உ
குருபாதம்
011 ஆராய்ச்சி முன்னுரை பேராசிரியர் டாக்டர் கு. சுந்தரமூர்த்தி எம்.ஏ., பி.எச்டி., அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம்
தமிழ் கூறும் நல்லுகம் செய்த பயனாகத் தோன்றியன பன்னிரண்டு திருமுறைகளாம். இவை திருஞானசம்பந்தர் முதல் சேக்கிழார் ஈறாக உள்ள இருபத்தெட்டு ஆசிரியன்மார்களால் அருளிச் செய்யப்பட்டவையாகும்.
இவற்றுள் பதினொன்றாம் திருமுறைக்கென அமைந்த தனித் தன்மைகள் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கன சில.
1. திருமுறைகள் அனைத்தும் திருவருள் நலம் உந்தச் செய்யப்பட்டவையே. எனினும், இறைவனாலேயே அருளப்பெற்ற திருமுகப் பாசுரம் இத்திருமுறையில் முதல் பதிகமாக அமைந்து அணி செய்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
2. ஏனைய திருமுறைகளில் ஆண் இனத்தவராகிய அடியவர் பெருமக்களின் திருவாக்குகளே இடம் பெற்றிருக்க, இத்திருமுறையில் தாய்க்குலத்தவராகிய காரைக்கால் அம்மையாரின் திருவாக்குகள் இடம் பெற்றிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
3. ஒன்பதாம் திருமுறையில் அருளாளர்கள் பலர் அருளிய பல பதிகத்தொகுப்புக்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இத்திரு முறையில் அருளாளர்கள் பலர் அருளிய பல நூல் தொகுப்புக்கள் இடம் பெற்றுள்ளன.
4. ஏனைய திருமுறைகளில் மூத்த பிள்ளையாரைப் பற்றி ஆங்காங்கு வருகின்றன. இத்திருமுறையில் மூத்த பிள்ளையாரைப் பற்றிய 3 நூல்கள் இடம் பெற்றுள்ளன.
5. ஏனைய திருமுறைகளில் ஆங்காங்கும், ஒன்பதாம் திருமுறையில் திருவிடைக்கழித் திருப்பதிகமுகமாக முருகன் இடம் பெற்றிருக்க, இத்திருமுறையில் முருகனைப் பற்றிய ஒரு பெரும்நூலே (திருமுருகாற்றுப்படை) இடம் பெற்றுள்ளது. இவ்வரிய நூலும் சங்க இலக்கியங்களுள் ஒன்றாக இருப்பதும் குறிப்பிடத்தக்கதாம்.
6. ஏனைய திருமுறைகளில் தென்னகத்தில் இருந்தவாறே திருக்கயிலையை நோக்கிப் பாடப்பெற்ற பதிகங்கள் உள்ளன. ஏழாம் திருமுறையிலும் சுந்தரர் திருக்கயிலைக்குச் செல்லும் பொழுதும், அங்குச் சென்ற பின்பும் ஆக அருளப் பெற்ற `தான் எனை முன்படைத் தான்' எனத் தொடங்கும் திருப்பதிகமே உள்ளது. இத்திருமுறையில் திருக்கயிலையில் இறைவன் திருமுன்பு அருளப் பெற்ற `திருக்கயிலாய ஞானஉலா' என்னும் நூலே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
7. பன்னிரண்டாம் திருமுறை நீங்கலாக ஏனைய திருமுறை களில் அடியவரின் வரலாறுகள் அங்கும் இங்குமாகச் சில பாடல்கள், அல்லது ஓரிருபதிகங்கள் ஆகியனவே இடம் பெற்றுள்ளன. இத்திரு முறையில் கண்ணப்பர், சம்பந்தர், அப்பர் ஆகியவர்களைப் பற்றிய பல நூல்களே இடம் பெற்றுள்ளன. மேலும் அறுபான்மும்மை நாயன் மார்களைப் பற்றியதாகவும், திருத்தொண்டத் தொகையின் வழியாக வும் எழுந்த திருத்தொண்டர் திருவந்தாதி அமைந்திருப்பது மேலும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலின் விரிவாகவே பன்னிரண்டாம் திருமுறை அமைந்திருப்பதும் எண்ணற்குரியதாகும்.
8. சிற்றிலக்கியங்கள் பலவும் தொல்காப்பியர் காலத்தேயே தோன்றியிருந்தன. எனினும் அவ்விலக்கியங்கள் பலவும் காலப் போக்கில் மறைய, பிற்காலத்தேயே அவை பெருகி வளரலாயின. அவ் வகையில் வளர்ந்த இலக்கியங்களுள் இரட்டைமணிமாலை, அந்தாதி, கோவை, உலா, பெருந்தேவபாணி, நான்மணிமாலை, ஒருபா ஒருபஃது, கலம்பகம், ஏகாதசமாலை, மறம் முதலிய பலவும் இப்பதி னொன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாம்.
9. எட்டாம் திருமுறையை அருளியவர் மணிவாசகர் ஆவர், இவரைப் பற்றி இத்திருமுறை தவிர, ஏனைய திருமுறைகளின்வழி ஏதும் அறியஇயலவில்லை. இத்திருமுறையில் மாணிக்கவாசகரைத்
திருந்திய அன்பின் பெருந்துறைப் பிள்ளையும் (11 திருவிடை 28 -31)
எனப் பட்டினத்துப் பிள்ளையாரும்,
திருக்கோவையாரில்,
வருவா சகந்தனில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண் டேயும்மற்றப் பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே (தி.11 கோயில். 58)
என நம்பியாண்டார் நம்பிகளும் போற்றி இருப்பது எண்ணி மகிழ்தற் குரியதாகும்.
10. சங்க இலக்கியங்களில் பாடற் பொருளும் எண்ணிக்கை யும் அமையக் கார் நாற்பது, களவழிநாற்பது, இன்னாநாற்பது, இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றிருப்பது போல, இத்திரு முறையிலும் திரு ஈங்கோய்மலை எழுபது, கார் எட்டு எனும் பெயரில் நூல்கள் இடம் பெற்றுள்ளன.
11. பன்னிரு திருமுறைகளும் யாவர்க்கும் மேலானவனான சிவபெருமானைப் போற்றுவனவே எனினும் அப்பெருமானின் திருப்பெயரில் பதிகங்களோ அன்றிப் பாடல்களோ அமைந்தில. ஆனால் 4 நூல்கள் இத்திருமுறையில் அமைந்துள்ளன. அவை,
1. சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை,
2. சிவபெருமான் திருவந்தாதி (கபிலர்),
3. சிவபெருமான் திருவந்தாதி (பரணர்),
4. சிவபெருமான் திருமும்மணிக்கோவை
என்பனவாம்.
