உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருமுறையில் சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 1 சுந்தரர் தேவாரத்தில் இலக்கிய இன்பம்
வித்துவான் ப. நீலா எம். ஏ.,
தமிழ்ப்பேராசிரியை, தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி.
பொங்குமா கடல் சூழ்ந்த பூவுலகத்தை வாழ்விக்க வந்த சைவ சமயாசாரியர் நால்வருள் `ஏழாம் திருமுறை' ஆசிரியரான ஷ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒருவர்.
திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில் சடையனார் இசைஞானியார் நடத்திய இல்லறத்தின் எழில் விளக்காய் அவதாரம் செய்தார்.
மாதொரு பாகனார்க்கு வழிவழி யடிமை செய்யும்
வேதியர் குலத்தில் தோன்றி மேம்படு சடையனார்க்கு
ஏதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானியார்பால்
தீதகன்று உலகமுய்யத் திருவவ தாரம் செய்தார்.
என்று (தி.12 தடுத்தா. 3) சேக்கிழார் பெருமான் இவரது அவதாரத்தைப்பற்றிக் கூறுகிறார். குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் விளையாடும் பருவத்தில் நரசிங்க முனையரையரின் காதல் மகனாக மாறினார். உரிய பருவத்தில் மணமுடிக்க எண்ணினர் பெற்றோர். விதிப்படி நடந்தேறின திருமணக் காரியங்கள்.
புத்தூர் சடங்கவி சிவாசாரியாரின் அருமை மகளை மணம் முடிக்கும் நேரத்தில் முழுதுணர்ந்த பெருமான் வலிய வந்து சுந்தரரை ஆட்கொண்டார். இதனைப் பெருமானே தம்வாக்கால் கூறுவார், `வித்தகம் பேச வேண்டா! பணிசெய்ய வேண்டும்' என்று.
சுந்தரரும் இச்செயலைப் பலவிடங்களில் குறித்துப் பாடி யுள்ளார்.
"நம்பனே அன்று வெண்ணெய் நல் லூரில்
நாயினேன் தன்னைஆட் கொண்ட சம்புவே." (தி.7 ப.69 பா.8)
"மண்ணின் மேல்மயங் கிக்கிடப் பேனை
வலிய வந்தெனை ஆண்டு கொண் டானே" (தி.7 ப.70 பா.2)
உலகியல் மயக்கப் பித்துக் கொண்டவர் பேரருளுடை யானைப் பார்த்துப் பித்தனோ என்று வினவிய விதம் பெருவியப்பைத் தருகிறது. பேரருளுடைய பெருமானின் செயல்கள் பித்தனின் செயல் களோடு உவமிப்பதில் பெரிதான தவறு இருக்கமுடியாது. தக்கன் வேள்வியில் பீடழிந்த பிறையைச் சூடி அருள் செய்தவன் தானே செம் மேனியம்மான்.
திருஞானசம்பந்தப் பெருமானும் இந்தச் செயலைச் சுட்டிப் பாடத் தவறவில்லை.
விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே. (தி.1 ப.89 பா.3)
"பித்தா" என்று தொடங்கும் பதிகத்திலிருந்து "ஊழிதோறூழி" என்பது முடிய முப்பத்தெட்டாயிரம் தேவாரப் பாக்கள் பாடி யருளினார் சுந்தரர் என்கின்றது திருமுறைகண்ட புராணம். (பா.16)
"பின்புசில நாளின்கண் ஆரூர் நம்பி
பிறங்குதிரு வெண்ணெய் நல்லூர்ப் பித்தாவென்னும்
இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும்
ஈறாய்முப் பத்தெண்ணா யிரமதாக
முன்புபுகன் றவர்நொடித்தான் மலையிற் சேர்ந்தார்"
ஏழாம் திருமுறையின்கண் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கையாண்ட செய்யுள்நலம் - சொல்லாட்சி - இயற்கை வருணனைகள் - நாட்டு நகர வளங்கள் யாவும் சேர்ந்துஅத்திருமுறையைப் பலமுறை படிக்கத் தூண்டுகின்றன. இலக்கிய ஆசிரியர் கையாளும் எல்லா உத்தி களையும் இவர் மேற்கொண்டுள்ளார்.
இவற்றோடு கூட சிவபெருமானின் பெருமை - திருவிளை யாடல்கள் - தன் வாழ்வில் கிடைத்த இறைவனின் அருட்பாங்கு, எல்லாவற்றையும் பதிகந்தோறும் அழகு பெறச் சுட்டிச் செல்கிறார். இப்படியாகப் பரந்துவிரிந்த பாநலத்தை - பாற்கடலுள் ஒரு துளியைச் சுவைத்திட முயற்சி செய்வோம்.
எழுமையும் அடிமை:
எழுமை என்றும் எழுபிறப்பு என்றும் ஆளப்படும் சொல் லாட்சி வள்ளுவரிடத்தே உண்டு. "எழுபிறப்பும் தீயவை தீண்டா" (குறள் 62) "எழுமையும் ஏமாப்புடைத்து" (குறள் 398) என்று அதனை ஏற்ற இடத்தில் போற்றி வைப்பர். மற்றைத் தெய்வங்களை மதிக்காத ஆரூரரும் சிவபரத்துவத்தைப் பற்றிப் பல இடங்களில் உயர்த்திச் சொல்கிறார். இவரிடத்தே காணப்படும் முன்னிய முனைப்புக் குணம் இது வொன்றே! செஞ்சடை வானவனின் திருவடித் தொண்டிற்கே தான் ஆட்பட்டமையைத் தெளிவாக விளக்குவார்,
"வைத்தனன் தனக்கே தலையுமென் நாவும்
நெஞ்சமும் வஞ்ச மொன் றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக் கடிமை" (தி.7 ப.14 பா.1)
என்பது இவரது வாக்கு. இன்னும் தனது எண்ணங்களை,
`கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழு தெழுவேன்' (தி.7 ப.14 பா.8)
`ஒருமையே யல்லேன் எழுமையும் அடியேன்' (தி.7 ப.14 பா.11)
`எங்கும் நாடியும் காண்பரியானை
ஏழையேற் கெளிவந்த பிரானை" (தி.7 ப.68 பா.5)
என்றெல்லாம் வெளிப்படுத்துவார்.
கற்பனை கடந்த கடவுள்:
நமது கற்பனைக்கு எட்டாத வடிவமும் குணங்களும் உடைய இறைவனே நம்முள்ளே ஆயிரமாயிரம் கற்பனைகளைத் தோற்று விக்கிறான். கற்பனை கற்பித்த கடவுளை வன்தொண்டர் - பழவினை போக்கும் பரமனாகவும், செய்வினை அறுத்திடும் செம்பொன்னாக வும், பிறவி வேரறுக்கும் பெருமானாகவும் விமரிசிக்கிறார்.
`கல்இயல் மனத்தைக் கசிவித்துக் கழலடி
காட்டி யென் களைகளை அறுக்கும்' (தி.7 ப.67 பா.5)
`பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப்
படுகடல் பரப்புத் தவிர்ப் பானை' (தி.7 ப.67 பா.7)
`அல்லல் உள்ளன தீர்த்திடு வானை' (தி.7 ப.56 பா.10)
`ஓயுமாறு நோய் புணர்ப் பானை
ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை' (தி.7 ப.56 பா.8)
`பறியா வினைகள் அவைதீர்க்கும் பரமா' (தி.7 ப.89 பா.4)
`மலந் தாங்கிய பாசப் பிறப்பறுப்பீர்' (தி.7 ப.82 பா.6)
என்று வினைதீர்க்கும் விமலனைப்பற்றிப் பேசுவார்.
சோதியாய்த் தோன்றும் உருவமே யருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்குமா னந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே. (தி.8 கோயில் திருப்.9)
என்று மணிவாசகப் பெருமானும் பந்தம் அறுக்கும் பரம்பொருளின் பெருமையைப் பேசுகிறார். பிள்ளை மதியணிந்த பிரானே முதற்கடவுள் என்பதில் நம்மவர்க்குத் தனிப் பெருமை உண்டு.
புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
பூதலங் ளவையெட்டும் பொழில்க ளெட்டும்
கலையெட்டும் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
நகையெட்டு நாளெட்டும் நன்மை யெட்டும்
நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும்
திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே. (தி.6 ப.34 பா.9)
என்றும், `ஐயன்காண் குமரன்காண் ஆதியான்காண்' என்றும் (தி.6 ப.24 பா.8) அப்பர் சுவாமிகள் தெரிவிக்கிறார்கள். சுந்தரமூர்த்திகளும் `முன்னமே முளைத்தான்' என்று (தி.7 ப.67 பா.9)குறிப்பிடுகிறார்.
`ஆலந்தரித்த லிங்கம் ஆலவாய்ச் சொக்கலிங்கம்
மூலமாய் எங்கும் முளைத்த லிங்கம்' -சொக்கநாத. 1
என்ற அடியார் வாக்கும் ஈண்டு நினைவு கோடற்குரியது.
இறைவன் வானாகவும், மண்ணாகவும், வளியாகவும், ஒளியாகவும் இருந்து விளக்கம் செய்யும் அழகை நம்பியாரூரர் பல இடங்களில் எடுத்துப் பாடுவார்.
`ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்
வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்' (தி.7 ப.1 பா.7)
`நிலங்கிளர்நீர் நெருப்பொடு காற் றாகாசமாகி' (தி.7 ப.16 பா.7)
உருவாக அருவாக உளதாக இலதாக, மருவாக, மலராக, மணியாக, ஒளியாக, கருவாக, உயிராக, கதியாக, விதியாக வரும் ஈறிலா இறைவனை எளிமை பொங்கும் பாடல்களால் அர்ச்சித்தோர் எத்துணை பேர் என்று இயம்ப இயலுமா!
வீரத்தின் விளையாடல்:
எண்தோள் முக்கண் எம்மான் விளையாடலில் வெளிப்பட்ட வீரத்தை வன்தொண்டர் பல இடங்களில் விதந்தோதுவார்.
(1) பிரமன் சிரமறுத்த பெரியோன்:
`பெண்படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடழித்தான்' (தி.7 ப.98 பா.6)
`அருமலரோன் சிரம் ஒன்றறுத்தீர்' (தி.7 ப.9 பா.2)
(2) அந்தகனை வென்ற செந்தழல் வண்ணன்:
`செறுத்தீர் அழற் சூலத்தில் அந்தகனை'
(3) புரமெரித்த பரமன்:
`ஏற்றார் புரமூன்றும் எரியுண்ணச் சிலை தொட்டாய்' (தி.7 ப.1 பா.8)
`வெற்பார்வில் அரவுநாண் எரி அம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன்' (தி.7 ப.16 பா.5)
`திரிபுரங்கள் வேவ எய்தானை' (தி.7 ப.38 பா.7)
`திருந்தாத வாளவுணர் புரம்மூன்றும் வேவச்
சிலைவளைவித் தொருகணையால் தொழில் பூண்ட சிவன்' (தி.7 ப.38 பா.9)
(4) தக்கனைச் சாடிய அக்கரவாரத்தான்:
`பழிக்கும் பெருந் தக்கன்எச் சம்மழியப்
பகலோன்முத லாப்பல தேவரையும்
தெழித்திட்டவர் அங்கஞ் சிதைத் தருளுஞ்
செய்கை யென்னை கொலோ' (தி.7 ப.9 பா.7)
`கொண்டாடுதல் புரியாவரு தக்கன் பெருவேள்வி
செண்டாடுதல் புரிந்தான் திருச் சுழியற் பெருமானை' (தி.7 ப.82 பா.9)
(5) சலந்தரனை வதைத்த சடைமுடியோன்:
`பிலந்தரு வாயினொடு பெரிதும்வலி மிக்குடைய
சலந்தரன் ஆகமிரு பிளவாக்கிய சக்கரம்முன்
நிலந்தரு மாமகள் கோன் நெடுமாற் கருள் செய்த பிரான்' (தி.7 ப.98 பா.5)
(6) கைம்மாவின் தோலுரித்த பெம்மான்:
`கடமா களியானை யுரித்தவனே' (தி.7 ப.42 பா.7)
`கம்ப மால் களிற்றின் உரியானை' (தி.7 ப.55 பா.10)
`நடுங்க ஆனையுரி போர்த் துகந்தானை' (தி.7 ப.57 பா.4)
`கரியானை யுரிகொண்ட கையானை' (தி.7 ப.59 பா.7)
(7) காமனை எரித்த கண்ணுதலோன்:
`அழிக்கவந்த காமவேளை அவனுடைய தாதை காண
விழித்துகந்த வெற்றியென்னே வேலைசூழ்
வெண்காடனீரே' (தி.7 ப.6 பா.2)
`நறைசேர் மலரைங் கணையானை நயனத் தீயாற்
பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும் இல்லை யென்னா தருள்
செய்வார்' (தி.7 ப.53பா.4)
(8) காலனை உதைத்த கழலோன்:
`வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்' (தி.7 ப.12 பா.1)
`அன்றாலின் நிழற்கீழ் அறம்நால்வர்க் கருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய் மறையோனுக்கு' (தி.7 ப.28 பா.3)
`மட்டுலா மலர் கொண்டு அடியிணை வணங்கும்
மாணிதன் மேல் மதியாதே
கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த சிட்டனே' (தி.7 ப.69 பா.9)
இந்த எட்டுத் திருவிளையாடல்களும் நடந்த வீரத்தலங்களை `அட்டவீரட்டம்' என்று அழைப்பர்.
பூமன் சிரங் கண்டி அந்தகன் கோவல் புரமதிகை
மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்
காமன் குறுக்கை யமன் கடவூர் இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன் சேவகமே.-தனிப்பாடல்
பின்னும் இறைவனது பெருமையை விளக்கும் வீரத் திருவிளையாடல்களும் உண்டு.
அடிமுடி தேடநின்ற அருட்பெருஞ் சோதி:
`மாவாய் பிளந்தானும் மலர்மிசை யானும்
ஆவாஅவர் தேடித் திரிந்து அலமந்தார்' (தி.7 ப.13 பா.10)
`மாலயனும் காண்பரிய மாலெரியாய் நிமிர்ந்தோன்' (தி.7 ப.16 பா.8)
அலற நெரித்த அந்தி வண்ணன்:
`இலங்கையர் கோன் சிரம்பத்தோ டிருபதுதிண் தோளும்
இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மே லூன்றி' (தி.7 ப.16 பா.7)
`எறியும் மாகடல் இலங்கையர் கோனைத்
துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
கோல வாளொடு நாளது கொடுத்த' (தி.7 ப.55 பா.9)
ஆலமுண்ட நீலகண்டன்:
"விஞ்சை வானவர் தானவர் கூடிக் கடைந்த
வேலையுள் மிக்கெழுந் தெரியும்
நஞ்சமுண்ட நள் ளாறனை அமுதை
நாயினேன் மறந்தென் னினைக்கேனே' (தி.7 ப.68 பா.4)
வெள்ளேறுடையானின் வீரத் திருவிளையாடல்களை இப்படிப் பாடி நம்மை மகிழ்ச்சியில் மூழ்க வைக்கிறார் சுந்தரர்.
பற்றலாவதோர் பற்றில்லை:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு -குறள் 350
என்பது தமிழ்மறை.
"திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்களென் றெண்ணி, ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்" (தி.7 ப.69 பா.1) என்று உள்ளத்தினை வெளிப் படுத்தும் வன்தொண்டர், உலக நிலையாமையை நன்குணர்ந்து "வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்" (தி.7 ப.78 பா.1) என்று பறைசாற்றுகிறார்.
நிலையாத உலகில் நமக்குப் பற்றுக்கோடாக உள்ளவன் "அலைபுனல் சேர் செஞ்சடை எம் ஆதியே" (தி.6 ப.31 பா.3) என்று அறிவுறுத்துவார்.
`மற்றுப் பற்றெனக் கின்றிநின் திருப்பாதமே மனம் பாவித்தேன்' (தி.7 ப.48 பா.1) என்பது சுந்தரர் வாக்கு!
பரிந்த சுற்றமும் மற்றுவன் துணையும்
பலரும் கண்டுஅழு தெழ வுயிருடலைப்
பிரிந்து போமிது நிச்சயம் அறிந்தால்
பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
கருந்தடங் கண்ணி பங்கனை உயிரைக்
கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்
சிவக் கொழுந்தினைச் சென்றடை மனனே. (தி.7 ப.64 பா.8)
தொண்டரினத்தவர் எல்லாம் ஆண்டவன் சந்நிதியில் தனித்த இடங்களைப் பெற்றுக் கொண்டனரே! நான் என்ன செய்து இனி அவனருளைப் பெறுவது என்று ஏங்கிப் பாடினார் தாயுமான அடிகள்.
கல்லால் எறிந்துங்கை வில்லால் அடித்துங் கனிமதுரச்
சொல்லால் துதித்தும்நற் பச்சிலை தூவியுந் தொண்டனேன்
எல்லாம் பிழைத்தனர் அன்பற்ற நான்இனி ஏதுசெய்வேன்
கொல்லா விரதியர் நேர்கின்ற முக்கட் குருமணியே! -தாயுமானவர்
"புல்நுனைப்பனி வெங்கதிர் கண்டாற் போலும் வாழ்க்கை" (தி.7 ப.60 பா.3)
`புல்லின் நுனியில் உருண்டு திரண்ட பனியின் ஆட்சி பகலவன் வரும் வரைதானே' என்று கண்டவர்,
"ஒன்றலாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்டு
உடல்த ளர்ந்தரு மாநிதி யியற்றி
என்றும் வாழலா மெமக்கெனப் பேசும்
இதுவும் பொய்யென வேநினை யுளமே" (தி.7 ப.64 பா.5)
என்று நெஞ்சிற்குபதேசம் செய்கிறார். தனது வாழ்வை மீள்பார்வை செய்யும்போது,
மந்திரம் ஒன்றறியேன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரிசே செயுந் தொண்டனெனை
அந்தர மால்விசும்பில் அழகானை யருள் புரிந்த
துந்தரமோ நெஞ்சமே நொடித்தான் மலையுத்தமனே! (தி.7 ப.100 பா.3)
"ஊன்மிசை உதிரக்குப்பை யொருபொரு ளிலாதமாயம்
மான்மறித் தனையநோக்கின் மடந்தைமார் மதிக்கும்இந்த
மானுடப் பிறவிவாழ்வு வாழ்வதோர் வாழ்வுவேண்டேன்!" (தி.7 ப.8 பா.2)
என்று திட்டமாய்த் தெரிவிக்கிறார். இன்பமுண்டேல் துன்பமுண்டு ஏழைமனை வாழ்க்கை - தோற்ற முண்டேல் மரணமுண்டு துயரமனை வாழ்க்கை என்பது அவரது அநுபவ வாக்கு. ஆகவே பொய்ம்மை யாளரைப் பாடிப் பொழுதைக் கழிக்காமல் இம்மையே இன்பம் தரும் இமயத் தலைவனை நாடுங்கள் - பாடுங்கள் என்று நமக்குத் தெரிவிக்கிறார்.
இறைவனும் இயற்கையும்:
`இறைகளோடியைந்த இன்பம் இன்பத்தோடியைந்த வாழ்வு' (தி.7 ப.8 பா.1) என்ற ஆரூரர் வாக்கு அமுதவாக்கே! புலவர்கள் கைபுனைந்தியற்றாக் கவின் பெருவனப்பில் ஈடுபட்டுத் தம்மை மறந்து செந்தமிழ்க் கவிதைகளைப் புனைந்திருக்கிறார்கள். நமக்கு மிகச் சாதாரணமாகத் தோன்றும் காட்சிகளெல்லாம் புலவர்களின் நாநயத்தோடு சேரும் போது அதியற்புத அழகோடு மலர்ந்து மணம் வீசுகின்றன. புராண இலக்கிய ஆசிரியர்கள் இவ்வியற்கையில் கொண்ட தோய்வை அவர்கள் தந்த இன்தமிழ்ப் பாடல்களே பறை சாற்றும். திருவிளையாடல் புராணத்தில் ஆசிரியர் பரஞ்சோதியார் வேனில் அரசன் வீற்றிருக்கும் காட்சியைச் சித்திரிக்கிறார்.
தாமரைக் களாஞ்சி தாங்க தண்குயில் முழவமேங்க
மாமரு தமருங்கிள்ளை மங்கலம் முழங்க தும்பி
காமரம் இசைப்ப முள்வாய்க் கைதை வாளெடுப்ப வேனிற்
கோமகன் மகுடஞ்சூடி இருப்பதக் குளிர்பூஞ் சோலை. -திருவிளை. புரா. தருமிப். 20
இயற்கைப் பொருள்களினூடே இறைவனையும் காணும் மாண்பு நந்தமிழ்ப் புலவர்பால் அமைந்த தனிச் சிறப்பு. `நோக்குவ எல்லாம் அவையே போறல்' என்பது அகத்துறையில் வருமோர வத்தை. சித்தத்தைச் சிவன்பாலே வைத்து அப்பாலும் அவனடி சார்ந் தாருக்கும் நோக்கும் காட்சிகளிலெல்லாம் சிவம் - சக்தியின் ஒளியே பிரதிபலிக்கும்.
