08 திருக்கோவையார் – ஆராய்ச்சியுரை

சேக்கிழார் அடிப்பொடி தி.ந. இராமச்சந்திரன்,

தலைவர், அனைத்துலகச் சைவசித்தாந்த ஆராய்ச்சி

நிலையம், தருமபுரம்.

ஆளுடைய அடிகளாகிய மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவை ஆகிய இவ்விரு ஞானப் பனுவல்களும் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பெற்றிருக் கின்றன. கோவை என்றால் திருச்சிற்றம்பலக் கோவையே கோவை. ஆகவே இந்நூல் கோவை என்றும் கோவையார் என்றும் வழங்கி வந்தது. திரு என்ற அடைமொழியோடு கூடி இந்நூல் திருக்கோவையார் ஆயிற்று. திருத்தொண்டர் புராணம், பெரிய புராணமாயினதை ஈண்டு நினைவு கூர்தல் பொருத்தமுடையது.

திருக்கோவையாரை மணிவாசகப் பெருமான் அருளவில்லை என்று பெரியவர் மு. அருணாசலம் உள்ளிட்ட ஒரு சிலர் கூறுவர். இது பிழையுடைய கருத்து. முப்பெரும் புலவர்கள் - இவர்கள் அருளாளர்களும் ஆவர் - மாணிக்கவாசகரே திருச்சிற்றம்பலக் கோவையை அருளியவர் என்று அறைந்துள்ளனர்.

இம்மூவரில் முதல்வர் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள கோயில் திருப்பண்ணியர் விருத்தம் எனப் பெயரிய பனுவலின் ஆசிரியராகிய நம்பியாண்டார் நம்பிகள் ஆவர். இப்பனுவலின் 58ஆம் பாடல் பின்வருமாறு:

வருவா சகத்தினில் முற்றுணர்ந்

தோனைவளர் தில்லைமன்னைத்

திருவாத வூர்ச்சிவ பாத்தியன்

செய்திருச் சிற்றம்பலப்

பொருளார் தருதிருக் கோவைகண்

டேயுமற் றப்பொருளைத்

தெருளாத வுள்ளத் தவர்கவி

பாடிச் சிரிப்பிப்பரே. (தி.11 திருப்பண்ணியர் விருத்தம் பா.58)

இவ்வொரு பாடல்மூலம் திருக்கோவையாரைப் பாடியவர் மாணிக்கவாசகர் என்றும், அவர்தம் பிள்ளைத் திருநாமம் சிவபாத்தியன் என்றும் நம்பியாண்டார் நம்பிகள் உலகத்திற்கு அறிவித்துள்ளார்.

இரண்டாமவர், திருக்கோவையாருக்கு உரை வரைந்த பேராசிரியர் ஆவார். இவர் கோவையாரின் முதற்பாடலுக்கு உரை வரையத் தொடங்கி, எடுத்த எடுப்பிலேயே, "திருவாதவூரடிகள் இத்திருக்கோவையை என்னுதலி யெடுத்துக் கொண்டாரோ வெனின்" என்று வினவி, மேலும் தம் கடாவிற்கு விடை வழங்கு முகத்தான்,

"திருவாத வூர்மகிழ் செழுமறை முனிவர்

ஐம்பொறி கையிகந் தறிவா யறியாச்

செம்புலச் செல்வ ராயினர் ஆதலின்

அறிவனூற் பொருளு முலகநூல் வழக்குமென

இருபொருளு நுதலி யெடுத்துக் கொண்டனர்"

மூன்றாமவர் குமரகுருபர சுவாமிகள் ஆவார். இப்பெருமான் தாம் அருளிய சிதம்பர மும்மணிக் கோவை 23ஆம் செய்யுளில், திருக்கோவையாரை,

"ஐந்திணை யுறுப்பில் நாற்பொருள் பயக்கும்

காமஞ் சான்ற ஞானப் பனுவல்"

1997இல் தருமை ஆதீனம் வெளியிட்ட திருவாசகத்திற்கு ஓர் ஆராய்ச்சியுரை வரையும் பேறு எளியேனுக்குக் கிட்டியது. இவ்வுரையில் மணிவாசகரே திருக்கோவையாரின் ஆசிரியப் பெருமான் என்று யான் காட்டியிருக்கிறேன்.

பதிப்பு வரலாறு

இனி, திருக்கோவையார் பதிப்பு வரலாறு பற்றிச் சில செய்திகளும், மேலும் சில தொடர்புடைய செய்திகளும் காண்போம்.

முதன் முதலில் அச்சில் வந்த திருமுறை திருவாசகமே. அதை அடுத்து வந்த நூல் திருச்சிற்றம்பலக் கோவையாரே. திருவாசகம் 1835இலும், திருக்கோவையார் 1841இலும் வெளிவந்தன. கோவையாரின் மூலம் கொளுக்களுடன் பிலவ வருடம் ஆடி மாதம் வெளிவந்தது. அதன் முகப்புப் பக்கத்தின் படிவம் கீழே தரப்படுகிறது.

இந்நூலின் பதிப்பாசிரியர் புதுவை நயநப்ப முதலியார் (நயநப்ப முதலியார் என்றால் கண்ணப்ப முதலியார் என்று பொருள். மாணிக்கவாசகரை வெள்ளியம்பலத் தம்பிரான் அரதனவாக்கிய அடிகள் என்று குறிப்பிப்பர்.)

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் முதன் முதலில் (1841-1842) சென்னைக்கு வந்தார். அக்காலத்தில் சென்னைக் கல்விச் சங்கத்தின் புலவர்களுள் ஒருவராக பு. நயநப்ப முதலியாரும் பணிபுரிந்து வந்தனர். இது பற்றிய குறிப்பு, தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் வரைந்த திரிசிரபுரம் ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் (பாகம் -1) என்ற நூலில் பக்கம் 56இல் காணக் கிடைக்கிறது.

பு. நயநப்ப முதலியார் புதுவை நயநப்ப முதலியார் என்பவரே. அக்காலத்தில் ஒருவர் பெயருக்கு முன்சேர்க்கப்படும் எழுத்து அப்பெயருக்கு உரியாரின் ஊரைக்குறிக்கும் முதல் எழுத்தாகும். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சிதம்பரம்பிள்ளையின் மகனாவார். அவருடைய ஊர் திரிசிரபுரம். ஆகவே அவர் தி.மீனாட்சிசுந்தரம் என்றே கையெழுத்துச் செய்வார். (மேற்படி நூல், பாகம் இரண்டு, பக்கங்கள் 292, 294 காண்க.)

முதன் முதலில் திருக்கோவையாரை உரையோடு பதிப்பித்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரே. நூன்முகப்பில், "மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினிய ருரையோடு இராமநாதபுர ஜமீந்தாரவர்களின் மாநேஜராகிய மஹராஜ ராஜஷ்ரீ பொன்னுச்சாமி தேவர் அவர்கள் கேட்டுக் கொண்டபடி யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரால் பலபிரதி பேதங்களைக் கொண்டு பரிசோதித்து, சென்னப் பட்டணம் முத்தமிழ் விளக்க வச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது" என்று அச்சிடப்பட்டிருக்கிறது. வெளிவந்த ஆண்டு ரௌத்திரி என்றும், மாதம் ஐப்பசி என்றும் முகப்பில் குறிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, இப்பதிப்பு வெளிவந்த ஆண்டு 1860 ஆகும். இவ்வாண்டில் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதய்யருக்கு வயது ஐந்தே.

பேராசிரியர் உரையே நச்சினார்க்கினியர் உரை என்று ஒரு காலகட்டத்தில் கருதப்பட்டது. நாவலர் வெளியிட்ட கோவை பல பதிப்புக்கள் பெற்றது. நச்சினார்க்கினியரே உரையாசிரியர் என்ற குழப்பம் நாவலர் நூலின் மூன்றாம் பதிப்பு வரை நீடித்தது.

அன்பர் தி. வே. சீனிவாசனிடமிருந்து கிடைத்த, பிரமாதி ஆண்டு ஆடித்திங்கள் வெளிவந்த மூன்றாம் பதிப்பைப் பார்வையிட்டபோது, அப்பதிப்பின் முகப்புப் பக்கத்தில் நச்சினார்க்கினியர் பெயர் நீக்கப்பட்டு, நூல்முகப்பின் பின்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கும் சிறிய தாளில் "இவ்வுரையைப் பிற்காலத்து அறிஞர்கள் பேராசிரியர தென்பர், முற்காலத்து அறிஞர் பலர் நச்சினார்க்கினியரென்றனர். தஞ்சைவாணன் கோவையுரைகாரர் சேனாவரையரதென்றனர்" என்று அச்சடிக்கப்பட்டிருக்கிறது

நான்காம் பதிப்பை வெளிக் கொணர்ந்தவர் விசுவநாதபிள்ளை ஆவார். இப்பதிப்பு (1922) துந்துபி ஆண்டு புரட்டாசி மாதம் வெளிவந்தது. இதன் முகப்பிலிருந்து நச்சினார்க்கினியர் பெயர் நீக்கப்பட்டு, நூல்முகப்பின் பின்புறத்தில் ஒட்டப்பட்டிருக்கும் சிறிய தாளில் "இவ்வுரையைப் பிற்காலத்து அறிஞர்கள் பேராசிரியரதென்பர், முற்காலத்து அறிஞர் பலர் நச்சினார்க்கினியரதென்றனர். தஞ்சைவாணன் கோவையுரைகாரர் சேனாவரையரதென்றனர்" என்று அச்சடிக்கப்பட்டிருக்கிறது.

