010 முதற் பகுதியின் பதிப்புரை

திருச்சிற்றம்பலம்

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. (தி.10 திருமந்திரம் 24)

வடமொழியில் அமைந்த பதஞ்சலியோக சூத்திரத்திற்கு நிகராகத் தமிழில் அமைந்த யோகநூல் திருமந்திரமாகும். இதனை அருளிச் செய்தவர் திருமூலதேவராவார். இவர் அருளிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களையுடையது. ஒன்பது தந்திரங்களைக் கொண்டது.

மந்திரம் என்பதற்கு நினைப்பவர்களைக் காப்பது என்பது பொருளாகும். இந்நூலில் கூறப்படும் செய்திகள் படித்து அநுபவத்தில் பின் பற்றுவாரைக் காக்கும் திறனுடையன ஆதலின் இந்நூல் மந்திரம் எனப்பெற்றது.

தமிழ் மொழியில் யோக நெறியைக் கூறும் சிறப்புடைய நூலாய்த் திருமந்திரம் விளங்குவது நாம் கருதி மகிழத்தக்கதாகும்.

பன்னிருதிருமுறைகளில் பத்தாவதாக விளங்கும் இந்நூலுக்கு விரிவான பொழிப்புரை, விளக்கக் குறிப்புரை எழுதி வெளியிட வேண்டுமெனத் திருவுளம் பற்றிய தருமையாதீனம் 25ஆவது குருமகாசந்திதானம் அவர்களின் அருளாணையை ஏற்று, மும்மூன்று தந்திரங்கள் கொண்ட மூன்று தொகுதிகளாகப் பகுத்துக் கொண்டு, மகாவித்துவான், முனைவர் திரு. சி. அருணைவடிவேல் முதலியார் உரை எழுத முற்பட்டார்கள்.

திருமந்திரம் முதல் தொகுதி வெளி வருவதற்கு முன்னரே, ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணி அவர்கள் காசி சென்று விசுவேசன் திருவடி நீழலிற் கலந்தருளினார்கள்.

ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணி அவர்களின் அருள் வழித் தோன்றலாய் எழுந்தருளிய தருமை ஆதீனம் 26ஆவது குருமகா சந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் இத்திருமுறைப் பதிப்பைத் தொடர்ந்து 1974, 1984, 1994 ஆகிய ஆண்டுகளில் ஷ்ரீ குருஞானசம்பந்தர் குருபூசை விழா மலர்களாக வெளியிட்டருளினார்கள்.

இதுபோது அந்நூல்களை ஏனைய திருமுறைகளுடன் ஒளியச்சில் அழகிய பதிப்புகளாக, ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணி அவர்களின் வெள்ளிவிழா மலராக ஞானசம்பந்தம் பதிப்பகத்தின் சார்பில் 26ஆவது குருமகா சந்நிதானம் வெளியிட்டருளுகின்றார்கள்.

திருமந்திரம் முதல் தொகுதிக்கு இராஜபாளையம் இராம்கோ நிறுவனத் தொழிலதிபர் திரு. பி. ஆர். இராமசுப்பிரமணிய ராஜா நன்கொடை வழங்கியுள்ளார்.

இத்திருமுறைப் பதிப்புக்களைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.

அன்பர்கள் இத்திருமுறையை ஓதியுணர்ந்து இறையருள் பெற்று இன்புறுவார்களாக்.

