளரணழியச்
சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவணி சிரபுரமே.

பொழிப்புரை :

வெல்லுதற்கரிய வலிமையினையுடைய அசுரர்களின் முப்புரங்களும் அழியுமாறு கணையைத் தொடுத்து எரித்த சங்கரனாகிய சிவபெருமானது ஊர், குருந்தமரம் கொடிகளாகப் படரும் மாதவி எனும் குருக்கத்தி ஆகியன நிறைந்த அழகிய புதர்களால் சூழப் பட்ட சிரபுரம் என்னும் நகரமாகும்.

குறிப்புரை :

அருந்திறல் - பிறரால் வெல்லுதற்கு அரிய வலிமை. சரம் துரந்து - அம்பைச் செலுத்தி. சங்கரன் - சுகத்தைச் செய்பவன். குருந்து - குருந்தமரம். மாதவி - குருக்கத்தி, புறவு - காடு.

பண் :

பாடல் எண் : 6

கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே.

பொழிப்புரை :

கலைகளாக விளங்குபவனும், வேதங்களை அருளியவனும் காற்று, தீ, மலை, விண், மண் முதலியனவாகத் திகழ்பவனும் கொடிகள் கட்டப்பெற்ற அசுரர்களின் முப்புரங்களை அவற்றின் மதில்களோடு கூட்டாக அழித்த மேருவில் ஏந்திய கொலையாளனும் ஆகிய சிவபெருமானது வளநகர் சிரபுரமாகும்.

குறிப்புரை :

கலையவன் - கல்வியினால் எய்தும் பயனாகிய ஞானம் ஆயவன், மதில் அழித்த கொலையவன் எனக்கூட்டுக.

பண் :

பாடல் எண் : 7

வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
தானவர் புரமெய்த சைவனிடங்
கானமர் மடமயில் பெடைபயிலுந்
தேனமர் பொழிலணி சிரபுரமே.

பொழிப்புரை :

வானத்தில் உலவும் பிறைமதியையும், ஊமத்த மலரையும் முடியிற் சூடி, அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சைவன் இடம், காடுகளில் வாழும் இள ஆண் மயில்கள் பெண் மயில்களோடு கூடி மகிழ்வதும் இனிமை நிறைந்து விளங்குவதுமான சிரபுரமாகும்.

குறிப்புரை :

தானவர் - அசுரர். கான் - காடு.

பண் :

பாடல் எண் : 8

மறுத்தவர் திரிபுர மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்
இறுத்தவ னிருஞ்சினக் காலனைமுன்
செறுத்தவன் வளநகர் சிரபுரமே.

பொழிப்புரை :

தன்னோடு உடன்பாடு இல்லாது மாறுபட்டு ஒழுகிய அசுரர்களின் முப்புரங்களும் கெட்டு அழியுமாறு சினந்தவனும், கரிய அரக்கனாகிய இராவணனின் தலை தோள் ஆகியவற்றை நெரித்தவனும், மிக்க சினம் உடைய இயமனை அழித்தவனுமான சிவ பிரானது வளநகர் சிரபுரமாகும்.

குறிப்புரை :

மறுத்தவர் - பகைவர். கறுத்தவன் - சினந்தவன்.

பண் :

பாடல் எண் : 9

வண்ணநன் மலருறை மறையவனுங்
கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய்
விண்ணுற வோங்கிய விமலனிடம்
திண்ணநன் மதிலணி சிரபுரமே.

பொழிப்புரை :

செவ்வண்ணமுடைய நல்ல தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் தன் திருவடிகளைத் தொழுது நிற்குமாறு கனல் உருவாய் விண்ணுற ஓங்கி நின்ற விமலனாகிய சிவபிரானது இடம் உறுதியான நல்ல மதில்களால் அழகுறும் சிரபுர வளநகராகும்.

குறிப்புரை :

வண்ணநன்மலர் - தாமரைமலர். திண்ணநன்மதில் - உறுதியாகிய மதில்.

பண் :

பாடல் எண் : 10

வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
கற்றில ரறவுரை புறனுரைக்கப்
பற்றலர் திரிபுர மூன்றும்வேவச்
செற்றவன் வளநகர் சிரபுரமே.

பொழிப்புரை :

ஆடையில்லாத இடையோடு திரிந்துழல்வோரும், விரித்த ஆடையைப் போர்வையாகப் போர்த்தியுள்ளவரும், மெய் நூல்களைக் கல்லாதவரும் ஆகிய சமண பௌத்தர்கள் அறவுரை என்ற பெயரில் புறம்பான உரைகளைக் கூறக்கேட்டு அவற்றைப் பொருட்படுத்தாதவனாய்ப் பகைவராகிய அவுணர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு அழித்தருளிய சிவபிரான் எழுந்தருளிய வளநகர் சிரபுரமாகும்.

குறிப்புரை :

வெற்று அரை உழல்பவர் - ஆடையில்லாத இடை யோடு திரிகின்றவர்கள். அறவுரை கற்றிலர் எனமாறுக. புறன் உரைக்க - பொருந்தாத புறம்பான உரைகளைச் சொல்ல. பற்றலர் - பகைவர்.

பண் :

பாடல் எண் : 11

அருமறை ஞானசம் பந்தனந்தண்
சிரபுர நகருறை சிவனடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே.

பொழிப்புரை :

அரிய மறைகளை ஓதாது உணர்ந்த ஞானசம்பந்தன் அழகிய தண்ணளியை உடைய சிரபுர நகரில் எழுந்தருளிய சிவபெருமான் திருவடிகளைப் பரவிப் போற்றிய இப்பதிகச் செந்தமிழ் பத்தையும் ஓத வல்லவர் செல்வத்துடன் புகழ் நிறைந்து ஒளியுடன் திகழ்வர்.

குறிப்புரை :

தேசினர் - ஒளியையுடையவர்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

பிறவி நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குபவனும், தேவர்கட்கும் அசுரர்கட்கும் தலைவனாய் விளங்குபவனும், உயிர்களின் பிறப்பு இறப்பிற்குக் காரணமானவனும், அரிய தவம் உடைய சனகாதி முனிவர்களோடு கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து அறம் உரைத்தருளியவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

இப்பதிகம் முழுதும் இறைவன் திருநகர் இடைமருதே என்கின்றது. மருந்தவன் - மருந்துபோல்பவன். மருந்து, நோய் நீக்கவும், நோய் வாராமல் தடுக்கவும், உடலைவளர்க்கவும் உண்ணப்படு மாறு போல இறைவனும் அநாதியே பந்தித்த மலப்பிணியினீக்கவும், வினை ஏறாமல் காக்கவும், கைவந்த சிவஞானங் கழன்றுபோம்வண்ணம் வாசனை தாக்காமல் வளர்க்கவும் உபகாரப்படுதலின் மருந்தவன் என்றருளினார். அமுதமாயினான் எனலுமாம் . தானவர் - அசுரர் . பிறவு இறவு - பிறப்பு, இறப்பு. `வு` விகுதிபெற்ற தொழிற்பெயர்; மிக அருமையான பிரயோகம். முனிவரோடு ஆலநிழல் கீழ் இருந்தவன் எனப்பிரிக்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

தோற்றவன் கேடவன் றுணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
நீற்றவ னிறைபுன னீள்சடைமேல்
ஏற்றவன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

உயிர்களின் தோற்றத்திற்கும் கேட்டிற்கும் காரண மானவனும், இணையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவனும், கொல்லும் தொழிலில் வல்ல புலியினது தோலை இடையில் கட்டியவனும், மெய்யெலாம் திருநீறு அணிந்தவனும், பெருகிவந்த கங்கையை நீண்ட சடைமுடிமேல் ஏற்று உலகைக்காத்தவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

தோற்றவன் - பிறப்பையருளியவன். கேடவன் - அழித்தவன். கூற்றவன் - பாகமதுடையான்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவி லேற்றினான் ஞாலமெல்லாம்
உடைதலை யிடுபலி கொண்டுழல்வான்
இடைமரு தினிதுறை யெம்மிறையே.

பொழிப்புரை :

மழுவைத் தனக்குரிய ஆயுதமாகக் கொண்டவனும், பால் போன்று வெள்ளிய திருநீற்றை மேனிமேல் பூசியவனும், இனிய நடையைப் பழகுகின்ற விடை ஏற்றை உடையவனும், உடைந்த தலையோட்டில் பலி கொண்டு உலகெலாம் திரிந்துழல்பவனும் ஆகிய எம் தலைவனாகிய சிவபெருமான் இனிது உறையும் நகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

நடைநவில் - நடைபழகுகின்ற. உடைதலை - உடைந்த கபாலம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

பணைமுலை யுமையொரு பங்கனொன்னார்
துணைமதிண் மூன்றையுஞ் சுடரின்மூழ்கக்
கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
இணையிலி வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

பருத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், பகைவராகிய அசுரர்கட்குத் துணையாக இருந்த மூன்று அரணங்களையும் தீயில் மூழ்கி அழியுமாறு கணையைச் செலுத்தி அழித்தவனும், காலனைச் செற்ற ஒப்பிலியும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருது ஆகும்.

குறிப்புரை :

பணைமுலை - பருத்தமுலை. ஒன்னார் - பகைவர். துணைமதிள் - திரிபுராதிகள் செய்யும் தீமைக்கெல்லாம் அரணாயிருந்து துணைபுரிந்த மதிள். கணை - அம்பு. அடுதிறல் - கொல்லும் வன்மை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

பொழிலவன் புயலவன் புயலியக்கும்
தொழிலவன் றுயரவன் துயரகற்றும்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

ஏழ் உலகங்களாக இருப்பவனும், மேகங்களாகவும் அவற்றை இயக்கி மழையைப் பெய்விக்கும் தொழிலைப் புரிவோனாக இருப்பவனும், துன்பங்களைத் தருபவனாகவும் அவற்றைப் போக்கும் கழலணிந்த திருவடிகளை உடையவனாக விளங்குபவனும், யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்த அழகனாக விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

புயலவன் - மேகமாயுள்ளவன். புயலவனாய், அதனை யியக்கும் தொழிலவனாய், துயரவனாய், துயரை அகற்றும் கழலவனாய், என்பன பொருளாயும், அதனையியக்கும் கருத்தனாயும் இருப்பவன் இறைவனே என்பதை விளக்கிற்று. `கரியுரிபோர்த்துகந்த எழிலவன் என்றது` செய்ய திருமேனிமேல் கரிய தோலைப் போர்த்தியதும் அழகாயிற்று என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

நிறையவன் புனலொடு மதியும்வைத்த
பொறையவன் புகழவன் புகழநின்ற
மறையவன் மறிகட னஞ்சையுண்ட
இறையவன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

குறைவற்ற நிறைவாக விளங்குபவனும், கங்கை யோடு திங்களைத் திருமுடியில் வைத்துச் சுமக்கும் சுமையை உடையவனும், புகழ் வடிவினனாக விளங்குபவனும், எல்லோராலும் புகழப்படும் வேதங்களாக விளங்குபவனும், சுருண்டு விழும் அலைகளை உடைய கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்ட தலைவனும் ஆகிய சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

பொறையவன் - சுமையையுடையவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொ டமரர்கண் முறைவணங்க
இனிதுறை வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

நாள்தோறும் ஒரு கலையாக நன்றாக வளர்தற்குரிய பிறைமதியோடு பாம்பையும் உடனாக வைத்துள்ளவனும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை சூடிய விரிந்த சடைமுடியை உடையவனும் ஆகிய சிவபிரான் முனிவர்களும் தேவர்களும் முறையாக வணங்க இனிதாக உறையும் வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

பனிமலர் - குளிர்ந்தமலர், முனிவர் முன்னும், தேவர் பின்னுமாக வணங்குதல் முறையாதலின் முறை வணங்க என்றார். முனிவர்கள் வணக்கம்; உலகம் உய்யவந்த நிஷ்காமிய வணக்கம்; தேவர்கள் வணக்கம்; அசுரர் அழியத் தாம் வாழ வேண்டும் என்னும் காமிய வணக்கம்; ஆதலின் அவர்கள் முன்னும் தேவர்கள் பின்னும் முறையே வணங்க என்றது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

தருக்கின வரக்கன தாளுந்தோளும்
நெரித்தவ னெடுங்கைமா மதகரியன்
றுரித்தவ னொன்னலர் புரங்கண்மூன்றும்
எரித்தவன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

செருக்குற்ற அரக்கனாகிய இராவணனின் தாள் களையும், தோள்களையும் நெரித்தவனும், நீண்ட கையை உடைய பெரிய மதயானையை அக்காலத்தில் உரித்துப் போர்த்தவனும், பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

அரக்கன் - இராவணன். ஒன்னலர் - பகைவர்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
வரியர வணைமறி கடற்றுயின்ற
கரியவ னலரவன் காண்பரிய
எரியவன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

எல்லோரினும் பெரியவனும், பெண் ஆண் வடிவாக விளங்குபவனும், வயிற்றிடையே கீற்றுக்களாகிய கோடுகளை உடைய பாம்பணைமேல் கடலிடையே துயிலும் கரியவனாகிய திருமால் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன் ஆகியோர் காணுதற்கரிய எரியுருவாய் ஓங்கி நின்றவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

அரவணை - ஆதிசேடனாகிய படுக்கை. கரியவன் - திருமால். அலரவன் - பிரமன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியி லுரையவை பொருள்கொளாதே
அந்தண ரோத்தினொ டரவமோவா
எந்தைதன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

சிந்திக்கும் திறனற்ற சமணர்களும், புத்தர்களும் கூறிய அறிவற்ற உரைகளைப் பொருளுடைய உரைகளாகக் கொள்ளாதீர். அந்தணர்களின் வேத ஒலியோடு விழவொலி நீங்காத வளநகர் ஆகிய இடைமருது எந்தையாகிய சிவபிரான் உறையும் இடமாகும் என்று அறிந்து சென்று வழிபடுமின்.

குறிப்புரை :

சிந்தை இல் சமண் - சிந்தனை என்பதொன்றற்ற சமணர். தேரர் - புத்தர். புந்தி இல் உரை - புத்தியற்ற வார்த்தை. ஓத்து - வேதம். அரவம் - ஒலி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

இலைமலி பொழிலிடை மருதிறையை
நலமிகு ஞானசம்பந்தன்சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொ டோங்குவரே.

பொழிப்புரை :

இலைகள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த இடை மருதில் உறையும் சிவபிரானை, அருள்நலம் மிகுந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பயன்மிகு தமிழ்ப் பாடல்களாலியன்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதிவழிபட வல்லவர் உலகில் நிறைந்து விளங்கும் புகழ்கள் அனைத்தையும் பெற்று ஓங்கி வாழ்வர்.

குறிப்புரை :

இடைமருதூர்ப் பதிகமாகிய இப்பத்தையும் வல்லவர், உலகிற் புகழோடு ஓங்கி வாழ்வர் என்கின்றது. பலமிகு தமிழ் - பயன் மிகுந்த தமிழ். தெய்வபலமிகுந்த தமிழ் என்றுமாம். புகழ் இம்மைப்பயனே என்பார் உலகு உறு புகழ் என்று அருளினர். நலம் - திருவருட்டிறம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

அருத்தனை யறவனை யமுதனைநீர்
விருத்தனைப் பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை யல்லதிங் குலகமேத்தும்
கருத்தவன் வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

வேதப் பொருளாய் விளங்குபவனும், அறவடிவின னும், அமுதம்போல இனியவனும், மூத்தவனும், இளையோனும், உலக மக்கள் பலராலும் இவ்வொருவனையன்றித் துணையில்லை என்று கருதி வழிபடும் முடிந்த பொருளாயுள்ளவனும், ஆகிய பெரு மான் எவ்விடத்தான் என நீர் வினவுவீராயின் அவன் எழுந்தருளிய வளநகர் கடைமுடி என்னும் தலமாகும். சென்று வழிபடுவீராக.

குறிப்புரை :

நீர் பொருளாயுள்ளவனும், அறவடிவானவனும், அமு தனுமாகிய இறைவன் இடம் வினவுவீராயின், அது கடைமுடி என்கின்றது. அருத்தன் - பொருள்வடிவானவன். விருத்தன் - மூத்தவன். அருத் தனை...... உலகம் ஏத்தும் ஒருத்தனை வினவுதிரேல் கருத்தவன் அல்லது வளநகர் கடைமுடியே எனக் கூட்டுக. இதன் கருத்து அத்தகைய ஒருவனை வினவுதிராயின் அவன் தியானிப்பார் கருத்தினை இடமாகக் கொண்டவன். அன்றியும், கடைமுடியும் இடமாக்கியவன் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 2

திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்
அரைபொரு புலியத ளடிகளிடம்
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

ஒளியால் விம்மித் தோன்றும் பிறைமதி, அலைகள் ஒன்றோடு ஒன்று மோதும் கங்கை ஆகியவற்றை உடைய திருமுடியை உடையவரும், இடையில் புலித்தோலைப் பொருந்த அணிந்தவருமாகிய அடிகள் எழுந்தருளிய இடம், அலைகளோடு நுரைகள் பொருந் திய தெளிந்த சுனைநீர் கரைகளில் வந்து மோதும் வளநகராகிய கடை முடியாகும்.

குறிப்புரை :

கங்கையையும் பிறையையும் அணிந்த திருமுடியை யும், புலித்தோலை உடுத்த அரையையும் உடைய அடிகளிடம் கடை முடி என்கின்றது. திரை - அலை. ஆகுபெயரால் கங்கையை உணர்த்தியது. அதள் - தோல்.

பண் :

பாடல் எண் : 3

ஆலிள மதியினொ டரவுகங்கை
கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி
ஏலநன் மலரொடு விரைகமழும்
காலன வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

கல்லால மர நீழலில் இளமதி அரவு கங்கை ஆகியன சூடிய சடைமுடியுடனும், அழகிய திருவெண்ணீற்றுடனும், நறுமலர் ஆகியனவற்றால் மணம் பொருத்தமாகக் கமழும் திருவடிகளை உடையவனாக விளங்கும் இறைவனைத் தொழுது இறைஞ்சுதற்குரிய வளநகராக விளங்குவது கடைமுடியாகும்.

குறிப்புரை :

இளம்பிறை முதலியவற்றையுடைய இறைவனைத் தொழ, மலர்மணங்கமழும் திருவடியையுடையவன் நகர் கடைமுடி (அடைவோம்) என்கின்றது. இறைஞ்சி என்ற செய்து என் வினையெச்சத்தைச் செயவென் எச்சமாக மாற்றுக. இறைஞ்சக் கமழும் காலன நகர் எனமுடிக்க.

பண் :

பாடல் எண் : 4

கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவனூர்
பையணி யரவொடு மான்மழுவாள்
கையணி பவனிடங் கடைமுடியே.

பொழிப்புரை :

கொய்யப் பெற்ற அழகிய மணம் கமழும் கொன்றை மலர்மாலை அணிந்தவனாய் விடம்பொருந்திய கண்டத்தை உடையவனாய், படம் பொருந்திய பாம்பையும், மான் மழு வாள் ஆகியவற்றையும் கையின்கண் அணிந்தவனாய் விளங்கும் மறை முதல்வனது ஊர் கடைமுடியாகும்.

குறிப்புரை :

கொன்றையையணிந்த நீலகண்டனும், அரவையும், மானையும், மழுவையும் கையில் அணிந்தவனும் ஆகிய இறைவன் இடம் கடைமுடி என்கின்றது. கொய் - கொய்யப்பெற்ற. மை - விடம். பை - படம்.

பண் :

பாடல் எண் : 5

மறையவ னுலகவன் மாயமவன்
பிறையவன் புனலவ னனலுமவன்
இறையவ னெனவுல கேத்துங்கண்டம்
கறையவன் வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

வேதங்களை அருளியவனும், அனைத்துலகங்களும் ஆகியவனும், மாயை வடிவினனும், சடைமுடியில் பிறை கங்கை ஆகியவற்றை அணிந்தவனும், கையில் அனல் ஏந்தியவனும் உலக மக்கள் இறைவன் எனப் போற்றும் நீல கண்டனுமான சிவபிரானது வளநகர் கடைமுடியாகும்.

குறிப்புரை :

`எல்லாமாயிருப்பவன் இறையவன்` என உலகேத்துங் கண்டங்கரியவன் இடம் கடைமுடி என்கின்றது. மறையவன் - ஒலி வடிவானவன். உலகவன் - பொருட் பிரபஞ்சவடிவானவன். மாயம் அவன் - இவையிரண்டிற்கும் அடியாகிய சுத்தமும் அசுத்தமும் ஆனமாயையும் அவன். இறையவன் - எல்லா உயிர்களிலும் உள்ளும் புறமுந்தங்குதலையுடையவன். கறை - விடம்.

பண் :

பாடல் எண் : 6

படவர வேரல்குற் பல்வளைக்கை
மடவர லாளையொர் பாகம்வைத்துக்
குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள்தன் வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

அரவின் படம் போன்ற அழகிய அல்குலையும் பலவகையினவான வளையல்களை அணிந்த கைகளையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாக வைத்து, மேற்குத் திசையில் தோன்றும் பிறைமதியைச் சூடிய சடைமுடியினனாய் விளங்கும் கடவுளின் வளநகர் கடைமுடியாகும்.

குறிப்புரை :

உமாதேவியையொருபாகம் வைத்து, பிறையைச் சூடும் முடியையுடைய கடவுள்நகர் இது என்கின்றது. பட அரவு ஏர் - அரவின் படத்தையொத்த. மடவரலாள் - உமாதேவி. குட திசைமதி - இளம்பிறை. பிறை மேற்கின்கண்ணே தோன்றுமாதலின் இங்ஙனம் கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்
அடிபுல்கு பைங்கழ லடிகளிடம்
கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

திருநீறு அணிந்த மார்பின்கண் முறுக்கேறிய பூணூலை அணிந்தவராய், திருவடிகளில் பொருந்திய அழகிய கழல்களை உடையவராய் விளங்கும் அடிகள் இடம் கொடிகளில் பூத்த மலர்களோடு குளிர்ந்த சுனை நீரின் மணம் கமழும் வளநகராகிய கடை முடியாகும்.

குறிப்புரை :

மார்பிற்பூணூலையும், திருவடியிற்கழலையும் பூண்ட அடிகளிடம் இது என்கின்றது. பொடி - விபூதி. கொடிபுல்கு மலர் - முல்லைக்கொடியில் பொருந்தியுள்ள மலர். கடி - காவல்.

பண் :

பாடல் எண் : 8

நோதல்செய் தரக்கனை நோக்கழியச்
சாதல்செய் தவனடி சரணெனலும்
ஆதர வருள்செய்த வடிகளவர்
காதல்செய் வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

இராவணனைத் துன்புறுமாறு செய்து, அவன் மீது முதலில் கருணை நோக்கம் செய்யாமல் வலிமை காட்டிப்பின் அவன் திருவடியே சரண் எனக் கூறிய அளவில் அவனுக்கு ஆதரவு காட்டி அருள் செய்த அடிகளாகிய சிவபிரானார் விரும்பும் வளநகர் கடைமுடியாகும்.

குறிப்புரை :

இராவணன் வலியடக்கியாட்கொண்ட இறைவன் இடம் இது என்கின்றது. நோதல்செய்து - வருத்தி. நோக்கு அழிய - திருவருட்பார்வைகெட, சாதல்செய்தவன் - அழிந்துபட்டவனாகிய இராவணன்.

பண் :

பாடல் எண் : 9

அடிமுடி காண்கில ரோரிருவர்
புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச்
சடையிடைப் புனல்வைத்த சதுரனிடம்
கடைமுடியதனயல் காவிரியே.

பொழிப்புரை :

அடிமுடி காணாதவராகிய திருமால் பிரமர் அருகிற்சென்று அருள்புரிக எனப்போற்றி செய்து வழிபடுமாறு, சடைமிசையே கங்கையை அணிந்த சதுரப்பாடுடைய சிவபிரானது இடமாக விளங்குவது காவிரியின் அயலிலே உள்ள கடைமுடியாகும்.

குறிப்புரை :

அடிமுடியறியாத அயனும் மாலும் அருள் என்று போற்றிசைப்ப, கங்கைசூடிய பெருமானிடம் இது என்கின்றது. புடைபுல்கி - அணுகி.

பண் :

பாடல் எண் : 10

மண்ணுதல் பறித்தலு மாயமிவை
எண்ணிய காலவை யின்பமல்ல
ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே.

பொழிப்புரை :

நீரிற் பல கால் மூழ்கலும் மயிர் பறித்தலும் ஆகிய புத்த சமண விரத ஒழுக்கங்கள் பொய்யானவை; ஆராயுமிடத்து இவை இன்பம் தாரா. ஒளி பொருந்திய நுதலினளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ள கண்ணுதலோனின் வளநகர் கடைமுடி யாகும்.

குறிப்புரை :

முழுகுதலும், மயிர்பறித்தலும் ஆகிய இந்த விரத ஒழுக்கங்கள் யாவும் வெறும் மாயம்; எண்ணும்பொழுது இவை இன்பமாகா; உமாதேவியைப் பாகம்வைத்த பெருமானது இடம் இது என்கின்றது. ஒள்நுதல் - ஒளிபொருந்திய நெற்றி.

பண் :

பாடல் எண் : 11

பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன
இன்றமி ழிவைசொல வின்பமாமே.

பொழிப்புரை :

பொன்துகள் திகழும் காவிரியாற்றின் அலைகளின் நீர் முறையாகச் சென்று அடையும் கடைமுடியில் விளங்கும் சிவபிரான் திருவடிப் பெருமைகளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இனிய தமிழாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபட இன்பம் ஆகும்.

குறிப்புரை :

காவிரியின் நீர்வளம்மிகுந்த கடைமுடியின்கண் எழுந் தருளியுள்ள சிவனடியைப்பற்றித் திருஞானசம்பந்தன் சொன்ன இனிய தமிழைச்சொல்ல இன்பமாம் என்கின்றது. பொருபுனல் - கரையை மோதுகின்ற நீர். பொன்திகழ் காவிரி - பொன்னியெனப் பெயர் தாங்கித் திகழ்கின்ற காவிரி. பொன் - அழகுமாம். சீர் சென்றடை சிவன் எனக் கூட்டுக. உரைப்பார் உரைக்கும் புகழ்களை உடையான் இவனென உணராதே உரைப்பினும், சென்றடைவது சிவனையே என்பதாம். சீர் சென்றடை கடைமுடி எனலுமாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கர மருவிய சதுரனகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே.

பொழிப்புரை :

இனிய ஒலியும் இசையும் பொருந்திய யாழ் முரலு மாறு தனது கரத்தின்கண்ணே அதனை ஏந்தி விளங்கும் சதுரனது நகர், அழகிய கரையினை மோதும் பழமையான காவிரியாற்றின் தென்கரையில் விளங்கும் சிவபுரமாகும்.

குறிப்புரை :

யாழேந்திய கரத்தன் நகர் சிவபுரம் என்கின்றது. முரல - ஒலிக்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட வுதைசெய்த புனிதனகர்
வென்றிகொ ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே.

பொழிப்புரை :

முற்காலத்தில் மார்க்கண்டேயன் பொருட்டு வலிய காலனைக் காலால் அழியுமாறு உதைத்தருளிய புனிதனது நகர், தனது கோரைப் பல்லால் வெற்றி பெறும் வெள்ளைப் பன்றியாகத் திருவவதாரம் கொண்ட திருமால், முற்காலத்தில் வந்து திருவடியைப் பணிந்து வழிபாடு செய்ததலமாகிய சிவபுரமாகும். (திருமால் வெண்ணிறப் பன்றியாகத் திரு அவதாரம் செய்த செய்தி தேவாரத்திலேயே உள்ளது. திவ்வியப் பிரபந்தத்தில் இல்லை.)

குறிப்புரை :

மார்க்கண்டற்காகக் காலனையுதைத்தவன் நகர் இது என்கின்றது. அடல் - வலிமை. பொன்றிட - அழிய. எயிறு - கொம்பு. வெண்பன்றி - திருமாலாகிய சுவேதவராகம். இது இத்தலவரவாற்றுக்குறிப்பை அருளியது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

மலைமகண் மறுகிட மதகரியைக்
கொலைமல்க வுரிசெய்த குழகனகர்
அலைமல்கு மரிசிலி னதனயலே
சிலைமல்கு மதிளணி சிவபுரமே.

பொழிப்புரை :

மலைமகளாகிய பார்வதிதேவி அஞ்சுமாறு மதம் பொருந்திய யானையைக் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்த குழகனது நகர், அலைகள் நிரம்பிய அரிசிலாற்றின் கரையருகே விளங்குவதும் மலை போன்ற மதில்களை உடையதுமான சிவபுரமாகும்.

குறிப்புரை :

மலைமகள் அஞ்ச யானையையுரித்த இறைவன் நகர் இது என்கின்றது. மறுகிட - கலங்க. உரிசெய்த - உரித்த. குழகன் - இளமையையுடையவன். சிலை மல்கும் - மலைபோல விளங்கும்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தனகர்
பண்புனை குரல்வழி வண்டுகிண்டிச்
செண்பக மலர்பொழிற் சிவபுரமே.

பொழிப்புரை :

மண், புனல், அனல், காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களாய்ப் பொருந்தி விளங்கும் விகிர்தனது நகர், பண் பொருந்திய குரலோடு வண்டுகள் சூழ்ந்து கிளர மலரும் செண்பகப் பூக்களோடு கூடிய பொழில்கள் சூழ்ந்த சிவபுரமாகும்.

குறிப்புரை :

ஐம்பூதமுமாகிய விகிர்தனகர் இதுவாம் என்கின்றது. மாருதம் - காற்று. பண்புனை குரல் - பண்ணைச்செய்கின்ற குரல்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

வீறுநன் குடையவள் மேனிபாகம்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறலுண் டெழுதரு சிவபுரமே.

பொழிப்புரை :

அழகால் தனிப் பெருமை பெற்ற உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக உடையவனாகிய சிவபிரானது குளிர்ந்த நகரம், மணம் வீசும் நல்ல குராமலரை வண்டுகள் கிண்டித் தேனை உண்டு மகிழ்ந்து எழும் பொழில் சூழ்ந்த சிவபுரமாகும்.

குறிப்புரை :

உமாதேவியை ஒருபாகங்கொண்டவன் நகர் இதுவாம் என்கின்றது. வீறு - தனிப்பெருமை. நாறு நல்குரவிரி - மணம் வீசுகின்ற நல்லகுராமலர்; விரி - மலர்; முதனிலைத் தொழிலாகு பெயர். தேறல் - தேன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

மாறெதிர் வருதிரி புரமெரித்து
நீறது வாக்கிய நிமலனகர்
நாறுடை நடுபவ ருழவரொடும்
சேறுடை வயலணி சிவபுரமே.

பொழிப்புரை :

பகைமை உணர்வோடு மாறுபட்டுத் தன்னை எதிர்த்துவந்த அசுரர்களின் திரிபுரங்களை எரித்து நீறாக்கிய நிமலனது நகர், உழவர்களோடு நாற்றுநடும் மகளிர் பலரைக் கொண்ட சேற்று வளம் மிக்க வயல்களால் அழகு பெறுவதாகிய சிவபுரமாகும்.

குறிப்புரை :

திரிபுரங்களை நீறாக்கிய நிமலன் நகர் இதுவாம் என் கின்றது. மாறு - பகையாக. நாறு - நாற்று.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

ஆவிலைந் தமர்ந்தவ னரிவையொடு
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.

பொழிப்புரை :

பசுவிடம் உண்டாகும் பால், தயிர் முதலிய ஐந்து பொருள்களை விரும்புபவனாகிய சிவபிரான் உமையம்மையோடு கூடி மகிழ்வுடன் இருக்கின்ற பெரிய நகர், தேனுண்ண வண்டுகள் மொய்க்கும் மலர்களை உடைய பொய்கைகளில் அன்னச் சேவல் தன் பெண் அன்னத்தைத் தழுவி மகிழும் அழகுடைய சிவபுரமாகும்.

குறிப்புரை :

ஆனைந்தாடும் பரமன் அம்மையோடும் எழுந்தருளி இருந்த இடமாம் என்கின்றது. ஆவில் ஐந்து - பஞ்சகவ்யம். அரிவை - உமாதேவி. பூவில் வண்டு கண்ணயர்ந்திருக்கும் பொய்கையிலே, அன்னச்சேவல் தன் பெடையைப்புல்லும் சிவபுரம் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
முழுவலி யடக்கிய முதல்வனகர்
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே.

பொழிப்புரை :

அழகிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் முழுமையான வல்லமையை அடக்கிய முதல்வனாகிய சிவபிரானது நகர், விழாக் காலங்களில் எடுக்கப்பட்ட வெண்மையான கொடிகள் நிறைந்து கரிய மேகங்களை நெருங்கிச் செறியும் வளமையான சிவபுரமாகும்.

குறிப்புரை :

இராவணனின் வலியடக்கிய முதல்வன்நகர் இது என் கின்றது. எழில்மலை - அழகியகைலை. உற்சவத்தில் உயர்த்திய கொடிகள் மேகத்தையணுகும் சிவபுரம் என விழாச் சிறப்பும், கொடியின் உயரமும் உரைத்தவாறு.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

சங்கள வியகையன் சதுர்முகனும்
அங்கள வறிவரி யவனகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகுதொறும்
செங்கனி நுகர்தரு சிவபுரமே.

பொழிப்புரை :

சங்கேந்திய கையினனாகிய திருமாலும் நான்முகனும் முற்காலத்தில் அடிமுடி தேடி அளந்தறியப் பெறாத சிவபிரானது நகர், இரவிலும் பறவைகள், கமுக மரங்கள் தோறும் தங்கிச் செங்கனிகளை நுகரும் வளம் மிக்க சிவபுரமாகும்.

குறிப்புரை :

அயனும்மாலும் அறியப்பெறாதவன் நகர் இதுவாம் என்கின்றது. சங்கு அளவியகையன் - பாஞ்சசன்யம் என்னும் சங்குகலந்த கையையுடையவன். அளவு - உயரமும், ஆழமும் ஆகிய புறஅளவு. இரவிலுங்கூடப் பறவைகள் கமுகுதோறும் பழநுகரும் நகர் என்று இருபோதும் பறவைக்கு உபகாரப்படுவது உரைக்கப்பெற்றது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

மண்டையிற் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலனகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே.

பொழிப்புரை :

உண்கலன் குண்டிகை ஆகியனவற்றை ஏந்திய வராய், மாசேறிய உடலினராய்த் தருக்கொடுதிரியும் சமணர்களை வெறுக்கும் சிவபிரானது நகர், பழமையான காலந்தொட்டே ஓடி வந்து வளம் சேர்க்கும் பழங்காவிரியின் அலைகள் வந்து பொருந்தும் சிவபுரமாகும்.

குறிப்புரை :

புறச்சமயிகளை விலக்கிய விமலன் நகரிதுவாம் என் கின்றது. மண்டை - உண்கலம். மாசு - அழுக்கு. பண்டு அமர் தரு பழங்காவிரி - முன்னமே வளந்தரும் பழங்காவிரி எனப்பழமைக்கு எல்லை கூறியவாறு.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.

பொழிப்புரை :

சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரநகரைப் போற்றிக் கவுணியர் குலபதியாகிய காழியர் தலைவன் ஞானசம்பந்தன் பாடிய தவத்தைத் தருவனவாகிய இப்பதிகத் தமிழை ஓதவல்லவர் புதுமைகள் பலவும் பெற்று முடிவில் சிவகதிசேர்வர்.

குறிப்புரை :

சிவபுரத்தைக் காழிநாதன் கூறிய பாடலைச் சொல்ல வல்லவர் சிவகதிசேர்வர் எனப்பயன் கூறியது. நவம் - புதுமை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

அவுணர்களின் முப்புரங்களையும் எரியில் மூழ்குமாறு செய்து அழித்தவனும், தாழ்ந்து தொங்கும் சடைமுடிமீது கங்கையைத் தரித்தவனும், வேதங்களை அருளிச் செய்தவனும், அவற்றின் பொருள்களை ஆறு அங்கங்களுடன் தெளியச் செய்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

முப்புரம் எரித்தவன். சடையிற் கங்கையைத் தரித்தவன். வேதங்களை விரித்தவன். வேறு வேறு தெரித்தவன் இடம் திருவல்லம் என்கின்றது. விரித்தவன் - பரப்பியவன். தெரித்தவன் - பொருளுணர்த்தியவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

தாயவ னுலகுக்குத் தன்னொப்பிலாத்
தூயவன் றூமதி சூடியெல்லாம்
ஆயவ னமரர்க்கு முனிவர்கட்கும்
சேயவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

உலக உயிர்கட்குத் தாய் போன்றவனும், தனக்கு யாரையும் உவமை சொல்ல முடியாத தூயவனும், தூய மதியை முடியில் சூடியவனும், எல்லாப் பொருள்களுமாக ஆனவனும், போகிகள் ஆன அமரர், மானசீலரான முனிவர் முதலானோர்க்குச் சேயவனும் ஆன சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

உலகுக்குத் தாயானவன், ஒப்பில்லாத் தூயவன், தேவர் கட்கும் முனிவர்கட்கும் சேயவன் திருத்தலம் திருவல்லம் என்கின்றது. அமரர் முனிவர் இருவரும் போகிகளாயும், மனன சீலர்களாயும் இருத்தலின் அவர்களுக்குச் சேயவனானான் என்று அருளினர். இவர்களுக்குச் சேயவன் எனவே ஞானிகட்கு மிக அண்ணியன் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

பார்த்தவன் காமனைப் பண்பழியப்
போர்த்தவன் போதகத் தின்னுரிவை
ஆர்த்தவன் நான்முகன் றலையையன்று
சேர்த்தவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

மன்மதனின் அழகு கெடுமாறு நெற்றி விழியால் பார்த்து அவனை எரித்தவனும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், தன்முனைப்போடு ஆரவாரித்த பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையினது ஓட்டைக் கையில் உண் கலன் ஆகச் சேர்த்துள்ளவனும் ஆகிய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

காமனையெரித்தவன், யானையையுரித்தவன், பிரமனைச் சிரங்கொய்தவன் இடம் இது என்கின்றது. பண்பு - அழகு. போதகம் - யானைக் கன்று. உரிவை - தோல். ஆர்த்தவன் - ஆரவாரம் செய்த பிரமன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

கொய்தவம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்
பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்
செய்தவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

அன்பர்களால் கொய்து அணியப்பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களைப் பலரிடத்தும் மாறிமாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும், பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

தம் அடியை வணங்குவாரைத் திருமகள் வணங்க வைத்து, உலகம் உய்யப் பெருமழை பெய்யச் செய்தவன் உறைவிடம் வல்லம் என்கின்றது. கொய்த அம் மலரடி - கொய்த அழகிய மலரையணிந்த திருவடி. கூடுவார்தம்மை - தியானிப்பவர்களை. தவழ் திரு மகள் - நிலையாமல் தவழ்ந்துகொண்டே யிருக்கின்ற இலட்சுமியை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவ னேரிழை யோடுங்கூடித்
தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே
சேர்ந்தவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்பங்கள் தழைக்குமாறு நேரிய அணிகலன்களைப் பூண்டுள்ள உமையம்மையாரோடு அருள் வழங்க இசைந்துள்ளவனும் தன்னைச் சேர்ந்த சிவஞானியர்க்கும் பிறவாறு தேடுபவர்க்கும் அவர்களைத் தேடுமாறு செய்து அவர்கட்கு உள்ளிருந்து அருள் செய்பவனுமாகிய சிவபெருமானது உறைவிடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

சார்ந்தவர்க்கு இன்ப நல்கி, பார்வதியோடும் இருப்பவனும், தெளிந்தாரும் தேடுவாரும் தேடச்செய்தே அவர்களிடம் சேர்ந்திருப்பவனும் ஆகிய சிவன் இடம் இது என்கின்றது. சார்ந்தவர்க்கு - திருவடியே சரண் என்று சார்ந்த ஞானிகட்கு. நேர்ந்தவன் - திருவுளம் பற்றியவன்; தேர்ந்த ஞானியரையும் தேடச்செய்து அவர்கட்குப் பாலினெய்போலவும் தேடுவாரைத் தேடச்செய்து விறகின் தீப்போலவும் தோன்றி நிற்பவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்
உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று
விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று
சிதைத்தவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

சினந்து வந்த எமனை இடக்காலால் உதைத்துத் தன்னை வணங்கி எழுந்த மார்க்கண்டேயனுக்கு உண்மைப் பொருளாய் எதிர்நின்று அருள் செய்தவனும், விதிர்த்தெழு கோபத்தால் படபடத்துத் திட்டமிட்டுச் செயற்பட்ட தக்கனது வேள்வியை முற்காலத்தில் சிதைத்தவனும் ஆகிய சிவபிரானது இடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

காலனை உதைத்தும், மார்க்கண்டர்க்கு உண்மைப் பொருளாய் எதிர் நின்றும், தக்கன் யாகத்தினைத் தகர்த்தும் நின்ற இறைவன் இடம் இது என்கின்றது. மாமுனி - மார்க்கண்டர். விதிர்த்து - நடுங்கி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

இகழ்ந்தரு வரையினை யெடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை யடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

இகழ்ந்து அரிய கயிலை மலையை எடுத்து அப்புறப்படுத்தற் பொருட்டு அகழ்ந்த வலிய இராவணனை அடர்த்த திருவடியை உடையவனும், அத்திருவடியையே நிகழ் பொருளாகக் கொண்ட அன்பர்கள் தேடி வருந்திய அளவில் அவர்கள் உள்ளத்திலேயே திகழ்ந்து விளங்குபவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

இராவணன் வலியடக்கிய பாதத்தைத் தேடுவார் தேடச் செய்தே எமக்கு எளிமையாகத் திகழ்ந்தவன் நகர் இது என்கின்றது. இகழ்ந்து அருவரையினை - இது என் வலிக்கு எம் மாத்திரம் என்று இகழ்ந்து அரிய கயிலையை. நிகழ்ந்தவர் - பாதத்தை நிகழ்பொருளாகக் கண்டவர்கள். நேடுவார் - தேடுபவர்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவ னருமறை யங்கமானான்
கரியவ னான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் வளநகர் திருவல்லமே.

பொழிப்புரை :

எல்லோரினும் பெரியவனும், அறிவிற் சிறியவர்கள் சிந்தித்து உணர்தற்கு அரியவனும், அரிய வேதங்களும் அவற்றின் அங்கங்களும் ஆனவனும், திருமால் பிரமர்கள் காண ஒண்ணாதவனாய் அன்பிற் சிறந்தார்க்குத் தெரிய நிற்பவனும் ஆன சிவபிரானது வளநகர் திருவல்லமாகும்.

குறிப்புரை :

பெரியவன், சிறியவர்கள் தியானித்தற்கு அரியவன், வேதமும் அங்கமும் ஆனான், அயனும் மாலுங்காண ஒண்ணாத தெரியவன் நகர் இது என்கின்றது. தெரியவன் - தெரிய நிற்பவன். முனைப்படங்கிய முத்தான்மாக்களுக்கு விளங்கி நிற்பவன் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

அன்றிய வமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய வறவுரை கூறாவண்ணம்
வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்கும்
சென்றவ னுறைவிடந் திருவல்லமே.

பொழிப்புரை :

கொள்கைகளால் மாறுபட்ட சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய உரைகளைக் கூறாவாறு, ஐம்புலன் களையும் வென்றவனும், எங்கும் விளங்கித் தோன்றுபவனும் ஆகிய சிவபிரான் உறைவிடம் திருவல்லமாகும்.

குறிப்புரை :

சமணரும், புத்தரும் அறமிலா உரை பேசாவண்ணம் ஐம்புலன்களையும் வென்றவன் நகர் வல்லம் என்கின்றது. அன்றிய - மாறுபட்ட. அறம் குன்றிய உரை எனமாறுக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

கற்றவர் திருவல்லங் கண்டுசென்று
நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவ ரீசன்பொற் பாதங்களே.

பொழிப்புரை :

கற்றவர்கள் வாழும் திருவல்லத்தைத் தரிசித்துச் சென்று நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் பாடிய குற்றமற்ற இச்செந்தமிழ்ப் பதிகத்தைக் கூற வல்லவர்கள் சிவபிரானுடைய அழகிய திருவடிகளை அடைவர்.

குறிப்புரை :

ஞானசம்பந்தப் பெருமான் திருவல்லத்தைக் கண்டு சொன்ன குற்றம்இல் செந்தமிழ்ப் பாடலாகிய இவற்றைக் கூறவல்லவர் ஈசன் பாதங்களைப் பற்றுவர் என்கின்றது. கண்டு சென்று சொன்ன என்பதால் இப்பதிகம் திருவல்லத்தை வழிபட்டுப்போன பின்பு சிவானந்தாநுபவம் சிந்தையில் நிறைய ஆக்கப்பெற்றதாகும் என்பது அறியப்பெறும்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவ னாணுமவன்
கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்
மருந்தவன் வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

குருத்தாக, தளிராக, மொட்டு, காய் ஆதியனவாக விளங்குபவனும், பெருந்தகையாய்ப் பெண் ஆண் வடிவோடு விளங்குபவனும், தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமையம்மையால் விரும்பப்படுபவனும், அரிய மருந்தாய் விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் மாற்பேறு.

குறிப்புரை :

இப்பதிகம், மருந்தாய், மாறிலியாய், உமாபதியாய், கயிலாய பதியாய். கால காலனாய், முனிவரும் தேவரும் மக்களும் ஒருசேர வணங்கத்தகும் எளிமையனாய் மாதுடையனாய், பிறை முதலிய சூடியவனாய், எந்தையாய் இருப்பவன் நகர் மாற்பேறு என்கின்றது. குருந்தவன் - குருந்த மரத்தடியிற் குருவானவன். இவ்வுரை மாணிக்கவாசகர் காலத்துக்கு ஞானசம்பந்தப் பெருமான் பின்னவராயிற் கொள்ளலாம். குருந்து - குருத்து எனலும் ஆம். குருகவன் - வயிர வகையில் ஒன்றானவன். மருந்து - அமுதம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய்
நீறணிந் துமையொரு பாகம்வைத்த
மாறிலி வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

பருந்தால் நெருங்கப்பட்ட புலால் நீங்கிய அழகிய வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகியலில் வேறுபட்ட அழகுடன் சென்று பலியேற்கும் வேட்கையனாய் மேனி முழுதும் நீறுபூசி உமையம்மையை ஒருபாகமாக வைத்துள்ளவனும், தனக்கு ஒப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது வளநகர், மாற்பேறு.

குறிப்புரை :

பாறு - பருந்து. மாறிலி - மாறுபாடில்லாதவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

கருவுடை யாருல கங்கள்வேவச்
செருவிடை யேறியுஞ் சென்றுநின்று
உருவிடை யாளுமை யாளுந்தானும்
மருவிய வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

பிறப்புடைய ஆன்மாக்களுக்குப் படைக்கப்பட்ட உலகங்களை ஊழிக் காலத்தில் அழியுமாறு செய்பவனும், போரில் வல்ல விடை மீது ஏறிவருபவனும் ஆகிய சிவபிரான் மணம் புரிந்த அழகிய இடையினை உடைய உமையாளும் தானுமாய்ச் சென்று நின்று பொருந்தி விளங்கும் வளநகர் மாற்பேறாகும்.

குறிப்புரை :

கருவுடையார் உலகங்கள் வேவ - பிறப்புடைய ஆன்மாக்களின் போக நுகர்ச்சிக்காகப் படைக்கப்பெற்ற உலகங்கள் அழிய. உரு - அழகிய.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

தலையவன் றலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்
கலைநவின் றான்கயி லாயமென்னும்
மலையவன் வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

எல்லோரினும் மேம்பட்டவனும், அழகிய தலைமாலையைப் பூண்டு உயிரைக் கொல்லும் விருப்பொடுவந்த கூற்றுவனைக் கொன்று மகிழ்ந்தவனும், பல கலைகளையும் உலகிற்கு அருளியவனும், கயிலாய மலையாளனுமாகிய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும்.

குறிப்புரை :

தலையணிமாலை - கபாலமாலை. நவில் - விரும்பும்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

துறையவன் றொழிலவன் றொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்
கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற
மறையவன் வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

பல்வேறு நெறிகளாய் விளங்குபவனும், பழமையாக வரும் உயிர்களின் பொருட்டு ஐந்தொழில்களைப் புரிபவனும், பிறையணிந்த சடைமுடியனும், உமை நங்கையை ஒருபாகமாகக் கொண்டவனும், விடக்கறை பொருந்தியமிடற்றினை உடைய தலைமையாளனும், காலனைச் செற்றுகந்த மறையவனுமான சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

குறிப்புரை :

துறையவன் - பல நெறிகளாய் இருப்பவன். தொழிலவன் - ஐந்து தொழிலையுடையவன். கறை - விடம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

பெண்ணினல் லாளையோர் பாகம்வைத்துக்
கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்
விண்ணவர் தானவர் முனிவரொடு
மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.

