குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் 26 ஆவது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்

வழங்கியருளிய

07 ஆசியுரை

திருச்சிற்றம்பலம்

ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள்

சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச்

சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலிமென்தோள்தடமுலை

ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருளதே.

- தி.7 ப.45 பா.4

நாலுபேர் போன வழி:

"நாலுபேர் போனவழியில் போ" என்பது நமது நாட்டுப் பழமொழி. நாலுபேராவார் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயாசாரியர் நால்வராவர். இவர்கள் சென்றவழி சைவ சமய நெறியாகும். சைவமும் வைணவமும் ஒன்றாயிருந்த காலத்தில் சைவத்தைச் சமயம் என்றே வழங்கிவந்தனர். சமயம் என்றாலே முற்காலத்தில் சைவத்தையே குறித்தது.

சமயாசாரியர்:

இதுபற்றியே நமது சைவசமய ஆசாரியர்களைச் சமயாசாரியர் என்றே வழங்கி வருகின்றனர். மேலும் எல்லாச் சமயக் கருத்துக்களையும் படிமுறையாகத் தன்னகத்தே கொண்டுள்ளமையால் எல்லாச் சமயங்கட்கும் தாய்ச் சமயம் என்ற கருத்திலும் இப்படி வழங்கி வந்துள்ளனர்.

வினை என்பது செயலைக் குறிக்கும். செயல் உண்டு என்றால் செய்பவன் ஒருவன் இருக்கவேண்டும். செயலும், செய்பவனும் உண்டு எனில் அவன் செய்த செயலுக்குப் பயன் ஒன்று இருக்கவேண்டும். செய்வினை, செய்வான் அதன் பயன் உண்டு என்றால் அப்பயனைச் செய்தவனிடம் சேர்ப்பிக்கும் ஒருவனும் வேண்டும். அவனே இறைவன். இந்நான்கு பொருளும் ஒருங்குகொண்டதே உண்மைச் சமயமாகும்.

இந்நான்கும் சைவநெறி அல்லவற்றிற்கு இல்லை என்பதை உணர்ந்தவர் சாக்கிய நாயனார். இவர் பௌத்த சமயத்தின் பிரிவாகிய சாக்கிய மதத்தைச் சேர்ந்திருந்து இவ்வுண்மையை உணர்ந்த பின்னர் சாக்கிய வேடத்தைத் துறவாதே சைவநெறியைக் கடைப்பிடித்தனர். வேற்றுச் சமயத்தைச் சேர்ந்த இவர் மதிப்பீடு இதுஎனில் சைவத்தின் பெருமையை நாம் சொல்லவும் வேண்டுமோ?

இதனைச் சேக்கிழார் காட்டும் அப்பாடல் காண்க.

செய்வினையும் செய்வானும்

அதன்பயனும் சேர்ப்பானும்

மெய்வகையால் நான்காகும்

விதித்தபொருள் எனக்கொண்டே

இவ்வியல்பு சைவநெறி

அல்லவற்றுக் கில்லையென

உய்வகையால் "பொருள் சிவன்"

என்(று) அருளாலே உணர்ந்தறிந்தார்" தி.12 சாக்கிய. புரா. 5

மேலும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழக வரலாற்றில் களப்பிரர் ஆண்டகாலம் இருண்டகாலமாய் இருந்தது. அக்காலத்தில் ஒருவர்பின் ஒருவராகத் தோன்றி சமண பௌத்த சமயங்களை அடக்கி சைவ ஒளி பரப்பிய சமய சஞ்சீவீகளாக அமைந்தமையால் இவர்களை, சமயாசாரியர்கள் என வழங்கி வருகின்றனர்.

நான்கு நெறி:

இவர்கள் காட்டிய வழி - அஃதாவது நெறி சிவநெறி, சைவநெறி. இந்நெறி மக்களை நான்கு நிலையினராக அவரவர் தகுதிக்கேற்பப் பிரிக்கிறது.