கட்டளை விசாரணை ஷ்ரீலஷ்ரீ குருமகாசந்நிதானத்தின்

மௌனமடம் உத்தரவுப்படி

திருச்சிராப்பள்ளி. மௌன மகாலிங்கத்தம்பிரான

010 முதற் பகுதியின் முதற் பதிப்பின் பதிப்புரை

"சக்கர வர்த்தி தவராச யோகியெனும்

மிக்கதிரு மூலனருள் மேவுநாள் எந்நாளோ!" - தாயுமானவர், பா.1113

திருமந்திர நூற்சிறப்பு:

திருமூல நாயனார் அருளிச் செய்த, `திருமந்திரம்' என வழங்கும் திருமந்திரமாலை, சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் பத்தாவதாய் விளங்குவது. `தோத்திரம், சாத்திரம்' என்னும் இரண்டனுள் `திருமுறைகள் யாவும் தோத்திரம்' என்பது பெரும் பான்மை பற்றிய முறை. எனினும் திருமந்திரம், உண்மையில் சாத்திரமே. என்றாலும், இதனைத் திருமூலர் தோத்திர முறையிலே தான் கூறுகின்றார். "போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை ... ... ... ... ... கூறுகின்றேன்" (தி.10 பாயிரம் பா.2) "பரமனைப் புக்குநின்று உன்னி யான் போற்றுகின்றேன்" (தி.10 பாயிரம் பா.3)என்பன நாயனார் கூறும் தொடக்க மொழிகள். இப் போற்றுதல் தன்மை, நூல் நெடுகிலும் காணப்படும். எனவே, திருமந்திரம் தோத்திரத்திற்குத் தோத்திரமாயும், சாத்திரத்திற்குச் சாத்திரமாயும் நிற்கும் பெருமையுடையதாம்.

தமிழ் ஆகமம்:

`திருமந்திர நூல் வடமொழியில் உள்ள சைவாகமங்களின் பொருளைத் தமிழால் கூறுவது' என்பதை ஆசிரியரே பாயிரத்தில் தெளிவாகக் கூறுகின்றார். அதனால் சேக்கிழார்,

"தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை

மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்ப" (தி.12 திருமூல. பா.23)

என எடுத்தோதினார். இதனால் திருமந்திரம், `தமிழ் ஆகமம்' எனப் பெறுகின்றது.

சிறப்பு நூல்:

வடமொழியில், வேதம் பொதுநூலாயும், சிவாகமம் சிறப்பு நூலாயும் விளங்குகின்றன. அதுபோலத் தமிழில் திருக்குறள் பொதுநூல்; திருமந்திரம் சிறப்பு நூல். வடமொழியில் வேத சிவாக மங்களில் அனைத்துப் பொருள்களும் அடங்கி உள்ளன. அதுபோலத் தமிழில் திருக்குறளிலும் திருமந்திரங்களிலும் அனைத்துப் பொருள்களும் அடங்கி உள்ளன. இக் கருத்தைக்கொண்டே ஔவையார்,

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகம்என் றுணர். -நல்வழி பா.40

என்று அறிவுறுத்தினார். திருமூலரை "நம்பிரான்" (தி,7 ப.35 பா.5)எனச் சுந்தரரும் குறித்தல் வாயிலாகத் திருமந்திரத்தின் உயர்வை உணர்த்தினார்.

ஆகமப் பொருள்:

`திருமூலர் வடமொழிச் சைவாகமத்தைத் தமிழிற் செய்தார்' என்பதனால். `அவ் ஆகமங்களை அவர் அப்படியே மொழி பெயர்த்தார்' என்பது பொருள் அன்று; `ஆகமங்களின் பொருளைத் தமிழில் தாம் ஓர் ஒழுங்கில் வைத்துக் கூறினார்' என்பதே பொருள். சேக்கிழாரும் "ஆகமப் பொருளை" எனக் கூறியிருத்தல் நினைவிற்கொள்ளத் தக்கது.

ஆகமப் பொருளை இங்ஙனம் அமைத்து நூல்செய்யப் புகுந்த நாயனார், நூலின் ஒவ்வொரு பகுதிக்கும், `தந்திரம்' எனப் பெயர் தந்து, ஒன்பது தந்திரங்களாகச் செய்தருளினார். `நூல்' எனப் பொருள் தரும் `தந்திரம்' என்பது ஆகமங்கட்கும் பெயராய் வழங்கும். அதனை நாயனார் ஆகமப் பொருள் ஒழுங்கிற்குப் பெயராக அமைத்தார்.

