உ
குருபாதம்
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய 09 ஆசியுரை
பொய்யாத வேதியர் சாந்தை மெய்ப்புகழாளர் ஆயிரம்பூசுரர்
மெய்யே திருப்பணிசெய் சீர்மிகு காவிரிக்கரை மேய
ஐயா திருவாவடுதுறை அமுதே என்றுன்னை அழைத்தக்கால்
மையார் தடங்கண் மடந்தைக்கு ஒன்றருளா தொழிவது மாதிமையே.
(தி.9 ப.6 பா.1)
இசைப்பாவின் ஏற்றம்:
இசை என்பது இசைப்பது என்னும் பொருளையுடையது. ஒருவரது எண்ணங்களை - கருத்துக்களை, அறிவியலை - மற்றொருவருடைய கருத்தாகிய அறிவுடன் இசைவிப்பது.
அறிவே இயற்றமிழ்,
அவ்வறிவை இசைப் பாடலால் மற்றவருக்கு இசைவிக்கும் பாடல்களே இசைத் தமிழ்ப் பாடல்கள்.
நடிப்பால் - மெய்ப்பாட்டால் அறிவைப் பிறருக்குப் புலப் படுத்துவதே நாடகத் தமிழ்.
மக்கள் மருட்சியடையாமல் தெருட்சியுடன் அறிவைப் புரிந்துகொள்வதற்கு இசைப்பாடல்களும், நாடகமும் பெரிதும் துணை புரிவன. இசைத் தமிழும் நாடகத் தமிழும், இயலாகிய அறிவியலைத் தொல்காப்பியர் கால (கி. மு. மூவாயிரம்) முதல் இன்று வரை, வளர்த்து வந்துள்ளது.
காமத்தை வளர்ப்பதே இசை என்ற சமணர்கள் வாதத்தையும் கடந்து நமது சைவ சமயாச்சாரியர்கள் இசைப் பாடல்களாலே சைவத்தை, சிவபக்தியை, வளர்த்தனர். இசையையும் நாடகங் களையும் பயன்படுத்துவோரைப் பொறுத்துப் பயன்களும் விளையும். இக்கருத்தைத் தெளிவிக்க நீதிவெண்பாவில் ஒரு பாட்டு உண்டு.
வல்லவர்பாற் கல்வி மதமா ணவம்போக்கும்
அல்லவர்பாற் கல்வி யவையாக்கும் - நல்லிடத்தில்
யோகம் பயில்வார் உயர்ந்தோர், இழிந்தோர்கள்
போகம் பயில்வார் புரிந்து. -நீதி வெண்பா - 70
எனவே கல்வி நல்லதையும் செய்யும், அல்லதையும் செய்யும். அல்லதைச் செய்வதால் கல்வியை விட்டுவிடலாகாதன்றோ!
எனவேதான் சைவர்கள், சைவக் கருத்துக்களையும் தத்துவ அறிவியலையும் வளர்ப்பதற்கு இசைக் கலையைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்த நிலை காரைக்கால் அம்மையார் காலத்திருந்தே (கி. பி. 3ஆம் நூற்றாண்டு) தொடங்கியிருக்கிறது. அவர்தான் இசைப் பாடல்களின் முன்னோடியாக அமைந்துள்ளார்.
நட்டபாடைப் பண்ணில், "கொங்கை திரங்கி நரம்பெழுந்து" என்று தொடங்கும் பதிகத்தையும், "எட்டி இலவம் ஈகை" எனத் தொடங்கும் இந்தளப் பண் பதிகத்தையும் (தி.11 ப.2 பா.3) பாடி வழிகாட்டியவர். முதல்முதல் தொடங்கிய இசைப்பாடல்களாதலின் இவை மூத்த திருப்பதிகங்கள் எனப் போற்றப்படுகின்றன.
கி. பி. 6 நூற்றாண்டின் இறுதியில் மகேந்திரவர்மப் பல்லவன் காலத்தில், பத்துப் பண்கள் வாயிலாகத் தேவாரம் பாடிச் சைவக் கருத்துக்களை அப்பர் சுவாமிகள் தமிழகத்தில் வளர்த்தார்.
கி. பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் 24 பண்கள் வாயிலாகத் தேவாரமாகிய இசைத்தமிழை ஞானசம்பந்தர் வளர்த்தார்.
ஏறத்தாழ கி. பி. 9 நூற்றாண்டின் இறுதி முதல் பத்தாம் நூற்றாண்டின் இறுதி வரை வாழ்ந்த திருமாளிகைத் தேவர் முதல் சேதிராயர் ஈறாக திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆசிரியர்கள் ஒன்பதின்மர், புறநீர்மை, காந்தாரம் சாளரபாணி முதலாய ஆறு பண்களால் இசைத் தமிழையும் இன்னுயிரான சைவத்தையும் வளர்த்தனர்.
இறைவனே ஏழிசையாயும், இசைப் பயனாயும் இருக்கின்றான் என்பார் சுந்தரர். கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாக, பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடியாக வேளூரில் இருப்பவன் என்று ஞானசம்பந்தரும், "நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகி" (அபிராமி அந்தாதி பா. 49) என்று அபிராமி அம்மையை அபிராமிப் பட்டரும் போற்றியுள்ள திறத்தால் இறையும், இசையும் இசைந்துள்ள பாங்கை நாம் நன்கு உணரலாம்
இசைப்பாடல்களால் இறைவனைப் போற்றிய மெய்யடி யார்கள் நெஞ்சினுள் இறைவன் நிறைந்து நின்று பரிசில்கள் வழங்கினான் என்பதை
"பாடலங்காரப் பரிசில் காசருளிப்
பழுத்த செந்தமிழ்மலர் சூடி
நீடலங்காரத்து எம்பெருமக்கள் நெஞ்சினுள்
நிறைந்து நின்றானை" (தி. 9. ப.5 பா.12)
என்னும் சேந்தனார் அருளியுள்ள திருவீழிமிழலைத் திருவிசைப் பாவால் உணரலாம்.
சுந்தரர் அருளிய திருவீழிமிழலைத் தேவாரம் "நம்பினார்க் கருள்செய்யும் அந்தணர்" எனத் தொடங்கும் பதிகத்தில் எட்டாம் பாடல் "பரந்த பாரிடம்" என்பது. அதில் "திருமிழலை இருந்து நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு நித்தல் நல்கினீர்" (தி.7 ப.88 பா.8) என்று வருவதாலும் இசைப் பாடல்கட்கு இறை அருளும் சால்பைத் தெளியலாம்.
வைணவ அடியவர் இருவர்:
திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மரில் வைணவ அடியவர் இருவர் உள்ளனர். ஒருவர் திருவாலியமுதனார். மற்றொருவர் புருடோத்தம நம்பி.
