தலைவாயில

சிவமயம்

அணிந்துரை

ஞானத்தமிழ் வள்ளல், அருட்செல்வர்

திரு. நா. மகாலிங்கம்

தலைவர், சக்தி நிறுவனங்கள், பொள்ளாச்சி.

சைவருக்குச் சாத்திரம் பதினான்காகவும் தோத்திரம் பன்னிரண் டாகவும் அமைந்துள்ளன. தோத்திரங்கள் பன்னிரண்டு நூலும் திரு முறைகள் என்று பெயர் பெற்றன.

பன்னிரண்டாவது திருமுறையாகிய பெரியபுராணம் சாத்திர மும் தோத்திரமும் ஆவதோடுகூடச் சரித்திரமும் ஆகித் திகழ்கிறது.

பழைய கதையைத் தொன்மை என்ற சொல்லால் பெரியோர் வழங்குவர். தொன்மையின் மொழிபெயர்ப்புத்தான் புராணம் என்ப தாகும். புராணம் என்பது சிலர் நினைப்பதுபோல், ஒரு புலவன் மனம் போனவாறு திரித்து எழுதும் கற்பனை அன்று.

இந்தத் தமிழ் மண்ணில் வாழ்ந்து, தொண்டு செய்து, சிவமாகிய நல்லோர்களைப் பற்றிய வராலறுகள்தான் பெரியபுராணம் ஆகும். திருவிளையாடல் புராணம் - கந்த புராணம் முதலிய மற்றைய புரா ணங்கள் தெய்வத்தை முதன்மைப் படுத்த எழுந்தவையாகும். பொது வாகப் புராணங்கள், தீமைக்கும் நன்மைக்கும் இடையே நடக்கும் போராட்டமாகவே சித்தரிக்கப்படுகின்றன. மேற்கூறிய கந்த புராணம் முதலியவற்றால் இவ்வுண்மை அறியப்படும். இடர்ப்படும்போது, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் தாயுள்ளம் கொண்ட கடவுளைத் திருவிளையாடல் புராணம் காட்டுகிறது.

இங்கு, நோயுளார் வாயுளான் என்ற தத்துவம் விளக்கம் பெறுகிறது. பெரியபுராணம் மனிதரை முதன்மைப்படுத்த எழுந்த நிலையில் சமுதாயத்தைச் சிந்திக்கிறது.

இந்நூலில் காண்பது சாதி வேறுபாடற்ற சமுதாயம் ஆகும். இங்கே வர்க்க பேதமில்லை. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை. மேதை, பாமரன் என்ற வித்தியாசமில்லை. வயதுகூட ஒரு வரம்பாக இல்லை. மொழிகள் இங்கே மனிதனைப் பிரிப்பதில்லை. இனம் இந்த சமுதாயத்தை எட்டிப் பார்ப்பதுகூட இல்லை. சுருங்கச் சொன்னால் வேறுபாடுகள் எந்தவிதத்திலும் காணமுடியாத ஓர் அற்புத, சமத்துவ, சகோதரத்துவ, சமதர்ம, சமநீதிச் சமுதாயத்தைப் பெரியபுராணம் காட்டுகிறது.

மேற்கோள் காட்டப் புகுந்தோமானால், புலையராகிய நந்தனா ரும் உருத்திர பசுபதியாராகிய வேதியரும் இங்கே ஒருநிகர் ஆவர். நெடுமாறபாண்டியரும், அதிபத்தரும் சமமானவர்கள். மங்கையர்க் கரசியாரும், இசைஞானியாரும் பெண்களின் பிரதிநிதிகள். அதி மேதையாகிய திருநாவுக்கரசரும், படிக்காத கண்ணப்பரும் சரிநிகர் சமானம். அப்பர் எண்பது வயதானவர், சம்பந்தர் மூன்று வயதுக் குழந்தை. பெல்லாரி மாவட்டத்துக் காம்பீலியைச் சேர்ந்த நேசரும், செந்தமிழ் நாட்டு மற்ற அடியவர்களும் ஒத்த நிலையில் வழிபடப் பெறுகிறார்கள். வணிகர், வேளாளர், தொழிலாளர், வேந்தர், வேதியர் என்ற இனப்பிரிவு எவ்விதத்திலும் இவர்களைத் தரம் பிரிக்கவில்லை.

