கல்லாடதேவ நாயனார்

படம்



சிவமயம்

நாயன்மார் வரலாறு

பதினொன்றாம் திருமுறை

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர்.

இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரி வாகக் கூறப்பட்டுள்ளது.

சங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர்.

ஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர்.

கல்லாடதேவ நாயனார் வரலாறு

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்

வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்

பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

பதினொன்றாம் திருமுறையில் நக்கீரதேவர் அருளிய திருக்கண்ணப்பதேவர் திருமறத்தை அடுத்துப் பெயருடைய பிறி தொரு பிரபந்தத்தை அருளிச் செய்தவர். கல்லாடதேவர் ஆவார். இவரும் நக்கீரதேவர் போலப் பிற்காலத்துச் சங்கப் புலவர் பெயர் தாங்கிய பெரும் புலவர் எனக் கொள்ளலாம். இவர் நக்கீரதேவர் காலத்திலோ அவருக்குப் பிற்பட்ட காலத்திலோ வாழ்ந்தவர் எனலாம். எனவே இவர் காலத்தையும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டாகலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய கல்லாடர், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியவர். பொறையாற்றுக்கிழான், அம்பர் கிழான் அருவந்தை என்னும் மன்னர்களால் ஆதரிக்கப் பெற்றவர். இவர் பாடியனவாகச் சங்க நூல்களில் பதினொரு பாடல் உள்ளன. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகும்.

கல்லாடர்கள்

பதினொன்றாம் திருமுறை ஆசிரியராகிய கல்லாட தேவரும், கல்லாடம் என்னும் அகப் பொருட்கோவை பாடிய கல்லாடரும் தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு உரை வரைந்த கல்லாடரும் ஆகிய நால்வரும் சங்கப்புலவராகிய கல்லாடர் பெயர் தாங்கிய வேறு வேறு புலவர்களாவர். இந்நால்வருள் பதினொன்றாம் திருமுறைக் கல்லாடரும் கல்லாடம் பாடிய கல்லாடரும் ஒருவராகலாம் எனக் கருதுவோரும் உளர்.

கல்லாடம் தெய்வ நலம் சான்ற நூலாயினும் பதினொன்றாம் திருமுறையில் தொகுக்கப் பெற்றிலது என்பதைக் காணுமிடத்து இந்நூலாசிரியர் காலத்தால் இன்னும் பிற்பட்டவர் ஆகலாம் எனக் கருதுவோரும் உளர்.