சீகாழிக்கு அருகில் கிழக்கே திருவாலி என்னும் ஓர் ஊர் உள்ளது. இது முன்பு ஆலிநாட்டின் தலைநகர். இங்கு திருக்கோயில் கொண்டுள்ள திருமாலுக்கு அமுதனார் என்பது திருப்பெயராகு மாதலால், இவர்தம் பெற்றோர் இவருக்குத் திருவாலி அமுதனார் என்ற பெயரையே இட்டு வழங்கினர்.
வைணவ அந்தணர் குடியில் தோன்றிய திருவாலியமுதனார் சிவபக்தியில் ஈடுபட்டுத் தாமே சைவ அடியாராக மாறினார். தில்லை நடராசப் பெருமானைத் தமது உயிர் நாயகனாகக் கொண்டு போற்றினார். "மயிலை மன்னன்" என்றும், அந்தணன் என்றும் தாம் பாடிய திருவிசைப்பா இரண்டாம் பதிகத்தின் திருக்கடைக்காப்பில் இவர் தம்மைக் குறிப்பிட்டுள்ளார். "வரைசெய் மாமதில் மயிலையின் மன்னவன் மறைவலதிருவாலி" (தி.9 ப.26 பா.10) என்பது அப்பாடற் பகுதி.
நான்காம் பதிகத் திருக்கடைக்காப்பில் "அறைசெந்நெல் வான் கரும்பின் அணி ஆலைகள் சூழ் மயிலை" (தி.9 ப.25 பா.10) என்று கூறுவதால், செந்நெல்லும், கரும்பும் விளையும் மருத நிலத்துள்ள மயிலாடுதுறையே இவர் தோன்றிய மயிலை என்பர். இவர் திருவிசைப்பாப் பதிகம் நான்கு பாடியுள்ளார். நான்கும் தில்லைப் பெருமானைப் பற்றியதே.
இரண்டாமவர் புருடோத்தம நம்பி:
திருவிசைப்பா ஆசிரியர் ஒன்பதின்மருள் எட்டாமவராகப் புருடோத்தம நம்பி திகழ்கிறார். இவரும் வைணவ அடியவரே.
புருடோத்தமர் என்பது திருமால் பெயர்களில் ஒன்று. இவர் தம்மை , "மாசிலா மறைபல ஓதுநாவன்வண் புருடோத்தமன்" (தி.9 ப.26 பா.11) என்ற திருவிசைப்பாப் பதிக இறுதிப் பாடலில் குறிப்பிடுதலால், இவர் அந்தணர் என்பதை நன்கு அறியலாம்.
இவர், இரண்டு திருவிசைப்பாப் பதிகங்கள் பாடிப் பரவியுள்ளார். இப்பதிகம் இரண்டும் சிதம்பரத்தைப் பற்றியனவே.
ஆதித்திராவிடரில் ஒருவர்:
ஆதித்திராவிடரில் ஒரு சாராரைப் பறையர் என்பர். பறை கொட்டும் தொழிலால் வந்த பெயர் இது.
திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மருள் இரண்டாமவராக வைத்து எண்ணப்படும் சேந்தனார் இம்மரபினராவர்.
பட்டினத்தடிகளின் கணக்கராக அலுவல் பார்த்தவர் என்பர். தில்லையிலேயே குடியேறி, விறகு வெட்டி விற்று, வாழ்வை நடத்தி வந்தார். அப்போது சேந்தனார் வறுமையில் வாடினார். இவர் இல்லத்தில் நடராசப்பெருமானே எழுந்தருளினார். இவரிடம் களியமுது பெற்று உண்டார். இந்நிகழ்ச்சி இன்றும் நடராசப் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் களியமுது நிவேதனம் நடைபெறுதலால் தெளியலாம்.
இதனைச் "செம்பொன் அம்பலத்து வேந்தன் தனக்கு ...... பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச் சேந்தன் கொடுக்க அதுவும் அமிர்தாகியதே" எனவரும் கோயில் திருப்பண்ணியர் விருத்தச் செய்யுளால் (தி.11 ப.33 பா.26) அறியலாம்.
தில்லையில் சேந்தனார் வசித்த காலத்து திருவாதிரைப் பெருவிழாவில் ஓடாதிருந்த திருத்தேரைத் "திருப்பல்லாண்டு" என்னும் பதிகம் பாடி ஓடச் செய்தவர் என்பது இவருக்குத் தனிச்சிறப்பைத் தருவது.
மூன்று திருவிசைப்பாப் பதிகங்களும், ஒரு பல்லாண்டு பதிகமும் சேந்தனார் பாடிப் பரவியுள்ளார். திருவிடைக்கழி முருகனைப் பற்றி "மாலுலாம் மனம் தந்து" எனத் தொடங்கும் திருவிசைப்பாப் பதிகம் பாடிய பிறகுதான் 11ஆம் திருமுறையில் விநாயகர், முருகன் இருவர்பற்றிய பிரபந்தங்கள் தோன்றின என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனைய திருமுறைகளில் தனியாக அம்மைக்கோ, கணபதிக்கோ, முருகனுக்கோ தனிப்பதிகமோ தனிப்பிரபந்தமோ கிடையாது என்பதும் எண்ணத்தக்கதாகும்.
எல்லா இனத்துள்ளும் நல்லவர்கள், அந்தணர்கள் வாழ்ந்து வந்துள்ளனர், வருகின்றனர் என்பது சேந்தனார் வரலாற்றால் நன்கு உணரலாம்.
அரசர் மூவர்:
திருவிசைப்பா அருளிய ஆசிரியர்களுள் மூவர் அரசர்.
கண்டராதித்தர் சோழப் பேரரசர். கி. பி. 950 முதல் 957 வரை சோழ மண்டலத்தை ஆட்சி புரிந்தவர். சிறந்த சிவபக்தர். செம்பியன் மாதேவியாரின் கணவர். முதலாம் இராஜராஜனின் பாட்டனார்.
வேணாட்டடிகள் என்பார் அரசருள் துறவு மேற்கொண்டவர் என அறிகிறோம்.
சேதிராயர் சேதி நாட்டை ஆண்ட குறுநில மன்னர். சேதி நாடு என்பது மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி புரிந்த திருக்கோவலூர்ப் பகுதியாகும். இது மலயமான்நாடு எனவும் வழங்கும்.
பல்லாண்டு கூறுதும்:
பரமனுக்குச் செய்யப்படும் வழிபாடுகள் யாவும் உபசாரமேயாகும். அவன் உண்பதும் இல்லை. உறங்குவதும் இல்லை. அவன் அருவமும், உருவமும், அருவுருவமும் இல்லாதவன். அவன் பண்டும், இன்றும், என்றும் ஒரு படித்தாயே இருப்பவன்.
