தலைவாயில்

முதற் காண்டம் ஆசியுரை தொடர்ச்சி..  | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |

குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம்

26ஆவது குருமகாசந்நிதானம்

சிறீலசிறீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்

வழங்கியருளிய

ஆசியுரை

திருச்சிற்றம்பலம்

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்
பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள
வயல்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர்
தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

-தி.12 பு.28 பா. 1

வேதம், சிவாகமம், புராணம், இதிகாசம், திருமுறைகள், சித் தாந்த சாத்திரங்களே நமது சைவசமயத்தின் அடிப்படைச் சட்ட நூல்க ளாகும். சிவநெறி கடைப்பிடிப்போர் இந்நூல்களின் வரையறைகளின் படியே நடக்கவேண்டும். நடவாதார் சைவத்திற்குப் புறம்பானவராவர்.

இந்தியப் பேரரசின் அடிப்படைச் சட்டம், அரசியலமைப்பு என்று சொல்லப்பெறும். இந்தியப் பேரரசின் மாநிலங்கள் அனைத்தும் அரசியலமைப்பு என்னும் இந்த அடிப்படைச் சட்டத்தைப் போற்றி மதித்தே நடந்துகொள்ள வேண்டும்.

அதைப்போலவேதான், சைவத்தின் அடிப்படைச் சட்டமாக விளங்குவது, வேதாகம, புராணதிகாச, திருமுறை, சித்தாந்த சாத்திரங்களாகும். ஆகவே இவற்றைப் போற்றியும், மதித்தும் நடந்து கொள்ளவேண்டும் என்பதே விதியாகும்.

அவரவர்களும் மனம் போன போக்கெல்லாம் போய்த் தனிவழி காண்பார்களானால் நாட்டின் ஒழுங்குமுறை கெட்டுச் சிதறிப் போக ஏதுவாகும். இதைச் சைவர்கள் அனைவரும் உணர்ந்து ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.

வேதம்:

வேதம் என்ற சொல், வித் என்ற வேர்ச் சொல்லிலிருந்து தோன்றியது. வேதம் என்பதற்கு அறிவுநூல் என்பதே பொருள்.

அறிவுநூலாகிய வேதம், இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு பகுதிகளாக விளங்குகிறது.

வேதம் என்னும் சொல்லுக்குப் பொருள் - காண்டல், கருதல் முதலிய அளவைகளுக்குப் புலப்படாததாய், வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் நெறி முறைகளை அறிவிப்பதாய் உள்ள - அறிவுநூல் என்பதாகும்.

வித்-ஞான என்பதாலும், வித் என்ற சொல்லுக்கு ஞானம் என்பதே பொருள். அஃதாவது நிச்சய ஞானம். நிச்சயம் என்பது நிலையானது; மாறுபாடு இல்லாதது. எனவே உண்மை ஞானத்தை உணர்த்தும் நூலுக்கு வேதம் என்பது பெயராயிற்று.

வேதங்களின் அங்கமாக உள்ள ஆறு அங்கங்களையும் முறையாகக் கற்றுத் தெளிந்தால்தான், வேதங்கள் நமக்குத் தெளிவா கப் புரியும். எதுபோல எனின், நன்னூல் என்னும் செந்தமிழ் இலக்கண நூலைக் கற்றுத் தெளிவு பெற வேண்டுமானால், அதற்கு முதற்படியாக விளங்கும் சிற்றிலக்கியங்கள், நிகண்டு நூல்களைக் கற்றால்தான், நன்னூல் என்னும் செந்தமிழ் இலக்கண நூல் இனிது விளங்கும்.

இது பற்றி, "நன்றாய்ந்த.... ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முதுநூல்" என்ற புறநானூறு, 166ஆம் பாடல் குறிப்பிடுவது காண்க. ஈரிரண்டு என்பது நான்கு பகுதியாக உள்ள வேதங்கள் என்றும், ஆறுணர்ந்த என்பது ஆறு அங்கங்களால் உணர்த்தப்பட்டது என்றும், ஒரு முதுநூல் என்பது ஒப்பற்ற பழைய நூலாகிய வேதம் என்றும் பொருள் தரும். ஆறங்கமாவன 1. சிட்சை, 2. கற்பசூத்திரம்,

3. வியாகரணம், 4. நிருத்தம், 5. சந்தோவிசிதி, 6. சோதிடம் என்பனவாகும்.

