உ
சிவமயம்
குருபாதம்
07 முகவுரை
தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்
உளத்திலொரு துளக்கமிலோம் உலகுய்ய இருண்டதிருக்
களத்துமுது குன்றர்தரு கனகம்ஆற் றினிலிட்டு
வளத்தின்மலிந் தேழுலகும் வணங்குபெருந் திருவாரூர்க்
குளத்தில்எடுத் தார்வினையின் குழிவாய்நின்
றெனையெடுத்தார். - தி.12 சேக்கிழார்
சைவ சமயாசாரியர் நால்வர் எனினும், தலங்கள் தோறும் சென்று இறைவனை வணங்கித் திருப்பதிகம் அருளிச் செய்த மூவரை முதற்கண் வைத்து, `மூவர் முதலிகள்' எனப் போற்றுதல் மரபு என்பது பலரும் அறிந்தது. அதற்கேற்ப அவர்கள் அருளிச் செய்த திருப் பதிகங்களும் எண்ணிறந்தனவாம்.
`திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் `பதினாறாயிரம்' என்கின்றார், நம்பியாண்டார் நம்பிகள்.
திருநாவுக்கரசர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் `நாலாயிரத்துத்தொளாயிரம்' என்று, சுந்தரர், நம்பியாண்டார் நம்பிகள் திருமொழி பற்றிக் கூறப்படுகின்றது.
சுந்தரர் அருளிச் செய்த `திருப்பதிகம் முப்பத் தெண்ணாயிரம்' என்று சிலரும், `முப்பத்தெண்ணாயிரம் பாடல்' எனறு சிலரும் திருமுறை கண்ட புராணம் பற்றிக் கூறுகின்றார்.
மூவரது திருப் பதிகங்கள், அல்லது பாடல்கள் இவ்வாறு இலட்சத்திற்கு மேலாகச் சொல்லப்படுதலால், தமிழ் நாட்டில் தேவாரத் திருப்பதிகங்கள் மிகப் பெரிய அளவில் வழங்கின என்பது பெறப்படும்.
இத்துணைத் திருப்பதிகங்களுள் நமக்குக் கிடைத்துள்ள திருப்பதிகங்கள் எழுநூற்றுத் தொண்ணூற்றைந்தேயாகும். அவற்றுள் சில திருப்பதிகங்களுள் சில திருப்பாடல்களும், சில திருப்பாடலின் பகுதிகளும் கிடைத்தில. திருஞானசம்பந்தர் அருளிய, `விடைவாய்' என்னும் தலத்திற்குரிய திருப்பதிகம் (தி.3 ப.126)ஒன்று, கல் வெட்டிலிருந்து பின்னர்க் கிடைத்தது.
நம்பியாண்டார் நம்பிகளால் திருமுறைகள் வகுக்கப்பட்ட வற்றிலும், தேவாரத் திருமுறைகளே பாதியளவிற்கு மேல் உள்ளமை அறியத்தக்கது.
இன்னும் தேவாரத் திருமுறைகளைக் காண முயன்று கண்டெடுத்து அவற்றை வகைப்படுத்தப் புகுந்தபொழுதே, ஏனைய திருமுறைகளும் வகுத்தமைக்கப்பட்டன. திருமுறைகண்ட புராணம் எழுந்தது தேவாரத் திருமுறையைக் கண்டெடுத்து, வகுத்தமைத்த முறையைக் கூறுதற்கே என்பது அதன் காப்புச் செய்யுளாலே விளங்கும். அப் புராணம் திருமுறைகளின் பெருமையைக் கூறவந்த இடத்திலும், மூவர் தேவாரத்தின் பெருமையையே சிறந்தெடுத்துக் கூறுகின்றது.
"கண்டபெரு மந்திரமே மூவர் பாடல்
கைகாணா மந்திரங்கண் ணுதலோன் கூறல்"
-திருமுறைகண்ட புராணம், 13
அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடும்
அதுபோல்அன் றிதுஎன்றும் உளதாம் உண்மைப்
பரபதமும் தற்பரமும் பரனே யன்றிப்
பலரில்லை என்றெழுதும் பனுவல் பாரில்
எரியினிடை வேவாதாற் றெதிரே யோடும்
என்புக்கும் உயிர்கொடுக்கும் இடுநஞ் சாற்றும்
கரியைவளை விக்கும்கல் மிதக்கப் பண்ணும்
கராமதலை கரையிலுறக் காற்றுங் காணே.
-திருமுறைகண்ட புராணம், 17
இன்னோரன்னவற்றால், தேவாரத் திருப்பதிகங்கள் திரு முறைகளில் முதற்சிறப்புடையனவாதல் தெளிவு. இவை இசைத் தமிழாயும், அவ் இசைகள் தமிழுக்குரிய பண்களாயும் அமைந் திருத்தல் அவற்றிற்கு மற்றும் ஒரு தனிச் சிறப்பாகும்.
தேவாரத் திருப்பதிகங்களுள், சம்பந்தர், அப்பர் திருப் பதிகங்கள் பெரும்பாலும் ஒரு காலத்தே தோன்றியன. சுந்தரர் திருப்பதிகங்கள், அவைகட்கு, ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு பின்னர்த் தோன்றியவை.
முன்னை இருவரது காலமும், தமிழ் நாட்டில் புறச் சமயங்கள் அரசர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேலோங்கியிருக்க, சைவ சமயம் அருகியிருந்த காலம். அதனால், அவர்கள் புறச் சமயக் களைகளைக் களைந்து சைவ சமயத்திற்குப் புத்துயிர் கொடுத்து வளர்க்கவேண்டிய நிலையில் இருந்தனர்.