இவனுக்குப் பல்லாண்டு கூறி வாழ்த்துகிறார் சேந்தனார். இப்பதிகத்துள் பரம்பொருளின் பரத்துவம் நன்கு விளக்கப்படுகின்றது.
"மாலும் அயனும் அறியாநெறிதந்து
வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே
பல்லாண்டு கூறுதுமே" (தி.9 திருப்பல்லாண்டு 8)
"ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே" (தி.9 திருப்பல்லாண்டு 9)
".................உமை கோன்அடி
யோமுக்கு அருள்புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே" (தி.9 திருப்பல்லாண்டு 1)
"அண்டங்கடந்த பொருள் அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே" (தி.9 திருப்பல்லாண்டு 2)
"பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே" (தி.9 திருப்பல்லாண்டு 4)
"மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடும் கூடிஎம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே" (தி.9 திருப்பல்லாண்டு 11)
இப்பல்லாண்டில் பக்தர்கட்கு அறிவுரை கூறுகிறார்சேந்தனார். தில்லை மன்னுக, வளர்க நம் பக்தர்கள் என்றவர், வஞ்சகர்போய் அகல என்று வேண்டுகோள் விடுக்கிறார். அடுத்ததொரு பாடலில் மிண்டு மனத்தவர் போமின்கள், மெய்யடியார்கள் விரைந்து வம்மின் என விரும்பி அழைக்கிறார்.
பஞ்ச புராணம்:
மற்றைய திருமுறைகட்கு இல்லாத தனிச்சிறப்பொன்று ஒன்பதாம் திருமுறைக்கு உண்டு. பஞ்சபுராணம் பாடித் தோத்திரம் செய்யும் ஐந்து பாடலகளுள் இத்திருமுறையிலிருந்து மட்டும் இரண்டு பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. திருவிசைப்பாவில் ஒரு பாடலும், திருப்பல்லாண்டில் ஒரு பாடலும் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.
ஆன்மார்த்த பூசையிலும், பரார்த்த பூசையிலும் நாள்தோறும் 12 திருமுறைகளையும் ஓதியே தோத்திரம் செய்ய வேண்டும். இயலாதபோது ஐந்து பாடல்களையேனும் அவசியம் ஓதவேண்டும் என்று முன்னோர் வரையறை செய்துள்ளனர்.
ஐந்து பாடல்களைப் பாடுவதாலும் கடைசியில் பெரியபுராணம் பாடப் பெறுவதாலும் இது பஞ்சபுராணம் எனப்பெற்றது.
மூவர் தேவாரத்துள் ஏழு திருமுறைகளுள் ஒரு பாடல்; திருவாசகம் - எட்டாம் திருமுறையில் ஒரு பாடல்; ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடலாக இரண்டு; 10ஆம் 11ஆம் திருமுறைகள் நீங்கலாகப் பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணத்துள் ஒரு பாடல்: இவையே பஞ்ச புராணமாம். பாடிப் பரவுக; பயன் உறுக.
தேவார கோஷ்டி கானத்தைப் பலமுறையும் தியாகையர் கேட்டவர். தேவாரப் பண்ணமைப்புக்களை தியாகையர் தமது கீர்த்தனைகட்குப் பண்ணமைத்துப் பாடியுள்ளமையைத் திரு எம். எம். தண்டபாணி தேசிகரும், பேராசிரியர் இராமநாத ஐயரும் பாடிக் காட்டியுள்ளமையால் உணரலாம்.
தேவார கோஷ்டியில் கையாண்டு வந்த பஞ்சபுராணத்தையே பஞ்சரத்தினக் கீர்த்தனை என்ற பெயரில் தியாகப் பிரம்மம் பாடிவந்துள்ளார். கன ராகங்கள் ஐந்தில், ஐந்து கீர்த்தனைகளைப் பாடியுள்ளமையைத்தான் பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் என்று சொல்கின்றனர்.
பேசாது அப்பேய்களோடே:
பிரமன் படைப்புத் தொழில் செய்ய அறியாமல் அழுதபொழுது அக்கண்ணீரில் தோன்றியவர்களே பேய்களாகத் திரிகின்றனர்.
பேய்கட்கு உருவம் இல்லை. ஆசாரம் இல்லாதவர்கள் மனவலிமையில்லாதவர்கள் ஆகியோரின் உடம்பையே தங்கட்கு இருப்பிடமாகக் கொண்டு வாழ்பவை.
திருநீறிடார், அரனை நினைந்திடார், அஞ்செழுத்தை நினையாதார், பூசனை புரியாதார் முதலியோர் உண்ட உணவே பேய்கள் உண்ணும் உணவாகும்.
கடவுள் சிந்தனையின்றித் திரியும் உலகாயதரையும் திருவள்ளுவர் பேயாக வைத்து எண்ணப்படும் என்று குறிக்கின்றார்.
இக்கருத்தையே சுந்தரர் தம் வாழ்வில் வைத்து "நாயேன் பல நாளும் உன் நினைப்பின்றிப் பேயாய்த் திரிந்து எய்த்தேன்" (தி.7 ப.1 பா.2) என்றார்.
ஞானசம்பந்தரும் திருவெண்ணியூர்ப் பதிகத்தில் "மூத்தானை" என்னும் நான்காம் பாடலில் "வெண்ணியெம்மான் தன்னை ஏத்தாதார் என் செய்வார் ஏழை அப்பேய்களே" (தி.2 ப.14. பா.4) என்று குறித்துள்ளார்.
இக்கருத்தையே திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா "இணங்கிலா ஈசன்" எனத் தொடங்கும் நான்காம் பதிகம் (தி.9 ப.4)முழுவதும் ஒவ்வொரு பாடல் இறுதியிலும் அறிவிலாச் சழக்கர்களாகிய பேய்களை என் கண்கள் காணா; வாய் அப்பேய்களுடன் பேசா, என்று ஆணித்தரமாகப் பாடுகிறார்.
இத்தகு மனநிலை உடையோரைப் பிணங்கள் என்றும், பிட்டர் என்றும், பிரட்டர் என்றும், பிணக்கர் என்றும், பிசுக்கர் என்றும், பாவப் பெருக்கர் என்றும், பேடர் என்றும், "இறப்பொடு பிறப்பினுக்கே இனியராய் மீண்டும் மீண்டும் பிறப்பரைக் காணாக்கண், வாய் பேசாது அப்பேய்களோடே" (தி.9 ப.4 பா.11) என்றும் குறிப்பிட்டுள்ளமை தெய்வ சிந்தனை இல்லாதார் பேய்களோடு ஒப்ப எண்ணத்தக்கார் என்பதை வலியுறுத்தல் காணலாம்.
