குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26ஆவது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்

வழங்கியருளிய

08 ஆசியுரை

ஆரணங்காண் என்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின்
காரணங்காண் என்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்:
ஏரணங்காண் என்பர் எண்ணர்: எழுத்தென்பர் இன்புலவோர்
சீரணங்காய சிற்றம்பலக்கோவையைச் செப்பிடினே.

-ஆன்றோர் வாக்கு

அறம் பொருள் இன்பம் வீடு:

மனிதன் அடையவேண்டிய பயன்கள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. இவற்றை வடநூலார் தர்மம், அர்த்தம் (பொருள்), காமம், மோட்சம் என்பர். இக்கருத்தையே நன்னூலாசிரியர் பவணந்தி முனிவர் "அறம் பொருள் இன்பம், வீடு அடைதல் நூற்பயனே" (நன்னூல் பொது. 10) என்னும் நூற்பாவால் தெரிவித்துள்ளார்.

இவற்றுள் அறமும், பொருளும், புறப்பொருளாகும். இன்பமும் வீடும் அகப்பொருளாகும். இவற்றுள் முதலும் கடையும் இன்றி அஃதாவது முதலில் உள்ள அறத்தையும், கடைசியில் உள்ள வீட்டையும் விட்டு இடையில் உள்ள பொருளையும், இன்பத்தையுமே எல்லோரும் அடைய விரும்புகின்றனர்.

இன்பம் துய்க்க வேண்டுமெனில் அதற்குப் பொருள் வேண்டும். பொருள் ஈட்டவேண்டுமெனில் அதற்கு முதல் வேண்டும். அம்முதலை வைத்துத் தொழில் செய்யவேண்டுமெனில் அதற்கு ஒரு கடை வேண்டும். முதல் தான் முதலில் உள்ள அறமாகும். கடைதான் கடைசியில் உள்ள வீடாகும். முதலும் கடையும் இன்றி பொருள் ஈட்டவும் இன்பம் நுகரவும் முடியாதன்றோ? எனவே வாழ்விற்கு முதலாகிய - அடித்தளமாயுள்ள அறத்தின் வழியே பொருளை ஈட்டி அப்பொருளின் வழியே இன்பம் துய்த்து, இவ்வுலகச் சிற்றின்பம் கைக்கும்போது உயிர்கள் வீடுபேறு அடைகின்றன. வீடுபேறே முடிந்த பயனாகும்.

பரனை நினைந்து பணி செய்க:

அறம் பொருள் இன்பம் வீடு என்பன பற்றி ஔவைப் பிராட்டியார் ஒரு வெண்பாவில் விளக்கியுள்ளமை அறிந்து இன்புறத் தக்கது.

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்

காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு

பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்

விட்டதே பேரின்ப வீடு. -ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64

நல்லோருக்கும் நற்செயலுக்கும் கொடுத்தலே அறமாகும். தீவினைவிட்டு நல்வழியில் ஈட்டுதலே பொருளாகும். எக்காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பமாகும். பரனை நினைந்து அவனருளால் இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீடாகும்.

வீடு என்றால் விடுபடுதல். விடுதலையை மட்டும் ஔவையார் சொல்லவில்லை. இவ்வுலகைவிட்டால் உயிர் பெறுவது பேரின்ப வீடாகும் என்கிறார். இதனால்தான் வீட்டை, வீடுபேறு எனக் குறித்தனர் அறவோர். வீடு - துன்ப நீக்கம். பேறு - இன்ப ஆக்கம் என்கிறது சித்தாந்த சைவம்.

இப்பாடலில் பரனை நினைந்து என்பதே முக்கியமானது. அவனன்றி அவனியில் ஒன்றும் அசையாதல்லவா? எனவே பரனை நினைந்து ஈதலே அறம் எனப்படும். பரனை நினைந்தாலே தீவினைவிட்டு நல்வினைப்பட்டுப் பொருளீட்டும் செயல் நிகழும். பரனை நினைந்தாலே இன்பமும் எக்காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுடன் நிகழும். பரனை நினைந்தாலே இம்மூன்றையும் விட்டு வீடுபேறடையவும் இயலும்.

எனவே இப்பாட்டில் "பரனை நினைந்து" என்பதை இடை நிலைத் தீவகமாகக் கொண்டு பொருள் காணவேண்டும்.

அடுத்தவன் பொருளை அறம் செய்யலாமோ:

பரனை நினைந்து என்று ஏன் சொன்னார் என்றால், எல்லாப் பொருள்களுமே பரமனது உடைமைகள். அவற்றை நாம் நமது உழைப்பிற்கேற்ப அவன் அநுமதிக்கும் அளவிற்கு அநுபவிக்கலாமே தவிர, நாமாகப் பிறர்க்கு வழங்க நமக்கு உரிமை இல்லை. அவனுடைய பொருள் என்னும்போது அவனை நினைந்து ஈதலே முறையாகும்.

இதனைப் பட்டினத்தடிகள் ஒரு பாடலில் குறிப்பிடுவது காண்க.

"பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்,

இறக்கும்பொழுது கொடுபோவதில்லை, இடைநடுவில்

குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்தது" -பட்டினத்தடிகள், திருஏகம்பமாலை, பா.7

என்பதே அப்பாடல் பகுதி.

சொத்து இறைவனது எனில், அவனது அநுமதி இன்றி அதன்மேல் நமக்கு என்ன உரிமை இருக்கிறது. எனவேதான் அறம் செய்தல், பொருள் ஈட்டல், இன்ப நுகர்வு, வீடுபேறு எல்லாமே அவனருளால் நாம் பெற்று நுகர்கிறோம். அப்பொருள்கட்கு நாம் காவலராகவும். தர்மகர்த்தராகவும் இருக்கிறோமேயன்றி பொருள் அனைத்தும் நமதாகாது. இத்தர்மகர்த்தா தத்துவத்தை நமக்கு முதலில் உபதேசித்த நூல் "ஈசாவாசியம்" என்னும் உபநிடதமாகும்.

இவ்வுபநிடதமே காந்தியடிகளை மிகவும் கவர்ந்தது. அவர் அதனைத் தனது வாழ்வில் மேற்கொண்டார். அதனால்தான் அவர் மகாத்மா காந்தி ஆனார். எனவே பரனை நினைந்து ஈதல், பரனை நினைந்து பொருளீட்டல், பரனை நினைந்து இன்பம் நுகர்தல், பரனை நினைந்து இம்மூன்றையும் விடுதல் எவ்வளவு பொருத்தமா யிருக்கிறது என்பதை உணர்ந்து கடைப்பிடித்து உயர்வோமாக.

