உ
சிவமயம்
011 உரையாசிரியர் முன்னுரை கல்விச் சிறப்பு
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு (குறள்., 392)
என்னும் பொது மறை மொழி, கல்வியை உயிர்கட்குக் `கண்' எனக் கூறிற்று.
கண், `அகக்கண், புறக்கண்' - என இரண்டு என்பதும் `அவற்றுள் கல்வி அகக்கண்' என்பதும் அம்மறையின் கருத்தாதலை,
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் (குறள்.,393)
என அது தானே கூறுமாற்றால் அறிகின்றோம்.
திருமுறைச் சிறப்பு
அகக் கண்ணாவது, அறிவே, `அறிவு' என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது மெய்ப்பொருள் அறிவே என்பதையும்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள்.,355)
என்னும் குறளால் அறிகின்றோம். ஆகவே, நூல்களுள் சிறப்புடைய நூல்கள் மெய்ப்பொருள் அறிவைத் தரும் நூல்களே ஆகின்றன மெய்ப்பொருள் அறிவைத் தரும் மிகப் பல நூல்களே நம் நாட்டில் சொல்லப்பட்டு வருகின்ரன. எனினும் தமிழகத்தில் தமிழ் மொழியில் தோன்றிச் சிறப்புற்று வழங்கும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டே சிறந்த அருள் நூல்களாகும். அதனைத் `திருக்களிற்றுப் படியார்' என்னும் மெய்யறிவு நூல்.
இன்றிச் சமயத்தி லல்லதுமற் றேழையுடன்
ஒன்று சொலி மன்றத்து நின்றவர்ஆர் அன்றியே
அங்கம் உயிர் பெறவே பாடும் அடியவர்ஆர்
எங்கும்இலை கண்டாய் இது. (திருக்களிற்.65)
என்றும், திருவிளையாடற்புராணம்.
தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை
உண்ட பாலனை அழைத்ததும், எலும்பு பெண் உருவாக்
கண்டதும், மறைக் கதவினைத் திறந்தும் கன்னித்
தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர் (திருவிளை- திருநாட். 58)
என்றும் எடுத்தோதி வலியுறுத்துகின்றன.
திருமுறைப்பரப்பு
இத்திருமுறைகள் பழங்காலத்தில் ஏடுகளில் எழுதி வைக்கப் பட்டன. ஆயினும் ஏட்டுச் சுவடிகளை உருவாக்குதல் எளிதான செய லன்று. அதனால், அறிஞர் சிலர் தாமே எழுதியும், தக்காரைக் கொண்டு எழுதுவித்தும் சுவடிகளை ஆக்கினார். ஆகவே, திருமுறைகள் கிடைப்பதே ஓர் அரிய வாய்ப்பாக அக்காலத்தில் இருந்தது. தாள் களும், அச்சுடும் தொழிலும் பல்கிய இக்காலத்திலும் திருமுறைகளை அச்சேற்றி வெளியிடுவோர் மிகச் சிலரே.
திருமுறை உரை:
திருமுறை மூல அச்சுப் படிகளே வெளிவருதல் அரிதாய் உள்ள நிலைமையில், அவை உரையுடன் வெளிவருதல் எத்துணை அரிது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இவ்அருமையிலும், அருமையான செயலைத் தமிழ்நாட்டில் தருமை ஆதீனம் பல்லாண்டுகளாக ஆற்றி, நிறைவேற்றி வருகின்றது. 10 (பத்துத்) திருமுறைகள் பல சிறந்த நுண்ணிய ஆராய்ச்சிக் கட்டுரை களுடன் இதுகாறும் அவ்வப் பொழுது இவ்வாதீன வெளியீடாக வெளிவந்து மக்கட்குப் பயனளித்து வருகின்றன.
பதினொன்றாம் திருமுறை
இது பொழுது பதினொன்றாம் திருமுறை தக்க குறிப்புரையுடன் இவ்ஆதீன வெளியீடாக வெளிவருகின்றது.
ஒன்றுமுதல் பத்து முடிய உள்ள திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறை ஒன்றே ஆசிரியர் பலரால் அருளிச் செய்யப்பட்ட அருட் பாடல்களின் தொகையாகும்.
