குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26ஆவது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்

வழங்கியருளிய

010 ஆசியுரை

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகம்என்று உணர்

- ஓளவையார், நல்வழி பா.40

கருத்து ஒன்றே:

"பலகலை ஆகமம் வேதம் யாவையினும் கருத்துப் பதி, பசு, பாசம் தெரித்தல்" என்பது உமாபதி சிவாசாரிய சுவாமிகளின் உபதேசம்.

இதனை ஒட்டியே ஓளவையாரும் திருக்குறள், நான்மறை முடிவு, மூவர் தமிழாகிய தேவாரம், முனிமொழி கோவை, திருவாசகம், திருமூலர் சொல்லாகிய திருமந்திரம் ஆகியவற்றின் முடிவான கருத்து பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மை மொழிதலேயாம் என்பதைத் தெரிவித்துள்ளார்.

ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்கள் ஒத்த கருத்து உடையவர்களாகவே இருப்பர். இதற்கு இந்நூல்களே சான்று.

மந்திரம்:

அருளாளர்கள் மொழிவன எல்லாம் மந்திரங்கள். மந்திரம் என்ற சொல்லுக்குப் பொருள், நினைப்பவரைக் காப்பது என்பதாம். மந்திரங்களை ஜெபிப்பதுடன் நினைப்பதற்கு ஆற்றல் அதிகம். மந்திரங்களாக விளங்கும் அருள் நூல்களை வழங்கிய பெருமக்களை நிறைமொழி மாந்தர் என்பர் தொல்காப்பியரும், திருவள்ளுவரும்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப. -தொல் செய்யுள் - 178

என்பது தொல்காப்பியம்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். -குறள் 28

என்பது திருக்குறள். இப்பெரியோர்களின் வார்த்தைகள் அனைத்துமே மந்திரங்கள் ஆயினும் சிறப்பாக யோகப் பயிற்சிக்கும் வழிபாட்டிற்கும் உரிய மந்திரங்கள் நிறைந்திருத்தல் பற்றி இப்பத்தாம் திருமுறை திருமந்திரம் என்றே போற்றப் பெறுகிறது.

முகம்:

இவ்வளப்பரிய பெருநூலைப் பருப்பொருட்டாகப் புரிந்து கொள்வதற்கு உரைநடையில் ஒரு முகவுரை இன்றியமையாதது. ஒரு மனிதனைப் புரிந்துகொள்ள அவன் முகம்தான் துணை செய்கிறது. அதுபற்றியே `அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' (பழமொழி) என்றனர்.

எவ்வளவுதான் உடல் வளமாகவும் வலமாகவும் நலமாகவும் இருந்தாலும் அவன் முகம்தான் அவனது வளத்தையும், வலத்தையும், நலத்தையும் எடுத்துக்காட்டும். இது பற்றியே திருவள்ளுவரும்;

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம். -குறள் 706

என்றார். எனவே ஒரு நூலின் முகவுரை அந்நூலில் உள்ள கருத்துகளைப் புரிந்துகொள்ளப் பெரிதும் துணைசெய்யும் என்பது ஒருதலை.

இம்முகவுரையைப் பாயிரம் என்று இலக்கண நூல் கூறும். இம்முறையில் இத்திருமந்திரத்திற்கும் திருமூலர் பாயிரம் எழுதி யுள்ளார். அது பாடல் பகுதியாய் உள்ளது;

"பருப்பொருட் டாகிய பாயிரம் கேட்டார்க்கு

நுண்பொருட் டாகிய நூல் இனிது விளங்கும்." (தி.10 பாயிரம்)

ஆதலின் இந்நூலின் அமைப்பினை ஓரளவு புரிந்து கொள்ளத் துணையாகவே முகவுரை (பாயிரம்) தேவைப்படுகிறது.

பத்தாம் திருமுறை :

திருமுறை ஆசிரியர்கள் இருபத்து எழுவருள் ஒருவராகிய திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் பத்தாம் திருமுறையாக விளங்குவது. இது மூவாயிரம்பாடல்களைக் கொண்டது.

காரணாகமம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்னும் ஒன்பது ஆகமங்களின் சாரமாகத் திகழ்வது. ஒன்பது ஆகமங்களையும் ஒன்பது தந்திரங்களாகக் கொண்டுள்ளது.

முதல் தந்திரம் நிலையாமை கூறுமுகத்தால் ஞானம் பெற அறம் உணர்த்துகிறது.

இரண்டாம் தந்திரம் புராணங்களின் வழியே சிவபராக் கிரமங்களையும் அவர்தம் புகழையும் பேசுகிறது.

மூன்றாம் தந்திரம் பெருமானை அடையும் யோக சாதனங்களைக் குறிப்பிடுகிறது.

நான்காம் தந்திரம் மந்திர யந்திர வழிபாட்டு முறைகளை விளக்குகிறது.

ஐந்தாம் தந்திரம் சைவத்தின் பிரிவுகளையும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகளையும் தெளிவிக்கிறது.

ஆறாம் தந்திரம் சிவமே குருவாக நின்று அருள்புரிவதையும் சற்குரு கிடைப்பது அவரவர் தவத்தின் பயனாலாகும் என்பதையும் உணர்த்துகிறது.

ஏழாம் தந்திரம் அண்டமும், பிண்டமும் இலிங்க உருவாய் உள்ளதையும், சிவபூசை, குருபூசை செய்ய வேண்டிய அவசியத்தையும் அறிவிக்கிறது.

எட்டாம் தந்திரம் உயிர் எடுக்கும் உடல் பற்றிய அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமய கோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமய கோசம் பற்றிய விளக்கங்களைக் கூறுகிறது.

ஒன்பதாம் தந்திரம் அகர, உகர, மகரமாகிய ஒங்காரப் பிரணவமே எல்லாவற்றிற்கும் மூலம் என்பதையும், தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், முதலிய ஐந்தெழுத்து உண்மைகளையும் ஐந்தொழில் நடனத்தையும் சிறப்புற விளக்குகிறது.

அன்பும் அறிவும்:

சைவ சமய நூல்களைச் சான்றோர் தோத்திரம், சாத்திரம் என இருவகையாகப் பகுத்துள்ளனர். தோத்திரம் அன்பின் அடிப்படையில் எழுவது. சாத்திரம் அறிவின் அடிப்படையில் எழுவது.

மெய் அன்பில் மெய்யறிவும், மெய்யறிவில் மெய்யன்பும் கலந்தே இருக்கும் என்பது நியதி. இங்கு அன்பின் அடிப்படை அறிவின் அடிப்படை என்றது மிகுதி பற்றி எழுவதையே குறிப்பதாகும்.

இறைவனது கருணைப் பெருக்கால் நடைபெறும் ஐந்தொழிற் சிறப்புகளையெல்லாம் அன்பினால் ஆவியோடு ஆக்கை ஆனந்தமாய்க் கசிந்துருகப் புகழ்ந்து பாடுதல் தோத்திரம் எனப்படும். ஆனால் இப்புகழ் உண்மைக்கு மாறாக உபசாரமாகப் பாடப்பட்டது அல்ல. அருளாளர்கள் அருளிய பொருள்சேர் புகழேயாம். என்னெனில், மெய்யறிவும், மெய்யன்பும் உடையாராகலின் இவர்களிடம் மறந்தும் பொய்ப்புகழ் வாராது என்க.

சாத்திரம் என்பதும் அன்புடையார் அறிவு மிகுதிப்பாட்டால் இறைவன் பெருமைகளையும் உயிர்களின் சிறுமைகளையும் உலக இயல்புகளையும் திருவருள் வலிமையால் ஒக்க ஆய்ந்து மக்கள் கடைத்தேற அருளிச் செய்ததாகும். எனவேதான் தோத்திரமும் சாத்திரமும் ஆனார்தாமே என்று இறைவனைப் பாடினார் அப்பர் பெருமான்.

