
முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 2 | 3 | 4 | 5 | 7 | 8 | 9 |
8.0 வாழ்வியல் அமைதிகள்:
8.1 நால்வகை இனத்தவர்: இனி இந்நூற்கண் காணும் வாழ்வியல் பற்றிய செய்திகளைக் காணலாம். தொல்காப்பியர் காலம் முதலாகவே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை இனத்தவரும் நம் தமிழகத்தில் வாழ்ந்து வந்திருந்தமை தெரிய வருகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். எனினும், செய்தொழில் வேற்றுமையால் இந்நால்வகை இனமாகப் பிரிந்து செயற்படலாயினர். இச்செயற்பாட்டால் நாடு நலம் பெற்றது. வளமும் பெற்றது. இது கருதியே ஆசிரியர் சேக்கிழாரும் `சாதிகள் நெறியில் தப்பா' (தி.12 சரு.1-2 பா.34) என்றனர். இவ்வாறு பிரிந்து செயற்படத் தொடங்கிய காலத்தே உயர்வு தாழ்வுகள் இருந்திரா. பிற்காலத்தேயே ஏற்பட்டிருக்கவேண்டும். அக்காலம்தானும் சங்க காலத்தேயே ஆதல் வேண்டும். "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்" (புறநானூறு, 183) எனவரும் புறப்பாட்டால் இவ்வுண்மை அறியலாம். எனினும் இவ்வுயர்வு தாழ்வுகள் பிறந்த குடிப் பிறப்புக் காரணமாக அமையாது, அவரவர்தம் பண்பாடு பற்றியே அமைந் திருந்தன. `மேலிருந்தும் மேலல்லார் மேலல்லவர் கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர்'(குறள், 973) `கீழ்ப்பாலொருவன் கற்பின் மேற்பாலொருவனும் அவன்கட்படுமே' (புறநானூறு, 183) என வருவனவற்றான் இவ்வுண்மை அறியப்படும். இவ்வகையான் அமைந்திருந்த நிலை மாறிக், காலப் போக்கில் பிறப்பு வகையான் மட்டுமே உயர்வு தாழ்வு கருதும் நிலை வந்துவிட்டது. அண்மைக் காலமாக அந்நிலையை மாற்றும் முயற்சியில் தலைப்பட்டு வருகின்றோம். திருவருள் முன்னின்றருள வேண்டும்.
8.2 அந்தணர்: இவர்கள் நாளும் நாட்டு நலன் கருதி மறையோதியும் தீவேட்டும் இறைவழிபாடாற்றியும் வாழ்ந்து வந்தனர். வழிவழியாக இந்நிலை வளரத் தத்தம் மாணாக்கர்களுக்கும் இந்நெறிகளைப் பயிற்றுவித்து வந்தனர். பெரிதும் இல்லறம் பேணி வந்த இவர்களின் மனைவியரும் கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்தறிந்து வாழ்ந்து வந்தனர். `அவ்வூர் (சீகாழி) மரங்களும் ஆகுதி வேட்கும் தகையவென மணந்துளதால்' (தி.12 பு.28 பா.7),
செம்மை
வெண்ணீற் றொருமையினார்இரண்டு பிறப்பின் சிறப்பினார்
மும்மைத்
தழலோம் பியநெறியார்நான்கு வேதம் முறைபயின்றார்
தம்மை ஐந்து புலனும்பின்
செல்லுந் தகையார் அறுதொழிலின்
மெய்ம்மை யொழுக்கம் ஏழுலகும்
போற்றும் மறையோர் விளங்குவது. (தி.12 ப.20 பா.2)
ஆய்ந்த
மெய்ப்பொருள் நீறென வளர்க்குமக் காப்பில்ஏய்ந்த
மூன்றுதீ வளர்த்துளார் இருபிறப் பாளர்நீந்து
நல்லறம் நீர்மையின் வளர்க்குமத் தீயைவாய்ந்த
கற்புடன் நான்கென வளர்ப்பர்கண் மடவார்.(
தி.12 ப.26 பா.3)என
வருவன காண்க.8.3 அரசர்: `மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' (புறநா னூறு, 186) என்னும் சங்கநூல். `மன்னரை இன்றி வைகும் மண்ணுல கெண்ணுங் காலை இன்னுயி ரின்றி வாழும் யாக்கையை ஒக்கும்' (தி.12 சரு.15 பா.29) என்னும் இந்நூலும்.