ஆயிரவர் பூசிக்கும் ஆவடுதுறை:
"பொய்யாத வேதியர் சாந்தை மெய்ப்புகழாளர் ஆயிரம் பூசுரர், மெய்யே திருப்பணி செய் திருவாவடுதுறை" (தி.9 ப.6 பா.1) என்னும் சேந்தனார் திருவிசைப்பாவில், சாந்தை என்பது சாத்தனூர் என்பதும், திருமூலர் பசு மேய்த்த ஊர் என்பதும், அதுவே ஊரின் பெயர் என்பதும், திருவாவடுதுறை கோயிலின் பெயர் என்பதும் தெளிவிக்கின்றார். தில்லையில் மூவாயிரம் அந்தணர் பூசித்ததுபோல், இங்கு ஆயிரம் அந்தணர் பூசித்தனர் என்ற குறிப்பையும் உணர்த்துகிறார். பூசுரர் (பூ - பூமி, சுரர் - தேவர்) - பூமியில் வசிக்கும் தேவர்கள்; இவர்களை நிலத்தேவர் என்பார் சேக்கிழார். மேலும் திருவீழிமிழலையில் ஐந்நூறு அந்தணர் பூசித்துப் போற்றினர் என்றும் அறிவிக்கின்றார்.
அப்பாடல் பகுதி காண்க: "எண்ணில் பல்கோடி" எனத் தொடங்கும் பாடலின் மூன்றாம் அடியில், "எண்ணில் பல்கோடி எல்லைக் கப்பாலாய் நின்றைஞ் ஞூற்றந்தணர் ஏத்தும் வீழி" (தி.9 ப.5 பா.9)
தில்லைவாழ் அந்தணரும் திருவாரூர்ப் பிறந்தாரும்:
திருப்பல்லாண்டுப் பதிகம் பதினொன்றாம் பாடல் - குழல் ஒலி, யாழ் ஒலி என்று தொடங்குகிறது. அப்பாடல், திருவாரூர்த் திருவாதிரை விழாவின் சிறப்பை, எடுத்து ஓதுகிறது.
குழல் ஒலி, யாழ் ஒலி, கூத்தொலி, அடியவர்கள் துதித்து ஏத்தும் ஒலி எல்லாம் சேர்ந்து விழா ஒலியாக விண்ணளவும் சென்றது என்கிறார் சேந்தனார். அத்தகு பெருவிழா நடைபெறும் திருவாரூரில் சிவபெருமானுக்கு வழிவழியாக - பரம்பரையாக ஆட்பட்டவர்களே தம்முள் மணம் செய்து வாழும் உரிமைக் குடியில் பிறந்தவர்கள். அவர்களே பழ அடியார்கள், திருமூலட்டானரையும், தியா கேசரையும் பூசிப்பவர்கள், அவர்களோடும் கூடிப் பெருமானுக்குப் பல்லாண்டு கூறுவோமாக என்கிறார்.
தில்லைவாழ் அந்தணர் என்றால் தில்லையில் வாழ்கின்ற எல்லா அந்தணர்களையும் குறிக்காமல், தில்லைத் தீட்சிதர்களையே குறிக்குமாப்போல, திருவாரூர்ப் பிறந்தார் என்றால், திருவாரூரில் பிறந்த எல்லோரையும் குறிக்காமல், தியாகேசரைப் பூசிக்கும் நாயனார் எனப் போற்றப்பெறும் சைவ அந்தணர்களையே குறிக்கும் என்ற இக்குறிப்பைக் "குழல் ஒலி" என்னும் பாடல் (தி.9 ப.29 பா.11) உரையில் அருணையார் குறிப்பிடுகின்றார். இது மகிழ்ச்சிக்கு உரிய புதிய செய்தியாகும். தில்லையும் திருவாரூரும் அருளால் தொடர்பு மிகுதியும் உடையது என்பதையும் இது குறிக்கின்றது. இப்பாடல் ஆரூர்த் திருவாதிரை விழாவைக் குறித்தது.
அடுத்த 12ஆம் பாடல் "ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்" என்பது. இது தில்லைத் திருவாதிரை விழாவைக் குறிப்பதாய் அமைந்துள்ளதும் இக்கருத்தை வலியுறுத்துவதாயுள்ளது. இன்னும் சொல்லப்புகின், சுந்தரரைத் தில்லைத் தரிசனத்தின்போதுதான் அசரீரியாய்த் தியாகேசர் ஆரூருக்கு நம்பால் வருக என்று அழைப்பு விடுத்தருளினார்.
சுந்தரர் தம் அடிமைப் பண்பை விளக்குவதற்குத் தம்மையே "தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று அருளிச் செய்தார். தியாகேசப் பெருமானே திருத்தொண்டர்களின் பெருமையைத் தமது அடிமைப் பண்பால் விளக்கியருளினார்.
தில்லையில் நடராஜப் பெருமான் நின்ற கோலத்தில் 108 தாண்டவம் புரிந்து பஞ்சகிருத்தியம் செய்து பிறவிக்கு வராத உயிர்களையெல்லாம் ஊன நடனத்தால் பிறவிக்குக் கொண்டு வந்து ஞான நடனத்தால் பிறவியை அறுத்து மோட்சம் அருள்கிறார்.
திருவாரூர்த் தியாகரோ, பிறவிக்கு வந்த பல்லுயிர்களும் யோக நெறியால் வீடுபேறு எய்த அசபா நடனம் முதலிய எழுவகைத் தாண்டவம் செய்து உயிர்களை ஈடேற்றம் செய்கிறார். இது பற்றியே சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட தியாகேசர் அவருக்கு யோகநெறி தந்து முத்திக் கரை சேர்த்தார். இதுபோன்ற பல உண்மைகள் இவ்விரு தலங்களின் இயைபை எடுத்தோதுவதாய் உள்ளன. அவ்விரு பாடல்களையும் ஓதி உய்தி பெறுவோமாக.
குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
எங்கும் குழாம் பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே. (தி.9 திருப்பல்லாண்டு 11)
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரைநாள்
நாராய ணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசை அனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே. (தி.9 திருப்பல்லாண்டு 12)
திருவாவடுதுறைச் சிறப்பு:
உமையம்மை சிவபெருமானைப் பசு வடிவத்துடன் பூசித்து அப்பசுவடிவம் நீங்கி அருள் பெற்றதலம் திருவாவடுதுறை. ஞானசித்தி பெற்ற முனிவர்களும், சித்தர்களும் வாழ்ந்து வளம் பெருக்கியதலமும் இதுவே. இதனால் நவகோடி சித்தர்புரம் என்ற பெருமை இதற்கு உண்டு. இத்தலத்தில் 1500 ஆண்டுகட்கு முன்னர்ச் சிவயோக நெறி நின்று சிவஞானநெறி விளக்கிய திருமூலர், மூவாயிரம் திருமந்திரங்களால் முப்பொருள் உண்மையை முதன்மை பெற விளக்கியுள்ளார்.
