09 பதிப்புரை

திருச்சிற்றம்பலம்

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்

பாற்கடல் ஈந்த பிரான்

மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்

மன்னிய தில்லை தன்னுள்

ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்

பலமே இடமாகப்

பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே

பல்லாண்டு கூறுதுமே. (தி.9 ப.29 பா.9)

திருமாளிகைத் தேவர் முதல் சேதிராயர் ஈறாக அருளாசிரியர் ஒன்பதின்மர் அருளிச்செய்த இருபத்தெட்டுத் திருப்பதிகங்களைத் திருவிசைப்பா என்றும், சேந்தனார் அருளிய பல்லாண்டிசையினைத் திருப்பல்லாண்டு என்றும் வழங்குதல் மரபு. இவை சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஒன்பதாம் திருமுறையாகப் போற்றப் பெறுகின்றன.

இத்திருப்பதிகங்கள் தேவாரத் திருமுறைகளைப் போலவே பண்ணமைப்புடன் கூடியனவாய், இசைநலம் வாய்ந்தன ஆதலின், திரு இசைப்பா என வழங்கப் பெறுவன ஆயின.

இத்திருமுறையின் இறுதியில் உள்ள திருப்பதிகம் இறைவனுக்குப் பல்லாண்டிசை கூறி வாழ்த்துவது ஆதலின் திருப்பல்லாண்டு என்னும் சிறப்புப் பெயருடன் விளங்குவதாயிற்று.

ஒன்பதாந் திருமுறை 301 பாடல்களை உடையதாய் அளவிற் சிறியதாயினும் திருக்கோயில் வழிபாட்டில் பஞ்ச புராணம் என ஓதப்பெறும் திருமுறைப்பாடல்கள் ஐந்தனுள் திருவிசைப்பாவில் ஒன்றும் திருப்பல்லாண்டில் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

திருவிசைப்பா, திருப்பல்லாண்டை அருளிச்செய்த ஆசிரி யர்கள் திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதர், புருடோத்தமர், சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர் ஆவர்.

திருவிசைப்பா திருப்பல்லாண்டைப் பெற்ற திருத்தலங்கள், தில்லை, திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி, திருக்களந்தை, கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர், திருவாரூர் எனப் பதினான்கு தலங்களாகும்.

இவற்றுள் தில்லைச் சிற்றம்பலத்திற்கு மட்டும் பதினாறு திருப்பதிகங்கள் அமைந்துள்ளன. ஏனைய பதின்மூன்று திருத்தலங்களும் ஒவ்வொரு திருப்பதிகமே பெற்றுள்ளன.

திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் இத்திருப் பதிகங்ளைப் பாடிய ஆசிரியப் பெருமக்கள் சோழ மன்னர்களில் முதல் ஆதித்த சோழன் முதல் கங்கை கொண்ட சோழன் இறுதியாகவுள்ள சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர்.

தேவாரத் திருமுறைகள் பெறாத சோழ மன்னர்களின் பெருங்கோயில்கள் திருவிசைப்பாப் பெற்ற சிறப்பால் திருமுறைகளில் இடம்பெறும் சிறப்பை எய்தின.

இத்தகைய சிறப்புகள் பலவற்றையும் உடைய ஒன்பதாம் திருமுறை ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணி அருளாட்சிக் காலத்தில் தருமை ஆதீனப் புலவர் மகாவித்துவான் முனைவர் திரு. சி. அருணை வடிவேலு முதலியார் அவர்களின் உரை விளக்கங்களோடு 1969ஆம் ஆண்டு குருபூசை விழா மலராக வெளி வந்தது.

இதுபோது 26ஆவது குருமகா சந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாணையின் வண்ணம், சிதம்பரம், நடராஜா ஜுவல்லரி, திரு. இரத்தினசாமி செட்டியாரின் புதல்வர்கள் வழங்கிய நன்கொடையால், ஞானசம்பந்தம் பதிப்பகத்தில் வெளியிடப்பெறுகிறது.

இத்திருமுறைப் பதிப்புக்களைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.

அன்பர்கள் ஓதி உணர்ந்து பயன் பெறுவார்களாக.

இங்ஙனம்,

கட்டளை விசாரணை ஷ்ரீலஷ்ரீ குருமகாசந்நிதானத்தின்

திருக்குவளைத் தேவஸ்தானம் திருவுளப்பாங்கின் வண்ணம்

தருமை ஆதீனம்

திருஞானசம்பந்தத் தம்பிரான்