b

02 பதிப்புரை

தேவரெலாம் தொழச்சிவந்த செந்தாள் முக்கண்

செங்கரும்பே! மொழிக்குமொழி தித்திப் பாக

மூவர்சொலும் தமிழ் கேட்கும் திருச்செவிக்கே

மூடனேன் புலம்பியசொல் முற்று மோதான்

- தாயுமானவர்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கும் வாழ்வின் முடிவில் நல்ல கதிகளைப் பெறுவதற்கும் உரிய அருள் நூல்களாக விளங்குவன பன்னிரு திருமுறைகள். திருமுறைச் சுவடிகளைச் சிவமாகவே பூசிப் போரும், அவற்றைப் புத்தாண்டு தொடங்கி ஆண்டின் நிறைவில் பூர்த்தி செய்யும் வகையில் முறையாகப் பாராயணம் புரிந்து வருவோரும் ஆகச் சமய உலகில் பலர் உள்ளனர்.

பன்னிரு திருமுறைகளிடம் அளவற்ற பக்தி கொண்டு இவ்வாறு பாராயணம் புரிவோர், தம் வாழ்வில் அவ்வப்போது ஏற்படும் நன்மை தீமைகளை அறிவதற்கு, தேவாரத் திருமுறை, பெரிய புராணம் ஆகியவற்றில் கயிறு சாத்திப் பார்த்து விளைவுகளை அறிந்து, அதன்படி நடந்து பயன் எய்துவர்.

தேவாரத் திருமுறைகளில், முதல் மூன்று திருமுறைகள், திருஞானசம்பந்தர் அருளியனவாகும். ஞானசம்பந்தர் அருளிய இரண்டாம் திருமுறையில் இந்தளம், (39) சீகாமரம் (14) காந்தாரம் (29) பியந்தைக் காந்தாரம் (14) நட்டராகம் (16) செவ்வழி (10) என்ற ஏழு பண்களின் அமைப்புக்களைக் கொண்ட 122 திருப்பதிகங்களும் 1326 பாடல்களும் 120 தலப்பதிகங்களும், 2 பொதுப் பதிகங்களும் உள்ளன. பொதுப் பதிகத்தில் ஒன்று திருகே்ஷத்திரக் கோவை.

திருகே்ஷத்திரக் கோவை என்பது பல தலங்களையும் இணைத்துப் பாடிய பதிகம். இப்பதிகத்தில் பல பாடல் வரிகள் குறைந்து உள்ளதால் ஞானசம்பந்தர் கூறும் பல தலங்களை அறிதல் இயல வில்லை. இவ்வாறே அப்பரும் சுந்தரரும் பல தலங்களை இணைத்துப் பதிகங்கள் அருளியுள்ளனர்.

அப்பர் பாடியன, கே்ஷத்திரக் கோவைத் திருத்தாண்டகம் (6-70) அடைவுத் திருத்தாண்டகம் (6-71), பலவகைத் திருத் தாண்டகம் (6-93) என்பனவாம்.

சுந்தரர் பாடியன திருநாட்டுத் தொகை (7-12), ஊர்த்தொகை (7-47) என்பனவாம்.

சிறந்த சிவ கவசமாக விளங்கும் கோளறு திருப்பதிகம் (பொது) இத்திருமுறையில் அமைந்துள்ளது.

இத்திருமுறையில் ஞானசம்பந்தர் முத்துச் சிவிகை, முத்துக் குடை, முத்துச் சின்னம் ஆகியன பெற்றது, அரவு தீண்டி இறந்த வணி கனை உயிர் பெற்று எழச் செய்தது, திருமறைக் காட்டில் வேதங்களால் அடைக்கப்பட்ட திருக்கோயில் திருக்கதவை அப்பர் திறக்கப் பாடியதைத் தொடர்ந்து மீண்டும் அடைக்கப்பாடியது, பாண்டியனின் வெப்புநோய் விலகத் திருநீற்றுப்பதிகம் அருளியது, மயிலாப்பூரில் எலும்பைப் பெண்ணாக்கியது, பாலையை நெய்தலாக்கிப்பின் மருதமாக்கியது ஆகிய அற்புதத் திருப்பதிகங்கள் இடம் பெற்றுள்ளன.

இத் திருமுறையில் பாடப் பெற்றுள்ள தலங்கள் 90.

இத் திருமுறையில் சில பதிகங்கட்கு வினாவுரைப் பதிகங்கள் (பதி.137,138,140,172) விடந்தீர்த்தபதிகம் 1 (பதி. 154) கதவு அடைக்கப் பாடியது (பதி. 173) முடுகியல் சந்தமான திருவிராகம் (பதி. 165-170, 233, 234, 236, 237) திருகே்ஷத்திரக் கோவை 1 (பதி. 175) பூம்பாவையை எழுப்பிய திருப்பதிகம் (பதி. 183) திருநீற்றுப் பதிகம் (பதி. 202) சித்திரக் கவிகளில் திருச்சக்கரமாற்று (பதி. 206 பதி. 209) திருக்கோமூத்திரி (பதி. 210), கோளறு திருப்பதிகம் (பதி. 221) என்ற தலைப்புகள் தரப் பெற்றுள்ளன. வினாவுரைப் பதிகங்களாக வேறு சில பதிகங்களும் உள்ளன அவற்றுக்குப் பதிப்பாசிரியர்கள் ஏனோ அப்பெயரைக் குறித்திலர். திருவலஞ்சுழிப்பதிகம் (பதி. 138) இறைவன் பலியேற்றதையே பாடல் தோறும் வினவுவதாக அமைந் துள்ளது.

எலும்பைப் பெண்ணாக்கிய பூம்பாவைத் திருப்பதிகம் ஒவ்வொரு திங்களிலும் நிகழும் சிறப்பு விழாக்களைத் தெரிவிக்கிறது. திருவாஞ்சியம் திருப்பதிகத்தில் ஞானசம்பந்தர் ஒன்று முதல் எட்டு வரை எண்ணலங்காரம் பட உரைத்தருளிய திருப்பதிகப் பாடல் உணர்ந்து இன்புறுதற்குரியது. இப்பாடலின் பொருளை இந்நூல் வாயிலாக அன்பர்கள் அறிந்து மகிழலாம்.

`மேவின் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய்

நாவி னாலர்உடல் அஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்

தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்

பாவந் தீர்ப்பர் பழி போக்குவர் தம்மடி யார்கட்கே'.

என்பதுதான் அத்திருப்பாடலாகும்.

வணிகனுக்கு விடந்தீர்த்த "சடையாய் எனுமால்.." என்னும் திருப்பதிகம் அவ்வணிகனோடு உடன் போக்காக வந்த அப்பெண் ணின் அவலச்சுவை நிரம்பிய வாய்மொழியாக அமைந்துள்ளதைக் காணலாம்.

திருநீற்றின் பெருமையை உலகுக்குணர்த்தும் `மந்திரமாவது' என்னும் திருப்பதிகம் இத்திருமுறையில் அமைந்து விளங்குகிறது. இவ்வாறே `ஒன்றொன்றொ டொன்று மொரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொ டேழும் உடனாய் அன்றின்றொ டென்றும் அறிவான வர்க்கும் அறியாமை நின்ற அரனூர்' என வரும் தென்திருமுல்லை வாயில் திருப்பதிகப் பாடற் கருத்தையும்,

`ஒன்பதோ டொன்றொ டேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்கள் அவைதாம்

அன்பொடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே'

எனக்கூறும் கோளறு திருப்பதிகப் பாடற் கருத்தையும் இந்நூல் உரை நன்கு தெளிவு செய்துள்ளது.

இவ்வாறு பல அரிய திருப்பதிகங்களை உள்ளடக்கிய இரண்டாம் திருமுறை தவத்திரு கயிலைக்குருமணி அருளாட்சிக் காலத்தில் சித்தாந்த ரத்னாகரம் முதுபெரும் புலவர் திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் (தொண்டை மண்டல ஆதீனம் 229 ஆவது குருமகா சந்நிதானம்) அவர்கள் எழுதிய விளக்கக் குறிப்புடன் 1954ஆம் ஆண்டு வெளியிடப் பெற்றது.

இதுபோது தருமை ஆதீனம் 26 ஆவது குருமகாசந்நிதானம் தவத்திரு சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திரு வுள்ளப் பாங்கின் வண்ணம் விளக்கக் குறிப்புரை என்பவற்றோடு தருமை ஆதீனப் புலவர் வித்துவான் திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள் எழுதிய பொழிப்புரையோடும் தவத்திரு கயிலைக் குருமணி குருபூசை வெள்ளிவிழா நினைவாக திருச்சிராப்பள்ளி மௌனமடம் அருட்கொடையாக வெளியிடப் பெறுகிறது.

இத்திருமுறைப் பதிப்பைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.

அன்பர்கள் பெற்றுப் போற்றி ஓதி உணர்ந்து பயன் எய்து வார்களாக.

இங்ஙனம்

மௌன மடம் ஷ்ரீலஷ்ரீ குருமகா சந்நிதானத்தின்

திருச்சிராப்பள்ளி. உத்தரவுப்படி,

மௌன மகாலிங்கத் தம்பிரான்.

 

a

 

 

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி சிற்பி