1300 ஆண்டுகளுக்கு முன்னர் சமயாசாரியர்களில் திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், 1200 ஆண்டுகட்கு முன்னர் சுந்தரரும் அருள்மிகு ஒப்பிலா முலையம்மை உடனாகிய மாசிலாமணி ஈசரை உளமுருகிப்பாடிச் சைவத் திறம் உரைத்துப் போற்றினர்.
1000 ஆண்டுகளுக்கு முன்னர் திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா புனைந்து சிவநெறி விளக்கினர்.
500 ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கயிலாய பரம்பரைத் திருநந்தி மரபில் மெய்கண்ட சந்தானத்தில், சித்தர் சிவப்பிரகாசரின் பேரருளால் அவரிடம் சிவஞானோபதேசம் பெற்ற ஷ்ரீ நமச்சிவாய மூர்த்திகள் ஆதீனத் திருமடம் கண்டு வழிவழி உபதேச வாயிலாகச் சிவம் பெருக்கினர்.
எனவே, திருமூலர் காலம் முதலாகவே சிவஞான வளர்ச்சிக்கு உரிய இடமாக விளங்கிவருவது திருவாவடுதுறை. இச்சிவஞான ராஜதானியில் 500 ஆண்டுகளாகச் சிவஞானப் பயிர்வளர்க்கும் ஞானப்பண்ணையாக இயங்கி வருவது ஷ்ரீ நமச்சிவாயமூர்த்திகளின் ஞானகுரு பீடமாகிய திருவாவடுதுறை ஆதீனம். இவ்வாதீனத்தில் இப்போது இருபத்துமூன்றாவது குருமூர்த்திகளாக வீற்றிருப்பவர்கள் ஷ்ரீலஷ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளாவார்கள். ஷ்ரீ சித்தர் சிவப்பிரகாசர் திருப்பெயர் தரித்த இவர்களும் அச்சித்தரைப் போலவே திகழ்ந்து வருவது பெயர்ப்பொருத்தப் பெருமையைப் பிறங்கச் செய்கிறது.
திருக்கோயில் சிறப்பு
இது காவிரித் தென்கரைத்தலங்கள் 127இல் 36ஆவது தலமாக விளங்குவது. முதலாம் பராந்தக சோழன் கி. பி. 907-948 வரை ஆட்சி புரிந்தவன். இவன் ஆட்சியில் கற்றளிப்பிச்சன் என்பவரால் இக்கோயில் திருப்பணி செய்யப்பெற்று கி. பி. 945இல் குடமுழுக்குச் செய்யப் பெற்றது என்பது கல்வெட்டுக் கூற்றாகும். கற்றளிப்பிச்சன் திருவுருவம் சுவாமி கருவறை விமானத்தில் தட்சிணாமூர்த்திக்குக் கீழ்ப்புறம் கூப்பிய கரத்துடன் சிலைவடிவில் உள்ளது. `திரைமூர்நாட்டுப் பிரமதேயம் சாத்தனூர் திருவாவடுதுறை கற்றளி எடுத்த பிச்சன்' என்பது கல்வெட்டு.
திருமூலரால் சாத்தனூர் பெருமைபெற்றது. அதனால்தான் சாத்தனூர் திருவாவடுதுறை என்று வழங்கியுள்ளது. சாத்தனூரைச் சாந்தை என்று சேந்தனார் இவ்வூர்த் திருவிசைப்பாவில் குறிப்பிட்டுள் ளார். இதனாலும் சாத்தனூரை அடுத்துள்ள திருவாவடுதுறை என்பது தெளிவாகும். ஆனால் சாந்தையூர் என்றும் திருவிசைப்பாவில் வருவதால் சாந்தையூர் என்பது இவ்வூரின் பெயர் என்றும், திருவாவடுதுறை என்பது கோயிலின் பெயர் என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.
செம்பொன் தியாகர்:
அம்மை பசுவடிவம் நீங்கியதும் பெருமான் அம்மையை அணைத்தெடுத்தார். அதனால் அணைத்தெழுந்த நாயகர் என்ற பெயருடன் அத்திருவுருவம் காட்சி தருகிறது. அவரே உற்சவத்தில் தீர்த்தம் கொடுத்தருள்கிறார். முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இங்கு திருவாரூர்த் தியாகேசராகக் காட்சி கொடுத்தருளினார். இதனால் இங்குள்ள சோமாஸ்கந்தர் செம்பொன் தியாகர் எனப் போற்றப் பெறுகிறார்.
இது செம்பொன் தியாகர் சந்நிதி என்றே வழங்கப்படுகிறது. வீரசிங்காதனமும் சுந்தர நடனமும் இங்குள்ள சிறப்பு. தேரில் இச்செம் பொன் தியாகரே எழுந்தருள்கிறார். இதனைச் சுந்தரர், "சிறைவண்டார் பொழில்சூழ் திருவாரூர்ச் செம்பொன்னே திருவாவடுதுறையுள் அறவனே" (தி.7 ப.70 பா.6) என்று போற்றுவதாலும் அறியலாம்.
தலச் சிறப்பு:
இறைவன் திருப்பெயர் மாசிலாமணி ஈசர் என்பதை "வான நாடனே வழித்துணைமருந்தே மாசிலாமணியே" (தி.7 ப.70 பா.9) என்ற பாடலாலும், அம்மையின் பெயர் ஒப்பிலாமுலையம்மை என்பதை "ஒப்பிலா முலையாள் ஒரு பாகா" (தி.7 ப.70 பா.3) என்ற பாடலாலும் சுந்தரர் இவ்வூர்த் தக்தேசிப் பண்ணில் குறிப்பிட்டுள்ளமை உணர்ந்து மகிழத்தக்கது.
தலவிருட்சம் - படர் அரசு, தீர்த்தம் - கோமுத்தி தீர்த்தம். சபை - போதி அம்பலம்.
தேவர் முனிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாசிலாமணி ஈசர் இங்கு அரசு நிழலில் ஆடினார் என்பது புராணம். முசுகுந்தனுக்கு மகப்பேறளித்ததலம் என்பர். கோமுத்திபுரம். கோகழி என்பது அம்மை பசுவடிவம் நீங்கியதால் வந்த பெயர். நவகோடி சித்தர்புரம் என்பது, சித்தர்கள் பலர் வாழ்ந்து வருவதால் பெற்ற பெயராகும்.
