குருபாதம்
09 ஆராய்ச்சிக் கட்டுரை திருவிசைப்பா இலக்கிய நலமும் பண்பாடும் வித்துவான் முனைவர் பா. நீலா எம். ஏ.
திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டுமாக இணைந்த ஒன்ப தாம் திருமுறை ஓர் அரிய இலக்கியப் பண்பாட்டுப் பெட்டகம். இலக்கியங்கள் பக்தியுணர்வை வெளிக்காட்டுவதைக் காட்டிலும் இது போன்ற பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட எழுந்த தோத்திரங்கள் இலக்கியமாக ஒளிர்வதே மிகப் போற்றற்குரிய அற்புதமாகும். இயற்கையாக இறைவனைக் காண்பது முன்னது. இறைவனாக இயற்கையைக் காண்பது பின்னது. ஒரோவிடங்களில், ஒன்றில் ஒன்று மறைந்து `மரத்தில் மறைந்தது மாமதயானை' என்பது போலவும் தோற்றந்தரும்.
பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணத்தில் ஆனாய நாயனார் இயற்கையாக இறைவனை - சரஞ்சரமாகப் பூத்துக் குலுங்கும் கொன்றையைப் பாம்பணிப் பரமனாகக் காணுந்திறம் இங்கே நோக்கற்குரியது,
சென்றணைந்த ஆனாயர் செய்தவிரைத் தாமமென
மன்றல்மலர் துணர்தூக்கி மருங்குதாழ் சடையார்போல்
நின்றநறுங் கொன்றையினை நேர்நோக்கி நின்றுருகி
ஒன்றியசிந் தையில் அன்பை உடையவர்பால் மடைதிறந்தார். (தி.12 ஆனாயர் பு. பா.21)
சங்கத் தொகை நூலாம் கலித்தொகை இறைவனாக இயற்கையைக் காட்டுகிறது.
ஒருகுழை ஒருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும்
பருதியஞ் செல்வன்போ னனையூழ்த்த செருந்தியும்
மீனேற்றுக் கொடியோன்போல் மிஞிறார்க்குங் காஞ்சியும்
ஏனோன்போல் நிறங்கிளர்பு கஞலிய ஞாழலும்
ஆனேற்றுக் கொடியோன்போல் எதிரியஇ லவமுமாங்கத்
தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோலப்
போதவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற.. -கலி. பாலைக்கலி
நம்பி மூத்தபிரானை வெண்கடம்பும், பருதியஞ் செல்வனை மலர்ந்த செருந்தியும், மீனக் கொடியுடைய மன்மதனைக் காஞ்சி மரங் களும், அவன் தம்பி சாமனைப் பூக்கள் நெருங்கின ஞாழல் தருக் களும், இடபக் கொடியுடைய இறைவனை இலவங்களும் காட்டு வதாகக் கூறுகிறார் பெருங்கடுங்கோ, இனி இறைவனையும் இயற் கையையும் ஒன்றில் ஒன்றாகக் கண்டு காரைக்காலம்மை பாடுகிறார்.
தீயின் இயற்கையான செம்மைப் பண்பால் திருக்கரம் சிவந்ததா! திருக்கரத்தின் செம்மையால் அழல் சிவந்ததா! என்று வேறு படுத்தவொண்ணா இறைவனோடு கூடிய இயற்கையை நமக்கு விண்டுரைக்கின்ற காரைக்காலம்மையாரின் பாட்டு:-
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப்
பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடுவாய் இதனைப் செப்பு. (தி.11 அற். திரு. பா.98)
என்று வரும். ஒன்பது அருளாளர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு இந்நூல்.
1.திருமாளிகைத்தேவர். 2. சேந்தனார். 3. கருவூர்த்தேவர். 4. பூந்துருத்திநம்பிகாடநம்பி. 5. கண்டராதித்தர். 6. வேணாட்டடிகள். 7. திருவாலியமுதனார். 8. புருடோத்தம நம்பி. 9. சேதிராயர் ஆகிய இவர்கள் திருவிசைப்பாக்களையும் சேந்தனார் திருப்பல்லாண்டையும் பாடியுள்ளனர்.
இத் திருமுறையிலுள்ள முந்நூற்றொரு பாடல்களில் பெரும் பான்மையான பாடல்கள் தில்லைத்தலம் பற்றி யெழுந்தனவே. பாடிய இவர்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அனை வருமே சமயாசாரியார்களின் அடியொற்றிச் செல்லும் நோக்குடையர் என்பதைப் பாடல்கள் தெரிவிக்கின்றன.
