ஓமாம்புலியூர்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பூங்கொடிநாயகி உடனுறை துயரந்தீர்த்தநாதர்


மரம்: இலந்தை மரம்
குளம்: கௌரி தீர்த்தம்

பதிகங்கள்: பூங்கொடி -3 -122 திருஞானசம்பந்தர்
ஆராரும் -6 -88 திருநாவுக்கரசர்

முகவரி: ஓமாம்புலியூர் அஞ்சல்
காட்டுமன்னார்குடி வட்டம்
கடலூர் மாவட்டம், 608306
தொபே. 04144 264845

புலிக்கால் முனிவரால் (வியாக்கிரபாதரால்) பூசிக்கப் பெற்றதால் புலியூர் என்றும், பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர், பெரும்பூலியூர் என்பவைகளைப் போல வேறுபாடு தோன்ற வேள்விச் சிறப்பினையுடைய என்னும் பொருளில் ஓமாம் என்னும் அடை மொழியும் கொடுக்கப்பெற்று ஓமமாம் புலியூர் என்னும் பெயர் எய்திற்று. சம்பந்தர் தேவாரத்தில் இவ்வூர் ஓமமாம்புலியூர் என்றும், அப்பர் தேவாரத்தில் ஓமாம்புலியூர் என்றும் கூறப்பெற்றுள்ளது.

வேடன் ஒருவன் புலிக்குப் பயந்து ஓடிவந்து இக்கோயில் வில்வமரத்தில் ஏறிக்கொண்டான். அப்புலியும் அம்மரத்தை விட்டு அகலாது கீழிருந்தது. அது நீங்குமாறு, வேடன் வில்வ இலைகளைப் பறித்து இரவு முழுவதும் அப்புலியின்மேல் போட்டான். அவ் இலைகள் அம்மரத்தடியில் எழுந்தருளியிருக்கும் இறைவர்மீதுபட, அவர் அவ்வேடனுக்கு மறுநாட்காலையில் முத்தியளித்தார். அது காரணமாகவே இப்பெயர் பெற்றது என்பர். ஊரின்பெயர் ஓமாம் புலியூர் எனினும் அங்குள்ள கோயிலுக்கு வடதளி என்று பெயர். (தளி- கோயில்). வடதளி என்றமையால் கோயிலுக்குக் கீழ்ப்பக்கத்தில் இருக்கும் கோயில் தென்தளி ஆதல் வேண்டும். இது சிதம்பரத்திற்குத் தென்மேற்கிலுள்ள காட்டுமன்னார் குடிக்குத் தெற்கே கொள்ளிடப் பேராற்றின் வடகரைப் பக்கத்தில் இருக்கிறது. இது காவிரியின் வடகரைத் தலங்களுள் முப்பத்தொன்றாவது ஆகும்.

இறைவரின் திருப்பெயர் துயரந்தீர்த்தநாதர். இறைவியின் திருப்பெயர் பூங்கொடிநாயகி. தீர்த்தம் கொள்ளிடப்பேராறு. இத்தலத்து அந்தணப் பெருமக்களின் பெருமையை ஞானசம்பந்தப் பெருந்தகையாரும், அப்பர் அடிகளாரும் இவ்வூர்ப் பதிகங்களில் முறையே ``நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்று எரி ஓம்பும் ஒள்ளியார் வாழும் ஓமாம்புலியூர்`` என்றும், ``ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர்புகழ் நான்மறை ஓமாம்புலியூர்`` என்றும் கூறியுள்ளனவற்றால் அறியலாம். இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் அப்பர் பதிகம் ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.


கல்வெட்டு:

இத் திருக்கோயிலில் சோழமன்னரில் மூன்றாங் குலோத்துங்க சோழ தேவரின் காலத்துக் கல்வெட்டு ஒன்றும் பல்லவரில் சகல புவனசக்கிரவர்த்தி கோப்பெருஞ்சிங்க தேவருடைய காலத்துக் கல்வெட்டு ஐந்தும் ஆக ஆறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. சோழ மன்னர் காலத்துக் கல்வெட்டில் இறைவரின் திருப்பெயர் வடதளி உடையார் என்றும், பல்லவர் காலத்துக் கல்வெட்டில் வடதளி உடைய நாயனார் எனவும், வடதளி உடையார் வரும் துயரம் தீர்த்த நாயனார் எனவும் கூறப்பெற்றுள்ளது. இங்குக் குறித்த சோழர் பல்லவர் காலங்களில் இவ்வூர் வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிருமதேயம். ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழ சதுர்ப்பெதி மங்கலம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

விருதராசபயங்கர வளநாட்டின் உட்பகுதியாய் அடங்கிய நாடுகளில் காநாடு என்பது ஒன்றாகும். அது மேற்காநாடு கீழ்க்காநாடு என்னும் இருபகுதிகளை உடையது, இவற்றுள் கொள்ளிடப் பேராற்றின் வட கரையை ஒட்டிய பிரதேசமாகிய ஓமாம்புலியூர் திருக்கடம்பூர் இவைகள் மேற்காநாட்டைச் சேர்ந்தவனவாகும். இவ் ஓமாம்புலியூர்க்குக் கிழக்கே யுள்ள திருக்கானாட்டு முள்ளூர், கீழ்க்காநாட்டைச் சேர்ந்ததாகும். இவ் ஓமாம்புலியூர்க்கு அண்மையில் ஆதனூர் என்னும் ஊர் இருக்கிறது. இதுவே திருநாளைப் போவார் பதியாகும். அவர் பதியைச் சேக்கிழார் மேற்காநாட்டு ஆதனூர் என்று குறித்திருப்பதை அறிய இவ்வூர்க் கல்வெட்டுப் பெரிதும் பயன் படுகிறது.

 
 
சிற்பி சிற்பி