நூல்வகை
இத்திருமுறையில் வரும் இலக்கிய வகைகள் இருபத் தொன்றாம். அவை திருமுகப்பாசுரம், திருப்பதிகங்கள், மாலைகள், திருவந்தாதிகள், திருவெண்பா, கோவைகள், உலா, உலாமாலை, ஊரொடுபடுத்தியும் (திருஈங்கோய்மலை எழுபது), பொழுதொடு படுத்தியும் (கார்எட்டு) வரும் தொகை நூல்கள், எழு கூற்றிருக்கை, தேவபாணி, கோபப்பிரசாதம், திருக்கலிவெண்பா, திருமுருகாற்றுப் படை, திருமறம், ஒருபாஒருபஃது, திருவிருத்தம், கலம்பகம், திருத் தொகை, திருஏகாதசமாலை என்பனவாம்.
1. இவற்றுள் திருமுகப்பாசுரம் என்பது திருவாலவாயுடை யாரால் அருளப்பெற்றதாகும்.
2. திருப்பதிகங்கள் என்பன காரைக்கால் அம்மையரால் அருளப் பெற்றவையாம். அவை:
1. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
2. மூத்த திருப்பதிகம்.
3. மாலை என வருவன இருவகையன. ஒன்று இரட்டை மணிமாலை, இரண்டு நான்மணிமாலை. இரட்டை மணிமாலையாக வருவன நான்காம். இவற்றுள் திருவிரட்டை மணி மாலை என்பது அம்மையாரால் அருளப் பெற்றதாகும். மூத்த நாயனார் திருவிரட்டை மணி மாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை என வருவன கபிலரால் அருளப் பெற்றனவாம். திருநாரையூர் விநாயகர் திருவிரட்டைமணி மாலை என்பது நம்பிகளால் அருளப் பெற்றதாம்.
நான்மணிமாலை கோயில் நான்மணிமாலையாம். இது பட்டினத்துப் பிள்ளையாரால் அருளப்பெற்றதாகும்.
4. அந்தாதி எனவருவன எட்டாம். இவற்றுள் அற்புதத் திருவந்தாதி அம்மையாராலும், பொன்வண்ணத் தந்தாதி சேரமான் பெருமாள் நாயனாராலும், கயிலை பாதிகாளத்தி பாதி அந்தாதி என்பது நக்கீர தேவநாயனாராலும், சிவபெருமான் திருவந்தாதி எனவரும் இரு நூல்களுள் முன்னையது கபிலராலும், பின்னையது பரணராலும், திருஏகம்பமுடையார் திருவந்தாதி என்பது பட்டினத்துப் பிள்ளையாராலும், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி என்பன நம்பியாண்டார் நம்பிகளாலும் அருளப் பெற்றனவாம்.
5. திருவெண்பா என்பது ஐயடிகள் காடவர் கோனால் அருளப் பெற்றதாகும்.
6. கோவை எனவருவன ஏழாம். இவற்றுள் திருவாரூர் மும்மணிக்கோவை சேரமான்பெருமாள் நாயனாராலும், திரு வலஞ்சுழி மும்மணிக்கோவை நக்கீரதேவராலும், சிவபெருமான் திருமும்மணிக்கோவை இளம்பெருமான் அடிகளாலும், மூத்த பிள்ளையார் திருமும்மணிக் கோவை அதிரா அடிகளாலும், திருக்கழுமலமும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக் கோவை என்பன பட்டினத்துப் பிள்ளையாராலும், ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை நம்பியாண்டார் நம்பிகளாலும் அருளப் பெற்றனவாம்.
7. உலா என்பது இருமுறையில் வருகிறது. ஒன்று திருக் கயிலாய ஞான உலா ஆகும். இது இலக்கிய ஆசிரியர்களால் வழி வழியாகக் கூறப்பெற்றுவரும் இலக்கண முறையில் வருவதாம். மற்றொன்று உலாமாலை என்னும் பெயரில் வருவது. இது நம்பிகளால் அருளப் பெற்றதாகும். ஏனைய உலாக்கள் போலன்றிப் பாட்டுடைத் தலைவராகிய ஆளுடைய பிள்ளையாரது இயல்பையே பெரிதும் விரித்துரைத்து, அவரைக் காதலித்த ஏழுவகைப் பருவத்து மகளிர் கூற்றுக்களையும் தனித்தனியே கூறாது, பொதுப்படக் கூறி, அவர்கள் அனைவரும் காமுற்று வருந்த, ஆளுடைய பிள்ளையார் திருவுலாப் போந்தருளினார் என இவ்வுலா கூறுகின்றது. மாலை - இயல்பு: திருஞான சம்பந்தரின் இயல்பு. இவர்தம் இயல்பேபெரிதும் பேசப் பெறுதலின் உலா மாலை எனப் பெயர் பெற்றது. சிலப்பதிகாரத்தில் வரும் துன்பமாலை, வஞ்சினமாலை என்பனவற்றை நினைவு கூரும் வகையில் இப்பெயர் அமைந்துள்ளது. இவற்றை விளக்க வந்த அடியார்க்கு நல்லார், `இக்கலிவெண் பாட்டுப் பத்தினித் தன்மைத் தாகிய ஒரு பொருளையே கருதிக் கூறிய இயல்பை யுடைத்தாகலின் மாலை என்றார்' என விளக்குவதும் நினைவு கூர்தற்குரியதாம்.
8. தொகை நூல்கள்:-
ஊரொடுபடுத்துவரும் நூல் திரு ஈங்கோய்மலை எழுபதாம். பருவத்தொடுபடுத்து வரும் தொகை நூல் கார் எட்டு என்பதாகும்.
திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், போற்றித்திருக்கலிவெண்பா, ஒருபா ஒருபஃது, திருத்தொகை, திரு ஏகாதசமாலை, என வருவன வகைக்கொன்றாக அமைந்துள்ளன. இவற்றுள் முன்னைய நான்கும் நக்கீரதேவ நாயனாராலும், திரு வொற்றியூர் ஒருபா ஒருபஃது பட்டினத்துப்பிள்ளையாராலும், ஆளுடையபிள்ளையார் திருத்தொகையும், திருநாவுக்கரசர் திருவேகாதசமாலையும் நம்பியாண்டார் நம்பிகளாலும் அருளப் பெற்றனவாம்.
9. திருமறம்
திருக்கண்ணப்ப தேவர் திருமறம் எனும் பெயரில் இரு நூல்கள் உள்ளன. ஒன்று நக்கீரதேவராலும், மற்றொன்று கல்லாட தேவராலும் அருளப் பெற்றதாகும்.
10. விருத்தம்
இப்பெயரில் வருவன இரண்டாம். ஒன்று கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்பது. மற்றொன்று ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் என்பது. இவ்விரண்டும் நம்பிகளால் அருளப் பெற்றனவாம்.
11. திருமுருகாற்றுப்படை
இது சங்க காலத்து வாழ்ந்த நக்கீரரால் அருளப்பெற்றதாகும்.
12. திருக்கலம்பகம்
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம். இது நம்பிகளால் அருளப் பெற்றதாகும்.
13. திருத்தொகை
ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை: இதுவும் நம்பிகளால் அருளப் பெற்றதாகும்.
