010 மதிப்புரை

முனைவர் பா. நடராசன், எம். ஏ., டி லிட்.,

தமிழ்நாடு அரசுத் திட்டக்குழுவின் பொருளாதார ஆலோசகர்,

சென்னை.

இந்து சமயத்தின் இருகண்களாகக் கருதப்படுவன வேதமும் ஆகமமுமாகும். இவையிரண்டும் மிகத் தொன்மை வாய்ந்தவை. மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் நிலவிய சமயம் ஆகமத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்நகர மக்கள் ஆலய வழிபாட்டையும் உருவ வணக்கத்தையும் மேற்கொண்டிருந்தனர் என்பதை அங்கே கிடைத்த அகழ்பொருட்கள் விளக்குகின்றன.

ஆகமக் கருத்துக்கள் பாரதநாட்டு மக்களிடையே வழங்கி வந்த பதினெண் மொழிகளிலும் பொதுவாகப் பரவியிருந்தன. எனினும், சிறப்பாக வடமொழி, தென்மொழி இரண்டிலும் பலப்பல நூல்களாக எழுதப்பட்டன. வேதங்கள் பன்னெடுங் காலமாக எழுதப்படாது வழங்கி வந்தமை போல, ஆகமங்களும் எழுதப் படாது குருசீட பரம்பரையாக நிலவி வந்தன. சமய தத்துவங்கள் வடமொழி, தமிழாகிய இரண்டிலுமே சிறப்பாக இந்நாட்டில் இருந்தன என்பதைத்,

"தமிழ்ச்சொல் வடசொல் எனுமிவ்விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலு மாமே" -தி.10 பா.110

என்றும்,

"ஆரிய மும்தமி ழும்உட னேசொல்லிக்

காரிகை யார்க்குக் கருணைசெய் தானே" -தி.10 பா.109

என்றும் வரும் திருமந்திரச் செய்யுட்களால் உணரலாம்.

மந்திரம் என்பது மனத்தின் நிலைத்த உறுதியான பேராற்றலின் விளைவைக் குறிக்கும். மண் - திரம் எனும் சொற்களின் புணர்ச்சியே மந்திரம் எனலாயிற்று எனல் பொருந்தும். இச்சொல் மிகத்தொன்மை வாய்ந்த இலக்கணமாகிய தொல்காப்பியத்தில்,

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரமென்ப" -தொல். செய். நூற்பா 176

என்ற நூற்பாவில் பயிலக் காண்கின்றோம். திருமூலரும்,

"ஆகும் அனுதி உடலல்லா மந்திரம்' -தி.10

என்ற அடியில் இதனை விளக்குகிறார்.

பசு பதி பாசம் பற்றிப் பேசும் இந்நூலில் ஒன்பது தந்திரங்கள் உள்ளன, முதல் நான்கும் சிவஞானத்தை அடைதற்கு விழைவார், அதற்குத் தம்மை உடலாலும் உளத்தாலும் செம்மைப்படுத்திக் கொள் ளுதற்குரிய வழிமுறைகளைக் கூறுகின்றன. சைவசித்தாந்தத் தத்து வங்களை ஐந்தாம் தந்திரம் உரைக்கின்றது. பின்னர் உள்ள ஆறுமுதல் ஒன்பது வரையுள்ளன ஞானத்தால் பெறும் நலங்களைக் கூறுகின்றன.

சைவத்தின் சமரசத்தை மலையிலக்காக எடுத்தோத வந்த நூல் திருமந்திரம். மூவரையும் ஒருவனாய்க் காட்டும் முதல் நூல்; இம்மூவரையும் பேதித்துப் பிளவு செய்வார் உண்மை உணராதவர் எனச் சாற்றும் நூல்.

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்

ஆதிக் கமலத்து அலர்மிசையானும்

சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்

பேதித்து உலகம் பிணங்குகின் றாரே. -தி.10 பா.87

என்பார் திருமூலர்.

கங்கையும் யமுனையும் கலந்து பேரியாறாய் வளஞ்செய்து பாய்வதொப்ப வேதமும் ஆகமமும் கலந்து சிவஞானச் செல்வத்தை வழங்கும் தன்மையது.

வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்

ஓதும் பொதுவும் சிறப்புமென் றுள்ளன

நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்

பேதமது என்பர்; பெரியோர்க்கு அபேதமே. -தி.10 பா.2362

என்னும் அரிய மந்திரம் இருபெரும் ஞானக் கருவூலங்களையும் இணைத்து நிற்கக் காண்கிறோம்.

முழுமுதற் பரம்பொருளை அடைவதற்குக் குருவின் திருவருள் இன்றியமையாதது என்பதை வற்புறுத்திக் கூறுவது இந்நூல்; குருவே இறைவன்; இறைவனே குரு என உணர்த்துவது.