பொழிப்புரை :

பெண்களிற் பேரழகினளாகிய உமையம்மையை ஒரு பாகமாக வைத்திருந்தும் தனது நெற்றிக் கண்ணால் காமனை நீறாக்கி அழித்தவனும், தேவர்கள், அசுரர்கள் முனிவர்கள், மண்ணுலக மக்கள் ஆகியோரால் வணங்கப் பெறுபவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

குறிப்புரை :

உமையையொருபாகம் வைத்தும் மன்மதனைக் கண்ணாற் காய்ந்தவன் என்பதில் நயம்ஓர்க. விண்ணவர் முதலானோர் ஒப்ப வணங்கத்தகும் எளிமையில் இருப்பவன் என இறைவனுடைய ஒப்பநோக்கும் பேரருள் உரைக்கப்பட்டது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்
நீதியால் வேதகீ தங்கள்பாட
ஆதியா னாகிய வண்ணலெங்கள்
மாதிதன் வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

குற்றமற்ற கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனை முதலில் கால்விரலால் அடர்த்துப் பின் அவன் பிழை உணர்ந்து முறையோடு வேத கீதங்களைப் பாட அருள்புரிந்த ஆதியானாகிய அண்ணலும் மாதினை இடப்பாகமாக உடைய எங்கள் தலைவனுமாய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

குறிப்புரை :

மாதி - மாதினையுடையவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

செய்யதண் டாமரைக் கண்ணனொடும்
கொய்யணி நறுமலர் மேலயனும்
ஐயனன் சேவடி யதனையுள்க
மையல்செய் வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

சிவந்த தண்தாமரை மலர்போன்ற கண்களை உடைய திருமாலும், கொய்து அணியத்தக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், தலைவனாகிய சிவபிரானின் சேவடிகளை விருப்போடு நினைந்து வழிபட அருள்புரியும் சிவபிரான் எழுந்தருளிய வளநகர், மாற்பேறாகும்.

குறிப்புரை :

ஐயன் நன்சேவடி - தலைவனுடைய நல்ல சேவடியை. மையல் - விருப்பம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

குளித்துணா வமணர்குண் டாக்கரென்றும்
களித்துநன் கழலடி காணலுறார்
முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி
வளைத்தவன் வளநகர் மாற்பேறே.

பொழிப்புரை :

குளித்துப்பின் உண்ணாத இயல்பினராகிய அமணர்களும், பருத்த உடலினராகிய புத்தர்களும், களிப்போடு சிவபிரான் திருவடிகளைக் காணப்பெறார். ஒரு கலைப் பிறையாக முளைத்த வெள்ளிய பிறை மதியையும் பாம்பையும் முடிமீது சூடியவனாகிய சிவபிரானது வளநகர், மாற்பேறாகும்.

குறிப்புரை :

`கூழாயினுங் குளித்துக் குடி` என்பது உலக வாய்மொழியாகவும் குளித்து உண்ணாத அமணர்கள் என அவர்கள் இயல்பு கூறியது. குண்டு ஆக்கர் - பரு உடலராகிய புத்தர்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

அந்தமின் ஞானசம் பந்தன்சொன்ன
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்
சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்
எந்தைதன் கழலடி யெய்துவரே.

பொழிப்புரை :

ஞானசம்பந்தன் செவ்விய இசையால் பாடிப் போற்றிய மாற்பேற்றைத் தரிசித்துச் சந்த இசையோடு கூடிய அழிவற்ற இனிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு ஏத்தி வழிபட வல்லவர் எந்தையாகிய சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை எய்துவர்.

குறிப்புரை :

அந்தம் இல் - அழிவற்ற. சந்தம் இன் தமிழ் - இசையோடு கூடிய இனிய தமிழ். இப்பதிகம் பாடினவர்க்குப் பயன் திருவடிப்பேறு எனச் சொல்லப்படுகின்றது. செந்து இசை பாடல் - செவ்விய இசையையுடைய பாடல். து - சாரியை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளு மவன்கோபப்
பொங்கர வாடலோன் புவனியோங்க
எங்கும னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

சங்கு வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய முனி பன்னியர் வாழும் வீதிகளிடையே சென்று அங்கு அவர்கள் இடும் பலியை மகிழ்வோடு கொள்பவனும், சினம் பொங்கும் அரவைப் பிடித்து ஆட்டுபவனும், உலக மக்கள் உயர்வுபெற எங்கும் நிறைந்திருப்பவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

முனிபன்னியர் இடும்பலியை ஏற்பவனும், அரவு அணிந்தவனும், உலகமெலாம் உயர எங்கும் மன்னியிருப்பவனும் ஆகிய சிவனிடம் இராமனதீச்சரம் என்கின்றது. சங்கு - வளையல். அங்கு - அசை. புவனி - பூமி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

சந்தநன் மலரணி தாழ்சடையன்
தந்தம தத்தவன் றாதையோதான்
அந்தமில் பாடலோ னழகனல்ல
எந்தவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

அழகிய நல்ல மலர்களை அணிந்து தாழ்ந்து தொங்கும் சடையினை உடையவனும், தந்தத்தையும் மதத்தையும் உடைய விநாயகப் பெருமானின் தந்தையும், முடிவற்ற இசைப்பாடல்களைப் பாடுபவனும், அழகனும், எங்கள் தவப்பேறாய் விளங்கும் நல்லவனுமாய சிவபிரானது தலம், இராமனதீச்சரம்.

குறிப்புரை :

தாழ்சடையன், விநாயகப்பெருமான் தாதை, பாடலன், அழகன் நகர் இது என்கின்றது. சந்தம் - அழகு. தந்தமதத்தவன் - தந்தத்தையும் மதத்தையும் உடைய விநாயகப்பெருமான். அந்தம் இல் - எல்லையில்லாத.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

தழைமயி லேறவன் றாதையோதான்
மழைபொழி சடையவன் மன்னுகாதில்
குழையது விலங்கிய கோலமார்பின்
இழையவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

தழைத்த பீலியோடு கூடிய மயில்மீது ஏறிவரும் முருகனது தந்தையும். உலகிற்கு நீர்வளந்தரும் கங்கை பாயும் சடையினை உடையவனும், காதில் நிலைபெற்று விளங்கும் குழையை அணிந்தவனும், அழகிய மார்பில் குறுக்காக முப்புரிநூல் அணிந்தவனு மாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

முருகன் தாதை, மார்பில் பூணூலன் நகர் இதுவே என்கின்றது. தழை மயில் - பீலியோடு கூடிய மயில். ஏறவன் - ஏறுதலையுடையவன். மழை - நீர்த்துளி. குழை - காதணி. கோலம் - அழகு. இழை - பூணூல்; ஆபரணமும் ஆம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

சத்தியு ளாதியோர் தையல்பங்கன்
முத்திய தாகிய மூர்த்தியோதான்
அத்திய கையினி லழகுசூலம்
வைத்தவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

சத்திகளில் முதல்வியாக விளங்கும் உமையம் மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், உயிர்கட்கு முத்திப்பேறாக விளங்கும் கடவுளும், தீயேந்திய கையில் அழகிய சூலத்தைத் தாங்கியவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

ஆதி சத்தியின் தலைவன், முத்திதரு முதல்வன் நகர் இது என்கின்றது. அத்தியகையினில் அழகு சூலம் வைத்தவன் - சங்கார கிருத்தியஞ்செய்யும் தீயேந்திய திருக்கரத்தில் அழகுக்காகச் சூலத்தை ஏந்தியவன். இதன் நயம் ஓர்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

தாழ்ந்தகு ழற்சடை முடியதன்மேல்
தோய்ந்த விளம்பிறை துலங்குசென்னிப்
பாய்ந்தகங் கையொடு படவரவம்
ஏய்ந்தவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

தலையில், தாழ்ந்த கூந்தலால் இயன்ற சடை முடியின்மேல், அழகு தோய்ந்த இளம்பிறை, பாய்ந்துவரும் கங்கை, படம் பொருந்திய அரவம் ஆகியவற்றைச் சூடிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

பிறையணிந்த சென்னியோடு கங்கை பாம்பு அணிந்தவன் நகர் இது என்கின்றது. ஏய்ந்தவன் - பொருந்தியவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

சரிகுழ லிலங்கிய தையல்காணும்
பெரியவன் காளிதன் பெரியகூத்தை
அரியவ னாடலோ னங்கையேந்தும்
எரியவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

பிடரியின்மேல் விளங்கும் சுருண்ட கூந்தலினளாகிய உமையம்மை அருகிலிருந்து காணும் பெரியவனும், காளியின் பெரிய கூத்தோடு போட்டியிட்டு அவளால் அறிதற்கு அரியவனாய், நடனமாடுபவனும், அழகிய கையில் எரி ஏந்திவிளங்குபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

பராசக்தி காணும் பெரியவன், காளியின் கூத்திற்கு அரியவன், ஆனந்தக் கூத்தன் நகர் இது என்கின்றது. சரிகுழல் - பிடரிமீது சரிந்த கூந்தல். இத்தலத்து இறைவிநாமம் சரியார் குழலி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

மாறிலா மாதொரு பங்கன்மேனி
நீறது வாடலோ னீள்சடைமேல்
ஆறது சூடுவா னழகன்விடை
ஏறவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

தனக்கு ஒப்பாரில்லாத அழகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், திருமேனியில் திருநீற்றை அணிந்தவனும், நீண்ட சடைமுடியின்மேல் கங்கையைச் சூடியவனும் அழகனும், விடையின்மேல் ஏறிவருபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

மாதொருபங்கன், நீறாடி, ஆறுசூடி, அழகன் நகர் இது என்கின்றது. மாறு இலா மாது - அபின்னையாகிய பராசக்தி. நீறு அது ஆடலோன் - நீறாடியவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

தடவரை யரக்கனைத் தலைநெரித்தோன்
படவர வாட்டிய படர்சடையன்
நடமது வாடலா னான்மறைக்கும்
இடமவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

பெரிய கயிலை மலையால் இராவணனின் தலையை நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பை ஆட்டி மகிழ்பவனும், விரிந்த சடைமுடியை உடையவனும், நடனம் புரிபவனும், நான்கு வேதங்கட்கும் இடமாக விளங்குபவனும் ஆகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

இராவணனை நெரித்தவன், அரவாட்டிய சடையன், நடனம் ஆடுதலையுடையவன் நகர் இது என்கின்றது. நான்மறைக்கும் இடம் அவன் - வேதங்கள் நான்கிற்கும் இடம் ஆயவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

தனமணி தையல்தன் பாகன்றன்னை
அனமணி யயனணி முடியுங்காணான்
பனமணி வரவரி பாதங்காணான்
இனமணி யிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

அழகிய தனபாரங்களையுடைய உமையம்மையின் கேள்வனும், அன்னமாகத் தன்னை மாற்றிக் கொண்டு, அழகிய முடியைக் காணாது திரும்பிய நான்முகன், திருவடியைக் காணாத, படங்களில் மணிகளையுடைய ஆதிசேடனாகிய அணையில் துயிலும் திருமால் ஆகியோர் வணங்க அருள் புரிந்தவனுமாகிய சிவபிரானது தலம் பல்வகையான மணிக்குவைகளையுடைய இராமனதீச்சரம் ஆகும்.

குறிப்புரை :

உமைபாகனை அயன்முடிகாணான், அரிஅடிகாணான். அத்தகைய இறைவன் நகர் இது என்கின்றது. அனம் அணிஅயன் - அன்னமாகத் தன்னைப்புனைந்து கொண்டபிரமன். பன மணி வரவு அரி - படங்களில் மணிகளையுடைய ஆதிசேடன் மேல் வருதலை யுடைய மால். பண என்பது எதுகை நோக்கிப் பன என ஆயிற்று. நான்கு தலைகளையுடைய பிரமன் ஒரு முடியைக் காணாமையும், ஏனமாய் நான்கு கால்களையுடைய திருமால் இணையடி காணாமையும் வியப்பு என நயம் தோன்றநின்றது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல்
அறிவோரா னாம மறிந்துரைமின்
மறிகையோன் றன்முடி மணியார்கங்கை
எறிபவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

மரத்தால் இயன்ற தடிபோன்ற அறிவற்ற சமண புத்தருடைய சொற்களைக் கேளாதீர். மெய்ஞ்ஞானியர்கள் வாயினால் இறைவன் திருப்பெயரை அறிந்து சொல்வீர்களாக. அப்பெருமான் மான் இளங்கன்றை ஏந்திய கையனாய்த் தனது முடியில், மணிகளோடு கூடிய கங்கை நதி அலை, மோதுபவனாய், இராமனதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான். சென்று வழிபடுக.

குறிப்புரை :

அறிவால் அறியப்பெறாதவன், மான்கையன், கங்கையன்நகர் இது என்கின்றது. தறி - கம்பம். அறிவு - பசு, பாச ஞானம். பாசஞானத்தாலும் படர் பசுஞானத்தாலும் ஈசனையறிய வொண்ணாது ஆதலின் இங்ஙனம் கூறினார். மறி - மான்குட்டி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

தேன்மலர்க் கொன்றையோன்
* * * * * * * *

பொழிப்புரை :

தேன் பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவன் .

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

`நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை நுகர்கிறோம்` என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை :

நாம் முன்முன் பிறவிகளில் ஈட்டிய தீவினைகட்கு ஏற்ப இப்பிறவியில் பிராரத்தம் வந்தூட்ட இத்துன்பம் அநுபவிக்கிறோம் என்று சொல்லும் அடியார்களைப் பார்த்து நீங்கள் உய்வைத்தேடாதிருப்பது ஊனமல்லவா? கைத்தொண்டு செய்து கழலைப் போற்றுவோம்; நாம் செய்தவினை நம்மைத் தீண்டா; திருநீலகண்டம் என்கின்றது. அவ்வினைக்கு - முன்னைய வினைக்கு. இவ்வினை - இப்போது சுரநோயால் வருந்தும் இவ்வினை. உய்வினை - தீரும் உபாயத்தை. கைவினை - கிரியைகளாகிய சிவப்பணி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு `கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே` என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த பெருமானே! நந்தவனம் வைத்தும், குளந்தோண்டியும், பூவெடுத்துக் கட்டி அணிவித்தும் போற்றுவோம்; ஆதலால் தீவினை எம்மை வந்து தீண்டப்பெறா திருநீலகண்டம் என்கின்றது. கா - சோலை. தொட்டும் - தோண்டியும். ஏ வினையால் - அம்பின் தொழிலால்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

முலைத்தட மூழ்கிய போகங் களுமற் றெவையுமெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மகளிர் இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக நுகர்வுகள் எல்லாம் நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு சிவபெருமானாரை `எம்மை ஆட்கொண்டருளிய விரிந்த சடையை உடையவரே` முத்தலைச் சூலம், தண்டாயுதம், மழு முதலியவற்றைப் படைக்கலங்களாக உடையவரே! எனப் போற்றுவோமாயின், பழைய தீவினைகள் ஆரவாரித்து வந்து நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

குறிப்புரை :

போகங்கள் எம்மைப் பற்றாவண்ணம் தடுத்தாண்ட பெருந்தகையீர்! சூலம் மழு இவற்றையுடையீர்! எம்மை வினை தீண்டப்பெறா என்கின்றது. விலைத்து அலையா வண்ணம்; அடியேனை விலகச் செய்து அலையா வண்ணம்; விலையாகக் கொண்டு எனலுமாம். சிலைத்து - ஒலித்து. விலைத்தலை ஆவணம் செய்து என்றுமாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி, விண்ணுலகை ஆளுகின்ற வித்யாதரர்களும், வேதியர்களும் `புண்ணிய வடிவமானவர்` என்று காலை மாலை இருபோதும் துதித்துத் தொழப்படும் புண்ணியரே. இமையாத முக்கண்களை உடையவரே! உம் திருவடிகளைப் புகலாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின் பழையதான வலிய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை :

வேதியரும் வித்தியாதரர்களும் புண்ணியர் என்று தொழும் புண்ணியரே! உம் கழல் அடைந்தோம்; திண்ணிய தீவினை தீண்டப்பெறா என்கின்றது. திண்ணிய தீவினை தீண்டப்பெறா என்றது இதுவரை நுகர்ந்த அளவிலேயே அமைவதாக, திருவருள் நோக்கத்தால் அவை மென்மையாயின ஆதலின் இங்ஙனம் கூறினார்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி ஒப்பற்ற மலைபோல் திரண்ட திண்மையான தோள்களை உடையவரே!. எம்மைப் பெருவலிமை கொண்டு ஆட்கொண்டும் சிறிதேனும் எம்குறையைக் கேளாதொழிவது உமது பெருமைக்கு ஏற்புடையதாமோ?. இல்லற வாழ்க்கைக்குச் சொல்லப்படும் எல்லாத் துணைகளையும் விடுத்து உம் திருவடிகளையே சரணாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின், நாம் முற்பிறவிகளில் செய்த தீவினைகள் பெருவலிமை கொண்டு வருத்தி நம்மை வந்து அடையமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை :

ஒப்பற்ற மலைபோல் திரண்ட தோளுடையீர்! எம்மையாட்கொண்டும் எம்குறையைக் கேளாதொழிவது பெருமையோ? எல்லாத் துணையையும் விட்டு உமது திருவடியடைந்தோம் ஆதலால் எம்மைத் தீவினை தீண்டப்பெறா. திருநீலகண்டம் ஆணை என்கின்றது. மற்று - வேறு. இணை - ஒப்பு. கிற்று - வலிபடைத்து. சொல்துணைவாழ்க்கை - சொல்லப்படுகிற துணைகள் பலவற்றோடும் கூடிய வாழ்க்கை. செற்று - வருத்தி. எமது வினைகளை வெருட்டும் வலியுடையீர் என்று குறிக்க இணையில்லாமலை திரண்டன்ன தோளுடையீர் என்று குறிப்பித்தது. எமக்கும் தேவரீர்க்கும் உள்ள தொடர்பு ஆட்கொள்ளப்பட்டதால் உண்டான ஆண்டானும் அடிமையுமான தொடர்பு அங்ஙனமிருந்தும் எமது குறையை நீரேயறிந்து நீக்க வேண்டியிருக்க, சொல்லியும் கேளாது ஒழிவதும் தன்மையோ என்றார். துணையென்று சொல்லப்படுகின்ற வாழ்க்கைகளைத் துறந்து உம்திருவடியடைந்தோம் என்றது அகப்பற்றும் புறப்பற்றும் விட்டு உம்மைப் பற்றினோம் என்றது. தீவினை செற்றுத் தீண்டப்பெறா என்றது தீவினைகள் தீண்டுபவற்றைத் தடுத்தலாகாது ஆயினும் அவை வலியிழந்தனவாகத் தீண்டா என்று விளக்கியவாறு. கிற்று - கற்றல் பொருந்திய.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மறக்கும் இயல்பை உடைய நம் மனத்தை மாற்றி மலமறைப்பால் தடுமாறும் உயிரை வற்புறுத்திப் பிறப்பற்ற பெருமானாகிய அச்சிவபெருமானுடைய அழகிய திருவடியின் கீழ் தவறாதவாறு மனத்தை நிறுத்தி அப்பொழுது பறித்த மலர்களைக் கொண்டு பூசித்து `உம்மை ஏத்தும் பணியை உடைய அடியவர் நாங்கள்` எனக் கூறி வழிபட்டுவரின் சிறப்பற்ற தீய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை :

எம்மோடு ஒன்றி வராமல் மறுக்கும் தன்மை வாய்ந்த மனத்தையும் மாற்றி, உயிரை வற்புறுத்தித் தேவரீர் திருவடிக்குப் பிழை ஏற்படாதவண்ணம் மலர் கொண்டேத்தும் அடியேங்களைச் சிறப்பு இல்லாத இத்தீவினைகள் தீண்டப்பெறா திருநீலகண்டம் என்கின்றது. மனத்திற்கு இயற்கை, பற்றியதை விட்டுப் பின்வேறொன்றைப் பற்றி, அதன் மயமாய், பற்றியதையும் மறந்துவிடுதல். அந்த நிலையை மாற்றி என்றார். வற்புறுத்தி - திருவடியையே பற்றிவிடாது நிற்றலின் வினையின் வழிநின்று மலமறைப்பால் தடுமாறும் ஆன்மாவை வற்புறுத்தி. சிறப்பில் இத்தீவினை - சிறப்பற்ற இந்தத்தீவினை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ! பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து அவன் திருவடிக்கண் நல்ல மலர்களைக் கொண்டு அருச்சித்துப் போற்றித் `தன்னை எதிர்ப்பாரில்லாத வலிய இராவணனைப் பலரும் போற்ற அடர்த்துப்பின் அருள் செய்த பெருமானே!` என உருகிப் போற்றுவோமாயின் சிவனடி வழுத்தும் செல்வத்தைப் போக்கும் இந்தப்பழைய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.

குறிப்புரை :

பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து உம் திருவடியை உருகிவழிபடும் எம்மைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் என்கின்றது. கரு - பிறவிமுதல். செரு இல் அரக்கன் - போரில்லாத இராவணன். திக்கு விஜயம் பண்ணிப் போரில்லாமையால் தருக்கிக் கயிலையை எடுத்தானாதலின் இங்ஙனம் கூறினார். திரு இல் - சிவனடி வழிபடும் செல்வத்தையில்லாத. கழலடிக்கே - கே - ஏழன் உருபு. திருவிலித் தீவினை - சிவஞானச்செல்வத்தை இல்லதாக்கும் தீவினை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

நாற்ற மலர்மிசை நான்முக னாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய வடியு முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி, மணங்கமழும் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாது செய்தபோது, அவர்கட்கு எதிரே கட்புலனாகத் தோன்றி, அவர்களால் அடியும் முடியும் அறியப்பெறாத்தன்மையை உடையவரே!, என்று அழைத்து, நாம் காணத்தோன்றுதலையும் செய்யும் அவ்விறைவனை நாம் தொழுது வணங்குவோம். அவ்வாறு வழிபடின், சினந்துவரும் பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

குறிப்புரை :

மலர்மேலயனும் திருமாலும் தங்களுக்குள் வாது செய்து, அடியும் முடியும் அறியப்படாத தன்மையை யுடையவரே! காணப்பெறினும் பெறுவீர், உம்மைத் தொழுது வணங்குவோம்; சீற்றமாகிய வினை எம்மைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம் என்கின்றது. நாற்றம் - மணம். தோற்றமுடைய - கட்புலனாகிய. சீற்றம் - கோபம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

பொழிப்புரை :

நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து ஆடையின்றித் திரிந்தும் சிவபிரானை வணங்கும் பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும் அவற்றைப் பெறும் பற்றையும் விட்டுப் பயனற்றவராயினர். நாம் அவ்விறைவனை நோக்கிக் கொன்றை மலர் மணக்கும் சடையை உடையவரே! உம் திருவடிகளைப் போற்றுகின்றோம் எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும் பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.

குறிப்புரை :

சாக்கியராயும் சமணராகியும் இருமையின்பமும் ஒழிந்தார்கள்; நாங்கள் நும் திருவடி போற்றுகின்றோம்; எம்மை வினை தீண்டப்பெறா என்கின்றது. இருதலைப் போகம் - இம்மை மறுமை யின்பம். தீக்குழித் தீவினை - தீக்குழியினைப் போலக் கனலுவதாகிய தீவினை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த வுலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.

பொழிப்புரை :

மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவபிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்.

குறிப்புரை :

எமது இறைவன் கழலடையப் பிறந்த இப்பிறவியில் சிவபெருமான் திருவடியைப்பேணி, மீட்டும் பிறவியுளதாயின், இம்மொழி பத்தும் வல்லார்கள் வானவர்கோனொடுங் கூடுவர் என்கின்றது. அடைவான் பேணி, வல்லார், பிறவியுண்டாகில் கோனொடுங் கூடுவர் என முடிக்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

காட தணிகலங் காரர வம்பதி காலதனில்
தோட தணிகுவர் சுந்தரக் காதினிற் றூச்சிலம்பர்
வேட தணிவர் விசயற் குருவம் வில்லுங்கொடுப்பர்
பீட தணிமணி மாடப் பிரம புரத்தரரே.

பொழிப்புரை :

பெருமைபெற்ற மணிகள் இழைத்த மாட வீடுகளை உடைய பிரமபுரத்து அரனார் இடுகாட்டைப் பதியாகக் கொள்வர். கரிய அரவினை அணிகலனாகப் பூண்டவர். கால்களில் தூய சிலம்பை அணிந்தவர். அழகிய காதில் தோடணிந்தவர். வேட்டுவ உருவம் தாங்கி அருச்சுனனுக்குப் பாசுபதக்கணை அருளியவர்.

குறிப்புரை :

மொழிமாற்று என்பது பொருள்கோள்வகையுள் ஒன்று. பொருளுக்கு ஏற்பச் சொல்லைப் பிரித்து முன்பின் கூட்டிக் கொள்வது. பிரமபுரத்தவர் காட்டைப் பதியாகக்கொள்ளுவர்; அரவத்தை அணிவர்; அழகிய காதில் தோடு அணிவர்; காலில் சிலம்பணிவர்; வேடுருவந்தாங்கி விசயற்குப் பாசுபதாஸ்திரம் அளிப்பர் என்கின்றது. காடது பதி, அணிகலம் காரரவம், காலதனில் தூச்சிலம்பர், சுந்தரக் காதினில் தோடது அணிகுவர் எனப்பிரித்துக் கூட்டுக. பீடம் - மேடை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

கற்றைச் சடையது கங்கண முன்கையிற் றிங்கள்கங்கை
பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண்
டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே.

பொழிப்புரை :

கருங்கல்லால் அழகு விளங்குவதாய் அமைக்கப்பட்ட வெற்றித் திருமதில் சூழ விளங்கும் வேணுபுரத்துள் உறையும் எங்கள் வேதியராகிய இறைவர் கற்றையான சடையின்கண் திங்களையும் கங்கையையும் கொண்டவர். முன்கையில் பாம்பைக் கங்கணமாக அணிந்தவர். கையில் உலகைப் படைத்த பிரமனது தலையோட்டை உண்கலமாகப் பற்றியிருப்பவர். முப்புரங்களைச் சுட்டெரித்தவர். முற்காலத்தில் மார்க்கண்டேயர் பொருட்டு எமனை உதைத்தவர். பாம்பை அணிகலனாகப் பூண்டவர்.

குறிப்புரை :

வேணுபுரத்து வேதியரின் சடையது திங்களும் கங்கையும்; முன்கையிற் கங்கணமாக அணிந்தது பாம்பு; கையில் பற்றியது பிரமன் தலை; சுட்டது முப்புரம் என்கின்றது. பண்டு கூற்றை எற்றித்து என மொழிமாற்றிக் காண்க. பற்றித்து எற்றித்து என்பன பற்றிற்று எற்றிற்று என்பதன் மரூஉ. எற்றித்து - உதைத்து.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது
தூவிளங் கும்பொடிப் பூண்டது பூசிற்றுத் துத்திநாகம்
ஏவிளங் குந்நுத லாளையும் பாக முரித்தனரின்
பூவிளஞ் சோலைப் புகலியுண் மேவிய புண்ணியரே.

பொழிப்புரை :

இனிய பூக்களை உடைய இளஞ்சோலைகளால் சூழப்பட்ட புகலியுள் மேவிய புண்ணியராகிய இறைவர், அடர்த்தியான சடைமுடியில் வில்வம் அணிந்தவர். கையில் பேரி என்னும் தோற்பறையை உடையவர். தூய்மையோடு விளங்கும் திருநீற்றுப் பொடியைப் பூசியவர். படப் பொறிகளோடு கூடிய நாகத்தைப் பூண்டவர். அம்பொடு கூடிய வில் போன்று வளைந்த நெற்றியை உடைய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவர். ஆனையை உரித்தவர்.

குறிப்புரை :

கூவிளம் சடைமுடிக் கூட்டத்தது; பேரி கையது; தூவிளங்கும் பொடி பூசிற்று; துத்திநாகம் பூண்டது என மொழிமாற்றிப் பொருள்கொள்க. கூவிளம் - வில்வம். பேரி - உடுக்கை. தூ - தூய்மை. பொடி - விபூதி. துத்தி - படப்பொறி. ஏவிளங்குநுதல் - வில்போல் விளங்கும் நெற்றியையுடையாள் என்றது உமாதேவியை. ஏ என்றது ஆகுபெயராக வில்லை உணர்த்திற்று. உரித்தனர் - தோலைத் தனியாக உரித்துப் பூண்டனர். புகலி - சீகாழி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

உரித்தது பாம்பை யுடன்மிசை யிட்டதோ ரொண்களிற்றை
எரித்ததொ ராமையை யின்புறப் பூண்டது முப்புரத்தைச்
செருத்தது சூலத்தை யேந்திற்றுத் தக்கனை வேள்விபன்னூல்
விரித்தவர் வாழ்தரு வெங்குரு வில்வீற் றிருந்தவரே.

பொழிப்புரை :

பல நூல்களைக் கற்றுணர்ந்து விரித்துரைக்கும் புலவர்கள் வாழும் வெங்குருவில் வீற்றிருக்கும் இறைவர் ஒப்பற்ற சிறந்த களிற்றை உரித்தவர். பாம்பைத் தம் திருமேனிமேல் அணிந்தவர். முப்புரங்களை எரித்தவர். ஆமையோட்டை மகிழ்வுறப் பூண்டவர். தக்கனை வேள்வியில் வெகுண்டவர். சூலத்தைக் கையில் ஏந்தியவர்.

குறிப்புரை :

பாம்பை உடல்மிசையிட்டது; ஓர் ஒண்களிற்றை உரித்து; ஆமையை இன்புறப் பூண்டது; முப்புரத்தை எரித்தது; சூலத்தை ஏந்திற்று; தக்கனை வேள்வி செருத்தது எனக்கூட்டுக. களிறு - யானை. செருத்தது - வருத்தியது. பன்னூல்விரித்தவர் - பல நூல்களையும் விரித்துணர்ந்த அந்தணர்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

கொட்டுவ ரக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன
விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமு மேந்துவர்வான்
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே.

பொழிப்புரை :

வானைத் தொடுமாறு உயர்ந்துள்ள கொடிகளைக் கொண்ட தோணிபுரச்சுந்தரராகிய இறைவர் தக்கை என்னும் வாத்தியத்தைக் கொட்டுபவர். இடையிலே சங்கு மணிகளைக் கட்டியவர். குறுகிய தாளை உடைய பூதகணங்களைக் கலத்தல் இல்லாதவர். இனிய புகழை ஈட்டுபவர். எலும்பையும், உலவுகின்ற இனிய தேன்மணம் வெளிப்படும் ஊமத்தம் பூவையும் சூடுபவர். தீயை ஏந்துபவர். ஈட்டுவர் - இட்டுவர் என எதுகை நோக்கிக் குறுகிற்று.

குறிப்புரை :

வான்தொட்டு வருங்கொடித் தோணிபுரத்துறை சுந்தரர் மத்தம் சூடுவர்; அக்கு அரையார்ப்பது; தக்கை கொட்டுவர்; குறுந்தாளன பூதம் இன்புகழ் விட்டுவர்; என்பு கலப்பிலர்; உலவின்மட்டு வருந்தழல் ஏந்துவர் எனக்கூட்டிப் பொருள்காண்க. அக்கு - சங்கு மணி. தக்கை - ஒரு வாத்தியம். உலவின் மட்டு வருந்தழல் - உலகத்தையழிக்குமளவு வரும் காலாக்கினி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங்
கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும்
பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்
பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.

பொழிப்புரை :

தவமுனிவர்கள் பூக்களைத் தூவி, கைகளால் தொழும் பூந்தராய் என்ற தலத்தில் எழுந்தருளிய புண்ணிய வடிவினர், கோவணம் உடுத்தவர். நீண்ட கையில் பாசத்தை ஏந்தியவர். தமக்கே உரித்தான கூத்தினை உடையவர். கச்சணிந்து ஆடுபவர். கொக்கிறகு சூடுபவர். பல்வகைப் படைகளாகிய பேய்க் கணங்களை அடி பெயர்த்து ஆடல் செய்தவர். மிக்க அழகுடையவர்.

குறிப்புரை :

தவர் பூ கைதொழுபூந்தராய் மேவிய புண்ணியர் பாசம் தடக்கையில் ஏந்துவர்; கோவணம் சாத்துவர்; தம்கூத்தவர்; கச்சு குலவி நின்று ஆடுவர்; கொக்கிறகும் சூடுவர்; பல்படைபேய் பேர்த்தவர்; பேர் எழிலார் எனக்கூட்டுக. கச்சு குலவி நின்று ஆடுவர் - அரையில் கச்சு விளங்க நின்றாடுவர். குலவி: குலவ எனத்திரிக்க. பேர்த்தவர் - அடி பெயர்த்தாடல் செய்தவர்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

காலது கங்கை கற்றைச் சடையுள்ளாற் கழல்சிலம்பு
மாலது வேந்தன் மழுவது பாகம் வளர்கொழுங்கோட்
டாலது வூர்வ ரடலேற் றிருப்ப ரணிமணிநீர்ச்
சேலது கண்ணியொர் பங்கர் சிரபுர மேயவரே.

பொழிப்புரை :

அழகிய நீலமணியின் நிறத்தையும் சேல்மீன் போன்ற பிறழ்ச்சியையும் கொண்ட கண்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும் சிரபுரத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சிவபிரான், கழலையும் சிலம்பையும் காலில் சூடியவர். கற்றைச் சடையில் கங்கையை உடையவர். திருமாலைப் பாகமாகக் கொண்டவர். மழுவை ஏந்தியவர். கொழுமையான கிளைகளைக் கொண்ட ஆலமரத்தின் கீழ் இருப்பவர். அடல் ஏற்றினை ஊர்பவர்.

குறிப்புரை :

அணிமணி நீர்ச் சேலது கண்ணி ஓர் பங்கர் சிரபுரம் மேயவர் காலது கழல் சிலம்பு, கற்றைச்சடை உள்ளால் கங்கை, மாலது பாகம், ஏந்தல் மழுவது, வளர் கொழுங்கோட்டு ஆலது இருப்பர், அடல் ஏறு ஊர்வர் எனமொழிமாற்றுக. கோடு - மேருமலைத் தென் சிகரம். ஆலது, சேலது, என்பனவற்றுள் அது பகுதிப்பொருள் விகுதி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

நெருப்புரு வெள்விடை மேனிய ரேறுவர் நெற்றியின்கண்
மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன்
விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறன் மாதவர்வாழ்
பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே.

பொழிப்புரை :

வீரர்களாகிய மிக்க தவத்தினை உடைய தவமுனிவர்கள் வாழ்வதும் மலை போன்ற மாளிகைகளை உடையதுமான அழகிய புறவநகருக்கு அணிசேர்க்கும் புண்ணியராகிய இறைவர் நெருப்புப் போலச் சிவந்த மேனியை உடையவர். வெண்மையான விடைமீது ஏறி வருபவர். நெற்றியின் கண், விழி உடையவர். தந்தத்தை உடையவராகிய விநாயகருக்குத் தந்தையாராவார். பாம்புக்குத் தம் மெய்யில் இடம் தந்து அதனைச் சூடுபவர். சிறப்புக் குரிய முருகனுக்கு உகப்பான தந்தையார் ஆவார்.

குறிப்புரை :

விறல் மாதவர்வாழ் பொருப்புறு மாளிகைத் தென் புறவத்து அணி புண்ணியர், நெருப்புரு மேனியர், வெள்விடை ஏறுவர், நெற்றியின் கண்ணர், மருப்புருவன் தாதை, மா முருகன் விருப்புறு தந்தையார், பாம்புக்கு மெய் (யைக்) காட்டுவர் எனக் கூட்டுக. மருப்பு உருவன் - கொம்பினையுடைய விநாயகப்பெருமான், தாதையை என்பதிலுள்ள ஐகாரத்தைப் பிரித்து மெய் என்பதனோடு கூட்டி மெய்யை எனப்பொருள் கொள்க. இது உருபு பிரித்துக் கூட்டல்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலையின்னாள்
கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது
கலங்கிளர் மொந்தையி னாடுவர் கொட்டுவர் காட்டகத்துச்
சலங்கிளர் வாழ்வயற் சண்பையுண் மேவிய தத்துவரே.

பொழிப்புரை :

நீர் நிறைந்து விளங்கும் வயல்களை உடைய சண்பைப் பதியில் எழுந்தருளிய இறைவர் இலங்கைத் தலைவனாகிய இராவணனை நெரித்தவர். மானைக் கையில் ஏந்தியவர். கலக்கத்தோடு வந்த கூற்றுவனைக் குமைத்தவர். வாழ்நாள் முடிவுற்ற மார்க்கண்டேயருக்கு உயிர் கொடுத்துப் புது வாழ்வருளியவர். வாத்தியமாக இலங்கும் மொந்தை என்ற தோற்கருவியைக் கொட்டுபவர். இடு காட்டின்கண் ஆடுபவர்.

குறிப்புரை :

சலம் கிளர் வாழ் வயல் சண்பையில் மேவிய தத்துவர் இலங்கைத் தலைவனை இறுத்தது; இரலை ஏந்திற்று; கலங்கிய கூற்று குமை பெற்றது; இல் நாள் மாணி உயிர்பெற்றது; கலங்கிளர் மொந்தை யின் கொட்டுவர்; காட்டகத்து ஆடுவர் எனக்கூட்டுக. இரலை - மான். இல் நாள் மாணி - வாழ்நாள் உலந்த மார்க்கண்டன், குமை பெற்றது - அளிந்தழிந்தது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

அடியிணை கண்டிலன் றாமரை யோன்மான் முடிகண்டிலன்
கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர்
பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர்
கடியணி யும்பொழிற் காழியுண் மேய கறைக்கண்டரே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த சீகாழிப் பதியுள் விளங்கும் கறைக்கண்டராகிய சிவபெருமானின் அடி இணைகளைத் திருமால் கண்டிலன். தாமரை மலரில் எழுந்தருளியுள்ள பிரமன் முடியைக் கண்டிலன். அவ்விறைவன் கொடிமிசை இலச்சினையாகவுள்ள ஏற்றினை உகந்து ஏறுவர். புலித்தோலை உடுத்தவர். பிடி போன்ற அழகிய நடையினை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவர். அவர் இருப்பதோ கயிலை மலையாகும்.

குறிப்புரை :

கடி அணியும் பொழில் காழியுள் மேயகறைக்கண்டர் அடியிணை மால் கண்டிலன்; தாமரையோன் முடி கண்டிலன்; கொடியணியும் ஏறு உகந்து ஏறுவர்; புலித்தோல் உடுப்பர்; பிடியணியும் நடையாள் கூறுடையர்; வெற்பு இருப்பது எனக் கூட்டுக. கடி - மணம். கொடியணியும் - கொடியையலங்கரிக்கும், பிடி அணியும் நடையாள் - பெண் யானையையொத்த நடையினையுடைய பார்வதி. வெற்பு - கைலை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

கையது வெண்குழை காதது சூல மமணர் புத்தர்
எய்துவர் தம்மை யடியவ ரெய்தாரொ ரேனக்கொம்பு
மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய
கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுண் மேவிய கொற்றவரே.

பொழிப்புரை :

சிறந்தனவாய்க் கொய்யக் கொய்ய மலர்வனவாய அழகிய பொழில்கள் சூழ்ந்த கொச்சையுள் எழுந்தருளிய கொற்றவராகிய சிவபிரான் கையில் சூலமும் காதில் வெண்குழையும் கொண்டவர். அப்பெருமானை அமணர் புத்தர் எய்தார். அடியவர் எய்துவர். பன்றியின் கொம்பை அவர் திருமேனிமேல் விளங்கப் பூண்பவர், கோவணம் உடுத்தவர்.

குறிப்புரை :

கொய்து அலர் பூம்பொழில் மேதகைய கொச்சையுள் மேவிய கொற்றவர் கையது சூலம்: காதது வெண்குழை; அமணர் புத்தர் தம்மை எய்தார்; அடியவர் எய்துவர்; ஓர் ஏனக்கொம்பு மெய்திகழ் பூண்பது; கோவணம் உடுப்பது எனக்கூட்டுக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 12

கல்லுயர் கழுமல விஞ்சியுண் மேவிய கடவுடன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை வானவர் தங்களொடும்
செல்குவர் சீரரு ளாற்பெற லாஞ்சிவ லோகமதே.

பொழிப்புரை :

உயர்ந்த மதில்களை உடைய கழுமலக் கோயிலுள் விளங்கும் கடவுளை நல்லுரைகளால் ஞானசம்பந்தன் பாடிய ஞானத்தமிழை நன்குணர்ந்து சொல்லவும் கேட்கவும் வல்லவர் பழமையான தேவர்களோடும் அமருலகம் சென்று சிவலோகத்தைப் பெறுவர்.

குறிப்புரை :

கழுமலநகர்க் கடவுளை ஞானசம்பந்தன் சொன்ன ஞானத்தமிழ் நல்லுரைகளைச் சொல்லவும் கேட்கவும் வல்லார் தேவரோடு சிவலோகம் பெறுவர் என்கின்றது. புண்ணியஞ் செய்து தேவராய்ப் பதவியில் நிற்பாரை விலக்கத் தொல்லை வானவர் என்றருளினார். இப்பதிகம் கட்டளைக் கலித்துறையாதலின் இப்பாடல் முதலடி, `கல்லுயர் இஞ்சிக் கழுமலம் மேய கடவுடன்னை` என்றிருந்து சிதைந்திருக்கலாம் என்பர் தி.வே.கோ.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான்
இடுமணி யெழிலானை யேறல னெருதேறி
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

மிக்க ஒளியைத் தரும் மாணிக்க மணியை உமிழும் பாம்பை இடையில் பொருந்தக் கட்டியவனும், இரு புறங்களிலும் மணிகள் தொங்கவிடப்பட்ட அழகிய யானையை ஊர்தியாகக் கொண்டு அதன்மிசை ஏறாது ஆனேற்றில் ஏறி வருபவனும், நஞ்சணிந்த மிடறு டையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய நீண்ட சிகரங்களை உடையதும் ஆங்காங்கே தோன்றும் மணிகள் உமிழ்கின்ற ஒளியினை உடையதுமான திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.

குறிப்புரை :

திருவரையில் நாகத்தைக் கட்டியவர்; யானையேறாது ஆனேறு ஏறியவர்; நீலகண்டர் எழுந்தருளிய சீபருப்பதத்தைப் பரவுவோம் என்கின்றது. சுடுமணி - ஒளிவிடுகின்ற மாணிக்கம். அசைத்தான் - கட்டியவன். இடுமணி எழில் ஆனை - இரு மருங்கும் இடப்பெற்ற மணிகளையுடைய யானையை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

நோய்புல்கு தோறிரைய நரைவரு நுகருடம்பில்
நீபுல்கு தோற்றமெல்லா நினையுள்கு மடநெஞ்சே
வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப்
பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

அறியாமையுள் மூழ்கித் திளைக்கும் நெஞ்சே! நீ போக நுகர்ச்சிக்குரிய இவ்வுடம்பில் இளமை முதல் மாறிவரும் தோற்ற மெல்லாவற்றையும், நோய்கள் தழுவும் தோல் சுருங்கி நரை தோன்றும் நிலையையும், நினைந்து சிந்திப்பாயாக. மூப்பு வருமுன் வாய் நிறைந்த தோத்திரங்களைப் பாடி, வலம் வந்து, தலையால் வணங்கிப் பாயும் புலியின் தோலை உடுத்த பெருமான் எழுந்தருளிய திருப்பருப் பதத்தைப் பரவுவோம்; வருக.

குறிப்புரை :

நெஞ்சே! தோல் திரங்கி, நரைத்துப் போகும் உனது தோற்றம் எல்லாவற்றையும் கொஞ்சம் நினைத்துப்பார், வாய் நிறைந்த தோத்திரத்தால் வலஞ்செய்து வணங்கிச் சீபருப்பதத்தைப் பரவுவோம் வா என்கின்றது. புல்கு - தழுவிய. திரைய - சுருங்க. நினை உள்கு - நினைத்துப்பார் சிந்தித்துப்பார். புல்கு - நிறைந்த.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்
இனியுறு பயனாத லிரண்டுற மனம்வையேல்
கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும்
பனியுறு கதிர்மதியான் பருப்பதம்பரவுதுமே.

பொழிப்புரை :

நெஞ்சே! வருத்தத்தைத் தரும் பிறவித் துயர்தீரத் தோன்றிய நீ, நல்வினைகள் செய்து அப்புண்ணியத்தால் தேவர் உலக இன்பங்களை நுகர்தல், வீடு பேறாகிய விழுமிய பயனை எய்துதல் ஆகிய இரண்டிலும் பற்றுக்கொள்ளாதே. கரிய குரங்குகள் கனி நிறைந்த மரத்தில் ஏறி அதனை விடுத்து மூங்கில் மரங்களில் தாவி உகளும், குளிர்ந்த ஒளியோடு கூடிய பிறைமதியைச் சூடிய சிவபெரு மானின் திருப்பருப்பதத்தை வணங்குவோம்; வருக. மனிதமனம் ஒன்றை விட்டு ஒன்று பற்றும் நிலையை இப்பாடலின் வருணனை தெரிவிக்கிறது.

குறிப்புரை :

பிறவித் துன்பம் நீங்கப் பிறந்த நீ, செய்த நல்வினை யால் எய்தப்போகும் இன்பப் பிறவியை எண்ணி இரண்டுபட்ட மனம் எய்தாதே; திருமலையைப் பரவுவோம் வா என்கின்றது. துனி - வருத்தம். கோடிசெல்வம் பெறமுயன்றார் பிடி செல்வம் பெற்றுமகிழார்கள். அதுபோல நீ பேரின்பம் பெறப்பிறந்து புண்ணிய வசத்தால் வரும் தேவலோக இன்பம் முதலியவற்றைச் சிந்தியாதே உறுதியாக இரு என்பதாம். முசு - குரங்கு.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்
எங்கணோ யகலநின்றா னெனவரு ளீசனிடம்
ஐங்கணை வரிசிலையா னநங்கனை யழகழித்த
பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

தேன் நிறைந்ததாய் மணம் கமழும் கொன்றை மலர்மாலையைச் சூடியவன், குளிர்ந்த சடைமுடியை உடையவன், எங்கள் துன்பங்களைப் போக்க எழுந்தருளியவன் என்று அடியவர் போற்ற அவர்கட்கு அருள்புரியும் ஈசனது இடம், ஐவகை மலர்களையும் வரிந்த கரும்புவில்லையும் உடைய மன்மதனின் அழகினை அழித்து அவனை எரித்துப் பசிய கண்களை உடைய வெள்ளேற்றை உடையவனாய் அப்பெருமான் எழுந்தருளிய பதிதிருப்பருப்பதம். அதனைப் பரவுவோம்.

குறிப்புரை :

எங்கள் பிறவிநோய் போக்க அருள் செய்யும் ஈசன் இடம் திருமலை என்கின்றது. கொங்கு - தேன். தொங்கலன் - மாலையையுடையவன். அநங்கன் - மன்மதன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

துறைபல சுனைமூழ்கித்தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்
சிறையொலி கிளிபயிலுந் தேனின மொலியோவாப்
பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

கிளிகள் சிறகுகளால் எழுப்பும் ஓசையோடு வாயால் எழுப்பும் மெல்லிய அழைப்பொலியும், வண்டுகளின் ஒலியும் நீங்காததாய்ப் பறைபோல ஒலிக்கும் அருவிகளை உடையதாய் விளங்குவதும், தேவர்கள் துறைகள் பலவற்றை உடைய சுனைகளில் மூழ்கித் தூய மலர்களைச் சுமந்து விரைந்து வந்து வேத கீதங்களைத் தம் வாய்மொழியாக ஓதி மகிழ்வோடு வழிபடுமாறு சிவபெருமான் விளங்குவதுமாகிய திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.

குறிப்புரை :

வானவர்கள் சுனைநீராடித் தொழும் பருப்பதம் பரவு தும் என்கின்றது. சிறை - சிறகுகள். தேனினம் - வண்டுக்கூட்டம். பறை படும் - முழவுபோல ஒலிக்கும்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில்
ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல்
கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால்
பார்கெழு புகழோவாப் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

அழகிய மடநெஞ்சே! பெருமை மிக்க சிறப்புக்கள் அகலாததாய் நாம் மேற்கொள்ளத்தக்க தவநெறியை நீ பின்பற்ற விரும்புவாயாயின், வேண்டுமா வேண்டாவா என இரண்டுபட எண்ணாமல் உறுதியாக ஒன்றை நினைந்து நெறியின் பயனாய் விளங்கும், கார்காலத்தே மலரும் மணம் மிக்க கொன்றை மலர்மாலை சூடியவனாய் எழுந்தருளியுள்ள அக்கடவுளது இடமாய் உலகிற் புகழ்மிக்க தலமாய் விளங்கும் திருப்பருப்பதத்தைப் பரவுவோம்.

குறிப்புரை :

நெஞ்சே! சிறப்பகலாத செய்தவம் வேண்டில் இரண் டுபட எண்ணாதே; புகழ் நீங்காப் பொருப்பைப் பரவுதும் என்கின்றது. ஏர் - எழுச்சி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்
தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற
விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்
படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

ஓடைகளின் புறத்தே நிறைந்து வளர்ந்த விரிந்த தாமரை மலர்கள் அந்தணர் வேட்கும் யாகப் புகையோடு மணம் கமழுமாறு தொடுக்கப் பெற்ற நறுமாலை திருமுடியின்மேல் விளங்க, விடைக் கொடியைக் கையில் ஏந்தி, மேனியில் திருவெண்ணீறு அணிந்து மழுப்படை ஏந்தியவனாய் விளங்கும் சிவபெருமானது பருப்பதத்தை நாம் பரவுவோம்.