1. சரியை நெறி-உடல் முக்கால் பகுதியும், உணர்வு கால்பகுதியும் கொண்ட உடல் தொண்டு. 2. கிரியை நெறி - பூசனைபுரியும் உடல்பாதியும் உணர்வு பாதியும் கலந்த தொண்டு. 3. யோக நெறி -அறிவு முக்கால் பகுதியும், உடல்கூறு கால்பகுதியும் கொண்ட யோகப்பயிற்சி. இம்மூன்றும் சாதனைநெறி. 4. ஞானநெறி சாத்தியம். மனிதன் அடையவேண்டிய முடிவான பயனாகிய நெறி இதுவே. ஞானமே சிவம், சிவமே ஞானம். அந்நிலையெய்தி, இரவு பகல் அற்ற இடத்தில், சிவம் வேறு தாம் வேறு என்றில்லாமல், சுத்தாத்துவிதமாய் நிற்கும் நிலை.

இந்நான்கு நெறிகளையும் விளக்கவந்தவர்களே நமது சமயாசாரியர்கள். என்றாலும் ஒவ்வொருவரும் ஞானநிலையில் சிவஞானிகளாகத் திகழ்ந்தவர்களே. இந்நான்கு நெறிகளையும் எல்லோரும் ஈடேறுவதற்காக வகுத்து வைத்துள்ளனர். இந்நான்கும் தனித்தனி நெறியன்று. பருவமாற்றமாகவே கொள்ளவேண்டும். சரியை அரும்புநிலை, கிரியை மலர்நிலை, யோகம், காய்நிலை, ஞானம் கனிநிலை. இக்கருத்தையே தாயுமானார்,

"விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்

அரும்பு, மலர், காய், கனிபோல் அன்றோ பராபரமே" -பராபரக்கண்ணி

என்று அருளிச்செய்தார்.

சுந்தரர் கற்பிக்கும் பாடம்:

இந்நான்கு நெறியில் யோகநெறி காட்டியதோடு, நமக்கு ஆசாரியர்களாவோர் ஞானசம்பந்தர், நாவுக்கரசர் ஆகிய இவர்களே என்றும், நம்மால் வணங்கத்தக்க அடியார்கள் நாயன்மார்களே என்றும், விளக்கிக் காட்டியதோடு, வாழ்ந்தும் காட்டிய ஆசாரியர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆவார்.

இவரது வாழ்வில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம், - குற்றம் செய்வது உயிர்களின் இயல்பெனினும், ஆன்மாக்கள் இறைநெறி பிழையாமல் எவ்வளவு துன்பம் வரினும், இறையே நம்மைக் காக்கும் என்ற உறுதிப்பாட்டுடன் ஒழுகினால், எல்லா இடர்களையும் கடந்து, இறை அடி கூடலாம் - என்பதாகும். இறைவனும் சுந்தரர்க்குத் தன்னைத் தோழனாகக் கொடுத்தபோதிலும் சுந்தரர் செய்த தவறுகட்கெல்லாம் உடந்தையாயிராமல், தவறு கண்ட இடத்தில் தண்டித்துத் தன்னுடைய இறைத்தன்மையை - நடுநிலையைக் காட்டி, உண்மையை உணர்த்தி, அடியவராகிய சுந்தரரை ஆட்கொண்டுள்ளமை அறியுந்தோறும் இன்பம் பயக்கும் இயல்பினதாகும்.

ஆலால சுந்தரர்:

ஆலாலம் என்பது மிகக்கொடிய விஷம். தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான விஷத்தை எடுத்து வருவதற்காகத் தோன்றியவரே ஆலாலசுந்தரர். விஷத்தை எடுத்துவரத் தகுதியான ஒருவர் இன்மையால், பெருமான், தான் ஒரு கண்ணாடியின்முன் நின்றார். பெருமானின் பேரழகுத் தோற்றம் கண்ணாடியில் பிரதிபலித்தது. அத்தோற்றத்தை, வருக எனச் சுட்டு விரலால் அழைத்தார். அவர் அழகிய உருவுடன் இறைவன் முன்தோன்றினார். அவரை அனுப்பி ஆலால விஷத்தை எடுத்துவரச் செய்து அதனைத் தாம் உண்டு கண்டத்தில் அடக்கினார். இவ்வாலால சுந்தரர் சிவ சிருஷ்டி. இந்நிலை எல்லோருக்கும் கிடைத்தற்கரியது.

