012 முன்னுரை

தருமையும் கமலையும் விரிதமிழ்க் கூடலும் திருநகராக அரசு வீற்றிருக்கும் திருத்தகவுடையது தருமபுர ஆதீனமாகும். இவ்வாதீன 25ஆவது குருமூர்த்திகளாக எழுந்தருளியிருந்தவர்கள் ஷ்ரீலஷ்ரீ கயிலை சுப்பிரமணியதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் ஆவார்கள். அவர்கள் தம் அருளாட்சிக் காலத்தில் செய்துவந்த அறப்பணிகள் மிகப்பலவாம்.

இவற்றுள் குறிப்பிடத்தக்கன தருமையாதீனத் திருக்கோயில்கள் இருபத்தேழிற்கும் திருக்குடமுழுக்கு விழா செய்தருளியமையும், பன்னிரு திருமுறைகளும் உரையுடன் வெளிவரத் திருவுளம்கொண்ட அருமையுமாகும். அவர்கள் திருவுளம்பற்றியவாறு ஒன்பதாம் திரு முறை வரை அவர்கள் காலத்தில் வெளிவரலாயின.

அக்குரு மூர்த்திகளை அடுத்து இருபத்தாறாவது குருமூர்த்தி களாக எழுந்தருளியிருந்து அவ்வருட்பீடத்தை அலங்கரித்து வருப வர்கள், ஷ்ரீலஷ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் ஆவார்கள். அவர்கள் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு திருவுள்ளமும், பதிகச்செஞ்சொல் மேய செவ்வாயும், எம்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க எனத் தம் திருக்கரங்களை ஆட்படுத்திக் கொண்டு நாளும் தாம் வழிபட்டுவரும் சொக்கநாதப் பெருமானுக்குச் சிறப்பொடு பூசனை செய்துவரும் பாங்கும் உடைய வர்கள்.

இவர்கள், தம் அருளாட்சிக் காலத்தில் நிகழ்த்திவரும் அறப் பணிகளும் அருட்பணிகளும் மிகப்பலவாம். அவற்றுள் குறிப்பிடத் தக்கன, அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை நிறுவி, அதன்வழி நான்மறைச் சைவம் ஓங்கச் செய்துவரும் பணிகள் பலவுமாம்.

தம் குருமூர்த்திகள் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுவந்த திருமுறைப் பணியை மேலும் தொடர்ந்து நிறைவுபடுத்த வேண்டும் எனத் திருவுளங்கொண்டு, பத்தாம் திருமுறையையும், பதினொன் றாம் திருமுறையையும் பெரும்புலவரும் சைவசித்தாந்த வித்தகரும் சிவபூசைச் செல்வரும் ஆய திருமிகு சி. அருணைவடிவேல் முதலி யார் அவர்கள் உரையுடன் வெளிப்படுத்தியருளினார்கள்.

பன்னிரண்டாம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணத்தை, ஒன்றற்கும் பற்றாத அடியேனிடம் கொடுத்தருளி, உரை எழுதுமாறு பணித்தருளினார்கள்.
அடியேனை ஆட்கொண்டருளி உய்வித்தருளிவரும் திருப்பெருந் திரு குருமகாசந்நிதானம் அவர்களின் அருளாசியுரை நூற்குமுன் அமைந்துள்ளது.

அதனை அடுத்து ஆராய்ச்சி முன்னுரை என்ற பெயரில் திருத் தொண்டர் புராணம் பற்றி அறியத்தக்க பல்வேறு செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவை அறிஞர் உலகிற்கும், திருவருள் தோய்வுடைய அருட்செல்வர்களுக்கும் பயன்படும் எனும் கருத்துடையேன்.

இதுபோன்ற நூற்பதிப்புப் பணிகளையும், திருமுறை முற்றோதல் முதலாய பல்வேறு சிவப்பணிகளையும் செய்து உய்யுமாறு பணித்தருளி, அடியேனை ஆட்கொண்டருளிவருகின்ற குருமூர்த்தி களின் திருவடி மலர்களை அடியேன் மனம், மொழி, மெய்களால் என்றும் வணங்கிடும் கடப்பாடு உடையேன்.

திருவருளும் குருவருளும் முன்னின்றருளத் திருத்தொண்டர் புராணத்திற்குப் பொழிப்புரையும், இன்றியமையாது வேண்டப்படும் இடங்கட்கு விளக்கவுரையும் எழுதப்பெற்று, இத்திருமுறை இது பொழுது வருவதாயிற்று.

உரை நிறைவு பெற்றுவரும் திருத்தொண்டர் புராணப் பதிப்புகளில், இஃது ஆறாவது பதிப்பாக விளங்குகின்றது. இதற்குமுன் பதிப்பித்த பெருமக்கள் அனைவர்க்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வுரைப்பதிப்பு நிறைவுபெறுவதற்கு ஏதுவாகப் பொருள் உதவிய அன்பர்கள் அனைவர்க்கும், சிறப்பாக இப்பன்னிரண்டாம் திருமுறைப் பதிப்புக்கு உதவிய, செட்டிநாட்டு அரசர் குடும்பத்தினராய டாக்டர் எம். ஏ. எம். சிதம்பரம் செட்டியார் - திருமதி அபிராமி ஆச்சி ஆகி யோர்க்கும், டாக்டர் ஏ. சி. முத்தையா - திருமதி தேவகி முத்தையா ஆகியோர்க்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எளியேன் இந்நூலுக்கு உரைசெய்திருக்கும் பெற்றிமையை எண்ணி, அணிந்துரை வழங்கியிருப்பவர்கள் என் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய பெருந்தகையாளர், அருட்செல்வர் திருமிகு நா. மகாலிங்கம் அவர்கள் ஆவார். என்னைப் பல்லாண்டுகளாக ஈர்த்துப் பணிகொண்டுவரும் அவர்களின் நல்வாழ்த்திற்கும் பேரன் பிற்கும் என்றென்றும் நன்றியுடையேன்.

இவ்வரிய திருமுறையைச் செம்மையாகவும் அழகியதாகவும் பதிப்பித்த சென்னை, காந்தளகம் உரிமையாளர் மறவன்புலவு க. சச்சி தானந்தன் அவர்கட்கு எளியேனின் அன்புகெழுமிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நூல், உரையுடன் திருந்திய பதிப்பாக வெளிவருதற்கு மெய்ப்புப் பணியைச் சீரிதாகச் செய்துதவியவர் என் அன்புக்குரிய பேராசிரியர் வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள் ஆவார். அவர்கட்கும் என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உடனிருந்து எழுதுதற்கும் திருத்துதற்கும் உதவிய காஞ்சிபுரம், வித்துவான் கன்னியப்பன் அவர்களுக்கும், மதுரை, வித்துவான் காசிநாத தேசிகர் அவர்களுக்கும், மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்

பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்

சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளுந்

தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. -தி.8 ப.10 பா.12

தருமபுரம் இங்ஙனம்

சித்திரபானு, கார்த்திகை கு. சுந்தரமூர்த்தி