தோத்திரமும் சாத்திரமும் :

இவ்விரு திறத்து நூல்களும் பொய்யன்பிலா அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் வாய்க்கப்பெற்ற மெய் உணர்வாளர்களால் அருளிச் செய்யப்பெற்றவை.

இவ்விரு வகையிலும் பல நூல்கள் இருப்பினும் சைவ உலகில் சமயாச்சாரியர் உள்ளிட்ட 27 ஆசிரியர்கள் அருளிய 12 திருமுறைகளே சிறப்பாகத் தோத்திரங்கள் எனப் போற்றப் பெறுவன.

இதேபோல் சந்தானாச்சாரியர் உள்ளிட்ட அறுவர் அருளிச் செய்த பதினான்கு நூல்களே சாத்திரங்கள். (மெய்கண்ட சாத்திரம்) எனப் போற்றப்பெறுவன.

எழுகோடி மந்திரங்கள்:

இந்த அடிப்படையில் பார்த்தால், திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம் தோத்திரத்தின்பாற்படும். ஆனால் இதில் தோத்திரத்தை விட சாத்திரக்கூறுகளே அதிகம் உள்ளன. இது பத்தாம் திருமுறையாகப் போற்றப்பெறுவது.

"மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னும் அவர் இந்த வகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்து" என்பது திருமுறை கண்ட புராணக் கூற்று. எழுகோடி என்றால் ஏழு கோடி மந்திரங்கள் என்பது பொருள் அல்ல. ஏழு முடிவுகளை உடைய மந்திரங்கள் என்பதே பொருளாகும்.

அவையாவன- நமஹா, சுவாஹா, சுவதா, பட், உம்பட், வௌஷட், வஷட் என்பனவாகும்.

நமஹா - ஐஸ்வர்யம் அளிப்பது.

சுவாஹா - தேவதைகளைத் திருப்தி செய்வது.

சுவதா - தைரியம், வசீகரம் கொடுப்பது.

பட் - விக்கினங்களைத் துரத்துவது.

உம்பட் - காமாதிகளைப் போக்குவது.

வௌஷட் - தேவதைகளை இழுப்பது.

வஷட் - தேவதைகளை வசம் செய்வது.
திருமுறைகள் அனைத்துமே மந்திரங்கள் ஆகையினால் ஏழு முடிபுகளை வைத்தே மூவர் தேவாரங்களை 7 திருமுறைகளாக வகுத்தனர்.

யோகநூல்:

"பந்தமுறும் மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால் அந்த முறை நான்கினொடும் முறை பதினொன்றாக்கினார்" என்கிறது திருமுறை கண்ட புராணம். அந்த முறையில் நான்கினொடு என்பது 8, 9, 10, 11ஆம் திருமுறைகளைக் குறிக்கின்றது.

"மந்திரங்கள் பதினொன்றும்" என்பது ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் ஆகிய ஐந்து பிரம்ம மந்திரங்களும், இருதயம், சிரசு, சிகை, கவசம், நேத்திரம், அஸ்திரம் ஆகிய ஆறு அங்க மந்திரங்களும் கொண்டதாம்.

இவற்றுள் பத்தாவது மந்திரம் நேத்திரமந்திரமாக உள்ளது. எனவே, பத்தாம் திருமுறையும் நேத்திரத்திற்கு ஒப்பாகக் கொள்ள இருப்பது.

நேத்திரம் - கண். இறைவனுக்கு மூன்று கண்கள் உண்டு. வலது கண் சூரியன், இடது கண் சந்திரன். நெற்றிக்கண் நெருப்பு. இது புருவ மத்தியில் இருப்பது. இக்கண் சிறப்பாக ஆக்கல், அழித்தலுக்குப் பயன்படுத்தப்படும். முருகவேளை ஆக்கியதும், கருவேளாம் மன்மதனை அழித்ததும் இந்நெற்றிக்கண்ணேயாம்.

நமக்கும் மூன்று கண்கள் உண்டு. மூன்றாவது கண் யோக முயற்சியால் திறக்கப்படத்தக்கது. இது பிராணாயாமப் பயிற்சியால் அடையத்தக்கது.

இத்திருமந்திரம் தோத்திர நூல். சாத்திர நூல் என்று போற்றப்பெற்றாலும் பெரும்பகுதி யோக நூலாகவே காட்சி தருகிறது. நெற்றிக் கண்ணும் உச்சித் தலையும் (பிரம்ம ரந்திரம்) யோகத்தால் திறக்கத் தக்கன. எனவேதான் பத்தாவது தந்திரமாகிய நேத்திரத்திற்கு ஒப்பான இதனைப் பத்தாம் திருமுறையாக அமைத்தனர் என்பது திருமுறைகண்ட புராணத்தால் உணர முடிகிறது.

மூலன் உடலில் புகுமுன்:

திருமந்திர ஆசிரியருக்கு அவர் தம் தாய் தந்தையர் இட்ட பெயர் சுந்தரன் என்பதாம். இவர் தென்தமிழ்ப் பொதியத்தில் அகத்தியர் நடத்திய தமிழ்ச் சங்கத்தில் உலகநூல் கற்றார். அவர் ஆதரவால் அறிவு நூல்களைக் கற்க வடகயிலையில் நடைபெற்ற குருகுலத்தில் சேர்ந்து அறிவு நூல்களாம் வேத ஆகமங்களை நந்தியெம் பெருமானிடம் கற்று, நாதர் என்ற பட்டம் பெற்றுச் சுந்தர நாதராய்த் தவம் செய்து வாழ்ந்திருந்தார். அங்கு இவருடன் பயின்றோர், சனகர், சனந்தனர். சனாதனர், சனற்குமாரர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சிவயோக மாமுனிவர் ஆகிய எழுவராவர்.

பதஞ்சலி, வியாக்கிர பாதருடன் இவர் ஒருமுறை தில்லை வந்து நடன தரிசனம் செய்து திருக்கயிலை மீண்டார். பதஞ்சலி வியாக்கிர பாதர் இருவரும் தில்லையிலேயே ஆச்சிரமம் அமைத்துத் தங்கி விட்டனர்.

பெரிய புராணத்தில் திருமூலர்:

சுந்தரநாதர் அகத்தியரைக் காணும் விருப்பினால், திருக்கேதாரம், பசுபதிநாதம், காசி, விந்தியமலை, சீபற்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், தில்லை ஆகிய தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறை சேர்ந்தார். ஒப்பிலாமுலையம்மை உடனாகிய ஸ்ரீ மாசிலாமணி ஈசரைத் தரிசித்தார்.

உள்ளம் துறைசையை நாடியபோதிலும் பொதியமலைக்குப் புறப்பட்டார். காவிரிக் கரையில் சாத்தனூரில், அந்தணர்களின் பசுக்கள் வினைமாள இறந்த மூலன் என்ற இடையன் உடலைச் சுற்றிக் கதறின. செந்தண்மை பூண்ட அந்தணராகிய சுந்தரநாதர், பசுக்களின் துன்பத்தைப் போக்கத் திருவுளம் கொண்டார்.

தமது உடலை ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, தம் உயிரை அட்டமா சித்திகளுள் ஒன்றாகிய பிராகாமியம் என்ற சித்தியினால் பவன வழியாக அம்மூலன் உடலில் பாய்ச்சினார். மூலன் எழுந்தான். பசுக்கள் மகிழ்ந்தன. புற்களை மேய்ந்தன. காவிரியில் நீர் பருகின. மாலையில் வீடு சேர்ந்தன. இவர் அவற்றுடன் சென்று ஊர்ப்பொது மடத்தில் தங்கினார். மனைவியுடன் தொடர்பில்லை என்பதை மனைவிக்கும் மக்கட்கும் அறிவித்தார்.

மறுநாள் தாம் சேமித்து வைத்த உடலில் புகுதற்குச் சென்றார். ஆனால் உடல் காணப்படவில்லை.