குறிப்புரை :

விடைக்கொடியை ஏந்தி நீறணியும் நிமலன் பருப் பதம் பரவுதும் என்கின்றது. புடை - பக்கம். புகை - யாகப்புகை. விரை - மணம். தொடை புல்கு - தொடுத்தலைப் பொருந்திய. விடை - இடபம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே
மனத்தினை வலித்தொழிந்தே னவலம்வந் தடையாமைக்
கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன்
பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

நினைப்பு என்னும் ஆழமான கிணற்றின் அருகில் இடையறாது நின்று சோர்வுபடாமல், மனம் என்னும் கயிற்றைப் பற்றி இழுத்து, எண்ணங்கள் ஈடேறாமல் அயர்வுற்றேன். ஆதலின் இதனைக் கூறுகின்றேன். துன்பங்கள் நம்மை அடையாவண்ணம் காத்துக் கொள்ளுவதற்கு இதுவே வழி. ஆரவாரித்து எழுந்த பரந்துபட்ட வெள்ளமாக வந்த கங்கை நீரைத் தனது மணம் கமழும் சடையிலே தாங்கி மறையச் செய்தவன் ஆகிய சிவபிரானது பனைமரம் போல உருண்டு திரண்டு ஒழுகும் அருவி நீரை உடைய திருப்பருப்பதத்தை நாம் பரவுவோம்.

குறிப்புரை :

நினைப்பாகிய கிணற்றைப் பார்த்து நின்று நின்று மயங்காமல், மனத்தை வலிய அடிப்படுத்தினேன்; ஆதலால் அவலம் அடையாவண்ணம் பருப்பதம் பரவுதும் என்கின்றது. அயராது - மயங்காமல். வலித்து - இழுத்து. நினைப்பை ஆழமான கிணறாகவும், மனத்தைக் கயிறாகவும் உருவகித்தார்; இது மனத்தினை வலித்து என்பதனால் உணரப்பெறுகின்றது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

மருவிய வல்வினைநோ யவலம்வந் தடையாமல்
திருவுரு வமர்ந்தானுந் திசைமுக முடையானும்
இருவரு மறியாமை யெழுந்ததோரெரிநடுவே
பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

பலபிறவிகள் காரணமாக நம்மைத் தொடரும் வலிய வினைகளின் பயனாகிய துன்பங்கள் நம்மை வந்து அடையாமல் இருக்கத் திருமகளைத் தன் மார்பில் கொண்ட திருமால், நான் முகன் ஆகிய இருவரும் அறியமுடியாதவாறு எழுந்த எரியின் நடுவே பெரிய மலையாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் வணங்குவோம்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியாவண்ணம் எரிநடுவே மலை யாய் எழுந்தானது பருப்பதம் பரவுதும் என்கின்றது. வல்வினை நோய் - பரிபாகமுற்ற வினையால் வரும் துன்பம், அவலம் - அதனால் விளைந்த செயலறிவு. திரு உரு அமர்ந்தான் - திருமகளைத் தன் மார்பில் வைத்த திருமால், பருவரை உற - பெரியமலையைப் போல.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்
படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

பொழிப்புரை :

அறியாமை வயப்பட்ட சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், சமணராகிய இழிந்தோரும் குண்டர்களும் கூறும் மடமையை விரும்பியவராய் மயங்கியோர் சிலர், கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச் செல்வார் போன்றவராவர். அவ்வாறு சென்றவர் செல்லட்டும். யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருப்பருப்பதத்தை நாம் சென்று பரவுவோம்.

குறிப்புரை :

சமணர் புத்தர்கட்குப்பின் பேய்த்தேர்முன் குடங் கொண்டு தண்ணீர்க்குப் போவார்போல போவார்போக, யானையுரிபோர்த்த இறைவன் பருப்பதம் பரவுதும் என்கின்றது. சடம் - அறியாமை. மடம் - அறியாமை. பேய்த்தேர் - கானல்நீர். குஞ்சரத்தின் படம் - யானைத்தோலாகிய ஆடை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
பண்செலப் பலபாட லிசைமுரல் பருப்பதத்தை
நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தனல்ல
ஒண்சொலி னிவைமாலை யுருவெணத் தவமாமே.

பொழிப்புரை :

வெண்ணெல், செந்நெல் ஆகிய இருவகை நெற் பயிர்களும் விளைவுதரும் வயல்களையுடையதும் விழாக்களின் ஆரவாரம் மிகுந்து தோன்றுவதுமாகிய கழுமலத்தில் அவதரித்தவனாய்ப் பண்ணோடு பொருந்திய பாடல்கள் பலவற்றால் இசைபாடி இறை வனைப் பரவிவரும் ஞானசம்பந்தன், திருப்பருப்பதத்தை நல்ல சொற்கள் அமைந்த பாடலால் பாடிய ஒளி பொருந்திய இத்திருப்பதிகப் பாமாலையைப் பலகாலும் எண்ணிப்பரவ, அதுவே தவமாகிப் பயன்தரும்.

குறிப்புரை :

சீபருப்பதத்தைத் திருஞானசம்பந்தர் சொன்ன இம் மாலையை உருவெண்ணத்தவமாம் என்கின்றது. வெண் செந்நெல்: உம்மைத்தொகை. எண்ண என்பது எண எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

முள்ளின்மேன் முதுகூகை முரலுஞ் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளின்மே யவண்ணல் கழல்க ணாளும்
உள்ளுமே லுயர்வெய்த லொரு தலையே.

பொழிப்புரை :

முள்ளுடைய மரங்களின்மேல் இருந்து முதிய கூகைகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்ததும், விளமரங்களின்மேல் படர்ந்த கூறைக் கொடிகள் விளைந்து தோன்றுவதுமாய கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய சிவபிரான் திருவடிகளை நாள்தோறும் நினைவோமானால் உயர்வெய்துதல் உறுதியாகும்.

குறிப்புரை :

கள்ளில் மேவிய கடவுளின் கழல்களைத் தியானிக்க உயர்வெய்தல் துணிவு என்கின்றது. முள்ளின்மேல் - முள்மரத்தின்மேல். வெள்ளில்மேல் - விளாவின்மேல். உள்ளுமேல் - தியானிக்குமாயின். ஒருதலை - துணிவு.

பண் :

பாடல் எண் : 2

ஆடலான் பாடலா னரவங்கள் பூண்டான்
ஓடலாற் கலனில்லா னுறை பதியால்
காடலாற் கருதாத கள்ளின் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.

பொழிப்புரை :

ஆடல் பாடல்களில் வல்லவனும், பாம்புகள் பல வற்றை அணிந்தவனும், தலையோட்டையன்றி வேறு உண்கலன் இல்லாதவனும், சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தைத் தனது இடமாகக் கொள்ளாதவனும் ஆகிய சிவபிரான், பெரியோர்கள் அருகிலிருந்து அவன் புகழைப் பரவக்கள்ளில் என்னும் தலத்தைத் தான் உறையும் பதியாகக் கொண்டுள்ளான்.

குறிப்புரை :

ஆடல்பாடல் உடையவன் உறைபதிகள்ளில், அதன் கண் மேயானுடைய பெருமைகளைப் பெரியார்கள் பேசுவார்கள் என்கின்றது. அரவம் - பாம்பு. கலன் - உண்கலன். பாடு - பெருமை.

பண் :

பாடல் எண் : 3

எண்ணார்மும் மதிலெய்த விமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார்நீ றணிமார்பன் கள்ளின் மேயான்
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.

பொழிப்புரை :

பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களை எய்து அழித்தவனும், இமையாத மூன்று கண்களை உடையவனும் இசையமைப்போடு கூடிய நான்மறைகளைப் பாடி மகிழும் மேலான யோகியும், கண்களைக் கவரும் வண்ணம் திருநீறு அணிந்த மார் பினனும், பெண் ஆண் என இருபாலாகக் கருதும் உமைபாகனும் ஆகிய பெருமான், கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த பரமயோகி கள்ளில் மேயவன்; அவனே பெண் ஆண் ஆனான் என்கின்றது. எண்ணார் - பகைவர். கண் - அழகு. பிஞ்ஞகன் - அழகிய சிவன் (தலைக்கோலமுடையவன்).

பண் :

பாடல் எண் : 4

பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார்ந யந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளின் மேயான்
நிறைபெற்ற வடியார்கள் நெஞ்சு ளானே.

பொழிப்புரை :

பிறை சூடிய சடையை உடைய அண்ணலும், பெண்வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி ஒலிக்கும் தேன் நிறைந்த விரிந்த கொன்றை மாலையை விரும்பிச் சூடிய, விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், மனநிறைவு பெற்ற அடியவர்களின் நெஞ்சங்களில் நிறைந்து நிற்பவனுமாகிய சிவபிரான், கள்ளில் என்னும் இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

கள்ளில் மேயான் என்நெஞ்சுளான் என்கின்றது. ஆலும் - ஒலிக்கும். நறை - தேன். கறை - விடம். நிறைபெற்ற அடியார்கள் - மனநிறைவுற்ற அடியார்கள்.

பண் :

பாடல் எண் : 5

விரையாலு மலராலும் விழுமை குன்றா
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்
கரையார்பொன் புனல்வேலிக் கள்ளின் மேயான்
அரையார்வெண் கோவணத்த வண்ணல் தானே.

பொழிப்புரை :

இடையில் வெண்ணிறமான கோவணத்தை உடுத்த சிவபிரான் மணம் கமழும் ஐவகை மணப் பொருள்களாலும் மலர்களாலும் சீர்மை குன்றாத புகழுரைகளாலும் ஊர் மக்கள் எதிர்கொள்ள, அழகியவும் பெரியவுமான கரைகளை உடைய பொன்னி நதியின் கிளையாறு சூழ்ந்துள்ள கள்ளில் என்னும் இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

கள்ளில் மேயான் மணப்பொருள்களாலும், மலராலும் தோத்திரப் பாக்களாலும் ஊரார் எதிர்கொள்ளும் அண்ணலாக இருக்கின்றான் என்கின்றது. விரை - மணம். எண்வகை விரைகள் சங்க இலக்கியங்களிற் கூறப்பெற்றுள்ளன. விழுமை - பெருமை. உரை - புகழ்.

பண் :

பாடல் எண் : 6

நலனாய பலிகொள்கை நம்பா னல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலையோட்டான் கள்ளின் மேயான்
மலனாய தீர்த்தெய்து மாதவத் தோர்க்கே.

பொழிப்புரை :

மக்கட்கு நன்மைகள் உண்டாகத் தான் பலியேற்கும் கொள்கையனாகிய நம்பனும், அழகிய வெற்றியைத் தரும் மழு வாள் வேல் ஆகியவற்றில் வல்லவனும், உண்கலனாகிய தலையோட்டை உடையவனும் ஆகிய சிவபிரான், தன்னை எய்தும் மாதவத்தோர்க்கு மும்மலங்களைத் தீர்த்து அருள்பவனாய்க் கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

கள்ளில் மேயான் மாதவத்தோர்க்கு மூலமலத்தைத் தீர்த்து அவரைப் பொருந்துவன் என்கின்றது. நலன் ஆயபலி - இடுவார்க்கு நன்மையமைத்த பிச்சை. வலன் ஆய மழுவாளும் வேலும் வல்லான் - வெற்றியைத் தருவதாய மழுமுதலிய படைகளை வல் லவன். மலன் ஆய தீர்த்து - மலங்களைப்போக்கி, தீர்த்து என்பது உபசார வழக்கு. வலியை வாட்டி என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 7

பொடியார்மெய் பூசினும் புறவி னறவம்
குடியாவூர் திரியினும் கூப்பி டினும்
கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளின் மேயான்
அடியார்பண் பிகழ்வார்க ளாதர் களே.

பொழிப்புரை :

மணம் கமழும் அழகிய பொழில்களும் சோலைகளும் சூழந்த கள்ளிலில் எழுந்தருளிய இறைவன் அடியவர்கள் திருநீற்றுப் பொடியை உடலில் பூசினும், சோலைகளில் எடுத்த தேனை உண்டு திரியினும் பலவாறு பிதற்றினும் அவர்கள் மனம் இறைவன் திரு வருளிலேயே அழுந்தியிருக்குமாதலின் அடியவர்களின் குணம் செயல்களை இகழ்பவர்கள் அறியாதவர்களாவர்.

குறிப்புரை :

கள்ளில் மேயான் அடியார்கள் நீறணியினும், தேனைக் குடித்து ஊர்திரியினும், கூப்பிடினும் அவர்களை இகழ்வார்கள் கீழ் மக்கள் என்கின்றது. `எத்தொழிலைச் செய்தாலும், ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனம் மோனத்தே` இருக்குமாதலின் அவர்களையிகழ்வார் ஆதர் என்றவாறு.

பண் :

பாடல் எண் : 8

திருநீல மலரொண்கண் டேவி பாகம்
புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.

பொழிப்புரை :

அழகிய நீலமலர் போன்ற ஒளி பொருந்திய கண் களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, முப்புரிநூலும் திருநீறும் பொருந்திய மார்பினனாய் விளங்கும் கரியமிடற்று அண்ணலாகிய சிவபிரான் என்றும் விரும்புவது கருநீலமலர்கள் மிகுந்து பூத்துள்ள கள்ளில் என்னும் தலமாகும்.

குறிப்புரை :

கள்ளிலே இறைவன் என்றும் பேணுவது என்கின்றது. பேணுவது - விரும்புவது.

பண் :

பாடல் எண் : 9

வரியாய மலரானும் வையந் தன்னை
உரிதாய வளந்தானு முள்ளு தற்கங்
கரியானு மரிதாய கள்ளின் மேயான்
பெரியானென் றறிவார்கள் பேசு வாரே.

பொழிப்புரை :

சிவந்த வரிகளைக் கொண்ட தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், உலகங்களைத் தனக்கு உரியதாகுமாறு அளந்த திருமாலும், நினைத்தற்கும் அரியவனாய் விளங்கும் பெரியோனாகிய இறைவன், அரியதலமாய் விளங்கும் கள்ளிலில் எழுந்தருளி உள் ளான். அறிந்தவர்கள் அவனையே பெரியோன் எனப் போற்றிப் புகழ்வர்.

குறிப்புரை :

`கள்ளின் மேயான் பெரியான்` என்று அறிவார்கள் இவனைப் பற்றிப் புகழ்வார்கள் என்கின்றது. அறியாத ஒன்று பேசவாராதாகலின் பெரியான் என்று அறிவார்களே பேசுவர் என்றார்கள். வரி - செவ்வரி. வையந்தன்னை உரிய ஆய அளந்தான் - உலகத்தை உரித்தாக்க அளந்த திருமால்.

பண் :

பாடல் எண் : 10

ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
மாச்செய்த வளவயன் மல்கு கள்ளில்
தீச்செய்த சடையண்ணல் திருந்த டியே.

பொழிப்புரை :

பரிகசிக்கத்தக்க பேய்கள் போன்றவர்களாகிய அமணர்களும், புத்தர்களும், கூறும் உரைகள் உண்மையான நெறிகளை மக்கட்கு உணர்த்தாதவை. எனவே அவர்தம் உரைகளைக் கேளாது விடுத்து, பெருமைக்குரிய வளவயல்கள் நிறைந்த கள்ளிலில் விளங்கும் தீத்திரள் போன்ற சடைமுடியை உடைய சிவபிரானுடைய அழகிய திருவடிகளையே பேணுவீர்களாக.

குறிப்புரை :

புறச்சமயிகள் பேச்சு நெறியற்றன; கள்ளில் இறைவன் திருவடியைச் சிந்தியுங்கள் என்கின்றது. ஆச்சியப்பேய்கள் - பரிகசிக்கத்தக்க பேய்கள். ஆச்சியம் ஹாஸ்யம் என்பதன் திரிபு. மா - பெருமை.

பண் :

பாடல் எண் : 11

திகைநான்கும் புகழ்காழிச் செல்வ மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்த னல்ல
முகைமேவு முதிர்சடையன் கள்ளி லேத்தப்
புகழோடும் பேரின்பம் புகுது மன்றே.

பொழிப்புரை :

நாற்றிசை மக்களாலும் புகழப்பெறும் சீகாழிப்பதியில் செல்வவளம் நிறைந்த பகல் போன்ற பேரொளியினனாகிய ஞானசம்பந்தன், நறுமணம் கமழும் மலர் அரும்புகள் நிறைந்த, முதிர்ந்த சடை முடி உடையவனாகிய சிவபிரானது கள்ளிலைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தைப் பாடி ஏத்தினால், புகழோடு பேரின்பம் அடையலாம்.

குறிப்புரை :

நாற்றிசையும் புகழ்பெற்ற ஞானசம்பந்த சுவாமிகள் பதிகத்தைக்கொண்டு கள்ளில் ஏத்தப் புகழோடு பேரின்பமும் பொருந்தும் என்கின்றது. திகை - திசை. பகல் - சூரியன். பந்தன் - நாம ஏகதேசம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

பணிந்தவ ரருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவ னரவொடு பேரெழி லாமைகொண்
டணிந்தவன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

தன்னை வணங்கும் அடியவர்களின் நீக்குதற்கரிய வினைகளை அடியோடு அழித்து அவர்கட்கு அருள் வழங்கத் துணிந்திருப்பவனும், மார்பின்கண் மான்தோலோடு விளங்கும் முப்புரிநூல் அணிந்தவனும், பாம்போடு பெரிய அழகிய ஆமை ஓட்டைப் பூண்டவனும், ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.

குறிப்புரை :

அடியார்களுடைய அருவினைகளையறுத்து அருள் செய்யத்துணிந்தவன்; தோல் சேர்ந்த நூல் செறிந்த மார்பினையுடையவன்; அரவோடு ஆமை ஓட்டைப் பிணித்தவன் வளநகர் ஐயாறு என்கின்றது. பணிந்தவர் - தாழ்வெனும் தன்மையோடு அடி பணிந்த அடியார்கள் . அருவினை - திருவருளன்றி வேறொன்றாலும் நீக்குதற்கரியவினை . பிணித்தவன் எனற்பாலது எதுகை நோக்கி பிணிந்தவன் என மெலிந்தது .

பண் :

பாடல் எண் : 2

கீர்த்திமிக் கவனகர் கிளரொளி யுடனடப்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்
போர்த்தவன் கரியுரி புலியத ளரவரை
ஆர்த்தவன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

புகழ்மிக்கவனும், பகைவர்களாகிய அவுணர்களின் முப்புரங்களைப் பேரொளி தோன்ற எரியுமாறு அழிந்தொழிய நெற்றி விழியால் பார்த்தவனும், குளிர்ந்த திங்களை விரிந்த சடைமுடிமீது வைத்துள்ளவனும், யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும், புலித்தோலைப் பாம்போடு இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகிய குளிர்ந்த ஐயாறாகும்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்தவன், யானையையுரித்துப் போர்த்தி யவன், புலித்தோல் பாம்பு இவற்றை அரையிற் கட்டியவன் நகர் ஐயாறு என்கின்றது. கீர்த்தி மிக்கவன் நகர் - திரிபுரம். திரிபுராதிகளுக்கு உண்டான கீர்த்தி அவர்கள் அழிவிற்குக் காரணமாயிற்று எனக்குறித்த வாறு, அடப் பார்த்தவன் - அழிய விழித்தவன். திரிபுரத்தை விழித்தெரித்ததாக ஒரு வரலாறு தேவாரத்துப் பல இடங்களிலும் வருதல் காண்க. அதள் - தோல். ஆர்த்தவன் - கட்டியவன்.

பண் :

பாடல் எண் : 3

வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்
எரிந்தற வெய்தவ னெழில்திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது விமையவர் குறைகொள
அரிந்தவன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

இருமுனைகளும் இழுத்துக் கட்டப்பட்ட கொடிய வில்லைப் பிடித்து, அசுரர்களின் வளமையான முப்புரங்கள் எரிந்து அழியுமாறு கணை எய்தவனும், தேவர்கள் வேண்ட அழகிய தாமரை மலர்மேல் எழுந்தருளிய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்த வனுமாகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

குறிப்புரை :

வில்லேந்தி அவுணர் முப்புரங்களும் எரிய எய்த வனும், பிரமனுடைய சிரத்தைத் தேவர்கள் வேண்ட அரிந்தவனும் ஆகிய இறைவன் நகர் இது என்கின்றது. வரிந்த - கணுக்கள் தோறும் கட்டப்பெற்ற. பிரமன் சிரங்கொய்தது தம்மைப்போல ஐந்தலை படைத் திருந்தமையால் அன்று; தேவர்கள் வேண்டிக் கொள்ள அவர்கள் மீது வைத்த கருணையினாலேயே என்பது விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 4

வாய்ந்தவல் லவுணர்தம் வளநக ரெரியிடை
மாய்ந்தற வெய்தவன் வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன் தொன்மறை யாறங்கம்
ஆய்ந்தவன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

வலிமை வாய்ந்த அவுணர்களின் வளமையான முப்புரங்களும் தீயிடை அழிந்தொழியுமாறு கணை எய்தவனும், வளரத்தக்க பிறை, பரந்து விரிந்து வந்த கங்கை ஆகியன தோய்ந்தெழும் சடையினனும், பழமையான நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்தருளியவனும் ஆகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்தவன், பிறையும் நீரும் பொருந்திய சடையினன், வேதம் அங்கம் இவற்றையாய்ந்தவன் நகர் ஐயாறு என்கின்றது. வாய்ந்த - வரங்களின் வன்மைவாய்ந்த. ஆய்ந்தவன் - ஆராயப் பெற்றவன். வேதங்களை ஆயவேண்டிய இன்றியமையாமை இறை வற்கின்றாதலின் வேதங்களால் ஆராயப் பெற்றவன் என்பதே பொருந்துவதாம்.

பண் :

பாடல் எண் : 5

வானமர் மதிபுல்கு சடையிடை யரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

வானின்கண் விளங்கும் பிறைமதி பொருந்திய சடையின்மேல் பாம்பையும், தேன் நிறைந்த கொன்றையையும் அணிந்தவனும், விளங்கும் மார்பினை உடையவனும், மான்போன்ற மென்மையான விழிகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் அழகும் தண்மையும் உடைய திருவையாறாகும்.

குறிப்புரை :

பிறையணிந்த சடையில் பாம்பையும் கொன்றையை யும் சூடியவன், விளங்கும் மார்பினையுடையவன், உமையொருபாதியன் வளநகர் ஐயாறு என்கின்றது. வானமர் மதி என்றது மதியென்ற பொதுமைநோக்கி. ஓர் பாகம் ஆனவன் என்பதற்கு இடப்பாகம் கொண்டவன் என்றுரைப்பினும் அமையும்.

பண் :

பாடல் எண் : 6

முன்பனை முனிவரோ டமரர்க ளடிதொழும்
இன்பனை யிணையில விறைவனை யெழில்திகழ்
என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்
அன்பன வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

வலிமையுடையவனும் முனிவர்களும் அமரர்களும் தொழும் திருவடிகளை உடைய இன்ப வடிவினனும், ஒப்பற்ற முதல்வனும், அழகு விளங்கும் என் பொன்னாக இருப்பவனும், குற்றமற்ற வேதியர்களால் தொழப்பெறும் அன்பனும் ஆகிய சிவபிரானது வளநகர் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

குறிப்புரை :

வலியுடையனை, முனிவரும் தேவரும் வணங்கும் இன்ப வடிவனை, என் பொன்போன்றவனை, அந்தணர் வணங்கும் அன்பனை உரிமையாக உடைய தலம் ஐயாறு என்கின்றது. முன்பு - வலிமை. இணையில இறைவனை - ஒப்பற்ற முதல்வனை. எழில் - அழகு. அன்பன - அன்பனுடையதான.

பண் :

பாடல் எண் : 7

வன்றிற லவுணர்தம் வளநக ரெரியிடை
வெந்தற வெய்தவன் விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்
அந்தமில் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

பெருவலி படைத்த அவுணர்களின் வளமையான முப்புர நகர்களும் தீயிடையே வெந்தழியுமாறு கணை எய்தவனும், விளங்கிய மார்பகத்தே பந்தணை மெல் விரலியாகிய உமையம்மையைப் பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானது அழிவற்ற வளநகர் அழகும் தண்மையுமுடைய ஐயாறாகும்.

குறிப்புரை :

திரிபுரங்கள் தீயிடை வேவ எய்தவன், பந்தணை விரலியைப் பாகங்கொண்டவன் வளநகர் ஐயாறு என்கின்றது. அந்தம் இல் - அழிவில்லாத.

பண் :

பாடல் எண் : 8

விடைத்தவல் லரக்கனல் வெற்பினை யெடுத்தலும்
அடித்தலத் தாலிறை யூன்றிமற் றவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

செருக்கோடு வந்த வலிய இராவணன் நல்ல கயிலை மலையைப் பெயர்த்த அளவில் தனது அடித்தலத்தால் சிறிது ஊன்றி, அவ்விராவணனின் முடிகள் அணிந்த தலைகள், தோள்கள் ஆகியவற்றை முறையே நெரித்தருளிய சிவபிரானது வளநகர் அழகும் தன்மையும் உடைய ஐயாறாகும்.

குறிப்புரை :

இராவணனை அடித்தலத்தால் அடர்த்தவன் நகர் ஐயாறு என்கின்றது. விடைத்த - செருக்கிய. நல்வெற்பு - கயிலை. இறை - சிறிது. இறையூன்றியது கருணையின் மிகுதியால்.

பண் :

பாடல் எண் : 9

விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனல்
எண்ணிலி தேவர்க ளிந்திரன் வழிபடக்
கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய
அண்ணல்தன் வளநக ரந்தணை யாறே.

பொழிப்புரை :

வானகத்தே வாழ்வார் தம்மோடு, சூரியன், அக்கினி, எண்ணற்ற தேவர்கள், இந்திரன் முதலானோர் வழிபட, திருமால் பிரமர்கள் காணுதற்கு அரியவனாய் நின்ற தலைவனாகிய சிவபிரானது வளநகர், அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும். வெங்கதிரோன் அனல் என்று பாடம் ஓதுவாரும் உளர்.

குறிப்புரை :

இந்திரன், அக்கினி, எண்ணற்ற தேவர்கள், இவர்கள் வழிபட, திருமாலும் பிரமனும் காண்டற்கரிய கடவுள் நகர் ஐயாறு என்கின்றது. அண்ணல் - பெருமையிற் சிறந்தவன்.

பண் :

பாடல் எண் : 10

மருளுடை மனத்துவன் சமணர்கண் மாசறா
இருளுடை யிணைத்துவர்ப் போர்வையி னார்களும்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை யடிகள்தம் அந்தணை யாறே.

பொழிப்புரை :

தெளிந்த மனத்தினை உடையவர்களே! மருட்சியை உடைய மனத்தவர்களாகிய வலிய சமணர்களும், குற்றம் நீங்காத இரண்டு துவர்நிறஆடைகளைப் பூண்ட புத்தர்களும் கூறுவனவற்றைத் தெளியாது சிவபிரானை உறுதியாகத் தெளிவீர்களாக. கருணையாளனாக விளங்கும் சிவபிரானது இடம் அழகும் தண்மையும் உடைய ஐயாறாகும்.

குறிப்புரை :

மருண்ட மனத்துச் சமணர்கள் முதலாயினார்களிடம் பொருந்தாது, தெளிந்த மனத்தவர்களே! உறுதியாகத் தெளிவுறுங்கள்; அருள் உடைய அடிகள் இடம் ஐயாறே என்கின்றது. மருள், இருள் - அறியாமை. இணை துவர் போர்வை யினார் - இரண்டான காவிப் போர்வையுடையவர்கள்.

பண் :

பாடல் எண் : 11

நலமலி ஞானசம் பந்தன தின்றமிழ்
அலைமலி புனல்மல்கு மந்தணை யாற்றினைக்
கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.

பொழிப்புரை :

அலைகள் வீசும் ஆறு குளம் முதலிய நீர் நிலைகளால் சூழப்பட்ட ஐயாற்று இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இன்தமிழால் இயன்ற கலைநலம் நிறைந்த இத்திருப்பதிகத்தைக் கற்று வல்லவராயினார் நன்மை மிக்க புகழாகிய நலத்தைப் பெறுவர்.

குறிப்புரை :

ஐயாற்றைப்பற்றித் திருஞானசம்பந்தர் சொல்லிய கலைமலிதமிழிவை வல்லார் புகழ்மிகுந்த நன்மையர் ஆவர் எனப்பயன் கூறுகின்றது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

நடைமரு திரிபுர மெரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் மிடர்கெட லெளிதே.

பொழிப்புரை :

இயங்குதலைப் பொருந்திய திரிபுரங்களை எரியுண்ணுமாறு சிரித்தருளித்தனது படைக்கலத்தால் தீ எழும்படி செய்தருளிய வெற்றி மழுவேந்திய பகவனாகிய சிவபிரான் எழுந்தருளியதும் அருகில் வளர்ந்துள்ள மருதமரங்களில் இளமேகங்கள் தவழ்ந்து மழை வளத்தை நிரம்பத்தருவதுமான திருஇடைமருதூரை அடைந்தால் நம் இடர்கெடல் எளிதாகும்.

குறிப்புரை :

திரிபுரம் தீயெழச் சிரித்த மழுவேந்தியவனது இடை மருது அடைய நம் இடர் கெடல் எளிது என்கின்றது. நடை மரு திரி புரம் - இயங்குதலை மருவிய முப்புரம். படை மரு தழல்எழ - படைக்கலமாகப் பொருந்தித் தீயெழ. புடைமருது - பக்கங்களிலுள்ள மருத மரங்கள். பொதுளிய - செறிந்த.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
குழைநுழை திகழ்செவி யழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரியண லிடமிடை மருதே.

பொழிப்புரை :

மேகங்களிடையே நுழைந்து செல்லும் பிறை மதியோடு தசைவற்றிய தலையோடு ஆகியவற்றையும், மடமயில்கள் மூங்கிலிடையே நுழைந்து செல்லும் மலையில் தோன்றிய தேவ கங்கை நதியையும்; கமழுமாறு சடைமுடியில் சூடியவனும், குழை நுழைந்து விளங்கும் செவியழகோடு இழையாகத் திரண்ட முப்புரிநூலை விரும்பி அணிபவனுமாகிய அண்ணல் எழுந்தருளிய இடம் திருவிடைமருதூராகும்.

குறிப்புரை :

மதியத்தையும் கபாலத்தையும் கங்கையையும் தாங்கிய சடையன்; குழைக்காதோடு விளங்கும் பூணூலையணிந்த அண்ணல் இடம் இது என்கின்றது. மழை நுழை மதியம் - மேகத்தினூடே நுழை யும்பிறை. அழிதலை - தசைநார் அழிந்த பிரமகபாலம். மடமஞ்ஞை கழை நுழை புனல் - இளைய மயில்கள் மூங்கிலிடையே நுழைகின்ற தேவகங்கை. இழை நுழைபுரி அணல் - இழையாகத் திரண்ட முப்புரிநூலை அணிந்த பெருமையிற் சிறந்தவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

அருமைய னெளிமைய னழல்விட மிடறினன்
கருமையி னொளிபெறு கமழ்சடை முடியன்
பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
இருமையு முடையண லிடமிடை மருதே.

பொழிப்புரை :

அன்பில்லாதவர்க்கு அரியவனும், அன்புடை அடியவர்க்கு எளியவனும், அழலும் தன்மையுடைய விடத்தை உண்டு நிறுத்திய கண்டத்தினனும், பெரியனவற்றுக்கெல்லாம் பெரியவனும், சிறியன யாவற்றினும் சிறியவனும், தன்னோடு பிணைந்துள்ள உமையம்மையோடு ஓருருவில் இருவடிவாய்த் தோன்றுபவனுமாகிய சிவபிரானுக்குரிய இடம் திருவிடைமருதூர் ஆகும்.

குறிப்புரை :

அரியனாக, எளியனாக, நீலகண்டனாக, சடை முடியனாக, ஓருருவிலேயே சிவமும் சக்தியுமாகிய ஈருருவத்தையுடையவனாக இருக்கும் அண்ணல் இடம் இடைமருது என்கின்றது. அருமையன் - அணுகியடிவணங்காத புறச்சமயிகட்கும், ஆணவ பரிபாகமுறாத பதவிமோகமுடையார்க்கும் அரியன். எளிமையன் - அடியார்க்கு எளியன். பெருமையன் - பெரியவற்றிற்கு எல்லாம் பெரிய பெருமையுடையவன். சிறுமையன் - சிறியவற்றிற்கெல்லாம் சிறியவன். பிணை பெண்ணொடு - பிணைந்துள்ள உமாதேவியோடு. ஒருமையின் - ஒரு திருமேனியிலேயே. இருமையும் உடைய - சிவமும் சத்தியுமாகிய இரண்டன்தன்மையும் உடைய.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையு ணடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையண லிடமிடை மருதே.

பொழிப்புரை :

நன்கு காய்ந்து பொரிந்த முதுகினை உடைய நரிகள் களிப்போடு அருகில் மிகுந்து தோன்ற, சுடலைக் காட்டில் நடம் நவில்பவனும், கோடாகத் தோன்றிப் பின்வளரும் குளிர்ந்த பிறைமதியை ஒளிபெற அணிந்த எரிபோன்று வளரும் சடைமுடியை உடையவனும் ஆகிய தலைமையாளனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.

குறிப்புரை :

இடுகாட்டுள் நடமாடுவோன், மதி புனைந்த சடையண்ணல் இடம் இது என்கின்றது. பொரி படு முதுகு உற முளி களி புடை புல்கு நரி - பொரிந்த முதுகிற் பொருந்தக் காய்ந்த களிப்போடு கூடிய நரி. வரி - கோட்டு அளவாக. அதாவது கீற்றாக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
இருநல புகழ்மல்கு மிடமிடை மருதே.

பொழிப்புரை :

அழகோடு அசைந்து வரும் மயில் போன்ற மட நடையினளாகிய மலையரையன் மகளும், பெருநல முலையாள் என்ற திருப்பெயருடையவளுமாகிய அம்மையின் இருதனபாரங்களைக் கூடியவனும், போர் செய்தற்குரிய தகுதியோடு விளங்கிய அவுணர்களின் மும்மதில்களை எய்தழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடமாகிய செழுமையான நகர் விரிந்த புகழால் நிறைந்த திருஇடைமருதூர் ஆகும்.

குறிப்புரை :

பெருநலமுலையம்மையோடு கூடிய பெருமான் நகர் இடைமருது என்கின்றது. வருநல மயில் அன மட நடை மலைமகள் - வருகின்ற மயிலன்ன சாயலையும் அன்னம் போன்ற மடநடையையும் உடைய மலைமகள். பெருநலமுலையாள் இத்தலத்து இறைவியின் திருநாமம். செருநலமதில் - போர்நலம் வாய்ந்த முப்புரம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

கலையுடை விரிதுகில் கமழ்குழ லகில்புகை
மலையுடை மடமகள் தனையிட முடையோன்
விலையுடை யணிகல னிலனென மழுவினோ
டிலையுடை படையவ னிடமிடை மருதே.

பொழிப்புரை :

மேகலை சூழ்ந்த விரிந்த ஆடையுடன் அகிற் புகையின் மணம் கமழும் கூந்தலை உடைய மலையரையனின் மட மகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாக உடையவனும் விலை மதிப்புடைய அணிகலன்கள் எவையும் இல்லாதவன் என்னுமாறு என்பு முதலியன பூண்டு மழு இலைவடிவான சூலம் இவற்றைப் படைக்கலனாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.

குறிப்புரை :

உமாதேவியை இடப்பாகம் உடையோன், மழு சூலம் இவற்றையுடையவன் இடம் இது என்கின்றது. துகிலையும், அகில் புகை கமழ் குழலையும் உடைய மடமகள் எனக் கூட்டுக. விலையுடை அணிகலன் இலன் என - விலைமதிப்புடைய உயர்ந்த ஆபரணங்கள் இல்லாதவன் என. இலையுடை படையவன் - இலைவடிவாகிய சூலப்படையை உடையவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமண லணைகரை யிசைசெயு மிடைமரு
துளமென நினைபவ ரொலிகழ லிணையடி
குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே.

பொழிப்புரை :

இது வளமான இடமாகும் என வளர்வனவாகிய வரிப் பாடல்களைப் பாடும் வண்டுகள் இளமணல் அணைந்த கரையில் தங்கி முரலும் இடைமருதை மனமார நினைபவர் அந்நகரை அடைந்து ஆங்குள்ள தீர்த்தத்தில் நன்கு மூழ்கி ஒலிக்கின்ற கழலணிந்த மருதவாணனை வழிபடுதலைப் பண்பாகக் கொள்க.

குறிப்புரை :

வண்டுகள் இசைமுரலும் இடைமருதுறைபவனிணை யடியைக் குளத்தில் மூழ்கி வழிபடல் குணமாம் என்கின்றது. வளம் என வளர்வன - இது வளமான இடம் என்று வளர்வனவாகிய. வரி முரல் பறவைகள் - வரிகளோடு ஒலிக்கின்ற வண்டுகள். மனம் நினைத்த பொருள் வடிவாக அமையும் இயல்பிற்றாதலின் `இடைமருது உளமென நினைபவர்` என்றார். குளம் அணல் உற மூழ்கி - குளத்தில் கழுத்தளவிருந்து மூழ்கி. அணல் - தாடி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

மறையவ னுலகவன் மதியவன் மதிபுல்கு
துறையவ னெனவல வடியவர் துயரிலர்
கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
இறையவ னுறைதரு மிடமிடை மருதே.

பொழிப்புரை :

வேதங்களை அருளியவனும் அனைத்துலகங்களாய் விளங்குபவனும், திங்களாகத் திகழ்பவனும், அறிவொடுபட்ட கலைத்துறைகளாக விளங்குபவனும் சிவபிரானேயாவன் என்று போற்ற வல்ல அடியவர் துயரிலராவர். மிடற்றிற் கறையுடையவனும் கனல்போல் விளங்கும் சடையினனும் எல்லோர்க்கும் தலைவனும் ஆய அப்பெருமான் உறையும் இடம் இடைமருதாகும்.

குறிப்புரை :

வேதியன், உலகெலாமாயவன் என்றெல்லாம் சொல்ல வல்ல அடியவர்கள் துயரிலர் என்கின்றது. செந்தீக் கொழுந்துபோலச் சுடர்விடும் சடையவன் என்க. மிடறது கறையவன் என மாறிக்கூட்டுக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
இருதுடை யகலமொ டிகலின ரினதெனக்
கருதிட லரியதொ ருருவொடு பெரியதொர்
எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே.

பொழிப்புரை :

மருதமரங்களின் இடையே கட்டிய உரலோடு தவழ்ந்த நீலமணிபோன்ற நிறத்தை உடைய திருமாலும், பிரமனும் மிக்க பெருமையுடையவர் யார் எனத் தம்முள் மாறுபட்டவராய் நிற்க அவர்கள் இன்னதெனக் கருதற்கரிய பெரிய ஒளி உருவோடு தோன்றிய பெரிய விடையூர்தியனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.

குறிப்புரை :

திருமாலும் பிரமனும் மாறுபட இன்னதென அறிய முடியா வடிவத்தோடு எழுந்த பெருமானிடம் இது என்கின்றது. மரு திடை நடவிய மணிவணர் - மருதமரங்களினிடையே கட்டிய உரலோடு புகுந்த கண்ணன். இனது எனக் கருதிடல் அரியது - இன்னது என்னக் கருதமுடியாத. எருது - இடபம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

துவருறு விரிதுகி லுடையரு மமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மி னிடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெட லணுகுதல் குணமே.

பொழிப்புரை :

துவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும் கூறும் சிறு சொல்லை விரும்பாதீர். காவிரி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் வாய்க்கால்களை உடைய இடைமருதைக் கைகளால் தொழுபவர்க்கு வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும் கூடும்.

குறிப்புரை :

புறச்சமயிகள் பேச்சை விரும்பாதீர்கள்; இடை மரு தினைக் கைதொழும்; அவர்களின் வினை கேட்டையணுகுதல் குணம் என்கின்றது. துவர் உறு உடையர் - புத்தர்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே.

பொழிப்புரை :

நீர்நிலைகள் பலவற்றை உடைய புகலிப் பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதீசனை இசையால் பரவிய சொல்லோவியமாகிய இத்திருப்பதிகத் தமிழைப் பாடிப் பரவ வல்லவர்தம் வினைகள் கெட்டொழிய அவர்கள் புகழோடும் விளங்கும் ஒளியோடும் திகழ்பவராவர்.

குறிப்புரை :

தமிழ் விரகினனாய ஞானசம்பந்தப் பெருமான், இடைமருதைப் பற்றி இயம்பிய தமிழை வல்லவர் வினைகெடப் புகழொடு ஒளியுமிக விளங்குவர் என்கின்றது. படம் மலி தமிழ் - பட மெடுத்தாற்போலச் சிறந்த தமிழ். கிளர் - மிகுகின்ற.

பண் :

பாடல் எண் : 1

விரிதரு புலியுரி விரவிய வரையினர்
திரிதரு மெயிலவை புனைகணை யினிலெய்த
எரிதரு சடையின ரிடைமரு தடைவுனல்
புரிதரு மனனவர் புகழ்மிக வுளதே.

பொழிப்புரை :

விரிந்த புலித்தோலை ஆடையாக உடுத்த இடை யினரும், வானகத்தில் திரிந்து இடர் செய்த முப்புரங்களை ஆற்றல் பலவும் அமைந்த கணையால் எய்தழித்தவரும் எரிபோன்ற சிவந்த சடை யினருமாகிய சிவபிரானார் உறையும் இடைமருதை அடைய எண்ணும் மனம் உடையவர்க்குப் புகழ்மிக உளதாகும்.

குறிப்புரை :

புலித்தோலரையினராகிய இறைவனது திருஇடை மருதினை அடைய விரும்பிய மனத்தவர்க்குப் புகழ் மிகவுளது என்கின்றது. திரிதரும் எயில் - திரிபுரம்.

பண் :

பாடல் எண் : 2

மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரு மிடைமரு தெனுமவர்
செறிதிரை நரையொடு செலவில ருலகினில்
பிறிதிரை பெறுமுடல் பெறுகுவ தரிதே.

பொழிப்புரை :

சுருண்டு விழும் அலைகள் உண்டாகும் கடலிடைத் தோன்றிய விடம் சேர்ந்த மிடற்றினர் உறைவதும், காவிரியாற்று அலைகள் கரைகளைப் பொருவதுமான இடைமருது என்னும் தலத்தின் பெயரைச் சொல்லுவோர் உடலிடை அலைபோலத் தோன்றும் தோலின் சுருக்கம், மயிரின் நரை ஆகியன நீங்குவர். மீண்டும் இவ்வுலகில் உணவு உண்ணும் உடலோடு கூடிய பிறவியை எய்தார்.

குறிப்புரை :

நீலகண்டர் எழுந்தருளிய இடைமருது என்று கூறுபவர் நரைதிரை எய்தார்; மீட்டும் இவ்வுடலையும் எய்தார் என்கின்றது. பிறிது இரைபெறும் உடல் பெறுகுவது அரிது. வேறு உணவை உட்கொளும் இந்த அன்னமயகோசத்தை அடைவது அரிது; பிறவியில்லை என்பதாம்.

பண் :

பாடல் எண் : 3

சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய வுடலினர் நிறைமறை மொழியினர்
இலரென விடுபலி யவரிடை மருதினை
வலமிட வுடனலி விலதுள வினையே.

பொழிப்புரை :

சலசல என்னும் ஒலிக்குறிப்போடு சொரியும் கங்கை ஆற்றைச் சடைமிசை அணிந்தவரும், மலைமகளை ஒருபாகமாகக் கொண்ட உடலினரும், நிறைவான வேதங்களை மொழிபவரும், உணவின்மையால் பசியோடுள்ளார் என மகளிர் இடும் பலியை ஏற்பவருமான சிவபிரான் உறையும் இடைமருதை வலம்வருபவர்க்கு வினைகளால் ஆகும் உடல் நலிவு இல்லையாம்.

குறிப்புரை :

இடைமருதை வலம்வர வினைகளால் உடல் நலிவு இல்லையாம் என்கின்றது. புனல் - கங்கை. நிலவிய - விளங்கிய. உளவினையால் உடல் நலிவு இலது என இயைக்க.

பண் :

பாடல் எண் : 4

விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி
கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்
இடைவிட லரியவ ரிடைமரு தெனுநகர்
உடையவ ரடியிணை தொழுவதெம் முயர்வே.

பொழிப்புரை :

விடையூர்தியை உடையவரும், வெண்மையான தலையோட்டை உண்கலன் எனக்கொண்டு பலகாலும் வீடுகள்தோறும் சென்று பலி இடுக என விரைந்து செல்பவரும், ஒருமுறை அன்பு செய்யின் விடுதற்கு அரியவரும், இடைமருது என்னும் நகரை உடையவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுவதே எமக்கு உயர்வைத் தரும்.

குறிப்புரை :

இடைமருதினை உடையவர் அடியிணை தொழுவது எம்முயர்வுக்கு வழியாம் என்கின்றது. வெளியது ஓர் தலை - பிரமகபாலம். கலன் - உண்கலன். முடுகுவர் - விரைவர். இடைவிடல் அரியவர் - ஆன்மாக்களால் இடைவிடாமல் எண்ணுதற்குரியவர் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 5

உரையரு முருவின ருணர்வரு வகையினர்
அரைபொரு புலியத ளுடையின ரதன்மிசை
இரைமரு மரவின ரிடைமரு தெனவுளம்
உரைகள துடையவர் புகழ்மிக வுளதே.

பொழிப்புரை :

சொல்லுதற்கரிய அழகரும், உணர்வதற்கரிய தன்மையரும், இடையில் பொருந்திய புலித்தோல் ஆடையினரும் அதன்மேல் இரையை விழுங்கும் பாம்பைக் கச்சையாகக் கட்டியவரும் ஆகிய சிவபிரானது இடைமருதைப் பலகாலும் புகழ்ந்து போற்றுவார்க்கு மிகுதியான புகழ் உளதாகும்.

குறிப்புரை :

சொல்லுதற்கரிய உருவினரும், உணர்தற்கரிய தன்மைகளை உடையவரும், புலித்தோலாடையினரும் ஆன இறைவனது இடைமருதென நினைக்கவும் பேசவும் வல்லவர்கட்குப் புகழ்மிக உளதாம் என்கின்றது. இரை மரும் அரவினர் - உணவை உட்கொள்ளும் பாம்பினையுடையவர். உளம் உடையவர், உரைகளது உடையவர் (க்குப்) புகழ் உளது என முடிக்க.

பண் :

பாடல் எண் : 6

ஒழுகிய புனன்மதி யரவமொ டுறைதரும்
அழகிய முடியுடை யடிகள தறைகழல்
எழிலின ருறையிடை மருதினை மலர்கொடு
தொழுதல்செய் தெழுமவர் துயருற லிலரே.

பொழிப்புரை :

வழிந்தொழுகும் கங்கை நதி, இளம்பிறை, பாம்பு ஆகியன உறையும் அழகிய சடைமுடியை உடையவரும், ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்துள்ள அழகரும் ஆகிய அடிகளது இடைமருதை அடைந்து மலர் கொண்டு போற்றித்தொழுது எழுவார் துன்புறுதல் இலராவர்.

குறிப்புரை :

இடைமருதை மலர்கொண்டு தொழுவார் துயருறுதல் இலர் என்கின்றது. அடிகளது இடைமருது, அறைகழல் எழிலினர் உறையிடைமருது எனத்தனித்தனி இயைக்க.

பண் :

பாடல் எண் : 7

கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்
நிலையினர் சலமக ளுலவிய சடையினர்
மலைமகண் முலையிணை மருவிய வடிவினர்
இலைமலி படையவ ரிடமிடை மருதே.

பொழிப்புரை :

வீணையை மீட்டி இன்னிசைக் கலையை எழுப்பும் விரலை உடையவரும், கொடிய மழுவாயுதத்தோடு விளங்கும் நிலையினரும், கங்கை உலாவும் சடைமுடியினரும் மலைமகளின் முலைத்தழும்பு பொருந்திய வடிவினரும், இலைவடிவான சூலத்தை ஏந்தியவருமாய சிவபிரானார் இடம் இடைமருதாகும்.

குறிப்புரை :

கங்கையுலாவிய சடையையும், உமாதேவியார் முலைத்தழும்பு சேர்ந்த வடிவினையும் உடையவர் இடம் இடைமருது என்கின்றது. வீணைவாயிலாக இசைக்கலையை வெளிப்படுத்துதலின் கலை மலி விரலினர் எனக் கூறப்பெற்றார்.

பண் :

பாடல் எண் : 8

செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர
இருவகை விரனிறி யவரிடை மருதது
பரவுவ ரருவினை யொருவுதல் பெரிதே.

பொழிப்புரை :

போரில் முறையற்ற செயல்களைச் செய்யும் இராவணன் தன்னிடமும் அவ்வாறு திறலோடும் செய்தலைக் கண்டு அரிய கயிலைமலையின்கீழ் அகப்படுத்தி அவனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு சினம் கருணை ஆகிய இருவகைக் குறிப்போடு கால் விரலை ஊன்றியவராகிய சிவபிரானது இடைமருதைப் பரவுவார் அருவினைகள் பெரிதும் நீங்கும்.