அணுக்கத் தொண்டர்:

இவர் இறைவனுக்கு அணுக்கத் தொண்டராய், மலர் பறித்தல், திருநீற்றுப் பெட்டகம் எடுத்து வரல், முதலிய பணிவிடைகளைப் பலகாலம் செய்து வந்தார். ஒருநாள் நந்தவனத்தில் உமாதேவியின் சேடிப் பெண்களாகிய அனிந்திதை, கமலினி ஆகியோரைப் பார்த்தபோது, அவர்கள் மீது மனம், ஒரு சிறிது ஈடுபட்டது. அதனால் தமிழ் மக்கட்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லகாலம் பிறந்தது. இதனைச் சேக்கிழார்,

மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத்

தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப்

போதுவார் அவர்மேல் மனம் போக்கினார்

காதல் மாதரும் காட்சியில் நண்ணினார். -தி.12 திருமலை 25

என்று அருளியுள்ளார்.

மையல் வாராத இடம் திருக்கயிலாயம். அங்குக் காதல் தோன்றியது என்றால் இறையருள்தான் அதற்குக் காரணம். இவரால் தமிழகம் உய்திபெற வேண்டும் என்ற பேரருளினால் இறைவனே நிகழ்த்திய திருவிளையாடல் இது. ஞானசம்பந்தரும் இக்கருத்தைத் தம் வாழ்வில் வேறுவகையில் குறிப்பிட்டுப் பாடியுள்ளமை கண்டு மகிழலாம்.

"துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி

மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்து மண்ணின்மேல்

பிறக்குமாறு காட்டினாய்" -தி.2 ப.98 பா.5

என்பது ஞானசம்பந்தரின் அருள்வாக்கு.

வன்றொண்டர்:

ஆலால சுந்தரர், இறைவன் ஆணைப்படி, திருநாவலூரில், ஆதிசைவ குலத்தில், சடையனார் இசைஞானியார் என்ற தவநிறை தம்பதியர்க்கு, மகவாய்த் தோன்றினார். திருமுனைப்பாடி நாட்டை ஆண்டுவந்த நரசிங்கமுனையரையரின் காதல் மகவாய், மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க வளர்ந்து, மணப்பருவம் எய்தினார். புத்தூர், சடங்கவி சிவாசாரியாரின் திருமகளை, மணம்புரியப் புகும்போதுதான், பெருமான் கிழவேதியராய் வந்து, கயிலையில் சொன்னசொல் தவறாமல், சுந்தரரை ஆட்கொண்டார்.

ஊரன் என்பதுதான் ஆரூரன் என்ற பொருளில் இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர். இது சுந்தரர் பாடல்களில் "ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே", "ஊரன் சொல்லிவை சொல்லுவார்க்கில்லை துன்பமே" என்பனபோல் இவர் தேவாரத்தில் பல இடங்களில் வந்துள்ளமையை அறியலாம். கடைசியாகத் திருக்கயிலாயம் சென்றபோது, பெருமான் இவரை "ஊரனே வந்தனை" என்று தான் அழைத்து மகிழ்ந்தார் என்பது நினைவுகூரத் தக்கது. இருப்பினும் திருக்கயிலையில் வழங்கிய ஆலால சுந்தரர் என்ற பெயர்தான் சுந்தரர் என்ற பெயரில் பெரிதும் வழங்கி வருகிறது. மணக்கோலத்தில் இருந்த சுந்தரரைப் பெருமான் "இவன் எனக்கு அடிமை" என்று கூறியதைப் பொறாதவராய் வழக்குப்பேசி ஓலையைக் கிழித்து திருவெண்ணெய்நல்லூர் மறையோர் மன்றத்தில் சுந்தரர் அடிமை என்பதை நிரூபித்தார் இறைவன்.