இல்லாளன்:

திருவருள், துறைசையில் தவம் இயற்றப் பணித்துள்ளதைத் திருவருளால் உணர்ந்தார்.

திருக்கோயிலின் மேல்பால் படர் அரசின் கீழ் இருந்து ஆண்டுக்கு ஒரு பாவாக மூவாயிரம் ஆண்டு தவம் செய்து மூவாயிரம் திருமந்திரம் மொழிந்தார்.

மூலனின் உடலில் புகுந்த சிவயோகியாரின் நிலைகண்டு மூலன் மனைவி வருந்தினாள். இந்த இடத்தில் இல்லாளன் என்ற அரியதொரு சொல்லைச் சேக்கிழார் எடுத்தாள்கிறார். "இல்லாளன் இயல்பு வேறானமை கண்டு" என்பது அப்பகுதி.

மற்றும் காரைக்காலம்மையார் வாயிலாகவும், "இல்லாளன் வைக்க எனத் தம் பக்கல் முன்னிருந்த நல்ல நறுமாங்கனிகள்" என்ற இடத்திலும் இவ்வரிய சொல்லை ஆள்கிறார்.

இல்லாள் என்ற பெண்பாற் சொல் இல்லத்தை ஆள்பவள் என்ற பொருள் தருகிறது. ஆனால் அதற்கு நேராக உள்ள இல்லான் என்ற ஆண்பாற் பெயர் இல்லாதவன் என்பதைக் குறிக்கிறது. என்பர் சிலர்.

அவர்களைத் தெளிவிப்பாராக "இல்லாளன்" என்னும் இவ்வரிய சொல்லை இவ்விரு இடங்களில் காட்டியுள்ளார் சேக்கிழார். இதன் பொருள், இல்லத்தையும் அதை ஆள்கின்ற இல்லாளையும் ஆள்பவன் என்பதாகும்.
மேலும் "இல்லான்" என்ற சொல் இல்லாதவன் என்னும் பொருளை உணர்த்துவதோடு இல்லத்தை உடையவன் என்ற பொருளிலும் வருகிறது. இதனை விளக்க, இல்லான் என்பதற்கு இல்லத்தை உடையவன் என்ற பொருள்தரும் பாடல் ஒன்றையே நமக்கு அருளியுள்ளார் திருஞானசம்பந்தர்.

நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்

வல்லானை வல்லவர்பால் மலிந்து ஓங்கிய

சொல்லானை தொல்மதிற் காழியே கோயிலாம்

இல்லானை ஏத்தநின்றார்க்குள தின்பமே. (தி.2 ப.11 பா.1)

என்பது அப்பாசுரம்.

வேதாகமம்:

வேத காலம் கி.மு. 6000 என்பர். கி.மு. 3000இல் வேத ஆகமம் பற்றிக் குழப்ப நிலை ஏற்பட்டது. அப்போது அக்குழப்பத்தைத் திருமூலர் தெளிவித்தார் என்பர்.

அதற்கேற்ப வேதச் சிறப்பு என்ற பகுதியில் `சீலாங்க வேதத்தைச் செப்பவந்தேனே' என்றும், `ஆகமச் சிறப்பு' என்ற பகுதியில் `சிந்தை செய்து ஆகமம் செப்பலுற்றேனே' என்றும் குறித்துள்ளமையால் தெளியலாம்.

வேதத்தை விட்ட அறமில்லை என்றும், வேதத்தில் ஓதத்தகும் அறங்கள் எல்லாம் உள்ளன என்றும், தர்க்கவாதத்தை விட்டு வளமுற்ற, வேதத்தை

ஓதியே வீடு பெற்றார்களே என்றும், வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல் என்றும், வேதம் பொதுவும், ஆகமம் சிறப்புமாகும் என்றும் நந்தியெம்பெருமான் வாயிலாக நமக்குக் கிடைத்த ஆகமங்கள் காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், வியாமளம், காலோத்தரம், சுப்பிரம், மகுடம் என்னும் ஒன்பதே என்றும், அவ்வொன்பது ஆகமங்களின் சாரங்களைத் தான் திருமூலர் ஒன்பது தந்திரங்களாகப் பாடியுள்ளார் என்றும் தெளியலாம்.

பாயிரத்தோடு கூடிய ஒன்பது தந்திரங்களையும் "காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின் ஞாலத் தலைவனை நண்ணுவரன்றே" என்று இவரே பலனும் கூறியுள்ளார்.

மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்

மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம்

மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்

மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே. (தி.10 பா.3046)

என்ற பாடலை வைத்து முப்பது உபதேசம் என்பதும், முந்நூறு மந்திரம் என்பதும், தனித்தனி நூல்கள் என்றும் அந்நூல்கள் மூலன் உடலில் புகுவதற்கு முன்னர் சுந்தரநாதர் செய்தது என்றும், மூலன் உடலில் புகுந்த பிறகு செய்தது மூவாயிரம் தமிழ் ஒன்றே என்றும் கூறுவர்.

மூலன் உரைசெய்த என்று இத்திருமந்திரத்திலேயே இருப்பதனால் மூன்றும் திருமூலராயிருந்து அருளிச் செய்ததே என்று கொள்ளுதலும் பொருத்தம் என்று தோன்றுகிறது. மேலும் மூன்றும் ஒன்றாமே என்பதனால் மூன்று நூல்களும் ஒரே கருத்தை மூன்று வரிசையாகக் கூறுவனவே என்று கொள்வதும் பொருத்தமுடைய கருத்தேயாகும்.

பாயிரம்:

ஒரு மனிதனைப் புரிந்து கொள்ள முகம் இன்றியமையாதது. அதுபோல ஒரு நூலுக்கு முகம் போன்றதான முகவுரை இன்றியமையாதது. முகவுரையைத்தான் பாயிரம் என்கிறோம்.

இதில் பொதுப்பாயிரம் இந்நூலைப் பற்றியது. சிறப்புப் பாயிரம் திருமூலரைப் பற்றி மாணாக்கர்கள் செய்தது. தற்சிறப்புப் பாயிரம் தம்மைப் பற்றித் தாமே கூறியது. ஆக முப்பாயிரமும் இதில் இடம் பெற்றுள்ளன. சிறப்புப் பாயிரத்துள் குருமட வரலாறும், திருமந்திரத் தொகைச் சிறப்பும் உள்ளன.

பொதுப்பாயிரம்:

1 கடவுள், 2. மழை, 3. நீத்தார், 4. அறம் 5. முடியுடைவேந்தர் என்ற ஐவகை வாழ்த்துக்களை உடையது. திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்து என்ற பாயிரப் பகுதியில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை அறன் வலியுறுத்தல் என்று அமைத்திருப்பது ஒப்புநோக்கத்தக்கது.

திருவள்ளுவர் அரச வாழ்த்தைப் பொருட்பாலில் புகன்றுள்ளார். இதனால்தான், தேவர் குறளும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் (ஔவையார் - நல்வழி 40) என்றனர். அஃதாவது, இருநூல்களும் ஒரே கருத்தை வெவ்வேறு வகையில் அறிவிக்க வந்தன என்பதாம்.

காலம்:

இவர் காலம் கி.மு. 3100 லிருந்து கி.மு. 100 என்று துடிசைக்கிழார் குறிப்பிடுகிறார்.

மற்றைய ஆய்வாளர்கள் ஏறத்தாழ கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்று கொண்டுள்ளனர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் இருண்ட காலம் அஃதாவது சிறப்பில் காலம் எனக் கொள்கின்றனர்.

"முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வாரிவளங் குன்றும்" (தி.10 பா. 518)

"ஈசனடியார் இதயம் கலங்கிட

தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்" (தி.10 பா. 534)

என்பன போன்ற பாடல்கள் இருண்ட காலத்தின் கொடுமைகளை விளக்கிக் கூறுவன போன்று உள்ளமையால் இவர் காலம் ஐந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளத் துணை செய்கின்றன.