குறிப்புரை :

இடைமருதைப் பரவுவார்வினை நீங்குதல் பெரிதாமோ என்கின்றது. செருவு அடையில வல செயல் செய் அத்திறலொடும் - போரில் முறையற்ற வலிய செயல்களைச் செய்யும் அத்தகைய வலிமை யோடும். இருவகை விரல் நிறியவர் - அவன் வலிமையும் முடியும் ஆகிய இரண்டும் நெரியும்படியான இருவகைத் திருவுள்ளக்குறிப்போடு விரலை ஊன்றியவர். அதாவது அவன் அழியப்படாது அடங்க வேண்டும் என்ற திருவுள்ளக்குறிப்புடன் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 9

அரியொடு மலரவ னெனவிவ ரடிமுடி
தெரிவகை யரியவர் திருவடி தொழுதெழ
எரிதரு முருவர்த மிடைமரு தடைவுறல்
புரிதரு மனனவர் புகழ்மிக வுளதே.

பொழிப்புரை :

திருமால் பிரமர்களாகிய இருவரும் அடிமுடி காண முயன்றபோது அவர்கட்கு அரியவராய்த் தோன்றி அவர்கள் தம்மைத் தொழுது எழுந்தபோது அழலுருவாய்க் காட்சிதந்த சிவபிரானாரது இடைமருதினை அடைய விரும்புவார்க்குப் புகழ் மிக உளதாகும்.

குறிப்புரை :

இடைமருதை எய்த வேண்டும் என்ற சித்தம் உடை யார்க்குப் புகழ் உண்டாம் என்கின்றது. தெரிவகை - ஆராய்ந்து அறிவதற்கு.

பண் :

பாடல் எண் : 10

குடைமயி லினதழை மருவிய வுருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை
அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்
இடைமரு தெனமன நினைவது மெழிலே.

பொழிப்புரை :

குடையையும் மயிற்பீலியையும் கையில் ஏந்திய வடிவினை உடைய சமணர்களும், மருதந்துவர் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தர்களும் பலவாறு கூற அவர்களோடு நமக்கு உறவில்லை என ஒதுக்கிச் செல்வங்கள்யாவும் தம்மை வந்தடைந்தவராய் விளங்கும் அடியவர்களால் தொழப்பெறும் திருவடிகளை உடைய சிவபிரானது இடைமருது என மனத்தால் நினைவது அழகைத்தரும்.

குறிப்புரை :

புறச்சமயிகள் பலபேச அவற்றோடு நமக்கு உறவே யில்லை என்று அடைகின்ற சில புண்ணியசீலர்கள் வணங்குகின்ற திருவடியையுடையார் இடைமருது என எண்ணுவதே அழகு என்கின்றது. குடை மயிலினதழை மருவிய உருவினர் - குடையையும் மயிற் பீலியையும் தழுவிய வடிவத்தையுடையவர்களாகிய சமணர்கள். துவர் - காவி. பல சொல என்றது அவற்றின் பொருளற்ற தன்மையையும் பொருந்தாக்கோளையும் புலப்படுக்க.

பண் :

பாடல் எண் : 11

பொருகட லடைதரு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடை மருதினைப்
பரவிய வொருபது பயிலவல் லவரிடர்
விரவிலர் வினையொடு வியனுல குறவே.

பொழிப்புரை :

கரையைப் பொரும் கடலை அணித்தாக உடைய புகலிப்பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதில் விளங்கும் பெருமானைப் பரவிய இத்திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் பயில வல்லவர் வினைகளும் இடர்களும் இலராவர். அகன்ற வீட்டுலகம் அவர்கட்குச் சொந்தமாகும்.

குறிப்புரை :

திருஞானசம்பந்தப்பெருமான் இடைமருதைப் பரவிய இப்பாடல் பத்தும் பயிலவல்லார் வினையும் இலர்; அவற்றால் வரும் துன்பமும் இலர் எனப்பயன் விளக்கிற்று. வியன் உலகு - அகன்ற சுவர்க்க பூமி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை யெதிர்விழி உமையவள்
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

மணம் கமழும் மலர்களையும், அவற்றில் தேனுண் ணும் வண்டுகளையும், உடைய பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், மலர்கள் அணிந்த சுருண்ட கூந்தலையும், வரிந்து கட் டப்பெற்ற வில்போன்ற நுதலையும், செலுத்துதற்கு உரிய கணை, மான் ஆகியன போன்ற கண்களையும் பெற்றுடைய உமையம்மையோடு கூடிய திருமேனியை உடையவன்.

குறிப்புரை :

உமாதேவி விரும்பி எழுந்தருளிய திருமேனியுடைய வன், வலிவலம் உறை இறைவன் ஆவான் என்கின்றது. பூ இயல் புரி குழல் - பூக்களையணிந்த பின்னப்பெற்ற கூந்தலையும், வரி சிலை நிகர் நுதல் - கட்டுக்களோடு கூடிய வில்லையொத்த நெற்றியையும் உடைய உமையவள் எனத்தனித்தனிகொண்டு இயைக்க. ஏவு இயல் கணை - செலுத்தப்பெற்ற பாணம். இதனைக்கண்ணுக்கு ஒப்பாக்கியது சென்று தைத்திடும் இயல்பு பற்றி. பிணை - பெண்மான்நோக்கு. ஆகுபெயர்; இதனைக் கூறியது மருட்சிபற்றி. மா இயல் பொழில் - மாமரங்கள் செறிந்த சோலை. வண்டு நிறைந்த சோலையுமாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

இட்டம தமர்பொடி யிசைதலி னசைபெறு
பட்டவிர் பவளநன் மணியென வணிபெறு
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

மணம் கமழ்கின்ற மலர்கள் தேனோடு விளங்கும் பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், விருப்பத்தோடு அணியப் பெற்ற திருநீறு பொருந்தி இருத்தலின் பட்டோடு விளங்கும் பவளமணி போல் ஒளிவிடுகின்ற அழகிய ஒளி வீசும் திருமேனியை உடையவனாகத் தோன்றுகின்றான்.

குறிப்புரை :

செம்மேனியில் திருநீறு அணியப் பெற்றமையால் பட்டோடு விளங்குகின்ற பவளமணிபோல ஒளிவிடுகின்ற திருவுருவுடையவர் இந்நகர் இறை என்கின்றது. இட்டம் - விருப்பம். நசை - விருப்பம். பட்டு அவிர் பவள நன்மணி என - பட்டோடு விளங்குகின்ற பவழமணியென்றுசொல்ல.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
கருமணி நிகர்கள முடையவன் மிடைதரு
மருமலி பொழில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

மிகுதியான மணம் நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த வலிவலத்தில் உறையும் இறைவன், தேவர்கள் அஞ்சத்தக்க கடலைக் கடைந்தபோது உலகில் உள்ள அனைத்துயிர்களும் அஞ்சத்தக்க வகையில் எழுந்த விடத்தை உண்டு, திருநீறு சண்ணித்த திருமேனி வெள்ளி மலைபோல விளங்க அதனிடை நீலமணி பதித்தாற்போல் கரியகண்டம் உடையவனாய் விளங்குபவன் ஆவான்.

குறிப்புரை :

பாற்கடலைக் கடைந்தகாலத்து, உலகத்து உயிர்கள் யாவும் அஞ்சும்படித் தோன்றிய விடத்தை அமுதுசெய்தமையால் வெள்ளிமலையணிந்த நீலமணியை ஒத்த கழுத்தையுடையவன் இந்நகர் இறை என்கின்றது. வெள்ளிமலை நீறுதோய்ந்த இறைவன் திருமேனிக்கும், நீலமணி அவன் கழுத்தில் விளங்கும் கறைக்கும் உவமை. மிடைதரு - நெருங்கிய. மரு - மணம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

அனனிகர் சடையழ லவியுற வெனவரு
புனனிகழ் வதுமதி நனைபொறி யரவமும்
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

வலிவலம் உறை இறைவன், அனல் போன்ற சடை யழலை அவிப்பதற்கென வருவது போன்ற கங்கையையும், பிறையையும், பூ மொட்டுப் போன்ற படப்புள்ளிகளை உடைய பாம்பையும் முடி மிசை உடையவன் என்னும் நினைவோடு வரும் மனமுடைய அடியவர் வாழும் சிறப்பினை உடையது வலிவலமாகும்.

குறிப்புரை :

முடிமீது மனமுடையவர் வலிவலமுறை இறைவர் என்கின்றது. அதற்குரிய ஏது கங்கையோ செந்தழல்போன்ற சடையின் தீயை அவிக்க வருவதுபோலப் பெருகிக்கொண்டிருக்கிறது. அக்கங் கையில் நனைந்த அரவமும் நம்மால் விழுங்கத்தக்க மதி எனநினைவொடும் வருகின்றது. ஆதலால் இவை தருக்கும் பகையுமாறித் தத்தம் எல்லையில் ஒடுங்க இறைவன் எப்போதும் தலைமேற் சிந்தையராக இருக்கின்றார் என்ற நயந்தோன்றக் கூறியது, அனல் நிகர் சடை அழல் அவியுற - நெருப்பை ஒத்த சடையின் தீயானது தணிய. நனை பொறி அரவம் - நனைந்த படப்புள்ளிகளோடு கூடிய பாம்பு. நனை - கூரிய என்றுமாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

மிகுதியாக வழங்கும் கொடையே தமக்கு அழகைத் தரும் என நினையும் வள்ளற் பெருமக்கள் வாழும் வலிவலத்தில் உறையும் இறைவன், உமையம்மை பெண்யானை வடிவுகொள்ள, தான் ஆண்யானையின் வடிவு கொண்டு தன் திருவடியை வணங்கும் அடிய வர்களின் இடர்களைக் கடியக் கணபதியைத் தோற்றுவித்தருளினான்.

குறிப்புரை :

உமாதேவி பெண்யானையின் வடிவுகொள்ள, ஆண் யானையின் வடிவத்தைத் தாம்கொண்டு விநாயகப் பெருமான் அவதரிக்கத் திருவுள்ளம்பற்றிய இறைவன் வலிவலநகரான் என்கின்றது. பிடி - பெண்யானை. கரி - ஆண்யானை. வடிகொடு - வடிவத்தைக் கொண்டு. கடி கணபதி - தெய்வத்தன்மையுடைய விநாயகப் பெருமான். கொடைவடிவினர் - வள்ளற் பெருமக்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

தரைமுத லுலகினி லுயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

அழகிய மலைபோலத் திகழும் மதில் சூழ்ந்த வலி வலத்தில் உறையும் இறைவன், மண் முதலிய அனைத்து அண்டங்களிலும் வாழும் உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடிப் போகம் நுகருமாறு மணம் மிக்ககூந்தலை உடைய உமையம்மையோடு கூடியவனாய் விளங்கித்தன்னை வழிபடும் அடியவர்க்கு நரை தோலின் சுருக்கம் என்பன கெடுமாறு செய்து என்றும் இளமையோடு இருக்க அருள்புரிபவனாவான்.

குறிப்புரை :

பிருதிவியண்டம் முதலான பல்வேறு அண்டங்களில் வாழும் உயிர்கள் யாவும் போகம் நுகரத்தாம் போகியாயிருந்து உமாதேவியோடு பொருந்துகின்ற இறைவன் இவன் என்கின்றது. சென்ற திருப்பாடலில் உமை பெண்யானையாக, இவர் ஆண்யானையானார் என்ற வரலாற்றுக்கு ஏது கூறி ஐயம் அகற்றியது. புணர்தகை - புணர்ச்சியை எய்துவதற்காக. விரை - மணம். விரவது - கலத்தலை. தன்னை வழிபடுகின்ற அடியார்களுக்கு நரை திரை முதலியனகெட, என்றும் இளமையோடிருக்க அருளினன் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

நலிதரு தரைவர நடைவரு மிடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவ னெழின்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

அழகுமிக்கக் கவின் கலை முதலான தொழில்கள் வளரும் வலிமை மிக்க மதில்களால் சூழப்பட்ட வலிவலத்தில் உறையும் இறைவன், மண்ணை மிதிப்பதற்கே அஞ்சும் மென்மையான பாதங்களையும், அசையும் இடையினையும் உடைய அழகிய தாருகாவன மகளிர் உறையும் மனைகள் தோறும் சென்று புகுந்து பலி ஏற்கப் பிட்சாடனனாய் வருபவன்.

குறிப்புரை :

பூமியை மிதிப்பதற்கு அஞ்சும் மெல்லிய பாதமுடைய முனிபன்னியர் வீடுகள்தோறும் சென்று பலியேற்க வருபவன் வலி வலம் உறை இறை என்கின்றது. தரை வரநலிதரும் நடை வரும் இடையவர் எனக்கொண்டு கூட்டுக. மடவரலியர் - பெண்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

இரவண னிருபது கரமெழின் மலைதனின்
இரவண நினைதர வவன்முடி பொடிசெய்து
இரவண மமர்பெய ரருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

தன்னை வழிபட்டு இரக்கும் தன்மையாளர்களாகிய அடியவர்கட்குத் தன் மனத்தில் தோன்றும் கருணையாகிய நிதியை வழங்கும் வலிவலத்தில் உறையும் இறைவன், இராவணனின் இருபது கரங்களையும் அவனுடைய பத்துத் தலைகளையும் அழகிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்திப் பொடி செய்து பின் அவன் இரந்து வேண்டி நினைத்த அளவில் அவனுக்கு வேண்டுவன அளித்து இரா வணன் என்ற பெயரையும் அருளியவன்.

குறிப்புரை :

இராவணன் செருக்கடங்க, விரல் நுதியையூன்றி அவன் இரக்க, மீட்டும் அருள் செய்தவன் இவன் என்கின்றது. இரவ ணன் - இராவணன்; எதுகை நோக்கி இடைகுறுகிற்று. இராவண்ணம் - இருக்காத வண்ணம். இரவணம் அமர் - அவன் அழுதலைப் பொருந்த. இரவு அண்ண நிகர் ...... இறை - அடியார்கள் தத்தம் குறைகளைச் சொல்லியாசிக்க அருளும் இறைவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

தேனமர் தருமல ரணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நில மகழரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

வானத்தைச் சென்றடையுமாறு நெருக்கமாகக் கட்டப்பட்ட கொடிகளைக் கொண்ட மதில்களால் சூழப்பட்ட வலி வலத்தில் உறையும் இறைவன், தேன் நிறைந்த தாமரை மலர்மேல் உறையும் நான்முகன், வலிமைமிக்க பன்றியுருவினனாய் நிலத்தை அகழும் திருமால் ஆகியோர் முடியையும் அடியையும் காணமுடியாதவாறு ஓங்கி உயர்ந்த திருவுருவை உடையவன்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியாத வடிவுடையான் வலிவல நாதன் என்கின்றது. ஏனம் - பன்றி. மிடை - நெருங்கிய.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையி லுணலுடை யவர்களு நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.

பொழிப்புரை :

மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட வலி வலத்தில் உறையும் இறைவன், மிகுதியான மருதந்துவர் இலைகளால் பிழியப்பட்ட மிக்க துவர்நிறம் உடைய ஆடைகளை அணிந்த புத்தர்களும் நின்றுண்ணும் இயல்பினர்களாகிய சமணர்களும் நினைப்பதை அழித்துப் பொருட்டன்மையால் வலியவான பெருமை மிக்க வேதங்கள் தன்னைத் தொடருமாறு செய்தருளும் உருவினை உடையவனாய் உள்ளான்.

குறிப்புரை :

சமணர் புத்தர்களுடைய நினைப்புத்தொலைய, வேதம் தேடும் வடிவினன் வலிவலநாதன் என்கின்றது. இலை மலிதர மிகு துவர் உடையவர்கள் - வாயில் வெற்றிலை மிக, காவியுடுத்த புத்தர்கள். நிலைமையில் உணலுடையவர்கள் - நின்றபடியே விழுங்கும் சமணர்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழின்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய வொருபது முயர்பொருள் தருமே.

பொழிப்புரை :

நிலைபேறுடைய வலிவல நகரில் உறையும் இறைவன்மீது இனிமையான இயல்பினை உடைய கழுமல நகருக்குத் தலைவனும் அழகிய வேதங்களையும் கலைகளையும் ஓதாமல் தானே உணர்ந்த தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் எண்ணிஉரைத்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தும் உயர்வான வீடு பேறாகிய செல்வத்தை அளிக்கும்.

குறிப்புரை :

வலிவல நாதனைக் கழுமலநாதனாகிய ஞான சம்பந்தன் சொல்லிய இந்தப்பத்து உரைகளும் உயர்ந்த பொருளைத் தரும் என்கின்றது. எழில்மறை தன்னியல் கலைவல தமிழ்விரகன் - அழகிய வேதத்தையும், கலைகளையும் ஓதாதே தன்னியலாலேயே திருவருள் துணைகொண்டு உணர்ந்த தமிழ் விரகன். உன்னிய - எண்ணிச் சொன்ன. உயர்பொருள் - வீடு.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

அலர்மகண் மலிதர வவனியி னிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனையிட மகிழ்பவர்
நலமலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

மலர் நிறைந்த கூந்தலை உடைய உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டு மகிழ்பவரும், அழகிய திருமேனியை உடையவரும் ஆகிய சிவபிரானது நிலவுலகத்தே நிறைந்த புகழை உடைய மிழலை நகரை நினையவல்லவர் திருமகளின் கருணையால் செல்வம் நிறையப் பெற்று உலகில் வாழ்வர்.

குறிப்புரை :

திருவீழிமிழலையை நினையவல்லவரே சீதேவி சிறக்க இப்பூமியில் வாழ்பவராவர் என்கின்றது. அலர்மகள் - லஷ்மி. அவனி - பூமி. இடம் - இடப்பாகம். நலம் - அழகு. உமைதனை இடம் மகிழ்பவர் உருவுடையவர் நகராகிய வீழிமிழலையை நினைபவர் அலர் மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் எனக்கூட்டிப் பொருள் காண்க.

பண் :

பாடல் எண் : 2

இருநில மிதன்மிசை யெழில்பெறு முருவினர்
கருமலி தருமிகு புவிமுத லுலகினில்
இருளறு மதியின ரிமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

எண்ணற்ற உயிரினங்கள் வாழும் மண் முதலிய அனைத்துலகங்களிலும் இருளைப் போக்கும் மதி போல ஒளியும் தண்ணளியும் செய்பவரும், தேவர்களால் தொழப்பெறும் தன்னொப்பார் இல்லாதவரும் ஆகிய சிவபிரானது மிழலையை நினைப்பவர்கள் பரந்து விரிந்த இவ்வுலகில் அழகிய உருவோடு விளங்குபவர் ஆவர்.

குறிப்புரை :

மண்முதலாகிய அண்டத்தில் மயக்கமலமற்ற உண்மை ஞானிகளும் தேவர்களும் தொழும் உவமனிலியாகிய இறைவன் மிழலையை நினைய வல்லவர்களே இவ்வுலகத்து அழகான உருவுடையவர்கள் என்கின்றது. எழில் - அழகு. கரு மலிதரு மிகு புவி - பிறவி மிக்க இப்பூமி. இருள் - ஆணவம். நிருபமன் - உவமம் இல்லாதவர். ஒப்பிலி என்பதாம்.

பண் :

பாடல் எண் : 3

கலைமக டலைமக னிவனென வருபவர்
அலைமலி தருபுன லரவொடு நகுதலை
இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

அலைகள் நிறைந்த கங்கை நதி, பாம்பு, தலை யோடு, வில்வஇலை, மிக்க கொன்றை ஆகியன பொருந்திய சடைமுடியினனாகிய சிவபிரான் உறையும் நிலைபேறு உடைய திருவீழிமிழலையை நினைய வல்லவர் கலைமகளின் தலைவன் இவன் என்னும் ஒவ்வொருவரும் சொல்லத்தக்க தகுதியை உடையவராய்க் கல்வி நலம் வாய்க்கப் பெறுவர்.

குறிப்புரை :

மிழலையை நினைவார் கலைமகள் கணவனாவார் என்கின்றது. நகுதலை - கபாலம். இலைமலி இதழி - இலைகளோடு நிறைந்த கொன்றை. இலை - இதழுமாம்; நிலை - நிலைபேறு; அழியாமை.

பண் :

பாடல் எண் : 4

மாடமர் சனமகிழ் தருமன முடையவர்
காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை
பாடலி னவில்பவர் மிகுதரு முலகினில்
நீடமர் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

இடுகாட்டில் வாழும் பேய்கள் ஒலிக்க முழவு முதலிய கருவிகள் ஒலிக்க இசைபாடி நடம் நவில்பவனாகிய சிவபிரான் இனிதாக எழுந்தருளியதும் இவ்வுலகிடைப் பெருமையோடு நீண்டகாலமாக விளங்குவதுமாகிய திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள் அருகில் விரும்பி உறையும் சுற்றத்தினர் மகிழும் மனம் உடையவராவர்.

குறிப்புரை :

பேயோடாடும் பெம்மான், இவ்வுலகில் இனிதமரும் மிழலையை நினைபவர் சுற்றம் மகிழஇருப்பர் என்கின்றது. மாடு - பக்கம். மாடமர்சனம் - சுற்றம். காடு - சுடுகாடு. கழுது - பேய்.

பண் :

பாடல் எண் : 5

புகழ்மகள் துணையினர் புரிகுழ லுமைதனை
இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்
முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
நிகழ்தரு மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

சுருண்ட கூந்தலை உடைய உமையம்மையை இகழ்ந்த தக்கனுடைய அழகிய வேதநெறிகளை ஓதி வளர்க்கும் தலையைச் சினந்து சிதைத்தருளியவனாகிய சிவபிரானது புகழ் பொருந்திய திருவீழிமிழலையை நினைய வல்லவர் புகழ்மகளைப் பொருந்துவர்.

குறிப்புரை :

உமாதேவியை இகழ்ந்த பிரமனது சிரத்தைக் கொய்த சிவபெருமான் எழுந்தருளிய இத்தலத்தை நினையவல்லவர் கீர்த்தி மாதைப் பொருந்துவர் என்கின்றது. இகழ்வு செய்தவன் உடை எழில் மறைவழி வளர் முகம் - இகழ்ந்த பிரமனது அழகிய வேதநெறி வளரும் முகத்தை; என்றது வேதஞ்சொல்லும் வாயையுடைய தலையை என்பதாம்.

பண் :

பாடல் எண் : 6

அன்றின ரரியென வருபவ ரரிதினில்
ஒன்றிய திரிபுர மொருநொடி யினிலெரி
சென்று கொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
நின்றவன் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

தவம் செய்து அரிதாகப் பெற்ற ஒன்றுபட்ட முப் புரங்களைத் தேவர்கள் வேண்டுகோட்படி ஒருநொடிப் பொழுதில் எரி உண்ணுமாறு சிறுமுறுவல் செய்து புகழ்பெற்றவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையைநினைய வல்லவர் பகைவர்கட்குச் சிங்க ஏறு போன்ற வன்மை உடையவராவர்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய இந்நகரை நினைய வல்லவர் பகைவர்களாகிய யானைகட்குச் சிங்கம் போல்பவர் என்கின்றது. அன்றினர் - பகைவர். அரி - சிங்கம். சிறுமுறுவல் - புன்னகை.

பண் :

பாடல் எண் : 7

கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்
சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்
வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

மணங்கமழும் தாமரை மலர்மேல் உறையும் பிரமனுடைய தலைகளில் ஒன்றை அவனது உடலில் பொருந்தா வண்ணம் கொய்த சிவபிரான் உறையும் செழுமையான நகராய். மேன்மை மிக்க கலைகள் பலவற்றோடு வேதவிதிகளையும், அறநெறிகளையும் அறிந்தவர்கள் நிரம்பிய திருவீழிமிழலையை நினைய வல்லவர் தம் கைகளால் பலகாலும் கொடுக்கும் வள்ளன்மையோடு கூடிய உள்ளத்தைப் பெறுவர்.

குறிப்புரை :

மிழலை நினைவார் வள்ளலாவார் என்கிறது. கரம் பயில் கொடையினர் - கை பலகாலும் பயின்ற வள்ளன்மையையுடையவராவர். கடிமலர் - மணமுள்ளமலர். பயில்வு அற எறி சிவன் எனப் பிரிக்க. வரம் - மேன்மை.

பண் :

பாடல் எண் : 8

ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
அரக்கனன் மணிமுடி யொருபது மிருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

இராவணனுடைய மணிமுடி தரித்த பத்துத் தலைகளும், இருபது கரங்களும் நெரியுமாறு தன்மலர் போன்ற திருவடியின் விரலைக் கொண்டு நெரித்தருளியவனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர் ஒன்றுபட்ட உணர்வோடு ஒளி நெறியாகிய ஞானமார்க்கத்தில் செல்லுபவராவர்.

குறிப்புரை :

மிழலையை நினைவார் ஒன்றுபட்ட உணர்வோடு ஞானமார்க்கத்தை நாடுவர் என்கின்றது. ஒருக்கிய - ஒன்றுபட்ட. ஒளிநெறி - சிவஞானமார்க்கம். கரக்கனம் - கைகளாகிய கூட்டம்.

பண் :

பாடல் எண் : 9

அடியவர் குழுமிட வவனியி னிகழ்பவர்
கடிமல ரயனரி கருதரு வகைதழல்
வடிவுரு வியல்பினொ டுலகுக ணிறைதரு
நெடியவன் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

மணம் மிக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரம னும், திருமாலும் நினைதற்கு அரியவகையில் தழல் வடிவோடு எல்லா உலகங்களிலும் நிறைந்தருளிய பெரியோனாகிய சிவபிரானது திருவீழிமிழலையை நினைய வல்லவர்கள், அடியவர் பலர் தம்மைச் சூழ இவ்வுலகில் இனிது வாழ்வர்.

குறிப்புரை :

இந்நகரை நினைவார் அடியார் கூட்டத்தோடு அவனி யில் நிகழ்பவர் என்கின்றது. குழுமிட - கூட. கருதருவகை - தியானிக்க முடியாதவண்ணம். உலகுகள் நிறைதரு நெடியவன் என்றது திருமாலும் நெடியவனாயினும் அவன் நின்ற இடமும் காலமும் நீங்க ஏனைய இடத்தும் எக்காலத்தும் நிறைந்தான் அல்லன்; சிவன் என்றும் எங்கும் பேரொளியாய் நிறைந்தான் என்பது விளக்க வந்தது.

பண் :

பாடல் எண் : 10

மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை யவர்களு மதியிலர்
துன்மதி யமணர்க டொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினையவ லவரே.

பொழிப்புரை :

மருதத்தினது வலிய மலரால் துவர் ஏற்றிய காவி ஆடையை உடுத்த புத்தர்களும் அறிவற்றவர். சமணர்களும் துன்மதியாளர்கள். இவர்கள் இருவராலும் அறிதற்கு அரிய மிக்க புகழினை உடைய நின்மலனாகிய சிவபிரானின் மிழலையை நினைப்பவர்கள் மன்மதன் போன்ற அழகினைப் பெறுவார்கள்.

குறிப்புரை :

புத்தர்கள் மதியிலிகள்; சமணர்களோ துன்மதிகள்; இந்த இருவகையாராலும் தொடர்பரிய புகழுடைய இறைவன் மிழலையை நினையவல்லவர் மன்மதன்போல அழகு பெறுவர் என்கின்றது. மருது அமர் வன்மலர் துவர் உடையவர் - மருதமலரால் ஊட்டிய காவியாடையையுடையவர்கள்.

பண் :

பாடல் எண் : 11

நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
கற்றுவல் லவருல கினிலடி யவரே.

பொழிப்புரை :

முத்துப் போன்றவனாகிய சிவபிரானது திருவீழி மிழலையை ஒப்பற்ற புகலிப்பதியில் வாழும் சதுரப்பாடுகளோடு வேதங்களிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் வல்லவன் ஆகிய ஞானசம்பந்தனது பத்தியால் விளைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பயின்று கற்று வல்லவர் உலகினில் சிறந்த அடியவராய் விளங்குவர்.

குறிப்புரை :

அன்பால் விளைந்த இப்பாடல்கள் பத்தையும் வல்லவர் உலகில் சிறந்த அடியாராவர் என்கின்றது. நித்திலன் - முத்துப் போன்றவன். பத்தியில் வருவன என்பது பிறப்பால் விளைந்தன அன்று; அன்பால் வருவன என்றதாம். அடியவராதலைக்காட்டிலும் சிறந்த பேறு இல்லாமையால் ஒவ்வொரு பாடல்தோறும் ஒவ்வொரு பயன் கூறிவந்த சுவாமிகள் இப்பதிகப் பயனாக அடியராவார் என்றார்கள்; இதனைக் காட்டிலும் சிறந்தபேறு இல்லை என்பதனைத் தெரிவிக்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

கலைமலி யகலல்கு லரிவைத னுருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன்
சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ
இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.

பொழிப்புரை :

மேகலை பொருந்திய அகன்ற அல்குலை உடைய உமையம்மை இடப்பாகமாகப் பொருந்திய திருவுருவினனும், அதனால் ஒரு கூற்றில் நகில் தோன்றும் திருவுருவை உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கருங்கற்களால் இயன்ற மதில்களால் பொதியப்பட்டுள்ள சிவபுரநகரைத் தொழுதால் நம்மை நலியும் வினைகள் இல்லை. இருமையிலும் இடர்கெடும்.

குறிப்புரை :

தனது திருமேனியிலேயே உமையையும் உடையவன்; அதனால் ஒருபாகத்தை முலைவிளங்கும் உருவமுடையவன்; அவனது சிவபுரநகரைத் தொழ வருத்தும்வினை இல்லை; இருமையும் இடர்கெடும் என்கின்றது. கலை - ஆடை, அரிவை - உமாதேவி. நலி வினை இலை இடர் இருமையும் கெடும் எனக் கூட்டுக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

படரொளி சடையினன் விடையினன் மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவ னுறைபதி
திடலிடு புனல்வயல் சிவபுர மடையநம்
இடர்கெடு முயர்கதி பெறுவது திடனே.

பொழிப்புரை :

ஒளி விரிந்த சடையினனும், விடை ஊர்தியனும் அசுரர்களின் மும்மதில்களை விளங்கும் எரி கொள்ளுமாறு செய்தழித்தவனுமாகிய சிவன் உறையும் பதிஆகிய, இடையிடையே திடலைக் கொண்ட நீர் சூழ்ந்த வயல்களை உடைய சிவபுரத்தை அடைந்து தொழுதால் நம் இடர்கெடும். உயர்கதி பெறுவது உறுதி.

குறிப்புரை :

ஒளிபொருந்திய சடையினன்; இடபத்தையுடையவன்; திரிபுரமெரித்த வீரன் உறைபதி சிவபுரம்; அதனையடைய நம் துன்பம் தொலையும்; உயர்கதி பெறுவது உறுதி என்கின்றது. திடல் - மேடு.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

வரைதிரி தரவர வகடழ லெழவரு
நுரைதரு கடல்விட நுகர்பவ னெழில்திகழ்
திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்
உரைதரு மடியவ ருயர்கதி யினரே.

பொழிப்புரை :

மந்தரமலை மத்தாகச் சுழல அதில் கயிறாகச் சுற்றிய வாசுகி என்னும் பாம்பின் வயிற்றிலிருந்து அழலாகத் தோன்றி, நுரையுடன் வெளிப்பட்ட விடம், கடலில் பொருந்த, ஆலகாலம் என்னும் அந்நஞ்சினை உண்டவனுடைய, அழகு விளங்கக் கரையில் மோதும் நீர் நிறைந்த அரிசிலாற்றங்கரையில் விளங்கும் சிவபுரத்தின் பெயரைக் கூறுபவர் உயர் கதிகளைப் பெறுவர்.

குறிப்புரை :

மந்தர மலை சுற்ற, வாசுகியின் உடல் அழலெழ வந்த நுரையோடு கூடிய விடத்தை நுகர்ந்தவனது சிவபுரத்தைப் புகழ்பவர் உயர்கதியினர் என்கின்றது. வரை - மந்தரமலை. வரை திரிதர அரவு அகடு அழல் எழ வரு நுரை தரு கடல் விடம் நுகர்பவன் எனவும், எழில் திகழ் திரைபொரு புனல் அரிசிலது அடை சிவபுரம் எனவும் பிரித்துப் பொருள் கொள்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

துணிவுடை யவர்சுடு பொடியின ருடலடு
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்
தணிவுடை யவர்பயில் சிவபுர மருவிய
மணிமிட றனதடி யிணைதொழு மவரே.

பொழிப்புரை :

அடக்கமுடைய மக்கள் வாழும் சிவபுரத்தில் எழுந்தருளிய நீலமணிபோலும் மிடற்றினை உடைய சிவபிரானுடைய திருவடிகளை வணங்குவோர் துணிபுடையவராவர். திருநீறு பூசும் அடியவர் ஆவர். உடலை வருத்தும் பிணிகளை அடையார். பிறவியும் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

அடங்கிய மனத்து அடியவர்கள் பயில்கின்ற சிவபுரஞ் சேர்ந்த நீலகண்டப் பெருமானது திருவடியைத் தொழுபவர்கள் துணிவுடையர்; நீற்றினர்; பிணியிலர்; பிறவியும் அறப்பெறுவர் என்கின்றது. உடல் அடு பிணி - உடலில் வருத்துகின்ற நோய். விசிறுவர் - வீசுவர். தணிவு - பணிவு. மணி - நீலம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

மறையவன் மதியவன் மலையவ னிலையவன்
நிறையவ னுமையவண் மகிழ்நட நவில்பவன்
இறையவ னிமையவர் பணிகொடு சிவபுரம்
உறைவென வுடையவ னெமையுடை யவனே.

பொழிப்புரை :

தேவர்கள் செய்யும் பணிவிடைகளை ஏற்றுச் சிவ புரத்தைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் எம்மை அடிமையாகக் கொண்டவனுமாகிய சிவபிரான் வேதங்களை அருளியவன். பிறை சூடியவன். கயிலை மலையைத் தனது இடமாகக் கொண்டவன். நிலைபேறு உடையவன். எங்கும் நிறைந்தவன். உமையம்மை கண்டு மகிழும் நடனத்தைப் புரிபவன். எல்லோர்க்கும் தலைவன்.

குறிப்புரை :

சிவபுரம் உறைபவன் எம்மையும் ஆளாக உடையவன் என்கின்றது. நிலை - அழியாமை. உறைவு - உறையும் இடம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்
ததிர்கழ லொலிசெய வருநட நவில்பவன்
எதிர்பவர் புரமெய்த விணையிலி யணைபதி
சதிர்பெறு முளமுடை யவர்சிவ புரமே.

பொழிப்புரை :

முதிர்ந்த சடையின்மீது இளம்பிறை, கங்கை நதி ஆகியவற்றைப் பொருந்த அணிந்து, காலில் அசையும் கழல்கள் ஒலிக்குமாறு அரிய நடனம் புரிபவனும், தன்னை எதிர்த்த அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த ஒப்பற்றவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியதலம், திறமையான மனம் உடைய அடியவர் வாழும் சிவபுரமாகும்.

குறிப்புரை :

முதிர் சடையிலே மதியையும் கங்கையையும் பதியச் செய்து நடம் செய்பவன்; திரிபுரம் எரித்த சிவன்; அவன் உறைபதி சிவபுரம் என்கின்றது. எதிர்பவர் - பகைவர். இணையிலி - ஒப்பற்றவன். சதிர் - சாமர்த்தியம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்
பொடிபடு முழையதள் பொலிதிரு வுருவினன்
செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்
அடைதரு மடியவ ரருவினை யிலரே.

பொழிப்புரை :

அழகிய வடிவினைக் கொண்ட மலைமகள் நீர் மகளாகிய கங்கை ஆகியோருடன் புள்ளி பொருந்திய மானினது தோல் விளங்கும் அழகிய உருவத்தைக் கொண்டவனும், தீ நாற்றம் வீசும் மண்டையோட்டில் பிச்சையை ஏற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும் சிவபுரத்தை அடையும் அடியவர் நீங்குதற்கரிய வினைகள் இலராவர்.

குறிப்புரை :

மலைமகளும் அலைமகளும் உடனுறையும் உருவுடையன்; பலிக்குத்திரிபவன் உறைபதி சிவபுரம்; அதனையடைபவர் வினையிலராவர் என்கின்றது. சலமகள் - கங்கை. உழை அதள் - மான் தோல். செடி படு பலி - முடைநாற்றம் கமழும் பிச்சை. செடி - ஆகு பெயராய்த் தலைஓட்டைக் குறித்தது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

கரமிரு பதுமுடி யொருபது முடையவன்
உரநெரி தரவரை யடர்வுசெய் தவனுறை
பரனென வடியவர் பணிதரு சிவபுர
நகரது புகுதனம் முயர்கதி யதுவே.

பொழிப்புரை :

இருபது கைகளையும், பத்துத் தலைகளையும் உடையவனாகிய இராவணனின் மார்பு நெரியுமாறு கயிலை மலையால் அடர்த்தருளிய சிவபிரான் உறைவதும், மேலான பரம் பொருள் இவனேயாவான் என அடியவர் வழிபாடு செய்வதும் ஆகிய சிவ புரத்தை அடைதல் நமக்கு உயர்கதியைத் தரும்.

குறிப்புரை :

சிவபுரம் புகுதலே நமக்கு உயர்கதியாம் என்கின்றது. உரம் - மார்பு. அடர்வு - நெருக்குதல். சிவபுரநகர் அது புகுதல் நம் உயர் கதியதுவே எனப்பிரிக்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

அன்றிய லுருவுகொ ளரியய னெனுமவர்
சென்றள விடலரி யவனுறை சிவபுரம்
என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்
ஒன்றிலர் புகழொடு முடையரிவ் வுலகே.

பொழிப்புரை :

தங்கள் செயலுக்கு மாறுபட்ட தன்மையொடு கூடிய பன்றி அன்னம் ஆகிய வடிவங்களைக் கொண்ட திருமால் பிரமன் ஆகியோர் சென்று அளவிடுதற்கு அரியவனாய் ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் சிவபுரம் என்று இருபொழுதுகளிலும் நினைத்து வழிபடும் அடியவர் ஒரு துன்பமும் இலராவர். இவ்வுலகில் புகழோடும் பொருந்தி வாழ்வர்.

குறிப்புரை :

சிவபுரத்தை இருவேளையிலும் வழிபடுவார் துன்பஞ் சேரார்; இவ்வுலகிற் புகழொடும் பொருந்துவர் என்கின்றது. அன்று இயல் உருவு - கோபித்த இயல்பினையுடைய வடிவம், சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம் எனப்பிரிக்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

புத்தரொ டமணர்க ளறவுரை புறவுரை
வித்தக மொழிகில விடையுடை யடிகடம்
இத்தவ முயல்வுறி லிறைவன சிவபுரம்
மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.

பொழிப்புரை :

புத்தர்களும் சமணர்களும் கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும், அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை. அவற்றை விடுத்து விடையூர்தியை உடைய தலைவனாகிய சிவபிரானை நோக்கிச் செய்யும் இத்தவத்தைச் செய்யும் முயற்சியை மேற்கொள்வீராயின் அவ்விறைவனது சிவபுரத்தைச் சென்றடைந்து வழிபடுதல் சிறந்த குணங்களை உங்கட்குத்தரும்.

குறிப்புரை :

புறச்சமயிகளுடைய புறவுரைகள் வித்தகம் ஒழியா; ஆதலால் சிவபுரத்தைத் தொழுதல் உங்கட்குச் சிறந்த குணமாம் என்கின்றது. அவர்களது அறவுரையாகத் தோன்றுவனயாவும் புறம்பான உரைகளாம்; அதுவேயும் அன்றிச் சதுரப்பாடு உடையனவும் அல்ல. மெய்த்தக - உண்மையாக.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்
பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை
எந்தையை யுரைசெய்த விசைமொழி பவர்வினை
சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.

பொழிப்புரை :

அறிவுடையவர்கள் ஓதும் வேதங்களை ஓதி உணர்ந்த புகலி மன்னனாகிய ஞானசம்பந்தன் தமிழைக் கொண்டு சிவபுரநகரில் உறையும் எந்தையைப் போற்றி உரைசெய்த இவ்விசை மாலையை ஓதி வழிபடுபவர் வினைகள் முற்பட்டு நீங்க உயர்கதி பெறுவார்கள்.

குறிப்புரை :

திருஞானசம்பந்தப் பெருமான் சிவபுரநகருறை எந்தையைச் சொன்ன இப்பதிகத்தை இசையோடு மொழிபவர்கள் வினையைக் கெடுத்து உயர்கதி அடைவார்கள் என்கின்றது. புந்தியர் - புத்தியையுடையவர்கள். சிந்தி - கெடுத்து.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்ற வும்பரப்
பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்
சேர்வார்நாணா ணீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்
சந்தித்தே யிந்தப்பார் சனங்கணின்று தங்கணாற்
றாமேகாணா வாழ்வாரத் தகவுசெய்த வனதிடங்
கந்தத்தா லெண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக்
காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

வினைவயத்தால் மண்ணுலகம் வந்து எல்லா இடங்களிலும் பொருந்தி அவ்விடங்களே தமக்கு இருப்பிடமாய் வாழும் தேவர்களும், மற்றவர்களாகிய கானகங்களில் வாழும் முனிவர்களும், மனத்தால் சிந்தித்து வழிபட்டு உய்தி பெறுமாறு, மலையரையன் மகளாகிய பார்வதி தேவியாரோடு சேர்ந்தவராய், நாளும் நாளும் நீண்டுயர்ந்த கயிலைமலையில் விளங்கும் திருவோலக்கச் சிறப்புக்கள் எல்லாவற்றையும் இந்த உலகில் வாழும் மக்கள் தங்கள் கண்களால் தாமே கண்டு வாழ்பவராகப் பெருங்கருணையோடு காட்சி நல்குபவனது இடம் எட்டுத் திசைகளிலும் மணம் கமழ்ந்து விளங்கும் மலர்களோடு கூடிய சந்தன மரக்காடுகள் சிறந்து வளர்ந்து செழிக்கும் கழுமலநகராகும்.

குறிப்புரை :

தேவர்களும் முனிவர்களும் தியானிக்க உமையோடு பொருந்தி, கைலையில் எழுந்தருளியிருக்கின்ற காட்சியை இந்த மண்ணுலகத்தவர்களும் தம் கண்ணாலே கண்டு வாழ அருளியவனது இடம் கழுமலவளநகர் என்கின்றது. பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் என்றது ஆணவமலக் கட்டினால் வந்து எவ்விடத்தும் உறைகின்ற தேவர்கள் வினையால் பந்திக்கப்பெற்ற இந்திரன் பிரமன் முதலியோர் கழுமலம் வந்து பூசித்தமைபோல்வன. அப்பாலே சேர்வாய் ஏனோர் - அப்பாலும் அடிசேர்ந்தார்களாய சிவஞானிகள். புறம்பான நெறிகளிற் சேர்ந்த பிறர் என்றுமாம். கான் பயில் கண முனிவர்கள் - காட்டுறை வாழ்க்கையையுடைய கூட்டமான முனிவர்கள். சிலம்பு - மலை. ஈண்டு இமயம். நாள்நாள் நீள் கயிலைத் திகழ்தரு பரிசது எலாம் - நாள்தோறும் திருக்கயிலையில் வீற்றிருக்கும் திருவோலக்கச் சிறப்பெல்லாவற்றையும். பார் - பூமி. தாமே காணா - தாங்களே கண்டு; என்றது அவ்வளவு எளிமை காட்டி நின்றது. கந்தம் - மணம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்தவெண்பொடிப்
பீடார்நீடார் மாடாரும் பிறைநுத லரிவையொடும்
உச்சத்தா னச்சிப்போ றொடர்ந்தடர்ந்த வெங்கணே
றூராவூரா நீள்வீதிப் பயில்வொடு மொலிசெயிசை
வச்சத்தா னச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்
கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங்
காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

பிச்சை ஏற்பதை விரும்பி நீரில் குழைத்தணிந்த வெண்பொடியினராய்ப் பெருமை பொருந்தியவரும் புகழால் விரிந்தவருமாய், அருகில் விளங்கும் பிறை போன்ற நெற்றியினளாகிய உமையம்மையோடு உச்சிப்போதினை விரும்பித் தன்னை எதிர்ப்பவரைத் தொடர்ந்து கொல்லும் தறுகண்மையை உடைய விடையேற்றின் மீதமர்ந்து, ஊர்ந்து ஊர்ந்து நீண்ட தெருக்களில் விருப்பத்தோடு பாடுவதால், நச்சுதலுக்குரியனவும் முத்துவடங்கள் அணிந்தனவுமாகிய கொங்கைகளை உடைய மகளிர் அவ்விசையைக் கேட்டு வந்து தமக்கு முன்னே விரக மயக்கம் கொள்ளுமாறு வசீகரிக்கும் வன்மை பொருந்திய சிவபிரானது இடம். மேலைக் காற்றினால் அல்லது ஒற்றுமையோடு பூக்களைக் கலந்து விளங்கும் வண்டினங்களோடு கருமை நிறம் பொருந்திய மேகங்கள் தவழும் நீண்ட சோலைகளை உடைய கழுமல வளநகராகும்.

குறிப்புரை :

பிச்சையை விரும்பி, நீரிற்குழைத்த நீற்றையணிந்து. உமாதேவியோடும் உச்சிப்போதில் விடையேறி, வீதியில் பாடிச்செல்லும் தமது இசையைக் கேட்ட மகளிர் மால் கொள்ளச் செய்பவனது இடம் கழுமலம் என்கின்றது. பீடு - பெருமை. நீடு ஆர் - புகழான் நீடுதலைப் பொருந்தும். மாடு ஆரும் - இடப்பக்கத்து இருக்கும். உச்சத்தான் நச்சி - உச்சிப் போதினனாக விரும்பி. போல்: அசை. ஊரா - ஊர்ந்து. ஊர் ஆம் நீள் வீதி - ஊரின் கண்ணதாகிய நீண்ட திரு வீதியில். ஒலிசெய் இசை வச்சத்தால் - பாடலை வைத்ததால், மங்கைமார் - முனிபன்னியர். வாரா - வந்து. மாலாகும் - மயக்கமுறும் வண்ணம். வசிவலஅவன் - வசீகரிக்கும் வன்மையுடையவன். கார் ஆர் கார் ஆர் - கருமை நிறம் பொருந்திய மேகங்கள் படிந்த.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ
டங்கைச்சேர் வின்றிக்கே யடைந்துடைந்த வெண்டலைப்
பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

திங்கள், தும்பை, விளங்கித் தோன்றும் ஊமத்த மலர் ஆகியவற்றைச் சேர்த்துச் செறிந்த நீராகிய கங்கை நதி, அழகிய கையில் விளங்குவதையன்றி உடைந்த கபாலம், முடிகாண மயக்க உணர்வுடையனாய் மேலே பறந்து சென்ற பிரமனாகிய அன்னத்தின் இறகு, நஞ்சு பொங்கும் பாம்பு, கொன்றை மாலை ஆகியவற்றை அணிந்து, வளைத்துக் கட்டிய சடையை உடைய சிவபிரானது இடம்; கங்கைக்கு நிகரான அழகோடு கலந்து வந்த பொன்னி நதியின் வாய்க்கால்கள் பாய்ந்து வளஞ் சேர்க்கும் கழுமல வளநகராகும்.

குறிப்புரை :

பிறை, தும்பை, ஊமத்தை இவைகள் சேர்ந்து சேர்ந்து, தேவகங்கையோடு, திருக்கரத்திற்சேராதே திருமுடியிற் சூடப்பெற்ற உடைந்த கபாலத்தின்பக்கல், அன்னத்தின் இறகையும், பாம்பையும், கொன்றை மாலையையும் அணிந்த புரிசடைப் பெருமானிடம் கழுமலம் என்கின்றது. திங்கட்கு தும்பைக்கு என்ற நான்கன் உருபுகள் ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தன. திங்களிலும் தும்பையிலும் ஊமத்தத்திலும் சேர்ந்து சேர்ந்து புனலாகப் பொருந்திய சுரநதி எனப் பொருள் முடிபு காண்க. மேலே மால் ஏயப் படர்வுறும் அவன் இறகும் - மேலே மயக்கம் பொருந்தப் பறந்து செல்லும் மகாசூரனுடைய இறகும். புயங்கமங்கள் - பாம்புகள். தார் - மாலை. கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னி - கங்கைக்குப் பொருந்திய புனிதமாகிய அழகைப் பொருந்திக் கலந்து ஒழுகும் காவிரி. கால் - வாய்க்கால்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத்
தாறேவேறே வானாள்வா ரவரவ ரிடமதெலாம்
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரு
மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த விஞ்சிசூழ்
மூவாமூதூர் மூதூரா முனிவுசெய்த வனதிடங்
கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

இம்மண்ணுலகில் இருந்துகொண்டே எண் திசைகளையும் உள்ளடக்கிய அனைத்துலகங்களுக்கும் சென்று வெற்றி கொண்டு வான்உலகை ஆளும் தேவர்களையும் நெருங்கிச் சென்று வெற்றிப்போர் செய்து, அத்தேவர்களாலும் எதிர்க்க இயலாதவர்களாய் விளங்கிய அவுணர்களின் வலிமை மிக்க முப்புரங்களைத் தன் நெற்றிவிழியால் வெந்து முடியுமாறு செய்து அவ்இஞ்சி சூழ்ந்த அழியாத பழமையான மூன்று ஊர்களும் முதுமை உடையவாய் அழியுமாறு சினந்த சிவபிரானது இடம், செஞ்சொற்களைக் கண்டு தேர்ந்து தொகுத்த அழகிய மந்திரங்களை மூச்சுக் காற்றாகக் கொண்டு உருவேற்றி வருவோர் வாழும் கழுமலமாகிய வளநகராகும்.

