08 முன்னுரை

பாய்பரியோன் தந்த பரமானந் தப்பயனைத்

தூயதிரு வாய்மலரால் சொற்செய்து - மாயக்

கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்

திருவாத வூராளுந் தே.

- திருக்களிற்றுப்படியார்.

திருவருள் வெளிப்பாடுகளாகிய திருமுறைகளுள் சமயாசாரியர் நால்வரது திருமுறைகளே முன்னிற்பவை. அவைகளுள் மாணிக்க வாசகரது திருமொழியாகிய எட்டாந் திருமுறையே காலத்தால் முற்பட்டது என்பது மரபு. இம் மரபு பற்றி இக்காலத்தார் சில தடைகளை எழுப்பி, அதனை மாறுபடக் கூறுவர். அவற்றுள், `மாணிக்க வாசகரது திருமுறை எட்டாவதாக வைக்கப்பட்டதே, அது தேவாரத் திருமுறைகளுக்குப் பிற்பட்டது என்பதனைக் காட்டும்' என்பது ஒன்று. திருமூலரது திருமந்திரம் தேவாரத்திற்கு முற்பட்டது என்பது அனைவர்க்கும் ஒத்த துணிபாகலானும், அது பத்தாந் திருமுறையாக வைக்கப்பட்டிருத்தலானும் திருமுறைகளின் வைப்பு முறையோடு அவற்றின் ஆசிரியரது காலங்களைத் தொடர்புபடுத்தல் கூடாததாகின்றது.

இனி, முதல்ஏழு திருமுறைகளாகிய தேவாரங்களை அருளிச் செய்த மூவர்க்கும் காலத்தாற் பிற்பட்டவரே எட்டாந் திருமுறையாகிய திருவாசகம் திருக்கோவையாரை அருளிச் செய்த மாணிக்க வாசகர் என்பதற்கு வலியதொரு சான்றாக அவர் கூறுவது, `சிவனடி யார்களைத் தொகுத்துக் கூறவந்த ஆளுடைய நம்பிகள் தமது திருத் தொண்டத் தொகையுள் மாணிக்க வாசகரை ஓதிற்றிலர்' என்பது. `ஆளுடைய நம்பிகள் மணிவாசகரைத் தமது திருத்தொண்டத் தொகையுள் எடுத்து ஓதாதது என்னை' என்பது பெரியதோர் ஐயப்பாடே என்பதும், அதற்கு விடை காணவேண்டுவது இன்றியமை யாதது என்பதும் உண்மையேயாயினும், `அஃது ஆளுடைய அடிகள் ஏனை மூவர்க்கும் முற்பட்டவர்' என்னும் மரபுபற்றி எழுவதோர் ஐயமாமன்றி, அதற்கு மாறாக, `அவர் பிற்பட்டவரே' எனத் துணிவிக் கும் சான்றாகாது. என்னை? ஆளுடைய நம்பிகள் மாணிக்கவாசகரைத் தம் திருத்தொண்டத் தொகையுள் எடுத்தோதாமைக்கு அவர் காலத் தால் பிற்பட்டவர் என்பதொன்றே காரணமாகாது, பிறிது காரணம் இருத்தலும் கூடுவதேயெனின், அதனை மறுத்தல் கூடாதாகலின், அதனால், `மாணிக்க வாசகர் மூவருக்குப் பிற்பட்டவர்' என நாட்டு தற்கு, `அவரைமூவருள் ஒருவரும் கூறிற்றிலர்' என்னாது மூவருள் ஒருவர் இருவரையோ அன்றி மூவரையுமோ, `மாணிக்கவாசகர் எடுத் தோதியுள்ளார்' எனக் காட்டுதலே செயற்பாலதாம். அங்ஙனம் காட்டு தல் ஒருவர்க்கும் இயலாததாகலின், `மாணிக்கவாசகர் மூவர்க்குப் பிற்பட்டவர்' என்பது துணியப்படாததொரு கொள்கையேயாம்.

நம்பியாரூரர் மணிவாசகரைத் திருத்தொண்டத் தொகையுட் கூறாமை பற்றியே, `மணிவாசகர் மூவர்க்குப் பிற்பட்டவர்' என முடிவு கட்டுவது நேரிதாகிவிடின், `மணிவாசகர் மூவரைப் பற்றி ஓரிடத்தும் கூறாமை பற்றி, `மூவர் அவர்க்குப் பிற்பட்டவரே' என முடிவு கட்டுதலும் நேரிதேயாம். அதனால், ஒருவர் மற்றொருவரைக் கூறாமை, அவர்தம் காலத்தின் முற்பிற்பாடு துணிதற்கு ஏதுவாகாது. மற்று, ஒருவர் மற்றொருவரை எடுத்துக் கூறியிருப்பின், அதுவே அதனைத் துணிதற்கு ஏதுவாகும் என்க.