சிவபக்தி என்பதே, யாவரையும் ஒன்றாக இணைக்கும் சங்கிலி யாக விளங்குகிறது. வேட்டுவனையும் அரக்கனையும், விலங்கரச னையும் இராமன் தனக்கு உறவாக்கிக் கொண்டான் என்பார்கள். அதனால் இராமாயணம் சீவகருணைக் காப்பியமாகத் திகழ்கிறது. பெரியபுராணமோ அதனையும் விஞ்சிய சிவகருணை வரலாற்றை யும் காட்டி மகிழ்விக்கிறது.

தம் உடல், உயிர், உடைமை ஆகிய அனைத்தும் சிவனுக்கும் சிவனடியார்களுக்குமே உரியவை: தம்முடையவை அல்ல என வாழ்ந்த உத்தமோத்தமமான மாந்தர்குலத் தெய்வங்களையே நாயன்மார்களாக இங்குக் காண்கிறோம். கண்ணப்பரை, அப்பூதி அடிகளை, இளையான்குடிமாறனாரைப் போல, எவராவது ஒருவரை உலகத்துக் காண முடியுமோ?

தமிழகத்தைப் பிடித்து உருக்குலைக்கும் நாத்திக வாதம் தொலைய ஓர் அருட்குழந்தை வேண்டும் எனத் தவம் கிடந்த பெற்றோ ரையும், ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் உலகமெல்லாம் போற்ற அரசு ஆளும் குழந்தை பிறக்கும் எனக் கேட்டவுடன், தன் உயிர் போனாலும் போகட்டும், நாடு காக்கும் நல்ல குழந்தை வேண்டும், என்று உடலை வருத்திக் குழந்தைபெற்று உயிர் துறந்த சோழப் பெருந்தேவியையும் பெரியபுராணம் நமக்கு அடையாளம் காட்டு கிறது.

நனி நாகரிகப் பண்பை அப்பூதியாரும் சிறுத்தொண்டரும் வாழ்ந்து காட்டி விளக்குகிறார்கள். ஏனாதி நாதரும் மெய்ப்பொரு ளாரும் சமுதாய கலாசாரத்துக்குக் கொடுக்கும் விலை அவர்களுடைய விலைமதிப்பில்லாத உயிரையேயாகும். என் கண்ணைக் கொடுத்து மற்றவர் கண்ணைக் காப்பாற்றுவேன் என்று எழுந்த மன எழுச்சி கண்ணப்பர் ஒருவரிடத்துக் குன்றின்மேலிட்ட விளக்காக ஒளிர்கிறது.

துறவரசராகிய குருமகா சந்நிதானம் அவர்கள், தமிழிலக்கியங் களிலும் சைவ சாத்திரங்களிலும் கற்றுத் துறைபோய விற்பன்னர். சென்னையில் தருமை ஆதீனத்துச் சைவப் பிரசார நிலையத்துப் பொறுப்பேற்றிருந்த நாளிலிருந்தே அவர்களுடைய சிவப்பணியைத் தமிழகம் நன்கு அறியும். ஆதீனத் தலைமை ஏற்றதன் பின், அவர்கள் முந்தைய சந்நிதானத்தால் விட்டுச் சென்ற நூற்பதிப்புப் பணியைச் செவ்வனே தொடரலானார்கள். அதில் பெரிதும் குறிப்பிடத்தக்கது பன்னிரு திருமுறைகளை மறுபதிப்புச் செய்தருளுவதாகும்.

தம் குருமூர்த்திகளின் அருளாட்சிக் காலத்தில் நிறைவேறா திருந்த 10ஆம், 11ஆம், 12ஆம் திருமுறைகளுக்கு உரை எழுது விப்பதும், முந்தைய திருமுறைப் பதிப்புகளைப் புதுப்பிப்பதும் மாபெரும் பணியாகும். அந்நெறியில் பன்னிரு திருமுறைகளை வெளிக் கொணரும் பெருந்தொண்டினைத் திருவுள்ளங் கொண்ட மகா சந்நிதானம் அவர்கள், பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்களைப் பன்னிரண்டாம் திருமுறைக்கு உரை எழுதப் பணித்தது தமிழுலகத் துக்குப் பாக்கியப் பயனாயிற்று.