அந்தக் கவினுறு காட்சியைத் திருவையாற்றில் கண்ட அப்பர் பெருமான், பின்வருமாறு பாடுகிறார்.
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடுபடாமல் ஐயாறடை கின்ற போது
காதன் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறியாதன கண்டேன். (தி.4 ப.3 பா.1)
குயில், மயில், நாரை ஆகியவற்றையும் சிவத்துடன் இணைந்த சக்தியாகவே கண்டு இன்புற்றார். பரஞ்சோதி முனிவர் மரத்தில் மறைந்துள்ள மறைப் பொருளை,
செங்கதிர் மேனி யான்போ லவிழ்ந்தன செழும்ப லாசம்
மங்குலூர் செல்வன் போல மலர்ந்தன காஞ்சி திங்கட்
புங்கவன் போலப் பூத்த பூஞ்சினை மரவஞ் செங்கை
அங்கதி ராழி யான்போ லலர்ந்தன விரிந்த காயா.-திருவிளையா. புரா. தருமிப். 12
என்று வெளிப்படுத்துவார்.
சோறு சிறக்கும் சோணாட்டில் சேறு நிறைந்த வயல்களின் காட்சியே கண்களுக்குத் தனி விருந்தளிக்கும். முற்றிய செந்நெல்லின் குவை மாமேருவைப் போன்றிருக்கும் என்கிறார் சிவஞான சுவாமிகள். சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக நெல் அளக்கும் குண்டையூர்க் கிழாரைப் போல உழவர்களெல்லாம் மனமகிழ்வோடு வேலையைத் தொடங்கிச் செய்வர் என்கிறார் காஞ்சிப் புராணத்தில்.
நாவலோர் புனைந்துரைக்கும் நலமுழுதும்
அமைந்துவட நாகஞ் சூழ்பொன்
நாவலோ எனவியப்ப வளர்செந்நெல்
அரிபருவ நாடித் தெண்ணீர்
நாவலோன் உளங்களிப்பப் படியெடுக்குங்
குண்டைநகர் உழவர் போல்வார்
நாவலோ எனவிளைப்பத் தொழுவரெலாம்
நயந்தெய்தி வினையின் மூள்வார். -காஞ்சி. நாட்டு. 101
1தாமரைத் தவிசு:
"வான் பொய்ப்பினுந் தான்பொய்யா மலைத்தலைய
கடற்காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்"
என்று கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் பாராட்டப்பெற்ற பொன்னியாற்றினால் பெருமை படைத்தது சோழநாடு. `பொன்னித் திருநாடே புவிக்குத் திலகம்' என்று சேக்கிழார் சுவாமிகளால் பாராட்டப் பெற்றதும் சோழவளநாடுதான். இத்தகைய சோணாட்டி லும், தொண்டை, நடுநாடுகளிலும் இயற்கை எழில் நிறைந்த காட்சி களுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. நடுநாட்டில் பிறந்து, தெய்வப் பெருமான் சேக்கிழார் சுவாமிகளால் `துரிசறுநற் பெருந் தொண்டர்' என்று பாராட்டப் பெறுகின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் அப்பொழுது தொண்டை நன்னாட்டில் சுற்றுலா செய்துகொண்டி ருந்தார். திருவொற்றியூரில் சாருந்தவத்துச் சங்கிலியை - இருந் தவத்துக் கொம்பை - மணந்து மகிழ்ந்து சிலகாலம் தங்கியிருந்த பின்னர் அவர் உள்ளம் திருவாரூர் தியாகேசப் பெருமானை நினைந்து உருகியது. "எத்தனைநாள் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறை வனையே" என்ற உணர்வு உள்ளத்தில் எழுந்ததும் சங்கிலிக்குச் செய்துகொடுத்த சபதத்தையும் மறந்து ஒற்றியூரை விட்டுப் புறப் பட்டார். `எக்காரணத்தாலும் ஒற்றியூர் எல்லை கடவேன்' என்று மகிழின்கீழ் செய்த சபதத்தை மீறியதால் இரு கண்களையும் இழந்தார்.
ஊன் கண் மறைந்தாலும் உளக்கண்ணால் பெருமானைக் காணலாம் என்ற ஊக்கத்துடன் அடியார்கள் வழிகாட்ட ஆரூரர் செல்கிறார். வட திருமுல்லைவாயில் வழிபாடு நடக்கின்றது. உள்ளம் உருக இறைவனை வேண்டி வழிபடுகின்றார்.
திருமுல்லைவாயிலில் உறையும் செல்வனே! திருவும் மெய்ப் பொருளும் எனக்கு உன் சீருடைக் கழல்கள்தாமே! தண் பொழில் ஒற்றிமாநகர் உடையாய்! சங்கிலிக்காக என் கண் கொண்ட பண்பனே! வள்ளலே! குற்றமே செயினும் குணமெனக்கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன். அடியேன் பற்றிலேன்; எல்லியும் பகலும் பணிசெய்வேன். நாயினேனாகிய என்னை அன்று வெண்ணெய் நல்லூரினில் ஆட்கொள்ளவில்லையா? பன்னலம் தமிழாற் பாடுவேற்கு அருள்செய். சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையினால் கட்டி எல்லையற்ற இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளியவனே! பல்கலைப் பொருளே! படுதுயர் களையாய், பாசுபதா பரஞ்சுடரே என்று திருநாவலூரர் வேண்டுகின்றார்.
இந்நிலையில் தொண்டைநாட்டின் எழில்மிக்க சூழலில் அமைந்துள்ள திருமுல்லை வாயிலின் வளத்தையும் வாயாரப் பாராட்டுகின்றார்.
பொன்னலம் பொலியும் செந்நெலம் கழனியில் பொறிவரி வண்டுகள் வயிறும் மனமும் நிறைந்த இன்பத்தில் பாடுகின்ற இசையில் இன்பங்கொண்டு நண்டு ஒன்று கமலத்தவிசில் உறங்குகிறது. உறங்கிய நண்டு பின் உலவுகின்றதாம்.
பொன்னலம் கழனிப் புதுவிரை மருவிப்
பொறிவரி வண்டு இசைபாட
அந்நலங்கமலத் தவிசின்மேல் உறங்கும்
அலவன் வந்துலவிட அள்ளற்
செந்நெலங் கழனி சூழ்திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பன்னலம் தமிழாற் பாடுவேற் கருளாய்
பாசுபதா பரஞ்சுடரே! (தி.7 ப.69 பா.4)
என்று தளராத தமிழ்ப்பாவால் வளமுடைய தொண்டை நாட்டைப் பாடுகின்றார் வன்தொண்டர். தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து அல்லவா!
திருத்தக்க தேவர் காட்டுகின்ற தக்க நாட்டில் அலவன் ஒன்று அதேதுறையில் வாழும் கன்னிவாளையின் உடலினைத் தனது நகத்தினால் தீண்டியது. அவ்வளவுதான் கன்னிவாளை ஊண் துறந்து ஒடுங்கிவிட்டதாம். காட்சி சீவக சிந்தாமணியில்,
வண்டுவாழ் கொடுந்துறைக் கன்னி வாளைமேல்
நண்டுகி ருற்றென நடுங்கி நாணினால்
விண்டொளித் தூண்துறந் தொடுங்கும் வீழ்புனல்
கொண்டபூங் கிடங்கணி நகரம் கூறுவாம்.-சீவக. சிந். கேமசரி.32
என்று அலவனையும் வாளையையும் கொண்டு அழியாத சித்திரம் ஒன்றைத் தீட்டுகின்றார் திருத்தக்க தேவர். காக்கையைப் பாடிய நச்செள்ளையார் அலவனைப்பற்றிப் பதிற்றுப்பத்தில்,
"வண்டிறை கொண்ட தண்கடற் பரப்பின்
அடும்பம லடைகரை யலவ னாடிய
வடுவடு நுண்ணயிர் ஊதை யுஞற்றும்." -பதிற்றுப் - 51
என்கிறார். அலவன் மணலில் கடந்துசென்ற சுவட்டினை அலையாலும் காற்றாலும் அறியப்படும் நுண்மணல் பரந்து மறைக்கின்றது என்கிறார்.
தாமரைத் தவிசில் - செந்திருவினாள் துயில் கொள்ளும் அரிய காட்சி கம்பர்காட்டும் காட்சியாகும். நீரில் சங்கமும், நிழலில் மேதியும், தாரில் வண்டும், தாமரையில் செய்யவளும், தூரில் ஆமையும், துறையில் இப்பியும், போரில் அன்னமும், பொழிலில் தோகையும் உறங்குவனவாகக் கூறுகின்றார்.
நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும்வண்டு தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடைஉறங்கும் ஆமைதுறையிடை உறங்கும் இப்பி
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை -கம்ப. பால. நாட்டுப். 6
இன்னொரு காட்சி:
சேலைப் பழிக்கும் விழியுடையாரைப் போல் திரிகின்ற செங்கால் அன்னம் - தனது மழலைப் பிள்ளையைத் தாமரைத் தவிசில் கிடத்தியது. சேற்றில் மாட்டிக்கொண்ட மேதி கன்றை நினைந்து சொரியும் பாலைக் குடித்த அன்னத்தின் குழவி தேரையின் தாலாட்டில் கண்வளர்கின்றது.
சேலுண்ட ஒண்கணாரின் திரிகின்ற செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்று மேதி கன்றுள்ளிக் கனைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயிலப் பச்சை தேரை தாலாட்டும் பண்ணை. -கம்ப. பால. நாட்டுப். 13
தாமரைத் தவிசில் கண்வளர்கின்ற அலவனையும் அன்னக் குழவியையும் இன்று தெய்வப் புலவர்களின் பாடல்கள் மூலம் நாம் காண்கின்றோம்.
புதுமணத் தம்பதிகளாகிய அன்னங்களைத் தாமரைத் தவிசில் அமர்வித்துத் தடாகமாகிய பெண் தனது அலைக்கரங்களால் தாமரை இலையாகிய மரகதத் தட்டில் நீர்த்துளிகளாகிய முத்துக்களைப் போட்டு ஆரத்தி எடுப்பதாகப் பரஞ்சோதிமுனிவர் தெரிவிக்கின்றார்.
எழில்நிறைந்த சோழநாடும், தொண்டைநாடும் ஏற்றமிகு தமிழ்க் கவிதைகளும் என்றும் நெஞ்சைவிட்டு நீங்கா.
சலசலக்கும் நீரிலே சதிராடும் அழகு:
சோற்று வளமெல்லாம் ஆற்றுவளத்தின் அடிப்படையில் தானே இருக்கிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் செல்லுமிடமெல்லாம் செல்வங் கொழிக்க வைக்கும் ஆறுகளைப் பார்க்கிறார். அப்படியே படமெடுத்துப் பாட்டில் அமைக்கிறார்.
காவிரி:
"மலைக்கொ ளருவி பலவாரி மணியும்
முத்தும் பொன்னுங் கொண்
டலைக்குந் திரைக்கா விரிக் கோட்டத்
தையா றுடைய அடிகளோ" (தி.7 ப.77 பா.7)
"நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெழில் பெற
நின்ற காவிரிக் கோட்டிடை" (தி.7 ப.48 பா.7)
பாலியாற்றின் வனப்பு:
"சந்தன வேரும் காரகிற் குறடும் தண்மயிற் பீலியும் கரியின்
தந்தமும் தரளக் குவைகளும் பவளக் கொடிகளும்
சுமந்து கொண் டுந்தி
வந்திழி பாலி . . . . . . . . . . . ." (தி.7 ப.69 பா.5)
பெண்ணையாற்றின் பெருமை:
"காரூர் புனல் எய்திக்கரை கல்லித் திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித் திகழ் பன்மா மணிஉந்தி" (தி.7 ப.1 பா.10)
"கந்தம் கமழ் காரகில் சந்தனம் உந்திச்
செந்தண் புனல்வந் திழி பெண்ணை" (தி.7 ப.13 பா.3)
கெடிலத்தின் கவின்:
"கூந்தல்தாழ் புனல் மங்கை குயிலன்ன மொழியாள்
சடையிடையில் கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி
வாய்ந்தநீர் வரவுந்தி மராமரங்கள் வணக்கி
மறிகடலை யிடங் கொள்வான் மலையாரவாரி
ஏந்துநீர் எறி கெடிலம்" (தி.7 ப.38 பா.5)
சிற்றாற்றின் சிறப்பு:
"எறிக்குங் கதிர்வேய் உதிர் முத்தமொ டேலம்
இலவங்கம் தக்கோல மிஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்து கொண்டு
மண்டித்திளைத் தெற்று சிற்றாறு" (தி.7 ப.42 பா.1)
"தண்ணாரகிலும் நலசாமரையும் அலைத்தெற்று சிற்றாறு"
மணிமுத்தா நதியின் மாண்பு:
"எத்திசையும் திரையேற மோதிக் கரைகள் மேல்
முத்திமுத் தாறு வலஞ்செயும் முதுகுன்றரே" (தி.7ப.43 பா.10)
கொள்ளிடத்தின் கொள்ளை யழகு:
"உடையவிழக் குழலவிழக் கோதைகுடைந் தாடக்
குங்குமங்கள் உந்திவரும் கொள்ளிடம்" (தி.7 ப.40 பா.6)
"குருமணிகள் கொதித்திழிந்து சுழித்திழியும் திரைவாய்க்
கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடம்" (தி.7 ப.40 பா.7)
அலர் உந்திவரும் நிவா:
"கல்வாய் அகிலும் கதிர் மாமணியுங்
கலந்துந்தி வரும் நிவா" (தி.7 ப.3 பா.1)
"கோஓடுயர் கோங்கலர் வேங்கையலர்
மிகவுந்தி வரும் நிவவின் கரைமேல்" (தி.7 ப.3 பா.4)
அரிசிலாறு ஓடும் அழகுக் காட்சி:
"கலைக்கொம் புங்கரி மருப்பும் இடறிக்
கலவம் மயிற்பீ லியுங்கா ரகிலும்
அலைக்கும் புனல்சே ரரிசில் தென்கரை" (தி.7 ப.9 பா.1)
தன்மையணி பயிலும் தமிழ்ப் பாடல்:
உயர்வு குறித்து எதுவேண்டுமானாலும் கூறலாம். கன்னிமீன் குதிக்கக் கற்பகச்சோலைக் கனி வீழ்ந்தது என்பது உயர்வு நவிற்சி. ஆனால் எளிய சூழலுக்கு ஏற்ப இயைந்த இயற்கையைத் தன்மை யோடு எடுத்துரைப்பது மிகவும் அருமையுடையது.
பெரிய புராணத்தில் ஆசிரியர் சேக்கிழார் இத்துறையில் துறை போகிய தன்மையைப் பல இடங்களில் புலப்படுத்துவார். தில்லை - திருவாரூர் - காஞ்சிபுரம் போன்ற தலங்களின் தன்மையை மிகமிக உயர்ந்த கற்பனைகளோடு விளக்கியவர் நந்தன் வாழும் புலைச் சேரியை எப்படி வருணிக்கிறார் பாருங்கள்.புலைப்பாடியில் பழங் கூரை வேய்ந்த புற்குரம்பை பல உண்டு. கூரைமேல் கொடிச்சுரை படர்ந்துள்ளது.
கீழ்மைத் தொழிலுழவர் பலரும் கூடியுள்ள இந்த இடம் அதற் கேற்ற சூழலோடு வருணிக்கப்பட்டிருக்கும் பாங்கு உளம் கொள்ளற் குரியது. நாய்க்குட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடும் கருஞ் சிறாரின் அரைக் கசைத்த மணி ஒலி நாயின் குரைப்பொலியை அடக்கிடுமாம்.
கூருகிர்மெல் லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும்
வார்பயின்முன் றிலினின்ற வள்ளுகிர்நாய்த் துற்றுபறழ்
காரிரும்பின் சரிசெறிகைக் கருஞ்சிறார் கவர்ந்தோட
வார்சிறுமென் குரைப்படக்கு மரைக்கசைத்த இருப்புமணி. (தி.12 பெரிய. திருநாளைப். 7.)
நாவலூரரும் தமது தேவாரத்தில் இத்தகைய இயற்கை யோடியைந்த கற்பனையைத் தருகிறார். திருமுதுகுன்றத்தில் ஆளி, யானைகளின் முழக்கம் ஓயாது. குன்றத்திலே திரிந்த களிறு ஒன்றை ஆளிபிடித்துக் கொல்ல, பிடி குறத்திகள் வாழ் முன்றிலிடையே கன்றி டும் (வருந்திடும்) முதுகுன்றம் என்கிறார்.
"மழைவள ரும்நெடுங் கோட்டி டைமத யானைகள்
முழைவளர் ஆளிமுழக்க றாமுது குன்றம்." (தி.7 ப.43 பா.6)
சென்றில் இடைச்செ டிநாய் குரைக்கச் சேடிச்சிகள்
மன்றி லிடைப்பலி தேரப்போவது வாழ்க்கையே
குன்றி லிடைக்களிறு ஆளிகொள்ளக் குறத்திகள்
முன்றி லிடைப்பிடி கன்றிடும்முது குன்றரே. (தி.7 ப.43 பா.7)
மந்தியும் கடுவனும்:
பூவும் நீரும் கொண்டு ஏத்தும் அடியார் போல ஐந்தறிவுடைய மந்தியும் செய்கிறதாம். பொன்னடியே நாளும் பூவொடு நீர் சுமக்கும் அடியார் இடர்களைவான் இறைவன். அப்பர் சுவாமிகளும் `சலம் பூவொடு தூபமறந்தறியேன், தமிழோடிசைப்பாடல் மறந்தறியேன், நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்' (தி.4 ப.1 பா.6) என்கிறார். நம்பியாரூரரும் `நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே' - (தி.7 ப.48 பா.1) என்று குறிப்பிடுவார். `பெற்றது கொண்டு பிழையே பெருக்கிப் பெருகுமன்பின் வெற்றடி யேனை விடுதி கண்டாய்' (தி.8 நீத்தல் வி.23) என்ற திருவாசக வரிகளும் ஈண்டு ஒப்ப நினைக்கற் பாலது. சுந்தரரும்,
"நொச்சியம் பச்சிலையால் நுரைதீர்புன லாற்றொழுவார்" (தி.7 ப.98 பா.3)
என்றருளுகிறார்.
கருதியது முடிப்பன் கங்கையணிந்த பெருமான் என்கிறார் சுந்தரர். இந்தத் தன்மையை அறிந்த மந்தியும் மலைப்புறச் சந்திகள் தோறும் சலபுட்பமிட்டு வழிபடும் காட்சி அவினாசியின் அழகுகளில் ஒன்று. மந்தி ஒன்று மாளாக் காதலோடு கடுவன் உண்ணத்தகுந்த பழங் களைத் தேடிக்கொண்டு வருகின்றதாம்.
"மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
சந்திகள் தோறுஞ் சலபுட்ப மிட்டு வழிபட" (தி.7 ப.92 பா.7)
"மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
முந்தி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே" (தி.7 ப.43 பா.8)
பாடுவார் பசிதீர்க்கும் பரமேஸ்வரன் உறையும் பதிகளை இப்படி இயற்கைத் தன்மையோடு பாடுவதில் நிகரற்று விளங்குகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
அஞ்சொலார் பயிலும் ஆரூர்:
ஆரூர் அப்பனிடத்தே ஆட்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொய்யாய வாழ்வை மெய்யென் றெண்ணும் எண்ணம் கொண்டவ ரில்லை. அதற்காகப் பல இடங்களில் இரங்கிக் கூறுகிறார்.
தஞ்சொலார் அருள்ப யக்குந் தமியனேன் தடமு லைக்கண்
அஞ்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சிச்
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சுலாங் கண்டத் தெங்கள் நாதனை நணுகுவாரே. (தி.7 ப.8 பா.10)
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தருக்கும், நாவுக்கரசருக்கும் காலத்தால் பிற்பட்ட சுந்தரர் பாடியருளிய தேவாரப் பாடல்கள் பண் முறையோடுகூட வகுக்கப்பட்டுள்ளன.
அரசராகிய நரசிங்க முனையரையர் விரும்பி ஏற்ற புதல்வராக இருந்தும் சமயவிதி வழாது கடைப்பிடித்தார்.
பெருமைசால் அரசர் காதற் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள்
வருமுறை மரபில் வைகி வளர்ந்துமங் கலஞ்செய் கோலத்(து)
அருமறை முந்நூல் சாத்தி அளவில்தொல் கலைகள் ஆய்ந்து
திருமலி சிறப்பின் ஓங்கிச் சீர்மணப் பருவஞ் சேர்ந்தார். (தி.12 தடுத். 6)
மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க
நன்னகர் விழவு கொள்ள நம்பியா ரூரர் நாதன்
தன்னடி மனத்துட் கொண்டு தகுந்திரு நீறு சாத்திப்
பொன்னனி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார். (தி.12 தடுத். 19)
ஒருமணத்தைச் சிதைவுசெய்து வல்வழக்கிட்டு ஆண்டு கொண்ட பெருமானைக் கொண்டே இருமணத்தையும் கொண்ட வல்லாளர் நம்பியாரூரர்.
