08 முதற் பகுதியின் அணிந்துரை
டாக்டர் திருமதி. இராதா தியாகராசன் அவர்கள்
(முன்னாள் துணை வேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்)
மதுரை.
தருமை ஆதீன அதிபர் ஷ்ரீலஷ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாணையின் வண்ணம், திருக்கோவையார் பேராசிரியர் உரையுடன் வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது.
எட்டாந் திருமுறையாகிய திருவாசகம், திருக்கோவையார் - நூல்களை ஒரு தொகுதியாகப் பெரும்புலவர் சி. அருணைவடிவேல் முதலியார், உரையுடன் முன்பு வெளியிட்ட ஆதீனத்தார், இப்பொழுது பழைய உரைகளுள் சிறப்பிடம் பெறும் போரசிரியர் உரையுடன் திருக்கோவையாரைத் தமிழுலகிற்கு நல்குவது பாராட்டற்குரியது.
பேராசிரியர் உரைக்கும் முற்படத் திருக்கோவையாருக்குப் பழையவுரையொன்று உண்டு. அதனைச் செய்த ஆசிரியர் பெயர் தெரிந்திலது. அதனினும் பன்மாண் சிறப்புடையதாக உரை வகுத்த பேராசிரியரும் தொல்காப்பியத்துக்கு உரைகண்ட பேராசிரியரும் ஒருவர்தாமா என்பது பற்றி அறிஞரிடையே ஐயம் நிகழ்கின்றது.
சொற்களுக்கும், உவமைகளுக்கும் நயம்படப் பொருள் விளக்கம் தரும் ஒப்புமை நோக்கி, இவ்விருவரும் ஒருவரே எனக் கருதக் கூடுமெனினும், இவர்கள் வேறுபட்டவர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவற்றுட் சில வருமாறு :
1)திருக்கோவையார் உரையில் பயன்படுத்தப்பெறும் தொல்காப்பிய மேற்கோள்களில் ஓரிடத்தும், இவர் தொல்காப்பிய உரையாசிரியர் என்னும் குறிப்பைக் காணவியலவில்லை.
2)திருக்கோவையாருரையின் சமயச் சார்பும், எதிர்ப்பும் தொல்காப்பிய உரையில் காணப்பெறவில்லை.
3)தொல்காப்பிய உரையாசிரியர் ஐந்திணைப் பெயர் பூவால் வந்தது என்பர். திருக்கோவையார் உரைகாரரோ, நிலத்தால் வந்தது என்பர்.
4)தொல்காப்பிய உரையாசிரியர் உவமை மட்டுமே கொள்வர். அதனையும் அணியென அழைப்பது பொருந்தாது என்னும் கொள்கையுடையவர். திருக்கோவையார் உரையாசிரியர் அலங்காரம் என்னும் பெயர் வழக்கிட்டு, சிலேடை, தற்குறிப்பேற்றம் முதலிய பலவற்றைச் சுட்டிக் காட்டுகின்றார்.1
பேராசிரியர் ஒருவரே ஆகுக, இருவர் ஆகுக, அவர் வரைந்துள்ள திருக்கோவையாருரை, ஓர் இலக்கிய மூல நூலே போலச் சுவை மிளிர்ந்து விளங்குகின்றது என்பதில் ஐயமின்று.
கோவை இலக்கியங்களுள் முதலில் தோன்றியது மாணிக்கவாசக அடிகள் அருளிய திருக்கோவையார். இதனைக் `கோவைத் திருவாசகம்' என்றும் வழங்குவர். வேண்டியார்க்கு வேண்டியாங்கு மணங் கமழும் மனோரஞ்சித மலர் போல, இந்நூல் பல்வேறு நோக்கத்துடன் பயில்வோர்க்கு அவ்வச் சிற்புக்களுடன் திகழ்வதாகும். அதுபற்றி இதனைப் பாராட்டிய சான்றோர்,
ஆரணங் காண்என்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின்
காரணங் காண்என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
ஏரணங் காண்என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. -ஆன்றோர் வாக்கு
என்று புகழ்ந்துரைத்தனர்.