இசைப்பாச் சிறப்பு:
மனம், வாக்கு, காயம் மூன்றில் மனம் இயற்றமிழ், வாக்கு இசைத்தமிழ், காயம் நாடகத்தமிழ், இவற்றுள் இசைத்தமிழே உயிரினங்களை மகிழ்வித்து ஒன்றுபடச்செய்வதுடன் மனிதனை இறைவனிடமும் இசைவிப்பது. இறைவனும் இசைப்பயனாய் இசைவாணர்க்கருள் புரிகிறான். எனவேதான் நம் சமயாசாரியர்கள் இசைப்பாடல்களால் இறைவனைப் போற்றித் துதித்தனர். அதனாலேயே தேவார மூவர்கட்கு மற்றையவர்க்கில்லாத ஏற்றம் சைவத்தில் ஏற்பட்டுள்ளது.
அவ்வழியிலேயே ஒன்பதாம் திருமுறை ஆசிரியர் ஒன்பதின் மரும் இசைப்பாடல் மூலமாகவே இறைவன் பெருமையையும், தத்துவ உண்மைகளையும் பாடிப்பரவியுள்ளனர்.
திருஇசைப்பா ஆசிரியர்கள்:
திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதர், புருடோத்தமர், சேதிராயர் ஆகிய ஒன்பதின்மரும் திருவிசைப்பா பாடிய ஆசிரியர்களாவர்.
போகசித்தருடைய சீடர்களில் திருமாளிகைத்தேவரும் ஒருவர். சைவவேளாளர் குலத்தினர், சைவமன்னர்களின் தீட்சா குருவாக விளங்கியவர். இவர் முன்னோர் வாழ்ந்த இடமாகிய மடம், மாளிகை எனப் பெற்றதால் இவர் திருமாளிகைத்தேவர் எனப்பட்டார். பேரருளாளர், பெருஞ்சித்தர் போகர் ஆணைப்படி திருவாவடு துறையில் தங்கினார். தில்லைத்தலம் தரிசித்துத் திருவிசைப்பாப் பதிகம் நான்குபாடியுள்ளார். திருவாவடுதுறை ஆதீனத் திருமடத்தில் இவர்தம் கோயில் உள்ளது. நான்கு திருக்கரங்களுடனாய இவர் திருவுருவம் அக்கோயிலில் பூசிக்கப்பெறுகிறது.
நீறணிபவளக்குன்றம்:
இராஜராஜன் பல ஊர்களிலிருந்தும் 400 தளிச்சேரிப் பெண்களைத் தஞ்சை இராசராசேச்சரக் கோயிலின் நான்கு திசைகளிலும் 400 வீடுகள் கட்டிக் கொடுத்துக் குடி ஏற்றினான். அவர்கள் இறைபணிக்கே தம்மை ஆளாக்கிக் கொண்டவர்கள். அவர்களைத் தேவதாசியர் என்றும் அழைப்பர், அக்கால் வழியே காலப்போக்கில் வேசியராயினர் எனத் தோன்றுகிறது.
தளிச்சேரிப் பெண்கள் சிவபக்திமிக்க தவச்சீலர்கள், அவர்களில் சிலரின் பெயர் திருவிசைப்பாக்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று "நீறணிபவளக்குன்றம்" என்பது. இது ஒரு திருவிசைப்பாவின் தொடக்கமாயுள்ளது.
காட்டும் உதவி, காணும் உதவி:
மேலும் இவர் இறைவன் உடனாயிருந்து உதவுவதை முதல் பதிகமாகிய "ஒளிவளர் விளக்கே" என்ற பதிகத்தின் (தி.9 ப.1 பா.1) முதல் பாடலின் இறுதியில் "விளம்பு மாவிளம்பே" என்கிறார். இதில் நான் பேசவேண்டுமானால் நீ உடனிருந்து உணர்த்தினால்தான் பேசுவேன் என்பதை உணர்த்துகிறார். இதேபோல், "பணியுமா பணியே" "விரும்புமா விரும்பே" "நினையுமா நினையே" என்ற தொடர்களால் இறைவன் உடனாயிருந்து உதவும் நலன்களை விளக்கியருள்கின்றார். இறைவன் காட்டினால்தான் உயிர் காணும் என்பதை இப்பதிகத்தில் உணர்த்தியுள்ளார். "காண்பார் ஆர் கண்ணுதலாய்க் காட்டாக்காலே" (தி.6 ப.95 பா.3) என்ற அப்பர் வாக்குடன் ஒப்பு நோக்குக. இவர் திருவாவடுதுறை பற்றித் திருவிசைப்பா பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சேந்தனார்:
திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள திருநாங்கூரில் தோன்றியவர். இவர் பட்டினத்தடிகளின் கணக்கர் என்பர். சோழ மன்னனால் சிறை வைக்கப்பட்டு, பட்டினத்தடிகளால் சிறை மீட்கப்பட்டவர். சிதம்பரத்தில் விறகுவெட்டி வாழ்ந்தவர். நாளும் ஒரு சிவனடியாருக்கு உணவருத்தும் நியமம் பூண்டவர். ஒருநாள் நடராசரே வர அவருக்குக் களியமுதூட்டினார். அதுவே திருவாதிரைக் களியின் மகத்துவம். திருவாதிரைத் திருவிழாவில் நடராசப் பெருமான் எழுந்தருளிய தேர் ஒடாது நிற்க, இவர் திருப்பல்லாண்டு பாடி, தேரை ஒடச் செய்தார்.
பொய்யாத வேதியர்:
திருவாவடுதுறை, திருவீழிமிழலை, திருவிடைக்கழி ஆகிய முத்தலங்களிலும் ஒவ்வொரு திருவிசைப்பாப் பதிகம் பாடியுள்ளார், அத்துடன் தில்லையில் பல்லாண்டும் பாடியுள்ளார் சேந்தனார். பொய்யாதவேதியர், சாந்தைமெய்ப்புகழாளர், ஆயிரம் பூசுரர், மெய்யே திருப்பணிசெய், என்ற பாடலில் (தி.9 ப.6 பா.1) பொய் சொல்லா அந்தணர் பூசிப்பதே பூவுலகிற்கு நன்மை தரும் என்பதும், தில்லை மூவாயிரவர்போல் இங்கு ஆயிரவர் அந்தணர் பூசித்தனர் என்பதும் புரிகின்றது. ஞானசம்பந்தர் கூற்றையே இவரும் கீழே எடுத்தோதி யுள்ளமையும் ஒப்புநோக்கி மகிழலாம். திருவீழிமிழலைத் தேவாரம் "மைம்மருபூங்குழல்" என்ற பாடலில் (தி.1 ப.4 பா.1) "பொய்ம்மொழியா மறையோர்கள் ஏத்த புகலி நிலாவிய புண்ணியனே" என்பதும் அதே பாடலில் "மெய்ம்மொழி நான்மறையோர் மிழலை", "விண்ணிழிகோயில் விரும்பியதே" என்பதும் ஞானசம்பந்தரின் ஞானத்தமிழ். இவ்விரு பெரியோரின் எண்ண ஒப்புமையை எண்ணி உயர்வோம்.