கலிவிருத்தச் சிறப்பு:

திருமந்திரம் முழுவதும் இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளைகளாலான கலிவிருத்தங்களாலாயது.

பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம், கம்பராமாயணம், ஆகிய பெருங்காப்பியங்களில் கடவுள் தோத்திரங்களாக உள்ள பாடல்கள் அனைத்தும் இக்கலிவிருத்தப் பாடல்களாலாயது. என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

ஒன்பது தந்திரங்களைக் கொண்டதாய் 232 தலைப்புகளில் இந்நூல் நடையிடுகிறது.

திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் 133 அதிகாரங்களைக் கொண்டுள்ளார். அவர் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பப்பத்துக் குறள் வெண்பாக்கள் பாடியுள்ளார்.

ஆனால் திருமூலரோ ஒவ்வொரு தலைப்பிலும் வரையறையின்றி இரண்டு பாடல்கள் முதல் 100 பாடல்களை வரை பாடியுள்ளார்.

கூடுதலாக மூவாயிரத்து நாற்பத்தேழு பாடல்கள் உள்ளன. மூவாயிரம் பாடல்களே இருத்தல் வேண்டும். சில பாடல்கள் முழுவதும் அப்படியேயும். சில மாற்றங்களுடனும் பலவிடத்தும் வந்துள்ளன. இடைச்செருகலும் சேர்ந்துள்ளது. இஃதன்றிச் சில ஏட்டுப்பிரதிகளிலும் உரைகளிலும் காணப்படும் பாடல்களும் 22 உள்ளன. அருணையார் இந்நூலுள் 3000 பாடல்களையே தேர்ந்துகொண்டுள்ளார்.

நூல் அமைப்பு:

பாயிரத்தில், கடவுள் வாழ்த்து, வேதச் சிறப்பு, ஆகமச் சிறப்பு, குரு பாரம்பரியம், திருமூலர் வரலாறு, அவையடக்கம், திருமந்திரத் தொகைச் சிறப்பு, குருமட வரலாறு, திரிமூர்த்திகளின் சேட்ட கனிட்ட முறை என்ற ஒன்பது தலைப்புகளும், அவற்றுள் 112 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

முதல் தந்திரம் உபதேசம் முதலாக கள்ளுண்ணாமை ஈறாக 21 தலைப்புகளில் 224 பாடல்களைக் கொண்டுள்ளது.

இரண்டாம் தந்திரம் அகத்தியம், பதிவலியில் வீரட்டம் எட்டு முதலாக, பெரியாரைக் துணைக்கோடல் ஈறாக 25 தலைப்புகளில் 212 பாடல்களைக் கொண்டு விளங்குகிறது.

மூன்றாம் தந்திரம் அட்டாங்க யோகம் முதலாக, சந்திர யோகம் ஈறாக 21 தலைப்புகளில் 335 பாடல்களைக் கொண்டு விளங்குகிறது.

நாலாம் தந்திரம் அசபை முதல் நவாக்கரி சக்கரம் ஈறாக 13 தலைப்புகளில் 535 பாடல்களைக் கொண்டு இலங்குவது.

ஐந்தாம் தந்திரம் சுத்த சைவம் முதல் உட்சமயம் முடிய 23 தலைப்புகளில் 154 பாடல்களைக் கொண்டுள்ளது.

ஆறாம் தந்திரம் சிவகுரு தரிசனம் முதல் அபக்குவன் முடிய 13 தலைப்புகளில் 131 பாடல்களைக் கொண்டுள்ளது.

ஏழாம் தந்திரம் ஆறாதாரம் முதல் இதோபதேசம் முடிய 38 தலைப்புகளில் 418 பாடல்களைக் கொண்டு இலங்குவது.

எட்டாம் தந்திரம் உடலில் பஞ்ச பேதம் முதல் சோதனை முடிய 43 தலைப்புகளில் 527 பாடல்களைக் கொண்டு விளங்குகிறது.

ஒன்பதாம் தந்திரம் குருமட தரிசனம் முதல் சர்வவியாபி முடிய 32 தலைப்புகளில் 399 பாடல்களைக் கொண்டு நிறைகிறது.

ஆக, பாடல்கள் 3047.

முதல் தந்திரம்:

முதலில் சிவபரத்துவம் கூறுகிறார். சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை என்பது முதலாக 46 பாடல்களில் இதனை விளக்குகிறார். இது காரணாகமத்தின் சாரமாகக் கொள்ளப்படுகிறது. "ஞான முதல் நான்கும் மலர் நல் திருமந்திரமாலை" என்ற சேக்கிழார் வாக்கிற்கேற்ப சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதம் (நிலைகளைப்) பற்றி விளக்க வந்தவர் முதலில் சிவபரத்துவம் கூறி பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையை விளக்குகிறார்.

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்

பதியினைப் போல்பசு பாசம் அனாதி

பதியினைச் சென்றணு காப்பசு, பாசம்

பதிஅணு கில்பசு, பாசம் நிலாவே. (தி.10 பா.115)

என்பது அப்பாடல். கடவுள், உயிர், மலம் என்ற முன்றுமே என்றும் உள்ள உண்மைப் பொருள்கள். ஆனால் கடவுளை உயிர்களும் மலமும் சென்றடையா. பதியாகிய கடவுள் பசுவாகிய உயிரை அணுகுவார். அணுகினால் உயிரைப் பற்றி நிற்கும் பாசமாகிய மலம் அகலும். அகன்றால் உயிர் கடவுளுடன் கலந்து பேரா இன்பப் பெருவாழ்வு பெறும். இக்கருத்தே சைவம் கூறும் உண்மை.

இறைவன் உயிர்களை அனாதியாகவே பற்றி நிற்கும் மலமாகிய அழுக்கை அகற்றுதற்குக் கருணையினால் உடல், கரணம், புவனம் போகங்களைக் கொடுக்கிறான்; அவற்றை உயிர் அநுபவிக்கும் போது நல்லது கெட்டதை அறிவதற்கும் நிலையானவை நிலையில்லாதவை இன்னவை என உணர்த்தி நிலையானவற்றைப் பற்றி உய்தற் பொருட்டும், வேதாகமங்களை அருளி, அதன் வாயிலாக இளமை, செல்வம், யாக்கை முதலியவற்றின் நிலையாமையை உணர்த்தியும், வேதத்தில் விதிக்கப்பட்ட கொல்லாமை, அன்புடைமை முதலாய அறங்களை வற்புறுத்தியும், அந்நெறி பற்றி உயரும் உயிர்கள் தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவசுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம் என்னும் இவ்வழியே சென்று சிவபோகம் துய்த்து உப்பானது தண்ணீரில் கூடித் தன்னிலை கெட்டு தண்ணீராகவே ஒன்றாகுமாறு போல் சீவனும் தன்னிலை கெட்டு சிவத்துள் அடங்கும் என்ற எடுத்துக் காட்டுடன் நிறைவு செய்துள்ளார்.

பாயிரம் - கடவுள் வாழ்த்து:

இதில் முதல் பாடல் "ஒன்றவன்தான்" என்பது. இதனைச் சேக்கிழார், "பான்மை முறை ஓராண்டுக் கொன்றாகப் பரம்பொருளாம் ஏன எயிறணிந்தாரை ஒன்றவன்தான்" என எடுத்து என்ற தொடரால் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான் குணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறுவிரிந்தனன் ஏழும்பர்ச்

சென்றனன் தானிருந்தான் உணர்ந்தெட்டே. (தி.10 பா.1)

ஏகம்சத் என்பது வேதம். `ஒருவன் என்னும் ஒருவன் காண்க' என்பது திருவாசகம். `ஒருவனே தேவன்' என்பது இத்திருமந்திரம்.

