011 உரை மாட்சி தருமை ஆதீனப் புலவர், செஞ்சொற்கொண்டல், தமிழாகரர், திருமுறை உரைமணி, நல்லாசிரியர், டாக்டர். சொ. சிங்கார வேலன், எம்.ஏ,பி.எச்.டி (மயிலாடுதுறை)
பொருள் காணும் புதுமை
உயர்ந்த சான்றோர் தம் விழுமிய அநுபவங்களை அவ்வப் போது மெய்ம்மொழிகளாக வடித்து உலகத்தார்க்கு எடுத்து உணர்த் துவர். அவை அவர் காலத்து அவர் தம் திருவாய் மொழிகளாகவும், அவர்கள் வாழ்ந்த காலத்திற்குப் பின் உயிர்த்துடிப்புள்ள, உணர்வு கலந்த சாவா இலக்கியங்களாகவும், திகழ்ந்து வருதல் தெளிவு. அந்த மொழிகளில் தோய்வோர் அவற்றின் பொருளாழத்தில் மூழ்குவர்; அவை உணர்த்தும் `அநுபவ நெறி' யைப் படிப்படியாக அடைந்திட முயல்வர். அந்த முயற்சி சாதனையாகிப் பேரின்ப அநுபவத்தில் தோய்ந்து இன்புறுவர். இத்தகைய அநுபவ மெய்ம்மொழிகளாகச் சைவ சமயத்திற்கு விளங்குவன பன்னிரண்டு திருமுறைகள். அவற்றிற்குப் பொருள் காணும் முயற்சியும் இந்த நலம் கருதியே எழலாயிற்று. தருமை ஆதீனம் 25 ஆவது குருமணி காலத்தில் இந்த அருமுயற்சி அரும்பிற்று. அந்த அரும்பு, சொக்கநாதப் பெருமான் திருவருளாலும், குருவருளாலும் மலர்ந்தது; பதினோரு திருமுறை மலர்ந்து பன்னிரண்டாவது மலரும் இதழ் அவிழ்ந்து மணம் பரப்ப உள்ளது.
குருவருள் விளக்கம்
தருமை ஆதீன ஞானவாவியல் பூத்த இந்தத் தெய்வீகத் திருமுறை மலர்களில் ஆறாவது திருமுறை மலர் முதல் தொடர்ந்து எழுதி வரும் உரைவேந்தர், தருமையாதீனப் புலவர், சித்தாந்தக் கலைமணி, மதுரைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் செம்மல், முதுமுனைவர். சி. அருணைவடிவேலு முதலியார் அவர்கள், எழுத்துலகத்தில் தமக்கென ஒரு தனியிடம் பெற்று ஒளிரும் ஞானச் செஞ்சுடர் ஆவர். இப்புலவர் பெருந்தகை தருமை ஆதீனத்தில் ஆதீனப் புலவராகவும், சைவசித்தாந்தக் கல்லூரிப் பேராசிரியராகவும், திருமுறை உரையாசிரியராகவும் இருந்து ஆற்றிய, ஆற்றிவரும் அரும் பணிகளுக்கெல்லாம் ஊற்றுக் கண் எது? 26 ஆவது குருமணியாக வீற்றிருக்கும் ஷ்ரீலஷ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் `வற்றாக் கருணைத் திருநோக்கும், அருள் முறுவலும், புலவர்ப் புரக்கும் தண்ணளியுமே அந்த ஊற்றுக்கண்ணில் பொங்கி வரும் நீர்க்குமிழிகள். திரு. முதலியார் `குருவருளால் வைத்தபடி' யே இருந்த, `சித்த சலனம்' இல்லாது இறைவன் திருவருளில் `ஒன்றி யிருந்து' தெய்வச் சான்றோர் திருவாக்குக்களுக்கு, அரும் பொருள் விளக்கம் கண்டு வருகின்றார்கள் என்றால் அது மிகையன்று.
முதல் வாசகனாக....
`தாமின் புறுவது உலகின் புறங்கண்டு' (குறள்., 399) என்ற குறள் நெறிப்படி, 26 - ஆவது குருமாமணி அவர்கள், இந்த உரைநலம் முற்றும் கண்டுவியந்து பாராட்டியதுடன், உலகு இன்புறத்தக்க வகையில் அதனை வெளிப்படுத்தும் பணியை அடியேனுக்கு வழங்கி யுள்ளார்கள்; அதுவே இந்தக் கட்டுரையாக வடிவு கொள்கிறது. `அங்கீகரிக்கப்பட்ட முதல் வாசகனாக' என்னைத் தெரிவு செய்து நலம் பாராட்டும் வாய்ப்பை எனக்கு அருளிய குருமணி அவர்களுக்கு என் வணக்கங்களைப் புலப்படுத்திக் கொள்கின்றேன்.
முதுபெரும் புலவரின் தனித்திறன்
தெய்வத் திருமொழிகளாகிய திருமுறைகளுக்கு உரை காணுதல் என்பது உலகியல் நூல்களைக் கற்றோர்க்கு அரிது. மெய்ப்பொருள் நூல்களைக் கற்றும் கேட்டும் உணர்ந்த நல்லறிவோர்க்கே - பெரியோர்க்கே உரியது; அவர்தாம் `கற்றல் கேட்டல் உடையார் பெரியார்' என்று பாலறாவாயரால் பாராட்டப் பெற்ற பண்பினர். (திருமுறை 1-1-2) திரு. சி. அ. அந்தப் பண்புருவாகிய முதுபெரும் புலவராக இருத்தலின் சொல், பொருள், சொல்லின் தொடர்ந்த பொருள் மாட்சி (Association) மேற்கோள், சாத்திரக்கருத்து, சங்க நூற்கருத்து முதலிய பல்வேறு நிலைகளில் ஓர் தேர்ந்த உரையாசிரிய ராக உள்ளார், என்பது இத்திருமுறை உரையை முற்றும் ஓதிய பிறகு எனக்கு மேலும் உறுதியாயிற்று. தாமே சிறந்த மரபுக் கவிஞராகவும் உள்ளவராதலின் உரிய சொற்களை உரிய இடத்தில் கண்டு விளக்கம் காணலும் இவர்க்கு இயல்பாக உள்ளது.
கவிதையை அல்லது ஓர் இலக்கியத்தைக் கற்றுணர்வோர், முதற்கண் கொள்ள வேண்டுவது `ஒன்றிய சிந்தையர்' (Attention) ஆதலும், `கூரிய நோக்கு' (observation) உடையராதலும் வேண்டும் என்றும், அவ்விரண்டும் தாம் தேட விழையும் பொருளாழத்தை வெளிக் கொணரும் இயல்பின என்றும் இக்காலத் திறனாய்வாளர் கூறுவதை 1 இப்போது எண்ணிப் பார்க்கின்றேன் நான்; ஆம் திரு. சி. அ., அருட் கவிஞர்களின் படைப்புக்களில் ஒவ்வோர் சொல்லிலும் ஆழ்கின்ற அற்புதத்தை அவர்தம் உரைப் பகுதியில் பல இடங்கள் மெய்ப் பிக்கின்றன.
திருமுகப் பாசுரம் முதலாகத் திருநாவுக்கரசர் ஏகாதச மாலை ஈறாக உள்ள இந்த அழகிய திருமுறையின்கண் அமைந்த பொருள் ஆழமும் அழகும் பொருந்திய பகுதிகளுக்கு எழுதப்பட்டுள்ள உரைப்பகுதிகள் அழகாகவும், தெளிவாகவும் திகழ்கின்றமையைக் கண்டு பன்முறை வியந்தேன்.
`இனி யார் உளரோ? நின் முன்னும் இல்லை' என்ற சங்க நூல் அடியே என்னுள் தோன்றுகின்றது.
திறனாய்வாளர் கவிதையைக் காணல் என்பதே அதன் அமைப்பழகைக் காணலும், உணர்தலும் தான் என்று கூறுவதை நான் இனிது உணர்ந்தேன்.
இவ்வுரை மாட்சிகள் அனைத்தையும் எழுதி மகிழ்தற்கு வாய்ப்பு இல்லை ஆயினும் என் மதிப்பீட்டில் உயர்ந்து நின்ற சில செய்திகளைக் காட்டி இவ்வுரை நலம் வரைதலே நான் இங்கு மேற் கொள்ளும் முறை; இம்முறையை ஒட்டியே தொடர்கின்றேன்.
முதல் பாசுர உரை (தோரண வாயில்)
`திருமுகப் பாசுரம்' திருவாலவாயுடையார் அருளிய, இத் திருமுறை முதற்பகுதி. இதற்கமைந்த உரைப்பகுதி, இத்திருமுறைக்கு ஒரு `கவினார்ந்த தோரணவாயில்' ஆகவே தோன்றுகின்று. `பாசுரம் - மிகுத்துரை பாட்டு' என்ற விளக்கம் வடசொற் பொருண்மையைத் தெளிவுறுத்திச் சுட்டுவது. இதிற்குறிக்கப்பட்ட சேரலன் யாவன் என்ற ஐயத்தை எழுப்பிய திரு. சி. அ., சேரமான் பெருமாள் நாயனாரே என்ற முடிவுக்கு வருமுன் முந்தையோர் கண்ட கருத்துக்கள் சில வற்றை மென்மையாகக் காரணம் காட்டி விலக்குகின்ற திறம் காணற் குரியது. (2-5) `வரகுணன்' என்ற கருத்தும், `திருமுகம் கொடுத்த வர லாறே இடைச் செருகல்; சேக்கிழார் பாடியன அல்ல' என்ற கருத்தும் (மறைமலை அடிகளார்) விலக்கப்படுகின்றன. பரஞ்சோதி முனிவர் `ஆலாசிய மான்மியம்' என்ற வடமொழி நூலைத் தழுவியே தம் நூலை ஆக்கியிருத்தலால் அதிற்சில மாற்றங்கள் காணுதல் இயல்பே என்ப தும் உள்ளுறுத்தப்பட்டுள்ளது. சேக்கிழார் பெருமான் கூறுவதே அடிப் படை என முடிவுக்கு வரும் உரைத் திட்பமும் இங்குக் காணப்படும்.
