08 முதற் பகுதியின் பதிப்புரை

திருச்சிற்றம்பலம்

காலமுண் டாகவே காதல்செய் துய்மின் கருதரிய

ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய

ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு

மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே. -தி.8 திருவா. திருப்பாண் 5

மணிவாசகர் அருளிய திருவாசகம் பன்னிரு திருமுறைகளில் பலராலும் பலகாலும் ஓதப்பெற்றுவரும் அருள் நூல். மக்களைப் பிறவிக் கடலிலிருந்து முத்திக் கரையில் சேர்ப்பிக்கும் உயரிய புணை. படிப்போரைப் பரவசப்படுத்தி அவர்களின் உள்ளங்களை நெகிழ்வித்து இறையருளில் தோய்விக்கும் திருமறை.

திருவா சகம்இங் கொருகால் ஓதின்

கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்

தொடுமணற் கேணியிற் சுரந்துநீர் பாய

மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி

அன்பர் ஆகுநர் அன்றி

மன்பதை உலகில் மற்றையர் இலரே. -நால்வர் நான்மணி. 4

என்பது சிவப்பிரகாச சுவாமிகள் திருவாசகத்தைச் சிறப்பித்துக் கூறும் மதிப்பீட்டுரை.

ஊழிக் காலத்தில் தன் தனிமையைப் போக்கிக் கொள்ள விரும்பினான் இறைவன். திருவாசகத்தின் ஒரு பிரதியை மணிவாசகர் சொல்லக் கேட்டு, தானே தன் கைப்பட எழுதித் திருச் சிற்றம்பலமுடையான் எனக் கைச்சாத்திட்டு, தில்லைப் பொதுவில் வைத்துக் கொண்டான். இது மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளையின் கற்பனை கலந்த பாராட்டுரையாகும்.

சிவஞான போதத்தின் எட்டாம் சூத்திரம், இறைவன் குருவாக எழுந்தருளி வந்து பக்குவமுள்ள உயிர்களை ஆட்கொள்ளும் திறம் கூறுவது. பன்னிரு திருமுறைகளில் எட்டாவதாக இலங்கும் இத்திருவாசகத்தை அருளிய மணிவாசகரைத் திருப்பெருந்துறையில் இறைவன் குருவாக எழுந்தருளி வந்து ஆட்கொண்டருளினார் என்பது வரலாறு.

"செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்

திருப்பெருந் துறைஉறை கோயிலும் காட்டி

அந்தண னாவதும் காட்டி வந்தாண்டாய்" -தி.8 திருவா. திருப்பள்ளி. 8

"....பேணு பெருந்துறையில்

கண்ணார் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட

அண்ணா மலையான்.." -தி.8 திருவா. திருவம்மானை 10

என்பன போன்ற பாடற் பகுதிகளால் திருப்பெருந்துறையில் இறைவன் குருவாக வந்து அவரை ஆட்கொண்டருளியதை அறியலாம்.

இறைவன் தனக்கு உபதேசம் செய்தருளிய சிறப்பை மணிவாசகர்,

`நானேயோ தவஞ்செய்தேன் சிவாய நம எனப் பெற்றேன்' தி.8 திருவா-திருவேச-10.

என்ற பாடலில் தெரிவித்தருளுகின்றார். இறைவன் தன்னை ஆட்கொண்டபின் உடல் பொருள், ஆவியை அவன் வசம்விட்ட சிறப்பை,

"அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமையெல்லாமும்

குன்றேயனையாய் என்னையாட்கொண்ட போதே

கொண்டிலையோ" தி.8 திருவா. குழைத். 7

என்ற பாடலால் உணர்த்தியருள்கிறார்.

இத்தகைய திருவாசகம், சிவபுராணம் முதலாக அச்சோப்பதிகம் ஈறாக 51 பதிகங்களைக் கொண்டு விளங்குகிறது. பஞ்சப்பிரம மந்திரங்களை அடுத்த ஆறு அங்க மந்திரங்களில் சிகாமந்திரமாக விளங்கும் சிறப்புடையது.

இந்நூலின் பல பகுதிகளும் படிப்போர்க்குச் சுவையுறுத்தி அவர்தம் பிறவிக்குக் காரணமான தளைகளை அறுத்து அவர்களை வீடுபேறு உறுவிக்கும் சிறப்புடையன ஆதலைப் பின்வரும்,

தொல்லை யிரும்பிறவிச் சூழும் தளைநீக்கி

அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை

மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவா சகம்என்னும் தேன். -அபியுக்தர்

என்ற வெண்பா தெரிவிக்கும்.

சைவநன்மக்கள் சிறப்பாக மார்கழி மாதத்தில் பன்னிரு திருமுறைகளில் திருவாசகத்தில் திருவெம்பாவை ஒன்றையே ஓதிவரும் மரபைக் காணலாம். திருவாசகத்தில் திருவெம்பாவை சிறப்புடையதாதலை இதனால் நாம் நன்கு அறியலாம்.