இறைவன் ஒருவனே என்பதைத்தான் திருமூலர், ஒன்றவன் தானே என்று முதலில் குறிப்பிட்டார்.

அடுத்து தன்னிடமிருந்து பிரிப்பின்றி நிற்கும் ஆற்றலை அதாவது அருளை இரண்டெனக் கொண்டுள்ளார். இரண்டவன் இன்னருள் என்பதில் அவனது அருள் இருதிறப்படும் என்ற பொருள்பட அறக்கருணை, மறக்கருணையைக் குறிப்பிட்டுள்ளார்.

நின்றனன் மூன்றினுள் என்பது ஒடுக்க காலத்தும் (அழித்தல்) அனுபவ காலத்தும் (காத்தல்) செயற்படுங்காலத்தும் (படைத்தல்) அவற்றுள் நிற்பவன் என்றார். இலய போக அதிகாரத்துள் நின்றமையை இது குறிப்பிடுகிறது.

நான்கு உணர்ந்தனன் என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனையும் தானே உணர்ந்து உயிர்கட்கு உணர்த்துபவன் என்பதைக் காட்டுகிறது.

ஐந்து வென்றனன் என்பது ஐந்தவித்தான் என்ற திருக்குறள் கருத்தும், நேரிழையைக் கலந்திருந்தே புலன்களைந்தும் வென்றானை என்ற அப்பர் திருவீழிமிழலைத் தாண்டகக் (தி.6 ப.50 பா.3) கருத்தும் புலப்படத் தோன்றுவது.

ஆறு விரிந்தனன் என்பது, மந்திரம். பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் ஆறு (அத்துவாக்கள்) வழிகளாக விரிந்தனன் என்பதை உணர்த்துகிறது.

ஏழு உம்பர்ச் சென்றனன் என்பது பிரமலோகம், விஷ்ணு உலகம், உருத்திரலோகம், மகேசுவரலோகம், சதாசிவலோகம், சக்திலோகம், சிவலோகம் என்னும் ஏழுலகங்கட்கும் மேற்சென்று நின்றவன் என்பதை உணர்த்தும்.

அங்கு அவன் தனித்துச் செயற்படாது இருந்தான் அவனை நெஞ்சமே நீ உணர்ந்து எட்டு அடைவாயாக என்று பூர்த்தி செய்துள்ளார். தனித்துச் செயல்படாதிருந்தான் என்பது பரசிவமும், பராசக்தியும் தன்னிலையில் உலகமுகப்படாது சும்மாயிருக்கும் சொரூப நிலையைக் குறிப்பதாகும்.

முதல் தந்திரத்தில் சில பாடல்கள்:

தான் பெற்ற இன்பத்தை எல்லோரும் பெற்று இன்புற வேண்டும் என்ற கருணையினால் திருமந்திரம் என்னும் இந்நூல் எழுந்தது. இதனை,

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. (தி.10 பா.85)

என்ற பாடலால் குறிப்பிடுகின்றார். இப்பரந்த உள்ளப்பாங்கை உணர்த்தும் இப்பாடல் பாயிரத்துள் காட்சி தருகிறது.

யாக்கை நிலையாமையை,

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்

மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார்

இடப்பக்கமே இறை நொந்தது என்றார்

கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. (தி.10 பா.148)

என்ற அரிய பாடலால் விளக்கியுள்ளார்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. (தி.10 பா.139)

என்ற திருமந்திரம்,

நல்லாரைக் காண்பதும் நன்றே நலம்மிக்க

நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்கள் உரைப்பதும் நன்றே அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று.

என்ற நல்வழிப் பாடலை நினைவு கூர்கிறது.

யாவர்க்கும்ஆம் இறைவற்கொரு பச்சிலை

யாவர்க்கும்ஆம் பசுவுக் கொருவா யுறை

யாவர்க்கும்ஆம் உண்ணும்போதொரு கைப்பிடி

யாவர்க்கும்ஆம் பிறர்க்கு இன்னுரை தானே. (தி.10 பா.252)

என்ற பாடலால் எல்லோரும் பின்பற்றத்தக்க எளிய அறம் நான்கினை விளக்கியுள்ளார்.

அன்பே சிவம்:

அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. இவ்வன்பு எல்லோரிடமும் இருப்பதுதான். இருப்பினும் அவரவர்க்கு ஏற்படும் நன்மை, தீமை காரணமாக அவ்வன்பின் தன்மை வேறுபடும். அங்ஙனம் வேறுபடாது ஒரே தன்மைத்தாய் உள்ள அன்பையே இங்குத் திருமூலர் குறித்துள்ளார்.

இதனால்தான், காரைக்காலம்மையார் திருக்கயிலைப் பெருமானிடம் "இறவாத இன்ப அன்பு" வேண்டினார். இறவாத எனில், கெடுதல் இல்லாததும் என்றும் நீங்காததும் நிலையானதும் ஆகும். அத்தகு நிறைவான இன்பமே பேரின்பம். அப் பேரின்பத்தைப் பெறவே நிலையான அன்பை இங்ஙனம் வேண்டினார். அன்பே இன்பத்திற்கு அடிப்படை என்பதை உணர்த்தினார்.

அன்பும் சிவமும் வேறல்ல என்பதுபோலவே அன்பும் இன்பமும் வேறல்ல.நமது அன்பின் முதிர்விலே முடிவிலா இன்பமான சிவம் வெளிப்பட்டுத் தோன்றும்.

நிலையான அன்புப் பிழம்பாகச் சிவம் திகழ்கிறது. அதனை அடைய நாமும் அன்புருவாய், நிலையான அன்புருவாய் ஆகவேண்டும். நமது அன்பு வளரும்; தளரும்.இறை அன்போ என்றும் ஒரே படித்தாய், உயிர்களிடத்தே நீங்காதிருக்கும். இதனை மணிவாசகரும், திருவாசகம், போற்றித்திருவகவலில் "சாயா அன்பு" என்று குறிப்பிடுகிறார்.

"சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்

தாயேயாகி வளர்த்தனை போற்றி." -தி.8 போற்றித் திருவகவல் 86,87

என்பது அப்பகுதி. இதனைத்தான் திருமூலர் அருளியுள்ள பாடலும் தெளிவிக்கிறது.

அன்புசிவம் இரண் டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. (தி.10 பா.269)

இதனை வேறொரு வகையிலும் சிந்திக்கலாம். அறிவு, சிவம், அன்பு, சக்தி இவ்விரண்டும் வேறல்ல. ஒன்றே, அறிவாகிய சிவம் பொருளாயிருப்பது. அன்பாகிய சக்தி சிவத்தின் தன்மையாயிருப்பது. எனவே, ஒரு பொருளும் அதன் தன்மையும் ஒன்றேயாமாறுபோல அறிவாகிய சிவமும் அதன் தன்மையாகிய அல்லது பண்பாகிய சக்தியும் வேறல்ல ஒன்றேயாம் என்பதை இம்மந்திரத்தால் தெளிவிக்கின்றார்.

இரண்டாம் தந்திரம்:

முதல் தந்திரத்தில் கூறியபடி நின்றவர்கள் அடையும் நன்மைகளையும் நில்லாதவர் அடையும் தீமைகளையும் புராண வரலாற்று வாயிலாக விளக்கியுள்ளார்.

அசுரர்களைப் பொதிய மலைக்கு வடக்கே செல்லவொட்டாமல் தடுத்த அகத்தியர் திறத்தினை அகத்தியம் என்ற தலைப்பிலும், அட்டவீரட்டச் செயல்களைப் பதிவலி என்ற தலைப்பிலும், அயனுக்கு வாளும், அரிக்கு ஆழியும், இராவணனுக்கு நாளும் வாளும் கொடுத்ததையும், சூரபன்மன் வதத்தையும் சண்டீசர் பதம் பெற்றமையையும் இலிங்க புராண(தி.10)ப் பகுதியிலும் குறித்துள்ளார்.