1. வேதங்களை எடுத்தல், படுத்தல், நலிதல் முதலிய இசை வேறுபாட்டால் உச்சரிக்குமாற்றை உணர்த்துவது, சிட்சை.

2. வேதங்கள் கூறும் நெறிமுறைகளை அநுட்டிக்குமாற்றை உணர்த்துவது, கற்பசூத்திரம்.

3. வேதங்களின் எழுத்து, சொல், பொருளியல்புகளை உணர்த் துவது, வியாகரணம்.

4. வேதங்களின் சொற்பொருள் உணர்த்துவது, நிருத்தம்.

5. வேதமந்திரங்களில் காயத்திரி முதலிய சந்தங்களின் பெயரும், அவற்றிற்குரிய எழுத்து இனைத்தென்றலும் உணர்த்துவது, சந்தோவிசிதி.

`. வேதங்களில் சொல்லப்படும் கருத்துக்களைச் செய்தற் குரிய கால விசேடங்களை உணர்த்துவது, சோதிடம்.

மேலும் புராணம், நியாயம், மீமாம்சம், ஸ்மிருதி என்னும் நான்கும் உபாங்கங்கள் எனப்படும்.

வேதம், உலக மக்களுக்குப் பொது அறம் போதிப்பது. சிவாகமம், சத்தினிபாதத்து உத்தமர்களுக்குச் சிறப்பறம் போதிப்பதாகும்.

வேதம் பற்றித் திருமூலர் அருள்வது காண்க.

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்

ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க

வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. (தி.10 பா.96)

வேதம் ஒவ்வொன்றும், கர்ம காண்டம், ஞானகாண்டம் என இரு பிரிவுகளையுடையது.

கர்மகாண்டம், செயல்முறைகளைப்பற்றிக் கூறுவது. ஞான காண்டம் உபநிடதங்களால் தத்துவ விசாரணை செய்வது.

யசுர் வேதத்தின் நடுப்பகுதியில் "நமசிவாயச சிவதராய\u2970?" என்னும் பஞ்சாட்சரம் அமைந்துள்ளது. எனவே, வேதம் சிவபரத்துவத் தைக் கூறுவதாகவே விளங்குகிறது.

ஆகமம்:

ஆகமம்: என்பது, ஈசுவரனைக் குறிக்கும் ஓரெழுத்தொரு மொழி; கமம் என்பது, வந்தது என்பதைக் குறிக்கும். எனவே ஈசுவர னிடமிருந்து வந்தது என்பதைக் குறிப்பதாகும். வேதம், ஆகமம் இரண் டுமே சிவபெருமானிடமிருந்து ஆன்மாக்களை நன்னெறி செலுத்தற் பொருட்டு வந்தவை என்பதையே அறிவிக்கும். இதை "மஹதோ பூதஸ்ய நிஸ்வசிதம்" என உபநிடதம் கூறுகிறது.

ஆகமங்கள் இருபத்தெட்டாகும். வேதம் நான்கும் பரமேசு வரனின் நான்கு முகங்களிலிருந்து தோன்றின என்பர்; ஆகமங்கள் இருபத்தெட்டும் பரமேசுவரனின் உச்சி முகத்தினின்றும் தோன்றின என்றும் திருமூலர் (தி.10 .3) குறிப்பிடுகிறார்.

வேதம் நான்கும், முறையே பரமேசுவரரின் தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் நான்கு முகங் களிலிருந்தும் தோன்றின.

சிவ ஆகமங்கள் இருபத்தெட்டும் சிவபெருமானின் உச்சி முகமாகிய ஈசான முகத்தில் தோன்றின என்பார் திருமூலர். அப்பாடல் காண்க.

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்

அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்

அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்

அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே. (தி.10 பா.102)

ஆகமம் - என்பது சிவம். கமம் என்பதற்கு வந்தது என்பது பொருள். எனவே சிவபெருமானிடமிருந்து வந்தது என்பதே சிவா கமம் என்பதற்குப் பொருளாகும். மேலும் என்பது ஆன்மாக்கள் என்றும், கமம் என்பது ஆன்மாக்களிடமுள்ள மும்மலங்களையும் நாசம் செய்வித்து மோட்சம் அடையச் செய்வது என்றும் பொருள் தரும்.