"வெண்ணெய்நல்லூர்ப் பித்தன் என்று தங்கள் ஊர் குறிக்கப்பட்டிருக்கிறது. தங்கள் இல்லம் எங்கு உள்ளது" என்று எல்லோரும் கேட்டனர். "அறியீராயின் வாருங்கள்" என்று அழைத்துக்கொண்டு திருக்கோயில் சென்றார். சுந்தரர் மட்டுமே காந்தம் கண்ட இரும்புபோலப் பின்தொடர்ந்தார். திருக்கோயிலுக்குள் சென்றதும் வேதியராக வந்த இறைவன் மறைந்தார். இடபாருடராகக் காட்சி தந்தார். வன்மை வழக்குப் பேசியதால் "வன்தொண்டன்" என்னும் பெயர் பெற்றனை. "நீ வழிபாடு செய்யும் குலத்தில் தோன்றியவன். நீ நமக்குச் செய்யவேண்டிய (அர்ச்சனை) வழிபாடு பாட்டேயாகும். ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுவாயாக" என்று அருளினார். "பெருமானின் பெருமை அறியாத அடியேன் என்ன சொல்லிப் பாடுவேன்" என்றபோது, பெருமான், "நீதான் முன்பே பித்தன் என்று என்பெருமையறிந்து பேசியுள்ளாயே அதையே முதலாக வைத்துப் பித்தன் என்றே பாடுக" என்று அருளினார். சுந்தரர் பெருமான் அருள்பெற்றவராய், "பித்தா, பிறைசூடி, பெருமானே, அருளாளா" என்று பதிகம் பாடிப் பெருமானின் கருணையை உள்ளவாறு விவரித்துப் பாடியருளினார்.

பித்தா பிறைசூடி:

பித்தன் என்றால் - துணி கிழிக்கும் பைத்தியமன்று - பெரும் கருணையாளன் என்பதே பொருள். "பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு" என்பது நமது நாட்டுப் பழமொழி. இப்பழமொழியாலும் பெருமானின் பெருங்கருணைத் திறத்தையும் சுந்தரரின் வழக்குப் பேசிய வன்கண்மையையும் உணரலாம்.

அன்று கயிலாயத்தில் பெருமானை விட்டுப் பிரியும்போது "மையல் மானுடமாய் மயங்கும் வழி, ஐயனே தடுத்தாண்டுஅருள்க" என்று வேண்டினார். வேண்டியவர் மறந்து விட்டார். பெரும் கருணையாளனாகிய பெருமான் மறப்பரோ? சொன்னபடியே வந்து தடுத்தாட்கொண்டார். சுந்தரர் பித்தனோ மறையோய் என்றதும் பெருமான் அருளால் வந்த சொல்லே என்பது தடுத்தாட்கொண்டபின் தெளிவாகத் தெரிகிறதன்றோ!

இனிப் பாடலைக் காண்போம். பித்தா என்னும் பாடலில் ஐந்து விளிவேற்றுமை (அழைப்பு) வந்துள்ளன. பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா! அருட்துறையில் அத்தா! என்பன ஐந்து விளிகள். ஐந்து வகையாக விளித்து அழைத்து இனி ஆளல்லேன் என்று சொல்லவும் கூடுமோ, கூடாது என்றார். இதுவரை ஆளில்லை என்று வழக்குப் பேசியவர் இப்போது எப்படி "ஆள் அல்லேன்" எனலாமோ என்கிறார் என்றால், பெருமானே நீ என்னை இதுவரை பொதுவாக நினைத்தாயே தவிர, சிறப்பாக என் உளம் புகுந்தாயில்லை. அதனால்தான் நான் உன்னை அறியாமல் வழக்குப் பேச நேர்ந்தது. இப்போது சிறப்பாக என் "மனத்துள் உன்னை வைத்தாய்" ஆதலினால் இனி ஆள் அல்லேன் என இயலாது என்று பெருமானுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பைத் தெளிவுபடுத்து கிறார். பாடல் காண்க.

பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!

எத்தான் மறவாதே நினைக்கின்றேன், மனத்துன்னை

வைத்தாய், பெண்ணைத் தென்பால் வெண்ணைநல்லூ [ரருட்டுறையுள்]

அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே. தி.7 ப.1 பா.1

இங்கு அப்பர் அருளிய குறுந்தொகைப் பாடலையும் நினைவுகூர்தல் பொருத்தமாகும். அப்பாடல் வருமாறு.

என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்

தன்னை நானும் முன்ஏதும் அறிந்திலன்

என்னைத் தன் அடியான் என்று அறிதலும்

தன்னை நானும் பிரான் என்று அறிந்தேனே. -தி.5 ப.91 பா.8

இத் திருப்பாடலில் மற்றொரு கருத்தையும் நாம் அறிதல் வேண்டும். இறைவனை நினைத்தற்கும் அவனருள் துணை வேண்டும் அவ்வருள் இல்லையேல் நினையவோ போடவோ காணவோ இயலாது.

"அவன் அருளாலே அவன்தான் வணங்கி" - தி.8 சிவபுரா.

என்பார் மணிவாசகர் இந்நோக்கோடு இத்தேவாரத்திருப்பாடலை அணுகினால் இக்கருத்துப் புலப்படும். `பெருமானே எத்தாலும் மறவாதே உன்னை நினைக்கின்றேன் அவ்வாறு நினைக்க நீ என் உள்ளத்தில் உன்னை வைத்துள்ளாய் இனியும் நான் உனக்கு ஆளல்லேன் எனல் ஆமோ? என்கிறார் சுந்தரர். அவர் உள்ளத்தில் இறைவன் பேரருளோடு தன்னை வைத்து ஆட்கொண்டதாலேயே இத்திருப்பதிகம் பேரருள்திறம் பேசும் திருப்பதிகம் எனப் பெயர் பெறுவதாயிற்று.

"தோடு கூற்றுப் பித்தா மூன்றும்

பீடுடைத்தேசிகன் பேரருளாகும்"

என்பது அகத்தியர் தேவாரத் திரட்டில் சிவாலாய முனிவர் கூற்றாக வருதலை உணர்க.

நம்பியாண்டார் நம்பிகளும், திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் திருவிரட்டை மணிமாலையில் அருளிய

என்னை நினைந்து அடிமை கொண்டு என் இடர்கெடுத்துத்

தன்னை நினையத் தருகின்றான்-புன்னை

விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்

அரசுமகிழ் அத்திருமுகத் தான். -தி.11 விநாய. திருவிரட். 1

இத்திருப்பாடலிலும் நம்பிகள் தன்னை நினையத்தருகின்றான் என்று கூறக் காணலாம்.

பேயாய்த் திரிந்தெய்த்தேன்:

பிரமன், படைத்தல் தொழிலைச் செய்ய அறியாமல் அழுதான். அழுத அக்கண்ணீரில் உதித்த தேவ வகுப்பினரே பேய்கள். பேய்கட்கு உருவமில்லை. ஆசாரம் இல்லாதவர்கள், மனோதிடம் இல்லாதவர்களைப் பற்றி, அவர்கள் உடலையே இருப்பிடமாகக் கொள்ளும் தன்மையுள்ளன. நீறிடார், அரனை நினைந்திடார், ஐந்தெழுத்தை நினையாதார், சிவபூசை புரியாதார், முதலிய இறைநெறி கடைப்பிடியாதவர் உண்ட உணவே பேய்கள் உண்ணும் உணவாகும். அகால மரணம் அடைந்தோர், காலம் வருத்துணையும் உடலின்றி ஆகாயத்தில் உலவி வருவனவே பேய்கள் என்பர். கடவுள் உணர்வின்றித் திரிபவர்களும் பேய்க் கணத்தில் சேர்க்கத் தக்கவரே. இதனைத்தான் சுந்தரர், "நாயேன் பலநாளும் மனத்துன் நினைப்பின்றி பேயாய்த் திரிந்தெய்த்தேன், உன்னை நினைந்தமையால் பெறலாகா அருள்பெற்றேன்" என்றுநெகிழ்வும் பெருமகிழ்வும் கொள்கிறார். கடவுள் உணர்வின்றித் திரிவோரைத் திருவள்ளுவரும்,

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும். -குறள் 850

என்று கூறியுள்ளமை இங்கு நினைவுகூரத்தக்கது. அலகை-பேய். திருஞானசம்பந்தரும் இறை உணர்வும் ஆசாரமும் வழிபாடும் இல்லாதவர்களைப் பேய்களாகவே குறிப்பிடுகின்றார், திருவெண்ணியூர்ப் பதிகம் நான்காம் பாடலில். அப்பாடல் வருமாறு.

மூத்தானை மூவுலகுக்கொரு மூர்த்தியாய்க்

காத்தானைக் கனிந்தவரைக் கலந்தாளாக

ஆர்த்தானை அழகமர் வெண்ணி அம்மான்தன்னை

ஏத்தாதார் என்செய்வார், ஏழைஅப் பேய்களே. -தி.2 ப.14 பா.4

தொழுவார் துயர் தீர்த்தலே தொழில்:

இறை நம்பிக்கையும் இறைவழிபாடும் செய்பவர்கள் என்றும் துன்புறார். வினை வழியே துன்பம் வரினும் அது பார்ப்பவர்க்குத் துன்பமாகத் தெரியுமே தவிர வழிபடும் நியமமுடையார்க்குத் துன்பம் துன்பமாகத் தெரியாது. இதைத்தான் உடல் ஊழாய்க் கழியும் என்பர். தொழுபவர்களின் துயர்களைப் பெருமானே ஏற்று வழிபடும் அன்பர்கட்கு இடர் ஏதுமின்றிக் காப்பாற்றுகின்றார். இதைத்தான் சுந்தரர் "தொழுவாரவர் துயராயின தீர்த்தல் உனதொழிலே" (தி.???) என "மழுவாள் வலனேந்தி" என்னும் (தி.?????) ஒன்பதாம் பாடலில் குறிப்பிடுகிறார்.

வேண்டிக்கொள்வேன் தவநெறியே:

சுந்தரர் தலயாத்திரை மேற்கொள்கிறார். முதலில் திருத்துறையூர் செல்கிறார். அத்தலம் பெண்ணை ஆற்றின் வடகரையில் உள்ளது. திருத்துறையூர்ப் பெருமான் சிட்டகுருநாதர். அவரிடம், "சிட்டனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே" என்று பத்துப்பாடல்களிலும் தவநெறி வேண்டுகிறார். முதல் பாடலில் பெண்ணை ஆற்றின் வடபால் உள்ள துறையூர் என்பதைக் குறிப்பிடுகிறார். அப்பாடல் காண்க.

மலையார் அருவித் திரள்மாமனி உந்திக்

குலையாரக் கொணர்ந்து எற்றியோர் பெண்ணை வடபால்

கலையார் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர்த்

தலைவா உனை வேண்டிக்கொள்வேன் தவநெறியே. - தி.7 ப.13 பா.1

யோகநெறி விளக்கவந்த சுந்தரர், திருவருளால் எடுத்த எடுப்பிலேயே தவநெறி வேண்டும் சால்பு, நெறிப்படுத்தும் இறை ஆட்சியின் ஏற்றத்தை இனிது உணர்த்துவதாயுள்ளது.

பித்தா பிறைசூடி என்னும் முதல் பதிகத்தில், பெண்ணை யாற்றின் தென்பால் உள்ளது வெண்ணைநல்லூர் என்பதை அறிவித்துள்ளமையும், ஈண்டு நினைக்கத் தக்கது. இவ்வாறு பல இடங்களிலும் நிலநூல் வரலாற்றை நினைப்பித்துச் செல்வது காணலாம்.

மரபு காத்தவர்:

புனிதமான திருக்கோயில்கள், புனிதப் பெரியோர்கள் வாழ்ந்த இடங்கள் இவற்றைப் பெரிதும் மதித்துப் போற்றவேண்டும். போற்றுவார்க்கு அதற்கு ஏற்ற பலன் உண்டு. இக்கருத்தை நமக்கு முதன்முதல் காட்டியவர் காரைக்காலம்மையார். புனிதத் தலமாகிய கயிலாயத்தில், காலால் நடத்தல் தகாது என்று, தலையால் நடந்து சென்றார். அதன் பயன், பெருமான் அம்மையே! என அழைத்து "என்ன வரம் வேண்டும்" என்றார். இறவாத இன்ப அன்பும், பிறவாமையும், பிறந்தால் இறைவா உன்னை மறவாமையும், மகிழ்ந்துபாடி அறவா உன் அடிக்கீழ் இருக்கும் தகைமையும் வரமாகத் தா எனக் கேட்டுப் பெற்றார்.

அடுத்து இதே மரபைத் திருஞானசம்பந்தர் பின்பற்றினார். திருவாலாங்காடு சேர்ந்தார். காரைக்காலம்மை தலையால் நடந்த தலத்தைக் காலால் கடத்தல் கடனன்று என்று பழையனூரிலேயே இரவு தங்கினார். ஆலங்காட்டுப் பெருமான் "நம்மைப் பாட மறந்தனையோ" என்று பிள்ளையார் கனவில் தோன்றி அருள் பாலித்தார். உடனே ஞானசம்பந்தர் திருவாலங்காட்டிற்கு எழுந்தருளி,

துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப்போய்

நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்

வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள் கொள்ளும் வகைகேட்டு

அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே. -தி.1 ப.45 பா.1

என்னும் பாடலை அருளிச் செய்தார். இது ஞானசம்பந்தர் மரபுகாத்து அருள் பெற்றமையைக் காட்டும் அகச்சான்றாகத் திகழ்கிறது.

திருவடி தீட்சை:

இப்பாரம்பரியத்தைச் சுந்தரர் தமது வாழ்விலும் கடைப்பிடித்து அருள்பெற்றார். சுந்தரர் மாலைப்பொழுதில் திருவதிகை அடைந்தார். திருநாவுக்கரசர் கைத்தொண்டு செய்த தலத்தை மிதிக்க அஞ்சியவராய், அருகில் உள்ள சித்தவட மடத்தில் தங்கினார். இம்மரபு காத்ததன் பயனாய், அன்றிரவு உறங்கும்போது அதிகைப் பெருமான் சுந்தரர் திருமுடிமேல் அடிவைத்துத் திருவடி தீட்சை புரிந்தார். இது சுந்தரர் பெற்ற பெறும்பேறு அல்லவா? இச்சமயத்தில் பாடியருளிய பதிகமே, "தம்மானை அறியாத சாதியார் உளரோ" என்னும் பதிகமாகும். தம் என்பது ஆன்மாக்கள். மான் என்பது தலைவன். எனவே உயிர்களின் தலைவன் என்ற பொருளில் பாடியுள்ளார். "தம்மான் தன் அடிக்கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்" (தி.???) என்பது ஆரூரரின் அகச்சான்று.