`பெரியபுராணத்துள் ஒரு சில பாடல்களை `இடைச்செருகல்' என்ற சொல்லி நீக்கிவிட முயன்றால் அம்முயற்சி பின் பல இடங்களில் தடைப்பட்டு வெற்றி பெறாது மறையும்' (2) என்பது, இப்பகுதிக்கு மட்டுமின்றி வேறு சில நூற் பகுதிகளுக்கும் பொது விதியாகக் கொள்ளத்தக்கது.
அம்மையார் பதிகங்கள்
காரைக்காலம்மையார் திருப்பாடல்களுக்கு அமைந்த உரை அடுத்து வருவது. `தேவாரப் பதிகங்களுக்கு முன்னே தோன்றியமை யின் மூத்த பதிகங்கள்' (6) `ஞானசம்பந்தரின் முதற் பதிகம் நட்ட பாடையைப் போலவே அம்மையாரின் முதற்பதிகமும் நட்டபாடை யில் அமைந்தது' (6) `புயங்கம் என்பது ஒருவகைக் கூத்தாயினும் இங்குப் பொதுப் பொருள் உடையது'. முல்லை முதலிய நானிலங் களுக்கும் பொருந்தியது என்று காரணம் காட்டிய திறம் (10) `பலர் செலச் செல்லாக் காடு' (தொல் - பொருள் -- புறத்திணை -- காஞ்சி) என்பதனால் இப்பொருள் குறிப்பால் சுட்டப்பட்டமை (10) இறைவனை `எங்கள் அப்பன்' `எங்கள் அப்பன்' என்று அம்மையார் பலமுறை சொல்லி இன்புற்ற திறம் (12) என்பன இனியவை.
சிவன் சுடுகாட்டில் ஆடுகின்றான் என்பதன் உண்மைப் பொருள், `ஊழி இறுதிக்கண் உலகெல்லாம் ஒடுங்கியுள்ள பொழுது, உடம்பும் கருவிகரணங்களும் ஆகியவற்றுள் ஒன்றும் இன்றி இருளிற் கிடக்கும் உயிர்களை, மீள உடம்போடும் கருவிகரணங்களோடும் கூடப் படைத்துக் காக்க வேண்டியவற்றைச் செய்தலாகிய சூக்கும நடனத்தைச் செய்கின்றான் என்பதே' (12 - 13) என்று திரு. சி.அ. விளக்கும் நுட்பம் பலரின் அறியாமைக் கண் திரையை விலக்குவதாக உள்ளது.
இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம்
இவரை இகழ்வதே கண்டீர் (அற்புத - 20)
என்று அம்மையார் பாடுவதைக் காட்டி இதனை நிறுவுவார். ஞானசம்பந்தர்க்கு முன்பே திருக்கடைக்காப்புச் செய்யும் முறையைச் சுட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது (13).
சுந்தரர் திருப்பதிகங்களில், முதல் பண் `இந்தளமே' அம்மையின் மூத்த திருப்பதிகப் பண் (15) என்று சுட்டுவதன் வாயி லாகச் சுந்தரர் அம்மை திருவாக்கின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டைச் சுட்டிக் காட்டுகின்றார். இறைவன் திரு நடனத்தை அம்மை கண்ணாரக் கண்டமை (17) `அருளாலே பாடிய என்ற ஒரு சொல் வருவிக்க' என்று உரைத்து, அதன் விளக்கமாக, `இதனால் அம்மையார் பாடல்கள் அருள்வழி நின்று அருளிச் செய்தனவாதல் அறியப்படும்' என்று எழுதும் பகுதி உளங்கொளத் தக்கது. (18)
`ஈசன் ஐசுவரியம் உடையவன்; அதாவது உயிர்களாகிய அறிவுடைப் பொருள்களை அடிமைகளாகவும் ஏனை அறிவிலாப் பொருள்களை உடைமைகளாகவும் உடையவன் எனவே, `முழு முதல் தலைவன்' என்பதாயிற்று' என்ற பகுதி உளங்கொண்டு போற்றத் தக்கது. (20) இவ்வாறே `சங்கரன் இன்பத்தைச் செய்பவன்' என்று விளக்குவதும் காண்க (22)
`கில்லேன் அ(ம்மா) கீழ்' என்ற (இரட்டை 8) சொற்களுக்கு உரையெழுதுங்கால் `அம்மா' என்னும் வியப்பிடைச்சொல் இடைக் குறைந்து நின்றது. என்றெழுதுவதை படித்த பின்பே, அத்தொடரின் பொருள் இனிது விளங்குவதைக் காண முடியும் (23).
`தலையாய ஐந்து -- திருவைந்தெழுத்து; சாதித்தல் கடை போகப் பற்றி முயலுதல்; அஃது இங்குக் கணித்தலைக் குறித்தது' என்பது இனிய குறிப்பு (24)
அம்மையாரின் `நிந்தாத்துதிப் (பழிப்பது போல புகழும் முறை) பாடல்களின் பொருளை ஆங்காங்குத் தெளிவாக விளக்கி மகிழ்வர் (22, 29, 37, 48)
`அற்புதத் திருவந்தாதி' என்ற தொடரில், `அற்புதம் ஞானம்' என்று நுட்பமாக எழுதுவதை மறக்கவியலுமோ? (31) ஞானமே நிறைந்த சொல்மாலையாக இந்நூல் உள்ள சிறப்பை ஆங்காங்கு இனிது விளக்கியும் செல்வர்.
`இறைவன் -- சிவன்; (சூடாமணி நிகண்டு தொகுதி 11 - 11) என்று எழுதி, `சிவனுக்கே உரிய சிறப்புப் பெயராதல் விளங்கும்' என்றும் அறிவுறுத்தவர் (33).
`அருளே உலகெலாம் எனத் தொடங்கும் வெண்பா உரை ஒரு கருத்துக் கருவூலம் என்றே கணிக்கத்தக்கது. திருவாசகம், பெரிய புராணம், தாயுமானவர் திருப்பாடல் திருக்களிற்றுப் படியார் கொண்டு மெய்ப்பொருள் காணும் திறத்தைக் காண்க (35)
`அரிய பரன்' (அற்புத - 18) என்ற இடத்து `அரியாம் பரன்' என்று பாடம் ஓதுதல் சிறக்கும் என்பர்; மேலானவன் என்பது பொருள். (39)
சிவஞான பேதச் சிற்றுரையில், சிவஞான முனிவர் இறைவனின் காட்டும் உபகாரம், காணும் உபகாரம் என்பவற்றை விளக்க, `அறிவானு தானே' என்ற (அற்புத - 63) வெண்பா சுட்டப் படுவதைக் காட்டினர்; ஒப்பீட்டறிவைப் படிப்போர்க்கு விளைத்தல் இத்தகு குறிப்புக்களால் உணரப்படும்.
`எந்தையா உள்ளம் இது' (அற்புத - 66) என்ற தொடரில் தயா என்பதில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்து தையா என நின்றது. தயா உள்ளம் - தயவை அருளை விரும்புகின்ற உள்ளம் என்ற உரைக் குறிப்பை விளங்கிக் கொண்டாலன்றி அம்மையாரின் கருத்துப் புலனாகாது. (42)
`தடத்த சிவன் கண்ணுக்குப் புலனாவன்; சொரூப சிவன் உணர்வுக்கு மட்டுமே புலனாவன்' என்ற பேருண்மையை `அன்றும் திருவுருவம் (அற்புத. 104) எனத் தொடங்கும் வெண்பா உரையில் விளக்கினார். (59)
`பன்னாள் இரந்தார் பணிந்து' (அற்புத 121) என்ற தொடரைக் குகை நமசிவாயர், அப்பர், பட்டினத்தார் திருவாக்குக்களைக் கொண்டு விளக்கினர். (68)
உவமான உவமேயங்கள் அமைப்புப் பற்றித் தொல்காப்பியக் கருத்தை விளக்கி, இறை இலக்கியத்தில் அவற்றின் போக்குப் பற்றி நுட்பமாகச் சுட்டினர். (70) கரைவு - அன்பு; `கரைவினால் பரவுவார்' என்றது இவ்வுலகத்திலும், பின் வந்தவை சிவலோகத்திலும் ஆதலின் அவை கூறியது கூறல் அல்லவாதலை அறிக - என்ற உரைப் பகுதியை உணர்ந்தாலன்றி 144 ஆவது வெண்பாப் பொருளமைதி விளங்காது.
ஐயடிகள் திருமொழி
ஐயடிகள் வெண்பாக்கள் அனைத்தும் உணர்த்தும் பொதுப் பொருளை, `இவ்வெண்பாக்கள் யாவும் யாக்கையின் நிலை யாமையை உணர்ந்து, இன்றே இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும் என்பதையே அறிவுறுத்துகின்றன' என முதற்கண் கூறி விடுவதால் (80) படிக்கப் புகுவோர்க்கு கை விளக்கு ஒன்று கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டு - விடுகின்றது; உள்ளே புகுந்து உருகலாம்; நெகிழலாம். `நடு நடுத்தல் - நடுக்கத்தைக் குறித்ததோர் இரட்டை கிளவி' (81) `வாய் வைத்தல் - வாசகமாகக் கணித்தல், நினைதல் - மானதமாகக் கணித்தல்; இவை ஒன்றின் ஒன்று மிக்கது. (83) `நென்னெற்று என்பது பாடம் அன்று' எனக் காட்டி, `நென்னற்று' என்றே பாடம் கொண்டமை (நேற்று என்பது பொருள்) (87) - ஆகியவை இப்பகுதியில் காணப்படும் `சிந்தனைக் குறிப்புக்கள். வைப்புத் தலங்கள் சிலவும் இந்நூலுட் காணப்படுகின்றன.
சேரமான் செந்தமிழ்
சேரமான் பெருமாளின் பொன் வண்ணத் தந்தாதி உரை மிகச் சிறப்பாக உள்ளது. எளிதாகப் பொருள் காட்டப்பட்டுள்ளது. உட் பொருள், இறைச்சி விளக்கப்பட்டுள்ளன.
`காணப்படாத இறைவனது இயல்பு காணப்படுகின்ற அவன் அடியவரிடத்து விளங்குதல் பற்றியே அறியப்படும்' என்ற உட் பொருளை முதல் பாட்டில் எடுத்துக் காட்டுவர் (91) திருக்களிற்றுப் படியார் (10) மேற்கோளும் பொருத்தமாகச் சுட்டப்பட்டுள்ளமை காண்க.