உலகியல் சிற்றின்பம் நுகர உடல்வளர்ச்சியும் பக்குவமும் வேண்டும். உலகியற்கு அப்பாற்பட்ட பேரின்பம் நுகர வேண்டு மானால் உயிர் வளர்ச்சியடைந்து பக்குவப்படவேண்டும். உலகியல் இன்பம் சிறிது பொழுது இன்பம் பயத்தலின் இது சிற்றின்பம் எனப்பெறும். உடல் முதலிய கருவி கரணங்களைக் கொண்டு அநுபவிக்கப்பெறுவது. இறையியல் பேரின்பம் நுகர உயிர் பற்றற்றுப் பக்குவப்பட்டாலே இறையருளில் திளைக்கும் பேரின்ப அநுபவம் கிட்டும். இப்பேரின்ப நிலையை உலகியல் சிற்றின்ப வாயிலாக அருளியல் பேரின்ப அநுபவங்களை எல்லோரும் பெறுமாறு திருக்கோவையார் என்னும் அருள்நூலால் தெளிய விளக்கி அருள்கிறார் மணிவாசகர்.

அகஒழுக்கமும் புறஒழுக்கமும்:

பழம்பெரும் நாகரிகப் பண்பாடு வாய்ந்த நாடு நம் பாரத நாடு. அதனிலும் தென்தமிழ்நாடு பல்லாற்றானும் பண்பாடுடையது. வாழ்வியலை அகவாழ்வு, புறவாழ்வு என இருதிறப்படுத்தி, அகவாழ்வை அக ஒழுக்கம் என்றும், புறவாழ்வைப் புற ஒழுக்கம் என்றும் நெறிப்படுத்தினர். அக ஒழுக்கத்தை அகத்திணை என்றும், புறஒழுக்கத்தைப் புறத்திணை என்றும் அமைத்தனர்.

திணை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும் சொல்.

முத்தமிழ்:

வாழ்வை, அகம், புறம் என்று அறிவித்த நமது முன்னோர், நாம் பயிலும் மொழியை இயல், இசை, நாடகம், என முத்தமிழாக மொழிந்தனர். இங்கு இயல் என்பது அறிவியல். இசை என்பது அறிவியலை இசையால் - சொல்லால் மக்கட்குப் புலப்படுத்தும் சிறந்த கருவிகள் இரண்டனுள் ஒன்று. நாடகம் என்பது அறிவை மெய்ப்பாடு என்னும் நடிப்பால் புலப்படுத்தும் மற்றொரு கருவி. ஒரு பறவை என்பது இயலாகிய அறிவு என்றால், அப்பறவை பல இடங்கட்கும் செல்வதற்குத் துணை செய்யும் இரு சிறகுகள் போல்வன இசையும் நாடகமும் என்பது சிந்திப்பார்க்குப் புலனாகும்.

தகுதியுடையோர்க்கே உபதேசம்:

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் அறவுரையைத் தகுதி வாய்ந்தவர்கட்கே உபதேசிக்கவேண்டும் என்பார் ஞானசம்பந்தர். திருமுதுகுன்றத் தேவாரத்தில் இதனைக் காணலாம்.

சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல் அரா நல் இதழிச்

சழிந்த சென்னிச் சைவவேடந் தான் நினைந்து ஐம்புலனும்,

அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு

மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே. (தி.1 ப.53 பா6)

புறம் என்பது எல்லோருக்கும் விளங்குமாறு எடுத்துச் சொல்ல இயல்வது. அகம் என்பது ஒருவன்தானே அந்நிலை எய்தி அநுபவித்து அறிவதேயன்றிப் பிறர்க்கு இவ்வாறு இருந்தது என்று எடுத்துச் சொல்ல இயலாதது. இன்பமும் வீடும் அத்தகையனவே.

இதனைத் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார்

"இங்ஙண் இருந்ததென்று எவ்வண்ணம் சொல்லுகேன்

அங்ஙன் இருந்ததுஎன்று உந்தீ பற; அறியும் அறிவதன்று [உந்தீ பற:" திருவுந். பா. 4

என்று தாம் அருளிய திருஉந்தியார் என்னும் நூலில் தெரிவித் துள்ளார். திருமூலரோ,

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

மகட்குத் தாய் தன் மணாளனோடாடிய

சுகத்தைச்சொல் என்றால் சொல்லுமாறு எங்ஙனே? (தி.10 பா. 2944)

என்று தெரிவிக்கிறார்.

வழக்க, பழக்க, ஒழுக்கம்:

"வழக்கெனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர்கட்டாகலான" -தொல். மரபியல் 93

என்பது தொல்காப்பியம். உலகியல் நடைமுறையை வழக்கு என்கிறோம். பண்பாடு இல்லாதாருடைய நடைமுறையை வழக்கென்றல் கூடாது. பண்பால் உயர்ந்தோருடைய நெறிமுறைகளே வழக்கெனக் கொள்ளப்படும். அவ்வழக்கத்தையே ஒழுக்கம் எனப்போற்றி மேற்கொள்கிறோம். பெரியோர் வழக்கமே மக்களிடையே பழக்கமாகிப் பின்னர் அதுவே ஒழுக்கம் என மக்களால் போற்றப்படுகிறது. எனவே அகம், புறம் என்னும் இருவகை ஒழுக்கமும் உயிரினும் மேலாக ஓம்பப்படும் என்பதைத் திருவள்ளுவர்,

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும். -குறள் 131

என அறிவிக்கிறார். ஒழுக்கம் என்று வாழ்வில் எல்லாத் துறைகளிலும் இருந்தபோதிலும் சிறப்பாக அகத்துறையில் குடும்ப வாழ்க்கையில் நெறியோடு வாழ்வதையே ஒழுக்கம் எனக் கொள்ளப்படுகிறது. ஒருவனை ஒழுக்கம் கெட்டவன் என்றால் அது புறத்துறை ஒழுக்கத்தைக் குறியாது அகத்துறை வாழ்வில் கெட்டவன் என்ற பொருளையே உலகியலில் குறிப்பதைக் காணலாம்.

ஒழுக்கமும் அன்பும்:

மேலும் ஆண்களின் அகவாழ்வு நெறிமுறையை ஒழுக்கம் என்றும் பெண்களின் அகவாழ்வு நெறிமுறையைக் கற்பு என்றும் தமிழ்ப் பண்பாடு நமக்கு அறிவிக்கிறது. கற்பு என்பது கற்றலையும் கற்பித்த வழி நிற்றலையுமே குறிக்கிறது. பெண்களுக்குப் பெற்றோரும் ஆசிரியரும் கற்பித்த வழி நிற்றலே கற்பெனப் போற்றி வந்துள்ளனர். "கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை" என்னும் கொன்றைவேந்தன் 14ஆம் வரியும் நினைவு கூரத் தக்கது.