குறிப்புரை :

இம்மண்ணுலகிலிருந்து, வானாள்வார் இடம் எல்லாம் போய்ச் சண்டைசெய்த தேவர்களும் மாறு ஏற்றுப் பொருதலாகாத திரிபுராதிகள் மேவிய முப்புரம் எரிய நெற்றிக் கண்ணால் எரித்து, மூதூர் மூதூராகா வண்ணம் முடிவு செய்தவன் இடம் கழுமலம் என்கின்றது. அண்டத்தால் எண்திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே - இவ்வண்டத்தில் எட்டுத் திக்கும் பொருந்தி அடங்கிய பூமியின் வழியாக. வேறேவான் ஆள்வாரது இடம் எலாம் - தனித்த தேவர்களிடம் எல்லாவற்றையும். மண்டிப்போய் - நெருங்கிச்சென்று. உம்பரும் மாறு ஏலாதார் - தேவர்களாலும் எதிர்க்க இயலாத அசுரர்கள். வலிமிகுபுரம் - வரபலமிக்க முப்புரம். முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த - நெற்றியால் வெந்து அழிந்து இடிந்த. முண்டம் ஆகுபெயராக நெற்றிக்கண்ணையுணர்த்தியது. இஞ்சி - மதிள். மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் - மூப்பையடையாத தொன்மையான நகர் இன்றும் தொன்மையானதாகா வண்ணம் கோபித்தவனது இடம். செஞ்சொல் - நேரே பொருள் பயக்கும் சொல்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்
சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்
போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கடிறஞ்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத்
தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங்
கைக்கப்பேர் யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
காடேயோடா வூரேசேர் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளுக்கும் காவலர்களாகிய தெய்வங்கள் அங்கங்கே இருந்து காவல் செய்து விளங்கும் இம் மண்ணுலகைச் சீறி அழித்தற்கு வந்த வலிய போர் வல்ல தாருகன் உடலை அவன் எதிரிலேயே புகுந்து வெட்டி வீழ்த்தி, புதைந்தெழுந்து வந்த ஊழித் தீப் போலத் தோன்றி மண் நீர் தீ கால் விண் ஆகிய ஐம்பூத வடிவாய் விளங்கும் இவ்வுலகில் வாழும் உயிர்களை அழிக்கச் சிவந்த கோபத்தோடு சொக்க நிருத்தத்தில் நடனமாடி வந்த காளியின் கோபத்தை அவளோடு எதிர் நடனம் ஆடி வென்று பெரிதான இவ்வுலக உயிர்களின் துயரைக் களைந்தவன் ஆகிய சிவபிரானது இடம் பலரும் வெறுக்கக் கனன்று வந்த பேரூழிக் காலத்தும் செறிந்த சோலைகளாகிய காடுகளோடு அழியாத ஊராக விளங்கும் கழுமல வளநகராகும்.

குறிப்புரை :

திக்குப்பாலகர்கள் அங்கங்கே விளங்க, இவ்வுலகத்துச் சீறி வந்த தாரகன் உடலை அவனெதிரிலேயே வெட்டி, விளைந்த ஊழித்தீயைப் போன்ற காளியின் கோபமானது ஐம்பூதச் சேர்க்கையாலான உலகத்துற்ற உயிர்களுக்குப் பொருந்தாதபடி உலகத்துயரைக் களைபவனது இடம் கழுமலநகர் என்கின்றது. திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்திலங்கு மண்டலம் - திக்குப் பாலகர்கள் அங்கங்கே அத்தன்மையோடு விளங்குகின்ற உலகம். சீறு ஆர் - கோபித்தலைப் பொருந்திய. சீறு ஆர் முதலியவற்றைத் தனித்தனி தாரகனோடு ஒட்டுக. வீறு - தனித்திருத்தல். சண்டத்தீப் போலத் தொடர்ந்த மங்கையினது எனக்கூட்டுக. உயிர்கள் திறம் ஏயாமே துயர்களைபவன் என இயைக்க. சொக்கத்தே: சொக்கம் என்ற நிருத்தம். நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை - சொக்க நிருத்தத்தில் தோற்றுத் தொடர்ந்த காளி. செம்கதத்தோடு ஏயாமே - சிவந்த கோபத்தோடு பொருந்தாதபடி. கைக்க - வெறுக்க. பேர்யுக்கத்தே கனன்றும் - பெரிய ஊழித்தீயில் கனன்றும். மிண்டு தண்டலைக் காடே ஓடா - அழியாது மிண்டிய குளிர்ந்த காடுகள் அகலாத. இது நெருப்பூழியிலும் நிலைத்தநகரம் என்பதறிவித்தது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்
சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைச்சேர் முற்றற்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக்
கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகவிறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய்த வனதிடங்
கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

சலந்தரன், திரிபுரத்தசுரர் முதலானவர்களைக் கொன்று வெற்றி பெற்று விளங்கும் வலிமை பொருந்திய ஆண் யானை வடிவு கொண்ட தன்னைச் சேர்தற் பொருட்டு வரும் நீண்ட மலர்மாலை அணிந்த உமையம்மை பெண்யானை வடிவு கொண்டு வந்து கூட முற்றிய ஒரு கொம்பையும் நீண்ட கையையும் மூன்று கண்களையும், இடைவிடாது மிகுந்து பொழியும் மதநீரையும் புள்ளிகளோடு கூடிய முகத்தையும் உடைய விநாயகனைப் பெற்றெடுத்து இவ்வுலகில் வாழும் மக்கட்குப் பெரிய துன்பங்களும் நோய்களும் வந்து பொருந்தாதவாறு செய்து காத்தருளிய சிவபிரானது இடம், அறுபத்து நான்கு கலைகளையும் முற்றக் கற்றுக் கரைகண்டு அவற்றின் வழி ஒழுகுவோர் சேர்ந்துறைவதும், அவ்வாறு ஒழுகாதார் அடைய முடியாததுமாகிய கழுமல வளநகராகும்.

குறிப்புரை :

உமாதேவி பெண்யானையின் வடிவாய், அசுரர் களைக் கொன்று வெற்றி சேர்ந்த ஆண்யானையினது தோள்களைச் சேர்ந்து ஒற்றைக் கொம்புடைய யானைமுகக் கடவுளைப் பெற்று இவ்வுலகம் துன்பம் எய்தாவகை பிரிவு செய்தவனது இடம் கழுமலவள நகர் என்கின்றது. செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்த தும்பி - சலந்தரன், திரிபுராதிகள் முதலிய அசுரர்களைக் கொன்று வெற்றியடைந்து விளங்கிய ஆண்யானையினது. மொய்ம்புறும் சேரே வாரா - தோளைப் பொருந்தும் புணர்ச்சியில் வந்து, நீள் கோதைத் தெரி யிழை - நீண்ட மாலையணிந்த உமாதேவியார். பிடியது வாய் - பெண்யானையின் வடிவாய். ஒற்றைச்சேர் முற்றல் கொம்புடைத் தடக்கை - ஒற்றையாகச் சேர்ந்த முற்றிய கொம்பினையுடைய துதிக்கையையும், மிக்கு ஓவாதேபாய் மாதானத்து உறு புகர் முக இறையைப் பெற்றிட்டு - மிகுந்து இடைவிடாது பாய்கின்ற பெரிய மதநீரோடு கூடிய யானைமுகக்கடவுளைப் பெற்று. இப்பார் பெருத்து மிக்க துக்கமும் - இவ்வுலகம் மிகப் பெரிய துக்கத்தையும். பேரா நோய் தாம் ஏயாமை - நீங்காத நோயையும் பொருந்தாதபடி. எட்டெட்டுக் கலைத்துறை கரை செலக் கற்றிட்டு - அறுபத்துநான்கு கலைகளையும் முடிவுபோகக் கற்று. காணாதார் - கரை காணாதார். சேரா - அடையாத.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

பத்திப்பேர் வித்திட்டே பரந்தவைம் புலன்கள்வாய்ப் பாலேபோகா
மேகாவாப் பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமு மொருநெறியாய்ச்
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவ னுறையுமிடங்
கத்திட்டோர் சட்டங்கங் கலந்திலங்கு நற்பொருள்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

அன்பாகிய விதையை ஊன்றி, பரந்துபட்ட சுவை முதலிய ஐம்புலன்கள் வழி ஒழுகாது தம்மைக் காத்துக் காமம் முதலிய பகைகளைக் கடிந்து முத்திக்கு இடையூறாகும் முக்குணங்களின்வழி ஒழுகாது அந்தக்கரணங்கள் நான்கையும் ஒரு நெறிப்படுத்திச் சிந்தனையில் செலுத்தி விளங்கும், மெய்ப்பரம்பொருளாகிய தன்னையே எண்ணுபவர்களைத் தானாகச் செய்யும் சிவபெருமான் உறையும் இடம், ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்தோர் தம்மோடு கலந்து விளங்கும் சிவபரம் பொருளின் திருவடிகளை இடைவிடாது தியானித்து வாழும் கழுமல வளநகராகும்.

குறிப்புரை :

அன்பாகிற விதையை இட்டு, புலன்வழி பொருந்தாது, பகையாறையும் கடிந்து, முத்திக்கு இடையூறாகிய சாத்விக இராஜஸ தாமஸங்களாகிய மூன்று குணங்கள் மூடாதபடி அந்தக்கரணம் ஒரு நெறிப்பட சிந்திக்க, மெய்ப்பொருளையே தியானிக்கின்ற சிவஞானிகளைச் சிவமாகவே செய்யும் சிவன் உறையும் இடம் கழுமலவளநகர் என்கின்றது. பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமேகாவா - எங்கும் பரவியுள்ள சுவை முதலாகிய ஐம்புலன்களிடம் சென்று பற்றாதபடி காத்து, பகை அறும்வகை நினையா - காமமாதிய உட்பகை ஆறையும் நீங்கும்வகை நினைத்து. முத்திக்கே விக்கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய்மூடாவூடா - முத்திக்கு இடையூறாக முடிக்கும் முக்குணங்களின் வழியை மூடிப்பிணங்கி. நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய்ச் சித்திக்கே உய்த்திட்டு - மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக் கரணங்கள் நான்கையும் ஒருநெறிப்படுத்திச் சிந்தனையில் செலுத்தி. திகழ்ந்த மெய்ப்பொருள் சேர்வார் - விளங்கிய சிவபரம்பொருளைத் தியானிப்பவர்கள். தாமே தானாகச்செயுமவன் - அவர்களனைவரையும் சிவமாகச் செய்யும் இறைவன். சட்டங்கம் கத்திட்டோர் கலந்திலங்கும் காலே ஓவாதார் - ஆறு வேதாங்கங்களையும் ஓதியுணர்ந்தோர்கள் ஒன்றி விளங்கும் சிவமாய நற்பொருளின் திருவடியை இடைவிடாது தியானிப்பவர்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

செம்பைச்சே ரிஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற்
சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன்
இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற்
பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விர லவணிறுவிட்
டம்பொற்பூண் வென்றித்தோ ளழிந்துவந்த னஞ்செய்தாற்
காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்
கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக்
காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

செம்பினால் இயன்ற மதில்களால் சூழப்பெற்றுச் செறிந்து விளங்குவதும், பசுமையான பொழில்கள் சேர்ந்ததும், நீண்ட கடல்களின் அலைகளால் மோதப் பெறுவதுமாகிய இலங்காபுரி நகருக்கு இறைவனாகிய இராவணன், இவ்வுலக மக்கட்குத் துன்பங்கள் செய்து வாழ்ந்ததோடு சிவபிரான் உறையும் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டபோது அழகிய மலர் போன்ற ஓர் திருவடி விரல் ஒன்றை ஊன்றி அழகிய பொன்னணிகலன்கள் பூண்ட அவனது வெற்றி நிறைந்த தோள்வலிமையை அழித்து அவன் பிழை உணர்ந்து வந்தனம் செய்த அளவில் அவனுக்கு அரிய கூரிய வாளையும் நீண்ட வாழ்நாளையும் அப்பொழுதே அருள் புரிந்தருளிய சிவபெருமானது இடம்; கம்பங்களில் கட்டிய யானைகளின் வலியகன்னங்கள் முதலியன பொழிந்த மும்மதங்களால் நிலம் கரிய சேறாகும் வீதிகளை உடைய கழுமலநகராகும்.

குறிப்புரை :

செம்பினால் இயன்ற மதில் சூழந்த, மிகச் செறிவாக விளங்கும் பசிய பொழில் சேர்ந்து வரும் கடற்றிரைவந்து மோதும் நகருக்குத் தலைவனாகிய இராவணன், இவ்வுலக மக்களுக்குத் துன்பம் விளைத்ததோடுமட்டுமின்றி. சிவனுறையும் கைலையையும் எடுத்தலைச்செய்ய, மலர்போன்ற திருவடியின் விரல் ஒன்றால் ஊன்றி, பொன்னணிகள் பூண்டதோளை நெரியச்செய்து, அவன் வணங்க வாளும் வாழ்நாளும் அருள்செய்தவனது இடம் கழுமலம் என்கின்றது. செம்பைச் சேர் இஞ்சி - செப்புத் தகடு வேய்ந்த முகட்டினையுடைய மதில். வாரிசம் - கடல். இம்பர் - இவ்வுலகத்தவர். ஏர் ஆர் - எழுச்சியை அடையச் செய்து; அதாவது எடுக்க என்பதாகும். வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவன் எனப் பிரிக்க. கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மதக் கார் ஆர் சேறு ஆர் மாவீதி - கம்பத்திற்கட்டிய யானையினது திண்ணிய கன்னத்தினின்று சொரிந்த மும்மதத்தாலாகிய கரிய சேறு பொருந்திய பெரியவீதி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப்
பானாமாறா னாமேயப் பறவையி னுருவுகொள
ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ
னோதானோதா னஃதுணரா துருவின தடிமுடியுஞ்
சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின்
றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங்
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

திருமால் பன்றி உருவம் எடுத்து இவ்வுலகைப் பிளந்து சென்று பாதாளம்வரை தேடியும், நீரில் தோன்றிய தாமரை மலரில் உறையும் நான்முகன் வேதங்களை ஓதுபவனாக இருந்தும் அதன் உண்மைப் பொருளை உணராது அன்னப்பறவை வடிவம் எடுத்து வானவெளியில் பறந்து சென்று தேடியும் தம் எதிரே தோன்றிய வடிவினது அடிமுடிகளைக் காணாது அயர்த்துச் சென்று வழிபட அவர்களின் பசுமையான கண்களுக்கு அழகிய நீலகண்டத்தோடு தனது வல்லமையால் வேறோர் வடிவம் தெரியச் செய்தவனது இடம் ஆன் கன்றுகள் முன்றிலில் நிறைந்து கலந்து நின்று இல்லத்தை நிறைக்கவும் வாய்க்கால்கள் வந்து மேல் ஏறிப்பாயவும் வளத்தால் நிறைந்து விளங்கும் கழுமல வளநகராகும்.

குறிப்புரை :

திருமால் பன்றியுருவெடுத்துப் பூமியைத் தோண்டியும், பங்கயத்தவன் அன்னமாய்ப் பறந்தும் அடிமுடி தேடியும் அறியாதே வணங்க, அக்கினிப்பிழம்பாகிய வேறோர் வடிவம் காட்டிய இறைவனிடம் கழுமலம் என்கின்றது. மால் தான் பன்றிக்கோலம் கொண்டு, இப்படித்தடம் பயின்று இடப்பான் ஆம் அம்புசேர் உயர்ந்த பங்கயத்தவனோ தான் மேய பறவையின் உருவுகொள ஒன்றிட்டு உருவினது அடிமுடியும் அஃது உணராது சென்றிட்டே வந்திப்ப, திருக்களம்கொள் பைங்கண் நின்று ஏசால், வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனிடம் எனப்பிரித்துக் கூட்டிப் பொருள்கொள்க. படித்தடம் - பூமி. இடப்பானாம் - தோண்டுவானாம். மால் - திருமால். தான்மேய பறவை - தான் ஊர்தியாக விரும்பியபறவை. அம்பு - நீர். தான் ஓதான் - தான் வேதங்களை ஓதியவனாக இருந்தும் அடிமுடியும் உணராது எனக்கூட்டுக. ஏசால் - வல்லமையால். ஆகாரம் - வடிவம். முன்றிற்கே கன்றுக்கே கலந்து இல்லம் நிறைக்கவும் - முன்றிலில் கன்று கலந்து வீட்டை வளத்தால் நிறைக்கவும், காலே வாரா மேலே பாய் - வாய்க்கால் வந்து மேலேறிப் பாயும் கழுமலம் என்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
தாமேபேணா தேநாளுஞ் சமணொடு உழல்பவரும்
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

தட்டைக் கையில்ஏந்தி வளைந்த கையில் தடுக்கை இடுக்கி நின்று உண்டு ஆடைகளால் தம்மைப் பேணாது நாள்தோறும் வருந்தித் திரியும் சமணர்களும், தம்விருப்பப்படி கேட்பவர்க்குத் தெளிவு ஏற்படாதவாறு பொருள் இது அன்று அதுதான் என்று வாய்க்கு வந்தபடி காரணம் கூறுபவரும், இலைகள் நெருங்கிய மருதமரத்தின் பூவை அரைத்துப் பின்புறத்தேப் பூசிச் சாயமூட்டிய ஆடையைத் தம் உடலின் பின்பாகத்தே சுற்றிக்கொண்டு உடலை மறைப்போரும் ஆகிய புத்தர்களும் போல்பவர் கண்டறியாதவாறு சென்று எழுந்தருளியுள்ள சிவபிரானது இடம் வெல்லக்கட்டிகளைத்தரும் இனிய கரும்பை வெட்டியதால் அக்கரும்பு தந்த இனியசாறு வாய்க்கால் வழியே வந்து மேல் ஏறிப்பாயும் வளமுடைய கழுமலவளநகராகும்.

குறிப்புரை :

சமணரும் புத்தரும் போல்வார் தம்மை அறியா வண்ணம் மறைப்பித்த இறைவனிடம் இது என்கின்றது. தட்டு இட்டே, முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவரும் - மண்டையை ஏந்தி கைமுட்டியில் தடுக்கை இடுக்கிக்கொண்டு, நின்றுகொண்டு உண்டு, தாம் ஒன்றையும் பேணாதவர்கள்போல நாளும் சமண் கொள்கையோடு சுற்றுபவர்களும், இட்டத்தால் அத்தம் தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் - விருப்பப்படி பொருள் இது அன்று அதுதான் என்று கேட்பவர்க்குப் பொருந்தாமல் வாயில் வந்தபடி காரணம் சொல்லும் (புத்தர்). இலை மலி மருதம்பூப் புட்டத்தே அட்டு இட்டு புதைக்கும் மெய்கொள் புத்தர் - மருதமரப் பூவை அரைத்து பின்பக்கத்துப் பூசி உடலை மறைக்கும் புத்தர்கள். ஓராமே - ஆராயாமல். புணர்வு - சூழ்ச்சி. கால் வெட்டி கட்டித் தீங்கரும்பு தந்த பைம்புனல் காலேவாரா மேலேயாய் - அடியை வெட்டிக் கட்டி இனிய கரும்புகள் தந்த சுவைநீர் கால்வழி வந்து மேலேறிப்பாயும் நகர் என்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

கஞ்சத்தே னுண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை
தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
எஞ்சத்தேய் வின்றிக்கே யிமைத்திசைத்த மைத்தகொண்
டேழேயேழே நாலேமூன் றியலிசை யிசையியல்பா
வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதன் மடவரலே.

பொழிப்புரை :

தாமரை மலரிலுள்ள தேனைக் குடித்துக்களித்த வண்டுகள் சண்பக மரச்சோலைகளில் உள்ள தேன் வண்டுகளோடு போரிடும் கழுமல வளநகர் இறைவனைத் தஞ்சமாகச் சார்ந்துள்ள சண்பைநகர்த் தலைவனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் குறைவின்றிப் பாடியமைத்த தேனுக்கு நிகரான இப்பதிகப் பாடல்களை நல்ல கலைகளில் துறைபோய்த் தமக்குத் தாமே நிகராய் இருபத்தொரு பண்முறையினால் இயல்பாக வஞ்சனையின்றி மனம் பொருந்தப்பாடுபவர்களின் மார்பினில் தேவர்களால் போற்றப் பெறும் சிறப்புமிக்க பிறை போன்ற நெற்றியினை உடைய திருமகள் சேர்வாள்.

குறிப்புரை :

கழுமல நகரிறையைத் திருஞானசம்பந்தன் சொன்ன மொழிகளை இசையோடு குறையின்றி மனங்கொளப் பயிற்றுவோர் மார்பைத்திருமகள் சேர்வாள் எனப் பயன்கூறியது. கஞ்சத்தேன் உண்டிட்டு - தாமரையிலுள்ள தேனைக்குடித்து. சண்பகக் கானே தேனே போராரும் - சண்பகக் காட்டிலுள்ள வண்டோடு பொரும். தஞ்சை சார் - அடைக்கலமாகச் சாருகின்ற. தேன் நேர் ஆர் தமிழ் விரகன மொழிகள் - தேனுக்கு ஒப்பான தமிழ் விரகருடைய சொற்கள். எஞ்ச தேய்வு இன்றி - குறைவின்றி. ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா - இருபத்தொரு பண் முறையால். வானோர் சீர்மதி நுதல் மடவரல் - தேவர்களது சிறப்போடுகூடிய மதிபோன்ற நெற்றியினையுடைய திருமகள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.

பொழிப்புரை :

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே விளக்கமாக இருத்தலால் பொழிப்புரை எழுதப்பெறவில்லை.

குறிப்புரை :

ஞானாகாசமாகிய பராசத்தியான பரிபூரணத்தை மிகுதியாக வியந்து அந்தப் பராசத்திக்கு அதீதமாகிய சுகமே வடிவாய் முதல் நடு இறுதி காணப்படாத வஸ்து எந்தப் பெரியோன். மேல்நிலமாகிய ஆகாசத்தின்கண்ணேயோடா நின்ற கங்காதேவியை விரும்பித் திருமுடியிலே வைத்தவன், எம்மை நீங்காத நிலைமையையுடைய எமது உயிர். பிரமரூபத்திலே எண்ணப்பட்ட என்னை முத்தியிலே விடுகைக்கு அமையாத விருப்பமுள்ளவனாய் என்னை ஒக்க வந்தவன். பிரமபுரம் என்கின்ற சீகாழிப் பதியிலே வீற்றிராநின்ற கர்த்தாவானவன் என்னுடைய சுவாமி. பெரியோனும் எனக்கு உயிரானவனும் என்னையொக்கவந்தவனும் சீகாழிப்பதியில் வீற்றிருக்கும் கடவுள் எனக் கூட்டிப் பொருள் கொள்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.

பொழிப்புரை :

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே விளக்கமாக இருத்தலால் பொழிப்புரை எழுதப்பெறவில்லை.

குறிப்புரை :

அஷ்டகுல பர்வதங்களும் ஒலிசிறந்த தரிசு மணியாகவும், அகிலலோகங்களையும் உள்ளே அகப்படுத்தும் தன்மையவாயும், பெரிதாயும் உள்ள திருச்சிலம்பினைத் தரித்துள்ளவன். நூபுரம் எனற்பாலது நுபுரம் எனக் குறுகிநின்றது. விஷ்ணுவின் புறனுரையாகிய சிவதூஷணத்தை அரச மரத்தினீழலில் அவனுடன் இருந்து விரும்பியுள்ள முப்புரங்களைச் சங்கரித்துள்ளவன். அண்ணி எனற் பாலது அணி என இடைக்குறையாய் நின்றது. தேவர்கள் கற்பகப் பூஞ்சோலை மலர்களால் அர்ச்சிக்கப்படுகின்ற தேவேந்திரனுடைய. எணு எனற்பாலது ஏணு என நீண்டது. புரந்தரன் எனற்பாலது புரத்தரன் என வலித்து நின்றது. இதழ்கள் விண்டு மலர்கின்ற சோலை சூழ்ந்த சீகாழிப்பதிக்குக் கர்த்தாவாயுள்ளவன். தேவேந்திரன் மூங்கில் வழியாகவந்து பூசித்ததால் வேணுபுரம் என்னும் பெயர் பெற்றது. சிலம்பினைத் தரித்துள்ளவரும், முப்புரத்தை எரித்தவரும், தேவேந்திரனுடைய சோலை சூழ்ந்த வேணுபுரத்தில் வீற்றிருக்கும் இறைவர் எனக் கூட்டி உரைத்துக் கொள்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே.

பொழிப்புரை :

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே விளக்கமாக இருத்தலால் பொழிப்புரை எழுதப்பெறவில்லை.

குறிப்புரை :

இதய கமலத்திலிருந்து இடையறாத ஆனந்தம் பொழியப்பட்டு என்னை மலபோதத்தில் தள்ளாமல் எனக்கு அடைக்கலப் பொருளாயுள்ளவன். ஆன்மாக்களுக்கு இரட்சையாக முண்டம்போலிருந்த திருநீற்றை அணியப்பட்ட மிக்க கருணையானவனே யான்பாடும் பாடலை உவந்துள்ளவன். புலிக்காலும் புலிக்கையும் பெற்றுள்ள வியாக்கிரபாதமுனிவருக்கு ஞானானந்தமாகிய நாடகத்தைக் கனகசபையிலே ஆடல் செய்யும் பரதவித்தையைக் கற்றுள்ளான். வியம் எனற்பாலது விய எனக் கடைகுறைந்து நின்றது. கீழ்ச்சொன்ன லீலைகளெல்லாம் செய்கின்ற சிவன் தனது இச்சையால் பொருந்தியிருக்கும் ஊர் பிரமாபூசித்த புகலி என்னும் திருப்பதி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.

பொழிப்புரை :

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே விளக்கமாக இருத்தலால் பொழிப்புரை எழுதப்பெறவில்லை.

குறிப்புரை :

கன்று குணிலாக எறிந்து விளவின் கனியைக் கொண்ட நாரணனைப் பிரகாசஞ் செய்யப்பட்டு நின்மலமாயிருந்துள்ள தனது பெரிய திருமேனியிலே ஒன்று பாதியாக வைத்துள்ளான் என்க. தீ எனற்பாலது தி எனக் குறுகிநின்றது. கழுதரு எனற்பாலது கழ்தரு என நின்றது. மாறுபாடாய்க் கதறப்பட்ட புத்தனது தலையிலே அக்கினியைச் சொரிந்து மிக்க பயத்தோடும் விழுகின்ற இடியை விழும்படி ஏவிப் புத்தரை வேரறுத்தானும் தானேயன்றி யானன்றாகும். தீ எனற்பாலது தி எனவும், காழ்தரு எனற்பாலது கழ்தரு எனவும், ஏங்கு எனற்பாலது எங்கு எனவும் குறுகிநின்றன. தனது பரிபூரணத்திலே தன்னையிழந்து இரண்டாய் விசுவமுருகித்தான் விஷமாகத் தூஷணப்பட்டு நிற்கின்ற எனக்கும் குருமூர்த்தியாய் வந்து என் பிறவியை ஒழித்துத் தனது பேரின்பமாகிய பரிபூரணத்திலே எனது அடிமை குலையாமல் இரண்டற வைத்தவன். கீழ்ச்சொல்லிப் போந்த செய்திகளெல்லாமுடையன் எத்தன்மையனோ என்னில் எங்கும் பிரகாசியா நின்ற கீர்த்தியினால் சிறக்கப்பட்டுள்ள இயமனால் பூசிக்கப்பட்ட வெங்குரு என்னும் திருப்பதியை விரும்பியுள்ளான். வெங்குரு என்பதும் சீகாழி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.

பொழிப்புரை :

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே விளக்கமாக இருத்தலால் பொழிப்புரை எழுதப்பெறவில்லை.

குறிப்புரை :

சுடுநிலமாகிய மயானத்தை நடமாடும் இடமாகக் கொண்டும், முப்புரங்களையும் நகைசெய்து சுடப்பட்ட வெற்றிப் போரையுடைய தும்பைமாலைக் கடவுள். சூடார் எனற்பாலது சுடர் எனவும், ஈமம் எனற்பாலது இம் எனவும் குறுகி நின்றன. துரோணம் எனற்பாலது தோணி எனமருவிற்று. என் உச்சிக்குச் சூடாமணியுமாய் என்மேல் வைத்த மாலினையுடையனுமாய் யாகத்தின்கண் வந்த யானையை வடிவொழித்துப் போர்க்கும் தன்மையை உடையவன். சூடாமணி எனற்பாலது சுடர்மணி எனவும், மாலி எனற்பாலது மாளி எனவும், தோல் எனற்பாலது தோள் எனவும் நின்றன. மாலையுடையவன் - மாலி. தோல் - யானை. சூரியனுடைய களங்கத்தைக் கழுவப்பட்ட சமுத்திரம் போன்ற செனனக்கடலிலே கீழ்ப்பட்டழுந்திக் கெடாநின்ற ஆன்மாக்களுக்குக் கைப்பற்றிக் கரையேறும் தெப்பமாகப் பிரணவம் என்கிற மந்திரத்தை அவரது செவியின் கண்ணே உண்டாக்கா நின்றவன். மண்ணி என்பது மணி என இடை குறைந்து நின்றது. புரந்தவன் எனற்பாலது புரத்தவன் என வலித்தல் விகாரமாயிற்று. விளக்கத்தையுடைய நவரத்தினங்களாலே அலங்கரிக்கப்பட்ட மாளிகை சூழ்ந்த திருத்தோணிபுரத்திலே வீற்றிருக்கும் சிவன் இத்தன்மையன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி.

பொழிப்புரை :

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே விளக்கமாக இருத்தலால் பொழிப்புரை எழுதப்பெறவில்லை.

குறிப்புரை :

பூமியிலுள்ளாரையும் தேவகணங்களாய் உள்ளாரையும் தனது நாபிக் கமலத்திலே தோற்றுவிக்கப்பட்ட பிரமா விஷ்ணுவினது போதத்திலே கண்ணாடியும் நிழலும் போலப் பிரதிவிம்பியா நின்றவன். ஆடி என்பது அடி எனக் குறுகிநின்றது. மலத்திரயங்களைக் கழுவப்பட்ட சிவஞானிகள் கூட்டம் பொலிவுபெறத்தக்க வனப்பையுடைய ஆனந்த நிருத்தம் செய்தருள்பவன். சர்வாங்கமும் உத்தூளனம் பண்ணின மார்பை உடைய சிவஞானிகளும், புண்ணிய பாவக்கட்டையரிந்து விசுவத்தைத் தள்ளப்பட்ட சிறப்பையுடையருமாயிரா நின்றவர்களுக்கு மிகுதியான மூலமாயுள்ளவன். உந்தராய் என்பது, ஊந்தராயென நீண்டது. மறுவிலா மறையோர் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் திருப்பதியின்கண் வீற்றிராநின்ற சிவனது அழகிய திருவடித் தாமரை என்னை ஆண்டிடுவதாக, பூந்தராய் என்பது சீகாழி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.

பொழிப்புரை :

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே விளக்கமாக இருத்தலால் பொழிப்புரை எழுதப்பெறவில்லை.

குறிப்புரை :

தனது திருவடிப் பிரசாதமில்லாதார்க்கு மல மயக்கத்தின் மேலீட்டைக் கெடாத சிவனுக்கு விசுவாதீதமான இருப்பிடம் எனது சைதன்னியமே. சத்தாதிகளஞ்சும் சேரப்பட்ட உலகத்தைத் தன் வாயினிடமாகவுடைய விஷ்ணுவின் களேபரத்தைத் திருமேனியிலே தரித்துள்ளான். சேர் எனற்பாலது செர் எனவும், சீர் எனற்பாலது சிர் எனவும் குறுகிநின்றன. ஆத்தும விகாரமாகிய கர்மத்தினாலே இந்திரியங்களுக்கு விடயமாகிய சுவர்க்கத்திலிச்சையுடையானுக்கு அந்தச் சுவர்க்கம் மெய்யாக விசேடித்திருக்குமன்றே. இந்திரிய வன்மையாகிய யுத்தத்துக்கு இளையாமல் அந்த இந்திரியமாகிய பாணங்கள் தனது அறிவுக்குள் தைக்கப்படான். ஒருகால் சிரபுரம் என்று சொன்னவிடத்துப் பஞ்சேந்திரியங்களையும் அவியப்பொருது சிவனுடைய திருவடியிலே அடையாநிற்பன் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

பொன்னடி மாதர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதர் சேர்புற வத்தவன்
பொன்னடி மாதர் சேர்புற வத்தவன்.

பொழிப்புரை :

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே விளக்கமாக இருத்தலால் பொழிப்புரை எழுதப்பெறவில்லை.

குறிப்புரை :

பொலிவினையுடைய மாயா நிருத்தம் புரிகின்ற பத்திரகாளியும் பூதபசாசும் பொருந்திய மயானமே திருக்கோயிலாக உள்ளவன். சுத்தமான வழியைத் தரப்பட்ட மகாரிஷிகள் திரண்டு தவம் பண்ணாநிற்கும் ஆரணியத்தில் தனித்துத் தவம் புரியாநிற்கும் தபோதனன். அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இலக்குமியையொத்த இருடி பத்தினிகள் பிச்சையிட வந்து அணையுமிடத்துத் தனக்குள்ள நிருவாணத்தை அவர்களுக்குக் கொடுத்தவன். பொன்னாற் செய்யப்பட்ட பாடக நூபுராதிகளைப் பாதங்களிலேயணிந்துள்ள கன்னியர் திரண்டு விளையாடும் புறவம் என்னும் திருப்பதியில் வாழ்கின்ற சிவன். புறவம் என்பதும் சீகாழி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்
தசமுக னெரிதர வூன்று சண்பையான்.

பொழிப்புரை :

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே விளக்கமாக இருத்தலால் பொழிப்புரை எழுதப்பெறவில்லை.

குறிப்புரை :

ஆத்துமாக்களிடத்துக் கருணைபிறக்கும் இடமாயுள்ளவன். அக்கினி வீசப்பட்டுத் திருவரையிலே அழுந்தச் சாத்தியுள்ள விரிந்த படத்தினையுடைய பாம்பை அரைஞாணாகவுடையான். எல்லாம் இறந்து அந்தமாயுள்ள சிவஞானிகள் குழாத்துக்கு நேரிதாகிய சூனியமாயுள்ள பொருளைத் தோற்றுவித்துள்ளானுமாய்ப் புலியினது ஊன்பொருந்திய தோலாடையைத் திருவரையிலே விரித்துடுத்தவன். நேரி எனற்பாலது நெரி எனக் குறுகிநின்றது. தரக்கு எனற்பாலது தர எனக் குறைந்தது. தூசு எனற்பாலது துசு எனக் குறுகிநின்றது. பாயான் எனற்பாலது பையானெனக்குறுகிப் போலியாயிற்று. ஆத்தும விகாரமான அகங்காரம் போம்படி என்னறிவில் எதிர்ப்பட்டவன் கயிலாயமலையைத் திருவுள்ளத்தடைத்து எழுந்தருளியிருந்து ஆத்துமாக்களை இரட்சையாக நின்ற விசேஷத்தையுடையவனென்றேத்தும் சட்சமயங்களுக்கும் அவரவர் கொண்ட பயனா யுள்ளவன். நேரி எனற்பாலது நெரி எனக் குறுகிநின்றது. பத்துத்தலையுள்ள இராவணன் முரியும்படி திருவிரலாலடர்த்தவன் யாரென்னில், சண்பை என்னும் திருப்பதியிலே வீற்றிருக்கும் கடவுள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே
காழி யானய னுள்ளவா காண்பரே.

பொழிப்புரை :

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே விளக்கமாக இருத்தலால் பொழிப்புரை எழுதப்பெறவில்லை.

குறிப்புரை :

நிலைபெற்றுநின்ற நின்மலமாகிய சித்தத்தையுடைய பத்தரிடத்துச் சத்தியப்பொருள் விளையும்பொருட்டு ஞானநாட்டத்திலே அவர்களைக் கடாக்ஷிக்கின்றவன். திருமிடற்றில் களங்கமுடையானது கருணையை நினைத்து ஞானநாட்டத்தையுடைய சிவஞானிகள் சிவனுக்கிச்சை தன்னடியார்க்கே ஆங்காரத்தைத் தடுக்குமதே பணியெனத்தமதறிவிலே கருதாநிற்பர். விஷ்ணுவும் பிர்மாவும், திருமுடியும் திருவடியும் காணும் பொருட்டு வராகமும் அன்னமுமாகக் கருதி வடிவுகொண்டார். ஐயோ! உள்ளபடி கருதிச் சிவனைப் பெறாமல் அவர் கருதியதேது எனில், அன்னியமே கண்டனர். கண் எனற்பாலது காண் என நீண்டது. என் பொருட்டால் காழி என்னும் திருப்பதியைப் படைத்தானை, என் ஐயனை, எனது ஆசையை, கீழ்ச் சொன்ன இருவர்களும் தாங்கள் தேடும் தேட்டப் பிரிவில் மயக்கத்திலே தேட்டமழித்துத் தோன்றா நிற்பவனைத் தேடி மறத்தலொழிந்து எவ்வாறு காண்பர்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.

பொழிப்புரை :

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே விளக்கமாக இருத்தலால் பொழிப்புரை எழுதப்பெறவில்லை.

குறிப்புரை :

ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும் மறைக்கப்படார்கள். மூடார் எனற்பாலது மூடர் எனக் குறுகிநின்றது. புலால் நாற்றத்தைப் பொருந்திய அழுக்கு மெய்யைப் பொய்யென்று மனங்கொள்ளமாட்டாமல் அதுவே தமது நிலைபெற்றவுருவாக நினைத்துத் துவராடையாலே உடம்பைச் சூழப்பட்ட புத்தரும், பேதைத் தன்மையையுடைய மச்சியகந்தியினுடைய நலத்தைக் கொள்ளும் பொருட்டு அவளது சரீரம் எல்லாம் சுகந்தமொய்க்கும்படி அவளுடனே பொருந்திய பராசரனாகிய மகாவிருடிவந்து சிவனைப் பொருந்தி அருச்சிக்கப்படுதலால். பராசரமுனிவரால் பூசிக்கப்பட்டு அவன்பெயரால் பெயர்பெற்றுள்ள கொச்சை நகரம் என்னும் திருப்பதியிலே எழுந்தருளியிராநின்ற தலைமையோனை உள்ளபடி தரிசனம் பண்ணி வழிபடமாட்டார்களது நினைவு எவ்வாறிருக்கும் என்னில், மழைக்காலிருளும் வெளிதென இருண்ட மயக்கத்தையுடைய ஆணவ போதமாயிருக்கும்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 12

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.

பொழிப்புரை :

இப்பதிகத்துக்குப் பழைய உரையில் அளித்துள்ள குறிப்புரையே விளக்கமாக இருத்தலால் பொழிப்புரை எழுதப்பெறவில்லை.

குறிப்புரை :

மிகுதிப்பட்ட தோஷமாயுள்ள சுக்கில சுரோணிதமாகிய இருவகை நீரின்கண்ணே சிர முதலாகிய அவயவமாகத் தோன்றிப் பூமியின்கண் செனித்துப் பரிணமித்துப் பின்பு தேய்ந்து மரிக்கின்ற சென்மத்தையும் பரிணமித்தல் - வேறுபடுதல். கீழ்ச் சொல்லிப்போந்த சென்மத்தையும் கழுவி மலத்திரயங்களையும் கழுவாநிற்கும். தனது பாதியாகிய திருவருளினாலே என்னை அகப்படுத்திக் கவளிகரித்துக் கொண்டு அந்த அருள்வழியாக என திடத்தில் இடையறாமல் வாழும் தன்னை எனக்குத் தந்த அடிமை குலையாமல் எக்கண்ணும் விட்டு விளங்கும் கர்த்தர். பாதி எனற்பாலது பதி எனக் குறுகி நின்றது. மாயா மயக்கத்தின்கண்ணே மயங்கி பெத்த முத்தி இரண்டும் தெரியாமல் திண்டாடப்பட்ட மலபோதர்க்கு அமுதம் போன்று அரிதாயுள்ளவனுமாய் விட்டு விளங்கப்படாநின்ற பொன்னுருவையுடையவனாய்ச் சிருஷ்டிக்குக் கர்த்தாவாகிய பிரமனது சிரக் கபாலத்திலே பிச்சைகொண்டு நுகரும் கருணை யாளனே! திருக்கழுமலம் என்னும் மூவாப் பழங்கிழமைப் பன்னிரு பெயர்பெற்ற அனாதி மூலமாகிய பதியிடத்துக் கவுணிய கோத்திரத்திலே தோன்றப்பட்ட யான் நிவேதிக்கப்படும் காட்டாகிய இப்பாடலைக் கீழ்ச்சொன்ன வற்றிலும் மலத் திரயங்களிலும் அழுந்தாநின்ற ஒருத்தராகிலும் பலராகிலும் உரை செய்வார் உயர்ந்தாரேயாதலால் இப்பாடலை இடை விடாமல் உரைசெய்வீராக. காட்டு என்பது கட்டு எனக் குறுகிநின்றது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

ஓருரு வாயினை மானாங் காரத்
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை
இருவரோ டொருவ னாகி நின்றனை 5.
ஓரா னீழ லொண்கழ லிரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை
இருநதி யரவமோ டொருமதி சூடினை
ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் 10
நாற்கான் மான்மறி யைந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை
ஒருதனு விருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானில மஞ்சக் 15
கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை
ஐம்புல னாலா மந்தக் கரணம்
முக்குண மிருவளி யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20
நான்மறை யோதி யைவகை வேள்வி
அமைத்தா றங்க முதலெழுத் தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை 25
இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த
தோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி
வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை 30
வரபுர மொன்றுணர் சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த விருதிற லரக்கன்
விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப்
பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை 35
ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும்
ஊழியு முணராக் காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமு மைந்தமர் கல்வியும்
மறைமுத னான்கும் 40
மூன்று காலமுந் தோன்ற நின்றனை
இருமையி னொருமையு மொருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணிய னறியும் 45
அனைய தன்மையை யாதலி னின்னை
நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே.

பொழிப்புரை :

சொரூப நிலையில் விளங்கும் பரசிவம் ஆகிய நீ உனது இச்சையால் ஐந்தொழில்களை நிகழ்த்த வேண்டி எடுத்துக் கொண்ட ஓருருவமாகிய திருமேனியை உடையை ஆயினை, உன் சக்தியைக் கொண்டு அவ் ஐந்தொழில்களை நடத்தும் திருவுளக்குறிப்போடு சத்தி சிவம் என்னும் இரு உருவாயினை, விண் முதலிய பூதங்களையும் சந்திர சூரியர்களையும் தேவர்கள் மக்கள் முதலியோரையும் படைத்துக் காத்து அழிக்க அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகள் ஆயினை, பிரமன் திருமால் ஆகிய இருவரையும் வலத்திலும் இடத்திலும் அடக்கி ஏக மூர்த்தியாக நின்றாய், ஒப்பற்ற கல்லால மரநிழலில் உனது இரண்டு திருவடிகளை முப்பொழுதும் ஏத்திய சனகர், சனந்தனர் முதலிய நால்வர்க்கு ஒளி நெறியைக் காட்டினாய், சூரியன் சந்திரன் அக்கினி ஆகியோரை மூன்று கண்களாகக் கொண்டு உலகை விழுங்கிய பேரிருளை ஓட்டினாய், கங்கையையும் பாம்பையும் பிறைமதியையும் முடிமிசைச் சூடினாய்,/n ஒரு தாளையும் ஈருகின்ற கூர்மையையும் முத்தலைகளையும் உடைய சூலத்தையும் நான்கு கால்களையும் உடைய மான் கன்று, ஐந்து தலை அரவம் ஆகியவற்றையும் ஏந்தினாய்,/n சினந்து வந்த, தொங்கும் வாயையும் இரு கோடுகளையும் கொண்ட ஒப்பற்ற யானையை அதன் வலி குன்றுமாறு அழித்து அதன் தோலை உரித்துப் போர்த்தாய்,/n ஒப்பற்ற வில்லின் இருதலையும் வளையுமாறு செய்து கணை தொடுத்து முப்புரத்தசுரர்களை இவ்வுலகம் அஞ்சுமாறு கொன்று தரையில் அவர்கள் இறந்து கிடக்குமாறு அழித்தாய்./n ஐம்புலன்கள் நான்கு அந்தக் கரணங்கள், முக்குணங்கள் இரு வாயுக்கள் ஆகியவற்றை ஒடுக்கியவர்களாய தேவர்கள் ஏத்த நின்றாய்,/n ஒருமித்த மனத்தோடு, இரு பிறப்பினையும் உணர்ந்து முச்சந்திகளிலும் செய்யத்தக்க கடன்களை ஆற்றி நான்மறைகளை ஓதி ஐவகை வேள்விகளையும் செய்து ஆறு அங்கங்களையும் ஓதி, பிரணவத்தை உச்சரித்து தேவர்களுக்கு அவி கொடுத்து மழை பெய்விக்கும் அந்தணர் வாழும் பிரமபுரத்தை விரும்பினாய்,/n ஆறுகால்களை உடைய வண்டுகள் இசைபாடும் பொழில் சூழ்ந்த வேணுபுரத்தை விரும்பினாய்,/n தேவர்கள் புகலிடம் என்று கருதி வாழ்ந்த புகலியை விரும்பினாய். நீர் மிகுந்த கடல் சூழ்ந்த வெங்குரு என்னும் தலத்தை விரும்பினாய்./n மூவுலகும் நீரில் அழுந்தவும் தான் அழுந்தாது மிதந்த தோணிபுரத்தில் தங்கினாய்./n வழங்கக் குறையாத செல்வவளம் மிக்க பூந்தராயில் எழுந்தருளினாய்./n வரந்தருவதான சிரபுரத்தில் உறைந்தாய்,/n ஒப்பற்ற கயிலை மலையைப் பெயர்த்த பெருந்திறல் படைத்த இராவணனின் வலிமையை அழித்தாய்./n புறவம் என்னும் தலத்தை விரும்பினாய்,/n கடலிடைத் துயிலும் திருமால் நான்முகன் ஆகியோர் அறிய முடியாத பண்பினை உடையாய்./n சண்பையை விரும்பினாய்./n ஐயுறும் சமணரும் அறுவகையான பிரிவுகளை உடையபுத்தரும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் பாழ் போக்கக் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளாய்./n வேள்வி செய்வோனாகிய ஏழிசையோன் வழிபட்ட கொச்சை வயத்தை விரும்பி வாழ்கின்றாய்,/n ஆறு பதங்கள், ஐந்து வகைக் கல்வி, நால் வேதம், மூன்று, காலம், ஆகியன தோன்ற நிற்கும் மூர்த்தியாயினாய்,/n சத்தி சிவம் ஆகிய இரண்டும் ஓருருவமாய் விளங்கும் தன்மையையும் இவ்விரண்டு நிலையில் சிவமாய் ஒன்றாய் இலங்கும் தன்மையையும் உணர்ந்த குற்றமற்ற அந்தணாளர் வாழும் கழுமலம் என்னும் பழம்பதியில் தோன்றிய கவுணியன்குடித் தோன்றலாகிய ஞானசம்பந்தன் கட்டுரையை விரும்பிப் பிரமன் மண்டையோட்டில் உண்ணும் பெருமானே அறிவான். அத்தன்மையை உடைய நின்னை உள்ளவாறு அறிவார், நீண்ட இவ்வுலகிடை இனிப்பிறத்தல் இலர்./n குருவருள்: ஞானசம்பந்தர் அருளிய சித்திரக் கவிகளுள் ஒன்றாகிய திருவெழுகூற்றிருக்கை ஒன்றை மட்டுமே பாராயணம் புரிவோர்,அவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் அனைத்தையும் ஓதிய பயனைப் பெறுவர் என்பது மரபு./n சிவபாத இருதயர், திருஞானசம்பந்தர் ஓதிவரும் திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணம் செய்வதை நியமமாகக் கொண்டிருந்தார். பதிகம் பெருகப் பெருகப் பாராயணம் செய்வதில் தம் தந்தையார் இடர்ப்படுதலைக் கண்ட திருஞானசம்பந்தர் இத்திருவெழுகூற்றிருக்கையை அருளி இதனை ஓதி வந்தாலே அனைத்துத் திருப்பதிகங்களையும் ஓதிய பயனைப் பெறலாம் எனக் கூறினார் என்பர்.