ஆசிரியன்மார்கள்
பதினொன்றாம் திருமுறையை அருளிய ஆசிரியன்மார்கள் திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன்நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாடதேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பிகள் எனப்பன்னிருவராவர். எனினும் திருமுருகாற்றுப் படையை அருளிய நக்கீரரும், கயிலை பாதி காளத்தி பாதி முதலாய ஒன்பது நூல்களை அருளிய நக்கீர தேவநாயனாரும் ஒருவர் அல்லர் என்பது அறிஞர்களின் முடிந்த முடிபாகும். இவ்வாற்றான் இப்பதினொன்றாம் திருமுறையை அருளிய ஆசிரியர்கள் பதின்மூவராவர். இங்ஙனம் கொள்ளுங்கால் பன்னிரு திருமுறைகளையும் அருளிய ஆசிரியர்கள் இருபத்தெண்மர் என்பதே பொருந்துவதாம்.
காலம்
1. திருவாலவாயுடையார்: காலம் கடந்த பரம்பொருள் ஆதலின் இவரது காலவரையறை கூறற்கியலாது. எனினும் இப் பாசுரத்தைப் பாடிய காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டாம்.
2. காரைக்கால் அம்மையார்: கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டினர்.
3. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்: கி.பி. 7 ஆம் நூற்றாண்டினர்.
4. சேரமான் பெருமாள் நாயனார்: கி.பி. 8 ஆம் நூற்றாண்டினர்.
5. நக்கீரர்: சங்க காலத்தவர்.
6. நக்கீர தேவ நாயனார்: கி.பி. 9 நூற்றாண்டை ஒட்டி வாழ்ந்தவர்.
7. கல்லாட தேவ நாயனார்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்.
8. கபில தேவர்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்.
9. பரணதேவ நாயனார்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்.
10. இளம்பெருமான் அடிகள்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலுமாக வாழ்ந்தவர்.
11. அதிராவடிகள்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலுமாக வாழ்ந்தவர்.
12. பட்டினத்துப் பிள்ளையார்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலுமாக வாழ்ந்தவர்.
13. நம்பியாண்டார் நம்பிகள்: கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலுமாக வாழ்ந்தவர்.
நூல்தொகை
இப்பதினொன்றாம் திருமுறையில் வரும் நூல்கள் நாற்பது என்றலே பெரு வழக்காக உள்ளது. அவர்கள், காரைக்கால் அம்மையார் அருளிய இரு பதிகங்களையும், பதிகம் என்ற அளவில் ஒன்று எனக் கொள்வர். ஞானசம்பந்தர் முதலிய அருளாளர்கள் அருளிய பதிகங்களைத் தனித்தனியே கணக்கிடுவது போல, இவ் வம்மையார் அருளிய பதிகங்களையும் தனித்தனியே கணக்கிடின் இத்திருமுறையில் வரும் நூல்கள் 41 ஆகும். எனினும் பதிகம் பனுவல் எனப் பெயர் பெறாமையின், இத்திருமுறையில் வரும் பனுவல்கள் 40 என்று கோடலே சிறக்கும்.
முறைவைப்பு
பன்னிருதிருமுறைகளும் தோன்றிய காலவகையில் தொகுக்கப்பட்டவை அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. இத்திருமுறையில் காணும் நூல்கள் காலவகையில் தொகுக்கப்பெறின் திருமுகப்பாசுரம் முன்னிருத்தல் பொருந்துவதேயாகும். எனினும் திருமுகப்பாசுரம் அருளப் பெற்ற காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டே யாம். எனினும் இதனை அருளிய திருவாலவாயுடையார் முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய் விளங்குபவர் ஆதலானும், உயிர்கட்கெல்லாம் வாழ் முதலாக விளங்கும் ஒப்பற்ற தலைமை உடையராதலானும், இப்பாசுரமே முன் இருத்தல் தக்க தாகும். திருமுருகாற்றுப்படையை அருளிய நக்கீரர் சங்ககாலத்தவ ராதலின் அடுத்துத் திருமுருகாற்றுப்படை இருத்தல் வேண்டும். காரைக்கால் அம்மையார் சங்க காலத்துக்குப் பின்னரும், ஞான சம்பந்தர் காலத்திற்கு முன்னரும் வாழ்ந்தவர் என்பது பலருக்கும் ஒப்ப முடிந்ததொன்றாம். எனவே அவர் அருளிய பதிகங்கள் மூன்றாவதாக அமைவது பொருத்தமாகும். எனினும் சேக்கிழாரின் திருவாக்கின் வண்ணம் அம்மையார் கயிலை செல்லுமுன் பாடிய முதல் நூல் அற்புதத்திருவந்தாதியாகும். இதனை அடுத்து அருளிய நூல் திரு விரட்டைமணி மாலையாகும். கயிலை சென்று வந்த பின் திருவாலங் காட்டில் பாடிய முதல் பதிகம் `கொங்கை திரங்கி' எனத் தொடங்கும் திருப்பதிகமாகும். அடுத்து அருளியது `எட்டி இலவம்' எனத் தொடங் கும் பதிகமாகும். இவ்வகையில் இந்நூல்களை நிரல்பட அமைத்துக் கொள்வதில் இழுக்கில்லை. இவரை அடுத்து வரும் ஆசிரியர்களின் காலங்களுக்கு ஏற்பவே அவரவர்களும் அருளிய நூல்கள் இடம் பெற்றிருத்தலின் இப்பொழுது இருக்கும் முறையிலேயே அந்நூல்கள் இடம் பெறலாம். இவ்வமைப்பில் இத்திருமுறை அமைதல் தக்கதாம்.
திருவாலவாயுடையார்
இப்பெயர் மதுரைச் சொக்கநாதப் பெருமானைக் குறிக்கும். `ஆலவாயில் மன்னிய சிவன்யான்' என இப்பாசுரத்தில் வருவதால் இவ்வுண்மையை அறியலாம். இப்பெருமான் நன்பாட்டுப்புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளியவன். அதுபொழுது பாடியது `கொங்குதேர் வாழ்க்கை' என வரும் பாடலாகும். இதனை அடுத்து அருளிய பாசுரமே இப்பாசுரமாகும். பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்திற்கு வழங்கிய பாடல் இதனையடுத்து அருளியதாகும். இது `அடியார்க்கு எளியன்' எனத் தொடங்கும் திருவெண்பாவாகும். ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளப்பில. அவ்வகையில் இவ்வாற்றான் அருளியிருக்கும் பாங்கு எண்ணி மகிழ்தற்குரியதாகும்.