அடுத்து நோக்கும் பொழுது இப்பதினொன்றாம் திருமுறையே ஆசிரியர் பலரால் அருளிச் செய்யப்பட்ட பிரபந்தங்களின் தொகையாய் அமைந்துள்ளது. அதனால் இதனைப் பிரபந்த திருமுறை எனலாம்.
உள்ளுறை
தேவார திருமுறைகளைப் போலவே இதுவும் நம்பியாண்டார் நம்பிகளால் தொகுக்கப்பட்டதே. அவர் இத்தொகுப்பினை மிக அழகாகச் செய்துள்ளார். 1. திருவாலவாயுடையார் திருமுகப் பாசுரம் முதலாவதாக வைக்கப்பட்டது.
2-4. அதனை அடுத்து, காரைக்கால் அம்மையாரது இரு திருப் பதிகங்களும், இரட்டை மணி மாலை, அற்புதத் திருவந்தாதி ஆகிய பிரபந்தங்களும் வைக்கப்பட்டன.
`சைவத்தின் மறுமலர்ச்சிக்குக் காரணராய் இருந்தவர்கள் நால்வர் சமயாசாரியர்' என்றாலும் அவர்களுள் மூவர் முதலிகட்குக் காலத்தால் முற்பட்டவர் காரைக்கால் அம்மையார். அதனால் அவரது திருப்பதிகங்கள் `மூத்த திருப்பதிகங்கள்' எனப் போற்றப் பெறு கின்றன. பண்களோடு கூடிய இசைத் தமிழாகிய தேவாரத் திருப் பதிகங்கட்கு முற்காட்டாக அம்மையார் திருப்பதிகங்கள் உள்ளன. எனவே மறைந்துபோன தமிழ் இசைக்கு முதற்கண் உயிர்தரு மருந்தாய் அமைந்தவை அம்மையாரது மூத்த திருப்பதிகங்களாகும்.
அம்மையார் தமது மானுட உடலை உதறிவிட்டுச் சிவகணங் களாகிய பேய்களின் வடிவம் பெற்றமையை அவரே தமது திருப் பதிகங்களிலும், பிரபந்தங்களிலும் குறித்தருளினார்.
5. `அம்மையாரது திருப்பாடல்களை அடுத்து அவரோடு ஒத்த நாயன்மார்களாகியவரது பிரபந்தங்களைச் சேர்க்க வேண்டி, ஐயடிகள் காடவர்கோன் நாயனாரது சேத்திர வெண்பாக்கள் தொகுத்து வைக்கப் பட்டன.
எனவே, `இப்பிரபந்தங்கள் காலமுறை பற்றி வைக்கப் படவில்லை' என்பது அறியத்தக்கது. இதனானே இதற்கு முன்னுள்ள திருமுறைகளும் காலமுறை பற்றி வகுக்கப்படாமை அறியப்படும்.
6-8. சேத்திர திருவெண்பாக்களை அடுத்து சேரமான் பெருமாள் நாயனாரது (6) பொனவண்ணத்தந்தாதி (7) திருவாரூர் மும்மணிக்கோவை (8) திருக்கயிலாய ஞானஉலா இவை முறையே வைக்கப்பட்டன.
9-18. இவற்றை அடுத்துப் பொய்யடிமையில்லாத புலவர் களது பிரபந்தங்களைத் தொகுக்க வேண்டி, முதற்கண் நக்கீர தேவ நாயனாரது பிரபந்தங்கள் வைக்கப்பட்டன. அவை, (9) கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, (10) திருஈங்கோய் மலை எழுபது, (11) திருவலஞ்சுழி மும்மணிக்கோவை. (12) திருஎழுகூற்றிருக்கை, (13) பெருந்தேவ பாணி (14) கோபப் பிரசாதம், (15) காரெட்டு, (16) போற்றிக் கலிவெண்பா, (17) திருமுருகாற்றுப்படை, (18) திருக் கண்ணப்பர் தேவர் திருமறம் ஆகியவை.