குறிப்புரை :

ஓருருவாயினை - என்றது, எல்லாத் தத்துவங்களையுங் கடந்து வாக்குமனாதிகளுக்கு எட்டாமலிருந்துள்ள தற்சுருபந்தான் பஞ்சகிர்த்தியங்களையும் நிகழ்த்தவேண்டி நினது இச்சையால் எடுத்துக்கொண்டிருக்கும் திருமேனியை (எ-று)/n மானாங்காரத்தீரியல்பாய் - என்றது. மானென்பது - சத்தி - ஆங்காரத்தீரியல்பாய் - தற்சத்தியைக் கொண்டு சர்வானுக்கிரகமான பஞ்சகிர்த்தியங்களை நடத்தவேண்டிச் சத்தி சிவமாகிய இரண்டு உருவாயினை எ - று./n ஒரு - என்றது. அந்தச் சத்தியுடனே கூடி யொன்றாகி நின்றனை எ - று./n விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும் படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை - என்றது. ஆகாச முதலாகப் பூமியீறாகவுள்ள பஞ்சபூதங்களையும் சந்திராதித்தர்களையும் தேவர்களையும் மற்றுமுள்ள ஆத்மாக்களையும் படைக்கைக்கும், காக்கைக்கும், அழிக்கைக்கும், பிரமா விஷ்ணு உருத்திரன் என்கின்ற திரிமூர்த்திகளுமாயினை எ - று./n இருவரோடு ஒருவனாகி நின்றனை - என்றது. பிரமாவையும் விஷ்ணுவையும் வலத்தினும் இடத்தினும் அடக்கிக் கொண்டு ஏகமாய்த் திரிமூர்த்தியாகி நின்றனை எ - று./n ஓரால்நீழலொண்கழல் இரண்டும் முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளி நெறிகாட்டினை - என்றது. விருக்ஷங்களுக்கு எல்லாந்தலைமையாய் இருப்பதொரு வடவிருக்ஷத்தின் நீழலிலே எழுந்தருளியிருந்து நின்னழகிய ஸ்ரீ பாதங்களை உதயம் மத்தியானம் அத்தமனம் என்கின்ற மூன்றுகாலமும் தோத்திரம் செய்யாநின்ற அகஸ்தியன் புலத்தியன் சனகன் சனற் குமாரன் என்னும் நால்வகை இருடிகளுக்கும் தற்சுருபமான திருமேனியைக் காட்டி அருளினை எ - று./n நாட்டம் மூன்றாகக் கோட்டினை - என்றது. பிர்மா முதலாயிருந்துள்ள ஆத்மாக்கள் ரூபமென்னும் புலனாலே சர்வ பதார்த்தங்களையும் காணாதபடியாலே சந்திராதித்தர்களையும் அக்கினியையும் மூன்று கண்ணாகக் கொண்டருளி அந்தகாரமான இருளை ஓட்டினை எ - று./n இருநதி அரவமோடு ஒரு மதி சூடினை - என்றது. பெரிதாகிய கங்கையையும் ஒப்பில்லாத பாம்பினையும் ஒருகாலத்தினும் முதிராத பிறைக்கண்ணியையும் சூடியருளினை எ - று./n ஒருதாள் ஈரயின் மூவிலைச்சூலம் நாற்கான் மான்மறி ஐந்தலை அரவம் ஏந்தினை - என்றது. பிரணவமாயிருந்துள்ள ஒரு காம்பினையும், ஈருகின்ற கூர்மையினையும், பிர்மா விஷ்ணுருத்திரனென்கின்ற மூன்று இலையினையும் உடையதொரு சூலத்தினையும், இருக்கு - யசுர் - சாமம் - அதர்வணம் என்கின்ற நாலு வேதங்களையும் நாலுகாலாயிருந்துள்ள ஒரு மான் கன்றினையும், ஸ்ரீ பஞ்சாக்ஷரங்களையும், அஞ்சு தலையாகவுடையதொரு மகாநாகத்தினையும் அஸ்தங்களிலே தரித்தருளினை எ - று./n காய்ந்த நால்வாய் மும்மதத்து இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை - என்றது தன்னிழலைக் காயத்தக்க கோபத்தினையும் தொங்கும் வாயினையும் இரண்டு கொம்பினையும் உடையதொரு ஒப்பில்லாத ஆனையினுடைய பெலங்களையெல்லாம் கெடுத்து உரித்துப் போர்த்தனை எ - று./n ஒரு தனு இருகால் வளைய வாங்கி முப்புரத்தோடு நால்நிலம் அஞ்சக் கொன்று தலத்துறு அவுணரை அறுத்தனை - என்றது, ஒப்பில்லாத பொன்மலையாகிய வில்லை இருதலையும் வளைய வாங்கி அஸ்திரத்தைத் தொடுத்து, மூன்றுபுராதிகளாகிய அவுணரை அறுத்தனை எ - று./n ஐம்புலம் நாலாம் அந்தக்கரணம் முக்குணம் இருவளி ஒருங்கிய வானோர் ஏத்த நின்றனை - என்றது. சத்த - பரிச - ரூப - ரச - கந்தம் எனப்பட்ட ஐம்புலங்களையும், மனம் - புத்தி - யாங்கார - சித்தம் என்கின்ற அந்தக்கரணங்கள் நான்கினையும், ராசத - தாமத - சாத்துவிகம் என்கின்ற மூன்று குணங்களையும், பிராணன் - அபானன் என்கின்ற இரண்டு வாயுவையும், மூலாதாரத்திலே ஒடுக்கிக்கொண்டு ஏகாக்ரசித்தராயிருந்துள்ள தேவர்கள் ஏத்த நின்றனை எ - று./n ஒருங்கிய மனத்தோடு இருபிறப்பு ஓர்ந்து முப்பொழுது குறைமுடித்து நான்மறை ஓதி ஐவகை வேள்வியமைத்து ஆறங்க முதலெழுத்தோதி வரன்முறை பயின்றெழுவான்றனை வளர்க்கும் பிரமபுரம் பேணினை - என்றது, ஆகாரம் - நித்திரை - பயம் - மைதுனம் இவற்றில் செல்லும் மனத்தைப் பரமேசுவரனுடைய ஸ்ரீ பாதங்களிலேயொருக்கி முன்பு தாம் மாதாவின் உதரத்திலே பிறந்த பிறப்பும், உபநயனத்தின் பின்பு உண்டான பிறப்புமாகிய இரண்டையும் விசாரித்து மூன்று சந்தியும், செபதர்ப்பண - அனுட்டான - ஓமங்களையுமுடித்து, இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்கின்ற நாலு வேதங்களையும் ஓதி, சிவபூசை - குருபூசை - மகேசுரபூசை - பிராமண போசனம் - அதிதி புசிப்பு என்கின்ற ஐந்து வேள்வியும் முடித்து, ஓதல் - ஓதுவித்தல் - வேட்டல். வேட்பித்தல் - ஈதல் - ஏற்றல் என்னும் ஆறங்கங்களையும் நடத்தி இவைகளுக்கு முதலாயிருந்துள்ள பிரணவத்தையும் உச்சரித்துத் தேவலோகத்திலுள்ள தேவர்களுக்கும் அவிகொடுத்து மழையைப் பெய்விக்கும் பிராமணராலே பூசிக்கப்பட்ட பிரமபுரமே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை என்றவாறு - ஆறங்கமாவன மந்திரம் - வியாகரணம் - நிகண்டு - சந்தோபிசிதம் - நிருத்தம் - சோதிடம் என இவ்வாறு வழங்கப்படு கின்ற முறையொன்று./n அறுபதமுரலும் வேணுபுரம் விரும்பினை - என்றது. அறுகாலுடைய வண்டுகளிசைபாடும் பொழில்சூழ்ந்த வேணுபுரம் என்பதே திருப்பதியாக எழுந்தருளினை என்றவாறு - வேணுபுரம் என்பதற்குக் காரணம்: வேணு என்பானொரு இந்திரனுடன் கெசமுகன் என்பானொரு அசுரன் வந்து யுத்தம்பண்ண அவனுடனே பொருது அப செயப்பட்டுப் பிரமபுரமென்னு முன் சொன்ன பதியிலேவந்து பரமேசு வரன் திருவடிகளிலே `தம்பிரானே! அடியேனுக்கு அமைத்தருளின சுவர்க்கலோகத்தைக் கசமுகன் சங்கரிக்க, அவனுடன் யுத்தம்பண்ணி அபசெயப்பட்டுப் போந்தேன்`என்று விண்ணப்பஞ்செய்து பூசிக்கையாலே தம்பிரானும் கணேசுரனைத் திருவுளத்தடைத்து `வாராய் கணேசுரனே! கசமுகன் வரப்பிரசாதமுடையவன்; ஒருவராலுமவனைச் செயிக்கப்போகாது; நீயும் அவன் வடிவாகச் சென்று உன் வலக்கொம்பை முறித்தெறிந்து அவனைக்கொன்று வேணு என்கின்ற இந்திரனைச் சுவர்க்கலோகத்திலே குடிபுகவிட்டுவா `என்று திருவுளம் பற்றக் கணேசுரனும் அவன் வடிவாகச்சென்று தன் வலக்கொம்பை முறித்தெறிந்து அவனையுங்கொன்று வேணு என்கின்ற இந்திரனையும் சுவர்க்கலோகத்திலே குடிபுகவிட உண்டானது என்க. இகலியமைந்துணர் புகலி அமர்ந்தனை - என்றது. தேவர்கள் முன்பு புகலிடமென்று புகுதலால் திருப்புகலி என்பதே திருப்பதியாக எழுந்தருளி இருந்தனை என்றவாறு - தேவலோகமான அமராபதியைச் சூரபத்மா என்பானொரு அசுரன் வந்து சங்காரம் பண்ண அவனுடனே தேவேந்திரன் முதலாயுள்ளார் பொருது அபசெயப்பட்டு யுத்தத்தையொழிந்து இனி நமக்குப் பரமேசுவரன் ஸ்ரீ பாதமொழிய புகலிடமில்லை என்று வேணுபுரத்திலே வந்து பரமேசுவரனைத் தெண்டம்பண்ணி அவனாலுண்டான நலிகையை விண்ணப்பஞ் செய்து எங்களை ரக்ஷித்தருள வேண்டும் என்னப் பரமேசுவரனும் சுப்பிரமணியரைத் திருவுளத்து அடைத்து `வாராய் சுப்பிரமணியனே! நீ ஆறுமுகமும் பன்னிரண்டு கையுமாகப் போய்ச் சூரபத்மாவையும் செயித்துத் தேவலோகத்திலே தேவர்களையும் குடிபுகுத விட்டுவா`என வருகை காரணம்./n பொங்கு நாற்கடல் சூழ் வெங்குரு விளங்கினை - என்றது. மிகவும் கோபிக்கப்பட்ட கடல்சூழ்ந்த வெங்குரு என்றதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை என்றவாறு. - லோகங்களுக் கெல்லாம் தேவகுருவாகிய பிரகஸ்பதிபகவான் என்னையொழிந்து கர்த்தாவுண்டோ என்று மனோகெர்வஞ் சொல்லுகையாலே பரமேசு வரனும் இவன் மகா கெர்வியாயிருந்தான் இவனுடைய கெர்வத்தை அடக்கவேண்டுமென்று திருவுளத்தடைத்தருளித் தேவர்க்குக் குருவாகிய அதிகாரத்தை மாற்றியருளப் பயப்பட்டுப் புகலி என்கின்ற திருப்பதியிலே போய்ப் பரமேசுவரனைத் தெண்டம்பண்ணி அடியேன் செய்த அபராதங்களைப் பொறுத்தருளி அடியேனை ரக்ஷித்தருள வேண்டும் என்று விண்ணப்பஞ்செய்யத், தம்பிரானும் நீ மகா வேகியாயிருந்தாய் என்று திருவுள்ளமாய் முன்புபோல் தேவர்களுக்குக் குருவாகிய அதிகாரத்தையும் கொடுத்த காரணத்தால் வெங்குரு என்கின்ற பெயருண்டாயது./n பாணி மூவுலகும் புதைய மேல்மிதந்த தோணிபுரத்து உறைந்தனை - என்றது. பாணி என்கின்ற சலம் பிரளயமாய்ப் பூமி அந்தரம் சுவர்க்கம் மூன்று லோகங்களையும் புதைப்ப அதைச்சங்காரம் பண்ணியருளி அதின்மேலே தோணிபோல மிதந்த வெங்குருவாகிய தோணிபுரம் என்றதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை எ - று./n தொலையா இருநிதிவாய்ந்த பூந்தராயேய்ந்தனை - என்றது. வேண்டினார் வேண்டியது கொடுத்துத் தொலைவறச் சங்கநிதி பத்மநிதி என்று சொல்லப்பட்ட இரண்டு நிதிகளும் பூவும் தராயும் பூசிக்கையாலே திருப்பூந்தராயென்னப்பட்ட திருப்பதியிலே எழுந்தரு ளியிருந்தனை எ - று./n ஒருகாலத்துத் தொலையாத வரத்தைப் பெறுவது காரணமாகத் திருத்தோணிபுரத்திலே வந்து தம்பிரானைப் பூசித்தளவில் `உங்களுக்கு வேண்டுவதென்`என்று கேட்டருள, `தம்பிரானே! அடியோங்களுக்கு எல்லாக் காலங்களுந்தொலையாமல் கொடுக்கத் தக்க வரத்தைப் பிரசாதித்தருள வேண்டும்` என்று விண்ணப்பஞ் செய்ய, அவ்வாறே தொலையாதவரத்தையும் கொடுத்தருளி மகாசங்காரத்தினுந் தம்முடைய ஸ்ரீ அஸ்தங்களிலே தரித்தருளும் வரப்பிரசாதமுங் கொடுத்தருளினதால் பூந்தராய் எனப் பெயருண்டாயது./n வரபுரமொன்றுணர் சிரபுரத்துறைந்தனை - என்றது. வரத்தைத் தருவதான புரமென்றுணரத்தக்க சிரபுரமென்பதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை எ - று. /nதேவர்களும் பிர்ம விஷ்ணுக்களுமாகக்கூடி அமிர்தத்தையுண்டாக்கித் தேவர்களை இருத்தி விஷ்ணுபகவான் அமிர்தம் படைத்துக்கொண்டு வருகிற வேளையில் ராகு கேது என்கிற இரண்டு பாம்புங்கூடிக் கரந்திருந்து அமிர்தபானம் பண்ணுவதாக இருப்பதுகண்டு விஷ்ணு பகவான் அமிர்தம் படைத்துவருகின்ற சட்டுவத்தைக் கொண்டு தலையற வெட்டுகையால் உடலிழந்து நாகமிரண்டும் நம்முடல் தரக்கடவான் பரமேசுவரனொழிய வேறேயில்லை என்று திருப்பூந்தராயிலே வந்து பரமேசுவரனை நோக்கி இரண்டு சிரங்களும் பூசித்ததால் சிரபுரம் என்று பெயருண்டாயது. ஒருமலை எடுத்த இருதிறலரக்கன் விறல்கெடுத்தருளினை - என்றது. பெருமையுள்ள கயிலாயம் என்னும் பேரையுடைத்தாய் உனக்கே ஆலயமாயிருப்பதொரு வெள்ளிமலையை எடுத்த பெரிய புசபலங்கொண்ட இராவணனுடைய கர்வத்தைக் கெடுத்தருளினை எ - று./n புறவம் புரிந்தனை - என்றது. பிரசாபதி என்கின்ற பிர்மரிஷி கௌதமரிஷியை நோக்கி நீ ஸ்திரீபோகத்தைக் கைவிடாமலிருக்கிறவனல்லவோ என்று தூஷணிக்கையாலே கவுதமரிஷியும் பிரசாபதி பகவானைப் பார்த்து நீ புறா என்னும் ஒரு பக்ஷியாய் நரமாமிசம் புசிப்பாயாக என்று சபிக்கப் பிரசாபதியும் ஒரு புறாவாய்ப் போய்ப் பலவிடத்தினும் நரமாமிசம் புசிக்கையிலே, ஒரு நாள் மாமிசந்தேடிச் சோழவம்சத்திலே ஒரு ராசா தினசரி தனாயிருக்கிறவிடத்திலே இந்தப் புறாவாகிய ரிஷியும் போய் ராசாவைப்பார்த்து எனக்கு அதிக தாகமாயிருக்கின்றது சற்று நரமாமிசம் இடவல்லையோ என்ன ராசாவும் உனக்கு எவ்வளவு மாமிசம் வேண்டும் எனப் புறாவும், உன்சரீரத்திலே ஒன்று பாதி தரவேண்டும் என்று ராசாவும் தன்சரீரத்திலேயொன்று பாதி அரிந்திடப் புறாவுக்கு நிறையப் போதாமல் சர்வமாமிசத்தையும் அரிந்திட்டு ராசாவும் சோர்ந்துவிழ இந்தப் புறாவாகிய பக்ஷியும் தமக்குத் தன் சரீரத்தை அரிந்திட்டுப் பிழைப்பித்த ராசாசரீரம் பெறும்படி எங்ஙனே என்று விசாரிக்கு மளவில் பரமேசுவரனொழிய வேறில்லை என்று சிரபுரத்திலேவந்து பரமேசுவரனை நோக்கி அர்ச்சிக்கப் பரமேசுவரனும் திருவுளத்தடைத்தருளத் தம்பிரானே அடியேன் தாகந்தீரத் தன் சரீரத்தை அரிந்திட்ட ராசாவுக்கு முன்போல உடலும் பிரசாதித்து அடியேனுக்கும் இந்தச் சாபதோஷம் நீக்கவேண்டும் என்று விண்ணப்பஞ்செய்ய, ராசாவுக்குச் சரீரமும் கொடுத்துப் புறாவுக்கு வேண்டும் வரப்பிரசாதங் களையும் பிரசாதித்துச் சாபதோஷமும் மாற்றியருளிப் புறாவும் பூசிக்கையாலே புறவம் என்கின்றதே திருப்பதியாக எழுந்தருளி இருந்தனை எ - று./n முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப் பண்பொடு நின்றனை - என்றது. ஆற்றுநீர் வேற்றுநீர் ஊற்றுநீர் என்று சொல்லப்பட்ட முந்நீராகிய சமுத்திரத்திலே துயிலாநின்ற நாராயணனும் நான்முகத்தினையுடைய பிர்மாவும் அடியும் முடியும் தேடற்கு அரிதாய் நின்ற பண்பினையுடையையாய் எழுந்தருளியிருந்தனை எ - று./n சண்பை அமர்ந்தனை - என்றது. துர்வாச மகரிஷி யாசிரமத்தே கிருஷ்ணாவதாரத்திலுள்ள கோபாலப் பிள்ளைகளெல்லாமிந்த ரிஷியை அசங்கதித்துத் தங்களிலே ஒருவனைக் கர்ப்பிணியாகப் பாவித்துச்சென்று அவள் பெறுவது ஆணோ பெண்ணோ என்று அந்த ரிஷியைக் கேட்கையாலே அவர் கோபித்து இவள் பெறுவது ஆணுமல்ல பெண்ணுமல்ல உங்கள் வமிசத்தாரையெல்லாஞ் சங்கரிக்கைக்கு ஒரு இருப்புலக்கை பிறக்கக்கடவதென்று சபிக்கையாலே அவன் வயிற்றிலிருந்து ஒரு இருப்புலக்கை விழ அந்தச் சேதியைக் கிருஷ்ணன் கேட்டுத் துர்வாச மகரிஷி சாபங்கேவலமல்ல என்று அந்த இருப்புலக்கையைப் பொடியாக அராவி அந்தப் பொடியைச் சமுத்திரத்திலே போட, அராவுதலுக்குப் பிடிபடாத ஒரு வேப்பம் விதைப் பிரமாணமுள்ள இரும்பை ஒரு மீன் விழுங்கி ஒரு வலைக்காரன் கையிலே அகப்பட்டது. அதன் வயிற்றில் கிடந்த இரும்பைத் தன் அம்புத் தலையிலே வைத்தான். மற்றுஞ் சமுத்திரத்திற்போட்ட இரும்புப் பொடிகளெல்லாம் அலையுடனே வந்து கரைசேர்ந்து சண்பையாக முளைத்துக் கதிராய் நின்றவிடத்திலே கோபால குமாரர்கள் விளையாடி வருவோமென்று இரண்டு வகையாகப் பிரிந்து சென்று அந்தச் சண்பைக்கதிரைப் பிடுங்கி எறிந்துகொண்டு அதனாலே பட்டுவிழுந்தார்கள். இதைக் கிருஷ்ணன் கேட்டு இதனாலே நமக்கு மரணமாயிருக்குமென்று விசாரித்து ஆலின்மேலே ஒரு இலையிலே யோகாசனமாக ஒரு பாதத்தை மடித்து ஒரு பாதத்தைத் தூக்கி அமர்ந்திருக்கிற சமயத்திலே அந்த மீன்வேடன் பக்ஷி சாலங்களைத்தேடி வருகிறபோது தூக்கிய பாதத்தை ஒரு செம்பருந்து இருக்கிறதாகப் பாவித்து அம்பைத் தொடுத்தெய்யக் கிருஷ்ணனும் பட்டுப் பரமபதத்தை அடைந்தான். இந்தத் சாபதோஷம் துர்வாச மகரிஷியைச்சென்று நலிகையாலே இந்தத் தோஷத்தை நீக்கப் பரமேசுவரனை நோக்கி அர்ச்சிக்கப் பரமேசுவரனும் திருவுளத் தடைத்தருள ரிஷியும் தெண்டம்பண்ணித் `தம்பிரானே! அடியேனுடைய சாபத்தாலே கிருஷ்ணனுடைய வமிசத்திலுள்ள கோபாலரெல்லாருஞ் சண்பைக் கதிர்களால் சங்காரப்படுகையாலே அந்தத் தோஷம் அடியேனைவந்து நலியாதபடி திருவுளத்தடைத்தருளி ரக்ஷிக்கவேண்டும்` என்று விண்ணப்பஞ்செய்யத் துர்வாச மகரிஷிக்குச் சண்பை சாபத்தினாலுள்ள தோஷத்தை நீக்கிச் சண்பைமுனி என்கின்ற நாமத்தையும் தரித்தருளிச் சண்பை என்கின்றதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை எ - று./n ஐயுறும் அமணரும் அறுவகைத்தேரரும் ஊழியும் உணராக் காழியமர்ந்தனை - என்றது, வேதாகம புராண சாத்திரங்களிலுள்ள பலத்தை இல்லை என்று ஐயமுற்றிருக்கின்ற அமணரும் கைப்புப் - புளிப்புக் - கார்ப்பு - உவர்ப்பு - துவர்ப்புத் - தித்திப்பு என்கின்ற அறுவகை ரசங்களையும் உச்சிக்கு முன்னே புசிக்கின்றதே பொருளென்றிருக்கின்ற புத்தரும் ,ஊழிக்காலத்தும் அறியாமல், மிகவும் காளிதமான விஷத்தையுடைய காளி என்கின்ற நாகம் பூசிக்கையாலே சீகாழி என்கின்றதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை எ - று./n எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை - என்றது. குரல் - துத்தம் - கைக்கிளை - உழை - இளி - விளரி - தாரம் என்பது ஏழிசை. - குரலாவது - சங்கத்தொனி, துத்தமாவது - ஆண்மீன்பிளிறு, கைக்கிளையாவது - குதிரையின்குரல். உழையாவது - மானின்குரல், இளியாவது - மயிலின்குரல், விளரியாவது - கடலோசை, தாரமாவது - காடையின்குரல் என்னும் நாதங்களையும் மெச்சினை, மகத்தான இருடிகள் எல்லாரினும் விருத்தராயுள்ள பராசரப் பிரமரிஷியானவர் மற்ற ரிஷிகளெல்லாரையும் நோக்கி நீங்கள் சமுசாரிகளொழிய விரதத்தை அனுஷ்டிப்பாரில்லையென்று அவர்களைத் தூஷிக்க அவர்களும் நீ மச்சகந்தியைப் புணர்ந்து மச்சகந்தமும் உன்னைப்பற்றி,விடாமல் அனுபவிப்பாயென்று சபிக்கையாலே அந்தச் சாபத்தின்படி போய் மச்சகந்தியைப் புணர்ந்து அந்தத் துர்க்கந்தம் இவரைப் பற்றி ஒரு யோசனை தூரம் துர்க்கந்தித்த படியாலே இது போக்கவல்லார் பரமேசுவரனையொழிய இல்லை என்று சீகாழியிலே வந்து பரமேசுவரனை அர்ச்சிக்கப் பரமேசுவரன் `உனக்கு வேண்டியது என்ன என்று கேட்க` `தம்பிரானே! அடியேனைப் பற்றின துர்க்கந்தத்தை விடுவிக்க வேண்டும்` என்று விண்ணப்பஞ்செய்ய, தம்பிரானும் `இவனென்ன கொச்சை முனியோ` என்று திருவுளமாய் இவன்மேற்பற்றின துர்க்கந்தத்தையும் போக்கிச் சுகந்தத்தையும் பிரசாதித்தருளிக் கொச்சை என்கின்ற சந்தான நாமத்தையுந்தரித்தருளிக் கொச்சை என்கின்றதே திருப்பதியாக எழுந்தருளியிருந்தனை எ - று./n ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும் மறைமுதல் நான்கும் மூன்றுகாலமும் தோன்ற நின்றனை - என்றது. பிரத்தி - பிரத்தியா காரம் - துல்லியம் - துல்லியாதீதம் - வித்தை - அவித்தை என்கின்ற ஆறுபதங்களும், ஆசு - மதுரம் - சித்திரம் - வித்தாரம் - விரையம் என்கின்ற ஐந்தும், இருக்கு - யசுர் - சாமம் - அதர்வணம் என்கின்ற நாலுவேதங்களும், செல்காலம் - வருங்காலம் - நிகழ்காலம் என்கின்ற மூன்றுகாலமும் தோன்றாநின்ற திரிமூர்த்தியாயினை எ - று./n இருமையின் ஒருமையின் - என்றது. சத்திசிவங்களா யிருந்துள்ள இரண்டும் ஒன்றாய் அர்த்தநாரீசுவரவடிவமாய் இருந்துள்ளதை எ - று./n ஒருமையின் பெருமை - என்றது. தானே ஒரு எல்லையில்லாத சிவமாயிருந்துள்ளதை எ - று. மறுவிலாமறையோர் கழுமலமுதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமலமுதுபதிக் கவுணியன் அறியும் - என்றது. மறுவற்ற பிர்ம வமிசத்தில் தோன்றித் தீக்கைகளாலே மலத்தைக் கழுவப்பட்ட கவுணியர் கோத்திரத்திலே வந்த சீகாழிப்பிள்ளை கட்டுரையை விரும்பிக் கழுமலம் என்கின்ற முதுபதியிலே எழுந்தருளினை. கம் என்கின்ற பிரமசிரசிலே உண்கின்றவனே அறியும் எ - று./n அனைய தன்மையை யாதலின் - என்றது. அத்தன்மையாகிய இயல்பினையுடையையாதலின் எ - று./n நின்னை நினைய வல்லவர் இல்லை நீணிலத்தே - என்றது. நின்னை நினைக்க வல்லார்களுக்குப் பிறப்பு இல்லை என்றவாறு.

பண் :

பாடல் எண் : 1

சேவுயருந் திண்கொடியான் றிருவடியே சரணென்று சிறந்தவன்பால்
நாவியலு மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள்கோயில்
வாவிதொறும் வண்கமல முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டுங் கழுமலமே.

பொழிப்புரை :

விடை வடிவம் எழுதி உயர்த்திய வலிமையான கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று நாவின்கண் பொருந்திய கலைமகளோடு வந்து நான்முகன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில்; வாவிகள்தோறும் மலரும் வளவிய தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும் செங்கழுநீர் மலர்கள் வாய்களையும், காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் கழுமலத்தின்கண் விளங்குவதாகும்.

குறிப்புரை :

`விடையுயர்த்த பெருமான் திருவடியே சரண்` என்று பிரமன் வழிபட்ட கோயில், நீர்ப்பூக்கள் நேரிழையார் அவயவங்களைக் காட்டும் கழுமலம் என்கின்றது. சே - இடபம். நா இயலும் மங்கை - சரஸ்வதி.

பண் :

பாடல் எண் : 2

பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தா னமரர்தொழ வமருங்கோயில்
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறு மிறைவனது தன்மைபாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயருங் கழுமலமே.

பொழிப்புரை :

அகன்ற விழிகளையும், பவளம் போலச் சிவந்த வாயையும் உடைய பெருமை மிக்க மலைமகளாகிய உமையம்மை பிரியாத திருமேனியில், அருமையான திருவெண்ணீற்றுப் பொடியை அழகுறப் பூசிய சிவபிரான் தேவர்கள் தன்னை வணங்க எழுந்தருளி யுள்ள திருக்கோயில், வள்ளன்மையோடு விளங்கும் நீண்ட கைகளை உடைய முத்தீ வேட்கும் அந்தணர்களின் வீடுகள்தோறும் கரியவான பெரிய கண்களை உடைய மகளிர் இறைவனுடைய இயல்புகளைக் கூறிக்கொண்டு கழற்சிக்காய் அம்மானை பந்து ஆகியன ஆடி மகிழும் கழுமல நகரின் கண் உள்ளது.

குறிப்புரை :

பெரியநாயகி பிரியாத மேனியில் திருநீற்றால் அலங்கரித்தான் கோயில் இது என்கின்றது. துவர் - பவளம். பீடு - பெருமை. தரும் தடக்கை - வழங்கும் விசாலமான கை. முத்தழலோர் - முத்தழல் ஓம்பும் அந்தணர். அந்தணர் வீட்டில் மகளிர் இறைவன் புகழைப்பாடி அம்மானை பந்து கழங்கு ஆடுகின்றார்கள் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 3

அலங்கன்மலி வானவருந் தானவரு மலைகடலைக் கடையப்பூதங்
கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி கண்டத்தோன் கருதுங்கோயில்
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக் கூன்சலிக்குங் காலத்தானுங்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய மெய்யர்வாழ் கழுமலமே.

பொழிப்புரை :

மலர்மாலை அணிந்த தேவர்களும் அசுரர்களும் கூடி அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்தபோது பூதங்களும் கலங்குமாறு எழுந்த கொடிய நஞ்சை, அவர்களைக் காத்தற்பொருட்டுத் தான் உண்டு, கரிய மணி போன்ற மிடற்றினன் ஆகிய சிவபிரான் தனது உறைவிடம் என்று மகிழ்வோடு நினையும் கோயில்; மலைகள் மீது தங்கி மழை பொழியும் மேகங்கள் மழை பொழிவதை மறத்தற்குரியதான மகரராசியில் சனி புகுந்து உணவு கிடைக்காமல் மக்கள் உடல் இளைக்கும் பஞ்ச காலத்திலும் மனம் கலங்காது பெரிய வள்ளன்மையோடு மக்களைக் காக்கும் உண்மையாளர் வாழும் கழுமலத்தின்கண் உள்ளது.

குறிப்புரை :

தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைய எழுந்த விடத்தை உண்டு கறுத்தகண்டன் உறைகோயில் இது என்கின்றது. அலங்கல் - மாலை. விலங்கல் - மலை. புயல் - மேகம். மீன் சனி புக்கு - மகர ராசியில் சனி புகுந்து. ஊன் சலிக்கும் காலத்தானும் - உடல் வாடிய காலத்திலும். பஞ்சகாலத்தும் கலங்காத வள்ளல்கள் வாழும் நகர் என்க.

பண் :

பாடல் எண் : 4

பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச் சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின் சூளிகைமேன் மகப்பாராட்டக்
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு மகிழ்வெய்துங் கழுமலமே.

பொழிப்புரை :

மண்ணுலக மக்களை வருத்தியும், தேவர்களை அஞ்சுமாறு செய்தும், வெற்றி பெறும் இயல்பினராய்க் கொடிய போரை நிகழ்த்தும் அவுணர்களின் முப்புரங்களும் அழிய ஒப்பற்ற வில்லை வளைத்த சிவபிரான் உறையும் கோயில்; கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய மகளிர் மாடவீடுகளின் உச்சியில் நின்று தம் குழந்தைகளைப் பாடிப் பாராட்டும் இசையை மேகங்கள் உலாவும் வானவெளியில் உலாவும் கந்தருவர்கள் கேட்டு மகிழும் கழுமல நகரில் உள்ளதாகும்.

குறிப்புரை :

உலகை வருத்தி, தேவர் அஞ்ச, வெல்லும் வகை வில்லை வளைத்து புரம்எரித்த இறைவன் கோயில் இது என்கின்றது. பார் - பூமி. நலிந்து - வருத்தி. வார் - கச்சு. சூளிகை - உச்சி. மகளிர் மாளிகையின்மேல் குழந்தைகளைத் தாலாட்ட அதனைத் தேவர் கேட்டு மகிழும் கழுமலம் என்க.

பண் :

பாடல் எண் : 5

ஊர்கின்ற வரவமொளி விடுதிங்க ளொடுவன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கை நகு வெண்டலைசேர் செஞ்சடையா னிகழுங் கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு சுதைமாடக் கழுமலமே.

பொழிப்புரை :

ஊர்ந்து செல்லும் அரவு, ஒளிவிடும் திங்கள், வன்னி, ஊமத்த மலர், நீர்வடிவான கங்கை, நகும் வெண்டலை ஆகியன சேர்ந்த செஞ்சடையை உடைய சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயில்; அழகு பொருந்திய வெள்ளி மலைகள் போல விளங்கி நிற்பனவும் மலர்களால் அலங்கரிக்கப்பெற்று அவற்றை மொய்க்கும் கரிய வண்டுகளின் கணங்களால் சூழப்பெற்றுக் கவின்மிகுவனவுமாய வெண்மையான சுதையால் அமைந்த மாட வீடுகள் நிறைந்த கழுமலநகரில் உள்ளது.

குறிப்புரை :

அரவம், மதி, வன்னி, ஊமத்தம், கங்கை, கபாலம் இவை பொருந்திய செஞ்சடையான் கோயில் கழுமலம் என்கின்றது. ஏர் - அழகு.

பண் :

பாடல் எண் : 6

தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து தழலணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ ழமையளித்த பெருமான்கோயில்
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப வதுகுடித்துக் களித்துவாளை
கருஞ்சகட மிளகவளர் கரும்பிரிய வகம்பாயுங் கழுமலமே.

பொழிப்புரை :

மெஞ்ஞானியர்க்குத் தரும் உண்மை ஞானத்தை எங்கட்கும் தந்தருள் என்று திருவடிகளை நினைந்து, தீ நடுவில் நின்று தவம் செய்யும் பெரிய சதுரப்பாடு உடையவர்கட்கும் மழை நீரில் நின்று தவமியற்றுபவர்கட்கும் பெருமை மிக்க தோழமையை வழங்கியருளும் சிவபிரான் உறையும் கோயில்; நெல்லறுவடை செய்த வயலில் முளைத்த தாமரை மலர்கள் தேனைச் சொரிய, அதனைக் குடித்துக் களித்த வாளை மீன்கள் வயற்கரைகளில் நிற்கும் பெரிய வண்டிகள் நிலைபெயரவும் கரும்புகள் ஒடியவும் துள்ளிப்பாயும் கழுமல வளநகரில் உள்ளதாகும்.

குறிப்புரை :

அருளுக என்று அடிநினைந்து, தீ நடுவில் தவஞ் செய்யும் சதுரர்க்கும், தோழமை தந்த பெருமான் கோயில் இது என்கின்றது. சரதம் - துணிவு. பீடு - பெருமை. அரிந்தவயல் - அறுத்த வயலிலே. அரவிந்தம் - தாமரை. வாளைமீன் தாமரைத் தேனைக் குடித்துப் பெரிய வண்டி இளக, கருப்பங்காடு விலகப் பாயும் கழுமலம் என்க.

பண் :

பாடல் எண் : 7

புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய் நிலனைந்தாய்க் கரண நான்காய்
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு வாய்நின்றா னமருங்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
கவணெறிகற் போற்சுனையிற் கரைசேரப் புள்ளிரியுங் கழுமலமே.

பொழிப்புரை :

மண், புனல் முதலிய பூதங்கள் ஐந்து. சுவை ஒளி முதலிய புலன்கள் ஐந்து. அவற்றுக்கு இடமாகிய மெய், வாய் முதலிய பொறிகள் ஐந்து. வாக்கு பாதம் முதலிய செய்கருவிகள் ஐந்து. மனம் புத்தி முதலிய உட்கருவிகள் நான்கு ஆகிய ஆன்ம தத்துவங்களாகவும் அவற்றின் பயனாகவும், உருவமாகவும் அருவமாகவும் நிற்கின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயில், தவம் செய்ய முயல்வோர் இறைவனை அருச்சிக்க மரங்களில் பூத்த மலர்களைப் பறித்துக் கொண்டு விடுத்த கொம்புகள் நிமிர்ந்து தாக்குதலால் மாமரத்தில் காய்த்த காய்கள் விண்டு கவணிலிருந்து வீசப்பட்ட கல்போல சுனைகளில் வீழ ஆங்குறைந்த பறவைகள் அஞ்சி அகலும் வளமான கழுமலவளநகரில் உள்ளதாகும்.

குறிப்புரை :

ஐம்பூதமாய், ஐம்புலனாய், ஐம்பொறியாய், நாற்கரணமாய், அவற்றின்பயனாய், உருவாய், அருவாய் நின்றான் அமரும் கோயில் இது என்கின்றது. நிலன் ஐந்து - புலன்கள் தோன்றுதற்கு இடமாய ஐம்பொறிகள். கரணம் நான்கு - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன. அவை அவை சேர்பயன் உருவாய் - பூத முதலியவற்றைச் சேர்ந்தபயனே வடிவாய்; என்றது பூதப்பயனாய சுவை முதலியதன் மாத்திரை ஐந்தும், புலனைந்தின் பயனாய பொறியின்பம் ஐந்தும், நிலனைந்தின் பயனாய புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற ஒழுக்கம் ஐந்தும், கரணம் நான்கின் பயனாய நினைத்தலும் புத்தி பண்ணலும் சிந்தித்தலும் இது செய்வேன் என அகங்கரித்து எழுதலுமாகிய நான்கும் கொள்ளப்பெறும். அல்ல வுருவாய் - இவையல்லாத அருவாய ஞானமாய். பூப்பறிப்போர் விட்ட பூங்கொம்புகள் சென்று தாக்க மாங்காய்கள் கவண்கல்லைப் போலச் சுனைக்கரையில் விழப் பறவைகள் அஞ்சியகலும்நகர் என்க.

பண் :

பாடல் எண் : 8

அடல்வந்த வானவரை யழித்துலகு தெழித்துழலு மரக்கர்கோமான்
மிடல்வந்த விருபதுதோ ணெரியவிரற் பணிகொண்டோன் மேவுங்கோயில்
நடவந்த வுழவரிது நடவொணா வகைபரலாய்த் தென்றுதுன்று
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற் கரைகுவிக்குங் கழுமலமே.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய தேவர்கள் பலரை அழித்து உலகை அச்சுறுத்தித் திரிந்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் வலிமைமிக்க இருபது தோள்களையும் கால் விரலால் நெரிய ஊன்றி அவனைப் பணிகொண்ட சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயிலை உடையது, நாற்று நடவந்த உழவர்கள் இவை நாற்று நடுவதற்கு இடையூறாய்ப் பரற்கற்கள் போலத் தோன்றுகின்றனவே என்று கூறுமாறு கடலின்கண் இருந்துவந்த சங்குகள் முத்துக்களை வயல்களில் ஈன்று குவிக்கும் கழுமலமாகும்.

குறிப்புரை :

தேவர்களை அழித்து உலகை வருத்தி உழலும் இராவணனது இருபது தோள்களும் நெரிய விரலூன்றிய சிவபெருமான் உறையுங்கோயில் நாற்று நடவந்த உழவர்கள் பருக்கைக் கல்லாக இருக்கிறதென்று எண்ணி முத்துக்களை வரப்பில் குவிக்கும் கழுமலம் என்கின்றது. அடல் - வலிமையோடு. ஒழித்து - கொன்று. மிடல் - வலிமை. பரல் ஆய்த்து - பருக்கைக் கல்லாயிற்று. துன்று - நெருங்கிய. இது நெய்தலோடு தழீஇய மருதம் என்பதை விளக்கிற்று.

பண் :

பாடல் எண் : 9

பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு கேழலுரு வாகிப்புக்கிட்
டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா வகைநின்றா னமருங்கோயில்
பாமருவுங் கலைப்புலவோர் பன்மலர்கள் கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து நின்றேத்துங் கழுமலமே.

பொழிப்புரை :

திருமகளின் கேள்வனாகிய திருமாலும், நான் முகனும் பன்றி உருவம் எடுத்தும், அன்னப்பறவை வடிவமெடுத்தும், தேடப் புகுந்து தம்மால் ஆமளவும் சென்று அடிமுடி காணாதவராய்த் தோற்று நிற்க, அழலுருவாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, பல்வகைப் பாக்களில் அமைந்துள்ள அருங்கலைகளை அறிந்த புலவர்கள் பல மலர்களைக் கொண்டு அருச்சித்து முறையோடு விருப்பங்கள் நிறைவேறக்கண்டு களிகூர்ந்து போற்றும் கழுமல நகராகும்.

குறிப்புரை :

பிரமனும் திருமாலும் அன்னமாயும், பன்றியாயும் அடிமுடிகாணப் பெறாதான் அமருங்கோயில் புலவர்கள் பூக்கொண்டு அணிந்து இஷ்டத்தை நிறைவேற்ற வழிபாடு செய்யும் கழுமலம் என்கின்றது. பூ மகள் தன் கோன் - இலக்குமி நாயகனாகிய திருமால். புள் - பறவையாகிய அன்னம். கேழல் - பன்றி. ஆம் அளவும் - ஆணவத்தால் விளைந்த தற்போதம் கெடுமளவும். காமனை - விருப்பம்.

பண் :

பாடல் எண் : 10

குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்றுகையில்
உணன்மருவுஞ் சமணர்களு முணராத வகைநின்றா னுறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி யிவையிசைய மண்மேற்றேவர்
கணமருவு மறையினொலி கீழ்ப்படுக்க மேற்படுக்குங் கழுமலமே.

பொழிப்புரை :

நற்குணங்கள் இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்களும், அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான் உறையும் கோயிலை உடையது, ஆடவர் பெண்டிரை மணக்கும் திருமணத்தில் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின் ஓசையும், பூசுரர்களாகிய அந்தணர்கள் ஓதும் வேத ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும்.

குறிப்புரை :

குணமில்லாமல் புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவமாக்காட்டியொழுகும் சமணர்களும், உணராதவகை நின்றான் கோயில், திருமணவொலியும், விழவொலியும் தம்முட் கலக்க, பூவுலகில் தேவர்கள் கூட்டம் சேருங்கால் உளதாகும் வேதவொலி அடங்க, அவை மேற்பட ஒலிக்கும் கழுமலம் என்கின்றது. வதுவை - தாலிகட்டுங் கல்யாணம்.

பண் :

பாடல் எண் : 11

கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து ளீசன்றன் கழன்மேனல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம் பந்தன்றா னயந்துசொன்ன
சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார் தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுவாண்டு முக்கணா னடிசேர முயல்கின்றாரே.

பொழிப்புரை :

கற்றவர்களாலே பணிந்து வழிபடப்பெறும் கழுமலத்துள் விளங்கும் இறைவருடைய திருவடிகளின் மேல், நல்லோர்க்கு நற்றுணையாகும் பெருந்தன்மையையுடைய ஞானசம்பந்தன் விரும்பிப் போற்றிப்பாடிய, ஓதுவார்களுக்குத் துணையாய் அமைந்த சொற்களையுடைய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர், திருமகள் கேள்வராய் இவ்வுலகம் முழுவதையும் அரசாண்டு சிவனடி கூடும் முயற்சியைச் செய்கின்றவராவர்.

குறிப்புரை :

கழுமலத்தீசன் திருவடிமேல், கற்றவர் நற்றுணையாகிய ஞானசம்பந்தன் சொன்ன திருப்பாடல் பத்தும் வல்லார் திருமகள் கணவராகி உலகமுழுதாண்டு சிவபெருமான் திருவடி சேரமுயல் கின்றார் என்கின்றது. சொல்துணை - ஓதுவார்க்குத் துணையான சொல்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 1

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.

பொழிப்புரை :

ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக்காலத்து, `அஞ்சேல்` என்றுரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது, நடனக்கலையில் வெற்றியுற்ற பெண்கள் நடனம் ஆட, அவ்வாடலுக்கேற்ற கூத்தொலிகளை எழுப்பும் முழவுகள் அதிர, அவற்றைக் கண்டு அஞ்சிய சிலமந்திகள் வானத்தில் கேட்கும் இடியோசை என்றஞ்சி மனம் சுழன்று மரங்களில் ஏறி மேகங்களைப் பார்க்கும் திருவையாறாகும்.

குறிப்புரை :

ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து கபம் மேலிட்டு வருந்துங்காலத்து அபயப் பிரதானம் செய்பவன் கோயில், வலம்வரும் பெண்கள் நடனம் செய்ய, அதற்குப் பக்கவாத்தியமாக முழவு அதிர, அவ்வொலியை மேகத்திடியோசையென மயங்கி, மந்திகள் மரம் ஏறி முகில் பார்க்கும் ஐயாறு என்கின்றது. ஐ - கபம். அலமந்து - சுழன்று. முகில் - மேகம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 2

விடலேறு படநாக மரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும்
அடலேறொன் றதுவேறி யஞ்சொலீர் பலியென்னு மடிகள்கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியி னுடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் கீன்றலைக்குந் திருவையாறே.

பொழிப்புரை :

கொல்லுதலாகிய குற்றம் பொருந்திய படத்தினையுடைய நாகத்தை இடையிற்கட்டி, மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு வலிமை பொருந்திய விடையேற்றின் மேல் ஏறி, அழகிய சொற்களைப் பேசும் மகளிரே! பிச்சையிடுங்கள் என்று கேட்டுச் சென்ற சிவபிரானது கோயிலையுடையது, வளைந்த மூக்கினையுடைய கடற் சங்குகள் கடலினின்றும் அலை வழியாக அதில் பாயும் காவிரியோடு வந்து இரவின்கண் திடலில் ஏறித்தங்கிச் செழுமையான முத்துக்களை ஈன்று சஞ்சரிக்கும் திருவையாறாகும்.

குறிப்புரை :

பாம்பைத் திருவரையிற்கட்டி, மலையரசன் மக ளோடும் விடையேறி, அம்மா பிச்சையிடுங்கள் என்னும் அடிகள் கோயில், கடற்சங்கம் காவிரியோடு மேல் ஏறி வந்து முத்தம் ஈன்றலைக்கும் ஐயாறு என்கின்றது. விடல் - வலிமை. வீடல் என்பதன் விகாரம் எனக்கொள்ளினும் அமையும். அஞ்சொலீர் - அழகிய சொற்களையுடையவர்களே. கங்குல் - இரவு. திடல் - மேடு. சுரி சங்கம் - சுரிந்த மூக்கினையுடைய சங்குகள்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 3

கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழினுழைந்து கூர்வாயா லிறகுலர்த்திக் கூதனீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கான லிரைதேருந் திருவையாறே.

பொழிப்புரை :

சிறந்த பிரமன், திருமால் ஆகியோரின் முழு எலும்புக்கூட்டை அணிந்தவரும், கயிலாய மலையில் உறைபவரும், கானப்பேர் என்னும் தலத்தில் எழுந்தருளியவரும், மங்கை பங்கரும் முத்தலைச் சூலப்படை ஏந்தியவரும், விடை ஊர்தியை உடையவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய கோயிலை உடையது, சிவந்த கால்களையுடைய வெண்ணிறக் குருகுகள் தேன் நிறைந்த சோலைகளில் நுழைந்து கூரிய தம் அலகுகளால் தம் இறகுகளைக் கோதிக் குளிர் நீங்கிப் பசுமையான சோலைகளில் தமக்கு வேண்டும் இரைகளைத் தேடும் திருவையாறாகும்.

குறிப்புரை :

கங்காளர் மங்கைபங்காளர் பயிலுங்கோயில், வெண்குருகு பொழிலில் நுழைந்து அலகால் சிறகைக் கோதி, உலர்த்தி, குளிர்நீங்கி இரைதேடும் ஐயாறு என்கின்றது. கொங்கு ஆள் அப்பொழில் - தேன் நிறைந்த அச்சோலை. கூதல் - குளிர். செங்கால் நல் வெண் குருகு எனப்பிரிக்க. கானல் - கடற்கரைச் சோலை. இது திணைமயக்கம் கூறியது.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 4

ஊன்பாயு முடைதலைகொண் டூருரின் பலிக்குழல்வா ருமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள்தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கமல மொட்டலருந் திருவையாறே.

பொழிப்புரை :

புலால் பொருந்தியதாய், முடை நாற்றமுடைத்தாய் உள்ள தலையோட்டைக் கையில் ஏந்தி, ஊர்கள்தோறும் பலியேற்று உழல்பவரும், உமை பாகரும், பாய்ந்து செல்லும் விடையேற்றை உடையவரும், நன்மைகளைச் செய்வதால் சங்கரன் என்ற பெயரை உடையவரும், தழல் உருவினருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, மான் துள்ளித்திரிய, வயலருகே உள்ள மரங்களில் ஏறி மந்திகள் பாய்வதால் மடுக்களில் தேன்பாய, அதனால் மீன்கள் துள்ளவும் செழுமையான தாமரை மொட்டுக்கள் அலரவும், விளங்குவதாகிய திருவையாறாகும்.