கற்பகத்தின் பூங்கொம்பாம் - காமன்தன் பெருவாழ்வாம் - பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமாம் - விற்குவளை மலர் பூத்த விரைக் கொடியாம் பரவையாரை மணமுடித்து வைத்தான் மகா தேவன். இந்நிகழ்ச்சியைத்தான் அற்புதமோ! சிவனருளோ! அறியேன் என்றதிசயிக்கிறார்.
பின்னும் ஞாயிறுகிழாரின் தவப்புதல்வி சங்கிலியாரை `மேரு மலையின் மேம்பட்ட தவத்தான் - வெண்ணெய்நல்லூரில் யாரும் காண யான் ஆள உரியான் - உன்னை எனை இரந்தான்' என்று கூறி மணம் புரிவித்தான்.
மணவாழ்வு சலித்தபின் அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன். பிழுக்கை வாரியும் பால் கொள்வதல்லவா உலகியல். எனை நீயும் ஏற்றருள வேண்டும் என்று வாதாடி வென்றார் ஆரூரர்.
முடிவுரை:
தன்னைப் பற்றித் துரிசே செயும் தொண்டன் என்று கூறிக் கொள்ளும் வன்தொண்டர் வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்று நான் அறியேன் மறுமாற்றம், எல்லியும் பகலும் பணியது செய்வேன் என்று தாழ்மையாகவும் வன்மையாகவும் கூறும் பாங்கு உள்ளத்தைத் தொடும்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. -குறள் 110
என்ற தெய்வ வள்ளுவர் வாக்கை நினைத்துத்தான் போலும்.
கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
காம கோபனைக் கண்ணுத லானைச்
சொற்ப தப்பொருள் இருள்அறுத் தருளுந்
தூய சோதியை வெண்ணெய்நல் லூரில்
அற்புதப்பழ ஆவணங் காட்டி
அடிய னாஎன்னை ஆளது கொண்ட
நற்ப தத்தைநள் ளாறனை அமுதை
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே. (தி.7 ப.68 பா.6)
என்றருளுகிறார். பணியுமாம் என்றும் பெருமை என்பதற் கொப்ப,
"நாவின் மிசை யரையன்னொடு தமிழ் ஞானசம்பந்தன்
யாவர்சிவ னடியார்களுக் கடியானடித் தொண்டன்." (தி.7 ப.78 பா.10)
"அடியார் அடியார்கட் கெல்லாம் தொண்டே பூண்
டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்" (தி.7 ப.24 பா.4)
எனது தம் எளிமையைத் தெரிவித்துக் கொள்வார்.
பாடுவார் பசி தீர்த்து, பரவுவார் பிணியைக் களையும் பரம் பொருளைத் தோழமை கொண்ட பெருந் தொண்டர் பாடியருளிய தேவாரப் பாடல்களில் இன்னும் சிந்தையைச் செலுத்தி எண்ண எண்ண அரிய இன்பம் கிடைக்கும். அறிதோறும் நம்முடைய அறியாமை நம்மை நாணவைக்கும். நவில்தோறும் நலம்தரும் தேவாரப் பாடல்களை ஓதி உய்யவேண்டும்.
திருத்தொண்டத்தொகையருளி, அடியார் பெருமைகளை யெல்லாம் விளக்கமுறச் சொன்ன சுந்தரமூர்த்தி சுவாமிகளை, நெஞ்சில் பதித்து வணங்குதல் நல்லது.
"தேசமுய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன்
வாச மலர்மென் கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்." (தி.12 மும்மை. பா.60)
உ
சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 2 சுந்தரர் தேவாரப் பொருளாராய்ச்சி
செஞ்சொற்கொண்டல், வித்துவான்,
முனைவர் சொ. சிங்காரவேலன் எம். ஏ.,
மொழியாராய்ச்சித்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
உயிர்த்துணை:
உள்ளம் கனிந்தபோது அக் கனிவைக் கவிதையாக்குவோர் அருளாளர்கள். அக் கவிதைகள் தாம் எவ்விடத்தினின்று மலர்ந் தனவோ, அவ்வருட்கனிவோடு கமழ்வன. தம்மைப் பயில் வோர்க்கும், சொல்லிய பொருள் உணர்ந்து சொல்வோர்க்கும் அத்தகு கனிவை அவைதாமும் வழங்குவன. அக் கவிதைகளை ஆழ உணர்தல் நம் வாழ்விற்கு உறுதுணையாம் தன்மை உடையன. அவர்கள் அடைந்த அநுபவங்களை நம் மாட்டும் நிகழ்த்தும் பெற்றியன அவ்வுயர் கவிதைகள்.
வாழ்வெனும் புயலிற் சிக்கி வழி தெரியாது மயங்கும் மனித குலத்திற்குக் கிடைக்கும் திசைகாட்டிகள் அவை; வாழ்வின் துயர வெயிலால் வாடிக் கருகும் நெஞ்சங்கட்கு உயிர்த் தழைப்பை உண்டாக்கும் வானமழைத்துளிகள் அவை.
இவ்வருட் கவிதைகளாகிய தமிழ்ப் பக்திப் பாடல்கள் அவ்வுணர்ச்சியை எடுத்துரைப்பன மட்டும் அல்ல; உலக சகோதரத்துவத்தை, வையகப் பணி நெறியை எடுத்துகாட்டும் அருநெறி. காணும் உயிர்க்குலங்கள் அனைத்தி னூடும் இறைவனைக் காணத் தூண்டும் உயர்நெறி. அன்பையும் தொண்டையும் இணைக்கும் திருநெறி. ஆம், இந்த நெறியையே இவ்வருளாளர்களின் கவிதைச் செல்வங்கள் காட்டுகின்றன.
தமிழ்ப் பெருமக்கட்கு இந்தப் பேறு வளமாக வாய்த்திருக்கிறது. பன்னிரு திருமுறைகளும் தமிழ் உலகிற்குக் கிடைத்துள்ள உயர் கருவூலங்கள்; ஞான பண்டாரங்கள். சைவத்திற்கு வாய்த்த இம் மூல பண்டாரங்களை அவ்வப்போது தஞ்சம் புகுந்தால், பெறும் பலன்கள், ஏட்டிலும் எழுத்திலும் அடங்காதன. அவை வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் திருவடிகட்கும், அவற்றையடைந்த அருளாளர் திருவடிகட்கும் நம்மையாற்றுப் படுத்துவன; ஆதலின், உயிர்த் துணை என்று நம்மாற் போற்றி ஒழுகத் தக்கனவாம்.1
ஆளுடைய நம்பிகள்:
ஏழாம் திருமுறையை அருளிய அருளாசிரியர் சுந்தரர் பெருமான். இவர் பெருங்கவிஞர்பிரான்; திருவருட் செல்வம் நிரம்பப் பெற்று இறைவனைத் தமிழாற் பிணித்த தம்பிரான் தோழர்; நாவலூரிற் பிறந்த நலமும், நாவலர் பலர்க்கும் நாயகராம் தலைமையும் பெற்ற நாவலர் காவலர்; சிவபிரானுக்கு வன்மை பேசுவார் போல மென்மை பேசும் திருவருள் வீறுடைய வன்றொண்டர்; தேசம் உய்ய, உலகுய்யத் திருத்தொண்டத் தொகை முன் பணித்த திருவாளர்; இவ்வருளாளர் திருவடியை வணங்குதற்கு உதவியாக வந்த பிறப்பையே வணங்கு வோம் என்று சேக்கிழார் கூறுதற்கேற்ற 2ஞானச்செம்மலார்.
இவர்தம் வாழ்வும் வாக்கும் ஆகியவற்றைத் திட்பமும் நுட்பமும் செறிய அருங் காப்பியமாகச் சேக்கிழார் செய்தனர்; எனவே `திருத் தொண்டர்புராணம்' எனின், அங்ஙனம் திருத்தொண்டர் என்ற பொதுப் பெயரானே சுந்தரர் பிரான் போற்றப் பெற்றமை தெளிவு, "ஆளுடைய நம்பிகள் ஷ்ரீ புராணம் என்றே கல்வெட்டுக்களிற் காணப் பெறுதலும் அறிஞர் விளக்கிய ஒன்றே.3
மூலஇலக்கியம்:
சுந்தரர் செந்தமிழ் இன்றேல் நாம் இன்று சைவ நாயன்மார் வரலாற்றை அறியச் சிறிதும் வாய்ப்பு இல்லை. திருத்தொண்டத் தொகையே, திருத்தொண்டர் திருவந்தாதியாய் கிளைத்துத் திருத் தொண்டர் புராணமாய் விளைந்தது. அப் புராணம் ஒரு தனி உலகம். அதனுள் சாதி, இனம், அரசன், துறவி, இல்லறத்தான் என்ற உலகியல் வேற்றுமைகளுக்கு எள்ளளவும் இடம் இல்லை. `தொண்டர் குலம்' என்ற ஒரு பெருந்தரத்தில் உயர்ந்து நிற்கும் பெரியோர் அவர் எல்லாம்.
`செயற்கரிய செய்வார் பெரியர்' என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க, அருஞ்செயல் புரிந்த ஆன்ம வீரர்களின் அருள் வரலாறு அது, சேக்கிழார் பெருமானும் இக் குறிப்பினை விளக்கும் இடங்கள் சிலவும் பெரிய புராணத்துட் காணலாம். தம்முடைய பேரறிவு திரு வருளால் துலங்க, நாடிடையிட்டும் காடிடையிட்டும் நிகழ்ந்த அனைத்தையும் உணர்ந்து, மிகச் சுருங்கிய அளவில், அடைமொழிகள் தக்கன புணர்த்து, அருளப்பெற்றது திருத்தொண்டத் தொகை.
அநுபவம் எய்த:
அருளாளர்கள் பாடிய தமிழ் அருட்கவிதைகள் அனைத் திற்கும் பொதுவாகப் பல்கலைச்செல்வர் பேராசிரியர், திரு. தெ. பொ. மீ, அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் இவ்விடத்திற் சிந்தித்தற்கு உரிய செப்பம் உடையன; `இலத்தீன் மொழி சட்டத்திற்கும், ஆங்கிலம், செருமன், பிரஞ்சு முதலியன அறிவியலுக்கும், சோவியத்மொழிகள் ஏகேசுவர வாதத்திற்கும், வடமொழி இலக்கணம், மெய்ப்பொருள் முதலியனவற்றிற்கும், தமிழ் ஆன்மீகக் கிளர்ச்சிக்கும் மிக வாய்ப்பான மொழிகள். 1இம்மொழிகளை ஆழக் கற்றாலொழிய இவற்றை உணர முடியாது. இவ்வாறே தமிழ் அருளாளர்களது தமிழ்க் கவிதைகளைப் பயிலுங்கால், நாம் அவர்கள் கண்ட அநுபவங்களை எய்துகின்றோம்; இறைவனோடு இரண்டறக் கலந்த அவர்களுடைய இனிய அருட்பேறுகளை உணர்கிறோம்".
ஆய்வு பலவகை:
பழந்தமிழ்ப் பேரறிஞர்கள் பொருள்களை ஆராய்ந்துள்ள திறம் பலவாகும். அவற்றையெல்லாம் பொருள் ஆராய்ச்சியின் கூறுகள் எனலாம். உரையாசிரியர்களும் பிறரும் மேற்கொண்டுள்ள பொருளாராய்ச்சி நெறியும் மிகப் பலவாக விரிந்து விளங்குகின்றன. ஆராய்ச்சி என்பது அவரவர் அநுபவப் போக்கைத் தழுவி நிற்பது. ஆதலால், இப் பொருளாராய்ச்சித் திறமும், அவரவர் அநுபவங்கட்குத் தகத் தனித்துநின்று ஒளிரும்.
மலரைக் காண்பார் ஒருவர் அதன் மணம் ஒன்றில் மட்டுமே ஈடுபட்டுநின்று, அனைத்து மலர் மணத்தைம் ஒப்பிட்டு, ஆய்தல் ஒருவகை; அதன் இதழ்கள், உள் அமைப்பு, புற அமைப்பு, அவற்றின் எண்ணிக்கை முதலியன கண்டு ஒப்பிட்டு, அவ்வளவில் செல்லல் மற்றொருவகை. அம்மலரின் ஊடும் அருள் ஒளிவழங்கும் இறை வனைக் கண்டு, "பார்க்கின்ற மலர் ஊடும் நீயே இருத்தி" என்று தொழுது அகங்கனிந்து அதைப் பறிக்கவும் அஞ்சும் கனிந்த நிலை பிறி தொன்று.1 இனி, அம்மலரும் இறைவன் தன் திருவடி போற்றத் தந்ததே எனறு கொண்டு, `இட்டுக் கொள்வன பூவுள நீர் உள' என்று எண்ணிச் `சலம் பூவொடு தூபம் மறந்தறியாது' வழிபடல் வேறொரு வகை. அம் `மலரினும் மெல்லிது காமம்' என்றுணர்ந்து அச்செவ்வி தலைப்படும் சிலரின் தாமும் ஒருவராதல் இன்னொரு வகை.
இவ்வாறு பொருள் ஆராய்ச்சி ஒவ்வொரு நிலையில், ஒவ்வொரு போக்கில் விரிந்து கொண்டே செல்லக் காணலாம், எல்லோரும் கூறும் அடிப்படை ஒன்றே. அதன்மீது எழும்பும் ஆய்வே பலப்பல. அவை அவரவர் அநுபவப் போக்கிற்குத் தக ஆழ்ந்தும். மிதந்தும், தழுவியும், தழைந்தும், அகன்றும், விரிந்தும் செல்கின்றன.
இது போன்றதே பாட்டாராய்ச்சியும் எனலாம். சுந்தரர் செந்தமிழ் ஒரு இலக்கியக் கருவூலம், அருட்பெட்டகம். அதனை ஆய்ந்து நலம் பகுக்கும் ஆராய்ச்சி யும் பல திறப்பட்டுச் செல்லும், ஆயினும் அப்பொருள் ஆராய்ச்சி தன் அடிநிலையாய அவ்வருளியல் திருப்பாட்டையே கொண்டு திகழும் என்பது மெய்ம்மை.
எட்டுவகை; எட்டிறந்த பல்வகை:
திருக்கடைக்காப்பு என்றும், தேவாரம் என்றும், திருப்பாட்டு என்றும் மூவர் தமிழை முறையே வழங்கும் வழக்கும் தமிழ் உலகில் உண்டு1. திருப்பாட்டு என்னுந் தகுதிபெற்ற சுந்தரர் செந்தமிழ்க் கவிதைகளை, அவற்றில் ஆழ்ந்து பயின்ற இரு பேராசிரியர்கள் இரு முறையிற் பகுத்து ஆய்ந்துள்ளார்கள்.
ஒருவர் `சந்தனப் பொதியத் தட வரைச் செந்தமிழ்ப் பரமாசாரியர்' எனப் பாராட்டப் பெறும் தமிழ் முனிவர்: மற்றவர் சித்தாந்தச் செந்நெறியில், சிவஞானபோதம் சிறந்து சிவஞானசித்தி கைவரப்பெற்றுச் சிவம் பிரகாசிக்கப் பெற்ற சைவத் தவ முனிவர்; தமிழ் முனிவரும், தவமுனிவரும் ஆகிய இவ்விருவர் மூவர் தேவாரத்தையும் முறையாக ஆராய்ந்துள்ளனர்.
தமிழ் முனிவர் ஆய்ந்த நெறி எட்டு வகையான். தவமுனிவர் ஆய்ந்த நெறி எட்டிறந்த பலவகையான். இது தொல்காப்பிய ஆராய்ச்சிநெறியை ஒத்துள்ளமை தமிழ் உலகம் அறிந்து இன்புறுதற்குரியதாகும். அகத்தியனாரும், உமாபதி தேவநாயனாரும் ஆகிய இவ்விரு பெருஞ் சான்றோர் இயல் நெறி நின்று, சுந்தரர் திருப்பாட்டினை மட்டும் இங்குச் சுருங்கிய நிலையில் ஆய்தலே குறிக்கோள்.
அகத்தியனார் நெறி:
ஆசிரியர் அகத்தியனார், (மூவர்க்குப் பிந்திய முழுமுதல் அறிஞர்) எட்டுவகையான் ஆய்ந்தனர். அவை பின்வருவன; (1) குருவருள், (2) வெண்ணீறு, (3) அஞ்செழுத்து, (4) கோயில், (5) சிவன் உருவம், (6) திருவடி, (7) அருச்சனை. (8) அடிமை. இப் பொருளைப் பின்வரும் பழைய பாடலும் அழகுறத் தொகுத்து அமைத்துள்ளது:
குருவருளும் வெண்ணீ றெழுத்தஞ்சும் கோயில்
அரனுருவும் என்தலைமே லாக்கும் - திருவடியும்
சிட்டான அர்ச்சனையும் தொண்டும் சிவாலயர்க் கென்று
இட்டார் அகத்தியனார் எட்டு.
-அகத்தியர் தேவாரத்திரட்டு - காசிமடத்துப்பதிப்பு - 1956. ப.9
இவ்வெட்டு நிலைகளும் சீவன் முத்தர்களின் நிலை ஆகும். இந்நிலையினை உட்கொண்ட தேவாரத் திருப்பதிகங்களை அகத்திய மாமுனிவர் சிவாலய முனிவர்க்கு ஓதியருளினார் என்பது வரலாறு. இவ்வெட்டுவகையான ஆராய்ச்சியும், சிவஞானம் கைவரப் பெற்ற அருட்பெருஞ்சித்தராக விளங்கிய அகத்திய முனிவர்க்கு வாய்க்கப் பெற்றது.
உமாபதி நாயனார் நெறி:
இனி, எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தமைந்த உமாபதி தேவ நாயனார் சைவ சந்தான ஆசிரியர்களில் நான்காமவராக விளங்கும் அருளாளர். சித்தாந்த அட்டகம் எனப் புகழப்பெறும் மெய் கண்ட நூல்கள் எட்டினையருளிய நல்லாசிரியர் - திருவருட்பயன் என்ற சாத்திர நூலின்கண் தாம் கொண்ட நிலைகளையே மூவர் தமிழ்க்கும் சார்த்தி விளக்கியுள்ள, இந்நாயனார் தொகுத்த திருமுறைத் திரட்டு பெருஞ்சிறப்புடையதாய்த் திகழ்கின்றது. (1) பதிமுதுநிலை (2) உயிரவைநிலை (3) இருண்மலநிலை (4) அருளதுநிலை (5) அருளுருநிலை (6) அறியுநெறி (7) உயிர்விளக்கம் (8) இன்புறு நிலை (9) அஞ்செழுத்தருள்நிலை (10) அணைந்தோர்தன்மை என்பன இந்நிலைகளின் பெயர்கள். கோயிற் புராணம், திருமுறை கண்ட புராணம், சேக்கிழார் புராணம் முதலியனவும் இந்நாயனார் அருளிய நற்பனுவல்கள். பௌட்கர விருத்தி எனப்பெறும் வட மொழிப் பேருரையும் இப் பெருந்தகையார் வரைந்ததேயாகும். இவ்வாறு இரு நெறிக்கண்ணும் அமைந்த சுந்தரர் தேவாரப் பொருள் அமைப்பு முறையை எடுத்துக்காண்டலும் காட்டலும், `இறைவனடி அடைவிக் கும் எழின்ஞானபூை\u2970?' யாகவே கருதி மேற்கொள்ளத் தக்கனவாகும்.
இரண்டிலும் ஒன்றாம்:
இவ்வாய்வு நிலைகளிற் பெரிதும் பொருந்தும் திறம் உடையனவாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்.
1. குருவருள் - பதிமுதுநிலை
அருளதுநிலை
2. அஞ்செழுத்து - அஞ்செழுத்தருள் நிலை
3. சிவனுருவம் - அருள் உருநிலை
4. திருவடி - இன்புறுநிலை
5. தொண்டு - அணைந்தோர் தன்மை
மேற்கொண்டன; அகத்தியர்:
அகத்தியர் எடுத்துக்கொண்டு, தலைப்புகட்கேற்பத் தொகுத்துள்ள சுந்தரர் திருப்பதிகங்கள் பின்வரும் முதற்குறிப்புடை யனவாம்:
1. குருவருள் - "பித்தாபிறைசூடி"
2. வெண்ணீறு - -
3. அஞ்செழுத்து - "மற்றுப்பற்றெனக்கு"
4. கோயிற்றிறம் - "காட்டூர்க்கடலே"
5. சிவனுருவம் - "மருவார்கொன்றை"
6. திருவடி - "அந்தணாளன்"
7. அருச்சனை - "கொன்றுசெய்த"
8. தொண்டு - "தில்லைவாழந்தணர்"
மேற்கொண்டன: உமாபதிதேவர்:
இனி உமாபதிதேவ நாயனார் எட்டிறந்த பல்வகையான் தொகுத்துள்ள தொடக்கத் திருப்பாட்டுகளிற் சுந்தரர் அருளியன பின் வருவன.