சுந்தரரது காலம் அவ்வாறின்றி, ஞானசம்பந்தர், நாவுக்கரசரது நல்லருட்செயல்களால், புறச்சமயம் அறவே மறைய, சைவ சமயம் மேலோங்கியிருந்த காலமாகும். அதனால், அப்பொழுது முன்னை இருவரது பாடலைப் பெற்ற தலங்கள் சிறப்புற்று விளங்கின; மக்களும் சைவ சமயத்தில் ஆர்வமும், ஊக்கமும் கொண்டிருந்தனர்.
மேலும் தமிழ்நாட்டு மூவேந்தர்களும் சைவ சமயத்தவராய் விளங்கினமை குறிப்பிடத் தக்கது. மூவேந்தர்களும் வன்றொண்டரை ஆசாரியராகக் கொண்டு போற்றினமைக்கு, அவர் தமது திருப்பரங்குன்றத் திருப்பதிகத்தில், "முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த" (தி.7 ப.2 பா.11) என்று அருளியிருத்தலே போதிய சான்று.
ஆகவே, ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் காடு போக்கி, நிலந்திருத்தி விதைத்துச் சென்ற வித்து விளைவைத்தர, அதன் பயனை மக்கள் மகிழ்ந்துண்ணுங் காலமே, நம்பியாரூரர் வாழ்ந்திருந்த காலம் என்பது நன்கு புலப்படும்.
காலத்திற்கு ஏற்ப, இறைவனும், முன்னை இருவருள் ஒருவரை அடியாராகவும், மற்றொருவரை மகனாராகவும் கொண்டு அருள் செய்தான்; ஆளுடைய நம்பிகளைத் தோழராகக்கொண்டு திருவருள் புரிந்தான். இந்நிலைகட்கு ஏற்பவே, இவர்களது திருப்பதிகங்களும் திகழ்தல் கண்கூடு. `சம்பந்தன் தன்னைப் பாடினான்' `நாவரசன் என்னைப் பாடினான்; சுந்தரன் பொன்னைப் பாடினான்' என்று சிவபிரான் சொன்னதாக ஒரு பழமொழி உண்டு. அத்தன்மைகள் அத்திருப்பதிகங்களில் விளங்குதலைக் காணலாம்.
திருக்கடைக்காப்பில் தம்மேல் ஆணைவைத்து அருளுதல் முதலாகத் திருப்பதிகத்தின் பெருமையை எடுத்து விளக்குதல் ஞான சம்பந்தரது திருப்பதிகங்களில்தான் முனைந்து தோன்றும். இது பற்றியே அவரது தேவாரத்தை. `திருக்கடைக்காப்பு' என்றே குறிப் பிடுவர் சிலர்.
இன்னும் இயற்கை வருணனைகள், உலகத்தாரையும், அடியார்களையும் நோக்கி, `இது செய்மின்; இது செய்யன்மின்' என விதித்தல், விலக்குதல், பலவகைத்தாள அமைதிகள், யமகம், ஏகபாதம் முதலிய சித்திரக்கவிகள் எல்லாம் அமைந்து தோன்றுவன, அவரது திருப்பதிகங்களே.
நாவுக்கரசர் தேவாரம், "கொடுமைபல செய்தன நானறியேன், (தி.4 ப.1 பா.1) நெஞ்சம் உமக்கே இடமாகவைத்தேன், (தி.4 ப.1 பா.2) சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடிசை பாடல் மறந்தறியேன்" (தி.4 ப.1 பா.6) என்று சொல்லிச் சூலைநோயைத் தீர்த்தருளவேண்டும் என்று வேண்டித் தொடங்கியது போலவே, "என்னை நீ இகழவேண்டா, (தி.4 ப.23 பா.1) அடியேனைக் குறிக் கொண்மினே, தருவாய் எனக்குன் திருவடிக் கீழொர் தலைமறைவே, அம்மான் அடிநிழற் கீழதன்றோ என்றன் ஆருயிரே, (தி.4 ப.113 பா.2) இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் - துடைக்கினும் போகேன் - தொழுது வணங்கித் தூநீறணிந்து உன் அடைக்கலங் கண்டாய், சிவனே உன் அபயம் நானே, திருவடி மறப்பிலேனே" (தி.4 ப.81 பா.8) என்றாற்போல இறைவனைப் பலவாறு பணிந்து வேண்டிக் கொள்ளுதலும், "என்கடன் பணிசெய்து கிடப்பதே, (தி.5 ப.19 பா.9) தலையே நீ வணங்காய், கண்காள் காண்மின்களோ, கைகாள் கூப்பித் தொழீர், (தி.4 ப.9) நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம் பிரானுடைய கோயில்புக்குப் - புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கும் இட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்துபாடித் - தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா சயபோற்றி போற்றி என்றும் ..... அலறா நில்லே" (தி.6 ப.31 பா.3) என்றாற் போலத் தொண்டினை வலியுறுத்துதலும் "என்செய்வான் தோன்றினேன், ஏழையேனே, கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே, சாராதே சாலநாள் போக்கினேனே, போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே, குறிக்கோள் இலாது கெட்டேன், (தி.4 ப.67 பா.9) பாழுக்கே நீர் இறைத்து வழியிடை வாழமாட்டேன், அழிவுடைத்தாய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக் கழியிடைத் தோணி போன்றேன்" (தி.4 ப.31 பா.6) என்றாற் போலத் தமது நிலைமைக்கு இரங்கிருளுதலும் போல்வனவாகவே பெரும்பான்மையும் இருத்தலைக் காணலாம்.