திருமுகப் பாசுரம்
உயர்ந்தவர்கள் தங்கள் கருத்துக்களை நேரிடையாகவோ அல்லது தக்கவர் வழியோ தெரிவித்துக் கொள்வதன்றி, ஓலை வழியும் தெரிவித்துக் கொண்டிருந்தனர். இவ் ஓலையைத் திருமுகம் என்பர். `மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி' என்னும் சிலப் பதிகாரமும். இதனைக் கூறும் இறைவன் வழங்கியருளிய திருமுகம் இரண்டாம். ஒன்று இத்திருமுகமாகும். இது பொருள் பெற அருளிய தாகும். பிறிதொன்று மேற்கூறியவாறு உமாபதி சிவத்திற்கு வழங்கிய திருமுகமாகும். இது அருள் பெற அருளியதாகும். இறைவன் இம்மைக்கும் அம்மைக்கும் துணையாதல் இவ்விரு அருள் நிகழ்ச்சி யாலும் அறியலாம். பாசுரம் என்பது பாடல், பதிகம் ஆகிய இரு பொருள்களையும் குறிக்கும். இங்குத் தனியே வரும் ஒரு பாடலைக் குறித்து நிற்கின்றது. இவ்வகையில் திருப்பாசுரம், என்றும், திருமுகப் பாசுரம் என்றும் குறித்துப் போற்றி வரும் இருபாசுரங்கள் உள்ளன. இவற்றுள் திருப்பாசுரம் என்பது திருஞான சம்பந்தப் பெருமான் பாண்டி மன்னனாகிய நின்றசீர் நெடுமாறனாருக்குக் கேட்பக்கிளந்த மெய்ஞ்ஞானமாகிய `வாழ்க அந்தணர்' எனத் தொடங்கும் திருப்பதிகமாகும். இதனை,
`வெறியார் பொழிற்சண் பையர்வேந்தர் மெய்ப்பாசுரம்' (844) எனச் சேக்கிழார் குறித்தருளுமாற்றான் அறியலாம். அடுத்துத் திருமுகப்பாசுரம் எனக் குறிப்பது, `மதிமலிபுரிை\u2970?' எனத் தொடங்கும் இத்திருப்பதிகம் ஆகும். சேக்கிழார் இதனைக் கொண்டெடுத்து மொழியுங்கால் `திருமுகம்' என்று அருளுகின்றார். இது பாடலாக அமைந்த திருமுகம் ஆதலின், திருமுகப் பாசுரம் என அழைக்கப் பெறலாயிற்று.
இத்திருமுகத்தில் அருளப் பெற்றிருக்கும் பொருள்முறை இக்காலத்துக்கும் ஏற்புடையதாக அமைந்திருப்பது அறியத்தக்கதாம். இக்காலத்துக் கடிதம் எழுதுவோர் அனுப்புநர், பெறுநர், பொருள் எனப்பகுத்துக் கொண்டே எழுதுவதைக் காண்கிறோம். பார்வை எண் என இடம் பெறுவது தொடர்ந்து போக்குவரத்து நிகழ்வதும், அலுவலக அமைப்பாக அமைவதுமான கடிதங்களிலேயே காணப்படுகின்றன. இவ்வகையில் அனுப்புநராக இருப்பவர் ஆலவாய்ப் பெருமான் ஆவர். இதனை
மதிமலி புரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிறகு
அன்னம் பயில் பொழில் ஆலவாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
என வரும் முதற்பகுதி குறித்துக் காட்டுகிறது. இதனைப் பெறுபவர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவர். இதனைப்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்கு
உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்குஞ் சேரலன் காண்க
என வரும் இரண்டாம் பகுதி குறிக்கிறது. இனிப் பொருளாக அமைவது,
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண் பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே. (தி.11 திருமுருகப். 1)
என வரும் மூன்றாம் பகுதியாகும். இதன் முற்பகுதியில் கூடல் என்பது நகரையும், ஆலவாய் என்பது அதன்கண் உள்ள திருக்கோயிலையும் குறிக்கின்றது. இத்திருமுகம் அருளும் நிலையில் ஆலவாயில் அப்பெருமான் மன்னி (பொருந்தி) இருப்பினும், அவன் யாண்டும் எக்காலத்தும் எப்பொருள்களிடத்தும் மன்னியிருப்பவன் என்பது உணரத்தக்கதாம். இனிப் பெறுநராம் சேரமானைக் குறிக்கும் பொழுது அப்பெருமகனாரின் வள்ளன்மையை முன்பும், அரசியல் சிறப்பைப் பின்புமாகக் குறித்தருளுகின்றார். கைம்மாறு வேண்டாக் கடப் பாட்டுடன் தம்பால் வருவோருக்குத் தாம் கொடுத்தலன்றி, அவரவ ரும் தாம் தாமும் வேண்டியவாறு எடுத்துக் கொள்ளும் உரிமை பெறுதலை `உரிமையின் உரிமையின் உதவி' என்றார்.
பூதலத்துள் எல்லாப் பொருளும் வறியராய்க்
காதலித்தார் தாமே கவர்தலால் - நீதி
அடுத்து உயர்ந்த சீர்த்தி அனபாயா யார்க்கும்
கொடுத்திஎனக் கொள்கின்றி லேம். (தண்டி- மேற்கோள்)
எனவரும் தண்டியலங்காரப் பாடலும் இவ்வுரிமையை அறிவித்து நிற்கும். `குருமாமதிபுரை குலவியகுடை' என்பது அப்பெருமகனாரின் நிறைந்த தண்ணளியைக் காட்டுவதாகும்.
கண் பொர விளங்கும் நின் விண்பொரு வியன் குடை
வெயில் மறைக் கொண்டன்றோ அன்றே
வருந்திய குடிமறைப்பதுவே கூர்வேல் வளவ. (புறம் 35)
என வரும் சங்கப் பாட்டால் இவ்வுண்மை அறியப்படும். அடுத்து வரும் பொருண்மை பரிந்துரையாக அமைகின்றது. ஒருவர் ஒருவ ருக்கு உதவுதற் பொருட்டுப் பரிந்துரை செய்யுங்கால் பன்னிப்பன்னிப் பலபட எழுதுவதைக் காண்கிறோம். ஆனால் இத்திருமுகத்தோ மூன்று சீர்களால் பரிந்துரை அமைகின்றது. அது,
தன்போல் என்பால் அன்பன்
என்பதாகும். இதன் அருமை நினைந்து நினைந்து இன்புறத்தக்கதாம். உலகில் இதற்கு மேலாகப் பரிந்துரை வழங்குதற்கு வேறு எச்சொற் களும் அமையா. தன்பால் காண்பது கருதிப் போந்தனன் என்பது, இன்றும் உலகினில் கூறும் கூற்றேயாம். ஒருவர் பிறர் இல்லத்துக்குச் சென்றால் தம் உள்ளத்தில் எத்துணை வேண்டுகோள் இருப்பினும், முதற்கண் எங்கு வந்தீர் என வினவும் போது தங்களைப் பார்க்க வந்தேன் என்று கூறுவதுதான் மரபாக உள்ளது. பின்னர் தான், தம் வேண்டுகோளைச் சிறிது சிறிதாக வெளிப்படுத்துவர். இவ்வகை யிலேயே `தன்பால் காண்பது கருதிப் போந்தனன்' என முதற்கண் கூறிப் பின் `மாண் பொருள் கொடுக்க' என்றும், கொடுத்த பின் இங்கு வரவிடுக்க என்றும் அருளுகின்றார். ஆலவாய்ப் பெருமான் பாணருக்கு வேண்டும் பொருளைத் தாமே வழங்காது, சேரமானா ரிடத்து ஆற்றுப்படுத்தியது ஏன் என்று ஒரு ஐயம் எழலாம். சேரமானா ரிடத்து உள்ள பொருள்கள் அனைத்தும் அறத்தின்வழிப்பட்ட பொரு ளாகும். அத்தகைய பொருள்களைத் தக்கதொரு இசைப்பாணருக்கு வழங்குவதன் மூலம், ஏற்பார்க்கும் கொடுப்பார்க்கும் கொடுக்கப்படும் பொருட்கும் இனிதாம். இவ்வுண்மையை உயிர்கள் உணரவும், தம் வாழ்வில் ஏற்றுக் கடைப்பிடிக்கவும், இறைவன் இவ்வாறு ஆற்றுப் படுத்தினன் என்பது அறியத்தக்கதாம். இதனை `மாண் பொருள்' எனக் குறிப்பதால் உய்த்துணரலாம். `வரவிடுப்பதுவே' என்றது அவ்விசைப் பாணர் கடமை உணர்வு தவறாது இசைத்து வரும் இசைத்திறனின் நுகர்வை விடுத்தற்கு அரிதாதல் பற்றியாம்.
