வாட்போக்கி (திருவாட்போக்கி)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சுரும்பார்குழலியம்மை உடனுறை இரத்தினகிரிநாதர்


மரம்: வேம்பு
குளம்: காவிரி

பதிகம்: காலபாசம் -5 -86 திருநாவுக்கரசர்

முகவரி: சிவாயம் அஞ்சல்
வைகநல்லூர் திருச்சி மாவட்டம், 639124
தொபே. 34323 245522

இரத்தினகிரி என இக்காலம் வழங்கும் இவ்வூர், திருச்சி மாவட்டத்தில் குளித்தலை தொடர்வண்டி நிலையத்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ளது.

மாணிக்கம் வேண்டிவந்த வடநாட்டு வேந்தன் ஒருவனுக்கு இறைவன் நீர்த்தொட்டி ஒன்றைக் காட்டி அதைக் காவிரி நீரால் நிரப்பும்படிக் கட்டளையிட, வேந்தன் முயன்றும் முடியாதது கண்டு, இறைவன்மீது தன் வாளை ஓச்ச, இறைவர் அவ்வாளைப்போக்கி இரத்தினம் கொடுத்த காரணத்தால் வாட்போக்கி என்னும் பெயர் பெற்றதென்பர்.

அகத்தியர், இந்திரன் முதலியோர் பூசித்துப் பேறெய்திய தலம். இங்கு அகத்தியர் உச்சிக்கால வழிபாடு (மத்தியான தரிசனம்) பெற்றபடியால், இங்கே உச்சிக்கால வழிபாடு சிறந்தது என்பர். சுவாமிக்கு மத்தியான சுந்தரர் என்ற பெயரும் உண்டு. இத்தலத்தை வழிபட வந்தவர் இங்கு இந்திரனால் உண்டாக்கப்பட்ட வேப்பமரத்தையும், இறைவரையும் வழிபட்டுத் திரும்பும்பொழுது வயிரவீரப்பெருமாள் என்னும் வீரவாகுவையும் வணங்கவேண்டும் என்று ஆன்றோர் கூறுவர்.




கல்வெட்டு:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1914 No. 144-191)

இத்திருக்கோயிலில் சோழமன்னர்களில் பரகேசரிவர்மரான உடையார் இராஜேந்திரதேவர் (கி.பி.1053-1063), முதற் குலோத்துங்க சோழதேவர், விக்கிரமசோழர், இரண்டாம் இராஜாதிராஜன்,

மூன்றாங்குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியமன்னரில் எம்மண்டலமும் கொண்டருளிய ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் I காலத்திலும்; விஜயநகரவேந்தர்களில் அரியண்ண உடையார் மகனாகிய விருப்பண்ண உடையார் II வீரநரசிம்மபூபால மகாராயர், சதாசிவதேவ மகாராயர் காலங்களிலும்; ஹொய்சல அரசர்களில் வீரசோமேஸ்வரன், வீரராமநாதன் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கல்வெட்டுக்களில் இறைவர் மாணிக்கமலை மகாதேவர், மாணிக்கமலை உடைய நாயனார், திருமாணிக்கமலை உடைய தம்பிரானார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். இறைவியார் திருக்காமக்கோட்டமுடைய பெரிய நாச்சியார் என்னும் பெயரால் அழைக்கப்பெறுகின்றனர்.

இவரை எழுந்தருளுவித்தவன் சிவபாதசேகரபுரத்து வணிகனாகிய திருஞானசம்பந்த நம்பி ஆவன். வடகொங்கில் இராஜராஜபுரத்தில் இருந்த புகலூர் தாமோதரனான பிள்ளைக்கடியார் இக்கோயிலில் உள்ள திருப்பள்ளியறை நாச்சியாரை எழுந்தருளுவித்துள்ளார்.

கோயிலில் தட்சிணாமூர்த்தி தேவரை எழுந்தருளுவித்து, சோபானங்களை (படிக்கட்டுகளை)க் கட்டியவர் சிவ பாதசேகரத்து வணிகனாகிய சிற்றம்பருடையான் காளி நல்லிசை யாளன் ஆவர்.

இக்கோயில் ஆடவிடங்கப்பிச்சனால் கருங்கல்லால் கட்டப் பட்டுள்ளது என்பதை இக்கோயில் கல்வெட்டுப்பாடல் தெரிவிக் கின்றது.

இக்கோயில் மண்டபம் சிவபாதசேகரபுரத்து நகரத்தாரால் கட்டப்பட்டது.

சாத்தன் சேதிராயனின் அகம்படி முதலிகளில் ஒருவனாகிய கொங்கரைக்கொண்ட பல்லவரையன் இக்கோயில் மண்டபத்துக்குக் கதவுகளை இட்டதோடு வாசல்படிக் கட்டுகளையும் கட்டியுள்ளான். இவனே மலையின் அடிவாரத்தில் திருமடைவிளாகத்தையும் ஏற்படுத்தியுள்ளான்.

இக்கோயிலில் வைகாசித் திருநாளுக்கும், மார்கழித் திருவாதிரைச் சிறப்புக்கும், சிவராத்திரி நாட்செலவுக்கும் நிவந்தங்கள் அளிக்கப்பெற்றிருந்தன. இறைவர்க்குத் திருமஞ்சனத்தின் பொருட்டு காவிரியிலிருந்து நீர் கொண்டு வருவதற்கு நிவந்தம் அளிக்கப்பெற்றது. விழாக்காலங்களில் இறைவரை மண்டபத்துக்கு எழுந்தருளப் பண்ணுங்கால் அவர்க்குத் திருவமுதுக்குச் சிவபாதசேகரநல்லூரில் இருந்த நாலூர் உடையான் நிலநிவந்தம் அளித்திருந்தான். தட்சிணாமூர்த்தி தேவாலயத்துக்கு சிவபாத சேகரபுரத்து வணிகனால் திருவமுதுக்கு இரண்டுமா நிலம் விடப்பட்டிருந்தது.

முதற் குலோத்துங்க சோழனின் 40 ஆவது ஆட்சியாண்டில் சிவபாத சேகரபுரத்துத் தென்மேற்கு வாசலில் இருந்த எழுநூற்றுவன் திருமடத்தில் தேவரடியார், சிவயோகி, தபசி இவர்கள் உண்பதற்கு வட கொங்கில் உள்ள இராஜராஜபுரத்தில் இருந்த புகலூர் தாமோதரனான பிள்ளைக்கடியார் நிவந்தம் அளித்திருந்தனர். முதற்குலோத்துங்க சோழனின் 47ஆவது ஆண்டில் அபூர்விகளை அமுது செய்விப் பதற்கும் நிவந்தம் விடப்பட்டிருந்தது.

 
 
சிற்பி சிற்பி