இறைவனது திருவருளில் வைத்த உறுதிப்பாட்டினால், "அஞ்சுவதுயாதொன்றும் இல்லை, (தி.4 ப.2 பா.1) வானந்துளங்கிலென் மண்கம்பம் ஆகிலென், (தி.4 ப.112 பா.8) நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்றாற் போலும் வீரமொழிகள், "சிவன் எனும் ஓசையல்லது அறையோ" (தி.4 ப.8 பா.1) என்றாற்போல அறை கூவுதல் இவை காணப்பெறுவதும், அவரது திருப்பதிகத்திலேதான்.
காயமே கோயி லாகக் கடிமனம் அடிமை யாக
வாய்மையே தூய்மை யாக மனமணி இலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே. -தி.4 ப.76 பா.4
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே. -தி.4 ப.31 பா.4
உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரி மயக்கி
இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே. -தி.4 ப.75 பா.4
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூர்எம் பிரானையே. -தி.5 ப.1 பா.2
கற்றுக் கொள்வன வாயுள நாவுள
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடை யான்உளன் நாமுளோம்
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே. -தி.5 ப.91 பா.6
என்பனபோல இறைவனை அகத்திலும், புறத்திலும் பூசிக்கும் பூசனையை வலியுறுத்தும் பாடல்களும், அப்பர் திருமுறையிலே சிறந்து விளங்கும்.
இனி, இறைவனைத் தோழமையால் பெரிதும் உரிமையோடு நெருங்கிக் கூறும் பாடல்களைச் சுந்தரமூர்த்திகளது திருப் பதிகங்களிலேதான் காண இயலும். முதலையுண்ட பாலனை அழைக்கப் பாடுமிடத்தில், "புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே - கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே" (தி.7 ப.92 பா.4) என்று வேண்டும் திருமொழியில், நாயனாருக்கு இறைவன்பால் உள்ள உரிமை எத்துணை வெளிப்படையாக விளங்குகின்றது!
"பாம்பினொடு படர்சடைகளவை காட்டி வெருட்டிப் - பகட்டநான் ஒட்டுவனோ, மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர் - வாழ்விப்பன் என ஆண்டீர் - ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீரல்லீர் அணி ஆரூர் புகப்பெய்த அருநிதியமதனில் தோற்ற மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒரு பொழுதும் அடி யெடுக்கலொட்டேன், மிகுதிண்ணென என் உடல்விருத்தி தாரீரேயாகில் திருமேனிவருந்தவே வளைக்கின்றேன் நாளைக் கண்ணறையன் கொடும் பாடன் என்றுரைக்க வேண்டா" (தி.7 ப.46) என்பன போன்ற பகுதிகளை விட உரிமை மிகுதியைக் காட்டும் பகுதிகள் வேறு எவை வேண்டும்!
ஆளுடைய நம்பிகள் திருஓணகாந்தன்தளியில் சென்று பொன் வேண்டும்பொழுது, இறைவரைப் பார்த்து, `நீர் மதியுடையவர் செய்கை செய்யீர்' (தி.7 ப.5 பா.3) என்று கழறுகின்றார். இத் தொடரை இறைவர்முன் நின்று மீளச் சொல்லவும் நம்போலியர்க்கு நாவும், நெஞ்சும் நனிமிக அஞ்சும்; ஆயினும், அஃது இறைவர்க்கு நன்றாய தோத்திரமாயிற்று. என்னே வன்றொண்டரது வன்றொண்டு!
ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசுகள் ஆகிய அவர்களும், இறைவனை நேரேகண்டு, தம் அநுபவப் பொருளாகப் பெற்றவர்கள்தாம். என்றாலும், அவனை, அன்றாடவாழ்க்கையில் உடன் உறைவோனாகப் பெரிதும் புலப்படக் கண்டு அளவளாவி, ஊடியும் உகந்தும் உரையாடி, இருமைப் பயனும் இனிதுபெற்று நுகர்ந்தவர் ஆளுடைய நம்பிகளே என்றல், சிறிதும் மிகையாகாது.
சங்கிலியாரது திருமணத்தில் இறைவனை, நாயனார், கோயிலை விட்டு மகிழமரத்தடியில் போய் இருக்கச் சொல்லியதும், இறைவனும் அதற்கு இசைந்து, அதனை அவர் அறியாமல் சங்கிலியாரிடம் தெரிவித்து, நாயனாரை மகிழடியில் வந்து சூளுரைக்கச் செய்யுமாறு கேட்கச் செய்ததும், நாயனார் பின்பு அச் சூளுரையைக் கடந்தபோது அவரைக் கண் இழப்பித்து, அடிக்கடி எளிமையில் எதிர்ப்படுகின்ற அவன், அவர் பன்முறை வேண்டியும் பலநாள் எதிர்ப்படாதொழிய, நாயனார், திருவெண்பாக்கம் கோயிலிற் சென்று, `பெருமானே, நீ கோயிலில் இருக்கின்றாயோ' (தி.7ப.89 பா.1) என்று கேட்டதும், அதற்கு இறைவன், ஓர் ஊன்றுகோலை அவர் முன்னே வீசி, `உளோம்; போகீர்' என்றதும், பின்னர்க் காஞ்சிபுரத்திலும், திருவாரூரிலும் நாயனார் எத்துணையோ வகையாகக் குறையிரந்து நிற்க, இறைவன் திருவுளம் இரங்கி முறையே இடக்கண்ணையும் வலக் கண்ணையும் கொடுத்தருளி, முன்போலவே தோழமை உரிமை தந்து நின்று, பரவையாரிடம் ஒருமுறையன்றி இருமுறை நாயனாருக்காகத் திருவாரூர்த் தெருவில் தூது நடந்ததும் போல அணுக்கமாகிய உரிமைப்பேறுகளைச் சுந்தரர் தவிர வேறு யாவர்தாம் பெற்றார்!