`அடியார்க்கு எளியன் சிற்றம்பலவன்' எனத் தொடங்கும் பாடலும் அனுப்புநர், பெறுநர், பொருள்திறன் என முறைப்படுத்திக் கூறும் அமைப்பில் பிறழாது விளங்குதலை அப்பாடலால் அறியலாம்.
காரைக்கால் அம்மையார்
புனிதவதியார் என்னும் இயற்பெயருடன் வாழ்ந்த இவருக்கு, இறைவன் தந்த அருட்கொடை நான்காம். ஒன்று இறைவனே அடியவ ராக வந்து அமுது உண்டது. இரண்டு இதன் வாயிலாக மாங்கனிகள் இரண்டை ஒன்றன் பின் ஒன்றாக வழங்கி அருளியது. மூன்றாவது இவருக்குப் பேய்வடிவு வழங்கியது. நான்காவது `வரும் இவள் நம்மைப்பேணும் அம்மைகாண்' என அருளி, அவர் வேண்டும் விருப்பை வழங்கி அருளியது. இறைவன் அம்மையே என அழைத்த அழைப்பைச் சேக்கிழார்.
அருகுவந் தணைய நோக்கியம்மையே யென்னுஞ் செம்மை
ஒருமொழி யுலக மெல்லா முய்யவே யருளிச் செய்தார். (58)
எனப் போற்றி மகிழ்வர்.
அருளிய நூல்கள்
இப்பெருமாட்டியார் அருளியவை இருநூல்களும் இரு பதிகங்களும் ஆம். இவற்றுள் அற்புதத்திருவந்தாதி இம் மண்ணுலகில் தம் கணவன் தம்மைத் தெய்வம் என்று துறந்ததை அறிந்து திரு வருளால் பேய்வடிவு ஆகியதும் பாடிய முதற் பெரும் நூலாகும்.
உற்பவித் தெழுந்த ஞானத் தொருமையி னுமைகோன் தன்னை
அற்புதத் திருவந்தாதி அப்பொழு தருளிச் செய்வார்
பொற்புடைச் செய்ய பாதபுண்டரி கங்கள் போற்றும்
நற்கணத் தினில்ஒன்றானேன் நானேன்று நயந்து பாடி (52)
என்பது சேக்கிழார் வாக்காகும். திருவருளால் தோன்றிய ஞான ஒருமையால் இவ்வந்தாதி அருளப் பெற்றது என்பதும், அதனால் இறைவன் திருவடிகளைப் போற்றும் நற்கணங்களுள் ஒன்றாகும் பேறு கிடைத்தது என்பதும் இதனால் தெரிய வருகின்றது. இங்குக் குறிக்கப்படும் ஞான ஒருமை என்பது ஒருநெறிய மனமாய், உறைப் புடையமனமாய் நிற்கும் அம்மையாரின் திருவுள்ளத்தைக் குறிக்கும். இவ்வரிய குறிப்பை அருளுதற்கு
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கே நாம் அன்பாவ தல்லால் - பவர்ச்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்கு
ஆகாப்போம் எஞ்ஞான்றும் ஆள். (3)
ஒன்றே நினந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேஎன் உள்ளத்தின் உள்ளடைத் தேன் - ஒன்றேகாண்
கங்கைமால் திங்கட் கதிர் முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது.(11)
என வரும் திருவந்தாதிப் பாடல்களே நிலைக்களனாகும். இனிப் புண்டரிகங்கள் போற்றும் நற்கணத் தினிலொன்றானேன் நான்' என்று நயந்து பாடியருளுதற்குப்
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கு ஈது
உறினும் உறாதொழியு மேனும் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய நாம்.(86)
என வரும் பாடல் அடித்தளமாயுள்ளது. `காரைக்கால் பேய்ச்சொல்' (அற்புத - 107), `செடிதலைக் காரைக்கால் பேய்' (திருவாலங்காட்டு- 11), `காரைக்கால் பேய் நன்பாடல்' (மூத்ததிருப் - 11), என அம்மையார் தம் திருவாக்கால் குறிக்கு மாற்றான் இப்பேய் வடிவம் பெற்றமையையே பெரும் பேறாகக் கருதியமை தெரிய வருகிறது. நம்பியாரூரர் திருத்தொண்டத்தொகையில் அம்மையாரின் இயற் பெயரையோ, இறைவனே அழைத்த அம்மை என்னும் பெயரையோ குறியாது, `பேயார்க்கும் அடியேன்' எனக் குறித்ததும் அம்மையாரின் திருவுளம் பற்றியேயாம் என்பதும் அறியத் தக்கது.
திருவிரட்டை மணிமாலை
ஆய்ந்தசீ ரிரட்டை மாலை அந்தாதி யெடுத்துப் பாடி
ஏய்ந்தபே ருணர்வு பொங்க எயிலொரு மூன்று முன்னாள்
காய்ந்தவ ரிருந்த வெள்ளிக் கயிலைமால் வரையை நண்ண
வாய்ந்தபே ரருண்முன் கூர வழிபடும் வழியால் வந்தார் (53)
எனச் சேக்கிழார் அருளுவதால் அற்புதத் திருவந்தாதியை அடுத்துத் திருஇரட்டை மணிமாலையை அம்மையார் அருளியமை தெரிய வருகிறது. ஆசிரியமும் வெண்பாவுமாகிய பாடல்கள் மாறி மாறி வர இருபது பாடல்களைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளமையின் இப்பெயர் பெற்றது. இறைவனை மறவாது வாழ்வாரை மண்ணுலகத்து என்றும் பிறவாமை காப்பன் என அருளும் அம்மையார், இறைவனை `ஆதிரை நன் னாளானை' (8) என்றும், ஆதிரையான் (10) என்றும் குறித்தருளுகின்றார். திருவைந்தெழுத்தைத் தலையாய ஐந்து எனக் குறித்துப் போற்றுவர். தலையில் இருக்கும் கங்கையை, இட மருங்கில் அமர்ந்து இருக்கும் உமை காணின், என் செய்வாய் என நகைச்சுவை யாக இறைவனைக் கேட்டு மகிழ்வர். (5). இக்கருத்து இவருக்குப் பின்தோன்றிய நாவரசர் திருவாக்கிலும் இடம் பெற்றுள்ளது.
வங்கமலி கடல் நாகைக்கா ரோணத்தெம் வானவனே
எங்கள் பெருமானோர் விண்ணப்ப முண்டது கேட்டருளீர்
கங்கை சடையுட் கரந்தாய் அக்கள்ளத்தை மெள்ள உமை
நங்கை யறியிற் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே., (தி.4 ப.103 பா.8)
என்பது அப்பாடலாகும்.
நெஞ்சே! `உற்றார்கள், செத்த மரம் அடுக்தித் தீயாமுன், நெய்யாடி தந்திறமே கேள்' எனத் தம் நெஞ்சறிவுறுத்தலாகக் கூறி நிறைவு செய்திருப்பது அம்மையார் நம்மனோரை நோக்கி ஆற்றுப் படுத்துவதேயாம்.
பதிகங்கள்
திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்றும், மூத்த திருப் பதிகம் என்றும் அருளப் பெற்ற இருபதிகங்களும், கயிலை சென்று வந்த அம்மையார், தம் தலையினால் நடந்து திருவாலங்காடு அடைந்தவுடன் அருளியவையாகும். இவற்றுள்ளும் முதற்கண் பாடியது `கொங்கை திரங்கி' எனத் தொடங்கும் திருப்பதிகமாகும்.
அறவா! நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அம்மையாருக்கு, அவ்விருப்பை ஆலங் காட்டில் பெறுவாய் என இறைவன் அருளினன். அவ்வாறு அருளியதற்கேற்ப, அம்மையார் இறைவனின் ஆடலைக் கண்டு மகிழ்ந்துகொண்டிருக்கும் நிலையை இப்பதிகத்தால் அறியலாம். `ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே' எனப் பாடல் தோறும் கூறி மகிழும் அம்மையார், அவ்வாடற்சிறப்பைப் பலபட எடுத்துக் கூறி மகிழ்கின்றார். இப்பதிகத்தில் வரும் பேய் வருணனை, பிற்காலத்து எழுந்த பரணி நூல்களில் வரும் பேய் வருணனைக்கு முன்னோடியாக அமைந்துள்ளது.
துத்தங்கைக் கிள்ளை விளரிதாரம்
உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு
தகுணிதந் துந்துபி தாளம்வீணை
மத்தளங் கரடிகை வன்கைமென்றோல்
தமருகங்கு டமுழா மொந்தை வாசித்து
அத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்பன் இடந்திரு வாலங்காடே (9)
என வரும் பாடல் பண்டைக்காலத்தில் இருந்த பண் அமைப்பையும் இசைக்கருவிகளையும் அறிதற்குக் கருவியாக உள்ளது.
இதனை அடுத்து வரும் `எட்டி இலவம்' எனத் தொடங்கும் பதிகம், இறைவன் ஆடும் ஆடலைக் கண்டு மகிழ்ந்து, போற்றி வரும் நாட்களில் பாடியதாகும். இப்பதிகத்தில் வரும் காடு வருணனையே பின் எழுந்த பரணி நூல்களில் வரும் காடு பாடியது என வரும் பகுதிக்கு முன்னோடியாகும்.
இவ்வாறு பாடிய நான்கு பதிகங்களில் இரட்டை மணிமாலை நீங்கலாக உள்ள ஏனைய மூன்று பதிகங்களிலும் உள்ள இறுதிப் பாடல்களில், பாடிய தம்மையும் இப்பதிகத்தால் வரும் பயனையும் கூறி அருளுகின்றார். இவ்வமைப்பு முறை, பின் வந்த திருஞான சம்பந்தர் தம் திருக்கடைக்காப்பை அருளுதற்கு முன்னோடியாக உள்ளது.
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
இரண்டாம் மகேந்திரனின் மகனும் இராசசிம்மப் பல்லவனின் தந்தையும் ஆன பரமேசுவரவர்மன் என்னும் மன்னர் பெருமானே பக்குவ முதிர்ச்சி பெற்ற அளவில் ஐயடிகள் காடவர்கோன் எனப் பெயர் பெற்று விளங்குகின்றார். அரசியல் நிலையில் ஆட்சியை மேற் கொண்டு நிற்கும் வேந்தனின் தந்தையை `ஐயன்' எனக் குறிப்பிடுவர். இக்காடவர்கோன் இன்பம் பெருகும் திருத்தொண்டிற்கு அரசியல் தடையாம் எனக் கருதித் தம் மைந்தன்பால் தன் அரசுரிமையை ஒப்பு வித்து, நெடுநாள் சிவத்தொண்டு புரிந்திருந்தார். இந்நிலையில் இவர் தம் மைந்தன் காலத்து `ஐயடிகள்' எனவும் `ஐயன்னடிகள்' எனவும் அழைக்கப் பெற்றார். இவர் காலம் கி.பி. 670 முதல் 685 வரை என்பர்.
அரசியலை விடுத்து அருளியலில் தலைப்பட்ட இவர், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடங்களைப் போற்றி மகிழ்ந்தனர். அவ்வகையில் எழுந்த நூல் ஊர் வெண்பா என்பதாகும். இதுவே காலப்போக்கில் கே்ஷத்திரத் திருவெண்பா என அழைக்கப் பெறுவதாயிற்று. சிற்றிலக்கியங்களில் ஊர் வெண்பா என அழைக்கப் பெறுவது இவ்வகையதேயாம். இவர் சென்ற திருப்பதிகள் பலவாக இருப்பினும், இற்றைக்குக் கிடைத்திருக்கும் பாடல்கள் இருபத்து நான்கு திருப்பதிகளைப் பற்றியேயாகும். இவ்விருபத்து நான்கு திருப்பதிகளுள் சோழ நாட்டைச் சார்ந்தன பதினேழாம். தொண்டை நாட்டைச்சார்ந்தன மூன்றாம். நடுநாட்டையும், வட நாட்டையும் சார்ந்தன ஒவ்வொன்றாம். பாடல் பெற்ற திருப்பதி குறியாது இருப்பன இருபாடல்களாம். அவை பத்தும் இருபத்து மூன்றுமாய எண்ணுடை யனவாம். `பாங்கரும் சிறப்பின் பல்லாற்றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே' என்னும் தொல்காப்பியம். இந்நிலையாமை கூறுவார் அனைவரும், இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை என மூவகைப் படுத்திக் கூறுவர். இவர் அவற்றுள் ஒன்றான யாக்கை நிலையாமையைப் பெரிதும் எடுத்துக் கூறியுள்ளார். வெண்பா யாப்பினவாய இப்பாடல்களுள், முன்னிரண்டு அடிகளும் நிலையாமையையும் பின்னிரண்டு அடிகளும் அவ்வுணர்வின் பயனாக இறையடி சார்ந்து இன்புற வேண்டும் என்பதையும் கூறுவன வாய் உள்ளன.
- நாடுகின்ற
நல்லச்சிற்றம் பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர். (1)
என்பது முதற்பாடலாகும். `நல், அச்சு, இற்று அம்பலமே நண்ணாமுன் தில்லைச் சிற்றம்பலமே சேர்' எனப் பிரித்துப் பொருள்கொள்ள வேண்டும். உடலை நல் அச்சு என்றார், அது உயிர் வளர்தற்கு உறுதுணையாய் நிற்றலின்.
- வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை (3)
என்பது மூன்றாவது பாடல் ஆகும். ஐ, ஆறு, வாய் ஆறு பாயாமுன் - தொண்டையிலிருந்து வெளிவரும் கபநீர், வாய் வழி வந்து துன்புறுத்தாமுன், திருவையாற்றை வாயால் அழைத்து மகிழ்வாயாக என்பது இதன் பொருளாம். இவ்வாறு நயம்பட உரைக்கும் திருப் பாடல்கள் பலவாம்.
சேரமான் பெருமாள் நாயனார்
சேர மன்னராகிய இவர், நாளும் செய்து வரும் சிவவழி பாட்டின் நிறைவில், இறைவனின் திருச்சிலம்பு ஓசை கேட்டு மகிழும் பெரும் புண்ணியம் உடையவர். ஒரு நாள் அவ்வோசை கேளாத நிலையில், இனி வாழ்தல் தக்கதன்று என்று கருதித் தம் உடைவாள் கொண்டு இறக்கத்துணிய, இறைவன் விரைந்து திருச்சிலம்பு ஓசை கேட்கச் செய்தான். திருவாரூரில் நம்பியாரூரர் பதிகம் பாட அதனைக் கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தமையால் சிலம்பு ஒலி இசைக்கக் காலம் தாழ்த்தது எனக் கூறி அப்பெருமகனாராகிய நம்பியாரூரரை நினைப் பித்தார். அவரைக் காணச் சென்ற சேரர் பெருமகனாரும், தில்லை சென்று கூத்தப்பெருமானை வணங்கி அவர் திருவடியின் கீழ்ப் `பொன் வண்ணத் தந்தாதி' என்னும் அரிய பனுவலை விண்ணப் பித்துக் கொண்டார் என்பது வரலாறு.
பொன் வண்ணத் தந்தாதி
`பொன் வண்ணம்' என்னும் முதற்குறிப்புடைதாய், அந்தாதித் தொடையில் இப்பனுவல் அமைந்துள்ளமையின் இப்பெயர் பெற்றது. நூறு பாடல்களை உடையது. 101 ஆவது பாடலில் இந்நூலை இவர் பாடிய குறிப்பு உள்ளது. பொன்னின் நிறம் எந்நிறமோ அந்நிறம் அவன்தன் திருமேனியின் நிறமாகும். மின்னின் நிறம் எந்நிறமோ அந்நிறமே அவன் திருச்சடையின் நிறமாகும். வெள்ளி மலையின் நிறம் எந்நிறமோ அந்நிறமே அவன் இவர்ந்தருளும் ஆனேற்று ஊர்தியின் நிறமாகும். அவனைக் கண்ட என்னிறம் எந்நிறமோ, அந்நிறமே அப்பெருமானின் நிறமாகும் எனத் தலைவி கூற்றாக வரும் கூற்றே முதல் திருப்பாடலாக அமைந்துள்ளது. `துளியின்மை ஞாலத் திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு' (குறள்.,557) என வரும் திருக்குறள் போல, வினா விடையுள்ளுறுத்தி வரும் அமைப்பில் இப்பாடல் அமைந்துள்ளது. இந்நூலில் அகச்சுவைபட வருவனவும், நெஞ்சிற்கு அறிவுறுத்தி வருவனவுமாய பாடல்கள் பல உள்ளன. வினா உரையாக இலக்கிய நயம் பட அமைந்த பாடல்களும் பல உள.
அவற்றுட் சில
பூதப்படைகளை உடைய புண்ணியரே! நும் மீது புறங்கூற்றாகக் கூறப்படும் சொற்கள் பல உள. அவை நும்மீது ஏதம்பட எழுந்தன. அவ்வாறு எழுவது அறமன்றே. உமையம்மையாம் இளையா ளொடும் பிரிந்து இருந்த உம்மை, ஒருமைப் படுத்தவே காமன் கணை தொடுத்தான். அன்னோனை நும் கண் மலரால் சேதப்படுத்தியது என்னோ? செப்புமின் என வருவது ஒன்று.
`இறைவனே! நீரும் நெருப்பும், மதியும் பாம்பும், யோகும் உமையுடனிருக்கையும், உருவவும் அருவும், வேங்கையும் மானும், பகலும் இரவும், ஆக நீர் முரண்பட்ட பொருள்களுடன் இருக்கின்றீர். இவ்வகையில் இருப்பது, பகை தீர்த்த பண்பன் என உயிர்கள் போற்றி மகிழவோ? என ஒரு பாடலில் வினவி மகிழ்கின்றார்.
பல் உயிர் பாகம் உடல்தலை
தொல்பக லோன் மறல்பெண்
வில்லிஓர் வேதியன் வேழம்
நிரையே பறித் துதைத்துப்
புல்லியுஞ் சுட்டும் அறுத்தும்
உரித்துங் கொண்டான் புகழே
சொல்லியும் பாடியும் ஏத்தக்
கெடும் நங்கள் சூழ்துயரே.
என வரும் பாடல் ஒன்று (36). இப்பாடலில் பல் முதல் தோல் வரை உள்ளன ஆறு பொருள்களாம். அடுத்துப் பகலோன் முதல் வேழம் வரை உள்ள பொருள்களும் ஆறாம். இவற்றை இறைவன் அழித்தும் ஆட்கொண்டும் செய்த அருளிச் செயல்களும் ஆறாம். அவை பறித்து என்பது முதல் உரித்து என்பது வரை உள்ள ஆறுமாம். இவற்றை நிரல் நிறைப்படுத்தி எண்ணும்போது, இடையில் உள்ள பகலோன் முதலியவர்களை முன்னும், முன்னர் உள்ள பல் முதல் தோல் வரை உள்ள பொருள்களை இடைப்படுத்தியும், மூன்றாவதாக உள்ள பறித்து என்பது முதல் உரித்து என்பது வரை உள்ளனவற்றை வினைமுதற்குரிய வினையாகக் கொண்டும் பொருள் கொள்ளல் வேண்டும். அங்ஙனங் கொள்ளின் பல் பறித்தும், மறலிஉயிர் உதைத்தும், பெண் பாகம் கொண்டு புல்லியும், வில்லி (மன்மதன்) உடல் சுட்டும், வேதியன் (நான்முகன்) தலை அறுத்தும், வேழம் தோல் உரித்தும் புகழ்கொண்டான் என வரும். அப்புகழைச் சொல்லியும் பாடியும் ஏத்த நம் துயர்கெடும் எனக் கூறிப் பாடலை நிறைவு செய்கின்றார். பறித்தலும் உதைத்தலும் புல்லலும் சுடுதலும் அறுத்தலும் உரித்தலும் கொடுஞ் செயல்களாயினும் அவை அனைத்தும் அவ்வவ்வுயிர்களையும் நல்லாற்றுப் படுத்துவதற்கே ஆதலின் அவையனைத்தும் இறைவன் புகழேயாம் என்பது கருத்து. இவ்வகையில் அமைந்த நிரல் நிறைப் பாடல் இலக்கிய உலகில் காண்டல் அரிதேயாம்.