இவற்றுள் திருமுருகாற்றுப்படை இக்காலத்தவரால் ஆசிரியர் பெயரொற்றுமையால் இடையே சேர்க்கப் பட்டதோ? என ஐயம் நிகழ்கின்றது. ஏனெனில், `கடைச் சங்கப் புலவராகிய நக்கீரர் செய்தது முருகாற்றுப்படை' என்பதில் ஒருவருக்கும் ஐயமில்லை. `அவர் இத் திருமுறைப் பிரபந்தங்களுள் சிலவற்றை அருளிச் செய்த நக்கீரதேவ நாயனாரின் வேறாய்க் காலத்தால் முற்பட்டவர்' என்பதும் அங்ஙனமே ஐயத்திற்கு இடமில்லாத ஒன்று.
`ஆற்றுப் படையை ஆக்கிய நக்கீரர், மக்களைப் பாடாது சிவனையே பாடும் இயல்புடையவரா என்னும் ஐயம் நீங்குதற்கு வழி தெரியவில்லை, செய்யுள் நடைகளும் இருவர் பாடல்களிலும் வேறு படுதல் தெளிவு.
இன்ன சில காரணங்களால் முருகாற்றுப்படையை, அது முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருத்தலாகிய ஒன்றைத் தவிர திருமுறைகளுள் வைத்து தொகுத்தற்குரிய இயைபு வேறு யாதும் இருப்பதாகத் தெரியவில்லை. இத் திருமுறையில் உள்ள சில பிரபந்தங்களை அருளிச் செய்த நக்கீர தேவர், முதலில் சிவபெரு மானது பாடலை, `குற்றமுடையது எனப் பழித்து, அவரோடே வாதிட்டு ஒறுப்புப் பெற்றமைக்குப் பின்னர் கழிவிரக்கங்கொண்டு பாடிய
`கூடல் ஆலவாய் குழக னாவது
அறியாது அருந்தமிழ் பழித்தன்ன அடியேன்'
என்னும் அகவலடிகள், இவரது பெருந்தேவபாணி (64-65) என்னும் பிரபந்தத் தில் இடம் பெற்று, இவரது வரலாற்றை நமக்கு அறிவிக்கின்றன.
`இந்நிலை ஆற்றுப்படை நக்கீரர்க்கு இருந்தது' எனச் சொல்வதற்கில்லை.
சிவபெருமான் `நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளிய' பின்பு அப்பொற்கிழியைச் சங்க மண்டபத்தில் தூக்கிவைத்த பாண்டியன், ஒறுப்புண்டு மிகுந்த புலமை பெற்றிருந்தவர்கள் சிலரை வைத்துச் சைவத் தமிழ் சங்கத்தை மதுரையில் நிறுவினான். அதன்கண் விளங்கிய புலவர்கள் `பொய்ம்மையாளரைப் பாடாது சிவபெருமான் ஒருவனையே பாடும் புலவர்களாய் இருந்தனர். அவர்களையே சுந்தர மூர்த்தி நாயனார், `பொய்யடிமை இல்லாத புலவர்' எனக் குறித்தருளினார். அவர்களில் சிலர், சிறப்புப் பற்றி கடைச்சங்கத்துப் புலவர் பெயரைக் கொண் டிருந்தனர். ஆயினும் மக்கள் அவர்களை `நாயன்மார்' என்னும் சிறப்புப்பப் பெயரால் குறித்தனர். அதனால் அவர்கள் நம்பியாரூரது திருத்தொண்டத் தொகை திருப்பதிகத்தில் இடம் பெற்றனர்.
`வஜ்ஜிர நந்தி' என்பவரால் ஜைனத் தமிழ்ச் சங்கம் ஒன்று மதுரையிலே நிறுவப்பட்டு நடைபெற்று வந்தது. அதன் காலம் இச்சைவத் தமிழ்ச் சங்க காலத்திற்கும் பிற்பட்டதாகும்.
19. நக்கீர தேவர் பிரபந்தங்களை அடுத்துக் கல்லாட தேவ நாயனார் அருளிச் செய்த திருக்கண்ணப்ப தேவர் திருமறம், நக்கீர தேவர் திருமறத்தோடு இயைய வைக்கப்பட்டது.