இங்கு ஒரு முக்கிய செய்தி கூறப்படல் வேண்டும். நான்காம் பதிப்பின் சில படிகள் அச்சாகிவிட்ட நிலையில் அச்சடிப்பதை நிறுத்தி விட்டு, முகப்புப் பக்கத்தின் பின்பக்கத்தில் உரைபற்றி மேலே கூறப்பட்ட செய்தியை ஏற்றியுள்ளனர். துண்டுத் தாளில் அச்சிட்டு ஒட்ட வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டு அச்சுப்பணி தொடர்ந்திருக்கிறது. அச்சாகிவிட்ட படிகளில் மாத்திரம் ஒட்டுவேலை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

நூலின் ஐந்தாம் பதிப்பு (1932) ஆங்கிரச ஆண்டு ஆவணி மாதம் வெளி வந்தது. இதை வெளியிட்டவர்கள் சிதம்பர சைவப் பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகர்கள் ஆவர். சென்னை வித்தியானுபாலன யந்திர சாலையில் இப்பதிப்பு அச்சிடப்பட்டது. இப்பதிப்பிலும், வீ. பொன்னுஸ்வாமி அவர்கள் (1954) ஜய ஆண்டு, ஆவணி மாதத்தில் வெளியிட்ட ஆறாம் பதிப்பிலும் உரைபற்றிய விவரம் 4ஆம் பதிப்பில் தரப்பட்டபடியே நூல் முகப்பின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. நூலின் ஏழாம் பதிப்பு (1957) துன்முகி ஆண்டு, மாசி மாதம் வெளி வந்தது. பதிப்பாசிரியர் ச. பொன்னுசுவாமி அவர்கள்.

ச. பொன்னம்பல பிள்ளையவர்களின் மாணாக்கர் சி.தம்பையா பிள்ளை (1894) ஜய ஆண்டு ஐப்பசி மாதம் திருச்சிற்றம்பலக் கோவையாருண்மை என்ற நூலை வெளியிட்டார். இப்பதிப்புப் பற்றிய குறிப்புக்களைப் பிரிட்டிஷ் நூலகத் தமிழ்நூல் அட்டவணையில் காணலாம்.

இந்நூல் வெளிவரச் சென்னை வித்துவான் ம. தணிகாசல முதலியார் அவர்களும், சிந்தாதிரிப்பேட்டை கொ. சண்முகசுந்தர முதலியார் அவர்களும் தங்களிடத்தில் இருந்த பிரதிகளைத் தந்து உபகரித்தனர் என்ற குறிப்புக் காணப்படுகிறது. இந்நூலின் கண் ஒவ்வொரு பாடலுக்கும் முன்பாகப் பேரின்பக் கிளவி என்ற கொளுவும், சிற்றின்பக் கிளவி என்ற கொளுவும் தரப்பட்டுள்ளன. நூலை இங்ஙனம் சுவடியில் அமைத்து வைத்தவர் இன்னார் என்பது தெரியவில்லை என்று ஒரு குறிப்பும் இந்நூலுள் உள்ளது.

சிற்றின்பக் கிளவிக்குப் பேராசிரியர் உரை வரைந்திருக்கிறார்.

திருவாசகத்திற்குச் சீகாழித் தாண்டவராயர் என்பார் இயற்றிய திருவாசக அநுபூதி உரை என்னும் திருவாசக வியாக்கியானம் (முதற் பகுதி) 1954இல் வெளிவந்தது. இந்நூலின் பதிப்பாசிரியர் ரா. விசுவநாதையர், தமிழ்த் தாத்தாவின் மாணாக்கர் ஆவார். தாண்டவராயர் 1834இல் தம் வியாக்கியானத்தை அரங்கேற்றியதாக நூலின் சிறப்புப் பாயிரம் கூறுகிறது.

இவ்வியாக்கியானத்தில் "துறையன்பு முதிர்ச்சி" என்று ஒரு பகுதி காணப்படுகிறது. இப்பகுதி "திருச்சிற்றம்பலக் கோவையார் பேரின்பத்துறையனுபூதி உரைக் குறிப்பு விளக்கம்" என்றும் வருணிக்கப்படுகிறது. இதற்கும், திருக்கோவையார் உண்மை என்னும் நூற்பகுதிக்கும் சில வேற்றுமைகள் உள. இவர்தாம் நாயகி பரம்பொருள் என்று முதன்முதலில் கூறியவர்போலும். இவர் கூற்றுப் பின்வருமாறு: "பத்தி முத்திக்கு உவமை பெத்தம், பேரின்பத்துக்கு உவமை சிற்றின்பம் என வைத்து உடம்பையுடைய யோகிகள் பாலுள்ள சிற்றின்பம் அடங்கத் தன் பேரின்பமாக, பேரின்பமான பிரமக்கிழத்தியோடு ஓரின்பமான அன்பே சிவமாய், அருளே காரணமாக, சுத்தாவத்தையே நிலமாக, நாயகி பரம்பொருளாக, நாயகன் பக்குவான்மாவாக, தோழி திருவருளாக, தோழன் ஆன்ம போதமாக, நற்றாய் பரையாக, திரோதாயி செவிலித்தாயாக, மேலும் நாயகன் கூற்றெல்லாம் நாயகி கூற்றாகவும், நாயகி கூற்றெல்லாம் நாயகன் கூற்றாகவும் நிகழ்ந்துவரும் அவை அநுபூதியாற் காண்க.

"நாயகியைச் சிற்றம்பலம்போல வருணிக்கையால் நாயகி பரம்பொருளாயிற்று. பெறுவார் நாயகனும், பேறு நாயகியுமாக இரசமும் நாவும் போல இருத்தலானும், கொத்தும் துறையும் கருப்பொருளும் உரிப்பொருளும் இடமும் எல்லாம் அருளின்ப மெனக் கொள்க."
திருச்சிற்றம்பலக் கோவையார் உண்மை என்ற நூலைச் சுவாமிநாத பண்டிதரும் பதிப்பித்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.

"இதனை அச்சிடுங்காலத்துத் `திருக்கோவையார் உண்மை' என்னும் சுவாமிநாத பண்டிதர் அவர்கள் பதிப்பும், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் பதிப்பும் மிகவும் துணை செய்தன. இவற்றுள் சிவக்கொழுந்து தேசிகர் பதிப்பால் கொளுவின் உண்மைப் பாடங்கள் துணியப் பெற்றன." இங்ஙனம் ச.தண்டபாணி தேசிகர் கூறியிருப்பதால்3 சிவக்கொழுந்து தேசிகரும் ஒரு பதிப்பை வெளிக்கொணர்ந்தார் என்பதும், திருச்சிற்றம்பலக் கோவையார் உண்மை என்பது திருக்கோவையார் உண்மை என்றும் வழங்கி வந்தது என்றும் அறியலாம்.

1897இல் பேராசிரியர் உரையோடும், விசாகப் பெருமாள் ஐயர் வரைந்த விளக்கத்தோடும் திருக்கோவையார் சென்னையில் வெளிவந்ததை பிரிட்டிஷ் நூலகத் தமிழ்நூல் அட்டவணை அறிவிக்கின்றது.

திருச்சிற்றம்பலக் கோவையார் உண்மையில் இருபத்து ஐந்து கொத்துக்களுக்கான துறைவகைச் சூத்திரங்கள் காணப்படுகின்றன. தாண்டவராயர் உரையிலும் இவை காணப்படுகின்றன. இவற்றின் சாரம் விசாகப் பெருமாள் ஐயரால் வரையப் பெற்றிருக்கிறது4. அவை பின்வருமாறு (1) சற்குரு தரிசனம், (2) ஆன்மபோத தரிசனம், (3) அன்பால் ஆனந்தம் பெற்று அநுபவித்தல் (4) அருள் சிவங்கலந்து உயிர் தரிசனம் செய்தல் (5) சிவமுயிர் விரவியதருளே தேறல் (6) சிவமுயிர் கூட அருள் வினாவுதல் (7) சிவமுயிர் கலத்தல் அருள் பணியாற் காண்டல் (8) அருள் உயிர்ப் பக்குவம் அறிந்து வியத்தல் (9) சிவமே கருணை என்று அருள் நோக்கல் (10) உயிர் இன்புறவே அருளோடு உரைத்தல் (11) உயிர்ப்பறிவின்புக் கருள் புகன்றிடுதல் (12) கிடையாவின்பத் தருமை காட்டல் (13) இயற்கை போல் சிவத்தொடு இயல் உறக் கூட்டல் (14) அருளே சிவத்தோடாக்கியவ் வருமை தெரியக் கருணை பலவும் எடுத்துக் காட்டல் (15) சிவனது கருணையருள் தெரிவித்தல் (16) அருள் உயிர்க்கு அருமை அறிய உரைத்தலும் ஆனந்தத்திடை அழுந்துவித்தலும் (17) சிவனது கருணை தெரிய உரைத்தவ் இன்பம் பெற அருள் எடுத்தியம்பியது (18) கருணை அருள் திரோதை பரையின் புணர்தல் (19) உயிர் சிவமணம் பெற்றுண்மையாதல் (20) இது ஓதற்பிரிவு எனவும்படும் - பூரண இன்பத் திறம் பாராட்டல் (21) இன்பத் திறத்தை எங்குங் காண்டல் (22) இது பகை தனி வினைப் பிரிவு எனவும் படும். இன்பகனமன்றி வேறிலை உலகு என்றல் (23) இது வேந்தற்குற்றுழி பிரிவு எனவும் படும்(24); தானதுவது தானாகுந் தன்மை (25) அறிவு பூரணமாகி இன்பாதல்.

திருக்கோவையாரை அறிய விரும்புவோர் தாண்டவராயர் உரையை நன்கு பயிலல் வேண்டும். 400 பாடல்களுக்கும் சைவ சித்தாந்த ரீதியாக அவர் குறிப்புரை தந்திருக்கிறார்

திருவாவடுதுறை ஆதீன குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் ஆக்ஞையின்படி திரிசொற்பொருள் விளக்கத்துடன் சார்வரி ஆண்டு ஆவணி மாதம் (1900) திருமயிலை செந்தில்வேலு முதலியார் அவர்கள், திருவாசகம் - திருக்கோவையார் முதலிய நான்கு திருமுறைகளை ஒரு புத்தகமாக வெளியிட்டார். இது சென்னை, கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலில் சில வண்ணப் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

1917ஆம் ஆண்டு வெள்ளையர் நிறுவனமாகிய லாங்மென்ஸ் க்ரீன் ஆண்டு கம்பெனியார் (சென்னை) திருக்கோவையாரை மிக நல்லமுறையில் வெளியிட்டார்கள். இதன் முகப்புப் பக்கத்தில் "பேராசிரியர் உரையைத் தழுவி எழுதப்பட்ட துறை விளக்கம் முதலியவற்றோடு கூடிய சுத்தப் பதிப்பு" என்று அச்சிடப்பட்டிருக்கிறது. துறை விளக்கம் அனுபந்தமாக இணைக்கப்பட்டிருக்கிறது. 400 பாடல்களுக்கான விளக்கம் 94 பக்கங்களில் தரப்பட்டிருக்கிறது. இந்நூலில் கிளவிக் கொத்தும் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்நூலின் பதிப்பாசிரியர் ராவ்பகதூர் வீ.பவானந்தம் பிள்ளை ஆவார். திருக்கோவையாருக்கு உரை வரைந்தவர் நச்சினார்க்கினியர் அல்லர் என்றும், உரையாசிரியர் பேராசிரியர் என்றும், அதற்கான ஆதாரங்கள் பிரயோ விவேக உரையில் பரக்கக் காணப்படுகின்றன என்றும் பிள்ளை அவர்கள் காட்டியிருக்கிறார்கள். கா.நமசிவாய முதலியார் அவர்கள் திருவாசகம், திருக்கோவையார் ஆகிய இரு நூல்களையும் ஒரு புத்தகமாக, 1927இல் சென்னையில் வெளியிட்டார்.