`திருமூலருக்கு ஆசிரியராகிய நந்திதேவர் சிவபெருமானிடம் ஒன்பது ஆகமங்களைக் கேட்டார்' என்று திருமூலர் இந்நூலின் பாயிரத்தில் கூறினார். அஃதே பற்றி, `திருமந்திரத்தின் ஒவ்வொரு தந்திரமும் அந்த ஆகமங்களில் ஒவ்வொன்றின் பொருளையே கூறுகின்றன' என்று கருதுவோரும் உளர். ஆயினும் எண் ஒற்றுமை பற்றியே அவ்வாறு கூறுதல் உண்மை ஆகாமை, மேற்குறித்தவாற்றால் விளங்கும்.

நாற்பொருள் நலம்:

நூல்களால் மக்கள் அறியத்தக்க பொருள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்குமாம். பொதுநூல் அவைகளைப் பொதுப் படக் கூறும். திருக்குறள் அப்படித்தான் கூறுகின்றது. சிறப்பு நூல் அவைகளைச் சிறப்பாகக் கூறும். ஆகவே, திருமந்திரம் அவற்றைச் சிறப்பாகக் கூறுகின்றது. எனினும், திருக்குறள் அறத்தை முதன்மை யாகக் கூறும் அறநூல் ஆதலின், அதில் வீடு சிறிதளவே கூறப்பட்டது. திருமந்திரம் வீட்டு நூல் ஆதலின், இது அறம் முதலியவற்றைச் சிறுபான்மை கூறி, வீட்டினையே பெரும் பான்மையாக விளக்குகின்றது. எனவே, திருக்குறள் முற்ற முடிந்த பொதுநூல் ஆதல்போலத் திருமந்திரம் முற்ற முடிந்த சிறப்பு நூலாகின்றது.

பாயிரமும் நூல் தொடக்கமும்:

திருமந்திரம், முன்னே பாயிரத்தைக் கொண்டு விளங்கு கின்றது. பாயிர வகை பலவற்றுள் இது தற்சிறப்புப் பாயிரமாகும். அஃதாவது, நூலாசிரியர் தாமே தம் நூலிற்குரிய சிலவற்றைக் கூறும் பாயிரம். இதில் நாயனார் முன்னோர் மரபுப்படி கடவுள் வாழ்த்து, நூல் நுதலிய பொருள், அவையடக்கம் என்பனவற்றுடன், தமது வரலாறு, தமது உபதேச பரம்பரை, அவற்றிற்குரிய திருமடங்களின் வரலாறு என்பவற்றையும் தாமே கூறியிருத்தல் மிக்க பயன் தருவதாய் உள்ளது.

சிவநெறிச் சிறப்பு நூலாகிய இந்நூல், சிவபெருமானது தன்மையை விளக்குகின்ற சிவ பரத்துவம், அவன் உலகிற்கு அருளிய பொது நூல் சிறப்பு நூல்களாகிய வேத சிவாகமங்களின் சிறப்பு அவற்றுள் வேத சாரமாகிய சிவாகமப் பொருள் முடிபைச் சிறப்பாக உணர்த்தும் உபதேசம் என்பனவற்றை முதலிற்கொண்டு, பின் ஏனைய பொருள்களைக் கூறிச் செல்கின்றது. முதலில் உள்ள சிவபரத் துவத்தைச் சார்ந்து திரிமூர்த்திகளின் நிலைகளும் கூறப்படுகின்றன.