`மாணிக்கவாசகர் மூவரைப்பற்றிக் கூறாமை போன்றதன்று, நம்பியாரூரர் மாணிக்கவாசகரைப்பற்றிக் கூறாமை; ஏனெனில், நம்பியாரூரர் சிவனடியார்கள் அனைவரையும் எடுத்துக் கூறுவதையே பொருளாகக் கொண்டு ஒரு திருப்பதிகம் அருளிச் செய்துள்ளார்; மாணிக்கவாசகர் அவ்வாறு அருளிச் செய்யப் புகுந்திலர், எனின், மாணிக்கவாசகர் சிவனடியார்களை எடுத்தோதப் புகுந்திலராயினும், சிவபெருமானது திருவிளையாடல்களை யெல்லாம் எடுத்தோதித் தொகுத்துள்ளார். அதுவே, `கீர்த்தித் திருவகவல்' என்பது. அதனுள் சிவபெருமான் ஓரிடத்தன்றிப் பற்பல இடங்களில் பற்பல அடியார் கட்குப் பற்பலவாறு அருள் புரிந்த வரலாறுகள் பலவும் காணப் படுகின்றன. அவற்றில் சிவபெருமான் திருநாவுக்கரசரைத் திருவதிகை யில் சூலைநோய் தீர்த்து ஆட்கொண்டதும், திருவெண்ணை நல்லூரில் நாவலூரரை வல்வழக்கிட்டு ஆட்கொண்டதும் குறிக்கப்படவில்லை. கழுமலத்தலம் (சீகாழி) கீர்த்தித்திருவகவலில் குறிக்கப்படுகின்றது. ஆனால், அங்கு ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தமை குறிக்கப்படவில்லை. `கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்' என்பது, திருஞானசம்பந்தருக்கு அருள் வழங்கியதையே குறிக்கும் என்பதற்கில்லை.

மதுரையில் சிவபெருமான் மண்சுமந்தது முதலிய பல திருவிளையாடல்களை மாணிக்கவாசகர் தமது கீர்த்தித் திருவக வலிலும், பிற இடங்களிலும் இனிது எடுத்து ஓதுகின்றார். அவற்றுள் மதுரையில் ஞானசம்பந்தர் சமணரை வாதில் வென்றமையைக் கூறவில்லை. ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் அருளியது, நாவுக் கரசருக்கு கல்மிதப்பித்தது, நாவலூரருக்குத் தூது சென்றதோடு, அவரைக் களையா உடலொடு கயிலைக்கு அழைத்தது முதலிய அதியற்புதச் செயல்களை அவர்களுக்குப் பின்வந்த பத்திமான்களுள் ஒருவரும் எளியனவாக் கருதி விடுத்திலர். மதுரையைப் பற்றிப் பல வகையாகப் பாடுகின்ற ஆளுடைய அடிகள், மூவர் முதலிகட்குப் பிற்பட்டவராயின், அங்கு ஞானசம்பந்தர் வாயிலாகச் சைவ சமயத் திற்கே புத்துயிர் வழங்கிய அருள் நிகழ்ச்சியைக் கூறாது போயினார் என்பது, எட்டுணையும் பொருந்துவதன்றாம். அதனால், `திருத் தொண்டத் தொகையையே நுதலி எடுத்துக் கொண்ட திருப்பதிகத்துள் சுந்தரர் மாணிக்கவாசகரைக் கூறாதது என்னை' என்னும் ஐயப் பாட்டிற்குச் சிறிதும் வலிமை குறைந்ததன்று. `மாணிக்கவாசகர், மதுரையில் ஞானசம்பந்தர் சைவசமயத் தாபனம் செய்தது முதலிய வரலாறுகளைக் கூறாதது என்னை' என்னும் ஐயம், `திருத்தொண்டர் வரலாறு' என்னும் முறையில் திருத்தொண்டத் தொகையுள் மாணிக்க வாசகர் இடம் பெறுதல் இன்றியமையாதது போலவே. `இறைவன் திருவிளையாடல்' என்னும் முறையில் கீர்த்தித் திருவகவலுள் ஞானசம்பந்தர் முதலியோரது வரலாறு இடம் பெறுதலும் இன்றியமை யாததேயாகும். திருவிளையாடற் புராணத்திற் ஞானசம்பந்தர் வரலாறு இடம் பெற்றிருத்தல் இதனை நன்கு விளக்குவதாகும். ஆகவே, திருத்தொண்டத் தொகையுள் மாணிக்கவாசகர் கூறப்படாமை பற்றி அவரைத் தேவார ஆசிரியர் மூவர்க்கும் பிற்பட்டவர் என முடிவு கட்டுதல் இயலாது.

திருத்தொண்டர் புராணம் போன்று சைவசமயப் பெரியார் களது உண்மை வரலாற்றை விரித்துரைக்கும் வரலாற்று நூல் ஒன்றற்குத் தோற்றுவாயாகவே சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையை அருளிச் செய்தாராகலின், அத்தகைய வரலாறுகள் நன்கறியப்பட்ட நாயன்மார்களையே பெயரெடுத்தோதி, ஏனையோரை, `அப்பாலும் அடிச் சார்ந்தார்' என ஒரு சொல்லாற் குறித்துப் போயினார் எனவும், மாணிக்கவாசகரது வரலாறு `தமிழகத்தின் இருண்டகாலம்' எனப்படும் குழப்பக்காலத்தில் நன்கறியப் படாது போயினமையின், அவரைப் பெயரெடுத்தோதிற்றிலர் எனவும் கொள்ளுதலே பொருந்துவதாம். இன்னும், தேவாரங்களுள் கிடைத்தன சிலவேயாக, கிடையாதன பலவாகலின், மூவர் முதலிகள் மாணிக்க வாசகரைக் குறித்திலர் என்பது துணியப்படாமையும், திருவாசகம் திருக்கோவையாருள் கிடையாதன இன்மையின், மாணிக்க வாசகர் மூவரைக் குறியாமை துணியப்படுதலும் கருதத்தக்கன. மற்றும் மாணிக்கவாசகர் பாடல் வகைகள், அவர் கூறும் தலங்கள், வரலாறுகள் முதலியன காலப் பழமையைக் காட்டுவனவாய் இருத்தலும் நோக்கற்பாற்று.