1939-இல் (பிரமாதி ஆண்டு, மார்கழி மாதம்) சைவ சித்தாந்த மகாசமாஜம், சோமசுந்தரம் செட்டியார் வரைந்த அரும்பொருள் விளக்க உரையோடு திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகிய நூல்களை ஒரு புத்தகமாக வெளியிட்டது. தனிப்பிரதி விலை ஒரு ரூபாய் இரண்டணா என்றும், 8 பிரதிகள் விலை ஏழு ரூபாய் நாலணா என்றும் இதில் குறிக்கப்பட்டிருக்கின்றன.

இதே ஆண்டு திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகிய மூன்று நூல்களும் ஒரு புத்தகமாக சோமசுந்தரம் செட்டியார் வரைந்த அரும்பொருள் விளக்க உரையோடு வெளிவந்தது. தனிப்பிரதி விலை ஒன்பது அணா, 10 பிரதிகள் விலை ரூபாய் நான்கும், அணாக்கள் பத்துமாம்.

பேராசிரியர் உரை தவிர வேறு சில உரைகளும் திருக்கோவையாருக்கு ஏற்பட்டிருந்தன; எனினும் 1951ஆம் ஆண்டு வரை வேறு ஓர் உரை வெளிவரவே இல்லை. இச்சூழ்நிலையில் தஞ்சை மகாராஜா ஷ்ரீ சரபோஜி சரசுவதி மகால் நூல் நிலையத்தில் வேறு ஓர் உரை அடங்கிய சுவடியின் இருப்பு உணரப்பட்டது. இந்நூல் நிலையத்தார் அதனை அச்சிட முன் வந்தனர். பதிப்பாசிரியர் பணியை ரா.விசுவநாத ஐயர் மேற் கொண்டார். இவ்வுரையில், பேராசிரியர் உரையில் காணப்பட்ட விளக்கமோ, இலக்கண முடிபோ இல்லை. எனினும், போற்றத்தக்க நயங்கள் பல இதில் அமைந்திருக்கின்றன. பேராசிரியர் காட்டிய பாடபேதங்கள் சிலவற்றை இவ்வுரை கொண்டிருந்தது. வடமொழிக் கலப்பும், இதில் சற்றே கூடுதலாகக் காணப்பட்டது. இவ்வுரையைச் செப்பம் செய்து நல்ல தமிழில் பேராசிரியர் தம் உரையை அமைத்திருக்கலாம் என்று ஒரு தோற்றம் எழுந்தது. ஆகவே, காலத்தால் பேராசிரியர் உரைக்கும் முற்பட்டது இவ்வுரை என்று கருதப்பட்டது. இவ்வுரை பல இடங்களில் பதவுரையாகவும், சில இடங்களில் பொழிப்புரையாகவும் வரையப்பட்டிருந்தது. தஞ்சைச் சுவடியில் 281ஆவது பாடலுக்குப் பின் முன்வந்த உரை அழிந்துபட்டிருந்த படியால், எஞ்சிய பகுதிக்கான உரை பேராசிரியர் உரையைத் தழுவிய பொழிப்பையே கொண்டிருந்தது.

இச்சூழலில், தற்செயலாய் உ.வே.சா. நூல் நிலையத்தில், விடுபட்ட பகுதிகளுக்குள்ள ஒரு சுவடி கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுவடியின் உதவியால், பழைய உரையை ஒருவாறு பதிப்பிக்க (பழைய உரையுடன்) என்ற தலைப்பில் 1951இல் இந்நூல் சரசுவதி மஹால் நூல் நிலையத்தாரால் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு 11 பக்க அளவில் ஓர் ஆங்கில முன்னுரை உண்டு, இதில் கிளவிக் கொத்துக்கான ஆங்கில விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இந்நூலின் அடிக்குறிப்புக்களில் தரப்பட்டிருக்கும் செய்திகள் மிகவும் பயனுள்ளவை.

1952இல் திருக்கோவையாரைப் பேராசிரியர் உரையோடு திருப்பனந்தாள் ஷ்ரீகாசிமடம் வெளியிட்டது. 1960இல் ஷ்ரீகாசிமடம் திருக்கோவையாரைப் பேராசிரியர் உரையோடும், பழைய உரையோடும் வெளிக் கொணர்ந்தது. இது மீளவும் 1972இல் ஒரு பதிப்புப் பெற்றது. மூல நூலை மட்டும் 1991இல் காசிமடம் பதிப்பித்தது. இதில் "மூன்றாம் பதிப்பு" என்று ஒரு குறிப்புக் காணப்படுகிறது.

1965இல் திருக்கோவையார் உண்மை விளக்கம் என்ற நூல் திருவாவடுதுறை ஆதீன வெளியீடாகத் தமிழ் உலகிற்கு வழங்கப்பட்டது. பேரின்பக் கிளவிகளுக்கான விளக்கம் இந்நூலில் தரப்பட்டிருக்கிறது. இந்நூலின் உரையாசிரியர் ச.தண்டபாணி தேசிகர் அவர்கள். காழித் தாண்டவராயர் கருத்தை நன்கு விளக்கும் வகையில் அமைந்த நூலிது. தேசிகர் அவர்கள், "திருவாசகம், மணிவாசகர் தாம் பெண்மையினின்று பேசிய பேச்சுக்கள், அநுபவ நிலையிலே நுகர்வான் உயிராகிய தானும், நுகரப்படுகின்ற பொருளாகிய சிவமும் பேரின்பமாக இருக்கும் பெற்றியைத் திருவுளத்து எண்ணிஉயிராகிய தான் ஆணாகச் சிவன் பெண்ணாகச் சிந்திக்க வைக்கின்ற அநுபவத் திருநூல் திருக்கோவையார்" என்று நாட்டுகிறார்.

1966இல் எட்டாந்திருமுறை முழுவதும் ஒரு புத்தமாகத் தருமையாதீனத்தால் வெளியிடப்பட்டது. நூல்களுக்குக் குறிப்புரை வரைந்தவர் சி.அருணைவடிவேல் முதலியார் அவர்கள். இவர் பெரும்பாலும் பேராசிரியர் உரையையும், சிறுபான்மை பழைய உரையையும் தழுவியே குறிப்புரை வரைந்துள்ளார். அங்கங்கும் சைவ சித்தாந்தக் கருத்துக்களைக் காட்டியபடியே இவ்வுரை செல்லுகிறது. திருக்கோவையாருக்கான கொளுக்கள் கோவையாரின் உரைகளுக்கு முற்பட்ட காலத்தில் தோன்றியவை என்பதே முதலியார் அவர்களின் கருத்தாகும். திருக்கோவையாரின் கிளவிகளுக்கு அமைந்த நூற்பாக்கள் பழைய உரையாசிரியர் உரையுள் காணப்படவில்லை. ஆகவே, அவை பேராசிரியர் உரையுள் முதற் பாட்டுரைக்கண் காணப்படும் உரைப்பாயிர நூற்பாப் போலப் பேராசிரியராலே செய்யப்பட்டன என்று கருதுகிறார் முதலியார். மேலும் அவர் கொளுக்களில் பல இடங்களில் முன்னைய இரண்டு உரைகளிலும் பெரிதும் வேறுபட்ட பாடங்கள் காணப்படுகின்றன என்றும் கூறுகிறார்.

சென்னை வர்த்தமானன் பதிப்பகத்தினர், "மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருக்கோவையார்" என்ற நூலை 1995இல் வெளியிட்டனர், இதன் உரையாசிரியர் எம். நாராயண வேலுப்பிள்ளை என்பவராவார். இவர் ஓர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1998இல் வெளிவந்தது.

மணிவாசகர் திருப்பெருந்துறையில் சிவபோதம் உற்றார். சுவாமிகளே "திருவார் பெருந்துறைச் செல்வனாகிக், கருவார் சோதியிற் கரந்த கள்ளமும்" என்று கீர்த்தித் திருவகவலிலும், "உருகு தலைச்சென்ற வுள்ளத்து மம்பலத் தும்மொளியே பெருகுதலைச் சென்று நின்றோன் பெருந்துறை" என்று திருக்கோவையார் பாடல் 104இலும் அருளியிருக்கிறார். ஆகவே, அடிகள் வரலாற்றோடு திருப்பெருந்துறை பிரிக்க முடியாதபடி அத்துவிதப்பட்டிருப்பதை அருளாளர்கள் நன்கு உணர்வர். இவ்வூர் பற்றியும், இதன் வரலாறு பற்றியும், தெரிவிக்கும் புராணங்கள் வடமொழியில், ஷ்ரீ ஆதீனகலாச மஹாத்மியம், பிருஹத் தீர்த்த மஹாத்மியம், அஷ்டாத்தியாயி என மூன்று உள்ளன என்பர்.

மேலும், இத்தலத்திற்குத் தமிழில் மூன்று புராணங்களும், திருப்பெருந்துறை யமகவந்தாதி, சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் என இரண்டு பிரபந்தங்களும் உள்ளன. அம்மூன்று புராணங்களில் ஒன்று, ஷ்ரீ முன்வேலப்ப தேசிகருடைய சீடராகிய ஷ்ரீ சாஸ்திரம் சாமிநாத முனிவரால் இயற்றப்பட்டது. அதன் பெயர் திருப்பெருந்துறைப் புராணம் என்பதாம். இப் புராணத்தின் பாயிரம் வாயிலாக இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. (1) இப்புராணம் தஞ்சை மன்னர் துளஜேந்திரர் விருப்பப்படி இயற்றப்பட்டது. (2) இப் புராணத்தை இயற்றுவதற்கு முன் சாமிநாத முனிவர் திருப் பெருந்துறைக் கலம்பகம் என்று ஒரு நூலை இயற்றியுள்ளார். "இக்கலம்பகம் இப்பொழுது கிடைக்கவில்லை" என்று தமிழ்த்தாத்தா கூறுகிறார்.