தேவார ஆசிரியர்களின் பாநலம் இதனுள் பயன்படுத்தப் படுகிறது. திருவாசகப் பாடல்கள் பல, கருத்தும் சொல் லமைப்பும் மாறாமல் எடுத்தாளப்பட்டுள்ளன. பெரிய புராண அடியார்கள் பலர் இத்திருமுறையுள் குறிக்கப்படுகின்றனர். இனி நாம் நயம்பொதிந்த இலக்கிய இயற்கைத் தன்மையோடு கூடிய சில பாடல்களைச் சிந்தனைக்கு விருந்தாக்கிக் கொள்வோம்.
புது மத்தம் மிலைந்த புனிதன்:
அந்திபோலும் உருவம் - பிள்ளை மதிக்கொழுந்தணிந்த பொன்சடை விரித்து, நினைக்க இனிக்கும் திருவடிதூக்கி, எரிதரு காட்டில் பிணத்தின் நிணமுண்டு ஏப்பமிடும் பேய்க்கணங்கள் எழுந்தாட, தூங்கிருள் நடுநல் யாமத்தே அருள்புரி முறுவல் முகிழ் நிலாவெறிப்ப அவன் ஆடுகின்ற ஆட்டத்தாலன்றோ உலகம் இயங்குகின்றது. அரவணிந்த பெருமானின் பெருமையைத்தான் அடியார்கள் எப்படியெல்லாம் பாடியுள்ளனர்!
"நீறணி பவளக் குன்றமே நின்ற
நெற்றிக் கண்ணுடைய தோர் நெருப்பே
வேறணி புவன போகமே யோக
வெள்ளமே!" (தி.9 ப.1 பா.6)
என விளிப்பார் திருமாளிகைத்தேவர்.
"அற்புதத் தெய்வமிதனின் மற்றுண்டோ?
அன்பொடு தன்னை யஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ள மள்ளூறும்
தொண்டர்" (தி.9 ப.13 பா.3)
தமக்கு அவன் கற்பகமே என்பார் கருவூர்த்தேவர். உண்மைதான். கருவூர்த்தேவர் காட்டுவதுபோல் இவன் அற்புதத்தெய்வந்தான். காரணம் என்ன தெரியுமா? அரிவையோர் கூறுகந்தும் ஆசை வாழ்வு நடத்தவில்லை. கங்கையைத் தலையில் தாங்கியிருந்தும் காமக் கடலுள் மூழ்கவில்லை. புவன உயிர்களின் போகத்திற்காகப் பெண் ணோடிணைந்துள்ளான். பெண்ணைத் தன் பாதியில் வைத்திருந்தும் யோகியாக வாழ்பவன் அற்புதச் சித்தன் தானே.
`மங்கை யோ டிருந்தே யோகு செய்வானை' என்று பின்னும் `அற்புத'த்திற்கு விளக்கம் தருகிறார் இவர்.
செம்மனத்தார் தொழு சோதி:
"செம்மனக் கிழவோர் அன்புதா வென்றுன்
சேவடி பார்த்திருந் தலச
எம்மனங் குடிகொண் டிருப்பதற்கு யானார்
என்னுடைய அடிமைதான் யாதே?" (தி.9 ப.14 பா.6)
என்று கருவூர்த்தேவர் மட்டுமல்லர் - ஆணவ நெறிச்சென்று அடிமுடி தேடிய மாயோனும் மலரவனுமே ஏங்குகிறார்கள்.
"மறைகளும் அமரர்கூட்டமு மாட்டாது
அயன் திருமாலொடு மயங்கி
முறை முறை முறையிட்டோர் வரியாயை" -(தி.9 ப.1 பா.1) திருமாளிகைத்தேவர்.
"பண்டலரயன் மாற்கரிது மாயடியார்க்
கெளிய தோர் பவளமால் வரையை" -(தி.9 ப.5 பா.3) சேந்தனார்.
"கேழலும் புள்ளுமாகி நின்றிருவர்
கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர்" -(தி.9 ப.10 பா.5) கருவூர்த்தேவர்.
"பரவிக்கிடந்து அயனும்மாலும் பணிந்தேத்த" -(தி.9 ப.19 பா.9)
பூந்துருத்திநம்பிகாடநம்பி.
"வாளா மாலயன் வீழ்ந்து காண்பரிய மாண்பு" -(தி.9 ப.21 பா.9) வேணாட்டடிகள்.
"வைத்த பாதங்கள் மாலவன் காண்கிலன்
மலரவன் முடிதேடி
யெய்த்து வந்திழிந் தின்னமுந் துதிக்கின்றார்
எழில் மறையவற் றாலே" -(தி.9 ப.23 பா.5) திருவாலியமுதனார்.
"அமரர்கள் தலைவனும் அயனும் மாலும்
இருவரு மறிவுடையாரின் மிக்கா
ரேத்து கின்றா ரின்ன மெங்கள் கூத்தை" -(தி.9 ப.26 பா.10) புருடோத்தமநம்பி.