புராணம்:

புராணம் என்ற சொல், பழமை என்னும் பொருளைக் குறிப்பது. பழமையானாலும் புதுமையாகவும் விளங்குவது.

பூரணனாகிய பெருமானிடமிருந்து வந்தமையால் பூரணம் என வழங்கி, பின்னர் அச்சொல்லே புராணம் எனத் திரிந்தது என்றும் கூறுவர். புராபிநவம் - பூரணம் எனக் கொண்டு, புராதனமாயும் புதுமை யாயும் உள்ளது எதுவோ, அதுவே புராணம் என்று ஆயிற்று என்றும் கொள்வர்.

"முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" (தி.8 .7 பா.9) என்னும் மணிவாசகரின் திருவாசகமே இதற்குப் போதிய சான்றாகும். மேலும் பழமையிலிருந்துதான் புதுமை தோன்ற முடியும் என்பதையும் ஊன்றி உணர்வோர் இவ்வுண்மையை உணர்வர்.

மேலும் அப்பர், பூவனூர்த் தேவாரத்தில்,

நார ணன்னொடு நான்முக னிந்திரன்

வார ணன்கும ரன்வணங் கும்கழற்

பூர ணன்திருப் பூவனூர் மேவிய

கார ணன்னெனை யாளுடைக் காளையே. (தி.5 .65 பா.10)

என்று பாடுவதாலும், திருக்காளத்தித் திருத்தாண்டகத்தில்,

"நாரணன் காண், நான்முகன்காண் நால்வே தன்காண்

ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன

பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்"

(தி.6 .8 பா.3) என்று போற்றுவதாலும் இவ்வுண்மையைத் தெளியலாம்.

புராணம், பழமையானது என்ற பொருளைத் தரும்; புராதனம் என்ற சொல்லின் மரூஉ மொழியே புராணம். எல்லாருக்கும் முன்னே தோன்றி முளைத்தவனாகிய சிவபெருமானைப் புராணன் எனத் தேவாரத் திருமுறைகள் கூறுகின்றன. "புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப் புத்தேளும் காண்பரிய புராணன் தான்காண்" (தி.6 .30 பா.9) என அப்பர் பெருமான் அருளிச் செய்கின்றார்.

இலக்கிய வகைகளில், பழமையான வரலாறுகளை உணர்த்தும் நூல், புராணம் எனப் பொருள் தரும். வேத சிவாகமங்களையடுத்துப் பதினெண் புராணங்கள் சிறப்புடையனவாகப் போற்றப் பெறும்.

கடவுட் கொள்கையில் ஊன்றி நிற்றற்கும், சமய உண்மைகளை உணர்தற்கும், உலகியலில் அறநெறி வழுவாது வாழ்தற்கும் புராணங் களைப் படித்தல் இன்றியமையாததாகும். இவை வடமொழியில் அமைந்துள்ளனவாயினும், இவற்றின் கதைக்கூறுகள் சங்கநூல்கள் தொடங்கி அனைத்துத் தமிழ்நூல்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளன.

வேத சிவாகமங்கள் இறைவனால் அருளிச் செய்யப் பெற்றன போலப் பதினெண் புராணங்களும் அவ்விறைவன் திருவுள்ளப் பாங்கின்படியே தோன்றலாயின என்பதைத் திருஞானசம்பந்தர், திருவையாறு தேவாரத் திருப்பதிகத்தில்,

எங்கு மாகிநின் றானு மியல்பறி யப்படா

மங்கை பாகங்கொண் டானு மதிசூடு மைந்தனும்

பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்

அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே.

(தி.2 .6 பா.6)

என அருளிச் செய்கின்றார். இப்புராணங்களைப் புடை நூல்கள் எனஙு சிவஞான சித்தியார் கூறுகிறது.