திருமால் சக்கரம் பெற்ற வரலாறு சக்கரப்பேறு என்ற பகுதியில் விளக்கப்படுகிறது. பிரமவிஷ்ணுவின் அகங்காரத்தைப் போக்கிய பகுதி "அடிமுடி தேடல்" என்ற பகுதியில் விளக்கப்படுகிறது. பரமன் எலும்பும் கபாலமும் ஏந்திலனேல் ஐந்தொழில் நடைபெறா என்பது "எலும்பும் கபாலமும்" என்ற பகுதியில் விளக்கப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களையும், முறையே அயன், மால், உருத்திரன், மகேசன், சதாசிவனாய் நின்று செயற்படும் திறனையும், புவனங்களையும் அதில் உள்ள எண்பத்து நான்கு நூறாயிரம் ஜீவபேதங்களையும் பரிபாலிக்கும் திறனையும், இப்பகுதிகள் விளக்கிக் காட்டுகின்றன.

அடுத்து, ஒருமலமுடைய விஞ்ஞானகலர், இருமலமுடைய பிரளயாகலர், மும்மலமுடைய சகலர், உற்பவிக்கும் முறை, கரு உற்பத்தி, உற்பவித்த சீவர்கள், குருநிந்தை, சிவநிந்தை, மாகேசுவர நிந்தையின்றிப் பெரியாரைத் துணைக்கொண்டு சத்பாத்திரம் அசத்பாத்திரம் தெரிந்து ஒழுகினோர் இறைவனடி சேர்வர் என்பவற்றை விளக்கியுள்ளார்.

இரண்டாம் தந்திரத்தில் சில பாடல்கள்:

பொதுவான அறங்கள் பலவும் சிவநெறிக்கண் சிறந்து நிற்றலையும், சிவபரத்துவம் நிரந்து நிற்றலையும் முதல்தந்திரத்துள் அருளிய திருமூலர் புராண தந்திரம் எனப் போற்றப் பெறும் இரண்டாந் தந்திரம் சிவபரத்துவத்திற்குச் சான்று காட்டுவதாயுள்ளது.

இதில் உள்ள முதல்பாடல் அகத்தியர் பெருமை கூறுமுகத்தால் சிவபரத்துவம் கூறுகிறது.

நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்து

கெடுகின்ற தெம்பெருமான் என்ன ஈசன்

நடுவுள அங்கி அகத்திய நீபோய்

முடுகிய வையத்து முன்னி ரென்றானே. (தி.10 பா.337)

தீ வண்ணனாகிய சிவபெருமானைச் சதாகாலமும் அகத்தே தியானிப்பவரானதால் அகத்தீயர் எனப்பெற்றார். இப் பெயர்ப் பொருள் பலரும் அறியாத ஒன்று. அகத்தீயரே மருவி அகத்தியர் என வழங்குகிறது என்பது இதனால் புலனாகிறது.

மக்கள் அறநெறி பிறழ்வார்களானால் நிலநடுக்கமும் நிலப்பெயர்ச்சியும் ஏற்படும். அதுபோது சான்றோர் சிலர் இருப்பரேல் உலகம் அழியாது நிலைபெறும். இக்கருத்தைத் திருவள்ளுவரும்,

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை. -குறள் 990

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன். -குறள் 96

என்ற குறட்பாக்களால் தெளிவுபடுத்தியுள்ளார்.

அறம் குறைந்து மறம் பெருகியதால் நிலம் ஒரு பக்கம் சரியத் தொடங்கியது: அப்போது தேவர்கள் சிவபெருமானை வேண்டினர்; பெருமான் சதாகாலமும் செம்பொருளாகிய தன்னை அகத்தே கொண்ட அகத்தியரைத் தெற்கே அனுப்பி, தான் வடக்கே வீற்றிருந்தருளினான். நிலம் சமமாயிற்று. இந்நிகழ்ச்சி சிவபெருமான் திருமணக்காலத்தில் நிகழ்ந்ததாகவும் சொல்லப்பெறும்.

இவ்வரிய பெரிய சிவன் பெருமை, சிவனடியார் பெருமை கூறுவதையே முதலாகக் தொடங்குகிறது இரண்டாந் தந்திரம். இதில் திருக்கோயில்களில் பூசை தடைப்படுமானாலும், பூசை புரிவோர் அன்பு, அறிவு ஆசாரமில்லாதவரானாலும் நாட்டிற்குத் தீங்குவரும் என்று அறிவுறுத்துகிறார்.

முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வாரிவளங் குன்றும்

கன்னம் களவு மிகுத்திடும் காசினி

என்னரு நந்தி எடுத்துரைத் தானே. (தி.10 பா.510)

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தாற்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே

சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே. (தி.10 பா.511)

மூன்றாம் தந்திரம்:

இது எண்வகை யோகங்களைக் கூறுவது. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன அவை.

தவிர்க்க வேண்டிய கெட்ட பழக்கங்களை விடுதல் இயமம் எனப்பெறும்.

கடைப்பிடிக்க வேண்டிய நற்பழக்கங்களை மேற்கொள்ளுதல் நியமம் எனப்பெறும்.

யோகம் பயில்வோர் அமர்ந்திருக்கும் நிலை ஆசனம் எனப்பெறும்.

மூலாதாரத்தில் மூண்டெழுகனலைப் பிராண வாயுவினால் எழுப்பி முறைப்படுத்தும் நிகழ்வே பிராணாயாமம் எனப்படும்.

மனத்தைப் பொறி வழி போகவிடாது அகமுகமாக ஆறு ஆதாரங்களில் நிறுத்துதல் பிரத்தியாகாரம் எனப்படும்.

பொறுமை தாரணை எனப்படும்.

இடையறாது நினைத்தல் தியானம் எனப்படும்.

இறையுடன் கலத்தல் சமாதி எனப்பெறும்.

யோக சித்திகளைப் பெறக் கருவியாயிருக்கும் உடம்பை அழியாதபடி நோயின்றிக் காக்கும் வழிகளைக் காய சித்தி என்ற தலைப்பிலும், உடம்பைப் பக்குவப்படுத்தவேண்டிய முறையை வார சரம், வார சூலை, அமுரி தாரணை, ஆயுள் பரீட்சை, கால சக்கரம் முதலிய தலைப்புகளாலும் விளக்கிப் பின் கேசரி யோகம், பரியங்க யோகம், சந்திர யோகம் முதலியவற்றை விளக்கிப் பிறகு சிவயோகங்கள் எல்லாவற்றினும் அட்டாங்க யோகமே சிறந்தது என்றும் முடித்துள்ளார்.

கேசரி யோகம் என்பது அடயோகத்தின் பாற்படும். கடினமானது. எல்லோரும் பயிற்சி செய்ய இயலாதது.

பரியங்க யோகம் இல்லாளுடன் கூடிச் செய்வது; இது கருத்தொருமித்த காதலனும் காதலியும் கூடிச் செய்வது. இதுவும் எல்லோருக்கும் இயல்வதன்று. சுந்தரர், பரவையார், சங்கிலியாருக்கும், திருவள்ளுவர் வாசுகிக்கும் ஏற்றது.

சந்திரயோகம் என்பது: சந்திரன் கலை 16, சூரியன் கலை 12, அக்கினி கலை 64, தாரணை கலை 4, ஆக 96 கலைகளையும் அறிந்து வளர்பிறை, தேய்பிறைகளில் பயிலப்படும் யோகம்.

இவற்றுள் அட்டாங்கயோகமே சிறந்தது. மேற்கொள்ளத் தக்கது என்று நிறைவு செய்துள்ளார்.

