கருப்பறியலூர் (திருக்கருப்பறியலூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கோல்வளைநாயகி உடனுறை குற்றம்பொறுத்தநாதர்


மரம்: சாதிமுல்லை
குளம்: செங்கழுநீர்த் தடாகம்

பதிகங்கள்: சுற்றமொடு -2 -31 திருஞானசம்பந்தர்
சிம்மாந்து -7 -30 சுந்தரர்

முகவரி: தலைஞாயிறு அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609201
தொபே. 04364 258833

இது வைத்தீசுவரன்கோயில் தொடர்வண்டி நிலையத்திற்கு வடமேற்கே 7.5 கி.மீ. தூரத்திலிருக்கிறது. தலைஞாயிறு என வழங்கப்பெறுகிறது. மயிலாடுதுறையிலிருந்தும் பந்தணைநல்லூர், வைதீஸ்வரன் கோயிலிருந்தும் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன.

ஊரின்பெயர் கருப்பறியலூராக இருப்பினும், கோயிலுக்குக் கொகுடிக்கோயில் என்று பெயர். முல்லைக் கொடியைத் தலக் கொடியாக உடைமையால் இப்பெயர்பெற்றது என்பர் ஒருசிலர். கோயில் அமைப்புப்பற்றி இப்பெயர்பெற்றது என்பர் வேறுசிலர்.

இறைவரது திருப்பெயர் குற்றம்பொறுத்தநாதர். ஒரு காலத்தில் இந்திரன் இறுமாப்புடன் கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன்முன் தோன்றினார். அவன் அதை அறிந்து கொள்ளாது வச்சிராயுதத்தை அவர்மேல் எறிந்தான். அதன்பின் இறைவர் என்று அறிந்து தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான். அதைப்பொறுத்த காரணம்பற்றி இப் பெயர்பெற்றார். இறைவியாரது திருப்பெயர் கோல்வளைநாயகி. தீர்த்தம் இந்திரதீர்த்தம்.

இக்கோயில் தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமானது. இவ்வூர் அந்தணர்களை இவ்வூர்த் தேவாரத்தில்,
``பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப்
போற்றிசைத்துப் பூசைசெய்து
கையினா லெரியோம்பி மறைவளர்க்கு
மந்தணர்தங் கருப்பறியலூர்``
எனச் சிறப்பித்துக் கூறியுள்ளது. அம்பலவாணர் இயற்றிய புராணம் அச்சில் வெளிவந்துள்ளது.



கல்வெட்டு:

இத்தலத்தின் கோயில் சீகாழி மலைக் கோயிலைப் போல் அமைந்திருக்கின்றது. மலைக்கோயிலில் அம்மையப்பர் திருவுருவமும் சட்டைநாதர் திருவுருவமும் உள்ளன. தருமை ஆதீனம் இருபத்தைந்தாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களால் ஜீரணோத்தாரணம் செய்யவும், சுதைவிக்ரகங்கள் புதுப்பிக்கவும்பெற்றுக் கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது. இதனை மேலைக்காழி எனவும் வழங்குவர்.

இத்திருக்கோயிலில் மூன்றாங்குலோத்துங்க சோழதேவரின் 13 ஆம் ஆண்டு 280 ஆம் நாள், 14 ஆம் ஆண்டு 35ஆம் நாள்களிலும், கோனேரின்மைகொண்டானின் 7 ஆம் ஆண்டு 73ஆம் நாள், 10ஆம் ஆண்டு 334ஆம் நாட்களிலும் திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் மூன்று, இருபது ஆண்டுகளிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்களும் விஜயநகர அரசர்களில் பிரதாபகிருஷ்ண தேவராயரின் சகம் 1489 இல் பொறிக்கப்பெற்ற கல்வெட்டும், அரசன் பெயர் குறிப்பிடாமல் உள்ள சில கல்வெட்டுக்களும் இருக்கின்றன.

தலைஞாயிறு என்னும் பெயர் எய்தியதற்குக் காரணம்: மூன்றாங்குலோத்துங்கசோழன் காலத்தில் இவ்வூர் தனிநாயகச் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயர் பெற்றது. அப்பெயரே சிதைந்து இக்காலம் தலைஞாயிறு என வழங்கப்பெறுகின்றது. இது மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தில் இராசாதிராச வளநாட்டுக் கழுமல நாட்டுக்கு உட்பட்டிருந்தது.

இவ்வூரை, இக்கோயில் கல்வெட்டுக்கள் அகரம் தனிநாயகச் சதுர்வேதி மங்கலம் எனக் குறிப்பிடுவதால் இது பிராமணர்கள் நிறைந்து வாழ்ந்த இடமாக இருக்கவேண்டும். இக் கோயிலில் பாறையின் மீது எழுந்தருளியிருக்கும் இறைவர் பார்வதி பாகர் என்னும் பெயரால் குறிக்கப்பெறுகின்றார். சோழக்குலத்தான் மங்களாதிராசர் என்பவர் இக்கோயிலின் ஸ்தூபியை வைத்தவர் ஆவர்.

அது நிகழ்ந்தது மூன்றாங் குலோத்துங்கசோழன் காலமாகும். இத்திருக்கோயிலில் பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளுவித்தவர் வில்லவரையர் ஆவர். திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் மூன்றாம் ஆண்டில் திருஞானம்பெற்ற பிள்ளையாருக்குக் காலை சந்திக்கும், உச்சியம்போதைக்கும் திருவமுது நடத்துமாறு நிவந்தம் அளிக்கப்பட்டிருந்தது. இக்கோயிலை வழிபடவரும் மாகேஸ்வரர்களுக்கும், திருவாதிரையில் கூத்தப்பெருமானை எழுந்தருளச்செய் வதற்கும் நிவந்தங்கள் அளிக்கப்பெற்றுள்ளன.

இக்கோயிலில் பெருமாள், சுந்தரப்பிள்ளையார், திருவுடையார், சோழர்குலத்தன் மங்களராசர் இவர்களின் உருவங்களின் பெயர்கள் பொறிக்கப்பெற்றுள்ளன. ஆனால் இப்பெயர்களுக்குரிய உருவங்கள் காணப்பெறவில்லை.

ஊர்ச்சபை உறுப்பினர்களாதற்குரிய சட்டதிட்டங்கள் இக் கோயில் வடபுறச் சுவரில் பொறிக்கப்பெற்றுள்ளன. அரசியல் அக்காலத்தில் எவ்வாறு நடைபெற்றது என்பதை அறிய விரும்புவாருக்கு இக்கல்வெட்டுப் பெரிதும் பயன்தரும். இக்கோயிலிலுள்ள மகாமண்டபம் விக்கிரமசோழவேளாளரால் கட்டப்பெற்றது(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1927, No. 140-158.)

 
 
சிற்பி சிற்பி