20-22. பொ-ரை: அதனை அடுத்துக் கபில தேவ நாயனார் அருளிச் செய்த (20) மூத்த நாயனார் இரட்டை மணிமாலை, (21) சிவ பெருமான் திரு இரட்டை மணிமாலை, (22) சிவபெருமான் திருவந்தாதி என்பவை முறையே வைக்கப்பட்டன. இத்திருவந்தாதி வெண்பாக்கள் யாவும் ஈரடி யமக அணியைப் பெற்றிருத்தல் அறியத் தக்கது.
23. இத்திருவந்தாதியை அடுத்துப் பரணதேவ நாயனார் அருளிச் செய்து சிவபெருமான் திருவந்தாதி வைக்கப்பட்டது.
சங்க காலத்தில் `கபிலருக்கு நண்பர் பரணர்' என்றும் அதனால் `கபில பரணர்' என வழக்கம் உண்டாயிற்று என்றும் கூறுவர். அது போலவே இங்கும் கபில தேவரது அந்தாதியை அடுத்து பரண தேவரது அந்தாதி வைக்கப்பட்டது.
கபிலரது அந்தாதி இறுதி வெண்பா, `நூறு' எனத் தொடங்குகிறது. பரண தேவரது அந்தாதி முதற்பாட்டு `ஒன்று' எனத் தொடங்குகிறது. அதனால் முன்னை அந்தாதிக்கும் பின் பின்னை அந்தாதி செய்யப்பட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
24. பரண தேவரது அந்தாதியை அடுத்து இளம் பெருமானடிகள் அருளிச் செய்த சிவபெருமான் திருமும்மணிக் கோவை வைக்கப்பட்டது.
`இளம் பெருமானடிகள்' - என்பது முருகக் கடவுளைக் குறிக்கும். `அப்பெயரை இப்புலவர் பெருமான் கொண்டிருந்தனர்' எனத் தெரிகின்றது.
25. இம்மும்மணிக் கோவையை அடுத்து அதிரா அடிகள் அருளிச் செய்த மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை வைக்கப்பட்டது.
`அதிரா அடிகள்' என்பது `அஞ்சாத சுவாமிகள்' எனப் பொருள் தரும். அதிராமை - நடுங்காமை.
அப்பர் பெருமான், `பதைத்தெழுவார் மனத்துள்ளே கலமலக் கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்' எனக் குறித்தருளிய களிற்றுக்குத் தொண்டு பூண்டமையால் "அஞ்சுவதியாதான்று மில்லை; அஞ்ச வருவதுமில்லை என்னும் உள்ளத்துறுதியுடையவராய் இருந்தமை பற்றி, இவர் `அதிரா அடிகள்' எனப் பெயர் பெற்றார் போலும்!
26-30. இவரது பிரபந்தத்தை அடுத்து பட்டினத்து அடிகள் பிரபந்தங்கள் ஐந்து முறையாக வைக்கப்பட்டன. அவை (26) கோயில் நான்மணி மாலை, (27) திருக்கழுமல மும்மணிக்கோவை, (28) திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, (29) திருஏகம்பமுடையார் திருவந்தாதி, (30) திரு ஒற்றியூர் ஒருபா ஒருபஃது என்பன.
`பட்டினத்து அடிகள்' எனப் பெயர் பெற்ற பெரியோர் இருவர் இருந்தனர். அவ் இருவரது வரலாறு பற்றியும் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் எம்.ஏ., எம்.எல்., சிறந்த ஆய்வுகள் செய்துள்ளார். `பட்டினத்தார் வரலாறு' என்று சொல்லப்படுவனவற்றுள் பெரும் பான்மைய பிற்கால அடிகள் பற்றியனவே என்று கருத வேண்டியுள்ளது.