குருவே சிவமெனக் கூறினன் நந்தி

குருவே சிவமென்பது குறித்து ஓரார்

குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்

குருவே உரையுணர்வு அற்றதோர் கோவே. -தி.10 பா.1561

உலக வாழ்வை வெறுத்தவரன்று திருமூலர். ஐம்புலன் களையும், புவன போகங்களையும் செம்மை நெறியிலே நின்று துய்த்துத் திருவருளைப் பெறல் வேண்டும் என்று கருதுவாராய், உடம்பை ஒறுக்காது பேணல்வேண்டும் என்று வற்புறுத்துவார்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. -தி.10 பா.708

என்றும்,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே. -தி.10 பா.1799

திருமந்திரத்தில் மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் பேசப் படுகின்றன. இன்றைய விஞ்ஞானிகள் கண்ட அணுவும், அணுவினுள் அணுவும் அன்றே அவர்கண்ட உண்மைகள். விஞ்ஞானிகளால் இன்னும் அறிதற்கரிய பல உண்மைகள் திருமந்திரத்தில் உள்ளன. `அமுரிதாரணை' என்பது திருமந்திரத்தில் ஒரு பகுதியாகும். சிறுநீர் கொள்ளும் இம்முறையை எள்ளியவர்களும் உண்டு. ஆயின், அண்மையிலே சிறுநீர் மருத்துவ முறையிலே இதயநோய் முதலிய பல்வகைப் பிணிகளை மாற்றுவதற்கு அருமருந்தாய் உதவுகிற தெனக் கண்டுள்ளனர். இங்ஙனம் எத்தனை உண்மைகளை இந்நூல் விளக்குமோ! காலம் காட்டும்; யாரறிவார் இதன் பெருமை.

இந்நூல் தோத்திர நூல்; சாத்திர நூல்; மந்திர நூல்; தந்திர நூல்; மெய்ஞ்ஞான நூல்; விஞ்ஞான நூல். இம்மையும் மறுமையும் காட்டும் செம்மை வாய்ந்த நூல்; யோக நூல்; போக நூல்; மருத்துவ நூல்; சித்த நூல்; இன்னும் வியத்தகும் கருத்துக்கள் பலவற்றை விளக்கும் அரிய நூல்.

இத்தகைய அரிய ஞானக் கருவூலம் தந்தருளிய திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த முனிவரெனக் கூறுவர்; ஆனால் அவர் எழுதிய திருமந்திரம் மூவாத மெய்ஞ்ஞான நூலாய் உலகம் உள்ள வரை நிலவும். இத்தகைய மெய்ஞ்ஞானி வாழ்ந்த காலத்தைப் பல்வேறு கோணங்களிலே இருந்து ஆய்வார் உண்டு. கடைச்சங்க காலத்திலே இருந்து சுந்தரமூர்த்தி நாயனார் காலம் வரை முன்னும் பின்னுமாகக் கூறுவர். இலக்கியமும் வரலாறும் இவர் ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தாரென்பதைத் தெளிவுறக் காட்டுகின்றன. எக்காலத்தில் இருந்தவராயினும் முக்காலமும் உணர்ந்த இம்முனிவர் பெருமான் "எண்ணிலி கோடியும்" வாழ்பவர் என்பதில் ஐயமில்லை.

திருமந்திரம் பலபதிப்புக்களாக முன்னர் வெளிவந்து உள்ளது.

சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதையே தம்பிறவிப் பெரும்பயனாகக் கருதும் தருமை ஆதீன 26ஆவது குருமகா சந்நிதானமாகிய ஷ்ரீலஷ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவருளால் திருமந்திரத்தில் மூன்று தந்திரங்கள் தெளிவுரை, குறிப்புரை தாங்கி வெளிவருதல் பெரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். முன்னைய பதிப்புக்களிலும், இப்பதிப்பில் சிற்சில மாற்றங்கள் காணப்படுகின்றன. வேறு பதிப்புக்களில் காணப்பட்ட பாயிரச் செய்யுட்களில் சில முதல் தந்திரத்திலே சேர்க்கப் பட்டிருக்கின்றன. உரையிலே திருவாசகம் போன்ற சமய நூற்பகுதிகள் மேற்கோள் செய்யப்பட்டுள்ளன. திருமந்திரச் சாயல் தாங்கிய சமய நூல்கள் ஆங்காங்குக் குறிக்கப்பட்டிருக்கின்றன. இங்ஙனம் பல வகையானும் விளக்கமும் திருத்தமும் பெற்று வெளிவரும் தருமை ஆதீனத் திருமந்திர இவ்வெளியீடு சைவத்துறை நிற்பார்க்குப் பேருதவியாக விளங்கும். இதனை வெளியிட்ட தருமை ஆதீனத்திற்கு அறிவுலகும் ஆன்ம உலகும் என்றும் கடப்பாடுடையதாகும்.