இனி, அடிகள் காலத்தைப் பிற்பட்டதாகக் கூறுவோர், அவர் திருக்கோவையாருள் வரகுண பாண்டியனைக் குறித்திருத்தலைக் காட்டி `அப்பாண்டியன் மூவரது காலத்திற்குப் பிற்பட்டவன் என்பது கல்வெட்டுக்களால் நன்கு பெறப்படுகின்றது' என மற்றொரு வரலாற்றுச் சான்று காட்டுவர். அடிகள் வாக்கில், `வரகுண பாண்டியன்' என்னும் பெயரொன்றுமே காணப்படுகின்றதன்றி, அவனைப் பற்றி வேறு ஒரு சிறு குறிப்பும் காணப்படவில்லை. ஆகவே, ஒருபெயரையுடைய மன்னர் பலர் இருத்தல் பலவிடத்தும் நன்கறியப்பட்டமையின், அடிகள் குறித்த வரகுணனே, கல்வெட்டுக் களால் அறியப்படுகின்ற வரகுணன் என அறுதியிட்டுக் கூறுதற்கு வழியில்லை. மாறாக, வேறொருவனைக் குறிப்பதற்கே அது வழிசெய் கின்றது.

அடிகள் உலக வாழ்க்கையை முற்றும் துறந்து இறைவன் திருவடிப்பேறு ஒன்றே கருதித் தில்லையை அடைந்திருந்த காலத்தில் அருளிச் செய்த திருக்கோவையாருள் `வரகுணன்' என்னும் மன்னனைச் சிவபெருமானை வணங்கும் அன்பனாகக் குறித்துள்ளார் எனின், அவனது சிறந்த சிவபத்தி நோக்கி உண்மையால் அங்ஙனம் குறித்தனராதல் வேண்டுமன்றி. அவனை மகிழ்வித்தற்கு முகமனாகக் குறித்தனர் என்றல் எவ்வாற்றானும் பொருந்தாது. ஆனால், கல்வெட்டுக்களால், அறியப்படும் வரகுண பாண்டியன் அத்தகைய சிவபத்தியுடையன் என்பதற்குச் சான்று யாதும் இல்லை. அதற்கு மாறாக அவன் எஞ்ஞான்றும் போரில் விருப்புடையவனாகவே அறியப்படுகின்றான்.

பதினொன்றாந் திருமுறையில் உள்ள பட்டினத்து அடிகள் பாடலில் `பெரிய அன்பின் வரகுண தேவன்' என்று ஒரு வரகுணன் பலவகைப் பத்துச் செயல்களுடன் எடுத்துக் கூறப்படுகின்றான். திருவிளையாடற் புராணத்திலும் ஒரு வரகுணன் அத்தகையோனாகக் குறிக்கப்படுகின்றான், இவ்விருவரும் வேறு வேறானவரல்லர்; ஒருவனே ஈரிடத்தும் சொல்லப்படுகின்றான் என்பதை மறுப்பவர் யாரும் இலர். `அவ்வரகுணன் தான் கல்வெட்டிற் காணப்படும் வரகுணன்' என்பதற்குப் பட்டினத்து அடிகள் பாடற் கருத்து, திரு விளையாடற் புராணத்தில் சொல்லப்பட்ட வரலாறு என்பவற்றோடு ஒத்த நிகழ்ச்சிகள் கல்வெட்டு வரகுணனைப் பற்றிக் காணப்பட வேண்டும். அங்ஙனம் காணப்படாதபொழுது, அந்நூல்களில் சொல்லப்பட்ட வரகுணனும் கல்வெட்டுக்களில் சொல்லப்படும் வரகுணனும் ஒருவனே எனக்கூறுதல் பொருள்படாததேயாம். அதனால் அடிகள் குறித்த வரகுணன், பெரிய அன்பின் வரகுணனாதல் சாலுமாதலின், அவ் வரகுணனைக் குறித்திருத்தல் பற்றியும் அவரது காலம் தேவார ஆசிரியர் மூவர் காலத்திற்குப் பிற்பட்டது என்னும் துணிபு பிறக்குமாறில்லை.

`திருவாதவூரடிகள், மூவர் முதலிகட்கு முற்பட்டவர்' என்பது மரபாய் இருத்தலின், அதற்கு மாறாக, `அவர் பிற்பட்டவர்' எனக்கூற முற்படுவோர், அதற்கு ஐயமற்ற தெளிவான சான்றுகாட்டியே தம்கொள்கையை நிறுவுதல் வேண்டும். அஃது இயலாதவரையில், முன்னை மரபே மரபாய் நிலைத்து நிற்பதாம். அதனான், ஒருவாற்றாற் கிடைக்கும் சான்றுகள் பலவும் முன்னை மரபிற்குத் துணைபுரியும் வகையிலேயே நோக்கப்படும். அவ்வாற்றால் அடிகள் குறித்த வரகுண பாண்டியனும், திருவிளையாடற் புரணத்திற் கூறுமாறு தேவார ஆசிர்யர்கட்கு முற்பட்டவனாகவே கொள்ளப்படுவான். அப்பர் தமது திருவாரூர்த் திருப்பதிகத்துள், "நரியைக் குதிரை செய்வானும்" என்று அருளிச் செய்ததும் இவ்வாற்றால், அடிகள் பொருட்டுச் சிவ பெருமான் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலைக் குறிப்பதாகவே கொள்ளப்படும். மற்றும் இன்னோரன்னவாகக் கொள்ளப்படுதற்கு உரியன பல.