இருவரையும் `பிள்ளையார்' எனக் குறிக்கின்றனர். `அதற்கான காரணம் இன்னது' எனத் தெரியவில்லை. இறைவன் பட்டினத்தார்க்குப் பிறவா மகனாய் வந்து வளர்ந்திருந்து, ஒருநாள் ஒரு பேழையில் காதற்ற ஊசியையும், `காதற்ற ஊசியும் வாராது காண் நும்கடை வழிக்கே' என்று எழுதப்பட்ட சிறு ஒலை நறுக்கினையும் வைத்துப் பூட்டித் தந்தையாரிடம் கொடுக்கும்படி தாயாரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற இடம் தெரியாதபடி சென்று மறைந்தார். பட்டினத்தார் அவைகளைக் கண்டவுடன் துறவுள்ளம் பிறந்து, தமது செல்வத்தை யெல்லாம் பலர் கொள்ளை கொள்ள அள்ளி இறைத்து விட்டுத் துறவியராய்ச் சென்றுவிட்டார் என்பது பட்டினத்து அடிகள் வரலாற்றில் சிறந்த ஒரு பகுதியாகும். இதற்குச் சான்றாக, `காதற்ற ஊசியும் வாராது காண்நும் கடைவழிக்கே' என்ற தொடர் பிற்கால அடிகள் பாட்டிலேதான் காணப்படுகின்றது.
பிற்கால அடிகள் பாடலில் ஒரு சில பாடல்கள் அவையல் கிளவிகளாய், அவையில் சொல்ல முடியாதபடி உள்ளன. அவைகள் இடைச் செருகல்களாகவும் இருக்கலாம்.
அவ்வடிகள் பாடல்கள் மிக எளிய நடையில் உள்ளன. இத்திருமுறையில் உள்ள அடிகள் பாடல்கள் மிக உயர்ந்த நடையில், மிடுக்குடன் காணப்படுகின்றன.
இவரது காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகக் கருதப்படுகின்றது.
31-40. பட்டினத்து அடிகள் பிரபந்தத்தை அடுத்துத் திருமுறைகளை வகுத்தருளிய நம்பியாண்டார் நம்பிகள் அருளிச் செய்த பத்துப் பிரபந்தங்கள் உள்ளன.
அவற்றுள் முதலாவது இவரை ஆட்கொண்ட (31) திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை. அதனை அடுத்து உள்ளது தில்லைக் கூத்தப் பெருமான் மீது பாடப்பட்ட (32) கோயில் திருப்பண்ணியர் விருத்தம். அதனை அடுத்துள்ளது திருத்தொண்டத் தொகையின் வகை நூலாகிய (33) திருத்தொண்டர் திருவந்தாதி. அதனை அடுத்துள்ள ஆறு பிரபந்தங்கள் ஞானசம்பந்தரைத் துதித்த துதிப் பிரபந்தங்கள். அவை (34) ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, (35) திருச் சண்பை விருத்தம், (36) ஆளுடைய பிள்ளையார் திருமும் மணிக் கோவை, (37) ஆளுடைய பிள்ளையார் திருஉலா மாலை, (38) ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், (39) ஆளுடைய பிள்ளையார் திருஉலா மாலை, (38) ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், (39) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை என்பன.
இவற்றை அடுத்து இத்திருமுறையில் இறுதிப் பிரபந்தமாய் உள்ளது (40) திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை.
ஆக நாற்பது பிரபந்தங்களால் ஆனது இப் பதினொன்றாந் திருமுறை. திருவாலவாயுடையார் திருமுகப் பாசுரம் தனி.
கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதல் இராசராச சோழன் வேண்டிக் கொண்டபடி இவர் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் அருளால் தில்லையில் தேவாரத் திருமுறைகளைக் கண்டெடுத்து அவற்றை ஏழு திருமுறைகளாக வகுத்தார். அப்பொழுது இவர் ஆண்டில் மிக இளைஞர்.
பின்பு அச்சோழன் மகன் முதல் இராசேந்திர சோழன் வேண்டிக் கொண்டபடி திருவிசைப்பாவைத் திருமுறையாகச் சேர்க்க இசைந்த இவர், காலத்தால் முற்பட்ட மாணிக்க வாசகர் திருவாசகம், திருக்கோவையாரை முதலில் எட்டாம் திருமுறையாக வகுத்துப் பின்பு திருவிசைப்பாத் திருப்பல்லாண்டுகளை ஒன்பதாம் திருமுறையாக வும், திருமூலர் திருமந்திரத்தைப் பத்தாம் திருமுறையாகவும் இங்குக் காட்டிய பிரபந்தங்களைப் பதினொன்றாந் திருமுறையாகவும் வகுத்தமைத்தார்.