1. ஒப்புமைப்பகுதிகள்
இறைவனின் மேனி, உடை, கண்டம், அணிந்த திருநீறு ஆகிய வற்றை,
விரிகின்ற ஞாயிறு போன்றது
மேனி, அஞ் ஞாயிறு சூழ்ந்து
எரிகின்ற வெங்கதிர் ஒத்தது
செஞ்சடை, அச்சடைக்கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது
கண்டம், ஆக காரிருட்கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்றுள
தால் எந்தை ஒண்பொடியே.(26)
என உவமித்துக்காட்டுகின்றார் இவர். இதனோடு
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை, மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு (அற்புதத். 65)
என வரும் காரைக்கால் அம்மையாரின் திருவாக்கு ஒப்பிட்டு மகிழ்தற் குரியதாய் உள்ளது.
2. இறைவற்கு அடிமையாகிய தொண்டர் துறக்கம் பெறுவது உறுதியாம் எனக் கூறும் நாயனார்,
காய்சின ஆனை வளரும்
கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே
படைத்தது பொன் வண்ணமே (100)
என வரும் உவமைகொண்டு விளக்குகின்றார். இக்கூற்று,
இமயப்பொருப்பகம் சேர்ந்த பொல்லாக் கருங்காக்கையும்
பொன்னிறமாய் இருக்கும் என்று இவ்வாறு
உரைக்குமன்றோ இவ்விருநிலமே
என வரும் யாப்பருங் கலக்காரிகையார் கூற்றோடு ஒப்பிட்டு மகிழ்தற் குரியதாய் உள்ளது.
ஐயம் ஏற்றல்
இறைவன் ஐயம் ஏற்றலை அருளாளர்கள் பலரும் கூறி மகிழ்வர் எனினும் இவர் கூறிமகிழும் திறம் பெரிதும் சுவைத்தற்குரிய தாய் உள்ளது. பிச்சை ஏற்க வரும் பரமன் ஓர் இல்லத்திற்குச் சென்று பலிதா (பிச்சைக் கொடு) என்றானாம். அதற்கு அவ்வம்மையார் அதனைச் சூரியனுக்குக் கொடு என்றாளாம். பலிதா என்பதைப்பல் இதா எனப் பிரித்துத் தக்கன் வேள்வியில் கதிரவன் பல் உடைந்து இருப்பதால் அவனுக்கு அதைக் கொடு என்ற பொருளில் இவ்வாறு கூறினாள். அதைக் கேட்ட பரமன் அன்னம் (சோறு) கொடு என்றா னாம். அதற்கு அவ்வம்மையார் அது (அன்னப்பறவை) அயன் ஊர்தி யாதலின் அவனிடம் கேட்க என்றாளாம். அடுத்து அப்பரமன் பெய் (பிச்சை கொடு) என்றானாம். அதற்கு அவ்வம்மையார் ஐ அம்பு எய் எனப் பொருள்கொண்டு அவ்வாறு எய்பவன் மன்மதன் அல்லவோ என்றாளாம். மேலும் பரமன் உண்டி இங்கு அமைந்தது (யாம் விரும்பி யது சோறு) என்றானாம். அதுபொழுதுதான் அவ்வம்மையார் தம்மிடம் வந்து கேட்டவரது உள்ளத்தைத் தெரிந்து கொண்டாளாம். இக்கருத்து அமைந்த பாடல்,
பண்டங்கன் வந்து பலிதா என்
றான்பக லோற்கிடென் றேன்;
அண்டங் கடந்தவன் அன்னம்என்
றான் அயன் ஊர்தி என்றேன்
கொண்டிங் குனையம் பெய் என்றான்
கொடித்தேர் அநங்கன் என்றேன்;
உண்டிங் கமைந்ததென் றாற்குஅது
சொல்ல உணர்வுற்றதே (38)
என்பதாம். இவ்வாறு அமைந்த பாடல்கள் பலவாம். தில்லையிலிருந்து திருவாரூர் சென்ற சேரர் பெருமகனார் அங்கு இருந்த நம்பியாரூரருடன் ஒருவர் ஒருவரில் கலந்து உணர்வுடன் பழகி வந்தனர். ஒரு நாள் இறைவன் திருமுன் சென்று திருமும்மணிக் கோவையை அருளினார்.
திருவாரூர் மும்மணிக்கோவை
அகவல், வெண்பா, கட்டளைக்கலித்துறை ஆகிய மூவகைப் பாக்களாலும் நாற்பது பாடல்களைக் கொண்டு அமைந்தது இந் நூலாகும். அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. திருவருள் சுவையை அகப்பொருள் சுவையோடு கூட்டித்தருவது. ஆரூரேயன்றி, திருச்சிராப்பள்ளி (10,12), திருக்கடவூர், திருமறைக்காடு, (26) ஆகிய திருப்பதிகளும் இந்நூலில் குறிக்கப்பெற்றுள்ளன. அர்ச்சுனன் (4), குமரவேள் (19) ஆகியோர்கள் இடம் பெற்றுள்ளனர். தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் செல்லும் இடமும், அவன் சென்ற பருவமும் தலைவியின் உடலோடு பொருந்த உவமித்திருக்கும் திறன் முதற் பாடலில் கண்டு இன்புறலாம். தலைவன் களிறு வினாவி வருதல் (8), தழை கொண்டு வருதல் (12), செவிலி பின் தேடிச்சேறல் (18), தலைவி பாணனை மறுத்தல் (20), தலைவனின் தேர்வரக்கண்டு மகிழ்தல் (27), முதலிய அகப்பொருள் துறைகள் இடம் பெற்றுள்ளன.
தலைவி தோழியருடன் சிற்றில் இழைத்து, அடாஅதுஅட்ட அமுதம் வாய்மடுத்து இடா ஆயமோ டுண்ணும் பொழுதில் வந்த தலைவன் தன்னையும் விருந்தாக ஏற்று அருளுதியோ என்னத் தலைவி முலைமுகம் நோக்கி இறைஞ்சினளாய் அந்நிலையில் தலைவி யின் உடம்பெல்லாம் அத்தலைமகனாக நிலைபெற்ற தன்மைக்குத், தண்ணீரில் பட்ட எண்ணெய்ச் சிறு துளி, தண்ணீர் முழுவதும் ஆனாற் போன்றது எனக்காட்டியிருக்கும் உவமை அறிதற்குரியதாம்.
நறைகமழ் எண்ணெய்ச் சிறுநுண் துள்ளி
பொங்கு புனல் உற்றது போலென்
அங்கம் எல்லாந் தானா யினளே (28)
என்பது அப்பகுதியாகும்.
தண்ணந் துறைவன் தடவரை அகலம்
கண்ணுறக் கண்டது முதலா ஒண்ணிறக்
காள மாசுணங் கதிர்மதிக் குழவியைக்
கோள் இழைத் திருக்குங் கொள்கை போல
கனைதிகழ் மிடற்று வானவன் மருவும்
அணிதிகழ் அகலத் தண்ண லாரூர்
ஆர்கலி விழவின் அன்ன தோர்
பேரலர் சிறந்தது சிறுநல் லூரே (25)
என வரும் பகுதி, `கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று' (குறள்.,1146) என வரும் திருக்குறள் பகுதியி