`திருவாதவூர் அடிகள் அருளிச்செய்த திருவாசகம், திருக்கோவையார் என்பன தேவாரங்கட்கு முற்பட்டன, எனவே' தமிழ்மொழியில் ஓர் ஆசிரியராலே பலவகை இயல்புகளும் பொருந்தச் செய்யப்பட்ட பத்தித்துறை முதற் பேரிலக்கியம் எட்டாந் திருமுறையேயாதல் தெளிவு. இதனால், `திருவாசகமே சைவம்; சைவமே திருவாசகம்' என்னும் நிலை ஒருகாலத்திருந்தது என்பது புலனாகும். இன்றும் திருவாசகத்திற்கு அத்தகைய ஒரு தனிச் சிறப்பிருத்தல் அறியத்தக்கது. `திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்னும் பழமொழியால், திருவாசகத்தின் பத்திப்பெருக்கும், "ஆரணங்காண் என்பர் அந்தணர்" என்னும் தனிப்பாடலால் திருக்கோவையாரின் இலக்கியச் சிறப்பும் நன்கு வெளியாகும். அதற்கேற்ப, ஆசிரியர் ஆளுடைய அடிகள் திருவாசகத் தில் இறைவனை எத்தனை எத்தனை வகையால் பாடுகின்றார்!.

`சிவபுராணம்' என்னும் முதற்பகுதியில், இறைவனது பெருமைகள் பலவற்றையும் தொகுத்துக் கூறி, இரண்டாவதாகிய கீர்த்தித் திருவகவலில் இறைவன்தன் அடியார்களுக்கு அருள்புரிந்த வரலாறுகளை எல்லாம் எடுத்தோதி, மூன்றாவதாகிய திருவண்டப் பகுதியுள், இறைவன் பெரியதிற் பெரியனுமாய்ச் சிறியதிற் சிறியனுமாய் நிற்கும் முறைமையை விரித்து, அவ்வாற்றால் எத் திறத்தார்க்கும், எவ்வகையானும் அரிதற்கரியனாகிய அவன், தமக்கு எளிவந்து அருள் புரிந்த அருட்டன்மையை வியந்து வாழ்த்தி, நான்கா வதாகிய போற்றித் திருவகலுள் இறைவனது இயல்புகள் பலவற்றை யும் பல்பெயர்க் கோவையாக வைத்துப் போற்றி, போற்றி என உளம் உருகிப் பலவாறு போற்றி, அடிநிமிர்ந்து வந்த பெரிய பாட்டுக்களாக நான்கு தனிநிலைச் செய்யுட்களை அருளிச் செய்தார்.

மற்றும் சொற்றொடர் நிலைச்செய்யுளாக ஒரு நூறு பாட்டுக் களான் இயன்ற, `சதகம்' என்பதனோடு இருபது பாட்டுக்களாலும், ஒருபது பாட்டுக்களாலும் இயன்ற பலவகைத் தொகைநிலைச் செய்யுட் களாகிய பாமாலைகளை இறைவனுக்கு, தம் அன்பென்னும் நாராலே, செந்தமிழ்ச் சொற்களாகிய செவ்வி பெற்ற பூக்களை அவனது அருள் என்னும் தேன் ததும்பி வழியுமாறு அழகுபடத் தொடுத்தணிந்தார். இப்பாமாலைகளுட் பலவற்றை மகளிர் விளையாட்டின்கண் பாடப் படும் பாடல்களாகவே அமைத்தார். அங்ஙனம் அமைத்தது, தோற்றத் தால் மக்களது காதற் பாடல்கள் போலத் தோன்றி, உண்மையால், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானிடத்துச் செல்லும் முறுகிய பேரன்புப் பாடலாய்ப் பயன்தருதற்பொருட்டு. அன்றியும் ஒரு பொருள் மகளிர் விளையாட்டுப் பாடலில் பாடப்படுமாயின், அது நாடெங்கும் நனிபரந்து பலர் நன்கறிந்த பொருளாய் நிற்றல் இயல்பாகலின், சிவபெருமானது திருப்புகழ் அத்தன்மையதாய் விளங்கி நிற்றல் வேண்டும் என்னும் கருத்தாலும் அடிகள் அவற்றை அங்ஙனம் அருளிச் செய்தாராவர்.

அடிகள் தமது திருக்குறிப்பினை இங்ஙனம், பிறர் கூற்றாக அருளிச் செய்ததன்றி, அதனை நேரே இறைவன் திருமுன் எடுத்து விண்ணப்பித்த பகுதிகள்தாம் எத்தனை! இவையெல்லாம், `திருவாசகம்' எனப்பெயர்பெற்று நிற்க. `திருக்கோவை' எனப் பெயரிட்டுப் பொருட்டொடர் நிலைச் செய்யு ளாய் விளங்கச் சிறந்ததொரு திருவருட் பேரிலக்கியத்தினை அடிகள் செய்தருளினார். `இடுகுறிவகையால் மேலனவே `திருவாசகம்' எனப் படினும், காரணவகையால் திருக்கோவையும் திருவாசகமே என்னும் கருத்தால், அதனையும் `கோவைத் திருவாசகம்' என வழங்குவர் ஆன்றோர்.