இங்ஙனம்
வழிவழியாகக் கூறுதற்குக் காரணம், எத்துணை வளமுடைய நாடாயினும் வேந்தமைவு இல்லையாயின் அது பயன் படாமை கருதியாம். இவ்வரசர்கள் உலகைக் காப்பர். அவர்களை அவர்கள் காத்துவரும் நெறி திறம்பா நீதிமுறைமை காத்துவரும். தன்னால், தன் பரிசனத்தால், ஊனமிகு பகைத்திறத்தால், கள்வரால், உயிர்கள் தம்மால் ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காத்துவருதலே அவர்கள் கடமையாகும் (தி.12 சரு.13 பா.36).தந்தை
மகன் என்ற முறையில், அரசுரிமை வழி வழியாகப் போற்றப்பட்டு வந்தது. சேரர் மரபினரைப் பொறுத்தமட்டில் மருமக் கள் தாயமாக அமைந்திருந்தது. ஓரரசர் இறப்ப அவருக்குப்பின் இவ்விருவகை நிலையிலும் உரிமையுடையோர் இலராயின், அரச யானையைக் கண்கட்டி விடுத்து அதன்வழித் தக்கவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையும் இருந்து வந்தது. `அரசுகொள் கடன்கள் ஆற்றி' என்பதற்கு ஏற்ப, உறுபொருளும் உல்கு பொருளும் பெற்றதோடு, ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருளாகப் பெற்றனர்.மன்னவர்க்குத்
தண்டுபோய் வடபுலத்து வாதாவித்தொன்னகரந்
துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்தும்பன்மணியும்
நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்இன்னனஎண்
ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.(
தி12 ப.36 பா.6)எனவரும்
திருவாக்கும் காண்க.குறைநீக்கும்
முறைகள்: மக்களுக்கு நேரும் குறைகளை உடனுக்குடன் கேட்டு நீக்குவதற்கு ஏற்ப ஆராய்ச்சி மணி அரண் மனையில் கட்டப் பட்டிருந்தது. ஊர்கள்தொறும் அறங்கூறு அவையம் அமைக்கப் பெற்று அவரவர்தம் பிணக்கும் வழக்கும் உடனுக்குடன் எண்ணித் துணிந்து தீர்ப்பளிக்கப்பட்டு வந்தன. இனி மக்கட்கு ஏற்படும் குறைகளை அரசனிடத்தேயே விண்ணப்பித்து அக்குறைகளை உடன் நீக்கிக் கொள்ளவும் உரிய சூழல் அமைந்திருந்தது.8.4 ஆராய்ச்சி மணி: நாட்டில் தீங்கிற்கு இலக்காகும் எவ்வுயிர் களும் உடன் தீர்வுபெறவும், அதற்கேதுவாக அரசின் கவனத்தை உடன் ஈர்க்கவும் இம்மணி அரண்மனை வாயிலில் கட்டப் பெற்றிருக் கும். எனினும் அரசர்கள் எவரும் இவ்வாராய்ச்சி மணியின் ஒலியைக் கேளாத நிலையிலேயே ஆட்சி புரிந்து வந்தனர். ஒரோவழி அவ் வொலியைக் கேட்க நேரின், அந்நிலைக்குப் பெரிதும் வருந்தினர். `மறை நாவோசை கேட்டலல்லது மணி நாவோசை கேட்டலு மிலனே' (சிலப்பதிகாரம், கட்டுரை. 31-35) எனச் சிலம்பிலும், அம்மணியோ சையின் இன்னாமை `பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ' (தி.12 சரு.1-3 பா.28) என இந்நூலில் குறிக்கப் பெறுதல் காண்க.
8.5 அறங்கூறு அவையம்: பேரூர்தொறும் அறங்கூறு அவையங்கள் இருந்தனவெனத் தெரிகிறது. அவ்வப்பொழுது ஏற்படும் சண்டை சச்சரவுகளைத் தீர்க்கவும், மனித உரிமை, நிலவு ரிமை முதலியவற்றை வரையறைப் படுத்தவும் இவ்வவைகள் பயன் பட்டன. இந்நூல்வழி மணம்வந்த புத்தூர், திருவெண்ணெய்நல்லூர், தில்லை நகர், திருச்சேய்ஞலூர், பழையனூர் ஆகிய ஊர்களில் இவ் அவையம் இருந்தமை தெரிய வருகிறது. இவ்வவைகள் வழித் தீர்க் கப்பட்ட வழக்கிலிருந்து அறியத்தகும் செய்திகள்:
8.5.1 மூல ஓலைக்குப் படியோலை எடுத்து வைக்கும் பழக்கம் இருந்தது.