முதல் மூன்று தந்திரப் பொருள்:

ஒன்பது தந்திரங்களுள் முதல் தந்திரம் பொதுவாக அறங் களைக் கூறுவது. இதில் பல்வேறு நிலையாமைகள், கொல்லாமை, புலால் உண்ணாமை, அந்தணர் ஒழுக்கம், அரசர் ஒழுக்கம், அறம் (ஈகை) செய்தல், அறம் செயாக்குற்றம், அன்புடைமை, நடுவு நிலைமை, கள்ளுண்ணாமை முதலியவை கூறப்படுகின்றன. `நல்குரவு (இன்மை), கல்வி, கல்லாமை, கேள்வி' என்னும் பொருட் பகுதிகள் இங்கு ஏற்ற பெற்றி கூறப்படுகின்றன. பிறன்மனை நயவாமை, பொது மகளிரைச் சேராமை இவை இன்பம் பற்றியவை எனலாம்.

இரண்டாம் தந்திரம் புராண மரபாகும். இதில் புராண வரலாற்றின் தத்துவங்கள், இறைவனது ஐந்தொழில்கள், திருக்கோயில் முறைமை, தீர்த்தச் சிறப்பு, தானம் செய்தற்கு உரிய பாத்திரம் இவைகள் கூறப்படுவதுடன், படைப்பின் விளக்கமாகக் கருப்பக் கிரியையும், மூவகைச் சீவ வருக்கமும் கூறப்படுகின்றன.

மூன்றாம் தந்திரம் யோகத்தை விரித்துக் கூறுகின்றது. யோகத்தின் உறுப்புக்களாகிய இயமம், நியமம் முதலிய எட்டு, பிராசாத யோகம், யோகத்தின் பயன்களாகிய அட்டமாசித்தி, காயசித்தி, ஆயுள் பரீட்சை, முதலியவற்றுடன், யோகத்தின் பல்வேறு வகைகள் ஆகிய பலவும் இத்தந்திரத்திலே விரிவாய்க் காணப்படும்.

திருமந்திரத்தின் முதல் மூன்று தந்திரங்கள் இவ்வாறு அமைந்துள்ளன.

நூற்பொருள்:

சைவாகமங்களிற் சொல்லப்படும் பொருள்கள் `சரியை, கிரியை, யோகம், ஞானம்' என நான்கு. அந்நான்கும் தமிழ் ஆகம மாகிய திருமந்திரத்தில் பொருந்தியிருத்தல் இயல்பு. அவற்றுள் சரியை கிரியைகளின் பகுதியாகப் பலவகை மந்திரங்களும், எந்திரங்களும், ஆசிரியர் மாணவர்களின் இயல்புகள், சம்பிரதாயங்கள் முதலி யனவும், சமய பேதங்களும், பிறவும் விரித்துக் கூறப்படுகின்றன. யோகம் மேற்கூறியவாறு மிக விரித்துக் கூறப்படுகின்றது. ஞானத்தின் பகுதிகளாகிய பதி, பசு, பாச இயல்பு, தத்துவங்கள், அவத்தை பேதம், இறைவன் திருக்கூத்து உண்மை முதலியன விரிக்கப்படுகின்றன.

திருமந்திர உரை:

இவ்வாறு திருமந்திரம் அனைத்துப் பொருள்களையும் கூறினும், யோகத்தையே சிறப்பாகக் கொண்ட ஒரு யோக நூலாகவே உள்ளது. இதனுடன், இந்நூல் பெரும்பாலும் சித்தர் முறையில் கருத்துக்களைப் புதிர்போல மறைபொருளாகவே கூறுகின்றது. இன்னோரன்ன காரணங்களால் இந்நூற்கு உரை காண்பது பிற நூல்கட்கு உரை காண்பதுபோல இல்லாமல், மிக அரிதாய் உள்ளது. எனினும், இதற்கும் பகுதியாகவும், முழுமையாகவும் உரைகள் வெளிவந்துள்ளன.