இவரது காலம் முதல் இராசராச சோழன், முதல் இராசேந்திர சோழன் இவர்கள் காலம் என்பதே பலரது துணிபு. ஆயினும சிலர், இவர் தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் இடங்கழி நாயனாருக் குரிய பாட்டில்,
சிற்றம்பல முகடு - கொங்கிற் கனகம் அணிந்த
ஆதித்தன் குலமுதலோன்
என ஆதித்த சோழனைச் சிறப்பித்துக் கூறியிருத்தலால் `ஆதித்த சோழன் காலத்தவர் எனக் கூறுவர். புலவர்கள் தம் காலத்து அரசனைச் சிறப்பித்துப் பாடுவர், முற்காலத்து அரசனைச் சிறப்பித்துப் பாட மாட்டார்கள் என்பதில்லை. அதனால் அவர்கள் கருத்து வலியுடைத் தாகாது.
`நம்பியாண்டார் நம்பிகள் தாம் பாடிய பிரபந்தங்களைத் தாமே திருமுறையில் சேர்த்திருப்பாரா' என்பது ஒரு பெரிய வினா.
இவரது பிரபந்தங்களில் முதலாவது தம்மைத் திருவருட் செல்வராகச் செய்த விநாயகப் பெருமானைப் பற்றியது. இரண்டாவது, தில்லைக் கூத்தப் பெருமானைத் துதித்தது. ஏனைய எல்லாம் அறுபான் மும்மை நாயன்மார்களையும், அவருள் ஆசிரியர்களாய்ச் சிறப்புற்ற சம்பந்தர் அப்பரையும் பற்றியனவாய் அவர்களது பெருமையை விளக்குவனவே. அதனால் பலரது விருப்பத்தின்படி தாமே இப்பிரபந்தங்களைத் திருமுறைகளாக அவர் வகுத்திருக்கலாம். அல்லது பிறர் சேர்த்தனர் எனக் கொள்ளினும் அதனால் வரும் தாழ்வு யாதும் இல்லை.
இவ்வாராய்ச்சி எவ்வாறிருப்பினும், திருத்தொண்டர் திருவந்தாதியைத் திருமுறைகளின் வேறுபடக் கருதுதல் முறை யாகாது. ஏனெனில், பிற்காலத்தில் திருத்தொண்டத் தொகைவிரியும் திருமுறையாகியுள்ளது.
திருமுறைக்கு உரை எழுதும் பணியைத் தருமை ஆதீன 25ஆவது குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணி அவர்கள் ஆறாந் திருமுறை முதலாக அடியேனுக்குப் பணித்தருளினார்கள். அதன்படி 6 முதல் 9 முடிய உள்ள திருமுறைகள் அடியேனுடைய உரையுடன் ஆதீனத்தில் அவ்வப்பொழுது வெளிவந்தன.
தருமை ஆதீனத்தில் இதுபொழுது அருளாட்சி செலுத்தி வரும் 26ஆவது குரு மகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் திருவுளம் பற்றியவாறே 10,11 ஆம் திருமுறைகட்கு உரையெழுதும் பணியும் அடியேனுக்குக் கிடைத்தற்கு அடியேன் ஷ்ரீலஷ்ரீ மகா சந்நிதானத்தின் திருவுளக் கருணைக்கு நன்றியறிவோடு கூடிய பெருவணக்கங்களைச் செலுத்திக் கொள்கிறேன்.
உரை குறிப்புரை என்றாலும் சில விளக்கங்களும் தரப்பட்டு இருப்பதால், பலருக்கும் பயன்படும் என்னும் நம்பிக்கை உடையேன்.
இவ்வெளியீட்டினை ஷ்ரீலஷ்ரீ குருமகாசந்திதானத்தின் திருவுளக் கருணைக்கு நன்றி செலுத்தும் கடப்பாட்டுடன் தமிழ் உலகமும், சைவ உலகமும் பெற்றுப் பயனடையத் திருவருள் துணை புரிவதாகுக. வணக்கம்.
அடியேன்,
காஞ்சிபுரம், சி. அருணைவடிவேல்,
20-5-1995.
உரையாசிரியன்