8.5.2 வழக்கிற்கிலக்கானவர் அவ்வழக்கு முடியும்வரை பிற செயல்களை மேற்கொள்ளாமல் வழக்குத் தொடுத்தவருடன் உடனிருந்து ஒத்துழைத்தனர்.
8.5.3 ஓரூரில் தொடுக்கப்பட்ட வழக்கு வேற்றூரில் தீர்க்கப்படும் நிலையும் இருந்து வந்தது.
8.5.4 அவ்வவ் வூரவர்தம் கையெழுத்துக்கள் பிற்காலத்தும் ஒப்பு நோக்குதற்கு ஏற்ப, ஒருங்கு தொகுத்து வைக்கப் பெற்று இருந்தன.
8.5.5 வழக்கிற்குரிய செய்திகளைப் படித்தற்குரியான் கரணத்தான் என அழைக்கப்பட்டான்.
8.5.6 வழக்கிற்குரிய செய்திகள் ஆட்சி, ஆவணம், அயலவர்தம் காட்சி ஆகிய மூன்றானும் நன்கு ஆராயப் பெற்றுத் தீர்ப்பளிக்கப் பெற்றன.
8.5.7 ஆவணம் எழுதியோன் இதற்கு இவை என் எழுத்து எனக் கையொப்பம் இட்டு வைப்பன்.
8.5.8 உரிய ஆவணங்கள் அரண்தரு காப்பில் வைக்கப் பெற்றிருந்தன.
8.5.9 தீர்ப்பளிக்கப்பெற்ற வகையில் தொய்வு ஏற்படின், அவ்வவையத்தார் ஒருங்கு உயிர் துறக்கும் அளவிற்கு வாய்மையும் நேர்மையும் கொண்டிருந்தனர்.
8.5.10 தீர்ப்பளிக்கப்பெற்ற செய்திகள் அறநெறி பிழையா திருந்ததோடு, வழக்குத் தொடுத்தார்தம் (வாதி) மன நிறைவிற்கும் ஏற்ப அமைந்திருந்தன.
3. மக்கட்கு ஏற்படும் குறைகளை நேரிடையாகவே
மன்னன் கேட்டுத் தீர்த்து வந்தமை:
பொத்தப்பி
நாட்டை ஆண்டு வந்த நாகன், தன் முதுமையால் காவல் பிழைத்தபொழுது, மக்கள் நேரில் வந்து முறையிடத் தன் தவற்றை ஒத்துக் கொண்டதோடு, தன் மகன் திண்ணனாரை உடனே ஆட்சியில் அமர்த்திக் குறைநீக்க முயன்றமை கண்ணப்பர் வரலாற்றால் அறிய முடிகின்றது.8.6 வணிகர்: இம்மரபினர் `மானமிகு தருமத்தின் வழிநின்று வாய்மை யினில் ஊனமில்சீர்ப் பெருவணிகர்' (தி.12 பு.24 பா.1) எனக் குறிக்கப் பெறுகின்றனர். தன்னிலையில் தாழாமையும் தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையுமே மானமாகும். தருமம் என்பது `கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து' (பட்டினப்பாலை, 210-211) வீசும்பான்மைய தாகும். இவ்வாற்றான் தமக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ்ந்தனர்.
8.7 வேளாளர்: வேளாளர் என்பார் வள்ளன்மையால் மிக்கி ருக்கும் தாளாளராவர். வேளாண்மையாவது உழுதுண்டு வாழும் வாழ்வாகும். தாளாண்மையாவது இம்முயற்சியால் ஈட்டிய பொரு ளைத் தக்கார்க்குக் கொடுத்து மகிழ்வதாகும். இவ்விரு பண்புகளோடு வாய்மை குன்றா வகைமையும் இவர்கள்பால் ஆழமாக வேரூன்றி இருந்து வந்தது.