அகப்பொருள் துறைகளில் அமைந்த குறிப்புக்களைத் தெளிவாக விளக்கும் அழகு உணர்ந்து இன்புறத்தக்கது. `வரமனையே கிளையாகும் முக்கண்ணுடை மாதவனே (பொன் வண்ண - 4) என்ற அடியின் பொருளை, `மேலான மனைவியாகிய அவளே அவனுக்குத் தாயும், மகளும் ஆகிய சுற்றம் என்று விளக்கியதுடன், திருவாசகம், திருக்கோவையார் மேற்கோள்களையும் காட்டி `தத்துவக் குறிப்பே முறையில்லாத முறைகளாக நகைச்சுவை தோன்றச் சொல்லப்படு கின்றன என்க' என முடித்துக் காட்டிய திறம் கருதி இன்புறத்தக்கது. (94)
கொக்கரித்து ஆடிய கொடுகொட்டிக் கூத்தே `கொக்கரை' எனப்பட்டது என விளக்கினார். (95)
அட்டாங்க, சாட்டாங்க நமற்கார இயல்புகளை அந்தாதியின் 11 ஆம் பாடலின் உரையிற் காணலாம்.
பாமாலைகளைப் புதிது புதிதாய் தொடுத்தணியும் மரபு இடையே அற்றொழியாமல் நீடு செல்லல் வேண்டும் என்பது இறை வனது திருவுள்ளக் குறிப்பு என்ற பகுதி ஓர் உண்மையை விளக்கு கின்றது. காலந்தோறும் புதிய புதிய தோத்திர இலக்கியங்கள் பெருகி வந்ததையும், அஃது இடையறாது தொடரவேண்டும் என்பதையும் உரையாசிரியர் தக்க இடத்தில் உணர்த்தியுள்ளார். (99) தேவார, திருவாசகங்கள் தோன்றிய பின்னரும் `அன்புடைத்' தொண்டர்கள் பாமாலை சாத்திப் பரவியமையே சான்று என்பர்.
`படிறாயின சொல்லிப் பாழுடல் ஓம்பி' (பொன் வண்ண - 13) என்ற பாடல் உரையில், `எள் விழுந்த இடத்தைத் தேடிக் கொண்டு, `ஈ மொய்த்தாலும் இழப்பு ஏற்படும்' என்று அதுபற்றி ஈயை அடிக்கின்ற உலோபியை, `வரையாது வழங்கும் வள்ளலே' எனக் கூறுவது போன்ற பல பொய்களைச் சொல்லி' ..... என்று எழுதும் இடம் குறிக்கத்தக்கது. பொய்க்கு எடுத்துக் காட்டிய இந்த உவமை சுந்தரர் செந்தமிழில் (7 - 34 - 8) திகழ்வது.
எள் விழுந்திடம் பார்க்கும் ஆகிலும்
ஈக்கும் ஈகிலன் ஆகிலும்
வள்ளலே எங்கள் மைந்தனே யேன்று
வாழ்த்தினும் கொடுப்பாரிலை
சேரமான் பெருமாளின் உற்ற தோழராக விளங்கிய நம்பியாரூரரின் வாக்கை நயமாக விளக்கிய இந்த இடம் இரண்டு இடங்களையும் இனிது விளங்கிக் கொள்ள உதவுவது அன்றோ!
பதினெட்டாவது திருப்பாட்டின் உரையில் சஞ்சித வினையே தீவினை எனக் குறிக்கப்பட்டது என்று விளக்கி, `திருக்குறட் பரிமேலழகர் சார்புணர்ந்து என்ற குறள் உரையில் விளக்கம் தாராது வாளா போயினார்' என்று மென்மையாகக் கூறினார். `சத்திநி பாதர்க்கு இந்த வினை ஞான குருவால் அழிக்கப்படும்' என்பது சைவ சித்தாந்தம். `இதுபொழுது' என்பதனை வருவித்துரைத்தது இவ் விளக்கம் காணவே என்பது அறியத்தக்க நுட்பம் (104)
நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாட்டு, இந்நாள் வரை அறிஞர்களால், திருமாலின் விசுவரூபம் கூறுவது என்றே கொள்ளப் பட்டு வந்துள்ளது. திரு. சி. அ. இதனைச் `சிவபெருமானது உலக உருவத்தைப் (விசுவரூபத்தை) புகழ்ந்தவாறு என்று துணிவர் (105). `மாநிலம் சேவடியாக' எனத் தொடங்கும் அச்சங்கப் பாட்டுள், `திகிரி' என்பதைப் பொதுப்பட ஆஞ்ஞா சக்கரமாகக் கொள்வுழி, இது பரம்பொருளின் தடத்தலக்கணத்தை விளக்கியதாதல் அறிக.' என்றவர், அதற்கு ஆதாரம் பாட்டுள்ளே காட்டுவது இவரது நுட்ப மான நோக்கு' எத்தகையது என்பதைச் சுட்டும்; அடி -- மாநிலம்; உடுக்கை -- பௌவம்; மெய் -- விசும்பு. கை - திசை; கண் - மதியம், சுடர் எனக் காணும்படிக் கவிதை அமைப்பு உள்ளமையால், -- சேவடி முதலியவற்றை வேறு வேறு பொருளாகக் கூறியவர்க்குச் சக்கரத்தை யும் வேறு பொருளாக உடம்பொடு புணர்த்துக் கூறலே கருத்தாதல் அறிக (105) அறிஞர்க்கு இஃது ஒரு விருந்து.
`பேதைப் பருவத்தே சிவனைத் தழுவி விட்டாள் இந்தப் பெண்' எனக் குறிப்பிடும் (பொன் வண்ண - 27) பாடல் உரையில், அழகிய - ஆனால் சிந்திக்கத்தக்க குறிப்பு, ஒன்றை வைத்து இழைத்துள்ளார் நம் பேருரைச் சிற்பியார் `குழவிப் பருவத்தே சிவனை அடைந்த ஞானசம்பந்தர் போன்றாரது பெருமையைக் குறிப்பால் உணர்த்தியது' (110)
`கொன்றையம் மாமுனிக்கே' என்ற (பொன் வண்ண - 39) பாடல் தொடர்க்குரிய விளக்கத்தில் சிவபிரான் பெருமுனிவன் என்பதை `விசுவாதிகோருத்ரோ மஹரிஷி' என்ற உபநிடதம் காட்டி யும் `முன்னியாய் நின்ற முதல்வா போற்றி' (முனி -- மு(ன்)னி) என்ற அப்பர் திருவாக்கினைக் காட்டியும் விளக்கினர். வடநூற் பொருண்மையை உரிய இடங்களில் ஆங்காங்கு விளக்குதலும் இவ்வுரைவேந்தர்க்கு இயல்பு, என்பதனை ஆறாம் திருமுறை உரை முதல் அனைத்துத் திருமுறைகளிலும் காணலாம் (118)
`முக்கண் முறைவனுக்கோ' (பொன் வண்ண - 32) என்பதில், `முறைவன் என்பது, வகர இடைநிலை பெற்ற பெயர்' எனக் காட்டியது காண்க. (128) `இறைவன்' `துறைவன்' `துணைவன்' முதலியவற்றையும் காட்டினர். சொற்பொருள் காண்டலில் இவர் திறம் தனித்தன்மை வாய்ந்தது என்பதற்கு இன்னோரன்னவை தக்க எடுத்துக் காட்டுக்கள்.
`சிவன் பிச்சை ஏற்பது உயிர்களைத் தன்பாற் சேர்த்துக் கொள்ளுதற் பொருட்டே' (136) `தமிழாற் பாடுவோரைச் சிவபிரான் மிக விரும்புவான்' (136) `ஏனையோர் மீது வைக்கும் ஆணை போலாது, சிவன் மீது வைக்கும் ஆணை தலையாயது ஆகலின் திரு ஆணை என்றார். (137). `உலகப் பற்றைவிட்ட போதிலும் மெய் யுணர்வு இல்லையேல் துறவு பயன் இலதாம்' (138) `மாணிக்கவாசகர் போலச் சிவனை அடைதலில் வேட்கை மிக்காரைச் சிவன் இவ்வுலகத்தில் வைத்தல் என்னை என உலகத்தார் இரங்கி ஆராய்தல் இதன் உள்ளுறை' (144) `வேண்டிற்று வேண்டிய நீசர் என்பதனை, `காணாதான்' குறள் (849) `பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்' `திருவாசகம் அதிசயப்பத்து 9) முதலியவற்றோடு ஒப்பிட்டு உணர்க; (152) `ஒருவனாகிய சிவனே படைத்தல் காத்தல், அழித்தல் என்னும் தொழிலை நோக்கி அயன், அரி, அரன் என மூவராய் நிற்கின்றான். `(157) இவ்வாறு சம்பு பட்ச, அணுபட்ச அடிப்படையில் உணர்ந்து கொள்ள வேண்டும்; (158) `கள்வன் என்பது எளிதில் அகப் படாமை பற்றி' (161) -- இக்குறிப்புக்கள் அந்தாதிக்கு அழகு சேர்க்கும் சீரிய தன்மை உடையவை.
திருவாரூர் மும்மணிக்கோவை உரை அகப்பொருள் திணை, துறை விளக்கம் உடையதாய் முன்போன்ற சிறந்த பதசாரம், மேற் கோள்களுடன் விளங்குகின்றது. குறிப்பெச்சம், இசையெச்சம் முதலிய வற்றால் வருவிக்கும் இனிய பொருள்கள் பல. `குராமலர் இறை வனுக்கு இனியது' (176) என்பது போன்ற குறிப்புக்களும் விரவி யுள்ளன. காமத்துப்பால் குறளும் (1146) 293 ஆம் பாட்டுரையில் ஒப்பீட்டிற்குக் காட்டப்பட்டது.
தமிழின் முதல் உலா ஆகிய திருக்கைலாய ஞான உலா உரை நலம் பெரிதும் பாராட்டத்தக்கது.