1. பதிமுதுநிலை - "மாயமாயமனம்"
2. உயிரவைநிலை - "ஐவகையரை"
"பந்தித்த வல்வினை"
"கூசநீக்கி"
3. இருள்மலநிலை -
4. அருளதுநிலை -
5. அருளுருநிலை - "நிலையாய் நின்னடியே"
6. அறியுநெறி - "வன்னாக நாண்"
7. உயிர்விளக்கம் - "என்னதெழிலும்"
"கார்க்குன்ற மழைபாய்"
"ஆக்குமழிவும்"
8. இன்புறுநிலை - "மாவையுரித்து"
9. அஞ்செழுத்தருள்நிலை
10. அணைந்தோர்தன்மை - "இங்ஙனம் வந்து"
"மறிசேர் கையினனே"
ஒருவிளக்கம்:
மேற்காட்டியவற்றுள், வெண்ணீறு எனுந்தலைப்பில் அகத்திய ரும், இருள்மலநிலை, அருளதுநிலை, அருளுருநிலை, அஞ்செழுத் தருள்நிலை எனுந்தலைப்புக்களில் உமாபதிதேவ நாயனாரும் சுந்தரர் செந்தமிழை எடுத்துக்கொள்ளாமை தெளிவு. ஒருவேளை அச்சான் றோர்களால், அவையும் தொகுக்கப்பெற்றிருந்து பின்னர் விடப் பெற்றனவோ, அன்றி அவர்களால் முன்னரே விடப்பெற்றனவோ அறியுமாறு இல்லை. எனினும் இந்த ஐந்து நிலைகட்கும் சுந்தர் செந்தமிழில் நுதல்பொருள் பல காணலாம்.
பிறிதொன்று இங்குச் சிந்தித்தல்வேண்டும். அகத்தியனார் பதிகங்களாகத் தொகுக்க, உமாபதி தேவநாயனார் பாடல்களாகத் தொகுத்துள்ளார். இவ்விரண்டு பொருளாராய்ச்சித் தொகுப்புக்களில் எது முன்னது, எது பின்னது என்று ஒப்பிட்டுக் காலவரையறைப் படுத்தற்கு உற்ற சான்று எதுவும் இல்லை. ஆயின் ஒன்று உறுதி. அகத்தியர் என்ற திருப்பெயருடன் தமிழகத்தே வாழ்ந்த பழஞ்சான்றோர் பலருள், இவரும் ஒருவரே என்பது அது. பதினோராந் திருமுறையிற் காணப்பெறும் கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், நக்கீரதேவ நாயனார் போல இவ்வகத்தியனாரும் சுந்தரர் காலத்திற்குப் பிற்பட்டு வாழ்ந்திருத்தல் வேண்டுமென்று கருதலாம். இனி உமாபதி தேவ நாயனாருடையதே இத்திருமுறைத் திரட்டு என்றற்கு `ஞானதீக்கை'த் திருவிருத்தம் ஒன்று சான்றாக நிற்கின்றது; அது பின்வருவது:
தேசுமிகும் அருட்பயின்ற சிவப்பிரகாசத்தில்
திருத்துபொதுச் சங்கற்ப நிராகரணம் திருத்தி
ஆசிலருள் வினாவெண்பாச் சார்புநூலால்
அருள்எளிதிற் குறிகூட அளித்து ஞானப்
பூசைதக்க காரணமுன் புகன்றதனிற் புரிந்து
புணர்விக்கச் சிவஞான போதசித்தி வழிநூல்
மாசில்சத மணிக்கோவை முன்னூல் சான்று
மருவுதிரு முறைத்திரட்டு வைத்தனன் மன்னுயிர்க்கே. -ஞானதீக்கைத் திருவிருத்தம்
குருவருள்:
சைவசித்தாந்தத்தில், குருவருள் விளக்கம் பெரிதும் போற்றப்பெறுவதாகும். தளைப்பட்டுக் கிடக்கும் உயிர், தளையறுத்து இறைவன் திருவருளை எய்துதல் வேண்டும். அதற்கு ஞானாசாரியன் அருள்வேண்டும்.
நம் சமயப் பெருந்தலைவர்களாகிய தேவார ஆசிரியர் மூவரும் குருவருள் பெற்றுப் பாடியருளிய முதற்றிருப் பதிகங்களை முதற்கண் குருவருள் எனுந்தலைப்பிற் காணலாம்.
திருஞானசம்பந்தர்க்கு உலகெலாம் ஈன்ற அன்னையே ஆசிரியத் திருக்கோலம் கொண்டருளினள்; திருநாவுக்கரசர்க்கு உடன்பிறந்த தமக்கையாராகிய திலகவதியாரே ஆசிரிய நிலையில் நின்று அறிவுறுத்தக் காணலாம். இதனை அப்பரடிகளே கூறிமகிழும் தேவாரப் பகுதியும் ஒப்பிட்டறிதற்குரியது.
எம்மையாரிலை யானும உளேனலேன்
எம்மையாரும் இதுசெயவல்லரே
அம்மை யாரெனக் கென்றென் றரற்றினேற்கு
அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே. (தி.5 ப.7 பா.6)
சுந்தரர்க்கோ இறைவனே ஞானாசிரியனாக எழுந்தருளி, நல்லருள் வழங்கினன். சுந்தரர்,
மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே
குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன்
நெறியே நின்னடியார் நினைக்கும் திருக்காளத்தியுள்
அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. (தி.7 ப.26 பா.4)
எனப்பாடுகின்றார். இதனுள் `என்னுடைய குருவே! உன் குற்றேவல் செய்வேன்' என்று பாடுதல் கருதி உணரத்தக்கது, `அத்தா' என்றும், `ஆயா' என்றும், `அன்னே' என்றும், `அடிகேள்' என்றும், `ஆதீ' என்றும், `அண்ணா' என்றும், `ஆனாய்' என்றும், `ஆற்றாய்' என்றும், `அழகா' என்றும் இறைவனை விளித்து, உனக்கு அடிமையான பிறகு அல்லேன் என்று கூறலும் ஆமோ என்பது குருவருட் பதிகத்தின் கருத்தாகும்.
பரை வரலாறு:
குருவருள் பெற்ற உயிர் முதல்வனது பராசக்தியின் விளக்கத்தை அடைந்து சிவயோக நிட்டையில் அழுந்திநிற்கும் நிலையைப் பரையின் வரலாறு என்பர். பராசக்தியின் வியாபகத்தில் அழுந்தி நிட்டை கூடிய நிலை கை கூடுவதற்காகப் பஞ்சாக்கரத்தை ஓதும் நெறியில் ஓதிச் `சிவோகம் பாவனை' புரியும் அநுபூதி நிலையே அஞ்செழுத்துண்மை யாகும். பழம் பஞ்சுரத்தில் அமைந்த திருப் பாண்டிக் கொடுமுடித் திருப்பதிகம் இப்பொருள் அமைதி உடையது.
நான்மறக்கினும் என் நா பஞ்சாக்கரமே `சொல்லும்' என்று தம் உறுதி உரைக்கின்றார் அடிகள். நற்றவன், நட்டவன், நாவலன், வல்லவன், நஞ்சணி கண்டன், சேடன், விரும்பன், நம்பன் காரணன் என்னும் தொடர்களால் இறைவனை யழைக்கின்றார். இதனுள்,
".....நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்; ......
.......இனிப்பிறவாத தன்மை வந்து எய்தினேன்" (தி.7 ப.48 பா.1)
எனவரும் பகுதி சிவோகம் பாவனையாகிய அநுபூதி நிலையை விளக்குதல் காணலாம். இருவினை யொப்பு எய்திய சிறப்பை,
"...விரும்பி நின்மலர்ப் பாதமே நினைத்தேன்;..
.....வினைகளும் விண்டனன்" (தி.7 ப.48 பா.7)
என்று புலப்படுத்துகின்றார் அடிகள்.
கோயிற்றிறம்:
இவ்வாறு அநுபூதி நிலை பெற்ற உயிர் சிலசமயங்களில் தன் அறிவு புறத்தே சென்றால். அதனைத் தன் வயப்படுத்த திருக்கோயில் கள் தோறும் சென்று இறைவனை வழிபடுவது, வழிபட்டு மனமொழி மெய்களை இறைவனின் திருவருளில் சேர்ப்பது, கோயிற்றிறத்தின் கட் கூறப்படும். "காட்டூர்க்கடலே" என்று தொடங்கும் ஊர்த்தொகைப் பதிகம் இதனுள் அடங்குவதாகும். இதனுள் பல தலங்களையும். ஆங்காங்கு எழுந்தருளியுள்ள இறைவனைத் தம் பேரன்பு தோன்ற விளித்து வழிபடும் இயல்பைக் காணலாம்.
காட்டூரின்கண் எழுந்தருளியுள்ள இறைவன் முதலாக, கடவூரில் எழுந்தருளியுள்ள பிரான் ஈறாகப் பல சிவதலங்கள் இதனுள் கூறப்பெற்றுள்ளன. கடல், மலை, கொழுந்து, அரசு, ஏறு, தலைவன், மணவாளன், அழகன், அத்தன், அமுது, கரும்பு, கட்டி, சுடர் என் றெல்லாம் சிவபிரானைக் கூறிக்கூறி உருகுகின்றார் அடிகள்.
"மறவா துன்னைப் பாடப் பணியாயே" (தி.7 ப.47 பா.1)
"அடியார் கவலை களையாயே" (தி.7 ப.47 பா.2)
"இறைக் காட்டாயே எங்கட் குன்னை" (தி.7 ப.47 பா.3)
"அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே" (தி.7 ப.47 பா.4)
"அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே" (தி.7 ப.47 பா.8)
என்பன இதனுட் காணப்பெறும் வேண்டுகோள்கள். பொய்யான உடல்மீது கொண்டுள்ள பற்றை விட்டு, மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றிக் கொள்ளுதல் வேண்டும். அவரே உண்மையை உணர்ந்தோராவர். அடிகள் கருத்து இது.
"ஊனைக் காவல் கைவிட்டுன்னை உகப்பார் உணர்வாரே" (தி.7 ப.47 பா.7)
உள்ளம் தவறு செய்யும் போதெல்லாம், தன் பெருங்கருணைத் திறத் தாலே உள்ளத்தைத் திருத்திச் செப்பம் செய்து அதைத் தன் நெறிப் படுத்துவன் இறைவன்; சுந்தரர் வாழ்வில் இத்தகு நிகழ்ச்சிகள் பல இங்கு ஒப்பிடற்குரியன. தாம் செய்யும் துரிசுகளுக்கு உடனாய் என்று பாடும் அடிகளே இவ்வாறு பாடுகின்றார்:
"திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா" (தி.7 ப.47 பா.8)
தம்முடைய தமிழ்மாலையைப் பெருமிதத்துடன் பாடிப் பரவு வோர்க்குச் சிவனுலகு எய்தல் எளிது என்று முடிகின்றது இப்பதிகம். அதனுள் அடியர் வாயைத் `திரு' என்ற அடைமொழி புணர்த்துக் கூறி, அதன் உயர்வை விளக்கியுள்ள ஆழம் உட்கொண்டு அறிதற்குரியது:
"செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோகத் தாரே"
(தி.7 ப.47 பா.10)
சிவனுருவம்:
இனி, பரையின் வியாபகமும், திருவைந்தெழுத்துத் தியான மும் அடைந்து, திருக்கோயில் வழிபாட்டிலும் சிறந்து நிற்கும் உயிர் தன் அகக்கண்ணாலே சிவபிரான் திருவுருவை வழிபட்டு அவ் வின்பத்தில் திளைத்துநிற்கும் அநுபூதிநிலையே, சிவனுருவம் எனப் படும். `பெரிய பெருமான் அடிகளைப்' பாடும் கடவூர்ப் பதிகம் (தி.7 ப.53 ) முதலியன இப் பொருளமைப்பினுள் அடங்கும். `எல்லார்க்கும் இறை ஆவார்; இல்லை என்னாது அருள் செய்வார்; தாயும் தந்தையுமாய்ப் பல்லுயிர்க்கும் தாமேயாய தலைவனார்; உலகேழும் உடையர்; பேராயிரம் உடைய பிரான்; பீடைதீர அடியார்க்கு அருளும் பெருமான் அடிகள். இத்தகு பெருமான் மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலைபோல விடைமேல் மாதோடு மகிழ்ந்து வரும் திருக்கோலம் காட்டுவர். தம் அடியார்க்குப் பிறவித் துன்பம் அறுத்துப் பாவம் கெடுக்கும் பரங்கருணைக் கடலாவர்' என்று இப் பதிகப் பொருளை உட்கோடல் வேண்டும்.
திருவடிப் பேறு:
இனி, அடுத்து நிற்பது திருவடி. சிவபிரானை வழிபடும் உயிர் சிவபிரான் திருவடிகளில் தலைப்பட்டுப் பேரின்பப் பெரு வெள்ளத்தில் மூழ்கும்; நான் என்ற உணர்வழிந்து தான் என்ற நிலை எய்தும். இதுவே திருவடிப் பொருட்கண் அமைந்த திருமுறைக் கருத்து. `மலமகற்றித் தான் ஆக்கி மலரடிக்கீழ் வைப்பன்' என்னும் மெய்கண்டார் திருவாக்குச் சிந்தித்தற்குரியது. `உன் திருவடி அடைந்தேன்' (தி.7 ப.55 பா.1) என்று புன்கூர் அரனைப் போற்றிசைக்கும் தக்சேசிப் பண்ணார் தமிழ்ப்பதிக முதலியன இவ்வமைப்பினுள் அடங்கும்.
திருவடி அடைந்து உய்ந்த மார்க்கண்டன், ஏயர்கோன், சண்டீசர், நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன், நாவினுக்கரையன் சூதன், சாக்கியன், சிலந்தி, கண்ணப்பன், கணம்புல்லன், பார்த்தன், பகீரதன், திரிபுராதிகள் முதலிய அனைவரையும் நினைவுகூர்கின்றார் அடிகள். `அயர்ப்பொன்றின்றி நின் திருவடியதனை அர்ச்சித்தார் பெறும் ஆரருள்', `நீ செய்த சீலம்', `குற்றம் செயினும் குணமெனக் கருதும் கொள்கை' என்றெல்லாம் ஏத்துகின்றார். சைவசித்தாந்தத்தே பெரிதும் ஏத்தப் பெறும் திருவடிப்பேறு குறித்த அடிகள் திருவாக்குகள் அனைத்தும் ஒருங்குநோக்கி உணர்தற்குரியன.
அருச்சனை:
பெருங்கருணையை நினைந்து உயிர் நினைந்து நினைந்து கசிந்துருகப் பாடும் நிலை அருச்சனை எனப்படும். அருச்சனை செய்யுங்கள் என்று ஆற்றுப்படுத்தும் திருக்கழுக்குன்ற நட்டபாடைப் பண் முதலியன இப்பொருட்பகுப்பின்கண் அடங்குவன.
`அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் நம்மை மண்மேல் சொற்றமிழ் பாடுக' என்று இறைவன் பணித்தபடிப் பாடிய அடிகள் பாடல்கள் அனைத்துமே அருச்சனை என்று கொள்ளத்தக்கன. ஆயினும் அருச்சனை செய்யுநெறி, செய்தார் பெற்றவை முதலிய அனைத்தும் பற்றிய கருத்துடையவற்றை இத் தலைப்பில் தனியே ஆய்தல் வேண்டும் என்பது சான்றோர் கருத்துப் போலும்!
"சென்று சென்று தொழுமின்" (தி.7 ப.81 பா.1)
"இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே" (தி.7 ப.81 பா.2)
"நீளநின்று தொழுமின் நித்தலும் நீதியால்" (தி.7 ப.81 பா.3)
"வெளிறு தீரத் தொழுமின்" (தி.7 ப.81 பா.4)
"புலைகள் தீரத் தொழுமின்" (தி.7 ப.81 பா.5)
"பிழைகள் தீரத் தொழுமின்" (தி.7 ப.81 பா.5)
"சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே" (தி.7 ப.81 பா.10)
என்று அருச்சித்தல் வேண்டும் என்று அறிவுறுக்கின்றமையின் இப் பதிகம் அருச்சனை யென்ற தலைப்பில் அமைக்கப்பட்டதாகலாம்.
அடிமை:
இறைவன் திருவடிகளில் திளைத்தின்புற்றிருக்கும் உயிர் அத்தகு தொண்டர்களுக்குத் தொண்டு செய்து வீற்றிருக்கும் விழுப்பம் தொண்டு அல்லது அடிமை என்னுந் தலைப்பில் ஆராயத்தக்கது. இதன் கண் அமைந்த திருத்தொண்டத் தொகை சுந்தரர் அருளிய பேரருட் கருவூலம் ஆகும் பெற்றி உடையது. அடியார்க்கு அடிமை செய்யும் அருளாளரின் கனிந்த நெஞ்சினை விளக்கும் இத் தமிழ் மாலை தனித்து ஆராய்ந்து சிந்திக்கவும், ஓதி உய்தி பெறவும் உற்ற துணையாவது எனலாம். திருமுறை ஆய்வாளர் இதன் திறம் எல்லாம் ஆய்ந்து முடிவுபோக்கியுள்ளமை அறிஞர் உலகு அறிந்ததேயாகும்.
அடியார்களது வரலாற்றில், அவர்கள் புரிந்த செயற்கருஞ் செயல்களை யெல்லாம் ஓரிரு சொற்களாலாகிய அடைமொழிகளால் விளக்கும் திறம் அடிகட்கேயுரியது.
"இல்லையே என்னாத இயற்பகை" (தி.7 ப.39 பா.1)
"வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருள்"
"கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்" (தி.7 ப.39 பா.2)
"மும்மையால் உலகாண்ட மூர்த்தி" (தி.7 ப.39 பா.3)
"நாட்டமிகு தண்டி" (தி.7 ப.39 பா.5)
"கடல்சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்" (தி.7 ப.39 பா.9)
முதலிய தொடர்கள் ஆழ்ந்து இன்புறத்தக்கன.
"திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்" (தி.7 ப.39 பா.4)
"வம்பறா வரிவண்டு மணநாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன்" (தி.7 ப.39 பா.5)
என்னுந் தொடர்கள் தமக்கு முந்திய அவ்விரு பெருமக்கள் மாட்டும் அடிகள் கொண்டிருந்த பக்தித் திறத்தை இனிது விளக்குகின்றன.
"சிவனெனும் ஓசையல்ல தறையோ உலகில்
திருநின்ற செம்மை உளதே" (தி.4 ப.8 பா.1)
என்று வினவிய அருள்வீரர் அப்பரடிகளின் அருந்தொடரில் ஈடுபட்ட அடிகள், அதனையே அப்பரடிகளின் சிறப்பாக அமைத்து ஓதி, `திருநின்ற செம்மை' என்ற தொடர் சிவபரம் பொருளாகிய திருவையே குறித்து நின்ற செம்மை எனத் தெளிவித்தல் எண்ணுந்தொறும் இன்பம் அளிப்பதாகும்.
இங்ஙனம் இவ்விரு பேராசிரியர்கள் திருவாக்குகளின் விளக்கவுரை போல அடிகள் அருளியுள்ள இடங்கள் பல. அவை யெல்லாம் அறிஞர் உலகின் ஆய்வுத் திறத்தால் எண்ணி முடிந்த முடிவுகள் ஆகும்.
விரிந்த திருவுளம்:
சைவம் பரந்த நிலை உடையது. உலகநெறிக் கோட்பாடு இச் சமயத்தின் உயர்நோக்கு ஆகும். பாரெலாம் போற்றும் வண்ணம் பரந்து, விரிந்த இச்சமயத்தின் விரிந்த நிலையை அறிஞர் உலகு நன்கு அறியும்.
`அறிவினான் மிக்க அறுவகைச் சமயம்
அவ்வவர்க்கங்கே ஆரருள் புரிந்து' (தி.7 ப.55 பா.9)
என்பர் நம்பியாரூரர். அப்பரடிகள்,
`விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்து
எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற் கேற்றதாகும்' (தி.4 ப.60 பா.9)
எனப்பாடுவதும் இங்கு ஒப்பிடற்குரியது. சுந்தரமூர்த்திப் பெருமானின் உலகநெறிமை திருத்தொண்டத்தொகையின் பத்தாம் திருப்பாட்டின் வாயிலாக இனிது விளங்குவதாகும். அதன்கண் (1) பத்தராய்ப் பணிவார் (2) பரமனையே பாடுவார் (3) சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் (4) திருவாரூர்ப் பிறந்தார் (5) முப்போதும் திருமேனி தீண்டுவார் (6) முழுநீறு பூசிய முனிவர் (7) அப்பாலும் அடிச்சார்ந்தார் (8) பொய்யடிமையில்லாத புலவர் ஆகிய தொகையடியார்களைக் குறிப்பிடுகின்றார்.1
காலம், இடம், சமயம் கருதாது இறையருள் தொண்டு ஒன்றே கருதி அவ்வனைவரையும் பணியும் அடிகள் விரிந்த திருவுள்ளத் தினைத் தொழுது பயன்கோடல் வேண்டும். தமிழ் நாட்டின் எல்லைக் கப்பாலும் எங்கெல்லாம் அடியவர்கள் உண்டோ. அவர்களை யெல்லாம் அடியார்களாகக்கொண்டு பணியும் பெருந்தகவு நம்மனோராற் பெரிதும் மேற்கொண்டு போற்றற்குரியதாகும்.