திருமந்திரம் `இரும்புக் கடலை' என்று சொல்லத்தக்க வகையில் இருப்பினும், அதற்கு ஓரளவேனும் உரை காணாவிடின், இந்த அரிய நூலால் நாம் எப்படித்தான் பயன் அடைவது? எந்த உயரிய நூலின் உரையும், அதன் முழு நிலையை எட்டி விடுவதில்லை; அதை எட்டுவதற்கு உரைகள் ஒரு துணையாகவே இருக்கும். அந்நிலை திருமந்திர உரைகளில் குறைவாய் இருக்கலாம். ஆனால், `உரையால் பயனே இல்லை' என்று சொல்லிவிட முடியாது.

அநுபவ நூல்:

சிலர், `திருமந்திரம் யோகநூல்; சிறந்த அருள் அநுபவநூல்; அதற்கு யார் உரை எழுதமுடியும்?' என்றுகூறி, `அதற்கு உரை சொல்லவோ எழுதவோ புகுவதே ஒரு தவறான செயல்' என்பது போலக் கூறுவர். திருமந்திரம் ஒன்றுதான் அருள் அநுபவ நூல் என்பதில்லை. மற்றும் எத்தனையோ அநுபவ நூல்கள் உள்ளன. தேவார திருவாசகங்கள் மட்டும் என்ன? அநுபவ நூல் அல்லவா? அவற்றிற்கு உரை சொல்லாமலும், எழுதாமலுமா இருக்கின்றோம்? ஆயினும், திருமந்திர உரை பற்றி மேற்கூறியவாறு சொல்கின்றவர்கள், மற்றைய அருள் நூல்களின் உரைபற்றி அவ்வாறு கூறுவதில்லை.

எந்த அநுபவ நூற்கும் நாம் அறியப் புகுவது சொற் பொருளே. அநுபவப் பொருள் அன்று. அநுபவம் சாதனத்தில் நின்று பெற வேண்டிய ஒன்று. சொற்பொருளை அறிதல், சாதனத்திற் செல்லத் தூண்டும். ஆகவே, சொற்பொருளையே அறிய முற்படாவிடின், சாதனத்திலே செல்ல இயலாது, இது திருமந்திரத்திற்கும் ஒத்ததுதான்.

மற்றைய அருள் நூல்களில் அவற்றின் அநுபவம் நமக்கு விளங்காவிடினும், சொற்பொருள் ஓரளவேனும் விளங்கும். திருமந்திரத்தில் அதுவும் மிக அரிதாகின்றது. அதுதான் இதில் உள்ள ஓர் தனித்தன்மை. அது பற்றியே, `மற்றைய நூல்களுக்கு உரை எழுதினாலும், திருமந்திரத்திற்கு எழுதலாகாது' என்பது போலக் கூறுதல் பொருந்துவதாகாது.

திருமந்திர மூலம்:

திருமந்திர நூலைப் பற்றிச் சொல்லுமிடத்து மற் றொன்றையும், வருத்தத்துடன் குறிப்பிட வேண்டி உள்ளது. அது, சைவர்களால் - சிறப்பாகச் சித்தாந்த சைவர்களால் - இந்நூலினது மூலம் தக்க வகையில் பாதுகாக்கப்படவில்லை என்பதே. பாடத் திரிபு, இடைச் செருகல் என்பன பண்டைப் பெருநூல்கள் பலவற்றில் சிறிது சிறிது உள்ளன எனக் கருதப்படுகின்றது. ஆயினும், திரு மந்திரத்தில் அவை மிகுந்துள்ளமை வெளிப்படையாகவே காணப்படுகின்றது. இதனைத் திருமந்திர உரையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பதிப்பாளர்கள் அனைவருமே ஒப்புக்கொள்கின்றார்கள்.