பல்லாண்டு:
இவர் பாடியுள்ள திருப்பல்லாண்டுப் பதிகத்துள், "மன்னுக தில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போய் அகல" (தி.9 ப.29 பா.1) என்றும், மற்றோர் பாடலில் இதே கருத்தை வேறுவிதமாக `மிண்டு மனத்தவர் போமின்கள், மெய்யடியார்கள் விரைந்து வம்மின்" என்றும் அருளியதோடு, `கொண்டும் கொடுத்தும் குடி குடி ஈசற்கு ஆட்செய்மின்' என்றும் கூறுகின்றார். "தாதையைத் தாளற வீசிய சண்டியின் பாதகத்துக்குப் பரிசு வைத்தான் பரமன்" (தி.9 ப.29 பா.10) என்று பாடுகின்றார். வாழ்வின் முதல்வனாகிய இறைவனுக்குச் செய்யும் தொண்டே மூலமானது. அதற்குத் தந்தையே ஊறு செய்தாலும் அதுபாதகம்; அது அறமும் ஆகாது. அதனால்தான் தாதையைத் தாளற வீசிப் பரிசு பெற்றார் சண்டீசர்.
பண்கள் ஆறு:
தேவார மூவர்போல் இசைப்பா ஆசிரியர்களும் ஒவ்வொரு தலத்திற்கும் சென்று பாடியுள்ளனர். அங்ஙனம் இசைப்பா பெற்ற தலங்கள் 14. இவற்றுள் சிதம்பரம், பூவணம், இடைமருதூர், ஆரூர், மிழலை, துறைசை ஆகிய ஆறு தலங்கள், தேவாரமும் பெற்ற தலங்கள்,
கங்கை கொண்ட சோழபுரம், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைக்கழி ஆகிய இவ்வெட்டுத் தலங்களும் திருவிசைப்பா மட்டும் பெற்ற தலங்கள். திருப்பல்லாண்டு பெற்றது சிதம்பரம் மட்டுமே.
பல்லாண்டையும் சேர்த்து 9ஆம் திருமுறையில் 29 பதிகங்கள் உள்ளன. 301 பாடல்கள் உள்ளன. இப்பதிகங்கள் இந்தளம், காந்தாரம், சாளரபாணி, நட்டராகம், பஞ்சமம், புறநீர்மை ஆகிய 6 பண்களில் பாடப்பெற்றுள்ளன. இவற்றுள் 21 பதிகங்களைப் பஞ்சமப்பண்களிலேயே பாடியுள்ளனர். தேவாரத்தில் காணப்பெறாத புதுப்பண் சாளரபாணி என்பது. அது இத்திருமுறையில் இடம்பெற் றுள்ளது. பூந்துருத்தி நம்பிகாட நம்பி அருளிய இருபதிகங்களில், சிதம்பரத்தில் பாடிய "முத்துவயிரமணி" (தி.9 ப.19 பா.1) எனத் தொடங்கும் பதிகமே சாளரபாணியில் பாடப்பட்டதாகும்.
களப்பாள்:
திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள களப்பாள்தான் களந்தை ஆதித்தேச்சரம் எனப்பாடப் பெற்றுள்ளது. இது கூற்றுவ நாயனாரின் அவதாரத்தலம், "கோதை நெடுவேல் களப்பாளனாகிய கூற்றுவனே" (தி.11 ப.34 பா.1) என்பது திருத்தொண்டர் திருவந்தாதி யாகும். அந்தணர் அழலோம்பும் திறத்தைக் கருவூர்த்தேவர் போற்றி யுள்ளார். "பழையராந்தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே" (தி.9 ப.19 பா.4) என்பதால் இறைவன் எளிமையையும் அருமை யையும் போற்றியுள்ளார்.
படிக்காசளித்த பரிசு:
சேந்தனார் திருவீழிமிழலைப் பதிகத்தில் "எம் குருமணியைக் குறுக வல்வினை குறுகாவே" (தி.9 ப.5 பா.3) என்று பாடியுள்ளார். "எண்ணில் பல்கோடி சேவடி நின்றைஞ்ஞூற்றுவர் ஏத்தும் வீழிமிழலை" என்பதால் ஐந்நூறு அந்தணர்கள் இங்கு வழிபாடியற்றும்" அர்ச்சகராயிருந்தமை தெளியலாம். "திக்கெலாம் குலவும் புகழ்த்திருவீழிமிழலை" "திக்கெலாம் நிறைந்த புகழ்த்திருவீழிமிழலை" என வருதலால் அக்காலத்துப் புகழ்மிக்க தலமாயிருந்தமை தெளிவாகிறது. "பாடலங்காரப் பரிசில்காசருளி, பழுத்த செந்தமிழ் மலர் சூடி, நீடலங்காரத்து எம்பெருமக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றான்" (தி.9 ப.5 பா.12) என்பதால் இறைவன் சம்பந்தருக்கும், அப்பருக்கும் படிக்காசு வழங்கியமை புலனாகிறது.
அகத்துறைப்பாடல்கள்:
சேந்தனார் திருவிடைக்கழி முருகனைத் தலைவனாகக் கொண்டு "மாலுலாம் மனங்கொண்டு என்கையில் சங்கம் வவ்வினான்" (தி.9 ப.7 பா.1) என்று தொடங்கும் அகத்துறைப் பாடல்களைக் கொண்ட திருவிசைப்பாப்பதிகம் பாடியுள்ளார். "தெருண்டவைதிகர் வாழ் திருவிடைக்கழி" என்றும், "திடங்கொள் வைதிகர்வாழ் திருவிடைக்கழி" என்றும் "தெரிந்த வைதிகர்வாழ் திருவிடைக்கழி" என்றும் பாராட்டப்படுவதால், இத்தலத்தில் வைதிக அந்தணர் அதிகம் வாழ்ந்தமை புலனாகிறது.
திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலப் பதிகத்தில் கருவூர்த்தேவர் "தெள்ளும் நீறவன் நீறு என்னுடல் விரும்பும். செவி அவன் அறிவு நூல் கேட்கும். மெள்ளவே அவன் பேர் விளம்பும்வாய், கண்கள் விமானமே நோக்கி வெவ்வுயிர்க்கும்" (தி.9 ப.10 பா.4 ) என்று தன் இறையனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏகநாயகன்:
"ஒருவன் என்னும் ஒருவன் காண்க" (தி.8 ப.3 வரி 43) என்பது திருவாசகம். "ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ" (தி.6 ப.34 பா.1 ) என்பது அப்பர் தாண்டகம். "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" (தி.10 பா.2404 ) என்பது திருமூலர் திருமந்திரம். இக்கருத்தையே சேந்தனார் திருவீழிமிழலைத் திருவிசைப்பா முதற்பாடலால் "ஏக நாயகனை இமையவர்க்கரசை என்னுயிர்க்கு அமுதினை" (தி.9 ப.5 பா.1) என்று பாடுகிறார். இதனையே வடமொழி வேதமும் "ஏகம்சத்விப்ராபகுதாவதந்தி" என்று கூறுகிறது.