இது பற்றித்தான்போலும். `திருக்களிற்றுப்படியார்' என்னும் சாத்திரத்தின் ஆசிரியர், சம்பந்தரது பெருமையையும், அப்பரது பெருமையையும், "தென்புகலி வேந்தன் செயல், திருவாமூராளி செயல்" (திருக்களி. 70, 71) என்று சில வற்றை எடுத்துச் சொல்லி, சுந்தரரது பெருமையைச் சொல்லுங்கால், "வன்றொண்டன் தொண்டதனை ஏதாகச் சொல்வேனியான்" (திருக்களி. 72) என்று சொல்லிப் போந்தார்.
சங்கிலியாரது திருமணம் பற்றி இறைவன் செய்த செயலை, "சொன்ன எனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே - என்னவல்ல பெருமானே இங்கிருந்தாயோ" (தி.7 ப.89 பா.9) என்று நாயனார் இறைவனை நகை யுண்டாக வினாவுகின்றார். இன்னும், "கண்மணியை மறைப்பித்தாய் இங்கிருந்தாயோ" (தி.7 ப.89 பா.6) என்று கேட்கின்றார். பல இடங்களில் நகை யுண்டாகப் பாடியது அன்றி, ஒன்றிரண்டு இடங்களில் இறைவனை வைது பாடியதையும் காண்கின்றோம், "மகத்தில் புக்கதோர் சனி எனக்கானாய்", (தி.7 ப.54 பா.9) "மற்றைக்கண்தான் தாராதொழிந்தால் வாழ்ந்து போதீரே" (தி.7 ப.95 பா.2) என்பன அதற்கு எடுத்துக்காட்டாகும்.
நாயனார் இறைவரை வற்புறுத்திப் பொன்பெற்ற இடங்கள் பல. அவை நிற்க. திருமுதுகுன்றத்தில் இறைவர் கொடுத்த பொன்னை எடுத்துக்கொண்டு போகவும் மறுத்து, அதனை மணிமுத்தாற்றில் இட்டு, `இது திருவாரூர்க் குளத்தில் வந்துசேரவேண்டும்' என்று சொல்லிச் சென்று, அங்ஙனமே திருவாரூர்க் குளத்தில் வரப்பெற்றார். பெற்றதனோடு அமையாமல் அதனை மாற்றுரைத்தும் பார்த்தார்.
திருக்கோளிலி இறைவன் குண்டையூரில் நெல்கொடுக்க, அதனை எடுத்துவந்து சேர்க்க ஆள் தருக என்றும் பாடி, அங்ஙனமே தரப் பெற்றார். இவையெல்லாம் அவரது தோழமை உரிமையை எவ்வளவு தெளிவாக நமக்குப் புலப்படுத்துகின்றன!
இவைகளையெல்லாம் நோக்கின், நாயனார் இறைவர் தமக்குச் செய்த திருவருட் பெருமையால் பெரிதும் தருக்கிநின்றார் போலத் தோன்றும். ஏனெனில், நாயனாரது நிலையை நம்மனோர் அறிதல் எளிதன்று. ஏன், அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய கலிக்காமரே அவரது நிலையை மாறுபட உணர்ந்தார் என்றால், நாம் எவ்விடத்தோம்! வன்றொண்டர், இறைவனைப் பரவையார்பால் தூதுவிடுத்தது கேட்டு, ஏயர்கோன் கலிக்காமநாயனார்,
"நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று சால
ஏயும்என்று இதனைச் செய்வான் தொண்டனாம்!
என்னேபாவம்!" (தி.12 ஏயர். பா.384)
"அரிவைகா ரணத்தி னாலே ஆளுடைப் பரமர் தம்மை
இரவினில் தூது போக ஏவிஅங் கிருந்தான் தன்னை
வரவெதிர் காண்பே னாகில் வருவதுஎன் னாங்கொல்!" (தி.12 ஏயர். பா.387)
என்று பெரிதும் வெகுண்டார் என்று அறிகின்றோம். நாயனார் இறைவனை ஏவவே இல்லை; இது முக்காலும் உண்மை. தமது உயிர் உடம்பின் அகத்ததோ, புறத்ததோ என்று எண்ணும்படி ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், இறைவரை உற்றுழி உதவப் பெரிதும் குறையிரந்து வேண்டினார். அவராலன்றிப் பிறர் ஒருவராலும் அக் குறை முடித்தல் கூடாமையாலே வேண்டினார். இறைவரும் தாம் அக்குறையை முடியாதுவிடின், நாயனார் உயிர் உய்யாது என்பதை உணர்ந்தே தூது சென்றார்.