இவை அனைத்திலும் அடிகளது அருள்நிலையும், அன்பு நிலை யும், இவ்வுலக வாழ்க்கையை நீத்து இறைவன் அடிநிழற் கண்ணே சென்று வாழ்தற்கண் அவர்க்கிருந்த அளவிலா விரைவும் தெற்றென விளங்கி நிற்றலேயன்றி, அவற்றில், அனைவரும் ஆழ்ந்துணர்ந்து பயன் பெறுதற்குரிய அரும்பொருள் திருமொழிகள்தாம் எத்துணைய!

"அவனருளாலே அவன்தாள் வணங்கி". "சிந்தனை நின்றனக்காக்கி நாயினேன்றன் கண்ணினை நின் திருப்பாதப் போதுக் காக்கி - வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கி", "வணங்கத் தலைவைத்து வார்கழல் வாய் வாழ்த்தவைத்து இணங்கத்தன் சீரடியார் கூட்டமும் வைத்தெம் பெருமான்", "தன் ஈரடிக்கு என் இரண்டு கரங்கள் தந்தான்" என்றாற் போலும் அருந்திரு மொழிகட்கு அடிகள் திருமுறையில் ஓர் அளவுண்டோ!.

"கல்நார் உரித்த கனியே போற்றி", "கல்லைப்பிசைந்து கனி யாக்கித் தன்கருணை - வெள்ளத்தழுத்தி வினைகடிந்த வேதியனை" `நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்", "பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே", "உலவாக் காலம் தவம் எய்தி உறுப்பும் வெறுத்திங்குனைக் காண்பான் - பலமாமுனிவர் நனிவாடப் பாவியேனைப் பணி கொண்டாய்", "அன்பராகிமற் றருந்தவம் புரிவார் அயனும் மாலும் மற்றழலுறு மெழுகாம் - என்பராய் நினைவார் எனைப்பலர் நிற்க, இங்கெனை எற்றினுக்காண்டாய் - வன்பராய் முருடொக்கும் என் சிந்தை மரக்கண் என் செவி இரும்பினும் வலிது","யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய்" "நாய்வயின் உள்ள குணமும் இல்லேனை நற்றொண்டு கொண்ட - தீவயின் மேனியன்" "பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார் - ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய பேராளன்", "வான்வந்த தேவர்களும் மாலயனோடிந் திரனும் - கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய தான் வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு" என்றாற் போலும் திருமொழிகள், அடிகளது பணிவையும், இறைவன் தமக்குச் செய்த கருணையை நினைந்து கசிந்துருகும் உருக்கத்தினையும் தெள்ளத் தெளியப் புலப்படுத்துகின்றனவல்லவோ!.

"பொய்யனேன் நான் உண்டுடுத்திங் கிருப்பதானேன் போரேறே", "கண்கெட்ட ஊரேறாய் இங்குழல்வேனோ கொடியேன் உயிர்தான் உலவாதே", "ஊனார் புழுக்கூடிது காத்திங் கிருப்பதானேன் உடையானே", "முடையார் புழுக்கூடிதுகாத்திங் கிருப்பதாக முடித்தாயே", "மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல்போர்த்த - குப்பாயம்புக் கிருக்ககில்லேன் கூவிக் கொள்ளாய் கோவேயோ" என்றாற் போல வரும் எண்ணிறந்த தொடர்கள் அடி களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் உண்டாகிய வெறுப்பினை நன்கு புலப்படுத்தி நிற்கும்.

உடம்பொடு நின்று இவ்வுலகத்தில் வாழ்தல் அடிகட்குப் பொறுக்கவொண்ணாத பெருந்துன்பமாய்த் தோன்றினமையை, "தினைத்துணையேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே" என்பதனால் இனிது விளங்க அருளிச்செய்தார். இத்துன்பம் காரணமாக அடிகட்கு, `இறைவன் தம்மை முன்பு எளிவந்து ஆண்டானாயினும், பின்னர்க் கைவிட்டனனோ' என்பதோர் ஐயமும் தோன்றுவதா யிற்று.

அதனால், "தன்மை பிறரால் அறியாத தலைவா, பொல்லா நாயான - புன்மை யேனை ஆண்டு ஐயா புறமே போக விடுவாயோ - என்னை நோக்குவார் யாரே! என் நான் செய்கேன்! எம்பெருமான் - பொன்னே திகழுந் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே" என்று முறையிடுகின்றார்! `நீத்தல் விண்ணப்பம்' என்னும் பகுதி முழுவதும், `எம்பெருமானே, என்னை நீ கைவிடாது காத்தல் வேண்டும்' என்னும் முறையீடேயாகும்.

இவ்வாறு முறையிடினும், "நன்றே செய்வாய் பிழை செய் வாய் நானோ இதற்கு நாயகமே", `ஆயக் கடவேன் நானோதான் என்னதோ இங்கதிகாரம் - காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே", "மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும் - அண்ணா எண்ணக் கடவேனோ அடிமை சால அழகுடைத்தே" என்றாற்போலும் திருமொழிகளால், அடிகள் தம் முனைப்பின்றி இறைவன் அருள் வழிபட்டு நின்றமை நன்கு புலனாகும். இவையேயன்றித் திருமுறைகட்கு இயல்பாய சிவ பெருமானது முழுமுதற்றன்மையைச் சிறப்பித்துக் கூறும் பகுதிகள் அடிகள் திருமொழிகளில் முனைந்து காணப்படுவனவாம். திருச்சாழற் பகுதி, அதனைத் தடைவிடைகளால் எடுத்தோதி விளக்குவதும், திருவுந்தியார், அதனையே பொருளாகக் கொண்டெழுந்ததும், அச்சப் பத்து, சிவபெருமானைப் பொது நீக்கி நினையும் சிறப்பினை விளக்கு வதுமாம். ஏனைய பகுதிகளிலும் இஃது ஆங்காங்கு விரவி நிற்பதே.