இரண்டாவது புராணம், திருவாவடுதுறை ஆதீனத்தில் 12ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஷ்ரீலஷ்ரீ திருச்சிற்றம்பலத் தேசிகருடைய சீடராகிய ஷ்ரீ சுந்தரலிங்க முனிவரால் இயற்றப்பட்டது. இதன் பெயர் ஆதி கைலாய மான்மியம் என்பதாம்.

மூன்றாவது புராணமும், திருப்பெருந்துறைப் புராணம் என்ற மகுடமே பெற்றிருந்தது. 850 பாடல்கள் கொண்ட நூலிது, "இது செய்யப்பட்ட காலம் சகாப்தம் கருரு0 என்பது மட்டும் இதன் பாயிரத்தால் தெரிகின்றதேயன்றி, வேறொன்றும் தெரிந்திலது" என்று தமிழ்த் தாத்தா அறிவிக்கின்றார்.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம் தமிழ்த்தாத்தாவால் 1892இல் அச்சுருவம் பெற்றது.

புராணங்களிலும், மான்மியங்களிலும் திருக்கோவையார் பற்றிக் கூறப்பட்டிருப்பவை மேலெழுந்த வாரியாகவே உள்ளன. சிவபெருமான் வேதியர் உருக்கொண்டு வந்து கோவையாரைத் தாமே தம் கைப்பட எழுதினார். என்ற ஒரு செய்தி மட்டுமே பிள்ளை அவர்களால் கூறப்பட்டிருக்கிறது.

இயம்பிய வனைத்து மைய ரேயினி தெழுதிக் கொண்டே

நயம்படு கோவை யொன்று நவின்றிட வேண்டு மென்ன

வயம்படு மவரு முள்ள மகிழ்ந்தனர் பாடப் பாடச்

சயம்படு மறையோர் தாமும் வரைந்தனர் சலித்த லின்றி.

திருவாதவூரர் புராணம் அருளியவர் கடவுள் மாமுனி என்னும் பெரியோர். இப்புராண மூலத்தை அருஞ்சொற்பொருள் அகராதியுடன் திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1923இல் வெளியிட்டது. இப்பதிப்பு மிக அழகுடைத்து. இப்புராணம்கூடத் திருக்கோவையார் பற்றி ஏதும் விரிவாகக் கூறவில்லை. அம்பலவாணரே திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் எழுதி அருளினார் என்ற செய்தி ஒன்றே முனிவராலும் கூறப்பட்டிருக்கிறது.

திருச்சதக முதலாச் சிறந்ததமி ழறுநூறும்

விரித்தவகப் பொருட்கோவை விளங்கவொரு நானூறும்

உரைத்தனன்பின் முடிந்தவிடத் துயர்வாத வூரன்மொழி

தரித்தெழுது மம்பலவ னெழுத்தென்று சாற்றினான்.

ஷ்ரீ மாணிக்கவாசக வெண்பா என்ற நூலை யாத்தவர் மு.கோவிந்தசாமி ஐயர் ஆவார். இந்நூலிலும் கோவையார் பற்றி ஒரே ஒரு பாடல்தான் உண்டு.

கூறும் துறையமைந்த கோவையொன்று செப்புமென

ஊறுஞ் சுவையொழுக வோர்கோவை - யாறணியுஞ்

சிற்றம் பலத்தாடும் தேவ ருளமகிழச்

சொற்றனரன் பூறத் தொடுத்து.

தை.ஆ. கனகசபாபதி முதலியார் என்பவர் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களால் "மும்மொழிப் புலவர்; நாவலர்; பாவலர்; ஓவியர்" என்று பாராட்டப் பெற்றவர். திருக்கோவையார் இயல்பு என்ற நூலின் ஆசிரியர் இவர். இந்நூல் சென்னை, பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி என்ற நிறுவனத்தால் அச்சிடப்பட்டது. அச்சுப்பதிப்பு 1936இல் நடந்தேறியது. இந்நூலுக்கு, அந்நாளில் நவசக்தி பத்திரிகையின் ஆசிரியராகச் செயல்பட்ட திரு.வி. கலியாணசுந்தர முதலியார் ஓர் அணிந்துரை அளித்திருக்கிறார்.

நூலாசிரியர் தம்முகவுரையில் கூறிய உண்மைகள் பின்வருமாறு: "மணிவாசகர் பாடிய திருக்கோவையார் சங்க நூற்களுள் ஒன்று அன்று, எனினும், அவற்றோடு ஒன்றாக வைத்து எண்ணும் பெருமை இதற்கே உண்டு. இந்நூலின் உயர்வை உணர்தற்குச் சங்கநூற் பயிற்சி பெரிதும் வேண்டும். செய்யுள் நூற்களில் பெரும் பயிற்சியுடையோர்க்கே திருக்கோவைச் செய்யுட்களின் இனிய எளிய தண்ணிய நடையின் செம்மை நனி விளங்கும்."

நம்பியாண்டார் நம்பிகள், பேராசிரியர், குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் போற்றி உள்ள திருக்கோவையாரை ஒரு பசுநூல் என்று கொள்ளுதல் முறையன்று. என்றாலும் இப்பனுவலைக் குறைத்துப் பேசுவோர் இருக்கவே செய்கின்றனர். 1992இல் எட்டாம் திருமுறை என்ற நூல் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. 108 பக்க அளவில் திருவாசகம் பற்றியும், 11 .5 பக்க அளவில் திருக்கோவையார் பற்றியும் செய்திகள் கூறப்பட்டுள்ளன. "திருக்கோவையாருக்குத் தனிச்சிறப்புத் தர வேண்டும் என்பதற்காகப் பாடல்களுக்குத் தத்துவப் பொருள்களை வலிந்து காட்டுவாரும் உளர்" என்று ஆசிரியர் கூறியிருப்பது சைவர்களைப் புண்படுத்தும்.

திருக்கோவையார் இயல்பு என்னும் நூலுக்கு அணிந்துரை வழங்கிய திரு.வி.க கூறுவதாவது:

"அக இன்பம் மனமாசை அகற்றும்; இயற்கைக் கூறுபாடுகளில் அறிவைச் செலுத்தும்; அக்கூறுபாடுகளில் இறை கலந்திருப்பதைப் புலப்படுத்தும். இவ்வாறு உயிர்க்கு விடுதலை நல்கும். இப்பெற்றி வாய்ந்த அகஅன்பு, திருக்கோவையாரில் ததும்பி வழிகிறது.

"திருக்கோவையார் வாழ்வுக்குரிய இயற்கை நூல்; இன்ப அன்புக்குரிய அகநூல்; வீடு பேற்றிற்குரிய ஞான நூல். அஃதொரு தமிழ்க் கோயில்; இன்ப அன்புத் தெய்வத் திருக்கோயில். அதனுள் இயற்கை - இறையின் கோலங்கள், பாட்டோவியங்களாக வரையப் பட்டிருக்கின்றன. இவ்வோவியங்களை அழியா முறையில் வரைந்தமைத்துத் திருக்கோவையாரென்னும் தமிழ்க்கோயிலை நமக்களித்த மாணிக்கவாசகனார்க்கு நாம் எத்தகைக் கைம்மாறு செலுத்த வல்லேம்! உரிய கைம்மாறும் உலகில் உண்டோ? அத்திருக் கோயிலை முறைப்படி வழிபட்டு விடுதலை பெற முயல்வதே அவர்க்கு நாம் செலுத்தும் கைம்மாறாகும்."

மகா வித்துவான் ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கராகிய வித்துவான் தியாகராசச் செட்டியார், திருக் கோவையார் நானூறு பாடல்களையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தார். சீவக சிந்தாமணியைத் தமிழ்த் தாத்தா ஆய்வு செய்து வந்த காலத்தில் தமக்கு விளங்காத மேற்கோள்களைத் தனியே குறித்து வைத்திருந்தார். ஒரு சமயம் செட்டியார் அவர்களிடம், அவை பற்றி அவர் வினவிய போது, "விளங்காத மேற்கோள்களில் திருக் கோவையாரிலுள்ள சிலவற்றை அவர் ஞாபகத்திலிருந்து சொன்னார்" (என் சரித்திரம் (1997) பக்கம் 562இல் காண்க.) "தேவார திருவாசங்களிலும் இவருக்கு (செட்டியாருக்கு) விருப்பம் மிகுதி. திருக்கோவையார் முற்றும் இவர் ஞாபகத்தில் இருந்தது" என்று உ.வே.சா. அவர்கள் செட்டியாரைப் போற்றுகிறார். (வித்துவான் தியாகராசச் செட்டியார் (1992) பக்கம் 103 காண்க.)

ஆத்திசூடிக்கு அகலவுரை கண்ட ஒரத்தூர் கோ. வைத்தியலிங்கம் பிள்ளை அவர்கள், விரும்புவோர்க்குத் திருக்கோவையாரைப் பாடஞ் சொல்லுதலைத் தம் கடமையாகக் கொண்டிருந்தார்.

சுந்தரம் பிள்ளை என்ற ஐயாற்று அன்பர், திருக்கோவையார் என்று சொன்னாலே சிலிர்த்துப் போவார். அவர் திருக் கோவையாரைப் `பாக்களின் சக்கரவர்த்தி' என்று கூறிப் போற்றி வந்தார்.

பலர்புகழ் திருக்கோவையாரை நிறுத்துப் பார்த்து அதன் மதிப்பை அறுதியிட்டுச் சொல்ல நம்போலியரிடம் தராசும் இல்லை; படிக் கற்களும் இல்லை. அறிவால் எட்டமுடியாததை அநுபூதி ஒன்றே இறையருளால் எட்டும். திருக்கோவையாரைத் தாழ்ந்து பணிந்து வணங்கிப் போற்றுதல் சைவரின் கடமை.