குறிப்புரை :

பிரமகபாலத்தை ஏந்தி ஊர்தோறும் பலிக்கு உழல்வா ராகிய தழல் உருவர் தங்கும் கோயில், மான்பாய, வயலருகேயுள்ள மரத்தில் ஏறி மந்திகள் மடுக்கள் தோறும் பாய்வதால் தேன் பாய, மீன்பாய, தாமரைகள் மலரும் ஐயாறு என்கின்றது. மான்: முல்லைக் கருப்பொருள்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 5

நீரோடு கூவிளமு நிலாமதியும் வெள்ளெருக்கு நிறைந்தகொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடு மரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே.

பொழிப்புரை :

கங்கைநதி, வில்வம், பிறைமதி, வெள்ளெருக்கு, கொன்றை மலர் நிறைந்த மாலை, குளிர்ந்த கரந்தை ஆகியவற்றைச் சடையின்கண் அணிந்த தத்துவனாகிய சிவபிரான் தங்கியுள்ள கோயிலையுடையது, மேகமண்டலம் வரை உயர்ந்து சென்று வானத்தை அளந்து மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்ததும், மணம் வீசும் வீடுகளை உடைய தேரோடும் வீதிகளில் அரங்குகளில் ஏறி அணிகலன்கள் புனைந்த இளம் பெண்கள் நடனம் ஆடுவதுமாகிய திருவையாறாகும்.

குறிப்புரை :

கங்கையோடு வில்வம் எருக்கம்பூ முதலியவற்றைச் சடையிலணிந்த தத்துவனார் தங்குங் கோயில், மேகமண்டலத்தையளாவி, விண்ணையளந்த பொழில்கள் சேர்ந்துள்ள தேரோடும் வீதியிலே உள்ள அரங்குகளில் மகளிர் நடமாடும் ஐயாறு என்கின்றது. கூவிளம் - வில்வம். கார் ஓடி - மேகம் பரந்து.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 6

வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தார மிசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.

பொழிப்புரை :

அனைத்துலகங்களுக்கும் வேந்தனாய், விண்ணவர் களுக்கும், மண்ணவர்களுக்கும் வழி காட்டும் வள்ளலாய், மணங்கமழும் கொன்றை மாலையைச் சடையின்மிசை அணிந்தவனாய் புண்ணிய வடிவினனாய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, மகளிர் காந்தாரப் பண்ணமைத்து இசைபாட அழகிய வீதிகளில் அமைந்த அரங்கங்களில் ஏறி அணிகலன்கள் பூண்ட இளம் பெண்கள் தேம், தாம் என்ற ஒலிக் குறிப்போடு நடனம் ஆடும் திருவையாறாகும்.

குறிப்புரை :

அரசாகி, வழிகாட்டும் வள்ளலாகிய பூங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியர் கோயில் காந்தாரப்பண்ணமைத்து மகளிர் இசைபாட, சேயிழையார் சிலர் அரங்கேறி நடமாடும் ஐயாறு என்கின்றது. தாமம் - மாலை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 7

நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.

பொழிப்புரை :

நீண்ட வானவெளியில் நின்று உலவி, தேவர்கள் வாழ்விடங்களை அழித்துவந்த முப்புரங்களையும், நீண்ட கூரிய அம்பு சென்று உலவும்படி கணை தொடுத்த வில்லாளியும், கயிலைமலை ஆளியுமாகிய சிவபிரான் சேர்ந்துறையும் கோயிலையுடையது, சிறுமலைகளில் குயில்கள் கூவவும், செழுமையான தேன் நிறைந்த மலர்களைத் தீண்டி மணம் மிகுந்து வருவதாகிய தென்றல் காற்று அடிவருடவும், அவற்றால் செழுமையான கரும்புகள் கண் வளரும் வளமுடைய திருவையாறாகும்.

குறிப்புரை :

வானவீதியில் நெருங்கிவரும் முப்புரங்களையும் அம்புதைக்கும் வண்ணம் வளைத்த வில்லாளி, மலையில் குயில்கூவத் தேன்பாய்ந்து மணம் நிறைந்த தென்றற்காற்று அடிவருடக் கரும்பு தூங்கும் ஐயாறு என்கின்றது. பிரசம் - தேன். இதனால் தென்றற்காற்றின் சௌரப்யம், மாந்தியம் என்ற இருகுணங்களும் கூறப்பட்டன. கண் வளரும் - கணுக்கள் வளரும் என்றுமாம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 8

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த வரக்கர்கோன் றலைகள்பத்தும்
மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ விளமேதி யிரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.

பொழிப்புரை :

அஞ்சாமல் கயிலை மலையை எடுத்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் தலைகள் பத்தையும் வலிமை பொருந்திய அவன் தோள்களோடு நெரியுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் புரிந்த சிவபிரான் எழுந்தருளிய கோயிலைஉடையது. இனிய தோற்றத்தையுடைய இளந்தென்னையில் காய்த்த நெற்று விழ, அதனைக் கண்டு அஞ்சிய எருமை இளங்கன்று அஞ்சி ஓடி செந்நெற் கதிர்களைக் காலால் மிதித்துச் செழுமையான தாமரைகள் களையாகப் பூத்த வயல்களில் படியும் திருவையாறாகும்.

குறிப்புரை :

சிறிதும் அஞ்சாது கயிலையைத் தூக்கிய இராவணன் தலைகள் பத்தையும் நெரித்து அவனுக்கு அருள்செய்த மைந்தர் கோயில், தேங்காய் நெற்று வீழ, எருமைக்கன்று பயந்தோடி நெல்வயலை மிதித்துத் தாமரை முளைத்திருக்கின்ற வயலிலே படியும் ஐயாறு என்கின்றது. மஞ்சு - வலிமை. மைந்து என்பதன் திரிபு. இன் சாயல் - இனிய நிழல். இஞ்சாயல் என ஆயிற்று எதுகைநோக்கி. இளமேதி - ஈனாக்கன்றாகிய எருமை. செஞ்சாலி - செந்நெல்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 9

மேலோடி விசும்பணவி வியனிலத்தை மிகவகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.

பொழிப்புரை :

அன்னமாய் மேலே பறந்து சென்று வானத்தைக் கலந்தும், அகன்ற நிலத்தை ஆழமாக அகழ்ந்தும் முயற்சியோடு தேடிய நான்முகன், திருமால் ஆகியோர் அறிய முடியாதவாறு ஓங்கி நின்ற சிவபிரான் உறையும் கோயிலையுடையது, கூத்தர்கள் கையில் வைத்து ஆட்டும் அபிநயக் கோலுடன் திரண்ட வளையல்களை அணிந்த மகளிர் கூத்தாட, திரண்ட தனங்களையுடைய அச்சேயிழையார் முகத்தில் கண்களாகிய சேல்மீன்கள் பிறழவும், வில் போன்ற புருவங்கள் மேலும் கீழும் செல்லவும், நடனமாடும் திருவையாறாகும்.

குறிப்புரை :

மேலே பறந்தும் நிலத்தைத் தோண்டியும் தேடிய அயனும் மாலும் அறியாதவண்ணம் அழலுருவானான் அமருங்கோயில், ஐயாறு என்கின்றது. அணவி - கலந்து. கோல் - கூத்தர் கையிற்கொள்ளும் அவிநயக்கோல். கோல் வளை - திரண்டவளை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 10

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர்
எண்டோளர் முக்கண்ண ரெம்மீச ரிறைவரினி தமருங்கோயில்
செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே.

பொழிப்புரை :

இழிசெயல்களில் ஈடுபடுவோராய்ச் சிறிய ஆடையினராய்த் திரியும் சமணர்களும், சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும், வஞ்சனை பொருந்திய உரைகளையும், கேளாமல், தொண்டர்களே! நீவிர் சிவபிரானை அடைந்து அவருக்கு ஆட்படுவீர்களாக. எட்டுத் தோள்களையும், முக்குணங்களையும் உடைய எம் ஈசனாகிய இறைவன் இனிதாக எழுந்தருளியிருக்கும் கோயிலையுடையது, பூக்களைச் செண்டுகள் போல் உருட்டி ஆட்டிக் கொண்டு வரும் நீர் நிறைந்த காவிரி செழுமையான மணிகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் திருவையாறு என்னும் தலமாகும்.

குறிப்புரை :

தொண்டர்களே! புறச்சமயிகளின் மொழிகளைக் கேளாதே ஆட்படுங்கள்; எம் இறைவர் அமருங்கோயில் காவிரி மணிகளைக் கொணர்ந்து எற்றும் திருவையாறு என்கின்றது. குற்றுடுக்கை - சிற்றாடை. மிண்டு - குறும்பான உரை. மேவி - விரும்பி. செண்டு - பூ உருண்டை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 11

அன்னமலி பொழில்புடைசூ ழையாற்றெம் பெருமானை யந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்து மிசையுங்கா லீசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகிற் றவநெறிசென் றெய்துவார் தாழாதன்றே.

பொழிப்புரை :

அன்னப் பறவைகள் நிறைந்த பொழில்கள் புடை சூழ்ந்து விளங்கும் திருவையாற்றுப் பெருமானை, அழகிய தண்மையான சீகாழிப்பதியில் வாழும் சிறப்பு மிக்க, வேதங்கள் பயிலும் நாவினன் ஆகிய புகழ் வளரும் ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்களாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதி, ஈசனடியை ஏத்துபவர்கள் புகழோடு தவநெறியின் பயனாக விளங்கும் அமரர் உலகத்தைத் தாழாமல் பெறுவர்.

குறிப்புரை :

ஐயாற்றெம்பெருமானைச் சம்பந்த சுவாமிகள் பாடல்களால் தோத்திரிப்பவர்கள் புகழோடு தேவருலகிற் செல்வார்கள் என்கின்றது. இசையோடு அமர் உலகு - தேவருலகு. தாழாது - தாமதியாது.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 1

மெய்த்தாறு சுவையுமே ழிசையுமெண் குணங்களும் விரும்புநால்வே
தத்தாலு மறிவொண்ணா நடைதெளியப் பளிங்கேபோ லரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் கருதுமூ ருலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா ரிக்கொழிக்கு முதுகுன்றமே.

பொழிப்புரை :

மெய்யினால் அறியத்தக்கதாகிய ஆறு சுவைகள் ஏழிசைகள், எண் குணங்கள், எல்லோராலும் விரும்பப்பெறும் நான்கு வேதங்கள் ஆகியவற்றால் அறிய ஒண்ணாதவனும், அன்போடு நடத்தலால் தெளியப் பெறுபவனும், பளிங்கு போன்றவனும், உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், ஆறு சமயங்களாலும் மாறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப் பெறும் ஒரே தலைவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் ஊர், தெளிந்த நீர் நிறைந்த மணிமுத்தாறு மலையின்கண் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை வாரிக்கொணர்ந்து கரையிற் கொழிக்கும் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

சுவைகளும், இசையும், எண்குணங்களும், வேதமும் அறியவொண்ணாத தலைவன், அகச்சமயமாறுக்கும் ஒரே தலைவன் திருவுளங்கொண்ட ஊர், மணிமுத்தாறு மூங்கில் உதிர்த்த முத்துக்களைக் கொழிக்கும் திருமுதுகுன்றமே என்கின்றது. மெய்த்து ஆறு சுவை - உடற்கண்ணதாகிய உப்பு, புளிப்பு, கார்ப்பு, கைப்பு, தித்திப்பு, துவர்ப்பு என்னும் ஆறுசுவைகள். சுவை, இசை, வேதம் முதலியன மாயா காரியங்கள் ஆதலின் அவற்றால் அறியப்பெறாதவன் ஆயினன் இறைவன். பளிங்கே போல் - வெண்பளிங்கு போல், `சுத்த ஸ்படிக சங்காசம்` என்று இறைவனுக்கு நிறம் கூறுகிறது சிவாகமம். வெதிர் - மூங்கில்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 2

வேரிமிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம் புரிந்தளித்த புராணர்கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல மலருதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளங் கிளர்தென்றல் திருமுன்றிற் புகுந்துலவு முதுகுன்றமே.

பொழிப்புரை :

தேன் மணம் மிகும் கூந்தலையுடைய உமையம்மை யோடு வேட்டுவ உருவந்தாங்கி அருச்சுனன் தவம் புரியும் கொடிய கானகத்திற்குச் சென்று அவனோடு போர் உடற்றி அவன் பொறுமையை அளந்து அவனுக்குப் பாசுபதக் கணையை விரும்பி அளித்த பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மழையால் செழித்த மணமுடைய சோலைகளில் கனிகளையும் பல மலர்களையும் உதிர்த்து, நீர் நிலைகளைப் பொருந்தி வலிய வளமுடைய தென்றல் காற்று அழகிய வீடுகள் தோறும் புகுந்து உலவும் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

விசயனது பொறுமையளந்து பாசுபதம் அருளிய பரமன் கோயில், தென்றற்காற்று பொழிலில் கனியுதிர்த்து, மலர்சிந்தி, முன்றிலில் உலாவும் முதுகுன்றம் என்கின்றது. வேரி - தேன். மலர் உதிர்த்து என்றது தென்றலின் மணமுடைமையையும், கயம் முயங்கி என்பது குளிர்மையையும் உணர்த்தின. கயம் - குளம். மூரி - வலிமை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 3

தக்கனது பெருவேள்விச் சந்திரனிந் திரனெச்ச னருக்கனங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும்வருக்கை கதலிகமு குயர்தெங்கின் குலைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா நீள்வயல்சூழ் முதுகுன்றமே.

பொழிப்புரை :

தக்கன் செய்த பெருவேள்வியில் சந்திரன், இந்திரன், எச்சன், சூரியன், அனலோன், பிரமன், முதலியவர்களை வீரபத்திரனைக் கொண்டு தண்டித்த விமலனாகிய சிவபெருமான் உறையும் கோயில், இனிய மாங்கனிகள், வளமான பலாக்கனிகள், வாழைக் கனிகள் ஆகிய முக்கனிகளின் சாறு ஒழுகிச் சேறு உலராத நீண்ட வயல்களும் குலைகளையுடைய கமுகு, தென்னை ஆகிய மரங்கள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்த திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

சிவத்துரோகியான தக்கன் யாகத்திற்குச் சென்ற குற்றத்திற்காகச் சந்திரன் முதலியோரை முறைப்படி தண்டித்த இறைவன் கோயில், முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா வயல்சூழ்ந்த முதுகுன்றம் என்கின்றது. எச்சன் - யாகபுருஷன். அருக்கன் - சூரியன். அங்கி - அக்கினி. விதாதா - பிரமன். கொக்கு - மாமரம். வருக்கை - பலா. கதலி - வாழை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 4

வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோ னிந்திரன்மால் சென்றிரப்பத் தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநா ணரியெரிகால் வாளியாக
மும்மதிலு நொடியளவிற் பொடிசெய்த முதல்வனிட முதுகுன்றமே.

பொழிப்புரை :

கொடுமை மிகுந்து முப்புரங்களில் வாழும் அவுணர்கள் தீங்கு செய்ய அதனால் தங்கள் வலிமை அழிந்து தேவர்களும், பிரமனும், இந்திரனும், திருமாலும் சென்று தங்களைக் காத்தருளுமாறு வேண்ட, தேவர்களைத் தேராகவும், மேகங்கள் தவழும் உயர்ச்சியையுடைய மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், திருமால், அனலோன், வாயுவாகிய முத்தேவர்களையும் அம்பாகவும் கொண்டு அவுணர்களின் மும்மதில்களையும் ஒரு நொடிப் பொழுதில் பொடி செய்ததலைவனாகிய சிவபிரானது இடம், திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

முப்புராதிகள் தீங்கு செய்ய, தேவர்கள் வேண்டு கோளின் வண்ணம், அவர்களைத் தேர் முதலிய சாதனங்களாகக் கொண்டு எரித்த முதல்வனிடம் முதுகுன்றம் என்கின்றது. விறல் - வலிமை. மாசுணம் - வாசுகியென்னும் பாம்பு. அரி, எரி, கால் வாளியாக - திருமாலும், அங்கியும், காற்றுமாகிய முத்தேவர்களும் அம்பாக.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 5

இழைமேவு கலையல்கு லேந்திழையா ளொருபாலா யொருபாலெள்கா
துழைமேவு முரியுடுத்த வொருவனிருப் பிடமென்ப ரும்பரோங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு மகவினொடும் புகவொண்கல்லின்
முழைமேவு மால்யானை யிரைதேரும் வளர்சாரன் முதுகுன்றமே.

பொழிப்புரை :

மேகலை என்னும் அணிகலன் பொருந்திய அல்குலையும், அழகிய முத்துவடம் முதலியன அணிந்த மேனியையும் உடையவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு தனக்குரியதான ஒருபாகத்தே மான்தோலை இகழாது உடுத்த ஒப்பற்றவனாகிய சிவபிரானது இருப்பிடம், ஊரின் நடுவே உயர்ந்த மூங்கில்மேல் ஏறி அமர்ந்த மடமந்தி, மழை வருதலைக் கண்டு அஞ்சித்தன் குட்டியோடும் ஒலி சிறந்த மலைக்குகைகளில் ஒடுங்குவதும், பெரியயானைகள் இரை தேர்ந்து திரிவதும் நிகழும் நீண்ட சாரலையுடைய திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

ஒருபால் உமை விளங்க. ஒருபால் மான்தோலையுடுத்திய ஒருவன் இருப்பிடம் மந்தி மழையைக் கண்டு குட்டியோடு குகையையடைய, யானை இரைதேடும் முதுகுன்றம் என்கின்றது. இழை - அணி. எள்காது - இகழாது. உழை மேவும் உரி - மானினது தோல். கழை - மூங்கில். மந்தி - பெண் குரங்கு. முழை - குகை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 6

நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த நாதனிடம் நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு கரையருகு மறியமோதித்
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார்செந் தாமரைகண் முகமலர வயல்தழுவு முதுகுன்றமே.

பொழிப்புரை :

சிரித்தலைப் பொருந்திய வெண்மையான தலை மாலையை முடியில் அணிந்துள்ள நாதனாகிய சிவபிரானது இடம், நல்ல மணிமுத்தாறு வகை வகையான மலைபடு பொருள்களைக் கொண்டு நெல், கழுநீர், குவளை ஆகியன சாயுமாறு பாய்ந்து வந்து, தாமரை மொட்டுக்கள் முகம் மலரும்படி வயலைச் சென்றடையும் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

தலைமாலையணிந்த தலைவனிடம், மணிமுத்தாறு மலைப்பண்டங்களைக் கொண்டு இருகரையிலும் எடுத்து எறிந்து கரையையுடைத்துக்கொண்டு, நெல்லும் கழுநீரும் குவளையும் சாயப்பாய்ந்து, தாமரை மலர வயலைத்தழுவும் முதுகுன்றம் என்கின்றது. நகை - பல். வரைப்பண்டம் - மலைபடுதிரவியம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 7

அறங்கிளரு நால்வேத மாலின்கீ ழிருந்தருளி யமரர்வேண்ட
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தி னொன்றறுத்த நிமலர்கோயில்
திறங்கொண்மணித் தரளங்கள் வரத்திரண்டங் கெழிற்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி முத்துலைப்பெய் முதுகுன்றமே.

பொழிப்புரை :

அறநெறி விளங்கித் தோன்றும் நான்கு வேதங்களை ஆலின்கீழ் இருந்து சனகாதியர்க்கு அருளி, தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, செந்நிறம் விளங்கும் தாமரையில் எழுந்தருளிய பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த நிமலனாகிய சிவ பிரானது கோயில், முற்றிய மாணிக்கங்கள். முத்துக்கள் ஆகியன ஆற்றில் வருதலைக் கண்டு அழகிய குறவர் குடிப்பெண்கள் திரண்டு சென்று அவற்றை முறங்களால் வாரிமணிகளை விலக்கிப் புடைத்து முத்துக்களை அரிசியாக உலையில் பெய்து சிற்றில் இழைத்து விளையாடி மகிழும் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

ஆலின் கீழிருந்து சனகாதியர்க்கு வேதப்பொருளை அருளிச்செய்து, தேவர் வேண்டுகோட்கிரங்கிப் பிரமன் சிரங்கொய்த நிமலர் கோயில், குறச்சிறுமியர் முறத்தால் முத்தைக் கொழித்துச் சிற்றுலையிற் கொட்டும் முதுகுன்றம் என்கின்றது. தரளம் - முத்து. மணி - மாணிக்கங்கள்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 8

கதிரொளிய நெடுமுடிபத் துடையகட லிலங்கையர்கோன் கண்ணும்வாயும்
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை மலையைநிலை பெயர்த்தஞான்று
மதிலளகைக் கிறைமுரல மலரடியொன் றூன்றிமறை பாடவாங்கே
முதிரொளிய சுடர்நெடுவாண் முன்னீந்தான் வாய்ந்தபதி முதுகுன்றமே.

பொழிப்புரை :

கதிரவன் போன்ற ஒளியுடைய நீண்ட மகுடங்களைச் சூடிய பத்துத் தலைகளையுடைய இராவணன் கண்களும், வாயும், ஒளிபரவும் தீ வெளிப்படச் சினங்கொண்டு பெரிய கயிலாயமலையை நிலைபெயர்த்த காலத்து, மதில்கள் சூழ்ந்த அளகாபுரிக்கு இறைவனாகிய குபேரன் மகிழுமாறு, மலர்போன்ற தன் திருவடி ஒன்றை ஊன்றி அவ் இராவணனைத் தண்டித்துப் பின் அவன் மறைபாடித் துதித்த அளவில் அவனுக்கு மிக்க ஒளியுள்ள நீண்ட வாளை முற்படத்தந்த சிவபிரான் எழுந்தருளிய பதி திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

இராவணனுக்கு மறக்கருணையும் அறக்கருணையும் காட்டியாட்கொண்டவனிடம் முதுகுன்றம் என்கின்றது. அளகைக்கு இறை முரல - குபேரன் தன் பகைவனாகிப் புஷ்பக விமானத்தைக் கவர்ந்த இராவணன் ஒழிந்தான் என்று மகிழ்ச்சி ஒலிக்க.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 9

பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும் பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந் துறநாடி யுண்மைகாணாத்
தேவாருந் திருவுருவன் சேருமலை செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ மேலுயர்ந்த முதுகுன்றமே.

பொழிப்புரை :

தாமரை மலராகிய அழகிய தவிசின்மிசை விளங்கும் பிரமனும், அழகிய துளசிமாலை அணிந்த திருமாலும், அன்னமாகவும், பன்றியாகவும் உருமாறி வானில் பறந்தும், நிலத்தை அகழ்ந்தும் இடைவிடாது தேடியும் உண்மை காண இயலாத தெய்வஒளி பொருந்திய திருவுருவை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய மலை, ஊழிக் காலத்து உலகத்தை மூடுமாறு முழங்கி வந்த கடல்நீர் கீழ்ப்படத் தான் மேல் உயர்ந்து தோன்றும் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

அயனும், மாலும் ஆழ்ந்தும் உயர்ந்தும் தேடியும் அறியமுடியாத இறைவனிடம், ஊழியில் உயர்ந்த முதுகுன்றம் என்கின்றது. தவிசு - ஆசனம். துழாய் - துளசி. ஓவாது - இடைவிடாது. கழுகு - பறவையின் பொதுப் பெயராய் அன்னத்தையுணர்த்தியது. ஏனம் - பன்றி.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 10

மேனியிற்சீ வரத்தாரும் விரிதருதட் டுடையாரும் விரவலாகா
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாது முள்ளுணர்ந்தங் குய்மின்றொண்டீர்
ஞானிகளா யுள்ளார்க ணான்மறையை முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம்புரியு முதுகுன்றமே.

பொழிப்புரை :

உடம்பில் துவராடை புனைந்த புத்த மதத்தினரும், விரிந்த ஓலைத் தடுக்கை உடையாகப் பூண்ட சமணர்களும், நட்புச் செய்து கோடற்கு ஏலாதவராய்த் தங்கள் உடலை வளர்த்தலையே குறிக்கோளாக உடைய ஊனிகளாவர். அவர்கள் சொற்களைக் கேளாது ஞானிகளாக உள்ளவர்களும், நான்மறைகளை உணர்ந்தவர்களும், ஐம்புலன்களை வென்ற மௌனிகளும், முனிவர்களாகிய செல்வர்களும், தனித்திருந்து தவம் புரியும் திருமுதுகுன்றை உள்ளத்தால் உணர்ந்து, தொண்டர்களே! உய்வீர்களாக.

குறிப்புரை :

தொண்டர்களே! புத்தரும் சமணருமாகிய ஊனிகளின் சொற்கொள்ளாது உள்ளுணர்ந்து உய்யுங்கள்! ஞானிகள் வேதத்தையுணர்ந்து ஐம்புலன்களையும் அடக்கி, மோனிகளாய்த் தனித்திருந்து தவம் புரியும் இடம் முதுகுன்றம் என்கின்றது. ஞானி - அறிவை வளர்ப்பவன். ஊனி - உடம்பை வளர்ப்பவன்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 11

முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யு முதுகுன்றத் திறையைமூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய கழுமலமே பதியாக்கொண்டு
தழங்கெரிமூன் றோம்புதொழிற் றமிழ்ஞான சம்பந்தன் சமைத்தபாடல்
வழங்குமிசை கூடும்வகை பாடுமவர் நீடுலக மாள்வர்தாமே.

பொழிப்புரை :

ஆரவாரத்தோடு நிறைந்துவரும் மணிமுத்தாறு வலஞ்செய்து இறைஞ்சும் திருமுதுகுன்றத்து இறைவனை, முதுமையுறாததாய்ப் பழமையாகவே பன்னிரு பெயர்களைக் கொண்டுள்ள கழுமலப்பதியில் முத்தீ வேட்கும் தொழிலையுடைய தமிழ் ஞானசம் பந்தன் இயற்றிய இப்பதிகப் பாடல்களைப் பொருந்தும் இசையோடு இயன்ற அளவில் பாடி வழிபடுபவர் உலகத்தை நெடுங்காலம் ஆள்வர்.

குறிப்புரை :

முதுகுன்றநாதனைப் பன்னிருநாமம் படைத்த பழம் பதியாகிய காழியையிடமாகக்கொண்ட, தழலோம்பு தொழிலுடைய தமிழ் ஞானசம்பந்தன் அமைத்த பாடல்களை, இசை கூடும் வகை பாடுபவர்கள் உலகத்தை நெடுங்காலம் ஆள்வர் என்கின்றது. தழங்கு - ஒலிக்கின்ற. எரிமூன்று - ஆகவனீயம், காருகபத்யம், தக்ஷிணாக்கினி என்பன.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 1

ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று
நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோ னின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோது மோசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லு மிழலையாமே.

பொழிப்புரை :

அழகிய வடவால மரத்தின்கீழ் வீற்றிருந்து சனகாதி முனிவர்களுக்குக் கருணையோடு நேரிய நால்வேதங்களின் உண்மைப்பொருளை உரைத்து அவர்கட்குச் சிவஞானநெறி காட்டியருளிய சிவபிரானது கோயில், நிலவுலகில் வாழும் வேதப்புலவர்கள் பல நாள்களும் தம்மிடம் பயிலும் மாணவர்களுக்கு வேதம் பயிற்றுவிப்பதைக் கேட்டுத் தேன் நிறைந்த பொழில்களில் வாழும் கிளிகள் நாள்தோறும் வேதங்களுக்குப் பொருள் சொல்லும் சிறப்பினதாய திருவீழிமிழலை ஆகும்.

குறிப்புரை :

வடவாலமரத்தின்கீழ் நால்வர்க்கு அறம் உரைத்து ஒளிநெறியளித்த இறைவன்கோயில், பண்டிதர்கள் பலகாற்பயிலும் ஓசையைக்கேட்டு, கிளிகள் வேதப்பொருள் சொல்லும் திருவீழிமிழலையாம் என்கின்றது. ஏர் - அழகு. எழுச்சியுமாம். ஈரிருவர் - சனகர் முதலிய தேவமுனிவர் நால்வர். `நேரிய நான் மறைப்பொருள்` எனவே இங்ஙனம் இறைவன்முன் உணராத பரம்பரையினர் தற்போத முனைப்பால் நேர்மையற்ற பொருளுங்கொள்வர் என்பது அமைந்து கிடந்தது. ஒளிசேர் நெறி - சிவஞான நெறி. வேரி - தேன்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 2

பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத் தாகப்புத் தேளிர்கூடி
மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட கண்டத்தோன் மன்னுங்கோயில்
செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு மிலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல்
வெறிகதிர்ச்சா மரையிரட்ட விளவன்னம் வீற்றிருக்கும் மிழலையாமே.

பொழிப்புரை :

தேவர்கள் அனைவரும் கூடி மந்தரமலையை மத் தாக நாட்டி உடலில் புள்ளிகளை உடைய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றிச் சுருண்டு விழும் அலைகளை உடைய கடலைக் கடைந்த காலத்து எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவ னாகிய சிவபிரான் உறையும் கோயில், செறிந்த இதழ்களை உடைய தாமரை மலராகிய இருக்கையில் விளங்கும், தாமரை இலையாகிய குடையின்கீழ் உள்ள இளஅன்னம், வயலில் விளையும் செந்நெற் கதிர்களாகிய சாமரம் வீச வீற்றிருக்கும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

வாசுகியை கடைகயிறாகச் சுற்றி, மந்தரமே மத்தாக, தேவர்கள் கூடி பாற்கடலைக் கடைந்தகாலத்து எழுந்த விடத்தை உண்ட கண்டன் மன்னுங்கோயில், தாமரையாசனத்தில் இலை குடையாக, செந்நெற்கற்றை சாமரையாக, இளஅன்னம் வீற்றிருக்கும் மிழலையாம் என்கின்றது. பொறியரவம் - படப்பொறிகளோடு கூடிய வாசுகியென்னும் பாம்பு. மறி கடல் - அலைகள் மறிகின்ற கடல். செய் - வயல். வெறி - மணம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 3

எழுந்துலகை நலிந்துழலு மவுணர்கடம் புரமூன்று மெழிற்கணாடி
உழுந்துருளு மளவையினொள் ளெரிகொளவெஞ் சிலைவளைத்தோ னுறையுங்கோயில்
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநகம் முகங்காட்டக் குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் வாய்காட்டும் மிழலையாமே.

பொழிப்புரை :

வானத்திற் பறந்து திரிந்து உலக மக்களை நலிவு செய்து உழன்ற அசுரர்களின் முப்புரங்களையும் அழகிய கண்ணாடியில், உளுந்து உருளக்கூடிய கால அளவிற்குள் ஒளி பொருந்திய தீப்பற்றி எரியுமாறு கொடிய வில்லை வளைத்தவனாகிய சிவபிரான் உறையும் கோயில், செழுமையான முத்துக்கள் மகளிரின் பற்களையும், தாமரைகள் முகங்களையும் துள்ளிக்குதித்து நீர்மேல் விழும் கயல்கள் கண்களையும், ஒளி பொருந்திய பவளங்கள் வாய்களையும் காட்டும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

உலகை வருத்தும் அவுணர்தம் புரத்தைக் கண்ணாடி யில் உழுந்துருளும் காலத்தில் எரித்த இறைவன்கோயில், முத்து, மகளிர் பல்காட்ட, தாமரை, முகங்காட்ட, துள்ளுங்கயல், விழிகாட்ட, பவளம் வாய்காட்டும் வீழிமிழலையாம் என்கின்றது. நலிந்து - வருத்தி. உழுந்து உருளும் அளவை - ஓர் உளுந்து உருளக்கூடிய காலச்சிறுமையில். தரளம் - முத்து. கோகநகம் - தாமரை. வில் - ஒளி.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 4

உரைசேரு மெண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரு முகின்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கு மிழலையாமே.

பொழிப்புரை :

நூல்களில் உரைக்கப் பெறும் எண்பத்துநான்கு லட்சம் பிறப்பு வேறுபாடுகளையும் முறையாகப் படைத்து, அவ்வவற்றின் உயிர்கட்கு உயிராய் அங்கங்கே விளங்கி நிற்போனாகிய சிவபிரான் உறையும் கோயில், மலைகளில் தங்கியுள்ள மேகங்கள் எழுந்து வந்து முழவுபோல ஒலிக்க, ஆண்மயில்கள் பல நடனமாட, வண்டுகள்பாட, பரிசிலாகக் கொன்றை மரங்கள் மணம் பொருந்திய மலர் இதழ்களாகிய பொன்னைத் தர மெல்லிய காந்தள் மலர்கள் கை போல விரிந்து அதனை ஏற்கும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

எண்பத்து நான்கு லட்சம் யோனிபேதங்களையும் படைத்து, அவற்றின் உயிர்க்குயிராக நிற்கும் இறைவன் கோயில், முகிலாகிய முழவம் ஒலிக்க, மயில் நடமாட, வண்டுபாட, கொன்றைமரம் பொற்பரிசில் வழங்க, காந்தள் கையேற்று வாங்கும் மிழலையாம் என்கின்றது. உரைசேரும் - நூல்களில் உரைக்கப் பெறுகின்ற. முகில் - மேகம். விரை - மணம். இதழி கொன்றை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 5

காணுமா றரியபெரு மானாகிக் காலமாய்க் குணங்கண்மூன்றாய்ப்
பேணுமூன் றுருவாகிப் பேருலகம் படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை யுத்தமனை யிறைஞ்சீரென்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப போலோங்கு மிழலையாமே.

பொழிப்புரை :

காண்டற்கரிய கடவுளாய், மூன்று காலங்களாய், மூன்று குணங்களாய் எல்லோராலும் போற்றப் பெறும் அரி, அயன், அரன் ஆகிய மும்மூர்த்திகளாய், பெரிதாகிய இவ்வுலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைப் புரியும் சிவபிரான் உறையும் கோயில், மூங்கில்களிற் கட்டிய நெடிய கொடிகள் நிலை பேறு உடையவனாய் நிற்கும் மேலான சிவபிரானாகிய, உத்தமனை, வந்து வழிபடுவீர்களாக என்று தேவர்களை அழைப்பன போல, அசைந்து ஓங்கி விளங்கும் திருவீழிமிழலையாகும். மூன்று உருவுக்கு ஏற்ப அழித்தல் வருவிக்கப்பட்டது.

குறிப்புரை :

காணுதற்கரிய கடவுளாகி, காலம் குணம் இவையுமாகி, எல்லாரானும் போற்றப்பெறும் பிரம விஷ்ணு ருத்ரனாகி, பெரிய உலகத்தைப் படைத்தும் அளிக்கும் பெருமான்கோயில், இறைவனை வணங்குங்கள் என்று கொடிகள் தேவரையழைக்கும் வீழிமிழலை என்கின்றது. காலமாய் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று காலமாய்; என்றது எல்லாவற்றையும் அடக்கித் தம் எல்லைக்குள் இன்பத்துன்பங்களை எய்தி நடக்கச்செய்தலின். குணங்கள் மூன்றாய் - சாத்துவிகம் முதலிய குணங்கள் மூன்றாய். பேணும் - போற்றப் பெறுகின்ற. படைத்து அளித்து எனவே அழித்தலாகிய இவர்தொழில் சொல்லாமலே பெறப்பட்டது. தாணு - நிலைத்த பொருள். தூண் வடிவு என்றுமாம். வேணுவார்கொடி - மூங்கிற்றண்டில் கோக்கப்பெற்ற நீளமான கொடிகள். விண்ணோர்கள் போகத்தால் மோகித்து மறந்திருத்தலின் கொடிகள் நினைவூட்டி அழைக்க வேண்டியதாயிற்று.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 6

அகனமர்ந்த வன்பினரா யறுபகைசெற் றைம்புலனு மடக்கிஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் கந்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணஞ்செய்யு மிழலையாமே.

பொழிப்புரை :

உள்ளத்தில் பொருந்திய அன்புடையவராய், காமம் முதலிய அறுபகைகளையும் கடிந்து, சுவை ஒளி முதலிய ஐம்புலங்களை அடக்கிச் சிவஞானத்தில் திளைத்திருப்பவர்களாகிய துறவிகளின் இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்கும் பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மணிகளும் சங்கினங்களும் விளங்கும் தூயதான நீர் நிலைகளில் முளைத்த தாமரை மலராகிய தீயில் மிகுதியாக வளர்ந்த புன்கமரங்கள் பொரி போல மலர்களைத் தூவி, திருமண நிகழ்ச்சியை நினைவுறுத்திக் கொண்டிருப்பதாகிய திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

உள்ளன்புடையாராக அரிஷட்வர்க்கங்களை அழித்து, ஐம்புலன்களையும் அடக்கிய சிவஞானச் சேர்க்கையுடையோர்களின் இதயத் தாமரையில் எழுந்தருளியிருக்கும் இறைவன் கோயில் அழகிய இடத்தில் சங்குகளாகிற சுற்றம்விளங்க தாமரையாகிய தீயில் புன்கம் பொரிதூவி மணங்களைச் செய்யும்மிழலை என்கின்றது. உள்ளப் புண் டரிகம் - இதயதாமரை. தகவு - தகுதி. நீர் மணித்தலத்து - நீரோட்டத்தோடு கூடிய இரத்தினங்கள் அழுத்தப்பெற்ற இடத்து. சங்கு உள வர்க்கம் திகழ - சங்குகளாகிய உள்ளசுற்றம் விளங்க. சலசத்தீயில் - தாமரைப் பூவாகிய தீயில். மலர்ந்த தாமரையைத் தீக்கு ஒப்பிடுவது மரபு.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 7

ஆறாடு சடைமுடிய னனலாடு மலர்க்கைய னிமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடுங் குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய வுருவாகிச் செவ்வழிநற் பண்பாடும் மிழலையாமே.

பொழிப்புரை :

கங்கையணிந்த சடைமுடியை உடையவனும், மலர் போன்ற கரத்தில் அனலை ஏந்தியவனும், இமவான் மகளாகிய பார்வதிதேவி தன் ஒரு கூறாக விளங்கத் திகழும் திருமேனியை உடையவனும், கூத்தாடும் குணமுடையவனும், ஆகிய சிவபிரான் மனங் குளிர்ந்து எழுந்தருளியிருக்கும் கோயில், சேற்றில் முளைத்த செங்கழுநீர் மலர்களின் மகரந்தங்களில் படிந்து தேனையுண்டு, தன் இயல்பான நிறம் மாறிச் சிவந்த நிறம் உடையதாய்த் தோன்றும் வண்டு செவ்வழிப் பண்ணைப் பாடிக்களிக்கும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

ஆறுசேர் முடியன், அனல்சேர் கையன், உமையொரு கூறன். கூத்தன்கோயில், செங்கழுநீர்ப்பூவின் மகரந்தத்தில் ஆடி, தேன்குடித்துச் சிவந்த வண்டு வேற்றுவடிவுகொண்டு செவ்வழிப் பண்ணைப்பாடும் மிழலையாம் என்கின்றது. தாது - மகரந்தம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 8

கருப்பமிகு முடலடர்த்துக் காலூன்றிக் கைமறித்துக் கயிலையென்னும்
பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள் நெரித்தவிரற் புனிதர்கோயில்
தருப்பமிகு சலந்தரன்ற னுடல்தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு
விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி விமானஞ்சேர் மிழலையாமே.

பொழிப்புரை :

கர்வம் மிகுந்த உடலை வருத்தி நெருங்கிச் சென்று காலை ஊன்றிக் கைகளை வளைத்துக் கயிலை என்னும் மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்ட அரக்கனாகிய இராவணனின் பொன்முடி தரித்த தலைகளையும் தோள்களையும் நெரித்து அடர்த்த கால் விரலையுடைய தூயவராகிய சிவபிரானார் உறையும் கோயில், செருக்கு மிக்க சலந்தரன் என்னும் அவுணனது உடலைத் தடிந்த சக்கராயுதத்தைப் பெற விரும்பிப் பெருவிருப்போடு இவ்வுலகில் திருமால் வழிபாடு செய்ததும், வானிலிருந்து இழிந்த விமானத்தை உடையதுமாகிய திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

கயிலையை எடுக்கலுற்ற இராவணனை நெரித்த விரலையுடைய பெருமான்கோயில், சலந்தரன் உடலையழித்த சக்கரத்தைத் திருமால் வழிபட்டுப்பெற்ற திருவீழிமிழலை என்கின்றது. கருப்பமிகும் உடல் - கருவம் மிகுந்த உடல் என்றது அப்பிராகிருதமான கயிலையைத்தீண்டும் உரிமையுங் கூட, பிராகிருத மேனி தாங்கிய இவற்கில்லை என்பது, உணர்த்தியவாறு. தருப்பம் - செருக்கு, மால் வழிபாடு செய்த வரலாறு இத்தலத்து நிகழ்ச்சி. இழிவிமானம் - விண்ணிழி விமானம். இது இத்தலத்து விமானம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 9

செந்தளிர்மா மலரோனுந் திருமாலும் ஏனமோ டன்னமாகி
அந்தமடி காணாதே யவரேத்த வெளிப்பட்டோ னமருங்கோயில்
புந்தியினான் மறைவழியே புற்பரப்பி நெய்சமிதை கையிற்கொண்டு
வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர் சேரூமூர் மிழலையாமே.

பொழிப்புரை :

சிவந்த இதழ்களையுடைய பெரிய தாமரை மலரின்மேல் உறையும் பிரமனும், திருமாலும் அன்னமாகியும் பன்றியாகியும் முடியடிகளைக் காணாது தம் செருக்கழிந்து வழிபட அவர்கட்குக் காட்சி அளித்தோனாகிய சிவபிரான் அமரும் கோயில், தாங்கள் பெற்ற அறிவால் வேத விதிப்படி தருப்பைப் புற்களைப் பரப்பி நெய், சமித்து ஆகியவற்றைக் கையில் கொண்டு அழல் வளர்த்து வேள்வி செய்து உலகைக் காப்பவர்களாகிய அந்தணர்கள் சேரும் ஊராகிய திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

அயனும் மாலும், அன்னமும் ஏனமுமாகித் தேடியறிய முடியாது வணங்க வெளிபட்ட இறைவன்கோயில், வேதவிதிப்படி தருப்பையைப்பரப்பி, நெய் சமித்து இவைகளைக்கொண்டு வேள்வி செய்து, உலகைக்காக்கும் அந்தணர் வாழும் மிழலையாம் என்கின்றது. அந்தம் - முடி. புந்தியினா - அறிவால். வேட்டு - வேள்வி செய்து.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 10

எண்ணிறந்த வமணர்களு மிழிதொழில்சேர் சாக்கியரு மென்றுந்தன்னை
நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க் கருள்புரியு நாதன்கோயில்
பண்ணமரு மென்மொழியார் பாலகரைப் பாராட்டு மோசைகேட்டு
விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ டும்மிழியும் மிழலையாமே.

பொழிப்புரை :

எண்ணற்ற சமணர்களும், இழிதொழில் புரியும் சாக்கியர்களும், எக்காலத்தும் தன்னை நெருங்க இயலாதவாறு அவர்கள் அறிவை மயக்கித்தன் அடியவர்களுக்கு அருள் புரியும் சிவபிரான் எழுந்தருளிய கோயில், பண்ணிசை போலும் மென்மொழி பேசும் மகளிர் தாங்கள் பெற்ற புதல்வர்களைப் பாராட்டும் தாலாட்டு ஓசை கேட்டு வியந்து, தேவர்கள் விமானங்களோடு வந்து இறங்கும் திருவீழிமிழலையாகும்.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் தம்மை அறியாவகையாக அவர்களை மயக்கித்தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன்கோயில், பண்மொழிப் பாவைமார்கள் பாலகரைப் பாராட்டும் ஓசை கேட்டு விண்ணவர்கள் விமானத்தோடு வந்திறங்கும் வீழிமிழலை என் கின்றது.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 11

மின்னியலு மணிமாட மிடைவீழி மிழலையான் விரையார்பாதம்
சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன் செழுமறைகள் பயிலுநாவன்
பன்னியசீர் மிகுஞான சம்பந்தன் பரிந்துரைத்த பத்துமேத்தி
இன்னிசையாற் பாடவல்லா ரிருநிலத்தி லீசனெனு மியல்பினோரே.

பொழிப்புரை :

மின்னல் போலும் ஒளியுடைய மணிகள் இழைத்த மாட வீடுகள் செறிந்த திருவீழிமிழலை இறைவனின் மணம் கமழ்கின்ற திருவடிகளைச் சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் இயல்புடைய சிரபுரநகரின் தலைவனும், செழுமறை பயின்ற நாவினனும் பலர் போற்றும் சிறப்பு மிக்கவனுமாகிய ஞானசம்பந்தன் அன்பு கொண்டு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் போற்றி இன்னிசையோடு பாட வல்லவர்கள் பெரிதான இந்நிலவுலகில் ஈசன் என்று போற்றும் இயல்புடையோராவர்.

குறிப்புரை :

வீழிநாதன் திருவடியைச் சிரமேற்கொண்டு ஒழுகும் திருஞானசம்பந்தர் பரிந்துரைத்த பாடல் வல்லார் பெரியபூமியில் ஈசன் எனும் இயல்புடையோர் ஆவர் என்கின்றது. பரிந்து - அன்புகொண்டு.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 1

வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தா ரவர்போற்ற வணங்கினொ டாடல்புரி
எந்தை மேவிய வேகம்பந் தொழுதேத்த விடர்கெடுமே.

பொழிப்புரை :

அனலிடை நன்றாக வெந்த வெண்மையான திருநீற்றைப் பூசியுள்ள மார்பின்கண் விரிந்த பூணூல் ஒருபால் விளங்கித் தோன்ற, மணங்கமழும் கூந்தலினையுடைய உமையம்மையோடும், விளங்கும் பொழில்களால் சூழப்பட்ட கச்சி என்னும் தலத்துள் எல்லையற்ற குணங்களையுடைய அடியவர்கள் போற்ற நடனம் செய்யும் எந்தையாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஏகம்பம் என்னும் திருக்கோயிலைத் தொழுது போற்ற நம் இடர் கெடும்.

குறிப்புரை :

திருநீறு பூசிய திருமார்பிற் பூணூல் கிடந்திலங்க, உமாதேவியோடு எழுந்தருளிய கச்சியுள் எல்லையற்ற குணங்களையுடைய அடியார்கள் போற்ற எந்தை மேவிய ஏகம்பம் தொழுதேத்த இடர்கெடும் என்கின்றது. அந்தம் - முடிவு. அணங்கினொடு - பார்வதியோடு.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 2

வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்
சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்
குருந்த மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவம்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.

பொழிப்புரை :

வரம்பெற்ற அவுணர்களின் பெருநகராக விளங்கிய முப்புரங்களும் ஒருசேர மாய்ந்து கெடுமாறு கணை எய்து எரித்தழித்த, தாழ்ந்து தொங்கும் சடைகளையுடைய சங்கரன் எழுந்தருளிய இடமாகிய, குருந்தம், மல்லிகை, கோங்கு, மாதவி, நல்ல குரா, கடம்ப மரம் ஆகியனவற்றால் சிறந்து விளங்கும் பசுமையான பொழில் சூழ்ந்த கச்சிமாநகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ, நம் இடர் கெடும்.

குறிப்புரை :

திரிபுரம் எரியச் சரம்விட்ட சங்கரன் மேவிய இடமாகிய பொழில் சூழ்ந்த ஏகம்பம்சேர, இடர்கெடும் என்கின்றது. துரந்து - செலுத்தி. மாதவி - குருக்கத்தி. மரவம் - வெண்கடம்பு.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 3

வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந் தெரியாடல் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த வேகம்பஞ் சேர விடர்கெடுமே.

பொழிப்புரை :

வெண்மைநிறம் அமைந்த திருநீறு பூசிய மார்பின்கண் உடலில் வரிகளையுடைய பாம்பை அணிந்து, உமையம்மையை விரும்பியேற்று, சுடுகாட்டில் எரியாடல் புரியும் தலைக் கோலம் உடையவனாகிய சிவபிரான் மேவிய இடமாகிய விண்ணளாவிய நீண்ட மாட வீடுகள் ஓங்கி விளங்குவதும், என்றும் நிலை பெற்ற பொழில்களால் சூழப்பட்டதுமாகிய கச்சிமாநகரில் உள்ளதுமாகிய திருஏகம்பத்தைச் சென்று வணங்க நம் இடர் கெடும்.

குறிப்புரை :

திருநீறணிந்த மார்பில் அரவம் அணிந்து, பெண்ணை ஒருபால் விரும்பி, எரிக்கண் திருநடனத்தை விரும்பிய பிஞ்ஞகன் இடம், விண்ணளாவிய மாடமோங்கிய கச்சியுள் ஏகம்பம் ஆம்; அதனைச்சேர இடர்கெடும் என்கின்றது. பிஞ்ஞகன் - மயிற்பீலியை யுடையான்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 4

தோலுநூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்
ஏலநாறிய சோலைசூ ழேகம்ப மேத்த விடர்கெடுமே.