சிவாலய பரிபாலனமும், செந்தமிழ்ப் பேணலும், சைவ சமயா சாரச் சீலத்தைப் பேணிப் பாதுகாத்தலும், சைவ நூல்களை வெளியிட லும் தருமை ஆதீனத்தில் அன்றாடம் நடைபெற்று வரும் அரும் பணிகள் ஆகும். இப்பணிகளை மேற்கொண்டு தருமை ஆதீனத்தில் இன்று அருட்செங்கோல் ஓச்சி வரும் ஞானாசிரியராகிய குருமகா சந்நிதானமவர்களைச் சைவத் தமிழுலகம் என்றென்றும் நன்றியுடன் போற்றி வணங்கும் கடப்பாடுடையது. ஒழுக்கமும், பணிவும் கொண்டு தமது கல்விப் பெருக்கத்தை விளக்க நிற்கும் சீலர் அவர்கள்.

பெரியபுராணத்துக்கு நீண்டநாள் உரையே இல்லாமல் இருந் தது. அருள் நூல்களுக்கு உரை எழுதுவதை ஆன்றோர்கள் விரும்ப வில்லை. உரையெழுத அஞ்சினார்கள் என்றே சொல்லவேண்டும். அவர்களிடத்தில் ஆற்றல் இல்லையா? இருந்தது. ஆனால் பின்னால் வருவோர், அந்த அருள் நூல்களின் பெருமையைத் தம் உரை அள வினதாகக் கொண்டு விடுவார்கள் என்பதுதான் அந்த அச்சம்.

ஆகையால், வைணவர்கள் போல், சைவர்கள் அருள் நூல்க ளுக்கு உரை எழுதாமல் விட்டுவிட்டார்கள் . இந்நிலையில் சொல் நடையும் பொருட்செறிவும் சேர்ந்த அந்த நூல்கள், பாமரர்களுக்கு எட்டாக் கனியாகவும் ஆகிவிட்டன.

நீண்ட காலத்துக்குப் பின் நிலைமை சற்றே மாறியது.

காரைக்காலம்மையார் புராணம் வரை, ஆறுமுக நாவலர் எழுதிய சூசனமும் ஒரு வகையில் குறிப்புரையே. திரு. வி. . அவர்கள் பெரியபுராணத்துக்குக் குறிப்புரை எழுதினார். கோவை சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார், தன் வாழ்நாள் முழுதும் முயன்றெழுதிய உரை, சைவ உலகத்தின் பெருந்தாகத்தைத் தணிக்க வந்த நீரூற்று. இன்று, பெரியபுராணத்துக்கு முழுமையான ஓர் உரையைச் சைவ சித்தாந்த சரபம் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

திரு. கு.சுந்தரமூர்த்தி அவர்கள், பனசைத் திருமடம் சைவ உலகத்துக்குத் தந்த பரிசு. பனசையில் பயின்று, அங்கேயே புலமை பெற்றுப் பேராசிரியராகவும் முதல்வராகவும் உயர்ந்து, ஓய்வு பெற்றபின், தாய் நிறுவனமாகிய திருத்தருமை மடத்தில் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர் பதவியைத் தாங்கி, பெரும் பணி செய்து வருகின்ற பெருமகனார்.

இலக்கிய இலக்கண நூற் கடலை, நிலை கண்டுணர்ந்த சான் றோர். சைவ சித்தாந்தத்தின் அகலமும் நீளமும் அளந்த அறிஞர். சிவ பூசைச் செல்வர். பலகாலும் மாணவர்களுக்குப் பாடஞ் சொல்லியும் மேடையேறிச் சொற்பொழிவாற்றியும் வரும் புலமை நலம் பழுத்துக் கனிந்த மூதறிஞர்.

இவ்வுரையின் தனிச் சிறப்பு

தருமையாதீனப் பதிப்பாய் வெளிவருகின்ற பெரியபுராணப் புதிய உரை பல ஏற்றங்கள் உடையது. முன்னமேயே உரைகண்ட கோவை சி. கே. சுப்பிரமணிய முதலியார் முதலான பெரியவர்களின் உரைகளைத் தழுவி, தமது நுண்மாண் நுழைபுலனால் புதிய செய் திகளை ஆராய்ந்து கண்டு, பெரியபுராண வகுப்புக்களை நூற்றுக் கணக்காக நாடெங்கிலும் நடத்திப் பழுத்த அநுபவத்தைப் பெற்ற பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி இன்று உரை வரைந்துள்ளார்.