கற்பு என்ற சொல், பெண்ணியல் கற்பு என்ற பொருளிலும் கற்றல் என்ற பொருளிலும் சங்க இலக்கியங்களிலும் திருமுறை இலக்கியங்களிலும் வருவது காணலாம். ஞானசம்பந்தரை வெப்புநோய் வாதத்திற்கு அழைத்தபோது அவர் மதுரைத் திருக்கோயிலுக்குச் சென்று சொக்கநாதர் சந்நிதியில் "காட்டுமா வதுரித்து" என்று தொடங்கும் பதிகம் (தி.3 ப.47 பா.1) பாடினார். அப்பதிகத்தில் "மண்ணகத்திலும்" என்று தொடங்கும் மூன்றாம் பாடலின் இறுதி வரியில் "தெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே" என்றருளினார். இங்கு கற்பு என்பது சமணர் கற்ற கல்வியின் நீர்மை இலாச்செயலை அழிக்கத் திருவுள்ளம் செய்யவேண்டும் என்பதே பொருளாகக் கொள்ள வேண்டும். இங்கு கற்பு என்பதற்கு மகளிரின் ஒழுக்க நெறிகள் என்று கொள்ளல் பொருந்தாது.

இதே போன்று திருப்பழுவூர்த் தேவாரத்தில் திருஞானசம்பந்தர் "மேவயரும் மதிலும்" என்று தொடங்கும் பாடலில் மூன்று, நான்காம் வரிகள் சிந்திக்கற்பாலன.

"பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ்சொல்லிப்

பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே" (தி.3 ப.34 பா.6)

என்பது அப்பாடற்பகுதி. இதன் கருத்து பூவை என்னும் நாகணவாய்ப் பறவைக்கு மகளிர் இறைவன் புகழைக் கற்பித்து வருகிறார்கள் என்பதாகும். இங்கு கற்பு என்பது கற்பித்தலையே குறிக்கிறது. இது பற்றித் தருமை ஆதீனக் குரு முதல்வர் குருஞானசம்பந்தர் மகளிர் ஒழுக்கத்தையும், கற்றலையும் குறிக்குமாறு சிவபோகசாரம் என்னும் நூலில் அருளியுள்ளதும் இங்கு சிந்தித்தற்குரியது. அப்பாடல் வருமாறு :

நீதியிலா மன்னர் இராச்சியமும் நெற்றியிலே

பூதியிலார் செய்தவமும் பூரணமாம் - சோதி

கழலறியா ஆசானும் கற்பிலரும் சுத்த

விழல்எனவே நீத்துவிடு. -சிவபோக. பா. 130

இப்பாடலில் கற்பிலரும் என்பது கல்லாதவரையும், கற்பொழுக்கம் இல்லாதவரையும் குறித்தல் காணலாம்.

இன்னோரன்ன கருத்துக்களையெல்லாம் ஒருங்கு திரட்டித் தமது திருக்கோவையார் என்னும் அருள்நூலில் மாணிக்கவாசகர் அருளியுள்ளதை இனிக் கண்டு மகிழலாம்.

வாசகம் - கோவை:

சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறை, திருவாசகம், திருக்கோவையார் என்னும் இரு பிரிவுகளை உடையது. இவற்றை அருளிச் செய்தவர் மணிவாசகப் பெருமான் ஆவார்.

திருவாசகம் தோத்திரமாக விளங்குவது. திருக்கோவையார் தனிப் பிரபந்த இலக்கிய அமைப்பில் திகழ்வது.

திருக்கோவையார்:

மணிவாசகர் தில்லையில் எழுந்தருளியிருந்தபோது தில்லைப் பெருமான் அந்தணராக அவர்முன் சென்று திருவாசகத்தைச் சொல்லக்கேட்டுத் தம் திருக்கையால் எழுதிக்கொண்டதோடு "பாவை பாடிய நும் வாயால் ஒரு கோவை பாடுக" எனக் கேட்க, மணிவாசகர் அருளிச் செய்த தெய்வப் பனுவல் திருக்கோவையார் ஆகும். இந்நூல் தில்லையைப் போற்றும் முறையில் அமைந்த அகத்திணைக் கோவை ஆதலின் திருச்சிற்றம்பலக்கோவையார் எனப்பெற்றது. சிவ பிரானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பெற்ற நூல் ஆதலின் இக்கோவை நூல், "திரு" என்ற அடைமொழியையும் உயர்திணைப் பலர்பால் விகுதியாகிய "ஆர்" என்பதனையும் பெற்று திருக்கோவையார் என வழங்கப் பெறுகிறது.

பிரபந்த விளக்கம்:

கோவை என்னும் பிரபந்தம் அகப்பொருளில் ஐந்திணை ஒழுகலாறுகளைத் தெரிவிப்பது. பல பிறவிகளில் கணவனும் மனைவியுமாக வாழ்ந்த அன்புடையார் இருவர் வேறு வேறு இடங்களில் பிறந்தனராயினும் நல்லூழின் பயனாக ஓரிடத்து எதிர்ப்பட்டு, அன்பினால் கூடிவாழும் இயல்பைக் கூறுவது. இவ்வைந்திணை ஒழுக்கம் களவு, கற்பு எனும் இரண்டு பிரிவுகள் கொண்டது. இதனை வரிசைப்படுத்தி உரைக்கும் நூலே கோவையாகும்.

முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முகந்து

களவு கற்பெனும் வரைவுடைத்தாகி

நலனுறு கலித்துறை நானூ றாக

ஆறிரண்டு உறுப்பும் ஊறின்றி விளங்கக்

கூறுவ தகப்பொருட் கோவையாகும். -இலக்கண விள. பா. 56

என்பது கோவைக்குரிய இலக்கண விளக்கப்பாட்டியல் நூற்பா. கோவையில் பாட்டுடைத் தலைமகன் பெயரைக் கூறலாம். கிளவித் தலைவன், தலைவி, பாங்கன், பாங்கி பெயர்களைக் கூறுதல் கூடாது என்பது விதி.

கோவைப் பிரபந்தம் பாடுவோர் பாட்டுடைத் தலைவனின் பெயர் அவனது வீரம் கொடை முதலான பண்புகளைக் கூறுவர். இவ்வகையில் எழுந்தவை பாண்டிக் கோவை, அம்பிகாபதிக் கோவை, தஞ்சைவாணன் கோவை முதலியனவாகும்.

மணிவாசகர் திருச்சிற்றம்பலமுடையானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவன் புகழைக் கூறும் நிலையில் இப்பிரபந்தத்தை அருளியுள்ளார். இக்கோவையில் கூறப்படும் கிளவித்தலைவன், தலைவி, பாங்கன், பாங்கி யாவரும் தில்லைப் பெருமானிடம் பத்திமை உடையவர்கள் ஆதலின் அவர்கள் கூற்றுக்கள் யாவும் சிவன் புகழ்பேசும் செம்மையினவாகவே அமைகின்றன.