`ஞாலம் அளந்த மேன்மைத் தமிழ்' எனச் சேக்கிழார் அருளிச் செய்தபடி, தமிழ்மொழி திருக்கைலை அளவும் சென்று விளங்கும் சிறப்பினதாதலும் விளங்கும்' என்ற பகுதி, நம் உரைவேந்தரின் தமிழ்ப்பற்று சுடர்விட்டு விளங்கும் பகுதி எனலாம் (189) இதில் `பொது மகளிரே காதல் கொண்டு வருந்தினர்' என்பதும், `பஃறொடை வெண்பாவே பிற்காலத்தில் கலிவெண்பா என்னும் மரூஉ வழக்கைப் பெற்று வழங்கியது' என்பதும் அரிய குறிப்புகள். (188)
முதல் 8 கண்ணிகளில் சிவபரத்துவத்தை மிகத் தெளிவாக உணர்த்துகின்றார் உரைவேந்தர். `மூவரும் பிறரும் ஆகிய தேவர் பலரும் `பசு' எனப்படும் உயிர் வருக்கத்தினரேயாகச் சிவபெருமான் ஒருவரே அனைவர்க்கும் தலைவனாகிய பதி' என்பது சைவசித்தாந்த உண்மை; அதனை முடித்து நிறைவு செய்கின்றார். (191) `இறைவனை உயிர்கள் வாழ்த்துதல் உலகம் வாழ்தற் பொருட்டு' (194) பெரும் பொழுதுகளைக் `கார்' முதலாக (ஆவணி) வைத்து எண்ணுதல் வடநூல் வழக்கு (200) `தமிழின் தெய்வம் -- தமிழ்த் தெய்வம். இஃது இனிமையும் அழகும் பற்றி வந்த உவமை? என்று.
`தீந்தமிழின் தெய்வ வடிவாள்' (112 கண்ணி) எனவந்த தொடர்க்கு உரை காணல் இனியது. தமிழுக்குள்ள அழகும் இனிமை யும் போன்றதோர் அழகும் இனிமையும் உடையாள் மங்கை என்பதை விளக்கினார். (214)
`சலஞ்சலம்' என்பதில் அமைந்த சிலேடை அமைப்பு விளக்கம் (228) திருக்கைலாய ஞான உலாவின் ஈற்றில் வரும் வெண்பாப் பிற்காலத்தது என்னும் கருத்தினர் திரு. சி. அ.
இவ்வுலாவின் உள்ளுறையை மிகத் தெளிவாக, `பக்குவ வேறுபாட்டால் பலவகைப்படும் நல்லோர் யாவரும் பெருமானது காட்சியால் தம் வசம் இழப்பர்' என்பது இப்பிரபந்தத்தின் உள்ளுறை என்று நிறைவு செய்கின்றார் (230)
நக்கீரரின் பிரபந்தங்கள்
களப்பிரர் ஆட்சியின் இறுதிப் பகுதியில் சிவபெருமானது திருவருளால் மூர்த்திநாயனார் பாண்டி நாட்டை மும்மையால் அரசாண்டார். அவரால் புரக்கப்பெற்ற சைவத் தமிழ்ச் சங்கப் புலவர் களும், பழைய தமிழ்ச் சங்கத்தில் இருந்த நக்கீரர், கபிலர், பரணர் முதலிய பெயர்களைப் பூண்டிருந்தனர். இவர்களையே நம்பியாரூரர் `பொய்யடிமை இல்லாப் புலவர்' என்றார். அதனால் இவர்கள் நாயன்மார் எனப்பட்டனர். இவர்கள் அருளிச் செய்த பிரபந்தங்களை நம்பியாண்டார் நம்பிகள் இத்திருமுறையுள் கோத்தார். இந்த விளக்கம், திரு. சி. அ. வின் `காலப் பார்வையையும், பழங்கொள்கை களில் தள்ளுவன தள்ளும் மனப் பக்குவத்தையும் காட்டுகின்றன அன்றோ? இதனால் சங்கப் புலவர்களோடு, இப்பிரபந்தத்தவரையும் நன்றாக எண்ணித் தாமும் குழம்பிப் பிறரையும் குழப்பத்திற்கு உரியவராக்கும் சிலருக்குத் தெளிவு ஏற்படும் எனலாம்.
`கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதியின்' பயனை முதற் பாடல் உரையிலேயே, இப்பிரபந்தத்தால் பெறும் பயன் அஞ்ஞான இருள் நீங்க மெய்ஞான ஒளியைப் பெறுதலாயிற்று' எனக் காட்டுவர். (231) `சிவனுக்குச் செய்யும் திருப்பணிகளுள் விளக்கு ஏற்றுதல் சிறந்தது என்றாலும் அக இருளை நீக்குதலால் மிகச் சிறந்த பணியாக வெண்பா விளக்கை ஏற்றுதல் கொள்ளப்படும் என்ற குறிப்பு சிறப்புடையது (232) சிவன் கண்ணோட்டத்தால் நஞ்சுண்டு உலகத்தை யெல்லாம் காப்பாற்றியதை `நஞ்சை உண்டு அமையும் நாகரிகம்' என்று குறள் நெறிகாட்டி
`நஞ்சு உண்டமையால் உணடிவ்வுலகு' (கயிலை 8) என்ற தொடர்க்கு விளக்கம் கண்டனர். (234)
பாரதக் கதையில் ஒரு நுட்பத்தை, அருச்சுனன் பாசுபத அத்திரம் பெற்ற வரலாற்றைச் சுட்டி விளக்கினார். இது பதின் மூன்றாவது வெண்பா தந்த விளக்கம் (237)
செய்தல், செய்யாமை, வேறொன்று செய்தல் என்னும் மூன்றனுள் ஒன்றைத்தான் விரும்பிய வண்ணம் செய்பவன் முதல்வன் (கருத்தா) ஆவன். அத்தகைய முதல்வன் நீயே என்று 23 ஆம் பாட்டு உரையில் விளக்கினார். `கர்த்திருத்துவம்'. அநகர்த்திருத்துவம்', அந்யதாகர்த்திருத்துவம்' என்ற வடநூல் வழக்கைக் காட்டியதுடன், `ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு' (நல்வழி) என்ற ஔவையார் பாடலைச் சுட்டியது அப்பொருளை இனிது தெளிவாக்கியுள்ளது (242)
`இனிதே பிறவி' (கயிலை - 26) எனத் தொடங்கும் பாட்டு உரையில் `வீடு வேண்டா' என்று விளக்கி, `தெண்ணிலா மலர்ந்த வேணியாய்' (பெரிய - 107) என்ற சேக்கிழார் திருவாக்கையும் உடன் சுட்டிய அழகு நோக்கத்தக்கது. (244)
திருவஞ்செழுத்தின் சீர்மையை, `வாயிலே வைக்கும் அளவில்' (கயிலை - 39), `அஞ்செழுத்தும் கண்டீர்' (கயிலை - 40) ஆகிய வெண்பாக்களின் உரைப் பகுதியில் விளக்கியுள்ளார் (250, 251).
46 - ஆம் பாடல் உரையுள், `வித்துண்டா மூலம் முளைத்தவா' (சிவஞானபோதம் சூ. 1 அதி. 2) என்ற சாத்திரத்தையும், `நுரையும் திரையும் ..... நின்னிடைத் தோன்றி நின்னிடையடங்கும் நீ, ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்' (கோயில் நான்மணி மாலை - 24) என்ற பட்டினத்தடிகள் திருவாக்கையும் காட்டி இனிது தெளிவுபடுத்தினார் (255).
யானென்றும் தானென்றும் இரண்டில்லை என்பதனை
யானென்றும் கண்டிருப்பன் ஆனாலும் (கயிலை - 55)
என்ற பாடல் உரையுள் இறைவன் தெளிவு தருதலும், மயக்கம் தருதலும் உடையவனாதல் ஏன் என்ற வினாவை எழுப்பி விளக்கம் காணும் அழகு இனியது. `மருத்துவன் கழலையைப் போக்கக் கருவி யாற் கீறி அழவைப்பது போல' ஆணவத்தை மெலிவித்தற்கு அதனை மறைக்கும் ஆற்றலைச் செயற்படுத்துவன்; `திரோதான சக்தி' என்னும் மலம் நீங்கியபின் தன்னைக் காட்டியருளும்போது அருட்சக்தி என்றும் கூறப்படும்; இரண்டும் கருணையே அன்றிக் கொடிதன்று என்பர்; அறக்கருணை, மறக்கருணை என்பன இவற்றையே என்றும் விளக்குவர் (260).
சிவபெருமான் மெய்தீண்டப் பெற்ற நாயன்மார் மிகச் சிலரே என்றும் பார்த்தனுக்கு அப்பேறு கிட்டிற்றென்றும், `காளத்தியாள் வாரைத் தீண்டத்தான் பெற்றமையாற் சென்று' என்ற தொடர்ப் பகுதியில் விளக்குவர் (266). `ஆதரித்த தெய்வம்' (கயிலை - 72) இட்ட தெய்வம் என்பர் (267).
தாருகன் என்ற அசுரனை அழித்தவள் காளி, அவளது செருக் கொழித்தற்கு இறைவன் ஆடிய ஊர்த்துவ நடனம்பற்றி விளக்கினர். `இந்நடனம் திருவாலங்காட்டில் நிகழ்ந்தது என்பது ஐதிகம்' என்றனர் (275).
அவனே காட்டினாலன்றித் தாமாக ஒருவரும் காண மாட்டார் என்று உணர்த்துவார் (275).
`மக்களே மணந்ததாரம்' (4.79.2) என்ற தொடர் கொண்டு, அப்பர்க்கு மக்களும் தாரமும் உண்டென்பார். `அஃது உலகியல் இயல்பினை விரித்தது' என்று உணராது குற்றப்படுவர் என்று அழகாக மறுக்கும் பகுதியும் காண்கிறோம் (278).
`பிழைப்பு - குற்றம் செய்தல்; `இது' பிழைத்தல் எனவும் வரும்; வாய்ப்பு - பொருந்துதல். நேர்மையினின்றும் விலகுதலையும் நேர்மை யில் நிற்றலையும் குறிக்கும்' என்பது ஓர் உண்மை விளக்கம் (280).
`திருநாம அஞ்செழுத்தைச் சோராமல் எப்பொழுதும் சொல்க' என்று முடித்த முடிவு அழகு காட்டுவர் (282).