"புரந்தரன் மாலயன் பூசலிட் டோல மிட்டு
இன்னம் புகலரிதா
யிரந்திரந் தழைப்ப என்னுயிராண்ட கோ" -(தி.9 ப.1 பா.6) சேந்தனார் பல்லாண்டு.
ஆணவம் அடையாத வெற்றியை இவ்வடியார்கள் அன்பால் அடைந்து இப்படிப் பெருமை பொங்கப் பேசுகிறார்கள்.
சிந்திப்பரிய தெய்வப் பதி:
அளக்கலாகா அருளுடையான் எழுந்தருளிய திருத்தலங்கள் பலவானாலும் சிந்திப்பரிய தெய்வப்பதி என்று திருவாலியமுதனார் திருவாக்கால் சிறப்பிக்கப்படும் பதி, சபாபதி ஆடும் சிதம்பரப் பதிதான். அல்லாய்ப் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதாய் கல்லால் நிழலாய் கயிலை மலையாய்க் காண அருள் என்று பல்லா யிரம் பேர் பரவித்தொழும் பெருமையுடையது இப் புலியூர்.
"கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லை" (தி.1 ப.80 பா.1)
என்ற ஞானசம்பந்தப் பெருமானின் வாக்கைத் திருவிசைப்பாவும் உறுதிசெய்கிறது.
"ஓமதூமப் படலத்தின்
பெயர்நெடு மாடத் தகிற் புகைப்படலம்
பெருகிய பெரும்பற்றப் புலியூர்" (தி.9 ப.2 பா.1)
"ஓமப்புகையும் அகிலின்புகையும் உயர்ந்து முகிறோயத்
தீமெய்த் தொழிலார் மறையோர் மல்கு சிற்றம்பலம்"
என்று திருமாளிகைத் தேவரும், திருவாலியமுதனாரும் தில்லைப் பதியின் பெருமையைப் பறைசாற்றுகிறார்கள்.
ஒலியாலும் ஓங்கியது:
காஞ்சிபுரமும் கடலும் இணைத்தெண்ணும் நிலைக்கு வந்தால் கச்சியே பெருமையில் விஞ்சும் என்றொரு பாடல் உண்டு.
மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்முள்
ஒலியும் பெருமையு மொக்கும் - மலிதேரான்
கச்சிபடுவ கடல்படா கச்சி
கடல்படுவ வெல்லாம் படும். -தண்டியலங்காரம் மேற்கோள்
என்னும் புகழ் இதோ தில்லைக்கும் உண்டு என்கிறது திருமுறை.
"தேர்மலி விழவிற்குழ லொலி தெருவிற்
கூத் தொலியேத் தொலி யோத்தின்
பேரொலி பரந்து கடலொலி மலியப்
பொலிதரும் பெரும்பற்றப் புலியூர்" (தி.9 ப.2 பா.4)
"தேரார் விழ வோவாத் தில்லைச் சிற்றம்பலவர்" (தி.9 ப.27 பா.4)
சிற்றம்பலத்துள் நட்டம் ஆடும் நாயகன் அந்தணர்களால் தொழப்படும் அந்தண்மையாளன்.
"பூவேந்தி மூவாயிரவர் தொழப் புகழேந்து மன்று பொலிய நின்ற" (தி.9 ப.3 பா.8) கோவாக - ஞானக் கொழுந்தாக - குணக் குன்றாக, சேவேந்து கொடியானைத் தரிசிக்கின்றோம். திருநாவுக்கரசர் ஓர் திருக்குறிப்பை உணர்ந்தார். `அடியவற்காகக் கன்றிய காலனைக் காலால் கடிந் தவனைச் சென்று தொழுது ஒன்றியிருந்து நினைமின்கள், அச்சிற்றம்பலத்து நட்டம் என்றுவந்தாய் என்ற திருக்குறிப்பை யருளும்' (தி.4 ப.81 பா.2) என்று அனுபவப்பொருள் பேசுவார் அப்பர். திருமாளிகைத்தேவர் `கோயில்'-பற்றிப்பாடிய `இணங்கிலா வீசன்' என்னும் பதிகத்துள் இத் திருக்குறிப்பைப் புலப்படுத்துவார்.
"உருக்கியென் னுள்ளத்துள்ளே யூறலந் தேறன்மாறாத் திருக்குறிப் பருளும் தில்லைச் செல்வன்" (தி.9 ப.4 பா.7)
என்பது அது.
எட்டாந் திருமுறையின் இனிய நினைவுகள்:
தேனூறுஞ் செஞ்சொல் திருக்கோவையாரின் முதற் பாடலில் மனத்தைப் பறிகொடுத்தார் போலும் திருமாளிகைத்தேவர். கோவை யாரின் சொல்லும் பொருளும் திருவிசைப்பாவில் பயிலும் பாங்கைப் பாருங்கள்.
திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள் கொண்
டோங்குதெய்வ
மருவளர் மாலையோர் வல்லியி னொல்கி யனநடை வாய்ந்து
உருவளர்காமன்தன்வென்றிக்கொடிபோன் றொளிர்கின்றதே. (தி.8 கோவை பா.1)
கருவளர் மேகத்தகடு தோய் மகுடக்
கனக மாளிகை கலந் தெங்கும்
பெருவளர் முத்தீநான் மறைத் தொழில்சால்
எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவதி நிதியந்
திரண்ட சிற்றம்பலக் கூத்தா
உருவளரின்பச் சிலம் பொலி யலம்பும்
உன்னடிக் கீழ தென்னுயிரே. (தி.9 ப.2 பா.2)
அனநடை வாய்ந்து வல்லியினொல்கும் அவளடிக்கீழ் என்னுயிர் தங்கி யது எனக்கூறும் கோவைத் தலைவன் கருத்திற்கும் திருவளர் தெய்வப் பதிக்குத் தலைவனாகிய சிற்றம்பலக் கூத்தனின் சிலம்பொலிக்கும் சீறடியில் என் சிந்தை இடங்கொண்டது என்று எடுத் தியம்பும் திருமாளிகைத்தேவரின் கருத்திற்கும் எத்துணைப் பொருத்தம். கோவையின் சொல்லையும் பொருளையும் பொன்னேபோல் போற்றிக் கொண்டாடும் அப்பக்தி நெஞ்சினைப் போற்றுவோம். இன்னும் இவரது கருத்து,
"எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை யுனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க"
என்னும் திருவாசக அடிகளில் (தி.8 ப.7 பா.19) ஊறித்திளைத்து
"திருநீறிடா வுருத் தீண்டே னென்னும்" (தி.9 ப.3 பா.10)
என்றும்,
"உற்றா யென்னும் உன்னையன்றி மற்றொன்று
உணரே னென்னும்" (தி.9 ப.3 பா.11)
என்றும் உருவம் பெறும். இறைவனே வந்து தலையளித்து ஆண்டு கொண்ட சிறப்பை வாதவூரர் இயலுமிடங்களிலெல்லாம் வியந்து பேசுவார்.
"அறிவிலாத எனைப்புகுந் தாண்டுகொண்
டறிவதை யருளிமேல்
நெறியெ லாம்புல மாக்கிய எந்தையைப்
பந்தனை யறுப்பானை" (தி.8 திருச்சதகம் பா.35)
எனப் பாராட்டுவார்.
"வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தா ழுறுபுனலிற் கீழ்மேலாகப்
பதைத்துருகு மவர்நிற்க என்னை யாண்டாய்" (தி.8 திருச்சதகம் பா.25)
என்று தெரிவிப்பார். ஆட்கொண்ட சிறப்பை ஒன்பதாம் திருமுறை கீழ்க்கண்டவாறு விளக்கும்.
"அக்கனா வனைய செல்வமே சிந்தித்
தைவரோ டழுந்தி நானவமே
புக்கிடா வண்ணங் காத்தெனை யாண்ட
புனிதன்" (தி.9 ப.5 பா.6)
"என்னையுன் பாதபங்கயம் பணிவித்
தென்பெலா முருகநீ யெளிவந்
துன்னையென் பால்வைத்தெங்கு மெஞ்ஞான்று
மொழிவற நிறைந்த வொண்சுடரே" (தி.9 ப.11 பா.8)
"பாம்பணைத் துயின்றோ னயன்முதற்றேவர்
பன்னெடுங் காலநிற் காண்பா
னேம்பலித்திருக்க வென்னுளம் புகுந்த
எளிமையை யென்றுநான் மறக்கேன்" (தி.9 ப.14 பா.2)
அதோடுகூட, `கலைகள் தம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினிற் பெற்றெடுத்து எனக்கே, முலைகள் தந்தருளும் தாயினும் நல்ல முக்கணான்' என்ற உள்ளுணர்வு
"நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" (தி.8 சிவபு. வரி 60, 61)
என்றும்,
`பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து' (தி.8 ப.37 பா.9) என்றும் எழிலோடு வரும் திருவாசகத்தைப் படித்தபின் எழுந்ததுதானே. `அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரி' என்று மணிவாசகர் விரும்பு வதுபோலவே கருவூர்த்தேவரும்,
"கண்பனி யரும்பக் கைகள்மொட்டித் தென்
களைகணே யோலமென் றோலிட்
டென்பெலா முருகு மன்பர் தங்கூட்டத்
தென்னையும் புணர்ப்பவன்" (தி.9 ப.8 பா.5)
என்று கூறுகிறார்.