பாவையும் கோவையும்:

பெரிய புராணத்தில் நங்கை பரவையாரைக் கண்ட சுந்தரர் "பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ அற்புதமோ சிவன் அருளோ" (தி.12 தடுத். பா.140) என ஐயுறுவதையும், அவ்வாறே பரவையாரும் சுந்தரரைக் கண்டு "மின்னேர் செஞ்சடையண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ" (தி.12 தடுத். பா.144) எனக் கூறுவதையும் காணலாம். மணிவாசகர், திருவெம்பாவையில் "உன்அடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து சொன்னபடியே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்னவகையே "எமக்கு எங்கோன் நல்குதி" (தி.8 திருவெம்பாவை பா. 9) எனக் கன்னிப் பெண்கள் இறைவனை வேண்டுதலைக் கூறியருள்கிறார். அதனால் தான் போலும் `பாவைபாடிய வாயால் கோவைபாடுக' என இறைவன் கேட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.

பாத்திரங்களின் பக்தி:

தலைவன்,

"அணியும் அமிழ்தும் என் ஆவியும் ஆயவன் தில்லைச்சிந்தா

மணி உம்பரார்அறியா மறையோர்அடி வாழ்த்தலரில்" (தி.8 கோவை பா.16)

எனத் தில்லைப் பெருமான் தனக்கு அணியும் அமிழ்தும் ஆவியுமாக இருக்கின்றமையைப் புலப்படுத்தியிருத்தலையும், தலைவியின் கண்ணழகைப் பாராட்டுமிடத்து, "ஈசற்கு யான்வைத்த அன்பின் அகன்று அவன் வாங்கிய என் பாசத்திற்காரென்று" (தி.8 கோவை பா.109) என அவள் கண்களை வருணித்தலையும், பாங்கன், "சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான்" எனப் போற்றுதலையும் (தி.8 கோவை பா.20 ) தோழி "பல்பிறவித் தொகை தணித்தற்கு என்னை ஆண்டு கொண்டோன்" (தி.8. கோவை பா.314) எனத்தன் சிவபக்தியைப் புலப்படுத்தலையும், தாய், சுடரோடு இரத்தல் என்னும் துறையில் "நான்நணுகப் பெற்றேன் பிறவிபெறாமல் செய்தோன் தில்லை" (தி.8. கோவை பா.232) எனத் தில்லையிறைவன் தனக்குப் பிறவிவேர் அறுத்ததையும் குறிப்பிடுதலைக் காணலாம்.

இவ்வாறு கிளவித் தலைவன் முதலானோரும் திருச்சிற்றம்பல முடையானைப் புகழ்ந்துபோற்ற அருளிச் செய்துள்ள இக்கோவைநூல் பக்திமருந்தைத் தேனோடு கூட்டித் தருதல் போல உள்ளதாதலை இந்நூலிற் காணலாம்.

பேராசிரியரின் உரைமாட்சி:

திருச்சிற்றம்பலக்கோவையார் இயற்கைப்புணர்ச்சி முதலாக இருபத்தைந்து அதிகாரங்களோடு நானூறு செய்யுட்களைக் கொண்டுள்ளது. இக்கோவைநூலுக்குத் திட்பநுட்பங்களுடன் பேராசிரியர் என்பார் உரைவரைந்துள்ளார். பேராசிரியரால் இயற்றப்பெற்ற இவ்வுரை திருவாதவூரடிகள் உணர்த்த எடுத்துக் கொண்ட அறிவனூற் பொருளையும் உலக வழக்கையும் தெள்ளிதின் விளக்கும் முறையில் அமைந்துள்ளது.

தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியர் வேறு. திருக்கோவையாருக்கு உரைகண்ட பேராசிரியர் வேறு என்பதை இந்நூலின் உரைமாட்சியில் செந்தமிழ்க் கலாநிதி திரு. டி.வி. கோபாலய்யர் தெளிவுபடுத்தியுள்ளமை காண்க.

திருவளர் தாமரை:

இந்நூலின் தொடக்கப் பாடல் இயற்கைப் புணர்ச்சியில் காட்சி என்ற துறைக்குரியது.

திருவளர் தாமரை, சீர்வளர் காவிகள், ஈசர்தில்லைக்

குருவளர் பூங்குமிழ், கோங்கு,பைங் காந்தள்கொண் டோங்க தெய்வ

மருவளர் மாலைஓர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந்து

உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்று ஒளிர்கின்றதே. (தி.8 கோவை பா.1)

என்பது பாடல். தலைமகன் தலைவியைக் காணுகின்றான். அப்பெண் சிவபிரான் உறையும் தில்லையில் வியக்கத்தக்க நிலையில் மலர்ந்துள்ள தாமரை, நீலம், குமிழ், கோங்கு, காந்தள் ஆகிய மலர்களால் தொடுத்த மாலைபோன்ற தோற்றத்தினளாய், அன்னம்போன்ற நடையினை உடையவளாய், காமனின் வெற்றிக் கொடிபோலக் காட்சி தருகிறாள். இப்பாடலில் திரு என்பதற்கு கண்டாரால் விரும்பப்பெறும் அழகையே திரு எனக் குறிப்பிடுகிறார் பேராசிரியர்.

இப்பாடலில் கூறப்பட்டுள்ள மலர்கள் அத்தலைவியின் முகம், கண், மூக்கு, தனம், கை ஆகியவற்றைக் குறிப்பன. மேலும் இம்மலர்கள் முறையே மருதம், நெய்தல், முல்லை, பாலை, குறிஞ்சி நிலங்கட்குரியன.

பேராசிரியர் இப்பாடலின் பொருட்சிறப்பைக் கூறுமிடத்து "இப்பாடற்குரிய காட்சி என்னும் துறை குறிஞ்சி நிலத்திற்கு உரியதாயினும் நிலமயக்கமாக ஏனைய நிலங்கட்கும் உரிய பூக்களையும் கூறியது பல நிலங்களிலும் சென்று துய்க்கும் இன்பத்தைத் தில்லையே தரும் என்பதை உணர்த்தற் பொருட்டேயாகும். மேலும் பாலைக்குத் தனியே நிலமில்லை என்பதை ஆசிரியர் அந்நிலப்பூவுக்கு அடைமொழி தாராமையால் உணர்த்தினார்" என்கிறார். மேலும் "ஓரிடத்துக் கலியாணம் நடந்தால் எல்லா நிலத்தவரும் வந்து தம்மிடமுள்ள அணிகலன்களை அளித்துச் சிறப்பிப்பது போல எல்லா நிலங்களும் தத்தம் மலர்களை அளித்துக் குறிஞ்சியைச் சிறப்பித்தன" எனவும் கூறுகிறார்.

அடைமொழி:

அடைமொழி தருதலால் ஒரு பொருள் சிறப்பெய்தலும் உண்டு, தாராமையால் சிறப்பெய்தலும் உண்டு. தலைவியின் முகம் முதலியவற்றைக் குறிக்கும் மலர்கட்கு அடைமொழி தந்த ஆசிரியர் அப்பெண்ணின் சிறந்த உறுப்பாகிய தனங்களைக் குறிக்கும் கோங்கிற்கு அடைமொழி கூறவில்லை. கோயில் குளம் முதலிய வற்றுக்கு திரு என்னும் அடைமொழி கொடுத்துக் கூறுவோர் அக் கோயிலில் விளங்கும் சிவனுக்கு திரு என்னும் அடைமொழி கூறல் இல்லை. சிறந்த பொருளை அடைமொழியின்றிக் கூறலும் சிறப்பாகும் என்பதை இதனால் அறியலாம் என விளக்கியுரைக்கும் பேராசிரியர் உரை கற்போர்க்குப் பெருவிருந்தாக விளங்குவது.

கலவியுரைத்தலில் அம்மை அப்பர்:

தலைவன் தலைவியின் கலவியின்பத்தைப் பெற்ற பின்பு அதன் இயல்பைக் கூறுதல் எனப்படும் துறைஇது.

சொற்பால் அமுதிவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே

நற்பால் வினைத் தெய்வம் தந்தின்று நான்இவ ளாம்பகுதிப்

பொற்பார் அறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில் வெற்பில்

கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே. (தி.8 கோவை பா.8)

"பெரும்பற்றப்புலியூர்ப் புனிதனின் பொதிய மலையிடத்துக் களவொழுக்கமாக அமுது இவளென்றும் யான் சுவையென்றும் கூறுமாறு ஊழ் எங்களைக் கூட்டிற்று, நான் என்றும் இவளென்றும் கூற ஒண்ணாதவாறு நாங்கள் கூடிய கூட்டத்தின் அழகை, யார் அறிந்து கூற இயலும்" என்பது இப்பாடலின் பொருளாகும். இங்கும் தத்துவம் சொல்லியுள்ளமை அறிந்து இன்புறத்தக்கதது. அமுது தலைவி, சுவை தலைவன் என்பதே அது. சொல்சக்தி என்றால் அச்சொல்லால் குறிக்கும் பொருள் சிவமே என்பது குறிக்கப்படுகிறது. காண்க!

திருக்கோவையாரின் ஒவ்வொரு பாடலிலும் உலகியற் பொருளோடு மெய்ப்பொருள் இயல்புகளையும் மணிவாசகர் கூறியருளியுள்ளார். அவற்றை உரையாசிரியர்கள் பலரும் இனிது எடுத்து சிவத்தின்வேறாய் நில்லாது அதன்கண் அழுந்தி ஒடுங்கிய வழியே உளதாவது என்பது இதனால் உணர்த்தப்படுவதாகக் கூறியுள்ளனர் "நான் இவளாம் பொற்பு" என்றது நான் பிரமமாகின்றேன் என்னும் பொருளையுடைய அகம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியத்தையும், பிரமம் நீ யாவாய் என்னும் பொருளையுடைய தத்துவமசி என்ற மகா வாக்கியத்தையும் உணர்த்தும் குறிப்புடையது எனக்கூறுவர். அத்துவிதம் இரண்டு பொருள்கள் கலப்பினால் ஒன்றாதலையும் பொருள் தன்மையால் வேறாதலையும் குறிக்கும். அவ்வத்துவித நிலையை இப்பாடல் குறிக்கிறது.

உயிரென வியத்தல்:

தலைவன் தான் முன்னாளில் தலைவியை எதிர்ப்பட்ட பொழிலை அடைந்து அங்கு நின்ற தலைவியைக்கண்டு என் உயிர் இதோ நிற்கிறது என வியந்துகூறல்.

நேயத்ததாய் நென்னல் என்னைப்புணர்ந்து நெஞ்சம் [நெகப்போய்

ஆயத்ததாய் அமிழ்தாய் அணங்காய் அரன்அம்பலம் போல்

தேயத்ததாய் என்றன் சிந்தையதாய்த் தெரியிற் பெரிதும்

மாயத்ததாகி இதோவந்து நின்றதென் மன்னுயிரே. (தி.8 கோவை பா.39)

நேற்று என்பால் அன்பு செய்து கூடிப்பின்நேயம் இல்லதுபோல் என்னை நீங்கி ஆயத்தினரிடையே கூடி, இன்பம் செய்தலின் அமிழ்தாய் துன்பம் தருதலின் அணங்காய் அரன் அம்பலம் போலத் தோற்றப்பொலிவுடையதாய், புலப்படாமல் என்சிந்தையின் கண்ணதாய் மாயம் செய்யும் என் உயிர் இதோ வந்து நின்றது என்பது இப்பாடலின் பொருளாகும்.

உலகியல் நிலையில் தலைவன் தலைவியைத் தன் உயிராகக் கண்டு வியந்து கூறுவதாக அமைந்த இப்பாடல் திருவாதவூரடிகள் திருப்பெருந்துறையில் தமக்குக் குருவாக வெளிப்பட்டு அருள் செய்து மறைந்தருளிய அற்புத நிகழ்ச்சியை நினைந்துபோற்றும் நிலையில் அமைந்திருக்கக் காணலாம்.

திருமால் வரங்கிடத்தல்:

தில்லையம்பலவன் வாயிலில் திருமால் கோயில் இருத்தலைகக் காணலாம். மணிவாசகர் திருமால் கிடந்த நிலையில் விளங்கற்குக் கற்பனையான காரணம் ஒன்றைப் படைத்து மொழிகின்றார். மாயவனாகிய திருமால் முப்புரங்களை வென்ற சிவபெருமானுடைய திருவடிகள் இரண்டையும் காணவேண்டி நிலத்தைப் பிளந்து சென்று காணாது அப்பெருமானையே இரங்கிடு என வேண்ட தன்னை வணங்க இரண்டு கரங்களைத் தந்த இறைவன் மேலும் சிறிது திருவுளம் இரங்கி, தில்லையில் தூக்கிய ஒரு திருவடியைக் காட்டினானாக மற்றொரு திருவடியையும் காட்டியருள வேண்டுமென அத்தில்லையம்பல வாயிலிலேயே மாயவன் வரங்கிடக்கிறான் எனக்கூறும் கோவையார்ப் பாடல் இது.

புரங்கடந்தான்அடி காண்பான் புவிவிண்டு புக்கறியாது

இரங்கிடுஎந்தாய் என்றிரப்பத்தன் ஈரடிக்கென் இரண்டு

கரங்கள்தந்தான் ஒன்றுகாட்டிட மற்றாங்கதும் காட்டிடென்று

வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றில்அம் மாயவனே. (தி.8 கோவை பா.86)

இப்பாடலுக்குப் பேராசிரியர் "புரங்கடந்தான் அடிகளைக் காணமுற்பட்ட மாயோன் பன்றியாய்த் தாமரையையும், நான்முகன் அன்னமாய்க் காட்டையும் தேடுதலால் கண்டிலர் இது நெறியல்லா நெறியாயிற்று" என எழுதும் உரை கற்போர்க்குப் பெருவிருந்தாய் அமைவது.

மணிவாசகர் காலம்:

மேலும் இப்பாடல் மணிவாசகர் காலத்தை அறிதற்குத் துணை புரிவதாகும். தில்லை நடராசர் கோயிலின் முன்பில் திருச் சித்திரக்கூடம் என்னும் பெருமாள் சந்நிதியை அமைத்தவன் திருமங்கையாழ்வார் காலத்தில் வாழ்ந்த நந்திவர்மப்பல்லவ மன்னன் ஆவான். இவனது காலம் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். மணிவாசகர் இத்திருக்கோவையாரில் தில்லை முன்றிலில் விளங்கும் மாயோனைக் குறிப்பிடலால் அவரது காலம் 8ஆம் நூற்றாண்டுக்கு முன்னரன்று என ஆய்வாளர் கூறுவது சிந்தனைக்குரியது.

தமிழ்ப்பண்பாடு:

மணிவாசகர் திருக்கோவையாரில் குறிப்பிடும் அரிய தமிழ்ப் பண்பாட்டை அறிதல் பயனுடைத்தாகும்.

உடன் போக்கு என்னும் துறையில் தலைமகனுடன் சென்ற தலைமகளைக் தேடிக்கொண்டு சென்ற செவிலித்தாய் தன்மகளையும் அவள் காதலனையும் ஒத்த காதலர்களாய்த் தனக்கு எதிரே வந்த இருவரைக் கண்டு அவர்களை அணுகி வினாவினாள். இம்மேதகவே பூண்டார் இருவர் முன்போயினரோ என்பதே அவ்வினா. அவ்வினாவின் மறுமொழியே தமிழ்ப் பண்பாடால் மிளிர்கிறது. அவ்விருவருள் தலைவன் அவளுக்கு மறுமொழி கூறும் நிலையில் அமைந்த திருக்கோவையார்ப் பாடல் இது.

மீண்டா ரெனவுவந்தேன் கண்டுநும்மை இம்மேதகவே

பூண்டார் இருவர்முன்போயினரே? புலியூர் எனைநின்று

ஆண்டான் அருவரை ஆளியன்னானைக் கண்டேன், அயலே

தூண்டா விளக்கனையாய்! என்னையோ அன்னை சொல்லியதே. (தி.8 கோவை பா.244)

காதலராய் வரும் நும் இருவரது தோற்றத்தைக் கண்டு நான் தேடி வந்த என் மகளும் அவளை அழைத்துச் சென்ற காதலனும் ஆகிய அவ்விருவரும் மீண்டு வந்தார்களோ என எண்ணி மகிழ்ந்தேன். நும்போன்ற இருவர் இவ்வருஞ்சுரத்தில் சென்றனரோ உரைமின் எனக்கேட்டான். அதற்கு அத்தலைவன் கூறிய விடை நம்மை வியக்கவைக்கும் நிலையில் தமிழ்ப்பண்பை விளக்குகின்றது.

புலியூர்க்கண் என்னை ஒரு பொருளாக மதித்து ஆண்ட இறைவனது மலைக்கண் சிங்கத்தினை ஒப்பானாகிய தலைவனை யான் கண்டேன் எனச் செவிலிக்கு மறுமொழி கூறிய தலைவன் தன் அருகே நின்ற தலைவியைப் பார்த்து, "தூண்டா விளக்கனையாய், அத்தலைமகனின் அயலே அன்னை சொல்லியது யாது? அன்னை கேட்பதற்கு நீ விடை அளிப்பாயாக" எனச் சொல்லி நின்றனன் என்னும் பாடற்பொருள் பிறிதொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காத தமிழ்ப் பண்பை விளக்குவதாக உள்ளது.

கண்ணயந்துரைத்தல்:

தலைவன் தலைவியின் அவயவ அழகை உரைக்குமிடத்து அவளது கண்களின் அழகை விவரிக்கும் பாடல் மணிவாசகர் சிவபிரான் மீது கொண்டுள்ள அளவற்ற பக்திச் சிறப்பை இனிதெடுத்து விளம்புவதாக அமைந்துள்ளது.

ஈசற்கு யான்வைத்த அன்பின்அகன்று, அவன் வாங்கியஎன்

பாசத்திற் காரென்று,அவன் தில்லையின் ஒளிபோன்று, [அவன்தோள்

பூசத்திருநீறு எனவெளுத்து, ஆங்கவன்பூங்கழல்யாம்

பேச்திருவார்த்தை யிற்பெருநீளம் பெருங்கண்களே. (தி.8 கோவை 109)

தலைவியின் கண்கள் யான் தில்லைப் பெருமானிடம் கொண்டுள்ள அன்புபோன்று அகலமானது. அவன் என்பால் இருந்து நீக்கிய பாசத்தைப் போன்று கருமையானது. அவன் தில்லையின் ஒளிபோல ஒளியுடையது. அவன் தன் செந்நிறமான தோள்களில் பூசிய திருநீறுபோலச் செம்மையின் மேல் பூத்த வெண்மையுடையது. அவன் புகழ்போல நீண்டது எனக் கூறும் இப்பாடல் மணிவாசகர் திருவெம்பாவையில் மழை வாழ்த்தாகக்கூறும் `முன்னிக்கடலை' (தி.8 திருவெம்பாவை பா.16) என்னும் பாடலில் அம்மையின் அழகையே உவமிக்கும் அமைப்பில் விளங்குவதாகும்.

பக்திச்சுவை நனி சொட்டப்பாடிய சேக்கிழாரும் இத்தகைய உவமைகளைக் கையாளுவதைப் பெரியபுராணத்தில் காணலாம். அடியவர் உள்ளம் புனிதமாக விளங்குவதைச் சேக்கிழார், பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள் எனக் கூறுவதையும், அடியவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது தலையால் வணங்குவது போல நெற்பயிர்கள் கதிர்முற்றித் தலைசாய்ந்தன எனக்கூறுவதையும் பெரியபுராணத்துள் காணலாம்.

