நாவலூர் (திருநாவலூர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை நாவலேசுவரர்


மரம்: நாவல்மரம்
குளம்: கோமுகி தீர்த்தம்

பதிகம்: கோவலன் -7 -17 சுந்தரர்

முகவரி: திருநாவலூர் அஞ்சல்
உளுந்தூர்ப்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம், 607204
தொபே. 04149 224391

இவ்வூரை இக்காலம் மக்கள் திருநாமநல்லூர் என்று வழங்குகின்றனர். விழுப்புரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் இருப்புப் பாதையில் உள்ள இருந்தை என்னும் தொடர்வண்டி நிலையத்துக்குக் கிழக்கே நான்கு கி.மீ. தொலைவில் இருக்கின்றது.

இவ்வையகமெல்லாம் ஈடேறவும் செந்தமிழ் தழைத் தோங்கவும், மாற்றம் மனங்கழிய நின்றான் அருளை நிரம்பப் பெற்று, பல அற்புதங்களைச் செய்து, சைவசமயமே மெய்ச்சமயம் என்பதை நிலைநாட்டிய சைவசமய ஆசாரியர் நால்வரில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் அவதாரஞ்செய்தருளிய தலம் இது. நரசிங்க முனையரையர் என்னும் அரசர் இத்தலத்து இறைவர்க்கு விரும்பித் தொண்டு செய்து வந்தபதி. இச்செய்தி `நரசிங்க முனையரையன் ஆதரித்தீசனுக்காட்செயும் ஊர் அணிநாவலூர்` என்னும் சுந்தரமூர்த்தி நாயனார் திருவாக்கால் அறியக்கிடக்கின்றது. (திருநாவலூர்ப் பதிகம், திருப்பாடல் 11)

தலவிருட்சம்: நாவல்மரம். இம்மரம் அம்மன் சந்நிதிக்கு அருகில் இருக்கிறது. தீர்த்தங்கள்: கோமுகி தீர்த்தம் - இது கோயிலுக்கு மேற்கில் உள்ளது.

கெடிலநதி: இது ஊர்க்குத்தெற்கே ஒரு கி.மீ தூரத்தில் இருக்கிறது.

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் சந்நிதி: வெளிப்பிராகாரத்தில் தென்கிழக்கில் இருக்கின்றது. சுந்தரர் பாடிய இவ்வூர்ப் பதிகத்தில் உள்ள, `பொன்னடிக்கென்னைப் பொருந்தவைத்த வேயவனார்` என்னும் தொடரினால் இத்தலத்துச் சிவபெருமான் முன்னொரு காலத்தில் மூங்கில் புதரின் அடியில் இருந்த குறிப்புப் புலப்படுகிறது.



கல்வெட்டு:

(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1902. No. 325-380 and the S.I.I.Vol. VII No. 954 -1010.)இவ்வூரின் பெயர் திருநாவலூர் ஆயினும் இங்குள்ள கோயிலுக்குத் திருத்தொண்டீச்சரம் என்று பெயர். இக்கோயிலிலுள்ள முதலாம் பராந்தக சோழருடைய இருபத் தொன்பதாம் ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும், ஏனைய கல்வெட்டுக்களும் இவ்வூரைத் திருமுனைப்பாடித் திருநாவலூர்த் திருத்தொண்டீஸ்வரமான இராஜாதித்த ஈஸ்வரம் என்று குறிப்பிடுகின்றன.

இத்தொண்டீஸ்வரத்தைக் கற்றளியாகக் (கருங்கல்லால்) கட்டுவித்தவன் முதற் பராந்தக சோழனது முதல் மகனாகிய இராசாதித்தன் ஆவன். இச்செய்தி `ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு இருபத்தெட்டாவது திருமுனைப்பாடி, திருநாவலூர்த் திருத்தொண்டீஸ்வரம் திருக்கற்றளி செய்வித்த இராஜாதித்ததேவர் தாயார் நம்பிராட்டியார் கோக்கிழானடிகள் பரிவாரத்தாள் சித்திரகோமளம் வைத்த சாவாமூவாப் பேராடு தொண்ணூறு. ஈழ விளக்கு ஒன்று. இது பன்மாஹேஸ்வரரகை்ஷ என்னும் கல்வெட்டால் தெளிவாக அறியக்கிடக்கின்றது. (Epigraphica Indica, Volume VII page 133) முதற் பராந்தகசோழனின் இருபத்தெட்டாம் இராச்சிய ஆண்டில் அதாவது கி.பி. 935 இல் தொண்டீச்சரத்தைக் கருங்கல்லால் கட்டிய இராசாதித்தனுடைய தாயார், கோக்கிழானடிகளின் பரிவாரத்தாள் சித்திரகோமளம் என்பவள் ஒரு நுந்தா விளக்கு ஒன்றுக்கு, தொண்ணூறு ஆடுகளையும் ஒரு ஈழவிளக்கையும் கொடுத்துள்ளாள் என்பது இக்கல்வெட்டின் பொருளாகும்.

இராசாதித்தன் இக்கோயிலைக் கருங்கல்லால் கட்டி அதற்கு இராசாதித்தஈஸ்வரம் என்று தன்பெயரை வைத்தாலும் முன்னுள்ள தொண்டீச்சரம் என்னும் பெயர் மறைந்து போகாமல் இருத்தற்கு அதற்குத் திருநாவலூர்த் திருத்தொண்டீஸ்வரமான இராஜாதித்த ஈஸ்வரம் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்களில் குறித்துள்ளான். இராசாதித்தன் இக்கோயிலைக் கருங்கல்லால் கட்டியது இற்றைக்கு 1030 ஆண்டுகளுக்கு முன்னதாகும்.

கர்ப்ப இல்லிற்கு முன்புள்ள மண்டபங்களைக் கட்டியவர்: இம் மண்டபங்களைக் கட்டியவர் இத்திருநாவலூர் வியாபாரி வேளூர் கிழவர் பள்ளிபட்டணசுவாமி ஆவார். இச்செய்தி `உடையார் திருத்தொண்டீஸ்வரமுடைய நாயனார் ஏவலாலே இவ்வூர் வியாபாரி வேளூர் கிழவன் பள்ளிபட்டணசாமி பெரியான் இத்திருமண்டபம் இரண்டும் செய்து கீழைத்திருவாசலும் திறந்து அத்திருவாசலும் செய்வித்தான்`( S.I.I. Vol. VII No. 1002) என்னும் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. இக்கல்வெட்டின் தொடக்கத்தில் அரசர் பெயர் குறிக்கப்படாமையால் இம்மண்டபங்கள் எந்த அரசர்களின் காலங்களில் கட்டப்பட்டன என அறுதியிட்டு உரைத்தற்கு இல்லை.

இக்கோயில் நடராசப் பெருமானைப் பற்றிய செய்தி: முதலாம் இராசராச சோழனின் 21-ஆம் இராச்சிய ஆண்டில் அதாவது கி.பி. 1006இல் மும்முடி சோழ பிரமராயர் கன்மி கழுப்பருடையான் சித்திரகுப்தன் ஐய்யக் குமரடி, இக்கோயிலில் ஆடி அருளுகிற கூத்தர்க்கு, திருநாவலூர்க் கோலால் 1750 பலம் நிறையுள்ள பாத பீடம் ஒன்றைக் கொடுத்துள்ளான்.

திருவமுது வகைகள்: இறைவர்க்குத் திருவமுதுக்குப் படிஇரட்டி மூன்று சந்தியும் குத்தல் அரிசி பன்னிரு நாழியும், நெய் முப்பிடியும், கறியமுதுக்கு நெல்லு முந்நாழியும் உள்ளிட்டவைகளுக்கு, கோப்பரகேசரிவர்மரின் மூன்றாம் ஆண்டில் முனையதரையர் அபராயிதன் குலமாணிக் கெருமனார் அருளிச் செய்ய, செம்மனங் கூருடைய நம்பூரன் பெருமுகிலன் விக்கிரமாபரண பல்லவரையன், காடுவெட்டித் திருத்தின நிலத்தைக் கொடுத்துள்ளான்.

தேவதான நிலங்கள்: திருத்தொண்டீச்சரமுடையார்க்கு மேலூர் நாட்டுத் திருநாவலூரும் இந்நாட்டுப் பெரும்பாக்கமும் மங்கல நாட்டு ஏகதீர சதுர்வேதிமங்கலமும் உரியனவாய் இருந்தன. இச் செய்தி முதலாம் இராசராச சோழனுடைய பதினெட்டாம் இராச்சிய ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டால் புலப்படுகின்றது. இவைகளுள் பெரும்பாக்கம் என்னும் ஊர், திருநாவலூர்க்கு வட மேற்கே நான்கு மைல் தொலைவில் இருக்கின்றது.

கற்றளியைச் செய்த தச்சனின் பெயர்: இத்திருநாவலூர் இராஜாதித்த ஈஸ்வரத்தைக் கருங்கல்லால் செய்த தச்சனின் முழுப்பெயரும் கிடைக்கவில்லை. ஒரு கல்வெட்டில் `இச்சாச நஞ்சேதானிக்கற்றளி செய்த தலைச்சங் ...... இவையென்னெழுத்து` என்பதிலிருந்து அவனுடைய பெயரில் பாதியாவது கிடைத்தது மகிழ்தற்குரியதாகும். (S.I.I.Vol. VII No. 963)

திருவலகிடுவார் திருப்பள்ளித் தாமம்தொடுப்பார்: இத்திருக் கோயிலில் திருவலகிடுவார் நால்வர், திருப்பள்ளித்தாமம் தொடுப்பார் இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு, கோவிராச கேசரிபன்மரின் மூன்றாம் இராச்சிய ஆண்டில் வீரஸோக பண்டிதன் நாற்பது கழஞ்சு பொன்னை மூலதனமாக வைத்திருந்தான்.

திருமால்கோயில்: இவ்வூரில் திருமால்கோயில் ஒன்று இத்தொண்டீச்சரத்துக்கு மேற்கில் உள்ளது என்பதும், அத் திருமாலின் திருப்பெயர் திருமேற்றளி மகாவிஷ்ணுக்கள் என்பதும் முதற்பராந்தக சோழனின் 32 ஆம் ஆட்சியாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டால் புலப்படுகின்றது.(S.I.I. Vol VII No. 978 )

வரலாற்றுப் பகுதி: முதற்பராந்தக சோழனது தேவியாரின் திருப்பெயர் கோக்கிழானடிகள் என்பதாகும். இவ்வம்மையார் சேரர் குலத்தினர் ஆவர். இம்மன்னனது முதல் மகன் இராஜாதித்தன். இந்த இராஜாதித்தன் மனைவியாரின் பெயர் மகாதேவடிகள் என்பதாகும். இவ்வம்மையார் மிலாடதரையர் மகளாவர். இந்த அம்மையாருடைய அண்ணன் இராஜாதித்த ஈஸ்வரத்துக்கு ஒரு நுந்தாவிளக்குக்கு நூறுசாவா மூவாப் பேராடுகளைக் கொடுத்துள்ளான்.(A.R.E. 1902 No. 363)

கண்டராதித்த சோழருடைய தேவியாரின் திருப்பெயரும் மாதேவடிகள் என்பதாகும். இச்செய்தி, ``கண்டராதித்ததேவர் தேவியார் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார்`` என்னும் கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.(S.I.I. Vol III Part III No. 146 page 296) திருவையாற்று ஓலோகமா தேவீச்சரத்திலுள்ள கல்வெட்டு ஒன்று, ``ராஜராஜதேவர் திருமகளார் மாதேவடிகளார்`` என்று குறிப்பிடுகின்றது. எனவே மாதேவடிகள் என்பது இயற்பெயராகவே உள்ளது என்பது ஈண்டு அறிதற்குரியதொன்றாகும்.

இத்திருநாவலூரைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் அனைத்தும் திருமுனைப்பாடி திருநாவலூர் என்றே குறிப்பிடுகின்றன. திருமுனைப் பாடி திருநாவலூர் என்பது திருமுனைப்பாடிக்கு அருகில் உள்ள திருநாவலூர் என்று பொருள்படும், இங்ஙனமே கல்வெட்டுக்களில் வரும் சாத்தனூர், திருவாவடுதுறை, பருவூர்க் கூற்றத்து நெற்குப்பை திருமுதுகுன்றம் என வரும் இடங்களிலும் சாத்தனூர்க்கு அருகிலுள்ள திருவாவடுதுறை நெற்குப்பைக்கு அருகிலுள்ள திருமுதுகுன்றம் எனப் பொருள் கொள்ள வேண்டும். இக்காலத்திலும் இவ்வழக்கம் உண் டென்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் வழுத்தூர் அய்யன்பேட்டை. மனைக்கால் அய்யன்பேட்டை என மக்கள் கூறுவதால் அறியலாம். வழுத்தூருக்கு அருகிலுள்ள அய்யன்பேட்டை, மனைக்காலுக்கு அருகிலுள்ள அய்யன்பேட்டை என்பவை இவைகளின் பொருளாகும்.

நுந்தாவிளக்கு: நுந்தா விளக்கு என்பது தூண்டப் பெறாத விளக்கு ஆகும். இந்த நுந்தாவிளக்கு ஒன்றுக்கு, நிசதம் உழக்கு நெய் எரிப்பதற்கு ஆடாயின் தொண்ணூற்றாறும் பசுவாயின் நாற்பத்தெட்டும், எருமையாயின் பதினாறும் அளிப்பது வழக்கம் என்பது முதலாம் இராசராசனுடைய தஞ்சை இராசராசேச்சரக் கல்வெட்டால் அறியலாம். இங்ஙனம் கொடுக்கப்பட்ட ஆடுகளும், பசுக்களும் சாவா மூவாப் பேராடுகள், சாவாமூவாப் பெரும் பசுக்கள், எனக் குறிக்கப் பட்டிருக்கும். இனம் பெருகிக்கொண்டிருக்கும் ஆடுகள், இனம் பெருகிக்கொண்டிருக்கும் பசுக்கள் என்பன அத்தொடர்களின் பொருள்.

இத்திருநாவலூர்க் கல்வெட்டுக்களில் பெரும்பான்மை நுந்தா விளக்குகளுக்கு 100 ஆடுகள் விடப்பட்ட செய்திகளே குறிக்கப்பட்டுள்ளன. இந் நுந்தா விளக்குகளுக்கு நிவந்தம் வழங்கியவர்களில் பெரும்பான்மையோர் இந்த இராஜாதித்தனுடைய பரிவாரத்தார்களேயாவர். பகைதீர ஒருவர் நுந்தா விளக்குக்கு நிவந்தம் அளித்திருப்பது இவ்வூர்க் கல்வெட்டால் அறியப்படும் புதிய செய்தியாகும்.

இவ்வூரைத் தன்னகத்துக் கொண்டுள்ள நாடு: இவ்வூர், முதற் பராந்தக சோழன் காலத்துக் கல்வெட்டுக்களில், `திருமுனைப்பாடித் திருநாவலூர்` என்றும், பூமியும் திருவும் தாமே புணர் என்னும் மெய்க்கீர்த்தியை யுடைய விசயராசேந்திரன் கல்வெட்டில் `இராஜேந்திர வளநாட்டுத் திருமுனைப்பாடி மேலூர் நாட்டுத் திரு நாவலூர்` என்றும், முதற்குலோத்துங்க சோழனின் 37வது ஆண்டுக் கல்வெட்டில் `கங்கை கொண்ட சோழ வளநாட்டுத் திருமுனைப்பாடி மேலூர் நாட்டுத் திருநாவலூர்` என்றும், `பூமேவிவளர் திருப்பொன் மாதுபுணர` என்னும் மெய்க்கீர்த்தியை யுடைய குலோத்துங்க சோழனின் கல்வெட்டில் `இராஜராஜ வளநாட்டுத் திருமுனைப்பாடி மேலூர் நாட்டுத் திருநாவலூர்` என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

நினைவில் வைக்க வேண்டிய செய்தி: இக் கோயிலிலுள்ள முதற்பராந்தக சோழனின் இருபத்தொன்பதாம் ஆண்டுக் கல்வெட்டு திருநாவலூர்த் திருவகத்தீஸ்வரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

இந்த அகத்தீச்சரம் என்பது தொண்டீச்சரத்துக்கு வேறுபட்ட கோயிலாகும். இம் மன்னனுடைய இதே ஆண்டில் பொறிக்கப்பட்ட இக்கோயில் கல்வெட்டு `இராஜாதித்த ஈஸ்வரத்து மகாதேவர்க்கொன்றும், திருவகத்தீஸ்வரத்து மகாதேவர்க்கொன்றும் வைத்த விளக்கு`(S.I.I.Vol. VII No..977) என்னும் கல்வெட்டுப் பகுதி வலியுறுத்துகின்றது.

 
 
சிற்பி சிற்பி