`திருச்சிற்றம்பலக் கோவை' என்றும் வழங்கும் திருக் கோவையார், உயர்திணைப் பன்மை ஈறு புணர்த்துக் கூறப்பெறுவதே இதன் சிறப்பை உணர்த்தும். இஃது அகப்பொருள் நூலாயினும், மெய்ந்நூற் கருத்துக்களை - சைவநெறி சார்ந்த உண்மைகளை - கற்பார் உளங்கொள உரைக்கும் பாங்கு வியந்து போற்றற்குரியது.
காண்டகு சிறப்பின் மாண்பெரு நூலாகிய இதற்குப் பேராசிரியர் இட்ட உரை, பொற்குடத்திற்கு நவமணி இழைத்த நன்னர்ப் பதக்கம் சூட்டியது போல் விளங்கிக் கற்பார்க்குக் கழிபேருவகை தருகின்றது.
இவ்வுரையாசிரியர் சொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் நயம்பட உரைக்கும் பொருள் நலம் நம் நெஞ்சத்தை ஈர்க்கின்றது. சான்றாக, விதி என்பதைச் `செய்யப்படும் வினையினது நியதி' என்பார். வஞ்சித்தல் என்பது மறுமொழியை வெளிப்படையாகக் கொடாது, பிறிதொன்றாகக் கூறுதல் என்பார்.
"பிழைகொண்டு ஒருவிக் கெடாது அன்பு செய்யின்
பிறவியென்னும்
முழைகொண்டு ஒருவன்செல் லாமைநின்று அம்பலத்
தாடும் முன்னோன்" (தி.8 கோவை பா.65)
என வரும் அடிகளின் திருவாக்கில் முதலடியை `ஒருவன் அன்பு செய்யின், (அவனது) பிழை கொண்டு, ஒருவி, கெடாது' எனக் கொண்டு கூட்டி, `அடைந்தார் பிழைப்பின், தலையாயினார் பிழையை உட்கொண்டு அமைதலும், இடையாயினார் அவரைத் துறத்தலும், கடையாயினார் அவரைக் கெடுத்தலும் உலகத்து உண்மையின், அம்மூவகையும் செய்யாது எனினும் அமையும்', என்று சிறப்புரை வழங்குவார் பேராசிரியர்.
"உய்த்துணர்வோர்" என்னும் தொடருக்கு, `வெளிப்படாத பொருளை ஏதுக்களால் உணர்வோர்' என்று விளக்கம் தருவார்.
உவமைக்கு உவமை கூறல் பிழையென்பர் தொல்லாசிரியர். "மதிக்கமலம் எழில் தந்தெனப் பொழில் ஆயத்துச் சேர்க" (பா.24) என்னும் திருவாக்கில், `தலைவி தோழியருடன் சேர்தல், சந்திரன் விண்மீன் தொகுதியில் சேர்வதைப் போன்றது' என உவமை கூறி, சந்திரனை `மதிக்கமலம்' எனத் தாமரையுடன் உவமை கூறுகின்றார். இஃது உவமைக்கு உவமை கூறியதன்று என மேற்கொண்ட பேராசிரியர் அதற்கு,
"கமலத்தோடு மதிக்கு ஒத்த பண்பு வெண்மையும் வடிவும் பொலிவும், மதியோடு தலைமகட்கு ஒத்த பண்பு கட்கு இனிமையும், சுற்றத்திடை அதனின் மிக்குப் பொலிதலும். இவ்வாறு ஒத்த பண்பு வேறுபடுதலான் உவமைக்கு உவமை யாகாமை அறிந்து கொள்க" என்று ஏது காட்டுகின்றார்.
இவ்வாறு நயம் பல வயங்க, நலம் பல புலனாக உரை வழங்கி, அகப்பொருள் திருமுறையாம் திருக்கோவையாரின் சீர்பரவும் பேராசிரியர் உரையைத் தமிழ் அன்பர்கள் கற்று இன்புறுமாறு, செவ்விதிற் பதிப்பித்து வெளியிடும் தருமை ஆதீனத்திற்குத் தமிழகம் நன்றி பாராட்டும் கடமை உடையதாகும்.
இத்தமிழ்ப் பணிக்கு ஏதுவாக அருளாணை வழங்கிய ஆதீனகர்த்தர் ஷ்ரீலஷ்ரீ சுவாமிகளுக்கு வணக்கமும் நன்றியும் தெரிவித்துக் கொள்கின்றேன்.