பாதிரிப்புலியூர் (திருப்பாதிரிப்புலியூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பெரிய நாயகி அம்மை உடனுறை தோன்றாத்துணைநாதர்


மரம்: பாதிரி
குளம்: கெடில நதி

பதிகங்கள்: முன்னநின்ற -2 -121 திருஞானசம்பந்தர்
ஈன்றாளுமா -4 -94 திருநாவுக்கரசர்

முகவரி: திருப்பாதிரிப்புலியூர் அஞ்சல்
கடலூர் மாவட்டம், 607002
தொபே. 04142 236728

பாதிரி மரத்தைத் தலத்துக்குரிய மரமாகக் கொண்டமை யாலும், புலிக்கால் முனிவரால் (வியாக்கிரபாதரால்) பூசிக்கப் பெற்றமையாலும் இது இப்பெயர்பெற்றது. திரு - அடை மொழி.

இது திருப்பாதிரிப்புலியூர் என்னும் தொடர்வண்டி நிலையத் திற்கு அருகில் இருக்கிறது. கடலூர் (புதுநகர்) என இவ்வூர் வழங்கு கிறது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிலிருந்தும் கடலூர் வரப் பேருந்துகள் உள்ளன. இது நடுநாட்டுத்தலங்களுள் ஒன்றாகும்.

இறைவர் திருப்பெயர் தோன்றாத்துணைநாதர். `` திருப் பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணையாயிருந்தனன் தன்னடியோங்களுக்கே`` என்ற இத்தலத்து முதற்பதிகத்திலுள்ள அப்பர் பெருமானின் திருவாக்கு இதற்குச் சான்றாகும். இறைவியார் திருப்பெயர் பெரிய நாயகி அம்மை. தலவிருட்சம் பாதிரி. இதை வடமொழியில் பாடலம் என்பர்.

தீர்த்தம் - கெடிலநதி. இது தென்திசைக் கங்கை என்று பாராட்டுப்பெற்றுள்ளது. திருநாவுக்கரசர் பெருமானைச் சமணர்கள் கல்லில் கட்டிக் கடலில் தள்ள, அப்பொழுது அவர் ``சொற்றுணை வேதியன்`` எனத் தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தை ஓதிக் கரையேறப்பெற்றதால், அவ்வூர் இப்பொழுது கரையேறவிட்ட குப்பம் என்று வழங்கப் பெறுகின்றது. சுவாமிகள் கரையேறி இப்பதிக்கு முதலில் வந்தபோது ``ஈன்றாளுமாய்`` எனத் தொடங்கும் பதிகம் பாடப்பெற்றது. மங்கண முனிவர் என்பவர் முடங்கிய காலுடைய முயல் வடிவமாகச் சாபமிடப் பெற்றார்.அவர் இத்தலத்து இறைவரைப் பூசித்துச் சாபநீக்கம் பெற்றார். இச்செய்தி ``முன்னநின்ற முடக்கான் முயற்கருள் செய்து`` என்னும் இக்கோயிலுக்குரிய திருஞானசம்பந்தப் பெருந்தகையாரின் திருவாக் கால் புலப்படுகின்றது. இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன. சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும், தொல் காப்பியர் இயற்றிய கலம்பகமும் இருக்கின்றன.

இவைகள் அச்சில் வெளிவந்துள்ளன.

``சிவாய நமவென்று நீறணிந்தேன்

தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூரரனே``.

என்னும் அப்பர் பெருமானுடைய திருவாக்கு, `சிவாயநம` என்று சொல்லித் திருநீற்றை அணிந்து கொள்ளவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது. ``திருந்தா வமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்து முத்திதரும் தாளிணைக்கே சரணம் புகுந்தேன்`` என்னும் அவருடைய திருவாக்கு. அவர் சமண சமயத்திலிருந்ததற்கு அகச்சான்றாய் உள்ளது.

இவ்வூரில் திருக்கோவலூர் ஆதீனத்தைச்சேர்ந்த ஒரு மடாலயம் இருக்கின்றது. அது வீர சைவ மடமாகும்.