இவர்களைச்
சூத்திரர் என்ற பெயராலும் குறித்து வந்தனர். `நம்பு வாய்மையின் நீடு சூத்திர நற்குலம் செய்தவத்தினால், இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப்பதி மாறனார்' (தி.12 பு.4 பா.1). `தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல, நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார், தன்மை வாயிலார் என்னுந் தபோதனர்' எனவரும் ஆசிரியர் திருவாக்கால் இவ்வுண்மை அறியலாம். சூத்திரர் என்னும் சொற்கு முன்னும் பின்னும் வரும் அடை மொழிகளைக் காண இச்சொல் உயர்பொருளைக் குறித்து வந்தமை அறியலாம். `சூத்ரா சுத்த குலோத்பவா' எனச் சிவாகமமும் கூறும் என்பர். எனினும் இச்சொல் இழிநிலையில் வந்த பிறப்பைக் குறிக்கும் என்றும், மேழியர் என்பதற்கு மாறாக இச்சொல் இடைச் செருகலாய்ப் புகுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுவாரும் உளர். எனினும் ஆசிரியர் திருவாக் கின் அமைதியைக் காண இக்கருத்து மேலும் எண்ணத் தக்கதாகவே உள்ளது.8.8 ஒருமையுணர்வு: இவ்வாறு வேற்றுமைப் படக் காணும் நால்வகை இனங்களும் செய்தொழில் வேற்றுமை வழியே அன்றி, அதனினின்றும் நீக்கிக் காணும் பொழுது, இனம் ஏது? நாடு ஏது? காலம் ஏது? எவையும் இலவாய், உயிரினம் என்ற அளவிலேயே எண்ணத் தக்கவாய் உள்ளன. ஆதலால்தான் ஞானியர்கள் எவ்வுயி ரையும் ஒக்கப்பார்த்தனர். ஞானம் ஈசன்பால் அன்பே என்பர். அந் நிலையில் அன்பினால் இன்பம் ஆர்ந்திருக்கும் அடியவர்களுக்கு இனம் ஏது? மொழி ஏது? நாடேது?, பிற பிற வேற்றுமை ஏது? இவற்றையெல்லாம் கடந்த நிலையே அவர்கள் நிலையாக இருந்தது. சிவவேதியராகிய ஆரூரர், உருத்திர கணிகையராய பரவையாரை யும், வேளாண் மகளிராய சங்கிலியாரையும் மணந்து கொள்கின்றார். வேளாண் மரபினராய கோட்புலியார்தம் மகளார் இருவரையும் மகண்மை கொண்டார் நம்பியாரூர். ஆதி சைவராய ஆரூரரை, நரசிங்கமுனையரையராகிய அரசர் மகன்மை கொள்கின்றார். வணிக ராய சிவநேசச் செட்டியார், தம் மகளாரை மறையவராகிய ஞானசம் பந்தருக்குக் கொடுக்க முனைகின்றார். மறையவராய அப்பூதியடி களார் வேளாண் மரபினராகிய நாவரசரை வணங்கியும் விருந்தேற்றும் குரு மூர்த்தியாகக் கண்டு மகிழ்கின்றார். மன்னர் சேரமானாரை ஆரூரர் உடன் வைத்து விருந்தோம்பி மகிழ்கின்றார். திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவர்தம் மனைவியார் மதங்க சூளாமணியாரை யும் வேள்வி செய்யுமிடத்து அருகே இருந்தருள ஏற்கின்றார் திருநீலநக்கர். ஞானசம்பந்தர் இவ்விருவரையும் தாம் செல்லும் பதிகட்கெல்லாம் அழைத்துச் சென்று தாம் பாடும் பதிகங்களை யெல்லாம் யாழிசையில் வைத்து இசைத்தருளத் திருவுளங் கொள்கின்றார். அவரை `ஐயரே' எனும் சொல்லால் அழைத்தும் மகிழ்கின்றார். நமிநந்தியடிகள், பெருமானின் திருமணலி எழுச்சி சேவித்துத் தம் மனைக்குச் சென்று, எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனக் கருத, இறைவன் `ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்' என அருளிச் செயக் காண்கின் றோம். இறைவனுடன் ஒருமை பெற்று நிற்கும் இவ்வடியவர்கட்கு, எவ்வுயிர்களிடத்தும் ஒருமை பெற்று நிற்கும் தகுதியும் சால்பும் ஏற்படுகின்றன. அங்ஙனமாயின் திருநாளைப் போவாரின் நிலை வேறுபட்டுளதே எனின், அன்று. அவ்வடியவரிடத்து, `இன்னல் தரும் இழிபிறவி இது தடை' எனும் உணர்வு தமக்குத்தாமே இருந்தமையின், இறைவன் அவ்வுணர்வை மாற்றி ஏற்கத் திருவுள்ளங் கொள்ள நேர்ந்தது. அதுவன்றிப் பிறிதில்லை என்பது அவர்தம் வரலாற்றை ஆழ எண்ணுங்கால் நன்கு விளங்கும்.
முதற் காண்டம் - ஆராய்ச்சி முன்னுரை - தொடர்ச்சி.. | 1 | 2 | 3 | 4 | 5 | 7 | 8 | 9 |