திருவாசகம் முத்திப்பேற்றையே சிறப்பாக வேண்டுவதாதலின், உடல் நலங்குன்றி உயிர்விடும் நிலையில் இருப்போர் அருகே இருந்து திருவாசகத்தை அன்பர்களைக் கொண்டு ஓதுவித்து வருகின்றனர். இறக்கும் போது ஒருவர் மறுபிறவி பற்றிய எந்தச் சிந்தனையோடு இறக்கின்றாரோ அப்பிறப்பினை அவர் அடைவார் என்பது மரபு. அப்பர் சுவாமிகள் உயிர் துறக்கும் போது உன் நினைவு என் நெஞ்சை விட்டு நீங்காதிருக்க அருள் செய்ய வேண்டுமென வேண்டுகின்றார்.

தூமென் மலர்க்கணை கோத்துத்தீ வேள்வி தொழில்படுத்த

காமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோணநின்

நாமம் பரவி நமச்சிவாய வென்னும் அஞ்செழுத்தும்

சாமன் றுரைக்கத் தருதிகண்டாய் எங்கள் சங்கரனே. -தி.4 ப.103 பா.3

என்பது அவர் அருளிய தேவாரத் திருமொழி.

உலக வாழ்க்கையில் மக்கள் அடையத்தக்க விழுமிய பயன், முத்திப்பேறேயாகும். திருவாசகத்தை நாம் நாள்தோறும் ஓதிவரின் நமக்கு அப்பேறு சித்திக்கும். திருவாசகம் முத்திப்பேற்றைச் சிறந்தெடுத்து ஓதுவதால், அதனை நாடோறும் படித்தல் கூடாது எனவும், இறப்பு நேரும் போது மட்டுமே அதனை ஓதுதல் வேண்டுமெனவும் சிலர் கூறுவர். அது தவறு. நாள்தோறும் உளம் நெகிழ்ந்து அந்நூலை ஓதிவரின் இம்மைப் பயன்கள் பலவற்றையும் பெறுவதோடு முடிவில் வீடுபேற்றையும் அடையலாம்.

நாள்தோறும் வழிபாடு செய்துவரின் `புலனைந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு, ஐமேல் உந்தி, அலமரும் போது அஞ்சேல் என்று அபயம் அருள்வான் இறைவன்' என்பார் திருஞானசம்பந்தர்.

வாழ்க்கையில் முழுமையாக நாம் வழிபாட்டு நெறிகளில் ஈடுபட இயலாமற் போயினும், நமக்கு அப்பெருமான் நினைவோடு வாழும் பிறப்பை அருளி, முடிவில் பரகதி வழங்குவான் இறைவன்.

தவமே புரிந்திலன் தண்மலரிட்டுமுட் டாதிறைஞ்சேன்

அவமே பிறந்த அருவினை யேன் உனக்கு அன்பருள்ளாம்

சிவமே பெறுந்திரு எய்திற்றி லேன்நின் திருவடிக்காம்

பவமே அருளுகண் டாய்அடி யேற்கு எம்பரம்பரனே. தி.8 திருவா. திருச்சத.5

என்பது திருவாசகம்.

அன்பர்கள் பன்னெடுங்காலமாக ஓதிப் பயனெய்திவரும் இந்நூல், பலராலும் மூலமாகவும் உரையோடும் பதிப்பிக்கப் பட்டுள்ளது.

தருமை ஆதீனம் 25ஆவது குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தம் அருளாட்சிக் காலத்தில் மணிவாசகரின் திருவாசகம், திருக் கோவையார் ஆகிய இருநூல்களையும் மகாவித்துவான், முனைவர் திரு. சி. அருணைவடிவேல் முதலியார் அவர்களைக் கொண்டு உரை எழுதுவித்து, 1-6-69 அன்று தருமை ஆதீன ஆதிபரமாசாரிய சுவாமிகள் ஷ்ரீ குருஞானசம்பந்தர் குருபூசை விழா மலராக வெளியிட்டருளினார்கள்.

இதுபோது அந்நூலை ஏனைய திருமுறைகளுடன், ஒளியச்சில் அழகிய பதிப்பாக ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணிகளின் வெள்ளிவிழா மலராக 26ஆவது குருமகா சந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டருளுகின்றார்கள்.

இந்நூலுக்கு ஷ்ரீலஷ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் அருளிய ஆசியுரை, நூலை நன்முறையில் ஓதி உணரத் துணைபுரிகிறது.

இத்திருமுறை வெளியீட்டுக்கு, திருச்சிராப்பள்ளி, சிவநேயச் செல்வர், சிவபூஜாதுரந்தரர், அன்பர் திரு. ப. மூக்கப்பிள்ளை அவர்கள் நன்கொடை வழங்கியுள்ளார். சைவ நல்லுலகம் இத்திருமுறையின் சிறப்பை உரை நலத்தோடு ஓதி உணர்ந்து, இம்மை, மறுமை, அம்மை ஆகிய மும்மைப்பயன்களையும் பெற்று இன்புறுவதாக.

இத்திருமுறைப் பதிப்பைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.

அன்பர்கள் இத்திருமுறையைப் பொருளுணர்ந்து ஓதி இறைவன் திருவருள் பெற்று இன்புறுவார்களாக.

இங்ஙனம்

கட்டளை விசாரணை ஷ்ரீலஷ்ரீ குருமகாசந்நிதானத்தின்

திருக்கடவூர் தேவஸ்தானம். உத்தரவுப்படி,