மூன்றாம் தந்திரத்தில் சில பாடல்கள்:

சாத்திரம் என்பது தவமும் அதன் பயனாகிய ஞானமும் என இருவகைப்படும். தவம் சாதனமாகும். அதில் சிறந்து நிற்பது அட்டாங்க யோகம். இதுபற்றி மூன்றாந் தந்திரத்துள் பெரிதும் உணர்த்துகின்றார்.

இயம நியமமே எண்ணிலா ஆசனம்

நயமுறு பிராணாயாமம் பிரத்தியா காரம்

சயமிகு தாரணை தியானம் சமாதி

அயமுறும் அட்டாங்க மாவது மாமே. (தி.10 பா.542)

இயமம் என்பது சான்றோரால் விலக்கியனவற்றை நீக்குதல். அவையாவன: கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்பின்மை, புலால் உண்ணாமை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, மிக்க காமமின்மை முதலியனவாம்.

நியமம் என்பது தவம், செபம், ஆத்திகம், மனநிறைவு, தானம், விரதம், ஞானநூற்கேள்வி, சிவவேள்வி, சிவபூஜை, நற்பண்பு முதலியவற்றை நியமமாகச் செய்தல்.

ஆசனம் என்பது யோகம் பயில்வோர் கை, கால் முதலிய உடல் உறுப்புக்களைத்தக்கபடி அமைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் முறையாகும். இது பத்துவகை, நூறுவகை எனக் கூறினும், எட்டு ஆசனங்களையே இவர் சிறந்ததாகக் கொண்டுள்ளார்.

பத்திராசனம், கோமுகாசனம், பத்மாசனம், சிங்காசனம், சுகாசனம், ஸ்திராசனம் என்ற ஆறும் உத்தமாசனம் என்றும் சுகத்திகாசனம், உத்தமோத்தமாசனம் என்றும் குறிக்கின்றார்.

இம்மூன்று நிலையும் கடைப்பிடிப்போரே அடுத்துள்ள பிராணாயாமம் செய்தற்குரியராவார்.

பிராணன் என்பது மூச்சுக்காற்று. இதனால்தான் உயிர் உடலில் தங்கி இருக்கிறது. பிராண ஆயாமம் என்பதைப் பிராணாயாமம் எனச் சேர்த்துச் சொல்கிறோம். ஆயாமம் என்றால் அடக்குதல் என்பது பொருள். மூச்சை முறைப்படி அடக்கினால் ஆயுள் நீளும். பிராணாயாமத்தை முறையாகச் செய்வோர் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வர். இதனைத் தெளிவிக்கும் பாடல்,

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்

உய்யக்கெண் டேறுங் குதிரை மற்றொன்றுண்டு

மெய்யர்க் குப்பற்றுக் கொடுக்கும்: கொடாதுபோய்ப்

பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. (தி.10 பா.552)

இங்குக் குதிரை என்றது மூச்சுக்காற்றை. இதனை வாசி என்று கூறுவர். அதுபற்றியே குதிரை என்றருளினார். வாசி - குதிரை - பிராண - யாமம் எனப்பிரித்து பிராணவாயுவை நடுநாடியில் செலுத்துவதே பிராணாயாமம் என்று கொள்ளவும் இடந்தருகிறது. யாமம் - நடு. மூலாதாரத்தில் மூண்டெழு கனலை இடது நாசி பூரகத்தால் இழுக்கும் பிராணவாயுவைக் கும்பகமாக அடக்கி அதனை நடுநாடியின் மூலம் மூலாதாரம் முதல் பிரமரந்திரம் வரை படிமுறையாகக் கொண்டுபோய்ப் பரம்பொருளைப் பிரிப்பின்றித் தியானிப்பதே பெரும் பயன் எனக் கொள்ளப்படுகிறது. பிராணாயாமம் செய்யும் முறையை ஒரு பாடலில் விளக்குகிறார்.

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்

ஆறுதல் கும்பம் அறுபத்து நால்; அதில்

ஊறுதல் முப்பத் திரண்ட திரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே. (தி.10 பா.556)

பூரகம் என்பது காற்றை இடது நாசியால் உள் இழுத்தல். கும்பகம் என்பது நிறுத்துதல், ரேசகம் என்பது வலது நாசியால் விடுதல். பூரகம் 16 மாத்திரை நேரமென்றால், நிறுத்துதல் நான்கு மடங்கு அஃதாவது 64 மாத்திரை. விடுதல் அதில் பாதியாகிய 32 மாத்திரையளவு. இதை முறையாகச் செய்தால் நரை திரை மூப்பற்றுப் பல்லாண்டு வாழலாம். முறைமாறின் தீங்கு பயக்கும்.

பிரத்தியாகாரம் என்பது மனம் பொறிவழி போகாமல் அகமுகப்படுத்தி மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களில் நிற்கச் செய்தல். அங்கு இறையருளில் கலந்து அமைதி பெறலாம்.

தாரணை என்பது பொறை நிலை என்பர். பிரத்யாகாரத்தால் ஆறு ஆதாரங்களில் நிறுத்தப்பட்ட மனத்தை மீளவும் புறம்போக விடாமல் அவ்வாதாரங்களிலேயே நிறுத்துதல். அவ்வாதார நிலைகளில் ஊன்றி நிலைப்பதே தியானம் எனப்பெறும் அத்தியான முயற்சியால் தன்னை மறந்து அவ்வாதாரப் பொருளேயாய் விடுதல் சமாதி எனப்படும்.

தியானம் என்பது இடையறாது நினைத்தல். இங்ஙனம் நினைப்பதால் மார்கழி நீராடுவோர் போல் இன்பவெள்ளத்தில் மூழ்கிச் சிறப்பர் என்று அறிவிக்கின்றார்.

சமாதி என்பது முடிவான நிலையைக் குறிப்பது; அஃதாவது நிறைவு. இயமம் முதலியவற்றை வழுவாது கடைப்பிடிப்பவர்கட்கே சமாதி நிலை கைகூடும். அல்லாதவர்க்குக் கூடாது.

இவ்வெண்வகை யோகம் பயிலுங்கால் அட்டமாசித்திகளும் இடையில் கைகூடும். அவற்றை அகற்றி சமாதிநிலை கூடுதலே பெரும் பயனாகும். சித்தியில் ஈடுபடுதல் சிறுபயன் பெறவே பயன்படும். கடவுளோடு ஒப்ப இருக்கும் சமாதி நிலையை விட்டுச் சிறுபயன் கொள்ள விழையார் சான்றோர்.

இனி இத்தந்திரத்தில் அகநோக்கில் காணத்தக்க ஆறு ஆதாரங்களைப் பற்றிச் சிந்திப்போம்.

ஆறு ஆதாரம் - மூலாதாரம் :

ஆறு ஆதாரங்களைப் பற்றியும் அவற்றிற்குரிய மூர்த்திகளைப் பற்றியும், அக்ஷரங்கள் பற்றியும் தெரிந்தால்தான் தியானிப்பதற்கு இயலும்.

மூலதாரம் - இது எருவாய் கருவாய்க்கு இடைப்பட்ட இடம்; மூலாதாரம் என்பது மண், பிருதிவி, முதலாவது ஆதாரம் எனப்படுவது; நான்கு இதழ்த்தாமரை. வீணா தண்டத்தின் அடிப்பாகத்தில் உள்ளது. இத்தாமரையில் சித்தலக்ஷ்மி, வல்லபை என்ற தேவியருடன் கணபதி வீற்றிருப்பதாகத் தியானித்தல் வேண்டும். நான்கு தளத்திற்கும் நான்கு எழுத்துக்கள், வம் சம் ஷம் ஸம்.

சுவாதிட்டானம் என்பது தனது இடம் எனப்பொருள் தரும். சோதியாகிய இறைவனது இடம். குறியினுக்கும் உந்திக்கும் இடைப்பட்ட இடமே சுவாதிட்டானம். கசேரு தண்டத்தின் முதுகுத் தண்டு அடிப்பாகத்தில் இருந்து சிறிது மேல்பாகத்தில் இருப்பது. ஆறிதழ்த் தாமரையில் பம் முதல் லம் வரை ஆறெழுத்துக்கள். சாவித்திரி காயத்திரியுடன் பிரம்மா வீற்றிருப்பார்.

