சிவமயம்

010 முன்னுரை

தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்

திருமூலர் என்னும் தவராச யோகியார் அருளிச்செய்த திருமந்திர மாலையாகிய தமிழாகமம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பத்தாம் திருமுறையாக வைத்துப் போற்றப் பெறுவது. இது தேவார காலத்திற்கு முற்பட்டது; பிற்காலத்து இறை உயிர் தளை என்னும் மேலான அடிப்படைப் பொருள்களை வரையறை வகையான் உணர்த்த எழுந்த அருள் ஞான நூல்களுக்கு மூலமாகவுந் தோன்றுகிறது.

கடவுள்நெறி நின்று ஒழுகி உயர்வற உயர்நலன் பெறக் கருதுவோர்க்கு இன்றியமையாது வேண்டப்படுவன - ஒழுக்க நெறி விதிவிலக்கு, இறைவன் பொருள் சேர் புகழுரைக்கும் போற்றருள் மாலைகள், அடிசார்ந்தார் வரலாறு, அடிப்படைப் பொருட்பெற்றி என்பவை. இவற்றுள் முதலும் முடிவுமாயுள்ளவற்றை விளங்கக்கூறி ஏனை இரண்டனையும் ஏற்ற பெற்றி அடங்கக்கொண்டு நிலவும் தனிப்பெரு வீட்டியல் நூல் இது; தந்திரம் எனப்படும் பெரும் பகுப்புக்கள் ஒன்பதும், தன்னை ஓதி உணரப்புகுவார் முதற்கண் அறியவேண்டிய பருப்பொருள்களை உணர்த்தும் பாயிர வியலும் உடையது. இவற்றுள் பாயிரவியலும் முதன் மூன்று தந்திரங்களும் இப்பதிப்பில் தெளிவுரை குறிப்புரைகளுடன் வெளிவருகின்றன.

இதனைச் சைவவுலகும் தமிழுலகும் பெற்றுப் பயன் கொள்ளுமாறு திருவுளம்பற்றி வெளியீடு செய்வது, சிவநெறியின் புண்ணியக்கண் இரண்டெனச் சோணாட்டில் இறைவன் திருவருளால் நிறுவப் பெற்று நிலவும் சைவ ஆதீனங்களுள் ஒன்றாகிய தருமை ஆதீனமாகும். இவ்வாறே இதற்குமுன் முதல் ஒன்பது சைவத் திருமுறைகளையும், வேறுபல அரிய உயரிய வெளியீடுகளையும் ஒழிவின்றிச் செய்து பொதுமக்களது போற்றுதலையும் பாராட் டினையும் பெற்று வருவது இத்தெய்வ ஆதீனம் என்பது நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தற்கு உரியது.

உரையைத் தம் கல்வி, கேள்வி, ஆய்வு, நுண்ணுணர்வு என்பவற்றின் பயனாக எழுதியுள்ளவர் இவ்வாதீனப் புலவர், மகாவித்துவான் திரு. சி. அருணைவடிவேல் முதலியார் அவர்கள் ஆவர். இவர்தம் நற்பண்புகளைத் தமிழ்உலகம் நன்கு அறியும். உரை நூலின் பெருமைக்குத் தக்கபடி செந்தமிழ்த் திறம் திட்பம் நுட்பம் செறிந்து பரிமேலழகர், மாதவச் சிவஞான சுவாமிகள் என்போரை நினைவூட்டும்வகையில் எண்ணி எழுதப்பட்டுள்ளது. இந்நலன்கள் படித்து இன்புறத்தக்கவை. ஆங்காங்கு வரும் இலக்கணக் குறிப்புக் களும், தமிழாக்கச் சொற்களும் பிறவும் தமிழ் ஆய்வார்க்கு நல் விருந்து ஆகும். எடுத்துக்காட்டாகச் சில உரைப்பகுதிகள் இங்கே தரப்படுகின்றன.

1. மூன்றாம் மந்திரம், `நக்கனென் றேத்திடும் நம்பனைப் - புக்குநின்றுன்னியான் போற்றுகின்றேனே' (தி.10 பாயிரம் பா.3) என்பதன் குறிப்புரை "திகம்பரன் என்னும் பொருட்டாகிய நக்கன் என்பது வியாபகனாதலைக் குறித்து ஏனையோரால் ஏத்தப்படுதற் குரிய இயைபுணர்த்தி நின்றது. நம்பன் - விரும்புதற்குரியவன், பழையோன் என்றும் ஆம்"

புக்கு நின்று என்றது அதீத நிலையையும், உன்னி என்றது துரிய நிலையையும் குறித்தவாறு. உன்னுதல் அன்றிப் புகாதே நிற்கும் துரிய நிலையிலே நிற்பின் சிவானந்தத்தை உணர்தல் கூடாமையால், புக்கு நின்று என்றும், புக்கு உன்னுதல் ஒழித்த அதீத நிலையிலே நிற்பின் மனவாக்கினால் போற்றுதல் கூடாமையால், உன்னி என்றும் கூறினார். இதனால், தமது அநுபவ நிலையை உணர்த்திய வாறாயிற்று."

2. `புரையற்ற பாலினுள் ... ... ... கலந்த சத்தாமே' (தி.10 பா.133) என்னும் மந்திரத்தின் உரை:

"குற்றமற்ற பாலில் உள்ள நெய் அப்பாலினுள் வேற்றுமை யின்றிக் கலந்து நிற்றல்போல, ஞானாசிரியன் அறிவுறுத்த சொல்லை அலைவற்ற உள்ளத்தில் வேற்றுமையற்றுக் கலந்து நிற்குமாறு உணர்ந்து அப்பொருளில் அழுந்தி நிற்பவர், தம் உடம்பு இங்கு வீழ்ந்த பின்னர் அவரது ஆன்மா, தன் இயற்கை வியாபகத்தைப் பெற்று என்றும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்ற மெய்ப்பொருளேயாய் விடும்"

"குற்றம் என்றது வேற்றுப் பொருளாகிய பிரையை ... ... ... ... சத்து - மெய்ப்பொருள், சிவம். இக்கலப்பு முன்பே உள்ளதன்றிப் புதுவதன்றாகலின், அஃதியற்கையாய் விடும் என்றற்குக் `கலந்த சத்தாமே' என்றார். `அன்னிய மின்மையின் அரன் கழல் செலுமே' என்றார் மெய்கண்ட தேவரும் (சிவஞானபோதம்). இவ்வாறு சிந்தித்து உரை எழுதப் பட்டமை பாராட்டிற்கு உரியது. `தங்கிமிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்' (பா.26) என்றதன் தாற்பரியத்தைப் பின்வருமாறு கொள்வது ஆராயத்தக்கது. `பலதலைப்பட்ட உணர்வுடையராய்ப் பரந்து சென்று ஆராயும் உலகர் பொருட்டு ஆரிய மொழியும், அவ்வாறு இன்றி ஒரு தலைப்பட அமைந்த உணர்வுடையராய் ஒழுக்கத்தில் நின்று பயன் பெற விரும்பும் நல்லோர் பொருட்டுத் தமிழ் மொழியுமாக இரு மொழியை இறைவன் சொல்லியருளினான்" (பா 109இன் உரை)

இரண்டாந் தந்திரத்தில் புராண வரலாறுகள் கூறும் பகுதிக்கு உள்ள உரை அதன் அருமையைத் தெளிவிக்கும்.

இனி இவ்வெளியீட்டில் உள்ள திருமந்திரப் பகுதிகளின் பொருள் நிலையை முன்னர் உளங்கொள்ளுதல் பயன் உடைத்தாம்.

முதற்கண் காப்புச் செய்யுள் உள்ளது. சிலை முதலியவற்றில் செய்து மாடத்துள் வைத்து வழிபடுவதுபோல, உணர்வைக் கொண்டு ஐந்து கரமும் ஆனை முகமும் ஒற்றைக்கொம்பும் உடைய மூத்த பிள்ளையாருடைய திருவுருவத்தை அறிவில் பிரதிட்டை செய்து வழிபடச் செய்கிறது செய்யுள்.

பின்னர் வருவது கடவுள் வாழ்த்து. சமய ஒழுக்கம் ஞானநெறி எனவும், ஒழுக்கநெறி (கிரியை) எனவும் இரண்டாய் அடங்கும். ஞானநெறி தத்துவக்கொள்கை எனப்படும்; சமய ஒழுக்கமே கிரியை ஆகும். பிறபல சமயங்களில் தத்துவக் கொள்கையில் முடித்துக் கூறப்படும் பொருள் முதற்பொருள் (முழுமுதல்) எனவும், சமய ஒழுக்கத்திற்குரிய முதல்வன் தெய்வம் (கடவுள்) எனவும் வேறுவேறாகக் கருதப்படுதல் காணப்படுகின்றது. ஆயின் சித்தாந்த சைவத்தில் ஞானநெறியில் கொள்ளப்படும் முதற்பொருளும், ஞானம் கிடைத்தற்கு நிமித்தமாகிய சமயநெறியில் கொள்ளப்படும் வழிபடு தெய்வமும் ஒன்றேயன்றி வேறு வேறு அல்ல; இது கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தின் கருப்பொருள் ஆகும். ஆதலால், பின்வருமாறு தொடங்குகின்றது இவ்வதிகாரம்:-

நம் அறிவிற்கு எட்டாத நிலையில் உள்ள சிவபிரான் வேதங்களால் ஒன்று எனக்குறிக்கப்படும் பரம்பொருளே; அவன்தன் அருளோடு கூடிநின்று சிவம், சத்தி (பதி, பத்நீ) என இரண்டும் ஆவன்; இலயம், போகம், அதிகாரம் என்னும் நிலைகளில் (அயன், அரி, அரன் என்னும் மூர்த்திகளில்) மூன்றாய் நின்றனன்; அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களை உணர்ந்தான் (உணர்ந்து உணர்த்தினான்); அந்நிலையில் ஐம்பொறிகளை வென்ற அருந்தவத்தோனாய் விளங்கினன்; வன்னம், பதம், மந்திரம், தத்துவம், புவனம், கலை என்னும் ஆறு வகையாக விரிந்தவனும் அவனே; அண்டத்தில் ஏழுலகையும் பிண்டத்தில் மூலம் முதல் முடிவரை (ஆறு ஆதாரம் சகச்சிராரம்) உள்ள ஏழு நிலங்களையும் கடந்து மேற்சென்றவனும் அவனே; ஐம்பெரும்பூதம் ஞாயிறு, திங்கள் உயிர் என்னும் எட்டனையும் தன் வடிவாக உணர்ந்து இருந்தனன்; அவனை உணர்ந்து எட்டு.

தத்தமக்கு இனிய உயிரில் உயிர்க்கு உயிராய் நிலை பெற்றோனும், உலகிற்கும் உறுதி பயக்கும் அம்மைக்கும் நாதனும், தென்றிசைத் தலைவனாகிய கூற்றுவனைக் குமைத்தோனும் ஆகிய அம்முதல்வனைப் போற்றி செய்து அவன் பொருள்சேர் புகழ் கூறு கின்றேன். முதல்வன் தான் கெடுதலின்றி உலகுயிர்களின் வேற்றுமை தோன்றாதபடி கலந்து நின்றவன். தேவர்கள் நக்கன் (உலக உருவினன்) என்று ஏத்தப்படுபவன். அடுத்து நின்றோரும் இன்ன தன்மையன் என்று அறியவொண்ணாத மேலோன். இவனைத் திரு முன் புகுந்து நின்று நினைந்து போற்று கின்றேன். சிவனோடு ஒக்கும் தெய்வந் தேடினுமில்லை; அவனோடு ஒப்பார் இங்கு யாவருமில்லை; அவன் பொன்னார் மேனியும் அங்கியை ஒத்து மின்னும் சடை முடியும் உடையவனாய் நெஞ்சக் கமலத்தில் தியானிக்கப் படுபவன். அவனே எல்லாத் தேவருமாய் நின்று அருள் புரிபவன்; அவனை முதல்வனாகக் கொள்ளாத ஒரு தவமும் இல்லை; மூவர் செயலும் அவன் ஆணையின்வழி நடப்பனவே; அவன் துணையின்றி வீடு சேர்தல் இல்லை. அவன் தன் ஆணைவழி நில்லாதாரைத் தெறுதலினும் பாச மாகிய அழுக்கைப் போக்குவதிலும் தீயினும் வெய்யன். தன் ஆணை வழி நிற்போர்க்குக் கருணைசெய்யும் போது நீரினும் குளிர்ச்சியை உடையவன் (உருத்திரசிவன்). இங்ஙனம் ஆயினும் அவனை அறிந்து ஒழுகுவார் இலர். அவன்தன் அன்பர்க்குக் குழந்தைபோல் உடன் பழகுபவன்; தாய்போல நன்மையை விளைப்பவன். பின் தாழ்சடையன்; எம்மால் தொழப்படும் அவன் அட்ட மூர்த்தியாய் உளன். அவனால் தொழப்படுவார் ஒருவரும் இல்லை.

கடவுள் வாழ்த்து இவ்வாறு சென்று, பின்வருமாறு முடி கின்றது.

அடியார்கள் துதிக்கும் தேவதேவனை முடியால் வணங்கி, அகத்தே நினைந்து, இம்மை மறுமை நலன்களைக் கொடுக்கும் மேலவர்க்கும் மேலோன், எனக்குத் தந்தை, ஒளிவளர் விளக்கு எனச் சொல்லி அவனையே விரும்பி நின்றேன். பதி பசு பாசங்கட்குத் தலைவனை எண்ணி, பசுத்துவத்தினும் பாசத்தினும் நீங்கித் திருவருளில் அடங்க வல்லார்க்குப் பசுத்துவ பாசங்களால் வரும் பிறவிக் கடலை நீந்தி, அக்குற்றங்களின் வாதனையைக் கடந்து, அவன் திருவடியாகிய கரையை அடைதல் கூடும். என் முடியிலும் சிந்தையிலும் முதல்வன் திருவடியை நிறுத்தி எம்பிரான் என்று பாடுவன்; பன்மலர்தூவிப் பணிந்து ஆனந்தக் கூத்தாடுவேன்; ஆடி தேவதேவன் என்று சிந்திப்பேன். செருக்கு நீங்கி அவனை யான் அறியும் நெறி இதுவே.

அடுத்து வருவது வேதச் சிறப்பு என்னும் அதிகாரம்.

வேதத்தை விட்ட அறம் இல்லை; வேதத்தில்

ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க

வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. -தி.10 பா.96

என வேதத்தின் சிறப்பை அறுதியிட்டுக் கூறுகிறார் திருமூலர். ஒருவன் வேதம் ஓதுதல் பற்றியே வேதியன் எனப்படான். அதன் பொருளை விளங்கிட உணர்ந்து ஒழுகின் அவன் வேதா ஆவன். வேதத்தை உரைத்தல் வேள்வி முதலியவற்றைச் செய்யும் முறையை அறியவும் மெய்ப்பொருளைக் காணவுமே ஆம். வேதம் இருக்கு வடிவ மந்திரங்களையும் உள்நின்று உருக்கும் உணர்வு வடிவச் சாமன் களையும், செய்முறையைச் சொல்லும் விதிகளையும் உடையது. அஃது உலகத்தை நீற்றும் இயல்புள்ள நெற்றிக்கண்ணன் இயல்பை விளக்குவதும் ஆகும். வேதியர்களுள் வேதத்துட் கூறிய விரதங்களை அநுட்டிக்க மாட்டாராய் வேறு பயன்களைப் பெருக்க முயன்று இகலுகின்றாரும் உளர்.

பின் ஆகமச் சிறப்புக் கூறப்படுகின்றது. நீலமேனி வாலிழை பாகத்தன் உரைத்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவற்றின் பொருள் நிச்சயம் உணர்தல் அரிது. அவற்றுள் ஒன்பது ஆகமங்களைத் திருநந்திதேவர் பெற்று எனக்கு நல்கினார். அவற்றின் பிழிவை இந்நூலில் உணர்த்துகிறேன். இஃது இப்பகுதியின் பொருட் சுருக்கம்.

இப்பிரிவில் மொழிகளைப் பற்றிய கருத்தும் வருகின்றது. பண்டிதர் எனப்படுவோர் பதினெண் நிலத்து மொழியும் கற்று அவ்வம் மொழியினர் கூறும் கருத்தை அறிய வல்லவரே ஆவர்; பதினெண் மொழியும் உலக முதல்வன் தன்னாற் படைக்கப்பட்ட உயிர்கள் அறத்தை உணர்தற்கு வாயிலாக அமைந்தனவேயாம். இம்மொழி களுள் இரண்டு மொழிகள் மிகப் பழையன. மழை, வெயில், பனி என்பவை மிக்குத் தோன்றும் பருவங்கள் முறையாக மாறிவருதல் நின்று, நீர்நிலைகளும் வற்றி எல்லாஞ் சுருங்கி நிற்கும் ஊழிக்காலத்தில் இறைவன் ஆரியத்தையும் தமிழையும் ஒருகாலத்து அம்மைக்குச் சொல்லி அருள் புரிந்தான்.

இம்மொழிகளில் உயிர்களை மாப்பேரூழியில் ஒடுக்கி நின்றவன் அவற்றை உலகமாகிய வனத்தில் அவிழ்த்து விடும் படைப் பும், அவற்றை மீளத்தன்கண் ஒடுங்கி இளைப்பாறச் செய்யும் ஒடுக் கமும், படைப்புக் காலத்தில் அவ்வுயிர்கள் சூக்கும உடலிற் கட்டுப் பட்டு இறந்தும் பிறந்தும் வருமாறும் உணர்த்தப்படுகின்றன; இங்ஙனம் உணர்த்தும் முதல்வன் இயல்பையும் அவற்றால் உணர்தல் கூடும்.

பின் திருமூலர் தமது குருபாரம்பரியம் திருக்கயிலையினின்று தொடங்கி உலகில் நிலவுதலையும் தம் வரலாற்றையும் கூறுகின்றார். தாம் திருவாவடுதுறையில் சிவபோதி நிழலில் எண்ணில் காலம் தவமிருந்து மறைப்பொருள் முற்றும் உணர்ந்து வெளிப்படுத்துகிறார். இந்நூலில் "நான் சிவயோகத்திலிருந்து பெற்ற இன்பத்தை உலக மக்கள் பெறுவார்களாக " என வாழ்த்தித் தொடங்குகின்றார்.

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்;

தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. -தி.10 பாயி. பா.22

பரவெளியைச் சார்பாகக் கொண்டுள்ள மறைப்பொருளைச் சொற் செய்து வெளிப்படுப்பின், அஃது உடம்பைச் சார்ந்துள்ள உயிரின் உணர்விற் பொருந்தும் திருமந்திரமாம்; அதனை ஒருவன்தன் அறிவிற்குத் துணையாய்ப் பற்றிப் பயிலும்போது, உணர்வில் ஒக்க நிற்கும் முதற்பொருள் அவ்வுணர்வில் தயிரில் நெய்போல விளங்கித் தோன்றும்; அதனால் அவன் முதற் பொருளைத் தலைப்படும்.

பிறப்பில் பெருமானைத் தேவர்கள் சிறப்பாகக் கைகூப்பித் தொழுது அவனை மறவாது இருக்கின்றனர்; மக்கள் தம் நெஞ்சத்து முதல்வனைக் கூடிநின்று இத்திருமந்திரமாலையை ஓதுதல் பொருத்தமே. உடம்பைப் படைத்தளித்த இறைவன் அஃது அழியா திருத்தற் பொருட்டு அதன்கண் அங்கியை மிகாதபடி அமைத்தான்; இவ்வாறே உலகேழையும் (ஐம்பூதங்கள் ஒன்றோடொன்று) இகலாத படி அமைத்தான். இத்தமிழ்ச் சாத்திரத்தையும் தங்கி மிகாதபடி வைத்தான். அதன் கண் பொருளும் வேண்டிய அளவிற்கு மேல் விஞ்சாதபடி அமைத்தான் முதல்வன். திருமாலும் அயனும் தேடிக் காணமாட்டாத கடவுள் விடை ஊர்தியும், கையில் மான் மழுவும் கொண்ட தற்பரன்; அவன் தன்னால் சித்திரிக்கப்பெற்ற சராசரமாகிய உலகினின்று நீங்குதலையும் அருளிக் குருவாக எழுந்தருளி என்முடிமேல் திருவடியினையும் சூட்டித் தலையளி செய்தான். அவ்வருளாற்றலால் இத்திருமந்திர நூலின் கண் ஞேயமாகிய முதற்பொருளையும், அதனைக் காட்டும் சிவஞானத்தையும், காட்டக் காணும் ஆன்மாவையும் மாயையினையும், சுத்த மாயையை அதிட்டிக்கும் பராசத்தியின் பேதங்களையும், அவற்றைப் பிரியாது நிற்கும் முதற்பொருளையும், மாற்றம் மனங்கடந்த மூலப் பொருளையும் முற்றாக விளக்கியிருக்கின்றேன். ஆனந்தக் கூத்தன் ஆணையால் திருக்கயிலை வழியில் வந்தேன்.

இவ்வாறு மேலும் சில சொல்லி முடிக்கின்றார் முனிவர் தம் வரலாற்றை.

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்

நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்

நந்தி அருளால் மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்

நந்தி அருளாலே நானிருந் தேனே. -தி.10 பா.29

மூலனை நாடுதல் - பசுமேய்த்த மூலன் உடலிற்புகுதல்; சதாசிவன் ஆதல் - கலைஞானம் உணர்தல்; மெய்ஞ்ஞானத்துள் நண்ணுதல் - துரிய அருணிலையைப் பெறுதல்; இருத்தல் - அதீத வாழ்வில் தங்குதல்.

பின் அவையடக்கம் கூறப்படுகிறது:

யாரும் அறியாத பெருமையும், அகல நீளமும் கொண்ட அண்ணலாகிய பெருஞ்சுடரின் மூலத்தை யான் அறிந்தேன் என்று சொல்லக்கூடுமா? கூடாது. அவ்வறி வொண்ணா நிலையைத்தான் விளக்கிச் சொல்லுகிறேன். சிந்திப்பவர் அகத்தே வீணையில் எழும் இன்னிசை போல் எழும் ஈசனும் உலகம் படைத்த அயனால் தியானிக்கப் படுபவனுமாகிய முதல்வனை நிலைபெற்ற மெய்ம் மொழி எனப்படும் மறைமொழி வாயிலாகச் சிறிது உணர்தலும் கூடும். மெய்யுணர்வு உரைக்கப்பட்ட இடம் திருக்கயிலைத் தாழ்வரை. ஆங்கு வீடுபேறு கருதியிருந்த முனிவரும் தேவரும் தம்மிற் கூடியும் தனித்திருந்தும் அன்பொடு துதிசெய்வர். பிறர் இதன் பயனை அறியமாட்டார்கள்.

அடுத்து வரும் தலைப்புத் திருமந்திரத்தின் தொகைச் சிறப்பு:-

மூலன் சொன்ன மூவாயிரந் தமிழ்ச் செய்யுட்களும் திருநந்தி தேவர் அருளாணை பற்றி உலகம் மேலான உண்மையை அறிதற் பொருட்டு இயற்றப்பட்டவை; காலையில் எழுந்து பாட்டின் கருத்தை அறிந்துகொண்டு ஓதிவரின், ஓதுவோர் உலக முதல்வனை அணைவர். இம் மூவாயிரத்தில் முடிந்த நிலையாகிய வீடு பேற்றுக்குரிய சாதனம் கூறப்பட்டுள்ளது. இவற்றை அமைத்த முறையிலே பகுதிபகுதியாக ஓதுதல் வேண்டும்; முன்னர் உலக நலன் தருவனவாக, இம்மூவாயிரம் பொதுப் பொருள் வெளிப்படத் தோன்றும்; இவையே பயிலப் பயில இதன் முடிநிலைப் பயனாக வைக்கப்பட்ட சிறப்பை (வீடுபேற்றை)த் தரும்.

இதன்பின் உள்ள தலைப்புக் குருமட வரலாறு;-

திருவருளால் உலகில் ஏழு மடங்கள் ஞானநெறியை உணர்த்த உள்ளன. அவற்றுள் முற்படத் தோன்றியது திருமூலர் மடம்; அதற்கு உபதேச நூல் அழகிய ஆகமமாகிய ஒன்பது தந்திரங்களும் அவற்றின் உள்ளுறுப்புக்களாகிய மூவாயிரம் மந்திரங்களும் ஆகும். மேற்கூறிய மடங்களின் பிரதிட்டாச்சாரியர்களாய்ப் பசுத்துவம் நீங்கிச் சிவத்துவம் விளங்கப் பெற்றோர் இறைவனோடு ஒன்றிக் கலந்தருளிய காலாங்கர், அவர்பால் அருள்பெற்ற அகோரர், உறுதியைத் தரும் மாளிகைத் தேவர், நாதாந்தர், ஞானத்தைக் கொண்ட பரமானந்தர், போகதேவர், உலகில் விளக்கம் உள்ள திருமூலர் என்போர் ஆவர்.

இறுதியாக உள்ள தலைப்புத் திரிமூர்த்திகளின் சேட்டகனிட்ட முறைமை:

இருவினைகளைக் கடந்தவனே முதல்வன்; அவன் பல அவதாரங்களாகவும் பலரை அவர்தம் புண்ணியப் பயனாய் அதிட்டித்தும் தன்தொழில் நடத்துவன். அதிட்டான பக்கமாகக் கொள்ளும்போது அயனும் மாலும் நமக்கு வேறானவர் அல்லர்; புராணங்களிற் கூறப்படும் மும்மூர்த்திகள் சமமானவரே; ஆயினும், அவருள் ஒருவரை உயர்த்தியும் பிறரைத் தாழ்த்தியும் பிணங்குதல் அறியாமையின் விளைவு. முதற்பொருள் மூவரையுங் கடந்த சக்தியோடு கூடிய சிவமேயாம் என்பது இப்பகுதியின் தாற்பரியம்.

இதுவரையில் பாயிரத்தின் பொருணிலை கருதப்பட்டது.

இனி நூலிற்குள் சென்று வெளியிடப்படும் மூன்று தந்திரங் களின் பொருணிலையைச் சுருங்கக் காண்போம்.

முதல் தந்திரத்தில்:<

ஒழுக்கநெறி பற்றிய விதி விலக்குகள் கொடுக்கப்படுகின்றன. பாவங்களைச் செய்யாது நீங்கி அறங்களைச் செய்து வருவோரே மனத்தூய்மை பெற்றுச் சிவஞானம் விளங்கப் பெறுவர். முதற்கண் வருவது நூலின் முதன்மையான கருத்தாகிய உபதேசம் என்பது. இறைவனே ஒருவன் அறிவில் இருவினையொப்பு நிகழும்போது அருட்குருவாய்த் தோன்றித் திருவடிதீக்கைசெய்து, மாணாக்கன் உள்ளத்திற்புகுந்து அன்பை வளர்த்து இன்ப அறிவாகிய அகக்கண்ணைத் திறந்து, அவன் அறிவை மறைத்திருந்த களிம்புபோன்ற மூலமலத்தை நீக்கியருளுகின்றான்.

உயிர் பளிங்கு போன்றது. அதில் மூலமல அழுக்குப் படிந்துள்ளது. அந்த அழுக்கைப் போக்கினான் அருட்குரு. எப்படி யென்றால் திருவருட் கண்ணைத் திறப்பித்து, ஞாயிற்றின் ஒளி போன்ற தன் ஒளியைக் காட்டிக் களிம்பை அறுத்தான். அவ்வொளி நிலை பெறும்படி, பதியாகிய முதல்வன் பவளத்தைப் பளிங்கிற் பதிப்பது போல அச்செவ்வொளியைப் பதித்து வைத்து விட்டான். நூல்களாற் சொல்லப்படுவன பதி பசு பாசம் (இறை உயிர்தளை) என்னும் மூன்று பொருள்கள். இறை ஒரு காலத்துத் தோன்றாத, என்றும் உள்ள முதற்பொருள் என்பது எல்லார்க்கும் உடன்பாடு; அதுபோல, மற்ற பசு பாசங்களும் அநாதியாக உள்ள நித்தியப் பொருள்களே ஆகும். ஆனால், பசு தன்னைப் பாசம் தடுத்து நிற்றலால் பதியை அணுகாது. அதன் பக்குவம் உணர்ந்து, பதி அதனை அணுகினால் அதைக் கட்டுப் படுத்தும் பாசம் நிற்கமாட்டா; பசுவும் பதியினை அணைந்துவிடும். பாசம் - ஆணவம், கன்மம், மாயை என மூன்று வகைப்படும். பலவகைக் கருத்துக்களை உதாரணங்களைக் கொண்டு விளக்கி, திருவடிப் பெருமை, சற்குருவை வழிபடுவதால் ஞானம் விளங்கி நிலைபெறும் என்னும் கருத்து முதலியவற்றைக் கூறி,

போதந் தருமெங்கள் புண்ணிய நந்தியைப்

போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்

நாதன் நடத்தால் நயனங் களிகூர

வேதந் துதித்திடப் போயடைந் தார்விண்ணே. -தி.10 பா.141

என இப்பகுதியை முடிக்கின்றார் திருமூலர்.

உபதேசம் என்னும் அதிகாரத்திற்குப்பின் வரும் நான்கு அதிகாரங்கள், ஒழுக்க நெறியைப் பின்பற்றுவதற்குக் காரணமாக முன் உணர வேண்டிய உலகப் பொருள்களின் நிலையாமையைத் தெரிவிக் கின்றன. நிலையாமையை உணர்ந்தபோதுதான் ஒருவனது அறிவு அறநெறியை நாடும்.

நம் உடம்பு இருவினைக்கு ஏற்றபடி ஐம்பூதங்களால் ஆனது. காலம் வந்தவுடன் தீக்கு இரையாகும். இது பச்சை மண்ணாற் செய்யப்பட்ட குடம் மழை நீரால் கரைந்து சிதைவதை ஒக்கும்.

மண்ணொன்று கண்டீர் இருவினைப் பாத்திரம்

திண்ணென் றிருந்தது தீயினைச் சேர்ந்தது

விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ஆனாற்போல்

எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே. -தி.10 பா.142

ஞாயிறு கிழக்கே தோன்றி விசும்பில் ஏறிப்பின் மறைந்து விடுகிறது; ஆன்கன்று தோன்றி வளர்ந்து மூத்து முடிவில் மாய்கின்றது. இவை போன்றதுதான் மக்கள் உடம்பும்; ஆதலால் உடம்பில் இளமைவலி உள்ளபோதே அதன்கண் உள்ள உத்தமனைக் காண முயலுதல் வேண்டும் என்கிறார் திருமூலர்.

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே

விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்

குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்

விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே. -தி.10 பா.176

பின் செல்வம் நிலையாமை, உயிர்நிலையாமை (உயிருக்கும், உடம்பிற்கும் உள்ள தொடர்பு நிலையாமை) என்பவற்றை உணர்த்தி, இயல்பாக நிகழக்கூடிய பாவச்செயல்களை நீக்கி நடக்கவேண்டும் என்று பல அதி காரங்களால் உணர்த்துகின்றார். கொலை, களவு, கள், காமம், பொய் என்பன பெரும் பாவங்கள். அவற்றை முன்னர் ஒருவன் தன் கண் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புலால் உண்டலும் கொலையிற் சேரும். காமம் என்பது பிறர் மனை நயத்தலும் பரத்தை யரை நாடுதலும் ஆகும்.

கொலையே களவுகட் காமம்பொய் கூறல்

மலைவான பாதக மாம் அவை நீக்கித்

தலையாம் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்கு

இலையாம் இவை;ஞானா னந்தத் திருத்தலே. -தி.10 பா.207

திருமூலர் கூறும் அறவுரைகளை மூன்று வகைப்படக் கொள்ளல் ஆகும். ஒன்று பாவம் செய்யாதீர்கள் என்பது; இரண்டா வது, பாவஞ்செய்யாதிருந்து அறங்களைச் செய்யுங்கள் என்பது; இந்த இரண்டோடு மூன்றாவது உபதேசம், இறைவனுடைய பேரின்பத்தை உடம்போடு இருக்கும் போதே, அவ்வுடம்பு தன் வலிவை இழக்காத முன்பே, பெற்று நுகருங்கள் என்பது.

அவர் கூறும் அறம் ஈகையில் தொடங்குகிறது.

ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்

பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்

வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்

காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. -தி.10 பா.249

இது போசன விதி.

யாவர்க்கும் ஆம்இறை வற்குஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம்பசு விற்கொரு வாயுறை

யாவர்க்கும் ஆம்உண்ணும் போதுஒரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம்பிறர்க்கு இன்னுரை தானே. -தி.10 பா.251

இவை அன்றாட வாழ்க்கையில் மறவாமல் கைக்கொள்ள வேண்டிய கடமைகள்.

அன்பின் சிறப்பைத் திருமூலர் கூறுவது தனித்தன்மை வாய்ந் தது. அன்புதான் கனிந்து கனிந்து நிறைவு நிலையில் சிவம் ஆகிறது என்கிறார்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. -தி.10 பா.269

இறைவனுடைய அருளைப்பெற விரதங்காத்து நோன்பிருப் பினும், உடம்பை வருத்தித்தவம் செய்யினும் அருளைப்பெற முடியாது; அன்பு ஒன்றினால்தான் என் ஐயனை அடையமுடியும் என்கிறார்.

என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப்

பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்

அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி

என்பொன் மணியை எய்தவொண் ணாதே. -தி.10 பா.271

ஈசன் அறிவன் ஒருவர் அகத்தே நிகழும் அன்பை; அதை அவர் வெளியே காட்டிக்கொள்ள வேண்டா.

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்

பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களை

தேசுற்று அறிந்து செயலற்றி ருந்திடில்

ஈசன்வந் தெம்மிடை ஈட்டிநின் றானே. -தி.10 பா.287

கல்விக்குள் பெரிய கல்வி கடவுளைப் பற்றிய கல்வியே, இதைக் கற்றுத் தேறுங்கள் என்கிறார்.

நிற்கின்ற போதே நிலையுடை யான் கழல்

கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள்

சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்

மற்றொன் றிலாத மணிவிளக் காமே. -தி.10 பா.291

மக்கள் படைப்பின் நோக்கத்தையும், உடம்பு அதற்காக வந்தது என்பதையும் இறைவன் எவ்வாறு உளம்புகுந்து நின்றான் என்பதை யும் கல்வி கேள்விகளால் உணர்தல் வேண்டும். இவற்றைப் பற்றிச் சிந்திப்போர்க்கு உள்விளக்கம் உண்டாய், அன்னோர் தாம் உணர்ந் ததை வெளிப்படுத்துகிறார்கள். அவ்வெளிப்பாடு மற்றையோர்க்குத் துணை ஆகின்றது. அறிஞர்கள் தம் உடம்பைப் பொருட்படுத்தாமல் இறைபணி செய்ய முந்துகிறார்கள், மற்றையோர் உடலைப்பெருக்கும் நோக்குடன் உண்டு துன்புறுகிறார்கள். இரவும் பகலும் இறைவனை வழிபட்டால் கடவுள்தன்மையை எய்துதல் ஆகும்.

மலரோடு கந்தம் பிரிப்பின்றி வருதல்போல, தூயகல்வியே உயிர்க்கு உறுதுணையாய் ஒளியாய் உடன்வரும் என்கின்றார்.

துணையது வாய்வரும் தூயநற் சோதி

துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்

துணையது வாய்வரும் தூயநற் கந்தம்

துணையது வாய்வரும் தூயநற் கல்வியே. -தி.10 பா.293

கடற்கரை, மலை என்பவற்றில் கோயில் கொண்டவனும் ஐம்பூதத்தை யும் தனக்குத் திருமேனியாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரானை நம் நெஞ்சத்தில் இடம்பெறும் பழ ஒளியைத் தருவது கல்வியேயாகும்.

கடல்உடை யான்மலை யான்ஐந்து பூதத்து

உடல்உடை யான்பல ஊழிதோ றூழி

அடல்விடை ஏறும் அமரர்கள் நாதன்

இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே. -தி.10 பா.298

நற்கேள்வியாவது இது எனவும் அது சிவகதியைத் தருமாறும் கூறும் மந்திரம்,

அறங் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்

மறங் கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்

புறங் கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்

திறங் கேட்டும் பெற்ற சிவகதி தானே. -தி.10 பா.299

மறம் - வல்வினை எனப்படும். வாகை - வெற்றி.

சிவம் முயன்று அடையும். தெய்வக்கலையைத் திருந்தக் கல்லாதாரை முனிவர் பெரிதும் கடிகின்றார்.

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது

கல்லாத மூடர்சொல் கேட்கக் கடனன்று

கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்

கல்லாத மூடர் கருத்தறி யாரே. -தி.10 பா.316

பின்னர் நடுவு நிலைமையைப் போற்றி அந்நிலை நிற்குமாறு உபதேசிக்கின்றார்.

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை

நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை

நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்

நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. -தி.10 பா.319

நடுவு நிலை ஏனைப் பல அறங்களையும் எய்துவிக்கும்

அடிப்படை அறம் என்பது திருமூலர் கருத்து. நடுவுநிலைமை ஏனைய அறங்களுக்கு வித்தாதல் போலவும் நல்குரவு இறைவனை எண்ணுவதைத் தடுப்பது போலவும், கள்ளுண்ணல் அறிவை மயக்கித் தீ நெறிக்கண் உய்க்கும் என வலியுறுத்துகின்றார் திருமூலர்.

"காமமுங் கள்ளுங் கலதிகட்கே உள;" -தி.10 பா.324

உள்ளுண்மை ஓரா ர், உணரார் பசுபாசம்

வள்ளன்மை நாதன் அருளினில் வாழ்வுறார்,

தெள்ளுண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்

கள்ளுண்ணும் மாந்தர் கருத்தறி யாரே. -தி.10 பா.326

மயங்கும், தியங்கும், கள்வாய்மை அழிக்கும்,

இயங்கும் மடவார்தம் இன்பமே எய்தி,

முயங்கும் நயங்கொண்டஞ் ஞானத்து முந்தார்,

இயங்கும் இடையறா ஆனந்தம் எய்துமே. -தி.10 பா.328

சந்தோஷித்து அறியாமையால் தள்ளாடிக் களிக்கும் என்பது இறுதித் தொடரின் கருத்து.

ஆயின் - மற்றொரு தேறல் உண்டு; அஃது உண்ணத் தகுவதே. அது சிவானந்தத் தேறல். அதன் செயல் இவ்விழிந்த கள்ளோடு புடைபட வைத்துக் காணத்தக்கது. அது தத்துவ வடிவமாகிய மாயையினையும், அதனைக் கலந்து நின்று மயக்கஞ் செய்யும் இருள் மலத்தையும் நீக்கி ஆன்மாவைத் தன்னியல்பு உணரவைக்கும்; பொய்த்தவத்தைப் போக்கும், உண்மை அநுபவமாகிய சிவபோகத்துட் செலுத்தும்; சற்காரிய முறையால் தொழிற்படும் நிலையாத இந்த உலகை விழுங்கு மாற்றால் அதனால் பற்றப்படாமல் கடந்து, பரானந்த சித்தியைக் கொடுக்கும்.

தத்துவம் நீக்கி, மருள் நீக்கித் தானாகிப்

பொய்த்தவம் நீக்கி, மெய்ப் போகத்துட் போக்கியே,

மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்

சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே. -தி.10 பா.331

என்கிறார் சித்தர் தலைவர்.

வாமமதத்தினர் சத்தியை வேண்டிக் கள் உண்பர். ஆனால் அவர் அறியுஞ் சத்தியை இழந்து வருகின்றனர்; சத்தி வழிபாடு என ஒன்று தனித்து வேண்டுவது இன்று, அம்மையப்பரை வழிபடு வோர்க்கு என்கின்றார் முனிவர்.

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்,

சத்தி அழிந்தது, தம்மை மறத்தலால்,

சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்

சத்திய ஞானஆ னந்தத்திற் சார்தலே. -தி.10 பா.329

சத்தன் அருள்தரில் சத்தி அருளுண்டாம்,

சத்தி அருள்தரிற் சத்தன் அருளுண்டாம்,

சத்தி சிவமாம் இரண்டுந்தன் உள்வைக்கச்

சத்தியம் எண்சித்தித் தன்மையும் ஆமே. -தி.10 பா.330

இத்தந்திரத்தின் முடிவில் அவர் கூறுவது; ஞானகுருவின் மலர் அடிகளைத் தியானித்து வழிபடு, அவர்தம் அருளால் யோகப் பயிற்சியை மேற்கொள்; உயிர்ப்பை நெறிப்படுத்தி மூலத்தில் அங்கி மண்டலத்தினின்று எழுந்து, மதிமண்டலமாகிய முடிவில் அமுத ஊற்றைத் திறந்து அவ்வமுதை உண்டு சமாதியைக் கூடி நில்.

இங்ஙனம் விலக்கு விதிவடிவ ஒழுக்கநெறி உணர்த்தும் போது, அங்கி காரியம், அந்தணர் ஒழுக்கம், அரசாட்சி முறை, வானச்சிறப்பு, என்னும் நான்கு அதிகாரங்களை, உடன்பாட்டு முறையில் அறங்களைக் கூறுவதற்குமுன், ஆசிரியர் அமைத்துள்ளார். இது வாழ்க அந்தணர் என்னும் திருப்பாசுர முதற்பாட்டின் முன் இரண்டாவது கருத்தை விளக்குவதாய் அமைந்துள்ளது.

வேதத்தைத் தமக்கு முதனூலாகக் கொண்டு ஒழுகும் சோர் வில்லாத அந்தணர் அவி சொரிந்து வேள்வி செயின் குற்றமற்ற விழுப் பொருள்களாகிய அறம் முதற்பொருள்கள் உளவாகி வானவரும் மக்களும் எண்திசைக் காவலர்களும் மேம்பாடு உடையராவர்.

ஓமத்தீயில் எம் இறைவிளங்கி நிற்பன்; ஈம எரியைத் தனக்கு மேற்செல்லும் விமானமாகக் கொள்ளும் ஒருவனும் (உயிர்) உளன்; முடிவில் வெந்து நீறாகும் உடம்பில் அங்கிபோன்ற காமம் வெகுளி என்பவற்றால் விளையும் வினையாகிய கடல் போன்ற பெரிய தீங்கு ஓமத்துள் உள்ள தீ அணைக்கும் பெருங்கடலாகும்.

என்றிவ்வாறு வேதவேள்வி உயர்த்துக் கூறப்படுகிறது.

அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுள்ளோர்

செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ் செய்

தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்

சந்தியும் ஓதி சடங்கறுப் போர்களே. -தி.10 பா.223

என்பது முதலாக அந்தணர் ஒழுக்கம் கூறுகின்றார்.

அந்தணர் உபநிடதங்களைக் கேட்க விரும்புவர்; ஓங்கார மகாவாக்கியம் என்பவற்றின் பொருளைச் சிந்திப்பர். இறைவனை அகத்தே கண்டு இன்புற விழைவர். காயத்திரி, சாவித்திரி என்னும் மனுக்களை எண்ணி இறைவனோடு இரண்டறக் கலந்து நிற்பர்.

இங்ஙனம் ஒழுக்கம் உடையோரைப் பாராட்டும் பெரு முனிவர் ஒழுக்கத்தின் இழிந்தோரைக் கண்டிக்கவும் தயங்கவில்லை.

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி

ஒத்த விடயம்விட் டோரும் உணர்வின்றிப்

பத்தியும் இன்றிப் பரனுண்மையும் இன்றிப்

பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே. -தி.10 பா.230

என்கின்றார்.

அரசன் கல்வி உடையனாய் அறம் ஓர்ந்து முறைசெய்து எல்லோரையும் காத்தல் வேண்டும். கல்லாத அரசனால் மக்களுக்கு நன்மை இல்லை.

கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்

கல்லா அரசனிற் காலன் மிக நல்லன்

கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான்

நல்லாரைக் காலன் நணுகிநில் லானே. -தி.10 பா.237

தத்தம் சமயத் தகுதிநில் லாதாரை

அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி

அத்தண்டமுஞ் செயும் அம்மையில்; இம்மைக்கே

மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே. -தி.10 பா.246

இக் கருத்துக்கள், இக்காலத்து அரசியல் தலைவர்களுக்கும் குடும்பத் தலைவர் முதலாயினார்க்கும் பொருந்தும்.

இறை வழிபாட்டாலும் நல்ல ஆட்சியாலும் வளம் பெருக்கும் பருவ மழை குறித்த அளவில் பெய்யும். அவ்விரண்டும் குன்றின் பெய்யாமை, அதிக மழை என்பவற்றால் தீமை நாட்டில் மிகும்.

அமு தூறும் மாமழை நீரத னாலே

அமுதூறும் பன்மரம் பார்மிசை தோன்றும்

கமுகூறு தெங்கு கரும்போடு வாழை

அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே. -தி.10 பா.247

இரண்டாந் தந்திரம்:

இங்ஙனம் ஒழுக்க நெறியைச் சிவநெறியோடு பொருந்துமாறு முதல் தந்திரத்தில் விளக்கியருளிய திருமூலதேவர் இனி இறைவன் தடத்தநிலையாகிய பொதுவியல்பைப் பழைய வரலாற்று முகத்தானும் இலக்கண வகையானும் சாதன முகத்தானும் இரண்டாம் தந்திரத்தில் உணர்த்துகின்றார்.

இப்பகுதியை மூன்று பிரிவுகளாக மனத்தில் கொண்டு உணர்தல் கூடும். முதற்கண் உணர்த்தப்படுவன புராண வரலாறுகள்; பின் உணர்த்தப்படுவன இறைவன் செயல்களாகிய ஐந்தொழில்கள் (பஞ்சகிருத்தியம்); மூன்றாவது கருவுற்பத்தியாகி வளரும் முறை, அன்பர் பெருமை, பெரியாரைத் துணைக்கொண்டு ஒழுகுதல் என்பவை.

இவற்றுள், தமிழ்முனிவராகிய அகத்தியமுனிவர் வரலாறும் பெருமையும் முதற்கண் உணர்த்தப்படுகின்றன.

ஒரு காலத்து உலகம் சமநிலை பெறாது சிதைவுறும் நிலையில் சாய்ந்தபோது தேவர்கள் சிவபிரானிடம் முறையிட்டார்கள். சிவபிரான் தவக்கனல் நடுவில் உள்ள (அகத்தே அழல் உருவச் சிவனைக்கொண்ட) அகத்தியரைத் தெரிந்து "மேலோங்கிய தென் திசைக்கண் முற்பட்டு இரு" என்று அருள்புரிந்தான்.

இத்துணைப் பெரியவர் அகத்திய முனிவர்; அவரையே உலகம் எல்லையாக உடையது.

ஞாயிறு தோன்றுங்கால் ஓம அங்கியை வளர்க்கும் அகத்தியர் ஓமம், தியானம் என்பவற்றை அங்கமாகக் கொண்டு அங்கியாகிய சிவ பூசையை அதிகாலையில் செய்யும் மேல்பால்முனி (குடமுனி) ஆதலோடு, பலநாள் தன் ஒளி - வடக்கு ஒளியாக மங்கித் தோன்றி ஞாயிறு பின்னர்த் தோன்றும்.

வடதிசைக்கண் தவஞ்செய்த முனியும் ஆவர்; அவர் உலகெங் கும் வளங்கொள்ளுதற்கு உரிய விளக்கமான அருளொளியாய்த் திகழ்பவர்.

இங்ஙனம் அகத்தியர் போன்ற பெரியோர் மூலம் உலகிற்கு முதல்வன் நன்மை புரிதலை உணர்த்திப் பின் இறைவன் உயிர்களின் வினையை நீக்குதற்குக் கொள்ளும் வேக வடிவங்களை உணர்த்தப் புகுவாராய் அந்தகன், சலந்தரன் முதலியோரை வதஞ்செய்தும், நான்முகன் தலையைக் கிள்ளியும், மன்மதன் உருவை நீறாக்கியும் வீரத்தைப் புலப்படுத்திய எட்டு வீரச் செயல்களையும் அவற்றை நினைந்து மக்கள் வினைநீங்கி அவ்வப்பயன் பெறுதற்குரிய தலங்களையும் குறிப்பிட்டு அவ்வரலாறுகட்குத் தத்துவக் கருத்துக்களையும் உணர்த்துகிறார். அவை:

"முப்புர மாவது மும்மல காரியம்" -தி.10 பா.339

என்பது முதலியன. செம்பு, வெள்ளி, பொன் என்பவற்றாலாகிய புரங்கள் ஆணவம் கன்மம் மாயை என்னும் தளைகளையே குறிக்கும். இவற்றின் வலியை மதித்து நிற்கும் ஆன்மாக்கள் பிறருக்குத் தீமையே விளைத்துப் பின் தாமும் துன்புறும் என்க.

பின், முதல்வனை யாதேனும் ஓர் ஆதாரத்தில் தெளியக் கண்டு தொழுதால் இறைவன் வெளிப்படுவான் என்னும் கருத்தை இலிங்க புராணம் என்னும் தலைப்பில் கூறுகிறார். இலிங்கம் - இறைவனுக்கு அடையாளமாக நிறுத்தப்படும் குறி; புராணம் - பழைய வரலாறு. இதில், முதற்கண் அம்மை, முதல்வனை அருச்சித்துக் காட்டினமையை எடுத்துக் கூறுகிறார்.

இறைவன் உயிர்கள் மாட்டுப் பரிவுடையன்; ஆயினும் அவரவர் தன்மையை அறிந்து அதற்கு ஏற்றபடி வேண்டுவார் வேண்டுவதே ஈவான் என்கிறார். மேலும் திருமாலுக்குத் திகிரியும் பிரமனுக்கு ஞானவாளும் கொடுத்தது, இராவணனுக்கு அருளியது, சண்டீசர்க்கு அருளியது, தேவர்கள் அஞ்சியபோது அமைதி அருளியது இவையெல்லாம் இலிங்க புராணத்தில் வருகின்றன.

பின் 4,5 அதிகாரங்களில் தக்கயாக அழிவு, திகிரியைத் திருமாலுக்கு மீளக்கொடுத்தது, உலக ஒடுக்கம், தேவர்களை அழி யாது காத்தமை, எலும்பு கபாலம் தரித்தமை பேசப்படுகின்றது. "இல யித்தது இலயித்தவாறு உளதாவேண்டும்" என்னும் சாத்திரக் கருத்தை,

"எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில்

எலும்பும் கபாலமும் இற்றுமண் ஆமே" -தி.10 பா.367

என உணர்த்துகிறார் சித்தர். புனர் உற்பவம் (மீளத் தோன்றுதல்) என்பது உறங்கி விழிப்பது போன்றது உயிர்கள் அநாதி; அவற்றின் அறிவுமலர்ச்சி தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை இவ்வாறு குறிக் கின்றார் திருமூலர். இதனால் மூன்று உண்மைகள் தெளிவாகின்றன; ஒன்று சிவபிரான் ஒருவனே இறப்பும் பிறப்பும் இல்லாத முழுமுதல்; இரண்டாவது, உயிர்கள் இறக்கும்போது அவற்றின் கன்மங்கள் அழி யாமல் காக்கப்படுகின்றன கடவுளால்; மூன்றாவது சற்காரிய வாதம் (அறிவியல் நூலார் கூறும் பொருள் ஆற்றல்களின் அழிவின்மை)

எட்டாம் அதிகாரத்தில் மாயோனும் அயனும் அடிமுடி தேடி எய்த்த வரலாறும், இறைவனுக்கு உலகத்தோடுள்ள அத்துவித சம்பந்தமும் கூறப்படுகின்றன. உலகினை இறந்துநிற்றல் உலக காரணன் ஆதல், உலகுக்கு உயிராதல், உலக உருவினன் ஆதல் என்னும் நான்கு நிலைகளும் உணர்த்தப்படுகின்றன.

பின்னர் வரும் அதிகாரங்களால் ஐந்தொழில்கள் உணர்த்தப் படுகின்றன. முதலும் முடிவும் இல்லாத பரம்பொருள், அதன் போதரூபமாகப் பராபரை உள்ளது, சோதிபோல் உள்ள பரத்தின் முன்னிலையில் பரையின் பால் நாதம், நாதத்தில் விந்து தோன்றும். நாதம் - ஒலி, உணர்த்தும் தன்மை; விந்து - ஒளி, விளக்குந்தன்மை. நாதவிந்துக்களில் ஞானமும் கிரியையும் தோன்றும். ஞானகிரியை களின் அதிட்டானங்கள் சிவம் சத்தி எனப்படுகின்றன. இவ்வாறு தொடங்கித் தத்துவங்களின் தோற்றம் கூறப்படுகின்றது. இதனை,

"ஓராய மேஉல கேழும் படைப்பதும்" -தி.10 பா.404

என்பதில் காணலாம். (ஓராயம் - சிவசத்தி சம்மேளனம்)

காத்தல் தொழிலை விளக்கும்போது,

உடலாய் உயிராய் உலகம தாகிக்

கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்

இடையாய் உலப்பிலி எங்குந்தான் ஆகி

அடையார் பெருவழி அண்ணல்நின் றானே. -தி.10 பா.410

என்றாற் போலவும், அழித்தல் தொழிலைக் கூறும்போது,

"அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது" -தி.10 பா.417

என்றாற் போலவும் சொல்லிப் போகிறார் திருமூலர்.

சங்காரம் - நித்தம், அவாந்தரம், சருவம், வீடு பேறு என நான்கு வகைப்படும். நித்த சங்காரம் - உறக்கம், அவாந்தர சங்காரம் - இறப்பு; சருவ சங்காரம் - முற்றழிப்பு; வீடு பேறு - மலம் நீங்கி உயிர் இறைவன் திருவடிபெற்று இன்புறுதல்.

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை

உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை

உள்ளமும் தானும் உடனே இருக்கினும்

உள்ளம் அவனை உருவறி யாதே. -தி.10 பா.427

என்றாற்போல மறைத்தற்றொழில் விளக்கப்படுகிறது.

அருளலைத் தெரிவிக்கும்போது உயிரின் பக்குவத்திற்குத் தக்க தனுகரண புவன போகங்களைக் கூட்டி அதன் அறிவை வளர்ப்பது அருள்தான் என உணர்த்துகின்றார் நாயனார்.

ஆரும் அறியாத அண்டத் திருவுரு

பார்முத லாகப் பயிலுங் கடத்திலே

நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்

சோராமற் காணும் சுகம் அறிந் தேனே. -தி.10 பா.441

நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மை - அத்துவிதமாய் உயிரிற் கலந்து காட்டிக் கண்டுவரும் தன்மை; அதனைச் சோராமற் காணும் சுகமே - அயரா அன்பின் அரன் கழல் சேறல்.

அண்டத்திற் படைப்பை விளக்கிய முனிவர் பிண்டத்தின் உற்பத்தியையும் நாம் அறியும்படி கூறுகின்றார்.

எலும்புகளை நெருங்கவைத்து நரம்புகளால் இறுகக்கட்டி குருதி கலந்த இறைச்சிகளால் உருவஞ்செய்து உயிர் வாழ்ந்து உய்தியைப் பெறுவதற்கு ஒரு வீடு செய்தான் இறைவன்; அவனைத் தொழுது அணைகின்றேன்.

போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்

கோசத்துள் ஆகங் கொணர்ந்த கொடைத்தொழில்

ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்தும்

மோகத்துள் ஆங்கொரு முட்டை செய்தானே. -தி.10 பா.459

இருவர் கொள்ளும் போகமாகிய இன்ப நுகர்ச்சியுள் உடன்நின்ற தூய முதல்வன் கருப்பையுள் உடம்பைக் கொடுத்த அருட் கொடையில் ஒருதுளி வெந்நீரில் மாயையின் காரியமாகிய முப்பத்தொரு தத்துவம் அமைந்த ஒரு முட்டையைச் செய்தான் என்கிறார்.

பிறந்த உயிர்க்கு வளர்ச்சியைத் தருகையில் அறிவு வளர்ச்சிக்குத் திரோதான சத்தியும், உடல் வளர்ச்சிக்குத் தாயும் ஆகிய இருசெவிலித் தாயர் மாட்டும் முதல்வன் அன்பை வைக்கின்றான் என்ற நயமும் காணத்தக்கது.

`தாய், தந்தையர் தாம், குழந்தையை வளர்ப்பதாக எண்ணிப் போற்றிவருவது குயிலின் முட்டையைக் காக்கை காத்துவருவது போன்றதுதான்; உண்மையில் அம்மையப்பர் தான் அதனை வளர்க்கின்றார்' என்றார் திருமூலர்.

பின் உயிர்கள் விஞ்ஞான கலர், பிரளயாகலர், சகலர் என மூவகைப்படுதலும் அவருட் பக்குவர் அபக்குவர் என்னும் பிரிவு களும் உணர்த்தப்படுகின்றன. மேலே ஒருவன் செய்ய வேண்டிய அறங்களும் நீக்கவேண்டிய குற்றங்களும் கூறிப் பெரியோரைத் துணையாகக் கொண்டு ஒழுகும்படி உபதேசிக்கின்றார் ஆசிரியர்.

முதல் தந்திரத்தில் ஆர்க்கும் இடுமின் என ஈகையை வற்புறுத்திய முனிவர் இங்கு, `அறத்தால் ஈட்டிய பொருளைத் தக்காரைத் தேடி அன்புடன் வழிபட்டுக் கொடுக்க' எனத் தானத்தை வலியுறுத்திக் கூறுகின்றார்.

"திலமத் தனையே சிவஞானிக் கீந்தால்

பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்" -தி.10 பா.493

உள்ளத்தில் அன்பு, உணர்வு முதலிய பண்புகள் ஊற்றெடுத்துத் தூய்மையைத் தரும்படி வாழவேண்டும். இங்ஙனம் அன்றி வெறுந்தல யாத்திரை, தீர்த்த யாத்திரையாற் பயனில்லை. திருக்கோயில்கள் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். கோயில் பூசைகள் தக்காராற் செய்யப் பெறுதல் வேண்டும் என்றும் கூறுகிறார். இவையெல்லாம் நன்கு நடைபெறச் செய்வது அரசின் கடமை என்கிறார்.

அசுத்த மாயை அதோ மாயை எனப்படும். அதன்கீழ் உள்ள பிரகிருதி மாயையைச் சார்ந்த நம் நிலவுலகத்தைக் கண்காணிக்கும் முதல்வன் திருமுகம் அதோமுகம். அம்முகம் பல சக்திகளாக உலகத்தில் தங்கி நின்று உலகத்தார்க்குத் தீங்கு வராமல் காக்கும். இவ்வியல்பைக் கூறும் பகுதி அதோமுக தரிசனம் என்னும் தலைப்பை உடையது. அறுமுகக் கடவுளாய் வந்து சூரனை அழித்ததும், கண்டம் கறுத்துத் தேவர் முதலாயினாரைக் காத்ததும், ஈண்டு உள்ளார்க்குப் பிரணவ பஞ்சாக்கர உபதேசங்களைச் செய்து வருவதும் அதோ முகத்தின் செயலே எனக் கூறுகிறார் இப்பகுதியில்.

அதோமுகம் கீழ்அண்ட மான புராணன்

அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலும்

சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப்பிரானும்

அதோமுகன் ஊழித் தலைவனும் ஆமே. -தி.10 பா.516

அடுத்துவரும் மூன்று அதிகாரங்களால் சிவநிந்தை, குருநிந்தை, அடியார் நிந்தை வேண்டா என அறிவுறுத்துகின்றார் திருமூலர்.

தெளிவும் அமைதியும் உள்ள மெய்யுணர்ந்தார் சிந்தையில் உள்ளவன் நக்கனாகிய நம்பிரான். அஃதறியாது அவனை இகழின் பூனை வாயில் அகப்பட்ட கிளிபோன்ற நிலைதான் ஏற்படும்.

தெளிவுறு ஞானத்துச் சிந்தையி னுள்ளே

அளிவுறு வார்அம ரர்பதி நாடி

எளியனென் றீசனை நீசர் இகழின்

கிளியொன்று பூஞையிற் கீழது வாகுமே. -தி.10 பா.518

அடுத்த அதிகாரம் `பொறையுடைமை' என்பது. அவா, அழுக்காற்றைத் தோற்றுவிக்கும்; அவாவுடையான் பிறராக்கம் பொறான். அதற்கு மருந்து போதும் என்ற மனமும் பொறுமையுமே ஆகும். இப்பொறையைப் பயின்றால் ஆனந்தக் கூத்தனோடு இசைந்து இன்புறல் ஆகும் என்பது `வல்வகையாலும்' என்னும் மந்திரத்தில் கூறப்படுகிறது. இறைவனை வழிபடுவோரே பெரியர்; அவர் கொள்ளும் தவம், சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வகைப்படும்.

அந்நால்வரோடும் உடனிருந்து இறைவன் திருவருளில் நிலைபெற்றுள்ளேன். நீங்களும் அவ்வாறே செய்ம்மின் எனவும் இறைவன் திருவருள் கலைஞான வடிவிலும், மெய்யுணர்வு வடிவிலும் அபர தடத்தமாகவும், பரசொரூபமாகவும் இருக்கும். இவற்றுள் கலைஞானம் கேட்டுச் சிந்தித்தோர் பிற்காலத்து வீடுபேறு உறுவர்; மெய்யுணர்ந்தார்க்கு இம்மையும் அம்மையேயாம். இவ்விருவருமே பெரியாருள் வைத்துப் பெரியார். அவர்களொடு யானும்

உடனிருந்து இன்புறுவேன் எனவும் கூறி இரண்டாந் தந்திரத்தை முடிக்கின்றார் திருமூலர்.

ஓடவல்லார் தமரோடு நடாவுவன்

பாடவல் லாரொலி பால்மிசை வாழ்குவன்

தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்

கூடவல் லாரடி கூடுவன் யானே. -தி.10 பா.533

அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்

பெருமைவல் லோன் பிற விச்சுழி நீந்தும்

உரிமைவல் லோன்உணர்ந் தூழி இருக்கும்

திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே. -தி.10 பா.538

அருமை வல்லான் - சிவபிரான்.

மூன்றாந் தந்திரம்:

உடம்பில் உறுபொருளாகிய முதல்வனைக் காண்டற்கு உடம்பு நீடுதலும் மன ஒருமையும் இன்றியமையாதவை. ஆதலால் அவற்றிற்குச் சிறந்த சாதனமாகிய வாசி யோகத்தை விரித்துக் கூறுகின்றது.

வேறு நெறிகளைத் தேடாமல் யோக நெறியை மேற்கொள்க. அது ஞானத்தைத் தரும்; பிறவியை நீக்கும் என்கிறார்.

அந்நெறி இந்நெறி என்னாது அட் டாங்கத்

தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்

நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகல் ஆம்

புன்னெறி ஆகத்திற் போக்கில்லை ஆகுமே. -தி.10 பா.541

இவ் யோகம் எட்டு உறுப்புக்களை உடையது. அவை இயமம், நியமம், இருக்கைநிலை, பிராணாயாமம் (வளிநிலை), பிரத்தியாகாரம் (தொகைநிலை), தாரணை (பொறைநிலை), தியானம், சமாதி என்பவை. இவற்றுள் முதன் மூன்றும் அடிப்படையாய் அமைவன; ஏனை ஐந்தும் மேல் நிலைகள்.

மனத்தை அது சென்றபடி செல்லவிடாது அறிவினால் கட்டுப் படுத்தித் தீமையின் நீக்குவதே இயமம் ஆகும். அது கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பேருண்டி நயவாமை, பொறையுடை யனாய் அடங்குதல், விருப்பு வெறுப்பின்றிச் சம நிலையனாதல், தனக்குக் கிடைத்ததைப் பகுத்து நுகர்தல், தூய்மை, கள்ளுண்ணாமை, காமங்கொள்ளாமை என்னும் பத்தில் அடங்கும்.

நியமமாவது அடங்கிய மனத்தை நன்றின்பால் உய்த்தல். அது தவம், செபம், உவகையோடிருத்தல், கடவுள் முதலிய பொருள்கள் உள்ளன என்னும் கொள்கை, தக்கார்க்குக் கொடுத்தல், சிவவிரதம் (திருநீறணிதல்), சைவ நூற்கேள்வி, சிவவேள்வி, சிவபூசை, தெளிவறிவு என்னும் பத்தையும் போற்றிக் கொள்வதால் உளதாகும்.

ஆதனம் (இருக்கைநிலை) என்பது தலையும் கழுத்தும் முது கெலும்பும் நேராக நிமிர்ந்திருத்தற் பொருட்டு மேற்கொள்ளப்படும். கால் கைகளின் அமைப்பு. அது பதுமாதனம், பத்திராதனம், சிங்கா தனம் முதலாகப் பலவகைப்படும். இவற்றுள் பெரும்பாலோர் கொள்வது பதுமாசனம். அது, தாள்களை மாற்றுத் துடைகளின் மேல் இறுக ஏற்றி, உள்ளங்கால்கள் மேல் நோக்கும்படி நிமிர்ந்திருந்து, இரு கைகளை வளைக்காமல் முழந்தாள்களை ஆதாரமாகக் கொண்டு அகங்கைகள் வெளிப்பட்டுத் தோன்றவைத்தல். இவ்வாறு தனக்கு ஒத்தவொரு இருக்கை முறையைப் பழகி நீண்டநேரம் அசைவின்றியும் வருத்தமின்றியும் மனவொருமையுடன் உயிர்ப்பு ஒழுங்காக உள் புகுந் தும் புறம் போந்தும் இயங்கும்படி இருத்தல் மூன்றாவது உறுப்பாகும்.

நான்காவது உறுப்பாகிய வளிநிலை உயிர்ப்பை ஒழுங்காக இயங்கச்செய்து அதன் பயனை முற்றக்கொண்டு, இதயத்துடிப்பு, செந்நீர்ச்செலவு, விளக்கமான அறிவு மூன்றும் காரண காரியமாய் நிகழ்ந்து செம்மையுறப் பழகுதல் ஆகும்.

உயிர்ப்பு தன் விருப்பிற்செல்லும் குதிரைக்கு ஒப்பிட்டுக் கூறப்படுகிறது. குதிரைத் தலைவன் அதனைத் தன் விருப்பப்படி செலுத்தி நலன் உறுவதுபோல நாம் உயிர்ப்பு நெறியைப் பழகுதல் வேண்டும்; குதிரை ஏற்றம் பழகாத ஒருவனைக் குதிரை கீழே வீழ்த்து வதுபோல, உயிர்ப்பும் அதனை இயக்கும் முறை அறியாதானை வீழ்த்திவிடும்; விரைந்து இறந்துவிடச் செய்யும் என்கிறார் திருமூலர்.

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்

உய்யக்கொண் டேறும் குதிரைமற் றொன்றுண்டு;

மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும்; கொடாதுபோய்

பொய்யரைத் தள்ளி விழுத்திடுந் தானே. -தி.10 பா.552

செலுத்தத் தெரிந்தால், பற்றுக்கொடுக்கும், ஏற இடங்கொடுக்கும், அவன் ஊர் காவலும் செய்யலாம், ஐவரையும் அடக்கி ஆளலாம். அதை அடக்கத் தெரியவில்லையோ, தான் கீழே வீழ்வன்; ஐவர் கலகம் செய்வர், ஊர் கெட்டுப் போகும். (ஐவர் - ஐம்பொறிகள், ஊர் - உடம்பு, தலைவன் - உயிர், மெய்யர் - உயிர்ப்பைப்பற்றி மெய்யாக அறிந்தவர், பொய்யர் - போலி அறிவினர்.

"சற்குரவன் அருளைப் பெற்றால் உயிர்ப்பு வசப்படும்"

இடத்துளையால் 16 மாத்திரைப் பொழுது உட்கொள்ளுதல் பூரகம்; உட்கொண்ட காற்றை 64 மாத்திரைப்பொழுது உள்ளே அடக்குதல் கும்பகம்; (வலத்தால்) 32 மாத்திரை அளவு வெளிவிடுதல் இரேசகம்; இதனை மீள வலத்தில் பூரித்தல் கும்பித்தல் இடத்தால் இரேசித்தல், என மாறி மாறிச் செய்தல் நாடி சோதனைக்கு உரிய மறைப் பொருளாம். பின் எப்போதும் இடத்தில் கொண்டு கும்பித்து வலத்தில் விடுதல் - பயிற்சிக்கு உரியது.

நாடி சோதனைக்கு நான்கு முறையும், பயிற்சிக்கு 16 முறையும் செய்யத் தக்கது என சிவாக்கிர பத்ததி கூறுகிறது. இங்ஙனம் செய்வார்க்கு உடலுக்கு வரக்கூடிய சில நோய்கள் வாரா; இருக்கும் சில நோய்கள் நீங்கும்; ஆயுள் நீடிக்கும். உடம்பு மந்திர வடிவாகவும் விளங்கும்.

அடுத்த உறுப்பு பிரத்தியாகாரம். இது கும்பகம் செய்யும் போது மனத்தை அவ்வுயிர்ப்புடன் குறிப்பிட்ட ஆதாரங்களிற் செலுத்துதல் தாரணை. அப்பழக்க முயற்சியால் ஆங்காங்கே மனத்தை நிறுத்துதல். இங்ஙனம் மூலாதாரம் முதலான ஆதாரங்களில் நிறுத்து தலால் வியக்கத்தக்க காட்சிகள் தோன்றும்.

மனத்தை ஒருக்குதலால் உபாதியாகிய தத்துவங்களையும், ஒளியுருவ இறையினையும் உணரும் ஆன்மாவினையும் எண்ணி, ஒன்றுகூடி அதில் அழுந்தல் பிரத்தியாகாரத்தால் கிடைக்கும் பெரும் பயன் என்பது திருமந்திரத்தில் விளக்கப்படுகிறது.

தியானம் சமாதி என்னும் உறுப்புக்கள் முறையே ஆதாரங்களில் உள்ள பொருள்களை உன்னுதலும், ஒன்றுபடுதலும் ஆகும். இங்கெல்லாம் உயிர்ப்பை ஒடுக்கிச் சுழு முனையைத் திறந்து ஒருக்குதல் மேற்செல்லல் என்பவை கூறப்படுகின்றன.

இவ் யோகத்தில் அகத்தே கேட்கப்படும் நாதங்களைத் திருமூலர் பின் வருமாறு கூறுகின்றார்.

மணிகடல் யானை வார்குழல் மேகம்

அணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ்

தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்

பணிந்தவர்க் கல்லது பார்க்க வொண்ணாதே. -தி.10 பா.593

இவ் யோகத்தின் பயன் தத்துவங்களினின்றும் பிரிந்து தன்னியல்பு உணர்தல் ஆகும்.

சுழுமுனை முடிவில் கண், காது, மூக்கு, நாக்கு என்பவற்றின் உணர்வு நரம்புகள் கூடும் இடம் உள்ளது. அங்கு நின்று தியானித்து அசைவற்றிருப்பின் முடிக்கு மேல் உள்ள வெளியில் அளவிறந்த மெய்யுணர்வைக் காண்குவீர், உமக்குக் காலன் என்னும் பேச்சு கனவிலும் வந்து அச்சம் தராது என்கிறார் திருமூலர். சமாதி நிலையில் இருப்போர்க்கு சமநிலை உண்டாகும்.

ஆதிசத்தி தன் சினந்தீர்ந்து கருணைச் சத்தியாக மாறும்; மெய்ப்பொருளைத் தலைப்படுதலும் கூடும்.

பின் அட்டாங்க யோகத்தினால் பெறும் பேறுகள் கூறி அவற்றில் வியக்கத்தக்கனவாக வரும் எண்சித்திகள் கூறப்படுகின்றன. அவை இத்தனை இத்தனை ஆண்டுகள் பயின்ற யோகப் பயிற்சியால் வரும் என்பதும் விவரிக்கப்படுகின்றன.

தானே அணுவும் சகத்துத்தன் நொய்ம்மையும்

மானாக் கனமும் பரகாயத் தேகலும்

தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்

ஆனாத உண்மையும் வியாபியு மாம் எட்டே. -தி.10 பா.634

என்பதனால் அணிமா முதலிய எண் பெருஞ்சித்தி இவை என்பது கூறப்படுகிறது.

உடல் அழியாமல் காக்க வேண்டிய அவசியமும், அதற்கு உரிய உபாயங்களும் பின் கூறப்படுகின்றன. இங்கு அசபையின் இயல்பும் கூறப்படுகிறது. காலச் சக்கரம் என்னும் பகுதியில், திதி, நாள் முதலிய வற்றை அறிந்து செயல் செய்க என்கிறார் முனிவர். ஆயுள் பரீகை்ஷ வாரசரம், வார சூலம் என்பவை இப்பகுதியில் இடம் பெறுகின்றன.

இறைவன் படையாகிய முத்தலைவேல் (சூலம்) திங்கள் சனிகளில் கிழக்கில் நிற்கும். செவ்வாய் புதனில் வடக்கில் நிற்கும். ஞாயிறு வெள்ளியில் மேற்கில் நிற்கும். வியாழனில் தெற்கே நிற்கும். வழிச்செலவு மேற்கொள்ளும்போது சூலம் நிற்கும் திசை பின்னும் இடமும் ஆயின் துன்பம் இல்லை. முன்னும் வலமும் ஆயின் மேல்வினை மேன் மேல் விளையும்.

அடுத்துவரும் அதிகாரம் கேசரியோகம் எனப் பெயர் பெறுகிறது. கேசரி - சிம்மம். இதன் கருத்து பலவாறாக உரைக்கப் படுகிறது. கேசரயோகம் என்பாரும் உளர். இதில், முடியில் ஊற் றெடுக்கும் அமுத ஆற்றைப் பிழைபடாமல் உடம்பில் நிரப்பினால் பாசம் நீங்கும் என்பது `வண்ணான் ஒலிக்கும் சதுரப்பலகை மேல்" என்னும் மந்திரத்தால் (தி.10 பா.784) கூறப்படுகிறது. `செந்நீரைத் தூய்மை செய்யும் பிராணன், கண் மூக்கு செவி நா என்னும் நான்கும் கூடும் இடத்தில் ஒலிக்கின்றது; அங்கு வானீராறும் பாய்கிறது; அவ்வமுதநீர் வேற்று வழியால் நழுவிப் போகாதபடி நாவை மடித்து உள்துளையை அடைத்து அதனை, உடம்பிற் பாயச்செய்து மேல்நோக்கி இருந்தால் பாசம் நீங்கும் எனவும், விசிறிபோல் நாவை மடித்து அதன் நுனியால் மூச்சுத்துளையை அடைத்து அமுதநீரைத் தலையில் தேக்கினால், அது சீவனும், சிவனும் கூடி உறைவிடமாகிறது. மும்மூர்த்திகள் தேவர்கள் முப்பத்து மூவர் தன்மை விளங்கும். உடம்பு எல்லையின்றி நீளும். இங்குச் சிவாயநம என நினைக்க எனவும் சொல்கிறார்.

பின், இல்லாளோடு வாழ்வோர் தம்மைக் கட்டுப்படுத்தி வாழும் முறைகளைக் கூறும் பரியங்க யோகம் கூறப்படுகின்றது. அடுத்து வருவது அமுரிதாரணை. இதில் அமுத நீரை வீணாக்காமல் தேக்கிக் கொள்ளுதல் மீளவும் பேசப்படுகிறது. அமுரி என்பது சிறுநீர் எனக் கொள்ளப்படுகிறது. அது சுரப்பிகளில் இருந்து வரும் எல்லா நீரையும் குறித்தல் கூடும்.

உடலில் உள்ள குடிநீர் கடற்கரையில் உள்ள சிறுகிணற்றுத் தூய நீரை ஒக்கும். ஏற்றம் இட்டுப் பயிருக்கு இறைப்பது போல், உயிர்ப் படக்க முறையால் மேற்சென்று அதனை உடலிற்குப் பாய்ச்சினால், உயிர் தெளிவுணர்வு பெறும். முதல்வனை அகத்தே நாடிக் காணலும் ஆகும் என்கிறார் முனிவர்.

இந்நீரோடு நாள் ஒன்றுக்கு ஒரு மிளகு வீதம் நூறு மிளகு உண்டு வந்தால் உடல்வலி மிகும்; நரை மயிர்கறுக்கும்.

கரையரு கேநின்ற கானல் உவரி

வரைவரை என்பர் மதியிலா மாந்தர்

நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு

நரைதிரை மாறும் நமனுமிங் கில்லையே. -தி.10 பா.832

என்னும் மந்திரப் பொருளுக்கேற்பச் சிறுநீரைத் தூய்மைப்படுத்தி சிலபல நோய்களை வடக்கே ஒரு மருத்துவர் நீக்கி வருவதாகச் செய்தித் தாளில் வந்துள்ளது. விண்வெளி வீரர்க்கு ரஷ்யாவில் இம்முறை பயன் படுத்தப்படுகிறது எனவும் கூறுகிறார்கள்.

இத்தந்திரத்தின் இறுதி அதிகாரம் சந்திரயோகம்.

மூன்றாந் தந்திரம் சந்திர யோகம் என்னும் அதிகாரத்தோடு முற்றுப் பெறுகிறது. சுழுமுனையை மூன்று கண்டமாகக் கருதி மூலா தாரம் தொடங்கி முதற் கண்டத்தில் அங்கி மண்டலமும் (உண்ட ஊனைச் சரிக்கச் செய்யும் நெருப்பு உள்ள இடம்) நெஞ்சக் கமலத்தை ஒட்டிய கண்டத்தில் சூரிய மண்டலமும், முடியில் மதி மண்டலமும் உள்ளன என யோகநூல்கள் கூறுகின்றன. இவற்றில் முடியாகிய சந்திர மண்டலத்தில் அறிவை நிறுத்தி அமுதப்பெருக்கை நுகருமாற்றை மிகுத்துக் கூறுதல் பற்றி இப்பிரிவு இப்பெயர் பெற்றுள்ளது.

எய்து மதிக்கலை சூக்கத்தில் ஏறியே

எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்

எய்துங் கலைபோல ஏறி இறங்குமாம்

துய்யது சூக்கத்துத் தூலத்த காயமே. -தி.10 பா.834

பருநிலையில் அண்டத்தில் உள்ள மதி தன் கலை வளர்ந்தும் தேய்ந்தும் வருதல்போல, நுண்ணிதாய உடம்பினும் மதி மண்டலத்தின் அமுதக் கலைகள் வளர்ந்தும் தேய்ந்தும் வரும் எனத் தொடங்குகிறார்.

புறத்தே ஞாயிறு, மதி, அங்கி, மீன்கள் உள்ளவாறு போல் அகத்தேயும் உள்ளன; அவை அறியற்பாலன. அவற்றின் கலைகள் அனைத்தையும் இடை பிங்கலை சுழுமுனை என்பவற்றின் மூலம் தலைக்கு ஏற்றி மூலத்திற்கு இறங்காதபடி காணும் யோகிகள் இறைவன் திருவடி கூடுவர்.

வலத்தால் பூரித்ததைக் கும்பித்து இடத்தால் இரேசித்தும், இடத்தால் பூரித்ததைக் கும்பித்து வலத்தால் இரேசித்தும் இவ்வாறு மாறி செய்துவரின் அச்சாணி போன்ற உடல் தன்னிலையில் தளராமல் பல்லாண்டுகள் இருக்கும்.

கொப்பூழ்த் தாமரையில் அங்கி வடிவாயுள்ள முதல்வனைப் பெறுவதற்குச் சாதனமாகிய சிவபீஜ மந்திரத்தை அல்லது அஞ்செழுத்தை அறியின், அவ்வழி நின்று எண்ணிவரின், மகனாகிய உயிரின்முன் தந்தையாகிய சிவன் தோன்றுவன் என்பவற்றைக் கூறி இச் சந்திரயோகம் வல்லவர் (சசிவன்னர்) ஊழையும் இறப்பையும் கடப்பர்; அவரே கால முதல்வர் ஆவர்.

மாறிவரும் இடைகலை பிங்கலை உயிர்ப்புக்கள் மாறுத லின்றித் தவறின்றிச் சுழுனையிற் செலுத்தப்பட்டால் உடம்பு தேயாது; இவ்வுலகிலேயே நீங்காத இன்பம் பெருகி வளரும். இதுவே வீடு பேற்றிற்கு வேண்டிய சாதனமும் ஆகும் என்பதனோடு சந்திர யோகம் முடிகிறது.

இங்ஙனம் ஒருவாறு பொருள்நிலை காட்டப்பட்டது. இவற்றுள் ஒரு பிரிவின் கருத்து ஏனைய பிரிவிலும் விளக்கத்தின் பொருட்டும் அதன் முதன்மை பற்றியும் திரும்பக் கூறப்படுதலைக் காணலாம். பலவற்றின் பொருள் துணியப்படாதவை என்பதும் எண்ணத்தக்கது.

இந்நூல் மிகப் பழமையையுடையது. ஆயினும் நூறு ஆண்டுகளாகத்தான் அச்சிடப்பெற்று வழங்குவது. அதனினும் குறைந்த கால அளவில்தான் ஆராயப்பட்டு வருகிறது. இதில் கருத்து வேறுபாடுகள் இருத்தல் இயல்பு. இங்குத் தருமை ஆதீனத்தால் வெளியிடப்படும் இவ்வுரையோடு கூடிய நூல் மேலும் உண்மையை நெருங்கி அணுகப் பெரிதும் துணை நிற்கும் என்பதில் ஐயம் இல்லை. ஆகவே, இவ்வுரையின் உரையாசிரியர் அனைவர்தம் மகிழ்ச்சிப் பாராட்டிற்கும் உரியவர்.

இத்தகைய வெளியீடுகளை எண்ணி ஒழிவின்றிச் செய்து வரும் தருமை ஆதீனக் குருமுதல்வர் அவர்களுக்குத