பாடல் தொகை:

முதலாவது திருமந்திரப் பாடல்களின் தொகையிலே மாறுபாடு. இத் தொகை `மூவாயிரம்' என்பது, வலிய அகச்சான்று புறச்சான்றுகளால் திட்டமாக அறியப்பட்டது. எனினும் பதிப்புக் களில், முறைப்படி அமைந்தவையாக 3047 பாடல்கள் பதிப்பிக்கப்பட்டு `அதிகப் பாடல்கள்' என்று பல பாடல்கள் காட்டப்படுகின்றன. `முறைப்படி உள்ளவை' என்பவற்றிலே ஒன்றே பல இடங்களில் வந்த பாடல்கள் பல. இன்னும், பிற நூல்களில் தக்க உரையாசிரியர்களால் `திருமந்திரம்' எனக் காட்டப்பட்ட பாடல்கள் பதிப்புக்களில் காணப்படவில்லை. முறைப்படி அமைந்தவையாக உள்ள பாடல்களில் காணப்படும் பாட வேறுபாடுகள் சிறிய அளவின அல்ல; மிகப் பெரிய அளவின. முழுமையான இடைச்செருகற் பாடல்களும் பல.

யாப்பு வகை:

திருமூல தேவர் தமது திருமந்திரம் முழுவதையும் ஒருவகையான யாப்பிலே அமைத்துள்ளார். அவ் யாப்பு நாற்சீரடி நான்கு கொண்டது முழுவதும் பெரும்பான்மை இயற்சீர் வெண்டளையும், சிறுபான்மை வெண்சீர் வெண்டளையும் வர, பிற தளைகளைக் கொள்ளாதொழிவது. இதனைக் `கலி விருத்தம்' எனல் வேண்டும். இவ்வாறான ஒரு கலி விருத்தம் பிற நூல்களில் இல்லாமையும் நோக்கத்தக்கது. இந்த யாப்பு வரையறைக்கு மாறாகச் சில பாடல்கள் பதிப்புக்களில் உள்ளன. மற்றும் சொல் நடையாலும், பொருளாலும் `நாயனார் திருமொழியல்ல' என எளிதில் அறியத்தக்க பாடல்களும் பல உள்ளன. எனவே, திருமந்திரத்தின் மூலத்தை உள்ளவாறு துணிதலே அரிதாகின்றது. எனினும், எந்த வகையிலேனும் ஒரு துணிவு கொள்ள வேண்டுவதும் இன்றியமையாததே.

வைப்பு முறை:

இனி, பாடல்களின் வைப்பு முறைகளும், இடங்களும் பிறழ்ந்து காணப்படுதலையும் அறிஞர்கள் உணர்கின்றார்கள். இன்னோரன்ன இடர்ப்பாடுகள் இருப்பினும், அரிய பெரிய நூல் - திருமுறை - ஆகிய திருமந்திரத்திற்குப் பொருள் காண முயலாதிருத்தல் பொருந்துவதாகாது. அதனால்தான் இந்நூற்குப் பகுதியாக வும், முழுமையாகவும் பல உரைகள் வெளிவந்துள்ளன.

இவ்வுரை வரலாறு:

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீன ஞான பீடத்தில் 25ஆவது குருமகாசந்நிதானமாய் எழுந்தருளியிருந்த கயிலை ஷ்ரீலஷ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருமுறையில் ஒரு தனிப்பட்ட ஈடுபாடு கொண்டவர்கள். தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் அனைத்தையும் அவர்கள் சென்று தரிசித்தார்கள். கயிலை யாத்திரையை மேற்கொண்டு கயிலாய தரிசனம் செய்து, `கயிலைக் குருமணி' என்று அனைவராலும் போற்றப் பெற்றார்கள். அவர்கள், திருமுறை பன்னிரண்டும் தனித்தனிப் புத்தகமாகச் சிறந்த குறிப்புரை, ஆய்வுரைகளுடன் வெளிவந்து பலர்க்கும் பயன் தரல் வேண்டும் எனத் திருவுளம் பற்றினார்கள். அதனால் அவர்கள் காலத்திலே ஒன்பது திருமுறைகள் அவ்வண் ணமே தருமை ஆதீன வெளியீடாக வெளிவந்தன. அவைகளில் ஆறாந் திருமுறை முதலாக நான்கு திருமுறைகளுக்குக் குறிப்பு எழுதும் அரிய வாய்ப்பினை அடியேனுக்கு அளித்தருளிய அவர்களது அருட்பெருக்கினை என்றும் நினைந்து நினைந்து போற்றும் கடப்பாடு உடையேன்.

