செந்திலாண்டவன் துணை

07 மதிப்புரை

திருப்பனந்தாள் ஷ்ரீகாசிமடம்

ஷ்ரீலஷ்ரீ காசிவாசி

அருள்நந்தித்தம்பிரான் சுவாமிகள்

அவர்கள்

சிவபெருமானுக்குரிய சிறப்பு அடையாளங்களுள் ஒன்று முக்கண் உடைமை. மூன்று திருக்கண்களுள் வலக்கண் ஞானக்கண்; இடக்கண் அம்மையாருடைய அருட்கண்; நெற்றிக்கண் உலகை நொடித்து உய்வித் தருளும் கண்.

முக்கண்ணர் ஆகிய சிவபெருமான் திருவாய்மலர்ந்தருளிய வேதங்கள் நான்கு. அவை ஆன்மாக்கள் உய்தற் பொருட்டே அருளப் பெற்றன. நான்கு வேதங்களின் சாரமே, தேனினும் இனிய தண்டமிழ் பாடிய மூவர் தேவாரம்.

திருமுறைக் களஞ்சியங்களைப் போற்றி வாழ்பவையும் வாழ்விப்பவையும் தென்னாட்டுச் சைவ மடங்கள் ஆகும்.

திருமுறைகளைக் கண்ணெனப் போற்றி மக்களுக்கு அருள் ஞானத்தை வழங்குவது, திருக் கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் என்பது கண்கூடு. "திருமுறைகள் ஓதாய் மனமே உனக்கென்ன வாய்" என்று தருமை ஆதீன முதற்குரவராகிய குருஞானசம்பந்த பரமாசாரிய மூர்த்திகளும் அருளியுள்ளார்கள்.

பன்னிரண்டாம் திருமுறைக்கு மூல காரணர் ஆகிய சுந்தரர் கயிலையிலிருந்து நிலவுலகத்துக்கு எழுந்தருளியவர்; சிவார்ச்சனைப் பாட்டாகிய தண்டமிழ்ப் பாடல்களைப் பாடுவதற்காகவே சிவபெருமானால் அனுப்பப்பெற்றவர்.

திருக்கயிலாய பரம்பரையில் வழிவழி வந்த ஞானபீடத்தில் வீற்றிருந்து ஞானதானம் செய்தருள்பவர்களும், கயிலையை நேரில் கண்டு தரிசித்துச் சிவாநந்தப் பெருவாழ்வு பெற்றிருப்பவர்களும் ஆகிய தருமை ஆதீன 25ஆவது குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ கயிலை சுப்பிரமணியதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், சுந்தரர் செந்தமிழ் ஆகிய ஞானக் கருவூலத்தை மன்பதைகள் கற்று உய்யும்பொருட்டு விளக்கவுரைகளுடன் வெளிப்படுத்தி அருளு கிறார்கள்.

தருமபுர ஆதீன வெளியீடுகளாகிய மற்ற ஆறு திருமுறைகளைப் போலவே, இத் திருமுறையும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

வன்றொண்டர் வண்டமிழ் மாலையைப் பக்தர்கள் கற்றுப்பாடி இன்பம் எய்துக!

மேலையார் மேலார் ஆகுக!

28-2-1965.

சிவ சிவ