திருவீங்கோய்மலை எழுபது அறுபது, எழுபது பாடல்களாலும் முற்கால இலக்கியங்கள் யாக்கப்பட்டன. அவ்வழக்கம் இக்காலத்தில் மறைந்து விட்டது என்ற குறிப்புக் காணத்தக்கது (283). இவ்வெண்பாக்களின் உரைப்பகுதியும், தக்க சொற்பொருள் விளக்கங்களும், இலக்கண அமைதி காட்டலும் ஏற்றமேற்கோள்களுமாக அமைந்து திகழ்கின்றன.
பிடிமேற் கொண்ட அன்பினால் சிங்கத்தின் வருகைக்கு அஞ்சாது, துதிக்கையை நீட்டிக் கோபத்தால் பிளிறுவதாயிற்று. `அன்பின் முன் அச்சம் நில்லாது என்று விளக்குவதுடன், `அச்சம் தாய் தலையன்பின் முன்பு நிற்குமே' என்ற சேக்கிழார் வாக்கையும் காட்டினார் (285).
வால் வீட்டுதல் உலகியல் வழக்கு: `வாலாட்டுதல்' `வாலை யறுத்தல்' என்பனபோல என்பர் (288) மறைக்கு ஈறு காணுதல் முற்ற உணர்தல் என்பர் (290) நால்வேதத்தை நால்வர் முனிவர்க்குச் சிவன் உணர்த்தியமை காட்டுவர் (291) காகோதரம் - பாம்பு; அருஞ்சொல் பொருள் (292) `இன்பக் குமரன் முது தாதையார் குன்று' (பா - 40) `அவன் மிக இளையனாயினும் அவனைப் பெற்ற தந்தை மிக முதியன் என்னும் நயம் தோன்றுதற்கு `முதுதாதையார்' என்றார் என்பது ஓர் நயக்குறிப்பு. (298) `சீராட்டுதல்' என்பது ஒரு சொல்; புகழ்தல் என்பது அதன் பொருள். (300) `வளர்ந்த இளங்கன்னி' (பா. 67) சிலேடை விளக்கம், அணி விளக்கக் குறிப்புக்கள் நோக்கத்தக்கன (306).
திருவலஞ்சுழி மும்மணிக்கோவை: அகப்பொருள் துறைகள் அமைந்த திறம்பாட்டோடு தொடர்புபடுத்தி விளக்கப்பட்டுள்ளது. (310, 311, 312, 313 முதலியன காண்க) தொடர்களை இயைத்துப் பொருள் முடிவு காட்டும் திறத்திற்கு 9 ஆம் பாடல் உரை காண்க (312).
திருவெழுகூற்றிருக்கை: சித்திரக்கவிகளுள் ஒன்றாகி இதன் அழகிய விளக்கம் முதற்கண் காட்டப்பட்டுள்ளது (317) ஏழுகூறுக ளாகிய இருக்கையாகிய பாட்டு: ஒன்று முதல் ஏழு முடிய உள்ள எண்கள் ஒருமுறை கூடியும் குறைந்ததும் வர எண்ணலங்காரம் அமையப்பாடுவது (317) சிவபெருமான் ஊழி இறுதியில் வீணை வாசித்திருப்பவன் என்பதைக் `கீதம் பாடிய அண்ணல்' என்ற உரை யில் கூறி, `முக்காலத்தும் நிகழற்பாலதனைப் பாடிய' என இறந்த காலத்தில் வைத்துக் கூறினார்' என்ற நுட்பம் காட்டுவர் (321).
பெருந்தேவபாணி: தேவபாணி என்பது கடவுள் வாழ்த்திற்குச் சொல்லப்படும் பொருள். `சிவபெருமானே தேவர்கட்கெல்லாம் தேவனான பெருந்தேவன் என்பதை நினைவு கூர்ந்து அப் பெருமானது பெருமைகள் அனைத்தையும் எடுத்தோதித் துதிக்கும் பாடலுக்கு `பெருந்தேவ பாணி' எனப் பெயர்கொடுத்தார். (322) என்ற குறிப்பு சுருக்கம் உடையது; தெளிவானது. பிரமகபாலத்தில் சிவபிரான் பிச்சையேற்றது பற்றிய புராணக் கருத்து ஆராயப்பட்டுள்ளது. (325) இறுதிக்கண் உள்ள வெண்பா ஒன்றே அகச்சான்றாக உண்மை சுட்டப்பட்டது (327).
கோபப்பிரசாதம்: கோபம் -- வெகுளி அஃது ஆகுபெயராய் அதனால் நிகழ்த்திய செயல்களைக் குறித்தது. பிரசாதம் -- அருள். அதுவும் அவ்வாறு நிகழ்த்திய செயல்களைக் குறித்தது. இவையே மறக்கருணை', அறக் கருணை எனச் சுட்டியதும் காண்க: (328) `தாருகன் -- கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட தாரகன் அல்லன். அவனின் வேறானவன்' என்ற குறிப்புக் காண்க (330).
ஆரியப் புத்தகம் பல தெய்வ வழிபாட்டைக் கூறும் ஆரிய நூல். அத்தகைய நூல் தமிழில் இல்லாமையால் ஆரியப் புத்தகம் என்றே கூறினார். அது வீணே அலையப் பண்ணுதலால் அதனை, `பேய்' என்றார் -- என்பது நயமான குறிப்பு. வட்டணை -- சுற்றிச் சுற்றி முடிவில்லாது வரப்பேசுதல் -- நல்ல விளக்கம் (333) `மாநெறி -- எல்லா நெறிகளையும் தன்னுள் அடக்கி நிற்கும் நெறி; அது சிவநெறி' என்பர் (333).
`இப்போதே அவர்களைக் கூற்றம் கொள்ள வேண்டும் என்பது அவர்கள் எழுந்த சீற்றத்தால் அன்று; பயனில் உழப்புச் செய்தல் பற்றி பரிதாபத்தினால்' என்பது இனிய குறிப்பு (334) `சாதல் அறங் கூறும் ஆக்கம் தரும், `உப்பிற்கும் காடிக்கும் கூற்று' என்ற குறட்பாக்களும் காட்டப்பட்டன.
கார் எட்டு: தொல்காப்பிய உவம இயல் கருத்தைச் சுட்டி மேகம் உவமிக்கப்படும் பொருளாகவும், சிவபெருமான் திருமேனி உறுப்புக்கள் உவமமாகவும் கூறப்படுவது. `எதிர்நிலை உவமம், என்பர் (335). `புகுந்தின்று' என்ற சொல்லின் இலக்கண அமைதியைக் `கூயிற்று' போயிற்று' என்பவற்றைக் காட்டி விளக்கினார் (339)
போற்றித் திருக்கலிவெண்பா: பஃறொடை வெண்பாவே கலி வெண்பா என மருவியது என்றும் மீண்டும் வலியுறுத்திக் கூறினர் (340) மட்டித்தல் -- பூசுதல், அது நன்கு அமையச் செய்தலைக் குறித்தது. (344) திரிபுர அசுரர் மூவர்க்கு அருளிய வரலாற்றுக் குறிப்பு (343) அறம் முதலிய நாற் பொருளைக் கூறிய பழைய தமிழ் நான் மறைகளை அருளிச் செய்ததனை விளக்கினர். (347) அருச்சுனனே கண்ணப்பராக அவதரித்தான் என்ற குறிப்பும் காட்டப்பெற்றது. `வடகயிலையில் சிவபெருமானோடு போராடிய அருச்சுனன் மறு பிறப்பில் தென் கயிலாயத்தில் சிவபெருமானை வழிபட்டு ஆறே நாளில் முத்தி பெற்றான் போலும்' என்பர் (348).
திருமுருகாற்றுப்படை: சங்கச் செய்யுட்களில் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படையை, `அதன் ஆசிரியர் நக்கீரர் என்னும் பெயர் ஒற்றுமை பற்றிப் பிற்காலத்தார் மேற்கூறிய நக்கீர தேவ நாயனார் பிரபந்தத்துடன் சேர்த்தனர்' என்பது திரு. சி. அ. அவர்களின் நடு நிலைக் குறிப்பு (360).
ஒருபாட வேற்றுமை காணல்: `செலவு நீ நயந்தனையாயின் (அடி - 64) என்ற அடி, `செல்வ' எனக்கொள்ளப்பட்டுள்ளது. முது வாய் இரவலன் என்பது படர்க்கை: இது முன்னிலை. முன் ஒருவரும் காணாத ஒரு பாடவேறுபாடு பொருள் நோக்கிச் செய்யப்பட்டுள்ளது. `ஆற்றுப்படை மரபிற்கேற்ப இது விளியாகக் கொள்ளப்பட வேண்டும்' என்பது திரு. சி. அ. கருத்து (360).
பெரும்பாலும் நச்சினார்க்கினியர் உரையை ஒட்டியே செல்வ தாயினும் சிற்சில உரைக்குறிப்புக்கள் புதியனவாக உள்ளன.
`பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்' (அடி 280) `இயவுள் என்பதும் கடவுள் என்பதனோடு ஒத்த ஒரு பெயர், `இயக்கு தலை உடைய பொருள் என்பது இதன் பொருள் (தலைவன் -- நச்சினார்க்கினியர்) (392) என்பது ஓர் எடுத்துக்காட்டு.
தனி வெண்பாக்கள் பிற்காலத்தாரால் செய்து சேர்க்கப் பட்டவை" என்பது சி. அ. குறிப்பு (396)
திருக்கண்ணப்பதேவர் திருமறம்: சொற்பொருள் விளக்கம் சுருக்கமாகவும், தெளிவாகவும் அமைந்துள்ளது. பொருள் இயைபும் காட்டப்பட்டது. `சிவகோசரியார் என்ற அருச்சகர் ஆதி சைவரே, மந்திரம் ஆகம மந்திரங்களே' என்று எழுதிய குறிப்பும் காண்க (402) கண்ணப்பரது அன்பு வழிபாட்டின் திறம் இனிது விளக்கப்பட்டது (407) `இறுதித் தனி வெண்பா பெரிய புராணத்தை ஓதி உணர்ந்த பிற் காலத்தவராற் செய்து சேர்க்கப்பட்டது' என்ற சி. அ. குறிப்பு (419) காணத்தக்கது.