திருமந்திரத்தின் மூவாயிரம் பாடல்களும் `பத்தாம் திருமுறை' என்று ஒரு திருமுறையாகவே இருப்பினும், அன்பர்கள் எளிதில் எடுத்துப் படித்துப் பயனடைவதற்கு ஏற்புடையதாக, மூன்று தந்திரம் - ஏறக்குறைய ஓர் ஆயிரம் பாடல் - ஒரு பகுதியாக வெளிவரத் திருவுளம் பற்றி, அதற்குக் குறிப்பெழுதும் பணியினையும் அடியேனுக்கே அவர்கள் பணித்தருளி, 1970ஆம் ஆண்டில் பாயிரப் பகுதியையே ஒரு வெளியீடாகச் செய்வித்தார்கள். ஆயினும், அப்பாயிரம் உட்பட முதற்பகுதி முடிவதற்கு முன்னே அவர்கள் காசிக்கு எழுந்தருளி, அத்தலத்திலே கயிலைப் பெருமானது கழற்போதினை எய்தினார்கள்.

அவர்களது அருள்வழித் தோன்றலாய் ஆதீன ஞான பீடத்து அமர்ந்து இதுபொழுது அருளாட்சி செலுத்தி வரும் 26ஆவது குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் அத் திருமந்திரப் பணியை அடியேன் தொடர்ந்து செய்யத் திருவுளம் பாலித்தார்கள். குருவருளையும், திருவருளையும் துணைக்கொண்டு அப்பணியை இயன்ற அளவில் முதற் பகுதிக்குச் செய்துள்ளேன்.

உரை அமைப்பு:

மந்திரங்களின் திரண்ட பொருள், யாவரும் எளிதில் உணரும் வண்ணம் தெளிவுரையாக முதலிலும், பின் அப்பொருள், மூலத்தில் அமைந்துள்ளமையை அறிதற்கு வேண்டிய குறிப்புக்கள் குறிப்புரை யாகவும் இதன்கண் தரப்பட்டுள்ளன. மூல பாடம், மந்திரங்களின் முறைவைப்பு ஆகியவைகள் பொருள் அமைதி முதலிய பல துணைகள் பற்றி ஏற்ற பெற்றியால் கொள்ளப்பட்டன. இவை பற்றிக் கருத்து வேறுபாடுகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. இவ் விடங்களில், ஏடு பெயர்த்தெழுதுதல், அச்சிடுதல் முதலிய காலங்களில் நேர்ந்த எழுத்துப் பிழைகள் எனத் தெளிவாகத் தோன்றியவை தவிர ஏனையவை, முன்னைப் பதிப்புக்களில் உள்ளவாறு காட்டப்பட்டுள்ளன. மந்திரங்களின் பொருள் தொடர்பான பிற செய்திகளும் சில இடங்களில் தந்துரைக்கப் பட்டிருத்தல் பலர்க்குப் பயன்படுவதாகலாம்.

இவ்வகையில் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தின் முதற் பகுதி, தருமை ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுளப் பாங்கின் வண்ணம், ஆதீன முதற்குரவர் ஷ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளது ஆனந்த ஆண்டுக் குருபூஜை விழாவின் அணி மலராக இதுபொழுது வெளிவருகின்றது.

நன்றி நவிலல்:

இப்பகுதிக்குத் தமிழ்நாடு அரசு திட்டக்குழு, பொருளாதார ஆலோசகர், டாக்டர். திரு. பா. நடராசன், எம்.ஏ., டி.லிட். அவர்கள் மதிப்புரை வழங்கியுள்ளார்கள். இவர்கள் திருமந்திர ஆராய்ச்சியை மேற்கொண்டு, இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள்.

தருமையாதீனத் தமிழ்ப்புலவரும், ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணி அவர்களால் "சித்தாந்தக் கலைச் செல்வர்" என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றவரும் திருவாவடுதுறை ஆதீன வித்துவானும் ஆகிய திரு. க. வச்சிரவேல் முதலியார் பி.ஏ., எல்.டி., அவர்கள் இதற்கு விரிவானதோர் ஆராய்ச்சி முன்னுரை அளித்துள்ளார்கள். சைவசித்தாந்தத்தில் தனிப்பெரும்புலமை வாய்ந்த இவர்களது முன்னுரை, இவ் வெளியீட்டின் பொருள் நிலை முழுதும் யாவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும் வண்ணம் இன்றியமையாத மூலங்களுடன் அடைவுபட உணர்த்துவதாய் உள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறை வித்துவான். திரு. க. வெள்ளைவாரணனார் அவர்கள் திருமூலரது வரலாற்றை ஆராய்ச்சிக் குறிப்புடன் எழுதியுள்ளார்கள். இயல்பாகவே மதிநுட்பம் நூலோடு உடையராய்ப் பன்னிரு திருமுறைகளைப் பற்றியும் சிறந்த வகையில் ஆய்வு செய்து நூலாக வெளியிட்டுள்ள இவர்கள், இவ்வரலாற்று ஆராய்ச்சியையும் இவ்வெளியீட்டிற்கு அளித்துள்ளார்கள். இவர்கள் அனைவர்க்கும் ஷ்ரீ சொக்கநாதப் பெருமான் திருவருளும், ஷ்ரீலஷ்ரீ குருமகா சந்நிதானத்தின் அருளாசியும், எல்லா நலங்களையும் இனிது வழங்குவனவாகும்.

தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரிப் பேராசிரியர், வித்துவான் திரு. இரா. செல்வக்கணபதி சொல்லதிகாரச் சுருக்கத்தைத் தொகுத்து அளித்துள்ளார். ஷ்ரீ குருஞானசம்பந்தர் உயர்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர், வித்துவான் கா. ம. கண்ணப்பன் இவ்வெளியீட்டில் உள்ள பாட்டுகளின் முதல் குறிப்பு அகராதியைத் தொகுத்து அளித்துள்ளார். ஆதீனப் பல்கலைக் கல்லூரிப் பொறுப்பு முதல்வர், திருநெறிச்செம்மல், வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகரும், பேராசிரியர், சிரோமணி, வித்துவான் திரு. வி. சபேசனாரும் இவ்வெளியீடு நன்கு வெளிவருவதற்குப் பிழை திருத்தம் முதலியவைகளைச் செய்து உடனிருந்து உதவினார்கள். `ஞானசம்பந்தம்' அச்சகப் பணியாளர்கள் பலரும் இந்நூற் பதிப்பு நன்கு அமையப் பணியாற்றியுள்ளார்கள். இவர்களுக்கும் செந்தமிழ்ச் சொக்கர் திருவருளும் தருமைக் குருமணியின் தண்ணருள் ஆசியும் உரியன.

மூவாயிரம் ஆண்டு சிவயோகத்திலிருந்து ஆண்டிற்கு ஒரு மந்திரமாகத் திருமூலதேவர் அருளிச்செய்த திருமந்திரத்தின் முதற்பகுதியாகிய இதனைப் பலரும் ஷ்ரீலஷ்ரீ குருமகா சந்நிதானத்திற்கு நன்றி செலுத்தும் கடப்பாட்டுடன் பெற்றுக் கற்று உணர்ந்து, நற்பயன் பலவும் நனிமிகப்பெற்று உய்வார்களாக.