பட்டுக்கோட்டை வக்கீல் வி. வெங்கடேச்வர ஐயர் என்பார் "ஆவுடையார் கோவிலென வழங்கும் திருப்பெருந்துறை விளக்கம்" என்ற நூலின் ஆசிரியர். இந்நூலிலும் "திருவாசகம் திருக் கோவையார் இவைகள் இவர் (மாணிக்கவாசகர்) பாடியவே" என்ற ஒரே குறிப்பு மட்டும் உள்ளது.

திருப்பெருந்துறை என்னும் ஆளுடையார் கோயில் ஸ்தல புராண வசனம்13 என்ற நூலை மதராஸ் ரிப்பன் பிரஸ் 1942இல் அச்சில் கொணர்ந்தது. வடமொழியிலிருந்து இந்நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் ஆசிரியர் கி.சுந்தர சாஸ்திரிகள் என்பவர். இந்நூலிலும் திருக்கோவையாரை, "வாதவூரர் சொல்லச் சுவாமி தம் திருக்கரத்தால் எழுதினார்" என்றே உள்ளது. ஆவுடையார் கோயிலை இவர் ஆளுடையார் கோயில் என்றே கூறுகிறார். சிவபெருமானை ஆளுடை வள்ளல் என்று இவர் வருணிக்கிறார். வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட இந்நூல்மூலம் நாம் அறியக் கூடிய செய்தி இதுவே. மணிவாசகரைப் பற்றிய வடமொழி நூல்களிலும் திருக்கோவையார் பற்றிய செய்தி மிக அருகியே காணப்படும்.

கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் எழுதிய மணிவாசகப் பெருமான் என்ற நூலைக் கழகம் 1928இல் வெளியிட்டது. இதில் எட்டுப்பக்க அளவில் திருக்கோவையார் ஆராய்ச்சி என்ற தலைப்பில் வரையப்பட்டிருக்கும் கட்டுரையில் நல்ல தகவல்கள் கிடைக்கின்றன. மணிவாசகரைப் பற்றிய பட்டயம் ஒன்று மலையாளத்தில் உள்ளது. இதன் மூலத்தைத் தமிழ் எழுத்திலும், இதற்கான தமிழ் மொழி பெயர்ப்பையும் பிள்ளையவர்கள் தம் நூலில் தந்திருக்கிறார்14. இது சைவருக்கும், கிறித்துவர்க்கும் இடையே தோன்றிய வழக்குப் பற்றியது. இதில் சம்பந்தப்பட்ட மாணிக்கவாசகர் வேறு ஒருவர் என்று நிச்சயமாகக் கூறலாம்.மணிவாசகர் சரித்திரம் என்ற நூலை ஆக்கியவர் பி.ஷ்ரீ. ஆசாரியார் ஆவர்15. இது 1929இல் வெளிவந்தது. இந்நூலில் திருச்சிற்றம்பலக் கோவை பற்றிய செய்திகள் சில கூறப்பட்டுள்ளன.

இராவ் பகதூர் தணிகைமணி டாக்டர் வ.சு. செங்கல்வராய பிள்ளை ஒரு மிகச் சிறந்த திருமுறை ஆய்வாளர். திருக்கோவையாரை முழுமையாக உரைநடையில் தந்த பெரியவர் அவர். அவரது "திருக்கோவையார் உரைநடை"யை 1970இல் கழகம் வெளியிட்டது16. இந்நூலின் பதிப்புரையில் ஓர் அற்புதமான தகவல் காணப்படுகிறது. "இத் திருக்கோவையார் நானூறு தெய்வப் பாடல்களைக் கொண்டு விளங்குகின்றது. (இந்நூல்) `திரு' எனத் தொடங்கி `ஊதியம்' என நிறைவுறுகின்றது17". திரு என்றால் செல்வம் என்று பொருள், செல்வம் என்பது செல்வன் கழல் ஏத்தும் செல்வமே. மணிவாசகரும் சிவபுராணத்தில்,

"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து"

என்று அருளியுள்ளார். திருக்கோவையாரை ஓதுவதால் திருவே ஊதியமாக விளையும்.

தணிகை மணி அவர்கள் திருக்கோவையார் ஒளிநெறி18 என்றதோர் அற்புத நூலின் ஆசிரியருமாவார். திருக்கோவையாரின் அருமை பெருமைகள் இந்நூலில் 54 தலைப்புகளில் தொகுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இந்நூல் போற்றிப் பயிலப்பட வேண்டிய நூல். திருக்கோவையாரில் அடங்கியுள்ள கரந்துறைப் பாடல்கள் 256 முதல் 259 முடிய உள்ள பக்கங்களில் பட்டியல் இடப்பட்டிருக் கின்றன. திருக்கோவையார் பாடல்களில் 28 குறட்பாக்கள் அடங்கியுள்ளன. காட்டாக ஒன்று காண்பம். பாடல் 56 பின்வருமாறு:

தாரென்ன ஓங்குஞ் சடைமுடி மேல்தனித் திங்கள்வைத்த

காரென்ன ஆகுங் கறைமிடற் றம்பல வன்கயிலை

ஊரென்ன என்னவும் வாய்திற வீர்; ஒழி வீர்பழியேற்

பேரென்ன வோஉரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே.

இப்பாடலில் "ஊரென்ன என்னவும் வாய்திற வீர்பழியேல், பேரென்ன வோவுரை யீர்" என்ற குறள் கரந்துறைகிறது. இது போல் திருக்கோவையாரில் இன்னிசை வெண்பாக்களும், கொச்சகக் கலிப்பாக்களும் அகவல்களும் கரந்துள்ளமை இவரால் நன்கு காட்டப்பட்டிருக்கின்றன.

கல்லாடாம் என்ற நூலின் "செய்யுட்கள் சொல்லால் சங்கச் செய்யுட்களைச் சார்ந்தும், பொருளால் இடைக்கால இலக்கியத்துக்கு இயைந்தும் இருக்கின்றன; சொல் செறிவுடையன; பொருள், புராணக் கலப்புடையது. திருவாதவூரடிகள் அருளிய திருக்கோவையாரின் நலத்தை உலகம் அறியச் செய்வதற்காக, அதிலிருந்து நூறு துறைகளைத் தேர்ந்து ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வோர் ஆசிரியப்பா இயற்றி, தமிழறியும் பெருமானாகிய ஆலவாய் அண்ணலின் தெய்வத்திருமுன் இவ்வாசிரியர் ஓதியபோது, பாட்டுக்கு உருகும் பனிமலைவல்லிபங்கன், ஒவ்வொரு செய்யுள் முடியும் போதும், தன் திருமுடியைத் துளக்கி மகிழ்ந்தார் என்று ஒரு பழம் பேச்சு, இந்நூலின் சிறப்பைத் தெரிவிக்கும் நோக்கத்தோடு, நம் நாட்டில் வழங்கி வருகிறது”

யானை, மான் ஆகியவற்றை வியாஜமாகக் கொண்டு, "இங்கு அவை வந்தனவோ?" என்று கேட்டபடி தலைவன், தலைவியும், பாங்கியும் இருந்த இடத்திற்கு வந்தனன். மறுமுறையும் ஒரு தடவை அவர்கள் இருந்த இடத்திற்கு வருகிறான். "யாவன் இவன்?" என்று தோழி ஐயுறுகிறாள்.

என்று தோழி ஐயுறுகிறாள். (நாகம் - யானை; ஏனம் - கடுவாய் (பன்றி).)

"ஏனம் வந்ததா?" என்று வினவிக் கொண்டு தலைவன் வரவில்லை. ஆகவே பதிப்பாசிரியர், தாம் வரைந்த அடிக்குறிப்பில், "ஏனம் வினாவியதற்குச் செய்யுளில்லை" என்று கூறியிருக்கிறார்.

பாடலை ஊன்றிப் பயின்ற தமிழ்த்தாத்தா, "ஏனம் என்ற பாடம் சரியன்று; ஏணம் என்ற பாடமே சரி21" என்று அறிவித்திருக்கிறார். ஏணம் என்றால் மான் என்று பொருள். பிங்கல நிகண்டு காண்க.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் சிவதீட்சை பெற்றவர். சிவபூசைச் செம்மல். திருமுறைகளில் அவருக்கு எல்லையற்ற ஈடுபாடு உண்டு. அவர் திருக்கோவையாரை நன்கு ஓதியவர். தாம் பதிப்பித்த பல நூல்களில் குறிப்புரைகளில் திருமுறைகளிலிருந்தும், மெய்கண்ட சாத்திரங்களிலிருந்தும் பலப்பல மேற்கோள்கள் வழங்கியுள்ளார். அப்பெரியாருக்கு உரையோடு கூடிய திருக்கோவையார் சுவடி ஒன்று கிட்டியது. உரையாசிரியர் பெயர் மணக்குடவர். இவர் திருக்குறளுக்கு உரைவரைந்த மணக்குடவரின் வேறானவர். திருக்கோவையாருக்கு வரையப்பட்ட கொளுக்களுக்கும் இவர் உரை வரைந்துள்ளார். பெற்ற சுவடியைச் சிறப்பாகப் பதிப்பிக்கக் கருதிய ஐயர் அவர்கள் பலப்பல செய்திகளைச் சேகரித்தார். இங்கு ஒன்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும். ஐயரே பதிப்பிக்காமல், ஆனால் ஐயரே பதிப்பிற்குச் சமைவாக அமைத்து வைத்திருந்த பல நூல்களை ஐயர் பெயர் தாங்கிய நூல்நிலையம் பதிப்பித்து வருகிறது. இதற்காக நிலையத்தாரைப் பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். என்றாலும், இவ்வாறு பதிப்பிக்கப்பட்ட நூல்கள் எல்லாம் ஐயரின் பதிப்புகளின் தரத்தை எட்டவில்லை. ஐயர் நூல் நிலையம் வெளியிட்ட "மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருச்சிற்றம்பலம் கோவையார் (மணக்குடவர் உரை)22" என்ற நூலும் நான்முன் சொன்ன கருத்துக்கு விதிவிலக்கு அன்று. இந்நூலில் "சிற்றாராய்ச்சியில் சில" என்ற தலைப்பில் பல அருமையான செய்திகள் உள. உலக சுந்தர முதலியார் பாடிய மாணிக்கவாசக வெண்பாப் பாடல்களும் இந்நூலில் இணைக்கப்பட்டிருக்கின்றன. கொளுக்களுக்கான உரை தனிப் புத்தகமாகவே வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கிளவித் தொகையும், அருஞ்சொல் அகராதியும் உள்ளன.