இத்திருமறமும், கல்லாட தேவர் எழுதிய மறமும் பின்னர்ச் சேக்கிழார் கண்ணப்பரது வரலாற்றை விளங்கக் கூறுதற்குத் துணை யாய் நின்றன. என்பது திரு. சி. அ. குறிப்பு (415)
கபிலர்: மூத்த நாயனார் திரு இரட்டை மணிமாலைப் பாடல் களின் உரை பல சிறப்புக்களும் பொருந்தியதாக உள்ளது. கொண்டு கூட்டுச் சிறப்பு (417) தலை தொடுதல் என்ற சூளுரைப்பது ஆகிய வழக்கு (422) பண்டம் -- தமக்குப் பொருளாய் உள்ளவன் (423) வல் வினைகள் -- வலியனவாகிய வினைகள்: சஞ்சிதம் (420) அணிக் குறிப்பு (418) கிலம் -- குறை என்னும் பொருளதாகிய வடசொல்; இதன் மறுதலையே அகிலம் (419) விண்ணுதல் -- விண் என ஒலித்தல் (424) வருகோள் - தசாபுத்திகளாகவும் பிறவாறாகவும் வந்து பற்று கின்ற கிரகங்கள் (425) சுவேதாசுவர உபநிடதக் கருத்து ஒப்பீடு (430) யமகம் என்ற சொல்லணிக் குறிப்பு (431) பழிப்பது போலப் புகழ்தல் அமைப்பு (429).
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை: `இணை மணி மாலை' என்று இருக்க வேண்டும் என்பர் திரு. சி. அ. (431) அகப் பொருள் துறை அமைப்பு விளக்கம் (445) 447) `இடுகாடு' `பேய்' என்பன, காரண மாத்திரையாய் நிற்கின்ற மாயை; பிரளய கேவல நிலையில் இருக்கும் உயிர்கள் என்ற அரிய குறிப்பு (448) இந்தப் பாடல்களில் சில தொடர்களுக்கு அழகிய பொருள் விளக்கம் அமைந் துள்ளமை கண்டு மகிழ்க.
கபிலர்: சிவபெருமான் திருவந்தாதிப் பாடல்களுக்கு அமைந்த குறிப்புரை தெளிவுரைப் பகுதிகள் வழக்கம் போல் `இருளில் விளக்குப்' போல் உதவுகின்றன.
சிவபெருமானைப் பிரம விட்டுணுக்களுக்குச் சமமாக எண்ணுதல் தவறு என்ற கருத்தைச் சிவ தத்துவ விவேகம். சிவஞானபோத மாபாடியம் (திவ்வியப் பிரபந்தக் கருத்து மறுக்கப் பட்டது கொண்டு தெளிவுபடுத்தினர் (451) நான்முகன் திருவந்தாதி (1)
நான்முகனை நாராயணன் படைத்தான்; நான்முகனுக்கு
தான்முகமாய்ச் சங்கரனைத்தான் படைத்தான்
என்பது, மூவருள் ஒருவனாகிய உருத்திரனைக் குறிக்குமேயன்றி மூவர்க்கும் மேலான நான்காமவனாகிய சிவபிரானைக் குறியாது; என்ற தத்துவக் குறிப்பு நுட்பமானது உறுதியானது. குழப்பம் தவிர்ப்பது.
மடக்கணிக்கு ஏற்ப, மந்திரத்தால் என்பது பாடம் அன்று என்று குறித்து, அந்தரத்தால் என்றே பாடம் கொண்டனர். (432) அணிநுட்பங்கள் ஆங்காங்கு விளக்கப்பட்டன. அரி - வண்டு, திருமால், சிங்கம் என்ற முப்பொருளிலும் ஒரே பாடலில் வழங்கப் பட்டமை காட்டுதல் காண்க (437)
திருவேங்கடத்தில் எழுந்தருளியிருப்பவர் திருமால் அல்லர் என்ற ஆசிரியர் திரு. சி. அ. கொள்கை, சிவபெருமான் அந்தாதி (15) யில் நிறுவப்பட்டுள்ளது.
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து
திருப்பதியில் அரியர்த்தேசுவரர் (சங்கர நாராயணர்) எழுந்தருளி யிருக்கின்றார் என்று விளக்கினார். (திவ்வியப் பிரபந்தம் 3188, 3281, 3446 - (பதி) கி. வெங்கடசாமி ரெட்டியார் 1981 (457) மடக்கு அணி, பிற சொல்லணிகள் அமைந்த பெரும்பான்மையான பாடற் பகுதிகள் மிகத் தெளிவாக விளக்கம் செய்யப்பெற்றுள்ளன.
பரணர்: சிவபெருமானை அந்தாதியாற் பாடிய பரணரின் பாடல்களும் மிக அழகிய விளக்கத்துடன் திகழ்கின்றன. சொல்லணி விளக்கங்கள் மிக அரிதின் முயன்று தெளிவுபடுத்தப் பெற்றுள்ளன. இவற்றின் துணையுடன் பாடல்களை இனிது உணரலாம்.
இதன் முதல் அடி கிடையாமையால் பொருளை நன்குணரவும் இயலவில்லை என்பது 14 ஆம் பாடற்குறிப்பு.
42 ஆம் பாடல் உரையும் பொருள் காணுதல் அரிதாகவே உள்ளது; நிரம்பக் கிடையாமல் ஒருசீர் விடுபட்டே கிடைத்துள்ளமை குறிக்கப் பட்டது. (543) தனி வெண்பா -- பரணராற் பாடப்பட்டதன்று; பிற் காலத்தது என்று காட்டினர் (537).
இவ்வுரை விளக்கைக் கையேந்தி உட்புகுந்தாலன்றி பரணர் பாட்டுப் பூங்கா மணத்தை நுகர இயலாது என்பது நூற்றுக்கு நூறு மெய்ம்மை.
இளம்பெருமான் அடிகள்: சிவபெருமான் மீது பாடப்பட்ட மும்மணிக் கோவை இலக்கிய நலம், மேற்கோளாட்சி இலக்கண அமைதி காட்டி உரைவிளக்கம் கொண்டுள்ளது. 7, 11, 13, 17, 18 முதலிய உரைகளைக் காண்க.
`இளைஞர் -- அறிவு முதிரப் பெறாதவர்கள்' என்பது நயமான குறிப்பு (350).
அதிராவடிகள்: மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை உரையும் முன்னவை போன்றே சிறப்பாக அமைந்துள்ளன. 3, 9, 12, 16, 20 பாடல் உரைகள் காண்க. விநாயகர் மறைமொழியின் முதல்; பிரணவம். விநாயகர் பிரணவ வடிவாய் உள்ளவர். அவர் தோன்றியதே பிரணவத்திலிருந்து என்பது வரலாறு. என்று விளக்கினர் (361).
பட்டினத்து அடிகள்: கோயில் நான்மணிமாலையில், ஒன்றும் இல்லாதவராயினும் அடியவர் வாழ்வு கவலையற்ற அமைதி வாழ்வாயும் இருத்தல் பற்றி அடியவர் வாழ்வே மகிழ்வைத் தருவது என்று 2 ஆம் பாட்டுக் கருத்தைத் தெளிவுபடுத்தினர் (371) 4 ஆம் பாடல் உரை மிகச் சிறப்பானது. கடோபநிடதக் கருத்து 12 ஆம் பாடல் உரையில் சுட்டப்பட்டது. (381) திருக்கழுமல மும்மணிக் கோவை முதற் பாடல் உரை, ஆளுடைய பிள்ளையார்க்குத் தோணியப்பர் அருள் புரிந்த வரலாறு கூறப்பட்டமையை விளக்கினர். சேக்கிழார் பாடற் கருத்துடன் இது ஒப்பீடு செய்யப்பட்டமையையும் காண்க. `அன்னாயோ' என்று தாயாரை மட்டுமே அழைத்தார் என்ற குறிப்பு, `அம்மே அப்பா' என்று இருவரையுமே அழைத்தார் என்று பெரிய புராணத்தில் வந்த குறிப்புச் சுட்டினர் (612). `பாழ் அறை, பள்ளியறை' என்பன இறைவன் அஞ்ஞானிகளது உள்ளத்தில் புகாது, மெய்ஞ்ஞானிகளின் உள்ளத்தில் புகுதல் உடைமையைச் சுட்டின என்று அழகுற விளக்கினர் (614). 10 ஆம் பாடல் உரை சிறப்பானது. ஆனூர் சிங்காரவேல் முதலியார் பதிப்புக் கிடைத்திருந்தால் மேலும் 6 பாடல்களுக்கு அவற்றின் அழகிய உரை விளக்கங்களும் கிடைத் திருக்கும் (622).
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை: முதற்பாடல் உரை பல்வேறு சீரிய பதசாரக் குறிப்புகளுடன் திகழ்கின்றது (626). இறைவர் உயிர்கள் மாட்டு வைத்த கருணையால் செயற்கையான வடிவங்கள் என்று விளக்கினர். (போக வடிவம்) (628) குறிப்புரை முதற்பகுதி நீண்ட பாடல்களின் கருத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிடுகின்றது.
`பதியில்பை மட்டுமன்று' ஏனைப் பசு பாசங்களது இயல்பை யும் உள்ளவாறு உணர்தல் திருவருள் வழியால் வரும் சிவஞானத்தா லன்றிக் கூடாது என்ற குறிப்பு இனியது (640).
நின்னைக் காணா மாந்தர்
தம்மையும் காணாத் தன்மையோரே (13 - ஆம் பா)
தன்னையும் என்பது தம்மையும் என்றே கொள்ளப்பட வேண்டு மென்பதை சிவஞானபோத மாபாடிய உரையுள் சிவஞான முனிவர் எடுத்துக்காட்டிய இடம் கொண்டு விளக்கிய திறம் போற்றற்குரியது (சூ. 6. பிண்டப் பொழிப்பு விளக்கம்) (642).
`அன்றென்றும் ஆமென்றும்' (பா - 17) என்ற பாடல் உரையில் ஆறு சமயங்களின் அடிப்படை உண்மைகளை இவ்வளவு சுருக்கமாக அழகுற விளக்க எவராலும் முடியாது எனலாம். `இவை யனைத்தும் சிவநெறி மெய்ம்மையுள் அடங்குதலையும் அறிந்து கொள்க' என்று நிறைவு செய்தனர் (647) `ஆளுடையான் அடி புகழ் வாரே உண்மை மக்களாவர்; அது செய்யாதார் மக்களே போல் தோன்றும் மாக்களே' என விளக்கம் வரைவர் (661).
26 ஆம் பாடல் உரை விழுமிய குறிப்புக்கள் பலவற்றை உடையது. `மாணிக்கவாசகர் தேவார மூவர்க்கு முந்தியவரே' என்ற தமது கருத்தைச் சுட்டினர் (665) வரகுணன் பற்றிய குறிப்பும் சிந்தித்தற் குரியது (668).
திருவேகம்பர் திருவந்தாதி; அகப்பொருள் துறை விளக்கம், அருஞ்சொல்லாட்சி நுட்பம், இலக்கண நுட்பம், பாட வேறுபாடுகள், முதலிய பல மாண்புகள் காணப்படும். இப்பிர பந்தத்தை அடியார்கள் ஏற்ற பின்பே ஆண்டான் ஏற்பான் ஆகலின், (பா 100) என்ற உரைக் குறிப்பு நயமானது.
திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது: `இறைவன் சேதனம், அசேதனம் என்னும் இருகூற்றுப் பிரபஞ்சத்துள் ஒன்றும் அல்லன் (722) என்ற குறிப்பு முதற்கண் சுட்டப்பட்டது. `அவரவரது அறிவு செயல்களுக்குத்தக இறைவன் பயன் அளிப்பவனேயல்லது, எவரது செயலையும் வீணாக்குபவன் அல்லன் ஆதலின் அவரவர் கருதுமாறே நின்று அவரவர்க்குப் பயன் தருவன் என்பது பற்றி, `அவ்வவர்க்கு அவ்வவையாகி' என்றார்' என்ற பதசாரம் இனியது (725) `கலப்பினால் எல்லாமாய் நிற்கின்ற இறைவன் பொருள் தன்மையால் அவற்றின் வேறாகியும் நிற்கின்றான்' என்ற குறிப்பும் காணத்தக்கது (727).
சொல்நின்று சுருங்கினல்லது
நின்னியல் அறிவோர் யார் இருநிலத்தே (7 ஆம்பா)
என்ற தொடர்ப் பொருளை விளக்குமிடத்து, `மெய்ப்பொருள் இன்னது எனச் சொல்ல வாராத அநிர்வசனப் பொருள் அன்று' என்று விளக்கியமை குறித்தனர். (734) 8 ஆம் பாட்டின் கருத்துத் தெளிவாகச் சில அடிகளில் கூறப்பட்டமை கண்டு இன்புறலாம். (736)
நம்பியாண்டார் நம்பிகள்
இத்திருமுறையைத் தொகுத்தருளிய பெரும்பேறு பெற்ற நம்பிகளின் பிரபந்தங்கள் திருநாரையூர் விநாயகர் இரட்டைமணி மாலை முதல் திருநாவுக்கரசு தேவர் திருவேகாதச மாலை வரை (31 - 40) அமைந்துள்ளன.
பொல்லாப் பிள்ளையார் என்ற பெயர்ப் பொருளைச் சிவஞானபோத மங்கல வாழ்த்து உரையிற் காண்க -- எனச் சுட்டிப் போந்தனர். (741) நம்பிகள் பொல்லாப் பிள்ளையார் திருவருளை எய்திய அருளாளர் ஆதலின் அவர் தம் திருவாக்குகள் அத்திருவருள் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன. 7 ஆம் பாடல் உரையில், `மலம் மூலமலமும் பின் அதுபற்றி வருகின்ற கன்ம மாயா மலங்களும். `அவை வருந்தா' எனவே, வீடு உளதாதல் அமைந்தது' என்பது குறிப்பு (744) `யானேத்திய வெண்பா' (பா - 13) வெண்பா என்பது இங்கு `வெளிற்றுப் பொருள்களை உடைய பாக்கள்' எனப் பொருள் தந்தது -- என்ற குறிப்பும் நோக்கத்தக்கது. (747) `தவமதி' (பா.19) தவமதி -- தவத்தால் உண்டாகிய ஞானம். தவமாவன சரியை, கிரியை யோகங்கள்' -- என விளக்கிய அழகு காண்க (749).
`தில்லைத் தலத்தில் கூத்தாடுபவர்' என்று பொருள் கண்டு விருத்த நூலிற்குள் நுழைந்து பொருள் நயம் காண்கின்றார். உரை யாசிரியர் (730) `தில்லைப் பெருமான் திருநடம் புரிதல் உயிர்களுக்கு வீடுபேற்றைத் தருதற் பொருட்டே' (732) `வெயிலைத் தடுத்துத் தலையைக் காக்கின்ற நிழல்போல வினையைத் தடுத்துக் காக்கும் காப்பு' (755) என்பன காண்க.
`கடைபடு சாதி' (பா. 17) எது என விளக்கித் தவம் செய்சாதி மேற்சாதி; தவம் செயாச் சாதி கீழ்ச்சாதி எனக் காட்டிக் கடைபடு சாதி என்பது தவம்செயாச் சாதியையேயாயிற்று என்று முடித்த நுட்பம் கண்டு இன்புறத்தக்கது. (759) சேந்தனார் வரலாற்று நுட்பம் 26 ஆம் பாடல் உரையில் விளக்கப்பட்டது (763) `இதனால் இவ்வாசிரியர் சேந்தனார்க்குப் பின்னர் வாழ்ந்தவராதல் அறியப்படும்' என்பது ஓர் இன்றியமையாத காலக் குறிப்பு. பிரமன் தலையரிந்த வரலாற்றுக் குறிப்பும், வைணவசமயக் கருத்திற்கு முன்னர்ப் போன்று மென்மை யான மறுப்பொன்றும் 35 ஆம் பாடல் உரையிற் காணப்படும். கிருட்டினன் கயிலாய மலைமேல் `காலால் நடத்தல் கூடாது' எனத் தலையால் நடந்து ஏறிய உண்மை (பா - 45) உரையில் விளக்கப் பட்டது (772).
புத்தகப் பேய்கள் (பா 53) சுவடிக் காத்தல் மாத்திரையே உடையவர்கள் என்பார்; நாலடி 318 மேற்கோள் காட்டினார்; சிவாகமப் பொருளை அறியாதவர்கட்குப் பிற நூல்களில் உண்மைப் பொருள் விளங்காது என்பார்; `எங்குள்ளதோ' என்பதை, `எங்கித்ததோ' என்றல் ஒரு வட்டார வழக்கு என்றனர் (777).
"வருவாசகத்தினில்" (பா 58) என்பதன் உரையில், `அருள் வழியால் வந்த சொற்பிரபந்தத்திற்கு அஃது இன்றி, மல வழியால் வரும் சொற் பிரபந்தங்கள் ஒவ்வா' எனக் கருத்துரைத்து, `இதனால் இவ்வாசிரியர் காலத்தில் சிவபிரான் மீது பாடப் பட்ட வேறு சில கோவைகளும் இருந்தமை அறியப்படும்' என்று முடித்த குறிப்பு நுட்பமானது (780).
"ஆண்டார்" என்பது ஒரு காலத்தில் ஆதி சைவர்களைக் குறிக்கும் சிறப்புப் பெயராய் வழங்கிற்று என்பர் (7 86). `இருந்தமிழ்' பெருமை மிக்க தமிழ்; செந்தமிழ் என்பர். (795) மூத்த பிள்ளையார் அந்தாதிக்குப்பின்பே இவ்வந்தாதி பாடப்பட்டது (789) என்று 34 ஆம் பாட்டால் குறிப்பர் (799).
`திருமுறை என்பது பழங்காலத்தில் இறைவணக்கப் பாடல்கள் வரையப்பட்ட ஏடுகளுக்கு வழங்கிய பெயர் என்ற குறிப்பு, நோக்கத்தக்கது. (803). வரையப்பட்ட ஏடுகளுக்கு வழங்கிய பெயர் என்ற குறிப்பு நோக்கத்தக்கது. (803). `பொய்மையிலாத் தமிழ்ச் சங்கம்' உலகியலை நோக்காத தமிழ்ச்சங்கம்; இது சைவத் தமிழ்ச் சங்கம் என்றனர். (805) `விரையாக்கலி -- ஒருவராலும் கடக்க லாகாத ஆணை; இது சிவபெருமான் மேல் இடப்படும் ஆணைக்கே பெயராய் வழங்கும்' என்பர். (813) `நூல் போன சங்கிலி' என்பது சிலேடே நயம் உடையது என விளக்கினர். (814). சுந்தரரை உணர மாட்டாதார் பிழைப்படக் கூறுவனவற்றை மறுத்து, `இன்னோரைத் தெருட்டுதல் அரிது' என்று சினக்குறிப்புச் சிறிது தோன்ற முடித்தமையும் நோக்குக. `உத்தமத்தானம்' (பா. 72) என்பது, `காரண பங்கயம் ஐந்து' என்று சேக்கிழார் குறிக்கப்பட்டதே. அவை -- மூலாதாரத்திற்கு மேலே உள்ள ஐந்து ஆதாரங்கள் என்றும் நிராதாரத்தையும், துவாத சாந்தத்தையும் ஞானத்தானம் ஆதலின் வித்தகத்தானம் என்றாம் -- என்று இனிது விளக்கினர் (816).
`இசை ஞானியார் பிறந்தகம் திருவாரூரே' என்று குறிப்பர். (824). திருத்தொண்டர் திருவந்தாதி ஈற்றுப்பாடல்கள் மூன்றும் நம்பிகள் செய்தனவே என்பர் (826).
ஆளுடைய பிள்ளையாரை நம்பிகள் வழிபடு தெய்வமாகக் கொண்டு சில நூல்களை அவர் மீது பாடியருளினார். திருவந்தாதி உரை முன்னர்ப்போல் அகப்பொருள் துறை விளக்கம் காட்டிச் செல்கின்றது. தொல்காப்பிய அகத்திணைக் கூறுகளை நூற்பாக்களை எடுத்துக்காட்டி விளக்குவர். ஞானசம்பந்தரைத் தியானிக்கும் தியான பலன் கூறப்பட்டது 50 ஆம் பாடலில் என்பார்; திருஞானசம்பந்தர் (2 - 2 - 11) திருப்பாடலையே மேற் கோளாகக் காட்டுவர் (852).