ஆனால், இறைவர் தாமே இதற்குத் தூதாகச் செல்ல வேண்டுவது இல்லை; வேறுவகையிலும் பரவையாரது ஊடலைத் தீர்த்தல் கூடும்; ஆயினும், தாம் தம் மெய்யடியார்க்கு எத்துணை எளியராகின்றார் என்பதையும், தாம் தம் அடியவர்க்கு இருமையும் பயத்தலையும் உலகிற்கு இனிது விளக்கவே, தாமே தூதாகச் சென்றார்' இஃது அவர் ஒருமுறையிலே அச்செயலை முடியாது, இரு முறை சென்றமையானே விளங்கும். இதனை, நால்வர் நான்மணி மாலை ஆசிரியர், பாடல் 15இல்,
"நோக்குறும் நுதலோன் நின்னிடை விருப்பால்
நூற்பக வன்னநுண் மருங்குல்
வார்க்குவி முலைமென் மகளிர்தம் புலவி
மாற்றுவான் சென்றனன் என்றால்
கோக்கலிக் காமன் வயிற்றிடைக் குத்திக்
கொண்டதே துக்குநீ புகலாய்"
என்று குறித்துக் காட்டுகின்றார். இறைவர் நாயனாருக்குத் தூது சென்ற தனால் அவரது எளிவந்த தன்மையையே பெரியோர் உணர்கின்றனர் என்பதற்கு,
வேதன் நாரணன் ஆர ணம்அறி
யாவி ழுப்பொருள் பேதைபால்
தூத னாய்இரு கால்ந டந்திடு
தோழன் வன்மைசெய் தொண்டனுக்கு
ஆத லால்அடி யார்க ளுக்கெளி
யான் அடிக்கம லங்கள்நீ
காத லால் அணை ஈண்டன் வேண்டிய
இம்மை யேதரும் கண்டிடே. -சிவஞானசித்தி., பரபக். 46
என்னும் திருவிருத்தமே சான்றாகும், இதனால், நாயனார் இறைவர் தமக்குத் தந்த பேருரிமையால் தருக்கியிருந்தார் என மனத்தால் நினைத்தலும் குற்றமாம் என்க.
இறைவன் எவ்வளவுக்கெவ்வளவு அடியவர்க்கு எளியனாய் வருகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு அவ்வடியவர் முனைப்பு அற்ற நிலையில் உள்ளார் என்பதே உண்மை.
அதனால், சுந்தரருக்கு எளிவந்ததுபோல, இறைவன் பிறருக்கு எளிவந்ததில்லை என்றால், சுந்தரரைப்போலத் தன் முனைப்பு நீங்கினவர் இல்லை என்பதுதான் பொருள்.
பொன்வேண்டிப் பாடியவை, பழிப்பது போலப் புகழ்ந்து நகைச் சுவையாகப் பாடியவை, இவைகள் சுந்தரரது தேவாரத்திற்கு உள்ள சிறப்பியல்பாதல் பற்றி, அவையே அவரது திருப்பதிகங்களில் உள்ளனபோலத் தோன்றினும், அவரது உண்மைநிலையைத் தெளி வாகப் புலப்படுத்தும் பகுதிகளும் பல காணப்படுதலைக் குறிக் கொளல் வேண்டும்.
``மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாதமே மனம் பாவித்தேன்" (தி.7 ப.48 பா.1)
"நான் மறக்கினும் சொல்லும்நா நமச்சிவாயவே"
"வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால்
மற்று நான்அறி யேன்மறு மாற்றம்" (தி.7 ப.54 பா.1)
"பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன்''
"திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்கள்" (தி.7 ப.69 பா.1)
என்றாற்போலும் பகுதிகள், நாயனாரது சிவபத்தியின் உறைப்பினைத் தெற்றென விளக்கும்.
"ஓவும்நாள் உணர்வழியும் நாள் உயிர்
போகும்நாள் உயர்பாடைமேற்
காவும்நாள் இவை என்றலாற் கருதேன்" (தி.7 ப.48 பா.3)
என்பது, "பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" (தி.6 ப.1) என்றதினும் எத்துணை வன்மையாய்க் காணப் படுகின்றது!
"பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்
பாவியேன் ........
எத்தனைநாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர்
இறைவனையே" (தி.7 ப.51 பா.1)
என்றதினும், நாயனாருக்கு இறைவரது பிரிவால் உளதாகும். துன்பத்தை விளக்க வேறு சான்று வேண்டுமோ!
தாம் செய்வது பெரியதொரு குற்றம் அன்று எனச் சூள்கடக்கும் குற்றத்தை நாயனார் செய்தாராயினும், அஃது இறைவரது திருவுள்ளத்திற்கு ஒவ்வாமை அறிந்தபின்னர்.
"குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையான் மிகைபல செய்தேன்" (தி.7 ப.69 பா.6)
என்று, அதனை வெளிப்படையாகச் சொல்லிப் பொறுத்தருள வேண்டு கின்றார்.
அப்பிழை காரணமாக இறைவர் கண்ணை மறைத்து, உடம்பிற் பிணியை உண்டாக்கினமைக்கு இறைவரைவெறாது, அழுது வேண்டும் பகுதிகள், கருங்கல் மனத்தையும் கரைந்துருகச் செய்யும்.
"அத்தா என்இடர் ஆர்க்கெடுத் துரைக்கேன்" (தி.7 ப.54 பா.3)
"கழித்தலைப்பட்ட நாயதுபோல
ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்து நீ அருளாயின செய்யாய்" (தி.7 ப.54 பா.5)
"அகத்திற் பெண்டுகள் நான்ஒன்று சொன்னால்
அழையேற் போகுரு டாஎனத்தரியேன்
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன்" (தி.7 ப.54 பா.9)
"அடியேன் படுதுயர் களையாய்" (தி.7 ப.69 பா.3)
"வலிய வந்தெனை ஆண்டுகொண் டானே
அண்ணலே எனை அஞ்சலென் றருளாய்" (தி.7 ப.70 பா.2)
"உறவிலேன் உனையன்றிமற் றடியேன்
ஒருபிழை பொறுத்தால் இழிவுண்ேட" (தி.7 ப.70 பா.6)
என்றற்றொடக்கத்தனவற்றை நோக்குக.