உரையாசிரியரான மணக்குடவர், திருக்குறள் உரையாசிரியரான மணக்குடவருக்கும் காலத்தால் முற்பட்டவர். பேராசிரியர் உரையைக் காட்டிலும் சில இடங்களில் இவர் சற்று விரிவாகவே உரை கண்டிருக்கிறார். துரதிருஷ்டவசமாக ஐயர் பெற்ற சுவடியில் பாடல் 39 முதல் 60 வரையிலும் பாடல் 337 முதல் 400 வரையிலும் உள்ள பாடலுக்கான உரை காணப்படவில்லை. ஆகவே இச்செய்யுள்களுக்கு ஐயர் நூலகத்தில் இருந்த வேறு ஒரு சுவடியிலிருந்து பதிப்பாசிரியர் பதவுரையைச் சேகரித்துத் தந்திருக்கிறார்.

கொளு எண் முப்பத்து ஐந்திற்கும் இந்நூலில் உரையில்லை. `உரையில்லை' என்ற செய்தியும் நூலுள் காணப்படவில்லை. முப்பத்து ஐந்தாம் செய்யுளும் உரையும் நூலில் காணப்படுகின்றன. ஆகவே கொளு முப்பத்து ஐந்திற்கான உரை, பதிப்பில் விடுபட்டுவிட்டது என்று கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் 39 முதல் 59, 337 முதல் 400 என்ற எண்களைப் பெற்ற பாடல்களுக்கான கொளுக்களுக்கும் உரையில்லை. இச்செய்தியைப் பதிப்பாசிரியரே தந்துள்ளார்.

இந்நூலின் பக்கம் 371 தொடங்கிப் பக்கம் 383 முடிய உள்ள பகுதியில் ஐயர் அவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதி, "காப்பு : எழு கோபுரம் - எழுநிலையை உடைய கோபுரம்..." என்று தொடங்குகிறது. ஆனால் நூலில் இங்குக் கூறப்பட்ட காப்புச் செய்யுள் இல்லை. மேலும் ஐயர் அவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் என்ற பகுதியை அடுத்து "ஐயரவர்கள் ஆராய்ச்சிக் குறிப்பு" (பக்கங்கள் 384, 385, 386) என்று ஒரு பகுதி வருகிறது. இப்படி வந்துவிட்ட குழறுபடையைத் தவிர்த்திருக்கலாம்.

திருக்கோவையார் - ஆங்கில நூல்கள்:

கிளென் ஈ யோகும் என்ற அமெரிக்க அறிஞர் தமிழை நன்கு கற்றவர். இவர் "ஆடல் வல்ல சிவனுக்கான அருட்பாடல்கள்"23 என்ற ஓர் ஆய்வு நூலை ஆங்கிலத்தில் வரைந்திருக்கிறார். இந்நூல் திருவாசகம் பற்றியது. திருவாசகத்தில் தோய்ந்து, அதன் பெருமைகளைப் பெரிய அளவில் உணர்ந்திருக்கும் இவர், திருக்கோவையார் ஒரு கடினமான நூலாதலால் அதைப் படித்துணரத் தமக்கு வாய்ப்பில்லாதது பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.24 இவருக்கு உதவவேண்டும் என்று கருதியே, நான் திருக்கோவையார் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். என் மொழி பெயர்ப்பின் ஒரு படியை அவருக்கு நான் நேரில் வழங்கிய போது அவர் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார்.

தமிழ் இலக்கியம் என்ற நூல், ஆங்கிலப் பேராசிரியர் எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை அவர்களால் வரையப்பட்டு, 1929இல் வெளிவந்தது. இதன் மறுபதிப்பு 1985இல் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாக வந்தது25. இந்நூலின் பெருமையைப் பண்பட்ட ஒரு சிலரே உணர முடியும் என்று பிள்ளை அவர்கள் அறிவித்துள்ளார்.

1930இல் பேராசிரியர் வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் வரைந்த "தமிழ் இலக்கியத்திலும் சரித்திரத்திலும் ஆய்வுகள்"27 என்ற நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தது. இந்நூலில் தீட்சிதர் அவர்கள், மேலெழுந்தவாரியாகப் படிப்போர் இதனைக் காம நூலாகக் கருதுவர் என்றும், இத்தோற்றம், அற்புதமான எழிலுடைச் சமய உண்மைகளையும், கருத்துக்களையும், இலேசாக மூடி நிற்கும் ஒரு போர்வை என்றும் கூறியுள்ளார்28. இந்நூல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் மறுபதிப்புப் பெற்றுள்ளது.

1937-இல் இலங்கை அரசு, சர். பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் ஆங்கிலத்தில் வரைந்த, "ஆய்வுகளும் மொழி பெயர்ப்புக்களும்" என்ற நூலை வெளியிட்டது. 1981இல் இந்நூல் மீளவும் பதிப்பிக்கப்பட்டது29. இந்நூலில் திருக்கோவையார் பாடல்கள் சில, மூலமும், மொழி பெயர்ப்புமாகத் தரப்பட்டிருக்கின்றன. திருவளர் தாமரை என்று தொடங்கும் பாடலும், போதோ விசும்போ என்று தொடங்கும் பாடலும், பாயும் விடையரன் என்று தொடங்கும் பாடலும், அணியும் அமிழ்தும் என்று தொடங்கும் பாடலும், வளைபயில் என்று தொடங்கும் பாடலும், அளவியை யார்க்கும் என்று தொடங்கும் பாடலும், கூம்பலங் கைத்தலத்து என்று தொடங்கும் பாடலும், சிந்தாமணி என்று தொடங்கும் பாடலும், சிறை வான் புனல் என்று தொடங்கும் பாடலும், விழியாற் பிணையாம் என்று தொடங்கும் பாடலும், வடிக்கணிவை என்று தொடங்கும் பாடலும், இருங்களி என்று தொடங்கும் பாடலும், மைவார் கருங்கண்ணி என்று தொடங்கும் பாடலும், அக்கின்றவா என்று தொடங்கும் பாடலும், செந்நிற மேனி என்று தொடங்கும் பாடலும், காகத்திரு கண் என்று தொடங்கும் பாடலும், தாதேய் மலர்க்கு என்று தொடங்கும் பாடலும், வரிசேர்த் தடங்கண்ணி என்று தொடங்கும் பாடலும், தேமென் கிளவி என்று தொடங்கும் பாடலும், அந்தியின் வாயெழில் என்று தொடங்கும் பாடலும், தெங்கம்பழம் என்று தொடங்கும் பாடலும் அருணாசலம் அவர்களால் நன்கு உரைநடையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன30. இவை காட்சி, ஐயம், தெளிதல், உட்கோள், தெய்வத்தை மகிழ்தல், கிளவி வேட்டல், நலம் புனைந்துரைத்தல், பிரிவுணர்த்தல், பாங்கன் வினாதல், இயலிடங் கூறல், குறிவழிக் காண்டல், வேழம் வினாதல், பிறைதொழுகென்றல், வேறுபடுத்துக் கூறல், சுனையாடல் கூறிநகைத்தல், மதியுடம்படுதல், குறிப்பறிதல், மென் மொழியாற் கூறல், தழை கொண்டு சேறல், நீயே கூறென்று மறுத்தல், குலமுறை கூறி மறுத்தல் என்பனவற்றைப் பற்றியவை.

1961இல் திரு.ஜேசுதாசன், திருமதி.ஜேசுதாசன் ஆகியோர் ஆங்கிலத்தில் வரைந்த தமிழ் இலக்கியத்தின் ஒரு சரித்திரம் என்ற நூல் வெளிவந்தது31. சங்க இலக்கிய அகப் பொருள் பற்றிய நூல் திருக்கோவையார் என்றும் இதில் பேசப்படும் காதல் கடவுளுக்கும், ஆன்மாவிற்கும் இடையே உள்ள காதல் என்றும், இந்நூல் தீர்மானமான உருப்பெற்ற ஒன்று என்றும், இது கோவை நூல்களில் தலையாய நூல் என்றும் இவ்வாரிசியர்கள் கூறியுள்ளனர்.

1963இல் கலைப்புலவர் க. நவரத்னம் அவர்கள், ஆங்கிலத்தில் வரைந்த "இந்து சமய ஆய்வுகள்" என்ற நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது33. இந்நூலுக்கான முகவுரையை வரைந்தவர் முனைவர் டி. எம். பி. மகாதேவன் அவர்கள். இந்நூலாசிரியர் நாயக - நாயகி பக்தியை உணர்த்தும் மகோன்னதமான தமிழ்நூல் திருக்கோவையார் என்றும், இஃதோர் ஞானப் பனுவல் என்றும் கூறுகிறார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக இருந்த, திரு ஔவை நடராசன் அவர்கள், எம்.லிட்.விருது பெற, திருக்கோவையாரை ஆய்விற்கு எடுத்துக்கொண்டு, ஆங்கிலத்தில் "திருக்கோவையார் ஆய்வுகள்" என்ற நூலை உருவாக்கினர்35. சென்னைப் பல்கலைக்கழகம் அவர் ஆய்வுகளை ஏற்றது. 1964இல் இவர் சமைத்த நூல் இன்னமும் அச்சேறவில்லை. சற்றேறக் குறைய 350 பக்கங்கள் கொண்ட இவ்வாய்வுச் சுவடி, 1964க்குப் பிறகு வெளிவந்திருக்கும் தகவல்களோடு பதிப்பிக்கப்பட வேண்டும். திருக்கோவையாரின் சிறப்புக்களை வகுத்தும் தொகுத்தும் நூலாசிரியர் நன்கு காட்டியுள்ளார். திருக்கோவையார் பற்றி முற்றுமாக ஆங்கிலத்தில் முதன்முதலில் வரையப்பட்டது இந்நூல். உலகத் தமிழ் மாநாடுகள் பல நடந்துள்ளன. என்றாலும், எந்த ஒரு மாநாட்டிலும் திருக்கோவையார் பற்றி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரைகூடப் படிக்கப்படவில்லை. ஔவை நடராசன் அவர்கள் வரைந்த நூலும் குடத்திலிட்ட விளக்காகவே இருந்து வருகிறது.