உலகியலில் இந்தியா ஒன்றே. அது பல மாநிலங்களையும், அம்மாநிலங்களில் பல மாவட்டங்களையும் கொண்டு திகழ்கிறது. அதுபோல், தெய்வ உருவங்கள் பலவாயினும் அவ்வுருவங்கள் வாயிலாக வரும் அருள் ஒரு பரம்பொருளினுடையதே என்பதை உணர்வோமாக.
என்னை விரும்பினான்:
திருமுகத்தலைக்குப் பதிகம் "புவன நாயகனே" (தி.9 ப.11 பா.1) என்ற பாடலில் "பணிசெய்வார்க்கு இரங்கும்பசுபதி" என்று பரமனின் தன்மை கூறியுள்ளார். புனல்பட உருகி என்ற பாடலில் "அடியேன் வினைபடும் உடலம் நீ புகுந்து நின்றமையால், விழுமிய விமானமாயினதே" (தி.9 ப.11 பா.6)என்று அகமிக மகிழ்கிறார்.
கங்கை கொண்ட சோளேச்சரப் பதிகத்தில் பிரமன் அன்னமாய் விண்ணில் பறந்து பரம்பொருளைத் தேடினான் ஆனால் பரம் பொருளாகிய நீயோ சிறியவனாகிய என்னை விரும்பி ஓடிவந்து "என் உள்ளம் புகுந்தாய் இவ்வெளிமையை என்றும் மறவேன்" (தி.9 ப.13 பா.1) என்றுருகிப் பாடுகிறார்.
தத்தை (கிளி) யங்கனை யார் தங்கள்மேல் வைத்ததயாவை நூறாயிரம் கூறிட்டு அதில் ஒரு கூறு ஆண்டவனிடம் வைத்தவர்க்கு அமருலகு அளிப்பவன் இறைவன் என்று இன்புற்றுப் பாடி (தி.9 ப.13 பா.8) நமக்கு அறிவுறுத்துகிறார்.
"மங்கையோடிருந்தே யோகு செய்வானை" (தி.9 ப.13 பா.11) என்பதால் இறைவன் விருப்பு வெறுப்பில்லாதவன் என்பதையும், விகார உணர்ச்சி இல்லாதவன் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். "நேரிழையைக் கலந்து நின்றே புலன்களைந்தும் வென்றானை" (தி.6 ப.50 பா.3) என்ற அப்பர் திருமொழியும் ஒப்பு நோக்கி நினைக்கத்தக்கது.
மூவாயிரவரொடும் குலாவிய கூத்தன்:
பூந்துருத்தி நம்பிகாட நம்பி ஒரு பாடலில் அடியார்களைப் போற்றி அவர்கள் அமருலகம் ஆள நீ அங்குச் செல்லாமல் தில்லையில் மூவாயிரவரொடும் குலாவிக் கூத்தாடினையே என்று தில்லை வாழ் அந்தணர் பெருமை பேசுகிறார். "கடியார்கணம் புல்லர் கண்ணப்பர் என்று உன் அடியார் அமருலகம் ஆள நீ ஆளாதே முடியாமுத்தீவேள்வி முவாயிரவரொடும் குடிவாழ்க்கைக் கொண்டு நீகுலாவிக்ககூத் தாடினையே" (தி.9 ப.19 பா.2) என்பது அப்பாடல். "எம்பந்தவல்வினை நோய் தீர்த்திட்டு எமையாளும் சம்பந்தன்" (தி.9 ப.19 பா.4) என்றும், "அல்லியம் பூம்பழனத்து ஆமூர் நாவுக்கரசை, செல்லநெறி வகுத்த சேவகனே" (தி.9 ப.19 பா.3) என்றும், "களையா உடலோடு சேரமான் ஆரூரன் விளையாமதமாறா வெள்ளானை மேற்கொள்ள" (தி.9 ப.19 பா.5) என்றும் மூவர் முதலிகளைப் போற்றியுள்ளார். மணிவாசகரை இதில் குறிப்பிடாதது அவர் காலத்தால் பிந்தியவர் என்று எண்ண இடந்தருகிறது.
பொன்வேய்ந்தான்:
கண்டராதித்தர் சோழர்மரபினர், வெங்கோல்வேந்தன் தென்னன்நாடும், ஈழமும் கொண்டதிறல் "செங்கோற்சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன் அணிந்த அணிதில்லை அம்பலம்" என்று பாடியுள்ளார். சூரியன் மகன் மனு; அவன் மகன் இரணிய வன்மன், அவன்தான் முதல் முதலில் சிற்றம்பலத்திற்குப்
பொன்வேய்ந்தவன். அவன் மரபினரான சோழர்களும் பின்னே பொன்வேய்ந்துள்ளனர்.
திருவாலியமுதனார் தம் திருவிசைப்பாவில் தில்லைப் பாடலில் "பந்தபாசமெலாம் அறப்பசுபாசம் நீக்கிய பன் முனிவரோடந்தணர் வணங்கும் அம்பலவன்" (தி.9 ப.22 பா.5) என்பதால் அம்பலவன் பெருமை பகர்ந்துள்ளார்.
தமிழிசை கலந்த சிற்றம்பலம்:
அன்னநடையார் அமுதமொழியார் அவர்கள் பயில்தில்லைத் தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலந்தன்னுள், பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு, "மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே" (தி.9 ப.24 பா.2) என்ற பாடலால் தமிழும் இசையும் சிற்றம்பலத்தில் கலந்து நின்றமையை விளக்கியுள்ளார்.
"சந்தும் அகிலும்" (தி.9 ப.24 பா.4) என்ற பாடலில் "நிவ வின்கரைமேல் உயர்ந்த மதில்தில்லைச் சிந்திப்பரிய தெய்வப்பதியுள் சிற்றம்பலம்" என்பதனால் வெள்ளாற்றின் கரையில் சிதம்பரம் உள்ளமையைக் குறிப்பிடுகிறார்.
திருவருட் சிந்தனை
இன்னோரன்ன பற்பல உண்மைகளை உணர்த்தும் இத்திரு விசைப்பாக்களை ஓதி உணர்ந்து உய்தி பெறுவோமாக. எல்லோரும் எல்லா நலமும் பெற்று இனிது வாழ அருள்மிகு செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.
இசைப்பா ஓதி இன்புறுவோம்.
கூத்தனைப் போற்றிக் குலவிடுவோம்