பொழிப்புரை :

மான்தோலும் பூணூலும் பொருந்திய மலை போன்ற மார்பின்கண் சுடலையில் எடுத்த வெண்மையான திருநீற்றை அணிந்து மார்க்கண்டேயர்க்காகக் காலன் மாயும்படி காலால் அவனை உதைத்தருளிய கடவுளாகிய சிவபிரான் விரும்புமிடமாகிய, மாலைக் காலத்தில் தோன்றும் வெண்மையான மதி தோயுமாறு உயர்ந்த பெரிய மதில்களை உடைய பெரிய காஞ்சிபுர நகரில் மணம் வீசும் சோலைகளால் சூழப்பட்ட ஏகம்பம் என்னும் திருக்கோயிலை ஏத்த, நம் இடர் கெடும்.

குறிப்புரை :

கரு மான்தோலும் பூணூலும் நெருங்கிய மார்பில் நீறணிந்து காலனைக் காய்ந்த கடவுள் கருதுமிடம், கச்சியுள் ஏகம்பம்; அதனை ஏத்த இடர்கெடும் என்கின்றது.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 5

தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து
பாடனான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ
வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துட னாடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.

பொழிப்புரை :

அழகிய இதழ்களோடு கூடிய கொன்றை மலர் மாலை சூடிய சடையின்மேல் தூய பிறை மதியை அணிந்து நான் மறைகளைப் பாடல்களாகக் கொண்டு பேய்க் கணங்கள் பலசூழப், புலால்வற்றிய வெண்தலையோட்டையும், அனலையும் கையிலேந்தி மகிழ்வோடு உமையம்மையுடன் ஆடல் புரிகின்ற பெரியோனாகிய சிவபிரான் எழுந்தருளிய ஆரவாரமுடைய கச்சியில் விளங்கும் திருஏகம்பத்தை நினைக்க, நம் இடர் கெடும்.

குறிப்புரை :

இதழோடு கூடிய அழகிய கொன்றை மலரை அணிந்த சடையிலே பிறைமதியைச் சூடி, நான்மறை பாடலாக, பேய்க்கணம் புடைசூழ, அனலேந்தி ஆடும் பெரியோன் சேரும் இடம் கச்சியுள் ஏகம்பம் என்கின்றது. சேடர் - உலகம் அழியத் தான் எஞ்சி நிற்பவர். சேர - தியானிக்க.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 6

சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்து
ஆகம்பெண் ணொருபாக மாக வரவொடு நூலணிந்து
மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே.

பொழிப்புரை :

மேருமலையை வில்லாகக் கொண்டு அசுரர்களின் முப்புரங்களை அழியுமாறு கணைதொடுத்துத் தன் திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு மார்பில் பாம்பையும், முப்புரிநூலையும் அணிந்து விண்ணளாவிய அழகிய மாடங்களையும், பெரிய மதிலையும் உடைய கச்சிமாநகரில் விளங்கும் திருஏகம்பத்தில் உறையும் ஈசன் திருவடிகளை ஏத்த நம் இடர் கெடும்.

குறிப்புரை :

மேருமலை வில்லாக முப்புரம் எரித்து, உடலில் ஒருபாகம் பெண்ணாக ஏற்று, அரவையும் நூலையும் அணிந்து கச்சியேகம்பத்துள் அமர்ந்த ஈசன் திருவடி ஏத்த இடர்கெடும் என்கின்றது. சாகம் - வில். சாபம் எதுகை நோக்கிச் சாகம் ஆயிற்று, தானவர் - அசுரர். ஆகம் - உடல். மாகம் - ஆகாயம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 8

வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்
தேணிலா வரக்கன்ற னீண்முடி பத்து மிறுத்தவனூர்
சேணுலாம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.

பொழிப்புரை :

ஒளி விளங்கும் பிறைமதி பொருந்திய செஞ்சடையில் ஒளி பொருந்திய பாம்பினை அணிந்து இடப்பாகத்தே நாணோடு கூடியவளாகிய இல்வாழ்க்கைக்குரிய உமையம்மையை விரும்பியேற்றுச் சிரிக்கும் தலையோட்டில் பலியேற்று, மன உறுதி படைத்தவனாகிய இராவணனின் நீண்ட முடிகள் பத்தையும் நெரித்தவனாகிய சிவபிரானது, வானளாவிய பொழில்களையுடைய கச்சிமா நகரிலுள்ள திருஏகம்பத்தை அடைந்து தொழ நம் இடர் கெடும்.

குறிப்புரை :

பிறையணிந்த செஞ்சடையில் அரவத்தையும் அணிந்து, இடப்பாகத்து நாணோடு கூடிய இல்வாழ்க்கைக்குரிய உமாதேவியை வைத்து, மண்டையோட்டில் பிச்சையேற்று, இராவணன் சிரம் பத்தும் இறுத்தவனூர் கச்சி ஏகம்பம் என்கின்றது. வாள் நிலா - ஒளிபொருந்திய நிலா. புல்கு - தழுவிய. இல்வாழ்க்கை - மனையில் வாழ்தலையுடையாளாகிய உமாதேவி; தொழிலாகுபெயர். ஏண் - உறுதி. சேண் - ஆகாயம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 9

பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்
அரவஞ் சேர்சடை யந்தண னணங்கினொ டமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வல்வினை மாய்ந்தறுமே.

பொழிப்புரை :

பிரமனும், திருமாலும் தம் கைகளால் தொழுது வணங்கப் பெரிய அனலுருவாகி நின்ற பெருமானும், பாம்பணிந்த சடையையுடைய அந்தணனும் ஆகிய சிவபிரான் தன் தேவியோடு அமரும் இடமாகிய, வஞ்சகம் இல்லாத வள்ளன்மை பொருந்திய கையினை உடையவர்கள் வாழ்கின்ற ஆரவாரமுடைய கச்சி மாநகரில் குங்கும மரங்கள் பொருந்திய சோலைகளால் சூழப்பட்டு விளங்கும் திருஏகம்பத்தைத் தொழ நம் வல்வினைகள் மாய்ந்து கெடும்.

குறிப்புரை :

அயனும் மாலும் அடிவணங்க அழல்வண்ணமாகிய பெருமான் உமாதேவியோடு உறையுமிடம், வள்ளல்கள் வாழ்கின்ற கச்சியில் ஏகம்பமாம்; அதனைத்தொழ வல்வினையறும் என்கின்றது. கரவு - உள்ளதை மறைக்கும் வஞ்சம். மரவம் - மல்லிகை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 10

குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்
விண்டவர் புரமூன்றும் வெங்கணை யொன்றினா லவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.

பொழிப்புரை :

பருமையான உடலோடு ஆடையின்றித் திரியும் சமணர்களோடு ஆடையைத் தம் உடலில் போர்த்து வலியவராய்த் திரியும் புத்தர்களும் புனைந்து கூறும் உரைகளைப் பொருளுரையாகக் கருதி விரும்பாதீர்கள். பகைவர்களாகிய அவுணர்களின் மூன்று புரங்களையும் கொடிய கணை ஒன்றை எய்து எரித்தழித்தவனாகிய சிவபிரான் எழுந்தருளிய கச்சியின்கண் உள்ள திரு ஏகம்பத்தைச் சென்று காண, நம் இடர் கெடும்.

குறிப்புரை :

புறச்சமயிகள் கூறும் கட்டுரைகளை நம்பாதீர்கள்; அவை அவர்கள் கட்டிய கட்டுக்கள்; பகைவரது முப்புரங்களும் ஓரம்பினால் உடையச்செய்தவனூர் கச்சி ஏகம்பம் என்கின்றது. குண்டுபட்டு - உடல்பருத்து. கூறை - ஆடை. விண்டவர் - பகைவர்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 11

ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்ப மேயவனைக்
காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.

பொழிப்புரை :

அழகு நிறைந்த பொழில்கள் சூழ்ந்த கச்சியேகம்பத்துள் விளங்கும் இறைவனை மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் ஓங்கும் கழுமல நன்னகருள் தோன்றிய தமிழ்வல்ல ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய பத்துப் பாடல்களையும் ஓத வல்லவர் இவ்வுலகின்கண் சிறந்த புகழால் ஓங்கி விளங்கிப் பின் விண்ணவர்களோடும் சேர்ந்து வாழும் நிலையைப் பெறுவர்.

குறிப்புரை :

இப்பதிகம் வல்லவர்கள் புகழ் ஓங்கித் தேவர்களோடும் சேர்வர் என்கின்றது. ஏரின் ஆர் பொழில் - அழகு நிறைந்த சோலை. காரின் ஆர் - மேகங்கள் கவிந்த.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 1

கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்
நிருத்தன் சடைமே னிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில்
விருத்த னெனத்தகும் வீரட்டத் தானே.

பொழிப்புரை :

திருந்திய மனமுடையவர்கள் வாழும் திருப்பறிய லூரில் தொன்மையானவனாய் விளங்கும் வீரட்டானத்து இறைவன் அனைத்துலகங்களுக்கும் தலைவனும், கடவுளுமாக இருப்பவன். கையில் கனலேந்தி நடனம் புரிபவன். சடைமுடி மீது இளம்பிறை அணிந்தவன்.

குறிப்புரை :

இப்பதிகம் முழுவதும் எல்லாவுயிர்கட்கும் கருத்த னாய், கடவுளாய், விருத்தனாய் இருப்பவன் திருப்பறியலூர் வீரட்டத்தான் என இறைவனியல்பு அறிவிக்கின்றது. திருத்தம் உடையார் - பிழையொடு பொருந்தாதே திருந்தியமனமுடைய அடியார். விருத்தன் - தொன்மையானவன்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 2

மருந்த னமுதன் மயானத்துண் மைந்தன்
பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பொழிப்புரை :

ஒழுக்கத்திற் சிறந்த அந்தணர்கள் வாழும் விரிந்த மலர்ச் சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன், பிணி தீர்க்கும் மருந்தாவான். உயிர் காக்கும் அமுதமாவான். மயானத்துள் நின்றாடும் வலியோனாவான். மிகப் பெரியதாகப் பரந்து வந்த குளிர்ந்த கங்கையைத் தன் சென்னியில் தாங்கி வைத்துள்ள பெருமானாவான்.

குறிப்புரை :

மருந்தன் - பிணி தீர்க்கும் மருந்தானவன்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 3

குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தா னடங்க வீந்தெய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பொழிப்புரை :

அறிவில் தெளிந்த மறையோர்கள் வாழும் மலர்ச்சோலைகளால் சூழப்பட்ட திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன் குளிர்ந்த சடைமுடியை உடையவன். கொடிய வில்லை வளைத்து மலர்க்கணை தொடுத்த மன்மதனை எரித்து இறக்குமாறு செய்து, இரதிதேவி வேண்ட அவனைத் தோற்றுவித்தவன்.

குறிப்புரை :

கொடுஞ்சிலை - வளைந்தவில். விளிந்தான் - இறந் தான். வீந்து எய்த - இறந்து பின்னரும் வர. செற்றான் - கொன்றவன்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 4

பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்
சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்
விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.

பொழிப்புரை :

சிறப்புடையவர்கள் வாழ்கின்ற திருப்பறியலூரில் வலிமை பொருந்திய பூதகணங்கள் தன்னைச் சூழ விளங்கும் வீரட்டானத்து இறைவன், பிறப்பும் இறப்பும் இல்லாதவன். இவ்வுலகில் பிறவி எடுக்கும் உயிர்கள் அடையும் பிறப்புக்கும், சிறப்புக்கும் முதலும் முடிவும் காணச்செய்யும் ஒளி வடிவினன்.

குறிப்புரை :

பிறப்பாதி எனவே இறப்புமில்லான் என்பதுணர்த் தியவாறு. பிறப்பார் பிறப்பு செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யுந் தேசன் - பிறவியெடுக்கும் உயிர்கள் எய்தும் பிறப்பிற்கும் சிறப்பிற்கும் முதலும் முடிவும் அடையச்செய்யும் ஒளிவடிவானவன். சிறப்பாடு - சிறப்பு. பாடு தொழிற்பெயர் விகுதி. விறல் பாரிடம் - வலிய பூதகணம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 5

கரிந்தா ரிடுகாட்டி லாடுங்க பாலி
புரிந்தார் படுதம் புறங்காட்டி லாடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறிய லூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் ஆராய்ந்தறிந்த மறையவர்கள் வாழும் விரிந்த மலர்ச்சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவர், இறந்தவர்களைக் கரிந்தவர்களாக எரிக்கும் சுடுகாட்டில் ஆடும் கபாலி.

குறிப்புரை :

கரிந்தார் - இறந்தவர். புரிந்தார் - வினைகளைப் புரிந் தவர். படுதம் - கூத்துவகை. அக்கூத்தினைச் சுடுகாட்டில் விரும்பி ஆடுபவன். புறங்காடு - சுடுகாடு. தெரிந்து ஆர் மறையோர் - ஆராய்ந்தறிந்த அந்தணர்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 6

அரவுற்ற நாணா வனலம்ப தாகச்
செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்
தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்
வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே.

பொழிப்புரை :

தெருக்களில் நடப்பட்ட கொடிகளால் சூழப்பெற்ற திருப்பறியலூரில், பிறவிப்பிணிக்கு அஞ்சுபவர்களால் தொழப்படும் வீரட்டானத்து இறைவன், வாசுகி என்னும் பாம்பை மேருவில்லில் நாணாக இணைத்து அனலை அம்பாகக் கொண்டு தன்னோடு போரிட்டவரின் முப்புரங்களைத் தீ எழுமாறு செய்து அழித்தவன்.

குறிப்புரை :

அரவு உற்ற நாணா (க) அனல் அம்பு அது ஆக செரு உற்றவர் புரம் தீ எழச் செற்றான் எனப்பிரிக்க. செரு - போர். வெரு வுற்றவர் - அஞ்சியவர்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 7

நரையார் விடையா னலங்கொள் பெருமான்
அரையா ரரவம் மழகா வசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பொழிப்புரை :

அலைகளையுடைய நீர்க்கால்களால் சூழப்பட்டதும், மணம் பொருந்திய மலர்ச் சோலைகளை உடையதுமான திருப்பறியலூர் வீரட்டத்தில் விளங்கும் இறைவன், வெண்மை நிறம் பொருந்திய விடையேற்றை உடையவன். நன்மைகளைக் கொண்டுள்ள தலைவன், இடையில் பாம்பினைக் கச்சாக அழகுறக் கட்டியவன்.

குறிப்புரை :

நரை - வெண்மை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 8

வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்
விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே.

பொழிப்புரை :

பெண் அன்னங்கள் ஆண் அன்னங்களோடு கூடித்திளைக்கும் ஆழமான மடுக்களை உடையதும், மிகுதியான நெல் விளைவைத் தரும் வயல்களால் சூழப்பட்டதுமான திருப்பறியலூர் வீரட்டானத்து இறைவன், வளைந்த பற்களையுடைய இராவணனைக் கயிலைமலையின்கண் அகப்படுத்தி அவனை வலிமை குன்றியவனாகும்படி கால்விரலால் அடர்த்து எழுந்தருளி இருப்பவனாவான்.

குறிப்புரை :

வளைக்கும் எயிறு - கோரப்பல். அரக்கன் என்றது இராவணனை. ஏழை அன்னம் திளைக்கும் படுகர் - பெண்ணன்னம் புணரும் ஆற்றுப்படுகர்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 9

விளங்கொண் மலர்மே லயனோத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளம்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே.

பொழிப்புரை :

இளைய பூங்கொம்பு போன்றவளாகிய உமை யம்மையோடு இணைந்தும், இடப்பாகமாக அவ்வம்மையைக் கொண்டும் விளங்குபவனாகிய திருப்பறியல்வீரட்டத்து இறைவன், ஒளி விளங்கும் தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் கடல்வண்ணனாகிய திருமாலும் அச்சத்தால் நடுங்கிய மனத்தையுடையவராய்த் தன்னைத் தொழத் தழல் உருவாய் நின்றவனாவான்.

குறிப்புரை :

விளங்கு ஒண்மலர் - விளங்குகின்ற ஒளிபொருந்திய தாமரைமலர். ஓதவண்ணன் - கடல்வண்ணனாகிய திருமால். துளங்கும் - நடுங்கும். மனத்தார் என்றது அயனையும் மாலையும். இணைந்து - ஒரு திருமேனிக்கண்ணே ஒன்றாய். பிணைந்து - இடப்பாகத்து உடனாய்க்கூடி.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 10

சடையன் பிறையன் சமண்சாக் கியரோ
டடையன் பிலாதா னடியார் பெருமான்
உடையன் புலியி னுரிதோ லரைமேல்
விடையன் றிருப்பறியல் வீரட்டத் தானே.

பொழிப்புரை :

திருப்பறியல் வீரட்டத்தில் உறையும் இறைவன், சடையில் பிறை அணிந்தவன். சமணர், புத்தர் ஆகியோர்க்கு அருள்புரிதற்கு உரிய அன்பிலாதவன். புலியின் தோலை இடைமேல் ஆடையாக உடுத்தவன். விடையேற்றினை உடையவன்.

குறிப்புரை :

சமண் சாக்கியரோடு அடைதற்கு அன்பிலாதான் என்க. பெருமான் - பெருமகன் என்பதன் திரிபு. புலியின் உரிதோல் அரைமேல் உடையன் எனக்கூட்டுக.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 11

நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்
வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்
பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க்
கறுநீ டவல மறும்பிறப் புத்தானே.

பொழிப்புரை :

நல்ல நீர் பாயும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், மணங்கமழும் நீர்வளமுடைய திருப்பறியல் வீரட்டானத்து உறையும் புள்ளிகளையுடைய நீண்ட பாம்பினை அணிந்த இறைவனைப் புனைந்து போற்றிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கட்குப் பெரிய துன்பங்களும் பிறப்பும் நீங்கும்.

குறிப்புரை :

நறுநீர் - நல்லநீர். வெறிநீர் - மணம்பொருந்திய தேன். நீடவல மறும்பிறப்பு அறும் எனக்கூட்டுக.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 1

நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை யண்ணலே.

பொழிப்புரை :

திருப்பராய்த்துறையில், கங்கையை அணிந்த சடையினராய் விளங்கும் இறைவர், திருநீறு அணிந்த திருமேனியை உடையவர். அணிகலன்கள் பல புனைந்த உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தினர். பருந்துகள் தொடரத்தக்கதாய்ப் புலால் நாற்றம் கூடிய பிரமனது தலையோட்டைக் கையில் கொண்டவர்.

குறிப்புரை :

இப்பதிகம், திருப்பராய்த்துறைசேர் அண்ணல் நீறணிந்தவர், நேரிழைவைத்தவர், கொன்றையணிந்தவர், வேதர், வேதம் விரித்தவர் என அவரது பல இயல்புகளை எடுத்து விளக்குவது. கூறு - மேனியில் ஒருபாதி. பாறு - பருந்து.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 2

கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல வடிகளே.

பொழிப்புரை :

பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்த திருப்பராய்த்துறையில் விளங்கும் அழிவற்றவராகிய இறைவர், மணங்கமழும் சிறந்த மலர்களும், கொன்றையும் மணக்கும் சடைமுடியின்மேல் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியை வைத்துள்ளவர்.

குறிப்புரை :

அந்தமில்ல அடிகள் - தாம் எல்லாவற்றிற்கும் அந்த மாதலேயன்றித் தமக்கு அந்தம் இல்லாத அடிகள்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 3

வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற வொருவனார்
பாதிபெண்ணுரு வாவர்பராய்த்துறை
ஆதியாய வடிகளே.

பொழிப்புரை :

திருப்பராய்த்துறையில் எல்லா உலகங்களுக்கும் ஆதியாக விளங்குபவராய் எழுந்தருளியுள்ள இறைவர், வேதங்களை அருளிச்செய்தவர். எல்லா வேதங்களையும் முறையாக விரித்துப் பொருள் விளக்கம் அருளிய ஒப்பற்றவர். தம் திருமேனியில் பாதிப்பெண்ணுருவாக விளங்குபவர்.

குறிப்புரை :

முறையால் விரித்து - இன்னவேதத்தின்பின் இன்னது என முறைப்படி விரித்து.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 4

தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலுநெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழ லடிகளே.

பொழிப்புரை :

திருப்பராய்த்துறையில் ஆலநீழலில் எழுந்தருளிப் பால், நெய் முதலியவற்றை விரும்பி ஆடும் இறைவர், புலித்தோலைத் தம் இடையிலே ஆடையாக உடுத்தவர். ஒளி பொருந்திய பூணூல் அணிந்த மார்பினை உடையவர்.

குறிப்புரை :

தோல் - புலித்தோல்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 5

விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவினின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம்பராய்த்துறை
அரவமார்த்த வடிகளே.

பொழிப்புரை :

திருப்பராய்த்துறையில் பாம்பை இடையில் கட்டியவராய் விளங்கும் பரமர், திருநீற்றைத் தம் மேனிமேல் விரவப் பூசியவர். நள்ளிரவில் சுடுகாட்டுள் நின்று எரி ஆடுபவர். வேதங்களால் பரவப் பெற்றவர்.

குறிப்புரை :

அவர் வேதம் பரவினார் - அவர் வேதங்களாற் பரவப் பெற்றவர்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 6

மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கு மொலிசெய்பராய்த்துறை
அறையநின்ற வடிகளே.

பொழிப்புரை :

பறை, சங்கு முதலியன முழங்கும் திருவிழாக்கள் நிகழும் திருப்பராய்த்துறையில் எல்லோரும் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய இறைவர், வேதங்களை ஓதுபவர். மான்கன்றைக் கையின்கண் உடையவர், விடக்கறை கொண்ட கண்டத்தையுடையவர்.

குறிப்புரை :

மறி - குட்டி. கறை - விடம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 7

விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற வடிகளே.

பொழிப்புரை :

திருப்பராய்த்துறையிற் பொருந்தி விளங்கும் இறைவர், விடையேற்றினை ஊர்ந்து வருபவர். வெண்மையான திருநீற்றைப் பூசுபவர். சடையின்மேல் கங்கையைத் தரித்தவர். வெண்மையான மழுவைப் படைக்கருவியாகக் கொண்டவர்.

குறிப்புரை :

அடைய - எங்குமாய்; பொருந்த என்றும் ஆம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 8

தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை யடிகளே.

பொழிப்புரை :

திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய இறைவர், வலிமைமிக்க பத்துத் தலைகளை உடைய இராவணனைத் தம் கால் விரல் ஒன்றினால் நெரித்தவர். தக்கன் வேள்வியில் கதிரவனின் பற்களைத் தகர்த்தவர்.

குறிப்புரை :

தசக்கிரிவன் - இராவணன்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 9

நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும்மறி யாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றன்மிக்க வடிகளே.

பொழிப்புரை :

திருப்பராய்த்துறையில் ஆற்றல் மிக்கவராய் விளங்கும் அடிகள், மணம் பொருந்திய தாமரை மலரில் விளங்கும் பிரமன், திருமால் ஆகியோரால் அடிமுடி அறியப்பெறாத தோற்றத்தினை உடையவர். தம்மை வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவர்.

குறிப்புரை :

நாற்றம் - மணம். பாற்றினார் - சிதற அடித்தார்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 10

திருவிலிச்சில தேரமணாதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயி லெய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே.

பொழிப்புரை :

புண்ணியமில்லாத சிலராகிய புத்தர்களும், சமணர்களாகிய, கீழ்மக்களும், கூறும் பொருளற்ற அறவுரைகளைக் கேளாதீர். பெரிய மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்தழித்து உலகைக் காத்துத் திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வாழ்த்துவீர்களாக.

குறிப்புரை :

திரு - சிவஞானம். தேரர் - புத்த சமயத்தினர். ஆதர் - கீழ்மக்கள். பரு வில் - (மலையாகிய) பெருத்த வில். எயில் - திரிபுரம். வாழ்த்தும் - வாழ்த்துங்கள்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 11

செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற்சிதை யாதன
செல்வன்ஞானசம் பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே.

பொழிப்புரை :

பொருட் செல்வங்களால் நிறைந்து விளங்கும் சிவஞானச் செல்வர்கள் வாழும் திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய, வீடுபேறாகிய செல்வத்தையுடைய, இறைவன்மீது, அருட்செல்வனாக விளங்கும் ஞானசம்பந்தன் அருளிய, அழிவற்ற இச்செந்தமிழ்ப் பாடல்களை ஓதினால், ஓதின அவர்கட்கு எல்லாச் செல்வங்களும் உண்டாகும்.

குறிப்புரை :

சிதையாதன செந்தமிழ் இவை செப்பச் செல்வமாம் எனக்கூட்டுக.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 1

மாதர்ம டப்பிடியும் மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலைமக டுணையென மகிழ்வர்
பூதவி னப்படைநின் றிசைபாடவு மாடுவ
ரவர்படர் சடைந்நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்டிரை
யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னை தயங் கும லர்ச்சிறைவண்டறை
யெழில் பொழில் குயில் பயில்தருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

விரும்பத்தக்க இளம்பிடியையும், இள அன்னத்தையும் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியைத்தம் துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதப்படைகள் நின்று இசை பாட ஆடுபவரும், விரிந்த சடைகளையுடைய நீண்ட முடிமீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர்தம் இடமாக விளங்குவது ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையைப் பொருது விளங்கவும், அதன் அயலில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும். அழகிய பொழில்களில் குயில்கள் பாடவும் விளங்கும் திருத்தருமபுரம் என்னும் நகராகும்.

குறிப்புரை :

மலைமகளைத் துணையாகக்கொண்டு மகிழ்ந்தவரும், பூதப்படை இசைபாட ஆடுபவரும், கங்கைச் சடையரும், வேதத்தையும் இசையையும் பாடுபவரும் ஆகிய இறைவர் இடம் தருமபுரம் என் கின்றது. பிடி - பெண்யானை. உமாதேவியின் பெருமித நடைக்குப் பெண்யானையும், நடையின் மென்மைக்கு அன்னமும் உவமமாயிற்று. தருமபுரம் நெய்தனிலச் சார்புடையதாதலின் புன்னை கூறப்பட்டது.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 2

பொங்குந டைப்புகலில் விடை யாமவ ரூர்திவெண்
பொடி யணி தடங் கொண்மார் புபூணநூல் புரள
மங்குலி டைத்தவழும் மதி சூடுவ ராடுவர்
வளங் கிளர் புனலர வம்வைகிய சடையர்
சங்குக டற்றிரையா லுதை யுண்டுச ரிந்திரிந்
தொசிந் தசைந் திசைந் துசே ரும்வெண்மணற் குவைமேல்
தங்குக திர்ம்மணிநித் தில மெல்லிரு ளொல்கநின்
றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

சினம் பொங்கிய நடையினைஉடையதாய், உவமை சொல்லுதற்கு வேறொன்று இல்லாததாய் விளங்கும் விடையை ஊர்தியாகக் கொண்டவரும், திருநீறு அணிந்த அகன்ற மார்பின்கண் பூணூல் புரள வானத்தில் தவழும் பிறைமதியைச் சூடி ஆடுபவரும், வளமைகளைத் தருவதாகிய கங்கை, அரவம் ஆகியன தங்கிய சடையினருமாகிய சிவபிரானாரது இடம், கடல் அலைகளால் அலைக்கப் பெற்ற சங்குகள் சரிந்து இரிந்து, ஒசிந்து, அசைந்து, இசைந்து வெண்மணற் குவியலின் மேல் ஏறித் தங்கி ஈனும் ஒளி பொருந்திய முத்துமணிகளால் மெல்லிய இருள் விலகி ஒளி சிறந்து தோன்றும் அழகிய திருத்தருமபுரமாகிய நகரமாகும்.

குறிப்புரை :

ஊர்தி விடையாம் நீறணிந்தமார்பில் பூணுநூல் புரள மதிசூடுவர், ஆடுவர், கங்கையும் அரவும் தங்கிய சடையர் பதி தருமபுரம் என்கின்றது. பொங்கிய நடையோடு, வேறு அடைக்கலத்தான மில்லாத விடையாம் அவர் வாகனம் என்பதாம். மங்குல் - ஆகாயம். சங்கு கடல் அலையால் மோதப்பெற்று மணற் குவியல்மேல் தங்கியதால் `ஈனப்பெற்ற முத்துக்கள் இருளோட்டி விளங்கும் நலங்கெழுமும் தருமபுரம்` என்க. சங்கு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் மணல் எனக் கூட்டுக. இது மணல்மேட்டின்மேல் சங்கு ஏறிய அருமைப்பாட்டை அறிவிக்கின்றது.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 3

விண்ணுறு மால்வரைபோல் விடை யேறுவ ராறுசூ
டுவர் விரி சுரியொளி கொடோடுநின் றிலங்கக்
கண்ணுற நின்றொளிருங் கதிர் வெண்மதிக் கண்ணியர்
கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின்றவர் தம் முரு வம்மயன் மாறொழவ்
வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொடெண் ணிதழ் மௌவன்ம ருங்கலர்
கருங் கழிந் நெருங் குநற் றருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

வானளாவிய பெரிய மலை போன்ற விடையின்மேல் ஏறி வருபவரும், கங்கையை அணிந்தவரும், விரிந்து சுருண்டு ஒளிதரும் தோடு விளங்கக் கண்ணைக் கவரும் ஒளிதரும் பிறைமதியாகிய கண்ணியை முடியிற் சூடியவரும், முடை நாறும் தலையோட்டை உண்கலனாகக் கொண்டவரும், உமையம்மையைக் கூடிப் பிணைந்து இணைந்து அணைத்துத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவரும், தமது உருவத்தை அயனும் மாலும் தொழ நின்றவருமாகிய சிவபிரானாரது இடம், குளிர்ந்த இதழ்களையுடைய முல்லை மலர்களோடு எட்டு இதழ்களையுடைய காட்டு மல்லிகை மலர்கள் மலர்ந்து மணம் வீசுவதும், கரிய உப்பங்கழிகள் நிறைந்ததுமாகிய திருத்தருமபுரம் என்னும் நன்னகராகும்.

குறிப்புரை :

விண்ணளாவிய மலைபோன்ற விடையை ஊர்தியாக ஏறுவர்; கங்கையைச் சூடுவர்; தோடு விளங்க, பிறைக்கண்ணி சூடுவர்; பிரமகபாலத்தை உண் கலனாகக் கொண்டு, பெண் பாதியாக நின்றவர்; தம் வடிவத்தை அயனும் மாலும் தொழ நின்றவர். இவர் பதி தருமபுரம் என்கின்றது. மால்வரை - பெரிய மலை. கண்ணியர் - தலைமாலையையுடையவர். கழிந்தவர் - இறந்தவர். மௌவல் - மல்லிகை. மல்லிகைக்கு எட்டிதழ் உண்மை உணர்த்தப் பெறுகின்றது.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 4

வாருறு மென்முலைநன் னுத லேழையொ டாடுவர்
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றலரும் மலர்க் கொன்றையங் கண்ணியர்
கடுவ் விடை கொடி வெடி கொள்காடுறை பதியர்
பாருற விண்ணுலகம் பர வப்படு வோரவர்
படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தாருறு நல்லரவம் மலர் துன்னிய தாதுதிர்
தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

கச்சணிந்த மென்மையான தனங்களையுடைய உமையம்மையோடு கூடி நடனம் ஆடுபவரும், உலகிற்கு வளம் சேர்க்கும் நிலவொளியைத் தரும் மதிசூடிய சடையினரும், கார் காலத்தே மலரும் கொன்றை மாலையைச் சூடியவரும், விரைந்து செல்லும் விடையைக் கொடியாகக் கொண்டவரும், அச்சந்தரும் சுடுகாட்டைத் தமக்குரிய இடமாகக் கொண்டவரும், மண்ணுலகத்தினர், விண்ணுல கத்தினர்களால் போற்றப்படுபவரும், அவமானம் எனக் கருதாது அழிந்துபட்ட தலையோட்டில் பலிகொள்பவரும், பாம்பை மாலையாக அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய பதி, மகரந்தங்களை உதிர்க்கும் மலர்கள் நிறைந்த, தழைகள் செறிந்த, மேகங்கள் தவழும் பொழில்கள் சூழ்ந்த திருத்தருமபுரம் என்னும் நகரமாகும்.

குறிப்புரை :

பெண்ணொடு ஆடுவர், பிறை விளங்கு சடையர், கொன்றைமாலை அணிந்தவர். விடைக்கொடியேந்தி இடுகாட்டைப் பதியாக்கொண்டவர். விண்ணும் மண்ணும் துதிக்கப்படுபவர். மண்டையோட்டில் பிச்சையேற்றலை அவமானமாகக் கருதாதவர். இவர் பதி தருமபுரம் என்கின்றது. வார் - கச்சு. பதி - இடம். பரிபவம் - அவமானம்.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 5

நேரும வர்க்குணரப் புகி லில்லைநெ டுஞ்சடைக்
கடும் புனல் படர்ந் திடம் படுவ்வதொர் நிலையர்
பேரும வர்க்கெனையா யிர முன்னைப்பி றப்பிறப்
பிலா தவ ருடற் றடர்த் தபெற்றியா ரறிவார்
ஆரம வர்க்கழல்வா யதொர் நாகம ழஃகுறவ்
வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிமவான் மக ளூர்வது போர்விடை
கடிபடு செடி பொழிற் றருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

ஆராயுமிடத்து அவருக்கு உவமையாகச் சொல்லத் தக்கவர் யாரும் இல்லை. கடிதாக வந்த கங்கைக்குத் தம் நீண்ட சடையை இடமாகக் கொடுத்த நிலையினர் அவர். அவருக்குப் பெயர்களோ பல ஆயிரம். முன்தொட்டு அவருக்குப் பிறப்பு இறப்பு இல்லை. தம்மை எதிர்த்தவர்களோடு சினந்து அவர்களைக் கொன்ற அவரது பெருவலியை யார் அறிவார்? தீயின் தன்மையுடைய நஞ்சினைக் கொண்ட நாகம் அவருக்கு ஆரம். செழுமையான பொன்போன்ற கொன்றை மலர், அவருக்கு மாலையாகும். இமவான் மகளாகிய பார்வதி அவருக்கு மனைவி. அவர் ஊர்ந்து செல்வது போர்ப்பயிற்சி உடைய இடபம். அவர் தங்கியுள்ள இடம் மணம் பொருந்திய ஒளிகளையுடைய பொழில்களால் சூழப்பட்ட தருமபுரம் என்னும் பதியாகும்.

குறிப்புரை :

அவருக்கு ஒப்பு ஆராயப்புகில் யாரும் இல்லை. கங்கை புகுந்தும் இடம்படும் சடையையுடையவர். அவர்க்குப் பேரும் ஆயிரம். பிறப்பு இறப்பு இல்லாதவர். இவரது மாறுபட்ட பகைவரைக் கொல்லும் வெற்றியை அறிவார் யார்? அவர்க்கு ஆரம் பாம்பு. அழகுற எழுந்த கொழுமலராகிய கொன்றையே மாலை. மனைவி மலைமகள். வாகனம் இடபம். தருமபுரம் பதி என்கின்றது. நேர் - ஒப்பு. இதழி - கொன்றை. அலங்கல் - மாலை. தாரம் - மனைவி. கடி - மணம்.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 6

கூழையங் கோதைகுலா யவ டம்பிணை புல்கமல்
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மடவா ளையொர் பாகம கிழ்ந்தவர்
வலம் மலிபடை விடை கொடிகொடும் மழுவ்வாள்
யாழையும் மெள்கிடவே ழிசை வண்டுமு ரன்றினந்
துவன் றிமென் சிறஃகறை யுறந்நறவ்வி ரியுந்நல்
தாழையு ஞாழலுந்நீ டிய கானலி னள்ளலி
சைபுள்ளினந் துயில் பயி றருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

மலர்மாலை சூடிய கூந்தலையும், தன் கணவரால் தழுவப்பெறும் மெல்லிய தனங்களையும், தேமல்களோடு கூடிய மேனியினையும், கொடி போன்ற இடையையும், பவளம் போன்ற வாயையும், மாவடு போன்ற ஒளி விளங்கும் கண்களையும் உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு மகிழ்ந்தவரும், வெற்றியைத்தரும் படைக்கலனாக மழுவாளைக் கொண்டவரும் விடையைக் கொடியாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி, யாழிசையையும் வெல்லுமாறு வண்டுகள் ஏழிசை முரன்று மெல்லிய சிறகுகளால் ஒலித்துச் சூழும் தேன்நிறைந்த நல்ல தாழை மரங்களும், புலிநகக் கொன்றையும் நிறைந்த கடற்கரைச் சோலைகளிலுள்ள சேற்று நிலங்களில் இசைபாடும் பறவையினங்கள் துயில்கொள்ளும் தலமாகிய தருமபுரமாகும்.

குறிப்புரை :

உமையாளை ஓர் பாகம் மகிழ்ந்தவர்; அவர்க்குப் படைமழுவும் வாளும்; கொடி விடை; பதி தருமபுரம் என்கின்றது. கூழை - கூந்தல். துவர் வாய் - சிவந்தவாய். மாழை - மாவடு, படை கொடு மழு வாள் எனவும் விடை கொடி எனவும் இயைக்க. எள்கிட - இகழ. நற - மணம். ஞாழல் - புலிநகக் கொன்றை. அள்ளல் - சேறு.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 7

தேமரு வார்குழலன் னந டைப்பெடை மான்விழித்
திருந் திழை பொருந் துமே னிசெங்கதிர் விரியத்
தூமரு செஞ்சடையிற் றுதை வெண்மதி துன்றுகொன்
றைதொல்புனல் சிரங் கரந் துரித்ததோ லுடையர்
காமரு தண்கழிநீ டிய கானல கண்டகங்
கடல் லடை கழி யிழி யமுண்டகத் தயலே
தாமரை சேர்குவளைப் படு கிற்கழு நீர்மலர்
வெறி கமழ் செறிவ் வயற் றருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

இனிமையும், மணமும் பொருந்திய நீண்ட கூந்தல், அன்னம் போன்ற நடை, பெண்மான் போன்ற விழி இவற்றை உடையவளும் திருத்தம் பெற்ற அணிகலன்கள் பூண்டவளும் ஆகிய உமையம்மை ஒருபாலாகப் பொருந்திய மேனியனும், செவ்வொளி விரியும் தூயசெஞ்சடையில் வெண்மையான பிறைமதி, நிறைந்த கொன்றை மலர், பழமையான கங்கை நீர், தலைமாலை ஆகியவற்றை மறைத்துச் சூடி, உரித்து உடுத்த தோல்களை உடையாகக் கொண்டவனும் ஆகிய இறைவனது பதி அழகிய குளிர்ந்த உப்பங்கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் தாழை மரங்களும், கடலினிடத்திருந்து பெருகிவரும் உப்பங்கழிகளிடத்து நீர்முள்ளிகளும், நீர் நிலைகளில் தாமரை, குவளை, செங்கழுநீர் ஆகியவற்றின் மலர்களும் மணம் வீசுவதும், வயல்கள் செறிந்ததுமாகிய தருமபுரமாகும்.

குறிப்புரை :

உமையுடன்கூடிய மேனி ஒளி விரிய, செஞ்சடையில் மதி கொன்றை கங்கை சிரம் இவற்றை மறைத்து, தோலையுடுத்தவரான இறைவன் பதி தருமபுரம் என்கின்றது. தேமரு - மணம் பொருந்திய, குழலையும், நடையையும், விழியையும் உடைய திருந்திழை என்க. துதை - செறிந்த. கரந்து - மறைய அணிந்து. கானல கண்டகம் - கடற்கரைச் சோலையிலுள்ள தாழை. முண்டகம் - கடல் முள்ளி. படுகு - மடு.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 8

தூவண நீறகலம் பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர் வரை புரை திரள்புயம் மணிவர்
கோவண மும்முழையின் னத ளும்முடை யாடையர்
கொலைம் மலி படை யொர்சூ லமேந்திய குழகர்
பாவண மாவலறத் தலை பத்துடை யவ்வரக்
கனவ் வலி யொர்கவ் வைசெய் தருள்புரி தலைவர்
தாவண வேறுடையெம் மடி கட்கிடம் வன்றடங்
கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

தூய வெண்ணிறம் பொருந்திய திருநீறு மார்பின் கண் விளங்க, மலை போலத்திரண்ட தோள்களில் மணம் நிறைந்து செறிந்த மென்மையான மலர்மாலையை அணிவர். கோவணத்தையும் மான் தோலையும் ஆடைகளாக உடையவர். கொல்லும் தொழிலில் வல்ல ஆயுதமாக ஓர் சூலத்தை ஏந்திய இளையர். பத்துத் தலைகளை உடைய அரக்கனாகிய இராவணன், பாடல்கள் பாடி அலறுமாறு அவனது வலிமையைச் செற்றுப் பின் அருள் புரிந்த தலைவர். தாவிச் செல்லும் இயல்புடைய ஆனேற்றைத் தம் ஊர்தியாகக் கொண்டவர். அவ்அடிகட்கு இடம், வலிய பெரிய கடலின் அலைகள் சேர்ந்த பெரிய மணற்கரையில் விளங்கும் தருமபுரம் என்னும் பதியாகும்.

குறிப்புரை :

வெண்ணிறத் திருநீறு மார்பில் விளங்க, மணம் பொருந்திய மலரைப்புயத்து அணிவர்; கோவணமும், மான் தோலும் உடுப்பவர்; சூலமேந்திய இளையர்; இராவணற்குத் துன்பஞ் செய்து, பின் அருளும்செய் தலைவர்; தாவும் நிறம் பொருந்திய இடபத்தையுடைய எம்மடிகட்கு இடம் தருமபுரம் என்கின்றது. அகலம் - மார்பு, உழை - மான். அதள் - தோல். அரக்கன் வலி ஓர் கவ்வை செய்து (அவன்) பாவண்ணமா அலற அருள்புரி தலைவர் எனக்கூட்டுக. பாவண்ணமா - சாமகீதமாக. கவ்வை - துன்பம். தா வண்ண ஏறு - தாவிச்செல்லும் நிறம் பொருந்திய இடபம்.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 9

வார்மலி மென்முலைமா தொரு பாகம தாகுவர்
வளங் கிளர் மதி யர வம்வைகிய சடையர்
கூர்மலி சூலமும்வெண் மழு வும்மவர் வெல்படை
குனி சிலைதனிம் மலை யதேந்திய குழகர்
ஆர்மலி யாழிகொள்செல் வனு மல்லிகொ டாமரைம்
மிசை யவன் னடிம் முடி யளவுதா மறியார்
தார்மலி கொன்றையலங் கலு கந்தவர் தங்கிடந்
தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். பிறைமதி, பாம்பு ஆகியவை தங்கும் சடையினர். கூரிய சூலமும், வெண்ணிறமான மழுவும் அவர் வெற்றி கொள்ளுதற்குரிய படைக்கலங்களாகும். ஒப்பற்ற மேரு மலையை வளைத்து வில்லாக ஏந்திய இளைஞர். ஆரக்கால் பொருந்திய சக்கராயுதத்தைக் கொண்ட திருமாலும், அகஇதழ்களை உடைய தாமரை மலரில் உறையும் பிரமனும் தம்முடைய அடிமுடிகளின் அளவுகளைத் தாம் அறியாவாறு அயரும்படி செய்தவர் அவர். கொத்தாகப் பூக்கும் கொன்றை மலரால் தொடுத்த மாலையை விரும்புபவர். அப்பெருமானார் தங்கியுள்ள இடம், பெரிய கடலின் அலைகள் வந்து தழுவிச் செல்லும் தருமபுரம் என்னும் பதியாகும்.

குறிப்புரை :

மென்முலை மாதை ஓர் பாகங்கொண்டவர்; மதியும் அரவும் வைகிய சடையர்; மழுவும் சூலமும் அவர் படை; அவர் வில் மலை; அயனாலும் மாலாலும் அறியமுடியாதவர்; கொன்றை மாலையை விரும்பியவர்; இவர் தங்குமிடம் தருமபுரம் என்கின்றது. தனி மலை - ஒப்பற்ற மேருமலை. ஆர் மலி ஆழி - ஆரக்கால் நிறைந்த சக்கரம். ஆழிகொள் செல்வன் - திருமால். அல்லி - அகவிதழ். தார்மலி கொன்றை - மாலையாகப் பூக்கும் கொன்றை. அலங்கல் - மாலை.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 10

புத்தர்க டத்துவர்மொய்த் துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழி வில்பெற் றியுற் றநற்றவர் புலவோர்
பத்தர்க ளத்தவமெய்ப் பயனாக வுகந்தவர்
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகையொண் மலை மாதுமை பொன்னணி
புணர்ம் முலை யிணை துணை யணைவதும் பிரியார்
தத்தரு வித்திரளுந் திய மால்கட லோதம்வந்
தடர்ந் திடுந் தடம்பொழிற் றருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

புத்தர்களாகிய தத்துவாதிகளும், உறிகளை ஏந்திய கையினராய்த் திரியும் சமணர்களும் கூறும் பொய் மொழிகளினின்று நீங்கிய நல்ல தவத்தை உடையவர்களும், புலவர்கள் பக்தர்கள் ஆகியோரின் தவத்தை மெய்ப்பயனாக உகந்தவரும், அன்புக்கு நெகிழ்பவரும், வன்புக்குச் சினப்பவரும் சுடலைப் பொடி அணிபவரும், முத்துப் போன்ற வெண்மையான பற்களை உடைய ஒளி பொருந்திய மலை மாதாகிய பார்வதி தேவியாரின் ஒன்றோடு ஒன்று செறிந்த தனங்கள் இரண்டையும் துணையாகக் கொண்டு அவற்றைப் பிரியாதவரும் ஆகிய சிவபிரானாரது பதி, தவழும் அலைகளை உடைய பெரிய கடலின் ஓதநீர் வந்து பொருந்தும் தருமபுரம் ஆகும்.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் கூறும் பொய்யினின்றும் நீங்கி, அழிவில்லாத் தன்மைபெற்ற புலவர்கள் பத்தர்கள் தவத்தை மெய்ப்பயனாக உகந்தவரும், சுடலைப்பொடியணிபவரும், உமையைக் கூடி, பிரிதலைச் செய்யாதவரும் ஆகிய இறைவன் பதி தருமபுரம் என்கின்றது. கட துவர் மொய்த்து - கடுவிதையால் உண்டாக்கப் பெற்ற துவர் நெருங்கி. உறி புல்கிய கையர் - உறி தூக்கிய கையையுடைய சமணர். உகந்தவர் - மகிழ்ந்தவர். தத்து அருவி - தாவிக் குதிக்கின்ற அருவி. மால்கடல் - பெரிய கடல். கருங்கடலுமாம்.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 11

பொன்னெடு நன்மணிமா ளிகை சூழ்விழ வம்மலீ
பொரூஉம் புன றிரூஉ வமர் புகல்லியென் றுலகில்
தன்னொடு நேர்பிறவில் பதி ஞானசம் பந்தனஃ
துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபுரம் பதியைப்
பின்னெடு வார்சடையிற் பிறை யும்மர வும்முடை
யவன் பிணை துணை கழல் கள்பேணுத லுரியார்
இன்னெடு நன்னுலகெய் துவ ரெய்திய போகமும்
முறு வர்கள் ளிடர் பிணி துயரணைவ் விலரே.

பொழிப்புரை :

பொன்னால் இயன்ற நெடிய நல்ல மணிகள் இழைத்த மாளிகைகள் சூழ்ந்ததும், திருவிழாக்கள் மலிந்ததும், கரைகளை மோதும் நிறைந்த நீர்வளம் உடையதும், திருமகள் உறைவதுமான புகலி என்னும், தனக்கு உவமை சொல்ல இயலாத பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தனுடைய பரந்து விரிந்து கடல் போன்ற செந்தமிழாகிய பாமாலைகளால், ஒன்றோடு ஒன்று பின்னி நீண்டுள்ள சடைமுடியில் பிறையையும் பாம்பையும் அணிந்துள்ளவனாகிய சிவபிரானுடைய பிணைந்துள்ள இரண்டு திருவடிகளையும் போற்றி அன்பு செய்பவர், இனிய பெரிய நல்லுலகை எய்துவர், அடையத் தக்கனவாய போகங்களையும் பெறுவர். இடர் செய்யும் பிணி துயர் முதலியன நீங்கி என்றும் இன்பம் உறுவர்.

குறிப்புரை :

ஞானசம்பந்தப் பெருமான் செந்தமிழால் திருத்தருமபுரப் பதியில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன் கழல்களைப் பேணுதல் உரியார் நல்லுலகம் எய்துவர்; போகம் பெறுவர்; இடரும் பிணியும் எய்தப்பெறார் என்கின்றது. விழவம் மலீ - விழாக்கள் நிறைந்த, பொரூஉ புனல் - கரையை மோதுகின்ற நீர். திரு திரூஉ ஆயிற்றுச் சந்தம் நோக்கி, புகல்லி - புகலி; விரித்தல் விகாரம். தன்னொடு நேர்பிற இல் பதி - தனக்குச் சமம் வேறில்லாத நகரம்; என்றது சீகாழியை, பேணுதல் - தியானித்தல். இப்பதிகத்தைச் சொல்லி இறைவனைத் தியானிப்பவர்கள் நல்லுலகம் எய்துவர்; போகம் பெறுவர்; அவர்களைப் பிணியும் துயரும் பொருந்தா; என்றும் இன்பம் பெறுவர். திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் முதல் திருமுறை மூலமும் - உரையும் நிறைவுற்றது.
சிற்பி