பதி:
இனி பதிமுதுநிலைபற்றி அடிகள் கூறும் கருத்துக்கள் சிறப் புடையன. இறைவன் மூத்த பழமை உடைமையை நம்மாசிரியர்கள் மிகச் சிறப்பித்து உரைத்துள்ளார்கள்.
"பதி பசு பாசம் எனப்பகர் மூன்றிற்
பதியினைப் போற்பசு பாசம் அநாதி" (தி.10 தந். 1-2 ப.3)
என்பார் திருமூலர்.
"முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி"
என்பது (தி.6 ப.19 பா.1) அப்பர் திருவாக்கு.
`பிறப்பில் பெருமான்' (தி.1 ப.116 பா.6)
`பிறப்பாதி இல்லான்' (தி.1 ப.134 பா.4)
என்பன திருஞானசம்பந்தர் திருவாக்குகள். உமாபதி தேவநாயனார் பதிமுதுநிலை குறித்த ஆசிரியர் திருவாக்காக மேற்கொண்டுள்ள திருப் பாட்டு நீடூர்த் திருத்தலமாகும். இறைவனது ஐந்தொழில் மாண்பை எடுத்துக்காட்டுவதாகும் இது. இறைவனது அநாதி முறைமையான பழமையினை இதன்கட் காணலாம். கடவுளியல்பு, சிவசக்தியின் இயல்பு, சிவத்தின் அருட்செயல்கள் திருவருளை நுகரும்வழி முதலியனபற்றிய வெல்லாம் இத்திருநெறியின்கண் அடங்கும்.
உயிர்:
உயிரவை நிலை என்ற பொருளிற் காட்டப்பட்டன இரண்டு பாடல்கள். இறைவன் அடியார்கட்கு அருள்செய்கின்ற திறம் கூறுவதும், அடியார்கள் நல்லியல்புகளைக் கூறுவதும் ஆகிய இரு கருத்துக்களை உடையவை இவை.
`பத்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப்
படுகடற் பரப்புத் தவிர்ப்பானை' (தி.7 ப.67 பா.7)
`கூசநீக்கிக் குற்றநீக்கிச் செற்றமன நீக்கி' (தி.7 ப.7 பா.7)
எனவரும் தொடர் உயிர்களின் நிலையை உரைப்பன.
அறியுநெறி:
உயிர்கள் இறைவன் திருவருளையே கண்ணாகக் கொண்டு தம்மையும் தம் தலைவனாகிய இறைவனையும் அறியும் முறையினைப் புலப்படுத்தும் சுந்தரர் தேவாரப் பாடல்கள் அனைத்தும் `அறியும் நெறி' என்ற தலைப்பில் ஆய்ந்து கோடற்குரியன. இறைவனிடத்து இடைவிடாப் பேரன்பு கொண்டால், அவனே தோன்றித் தன்னை வணங்கும் நெறியை அறிவுறுத்துவான்; துன்பத்தைப் போக்கியருள் வான். என்ற கருத்தொடு பாடியருளிய நிலையாய் நின்னடியே நினைந்தேன், (தி.7 ப.21 பா.9) என்ற பாடல் நாயனாரால் காட்டப்பட்டுள்ளது.
உயிர் விளக்கம்:
உயிர் தன்னியல்பு நீங்கி ஞானம் அடைந்தவிடத்து அதனது வெற்றிப்பாட்டின் இயல்பு கூறும் அடிகள் பாடல்கள் உயிர் விளக்கம் என்ற பொருட்கீழ் அடங்கும் பெற்றியன.
`என்னதெழிலும்' (தி.7 ப.91 பா.4) என்ற ஒற்றியூர்த் திருப்பாட்டும், `கார்க்குன்ற மழையாய்' (தி.7 ப.59 பா.3) என்ற ஆரூர்த் திருப்பாட்டும், `ஆக்கும் அழிவும்' (தி.7 ப.4 பா.7) என்ற அஞ்சைக்களத் திருப்பாட்டும் காட்டப்பட்டன. இறைவன் மழையாய் - ஆக்கம் அழிவு முதலிய அனைத்துமாய் உயிர்கட்கு அருள் புரியும் இயல்பு இவற்றால் அறியப்பெறும்.
இன்புறுநிலை:
உயிர்க்குயிராய் உள்நின்றுணர்த்தி வரும் இறைவன் அருளாசிரியனாய் எழுந்தருளி, உயிரின் இயல்பை அறிவுறுத்த, பின் அம் முதல்வன் திருவடிகளை அணைந்து இன்புறும் நிலையினை `இன்புறுநிலை' என்ற பொருளில் ஆராயலாம். `மாவையுரித்து' எனத் தொடங்கும் கானப்பேர்ப் பாடல் மட்டும் எடுத்துக் காட்டப் பட்டது.3 இதனைப்போன்ற அனைத்தும் இப்பொருள் பற்றியனவேயாம். `பாவகமின்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை' (தி.7 ப.84 பா.7) என்ற தொடர் இன்புறு நெறி காட்டிய குறிப்பாம் எனலாம்.
அணைந்தோர்:
அணைந்தோர் தன்மையைக் குறிக்கும் தேவாரப் பாடல்கள்; `மறிசேர்கையினனே' (தி.7 ப.26 பா.4) எனத் தொடங்குவதும் `இங்ஙனம் வந்து' எனத்தொடங்கப்படுவதும்' (தி.7 ப.51 பா.4) காட்டப்பட்டுள்ளன. இறைவனே குருவாக எழுந்தருளி வந்தானாதலின், அவ்வாறு ஆட்கொள்ளப் பெற்ற அநுபவ ஞானியர் அப்பரம்பொருளையே தொழுதலல்லது உலக நுகர்ச்சிகளில் ஒருபோதும் சிந்தை செலுத்தார் என்பது இத்திருப்பாடல்களால் விளக்கமாகும் செய்தியாம்.
ஏனையபிற:
இருள்மலநிலை, அருளது நிலை, அருளுருநிலை அஞ்செழுத்தருள்நிலை ஆகிய மூன்று நிலைகட்கும் மேற்கோட் பாடல்கள் நாயனாரே காட்டாது விட்டனரோ, அன்றித் தொகுக்கப் பெற்றுப் பின்னர் ஏட்டிற் சிதைந்தனவோ அறிதற்கு அரிதாக உள்ளது. இவை குறித்த சுந்தரர் தேவாரப்பாடல்கள் இப்பொருள் நெறியில் ஆயத் தக்கனவாம்.
"..கள்ளமே பேசிக் குற்றமே செயினும்
குணமெனக் கொள்ளும் கொள்கையால் மிகைபல
செய்தேன்" (தி.7 ப.69 பா.6)
"மலமெலாம் அறும் இம்மையே மறுமைக்கும்
வல்வினை சார்கிலா
சலமெலாம் ஒழி நெஞ்சமே" (தி.7 ப.35 பா.8)
முதலியன இருள் மலநிலை பற்றியனவாம்.
"எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர்
எண்ணிறந்தார்கள் மற்றெங்கும் நின்றேத்த
அவ்வவர் வேண்டியதே அருள் செய்து
அடைந்தவர்க்கே இடமாகி நின்றானை" (தி.7 ப.67 பா.8)
"எங்கேனும் இருந்துன் னடியேன் உனை நினைந்தால்
அங்கே வந் தென்னோடும் உடனாகி நின்றருளி" (தி.7 ப.23 பா.2)
எனவருவன முதலிய பகுதிகள் அருளது நிலை. அருளுரு நிலை பற்றி அமைந்தனவாம். இவ்வாறே
"அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி" (தி.7 ப.83 பா.1)
"நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லுநா
நமச்சிவாயவே" (தி.7 ப.48 பா.1)
என்றெல்லாம் வருவன ஐந்தெழுத்தருள் நிலையில் ஆராய்ந்து கோடற்குரியன.
அரும்பொருள்; அருந்துணை:
சுந்தரர் தேவாரத்தினை இவ்வாறு பல நிலைகளில் ஆராய்ந் தால் பெறும் பயன்கள் பல. அவை பெருமான் திருவுள்ளத்தை நன் கறிந்து கொள்ளப் பெரிதும் உதவும். அந்த நிலையினைத் தமிழ்ச் சான்றோர் பன்னூறாண்டுகளுக்கு முன்னேயே ஆழ்ந்தறிந்தனர்; அந் நெறிநின்றால் பல உண்மைகளைத் தெளிந்து கொள்ளலாம். இப் பொருளாராய்ச்சியிற் புலனாகும் உண்மை நெறி திருமுறையாராய்ச்சி யில் நற்றுணைபுரியும் என்பது உறுதி.
சுந்தரர் செந்தமிழ் தன்னை ஆய்வோர் மருள் தம்மை யெல்லாம் நீக்கி ஒளி காட்டி, வாரா உலக நெறியேற வழிகாட்டுவது என்பது நம்பியாண்டார் நம்பிகளின் கருத்து. `ஆளான பிறகு இனி அல்லேன் எனல் ஆமே' என்று கூறும் அடிகள் வாக்குச் சிந்தித்தற்குரிய செம்மை உடையதாகும். நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்கு பின்வருவது:
அருட்டுறை அத்தர்க்கு அடிமைப்பட்டேன் இனி
அல்லன்என்னும்
பொருட்டுறை யாவதென் னேயென்ன
வல்லவன் பூங்குவளை
இருட்டுறை நீர்வயல்நாவற் பதிக்கும்
பிரான் அடைந்தோர்
மருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட
வல்லவனே. (தி.11 திருத்தொண். பா.16)
அரிது சிந்தித்துக் கொளத்தக்க அரும்பொருளுடைமையின் இவரது செந்தமிழை, "பந்திப்பரியன செந்தமிழ்" என்று நம்பிகள் விரித் துரைப்பர். `பந்திப்புக்கு அரியன' எனவே ஆய்ந்து கோடற் கேற்ற அருநிலை உடையது அது எனல் அவர் கருத்தாதல் விளங்கும்.
இருநிலை விளக்கம்:
திருமுறைகளைக் கற்றுத் தெளிதல் வாழ்வின் அக நிலைக்குத் துணைபுரிவது ஆகும். அக்கல்வியும் தெளிவும் தமிழ் உலகிற் பெருகுதல் வேண்டும். ஆய்வு நெறிகளாற் புதுமை காணும் விருப்பு, கற்றவர் மாட்டுப் பெருகிவரும் இந்நாளில், இம்முயற்சி பெருவெற்றி யளிக்கும் என்ற நம்பிக்கையில் சைவ உலகம் நிற்கின்றது.
புறநிலை அகநிலை ஆகிய இரு நிலையிலும் விளங்கித் தோன்றித் தமிழகத்தின் பக்தி வளத்தை - அன்புச் செல்வத்தை - தெய்வத் தீந்தமிழ்த் திரு நிதியை யாண்டும் பரவச் செய்தல் வேண்டும். அக் கடனை அனைத்துத் தமிழர்களும் மேற்கொண்டால் எதிர்காலம் எல்லா நலங் களும் விளைந்து சிறப்பதாக இருக்கும் என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லை.
சுந்தரர் செந்தமிழ் வாழ்க!
சிவநெறித் தமிழகம் வாழ்க!!
உ
சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 3 புராண வரலாற்றுக் குறிப்புக்கள்
சிரோமணி, வித்துவான் வி. சபேசன்,
தமிழ்ப்பேராசிரியர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.
உலகம் தோன்றிய நாள்முதல் இன்றுவரையுள்ள பழமையான வரலாறுகளைச் சிந்திப்பதால் பல உண்மைகள் நமக்குப் புலப்படுதல் கண்கூடு. இவ்வரலாறுகளுள் இறைவனருள் விளையாடல்களைத் தெரிவிக்கும் புராணச் செய்திகள் நம் உள்ளம் பண்படுவதற்கும் உயிர் உறுதியடைவதற்கும் துணை செய்வன என்று கூறலாம்.
புராணம் என்ற சொல்லுக்குப் பழமையானது என்பது பொருள். இச்சொல் புராதனம் என்பதன் திரிபு. புராணவரலாறுகள் இறைவன் உயிர்கள் மேல் வைத்துள்ள பெருங்கருணைத்திறத்தைப் புலப்படுத்துகின்றன. இறைவன் திருவருளைப் பெறும் வேட்கையை நமக்குத் தூண்டுகின்றன.
சுந்தரர் தேவாரத்தில் எடுத்தாளப்பெற்றுள்ள புராண வரலாறுகளை ஒருவாறு தொகுத்துக்காண்பது பயன்தரும் பணியாகும். புராண வரலாறுகளைத் தத்துவ உணர்வோடும், இறைவனது அருளாற்றலை விரித்துரைப்பன இவ்வரலாறுகள் என்ற எண்ணத் தோடும், நம்பிக்கையோடும் நாம் அணுகவேண்டும்.
புராண வரலாறுகளைக் குறிக்குந் தொடர்களின் பொரு ளறிந்து வரலாறு தெரிந்து ஓதினால் நம் மனம் கனிவுறும். இறைவன் பால் அன்பு ஊற்றெடுத்துப்பாயும். உள்ளம் பண்படும் என்பது ஒரு தலை.
`பிறைசூடீ' என்று இறைவனை விளிக்கும்போது அடைக் கலமாக இறைவன் திருவடிகளையடைந்த சந்திரனைச் சடைமுடியில் சூடிக்காத்த இறைவன் கருணையை எண்ணுகின்றது நம் மனம். "அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனைக்காப்பது காரணமாக வந்த காலன்தன் ஆருயிரதனை வவ்வினாய்" என்ற தொடரை ஓதும்போது தன்பாலன்புகொண்ட அடியார்க்கு இறைவ னருள் புரியும் வள்ளன்மை நம் நினைவிற்கு வரும். இவை போன்ற வரலாறுகள் நம் சிந்தனைக்கு வருவதால் எவ்வாறு நாம் பக்தி செலுத்தவேண்டும் என்ற எண்ணமும் உடன்வருதல் இயற்கை.
இக்கட்டுரையில் ஏனைய திருமுறைகளில் இதுவரை வெளி வந்துள்ள வரலாறுகள் குறிக்கப்பெற்றில. மேலும் சுந்தரர் நாயன்மார் களின் வரலாறுகளைத் திருத்தொண்டத் தொகையில் குறித்துள்ளார். திருத்தொண்டத் தொகையில் குறிக்கப்பெற்ற அடியார்களின் வரலாறு கள் பெரியபுராணமாக விரிந்துள்ளன. ஆகையால் சுந்தரர் தம் திருப் பதிகத்தில் எடுத்தாண்ட நாயன்மார்களின் வரலாறுகளையே இக் கட்டுரையில் தருகின்றோம்.
அகத்தியர் பொதியமலையை யடைந்தது1
சிவபெருமான், பார்வதியை மணக்க இமயமலைக்கு எழுந் தருளினான். பெருமானின் திருமணக்கோலத்தைக் காண எல்லாப் புவனங்களில் உள்ளவர்களும் வந்து கூடினர். அதனால் இமயமலை நடுங்கியது; உயிர்கள் அஞ்சின; வடபக்கம் தாழ்ந்தது; தென்பக்கம் உயர்ந்தது. இரண்டையும் சமன் செய்யப் பெருமான், அகத்தியரை அழைத்து, `நீ தெற்கேயுள்ள பொதியமலையை யடைந்து தங்கினால் தெற்கு உயர்ந்தும், வடக்கு தாழ்ந்தும் இருக்கும் நிலை மாறும். உயிர்களின் அச்சமும் நீங்கும்' என்று திருவாய் மலர்ந்தருளினான்.
அகத்தியர், `பெருமானின் திருமணக் கோலத்தைக் காண வியலாதே' என்ற தமது வருத்தத்தைப் பெருமானிடம் விண்ணப் பித்தார். பெருமானும், `நாம் நமது திருக்கல்யாணக் கோலத்தை அங்கு உனக்குக் காட்டுவோம்' என்றும் அருளினார். அதனால் மகிழ்ந்த அகத்தியர் இறைவன் திருவடிகளை வணங்கி, விடைபெற்றுப் பொதிய மலையை யடைந்தார். வடபகுதியும் தென்பகுதியும் சமமாயின. அங்குப் பெருமான் தமது திருக்கல்யாணக் கோலத்தோடு எழுந்தருளி அருள் வழங்கினான்.
சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச்
சகளி செய்திறைஞ் சகத்தியன் றனக்குச்
சிந்து மாமணி யணிதிருப் பொதியிற்
சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன். (தி.7 ப.65 பா.5)
என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாக்கில் அகத்தியருக்கு அருளிய குறிப்பு உளது.
அடி முடி தேடியது: 1
நான்முகனுக்கு ஆயிரம் சதுர்யுக காலம் பகற்காலமாயும் ஆயிரம் சதுர்யுக காலம் இரவுக் காலமாயும் உள்ளன. இரவுக் காலத்தில் நான்முகன் துயில் கொள்ள, இந்திரன் முதலாகிய தேவர்களும், உயிர்க் கூட்டங்களும், உலகமும் அழிந்தன. கடல், உலகம் முழுவதையும் சூழ்ந்தது. அக்காலத்தில் திருமால் சிவபெருமானை எண்ணி ஆலிலையில் துயில் கொண்டிருந்தார். சனலோக முனிவர்கள் திரு மாலைத் துதித்தனர். திருமாலும் துயில்நீங்கிப் பூவுலகம் பாதாளத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு, பன்றி வடிவெடுத்து அதனை மீட்டுவந்து முன்போல நிறுத்தினார். நான்முகனும் இரவுப் பொழுது நீங்கியதால் விழித்தெழுந்து, தமது படைத்தற்றொழிலை மேற்கொண்டு உலகை முன்போல் உண்டாக்கினான்.
அதனால் செருக்குக்கொண்ட நான்முகன் தன்னால்தான் உலகம் உண்டாக்கவும் அழிக்கவும்படுகிறது என்று எண்ணியவனாய்த் திருமாலிடம் சென்று, `நீ யார்' என்று வினவி, அவரிடம் தானே பரப்பிரமம் என்று தெரிவித்தான். திருமாலும், "நானே உன் தந்தை, தாய், தெய்வம், குரு யாவும் ஆவேன்; உருவமாயும், அருவமாயும், ஆதியாயும், சோதியாயும் யானே உள்ளேன்" என்றார். இதனால் இருவருக்கும் போர் மூண்டது. இருவரும் விட்ட சிவப்படைகளால் பல உயிர்த் தொகைகள் அழிந்தன. தேவர்கள் அஞ்சிக் கயிலையை அடைந்தனர்.
அப்பொழுது மாசித்திங்கள் அமரபக்ஷ சதுர்த்தசி திதியில் நள்ளிரவில் சிவபெருமான் இருவருக்கும் இடையில் சோதி வடிவாய்த் தோன்றி "நீங்கள் இந்தச் சோதி மலையின் அடியையும் முடியையும் காண்பீராக" என்றருளினார். அதனைக் கேட்டும் ஆணவம் நீங்காதவராய் இதன் அடி முடிகளைக் காண்பவரே முழுமுதற் கடவுள் என்று முடிவு செய்து, திருமால் அடியைக் காணப் பன்றியுருவில் கீழ் உலகத்திலும், நான்முகன் முடியைக் காண அன்னப்பறவையின் வடிவில் மேல் உலகத்திலும் புறப்பட்டனர். இருவரும் பலகாலம் தேடியுங் காண முடியாமல் வலிமையிழந்து வருந்தினர். பின்பு சிவபெருமான் அருளால் வலிமை பெற்றுப் பூமியை யடைந்து ஆணவம் நீங்கிச் சிவனை வழிபட்டனர். இதைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
"பண்டைய மால்பிரமன் பறந்தும் மிடந்தும் மயர்ந்தும்
கண்டிலராய் அவர்கள் கழல் காண்பரிதாய பிரான்'' (தி.7 ப.20 பா.9)
என்றும் மேலும்பலவிடங்களிலும் (தி.7 ப.13 பா.10, ப.58 பா.8, ப.73 பா.9) கூறியிருத்தல் காண்க.