அருமறையா கமம்முதல்நூல் அனைத்துமுரைக் கையினால் அளப்பரிதாம் அப்பொருளை அரனருளால் அணுக்கள்

தருவர்கள்பின் தனித்தனியே தாமறிந்த அளவில்

தர்க்கமொடுத் தரங்களினால் சமயம்சா தித்து

மிருதிபுரா ணம்கலைகள் மற்று மெல்லாம்

மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்கம்வே தாங்கம்

சுருதிசிவா கமமொழியச் சொல்லுவதொன் றில்லை சொல்லுவார் தமக்கறையோ சொல்லொ ணாதே

(சித். சூ. 8 பா. 14)

பதினெண் புராணங்கள்:

சிவபெருமான் அம்மைக்கு உபதேசித்த பதினெண் புராணங் களையும் இடையில் வீற்றிருந்த முருகப் பெருமான் கேட்டு, அதைச் சனற்குமாரருக்கு உபதேசிக்க, அவர் அகத்திய முனிவருக்கு உபதே சிக்க, அவர் வியாசருக்கு உபதேசிக்க, அவர் தம் மாணாக்கர் சூத முனிவருக்கு உபதேசிக்க, சூத முனிவர் பதினெண் புராணங்களையும் நைமிசாரணிய முனிவர்கட்கு உபதேசித்து, அஃது உலகில் பரவியது என்பதே புராண வரலாறு.

இந்த அமைப்பிலேயே பதினெண் புராணங்கள் தோன்ற லாயின. பதினெண் புராணங்களாவன,

1. பிரம புராணம், 2. பதும புராணம்,

3. விட்டுணு புராணம், 4. சிவ புராணம்,

5. பாகவத புராணம், 6. நாரதீய புராணம்,

7. மார்க்கண்டேய புராணம், 8. ஆக்கினேய புராணம்,

9. பவிஷ்ய புராணம், 10. பிரமவைவர்த்த புராணம்,

11. இலிங்க புராணம், 12. வராக புராணம்,

13. ஸ்கந்த புராணம், 14. வாமன புராணம்,

15. கௌமார புராணம், 16. மச்ச புராணம்,

17. கருட புராணம், 18. பிரும்மாண்ட புராணம்

என்பனவாம். இப்பதினெட்டும் மகாபுராணங்கள் எனப்படும்.

இவ்வாறே உபபுராணங்கள் பதினெட்டும், அதிபுராணங்கள் பதினெட்டும் உள்ளன.

கந்த புராணம்:

பதினெண் புராணங்களில் சிவ புராணங்களாக விளங்குவன பத்தாகும். அவற்றுள் ஒன்றான ஸ்காந்த புராணம், 50 காண்டங்களைக் கொண்டதாய், ஓரிலட்சம் கிரந்தங்களை உடையதாய் விளங்குவது.

சனற்குமார சங்கிதை, சூத சங்கிதை, பிரம சங்கிதை, விட்டுணு சங்கிதை, சங்கர சங்கிதை, சூர சங்கிதை என்ற ஆறு சங்கிதைகளை உடையது.

அவற்றுள் சங்கர சங்கிதை முப்பதாயிரம் கிரந்தங்களைக் கொண்டது. பன்னிரு காண்டங்களுடன் விளங்குவது. அவற்றுள் பதின்மூவாயிரம் கண்டங்களைக் கொண்ட சிவரகசிய காண்டத்தில் முருகன் வரலாறு - உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தக்ஷ காண்டம், உபதேச காண்டம் என்ற ஏழு காண்டங்களைக் கொண்ட இப் பகுதியை மூலமாக வைத்தே, கச்சியப்ப சிவாசாரியார் கந்த புராணத்தைப் பாடியுள்ளார்.