"மயிலேந்திய வள்ளல்" (64 ஆம் பா) எனத் தொடங்கும் பாடற்கு, ஞானசம்பந்தரை முருகன் அவதாரமாகக் குறிப்பதும், அவ்வாறன்றிப் பொதுவாய் நிற்பதும் ஆகிய இரண்டு பொருள்கள் கூறப்பட்டன (859, 60) `நிலத்துக்கு மேலாறு நீடுலகத்து' (மும்மணிக் கோவை - 5) என்பதன் உரையில் சிவஞானமாபாடியத்துக் கண்ட படி ஆறு உலகங்கள் பற்றிய குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன (887).
மும்மணிக்கோவை அகப்பொருள் துறை விளக்கம் காட்டிச் சொற் பொருள் விளக்கம் கண்டு, தொல்காப்பிய இலக்கண அமைதி காட்டி விளக்குகின்றது.
`உலா மாலைக்கும் உலாவிற்கும் உள்ள வேறுபாடு குறிக்கப் பட்டது. (910) `தில்லை மூவாயிரவர்' திருச்செந்தில் முந்நூற்றுவர்' என்பன போல சீகாழி நானுற்றுவர் என்றல் மரபு -- என விளக்கினர் (919). `இருக்குக் குறள் மந்திரம் போலச் சுருக்கமான குறுகிய பாடல்கள்' -- (925) இருள்வாசி என்பது மருவி இருவாட்சி என வழங்கப்படுகின்றது.
நள்ளிருள் வேளையில் மலர்ந்து வாசனை செய்வது என்பதன் பொருள். குறிஞ்சிப் பாட்டுள் `நள்ளிருள் நாறி' (அடி 94) என்பது இதுவே எனச் சுட்டும் குறிப்பு இனியது (927).
`பலவகைப் பொருள்களைக் கலந்து பலவகை யாப்புக்களால் ஆக்கப்படும் பிரபந்தம் கலம்பகம் என்பதே சி. அ. கருத்து (939) `நற்கண்ணி: சுலோசனா என்பது வடமொழி' (941) ஆளுடைய பிள்ளையார் கலம்பகத்தில் சம்பிரதம் உண்மையோடு பொருந்திய சிலேடை உடைய அமைப்புடையதாக இல்லை என்று கூறும் நுட்பம் காண்க (956).
1360 ஆவது பாடல், பதின்சீர்க் கழிநெடிற்சந்த விருத்தமே; பன்னிருசீர்க் கழிநெடில் விருத்தம் அன்று. அது சிறவாமையை அறிந்து கொள்க என்பது சி. அ. தரும் அரிய யாப்புக் குறிப்பு. (969). இவ்வாறே 1369 ஆம் பாடலைப் பதின்சீர் விருத்தம் என்பாரும் உண்டு; அவர் கூன்களைச் சீராய்க் கொள்வர் என்பர். (976) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை வெண்கலிப்பா ஆகாது; கொச்சக ஒரு போகு என்பர். (990).
முத்திப்பேற்றை அருளுபவன் சிவபிரானே அல்லது பிறர் ஒருவரும் இல்லை என்பது, முத்திப் பகவன் என்றதன் கருத்து என்பர் (985).
திருஞானசம்பந்தர் மீது கொண்ட ஆழ்ந்த பத்தியும் ஈடு பாடுமே இந்தப் பிரபந்தங்களை நம்பிகள் இயற்ற அடிப்படையாயின என்று கருதுவதும், உரையாசிரியரும் அறநெறி நின்றே உண்மை விளக்கம் கண்டுள்ளனர் என்று எண்ணுவதும் தவறாகா மெய்ம்மை.
திருநாவுக்கரசு தேவர் திருவேகாதச மாலை
நம்பிகளின் நிறைவுப் படைப்பு; இத்திருமுறையின் முடிப்புப் பகுதி. `தேவர் -- சுவாமிகள்' என்று தொடங்குகின்றது சி. அ. குறிப்பு. (988) சமண சமயக் கொள்கையைப் `பெருமயக்கு' எனக் குறித்தனர் (990) `உபரிபாகம் -- முடிநிலைப்பகுதி' என்பர். (990) `வசி -- வசப்படுத்துபவன்' என்பதும் காண்க. `எழுநூறு அரும் பதிகம்' (பா . 3) எனினும், பதிகம் 490 ஆகும்; இன்று கிடைத்துள்ளன 312 தாம் என்று விளக்கினர் (991) `பிட்டர்கள் -- (பிரஷ்டர்கள்) சான்றோரால் விலக்கப்படுபவர்கள்' என்பர். (993) `அரச வசை -- தலையாய குற்றங்கள்; நூற் குற்றங்கள். அவை பத்து என்பது இலக்கணம் -- என்ற குறிப்பும் காண்க. (994) `கவியோகி' என்பதனை `யோக கவி; யோகம் -- சிவயோகம்' என்று வரைந்து தெளிவுபடுத்தினர். (994) `திருந்தா அமணர்'க்குத் தந்த விளக்கக் குறிப்பு இனியது. (997). தவண்டு; வெண்மை என்னும் பொருளதாகிய தவளள் என்னும் முதனிலை`டு' என்னும் இறுதி நிலையோடு புணர்ந்து தவண்டு என வந்தது' என்ற சொற்பொருட் குறிப்பு அறிஞர்க்கு விருந்து.
பொதுநோக்கில் இவ்வுரை
பதினோராம் திருமுறை என்ற அற்புதமான இத்தெய்வத் தமிழ் நூலை, நான் பன்முறை மூல பாடத்தையே படித்திருந்தாலும், முதுபெரும்புலவர் திரு. சி. அ. அவர்களின் உரைக் குறிப்புக்களுடன் இணைத்துப் பயின்றபோது பேருவகை என்னுள் கிளர்ந்தது. மடக்கு, யமகம் முதலிய சொல்லணிகள் அமைந்த -- பொருள் விளங்காப் பாடற்பகுதிகள் எனக்குத் தெளிவுடன் காட்சி நல்கின. இயைத்துப் பொருள் காட்டும் பாங்கும். பாட்டின் கருத்தை நுண்ணதின் உணர்ந்து, சுருங்கச் சொல்லி நெஞ்சிற் பதியவைக்கும் திறமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. `இசையெச்சம்' குறிப்பெச்சம்' ஆகியவை கொண்டு படித்தபோதுதான் ஒரு முழுமை உணர்வு கிடைத்தது. இனி, அடுத்தடுத்தும் பயிலும் போதெல்லாம், உரைவிளக்குச் சுடர் நெஞ்சுள் நின்று நயம் காட்டியும், பொருள் உணர்த்தியும் நலம் பயக்கும் என்பது தெளிவு. ஒன்பதாம் திருமுறை போன்று, பலரால் பாடப்பட்ட இத் திருமுறைக்கு திரு. சி. அ., அவர்கள் அவ்வப் பிரபந்த ஆசிரியர் போக்கிற்கும், திருவுள்ளத்திற்கும் ஏற்ப நின்ற அப்பெற்றியில் உரை விரித்துள்ளார் என்ற உண்மையும் புலனாயிற்று. `உரை என்பதே ஒரு திறனாய்வுச் சூத்திரந்தான் என்பது மெய்ம்மையே.
தத்துவ சாத்திர விளக்கங்கள் இத்திருமுறையில், பேரிடம் பெறாததும், அகப்பொருள் துறை விளக்கமும், உள்ளுறை, இறைச்சிப் பொருள்கள் நிரம்ப இடம் பெற்றுள்ளதும் குறிக்கத்தக்கவை. சுருங்கச் சொன்னால் இலக்கிய மணம் கமழக் கமழ இந்த உரைவிளக்கம் அமைந்துள்ளன எனலாம். `நவில்தொறும் நூல் நயம் போலும்' என்ற திருவள்ளுவர் கூறிய இயல்பு நூலுக்கு மட்டுமன்று; நூல் உரைக்கும் பொருந்துவதே என்ற நிறைவும் நினைவும் எனக்கு உண்டாயின. அதனைவிட `தெய்வத் தமிழ் நூல்களுக்கு இத்தகைய தக்கோரால் வரையப்பட்ட நல்லுரைகள் தோன்றாவிடின் பொருள் உணர்தல் எத்துணை அரிது!' என்றும் எண்ணத் தோன்றியது.
ஞானப்பனுவல் மணம்: `இப்பிரபந்தத்துள் வரும் காரைக்காலம்மையார், பட்டினத்தார், கபிலதேவ நாயனார், பரண தேவ நாயனார், அதிராவடிகள் இளம்பெருமானடிகள், நக்கீரர், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய அருளாளர்களின் தெளிந்த ஞானத் திரளாக' ஒவ்வொரு பாடலும் விளங்குகின்றன. இத்தகைய ஞானப் பாங்கு தமிழகத்திற்கு அப்பாலும் வையகம் முற்றும் உண்டு என்றும், `இந்தியத் திருநாடு வரலாற்றுக் காலத்திலிருந்து, ஏன்? வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து ஞானவளத்தில் பெரும் பங்கு கொண்ட மாண்பினது' என்றும் பேரறிஞர் கூறியது என் நினைவில் எழுகின்றது.
Although saintlihood is a Universal phenomenon, India has a major of it right from the dawn of histor nay, even from the age of pre-history., TMP Mahadevan A Seminar of saints (1960) P. 6.
தமிழகம், குறிப்பாக இந்திய நாட்டின் இந்த உயர்விற்குக் காரணமாக ஞானப் பனுவல்களை வழங்கி வந்துள்ளமை தமிழ் மக்கள் பெருமை கொள்ளத்தக்க பேருண்மை. முதுபெரும்புலவர், உரை வேந்தர், சித்தாந்தக்கலைமணி, திருமுறை உரைமணி, திரு. சி. அருணைவடிவேலு முதலியாரவர்களது தெய்வத் தமிழ்த் திருப் பணிக்கு பாராட்டுத் தெரிவித்து, உரைமாட்சிப் பகுதியை நிறைவு செய்கின்றேன். பல்லாற்றானும் சிறந்து விளங்கும் இந்நூலின் உரைமாட்சியை எழுதப் பணித்த ஷ்ரீலஷ்ரீ குருமகாசந்நிதானம் அவர் கட்கு வணக்கமும் நன்றியும் உரித்தாக்குவன்.