இம்மரபுச் செயலைத் திருஞானசம்பந்தர் அவதரித்த சீகாழிப் பதியிலும் நடந்து காட்டினார் சுந்தரர். "பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும்புகலி உள்ளும் நான் மிதியேன்" என்று ஊரையே வலமாக வந்தார். பெருமானும் ஞானசம்பந்தருக்குக் கொடுத்த அதே காட்சியை இவருக்கும் கொடுத்தார். இதனைச் சேக்கிழார், "மங்கை இடங்கொள்ளும் மால்விடையானும் எதிர்க்காட்சி கொடுத்தருள" என்று அறிவித்துள்ளார். சுந்தரரே, "காதில்வெண்குழையனைக் கடல்கொள மிதந்த கழுமலவளநகர் கண்டுகொண்டேனே" (தி.???) என்று அகச்சான்று பகர்கின்றார்.

வழிபட்டுக் காட்டுகிறார்.

ஐம்புலன்களும் ஒன்றி வழிபடுவதே வழிபாடு. "ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை" என்பார் அப்பர். இதனைச் சுந்தரர் தம் வாழ்வில் நடந்து காட்டினார். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்தும் அறிவுப்பொறிகள். அஃதாவது அறிவுதோன்றும் கருவிகள், சுந்தரரின் கண்கள் கூத்தப்பிரானைக் காண்கின்றன. மெய், வாய், மூக்கு, செவி என்னும் நான்கும் செயல்படாமல் கண்ணுக்குத் துணை நின்றன. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தக்கரணங்களுள் சித்தம் மட்டும் கண்கண்ட பொருளைச் சிந்தித்துக்கொண்டிருந்தது. மற்ற மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்று கரணங்களும் செயல்படாமல் சித்தத்திற்கு துணை செய்தன.

சத்துவகுணம் ரஜோகுணம் தமோகுணம் என்ற மூன்றில் சத்துவகுணம் செயல்பட்டது. ரஜோகுணமும் தமோகுணமும் செயல்படாது சத்துவ குணத்திற்கு இடர்செய்யாதிருந்தன. கண் பெருமானைக் காண்கின்றது. கண்ட பேரின்பப்பொருளைச் சித்தம் சிந்திக்கிறது. இவற்றிற்கு அடிப்படையாகச் சத்துவ குணம் மேலோங்கி நின்றது. எனவே நடராசப் பெருமானை ஒருமையுணர்வுடன் வழிபட்டு மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார். இது சேக்கிழார் காட்டும் சித்திரம். சுந்தரர் பெருமானை அனுபவித்த பேரின்ப வழிபாட்டுநிலை. அப்பாடல் காண்க.

ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள

அளப்பருங்கரணங்கள் நான்கும்

சிந்தையே யாகக் குணம் ஒரு மூன்றும்

திருந்து சாத்துவிகமேயாக

இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த

எல்லையில் தனிப்பெருங்கூத்தின்

வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து

மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்." தி.12 தடுத். 106

இப்பாடலுக்கு அனுபவப்பயன் வருமோ என்று தருமை ஆதீனம் நான்காவது குருமூர்த்திகளாகிய ஷ்ரீலஷ்ரீ மாசிலாமணி தேசிக சுவாமிகள் குமரகுருபரரை வினவியபோதுதான், "இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டவேண்டிய நிலை அல்லவா அனுபூதிநிலை" என்பதை உணர்ந்து, அப்பயிற்சியின்மையால், பதில் கூறமுடியாது, வாக்குத் தடைப்பட, இவரே நம் குருநாதர் என்று திருவடிகளில் வீழ்ந்து, வணங்கிச் சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணப்பித்தார். அவ்விண்ணப்பமே, பண்டார மும்மணிக்கோவை என்ற சித்தாந்தத் தெளிவியல்நூல்.

தில்லையில் பதிகம் பாடினார் என்கிறார் சேக்கிழார். அப்பதிகம் கிடைத்திலது. இங்குத்தான் "ஆரூரில் நம்பால்வருக" என அசரீரியாக அம்பலக்கூத்தன் அருள்புரிந்தார். அம்மொழிவழியே ஆரூர் சேர்ந்தார் சுந்தரர்.