உணர்ந்தார்க்கும் உணர்வரியோன்:

இறைவனை உணர்ந்தவர்கள் ஞானியர்கள். அவர்கள் ஒரு முறை உணர்ந்தபடியேதான் இருப்பான் இறைவன் என்று சொல்ல இயலாது. அவன் பல கோணங்களிலும் பலபடியாயிருப்பான் என்பதே உண்மை. `அது பழச்சுவை என, அமுதென, அறிதற்கு அரிதென, எளிதென, அமரரும் அறியார்' (தி.8 திருப்பள்ளி. பா.7) என்னும் மணிமொழியை உணர்க. மேலும் அதே திருப்பள்ளி யெழுச்சிப் பகுதியில், `கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை' என்பதால், இறைவனது முழுமுதல் தன்மையை இதுவரை எவரும் முற்றும் உணர்ந்திலர், கண்டிலர் என்பதை இப்பாடலும் உணர்த்துகிறது.

அவனை உணருந்தோறும் புதிதாய்ப் பற்பல உண்மைகளை உணர்வது போல, இத்தலைவியைப் புணரும்தோறும் புதிதாய்ப் பற்பல அநுபவங்களை உணரலாம் என்று போற்றி உரைத்துள்ளமை, சிற்றின்பத்துக்கும் பேரின்பத்துக்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்துவனவாயுள்ளன. அப்பாடல் காண்க.

உணர்ந்தார்க்கு உணர்வரியோன் தில்லைச் சிற்றம்பலத் தொருத்தன்

குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாய் இக்கொடியிடைத்தோள்

புணர்ந்தால் புணருந்தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய்

மணந்தாழ் புரிகுழலாள் அல்குல்போல் வளர்கிறதே. (தி.8 கோவை. பா.9)

கூம்பல் அங்கைத்தலம்:

கூப்பிய கைகளை உடையஅன்பர்களின் என்பும் கரைந்து உருகுமாறு தில்லையிலே ஆனந்தக் கூத்தாடுகின்றான் நடராஜப் பெருமான். அதேபெருமான் தில்லையைப் பாடும் பத்தியில்லாதவர் எப்படி மெலிந்து துவள்கின்றனரோ அதைப்போல் இவளுடைய மெல்லிடை மெலிந்து துவள்கின்றது என்று பெருமானது அருளின் பெருமையும் நிலையாத மருளின் சிறுமையும் (தி.8 கோவை பா.11) இப்பாடலில் குறித்துள்ளமை அறிந்து மகிழ்தற்குரியது. அப்பாடல் காண்க.

கூம்பலங் கைத்தலத் தன்பரென் பூடுரு கக்குனிக்கும்

பாம்பலங் காரப் பரன்றில்லை யம்பலம் பாடலரின்

தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள் தீங்கனி வாய்கமழும்

ஆம்பலம் போதுள வோஅளி காள்நும் அகன்பணையே. (தி.8 கோவை பா.11)

சிற்றம்பலத்தும் சிந்தையுள்ளும்:

இறைவன் புறத்தே சிற்றம்பலத்திலும் அகத்தே சிந்தையுள்ளும் தகராகாசத்திலும் உறைபவன். அங்ஙனம் உறைபவன், கூடலாகிய மதுரையில் தலைச்சங்கம் அமர்ந்து ஆய்வு செய்த இயற்றமிழாகிய எளிய இனிய தமிழின் துறைவாய் ஆய்வுசெய்ய நுழைந்தனையோ? அன்று ஏழிசைச் சூழல் ஆய்வு செய்யப் புக்கனையோ? இவ்விரண்டும் உடலை மெலிவிக்கும், உயிரை உயர்விக்கும். எனவேதான் தோள் மெலிந்திருக்கும் காரணம் என்னவோ? என்று பாங்கன் தலைவனை வினவுகிறான்.

தலைவன் தலைவியைப் பிரிந்து அவள் நினைவாகவே ஏங்குதலால் அவன் உடல் மெலிவுற்றது. இதனைத் தமிழ் ஆய்வு மேலும், தமிழிசை ஆய்வு மேலும் வைத்து வினவினான். இம்மூன்றாலும் உடல் மெலியும் என்பதைப் பின்வரும் பாடலில் குறிப்பிட்டவாறு உணரலாம்.

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் என்சிந்தையுள்ளும்

உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனையோ அன்றி ஏழிசைச் சூழல் புக்கோ?

இறைவா தடவரைத் தோட்கு என்கொலாம் புகுந்து எய்தியதே. (தி.8 கோவை பா.20)

கோம்பிக்கு ஓங்கி மேயா மஞ்ஞை:

பாம்பு யானையைக் கொல்லும் ஆற்றல் உடையது. அப்பாம்பைக் கொல்லும் ஆற்றல் உடையது மயில். அத்தகைய ஆற்றல்மிக்க மயிலைப் பச்சோந்தி கொன்றுவிடும். இஃது என்போல்வதெனின், கொங்கைகட்கு மெலியும் இடையானது என் ஆற்றலை அழித்துவிட்டது. எனது ஆற்றல் எப்படிப்பட்டது எனில், தில்லைச் சிவனார் தாள் சூடிய திறத்தால் புறப் பகையோடு அகப் பகையாகிய வினையையும் வெல்ல வல்லது. எனவே பச்சோந்திக்கு ஆற்றல் மிக்க மயில் அஞ்சுவது போல, அருள் மிக்க யான் இவள் இடைக்கு அஞ்சுகிறேன் என்கிறான் தலைவன்.

பொய்யுடையார் மெய்யுடையார்:

பொய்யுடையார்க்கு அரன் அகப்படாது அகல்வான். மெய்யுடையாருக்கு அவ்வரன் மிகவும் நெருக்கமாய் இருந்து அருள் புரிவான். இஃது எது போன்றது என்பதைத் தலைமகன் குறிப்பிடுகின்றான். அவள் காக்கும் தினைப்புனத்தை அகன்றால் அவளும் அகலும், நெருங்கின் நணுகும் என்பது போலாகின்றதாம். இப்பாடல் பகுதி காண்க.

"பொய்யுடையார்க்கு அரன்போல் அகலும், அகன்றால், புணரின்

மெய்யுடையார்க்கு அவன் அம்பலம்போல் மிக நணுகும்" (தி.8 கோவை பா.48)

காகத்திரு கண்ணிற்கு ஒன்றே மணி:

காகத்திற்குக் கண்கள் இரண்டு உள. ஆனால் அக்கண்கட்கு விழி ஒன்றே உளது. இதைப் பலர் அறியார். இதனைப்போலத் தலைவனுக்கும் தலைவிக்கும் உடல் இரண்டே தவிர, உயிர் ஒன்றாய் உளது என அறிவிக்கின்றார். தத்துவத்துறையில் இறைவனும் இறைவியும் வேறல்ல. ஒரு பொருளே இரு தன்மைப்பட்டுள்ளது. எனவே தலைவனும் தலைவியும் உடம்பால் இரண்டாயிருப்பினும், உணர்வால் ஒன்றாய் இயைந்து இயங்குகின்றனர் எனத் தெரிவ்க்கின்றார் மணிவாசகர். இப்பாடல் பகுதி காண்க.