ஏத்து வகையில் அருளிச்செய்த திருவாசகத்துள் செம் பொருளாகக் காணப்படும் அடிகளது அனுபவங்கள் யாவும், இலக்கிய வகையில் அருளிச்செய்த அவரது திருக்கோவையிலும் மறைபொரு ளாய் நிரம்பி நிற்கின்றன. இவ்வாறு அளவிட ஒண்ணா அருஞ்சிறப்பு வாய்ந்த இவ் எட்டாந் திருமுறைக்கு உரைகாண்பது எளியதொன்றோ! `அடிகளது திருமுறைக்குப் பொருள் யாது என வினவியவர்கட்கு, அம்பலக் கூத்தனையே காட்டி, "இவர்தாம் அதற்குப் பொருள்" என அடிகளே கூறினார்' என்பது ஒரு செவிவழிச் செய்தி உண்டு. சிவப் பிரகாச அடிகள் தமது நால்வர் நான்மணிமாலையில், "பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் - மூழ்கிய புனிதன் மொழிந்தவா சகமே - வாசகம்; அதற்கு வாச்சியம் - தூசகலல்குல் வேய்த் தோளிடத் தவனே" எனக் கூறினமை இதனை வலியுறுத்துகின்றது. இவ்வாற் றால், `திருவாசகத்திற்கு உரை எழுதுதல் கூடாது' என்றும் ஒரு காலத் திற் சொல்லப்பட்டு வந்தது. எனினும், தேவாரங்கட்குப் போலாது, `திருவாசகத்திற்கு இற்றைக்குச் சிறிது முற்பட்ட காலந் தொட்டே இன்று காறும் உரைகள் பல தோன்றி வந்துள்ளன. மிக முற்பட்ட காலத்தே திருக்கோவையார்க்கு இரண்டு உரைகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின. அவற்றுள் பின்னதாகிய பேராசிரியர் உரையே சிறப்பாக் கொண்டு போற்றப்பட்டு வருகின்றது. எனினும், ஓரோரிடங்கள் தவிரப் போராசிரியர் முன்னை உரையையே பின்பற்றி உரை வகுத்துள் ளார். முன்னை உரை மிகச் சுருங்கியிருப்பினும், ஆழ்ந்த நுட்பங்கள் பலவற்றை உடைய மெய்யுரையாகவே விளங்குகின்றது. பேராசிரிய ரும் அவ்வுரையை அங்ஙனமே மதித்துப் பல இடங்களில் தம் கருத்தை இரண்டாவது பொருளாகவே உரைத்துச் சென்றார். விரிவும், சீரிய செந்தமிழ் நடையுமே பேராசிரியர் உரையிற் காணப் படும் பெரும் பான்மையான சிறப்புக்கள்.

திருக்கோவையார் உரையைப்போலத் திருவாசக உரைகள் ஒரே வகையாய் அமையவில்லை. அவைகளுட் சில, திருவாசகத்தின் சில பகுதிகட்கேயன்றி, முழுதற்கும் எழுதப்படாதன. மேலும் இவ்வுரைகளுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போக்கில் அமைந் துள்ளது. `திருவாசகம் சிவானுபூதியின் சிறந்த விளைவாகலின், அதன்கண் உள்ள சொற்களுக்கு ஏனைய இலக்கியங்களில் உள்ள சொற்களுக்குப் பொருள் காண்பது போலப் பொருள் காணாது, தத்துவப் பொருளே காணுதல் வேண்டும் எனக் கொண்டு ஒன்று அனுபூதியுரைப்பதும், மற்றொன்றுயோகப் பொருள் கூறுவதும், பிறி தொன்று நாயக நாயகி பாவமாக ஐந்திணைப் பொருள் வழங்குவதும், வேறொன்று அனைத்து வகையானும் அகலங் கூறிச் செல்வதும் இங்ஙனம் அவை பல திறத்தனவாகக் காணப்படுகின்றன. எனினும் இவற்றுக்கிடையில், பாட்டுக்குப் பொருள்கொள்ளும் மரபு பிறழாது, சொற்பொருள், கருத்துப் பொருள், நோக்குடைப் பொருள் முதலியவற்றை உரைத்துச் செல்லும் உரையும் இல்லாமல் இல்லை. இந்நிலையில் எட்டாந் திருமுறைக்குக் குறிப்புரை எழுதும் பணி அடியேனுக்கு உளதாயிற்று.

தருமையாதீனம் 25 ஆவது குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள வர்கள் திருமுறைகள், குறிப்புரை ஆராய்ச்சியுரைகளுடன் முறையாக வெளிவரத் திருவுளம்பாலித்துள்ளார்கள். அவ்வகையில் முதல் ஏழு திருமுறைகளாகிய தேவாரத் திருமுறைகள் வெளிவந்து பலர்க்கும் பயன்பட்டு வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து எட்டாந் திருமுறை யாகிய திருவாசகம் திருக்கோவையார் திருமுறையும் அங்ஙனம் வெளிவருதற்பொருட்டு அதற்குக் குறிப்புரை எழுதும் வண்ணம் ஷ்ரீலஷ்ரீ மகாசந்நிதானத்தில் அடியேனுக்கு அருளாணை பிறந்தது.