பாதகத்துக்குப் பரிசு வைத்தான்:
நற்செயல்கள்தாம் உலகில் பாராட்டுப்பெறும்; இஃது இயற்கை. பித்தன் என்று பெயர்படைத்த பெருமான் பொல்லாங் கிற்கும் பரிசு தருகிறானே! இதனை என்னென்று சொல்வது? அன்னையையும் தந்தையையும் முன்னறி தெய்வமாக வணங்குவது போக - சண்டேசுரர் தந்தையின் காலைத் தடிந்து ஈறிலாப் பதம் பெற்றார்; பாதகத்திற்கு இவனையன்றிப் பரிசு தருவோர் யார்?
தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். (தி.8 ப.15 பா.7)
தண்டியலங்காரத்தில் இச் செயல்,
தலையிழந்தா னெவ்வுயிரும் தந்தான் பிதாவைக்
கொலைபுரிந்தான் குற்றங் கடிந்தான் - உலகில்
தனிமுதன்மை பூண்டுயர்ந்தோர் வேண்டுவரேற் றப்பாம்
வினையும் விபரீத மாம். -தண்டியலங்கார மேற்கோள்
என்று குறிக்கப்படுகிறது. சேந்தனாரோ,
தாதையைத் தாளற வீசிய சண்டிக்கவ்
அண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப் பொற்கோயிலும்
போனகமும் அருளிச்
சோதிமணி முடித்தாமமு நாமமுந்
தொண்டர்க்கு நாயகமும்
பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. (தி.9 ப.29 பா.10)
என்று அல்லாண்ட கண்டனுக்குப் பல்லாண்டு பாடுகிறார்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையாகி இன்மையாகி இலங்கும் இறைவனை,
"அம்பரா! அனலா! அனிலமே! புவிநீ
அம்புவே! யிந்துவே! யிரவி
உம்பரால் ஒன்றும் அறியொணா அணுவாய்
ஒழிவற நிறைந்த வொண் சுடரே!" (தி.9 ப.11 பா.9)
எனத் திருமுறையுள் பாராட்டுவார் கருவூர்த் தேவர்.
ஈறிலான் எங்கள் இறை:
நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடிநா ராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறிலாதவ னீச னொருவனே. (தி.5 ப.100 பா.13)
செத்துப் பிறக்கின்ற தெய்வங்களின் தலைவனாகச் செம் மாந்து நிற்பவன் தான் செஞ்சடை விரித்த செம்மல்.
சேவிக்க வந்த அயனும் இந்திரனும் செங்கண்மாலும் எங்கும் நெருங்கிக் குழாங் குழாமாய் நின்று கூத்தாடும் தில்லையின் பெருமையைச் சேந்தனார் பல்லாண்டில் பகருகிறார். ஆதியும் அந்தமுமில்லாச் சோதி எனச் சொல்லாமல் சொல்கிறார்.
என்னை இறைவன் ஆட்கொண்ட விதம் எப்படித் தெரியுமா! அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்தினில் கோயில் கொண்டான்.
அந்தத் `தேனைப் பாலைத் தில்லை மல்கு செம்பொனினம் பலத்துக் கோனை ஞானக் கொழுந்து தன்னைக் கொடியேன் என்று கூடுவது' (தி.9 ப.20 பா.4) என்று ஏங்கும் கண்டராதித்தரின் எண்ணங்கள்.
"இன்றெனக் கருளி யிருள்கடிந் துள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று நீ ஆண்டாய்"(தி.8 ப.20 பா.4)
என்றும்,
"தேனைப் பாலைக் கன்னலின்
தெளியை யொளியைத் தெளிந்தார்தம்
ஊனையுருக்கு முடையானை
உம்பரானை வம்பனேன்
நானின் அடியேன் நீயென்னை
யாண்டா யென்றால் அதுசிரிப்பதற்கிடமாகுமே" (தி.8 ப.திருச்சதகம் பா.62)
என்னும் உள்ளொளி, வாக்கில் தெரிய வார்த்தை பேசும் வாதவூரரை யன்றோ பிரதி பலிக்கின்றன.
கருதுவார் கருதும் உருவமுடையான்:
சுருதிவானவனாக - திருநெடுமாலாக - சுந்தர விசும்பின் இந்திரனாக, பரிதிவானவனாக, படர்சடை முக்கட் பகவனாக எருது வாகனனாக, எயில்கள் மூன்றெரித்த ஏறு சேவகனாகப் பின்னும் கருதுவார் கருதும் உருவங்கொள்வான் கங்கைகொண்ட சோளேச்சரத் தான் என்கிறது திருவிசைப்பா. இக் கருத்து கம்பரின் பாடலில் எழிலுருக் கொள்ளுகிறது.