அன்புக்கு இன்னொரு பெயர் சைவம். இதனை அற்புதமாக எடுத்து விளக்கும் வகையில் பெரியபுராணம் அமைகிறது என்பத னைப் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி அருமையாகச் சித்திரிக்கிறார். மேலும், உபமன்னியு முனிவர் ஒளியுருவில் சுந்தரரைக் கண்டு தொழுது அவர் பெருமையை மற்றவர்க்கு உணர்த்தும், நடந்தது நவிற்றலாகிய உத்தியைப் பயன்படுத்திய காப்பியம் இது ஒன்றே என்று காட்டும் திறமும் சிந்திக்கத்தக்கது.

பகைமையே இல்லாத காப்பியத் தலைவர் சுந்தரர் ஒருவரே என்று பேராசிரியர் சுட்டிக்காட்டும் இடம் மிகச் சிறந்ததாகும். போரை மறுப்பது சமணம். சமண சமயப் பேரிலக்கியங்களாகிய சிந்தாமணி, பெருங்கதை நாயகர்கள் கூடப் போரிட்டு வென்றே தலைமையை நிலை நிறுத்திக் கொண்டார்கள். கலிக்காமர், விறன்மிண்டர் ஆகிய இருவரிடத்தும் சுந்தரர், அன்பு காட்டி, அடிமைத் திறம் பூண்டு, அவர் களை மீளா நட்புக்குரியவர்களாக்கிக் கொண்டதைத் தனித்தன்மை வாய்ந்ததாகக் காட்டுகிறார் சேக்கிழார்.

சங்க இலக்கியம், திருக்குறள் முதலியவற்றின் கருத்துகளைப் பெரியபுராணம் எடுத்தாண்டுள்ள இடங்களையும், சைவ சித்தாந்த நுண்பொருள் பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ள இடங்களையும் மிகச் செம்மையாகப் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி காட்டியிருக்கின்றார்.

இடைச்செருகல் என்று அறிந்தவற்றைத் துணிந்து நீக்குகின்றார்.

இலக்கண இலக்கியக் கருத்துக்களைத் தொகுத்துக் குறிக்கும் இடங்களும் மிகச் செம்மையாக அமைந்துள்ளன.

பெரியபுராணப் புத்துரை வரைந்து, தமிழிலக்கிய உலகின் பெரிய உரையாசிரியர்களில் ஒருவராய்ப் பேராசிரியர் கு. சுந்தர மூர்த்தி அவர்கள் இடம் பெற்றிருக்கின்றார்.

இராமலிங்கர் பணிமன்ற விழாக்களில் இவருடைய திருவாசக உரையைக் கேட்டு உருகாதவர் யாரும் இலர். தமிழகமெங்கும் ஓயாது ஒழியாது பயணம் செய்து திருமுறைகளை விளக்கி வரும் இவரது சலி யாத தொண்டைச் சைவ உலகம் தலையால் வணங்கிப் போற்றுகிறது.

இரண்டாம் கோவை சி. கே. சுப்பிரமணிய முதலியார் என்று இனிச் சைவர்கள் இவரை அகங் கனிந்து போற்றுவார்கள் என்பது உறுதி.

அவர்கள் சிவப்பணியும், செந்தமிழ்ப்பணியும் மேலும் பரவிப் பல்கி ஓங்க, அவருக்கு நீண்ட நெடிய வாழ்நாளும், செல்வமும், உடல் நலனும், மன நிறைவும் அருளிச் செய்க என்று எல்லாம் வல்ல சிவபரஞ்சுடரைப் பணிந்து வேண்டுகிறேன்.

அவரை இத்திருப்பணிக்கு என ஏற்றுப் பணிகொண்ட தருமையாதீனக் குருமணிகளின் திருத்தாள்கள் வாழ்க எனப் பரவுகின்றேன்.

தலைவாயில்