திருவிளையாடற் புராணம்:

பதினெண் புராணங்களில் ஒன்றான ஸ்காந்த புராணத்தில், சங்கர சங்கிதை, சிவபிரான் உமையம்மைக்குச் சொன்னதாகச் சொல்லப் பெறுவது. அவ்வாறு சொன்னபோது, தாயின் மடியிலிருந்து கேட்ட முருகன் அதனை அகத்தியருக்குச் சொன்னார். அதனால் அச் சங்கிதை, அகத்திய சங்கிதை எனவும் வழங்கப் பெறுகிறது. அச் சங்கிதையுள் விளங்குவது ஆலாசிய மகாத்மியம் (ஆலாசியம் - திருவாலவாய்) இஃது 71 அத்தியாயங்களைக் கொண்டது; 6,085 சுலோகங்களை உடையது. இதனுள் 4ஆவது அத்தியாயம் முதலாகச் சிவனின் திருவிளையாடல்கள் கூறுப்பெறுகின்றன. முதல் மூன்று அத்தியா யங்கள், மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவற்றின் பெருமைகளைக் கூறுகின்றன. ஏனைய அத்தியாயங்கள் ஆலவாய் இறைவனின் அருள் விளையாடல்களைத் தெரிவிக்கின்றன.

தமிழ்த் திருவிளையாடற் புராணத்துக்கு மூலநூல் வடமொழி யில் அமைந்த ஆலாசிய மகாத்மியம் ஆகும்.

இதிகாசம்:

இதிகாசம்: இதி+இக+ஆசம என்ற மூன்று சொற்களே இதிகாசம் என்றாயிற்று. இதி - இது, இக - இப்படி, ஆசம் - நிகழ்ந்தது. எனவே இது இப்படி நிகழ்ந்தது என்பதே இதிகாசம் ஆயிற்று.

இராமாயணம், பாரதம் ஆகியவற்றை இதிகாசம் என்று வழங்குகிறோம். இராமபிரானின் வரலாறும் பஞ்சபாண்டவர் வரலாறும் இப்படித்தான் நிகழ்ந்தது என்று கூறுவதால்தான், இரண்டு வரலாறுகளும் இதிகாசமாயின என்று உணர்க.

9; பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும் வேத, சிவாகம, புராண, இதிகாசக் கருத்துக்களையே தெளிவாகத் தூய இனிய தெய்வத் தமிழில் விளக்கமாகக் குறிப்பிடுகின்றன. பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களும், இறையருளால் சமயாசாரியர், சந்தானாசாரியர் உள்ளிட்ட நாயன்மார்கள் வாயிலாகத் தோன்றியவை. இத்திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் இல்லையேல் வேதம், சிவாகமம், புராணங்களைப் பற்றிப் பொது மக்களும், புலவர்களும் புரிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். வேதம், சிவாகமம், புராணங்கள் இல்லையென்றால் பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சாத்திரங்களும் தோன்றுவ தற்கே வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.

எனவே வேத, சிவாகம, புராண இதிகாசக் கருத்துகளைத்தாம், திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் பல கோணங்களினின்று பார்த்து, அவற்றின் செம்பொருளை நமக்குப் பக்குவமாக உணர்த்தி வருகின்றன. இவற்றையெல்லாம் செந்நெறி நிற்க விரும்புவோர் கைக்கொண்டு பயன் பெறுவரே அன்றிக் கைவிடார்.

இனி, சமயாசாரியர் நால்வரும், வேதாகம, புராண, இதிகாசம் பற்றிக் கூறுமாற்றைக் காண்போம்.

சமயாசாரியருள் ஞானசம்பந்தர் கூற்று

வேதத்தை அருளிச் செய்தவர் சிவபெருமானே என்றும், வேதத் திற்குப் பொருள் உரைத்தவரும் அவரே என்றும் இருக்கு மறைப் பிள் ளையாராகிய திருஞானசம்பந்தர் அருள்கிறார்.

"மங்கையர்க்கரசி" (தி.3 .120 பா.1) என்று தொடங்கும் பதிகத்தின் முதற்பாடலின் மூன்றாம் அடியில், "பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி" (தி.3 .120 பா.1) என்று பாடியுள்ளார்.