ஒன்றே என்னில் ஒன்றே யாம்
பலவென் றுரைக்கிற் பலவே யாம்
அன்றே என்னில் அன்றே யாம்
ஆம்என் றுரைக்கில் ஆமே யாம்
உண்டே என்னில் உண்டே யாம்
இலதென் றுரைக்கில் இலதே யாம்
நன்றே நம்பி குடிவாழ்க் கை
நமக்கிங் கென்னோ பிழைப்பம் மா! -கம்பராமா. யுத்த. கடவுள் வாழ்.
உலகில் பல நோய்களால் மனிதர்களாகிய நாம் துன்புறுகிறோம். அதில் ஒரு நோய் காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மல ரும் இந்நோய்க்கு மருந்து எதிர்பாலரே. பிணிக்கு மருந்து பிற ஆகலாம்.
அணியிழை தன்னோய்க்குத் தானேதான் மருந்து என்பார் வள்ளுவர். இந்நோய்க்கு மருந்து தேடி மாயையில் சுழலும் உலகமே! பிறவி நோய்க்கு நீ என்ன மருந்து கண்டாய்! சிறிதே எண்ணிப்பார்! வைதாலும் வாழ்த்தினாலும் ஒன்றே என்று மடிதற்கு முந்துகின்ற பரம் பொருளின் அருளைப் பெற என்ன வழி கண்டாய்! தண்ணிலவு முடித்த தூயவன் எத்துணை எளிவந்த கருணையாளனாக விளங்குகிறான்?
தத்தையங் கனையார் தங்கண் மேல்வைத்த
தயாவை நூறாயிரங் கூறிட்டு
அத்திலங்கொரு கூறுன்கண் வைத்தவருக்கு
அமருல களிக்கு நின் பெருமை
பித்தனென் றொருகாற் பேசுவ ரேனும்
பிழைத்தவை பொறுத்தருள் செய்யும்
கைத்தல மடியேன் சென்னிவைத்த கங்கை
கொண்ட சோளேச் சரத்தானே. (தி.9 ப.13 பா.8)
இறைவனது அருட்பார்வை பட்டவுடன் பாவம் பறைந்தோடும்.அது `பாலொடு கலந்த நீர் தழல் பட்டவுடன் மறைந்துவிடுவது போல' என்ற உவமை எண்ணுதற்கு இனியது.
"பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போல்
பாவமுன் பறைந்து பாலனைய
புண்ணியம் பின்சென்று" -(தி.9 ப.29 பா.10) கருவூர்த்தேவர்.
நின்றதென்பார்.
பாதாதிகேசமாகப் பார்க்குமழகு:
திருவாலியமுதனார் நெஞ்சங்கொண்ட நம்பியைப் பாதாதி கேசமாகப் பார்த்து பாடும் அழகே அழகு.
`தில்லையம்பலத்தானின் செய்யபாதமும், சிலம்பு கிண் கிணியும், மணிபுரைதரு திரண்ட வான்குறங்கும், தாழ்ந்த கச்சும், திரு வயிறும், வயிற்றினு ளுந்தி வான் சுழியும், திகழுதர பந்தமும், தடக்கை நான்கும் தோள்களும், தடமார்பின் பூண்களும், விடங்கொள் கண்டமும், செய்ய வாயின் முறுவலும், செவியி லிலங்கு தோடும், நெற்றி நாட்டத்தொடு பொலியும் பிறை கொள் சென்னியும், மற்றை நாட்ட மிரண்டொடு மலரும் திருமுகமும் என்னெஞ்சம் பிரியாது நின்றனவே' என்று சிந்திப்பரிய சிவனை வந்திக்கிறார்.
`பேயொடாடும் இந்தப் பெருந்தகை புலித்தோல் பூண்டு, நல்லரவே பூணாகக் கொண்டு - விடையில் ஊர்ந்து - கொடுமலையில் வாழ்ந்தாலும் - என் நெஞ்சம் அவனையே நினைக்கின்றதே; இது என்ன விந்தை' என்று ஒரு தலைவி ஏக்கப் பெருமூச்சு விடுகிறாள்.
உடையும்பாய் புலித்தோலு நல்லரவமும்
உண்பதும் பலி தேர்ந்து
விடையதூர்வது மேவிடம் கொடுவரை
யாகிலு மென்னெஞ்சம்
மடைகொள் வாளைகள் குதிகொளும் வயற்றில்லை யம்பலத் தனலாடும்
உடைய கோவினை யன்றி மற்றாரையு
முள்ளுவ தறியேனே. (தி.9 ப.23 பா.7)
திருநுதல்விழியும் - பவளவாயிதழும் - திலகமு முடையவன் சடை மேல் புரிதரு மலரின் தாது நின்றூதப் போய்வரும் தும்பிகளே! நீங்கள் கீழ்க்கோட்டூர் மணியம்பலப் பெருமானின் திருமார்பிடை மலர்ந்த பூவில் தேன்நக்கி வருவீரானால் - வரும்போது அவனுடைய திருவடி களைத் தழுவிக் கொண்டிருக்கின்ற என் மனத்தையும் கொண்டு வாருங்கள் என்கிறாள் அன்புவயப்பட்ட ஓர் அணங்கு. (தி.9 ப.10 பா.3)
என்னுள்ளே புகுந்தவனை இனிப் போக விடுவேனோ! என் நெஞ்சக் கோயிலின் கதவைத் திறந்தால் தானே அவன் புறப்படுவான். அவனைச் சிக்கெனப்பிடித்து சிறைப்படுத்திவிட்டேன் என்று ஒரு பேதை மங்கை பேசுகிறாள்.
"மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி
மிழலையுள் வீங்கு வெண்பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
விடுவனோ பூண்டு கொண்டேனே." (தி.9 ப.5 பா.4)
இயற்கை தந்த பரிசு:
நீரிடை சங்கமும், நிழலிடை மேதியும், போரிடை அன்னமும், பொழிலிடைத் தோகையும், தூரிடை ஆமையும், துறையிடை இப்பி யும், தாரிடை வண்டும், தாமரையில் செய்யவளும் உறங்குகிறாள் என்று நாட்டு வளங் காட்டுவார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
நன்றாக மேய்ந்த மேதி நிழலில் உறங்குவதனால் நீரில் சங்கமும், போரில் அன்னமும் உறங்கல் முடிந்தது, தாமரையை விட்டு வண்டு தோளில் கிடக்கும் தாரில் உறங்குவதனால் தாமரையில் செய்யவள் துயிலல் முடிந்தது. இப்படி ஒன்றுள் ஒன்றாக - அனைத்துமே நாட்டின் செல்வக் கொழிப்பைக் காட்டுவதாகக் கூறுவார்.
கழனியும் பொழிலும் தழுவிய எழிலை நாட்டு வளமாகவும் திங்களைத் தீண்டும்படி உயர்ந்த மாட மாளிகைகளை நகர் வளமாக வும் காட்டும் திருவிசைப்பாவின் சுருங்கிய அடிகள் நமக்கோர் அரிய விருந்து.
"கங்கை நீ ரரிசிற் கரை யிருமருங்கும்
கமழ்பொழில் தழுவிய கழனித்
திங்கணேர் தீண்ட நீண்ட மாளிகைசூழ்
மாட நீடுயர் திருவீழி" (தி.9 ப.5 பா.7)
அச்சமில்லை அறந்தழைத்தது:
அணங்காலும், விலங்காலும், கள்வராலும், மன்னனாலும் வரும் அச்சம் என்பார் தொல்காப்பியர்.
"அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே." - தொல் - மெய்ப்பாட்டியல் நூற்பா 8.
அறந்தழைக்கும் நாட்டில் வேலொடு நின்றான் இடுவென்றது போலக் கோலொடு நின்றான் இரக்கமாட்டான். அங்கே பொய்யும் திருட்டும் புரட்டுமிருக்கா.
ஆனால், கருவூர்த் தேவர் கீழ்க்கோட்டூரிலே அச்சம் குடி கொண்டுள்ள பான்மையைப் பாடுகிறார். என்ன அச்சம்! யாரால் எப்படி விளைந்தது என்று வியக்கிறீர்களா? இதோ அக் காட்சி.
"கேதகை நிழலைக் குருகென மருவிக்
கெண்டைகள் வெருவு கீழ்க் கோட்டூர். " (தி.9 ப.10 பா.9)
என்பதுதான் அது, ஐயகோ, இங்கே நிற்பது கொக்கல்லவோ என்று தாழையின் நிழலைக் கண்டு பயந்த மீனினங்கள் பாய்ந்தோடின.
வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகியதென் றஞ்சி முதுமந்தி - பழகி
எழுந்தெழுந்து கைந்நெரிக்கும் ஈங்கோயே திங்கட்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.(தி.11 ப.11 பா.70)
என்று அச்சம் நிறைந்த காட்சியைப் பதினொன்றாம் திருமுறை காட்டும்.
கிட்கிந்தா காண்டத்தில் பம்பைக் கரையில் கம்பர் காட்டுகிறார், கொக்கின் நிழல்கண்டு நடுங்கும் மீன் கூட்டத்தை.
ஏலும் நீர் நிழல் இடையிடை எறித்தலின் படிகம்
போலும் வார்புனல் புகுந்துளவாம் எனப் பொல்கி
ஆலும் மீன் கணம் அஞ்சின அலமர வஞ்சிக்
கூல மா மரத்து இருஞ்சிறை புலர்த்துவ குண்டம். - கம்ப. கிட்கிந்தா. பம்பைப் படலம் -19
படிகம் போன்ற நீரில் கரையில் வஞ்சிமரத்திலிருந்து இறகு களைப் புலர்த்திக் கொண்டிருக்கிற கொக்குகளின் நிழல் தெரிய அவற்றை - உண்மையென்று நம்பி அஞ்சிப் பதுங்கின மீன்கள். எப்படி இருக்கிறது இயற்கையின் பரிசு.
சேயோன் செய்த மாயை:
திருவிடைக்கழி முருகனைப் பாடும் சேந்தனார் தாயாகவும் தலைவியாகவும் இருந்து பாடுங் கூற்றுக்கள் அந்தாதியாக அமைந் துள்ளன.
சாயலும் நாணுமவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையுந் தந்து. -குறள் 119-3
என்றொருத்தி புலம்புவாள். இந்தத் தலைவியும் செவ்வேளாம் இளங் குமரன் மால் தந்து சங்கம் வௌவினான் - என்று குறை கூறுகிறாள்".
தாய் - தன் மகள் நிலைகண்டு வேதனையும் வெட்கமும் கொண்டாள். இவள் இன்னும் சிறுமியாகவே இருக்கிறாளே! என்ன செய்வது!
வேல் பிடித்த அவ்வீரனை - கோனமர் கூத்தனின் குலவிளங் களிறாக - மாமயிலூரும் சுப்பிரமணியனாக - கங்கைதன் சிறுவனாக- சபாபதி பின்னிளங்கிளையாகக் கண்டாளே தவிர குவளை மாமலர்க் கண் நங்கை தெய்வயானைக்கும் - குறவள்ளிக்கும் காந்தனெனக் கருதினாளில்லையே! அம் முருகவேளெனும் முளையிளங்களிறு என் மொய் குழற் சிறுமிக்கு அருளுங்கொல்! என ஐயவினா எழுப்புகிறாள். இவள் இடருற இன்னொரு காரணமும் உண்டு. மோகத்தால் மதியிழப் பதற்குமுன் காதலனின் தன்மையை நன்கு தெளிதல் வேண்டுமன்றோ! அன்புகொண்ட பிறகு ஆராய்ந்து என்ன பயன்.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். -குறள் 119-3
என்பது இவளுக்குத் தெரியாது போலும் - என்று நையும் தாயின் இதயம் இங்கே பேசுகிறது.
பரிந்த செஞ்சுடரோ பரிதியோ மின்னோ
பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்த சிந்துரமோ தூமணித் திரளோ
சுந்தரத் தரசிது வென்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியிற்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்த வெஞ்சிலைக்கை மைந்தனை யஞ்சொல்
மையல் கொண்டு ஐயுறும் வகையே. (தி.9 ப.7 பா.7)
தீவண்ணனின் திருமகன் என்பதற்கேற்ப சுடரும், பரிதியும், மின்ன லும், பவளமும், செந்துரமும் உவமை காட்டப் படுகின்றன. இக்கருத்து `தாமரை புரையுங் காமர் சேவடியும் பவளத்தன்ன மேனியும், திகழொளி குன்றி யேய்க்கும் உடுக்கையும், குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் வேலுங் கொண்ட சேவலங் கொடியோனாகக் குறுந்தொகை காட்டும் ஓவியத்தை நினைவூட்டுகிறது.
தொண்டர்களைப் போற்றும் தொன்மை நெறி:
கடியார் கணம்புல்லர் கண்ணப்பரென்று வரும் அடியார்களை அமரருலகம் ஆளச் செய்தாய் (பா.186) அல்லியம் பழனத் தாமூர் நாவுக் கரசைச் செல்ல நெறி வகுத்த சேவகன் (பா.187) எம்பந்த வல்வினை நோய் தீர்த்திட் டெமையாளும் சம்பந்தன் (பா.188) களையாவுடலோடு சேரமானாரூரன், விளையா மதமாறா வெள்ளானைமேல் கொள்ள உதவினாய் (பா.189). சிலந்தியை அரசாள்க என்று அருள் செய்தவனே(பா.228) உலந்த மார்க்கண்டேயருக்காகக் காலனை யுயிர்செக உதைத்தவனே (பா.228) என்றெல்லாம் அடியார்களைப் போற்றும் திறத்தைத் திருவிசைப்பாவில் காண்கிறோம்.
பக்தியமுதை இலக்கியச் சுவையோடு தரும் அரிய திருமுறை இது என்பதில் என்ன ஐயமுண்டு? தொட்ட தொட்ட இடமெல்லாம் இனிக்கும் தேனூற்றாகத் திகழ்கிறது ஒன்பதாம் திருமுறை. இது சிந்திக்க இனியது, வந்திக்க நல்வழி காட்டுவது. ஆகவே இதனைப் புந்திக்குள் வைத்துப் போற்றுவதில் நாம் முந்திக் கொள்வோம்.
வாழ்க திருமுறைகள்!
வளர்க திருமுறைத் தொண்டு!!