ஞானசம்பந்தரது பாடல்களில் உள்ளவற்றினும், நாவுக் கரசரது பாடல்களில் பணிவு மிகுதியாய்த் தோன்றும்; எனினும், அவரது பாடல்களினும் அளவிட இயலாதபணிவு நம்பியாரூரரது பதிகத்திலே காணப்படுவதாம்.
முன்னை இருவரும் ஆண்டவனுக்கு அடிமையானவர்கள்; நம்பியாரூரர் அடியார்க்கு அடியரானவர். அதனானே இறைவன், தனக்கு அடிமைப்பட்டவரினும், தன் அடியார்க்கு அடிமைப் பட்டவரிடம் பெரிதும் எளியனாய் இருந்தான்.
இதனால், முன்னை இருவரும் அடியார்க்கு அடியராயின ரல்லர் என்பது பொருளன்று; அடியார்க்கடியராதல் ஆளுடைய நம்பிகள்பால் முதன்மை பெற்று விளங்குகின்றது என்பதே பொருளாம். இது, திருத்தொண்டத் தொகை (தி.7 ப.39) யில் மட்டுமன்று;
"அத்தா ஆலங் காடாஉன் அடியார்க் கடியே னாவேனே" (தி.7 ப.52பா.1)
"நாவின்மிசை அரையன்னொடு தமிழ்ஞானசம் பந்தன்
யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்" (தி.7 ப.78 பா.10)
என்றாற்போலப் பிறவிடத்துங் காணப்படுவதேயாம். இது பற்றியே சேக்கிழார், திருத்தொண்டர் புராணத்திற்கு நம்பியாரூரரையே தனிப் பெருந்தலைவராகக் கொண்டு அருளிச் செய்தார். அவர் அப் புராணச் சருக்கத்தின் முடிவுதோறும் சுந்தரரை வணங்கிக் கூறும் வணக்கச் செய்யுட்கள், உன்னி உன்னி உணர்தற்குரியனவாம். ஆகவே, நம்பியாரூரரது சிவபத்திச் சிறப்பும், சிவானுபவ உண்மையும் அவர் அறிதல், அவரை ஆண்டபெருமான் அறிதல் அன்றி மற்று யாவரே அறியவல்லார்!
இத்தகைய அளப்பரும் பெருமையும், அருட்டன்மையும் பொதிந்தவை நம்பியாரூரரது திருப்பதிகங்கள்.
பன்னிரு திருமுறைகளையும் மக்கள் ஒருவாறேனும் பொருளுணர்ந்து ஓதி உய்தல் வேண்டும் என்னும் பெருங் கருணையால், அவைகட்குத் தக்க அறிஞர்களைக் கொண்டு குறிப் பெழுதத் திருவுளம் பற்றிய, திருத்தருமை ஆதீனம் 25 ஆவது குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் ஆறாந் திருமுறைக்கு அருள் பாலித்தது போலவே, ஏழாந் திருமுறைக்கும் குறிப்பெழுதும் வண்ணம் அடியேனுக்கு அருளாணை வழங்கினார்கள், மகாசந்நிதானத்தில் எழுந்த அருளாணையைச் சிரமேல் ஏற்கும் வகையில் அடியேன் அப்பணியை மேற்கொண்டதன்றி, இவ்வரும் பெருந்திருமுறையின் பொருளைக் காண, யான் என்ன உரிமை யுடையேன்! ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு செயலை ஒவ் வொருவர் வாயிலாகச் செய்து முடிக்கும் திருவருள், என்னை இப் பணியிற் செலுத்துமாயின், என்னால் இயல்வது இயல்க என்னும் எண்ணத்தோடே இப்பணியில் இயன்ற அளவு முயன்றேன்.
ஆறாந்திருமுறையில் குறிப்புரை மட்டுமே எழுதப்பட்டது. அதற்கு முன்னுள்ள திருமுறைகளில் ஐந்தாந் திருமுறை தவிர, ஏனைய திருமுறைகட்கு அவ்வாறு குறிப்புரைகளே எழுதப்பட்டன. ஆயினும் ஏழாந்திருமுறையை நோக்குமிடத்து, பொழிப்புரையும் இன்றி யமையாததெனத் தோன்றிற்று. ஆறாந்திருமுறைப் பாடல்கள் பெரும் பாலும், தனித்தனிச் சிறு தொடர்களால் ஆனவை.
இவ்வேழாந் திருமுறைப் பாடல்கள் அவ்வாறின்றிப் பெரும் பாலும், பாடல் முழுதும் ஒருதொடராய் அமைந்து, பலவகையில் கொண்டு கூட்டிப் பொருளுரைக்கத் தக்கனவாய் இருத்தலே, அவ்வாறு தோன்றினமைக்குக் காரணம். ஆகவே இத்திருமுறைக்குப் பொழிப்புரையோடு கூடிய குறிப்புரையே எழுதப்பட்டது.
இத்திருமுறையின் பதிப்புக்களில், திருப்பனந்தாள் காசி மடத்துப் பதிப்பு, சென்னைச் சைவசித்தாந்த மகா சமாஜத்து வரலாற்று முறைப் பதிப்பு, ஆகிய இவ்விரு பதிப்புக்களில் மட்டுமே மிகச் சுருங்கிய அளவில் சிற்சில உரைக் குறிப்புக்கள் தரப்பட்டன. ஆயினும், மற்றும் பெரும்பகுதிகள் பெரிதும் முயன்று பொருள் காண வேண்டியிருந்தன. அவற்றிற்கெல்லாம், எனது சிந்தனை சென்ற அளவில் ஒருவாறு புலனாய பொருள்களைக் குறித்துள்ளேன்; அறிஞர் உலகம் அவற்றை ஆய்ந்து, ஆவன செய்வதாக.
இவ்வேழாந் திருமுறை ஈடுபாட்டில் முதன்மையாகத் தோன்றியது, தேவாரத் திருப்பாடல்களில் பல இடங்களில் மூலபாடம் தக்க வகையில் நன்கு போற்றப்படவில்லை என்பதே. ஆறாந் திருமுறையில் ஈடுபட்ட பொழுதே இஃது ஒருவாறு தோன்றியது. எனினும் இத் திரு முறையில் அவ்வெண்ணம் பெரிதும் உறுதிப்பட்டது.
பல இடங்களில் பதிப்புத்தோறும் பாடங்கள் வேறு வேறாகவே காணப்படுகின்றன. அவைகளில் யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதரவர்கள் தமது தலமுறைப் பதிப்பில், பல இடங்களில் பொருத்தமான பாடத்தை ஏற்று, மற்றவைகளைப் பாடபேதமாகக் காட்டியுள்ளார்கள். அவைகளே, பின்வந்த பதிப்புக்களுக்கெல்லாம் முதலாய் அமைந்துள்ளன.
மற்றும் பல இடங்களில் உண்மைப்பாடம் வேறொரு வகையாதல் தோன்றிய போதிலும், அவற்றைத் திருத்துதற்கு அஞ்சித் திருத்தவில்லை. ஆயினும், அவற்றை அவ்வாறு திருத்துதல் ஆசிரியர்களது அருள் மொழிகளைத் திருத்துதல் ஆகாது என்பதும், அவர்களது அருள் மொழிகளை உண்மையாகப் பெற்று ஓதுவதாம் என்பதுமே நினைவிற் கொள்ளத்தக்கன.
வாய்ப்பு உளதாயின், அவைபற்றி விளக்கும் விருப்பம் உடையேன். இவ்வகையில், ஏழாந் திருமுறை உரைப் பதிப்பு, திருவருளாலும், குருவருளாலும் ஒருவாறு முற்றுப்பெற்றது.
திருத்தருமை ஆதீனம் 25 ஆவது குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணியவர்களது திருவுளப்பாங்கினால், இவ்வாதீனத் தின் சார்பில் ஆறு திருமுறைகள் முன்பே உரைக்குறிப்பு, ஆராய்ச்சிக் கட்டுரைகள், பாட்டு முதற் குறிப்பகராதி, சொல்லகராதி முதலியவை களுடன் நன்கு வெளிவந்துள்ளன.
இதுபோழ்து ஏழாந் திருமுறை, அவ்வாறு பொழிப்புரை, குறிப்புரை முதலியவைகளுடன் வெளி வருகின்றது. குருமகா சந்நிதானத்தின் இப்பெருங்கருணைத் திறத்திற்கு, தமிழுலகம் - சிறப்பாகச் சைவ உலகம் பெரிதும் நன்றி யறியுங் கடப்பாடுடையது. உயிர்க்கு உறுதி பயக்கும் ஒப்பற்ற இப் பேரருட் பெரும்பணியை அடியேனுக்குக் கிடைக்கத் திருவருள் பாலித்த ஷ்ரீலஷ்ரீ குருமகாசந்நிதானத்தின் திருவடிகட்கு எனது மன மொழி மெய்களாலாய பெருவணக்கத்தைச் செலுத்திக் கொள்கின்றேன்.
இவ் ஏழாந் திருமுறைப் பதிப்பு, திருப்பனந்தாள் ஷ்ரீ காசி மடம் ஷ்ரீலஷ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்களது திருக்கண் பார்வையுடன், அவர்களது நன்மதிப்பைப் பெற்று மிளிரும் சிறப்புடையதாய்த் திகழ்கின்றது.
ஷ்ரீலஷ்ரீ காசிவாசி சுவாமிகளவர்கள், திருமுறையில் தோய்ந்து திளைத்த தங்களது திருவுள்ளம் காரணமாக, திருமுறைத் திருப்பணியையே தங்கள் முதல் திருப்பணியாகச் செய்து வருபவர்கள். அவர்களது திருவருட் பார்வையில் பன்னிரு திருமுறைகளும் செவ்விய முறையில் வெளி வந்து, அன்பர் பலர்க்கும் பயன்பட்டு வருதல் கண்கூடு.
பாடல் பெற்ற தலங்கள் பலவற்றில் ஓதுவார்களை நியமித்துத் திருமுறைகளை ஓதிவரவும், மாணவர்களுக்குத் தேவாரப் பரிசுகள் வழங்கவும், சிறந்த விழா நாட்களில், தேவாரப் பண்ணிசைவாணர்கள் திருமுறைப் பாராயணம் நிகழ்த்தவும், ஆங்காங்கு அறக் கட்டளைகள் பலவற்றை அமைத்தும், திருக்கோயில்கள் பலவற்றில், அவற்றிற்குரிய திரு முறைப் பகுதிகளைச் சலவைக் கல்லில் பொறித்துப் பதிப்பித்தும் தேசமெங்கும் திருமுறைகள் பரவச் செய்து வருகின்ற அவர்கள் இத்திருமுறைப் பதிப்பிற்கு அருள்கூர்ந்து மதிப்புரை வழங்கியருளிய கருணைப் பெருக்கிற்கு, எனது மனமார்ந்த வணக்கத்தைத் தெரி வித்துக் கொள்கின்றேன்.
ஆளுடைய நம்பிகளது அருட்டிருப் பதிகங்கள் அனைத்தும் அடங்கியுள்ள இவ்வேழாந் திருமுறைக்கு முதற்கண் இன்றி யமையாது வேண்டப்படுவது அந்நாயனாரது அருள்வரலாறாகும். அதனை, தக்க அகச்சான்று புறச்சான்றுகளுடன் நன்கு எழுதி உதவியவர்கள். தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரிப் பொறுப்பு முதல்வர் திருநெறிச் செம்மல், வித்துவான், திரு வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்.
"நயத்துக்குச் சுந்தரனார்" என்ற முதியோர் மொழிப்படி, நயம் மிக நிறைந்ததாகிய இத் திருமுறைக்கண் உள்ள இலக்கிய இன்பங்களை, ஆதீனக் கல்லூரிப் பேராசிரியை வித்துவான், திருமதி ப.நீலா அவர்கள், இனிதெடுத்துச் சுவைபடத் தொகுத்து அளித்தார்கள்.
அப் பல்கலைக் கல்லூரிப் பேராசிரியர் சிரோமணி, வித்துவான். திரு.வி. சபேசன் அவர்கள் இத் திருமுறையின் திருப்பதிகங்களுக்கு வரலாறு எழுதித் தந்ததுடன், திருப்பாடல்களில் ஆங்காங்கு அமைந்த புராண வரலாறுகளையும், நாயன்மார் வரலாறுகளையும் ஒருங்கு தொகுத்து விளக்கம் செய்துள்ளார்கள்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மொழியாராய்ச்சித்துறை, செஞ்சொற் கொண்டல், வித்துவான். திரு. சொ. சிங்காரவேலன் எம்.ஏ., அவர்கள், `சுந்தரர் தேவாரப் பொருள் ஆராய்ச்சி' என்னும் தலைப்பில் அரிய ஆராய்ச்சிக் கட்டுரை யொன்றினை, தங்களுக்கு இயல்பாய் உள்ள ஆழ்ந்து அகன்ற நுண்ணிய ஆராய்ச்சித்திறன் பொதுள எழுதி உதவினார்கள்.
இத் திருமுறைத் திருப்பதிகங்களின் சிறப்புத் தலவரலாறுகளைக் கல்வெட்டுச்சான்றுகளுடன் ஆராய்ந்து எழுதியும், உரைபற்றிய அரும் பொருள் அகராதி, மேற்கோள் அகராதி, சொல்லகராதி இவைகளைக் கண்டு தொகுத்தும் அளித்தவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மொழியாராய்ச்சித்துறை விரிவுரையாளர், திருவையாறு, கல்வெட்டாராய்ச்சிக் கலைஞர், வித்துவான். திரு.வை. சுந்தரேச வாண்டையார் அவர்கள்.
இவர்கள் அனைவர்க்கும் தனித்தனியே எனது உளங்கனிந்த நன்றி உரியதாகின்றது.
முன்னைய ஆறு திருமுறைகள் போலவே, இவ்வேழாந் திருமுறையையும் சீரிய முறையில் அச்சிட்டு உதவிய ஞானசம்பந்தம் அச்சகத்தார்க்கும் எனது நன்றி உரியது.
ஞானசம்பந்தர், நாவுக்கரசர் திருமுறைகளுடன் சுந்தரர் தேவாரத் திருமுறைப் பணியையும் முன்னின்று இனிது முற்று வித்தருளிய செந்தமிழ் சொக்கன் திருவருளை இடையறாது எண்ணி இறைஞ்சுகின்றேன்.
ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணியவர்கள், தங்கள் ஆதீன முதற் குரவர் ஷ்ரீ குருஞானசம்பந்தர், `திருமுறைகள் ஓதாய் - மனமே உனக் கென்ன வாய்' என்று அருளிச்செய்த திருவாக்கில் ஊறித் திளைத்தவர் கள். திருமுறை வழிபாடு, திருமுறைப் பாராயணம் திருமுறைச் சிந்தனை முதலியவற்றில் பெரிதும் ஈடுபாடுடையவர்கள்.
கயிலைத் திருப்பதிகங்களை - சிறப்பாகச் சுந்தரரது, `தானெனை முன்படைத் தான்' என்னும் திருப்பதிகத்தை ஓதக் கேட்பதில் பெருவிருப்புடையவர்கள்.
பன்னிரு திருமுறைகளும் நன்முறையில் பொருள் விளக்கங்களுடன் வெளிவந்து உலவவேண்டும் என்னும் அவர்களது திருவுளப் பாங்கின்படி, ஆறு திருமுறைகள் முன்னமே ஆதீன வெளியீடாக வெளிவந்துள்ளன.
இதுபோழ்து ஏழாந்திருமுறை, ஷ்ரீ குருஞானசம்பந்தர் குருபூஜை மலராக வெளிவருகின்றது. ஏனைய திருமுறைகளும் இனிது வெளிவரத் திருவருளை யாவரும் இறைஞ்சுவோமாக.
வாழ்க திருமுறை! வளர்க திருநெறி!!
தருமையாதீனம்
இங்ஙனம்,
19.05.64
ஷ்ரீலஷ்ரீ கயிலைக் குருமணி அவர்கள்
அருளாணைப்படி,
அடியேன்,
சி. அருணைவடிவேல்.