1965இல் தெ.பொ.மீனாட்சிசுந்தரன் அவர்கள் வரைந்த தமிழ் இலக்கியத்தின் ஒரு சரித்திரம் என்ற ஆங்கில நூல் வெளி வந்தது36. திருக்கோவையார் பற்றி இந்நூலில் சில செய்திகள் கூறப்பட்டிருக் கின்றன. இந்நூலாசிரியர் திருக்கோவையார் காட்டும் தலைவி கடவுள் என்றும், தலைவன் ஆன்மா என்றும் கூறியிருக்கிறார்.

1974இல் கமில் சுவலபில் வரைந்த தமிழ் இலக்கியம் என்ற ஆங்கில நூல் வெளிவந்தது38. தமிழ் இலக்கியத்தை மேனாட்டர் உணர்தற்கு மிகவும் பாடுபட்டார் சுவலபில் அவர்கள். கோவைகளுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி திருக்கோவையார் என்று இவர் கூறுகிறார்.

விஸ்வ பாரதியின் தொன்மை இந்தியச் சரித்திரம் பண்பாட்டுத் துறையைச் சார்ந்த முனைவர் ப்ரடுபாநந்த ஜாஷ் அவர்கள், சைவத்தின் சரித்திரம் என்ற நூலின் ஆசிரியர். இவ்வாங்கில நூல் 1974இல் வெளிவந்தது40. இஃதோர் அருமையான நூல். கோளகி மடம் பற்றிய பல செய்திகளை இந்நூலில் காணலாம். நீலகண்ட சாஸ்திரியார் கருத்தை ஏற்று, கி.பி. 862 முதல் 880 வரை ஆண்ட இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தவர் மணிவாசகர் என்று இவர் கூறுகிறார். தம் நூலில் திருவாசகம் பற்றியும் திருக்கோவையார் பற்றியும் இவர் குறிப்புக்கள் தருகிறார்41.

கோ.வன்மிக நாதன் அவர்கள் சாகித்ய அகாடெமிக்காக வரைந்த `மாணிக்கவாசகர்' என்ற ஆங்கில நூல் 1976இல் வெளிவந்தது42. புறத் தூண்டுதல் இன்றித் தன் இயல்பாகவே பொழிந்த பாடல்களே திருவாசகமும், திருக்கோவையாரும் ஆக உருக் கொண்டன என்றும், இவ்விரு நூல்களும் இடைச் செருகல் ஏதுமின்றி, பழுதுபடாமல் நமக்குக் கிடைத்துள்ளன என்றும், திருவாசகப் பாடல்கள் பற்பல இடங்களில் பற்பல காலங்களில் பாடப்பட்டன என்றும், ஆனால் திருக்கோவையார் ஒரே இடத்தில் ஒரே காலத்தில் பாடப்பட்டது என்றும் கூறுகிறார்.

1987இல் அநுபூதிப் பாடல்கள் என்ற ஓர் ஆங்கில நூல், நார்மன் கட்லர் அவர்களால் இயற்றப்பட்டு வெளிவந்தது44. கட்லர் அவர்கள் தமிழ் அறிந்தவர். திருக்கோவையார் பாடல்கள் இருபத்தொன்பது இவரால் ஆங்கிலவாக்கம் பெற்றன. அப்பாடல் எண்களாவன: 1, 2, 3, 6, 8, 11, 20, 23, 70, 71, 75, 102, 109, 115, 120, 144, 166, 178, 248, 250, 287, 289, 292, 304, 315, 324, 335, 341, 34345.

திருக்கோவையார் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரைகள் வரைந்தவர் பென்னம்பெரிய சித்தாந்தப் புலவரான கிருஷ்ண சிவராமன் அவர்களே46. பொன்னே போல் போற்றிப் பயிலப்படவேண்டிய கட்டுரைகள் இவை.

ஒருவாறு வரையறுக்கப்பட்ட வேதாந்த மரபிற்குப் புறத்தே நின்றும், அதே சமயத்தில் வேதாந்தத்தின் அந்தரங்கமான, சாரமான கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்டதுமான சிவஞான போதம் உருப்பெறக் கோவைப் பாடல்கள் முக்கிய காரணமாக இருந்தன என்றும் இவ்வாசிரியர் ஒரு முடிவை அறிவிக்கின்றார்47. மேலும் அவர் கூறுவதாவது: `பெயர் அறிவிக்கப்படாத் தலைவன், தலைவியர்; இலக்கண மரபிற்கு முற்றும் ஒத்துவரும் அமைப்பு; உண்மையான, மிகவும் நெருக்கமான காதல்; இப்படிச் சமைக்கப்பட்ட இந்நூலின் பாடல்கள் உலகளாவிய காதல் பேரிலக்கியப் பாடல்கள்'.

திருக்கோவையார் பாடல் அனைத்தையும் முதன் முதலில் ஆங்கிலத்தில் பெயர்த்த பெருமை இறையருளால் எனக்குக் கிட்டியிருக்கிறது. என் மொழி பெயர்ப்பு 1989இல் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது49. திருக்கோவையாரை மேனாட்டர் உணர்ந்து ஓதுவதற்காகவே இந்நூல் வெளியிடப்பட்டது. 42 பக்க அளவில் அமைந்த விரிவான அறிமுகக் கட்டுரை, கற்க விழைவோருக்கு உரிய விளக்கங்கள் வழங்கியிருக்கிறது. ஒவ்வொரு பாடலுக்கும் குறிப்புரை உண்டு, பல நூல்களிலிருந்து தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒப்புமைப் பகுதிகள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன. மில்டன், ஷேக்ஸ்பியர், வில்லியம் கூபர், ராபர்ட் பிரௌனிங், வேர்ட்ஸ்வொர்த், எமர்சன், உமார்கய்யாம், ரூமி, கலீல் ஜிப்ரான், ஹம் போல்ட், வர்ஜில் ஆகியோர் நூற்பகுதிகள் ஒப்புமைக்காக உரிய இடங்களில் தரப்பட்டிருக்கின்றன. சீனப் புலவர்களான போ சூய், வாங்சங், லிய், லி-போ ஆகியோரின் நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன. பால்இயல் உள தத்துவ நிபுணரான ஹாவ்லாக் எல்லீஸ் நூல்களிலிருந்தும் பொருத்தமான பகுதிகள் இம்மொழிபெயர்ப்பில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. எடின்பரோ பல்கலைக்கழகப் பேராசிரியரும் தமிழ் அறிஞருமான ஆர்.ஈ.ஆஷர் அவர்கள் இம் மொழிபெயர்ப்பிற்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். முறுகிய தெய்வக் காதல் பற்றிய நூலே திருக்கோவையார் என்பதை என்னால் இயன்றவரை நான் விளக்கியிருக்கிறேன்.

சமயங்களில் ஒற்றுமை என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் தாமஸ் மன்னினேழர் என்பவர். இந்த நூல் 1993இல் வெளிவந்தது51. தாயுமானவர் அருளிய வேதாந்த சித்தாந்த (மோன) சமரசத்தை விளக்கவே இந்நூல் எழுந்தது. இஃதோர் அற்புதமான படைப்பு. "நான் இவளாம் பகுதிப் பொற் பாரறிவார்?" என்ற திருக்கோவையார் வாசகம், காதல் மொழியை அத்துவித மொழியோடு புணர்த்திக் காட்டும் என்று இந்நூல் ஆசிரியர் காட்டுகிறார்.

"மிஸ்டிசிஸம் ஆஃப் லவ் இன் சைவா திருமுறைஸ்" என்ற ஆங்கில நூலின்53 ஆசிரியர் முனைவர் வி. சி. சசிவல்லி அவர்கள். சற்றே விரிவாக திருக்கோவையார் பற்றிய செய்திகளை இந்நூலில் காணலாம்.
அவரவர் தகுதி, அறிவு, அநுபூதிகளுக்கு ஏற்பக் காட்சிதரும் பனுவல் உலகில் ஒன்று உண்டு என்றால் அது திப்பிய கிரந்தமாம் திருக்கோவையாரே, இப்படி இதன் பெருமையை அறிவிக்கும் பழைய பாடல் பின்வருமாறு.

ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்

காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்

ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர்

சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே. -ஆன்றோர் வாக்கு

சிந்தைத் திருக்கோட்டும் சிவகாமவேதம் திருக்கோவையார் இத்திருமுறையை முறையாக ஓதி உய்வோமாக.

எண்ணிறைந்த தில்லை யெழிற்கோ புரந்திகழக்

கண்ணிறைந்து நின்றருளும் கற்பகமே - நண்ணியசீர்த்

தேனூறு செஞ்சொற் றிருக்கோவை யென்கின்ற

நானூறு மென்மனத்தே நல்கு.61

அடிக்குறிப்புகள்

1.A catalogue of The Tamil Books In The Library Of The British Museum, Vol. I, Page 167: "MANIKKA-VACHAKAR.... திருச்சிற்றம்பலக் கோவையாருண்மை. [Tiru-Chittambala-Kovaiyar-Unmai. A Saiva devotional poem in 400 stanzas with a metrical commentary by Perasiriyar, here described to Nachinarkk'-Iniyar, Edited by N.Ch. Tamb'-aiya Pillai.] PP. vi. 159, v. சென்னபட்டணம் ஜய [Madras, 1895] 12. பதிப்பாண்டு 1894 என்று காட்டப்பட்டிருக்க வேண்டும்.

2.திருவாசக அநுபூதி உரை என்னும் திருவாசக வியாக்கியானம், முதற்பகுதி (1954), டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, பக். 149-150.

3.திருக்கோவையார் உண்மை விளக்கம், முன்னுரை, திருவாவடுதுறை ஆதீனம், 1965.

4.திருவாசக அநுபூதி உரை என்னும் திருவாசக வியாக்கியானம், முதற்பகுதி (1954), டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை,. பக். 151-154, அடிக்குறிப்புக்கள்.

5.திருவாசக அநுபூதி உரை என்னும் திருவாசக வியாக்கியானம், முதற்பகுதி (1954), டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை,154-212.

6.ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம், உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) முகவுரை, பக்கம் 5.

7.ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம், உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) பக்கம் 5.

8.ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம், உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) பக்கம் 6.

8.ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம், உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) , பக்கம் 6.