அந்தகாசுரனை அழித்தது: 1
இரணியாட்சன் மகன் அந்தகாசுரன். இவன் இறைவனை வழிபட்டு வரம் பெற்றுத் திருமால் முதலிய தேவர்களைப் புறங்கண்டு உலகை ஆண்டுவந்தான். தேவர்கள் அவனுக்குப் பயந்து பெண் வடிவங்கொண்டு கயிலையில் இறைவியின் கணங்களோடு வாழ்ந் திருந்தனர். அப்பொழுது சிவபெருமான் தாருகாவனத்து முனிவர் களைச் சோதிக்கச் சென்றான். அந்தகாசுரன் இதையறிந்து கயிலையில் போருக்குவர, திருமால் அம்பிகையின் திருவருள்பெற்று, அனேக பெண்களையுண்டாக்கி அனுப்பினார். அந்தகாசுரன் அவர்களுக்குத் தோற்று ஓடினான்.
பெருமான் திருக்கயிலையைடைந்த பின்னர், அந்தகாசுரன் தன்னைத் தோற்கடித்த பெண்களைப் பிடித்து வருதல் வேண்டுமென எண்ணி, கயிலையையடைந்தான். அதையறிந்த தேவர்கள் வேண்டு கோளால் சிவபெருமான் வயிரவமூர்த்தியை யனுப்பினான். அவர் சென்று அவனைச் சூலத்தில் கோர்த்து நடனம் செய்தார்.
அந்தகாசுரன் அறிவு பெற்றவனாய் சூலத்தின்மேலிருந்தே சிவபெருமானைத் துதித்தனன். வயிரவமூர்த்தியும் மகிழ்ந்து அவனைச் சிவகங்கையில் முழுகுவித்து, திருவருளையளித்துப் பாசத்தை நீக்கினர். இவ் வரலாற்றை நாயனார்,
"இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி" (தி.7 ப.16 பா.2)
"செறுத்தீர் அழற் சூலத்தில் அந்தகனை" (தி.7 ப.9 பா.2)
என்று பல இடங்களில் கூறியிருத்தல் கருதத்தக்கது.
அம்பிகை அறம் வளர்த்தது: 1
திருக்கயிலையில் இறைவனும் இறைவியும் மகிழ்ச்சி யோடிருக்குங்கால், ஒருநாள் அம்மையார் விளையாட்டாக, சிவ பெருமானது திருக்கண்களை மூடியதால் உலக முழுதும் இருள் மூடிக் கொண்டது. அதனால் படைப்புமின்றி, கடவுட் பூசை முதலிய அறங் களும் ஒழிந்தன. அம்மையார் கைகளை வாங்கிக் கொள்ள இறைவன் விழி திறப்ப முன்போல் உலகம் ஒளி பெற்றுச் சிறந்தது. பின்னர்ச் சிவ பெருமான் உமையம்மையாரை நோக்கி, நீ நமது கண்களை மூடி வாங்கிய சிறு பொழுது உலகிற்குப் பல்லூழியாக உயிர்கள் வருந்தி அறங்கள் தடைப்பட்டன. அப்பாவம் நீங்க நீ பிராயச்சித்தம் செய்தல் வேண்டும், எமக்கும் அடியார்களுக்கும் பாவம் அணுகா தாயினும் நாம் இயற்றிய வழியை உலகம் பின்பற்றி நடக்கு மாதலால் நீ செய்தல் வேண்டும் எனவும், காசி, காஞ்சி இவ்விரண்டு தலங்களே கருமபூமியில் உயர்ந்தன எனவும் அருளினார்.
அங்ஙனமே, அம்மையார் காசியை அடைந்து ஷ்ரீ விசுவேசு வரரைப் பூசித்து, வேறோர் இலிங்கம் தாபித்து வழிபட்டுக் காஞ்சியை யடைந்து, ஷ்ரீ கங்கணேசர், ஷ்ரீ கடகேசர் என்ற இலிங்கங்களை அமைத்து வழிபட்டு, அகநகரை யடைந்தார். அங்கு உலகாணித் தீர்த்தத்தின் கரையில் பிலாகாசத்தையடைந்து தங்கி, அறச்சாலை செய்து முப்பத்திரண்டு தருமங்களையும் வளர்த்தார்.
இவ் வரலாற்றை, சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
"தாரிருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகுய்ய வைத்த
காரிரும் பொழிற்கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக நீர்போய்
ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே" (தி.7 ப.5 பா.6)
என்று அருளியிருத்தல் காண்க.
அம் முப்பத்திரண்டு அறங்களாவன: (1) தேவயாகம், (2) பிதிர்யாகம், (3) பூதயாகம், (4) மானிடயாகம், (5)பிரமயாகம், (6) வறியார்க்கு ஈகை, (7) துறந்தவர்க்கு மடம், (8) இல்வாழ்வார்க்கு இல்லம், (9) இல்வாழ்க்கைக்குரிய கருவிப்பொருள்கள், (10) தண்ணீர்ப்பந்தல், (11) பூஞ்சோலை, (12) யாசிப்பவர், குருடர் முதலிய அங்க ஈனர்கள் முதலாகத் துன்பமுற்றவரை ஆதரித்தல், (13) நோய்க்கு மருந்துகொடுத்தல், (14) குழவியை வளர்த்தல், (15) சுண்ணாம்பு கொடுத்தல், (16) தாம்பூலம் கொடுத்தல், (17) தலைக்கு எண்ணைய்வார்த்தல், (18) முழுகுதற்கு அரைப்புப்பொடிகள் கொடுத்தல், (19) படுக்கை அளித்தல், (20) பூதானம், (21) கோதானம், (22) கன்னிகாதானம் செய்தல், (23) மணம் செய்வித்தல், (24) விளக்குக் கொடுத்தல், (25) தீராக் கடன் தீர்த்தல், (26) சிவனடி யார் வேண்டுவன கொடுத்தல், (27) உருத்திராக்கமளித்தல், (29) திருவெண்ணீறு கொடுத்தல், (28) பூசைக்குரிய பொருள்கள் தருதல், (30) சைவ நூல், புராணம் முதலிய நூல்களைத் தருதல், (31) சிவ பத்தியை உபதேசித்தல், (32) அபயமளித்தல் என்பன.
இந்திரன் முதலிய தேவர்களைத் துன்புறுத்தியது: 1
தக்கன், தன்னால் மகளாக வளர்க்கப்பட்ட உமாதேவியை யும், தான் மருகனாக் கொண்ட பெருமானையும் கண்டுவரக் கயிலை மலைக்குச் சென்றான். அங்கு வாயில் காவலர்களாகவுள்ள பூதர்கள், "நீ சிவ பெருமானை யிகழ்ந்துரைத்தாய்; ஆதலால் உன்னை உள்ளே அனுமதிக்கமுடியாது" என்று கூறி அவனைத் திரும்ப அனுப்பி விட்டனர். அதனால் சினந்த தக்கன் பெருமானிடம் மிக்க சினம் கொண்டான். பின்னர் ஒரு வேள்வி செய்ய முற்பட்டு அதற்குச் சிவ பெருமானை அழைப்பதில்லை என்றும் முடிவு செய்தான். திருமால் நான்முகன் முதலிய தேவர்களைக் கொண்டு வேள்வி செய்தான். இதையறிந்த உமாதேவி பெருமானிடம் வேண்டி விடைபெற்று தன் தந்தையியற்றும் வேள்வியைக் காணச் சென்றாள். தக்கன் உமா தேவியைக் கண்டு `நான் உன்னை அழைக்க வில்லை. நீ ஏன் இங்கு வந்தாய், நீ கயிலைக்குத் திரும்பிச் செல்க'. என்று கூறிப் பலவாறு பெரு மானையும் இகழ்ந்துரைத்தான். அவற்றைக் கேட்ட உமாதேவியார் சினங்கொண்டு தக்கனைச் சபித்து, திருக்கயிலை யடைந்து பெருமானிடம், தக்கனின் வேள்வியை அழித்தருள வேண்டும் என்று வேண்டினார்.
அவ்வாறே பெருமான் தமது திருக்கண்ணினின்றும், ஆயிரம் தலைகளையும், ஆயிரம் முகங்களையும் இரண்டாயிரம் தோள்களையும் கொண்ட மிக்க பேரொளியுடைய வீரபத்திரக் கடவுளைத் தோற்றுவித்தார். அவ்வாறே உமாதேவியார் பத்திரகாளியை உண்டாக்கினார். இருவரும் பெருமானை வணங்கிய பொழுது பெருமான், `தக்கன் நம்மையிகழ்ந்து வேள்வி செய்கின்றான். அங்குச்சென்று நமக்குரிய அவியைக்கேள். கொடுக்கமறுத்தால் அவன் தலையை அறுத்து அவனைச் சேர்ந்தவர்களையும் அழிப்பாயாக. என்றருளினார்.
அவ்வாறே, வீரபத்திரர் வேள்விச்சாலையடைந்து தக்கன்யாகத்தை அழித்தபோது, இந்திரனின் தோள்களை அறுத்தார். சூரியனைக் கன்னத்தில் அடித்துப் பற்களை உதிர்த்தார். பகன் என்னும் சூரியனுடைய கண்களைப் பிடுங்கினார். அக்கினியின் கைகளையும் ஏழு நாக்குகளையும் துணித்தார். இவ்வாறு தக்கனின் யாகத்தை அழித்தார். இவ் வரலாற்றைச் சுந்தரர்.
"பெற்றிமை ஒன்றறியாத தக்கனது வேள்விப்
பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கள் பீடழியச்
செற்றுமதிக் கலைசிதைய திருவிரலால் தேய்வித்து" (தி.7 ப.16 பா.6)
"இந்திரனைத் தோள்முரித்த இறையவன்" (தி.7 ப.16 பா.2)
என்று பல இடங்களில் அருளியுள்ளமை அறியத்தக்கது.
சலந்தரனை அழித்தது:1
சலத்தில் தோன்றினமையால் சலந்தரன் என்னும் பெயரைப் பெற்றான். அவன் காஞ்சியில் சிவலிங்கம் அமைத்துப் பூசித்து ஆண்மை, வலி, எல்லாவுலகத்தையும் ஆளும் ஆட்சி, வெற்றி, சிவபெருமான் தவிர வேறு யாவராலும் அழியாமை, காஞ்சியில் முத்தியடைதல் ஆகிய வரங்களைப் பெற்று உலகங்களை ஆண்டான். அப்பொழுது இந்திரன் முதலிய திக்குப் பாலகர்களையும், பிரமனை யும் வென்று, திருமாலைச் சிறை வைத்திருந்து, தேவர்கள் வேண்டு கோளால் விடுதலைசெய்து வாழுகின்ற நாட்களில், ஒரு நாள் செருக்குக்கொண்டு சிவபெருமானை வெல்லக்கருதிக் கயிலைக்குச் சென்றான். அங்குப் பெருமானைப் போருக்கு அழைக்கு முன்னரே, அவன் தமது நெற்றிக்கண்ணினால் அவனது சேனைகளை அழித்து, ஆயிரஞ் சூரியர்போல ஒளிரும் சக்கரம் ஒன்றை உண்டாக்கி அவனை யும் அழித்தருளினான். இவ்வரலாற்றைச் சுந்தரர்,
"செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக்கருளி" (தி.7 ப.16 பா.2)
என்று அருளியிருத்தல் கண்டுமகிழத்தக்கது.
கொக்குருவாய அசுரன் வாயைக் கிழித்தது: 1
கண்ணனைக் கொல்வதற்குப் பல முயற்சிகளை மேற் கொண்டிருந்த கம்சன் ஒருநாள் கண்ணனைக் கொல்ல பகன் என்னும் அசுரனை அனுப்பினான். அவன் கொக்கு வடிவங்கொண்டு கண்ணனை அடைந்தான். அப்பொழுது கண்ணன் அக்கொக்கின் வாயலகுகளைத் தன்னுடைய இரண்டு கைகளாலும் பிடித்துக் கிழித்து அதனைக் கொன்றான். இவ்வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
"புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கி உமிழ்ந்தானை" (தி.7 ப.40 பா.1)
என்று கூறியிருத்தல் கருதத்தக்கது.
தாரகனை அழித்தது:2
சிவபெருமான் திருக்கயிலையில் முருகப்பிரானுடன் வீற்றிருக்கையில், தேவர்கள் சூரபன்மன் முதலாய அசுரர்கள் தங்களுக்கு இழைக்கும் கொடுமைகளைப் பெருமானிடம் விண்ணப் பித்து அவற்றைப் போக்கியருள வேண்டுமென வேண்டினர்.
அவர்களுடைய வேண்டுகோட்கிரங்கிய பெருமான், முருகப் பிரானை நோக்கி, `நீ சூரபன்மனை அழித்துத் தேவர்கள் துன்பந் துடைப்பாயாக' என்று கட்டளையிட்டுப் போருக்கு வேண்டிய ஆயுதங்களையும் தேர் முதலியவற்றையும் படைவீரர்களையும் அருளி, எல்லாப் படைகளுக்கும் தலைமையானதாக வேற்படை ஒன்றையும் கொடுத்தருளினான். முருகப்பிரானும் பெருமானை வணங்கி விடைபெற்றுத் திருக்கயிலையினின்றும் தம் சேனைகளோடு பூமியையடைந்து கிரவுஞ்ச மலையைக் கண்டார்.
அப்பொழுது நாரதர், கிரவுஞ்ச மலையின் தன்மைகளையும், அங்குள்ள தாரகாசுரனின் வீரத்தையும் எடுத்துக்கூறி அவனைக் கொன்றால் சூரபன்மனைக் கொல்லுதல் எளிது' என்று முருகப் பிரானிடம் தெரிவித்தார்.
அவரும் உடன்பட்டு, வீரவாகுதேவரைச் சேனைகளுடன் அனுப்பி, தாரகனைக் கொன்றுவருமாறு ஆணை யிட்டருளினார். வீரவாகு தேவர் முருகப்பிரானிடம், விடைபெற்றுத் தாரகனின் மாயா புரியை வளைத்துப் பின்னர் அவனுடன் போரிட்டு அவன் படைகளை யழித்து, கடைசியில் கிரவுஞ்சமலையில் உள்ள குகை வழியில் தாரகன் பின்னே சென்று, அவனது மாயையால் மயங்கித் தூங்குவதுபோல் கிடந்தார்.
இவற்றையெல்லாம் நாரதர்மூலம் அறிந்த முருகப்பெருமான் பூத கணங்களுடன் போருக்குச் சென்று தாரகனோடு போர்செய்து, அவன் மாயைகளையெல்லாம் அறிந்துவென்று தமது வேற்படையை யேவி தாரகன் மார்பையும் கிரவுஞ்ச மலையையும் பிளந்து அவனை அழித்தார். இவ்வரலாற்றை நாயனார்,
"பொரும்பலம துடையசுரன் தாரகனைப் பொருது
பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்" (தி.7 ப.16 பா.9)
என்று கூறியிருத்தல் காண்க.
திரிபுரத்தை எரித்தது1
பூமி, அந்தரம், சுவர்க்கம் என்று சொல்லப்படும் மூன்று உலகங்களிலும் பொன், வெள்ளி, இரும்பு இவற்றாலாகிய மூன்று கோட்டைகளையுடைய அசுரர்கள் திரிபுரத்தவர் என்னும் பெயருடன் விளங்கினர். அவர்கள், சிவபத்தி, அடியார் பத்திகளிற் சிறந்து விளங்குவதோடு சிவபூஜையிலும் சிறந்து விளங்கினார்கள். அவர்களுடைய திரிபுரங்களில் வாழ்வோரும் சிவபத்தியுடையவர் களாயும் சிவநாமத்தை ஒலிப்பவர்களாயும் இருந்தனர். ஆயினும் அசுரர் குலத்தைச் சேர்ந்தவர்களாதலால் தேவர்களை வருத்தினர். பிரமன் முதலிய தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். திருமால் அத்தேவர்களுடன் ஒரு வேள்வியியற்றி, அதினினின்றும் பல பூதங்களை உண்டாக்கித் திரிபுரத்தவர்மேல் ஏவினர். அவை திரிபுரத்தவர்களை அணுக மாட்டாதனவாய் அழிந்தன.
பின்னர், திருமால், அவ்வசுரர்கள் சிவபெருமானைச் சார்ந்தவர்களாய் இருத்தலால் நம்மால் அவர்களை அழிக்கவியலாது; சிவபெருமானே அழிக்கவல்லவர். ஆதலால் நாம் அவ்வசுரர்கள் கொண்டுள்ள சிவபத்தியைச் சிதைப்போம் என்று கூறி, `வேதநெறி குற்றமுடையதென்றும், மறுமை என்று ஒன்று இல்லையென்றும், எல்லாப் பொருளுங் கணந்தோறும் தோன்றியழியும் என்றும் கூறும் நூல் ஒன்று செய்து, தனது அம்சத்தில் ஆதிபுத்தன் என்னும் ஒரு புருடனைப் படைத்து, நீ நாரத முனிவனுடன் சென்று திரிபுரத்தவர் களுக்கு இந்நூலைப் போதித்து மயக்கி அவர்களைச் சிவநெறி யினின்றும் நீக்குக' என்று அனுப்பினார்.
நாரதரும், ஆதிபுத்தனும் திரிபுரத்தவர்களை அடைந்து மயக்கித் தமது மாணாக்கராகச்செய்து புத்தமதத்தைப் போதித்தனர். அவர்களும் சிவநெறியினின்றும் நீங்கினர். இதையறிந்த திருமால் மகிழ்ச்சியுற்று, தேவர்களோடு திருக்கயிலையையடைந்து, திரிபுரத் தசுரர்களால் தாம் பட்ட துன்பத்தையும், அவர்களைச் சிவநெறி யினின்றும் மாறச்செய்ததையும் கூறி அவர்களை அழிக்கும்படி வேண்டினார். சிவபெருமான் `போர்க்குரிய கருவி யாதும் இல்லையே' என பூமி தேர்த்தட்டாகவும் சூரிய சந்திரர் சக்கரங்களாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், பிரமன் சாரதியாகவும், மேருமலை வில்லாகவும், வாசுகி நாணாகவும், திருமால் அம்பாகவும் மற்றைய தேவர்கள் மற்றைய கருவிகளாகவும் அமைந்து நின்றனர். சிவ பெருமான் அத்தேர்மீதேறி, அவ்வில்லை வளைத்து நாணேற்றிக் கணைபூட்டித் திரிபுரத்தவர்களை நோக்கி, ஓர் புன்னகை புரிந்த காலையில் திரிபுரங்களும் வெந்து நீறாயின. இவ்வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
"நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி யவர்க்காய்
வெற்பார்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன்" (தி.7 ப.16 பா.5)
என்று அருளியுள்ளமை காண்க.
திருக்கண் புதைத்தது: 1
சிவபெருமான், மந்தரவெற்பில் உமாதேவியோடு மகிழ்ச்சி யுடன் வீற்றிருக்கும் நாட்களில் ஒருநாள் விருப்பமிகுதியால் உமா தேவி முதுகுப்புறம் அடைந்து தனது இருசெங்கைகளால் பெருமானின் திருக்கண்களை இறுகப்புதைத்தாள். பெருமானின் வலதுகண் சூரிய னாகவும் இடதுகண் சந்திரனாகவும் இருத்தலால் விண்ணுலகமுதல் தேவருலகம் பூவுலகம் முதலிய யாவும் இருண்டன. அதனால் படைத்தல் தொழில் நின்றது. வேள்வி தடைப்பட்டது. தவம் தானம் முதலியனவும் கடவுள் வழிபாடுகளும் நின்றன. தேவர்கள், முனிவர்கள், மக்கள் முதலிய எல்லோரும் அஞ்சி நடுங்கியிருக்கும் பொழுது உமையம்மை திருக்கைகளை நீக்கியதால் பெருமான் கண்ணின் ஒளி எங்கும் பரவியது. உலகங்கள் மீண்டும் முன்னிலையை யடைந்தன. உயிர்கள் உய்ந்தன. இவ்வரலாற்றால் "எல்லா ஒளிகட்கும் காரணம் இறைவன் அருளுருவத்தின் ஒளியே" என்னும் உண்மை விளங்குகிறது. இவ்வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்:
"மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தான்
மகிழ்ந்தவள் கண்புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுடன் றான்மூடவிருள் ஓடும்வகை நெற்றி
ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமன்" (தி.7 ப.16 பா.4)
என்று திருக்கலயநல்லூர்த் திருப்பதிகத்தில் கூறியிருத்தல் காண்க.
திருமாலை இடப வாகனமாகக் கொண்டது:2
இரண்டாயிரம் சதுர்யுகங்கள் நான்முகனுக்கு ஒருநாள், அந்தநாள் முப்பதுகொண்டது ஒரு திங்கள், அத்திங்கள் பன்னிரண்டு கொண்டது ஒரு வருடம். இவ்வாறு நூறு வருடங்கள் கழிந்தால் நான் முகன் ஆயுட்காலம் நிறைவுறும். நான்முகனின் ஆயுட்காலம் திரு மாலுக்கு ஒருநாள், இவ்வாறே திருமாலின் ஆயுளும் கழியும். திருமாலின் ஆயுட்காலத்தின் முடிவில் உலகங்களும், உயிர்க்கூட்டங் களும் தீயால் அழிந்து எங்கும் சுடலை மயமாய்க் காட்சியளிக்கும். அப்போது பெருமான் உமைகாண திருநடனம் புரிவான். இவற்றைக் கண்ட தருமதேவதை அஞ்சிச் சிவபெருமானைச் சரண் அடைந்து துதித்து "அடியேன் இறக்கும் தன்மையை மாற்றி, தேவரீருக்கு வாகன மாகும் பேற்றையும், வலிமையையும் தந்தருள வேண்டும், என வேண்டியது. அவ்வேண்டுகோளை ஏற்று, நீ இடபவாகனமாய் நம் மிடத்தில் எப்பொழுதும் இருப்பாயாக. என்று அருளிச் செய்து இடப வாகனமாக ஏற்றார். அதை யறிந்த திருமாலும் பெருமான் திரிபுரத்தை எரிக்கப் புறப்பட்டுச் சென்றபொழுது இடபவாகனமாக இருந்து தாங்கினான். இவ்வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
"திரியும் முப்புரந் தீப்பிழம் பாகச்
செங்கண் மால்விடை மேல்திகழ்வானை" (தி.7 ப.61 பா.3)
என்று கூறியிருத்தல் காண்க.
நெற்றிக்கண் தோற்றுவித்தது: 1
திருக்கயிலையில் பெருமான் உமாதேவியோடு வீற்றிருந் தருளும் போது, உமாதேவியார் பெருமானின் திருக்கண்களைத் தமது இருகைகளாலும் விளையாட்டாக மூடியதால் உலகம் இருண்டது, துன்புற்றது. உலக இருளைப் போக்கிப் பெருமான் ஒளி உண்டாக்க, தமது நெற்றிக் கண்களைச் சிறிது திறந்து அருளினார். அதனால் உலகம் ஒளிபெற்றது. உய்ந்தது. இவ்வரலாற்றை,
"மலைமடந்தை விளையாடி விளையாடு கரத்தான்
மகிழ்ந்தவள் கண்புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுன்றான் மூடவிருள் ஓடும் வகை நெற்றி
ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமன்" (தி.7 ப.16 பா.4)
என்னும் சுந்தரர் திருவாக்கால் உணர்க.
பார்வதியின் அன்பைச் சோதித்துப் பெருமான் மணந்தது:2
இமய மலையில் தவம் செய்துகொண்டிருந்த மலையரசன் மானசவாவியில் தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டு எடுத்து வந்து மேனையினிடத்தில் கொடுத்துப் பார்வதி என்னும் பெயர் சூட்டி வளர்த்துவந்தான். ஐந்து வயது நிரம்பியதும் பார்வதி, பெருமானையே திருமணம் புரிய விரும்பி, தந்தையிடம் கூறித் தவச்சாலை ஒன்றை அமைத்துத் தவம் புரியலானாள்.
பார்வதியின் தவத்திற்கிரங்கிய பெருமான், கிழவேதியர் வடிவுடன் தவச்சாலையை யடைந்தார். பார்வதி தவமியற்றும் காரணம் வினவி, சிவபெருமானைத் திருமணம் புரியத் தவம் இயற்றுவதை அறிந்தார். திருமாலினாலும் நான்முகனாலும் அறியவியலாத பெருமான் `உன்னை மணம் புரியமாட்டார். உன் தவத்தை விடுக' எனப் பலவகையாக இகழ்ந்துரைத்தார்.
இவற்றிற்கெல்லாம் பார்வதி மனம் தளராது உறுதியுடன் இருப்பதைக் கண்டு பெருமான் காட்சிதந்து அவள் வேண்டும் வரமருளி மணந்துகொண்டார். இவ் வரலாற்றைத் திருக்கலயநல்லூர்த் திருப்பதிகத்தில்
"குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள் தன்குணத்தினை நன்கறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன்" (தி.7 ப.16 பா.1)
என்று குறிப்பிடுதல் கருதத்தக்கது.
மருதிடையே தவழ்ந்தது1
நளகூபரன், மணிக்கிரீவன் என்னும் இருவரும் குபேரனுடைய மக்கள். இவ்விருவரும் ஒருநாள் மதுவினை நிறைய அருந்தி ஒரு நீர்நிலையில் இறங்கி நீராடி, ஆடை இல்லாமல் கரை யிலேறி நின்றனர். அவ்வழியே வந்த நாரதரைக் கண்டும் ஆடை அணிய முயலாமல் வாளாவிருந்தனர். அவர்களைக் கண்டவுடன் நாரதருக்கு மிகுந்த சினம் மூண்டது. "மரம்போல் நிற்கும் நீங்கள் மரங்களாகக் கடவீர்கள்" என்று சாபமிட்டார். அம்மொழியைக் கேட்ட அவர்கள் வருந்தித் தங்களை மன்னிக்குமாறும், அச்சாபத்தை மாற்று மாறும் வேண்டிக்கொண்டனர். அதற்கிரங்கிய நாரதர், "ஆயர் பாடியில் நீங்கள் மரமாக நில்லுங்கள். கண்ணன் உரலோடு வந்து உங்களைக் கீழே சாய்க்கும் பொழுது நீங்கள் பழைய உருவத்தைப் பெறுவீர்கள்" என்று கூறினார். இருவரும் அவ்வாறே கண்ணபிரான் வளர்ந்த மாளிகை வாசலில் இரண்டு மருதமரங்களாகி நின்றனர். ஒரு நாள் அசோதை கண்ணபிரானை எங்குஞ் செல்லாதவாறு உரலோடு சேர்த்துக் கட்டிவைத்தாள். ஆனால் கண்ணன் உரலையுஞ் சேர்த்து இழுத்துக்கொண்டு இரு மருதமரத்தின் இடையே சென்றார். உரல் மருதமரத்தில் சிக்கி இழுபட, மருதமரங்கள் உடனே நிலத்தில் சாய்ந்தன. அவ்வளவில் குபேரன் மக்கள் சாபந் தீர்ந்து பழைய உருவைப் பெற்றனர். இவ்வரலாற்றை நாயனார், "மருதுகீறி ஊடு போன மால்"(தி.7 ப.7 பா.10) என்று கூறுவதால் அறியலாம்.
மன்மதனை உயிர்ப்பித்தது: 1
திருமால் மனத்தில் உதித்தவனாகிய மன்மதன் உயிர்க் கூட்டங்களை மயக்கி உலகை அடக்கியிருந்தான். சூரபன்மன் முதலிய அரக்கர்களால் துன்புற்ற தேவர்கள் விரும்பியவண்ணம் நான்முகன், மன்மதனை அழைத்து, முருகப்பெருமானின் தோற்றத்திற்காக, பெருமான்மீது மலர்க்கணை எய்யும்படியும், இல்லையேல் சாபம் கொடுப்பதாகவும் கூறினான். சாபத்தால் வருந்துவதை விட கண்ணுத லோன்மேல் கணையெய்து மாய்தலே சிறப்புடையது என்று கருதி உடன்பட்டு இரதிதேவியுடன் திருக்கயிலையையடைந்த மன்மதன், திருநந்திதேவரின் அனுமதி பெற்று உள்ளே சென்று, பெருமானின் மோன நிலையைக் கண்டு கலங்கிப் பின் தெளிந்து மலர்க்கணைகளைச் சொரிந்தான். மலர்க்கணை பட்டதும் பெருமான் சிறிதே கண்விழித்துப் பார்த்தார். நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த தீயினால் மன்மதன் எரிந்து சாம்பரானான். அதைக்கண்ட இரதிதேவி அழுது அரற்றி, `எம் பெருமானே! பிரமன் முதலிய தேவர்களின் தூண்டுதலினால் அடிய வளாகிய எனது கணவன் மலர்க்கணையெய்து மாண்டனன். அக் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும்' என வேண்டிநின்றாள். பெரு மானும், உமாதேவியை நாம் மணம் புரியுங் காலத்து உன் கணவனை உயிர்பெற்றெழச் செய்வோம் என்று வரமருளினான்.
அவ்வாறே, பெருமான் உமாதேவியின் தவத்தைக் கண்டு இரங்கி காட்சி தந்து திருக்கல்யாணம் செய்தருளியபோது, மன்மதனை யெழுப்பி, "இரதிதேவிக்கு மாத்திரம் உருவமாயும், மற்றவர்களுக்கு அருவமாயும் இருக்குமாறு அருள்புரிந்தான்" இவ் வரலாற்றைச் சுந்தரர்,
"........நீர்முன் கொண்ட உயர்தவத்தை அமரர் வேண்ட
அழிக்கவந்த காமவேளை அவனுடைய தாதை காண
விழித்துகந்த வெற்றியென்னே வேலைசூழ் வெண்காடனீரே" (தி.7 ப.6 பா.2)
என்று கூறியுள்ளமை காண்க.
வாயில்காவலராயினமை: 1
திரிபுரத்தவர்கள் நாட்டில் சுதன்மன், சுசீலன், சுபுத்தி என்ற மூவரும் ஆதிபுத்தனின் பொய்யுரையால் மயங்காது சிவநெறி யினின்றும் பிறழாதிருந்தனர். அதனால் பெருமான் திரிபுரத்தை அழித்தபொழுது அழியாது நின்றனர். பெருமான் அவர்களை நோக்கி உமக்கு வேண்டும் வரம் யாது என்று கேட்க, தேவரீர், திருக்கோயிலில் வாயில் காவலராக இருக்க அருள்புரியவேண்டும் என்றனர். பெரு மானும் `நீவிர் காஞ்சியை யடைந்து எம்மைப் பூசித்தால் அதனை யளிப்போம்' என்று திருவாய்மலர்ந்தருளினான். அவ்வாறே அவர்கள் காஞ்சியை யடைந்து முப்புராரீசன் என்னும் பெயரினால் ஓர் இலிங்கம் தாபித்துப் பூசித்து அப்பேற்றையடைந்தனர். இவ் வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
"மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல்
காவலாளர் என் றேவிய பின்னை
ஒருவன் நீகரி காடரங் காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
மணிமுழா முழக்க அருள் செய்த தேவதேவ" (தி.7 ப.55 பா.8)
என்று அருளியிருத்தல் காண்க.
முத்துமாலை அணிந்துகொண்டது: 2
உறையூரிலிருந்து சோழநாட்டை ஆண்டு வந்த சோழன் ஒருவன் சிவபத்தியிற் சிறந்திருந்தான். அவன் ஒருநாள் காவிரியில் முத்துமாலை அணிந்துகொண்டு நீராடினான். அது நீரில் தவறி வீழ்ந்து விட்டது. அதனால் துன்புற்ற அரசன் நீரில் நின்றவாறே பெருமானே நீ ஏற்றருள்க என்று வேண்டினான். பெருமான், சோழனின் மனவருத்தந் துடைக்கக் கருதி திருமுழுக்காட்டிற்குத் திருமஞ்சனம் எடுக்கச்சென்ற பொழுது அம் மாலையைக் குடத்திற்குள் புகச்செய்து, திருமஞ்சனம் செய்யும் பொழுதுதான் அணிந்துகொண்டு உறையூர்ச் சோழன் திருவானைக் காவில் வழிபாட்டிற்கு வந்த நேரத்தில் முத்துமாலை யுடன் காட்சி வழங்கி அருள்புரிந்தான், இவ்வரலாற்றைச் சேக்கிழார்.
"உறையூர்ச்சோழன் மணியாரஞ் சாத்துந்திறத்தை
உணர்ந்தருளி" (தி.12 ஏயர்கோன். பா.??)
வளவர் பெருமான் மணியாரம் சாத்திக்கொண்டு
வரும்பொன்னிக்
கிளருந்திரை நீர்மூழ்குதலும்
வழுவிப்போகக்கேதமுற
அளவில் திருமஞ்சனக் குடத்துள் அது புக்காட்ட
அணிந்தருளித்
தளரும் அவனுக்கருள் புரிந்த தன்மை
சிறக்கச் சாற்றினார். (தி.12 ஏயர்கோன். பா.77)
என்று கூறியுள்ளமை கண்டு மகிழலாம். சுந்தரர் இவ் வரலாற்றைத் திருவானைக்காப் பதிகத்தில்,
"தார மாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்தும்
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரங் கொண்ட எம் ஆனைக் காவுடை ஆதி'' (தி.7 ப.75 பா.7)
என்று கூறியுள்ளமை கருதத்தக்கது.
முருகன் சூர் தடிந்தது: 1
காசிபமுனிவருக்கு மாயையினிடத்தில் தோன்றியவன் சூரபன்மன். அவனுக்குத் தம்பியர்களாக சிங்கமுகாசுரன், தாரகாசுரன் முதலிய பல அசுரர்கள் தோன்றினர். அவர்களுக்குக் காசிபர் தவம் செய்து வீடுபேறு அடைவதற்குரிய மொழிகளை உபதேசித்தார். அப்பொழுது மாயை தன்பிள்ளைகள் மிக்க செல்வத்தையும், வெற்றியையும், இன்பத்தையும், நீண்ட ஆயுளையும் பெற வேண்டு வனவற்றை உபதேசிக்க வேண்டுமெனக் காசிபரிடத்தில் கூறினாள். காசிபர் "உன் எண்ணம் அதுவாயின் அதனை நீயே அவர்களுக்குச் சொல்வாயாக" என்றார். அவ்வாறே மாயை அவைகளைக் கூறி அவை பெறுதற்கு வேண்டிய உதவிகளையும் செய்தாள்.
மாயையின் சொற்படி சூரபன்மன் வீரயாகம் புரிந்து வேள்வி குண்டத்தில் வீழ்ந்தான். அதைக்கண்ட அவனது இளவலாகிய சிங்க முகன் அவ்வேள்வியைத் தொடர்ந்து செய்தான். பெருமான் அந்தணர் வடிவில் சென்று அவர்கள் வரலாற்றை வினவியறிந்து வேண்டு வனவற்றை யளித்துச் சூரபன்மனையும் எழுப்பி, காட்சி வழங்கி யருளினான். பின்னர் சூரபன்மனின் வேண்டுகோட்படி `பூமியிலுள்ள ஆயிரங்கோடி அண்டங்களுள் ஆயிரத்தெட்டு அண்டங்களை நூற் றெட்டுயுகம் ஆளுக' என்று அருளிப் பல வரங்களையும் அருளினான்.
அவ்வரங்களைப் பெற்ற சூரபன்மன் திக்கு விஜயம் செய்து தேவர்களை ஏவல்கொண்டு, வீரமகேந்திரபுரம் என்னும் நகரையும், மாயாபுரம் என்னும் நகரத்தையும் உண்டாக்கி முடிசூடி எல்லா வுலகங்களையும் அரசாண்டு வந்தான்.
சூரபன்பனால் துன்புற்ற திருமால் முதலிய தேவர்கள் சிவ பெருமானை வேண்டி நின்றனர். அவர்கள் துன்பந்துடைக்கக் கருதிய பெருமான், முருகப்பிரானையும் வீரபாகு முதலியவர்களையும் தோற்றுவித்தருளினான். பின்னர் பெருமான் ஆணைப்படி முருகப் பெருமான் வீரபாகு முதலிய சேனைத் தலைவர்கள் தன்னைச் சூழ்ந்து வர சூரபன்மனுடன் போர் புரிய எழுந்தருளி, கிரவுஞ்சகிரியில் மாயையில் வல்லவனாய் விளங்கிய தாரகனைக் கொன்று திருச் செந்திலம்பதியில் எழுந்தருளியிருந்து வீரபாகு தேவரைச் சூரபன் மனிடம் தூதாக அனுப்பினான், சூரபன்மனும் போருக்கு எழவே, முருகப்பிரான், பானுகோபன், சிங்கமுகன் முதலியவர்களைக் கொன்று சூரபன்மனுடன் போரிட்டு, தமது பேருருவக் காட்சியை அவனுக்கு அளித்து' மீண்டும் போரிட்டார். சூரபன்மன் மிகப் பெரிய மாமர வடிவாய் நின்றான். அவன் மீது தமது வேற்படையையேவி மாமரத்தை இருபிளவாக்கி அழித்தார். சிவபெருமான் அளித்த அழியா வரத்தினால் அவன் உடலின் இரண்டு கூறுகளும், சேவலும் மயிலும் ஆகி நின்றன. முருகப்பிரான் சேவலைக் கொடியாகவும், மயிலை ஊர்தியாகவும் கொண்டார். இவ்வரலாற்றை நாயனார்.
"கடற்சூர் தடிந்திட்ட சேந்தர்" (தி.7 ப.64 பா.6)
என்று குறிப்பிடுதல் காண்க.
முடிவுரை:
இங்குக் குறிக்கப்பெற்ற சிறந்த வரலாறுகள் அன்றியும், தல புராணங்கள், சில இடங்களில் வழங்கும் செவி வழிச்செய்திகள் முதலி யன பற்றி ஆங்காங்கு அறிதற்குரிய சிறுசிறு வரலாறுகளும் இவ் வேழாந் திருமுறையில் அமைந்திருத்தல் காணப்படும். அவைகள் அனைத்திலும் சிறப்புடைய புராண வரலாறுகளே இங்குத் தொகுத்துத் தரப்பட்டன. இவைகளையும் ஏனையவற்றையும் உணர்தலால் புராணங்களின் பெருமை இனிது விளங்கப்பெற்று அவற்றின் பயனை அடையலாகும். இவ் வரலாற்றுச் சிறப்புக்களையும் தமிழுலகமும் சைவ உலகமும் உணர்ந்து பயன் எய்துவனவாக.
உ
சிற்றாராய்ச்சிப் பெரும் பொருட் கட்டுரை - 4 நாயன்மார் வரலாற்றுக் குறிப்புக்கள்
சிரோமணி, வித்துவான் வி. சபேசன்,
தமிழ்ப்பேராசிரியர், தருமை ஆதீனப் பல்கலைக் கல்லூரி.
ஏயர்கோன் கலிக்காம நாயனார்: 1
இவர் சோழநாட்டில் திருப்பெருமங்கலத்தில், வேளாளர் மரபில் தோன்றியவர். சோழ அரசர்களிடத்தில் பரம்பரையாகச் சேனைத் தலைவராக விளங்கிய ஏயர் குடியைச் சேர்ந்தவர். கலிக்காமர் என்பது இவரது இயற்பெயர். இவர் குரு, லிங்க, சங்கம பத்தியில் சிறந்தவராய் விளங்கினார்.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானைப் பரவையாரிடம் தூதாக அனுப்பிய செய்திகேட்டு மிகச் சினந்து, "நாயனை அடியான் ஏவுங்காரியம் மிக நன்று. இப்படிச் செய்பவன் தொண்டனாம். இது என்ன பாவம். பொறுக்க வொண்ணாத இந்தப் பெரும்பாதகத்தைக் கேட்டும் உயிரோடிருக்கின்றேனே" என்று வருந்தி அவரைக் காணின் யாது நிகழுமோ என்று சினத்துடன் இருந்தார். இச்செய்தி யறிந்த சுந்தரர், பெருமானிடம் விண்ணப்பித்தார். பெருமானும் கலிக் காமருக்குச் சூலை நோய் அருளி, அவரிடம் `வன்றொண்டன் தீர்க்கில் அன்றி முந்துற ஒழியாது' என்றும், சுந்தரரிடம் `இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்றசூலையை நீ சென்று தீர்ப்பாயாக' என்றும் அருளிச் செய்தார். சுந்தரரும், தாம் வரும் செய்தியைக் கலிக்காமருக்கு முன்னர் சொல்லியனுப்பி எழுந்தருளினார். சுந்தரர் வருகின்ற செய்தியறிந்த கலிக்காமர் "என்னை நீங்காப் பாதகச்சூலைதனை உற்ற இவ்வயிற்றி னோடுங் கிழிப்பன்" என்று தன் உடைவாளால் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்தார். அவரது மனைவியாரும் உடன்போக எண்ணிய போது, சுந்தரர் எழுந்தருளினார் என்று கேட்டு, தம் நாயகர் செய்கையை மறைத்து ஏவலர்களை எதிர்கொண்டழைக்கச் செய்து அருச்சனை முதலியவைகள் புரிவித்தார். அவற்றை ஏற்றுக்கொண்ட சுந்தரர், கலிக்காமருடைய சூலையை நீக்கி அவருடன் இருத்தற்கு மிக வருந்துகின்றேன் என்றார். அங்குள்ளோர், தீங்கு ஒன்றும் இல்லை; உள்ளே பள்ளி கொள்கின்றார் என்று விண்ணப்பித்தனர். அதைக் கேட்ட சுந்தரர், `என் மனந்தெளிந்திலது; ஆதலால் நான் அவரைக் காணல் வேண்டும்' என்று கூறிச்சென்று பார்த்துத் திடுக்கிட்டு `நானும் நண்ணுவேன் இவர் முன்பு' என்பவராய் உடைவாளைப் பற்றினார். பெருமான் அருளால் கலிக்காமரும் உய்ந்து `கேளிரே யாகிக் கெட்டேன்' என விரைந்து எழுந்து வாளினைப் பற்றிக்கொண்டார். இருவரும் ஒருவரையொருவர் வணங்கினர். பின்னர் இருவரும் திருப்புன்கூர் சென்று பெருமானைத் தொழுதனர். இவ்வரலாற்றைச் சுந்தரர்,
`ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து' (தி.7 ப.55 பா.3)
என்று அருளியுள்ளமை கண்டு மகிழத்தக்கது.