மணிபூரகம் வாயுவைக் கும்பிக்கும் சிறந்த இடம் : டம் முதல் பம் வரையுள்ள பத்து எழுத்துக்கள். பத்திதழ்த் தாமரையில் பூதேவி சீதேவியுடன் விஷ்ணு வீற்றிருக்கிறார். இது தொப்புள் பிரதேசம்.

அனாகதம் என்றால் வடிவற்றது என்பது பொருள். மனத்தின் இடம் இதுவே. கம் முதல் டம் வரை 12 அக்ஷரங்கள் 12 இதழ்த் தாமரையில் கௌரி அம்பிகையுடன் உருத்திரன் வீற்றிருக்கிறார்.

விசுக்தி என்பது மிக்க தூய்மை எனப் பொருள் தரும். முதல் ஃ வரை 6 எழுத்துக்கள். 16 இதழ்த் தாமரையில் உன்மனி வாக்வாதினியுடன் மகேஸ்வரன் வீற்றிருக்கிறார். இடம் நாக்கின் அடிப்பாகம்.

ஆக்ஞை என்பது அறிவிற்கு நிலைக்களம் எனப் பொருள் படும்.

ஹம், க்ஷம் இரு எழுத்து. ஈரிதழ்த் தாமரையில் மனோன்மணி, தர்மசத்தியுடன் சதாசிவம் குருவடிவாக வீற்றிருக்கின்றார். இடம் புருவ மத்தியம், பிரம்மரந்திரம் - இது சிரத்தின் உச்சியில் உள்ளது. அதில் பராசக்தியுடன் பரமசிவன் வீற்றிருக்கிறார்.

இங்குக் குறிப்பிட்ட ஆதாரங்களில் அவ்வம் மூர்த்திகளைத் தியானித்தல் வேண்டும். அனாகததளம் இதயம். மனத்தின் இடம் இது. இங்கு அட்டசித்திகளும் கைகூடும். அதனை அகற்றி மேற்செல்ல வேண்டும். சித்திகளில் ஈடுபட்டால் உண்மை ஞானம் தடைப்பட்டுவிடும்.

பிராசாத யோகம்: கலை நிலை என்ற தலைப்பில் நமது ஆதீன யோகப் பயிற்சிக்கு உரியதாகிய பிராசாத யோகம் பற்றிக் கூறுகிறார். பிராசாதம் என்பதற்குப் பொருள் சிவஞான கதியைத் தருவது என்பது பொருளாகும். பிரா - சிவஞானம்; ஸா - கதி; த - தருவது; இது வாசி யோகத்தினும் நுண்ணிதாய் மேம்பட்டு விளங்குவது. ஒம் என்ற பிரணவத்தைப் பதினாறு கூறுகளாகப் பிரித்துப் பயிற்சி செய்வது சோடசகலாப் பிராசாதம் ஆகும். குரு ஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம் என்ற நூலில் இதுபற்றிய விளக்கம் காணலாம்.

வார சரம்:

வாரம் என்பது இங்கு கிழமைகளைக் குறிக்கின்றது.கிழமைகள் ஏழனுள், வெள்ளி, திங்கள், புதன் ஆகிய மூன்று நாள்களிலும் பிராண வாயு இடது நாடி (நாசி) வழியாகவும், சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய மூன்று நாள்களிலும் பிராண வாயு வலது நாடி (நாசி) வழியாகவும், வியாழனில் வளர்பிறையாயின் இடது நாடி வழியாகவும், தேய் பிறையாயின் வலது நாடி வழியாகவும் இயங்குதல் உடல் நலத்திற்கு ஏற்புடைய இயற்கைப் பிராண வாயு இயக்கமாகும். இதை விளக்கும் பாடல்,

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்

ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்

வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்

தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே. -தி.10 பா.774

அமுரி தாரணை :

அமுரி என்பது சிறுநீரில் உள்ள ஒரு மருந்துப் பொருள். தாரணை என்பது தரித்தல் எனப் பொருள் தரும். அமரி என்பது மருவி அமுரி என வழங்குகிறது. அமரி - மரித்தலை (இறத்தலை) நீக்குவது.எனவே இதுவும் அமிர்தம் என்பதும் ஒரு பொருட் சொற்களாம்.

அமுரி என்பது சிறுநீரே என்பாரும் உளர். அது பொருந்தாது என்பதை அமுரி தாரணைப் பகுதியிலுள்ள ஐந்து திருமந்திரங்களும் பல கோணங்களில் தெளிய விளக்குகின்றன.

துறவிகளும், துறவிகளாய் வாழும் எண்ணம் உடையவர்களும் மிளகுப் பொடியைப் பல வகையாலும் உணவில் சேர்த்து உண்பர். இவ்வாறு உண்டால் சிறு நீரானது சிவ நீராய் மாறும். இதனால் துறவிகள் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் மிளகு தேய்த்துக் குளிக்கிறார்கள். மிளகு தேய்த்துக் குளிப்பவர்களுக்கு நரை திரை வராது. இதை விளக்கும் பாடல்,

நூறும் மிளகு நுகரும் சிவத்தின் நீர்

மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்காள்

தேறி இதனைத் தெளிஉச்சி கப்பிடின்

மாறும் இதற்கு மறுமயி ராமே. -தி.10 பா.831

சந்திர யோகம்:

சந்திரனை விளக்கம் செய்கின்ற யோகம் என்பது இதன் பொருள். சந்திரன் என்பது இங்குச் சந்திர மண்டலத்தைக் குறிக்கும். இஃது ஆறாதாரங்களைக் கடந்த ஏழாம் இடமாகிய பிரமரந்தரத்தைக் குறிப்பது. இது சகஸ்திராரம் எனவும் பேசப்படும். இந்த இடத்தை ஆயிரம் இதழ் உள்ள தாமரை மலராகக் கொண்டு அதில் சிவம் பிரகாசிப்பதாகக் கொள்வர்.

பதினாறு கலைகளுடன் சந்திரன் வளர்ந்தும் தேய்ந்தும் வருவது போல், உடம்பிலுள்ள சந்திர மண்டல ஆற்றலும் வளர்ந்தும் தேய்ந்தும் ஒடுங்குவதாகும். அண்டத்தில் உள்ள சந்திரனைப் போலவே, பிண்டத்தில் உள்ள சந்திர மண்டலமும் ஒத்துள்ளதைக் கூறுகிறது இப்பகுதி.

சூரிய கலை பன்னிரண்டு என்கிறார். இது 12 சூரியர்களைக் குறிக்கும். வளர்பிறை தேய்பிறைகளால் சந்திர கலை பதினாறு என்பதை உணரலாம். அக்கினி கலை பத்து எனக்கூறினாலும், விரிவில் அறுபத்துநான்கு எனப் பேசுகிறார். மேலும் நட்சத்திரக் கலைகளையும் சேர்த்து 96 கலையாகக் கணக்கிட்டு, தத்துவம் 36, தாத்துவிகம் 60, ஆக 96 தத்துவங்களாகக் குறிப்பிடுகிறார்.

மூன்றாம் தந்திரத்தின் முடிவில் யோக நெறியை விளக்கி நிறைவு செய்கின்றார்.
vஇத்திருமந்திர நூலை உரையின் துணைக்கொண்டு தெளிவு கண்டு பயிற்சி பெறுபவரெல்லாம் பல்லாண்டு வாழலாம். அன்பர்கள் படித்துப் பயிற்சி மேற்கொண்டு பல்லாண்டு வாழ, செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.

வாழ்க திருமந்திரம்,

வளர்க அட்டாங்க யோக நெறி.