9.ஷ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம், உ.வே. சாமிநாதையர் பதிப்பித்தது (1913, இரண்டாம் பதிப்பு) , தில்லையடைந்த படலம், பாடல் 65.

10.கடவுள் மா முனிவர் இயற்றியருளிய திருவாதவூரர் புராணம், கழகம் (1923), திருவடி பெற்ற சருக்கம், பாடல் 531.

11.ஷ்ரீ மாணிக்கவாசக வெண்பா, மதுரை எக்ஸெல்ஸியர் பிரஸ், 1918, பாடல் 261.

12.திருப்பெருந்துறை விளக்கம், ஷ்ரீ நாடியம்மன் பிரஸ், பட்டுக்கோட்டை, 1925, பக்கம் 49.

13.திருப்பெருந்துறை என்னும் ஆளுடையார் கோயில் ஸ்தல புராண வசனம், மதராஸ் ரிப்பன் பிரஸ், புதுக்கோட்டை, 1942, பக்கம் 234.

14.மணிவாசகப் பெருமான், கழக வெளியீடு 102, 1928, பக். 120-124.

15.மணிவாசகர் சரித்திரம், இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1929, பக். 143-150.

16.திருக்கோவையார் உரைநடை, வ.சு. செங்கல்வராய பிள்ளை, கழகம், 1970.

17.திருக்கோவையார் உரைநடை, வ.சு. செங்கல்வராய பிள்ளை, கழகம், 1970, பக்கம் 4.

18.திருக்கோவையார் ஒளி நெறி, கழகம், 1970.

19.கல்லாடம், மர்ரே அண்டு கம்பெனி, சென்னை, 1957, பதிப்புரை.

20 திருச்சிற்றம்பலக் கோவையார் (பழைய உரையுடன்), தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக வெளியீடு, வெற்றிவேல் மின்சார அச்சகம், தஞ்சாவூர், 1951, பக்கம் 70.

21 இத்தகவலைப் பண்டித வித்துவான் தி.வே.கோபால ஐயருக்கு அறிவித்தவர் தமிழ்த்தாத்தாவின் சீடரான வி.மு. சுப்பிரமணிய ஐயர் ஆவர்.

22 மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருச்சிற்றம்பலக் கோவையார் (மணக்குடவர் உரை), மாகமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை-90, 1995. பக்கம் 277 முடிய ஒரு புத்தகமாகவும், பக்கம் 278 முதல் 386 முடிய மற்றொரு புத்தகமாகவும் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

23. Hymns to the Dancing Siva, Glenn E. Yocum, Heritage Publishers, New Delhi, 1982.

24. மேற்படி நூல், பக்கம் 10. யோகும் அவர்கள் கூறியிருப்பது: "The Tirukkovaiyar is ostensibly an erotic poem, although it has traditionally been interpreted as an allegory of God's love for the soul. The poem is not an easy one and, as can be imagined, is a far less accessible form of religious literature than the clearly devotional hymns of the Tiruvacakam. In order to discuss the Tirukkovaiyar in the context of a wider study of Manikkavacakar, I would first want to read the book carefully with a pandit, an opportunity I have not had. More thorough examination of the hagiographical literature about Manikkavacakar is also a desideratum.''

25. Tamil Literature, M.S. Purnalingam Pillai, Tamil University Reprint, Thanjavur, 1985.

26. மேற்படி நூல், பக்கம் 160: "Thiru-Kovaiyar or "Thiru-Chittambala Kovaiyar', whose subject matter is Aham, chiefly is love furtive and wedded, contains 400 stanzas in Kattalai-Kalithurai metre. It is called Kovai or collection, because it strings together twenty-five clusters of thurais or sub-divisions of the subject. The higher wisdom enshrined in these verses can be reached only by the cultured few to whom the transitoriness of this life's span is patent and who knows that Sivam plays with Atma and produces many a phenomenon.''

27. Studies In Tamil Literature And History, V.R. Ramachandra Dikshitar, London, Luzac and Co., 1930.

28. மேற்படி நூல், பக்கம் 101: "The other equally remarkable work of his is the Tirukkovai. Superficial readers devoid of the true spiritual acumen are apt to treat this supreme mystic work as an ordinary text of love-poetry. True, what is known in Sanskrit as the Sringara rasa seems at first sight to predominate the whole poem. But it must be remembered that it is only a thin veil covering grand and beautiful religious truths and conceptions.''

29. Studies And Translations, Philosophical and Religious, Sir Ponnambalam Arunachalam, Ministry of Regional Development, Colombo, 1981.
. மேற்படி நூல், பக். 258 - 268.

31. A History of Tamil Literature, C. Jesudasan and Hephzibah Jesudasan, Y.M.C.A. Publishing House, 5 Russel Street, Calcutta, 1961.

32. மேற்படி நூல் பக். 86-87: "Manikka-Vasakar's works are Tiru-K-Kovaiyar and Tiru-Vasakam. Tiru-K-Kovaiyar belongs to the Kovia class of verse which treats of the Sangam love-themes with this difference, namely, that it reads like a continuous story. But the love depicted in Tiru-K-Kovaiyar is the love between God and the soul... Tiru-K-Kovaiyar has a definite finish of form and stands first, though not in point of time, among the Kovais.''

33. Studies in Hinduism by Kalaipulavar K. Navaratnam, Jaffna, Ceylon, 1963.

34. மேற்படி நூல், பக்கம் 194. "St. Manickavachakar's "Tirukovaiyar' is the most outstanding compositon on the Nayaka-Nayaki bhava devotion in Tamil language.... (Lt) belong(s) to the Saiva school of Mysticism.''

35. Studies in Tirukkovaiyar, Thesis submitted for The M. Litt Degree of The Madras University By D. Natarajan, 1964.

36. A History of Tamil Literature By T.P. Meenakshisundaram, Annamalai University, Annamalai Nagar, 1965.

37. மேற்படி நூல், பக்கம் 138: "As against the ordinary trend of mystic poetry, in Tiru-K-Kovaiyar the lady lore is God and the hero is the soul.

38. Kamil Veith Zuelebil, TAMIL LITERATURE, Otto Hanassouritz, Wiesbaden, 1974.

39. மேற்படி நூல், பக்கம் 98.

40. History of Saivism by Dr. Pranabananda Josh, Roy and Chaudhury, Calcutta, 1974.

41. மேற்படி நூல், பக்கம் 90.

42. Manikkavachakar, G. Vanmikanathan, Sahitya Akademi, New Delhi, 1976.

43. மேற்படி நூல், பக். 20-22. "Manikkavachakar is the author of two major works, both of which have come down to us without mutilation or interpolation. It is more fitting to sya that he sang two major works than that he was the author of two such works, for they are spontaneous outpouring of the heart rather than planned works composed at leisure... The songs of the Thiruvachakam..... were sung at various times and various places. The Thirukkovaiyar, on the other hand, it may be safely guessed, was sung at onetime and at one place.''

44. Songs Of Experience, The Poetics Of Tamil Devotion by Norman Cutler, Indiana University Press, Bloomington and Indianapolis, 1987.

45. மேற்படி நூல், பக். 150-160.

46. (1) The Spirituality of Love in the Saiva Hindu Tradition: The Esoteric Implications of Tirukkovaiyar, Journal of the International Institute of Saiva Siddhantha Research, Dharmapura Adhinam, 1987, Vol. 3, No. 1, PP. 1-14.

(2) Ibid. The Mysticism of Male-Female Relationship, Some Philosophical and Lyrical Motifs of Hinduism, pp. 46-59.

47. மேற்படி சஞ்சிகை, பக். 14: "The writer's own conclusion in this regard, based on careful study and reflection, is not only in favour of interpreting it as a text of spiritual love but also as the most significant formative factor that shaped the twelfth century religio-philosophical text of Civagnanapotham which standing outside the formal boundary of the normative tradition of Vedanta, nevertheless enunciated its quintessential doctrine in the form of a philosophy of love:

. மேற்படி சஞ்சிகை, பக்கம் 55: "This is the tender, intimate love poetry, anonymous, stylised in accord with strict grammatical convention comprising some of the greatest love poems ever composed in world literature.''

49. Tirukkovaiyar, translated by Sekkizhar Adi-p-Podi T.N. Ramachandran, Tamil University, Thanjavur, 1989.

50. மேற்படி நூல், பக்கம் xlvii - xlviii.

"From "eros' which is "the hot and unendurable desire', to "storage', which is family affection, and from storage to "philia', which is physical and more than physical love, and from philia to "agape' which is "unconquerable' benevolence, "unvincible goodwill', the Tirukkovaiyar is the recordation of the odyssey of love. None can miss its message, as poetry after all, it is said, "can comunicate before it is understood.''

"The heroine is the symbol of love that transforms, transfigures and totally transmutes. The Tirukkovaiyar does not think of man finally submitting to the power of Love, it thinks of him as finally surrendering to the love of Love.''

"Love in its sublime state is the very nature of God. Is not God but Ananda, the Bliss of Love. The heroine in the Tirukkovaiyar is a symbol of the Bliss of Love. Here is a Universal love; a sacrificial love; a saving and sanctifying love; a sustaining and strengthening love; an inseparable and ineluctable love; a ewarding and chastering love. It is untained by "mismos' (hatred). It is awful and grand, lofty and noble, sublime and beautiful, elevating and edifying, pure and ambrosial, transcending and transmuting, sincere, innocent, generous, forbearing, forgiving and is full of the peace that surpasseth understanding.''

51. Harmony of Religions by Thomas Manninezhath, Motilal Banarasidoss Publishers Private Limited, New Delhi, 1993.

52. மேற்படி நூல், பக்கம் 82: "In Tirukkovaiyar ... the love theme takes the form of sustained allegory. Attention deserves to be drawn to a line (Verse 7) in the text which combines the language of love and the language of Advaita: nan ivalam pekutip porppararivar?-who can know this mystery (porppu) of my being one with this lady - love?''

53. Mysticism Of Love In Saiva Mysticism by Dr. V.C. Sasiralli, International Institute of Tamil Studies, Chennai-113, 1995.

54. மேற்படி நூல், பக். 76-110.

55 திருச்சிற்றம்பலக் கோவை, நயநப்ப முதலியார் பதிப்பு, பக்கம் 1, (1841) சில வேறுபாடுகளுடன் இப்பாடல் கழகப் பதிப்பில் அச்சிடப்பட்டிருக்கிறது.