அவரே திருமுதுகுன்றத் தேவாரத்தில், "அறங்கிளரு நால்வேத மாலின்கீ ழிருந்தருளி" (தி.1 .131 பா.7) என்று அருளிய இடத்தையும் குறிப்பிட்டுள்ளார். அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கையும் வகுத்து, வேதம் அறிவிப்பதால் வேதத்தையே அறம் என்ற சொல்லில் அருள்கின்றார் . அது வருமாறு:

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு

மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை

ஆலடைந்த நீழன்மேவி யருமறை சொன்னதென்னே

சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. (தி.1 .48 பா.1)

என்று சேய்ஞலூர்த் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு வகையான புருடார்த்தங்கள்:

திருமுதுகுன்றத் தேவாரத்தில்,

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லரா நல்லிதழி

சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைந் தைம்புலனும்

அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு

மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே. (தி.1 .53 பா.6)

என்று அறம் மட்டும் அல்லாமல் பொருள், இன்பம், வீடு ஆகிய புருடார்த்தங்கள் நான்கையுமே ஓதி உணர்த்தியுள்ளது வேதம் என்று கூறியுள்ளார்.

வேதத்தை உலக மக்களுக்காகச் சொன்னதோடு தாமே ஓதியும் வருகிறார் என்பதைத் திருப்பழனத் தேவாரத்தில்,

"வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப்

பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார்"

(தி.1 .67 பா.1) என்று ஞானசம்பந்தரே முதல் திருமுறையில் அருளி யுள்ளார்.

சிவபெருமான் வேதத்தை மட்டுமின்றி வேதம், ஆறங்கம், ஆகமம், பதினெண் புராணங்கள், இதிகாசங்களையும் அருளியுள்ள மையை,

எங்கு மாகிநின் றானு மியல்பறி யப்படா

மங்கை பாகங்கொண் டானு மதிசூடு மைந்தனும்

பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்

அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை யையனே.

(தி.2 .6 பா.6)

என்று திருவையாறு தேவாரத்தில் பதினெண் புராணங்களையும் நால்வேதங்கட்கு உணர்வாய் உள்ள ஆறு அங்கங்களையும் ஐயாறப் பரே சொன்னார் என்று கூறியுள்ளார்.

பாதம்விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே

வேதநான்கும் பதினெட்டொ டாறும் விரித்தார்க்கிடம்

தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினம்

கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே. (தி.2 .114 பா.2)

என்று திருக்கேதாரத் தேவாரத்தில், வேதம் நான்கும் பதினெண் புராணங்களும் ஆறு அங்கங்களும் விரித்தோதியவர் திருக்கேதார நாதரே என்று அருளியுள்ளார்.

கூறை போர்க்கும் தொழிலா ரமண்கூறல்

தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்

ஆறு நான்கு மமர்ந்தா ரவர்போலும்

ஏறு கொண்ட கொடியெம் இறையாரே. (தி.1 .26 பா.10)

என்று திருப்புத்தூர் தேவாரத்தில், கூறை போர்க்கும் புத்தர்களும் அம ணர்களும் கூறுவதைத் தெளியாதீர்; திருப்புத்தூர்ப் பெருமானைத் தெளிந்து போற்றுங்கள். அவர் ஆறு அங்கத்திலும் நான்கு வேதத்தி லும் அமர்ந்துள்ளார் என்று அருளியுள்ளார். அமர்ந்தார் என்பதற்கு, விரும்பி அமர்ந்துள்ளார் என்று பொருள் கொள்வதே சிறப்பாகும்.

வேதத்தை அருளிச் செய்தவனும் வேதப் பொருளாக விளங்கு பவனும் சிவபெருமானேயாவார். உலக மக்கள் குற்றம் செய்யாமல், நன்னெறி நிற்றற் பொருட்டு, அச் சிவபெருமான் அருளிய உபதேசத்தையே முதலாகக் கொண்டு சூத முனிவர் உரைத்த ஒலி மாலையாகிய பதினெண் புராணங்களும் நன்னெறியையே போதிப்பனவாம்.

இக்கருத்துள்ள பாடல் சைவ தத்துவத்தை நிலைநாட்டிய புனல் வாதப் பதிகமாகும். "வாழ்க அந்தணர்" எனத் தொடங்கும் திருப் பாசுரப் பகுதியில் எட்டாவது பாடலாக விளங்குகிறது. அப்பாடல்,

வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்

ஏதப் படாமை உலகத்தவ ரேத்தல் செய்யப்

பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த

சூத னொலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே.

(தி.3 .54 பா.8)

தலைவாயில்

முதற் காண்டம் ஆசியுரை தொடர்ச்சி..  | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |