தூங்கானைமாடம்(பெண்ணாகடம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு கடந்தை நாயகி உடனுறை சுடர்க்கொழுந்துநாதர்


மரம்: செண்பகம்
குளம்: கெடிலநதி, வெள்ளாறு

பதிகங்கள்: ஒடுங்கும்பிணி -1 -59 திருஞானசம்பந்தர்
பொன்னார்திரு -4 -109 திருநாவுக்கரசர்

முகவரி: பெண்ணாகடம் அஞ்சல்
திட்டக்குடி வட்டம்
கடலூர் மாவட்டம், 606105
தொபே. 04143 222788

நடுநாட்டுத் தலம். விருத்தாசலத்திலிருந்து பேருந்துகளில் செல்லலாம். இத்தலம் பெண்ணாகடம் எனவும் திருக்கடந்தைநகர் எனவும் வழங்கும். பெண் (தேவகன்னியர்) ஆ (காமதேனு) கடம் (வெள்ளையானை) ஆகிய இவர்கள் பூசித்துப் பேறுபெற்றதாதலின் இப்பெயர் எய்தியது. ஆலயத்தின் பெயர் தூங்கானைமாடம். அப்பரடிகள் ``பொன்னார்திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்`` என்றேத்தித் தம்முடைய தோளின்மேல் சூலக்குறியும் இடபக்குறியும் பெற்றதலம். இங்கவதரித்த கலிக்கம்பநாயனார், ஒருநாள் தன்பணி யாளனே சிவனடியாராக வர, தம்மனைவி அவருக்கு நீர்வார்க்கத் தாழ்த்தமையை யறிந்து மனைவியின் கரத்தை வாள்கொண்டு வெட்டி வீடுபெற்றார். மெய்கண்டதேவரின் தகப்பனார் அச்சுத களப்பாளர் வாழ்ந்த தலமும் இதுவே.

சுவாமிபெயர் சுடர்க்கொழுந்துநாதர். அம்மை கடந்தை நாயகி. தீர்த்தம் கெடிலநதி.




கல்வெட்டு:

பரகேசரிவர்மனான இராஜேந்திரன் காலத்தில் வடகரை இராஜாதிராஜ வளநாட்டு மேற்காநாட்டுப் பிரமதேயமான முடி கொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்துத் திருத்தூங்கானைமாடம் என்று குறிக்கப்பட்டுள்ளது. இறைவன் நாமம் திருத்தூங்கானை மாடமுடைய மகாதேவர் எனவும்(235of 1929)திருத்தூங்கானைமாடமுடைய நாயனார் (247 of 1929)எனவும் நல்ல பெண்ணாகடத்திலுள்ள வீற்றிருந்த பெருமாள் ( 250 of 1929)எனவும் திருத்தூங்கானை மாடத்துக்கடவுள் (255 of 1929)எனவும் வழங்கப்படுகின்றனர். இவையன்றி கோயிலுள் கோச்செங்கணேசு வரமுடையார் கோயிலும்(238) மதுராந்தக ஈச்சரமுடையார் கோயிலும்(239) தனிமையாகப் பள்ளிகொண்ட பெருமாள் கோயிலும் (273 of 1929)இருந்திருக்கின்றன.

இராஜகேசரிவர்மனான குலோத்துங்கன் காலத்து வடகயி லாயமுடைய மகாதேவர்க்கு விருதராச பயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு முடிகொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்துச் சபையாரால் நிலம் தானம் வழங்கப்பட்டது. திருத்தூங்கானை மாடமுடைய மகாதேவர் கோயிலுக்கும் கோச்செங்கணேசுவரமுடையார் கோயிலுக்கும் முடி கொண்டசோழ சதுர்வேதி மங்கலத்துத் தேவதானமான கிராமத்தைச் சேரிசபையார் இறையிலிசெய்தனர். குலோத்துங்கன் தான்பிறந்த நாளாகிய மாதபூச விழாவை நடத்தவும், கோயில் நாட்பூசைக்காகவும் நிலமளிக்க உத்தரவிட்டான். மேலும் மதுராந்தகேசுவரமுடையார் கோயிலிலுள்ள இரு சிவப்பிராமணர்களுக்கு உணவளிக்கப் பணம் வழங்கப்பட்டது. பரகேசரிவர்மனான இராஜேந்திரன் காலத்து, திருத் தூங்கானைமாடமுடைய மகாதேவர் கோயிலுக்குத் தூண்டா விளக் கெரிக்கப் பசுக்கள் வழங்கப்பட்டன. தென்கரை நித்தவினோத வள நாட்டுக் கிழார்க்கூற்றத்துக் கீழநல்லூர் உடைய ஒருவன் பசுக்கள் அளித்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. கடவுளுக்கு நீராட்டவும் பார்ப் பனர்களுக்கு அன்னமளிக்கவும் ஷ்ரீராமன் ஷ்ரீதரரான பவித்திர மாணிக் கச்சேரி உடையான் ஒருவனால் ஏற்பாடுசெய்யப்பட்டது. இராஜகேசரி வர்மனான ராஜராஜன் முத்திரையிடப்பட்ட அளவைகளால் வியாபாரி கள், பொருள்களை அளக்கவும் சில வரிகளைக் கோயிலுக்களிக்கவும் ஏற்பாடுசெய்தான்(244 of 1929)249-ஆவது கல்வெட்டால் மூவாயிரவன் கோல் என்ற நீட்டலளவை (15அடி) யால் நிலமளந்த செய்தி தெரிகிறது. பரகேசரிவர்மனான விக்கிரமன் காலத்து அரையன் ஆதித்ததேவன் தேவர்கள்நாதன் என்ற மரக்காலைப் பயன்படுத்தியுள்ளான் (270 of 1929)குலசேகரன் காலத்துப் பொன்பேத்தி அம்பலத்தாடி அழகனால் மண்டபமும், முகப்பும் கட்டப்பட்டன. அரசன் மந்திரியான மையிருஞ் சோலை, மண்டபங் கட்டியுள்ளான்.

விஜயநகர தேவமகாராயர் காலத்தில் நைவேத்தியத்திற்கும் திருப்பணிக்கும் பள்ளிகொண்டபெருமாள் கச்சிராயருடைய மகனான ஏகாம்பரநாதன் சில கிராமங்களை இறையிலிசெய்தான். தேவராஜ மகாராஜா சகம் 1356இல் 18 -ப் பற்றுச்சபையாரால் வீதிகளுக்கு இறையிலிசெய்து திருமடை விஜயத்திற்காகவும் நல்ல பெண்ணா கடத்துப் பெருமாளுக்கும் திருமாறன் பாடியிலுள்ள தாகந்தீர்த்தருளிய நாயனாருக்கும் விழாசெய்வதற்காக, பெரியநாட்டான் இறையிலி செய்தார். விக்கிரமன் காலத்தில் அமாவாசையில் சுவாமி உலாவரவும் விளக்குக்கு நெய் இடவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏனையவை விளக்கு முதலானவற்றிற்கு நிலம், பொன், பசுக்கள், நெல் முதலியன அளித்தமையைக் குறிப்பிடுகின்றன.

 
 
சிற்பி சிற்பி