ஆறாந் திருமுறை ஏழாந் திருமுறை உரைகளிற் போலவே அடியேன் இவ் எட்டாந்திருமுறைக் குறிப்புரையிலும், ஷ்ரீலஷ்ரீ குருமகா சந்நிதானத்தில் எழுந்த அருளாணையின்வழி நிற்குங் கடப் பாடுபற்றிப் புகுந்தேனல்லது: `இதற்கு ஏனைய உரைகளிலும் விழுமிய தோர் உரைகாண்பேன்' என்னும் கருத்தினாற் புகுந்தேனல்லேன். தேவாரத் திருமுறைகள் இரண்டற்கும், இத்திருவாசகம் திருக்கோவை யார்க்கும் என்னால் இயன்ற பணியைச் செய்தற்குக் கிடைத்த இவ் வாய்ப்பினைக் கிடைத்தற்கரிய பெரும் பேறாகவே நினைந்து மகிழும் மனமுடையேனாதலின், இவ் அரிய வாய்ப்பினை எனக்கு அளித் தருளிய ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமகாசந்நிதானம் அவர்களுடைய பொன்னார் திருவடிகளுக்கு எனது மனமொழி மெய்களாலாகிய வணக்கங்களைப் பன்முறையும் செலுத்திக் கொள்கின்றேன்.

மேற்கூறியவாறு இவ் எட்டாந் திருமுறைக்குப் பல உரைகள் முன்னரே வெளிவந்திருத்தலின், இன்றியமையாத சிலவற்றை மட்டில் விளக்கிச் சுருக்கமாக அமைத்தலையே குறிக்கோளாகக் கொண்டது இக்குறிப்புரை. எனினும், கருத்து வேறுபாட்டிற்கு உரியனவாய் இன்றியமையாது விரித்துரைக்கற்பாலன சில விரித்தே உரைக்கப் பட்டன. திருக்கோவையாரின் குறிப்புரையில் பெரும்பாலும் பேராசிரியர் உரையும், சிறுபான்மை பழைய உரையும் தழுவப் பட்டன. எனினும், அவ்விரண்டிற்கு வேறாகவும் சில விடங்களில் உரைகொள்ள நேர்ந்தது.

திருக்கோவையாரின் பாட்டு ஒவ்வொன்றிற்கும் கொளு அமைந்துள்ளது. ஆயினும் அவற்றைச் செய்தார் யாவர் என்பது விளங்கவில்லை. பழைய உரையாசிரியர், பாட்டிற்குப் போலவே அக்கொளுக்களுக்கு முழுவுரை எழுதியுள்ளார். பேராசிரியர், இன்றியமையாத இடங்களில் சில குறிப்புக்களைத் தந்துள்ளார். இவற்றால் அக்கொளுக்கள் இவ்வுரைகட்கு முற்பட்டவை எனத் துணியலாகும். அவை, திருவாசகப் பகுதி ஒவ்வொன்றிற்கும் குறிப் பாக ஒவ்வொரு தொடர் செய்யப்பட்டிருப்பது போலத் திருக்கோவை யாரின் துறைப்பாட்டு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கொளுச் செய்யப்பட்டது எனத் தோன்றுகின்றது. ஆயினும் இவ்விரு திறத்துக் குறிப்புக்களையும் தந்தோர் ஒருவரோ வேறு வேறானவரோ என்பது புலப்படவில்லை. திருக்கோவையாரின் கிளவிகளுக்கு அமைந்த நூற்பாக்கள் பழைய உரையாசிரியர் உரையுள் காணப்படவில்லை. அதனால் அவை பேராசிரியர் உரையுள் முதற்பாட்டுரைக்கண் காணப்படும் உரைப்பாயிர நூற்பாப் போலப் பேராசிரியராலே செய்யப்பட்டன எனக் கருத வேண்டியுள்ளது. கொளுக்களில் பல இடங்களில் முன்னைய இரண்டு உரைகளிலும் பெரிதும் வேறுபட்ட பாடங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பேராசிரியர் கொண்டவாறே இங்குக் காட்டப்பட்டன. நூற்பாக்களையும், கொளுக்களையும் இவ்வுரையில் எடுத்துக் காட்டியதன்றி, வேறொன்றும் கூறவில்லை. இவையனைத்தையும் அறிஞர் உலகம் உற்றுநோக்கி, அல்லன நீக்கி நல்லன கொள்ளும் என்றும் நம்புகின்றேன்.

ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணியவர்கள் திருமுறைகளில் உள்ள ஈடுபாட்டினால் திருமுறை வழிபாடு, திருமுறைவிழா, திருமுறை மாநாடு, திருமுறை வெளியீடு முதலியவற்றால் திருமுறைகளை எங்கும் பரவச் செய்து வருபவர்கள். அம்முறையில் இதுபொழுது எட்டாந்திருமுறையும் குறிப்புரை, ஆராய்ச்சியுரை முதலியவற்றுடன் வெளிவரத் திருவுளம் பற்றிய வண்ணம் தருமையாதீனத்தின் ஆதிபரமாசாரியர் ஷ்ரீ குருஞானசம்பந்தரது 1966 ஆம் ஆண்டுக் குருபூஜை விழா மலராக இது வெளிவருகின்றது. திருவாசகம் திருக்கோவையார் என்னும் இரண்டும் உரையுடன் ஒருங்கிணைந்து விளங்குவது இப்பதிப்பில் உள்ள ஒரு தனிச் சிறப்பாகும். ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமகாசந்நிதானத்தின் இப்பெருங்கருணைத் திறத்திற்குத் தமிழுலகமும் சைவ உலகமும் என்றும் குன்றாநன்றி பாராட்டும் கடப்பாடுடையன.