கோட்புலி நாயனார்:1
சோழநாட்டில் திருநாட்டியத்தான்குடியில் வேளாளர் குலத்தில் சிவபத்தியிற் சிறந்தவராய் கோட்புலியார் என்ற பெயருடை யவர் ஒருவர் இருந்தார். அவர் அரசனிடத்தில் சேனாதிபதியாக விளங்கினார். அதில் தமக்குக் கிடைக்கும் வருவாயைக்கொண்டு சிவாலயங்களில் நிவேதனத்திற்கு நெல் வாங்கியளித்து வந்தார். ஒருசமயம் அரசன் ஆணைப்படி போர்மேற்செல்ல வேண்டியிருந்தது. தான் போர்க்களத்திலிருந்து திரும்பி வரும்வரை திருக்கோயில் நிவேதனத்திற்கு வேண்டிய நெல்லை வாங்கிவைத்து, சுற்றத்தவர்கள் அதை எடுத்துச் செலவழிக்காதிருக்கும்படியும் கூறிச்சென்றார். சில நாட்களில் பஞ்சம் வந்தது. சுற்றத்தவர்கள் உணவில்லாது இறப்பதைக் காட்டிலும் சுவாமி திருவமுதுக்காக உள்ள நெல்லை எடுத்து உண்டால் பின்னர்க்கொடுத்துவிடலாம் என்று எண்ணி நெல்லைச் செல வழித்தார்கள். கோட்புலியார் பகையை வென்று போர்முனை யிலிருந்து மீண்டு வந்து அரசனிடம் நிதிக்குவை பெற்றுத் தம்மூரை யடைந்து செய்தியறிந்தார். சுற்றத்தவர்களை வீட்டிற்குள் அழைப் பித்து, தமது கோட்புலி என்னும் பெயருடைய காவலாளனை வாயிற் காவலாக வைத்து, பெருமான் நிவேதனத்திற்கென்று வைத்திருந்த பொருள்களைச் செலவழித்த தந்தை, தாய், உடன்பிறந்தார், மனைவி, முதலிய சுற்றத்தவர்களையும் பணிவிடைக் காரர்களையும் வாளினால் துணித்தார். காவலாளன் `அங்குப் பிழைத்திருந்த ஆண் குழந்தையைப் பார்த்து, இது அவ்வன்னத்தை உண்டதன்று. இக்குடிக்கு ஒரே பிள்ளை; இதனைக் கொல்லாதருள் செய்யவேண்டும்' என்று வேண்டினான். `இது நெல்லை உண்ட தாயின்பாலை உண்டது' என்று கூறி அதனையும் கொன்றார். அப்பொழுது பெருமான் தோன்றி, `அப்பனே, உன் கைவாளினால் தங்கள் பாவத்தினின்றும் நீங்கிய உன் சுற்றத்தவர்கள் சுவர்க்கத்தையடைய, நீ நம்முடன் வருவாயாக' என்றருளினார். இவ்வரலாற்றைச் சுந்தரமூர்த்திசுவாமிகள்,
"கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன் திருவாரூரன்" (தி.7 ப.15 பா.10)
என்று கூறியருளினார்.
தண்டியடிகள் நாயனார்:1
சோழநாட்டில் திருவாரூரில் தண்டியடிகள் என்ற பெயருடைய ஒரு சிவனடியார் பிறவிக்குருடராய் இருந்தும், அகக் கண்ணால் பெருமானைத் தரிசித்து ஐந்தெழுத்தை ஓதி, பூங் கோயிலைக் காலங்களில் அணைந்து வழிபட்டு வந்தார். அவர், திருக்குளத்திற்கு அருகில் சமணப்பாழிகள் ஏற்பட்டு அதனால் திருக் குளம் குறைவடைந்து வருவதை அறிந்து திருக்குளத்தைப் பெருக்கத் திட்டமிட்டு, கரையிலும் திருக்குளத்திலும் தறி நட்டு அதில் கயிறுகட்டி அதைப் பிடித்துக்கொண்டு திருக்குளத்தை வெட்டினார். அதைக்கண்டு பொறாமையுற்ற சமணர்கள் "மண்ணைத் தோண்டினால் பிராணிகள் இறந்துபோம். அவற்றை வருத்தல் வேண்டாம்" என்றனர். அதைக் கேளாது தொடர்ந்து திருக்குளத் திருப்பணி செய்யும் தண்டியடிகளைப் பார்த்து ஏளனமாகக் `கண்ணையன்றிக் காதினையும் இழந்தனையோ' என்று பலவாறு கூறி, `நீ உன் கடவுள் அருளினால் கண் பெற்றாயானால், நாங்கள் இவ்வூரில் இரோம்' என்று சொல்லி மண் வெட்டி, தட்டு முதலியவற்றைப் பிடுங்கி எறிந்தனர். பின்னர் நாயனார் திருக்கோயில்முன் சென்று சிவபெருமானிடம் சமணர்கள் தனக்குச் செய்த அவமானத்தைப் பொறாது வருந்துகின்றேன். என் வருத்தத்தை நீக்கியருளல் வேண்டுமெனவேண்டி, திருமடத்திற்குச்சென்று அழுதுகொண்டேயிருந்து துயில் கொள்ளலானார்.
அவரது கனவில் பெருமான் தோன்றி "நாளைக்கு உன் கண் காணவும், சமணர்கள் கண் மறையவும் அருள்செய்வோம்" என்று கூறி மறைந்து, சோழ அரசனுடைய கனவிலும் தோன்றி, `தண்டி என்பவன் நமக்காகத் திருக்குளம்வெட்ட, சமணர்கள் அதற்கு இடையூறு செய்தனர். ஆதலால் தண்டியிடம் சென்று அவன் கருத்தை முடிப்பாயாக' என்றருளினார். அவ்வாறே அரசனும் தண்டியடிகளிடம் வந்து தமது கனவில் இறைவன் இட்ட கட்டளையைத் தெரிவித்து, அடிகள் கண்ட கனவையும், அடிகளுக்கு நேர்ந்த இடையூறுகளையும் கேட்டறிந்து, சமணர்களையும் அழைப்பித்து வினவினான். அதற்குச் சமணர்கள், `அடிகள், கண்பெற்று, நாங்கள் கண் இழந்தால் இவ்வூரை விட்டு நீங்கி விடுகின்றோம்' என்று உறுதியளித்தனர்.
எல்லோருமாகத் திருக்குளக்கரைக்குச் சென்றனர். அங்கு அரசன் தண்டியடிகளை நோக்கி, `நீர் பெருமானது திருவருளினாலே கண் பெறுதலைக் காட்டும்' என்றான். அவரும், யான், `சிவபெரு மானுக்கு அடியவன் என்றால் என்கண் ஒளிபெறவும் சமணர்கள் கண் இழக்கவும் செய்வர்' என்று கூறித் திருவஞ்செழுத்தை ஓதித் திருக் குளத்தில் மூழ்கி, கண் ஒளியுடன் எழுந்தார். சமணர்கள் கண் ஒளி யிழந்தனர். இவற்றைக் கண்ட அரசன் திருவாரூரினின்றும் சமணர் களைத் துரத்தி அமண் பள்ளிகளையும், பாழிகளையும் இடித்துத் திருக்குளத் திருப்பணியையும் நிறைவேற்றினான். இவ்வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
"குண்டிகைப் படப்பினில் விடக்கினை யொழித்தவர்
கண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்
தண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்
எண்டிசைக் கொடுசுடர்" (தி.7 ப.72 பா.10)
என்றருளியுள்ளமை காண்க.
திருநாவுக்கரசு நாயனார்:1
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருவாமூரில் குறுக்கையர் குடியில் புகழனார், மாதினியார் இவர்கட்குத் திருமகனாராய், திலகவதியாருக்கு இளவலாய்த் திருநாவுக்கரசர் தோன்றினார். அவருக்கு மருணீக்கியார் என்னும் திருநாமம் இட்டு வளர்த்தனர். சிவபத்தியிற் சிறந்தவரும், சேனைத்தலைவருமான கலிப்பகையார் என்ற ஒருவருக்குத் திலகவதியாரைத் திருமணஞ் செய்து கொடுக்கத் தீர்மானித்தனர். அப்பொழுது கலிப்பகையார், அரசன் ஆணைப்படி வடநாடு சென்று பகைவரோடு போரிட்டு வீர சுவர்க்கம் அடைந்தார். கலிப்பகையார் போருக்குச் சென்றபொழுது புகழனார் சிவபதம் அடைந்தார். மாதினியாரும் உடன் உயிர்நீத்தார். பின்னர், கலிப்பகையார் வீரசுவர்க்கம் அடைந்த செய்தியறிந்த திலகவதியாரும் உயிர்விடத் துணிந்து மருணீக்கியாரின் வேண்டுகோளால் அவருக்காக உயிர் வாழ்ந்தார். பின்னர் மருணீக்கியார், பல அறங்களை இயற்றி, சமயங்களின் நல்லாறு தெரிந்துணர்ந்து சமண சமயம் புகுந்து தருமசேனர் என்னும் பட்டம் பெற்றுத் தலைவரா யிருந்து பௌத்தர்களை வாதில் வென்று புகழ் பெற்று விளங்கினார். அப்பொழுது திலகவதியார் வேண்டுகோட்படி பெருமான், தரும சேனர்க்குச் சூலைநோய் அருளினார். அது சமணர்களால் நீக்க முடியாமற்போகவே, அவர் திலகவதியாரை வந்து அடைந்து, அவர்கள் அஞ்செழுத்து ஓதிக் கொடுத்த திருநீற்றைப்பெற்று அணிந்து தமக்கையுடன் வீரட்டானேசுவரரை வலம் வந்து வணங்கிப் பெரு மானருளால் "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" என்னும் திருப்பதிகம் பாடினார்; சூலை நீங்கியது. இறைவன் திருநாவுக்கரசு என்னும் திருநாமமும் வழங்கப்பெற்றார். பின்னர் பல தலங்களுக்கும் சென்று அங்கங்கும் திருப்பதிகம்பாடி வணங்கினார்.சமண் சமயத்தை நீங்கிச் சைவம் சார்ந்ததால் சமண மன்னன் செய்த, நீற்றறையில் இடுதல், நஞ்சு ஊட்டுதல், கொலையானையை ஏவுதல், கல்லிற்கட்டிக் கடலில் வீழ்த்துதல் ஆகிய தீங்குகளினின்றும் இறைவனருளால் நீங்கினார். பல தலங்களிலும் பல அற்புதங்களை நிகழ்த்திப் பெருமானை வணங்கிப் பதிகம் பாடி திருப்புகலூரில் "எண்ணுகேன் என் சொல்லி எண்ணு கேனோ" என்னுந் திருத்தாண்டகம் பாடி, இறைவன் திருவடி நிழலை யடைந்தார். இவரது வரலாற்றைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
"இணைகொள் ஏழெழு நூறிரும்பனுவல்
ஈன்றவன் திருநாவினுக் கரையன்" (தி.7 ப.65 பா.2)
என்றும்,
"நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை" (தி.7 ப.67 பா.5)
என்றும்,
"தெரிந்த நான்மறையோர்க் கிடமாய திருமிழலை
இருந்துநீர் தமிழோடிசை கேட்கும்
இச்சையாற்காசு நித்தல் நல்கினீர்" (தி.7 ப.88 பா.8)
என்றும்,
"நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த
நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்
காசருளிச் செய்தீர்" (தி.7 ப.46 பா.7)
என்றும் மற்றும் பல விடங்களிலும் அருளிச்செய்துள்ளமை காண்க.
திருநாளைப்போவார்:1
சோழநாட்டைச் சேர்ந்த கொள்ளிட நதியின் பக்கத்தில் மேற்காநாட்டு ஆதனூரில் புலையர் குலத்திலே நந்தனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பெருமானின் திருவடிகளையன்றி மற்றொன்றையும் மறந்தும் நினையாது சிவாலயம் முதலியவற்றிற்கும் பிறவற்றிற்குமாக வேண்டும் தோற்கருவி, நரம்புக்கருவி முதலிய வற்றைச் செய்து கொடுத்தலாகிய தம் தொழிலைச் செம்மை யாகச் செய்து திருக்கோயில் திருமுன்னின்று அன்பின் மேலீட்டினால் கூத்தாடிப்பாடி யாடி வணங்குவார்.
ஒருநாள் திருப்புன்கூர் இறைவரை வணங்கிச் சென்றார். அங்குப் பெருமான் நந்தியை விலகச்செய்து காட்சி கொடுத்தார். நந்தனார் அந்த ஊரிலே ஒரு பள்ளத்தைக் கண்டு, பெரிய குளம் ஒன்று வெட்டி ஊர் திரும்பினார். இவ்வாறே பல தலங்களையும் வணங்கு வாராயினார்.
ஒரு நாள் சிதம்பரத் தரிசனம் செய்யவேண்டும் என்று விரும் பினார். கோயிலுக்குள் சென்று தரிசிக்க முடியாதே என்று வருந்தி நாளைக்குப் போவேன், நாளைக்குப் போவேன் என்று அநேக நாட்களைக் கழித்தார். அதனால் அவருக்குத் திருநாளைப் போவார் என்னும் பெயர் உண்டாயிற்று. பல நாட்கள் கழிந்தபின் ஒருநாள் சிதம்பர தரிசனத்திற்குப் புறப்பட்டுச்சென்று உள்ளே போதற்கஞ்சி ஊர்ப்புறத்தே வணங்கி வலஞ்செய்து தங்கினார். இவ்வாறே நாள்தோறும் இரவும் பகலும் வலஞ்செய்து வந்து ஒருநாள் தம் இழி பிறப்பை எண்ணி வருந்தித் துயின்றார். அன்று இரவு கனவில் பெரு மான், `நீ இந்தப் பிறப்பு நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து பிராமணர்களோடு நமது சந்நிதியை அடைவாய்' என்று அருளி, தில்லைவாழ் அந்தணர்களுக்கும் திருநாளைப் போவாருக்காக நெருப்பை வளர்க்குமாறு கட்டளையிட்டருளினார். அவர்களும் அவ் வாறே மறுநாள் விடியலில் திருநாளைப் போவாரிடம் தெரிவித்துத் தென்மதிற்புறத்தே கோபுர வாயிலுக்கு எதிரில் தீ வளர்த்தனர். திரு நாளைப் போவாரும் கூத்தப்பெருமானின் திருவடியைத் தியானித்து அதனுள் புகுந்து, அத்தேகத்தை விட்டுப் பிராமணமுனி வடிவங் கொண்டு சடைமுடியோடும் எழுந்து கனகசபையை அடைந்து மறைந்தார். இவர் பற்றிய குறிப்பை,
"நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன்
நாவினுக் கரையன் நாளைப்போவானும்
கற்றசூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டு நின்குரை கழலடைந்தேன்" (தி.7 ப.55 பா.4)
என்ற திருப்பாடலில் காண்க.
நரசிங்கமுனையரைய நாயனார்: 1
திருமுனைப்பாடி நாட்டிலே குறுநில மன்னராய் விளங்கிய நரசிங்கமுனையரையர் திருநீறே தமக்குப் பெருஞ்செல்வம் என்று எண்ணி வாழ்ந்தார். அவர் உலகமக்கள் எல்லோரும் சைவத்தைப்பற்றி வாழவேண்டும் என்ற பெருங் கருணைகொண்டு பகையை வென்று அரசாண்டார். சிவனடியார்களின் திருவடியடைதலே பேறு என்று கருதி திருவாதிரை நட்சத்திரந்தோறும் சிறப்பு வழிபாடு செய்வித்தும், அடியார்களுக்குத் திருவமுது செய்வித்தும் அவர்களுக்குத் தனித் தனியே நூறுபொன் கொடுப்பார். அவ்வாறு செய்யும்பொழுது பொய் வேடம் பூண்டு வந்த ஒருவரை அடியார்கள் ஒதுக்க, அதைக் கண்ட அரசன் அவரைத் தனியே அழைத்துச்சென்று உபசரித்து இன் சொற் சொல்லி இருநூறு பொன் கொடுத்து அனுப்பினார். இவ்வாறு திருத் தொண்டு செய்திருந்து திருவடியடைந்த இவர் குறித்து நாயனார்,
``நாதனுக்கூர் நமக்கூர்நர சிங்கமுனை யரையன்
ஆதரித்தீசனுக் காட்செய்யும் ஊர்அணி நாவலூர்" (தி.7 ப.17 பா.11)
என்று அருளியுள்ளமை அறிந்தின்புறத்தக்கது.
புகழ்த்துணை நாயனார்: 1
செருவிலிபுத்தூரில் ஆதிசைவர் குலத்தில் புகழ்த்துணை நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் சிவாகமப்படி அருச்சனை புரிந்து வந்தார். ஒருகாலத்தில் பஞ்சம் உண்டாயிற்று. பசி வருத்தியது. அதனாலும் நாள்தோறும் அருச்சனையை நிறுத்தாத வராய் வழிபாடு புரிந்து வந்தார். ஒருநாள் வழிபாட்டில் திருமஞ்சன மாட்டும்பொழுது கைசோர்ந்து கலசந் திருமுடியில் விழ, தான் திரு வடியிலே விழுந்து அயர்ந்து நித்திரை அடைந்தார். அவரது கனவில் `பஞ்சம் நீங்கும்வரை நாள்தோறும் உனக்கு ஒரு காசு வைப்போம்' என்று அருளி ஒரு காசு வைத்தருளினார். துயில் எழுந்து பார்த்து வியந்து, பெற்று மகிழ்ந்தார். அவ்வாறே நாள்தோறும் காசு பெற்றுத் திருத்தொண்டு செய்து, வறுமை நீங்கிய பின்னும் திருத்தொண்டு புரிந்து திருவடி அடைந்தார். இவ்வரலாற்றை,
அகத்தடிமை செய்யும் அந்தணன்றான்
அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
முடிமேல் விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்தவனுக்கு நித்தற்படியும்
வரும்என்றொருகாசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைபுகச் செய்துகந்தீர். (தி.7 ப.9 பா.6)
என்று நாயனார் அருளியுள்ளமை குறிக்கொளத்தக்கது.
மூர்க்க நாயனார்: 1
தொண்டை நாட்டில் திருவேற்காட்டில் வேளாளர் குலத்தில் தலைசிறந்தவராக ஒருவர் விளங்கினார். அவர் தினந்தோறும் சிவனடி யார்களைச் சிவனென வணங்கித் துதித்து திருவமுது செய்வித்த பின்பே தாம் உண்டு அவர்கள் விரும்பும் பொருள்களையும் கொடுத்து வாழ்ந்தார். அதனால் பொருள் முழுவதையும் இழந்தார். மாகேஸ்வர பூசை முதலியவற்றிற்குப் பொருள் இல்லாமையால், தான் முன்னமே பயின்ற சூதினாலே பொருள் சம்பாதிக்க எண்ணினார். ஆயினும் சூதாடுவோர் அவ்வூரில் இல்லாமையால் அவ்வூரை யகன்று சிவஸ் தலங்கள்தோறுஞ் சென்று சுவாமி தரிசனஞ்செய்து அங்கங்கும் சூதாடி அதனால்வரும் பொருளைக்கொண்டு தம்முடைய நியதியை முடித்துக் கொண்டு சில நாளில் திருக்குடந்தையை அடைந்தார்.
அங்குச் சூதாடி வென்று கிடைத்த பொருளால் மாகேசுவரபூசை செய்தார். சூதாடும் பொழுது முதலாட்டத்திலே தாம் தோற்றுப் பின்னர் ஆடும் ஆட்டங்களில் வென்று அதனால் பொருளைத் தேடினார். பொருள் தர மறுத்தவர்களைக் கத்தியை உருவிக் குத்தி `சூதர்' என்ற பெயரையும், `மூர்க்கர்' என்ற பெயரையும் பெற்றார். சூதினால் வரும் பொருளைத் திருவமுதாக்குவோர்கொள்ள, தாம் தீண்டாதவராய், அடியார்கள் அமுதுசெய்தபின் கடைப்பந்தியில் தாம் உண்டு வாழ்ந்தார். இவ்வடியவர் பற்றிய குறிப்பை,
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள்
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கைகண்டு நின்குரை கழலடைந்தேன். (தி.7 ப.55 பா.4)
என்ற சுந்தரர் தேவாரத்தில் காணலாம்.
முடிவுரை:
இங்குக் குறிக்கப்பெற்ற நாயன்மார்களது வரலாறுகளும் திருத் தொண்டத் தொகையில் அன்றிப் பிற இடங்களிலும் எடுத்துப் பாராட்டப்பெற்ற சிறப்பும் இத்திருமுறைத் திருப்பதிகங்களால் விளங்கும். இவ் வரலாற்றுச் சிறப்புக்களையும் தமிழுலகமும் சைவ உலகமும் உணர்ந்து பயன் எய்துவனவாக.