கல்வெட்டு:

இந்தக்கோயிலில் 21 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளன, கோயில் புதுப்பிக்கப்பட்டபோது அவை அகற்றப்பட்டுச் சிதறிக்கிடக்கின்றன. கல்வெட்டுக்கள் இரண்டைத் தவிர மற்றவை யெல்லாம் சோழர்களுடையனவே. இவை பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுவரையில் வெட்டுவிக்கப்பட்டவையாம். கோப்பரகேசரிவர்மன் காலத்தில் கி.பி. 969இல் சோமாசியார் 5 பிராமணர்களுக்குக் குடியிருக்க நிலம் தந்ததும், கி.பி.923இல் தாமோதக்கன் ஒற்றியூரான் ஒரு கமுகந்தோட்டம் கொடுத்ததும், நாராயணன் சேந்தன் திருவமிர்தத்திற்காக வேண்டும் முதல் கொடுத்ததும் கண்டிருக்கின்றன.பிறகு இராசகேசரி காலத்தில் (கி.பி.959) ஒரு நந்தா விளக்கிற்காக 96 ஆடுகள் கொடுக்கப்பட்டன. வீரராசேந்திரன் காலத்தில் (கி.பி.1057) மும்முடிச்சோழப் பேரியான் நுந்தாவிளக்கு வைத்ததும், காடன்தேவன் 80 கலம் நெல் தந்ததும் காண்கின்றன. குலோத்துங்கன் காலத்தில் கி.பி. 1076-ல் இராமேச்சுர முடையான் நுந்தா விளக்கிற்காக 20 காசு தந்ததும் இதில் கண்டிருக் கிறது. விக்கிரமசோழன் காலத்தில் (கி.பி. 1118, 1124,25) மூவேந்த வேளான் ஒரு விளக்கிற்காக 18 காசும் உலகளந்த மூவேந்த வேளான் 18 காசும் கொடுத்துள்ளார்கள். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1213) காலத்தில் தேவதானத்தில் எல்லை குறிக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலில் சோழமன்னர்களுள் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், இராஜராஜ ராஜகேசரிவர்மன் (முதலாம் இராஜராஜசோழன்), இராஜகேசரிவர்மனாகிய உடையார் வீர ராஜேந்திர தேவன், இராஜகேசரிவர்மனாகிய உடையார் இராஜ மகேந்திர தேவன், முதற்குலோத்துங்கன், விக்கிரமசோழதேவன் இவர்கள் காலங்களிலும், பாண்டியர்களில் பெருமாள் விக்கிரம பாண்டியன் காலத்திலும், விஜயநகரப் பரம்பரையினரில் வீரவிருப் பண்ண உடையார் காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.

இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருக்கடைஞாழல் பெருமான் அடிகள், திருக்கடைஞாழல் ஆழ்வார், தோன்றாத்துணை ஆளுடையார், திருக்கடைஞாழல் உடையார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர்.

இவ்வூரை மதுரைகொண்ட கோப்பர கேசரிபன்மரின் கல்வெட்டு வடகரைதேவதானம் திருப்பாதிரிப் புலியூர் எனவும், இராஜகேசரிபன்மரான உடையார் இராஜமகேந்திர தேவர் கல்வெட்டு வடகரை இராஜேந்திரசோழ வளநாட்டு மேல்கால் நாட்டுப் பிர்மதேயம் திருப்பாதிரிப்புலியூர் எனவும், விக்கிரமசோழ தேவர் கல்வெட்டு இராஜராசவள நாட்டுப் பட்டான்பாக்கைநாட்டுத் திருப்பாதிரிப்புலியூர் எனவும், `வீரமே துணையாக` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய வீரராசேந்திரசோழதேவர் கல்வெட்டு இராஜேந்திரசோழ வளநாட்டுப் பவித்திரமாணிக்கவள நாட்டு பிர்மதேயம் பரநிருப பராக்கிரம சதுர்வேதிமங்கலம் எனவும் கூறுகின்றன.

மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கல்வெட்டு ``வடகரை தேவதானம் பாதிரிப்புலியூர் திருக்கடைஞாழல் பெருமான் அடிகளுக்கு`` எனவும், கோவிராசகேசரிபன்மரான உடையார் ஷ்ரீ இராசமகேந்திரதேவரின் கல்வெட்டு வடகரை இராசேந்திர சோழவள நாட்டு மேல்கால்நாட்டுப் பிர்மதேயம் பாதிரிப்புலியூரான பரநிருப பராக்கிரம சதுர்வேதி மங்கலத்து உடையார் திருக்கடை ஞாழலுடை யாருக்கு எனவும், முதற்குலோத்துங்க சோழன் கல்வெட்டு திருப் பாதிரிப்புலியூர்த் திருக்கடைஞாழல் உடைய பெருமான் அடிகள் எனவும் குறிப்பிடுகின்றன. ஆதலால் ஊரின் பெயர் பாதிரிப்புலியூர் ஆகவும் கோயிலின் பெயர் ஞாழற்கோயிலாகவும் கொள்ளவேண்டும்.

நாவுக்கரசு பெருந்தகையார் ``கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்`` என்று தாம் அருளிய அடைவுதிருத்தாண்டகத்தில் குறிப்பிட்டிருக்கும் கோயில் இப்பாதிரிப்புலியூர்க்கோயில் என்பதை மேற்கண்ட கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஞாழல் என்பதற்குப் புலிநகக்கொன்றை என்ற பொருள் உண்டாயினும் அதைத் தலவிருட்சமாகக் கொள்ளுதற்கில்லை. இவ்வூர்க்குரிய தலவிருட்சம் பாதிரிமரமாதலால் பாதிரிப்புலியூர் என்று பெயர்பெற்றது. மேலும் ஒரு ஊருக்கு இரண்டு தல விருட்சங்கள் கிடையாதென்பதையும் உய்த்துணரவேண்டும். பாதிரி என்ற சொல் தேவாரத்தில் வருவதால் அதுவே தலமரமாதல் வேண்டும்.

இக்கோயில் கல்வெட்டுக்கள் நுந்தாவிளக்கினுக்கும், திருவமிர்துக்கும், பூந்தோட்டத்திற்கும் நிவந்தங்கள் கொடுத்த செய்திகளைக் குறிப்பிடுகின்றன.

``திருநட்டக்கணப்பெருமக்கள் வழி கொடுத்த தோட்டம்``, ``திருவுண்ணாழிகைப் பெருமக்களோம் திருவமிர்துக்கு வேண்டும் முதல் இவரிடைப்பெற்றோம்`` என்னும் கல்வெட்டுத் தொடர்கள் திருநட்டக்கணப் பெருமக்களும், திருவுண்ணாழிகைப் பெருமக்களும் இக்கோயில் நிர்வாகிகளில் சிலர் என்பதைக் குறிப்பனவாகும்.

இவ்வூர்க் கல்வெட்டுப் பாடலில் திருநாவுக்கரசுப் பெருந் தகையார் பரசமய கோளரி மாமுனிவர் என்னும் ஒருவரால் கூறப் பெற்றிருப்பதோடு அவர்மீது புராணம் இயற்றிய புலவர்க்கு இரண்டு மா நிலம் இறையிலி யாகக் கொடுத்த செய்தி குறிப்பிடப் பெற்றுள்ளது.

கன்னி வன புராணமும், திருப்பாதிரிப்புலியூர் நாடகமும் புரசமய கோளரி மாமுனி என்பவரால் இயற்றப்பட்டவை. இச்செய்தி முதற் குலோத்துங்க சோழதேவரின் (கி.பி.1070 முதல் 1120 வரை) நாற்பத்தொன்பதாம் ஆண்டில் (கி.பி.1119,) இற்றைக்கு எண்ணூற் றெழுபத்தெட்டு ஆண்டிற்கு முன்னதான கல்வெட்டில், குறிப்பிடப் படுகிறது. மேலும் முதற்குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டுப் பாடல் ஒன்று இக் கோயிலுக்குக் கன்னிவன புராணமும், நாடகமும் பாடிய நாவலர் ஒருவர்க்கு நிவந்தம் அளித்ததையும் குறிப்பிடுகின்றது. வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டு ( See the Annual Reports on South Indian Epigraphy for the year 1928, No. 42-108.)இவ்வூரில் புஷ்பகிரிமடம் ஒன்று இருந்ததைப்பற்றித் தெரிவிக்கின்றது.

 
 
சிற்பி சிற்பி