இவ்வுரையினை முழுவதும் நன்கு ஆராய்ந்து `உரைமாட்சி' எழுதியளித்தவர்கள், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி, முன்னாள் முதல்வரும், மாயூரம் அன்பநாதபுரம் வகையார் அறத்துறைக்கல்லூரி விரிவுரையாளரும் ஆகிய செஞ்சொற்கொண்டல் வித்துவான். திரு. சொ. சிங்காரவேலனார். M.A., Dip. Ling. அவர்கள். இவர்கள் தமது இயற்கை நுண்ணறிவாலும், இலக்கிய இலக்கணமொழிப் புலமையாலும் இவ்வுரைப் பொருளைத் திறனாய்வு முறையில் பலவகையாகப் பகுத்துக் காட்டி எடுத்துரைத்திருப்பது, இவ்வுரைக்கு மாட்சி தருவதோடன்றி, இத்திருமுறையினையும், உரையையும் ஆய்வோருக்குப் பெருந்துணை செய்வதாகவும் உள்ளது. இவ்வுரையையும், அதுகாரணமாக அடியேனையும் பலவகையாகப் பாராட்டியுள்ள அவர்களது பேரன்பிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்திருமுறைக்கு முதற்கண் இன்றியமையாது வேண்டப் படுவது, இத்திருமுறையின் அருளாசிரியராகிய திருவாதவூர் அடி களது அருள் வரலாறாகும். அவ்வரலாறு, சமயாசாரியர்களில் ஏனைய மூவரது வரலாறுபோல இல்லாமல், பல நூல்களைக் கொண்டு ஆய்ந் துணர வேண்டிய ஒன்றாகும். அதனை அம்முறையில் நன்கு ஆராய்ந்து அகச் சான்றுகளுடன் சிறப்புற எழுதித் தந்தவர்கள் தருமையாதீனப் பல்கலைக் கல்லூரிப் பொறுப்பு முதல்வர் திருநெறிச் செம்மல், நல்லிசைப் புலவர், வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்.

தித்திக்கும் மணிவார்த்தையாகிய இவ் எட்டாந்திருமுறையுள் அமைந்த இலக்கியச் சுவையைத் தனித்தெடுத்து விளக்கி வரைந்து ஓர் இனிய கட்டுரையை ஆக்கி அளித்தவர்கள் தருமையாதீனப் பல்கலைக் கல்லூரிப் பேராசிரியை வித்துவான். திருமதி. ப. நீலா அம்மையார் அவர்கள். இலக்கியங்களில் இன்பந்தருவன உவமையும் உருவகமு மாகிய அணிநலம். அவைகளை இத்திருமுறைப் பதிப்பிற்கு அணி யாகத் தொகுத்தும், திருவாசகம் திருக்கோவையார் உள்ளுறை, பாட்டு முதற்குறிப்பகராதிகளை அமைத்தும் தந்ததோடன்றி இத்திருமுறை அச்சாகும் காலத்தில் பிழை திருத்தம் செய்து உதவியவர்கள், தருமை யாதீனப் பல்கலைக் கல்லூரிப் பேராசிரியர் சிரோமணி. வித்துவான். திரு. வி. சபேசனார் அவர்கள். இப்புலவர் பெருமக்கள் மூவருக்கும் எனது உளமார்ந்த நன்றி தனித்தனியேவுரியதாகும்.

முன்னைத் திருமுறைகள் போலவே இவ் எட்டாந் திருமுறை யினையும் அழகு பெற அச்சிட்டுத் தந்த தருமபுரம் ஞானசம்பந்தம் அச்சகத்தார்க்கும் எனது நன்றி உரியதாகின்றது.

அடியார் உள்ளத்து அகலாதிருந்து அவர் கருத்து யாவும் முடியும் வண்ணம் முன்னின்று முடிக்குமாறே, இத் திருப்பணியினை யும் முன்னின்று முடித்தருளிய முடியா முதல்வனாகிய இறைவனது திருவருளை எண்ணியும், வாழ்த்தியும், இறைஞ்சியும் அமை கின்றேன். அத்திருவருள் ஏனைய திருமுறைகளையும் இங்ஙனமே இனிது வெளிவரச் செய்வதாகுக.

திருவாசகம் திருக்கோவையார், என்னும் இருபெரு நூல் களும் ஒருங்கிணைந்த இவ் எட்டாந்திருமுறைப் பதிப்பினைத் தமிழுலகமும், சைவ உலகமும் பெற்றுப் பயன்பெறுவதாக.

வாழ்க திருமுறை! வளர்க திருநெறி!

இங்ஙனம்,

தருமையாதீனப் ஷ்ரீலஷ்ரீகயிலைக் குருமணியவர்கள்

பல்கலைக்கல்லூரி, அருளாணையின் வண்ணம், தருமபுரம். அடியேன்

21-03-1968.

சி. அருணை வடிவேல்.