"காகத்திரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்தாங்கு இருவர்

ஆகத்துள் ஓருயிர் கண்டனம் யாம்" (தி.8 கோவை பா.71)

முனிவரும் மன்னரும்:

முற்றுந் துறந்த முனிவராயினும் முற்றும் தொடர்ந்த மன்னராயினும் அவ்விருவரும் நினைத்தவற்றை நிறைவேற்றப் பொருள் வேண்டும். முனிவர் முன்னுவது அறம் செய்வது. மன்னவர் முன்னுவது இன்பம் நுகர்வது. இரண்டிற்கும் பொருள் இன்றியமையாதது. அறம், பொருள், இன்பம் மூன்றின் நடுவணதை எய்த, இருதலையும் எய்தும் என்பது நாலடியார் (பா.114). "ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு" என்பது குறள் (770). இதனால் பொருளே அறம், இன்பம் இரண்டிற்கும் பெருந் துணையாவது. எனவே பொருள் பற்றிய பிரிவு தவிர்க்க முடியாதது என்பதைத் தோழி வாயிலாகத் தலைவிக்கு அறிவிக்கச் செய்கிறான் தலைமகன். இப்பாடல் பகுதி காண்க.

"முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்" (தி.8 கோவை பா.332)

அறிவன் நூற்பொருள்:

அறிவன் நூல் என்பது ஆகமத்தை உணர்த்துவதாகும். திருக்கோவையார் உலக இயல்புகளோடு அறிவன் நூற்பொருளை ஒவ்வொரு திருப்பாடலிலும் உணர்த்தியருள்கிறார். இவற்றை அண்ணாமலைப்பல்கலைக்கழக வெளியீடான பன்னிரு திருமுறை வரலாற்றில் பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார் தொகுத்து எழுதி வெளியிட்டுள்ளதை இங்குத் தருகின்றோம்.

"சிவபெருமானுடன் பிரிவற ஒன்றாயுள்ள பராசக்தியை `யாவையுமாம் ஏகம்' என 71ஆம் திருப்பாடலிலும், பிறத்தற்குக் காரணாகிய மலங்கெட்டும் யாக்கைக்குக் காரணமாகிய மலத்துடனே வினை நிற்றலின் நிகழ்காலம் புலனாக என்பிறவி கெட்டு இன்று அழிகின்றதாகிய தாள் அம்பலவன் என 76ஆம் பாடலிலும், சிவதத்துவத்தினின்றும் சத்திதத்துவமும், சத்திதத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவமும் தோன்றும் என்பதனைத் தன்னொருபாலவள் அத்தனாம் மகனாம்தில்லையான் என 112ஆம் பாடலிலும், பாசமாகிய தளையிற்பட்டுக் கிடத்தல் உயிரியல்பு என்பதும், உயிர்களின் பாசத்தினை அறுத்து ஆண்டு அருள்புரிதல் இறைவன் இயல்பு என்பதும் ஆகிய உண்மையினை, பாசத்தளையறுத்தாண்டு கொண்டோன் என 115ஆம் பாடலிலும், உயிர்கட்குப் புகலிடம் இறைவனே என்பதனை 143ஆம் பாடலிலும், சிவத்தைத் தலைப்பட்டு இரண்டறக் கலந்த ஆன்மா மீளவும் அதனை விட்டு நீங்கிப் பிறவியுட்புகுதல் இல்லை என்பதனைப் `புகுநர்க்குப் போக்கரியோன்' என 188ஆம் பாடலிலும், தில்லையம்பலத்தோனாகிய இறைவனது அருள் எல்லையினைத் தலைப்பட்டவர்களாகிய சீவன்முத்தரது இயல்பு உலகமெங்கும் பரவி அகண்டபரிபூணராய் இருத்தல் என்னும் மெய்மையினை `அம்பலத்தோன் எல்லை செல்குறுவோர் நலம்பாவியமுற்றும்' என 197ஆம் பாடலிலும் அடிகள் குறித்துள்ள திறத்தினைப் பேராசிரியர் அவ்வத்திருப்பாடல்களின் உரையில் நன்கு விளக்கியுள்ளார்."

தத்துவ நோக்கு:

திருக்கோவையாருக்குத் தத்துவநோக்குக் கற்பித்து சீகாழித் தாண்டவராயர் என்பார் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

"பேரின்பமான பிரமக்கிழத்தியோடு ஓரின்பமான அன்பே சிவமாய், அருளே காரணமாக சுத்தாவத்தையே நிலமாக, நாயகி பரம்பொருளாக நாயகன் பக்குவான்மாவாக, தோழி திருவருளாக, தோழன் ஆன்மபோகமாக, நற்றாய் பரையாக திரோதாயி செவிலித்தாயாக விளங்குவதைத் திருக்கோவை உணர்த்துகிறது" என அவர் கூறுவார். இறைவனை நாயகியாகக் கூறும் இக்கருத்தைப் பலரும் மறுத்துள்ளனர்.

இறைவனை நாயகியாகவும் உயிரை நாயகனாகவும் கூறுதல் பொருந்துவதாக இல்லை. திருமுறைகளில் நாயன்மார்கள் தங்களை நாயகிகளாகப் பாவித்து இறைவனை நாயகனாகக் கருதியே பல பாடல்களை யாத்துள்ளனர். மணிவாசகரும் திருவாசகத்தில் இறைவனைத் தலைவனாகவும் தம்மைத் தலைவியாகவும் கொண்டு அன்பு செய்து போற்றியுள்ளமை அறிதற்குரியதாகும்.

திருக்கோவையார் இத்தத்துவ அமைப்பில் இன்றி தனிநிலையில் தில்லையம்பலவனைப் பாட்டுடைத் தலைவனாகவும் அப்பெருமானிடம் பத்திமை பூண்ட தலைவன் தலைவி முதலானோரை கோவைக்குரிய கிளவித் தலைவன் தலைவி முதலானோராகவும் கொண்டு பாடியருளிய நூலே இஃது என்பது அறியத்தக்கதாகும்.

அன்பர்கள் இந்நூலை இலக்கியச் சுவைக்காக மட்டுமின்றி இந்நூல் உணர்த்தும் மெய்ந்நூற் பொருள்களையும் ஓதி உணர்ந்து பயனடைய அருள்மிகு செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம்.

வளர்க திருமுறை நெறி

வாழ்க உலகெலாம்